Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 488

ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

4

ட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார் ரஜினி. ரஜினி குறித்த எண்ணிறந்த விவாதங்களை நடத்திய ஊடகங்கள், ரஜினி போன்ற நட்சத்திர கோமாளிகள் இப்படி துணிந்து அறிவிக்குமளவு தமிழகம் ஏன் இப்படி ஒரு மட்டமான மாநிலமாக இருக்கிறது என்பதை பேசவில்லை.

அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் வரையிலும் எந்த அரசியல் போராட்டங்களோ, விமர்சனங்களோ செய்யக் கூடாது என ரஜினி தனது இரசிகர்களுக்கு ஒரு உத்திரவை வெளியிட்டார். போராடுவதற்கு மற்ற கட்சிகள் இருப்பதாக அவர் கேலியுடன் பேசியதிலிருந்தே இவரின் யோக்கியதை தெரிகிறது.

பாஜக மோடி அரசின் கண்காணிப்பில் நாடெங்கும் நடந்து வரும் மதக்கலவரங்கள், கொலைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைத்தையும் வைத்து பார்க்கையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் இந்துமதவெறியின் இளைய பங்காளி அல்லாமல் வேறென்ன?

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டுமென குதிக்கின்ற பாரதிய ஜனதா தனது அடுத்த நகர்வை ரஜினியை வைத்து முயல்கிறது. பார்ப்பனிய சதிக்கூட்டத்தின் முக்கிய பிரமுகரான குருமூர்த்தி, துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் ரஜினியும், பாஜகவும் சேரவேண்டுமென அறிவிக்கிறார். தமிழக பாஜக தலைவர்களும் அதை பின்பாட்டாக பாடிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டாராக நிலை கொண்ட நேரம் தொட்டு, இன்றைய கபாலி காலம் வரை ரஜினியின் அரசியல் வரலாறு காட்டுவது என்ன?

அவரது திரைப்படங்களின் கள்ள வருமானம், ஜெயா, மோடி போன்றவர்களை பயந்தும், விரும்பியும் ஆதரிக்கும் சந்தர்ப்பவாதம், முக்கியமான பிரச்சினைகளின் போது மக்கள் விரோத நிலையை எடுத்ததும்தான் அந்த வரலாறு.

இருப்பினும் ரஜினியின் சினிமா செல்வாக்கால் அஞ்சும் ஓட்டுக் கட்சிகள், அவரை அம்பலப்படுத்தி கருத்து ரீதியாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புவதில்லை.

விழிப்புணர்வு பெற்று வரும் தமிழகத்தை பின்னுக்கிழுக்கும் முயற்சியாக ரஜினியின் பிரவேசம் இருப்பதை எச்சரிக்கின்றது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ரஜினி : வரமா – சாபமா ? – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • எந்திரன் : படமா ? படையெடுப்பா?
  • ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !
  • ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !
  • பாட்ஷா பாபாவான கதை!
  • ரஜினி ரசிகர்கள்: விடலைகளா ? விபரீதங்களா?
  • ஃபியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம்!
  • மோடி – ரஜினி சந்திப்பு : பில்டிங் மட்டுமல்ல பேஸ்மெண்டும் வீக்குதான்
  • குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !
  • கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
  • போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
  • சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு
  • கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
  • ரஜினி அரசியல் : மக்கள் என்ன கருதுகிறார்கள் ? – 2018 பொங்கல் மெகா சர்வே!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


 

புலம்பாதே ! போராட்டத்தை கையிலெடு ! குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்

0
குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
 கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல்  கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் வேதியியல் துறை மாணவர்களாகிய நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.

வேதியியல் துறையின் கட்டிடங்களை காக்க ஆர்வம் காட்டாத பொதுப்பணித்துறையே !
அடிப்படை வசதிகளை அலட்சியபடுத்தும் கல்லூரி நிர்வாகமே!

கல்லூரி கல்வி இயக்குனர் வந்து எங்கள் துறையை பார்வையிட்டு எங்களுக்கான உரிமையை தரும்வரை கல்லூரியே எங்கள் வீடு…..
புலம்புவதை நிறுத்து போராட்டத்தை கையில் எடு
இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

இவண்
அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், குடந்தை.

 

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

53
லகம் எனது பார்வையில்….. என்ற வலைபக்கத்தில் அன்னா வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. வினவு தளத்திலும் சில அறிவியல் – மகளிர் தினக் கட்டுரைகளை அன்னா எழுதியுள்ளார்.  நவீன மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் உள்ள முரணை எளிய முறையில் விளக்குகிறார், அன்னா. அவருக்கு எமது நன்றி!
– வினவு

மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு

இது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.

ம‌ருத்துவம் / மருந்துகள் என்றால் என்ன‌? எவை குறிப்பிட்ட‌ நோய்க‌ளை அல்ல‌து நோய்க‌ளின் அறிகுறிக‌ளை இயன்றளவு தீமையின்றி போக்க‌வோ குறைக்க‌வோ செய்கின்ற‌ன‌வோ, அவ்வாறு செய்வ‌தற்கு ஆதார‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌வோ அவையே ம‌ருந்துக‌ளாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌லாமா? அப்ப‌டியாயின் மாற்று ம‌ருத்துவ‌ம் என்றால் என்ன‌? உண்மையாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளுக்கு முற்றிலும் எதிர்மாறான‌வையா? மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு ஏதாவது ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா?

ஒரு ம‌ருந்து குறிப்பிட்ட‌ ஒரு நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ உத‌வ‌லாம். அதை அந்நோயால் பாதிக்க‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு ம‌ருந்தாக‌க் கொடுக்க‌லாம் என‌ எவ்வாறு முடிவு செய்வ‌ர் என‌ப் பார்க்க‌லாமா? ஒரு உண்மையான உதாரணத்தைக் கொண்டு விளக்கினால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் இத‌ற்கு உதார‌ண‌மாக‌ என‌து துறையில் த‌ற்போது ப‌ரிசோத‌னையில் இருக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும் அநேகமாக‌த் தெரிந்த‌ ஒரு ம‌ருந்தை எடுத்துக் கொள்வோம்.

வ‌யாக்ரா! இது த‌ற்போது ஏன் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்பதற்கான‌ ஒரு காரணம்‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இடுப்புப் பகுதிக்குச் செல்லும் இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விரிவ‌டைய‌ச் செய்வ‌த‌ன் மூலம் ஆண்க‌ளின் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்வதே வயாக்ரா பயன்படுத்தும் ஆண்களில் வேலை செய்ய முக்கிய காரணம். இத‌ன் இர‌சாய‌ன‌ப் பெய‌ர் sildenafil citrate.

மேற்சொன்ன விடயத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கு மிக வித்தியாசமான ஒரு விடயத்தைப் பற்றி சுருக்கமாக கீழ்க்காணும் பத்தியில் பார்ப்போம். இரண்டிற்குமான தொடர்பு இதை வாசித்ததும் புலப்படும்.

குழ‌ந்தை க‌ருப்பையில் விருத்திய‌டையும் போது தாயிட‌மிருந்து தேவையான‌ போஷாக்கு, வாயுக்க‌ளை குழ‌ந்தைக்குக் கொண்டு செல்ல‌வும் குழ‌ந்தையிட‌மிருந்து க‌ழிவுக‌ளை தாய்க்கு அனுப்ப‌வும் உத‌வும் அங்க‌ம் சூல்வித்த‌க‌ம் (placenta). க‌ருத்த‌ரித்த‌ உட‌னேயே க‌ருவிலிருந்து உருவாகும் சூல்வித்த‌க‌ செல்க‌ள் தாயின் க‌ருப்பை அக‌ப்ப‌ட‌லத்தினூடாக தாயின் க‌ருப்பையிலிருக்கும் இர‌த்த‌ நாளங்க‌ளை ஊடுருவி, அவற்றை முற்றாக மாற்றி மிக‌வும் விரிவ‌டைய‌ச் செய்யும். இதன் மூல‌ம் தாயின் க‌ருப்பை ஊடாக‌ சூல்வித்த‌க‌த்திற்கு இர‌த்த‌ ஓட்ட‌ம் மிக‌வும் அதிக‌ரிக்கும்.

அதிக‌ரித்த‌ இர‌த்த‌ ஓட்ட‌த்திலிருந்து குழந்தைக்குத் தேவையான‌வ‌ற்றை உறிஞ்சி எடுக்க சூல் வித்த‌க‌த்திற்கு இல‌குவாக‌ இருக்கும். குழ‌ந்தையின் ந‌ல் விருத்திக்கு க‌ருப்பையில் க‌ருக்க‌ட்டிய‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌க்கும் இம்மாற்ற‌ம் மிக‌வும் இன்றிய‌மையாத‌து. கரு வளர்ச்சி தடைப்படுவதால் குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறத்தல் (fetal growth restriction), மற்றும் pre-eclampsia என்று சொல்லப்படும் முன்சூழ்வலிப்பு / குருதி நஞ்சூட்டுதல் உட்பட‌ கருக்காலத்தில் வரும் பலவகையான நோய்களில் இந்த சூல்வித்தகம், அதன் இரத்த நாளங்கள் எவையும் நன்றாக விருத்தியடைந்து இருப்பதில்லை. இந்நோய்க‌ளுக்குத் த‌ற்ச‌ம‌ய‌ம் ம‌ருந்துக‌ள் எதுவும் இல்லை. இந்நோய்கள் பிறந்த குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கின்றன. அத்துடன் இந்நோய்க‌ளால் தாய்க்கும் குழ‌ந்தைக்கும் க‌ருக்கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ குழ‌ந்தை பிற‌ந்து வ‌ள‌ர்ந்து பல வருடங்களின் பின்பும் இருவ‌ருக்கும் இத‌ய‌ நோய்க‌ள், நீரிழிவு நோய் என்ப‌ன‌ வ‌ரும் வாய்ப்பு மிக‌ அதிக‌ம்.

மேற்சொன்ன இரு விடயங்களையும் வாசித்ததும் யாருக்காவ‌து ஒரு திறமான எண்ணம் தோன்றியதா? என்னுட‌ன் வேலை செய்யும் ஒரு ம‌ருத்துவ‌ அறிவிய‌லாள‌ருக்கு வ‌ந்த‌து. வயாக்ரா ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட‌ பாதுகாப்பான‌ ம‌ருந்து. அது ஆண்க‌ளில் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்கிற‌து. அது தானே மேற்சொன்ன‌ நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கும் தேவை. க‌ருப்பை இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விருத்திய‌டைய‌ச் செய்து சூல்வித்த‌க‌த்தின் இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்தால், சூல்வித்த‌க‌ம் ந‌ன்றாக‌ விருத்தியாவதால் வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ குழ‌ந்தைக‌ளுக்கு இத‌ன் மூல‌ம் ப‌ல‌ன் கிடைக்க‌லாம் இல்லையா?

திறமான எண்ணம் வ‌ந்த‌து ச‌ரி, அத‌ற்காக‌ இத‌ற்கு ஒரு ஆதார‌மும் இல்லாமல், எவ்வளவு வயாக்ரா கொடுக்க வேண்டும், எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், அதனால் வேறு ஏதாவது பாதிப்பான‌ பக்க விளைவுகள் வருமா என்றெல்லாம் தெரியாமல் இந்நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் கர்ப்பிணிப் பெண்க‌ளுக்கு கொடுப்ப‌து ச‌ரியாகாது தானே. வயாக்ரா இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்வது முதலே ஆய்வுகூட அடிப்படைப் பரிசோதனைகளில் கண்டுபிடித்தாயிற்று. அத‌னால் அடுத்து க‌ரு வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ க‌ருக்க‌ளைச் சும‌க்கும் சுண்டெலிக‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்துப் பார்த்தார்க‌ள். தாய்ச் சுண்டெலிக‌ளின் சூல்வித்த‌க‌ இர‌த்த‌ நாள‌ங்க‌ள் ந‌ன்றாக‌ விருத்தி அடைந்த‌து ம‌ட்டும‌ன்றி பிற‌ந்த‌ குட்டிச் சுண்டெலிக‌ளும் ந‌ல்ல‌ நிறையுட‌ன் பிற‌ந்த‌ன (1)‌. இதே மாதிரி எலிக‌ள், கினியாப் ப‌ன்றிக‌ளில் செய்த‌ ப‌ரிசோத‌னைக‌ளிலும் வ‌யாக்ரா சாத‌க‌மான‌ முடிவுக‌ளையே த‌ந்த‌து.

