Wednesday, March 3, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி - தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !

தூத்துக்குடி சிறுமி காமாட்சி பலி – தடுப்பூசி விதிமுறைகள் கலெக்டருக்கே தெரியாதாம் !

-

தூத்துக்குடியில் 20.03.17 அன்று ICE தனியார் ஆங்கிலப்பள்ளியில் நடந்த முகாமில் வைத்து அரசு தடுப்பூசி போடப்பட்டது.  அன்று மாலையே சிறுமி காமாட்சிக்கு காய்ச்சல் வந்துள்ளது. நான்கு நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், 25.03.17 அன்று அவரது தாய் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 10 நாட்கள் சிகிச்சையின் முடிவில் 04.04.17 அன்று மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சிறுமி காமாட்சி

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு – ஹவுசிங்போர்டு  கொத்தனார் காலனியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவியான இவருக்கு தந்தை இல்லை. தாய் வீட்டுவேலை செய்து மகளை வளர்த்து வந்துள்ளார். இவர் படித்துவந்த அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஊசிபோட பலமுறை வற்புறுத்தியும் இவர் போட்டுக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர் தடுப்பூசி நல்லதுதான் என்றும்,  “வெளியில் 1,500 ரூபாய் செலவாகும்; நாங்கள் இலவசமாக போடுகிறோம்” என்று இவர்கள் தெருவில் அரசு பிரச்சாரம் செய்தது. முகாம் குறித்து பிரசுரம் வாங்கிய பின்னர்  தனது மகளை ஊசிபோட்டுக்கொள்ள அனுப்பிவைத்துள்ளார் அந்த ஏழைத்தாய்.

தமிழக அரசோ உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. முகாமில் மாணவர்களுக்கு ஏற்கனவே என்னென்ன  நோய்க்குறிகள் உள்ளது என்று விசாரிக்கவும் இல்லை; இந்த ஊசி போட்டபின் வரும்  பின்விளைவுகளையும், அதை எதிர்கொள்ள வேண்டிய எந்த ஒரு அணுகுமுறை குறித்து விளக்கவும் இல்லை. அரசு பொதுப்பிரச்சாரமாகவும் இதை கொண்டு செல்லவில்லை. பொதுவில் தடுப்பூசி போட்டால் வரும் காய்ச்சலுக்கான மாத்திரைகளைக்கூட தரவில்லை.

பொதுவாக ஒரு அரசு தன் குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டால் தொடர் கண்காணிப்பு செய்து  Post Margeting Surveillance Registry  எனும் பதிவேடை பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் எங்காவது இதை செய்துவருவதை பார்த்துள்ளோமா?

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் சிறுமிக்கு  “என்ன காய்ச்சல் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அது டெங்கு அல்லது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம்” என்றுதான் 10 நாட்களாக கூறிவந்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் காமாட்சி இறந்தபின் மூளைக்காய்ச்சலால் சாவு என்று அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். அதுவும்கூட மறுநாள் 05.04.17 அன்று வந்த செய்தித்தாளை பார்த்துதான் தெரிந்தது கொண்டார், தாய் ராமலட்சுமி.

“பத்து நாளா வைரஸ் காய்ச்சல்னு  கண்டுபிடிக்கிறதா சொல்லிட்டு இப்ப எப்படி  மூளைகாய்ச்சல்னு நியூஸ் தந்தீங்க” என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். நிர்வாகத்தின் மழுப்பலால் சந்தேகம் வலுத்ததால் காமாட்சியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர்.

04.04.17 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வழக்குரைஞர்கள் (அரிராகவனும், பால்முருகனும்) நேரில் சென்று விசாரித்தோம். தவறிழைத்த மருத்துவர்கள், முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் கட்டமாக ஒரு புகார் மனுவை தாய்  ராமலட்சுமியை அழைத்துச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் தர வைத்தோம்.

