Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 489

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

வெள்ளைக்காரன் – அ. முத்துலிங்கம்

சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ‘மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன்.

சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்குமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான்.

அவர் குறிப்பிட்ட உணவகத்துக்கு நான் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே மழை கொட்டியது. பனியும் கொட்டியது. ஒன்று மாறி ஒன்று பெய்தது. மழைக்காக ஆடை அணிவதா அல்லது குளிருக்காக ஆடை அணிவதா? குளிருக்கு அணிந்த மேலங்கி ஓர் அளவுக்கு மழையையும் தடுத்தது. உடல் நடுங்க நான் உணவகத்துக்குள் நுழைந்தேன்.

நான் முதன்முதல் அவரை பார்க்கிறேன். பக்கவாட்டில் பார்க்கக்கூடிய விதமாக அவர் ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். வெள்ளை நிறம். மெல்லிய தோற்றம். வயது முப்பத்தைந்து மதிக்கலாம். கட்டம்போட்ட சட்டை. கையில்லாத கறுப்பு ஸ்வெட்டர். சிரித்தபடியே இருக்கும் வாய். கழுத்து சால்வையால் தன்னைச் சுற்றியிருந்தார்.

அவர் வெள்ளைக்காரன் என்றாலும் தமிழிலே அளவற்ற பற்றுக் கொண்டவர். தமிழை முறையாகக் கற்றவர். அதன்மேல் காதலானவர் என்றே சொல்லலாம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒருவர் 19 வயது மட்டும் தமிழ் என்று ஒரு மொழி இருக்கிறது என்பதை அறியாதவர். அவர் பெயர் ஜொனாதன் ரிப்ளி. எப்படி தமிழால் ஈர்க்கப்பட்டார். என அவரிடமே கேட்டேன்.

ஒன்றுமே யோசிக்காமல் சட்டென்று ‘அதன் இனிமைதான்’’ என்றார். சிறுமி ‘மணிக்கூடுதான்’ என்று சொன்னதுபோல.

‘இனிமையா?’ நான் எதிர்பார்க்காத பதில். பாரதியார் கூட ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார். அவர் அப்படித்தானே பாடுவார். தமிழின் மகாகவியல்லவா?

எப்படி இனிமையானது என்று சொல்கிறீர்கள்?

‘நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பபில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அந்த ஓசை நயமும் பாடலின் இனிமையும் காதுகளில் விழுந்தது. எதிரில் வந்த பல நாட்கள் அந்த இனிமை காதுகளில் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன்.

அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன் நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.

தமிழைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தீர்களா?

இல்லையே. எனக்கு குஜராத்தி நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் போயிருக்கிறேன். அவர்கள் வீடுகளில் உணவருந்தியிருக்கிறேன். கொண்டாட்டங்களில், நடனங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருக்கிறேன். ஆனால் குஜராத்தி மொழி படிக்கவேண்டும் என்றோ, இந்தி மொழி படிக்கவேண்டுமென்றோ எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் தமிழ் படிக்கவேண்டும் என்ற வெறி வந்துவிட்டது.

இந்தியாவுக்குப் போய் அங்கே படிக்கவேண்டும் என்று திட்டமெல்லாம் போடத் துவங்கினேன். 1997 -ல் ஒபர்லின் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றேன். அங்கே படிக்கும்போது நாலு வருடம் சீன மொழியும் கற்றேன். உதவிப்பணத்துக்கான நேர்காணலில் என் மனம் முழுக்க தமிழ் நிரம்பியிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சீனா போக இருந்த நான் மதுரைக்குப் போனேன்.

பெற்றோர்களிடம் உங்கள் முடிவை சொன்னீர்களா?

சொன்னேன். அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். அவர்கள் என்னைச் சுற்றி கனவுகள் கட்டி வைத்திருந்தார்கள். அவை எல்லாம் பொலபொலவென்று உடைந்தன. ‘தமிழை படித்துவிட்டு என்ன செய்வாய்? ஏன் இத்தாலிய மொழி படிக்கலாமே? பிரெஞ்சு மொழி படிக்கலாமே? ஸ்பானிஷ் படிக்கலாமே?. இது என்ன தமிழ் மொழி.? அதை படிக்க இந்தியாவுக்கு போகவேண்டுமா? என்று மிகவும் வருந்தினார்கள். என் பெற்றோர் அப்படி வருந்தி முன்னர் நான் பார்த்தது கிடையாது.

அதன் பின்னர்தான் தமிழ்நாடு போனீர்களா?

நான் மதுரைக்குப் போய் அங்கே இரண்டு வருடம் படித்தேன். ஒபர்லின் கல்லூரியில் படிப்பு முடிந்த பின்னர் நான் உடனேயே மதுரை செல்லவில்லை. விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் 10 வாரங்கள் அதி தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டேன். தென்னாசிய கோடைகால மொழிப் பயிற்சி திட்டத்தின் கீழ் சாமுவேல் சுத்தானந்தா என்பவரிடம் தமிழ் படித்தேன். தமிழ் கற்பிப்பதில் அவர் அபார திறமையுடையவர். மதுரைக்கு என்னைத் தயார்செய்த பின்னர் அங்கே போனேன்.

இரண்டு வருடம் தொடர்ந்து அங்கே இருக்கவேண்டும். இடையில் அமெரிக்கா திரும்பக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். அங்கே ஜீவன ஜோதி அமைப்பு ஏற்பாடு செய்த வகையில் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பெரியவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தேன். என் பாட்டியும் பெற்றோரும் என்னைப்பற்றி தினமும் உருகி உருகி கவலைப் பட்டார்கள். நானோ தண்ணீரில் விழுந்த மீன்குஞ்சுபோல அகமகிழ்ந்து தமிழ்நாட்டில் சுற்றினேன்.

என்னிடம் ஸ்கூட்டர் இருந்தது. அதிலே கடைகள் ஹொட்டல்கள் கோயில்கள் கொண்டாட்டங்கள் என்று ஒரு நிமிடமும் வீணாக்காமல் அலைந்தேன். தமிழில் பேசினேன். மக்கள் அன்பாகவும் ஆதரவாகவும் சொல்லித்தந்தார்கள். அமெரிக்க படிப்பறையில் படித்ததிலும் பார்க்க வீதிகளில் நிறையக் கற்றுக்கொண்டேன். நல்ல நண்பர்களைச் சம்பாதித்தேன். நான் தமிழுக்கு எவ்வளவு கொடுத்தேனோ அதிலும் பார்க்க கூடுதலாக தமிழ் எனக்குக் கொடுத்தது. இரண்டு வருடம் முடிந்த பின்னரும் எனக்கு அமெரிக்கா திரும்ப மனம் வரவில்லை. ஆனாலும் திரும்பவேண்டி நேர்ந்தது.

மீண்டும் தமிழ்நாடு போனீர்களா?

அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் நோர்மன் கட்லர் என்பவரின் வழிகாட்டலில் தென்னாசிய மொழிகளில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். இந்தச் சமயம் மதுரையில் இரண்டு வருடங்கள் முனைவர் எஸ். பாரதியிடம் தமிழ் கற்றுக்கொண்டேன். எல்லாமாக நாலு வருடங்கள். அதன் பின்னரும்கூட தமிழ்நாடு போய் கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி , தேவாரங்கள் என நானாகவே கற்றுக்கொண்டேன்.

தமிழ் படிப்பதில் என்ன சவால் இருந்தது?

எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்தான் நான் சந்தித்த முதல் சவால். ஆரம்பத்தில் இருந்து இரண்டையுமே கற்றுக்கொண்டேன். இன்றும் யாராவது வேகமாகத் தமிழ் பேசினால் எனக்கு அதை புரிந்துகொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தபோது எனக்கு தினமும் மக்களுடன் பேசுவதிலும், புதிதாக கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் இருந்தது. மக்கள் உற்சாகப்படுத்தினர். இங்கே அமெரிக்காவில் அது கிடையாது. தமிழ் பேசிப்பழகும் வாய்ப்புகள் வெகு குறைவு.

தமிழ்நாடு மக்களைப்பற்றி?

எனக்கு ஏதோ விதத்தில் ஒரு முன்தொடர்பு இருந்தது. நான் அந்நியமாகவே உணரவில்லை. என்னை வெள்ளைக்காரன் என்று அழைத்தார்கள். ஆரம்பத்தில் ஒருமாதிரி இருந்தது, ஆனால் பழகிவிட்டது. அவர்களின் உண்மையான அன்பை ஒருநாள் உணர்ந்தேன். மதுரை வீதியில் நடந்தபோது நான் கால் தடுக்கி விழுந்துவிட்டேன். அடுத்த நிமிடம் என்னைச் சுற்றி பத்துப்பேர் நின்றார்கள். தூக்கிவிட்டார்கள். அடிப்பட்டதா என்று என்னைத் தடவித்தடவிப் பார்த்தார்கள். அத்தனை கரிசனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

அமெரிக்காவில் இப்படி நடந்திருந்தால் கிட்டவே அணுக மாட்டார்கள். அவசர உதவி வாகனத்துக்கு தொலைபேசி போயிருக்கும். நான் வெள்ளைக்காரனாக இருந்ததால் அப்படி நடந்ததா என்றும் யோசித்திருக்கிறேன். அப்படி இல்லை. மதுரை மக்கள் அப்படித்தான். கருணை நிறைந்தவர்கள்.

தமிழ்நாட்டில் 4 வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். அதன் பின்னரும் பலதடவை அங்கே போய் வந்திருக்கிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம் ஏதாவது?

ஆச்சரியம் அல்ல அதிர்ச்சி என்று சொல்லலாம். தமிழ்நாட்டு கல்வித்திட்டத்தில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ் கற்காமலே ஆங்கிலத்தில் கல்வி கற்று பட்டம் பெற்று வேலைதேடி சம்பாதித்து வாழலாம். அவர் தமிழ் கற்கவேண்டிய அவசியமே கிடையாது. சிலர் ஆங்கிலத்தை முதல் பாடமாகவும் பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகவும் எடுக்கிறார்கள். இரண்டாம் பாடமாகக்கூட தமிழ் இல்லை.

அதுவும் தமிழ் நாட்டில். கல்லூரிகளில் ஆங்கில வகுப்புகளுக்கு போயிருக்கிறேன். மேல்தட்டு மக்கள் அழகாக உடையுடுத்தி படிக்க வருகிறார்கள். வகுப்புகள் பெரிசாகவும் அழகாகவும் இருக்கின்றன. பேராசிரியர்கள் மேல்நாட்டு முறையில் உடை தரித்திருக்கிறார்கள். மாணவர்கள் மரியாதையுடன் நடக்கிறார்கள். அழுக்கான சிறிய வகுப்பறையில் தமிழ் பாடம் நடக்கிறது. மாணவர்கள் அநேகமாக ஏழைகளாகவே காணப்படுகிறார்கள். எல்லோரும் மருத்துவம், பொறியியல், சட்டம், கணக்காளர் இப்படி நல்ல வருமானம் தரும் படிப்பையே விரும்புகிறார்கள். அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் ஆகக்குறைவாக இருந்தால் வேறு ஒன்றும் படிக்க இயலாத நிலையில் தமிழை வேண்டா வெறுப்பாக எடுக்கிறார்கள். அதுதான் ஆச்சரியம்.

இது மலையாள மாநிலத்திலோ கன்னட மாநிலத்திலோ அல்லது தெலுங்கு மாநிலத்திலோ நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் நடப்பது தமிழ் நாட்டில். அனைவரும் ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழுக்கு இந்த நிலை என்றால் நாம் தமிழை வளர்க்க எந்த நாட்டுக்கு போவது.

ஈழத்து இலக்கியக்காரர்களுடன் உங்களுக்கு ஏதாவது பரிச்சயம் உள்ளதா?

ஒரே ஒருவரைச் சந்தித்திருக்கிறேன். வாசுகி கணேசானந்தன். Love Marriage என்ற நாவல் எழுதியவர்; என்னுடைய நண்பர். அவரைத் தவிர இப்பொழுது உங்களைச் சந்தித்திருக்கிறேன். இனிமேல்தான் நான் ஈழத்து இலக்கியம் படிக்கவேண்டும். என்னிடம் ஒன்றிரண்டு ஈழத்து மாணவர்கள் படித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் தமிழ் என்னை ஈர்க்கும். ‘ஓம், ஓமோம், ஓ, ஓ’ என்று ஒருவர் பேசினால் அவர் ஈழத்தமிழர் என்று எனக்கு புரிந்துபோகும். எழுத்துத் தமிழுக்கு மிக அண்மையாக அவர்கள் பேச்சுத் தமிழ் இருக்கும். எழுத்திலே ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்று எழுதினால் அவர்கள் பேச்சுத் தமிழிலும் ‘வந்து கொண்டிருக்கிறோம்’ என்றே இருக்கும்

நீங்கள் பொஸ்டனில் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிந்தேனே. அது பற்றிச் சொல்லுங்கள்.

அதற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. அதன் பெயர் Community Cooks. அதிலே 700 தொண்டர்கள் வேலை செய்கிறோம். வீடு இல்லாத ஏழைகள், உணவுக்கு வழியில்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம். சமையல் சாமான்களையும் எங்கள் நேரத்தையும் இலவசமாகத் தருவதுதான் தொண்டு… நான் மாதத்தில் ஒருநாள் அங்கேபோய் சமையல் செய்வேன். மாதம் 3500 பேர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவோம்.

தமிழ்நாட்டு உணவு சமைப்பீர்களா?

வீட்டிலே மட்டும் நான் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்பேன். சோறு, சாம்பார், ரசம், வறுவல் என்று சமைக்கத் தெரியும். நண்பர்களும் வந்து சாப்பிடுவார்கள்.. இன்னும் புதுவிதமான சமையல் பழகிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஹார்வார்டில் தமிழ் படிப்பிக்கிறீர்கள் அல்லவா? அதுபற்றி சொல்லுங்கள்?

நான் ஹார்வார்டில் Preceptor ஆக இருக்கிறேன். போதனாசிரியர் என்று சொல்லலாம். இங்கே மூன்று தரநிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. முதலாவது நிலையில் எழுத்துக்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அது இரண்டாம் மூன்றாம் வகுப்பு மட்டும் போகும். அடுத்த நிலை 10 -ம் வகுப்பு மட்டும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். மூன்றாவது நிலையில் திருக்குறள், கம்பராமாயணம் சங்க இலக்கியங்கள் என மாணவர் விருப்பப்படி கற்கை நெறியை அமைத்துக்கொள்கிறோம்.

தமிழிலே உள்ள முக்கியமான பிரச்சினை எழுத்து தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருப்பது. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. ஆகவே பாடம் சொல்லிக்கொடுக்கும் போதே எழுத்தில் இப்படி வரும் ஆனால் பேசும்போது இப்படி வரும் என்று சொல்லிக் கொடுத்துவிடுகிறேன்.

மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்குமே?

கிடையாது. மாணவர்கள் கப்பென்று பிடித்துவிடுகிறார்கள். எனக்கும் கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் அத்தனை இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘உன்கூட வாழவேண்டும் என ஆசைப்படுகிறேன்..’ இதைப் பேச்சுத் தமிழில் ‘உங்கூட வாழணும்னு ஆசைப்படுறன்’ என்றும் ‘கண்டிப்பாக நாளை வருகிறேன்’ என்பது ‘கண்டிப்பா நாளை வாறேன்’ என்றும் குழப்பம் இல்லாமல் அவர்கள் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்..

நவீன இலக்கியம் சொல்லிக்கொடுக்கிறீர்களா? போதிய புத்தகங்கள் உள்ளனவா?

இப்பொழுதுதான் புத்தகங்கள் கொஞ்சம் கிடைத்திருக்கின்றன. சிறிது சிறிதாக ஒரு தமிழ் நூலகத்தை வளர்த்தெடுப்போம்… புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி. அம்பை போன்ற எழுத்தாளர்கள் மாணவர்களுக்கு பரிச்சயம். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை நிரம்பவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஹார்வார்டில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளதா?

தமிழ் தான் ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி. அதை பாதுகாக்க வேண்டியது கடமை. ஹார்வார்ட் போன்ற முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை மட்டும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சிந்திக்கவும் ஆராயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. ஹார்வார்டில் நிறைய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அழிந்துபோன நிலையிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகளைக் கற்க நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இன்றும் வாழும் செம்மொழியான தமிழுக்கு அதற்கான மதிப்பு கிடையாது. மற்றைய மொழிகளுக்கு மாணவர்கள் திரள் திரளாக வருவதுபோல தமிழ் மொழிக்கும் வரவேண்டும்.

ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி?

அருமையான முயற்சி. நான் தற்போது ஹார்வார்டில் தமிழ் கற்பிப்பதால் தமிழ் இருக்கை கிடைப்பதால் என்ன நன்மைகள் கிட்டும் என்பதை சொல்லமுடியும். இங்கே கற்கும் மாணவர்களிடம் தமிழ்மீது நிறைய ஆர்வமிருப்பதை காணமுடிகிறது. அவர்களுடன் தினம் பழகும்போது அவர்களுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கண்டு வியக்கிறேன். முதல் வருடத்திலும் பார்க்க அடுத்த வருடத்தில் அதிக மாணவர்கள் தமிழ் படிக்க பதிவு செய்தது உற்சாகம் தரும் அறிகுறி.

நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை வடிகாலாக அமையும்.

அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவுகூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது.

