அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

3
51

பெயர் சுதந்திர தினம்
அணிவகுப்பதோ
அடக்குமுறைக் கருவிகள்.

எங்களிடம்
எத்தனை துப்பாக்கி இருக்கிறது
என்று காட்டுவதா சுதந்திரம்?

எங்கள் பக்கம்
எத்தனை மக்கள் இருக்கிறார்கள்
எனக் காட்டுவதல்லவா சுதந்திரம்!

மக்களோ
உங்களை எதிர்த்து
குண்டாந்தடிக்கு முன்னாடி,
நீங்களோ
குண்டு துளைக்காத
கண்ணாடிக்கு பின்னாடி.

பன்னாட்டு
மூலதன ஆக்கிரமிப்புக்கு
பாதை அமைத்துவிட்டு
உள்நாட்டு பாதுகாப்புக்காக
உனக்கு எத்தனை படைகள் பார்!  என்றால்
நம்ப மறுத்து
வேறுபக்கம் அணிவகுக்கிறார்கள்
மக்கள்.

மீனவர் ரதத்தில்
பிணங்களின் வாடை,
கைத்தறி ரதத்தில்
நெசவின் அலறல்,
விவசாய ரதத்தில்
வெடித்த இதயங்களின்
சிதறல்…

சகிக்க முடிந்தவரால்
ரசிக்க முடியும்.
வண்டி வண்டியாய்
அலங்கரிக்கப்பட்ட பொய்களின்
அணிவகுப்பு.

மக்கள்
வேறு ஒரு அணிவகுப்பை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வுரிமை பறிக்கப்பட்ட
விவசாயிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

தொழிலுரிமை பறிக்கப்பட்ட
சிறுகுறு தொழிலாளார்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கடலுரிமை பறிக்கப்பட்ட
மீனவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கல்வியுரிமை பறிக்கப்பட்ட
மாணவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

கார்ப்பரேட்டே வெளியேறு
என கனன்று நிற்கும் மக்கள்முன்
மோடியின்
வெள்ளையனே வெளியேறு
பஞ்ச் டயலாக்
பஞ்சராகிக் கிடக்கிறது.

பச்சை பசேல்
பறிக்கப்பட்ட வெறுமையில்
பறக்கும் தேசியக் கொடியையும்

திண்ணப் பார்க்கிறது ஆடு, மாடு.
விளைநிலத்தை
காயப்போடும் நாட்டில்
தியேட்டரில்
தேசியகீதம் போட்டால் மட்டும்
தேசம் விளங்கிடுமா!

எங்கள் மலைகளை
விட்டு விடுங்கள்
என கதறுகிறது நியாம்கிரி.

எங்கள் மணல
விட்டு விடுங்கள்
எனக் கெஞ்சுகிறது
பாலாறு, காவிரி,

எங்கள் மண்ணை
விட்டு விடுங்கள்
என இரைஞ்சுகிறது
நெடுவாசல், கதிராமங்கலம்.

ஆதரித்து
ஒரு துண்டறிக்கை கொடுக்கவும்
சுதந்திரமில்லை,

மனிதக்கறி தின்னும்
காவிகள் உலவும் நாட்டில்
மாட்டுக்கறி திண்ணவும்
சுதந்திரமில்லை
எனது
சாப்பாட்டுத் தட்டில்
செத்துக்கிடக்குது சுதந்திரம்.

எனது
மொழிச் சுதந்திரத்தின் மீது
திணிக்கபடுகிறது சமஸ்கிருதம்
சுதந்திரமாய் வாழ முடியாதது
மட்டுமல்ல
என்னால் சுதந்திரமாக
சாகவும் முடியாது
ஆதார் இருந்தால்தான்
நான் சட்டப்படி சவம்!

விவசாயிக்கு இல்லாத சுதந்திரம்…
தொழிலாளிக்கு இல்லாத சுதந்திரம்…
சுயதொழிலுக்கு இல்லாத சுதந்திரம்…
சுயமரியாதைக்கு இல்லாத சுதந்திரம்…

மொத்தத்தில்,
சொந்த நாட்டு மக்களுக்கு
இல்லாத சுதந்திரம்
வேறு யாருக்காக?

உங்கள்
அடையாள அணிவகுப்பில்
அதையும் காட்டிவிடுங்கள்!

– துரை. சண்முகம்
_____________

இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

3 மறுமொழிகள்

 1. சுதந்திரமாம், சுதந்திரம் இது யாருக் கான சுதந்திரம்,
  அம்பானிக்கும், அதானிக்கும் வராக்கடன் தள்ளுபடி அவர்களுக்கு இது சுதந் திரம்,
  மல்லயா தான் வாங்கிய கடனை கட்ட மறுத்து நாடு தப்பினான் அவனுக்கு இது சுதந்திரம்,
  மதவெறியும், காம வெறியும் ஆடி சட்டத்தின் ஓட்டையில் தப்பிக்கும் காவிகளுக்கும், பாவிகளுக்கும் இது சுதந்திரம்,
  மக்கள் பணத்தை கொள்ளையடித்து 20 வருடம் வழக்கு நடத்தும் அரசியல்வாதிகளுக்கு இது சுதந்திரம்,
  ஆற்று மணலை அள்ளிவிட்டு,
  நாட்டை புதை குழியில் தள்ளி விட்டு யாருக்கு வேண்டும் உங்கள் சுதந்திரம்,
  மக்கள் குடிக்க தண்ணீர் இல்லை,
  மது குடிக்க பஞ்சமில்லை,
  மதி கெட்ட அரசே இதுவா உன் சுதந்திரம்,
  சாமிக்கு பஞ்சமில்லை, உண்மையை காமிக்க யாரும் மில்லை,
  ஊடகமே இதுவா உன் சுதந்திரம்,
  சாதி வெறியில் கொலை கும்பல், தட்டி கேட்க ஆள் இல்லை,
  நதி இணைக்க வழியில்லை இந்த அரசை நம்பி இனி பிரியோஜனம் இல்லை
  மத்திய அரசே இதுவா உன் சுதந்திரம்,
  மக்களை காக்க வேண்டிய அரசு
  மாட்டை காக்குது மோடி அரசு
  சாட்டை அடி ஓட்டு போட்ட மக்களுக்கு
  இது வா உன் சுதந்திரம்,

