
04.02.2026
கல்வி காவி – கார்ப்பரேட்மயத்திற்கு எதிராகவும்
பொதுப்பள்ளி முறைமைக்காகவும்
வாழ்நாள் முழுவதும் போராடிய
தோழர் ச.சீ.ராஜகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி!
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த மாணவர்களே, பொதுமக்களே!
கல்வி சந்தைச் சரக்காக மாற்றப்படுவதற்கெதிராக அறிவுத் தளத்தில் தொடர்ந்து போராடியவரும், தமிழ்நாட்டின் மாணவர் சமூகத்தின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த மூத்த கல்வியாளர் தோழர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது மறைவு, கல்வி உரிமைக்காகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்குப் பேரிழப்பாகும். அவருக்குப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
பொதுவுடைமைத் தத்துவம்தான் மக்களுக்கு தீர்வு தரும் என்று ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர், தோழர் ச.சீ.ராஜகோபாலன். 1990-களுக்குப் பிறகு புகுத்தப்பட்ட தனியார்மய – தாராளமய-உலகமயக் கொள்கைகள், கல்வியை ஒரு வணிகப் பொருளாக மாற்றியதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். கல்வியை ஒரு சேவையாகக் கருதாமல், இலாப வெறியோடு செயல்படுபவர்களை “கல்வி வியாபாரிகள்” என்று துணிச்சலாகச் சாடி அம்பலப்படுத்தினார். தனியார்ப் பள்ளிகள் மீதான நடுத்தர வர்க்கத்தின் மோகத்தைப் பயன்படுத்தி, தரமற்ற கல்வியை அதிக விலைக்கு விற்கும் மோசடியை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார்.
எமது அமைப்பின் தோழமை ஊடகமான ‘வினவு’ தளத்தில் இவர் அளித்த நேர்காணல்கள், நாங்கள் முன்னெடுத்த தனியார் கல்வி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஊக்கமளித்து வந்தன. “மாதிரிப் பள்ளிகள்” என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்தும், நீட் தேர்வு குறித்தும் அவர் அம்பலப்படுத்திய விசயங்கள் ஜனநாயக சக்திகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தோழர் ச.சீ.ராஜகோபாலன் எமது அமைப்பின் போராட்டக்களங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தவர். 2010-களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) மற்றும் பு.மா.இ.மு நடத்திய பல்வேறு அரங்கக் கூட்டங்களில் பங்கேற்று கல்வி தனியார்மயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி சிதம்பரத்தில், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் முன்னின்று நடத்திய ‘இலவசக் கல்வி உரிமை’ மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தினார் தோழர் ச.சீ.ராஜகோபாலன். அம்மேடையில், “அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்” குறித்தும், “கல்வி சந்தையாவதை எதிர்த்தும்” அவர் ஆற்றிய உரை இன்றும் எமது செவிகளில் ஒலிக்கிறது.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட, நான்கு வகையான கல்வி வாரியங்களை இணைத்து ஒரே மாதிரியான கல்வி முறை வேண்டும் என்று முத்துக்குமரன் குழுவின் மூலம் அவர் முன்னெடுத்த போராட்டம் தமிழ்நாட்டின் கல்வி உரிமைக்கான போராட்டத்தில் முக்கியத்துவமுடையது. 2011-இல் சமச்சீர்க் கல்விக்கு எதிராக ஜெயலலிதா அரசு சதி செய்தபோது, உச்ச நீதிமன்றக் குழுவில் இடம்பெற்று, “கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனைக் குறைத்து மதிப்பிடுவது அபத்தமானது” என்று ஆணித்தரமாக வாதிட்டு, சமச்சீர்க் கல்வியைப் பாதுகாத்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு.
“மாவட்ட ஆட்சியரின் குழந்தையும், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தையும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பறையில் அமர்ந்து படிக்கும்போதுதான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு உருவாகும்” என்ற அவரது முழக்கம், வர்க்க மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கும் பார்வை கொண்டது. கல்வித் துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்று அவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார். இது, பு.மா.இ.மு-வின் நீண்டகாலக் கோரிக்கையான “அருகாமைப் பள்ளி – பொதுப்பள்ளி முறைமை” போராட்டத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.
பாசிச மோடி அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்த கல்வியாளர்களில் ச.சீ.ராஜகோபாலன் முக்கியமானவர். கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டிய அதிகாரம் என்றும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்றும் அவர் வாதிட்டார். மாணவர் அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அதற்குத் தேவையான தரவுகளையும், கருத்தியல் ஆயுதங்களையும் வழங்கியவர் அவர்.
90 வயதைக் கடந்தும், தனது தளர்ந்த உடலையும் பொருட்படுத்தாமல், கல்வித் துறையின் சீர்கேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து “ஆசிரியர் கடிதங்கள்” மூலம் குரல் கொடுத்து வந்தார்.
தோழர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் விட்டுச் சென்ற பணியான, “அனைவருக்கும் சமமான, இலவச, அறிவியல்பூர்வமான கல்வி”, “பொதுப்பள்ளி முறைமை”, கல்வித் தனியார்மயத்தை முறியடிப்பது போன்ற கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராட உறுதியேற்கிறோம்.
![]()
இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