சோதனை விலங்குகளில் மருந்து வேலை செய்தால், மனிதரில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பினும், ஒரு ஆதாரங்களும் இல்லாமல் மனிதரில் வேலை செய்யும் என நம்புவது மடத்தனம். அதனால் இவ்வாய்வின் அடுத்த கட்டமாக‌ க‌ருக்கால‌த்தில் மிக‌வும் ஆர‌ம்ப‌த்திலேயே குழந்தையின் வ‌ள‌ர்ச்சி குன்றி இருப்ப‌தாக‌க்  க‌ண்ட‌றியப்பட்ட 10 பெண்க‌ளிட‌ம் (இச்சந்தர்ப்பங்களில் சாதார‌ண‌மாக‌ பிர‌ச‌வ‌த்தின் போதே 50 சதவீத அளவு குழ‌ந்தைக‌ள் இற‌ந்து விடும்) அனும‌தி பெற்று அவ‌ர்க‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்தார்க‌ள். அவ்வாறு வயாக்ரா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 கர்ப்பிணிப் பெண்களில் 9 பேருக்கு குழந்தைகள் பிழைத்தன, மட்டுமன்றி வைத்தியசாலையிலிருந்தும் குறைந்த காலத்திலேயே விடுவிக்கப்பட்டும் விட்டனர். ஓரே ஒரு குழந்தை மட்டுமே இறந்து பிறந்தது (2).

இந்த‌ ஆதார‌ம் போதுமா? இல்லவே இல்லை. ஒரு நோயைக் குணப்படுத்த ஒரு மருந்து அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமெனில் இத‌ற்கும் மேலாக இன்னுமொன்று செய்ய வேண்டும். அது தான் double blinded randomised clinical trial. வேறெந்தக் காரணிகளின் தாக்கமும் அற்று வயாக்ரா கொடுத்ததன் விளைவால் மட்டுமே குழந்தைகள் நற்சுகத்துடன் பிறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த இது அத்தியாவசியமானது. அதாவ‌து வ‌யாக்ரா உண்மையில் இப்பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் உத‌வுமா என‌ப் பார்க்க‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் பல்வேறு கட்டங்களில் ப‌ல‌ நூறு க‌ரு வ‌ளர்ச்சி குன்றி இருக்கும் க‌ர்ப்பிணிப் பெண்க‌ளை எடுத்து அவ‌ர்க‌ளின் அனும‌தியுட‌ன் சில‌ருக்கு வ‌யாக்ராவும் சில‌ருக்கு வ‌யாக்ரா மாதிரியே இருக்கும் சும்மா ஒரு மாத்திரையும் கொடுக்க‌ வேண்டும்.

இதில் மாத்திரை கொடுக்கும் ம‌ருத்துவ‌ருக்கோ எடுக்கும் பெண்ணுக்கோ அது ம‌ருந்தா அல்ல‌து சும்மா மாத்திரையா என்று தெரிந்திருக்க‌க் கூடாது – அது தான் double blinding. ஏனெனில் மருத்துவருக்குத் தெரிந்தால் அவரை அறியாமலே அவரின் செய்கைகளும் உணர்ச்சிகளும் மருந்து கொடுக்கும் போது மாறுபடலாம். சில மருத்துவர்களிடம் போனால் அவர் மருந்து ஒன்றும் கொடுக்காமலே உங்களுக்கு வருத்தம் கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா? அதே போல் மருந்து தான் எடுக்கிறேன் என உண்மையில் நினைத்து சீனிக் குலுசையைப் போட்டாலும் சிலருக்கு சில நோய்கள் மாறிவிடும்*.

அதோடு வ‌யாக்ரா ம‌ருந்து எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் அதிக‌ம் இருக்கும் பெண்க‌ளும் சும்மா மாத்திரை எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் குறைந்த‌ பெண்க‌ளும் கூட‌ இருக்க‌க் கூடாது. இர‌ண்டு குழுக்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா வித‌த்திலும் ச‌ம‌த்துவ‌மான‌ பெண்க‌ள் இருக்க‌ வேண்டும் – அது தான் randamisation. ஒரு நோயின் வீரியம் குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுப்பவரினதும் நோயாளியினதும் மனநிலை / காட்டும் உணர்ச்சிகள், நோயின் வீரியம், நோயாளியின் வயது, வாழ்க்கை நிலை என்று எந்தக் காரணிகளும் அன்று அந்த மருந்து மட்டுமே காரணமாகுமா என அறிவதற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் இன்றியமையாதது.

இந்த பரிசோதனையிலும் உண்மையில் வயாக்ரா கரு வளார்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது எனக் கண்டால், அதன் பின் வயாக்ரா கருக்காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருந்தாக ஆதாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். தற்போது ஜரோப்பாவிலும் நியூசிலாந்திலும் இந்த double blinded randomised clinical trial செய்வதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பாடுபடுவதற்கு முக்கிய காரணம் உலகில் எங்கோ ஓரிடத்தில் இவ்வாறான நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறாள். இந்த வகையான ஒவ்வொரு ஆராய்ச்சியின் இலக்குமே இந்த இறப்பு விகிதத்தைத் குறைப்பதும் இதனால் தாயினது சேயினதும் வாழ்க்கைத் தரத்தை நோயின்றி உயர்த்துவதுமே.

வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் ம‌ருந்துக‌ள் எவ்வாறு உட‌லில் வேலை செய்கின்ற‌ன‌? உட‌லில் என்ன‌ மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருகின்ற‌ன‌? அவ‌ற்றால் ஏற்ப‌டும் ப‌க்க‌ விளைவுக‌ள் என்ன‌? ப‌க்க‌ விளைவுக‌ளை விட‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ந‌ன்மைக‌ள் அதிக‌மான‌வையா? அம்ம‌ருந்துக‌ள் உப‌யோகிப்ப‌தால் எதேனும் நீண்ட‌கால‌ தாக்க‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்ப‌தெல்லாம் அறிவிய‌ல் ஆய்வுக‌ளின் மூல‌ம் க‌ண்ட‌றிந்து ஆவணப்படுத்தப்படும். அதோடு தொட‌ர்ந்து அவ‌ற்றின் உப‌யோக‌ம், விளைவுக‌ளை பார்வையிட்டுக்கொண்டே இருப்ப‌ர்.

இனிக் கட்டுரையின் முதலில் கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு என்ன‌வாவ‌து ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்று. எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அநேகமான மாற்று மருத்துவ முறைகளில் மேற்சொன்ன‌ வகையான ஆய்வுகள் எதுவுமே நடைபெறவில்லை.

ஆய்வுகள் நடந்த பலவற்றில் நோயின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையில் கொடுத்த மருந்துக்கும் சும்மா கொடுக்கப்பட்ட மருந்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பல சமயம் இந்த மாற்று மருத்துவ முறைகளைச் செய்பவர்கள் இந்த மாதிரியான ஆய்விற்குத் தமது மருந்துகளை உட்படுத்த விரும்புவதுமில்லை. உலகில் எத்தனையோ வகையான மாற்று மருத்துவங்கள் உண்டு. ஆனால் இந்திய/இலங்கைச் சமூகத்தில் அதிகம் உபயோகத்தில் இருப்பவை ஆயுர்வேதம், யோகா, உனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி. சுருக்கமாக AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy).

இக்கட்டுரைக்கு ஆயுர்வேதத்தையும் ஹோமியோபதியையும் உதாரணமாக எடுப்போம்.

முக்கியமாக ஆயுர்வேதத்தின் அடிப்படையான வதா, பிதா, கப்பா தோஸாக்கள் இருப்பதற்கே எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மருந்துகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமாகுமென ஆதாரங்கள் உண்டு. ஆனால் பலவற்றிற்கு இல்லை. அதோடு வழக்கமான மருந்துகளிற்கு இருக்கும் சட்ட திட்டங்களுக்கேற்ப‌ இவ்வாயுர்வேத மருந்துகள் மதிப்பிடப்படுவதில்லை.

வெளிநாடுகளிற்கு இவை உணவுக் கூடுதல்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் மருந்துகளிற்கு இருக்கும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல ஆயுர்வேத மருந்துகளில் ஆபத்தான அளவுகளில் செம்பு, ஆர்சனிக் போன்ற இரசாயன மூலகங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை. அவர்கள் நோயைப் போக்கும் கூலகத்தை நீரில் பல்லாயிரம் தடவை நீர்க்கச் செய்து (ஜதாக்கி) (ஏனெனில் நீருக்கு ஞாபக சக்தி உண்டென்பது அவர்களின் ‘நம்பிக்கை’) அதன் பின் அந்நீரை மாத்திரையாக்குவார்கள். அம்மருந்தை எடுப்பதற்கும் நீங்கள் ஒரு சீனி மாத்திரையை எடுப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் ஹோமியோபதி மருந்துகள் பாவிப்பதால் உங்களுக்கு பெரிதாக ஒரு தீங்கும் வராது.

ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள். ஹோமியோபதி சிகிச்சையாளர்கள் தமது சிகிச்சை முறை உண்மையில் வேலைசெய்கிறது என விஞ்ஞான ரீதியில் ஆதாரபூர்வமாகக் காட்டினால் 10,000 பவுண்டுகள் பரிசாகத் தருவதாக Trick or Treatment என்ற புத்தகத்தின் எழுத்தாளார்கள் சவால் விட்டுள்ளனர். இதுவரைக்கும் யாரும் வெற்றி பெறவில்லை.

இம்மாதிரியான‌ மாற்று “ம‌ருத்துவ” முறைகள் மக்களைக் கவர்வதற்கு முக்கிய‌மாக நான்கு கார‌ண‌ங்க‌ளைக் கூற‌லாம்.

முதலாவது காரணம் :

இம்முறைக‌ள் எல்லாம் இய‌ற்கையானது / இரசாயனங்கள் ஏதும் அற்றது என‌ இம்முறைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ள் கூறுவ‌து. இக்கூற்று மிக‌வும் கேலிக்குரிய‌து. ஏனெனில் நீங்க‌ள் அருந்தும் த‌ண்ணீர் கூட‌ ஒரு இர‌சாய‌ன‌ப் பொருள் தான். அத‌ன் இர‌சாய‌ன‌க் குறியீடு H2O. த‌ண்ணீர் இரு ஜ‌த‌ர‌ச‌ன் (ஹைட்ரஜன்) அணுக்க‌ளையும் ஒரு ஒக்சிய‌ன் (ஆக்சிஜன்) அணுவையும் கொண்ட‌து. அநேகமான மாற்று ‘மருத்துவங்களில்’ உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே.

அதும‌ட்டும‌ல்ல‌ எம‌து உட‌லே ஒரு இர‌சாய‌ன‌த் தொழிற்சாலையே. ஒரு கூறு இய‌ற்கையான‌து என்றால் அது ந‌ம‌க்கு ந‌ன்மையான‌தாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌ ந‌ம்பிக்கை கூட‌ மிக‌த் த‌வ‌றான‌தே. பாம்பின் ந‌ஞ்சு கூட‌ இய‌ற்கையான‌தே. அத‌ற்காக‌ ந‌ஞ்சு குடித்தால் உட‌லுக்கு ந‌ன்மை அளிக்கும் என‌ யாராவ‌து சொல்வார்க‌ளா? எத்த‌னையோ புழ‌க்க‌த்தில் இருக்கும் ம‌ருந்துக‌ள் ப‌ல‌ மூலிகைக‌ளிலிருந்தே முத‌லில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

மூலிகைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இர‌சாய‌ன‌க் கூட்டுக‌ள் உள்ள‌ன‌. அதில் எந்த‌க் கூட்டு ஒரு குறிப்பிட்ட‌ நோய்க்கு நிவார‌ண‌மாக‌லாம் என‌ ப‌ரிசோதித்து, பின் அதைத் த‌னிமைப்ப‌டுத்தியே ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் ம‌ருந்துக‌ள் வீரிய‌ம் கூடிய‌வையாக‌வும் ஆப‌த்துக் குறைந்த‌வையாக‌வும் உள்ள‌ன‌.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் :

இம்முறைக‌ள் ப‌ண்டைய‌ கால‌ந்தொட்டு எம்ச‌மூக‌த்தில் உப‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு முறை ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளாக‌ப் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்த‌ற்காக‌ அம்முறை ச‌ரியான‌தாக‌வோ ந‌ன்மையான‌தாக‌வோ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. எமது உட‌ல் எவ்வாறு வேலை செய்கிற‌து என்று தேவையான‌ அறிவு இல்லாத‌ கால‌த்தில் உருவான‌ முறைக‌ளை உண்மையில் ந‌ன்மை செய்கிற‌தா என‌ முழுமையாக‌ ஆராயாம‌ல் ப‌ய‌ன்ப‌டுத்துவது பாத‌கமான‌ விளைவுக‌ளையே த‌ரும்.

