உலகம் முழுவதும் சுமார் 2.6 இலட்சம் பேரை ஊழியர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது காக்னிசண்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் (சி.டி.எஸ்) நிறுவனம். அந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.8 இலட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அதில் சுமார் 6,000 முதல் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக ஊடகங்களுக்குக் கடந்த மார்ச் மாத இறுதியில் தகவல்களை கசிய விட்டது சி.டி.எஸ் நிறுவனம். இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறிய பின்னர், தகுதி குறைந்தவர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்களை ஒவ்வொரு ஆண்டும் எடுப்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான் என்று கார்ப்பரேட் அறிவுஜீவிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகளும் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர்.
இந்த தகுதி குறைவு பூச்சாண்டியே ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்க இதன் காரணமாகத் தான் ஆட்குறைப்பு செய்யப்படுகிறதா ?
பணிநீக்க செய்திகள் வெளியாவதற்கு முன்பே, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யத் தொடங்கியிருந்தது சி.டி.எஸ். நிறுவனம். அந்நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் (HR), ஊதிய உயர்வுக்கான ஊழியர் பரிசீலனையில்(Appraisal), ஒவ்வொரு குழுவிலும்(Team) இருக்கும் மொத்த நபர்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு தர வரிசைப் பட்டியலில் கண்டிப்பாக 4 வது தரநிலை (4th Grade) கொடுக்க வேண்டும் என அனைத்து செயல்திட்ட மேலாளர்களிடமும் (Project Manager) வலியுறுத்தியுள்ளனர். அதாவது ஒரு குழு முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதிலிருந்து ஒருவர் அல்லது இருவர் கண்டிப்பாக பலிகடாவாக்கப்பட வேண்டும் என்பது தான் அதன் பொருள்.
இவ்வாறு 4-வது தரநிலை கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களை, அவர்கள் வேலை பார்த்து வரும் குறிப்பிட்ட செயல்திட்டத்திலிருந்து (Project) இருந்து நீக்கி காத்திருப்புப் பட்டியலில் வைத்தது நிர்வாகம். அவர்களை இரண்டு மாதங்களுக்குள் வேறு செயல்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்று சேர்ந்து கொள்ளுமாறும், ஒரு வேளை இரண்டு மாதங்களுக்குள் வேறு எந்த ப்ராஜெக்ட்களிலும் சேரவில்லை எனில் அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில் செயல்திட்ட மேலாளர்களிடம், அவர்களது செயல்திட்டங்களில் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஊழியர்களை எடுக்கும் போது 4-வது தரநிலை கொடுக்கப்பட்ட ஊழியர்களைக் கண்டிப்பாக எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
அதாவது ஒரு குழுவிற்கு ஒருவரோ அல்லது இருவரோ கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அவர்களுக்கு வேண்டுமென்றே 4-வது தரநிலை கொடுத்து, அதன் காரணமாக அவர்கள் வேலை பார்க்கும் செயல்திட்டங்களிலிருந்து நீக்கி, வேறு எந்த செயல்திட்டங்களிலும் சேர முடியாதவாறு நிர்பந்தத்தை உருவாக்கி அதனடிப்படையில் அவர்களைப் பணியை விட்டு நீக்குவது என்பதை திட்டமிட்டு சதி செய்திருக்கிறது சி.டி.எஸ். நிர்வாகம்.
இது தவிர சம்பந்தப்பட்ட ஊழியரை மனித வளத்துறை அதிகாரி அறைக்கு வரவழைத்து ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் அவர்களிடம் அவர்களது குறைகளாக பல்வேறு கதைகளைக் கூறி அவர்களைத் தானாக இராஜினாமா செய்யத் தூண்டுவதன் மூலமும் ஆட்குறைப்பைச் செய்து வருகிறது சி.டி.எஸ். நிறுவனம். இத்தகைய உளவியல் தாக்குதல்களை பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.
இப்படி ஊழியர்களை சட்டவிரோதமாக மனிதத் தன்மையற்று சி.டி.எஸ். நிறுவனம் வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்நிறுவனம் நட்டத்தில் செயல்படுகிறதோ? நிச்சயமாக இல்லை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% அதிகமான வளர்ச்சியைச் சாதித்துள்ளது இந்நிறுவனம். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் இதே ஊழியர்களின் கண் துஞ்சாத உழைப்பில் தான் இந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது சி.டி.எஸ். இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளுக்குக் கொழுத்த இலாபத்தை உறுதி செய்யும் பொருட்டே பல ஆயிரம் ஊழியர்களை ஈவிரக்கமின்றி பணிநீக்கம் செய்துவருகிறது சி.டி.எஸ். நிறுவனம்.
இது வெறுமனே காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களின் பிரச்சினை அல்ல. அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் இது தான் நடைமுறை. பணிநீக்கம் ஒரு பிரச்சினை என்றால் சம்பளத் திருட்டு அடுத்த பிரச்சினை. ஐ.டி. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதித் தொகை திறன் சார்ந்த ஊதியம் என்று பிரிக்கப்படுகிறது, அதாவது நிறுவனத்தின் மொத்த வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிபுரியும் ப்ராஜெக்டின் வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியரின் (அடிமைத்) திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த சம்பளப் பகுதியை 200%ஆக அதிகரிக்கவோ அல்லது 0%ஆக குறைக்கவோ செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.
இரவும் பகலும் வேலை பார்த்து கூடவே மேலதிகாரியின் ‘குட் புக்கில்’ இடம்பெறும் ஊழியனுக்கே இச்சம்பளத்தில் அதிகபட்சமாக 95% தான் தரப்படுகிறது என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள். அதுவும் ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஊழியர் வேலை செய்யும் ப்ராஜெக்டும் வெற்றிகரமாக இலக்கை அடையும் பட்சத்தில் தான் இதுவும் சாத்தியம்.
இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சங்கமான நாஸ்காம் ( NASCOMM) தனது ஆண்டுப் பரிசீலனைக் கூட்டத்தில் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016-17 நிதியாண்டில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 8.6% அளவில் இருந்த போதிலும், வேலை வாய்ப்பின் வளர்ச்சி 5% தான் உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் 20 முதல் 25% வேலைகள் பறி போகும் என்றும் கூறியுள்ளது.
இதே போல சமீபத்தில் மும்பையில் நடந்த நாஸ்காம் தலைமை மாநாட்டில் பேசிய கேப்-ஜெமினி என்னும் பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரி சீனிவாச கண்டுலா, ஐ.டி. துறையில் நடுத்தர மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பெருமளவில் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறினார். மேலும் தற்போதைய ஐ.டி. ஊழியர்களில் பயிற்சியளித்தாலும் தேறாதவர்கள் சுமார் 60 முதல் 65% வரை இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். கேப் ஜெமினி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டின் கீழ் மட்டும் 1,00,000 ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஐ.டி. மற்றும் வியாபாரத் துறையில் ஹோம்ஸ் (HOLMES – Heuristics and ontology-based learning machines and experiential systems ) என்னும் தானியங்கி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்த்த் தானியங்கித் தொழில்நுட்பம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலைகளைத் தானே செய்ய வல்லது. அந்த அடிப்படையில் விரைவில் சுமார் 30,000 ஐ.டி. ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்தால் விரைவில் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் உண்டு.
முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் புரிய, சக ஐ.டி ஊழியர்களை வேவு பார்க்கும் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும் ஆப்பைத் தயாராகவே வைத்துள்ளன ஐ.டி.நிறுவனங்கள். மனித வளத்துறை மற்றும் நிதித்துறையிலும் தானியங்கித் தொழில்நுட்பத்தை உபயோகித்து ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
படிக்கவே அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இவை யாவும் உங்களை பீதியூட்டுவதற்காக இட்டுக்கட்டி சொல்லப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் முதலாளித்துவ பத்திரிக்கைகளில், அவர்களது இணையதளங்களில், முதலாளிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களே. இன்று “திறமையற்றவர்களாக” காட்டப்படும் சக ஊழியருக்காக குரல் கொடுக்க நீங்கள் தயங்கினால், நீங்களும் உங்கள் நிறுவனத்தால் ‘திறமையற்றவராக’ காட்டப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்களது தேவை நிறுவனத்திற்கு மறைந்த உடனோ அல்லது உங்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொருவர் உருவாக்கப்பட்டவுடனோ, நீங்கள் கருவேப்பிலையாக தூக்கியெறியப்பட்டு விடுவீர்கள்.
1. உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் ! நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.
2. தேர்தலை மற ! மக்கள் அதிகாரத்தை நினை !! மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற சூதுதான் தேர்தல்கள்.
3. மக்களாட்சியா, சாராய முதலாளிகளின் ஆட்சியா ? நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.
4. வங்கிக் கடன் : நிலத்தை விற்றால் யோக்கியன் ! இல்லையென்றால் நாணயமற்றவன் !!
வங்கிக் கடனையும், பயிர்க் காப்பீடையும் விவசாயப் பிரச்சினைகளின் சர்வரோக நிவாரணியாகக் காட்டுகிறது, அரசு. ஆனால், விவசாயிகளை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்தும் கருவியாகத்தான் பயன்படுகிறது வங்கிக் கடன்.
5. தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க.! பணந்தின்னி அ.தி.மு.க.!! தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
6. கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் ! கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.
7. இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ? ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
8. கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது ! இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.
9. எங்கம்மா சாணி தட்டி வித்திச்சி ! நாங்கள் எச்சி பாட்டில் கழுவிப் பொழைக்கிறோம் !! நெசவுத் தொழில் அழிந்து, பாலாற்று மணல் கொள்ளையால் விவசாயமும் அழிந்து, டாஸ்மாக்கினால் குடும்பங்களும் அழிந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு வழங்கியிருக்கும் வேலைவாய்ப்புதான் எச்சில் சாராய பாட்டில் கழுவும் தொழில்.
10. இந்திய இராணுவத்தின் அறவொழுக்கம் : ஊழலைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே ! இந்திய இராணுவத்தில் நடந்துவரும் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணியும் சிப்பாய்களும் அதிகாரிகளும் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்டு துரத்தப்படுகிறார்கள்.
11. சேவைக் கட்டணம் என்றொரு முகமூடி ! அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.
எப்பொழுதும் போல் பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதை கண்டித்து விவசாயிகள் தலைநகர் தில்லியில் பல நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை. நாட்டுக்கே உணவு கொடுத்தவர்களை உடையின்றி நிர்வாணமாக போராடவிட்டது இந்த அரசு.
