கிக் தொழிலாளர்களின் அவல வாழ்வு: கணக்கெடுப்பு எடுத்துக் காட்டும் உண்மைகள்

கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்கள் சென்ற டிசம்பர் மாதம் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்றும் அதைத் தொடர்ந்து ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்றும் காலையிலிருந்து இரவு 8 மணி வரை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். TGPWU (Telangana Gig and Platform Workers Union) தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தைத் தலைமை ஏற்று நடத்தியது.

ஏறக்குறைய இரண்டு லட்சம் கிக் தொழிலாளர்கள் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டதாக அந்நகரத்தின் தொழிற்சங்க தலைவர் சலாவுதீன் தெரிவித்துள்ளார். இப்போராட்டம் பகல் உணவு நேரத்தில் பயனாளிகளைப் பெரிதும் பாதித்தது. இருப்பினும் தேசிய செய்தி ஊடகங்கள் எதுவும் இப்போராட்டச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்தன.

கிக் நிறுவன நிர்வாகங்களோ தொழிற்சங்கத்தை மதித்து எந்த பேச்சுவார்த்தைக்கும் முன் வரவில்லை. மாறாக அன்றைய தினம் போராட்டத்தில் பங்கு கொள்ளாத தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்து தொழிலாளர்களுக்கு ஆசை காட்டி பிளவுபடுத்தும் இழிவான வேலையில் ஈடுபட்டன. பவுன்சர்கள் எனப்படும் அடியாட்களையும் போலீசையும் கொண்டு போராட்டத்தை ஒடுக்கி விடவே முற்பட்டன.

சொமேட்டோ நிறுவன உரிமையாளரான அருண் கோயல் சமீபத்தில் தேசிய நாளிதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் போலீசுக்கு நன்றி தெரிவித்தது கவனிக்கத்தக்கதாகும். என்ற போதிலும் இப்போராட்டத்தின் உடனடிப் பயனாக 10 நிமிட டெலிவரி என்னும் விளம்பரத்துடன் கூடிய சேவைகளை நிறுத்த வேண்டும், அவ்விளம்பரத்தை நீக்க வேண்டும் எனும் முக்கிய கோரிக்கை ஒன்றிய அரசினால் ஏற்கப்பட்டு கிக் நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியன வெளியிடும் 10 நிமிடத்தில் டெலிவரி என்ற விளம்பரத்தை நீக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த விளம்பரம் இணையதளங்களிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது.

ஏற்கெனவே நவம்பர் 15 முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்தில் லாப நோக்கம் இல்லாத மக்கள் முயற்சி மற்றும் தொழிலாளர் அமைப்பு (Janpahal and Gig Workers Association) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கிக் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து அந்த கணக்கெடுப்பு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஆர்வம் கொண்ட நந்திதா போஸ் போன்ற திரைப்பிரபலங்கள், ராஷ்டிரிய லோக் தள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா மற்றும் பிரபல பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், போபால், ஆக்ரா, லக்னோ, ஜெய்ப்பூர், பாட்னா ஆகிய 10 நகரங்களில் 1000 கிக் தொழிலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு விநியோகம், மளிகை பொருள் விநியோகம், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுவோர் மற்றும் உடனடி விநியோகம் போன்ற துறைகளில் வேலை செய்யும் கிக் தொழிலாளர்களிடம் நேர்காணல் மூலம் நேரடியாகவும் சில குறிப்பான கேள்விகளைக் கொண்ட கேள்வித் தாள்களைக் கொடுத்தும் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கெடுப்பின்படி கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். 57 சதவிகிதத்தினர் 49 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளை 44 சதவிகித தொழிலாளர்கள் விபத்துக்கான காப்பீடு எதையும் பெற்றிருக்கவில்லை. அதுபோலவே 62 சதவிகித தொழிலாளர்கள் மருத்துவ காப்பீடு எதையும் பெற்றிருக்கவில்லை என்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரிய வந்திருக்கிறன.

மேலும் நேர்காணலில் சந்தித்த 34 சதவிகிதம் பேர் தாங்கள் டெலிவரி செய்யும் பயனாளிகளிடம் மோசமான அனுபவங்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளனர். 84 சதவிகித தொழிலாளர்கள் வெயில், மழை, பனி போன்ற மோசமான காலநிலை சூழலால் பாதிக்கப்பட்டு உடல்நலத்தை இழந்துள்ளனர்.

அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா இந்த கிக் கம்பெனி நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் இணைய வழியிலேயே வேலை நீக்கம் செய்வதும், தண்டத்தொகை விதிப்பதும் என அராஜகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று நிர்வாகங்களின் திமிர்த்தனத்தை சாடினார்.

மேலும் சாதிய படிநிலை வேற்றுமைகளும் வர்க்க ஒடுக்குமுறைகளும் இணையாக நிலவுகின்ற நமது இந்திய சமூகத்தில் இந்த கிக் தொழிலாளர்களைச் சுயாதீனமுள்ள பங்குதாரர்கள் (partners) என்று அழைப்பது தங்களின் கோரமான முகத்தை மறைத்துக் கொள்ளும் உத்தியே ஆகும். இது நடுத்தர மேல் தட்டு குடும்பங்களில் தங்கள் வீட்டு வேலைக்கார பெண்களை ஆன்ட்டி என்று அழைக்கும்படி பிள்ளைகளுக்குச் சொல்லித்தருவதைப் போன்றதுதான் என்று அந்தப் போலித்தனத்தை விமர்சித்தார்.

முறையான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், படித்த இளைஞர்களும், ஒற்றைப் பெற்றோர்களும், வயது முதிர்ந்தவர்களும் தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டி எந்த உரிமைகளும் உத்தரவாதமும் இல்லாத இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்களின் நிர்க்கதியான நிலைமைகளைப் பயன்படுத்தி உழைப்பை கொள்ளையிட்டு வருகின்றன இந்த கிக் நிறுவனங்கள்.

எந்த குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லாமல் அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி நடத்தப்படும் இச் சுரண்டலை பாசிச மோடி அரசு தெரிந்தே அனுமதித்து வருகிறது. அரசு ஆதரவுடன் இயங்கும் இந்த கிக் நிறுவனங்களை அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டும் எதிர்த்து வெல்ல முடியாது என்பதே நிதர்சனம். இதை இத்தொழிலாளர்கள் உணர வேண்டும். இந்த பாசிச அரசை ஒழித்துக் கட்டி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலமே இத்தொழிலாளர்கள் கௌரவமான வாழ்வை அடைய முடியும்.

செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க