மணப்பாறையில் 15-03-2017 புதன்கிழமை காலை 10-00 மணிமுதல் மாலை 05-00 மணிவரை மக்கள் அதிகாரம் தோழர் பாண்டியன் தலைமையில் துப்பாக்கிச்சூட்டுக்கு மீனவர் பலி ! காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி !! கோக்கோ கோலாவிற்கு தாமிரபரணி பலி ! ஹைட்ரோகார்பனுக்கு நெடுவாசல் பலி !! புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார் மயம், தாராளமயம், உலகமயத்திற்கு நாடே பலி !
என்ற முழக்கத்தை முன்வைத்து மணப்பாறை பெரியார் சிலை அருகில் தர்ணா போராட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் 13-03-2017 அன்று எழுத்துப்பூர்வமாக அனுமதிவழங்கியுள்ளனர்.
தர்ணா போராட்டம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் 15-03-2017 அன்று காலை 10-00 மணியளவில் அனுமதி மறுக்கப்பட்டது என வாய்மொழி உத்தரவு மூலம் காவல் துறை தடுத்தனர். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்கள் அதிகார தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டமாக மாற்றி நடப்பட்டது.
தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், திராவிடர் கழகம் திரு மணவை துரை காசிநாதன் திமுக தலைமைகழக பேச்சாளர் தோழர் பழனிச்சாமி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர் ந. பிரபாகரன் மாநில து. பொதுச்செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம் தோழர் வீ. தனபால் திராவிடர் விடுதலைக்கழகம் திரு தே. கோபி புதிய தமிழகம், புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர். கராத்தே வீர. முருகன் மாவட்டச் செயலாளர், ஆதிதமிழர் கட்சி வழக்கறிஞர் கு. தமிழ்மணி சமூக ஆர்வலர் திரு சுப்பிரமணியன் சேர்மன் சூர்யாநர்சிங்கல்லூரி, வையம்பட்டி கவிஞர் பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ்க் கழகம் கவிஞர் வே. பால சுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர் கவிஞர் அறிவுச் செல்வன் சமூக ஆர்வலர் தோழர் வை.கண்ணன் மக்கள் அதிகாரம், மணவை
ஆகிய தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் கலந்துகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்தனர். நிறைவாக தோழர்காளிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் அதிகார தோழர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சுமார் 30 பேரை கைசெய்து மாலை 06:00 மணிக்கு விடுதலை செய்தனர்.
தகவல் : மக்கள் அதிகாரம் மணப்பாறை. தொடர்புக்கு – 98431 30911
வேலூர் மாவட்ட நிர்வாகமே ! மாநாகராட்சியே !! தரைக்கடை வியாபாரிகளுக்கு கட்டிய கடைகளை மாநகராட்சியே ஏற்று நடத்து என்று 13.03.2017 அன்று திங்கள் மாலை வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு.-வின் கிளை சங்கமான வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், அடுக்கம்பாறை பகுதி தரைக்கடை வியாபாரிகள் மற்றும் ம.க.இ.க. தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
பு.ஜ.தொ.மு.-வின் மாவட்ட இணை செயலாளர் மற்றும் இச்சங்கத்தின் செயலாளர் தோழர் சரவணன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். வேலூர் லாங் பஜாரில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து பிழைத்து வரும் வியாபாரிகளை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூறி அப்புறப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். பின்னர் வேறு இடத்தில் கடைக்கட்டி தந்து அதை தனியாரிடம் ஒப்பந்தம் என்ற பேரில் டெண்டர் விட்டு தனியார் பகல் கொள்ளைக்கு மாநகராட்சியே துணை நின்றது இதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்தாக இரு பகுதி சங்க செயலாளர்கள் மாநகராட்சி மற்றும் போலீசு ஆகியோர் முன்பு எவ்வாறு நடத்தினர் என்றும் இச்சங்கத்தில் இணைந்த பிறகு எவ்வாறு சுயமரியாதையுடன் தொழில் செய்து வருகிறோம் என்றும் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் இவ்வார்ப்பாட்டம் கடந்த மாதம் நடத்தப்படிருக்க வேண்டியது, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று சொல்லி போலீசு மறுத்துவிட்டதை அம்பலப்படுத்தினார்.