இதே போல் மாருதி மனேசர் தொழிலாளர்களின் மீது தொடுக்கப்பட்ட அநீதியை கண்டித்தும் , சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் திருமயம் BHEL PPPU தொழிற்சங்கம் சார்பாக 12.04.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு PPPU தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் திரு. இளங்கோவன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பார்களாக நெடுவாசலை சேர்ந்த மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் திரு.சுந்தராசனும் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி தோழர் . தர்மராஜனும் கலந்து கொண்டனர்.
மனேசர் மாருதி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் அநீதியானது என்றும், தொடர்ந்து மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்க தக்கது என்றும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க அரசு ஏன் ஆர்வமாக உள்ளது என்பது பற்றியும் தொழிலாளர்களிடம் விளக்கினார் அமைப்பு செயலாளர் தோழர் வெங்கட்ராமன். தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் இளங்கோவன் அரசுகளின் உண்மை முகத்தை தோலுரித்ததும். இது தொடர்ந்தால் இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் என தனது உரையில் கூறினார்.
தோழர் தர்மராஜன் பேசும்போது “பொதுத்துறை நிறுவனம் மட்டும் இல்லை தனியார் நிறுவனங்களில் நடைபெறும் அநீதிகளை இந்த அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. இதை தொழிலாளர்கள் கடுமையான போராட்டம் மூலம் மாற்ற வேண்டும் என்றார்.”
மத்தியில் ஆளும் அனைத்து அரசுகளும் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக தான் இருந்து வருகிறது மீத்தேன் என்றும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பெயரை மாற்றி ஹைட்ரோகார்பன் என்றும் மக்களை ஏமாற்ற பார்க்கிறது. இதனை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும்.” என்று பேசினார். செயலாளர் சரவணன் கண்டன கோஷங்கள் எழுப்பினார். இறுதியாக துணைத்தலைவர் தோழர் இராஜ்குமார் நன்றியுரை கூறினார். ஆர்ப்பாட்டத்தில் PPPU தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் திருமயம் விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக
விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்துசெய்!
விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கு!
காவிரி நடுவர் மன்றத்தை உடனே அமை!
வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்காதே!
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ போரடக்கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளையோ, போராட்டத்தையோ சிறிதளவும் மதிக்காமல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றது. இதனைக் கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி, தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக 17.04.2017 அன்று திருச்சியில் உள்ள மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக சுவரொட்டி மூலம் அறிவித்தனர். காலை 9:00 மணி முதலே தடுப்பரண்கள் அமைத்து, சாலையை மறித்து கடமை உணர்வுடன் காத்துக்கிடந்தது போலீசு. இதனால் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமானது. போலீசின் இந்தக் கெடுபிடியைக் கண்டு அருகிலுள்ள சினிமா தியேட்டருக்கும், பெட்ரோல் பங்குக்கும் வந்தவர்கள் ’ஏதும் மந்திரிங்க, நடிகருங்க வர்ராங்களா?’ என பேசிக்கொண்டனர். திட்டமிட்டபடி மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்ட இடத்திற்கு அருகில் மக்களோடு மக்களாக கலந்து தயாராக இருந்தனர்.
சரியாக 11:00 மணியளவில் பறை முழக்கம் கேட்டவுடன் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கொடி மற்றும் முழக்கத்தட்டிகளை ஏந்தியபடி பல முனைகளில் இருந்தும் திரண்டு பாஸ்போர்ட் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். முன்னேறிய தோழர்களைப் போலீசு தடுக்க முயன்றது. தோழர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் போலீசைப் புறந்தள்ளி முன்னேறிச் சென்றனர். போலீசின் தடுப்பரண்களைத் தாண்டி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோடி முகமூடி அணிந்து விவசாயிகளுக்கு சுறுக்கு மாட்டி இழுக்கும் எமதர்மனாக மோடியை சித்தரித்தும், மோடி முகமூடி அணிந்தவரை செருப்பால் அடித்தும் காட்சி விளக்கம் செய்தனர். பி.ஜே.பி-யின் தாமரை சின்னத்தை வெட்டியெறிந்து காலில் போட்டு மிதித்தனர்.
பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் “இந்த அரசு விவசாயிகளின் போராட்டத்தை சிறிதளவுக்கூட மதிக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த இதே அரசுதான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இது மக்களுக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இது எந்த வகையிலும் மக்களுக்கு உதவாது. இதனை தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கான மாற்று அரசை நிறுவ வேண்டும். அனைத்து அம்சங்களிலும் இந்த அரசை முடக்கி மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வு அது தான் மக்கள் அதிகாரம்” என்றார்.
பிறகு தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்ற போலீசார் போராட்டத்தை தடுத்துவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிடுவற்குள் மற்றொரு குழுவினர் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டவாறு தடுப்பரண்களை தள்ளிவிட்டு முன்னேறிச் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் போராட்டத்தைப் பார்த்து மிரண்டனர். போர்குணமாக போராடிய தோழர்களை கைது செய்ய முடியாமல் போலீசு திணறியது. போலீசுத்துறை துணை ஆணையர் மயில்வாகனன், ஜல்லிகட்டு போராட்டத்தின்போது எந்த அமைப்பினரை பெயர் குறிப்பிடாமல் தீவிரவாதிகள் என்று சித்தரித்து பீதியூட்டினாரோ அதே அமைப்பினரின் போராட்டத்திற்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய காலத்தின் காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். போர்க்குணமிக்க இப்போராட்டம் மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகவும், போராடக் கூடிய மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்தது.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
காவிரி ஆணையம் மறுத்து விட்டு
ஒற்றை ஆணையம்னு ஏய்க்காதே!
வளர்ச்சி என்று ஏய்க்காதே
ஹைட்ரா கார்பனைத் திணிக்காதே!
விவசாயி, வியாபாரி…
மீனவன… மாணவன…
மக்களையெல்லாம் கொன்று விட்டு
டிஜிட்டல் இந்தியா யாருக்கு?
பதில் சொல் பதில் சொல்
காட்டை அழித்த கிரிமினல் ஜக்கி
சிலை திறக்க பறந்து வந்த…
கூப்பிடு தூரத்தில் சாகக் கிடக்கான்
தமிழகத்து விவசாயி…
எட்டிப்பார்க்க நேரமில்லையா
உலகம் சுத்தும் மோடியே
பதில் சொல் பதில் சொல்!
வர்தா புயலுக்கும் வறட்சிக்கும்
அறுபதாயிரம் கோடி கேட்டாக்கா
ரெண்டாயிரம் கோடிதான் தருவானாம்!
யானைப்பசிக்கு சோளப்பொறி
பார்ப்பன கும்பலின் மனுநீதி!
இது பார்ப்பன கும்பலின் மனுநீதி!
வேண்டும் காவிரி மறுப்பானாம்
வேண்டாத மீத்தேன திணிப்பானாம்
விடமாட்டோம் விடமாட்டோம்
பார்ப்பன கும்பலே பா.ஜ.க-வே
திராவிடப் பகையே விடமாட்டோம்!
மாடு செத்துப் போனதெல்லாம்
தேசியப் பிரச்சினையாம்….
விவசாயிகள் செத்து மடிவது
உப்புப் பொறாத விசயமா?
கோமாதாவின் புதல்வர்களை
மாட்டுக்குப் பிறந்த முண்டங்களை
உலவ விடுவது அவமானம்!
காவிரி உரிமையை மறுத்துவிட்டு
வறட்சி நிவாரணம் மறுத்து விட்டு
விவசாயிகளைக் கொன்று விட்டு
மீனவனைக் சுட்டுப்போட்டு
ஆட்டம் போடும் மோடி அரசை
அடித்து விரட்ட வாருங்கள்!
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
திராவிடத்தை… சமூக நீதியை
எதிர்க்க வந்த பார்ப்பன கொழுப்பை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!
துரத்தியடிப்போம், துரத்தியடிப்போம்!
தமிழர் விரோத திட்டங்களை
நீட் தேர்வை, ஹைட்ரா கார்பனை…
கெயில் குழாயை, நியூட்ரினோவை…
திணிக்க முயலும் பா.ஜ.க-வை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!
விவசாயி… தொழிலாளி…
மாணவனும் மீனவனும்…
டாஸ்மாக் எதிர்க்கும் பெண்களும்
தனித்தனியாப் போராடி
தீர்வு கான முடியாது…
கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும்
இந்த அரசமைப்பையே ஒழிக்காம
எந்தப் பிரச்சினையும் தீராது…
தோற்றுப்போன அரசமைப்பு
மக்களுக்கு உதவாது!
போராட்டங்கள் இணையட்டும்
மக்கள் அதிகாரம் மலரட்டும்!
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருச்சி, தஞ்சை மண்டலங்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாகக் காவிரியில் வஞ்சிக்கப்பட்டும், பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டும், வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம்?” என்ற பிரச்சார சுவரொட்டிகளைப் கீழத்தஞ்சை பட்டிதொட்டி எங்கும் காண முடியும். மக்கள் அதிகாரத்தின் இந்தச் சுவரொட்டி வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதலையும், அதிகார வர்க்கத்திற்கு எரிச்சலையும் உருவாக்கியுள்ளது.
கீழத்தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பு பாதிக்கப்பட்ட, விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த ஜனவரி 29 அன்று திருத்துறைப்பூண்டி, தெற்குவீதியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேருந்து பிரச்சாரம் மற்றும் குடியிருப்புகளில் மக்களைச் சந்திப்பது மூலம் பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணிதிரட்டி வந்தனர்
சட்டஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி 29-01-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மீண்டும் 25-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு, பேச்சுவார்த்தைக்குப் பிறகு 26-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று திருத்துறைப்பபூண்டி காவல்துறை ஆய்வாளர் வாய்வழி உறுதிஅளித்தார்.
பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் 25-02-2017 அன்று நள்ளிரவில் கடிதத்தை கொடுத்து திடீர் தடை விதித்தது காவல்துறை. மக்கள் அதிகாரம் திருவாரூர் அமைப்பாளர் முரளி, திருத்துறைப்பூண்டி தோழர் செல்வம் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பொதுக்கூட்ட விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு 27-03-2017 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கழிப்பறை காகிதமாகவே கருதினார் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன்.
தற்போது டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி வாசகம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் பொதுக்கூட்டத்திற்குத் தொடர்பற்ற காரணங்களைக் கூறி 15-04-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது.
தடையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய முரளி, முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து காவல் வைப்பு (ரிமாண்ட்) கோரியது காவல்துறை. திருவாரூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தும் கண்டனத்தைப் பதிவு செய்தும் தோழர்களை விடுவித்துள்ளார்.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், வறட்சி பாதிப்பு, நூறுநாள் வேலை கூலி மறுப்பு, டாஸ்மாக் எதிர்ப்பு என்று மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான். என்றாலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் கிரிமினல் குற்றவாளி சசிகலா கும்பலின் விசுவாசி என்பதால் உச்சத்திற்கே சென்று கூவுகிறார் என்பதே உண்மை.
எந்த மக்கள் போராட்டக் கூட்டு நடவடிக்கையாக இருந்தாலும், மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளதா? இருந்தால் அனுமதி கிடையாது என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார் மயில்வாகனன். மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அரங்குகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று அரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இதனைக் கண்டித்து 15-04-2017 அன்று தஞ்சை ரெட்கிராஸ் அரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பு மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காளியப்பன் பங்கேற்று திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் சட்ட விரோத, ஜனநாயக விரோத மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார். பொதுக்கூட்டத்திற்குத் தடைவிதித்த அன்றே தடையை அம்பலப்படுத்தி பேருந்து பிரச்சாரம், குடியிருப்பு பிரச்சாரம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் சுறுசுறுப்பாகி விட்டனர்.
அடக்குமுறைகளைக் கண்டு மக்கள் அதிகாரம் அஞ்சப்போவது இல்லை. திரளான மக்களுடன் திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை மக்கள் அதிகாரம் தொண்டர்களின் உழைப்பும், உணர்வும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஊழலுக்கு எதிரான சண்டமாருதம் என்றும் எச்சரிக்கை என்றும் பலவாறாக கொண்டாடப்பட்டது ஜெயா – சசி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இந்த வழக்கில் துவக்கம் முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எப்படியெல்லாம் உதவி வந்திருகிறார்கள் என்பதையும், இத்தீர்ப்பு திட்டமிட்டே தாமதிக்கப்பட்டிருப்பதையும், தீர்ப்பில் உள்ள நிழலான பகுதிகள் குறித்தும் புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.
முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கும் மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் இடையிலான உறவும், குற்றத்தில் ஜெயலலிதாவின் பாத்திரமும் உண்மை விவரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், அவர் இறந்து விட்ட காரணத்தினால், அவருடைய மேல் முறையீடு அற்றுப் போய்விட்டது (abated) என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தது உச்ச நீதிமன்றம். அற்றுப் போய்விட்டது என்று குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்ற கேள்வி அப்போதே எழுந்து விட்டது.
வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் நீதிபதி குன்ஹா
இறந்தவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க முடியாது என்பது எதார்த்தம். அபராதத்துக்கு ஜெயலலிதா விலக்குப் பெற முடியாது. ஏனென்றால், அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா வசூலிக்கும் முறை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் என்று தீர்ப்புக்கு விளக்கமளித்தார் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆசார்யா. மரணம் என்பது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வழக்கைத்தான் முடிவுக்கு கொண்டு வருகிறதேயொழிய, அவருடைய சொத்துக்கு எதிரான வழக்கை அல்ல என்பதுதான் சட்டம்.
முறைகேடாக சேர்த்த சொத்துகள் முழுவதும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படவேண்டும். குற்றவாளிகள் தாங்கள் நியாயமாக சம்பாதித்த பணத்திலிருந்து அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்பது குன்ஹாவின் தீர்ப்பு. அவருடைய தீர்ப்பை முழுமையாக ஏற்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்த போதிலும், ஜெயலலிதா தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் சந்தேகத்துக்கிடமானவையாக இருந்த காரணத்தினால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது கர்நாடக அரசு.
“மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்தான் குற்றவாளி இறந்திருக்கிறார் என்பதால், மேல்முறையீடு அற்றுப்போதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி இறப்பதற்கு முன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு என்ன வலிமையும் விளைவும் இருக்குமோ அது மரணத்துக்குப் பின்னரும் இருக்கும்… எனவே ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீடு அற்றுப்போய்விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது, வெளிப்படையாகத் தெரிகின்ற சட்ட ரீதியான தவறு. தீர்ப்பில் உள்ள இந்த தவறு திருத்தப்படவேண்டும் ” என்றும் இது குறித்த தங்களது வாதுரைகளை முன்வைக்க நீதிபதிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தனது சீராய்வு மனுவில் கோரியிருந்தது கர்நாடக அரசு.
கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்கக் கூட மறுத்த நீதிபதிகள் (குமாரசாமிகள்) பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய்.
ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளான பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர், கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்பதற்குக் கூட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இதன் பொருள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயா குற்றவாளி இல்லை என்பதுதான். எனவே அரசு அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவோ அபராதத்தை வசூலிக்கவோ முடியாது என்று விளக்கமளிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.
கொடநாடு, பையனூர் பங்களா, மிடாஸ் உள்ளிட்ட எந்த திருட்டுச் சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை. அனைத்தையும் மன்னார்குடி மாபியா கேட்பாரின்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறது. போயஸ் தோட்டத்தில் தினகரன் ஆட்சி. தனது தலைமையகத்தை தற்காலிகமாக பரப்பன அக்கிரகாராவுக்கு மாற்றியிருக்கிறார் சின்னம்மா.
அனுப்பம்பட்டு டாஸ்மாக் கடை மக்கள் போராட்டாத்தால் மூடப்பட்டது !
திருவள்ளூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் 10-ம் தேதி அன்று அனுப்பம்பட்டு நெடுசாலையில் மூடிய டாஸ்மாக் கடையில் உள்ள சாராய பாட்டில்களை இரவோடு இரவாக வந்து இறக்கியது டாஸ்மாக் நிர்வாகம். இதை அறிந்த ஊர் மக்கள் 11-ம் தேதி காலையில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தை தொடங்கினர். எங்கள் ஊரில் சாராய கடையை திறக்க கூடாது என போராட தொடங்கினர். இந்த போராட்டத்தை பற்றிய தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அந்த பகுதிக்கு சென்று மக்களுடன் இணைந்து போராட தொடங்கினர்.
முதல் நாள் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த கடையை இங்கே திறக்க வேண்டாம் என மனு ஒன்றை தயாரித்து தாசில்தாரிடம் கொடுத்தனர். இது குடியிருப்பு பகுதி, மக்கள் செல்லும் வழி, பள்ளிக்கூடம் 100 மீட்டருக்குள் இருக்கிறது. பெண்கள் இந்த வழியாகத்தான் ஊருக்குள் சென்று வருகிறார்கள் அதனால் எங்களுக்கு பாதிப்பு உள்ளது என மக்கள் மனுவில் எழுதியிருந்தனர். தாசில்தார், மறுநாள் நேரில் வந்து பார்த்து முடிவு சொல்வதாக கூறினார். ஆனால் நேரில் வந்து பார்க்கவில்லை.
அந்த கடை அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவருடைய இடத்தில் தான் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று யாரும் போராட்டத்திற்கு போக கூடாது என இரண்டாவது நாள் ஆள் வைத்து மிரட்டியுள்ளார். டாஸ்மாக் வைக்க இருக்கும் கந்தம்பாளையம் கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மிரட்டிகிறார் என்ன செய்வது என அச்சப்பட்டனர். எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கதான் செய்வார்கள் நாம் இவர்களை மீறி தான் போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.
அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவர் சசிகலா அணியை சேர்ந்தவர். கந்தம்பாளையம் நாலூர் ஊராட்சி தலைவர் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர். போராடும் மக்களை போலிஸ் நிலையத்தில் உங்கள் ஊராட்சி தலைவரின் மீது புகார் கொடுங்கள் என பேசியுள்ளார். போலிசிடம் புகார் கொடுத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளக்கிய பேசிய பிறகு மக்கள் நாம் சொல்வதை ஏற்று கொண்டனர். போலிசிடம் போக தேவையில்லை நாங்கள் போராடுகிறோம். யாருக்கு இந்த கடையை மூட அதிகாரம் இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் உறுதியாக கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
அன்று மாலை நான்கு மணி வரை வருவதாக சொன்ன தாசில்தார் வரவில்லை. போலிசோ உங்களுடைய பாதுகாப்பிற்கு நாங்கள் வரவில்லை. கடையின் பாதிகாப்பிற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என சொல்கிறார்கள் என மக்கள் தங்களுக்குள் பேசி ஆவேசப்பட்டனர். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது கடையை நடத்த வேண்டும் என்பது தான் போலிஸ், தாசில்தார் எல்லாம் கூட்டு களவாணிகள் தான் என்பதை மக்கள் மத்தியில் விளக்கினோம். இப்படி பேசி கொண்டிருக்கும் போதே வருவாய் துறை அதிகாரி வந்து என்ன நடக்கிறது என்று நோட்டம் பார்க்க வந்திருந்தார். வந்தவர் மக்களிடம் ஒன்றும் பேசவில்லை.
சும்மா நின்று பார்த்து கொண்டிருந்தார். போலிஸிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள் அவரிடம் சென்று மேடம் பாருங்க இங்கு கடை வந்தால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாது என்று முறையிட்டனர். என்னிடம் அதிகாரம் இல்லை, உடனே முடிவு செய்ய முடியாது என்றார். மேல் அதிகாரிகள் தான் முடிவு செய்ய முடியும் என்றார். மேலே மேலே என்றால் யாரு? உங்கள் வீட்டின் பக்கத்தில் இப்படி டாஸ்மாக் கடையிருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? இப்படி பேசுவீர்களா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். உடனே அவர் கிளம்பிவிட்டார். கடையை இன்று திறக்கமாட்டார்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
இரண்டாவது நாள் – நம் ஊர் மக்கள் மட்டும் போராடினால் வெல்ல முடியாது. பக்கத்தில் உள்ள ஊர் மக்களை இணைத்து கொண்டு போராடினால் தான் கடையை மூட முடியும் என மக்களிடம் கூறினோம். மக்கள் ஏற்று கொண்டனர். கந்தன்பாளையம் ஊரில் உள்ள பெண்கள், ஆண்கள், பள்ளி மாணவர்கள் என மொத்தம் 30 பேர் பக்கத்துக்கு கிராமமான ராஜபாளையம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை அணிதிரட்டினர். பின்பு ராஜபாளையம் ஊர் மக்களுக்கும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்பு இரண்டு ஊர் மக்களும் சேர்ந்து கொண்டு அடுத்த ஊரான ஏரிமேடு கிராமத்திற்கு சென்றனர்.