****

ஜொனாதன் எழுந்து நின்றதும் நான் விடை பெற்றுக்கொண்டேன். வெளியே மழை நின்றுவிட்டது ஆனால் குளிர் அதிகமாகியிருந்தது. ஜொனாதன் போன்றவர்கள் தமிழினால் ஈர்க்கப்பட்டு அதைக் கற்க முன்வருகிறார்கள். தங்கள் வாழ்நாளையே தமிழுக்கு அர்ப்பணிக்கிறார்கள். என்ன அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது? பல செம்மொழிகள் இன்று இறந்துவிட்டன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழி இன்றும் வாழ்கிறது. அது இப்படியான தமிழ் பற்றாளர்களின் அர்ப்பணிப்பால்தான் என்பது நிச்சயமாகிறது.

நாளை ஜொனாதன் அவர் வகுப்பறைக்குள் தமிழ் கற்பிக்க நுழைவார். அங்கே ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ஒரு மொழி வகுப்பு அப்போது முடிவுக்கு வரும். நூற்றுக் கணக்கான மாணவர்கள் வெளியேறுவார்கள்.

ஜொனாதன் வகுப்பறைக்குள் நுழைவார். கரும்பலகையை அவருக்கு பரிச்சயமில்லாத எழுத்துக்கள். நிறைத்திருக்கும். உன்னிப்பாகப் பார்ப்பார். எப்போதோ இறந்துபோன ஒரு மொழியின் எழுத்துக்கள். அந்த எழுத்துக்களை அழித்து முடிக்க அவருக்கு இரண்டு நிமிடம் எடுக்கும். தன் மாணவருக்காக அவர் காத்திருப்பார். இரண்டு பேர் உள்ளே நுழைவார்கள்.

நன்றி :அ.முத்துலிங்கம்
முத்துலிங்கத்தின் இணைய தளம்

***

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:

லங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

இதுவரை வெளிவந்த நூல்கள் :

1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்கு வீதி – 1998
5. மகாராஜாவின் ரயில் வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம்? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010
16. ஒன்றுக்கும் உதவாதவன் – 2011

 

பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்

0

ழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

இத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.
அப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை.இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.

உலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.

திரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆரம்பத்தில், வலதுசாரிகளான, (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், அவர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.
தொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர்.

நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள். இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.

இத்தாலி பிரதமர் ஆல்டோ மோரோ

16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.

ஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வாசிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.

அந்த உரிமை கோரும் கடிதத்தில், “பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்” என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. “பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.

அல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை.

இடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.

எதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.
என்ன காரணம்?

உண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.
இத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றி.

“கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது” என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், “கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது” என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.

பிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.
1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது.

குறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.

நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

 

பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ

0

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர், பேராசிரியர் என பலரும் நீதித்துறையின் இன்றைய நெருக்கடி நிலை குறித்து பேசினர்.

பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேசுகையில்; “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கண்ணையா குமார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, “நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் முடிந்த பிறகு இதுவரையில் நடக்காத விசயங்கள் நடக்கின்றன” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பல ஊடகங்கள் இதை பற்றி பெரியதாக பேசவில்லை .

பத்திரிக்கையாளர் மணி

டெல்லியில் இருக்கும் எனது நண்பர்களிடம் விசாரித்த போது, இப்போது நான்கு நீதிபதிகள், தலைமை நீதிபதியின் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளில் மருத்துவமனை ஊழல் போன்ற விசயங்கள் மட்டுமே பிரதானமானது இல்லை என்றும்; கடந்த ஆறு, ஏழு மாதங்களாக கொலிஜிய முறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விசயத்தில், மத்திய அரசு கூறிய 90% ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை தான் தீபக் மிஸ்ரா நியமித்துள்ளார், இதுவே முக்கியமான குற்றச்சாட்டு என கூறுகின்றனர்.”

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். 2003 -ல் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு வழக்கில் இவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வருகின்றது, அந்த வழக்கிலும் இவரே நீதிபதியாக இருக்கிறார். இப்படி சட்டத்திற்கும் அப்பாற்பட்டும், இயற்கை நீதிக்கு அப்பாற்பட்டும் எல்லா விசயங்களும் இப்போது நடக்கின்றது.

குஜராத் கலவரத்தில் 3000 முஸ்லிம்கள் வெட்டி கொல்லப்பட்டார்கள். இந்த கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம், மகாராஷ்ராவிற்கு மாற்றுகிறது. இதில் மோடியை ‘நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல’; என்று விமர்சித்த நீதிபதிகள் பின்பு ஆதரவாக பேசுகிறார்கள். இப்படி நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மாறி கொண்டே வருகிறது.

இந்த விவாதம் நாடு தழுவில் அளவில் நடக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியல் நடத்த கூடியவர்கள் கண்டிப்பாக இதை செய்ய மாட்டார்கள். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் தான் செய்ய வேண்டும். எல்லோரும் கரம் கோர்த்து போராட வேண்டிய நேரம் இது, இதில் கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள், காந்தியவாதிகள் என அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் கண்டிப்பாக பி.ஜே.பி போன்ற மதவாத சக்திகள் இருக்க கூடாது.” என தனது உரையில் கூறினார்.

அவரைத் தொடர்ந்து என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர், அவரது உரையில் “நீதிமன்றம் மாற வேண்டுமென்றால் மக்களுடைய போராட்டங்கள் இருக்க வேண்டும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் வெளியே போராடினால் தான் நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி ஜெயிக்க முடியும். நாங்கள் வாதாடியதால் தான் ஜெயித்தோம் என்று சொன்னால் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று அர்த்தம். மக்கள் போராட்டமே தீர்ப்பை தீர்மானிக்கிறது.

என்.ஜி.ஆர் பிரசாத் – மூத்த வழக்கறிஞர்

நீதிமன்றத்தில் நடக்கும் ஊழலை பற்றி சாந்தி பூஷண் போன்றோர் நீண்ட காலமாக பேசி கொண்டிருக்கின்றனர். தலைமை நீதிபதிகளில் 50% பேர்கள் ஊழல்வாதிகள் என்றார். அவர் சொன்னதற்கு இன்றுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை.

பிரசாந்த் பூஷண் மருத்துவக் கல்லூரி வழக்கில் ஊழல் இருக்கிறது. தலைமை நீதிபதி மீதே குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் தலைமை நீதிபதி விசாரிக்க கூடாது என்றார். தலைமை நீதிபதியோ “இந்த வழக்கில் தலையிடவில்லை” என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரே ஒரு பென்ச் யை நியமித்து, வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கிறார். அப்படி நீதிமன்றம் வசூல் செய்தால் நாங்கள் எல்லோரும் திருப்பதி உண்டியல் போல் சில்லறைகளை அனுப்பலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். ஏனெனில் எந்த தவறும் செய்யாதவர் எதற்கு அபராதம் கட்ட வேண்டும்?

நீதிமன்றத்தில் பேச்சுரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் நீதிமன்ற அவமதிப்பு பிரிவை முதலில் நீக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. பிரசாந்த் பூஷண் போன்று துஷ்வந் தவே, இந்திராஜி, காமினி ஜேஸ்வாக் போன்றோர், வெளியில் இருந்து இந்த பிரச்சனைகளை தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மூத்த நீதிபதிகள் வெளியே வந்து சொன்ன பிறகு தான் மக்களுக்கு தைரியம் வந்திருக்கிறது. மக்கள் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். எல்லா இடங்களிலும் பிரச்சனை செய்ய வேண்டும். மக்கள் தான் போராடி சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இங்கு நடந்து கொண்டிருக்கும் கூட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதே போல வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்திற்கு அப்பால் தான் நீதி இருக்கிறது.” எனக் கூறினார்.

பின்னர் பேசிய பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு); “நீதிமன்றம் புனிதமானது என்று கூறி மாயையை உருவாக்க விரும்புகிறார்கள். இந்து நாளிதழில் உஜ்ஜல் நிகாம் என்பவர் எழுதிய கட்டுரையில் “நீதிமன்றத்திற்குள் பிளவு வந்தால் ஜனநாயகம் நிலைப்பதே சிரமமாகிவிடும்” என்று ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு நீதிபதிகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றி பொதுமக்களிடம் பேசுவது தவறு என்றும் கூறிகிறார்.

பேராசிரியர் கருணானந்தம் (ஓய்வு)

மேலும் இந்த நாட்டின் நிலைப்பு இரண்டு அடைப்படைகளை கொண்டது, நாட்டினுடைய நாணயத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும், இரண்டாவதாக, நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டு மக்களுக்கு நாணயத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துவிட்டது.

நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள், நீதிபதிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு பேராபத்து – ஜனநாயகம் என்றால் இவர்கள் என்ன நினைக்கிறார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை தெளிவாக்கி விட வேண்டும். ஜனநாயகம் என்றால், முதலாளிகளை உருவாக்க ஒரு கட்டமைப்பு என்று நினைக்கிறார்கள். நாம் அடிமைகளாக இருப்பதற்கு ஒரு எஜமானன் தேவை, அதற்காக ஒட்டு போட்டு தேர்ந்தேடுப்பது மட்டும் தான் ஜனநாயகம், மற்றவற்றை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

ஆனால் ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள் என்று நினைக்கிறோம். இறுதி என்பது மக்களிடம் தான் இருக்கிறது. மக்கள் தான் அடிப்படையில் அதிகாரம் படைத்தவர்கள். இவர்கள் தான் தெய்வங்களை உருவாக்குகிறார்கள். அரசியலைப்பு கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. மக்களால் உருவாக்கப்பட்ட அரசியலைப்பை கண்காணிக்காவிட்டால் எப்படி ஜனநாயகமாக இருக்கும். சாமானிய மக்களின் கடைசி புகளிடம் என்கிறார்கள், பணம் இல்லாமல் உச்சநீதிமனறம் செல்ல முடியுமா? பூசாரிகளாகதான் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

அனிதா விசயத்தில் எப்படி உச்சநீதிமன்றம் போக முடிந்தது என்று கிருஷ்ணசாமி கேட்கிறார். அப்படி என்றால் சாமானிய மக்கள் போக முடியாத இடம் என்று இவர்களே ஏற்று கொள்கிறார்கள். 50% மக்களுக்கு எட்டாத இடம் எப்படி ஜனநாயக அமைப்பாக இருக்க முடியும். நீதிமன்றம் அனைவரும் அனுக கூடியதாக இருக்க வேண்டும். இவர்கள் தெய்வ குற்றம், தேச குற்றம் , தெய்வ விரோதிகள், தேச விரோதிகள் என்பார்கள். தெய்வங்களே பல தீர்ப்புகளை தவறாக எழுதியதாக புராணங்கள் இருக்கின்றன. சிவபுராணத்தில் நக்கீரனுக்கு நேர்ந்தது என்ன?

உச்சநீதிமன்றத்தில் நடப்பது சகோதர சண்டை என சிலர் கருதுகிறார்கள். சில நெறிகள் தெரிந்தே மீறப்படுகின்றன. தீபக் மிஸ்ரா, அவர் சார்ந்த வழக்கை அவரே விசாரிக்க கூடாது என்பது அடிப்படை அறம், விழுமியம், இது தெய்வத்திற்கு பொருந்ததா? நீதிமன்ற நெறிமுறைகள் நியாயமாக இருக்கிறதா? அப்படியில்லை, தீபக் மிஸ்ரா தெய்வமில்லை என்பது தெரிகிறது. பொதுமக்கள் என்றால் ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். நீதிமன்ற விசயங்களை பொதுப்படையாக விவாதிக்க வேண்டும். விமர்சனத்திற்கு உட்படாத எதுவும் ஜனநாயகமல்ல. எதுவும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். .

1951 -ல் அரசியலைப்பு சட்ட திருத்தம், இடஒதுக்கீடு சம்பந்தமாக வந்த பொழுது நீதிமன்றத்தில் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வந்தது. பெரியார், மக்கள் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என போராடி, பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வர செய்தார். நீட் தேர்வை நீதிமன்றம் தான் கட்டாயப்படுத்தியது. போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டத்தில் மந்திரியை போல நீதிபதிகள் பேசுகிறார்கள்.

பி.ஜே.பி -க்கும் நீதித்துறைக்கும் கூட்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் தீர்ப்புகள் விளக்கப்படுவதில்லை. எதையும் தீர்ப்பாக சொல்லி விட்டு தப்பித்து கொள்கிறார்கள். இது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும். ஜனநாயகத்தில் நீதிமன்றங்கள் மக்களுக்கான அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர மக்களை ஒடுக்கும் அமைப்பாக இருக்க முடியாது. ஒடுக்குபவர்களுக்கு துணை போக கூடாது. சாமானிய மக்கள் என்பவர்கள் அம்பானி, அதானி அல்ல! சாமானிய மக்களை பற்றி அக்கறையில்லாத நீதிமன்றங்களாக இருக்கிறது. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா நீதிமன்றம்? நீதித்துறை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் அதை பற்றிய விவாதங்கள் துவங்க” வேண்டும் என பேசினார்.

(தொடரும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com

 

இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ? திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

“புதிய கட்டணத்தை கொடுக்க மறுப்போம். பழைய கட்டணத்தையே கொடுப்போம்”  என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் பிரச்சாரமும் ஆா்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.  திருச்சியில் 31.1.2018 மாலை 6.00 மணி அளவில் பறை இசையுடன் கண்டன ஆா்ப்பாட்டம் தொடங்கியது.

ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் , “கட்டண உயர்வை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராடுகிறார்கள். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து மக்கள் அதிகாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அதை தடுக்கிறது போலீசு. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூட அனுமதிப்பதில்லை. இதை வேற சுதந்திர நாடுன்னு சொல்றாங்க. போராடுற மாணவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. விவசாய மாணவர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள் யாரையும் பாதுகாக்க துப்பில்லாத ஆளத்தகுதியிழந்த இந்த அரசு கட்டமைப்பை எதிர்த்து போராட வேண்டும். மதுரை விவசாயிகள் போராட்டம், சாராய கடைக்கு எதிராக போராட்டம் போன்ற அதிகாரத்தை செலுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில், “போக்குவரத்து நஷ்டத்துக்கு காரணம் யாரு? அமைச்சரும் அதிகாரிகளும் தான? அவங்கள வைச்சி நஷ்டத்த ஈடுகட்ட முடியாதா? 5 லட்சம் பேர் பேருந்து பயணத்தை தவிர்த்து உள்ளனர். அனைவரும் ரயில் நோக்கி ஓடுகின்றனர். நாம் ஏன் ஓட வேண்டும்? எதிர்த்து கேட்க வேண்டும். பெட்ரோல், டீசல் பராமரிப்பு விலை ஏறுகிறது என்கிறார்கள். டீசல் வரியை ஏன் குறைக்க முடியாதா? அமைச்சரின் சொத்த எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டியது தானே” என்று கூறினார்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி திருநாவுக்கரசு பேசுகையில், “33 ஆண்டுகளாக நான் இந்த வேலையில இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். ஒரு நாள் லீவ் வேணும்னா சரக்கு, காசு லஞ்சமா கொடுத்தா தான்  கிடைக்கும். ஆப்சண்ட் போட்டா 6 மாசத்துக்கு சம்பள உயர்வு கிடையாது. கும்பகோணம் மேனேஜர் ஒரு கோடி கட்டி வேலைக்கு வர்றான். அப்போ அவன் ஒரு கோடிக்கு மேல சம்பாதிக்க தான் நினைப்பான். எனக்கு இன்னும் நிலுவை இருக்கு. ஆனா பேப்பர்ல நிலுவையை எடப்பாடி கொடுத்துட்டாருன்னு சொல்றாங்க. ஆர்.டி.ஐ போட்டு இவனுங்க பண்ற பித்தாலாட்டத்த எடுத்து வச்சிருக்கேன். போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு இவங்க அமைச்சர் தான் காரணம். எனவே போராட்டம் தொடர வேண்டும்” என்றார்

குடும்பத் தலைவி மேரி பேசுகையில், ”இது என்ன அரசு? 200 ரூபாய்க்கு விக்குது டிக்கெட். மோடி அரசு வந்தா காசு செல்லாதுன்னு அவன் ஒரு வகையில கஷ்டப்படுத்துறான். ரேசன் கடைய வேற மூடுறாங்க. குடிகாரங்க ஓட்டுப்போட்டு குடிகார ஆட்சி,கொள்ளை ஆட்சி நடக்குது. குடிச்சிப்புட்டு வறாங்க வயசு புள்ளைங்க ரோட்டுல போக முடியல. மக்கள சித்ரவதை பண்றானுங்க. நீ ஆட்சிய விட்டு போ. மாணவர்களும், மாணவிகளும் ஆளட்டும். ஜல்லிக்கட்டுல போராடுனாங்க அவ்வளவு பேரு. அப்பவே நீ கம்மென்று இருந்த. மாட்டுக்கறி திங்க்க் கூடாதுன்னு சொல்றான். இவன் யாரு மாட்டுக்கறி திங்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு. நான் சாப்பிடுறத நீ ஏன்டா எட்டிப் பாக்குற. ரொம்ப வேதனபடுத்துறாங்க. வீட்டு வேலைக்கு, கட்டிட வேலைக்கு காச ஏத்துறாங்களா? ஓபிஎஸ்-ம், ஏபிஎஸ்-ம் மம்பட்டி புடிச்சு வேலை பார்க்க சொல்லனும். அவன் பொண்டாட்டி, புள்ளைங்கள வேலை பாக்க சொல்லனும். அப்பதான் கஷ்டம்னா என்னன்னு தெரியும்” என்றார்.