  மங்கி கெடக்குது வங்கி கணக்கு
  கட்டாயமாக்கு து ரூ 5000 னு,
  இதுவா உன் சுதந்திரம்
  நாட்டில் பாதி ஊரில் இல்லை கக்கூசு,
  யாருக்கு வேண்டும் உன் வல்லரசு
  இது வா உன் டிஜிட்டல் இந்தியா

  கடலில் கொட்டிய எண்ணையை
  வாலியில் மொள்ளும் அரசு
  இது வா உன் டிஜிட்டல் இந்தியா
  யாருக்கு வேண்டும் உங்கள் சுதந்திரம்,
  பாராளமன்றத்தில் என் மொழியில் பேச வாய் பிள்ளை
  என் கீழடியை அழிக்க அரசு தயங்கவில்லை
  யாருக்கு வேண்டும் உங்கள் சுதந்திரம்,
  தொழிலாளியின் உழைப்பை சுரண்டும் முதலாளிக்கு இது சுதந்திரம்,
  நான் எதிர்பார்த்த இந்தியா இது இல்லை
  மக்களும் இதை ஏற்கவில்லை,
  யாருக்கு இது சுதந்திரம்?
  இது யாருக்கான சுதந்திரம்?
  யாருக்கு வேண்டும் உங்கள் சுதந்திரம் .
  வேதனையுடன்,
  பா.நரேந்திரகுமார்
  SRF MANALI
  ( பு.ஜ.தொ.மு மணலி கிளை)

 2. அட நீங்க வேற, முதலாளிகளுக்கு காட்ட வேண்டுமில்லையா , கபடப்பன்றிகளுக்கு பண்ணையை காவல் காக்க வேட்டை நாய்கள் தயாராக இருக்கின்றன என்று உள்ளூர்ப்பன்றி காட்ட வேண்டுமில்லையா ? அப்போதானே அதக்குரிய பீத்துண்டு கிடைக்கும். அதற்குதான் அங்கே ரொட்டிக்கு குருமா குடுக்கிரார்களோ இல்லையோ சொதந்தர தெனத்துக்கு மட்டும் எல்லாம் உஜாலா போட்டு மினிக்கி கொண்டு லெப்டு ரைட்டு அடிக்க உத்தரவு.

  ரொட்டிக்கு குருமா இல்லை வீரர்களுக்கு.
  சண்டை தொடங்கினால் இருக்கும் வெடி பத்து நாளில் தீர்ந்து விடும்.
  அண்மையில் ஒரு அமெரிக்க இராணுவ பத்திரிக்கை கூறிய சேதி – இந்தியாவின் சிறப்பு பரசூட் படைகளுக்கு கூட சாதாரண வீரர்கள் கூட வெறுக்கும் கழிவு துப்பாகிகளே வழங்க பட்டிருக்கிறதாம்.

  தோழர் இதில் நீங்க வேறு அவர்களை சபிக்க வேண்டுமா? கொஞ்சம் இறக்கம் காட்டவும்.

 3. ” சுதந்தரம் எனது பிறப்புரிமை ” எழுத்திலும் … பேச்சிலும் மட்டும்தான்…. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு மத.. மாெழி..அடக்குமுறை… திணிக்கப்பட்டு அல்லல் படுத்துவதுதான் சுதந்திரமா …. எழுபது ஆண்டுகளை கடந்த பின்னும் முழுமையான கல்வி .. மருத்துவ வசதி …வேலை உத்தரவாதம் … உணவு …இருப்பிடம் …தண்ணீர்…பாேன்ற அத்தியாவசியங்களை மக்களுக்கு காெடுக்க வக்கில்லாத தன்மைதான் சுதந்திரமா…?
  இன்று ஒரு நாள் மட்டும் பசப்பு வார்த்தைகள் .. தியாகிகளுக்கு மரியாதை … நலிவுற்றவர்களுக்கு நலத்திட்டம் .. பசங்களுக்கு சாக்லேட்… என்று வழக்கம் பாேல சம்பிரதாயமாக நடத்திவிட்டு …அடுத்த நாள் மறந்து விடுவதுதான் … அவர்களின்,ஆட்சியாளர்களின் சுதந்திரம் …!
  ஒரு நாள் விடுமுறை டி.வி. முன் குந்திக்கிட்டு … சினிமாகார்களின் தத்துவங்களையும் … பட்டிமன்றம் என்றபேரில் பலர் கூடி அடிக்கற வெட்டி அரட்டைகளையும் .. படங்களையும் பார்த்துவிட்டு காெட்டாவி விட்டு தூங்கிவிடுதான்பெரும்பாலாேரின்.. சுதந்திரம்…வாக்குகளை காசாக்குவதே சுதந்திரம் தானே …. நாடு நல்ல நாடு …?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க