அடுத்த நாள் மூன்று ஊர்களிலும் மக்கள் அதிகாரம் போஸ்டர் ஒட்டப்பட்டது. மூன்று ஊர் மக்களும் சேர்ந்து மொத்தம் 200 பேர்கள் அடுத்த நாள் போராட்டத்தில் இறங்கினர். டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை போலிசு கிழித்துவிட்டனர். மூன்றாவது நாள் போராட்டத்தின் போது பொன்னேரி டி.எஸ்.பி நேரில் வந்தார். நீங்கள் செய்யும் போராட்டங்களை நாங்கள் கோட்டாச்சியர், கலெக்டருக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம் என்று போனில் அனுப்பிய செய்தியை காட்டி மக்களை படிக்க சொன்னார். மக்களும் படித்தனர். வன்முறையெல்லாம் செய்ய கூடாது. யாருடைய பேச்சை கேட்டோ இப்படி செய்கிறீர்கள் என்று கூறினார். உடனே இது எங்கள் பிரச்சனை யாரை பேச்சையும் கேட்டு நாங்கள் போராடவில்லை. மூன்று நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறோம் இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் என மக்கள் கூறினர். அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மக்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். மதியம் 1 மணி பிறகும் எந்த அதிகாரியும் வரவில்லை. தொடர்ச்சியாக இப்படி எங்களால் போராடிக் கொண்டேயிருக்க முடியாது. ஒரு முடிவு சொல்லுங்கள், 2 மணி வரை கெடு என்று போலிசிடம் மக்கள் அறிவித்தனர். அப்படி வரவில்லை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர். உடனே போலிசு போனில் பேசினார். பொன்னேரியில் இருக்கும் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என கூறினார். ஆண்கள் மட்டும் போவதாக இருந்தது. பெண்கள் பத்து பேர்கள் போக வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டது. இவர்கள் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் தாசில்தார் போராடும் இடத்திற்கு வந்தார். வந்து மக்களிடம் பேசவில்லை. போலிசிடம் மட்டும் பேசிவிட்டு சென்று விட்டார். போலிசுக்காரர்கள் வெறும் 30 வீடுகள் தான் இருக்கிறது ஒரு பிரச்சனையும் இல்லை என கூறினார்கள். அதை கேட்டு விட்டு சென்றுவிட்டார். உடனே பெண்கள் போலிசை சுற்றி வளைத்து உங்களுக்கு தெரியுமா? எந்த பிரச்சனையும் இல்லையென்று சொல்கிறீர்கள், உங்கள் வீட்டின் பக்கத்தில் டாஸ்மாக் இருந்தால் இப்படி சொல்வீர்களா? என சரமாரியாக கேள்வி கேட்டனர். உடனே அந்த இடத்தை விட்டு போலீசுக்காரர்கள் நகர்ந்துவிட்டனர்.
மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைமக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை
இந்த தாசில்தார் தான் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த கடையை மூடினால் கள்ள சாராயம் வந்து விடம் பரவாயில்லையா? என்று கேட்டுள்ளார். மக்கள் பாதிப்புகளை எடுத்து கூறி கடையை மூடுங்கள். கள்ள சாராயம் வந்தால் நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம் என்றனர். ஏற்கனவே நாங்கள் மனு கொடுத்துள்ளோம் என அந்த மனுவையும் சேர்த்து காட்டியுள்ளனர். கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி கூறிய பிறகே மக்கள் வந்தனர்.
இங்கு கடையை திறக்க விடமாட்டார்கள் என்று உணர்ந்த அதிகாரிகள் உடனே வருவாய் துறை அதிகாரி அனுப்பி கடையை பூட்டு போட்டு, நோட்டீஸ் ஒட்டினர். மறுபடியும் திறந்தால் போராட்டம் தொடரும் என கூறி மக்கள் கலைந்தனர். மக்களின் போராட்டம் வென்றது. இவர்களிடம் கெஞ்சி ஒரு பயனுமில்லை. உறுதியான போராட்டமே ஒரே தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் கற்று கொண்டனர்.
தகவல் : மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.
சுந்தர பெருமாள் கோவில் :
நீதிமன்ற உத்தரவுன் படி குடந்தை – தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை சுந்தர பெருமாள் கோவில் அருகிலுள்ள சுடுகாட்டின் அருகிலேயே டாஸ்மாக் கட்ட இடம் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த சுந்தர பெருமாள் கோவில் இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம் தோழர்களும் களநிலையை அறிந்து 10.04.2017 கடந்த திங்கள் கிழமை அன்று சில மணிநேரங்களில் மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று அப்பகுதி உழைக்கும் மக்களை அணிதிரட்டினர். தோழர் சங்கத்தமிழன் தலைமையில் இளைஞர்கள்,பெண்கள்,குழந்தைகள், வயதானவர்கள் என 70-க்கு மேற்ப்பட்டோர் திங்கள் கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தை அறிந்து வந்த அதிகாரிகள் டாஸ்மாக் வரவே இல்லை. இப்போது ஏன் போராடுகிறீர்கள்…? என்று கேட்ட போது போராட்டத்தில் இருந்த பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை பார்த்து அப்போ டாஸ்மாக் வந்த பிறகு போராடினால் மூடி விடுவீர்களா…? என சரியான பதிலடி கொடுத்தார்.
இவ்வாறு சமரசத்திற்கு பணியாது மக்கள் எங்கள் பகுதில் டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம். அப்படி மீறி டாஸ்மாக்கை திறந்தால் கடையை கொளுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். சில பெண்கள் எங்கள் உயிரே போனாலும் சரி டாஸ்மாக் கடையை வைக்க விடமாட்டோம் என உறுதியாக போராட்டத்தில் முன் நின்றனர். மக்களின் இந்த நெஞ்சுரத்தை கண்ட அதிகாரிகள் உடனடியாக பின் வாங்கினர்.
எழுத்து பூர்வமாக இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மூன்று மணிநேர சாலை மறியல் போரட்டத்தை விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கொராநாட்டு கருப்பூர் :
கொராநாட்டு கருப்பூர் நெடுஞ்சாலையில் நீதிமன்ற உத்தரவுன் படி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை கொரநாட்டு கருப்பூர் அருகிலுள்ள புளியந்தோப்பு பகுதியில் அமைக்க கடந்த 11.04.2017 செவ்வாய்கிழமை அன்று மாலை அங்கு செங்கள் இறக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த கருப்பூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள், மக்கள் மத்தியில் இதனை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதனை அறிந்து கிராமமக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதைத் தடுக்க களமிறங்கினர். அதைத் தொடர்ந்து குடந்தை – சென்னை நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமை தாங்கினர்.
அதன் பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து சமர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மக்கள் அதற்குப் பணியாமல் போராட்டத்தினைத் தொடர்ந்தனர். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அதிகாரிகள் கடை வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர். எழுத்து பூர்வமாக அறிவித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் சென்னை – குடந்தை சாலை முடங்கியது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: மக்கள் அதிகாரம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, குடந்தை – 97902 15184.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என அறிவிப்பு வந்தவுடன் அக்கடைகளை உடனடியாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக வாடகை கொடுத்து வைக்க தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டும்,உடைத்தும் வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை இந்த அரசால் காவல்துறை கொண்டு ஒடுக்க முடியாமல் அம்பலப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருச்சி பொன்மலை கணேசபுரம் பிரதான சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றி மக்கள் குடியிருப்பு பகுதியான மிலிட்டரி காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் அதிகாரிகள் அக்கடையை திறப்பதற்கு அப்பகுதியில் ஒரு கடையை பிடித்து ஒருவாரத்திற்கு முன்பே கிரில் ஒர்க்ஸ் என பெயர் பலகை வைத்திருந்ததால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் திடீரென அந்த பெயர் பலகையை நீக்கிவிட்டு டாஸ்மாக் கடை என பெயர் பலகை வைத்து விற்பனையை தொடங்கினார்கள்.
பொன்மலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் சாராயக் கடை
இதனால் அப்பகுதியில் வெளியிலிருந்து அதிகமான குடிகாரர்கள் வரத்தொடங்கினர்.அவர்கள் குடி போதையில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்வது,மிரட்டுவது,வீடுகளுக்குள் புகுந்து படுத்து கொள்வது என அவர்களது தொல்லை சில நாட்களிலேயே மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் அனைவரும் அக்கடையை முற்றுகையிட்டு போராடினர். உடனே காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு கொடுங்கள் அதை விடுத்து முற்றுகை செய்யக்கூடாது என கூறி அம்மக்களை கலைத்தனர். அன்றைக்கே (07.04.2017) ஆட்சியரிடம் மனு கொடுத்து காத்திருந்தனர்.
08.04.2017 அன்று அதே கடையை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவுசெய்து அதிக அளவில் காவல் துறையினரை குவித்தது. காவல் துறையினர் அருகில் இருந்த கடைகளை மூடச்சொன்னார்கள் காவல்துறையினர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை துரத்திவிட்டனர். இதனால் அப்பகுதியினர், மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதிக்கு வரச்சொன்னார்கள்.சி.பி.எம்.,வி.சி.க.,ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகளை மக்கள் அதிகாரம் சார்பில் ஒருங்கிணைத்து கடை திறப்பதற்கு முன்பே அப்பகுதி மக்களிடையே பறையடித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் கடைக்கு முன் ஒன்று திரட்டினோம்.
பிறகு CPM கட்சிக்காரர் ஒருவர் வாயில் துணிகட்டி,மாலை அணிந்து கொண்டு பிணமாக நடித்தார். அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது எதிர்பை அரசுக்கு தெரிவித்தனர். நாம் ஊருக்கூரு சாராயம்,மூடு டாஸ்மாக்கை மூடு பாடல்களை மக்கள் முன் பாடினோம் மக்கள் மிகுந்த வரவேற்பு தந்தனர். மேலும் முழக்கங்களிட்டுக்கொண்டே மக்களுடன் அதிகாரிகள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டோம். கடை திறக்க வந்த டாஸ்மாக் அதிகாரிகள்,ஊழியர்களை மக்கள் திட்டி அனுப்பினார்கள். பிறகு காவல் ஆய்வாளர் நம்மிடையே பேசியும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியரின் உதவி ஆணையர் வந்து மக்களிடையே பேசினார். அவரிடம் டாஸ்மாக் கடையால் என்ன என்ன பாதிப்புகளை நாங்கள் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என மக்கள் விவரித்தனர்.
