“வரலாறு தனக்கு தேவையானவர்களை தானே உருவாக்கும்” என்கிற கூற்றிற்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய “மாவீரன் மலைச்சாமி”.
ஏனெனில், அவர் பிறந்த காலத்தின் சூழல் அவ்வாறு இருந்தது.
இதற்கு சான்றாக, டிசம்பர், 1930-இல் தேவகோட்டையில் நடைபெற்ற நாட்டார் மாநாட்டை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அம்மாநாட்டில் அங்கு வாழும் பட்டியல் சமுதாய மக்களின் மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. பட்டியலின மக்கள் படிக்கக்கூடாது; மேலாடைகள் எதுவும் அணியக்கூடாது; பெண்கள் வெள்ளி தண்ணீர்க் குடங்கள் பயன்படுத்தக் கூடாது; பெண்கள் பித்தளை பாத்திரங்களை தலையில் சுமக்கக் கூடாது; தங்கச் சரிகை முலாம் பூசப்பட்ட எந்தவொரு ஆடையையும் அணியக்கூடாது; தலையில் தலைப்பாகை கட்டக்கூடாது போன்ற பல கட்டளைகள் அம்மாநாட்டில் போடப்பட்டன. ஆரம்பக் காலங்களில் எட்டு கட்டளைகளாக இருந்த அவை, பின் 1931-இல் மேலும் விரிவடைந்து, 12-ஆக மாற்றப்பட்டன.
இது ஏதோ அந்த ஒரு இடத்தின் சூழல் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த தென்மாவட்டங்களிலும் இதுதான் சூழலாக இருந்தது.
இப்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த சாதியம் எனும் தமிழ் மரபுக்கு எதிரான மரபினை, மதுரை மண்ணில் மட்டுமல்லாமல் தமிழ் நிலமெங்கும் அழித்தொழிக்க முனைந்தவர்தான் மாவீரன் மலைச்சாமி.
11 மார்ச், 1954 அன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இருளாயி-அழகப்பன் இணையருக்கு மகனாக பிறந்தார் மலைச்சாமி.
பெரியாரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மலைச்சாமி, சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திராவிடர் கழகத்தில் இணைந்து, 1978-இல் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட இளைஞரணியின் துணைத் தலைவரானார். ஊர் பெயர்களில் சாதிய அடையாளங்களை துடைத்தெறிவதற்காக சக மாணவர்களை இணைத்துக்கொண்டு போராடினார். பச்சேரி-யை (பள்ளர் மக்கள் வசிக்கும் பகுதி) இமானுவேல் நகர், பெரியார் நகர் என்றும், பறச்சேரி-யை டாக்டர் அம்பேத்கர் நகர் என்றும், சக்கிலியச்சேரி-யை விடுதலை நகர் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக போராட்டங்களை முன்னெடுத்தார்.
அதேபோல், “மாணவர் எழுச்சி மன்ற”த்தை தொடங்கி மாணவர்களின் கல்வி உரிமைக்கானப் போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக, 1980-களில் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வந்த தமிழீழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பட்டியல்-பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகையை பெறுவதற்கு 90 சதவிகித வருகைப் பதிவை கட்டாமாக்கியது எம்.ஜி.ஆர். அரசு. அதற்கெதிராக மலைச்சாமி மதுரையில் போராட்டங்களை நடத்தினார். இது பின்னர் தமிழ்நாடு முழுக்க பரவியதையடுத்து அந்த அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது.
அச்சமயத்தில், மலைச்சாமி அம்பேத்கரிய கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மறுபுறம், “பாரதிய தலித் பேந்தர்ஸ்” (DPI – Dalit Panthers of India) அமைப்பு மகாராஷ்டிராவில் வளர்ந்து வந்தது. இதனையடுத்து, 1983-ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் மலைச்சாமி தலைமையில் “பாரதிய தலித் பேந்தர்ஸ்” அமைப்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 14, 1989 அன்று மலைச்சாமி (33 வயதில்) உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து, தொல். திருமாவளவன் தலைமையேற்ற தலித் பேந்தர்ஸ் இயக்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, “விடுதலை சிறுத்தைகள் கட்சி”யாக செயல்பட்டு வருகிறது.
