உதய்பூர் ஃபைல்ஸ்: இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் திரைப்படம்!

இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல்.

டந்த ஆகஸ்ட் மாதம் 8 அன்று இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் நோக்கில் எடுக்கப்பட்ட “உதய்பூர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படம் வெளியானது.

2022-ஆம் ஆண்டில் இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்ஹய்யா லால் என்ற தையல்காரர் இரண்டு இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திரைப்படம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி படத்தை வெளியிடுவதற்கு முன்பே ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வந்தனர்.

இத்திரைப்படத்தின் அபாயத்தை உணர்ந்துகொள்வதற்கு கன்ஹய்யாவின் கொலையின் உண்மை பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

கன்ஹய்யா லால் கொலையின் திடுக்கிடும் பின்னணி

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பா.ஜ.க-வின் அன்றைய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து அவதூறு செய்யும் வகையில் பேசியதற்கு உலகளவில் எதிர்ப்பு கிளம்பியது. அச்சமயத்தில், இராஜஸ்தானின் உதய்பூரைச் சார்ந்த தையல்காரரான கன்ஹய்யா லால், நுபுர் சர்மா பேசிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அதனை ஆதரிக்கும் வகையில் சர்ச்சைக்குரியக் கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தன்னை இஸ்லாமியர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட முகமது ரியாஸ் அட்டாரி என்பவன் கன்ஹய்யா லால்க்கு கொலை மிரட்டல் விடுத்து காணொளி வெளியிட்டிருந்தான். இந்நிலையில், அவனும் மற்றோருவருவனும் இணைந்து ஜூன் 28, 2022 அன்று கசாப்பு கத்தியால் கன்ஹய்யா லாலின் தலையைத் துண்டித்து படுகொலை செய்ததாகச் செய்தி வெளியாகியது.

ஆனால், இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இக்கொலை குறித்து கருத்து தெரிவித்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம், “எந்த ஒரு குற்றத்தில் ஈடுபடும் நபர்களும் யாருக்கும் தெரியாமல், அடையாளங்களைக் கூட விட்டு வைக்காமல், மிகவும் நுணுக்கமாக சம்பத்தைச் செய்துவிட்டு, தடையமின்றி தப்பிக்கவே முயல்வார்கள். ஆனால், இவ்விவகாரத்தில் சம்பவத்தைப் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மிரட்டல் விடுப்பதற்காகப் பதிவிட்ட காணொளியிலும், நபிகள் குறித்து அவதூறு பேசிய நுபுர் சர்மா குறித்து மட்டும் பேசாமல் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் உடனடியாகவே ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் தப்பித்துச் செல்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது போன்ற பல கேள்விகள் நம்முன் எழுகின்றன. அந்த வகையில் பார்க்கும்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவருமே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில், என்னிடமே, மோகன் பகவத்தை சந்திக்கலாம் வாருங்கள் என்று ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் விலை பேசியுள்ளனர். எனவே, இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சம்பவமாகவே இருக்கக்கூடும்” என்று காவி கும்பலின் முகத்திரையைக் கிழித்தார்.


படிக்க: முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


அதேபோல், அச்சமயத்தில் இராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காங்கிரசு கட்சியின் அஷோக் கெலாட், “குற்றவாளிகளுக்கு பா.ஜ.க-வுடன் தொடர்புள்ளது. இச்சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வேறு சில வழக்குகளில் குற்றவாளிகளை போலீசு கைது செய்தபோது, சில பா.ஜ.க. தலைவர்கள் அவர்களை விடுவிக்க போலீசு நிலையத்திற்குச் சென்றுள்ளனர்” என்று அம்பலப்படுத்தினார்.

மேலும், கொலைகாரர்கள் இருவரும் பா.ஜ.க-வின் கூட்டங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும், பா.ஜ.க-வின் ராஜஸ்தான் மாநில சிறுபான்மை அணியைச் சார்ந்த இர்ஷாத் செயின்வாலா என்பவனுடன் நெருக்கமாக இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதிலிருந்து, தனது கலவர சூத்திரத்தைப் பயன்படுத்தி இந்து -இஸ்லாமிய மக்களிடையே மோதலை உண்டாக்கி கலவரத்தைத் தூண்டுவதற்கும், அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரசின் ஆட்சியைக் கலைப்பதற்கும் பா.ஜ.க. திட்டமிட்டே இக்கொலையை அரங்கேற்றியுள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

கன்ஹய்யா லால் கொலை செய்யப்பட்டவுடன், அதற்காகவே காத்திருந்தது போல அச்சம்பவத்தைக் கையிலெடுத்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல், உதய்பூரில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திலும் கலவர முயற்சியிலும் இறங்கியது. அந்தாண்டு இறுதியில் நடந்த இராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் இச்சம்பவத்தை வைத்து பிரச்சாரம் செய்தது. திட்டமிட்டதைப் போலவே 2023 சட்டமன்றத் தேர்தலில் இராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது.

இவையெல்லாம், தனது பாசிச கெடு நோக்கத்திற்காக பா.ஜ.க-தான் இக்கொலையை நிகழ்த்தியுள்ளது எனும் கூற்றிற்கு வலுசேர்க்கின்றன.

இஸ்லாமிய வெறுப்பு திரைப்படங்களும்
சேவையாற்றும் அரசு கட்டமைப்பும்

நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் இச்சம்பவத்தின் உண்மை பின்னணியை மறைத்து, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, கலவரத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் உதய்பூர் ஃபைல்ஸ்.