இதைக்கேட்ட அதிகாரி அனைவரும் கலைந்து செல்லுங்கள் இங்கு இனி டாஸ்மாக் கடை வராது நான் பார்த்து கொள்கிறேன் என உத்திரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் நாம் மற்ற கட்சிகளிடம் விவாதித்ததில் அவர்கள் இப்போது கலைந்து செல்லலாம் கடையை திறக்க அரசு முற்பட்டால் அதை மக்களை கொண்டு அடித்து நொறுக்கிவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது. தோழர்களுக்கு எங்கள் பகுதி சார்பாக நன்றி என மக்கள் மனதார கூறினர். அப்பகுதி மக்கள் தற்போதுவரை கடைக்கு முன் காவல் காத்து வருகின்றனர். விரைவில் கடை அப்புறப்படுத்தப்படும் என்ற நம்மீதான நம்பிக்கையில்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உறையூர் பேருந்து நிறுத்தம் :
திருச்சி உறையூர் சாலையில் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதி இவ்விடத்தில் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் காலை 6:00 மணி முதலே மது பாட்டில்கள் கள்ளத்தனமாக பார்களில் வைத்து விற்க்கப்படுவதால் அப்பகுதியில் குடிகாரர்களால் மக்களுக்கு தொடர்ந்து மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கடைக்கு முன் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தவர்களை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பிடித்து மது பாட்டில்களை உடைத்து அரசையும்,காவல் துறையினரையும் மக்களிடையே அம்பலப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி உறையூர் பகுதி டாஸ்மாக் கடையில் திருட்டுத் தனமாக நடத்தப்பட்ட சாராய விற்பனையை எதிர்த்து கடந்த 01-08-2016 அன்று நடந்த போராட்டம் (கோப்புப் படம்)
இந்நிலையில் அதே கடையில் காவல்துறையின் முழு பாதுகாப்போடு அ.தி.மு.க உள்ளூர் கட்சிக்காரர்கள் டாஸ்மாக் பாரில் காண்ட்டிராக்ட் எடுத்து தைரியமாக 24 மணிநேரமும் மது பாட்டில்களை விற்று வந்தனர்.90 ரூபாய்க்கு விற்க வேண்டிய பாட்டிலை 130 ரூபாய்க்கு கள்ளத்தனமாக பாரில் வைத்து விற்று வந்தனர். இதனை தடுக்க மக்கள் அதிகார தோழர்கள் 13.04.2017 அன்று காலை 11:00 மணியளவில் டாஸ்மாக் பாரின் உள்ளே நுழைந்து அங்கு குடித்து கொண்டிருந்த குடிகாரர்களை விரட்டி விட்டு அங்கு குப்பை தொட்டிக்குள் வைத்து விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்தெரிந்தனர்.
இந்நிகழ்வினை நியூஸ் 7 தொலைகாட்சி நேரடியாக ஒளிபரப்பியது. பிறகு வெளியே வந்து பாட்டில்களை உடைத்து பார் நடத்திவரும் அதிமுக கைக்கூலிகளையும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினோம். இந்நிகழ்வினை மக்கள் அதிகமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். போராட்டத்திற்க்கு வாழ்த்து கூறியதுடன் தங்களது கருத்துக்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். இது போன்ற போராட்டங்களில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்ளும் போது டாஸ்மாக் கடைகள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடியும் என மக்களிடம் அறைகூவல் விடுத்தோம்.
குழுமணி சாலை அரவானூர் பகுதி :
திருச்சி சத்திரம் பேருந்து அண்ணாசிலை அருகே எடுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை குழுமணி சாலையில் உள்ள அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இன்று 14.04.2017 காலை 12:00 மணிக்கு கடையை திறக்க முற்ப்பட்டபோது. அரவானூர் கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் இணைந்து கடையின் முன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் பெண்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் அமையவுள்ள டாஸ்மாக் கடை
கடையில் உள்ளே வைத்திருக்கும் மது பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். டாஸ்மாக் கடையை இப்பகுதியில் வைக்கக்கூடாது என அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் மக்கள் முறையிட்டனர். காவல்துறையினர் காலம் தாழ்த்தி மக்களை கலைத்து டாஸ்மாக் அதிகாரிகளை வைத்து இன்றே கடையை திறந்து விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் நாம் முழக்கமிட்டவாரே கடையை நோக்கி முற்றுகையிட ஆரம்பித்த பின்னர் தான் காவல்துறையினர் மக்களிடம் ½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் மக்கள் இரவு 10:00 மணிக்கு மேல் பேருந்துகள் அப்பகுதியில் இயங்காததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடந்தே வீட்டிற்க்கு செல்கிறார்கள் இந்த அரவானூர் செல்லும் சாலை பகுதியில் இயல்பாகவே வெளியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி குடித்து விட்டு கொலை,கொள்ளைகள் நடந்துள்ளது இன்று வரை எவரையும் காவல்துறையினர் பிடிக்கவில்லை,.
இந்நிலையில் இங்கே டாஸ்மாக் கடையை திறந்தால் என்ன வெல்லாம் நடக்கும் என திருவரங்கம் AC ஸ்ரீதரிடம் மக்கள் முறையிட டாஸ்மாக் அதிகாரிகளை உடனே அனுப்பிவிடுவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி திங்கள் கிழமை காலை இக்கடையில் உள்ள மது பாட்டில்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறேன். இனி இங்கு டாஸ்மாக் கடை இயங்காது நடக்காவிடில் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள் என மக்களிடையே உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கடையை திறந்தால் நாங்களே அடித்து நொருக்குவோம் என மக்கள் காவல்துறையினரிடமும், டாஸ்மாக் அதிகாரிகளிடையே எச்சரித்து விட்டு கலைந்து சென்றனர். திங்கள்கிழமை நம்மையும் கட்டாயம் வருமாறு கோரியுள்ளனர்.
இத்தொடர் போராட்டங்களில் மக்கள் அதிகாரம் முன் நின்று செயல்படுவதால் மக்களை கலைக்க முடியாமலும், டாஸ்மாக் கடைகளை பகுதிக்குள் வைக்க முடியாமலும் திருச்சி காவல்துறையினர் திணறிவருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.
கோவை – சோமனூர் பகுதி :
கோவை-சோமனூரை ஒட்டியுள்ள திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் செவ்வாயன்று (11-04-2017) புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க முயற்சித்ததை எதிர்த்து ஏற்கனவே பல வருடங்களாக இதே பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளாலும் சொந்தவாழ்வில் பல துயரங்களை அனுபவித்த பெண்கள் ஒன்று திரண்டு நின்றனர். அவ்வழியே வந்த அவிநாசி தொகுதி MLA வை நிறுத்தி டாஸ்மாக் கடை வருவதை தடுத்து நிறுத்துமாறும் அதற்கான உத்திரவாதம் தருமாறும் உரிமையோடு பேசிய மக்களை சமாளித்து வெளியேறி சென்ற, சிறிது நேரத்தில் திருப்பூர் ADSPபாண்டியராஜன் அங்கு விரைந்து வந்து அமைதியாக போராடிக்கொண்டிருந்த பெண்களை ஏற்கனவே நின்று கொண்டிருந்த போலீசை ஏவி வெறி கொண்டவனை போல் தானே பெண்களை நேரடியாக தாக்கி விரட்டியுள்ளார்.
அதோடல்லாமல் காக்கி ரௌடிகள், அங்கிருந்த ஆண்களையும் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர் இதில் சாமளாபுரம் பகுதியே கலவரமானது மறுநாள் (12-04-2017) புதன் அதிகாலை 3 மணிக்கு வீடுவீடாக சென்று ஆண்கள் பெண்கள் என 22 பேரை பிடித்து பல்லடம் ரைஸ் மில்லில் அடைத்துள்ளனர். அதில் ஆண்கள் 7 பேரை கோவை மத்திய சிறைசாலையில் பொய் வழக்கு தொடுத்து அடைத்துள்ளனர். எஞ்சிய 20 பேரையும் சட்ட விரோதமாக ரைஸ் மில்லிலேயே அடைத்து வைத்ததோடு குடும்பத்தினர் உட்பட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
இதை கண்டித்து சாமளாபுரம் முழுவதும் கடையடைப்பு செய்து போராடும் நிலையில் யாரையும் வெளியில் ஒன்று சேர விடாமல் அந்த பகுதி முழுவதும் போலிசு குவிக்கப்பட்டது. ஊரின் மையத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் ஒன்று கூடிய மக்களை அங்கிருந்து வெளியே வரவிடாமல் அந்த வீட்டு வாசலின் முன்பு போலிசு வேன்-களை நிறுத்தி அச்சுறுத்தினர். இந்த சூழலில் கோவையை சேர்ந்த திரைப்பட நடிகர் ரஞ்சித் அவ்வீட்டிற்கு வந்து பெண்களுக்கு நடுவே அமர்ந்து சினிமா பாணியிலான பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு வந்த பா.ம.க., தி.மு.க போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களை கூட மக்கள் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அதிகார தோழர்கள் காலையிலேயே அந்த பகுதிக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து மூடுடாஸ்மாக்கை எனும் நமது நீண்ட நெடிய போராட்டம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி எடுத்து கூறும் பொழுது அத்தகைய செய்தி மற்றும் நிகழ்வுகளை அறிந்து இருந்த சிலர் நடந்த சம்பவங்களை கூடுதலாக கூறினர்.
“மூடு டாஸ்மாக்கை” “போதையும் போலிசும் ஒழிக” மற்றும் “போலிசு ராஜ்ஜியம்” போன்ற துண்டறிக்கைகள் நூற்றுகணக்கில் கூடி இருந்தோரிடம் விநியோகிக்கப்பட்டது. டாஸ்மாக்கு எதிரான ம.க.இ.க கோவன் பாடல் சி.டி.-களையும் காண்பித்து பேசி அப்பகுதயில் “குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது” தற்போதைய சுவரொட்டிகளையும் ஒட்டினோம்.
வியாழன் 13-04-2017 அன்று மாலை 5.30 மணிக்கு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக தடையை மீறி சாமளாபுரம் மக்கள் மீதான போலிசு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்திற்கு முன்னதாகவே போலிசுக்கு தகவல் கொடுத்து அனுமதி கேட்கப்பட்டது அவர்கள் வழக்கம் போல தெற்கு வட்டசியர் அலுவலக இடத்தில் நடத்திக்கொள்ள கூறினர்.