சாதாரண உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக போராடும்போது சட்டம் ஒழுங்கை காட்டும் போலீசு இன்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்நாட்டை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல்களுக்கு பாதுகாப்பு தருகிறது. சாதாரண வியாபாரிகளுக்கு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம் இங்குள்ள பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் முன் சாலைகளை மறித்து நிற்கும் வாகனங்களை தடுக்காமல் அவற்றுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது எந்த வர்க்கத்திற்கான அரசு இதில் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை நடைமுறை ஆதாரமாக விளக்கினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு.-வின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் இவ்வியாபாரிகள் தினந்தோறும் வட்டிக்கு கடன் பெற்று பிழைப்பு நடத்துவதையும், இத்தொழில் என்பது சதவீத சாதாரண உழைக்கும் வர்க்கத்துக்கு எந்தளவு இன்றுள்ள விலைவாசியில் பயனுள்ளதாக உள்ளது என்பதையும் விளக்கிப்பேசினார். இதை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர்களில் இவர்களின் வாழ்வுரிமையை பறித்து கொள்ளை கும்பலிடம் தாரை வார்க்கிறது என்பதையும் விளக்கிக்கூறினார். இன்று அனைத்து பிரிவு மக்களும் போராடுகிறார்கள், போராட்டம் தான் நம் அனைவருக்குமான தீர்வு என்று கூறினார்.
இறுதியாக தோழர் சுப்பிரமணி நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஒரு நாள் தனது வியாபாரத்தை இழந்தாலும் அவர்களுடைய தொழிலே போய்விடும் என்ற நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்) வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841
உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னைச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இளநீர் கடை வைத்திருக்கும் சத்தியவாணியைச் சந்தித்தோம்.
“மகளிர் தினமா? கேள்வி பட்டுருக்கேன். அது எங்க நடக்குதுன்னு தெரியாது. நான் போனதுமில்ல. எந்த நல்ல நாளு வந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசம்தாங்க. ஏன்னு கேட்டா நாளு கெழமையில இன்னும் நாலு எழநி கூட விக்குமே!. சரி அது போகட்டும் உழைக்கும் மகளிர் தினம் கொண்டாற்றீங்கன்னா நீங்க எங்கள நெதமும் கொண்டாடனும்.பொண்ணுங்களுக்கான நல்ல நாளுன்னா சந்தோசமா எதுனாச்சும் சொல்லனும் எங்கிட்ட அப்படி ஒன்னும் இல்லையே என்னத்த சொல்ல.”
சத்தியவாணிக்கு வயது 46. திருமணம் செய்துக் கொள்ளாமல் தனி ஒருவராக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கும் போராட்ட மனுசி. இதே இடத்தில் 40 வருடங்களுக்கு முன் அவர் அப்பா, அம்மா ஆரம்பித்த இளநீர் கடையைக் கடந்த 17 வருடங்களாக நடத்தி வருகிறார். வெளியூரிலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் இளநீரை, நடு இரவிலும் தனி ஆளாக நின்று இறக்கி பத்திரப்படுத்திவிட்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு வாழும் தைரியமான பெண்.
“கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு கொள்கையெல்லாம் கெடையாதுங்க. எல்லாரப் போலவும் கல்யாண பன்னிக்கிட்டு புருசம் புள்ளையோட வாழ ஆசப்பட்டவதான் நானும். 1998-ல அப்ப எனக்கு 25 வயசு. கல்யாணம் பேசி அதுக்கான வேலைங்க சந்தோசமா நடந்துட்டு இருந்துச்சு. கல்யாணத்துக்கு நாலு நாள் இருக்கறப்ப எங்க அம்மா இதே எடத்துல அடிப்பட்டு எறந்து போச்சு. என்ன செய்ய ஏது செய்யன்னு ஒன்னும் புரியல. நாலு மாசம் தள்ளி வச்சுக்கலான்னு மாப்ள வீட்டல சொன்னோம் அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.”
“அம்மா அப்பா ரெண்டு பேருமே நடு ராத்திரி எழநி எறக்க வந்தாங்க. எறக்குனது அசதியாருக்குன்னு அப்பா கொஞ்சம் கண்ண மூடிருக்காரு ,அம்மா வெத்தல போட்டுட்டு காவலுக்கு உக்காந்திருக்கு. எந்தப் பாவியோ எமனப்போல எங்குட்டுருந்து வந்தானோ அடிச்சு தூக்கிட்டான். அஞ்சு நிமிசத்துல அப்பா மடியிலேயே அம்மா உயிரு போச்சு. ஸ்டேசனுக்கு அலஞ்சு பாத்தோம் யாருன்னே கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லிட்டாங்க. அம்மா செத்து கல்யாணம் தள்ளிப் போயி என்ன செய்றதுன்னு முழி பிதுங்கி நிக்கிறப்ப ஆண்டவன் அடுத்த பாரங்கல்ல நடு மண்டையில நச்சுன்னு போட்டான்.”
