Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 506

கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

0

போராடும் மக்களின் மண்டையை பிளந்த கூடுதல் DSP பாண்டியராஜனை கைது செய்!
மக்களின் பிரச்சையை தீர்க்க வக்கற்ற எடப்பாடி இனியும் நீடிக்கக்கூடாது!

என்பதை முன் வைத்து மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் இன்று 13.4.2017 காலை 10.30 மணியளவில் எழும்பூர்  ரயில் நிலையம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

நூற்றுக்கணக்கான  மக்கள் வந்து செல்லக்கூடிய எழும்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்களை பார்த்து வெற்றிவேல் செழியன் “டாஸ்மாக்கை வேண்டாம் என்று போராடுவது மக்கள் உரிமை, அதற்கு பதில் சொல்லவேண்டியது டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடமை. இங்கு போலீசுக்கு என்ன வேலை?  இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இதை மீறி செய்கிறது என்றால் இந்த போலீசு மக்களுக்கு வேலை செய்யவில்லை. சாராய முதலாளிகளுக்கு மக்கள் பணத்தில் வேலை செய்கிறது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிறுவுகிறது.

எனவே இத்தகைய போலீசு துறையை மக்கள் நம்பக் கூடாது  போலீசைப் பற்றி கவலைப்படாமல்  மக்கள் போராடினால்தான் டாஸ்மாக் கடையை மூட முடியும், இப்படி போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்”  என்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில்   மக்கள்  கலந்துவிடக்கூடாது என்று அச்சப்பட்ட போலீசார் அவர்களை விரட்டியடித்துக் கொண்டே இருந்தனர்.  சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டம்  நீடித்தது.  பின்பு அனைவரையும் கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு – 99623 66321.

இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?

3
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டந்த செவ்வாய்க்கிழமை 11.04.2017 அன்று பிரதமர் மோடி அவர்கள், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஒரு யூத பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்தார். எகிப்திலிருந்த யூத அடிமைகள் தமது விடுதலைக்காக போராடியதை நினைவு கூறும் நாளாம் அது. இந்த வாழ்த்துச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்த நெதன்யாகு, “விடுமுறை நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு நன்றி நண்பா! உங்கள் வருகைக்காக இஸ்ரேல் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்று டிவிட்டரில் நன்றி தெரிவித்தார். இதை மோடி மறுபடியும் டிவிட்டினாராம்.

இருநாடுகளும் தமது தூதரக உறவுகளை முறையாக ஆரம்பித்த 1992-ம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேலுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடிதானாம். ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இஸ்ரேல் கதைகள் கேட்டு வளர்ந்த மோடிக்கும், ஒரு இந்து என்ற முறையில் இந்த பயணம் ஒரு புண்ணிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான். இதில்தான் முசுலீம்களை அடக்கி ஒரு யூத நாடு எப்படி ஜெயித்தது என்று கோல்வால்கர் விடைப்புடன் விளக்கியிருப்பார்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னால் 2014 செப்டம்பரில் ஐ.நா பொது மன்றத்தின் கூட்டத்திற்காக நியூயார்க் நகரம் சென்ற மோடி அங்கு நெதன்யாகுவை சந்தித்திருக்கிறார். இதுவும் கடந்த 20 வருடங்களில் முதன்முறையாக ஒரு இந்திய பிரதமர் இஸ்ரேல் பிரதமரை சந்தித்த நிகழ்வாம். இப்படி முதன் முறையான சந்திப்பு என்ற வரலாற்று சிறப்பிற்கு என்ன முக்கியம்? 90-களுக்கு முந்தைய இந்திய அரசின் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கைகளில் இஸ்ரேலின் அடாவடிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. பிறகு மெல்லமெல்ல உரிய அங்கீகரித்தல் நடந்து இருவரும் நட்பு நாடாகிவிட்டார்கள். வாஜ்பாய் மற்றும் மோடி காலத்தில் இந்த நட்பு பெரு நட்பாகிவிட்டது. ஆன போதிலும் இந்த நட்பு ஏதோ வெறும் சென்டிமெண்ட் பற்றியதல்ல. பொருளாதாரம் பற்றியது.

எந்த தேதியில் திருவாளர் மோடி இஸ்ரேல் செல்கிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லையாயினும், பயணத்திற்கான ஆயத்தங்களை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறதாம். கடந்த மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்ரேல் சென்று மோடி அங்கே வரும் போது என்னென்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவேண்டுமென்று பேசினாராம்.

இந்த ஒப்பந்தங்கள்தான் ரவுடி இஸ்ரேல் நாடு திருவாளர் மோடியை வரவேற்பதின் இரகசியமாகும். பல்வேறு அதிவுயர் இராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதே அந்த ஒப்பந்தங்களின் உட்கிடை. பிறகு சோழியன் குடுமி சும்மா ஆடுமா? மோடிக்குத்தான் அங்கே சிவப்பு கம்பள வரவேற்பு சும்மா கிடைத்து விடுமா?

ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

ஸ்பைக் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இந்திய இராணுவத்திற்கும், பாரக் 8 எனப்படும் வான் தடுப்பு ஏவுகணைகள் இந்தியக் கடற்படைக்கும் வாங்குவது இந்திய இஸ்ரேல் ஒப்பந்தத்தின் மையம். இதன் மதிப்பு என்ன? 1.5 பில்லியன் டாலர் என்கிறது புளூம்பெர்க் பத்திரிகை. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய். இது போக கடந்த வாரம் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான தரையிலிருந்து வான் சென்று தாக்கும் முன்னேறிய தொழில் நுட்பம் சார்ந்த இடைரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுதான் இஸ்ரேல் இதுவரை செய்திருக்கும் ஆயுத தளவாட ஒப்பந்தங்களில் மிகப்பெரியது.

ஏற்கனவே இந்தியா இறக்குமதி செய்யும் இராணுவத் தளவாடங்களில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர் இஸ்ரேல்தான். ஆகையால் மோடி அங்கு செல்லும் போது இந்த ஆண்டிற்குரிய இறக்குமதி ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். இப்படி இந்திய மக்கள் பணம் சற்றேரக்குறைய 25,000 கோடி ரூபாயை இஸ்ரேல் எனும் அமெரிக்கா ஊட்டி வளர்க்கும் பேட்டை ரவுடிக்கு கொட்டிக் கொடுக்கப் போகிறார்கள்.

பாரக் 8 வான் தடுப்பு ஏவுகணை

இந்த ஸ்பைக்கும், பேரக்கும் வருவதால் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பும் கிடையாது. இதற்கு நிகரான ஆயுதங்களை அமெரிக்காவிலோ இல்லை சீனாவிலோ பாகிஸ்தான் வாங்கிவிடும். ஆக இரு ஏழைநாடுகளும் மாற்றி மாற்றி மக்கள் பணத்தை விரயமாக்கி இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.

இப்படி இந்திய மக்களின் பணத்தை பட்டை நாமம் போடுவதன் பொருட்டே நெதன்யாகு திருவாளர் மோடியின் வருகைக்காக ஏங்குகிறார். இருப்பினும் பாஜக கும்பல் இந்த பயணத்தை இந்துத்துவத்தின் கொள்கைப் பூர்வமான கூட்டு என்று தத்துவம் பேசும்.

மேலும் திருவாளர் 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி அவர்கள் அவர் முதலமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டிலேயே இஸ்ரேல் சென்றிருக்கிறார். ஒருவேளை பின்னர் தான் பிரதமராக வரும் போது நிறைய இறக்குமதி செய்வேன் என்று டீல் பேசினாரோ தெரியாது. 2015-ல் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அதன் பிறகு 2016-ம் ஆண்டில் சுஷ்மா ஸ்வராஜும் சென்றிருக்கிறார். அமெரிக்காவுடன் எஜமான் விசுவாசம் காட்டும் இந்தியா அமெரிக்காவின் இயல்பான அடியாள் இஸ்ரேலுடன் கூடிக் குலாவுவது வியப்பிற்குரியதல்ல.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பத்திரிகைகள் மற்றும் பாஜக கொள்கை பேசும் கார்ப்பரேட் ஊடகங்கள் அடிக்கடி இஸ்ரேல் புராணம் பேசும். சொட்டு நீர் பாசனம், ஆர்கானிக் அற்புதம் என்று ஏகப்பட்ட இஸ்ரேல் ‘சாதனைகளை’ ஸ்வயம் சேவக் அம்பிகள் எடுத்து விட்டிருக்கிறார்கள். தற்போது என்ன சொல்வார்கள்?

மகாபாரதத்தில் இந்துக்கள் கண்டுபிடித்த  பிரம்மாஸ்திரம் இதர அஸ்திரங்களுக்கு நிகரானதுதான் இந்த ஸ்பைக்கும், பேரக்கும் என்று கதைவிடலாம். எனினும் இந்த ஆயுதங்கள் சுதேசி இல்லை, விதேசி என்பதை எடுத்துச் சொன்னால் யூதர் வேறா, ஆரியர் வேறா என்று இளிப்பார்கள். இறுதியில் இஸ்ரேல் நித்தம் குண்டு வீசி பாலாஸ்தீன மக்களை அழிப்பதற்கு ஒர பெரும் பாக்கெட் மணியை இந்தியாவில் இருந்து வெட்டியதன் பொருட்டு ஒரு மாலை நேர காக்டெயில் பார்ட்டியை ஏற்பாடு செய்யும்.

அங்கே அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ் பிராசரகர்கள், மோடி கும்பல், ஆர்னாப் போன்ற ஊடக தூண்கள் என பலர் சியர்ஸ் சொல்லுவார்கள்.

