உலகம் முழுவதும் மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் கொண்டாட்ட நாளாக மட்டும் அனுசரிக்கப்படுகிறது. சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமையாக்கப்பட்ட பெண்களை தட்டி எழுப்பும் விதமாக பெண்கள் விடுதலை முன்னணி ஒவ்வொரு ஆண்டும் போராடும் விழிப்புணர்வை ஊட்டும் முகமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி பென்னாகரத்தில் 8.03.2017 அன்று மாலை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தினை தோழர் பழனியம்மாள் தலைமை ஏற்று பேசுகையில் அன்றைக்கு லட்சகணக்கான பெண்கள் ஆயத்த ஆடை மற்றும் இதர தொழிற்சாலைகளும் கொத்தடிமைகளாக வேலைசெய்து வந்தனர். ஆண்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது இப்படி பல்வேறு அடக்குமுறைகளை தகர்த்து பெண் விடுதலை மற்றும் பொதுவுடமை போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் ரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்து 8 மணி நேர வேலை, 8 மணிநேர உறக்கம், வாக்குரிமை, சங்கம் சேரும் உரிமைகளை பெற்றெடுத்த உன்னதமான நாள் தான் மார்ச் 8 . ஆனால் இன்றைக்கு விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் ஆண்களும், பெண்களும் உழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்டமுடியும் என்கிற நிலையில் 12,14 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. மீட்டெடுத்த உரிமைகள் பறிபோயிருக்கிறது.
இந்திய சமூக அமைப்பே ஆண் என்றால் வீரம், பெண் என்றால் அழகு சாதன பொருளாக பார்ப்பது,என்று இருவேறு உலகமாக பிரித்து பார்க்கபடுகிறது. இதன் விளைவாக பெண்களுக்கு அநீதிகள் அதிகரித்திருக்கிறது. ஆண்கள் ஆயிரம் தவறு செய்தாலும் அதற்கு எந்த வசை சொல்லும் இல்லை, பெண்கள் தவறு செய்தால் நடத்தை கெட்டவள் என்ற வசை சொற்கள் இருக்கிறது. பெண்கள் சத்தமாக பேசினால் வாயாடி என்று வசை பாடுகிறார்கள் . ஆண்கள் அசிங்கமாக பேசினாலும், அடிச்சாலும் அவர்களுக்கு எந்த வசை சொல்லும் கிடையாது. ஆண்கள் இறந்தால் பெண்களுக்கு விதவை என்கிற பட்டம் இருக்கிறது. பெண்கள் இறந்தால் ஆண்களுக்கு எந்த பட்டமும் கிடையாது, பெண்கள் மீதான இந்த கறையை ஆணாதிக்கத்தை தகர்தெறிய பெண்களும் சமூக போராடங்களில் ஈடுபடும் பொழுதுதான் பெண்களுக்கான சமத்துவம் பிறக்கும். அதுதான் சல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்திருக்கிறது. எனவே சமூக போராட்டங்களில் பங்கெடுப்போம்,பெண்களின் விடுதலையை மீட்டெடுப்போம் என்று அறைகூவினார்.
தோழர்.மலர்கொடி பேசுகையில் தண்ணீர் ,விலைவாசி,போன்ற எல்லா பிரச்சினைகளும் பாதிப்பது பெண்கள்தான். இன்றைக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் குழாய் அடியில் சண்டைபோட்டுக்கொள்கிறோம். நிலத்தடி நீர் வறண்டு போனதற்கு யார்காரணம். வறட்சியை ஏற்படுத்தியது யார்.? மரங்களை அழித்து, மணலை ஒட்ட சுரண்டி கொள்ளையடித்தது முதலாளிகள்தான் 1000,2000 அடிகளை போர் போட்டடு தண்ணீரை உறிஞ்சி கொள்ளையடிக்கின்றனர். ஆனால் நமக்கு முறையாக தண்ணீர் கொடுப்பது கிடையாது, விலைவாசி உயர்வால் வாழமுடியாமல் பல மணிநேரம் உழைக்கிறோம். அதோடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு காரணமான சினிமா, சீரழிவு கலாச்சாரத்தை எதிர்த்து போராட வேண்டும். பெண்கள்தான் பல புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கிறார்கள் .அத்தகைய புரட்சியின் மூலம்தான் பெண் விடுதலை சாத்தியமாகும் அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்றார்.
தோழர் வனிதா பேசுகையில் முதலாளிகளின் உற்பத்தியை பெருக்கி அதிக அளவில் கொள்ளையடிக்க பெண்களைதான் வேலைக்கு அமர்த்தபடுகிறார்கள். ஏனென்றால் பெண்கள் அதிகமாக உழைக்க கூடியவர்கள், நேரத்தை வீணடிக்கமாட்டார்கள், சங்கம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற அடிப்படையில் இன்றைக்கு சுமங்கலி திட்டம் என்கிற பெயரில் இளம் பெண்களை ஒப்பந்த முறையில் சக்கையாக கசக்கி பிழியபடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகிறார் . இந்த சமூக நிலைமைகளை மாற்றாமல் பெண்களுக்கு விடுதலை இல்லை என்றார்.
சிறப்புரை ஆற்றிய வழக்குரைஞர் பொற்கொடி பேசுகையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்து வருகிறோம். சிறுமி ஹாசினி, நந்தினி என்று அடுத்தடுத்து பாலியல் படுகொலைகள் நடக்கிறது, இதற்கு ஆபாச சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போன்றவைகள் முக்கிய காரணம். ஆபாசத்தை விற்றுக் காசாக்கம் சினிமாவால் சமூகத்திற்கு நடக்கும் கேடுகள் இன்று நடிகை பாவனா போன்றவர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது. இப்பிரச்சினைகளுக்கு யார் காரணம்?இதை சட்டத்தால் தடுக்க முடியுமா? 5 மாத ஆகிவிட்டால் கருவை கலைக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது. குடும்ப வன்முறை சட்டம் இருக்கிறது. வரதட்சணை ஒழிப்பு சட்டம் இருக்கிறது. குற்றம் இழைத்ததால் 5 வருடத்திற்கு சிறை வைக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அந்த சட்டம் நடைமுறைப்படுத்த படுகிறதா? என்றால் இல்லை எல்லா நிறுவனங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? 1992 ல் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்றது. ஆனால் இதுவரைக்கும் உயர்நீதி மன்றத்திற்கு வழக்காக கூட வரவில்லை, ஹெல்மெட்க்கு தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம், டாஸ்மாக் பிரச்சினையில் இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு இதில் தலையிட முடியாது என்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆபாச படங்கள் இன்று பலருக்கும் மலிவாக கிடைக்கின்றது. குளிர்பானம், வண்டி , வேஷ்டிகள் என எல்லா விளம்பரங்களிலும், பெண்களை நுகர்வு பொருளாக உணர்த்துகிறார்கள். எனவே சீரழிவுக்கு காரணம் நுகர்வுவெறி கலாச்சாரமே ? இதனை மாற்ற முடியாதா என்றால் முடியும். ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டவர்கள் பெண்கள். அதுதான் மெரினா எழுச்சியிலும் நடந்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் சமத்துவமாக இருந்ததை உணர்ந்ததாக கூறினார்கள். அங்கு பாலியல் துன்புறுத்துல்களும் சீண்டல்களும் இல்லை போலீசும் இல்லை. அங்கே போராடுபவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்தது . ஆகவே பெண்கள் அழகுபடுத்தி கொள்வது அல்ல வீரம், சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுதான் வீரம். நெடுவாசல் போராட்டத்தில் இருக்கும் பெண்கள் விடாபிடியாக போராடுகிறார்கள். ஆகவே சமூக விடுதலைக்காக போராடுவதின் மூலம்தான் பெண்கள் விடுதலையை பெறமுடியும் என்று போராட அறைகூவினார்.பொதுக்கூட்டத்தில் நூற்றுக்குமேற்பட்ட மக்கள் கவனித்தனர். அங்கு வந்திருக்கும் ஆண்களை யோசிக்க வைக்கும் விதமாகவும், சமூக போராட்டங்களில் ஈடுபட்டால்தான் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இக்கூட்டம் அமைந்தது.
தகவல் : புஜ செய்தியாளர் பெண்கள் விடுதலை முன்னணி, பென்னாகரம். பேச – 8870375836.
“நான் இந்த உலகத்திற்கு தனியே வந்தேன், தனியே செல்வேன். குழந்தைப் பருவத்தில் தாயையும் ஆறுவயதில் தந்தையையும் இழந்தவன் நான். என்னுடையவர்கள் என்று சொல்ல எனக்கு எவருமே இருந்ததில்லை. பெற்றோரின், குடும்பத்தாரின் அன்பு எனக்கு எப்போதுமே கிடைத்ததில்லை”
”ஏழ்மையின் பிடியில் கையறு நிலையில் உழன்று கொண்டிருந்தேன். ஒன்னரை ரூபாய் நாள் கூலிக்கு மாதம் 45 ரூபாய் சம்பாதிக்க தச்சு வேலை செய்திருக்கிறேன். இன்றைக்கும் நான் தச்சு வேலை செய்த கருவிகளை ஞாபகமாக வைத்திருக்கிறேன்”
– கலிகோ புல்லின் தற்கொலைக் குறிப்பிலிருந்து.
கலிகோ புல்லின் தற்கொலை குறிப்பில் “எனது சிந்தனைகள்”, ”தற்போதைய நீதிமன்ற விவகாரங்கள்” மற்றும் “எனது செய்தி” என மூன்று உட்பிரிவுகளாக உள்ளது.
சுமார் அறுபது பக்கங்களுக்கு சமஸ்கிருதமயமான இந்தியில் தட்டச்சு செய்யப்பட்டு ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம். இவ்வாறாக ஒரு குறிப்பு இருப்பதை முதன் முதலாக வெளிப்படுத்தியவர் முன்னாள் கவர்னர் ராஜ்கோவா. ஏராளமான முரண்பாடுகளுடன் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தை உண்மையாகவே கலிகொ புல் தான் எழுதினாரா, அல்லது அரசியல் நோக்கங்களுக்காக இடைச்செருகல் செய்யப்பட்டதா என்பதை விசாரணை தான் தீர்மானிக்கும் – ஆனால், அந்த விசாரணையின் முடிவு எப்படியிருக்கும் என்பதை அதே அரசியலின் தேவைகள் தான் தீர்மானிக்கப் போகிறது.
எனினும், நாம் கலிகோ புல் எழுதியதாகச் சொல்லப்படும் தற்கொலைக் குறிப்பின் வரிகளுக்கிடையே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை அருணாச்சல பிரதேசத்தின் அரசியலுடன் – அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவ கும்பலின் அரசியல் செயல்திட்டத்துடன் உரசிப் பார்ப்பதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். மேற்படி குறிப்பானது “எனது சிந்தனைகள்”, ”தற்போதைய நீதிமன்ற விவகாரங்கள்” மற்றும் “எனது செய்தி” என மூன்று உட்பிரிவுகளாக உள்ளது.
தனது ஏழ்மையான வாழ்க்கைப் பின்னணி குறித்து துவங்கும் கலிகோ புல், எப்படி படிக்கும் காலத்திலேயே கோடீஸ்வரனாக உயர்ந்தேன் என்பதை விவரிக்கிறார். விக்கிரமனின் சினிமாவைப் போலிருக்கும் அந்தக் காட்சிகளில் இருந்து சில பகுதிகள் கீழே …
“ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நான் இரவுக் காவலனாக பணிபுரிந்தேன். காலை ஐந்து மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி மாலை ஐந்து மணிக்கு இறக்க வேண்டும். இதற்காக எனக்கு 212 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது”
சோவ்னா மெயின்
”பின்னர் காண்டிராக்டுகள் எடுத்துச் செய்தேன். 400 ரூபாய்க்கு மூங்கில் வீடுகள் கட்டிக் கொடுக்கத் துவங்கினேன்.. பின்னர் அரசு வீடுகள் மற்றும் பாலங்களைக் கட்டும் காண்டிராக்டுகளையும் எடுத்துச் செய்தேன். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போதே ஒரு ஜிப்சி ஜீப்பும் நான்கு டிரக்குகளும் வாங்கி விட்டேன். நான் முதன்முதலாக எம்.எல்.ஏ ஆன போது (26 வயது) எனது ஆண்டு வருமானம் 46 லட்சங்களாக இருந்தது. எனது மாணவப் பருவத்திலேயே நான் கோடீசுவரனாகி விட்டேன். ஆனால், அதற்காக எப்போதும் நான் பீற்றிக் கொண்டதில்லை”
ஒரு வள்ளலாரின் வாழ்வைப் போல் விரியும் அந்தச் சுயபுராணத்தில் இருக்கும் ஏராளமான முரண்பாடுகளுக்கு மேலே சுட்டிக்காட்டிருப்பவை சிறிய உதாரணங்கள் மட்டும் தான். சூரிய வம்சம் சரத்குமாரை விட அதிவேகமான இந்த வளர்ச்சியை எட்டியிருக்கும் கலிகோ புல், அதனை அரசு காண்டிராக்டுகளின் வழியே தான் சாதித்ததாகச் சொல்கிறார்.
அதே குறிப்பின் வெவ்வேறு இடங்களில் அருணாச்சல பிரதேசத்தின் அரசாங்கமும், அதன் ஒவ்வொரு திட்டமும், நடைமுறைகளும் எந்தளவுக்கு ஊழல் கறைபடிந்துள்ளதென விவரிக்கும் கலிகோ புல், அதனைச் சீர்திருத்தி மக்களுக்கு சேவையாற்றுவதே தனது கொள்கை என குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் மேல் தீவிரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்ற அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதாவின் பெயர் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இன்று கலிகோ புல் குற்றம் சுமத்திய அத்தனை எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் அவரது இறப்பிற்குப் பின் ஒருசில மாதங்களிலேயே மொத்தமாக பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளனர்.
மேலும் சுவாரசியமான விசயம் என்னவெனில், அந்தக் கடிதத்தில் மிக மோசமான ஊழல்வாதியாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சோவ்னா மெய்னை, கலிகோ புல் தனது அமைச்சரவையில் துணை முதல்வராகவே நியமித்திருந்தார். அரிதினும் அரிதாக கலிகோ புல்லின் அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் இருந்தனர்.
மேலும் எப்போதெல்லாம் அருணாச்சல பிரதேசத்தில் அரசியல் குழப்ப நிலை ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் தங்களை பத்து கோடிக்கும் பதினைந்து கோடிக்கும் விற்று விடுகின்றனர் என்றும், இது மிக கேவலமான மக்கள் விரோத அரசியல் எனவும் சாடுகிறார் கலிகோ புல். இவ்வாறு சாடும் அதே கலிகோ புல் தான் நபாம் டுக்கியின் அரசை உடைத்து தனது தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் திரட்டி பாரதிய ஜனதாவின் 11 எம்.எல்.ஏக்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர். இதற்கு ஆன செலவு எவ்வளவு என்கிற விவரமும் மிக கவனத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் கலிகோ புல் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் உள்ள முரண்பாடுகள் என்றாலும், கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டது மட்டும் உண்மை (குறைந்தபட்சம் இதிலும் சதிக்கோட்பாடுகள் எழாத வரை). கலிகோ புல்லின் தற்கொலை முடிவை (அல்லது மரணத்தை) எது தூண்டியிருக்கும்? அவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த 60 பக்க குறிப்புகளால் யார் பலனடைந்துள்ளனர்?
அதற்கு முன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பத்தால் சந்தேகமின்றி ஆதாயமடைந்திருப்பது பாரதிய ஜனதா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ’மோடி அலையையும்’ மீறி தேர்தலில் படுமோசமாகத் தோற்று வெறும் பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா மாறி மாறி நடந்த தாவல்களுக்குப் பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கலிகோ புல் பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்பதும் மிகத் தெளிவாகத் தெரியும் உண்மை. எனில் பாரதிய ஜனதா ஏன் அவரைக் கைவிட வேண்டும்? கலிகோ புல் ஏன் மரணமடைய வேண்டும்?