கல்லூரி மாணவர் சுரேஷ், “நான் பாதிக்கப்பட்டேன். அதனால எங்க காலேஜ்ல 6 நாள் போராடினோம். கடைசி நாள் எடப்பாடிக்கு பாடை கட்டி போராடினோம். அரசு கல்லூரியில பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் தான் படிக்கிறாங்க. பொண்ணுங்க வீட்ல, நீ படிக்க வேணாம். நீயும் வேலைக்கு வா, இல்லன்னா கல்யாணம் பண்ணி வச்சிருவோம்ன்னு சொல்றாங்க. அரசியல்வாதி, அமைச்சர் எல்லாம் நம்மளோட வரிப்பணத்துல நல்லா தான் இருக்கான். அப்புறம் சம்பள உயர்வுன்னு வேற ஏத்துறான். நான் ஆஸ்டல்ல இருக்கேன். ஊருக்கு போக 200, 300 ரூபா ஆகுது. எங்க அப்பா, அம்மாவே வூட்டுக்கு வர வேணாம்ன்னு சொல்றாங்க “என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

லால்குடி வட்டத்தை சேர்ந்த விவசாயி மணியரசன், “எங்க ஊருல குடிமராமத்து பணிய அரசு செய்யல. மக்கள் அதிகார தோழர்களும், நாங்களும் சேந்து தான் செஞ்சோம். குடிமராமத்து பணிக்கு 100 கோடி அரசு ஒதுக்கி அதை அவனே சாப்பிட்டுட்டான். கிட்டத்தட்ட 5000 ஏக்கர் விவசாயம் நடக்குன்னா அதுக்கு காரணம் மக்கள் அதிகாரம் தான். அன்னைக்கு அவங்க தூர் வார்னது தான் காரணம். யார் வேணா வாங்க காட்டுறோம். இதையும், மக்கள் அதிகாரத்தால தான் மாத்த முடியும் ” என்றார்.

மேலும், தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ம.ப.சின்னதுரை, பெ.தி.க மாவட்ட செயலர் கமலக்கண்ணன் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மக்கள் அதிகார மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், “ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் போது திருமங்கை ஆழ்வார்ன்னு ஒரு திருடன் இருந்தது போல இன்று அரசு திருட்டுத்தனம் செய்கிறது, கிரிமினல் அட்சி தான் நடக்கிறது. சட்டம், நீதிமன்றம், போலீசு எல்லாம் மக்களுக்கானது அல்ல. நீதித்துறை 60% மக்களுக்கு நீதி வழங்குவதில்லை. 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறைக்கு எதிராக பேசுகிறார்கள். தமிழ்நாடு கொந்தளிப்பான நிலைமையில் உள்ளது. போராடுகிற மாணவர்களை கைது செய்து உள்ளே வைக்கின்றனர். 7 ஆண்டுக்கும் குறைவாக தண்டிக்கக் கூடிய குற்றவழக்குகளுக்கு கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சொல்லியும் தொடர்ந்து கைது செய்கிறது. இது தான் சட்டத்தின் ஆட்சி. சம்பளம், கிராஜுவிட்டி, சொசைட்டி, இன்சுரன்ஸ் எல்லா பணத்தையும் ஏப்பம் விட்டானுங்க. தனியார் பேருந்து இலாபமாக ஓடும் போது அரசு போக்குவரத்தை இலாபமாக நடத்த முடியாது? 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பது கண்டிரக்டர், டிரைவர்,மெக்கானிக். அவர்களுக்கு சம்பளம் குறைவு தான் ஆனா, ஒரு டெப்போவில் இருக்கிற மேனஜருக்கு ஆரம்ப சம்பளமே ஒரு லட்ச ரூபாய். அவனுக்கு கீழே ஏகப்பட்ட அதிகாரிகள். அவர்களுக்கும்  இதே போல சம்பளம். போக்குவரத்துத் துறையின் பணத்தை இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள். ஏராளமான தனியார் பேருந்து எம்.எல்.ஏ, அமைச்சர்களின் பினாமி பெயரில் தான் ஓடுகிறது. எதற்கும் பெர்மிட் வாங்குவது இல்லை. அதனால், அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த அமைச்சரும் அதிகாரியும் தான் போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு காரணம். எனவே, அவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்”  என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் 250 பேர் வரை கலந்து கொண்டனர். 200 பேர் வரை சுற்றி நின்று கவனித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்கள் இது மட்டும் போதாது சாலை மறியல் செய்ய வேண்டும் எனக் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் ‘பாதுகாப்பு’க்காக நிறுத்தப்பட்டிருந்த கீழ்நிலை காவலர்கள் நாங்களும் பஸ்ல தான் வாறோம். எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்கு என்றனர்.

தனது ஏவலர்களைக் கூட திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாத இந்த அரசு இனியும் நீடிக்கலாமா?

தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.

 

அய்யங்காளி : தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் – நூல் அறிமுகம்

0

ந்தியாவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் சிந்தனைச் சுயஇன்பத் தருணங்களில் தெறிப்பதைப் போல் ஒளிபொருந்திய ஒன்றல்ல. சாதாரண மக்களின் வரலாறு அது; ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டவர்களின் கண்ணீரும் ரத்தமும் இந்தப் ”புண்ணிய பூமியில்” ஆறாய்ப் பாய்ந்த வரலாறு. இமயத்தின் சிகரங்களைக் காட்டிலும் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த வரலாற்றின் மாந்தர்கள் நம்மிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். இன்றும் துடித்துக் கொண்டிருக்கும் அம்மாந்தர்களின் இதயங்கள் எழுப்பும் துடியோசை நமத்துப் போன நமது மனசாட்சியை எழுப்பும் வலிமையைக் கொண்டிருக்கிறது.

அந்தப் பழைய வரலாற்றையும், அதன் மாந்தர்களையும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தினுள் நம்மையெல்லாம் குப்பைகளைப் போல் வாரித் தட்டியுள்ளனர் இன்றைக்கு அரசியல் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்துள்ள இந்துத்துவ ஆண்டைகள். இதோ, அந்த வரிசையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஆளுமையைக் குறித்து எதிர் வெளியீட்டகம் ஒரு சிறு நூலை வெளிக் கொண்டு வந்துள்ளது.

ஆங்கிலத்தில் டி.எச்.பி செந்தாரசேரி அவர்களால் எழுதப்பட்ட ”அய்யங்காளி : தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்” என்கிற இச்சிறுநூலை மலையாளத்தில் கெ.ஆர். மாயா அவர்களும் தமிழில் மு.ந. புகழேந்தி அவர்களும் மொழி பெயர்த்துள்ளனர்.

அன்றைய கேரளத்தில் நிலவிய சாதிய கொடுங்கோன்மைகளைக் கண்டு ஆத்திரமுற்ற விவேகானந்தரே “மலபார் ஒரு பைத்தியக்கார வாழ்விடம்” என 1897-ம் ஆண்டு சென்னையில் நடந்த தனது சொற்பொழிவின் போது குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கேரளாவில் அதற்கும் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெங்கனூரில் அய்யன் எனும் தகப்பனுக்கும் மாலா எனும் தாயாருக்கும் பிறந்தவர் தான் அய்யங்காளி.

அன்றைய கேரளத்தில் சாதி ரீதியில் நொறுக்கப்பட்ட மக்கள் ”உயர்” சாதிக்காரர்களை விட்டு எத்தனை அடிகள் தூரம் நிற்க வேண்டும் என்பதற்கு தனி கணக்குகளே இருந்துள்ளன. நிலம் வைத்துக் கொள்ள தடை, மேலாடை உடுத்திக் கொள்ள தடை, மீசை வைத்துக் கொள்ள தடை, பொதுக்கிணற்றையும், பொது வழிகளையும் பயன்படுத்த தடை, கோவிலுக்குள் நுழையத் தடை, கல்வி கற்கத் தடை, புத்தாடைகள் உடுத்திக் கொள்ள தடை… என அந்த மக்கள் எதிர்கொண்ட தடைகளின் பட்டியல் மிக நீண்டது. தாங்கள் அணிந்துள்ள புத்தாடைகள் புதிதாய்த் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அம்மக்கள் அவற்றின் மீது அடுப்புக் கரியைத் தோய்த்துக் கொள்வது வழக்கம்.

அய்யங்காளி வில்லுவண்டி யாத்திரை சிலை

தான் பிறந்த சமூகச் சூழலை எதிர்த்து அய்யங்காளி நடத்திய போராட்டங்களில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வீரத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் போராட்டங்களையும் அவை நடந்த காலகட்டத்தையும் ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். மக்களின் உரிமைகளை மறுத்த பார்ப்பனியக் கொடுங்கோன்மையை வீழ்த்திய அய்யங்காளியின் போராட்டங்களில் இருந்து நமது சமகாலத்திய எதிரிகளை எப்படிக் கையாள்வது என்பதற்கு ஏராளமான பாடங்கள் உள்ளன.

கல்வி கற்பதற்கான உரிமையை நிலைநாட்ட, கல்விக் கூடங்களுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்ல அய்யங்காளியும் அவரது தோழர்களும் நடத்திய போராட்டங்களும், அதற்கு எதிர்வினையாக பல பள்ளிக்கூடங்களைத் தீயிட்டுக் கொளுத்திய இடைநிலைச் சூத்திரர்களின் சாதி வெறியும் வார்த்தைகளாய் நம் கண் முன்னே விரியும் போது மனக் கண்ணின் முன் அரியலூர் அனிதாவின் முகம் தோன்றி மறைகிறது. நம்பூதிரிப் பார்ப்பனர்களால் வெறியூட்டப்பட்ட இடைநிலைச் சூத்திர சாதிவெறியர்களை அவர்களின் பொருளாதார ஆதிக்கத்தின் மீது அமிலத்தைக் கொட்டி அடக்குகிறார் அய்யங்காளி.

”எமது உரிமைகளை நசுக்கும் உமது வயல்களின் சேற்றில் கால் நனைக்க மாட்டோம்” என்கிற அய்யங்காளியின் போர் முழக்கத்தின் பின் தலித் மக்கள் அணி திரள்கின்றனர். காலங்காலமாய் தலித் மக்களிடம் இருந்து உழைப்பை இலவசமாய்த் திருடிக் கொழுத்துக் கிடந்த ஆதிக்க சாதியினரை அய்யங்காளியின் போராட்ட அறைகூவல் மிரளச் செய்தது. வெள்ளை அரசாங்கத்தின் காகிதச் சட்டங்கள் சாதிக்க முடியாததை, கிறிஸ்தவ மிசனரிகளால் சாதிக்க முடியாததை அய்யங்காளியின் தலைமையில் சுமார் ஓராண்டு காலம் நீடித்த தொழிலாளர் போராட்டம் சாதித்துக் கொடுத்தது.

நீதிமன்றங்களின் பீடங்களை “மேன்மக்களின்” புட்டங்களே ஆக்கிரமித்துக் கிடப்பதையும், தலித்துகளின் குரல்களுக்கு அங்கே இடமில்லாதிருப்பதையும் கண்டு ஆவேசமுற்ற அய்யங்காளி, மக்களைக் கொண்டு “சமூக நீதிமன்றங்களை” கட்டியமைக்கிறார். சட்டங்களும், நீதி நெறிகளும் என்னவாக இருந்தாலும் – ஒரு வேளை நியாயமாக இருந்தாலுமே கூட – அவற்றை வழங்கும் இடத்திலும் அமல்படுத்தும் இடத்திலும் எளிய மக்களின் நேரடிப் பங்கேற்பு இல்லையென்றால் மக்களுக்கான நீதி கிடைக்காது என்கிற உண்மையை இன்றைய ”நாகரீக” உலகின் மாந்தர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பாடமாக எடுத்துள்ளார் அய்யங்காளி.

பக்க வரம்புகளுக்கு உட்பட்டு அய்யங்காளியைக் குறித்த ஒரு துவக்க நிலை அறிமுகத்தை இந்நூல் ஏற்படுத்துகின்றது. தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சாது ஜன பரிபால சங்கத்தின் செயல்பாடுகள், அவற்றினுள் உபசாதிகளுக்கிடையே நடந்த உட்பூசல்கள் குறித்து மேலும் வாசிக்க தூண்டும் வகையில் சுருக்கமாகவும் சாரமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அய்யங்காளியின் போராட்டங்களை அடிப்படையாக வந்த இலக்கியங்கள் மற்றும் ரசிய புரட்சியின் தாக்கத்தில் புதிதாக உருவாகி வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகள் குறித்து இச்சிறு நூல் கோடிட்டுகாட்டுவதுடன் அவற்றைக் குறித்து மேலும் வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகின்றது.

சாதிய இருள் சூழ்ந்த கொடூரக் கானகத்தில் சிங்கமாய்க் கர்ஜித்து மலையாய் உயர்ந்து நின்ற அய்யங்காளியைக் குறித்த ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ள அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.

நூல்: ”அய்யங்காளி : தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்”

  • ஆங்கில மூலம்: டி.எச்.பி செந்தாரசேரி
    மலையாள மொழிபெயர்ப்பு : கெ.ஆர். மாயா
  • தமிழில் :  மு.ந. புகழேந்தி.
  • பக்கங்கள்: 55
  • முதல் பதிப்பு 2013
  • விலை: ரூ 40
  • பதிப்பகம் : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
    ஆன்லைனில் வாங்க

சென்னையில் நேரடியாக வாங்க:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

படியுங்கள், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

 

பேருந்து கட்டண உயர்வு : மாணவர்களைத் தாக்கும் ரவுடி போலீசு !

0

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராடிய வேலூர், கும்பகோணம், மதுரை கல்லூரி மாணவர்கள் மீது ரவுடி போல போலீஸ் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. இதனைக்  கண்டித்து விருத்தாசலம் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 31.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கைது செய்த மாணவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !

0

அலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !

பாபர் மசூதி விவகாரத்தில், வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் ஆகியவற்றை தனது நோக்கத்துக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் வேலையை சங்க பரிவாரம் தொடக்கம் முதலே செய்து வருகிறது.

“ராம ஜென்மபூமி என்பது இந்துக்களின் மத நம்பிக்கை. மத நம்பிக்கை உண்மையா பொய்யா என்று எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. எனவே மசூதி இருக்கும் இடத்தை முஸ்லிம்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்படவேண்டும்” என்பதுதான் இந்த விவகாரம் தொடங்கிய நாள் முதல் பாஜக முன்வைத்து வரும் கோரிக்கை. 1989 -இல் பா.ஜ.க. நிறைவேற்றிய பாலம்பூர் மாநாட்டு தீர்மானமும் வாஜ்பாயி, அத்வானி உள்ளிட்டவர்களின் அறிக்கைகளும் இதைத்தான் கூறுகின்றன.

பாபர் மசூதி இருந்த வளாகத்தை மூன்றாகப் பிரித்துத் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் (இடமிருந்து) தரம் வீர் ஷர்மா, எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் (கோப்புப் படம்)

பாபர் மசூதியை கடப்பாரையை வைத்துத்தான் இடிக்க வேண்டும் என்பதில்லை, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் இடிக்கலாம் என்ற சாத்தியத்தை சங்க பரிவாரத்துக்கு புரிய வைத்த தீர்ப்புதான் 2010 -இல் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

இந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் புரிந்து கொள்வோமானால், பாபர் மசூதி வழக்கைப் பற்றி மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்தின் யோக்கியதையையும், நீதித்துறையின் யோக்கியதையையும் கூட தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

சிவில் வழக்கில் மனுதாரராக இணைக்கப்படும் இராமன் சிலை!

ராம ஜென்மபூமி என்கின்ற ஒரு மதநம்பிக்கை சார்ந்த விசயத்தை, சிவில் வழக்கின் வரம்புக்குள் கொண்டுவருகின்ற மிகப்பெரிய மோசடி 1989 -இல்தான் அரங்கேறியது. “1959-இல் நிர்மோகி அகாரா தொடுத்திருந்த உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டபூர்வமான முறையில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த சிவில் வழக்கைக் கொண்டு வருவதன் வாயிலாகத்தான் சட்டப்படியே மசூதியைக் கைப்பற்ற முடியும்” என்ற “நுணுக்கம்” தேவகி நந்தன் அகர்வால் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தான் புரிந்திருந்தது.

டிசம்பர் 22, 1949 இரவில் பாபர் மசூதி வளாகத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட குழந்தை ராமன் சிலை. (கோப்புப் படம்)

உரிமையியல் சட்ட விதி 32 -இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையை கடவுள் சிலை பெற்றிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் பல்வேறு நாடுகளில் மத நிறுவனங்களுக்கு சொத்துரிமை இருக்கிறதேயன்றி, கடவுளுக்கே நேரடியாக அரசியல் சட்டரீதியான உரிமை எந்த நாட்டிலும் வழங்கப்படவில்லை. இது இந்திய அரசியல் சட்டத்தின் தனிச்சிறப்பு.

இதனை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, பாபர் மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட இராமன் சிலையையே மனுதாரர் ஆக்கி, அந்தச் சிலையின் காப்பாளர் என்ற முறையில், 1959 முதல் நீடித்துவரும் சிவில் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருடைய இடத்தில் ‘ராமனின் காப்பாளராக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த திரிலோக் நாத் பாண்டே, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மீதான மேல்முறையீட்டைத்தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது என்பதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

எது மத நம்பிக்கை? – அதை நீதிமன்றமே தீர்மானிக்கும்!

