privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுபள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் - பெண்கள் முற்றுகை - வீடியோ

பள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ

-

சென்னை வேளச்சேரிக்கு அருகில் உள்ளது மயிலை பாலாஜி நகர் மற்றும் ராம் நகர். இங்கே 2,500 குடும்பங்ககளில் 10,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடையினால் பெண்கள் பலர் விதைவைகளாகவும், இளைஞர்கள், குடிப்பழக்கத்திற்கும், சீரழிவுக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிக்னல் இல்லாத காரணத்தால் குடித்துவிட்டு சாலையை கடக்கும் போதும், வண்டி ஓட்டும்போதும் பல விபத்துக்களும், உயிர் சேதமும் நடைந்தேறியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த கடையை உச்ச நீதிமன்ற உத்திரவின்படி தேசிய நெடுஞ்சாலையில் இருந்ததால் அரசே அகற்றிவிட்டது. ஆனால் தற்போது குடியிருப்பு பகுதியில் ஓட்டல் பெயரில் டாஸ்மாக் கடையை நடத்தி வந்தார்கள். பிறகு மக்கள் அதனை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

குடும்பத்தை நடத்த பெண்கள் வீட்டு வேலைக்கு போய் தான் குழந்தைகளை படிக்க வைப்பது, குடும்பதை நடத்துவது என்று இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு பக்கத்திலேயே இருப்பதால், 8 வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட அனைவரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தான் பெண்கள் வீட்டு வேலை செய்கின்றனர். மதிய நேரத்திலும், இரவு நேரத்திலும் பெண்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென்று, நம்மிடம் ஊர் மக்கள் கோரினர்.

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக பகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி மனு கொடுத்ததோடு உடனே கடையை மூடு என்ற முழக்கத்துடன் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒட்டிய போது பாரின் உரிமையாளர் நம்மிடம் மற்ற கட்சிகாரர்களிடம் பேசி விட்டோம். உங்கள் தலைவர் யார் அவரை பார்த்து பேச வேண்டும். அவருடைய தொடர்பு எண்ணை கொடுங்கள் என்று கேட்டார்.

முடியாது என்றோம். அவரோ “நாங்கள் இந்த கடைக்காக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து உள்ளோம். நாங்களும் குடும்பம் குழந்தைகள் என்று உள்ளவர்கள் தான்” என்றார். குடும்பம் உள்ளவர்கள் தான் பல ஆயிரம் குடும்பங்களை கெடுத்து அதில் வரும் வருமானம் வைத்து குடும்பதை நடத்துகிறீர்களா? என்ற உடன் சரிம்மா அதை விடுங்கள். எங்கள் நெம்பரையாவது வாங்கி கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன தேவையோ அதை சொல்லுங்கள் நாங்கள் செய்து கொடுக்கின்றோம் என்றனர். எங்களுக்கு தேவை, வாழ்க்கையை சீரழிக்கும் இந்த டாஸ்மாக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு வந்தோம்.

டாஸ்மாக் கடையை எடுக்க சொல்லி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்த பள்ளிக்கரணை காவல்துறை அதிகாரிகள் உடனே தொடர்பு கொண்டு எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு செய்யுங்கள். அப்போதுதான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்றார்கள். மேலும் பகுதியில் உள்ள தோழர் வீட்டிற்கே ஒரு போலீசை அனுப்பி நம்மிடம் பேச வைத்தார்கள். நாமும் மக்கள் முடிவின் படி கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறி அனுப்பி வைத்தோம்.