மூன்றாவ‌து கார‌ணம் :

தாம் முழு ம‌னித‌ உட‌லையும் பார்த்து ம‌னித‌ரின் வாழ்க்கை முறையையும் கேட்டே ம‌ருத்துவ‌ம் அளிப்ப‌தாக‌ மாற்று “ம‌ருத்துவ‌ர்க‌ள்” சொல்வ‌து. இது கூட‌ கேலிக்குரிய‌தே. ஏனெனில் அதைத் தான் வ‌ழ‌க்கமான‌ ம‌ருத்துவ‌ர்க‌ளும் செய்கிறார்க‌ள்.

நான்காவ‌து கார‌ண‌ம் :

இம்மாற்று ‘ம‌ருத்துவ‌த்தில்’ ப‌க்க‌ விளைவுக‌ள் இல்லை என்று ம‌க்க‌ள் ந‌ம்புவ‌து. இந்ந‌ம்பிக்கை கூட‌ மிக‌வும் பிழையான‌தே. எல்லா ம‌ருந்துக‌ளுக்கும் ப‌க்க‌ விளைவுக‌ள் நிச்ச‌ய‌ம் உண்டு. வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் எம்ம‌ருந்துக‌ள் தீமைக‌ளை விட‌ மிக‌ அதிக‌ம் ந‌ன்மை கொடுக்கின்ற‌ன‌வோ அவற்றைப் ப‌ய‌ன் ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

மிக‌ முக்கிய‌மாக‌ ம‌ருந்துக‌ளால் வ‌ரும் ந‌ன்மைக‌ள், தீமைக‌ள், நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எல்லாவ‌ற்றிற்கும் இய‌ன்ற‌ள‌வு ஆதார‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து ஆவணப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌ர். அவ்வாறான ஆராய்ச்சிகளால் பல வருடங்களுக்குப் பின் ஒரு மருந்து நன்மையை விடத் தீமையே செய்கிறது எனக் கண்டால், அதன் பின் அம்மருந்து உபயோகப்படுத்துவது தடை செய்யப்படும். ஆனால் இம்மாற்று ம‌ருத்துவ‌த்தால் வ‌ரும் ப‌க்க‌ விளைவுக‌ளை யாரும் ஆவணப்ப‌டுத்துவ‌தில்லை.

இச்சிகிச்சை எல்லாவற்றிற்கும் அநேகமானோர் ஆதாரமாகக் கொடுப்பது பல மூன்றாம் மனிதர்கள் கொடுத்த வாக்குமூலங்களையே. தனி மனிதர்களின் வாக்குமூலம் மிகப் பிழையானதானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவுமே அநேகமாக‌ இருக்கும். அதற்காகவே தற்சார்பற்ற முடிவு என்ன என்று காண்பதற்காகவே இந்த randominsed double blinded trials அவசியமாகின்றது. அதோடு இந்த மாற்று மருத்துவம் செய்யும் அநேகமானோருக்கு சரியான மருத்துவப் பயிற்சியே இல்லை. பிறகு எவ்வாறு என்ன நோய், எப்படி மருத்துவம் செய்வது எனத் தெரியும்?

“மருந்துகள் என்றால் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்டவை. மாற்று ‘மருந்துகள்’ எல்லாம் கீழைத்தேய நாடுகளில் தோன்றியவை. அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு” என்று எம் நாடுகளில் நினைப்பவர்கள் பலர். மருந்துகள் என்றால் தற்சார்பற்ற, ஆதாரபூர்வமாக, இயன்றளவு பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குபவை அல்லது அந்நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துபவை.

சரியான அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளின் ஊடாக அவற்றால் வரும் தீய பக்க விளைவுகளை விட நன்மைகள் குறிப்பிட்டளவு அதிகம் என முடிவு செய்வதால் அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்பங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் பிரச்சினையில்லை. எத்தனையோ மருந்துகள் கீழைத்தேய நாடுகளில் பயன்படுத்திய மூலிகைகளில் இருந்தே உருவாக்கப்பட்டவை. அம்மூலிகைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மூலகங்களில் அக்குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணியான குறிப்பிட்ட மூலகத்தைத் தனிப்படுத்தி மாத்திரையாக்குவதே மருந்தாகிறது. நோயைக் குணப்படுத்தத் தேவையான இரசாயனக் கூறுகள் மட்டுமே இருப்பதால் மூலிகையாக எடுப்பதை விட மருந்தாக எடுப்பது பாதுகாப்பானதும் விரைவில் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அவ்வளவே.

உண்மையான மருத்துவம் மாற்று மருத்துவத்தை விட எல்லா விதத்திலும் உயர்ந்ததென பல ஆய்வுகள் காட்டி விட்டன. ஏனெனில் அவை எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையாகும். எப்போ மாற்று மருத்து முறைகள் நோய்களைக் குணப்படுத்தப் பயனுள்ளவை என ஆதாரங்கள் கிடைக்கிறதோ அன்றே அவை மாற்று மருத்துவத்திலிருந்து உண்மை மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருப்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமும் போலிகளுமே. போலிகளை மாற்று ‘மருத்துவம்’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதோடு அது மக்களுக்கு ஒரு பிழையான புரிதலையும் கொடுக்கிறது.

எந்தவித ஆதாரங்களுமின்றியே இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.

இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.

இந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.

————————————————————————————————————————
படங்கள் கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து ‘புனித’ நீர் எடுத்து வரச் சொல்வார்களாம்.

கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம்.

அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.

1. Stanley JL, et al., Sildenafil citrate rescues fetal growth in the catechol-O-methyl transferase knockout mouse model. Hypertension (2012); 59 (5): 1021-1028.
2. von Dadelszen P, et al., Sildenafil citrate therapy for severe early-onset intrauterine growth restriction. BJOG (2011); 118(5): 624-628.
3. source: THE MIRACLE OF GANGA WATER by the late Dr Abraham Kovoor

மாற்று மருத்துவத்தைப் பற்றிய விபரமான தகவல்களுக்கு :

நன்றி : annatheanalyst

நிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள்

0

தொன்மை வாய்ந்த ஏதென்ஸ் நகரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோலிமைடாவிற்கு(Ptolemaida) வெளியே பயணம் செய்தால் சூரியனையே நம்மால் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு காற்றில் மாசுக்களின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் டோலிமைடாவைச் சேர்ந்த கோஸ்டாஸிற்கு(Kostas ) அந்த சிக்கல் இல்லை. கண்ணைக் கட்டினால் கூட தன்னால் வண்டியை ஓட்ட முடியும் என்கிறார் அவர்.

“என்னுடைய தந்தை புற்றுநோயால் இறக்கும் போது எனக்கு 12 வயது. அவருடைய சகப்பணியாளர்கள் நால்வர் கூட அதே பிரச்சினையால் தான் இறந்து போனார்கள்” என்கிறார் அவர்.

கிரீஸ் அரசு மின்சக்தி நிறுவனத்தில் (PPC) அவரது தந்தையை போலவே பாதுகாவலராக கோஸ்டாஸ் பணிப்புரிகிறார். டோலிமைடாவின் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக பணியில் இருக்கும் போதே இறந்துவிட்ட கோஸ்டாஸின் தந்தை அந்நிறுவனத்தின் முக்கியமான ஊழியர்களில் ஒருவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறமும் நட்டமடைவது மறுபுறமும் இருந்தாலும் கூட 1.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு புதிய சுரங்கங்களில் கிரீஸ் அரசு முதலீடு செய்துள்ளது. பாலைவனமான சில கிராமங்களையும் உள்ளடக்கி சுமார் 625 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ள நிலக்கரி சுரங்கம் நாட்டின் 30 விழுக்காட்டு மின்சாரத்தேவையை பூர்த்தி செய்கிறது.

ஜெர்மனி, செக் குடியரசு மற்றும் போலந்துடன் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியை மட்டுமல்லாமல் மிக மோசமான மாசுப்பாட்டையும் சேர்த்தே கிரீஸ் உற்பத்தி செய்கிறது.

கிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. கிரீசை மட்டுமல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து அண்டை நாடுகளையும் இது பாதிக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் சராசரி வாழ்நாளும் அங்கே குறைகிறது.

கிரீசின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் இது போன்ற சுரங்கங்களில் கோஸ்டாஸ் போன்றவர்கள் தங்களது உடல்ரீதியான சிக்கல்களை தள்ளி வைத்துவிட்டு 847 டாலர் மாத ஊதியத்திற்கு பணிப் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக, 1976-ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 4000 மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டு அகதிகளாகிவிட்டனர்.

சிதிலமடைந்த வீடுகள், பசியால் வாடும் சில தெருநாய்கள், பாழடைந்த தேவாலயங்கள் மட்டுமே டோலிமைடாவிற்கு அருகே இருக்கும் மாவ்ரோபிகி (Mavropigi) கிராமத்தின் இன்றைய அடையாளம்.

அந்த கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி 2010 –ம் ஆண்டில் தொடங்கப்பட்டப் பிறகு பயத்தினால் பலர் வெளியேறிவிட்டனர். பள்ளிகள் நிரந்தரமாக அங்கே மூடப்பட்டன.

அங்கே எஞ்சியிருக்கும் 10 குடியிருப்புவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் அவரது மனைவியும் இருக்கின்றனர். “என்னுடைய மனைவியும் மற்றும் நாய்களும் இங்கே வசிக்கிறோம். வேறெங்கும் சென்று வாழ நான் விரும்பவில்லை. இது மட்டுமே என்னுடைய சொந்த இடம்” என்று கூறுகிறார் அரிஸ்டோக்ராதிஸ்.

நிலக்கரி தோண்டுவதற்காக மிக அண்மையில் கைவிடப்பட்ட மவ்ரோபிகி கிராமம் இடித்து தள்ளப்பட தயாராக இருக்கிறது.
நிலக்கரியைக் கொண்டு செல்லும் கொணரிப்பட்டையை(conveyor belt) சுற்றியிருக்கும் சாம்பலை அரசு மின்சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் துடைக்கின்றனர்.
அரசு மின்சக்தி நிறுவனத்தில் பணிப்புரியும் இளைஞர்களில் கோஸ்டாசும் ஒருவர். மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமெனில் சுரங்கத்திலிருந்து வெளிவரும் தூசுக்களையும் சாம்பலையும் நாள்தோறும் அவர் துடைக்க வேண்டும். ஊழியர்கள் 24/7 நேரமும் அச்சுரங்கத்தில் பணிப்புரிகிறார்கள்.
டோலிமைடாவின் வடப்பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் நிலக்கரி தோண்டப்படுவதை கோஸ்டாஸ் மேற்பார்வையிடுகிறார்.
கோஸ்டாஸின் கண்கள் தூசியினால் சிவப்பாகிவிட்டன. அதிகப்படியான மாசுபாட்டினால் பணியாளர்களும் அங்கே வசிக்கும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
அரசு மின்சக்தி நிறுவன உற்பத்திப் பிரிவு பணியாளர் ஒருவரின் தோற்றம் இது. அரசு மின்சக்தி நிறுவனத்தாலும் அதன் பங்குதாரர்களாலும் 10,000 க்கும் மேற்பட்டோர் அங்கே பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
வேலை நேரத்திற்குப் பிறகு நிலக்கரி கொண்டு செல்லும் கொணரிப்பட்டை அருகே அரசு மின்சக்தி நிறுவன ஊழியரான கியான்னிஸ் இருக்கிறார். விபத்துக்கள் அங்கே சாதாரணமானது. சில சமயங்களில் அபாயகரமாகவும் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுவாக அங்கே பின்பற்றப்படுவதில்லை. 1970-லிருந்து 106-க்கும் மேற்பட்ட மக்கள் பணியிடங்களில் பலியாகியுள்ளனர்.
மேற்கு மாசிடோனியாவின் சுரங்கமொன்றில் காணப்படும் ஒரு தொழிலாளி.
அரசு மின்சக்தி நிறுவன ஊழியர் ஒருவர் பரிசோதனைக்காக நிலக்கரி மாதிரியை சேகரிக்கிறார்.
சுரங்கத்தின் நடுவே கைவிடப்பட்ட ஒரு தேவாலயம். சுரங்கத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டப் பிறகு சரவாகி(Charavgi) என்ற கிராமத்தில் இது மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறது.
நிலக்கரி தோண்டுவதற்காக இடிக்கப்படத் தயராக இருக்கும் மாவ்ரோபிகி கிராமத்தின் கடைசி 10 குடிவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் ஒருவர். அரசு மின்சக்தி நிறுவனம் மாவ்ரோபிகியின் குடிமக்களை அதிகாரபூர்வமாக இடமாற்றம் செய்திருந்தாலும் சிலர் இன்னும் அங்கே வாழத்தான் செய்கின்றனர். “நாங்கள் சாவதற்காக சம்பாதிக்கிறோம்” என்கிறார் அவர்.
டோலிமைடாவில் நிலக்கரி தோண்டும் எந்திரத்தை இரு பணியாளர்கள் இயக்குகிறார்கள்.
மேற்கு மாசிடோனியாவிலிருக்கும்(Macedonia) இச்சுரங்கம் தான் பால்கன்(Balkans ) தீபகற்பத்திலேயே பெரியதும் மேலும் உலகின் ஆறாவது பெரிய சுரங்கமுமாகும்.
கோஸ்டாஸிற்கு 12 வயதாகும் போது புற்றுநோயினால் அவரது தந்தை மரணமடைந்தார்.
அழிவிற்குப்பிறகு, முடிவிலா கருப்பு நிலக்கரி சுரங்கங்களாக காட்சி தரும் டோலிமைடா.

நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: சுந்தரம்
மூலக்கட்டுரை: Life in the shadows of Greece’s coal mines

 

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்

2

தமிழ் நிலத்தின் வரலாறாக ராஜராஜனின் படையெடுப்புகள் குறித்த பிரஸ்தாபிப்புகளும், “முன் தோன்றி மூத்த குடி” என்பன போன்ற வெட்டிப் பெருமிதங்களுமே ஓரளவுக்கு ‘விவரம்’ அறிந்த தமிழர்களின் பொதுபுத்திப் பதிவுகளின் சாரமாக இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலை அண்ணாந்து பார்த்து ”முப்பாட்டன்மார்களின்” அறிவியல் தொழில் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயலும் வலதுசாரி இனவாத பெருமிதங்கள் “திருநள்ளாறு கோவிலைப் பார்த்து விண்கலங்களே தடுமாறுவதாக” வரும் வலதுசாரி மதவாத பிரச்சாரங்களுக்கு வெகு இயல்பாக பலியாவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தச் சூழலில் முனைவர் சி. இளங்கோ எழுதி அலைகள் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ள “தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை…” எனும் நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் மதிப்புரையில் மயிலை பாலு எழுதியிருக்கும் இந்த வரிகளே இந்நூலின் முக்கியத்துவத்தை மிக எடுப்பாக உணர்த்துகின்றது.

“மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது”

பல்லாயிரம் வருடங்களாக இத்தமிழ் நிலம் எவற்றையெல்லாம் தனக்குள் பொதிந்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடுவதற்கு இந்நூல் ஒரு அறிமுகக் கையேடாக உள்ளது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள், பானைகள், குகை ஓவியங்கள், கற்கருவிகள், உலோகக்கருவிகள், நாணயங்கள் போன்றவற்றைக் கொண்டு அந்தக் கால மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் குறித்த ஒரு சுருக்கமான சித்திரத்தை முன்வைக்க நூலாசிரியர் முயன்றுள்ளார்.

”ஏடறிந்த வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்கிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு அந்தக் காலகட்டங்களில் எம்மாதிரியான தொழிற்பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பதை அலசிச் செல்கிறது இந்நூல். குயவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள், உழவர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தை அச்சமூகத்தில் புழங்கிய பொருட்களைக் கொண்டு முகநூல் சகாப்தத்தின் மாந்தர்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்.

கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. இன்றைக்கும் பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலையால் தண்ணீர் குடித்தும் தமிழகத்தில் தங்களது கலவர அரசியலை வெற்றிகரமாக விதைப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளில் தமிழகத்தின் ”சமூக மரபணுவின்” பாத்திரத்தை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் உணர்த்துகின்றது.

அதே போல் மத்தியில் அதிகாரத்திற்கு வரும் காங்கிரசோ பாரதிய ஜனதாவோ தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளின் மேல் கணத்த கம்பளியைப் போர்த்தி மூட முயற்சிக்கும் காரணத்தையும் நம்மால் யூகிக்க முடிகிறது. கீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன, கீழடியில் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூடி மறைப்பதற்கு மத்திய அரசு ஏன் முயல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகளையும் அவைகளும் இவ்வாறே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றையும் தொகுப்பாக முன்வைக்கிறது நூல்.

ஒருபக்கம், இல்லாத சரஸ்வதி நதியைத் தேட நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டுகிறார் வளர்ச்சி நாயகன் மோடி , ஆடம்ஸ் மணல் திட்டை “இராமர் பாலம்” என்று நிரூபிக்க கடலுக்கு அடியில் துளை போட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, அயோத்தி பாபர் மசூதியின் இடிபாடுகளுக்குள் கற்பனைக் கதாபாத்திரம் இராமனின் பிறப்பைத் தேட தொல்லியல் அறிஞர்களை களமிறக்கியது பாரதிய ஜனதா அரசு – இப்படி பிற்போக்குத்தனங்களை நிரூபிக்க ஊருக்கு முந்தி நிற்கும் அதிகார வர்க்கமும், இந்துத்துவ கும்பலும் உண்மையான மக்களின் வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதற்கு கீழடியே சாட்சி.

ஏழாயிரத்துக்கும் மேல் கிடைத்துள்ள சான்றுகளில் வெறும் இரண்டே இரண்டு பொருட்களை மாத்திரம் கரிமச் சோதனைக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. அகழாய்வுக்கென தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 செண்ட் நிலத்தில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் அந்த ஆய்வை மேற்கொண்ட நேர்மையான அதிகாரியை மாற்றியது, அகழாய்வில் கிடைத்த பொருட்களை கடத்த முயற்சி என வரிசையாக தமிழ் மக்களின் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க மத்திய பாரதிய ஜனதா ஏவிவிட்டுள்ள சதிகளைக் குறித்து இந்நூல் எச்சரிக்கை செய்கிறது.

இந்துத்துவ பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்த்து முறியடிப்பதற்கு நம் தமிழ்ச் சமூகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் குறித்த அறிமுகம் மட்டுமல்ல – நம் சமூகத்தின் நரம்புகளுக்குள் எவ்வாறு பார்ப்பனிய நஞ்சு ஏற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில்  நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

மேலும் ஆர்வம் கொண்டவர்கள் இதே நூலின் 106ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள துணைநூல்களைத் தேடி வாங்கிப் படிக்கலாம்.

நூல் : தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்  – கீழடி வரை…
ஆசிரியர் : சி.இளங்கோ
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்,
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
பக்கங்கள் : 112
விலை : ரூ.80

ஆன்லைனில் வாங்க

 

ஒப்பந்த முறை தொழிலாளர் கூட்டமைப்புக்கு வழிகாட்டும் சென்னை கருத்தரங்கம் !

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

ற்காலிக வேலைகள், திடீரென்று வருகின்ற வேலைகள் தவிர தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற வேலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று 1970 ஆம் வருடத்தில் போடப்பட்ட “காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம்” சொல்லிக் கொண்டது. ஆனால் இன்றைய நிலவரம் என்ன? டாக்டரும் காண்டிராக்ட்; கம்பவுண்ட்ரும் காண்டிராக்ட்; கல்லூரி பேராசிரியரும் காண்டிராக்ட்; பஸ் டிரைவரும் காண்டிராக்ட்; எஞ்சீனியரும் காண்டிராக்ட்; மெஷின் ஆபரேட்டரும் காண்டிராக்ட்; கம்ப்யூட்டர் நிபுணரும் காண்டிராக்ட்; ஐ.டி ஊழியரும் காண்டிராக்ட்; எங்கும், எதிலும் காண்டிராக்ட் மயம். இதில் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என்கிற வேறுபாடு இல்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த விவசாயம், நெசவு, சிறுவணிகம், மீன்பிடித்தல் மற்றும் சிறுதொழில்களை அழித்து, கோடிக்கணக்கில் அவர்களை வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக்கி உள்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே காண்டிராக்ட் மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. இதே நோக்கத்தில் காண்டிராக்ட் முறைக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தி உரம் போட்டு வளர்க்கிறது, அரசு.

காண்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத்தான் நக்கி வருகின்றது. விதிமுறை மீறல், விபத்துகளில் கொத்துக் கொத்தான சாவுகள் ஆகிய எந்த குற்றத்திலும் காண்டிராக்ட் முதலாளிகளோ, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நேரடி முதலாளிகளோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. நீதிமன்றங்களே பெரும்பாலும், காண்டிராக்ட் முறையை ஆதரித்து தான் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. காண்டிராக்ட் முறையில் இருக்கும் சட்டமீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் காண்டிராக்ட் முறையிலான சுரண்டல்களை சட்டப்பூர்வமாக்கி விட்டன நீதிமன்றங்கள்.

எனவே, பணிநிரந்தரம், 8 மணிநேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடும்போதே சட்டம் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்தக் கைவிலங்கை உடைத்து வெளியேறுவதும், நமக்கான உரிமையை நிலைநாட்ட தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதும் தான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடிய, புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே நமக்குத் தேவை.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை என்பது வீணர்களின் பேச்சு. ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும்  முடிவு கட்ட முடியும்.

தோழர் அபர்ணா

இதனடிப்படையில், இந்திய அளவில் இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திட்டமிட்டன. இதன் முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது எனவும், கீழ்க்காணும் முழக்கங்கள் அடிப்படையில் 28.1.2018 அன்று கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

  • காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!
  • வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
  • 8 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய மறுப்போம்!
  • சமவேலைக்கு சமஊதியம் என்கிற உரிமையை அடைந்தே தீருவோம்!
  • முழுமையான பணியிடப் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்யப் போராடுவோம்!
  • வேலை பறிப்பு, பசி-பட்டினியில் தள்ளுகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
தோழர் பா.விஜயகுமார்

கருத்தரங்கமானது 28.1.2018 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள கேரளா சமாஜம் கட்டிடத்தில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கருத்தரங்கினை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் அபர்ணா, பு.ஜ.தொ.மு சார்பில் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார்,புதிய தொழிற்சங்க முனைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன், அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் சார்பில் தோழர் தபன் ஆகியாரைக் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் பிரதீப் ஆங்கிலத்திலும்,  , புதிய தொழிற்சங்க முனைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் கவுதம் மோடி இந்தியிலும், பு.ஜ.தொ.மு பொருளாளர் தோழர் விஜயகுமார் தமிழிலும் முன்மொழிந்தனர்.

கருத்தரங்கின்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும், தெலுங்கானாவின் அருணோதயா கலைக்குழுவினரது கலைநிகழச்சிகளும் நடைபெற்றன.ஒரு புதிய கருத்தாக்கத்தையும் நம்பிக்கையையும் இந்த கருத்தரங்கம் உருவாக்கியது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

4

ணி நிரந்தரத்திற்காக துணை பேராசியரிடம் 30 லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் ஆ.கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 03.02.2018 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இப்பல்கலைகழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக 2016 மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.

துணை வேந்தர் கணபதி

2016 ஆண்டு பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 84 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ஒரு பேராசிரியருக்கு 6௦ லட்சம் ரூபாய் என பேரம் பேசி தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா இறக்கும் வரை ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்ததால் உயர்கல்விச் செயலாளர் முதல், முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் என முறையாக ஊழல் ராஜ்ஜியம் சென்று கொண்டிருந்தது.

ஜெயலலிதா இறந்த பின் மன்னார்குடி மாஃபியா சசி கும்பலுக்கு ஊழல் பங்கு சென்றடையவில்லை என்பதால் கணபதி செய்த பணி நியமனத்தை நிறுத்தும் முயற்சியில் உயர்கல்வித்துறை ஈடுபட்டது. அவசர கடிதம் அனுப்பப்பட்டது. பதிவாளர் ஃபேக்ஸ் ஐ நிறுத்தி வைத்து தாமதமாகவே கொடுத்ததாகவும், அதனால் பணிநியமனம் செய்துவிட்டதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்போதைய பதிவாளர் பி.எஸ்.மோகன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் துணைவேந்தர் கணபதிக்கும் நேரடியான பேச்சு வார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டது. முடிவாக அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதில் முறைகேடுகளை முறையாக செய்துகொள்ள பணிக்கப்பட்டது.

உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்ட துறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது. இதனால் இங்கு மாணவர்களுக்கு வேறுதுறை பேராசிரியர்கள் நடத்தும் பாடம் தெளிவாக உள்வாங்கி கற்றுக்கொள்ள முடியவில்லை. உள்ளே சென்று கல்வி சம்பந்தமாக பேராசிரியரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லி புரியவைக்க அவர்களால் இயலவில்லை என்கின்றனர் மாணவர்கள்.

துணைவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து உதவிப் பேராசிரியர்கள் 112 பணியிடங்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் துணை வேந்தர் ஒவ்வொருவரிடமும் 30 முதல் 60 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நியமித்துள்ளார். இதற்குமுன்னர் இருந்த துணைவேந்தர் ஜேம்ஸ்பிட்சை கொங்கு வேளாள கவுண்டர் ஆதிக்க சாதியினரையே நியமித்ததாகவும் தற்போது கணபதி அவ்வாறு செய்யவில்லை என்பதால், இவருக்கு எதிராக பல்கலைகழகத்துக்குள்ளேயே ஆதிக்க சாதியின் பேராசிரியர்களை இவருக்கு எதிராக இருக்கும் பொது சுரேஷ் என்ற உதவிபேராசிரியர் நியமனத்தில் பேசியதொகையை ஒப்படைக்கும்படி தொல்லை கொடுத்தால், அவருக்கு பணம் கொடுக்கும் போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஊழல் பங்கு பிரிப்பதில் உள்ள சண்டை எனவும் கூறலாம்.

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சையும் இதே போன்று ஊழலில் ஈடுபட்டது, வெளிப்படையாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பது என்று மாவிலும் கொள்ளை! பனியாரத்திலும் கொள்ளை!  என அடித்து செயல்பட்டது ஊடகங்களால் அம்பலமானது. ஆனால்  ஊழலில் பங்கு அதிகார வர்க்கத்துக்கு ஆளும் கட்சிக்கும் சென்றுள்ளதால் அப்போது முறைகேடு வெளியே வரவில்லை. துணைவேந்தர் கணபதி அவ்வாறு பங்கு கொடுக்காமல் கூடுதலான ஆதிக்கசாதியின கவுண்டர்களை நியமித்ததாகவும், கைது நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள்.

துணைவேந்தர் நியமனம் ஆளுநர் பார்வையிலும், ஊழல்களிலும் உயர்கல்வி செயலர் என்று அனைவர் முன்னிலையில் தான் நடக்கிறது. பொறுப்புக்கு வந்தவுடனே மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை திருடி மாணவர்களுக்கு வஞ்சகம் செய்து கொள்ளையடிப்பது முதல் பல முகாந்திரங்களில் நடந்துள்ளது.

பாரதியார் பல்கலைகழகம்

துணைவேந்தர் கணபதியின் திருட்டு அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த வண்ணமே உள்ளது. 300 மையங்களில் தலா 10 லட்சம் வசூல் செய்து கொண்டு தொலைதூரக்கல்வி மையத்திற்கு பல்வேறு வெளிமாநிலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் நடத்துவதற்கு அனுமதி அளித்தது, சிண்டிகேட் தேர்தல் முறையிலும் முறைகேடு, என கடந்த காலத்தில் ஊடங்களில் சந்தி சிரித்தவை ஏராளம்.

துணைவேந்தர் கணபதியின் ஒருவர் மட்டும் அடித்தகொள்ளை அல்ல இது. கல்வித்துறை அடி முதல் நுனி வரை ஊழல்மயப்பட்டு அழுகி நாறுவதன் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே இந்த ஊழல். ஒரு பல்கலைக்கழகம் வருங்கால சமூகத்தை உருவாக்க கூடிய மாணவர்களை உற்பத்தி செய்து அனுப்பக் கூடிய இடத்தில் இருக்கிறது. சிந்தனை ரீதியாகவும் செயல்ரீதியாகவும் இப்பல்கலை மாணவர்கள், ஊழல்மய பாதிப்பால் கல்வி முடித்து சமூகத்தில் வாழும்போது அத்தகைய பண்புகளுக்கு அறிமுகமாவது எவ்வளவு பெரிய ஆபத்து?

இதுநாள்வரை கொள்ளை சம்பவம் நடக்காதது போலவும் தற்போதுதான் நடந்தது போலவும் அதிரடியாக கைது செய்து ஊழல்வாதிகளை தண்டிப்பது போல நாடகம் நடத்தும் பாவனையில் காட்டிக் கொள்கிறது அரசு. இந்நாடகத்திற்கு பின்னே ஆளும்வர்க்கம் நலன் இருக்கிறது. அது என்னவென்றால் மருத்துவத்துறையில் நடந்த ஊழலை சுட்டிக்காட்டி நம்மீது நீட் தேர்வை திணித்தார்கள். இதே போல பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கும் இதன் வழிகாட்டியாக உள்ள (UGC) ஒழுங்காக செயல்படாமல் முறைகேடுகள் நடப்பதால் அதை கலைத்துவிட்டு உயர்கல்வி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை HEERA (Higher Education Empowerment Regulation Agency) உருவாக்க போவதாக புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி அறிவித்துள்ளார்கள். எனவே இதுபோன்ற கைது அரசின் நிகழ்ச்சிநிரலில் உள்ள திட்டத்தை மக்கள் மீது திணிப்பதற்கும் நியாயப்படுத்தவும் பயன்படும்.

இவர்கள் உருவாக்கும் HEERA எனும் ஆணையத்தில் ஊழலில் ஊறித் திளைத்திருகின்ற அரசு அதிகாரிகள் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு கல்வி நிறுவன முதலாளிகள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இடம்பெறுவர். பேராசிரியர்கள், கல்வியாளர்கள் யாருக்கும் இடமில்லை. இனி பாடத்திட்டம், கட்டணம் என அனைத்தையும் ஆணையம் தான் தீர்மானிக்கும். ஆகவே இங்கு ஊழலும் ஒழியாது. கல்வியில் இந்துத்துவ சிந்தனையும் கார்ப்பரேட் அடிமை புத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் புதிய கல்வி கொள்கை நேரடியாக அமுல்படுத்தப்படும்.

எனவே எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் பாடையில் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை சவக்குழியில் புதைக்கின்ற விதமான போரட்டத்தை நடத்த வேண்டும். அதே வேளையில் கல்வி நிலையங்களால் முடிவெடுக்கும் அதிகாரம், நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய சின்டிகேட்களை கட்டியமைக்க வேண்டும். அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ள வேலையில் எஞ்சியிருக்கும் ஒரே வழி இதுவே…

செய்தி – நேரடி கள ஆய்வு
மக்கள் அதிகாரம்
கோவை


கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களை பறிமுதல் செய் !
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள் – அமைச்சர்களையும் சிறையிலடை !

நேர்மையான பேராசிரியர்களே! மாணவர்களே!
மாணவர் எதிர்காலத்தை – கல்வி தரத்தை லஞ்சப் பேய்களான துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் தீர்மானிப்பதா?

கிரிமினல் –  மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு நாமே நடத்துவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – 94451 12675


Confiscate the properties of the corrupt kovai bharathiyar university VC Ganapathi!
Send the officers and ministers who also took part in the corruption to jail!

To the honest professors and students!

  • Should we still allow the shamelessly corrupt VCs and professors to decide the quality of education and the future of our students?
  • Let us reclaim the education department from the corrupt criminal-mafia!

REVOLUTIONARY STUDENT and YOUTH FRONT
TAMILNADU – 9445112675

 

வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

2

யிரை கொடுத்து வேலை செய்வது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே வேலைக்காகத் தங்கள் உயிரைப் பறிகொடுத்த பலர் ஜப்பானில் இருந்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் பணியிடங்களில் ஏற்படும் மரணங்களைக் குறிப்பதற்கு தனியே `கரோஷி` என்று ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு.

ஜோயி டோக்னாங் என்பவர் ஜப்பானின் மத்தியப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜப்பானைப் பொருத்தவரை பணியாற்றுவது என்றால் காலை பத்து மணி முதல் ஆறு மணி வரை வேலை செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இதற்கெல்லாம் பயந்துதான் ஜோயி ஓடியோடி உழைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் மகளும் பிலிப்பைன்ஸில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் உங்களுடன் இணைந்து விடுவேன், பிறகு நாம் எல்லோரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜோயி. எனவே தற்காலிகமாக மனைவி, மகள் இருவரையும் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு வேலையில் கரைந்து போனார்.

ஜோயி தங்கியிருந்தது பலரும் ஒன்று சேர்ந்து வசிக்கும், குறைந்த வாடகைக் குடியிருப்பு ஒன்றில். அலுகலகத்திலிருந்து கிளம்பி தூக்கக் கலக்கத்தோடு சென்று படுக்கையில் விழுந்து புரண்டு படுப்பதற்குள் ஒலிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென்று வேலைக்கு விரைந்து சென்றாக வேண்டும். சிறைச்சாலை கைதிகளைப்போல ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைப் போலவே இருக்கும். எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே, பிறகு ஜப்பானுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று கனவு கண்டபடி உறங்கப்போனார்.
எழுந்திருக்கவேயில்லை ஒருநாள். காரணம் மாரடைப்பு. நித்தம் நித்தம் அனுபவித்த மன அழுத்தத்தின் காரணமாக இருதயம் செயலிழந்துவிட்டது. இது நடந்து ஏப்ரல் 2014-ம் ஆண்டில். ஜோயியின் வயது 27 மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் ஜோயியைப் போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் மரணம், சிலருக்கு மன அழுத்தம், சிலர் அமைதியாகத் தற்கொலை செய்துகொண்டனர்.

பணிச்சுமை தாளாமல் பெருகும் கரோஷி கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவர் அநேகமாக இறந்து விடுவார் என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் வெளிவருவதையும்கூட அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு 80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இப்படிப் பலியாகிறவர்கள் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு ஜப்பானின் டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றச் சென்ற நோயாவின் உற்சாகம் சில தினங்களுக்குள் வடிந்துவிட்டது. முதலையின் வாயைப்போல் கம்ப்யூட்டர் திரை அவரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டுவிட்டது. கண் சிமிட்டக்கூட நேரமில்லை. அடுத்து, அடுத்து என்று டெட்லைன்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இடையில் ஒருமுறை ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த நோயா உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக படுக்கையில் போய் விழுந்துவிட்டார். “அம்மா தயவு செய்து என்னைத் தூங்கவிடு. நான் தூங்கவேண்டும். என்னை எழுப்பாதே, ப்ளீஸ்!”

இரண்டு ஆண்டுகளில் நோயா இறந்துவிட்டார். கம்ப்யூட்டர் வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்றும் தன் மகனைப் பற்றிய பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்த அவர் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். தன் மகனின் அசலான பணி வாழ்க்கை எப்படியிருந்தது என்பது அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது. அறைக்குச் சென்று உறங்கக் கூட நேரமில்லாமல் பலமுறை நோயா தனது மேஜையிலேயே சரிந்து உறங்கியிருக்கிறார். மன அழுத்தத்தைக் குறைக்கப் பல்வேறு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஓய்வின்றி 37 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பல முறை பணியாற்றியிருக்கிறார். சரியான உறக்கம், சரியான சாப்பாடு, மன நிம்மதி எதுவும் இல்லை. மாத்திரைகள்தான் அவரைப் பிழைக்க வைத்திருந்தது. இறுதியில் அதே மாத்திரைகள் அவருடைய உயிரையும் பறித்துவிட்டன. ஜோயியைப் போலவே 27 வயது நோயா கரோஷிக்கு இரையாகிவிட்டார்.

ஆனா அதிக வேலைப்பளு என்னை கொன்றுடுகிறது? நீங்கள் மரணத்திற்கு பிறகு பதவி உயர்த்தப்படுவீர்கள்.

அடங்க மறுக்கும் பசியுடன் கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாதம் 100 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் தவித்திருப்பது தெரியவருகிறது.

ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல் ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக காலக்கெடுவை விதித்து ஊழியர்களை மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.

காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் அங்கீகாரமும் உண்டு. ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் முணுமுணுப்புகளும் எப்போதேனும் எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே சிறைபட்டுக் கிடக்கின்றன.

ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

எடுத்துக்காட்டுக்கு, சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. ஆனால், இதையும் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி கொலைகளுக்குக் காரணம் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.

இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். தனியார்களைப் பாதுகாக்க எதையும் செய்ய (அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு. அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

ஜோயி, நோயா, மட்சுரி ஆகிய பெயர்கள் வேண்டுமானால் நமக்கு அந்நியமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்களை வெவ்வேறு பெயர்களில் நாம் தினம் தினம் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

– மருதன்

புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !

2

ன்றைக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என்று தினம்தோறும் பிரச்சனையை எதிர்க்கொண்டு விழிபிதுங்கி வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இப்படி தினம்தோறும் மக்கள் கோவணத்தை உறுவி வரும் அரசு. மறுபக்கத்தில் போலீசை வைத்து சட்டபூர்வ வழிப்பறியை செய்துவருகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்

4/2/2018 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் இளவரன், மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்து அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகனங்களை பிடித்து பணம் வசூலித்து கொண்டு இருந்தனர். அப்போது பெரியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ஜெயவேல் அந்த வழியாக வீட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை திடீரென மறித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன். வண்டியை நிறுத்த தடுமாறிய ஜெயவேல் சற்று தள்ளி நிறுத்தியுள்ளார். நான் நிறுத்த சொல்லியும் ஏன் தள்ளி நிறுத்தினாய் என்று ஜெயவேலை நடுரோட்டில் அடித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன்.

எதற்காக அடித்தீர்கள் என எதிர்த்து கேட்ட ஜெயவேலுவை, ” என்னையே கேள்வி கேட்கிறாய நாயே வாட நான் யார் என்று காட்டுகிறேன்” என்று காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று நான்கு போலீசார் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்து நேற்று பெரியாம்பட்டியில் ஆத்திரப்பட்ட சில இளைஞர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டது மட்டுமல்ல. போலீசார் மன்னிப்பு கேட்க கூறி சாலையை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனூடாக பொதுமக்களும் போலீசாருக்கு எதிராக இணைந்து கொண்டனர். இதன்பிறகே ஜெயவேலுவை விடுவித்துள்ளனர். அவர் தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது எதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைதான். போலீசின் வழிப்பறியும், லஞ்சமும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான்.

போலீஸ் என்றால் நேர்மையானவர்கள், மக்களை காப்பற்றுபவர்கள், தவறை கண்டுபிடித்து தண்டிப்பவர்கள் என்ற பிம்பத்தை சினிமாவும், ஊடகங்களும் எவ்வளவுதான் உருவாக்கினாலும். காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுக்கவோ அல்லது பிரச்சனையை கொண்டு செல்லவோ அச்சப்படுகின்றனர். போலீசார்  பற்றி தமிழகமெங்கும் தினம்தோறும் வரும் செய்திகளை பார்க்கும் போது வழிப்பறி திருடனை கண்டு அஞ்சுவது போல், போலீசை கண்டு அஞ்சுகின்றர் மக்கள். இருசக்கர வாகனம் ஒட்டவே பயப்படுகின்றனர். தான் சம்பாதித்த ஒருநாள் கூலியை பறித்து கொள்வார்களே என்ற அச்ச உணர்வோடே செல்கின்றனர்.

பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்ட பிறகு  வேலைக்கு சென்றால் சம்பளத்தில் பாதியை பேருந்துக்கு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால், தினக்கூலிகளாக செல்லும் தொழிலாளிகள் வேலைக்கு சென்றுவர 100 ரூபாய் தாண்டுகிறது. இதற்கு பதிலாக இருசக்கரம் வைத்திருக்கும் சிலர் இருவராக சேர்ந்து பெட்ரோல் போட்டு கொண்டு வேலைக்கு செல்கின்றனர். போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இந்த வழிப்பறி மூலம் பிரச்சனை வீதிக்கு வருகிறது. கேள்வி கேட்க முடியாத நபர்களாக இருந்தால் மிரட்டியே பணம் பறிக்கின்றனர். ஒரு உதவி ஆய்வாளர் நாள் ஒன்றுக்கு 50 பேரிடம் தண்டம் வசூலில் ஈடுப்பட வேண்டும் என்று மேலிட உத்தரவாம். காவல் துறை என்றாலே லஞ்சம், ஊழல், பொய் வழக்கு, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை என்று போலீசின் குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம். இப்படி குற்றங்களில் ஈடுப்படும் போலீசாரை தண்டிக்க முடிவதில்லை. மாறாக அவர்களிடமே மீண்டும் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரத்தை வாரி வழங்குகின்றனர். போலீசு என்றாலே கிரிமினல் கும்பல் தான். எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்லகொல்லியாக இருக்க முடியும். போலீசு என்ற கட்டமைப்பையே கலைக்கப்பட வேண்டும். அதுதான்  நிரந்தர தீர்வாகும்.

தோழர்  கோபிநாத்,
மக்கள் அதிகாரம்
தருமபுரி, 9943312467

 

அரிசி கிலோ 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம் ! கருத்துப் படங்கள்

0

அரிசி 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம்..!!

அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40-50 ரூபாய்.
ஆனால், சிம்கார்டோ இலவசம்..!!

***

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால், பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

படங்கள் : வேலன்

இணையுங்கள்:

 

சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

7

சோடாபுட்டி ஜீயர் புராணம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுவினர் வழங்கும் சோடாபுட்டி ஜீயர் புராணம் !

ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து இழிவுபடுத்தியதாக எச். ராஜா ஒரு அவதூறு பிரச்சாரத்தை துவக்கினார். அதை வைத்து இந்துமதவெறியை  ஊட்டும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்கள் செய்தனர். தினமணி வைத்தியநாதய்யரை காலில் விழ வைத்த ஜீயர் பிறகு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். பின்னர் திடீரென்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வைரமுத்து மன்னிப்புக்கு பிப்ரவரி 3ம் தேதி வரை கெடு வைத்தார்.

அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதவெறி பிக்கப் ஆகாத அதே நேரத்தில், பாஜக மீதான தமிழக மக்களின் வெறுப்பை இந்த விவகாரம் அதிகப்படுத்தியது. கொசுறாக சின்ன சங்கரனின் தமிழ்த்தாய் அவமதிப்பு இதற்கு பெரும் உதவியையும் செய்தது. ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !

1

லகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டதால் ஏழைகள் ஏன் பயன்பெற மாட்டார்கள்.  தனியார் துறை மூலமாக சுகாதார அமைப்பை வீடுகளுக்கே கொண்டுவருவதாய் இந்த அரசு பீற்றுகிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல

நடப்பாண்டின் (2018) வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக விதந்தோதப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்களை மேம்போக்காக பார்த்தாலே வரவு செலவு திட்டத்தில் கொண்டாடத்தக்க அம்சம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. உண்மையில் “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதில் எவ்விதத் தெளிவான பார்வையும் அரசுக்கு இல்லாததையே இந்த வரவு செலவு திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிதியமைச்சரின் உரையில் இரண்டு முதன்மையான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக சுகாதார அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மற்றும் முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி நபர்கள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி – 2018 பட்ஜெட்

அந்த இரண்டாவது அம்சம் சுகாதாரத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இன்றைய தலைப்பு செய்திகளாகிவிட்டது. ஆனால் இது ஒன்றும் புது முயற்சியல்ல. இது சுகாதார வசதிகளை மேம்படுத்தவோ அல்லது கைச்செலவை (out-of-pocket expenditure) குறைக்கவோ செய்யாது.

தனியார் துறைக்கு இத்திட்டம் பெரிய உந்துதலா?

சுகாதாரத்துறைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கூச்சலை ஒருவர் கேட்டால் ஏதோ வரவு செலவு திட்டத்தில் இதற்கு அதிகமாக [நிதி] ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று நம்பி விடுவார். மாறாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 2018-19-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 52,800 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் 51,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒப்பீட்டளவில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே அதிகம்.

ஆகையால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது உண்மையில் சுகாதாரத்துறைக்கு வரவு செலவு திட்டத்தில் சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது.
இத்தலையாய திட்டத்தின்(flagship programme) கீழ் புதிதாக 1.5 இலட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கும் பொருட்டு சுமார் 1,200 கோடி ரூபாயை தாரளமாக வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். அதாவது ஒவ்வொரு மையத்திற்கு தலா 80,000 ருபாய் கொடுக்கப்படும். எப்படி இருப்பினும் இது ஏற்கனவே 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் இடம் பெற்றிருப்பதால் இது ஒன்றும் புதிய அறிவிப்புமல்ல. சென்ற ஆண்டின் இந்த அனுபவத்தைப் பற்றி எதுவுமே அறிக்கைகளில் இல்லை அல்லது உண்மையில் இது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை.

10 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு.

மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், பற்றாக்குறையான ஊழியர்கள், போதிய உபகரணங்கள் மற்றும் மருத்துகள் இல்லாததாலேயே துணை மையங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31, 2012 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊரக சுகாதார புள்ளிவிவரங்களின்படி, 1,56,231 துணை மையங்களில் 17,204 (11%) மட்டுமே இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றுகின்றன. 20 விழுக்காட்டு மையங்களில் போதுமான தண்ணீரும் 23 விழுக்காடு மையங்களில் போதுமான மின்சாரமும் கிடையாது. 6,000-க்கும் அதிகமான மையங்களில் பெண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 1,00,000-க்கும் அதிகமான மையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 4,243 மையங்களில் இருவருமே கிடையாது. குறைந்தது இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இவற்றை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக ஒருவர் கருத முடியும். இந்த அற்ப நிதியை வைத்துக்கொண்டு எப்படி இதை சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

இப்பொழுது இரண்டாவது அறிவிப்பான “அரசு உதவி பெரும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை” பார்க்கலாம். இந்த அறிவிப்பு இதே நிதியமைச்சரால் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் கூறப்பட்டது கண்டிப்பாக நினைவுக்கூறப்பட வேண்டும். “புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்றை அரசு தொடங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு அளிக்கும்” என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை 30,000 ரூபாயாகவே உள்ள நிலையில் தற்போது அதை ஐந்து இலட்சமாக்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு வளங்கப்படுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.

இது ஒருப்போதும் செலவிடப்படவில்லை மாறாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை விட குறைவாகவே சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது சிறு அளவு அதிகரிக்கப்பட்டு 2,000 கோடி ரூபாயாக திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் யோக்கியதையை இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகங்கொள்ள செய்கின்றன.

இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY)

மறுபுறம் கல்வி வரி (education cess) 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் இதன்மூலம் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் வரவு செலவு திட்டம் கூறுகிறது. ஒருவேளை இக்கூடுதல் வருவாயில் 25 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 2,750 கோடி ரூபாய் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் 1,250 கோடி ரூபாய் மட்டுமே. இந்த வரவு செலவு திட்டம் என்ன செய்வது போல் தோன்றுகிறது? ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கூடுதலான பணத்தை பறித்து தனியார் சுகாதாரத்துறைக்கு கொடுக்கிறது. இச்சூழலில் [தனியார்] சுகாதார மற்றும் காப்பீடு நிறுவன பங்குகளின் விலை உயர்வானது இத்திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்று கட்டியங்கூறுகிறது.

ஏழைகளுக்கான சுகாதாரமா இல்லை பெருநிறுவனுங்களுக்கான ஆதாயமா?

கைச்செலவை குறைப்பதை அடிப்படையாக கொண்டு, தனியார் மருத்துவ காப்பீட்டின் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கு தனியார் சுகாதாரத்துறையை நம்பி இருப்பது என்பது ஒட்டுமொத்த மருத்துவ செலவினங்களையும் அதிகரிக்கிறது மேலும் இது பெரும்பான்மையான மக்களை தவிர்க்கிறது மற்றும் சரியான முறையான [மருத்துவ] நடைமுறைகளை சிதைக்கிறது என்பது உலகம் முழுதுமான அன்பவங்களாக இருக்கிறது. மக்களுக்கு உடல்நலத்தை வழங்க முயற்சிகள் செய்தால் கூட அதை தனியார் துறை மூலமாக செய்யவே இந்த அரசு நினைக்கிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல.

கைச்செலவை குறைப்பதற்கு காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் இந்தியாவில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. இத்திட்டம் கைச்செலவையும் குறைக்கவில்லை மருத்துவத்தையும் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை RSBY-யைப் பற்றிய பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன. RSBY-யோ அல்லது புதிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமோ உள்நோயாளிகளுக்கான காப்பீடை மட்டுமே அளிக்கின்றன. அடிப்படை மருத்துவத்திற்கோ மக்கள் பொது சுகாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவை போதுமானவையல்ல மேலும் அதிக வசதிகள் தேவைப்படுகிறன. இது கைச்செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களில் 67 விழுக்காடு கைச்செலவின் மூலமாகவே செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக 63 விழுக்காடு வெளிநோயாளிக்கான பராமரிப்பு செலவாகவே இருக்கிறது.