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, 6 வயது வளர்ப்பு குழந்தை இதுதான் சத்தியவாணியின் குடும்பம். பெற்றோர் இறந்ததால் அனாதையான மாமன் மகனை 3 வயதிலிருந்து சத்தியவாணியின் அம்மா எடுத்து வந்து வளர்த்துள்ளார். அம்மா இறப்புக்கு பிறகு தன் பிள்ளையாகவே வளர்த்துள்ளார் சத்தியவாணி. இந்தச் சூழலில் சோதனைகளும் அவரை துரத்துவதை விடவில்லை.
“பட்ட கால்லேயே படும் கெட்ட குடியே கெடுமுன்னு பழமொழி ஒன்னு சொல்லுவாங்களே அது எனக்குதாங்க பொருந்தும். சரி போனது போச்சு, ஆக வேண்டியத பாக்கலான்னு திரும்பவும் கல்யாணத்துக்கு நல்ல நாள் பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அண்ணெ லவ் பெயிலியருன்னு மண்ணன்னெய ஊத்தி கொளுத்திக்கிட்டான். தலையில இருந்து கால் வரைக்கும் சரி பாதியா வெந்துப் போச்சு. ஆறு மாசம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா நடந்து உயிரக் காப்பாத்தி கொண்டாந்தேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. ஆனா அங்கங்க நரம்பு சுருட்டி இழுத்துகினு பாக்க கோரமா இருப்பான். கையில வெரலெல்லாம் கோணிக்கிச்சு. எந்த வேலையும் செய்ய முடியாது.”
“வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ணன், வெவரம் இல்லா தம்பி, வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல. அப்பா ஆத்தா இல்லாதப் புள்ளைய நெனச்சு பாருங்க, அம்மாவும் போச்சு நானும் கல்யாணம் பன்னிட்டு போனா எங்கன்னு போவும் அந்தக் கொழந்த. மாப்ள வீட்டுல ஒரு வருசம் போலக் காத்துருந்தாங்க வேற எடம் பாத்துக்கச் சொல்லிட்டேன்.”
“அம்மா சாவரதுக்கு முன்ன வரைக்கும் வீட்டு வேலை மட்டும் செய்வேன். எந்த வெளி வேலைக்கும் போனதில்ல. அம்மா செத்து தெவசம் முடிஞ்சுச்சு இனிமே வீட்டுல இருக்க கூடாது தொழில கத்துகனும்னு அப்பாக் கூட நானும் கொஞ்ச நேரம் கடைய பாத்துக்க ஆரம்பிச்சேன். சரியா மூனே வருசம்தான் 2001-ல அப்பா எறந்துட்டாரு. வேலையே செய்ய முடியலன்னாலும் ஆதரவா இருந்த அண்ணனும் அடுத்ததா போய் சேந்துட்டான். ஆறு வருசத்துல மூனு சாவு தாங்க முடியல. நானே ஒரு நட பொணமா மாறிட்டேன்.”
“கெட்டது நடந்த வீட்டுல ஒரு நல்லது நடந்தா கொஞ்சம் நெலம மாறுன்னு நெனச்சேன். சொந்தத்துல ஒரு பொண்ண பாத்து தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். சொந்தக்கார புள்ள நம்மள நல்லா பாத்துக்குமுன்னு நெனச்சேன். நெனப்பு பொய்யாப் போச்சு. எந்தம்பியும் ரொம்ப பாசக்கார பய. என்ன பாசம் இருந்தாலும் தாம்பொண்டாட்டி புள்ளன்னு வரும்போது நாம கொஞ்சம் தூரம்தான்.”
“ஒரு வருசத்துக்குள்ள குடும்பத்துல எண்ணிப் பாக்க முடியாத பிரச்சன. தனியா போய்ட்டான். கொஞ்சமா குடிச்சவன் முழு நேர குடிகாரனாயிட்டான். அரிசி, பருப்பு அத்தனையும் நான் கொடுக்கனும். மொளகா, மல்லியக் கூட அரச்சு கொடுக்கனும். தம்பி நல்லாருந்தா போதுமுன்னு அத்தனையும் செஞ்சேன். 2 வருசமாச்சு அவனும் என்ன விட்டுட்டு போய்டாங்க. அவன நெனச்சு நெனச்சு உருகொலஞ்சு போய்டேன். கழுத்தே தெரியாது அந்த அளவு குண்டா இருந்தேன். வேல செய்ய முடியல ஒடம்ப கொறையனுமுன்னு என்னான்னாவோ செஞ்சு பாத்தேன். எந்தம்பி செத்தான் தானா உடம்பு எறங்கிப்போச்சு.”