அந்த தற்கொலைக் குறிப்பில் கலிகோ புல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தாலும், அவர் யாரையெல்லாம் குற்றம்சாட்டியிருந்தாரோ அவர்களுக்கே பதவிகளை வாரி வழங்கித் தன்னோடு வைத்துக் கொண்டார். அருணாச்சல பிரதேசத்தின் தேர்தல் அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் ’ஊழல்’ – குறிப்பாக பொது விநியோகத் துறையின் ஊழல் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பேசு பொருளாக இருந்து வந்தது.
பாரதிய ஜனதாவின் வடகிழக்குத் திட்டங்கள் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. அரசியல் ரீதியில் காங்கிரசையும் வட்டாரக் கட்சிகளையும் ஒழித்து இந்துத்துவ அரசியலை நிலை நாட்டி அப்பகுதியை இந்து தேசியத்தின் மையநீரோட்டத்தில் சேர்ப்பது மற்றும் பொருளாதார ரீதியில் ”அரசியல் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலைநாட்டப்பட்ட” வடகிழக்கின் இயற்கை வளங்களை தரகு முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பது.
’தூய்மையான’ ஆட்சி நிர்வாகத்தை வலியுறுத்திய கலிகோ புல்லின் மூலம் புறவாசல் வழியாக அரசியல் அதிகாரத்தைக் கைபற்றுவதில் பாரதிய ஜனதா வென்றது – சில மாதங்கள் நீடித்த தனது ஆட்சிக்காலத்தில் ஹைட்ரோகார்பன் துரப்பணம் செய்வது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களுக்கு கலிகோ புல் அனுமதியளித்துள்ளார். அதே காலகட்டத்தில் தொலைதூரப்பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக மாநிலத் தலைநகருக்கு வரும் பழங்குடி இன மக்களைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்க வைப்பது, (ஊழல்வாதிகளை கக்கத்தில் வைத்துக் கொண்டே) ஊழல் எதிர்ப்பு சவடால்கள் அடிப்பது என தனது சொந்த அரசியல் நலனுக்கான ’இமேஜ் மேக் ஓவர்’ வேலைகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற வழக்கு சூடு பிடிக்கிறது. கலிகோ புல்லின் கடிதத்தில் தீர்ப்பை தனக்குச் சாதகமாக வழங்க கோடிக்கணக்கில் லஞ்சம் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஏஜெண்டுகள் அணுகிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் உண்மையாக இருக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எந்நேரமும் தாவுவதற்குத் தயாராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபுறமும் தீர்ப்புக்கான பேரம் இன்னொருபுறமும் நடந்து வந்த நிலையில் – தீர்ப்புக்காக அத்தனை செலவு செய்த பின்னும் உறுப்பினர்களைத் தக்க வைக்கும் சாத்தியம் குறைவு என்பதை கலிகோ புல் உணர்ந்திருக்க வேண்டும்.
பெமா கந்து
மற்றொருபுறமோ கலிகோ புல்லுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற பெமா கந்து பாரதிய ஜனதாவுக்குத் தாவிய வேகத்தைப் பார்த்தால், அவரைத் தனது சிலீப்பர் செல் ஏஜெண்டாக பல மாதங்களாகவே பாரதிய ஜனதா பராமரித்து வந்திருக்க வேண்டும் – இதுவும் கலிகோ புல்லுக்குத் தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. கடைசியாக, கலிகோ புல்லுக்குள் இன்னமும் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்திருக்க (மிகக் குறைந்தபட்சமாகவாவது) சாத்தியமுள்ள அந்த ஏழைத் தச்சனின் மனசாட்சி. இவையனைத்தையும் கடந்து பேரம் படியாமல் போயிருக்கும் சாத்தியங்களையும் தள்ளி விடுவதற்கில்லை.
கலிகோ புல் ஆட்சியை இழக்கிறார் – அதிகாரம் கையை விட்டுப் போனதும் கிழிந்த நெல்லிக்காய் மூட்டையாக சிதறியோடிப் போகின்றனர் அவர் வசமிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள். அரசியல் பேரங்களில் திறமையைக் காட்டாத பழைய ’பன்னீர்செல்வமான’ கலிகோ புல்லைக் கழற்றி விடுகின்றது பாரதிய ஜனதா. கலிகோ புல் மரணமடைகிறார் – உடனே அவரது தற்கொலைக் குறிப்புகள் குறித்த வதந்திகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. முதலில் அதை பா.ஜ.கவின் விசுவாசியான ராஜ்கோவாவே துவக்கியும் வைக்கிறார்.
மேற்படி தற்கொலைக் குறிப்பும் அதன் உள்ளடக்கமும் தற்போது பதவியிலிருக்கும் அத்தனை பேரின் அரசியல் எதிர்காலத்தையும் (குறிப்பாக பெமா கந்து) காவு வாங்குமளவுக்குத் தீவிரமானவை என்கிற நிலையில் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்த பேரையும் கடத்திக் கொண்டு பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகிறார் பெமா கந்து. தற்கொலைக் குறிப்பு ஒன்று இருப்பதாக முன்னாள் கவர்னர் சொல்லி விட்டார், கலிகோ புல்லின் மனைவியும் அப்படியொன்று இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளார் – ஆனால், இன்று வரை அதன் மேல் சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனினும், அந்த மசால் வடையைக் காட்டி பெமா கந்து என்கிற ஊழல் பெருச்சாளியையும், அவருடன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் பாரதிய ஜனதா வளைத்திருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள், அவற்றின் பின்விளைவுகள் மற்றும் அதனால் ஆதாயம் அடைந்த தரப்பு யார் என அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் என்ன? முன்னாள் தச்சுத் தொழிலாளியாக இருந்து ‘முன்னேறிய’ கலிகோ புல் இறந்து விட்டார். வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பாரதிய ஜனதா ஆடியிருக்கும் அரசியல் கோர தாண்டவம் திகைப்பூட்டுவதாக உள்ளது. ஒரு சிறிய மாநிலத்துக்கே இந்தளவுக்கு மெனக்கெடுவார்கள் எனில், தமிழகம் போன்ற (வரலாற்று ரீதியாக இந்துத்துவத்தின் தொண்டையில் சிக்கிய கடப்பாறையாக உள்ள) மாநிலத்தின் அதிகாரத்தைக் கைப்பற்ற எந்தளவுக்கு இறங்கிப் போவார்கள் என்பது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டு, ஜெயா மரணம், நெடுவாசல், மீனவர் கொலை என்று பல்வேறு பிரச்சினைகளில் பாரதிய ஜனதா ஆடி வரும் அரசியல் சூதாட்டங்களை அருணாச்சல பிரதேசம் காட்டும் உதாரணத்தின் ஒளியில் பார்ப்பதுடன், இந்து பாசிஸ்டுகளின் அரசியல் அபிலாசைகளை முளையிலேயே கிள்ளியெறிந்து அவர்களைக் களத்தில் மோதி முறியடிப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடமையாகும்.
அகதிகள் மற்றும் முசுலீம்கள் மீது பாக்கிஸ் என உமிழப்படும் கொடுஞ்சொற்கள்
இங்கிலாந்தை உருவாக்கிய அகதிகளைக் கொண்டாட வேண்டிய நேரமிது!
ஏகாதிபத்தியங்களின் போர்ச்சக்கரங்களில் மிதிபட்டு நசுங்கிய மத்திய கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்க மக்கள் பலர் உலகம் முழுதும் அகதிகளாக விசிறியடிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் இங்கிலாந்தும் வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இளம் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அந்நாடுகள் அவர்களை மறைமுகவாவேனும் வரவேற்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன. ஏனெனில் இவர்கள்தான் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சொகுசாக வாழ்வதற்கு குறைந்த கூலியில் கிடைக்கும் அடிமைகள். ஆயினும் அவர்களது உழைப்பினைத் துய்த்துக்கொண்டே அவர்களை நாட்டை விட்டே துரத்தச் சொல்கிறார்கள் இனவெறியர்கள். இந்த இனவெறியர்களையும் மேற்குலக அரசுகள் தூண்டி விடவும் செய்கின்றன. இதன் மூலம் அகதிகளை சுரண்டுவதோடு எப்போதும் அவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கவும் முடியும்.
பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து அகதிகள் மீதான எதிர்ப்புணர்வும் இனவெறியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது
பிரெக்ஸிட் வாக்கெடுப்பைத் (Brexit Referendum) தொடர்ந்து அகதிகள் மீதான எதிர்ப்புணர்வும் இனவெறியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் பண்பாடு மற்றும் பொருளாதாரத்திற்கு அகதிகள் ஆற்றிய பங்களிப்பினைப் பறைசாற்றவும் அகதிகளுடைய இழப்பினை இங்கிலாந்து மக்களுக்கு உணர்த்தவும் “நாங்களில்லாமல் ஒரு நாள்’ என்ற பெயரில் நாடுதழுவிய ஒரு இயக்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட அகதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதற்குச் சில நாட்கள் முன்னதாக (16/02/2017) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எல்லைச் சுவர் (Border Wall) திட்டத்திற்கு எதிராக அகதிகள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையின் ஆசிரியரான மைரியா கொன்சலஸ் ரோட்ரிக்ஸ் (Mireya González Rodríguez) லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையில் (University of Leicester Archaeological Services) ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். இவர் லீசெஸ்டர் நகரில் “நாங்களில்லாமல் ஒரு நாள்” இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளின் அமைப்பாளர் ஆவார்.
நான் ஒரு அகதி. ஒரு கலைத்துறை வரலாற்று மாணவியாக எராஸ்மஸ்(Erasmus – மாணவர் அறிவுப் பரிமாற்றத் திட்டம்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதன்முறையாக இங்கிலாந்து வந்தேன். பன்முக கலாச்சாரங்களை கொண்ட லீசெஸ்டர் போன்ற ஒரு நகரத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். நான் வட ஸ்பெயினைச் சேர்ந்த போன்போரேடா நகரத்திற்கு திரும்பினாலும் மீண்டும் என்னுடைய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள இங்கிலாந்திற்கு வந்து சேர்ந்தேன். இங்கிலாந்து கல்வித்துறையின் ஒருங்கிணைந்த வெளிப்படையான அணுகுமுறையின் காரணமாக மேற்படிப்பையும் முனைவர் பட்டப்படிப்பையும் படித்தேன். இங்கிலாந்தின் சமூக கலாச்சாரப் பன்முகத்தன்மையை எப்பொழுதும் நான் பாராட்டியிருக்கின்றேன். “இங்கிலாந்து சமூகம் பாகுபாட்டிற்கு ஒருபோதும் இடங்கொடுக்காது, எந்த வடிவிலான தீவிரவாதத்தையும் பொறுத்துக் கொள்ளாது, பன்முக கலாச்சாரத்தை மதித்து அரவணைக்கும் மற்றும் அகதிகளின் பங்களிப்புகளை மதித்து மரியாதை செலுத்தும்” – ‘பிரிட்டன் வாழ்க்கைப் பற்றிய தேர்வு” (Life in the United Kingdom test) என்ற இணைய வழித் தேர்வின்(குடியுரிமைக்கான) பொழுது எங்களுக்கு கூறப்பட்டது.
இருந்த போதிலும் அண்மைக்காலங்களில் சில மாதங்களாக இங்கிலாந்து மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்யும் வகையில் என்னைப் போன்ற அகதிகளைத் தூற்றவும் புறக்கணிக்கும்படியுமான கட்டுக்கதைகள் அதிகரித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேறியிருக்கும் மக்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்கும்படியாக அது இருக்கிறது. ஒரு சில ஊடகங்களால் பரப்பப்படும் இந்தக் கட்டுக்கதைகளால் பகைமையுணர்வு உருவாகிறது. போக்குவரத்திலிருந்து பொது சேவைகள் வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் நாங்கள் தான் காரணம் என்று வெளிப்படையாக குற்றச்சாட்டப்படுகிறோம். அகதிகளுக்கெதிரான தாக்குதல்கள் மற்றும் வெறுப்புக் குற்றங்களும் இத்துடன் சேர்ந்தே வருகின்றன.
அகதிகள் மற்றும் முசுலீம்கள் மீது பாக்கிஸ் என உமிழப்படும் கொடுஞ்சொற்கள்
இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த அகதிகள்(EU) மற்றும் சேராத அகதிகள்(Non-EU) என்று பிரிக்காமல் இருப்பது தேவையானது என்று நம்புகிறேன். நான் ஸ்பெயினின் குடிமகள் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத எனது நண்பர்கள் மற்றும் சகப்பணியாளர்கள் போலல்லாமல் ஐரோப்பாவெங்கும் இடம் மாறவும், வேலை செய்யவும் மற்றும் தங்கியிருக்கவுமான உரிமைகளை பெற்றிருக்கிறேன். இந்த உரிமைகள் மாறக்கூடும். ஆனால் ஒரு அகதியாக என்னுடைய தகுதி மாறாது. நான் எப்போதும் ஒரு அகதியாகவே இருக்கிறேன். எப்போதும் ஒரு அகதியாகத் தான் உணர்கிறேன். இது நான் தெருவில் செல்லும் பொழுது “பாக்கி, உன்னுடைய நாட்டிற்கு போ” (Paki go home – இனவெறியர்கள் முசுலீம்களை நோக்கி உமிழும் அமில வார்த்தைகள்) என்று காரில் செல்லும் சிலர் கூச்சலிட்டதால் இருக்கலாம். அல்லது தொலைப்பேசியில் என்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் “நாங்கள் ஓட்டு போட்டது உன்னுடைய நாட்டிற்கு உன்னை துரத்துவதற்கு தான்” (We voted for you to go home) என்று என்னைப் பார்த்து சிலர் கூறியதாலும் இருக்கலாம்.
ஆனால் இங்கிலாந்து தான் எனது தாயகம். இங்கிலாந்து குடிமக்களின் ஒத்த நடத்தைகளை கூட நான் வரித்துக் கொண்டுள்ளேன். நான் திரும்பவும் ஸ்பெயினுக்கு சென்ற பொழுது ஒரு உண்மையான இங்கிலாந்து குடிமகளை போல பேருந்திற்காக வரிசையில் காத்திருந்தேன். பேருந்து பயணத்திற்காகவும் வானிலையைப் பற்றி புதிய நபர்களிடம் பேச்சு கொடுத்து வந்ததற்காகவும் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி கூறுகிறேன்.
இங்கிலாந்து நாட்டிற்காக அகதிகளாற்றிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்கு தேசிய அளவிலான ஒரு புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட “ஒருநாள் நாங்கள் இல்லாமல்” இயக்கத்தில் நான் பங்கேற்க இதுதான் காரணம். இந்த இயக்கம் அனைத்துவிதமான அகதிகளையும் பற்றியது என்பதை ஆணித்தரமாக கூறி வருகிறேன். தங்களது சுயநல அரசியலுக்காக இந்த இயக்கத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் பிரெக்ஸிட்டுடன் (BREXIT) இதைத் தொடர்புபடுத்த முயற்சிப்பவர்களுக்கும் இந்த விளக்கத்தைக் கூறி நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன். இந்த இயக்கம் அந்த மாதிரியான அரசியலைப் பற்றியதல்ல. எங்கு பிறந்திருப்பினும் எவ்வளவு காலங்கள் இங்கே தங்கியிருப்பினும் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு அகதிகளின் பங்களிப்புகளைக் கொண்டாடும் மக்களைப் பற்றியது இது. இதற்குமேல் என்னால் அழுத்தமாகக் கூற முடியவில்லை.
லீசெஸ்டர் நகரத்தில் இன்று தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. லீசெஸ்டர் நகரைச் சேர்ந்த பன்முக கலாச்சார பின்னணிக் கொண்ட கலைஞர்கள் மற்றும் பேச்சாளர்களால் டவுன் ஹால் சதுக்கத்தில் (Town Hall Square ) கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கள் கதைகளையும், பட்டறிவுகளையும், உணவுகளையும் மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான நாளிது.
இங்கிலாந்திற்கு அகதிகளால் ஏற்படும் பொருளாதார நலன்களை “நாங்களில்லாமல் ஒருநாள்” இயக்கம் பேசப்போவதில்லை (ஆனாலும் இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் பொது மக்களுக்கான சேவைகளுக்கான நிதிகளிலும் இளம் தொழிலாளர் பட்டாளமான அகதிகள் பங்களிக்கிறோம் என்பது பொதுவான உண்மை). பதிலாக அகதிகளின் பங்களிப்பினை அடிக்கடி மறந்துபோகும் அல்லது எங்கள் பங்களிப்புகளை ஆதாரமின்றி மறுக்கும் (Taken for Granted) இங்கிலாந்தின் குடிமக்களுக்கு எங்களது சமூக மற்றும் கலாச்சார பங்கை நினைவூட்டவே நாங்கள் விரும்புகிறோம்.