நாம் அதை மறுத்து மக்கள் கூடும் இடமாகிய கோவை நகரின் மையமான காந்திபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம் அவர்கள் மறுத்ததால், மறுப்பை மீறி மக்கள் அதிகார சீருடை அணிந்து ப்ளெக்ஸ் பதாகைகள் மற்றும் கொடிகள் பிடித்து மிதமாக விழுந்த மழையிலும், முழக்கங்கள் உயர போலிசு தடுப்புகளையும் மீறி எண்ணற்ற மக்கள் பார்வையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக நகர பேருந்து நிலையர்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய மக்களை தாக்கிய ADSP பாண்டியராஜனை டிஸ்மிஸ் செய்! கைது செய்!!மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு!!! என்ற முழக்கங்கள் முழங்கப்பட்டன்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு தோழர்களை கைது செய்தது. டாஸ்மாக்குக்கு எதிராகவும் ADSP க்கு எதிராகவும் கொடுக்கப்பட்ட முழக்கங்கள் மக்களை திரும்பி பார்க்க செய்தது. குழந்தைகள் பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மண்டபத்தில் தோழர்கள் சுற்றி அமர்ந்து ஆர்பாட்டத்தின் அவசியம் குறித்து கூடுதலான விவரங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். போலிசோ ஆதாரங்களுக்காக ப்ளெக்சையும் முழக்க அட்டையையும் வாங்கி சுமந்து சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வாகியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் ஏறத்தாழ மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அரசாங்க புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. இதிலிருந்து தமிழக விவசாயிகளும் தப்பவில்லை. கடந்த சில மாதங்களில் தமிழக விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கை 200-ஐயும் தாண்டிவிட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயத்தின் மீதான அவர்களின் அலட்சியமுமே விவசாயிகளைத் தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன.
வறட்சி நிவாரணம் வேண்டும், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பலவிதமான போராட்டங்களை டெல்லியில் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள். ஆனால் மத்திய மாநில அரசுகளோ இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் பி.ஜே.பி-யின் தமிழக பிரதிநிதிகளோ போராடும் விவசாயிகளைப் பற்றி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியும் போராட்டத்தை ஆதரிப்பவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்தும் பிரச்சாரம் செய்கின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தோடு கூடவே டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டமும் தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. பல இடங்களில் உழைக்கும் மக்கள் தன்னியல்பாகவே டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க அரசோ போராடும் மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி அரசு சில ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இப்படி பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செய்துவருகின்றன.
தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் சாராயக் கடைகளை(டாஸ்மாக்) மூடவேண்டும் என்ற உழைக்கும் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் ஏப்ரல் 15 2017 அன்று ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
தகவல் : சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள்
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 15.04.2017 அன்று, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுர மாவட்டத் தலைநகரில் பேருந்து நிலையம் வணிகர் வீதி, தாலுகா அலுவலகம் எதிரில் மற்றும் வெம்பாக்கம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு காஞ்சிபுர மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இதனை பல பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்து சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. காஞ்சிபுரம் .
ஆர்.கே. நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு:
“வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால் சூழல் நஞ்சாகிவிட்டது. காலப்போக்கில் இந்த நச்சுச் சூழல் மாறி, சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்.”
“வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.”
“கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகள், தவறு செய்யும் தங்களது வேட்பாளர்கள் மீது தார்மீக செல்வாக்கையும் அதிகாரத்தையும் செலுத்தி, அவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.”
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை.
கண்காணிப்புக் கேமராக்கள், பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் இடமாற்றம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 பார்வையாளர்கள்… என்று உடம்பு முழுவதும் ஆயுதம் தரித்திருந்த தேர்தல் ஆணையம் விட்டிருக்கும் அறிக்கை இது.
ஆர்.கே. நகரை தினகரன் தடுத்தாட்கொண்ட கதையைக் கிண்டலாக எழுதுகின்றன ஊடகங்கள். ஜெயலலிதா போட்டியிட்ட கடந்த இரண்டு தேர்தல்களில் எந்தெந்த திருமண மண்டபங்களில் ஆட்களைத் தங்கவைத்தார்களோ, அதே மண்டபங்கள், அதே பணப்பட்டுவாடா, அதே ஆம்பூர் பிரியாணி என்று எழுதுகின்றன. அதே பிரியாணி மாஸ்டர், அதே தேர்தல் ஆணையம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
“தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் கைப்பாவை” என்று சொல்லித்தான் அன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிறகு பொதுத்தேர்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் ஜெயலலதாவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையம்தான், தற்போது சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முயன்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனை. (உள்படம்) அன்புநாதன். (கோப்புப் படம்)
ஏற்கெனவே நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள், மோடியின் கருப்புபண ஒழிப்பு நாடகத்தை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்டவை. தற்போது நடத்தப்படுபவை தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்த பிரமையைத் தோற்றுவிப்பதற்கானவை. இவை இரண்டுக்கும் பின்னால், அ.தி.மு.க. கோஷ்டிகளுடன் பா.ஜ.க. நடத்திவரும் திரைமறைவு பேரங்களும் இருக்கின்றன. இந்த ரெய்டுகள் எவ்வளவு “பயங்கரமானவை” என்று அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், சேகர் ரெட்டி சிறையிலிருந்து மாப்பிள்ளை போல மினுமினு என்று நீதிமன்றத்துக்கு வந்து போகும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கவும்.
சென்ற பொதுத்தேர்தலின் போது பிடிபட்ட “ஆம்புலன்ஸ் அன்புநாதன்” மீதான வழக்குகள் என்ன ஆயின? ஜெயலலிதாவின் கன்டெயினர் விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன? அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை என்ன? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
எடப்பாடி முதல்வராகிவிட்டார். ராம மோகனராவ் பா.ஜ.க. அரசின் ஆசியுடன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டார். நத்தம் ஓ.பி.எஸ். அணியில் இணைந்து நல்லவராகிவிட்டார். சேகர் ரெட்டியின் சகபாடி பன்னீர்தான் பா.ஜ.க. அமைத்திருக்கும் பாண்டவர் அணியின் தருமர். தினகரன் அணியைச் சேர்ந்த கௌரவர்கள் பன்னீர் பக்கம் தாவிவிட்டால் – இதுவும் ஒரு “கர் வாப்ஸி” தான் – அனைவரும் பாண்டவர்களாக கருதப்படுவார்கள் என்பது புதிய கீதை. இந்த பாரத யுத்தத்தின் கிருஷ்ண பரமாத்மா பாரதிய ஜனதாக் கட்சி. அன்று ஜெயலலிதாவுக்கு சோ என்றால், இன்று பன்னீருக்கு குருமூர்த்தி. மோடி அரசு நடத்தும் இந்த அசிங்கம் பிடித்த நாடகத்தை ஊழல் ஒழிப்பு தர்ம யுத்தமாகச் சிங்காரித்துக் காட்டுவதற்கு முன்னாள் அதிகாரிகள், நடுநிலையாளர்கள் எனப்படுவோர் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.
அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியுடன், பா.ஜ.க.வால் முட்டுக் கொடுக்கப்படும் உத்தமர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)
பணம் கொடுத்தவர்களைத் தண்டித்த பிறகுதான் தேர்தல் நடத்தவேண்டுமாம். இது முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் அறச்சீற்றம். ஆணையத்தின் அறிக்கையோ “தகுதி நீக்கம் செய்ய சட்டமே இல்லை” என்கிறது. சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, அப்புறம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, குமாரசாமிகள், தத்துக்களைத் தாண்டி குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அப்புறமல்லவா தண்டனை! நமக்கு தெரிந்த இந்த உண்மை முன்னாள் ஆணையருக்குத் தெரியாதா? இருந்த போதிலும் புருவத்தை நெரித்துக்கொண்டு, நெற்றி நாமம் நெளிய காமெராவுக்கு முன்னால் பொளந்து கட்டுகிறாரே கோபாலஸ்வாமி, சும்மா சொல்லக்கூடாது, மேன்மக்கள் மேன்மக்கள்தான்.
பணம், பரிசு, சாதி-மதவெறி, கள்ள ஓட்டு உள்ளிட்ட எதுவும் இல்லாத சுதந்திரமான, நியாயமான தேர்தல் இந்த நாட்டில் எந்தக் காலத்தில் நடந்திருக்கிறது? எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது? ஆனால், அப்படி ஒரு பிரமையை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டி.என்.சேஷன் உருவாக்கினார். (சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து பெரியவாள் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை விடுவிப்பதற்காக, சட்டையைக் கழற்றி வீசிவிட்டு களத்தில் நின்றாரே, அந்த நேர்மையாளர் சேஷனேதான்.)
விளம்பரச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, சுவருக்கு வெள்ளையடிப்பது என்பன போன்ற கெடுபிடி காமெடிகள் அப்போதிருந்துதான் அரங்கேறத் தொடங்கின. மக்களின் கருத்துரிமையையும் எளிய வேட்பாளர்களின் பிரச்சார உரிமையையும் பறிப்பதற்குத்தான் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் பயன்பட்டன. அதே நேரத்தில், இந்த 25 ஆண்டுகளில் தான் தேர்தல்களில் பணம், சாதி, மதவெறி என்பது அதுவரை இல்லாத உச்சத்தை எட்டின.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நேர்மையான தேர்தல் பிம்பத்தை உருவாக்க முயன்ற டி.என்.சேஷன்
கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதிகார வர்க்கமும் ஓட்டுக்கட்சிகளும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளைத் தனியார்மயம் எந்த அளவுக்கு உருவாக்கித் தந்ததோ அந்த அளவுக்கு, கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் எந்த அளவுக்கு இல்லாமல் போயினவோ அந்த அளவுக்கு, கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும், முதலாளிகள் கட்சிப்பிரமுகர்களாகவும் உருமாற்றம் பெறுவது எவ்வளவு நிகழ்ந்ததோ அந்த அளவுக்கு, கட்சிப் பதவிகள் தந்தை வழி சொத்துரிமையாக எந்த அளவுக்கு குடும்பத்துக்குள் கைமாற்றி விடப்பட்டதோ அந்த அளவுக்கு, மக்கள் நல அரசு என்ற வாய்ப்பேச்சும் கூட அற்றுப்போய், மக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து எந்த அளவுக்கு அரசு வழுவியதோ அந்த அளவுக்கு – பணம், சாதி, மதம் ஆகியவற்றின் பாத்திரம் அதிகரித்தது.
“கரூரிலும் அரவக்குறிச்சியிலும் தேர்தலை ரத்து செய்தீர்களே, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது பணம் தரப்படவில்லையா? பணம் விளையாடுகிறது என்று கூறி இடைத்தேர்தலை ரத்து செய்யும் ஆணையம், இதே காரணத்துக்காக பொதுத்தேர்தலையும் ரத்து செய்யுமா?” என்பன போன்ற கேள்விகளை கட்சிக்காரர்களே எழுப்புகிறார்கள். ஆனால், இந்த அரசமைப்புக்குள்ளே தீர்வு தேடும் யாரிடமும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.
தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன்
தேர்தல் நடக்கும் என்று “நம்பி” பிரச்சாரத்துக்கு செலவு செய்து விட்டதாம் மார்க்சிஸ்டு கட்சி. தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன். நியாயம்தான். இது ஜனநாயகம்தான் என்று இத்தனை காலம் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே, அதன் பொருட்டு இவர்களும் மக்களுக்கு இழப்பீடு தரவேண்டியிருக்கும்.
வாக்குக்குப் பணம் கொடுத்த காரணத்துக்காக ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாகச் சொல்கிறது ஆணையம். சாதி, மதம் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் ஆணையத்தின் விதிகளின்படி காசு கொடுப்பதற்கு இணையான குற்றங்கள்தான். அதையும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்தால், சமீபத்திய உ.பி. தேர்தல் நடந்திருக்குமா? மோடி பிரதமரானது இருக்கட்டும், குஜராத் முதல்வராக அவர் நீடித்திருப்பாரா?
“பணம், சாதி, மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தலை அனுமதிக்கக் கூடாது” என்று முடிவு செய்தால், தேர்தலை நடத்தாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆணையத்தின் முன் உள்ள ஒரே வழியாக இருக்கும். “புனிதமான” இந்த ஜனநாயக அமைப்பின் தோல்வியை விளக்குவதற்கு இதனினும் வேறு சான்றுகள் தேவையில்லை.
000
ஆர்.கே. நகர் தேர்தலை ஒட்டி நடைபெறும் விவாதங்களில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று பலரும் கூறுகின்ற தீர்வுகள், ஊழல் அதிகார வர்க்கத்தின் (தேர்தல் ஆணையம்) அதிகாரத்தை மேலும் கூட்டுவதற்கும், கிரிமினல் பாரதிய ஜனதாவை நல்லொழுக்கவாதியாகக் காட்டுவதற்குமே தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்கின்றன.
ஊழல் விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பா.ஜ.க.-வின் யோக்கியதை என்ன? “மணல் மாஃபியாவுக்கு தினந்தோறும் இத்தனை கோடி வருகிறது, டாஸ்மாக் வருமானம் இவ்வளவு” என்று தொப்பிக்காரர்களைப் பற்றித் தொலைக்காட்சிகளில் புள்ளி விவரம் கொடுக்கிறார்கள் பா.ஜ.க. நாக்குமாறிகள். இத்தனைக்கும் மூல முதல்வரான ஊழல்ராணியை வழக்கிலிருந்து காப்பாற்றி, தேர்தலில் வெற்றி பெற வைத்துப் பாதுகாத்தது யார்? மன்னார்குடி மாஃபியாவுக்குப் பஞ்சாயத்து செய்து வைத்தவர் வெங்கய்யா நாயுடு என்று ஊடகங்களில் சந்தி சிரிக்கவில்லையா? நல்லொழுக்க சீலர் சோ, மிடாஸ் சாராயக் கம்பெனியில் இயக்குநர் பதவி வகிக்கவில்லையா? சோ மறைவுக்குப் பின் துக்ளக் ஆசிரியராகியிருக்கும் குருமூர்த்தி, ஜெயா மறைவுக்குப் பின் பன்னீர் அண்டு கம்பெனியில் ராஜகுரு பதவி வகிக்கவில்லையா?
கல்லூரியிலும், குவாரியிலும், சுகாதாரத் துறையிலும் விஜயபாஸ்கர் அடித்த கொள்ளை முதல் இதர அமைச்சர்களின் திருட்டுகளையெல்லாம், ஆர்.கே. நகரில் ஓட்டுக்குப் பணம் கொடுத்த பின்னர்தான் இவர்களும், இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையினரும் கண்டுபிடித்தார்களா? “வாக்காளர்களுக்குப் பணம்” என்ற சட்டகத்தின் வழியாக தேர்தல் அரசியலின் ஊழல் தன்மையைப் பற்றிப் பேசுவது மக்களைக் குற்றப்படுத்தும் சூழ்ச்சி.
கார்ப்பரேட் முதலாளிகளிடம் காசு வாங்கும் கட்சிகளில் முதலிடத்தில் இருப்பது பாரதிய ஜனதா. அதானி காசில் பிரதமரானவர் மோடி என்பது நாடறிந்த உண்மை. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்கு, கைப்பிள்ளையைப் போல பிரதமர் மோடியையும் அழைத்துக் கொண்டு போனார் அதானி. கூடவே அதானிக்கு கியாரண்டி கையெழுத்து போடுவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாசார்யாவையும் அழைத்துக் கொண்டு போனார் மோடி. கிட்டத்தட்ட கலெக்டர் ஆபீசில் வேலையை முடித்துக் கொடுக்கும் புரோக்கரைப் போன்ற இந்த நடத்தைக்கு என்ன பொருள்? இது ஊழல் என்ற வரையறையில் வராதா?
கட்சிகள் கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்கினால் அது ஜனநாயகமாம். வாங்கின காசுக்கு அவர்கள் கூவ மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம். ஆனால், தினகரனிடம் 4000 ரூபாய் வாங்கிக்கொண்டு தொப்பிக்கு ஓட்டுப்போட்டால் அது காசுக்கு ஓட்டை விலை பேசும் நடவடிக்கையாம். மக்கள் கட்சியின் கொள்கையை மட்டும் பார்த்து வாக்களிக்க வேண்டுமாம்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.
கட்சிகளுக்கு கொள்கையே இல்லாமல் போய்விட்ட நிலையில் எதைப்பார்த்து வாக்களிப்பது? எல்லாக் கட்சிகளும் “நாட்டை அறுத்து விற்பது” என்ற கொள்கையில் ஒன்றாகிவிட்ட பின்னர், நாலாயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் இடையிலான வேறுபாடுதானே, ஒரேயொரு கொள்கை வேறுபாடாக எஞ்சியிருக்கிறது!
“உடனே ரிசல்ட் கொடுக்கும் கடவுளைக் காட்டு” என்று பக்தியே சுரண்டல் லாட்டரியாக முன்னேறிவிட்ட காலத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, கட்சிகளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து மக்கள் காத்திருப்பார்களா, வந்த விலைக்கு வாக்குகளை விற்பார்களா? இது வாக்குக்கு பணம் வாங்குவதை நியாயப்படுத்துவதற்கான வாதம் அல்ல. எதார்த்த நிலைமை குறித்த சித்திரம்.
தேநீர் செலவு முதல் விமானப் பயணம் வரை அனைத்துக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் கட்சிகள், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாக்காளர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குடும்ப நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தனது மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஸ்திரீ லோலனான புருசனைப் போல!
000
விஜய பாஸ்கரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய காகிதத்தில் எந்தெந்த அமைச்சர் எந்தெந்த வாக்குச்சாவடிக்குப் பொறுப்பு, அங்கே விநியோகிக்கப்பட வேண்டியது எத்தனை ரூபாய் என்ற பட்டியல் உள்ளது. இதே போல வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டவைதான் “சகாரா பிர்லா பேப்பர்ஸ்” எனப்படும் காகிதங்கள். அவற்றில் குஜராத் முதல்வர் (மோடி) முதல் ஷீலா தீட்சித் வரையிலான பல்வேறு கட்சி அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்ட பணம், கொடுக்க வேண்டிய பாக்கி ஆகியவை குறித்த விவரங்கள் உள்ளன.
“இவை குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார். “தின்ன மாட்டேன், தின்னவும் விடமாட்டேன்” என்று பஞ்ச் டயலாக் பேசிய மோடி அதற்குச் சம்மதிக்கவில்லை. அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இவையெல்லாம் உதிரி காகிதங்கள். அதில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துக் கொள்ளலாம்” என்று வாதாடினார். உச்ச நீதிமன்றம் மோடிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இப்போது விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய காகிதங்களைக் காட்டித் தேர்தலை நிறுத்தியிருக்கிறது ஆணையம். சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு. மக்களின் ஒழுக்கமல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!
கருப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு, உள்ளாடை வாங்குவதாக இருந்தாலும் அதை பே டிஎம் வழியாக வாங்கு என்ற கட்டாயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியவர் மோடி. அப்பேர்ப்பட்ட நல்லொழுக்க சீலர், “இனி கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கும் முதலாளிகள், இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு என்று பெயர் குறிப்பிட்டுக் கணக்கு எழுதத் தேவையில்லை” என்று சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார். இனி எந்த சகாரா பேப்பரைக் கைப்பற்றினாலும், அது கறைபடியாத வெள்ளை பேப்பராகவே இருக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கும் நல்லொழுக்கத்துக்கும் ஆபத்தில்லை.
000.
“தேர்தல்தான் மக்களின் ஆதாரமான ஜனநாயக நடவடிக்கை” என்பது ஒரு பொய். அந்தப் பொய்யின் மீதுதான் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முதன்மை முக்கியத்துவம் வழங்குகின்ற பார்வை உருவாக்கப்படுகின்றது. விவசாயிகள் போராட்டமும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டமும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
உண்மையில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் என்பது, மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற ஒரு சூது. “ஹைட்ரோ கார்பனையும் மீத்தேனையும் திணிப்பதற்கும், காவிரி ஆணையத்தை மறுப்பதற்கும், வறட்சி நிவாரணத் தொகையை வெட்டுவதற்கும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் நான்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்கிறார் மோடி. “சாராயக் கடையை உங்கள் தெருவில் திணிப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது” என்கிறார் எடப்பாடி.
இவர்களுக்கும் இவர்களால் தலைமை தாங்கப்படும் அரசமைப்புக்கும் எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், தங்களுடைய போராட்டம்தான் ஜனநாயகத்துக்கான நடவடிக்கையேயன்றி, ஆர்.கே. நகரில் நடப்பது அல்ல என்பதை உணரவேண்டும். அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவது அல்ல, அதிகாரத்தை மக்கள் தம் கையில் ஏந்துவதுதான் ஜனநாயகம் என்பதை எந்த அளவுக்கு மக்கள் உணர்ந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு ஆர்.கே. நகர் விவகாரம் புறக்கணிக்கத்தக்கதாக மாறும். அது எந்த அளவுக்குப் புறக்கணிக்கத்தக்கதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு அதிகாரத்துக்கான மக்களின் போராட்டம் வீரியம் பெறும்.