அருந்ததியர்களை கூர்மைப் படுத்தியவர்
“சாதிகள் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது பட்டியல் சமுதாய மக்களிடமுள்ள வேற்றுமைகளைத்தான்” என்றார் மலைச்சாமி.
இதை சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அம்மக்களிடம் பரவியிருந்த சாதிய முரண்பாட்டை அவர் எதிர்த்து நின்றார். அதற்கு சிறு சான்றுதான் ஐந்து வீடு கிணறு போராட்டமாகும்.
அவனியாபுரத்திற்கு அருகில் ஐந்து வீடு மற்றும் சோமநாதபுரம் கண்மாய் ஆகிய பகுதிகள் உள்ளன. அங்கு கள்ளர் சமுதாய மக்கள்தான் அதிகளவில் வசித்து வருகிறார்கள் என்றாலும், அவ்வூரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர்களும் அருந்ததியர்களும் வசித்து வந்தனர்.
இதில் தேவேந்திரர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். இதனால் அவர்கள் கொண்டுவரும் மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு குடிநீருக்காக அருகிலிருந்த கள்ளர்களின் கிணற்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறு செல்லுகையில், ஒருவேளை அவர்கள் மற்றவர்களைவிட விரைவாகச் சென்றாலும், அங்கிருக்கும் சாதி இந்து பெண்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். இது அந்த ஊரிலிருந்த எழுதப்படாத விதியாகும்.
ஏனெனில், தாமாக தண்ணீர் எடுத்து குடிக்கக்கூடிய உரிமை அப்போது அங்கிருந்த தேவேந்திரர்களுக்கு கிடையாது. இப்படி, சாதி இந்துக்களால் கொடுமைகளை அனுபவித்து வந்த அம்மக்கள், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தண்ணீர் குடிப்பது தமது உரிமை என்று போராடாமல், சாதி இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு, அமைதிக் காத்தனர்.
ஒரு பக்கம் அங்கிருக்கும் சாதி இந்துக்களின் ஆதிக்க சிந்தனை தேவேந்திரர்களை அடிமையாக்கி வைத்திருந்தது என்றாலும், தேவேந்திரர்களிடம் படிந்திருந்த சாதியம் தாழ்த்தப்பட்ட மக்களில் மற்றொரு பிரிவினரான அருந்ததியர்களை சீண்டிப் பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், மயானத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களும் தங்கள் வீட்டிற்கு அருகில் வரும் பட்சத்தில், மலைச்சாமியின் ஊரான பெரியார் நகரைச் சேர்ந்த தேவேந்திரர்கள், அவர்களுக்கு குவளைகளில் தண்ணீர் கொடுக்காமல், கையில் தண்ணீர் ஊற்றும் இழி-வழக்கத்தை பின்பற்றி வந்தனர்.
இதனை உணர்ந்த மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே நிலவும் இப்பாகுபாடு ஆக மிக ஆபத்தானது என்று உணர்ந்து அதனை ஒழிக்கத் துணிந்தார்.
அதன் முதல் கட்டமாக, ஊரில் இருந்த மூன்று கிணறுகளிலும் அருந்ததியர்களை கொண்டு தண்ணீர் இறைக்கச் செய்து, சாதிய மனோபாவத்திற்கு சவுக்கடிக் கொடுத்தார் மலைச்சாமி!
மணிக்குறவன் எனும் மாவீரனும்
மேலவாசல் பாக்கியம் படுகொலையும்
இன்றைய காலகட்டத்திலும் பட்டியல், பழங்குடியின மக்கள் பேருந்து, பேருந்து நிறுத்தம் வேண்டி போராடும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல், மதுரை மேலவாசலில் வசிக்கும் பட்டியல் சமுதாய மக்கள் வாழும் பகுதிகளுக்கு பேருந்துகளை கொண்டுவர அம்மக்கள் செய்த தியாகம் முக்கியமானது.
அதில் ஒன்றுதான் மணிக்குறவனின் தியாகம்.
அவர் வாழ்த்த காலகட்டத்தில் “டி.வி.எஸ்” என்ற பேருந்து கம்பெனி ஒன்று இருந்தது. அது பல இடங்களில் அடித்தட்டு மக்களை அனுமதிக்காமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதே நிலை அவர்கள் ஊரிலும் இருந்தது.
இதனை எதிர்த்த மணிக்குறவன், பேருந்தில் ஏற விடாமல் தடுத்த ஓட்டுநரை எதிர்த்துக் கலகம் செய்தார்.