உறவினர் ஒருவர் இரட்டை பெண் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார். அந்தக் குழந்தையை அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். தம்பி தனி குடித்தனம் சென்றதில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் குழந்தையை வைத்து சரிசெய்ய நினைத்தார். பெண் குழந்தை என்பதால் தான் அம்மாவாக பாவித்து ஆசையாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
“கல்யாணம் தான் ஆகல ஆனா ரெண்டு பிள்ளைங்களுக்கு தாயாயிட்டேன். மனசார சொல்றேன் இந்தக் கொடுப்பன யாருக்கு வரும் சொல்லுங்க. (பெருமையோடுஅழகாக சிரிக்கிறார்) எம்பொண்ணும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவா. மாமா பையனும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவான். இப்ப அவனும் ஒரு குடும்பமாயிட்டான். தம்பி எறந்ததால தம்பி பொண்டாட்டியும் எங்கூடத்தான் இருக்கா ஆனா நாங்க இருக்கும் போது இந்தப் பொண்ணு எதுக்கு வளக்குறேன்னு அப்பப்ப வம்பு பன்னுவா. யாருக்காகவும் எம்பொண்ண நான் விட்டுத் தர மாட்டேன்.”
எம் பொண்ண ஒரு வயசுலேருந்து வளத்துகினு இருக்கேன். நாலு கட தள்ளிதான் அவளப் பெத்த அப்பா கட போட்ருக்கான். அவனாண்ட ஒர்ரூவா எனக்கு வேணுன்னு போய் நிக்க மாட்டா. எல்லா நல்லது கெட்டதும் நானே பாத்துப்பேன். படிப்பு வரல எத்தனேயோ சொல்லிப் பாத்துட்டேன் படிக்க மாட்டேன்னுட்டா. இப்ப ஒரு கடைக்கி வேலைக்கிப் போறா சம்பளத்த அப்படியே எங்கிட்ட குடுத்ருவா. அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணத்த பன்னிப் பாக்கனும் அதுதான் என் கடைசி ஆசை.”
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏரோபிக் அண்ட் ஃபிட்னஸ் அசோசியேசன் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு அங்கீகரித்த ‘பெல்லேடி’ என்ற நடனத்தை சென்னை ஜூம்பா நடன அமைப்பு தமிழகத்தில் பல இடங்களில் அறிமுகம் செய்திருக்கிறதாம். இந்த நடனம் ஆடினால் பெண்களின் மன அழுத்தம் குறைந்து இலகுவாக காணப்படுவார்களாம். சத்தியவாணி போன்ற உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு உள்ள மன அழுத்தத்தைக் குறைக்க எங்கு செல்வது?
"பெட்ரோல் டெக்" சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதையடுத்து, அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாடகமாடிய மோடி அரசு, அதே திட்டத்தை “ஹைட்ரோகார்பன் திட்டம்” என்ற பெயரில் நரித்தனமாகக் கொண்டு வந்துள்ளது. கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷெல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, மற்றும் தமிழகக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கும் திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்!
ஹைட்ரஜன், கார்பன் என்ற இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில் சுமார் 6000 மீட்டர் ஆழம் வரை பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
இந்தியாவின் எண்ணை மற்றும் எரிவாயுவின் ஒரு ஆண்டுத்தேவை 226 மில்லியன் டன்கள். இதில் 70 மில்லியன் டன்கள் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, நமது மொத்தத் தேவையில் 78 சதவீதத் தேவைக்கு இறக்குமதியை நம்பியுள்ளோம். அதிகரித்துவரும் இந்த இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பதுதான் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. இந்தக் கூற்று உண்மையா?
ஒ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா முழுவதும் ஆய்வு செய்து எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் அதிகமுள்ள 310 இடங்களைக் கண்டறிந்தன. இதில் முதல்கட்டமாக, மகராஷ்ட்ராவில் 29, ஆந்திராவில் 15, அஸ்ஸாமில் 13, குஜராத்தில் 6, இராஜஸ்தானில் 2, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2, (நெடுவாசல்,காரைக்கால்) என மொத்தம் 67 இடங்களில் ஆய்வுக்கான நிலங்களைக் கையகப்படுத்தி, ஒவ்வொரு இடத்திலும் எத்தனை டன் எண்ணெய் உள்ளது, எத்தனை கனஅடி எரிவாயு உள்ளது என்று ஆய்வுகள் செய்து முடித்துள்ளன. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுவை, அன்னிய நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார் மோடி.