ஒரு குறிப்பிட்ட இடத்தை இராமன் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இராமன் சிலையுடைய (அதாவது அதன் காப்பாளருடைய) சொத்தாகிவிட முடியுமா?
பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபவ பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பில் குறைபாடுகள், முறைகேடுகள் பல உள்ளன. முகலாய மன்னர்கள் காலத்தில் ஏராளமான கோயில்கள் இடிக்கப்பட்டன என்ற பா.ஜ.க.வின் பிரச்சாரத்தில் தொடங்கி, இராமன் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற புனைகதை வரை அனைத்தையும் அப்படியே வழிமொழிந்திருக்கிறது இத்தீர்ப்பு. ஆனால், பாபர் மசூதியின் நிலத்தை இராமன் சிலைக்கு வழங்குவதற்கான சட்டபூர்வமான நியாயத்தை இந்த புனைகதைகள் வழங்கவில்லை.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள்.

அதனை வழங்கியிருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான்.
‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக இந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5, 6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் தொன்மையான நம்பிக்கை அல்ல.

இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது.

பார்ப்பனரல்லாதவர்கள் சாமி சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்ற கருத்தை இந்துக்களின் மதநம்பிக்கை என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரிப்பதைப் போலத்தான், மசூதியின் மையப்பகுதியில் ராமன் பிறந்தான் என்று இந்து நம்பிக்கையையும் அலகாபாத் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.

மத நம்பிக்கை, சொத்துரிமையாகவும் ஆக முடியுமா?

ஒரு வாதத்துக்கு அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா? அங்கே ஒரு கோயில் இருந்து அது இடிக்கப்பட்டது என்பதையும் ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், 400 ஆண்டுகளாக அது முஸ்லிம்களின் அனுபவத்தில் இருக்கும் சொத்து என்பது உண்மையா, இல்லையா? மேலும், 1949 -இல் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது உண்மையா இல்லையா? எல்லாமே உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் இந்தத் தீர்ப்பு, மேற்கண்ட கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது.

பாபர் மசூதியைத் திருப்பிக் கட்டக்கோரி 25 ஆண்டுகளாகப் போராடிவரும் இந்திய முசுலீம்கள்

”ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை” என்றும், ”இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும்” என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி இத்தீர்ப்பு விளக்கம் அளிக்கிறது.

இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடம், நிலம் என்ற முறையில் ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது. இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.

கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு.

மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பற்றிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு. அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25 -ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.

சட்டப்படி இராம ஜென்மபூமி புனிதம், மசூதி புனிதமில்லை– இதுதான் இந்திய மதச்சார்பின்மை!

எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும்.

”கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்” என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ”தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்” என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.

1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் – 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

மறைந்திருந்து கொன்றாலும் ராமன் வீரனே! திருட்டு சிலையானாலும் ராமன் தெய்வமே!

1949 சிலை வைப்பும், 1992 மசூதி இடிப்பும் சட்டப்படியே குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?

சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. தீண்டாமை என்பது கிரிமினல் குற்றம். ஆனால், பார்ப்பன அர்ச்சகன் தவிர, மற்றவர்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டு என்று கூறுவது மத உரிமை.

இதுதான் சட்டத்தின் நிலை. அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை.

சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்தக் குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொகுத்துக் கூறினால், 1992-இல் இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு -25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு -25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

எனவே, அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26 -ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஏனென்றால், பார்ப்பனியம் மட்டுமின்றி, எல்லாவகையான மதப்பிற்போக்குத்தனங்களையும் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி, மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.

அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிப்பதற்காக, மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.

1949 -ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986 -இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.

டிசம்பர் 1992 -இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.

“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, நிலத்தையும் பெற்றுவிட்டது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

அரசியல் சட்ட வரம்புக்குள் நின்றபடியே பார்ப்பன பாசிசத்தை முறியடித்து விட முடியும் என்ற பிரமையிலிருந்தும் விடுபட முடியும்.

-மருதையன்.

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

ஆகமம் அவாளுக்குத்தான் – இந்துக்களுக்கில்லை ! வீடியோ

0

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் தோழர் ராஜூ மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ…

தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:

கருவறைக்குள் நுழைய நமக்கு உரிமையில்லை என்று சொல்லும் போது நாம் கோபமோ, அவமானமோ அடையவில்லை. பெரியார் இதனைத்தான் கோபமாக சாடினார். பொதுவாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடித்துத் தீர்ப்பு வரும். ஆனால் தீட்சிதர் வழக்கு மட்டும் வெகு விரைவாக விசாரிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 2009 -ம் ஆண்டு, அம்மாணவர்களைத் தேடி ஒருங்கிணைத்து அந்த வழக்கில் ஈடுபடுத்தினோம். அதற்கு முன்னால் அம்மாணவர்கள் அனைத்து தலைவர்களையும் பார்த்தார்கள். நம்பினார்கள். இவ்வழக்கை பார்ப்பனர்கள் தங்களுக்கு ஏற்ற நீதிபதி வரும் வரை இழுத்தடித்தார்கள்.

இவ்வழக்கை ம.உ.பா.மை கையிலெடுத்த போது, இறுதி விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் பெரிய வக்கீல் பிடிப்பது சாதாரண விசயம் கிடையாது. திமுக, திக என யாரும் முன் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்கள் சார்பில் வாதாடும் பார்ப்பன வக்கீல் அடுத்து என்ன பொய் சொல்வான் என வாய்பார்த்து காத்திருக்க வேண்டும். அவன் சொன்ன பொய்யை உடைக்க முயற்சிக்க வேண்டும். ஆகமத்தில் அப்படி பார்ப்பனர்கள் தான் அர்ச்சகர்களாக வரவேண்டும் என்பது கிடையாது.

இங்கு நீதியை சீர்குலைத்த உச்சநீதிமன்றம், தற்போது ஹதியா வழக்கிலும் அடிப்படை மனித உரிமைகளில் கை வைத்திருக்கிறது. தனது இந்து மத சார்பை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத்தில் இதற்குத் தீர்வு கிடையாது. இதற்கு மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெற வேறு வாய்ப்புகள் ஏதும் கிடையாது. சங்கரராமனை ‘போட்டவர்கள்’ தான் பார்ப்பனர்கள். அவர்கள் சிதம்பரத்தில் நந்தனை கொளுத்தினாரகள். அது நந்தனின் தோல்வியல்ல. அது நந்தனின் போராட்டம்.

அதனை ஆறுமுகசாமி தொடர்ந்து நடத்தினார். வழக்கில் வென்று வந்த ஆறுமுகசாமிக்கு நயவஞ்சக தீட்சிதர்கள் மரியாதை செய்வதாக வந்தனர். ஆறுமுகச்சாமி தீட்சிதர்களின் மரியாதையை புறக்கணித்தார். அதுதான் போராட்ட உணர்வு, சுயமரியாதை உணர்வு. ஆகவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதுதான் ஒரே தீர்வு.

*****

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உரை – வீடியோ

மாணவர் பாலகுரு பேசும் போது:

“எங்களுக்கு படித்து முடித்த பின்னர் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தனர். ம.உ.பா.மையத்தினரின் முயற்சியால்தான் அனுமதி கிடைத்தது. அர்ச்சகர் பாடசாலையில், அனைத்து சாதியினருக்கும் சம ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது.

படித்து முடித்த நாங்கள் வேலைக்கு எங்கு செல்வது எனத் தெரியவில்லை. எங்களுடன் படித்த மாணவர்கள், பல இடங்களில் பல வேலைகளுக்குச் சென்றுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.

எங்களுக்கு கோவில்களில் பணி வழங்குவதற்கு ஆகமத்தின் பெயரால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரவு 1 மணிக்கு நடை திறப்பு செய்யப்படுகிறது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆகமப் படி 9 மணிக்கு நடை சாத்த வேண்டும். மக்கள் அதிகமாக வர வர, வருமானம் வரும் போது இவர்கள ஆகமத்தை கண்டுகொள்வதில்லை. ஆகவே பார்ப்பனர்களுக்கு ஆகமம் முக்கியமில்லை, வருமானம் தான் முக்கியம்.”

மாணவர் வெங்கடேசன் பேசியது :

“அர்ச்சகர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு என்பது கடினமான ஒன்று. ஒரு சென்டருக்கு ஒரு நாளைக்கு 1000 பேர் என மூன்று நாட்களுக்கு சுமார் 3000 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்தனர். அவர்களில் வெறும் 40 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட்டனர். அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் இப்போது படித்து முடித்தவர்களும். இது போல தமிழகம் முழுவதும் 6 சென்டரில் தேர்வு நடைபெற்றது.

நாங்கள் அனைவரும் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தோம். மற்ற அனைத்து வேலைகளுக்கும் தகுதி தான் முக்கியம் என்கிறார்கள். மற்ற வேலைகளில் தகுதி தேவை ஆனால் அர்ச்சகருக்கு மட்டும் சாதிதான் தேவையா ?

அன்று கோவில் கட்ட தலைப் பிள்ளையை வெட்டிப் பலிகொடுத்து புதைத்து கட்டுவார்கள். இன்று அப்படி நடக்க முடியுமா ? இங்கு யாரும் பழைய முறையில் தான் செய்வேன் என்று பேசுவதில்லை. பிராமணன், வெறும் கோவில் பூசாரி வேலையை மட்டும் செய்வதாக இருந்தால் சரி, பிழைத்துக் கொள்ளட்டும் என விட்டுவிடலாம். மற்ற எல்லா வேலைகளிலும் அவர்கள் தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு காசு வரும் இடம்தான் முக்கியம்.

எங்களுக்கு சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தால் போதும். நீதிபதிகள் சட்டத்தின்படி செயல்பட்டால் எங்களுக்கு விடிவு கிடைக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லை. அவர்கள் யாருக்காகவோ பயப்படுகிறார்கள்.

எங்களுக்கு தொடக்கத்தில் இருந்து ஆதரவாக ம.உ.பா.மை. வழக்கறிஞர்கள் உதவி இருக்கிறார்கள். இன்றைய முதல்வர் எங்களுக்கு உதவியைச் செய்வாரா ? எங்களுக்கு யார் உதவுவார்கள். மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும்.”

மாணவர்  திருமுருகன் பேசியது :

“2006 -ல் நாங்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். ஆகமத்தில் அப்படி இந்த சாதிதான் அர்ச்சகர் வேலை செய்யவேண்டும் என்று கூறுகிறது என்றால் ஆகம விதிப்படி வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது. ஆனால் அமெரிக்காவில் சென்று கோவில்கட்டியிருகிறார்கள். அங்கு போய் பூஜை செய்கிறார்கள். அதற்கு அவர்கள் ஆகமம் பார்ப்பது இல்லை. அதற்குக் காரணம் பணம்தான். பெரியார் சொன்னபடி அனைவரும் சமம் என்ற வகையில் ஒரு நிலைமை வரும்வரைக்கும் நாம் போராடுவோம்.”

அரங்கநாதன் – மாணவர் சங்கத் தலைவர் பேசியது :

“கேரளாவில் அர்ச்சகர்களாக பிராமணரல்லாதவர்கள் 36 பேரை சேர்த்துள்ளார்கள். அது வரவேற்கத்தக்கது. கடந்த 2007- 2008 – பயிற்சி முடித்த மாணவர்கள் வேலையின்றி இருக்கிறாரகள். மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பலரும், பல வேலைகளில் இருந்து பாதியிலேயே வெளியேறி வந்து கலந்து கொண்டனர். அர்ச்சகர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு சமஸ்கிருதம், தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர்.

எங்களுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஐயரை மிரட்டி எங்களுக்கு சொல்லித்தரப் போகக்கூடாது என்று மிரட்டினார்கள். சேலம் அருகில் இராமகிருஸ்ண ஜீவா என்ற பிராமண அர்ச்சகர் நாங்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரே மாதத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பிராமணர் சங்கத் தலைவர், அடியாள் வைத்து அவரை அடித்தனர். அவர் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டார். மீண்டும் மாணவர்கள் அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து பாதுகாப்பு கொடுத்தனர்.

அதுமட்டுமல்ல, சிலை செய்து தருபவர்களை மிரட்டி பயிற்சிப் பள்ளிக்கு தரவேண்டிய சிலையை தடுத்தனர். அதன் பின்னர் வழக்குப் போட்டு பரீட்சை தள்ளி வைக்கப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ம.உ.பா.ம. தான் சங்கமாக திரட்டி போராட்டத்தை எடுத்தது.

போராட்டத்தின் போது பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்கு இந்து முன்னணி கும்பல் மிரட்டியது. மிரட்டல் குறித்து புகார் கொடுத்த அன்று மாலை டி.எஸ்.பி அழைக்கிறார் என்றார்கள். அவரை சந்திக்கச் சென்ற போது, இந்து முன்னணி ஆட்கள் கடுமையாக தாக்கினர். அப்படி இருந்தும் போராட்டத்தைக் கைவிடவில்லை. அதன் பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.

“அர்ச்சகருக்கு பல் சொத்தை இருக்கக் கூடாது, மீசை, தாடி கூடாது. ஆனால் அப்படியா பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இதே பார்ப்பனர்கள்தான் யாகத்தில் காபியை சூடு செய்து குடிக்கிறான். இந்து அமைப்புகள் அனைத்தும் பிராமனர்களுக்கு மட்டும் ஆதரவாக இருக்கிறாரகள்.”

கோர்ட்டை நம்பினோம். தீர்ப்பு எதிராக வந்தது, நான் தீட்சையை களைத்துவிட்டேன். தற்போது பேசிய பத்திரிக்கையாளர் சட்டமன்றத்தின் மூலமாக தீர்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அனைத்து ஓட்டுக் கட்சிகளிடமும் காலில் விழாத குறையாக நாங்கள் கேட்டுவிட்டோம். ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கருவறைத் தீண்டாமைக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடினால் தான் தீர்வு காண முடியும்.”

 

புதிய கட்டணத்தை செலுத்த மறுப்போம் ! தொடரும் போராட்டங்கள்

0

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருப்பூர் பகுதி முழுவதும் இபிஎஸ் – ஓபிஎஸ் கும்பலின் பிக்பாக்கெட் கொள்ளையான பஸ்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி  பொதுமக்களிடம், “போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு காரணமான அமைச்சர்கள் -அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடு கட்டு. முடியாவிட்டால் பதவியை விட்டு விலகு !” – என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக 31-01-2018 அன்று புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் கொடுத்தோம்.

தற்போது மேலிடத்து உத்தரவு அனுமதி கிடையாது என கடிதம் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தானே மறுப்பு மக்களை சந்திக்க எங்களுக்கு யாரும் அனுமதி கொடுக்க வேண்டியதில்லையே…மக்களிடம் பிரச்சாரம் தொடர்கிறது…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் நல்ல ஆதரவு கொடுத்ததுடன் தங்களால் எவ்வளவு அர்ச்சனை கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்தனர் அதனை இபிஎஸ் – ஓபிஎஸ் கும்பலிடம் எப்படி கொண்டு சேர்ப்பதென்று தெரியவில்லை.

குறிப்பாக எம்ஜிஆர் விழாவிற்கு ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கும் ,எம்எல்ஏ -க்களுக்கு சம்பளம் உயர்த்தியதற்கும் மக்கள் சொன்ன வார்த்தைகளை நம்மால் எழுத முடியாத அளவுக்கு இருந்தது!

90 வயதுள்ள பாட்டியம்மா ஒருவர் கூறும் போது, “நானே தெருவோரம் அமர்ந்து வேஸ்டு பிரித்து வாழ்கிறேன். அந்த ஈனப்பயல்கள் நம்ம உழைச்ச காச அநியாயமா துன்றானுக” என பேச துவங்கி எம்ஜிஆர், ஜெயா, எடப்பாடி, தினகரன் வரை ஒருபிடிபிடித்தார்.

70 வயது மூதாட்டி “நான் 25வருட சத்துணவு ஆயாவாக வேலை பாத்து 40 பிள்ளைகளை பராமரித்தேன் எனக்கு பென்சன் 3,500 தான் ஆனா அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நம்ம பணத்தை கொள்ளையடிச்சு கொழுக்கிறாங்க உங்க போராட்திற்கு நானும் வாரேன் நடக்க முடியாது வந்து கூப்பிட்டு போங்க” என்றார்.

மேலும் ஒரு பெண்மணி ஜெயலலிதாம்மா சேர்த்த பணத்தையெல்லாம் என்னா செஞ்சாங்க அதைக்கொண்டு இன்னும் 30 வருசத்திற்கு 7 கோடி தமிழக மக்களுக்கும்அம்மா உணவகத்தில் உணவு போடலாம் என்றார். எப்படிங்க போடமுடியும்? கேட்டோம் அதற்கு எங்க வீட்டுகாரர் அதிமுக தாங்க அவருதான் சொன்னாரு என்று கூறி 2018 காலண்டரை காண்பித்தார் அதில் ஜெயா சிரித்துக்கொண்டிருந்தார்.

மக்களின் பேச்சிலிருந்தே தெரிகிறது
இந்த அரசு மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபம்….

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர், தொடர்புக்கு : 99658 86810.