மேலும் தகவலுக்கு :

‘My Friend, Awaiting Your Historic Visit’: Israel’s Benjamin Netanyahu To PM Narendra Modi

காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

0
ஹஃபீசா பானு

“அன்றைக்கு மசூதி முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியே பெரும் பரபரப்பில் இருந்ததால் ஜாவேதின் பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். அவன் பக்கத்தில் இருந்த பிள்ளைகளோடு விளையாடி விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தான். அவன் வந்து கொஞ்ச நேரத்தில் படைவீரர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது மகனைத் தூக்கிச் சென்றார்கள். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம்… ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை” என்கிறார் ஹஃபீசா பானு. காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஃபீசா.

அது 1993-ம் ஆண்டின் குளிர்காலம். அப்போது ஹஸ்ரத்பால் மசூதி முற்றுகைக்குள்ளாகியிருந்தது. மொத்த மாநிலத்தின் மீதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரித் தாய்.

கடத்திச் செல்லப்பட்ட தங்கள் பிள்ளையை மீட்க அந்தக் குடும்பம் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஜாவேதை தாங்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்று விட்டானென்று சாதிக்கிறது போலீசு. போலீசால் ‘தீவிரவாதி’ எனச் சொல்லப்படும் ஜாவேதின் வயது 13. ஜாவேதைத் தேட அலைந்து திரிந்த ஹஃபீசாவுக்கு அவரது மகள் ருக்‌ஷானா உதவியாக இருந்திருக்கிறார். சரியாக மூன்று வருடங்கள் கழித்து, 1996-ல் மனவுளைச்சல் தாளாமல் மாரடைப்பில் ருக்‌ஷானா இறந்த போது அவளுக்கு வயது 14.

இன்று ஹஃபீசா பானுவுக்கு வயதாகி விட்டது. தனது வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டோ, அல்லது கூரையில் உள்ள உத்திரங்களை மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டோ, அல்லது வீட்டுக் கதவில் உள்ள விரிசல்களை எண்ணிக் கொண்டோ, கம்பளிப் போர்வையில் அச்சிடப்பட்டிருக்கும் மலர்களை எண்ணிக் கொண்டோ தனது பொழுதைப் போக்குகிறார்.

ஹஃபீசா பானு குடும்பத்தினருடன்

மூன்று சிறிய அறைகளுடன் சமையல் அறையும் கொண்ட வீட்டில் ஹஃபீசா வசிக்கிறார். மண்சுவர்களால் ஆன ஒரு அறையில் உடலுறுப்பை இழந்த உறவினர் ஒருவர் வசிக்கிறார்; விருந்தினர்களை வரவேற்க மற்றொரு அறை; தனது இறந்து போன மகள் மற்றும் காணாமல் போன மகனின் நினைவுகளால் நிரப்பப்பட்ட அந்த மூன்றாவது அறையில் வசிக்கிறார் ஹஃபீசா.

அந்த அறையில் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன் ஒரு முனையில் உடைந்த வானொலிப் பெட்டி ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது; இன்னொரு முனையில் விதவிதமான மாத்திரைகள் நிறைந்த ஜாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படுக்கையில் தான் ஹஃபீசா துயில்கிறார். ஒவ்வொரு இரவும் ஈது பண்டிகைக்காக தனது மகனுக்குப் புத்தாடைகள் எடுப்பது போல் கனவு காண்கிறார் – மறுநாள் காலை அழுது கொண்டே விழித்தெழுகிறார். ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரத் தாய்.

மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரணமாக நிலவுகின்றது. இது குறித்து பல்வேறு தன்னார்வக் குழுக்கள் ஆய்வுகள் நடத்தி உள்ளன. எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் (Doctors without Borders) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று சரிபாதி காஷ்மீரிகள் ஏதோவொரு வகையில் மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

அதே போல், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்ட உலக சுகாதார தினத்தை முன்னிட்டு “மன அழுத்தம் குறித்துப் பேசுவோம்” என்கிற தலைப்பிலான நிகழ்வுக்கு சிரீநகர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், “காஷ்மீரில் சமூகம் சார்ந்த மனநோய் ஆய்வு” என்கிற அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.  இமான்ஸ் (IMHANS – Institute of Mental Health and Neurosciences) மற்றும் சில தன்னார்வக் குழுக்கள் காஷ்மீர் மக்களிடையே செய்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்டதே மேற்படி அறிக்கை.

சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு.  இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக ஏற்படும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொள்வதே காஷ்மீர் மக்களிடையே மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையாக உள்ளதென மேற்படி ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

”1989-ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் ‘மோதலுக்குப் பிந்தைய மன அழுத்தப் பிரச்சினைகளுடன்’ (Post traumatic Stress Disorder) எந்த நோயாளிகள் வருவது அரிது. இப்போது நிலைமை அப்படியல்ல. தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானால் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதே நிலைமை” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த மனநல மருத்துவர் முஷ்டாக் மர்கூப்.

காஷ்மீரில் மனநோய்களுக்கு ஆளானவர்களில் வெறும் 6.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர் என்கிறார் இமான்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்ஷாத் ஹுசைன். என்பதுகளின் இறுதியில் காஷ்மீரில் உள்ள ஒரே அரசு மனநல மருத்துவமனைக்கு சுமார் 1700 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர்; தற்போதோ ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். என்றாலும், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அற்பமாகவே உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற நிலையில் மாத்திரைகள் மட்டும் இவரது மனநோயினை தீர்க்குமா?

மனநோய்களுக்கான காரணங்களை விளக்கும் தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் பெயரளவிற்கு காஷ்மீரில் நிலவும் “அசாதாரண சூழல்”, “பதட்டமான சூழல்” போன்ற சில தேய்வழக்குகளைப் பயன்படுத்தி விட்டு நகர்ந்து விடுகின்றன.

தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் இறுதியில் “மருத்துவமனைகளை அதிகரிப்பது, மருத்துவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிக்கிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் முகாம்களை நடத்துவது” மற்றும் இன்னபிற சொத்தையான தீர்வுகளையே முன்வைக்கின்றன. ஆனால், ஒரு மாநிலம் முழுவதையும் இராணுவத்தால் நிரப்பி அங்கு வாழும் மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ள மாபெரும் குற்றவாளியான இந்திய ஆளும் வர்க்கத்தை இவ்வறிக்கைகள் மென்மையான வார்த்தைகளில் கூட இடித்துரைக்க மறுக்கின்றன.

பொருளாதாரம், மொழி, பண்பாடு, கல்வி உரிமை, உழைக்கும் உரிமை உள்ளிட்ட சகல துறைகளிலும் நாடெங்கும் உள்ள உழைக்கும் மக்களை ஆளும் கும்பல் வஞ்சிக்கிறது. அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் செல்லாக்காசாக்கி மக்களை சதாகாலமும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்காகவே ஆதார் போன்ற திட்டங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் களமிறக்கியுள்ளன. அரசை எதிர்த்துப் போராடுவோரின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் வேறு வேறு பிரிவு மக்கள் என்றாலும் அவர்களின் எதிரி ஒருவன் தான். எனவே எங்கோ வட எல்லையில், கண்காணாத தொலைவில் வாழும் மக்களுக்கு நடந்த அநீதியாக இதைக் கடந்து செல்லாமல் காஷ்மீர்களுடன் கைகோர்க்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உள்ளது.

நன்றி: அல்ஜசிரா

மேலும் படிக்க:

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் – வீடியோ

1

 தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் நடந்தது.

அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்களும் திரளான பொதுமக்களும் மாற்று அமைப்பு நண்பர்களும் கலந்து கொண்டனர்.

சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை.

அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது.

இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

• மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
• மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !

0
வெறி கொண்ட நாயைப் போல் ஒரு பெண்ணை பாய்ந்து அடிக்கும் ஏ.டி.எஸ்.பி
கேலிச்சித்திரம்: முகிலன்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் 2017, மார்ச் 31-க்குள் அகற்றப்பட வேண்டும் எனக் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்குள் மதுபானக் கடைகள் வைக்கக் கூடாது, மதுபானக் கடைகளுக்குச் செல்லும் வழிகாட்டி பதாகைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 5,672 மதுக்கடைகளில் 3,321 மதுக்கடைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசிற்கு ஏற்பட்டது.

கோவை காக்கா பாளையம் – போலீசு குவிப்பு

தமிழகத்தை ஆளும் அதிமுக மாஃபியா கும்பலுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அடியாக இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களே சாராய ஆலைகளை நடத்துபவர்களாகவும், அதிமுகவின் அல்லக்கைகளே பார்களை நடத்துபவர்களாகவும் இருக்கும் போது இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு? அதோடு, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 30,000 கோடி வருமானத்தை ஈட்டித் தரக் கூடியதாக டாஸ்மாக் இருப்பதால், ஏற்கனவே கடனில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இது புதிய தலைவலி.

அரசிற்கு ஏற்படும் நிதி இழப்பை முன் வைத்து சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடினால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும், ஆகையால் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கடந்த மார்ச் 29 அன்று இதனை  விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், வருமானத்திற்காக மக்களின் உயிரிழப்பை அங்கீகரிக்க முடியாது எனக் கூறி, உத்தரவை நிறுத்தி வைக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.

வெறி கொண்ட நாயைப் போல் ஒரு பெண்ணை பாய்ந்து அடிக்கும் ஏ.டி.எஸ்.பி

உச்சநீதிமன்றத்தின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள தமது டாஸ்மாக் கடைகளை, அருகில் உள்ள ஊர்ப்பகுதிகளுக்குள் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. இதற்கு எதிராக தங்களது ஊருக்குள் கொண்டு வரப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சமளாபுரத்தில், நெடுஞ்சாலைப்பகுதியில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதற்கு மாற்று மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டு வருவதற்கான பணிகளைப் பார்த்து வந்தது மாவட்ட நிர்வாகம். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 11.04.2017 அன்று சோமனூர்- காரணம்பேட்டை சாலையில்   போரட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் இருந்து 9 மணிநேரம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை. பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் அங்கு வந்த போலீசு அவர்களை களைந்து போகும் படி மிரட்டியது. அதற்கு மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து போராடிய மக்களின் மீது திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசு வெறிக் கும்பல் கடும் தாக்குதலைத் தொடுத்தது. களத்தில் முன் நின்று உறுதியாகப் போராடிய பெண்களைக் குறி வைத்து கடுமையாகத் தாக்கிய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது கைகளால் ஓங்கி அறைந்தது பார்ப்பவர்களையே பதறச் செய்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவலாக சென்றடைந்தது.

போலீசு நடத்திய தடியடியில் சமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவருக்கு மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. போலீசின் வெறித் தாக்குதலில் சுமார் 10 பெண்கள் உட்பட 30 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.  பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன், போலீசு ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரைக் கண்டித்து மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். 12/04.2017 அன்று அதிகாலை 3.30 மணியளவில் போராட்டக்காரர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வலுக்கட்டாயமாகக் கைது செய்தது போலீசு

போலீசு தாக்குதலில் போராட்டக்காரர் ஒருவரின் தலை உடைக்கப்பட்டு ரத்தம் வழிய அழைத்துச் செல்லப்படும் காட்சி

அதே போல வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு கிராமத்தில் மாற்று டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.  இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகம் 11.04.2017 அன்று காலை அங்கு கடையைத் திறந்தது. இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாட்டில்களை அடித்து நொறுக்கிக் கடையைச் சூறையாடினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் முழுக்க சுமார் 176 நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை மூடியது மாவட்ட நிர்வாகம். அக்கடைகளுக்கு மாற்றுக் கடைகளாக அருகில் உள்ள கிராமப்புறங்களில் கடைகளைத் திறக்க நடைபெற்று வரும் ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடை 11.04.2017 அன்று திறக்கப்பட இருந்தது. இதனைக் கண்டித்து அனுப்பம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கந்தன்பாளையம்,அக்கரைமேடு, ஏரிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஊர்ப் பொதுமக்கள் ஒன்று கூடி நடத்திய விடாப்பிடியான போராட்டத்தின் பயனால், டாஸ்மாக் கடை அப்பகுதியில் இருந்து ஒரே நாளில் அகற்றப்பட்டது.

அரூர் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக்கை  அருகில் உள்ள மொண்டுகுழி கிராமத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அன்று சாலை மறியலில் ஈடுபட்டதோடு, இப்பகுதியில் கடை வைத்தால் குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர். அதோடு ஒரு பெண் அங்கேயே தீக்குளிக்கவும் முயற்சித்தார். பின்னர் அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள், கடையை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கை விட்டுக் கலைந்து சென்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மூலிமங்கலம் அருகே கிலுவக்காடு பகுதிக்கு மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டித்து சுமார் 25 பெண்கள் உட்பட 35 பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சீனிவாச நகரில், மாற்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க வந்த ஊழியர்களை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், டாஸ்மாக் கடை தொடர்ச்சியாக மூடப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே குமாரபுரம் டாஸ்மாக் கடைக்கான கட்டுமான வேலைகள் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று அங்கு கட்டுமானப் பணிகளுக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல், அருப்புக்கோட்டை அருகே சலுக்குசார்ப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை போராட்டம்

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, உளுந்தூர்ப்பேட்டை அருகே கெடிலம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள திங்குவார்பட்டி, வேலூரை அடுத்துள்ள காட்பாடி, நாமக்கல் ராசிபுரம், தஞ்சாவூர், நெல்லை, அம்பாசமுத்திரம், கடலூர், விருத்தாச்சலம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்களே களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் செங்காளிப் பாளையம்  மற்றும் காக்கா பாளையத்திலும் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் காக்கா பாளையம் டாஸ்மாக் கடையைத் திறக்க கடந்த ஏப்ரல் 11 அன்று கருத்தம்பட்டி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்.ஐ.கள் தலைமையில் சுமார் 50 ஆயுதப்படை போலீசு கும்பல் குவிக்கப்பட்டது. அரசின் ஏவல்நாய்களின் பாதுகாப்போடு காக்கா பாளையம் சாராயக்கடை திறக்கப்பட்டது. அதே போல, மக்கள் எதிர்ப்பு அதிகமாக உள்ள செங்காளிப் பாளையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு போலீசு பாதுகாப்போடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

வெறிநாய்கள் போல மக்களின் மீது பாய்ந்து பிடுங்கி, மிரட்டி இன்று திறந்து விடலாம். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மக்களின் வெஞ்சினத்திலிருந்து இந்த சாராயக்கடைக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?

எடப்பாடி – மக்கள் போராட்டம்

கடந்த 2015-ம் ஆண்டு சசிப்பெருமாள் மூட்டிய தீ, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் உணர்வுமிக்கப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பற்றிப் படர்ந்தது. “மூடு டாஸ்மாக்கை” என முழக்கம் வைத்து மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பாசிச ஜெயா அரசிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவன் டாஸ்மாக்கிற்கும், அதன் வருமானத்தில் கொழுக்கும் ஜெயாவிற்கும் எதிராக பாடிய பாடலுக்காக கைது செய்யப்பட்டார். இக்கைதின் மூலம் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் போராட்டமாகப் பற்ற வைத்தது பாசிச ஜெயா அரசு. சாராயத்திற்கு எதிரான மக்களின் உணர்வுநிலை அரசிற்கு எதிராக இருந்ததால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாசிச ஜெயாவே, படிப்படியாக சாராயக் கடைகளை மூடப் போவதாக அறிவித்தார்.

இன்று மீண்டும் தமது வாழ்நிலையை சீர்குலைக்க வரும் அரசிற்கு எதிராக அதே உணர்வு நிலை மக்களிடையே எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இங்கு டாஸ்மாக்கிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளது. இது ஒரு துவக்கம் தான். இனி மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை என எது வந்தாலும் போராடப் பழகிய தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைத் தாங்களே வென்றெடுப்பார்கள்.

வறுமையின் கணிதம் – கேலிச்சித்திரங்கள்

0

உலகளாவிய வறுமை
ஓவியம்: Steve Greenberg, அமெரிக்கா.


விலைவாசியும் வறுமையும்
ஓவியம்: Saad Murtadha, ஈராக்.

வறுமையின் கணிதம்
ஓவியம்: Vladimir Kazanevsky, பிரேசில்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே?
ஓவியம்: Dan Carino, அமெரிக்கா.

பசியாறுதலின் இரண்டு யதார்த்தங்கள்
ஓவியம்: Daniel Clós Cesar பெரு.

இரண்டு வரிசைகள்
ஓவியம்: Daniel Clós Cesar, பிரேசில்.


ஷாப்பிங் வண்டிகளின் விசித்திரங்கள்
ஓவியம்: Steve Greenberg, துருக்கி.

நன்றி: Cartoon Movement.

மம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்

3
மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினி

ம்தா பானர்ஜி வங்கத்தின் ஜெயலலிதா. அவரை எதிர்த்து கார்ட்டூன் வரைந்தவர்கள், பகிர்ந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசு கட்சியை சகல மட்டங்களிலும் உறுதியாக நிறுத்தியிருக்கின்ற மம்தா பானர்ஜி, மோடியின் வருகைக்கு பிறகு பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்து வருகின்றார்.

இருப்பினும் இத்தகைய ‘இரும்பு’ பெண்மணியைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினாலும் பார்ப்பன இந்துமதவெறியர்கள் அஞ்சுவதில்லை. கருணாநிதி, பினரயி விஜயன் தலையை வெட்டி வருவோருக்கு பரிசு என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தற்போது மம்தா பானர்ஜியின் தலைக்கும் பரிசு அறிவித்து விட்டது.

மேற்கு வங்கத்தின் பிர்ப்ஹம் மாவட்டத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையில் முடிந்து போலீசு தடியடி வரை போயிருக்கிறது. அதனால் கொதித்தெழுந்த யோகேஷ் வர்ஷினி எனும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர், முதலமைச்சர் மம்தாவின் தலையை வெட்டி வருவோருக்கு 11 இலட்சம் ரூபாயை பரிசுப் பணமாக அறிவித்திருக்கிறார்.

“சரஸ்வதி பூஜைக்கு ஒருபோதும் அனுமதிக்காத மம்தா பானர்ஜி அதுபோல ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலங்களையும் அனுமதிப்பதில்லை. மீறினால் மக்களுக்கு கடும் தடியடி உண்டு. இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்யும் அவர் எப்போதும் முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று அவர் இந்து முன்னணி இராம கோபாலன் பாணியில் பொங்கியிருக்கிறார். இதை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

இது குறித்து பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விளக்கமளித்த போது மம்தா பானர்ஜி இப்படி சிறுபான்மை மக்களுக்கு ஆதவாக அரசியல் செய்தாலும் இத்தகைய வன்முறை பேச்சுக்களை தான் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போதும் கூட அவர் தனது இளைய பங்காளியை கண்டிக்கவில்லை. காரணம் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் உபி முதலமைச்சராக வந்த பிறகு இப்படி அடாவடியாக பேசுவோரே கட்சியிலும், இந்துக்களிடமும் பெயர் எடுத்து முன்னேற முடியும் என்று பா.ஜ.க பண்டாரங்களிடம் கடும் போட்டி இருக்கிறது. இங்கேயும் எச்ச ராஜா அப்படி ஊளையிடுவது கூட இத்தகைய கனவுகளை எதிர்பார்த்துத்தான்.

பிர்ப்ஹம் மாவட்டத்தில் இந்துமதவெறியர்களின் ஊர்வலத்திற்கு போலீசு அனுமதி கொடுக்கவில்லை. அதை மீறி இவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டு, காவிக் கொடியுடன் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். ஊர்வல ஏற்பாட்டளர்கள் தாங்கள் ஆயுதம் ஏதும் ஊர்வலத்தில் கொண்டு செல்லவில்லை என்று போலீசிடம் விளக்கமளித்தார்களாம். இதிலிருந்தே இவர்களது வன்முறை திட்டம் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் இக்கூட்டம் வாள்களையும் மற்ற ஆயுதங்களையும் பகிரங்கமாக கொண்டு சென்று பீற்றியிருக்கிறது. அப்போது பா.ஜ.கவின் மேற்கு வங்கத் தலைவரே கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி பார்த்தால் போலீசின் ஊர்வல அனுமதி மறுப்பு மிகவும் நியாயமானது.

மம்தா பானர்ஜி போன்ற தீவிரமான மோடி எதிர்ப்பு தலைவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இப்படி ஒரு காக்கி டவுசர் தலைவெட்டி பரிசு அளிக்க முடியுமென்றால் பா.ஜ.க மாநிலங்களில் முசுலீம்களுக்கும், தலித்துக்களுக்கும், மற்ற சிறுபான்மை மக்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள கதி என்ன?

ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் இனி பலனேதுமில்லை.

மேலும் படிக்க,

Watch: BJP youth wing leader offers Rs 11 lakh for Mamata Banerjee’s head

போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

1

PP Logo12-04-2017

பத்திரிகைச் செய்தி

 ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து – வருமானவரி ரெய்டுகள்,
போராடும் விவசாயிகள் மீதும், டாஸ்மாக்கை எதிர்த்தும்,
குடிநீர் கேட்டும் போராடும் பெண்கள் மீதும், போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும், பதவியில் நீடிக்க
எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது
அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. .
இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?

அன்புடையீர் வணக்கம் !

ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க முயன்றதாகவும், அதையும் மீறி நடந்து விட்டதாகவும், அதனாலேயே தேர்தலை  ரத்து  செய்ததாகவும் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அறிவித்து நாடகம் ஆடுகின்றன. இது ஒரு வகையில் அவர்களின் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மத்திய காவல் படைகள், பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் என அதி தீவிர நடவடிக்கை, கண்காணிப்பு என்பது வெறும் பாவ்லாதான். ஓட்டுகட்சி அரசியல் குற்றவாளிகள் தாங்கள் பிடிபட்டு விடுவோம், சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சவில்லை. மாறாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். கண்டெய்னர் பணத்தை காப்பாற்றி கொடுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்  இன்றைக்கு உத்தமர் வேடம் போடுவதை எப்படி நம்புவது?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் என்பது உருட்டி மிரட்டி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன. நேற்று ராம்மோகன் ராவ், கரூர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, இன்று விஜயபாஸ்கர், துணை வேந்தர் கீதாலட்சுமி மீதான ரெய்டுகள் எல்லாம் காதும் காதும் வைத்தாற்போல் எந்த விவரங்களையும் வெளியிடாமல் கமுக்கமாக நடக்கின்றன. இறுதியில் வருமானத்திற்கு வரி கட்டுங்கள் என பேரம் பேசி முடிக்கப்படுகிறது.

விதிமுறைகள் தெரிந்தே மீறப்பட்டுதான், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.  டாஸ்மாக் வேண்டாம் என போராடும் மக்கள் மீது தடியடி, தேசத்துரோக வழக்கு, சிறை என செயல்படும் அரசும், போலீசும், தேர்தலை சீர்குலைக்கும் அரசியல் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் நடப்புகளும், இன்று தமிழகத்தில் நடக்கும் ஏராளமான போராட்டங்களும்  இதையே காட்டுகின்றன. மெரினா முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை நெடுகக் காண்கிறோம். பணப்பட்டுவாடா போன்ற கிரிமினல் நடவடிக்கை, ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்றால் அந்த குற்றவாளிகள் மீது தேசத்துரோக குற்றம்சாட்டி உள்ளே தள்ளுவதற்கு பதில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை என்ற அட்டைக் கத்தியைக்  கொண்டு ரெய்டுகள் நடத்தி சவடால் விடுவது ஏன்?

செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு  தீர்வு காணாமல் சூழ்ச்சி, இழுத்தடிப்பு, அவதூறு ஆகியவற்றால் போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. ஆங்கிலேயர் காலத்து போலீசைப் போல பிரச்சனைகளை பேசுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், போராடுவதற்கும் கூட  உரிமை இல்லை என தடுக்கிறது. மக்களை உரிமைகளற்ற அடிமைகளாக  கருதுகிறது போலீசு. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட திரளும் நான்கைந்து மாணவர்களும் இளைஞர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள்.

தேர்தல்களில் பணப்பட்டுவாடா, ஊழல் முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிப்பது, சட்டத்தை கடுமையாக்குவது போன்ற தீர்வுகளை முன்வைக்கின்றனர். வாக்காளர்கள் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் பணம் வாங்குகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகார வர்க்கம்  ஆண்டு முழுவதும் ஊழல், முறைகேடு. கிரிமினல் குற்றங்களில் மூழ்கி கிடக்கிறது.

சாதி, மதம், பணம், பரிசுப்பொருள், ஊழல் முறைகேடு இல்லாமல் ஒரு நாளும் தேர்தலை நடத்த  முடியாது என்பது மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். தேர்தல்கள் மூலம் ஆளை மாற்றுவதால் எந்த தீர்வும் ஏற்படாது. அவர்களால் இந்த ஊழல் அரசு கட்டமைப்பை வைத்து நியாயமான தேர்தலை ஒருக்காலும்  நடத்த முடியாது.

போராடும் அய்யாக்கண்ணு சொல்வதைப் போல மாத சம்பளத்திலும், லஞ்ச ஊழலிலும் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் புரியாது. ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை டெல்லியில் நடத்தி துன்புறும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்கும் என எப்படி நம்புவது?.

டாஸ்மாக்கை மூடு என போராடும் சாதாரண மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பதவியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பவர்கள் :

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
  2. தோழர்..கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. தோழர்.வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர். மக்கள் அதிகாரம்.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. தோழர். அமிர்தா, மக்கள் அதிகாரம், சென்னை.

தோழமையுடன்
வழக்குரைஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

0

நம்மைப் பொறுத்தவரை ஒரு மாதம் என்பது ஊதியத்திற்கான கால மதிப்பீடு. அல்லது பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக் காலம். அல்லது வருடத்தில் கடந்து செல்லும் மற்றுமொரு மாதம். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கோ அது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு, பட்டினி, போராட்டம், வீடிழப்பு, அகதிகாளய் வெளியேறுதல், ஆதரவற்ற குழந்தைகள், உறுப்புகள் இழந்தோர், வேலையிழந்தோர் என்று வாழ்வின் அத்தனை அழிவுகளையும் அன்றாடம் பார்த்து வரும் மண்ணிது. மார்ச் மாதம் 2017-ல் மட்டும் அங்கு நடந்தவற்றின் காட்சிப்பதிவுகளை இங்கே காணலாம்.

தெற்கு காசாவில் இருக்கும் ராஃபா அகதி முகாமில் 15 வயது சிறுவனான யூசுப் ஷபீன் அபு அத்ராவின் இறுதி ஊர்வலம். சிறுவன் அபு அத்ரா, காசா மற்றும் இஸ்ரேல் எல்லையில், இஸ்ரேலிய இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டான். அன்றாடம் ஒப்பாரியும் முழக்கமும் கேட்கும் மண்ணிது. (மார்ச் 22)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேலின் பிரம்மாண்டமான காங்கிரீட் சுவருக்கு அருகே “தி வாலட் ஆஃப் ஹோட்டல்” எனும் விடுதியின் முகப்பு. இதைத் திறந்து வைத்த பிரிட்டீஷ் கலைஞரான பாங்க்ஸ்கி, “உலகின் மோசமான காட்சியை தரிசிக்க உதவும் விடுதி” என்று கூறினார். இந்த விடுதியில் சாப்பிடச் செல்வோரின் நிலையை பாருங்கள்! (மார்ச் 3)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான நாப்லஸில், இஸ்ரேலிய விமான போக்குவரத்து நிறுவனத்தால் கைவிடப்பட்ட போயிங் விமானம் ஒன்று காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை கடந்து போகிறார் பாலஸ்தீனியர் ஒருவர். குப்பைகளுக்கு இடம் கொடுக்கும் இசுரேல் பாலஸ்தீனர்களின் தாய்நாட்டிற்கு எதையும் கொடுப்பதில்லை.(மார்ச் 7)

தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது. இருக்குமிடத்திலும் வாழ்வில்லை, செல்லுமிடத்திலும் நிம்மதியில்லை! (மார்ச் 7)

ழைக்கும் மகளிர் தினமன்று, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்தும் காசா நகரத்தில் பாலஸ்தீனிய பெண்கள் நடத்திய போராட்டம். இழப்புகளுக்கு அஞ்சாத பாலஸ்தீன பெண்கள்! (மார்ச் 8)

ரு கால் அகற்றப்பட்ட பாலஸ்தீனக் கலைஞரான முகமது டோடா, காசா நகர கடற்கரையில் காயமுற்ற பாலஸ்தீனர்களுக்கா அனுசரிக்கப்படும் மார்ச் 12 நாளை குறிப்பிடும் மணற் சிற்பத்தின் பின் நிற்கிறார். காயமுற்றவர்களுக்கு ஒரு நாளென்றால், ஒரு ஆக்கிரமிப்பில் அவதிப்படும் மண்ணில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்? (மார்ச் 12)

காசா நகரத்தை பிரித்திருக்கும் இஸ்ரேலின் தடுப்புச் சுவர் தற்போது பத்தாவது வருடத்தில் நுழைகிறது. அதை அகற்றுமாறு காசாவில் இருக்கும் ஐநா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். ஆண்டுகள் பத்தானாலும் சோர்வடையாத போராட்டம்! (மார்ச் 13)

மார்ச் 6 அன்று, அங்கே அனைவரும் அறிந்த களச்செயல்பாட்டளரும், அறிஞருமான பாசெல் அல் அராஜ், இஸ்ரேலின் இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் மேற்கு கரை நகரமான பெத்லஹேம் அருகே இருக்கும் அல் வாலஜா எனும் கிராமத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பாலஸ்தீன பெண்கள் தலை வணங்காத வீரத்துடன் கலந்து கொள்கிறார்கள். (மார்ச் 17)

மேற்கு கரை நகரமான ஹெப்ரான் அருகே இருக்கும் க்யுலாக் கிராமத்தின் முதன்மை நுழைவு வாயிலை 17 வருடங்களாக மூடிவிட்டது, இஸ்ரேல் இராணுவம். இதை எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்கள். சொந்த மண்ணில் எத்தனை தடுப்புக்கள், அரண்கள், சுவர்கள், சோதனைச் சாவடிகள்! (மார்ச் 17)

தெற்குகரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேல் இராணுவம் அமைத்திருக்கும் சோதனை வாயிலில் குவிந்திருக்கும் பாலஸ்தீன தொழிலாளிகள். வாயில் திறந்த உடன் இஸ்ரேல் பகுதியில் விரைவாக வேலைக்கு போக அவர்கள் முன்பே வந்து காத்திருக்கிறார்கள். இவர்களைச் சுரண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை போராளிகளாக பார்க்க விரும்புவதில்லை! (19 மார்ச்)

மீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு போய்ச் சேரும் நன்கொடைகளை, அரசுப்பணத்தை தடை செய்திருக்கிறது. அதைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான ராமல்லாவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதிநிதித்துவ அலுவலகம் எதிரில் பாலஸ்தீன மக்களின் ஆர்ப்பாட்டம். எப்படியெல்லாம் பொருளாதார முற்றுகை போடுகிறார்கள்! (20 மார்ச்)

மார்ச் 22 அன்று மேற்கு கரை நகரமான பெத்லகேமில் ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீன மக்கள் மீது ரப்பர் பூசப்பட்ட இரும்பு குண்டுகள், காதைக் கிழிக்கும் ஒலிக் கொண்டுகள் மற்றும் கண்ணீர் குண்டுகளை வீசியது இசுரேலின் இராணுவம். இதில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை தர மறுக்கும் இசுரேலைக் கண்டித்து போராடுகிறார்கள் மக்கள். 2015-ம் ஆண்டிலிருந்து இப்படிக் கொல்லப்படும் மக்களின் உடலை தர மறுத்து சுயேச்சையான சவப்பரிசோதனை செய்வதையும், முறையாக நல்லடக்கம் செய்வதையும் தடுக்கிறது இசுரேல் அரசு. நல்லடக்கம் செய்வது குறித்து கொலைகாரர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ராணுவத்தில் பணியாற்ற மறுத்த மூன்று மாணவர்களை இஸ்ரேல் அரசு கைது செய்ததைக் கண்டித்து அதி தீவிர பழமைவாத யூதர்கள் ஜெருசேலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரை பீற்றி கலைக்க முயல்கிறது போலீசு. இசுரேலின் மக்கள், இராணுவம் இரண்டு பிரிவுமே ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத படி இணைந்திருக்கிறது.

சுரேலின் எல்லையில் இருக்கும் வடக்கு காசாவில் ஒரு இசுரேலிய உளவுத்துறை அதிகாரி, பாலஸ்தீனர்களிடம் தகவல் சொல்லுபவர்களை சேர்க்க முயற்சிக்கிறார். இந்த எல்லையில் பாலஸ்தீனத்தின் பக்கம் இருக்கும் பகுதியை ஹாமாஸ் அதிகாரிகள், மாசென் ஃபுகாகா கொல்லப்பட்ட பிறகு மூடி விட்டனர். ஆட்காட்டிகள் இன்றி ஆக்கிரமிப்பு ஏது? (மார்ச் 26)

மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் குடியமர்த்தப்பட்டிருக்கும் யூதக் குடியிருப்புக்களை கண்டித்து பதாகை பிடிக்கிறார் ஒரு பாலஸ்தீனத்து பெண். இசுரேலின் குடியிருப்பு ஒரு ஆக்கிரமிப்பு – பாலஸ்தீனத்தின் குடியுரிமை ஒரு அடிப்படை உரிமை. (மார்ச் 26)

கொல்லப்பட்ட ஹமாசின் அதிகாரியான மாசென் ஃபுகாகாவின் மகளை தோளில் சுமக்கிறார் காசாவில் செயல்படும் ஹமாசின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார். கொல்லப்பட்ட தலைவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தும் ஹமாஸ் ஆதரவாளர்கள். அப்பா போனால் என்ன என்று மகன் வந்து விட்டான்!

பாலஸ்தீனத்து மண்ணை ஆக்கிரமித்த இசுரேலைக் கண்டித்து போராடிய ஆறு பாலஸ்தீனர்கள் மார்ச் 30, 1976-ம் ஆண்டில் கொல்லப்படுகிறார்கள். அந்த தினத்தை நில தினமென்று வருடந்தோறும் மக்கள் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இங்கே மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் மார்ச் 30 நடந்த ஆர்ப்பாட்டம். நிலத்தை மீட்பதற்காக ஒரு விடாப்பிடியான போராட்டம்!

நன்றி:  Electronicintifada.net

திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

0
தோழர் காளியப்பன்

மாருதி தொழிலாளர்களின் சிறைமீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது மாருதி தொழிலாளர் சங்கம்.  அதனை ஆதரித்து திருச்சியில் பு.ஜ.தொ.மு சார்பில் கடந்த 06.04.2017 அன்று மாலை மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசியதை அடுத்து, சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசினார்.

சங்கம் என்றாலே முதலாளிக்கு பிடிக்காது. முதலாளித்துவம் தோன்றி 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் முன் வைக்கும் எந்த கோரிக்கையையும் முதலாளிகள் நிறைவேற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கத்தை முடக்குவது, தலைவர்களை தண்டிப்பது போன்ற  நடவடிக்கை மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதலாளிகள் இன்று அடியாட்கள் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். மாருதி ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க ஆலை நிர்வாகமே HR அதிகாரிக்கு தீவைத்து விட்டு பழியை தொழிலாளர்கள் மீது போட்டது. 90 தொழிலாளர்களை கைது செய்தனர். 1வாரம் கழித்து மேலும் 50 தொழிலாளரகளை கைது செய்தது. ஆண்டுக்கணக்கில் பிணை வழங்காமல் சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து நான்காண்டுகள் போராடியும் குற்றம் நிருபிக்கப்படாமலேயே   தற்போது 117 பேர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 31 தொழிலாளிக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது நீதிமன்றம். இத்தொழிலாளர்களது குடும்பங்கள் இதுநாள் வரை பட்ட துன்ப துயரங்கள் எத்தனை, எத்தனை குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. எத்தனை பேர் செத்து மடிந்துள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

எந்த முதலாளியாவது சட்டப்படி நடக்கின்றானா ? முறையான வேலை, சம்பளம், விடுப்பு, உரிமை தொழிலாளிகளுக்கு வழங்குகின்றார்களா ? உரிமையை பறித்தெடுத்த முதலாளிகள் யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? இதனை நீதிபதிகள் என்றைக்காவது  கண்டித்தது உண்டா ? நீதித்துறை ஒழுங்கு பற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொடுத்த பேட்டியை படித்து பாருங்கள் நீதிபதிகள் யோக்கிதையை சந்தி சிரிக்க வைத்துள்ளார். இவர்கள் தான் தொழிலாளர்களை குற்றவாளிகள் என சித்தரிக்கின்றனர். மாருதி ஆலைக்குள் உள்ள 13 தொழிற்சங்கத்தை நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஜெயா குற்றவாளி என தீர்ப்பு வந்த போது 3 மாணவிகளை தீவைத்து கொளுத்திய அ.தி.மு.க. ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சங்கரராமனை கோயில் கருவறையிலேயே வைத்து கொலை செய்த சங்கராச்சாரிக்கு 1 மாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டிக்கு 3 மாதத்துக்குள் பிணை வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்து 13 பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் குற்றவாளியான மருத்துவருக்கு ஒரு மாதத்தில் பிணை வழங்கப்பட்டு பின் அவர் அரசு மருத்துவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோக் நிறுவனம் சொன்னதை அங்கீகரித்து நீதி மன்றம் உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாருதி தொழிலாளர்களுக்கோ 4 ஆண்டுகள் கழிந்தும் பிணை வழங்க மறுப்பது என்ன நீதி?  ஆகவே நீதி மன்றம் பெறும் பணக்காரர்களுக்கும் கிரிமினல் கும்பளுக்காக  மட்டும்தான்  செயல்படுகின்றது..

இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு – நீதி மன்றம் – அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம் !  போராடுவோம்! என தனது உரையை முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட முன்னணியாளர்கள் உள்ளிட்டு திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆ.ஓ.பா.சங்கத்தின் தலைவர் தோழர் கோபி அவர்கள் நன்றியுறையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

உலக மக்களின் ஆரோக்கியம் – கேலிச்சித்திரங்கள்

0

மனமெனும் குரங்கு தாவிக் கொண்டே இருப்பது கூட பெரிய பிரச்சினையில்லை. ஒரு இடத்தில் முடங்கி விடும் போது அதுதான் மன அழுத்தம். விளைவு உடல் நலமின்மையோடு செயல்படாதவாறு முடங்கிப் போய்விடுகிறார்கள். தற்போது முப்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகமெங்கும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இதில் 2005-2015 காலகட்டத்தில் மட்டும் 18% பேர் சேர்ந்திருக்கிறார்கள். ஐ.நா சபையின் உலக சுகாதார நிறுவனம் 2017 ஏப்ரல்7-ம் தேதியை உலக ஆரோக்கிய நாளாக கடைபிடித்தது. இந்த நாளை வைத்து உலக அளவில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும், அப்படி பாதிக்கப்பட்டவர்களை கண்டிபிடித்து உதவுதும் நோக்கங்களாம்.

மன அழுத்தத்தை நீக்க வேண்டிய மருத்துவத் துறையே ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் நிலையில் இம்மக்களுக்கு உதவுவது எங்கனம்? இந்தியாவில் ஏழைகள் மட்டுமல்ல முசுலீமாகவோ தலித்தாகவோ அடையும் மன அழுத்தத்திற்கு என்ன தீர்வு? சங்கம் அமைக்க வேண்டும் என்று சிறையில் இருக்கும் மாருதி தொழிலாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வந்த மன அழுத்தத்தின் காரணம் என்ன? வளைகுடா நாடுகளில் அமெரிக்கா போட்ட குண்டுகளிலும், அன்றாடம் இசுரேலின் கண்காணிப்பில் வதைபடும் பாலஸ்தீனத்திற்கும் என்ன மருந்து மாத்திரையை கொடுத்து விட முடியும்? இல்லை அதிக வருமானம் வாங்கிய ஒரு ஐடி ஊழியர், தானியங்கி மாற்றத்தால் வேலை இழக்கும் போது வாழ்வை எப்படி எதிர் கொள்வார்?

உலக அளவிலான கேலிச்சித்தரக் கலைஞர்கள் உலக ஆரோக்கிய நாள் குறித்து வரைந்த சித்திரங்களை இங்கே வெளியிடுகிறோம்.

சுரண்டல்
ஓவியம்: Amr Okasha, எகிப்து.

இனிமேல் மருந்துக் கடையில் உணவுகளைப் போன்று மருந்துகளை அள்ளி வாங்க வேண்டியிருக்கும்
ஓவியம்: Gatis Sluka, லாட்வியா.

காற்று மாசுபாடு
ஓவியம்: Payam Boromand, ஈரான்.

சிந்தனையை விடுதலை செய்!
ஓவியம்: Lorenzo Conti, இத்தாலி.

முதல் உலகிலும், மூன்றாம் உலகிலும் கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு – விசித்தரமான உலகம், வேறுபடும் யதார்த்தம்! 
ஓவியம்: Dan Carino, அமெரிக்கா.

சீனாவில் காற்று மாசுபாடு – சிவப்பு எச்சரிக்கை
ஓவியம்: Alex Falcó Chang, கியூபா.

மதுப்பழக்கம்
ஓவியம்: Enrico Bertuccioli, இத்தாலி

நடப்பதில் முதுமை இதயத்தில் இளமை
ஓவியம்: Payam Boromand, ஈரான்

நன்றி: Cartoon Movement.

நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?

0

“காசுக்கேற்ற தோசை”தான் வர்க்கத்திற்கேற்ற வாழ்க்கைதான். அதே நேரம் தமது வருமானம் குறைவாக இருந்தாலும் சுற்றி நடக்கும் வாழ்க்கை குறித்த ஏக்கத்தால் இளைப்போரும் இங்கே சகஜம். இத்தகைய நுகர்வு பண்பாடு அலை மோதும் சென்னை தி.நகரில் அனைத்துப் பிரிவு மக்களையும் காணலாம். வாங்கும் சம்பளத்தின் அளவுக்கேற்ப செலவழிக்க வரும் மக்கள் ஒரு பக்கம். வண்ண வண்ண பொருட்கள் நிறைந்த உலகை கண்டு மகிழ மட்டும் வரும் கூட்டம் இன்னொரு பக்கம். இவர்களுக்கிடையில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு நாள் சாப்பாட்டுக்காகவாவது இன்றைய வியாபாரம் வழிவகுக்குமா என்ற தவிப்பில் வியாபாரிகள் இருக்கிறார்கள். இப்படி இந்த மக்களில் சிலரை சந்தித்தோம். அவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழ் மக்கள், உள்ளூர், வெளியூரிலிருந்து வந்த மக்கள், சிறு வணிகர்கள், அனைவரும் உண்டு. பொதுவில் உரையாடினாலும் அவர்களிடம் உங்களின் பொழுது போக்கு என்ன என்று கேட்டோம்.

லெட்சுமி, வயது 50, குமரன் சில்க்ஸ் வாசலில் தள்ளு வண்டி கர்ச்சிப் கடை.

ங்க வர்றவங்கள பாக்குறதுதான் பொழுதுபோக்கு. வியாபாரத்துக்காக பொருள் வாங்க பாரிஸ் போவேன் அதுதான் ஷாப்பிங்கு. 40 வருசமா இந்த குமரன் சில்க் வாசல்லதான் கடை வச்சிருக்கோம். ஒரு மாடியா இருந்த கடை இன்னைக்கி நாலு மாடியா ஆச்சு. ஆனா எங்களுக்கு அதே கடை வாசல்ல பூ, பழம், கர்ச்சிப்புன்னு வியாபாரம் தான் மாறுதே தவிற பொழப்பு அப்படியேதான் இருக்கு.”

முன்னெல்லாம் இது போல பெரிய கடைகள்ள நாங்க வச்சுருக்க மாதிரியான சின்ன பொருளெல்லாம் இருக்காது. இப்ப பாருங்க வளச்சுப் பிடிச்சு கட்டடத்தக் கட்டி குண்டுசீல இருந்து கொழுந்து வெத்தல வரைக்கும் எல்லாத்தையும் கடைக்குள்ள வச்சுருக்கான்.  எங்களப் போல சின்ன கடைக்காரங்களுக்கு வியாவாரமெல்லாம் கெட்டுப்போச்சு. இப்ப நாலு மாசமா செல்லாத நோட்டு பிரச்சினையால இருக்குற வியாவாரமும் குறைஞ்சு போச்சு ”

தரணி, வயது 43 சீசன் பழ வியாபாரி.

னக்கு 43 வயசாகுது இந்த தி.நகர விட்டா வேற எடம் தெரியாது. காலையில8 மணிக்கு வந்தா ராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு போவேன். மாசம் ஒருக்க சனக்கூட்டம் கொஞ்சம் கொறையிர நேரமா பாத்து அரமணி நேரத்துல சரவாணாவுல போயி மளிக சாமான் வாங்யாருவேன். அதுவுமே பக்கத்துல யாவாரம் பாக்கறவங்கக் கிட்ட பாத்துக்க சொல்லிட்டு போவேன். இதுல நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு?”

கற்பகம், வயது 50 வீட்டிலேயே தையல் தொழில் செய்பவர்.

னக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டும் இஞ்சினியரிங் படிக்குது. எங்கூட்டுக்காரரு காலையில 8 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி 10 மணிக்கு மேல ஆயிரும் வீடு திரும்ப. வீட்டு வேலைய முடிச்சுட்டு தையல் மிஷின்ல உக்காந்தேன்னா பிள்ளைங்க வந்ததும்தான் எழுந்திருப்பேன். அதுங்களுக்கு பீசு கட்டி துணிமனி வாங்கி கொடுத்து வீட்டு வாடகை கொடுக்கவே நாக்கு தள்ளுது இதுல பொழுதுபோக்க ஏது நேரம். வீட்டு பிரச்சனையை சமாளிக்கறதுதான் பொழுதுபோக்கு வாழ்க்கை எல்லாம். நான் டைலருங்கிறதால என் தொழிலுக்கு தேவையான லைன் கிளாத், லேஸ், பார்டரு. புடவை ஃபால்ஸ் மாதிரி ஐட்டங்களை இங்க சரவணா ஸ்டோருலு வாங்க வருவேன். அப்படி வரும் போது என் பொண்ணையும் கூட்டிட்டு வருவேன். இதுல நமக்கு எங்கம்மா ஷாப்பிங்கு?”

மீனாம்பாள், வயது 60, சவுரி முடி விற்பவர்.

ந்த போத்தீஸ் வாசல்ல நின்னுதான் வித்துட்டு இருக்கேன். வாச்சுமேனுட்ட கேட்டுக்கிட்டு தண்ணி குடிக்க உள்ள போயிருக்கேன். ஆனா  ஒரு தடவ கூட உள்ள போயி எப்புடி இருக்குமுன்னு பாத்தது கூட கெடையாது. இதுல நாம எங்க ஊர் சுத்தி பாக்க போறது. விடியக்காலையில எட்டு மணிக்கு வூட்ட வுட்டு கிளம்புவேன். இங்க வந்துதான் நாஸ்டா துன்னுவேன். ராவுல வீடு திரும்ப 8 மணியாவும். ஒரு நாளைக்கு 200 ரூபா நின்னா ஜாஸ்தி.

முடிதான் அழகுன்னு நீண்ட முடிய விக்கிறீங்களே, நீங்க மட்டும் கிராப் வெச்சிருக்கிங்களே?

அதுவாம்மா, சொந்த வூடு இருந்தா நல்லாருக்கும். 1,500 ரூபா வாடகை குடுக்க முடியல. எதாவது வழி செய்யி ஆண்டவரேன்னு ஒரு தடவ வேளாங்கன்னி போயி முடிய காணிக்கையா கொடுத்துட்டு வந்துருக்கேன். அதான் நான் போன வெளியூரு.”

சண்முகம், சைக்கிளில் டி, காப்பி விற்பவர்.

மக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்குறதுதானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன். தொழில விட்டு வெளிய போறதுன்னா முக்கியமான சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கு தலைய காட்டுறதோட சரி. சினிமா, பீச்சு இப்படி வெளிய போகனுன்னு பிள்ளைங்க கேட்டா வீட்டுல சம்சாரம் கூட்டிட்டு போகும். இதுக்கு மேல உங்க கிட்ட பேசினாக்க என் டீ ஆறிப்போயிடும். வரட்டுமா?”

அர்ஜுன், வயது 30, தனியார் நிறுவன ஊழியர்.

ங்க வாரா வாரம் ஞாயித்துக் கிழம வந்துருவேன். எதுவும் பொருள் வாங்குறேனோ இல்லையோ வர்ரதுல ஒரு சந்தோசம். இங்கேருந்து பாண்டி பஜார் முழுக்க சுத்துவேன். கசகசன்னு சனங்க ஏதோ ஒன்னு வாங்கிட்டு போறதும் வர்ரதும் பாக்க வியப்பா இருக்கும். மதியம் சாப்பாட்ட முடிச்சுட்டு வீட்டுக்கு கெளம்பிருவேன். ஷூன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்க வர ஆரம்பிச்சு மூணு வருசத்துல எழு ஷூ வாங்கிருக்கேன். “

வேலு, வயது 45 ,ஆட்டோ ஓட்டுனர்.

ரெல்லாம் சுத்தி சுத்தி ஆட்டோ ஓட்டுறோம் எங்களுக்கும் கொஞ்சம் அலுப்பாத்தான் இருக்கு. குடும்பத்தோட அப்புடி சந்தோசமா எங்கனாச்சும் போயி வரலான்னு தோனும். ஆனா நேரம் கெடைக்க மாட்டேங்குது. எதுத்தாப்போல இருக்குற நகைக்கடைக்கி லட்ச கணக்குல பணத்த எடுத்துட்டு வந்து பேரமே பேசாம வாங்கிட்டு போறவங்க, ஆட்டோவுல ஏறும் போது பத்துருவா காசுக்கு நியாய தர்மப்படி எல்லாம் பேரம் பேசுவாங்க. டீசல் வெல ஏறிப்போச்சு, டீ வெல ஏறிப்போச்சுன்னு நாம வாதாடனும். இதுக்கு மத்தியில பொழுது போக்கு……. பாக்கலாம்!

கஸ்தூரி, வயது 35, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்.

நாம சும்மா இருந்தாலும் பிள்ளைங்க விடாது அவங்களுக்காக எங்கனா போயி வருவோம். சொல்லிக்கிறா போல பெருசா எந்த எடத்துக்கும் போனதில்ல. எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள எடங்களுக்கு கூட்டிட்டு போயிருக்கோம். நாங்க சென்னைக்கி ஒரு வேலையா பத்துப் பேரு வந்தோம். எங்கயுமே போகல சரி தி.நகராச்சும் போகலாம்ன்னு வந்தோம். ஈரோட்ட விட ஒரு மடங்கு விலை அதிகமா இருக்கு. வெளியூரு வந்தா எதுவும் வாங்கிட்டு போகனுமேன்னு கொஞ்சம் வாங்கினோம்.”

பானு, வயது 27, கணவருடன் வந்திருந்தார், ஸ்ரீபெரும்புதூர்.

பொழுது போக்குன்னு ஒன்னும் கெடையாது. ரெண்டு பேருமே ஒர்க் பன்றோம். ஆபீசுக்கு போட்டுட்டு போறதுக்கு துணிங்க எடுக்க மாசத்துக்கு ஒருக்க இங்க வருவோம். ரொம்ப விலையுள்ளத எடுக்க மாட்டோம். ஆயிரம்,ரெண்டாயிரம் செலவு செய்வோம். ஃபோட்டோல்லாம் எடுக்காதீங்க. நெட்ல போட்டு அசிங்கபடுத்துராங்க, பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நடிகை பாவனாவ என்ன செஞ்சுருக்கானுங்க பாத்தீங்களா? ஆக்சுவலா நீங்க யாரு? எங்கெருந்து வாரீங்க? என்ன பத்திரிக்கை?”

நாங்க வினவுங்குற இணைய பத்திரிக்கையில இருந்து வருகிறோம்..

“வினவா, தெரியுமே எனக்கு. ஒரு புத்தகம் பத்தி இணையத்துல தேடும் போது வினவு சைட்ட பாத்தேன். அதுலேருந்து தொடர்ந்து படிக்கிறேன். பரவால்ல பெண்கள் பிரச்சனையெல்லாம் எடுத்து பேசறீங்க. மீடியான்னதும் பயந்து போயிட்டேன். இப்ப நீங்கன்றதுன்னால எனக்கு பயமில்லை. ஃபோட்டோ எடுக்குறதுன்னா எடுத்துக்குங்க.”

ராதாகிருஷ்ணன், வயது 55, இலங்கையைச் சேர்ந்த கோயில் குருக்கள்.

னகல் பார்க் பக்கத்தில் மெகந்தி வைக்கும் வடமாநில தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களிடம் மெகந்தி வைத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரைப் பார்த்தோம்.

“ பொழுது போக்கு…… வேலையே சரியா இருக்கும். நான் இலங்கையில குருக்களா இருக்கேன். வீட்டு விசேசம், பூசை, கோயில் திருவிழா எல்லா எடத்துலயும் வேலை செய்வேன். வருசத்துக்கு இரண்டு தடவை வெளிநாடுகளுக்கு போவேன்.  இத்தாலி, ஆஸ்த்ரேலியா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின் இன்னும் பல நாடு போயிருக்கேன்.  இங்க  மெகந்தி போட்றத பாத்ததும் எம்பொண்ணு ஆசப்பட்டுச்சு.

பல நாடு போற அளவுக்கு உங்க வேலையில வருமானம் இருக்கா?

இல்லன்னு சொல்ல முடியாது. சீசனுக்கு தகுந்தாப் போல ஓரளவு வருமானம் வரும். வெளிநாடுகள்ள இருக்கும் நம் பிள்ளைகளும் குடுத்து உதவாங்க. ஆண்டவன் புண்ணியத்துல சிரமம் எதுவும் கிடையாது.”

– வினவு செய்தியாளர்கள்

கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ

0

 

மிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.

இது ஒன்று போதாதா? உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.

இது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.

”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.

அடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான்! அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் ! இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.

பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!

BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !

4

தேசத்தின் சொத்தான BEML (Bharath Earth Movers Ltd) பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது, “தேசபக்தர்” மோடி அரசு.

“வெற்றிக்கதைகளைக்” கேட்பது  நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆம், தனிமனிதனோ, நிறுவனமோ சந்தித்த சவால்கள், திருப்பங்கள், தோல்விகள், துரோகங்கள், வெற்றியின் “சூட்சமங்கள்”, தொழில் வெற்றிகள் அடங்கிய “வெற்றிக்கதை”புத்தகங்கள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. அம்பானியின் திருட்டைக்கூட சாமர்த்தியம் என அடித்துப்பேசும் காரியவாதிகளுக்கு அந்த “வெற்றிக்கதைகள்’ அவ்வளவு அலாதியானது. ஆனால் பாருங்கள் தனி மனித/தனியார் நிறுவனங்களின் “வெற்றிக்கதை” தெரியும் அளவுக்கு நமக்கு பொதுத்துறை நிறுவனங்களின் வெற்றிக்கதைகள்  தெரிவதில்லை.

தேசபக்தியின் மொத்த குத்தகைகாரர்களான காவிவெறி மோடி அண்ட் கோ-வுக்கோ, பொதுத்துறையின் வெற்றிக்கதைகளே பிடிப்பதில்லை. எந்த அளவு பிடிக்காதென்றால், மாபெரும் லாபத்தில் இயங்கிவரும் எல்.ஐ.சி-யின் வைரவிழாவுக்கு போன அருண்ஜெட்லி, ஆட்டைப்பார்த்த ஓநாயைபோல வாயில் எச்சில் ஒழுக எல்.ஐ.சி-ஐ  தனியார்மயமாக்குவது குறித்து பேசியதைக்கேட்ட அதிகாரிகள் ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்கள்.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும்

எல்.ஐ.சி-யைப் போலவே மோடி அண்ட் கோவிற்கு பிடிக்காத வேறு சில வெற்றிக்கதைகளும் இருக்கின்றன. அப்படி ஒரு வெற்றிக்கதைதான் BEML-ன் கதை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 150 ரயில் பெட்டிகளை செய்துதரும் வேலைக்கான ஒப்பந்தத்திற்கு டெண்டர் கோரியது. அத்துறையின் முன்னணியில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுடன் கலந்து கொண்டு BEML டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 1,421 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான BEML பெற்றுள்ளது. டெண்டரில் கலந்துகொண்ட மற்ற நிறுவனங்கள் ஒரு பெட்டிக்கு 34 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில், BEML நிறுவனம் 9 கோடி ரூபாயில் பெட்டியை தயாரித்து தருகிறது.

விலை குறைவு என்பதற்காக தரத்தில் எந்த குறையும் கிடையாது. BEML, 2016-ம் ஆண்டு பேங்க்காகில் நடைபெற்ற சர்வதேச மெட்ரோ ரயில் உற்பத்தியாளர்களுக்கான போட்டியில் (ICQCC-2016) மெட்ரோ ரயில்பெட்டிகளின் தரத்திற்காக தங்கப்பதக்கத்தை தட்டிவந்துள்ளது.

ஆனால் “மேக் இன் இந்தியா” புகழ் மோடியின் அமைச்சரவையோ, பாதுகாப்புத்துறையில் குறைந்தபட்ச தற்சார்புடன் விளங்க காரணமான BEML நிறுவனத்தில் அரசு கொண்டிருக்கும் 54% பங்குகளில் 28% -ஐ விற்று 26% என்ற அளவுக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இது  நிறுவனத்தை தனியார்மய புதைகுழியில் தள்ளி தொழிலாளர்களின் வாழ்வையும் மக்களின் சொத்தையும் நாசமாக்கும் நடவடிக்கையாகும். நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை திரும்ப எடுப்பதன் மூலம் ரூ.56,000 கோடி திரட்ட மோடியின் ஏலக்கம்பெனி முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது.