மறுநாள் காலை நாம் ஒட்டிய சுவரொட்டிகள் அனைத்தையும் காவல்துறையும் டாஸ்மாக் பார் உரிமையாளர்களும், ஆட்களை வைத்து கிழித்திருந்தனர். அதை அறிந்த பகுதி மக்கள் நம்மிடம் கூறி ஆதங்கப்பட்டார்கள். இதனிடையே டாஸ்மாக் கடையை ஒட்டிய பிளாட்டின் உரிமையாளர் வேளைசேரி செல்வம் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) என்பவர் நம்முடைய செயல்பாடுகளை பார்த்து நம்முடன் தொடர்பு கொண்டு, அவரின் சார்பாக வழக்கு போட்டுள்ளதையும் கூறினார். அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதை சொன்ன போது பத்திரிக்கையாளர்களுக்கு சொல்லி விடுகிறேன் என்றார். அவருடைய வழக்கறிஞர் நண்பர்களையும் அழைத்து வருவதாக சொன்னார்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட செல்லும் பெண்கள்

அன்று மாலை சுமார் 60 பெண்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல் துறை ஏன் அனுமதில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு மக்களின் அனுமதியில்லாமல் கடையை வைப்பீர்கள் ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாதா? என்று மக்கள் கேட்டார்கள். பிறகு கடையை உடனே மூடுங்கள் என்று சொன்னதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அப்படி என்றால் நீங்கள் ஏன் வந்தீர்கள் அதிகாரம் உள்ளவர்களை கூப்பிடுங்கள் என்றார்கள். பிறகு அனைவரும் கடையை மூடும்வரை இங்கேயே உட்காருவோம் என்று கூறி சாலையில் உட்கார்ந்தார்கள். நாமும் மக்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் உரிய அதிகாரிகள் வரும் வரை முழக்கம் போடுவது பிறகு மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடினோம்.

பிறகு சோழிங்கநல்லூர் தாசில்தார் வந்து மக்களிடம் என்ன விசயம் என்று விசாரித்துவிட்டு கடையை மூட எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவுடன் மக்கள் எல்லோரும் பிறகு நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கோபத்துடன் கேட்டார்கள். ஒரு பள்ளி மாணவி என்னுடைய அப்பா எங்களுக்காக குடிக்காமல் இருந்தார். ஆனால் கடை பக்கத்திலிலேயே வந்துவிட்டதால் சம்பாதிக்கும் பணத்தை முழுவதையும் டாஸ்மாக் கடையிலேயே செலவழித்துவிட்டார். இன்று முழுவதும் நானும் என்னுடைய தம்பியும் பட்டினியாகதான் இருக்கிறோம். எங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்ற போது அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியாமல் நின்றார்.

அரசுக்கு வருமானம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் வைத்து கொள்ள வேண்டியது தானே ஏன் எங்கள் ஊரில் வைத்து எங்கள் தாலியை அறுக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்களா? என்ற பல கேள்விகள் மக்களிடம் இருந்து வந்ததை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்.

டாஸ்மாக் கடையை மூடும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் – போராடும் பெண்கள்

பிறகு 10 நாட்களில் கடையை மூட முயற்சி செய்கிறேன் என்றார்.எப்படி நம்புவது என்று கேட்டதற்கு நாளை இதற்கான கடிதத்தை என்னுடைய அலுவலகத்தில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றார். பிறகு மக்களிடம் என்ன செய்வது என்று கேட்டதற்கு இப்போது இவர் சொல்வதை நம்புவோம், ஆனால் கண்டிப்பாக 10 நாளில் மூடவில்லை என்றால் கடையை நொறுக்கி மூடும் வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொண்டு கலைந்தார்கள்.

மறுநாள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றபோது, தமிழ்நாடு வாணிபக் கழக மாவட்ட மேலாளருக்கு கடையை எடுக்க பரிந்துரை செய்து அனுப்பிய கடிதத்தை நமக்கும் ஒரு நகல் கொடுத்தார்

10 நாட்களுக்கு பிறகும் கடையை மூடவில்லை, பிறகு திருமழிசையில் உள்ள மாவட்ட மேலாளரிடம் அலுவலகம் சென்று மனுக்கொடுக்கப்பட்டது. அங்கு சென்றவுடன் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டனர்.பள்ளிக்கரணை என்றவுடன் ராம் நகர் கடை தானே என்று கூறி சிரிந்தனர். பிறகு கலால் துறை அதிகாரி இதனை எடுப்பதற்கானஅதிகாரம் எனக்கு இல்லை என்றும், மாவட்ட கலெக்டருக்கு மனுக் கொடுங்கள் என்று கூறினார். அதற்கு மக்கள் இதற்கு மேல் யாரிடமும் மனுக்கொடுக்க முடியாது. நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