கலெக்டரோ “விஷயம் கேள்வி பட்டேன், டாக்டர் டீமை இந்த இறப்பு பற்றி விசாரிக்க நியமித்துள்ளேன் அவர்கள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு தான் இறப்பிற்கான காரணம் தெரியும் என்று சொன்னாம் மேலும் ரூபெல்லா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் வராது. மரணமும் வராது என்று கூறி விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் ஒரு “முடிவு”க்கு வந்துவிட்டார் என்று நாம் தெரிந்து கொண்டோம்.

எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும்

நாம் மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைக்க சிப்காட் காவல் நிலையத்தில் புகார் தந்தோம். புகாரை பெற்ற காவல்துறையோ மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக மரணம் நிகழ்ந்ததை அதற்குறிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தயங்கினார். “DSP, மேலதிகாரிகளிடம் கேட்டுவிட்டுதான் முடிவெடுக்க முடியும்” என்று காக்க வைத்தனர். நாம் தொடர்ந்து முயற்சி செய்ததில் முடிவில் சந்தேக மரணமாக (CRPC பிரிவு 174ன் கீழ் நிலைய குற்ற எண் 85/2017 ல்) வழக்கு பதிவு செய்தனர்.

இரண்டாம் நாளில் (05.04.17 முற்பகலில்) DSP நம்மிடம் வந்து “பிரேத விசாரணை அறிக்கையில் கையெழுத்து போட பஞ்சாயத்தார் 4 பேர் வாங்க” என்றழைத்தார். அவர் நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்து கேட்டார். நாம் படிவத்தை நிரப்பும் படியும், மாணவியின் தொடையில் சதை வெட்டியெடுக்கப்பட்டு பிளாஸ்டெர் ஒட்டப்பட்டுள்ளதை குறிப்பிடும்படியும் மேலும் உறவினர்களான பஞ்சாயத்தார் இந்த சாவுக்கு ரூபல்லா தடுப்பு ஊசி போட்டதுதான் காரணம் என்றும் கூறும் கருத்தை அதில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்வைத்தோம். அதன் பின்னரே மீண்டும் உடலை பரிசோதித்துவிட்டு நாம் கூறியபடி படிவத்தில் குறித்தனர்.

பிரேத பரிசோதனையை ஒரு மருத்துவர் அல்ல மருத்துவர்கள் குழுதான் செய்யவேண்டும்; அதை வீடியோ எடுக்கவேண்டும் என்றும்  மனுசெய்து நிபந்தனை வைத்தோம். அதை நிர்வாகம் ஏற்றதன் பேரில்  உறவினர்கள் கையெழுத்து போட்டனர். இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகம் சதிகளில் இறங்கியது. காமாட்சியின் தாயாரை அழைத்துச் சென்ற செவிலியர்  “உங்க பிள்ளையோட கம்மலை தர்றோம். அதுக்கான அத்தாட்சி கையெழுத்து போடுங்க” என்றுள்ளார். ஆனால் ராமலட்சுமியோ “எங்க வக்கீல கேட்டுட்டு வர்றேன்” என்று கையெழுத்து போட மறுத்துவிட்டு வந்துவிட்டார். நாம் போய் கையெழுத்து போடச்சொன்ன பதிவேட்டை பரிசோதித்தோம். அதில் நகை குறித்து எதுவும் இல்லை. ஆனால் அதில் ஆங்கிலத்தில் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் (Body handed over to the relative), என்றும் தமிழில் எனது மகளின் உடலை பிணவரையில் வைக்க பெற்றுக்கொண்டேன் என்றும் எழுதியிருந்தனர். நாம் அதிர்ந்துபோனோம் ! இந்த அரசு எவ்வளவு  நேர்மையானது என்பதற்கான ஒரு உதாரணம் இது. நாம் சத்தம்போட்டவுடன் செவிலியர் அந்த பதிவேட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