*****

கும்பக்கோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரி கடந்த ஐந்து நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். ஆறாவது நாளான 30.1.2018 அன்று காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வரவிடாமல், வாயிலை அடைத்து வைத்தது போலீசு.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியை சேர்ந்த 10 -க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் போலீசின் தடைகளை தாண்டி சாலை மறியல் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தது போலீசு.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையேல் எங்கள் அனைவரையும் கைதுசெய் என்று முழக்கமிட்டபடி கல்லூரியின் வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை வெளியே வரவிடாதபடி வாயிலில் கையிற்றை கட்டியது போலீசு.

போலீசின் கையிறுகளையும் மீறி 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறினர். அவர்களையும் உடனே கைதுசெய்தது போலீசு.

போலீசின் கைது நடவடிக்கையால், கல்லூரி மாணவர்களுக்கும் போலீசுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்க கோரி 40 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் இருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் கைதுசெய்து காவல்நிலையத்தில் வைத்து அடைத்து வைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக போலீஸ் தடையை மீறி 30.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் இதற்கு தலைமை தாங்கினார். இதில் 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “புதிய கட்டணத்தை கொடுக்க மாட்டோம் ! பழைய கட்டணத்தில் பயணம் செய்வோம் !” போக்குவரத்து துறை நட்டத்திற்கு காரணமான அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்து, செத்துக்களை பறிமுதல் செய்து சிறையிலடை! என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

 

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !

12

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !

ஜினியின் அரசியல் அறிவிப்பு இணையத்தின் மெய்நிகர் உலகில் ஒரே சமயத்தில் பல்வேறு வகையான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது. ஓரளவுக்கு அரசியல் அறிமுகம் கொண்டவர்களும், அரசியல் உரையாடல்களுக்கு பழக்கமானவர்களாகவும் இருக்கும் தமிழ் சமூக இணைய மக்கள் ஒருபக்கம் மீம்ஸ்கள் மூலமாகவும், இன்னபிற வழிகளிலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பை கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டாள் விவகாரத்தில் நித்தியின் பெண் சீடர்கள் களமிறங்கிய பின் ரஜினியின் ஆன்மீக அரசியல் இந்த வட்டாரங்களில் கேலிக்குரியதாக மாறியுள்ளது.

சென்னை புத்தகக் காட்சி: கருத்துக்கணிப்பில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் இளைஞர்கள்

இன்னொரு பக்கம், ரஜினியின் பூர்வீகத்தை முன்வைத்து தமிழர் vs தமிழரல்லாதார் அரசியலை முன் தள்ளும் நாம் தமிழர் அல்லது அதைப் போன்ற இனவாத கருத்துக் கொண்டவர்களின் விமர்சனங்கள். மூன்றாவதாக வழக்கமாக தமிழ் இணைய உலகில் பாரதிய ஜனதாவுக்கு முட்டுக் கொடுக்கும் பார்ப்பனியக் கருத்துக்களை கொண்ட வலதுசாரி தரப்பினரின் ஆதரவுக் குரல்.

நடப்பு அரசியல் குறித்தோ மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ எந்த வகையிலும் தலையிடுவதோ போராடுவதோ இல்லை என்கிற ரஜினியின் நிலைப்பாடு இணையத்தைப் பொறுத்தவரை பரவலாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மெய்நிகர் உலகைப் பொறுத்தவரை ஏறக்குறைய ரஜினியின் பிம்பம் கோமாளித்தனமானதாக பார்க்கப்படும் நிலையில் மெய் உலகின் கருத்து என்னவென்பதை அறியும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தோம். இதற்கென தமிழகத்தின் சில நகரங்கள் தெரிவு செய்யப்பட்டன.

ரஜினியின் அரசியல் நுழைவு குறித்த எட்டு கேள்விகளுக்கான பதில்களுடன் பாலினம், வயது மற்றும் வருமானம் ஆகிய மூன்று தனிப்பட்ட தகவல்களை மட்டும் பதிவு செய்து கொண்டோம். சென்னையில் ஏழு பேர் கொண்ட செய்தியாளர் குழு புறநகர் ரயில்களில் மக்களைச் சந்தித்தது. மற்றுமொரு குழுவைச் சேர்ந்த பத்து தோழர்கள் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் புத்தகச் சந்தை உள்ளிட்ட இடங்களில் கருத்துக் கணிப்பை எடுத்தனர். சென்னை தவிர தருமபுரி, கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களிலும் பாண்டிச்சேரியிலும் எமது செய்தியாளர் குழுவினர் மக்களைச் சந்தித்தனர்.

திருச்சி கருத்துக்கணிப்பில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் இளைஞர்கள்

மொத்தம் 5,150 மாதிரிகள். இதில் 78% ஆண்கள், 21.73% பெண்கள் மற்றும் 0.27% மூன்றாம் பாலினத்தவர்.

வயதுவாரியாகப் பார்த்தால், 49.63%பேர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். 31 -ல் இருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள் 36.82% பேர். மேலும் 13.55% பேர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.

வருமானப் பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால், வருமானமற்ற 16% பேர் (மாணவர்கள் அல்லது இல்லத்தரசிகள்); பத்தாயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள் 48.56% பேர்; 10 -ல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கொண்ட பிரிவினர் 25.15% பேர்; 20 -ல் இருந்து 50 ஆயிரம் வரையிலான வருவாய் கொண்டவர்கள் 6.31% பேர்; சுமார் 3.98% பேர் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வருவாய் கொண்ட பிரிவனராக இருந்தனர்.

கேள்விகளைப் பொறுத்தவரை, ரஜினியின் அரசியல் வருகைக்கு மக்களின் விருப்பு, அவர் பட வெளியீடுகளின் போது நடக்கும் பிளாக் டிக்கெட் விற்பனையும் அவரே சொல்லிக் கொள்ளும் அரசியல் தூய்மையும், ஆன்மீக அரசியல், பெண்கள் ஆதரவு, தேர்தல் வரைக்கும் கொள்கையோ மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டமோ இல்லை என்கிற அறிவிப்பு, இந்த அரசியல் நுழைவின் மூலம் ஆதாயமடையப் போவது யார், ரஜினி-கன்னடர் என்கிற விமர்சனம் மற்றும் கடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என மொத்தம் எட்டுக் கேள்விகளை வடிவமைத்திருந்தோம்.

சென்னை மின்சார இரயிலில் ரஜினி சர்வே

இந்தக் கேள்விகளுக்கு மக்கள் தெரிவு செய்த பதில்கள் என்னவென்பதைக் குறித்த முடிவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இக்கருத்துக் கணிப்பின் முடிவுகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது ரஜினியின் அரசியல் வருகைக்கு பாதியோ அல்லது அதற்கு சற்று குறைவான மக்களின் ஆதரவு இருப்பதான தோற்றம் கிடைக்கிறது.

எனினும், இம்முடிவுகளை அதன் முகமதிப்பை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வதற்கில்லை. கொஞ்சம் நெருக்கமாக முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது சில நம்பிக்கையூட்டும் அம்சங்களும், எச்சரிக்கையூட்டும் அம்சங்களும் கலந்தே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவு என்பது அப்படியே ஓட்டாக மாறக்கூடியதா?

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்புகிறீர்களா?” என்கிற கேள்விக்கு “ஆம்” என 43.09% பேரும் ”இல்லை” என 42.80% பேரும் “கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என 14.12% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், “அவரது படங்களுக்கு ரூ 500, 1000 என்று பிளாக்கில் டிக்கெட் விற்கப் படும்போது அவரது கட்சி ஊழலற்ற அரசியல் நடத்தும் என்று நம்புகிறீர்களா?” என்கிற கேள்விக்கு “இல்லை” என 52.23% பேரும், “ஆம்” என 27.55% பேரும் ”கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என 20.21% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் நுழைவை ஒரு பொதுப் பார்வையில் இருந்து “எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இவரும் இருந்து விட்டுப் போகட்டுமே” என்பதன் அடிப்படையில் கணிசமானவர்கள் ஆதரித்துள்ளனர். எனினும், அவரது பட வெளியீட்டு சமயங்களில் லாபவெறியுடன் பிளாக்கில் டிக்கெட் விற்பதை ஊக்குவிப்பது, அதன் மூலம் கருப்புப் பணத்தை குவித்துக் கொள்வது என்பதைக் கடந்து அவரால் ஒரு ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும் என 27.55% பேர் கருத்து தெரிவிப்பது கவனத்திற்குரியது. அதே நேரம் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இத்தகைய பிளாக் டிக்கெட் நடிகர் ஊழலற்ற ஆட்சி வழங்க முடியாது என்றே பதிலளித்திருந்தனர்.

மேலும், எமது கருத்துக் கணிப்பின் போது ரஜினியின் அரசியல் நுழைவை எதிர்த்து பதில்களைப் பதிவு செய்தவர்கள் பெரும்பான்மையாக நேர்ப்பேச்சிலும் மிக கடுமையாக ரஜினியை விமர்சிக்கத் தயங்கவில்லை. ரஜினி என்றதும் இது அவரது ரசிகர்கள் எடுக்கும் கருத்துக்கணிப்பு என்பதாகப் புரிந்து கொண்டு பலரும் கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். “நாற்பது வருடமாக என்னத்தைக் கிழித்தான்?” “ராகவேந்திரா மடத்துக்கு 10 கோடி, புயலுக்கு வெறும் பத்து லட்சமா?” “வயசான காலத்தில் வேலை வெட்டியெல்லாம் முடிச்சிட்டு வேண்டிய வரைக்கும் சம்பாதிச்ச பின்னே பதவியும் வேற கேட்கிறதா?” – இவையெல்லாம் மக்கள் எம்மிடம் தெரிவித்த கருத்துக்களின் சில மாதிரிகள்.

விழுப்புரம் பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு

ரஜினியை ஆதரித்தவர்களில் சிலரே கூட 500/1000 நோட்டு தடை செய்யப்பட்டதை ரஜினி ஆதரித்ததைக் குறிப்பிட்டுக் கண்டித்தனர். ஆதரவு தெரிவித்தவர்களில் சிலர், “அவருக்கென்னங்க.. . வேண்டிய அளவுக்கு சம்பாதிச்சிட்டாரு.. எங்களோட பிழைப்பு தான் சார் இப்படி தினம் தினம் நாறிக்கிட்டு இருக்கு” என்று சலித்துக் கொண்டதையும் கவனிக்க முடிந்தது. ரஜினிக்கு கணிசமாக உள்ள ஆதரவு பெரும்பாலும் அரசியலற்றவர்கள் அல்லது அரசியல் நடப்புகளையும் அவை தொடர்பான செய்திகளையும் பின்தொடரும் வாய்ப்பில்லாத பிரிவினரிடம் இருந்தே வந்தது. இந்தப் பிரிவில் இல்லத்தரசிகள், மாணவர்கள், அன்றாட பிழைப்புக்காக நிற்க நேரமின்றி ஓடும் கீழ்தட்டுப் பிரிவினர் போன்றோர் கணிசமாக இடம் பிடித்தனர்.

மறுபுறம், ரஜினியின் சந்தர்ப்பவாத அரசியல் ஓரளவுக்கு விழிப்புணர்வு பெற்ற பிரிவினரைச் சென்றடைந்துள்ளது. வெளிப்படையாக தமது அரசியல் நிலைப்பாடுகளைப் பேசி கருத்துருவாக்கம் செய்யும் இந்தப் பிரிவினர் ரஜினிக்கு எதிரான மனநிலையில் இருப்பது ஒரு சாதகமான அம்சம். எனினும், மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுவது, மோடி அரசு மக்கள் மேல் தொடுக்கும் பொருளாதார தாக்குதல்கள் போன்ற குறிப்பான அரசியல் தருணங்களில் ரஜினியின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தி வீச்சாக பிரச்சாரம் செய்வதன் மூலம் ரஜினியின் பின் திரளும் சாத்தியம் கொண்ட அரசியலற்ற பிரிவினரிடமும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை இந்தக் கருத்துக்கணிப்பு எடுப்பாக உணர்த்துகின்றது.

அடுத்து, “ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என்பதன் பொருள் என்ன?” என்கிற கேள்விக்கு 26.74% பேர் “மதவாத அரசியல்” எனவும், 25.20% பேர் “சாதிமத நல்லிணக்க அரசியல்” எனவும், 48.06% பேர் “கருத்து இல்லை” எனவும் தெரிவித்தனர்.

அதே சமயம், “ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசத்தின் விளைவால் யாருக்கு ஆதாயம்?” என்கிற கேள்விக்கு பா.ஜக என 25.46% பேரும், “எடப்பாடி அரசுக்கு” என 2.58% பேரும், “தமிழக மக்களுக்கு” என 30.70% பேரும், “யாருக்குமில்லை” என 25.09% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சந்தர்ப்பவாத அரசியல் குறித்த குறிப்பான கேள்விகளுக்கு அவருக்கு ஆதரவு நிலை எடுத்தவர்கள் கணிசமானவர்கள் என்பதோடு “கருத்து இல்லை” எனத் தெரிவித்தவர்கள் கணிசமான பேர் இருப்பது கவனத்திற்கு உரியது. இவ்வாறு தெரிவித்தவர்கள் தேர்தல் சமய நிலவரங்களைக் கொண்டு யாருக்கு ஓட்டளிப்பது என முடிவெடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் என்பதை நேர்ப்பேச்சில் இருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

“ஆன்மீக அரசியல் அப்படின்னா என்னான்னு அவரே இன்னும் சொல்லவில்லையே சார்…?” என்றார் ஒரு இரயில் பயணி. “அவரு முதல்ல தேர்தல்ல நிக்கட்டும்.. அந்த நேரத்துல பாரதிய ஜனதா, மத அடையாளம்னு ஆரம்பிச்சாருன்னா வைச்சி செஞ்சிடுவோம் பாஸ்” என்றார் இன்னொருவர். ரஜினிக்கு ஆதரவாக பதிலளித்தவர்களில் சிலரே கூட இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தனர்; சென்னை புறநகர் இரயிலில் சந்தித்த ரஜினியின் ரசிகர்கள் இருவரே கூட “பாரதிய ஜனதா கூட சேர்ந்துட்டாருன்னா அப்புறம் நாங்களே ஓட்டுப்போடமாட்டோம் சார்” என்றனர். ரஜினியின் “ஆன்மீக” அரசியலும் பாரதிய ஜனதா கும்பலோடு அவர் கொண்டிருக்கும் கள்ளக்கூட்டணியும் போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தப்படவில்லை என்பதையே இந்தக் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களும் உணர்த்துகின்றன.

அடுத்து, “சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி, கொள்கை, போராட்டம் எதுவும் இல்லை” என ரஜினி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு ”கோழைத்தனம்” என 14.74% பேரும், “சந்தர்ப்பவாதம்” என 30.25% பேரும், “ராஜதந்திரம்” என 24.23% பேரும் கருத்து இல்லை என 30.78% பேரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆக, மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை குறித்து ரஜினிக்கு இருக்கும் அலட்சியத்தை சுமார் 45% பேர் கண்டிக்கிறார்கள் என்பது இதில் நேர்மறையானது. அதே நேரம் கணிசமான பேர் (24.23 %) ரஜினியின் சந்தர்பவாதத்தை ராஜதந்திரமாக கருதுகின்றனர் என்பது நமது கவனத்திற்குரியது.

தனது மௌனத்தின் மூலம் மத்திய மாநில அரசுகள் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ரஜினி அளித்து வரும் மறைமுக ஆதரவையும் – எந்தப் போராட்டமும் இன்றி நேரடியாக பதவி சுகம் அனுபவிக்கத் துடிக்கும் வெறியையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை இது உணர்த்துகின்றது.

அடுத்து, “ரஜினி கன்னடர் என்பதால் தமிழ்நாட்டை ஆளக்கூடாது” என்ற கருத்தை     55.30% பேர் தவறு என கண்டிக்கின்றனர். அவ்வாறு சொல்வது சரி என 28.50% பேரும், கருத்து இல்லையென 16.19% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய சினிமாக் கவர்ச்சி என்கிற சர்க்கரையை இந்துத்துவ பாசிச நஞ்சின் மேல் தடவி கடைவிரித்துள்ள ரஜினியின் அபாயகரமான அரசியலை “இனவாதம்” என்கிற மற்றொரு சிறிய நஞ்சைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதை இந்தக் கேள்விக்கான முடிவு தெளிவாக உணர்த்துகின்றது.

ஒருபக்கம் பாஜக போன்ற மதவாத வலதுசாரிகள் ரஜினிக்கு நேர்மறையில் உதவிபுரியும் நிலையில், சீமான் போன்ற இனவாத வலதுசாரிகளின் பிரச்சாரங்கள் எதிர்மறையில் சேவை புரிந்து விடக்கூடும் என்பதை ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியின் மக்கள் விரோத கருத்துக்கள், செயல்கள் வழி விமர்சிப்பதை விட அவர் தமிழர் இல்லை என்பதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களை மக்கள் ஏற்கவில்லை. அதே நேரம் இந்த இனவாத கருத்துக்களை கால்வாசி மக்கள் ஆதிரிக்கின்றனர்.

இதை ஆதரவாக வைத்துக் கொண்டு இக்கருத்தை பெரும்பான்மை கருத்தாக மாற்றலாம் என நாம் தமிழர் இயக்கம் முடிவு செய்யுமானால் அது வளர்வதற்கு பதில் குறைந்து போகவே வாய்ப்பிருக்கிறது.

இதையே வேறு வார்த்தைகளில் பார்க்கலாம்.