பின்பு மக்களிடமே கருத்து கேட்கப்பட்டது. அவர்கள், நீங்கள் சொல்வது போல் இந்த ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நம்பி எந்த பயனுமில்லை. அனைத்து துறைகளுக்கும் சென்று மனுக்கொடுத்தாகி விட்டது இனி நாமே முடிவு செய்வோம் என்று கூறி மேலும் 10 நாட்கள் அவகாசத்தில் 20-ந் தேதி பகுதி மக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்ற போது முன்கூட்டியே அங்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால் மக்கள் உங்கள் பேச்சை கேட்க நாங்கள் வரவில்லை. வழியை விடுங்கள் கடையை நாங்களே மூடிக் கொள்கிறோம் என்றனர்.

பிறகு கடைக்கு குடிக்க வந்தவர்களை நீங்களே விரட்டுகிறீர்களா? அல்லது நாங்கள் விரட்டட்டுமா? என்றார்கள். மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மக்களிடம் நான் இப்போது புதிதாக வந்துள்ளேன். கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றுவேன் என்றதற்கு, உங்களை எல்லாம் நம்ம முடியாது வழி விடுங்கள் என்று முன்னேறினார்கள். நான் மேல் அதிகாரியை வரவழைக்கிறேன் அவரிடம் பேசுங்கள் என்று மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை வரவழைத்து மக்களுடன் பேசி வைத்தார்.

சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாசை பார்த்தவுடன் சார் உங்க கையெழுத்துக்குதான் மரியாதையே இல்லையே நீங்க ஏன் சார் வீணா வரீங்க என்றவுடன் அவர் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு உதவி கமிஷனரின் பின்னால் நின்றவர் ஆர்ப்பாட்டம் முடியும் வரை மக்களை பார்க்காமலேயே குனிந்தபடி நின்றார்.

உதவி கமிஷனர் என்ன பிரச்சனை எல்லோரும் கலைந்து போங்க என்றார் அதிகார தோரணையுடன்.. என்ன சார், என்ன பிரச்சனை என்று கேட்காமலேயே கலைந்து போங்கன்னு சொன்னா எப்படி. திருட்டுதனமா கடையை நடத்துவீங்க, கேட்கவந்த கலைஞ்சு போங்கன்னு மிரட்டுவீங்களா?

முழக்கமிடும் கல்லூரி மாணவி பிரியா

பிரியா என்ற கல்லூரி மாணவி, எங்கள் வீட்டில் அம்மா தான் வீட்டு வேலைக்கு போய் என்னை படிக்க வைக்கிறார். ஆனால் தற்போது டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்துவிட்டு நிர்வாணமாக விழுந்து கிடக்கின்றனர். இரவு நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் வேலைகளுக்கு வருவதில்லை, சம்பளமும் இல்லை எங்களை யார் படிக்க வைப்பார்கள், இது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமில்லை, எங்களை போல பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இன்னொருவர், பக்கத்தில் இருக்கும் பள்ளியில் தான் எங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள், பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. இது போன்ற பல கேள்விகளை கேட்டு திணறடித்தனர்.

இனிமேல் கெஞ்சி பயனில்லை, டாஸ்மாக் நீங்கள் மூடவில்லை நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம் என்று கூறிய உடனே உதவி கமிஷனர் கோவிந்தராஜ் இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள் இந்த டாஸ்மாக் கடை எடுப்பது பற்றி நாளை ஆலோசனை நடத்துகிறோம். புதன் கிழமை மூடிவிடுகிறோம் என்று கூறினார்.அதற்கு மக்கள் 2 நாட்களில் கடையை மூடவில்லையென்றால் கடையை உடைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று மக்கள் கூறிவிட்டு கலைந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

_____________

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் கருத்தை பிரச்சாரம் செய்யும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி