Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 507

உலக தண்ணீர் தினத்தில் காலிக் குடங்களின் இந்தியா – படங்கள்

0

லக தண்ணீர் தினமென்று மார்ச் 21-ம் நாளை ஐ.நா சபை அனுசரித்திருக்கிறது. உலகெங்கும் தண்ணீரை தனியாருக்கு அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்ட நிலையில் இந்த தினம் எதைச் சாதிக்கப் போகிறது? தண்ணீரை சுத்தமாக பாதுகாப்பாக குடியுங்கள் என்பதில் துவங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எவையும் தனியார் மயத்தை கண்டு கொள்வதில்லை. இன்று சுத்தமான பாதுகாப்பான குடிநீர் என்பது உலகெங்கும் வசதி படைத்த மக்களுக்கு மட்டுமே என்பதை நிலைநாட்டியிருக்கிறது உலகமயம்.

முதலாளித்துவம் எனும் நச்சை அகற்றாமல் நல்ல நீர் எப்படிக் குடிக்கும்? புவி வெப்பமாதல் அதிகரித்து வரும் நிலையில் வறட்சியும், வெயிலும் ஆண்டுக்காண்டு  அதிகரிக்கின்றன. புவி வெப்பமாதலுக்கு முதன்மைக் குற்றவாளிகளாக மேற்கத்திய நாடுகள்தான் இத்தகைய ‘தண்ணீர் உபதேசங்களையும்’ நடத்துகின்றன. உலக தண்ணீர் தினமென்று இந்தியாவெங்கும் காலி குடங்களுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் காட்சியை ஜம்மு, அஸ்ஸாம், ஹைதராபாத் என்று அனைத்து மாநிலங்களிலும் காணலாம்! சில படங்கள் இங்கே இடம்பெறுகின்றன. தண்ணீர் தாகத்திற்காக இலாபத்திற்கா என்ற பிரச்சினை தீர்க்கப்படாத வரை நமது குடங்களில் நீர் நிரம்பிவிடாது.

மார்ச் 21 2017 உலக தண்ணீர் தினத்தில் போபால் மக்கள் எப்போது தண்ணீர் வருமென்று காலி பாத்திரங்களுடன் காத்திருக்கிறார்கள். வாழ்வில் பெரும் பகுதி காத்திருத்தல் என்பது நமக்கு தண்ணீருக்காகத்தான்!

லையில்தண்ணீர் சுமையுடன் செல்லும் பெண்கள் – ஜம்முவில். குடிநீர் உயிர்வாழ அத்தியாவசியமென்றால் நீர் எடுக்க அலைவது அன்றாட கடமையாகிவிட்டது.

ஸ்ஸாம் தலைநகரம் கௌகாத்தியில் பொதுக்குழாயில் வரப்போகும் நீருக்காக காத்திருக்கும் சிறுமி. அருகில் மக்கள் வரிசைப் பதிவுக்காக விட்டுச் சென்றுள்ள காலிக் கேன்கள். விளையாடப் போகாமல் இப்படி குடிநீருக்காக காத்திருப்பது குழந்தை தொழிலாளர் உழைப்பென்று என்ஜிவோக்கள் கருதவில்லையா?

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் மரபார்ந்த ஆடை அலங்காரங்களோடு இரண்டு அடுக்கு குடங்களுடன் செல்லும் பெண். ஆடை அணிகலன்களோடு குடங்களும் சேர்ந்து விட்டன!

ஹைதராபாத்: பொதுக்குழுயில் எப்போது நீர் வருமென்று காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள். போதுமான அளவு நீர் கிடைக்காத போது இங்கே சண்டையும் சகஜம். குழாயடிச் சண்டை என்ற வழக்கே குடிநீர் கிடைப்பது அரிது என்ற அவலநிலையை சுட்டாமல் பெண்கள் என்றால் சண்டை என்று மடை மாற்றுகிறது

குஜராத்தின் அகமதாபாத்தில் கைவண்டியில் குடிநீர் எடுத்துச் செல்லும் பெண். மோடியின் மண்ணில் குடிநீர் கிடைப்பது அவ்வளவு கடினம்.

கௌகாத்தி: மலைமேல் சென்று நீர் எடுத்து வரும் ஒரு பெண். குடிநீருக்கா அலையும் உழைப்பு ஒரு உடற்பயிற்சியல்ல அது ஒரு உடல்வதை!

ஹைதராபாத் புறநகர்ப்பகுதியில் பொதுக்குழாய் ஒன்றில் குளிக்கும் தொழிலாளி. இப்படி எப்போதாவதுதான் குற்றாலக் குளியல் வாய்ப்பு கிடைக்கும்! இதை வைத்து நீரை விரயமாக்காதீர்கள் என்று நீச்சல் குளங்களில் நித்தம் நீர் மாற்றும் கனவான்கள் மன்றாடுவார்கள்!

லக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “ பாதுகாப்பான குடிநீரை அருந்துங்கள்” எனும் விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் தேசிய விருது வென்ற நடிகை ரிதுபர்ணா சென்குப்தா. பாதுகாப்பான குடிநீருக்கு இப்படி பளிச்சென்று விளம்பரம் கொடுக்கும் அம்மணிகள்தான் தண்ணீரை பறித்து வைத்திருக்கும் பெப்சி கோக்கிற்கும் ஆஸ்தான தூதர்களாக இருக்கிறார்கள்.

லைக்கவசத்தோடு பூஜை செய்யப்பட்ட பூ இதர பொருட்களை எடுத்துச் சென்று பிரம்ம்புத்திரா நதியில் கொட்டச் செல்கிறார் ஒருவர் – இடம் கௌகாத்தி. இந்திய நதிகளை சாக்கடையாக்குவதில் பார்ப்பனியத்திற்கு போட்டி யாருமில்லை.

கௌகாத்தி: பிரம்மபுத்ரா நதியில் பக்தர்கள் வீசிய காசுகளை தேடி எடுக்கும் சிறுவன். நதியில் காசுகளை வீசும் பக்தர்கள் குடிநீருக்கும் காசுகளை அல்ல கணிசமான பணத்தையே ஒதுக்க வேண்டும்.

நன்றி: Out Look

தருண் விஜயைக் கழுவி ஊற்றும் தமிழ் பேஸ்புக்

6

நாங்கள் என்றால் சிவப்பானவர்கள் இந்தியர்கள், அவர்கள் என்றால் கருப்பர்கள் தென்னிந்தியர்கள் என்று நனவிலி மனதிலிருந்து உண்மை பேசியிருக்கிறார் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்! என்ன செய்தாலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் ஆதிக்க உணர்வை எங்கேயும் மறைக்க முடியாது என்பதற்கு தருண் விஜயின் நழுவாத நாக்கு ஒரு சான்று! ஃபேஸ்புக்கில் தருண் விஜயின் திமிருக்கு விதவிதமான எதிர்வினைகள் வந்து கொண்டே இருக்கின்றன! அவற்றில் எம் கண்ணில் பட்டவைகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தருண் விஜய் குரலில் பேசும் திமுக எம்.பி!

தருண் விஜய் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் எனவும் கறுப்பர்கள் மட்டமானவர்கள் என்ற அர்த்தத்திலும் கூறியிருக்கிறார். தருண் விஜய்க்கு பதில் சொன்ன இளங்கோவனும் தனது ஒரிஜினல் நிறமான கருப்பை மட்டமாக நினக்கிறார். “தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள் அல்ல கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெள்ளையானவர்களே” என்பது கருப்பை மட்டமாக, தாழ்வாக நினைக்கும் மனதில் வெளிப்பாடுதான்.

– Arul Ezhilan

“நாங்கள் கறுப்பர்களுடன் வாழ்கிறோம் என்கிறார் தருண் விஜய், நான் கேட்கிறேன் நாங்கள் என்றால் யார்? ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. ஆகியோர் மட்டும்தான் இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறீர்களா?” – ப.சிதம்பரம்

– Tamilnadu Congress Committee

வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் வரலாற்று ரீதியாக இருந்த முரணை தருண் விஜய் இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாவம்..! இங்குள்ள நம்மூர் பாஜகவினருக்கு அடிமை விசுவாசம். அதனால் தான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புனிதமாக கருதுகிறான்.

தென்னிந்திய கறுப்பர்கள் என தருண் விஜய் யாரை சொல்லுகிறார் ? நமது தமிழிசை உட்பட உள்ள பாஜகவினரையும் சேர்த்து தான் சொல்லுகிறார். நாங்கள் ஒரு தலித்தான கங்கை அமரனை தேர்தலில் விட்டிருக்கோம் என வானதி புளகாகிதம் அடையும் போது கங்கை அமரன் மீது பெரியாரும் மார்க்ஸும் என்ன மாதிரியான பார்வையை வீசியிருப்பார்கள் ?

ஆர்.கே நகரில் சுய மரியாதையை கங்கை அமரன் அடகு வைத்தார் எனில் தற்போது சுயமரியாதையை தமிழிசை, பொன்னார் போன்றோர் அடகு வைக்கின்றனர். தமிழிசையும், பொன்னாரும் குமரி மாவட்ட பின்னணியில் வந்தவர்கள் ஆனதால் பெரியாரை தெரியாமல் கூட போகலாம். ஆனால், அய்யா வைகுண்டரும், அய்யங்காளியும், சட்டம்பி சாமிகளும் கற்று தந்த சுயமரியாதையை இவ்வளவு வேகமாக பணயம் வைக்க வேண்டிய தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்.

பல நேரங்களில் பிராமணீய தலைமை இன்னும் தெளிவாக சொன்னால் ஆர் எஸ் எஸ் தலைமை மத்திய ஆசியாவிலிருந்து வந்த வந்தேறிக் கூட்டம் தான் என்பதை தங்களையும் அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக வட இந்திய தலித்கள் மற்றும் தென்னிந்திய மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். கறுப்பான தோற்றமிக்கவனாக சித்தரிக்கப்பட்ட மன்னன் மாவேலியை வஞ்சனையாக கொன்ற ஆரியன் வாமனனின் வழியாக இந்த முரண்பாட்டின் வரலாறு தொடருகிறது.

இன்று தருண் விஜய் மூலம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. நான் தருண் விஜயை மத்திய ஆசியாவிற்கு திரும்பி செல்லுங்கள் கூற மாட்டேன். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் மக்களின் வரிசாக வந்தவர்கள் நாங்கள். எங்களை அடிமைப்படுத்த வேண்டாம். –

– Govindaraj Ramaswamy

செவப்பு…தருண் விஜய், பி ஜே பி, M P யின்….திராவிட கருப்பு விமர்சனத்துக்கு….. தமிழிசையும், பொன்னாரும் சொல்லும் பதில் என்ன….? நாங்களும் சிகப்புத்தோலுதான் என்று சொல்லப்போகிறீர்களா…..? நீங்கள் பி.ஜே.பியில்…பட்டம்.. பதவியில்…. இருந்தாலும்…அவர்களுக்கு நீங்கள்…..சூத்திர திராவிடர்களே….

புரிஞ்சுதா…..

– Msrm Murugan

தருண் விஜய் தனது ஆர்எஸ்எஸ் வளர்ப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.இப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இதை மறைத்துக்கொண்டு நடிப்பதற்கும்.தமிழர் ,திருவள்ளுவர் போன்ற நாடகங்களை நாமும் பார்த்தோம். எல்லாம் பயிற்சிதான்.

மக்களை நிறம்,சாதி,மதம்,பாலின பாகுபாட்டுடன் நடத்துவதே அவர்கள் கொள்கை. உண்மையில் அவர்கள் பின்பற்றும் நூல் பகவத்கீதை அல்ல மனுஸ்மிருதி. அவர்கள் சொல்கிற ஹிந்துத்துவாவும், நாம் நினைக்கிற இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கே மக்கள் இந்துக்கள் அல்ல கருப்பர்களும் இன்னபிறவும். இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

– jothimani Sennimalai


மதிப்பிற்குரிய தருண் விஜய் அவர்களே…

பொறுப்பான மனிதராய் இருந்தால்… நாங்கள் நிறவெறி இன்றி வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.. எதற்கு தென் இந்தியர்களை கருப்பாக இருப்பதாக கூற வேண்டும்.. என்னவோ பெருந்தன்மையாக இவங்க கூட எல்லாம் நாங்க வாழுறோம்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இருக்கு. இந்தியாவை தாண்டி விட்டால் நீங்களும் ப்ளடி பிளாக் இந்தியன்தான் என்று மறந்து போனது ஏன்..

திருக்குறள் படித்தால் மட்டும் திருவாளர் ஆகி விட முடியாது என்பதற்கு நீங்கள் உதாரணம்….

– Manojkumar Pandian


தருண் விஜய் அன்று திருவள்ளுவரை அவமானப்படுத்தினார் – இன்று நம்மையே அவமானப்படுத்துகிறார். இதற்குக் கீழாக அவமானப்படுத்த இயலாது, தமிழனுக்கு மான உணர்ச்சி குறைகிறதோ? ஆன்மீகம் நம் அறச்சீற்றத்தை குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.

  • ராஜா ஜி  feeling sad.

தருண் விஜய் சொன்னது கூட கவலை இல்லடா

ஆனா அதுக்கு நம்ம அக்கா எமிஜாக்சன் தமிழைசையும்,டிகாப்ரியோ பொன்னரும் கொடுக்க போற விளக்கத்த நினச்சாதான் பயம்மா இருக்கு

– Alagendran R Alagendran R


தருண் விஜய்: நுண்ணிய நூல் பல கற்பினும்…

தருண் விஜயுடைய திருக்குறள் ஆர்வம், தமிழ்க்காதல் இதையெல்லாம் பெரும்பாலும் நான் கிண்டலடிப்பதில்லை. மனுசங்களுக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்கலாம்.

கடந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கே வைத்து ஒரு நிகழ்வில் தருண் விஜயின் பேச்சைக் கேட்டேன். தமிழ், தமிழர் வரலாறு, ராசேந்திரசோழன், வேலு நாச்சியார் என எல்லாவற்றையும் பேசினார். தமிழர்களின் வரலாற்றை அறியாத வட இந்தியர்களான தாங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்று கூட கூறினார்.

தமிழ்நாட்டில் காவி அரசியலை நுழைப்பதற்கான சதிகளில் ஒன்றுதான் தருணுடைய செயல்பாடு என்பதைக் கூட நாம் பொருட்படுத்தாமல், தருணுக்கு உண்மையிலேயே குறள் மீது பற்று இருக்கிறது, தமிழ் தருண் என்று அழைக்கப்படுவதில் பெருமை கொள்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் தனனை மிகவும் பாதித்ததாகவும் உத்தரகாண்டில் தலித்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டதற்குக்கூட அந்த குறள்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் கூறினார். நான் கூட கொஞ்சம் நெகிழ்ந்து போய்விட்டேன்!

ஆனால் ஒரு சங்கியால், ஒரு சாவர்ண கருத்தாளரால், ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தவாதியால் – அதில் ஊறிப்போன ஒருவரால் – ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை உண்மையிலேயே உட்கிரகிக்க முடியுமா?

முடியாது என்பதுதான் உண்மை. அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள்தான் அதற்கான ஒரே அத்தாட்சி. அவர் தென்னிந்தியர்களை கருப்பர்களாகப் பார்ப்பது மட்டும் சிக்கல் இல்லை, இந்தக் கருப்பர்களோடு நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று அவர் கேட்கிறாரே அந்த பார்வைதான் சங்கியின் பார்வை.

இந்தியா என்பது இந்து மேல்சாதிக்கார்ரகள் – மூவர்ணர்களின்- நாடு என்பதுதான் அவரது பார்வை. அவர் தென்னிந்தியாவிலும் வடக்கு மத்திய மாநிலங்களிலும் கோடிக்கணக்கான கருப்புத் தோலர்களை சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நாங்கள் வெள்ளையர்கள், நீங்கள் கருப்பர்கள் என்கிற எதிர்வை அவர் முன்வைத்திருக்கிறார். இதுதான் தருண். இதுதான் ஆர்எஸ்எஸ்.

எங்கிருந்து வந்தது இந்த வெள்ளை vs கருப்பு பிரிவு? இது பழைய பிரிவா? கார்மேனியனையும் பச்சை மா மலை போல் மேனியை உடையவனையும் காளியையும் கும்பிட்டவனிடமிருந்து வந்த பிளவு அல்ல இது. ஒரே சமயத்தில் பொன்னார் மேனியனையும் காக்கை நிறத்துக் கண்ணனையும் கும்பிட்டவர்களின் குரலா இது?

உண்மையில் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவா என்பது மேலைநாட்டு ஆரியவாதத்திடமிருந்து, வெள்ளை நிறவெறி சித்தாந்தங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது. தருணின் ஆழ்மனத்திலுள்ள வெள்ளை vs கருப்பு என்பது பாசிசத்தின் நாங்கள் vs நீங்கள் என்ற உளவியலோடும் ஐரோப்பிய நிறவெறியோடும் இணைகாண வேண்டிய ஒன்று.

இந்திய வர்ண சித்தாந்தமும் ஐரோப்பிய வண்ண சித்தாந்தமும் இணைந்த ஒரு புள்ளியில்தான் இந்தியாவில் தோலின் நிறம் பார்க்கப்படுகிறது. அதை மேலும் அழகூட்டுகிறது சிவப்பழகு மோகச் சந்தை.

உண்மையில் இந்தியாவில் யாரும் கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல என்பான் அமெரிக்கன், நாமெல்லாம் அவனுக்கு colored people.

தோலின் நிறம் பற்றிய தமிழர்களின் கலாச்சாரப் பதிவுகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். எப்போது தோல் நிறம் சார்ந்த உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் நம்மை பீடிக்க ஆரம்பித்தன என்பதைப் பார்க்கவேண்டும்.

தருணுடைய குரல் என்பது வட இந்திய / தென் இந்திய மேல்சாதிகளின் குரல்தான். அது வண்ணம் தொடர்புடையது மட்டுமல்ல, வர்ணம் தொடர்புடையது.

ஆனால் அவர் தென்னிந்திய “வெள்ளைத் தோலர்களை” சட்டென்று கைகழுவிவிட்டார் என்பதில் இங்கு பலருக்கு அவர் மீது கோபம் ஏற்படலாம். நாங்களும் வெள்ளைதான் அல்லது சிவப்புதான் என்று அவர்கள் குதிக்கலாம்.

இந்துவத்துவ சக்திகளின் கலாச்சார தேசிய அடையாளங்களில் ஒன்றாக திருக்குறளை ஆக்க முயன்ற தருணால், ஒருபோதும் திருவள்ளுவரை புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

இறுதியாக ஒரு திருக்குறளைப் பார்ப்போம்.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்”

இதற்கு தமிழ்நாட்டு ‘வெள்ளையர்’ (நன்றி: டிகேஎஸ் இளங்கோவன்) கலைஞர் எழுதிய உரை:

“கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.”

இங்கே உண்மை அறிவு என்பது என்ன? ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிக்கு உண்மை அறிவு என்பது என்னவாக இருக்கமுடியும்?

–  ஆழிசெந்தில்நாதன்


தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை விரிவுபடுத்துவோம்:

இதுவும் நன்மைக்கே. ஆம். பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான தருண் விஜய் சொன்னது நன்மைக்கே. நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்னிந்திய கருப்பர்களோடு சேர்ந்து வாழ்வோமா? என்று அவர் சொன்னதன் பிறகு, தென்னிந்தியாவில் பலருக்கும், பரந்த இந்த இந்திய தேசத்தில், தங்களுக்கான அடையாளம் என்னவென்று புரியத் தொடங்கி உள்ளது.

சில நாட்களுக்கு முன், தமிழ் நாட்டின் எல்லை ஓர மாவட்டங்களில், மைல்கற்களில் ஆங்கிலத்தை அழித்து, ஹிந்தியை எழுதி, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பை தமிழ் நாட்டில் மீண்டும் புதுப்பித்துடும் ஓர் வாய்ப்பை தந்தார்கள்.

ஹிந்தி படித்தால்தான், இந்தியாவில் சிறப்பான கல்வியும், வேலையும் கிடைக்கும் என்ற பொய் தோற்றத்தை, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்லூரி தரப்பட்டியல் அம்பலப்படுத்தி விட்டது. முதல் நூறு தரவரிசைக் கல்லூரிகளில், முப்பத்தேழு கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை; அறுபத்து ஏழு கல்லூரிகள் தென்னகத்தைச் சேர்ந்தவை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடிந்தது.

இப்போது தன் பங்குக்கு, தருண் விஜய், தென்னிந்தியர்களைக் கருப்பர்கள் என்ற உண்மையைக் கூறி உள்ளார். இராமாயணம் எனும் கதையே, ஆரியர் திராவிடர் போராட்டம்தான் என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் தெளிவாக்கினார்கள். அதில் வரும் அரக்கர்கள், குரங்குகள் அனைவரும் திராவிடர்களைக் குறிப்பனவே என்றும் கூறினார்.

ஏதோ தென்னிந்தியாவின் கருப்பர்களை வட நாட்டில் வாழும் இவர்கள் சுமந்து செல்வதுபோல் தருண் விஜய் கருத்தினைக் கூறினார். இப்போது எதிர்த்தவுடன், பின்வாங்கி உள்ளார். எனினும், உண்மை நிலை என்ன?

கல்வி, வேலைவாய்ப்பு என தமிழகமும், தென்னிந்தியாவும், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே எடுத்துக் காட்டுகின்றன.

GDP எனப்படும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் எந்தெந்த விகிதத்தில் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தால், தென்னக மாநிலங்களின் பங்களிப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திடுகிறது என்பது விளங்கும்.

இந்தியா முழுமைக்குமான முப்பத்திரெண்டு மாநிலங்களும் சேர்த்து 161 லட்சம் கோடி ரூபாய்; இதில் தென்னகத்தின் பங்கு 48.71 லட்சம் கோடி ரூபாய். அதாவது, மொத்த ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கு தென்னக மாநிலங்கள் அளிக்கின்றன.

இத்தகைய பங்களிப்பை தென்னக மாநிலங்கள் தந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு இதே அளவில் மத்திய அரசால் திரும்பவும் தரப்படுகிறதா? என்பதை தென்னக மாநில அரசுகள் ஆராயும் காலம் வந்துள்ளது.

திராவிடர் இயக்கம் துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1917-ல் இங்கே துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை கூட்டமைப்பு, பின்னாளில் நீதிக்கட்சியாக ஆட்சியைப் பிடித்து, அன்றைய சென்னை மாகாணத்தில் சமூக, பொருளாதார புரட்சிக்கு வித்திட்டது.

நூறாண்டு முடியும் இன்றைய நிலையில், இதன் நீட்சியாக தென்னக மாநிலங்களோடு, தென்னிந்திய நல உரிமைக் கூட்டமைப்பை புதுப்பித்து, தென் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க, இதுவே நல்ல தருணம்.

–  திராவிடர் கழகம் ( DK )

****

யார்டா அது தருண் விஜய் எப்டியாது நாக்கபுடுங்குற மாதிரி இழுத்து திட்டிபுடனும்-ங்கிற கனலாக எரிகிற கோபத்தோடு போனேன். அங்கிட்டு பாத்தாக்க பயபுள்ள அம்பது நூறு லைக் வாங்கிண்டு பொழப்பு நடத்துது. நம்ம ரேஞ்சுக்கு இந்த சல்லிப்பயலயா திட்டுறதுன்னுட்டு அப்டியே உ டர்ன் அட்ச்சு வந்துட்டேன்.

–  மாக்கான் மாக்ஸ்


தருண் விஜய் உள்நோக்கத்தோடு அந்த கருத்தை சொன்னாரா? அல்லது அவருடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா என்று தெரியாது. ஆனால் தமிழர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடக் கூடிய அளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல என்பதை தாமதமாக இருந்தாலும் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி..

–  $Honey Kumar


ஆப்பிரிக்க நாட்டவர் மீது டில்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், “நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?” என்று கேட்டுள்ளார்.

உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர்.

கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, ‘பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?’ என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், ‘தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும் தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?’ என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.

–  Aloor Sha Navas


ஆர்எஸ்எஸ்-க்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று டெர்ரஸ் பேஸ். மோகன் பகவத்திலிருந்து துவங்கி எச்.ராஜா வரை உதாரணங்களை நாம் கூறமுடியும். மற்றொன்று பேபி பேஸ். வாஜ்பாயிலிருந்து துவங்கி தருண் விஜய் வரை. சண்டமாருத கலவர உரை வீச்சு செய்து கிலியை உருவாக்குவது டெர்ரல் முகங்கள். தடுமாற்ற மாயையை உருவாக்கி மீன்பிடிப்பது குழந்தை முகங்கள். 20 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இதழான பஞ்சசன்யாவின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் தருண் விஜய். காவியிசத்தின் தத்துவார்த்த எதிரிகளை வீழ்த்துவதற்கு நாக்பூர் பீடத்தால் தீட்சையளிக்கப்பட்டு பஞ்சஜன்யாவிலிருந்து 2008 இல் விடுவிக்கப்பட்டு சமூகத்தின் பல தளங்களிலும் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்தான் தருண்விஜய்.

நீண்ட காலம் சுதந்திர இதழாளராக பல மொழி ஏடுகளில் எழுதிய காலங்களில் 2013 செப்டம்பரை வரை தருண் விஜய் தமிழை அல்லது திருவள்ளுவரைப் பற்றியோ அப்படியொன்றும் புகழ்ந்து பிரமாதப்படுத்தி எழுதியவரல்ல. பேசியவரும் அல்ல. 13.9.2013 இல் பாராளுமன்றத்தில் தமிழைப் பற்றி முதன்முறையாக தருண் விஜய் பேசியபோது தமிழ்கூறும் நல்லுலகின் முக்கிய புள்ளிகளும் கூட க்ளீன் போல்டானார்கள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை இழந்தார்கள். 2014 பாராளுமன்ற மற்றும் 2016 தமிழ்நாட்டின் தேர்தல்களில் தமிழ்மக்களின் கவனத்தை பெற தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ்-இன் காவியிச அஜெண்டாக்களை நோக்கி பைய்யப் பைய்ய முன்னேற பயன்படுத்தப்பட்ட பல உத்திதான் மிக முக்கியமானதுதான் தருண் விஜய்யின் திடீர் தமிழ் பாசம் என்பதை இடதுசாரிகள் மட்டுமே அம்பலப்படுத்தினார்கள்.

இப்போது மீண்டும் தருண் அம்பலமாகி உள்ளார். நொய்டாவில் நைஜீரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று தருண்விஜய் பேசியவர் இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை தாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம் என்று தன்னிலை மறந்து காவியிச உளநிலையை ஒப்புவித்துவிட்டார்.ஆர்எஸ்எஸ்-இன் டெர்ரர் முகங்களை பாசிசனத்தின் இந்திய முகங்கள் என எளிதில் கண்டு கொள்ள முடியும். ஆனால் பேபி முகங்களை இனம் கண்டு கொள்வதற்கு தத்துவார்த்த அடிப்படை தேவை.

–  தீக்கதிர்


கோகுலத்தில் சீதை படத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்ணை ஏதேதோ ஆசைவார்த்தை பேசி விபச்சார தொழிலுக்கு அழைப்பார் தலைவாசல் விஜய். அந்தப் பெண் காறித்துப்பிவிட்டு போவார் என்பது வேறு விஷயம். அதே போல தருண் விஜய் என்பவர் பாஜகவில் இருக்கும் தலைவாசல் விஜய். அதிரடியாக செயல்படுவது தமிழர்களிடம் வேலைக்கு ஆகாது, பணிய மாட்டார்கள் எனத் தெரிந்துகொண்டு திருக்குறள், அது, இது என ஆசைவார்த்தை காட்டி இந்துத்துவ சகதிக்குள் ஐக்கியமாக அழைத்தார். ஆனால் எப்படி வேடமிட்டு வந்தாலும் கொண்டையை எளிதில் கண்டுபிடித்துவிடும் தமிழர்கள் அதற்கும் மசியவில்லை. அந்த கடுப்பிலோ என்னவோ இதுவரை ஒரே தாய் ஒரே பிள்ளைகள் என புழுகிவந்தவர் கடுப்பாகி, “தென்னிந்தியர்கள் கருப்பர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இணைந்து வாழவில்லையா?” என கேட்டிருக்கிறார். இதுதான் தருண் விஜய்யின், பாஜகவின் உண்மையான சுயரூபம்.

ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு. தென்னிந்தியாவில் பெரும்பாலானோர் கருப்புதான் என்றாலும் வட இந்தியாவில் கூட எல்லோரும் சிகப்பு மனிதர்கள் இல்லை. தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களில் ஏனையோரும் மொகஞ்சாதரோ நாகரீகத்தின் எச்சமாக இன்னமும் திராவிட நிறத்தில்தான் இருக்கிறார்கள். சிகப்பு என்பது இந்த நிலப்பகுதியில் வந்தேறிய ஆரிய நிறம்தான் என்பதால் கலப்பின் அடிப்படையிலேயே சிகப்புத்தோல் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் தருண் விஜயோ ஏதோ இந்த நிலப்பகுதி மொத்தத்திற்கும் சிகப்புத்தோல்காரர்கள் தான் உரிமைபோலவும், ஏனையோர் எல்லோரும் அடிமைகள் போலவும் பேசியிருக்கிறார்.

மதப்பற்று என்ற பெயரில் இப்படி உயர்சாதி திமிர் பிடித்து அலைவதுதான் பாஜகவின் அரசியல். அவர்களுக்கு கூட்டாக எல்லோரையும் அரவணைத்து சமத்துவத்துடன் வாழ்வதெல்லாம் ஆகவே ஆகாது, வரவும் வராது. நிறத்தில் உயர்ந்தவர்கள் சிகப்புத் தோல்காரர்கள் மதத்தில் உயர்ந்தது இந்து மதம். சாதியில் உயந்தவர்கள் பார்ப்பனர்கள். மொழியில் உயர்ந்தது சமஸ்கிருதம்/இந்தி. ஏனைய எல்லாமும் அவர்களுக்கு இரண்டாம் தரம்தான். சுருக்கமாக பாஜகவின் கொள்கை என்பது இவ்வளவுதான்.

தருண் விஜய் தனக்கே தெரியாமல் தன் பேச்சில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னதான் பாம்பு வேடமிட்டு பல்லிளித்தாலும் அதன் பல்லில் விஷம்தான் இருக்குமே தவிர பாயசம் இருக்காது என்பதற்கு தருண்விஜய்யின் பேச்சு ஒரு சோற்றுப் பதம்.

–  Don Ashok


தான் சொல்ல வந்த கருத்து சரியாக வெளிப்பட வில்லை என்கிறார் தருண் விஜய் …

இல்ல தருண் விஜய் சரியாகவே வெளிப்பட்டுஉள்ளது உங்களது மேலாதிக்க மனப்பான்மை.. உங்கள் சுயரூபத்தை காட்டியதற்கு நன்றி ..

–  Sajeev Narayan


#கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் இணைந்துதான் வாழ்கிறோம்.#தருண் விஜய்

#பொன்னர் அண்ண! பொன்னர் அண்ண! உங்க மூஞ்சில கறுப்பு மைய அள்ளி பூசன மாதிரி இருக்குதாம்.

–  Anand Anandan


தம்பி தருண் நாங்கள் தென் இந்தியர்கள் அல்ல. முதலில் இது இந்தியா அல்ல பாரதம். நாங்கள் ஆரியர் அல்ல திராவிடர். நாங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல இங்கே தோன்றியவர்கள். உங்களை போல் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் இல்லை நாங்கள். உனக்கு நாங்கள் வாழ்தற்க்கான சான்று வேண்டுமா? போய் பார் பாகிஸ்தானில் மெகந்சாதாரோ, அரப்பா என்னும் இடத்தில் திராவிடர் வாழ்ந்த தொல்லியல் சரித்திரம் சொல்லும்.

–  Pandurangan Venugopal


பாஜக மத்திய இணை அமைச்சர் பொண் ராதா கிருஷ்ணனை வேற்றின வாசியாகத் தான் இதுவரை பார்த்திருக்கிறார் தருண் விஜய்….

இதுகூட புரியாமத் தான் அவர்களோடு சேர்ந்து குப்பை கொட்டுகிறார் போல மன்னாரு…

–  தமிழன் டி. சிவா


தென்னிந்தியர்கள் இந்தியர்கள் அல்ல.ஏனெனில் அவர்கள் கருப்பாக இருக்கிறார்கள்.- பாஜக மு.எம்பி தருண் விஜய்.

டேய்…செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்டா… கரெக்ட்டு நாங்க இந்தியர்கள் அல்ல… தமிழர்கள்.

–  அலையாத்தி செந்தில்


ஆந்திரா தெலுங்கானா வில் தருண் விஜய்க்கு வலுக்கிறது எதிர்ப்பு!! உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் தருண் விஜய் மன்னிப்பு கோர வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு!!

ஜெய் சென்னகேசவா.
–  Naveen Kumar


தருண் விஜய், வழக்கமான வெள்ளைத் தோல் ஆணவத்துல, கருப்பான தென்னிந்தியர்களை சகிச்சு வாழ்றோம்னு சொல்லிருக்காரு… திமுக எம்பி இளங்கோவன், எல்லா தமிழனும் கருப்பு இல்ல… எங்க தலைவரு வெள்ளை கலருதான்னு பதிலடி குடுத்திருக்காரு….

இவங்களை எல்லாம் பார்லிமென்ட்ல சகிச்சிட்டிருக்கோமேன்னு ஒரு வேளை தருண் விஜய் மீன் பண்ணிருக்கலாமில்லையா….

–  Nanjil Aravintha


என்னடா பொழுது போயிடுச்சே, ஒன்னும் நடக்கலையேனு பார்த்தேன்……இந்தா சிக்கிடுச்சில்ல தருண் விஜய் னு ஒரு பீஸு……இன்னும் ஒரு வாரம் வச்சு செய்வோம்….

–  கரூர் மகேஸ்வரன்


ஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் !

4
தாக்குதலின் போது கான்

சுவைக் கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்கு” என்கிறது மனுநீதி ! மோடியின் ஆட்சியில் அந்த தண்டனையை வழங்குகிறது சங்க பரிவாரம். ஆயினும் பழைய நீதிப்படி பசுவை கொன்றிருக்க வேண்டும் என்பதல்ல ! பசுவை கொல்வதற்காகத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்ற சந்தேகமே போதும் !

பெஹ்லுகானின் மனைவி மகன்கள்
பெஹ்லுகானின் மனைவி மற்றும் மகன்கள்

இந்தியா முழுவதும், கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி பசுவதைத் தடுப்பின் பெயரில் முசுலீம்கள், தலித்துக்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் உ.பி., உத்திரகாண்ட் தவிர கோவா மற்றும் மணிப்பூரில் குதிரைப்பேர மோசடி மூலம் ஆட்சியைப் பிடித்த பிறகு பாஜக – ஆர்.எஸ்.எஸ். கிரிமினல் கும்பல்களின் பார்ப்பனியத் தாக்குதல்கள் இன்னும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் குஜராத்தில் பசுவதைக்கு ஏற்கனவே இருந்த 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சட்டதிருத்தம் கொண்டுவந்திருக்கிறது பாஜக மாநில அரசு. அதை மரண தண்டனையாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கிறார், உ.பி. யின் ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இச்சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று ஹரியானா மாநிலம் மேவட் மாவட்டத்தின் ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெஹ்லு கான் தனது இரண்டு மகன்களான இர்ஷாத், ஆரிஃப் ஆகியோருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த அசுமத் கான் என்பவரோடு சேர்ந்து தங்களது பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஹத்வாரா சந்தையிலிருந்து பசுக்களை வாங்கி, இரண்டு வாகனங்களில் அவற்றை ஏற்றிக் கொண்டு நால்வரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்தியது. பசுக்களை மாட்டிறைச்சிக்காக ராஜஸ்தானிலிருந்து ஹரியானாவிற்கு சட்டவிரோதமாகக் கடத்துவதாகக் குற்றஞ்சாட்டி அவர்கள் நால்வரையும் உடன் வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. பசுக்களை பால் பண்ணைக்கு வாங்கிச் சென்று கொண்டிருப்பதாக பெஹ்லுகான் கூறி, அதனை வாங்கிய ரசீதைக் காட்டிய பின்னரும் கூட அவர்களை விடாமல் தாக்கியது

வாகன ஓட்டிகளில் ஒருவரான அர்ஜூன் என்பவர் தான் ஒரு ஹிந்து என்று கூறியதும் அக்கும்பல் அவரை மட்டும் விடுவித்து விட்டு மீதமுள்ள ஐவரையும் சுமார் அரை மணி நேரம் கம்புகளையும், கற்களையும், இரும்புப் பைப்புகளையும் கொண்டு கடுமையாகத் தாக்கியது. அதோடு அவர்களிடமிருந்து சுமார் 75,000 ரூபாய் பணத்தையும் திருடிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போலீசு, தாக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தது. பெஹ்லு கானின் மகனான இர்ஷாத், போலீசிடம்  நடந்தவற்றை எல்லாம் குறிப்பிட்டு, மாடு வாங்கிய இரசீதையும் காட்டியிருக்கிறார்.

தாக்குதலின் போது பெஹ்லுகான்

அனைத்தையும் கேட்டுக் கொண்ட போலீசு மறுநாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் இருந்து ஒரு புகாரைப் பெற்றுக் கொண்டு “சட்டவிரோதமான முறையில் மாட்டை அடிமாட்டுக்கு கடத்துவது“ என்ற பிரிவின் கீழ் முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தது. அதன் பின்னர் தான், தாக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையில், குறிப்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறது இராஜஸ்தான் மாநிலப் போலீசு.

ஹிந்துத்துவக் கிரிமினல் கும்பலின் கொடுந்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 5 அன்று மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்கள் எடுத்த வீடியோக்கள் இணையத்திலும், போலீசுக்கும் பகிரப்பட்டும், இராஜஸ்தான் போலீசு இதுவரையிலும் அக்கும்பல் சம்பந்தமாக வெறும் 3 பேரை மட்டும் கண் துடைப்புக்காகக் கைது செய்திருக்கிறது

இச்சம்பவம் குறித்து இராஜஸ்தான் மாநில பாஜக அரசின், உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா கூறுகையில், “ பசுக்களை கடத்துவது சட்டவிரோதம் எனத் தெரிந்தும் அவர்கள் (முசுலீம்கள்) அதனைச் செய்திருக்கிறார்கள். பசுப்பாதுகாவலர்கள் (வி.எச்.பி, பஜ்ரங்தள் காலிகள்) அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது தவறு” என பார்ப்பனிய இந்துமதவெறிக் கும்பலைச் செல்லமாக்க் கடிந்து கொண்டு, ஒரு பச்சைப் படுகொலையை மிகச் சாதாரணமாக நியாயப் படுத்தியுள்ளார்.

பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான அஸ்ஸாமில் இதே போன்று மற்றொரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோராத் நகரில் ஒரு சிறுவன் உட்பட மூன்று முசுலீம்களை மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி கடந்த ஏப்ரல் 4 அன்று இரவில் கைது செய்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலப் போலீசு. மிரிதுபவன் போரா என்ற இந்து வெறியனிடமிருந்து புகார் பெற்று இந்நடவடிக்கையை போலீசு எடுத்துள்ளது.

பஞ்சாப்பின் கவ் ரக்‌ஷா தள் முகநூல் முகப்பு பக்கம்

குறிப்பாக சொல்லப் போனால், அஸ்ஸாமில் மாட்டிறைச்சி மக்களின் முக்கிய உணவாகும். அங்கு அங்கீகரிக்கப்பட்ட  மாட்டிறைச்சிக் கூடங்களில் இருந்து மாட்டிறைச்சி விற்பதும், மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சட்டப்பூரவமானதே. இந்நிலையில் சமைப்பதற்கு மாட்டுக்கறி வாங்கிச் சென்ற ‘குற்றத்திற்காக’, ”மாற்று மதத்தினரின் மனதைப் புண்படுத்திய” குற்றப் பிரிவின் கீழ் அவர்களைக் கைது செய்திருக்கிறது போலீசு.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலுமே மாட்டுக்கறியை முகாந்திரமாக வைத்து முசுலீம்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதனால் தான் இராஜஸ்தானில் தான் ஒரு இந்து எனக் கூறிய வாகன ஓட்டி அடிவாங்காமல் தப்பிக்கவும், இசுலாமியத் தோற்றம் கொண்ட வாகன ஓட்டி அடி வாங்கவும் நேர்ந்தது. அதே போல, சட்டப்படி மாட்டுக்கறி சாப்பிடலாம் என அனுமதி உள்ள ஒரு மாநிலத்தில் இசுலாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் மாட்டுக்கறி தின்பதையே ’குற்றமாக்கி’யிருக்கிறது அஸ்ஸாம் மாநில பாஜக அரசு.

இந்து மதவெறி பிடித்த பாஜக பாசிஸ்ட்டுகள் ஆளும் மாநிலங்களில் படிப்படியாக இந்து மத வெறியும், முசுலீம்கள் மற்றும் தலித்துகளின் மீதான வெறுப்புணர்வும் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.  மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அப்பிளவை தமக்குச் சாதகமாக்கி தேசத்தின் வளங்களையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் கபளீகரம் செய்து வருகிறது இந்துத்துவக் கும்பல்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்களை சாதிய ரீதியாகப் பிரித்து, சாதியப் படிநிலையில் மேல்நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டிக் கொழுத்த பார்ப்பனீயம், இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலின் வாயிலாக தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிராக மக்கள் கொதித்தெழா வண்ணம், அவர்களை இருத்தி வைப்பது தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் நோக்கம். அதற்கு பெரும்பான்மை இந்துக்களின் பொது எதிரியாய் முசுலீம்களைக் காட்டி, அப்’பயங்கரவாதி’களிடமிருந்து காக்க வல்ல இரட்சகனாகத் தம்மை முன்நிறுத்தி பெரும்பான்மை மக்களை முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் பார்ப்பனிய ஒடுக்குமுறையின் நுகத்தடியில் சிக்க வைத்திருக்கிறது பாஜக கும்பல். இதை நாம் முறியடிக்கவேண்டும்.

ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் ! மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “இந்து நண்பன் இல்லாத ஒரு முசுலீமும், முசுலீம் நண்பன் இல்லாத ஒரு இந்துவும் இங்கு இல்லை, தமிழன்டா” என்று முழங்கிய தமிழகம் அதை நடைமுறையிலும் நிரூபிக்க வேண்டும்.  இல்லையேல் விரைவில், பசு மாட்டு மூத்திரத்தை முகஞ்சுழிக்காமல் ‘மடக்’ ’மடக்’ கென்று குடிக்காத ’தேசவிரோதச்’ செயலுக்காக நமக்கும்  7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

  • நந்தன்

செய்தி ஆதாரம்:

தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி – தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !

0

தூத்துக்குடியில் 20.03.17 அன்று ICE தனியார் ஆங்கிலப்பள்ளியில் நடந்த முகாமில் வைத்து அரசு தடுப்பூசி போடப்பட்டது.  அன்று மாலையே சிறுமி காமாட்சிக்கு காய்ச்சல் வந்துள்ளது. நான்கு நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், 25.03.17 அன்று அவரது தாய் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 10 நாட்கள் சிகிச்சையின் முடிவில் 04.04.17 அன்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சிறுமி காமாட்சி

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு – ஹவுசிங்போர்டு  கொத்தனார் காலனியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியான இவருக்கு தந்தை இல்லை. தாய் வீட்டுவேலை செய்து மகளை வளர்த்து வந்துள்ளார். இவர் படித்துவந்த அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஊசிபோட பலமுறை வற்புறுத்தியும் இவர் போட்டுக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர் தடுப்பூசி நல்லதுதான் என்றும்,  “வெளியில் 1,500 ரூபாய் செலவாகும்; நாங்கள் இலவசமாக போடுகிறோம்” என்று இவர்கள் தெருவில் அரசு பிரச்சாரம் செய்தது. முகாம் குறித்து பிரசுரம் வாங்கிய பின்னர்  தனது மகளை ஊசிபோட்டுக்கொள்ள அனுப்பிவைத்துள்ளார் அந்த ஏழைத்தாய்.

தமிழக அரசோ உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. முகாமில் மாணவர்களுக்கு ஏற்கனவே என்னென்ன  நோய்க்குறிகள் உள்ளது என்று விசாரிக்கவும் இல்லை; இந்த ஊசி போட்டபின் வரும்  பின்விளைவுகளையும், அதை எதிர்கொள்ள வேண்டிய எந்த ஒரு அணுகுமுறை குறித்து விளக்கவும் இல்லை. அரசு பொதுப்பிரச்சாரமாகவும் இதை கொண்டு செல்லவில்லை. பொதுவில் தடுப்பூசி போட்டால் வரும் காய்ச்சலுக்கான மாத்திரைகளைக்கூட தரவில்லை.

பொதுவாக ஒரு அரசு தன் குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டால் தொடர் கண்காணிப்பு செய்து  Post Margeting Surveillance Registry  எனும் பதிவேடை பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் எங்காவது இதை செய்துவருவதை பார்த்துள்ளோமா?

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் சிறுமிக்கு  “என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அது டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம்” என்றுதான் 10 நாட்களாக கூறிவந்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் காமாட்சி இறந்தபின் மூளைக்காய்ச்சலால் சாவு என்று அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். அதுவும்கூட மறுநாள் 05.04.17 அன்று வந்த செய்தித்தாளை பார்த்துதான் தெரிந்தது கொண்டார், தாய் ராமலட்சுமி.

“பத்து நாளா வைரஸ் காய்ச்சல்னு  கண்டுபிடிக்கிறதா சொல்லிட்டு இப்ப எப்படி  மூளைகாய்ச்சல்னு நியூஸ் தந்தீங்க” என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். நிர்வாகத்தின் மழுப்பலால் சந்தேகம் வலுத்ததால் காமாட்சியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர்.

04.04.17 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்குரைஞர்கள் (அரிராகவனும், பால்முருகனும்) நேரில் சென்று விசாரித்தோம். தவறிழைத்த மருத்துவர்கள், முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் கட்டமாக ஒரு புகார் மனுவை தாய்  ராமலட்சுமியை அழைத்துச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் தர வைத்தோம்.

கலெக்டரோ “விஷயம் கேள்வி பட்டேன், டாக்டர் டீமை இந்த இறப்பு பற்றி விசாரிக்க நியமித்துள்ளேன் அவர்கள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான் இறப்பிற்கான காரணம் தெரியும் என்று சொன்னாம் மேலும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் வராது. மரணமும் வராது என்று கூறி விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் ஒரு “முடிவு”க்கு வந்துவிட்டார் என்று நாம் தெரிந்து கொண்டோம்.

எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும்

நாம் மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைக்க சிப்காட் காவல் நிலையத்தில் புகார் தந்தோம். புகாரை பெற்ற காவல்துறையோ மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக மரணம் நிகழ்ந்ததை அதற்குறிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தயங்கினார். “DSP, மேலதிகாரிகளிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுக்க முடியும்” என்று காக்க வைத்தனர். நாம் தொடர்ந்து முயற்சி செய்ததில் முடிவில் சந்தேக மரணமாக (CRPC பிரிவு 174ன் கீழ் நிலைய குற்ற எண் 85/2017 ல்) வழக்கு பதிவு செய்தனர்.

இரண்டாம் நாளில் (05.04.17 முற்பகலில்) DSP நம்மிடம் வந்து “பிரேத விசாரணை அறிக்கையில் கையெழுத்து போட பஞ்சாயத்தார் 4 பேர் வாங்க” என்றழைத்தார். அவர் நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்து கேட்டார். நாம் படிவத்தை நிரப்பும் படியும், மாணவியின் தொடையில் சதை வெட்டியெடுக்கப்பட்டு பிளாஸ்டெர் ஒட்டப்பட்டுள்ளதை குறிப்பிடும்படியும் மேலும் உறவினர்களான பஞ்சாயத்தார் இந்த சாவுக்கு ரூபல்லா தடுப்பு ஊசி போட்டதுதான் காரணம் என்றும் கூறும் கருத்தை அதில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்வைத்தோம். அதன் பின்னரே மீண்டும் உடலை பரிசோதித்துவிட்டு நாம் கூறியபடி படிவத்தில் குறித்தனர்.

பிரேத பரிசோதனையை ஒரு மருத்துவர் அல்ல மருத்துவர்கள் குழுதான் செய்யவேண்டும்; அதை வீடியோ எடுக்கவேண்டும் என்றும்  மனுசெய்து நிபந்தனை வைத்தோம். அதை நிர்வாகம் ஏற்றதன் பேரில்  உறவினர்கள் கையெழுத்து போட்டனர். இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகம் சதிகளில் இறங்கியது. காமாட்சியின் தாயாரை அழைத்துச் சென்ற செவிலியர்  “உங்க பிள்ளையோட கம்மலை தர்றோம். அதுக்கான அத்தாட்சி கையெழுத்து போடுங்க” என்றுள்ளார். ஆனால் ராமலட்சுமியோ “எங்க வக்கீல கேட்டுட்டு வர்றேன்” என்று கையெழுத்து போட மறுத்துவிட்டு வந்துவிட்டார். நாம் போய் கையெழுத்து போடச்சொன்ன பதிவேட்டை பரிசோதித்தோம். அதில் நகை குறித்து எதுவும் இல்லை. ஆனால் அதில் ஆங்கிலத்தில் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் (Body handed over to the relative), என்றும் தமிழில் எனது மகளின் உடலை பிணவரையில் வைக்க பெற்றுக்கொண்டேன் என்றும் எழுதியிருந்தனர். நாம் அதிர்ந்துபோனோம் ! இந்த அரசு எவ்வளவு  நேர்மையானது என்பதற்கான ஒரு உதாரணம் இது. நாம் சத்தம்போட்டவுடன் செவிலியர் அந்த பதிவேட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

அதன் பின்னர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு காவல் துறை அனுப்பியது. பிரேத பரிசோதனை முடிந்தபின் உடலை ஒப்படைக்க வந்தது காவல்துறை. உடலை வாங்க உறவினர்கள் தயாரில்லை. கொடுத்த புகாரின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? ஏன் போலீசைத் தவிர எந்த அதிகாரியும் இதுவரை வரவே இல்லை? இதற்கு முடிவு தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் ! என்று அறிவித்தனர். வேறு வழியின்றி DSP போன் செய்து தாசில்தாரை வரவைத்தார். ஒரு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  “கலெக்டர் விசாரிக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன்  நடவடிக்கை எடுப்பார்.” என்றார் தாசில்தார். அவருடைய உத்திரவாதத்தை எழுதித்தரும்படி கேட்டோம். மறுத்துவிட்டார். நாம் மேற்கொண்டு பேசாமல் கலெக்டரே வந்து சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டோம். காமாட்சியின் உறவினர்களான DYFI இளைஞர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் உடன் நின்றனர். உடலை இரண்டாவது நாளும் நாம் வாங்கவில்லை.

மூன்றாம் நாள் (06.04.2017) கலெக்டரை பார்த்து விசாரிக்க நேரில் சென்றோம். அங்கு “கலெக்டர் இல்லை, கலெக்டர் வரமாட்டார், PA கிட்ட பேசுங்களேன்” என்று சிப்காட் உதவி ஆய்வாளர் நம்மிடம் கூறினார். நாம் PA கிட்ட பேச வரவில்லை  என்று கூறிவிட்டோம். ஒரு மணி நேரம் போனது. முதல்நாள் பேசிய அதே தாசில்தார் வந்தார். அவர் “சார் சப்-கலெக்டர் வந்திருக்கிறார் கலெக்டர் வர முடியாததால் கலெக்டரேதான் சப்-கலெக்டரை அனுப்பி இருக்கிறார் அவரிடம்  பேசலாம் அவரும் IAS தான்.” என்று அழைத்தார்.

பின்பு உறவினர்கள் ஒப்புதலுடன் நடந்த IAS தீபக் ஜேக்கப்புடனான பேச்சுவார்த்தையின்போது தாசில்தார், துணை தாசில்தார்கள் இருவரும், அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர். இவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. தடுப்பூசி போடும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ஏன் மீறினீர்கள்? UNICEF, WORLD HEALTH ORGANISATION பெயரில்தான் கலெக்டர் தந்த முகாம் அழைப்பு அட்டை உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலையே நீங்கள் மதிக்காதது ஏன்? என்றோம். “எனக்கே இப்படி தடுப்பூசி போட்டபின் கண்காணிக்கனும்ங்கற விதி தெரியாது. விசாரித்து நடவடிக்கை எடுக்கறோம்” என்றார் சப் கலெக்டர். உடன் வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கோ IAS களின் மீதான மதிப்பு சரிந்தது. அவர்களே வகுத்து கொண்ட விதிமுறைகளை அவர்களே மதிக்காமல் எதிராக தான் செயல்படுகின்றனர். இவ்வளவு தூரம் மனு தந்தும், 3வது நாளாக உடலை வாங்காமல் போராடியும் வரும் சூழலில் சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக ஆட்சி எவ்வளவு தரங்கெட்டுவிட்டது என்பதை உணர்த்துவதாக இந்த IAS ன் ஒப்புதல் வாக்குமூலம் இருந்தது.

ஒரு வாரத்திற்குள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் இன்று இரவே அதற்கான ஆணையை வெளியிடுகிறேன் என்ற உத்திரவாதம் தந்தார். மற்றபடி வீடு கட்டித்தருகிறேன். விதவைகள் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் கூறியதை மாணவியின் தாயார் அதை பொருட்டாக கூட எடுக்கவில்லை. சப்-கலெக்டரை பார்த்து கையை கூப்பி அடுத்து எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும் என்று கண்ணீர் தழும்ப கோரிக்கை வைத்தார். அதன் பின் உடலை பெற்றுச் சென்று எரியூட்டினர்.

இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த சமூகமே போராடவேண்டிய மிக முக்கிய பிரச்சினை. தூத்துக்குடியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அம்மை என்று கோரத்தாண்டவம் ஆடிவருவதற்கும், ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது. விதிகளை மீறிய மருத்துவர்களின் அலட்சியம் மட்டுமல்ல, தேவையற்ற மருந்தை நம் உடலில் கட்டாயமாக திணிக்கும் அரசின் சதியும்தான் இப்போதைய முக்கிய பிரச்சினை. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் காமாட்சி இறப்பையும் அரசின் அலட்சியத்தையும் மக்கள் மத்தியில் உடனடியாக துண்டு பிரசுரம் மூலம் கொண்டு சென்றோம். மக்கள் விரோத அரசின் ரூபெல்லா தடுப்பூசியின் சதி திட்டங்களை எதிர்த்து களம்காண தயாராகி வருகிறது மக்கள் உரிமை பாதுக்காப்பு மையம்.

பத்திரிக்கைகளில் வந்த செய்தி

தகவல்
அரிராகவன்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி.


ரூபெல்லா தடுப்பூசி போட்டபின் வந்த காய்ச்சலுக்கு மாணவி காமாட்சி பலி!

  • நம்மை தடுப்பூசியை போடும்படி தொடர்ந்து வலியுறுத்தியும் கட்டாயமாக்கியும் தான் நிறைவேற்றிவருகிறது அரசு!
  • தடுப்பூசி போட்டபின் எவ்வித கண்காணிப்பையும் செய்யாமல் மக்களுக்கும் விழிப்புணர்வூட்டாமல் புறக்கணித்ததன் விளைவாகவே சிறுமி பலி !
  • அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் உண்மையை சொல்லவில்லை மருத்துவர்கள்.
  • முதலில் டெங்கு என்றனர் ! ஆனால் குழந்தை இறந்த பின் மூளைக்காய்ச்சல் என்று செய்தி வெளியிடுகின்றனர்.
  • உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டிய வழிமுறைகளை நம் மருத்துவத்துறை அமல்படுத்தவில்லை.
    2016ல் தமிழகத்தில் ரூபெல்லா பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு புள்ளிவிவரம் தருகிறது. இது உண்மைதானே!
  • இங்கு இருக்கும் நோயான டெங்கு, பன்றிக்காய்ச்சல், போன்றவற்றை தடுக்க தீவிர முயற்சி எடுக்காமல், இல்லாத ரூபெல்லாவுக்கு இவ்வளவு அக்கறை காட்டுவது சந்தேகத்தை தருகிறது.
    இந்த தடுப்பூசி மருந்தில் மனிதர்களின் ஹார்மோன் வளர்ச்சியை தடுத்து மலடாக்கும் மருந்து இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளதே!
  • அரசு தடுப்பூசியை இலவசமாக வாரிவழங்கி வரும் பில்கேட்சின் “ கேட்ஸ் மெலிந்தா பவுண்டேசனின்” கடந்தகால உதவிகள் மாணவர்களை சோதனைச்சாலை எலிகளாக்கிய சதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது!
  • “குழந்தையின் நகைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அழைத்துவிட்டு “குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டேன் என்று எழுதி வைத்ததில் கையெழுத்து கேட்பது எதைக் காட்டுகிறது?
  • நம் சந்தேகங்களுக்கு பதில்தர வேண்டிய அரசு காவல்துறை உடலை எரிக்க வைக்க மட்டுமே வழிகாட்டுவது எதனால்?
  • சிறுமி காமாட்சியின் மரணத்துக்கு நீதி கிடைக்க போராடுவோம்!
  • எந்த விதிகளையும் மதிக்காமல் நம் உயிருடன் விளையாடும் அரசின் அலட்சியத்துக்கு முடிவு கட்டுவோம்!

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு 94435 84049

அடங்காத சுயமரியாதைச் சுடர் ஆறுமுகச்சாமி !

0
2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார்

க்தனாய் பாடவில்லை
சுயமரியாதை சித்தனாய்
கனகசபையில்
கனன்றெழுந்த உன் பாடல்,

எத்தனாய் திரிந்த
தீட்சிதக் கொட்டமடக்கி
அத்தனாய் வீற்றிருந்த
அம்பலத்தரசும்
உன்பலத்தால் ஆடியதை
உலகமே கண்டதய்யா
ஆறுமுகச்சாமி !

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார்

வேதியர் வடிவில்
நந்தனின் கனவில் வந்த
ஈசன்,
முதியவர் உருவில்
நீ முன்னேறியதைப் பார்த்து
ஜோதியில் கலக்காமல்
சுயமரியாதையில் கலந்தான்.

வாழ்ந்தால்
உம் போல் வாழ வேண்டும்
எந்த வடிவிலும்
இடையறாது போராட வேண்டும்.

பனித்த சடையும்
பவளம் போல் மேனியும்,
பார்ப்பனத் திமிருக்கெதிராய்
தெறித்த உன் சொல்லால்
தமிழினித்த உருவமாய்
தடுத்தாட் கொண்டாய்
ஆறுமுகச்சாமி !

எல்லோரும்
கடவுள் மேல்
பாரத்தை போடையில்,
கடவுள் பாரத்தை
உன் மேல்
போட்டுக்கொண்டாய் !

வியாபாரம் பார்த்த
வேதியக் கூட்டத்தை
தமிழ் தேவாரம் பாடி
தன்மானம் காட்டினாய்
தாவாரம் நின்று
தயங்கிய பக்தர்களுக்கு
சிற்றம்பல அவமானம் போக்கி
தமிழ் மானம் ஊட்டினாய் !

இரைஞ்சுதல்
இறை நெறி என்று
அடியார்கள் அடங்கையில்,
போராடுதல்
பொது நெறி
என எழுந்த உன் ஆளுமை
ஈசனுக்கும் வாய்க்கவில்லை !

சிவனடியார் ஆறுமுகச்சாமி
எவனடிக்கும் படியார்.
சிவனே
ஒரு தில்லைவாழ் அந்தணன்
என அவிழ்த்துவிட்டாலும்
சீறும்
சுயமரியாதை முடியார்.

ஆயிரம் முறை
ஆரியக் காட்டுமிராண்டிகள்
தள்ளிவிட்டாலும்
அம்பலத்தேற
மனம் ஒடியார்.

‘‍பொது தீட்சீதர்
கோயில் தனியார்’
எனும் அநீதிக்கெதிராக
அடங்கார்.
அய்யா ஆறுமுகச்சாமி
உம் போல் இனி யார் ?
விடையேறி  திருமேனியனுக்கும்
தமிழ் தடை உடைத்த கண்மணியே
நெற்றி‍யெல்லாம் திருநீறு
உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு
ஓயாதய்யா உன் போர் !

போற்றுதலுக்குரிய
உம் போராட்டக் குணம் பற்றி,
தமிழுணர்வின் சிற்சபை காட்ட
சுயமரியாதை அற்புதம் காட்ட
ஆயிரமாயிரம்
ஆறுமுகச்சாமிகள் வருவார் !

துரை. சண்முகம்

மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

1

எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன,
உடைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை!

பொதுக்கூட்டம்
தேதி: 15-04- 2017
நேரம்: மாலை 5 மணி
இடம்: திருத்துறைப்பூண்டி

போராடும் விவசாயிகளே, மீனவர்களே, மாணவர்களே, இளைஞர்களே !

நாம் ஒன்றிணைய வேண்டிய தருணமிது., விவசாயிகள் தற்கொலை, வறட்சி, தண்ணீர் பஞ்சம் என தமிழகமே சுடுகாடாக மாறி வருகிறது. நமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காகவும் அரசின் அழிவுத்திட்டங்களுக்கு எதிராகவும் கொதித்து எழுந்துள்ளோம்.

போராடும் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, எவ்வாறு மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி. மைதானத்தையும், முற்றுகையிட்டு தாக்கினரோ, அதே போல தமிழகம் முழுவதும் அதிரடிப்படையும், உளவுப்படையும் முற்றுகையிட்டுள்ளன. முக்கிய சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு போராடுவோர் தடுக்கப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம்தான் இந்த சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கை நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கு அலையும் பாலைவனமாக்கியுள்ளனர். கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக வளர்ச்சி என்ற பெயரால் மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர்.

நாடு முழுவதுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் மின் தேவைக்கான உற்பத்தி குவிமையமாக தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நமது காட்டுவளம், கடல்வளம், நீராதாரம், அனைத்தையும் சூறையாடுகின்றனர். அதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நிறுவப்படுகின்றன. இவற்றின் கழிவுகளால் நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகின்றன.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் 37 லட்சம் கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்திருக்கிறார்கள். சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறது மத்திய அரசு. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து நாடகமாடுகிறது.

அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை. கொள்ளையே குறியாக செயல்படுகிறார்கள். மக்கள் போராட்டங்களை வரிசைகட்டி ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இனி என்னதான் செய்வது? டாஸ்மாக்கிற்கு எதிராக கோர்ட் மூலம் தீர்வுகாண முடியாது. அதனால் விளக்குமாறு, செருப்போடு போய்தான் போராட வேண்டும் என தாய்மார்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

விவசாயிகளை கொன்று, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குகிறார்கள். இனியும் சகிக்க முடியாது. சோறு சாப்பிடும் அனைவரும் பதில் சொல்ல வேண்டும். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண இன்னும் எத்தனை விவசாயிகள் சாக வேண்டும்? மயிலே மயிலே என்றால் இறகு போடாது. வேறு வழியில்லை. புடுங்கிதான் ஆக வேண்டும்.

தனித்தனியான போராட்டங்களால் இனி தீர்வு காண முடியாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு மக்கள் போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். மக்கள் அதிகாரம்தான் ஒரே தீர்வு.

மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம் – 91768 01656

தில்லைக் கோவிலை மீட்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார் !

8

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களுக்கு எமது அஞ்சலி !

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் இன்று (8.4.2017) பிற்பகல் 2.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் நாளை (9.4.2017) பிற்பகல் 3 மணியளவில், சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் அடக்கம் செய்யப்படும்.

தமிழ் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் வழிபாட்டுக்காகவும், தில்லை தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உடமையான தில்லைக் கோயிலை மீட்பதற்காகவும் இறுதி வரை போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களுக்கு இறுதி அஞ்சலி!

இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ் மக்கள் திரளாக பங்கு கொள்ளுமாறு கோருகிறோம்.

  • மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
  • மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு

பத்திரிகைச் செய்தி

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய
சிவனடியார் ஆறுமுகசாமிக்கு எம் அஞ்சலி!

சிவனடியார் ஆறுமுகசாமி இன்று (8.4.2017) மதியம் இயற்கை எய்திவிட்டார். தில்லைக் கோயில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி கண்ட எளிய மனிதர் அவர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அவர் வந்தார். தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடிய தன்னை தீட்சிதர்கள் கையை முறித்து கீழே தள்ளிவிட்டார்கள் என்ற அவரது முறையீடு கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அவருக்குத் துணை நிற்க உறுதியளித்தோம்.

“தமிழ்நாட்டுக் கோயிலொன்றில் தமிழர்கள் தம் தாய்மொழியில் பாடி வழிபடக் கூடாது” என்று தடுக்கப்படும் அநீதியை தமிழகம் அறிந்திருக்கவில்லை. இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். அடுத்த நான்கு ஆண்டுகளில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் பாடும் உரிமைக்காக சிதம்பரத்தில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தியது. எல்லாப் போராட்டங்களிலும் முன் நின்றார் ஆறுமுகசாமி.

உயர் நீதிமன்றம் சென்றோம். “தேவார மூவரே சிற்றம்பலத்தில் நின்று பாடியது கிடையாது” என்று திமிர்வாதம் புரிந்தார்கள், தேவாரப் பதிகங்களை கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள்.  தடை பல தாண்டி தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டினோம். “பக்தர்கள் அனைவரும் சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடி வழிபடலாம்” என்று அறநிலையத்துறை ஆணை பிறப்பித்தது. அரசாணையின் படி பாடச்சென்ற சிவனடியாரை சிற்றம்பலத்தில் ஏற விடாமல், தீட்சிதர்கள் நடத்திய கைகலப்பையும், தாக்குதலையும் தொலைக்காட்சிகளில் கண்டு தமிழகமே கொதித்தது. அஞ்சிப் பணிந்தார்கள் தீட்சிதர்கள். ஆறுமுகசாமி சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடினார். தமிழ் வழிபாட்டுரிமை நிலைநாட்டப்பட்டது.

தில்லைக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருப்பதுதான் இத்தகைய அநீதிகளுக்கு காரணம் என்பதால், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான சட்டப்போராட்டத்தைத் தொடங்கினோம். வழக்கில் தீட்சிதர்களுக்கு எதிரான மனுதாரராக ஆறுமுகசாமி முன் நின்றார். “அறநிலையத்துறையிடம் தீட்சிதர்கள் கோயிலை ஒப்படைக்க வேண்டும்” என்று 2009 இல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம்.

உடனே போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவிடம் முறையிட்டார்கள் தீட்சிதர்கள். சுப்பிரமணியசாமியின் தலையீட்டால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மிக விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் கள்ளத்தனமான ஒத்துழைத்தது ஜெ அரசு. கோயிலை தீட்சிதர்களுக்கே உரிமையாக்கி ஜனவரி 2014 இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி மனமுடைந்தார். இத்தகையதொரு அநீதியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க முடியும் என்ற அதிர்ச்சியை அவரால் தாங்கமுடியவில்லை.

சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை. அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.

சிற்றம்பலத்தில் நின்று அனைவரும் தேவாரம் பாடும் அரசாணையைப் பெற்ற பின்னரும், தன்னைத் தவிர யாரும் அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லையே என்று அவர் பெரிதும் வருந்தினார். “போராடிப் பெற்ற உரிமை பயன்படுத்தப்படாத காரணத்தால் பறிபோய்விடக் கூடாதே” என்று கவலைப்பட்டு, தள்ளாத வயதிலும், தட்டுத்தடுமாறி மெள்ள நகர்ந்து சென்று, சிற்றம்பல மேடையேறி, தனது நடுங்கும் குரலில் பாடி வழிபட்டு வந்தார். நடக்கவே முடியாத நிலை எய்தும்வரை அவர் அயரவில்லை. அவர் போராடிப் பெற்ற உரிமையைப் பயன்படுத்துவதுதான் பக்தர்கள் அவருக்குச் செலுத்தக் கூடிய நன்றி.

குறிக்கோளில் வெல்லும் வரை அவர் ஓய்ந்ததில்லை. மற்றவர்களை ஓயவிட்டதும் இல்லை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது. இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

இவண்,

மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
8.4.2017

*******

(தில்லைக் கோவிலில் தமிழில் பாட முடியாது என்ற நிலையை சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள், ம.க.இ.க மற்றும் ம.உ.பா.மை உதவியுடன் மாற்றிய வரலாறு இது. இன்று அவரது மறைவை ஒட்டி அந்த போராட்ட வரலாற்றை நினைவுகூரும் பொருட்டு 2008-ம் ஆண்டில் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே பகிர்கிறோம்)

தில்லைச் சிற்றப்பலத்தில் தமிழ்:வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!

2008 மார்ச் 2 -ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றப்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். “திலைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை ஆறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை. கலவரத்துக்கும் தீட்சிடப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்ததுக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்த்தை மட்டும்தான் பார்க்க முடிந்த்து.

ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சிலநூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. “தில்லைவாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை… இல்லை… இல்லவே இல்லை…” என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும் தான்.

அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிகழ்வைப் பார்க்காத அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டிருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கே நடந்தது ‘வழிபாடு’ அல்ல, போராட்டம்!

‘சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குவதாக’ கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை ‘வழிபடவில்லை’. வழிபட முடியவும் இல்லை. அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும் தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.

நேர்ப்பொருளிலும் இது தான் உண்மை. ஆறுமுகசாமி வாய் திறந்தவுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிகர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண்முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.

ம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள் “அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதந்தான்” என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்றுவரை நிலைநாட்டிவரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களுக்கு பாத்தியதை கொண்டாடி வரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொளைக்களமாகவும், ராஜகோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிகர்கள்,

பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை – கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் – இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.

எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்கவிடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.

இது இறுதி வெற்றியல்ல, முதல் அடி மட்டுமே என்பதென்னவோ உண்மைதான். ஆனால் முதல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராசராசனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது என்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டைதான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆனையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத் தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. “தீட்சிதர்கள் – போலீசு கைகலப்பு” பிறகு “ஆறுமுகசாமியின் ஆதரவாளர்கள் – போலீசு கைகலப்பு”, “தீட்சிதர்கள் 11 பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35 பேர் – ஆக மொத்தம் 46 பேருக்கு சிறை!” இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! – இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுகசாமிக்குத் துணை நின்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள் தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச்2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடைகண்டுவிடமுடியும்.

நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1-ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே “மார்ச் 2-ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்” என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.

கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப் பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?

சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றப்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. ‘பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது’ என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம் தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகத்துக்கே ஒளிபரப்பப்பட்டது.

காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, ‘போதும் பக்த‌னே போதும்’ என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியை நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.

சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் ‘கண்ணால் காண்பது பொய்’என்ற முதுமொழிக்கு மிகப் பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருந்தது.

……………………………………………

தை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. “சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல்துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர்மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்” என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.

“நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்கமுடியாது” என்றனர் போலீசு அதிகாரிகள். “ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்” என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கூறினார். ஆனால் “அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது, கலைந்து செல்லுங்கள்” என்றார் ஆர்.டி.ஓ. “மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது” என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.

உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறிக் கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.

சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிக்கைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கின்றன. “போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்” என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களையும் வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.

அதே போலீசு அன்று மாலை தோழ‌ர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக் கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!

‘ச‌ம‌ஸ்கிருத‌த்துக்கு ஒரு நீதி த‌மிழுக்கு ஒரு நீதி’ என்ப‌தைக் க‌ளைவ‌த‌ற்காக‌ப் போட‌ப்ப‌ட்ட‌ ஒரு அர‌சாணை! அத‌னை அம‌ல் ப‌டுத்த‌க் கோரினால்      ‘சூத்திர‌னுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி’ என்ற‌ அதைவிட‌ப் பெரிய‌  அர‌சாணை அம்பலமாகிற‌து! “த‌மிழ் பாட‌லாம்” என்று ஆணையிடுகிற‌து அர‌சு. “அதை அம‌ல்ப‌டுத்த‌ உத்திர‌வாத‌ம் த‌ர‌முடியாது” என்று அந்த‌க் கோயிலின் வாச‌லிலேயே நின்று பிர‌க‌ட‌ன‌ம் செய்கிறார் ஆர்.டி.ஓ. “அம‌ல்ப‌டுத்து” என்று கேட்ட‌ எம‌து தோழ‌ர்க‌ள் போலீசு வேனுக்குள் இர‌வு முழுவ‌தும் வைத்துப் பூட்ட‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மார்ச் 2-ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை ந‌க‌ர‌ வீதிக‌ளில் நாய‌கனாக‌ப் ப‌வ‌னிவ‌ந்த‌ ஆறுமுக‌சாமி அன்று மாலையே ‘அவ‌ருக்கு உரிய‌’ இட‌த்துக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு விடுகிறார். “என‌க்காக‌ப் போராடிய‌ பிள்ளைக‌ளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!” என்று               த‌ன்ன‌ந்த‌னிய‌னாக‌ போலீசு நிலையத்தின் முன் ம‌றிய‌ல் செய்கிறார். காலையில் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் போராட்ட‌ம்! மாலையில் போலீசு நிலையத்தின் முன் போராட்ட‌ம்!

பார்ப்ப‌ன‌த் திமிரையோ, போலீசின் அராஜ‌க‌த்தையோ, இந்த‌ அர‌சின் இர‌ட்டை வேட‌த்தையோ அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ம‌ட்டும் இவ‌ற்றையெல்லாம் விவரிக்க‌வில்லை. இதுவரை விவ‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஒரு கொடுமையை, பல‌‌ர் ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் ஒரு எதார்த்த‌த்தை, ந‌ந்த‌னின் உள்ள‌த்தை எரித்திருக்க‌க் கூடிய‌ அந்த‌ உண்மையை வாச‌க‌ர்க‌ள் உண‌ர‌ச் செய்வதற்காகத்தான் இவ‌ற்றை விவ‌ரித்தோம்.

……………………………………………..

‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் நுழைய‌க்கூடாத‌ கோயிலுக்குள் நுழைய‌க் கன‌வு க‌ண்ட‌ ந‌ந்த‌னை ‘கிறுக்க‌ன்’ என்று அவ‌னுடைய‌ சொந்த‌ சாதிகார‌ர்க‌ளே ஏள‌ன‌ம் செய்திருக்க‌க் கூடும். ‘திமிர் பிடித்த‌ மூட‌ன்’ என்று பார்ப்ப‌ன‌ உயர்சாதிக்கார‌ர்க‌ளே ஏள‌ன‌ம் செய்திருக்க‌க் கூடும். கேட்பாரில்லாத‌ அநாதையாய் அவ‌ன் அந்த‌ ஆலைய‌த்தின் வாயிலில் எரிந்திருக்க‌க் கூடும்.

நூற்றாண்டுக‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌. கால‌ம் மாறிவிட்ட‌து. அர‌சும் ஆணையிட்டு விட்ட‌து. ஆனால் மார்ச் 2-ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எம‌து தோழ‌ர்கள் ர‌த்த‌ம் சொட்ட‌ச் சொட்ட‌த் தாக்கிக் கைது செய்யப்ப‌ட்ட‌ பிற‌கு, அந்த‌ ந‌ந்த‌னைப் போல‌வே, கேட்பார‌ற்ற‌ அநாதையாக‌, நந்த‌ன் எரிந்த‌ அதே வாயிலில் ஆறுமுக‌சாமியும் அம‌ர்ந்திருந்தார். ‘என்னை எரித்துக் கொல்’ என்று ந‌ந்த‌ன் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் ம‌ன்றாட‌வில்லை. ஆறுமுகசாமியோ ‘என்னைக் கைது செய்’ என்று போலீசிட‌ம் போராடினார். நீதிம‌ன்ற‌த்தில் ம‌ன்றாடினார். ஏனென்றால் நாங்க‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌பின் அவருக்குத் துணை நிற்க‌ அங்கே யாரும் இச்லை. த‌மிழுக்குத் துணை நிற்க‌ ஒரு த‌மிழ‌னுமில்லை. ப‌க்த‌னுக்குத் துணை நிற்க‌ ஒரு ப‌க்த‌னுமில்லை.

ஆறுமுக‌சாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப் போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்…! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி.

தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் ‘திருச்சிற்றம்பலத்தை’ மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்கர்கள் அல்ல. திருமறையில் ஒருவரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!

எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழகத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பலமேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்கமுடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்கமுடியாது.

கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மைதான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. கசப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.

இந்த உண்மையைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். “யாருக்கும் பிரச்சினை இல்லை, இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்ச்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!

இந்த‌ உண்மையின் கார‌ண‌மாக‌த்தான் ந‌ந்த‌ன் நுழைந்த‌ தெற்கு வாயிலை அடைத்து தீட்சித‌ர்க‌ள் எழுப்பிய‌ தீண்டாமைச் சுவ‌ர் இன்னும் நின்று கொண்டிருக்கிற‌து. சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழ் ஏற‌லாமென்ற‌ அர‌சாணை வந்த‌பிற‌கும், த‌மிழ‌ர்க‌ள் கிடைக்காம‌ல் அந்த‌ மேடை த‌வித்துக் கொண்டிருக்கிற‌து.

இத்த‌னைக்குப் பிற‌கும் ஆறுமுக‌சாமியின் போராட்ட‌த்தைத் தொட‌ர்வ‌த‌ற்கு அடுத்தொரு ‘சாமி’ வ‌ர‌வில்லையென்றால், எந்த‌ச் சாமியின் மீதும் பூத‌தின் மீதும் ந‌ம்பிக்கையில்லாத‌ க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் அந்த‌ மேடைமீது ஏறிநின்று “உல‌கெலாம் உண‌ர்ந்தோத‌ற்க‌ரிய‌வ‌ன்” என்று பாட‌ வேண்டியிருக்கும். அது இன்னொரு வ‌ர‌லாற்றுச் சாத‌னையாக‌ அமைய‌ நேரிடும்.

அத்த‌கைய‌தொரு ‘சாத‌னை’ த‌மிழ‌க‌த்துக்கு நிச்ச‌ய‌ம் பெருமை சேர்க்காது. எங்க‌ளுக்குச் சிறுமையும் சேர்க்காது.

  • புதிய ‌க‌லாச்சார‌ம், மார்ச், 2008

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

1

மீபத்தில் தோழர் ஒருவரது நண்பருக்கு திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சிறு நகரத்தில் நடைபெற்ற திருமணம் அது. மணமக்கள் விவசாயப் பின்னணியைக் கொண்டவர்கள். மணமகனுக்கு சென்னையில் வேலை. மணமக்கள் குடும்பத்தினருக்கு நேரடியாக எமது அரசியல், பத்திரிகைகள், அமைப்புக்கள் பரிச்சயம் கொண்டவர்கள் அல்ல. மணமகனின் நண்பரான அந்த தோழர் அவ்வப்போது அவரிடம் அரசியல் பேசுவதோடு சரி.

இருப்பினும் இந்த திருமணத்திற்கு வருகை தருவோருக்கு மணமக்கள் சார்பில் புதிய கலாச்சாரம் புத்தகங்களை பரிசாக வழங்கலாமே என்று கேட்டதும் ஒத்துக் கொண்டார். அவ்வண்ணமே திருமணத்திற்கு வந்த மக்களுக்கு அவரது சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அனைவரும் வித்தியாசமான இந்த பரிசை விரும்பி வாங்கினர். எனினும் நண்பர் தீர்மானித்திருந்த எண்ணிக்கை விரைவிலேயே காலியாகி பலர் புத்தகங்கள் கிடைக்கவில்லையென வருத்தப்பட்டனர்.

வழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் இப்படியும் ஒரு பரிசு கொடுக்கலாம். முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இது அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் இத்தகைய முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.

ஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.

குறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம். இந்த ஏப்ரல் 2017 வரை 22 நூல்களை வெளியிட்டுள்ளோம்.

இருபது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே இருபது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.

இது வரை வெளிவந்த 22 நூல்களும் 22 விதமான தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல், மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.

ஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி
புதிய கலாச்சாரம்
மே 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 18 புத்தகங்கள்

 

குற்றங்களின் அம்மா

புதிய கலாச்சாரம்
ஜூன் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 148 புத்தகங்கள்

 

   

பன்றித்தீனி
புதிய கலாச்சாரம்
ஜூலை 2015

விலை: ரூ.20

கையிருப்பு : இல்லை

 

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்
புதிய கலாச்சாரம்
ஆகஸ்ட் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 22 புத்தகங்கள்

 
   

அறிவியலா ? இறையியலா ?
புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 18 புத்தகங்கள்

 

எது காதல் ?
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 20 புத்தகங்கள்

 
   

ஊடகங்களை நம்பலாமா ?
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 80 புத்தகங்கள்

 

ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2015

விலை: ரூ.20

கையிருப்பு :  233 புத்தகங்கள்

 
   

அகதிகளா தலித் மக்கள் ?
புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2016

விலை: ரூ.20

கையிருப்பு : இல்லை

 

காவி பயங்கரவாதம்
புதிய கலாச்சாரம்
மார்ச் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : இல்லை

 
   

பெண் : வலியும் வலிமையும்
புதிய கலாச்சாரம்
மார்ச் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : இல்லை

 

தொழிலாளி : வியர்வையின் மணம்
புதிய கலாச்சாரம்
ஜுன் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 100  புத்தகங்கள்

 
   

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ?
புதிய கலாச்சாரம்
ஜுலை 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 100 புத்தகங்கள்

 

உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி !
புதிய கலாச்சாரம்
ஆகஸ்ட் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 108  புத்தகங்கள்

 
   

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…
ஹீரோவா ஜீரோவா…?

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 126 புத்தகங்கள்

 

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 211 புத்தகங்கள்

 
   

நுகர்வு – கழிவு – பண்பாடு
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 210 புத்தகங்கள்

 

விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம்
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 40 புத்தகங்கள்

 
   

மோடியின் டிஜிட்டல் பாசிசம்
புதிய கலாச்சாரம்
சனவரி 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 104 புத்தகங்கள்

 

விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ?
புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 161 புத்தகங்கள்

 
   

எதிர்த்து நில் !
புதிய கலாச்சாரம்
மார்ச் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 330 புத்தகங்கள்

 

கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் !
புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 180 புத்தகங்கள்

 

புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:

இதழ்களுக்கான தொகையை அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

இதழ்களுக்கான தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

சத்தியபாமா பல்கலைக் கழக தொழிலாளிகளின் போனஸ் வழக்கு வெற்றி !

0

சத்தியபாமா பல்கலைக் கழகத் தொழிலாளிகள் போனஸ் வழக்கு உயர்நீதிமன்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வெற்றி !

சென்னை செம்மஞ்சேரி OMR சாலையில் இயங்கிவரும் ஜேப்பியாருக்குச் JPR சொந்தமான சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் மாணவ – மாணவிகளை ஏற்றிவரும் வாகன ஓட்டுநர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் மற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் என அனைவரையும் நிர்வாகம் கொத்தடிமைகளாக நடத்தி வந்தது. இவர்களுக்கு தொழிலாளர் தகுதிகள் ஏதுமின்றியும், உரிமைகள், தற்காலிக விடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு என எதுவும் முறைப்படி வெளிப்படையாக அறிவிக்காமல் நடத்தியது நிர்வாகம். தனக்கு ஏற்படும் தற்செயல் பிரச்சினைகளுக்குக் கூட விடுப்பு எடுக்க இயலாமல் இதுபற்றி கேட்கவும் முடியாமல், கேட்பாரற்ற நிலையில் இந்தத் தொழிலாளிகள் இருந்தனர்.

கல்வி கொள்ளையன் ஜேப்பியார்
கல்வி கொள்ளையன் ஜேப்பியார்

இந்த கொத்தடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு தொழிற்சங்கத்தைத் தொடங்க முடிவு செய்தார்கள் தொழிலாளிகள். இதற்காக 2006 இல் பெருங்குடி வட்டார CITU தொழிற்சங்கத்தை அணுகி கேட்டபோது, அவர்கள் உங்கள் நிர்வாகம் தொழிற்சாலை நடத்தவில்லை, கல்வித் தொழில் செய்கிறார்கள். அது சேவைக்குரிய தொழில் என்பதால் அங்கு தொழிற்சங்கம் கட்ட முடியாது என அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். இப்போது CITU-வும் சில கல்வி நிறுவனங்களில் தொழிற்சங்கம் கட்டிச் செயல்படுகின்றனர்.

இதை ஏற்க மறுத்தத் தொழிலாளிகள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிடம் வந்தனர். இவர்கள் பிரச்சினையைக் கேட்டு சங்கம் சேரலாம் என உணர்வூட்டி உறுப்பினராக்கியது புஜதொமு. பிறகு, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம் என பதிவு எண் 3103/CNI என்ற சங்கத்தைப் பதிவு செய்து இதன் மூலம் நிர்வாகத்திற்கு கோரிக்கைகளைக் கொடுத்தது.

இதனால் கொதிப்படைந்த சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சேர்மன் திரு. ஜேப்பியார் அவர்கள் சங்கத்தின் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியனை தடாலடியாக வேலைநீக்கம் செய்து தொழிலாளர்களை பணியவைத்து தொழிற்சங்கத்தை கலைக்க முற்பட்டார். இருந்தும் மற்ற நிர்வாகிகள் மூலம் சங்கம் உறுதியாக நின்றதால் அடுத்த கட்டமாக ஆத்திரம் கொண்டு சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னணியாளர்கள் என 20 தொழிலாளிகளை தொடர்ந்து சட்டவிரோத வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதன் பேரில் தொழிலாளர் ஆணையத்தில் தாவா எழுப்பியதும் முன்னுக்குப் பின் முரணாக அனைவர் மீதும் கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு புகார்களை ஜோடித்து, உள்துறை விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார்கள். தொழிலாளர்களை சங்கமாக்க வேண்டாமென்று பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த ஜேப்பியார் அவர்கள் சுயநிதி கல்லூரி முதலாளிகளின் சங்க செயலாளராக இருந்தார். இப்பொழுது அவரது சகபாடியான RMK & RMD கல்விக் குழும முதலாளி திரு. R.முனிரத்தினம் என்பவர் செயலாளராக செயல்படுகிறார். இவரது கல்லூரிகளிலும் தொழிலாளர் மீதான அனைத்து அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

உள்துறை விசாரணை அதிகாரிகள் அனைவரும் தொழிலாளர் நலத்துறையில் ACL, DCL, JCL என்ற பதவிகளில் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு தம்பிதுரை (ACL ஓய்வு). திரு அருணாச்சலம் (ACL ஓய்வு), திரு சந்திரமோகன் (JCL ஓய்வு), திரு ரவீந்திரன் (JCL ஓய்வு) ஆகியோர் ஆவர். இந்த தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மூலம் தொழிலாளிகள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்து வேலைநீக்கம் சரியென உறுதி செய்தார்கள். தொழிலாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இந்த மேற்படி அதிகாரிகளின் ஆலோசனைப்படியே ஜோடிக்கப்பட்டவை. தாங்கள் ஜோடித்தவைகளையே அவர்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்வு எழுதினார்கள். இவர்கள் இந்த நிர்வாகம் மட்டுமின்றி இதுபோன்ற சுயநிதி கல்லூரிகள், தொழிற்சாலை முதலாளிகள் என முதலாளிகளுக்கு ஆலோசகர்களாக இருந்து தொழிலாளர்களின் உரிமைப்பறிப்புக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். மேற்கண்ட துரோகிகள் இன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்படியான தரகு வேலைகள் செய்து வருகின்றனர்.

தொழிலாளிகள் மீது நிரூபித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இதில் முதல் வழக்கான தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் தவறானது என தொழிலாளர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் பின் சம்பளத்துடன் பணி வழங்க ஆணையிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலைக்கு எடுத்துக்கொண்ட நிர்வாகம் தோழருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் வெறுமனே மரத்தடியில் உட்கார வைத்தது. அது மட்டுமின்றி மற்ற தொழிலாளர்களுடன் இவர் பேசாமலிருக்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு கங்காணியாக Transport incharge திரு முகமது கரிமுல்லா என்பவரை நியமித்தது நிர்வாகம். இவர் மூலம் 3 நாட்கள் தொடர்ந்து தகாத வழியில் இம்சிக்கப்பட்டதால் எதிர்த்துக் கேட்ட தோழர் வெற்றிவேல் செழியனை இழிவான வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தினார்கள். பதிலுக்கு இவரும் பேசவே, தள்ளுமுள்ளாகியது.

இதனை வைத்து இந்த கருங்காலியை அடித்துவிட்டதாக போலீசில் புகார் செய்து கிரிமினல் வழக்குப் போடப்பட்டது. இதில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் அப்போதைய செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் திரு சிவக்குமார் என்பவர் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை, தன்னால் இதில் எதுவும் செய்ய இயலாது, எல்லாம் மேலிருந்து நடக்கிறது என அவர்கள் சொல்லும் வேலையையே செய்தார். நமது தோழர்கள், வழக்குரைஞர்கள் என 50 பேர்களுக்கும் மேல் இருந்தும் 10க்கும் மேற்பட்ட உளவுப்பிரிவு  சஃபாரி போட்ட போலீசு கும்பல் மூலம் திடீரென ஒரு காரில் 4 கதவுகளையும் திறந்து வைத்து, ஒரு கடத்தல் கும்பலைப் போல நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொண்டு தோழர் வெற்றிவேல்செழியனை கடத்திச் சென்றார்கள். எங்கு கொண்டுச் சென்றார்கள் என்ற விவரம் கூட தெரிவிக்கவில்லை. மாலை 4 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இரவு 10 மணிக்கு இது போன்ற ஏற்பாட்டைச் செய்து உளவுப் பிரிவு போலீசு ஜேப்பியாருக்கான ‘சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சேவை செய்து’ தோழர் வெற்றிவேல் செழியனை சிறையிலடைத்தது.

சத்தியபாமா பல்கலைகழக வளாகம்
சத்தியபாமா பல்கலைகழக வளாகம்

தோழர் வெற்றிவேல் செழியனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முகம்மது கரிமுல்லாவுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க தனது பணபலத்தால் போலீசு உதவியுடன் முயற்சித்தார்கள். அன்றைய மருத்துவர், அவருக்கு ஒன்றுமில்லை என மருத்துவத்தை முடித்து அனுப்பி வைத்துவிட்டார். இந்த கருங்காலி கரிமுல்லாவை தாம்பரம் சரஸ்வதி தனியார் மருத்துவமனையில் சேர்த்து பிறகு பாதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவ பராமரிப்பில் உள்ளார் என மறைமுகமாக வைத்து ஏமாற்றினார்கள்.

அவர் டிஸ்சார்ஜ் ஆனால்தான் பெயில் கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தில் போலீசு பெயில் கொடுக்காமல் இழுத்தடித்தது. இதனை கண்டுபிடித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் உதவியுடன் தாம்பரம் சரஸ்வதி மருத்துவமனை நிர்வாகத்தை நேரில் அணுகியபோது, அவருக்கு ஒன்றுமில்லை, அவருக்கு பெட் ரெஸ்ட் வேண்டுமென எங்கள் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். மற்றபடி எங்களுக்கு உள் விவகாரங்கள் எதுவும் தெரியாது என்று கூறிய நிர்வாகம் உடனே அவரை அரைமணி நேரத்தில் வெளியேற்றியது மருத்துவமனை நிர்வாகம். இதற்கடுத்த நாள் போலீசின் வேசம் கலைந்து பெயில் கொடுக்கப்பட்டது.

இது போன்ற எல்லா நெருக்கடிகளையும் எமது சங்க உறுப்பினர்கள் உறுதியாக நின்று நிர்வாகத்திடம் தங்களது நியாயமான உரிமைகளுக்காக தொடர்ந்து சட்டபூர்வ வழிகளில் போராடி வந்தனர். இந்தப் போராட்டங்களால் அனைவருக்கும் நிர்வாகம் மூலம் பணிநிரந்தர ஆணை வழங்கப்பட்டது. அடுத்தபடியாக ESI மருத்துவப் பாதுகாப்பிற்கு சேர்க்க நிர்வாகம் மறுத்ததால் ESI நிர்வாகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் மீது நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. தொழிலாளர் தரப்பு நிர்வாகத்தின் தடையாணைக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இதேபோல் தொழிலாளர் ஆய்வாளர் மூலம் தொழிலாளர்களுக்குரிய ஆவணங்களை பராமரிக்கும்படி தாவா மூலம் செய்யப்பட்டது. இதிலும் நிர்வாகம் பரங்கிமலை நீதிமன்றத்தில் 3 முறை தண்டத் தொகை கட்டியுள்ளது. இருந்தும் இன்னாள் வரை முறையான ஆவணங்களை பராமரிக்காமல் இழுத்தடித்து வருகிறது. போனஸ் கோரி சட்டபூர்வ போராட்டங்கள் நடத்தி அடுத்த கட்டமாக 2014 முதல் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் (tribunal) வழக்காடினார்கள். போனஸ் பெறுவதற்கான தங்கள் நியாயத்தை தமது வழக்குரைஞர்களான திரு பாலன் ஹரிதாஸ், திரு காமாட்சி சுந்தரேசன் மூலம் வாதாடினர். இதன் பேரில் தொழிலாளர் தீர்ப்பாயம் 24.03.2017 இல் இந்த வழக்கில் தொழிலாளர் தர்ப்பு நியாயங்களை ஏற்று போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.

கட்டணக் கல்வி சேவையாகாது. கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களே கல்வியுடன் உபதொழில்களாக பேருந்து போக்குவரத்து, உணவு விடுதி, தங்கும் விடுதி, சுற்றுலா.. . என அனைத்திற்கும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் கட்டாய வசூலில் தனியார் பள்ளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நுற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள், பல கோடிகளில் சொத்து வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இந்த கல்வி முதலாளிகள் வளர்ந்து வருவதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றத்தில் எடுத்து வைத்ததன் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர் தீர்ப்பாயம் தொழிலாளர்க்கு போனஸ் உரிமை நியாயமானது எனக்  கூறியது.

எமது தொழிற்சங்கத்தை உடைக்க தொழிலாளிகளை தனித்தனியாகப் பேசி நிர்வாகம் கலைக்க முயற்சித்தது. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளை சட்டவிரோத வேலைநீக்கம் செய்து பழிவாங்கியதால் தொழிலாளிகள் அஞ்சுவார்கள் என எண்ணி ஏமாந்தது. அடுத்த கட்டமாக வெல்பர் அசோசியேசன் என்ற ஒரு ஸ்பான்சர் சங்கத்தை உருவாக்கி தொழிலாளர் சங்கம் என கூறி இந்தச் சங்கத்தில் உறுப்பினராகும் தொழிலாளிக்கே வருடந்தோறும் கல்விச் சலுகை கிடைக்கும் எனக் கூறி கட்டாயத்தின் பேரில் ஒரு பகுதி தொழிலாளர்களை பிரித்து அவர்களுக்கு நிர்வாகம் ID கார்டை மஞ்சள் நிறத்தில் வழங்கியது. எமது சங்க தொழிலாளிகளுக்கு ID கார்டை சிவப்பு நிறத்தில் வழங்கி பேதம் பிரித்தது, மஞ்சள் கார்டு தொழிலாளிகளுக்கு சில சொற்ப சலுகைகளை வழங்கிய நிர்வாகம், அவர்களை செல்லப்பிள்ளைகளாக அரவணைத்துப் பேசுவது அவர்கள் கேட்கிற ரூட்டு, விடுப்பு என வழங்கி தங்கள் கைப்பாவையாக வைத்திருக்கின்றனர். இருந்தும் நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கு பலியாகாமலும், தங்களது சுயமரியாதையை இழக்காமலும், சோரம் போகாமலும், தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர், எமது சங்கத் தொழிலாளிகள்.

இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள்
இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்கள்

1980-களில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க-வின் முதற்சுற்று கட்சிப் பெரும்புள்ளிகளாக இருந்த திரு ஜே.பங்கராஜ் என்கிற ஜேப்பியார், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் திரு ஐசரி கணேசன், காரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் இயங்கும் RMK, RMD கல்வி குழுமத் தலைவர் ஆர்.முனிரத்தினம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக குழுமம் ஏ.சி.சண்முகம் போன்றவர்களால் தனியார் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது. அதேபோல் SRM., SRE குழுமத்தின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர், தனலெட்சுமி சீனிவாசன் குழுமம், சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் இவை தவிர்த்து அமிர்தானந்த மாயி, சத்திய யோகி, சங்கராச்சாரி, கிறித்துவ மெஷினரிகள், முசுலீம் ட்ரஸ்ட்கள் என பலரும் இந்தத் தொழிலில் கோடிகளில் லாபமீட்டும் கார்ப்பரேட் பணக்காரர்களாக பல்கிப் பெருகி கல்விக் கொள்ளையர்களாக இருந்து வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட தனியார் கல்வி, தொழிற்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.

இவர்கள் கல்வி வியாபாரத்தில் கொழுத்த பணக்காரர்களாக இருந்து கொண்டு இதில் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமற்ற கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். இதற்கான நியாயத்தை தொழிற்சங்கம் மூலம் கேட்டபோது, இவர்கள் கல்வி சேவை செய்வதாகக் கூறுகிறார்கள். இதற்கு தொழிலாளர்களை தங்கள் வாழ்க்கையையும் உரிமைகளையும் இழந்து சேவையாற்ற கோரி நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்.

ஜேப்பியாரின் குழுமம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சேவை என்ற பேரில் அனைத்து கல்வி முதலாளிகளும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிலாளர்களை உரிமைகளற்ற கொத்தடிமைகளாகவே இந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், IT கம்பெனிகளில் பேருந்து ஓட்டுநர்களாக பணிபுரியும் சுமார் 1 லட்சம் தொழிலாளிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று பேருந்திலேயே படுத்திருந்து அந்த வாரம் முழுவதும் பேருந்துள்ளேயே தனது வாழ்க்கையை நடத்தி சனிக்கிழமை இரவு வீடு சென்று மீண்டு ஞாயிறு மதியம் தனது பேருந்துக்கே வந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இரவும் பகலுமாக இந்தப் பேருந்துக்குள்ளேயே வாழ்ந்து பராமரித்து கொத்தடிமைகளாக வாழும் இவர்கள் தமது குடும்பம், பிள்ளைகளை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பார்த்து வர முடிகிறது. மற்ற 6 நாட்களில் ஒவ்வொரு 24 மணி நேரமும் தொடர்ந்தார்போல் பேருந்தை இயக்குவது, பராமரிப்பது, பாதுகாப்பது என கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பெறும் ஊதியமும் அடிப்படைச் சம்பளத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. செங்கல் சூளைகளில், விவசாயப் பண்ணைகளில் கொத்தடிமைகளை மீட்பதாக்க் கூறும் அரசும் தொழிலாளர் நலத்துறையும் இந்த கல்லூரிகள், IT நிறுவனங்களில் படித்து ஒரு தொழிலை செய்யும் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள வாகன ஓட்டுநகர்களைப் பற்றி இன்றுவரை பேச மறுத்து வருகிறது.

இவ்வாறே கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ESI சட்டத்தின் கீழ் மருத்துவ பாதுகாப்பு கொடுக்க முடியாது என அடாவடியாக மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் இந்த நிறுவனங்களை ESI சட்டப்படி சேரக்கேட்டதின்பேரில் 400-க்கும் மேற்பட்ட கல்வி முதலாளிகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி மறுத்து வருகின்றனர். ESI நிர்வாகம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கல்வி நிறுவனங்களுடனும் வழக்கு நடந்து வருகிறது.

சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு எதிராக ESI கட்டக்கோரி புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றம் டெனிஷியன்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்த ஒரு வழக்கு மட்டுமே தொழிற்சங்கம் மூலம் ESI இல் தொழிலாளர்களுக்காக நடந்து வருகின்றது. மற்றவை அனைத்தும் ESI நிர்வாகத்திற்கும் கல்வி நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே நடைபெற்று வருகிறது.

கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் தகுதி, உரிமைகள், போனஸ், ESI. சம்பளத்துடன் கூடிய விடுப்பு என அனைத்திற்கும் நமது சங்கம்தான் உரிமை கோரி வந்தது. இந்த தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க தொழிற்சங்கம் கட்டியதும் நாம்தான். இதன் முதல் வெற்றியாக போனஸ் வழக்கு தீர்ப்பைப் பெற்றுள்ளோம். 80-களுக்குப் பிறகு உருவான தனியார் வேலைவாய்ப்பில் லட்சக்கணக்கான தொழிலாளிகள் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் உரிமைகளற்ற நிலையில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு அரசே நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்திற்கும் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. இவர்களின் உரிமை நசுக்கப்படுவதை முறியடிக்க வேண்டும். அவர்கள் தொழிலாளிகள்தான் என்ற வரையறையில் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

இந்த போனஸ் தீர்ப்பிற்கு எதிராக கல்வி முதலாளிகள் செயல்படுவதை நிறுத்த, தொழிலாளிகள் போனஸ் பெற, அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க என அனைத்திற்கும் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்த புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவல் விடுகிறது.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்
இணைப்பு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சத்தியபாமா பல்கலைக் கழகக் கிளை

***

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கத்தின் சுற்றறிக்கை

ன்பார்ந்த தொழிலாளர்களே நமது சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நாம் தொழிலாளர்களாக அங்கிகாரம் பெறவும் பணிநிரந்தரம், தற்காலிக விடுப்பு முறையான வார விடுமுறை, மருத்துவ பாதுகாப்பு (EST) போனஸ், தொழிலாளர் என்பதற்கான ஆவணங்கள் (ரெக்காட்ஸ்) பராமரிப்பது, நமக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் ரசீது பெறுவது போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமை அனைத்தும் நாம் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னிஸியன்கள் சங்கம் என்ற சங்கத்தை துவங்கி கோரிக்கை வைக்கப்பட்டதின் அடிப்படையில் பெற்று வருகிறோம்.

இதற்காக 20-க்கும் மேற்ப்பட்ட முன்னணி தொழிலாளர்கள் வேலையை இழந்தும் போராடி வருவது தாங்கள் அறிந்ததே இந்த ஒற்றுமையை கலைக்க நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் செய்து சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் என்ற சங்கத்தை உருவாக்கி ஒரு பகுதி தொழிலாளர்களை பிரிவினை முலம் எதிராக வைத்துள்ளது. தொழிற்சங்க சட்டத்தின் படி தொழிலாளர் சங்கமாக சத்யபாமா பல்கலைகழகம் டிரைவர்ஸ் மற்றும் டெக்னிஸியன்ஸ் வெல்பர் அசோசியேசன் அங்கிகாரம் பெற முடியாது. இதனை தொழிலாளர்கள் புரிந்து கொண்டு நமது உரிமைகளை காக்க தொடர்ந்து போராடி வரும் புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுகொள்கிறோம்.

போனஸ் வழக்கில் வெற்றி பெற்று உள்ளோம் (ESI) வழக்கில் வெற்றி பெற போகிறோம். நமது நிர்வாக தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கி வரும் 400-க்கு மேற்ப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களை தொழிலாளர் உரிமை பெறும் தகுதிக்கு உருவாக்கும் வரலாற்று கடமை நமது சங்கம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வழிகாட்டுதலில் நடந்து வருகிறது என்பதை உணர்ந்து நமது தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சங்கமாக சேர்ந்து நமது உரிமையை நிலை நாட்ட வருமாறு அறைகூவல் விடுகிறோம்.

தகவல்:
புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம்

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா ?

2
டாஸ்மாக்கை எதிர்த்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம்

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் போராட்டப் பாரம்பரியம் கொண்டவர்கள். வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் விவசாயிகள் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடி இருக்கிறார்கள்.

மற்றவர்களுக்காக போராடியவர்கள் தங்களது உரிமைகளுக்காக கடந்த 18-08-2016 அன்று அரசு சட்டக் கல்லூரியின் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், கல்லூரி வளாகத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மாணவர்கள் போராடினார்கள். அந்த நாள் முதலாகவே போராட்டத்தை முன் நின்று நடத்திய மாணவர்களை எப்படி பழி தீர்ப்பது என்று காத்துக் கொண்டு இருந்தது நிர்வாகம்.

இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவர்கள் இடையில் ஏற்பட்ட சிறு சச்சரவை விடுதி துணை காப்பாளர் ராஜாவின் துணையோடு மாணவர்கள் இடையே மோதலையும் பிளவையும் தூண்டி விட்டு ஒரு தரப்பு மாணவர்களின் வார்த்தைகளை மட்டும் வைத்து அதை புகார் கொடுத்தது போல் திரித்து அந்த பொய் புகாரின் மீது நடவடிக்கை போல 6 மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அதோடு நில்லாமல் அந்த புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் தனக்கு தேவையான பொய் சாட்சியங்களை உருவாக்கி முடித்ததும் புகார் கூறப்பட்ட 6 மாணவர்கள் உடன் இன்னும் 2 மாணவர்களை சேர்த்து 8 பேருக்கு தண்டனை, இடமாற்றம் போட்டுள்ளது நிர்வாகம். புகார் கூறப்பட்டதிலேயே ஒருவர் இவ்விவகாரத்திற்கு முற்றிலும் தொடர்பற்றவர். புதிதாக சேர்க்கப்பட்ட இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட சச்சரவில் எந்த பங்கும் இல்லாதவர்கள். இது போதாது என்று விடுதியில் இருக்கும் இன்னும் ஐந்து மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது நிர்வாகம்.

இப்படி மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது நிர்வாகம். அடிப்படை உரிமைகளுக்காக மாணவர்கள் போராடாமல் இருந்திருந்தால் இந்த தண்டனை விவகாரமே நடந்திருக்காது.

நீதித் துறையே பாசிச மயமாகி வழக்கறிஞர்களையும் நீதிபதிகளின் அடிமைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை நீதித்துறையின் ஒவ்வொரு அங்கக்திற்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சட்டக்கல்லூரியிலும் மாணவர்களுக்கு இருக்கும் போராட்டப் பண்பினை அழித்து விட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

கோவை அரசு சட்டக்கல்லூரியின் நிர்வாகத்தின் சூழ்ச்சிகரமான அடக்குமுறையை எதிர்த்து பாதிப்புக்குள்ளான மாணவர்களின் போராட்டம் கடந்த 05.04.2017 முதல் நடந்து வருகிறது. அதோடு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனுக்கும் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி உள்ளது. எனவே தனது முடிவை மறு பரிசீலிக்க நிர்வாகம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் மாணவர்களிடையே பொய் புனைசுருட்டுகளை கொண்ட எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களும் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

பின்வரும் நிபந்தனைகளை முன் வைத்து மாணவர்கள் போராடுகிறார்கள்.

  • முறைகேடாக விதிக்கப்பட்ட தண்டனை இடமாற்றத்தை ரத்துச் செய்
  • வஞ்சககாரர் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனையும் விடுதி துணைக் காப்பாளரையும் இட மாற்றம் செய்.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே தமிழக வழக்குரைஞர்கள் சமூக அக்கறை கொண்ட நீண்ட பாரம்பரியத்தை காக்கும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கோவை

மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !

0

மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஹெச். ஆர். அதிகாரியை கொலை செய்ததாக பொய்க்குற்றம் சாட்டி ஆயுள் தண்டனையும், வன்முறை தீயிடல் குற்றங்களுக்காக 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  வழங்கி தீர்ப்பளித்துள்ளது குர்காவ்ன் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். 10.03.2017 அன்று குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், 18.03.2017 அன்று மேற்படி தண்டனையை வழங்கியது. இவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 117 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்கள், இருக்கின்ற வழக்கின் படியே நான்கரை ஆண்டுகள் சட்டவிரோதமாக அனுபவித்த சிறைத் தண்டனை பற்றியோ அவர்களது வேலை பறிபோய், வாழ்வே கேள்விக்குள்ளானது பற்றியோ வாயே திறக்கவில்லை.

மாருதி தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதியான, சட்டவிரோதமான தீர்ப்பை கண்டித்தும் அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையிலும் 04.04.2017 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இப்பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்திவருவதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை புஜதொமு-வின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாருதி தொழிலாளர் போராட்டத்தின் நியாயத்தை விளக்கியும், மாருதி நிர்வாகத்தின் சூழ்ச்சிகள், நரித்தனங்கள், வஞ்சகங்களை விளக்கியும், போலீசு, நீதிமன்றத்தின் கூட்டுச் சதியை விளக்கியும், உரையாற்றினார்.  மேலும், குற்றமே நிரூபிக்கப்படாத போதும், மாருதி தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கும் நீதித்துறை, புதுச்சேரியில் வெட்ட வெளிச்சமாக நடந்த ரவுடி கொலையை செய்தது, அரசியல்வாதிகளின் தூண்டுதலில் தான் என்று தெரிந்த போதும், சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்கிறது என்று நீதித்துறையின் தொழிலாளர் விரோதப் பண்பை அம்பலப்படுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய புஜதொமு-வின் திருபுவனை வட்டாரக் கிளைப் பொருளாளர் தோழர் சங்கர், ” தொழிலாளர் விரோதமாகச் செயல்படும் தொழிலாளர் துறையைச் சாடியதுடன், தொழிலாளர் போராட்டம் என்பது மட்டுமில்லை, எந்தப் போராட்டமானாலும், அதைத் தீர்க்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, துறை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ வருவதில்லை. முண்டியடித்துக் கொண்டு வருவது போலீசு தான். அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்லாமல், போராட்டத்தை கலைப்பதற்கு, பேச்சுவார்த்தை நாடகமாடுவது, அதையும் மீறி மக்கள் உறுதியாக இருந்தால், அவர்களை வழக்கு போட்டு மிரட்டுவது என்பதையே வேலையாகச் செய்து வருகிறது. உண்மையில் அரசின் உறுப்புகள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்கும், மிரட்டுவதற்கும் தான் உள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதும், மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதும், தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை நம்பிப் பலனில்லை. அதைத் தகர்த்தெறிந்து, நமக்கான அரசுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்; அதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாகத் திரள வேண்டும்” என்று அறைகூவி உரையாற்றினார்.

அடுத்ததாக, சேதுராப்பட்டு தொழிற்பேட்டைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் ரமேஷ், தொழிலாளர் பிரச்சினையைப் பற்றிய போராட்டத்தில் பேச அழைத்ததை பெருமையாகவும், கடமையாகவும் கருதி உரையைத் தொடங்கியவர், ”புதுச்சேரி தொழிலாளர் அதிகாரிகளின் முதலாளிகளின் ஆதரவான நடவடிக்கையைப் பற்றி அவர்களிடம் பேசும் போது, தங்களது நடவடிக்கையைப் பற்றி குற்ற உணர்வு ஏதுமின்றி, தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும் ? மிஞ்சிப் போனால், போஸ்டர் அடித்து ஒட்டியும், மைக்கைப் பிடித்துக் கத்தியும் போராட்டம் செய்வீர்கள் ? என அதிகாரத் திமிரோடு பேசியதை அம்பலப்படுத்திய தோழர், தொழிலாளர்களை வன்முறையைத் தூண்டுவதற்கு இது போன்ற அதிகாரிகளின் தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகள் தான் காரணம் என்பதை விளக்கினார். மேலும், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இது போன்ற முன்னெடுப்புக்களுக்கு எப்போதும் துணை நிற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக உரையாற்றிய, புதுச்சேரி புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விளக்கி, அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது, அவர்களை மிரட்டி தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்குத் தான். அதன் வெளிப்பாடு தான் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் மாருதி நிறுவனம் அமைந்துள்ள மானேசர் தொழிற்பேட்டை வட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான கலவரத் தடுப்புப் போலீசாரைக் குவித்து, தொழிலாளர்கள் மீண்டும் சேர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விடக்கூடாது என அச்சுறுத்தியது. ஆனால், அந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒன்று கூடி தீர்ப்புக்கு முன்னதாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மேலும், தொழிலாளர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் கருவியாகத் தான் அரசு உள்ளது என்ற மார்க்ஸின் வரிகளைச் சுட்டிக் காட்டி, கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, பணமில்லாப் பரிவர்த்தனை, வங்கி இருப்பு அதிகரிப்பு என மக்களைச் சுரண்டுவது, உலக நாடுகள் வரையிலும் பேசப்படும் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, மோடி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் தவிர்ப்பது, என உழைக்கும் மக்கள், விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதில் அரசும், இவ்வொடுக்குமுறைகளை மூடி மறைப்பதன் மூலம் பத்திரிக்கைகளும் தங்களுக்குள் கள்ளக் கூட்டு வைத்துச் செயல்படுவதையும் தோலுரித்தார்.

ஆனால், அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு என்பது நீரில் மிதக்கும் காற்றடைத்த பந்தைப் போன்றது. அதை என்ன தான் முயற்சி செய்து தண்ணீருக்குள் அமிழ்த்தினாலும், இறுதியில் அது நீரின் மேலே தான் எழும்பி நிற்கும்.

உழைக்கும் மக்களின் ஒவ்வொருவர் மனதில் எழும்பி நிற்கும் உணர்வை அரசின் எந்த ஒடுக்குமுறையாலும் நசுக்கி விட முடியாது. அந்த உணர்வை ஒன்று பட்ட வர்க்க உணர்வாக மாற்றி, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி அமிழ்த்துவதன் மூலம், உழைக்கும் மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப் படைத்து நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் போராட்டமாக இதை மாற்றுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.

இறுதியாக நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
போலிசு – நீதிமன்றம் – போலிசு கூட்டுச்சதியை முறியடிப்போம்!
ஆயுள்தண்டனையை ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க அரசை கட்டியமைப்போம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு தோழர் பழனிசாமி, 95977 89801.

சிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்

0
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(விருதை)

மார்ச் -23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் – நினைவுதினம் !

1991 – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்தியாவில் திணிக்கப்பட்டதன் விளைவுகளை இன்று காண்கிறோம். இன்று விவசாயம் அழிவை நோக்கி நகர்கிறது, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கல்வி காசுக்காகவும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், இயற்கை வளங்களை சூறையாடவும் இதனை எதிர்க்கும் மக்களின் சுய உரிமையை பொசுக்க ராணுவம், காவல்துறை கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.

மேலும் இதற்கு பொருத்தமாய் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் RSS-BJP-ABVP கும்பல் முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.

  • இயற்கை வைட்டமின் நிறைந்த மாட்டுக்கறியை சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறது
  • தொழில் நிமித்தம் மாட்டுத்தோலை உரிக்கும் தலித்துக்களை பிடித்து அடிக்கிறது BJP
  • ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையகுமாருக்கு அடி, சிறை, தலையை துண்டிப்பேன் என மிரட்டல், என் தந்தை போரில்தான் இறந்தார் என்று சொன்ன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என மிரட்டுகிறது ABVP வானரக் கும்பல்

பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு  எதிராக உள்ள தமிழக மக்களையும் தொடர்ந்து நசுக்கிறது. காவிரி நீர் – மேலாண்மை வாரியம் மறுப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் – கடன் தள்ளுபடி இல்லை, நியூட்டிரினோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், கெயில், இணையம் துறைமுகம், ரேசனில் பொருட்கள் இல்லை, நீட் தேர்விற்கு விலக்கு இல்லை என்று பல்வேறு திணிப்புகளை செய்கிறது. எனினும் தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்புக்கு எதிராக RSS – BJP மோடிக் கும்பலை கிழித்தெறிந்தது, தமிழகத்தின் இளைய சமூகம்.

இதே மெரினா புரட்சியை நாளை விவசாயிகளுக்காகவும், சமூக மாற்றத்திற்கான கல்விக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராட பகத்சிங் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். இது தொடர்பான துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் – விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விருதை – சிதம்பரம்.

ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே – சலோ மானேசர் நேரடி ரிப்போர்ட்

0

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 4

நாங்கள் குர்காவ்ன் மானேசரில் அமைந்துள்ள தேவிலால் பூங்காவில் இருந்தோம். மார்ச் 23-ம் தேதி வியாழக்கிழமை. மாருதி தொழிலாளர் வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பால் தண்டிக்கப்பட்ட 31 தொழிலாளிகளை விடுவிக்க கோரியும் வேலையிழப்புக்கு ஆளான 2340 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் “சலோ மானேசர்” என்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்தது.

தேவிலால் பூங்கா
தேவிலால் பூங்கா

மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு குர்காவ்ன் – மானேசர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. வேலையிழப்புக்கு ஆளான மாருதி தொழிலாளர்கள் பலரும் அந்த ஆர்பாட்டத்திற்கு வரவுள்ளதாக எமக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்ததால் அன்றைய தினம் காலையிலேயே நாங்கள் மானேசர் சென்று காத்திருந்தோம்.

நேரம் நண்பகலைக் கடந்த சமயத்தில் பத்துக்கும் குறைவான தொழிலாளிகளே இருந்தனர். ராம் நிவாசுடன் வந்த தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது உடனிருந்த ராஜஸ்தான் தோழர் மொழி பெயர்த்தார்.

”வேலை இழந்த மாருதி தொழிலாளிகள் என்னவானார்கள் ? அவர்களுக்கு வேலை கிடைத்ததா ? அவர்களின் குடும்பங்கள் என்னவாயின ?” என்றோம்.

“வேலை இழப்பு ஒருபுறம், கொலைப்பழி இன்னொரு புறம். அவர்களுக்கு வேறெங்கும் வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. சில காலம் இங்கேயே சுற்றித் திரிந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. சிலர் சொந்த ஊர்களுக்கே திரும்பினர். சிலருக்கு வேறு தொழிற்சாலைகளில் வேலை கிடைத்தது. வாழ்க்கை சென்றாக வேண்டும் அல்லவா ? உயரத்தில் இருந்து விழுந்தால் தானே பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்றவர் பலமாகச் சிரித்தார்.

”தொழிற்சங்க முன்னோடிகள்?”

“பன்னிரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர் அல்லவா ? ராம் நிவாஸ் போல் ஒருசிலரை ஜூலை 18 சம்பவத்துக்கு முன்பே வேறு வேறு காரணங்கள் சொல்லி வேலை நீக்கம் செய்திருந்தனர். ராம் நிவாஸ் இப்போது வரை தொழிலாளர்களின் பராமரிப்பில் தான் இருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்”

”வேலையிழப்பு ஆளான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டிருதோம். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார்கள் தானே?”

“இங்கே வாழ்க்கையே சிரமம் தான் நண்பரே. மாருதியால் மேலும் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளானோம் என்பது உண்மை தான். ஆனால் தாக்குப்பிடித்துக் கொண்டோம். பெரும்பாலான தொழிலாளிகள் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் பலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. எனவே அவர்களின் குடும்பங்கள் வெளியூர்களில் தான் இருக்கின்றன”

“நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்க முடிந்தது. தொழிலாளர்கள் பலரும் இளம் வயதினராக இருக்கிறார்களே? முதிய தொழிலாளிகளை அதிகம் காண முடியவில்லையே ?”

“இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன செய்வார்கள் என்றால், ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை இருபது வயதுகளின் துவக்கத்தில் ட்ரைனியாக எடுப்பார்கள். பின்னர் அப்பிரண்டிஸ் ஆக்கி சில ஆண்டுகள் கழித்து கான்டிராக்ட் தொழிலாளியாக்குவார்கள். ஒரு தொழிலாளி வேலைக்குச் சேர்ந்து முப்பது வயது கடந்த பின்னரே வேலை நிரந்தரம் செய்யப்படுவார். வருடங்கள் கூடக் கூட உற்பத்தி இலக்குகளும் வேலை நிலைமைகளும் கடினமாக்கப்படும், முப்பத்தைந்து வயதுக்குப் பின் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கடினமாக உழைக்க முடியாது. ஒரு கட்டத்தில் மருத்துவ ரீதியில் வேலைக்குத் தகுதியில்லை (Medically unfit) என்கிற சான்றிதழைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நாற்பத்தைந்து வயதுக்குள் எல்லாம் முடிந்து போகும்.”

”இதையெல்லாம் தொழிற்சங்கங்கள் தட்டிக் கேட்காதா?”

மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.

”தொழிற்சங்கம் வலுவாக இருக்கும் ஆலைகளில் இப்படிச் செய்ய முடியாது. எனவே தான் அவர்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் சிவப்புச் சங்கங்களை விட மஞ்சள் சங்கங்களை அனுமதிப்பார்கள். மீறி சிவப்புச் சங்கங்களைக் கட்ட முயற்சித்தால் எல்லா வகையிலும் தடை போடுவார்கள்”

”ஆனால், சட்டப்படி தொழிற்சங்கம் துவங்குவதைத் தடுக்க முடியாதே? சட்டப் பாதுகாப்பு உள்ளது தானே?”

”தோழரே. சட்டம் எங்கே உள்ளது? காகிதத்தில் தானே? அது பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதை யார் கண்காணிப்பது? அரசாங்கம் தானே? நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? இப்போது ஒரு ஆலையில் தொழிற்சங்கம் துவங்கினால் அதை முதலில் பதிய வேண்டும். பதிவு அலுவலகத்தில் கொண்டு போய் அதற்கான மனுவைக் கொடுத்தால் அந்தக் காகிதங்கள் அப்படியே தேங்கி நிற்கும். அதற்கு நடையாய் நடக்க வேண்டும். பல வாரங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களைப் போல் அதிகாரிகளின் டேபிள்களுக்கு முன் கைகட்டி நிற்க வேண்டும். பின் அந்தக் காகிதத்தில் ஏதோ எழுத்து குறைகிறது என்று முகத்தில் எரிந்து துரத்தி விடுவார்கள். நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதற்கு வேலையை விட்டுவிட்டு அலைய வேண்டும். இதற்குள் ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும். இதற்கிடையே சங்கம் துவங்க முன்னே நிற்பவர்களை விலைக்கு வாங்கும் பேரத்தை நிர்வாகம் துவங்கியிருக்கும். ஒருவேளை படிந்து வந்தால் மஞ்சள் சங்கமாக உடனடியாக பதிந்து விடலாம். சங்க முன்னோடிகள் பேரத்துக்குப் படியவில்லை என்றால் ? மேலும் சில மாதங்கள் நீதி மன்றத்துக்கு அலைய வேண்டியிருக்கும்.”

நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராம் நிவாசும் அவருடன் வந்த தோழர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைந்தனர். நாங்கள் அந்த வளாகத்தைச் சுற்றி வந்தோம். பூங்கா எனச் சொல்லப்பட்டாலும் பூச்செடிகளோ புல்வெளியோ சரியான பராமரிப்போ இன்றி வறண்டு கிடந்தது. சில பத்து ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த அந்தப் பூங்காவின் ஒரு முனையில் முன்னாள் ஹரியாணா முதல்வர் தேவிலாலின் சிலை ஒன்று நின்றது.

தேவிலாலின் சிலையைச் சுற்றிலும் அகழி போல் அமைத்திருந்தனர். அதன் ஓரத்தில் நீரூற்றுக்கான குழாய்கள் துருப்பிடித்த நிலையில் தென்பட்டன. பூங்காவுக்கு நேர் எதிரே இருந்த சாலையில் மேம்பால வேலை நடைபெற்று வந்தது. அருகிலேயே வேறு சில கட்டுமானப் பணிகளும். தேவிலாலின் சிலை எதிரே புழுதி பறந்து கொண்டிருந்த குர்காவ்ன் மானேசர் சாலையையும் உயிரற்ற அந்த நகரத்தின் எந்திரகதியான இயக்கத்தையும் வெறித்துக் கொண்டே நின்றது.

ஆளரவமற்றுக் கிடந்த அந்தப் பூங்காவின் மறுகோடியில் மெல்ல மெல்ல தொழிலாளிகளின் நடமாட்டம் தென்படத் துவங்கியது. சரியாக 3:45 மணிக்கு சாரை சாரையாக அணிவகுக்கத் துவங்கிய தொழிலாளிகள் எழுப்பிய கோஷங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

”ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே”
“பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ. பஹால் கரோ பஹால் கரோ”
”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்”

பள்ளமான நிலத்தை நான்கு திசைகளிலும் பாய்ந்து சூழ்ந்து கொள்ளும் காட்டாற்று வெள்ளம் போல்  வெவ்வேறு திசைகளில் இருந்தும் தொழிலாளர்கள் அணியணியாக பூங்காவினுள் நுழைந்தனர். தொழிலாளர்களில் சிலர் அப்போது தான் ஷிப்டு முடித்திருந்தனர்; அவர்கள் நிறுவனத்தின் சீருடைகளோடு செங்கொடியேந்தி அணிவகுத்து வந்தனர். மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.

அதன் பின்னும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சில பத்து பேர் கொண்ட குழுக்களாக தொழிலாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அங்காங்கே ஜே.என்.யூ-வைச் சேர்ந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் காண முடிந்தது. நம்முடன் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ராஜஸ்தானி தோழர் இருந்தார்; எனினும், தொழிலாளிகளின் வெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்.

இந்தி மட்டுமே தெரிந்த தொழிலாளிகளிடம் ஆங்கிலமும் தமிழும் உடைந்த இந்தியும் கலந்து பேச்சுக் கொடுத்தோம். தமது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள நாட்டின் தென்கோடியிலிருந்து வந்தவர்கள் என்பதே அவர்களுக்கு உற்சாகமூட்டியது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக இந்தியிலும், உடைந்த ஆங்கிலத்திலும், சைகை பாஷையிலும் என மூன்று முறை பதில் சொன்னார்கள். பதிலைப் புரிந்து கொண்டோம் என்பதை தலையசைப்பில் நாம் உறுதி செய்ததைக் கண்டு தோழமையுடன் சிரித்தார்கள்.

”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி
”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி

”பாஷா கோயி தக்லீஃப் நஹி ஹேய்” என்ற ரஜேந்தர் சிங், (மொழி ஒரு பிரச்சினையே அல்ல) வலதுகையை இடது மார்பில் வைத்து விட்டு நமது தோளைத் தட்டினார். அவரிடம் மேலே எழுப்பப்பட்ட கோஷங்களின் பொருளைக் கேட்டு விளங்கிக் கொள்ள முயற்சித்தோம். அவர் விளக்கியதில் இருந்து நாம் புரிந்து கொண்டது.

”ஆவாஸ் தோ ஹம் ஏக் ஹே” – ”உரக்கச் சொல், நாம் ஒன்று என” ” பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ.” – “தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” “”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்” – “புரட்சி ஓங்குக. மோடி அரசு ஒழிக”

கூட்டத்தில் மாருதி ஆலையில் தற்போது பணிபுரிந்து வரும் தொழிலாளிகளைத் தேடினோம். சீருடையின்றி சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம்.

”2012, ஜூலை 18 அன்று நடந்த சம்பவத்துக்குப் பின் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்னவாயின?” பெயர் குறிப்பிட மறுத்த அந்த தொழிலாளியிடம் கேட்டோம்.

”தொழிற்சங்கம் மொத்தமும் முடக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டன. வெளியில் இருந்து மீண்டும் ஒப்பந்த தொழிலாளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்”

”தற்போது மானேசர் ஆலையில் எத்தனை தொழிலாளிகள் பணிபுரிகின்றனர்”

”சுமார் ஐயாயிரம் பேர். வழக்கம் போல இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளிகள் தான்”

”தொழிற்சங்க நடவடிக்கைகள்?”

அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்
அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்

“நாளுக்கு நாள் நிர்வாகம் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடும் சித்திரவதைகள் அதிகரித்து வந்தன. சரியாக இரண்டே ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் ஒரு சிவப்புத் தொழிற்சங்கத்தைக் கட்டினோம். எங்கள் அதே பழைய கோரிக்கைகளை தூசி தட்டி கையிலெடுத்தோம். ”சமமான வேலை, சமமான கூலி, சமமான சலுகைகள்” என்பதை முன்வைத்தோம். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்த தொழிலாளிகளாக்குவது, வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை என்பதை முன்வைத்து மீண்டும் போராடத் துவங்கினோம். அதே போல் 44 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற உற்பத்தி இலக்கை தளர்த்தக் கோரினோம்”

”இந்தக் கோரிக்கைகளை வென்றெடுத்தீர்களா ?”

“சிலவற்றில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை நிர்வாகம் எடுக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். உதாரணமாக 42 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற இலக்கை தற்போது 60 நொடிகளாக தளர்த்தியுள்ளனர். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற கோரிக்கையை நாங்கள் இன்னும் விடவில்லை. எப்படியும் விரைவில் வெல்வோம்” என்றவர் நம்மிடம் விடைபெற்றுக் கூட்டத்தில் கலந்தார்.

மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது. தாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்கிற நம்பிக்கையை அந்தக் கூட்டம் அவர்களுக்கு ஏற்படுத்தியதா? அல்லது இந்திய அரசின் ஆதரவையும் சர்வ வல்லமையையும் கொண்ட ஒரு ஜப்பானிய கோலியாத்தைப் பணிய வைத்த வர்க்கப் பெருமிதமா? அல்லது இறுக்கமான சாதிய கட்டுமானத்தின் நடுமையத்தில் சாதி கடந்த வர்க்க ஒற்றுமை ஒன்றைச் சாதித்த வெற்றிச் செருக்கா?

தேவிலால் பூங்காவில் எதிரொலித்த முழக்கங்களில் வெளிப்பட்ட வர்க்க கோபத்தின் அடியாழத்தில் இருந்த தோழமைப்பூர்வமான மகிழ்ச்சியின் நினைவுகளோடு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

முற்றும்.

  • வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலை : நேரடி அறிக்கை ( பகுதி – 1 )
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில் (பகுதி 2)
வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் ! பகுதி 3

பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !

1

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 8

கோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.

95 வயது தொழிலாளி பெரியம்மாள்.

சாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.

கல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.

சிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக் கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.

செல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிருந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.

இருப்பினும் இங்கு ஒரு  பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.

செல்லம்மாவும் (டி ஷர்ட் அணிந்திருப்பவர்) பாப்பாவும்.

பாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.

நாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழைத்து கருத்தவர்கள்.

புகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.

மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.

மோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்?

விதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.

கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு)  ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும்  10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார்.  அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி.  “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களும் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும்? பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க? ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.

விளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.

கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.

கடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.

வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.

ஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.

அவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.

செங்கல் அறுக்கும் பச்சியம்மாள்.

பச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.

கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.

ச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.

மணத்தக்காளி விற்கும் தங்கம்மாள்.

ணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம்.  “பொண்ணுன்னு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.

வேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.

பொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது.  ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.

வினவு செய்தியாளர்கள்

சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள்

1

பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனை!
சிவில்-ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நீதிமன்றங்கள்
!

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளை சார்பாக கடந்த 2-4-17 ஞாயிறு அன்று “ பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா (UAPA) சட்டத்தை நீக்கு!” என்ற முழக்கத்தை முன் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது.

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன் “மாபெரும் அபாயமாய் மின்னணு சாட்சியங்கள் ! சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள் !” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தோழர் பாலன்
தோழர் பாலன்

நரசிம்மராவ் – மன்மோகன் சிங் இணைந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் கொள்கையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். பகத் சிங் ஏகாதிபத்தியத்தை முற்றிலும் ஒழிக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்தார். இப்போது நரேந்திர மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தரகர் வேலை பார்க்கிறார். பறந்து பறந்து பன்னாட்டு முதலாளிகளை இந்தியாவுக்கு அழைக்கிறார். ஆனால் அவன் நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை சொந்த நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதில்லை. கடமையைச் செய் ! பலனைக் கேட்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னதை மோடி அமல்படுத்துகிறார்.

நமது தாய் நாட்டின் வளங்களை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார். தண்டகாரண்யா மலைப் பகுதியிலே எண்ணற்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றைக் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். ராணுவத்தை ஏவி அந்த மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை பேராசிரியர் சாய்பாபா எதிர்த்துப் போராடினார். அவர் டெல்லியில் இருக்கிறார். மராட்டிய மாநிலம் கட்ஜ்ரோலி மாவட்டக் கோர்ட் அவருக்கு தண்டனை கொடுத்துள்ளது. எப்படி? அந்தப் பகுதியிலுள்ள இரண்டு பேருக்கு சாய்பாபாவைத் தெரியும் என்பதை வைத்து வழக்குப் போட்டு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் பிணையில் வந்தார். இப்போது அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ், சி.டி., டி.வி.டி. போன்ற மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக வைத்து அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று  நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார். அது 7 நீதிபதிகள் அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது. எனவே மின்னணுக் குப்பைகளை வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(ஊபா) ஒரு மக்கள் விரோதக் கருப்புச் சட்டம். குடிக்கத் தண்ணீர் கேட்டால் அது சட்ட விரோதம். ஆற்று நீர், நிலத்தடி நீரைக் கொள்ளையடித்தால் அது சட்டப் பூர்வம். வேலை கேட்டால் சட்டவிரோதம். வேலையை விட்டுத் தூக்கினால் சட்டப்படியானது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடினால் சட்டவிரோதம். வாழ்வாதாரங்களைக் கொள்ளையடித்தால் அது சட்டவிரோதம் இல்லை. தாடி வைத்துள்ள இசுலாமியருக்கு ஊபா.

மதுரை வழக்கறிஞர் முருகன் ஊபா சட்டதில் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? மாவோயிஸ்டுகள் என்று சொல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில தோழர்களுக்காக அவர் கட்டணம் வாங்காமல் வாதாடினார். அவர் கடமையைச் செய்தார். பலனை எதிர்பார்க்கவில்லை. அதுதான் குற்றம் என்று ஊபா அவர் மீது பாய்ந்துள்ளது. சட்டவிரோதம் என்று எதை வேண்டுமானாலும் அரசு சொல்லலாம். அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அதுதான் பெரிய அபாயம்.

ஒரு நாயைக் கொன்றால் அதை ஏன் கொன்றாய் என்று கேட்டால் அதற்குப் பைத்தியம் என்று சொல் என்றான் ஹிட்லர். அதுபோலத்தான் மக்களுக்காகப் போராடுகிறவர்களை நக்சலைட்டுகள். பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று சொல்லி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் மோடியின் வேலை. ஹிட்லரின் முடிவு மோடிக்கும் ஏற்படும் என்று சொல்லி தனது சிறப்புரையை முடித்தார் வழக்கறிஞர் தோழர் பாலன்.

முன்னதாக தலைமையுரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் “ பேராசிரியர் சாய்பாபா முதலில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எழ வேண்டிய எதிர்ப்புக் குரல்கள் குறைந்துள்ளன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது படித்த அறிவுஜீவி தரப்பினர் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கோ இருக்கிற சாய்பாபாவுக்குத்தானே வந்திருக்கிறது. நமக்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. மதுரையில் வழக்கறிஞர் முருகனுக்கு எதிராக இந்தக் கருப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. நாளை நெடுவாசலில், தஞ்சையில், கூடங்குளத்தில், மெரினாவில் போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் மீது பாயலாம். டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது, என் மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழலுக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது நிரந்தரத் தொழில் தடைவரை தண்டனை சட்டப் புறம்பாக மின்னணு சாட்சியங்களை வைத்து விதிக்கப்பட்டுள்ளது.

தோழர் வாஞ்சிநாதன்

சாய்பாபா 90% உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியில் தான் அவரால் இயங்க முடியும். அவருடைய சிந்தனைக்கு, கருத்துக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகப் போராடுகிற முன்னணியாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் அறிவுஜீவிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.

ஆஜ்மீர் தர்கா, மாலேகான், ஹைதராபாத் போன்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துமத வெறியர் அசீமானந்தா குண்டு வைத்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பின்பும், பத்திரிகைகளில் நேரடியாக பேட்டி கொடுத்து தண்டனையும் எதிர்பார்த்திருந்த போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு போதிய சாட்சியங்கள் இல்லையாம். ஆனால் நேரடி சாட்சியங்களே இல்லாத நிலையில் இரண்டாம் தர சாட்சியங்களை வைத்து சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. பார்ப்பன இந்து மத வெறிக் கும்பலின் பாசிசக் கொடுங்கரங்கள் நீதிமன்றங்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி தன் வசமாக்கி வருகின்றன. எனவே மக்கள் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிற, ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்டுள்ள அனைவரும் செயலை நோக்கி முன்வரவேண்டிய தருணம் இது “ என்று கூறி முடித்தார்.

அதன் பிறகு கேள்வி-பதில் நிகழ்வு நடை பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பினர்களும் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மின்னணு சாட்சியங்கள் பற்றியும், தற்போதைய அரசியல் சமூக சூழலில் நீதிமன்றங்களை நாம் பயன்படுத்த முடியுமா? சாய்பாபா பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.பொருத்தமான முறையில் பாலன் பதில் சொன்னார். மேல்முறையீட்டில் அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். லாட்டரி விழுவது போல் சில வேளைகளில் தீர்ப்புகள் வருவதுண்டு என்று தெளிவுபடுத்தினார்.

நிறைவாக கிளைச் செயலாளர் லயனல் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பெண்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 250 பேர்வரை கலந்து கொண்டனர். 5000- துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பலர் செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். சட்டம், நீதி சார்ந்த பல அறிஞர்களின் மேற்கோள்கள் பிளக்ஸில் அச்சிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை, தொடர்புக்கு – 9443471003