RSBY (மற்றும் ஆந்திர மாநில ஆரோக்யஸ்ரீ உள்ளிட்ட மாநில திட்டங்கள்) போன்ற காப்பீட்டுத் திட்டங்களைப் பாத்தாண்டுகளாக ஊக்குவித்து வந்த போதும் கைச்செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனையில் சேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த 1.2 விழுக்காட்டினருக்கும் நகர்புறத்தை சேர்ந்த 6.2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே செலவு ஈடு (Reimbursement) செய்யப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்த சுந்தரராமனும் முரளீதரனும் நிறுவுகின்றனர். காப்பீடு திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும் ஒன்று அவை ஏழை மக்களை சேரவில்லை அல்லது போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கவில்லை என்பதற்கு சான்று இருக்கிறது. உள்நோயாளிக்கான கைச்செலவை குறைக்கவோ அல்லது உள்நோயாளிக்கான செலவின் அளவிலோ RSBY எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதை அனுப் கரன் மற்றும் ஏனையவர்களின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு ( 40% மக்கள்) மட்டுமே அதுவும், உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தாமல் காப்பீட்டின் மீதான அரசின் அக்கறையானது ஒருபுறம் சுகாதாரத்திற்கு அரசு குறைந்த நிதியை ஒதுக்குவதற்கும் மறுபுறம் தனியார் துறை ஏழைகளின் உடல் நலப்பிரச்சினைகளை காசாக்குவதற்கும் இசைவளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதியிலேயே மொய்த்துள்ளதால் காப்பீடு திட்டங்கள் யாவும் கிராமப்புற ஏழைகளை சேர்வதில்லை என்று மாநில காப்பீடு திட்டம் மற்றும் RSBY திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இல்லை:

உடல்நலத்திற்கான கைச்செலவானது இந்திய மக்களை கவ்வியிருக்கும் முதன்மையான சிக்கல் என்பது பலரால் சரியாக உணரப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் (உடல்நலத்திற்கான கைச்செலவினால் 7 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே விழுகின்றனர்) முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்புதிய திட்டமானது எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் உலகாளாவிய உடல்நலப்பாதுகாப்பை (universal health coverage) நமக்கு வழங்கப்போவதில்லை. உலகளாவிய உடல்நலப்பாதுகாப்பு அதன் உள்ளார்ந்த பொருளில் அனைத்து விதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்குகிறது. இக்காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு (10 கோடி அல்லது 40% மக்கள்) மட்டுமே அதுவும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக குறைந்தது 2.5 – 3 விழுக்காடாக நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஏரளமான பல்கலைக்கழக கட்டுரைகள், அரசாங்க குழுக்களின் பரிந்துரைகள், தேசிய சுகாதார கொள்கை மற்றும் இன்ன பிற அனைத்தும் கூறுகின்றன. ஆயினும் ஆண்டாண்டுகளாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.1-1.2 விழுக்காடாகவே இருக்கிறது. தலைப்புச்செய்திகள் தவறாக கூறுகின்றன – இந்த வரவு செலவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. இது குழந்தைகள் இறப்பிலும் பேறுகால மரணங்களிலும் உலகில் முன்னிலையாக இருக்கும் ஒரு நாடு தன்னுடைய சொந்த மக்களின் உடல்நலத்திற்காக ஏனைய நாடுகள் செலவிடுவதில் பாதி மட்டுமே செலவு செய்வதைப் பற்றியது – அரசாங்கம் மாறி அரசாங்கம் வந்தாலும் இது தன்னுடைய சொந்த மக்களுக்கான உடல்நலத்திற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

– தீபா சிங்
அம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி, டெல்லி.
தமிழாக்கம்: சுந்தரம்
நன்றி: The Wire

 

மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !

0

ற்ற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

பொதுவாக நம்மைச் சுற்றிய உலகை சில விதிகளையும் நிகழ்முறைகளையும் கொண்ட கண்ணோட்டத்தை பயன்படுத்தி புரிந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பிறகு இப்போது திரட்டப்படும் தரவுகளின் அளவு பிரம்மாண்டமாக உயர்ந்து வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் திரட்டப்படும் தரவுகளின் அளவு 2013-ல் 4.4 லட்சம் கோடி ஜி.பியாக இருந்தது. இது 2020-ல் 44 லட்சம் கோடி ஜி.பியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரும் அளவிலான தரவுகளை திரட்டுவதற்கும், சேமிப்பதற்கும், அவற்றை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கவும் தேவைப்படும் உத்திதான் செயற்கை நுண்ணறிவு.

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை உலகெங்கிலும் உள்ள பல கோடி நோயாளிகளின் மருத்துவ பதிவுகள், சிகிச்சை தொடர்பான விபரங்கள், உடலில் பொருத்திக் கொள்ளும் உடல்நிலை கண்காணிப்பு கருவிகள், உணர்விகள் பதிவு செய்யும் தரவுகள் திரட்டப்படுகின்றன. பெரும் அளவிலான இந்தத் தரவுகளை பயன்படுத்தி நோயாளிகளின் தேவைகளையும், பழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை வடிவமைப்பது சாத்தியமாகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ செயலிகள் (Apps) பல உருவாக்கப்பட்டு வருகின்றன.

வழக்கம் போல, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஐ.பி.எம் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாட்சன் என்ற கருவி.

ஐ.பி.எம் வாட்சன் புற்றுநோய் மருத்துவர்களுக்கான ஒரு தனிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவரின் குறிப்புகளிலும், சோதனை அறிக்கைகளிலும் உள்ள தகவல்களை உள்வாங்கி குறிப்பிட்ட சிகிச்சை முறையை பரிந்துரைக்க வல்லதாக வாட்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் முந்தைய வாழ்நிலை, மருத்துவ அறிவு, பிற ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் இவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டிய பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண்கிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் இன்னொரு மென்பொருள் மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை). கதிரியிக்கவியலிலும், இருதயவியலிலும் படங்களை அலசி ஆய்வு செய்து பிரச்சனைக்குரிய பகுதிகளை மனிதர்களை விட கூடுதல் துல்லியத்துடன் அடையாளம் கண்டு நோயை கண்டுபிடித்து சொல்கிறது மெடிக்கல் சீவ்.

ஐ.பி.எம்-க்கு போட்டியாக டெல், எச்.பி, ஆப்பிள், ஹிட்டாச்சி, லுமினோசோ, அல்கெமி ஏ.பி.ஐ, டிஜிட்டல் ரீசனிங், ஹை ஸ்பாட், லுமியாட்டா, சென்டியன்ட் டெக்னாலஜிஸ், என்டெர்ரா, ஐ.பிசாஃப்ட், நெக்ஸ்ட் ஐ.டி என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் குதித்துள்ளன.

இவ்வாறு மருத்துவத் துறை மேலும் மேலும் பெரிய கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று, நிதி மூலதனத்தின் லாப வேட்டைக் களமாக மாற்றப்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள்

சமீபகாலங்கள் வரை நோய் கண்டறியும் கணினி செயலிகள் குறிப்பிட்ட நோய்களை இலக்காக வைத்து அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட முன் ஊகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பான செயலி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. எனவே அவற்றை மிகக் குறுகிய வரம்பில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அவற்றின் பலனும் குறைவாகவே இருந்தது. எனவே அவை மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு மாறாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள் உடல் முழுவதுக்குமான பல வகை நோய்களை கையாள முடிவதோடு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் போன்ற அனைத்து வகையான கருவிகளின் படங்களையும் அலசும் திறனை கொண்டுள்ளன.

மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை)

மரபணுவியலிலும், மரபணு ஆய்விலும் பெரும் அளவிலான மரபணுவியல் தகவல்களையும் மருத்துவ பதிவுகளையும் கொண்ட தரவுத் தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க போக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

மனித ஜீனோம் திட்டத்தின் தந்தைகளில் ஒருவரான கிரெய்க் வென்டர் ஒரு நோயாளியின் டி.என்.ஏ-வின் அடிப்படையில் அவரது உடல் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும் மென்பொருளை உருவாக்கி வருகிறார். Human Longevity (மனித வாழ்நாள் நீட்டிப்பு) என்ற அவரது நிறுவனத்தின் மூலம் அவர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜீனோம் வரிசைப்படுத்தலையும், முழு உடல் ஸ்கேனையும், விபரமான மருத்துவ பரிசோதனையையும் வழங்குகிறார். இந்த ஒட்டு மொத்த நடைமுறை மூலம் புற்றுநோய், இரத்தம் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது.

நோயாளிகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந் தரவுகளை பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான உதாரணம், பெர்க் ஹெல்த் என்ற போஸ்டனைச் சேர்ந்த உயிர்மருந்து நிறுவனம். தரவுகளை அகழ்ந்து ஒரு சில மக்கள் ஏன் நோய்களிலிருந்து சமாளித்து பிழைத்து விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் தற்போதைய சிகிச்சைகளை மேம்படுத்துவதோடு புதிய சிகிச்சைகளை உருவாக்கவும் முடிந்தது.

அறுவை சிகிச்சை துறையில் டாவின்சி சி.எச்.டி என்ற கருவி அறுவை சிகிச்சை தானியக்க கருவிகளை உருவாக்கியுள்ளது. உடல் உள் உறுப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீச்சிறு அளவு துளைகள் மூலம்ரோபோக்களை அனுப்பி வைத்து மருத்துவர்கள் உள் உறுப்புகளின் நிலையை துல்லியமாக கண்டு கொள்வதை சாத்தியமாக்குகிறது.

இன்னும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

டாவின்சி சி.எச்.டி முறை

இங்கிலாந்தைச் சேர்ந்த பாபிலோன் என்ற இணைய மருத்துவ சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலியை (App) நாடி என்னென்ன பிரச்சனை என்று ஒரு மருத்துவரிடம் சொல்வது போல அதனிடம் விளக்க வேண்டும். உங்கள் பேச்சை உணர்ந்து கொண்டு அதிலிருக்கும் நோய் அடையாளங்களை கண்டறிந்து, ஏற்கனவே உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கும் மருத்துவ விபரங்களையும், பொதுவான மருத்துவ தகவல்களையும் பயன்படுத்தி உங்களுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று சொல்கிறது அந்தச் செயலி. அதை தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் பாபிலோன் என்ற நிறுவனம் தனக்கு சந்தா கட்டும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் சேவையை வழங்குகிறது. காசிருப்பவனுக்கே சேவை.

நோயாளி மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி சொன்ன நேரத்தில் சொன்ன மருந்தை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று தகவலை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

இத்தகைய செயலிகள் எதற்கு பயன்படும்?

நிதிமூலதன நிறுவனங்களும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும்தான் இது முதன்மையாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, மருந்தக சோதனைகள் மூலம் மருந்துகளை உருவாக்குதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பிடிப்பது, பல நூறு கோடி டாலர் செலவு பிடிப்பது. இந்த நிகழ்முறையை வேகப்படுத்துவதும், செலவுகளை குறைப்பதும் இன்றைய மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளின் விலையை தீர்மானிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் செய்த செலவை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன.

ராயல்டி ஃபார்மா என்ற நிறுவனம், ‘தான் எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிப்பதிலோ, உற்பத்தி செய்வதிலோ விற்பதிலோ ஈடுபடுவதில்லை’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமை அதன் வசம் உள்ளது. இந்த உரிமைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மதிப்பு $1500 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.

தமது மருந்துகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் சம்பாதிப்பதற்காக விற்பனை முயற்சிகளிலும், விளம்பரங்களிலும் பணத்தைக் கொட்டுகின்றன மெர்க், கிளாக்சோ ஸ்மித்கிளைன், நோவார்டிஸ், ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளில் சோதனைச் சாலை எலி போல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

இது போன்று மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீதான உரிமத் தொகையை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்று கொழுக்கும் நிதி சூதாட்ட நிறுவனங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் கொள்ளைக் கூடாரமாக நிற்கின்றன, மருத்துவமனைகள்!

மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் எப்படி உள்ளன?

மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன உயர்திறன் கொண்ட மருத்துவக் கருவிகள், அங்கு பணிபுரியும் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கான கடவுச் சீட்டு பணம்தான்.
அமெரிக்காவில் மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியாத முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆளரவமற்ற சாலை ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் சென்னை முதல் சிக்காகோ வரை எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்கின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் தன் வசப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகம்தான் இது. கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் தமது புதிய மருந்துகளை சோதித்து பார்க்கும் சோதனை எலிகளாக மக்களை பயன்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சேவை பணம் படைத்த மேட்டுக் குடியினருக்கு மட்டும் கிடைப்பதாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெரும் லாபத்தை குவிக்கும் ராயல்டி ஃபார்மா போன்ற நிதி சூதாட்ட நிறுவனங்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவம்.

மருத்துவம் சார்ந்த செயலிகள் ராயல்டி ஃபார்மா போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று எந்த மருந்துகளின் காப்புரிமையை வாங்கினால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

சென்ஸ்.லி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மோலி என்ற செயற்கை நுண்ணறிவு செயலி நோயாளி எப்படி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளவும் உரிய சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. பணக்கார நோயாளிகள் மருத்துவரை பார்த்து விட்டு வந்த பிறகு அடுத்த தடவை மருத்துவரை பார்க்கப் போவது வரை இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கவனிப்பையும், நோய் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பையும் வழங்குகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவிலியரை பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுப்பதை விட மென்பொருள் செயலி மூலம் வேலையை நிறைவேற்றி லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயலுகிறது முதலாளித்துவம்

பிற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கவும், உழைக்கும் மக்களை விலக்கி வைக்கவும், உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுத்தப்படுகிறது.