BEML நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக்கொண்டு 1965-ல் உருவாக்கப்பட பொதுத்துறை நிறுவனமாகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய கனரக இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் அந்த துறையில் நாட்டின் 70% சந்தையை கையில் வைத்திருக்கக்கூடிய BEML-க்கு கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல், மைசூர், பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், சுரங்கங்களுக்கு தேவையான வெட்டியெடுக்கும்  கனிமங்களை இடம் மாற்றும் கனரக வாகனங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரொ ரயில் பெட்டிகள் இவைகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு என மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் எல்லா யூனிட்டுகளையும் சேர்த்து 2,000 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,500 ஒப்பந்தத்தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

1965-ல் தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு ரூ.5 கோடி வர்த்தகத்தில் துவங்கி இன்று  ரூ.3,500 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். உலகம் முழுதும் 56 நாடுகளில் BEML வர்த்தகம் செய்கிறது. சீனா, மலேசியாவைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியாவில் நேரடி நிறுவனத்தை திறந்து தனக்கென வெற்றிகரமான, பரந்த வியாபாரத்தைக் கொண்டிருக்கிறது.

BEML

முற்றிலும் அரசு நிறுவனமாக இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த BEML  நரசிம்மராவ் பிரதமராக இருந்த பொழுது (புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்ப காலகட்டம் ) 1992-ல் 25% பங்குகளை விற்றதன்மூலம் அரசு, பெரும்பான்மை பங்குகளைக்கொண்ட வெறும் “பங்குதாரர்” ஆனது.

திட்டக்கமிசன் கலைக்கப்பட்டு அதற்கு பதில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு பி.இ.எம்.எல், ஹெச்.ஏ.எல், பெல், ஓ.என்.ஜி.சி கோல் இந்தியா, எல்.ஐ.சி உள்ளிட்ட 44 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட செப்டம்பர் 2016-ல் அரசுக்கு பரிந்துரை செய்தது.

அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே சேலம் உருக்காலையும் தனியார் மயமாக்கிவிட துடிக்கிறது அரசு. ஏனைய நிறுவனங்களைக் கூட திட்டமிட்டே நட்டத்தில் தள்ளி அதனைக் காரணம் காட்டி முதலைக்கண்ணீர் வடித்து, ஊடக வித்வான்களை வைத்து வாய்கிழிய நியாயம் பேசி, லாபம் வந்தால் அதை ஏன் விற்கப் போகிறோம் ? என்கிற ரீதியில் கதையளந்தார்கள்.

ஆனால், லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும், காலத்திற்கு ஏற்ப பழைய உற்பத்தி மட்டுமல்லாது மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்ய தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கும் BEML விஷயத்தில் அப்படிக்கூட அரசால் ஒரு பொய்க்காரணத்தை கூறமுடிவில்லை. அதாவது, மோடி தலைமையிலான பாசிசக் கும்பலுக்கு ஒரு ‘ஜனநாயக’ முகமூடி கூட தேவைப்படவில்லை. சர்வாதிகாரி குடிமக்களுக்கு ஏன்? எதற்கு? என காராணமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?

BEML கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தியில் மட்டும் வரி கட்டியது போக நிகர லாபமாக ரூ. 53 கோடி ஈட்டியுள்ளது. மெட்ரோ ரயில் கோச்சுகள் உற்பத்தியில் அதன் முன்னேறிய தொழில் நுட்பத்தால் ஏனைய போட்டி நிறுவனங்களைவிட குறைந்த விலையில் உற்பத்தியை செய்து தருவதால் டெல்லி மெட்ரோ , பெங்களூரு மெட்ரோ, ஜெய்ப்பூர் மெட்ரோ என அதிகமான ஆர்டர்களை பெறுகிறது.

மோடி அரசு கொண்டுள்ள திட்டத்தின்படியே ஸ்மார்ட் நகரங்களை கொண்ட உள்கட்டமைப்புகள் பெருக்கப்பட்டு உருவாகப்போகும் “புதிய இந்தியாவில்” மெட்ரோ ரயில் உற்பத்திக்கு மிகச்சிறந்ததொரு எதிர்காலமும், வாய்ப்பும் இருக்கிறது. பிராசிஞ்சித் போஸ் என்கிற பொருளியலாளர், “ஒருமுறை வருகின்ற வருமானத்திற்காக எல்லா வகையிலும் லாபம் தரும் பிஇஎம்எல் பங்குகளை விற்பது பொருளாதார ரீதியில் அர்த்தமற்ற செயல்” என்கிறார்.

இந்த நிலையில்தான் இவையாவும் நன்றாக தெரிந்திருந்தும் தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றைக்கிழிக்கும்  அயோக்கியத்தனமான வேலையை செய்கிறது மோடி அரசு. மக்களின் வரிப்பணத்தில், தொழிலாளார்களின் உழைப்பில் உருவான இக்குழந்தையை கடத்திக்கொண்டு போய் விற்று, பன்னாட்டுக் கம்பெனிக்காக பிச்சையெடுக்க வைக்கப் பார்க்கிறார் மோடி.

BEML தொழிலாளர்கள் தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் தொழிற்சங்கத் தலைமையோ சீனிவாச ரெட்டி என்கிற பாஜக ஆதரவாளரிடமிருக்கிறது. பெயரளாவிளான அடையாளப் போராட்டத்தை அறிவிப்பது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து கோரிக்கை வைப்பது என களவாணியிடமே தீர்ப்பு வேண்டி நிற்பது என்பதையெல்லாம் தான் செய்கின்ற “போராட்டமாக” தொழிலாளார்களை ஏய்க்கிறார்.

ஹெச்.ஏ.எல் (ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட்) தொழிற்சங்கமும், BEML தொழிற்சங்கமும் “BEML-ஐ காப்போம்; தேசத்தைக் காப்போம்” (Save BEML; Save Nation), “தேசத்தின் சொத்தை விற்காதே” என்கிற முழக்கங்களோடு ஒரு கூட்டு போரட்டக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில் ஏதாவது வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? அரசு, நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கிடும் என்பதெல்லாம் புரியாத புதிரல்ல. “எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஏதோ ஒன்றுக்கு அடிமாட்டு விலைக்கு தொழிற்சாலையும், நிறுவனத்தின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களும் விற்கப்பட இருப்பதை எங்களால்  புரிந்துகொள்ள முடிகிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள் தொழிலாளார்கள்.

ஆனால், இம்முறை தொழிலாளர்களின் கோரிக்கை வழக்கமான வேலை உத்திரவாதத்தை வழங்கு என்பது மட்டுமல்ல, “பொதுத்துறை நிறுவனத்தை காப்போம்; தேசத்தைக் காப்போம்” என்பதாக இருக்கிறது, மோடி கும்பல் தேசத்தை விற்பதை தொழிலாளார்கள் கண்டுணர்ந்து அதை இன்று பிரச்சாரமும் செயயத்தொடங்கி இருக்கிறார்கள், நாடு முழுதும் கார்ப்பரேட் காலை நக்கும் மோடி தலைமையிலான தேசதுரோக கும்பலின் தொடர் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துவது என்ன?

அன்று பாளையங்களையும், நகரங்களையும், துறைமுகங்களையும் கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியதைப்போல இன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெருமளவு நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன; மாருதி தொழிற்சாலையைப் போல் “சட்டத்தின் ஆட்சியே” நிலவாத தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன; நாட்டுக்குள்ளேயே நிலவும் அந்நிய நிலப்பரப்பு, தாதுக்களுக்காக தண்டகாரண்யக் காடு, நியாம்கிரி-கஞ்சமலையும், மீத்தேனுக்காக காவிரி டெல்டாவையும் பெட்ரோலியத்துக்கு கோதாவரிப் படுகையையும் கைப்பற்றி இயற்கையும் மனித வாழ்வையும் அழிக்கின்றன; இவை தவிர, சாலைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்ற எல்லா வகையான உற்பத்திக்கேந்திரங்கள் கல்வி, மருத்துவம் என இன்றியமையாத எல்லாத் துறைகளும் பன்னாட்டுக் கபெனிகளின் ஆக்டோபஸ் கரங்களால் சுற்றி வளைக்கப்படும் போது, இவையாவும் தனித்தனி பிரச்சனைகளாக இனியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து போராடுவதால் மட்டுமே இந்த தேசவிரோத கும்பலை வீழ்த்த முடியும்!

தொகுப்பு:
பு.ஜ. செய்தியாளர், KGF.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்

0

DIGITAL INDIA வின் தலைநகரில் விவசாயிகளின் நிர்வாணப்போராட்டம் !

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588

இணையுங்கள்:

***

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் பு.ஜ.தொ.மு-வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை, இதுவரை பிரதமர் மோடியோ, அவரது அமைச்சர்களோ, சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்கவில்லை. அதே நேரம், தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, நாடெங்கும் விவசாயிகளுக்காக மாணவர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் போராடி வருகின்றனர்.

அதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில்,  07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று காவல் துறையிடம் அனுமதி கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், தோழர்கள் கையில் தட்டி, பேட்ஜ்யுடன் பேருந்து நிலையம் , பேருந்து நிறுத்தம்,மார்க்கெட் போன்ற 6 இடங்களில் முழக்கமிட்டு,போராட்டம் நடத்தினோம். விவசாயகளின் போராட்டத்தை திரும்பி பார்க்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் மோடியை அம்பலப்படுத்தி, தோழர்கள் பேசினார்கள். இந்த போராட்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து ஆதரித்தனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்.