இந்த ஒட்டு மொத்த சர்வேயின் படி கால்வாசி மக்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள். பாதிக்கும் குறைவான மக்கள் ரஜினியை எதிர்க்கிறார்கள். கால்வாசிக்கும் அதிகமான மக்கள் கருத்தின்றி இருக்கிறார்கள்.

ரஜினியை ஆதரிப்போர் அரசியல் அற்ற பிரிவினராகவும், ரஜினியை எதிர்ப்போர் அரசியல் கருத்துள்ள பிரிவினராகவும் உள்ளனர். இடைப்பட்ட கருத்தற்ற மக்களை ஆளும் வர்க்கங்கள், ஊடகங்கள் திசை திருப்பி ரஜினி ஆதரவை அதிகரிக்க முயற்சி செய்யும்.

மேலதிகமாக தொலைக்காட்சி விவாதங்கள், சமூகவலைத்தள மீம்கள் – இவற்றைத் தாண்டி உள்ள மக்களே அதிகம். இவர்களிடம் பொதுவில் எந்த வகையான அரசியல் கருத்துக்களும் சென்றடைவதில்லை. அம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் அப்படி அரசியல் கருத்துக்கள் இடம்பெறும் வாய்ப்பு இல்லை. கூடவே கட்சிகள் பலவும் நேரடியாக மக்களிடையே அரசியல் பிரச்சாரம் செய்வதில்லை. அறிக்கைகள், பெயரளவு ஆர்ப்பாட்டங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள், மற்றும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளப் பிரச்சாரத்திற்கே கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

எனவே ரஜினிக்கு ஆதரவாக ஆளும் வர்க்கங்கள், ஊடகங்கள் முயலும் போது அதை வீழ்த்துவதற்கு மக்களிடையே கடும் பிரச்சாரம் ஒன்றே தீர்வு என்பதை இந்த சர்வே காட்டுகின்றது.

இந்த சர்வேயில் மற்ற கட்சிகள், தலைவர்களை ஒப்பீடு செய்து கேள்விகள் கேட்கப்படவில்லை. மேலும் ரஜினி  கட்சி ஆரம்பித்தால் வாக்களிப்பீர்களா, அவர் முதல்வராக வருவாரா, மற்ற கட்சி தலைவர்களின் முதல்வர் வாய்ப்பு போன்ற கேள்விகளை நாங்கள் தெரிவு செய்யவில்லை.

பொதுவில் ரஜினி எனும் நபரின் செல்வாக்கு தமிழக மக்களிடம் என்ன  அளவில் நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்வதும், அதன் வழி அரசியல் பிரச்சாரம் குறித்த ஆய்வுமே எமது நோக்கம். இன்றைக்கு ஆண்டாள், தமிழ்த்தாய் வாழ்த்து, போக்குவரத்து கட்டண உயர்வு போன்ற அன்றாட பிரச்சினைகள் வரும் போது மக்களின் இந்த கருத்து நிலை அவ்வப்போது மாறலாம்.

எனினும் அடிப்படையில் களத்தில் நின்று மக்களிடையே நெருக்கமாக பணியாற்றுவதே ரஜினியை குறித்து மட்டுமல்ல, தோற்றுப்போன இந்த அரசியல் அமைப்பைக் குறித்தும் மக்களிடையே ஒரு ஆக்கபூர்வமான கருத்தை உருவாக்கும்.

( தொடரும் )

– வினவு கருத்துக்கணிப்பு குழு

 

பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

0

பாபர் மசூதி இடிப்பு : என் பெயரைத் துறந்த நாள் !

– எஸ்.என்.எம். அப்தி, பத்திரிக்கையாளர்.

து பாபர் மசூதி இடிப்பின் 25 -ஆம் ஆண்டு. 1992, டிசம்பர் -6 அன்று அத்வானியின் மேற்பார்வையில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாட்டையே ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்த அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அவர்களின் கையில் இன்று நாடே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பத்திரிக்கையாளர், எஸ்.என்.எம். அப்தி.

நாட்டைக் காவி இருள் கவ்வத் தொடங்கிய அந்த நாட்களை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கடந்த கால வரலாறைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல, வரவிருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கு அது அவசியம்.

எஸ்.என்.எம். அப்தி, புகழ்பெற்ற பத்திரிகையாளர். பீகார் மாநிலம் பகல்பூரில் விசாரணைக் கைதிகள் பலரின் கண்களில் ஆசிட் ஊற்றி அவர்களைக் குருடாக்கிய போலீசின் கொடூரமுகத்தை 1980 -இல் சண்டே வார இதழில் அம்பலப்படுத்தியவர். புலனாய்வு இதழியலின் ஒரு முன்னோடி. 1992 -இல் இல்லஸ்டிரேடட் வீக்லி இதழின் பத்திரிகையாளராக அயோத்திக்குச் சென்ற அப்தி, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட ஒரு குடிமகனாக தனது அனுபவத்தை விவரிக்கிறார்.

*****

நான் முஸ்லீமாகப் பிறந்தவன். எனது தாய் எல்லா தாயையும்போல என்னைப் பாலூட்டி வளர்த்தாள். எனது தந்தை ஒரு முஸ்லீமின் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தந்தார். வாரணாசியில் பிறந்தேன், பீகாரில் படித்தேன்; பின் கல்கத்தாவில் குடிபுகுந்து வளர்ந்தேன்; கல்கத்தாவில் என்னை வளர்த்து அன்பை ஊட்டியவர் ஓர் இந்துத் தாய். ஆக, எனக்கு இரண்டு அம்மாக்கள்.

1990 -ல் கல்கத்தாவில், ஓர் இந்துப் பெண்ணை மணம் முடித்தேன். இப்போது ஒரு மகன் இருக்கின்றான். அவனுக்கு முஸ்லீம் – இந்து இரண்டு பக்கமும் மாமா – அத்தைமார்கள் ஏராளம். இரண்டு கலாச்சாரமுறைகளும் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

டிசம்பர் 2 – நான் அயோத்திக்குப் பயணமானேன். எனது இரண்டு அம்மாக்களும் பத்திரிக்கைத் துறை நண்பர்களும் ஒரே மாதிரி புத்திமதி சொன்னார்கள் – ‘பேசாமல் ஒரு இந்துப்பெயரைப் பயன்படுத்து; அதேபோல் நடந்து கொள்.’ எனது இந்துத் தாயை சமாதானப்படுத்திய போது நான் சொன்னேன்; “அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டால், ஒரேயடியாக இந்தியாவை விட்டுப் போக வேண்டியதுதான்.”

லக்னோவை அடைந்தபோது நகரையே அச்சம் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. எனக்கு அறிமுகமான மதச்சார்பற்ற நண்பர் தான் நேரில் கேட்ட, பார்த்த செய்திகளை எனக்குச் சொன்னார். என் மனத்தில் பல கேள்விகள், கல்யாண் சிங் அரசாங்கத்தின் மீது உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றி உச்ச நீதிமன்றம் ஏன் தீர்ப்பு வழங்கவில்லை? உ.பி. அரசாங்கம் 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதே முறையற்றது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதே இடத்தில் கரசேவை நடத்த ஏன் அனுமதி வழங்கப்பட்டது? மத நம்பிக்கை, சட்டத்தைக் காட்டிலும் பெரியது என்று எப்போதும் பிதற்றி வரும் பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி., – பஜ்ரங்தள் கும்பலிடம் உச்சநீதிமன்றம் ஏன் மலையளவு நம்பிக்கை வைக்கவேண்டும்?

வியாழன், டிசம்பர் 3, 1992 :

லக்னோவிலிருந்து இயங்கும் ஒரு பத்திரிக்கையாளரை எனக்கு மிகவும் பிடிக்கும். “அயோத்திக்குப் போவதானால் ஒரு இந்துப் பெயரோடு போ” என்று அவரும் அம்மா சொன்னது போலவே சொன்னார். அது அதிர்ச்சி அளித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே அவர் அயோத்தி விஷயங்களை எழுதியபோதெல்லாம் இந்துப்பெயரைத்தான் பயன்படுத்தினார்; அவர் ஒரு முஸ்லீம்.

1980 -களின் பிற்பகுதியில் பாபர் மசூதி வளாகத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவோம் என்ற மதவெரி முழக்கத்தை முன்வைத்து எல்.கே. அத்வானி நடத்திய ரதயாத்திரை (கோப்புப் படம்)

மாலை மங்கிய நேரத்தில் பைசாபாத் சென்றேன். மொத்தம் 250 பத்திரிக்கையாளர்கள் அங்கு நிரம்பி வழிந்தார்கள். ஒரு விடுதியின் முதலாளி கே.கே.கபூர் என்பவர் சொன்னார், “இன்னொரு 10 வருஷம் போனாலும் கோவிலைக் கட்ட முடியாது. நான் இன்னும் சில அறைகள் கட்டப்போகிறேன். அடுத்த கரசேவைக்கு எல்லாப் பத்திரிக்கையாளர்களும் என் விடுதியிலேயே தங்கலாம்”

அயோத்திக்குச் செல்லும் சாலை முழுக்க கரசேவகர்கள் நிரம்பிக் கிடந்தார்கள். “யே அந்தர் கி பாத்ஹை, போலீஸ் ஹமாரே சாத் ஹை!” (உனக்கொரு ரகசியம், போலீஸ் எங்கள் வசம்) என்று அவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.

பாபரி மசூதிக்கு வெளியே காவலில் இருந்த போலீஸ் ஒருவர் புரோகிதர் கொடுத்த ‘பிரசாதத்’தை வாங்கி மென்று கொண்டிருந்தார். பிரதேச ஆயுதப்படை ஜவான்கள் பஜ்ரங்தளத்தின் சின்னம் பொறித்த காவி ரிப்பனைத் தலையில் கட்டிக்கொண்டு ‘ஜெய் சியாராம்’ முழக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அயோத்தியில் அஷிம் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றேன். அது பல நடப்புக்களை வெட்ட வெளிச்சமாக்கியது. பாபரி மசூதிக்கு அருகாமையில் 2.77 ஏக்கர் நிலத்தை பி.ஜே.பி. அரசாங்கம் கைப்பற்றியது செல்லாது என்று வழக்கு தொடுத்தவர் இந்த அன்சாரிதான். டிசம்பர் 2 அன்று கரசேவகர்கள் அன்சாரி வீட்டுக்குள்ளே புகுந்து தாக்கினார்கள். வருவதை முன்பே ஊகித்துவிட்டதால் அன்சாரி உயிர் தப்பினார். அவரது குடும்பத்தாரை அடுத்த வீட்டு இந்துக் குடும்பப் பெண் கங்காதேவி, தாக்க வந்த கொலைகாரக் கூட்டத்தின் எதிரே மறித்து நின்று காப்பாற்றினார்.

உ.பி. அரசாங்கம் உச்சநீதிமன்றத்துக்கு நவம்பர்-28 அன்று கொடுத்த வாக்குறுதியை மதிக்காமல் கரசேவகர்களுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறது என்பதை அறிந்தவுடன், ”மசூதியையும் 2.77 ஏக்கர் நிலத்தையும் சட்டரீதியாக ஒரு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்திடம் கோரினார் அன்சாரி, அது தள்ளுபடி செய்யப்பட்டது.

வெள்ளி, டிச. 4, 1992 :

பாபரி மசூதி நடவடிக்கை குழுவின் பரீதாபாத் பகுதி தலைவர் முகம்மது யூனஸ் ஒரு வழக்குரைஞர். நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தார் யூனஸ். முந்திய இரண்டு நாட்களிலும் 16 முஸ்லீம் கல்லறைகளை கரசேவகக் குண்டர்கள் இடித்துத் தள்ளினார்கள். இப்ராகிம் ஷா என்ற முஸ்லீம் ஞானியின் கல்லறையைத் தோண்டி எடுத்துப் போட்டார்கள் என்று கொந்தளிப்பான நிலையை விளக்கினார்.

கரசேவகர்கள் அயோத்தி, பைசாபாத் வீதிகளெங்கும் சுற்றித் திரிந்தார்கள்; முஸ்லிம்களுக்கு எதிராக ஆபாசமாகக் கோஷமிட்டார்கள், பயபீதி ஊட்டினார்கள்.

அயோத்தி ஜானகி பவனம் கோயிலில் மறக்கமுடியாத ஒரு காட்சி பார்த்தேன் – போலீஸ் ஒருவர் தரையில் சப்பனமிட்டு உட்கார்ந்திருக்கிறார்; மடியில் துப்பாக்கி; கையில் ஜால்ரா, வாயில் பக்தி கீர்த்தனை, தெரியாதவர்களுக்கு ஒரு தகவல் சொல்கிறேன் – ஜானகி பவனம் என்பது அயோத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – வி.எச்.பி. – பஜ்ரங்தள் கூட்டுக் கும்பலின் மடம்.

அன்று விடியற்காலையிலேயே நான் விஸ்வ இந்து பரிசத் மையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. டிச. 6 கரசேவையைப் பற்றி செய்தி சேகரிக்க வி.இ.ப. – விடமிருந்து செய்தியாளர் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அந்த மையத்தின் இயக்குனர் ராம்சங்கர் அக்னிஹோத்ரி அட்டை கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொன்னார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுக்கும்போதே உள்ளே நுழைந்த என் நண்பர் என்னை அழைத்தார். அவர் ஆனந்த பஜார் பத்ரிகா – டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். அடையாள அட்டையில் ஒரு முஸ்லீம் பெயரோடு நான் நடமாடினால் வெறி பிடித்த கரசேவகர்கள் கொன்றே போட்டுவிடுவார்கள் என்று அவர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

அவரது ஆலோசனை நினைவில் எழுந்தது. என் இதயம் கனக்க என் பெயருக்குப் பதிலாக, “ஏ.கே.ரே” என்று எழுதினேன், வங்காள மொழியில் இதனை பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தாதபோது, ‘யே கே(ய்) ரே?” (அவன் யார்?) என்று பொருள் கொடுக்கும். என் வங்காளி நண்பர் எனது நகைச்சுவை உணர்வைப் பாராட்டினார்; ஆனால், என் இதயத்தில் ரத்தம் வடிந்தது.
முதல்நாள் தான் தூர்தர்சன் ஒரு செய்தி வெளியிட்டது. மத்திய மந்திரிகளான அர்ஜூன் சிங்கும், ராஜேஷ் பைலட்டும் பிரதம மந்திரியின் தூதராக அயோத்திக்கு வரப் போவதாக, நிலைமையைக் கணிக்கப் போவதாகச் சொன்னார்கள்; வந்தார்கள் – கல்யாண்சிங்கை மட்டும் சந்தித்துவிட்டு உடனே டெல்லிக்குப் பறந்துவிட்டார்கள் பாபரி மசூதிக்கு ஒரு இரங்கல் குறிப்பு எழுதிவிட நினைத்தேன்; பிறகு, பார்க்கலாம், பொறுத்திருப்போம் என்று தள்ளி வைத்தேன்.

சனிக்கிழமை, டிச.5, 1992 :

அயோத்தி, முஸ்லீம்களுக்கும் ஒரு புனிதத்தலம் என்பதை அங்கு சென்ற பிறகு தான் கண்டுபிடித்தேன். இஸ்லாமியத் துதர்களில் ஒருவரது மகனான அஸ்ரத் ஆதம், மணிபர்வத் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்; அந்த இடம் அயோத்தி ரயில் நிலையத்தின் அருகே உள்ளது. அதற்கு சிஷ் பைகாம்பர் என்று பெயர்.

பிரிவினை வரை முஸ்லீம்கள் பெருந்தொகையில் சீரும் சிறப்போடும் வாழ்ந்த நகரம் அயோத்தி; பிறகு பெருவாரி முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள்; பழைய ஆண்டுகளின் சுவடுகளை பல கல்லறைகளிலும், 200 மசூதிகளிலும் இன்றும் காண முடியும். அயோத்தியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் முஸ்லீம்கள்: 18000 பேரில் 6000 பேர்.

அயோத்தியில் 400 கோயில்கள் இருக்கின்றன; இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பல கோயில்களின் மேனேஜர்கள் முஸ்லீம்களே. 1984-இல் இறந்த மக்குட் அலி சாகும் வரை மாத்ரகீர் கோயிலை நிர்வாகம் செய்துவந்தார்; முன்னுமியான் என்று அழைக்கப்படும் 87 வயதான அன்சார் ஹுசைனைச் சந்தித்தேன் – அவர் 1984-லிருந்து இன்றுவரை ஒருகோயிலின் நிர்வாகி.

அயோத்தியில் கரசேவகர்கள் கலவரம் செய்தார்கள், மசூதிகளைத் தாக்கினார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர் அன்று மாலை அறிக்கை கொடுத்தார், “அயோத்தியில் நிலைமை கட்டுக்கடங்கியுள்ளது; கரசேவகர்கள் மிகமிக அமைதியாக ஒழுக்கத்தோடு நடந்து கொள்கிறார்கள்.” கரசேவர்கள் பத்திரிக்கையாளர்களின் கார்களைக் கூட விட்டுவைக்கவில்லை, எல்லோரையும் வழிமறித்து ’ஜெய் சியாராம்’ என்று சொல்லச் சொன்னார்களே என்று கேட்ட போது, அவர் ”கரசேவகர்கள் உற்சாகத்தில் அப்படிச் செய்திருக்கலாம்” என்று சப்பைக் கட்டு கட்டினார்.