பேட்டர்ட் ஃபிஷ் என்ற மீன் உணவை யூத அகதிகளும், சிப்ஸ்-ஐ போர்ச்சுகள் அகதிகளும் தான் அறிமுகப்படுத்தினர். இவ்வாறு இங்கிலந்தின் புகழ்பெற்ற உணவு வகைகளில் கூட அகதிகளின் பங்களிப்பு நிறைந்துள்ளது.
உள்ளூர் சந்தைகள், உணவகங்கள், துணிக்கடைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வகைகள் மற்றும் சந்தங்கள் முதல் கறி வகைகள், வெள்ளிக்கிழமை மீன் மற்றும் சிப்ஸ்(Friday fish and chips) வரை இங்கிலாந்து மக்களுடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அகதிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம். இத்தாலியைச் சேர்ந்த மேலாளர் கிளாடியோ ரேனியாரி உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் சென்ற பிரிமியர் லீக்கை என்னுடையச் சொந்த ஊரான லீசெஸ்டரின் கால்பந்து அணி வெற்றியைக் கொண்டாடிருக்க முடியாது. பொதுவாக இந்த குடியேற்றம் பன்முக கலாச்சாரங்களையும் புதிய சிந்தனைகளையும் இங்கிலாந்து சமூகம் சந்திக்கும்படி செய்திருக்கிறது. இந்த அறிவு பரிமாற்றத்தின் காரணமாக அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் இங்கிலாந்தில் சாத்தியமானது.
உங்களுடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அசிரியர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தலைமைச் சமையல்காரர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அலங்கார வடிவமைப்பாளர்களாக அகதிகள் இருக்கிறார்கள் என்பதை இன்று இங்கிலாந்து குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம். பேருந்துக்காக நாள்தோறும் காத்திருக்கும் பொழுதும் தேநீர் விடுதிகளில் வரிசையில் நிற்கும் பொழுதும் நீங்கள் சந்தித்துப் பேசி மகிழும் மனிதர்களில் பெரும்பாலானோர் அகதிகளே.
நமது (அகதிகளுடைய) பொதுவான அம்சங்களைப் பறைசாற்றுவதையும் அதைக் கொண்டாடுவதையும் “நாங்களில்லாமல் ஒரு நாள்” இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது. உண்மையில் நம்மைப் பிரிப்பவற்றை விட நம்மைச் சேர்க்கும் பொதுவான அம்சங்கள் தான் மிகவும் உயர்வானது. தனித்திருப்பதை விட சேர்ந்திருப்பது தான் சிறந்தது என்பதைக் கூறுவதற்கு நாம் பயப்படக்கூடாது.
உழைக்கும் மகளிரின்
உரிமைகள் பொசுங்கையில்
திளைக்கும்
மகளிர் தின வாழ்த்து மட்டும்
தெரிவித்தால் போதுமா?
எதையும் கொண்டாடும் வர்க்கம்
இதையும் கொண்டாடினால் தீருமா?
பெண்கள்
சதையும் கிழிக்கும்
இந்த சமூகக் கட்டமைப்புக்கெதிராக
உதையைக் கொடுக்கும் அரசியலின்றி
ஒருநாளும்… பெண்நிலை மாறுமா?
போராட்டத்தின் தேவைகளை
புதைத்துவிட்டு,
கொண்டாட்டத்தின் கூத்துகள் நியாயமா?
பெண்கள் பேசினால்
கருத்தையும்
வல்லுறவு செய்யத் துடிக்கும்
அந்தக் காவி பயங்கரத்தைத் தண்டிக்காமல்
மகளிர் தினத்திற்கு
பொருள் உண்டா?
பிறப்புறுப்பை அறுக்கும்
இந்து முன்னணி கயவர்களை
இந்த ஊரில் வைத்துக்கொண்டே
எனக்கும் மகளிர் தின வாழ்த்தா!
கேட்கிறாள் அரியலூர் நந்தினி?
எதற்கு குதரறப்பட்டேன்
எனும் விவரம்
இறுதி மூச்சடங்கும் வரை தெரியாது,
என்னிடம் அந்த மிருகம்
என்ன எதிர்பார்த்தது
என்பது புரியாது,
யாரையும்
தப்பாக நினைக்கத் தெரியாமல்
நட்பாக நம்பினோம் சமூகத்தை…
சிதைக்கும் பாலியல்
ஆணாதிக்க வெறி அடிப்படையின்
சிதைக்குத் தீ மூட்டாமல்,
ஆபாச இணையம், சினிமா, நுகர்வு வெறியை
அப்படியே வைத்துக்கொண்டு
எமக்கும் மகளிர் தினமா?
கேட்கிறார்கள்
எண்ணூர் சிறுமி ரித்திகாவும்
போரூர் ஹாசினியும்.
வெறிக்கும் விழிகளைச் சேர்த்து
வெட்ட வேண்டியிருக்கிறது
இளநீர் சீவும் பெண்.
உறிக்கும் பார்வைகளையும் சேர்த்து
தூசு துடைக்க வேண்டியிருக்கிறது
பழம் விற்கும் பெண்.
உரசும் சீண்டலை இடைமறித்து
லாவகமாக பேருந்துக்குள்ளேயே
பயணிக்க வேண்டியிருக்கிறது
வேலைக்குப் போகும் பெண்.
மேஸ்திரியின் ‘பிளானுக்கு
தப்பிவரும் தருணங்களில்
தலையில் அழுத்தும் கற்களைவிட
சுமக்க முடியாததாகிறது
சுயமரியாதையுள்ள
பெண் தொழிலாளியின் மனது.
காவல் அதிகாரியே ஆனாலும்
கலெக்ட்டரே ஆனாலும்
ஏன்! கடவுளே ஆனாலும்
பெண்ணைப் பிடித்தாட்ட
சீசன் தவறாமல்
ஈசன் வருகிறான்!
மொத்த சமூகமே
பெண்ணை உற்று உற்றுப் பார்க்கும்
ஒரு பொருளாக்கி விட்ட பிறகு
போதாது வெறும் உபதேசம்…
மனித உணர்வுகளையே
பண்டமாக்கி பிண்டமாக்கும்
முதலாளித்துவ கட்டமைப்பையே
அகற்றினால்தான்
இனி பெண்ணுக்கும் சுவாசம்.
ஷேல் கேஸ் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் !
நாகைமாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் பகுதி பழையபாளையம், தாண்டவன்குளம், இருவக்கொள்ளை கிராமங்களில் ஷேல்கேஸ் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறையில் உள்ளது. தாண்டவன்குளம் பகுதி கிராம மக்களும் சுற்றுபகுதியில் உள்ள மக்களும் இன்று 9.3.2017 காலை 11 மணி அளவில் கூடி இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவது என முடிவு எடுத்துள்ளனர். வருகிற செவ்வாய்கிழமை 14.03.2017 அன்று தாண்டவன்குளம் கிராமத்தில் காலை 10 மணி அளவில் தொடர் முழக்க போராட்டம் தொடங்குவது எனவும் அரசு இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அம்மக்கள் கோருகிறார்கள்
தகவல் : தோழர் ரவி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம். சீர்காழி தொடர்புக்கு: 98434 80587
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு !
தமிழக மீனவர் பிரிட்டோ படுகொலை !
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடு !
மாணவர்களே !
ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிட மறுப்பு !
மாணவர்கள் மீது நீட்தேர்வு திணிப்பு !
மீனவர்கள் படுகொலை !
மீண்டும் களமிறங்குவோம் ! தமிழகத்தையே மெரினாவாக்குவோம் !
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தமிழ்நாடு, தொடர்புக்கு : 9445112675.
குற்றவாளி ஜெயா படத்தை உடனே அகற்று !
மனு கொடுத்த தோழர்களை கைது செய்த காவல்துறை !
விருத்தாச்சலம் MLA அலுவலகத்தில் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றிய மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்த போலீசு ( கோப்புப் படம் )
விருத்தாசலத்தில் ஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இம்மனுவை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு தலைமையில் மனுகொடுக்க 9-3-2017 காலை 10.00 மணியளவில் செல்ல திட்டமிட்டிருந்தனர். காவல்துறைக்கு மனுகொடுப்பது பற்றி முன்னதாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதை அறிந்த காவல்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் 300-க்கு மேற்பட்ட போலீஸ் பட்டாளத்தை குவித்தனர். ஆனால் மனுகொடுக்க கால தாமதம் ஏற்பட்டதால் மனுதாரரான வை.வெங்கடேசன் ஐயா அவர்களை அவருடைய அலுவலகத்திற்கே டி.எஸ்.பி. கார்த்திகேயன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் நேரில் சந்தித்து தனது காவல்துறை வாகனத்திலேயே நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்து சென்றனர். வை.வெங்கடேசன் ஐயா மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இறங்கியதை பார்த்த அ.தி.மு.க குண்டர்கள் தோழர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் இந்த தே…… பசங்கள அனுமதிச்சீங்கனா நாங்களும் உள்ளே வருவோம் என்று கூச்சலிட்டனர்.
அவங்க கொடுக்கிற மனுவை வாங்க கூடாது என்று நகராட்சி ஆணையருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த அடாவடி போக்கிரிதனத்தினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது காவல்துறை. இதையெல்லாம் மீறி உள்ளே சென்று மனுவை நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
விருத்தாச்சலம் MLA அலுவலகத்தில் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றிய மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்த போலீசு ( கோப்புப் படம் )
நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்த அதிமுக குண்டர்கள் மக்கள் அதிகாரத்தின் பெண் தோழரை குறிப்பிட்டு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேச குரல் எழுப்பினர். அதிமுக குண்டர்களை விடுத்து அந்த பெண் தோழரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது காவல்துறை. அதிமுகவினரின் ஆணைப்படி இந்த காவல்துறை பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் 7 பேரையும் கைது செய்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க அனுமதித்த காவல்துறை மனு கொடுத்த மக்கள் அதிகார தோழர்களை விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தது. அவர்களை குற்றவாளிகளை போல சட்டையை கழட்ட சொல்லி தரையில் உட்காரும்படி ஆணையிட்டார் கே.கே.செந்தில்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர்.
ஐயா வெங்கடேசன் கழற்ற முடியாது, தரையில் எல்லாம் உட்கார முடியாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பின்வாங்கினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் மதிய உணவை சாப்பிடாமல் காவல்நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் பிறகு மாலை 3.00 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஊழல் என்பது புற்றுநோய் போல பரவி ஊன்றியிருக்க நேர்மையானவர்கள் சிறுபான்மையராகி வருகின்றனர். குரல்வளையை நெறிக்கும் ஊழல் என்ற இந்த மரண துன்பத்திலிருந்து குடிமைச் சமூகத்தை விடுவிக்க அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து கடமையுடன் தைரியமாக சகமனிதர்களின் துணையுடன் போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் விடுதலை போராட்டத் தலைவர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் படம் இருப்பதற்கு இங்குள்ள அரசும், போலீசும் உதவியாக இருக்கின்றது.
இந்நிலையில் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் பத்திரிக்கையாளர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஊழல் குற்றவாளி என தண்டனை பெற்ற ஜெயாவின் புகைப்படத்தை அரசு மரியாதையுடன் அரசு செலவில் நலத்திட்டங்களில் அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்தக்கூடாது அகற்ற வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த கோரிக்கைக்காக பல்வேறு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது.
ஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றும் வரை தமிழகமெங்கும் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தொடரும் !
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கண்டித்து கல்லூரி வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.
வியாழனன்று (09.03.2017) பிற்பகல் 12:00 மணிக்கு பச்சையப்பன் கல்லூரியில் இயங்கிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடினர். மேலும் தமிழக மக்களின் வாழ்வைச் சூறையாட வரும் மோடி அரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களை முழங்கினர்.
இந்த போராட்டத்தை தொடக்கத்திலே சிதைக்கும் விதமாக கல்லூரி நிர்வாகமும் உளவுத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இன்று கல்லூரியில் தேர்வுகள் நடக்கிறது எனவே போராட்டத்தை கைவிடும்படி சொல்லிப்பார்த்தது. மேலும் தேர்வு முடிந்தும் போராட்டத்துக்காக காத்திருந்த மாணவர்களை கல்லூரி வளாகத்தை விட்டு விரட்டவும் முயற்சித்தது போலீசு.
இந்தத் தடைகளைத் தாண்டி மாணவர்கள் தங்கள் உணர்வைப் பதியவைக்கும் வகையில் போராட்டத்தை நடத்திக் காட்டினர். இனி அனைத்து பிரச்சினைகளுக்காகவும் களமிறங்குவோம் என பறைசாற்றும் வகையில் இப்போராட்டம் அமைந்தது. டாஸ்மாக்கை மூடும் போராட்டத்த்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்தான் அருகாமை டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கி போர்க்குணத்துடன் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே தற்போதைய போராட்டத்தின் போதும் போலீஸ் துறை கல்லூரியை சுற்றி சுற்றி வந்தது.
போராட்டத்தில் முழங்கிய முழக்கங்கள் :
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மோடி அரசு திணிக்கும்
கொள்ளிவாய்ப் பிசாசு !
வெல்லட்டும்… வெல்லட்டும்…
நெடுவாசல் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் !
நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யச் சொல்லும்
BJP-யே தைரியம் இருந்தா பச்சையப்பாஸ் பக்கம் வா !
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு !
அவன் தூதரகத்தை இழுத்து மூடு !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. சென்னை – 94451 12675
இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கொலை குறித்து எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், தமிழ் இந்து நாளிதழில் இன்று (மார்ச் 9, 2017) “ஓட்டுக்கு மட்டும்தான் நாங்கள் இந்தியர்களா?” என்றொரு சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
அதில், “பிரதமரே! ஒரு உயிர் போயிருக்கிறது, அதைப் பாதுகாக்கத்தான் முடியவில்லை. கொன்றவர்கள் யார்? எங்களுக்குச் சொல்லுங்கள். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும்தான் நாங்கள் கண்ணுக்குத் தெரிவோம்; மற்ற நேரங்களில் நாங்கள் பொருட்டில்லை என்றால், எங்களுக்கும் நாங்கள் யாரென்று உணர்த்தும் காலம் வரும்!” என்று கோபத்துடன் சீறுகிறார் குரூஸ். நியாயமான கோபம்தானே என்று நீங்கள் பாராட்டுவதற்கு முன் சற்று பொறுங்கள்!
இன்றைக்கு மோடியின் பெயரைக் கூட சொல்லாமல் பிரதமரே என்று விளித்தும் இலங்கை கடற்படைதான் கொன்றது என்று மீனவர்கள் ஆணித்தரமாக சொல்லும் போது கொன்றவர் யார் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சுவதையும் செய்யும் குரூஸ் அவர்கள் 2014 பாராளுமன்ற தேர்தலில் இதே மோடிக்காக தமிழகத்தில் களமிறங்கியவர்.
இலங்கை நெஞ்சில் சுடுகிறது இந்தியா முதுகில் குத்துகிறது – ஓவியம்: முகிலன்
அப்போது அவர் மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்த போது, மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற(!) தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரித்தாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார் குரூஸ்.
குரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அன்றும் இன்றும் அடித்து விடுகிறார்கள். தற்போது அந்த ‘வளர்ச்சி’ தோற்றுவித்திருக்கும் மரணங்களை நாம் பணமதிப்பிழப்பு கொலைகள் முதல், வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை வரை பலவற்றில் பார்த்து விட்டோம்.
குரூஸ் அன்று மோடியை ஆதரித்த போது தமிகத்தில் தினமலர், தினமணி, விகடன், குமுதம், தந்தி, புதிய தலைமுறை என்று அனைத்து ஊடகங்களுமே மோடியின் குஜராத் செட்டப் காட்சி வளர்ச்சிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். ஆகவே இது குரூஸ் மட்டுமே செய்த ஒன்றல்ல.
இருப்பினும் அன்றைய நிலவரப்படியே, குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86 ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள், முதலாளிகள்.
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார் மோடி. 2012-ல் மட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இது போக குஜராத்தில் மோடி அரசு நடத்திய முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் ரத்த வீச்சு இன்றும் அடித்துக் கொண்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தின் தாத்ரி கொலையோ, குஜராத்தின் ஊனா அடியோ, ரோகித் வெமுலா தற்கொலையோ நூற்றுக் கணக்கான சான்றுகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.
பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே?
பாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். மற்றபடி இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டு அதையும் இந்திய அரசு கண்டிக்க கூட துப்பில்லாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் தமிழக மக்களின் ஒட்டு மொத்தமான கோபம் மத்திய அரசை கேள்வி கேட்கும் நிலையில் மீனவ மக்களின் பிரதிநிதி போல வேடம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
இல்லை என்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா? மீனவர் பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே? நீங்கள் படித்த மற்றும் வடித்த இலக்கியம் சொல்லிக் கொடுத்த மனிதநேயம் என்பது இதுதான் என்றால் அந்த இலக்கியம் எங்களுக்கு வேண்டாம்.
தி இந்து கட்டுரையில் அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்: “ராமேஸ்வரம் சொந்தபந்தங்கள் அத்தனையிடமும் பேசிவிட்டேன். “மீன் பிடிக்கப் போறோம்ங்குறது தவிர, வேற எந்த நோக்கமும் இல்லாத அப்பாவிப் புள்ளைக. இலங்கைக் கடற்படையோட இரண்டு படகுகள் சுத்திச் சுத்தி வந்து சுட்டிருக்கு. இறந்த பையன் தங்கச்சிமடம் தவசி பேரன் கெமிலஸ் மகன் பிரிஜ்ஜோ. அணியத்தில் நின்னு இலங்கை நேவிப் படகுகளைப் பார்த்தவன் பதறி, எல்லோரையும் கிடைத்த இடத்தில் பதுங்கச் சொல்லியிருக்கான். குண்டுச் சத்தம் ஓய்ஞ்சதும் மத்தவங்க மேலே வந்து பார்த்தால், கழுத்தில் குண்டு பாய்ஞ்சு ரத்த வெள்ளத்துல அவனே கெடந்துருக்கான். பதறி கரைக்குச் செய்தி சொல்லியிருக்காங்க. சேதி கடலோரக் காவல் படைக்கும் போயிருக்கு. அங்க வழக்கம்போல அலட்சியம். இளம்பிள்ளையைக் கொன்னது நாங்களில்லன்னு இலங்கைக் கப்பப் படை சொன்னா அப்பம் வேற யாரு?”
இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது ஜோ டி குரூஸ் அவர்கள் சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா?
சரி ஐயா அதே சொந்தங்களிடம் நீங்கள் மோடியை ஆதரித்து வெட்கம் கெட்ட முறையில் எழுதிய வரலாற்றையும் சேர்த்து காட்ட தைரியம் உண்டா? இல்லை இதே சொந்தபந்தங்கள் சொன்ன விசயத்தை பாஜக குள்ளநரித் தலைவர்களிடம் சொல்ல முடியுமா? ஒரு குஜராத்தியை பாகிஸ்தான் சுட்டிருந்தால் கடலோரக் காவல் படை இப்படித்தான் செயல்படுமா என்று தற்போது கேட்கும் ஜோ டி குரூஸ் இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா? எந்தக் காலத்தில் அய்யா கடலோரக் காவற்படை நமது மீனவர்களை காப்பாற்றியது? இல்லை மோடியின் பதவியேற்புக்கு கொலைகார ராஜபக்சேவை அழைத்து நடத்த விருந்தின் போது கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலக்குரல் கூட உங்களுக்கு கேட்காததன் காரணம் என்ன? அப்போது நீங்கள் விரும்பிக் கேட்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகாத்மதா ஸ்தோத்திரம் அல்லவா?
மீனவ மக்களையும் உள்ளிட்ட முழு தமிழகமுமே இந்தக் கொலைக்கு நீதி கேட்டு மத்திய பாஜக அரசு மீது கொலை வெறிக் கோபத்தில் இருக்கும் போது அதை தணிய வைப்பது தி இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்களின் கடமையாகிறது. உடனே சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தைச் சேர்ந்த மீனவருமான ஜோ டி குரூஸை அழைத்து எழுதி வெளியிட்டு விட்டார் சமஸ்.
ஜோ டி குரூஸ் மனதில் இடம் பெற்ற பாஜக மற்றும் மோடியின் இன்னொரு முகமான சுப்ரமணிய சுவாமி என்ன சொல்லியிருக்கிறார்? மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இதுதான் பாஜகவின் உண்மையான முகம். இந்த முகம் தோற்றுவிக்கும் தமிழக சேதாரத்தை குறைப்பதற்கு ஜோ டி குரூஸ் போன்றவர்கள் களமிறக்கி விடப்படுகின்றனர்.
ஆனால் அதே இராமேஸ்வரம் மீனவர்கள் எங்களை இந்தியாவிலிருந்து பிரித்து விடுங்கள், நாங்கள் இந்தியர்களில்லை என்று சீறுகிறார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தல் போது மோடி அளித்த பொய் வாக்குறுதிகள் குறித்து அவர்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
அந்த கேள்விகளுக்கு பதிலே அளிக்க முடியாத போது ஜோ டி குரூஸ் போன்றவர்கள் கேள்வி கேட்பவர் பக்கம் நின்று பதில்கள் தர வேண்டியவர்களின் கோர முகத்தை மறைக்க பார்க்கிறார்கள்.
இறுதியில் ஜோ டி குரூஸ் அவர்களிடம் நாம் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது?
“மூன்று வகையான பொய்கள் இருக்கின்றன : பொய், கேடுகெட்ட பொய் மற்றும் புள்ளிவிவரம்” – என்றார் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரேய்லி (1804-1881). முதலாளித்துவ உலகின் நெருக்கடிகள் பல புள்ளிவிவர செட்அப் மூலம் மறைக்கப்படுவது அன்றே சாதாரண விசயம். கடைசியாக என்ரான் நிறுவனம் திவாலானது, சத்யம் கம்யூட்டர் நிறுவனம் வரை இந்த புள்ளிவிவரங்களே குற்றத்தை மறைத்து வந்தன.
இந்நிலையில் இந்தியாவின் இந்நாள் பிரதமர் திருவாளர் மோடி அவர்கள், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். உத்திரபிரதேச தேர்தலுக்காக அம்மாநிலத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் நம்மூர் குண்டு கல்யாணம் போல புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதமர், பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும் போது “கடும் உழைப்பு (Hard work) என்பது ஹார்வர்டை (பல்கலைக்கழகம்) விட பலம் பொருந்தியதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுக்கு பதிலளிக்கும் முகமாக செய்யப்பட்ட மோடி பாணி தேர்தல் சவடால். வரலாறு, பொருளாதாரத்தில் வடக்கு தெற்கு அறியாத இப்பேரறிஞர் எழுதிக் கொடுத்த வசனங்களை வாந்தியெடுப்பது வழக்கமென்றாலும், இந்த கடும் உழைப்பு குறித்து கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே பார்த்தாலும் மோடி சிக்கிக் கொள்வார்.
உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் நம்மூர் குண்டு கல்யாணம் போல சந்து பொந்துகளில் பொளந்துகட்டும் மோடிஜி
மோடியின் சீரிய சிந்தனையில் உதித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துப் போட்டதுடன் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியாக மக்களின் தலையில் விடிந்தது. பாசிசம் கலந்த கோமாளித்தனமான இந்நடவடிக்கையின் விளைவாக மக்கள் அனுபவித்த – அனுபவித்து வரும் – துன்ப துயரங்களைப் புரிந்து கொள்ள பொருளாதார, அறிவியல் பூகோள அறிவெல்லாம் தேவையில்லை; பொது அறிவும் மனசாட்சியும் இருந்தாலே போதும். மோடியின் அறிவிப்புக்குப் பின் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்த எதார்த்தம் நம் கண்முன்னே நடந்தது. மக்களின் வாங்கும் சக்தியை அடியறுத்த இந்நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கிகளின் முன் வரிசையில் நிற்கும் போதே மரணமடைந்தனர்.
எனினும், தனது பிம்பத்தைத் தானே காமுறும் நார்சிச வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் மோடியோ பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்திய புள்ளியியல் துறை வெளியிட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டு எண்ணின் வீக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் 1-ம் தேதி இந்திய புள்ளியியல் துறை 2016-17 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (அதாவது 2016-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதம் என அறிவித்தது. இதற்காகவே காத்திருந்த ஊடகங்களோ பெரும் ஆரவாரத்துடன் புள்ளியியல் துறையின் அறிவிப்பை கொண்டாடின. முதலாளித்துவ ஆதரவு பொருளாதார நிபுணர்கள் பலரும் சென்ற காலாண்டின் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில் நிர்வாண பேரரசர் முழு மேக்கப்பில் ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள் மோடியின் அரசவைக் கோமாளிகள்.
இதற்கு என்ன அடிப்படை?
சுழற்சியில் இருந்த சுமார் 86 சதவீத பணத்தாள்களை செல்லாக்காசாக்கிய மோடியின் அறிவிப்புக்குப் பின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசயம் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத தொழிற்துறைகள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டன என்பதே உண்மை. இந்நிலையில் அரசின் புள்ளியியல் துறை பாரதிய ஜனதாவின் தேர்தல் நலனுக்காக புள்ளிவிவரங்களை வளைத்துள்ளதை பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் விளக்கியுள்ளார்.
புள்ளிவிவரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை காட்டலாம். ஆனால் உண்மையை அறிய நமது வீட்டருகில் உள்ள சிறுகடை வியாபாரியை விசாரித்தாலே போதுமானது
முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் குறிப்பிட்ட காலாண்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி அதற்கு முந்தைய நிதியாண்டின் அதே குறிப்பிட்ட காலாண்டின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டே கணக்கிடப்படுகின்றது. கடந்த நிதியாண்டின் (2015-2016) மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி 7.3 சதவீதமாக (28,52,339 கோடி) கணக்கிடப்பட்டு 2016 பிப்ரவரி 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வளர்ச்சி விகிதம் அதே ஆண்டு மே 31-ம் தேதி சற்றே திருத்தப்பட்டு 7.2 சதவீதமாக (ரூ. 28,51,682 கோடி) அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் வெறும் 6.2 சதவீதம் தான் (அரசு அறிவித்துள்ளதோ 7 சதவீதம்!)
கருப்புப்பண ஒழிப்பை நோக்கமாக கொண்டதென முதலில் அறிவிக்கப்பட்டு பின் சர்வரோக நிரவாரணியாக முன்னிறுத்தப்பட்டு படு தோல்வியடைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வெற்றியாக காட்ட வேண்டிய நெருக்கடியும் உத்திரபிரதேச மாநில தேர்தலும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன. வழக்கம் போல் பிராடுத்தனத்தில் இறங்கியது மோடி அரசு. குறிப்பான காரணம் ஏதுமின்றி 2015-16 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ரூ. 28,30,760 கோடிகளாக குறைத்தது மத்திய புள்ளியியல் துறை. பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யா காந்தி கோஷ் இவ்வாறு கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவது மர்மமாக உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் தான் கடந்த காலாண்டின் வளர்ச்சியை 7 சதவீதம் என பீற்றிக் கொண்டது மோடி அரசு – அதாவது, தன்னை உயரமானவனாக காட்டிக் கொள்ள அருகிலிருப்பவனின் காலை வெட்டுவதைப் போல.
இரண்டாவதாக, சொல்லிக் கொள்ளப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுவதே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்தின் மொத்த மதிப்பல்ல – மாறாக உற்பத்தித் துறை நிறுவனங்கள் வெளியிடும் பற்று வரவு நிதியறிக்கைகளை அடிப்படையாக கொண்டது. லேத்து பட்டறைகள், தங்கப்பட்டறைகள், பவர்லூம்கள் உள்ளிட்ட சிறிய உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தித் துறை நிறுவனங்கள் பற்றுவரவு நிதியறிக்கைகள் வெளியிடுவதில்லை.
மேலே குறிப்பிட்ட சிறு உற்பத்தித் துறை மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள் மட்டுமின்றி தையல் கடை, மளிகைக் கடை, சிறிய ஓட்டல்கள் உள்ளிட்டு சொந்தத் தொழில்களிலும் விவசாயத்திலுமே ஆகப் பெரும்பான்மையான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பிரிவினரே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தலையில் பட்ட காயத்துக்கு புட்டத்தில் களிம்பு தடவுவதைப் போல், தனது நடவடிக்கையால் பாதிப்படைந்த மக்களிடம் அவர்களுக்குச் சம்பந்தமில்லாத துறைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாக கொண்டு போலியாக கணக்கிட்ட வளர்ச்சி விகிதத்தைக் காட்டி “வெற்றி எனக்குத் தான் கோப்பையும் எனக்குத் தான்” என்று கொக்கரித்துள்ளார் மோடி.
மூன்றாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு செய்யும் முறையே மோடி வந்த பிறகு 2014-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அப்போதிருந்தே உலகளவில் பல்வேறு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் இந்தியா தனது வளர்ச்சி விகிதத்தை கணக்கீடு செய்வதில் போங்காட்டம் ஆடி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய முறையின் படி சந்தை விலைகளின் படியே (GDP at Market price) வளர்ச்சி விகிதம் கணக்கீடு செய்யப்படுகின்றது. அதாவது மொத்த பொருளாதார நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட கூட்டு மதிப்புடன் மறைமுக வரியையும் சேர்த்துக் கணக்கிட்டு பின் அதிலிருந்து மானியங்களைக் குறைப்பது. (Gross Value added (factor cost) + Indirect Tax – Subsidies given = GDP at Market price)
மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது ஒரு புறம் இருக்கட்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டவுடன், பெரிய உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுடைய வணிக முகவர்கள் தங்களது நிலுவைத் தொகைகளை பழைய நோட்டுக்களில் சரியான காலத்திற்குள் செலுத்தியுள்ளனர். எனவே உற்பத்தியாளார்களும் தங்களது வரியை பழைய நோட்டுக்களில் செலுத்தியுள்ளனர். எனவே இந்தக் காலகட்டத்தில் அரசின் மறைமுக வரி வருவாய் அதிகரித்தது உண்மை – இவ்வாறு வசூலான வரியால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதோடு ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் மானியங்கள் மேலும் குறைக்கப்படும் என்பதே மோடியின் திட்டம்.
இம்மூன்று பிராடுத்தனமான வழிகளில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக மரணப்படுக்கையில் விழுந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தில் பவுடரை அப்பியுள்ளது மோடி அரசு. ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் ஏற்பட்டுள்ள கதவடைப்புகளும் வேலையிழப்புகளும் ஒருபுறம் என்றால், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளே தடுமாறி வருகின்றன.
கடந்த காலாண்டில் சிமெண்ட் விற்பனை 13 சதவீதமாக குறைந்துள்ளது – இதோடு பிற கட்டுமான உள்ளீட்டுப் பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ளன. வங்கிக் கடன்களும் வீழ்ந்துள்ளதை ஒப்பிட்டால், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை அடுத்த ஓராண்டுக்கு மந்த நிலையில் இருந்து மீள முடியாது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையும் வீழ்ந்துள்ளது. இதன் விளைவாக பெரிய உற்பத்தி ஆலைகள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
விவரங்கள் உறுதியனவை, ஆனால் புள்ளிவிவரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம் என்பது மார்க்ட்வைனின் புகழ்பெற்ற கூற்று. மோடி அரசு மக்களை ஏமாற்ற புள்ளிவிவர மோசடியில் ஈடுபட்டது படுகேவலமாக அம்பலமாகியுள்ளது. நமது தெருமுனையில் உள்ள மளிகைக் கடைக்காரரும், தேனீர்க் கடைக்காரரும் அடைந்த துன்ப துயரங்களையும், கூலி வேலைகளுக்குச் செல்லும் மக்கள் பட்ட சிரமங்களையும் நேரில் பார்த்திருக்கிறோம். இந்த உண்மைகள் மக்களின் மனதில் தோற்றுவித்த காயங்களின் மேல் புள்ளிவிவர மிளகாய்ப் பொடியைத் தூவுயுள்ளார் மோடி. இதற்கு விளக்குப் பிடிக்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள்.
தான் அணிந்திருப்பதைப் பட்டாடை என பேரரசர் வேண்டுமானால் நம்பிக்கொள்ளட்டும் – நாமும் ஏன் அரசவைக் கோமாளிகளாக இருக்க வேண்டும்?
காஞ்சிபுரத்தில் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்ற வழக்கு அங்கே புகழ் பெற்ற கைத்தறித் தொழிலை உணர்த்துகிறது. இருப்பினும் இந்த வழக்கின் படி அங்கே ஏதோ சுலபமாக வாழலாம் என்பதல்ல. அந்த காலாட்டும் கைத்தறி தன்னகத்தே பல்வேறு துயரங்களை உள்ளடக்கியது. இங்கே தெருக்களில் தடுக்கி விழுந்தால், பட்டு அல்லது பருத்தி பாவு மீதுதான் விழ வேண்டும். நாள் முழுக்க பட்டு, பருத்தி, நூல்களை நெசவுக்கு ஒழுங்குப்படுத்தும் ஏதோ ஒரு வேலை, தெருக்களில் நடந்துக் கொண்டிருக்கும். மேலும், பாவு ஓடுவதற்கென்றே ஒவ்வொரு பேட்டையிலும் குளிர்ச்சியான புளியமரங்கள் மத்தியில் பல ஏக்கர் கணக்கில் பொதுப் பாவடிகள் நிறைந்திருக்கும். இங்கு, எந்தக் கோடையிலும் வெயில் அண்டாது, வேர்க்காது.
ஆனால், இப்போது… நெசவு தனது இறுதிமூச்சை நிறுத்தும் நிலைக்கு நொடிந்து விட்டது. பொதுவில் குடும்பத்தில் இறக்கும் தறுவாயில் இருக்கும் நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பு பெண்களையே சாரும். அதே கதிதான் காஞ்சி நெசவிற்கும். இங்குள்ள இளைஞர்கள், ஆண்கள் பலரும் கல்யாண சமையல் வேலைக்கும், பல்வேறு கம்பெனி வேலைகளுக்கும் ஓட, வீட்டிலிருக்கும் வயதான பெண்கள் தங்கள் குடும்ப தொழிலான நெசவை விடாமல் வதைபட்டவாறே பாதுகாக்கின்றனர்.
நூற்பாலையிலிருந்து பேல் கணக்கில் வரும் கச்சா நூலை. தேவைக்கு தகுந்தாற் போல் பெட்டிகளாக பிரித்து அதை போந்து, சிலுப்பை, தார் என்று கடைசி அலகுகளாக்கி தறியில் லுங்கிகளாக உருமாற்றுகிறார்கள், நெசவாளர் பெண்கள். இந்த தொடர் வேலைகளுக்கு மத்தியில் கச்சாநூல், பாவு நூலாகவும், ஊடு நூலாகவும் மாறுவது தனிக் கலை. கச்சா நூலை, நுட்பமாகத் தட்டி, மண்ணெண்ணை தடவி மிருதுவாக்கி அதை பரூட்டத்தில் ஓட்டி இழைகளாக்கி, 32 இழைகளை வரிசையாக கைஆலையில் ஓட்டி அதை, சாயடிக்க எடுத்துச் சென்று பல வண்ண சாயங்கள் ஏற்றிக் காயவைத்து பிறகு தோச்சடியில் கஞ்சிப்போட்டு பாவாக்கி அதை ஒவ்வொரு இழையாக ஒரு நாள் முழுக்க, அச்சில் பிணைத்து தெருவில் நீட்டி, பாவுபோட்டு கடைசியில் தறி உருளையில் சுற்ற வேண்டும்.
உருளையை கைதறியில் பிணைத்து, ஊடு நூல் பூட்டிய நாடாவில் நெய்வதுதான் நெசவு. இதில் ஒவ்வொரு துறைக்கும் தனிதிறமை தேவை. ஆனால்,நெசவாளி பெண்கள் எல்லா வேலைகளிலும் ஆச்சரியமூட்டும் வண்ணம் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
தமது பால்ய பருவத்திலிருந்து உறவாடும் தறித்தொழிலை தன் மூத்த குழந்தையைப் போலவே கருதுக்கின்றனர். கடுமையான உடலுழைப்பைக் கோரும் இத்தொழில் செய்யும் பெண்களுக்கு போதுமான கூலி கிடைப்பதில்லை. ரேஷன் அரிசியும், வீட்டில் வளரும் முருங்கைக் கீரையும்தான் அவர்களின் அன்றாட உணவு. கல்யாண சமையல் வேலைக்கு செல்லும் ஆண்கள் எடுத்துவரும் இனிப்புகள்தான் அவர்கள் எப்போதாவது ஆசையோடு தின்னும் தின்பண்டம்.
காஞ்சிபுரம் கருக்குப்பேட்டையில் கை ஆலை ஓட்டும் ஆலக்காரம்மா
“எங்க… இப்ப முன்ன மாதிரியெல்லாம்… தொழில் இல்ல… வேற வழியில்லாம செய்துட்டு இருக்கோம். எங்க தலைமுறையோட சேர்த்து தொழிலையும் புதைச்சிட வேண்டியதுதான்.
ஒருப்பெட்டியில் 30 பொந்து, கச்சா பொருளா வரும். அதை டீசலும், மண்ணெண்ணயும் போட்டு பக்குவமாக உதறி எடுக்கணும், பிறகு அதை அடிக்கணக்கில் பிரித்து 2 அடி ஒரு பரூட்டம் என நூல் இழைக்கணும். பரூட்டத்திலிருந்து, இழைத்ததை ஆலையில் ஓட்டி, பாவாக மாற்றவேண்டும். ஒருநாளைக்கு இரண்டு ஆலை ஓட்டுறதே இப்ப கஷ்டமாயிருக்கு. இரண்டுக்கும் கூலி ரூ 300 வரும். அதில் பரூட்டத்தில் இழைக்கற கூலி போக மீதி 150 ரூபாய்தான் நிக்கும். டீசல், மண்ணென்ணெ செலவும் இந்த பணத்தல செஞ்சா… மீதி என்ன இருக்கும்?”
“தொழிலைத் தக்க வைக்கறதுக்காக யார்கிட்ட இருந்தும் எந்தவித உதவியும் இல்ல.. பல முறை அலைஞ்சும் 1000 ரூபா முதியோர் பென்ஷனைகூட என்னால வாங்க முடியால”.
கம்சவள்ளி, 36 வயது,
“நூல், கட்டு கட்டும் வேலைய டெய்லியும் செய்வோம், வர்ற நூலைப் பொறுத்தே வேலை அமையும். ஒரு பாவுக்கு 8 கைலி வரும். 2 மீட்டர் ஒரு கைலி (லுங்கி). ஒவ்வொரு கட்டுக்கும் இடைவைளி 4 இன்ச்சு. கட்டு புத்தூர் கட்டுமாதிரி இறுக்கி கட்டனும். அதைப்போல 40 பாவுக்கு மூச்சுவிடாம கட்டுக்கட்டனும். பொழுதன்னைக்கும் கட்டினாலும் 200 ரூபா வர்றது கஷ்டம்.
காஞ்சிபுரம் ஒட்டி இருக்கிற ஊரு இது, கன்னிகாபுரம். இது நகராட்சியில சேர்ந்துடுச்சினு இப்ப மண்ணு வேலையும் (100 நாள் வேலை) கொடுக்கறதில்ல. இந்த தொழிலை மட்டுமே நம்பி குடும்பம் நடத்த முடியல… எங்கம்மாவுக்கு 65 வயசுக்கு மேலே ஆச்சு. முதியோர் பென்ஷனுக்கு எழுதிப்போட்டு அலைஞ்சதுதான் மிஞ்சம். எங்கம்மாவே போய் சேர்ந்திடுச்சி இன்னும் யாரும் கண்டுக்கல”.
சுகன்யா, வயது 20, பி.காம் பட்டதாரி.
“வீட்ல நேரம் கிடைக்கறப்போ இந்த வேலைய செய்யறேன். காஞ்சிபுரத்தில இருக்கற ஒரு லேடி டாக்டர்கிட்ட உதவியாளார வேலை செய்றேன். காலைல 7 மணிக்குப் போய் சாயந்திரம் 7 மணிக்கு வரணும். சம்பளம் ரூ 4000 தர்றாங்க. கொஞ்ச நாள் கழிச்சி சம்பளத்த ஏத்தறதா சொல்லி இருக்காங்க. லீவு நாள்ல இங்க வந்து வேலை செய்வேன்”.
கற்பகம், வயது 40
“தொழில் சுத்தமா நொடிஞ்சி போயிடுச்சி, இதுல நிலையான வருமானம் கிடையாது. இப்ப நாங்க செய்யிர வேலை, கட்டுப்பிரிக்கிற வேலை. இத, சும்மாதான் செய்யனும். கட்டு பிரிக்கற வேலைக்கு கூலி கிடையாது. கட்டுப் போடறவங்களேதான் அதை பிரிக்கணும்னு சொல்வாங்க. அப்பத்தான் கட்டு போட எங்கள கூப்பிடுவாங்க… இந்த வேலையும் ஒரு நாள் ஃபுல்லா.. ஆகும். .. டீ மட்டும் போட்டு தருவாங்க… இந்த கூலி வைச்சில்லாம் குடும்பம் பாக்க முடியாது. கொழம்பு செலவுக்கும், குழந்தைகளுக்கு தின்றதுக்கு வாங்கிக் கொடுக்கவே பத்தாது.. ” என்று கலர் சாயம் ஏறிய கையை நீட்டி சிரிக்கிறார்.
1980 களில் துவக்கப்பட்ட காஞ்சிபுரம்-அய்யன்பேட்டை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வெறும் 5 தறிகளள் மட்டுமே இயங்குகிறது. அதில் 2 பெண்கள் தறி நெய்கிறார்கள், இருவர் தார் சுற்றுகிறார்கள்.
தார்சுற்றும் பெரியம்மா
“நாள் ஒன்றுக்கு ரூ 30, 40 வரை தார் சுற்றுவேன்.. வீட்டிலிருந்தால், அதற்கும் வழியில்லை. வயசாயிடுச்சு நாள்புல்லா சுத்துனா கை கொடையும் என்ன பன்றது… பேரன், பேத்திககோட செலவுக்குனா உதவட்டுமேன்னு வர்றேன்.. ஒய்வில்லாம ஒழைச்ச கை… சும்மா இருக்க முடியாதும்மா..”.
நெசவாளர் நீலா, வயது 50
“ஒரு பாவு நெய்ஞ்சா ரூ 1000 கிடைக்கும். அதுல 8 லுங்கி வரும்.. இதை ஒரு வாரத்துல நெய்வேன். தறி வேலை எல்லாம் எங்களோட முடிஞ்சிடும் யாரும் புதுசா வர்றதில்ல… கை தூக்கி விட்டு தொழிலை காக்க யாருமே இல்ல… சரியான கூலி, தொடர்ச்சியா வேலை இருந்தா வீட்டு பசங்கள வா.. னு நம்ம சொல்லலாம்… இல்லாம எப்படி அதுங்களையும் கெடுக்கறது…”.
வேலையில்லாமல், நெசவாளி பத்மா
“வீட்ல தறி சத்தம் கேட்டு 4 வருசமாச்சி, அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்ல… அம்மாவும் கூட சேர்ந்து தறிவேலை செய்யும். இப்ப சரியான கூலி இல்ல.. தொடர்ந்தாப்புல வேலையும் இல்ல… என்ன செய்யறதுன்னே தெரியல… எப்பவாச்சும் வரும் மண்ணு வேலயே கதியினு இருக்கோம்.. அதுக்கு கூலி சரியாப் போட மாட்டேன்றாங்க… சொந்த வீடு இருக்கறதானால தப்பிச்சேன்…”.
எங்கு திரும்பினாலும் அரசின்-விவசாயம்,கைத்தொழில் புறக்கணிப்பால் நெசவாளர் குடும்பங்கள் போக்கிடம் இல்லாமல் நிற்கதியாக நிற்கின்றன. குடும்பத்தால் பராமரிக்க முடியாமல் வயதான பெண்கள் காலி சாராய பாட்டில்களை சேகரித்து கூட வாழ வேண்டிய நிலை. அங்கே இங்கே ஏதாவது கிடைப்பதை வைத்து ஆண்கள் குடிக்கிறார்கள். அவர்கள் குடித்துவிட்டு போடும் பாட்டில்களை இவர்கள் பொறுக்குகிறார்கள். இன்னும் சிலரோ சமூகத்தால் துரத்தப்பட்டு பிச்சையெடுக்கிறார்கள், மனநோயாளியாக திரிகின்றனர்.
நெசவாளிக் குழந்தைள் ஊட்டசத்தின்றி சூம்பிக் கிடக்கின்றார்கள். பெண் பிள்ளைகள் பள்ளியில் பாதியில் நின்று, வயிற்றை கழுவ கம்பெனி வேலைக்கு ஓடுகிறார்கள். புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் உழைக்கும் பெண்களின் நிலை இதுதான். இதே காஞ்சிபரம்தான் சங்கராச்சாரி எனும் மோசடி சாமியாருக்காவும், சென்னை தி நகரில் எடுக்கப்படும் பட்டுப் புடவைகளுக்காகவும் புகழோடு நினைக்கப்படுகிறது. அடுத்த முறை காஞ்சிபுரம் வந்தால் கைத்தறி நெசவாளிகளின் கிராமங்களுக்கு சென்று பாருங்கள்! தமிழக கிராமங்களின் உண்மையான மாதிரியை அங்கே காணலாம்!
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றிருந்தாலும் மீதமிருக்கின்ற மாணவர்கள் அணிதிரண்டு எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திணிப்பு, நியுட்ரினோ திணிப்பு, மீத்தேன் திட்டம் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்ற எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர். தங்களுடைய எதிர்ப்பை ஓவியங்கள் மூலம் காட்டியுள்ளனர். மத்திய , மாநில அரசுகள் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பதை அனைத்து மாணவர்களும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பதற்கு இப்போராட்டமும் ஒரு சான்று.
இந்த போராட்டத்திற்கு பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த போராட்டத்தின் இறுதியில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நடத்த போவதாக கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இங்கிலாந்து நாட்டில் சில பென்னி நாணயங்களே தேவைப்படும் 14 சிகிச்சைகளுக்கான செலவு அல்லது மருந்துகளின் விலை 1000 விழுக்காடு வரை அதிகரித்திருக்கின்றன.
NHS – இங்கிலாந்து மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பொதுச் சுகாதார நிறுவனமாகும். ஆண்டு ஒன்றிற்கு அரசால் 8 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இயங்கும் இந்த தேசிய சுகாதாரச் சேவை(NHS) இங்கிலாந்து மக்களின் நாடித்துடிப்பு என்றே சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு உலக வல்லுனர்கள் குழு ஒன்று, வளர்ந்த 11 நாடுகளின் மருத்துவத்துறைகளை ஒப்பிட்டு ஒரு ஆய்வினை வெளியிட்டது. நலம்புரி அரசுகளின் எச்சமாக இருக்கும் இங்கிலாந்தின் NHS-யை அவற்றில் மிகச்சிறந்ததாக தேர்வு செய்தனர். அதே நேரத்தில் மிகவும் மோசமானதாக அமெரிக்க சுகாதாரத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இது ஒன்றே NHS-க்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்த போதுமானதாக இருக்கிறது. இந்த நிலையில் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாறுமாறாக அதிகரித்துவிட்டதால் இங்கிலாந்து மக்களும் தவிக்கின்றனர்.
காப்புரிமை காலாவதியான புற்றுநோய் மருந்துகளின் விலையை ஏற்றுவதின் மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இந்த விலை உயர்வால்ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் தவிக்கும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை நிறுவனம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 விழுக்காட்டிலிருந்து 1000 விழுக்காடு வரை உயர்ந்து விட்டதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். விலையேற்றம் செய்யப்பட இந்தப் பொதுமருந்துகள் அனைத்தின் காப்புரிமைகளும் அங்கே காலாவதியாகிவிட்டன. அதாவது மூலப்பொருட்களின் விலையை விட சற்றேக் கூடுதலான விலையில் அம்மருந்துகளை இனி தயாரிக்க முடியும்.
ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஐரோப்பிய புற்றுநோய் கலந்தாய்வு கூட்டத்தில்(European Cancer Congress) ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த வல்லுனர்கள் பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அநியாய விலையேற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு அளிக்கப்படும் தாராபிரிம்(Daraprim) என்ற மருந்தின் காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த டூரிங் என்ற மருந்து நிறுவனம் 2015 ஆண்டு பெற்ற பின்னர் அதன் விலையை 904 ரூபாயிலிருந்து (13.5 டாலர்) இருந்து 50,228 ரூபாயாக (750 டாலர்) அதாவது 5,500 விழுக்காடு அநியாய விலையேற்றம் செய்தது. டூரிங் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியான மார்டின் ஸ்ரேலி (Martin Shkreli) அமெரிக்க மக்களின் மிகவும் வெறுக்கத்தக்க மனிதரானது மட்டுமல்லால் ஜனாதிபதி தேர்தலிலும் இது எதிரொலித்தது.
விலையேற்றத்தின் காரணமாக இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவைக்கான செலவீனம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்குமென்று லிவெர்பூல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் சிகிச்சைத்தீர்வியல் துறையைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹில் கூறினார். இதனால் சந்தைக்கு வரும் மிக அதிக விலை கொண்ட புதிய புற்றுநோய் மருந்துகளின் பயன்பாடு 20 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று NHS கூறியிருக்கிறது. “இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில் இருந்து 8,337 கோடி ரூபாய்(£1 பில்லியன்) கூட இருக்கும்” என்று அவர் கூறினார்.
நன்றி: தி கார்டியன், ஜனவரி 2015 ல் 10,500 க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன
இந்த நிதிவெட்டுக் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 30,000 மரணங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் 50 வயதை கடந்தவர்களின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக பதிவாகி இருக்கின்றது.
NHS க்கு ஆகும் திட்ட வட்டமான செலவைக் கண்டறிய ஆண்ட்ரூ ஹில் மற்றும் இலண்டன் சுகாதார மற்றும் வெப்பமண்டல மருத்துவப்பள்ளியின் இணையாசிரியரான மெலிசா பார்பர் இருவரும் ஈடுபட்டனர். புற்றுநோய்க்கான மருந்துகளைக் குறித்துக் கொடுக்கும் மருத்துவமனைகளில் இருந்து தகவல்களைச் சேகரிக்க இயலாததால் NHS-ற்கு ஆகும் செலவினை இவர்களால் கணக்கிட இயலவில்லை. இந்த ஆய்விற்காக உலகச் சுகாதார நிறுவனமும்(WHO) திறந்தவெளி சமுதாய அறக்கட்டளையும்(Open Society Foundation) நிதியுதவி செய்திருந்தன. அதேநேரத்தில் புற்றுநோய்க்கான மருந்து மட்டுமல்ல பொது மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொதுமருந்துகளின் விலையும் கடுமையாக அங்கே உயர்ந்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. பொதுமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை ஏற்றிவிட்டதால் 2015 ஆம் ஆண்டில் 3,160 கோடி ரூபாய் (380 மில்லியன் பவுண்டுகள்) அதிகமாக NHS செலவழித்துள்ளது. இது இங்கிலாந்து மக்கள் அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் காணாத கடும் விலையேற்றம்.
விலையேற்றம் செய்யும் மருந்து நிறுவனங்களை கண்காணிக்கவோ அல்லது அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தவோ NHS முயலவில்லை என்கிறார் ஹில். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மருந்து நிறுவனங்கள் செய்யும் விலையேற்றம் கண்டுகொள்ளப்படவில்லை.
கருப்பைப் புற்றுநோய்க்கு வழங்கப்படும், காப்புரிமை காலாவதியான விலையேற்றப்பட்ட மருந்துகளில் ஒன்றான மெல்பாலான் என்ற மருந்தை இங்கிலாந்து நிறுவனமான கிளாக்சோஸ்மித்கிலைன் (GlaxoSmithKline) தயாரித்திருந்தது. அந்த மருந்துடன் காப்புரிமை காலாவதியான வேறுசில புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆஸ்பென் மருந்து நிறுவனத்திடம் 2009 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆஸ்பென் நிறுவனத்தின் 16 விழுக்காடு பங்குகளை கிளாக்சோஸ்மித்கிலைன் வைத்திருந்தது.
2011 ஆம் ஆண்டு 2 மி.கி மெல்பாலான் மருந்தின் விலை 46 ரூபாயிலிருந்து(55 பென்னி) 2016 ஆம் ஆண்டு 151 ரூபாயாக (1.82 பவுண்டு) அதாவது 230 விழுக்காடு எகிறிவிட்டதாக ஹில் மற்றும் பார்பரது ஆய்வு கூறுகிறது. இதற்கெதிராக எந்த நடவடிக்கையும் NHS எடுக்கவில்லை. இத்தாலியில் 2014 ஆம் ஆண்டு இந்த மருந்தின் விலையை 1500 விழுக்காடு அதிகரிக்க ஆஸ்பென் முயற்சி மேற்கொண்டது. மறுத்தால் கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் அனைவருக்கும் மருந்து வழங்குவதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இதற்க்கெதிராக இத்தாலியின் வர்த்தக சுதந்திரத்திற்கான ஆணையம் (Italian competitions authority) 36 கோடி ரூபாய் (5.5 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. இத்தாலியின் மருந்து சந்தைக்கான நேரடி வழங்கலை(Direct Supply) கடுமையாக பாதிக்குமளவிற்கு இந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் இருந்ததாக அந்த ஆணையத்தின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
ஆஸ்பென் நிறுவனத்தின் மருந்து தட்டுப்பாட்டால் இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. மருந்துத் தட்டுப்பாட்டிற்கான காரணத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆஸ்பென் நிறுவனம் பதிலளிக்கவில்லை. மெல்பாலான் மருந்து கிடைக்காததால் மாற்றுமருந்து கொடுக்கப்பட்ட மூன்று பிரான்ஸ் பெண்கள் உயிரிழந்துள்ளனர். மெல்பாலான் சந்தைப்படுத்தபடுவதற்கு முன்னர் சைக்ளோஸ்பாமைடின் மருந்தே பரிந்துரைக்கப்பட்டு வந்ததால் இது கண்டிப்பாக பாதுகாப்பானதாக தான் இருக்க வேண்டும். இதைக்குறித்த ஆய்வு ஒருபுறம் நடந்து வருகிறது.
இங்கிலாந்தில் அதிக விலையேற்றம் செய்யப்பட்டது அதே ஆஸ்பென் நிறுவனம் தயாரித்த பசல்ஃபேன் என்ற மருந்து என அக்குழு கண்டறிந்தது. நாட்பட்ட இரத்த வெள்ளையணு புற்றுநோயான மைலாய்டு உலுக்கேமியாவிற்கு பயன்படும் மருந்தான பசல்ஃபேனின் விலை 2011 ஆம் ஆண்டு 2 மி.கி-ற்கு 17 ரூபாயாக (21 பென்னி) இருந்தது. ஆனால் 2016 ம் ஆண்டில் தடாலடியாக 217 ரூபாயாக (2.61 பவுண்டுகள்) அதாவது 1,143 விழுக்காடு அதிகரித்துவிட்டது.
ஆஸ்பென் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2010-லிருந்து 650 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனம் தனது ஆஸ்பென் நிறுவன பங்குகளை மூன்று பகுதிகளாக விற்றது. கடைசிப் பகுதியை விற்றதில் சுமார் 12,500 கோடி ரூபாய்(1.5 பில்லியன் பவுண்டுகள்) அதற்குக் கிடைத்தது.
ஃ`பைசர்(Pfizer) என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 2016 டிசம்பரில் 700 கோடி ரூபாய் (84 மில்லியன் பவுண்டு) அபராதம் விதிக்கப்பட்டது. பிளின் பார்மா(Flynn Pharma) என்ற மற்றொரு பொதுமருந்து நிறுவனத்துடன் சேர்ந்து காப்புரிமை காலாவதியான கை-கால் வலிப்பு எதிர்ப்பு மருந்து ஒன்றிற்கான விலையை 2,600 விழுக்காடு அதிகரித்து NHS-யிடம் வசூலித்ததாக குற்றஞ்சாட்டி இங்கிலாந்து போட்டி ஆணையம் இந்த அபராதத்தை விதித்து இருந்தது. NHS-ற்கு வேறு போக்கிடம் இல்லாததைப் பயன்படுத்தி அதனை அந்நிறுவனம் சுரண்டியிருக்கிறது. ஏனெனில் அந்த மருந்தை வேறெந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை. இதனால் முறையான காரணங்களின்றி செய்யப்படும் விலையேற்றத்தை விசாரிக்க இங்கிலாந்தின் சுகாதாரத்துறைக்கு அதிகாரத்தை அளிக்கக்கூடிய ஒரு மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் கவலையளித்திருப்பதாக டோரி கட்சி எம்.பி சாரா வோலஸ்டன் கூறுகிறார். “மருந்து நிறுவனங்கள் செயற்கையாக விலையேற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதனால் ஏனைய இன்றியமையாத சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் நிதி தவிர்க்கவியலாமல் வெட்டப்படுகிறது.” என்று அவர் கூறினார்.
இந்த விலையுயர்வு வேறு எந்த மூர்க்கத்தனத்தை விடவும் மோசமானது என்று ஐரோப்பிய புற்றுநோய் கழகத்தின் நோயாளிகளுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவர் இயான் பேங்க்ஸ் கூறுகிறார். இந்த விலையேற்றத்தினால் ஒரு நோயாளியாவது அவரது உயிர்காக்கும் சிகிச்சை பெறமுடியாமல் இருக்கிறார் அல்லது அந்த பணத்தை வைத்து குறைந்தது அவரது வாழ்க்கைத்தரத்தையாவது உயர்த்திக் கொள்ளமுடியும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
மார்பக புற்றுநோய்க்கான மருந்தான தமொக்சிபேன் உள்ளிட்ட பொதுமருந்துகளை விலையேற்றம் செய்வதற்காக மருந்து நிறுவனங்கள் கூறும் பரிந்துரைகள் குறித்தும் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது ஏற்கனவே தடுமாற்றத்தில் இருக்கும் NHS-ற்கு மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும் என்று “நிகழ்கால மார்பக புற்றுநோய்’’ (Breast Cancer Now)” என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மியா ரோசன்பிளாட் கூறுகிறார்.
நன்றி: தி கார்டியன், 2015 இல் இறப்பு விகிதங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளை விட அதிகபட்ச உயர்வை எட்டியது
அதிக விலை கொண்ட மருந்துகளைத் தயாரிக்கும் மருந்து நிறுவனங்கள் தங்களது முதலீடுகளைத் திரும்ப பெற குறுகிய காலமே இருப்பதாகவும் எதிர்காலத்தில் மருந்துகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்குமென்பது சுகாதாரக் கட்டுப்பாட்டுத் துறைகளின் புரிதலில் ஒன்றாக இருக்கிறது.
பொதுமருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருவதுதான் உண்மையான பிரச்சினையாகும். சுகாதார சேவை மருத்துவப் பொருட்களுக்கான மசோதா மூலம் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முயலும், அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ரோசன்பிளாட் மேலும் கூறுகிறார். ஆனால் இம்முயற்சிகளெல்லாம் நிறுவனங்களின் கொள்ளையை தடுத்து நிறுத்துவது கடினம்.
இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பான்மையான மருந்துகளுக்கு போட்டியான மாற்று மருந்துகள் எதுவும் கிடையாது. ஏனெனில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே ஏகபோக தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது என்று பிரிட்டிஷ் பொதுமருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு(The British Generic Manufacturers Association) கூறியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சந்தையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் மருந்து தயாரிக்கவும் சோதிக்கவும் காப்புரிமை வாங்கவும் போடும் முதலீட்டை நிறுவனங்களால் திரும்பப் பெற முடியாது என்பதால் பொதுமருந்து நிறுவனங்கள் அதில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுவதில்லை என்று ஒரு அறிக்கையில் அது கூறியிருந்தது.
ஆனால் பொதுமருந்து ஒன்றைப் புதிதாக தயாரிக்க ஆகும் செலவு அதிகம் கிடையாது என்கிறார் ஹில். NHS-ற்கு மருந்து நிறுவனங்கள் தற்போது கொடுக்கும் மருந்தை விட மலிவு விலை மருந்துகளை இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியும் என்று கூறுகிறார். உலகின் பல்வேறு வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் பொது மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது. அதையும் முன்னர பன்னாட்டு நிறுவனங்கள் தடை செய்திருந்தன.
இன்று உலகின் பெரும்பாலான மருந்துகளின் காப்புரிமைகளைப் பெருநிறுவனங்களே வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் புதிய மருந்திற்கான ஆராய்ச்சிக்கு நிதியை ஒதுக்குவதை விட கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கவே அதிகம் செலவிடுகின்றன. மேலும் காப்புரிமை காலாவாதியான பின்னரும் மருந்துகளுக்கு காப்புரிமையை நீட்டித்துக் கொள்கின்றன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவர்டிஸ்(Novartis) புற்றுநோய்க்கான கிலீவச்(Gleevec) என்ற மருந்தைச் சிறுமாற்றம் செய்து காப்புரிமை நீட்டிப்பை பெற இந்தியாவில் முயன்றது குறிப்பிடத்தக்கது.
அரசின் அத்தனை உறுப்புகளையும் பணமும் அதிகாரமும் படைத்த பெரும்பணக்காரர்கள் தான் கட்டுபடுத்துகின்றனர். காப்புரிமைச் சட்டங்களையும் அவர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். தனிநபர்கள் காப்புரிமை வாங்குமளவிற்கு பணபலம் மற்றும் அரசியல் பலமற்றவர்கள். இவர்களிடம் இருந்து காப்புரிமையைக் கைப்பற்றியப் பின்னர் பெருநிறுவனங்கள் அதை ஏகபோகமாக்கிவிடுகின்றன.
காப்புரிமை இல்லையென்றால் புதிய மருந்துகள் கண்டுபிடிக்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள் அல்லது அவர்களுடைய உழைப்பை யாராவது ஏமாற்றி பறித்துக்கொள்வார்கள் என்பது முதலாளித்துவவாதிகள் கூறும் வழமையான காரணங்களில் ஒன்று. ஆனால் சூரியனுக்கு காப்புரிமை வாங்க முடியுமா என்று கேட்டார் போலியோவிற்கான மருந்தை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜோனஸ் ஸ்டால்க்.
தனிமனிதனே எதையும் உருவாக்கி விடுவதில்லை. புராதன இனக்குழு மக்கள் தாங்கள் கண்டறிந்த சக்கரத்திற்கும் நெருப்பிற்கும் காப்புரிமை வாங்கியிருந்தால் நவீன அறிவியலே கிடையாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு சில மனிதர்களுக்கோ அல்லது ஒருசில தனியார் நிறுவனங்களுக்கோ சொந்தமல்ல. நவீன இயற்பியலின் ஆகச்சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவத்திற்கு (E=mc2) பின்னால் மைக்கேல் ஃபாரடே, எமிலி டூ சாட்லே, லிசா மைட்னர் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பங்களிப்பு இருக்கிறது.
காப்புரிமைப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உண்மையில் சாகடித்துவிடுகிறது. உருவாக்குவது, சோதித்தறிவது, சரி செய்வது என்று மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கானது உண்மையில் பரந்துபட்ட மக்களின் பங்களிப்பில் தான் சாத்தியமாகிறது. காப்புரிமையும் ஏகபோகமும் அறிவியலின் இந்தச் செயல்முறையைச் சில தனிப்பட்ட நபர்களின் கைகளில் சேர்ப்பதன் வாயிலாக மனிதச் சமூகத்தின் சிந்தனையைக் காயடிக்கின்றன.