அதன் பின்னர் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு காவல் துறை அனுப்பியது. பிரேத பரிசோதனை முடிந்தபின் உடலை ஒப்படைக்க வந்தது காவல்துறை. உடலை வாங்க உறவினர்கள் தயாரில்லை. கொடுத்த புகாரின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? ஏன் போலீசைத் தவிர எந்த அதிகாரியும் இதுவரை வரவே இல்லை? இதற்கு முடிவு தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் ! என்று அறிவித்தனர். வேறு வழியின்றி DSP போன் செய்து தாசில்தாரை வரவைத்தார். ஒரு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  “கலெக்டர் விசாரிக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன்  நடவடிக்கை எடுப்பார்.” என்றார் தாசில்தார். அவருடைய உத்திரவாதத்தை எழுதித்தரும்படி கேட்டோம். மறுத்துவிட்டார். நாம் மேற்கொண்டு பேசாமல் கலெக்டரே வந்து சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டோம். காமாட்சியின் உறவினர்களான DYFI இளைஞர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் உடன் நின்றனர். உடலை இரண்டாவது நாளும் நாம் வாங்கவில்லை.

மூன்றாம் நாள் (06.04.2017) கலெக்டரை பார்த்து விசாரிக்க நேரில் சென்றோம். அங்கு “கலெக்டர் இல்லை, கலெக்டர் வரமாட்டார், PA கிட்ட பேசுங்களேன்” என்று சிப்காட் உதவி ஆய்வாளர் நம்மிடம் கூறினார். நாம் PA கிட்ட பேச வரவில்லை  என்று கூறிவிட்டோம். ஒரு மணி நேரம் போனது. முதல்நாள் பேசிய அதே தாசில்தார் வந்தார். அவர் “சார் சப்-கலெக்டர் வந்திருக்கிறார் கலெக்டர் வர முடியாததால் கலெக்டரேதான் சப்-கலெக்டரை அனுப்பி இருக்கிறார் அவரிடம்  பேசலாம் அவரும் IAS தான்.” என்று அழைத்தார்.

பின்பு உறவினர்கள் ஒப்புதலுடன் நடந்த IAS தீபக் ஜேக்கப்புடனான பேச்சுவார்த்தையின்போது தாசில்தார், துணை தாசில்தார்கள் இருவரும், அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர். இவர் புதிதாக எதையும் சொல்லவில்லை. தடுப்பூசி போடும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ஏன் மீறினீர்கள்? UNICEF, WORLD HEALTH ORGANISATION பெயரில்தான் கலெக்டர் தந்த முகாம் அழைப்பு அட்டை உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலையே நீங்கள் மதிக்காதது ஏன்? என்றோம். “எனக்கே இப்படி தடுப்பூசி போட்டபின் கண்காணிக்கனும்ங்கற விதி தெரியாது. விசாரித்து நடவடிக்கை எடுக்கறோம்” என்றார் சப் கலெக்டர். உடன் வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கோ IAS களின் மீதான மதிப்பு சரிந்தது. அவர்களே வகுத்து கொண்ட விதிமுறைகளை அவர்களே மதிக்காமல் எதிராக தான் செயல்படுகின்றனர். இவ்வளவு தூரம் மனு தந்தும், 3வது நாளாக உடலை வாங்காமல் போராடியும் வரும் சூழலில் சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக ஆட்சி எவ்வளவு தரங்கெட்டுவிட்டது என்பதை உணர்த்துவதாக இந்த IAS ன் ஒப்புதல் வாக்குமூலம் இருந்தது.

ஒரு வாரத்திற்குள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் இன்று இரவே அதற்கான ஆணையை வெளியிடுகிறேன் என்ற உத்திரவாதம் தந்தார். மற்றபடி வீடு கட்டித்தருகிறேன். விதவைகள் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் கூறியதை மாணவியின் தாயார் அதை பொருட்டாக கூட எடுக்கவில்லை. சப்-கலெக்டரை பார்த்து கையை கூப்பி அடுத்து எந்த பிள்ளைகளையும் இதை போன்று கொன்றுவிடாதீர்கள் என் மகளே கடைசியாக இருக்கட்டும் என்று கண்ணீர் தழும்ப கோரிக்கை வைத்தார். அதன் பின் உடலை பெற்றுச் சென்று எரியூட்டினர்.

இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த சமூகமே போராடவேண்டிய மிக முக்கிய பிரச்சினை. தூத்துக்குடியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் அம்மை என்று கோரத்தாண்டவம் ஆடிவருவதற்கும், ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது. விதிகளை மீறிய மருத்துவர்களின் அலட்சியம் மட்டுமல்ல, தேவையற்ற மருந்தை நம் உடலில் கட்டாயமாக திணிக்கும் அரசின் சதியும்தான் இப்போதைய முக்கிய பிரச்சினை. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் காமாட்சி இறப்பையும் அரசின் அலட்சியத்தையும் மக்கள் மத்தியில் உடனடியாக துண்டு பிரசுரம் மூலம் கொண்டு சென்றோம். மக்கள் விரோத அரசின் ரூபெல்லா தடுப்பூசியின் சதி திட்டங்களை எதிர்த்து களம்காண தயாராகி வருகிறது மக்கள் உரிமை பாதுக்காப்பு மையம்.

பத்திரிக்கைகளில் வந்த செய்தி

தகவல்
அரிராகவன்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி.


ரூபெல்லா தடுப்பூசி போட்டபின் வந்த காய்ச்சலுக்கு மாணவி காமாட்சி பலி!

 • நம்மை தடுப்பூசியை போடும்படி தொடர்ந்து வலியுறுத்தியும் கட்டாயமாக்கியும் தான் நிறைவேற்றிவருகிறது அரசு!
 • தடுப்பூசி போட்டபின் எவ்வித கண்காணிப்பையும் செய்யாமல் மக்களுக்கும் விழிப்புணர்வூட்டாமல் புறக்கணித்ததன் விளைவாகவே சிறுமி பலி !
 • அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் உண்மையை சொல்லவில்லை மருத்துவர்கள்.
 • முதலில் டெங்கு என்றனர் ! ஆனால் குழந்தை இறந்த பின் மூளைக்காய்ச்சல் என்று செய்தி வெளியிடுகின்றனர்.
 • உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டிய வழிமுறைகளை நம் மருத்துவத்துறை அமல்படுத்தவில்லை.
  2016ல் தமிழகத்தில் ரூபெல்லா பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு புள்ளிவிவரம் தருகிறது. இது உண்மைதானே!
 • இங்கு இருக்கும் நோயான டெங்கு, பன்றிக்காய்ச்சல், போன்றவற்றை தடுக்க தீவிர முயற்சி எடுக்காமல், இல்லாத ரூபெல்லாவுக்கு இவ்வளவு அக்கறை காட்டுவது சந்தேகத்தை தருகிறது.
  இந்த தடுப்பூசி மருந்தில் மனிதர்களின் ஹார்மோன் வளர்ச்சியை தடுத்து மலடாக்கும் மருந்து இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளதே!
 • அரசு தடுப்பூசியை இலவசமாக வாரிவழங்கி வரும் பில்கேட்சின் “ கேட்ஸ் மெலிந்தா பவுண்டேசனின்” கடந்தகால உதவிகள் மாணவர்களை சோதனைச்சாலை எலிகளாக்கிய சதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது!
 • “குழந்தையின் நகைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் அழைத்துவிட்டு “குழந்தையின் உடலை பெற்றுக் கொண்டேன் என்று எழுதி வைத்ததில் கையெழுத்து கேட்பது எதைக் காட்டுகிறது?
 • நம் சந்தேகங்களுக்கு பதில்தர வேண்டிய அரசு காவல்துறை உடலை எரிக்க வைக்க மட்டுமே வழிகாட்டுவது எதனால்?
 • சிறுமி காமாட்சியின் மரணத்துக்கு நீதி கிடைக்க போராடுவோம்!
 • எந்த விதிகளையும் மதிக்காமல் நம் உயிருடன் விளையாடும் அரசின் அலட்சியத்துக்கு முடிவு கட்டுவோம்!

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு 94435 84049

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க