லக்னோவில் கல்யாண்சிங் பத்திரிக்கையாளரிடம் பேசினார்: “அயோத்தியில் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுக்க முழுக்க கறாராகச் செய்யப்பட்டிருக்கின்றன; உச்சநீதி மன்றத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி சொல்லிலும் சரி, உணர்விலும் சரி முழுமையாகக் காக்கப்படும். பாபரி மசூதியின் ஒரே ஒரு செங்கல் கூட பாதிக்கப்படாது”

கறுப்பு ஞாயிறு, டிசம்பர் 6, 1992 :

சரியாக பிற்பகல் 4:55 மணிக்கு மதச்சார்பின்மைக்கு அயோத்தியில் சாவுமணி அடிக்கப்பட்டது; பாபரி மசூதியின் மத்திய மகுடம் நொறுக்கி வீழ்த்தப்பட்டது – அந்தக் கணத்திலிருந்து இந்தியா மதச்சார்பின்மை நாடல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. கடைசி போலி, பாசாங்குத்தனம், அடடா, எத்தனை விரைவாக, வேகமாக உதிர்க்கப்பட்டுவிட்டது?

பாபர் மசூதி இடிக்கப்படும் சதிச் செயலைக் கண்டு குதூகலிக்கும் முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி. (கோப்புப் படம்)

மசூதி மீதான தாக்குதல் சரியாக காலை 11.55-க்குத் தொடங்கியது; கரசேவகர்கள் கையில் கோடரிகள், வெட்டுக் கத்திகள், மண்வாரிகள், சம்மட்டிகள், இரும்புக் கம்பிகள் ஆகிய ஆயுதங்களோடு மசூதியின் மகுடங்கள் மீது ஏறினார்கள். நூற்றுக்கணக்கான போலீஸ், அதிகார அரசு எந்திரம் வெறுமனே கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு லத்திக்கம்பு கூட அசைக்கப்படவில்லை. சிறப்பு மேடையிலிருந்து பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி., பஜ்ரங்தள் கும்பலின் பெருந்தலைவர்களான எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முரளி மனோகர் ஜோஷி, விஷ்ணு ஹரி டால்மியா, வினய் கத்தியார், உமா பாரதி, பெண் துறவி ரிதம்பரா ஆகியோர் வெறிகொண்ட அந்த கூட்டத்தை வழி அனுப்பி வைத்தார்கள்.

வலது மகுடம் பிற்பகல் 2.45-க்கும், இடது மகுடம் பிற்பகல் 3.45-க்கும் வீழ்த்தப்பட்டன. சுற்றுச்சுவரும், உள் சுவர்களும் மெள்ளமெள்ளச் சரியத் தொடங்கின; 4.55-க்கு மத்திய மகுடத்தின் மீது இரும்புக் கொக்கி இணைத்த நீளமான கயிறு வீசப்பட்டு மகுடம் இழுத்து எறியப்பட்டது. சூரியன் மறைந்த அந்தி நேரம் – பாபரி மசூதி அங்கே இல்லை; வெறும் சுண்ணாம்புக் கல் சிதிலமாக மசூதி நொறுங்கிச் சரிந்து விழுந்து கிடந்தது. இனி மறுபடி ஒரு சூரிய உதயத்தை பாபரி மசூதி காணப்போவதில்லை.

மத்திய மகுடம் சரியத் தொடங்கிய கடைசி நேரத்தில் ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு உமாபாரதி கூச்சலிட்டார்: ”ஏக் தாக்கா அவர் தோ, பாபரி மஸ்ஜித் தோடு தோ.”

எங்கு பார்த்தாலும் கைதட்டல்; பஜனைகள்; கரைபுரண்டு ஓடும் மகிழ்ச்சி ஆரவாரம் உமாபாரதி மறுபடி பஜனைப்பாட்டைத் தொடங்கினார்: ”ராம் நாம் சத்ய ஹை, பாபரி மஸ்ஜித் துவஸ்த ஹை”

பாபரி மசூதிக்கு நேர் எதிரே மானஸ் பவன் விடுதி. அதன் மேல்மாடியில் உள்நாட்டு, வெளிநாட்டு, செய்தியாளர்கள் – கரசேவை பற்றி செய்தி எழுத, படம்பிடிக்க நின்றிருந்தார்கள். ஐந்து மணிநேரம் நடந்த மசூதி உடைப்பை நேருக்கு நேர் பார்த்த அதிர்ச்சியில் ஒன்றிரண்டு இந்துப் பத்திரிக்கையாளர்கள் அடக்கவே முடியாமல் வாய்விட்டு அழுதார்கள். நான் அழவில்லை; கண்ணீர் வெப்பமாய்த் திரண்டது; ஆனால், அதை அடக்கிச் சேமித்துக் கொண்டேன், இனிவரும் 100 வருடங்களில் அழுவதற்காக.

அங்கே மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கே செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள்; திட்டமிட்ட தாக்குதல் – நோட்டுப் புத்தகங்கள் பறித்துக் கிழிக்கப்பட்டன; கேமெராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன; செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் அடித்து விரட்டப்பட்டார்கள்; ஒரு வகையில் அதுவும் நல்லதற்குத்தானோ என்று தோன்றியது – பத்திரிக்கையாளர்கள் இந்துத்துவ வெறியைக் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டாமா? மத அடிப்படைவாத அமைப்புக்கள் தங்கள் கருத்துக்களை முழுக்க முழுக்கப் பிரச்சாரம்செய்து பிரபலப்படுத்த இதே பத்திரிக்கைத் துறை துணைபோனதல்லவா?

மசூதி இடிக்கப்படுவதற்கு மத்திய ஆட்சி துணையாக நின்றது. மாலத்தீவைக் காக்க ஐந்தே மணிநேரத்தில் இந்தியத் துருப்புக்கள் அனுப்பப்பட்டது சாத்தியமானது; ஆனால், அதுவே பாபரி மசூதியைக் காக்க அனுப்பப்படவில்லையே, ஏன்?

மசூதி இடிக்கப்பட்டுவிட்டது; கரசேவகர்கள் முஸ்லீம் வீடுகளை, வேறுபல மசூதிகளைக் கொளுத்தத் தொடங்கினார்கள். முஸ்லீம் கல்லறைகளைத் தோண்டி எடுத்துப்போட்டு கேவலப்படுத்தினார்கள்; ஆயுதக் காவல்படை கைகட்டி வாய்பொத்தி நின்றது. அத்துமீறி நொறுக்கப்பட்ட ஒரு மசூதிக்குள்ளே அனுமன் சிலை வைக்கப் பட்டது.

நான் அயோத்தியை விட்டுக் கிளம்பினேன். என் இயலாமை மீது, என் மலட்டுத்தனத்தின் மீது கோபம் பொங்கியது. எனது வீரியத்தின் சின்னமான என் மகன் பல மைல் தொலைவில் கல்கத்தாவில் இருந்தான். அவன் முழுவதுமாக முஸ்லீமும் அல்ல, முழுவதுமாக இந்துவும் அல்ல அவனது மதம் எது?

அது எதுவாக இருந்தால் என்ன, அவன் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா?

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

சோடா பாட்டில் ஜீயர் சடகோபன் – கருத்துப் படம்

3

சோடா பாட்டில் சடகோபன் – கருத்துப்படம்

வைரமுத்துவ ஆண்டாள்கிட்டே மன்னிப்பு கேக்க சொன்னீல்ல…  நீ சோடா பாட்டில பத்தி தரக்குறைவா பேசுனதால சோடா பாட்டில்கிட்டதானே மன்னிப்பு கேக்கணும் எதுக்கு ஆண்டாள்கிட்ட மண்டிபோடுறே!

படம் : வேலன்

இணையுங்கள்:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

60

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் வீடியோ…

தோழர் மருதையன் உரையின் சுருக்கம்:

வ 26, 1957 -ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அரசியல் சட்டம் 25, 26 பிரிவு சாதி அதிகாரத்தையும், சாதிக்கான உரிமையையும் நியாயப்படுத்துகிறது என்று கூறி சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்து ரிமாண்டு செய்தது அரசு.

அதில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பேசிய அதிகாரி ஒருவர், “தெரியாமல் செய்துவிட்டேன், செய்தது தவறு” என எழுதிக் கொடு. உன்னை விட்டுவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அச்சிறுவனோ தான் செய்தது நியாயம் என்று கூறினார். “என்னை வெளியே விட்டாலும் மீண்டும் கொளுத்துவேன்” என்று கூறினார். அப்போராட்டத்தில் உயிரிழப்பு மொத்தம் 20 பேர்.

சாதாரண மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சாதி என்னும் இழிவை நியாயப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்தை கொளுத்தினால் போதும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

இன்று கேரளாவில் யதுகிருஷ்ணா என்றொரு தலித் இளைஞர் அர்ச்சகர் பயிற்சி பெற்று அங்கு அர்ச்சகர் ஆகியிருக்கிறார். அவருக்கு பயிற்சியளித்த குரு, “யதுகிருஷ்ணா 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். இப்போது அவர் எல்லாவிதங்களிலும் ஒரு பார்ப்பனர்” என்று கூறியிருக்கிறார்.

ஒரு சூத்திரன் பார்ப்பனியத்தைக் கடைபிடித்து அர்ச்சகர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அக்காரணத்தால் தான் ஆர்.எஸ்.எஸ். இந்த நியமனத்தை வரவேற்கிறது. அது தான் இப்போது கேரளாவில் நடந்திருப்பது. இது தான் ஒழிக்கப்படவேண்டும். பெரியார் ஜாதியை அழிக்க விரும்பினார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் சாதியை நிலைநாட்ட விரும்புகிறது.

அரசுக்கு கோவில் மீது உரிமை கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்து அறநிலையத் துறையை மூடத் திட்டம் தீட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கோவில்களை மீட்போம் என்ற பெயரில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணிய சாமி புள்ளி விவரங்களோடு பேசுகிறார். தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமாக கிராமப்புறங்களில் 4.7 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.  2.6 கோடி சதுர அடி நிலம் இருக்கிறது. நகர்ப்புறங்களில், 20 கோடி ச.அடி. இடம் இருக்கிறது. இதனை மொத்தமாக சுருட்டிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் விழைகிறது. வெறும் விநாயகர் ஊர்வலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முழுக்க இவ்வளவு பெரிய கலவரங்களைச் செய்தவர்கள், கோவில்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்?

சி.பி. இராமசாமி ஐயர் கொடுத்த அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் விக்கிரகங்கள், நகைகள், நிலங்கள் பிராமணர்களால் திருடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்து அறநிலையத் துறை வசம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 1993 -ம் ஆண்டு மே மாதம், ம.க.இ.க கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியது. மே -1 அன்று சுமார் 1000 பேரை தடுத்து கைது செய்து ரிமாண்ட் செய்தது. மே 24 அன்று பெண்கள் உட்பட தோழர்கள் கருவறைக்கு உள்ளே நுழைந்து பெரியார் அம்பேதக்ர் படம் வைத்தும் போட்டோ எடுத்தனர். அப்போது ம.க.இ.க. -வினர் நீதிமன்றத்தில் உள்ளே சென்றோம் எனக் கூறினர். ஆனால் சாட்சி சொல்ல வந்த பார்ப்பனர்கள் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டுச் சென்றனர்.

இவ்வழக்கு வெற்றி எனப் பேசுகிறார்கள். அது நடைபெறவில்லை. அரசியல் சட்டம் அப்படி ஒளிரவில்லை. தற்போது அர்ச்சகர் வழக்குத் தீர்ப்பு, யானையை பானைக்குள் அடைக்கத் தடையில்லை என்பதைப் போன்றதுதான்.

அன்று நூற்றுக்கணக்கான பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தது போல் இன்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் செய்கின்றன. சாதி உரிமைகளை அரசியல் சட்டம் 25, 26 பாதுகாக்கிறது. வெறும் இந்துத்துவம் மட்டும் அல்ல அனைத்தும் மதங்களிலும் நடக்கும் ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது.

அம்பேத்கர் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்றார். பெரியார் 1957 -லேயே கொளுத்திவிட்டார். இது கொளுத்தப்பட வேண்டியது. இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது. பிரச்சினையை தெருவில் தான் தீர்க்கவேண்டும்.

 

 

கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

0

மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க ‘நீட்’ (NEET) தொழிலாளிகளின் தொழில் உரிமையைப் பறிக்க ‘நீம்’ (NEEM) குடிமக்கள் வாழ்வை அழித்துக் குடியரசுக் கொண்டாட்டம்!

ண்ணூர் அசோக் லேலாண்டில் பணி புரியும் 100 தொழிலாளர்கள் தங்கள் உணவு இடைவேளையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அசோக் லேலாண்ட் நிர்வாகம் நிரந்தரப் பணியாளர்களின் உற்பத்தி சார்ந்த வேலைகளில் தொழிற் பழகுநர்கள் (Apprentices) மூலம் நடத்துவதற்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பை அவர்கள் நிர்வாகத்திற்காக மட்டுமின்றி, இதற்கு ஆதரவாகச் செயல்பட்ட தொழிற்சங்கத் தலைமைகளுக்கு எதிராகவும் பதிவு செய்தார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்களின் பணியில் இப்படி நேரடியாக தொழில் பழகுநர்களைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு, தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘நீம்’ எனப்படும் திட்டம் வழி வகுக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தொழிற்சங்கமும் நிர்வாகமும் போட்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்துகிறது.

(மாதிரிப்படம்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள “தேசிய வேலை வாய்ப்பை உயர்த்தும் திட்டம் (National Employability Enhancement Mission) என அழைக்கப்படும் இந்த ‘நீம்’ -ஐக் கண்டு நிரந்தரப் பணியாளர்கள், அஞ்சுகிறார்கள். இது கொல்லைப்புற வழியாக தொழிற்சாலையின் நேரடி உற்பத்தியில் சட்டவிரோதமாக நுழைக்கப்படும் ஒப்பந்த முறை என்பதாலும் தொழிலாளிகளின் கூட்டு பேர உரிமையை ஒழித்துக் கட்டிவிடும் என்பதாலும் இதனைக் கண்டு தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள்.

அகில இந்திய தொழிற்கல்வி மையம், AICTE (ALL India Council for Technical Education) மூலம் 2013 -இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீம்’ திட்டம் 2017 -இல் பா.ஜ.க.வின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் இந்தத் திட்டத்தின் மூலம் பணிக்கு வரும் தொழிற் பழகுநர்கள் இதுவரை நிரந்தரப் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் விதமாக கனரக வாகன உற்பத்தி (Automobiles), மின்னணுவியல் (Electronics) துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சமென இந்தத் திட்டத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2006 -இல் இந்தத் திட்டம் நோக்கியா, ஃபாக்ஸ்கான், ஹூண்டாய் போன்ற நிறுவனங்களால் அவர்களின் நிறுவன உற்பத்திக்கான புதிய உற்பத்தி சக்திகளை உருவாக்குவது என்ற வகையில் அவர்களே இதுபோன்ற பயிற்சியினை அளித்து உருவாக்கினார்கள். இந்த வகை தொழில் பழகுநர்கள் தொழிலக நிலை ஆணைகள் சட்டம் (Industrial Standing Orders Act) அல்லது தொழிற்பழகுநர்கள் சட்டம் (Apprentices Act) கீழ் வராது.

இது தொழிற்சாலை பயிற்சியாளர்கள் என்று அழைக்கப்படும் முற்றும் முழுவதும் நிர்வாகத்தின் பொறுப்பில் வரும் புதிய திட்டமாகும். இந்தத் திட்டம் நிரந்தரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் நிறுவனத்தின் மையமான உற்பத்தியை நிரந்தரப் பணியாளர்களுக்கு நேரடியாக பல கோணங்களில் உதவும் திட்டம் என மத்திய அரசால் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் பயிற்சியாளர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத அதே மாதிரியான வேலையாட்களாக நிர்வாகத்தால் எடுக்கப்படுவார்கள். இப்படி எடுக்கப்படும் இளம் தொழிலாளர்கள் ஒரு வேளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகத்திற்குத் தேவைப்படுவார்களேயானால் பணி நிரந்தரமும் செய்யப்படலாம் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதுவும் இதுவரை தனியார் நிறுவனங்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட எல்லா வகை தொழிலாளர்களுக்கும் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாக இல்லாத வாக்குறுதியாகவே கடந்த காலங்களில் இருந்தது போலவே இதுவும் இருக்கும்.

முதலாளிகளுக்கு இந்தப் பயிற்சியாளர்களைச் சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்ல, அதற்கு மேலும் செல்கிறது இந்தத் திட்டம். இது தனியார் துறைக்கு மட்டுமேயானது, மேற்படி நிறுவனங்கள் இந்த நீம் திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதியத் திட்டம் பயிற்சியாளர்கள் என்ற வரையறையையே மாற்றுகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஒரு சிறந்த தரகனைப் போல் இந்தத் திட்டம் செயல்படுமென மத்திய அரசு வாய்க் கூசாமல் முன் மொழிகிறது. இந்த நீம் திட்டம் மூலம் எடுக்கப்படும் தொழிலாளர்களுக்கு தொழில் துறையில் பணி புரியும் பயிற்சியற்ற பொது ஊழியர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். அதே சமயம், இந்தத் தொழிலாளர்கள் Skilled Labour -களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவார்கள். Skilled Labour -களுக்கு வழங்கப்படும் எந்த வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

பணியின் போது பாதுகாப்பு என்பதும் இவர்களது சொந்தப் பொறுப்பையே சாரும். பணியில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டப்படியான (Workmen Compensation Act) எந்தவித பாதுகாப்பையும் இழப்பீட்டையும் இந்தப் பணியாளர்கள் கோரமுடியாது.
இதுவரை நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக் கொண்ட முதலாளிகளுக்கு இப்போது ஒப்பந்தக்கார முதலாளிகளையும் ஒழிப்பதன் மூலம் இரட்டிப்பு உழைப்புச் சுரண்டலை ஏகபோகமாக்கிக் கொள்ள இந்த நீம் திட்டம் வழி வகுக்கிறது.

தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இவர்களை விடுவிக்கும்போது தொழிலாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள், உரிமைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தேவைகள் இந்த நீம் திட்டத்தின்படி இல்லாமல் ஒழிக்கப்படுகிறது. இவர்களுக்கு ESI, PF கூட கட்டவேண்டியது இல்லை. இதுவரை ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் வழங்கப்பட்டு வந்ததோடு, சில இடங்களில் பணி தொடர்ச்சியும் போனசும் குறைந்த பட்சமாவது வழங்கி வந்தார்கள். இந்தச் சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற முறையில் பெற்று வந்த குறைந்தபட்ச சலுகைகளையும் பறித்துவிட்டது.

அசோக் லேலாண்ட், மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், மெர்சடிஸ் பென்ஸ் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களும், நோக்கியா, ஃபாக்ஸ்கான், சாம்சங் போன்ற மின் அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் உற்பத்தியில் தொழிலாளர்களிடம் நல்ல முன்னேற்றத்தையும் திறமையையும் உருவாக்கும். ஆனால் நிறுவனங்கள் இந்தத் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் போது மிகச்சிறந்த திறனாளிகளாக தொழிலாளிகளோடு நிபந்தனை இல்லாமல் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் எனக் கோருகிறது. இதன்மூலம் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு நிபந்தனைகள் மேல் நிபந்தனைகளைப் போட்டு, ஏதோ தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற தொழிலாளர்களை கம்பெனிகள் ஏன் எடுக்கவேண்டும்?

இந்த நீம் திட்டம் 16 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் தொழிலாளர்களை வேலைக்காக பயிற்றுவிக்கப் படுபவர்களாகவே அறிவிக்கிறது. இதுவரை ITI, Diploma, Engineering என படித்து வந்தவர்கள் செய்து வந்த வேலையை அவர்கள் அல்லாதவரை பயிற்சி அளிப்பதன் பேரில் ஈடுபடுத்தித் தங்களது சுரண்டலை நிர்வாகம் தடையின்றி நடத்திக் கொள்ளும் அதே வேளையில் இதற்காகவே படித்த இளைஞர்களையும் அவர்கள் படித்தப் படிப்பையும் லாயக்கற்றதாக மாற்றுகிறது இந்தத் திட்டம்.

இதன்மூலம் தொழிற்கல்வி பயில்வதில் ஆர்வம் குன்றி, அடுத்தக்கட்ட தொழில் முன்னேற்றத்திற்கான உந்துதல் இன்றி எதிர் காலத்தில் தொழில்துறை நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது.

2013 -இல் இதை அறிமுகம் செய்தபோது, 18 வயதிலிருந்து 35 வயது வரை என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இப்போது இது 16 வயதிலிருந்து 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 40 வயது வரை வேலை தேடுபவராகவே அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

இது தொழிலாளிகளுக்கு எதை உணர்த்துகிறது?

முதலாளிகளுக்கான அதிகப்படியான உற்பத்தி என்பதில் மட்டுமே இந்தத் தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இது அசோக் லேலாண்டில் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு, GEC-ல் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் புதுமையான திட்டம் அல்ல.

இந்த ஆலைகளை குசேலர், பிரகாஷ், மைக்கல் பெர்னான்டஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் மூலம் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுக்கும் நோக்கத்திற்காக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுடன் இந்த Outsourcing முறை கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அப்போதுதான் முதன் முறையாக நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான வாய்ப்பை இந்தத் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் மீது திணிக்கப் பட்டது.

இந்த நீம் திட்டத்தை இப்போது தொழிற்சாலையில் புகுத்தியதால் இவர்கள் எச்சரிக்கை அடைகிறார்கள். நிரந்தரத் தொழிற்சங்க பண்பாடு கொண்ட நிறுவனங்கள் இவை. அசோக் லேலாண்டில் பணி புரியும் 1,750 நிரந்தரத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவே இங்கு அயல் பணி (Out source) முறையில் வேலை வாங்கப்பட்டு வந்தது.

இந்தக் கம்பெனியில் 6000 -க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்களால் நிர்வாகத்துடன் சம்பள உயர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. தற்போது 2016 செப்டம்பரில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்த நிர்வாகம் முனைகிறது.  இதில் 400 விதமான வேலைகள் வெளியில் இருந்து செய்யும் ஒப்பந்த முறைக்கு விடப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட்டின் எண்ணுரர் மற்றும் ஒசூர் பணி மனைகளில் 2,154 நிரந்தரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். உற்பத்தி சார்ந்த தொடர் வேலையில் நீம் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களைக் கொடுத்து அனுபவமிக்க தொழிலாளர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இந்த சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் இதை மட்டும் சொல்லவில்லை. தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பே இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தில் நீக்கு போக்காக உற்பத்தி உயர்வுக்காக மட்டுமே இது செயல்படுத்தப்படும் என அறிவிக்கிறது.

இந்த எதிர்ப்பை தங்களுக்கு இதுநாள் வரை அறிமுகமான தொழிற்சங்க இயக்கங்கள் CITU, WPTUC, முற்போக்கு தொழிலாளர் மன்றம், குசேலர் நலமன்றம், தொழிலாளர் பேரியக்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற சங்கங்களின் தலைவர்களை இந்த ஒப்பந்த முறை சம்மந்தமான குற்றவாளிகளாக அறிவித்து, தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

ஒரு சில தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் போதே தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். நிர்வாகம் இந்த வகைப் பயிற்சியாளர்களை உற்பத்தியில் அனுமதிக்கா விட்டால், நிரந்தரப் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து 4000 மணி நேர சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொள்வதுடன் இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்வோம் என நிபந்தனை போட்டுள்ளது.

நிர்வாகத்திற்கு ஆதரவான தொழிற்சங்க முடிவை எதிர்த்து, 1500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பமிட்ட மனுவை வழங்கியுள்ளார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பினைத் தொழிற்சங்க இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததே இந்தத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்குக் காரணமான அமைந்தது. மத்திய அரசு உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை ‘நீட்’ என்ற தேர்வு முறையின் மூலம் பறித்தது போல, தொழிலாளர்களின் தொழில் உரிமையை இந்த ‘நீம்’ திட்டத்தின் மூலம் பறிக்கிறது.

தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை ஒழித்துக் கட்டும் ஆர்.எஸ்.எஸ். மோடி, குடிமக்களின் வாழ்வை அழித்து குடியரசைக் கொண்டாட இந்திய மக்களை அழைக்கிறார். தான் உலக முதலாளிகளுக்காக இதுவரை 1400 விதித் திருத்தங்களைச் செய்துள்ளதாகவும் இந்தியாவில் 90% அந்நிய நேரடி முதலீட்டினை நம்பகமாக தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள் செய்யலாம் என உலக நாடுகளிடம் அறை கூவுகிறார்.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் தொழில் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் என்பதை உணராமல் தொழிலாளி வர்க்கம் புதிய உரிமைகளுக்காக போராடாமல் இருப்பதுடன், இருப்பதை இழப்பதற்கு எதிராகவும் போராடாமல் இனியும் இருக்கமுடியாது என்பதை உணரவேண்டும்.

பிழைப்புவாத தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவையை உணர்ந்து செயல்படவேண்டும். புரட்சிகர தொழிற்சங்கத்துக்குள் அணி சேரவேண்டும்.

-பழனி

 

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில் பு.ஜ.தொ.மு -வை ஆதரியுங்கள் !

0

ன்பார்ந்த தொழிலாளர்களே !

தொழிற்சங்கம் என்றால் என்ன? என்று ஒரு தொழிலாளியிடம் கேட்டால், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சூப்பர்வைசர் அல்லது மேனேஜரை உடனே வந்து கேட்க வேண்டும். வருடந்தோறும் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பெற்றுத் தர வேண்டும் என கூறுவார். இதை தவிர்த்து ஒரு தொழிற்சங்கத்தின் வேலை என்று எதுவும் இல்லை என்று தான் நாம் நினைக்கின்றோம்.

இது சரிதானா? “ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றுத் தருவது, நிம்மதியான பணிச்சூழலை உருவாக்கி தருவது என்பது தொழிற்சங்கத்தினுடைய கடமைதான்.” ஆனால் இது மட்டும் தான் தொழிற்சங்கத்தினுடைய வேலையா? இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என நினைப்பது சரியா?

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கக்கூடிய பயிற்சி பள்ளி என்று தொழிலாளிகள் தலைமையில் மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டிய ஆசான் லெனின் சொல்லியிருக்கிறார்.

அரசியல் எங்களுக்கு எதற்கு என்று கேட்கிறீர்களா? நாம் எதற்காக நிர்வாகத்திடம் ஊதிய உயர்வு கேட்கிறோம். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமீபத்தில் பேருந்து கட்டண உயுர்வு போன்ற விலைவாசி ஏற்றங்களால் நாம் தற்போது வாங்கிக் கொண்டிருக்கின்ற சம்பளம் போதவில்லை. அதனால் தானே ஊதிய உயர்வு கேட்கிறோம்.

நம் முதலாளியிடம் நாம் போராடிப் பெறுகின்ற ஊதிய உயர்வை வெளியில் இருக்கின்ற டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக பிரித்து தருகிறோம். சரி, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு தான் காரணம். இந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த அரசும், அரசியலும் காரணமாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடாமல் அரசியல் வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சொல்லுங்கள்.

ஆனால் உங்களிடம் ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் இதை பற்றி பேசுவதில்லை. மாறாக எப்படி அரசாங்கம் மக்கள் விலைவாசி உயர்வு பற்றியோ அல்லது மற்ற பிரச்சனைகள் பற்றியோ யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக, வீதிக்கு வீதி சாராயக் கடைகளையும், வீட்டுக்கு வீடு வாட்ஸ் அப், பேஸ்புக், ஆன்லைன் விளையாட்டு ஆகியவைகள் மூலம் மக்களை சீரழிக்கிறதோ அதைப் போல நமது ஆலையிலும் தொழிலாளர்களை போதை கலாச்சாரத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இந்த சமூகமோ சக மனிதனோ எப்படியோ போகட்டும், நான் மட்டும் நல்லா இருந்தால் போதும், எனக்கு என் பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்க முடியுமா? இந்த சமூகத்தில் நடக்கும் எதுவும் என்னை பாதிக்காது என்று யாரேனும் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

சில நாட்கள் முன்பு உயிர்காக்கும் வேலை செய்கின்ற செவிலியர்கள் போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம்முடைய அக்கா, தங்கைகளோ சொந்த பந்தங்களோ இல்லையா? உயிரைப் பனையம் வைத்து மழையிலும், வெயிலிலும் அயராது உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இப்படி ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் நம் தலையில் இடியை இறக்குகின்றன. இந்த சமூகத்தில் தான் SRF -ல் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கூறிய இந்த பிரச்சனைகளுக்காக எமது அமைப்பான பு.ஜ.தொ.மு. ஆலலகளிலும் சமூகத்திலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக ஆலைக்குள்ளும் போராட்டம் நடத்துவதில்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக இம்மியளவு கூட கவலைப்படுவதுமில்லை. இவர்களா நம்மை காப்பாற்றக் போகிறார்கள் வேலையை விட்டு வேண்டுமானால் அனுப்புவார்கள் (2016ல் 4 தொழிலாளர்களை அனுப்பியது போல்).

ஆக நம்முடைய ஆலைக்குள் நடக்கின்ற பிரச்சனைகள் வேறு சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளும் வேறானவை அல்ல. இரண்டுக்குமே மூல காரணம் ஒன்றுதான். இந்த சமூக அறிவியலை புரிந்துகொள்வது தான் மார்க்சிய விஞ்ஞானம். அதனடிப்படையில் தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டும் வேலையை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் காண்ட்ராக்ட் தொழிலாளைகளை அணி திரட்டுகிறவிதமாக 28.01..2018 அன்று இந்திய அளவில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து மிகப்பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான விடுதலைக்குப் போராடும் ஒரு சங்கத்தால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா? அல்லது எவன் செத்தால் நமக்கென்ன நம் வயிறு நிறைந்தால் போதும் என்று இருப்பவர்களால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா?

முடிவு உங்கள் கையில்…

இறுதியாக ஹிட்லர் கால ஜெர்மானிய கவிஞனின் கவிதை வரிகள்.

  • ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்தான். நான் அமைதியாக இருந்தேன்.
  • கத்தோலிக்கர்களை தேடிப்பிடித்து வெட்டினான். அவர்களைத் தானே கொல்கிறான் என அப்போதும் நான் அமைதியாக இருந்தேன்.
  • புரோட்டஸ்டண்டுகளை கொன்றான். அப்போதும் நான் இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
  • கம்யூனிஸ்டுகளை கொன்றான். நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் எனக்கு கவலை இல்லை என்று இருந்தேன்.
  • தொழிற்சங்கத் தலைவர்களை கொன்றான். நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
  • இறுதியில் அவன் என்னிடமே வந்துவிட்டான். திரும்பி பார்த்தால் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை.

சிந்திப்பீர்… வாக்களிப்பீர்… தராசு சின்னத்தில்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
SRF மணலி கிளை.

*****

மணலி SRF பொதுதொழிற்சங்க தேர்தலில்  பு.ஜ.தொ.மு வேட்பாளர்களை ஆதரித்து தராசு சின்னத்தில் வாக்களியுங்கள் !

அன்பார்ந்த தோழர்களே!

ணலி SRF தொழிற்சங்க தேர்தலில் ஏன் பு.ஜ.தொ.மு வெற்றி பெறவேண்டும் என்றால் வட சென்னை பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளிலுல் முதலாளித்துவம் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தி வருகின்றது. இந்த அடக்குமுறைகளிலிருந்து  தொழிலாளி வர்க்கத்தை காப்பாற்ற பு.ஜ.தொ.மு சங்கத்தால் மட்டுமே முடியும் என நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளாக SRF MANALI தொழிற்சாலையில் சாதித்து காட்டியுள்ளோம்.

மேலும் மணலி தொழிற்சங்க கூட்டமைப்பில்(FMTU) அங்கம் வகித்து செயல்பட்டு கொண்டு இருக்கக்கூடிய பு.ஜ.தொ.மு சங்க நிர்வாகிகள் மணலி சுற்றுவாட்டாரத்தில் இருக்கக்கூடிய PALMALLORRY, TPL, MPL, CPCL, KOTHARI ஆகிய தொழிற்சாலைகளில் நடக்கக்கூடிய தொழிலாளர் விரோத போக்கான  செயல்களை கண்டித்துள்ளோம். குறிப்பாக TPL நிர்வாகத்தின் பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது தமிழக அரசின் TIDCO – வே TPL நிர்வாகத்தை நேரடியாக ஏற்று நடத்து என்ற முழகத்தின் கீழ் நடந்த போராட்டங்களுக்கு பு.ஜ.தொ.மு சங்கத்தின் சார்பாக முழு ஆதரவு கொடுக்கப்பட்டது.

திருவொற்றியூர் MRF ஆலையில் தொழிலாளர்கள் மீது செலுத்தப்படுகின்ற அடக்குமுறைகள் குறித்து கடந்த 26.01.2018 தேதியன்று பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப. தங்கராசு அவர்கள் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து MRF நிர்வாகத்தின் அடக்குமுறையை எப்படி முறியடிப்பது என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.

இப்படி மணலி, எண்ணுர், திருவொற்றியூர் பகுதிகளில் இயங்கக், கூடிய ஆலைகளில் தொழிலாளர் அடக்குமுறைகளுக்கு தீர்வு; அரசிடம் வெறும் சட்ட வாதத்தில் மட்டும் தற்போதைய தொழிலாளர்களின் உரிமையை தக்கவைத்து கொள்ள முடியாது. ஏனெனில் தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிற்சங்க சட்டஉரிமைகளை முதலாளிகளின் லாபத்திற்காக திருத்தி குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு! இதனை போர்க்குணத்தோடு எதிர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மீண்டும், மீண்டும் இந்த அரசிடமே கோரிக்கையை வைத்து மன்றாடி வருகின்றன.

ஆனால் நாளுக்கு நாள் வேலைபறிப்பு, ஆட்குறைப்பு, உச்சகட்டமாக நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து காண்ட்ராக்ட் கொத்தடிமை முறையை சட்ட பூர்வமாக செயல்படுத்த முதலாளிகளுக்கு அரசே ஆசி வழங்குகிறது!

நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராடாமல் இருக்க சில சீர்திருத்தங்கள் செய்தும், கைகூலி, பிழைப்புவாத, கலைப்புவாத தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் அரசியல் உணர்வை மழுங்க செய்கிறது ஆளும்வர்க்கம். இந்நிலையில் வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டும் போராடமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை சாதிக்க அரசியல் உணர்வு பெறவேண்டும் என புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவி அழைக்கின்றது.

அந்த வகையில் 29.01.2018 தேதியன்று நடைபெறும் மணலி SRF தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுத் தேர்தலில் பு.ஜ.தொ.மு தலைமையின் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண் :
பு.ஜ.தொ.மு
SRF மணலி கிளை.