இந்தியாவில் தற்போது மலிவு விலையில் போடப்படும் தடுப்பூசிகளின் நிலையை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போதே அரசு போடும் தடுப்பூசிகளை விட தனியார் மருத்துவமனைகள் அதிக ஊசிகளை மிக அதிக விலையில் போடுகின்றன. நாளைக்கே இத்தடுப்பூசிகளை போட்டே ஆக வேண்டும் என்ற நிலையை அனைவருக்கும் உருவாக்கி விலையையும் அதிகம் உயர்த்துவார்கள். ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் அப்படி உயர்த்தப்பட்டிருக்கின்றன. இப்படித்தான் மருந்து துறை செயல்படுகிறது. இறுதியில் காசு உள்ளவனுக்கு மருந்து இல்லாதவனுக்கு மரணம் என்பதே இவர்கள் வகுத்திருக்கும் நீதி! இந்தியாவானாலும் இங்கிலாந்தானாலும் முதலாளித்துவ சந்தை முறை நீடிக்கும் வரை இங்கே அறிவியலுக்கும், மருத்துவத்திற்கும், மக்களுக்கும் விடுதலை இல்லை!
இவர்கள் வேறு பெண்கள். சென்னை நகரின் அழுக்கை துவைக்கும் வெள்ளை மனம் கொண்ட கடும் உழைப்பாளிகள். உழைப்பின் அழகில் தோய்ந்திருக்கும் அவர்களது முகங்கள் வயதை கூட்டியே காண்பித்தன. அன்றாடம் அடித்து துவைத்து, குனிந்து நிமிர்ந்து உடல் என்பது இவர்களைப் பொறுத்த வரை ரப்பர் போன்றது. அத்தோடு வீட்டு வேலைகள். வழக்கமாய் குடிக்கும் ஆண்கள். ஊரைச் சுற்றி கடன். மழை வந்தால் வெள்ளாவி வேலை இல்லை. கடன் அதிகம் வேண்டும். பிள்ளைகளை படிக்க வைக்க முயன்றும் வேறு வழியின்றி சோப்பையே ஆயுதமாக எடுக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரின் கூவத்திற்கு அருகே இருக்கும் திடீர் நகரின் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் துறைக்கு வாருங்கள். இந்த மகளித் தினத்தை இவர்களோடு செலவழிப்போம்.
சிறு சிறு பகுதியாக தடுக்கப்பட்டு சிதிலமடைந்த நீளமான சிமண்ட்டு தண்ணீர் தொட்டி. அதனருகில் அடித்துத் துவைக்க இடுப்பளவு உயரமுள்ள சலவைக் கல். துவைத்தது, துவைக்காதது, நீலம், கஞ்சி போட்டது, போடாதது என பிரித்து வைக்கவும் நின்று வேலை செய்யவும் நீண்ட சிமெண்ட் களம். கார்ப்ரேசன் லாரி தண்ணீரை நம்பித்தான் சலவை என்பதால் தண்ணீர் பிடித்துவைக்க பெரிய சிறிய டிரம் மற்றும் பாத்திரங்கள். துணிகளைக் காயவைக்க கயிறு கட்டிய திறந்த வெளி. துணிகளுக்கான கஞ்சியைக் காய்ச்சும் இடம். குடித்தனமாகவும் பயன்படுத்தப்படும் சலவையர் ஓய்வறை. துவைத்த கழிவுநீர் சரியாக ஓட வழியில்லாததால் ஒரு பக்கம் சாக்கடைத் தேக்கம். இதுதான் சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரில் இருக்கும் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் தொழிலாளர் துறை.
இங்கே 500-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். தண்ணீர் வசதியுடன் துவைப்பதற்கு ஒவ்வொரு சலவைத் தொழிலாளிக்கும் கல் பலகை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அங்கே 50 பலகைதான் இருக்கிறது. சலவைத் தொழிலுக்கு மூலதாரமான தண்ணீருக்கு இங்கு எந்த வாய்ப்பும் கிடையாது. 20 வருடங்களாக லாரி தண்ணீரை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள். அதற்கு அவர்களே செலவும் செய்கிறார்கள். ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு சலவைக் கல்லுக்கு மாதம் 12 ரூபாய் வரி கட்டுகிறார்கள். கல், தண்ணீர், துணி காயும் இடம் போன்றவற்றில் வரும் சிக்கல்களை இவர்களது சங்கத்தின் தீர்த்துக் கொண்டு தொழில் செய்கின்றனர்.
சலவை மட்டும் செய்பவர்கள், வாடகை கடை, தள்ளுவண்டி, அயனிங் என்று சிறு ஏற்ற இறக்கத்துடன் ஓடுகிறது இவர்கள் வாழ்க்கை. வாடிக்கையாளர்கள் வீடு, அரசியல்வாதி, மருத்துவமனை, அழகு நிலையம், நட்சத்திர விடுதி, சாதாரண விடுதி போன்ற இடங்களில் இருந்து இவர்களுக்கு துணிகள் சலவைக்கு வருகின்றது. இது போக வயதான சலவைத் தொழிலாளிகளுக்கு வரும் துணிகளை பிரித்தும் கொடுக்கிறார்கள். தள்ளாத வயதிலும் துவைக்கும் கரங்களை அங்கே காணலாம். துவைக்கவே இயலாதவர்களுக்கு மடிக்கவும், ரகம் பிரிக்கவும் வேலை உண்டு. சில இளைஞர்கள் மட்டும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அயனிங் வேலைக்கு செல்கிறார்கள்.
எது வீடு, எது கழிவறை என இனம் காண முடியாத நெருக்கடியான குடியிருப்பு. துவைத்த துணிகளுக்கும் கழுவிய பாத்திரத்துக்கும் நடுவில் மீன் அலசும் பெண். தெரு முழுவதும் வழிந்தோடும் சாக்கடையில் விழுந்து விடாமல் சாமார்த்தியமாக விளையாடும் குழந்தைகள். அன்னக்கூடை, தண்ணீர் கேன், தண்ணீர் குடம், அழுக்குத் துணி மூட்டைகள், அழுக்கு பாத்திரமும் அதை கழுவ தண்ணீர் வாளியும், தக்காளி வைக்கப்படும் மரப்பெட்டியில் பலதரப்பட்ட பொருட்கள் என வறண்டு போன ஒரு தோற்றம் தெருமுழுதும். வீட்டுக்கு வெளியேயும் வரிசைகட்டி நிற்கும் பொருட்களைப் பார்க்கும்போது எதுவரை அவர்கள் வீட்டு எல்லை, எந்த பொருள் யாருடையது எனப் பிரித்து பார்க்க முடியாத குழப்பம் நமக்கு.
உச்சிப் பொழுது வெயில் உடலை சுட்டெரிக்கும் வரை துணிகளைத் துவைத்துவிட்டு காய வைப்பதும் மடிப்பதும் சலவை செய்வதும் என அன்றாடம் மூச்சு முட்ட ஓடிக் கொண்டிருக்கிறது இவர்களது வேலை. இவர்கள் குடியிருப்பில் யாரேனும் இறந்து விட்டால் அன்று மட்டும் விடுமுறை. அந்நாள்தான் இவர்களுக்கு கிடைக்கும் அரிதான ஓய்வு. வேலை செய்துகொண்டே பாட்டுக் கேட்பதும் டிவி பார்ப்பதும்தான் இவர்களுக்கிருக்கும் ஒரே பொழுது போக்கு. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலோடு போராடும் இவர்களுக்கு உடுத்திக் கொள்ள ஒரு நல்ல துணி கிடையாது. வெள்ளுடையாளர்கள் வேண்டாமென்று ஒதுக்கும் உடைகள்தான் இவர்களுக்கு பல சமயம் புத்தாடை.
நகம் வெட்டும் நேரம் கூட இல்லாது சிலர் உழைப்பதாகச் சொல்வார்கள். ஆனால் சலவை தொழிலாளிக்கு நகம் வெட்டும் தேவையே இருப்பதில்லை. சோப்பு மற்றும் பல்வேறு வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதாலும், அதிக நேரம் நீரிலையே நனைக்க வேண்டியிருப்பதாலும் பலருடைய கை நகக்கண்கள் பாதிக்கும் மேல் மென்று கரைக்கப்பட்டு ரத்தம் சொறிந்திருந்தது. அதேபோல் துணிக்கு மருந்து போடும் வேலையை அக்குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே செய்வார்கள். காரணம் மருந்து பட்டால் கை தார் போல் கருத்து போய்விடும். ஆனால் பல பெண்களின் கையும் அங்கே அப்படி இருந்ததைப் பார்க்க முடிந்தது.
குழந்தைப் பருவம் முதல் இத்தொழிலில் ஈடுபட்டதால் கல்யாண வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கு உடல் முழுதும் மாநிறமும் கைகளின் நிறம் மட்டும் தாரின் கருப்பாகவும் இருந்தது. அந்த பெண் எட்டாவது மட்டும் படித்திருந்தார். “எட்டாவது படிச்சா போதும் கலக்டர் வேலை தர்ரேன்னு சொன்னாங்க அதான் வீணா எதுக்கு படிச்சுகிட்டுன்னு நிறுத்திட்டோம்.” என்று அருகில் துவைத்துக் கொண்டிருந்த ரத்தினம் கேலியாகச் சொன்னார்.
“முடி வெட்றவனுக்கும் துணி வெளுக்குறவனுக்கும் தகுதி தராதரம் ஒன்னும் கூடிடலங்க. ஆத்துக்கறையில, குளக்கறையில செஞ்ச தொழில அந்தஸ்தா அழகு நிலையத்துலயும் அயனிங்க கடையிலயும் கூலிக்கு செய்யிறோம். இதைத் தாண்டி சாதித் தொழில் பாக்குற யாரும் மேல வர முடியாது. பிள்ளைங்களும் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழில செஞ்சுதான் ஆகவேண்டிருக்கு. என்ன படிச்சாலும் தலைமுறை பல தாண்டியும் இந்தக் குலத்தொழில விட்டு மீள முடியலையே” என்றார்.
இப்பகுதியில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைத்து வேலைகளையும் இருபாலரும் கலந்தே செய்கின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஒரு ஏரில் பூட்டிய இரு மாடுகளாக பாரம் சுமக்கின்றனர். வீட்டில் துணிகளைத் துவைக்க எந்திரத்தின் உதவியை பலர் நாடும் போது ஊர் அழுக்கை அடித்துத் துவைக்கும் இப்பெண் தொழிலாளிகள் என்ன சொல்கிறார்கள்?
ரமணி வயசு 70. மகன் மனைவியுடன் சித்தாள் வேலை செய்து வேறு இடத்தில் வசித்து வருகிறார். தள்ளாத வயதில் தனிக் குடித்தனம் செய்யும் ரமணியம்மா மற்ற தொழிலாளிகள் பிரித்து தரும் துணிகளை துவைத்து கொடுக்கிறார். “வயசாகி போச்சுன்னு சும்மா உக்காந்திருந்தா வயிறு பசிக்காம இருக்குமா? எங்க போரது? யாரு குடுப்பா? நேரத்துக்கு பசிக்கும் வயித்துக்காக வேலை செஞ்சுதானே ஆகனும்.”
சுமதி வயசு 50. தள்ளுவண்டி, அயன் கடையும் வைத்துள்ளனர். “நாங்க சாதியிலயே வண்ணான். எங்களப் போயி எத்தன வருசமா தொவைக்கிறீங்கன்னு கேட்டா என்னத்த சொல்ல. எங்க அப்பன், பாட்டன் காலத்துல ஆரம்பிச்சு எனக்கு கருத்து தெரிஞ்ச நாள்லேருந்து துணி வெளுக்குறேன். எம்பிள்ளைங்களாவது வேற வேலைக்கு போகாதான்னு ஏக்கமா இருக்கு”
உஷா வயது 55. பெண்கள் தினமா? துணிக்கு போட்ற சோப்பு பேரே எனக்கு ஒழுக்கா சொல்லத் தெரியாது. இதுல்லாம் எனக்கு எங்க தெரிய போகுது. நீங்க எதுக்காக வந்திருந்தாலும் சரி, எனக்கு இந்த உதவிய மட்டும் பண்னுங்க மேடம். எனக்கு ரேசன்ல சர்க்கரை அட்டை (அதிக வருமானம் உள்ள குடும்பத்துக்கான ரேசன் அட்டை) போட்டு குடுத்துருக்காக. அரிசி பருப்பு எதுவும் வாங்க முடியல அதை மாத்தி குடுத்திங்கன்னா புண்ணியமா போகும்.”
அமுதா. வயது 26 “எப்படியாவது ஒரு அயனிங்க கட போடனுன்னு ஆசை. ஆசைய மட்டும் வச்சுட்டு என்ன செய்ய முடியும். ரெண்டு லட்சம் மூனு லட்சம் பணம் வேணுமே? எங்களப் போல உள்ளவங்களுக்கு பேங்குல கடன் தரதா சொல்றதெல்லாம் டிவில பாக்குறதோட சரி. அதை யாரப் புடிச்சி எப்படி வாங்குறதுன்னு எந்த வழிமுறையும் தெரியல.”
பூவம்மாள் வயது 50 வயதை கடந்திருப்பார். “நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”
கங்கம்மா. சலவை தொழிலாளி. “ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்து பேரப்பிள்ள எடுத்து பாட்டியாயிட்டேன். அத வெச்சு வயசு பாத்துக்கோ. 3 மாசமா ரேசன்ல எந்த பொருளும் குடுக்க மாட்றான். இன்னைக்கி சண்ட வலிச்சதுல சக்கர மட்டும்தான் இருக்கு வாங்கினு போன்னான். அவன விடாம டார்சர் பன்னி அரிசி, பருப்பு வாங்கினாதான் எனக்கு மகளிர் தினம்னு போடுங்க.”
லட்சுமி வயது 48. “எங்களுக்கு பொழுது விடியறதே கல்லாண்டதான். ஓய்வு பொழுது போக்கு எதுவும் இல்லாமத்தான் உழைக்குறோம். ஒரு வார காலம் வேலை இல்ல, தவணக்காரன் தயவு இல்லாமெ உயிர் வாழவே முடியாது..”
ஜீவா. வயது 25. பத்தாவது வரைப் படித்தவர். “நான் பொறந்ததும் கல்யாணம் செஞ்சதும் இங்கேதான். எங்க வீட்டுக்காருக்குப் பேச்சு வராது, காதும் கேக்காது. ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அவருக்கு உள்ள குறைய விட மத்த ஆம்பளங்களைப் போல குடிக்காம இருக்குறது எனக்குப் பெரிய விசயமா தோணுச்சு.”
கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6 2017) இரவு பத்து மணி அளவில் கச்சத்தீவு அருகே மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து 464 விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படை பிரிட்ஜோ இருந்த விசைப்படகு மீது சராமரியாக சுட்டிருக்கிறது. கழுத்தில் குண்டு பாய்ந்த பிரிட்ஜோ அங்கேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மீனவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீன் பிடிதொழிலுக்காக ஒரு மீனவர் கொல்லப்படுவது உலகத்திலேயே இந்தியா அன்றி வேறு எங்கு இருக்கும்?
அதே மருத்துவமனையில் இருக்கும் பிரிட்ஜோவின் உடலுக்கு பிரதே பரிசோதனை முடிந்தாலும் உடலை வாங்க மக்கள் மறுப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கை இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும், இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே. இதற்கு மத்திய மாநில அரசுகள் உறுதி தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் கொலை செய்த இலங்கை கடற்படை வீரர் கைது செய்யப்படவேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை.
சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ. இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
கடந்த ஆறு ஆண்டுகளில் யாரும் சுட்டு கொல்லப்படவில்லை என்றாலும் அன்றாடம் மீனவர்களை தாக்கும் அட்டூழியத்தை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்கிறது. 130க்கும் மேற்பட்ட படகுகள் மாதக் கணக்கில் இலங்கை வசம் பிடித்து வைக்கப்பட்டு 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கே சிறையில் இருக்கின்றனர். இதுநாள் வரை தமது வாழ்வாதாரம்தான் பாதிக்கப்பட்டது என்பது போய் இப்போது மீண்டும் உயிரையே பலி கொடுக்கும் நிலைமை வந்திருக்கிறது என்று கதறுகிறார்கள் மீனவர்கள்.
இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் 30 கடல் மைல் தூரம் உள்ளது. இதை சர்வதேச விதிகளின் படி சரியாக பிரித்தால் 15 கடல் மைல் அளவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். ஆனால் 1974 இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போதும் அதற்கு பிறகு அதே ஒப்பந்தம் 76-ம் ஆண்டில் புதுப்பிக்கப் பட்ட போதும் கடல் தூரத்தை சமமாக பிரிக்கவில்லை.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி தமிழக மீனவர்கள் அத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஆண்டு தோறும் நடக்கும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று இரண்டு உரிமைகளை மட்டும் வழங்கியிருக்கிறார்கள். மாறாக அங்கே மீன் பிடிக்க கூடாதாம். இந்தக் குழப்பங்களோடு குறைவான தூரத்தில் எது சர்வதேச எல்லை என்று பிரித்தறிவது கடினம்.
ராமேஸ்வரத்திலிரிந்து முதல் மூன்று கடல் மைல் பரப்பில் நாட்டுப்படகுகளும், அதற்கடுத்த நான்கு கடல் மைல் பரப்பில் பாறைகள் இருப்பதால் 7 மைல்களுக்கு மேல்தான் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தனி. ஒரு வேளை தமிழக மீனவர்கள் இந்தக் குழப்பமான சர்வதேச எல்லையை மீறுவதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்களை சுட்டுக் கொல்வது எப்படி சரி?
இதற்கு முன்னர் ஈழத்தமிழர் போராட்டத்தின் போது சுமார் 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது புலிகளும் இல்லை, போராட்டமும் இல்லை. ஆனால் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அங்கே இராணுவம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மதயானை போல பெருத்து இருக்கிறது. மற்ற நாடுகளின் மக்கள் தொகையில் இராணுவத்தின் விகிதம் குறைவாக இருந்தால் இலங்கையில் அது அதிகம். இப்படி ஊட்டி வளர்க்கப்பட்ட் ஒரு விலங்கு தனது சுபாவத்தை கைவிடுவது கடினம்.
மேலும் புலிகளை ஒடுக்குவதற்கு பாக் நீரிணையில் மீனவர்களை அவ்வப்போது கொன்றால்தான் தமிழகத்தில் இருந்து வரும் பொருட்களை நிறுத்த முடியும் என்று இலங்கை அன்று அமல்படுத்தியது. அதை அப்போது இந்தியாவும் அங்கீகரித்தது. இப்படித்தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எங்கு பார்த்தாலும் அடித்து ஒடுக்கும் காட்டிமிராண்டித்தனத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்தியாவின் மறைமுக ஆதரவுதான் இலங்கை கடற்படை இப்படி கேட்பார் இன்றி கொல்வதற்கு முக்கியமான காரணம்.
சுட்டுக் கொல்லைவில்லை என்றால் வலைகளை சேதப்படுத்தி, படகுகளை தாக்கி அல்லது பிடித்துச் சென்று என்று அன்றாடம் எல்லா வதைகளையும் படுகிறார்கள் தமிழக மீனவர்கள். விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அன்றாட ஊதியத்திற்கு வேலை பார்க்கும் தொழிலாளிகள்தான். அவர்களைப் பொறுத்த வரை கடற் தொழில் என்பது போர் முனையில் சாகும் அபாயத்தை கொண்டிருப்பதாக மாறிவிட்டது.
இத்தாலியர்கள் அரபிக் கடலில் கேரள மீனவர்களை சுட்ட போது அவர்களை கைது செய்த இந்திய அரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது ஏன் வாய் பொத்தி நிற்கிறது என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கேட்கிறார்கள். எதிரி நாடு எனக் கூறப்படும் பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. இதற்கு மேல் நாங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் இலங்கையோடு கூட சேர்த்து விடுங்கள் என்று கோபமாக கேட்கிறார்கள் அவர்கள்.
மத்திய பாரதிய ஜனதா அரசோ இந்த படுகொலைக்கு வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்திருக்கிறது. பெயரளவு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. இலங்கை அரசோ தமது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று முழுப்பொய்யை அதிகாரப்பூர்வமாக கூறுகிறது. பிறகு விசாரிக்கிறோம் என்று கூறுகிறது. இறுதியில் இந்த விசாரணையை வைத்தே தான் கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டதாக இந்திய அரசு நாடகமாடும்.
எல்லையிலே சர்ஜிக்கல் ஸ்டிரைக், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று உதார் காட்டிய மோடி இப்போது ஏன் பயந்து ஓடுகிறார் என்று மீனவர்களோடு சேர்ந்து இதர பிரிவு தமிழக மக்களும் கேட்கிறார்கள். இலங்கையிலேயே ஏராளம் முதலீடு செய்துள்ள தரகு முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மோடி அரசு ஒரு மீனவனின் உயிருக்காக ஒன்றும் செய்யாது என்பதே யதார்த்தம். இதற்கிடையில் சிலர் இலங்கையை யார் கட்டுப்படுத்துவது என்று சீனா – அமெரிக்காவிற்கு இடையே நடக்கும் போராட்டம் என்று கண்டதையும் உளறி இந்த சம்பவத்திற்கு பயங்கரமான பின்னணி ஆய்வு தருகின்றனர்.
தமிழக் மக்களை ஒடுக்கிய இலங்கை இராணுவத்தின் கடற்படை தனது பழைய பழக்கத்தை அதாவது தமிழக மீனவர்களை ஒடுக்கும் பேட்டை ரவுடித்தனத்தை விடவில்லை. மேலும் தற்போது இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அனைத்து பிரிவு மக்களும் அங்கே அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் குறிப்பான பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டங்களை திசை திருப்பக் கூட இலங்கை அரசு தனது கடற்படையை ஏவி இந்தக் கொலையை செய்திருக்கலாம். ஆகவே இலங்கை கடற்படை என்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, போராடும் இலங்கை மக்களுக்கும் எதிரிதான்.
முக்கியமாக இலங்கை அரசின் கடற்படை ரவுடித்தனத்திற்கு சோறும் சரக்கும் போட்டு வளர்த்து ஆசீர்வசித்த இந்திய அரசு இலங்கையில் ஏர்டெல், டாடாவிற்கு சேவை செய்யுமா தமிழக மீனவரின் உயிரை காக்குமா?
நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொருட்டு இளைஞர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !
கோவையில் மருதமலை அருகில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் 06.03.2017 அன்று மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், நெடுவாசல் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் துவங்கினர். அனுமதி வாங்கி போராட்டம் செய்யும் மாணவர்கள் அன்று போராட அனுமதி தரவில்லை என்றாலும் போராடுவோம் என உறுதியாள நின்றனர். போராட்டத்தை ஆதரித்து சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் சென்றனர்.
இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க
மாணவர்கள் விண் அதிர முழக்கமிட்டு கொண்டிருக்கையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அந்த மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.
உடன் ஓடி வந்த காவல் துறை போராட்டத்தை கலைக்கும் படியும், போராட்டம் நடத்த கூடாது எனவும் மிரட்டினர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் திரும்பவும் நீங்கள் ஒன்று கூடி போராடலாம் என்ற காவல் துறையின் நயவஞ்சக பேச்சை மாணவர்கள் நம்பவில்லை.
சட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறை மாணவர்களை கலைக்க பல்கலை கழக பேராசிரியர்களை அழைத்து பேசினர். பேராசிரியர்கள் மாணவர்களிடம் வந்து இங்கு மற்ற கல்லூரி மாணவர்களை வெளியேறுமாறு கூறினர்.
அதன் பின் காவல்துறை பேராசிரியர்களையும், நிர்வாகத்தையும் அழைத்து அவர்களின் மூலமாகவும் ” இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க ” என கூறியும் மிரட்டியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை மக்கள் பார்த்துவிட கூடாது என எண்ணிய காவல்துறை பல்கலை கழக வாயிலில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை மறைத்தனர்.
மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.
காவல்துறையும், நிர்வாகமும் மிரட்டினாலும் அதற்கு அஞ்சாமல் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். பின்பு காவல்துறை கைது செய்வதாக அறிவித்து வேனில் ஏற்றி வடவள்ளியில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்தனர். கைது செய்து மண்டபத்தில் உள்ள மாணவர்களை பார்க்க தோழர்கள் சென்ற போது சட்ட கல்லூரி மாணவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறினர்.
மண்டபத்தின் உள்ளே உள்ள மாணவர்கள் இனி போராட கூடாது என நினைத்த காவல்துறை பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை கேட்டும் , வழக்கு தொடுப்பேன் என மிரட்டத் துவங்கினர்.
எனினும் மாணவர்கள் போலீசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம் அடுத்த முறை எங்களின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கும் எனவும் உறுதியேற்றனர். கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் சற்றும் அஞ்சாத போர்க்குணத்தையும் , உறுதியையும் வெளிப்படுத்திய மாணவர்களை பு.மா.இ.மு போற்றுகிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி கீழமை நீதிமன்றம். மாவோயிஸ்டு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனும் பயங்கரவாத “ஊபா” சட்டத்தின் கீழ் அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபாவுக்கு எதிராக “அரசுக்கு எதிராக போர் தொடுத்தார்” என பொய்வழக்கு தொடுத்தது மகாராஷ்டிர அரசு.
பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்ட ஹேம் மிஸ்ரா, பாண்டு நரோட்டே, மகேஷ் திர்கெ மற்றும் பிரஷாந்த் ராஹி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான விஜய் திர்கெவுக்கு பத்தாண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுத்த முதல் குற்றவாளியான பேராசிரியர் சாய்பாபாவின் உடல் 90 சதவீதம் செயல்படாத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் . சாய்பாபா
கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தண்டகாரண்ய வனப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமக் கொள்யை எதிர்த்துப் போராடிய பழங்குடியின மக்களை ஒழித்துக் கட்ட பச்சை வேட்டை எனும் பெயரில் இராணுவம் களமிறக்கப்பட்டது. இதை நாடெங்கும் இருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் எதிர்த்துப் போராடினர். மனித உரிமைப் போராளியும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்கிற அமைப்பின் இணைச்செயலாளராகவும் இருந்த பேராசிரியர் சாய்பாபா பச்சை வேட்டைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக அறிவுத் துறையினரிடையே அறியப்பட்டவரும், மனிதவுரிமைப் போராளியுமான அவரை ஒழித்துக்கட்ட தருணம் பார்த்துக் கொண்டிருந்தது மத்திய அரசு.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி சுமார் 50 போலீசார் ‘திருட்டுப் போன பொருளைத் தேடுவதற்கான நீதிமன்ற ஆணை’ ஒன்றுடன் பேராசிரியர் சாய்பாபாவின் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். சட்டவிரோதமான இந்த தேடுதலில் சாய்பாபாவுக்கு எதிராக ஏதும் கிடைக்காத நிலையில், அவரது மடிக்கணினி மற்றும் சில பென் டிரைவ்களைத் திருடிச் சென்றுள்ளனர் போலீசார். இரண்டு வாரங்கள் கழித்து பேராசிரியர் சாய்பாபாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மடிக்கணினியின் கடவுச் சொல்லைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பேராசிரியர் சாய்பாபாவை விசாரிக்கும் போலீசார், அதே ஆண்டு மே 9-ம் தேதி நீதிமன்றப் பிடி வாரண்டு ஏதுமின்றி அவரது காரை வழிமறித்து கடத்திச் சென்றது. கைது செய்த போதும் சரி, அதற்குப் பின்னும் சரி பின்பற்றியிருக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தையும் மதிக்காத போலீசார், சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத, இன்னொருவரின் உதவியின்றிக் கழிவறைக்குக் கூட செல்ல முடியாத மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவைக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது.
சட்டவிரோதமாக பேராசிரியர் சாய்பாபாவைக் கடத்திய அரச பயங்கரவாதிகள், அவரை நாக்பூர் சிறையில் அடைக்கிறார்கள். அரசியல் கைதியான சாய்பாபாவை சாதாரண கிரிமினல்களுடன் அடைத்த போலீசார், பிறர் உதவியின்றி நகரக் கூட முடியாத அவரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரையில் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே உடல் இயக்க குறைபாட்டுடன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளோடு போராடி வந்த பேராசிரியர் சாய்பாபாவின் உடலின் மேல் போலீசார் கட்டவிழ்த்து விட்ட குரூரமான சித்திரவதையின் விளைவால் அவரது இடது கை முடமானது. இத்துடம் தமிழகத்தை கொள்ளையடித்த குற்றவாளி ஏ 2 சசிகலாவுக்கு பரப்பன அக்ரகார சிறையில் அளிக்கப்படும் ஆடம்பர வசதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்!
ஒருபுறம் நீதிமன்றத்தில் போலீசார் தொடுத்த பொய் வழக்கை எதிர்த்துப் போராடி வந்த பேராசிரியர் சாய்பாபா, இன்னொரு புறம் தனது நோய்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச மருத்துவ வசதிகளுக்காகவும் போராடி வந்தார். நியாயமாக அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய மருத்து சிகிச்சைகளைத் தடுத்து சிறையிலேயே கொன்று விடும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய தீர்ப்பு வந்துள்ளது.
சட்டவிரோதமாக போலீசார் திருடிச் சென்ற கணினி மற்றும் பென் டிரைவ்களை ஆதாரமாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபாவின் தரப்பில் போலீசாரால் திருடிச் செல்லப்பட்ட கணினியில் எந்த வகையான ‘ஆதாரத்தையும்’ சொருகி வைக்க முடியும் என முன்வைத்த வாதங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்துள்ளது. பென் டிரைவ் ஒன்றில் அபாயகரமான மின் ஆவணங்களை சேமித்து அதை கட்சிரோலி காட்டுப்பகுதியில் உள்ள நர்மதாக்கா எனும் மாவோயிஸ்டு பெண் தளபதியிடம் தனது தோழர்கள் மூலம் பேராசிரியர் சாய்பாபா கொடுத்து அனுப்பினார் என அரசு தரப்பு வைத்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பென் டிரைவ்களை ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம்.
அரசு தரப்பால் பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக சோடிக்கப்பட்ட எந்த ‘ஆதாரங்களையும்’ சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவ முடியாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இயற்கை வளங்களை கூறு போட்டு விற்கும் அரசின் ‘கொள்கைகளை’ எதிர்க்கும் எவருக்கு எதிராகவும் இது போல் ஆயிரக்கணக்கான பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் ஆற்றல் போலீசாருக்கு உள்ள நிலையில், எந்த தர்க்க நியாயமும் சட்டவாத அதனடிப்படையும் இன்றி தண்டனை வழங்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளன என்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
பேரா. சாய்பாபா மற்றும் அருந்ததி ராய் மட்டுமல்ல நாளை நெடுவாசல் கிராமத்தினர் மீதும் இந்த அரச பயங்கரவாதம் பாயும்.
சாய்பாபா 90 சதவீதம் முடமானவர் என்பதைக் கணக்கில் கொண்டு அவருக்கு கருணை காட்ட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவர் உடல் ரீதியாக ஊனமுற்றவராக இருந்தாலும் சிந்தனை ரீதியாக உறுதியானவரெனவும் எனவே தண்டனை பெற்றாக வேண்டுமெனவும் எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒருவர் அரசுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டுமென்பதில்லை – சிந்தித்தாலே சிறை தான் என கொக்கரிக்கிறது இத்தீர்ப்பு. ஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.
இது எங்கோ கட்சிரோலியில் நடந்த அநீதியாகவோ, பேராசிரியர் சாய்பாபாவுக்கு நேர்ந்த ‘துரதிர்ஷ்டமாகவோ’ கடந்து செல்ல முடியாது. நாடெங்கும் பன்னாட்டு கம்பெனிகளுடனும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுடனும் கைகோர்த்துக் கொண்டு இயற்கை வளங்களைச் சூரையாடும் அரசின் சட்டப்பூர்வ கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகளுக்கு அரசு விடுக்கும் மிரட்டலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெரினாவில் துவங்கி, நெடுவாசல், தாமிரபரணி, சேலம் உருக்காலை என தமிழகத்தின் வீதிகளில் அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடி வரும் மக்களும் ஜனநாயக சக்திகளும் இத்தீர்ப்பு தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடியான சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் – நீதிமன்றங்கள் அநீதிமன்றங்களாக உருவெடுத்திருப்பதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடாவிட்டால் இன்று பேராசிரியர் சாய்பாபாவின் மேல் பாய்ந்தது நாளை மக்களின் மீதும் பாயும்.