மேலும், பட்டியல் சமுதாய மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பெண்களை அவமானப்படுத்துவது அக்காலத்தில் வாடிக்கையாக இருந்தது. அவர்கள் யாராக இருந்தாலும் அதைச் செய்தவர்களை அவர் இழுத்துபோட்டு அடித்தார். யார் யாரெல்லாம் சாதிய மனோபாவத்துடன் குடியிருப்புகளுக்குள் நுழைகிறார்களோ, அவர்களை எல்லாம் எதிர்த்து நிற்கும் வல்லமையும் அதீத வீரமும் அவருக்கு இருந்தது. இதனை நன்றாகப் புரிந்துகொண்ட சாதி இந்துக்கள் சமயம் பார்த்து அவரைத் தீர்த்துக் கட்டினர்.
வீரம் நிறைந்த மணிக்குறவனின் வம்சாவழியில் வந்தவர்தான் மேலவாசல் பாக்கியம்.
அவருடைய சமகாலத்தில் அங்கிருந்த சாதி இந்துக்கள் கஞ்சா வியாபாரம் செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சமூக விரோதச் செயல்களை ஊருக்குள்ளேயே செய்து வந்தனர். இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களை ஆள் வைத்து அடித்ததுடன், வீடு தேடிச் சென்று வெட்டிக் கொன்றனர்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, செருப்பு தைக்கும் இளைஞரான மேலவாசல் பாக்கியம், தன் தலைமையில் “மேலவாசல் இளைஞர்கள்” என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். பின்னர், அதனை மலைச்சாமி தலைமையில் இயங்கிவந்த தலித் பேந்தர்ஸ் அமைப்போடு ஒருங்கிணைத்து, அதன் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சாதிவெறியை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தார்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியர்கள் அவரையும் அவரின் நண்பர்களையும் தாக்கினர். இச்செய்தி மலைச்சாமியின் செவிகளை எட்டியவுடன், பெரும் படையுடன் சென்று சமூகவிரோதியான பருத்தியூரானை தாக்குவதற்காகத் தேடினார். அவர் எங்கும் கிடைக்காததால் பாக்கியத்தின் மூலம் போலீசுதுறைக்கு ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவினை சிறிதும் பொருட்படுத்தாத போலீசுதுறையினர், சமூகவிரோதிகளை வெளியில் நடமாடவிட்டனர்.
இதனைக் கண்ட மலைச்சாமி மேலவாசலில் ஒரு கூட்டம் போட்டு, “சமூகவிரோதிகள் யாராவது ஊருக்குள் நுழைந்தால், அவர்களை போலீசுதுறையின் உதவியின்றி நாமாக அடித்து விரட்டுவோம்” என்றார். அத்துடன், சாதி மனோபாவத்துடன் செயல்பட்டு வந்த போலீசுதுறையினருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
அதன் பிறகு, அச்சமூகவிரோதிகள் பிடிக்கப்பட்டு போலீசுதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், வெளியே வந்து மேலவாசல் பாக்கியத்தை திட்டமிட்டு படுகொலை செய்தனர். “ஒரு சக்கிலிப் பய நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் வந்திருச்சா…” என்று கூறிக்கொண்டே சாதிய வன்மத்துடன் பாக்கியத்தின் கழுத்தை அறுத்து கொன்றனர்.
இதற்கெதிராக தலித் பேந்தர்ஸ் மதுரையில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது. இது அக்காலகட்டத்தில், தலித் பேந்தர்ஸ் முன்னெடுத்த போராட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
உத்தப்புரம் சாதி எதிர்ப்புப் போர் – 1989
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே சேட்டப்பட்டி ஒன்றிய பகுதியில் உள்ள ஊர் உத்தப்புரம். இங்கே பல்வேறு சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள் என்றாலும், பெரும்பான்மையாக தேவேந்திரர்களும் பிள்ளைமாரும்தான் வாழ்கிறார்கள்.
அந்த ஊரின் மையத்தில் முத்தாலம்மன் என்ற ஒரு கோவில் உள்ளது. அக்கோவிலில் பட்டியல் சாதி மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், அவ்வூரில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கவும் பிள்ளைமார் சமூகத்தினர் மறுத்து வந்தார்கள். ஒருவேளை நிழற்குடை அமைந்துவிட்டால் தேவேந்திரர்கள் அதில் அமர்ந்து விடுவார்கள், அதனால் பிள்ளைமார்களின் ‘கௌரவம்’ குறைந்துவிடும் என்ற அப்பட்டமான சாதிய மனநிலையே அதற்கான காரணமாகும்.