புறவழிச் சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராமத்தின் நடுவே கொண்டு வந்து திணிக்கிறது தமிழக அரசு . அதனால் தமிழக முழுவதும் மக்கள் கடுமையாக எதிர்த்து போராடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஓலையூர் கிராமத்திலும், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்திலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி O8.04.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஓலையூரிலும், கம்மாபுரத்திலும் திரண்டனர். ஓலையூர் கிராமத்தில் மக்கள் கடையை முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். கடைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதிதனால் வாகன நெறுக்கடியின் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே கடையை அகற்றியாக வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவெடுத்து கடையை முற்றுகையிட்டனர், போலீஸார் தடுத்தனர்.
கடையை அகற்றாவிடில் வீடு திரும்புவது இல்லை என்று கடைக்கு அருகாமையில் அமர்த்துக்கொண்டு முழக்கமிட்டனர்.
அதே போல் 10.04.2O17 அன்று கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தில் மக்கள் அதிகாரத்தோழர் அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களை பார்த்து கடை வேண்டாம் என்று நாங்கள் போராடுகிறோம் நீங்கள் எதற்கு வந்து பேசுரிங்க சம்மந்தப்பட்ட அதிகாரியை வந்து பேச சொல்லுங்க என்று கேட்டுக்கொண்டு இருந்தபோதே போலீஸ்காரர் ஒருவர் அவரை கூட்டத்தின் நடுவே தள்ளிவிட்டார்.
உடனே கீழே விழுந்தவர் நிலைதடுமாறி போலீஸ்காரரின் சட்டையை பிடித்தார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கலைக்கவேண்டும் என்பதற்காக பெரும் திரளாக போரட்டத்தில் கூடியிடியிருந்த மக்களை தடி அடி நடத்தி வெறியாட்டம் போட்டு போலீசர் போராட்டத்தை கலைத்தனர். பின் மக்கள் அதிகார தோழர் அருள் உட்பட 7 பேரை காவல் துறை கைது செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்தனர், மாலை 6.00 மணிக்கு 6 பேரை மட்டும் விடுவித்தது போலீசு, சட்டையை பிடித்தவரை மட்டும் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
விவசாயிகளின் கோரிக்கைகள் – போராட்டங்கள் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன ! உடைப்பதை தவிர வேறு வழியே இல்லை ! என்ற தலைப்பின் கீழ் திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 பொதுக்கூட்டம் நடத்த திடமிட்டு இருந்தோம் ஆனால் திருவாரூர் மாவட்டக் காவல்துறை தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மூன்றாவது முறையாகவும் அனுமதியை மறுத்துள்ளது. கடந்த முறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுக்கூட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடந்த 27.03.2017 அன்று உத்தரவிட்டு இருந்தது.
அதன் பிறகும் கூட எமது பொதுக்கூட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது திருவாரூர் மாவட்ட காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எமது அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார். டாஸ்மாக்கிற்கு எதிரான எமது சுவரொட்டி வாசகம் வன்முறையத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சற்றும் பொருத்தமற்ற, தொடர்பற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் சொத்தை கொள்ளையடிக்கின்ற, லஞ்ச ஊழலில் ஊறித்திளைக்கின்ற, அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்கின்ற மக்கள் விரோத கட்சிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து பாதுகாப்பிற்கு நிற்கும் காவல் துறை மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகவே திட்டமிட்டு செயல்படுகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட போலீசு அனுமதியைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவ்வாறு திட்டமிட்டே சட்டப்பூர்வமான வழி முறைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.
எனவே திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் போலீசின் அனுமதி மறுப்பு காரணமாக நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுக்கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையானது பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறோம்.
தங்கள் : தோழர்.காளியப்பன் மாநிலப்பொருளாளர்,மக்கள் அதிகாரம்
தமிழகவிவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும், மற்றும் தேசியவங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசைகண்டித்து., விருத்தாச்சலம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னணி சார்பாக, பாலக்கரையில் 12.04.2017 அன்று காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் தலைமயேற்று நடத்தினார். இதில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்துவரும் அநீதிகளான ஹைட்ரோ கார்பன் திட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஆகியவற்றை அம்பலப் படித்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தை திரளான மக்கள் கவனித்துச் சென்றனர்.
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.
குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே ! அடிக்கவரும் போலீசுக்கு அஞ்சாதே !!
திருப்பூர் – சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய பெண்கள் – பொதுமக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் !
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ADSP பாண்டியராஜனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வரை போராடுவோம் !
தமிழகத்தை சுடுகாடாக்கி டாஸ்மாக்கால் வருமானத்தை பெருக்கும் தமிழக அரசை தூக்கியெறிவோம் !
புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் பொதுக்குழு 12.04.2017 புதன் அன்று மேடவாக்கம் சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்டது.
இந்த பொதுக் குழுவிற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சிவசங்கரன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளருமான தோழர். சி. வெற்றிவேல் செழியன், சிறப்புத் தலைவர் தோழர். சுப. தங்கராசு, மாநில பொதுச் செயலாளர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இல.பழனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்தப் பொதுக்குழுவில் சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் ஜேப்பியார் குழும கல்வி நிறுவன பணியாளர்கள் எனப் பெருவாரியான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்களுக்கு போனசு வழங்கவேண்டும் என்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிர்வாகம் நிறைவேற்றச் செய்வது பற்றியும், தனியார் கல்வி நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதையும் மற்றும் உரிமை மறுப்புக்கு எதிராகப் போராடிய மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நிர்வாகம் ஆலையில்ஏற்பட்ட தீவிபத்து கொலையை நீதிமன்றத்தின் உதவியுடன் தொழிலாளர்கள் மீது திணித்து தண்டித்துள்ளது பற்றியும், தமிழக விவசாயிகள் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரும் போராட்டங்கள் மீது அரசு, போலீசின் காட்டுமிராண்டி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இது சம்மந்தமாக இந்த பொதுக்குழு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.
தனியார் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு PF ESI சம்பளத்துடன் கூடிய EL, CL, போனசு போன்ற தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப் படவேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மாருதி தொழிலாளர் மீதான நீதிமன்ற தண்டனையை நிபந்தனை இன்றி நீக்கி விடுதலை செய்யப்பட வேண்டும். அதிகாரியின் கொலைக்கான உண்மையைக் கண்டறிய வேண்டும்.
தமிழக மக்கள் வாழ்வாதாரத்துக்கான விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், செல் கேஸ் திட்டங்களை ரத்து செய்யவும், டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் பொதுமக்கள் போராட்டங்கள் மீதான போலீசின் பொய் வழக்குகள், கொலை வெறித் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்.
திருப்பூர் சாமளபுரம் டாஸ்மாக் கடையை அகற்றப் போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய “ஆண்” ஏ.டி.எஸ்.பி. திரு. பாண்டியராஜனைப் பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
என இந்தப் பொதுக்குழு எங்கள் கோரிக்கைகளோடு சமூகத்தின் பிரச்சினைகளையும் விவாதித்து மேற்கண்ட தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளது.
இவண் : சி. வெற்றிவேல் செழியன், பொதுச்செயலாளர். புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.
ஏப்ரல் – 14டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அறிய வேண்டிய சிந்தனை…!
கையில் கிடைத்ததையெல்லாம் காவிமயமாக்கும் வெறிகொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். மைல் கல்லையே மஞ்சள் பூசி ‘மைல் சாமியாக்கும்’ அவாளின் பித்தலாட்டங்கள் முன்னேறி முன்னேறி பல தேசிய இனங்கள், பல பண்பாட்டு மரபுகளைக் கொண்ட நாட்டை இந்து – இந்தி – இந்தியா எனும் ஒற்றை ராஜ்ஜியத்தின் கீழ் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு படையலாக்கப் பார்க்கிறது. காலமெல்லாம் இந்து மதத்தையும் அதன் சாதியக் கொடூரத்தையும் எதிர்த்து அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர்.
இந்து மதம் ஒரு மதமே அல்ல, அது ஒரு அடக்குமுறைக் கருவி, அழிவைத்தரும் தொற்றுநோய் இதை ஒழிக்காமல் இந்தியாவிற்கு விடிவில்லை, ஜனநாயகம் இல்லை எனப் போராடியவர் அவர். அத்தகைய அம்பேத்காரையே காவிமயமாக்கும் முயற்சியில் பார்ப்பன – பா.ஜ.க. பரிவாரங்கள் வேலை செய்து வருகின்றன. மனித விரோத, மக்கள் விரோத இந்துத்துவ பாசிசத்தை எதிர்கொள்ள இந்நாளில் அம்பேத்கரின் சிந்தனைகளை அறிவதும் உயர்த்திப் பிடிப்பதும் தேவையாக இருக்கிறது. இந்து வெறிக்கு தொடர்ந்து பதிலடிக்கொடுத்த அம்பேத்கரின் கருத்துக்களை, அவற்றில் ஒரு சிலவற்றை அறிமுகம் செய்தும்கொள்வது இன்றைய நாளை பயனுள்ளதாக்கும்.
1. இந்துமதத் தத்துவம்
விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம் இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டது தான் “இந்துமதத் தத்துவம்” மக்களை நல்வழிப்படுத்துவதற்கானது எனக் கூறிக்ககொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும்
இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவு படுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல. அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும்.
படியுங்கள்! பரப்புங்கள்!!
வெளியீடு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு
2. நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.
கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் : “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.” …ஏன்? நூலைப் படியுங்கள்.
வெளியீடு : தலித் முரசு
சென்னை – 34.
3. முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்
சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்துமதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்பப் பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்பு செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.
…விடுதலைப் போராட்ட கால அரசியல் சூழலில் முஸ்லிம் லீக் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களையும், சமத்துவம் – ஜனநாயகம் என்ற விழுமியங்களின் அடிப்படையில் அவர் முன்வைத்த விமரிசனங்களையும் தனது இந்து பாசிசச் சட்டகத்திற்குள் இழுத்துத் திணித்துக் கொள்கிறது. முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள். கருத்தியல் தளத்தில் இன்று இந்துமதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை இத்தகைய பல அரை உண்மைகள்தான். பிழைப்புவாத அறிவுத் துறையினர் புகலிடம் தேடுவதும் இத்தகைய அரை உண்மைகளில்தான்.
வெளியீடு : கீழைக்காற்று
சென்னை – 02.
– துரை. சண்முகம்
நூல்கள் கிடைக்குமிடம்: கீழைக்காற்று, பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367