ரோபோ (robot) என்ற செக் மொழி சொல்லின் பொருள் அடிமை என்பதாகும்.

அதாவது ரோபோக்கள் என்பவை சிக்கலான செயல்களை தாமாகவே செய்யக் கூடிய எந்திர அடிமைகள்.

‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது. எந்திரங்களை இயக்கும் பணியில் அமர்த்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தின் மூலம் வீட்டில் பாத்திரம் கழுவ எந்திரம், துணி துவைக்க எந்திரம், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய எந்திரம் என்று வாங்கி விடலாம். ஆனால், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் 10-12 மணி நேரம் உழைத்து மூலதனத்துக்கு உபரியை வாரி வழங்கினால்தான் அத்தகைய வாழ்வு சாத்தியமாக இருக்கும். எனவே, உண்மையில் ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய் விடும்.

மறுபுறம், தனது லாப ஈட்டலுக்கு தேவையில்லாத பெரும்பாலான உழைக்கும் மக்களை உபரி உழைப்புப் பட்டாளமாக சந்தையில் குவித்து பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகரிக்கச் செய்யும் மூலதனம்.

தொழில்நுட்பங்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்தி உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் பேரழிவிற்கு தள்ளுகின்றன என்பது கடந்த 200 ஆண்டு கால அறிவியல் வரலாற்றின் அனுபவம்.

தொழில்நுட்பங்களை அவற்றை படைத்த, அவற்றை பயன்படுத்துகின்ற பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே இந்த உலகையும் உலக மக்களையும் மூலதனச் சுரண்டலில் – ஆதிக்கத்தில் இருந்து நாம் காப்பாற்ற முடியும்.

– குமார்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

21

ரு பொருள் வேண்டும் என்று நீங்கள் நினைத்து முடிப்பதற்குள் அலாவுதின் அற்புத விளக்குபோல் அதை உங்கள்முன் தோன்றச் செய்ய என்ன செய்யவேண்டும்? அமேசானின் கவலையெல்லாம் இது ஒன்றுதான். வேகமாக, இன்னும் வேகமாக, மேலும் வேகமாக வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தங்களுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்பது அமேசானுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேகத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். வேகத்தைக் கூட்டக்கூட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அதன்மூலம் லாபமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்திலிருந்து ஒரு பண்டத்தை இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு எளிய நிறுவனமாகத் தொடங்கிய அமேசான் இன்று உலகையே தன் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப் மட்டுமே தெரிகிறது என்பதால் இப்படி முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

உலகம் முழுக்க பல்லாயிரம் தொழிலாளர்கள் சரக்கு அறைகளில் அமர்ந்து நமக்கான பண்டங்களைத் தனித்தனியே பிரிக்கிறார்கள். மனிதர்கள்தான் பாக்கிங் வேலையையும் செய்யவேண்டியிருக்கிறது. முகவரியைச் சரி பார்த்து பார்சலில் ஒட்டுவதும் தொழில்நுட்பம் அல்ல, மனிதர்கள். எது எங்கே போகவேண்டும் என்பதையும் எப்போது போகவேண்டும் என்பதையும் மனிதர்களே முடிவு செய்கிறார்கள். மனிதர்களே பார்சல்களை வண்டிகளில் போட்டு அனுப்புகிறார்கள். மனிதர்களே நமக்கு டெலிவரியும் செய்கிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் நாம் இவர்களை மட்டுமே நேரடியாகப் பார்க்கிறோம். மற்றவர்களின் முகம், பெயர் நமக்குத் தெரியாது. அமேசான்தான் நமக்குத் தெரிந்த ஒரே முகம். அந்த முகத்தை நாம் மொபைலில்தான் பெரும்பாலும் பார்க்கிறோம் என்பதால் தொழிலாளிகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

நாம் மட்டுமல்ல அமேசானும்கூடத் தொழிலாளர்கள் குறித்து அக்கறையுடன் சிந்திக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளர்கள் எவரையும் அமேசான் தன்னுடைய தொழிலாளர்களாக பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. தன்னுடையை தேவையை செய்து முடிக்கும் பொருட்டு, உலகின் எந்த ஒரு மூலையிலும், எந்த ஒரு நிறுவனத்தையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இவர்களுக்கு வேலைநிரந்தரம் கிடையாது; உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடையாது. மேற்படி நிறுவனம் தனது தொழிலை வேறு ஊருக்கு மாற்றிவிட்டாலோ, வேறு ஒரு இடத்தில் இதைவிட மலிவான ஊதியத்துக்கு ஆள் கிடைத்துவிட்டாலோ இந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும். இதனை அவுட் சோர்சிங், அதாவது அயல்பணி என்கின்றன, பன்னாட்டுக் கம்பெனிகள்.

தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

அமேசான் உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் உலகெங்கும் தங்களது கிளைகளை வேர்பிடிக்க வைக்க அயல்பணி தொழிலாளர்களையே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இவ்வாறு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் அயல்பணி வேலைமுறையில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரு மாதங்களுக்குமுன்பு வேலை நிறுத்தத்தில் இறங்கினர். காரணம் என்ன? இங்கே தீபாவளி, பொங்கல் போல் அமெரிக்காவில் நன்றியறிதல் நாள் என்பது ஒரு மிகப் பெரிய கொண்டாட்ட தினம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஆபிரஹாம் லிங்கன் ஆரம்பித்து வைத்த வழக்கம் இது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல் இதையும் அமெரிக்கர்கள் விமரிசையாக வரவேற்று மகிழ்வது வழக்கம்.

இந்த நன்றியறிதல் முடிந்த மறுதினமான வெள்ளிக்கிழமையை ”கறுப்பு வெள்ளிக்கிழமை” என்று அழைக்கிறார்கள். இதற்கு இன்னொரு பெயர், பிரம்மாண்டமான ஷாப்பிங் தினம் என்பதாகும். இந்தத் தினத்தின்போது உள்ளூர் பெட்டிக்கடை தொடங்கி வானுயர்ந்த மால்கள்வரை எல்லாவிடங்களிலும் மாபெரும் கழிவுகள் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். நள்ளிரவில்கூட கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்வார்கள். மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். கடைகளிலும் மால்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்பே இதற்குத் தயாராக ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கமான பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பணியாற்றும்படி இவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். டார்கெட் அச்சுறுத்தல்களும் பலருக்கு இருக்கும். அவசரம் என்றால்கூட விடுமுறை கிடையாது. பக்கத்து கடையைவிட அல்லது போட்டி நிறுவனத்தைவிட அதிக லாபம் ஈட்டவேண்டும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் அக்கறை கொண்டிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் நிலை குறித்து யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு அவகாசம் இருக்காது.

அமேசானிலும் இதே நிலைமைதான். அமேசான் என்னவோ ஆன்லைன் நிறுவனம்தான். ஆனால் உலகம் முழுக்க பல நாடுகளில் பெரிய பெரிய சரக்கு கிடங்குகளை வாடகைக்குப் பிடித்து வைத்து அங்கே பணியாளர்களை நியமித்து அவர்கள் வாயிலாகவே உலகம் முழுக்க பண்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமேசான். நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்கும் வாடிக்கையாளர்களையும் தம் பக்கம் இழுப்பதே அமோசானின் நோக்கம். பொருள் என்றாலே ஆன்லைன்தான் என்று மக்கள் மாறவேண்டும் என்பதுதான் அதன் கனவும்கூட. அதனால் நேரடி விற்பனை விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிரடியாக விலையைக் குறைத்து, தொடக்கத்தில் இழப்பு வந்தாலும் பரவாயில்லை என்று கருதி வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது அமேசான். தற்போது நடந்திருப்பதும் அதுதான். பிளாக் ஃபிரைடே தினத்தின்போது மக்கள் அமேசானைக் கைவிடக்கூடாது என்பதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு பல டெலிவரிகளை மின்னல் வேகத்தில் நடத்திக்காட்ட விரும்பியது அமேசான்.

தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்.

இந்த இலக்கை நிறைவேற்றும் பொறுப்பை மேற்படி அயல்பணி தொழிலாளர்கள் தான் சுமக்கவேண்டும். பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள். இரண்டு நாளில் முடிக்கவேண்டிய ஒரு டெலிவரியை ஒரே நாளில் முடி. ஒரு நாளில் முடிக்கவேண்டியதைச் சில மணி நேரங்களுக்குள் முடிக்கப் பார். சில மணி நேரம் ஆகவேண்டியதை அரை மணி நேரத்தில் ஏன் முடிக்க முடியாது? வீடு, குடும்பம், குழந்தைகளை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமேசானே கதி என்று கிடந்தால்கூட அவர்கள் நிர்ணயிக்கும் டார்கெட்டுகளைச் சரியாக முடிப்பதற்குள் முழி பிதுங்கிவிடும்.

இத்தாலியில் உள்ள மிலான் பகுதியில் பணியாற்றும் 500 தொழிலாளர்கள் முதல்முறையாக அமேசான் கொடுக்கும் அதீத அழுத்தத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கிறார்கள். இது போக, ஊதிய உயர்வும் அவர்களுடைய முக்கியமான கோரிக்கைளில் ஒன்றாக இருக்கிறது. கூடுதல் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் என்பதையும் அமோசான் பல இடங்களில் சரியாக அமல்படுத்தவில்லை. அதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் 2,500 தொழிலாளர்கள் அமேசானுக்கு எதிரான வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். சரக்குக்கிடங்குகளில் பணியாற்றும் பலருக்கு அடிப்படை ஊதியம்கூட மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது உயர்த்துவார்கள், பிறகு உயர்த்துவார்கள் என்று நம்பி காத்திருந்ததுதான் மிச்சம். ஊதிய உயர்வு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதையே நிர்வாகிகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது போதாதென்று, கறுப்பு வெள்ளி தினத்துக்குக் கூடுதலாக உழைக்கவேண்டும், டார்கெட்டை முடிக்கவேண்டும், தவறுகள் இருக்கக்கூடாது, விடுமுறைகள் எடுக்கக்கூடாது, ஒரு நொடி தாமதமாக வந்தாலும் நடடிவக்கை என்றெல்லாம் அடுக்கடுக்காக பல நிபந்தனைகளையும் தொழிலாளர்கள்மீது விதித்து அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது அமேசான்.

இந்த வெள்ளி மட்டுமல்ல எங்களுக்கு எல்லா நாள்களுமே கறுப்பு தினங்கள்தான் என்று வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைக்குத் திரும்பமாட்டோம் என்று அறிவித்து வீதியில் திரண்டுவிட்டார்கள். மலையளவு லாபம் சம்பாதித்து, உலகமெங்கும் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அமேசான், அதன் வெற்றிக்காக உழைப்பைச் செலுத்தும் எங்களை மட்டும்தொடர்ந்து புறக்கணித்துவருவது சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

உலகெங்கும் தொழிலை பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அதுவே உழைப்பாளிக்கு மாற்றாக முடியாது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு திடமானது, மறுக்கமுடியாதது. இதை அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் உணரப்போவதில்லை. ஆனாலும், அதை உணர்த்தவேண்டியது நம் கடமை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தான் தொழிலாளர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை உலக முதலாளிகள் மீண்டும், மீண்டும் சொல்லித்தருகின்றனர்.

– மருதன்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

344

சோடாபுட்டி ஜீயர் புராணம் – டீசர்

இப்படியாக…
சடகோப சோடாபாட்டில் ஜீயர்
டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர்

கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ
எதுக்கு கெடு வச்சார்?
அதைச் சொல்லுங்கோ

அன்புச்செல்வன் வட்டிக்கு கெடு வப்பேர்
ஐடி யிலே ரிலீஸ் டேட்டுக்கு கெடு வப்பாள்

ஐயர்வாள் எதுக்கு கெடு வச்சார்
அதச்சொல்லுங்கோ

அவர் ஐயர்வாள் இல்லடா ஜீயர்வாள்
ஐ க்கும் ஜிக்கும் வித்தியாசம் தெரியாத அபிஷ்டு

நேக்கு எல்லாம் ஜிலேபி மாதிரிதான் தெரியரது
நீங்க ஜீயர்னா என்னன்னு சொல்லுங்கோ

ஆடு மேய்க்கிறவன் ஆயர்
டீ ஆத்தறவன் நாயர்
இடுப்புக்கு கீழே போடறது லோயர்
லோயர்ல இருக்கிற கோமணத்தை குச்சியில கட்றவர் ஜீயர்

 

ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்…….. விரைவில்…………
பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com