மேலும், அங்கிருந்த பிள்ளைமார் சமூகத்தினர் தேவேந்திரர், பறையர் மக்களை ஒதுக்கி வைப்பதற்காக 12 அடி உயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட நீண்ட தீண்டாமை சுவரை உருவாக்கி வைத்திருந்தனர்.
மேற்கண்ட இம்மூன்று பிரச்சினைகளையும் எதிர்த்து, பல தருணங்களில் சாதியக் கலவரங்கள் நடந்துள்ளன.
இறுதியாக, 2008-ஆம் ஆண்டு “சாதி ஒழிப்பு முன்னணி” போன்ற பல்வேறு இயக்கங்களின் தொடர் போராட்டதால் அத்தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் தேவேந்திரர் சமுதாய இளைஞர் ஒருவர் மீது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்தது. அப்படுகொலையை எதிர்த்து தேவேந்திரர்களும் இதர பட்டியல் சமுதாயத்தினரும் நடத்திய உரிமை போராட்டத்தில் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு என அனைத்து தாக்குதல்களும் நடத்தப்பட்டன. அதில், ஐந்து தேவேந்திர குல வேளாளர் மக்களும், இரு சாதி இந்துக்களும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தீண்டாமை சுவர் எனும் இந்த அநீதியை எதிர்த்து தோழர் மலைச்சாமி அவர் வாழ்ந்த காலத்தில் அங்கு கண்டனக் கூட்டம் நடத்தியிருந்தார்.
ஒடுக்கப்பட்டோர் இயக்கங்களை ஒன்றிணைத்து அருகிலிருந்த எழுமலை எனும் ஊரில் கண்டனக் கூட்டத்தை நடத்தினார். அக்கூட்டத்தில், “சாதி இந்துக்களின் மனநிலையில் மாற்றம் ஏதும் வரவில்லை என்றால், இந்நிலை இப்படியே நீடித்தால், ஒவ்வொரு பட்டியலின இளைஞர்களும் தீரன் சுந்தரலிங்கத்தை போன்று, வீரத்தமிழச்சி குயிலியைப் போன்று மனித வெடிக்கிடங்காய் மாறுவோம்” என்று கடுமையாக எச்சரித்தார்.
தென்மாவட்டங்களில் இன்றைய நிலையும்
மலைச்சாமியின் தேவையும்
மலைச்சாமியின் காலகட்டத்தை போலவே தற்போதும் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய அடக்குமுறைகள் தீவிரமடைந்து வருகின்றன.
தேவேந்திர குல வேளாளர் மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்ட ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இன்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு கருங்காலிகளாக செயல்பட்டு வருகின்றனர். சான்றாக, “நான் இந்துக்களின் பாதுகாவலர்” என்கிறார் கிருஷ்ணசாமி. தென் மாவட்ட படுகொலைகள் அனைத்தும் “கஞ்சா போதையால் நடந்தது” என்கிறார் ஜான் பாண்டியன்.
ஆனால், தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்குமான மூலக் காரணம் கஞ்சா, மது பழக்கங்கள் கிடையாது. மாறாக, பார்ப்பனியத்தை தனது சித்தாந்தமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும், ஆதிக்கச் சாதி சங்கங்களில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்தான். மறுபுறம், தேவேந்திர குல வேளாளர் மக்களின் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி அம்மக்களையும் அணித்திரட்ட விழைகிறது.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் சாதி-மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி மதக்கலவரங்களை தூண்டுவதற்கு காவி கும்பல் திட்டமிடுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய மாபெரும் இழிவுக்கும், நீங்காத் துயருக்கும் காரணமாக உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை இத்தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க மலைச்சாமியின் வழியில் ஒன்று சேர்வோம்.
நாம் பிறப்பதற்கு முன் இருந்த சாதியை,
இறப்பதற்கு முன் கண்டிப்பாக அழித்தொழித்திட வேண்டும்…
இரா.சே கருணாகரன்,
சமூக செயற்பாட்டாளர்.