இத்திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் முற்றிலும் தவறான-பொய்யான கண்ணோட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், மசூதிகள், மதராசாக்கள் உள்ளிட்டவை பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, ஜஹாங்கீர் நேஷனல் யூனிவர்சிட்டி, தி சபர்மதி ரிப்போர்ட், சாவா (Chhaava) போன்ற இஸ்லாமிய வெறுப்பு திரைப்படங்களின் வரிசையில் இணைந்ததுதான் உதய்பூர் ஃபைல்ஸ் திரைப்படம் ஆகும். ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார கும்பல் நாடு முழுவதும் மேற்கொண்டுவரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சார நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கம்தான் இத்தகை திரைப்படங்களை எடுக்கும் முன்னெடுப்பாகும்.

இதுபோன்ற படங்களின் மூலம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது மிகத் தீவிரமான உளவியல் போரைத் தொடுத்து வருகிறது பாசிச கும்பல். மேலும், மக்களிடத்தில் இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டி, அதன் மூலம் இஸ்லாமியர்களின் மீது பாசிஸ்டுகளால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையை மக்களிடத்தில் நியாயப்படுத்துகிறது.

மறுபுறம், மக்களின் பிரச்சினைகளை, சமூகத்தில் உள்ள அநீதிகளை எடுத்துரைக்கும் “சந்தோஷ்” (Santosh) போன்ற திரைப்படங்களையும் முற்போக்கு கருத்துகளை விதைக்கும் “விடுதலை 2” போன்ற திரைப்படங்களையும் வெளியிடுவதற்கு பல தடைகளை விதித்து கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் மத்திய தணிக்கை துறை, இத்தகைய திரைப்படங்களுக்கு சேவகனாகச் செயல்படுகிறது.


படிக்க: உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்


மேலும், இத்திரைப்படம் முன்னதாக ஜூலை 11 அன்று வெளியாக இருந்தது. ஆனால், இத்திரைப்படத்தின் அபாயத்தை உணர்ந்தும், இத்திரைப்படம் இந்திய இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதை எதிர்த்தும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதற்கு எதிராக பாசிஸ்டுகளின் ஊதுகுழல் ஊடகங்களும் சங்கி கும்பலும் மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடும் பணியை சிரமேற்கொண்டு செய்தன.

சி.என்.என்., நியூஸ் 18, டைம்ஸ் நௌ போன்ற பா.ஜ.க-வின் ஊதுகுழல் ஊடகங்களின் பத்திரிகையாளர்கள், “இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணுகின்றனர்”, “மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்கள் இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்றெல்லாம் அருவருக்கத்தக்க வகையில் இஸ்லாமிய வெறுப்பைக் கக்கினர்.

இதற்கு ஒருபடி மேலே சென்று, “ஏற்கெனவே தணிக்கைத்துறை என்ற ஒன்று இருக்கும்போது நீதிமன்றம் ஏன் தணிக்கை செய்ய வேண்டும்? நீதிமன்றத்தின் வேலை இந்த படம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறதா என்று சொல்வது மட்டும்தான்” என்று நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று கட்டளையிடும் அளவிற்கு சங்கிகள் சட்டத்தை தங்கள் கையிலெடுத்தனர்.

ஆனால், இத்திரைப்படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீட்டிக்க மறுத்ததுடன் உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும் கண்டித்து இத்திரைப்படத்திற்குச் சேவையாற்றியது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி ஆகஸ்ட் 8 அன்று இத்திரைப்படம் வெளியானது.

பாசிச கும்பலின் சதித்திட்டம்

இந்தாண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில், இஸ்லாமியர்கள் இந்துக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக சித்தரிப்பதற்கும், ‘இந்துக்களின் பாதுகாவலர்களாக’ பா.ஜ.க. தன்னை அறிவித்துக்கொண்டு வாக்குகளை கவர்வதற்காகவும்தான் தற்போது இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது, இந்துமதவெறிக் கும்பல்.

பாசிச மோடி கும்பலானது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்கு ஏற்பவே இந்தியாவை ஆட்சி செய்து வருகிறது. இந்துராஷ்டிரம் என்ற பெயரில் நாட்டை 2,000 ஆண்டுகளுக்கு பின்னிழுத்துச் செல்லும் ஆகப் பிற்போக்கான-பார்ப்பன கும்பலின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ‌ஆட்சியை ஏற்படுத்த முயன்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க,; அம்பானி-அதானி பாசிச கும்பலின் நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.

இந்த பாசிச ஆட்சியில் உழைக்கும் மக்கள் அனைவரும் பசி, பட்டினி, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல வாழ்வாதார சிக்கல்களை தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். முதலாளிகள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் ஏழைகள் மேலும் மேலும் வறுமையில் உழல்வதுமான படுமோசமான நிலையில்தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கை உள்ளது.

தனது பாசிச ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கச் செய்வதற்கு பாசிஸ்டுகள் கையாளும் ஆயுதங்களில் ஒன்றுதான் மத பிரிவினையைத் தூண்டும் திரைப்படங்கள். இதன் மூலம் பண்பாட்டுத் தளத்தில் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அரங்கிற்குக் கொண்டு வர முயல்கின்றனர்.

கலை இலக்கியங்களில் பார்ப்பனியத்தைப் புகுத்திவரும் இந்துமதவெறி கும்பலை எதிர்ப்பதுடன் இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பாசிஸ்டுகளின் இந்த சதித்திட்டத்தை முறியடித்து உண்மையான ஜனநாயகத்தைப் பெறுவதற்கான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அணிதிரட்ட வேண்டிய முக்கிய கடமை ஜனநாயக சக்திகளின் முன்னுள்ளது!


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க