“பெட்ரோல் டெக்” சர்வதேச மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்கள், முதலீட்டாளர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
2016 டிசம்பர் 5-ம் தேதி, சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகள் கலந்துகொண்ட ”பெட்ரோல் டெக்”’ என்ற சர்வதேச மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். இந்தியாவின் எண்ணெய் எரிபொருள் தேவை ஒவ்வொரு ஆண்டும் 3.5% அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவில் தயக்கமின்றி முதலீடு செய்யுங்கள்” என கார்ப்பரேட் கம்பெனிகளை தாஜா செய்தார்
பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ””கண்டுபிடிக்கப்பட்ட சிறு வயல்களின் ஏலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் கலந்து கொள்ளாது” என்று அன்னிய முதலாளிகளுக்கு சத்தியம் செய்கிறார்.
பன்னாட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கும் வாக்குறுதிகளையும் சலுகைகளையும் பாருங்கள்:
ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு தொழிலில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப அறிவு மட்டும் இருந்தால் போதுமானது.
இதற்கென இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் அனைத்துக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஏலம் எடுத்த நிலப்பரப்பில் எத்தனை கிணறுகள் வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளலாம்! இத்தனை மீட்டர் ஆழம்தான் தோண்ட வேண்டும் என்றும் நிபந்தனை இல்லை.
ஷேல், மீதேன் உள்ளிட்ட எல்லா வகையான ஹைட்ரோ கார்பன்களையும் எடுப்பதற்கு எந்தவித தடையோ, கட்டுப்பாடோ கிடையாது.
பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரி கிடையாது, எரிவாயுவுக்கு ராயல்டி 10% மட்டுமே.
உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சர்வதேச சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம். ஏலம் எடுக்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
ஒப்பந்த காலமான 15 ஆண்டுகள் முடிந்தபின், மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க முடியும். ஒப்பந்த காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தாலோ அல்லது காரணமின்றியோ திட்டத்திலிருந்து விலகும் நிறுவனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது.
இப்படி அடுக்கடுக்கான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது மோடி அரசு.
நெடுவாசல் பூமியின் அடியில் கிடக்கும் வளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வரா
எண்ணெய், எரிவாயு வயல்களைச் சர்வதேச சந்தையில் ஏலம் விடுவதற்காக மோடி அரசு நியமித்திருக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற தரகு கம்பெனி வெளியிட்டிருக்கும் ஆவணமும், 14.10.2015 தேதியிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணமும், டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஹைட்ரோ கார்பன்ஸ்-இன் ஆவணங்களும் மேற்கூறிய விவரங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன.
நெடுவாசல், காரைக்கால் மட்டுமல்ல, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், இராமநாதபுரம், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் சுமார் 3,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 398 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் திட்டமிட்டுள்ளது மோடிஅரசு. நெடுவாசலை பி.ஜே.பி.-யின் முன்னாள் மத்திய மந்திரியான ஜி.எம்.சித்தேஸ்வராவின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையை ரிலையன்ஸ் மற்றும் அதானிக் குழுமத்திற்கும், இராஜஸ்தானில் வேதாந்தா மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கும், குஜராத்தில் அதானிக்கும் ஒதுக்கியிருக்கிறது மோடிஅரசு. இதற்காக நாடு முழுவதும் 16,82,657சதுர கி.மீ. பரப்பளவு நிலங்கள் கண்டுபிடிப்புகளுக்கும், எண்ணெய் உற்பத்திக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 2015-16 வரை சுமார் 40 பில்லியன் டாலர் தனியார் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
மோடி அரசு சொல்லிக் கொள்வது போல, இந்த திட்டத்தின் நோக்கம் சுயசார்பும் அல்ல, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவதும் அல்ல. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கூறுபோட்டு விற்பதுதான் மோடி அரசின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வெளிப்படையாகத் தெரியாத நோக்கம் ஒன்றும் மோடி அரசுக்கு இருக்கிறது. காவிரி வடிநிலத்தை ஹைட்ரோ கார்பன் வேட்டைக்குப் பயன்படுத்துவதற்காகத்தான், காவிரி நீரை மோடி அரசு திட்டமிட்டே தடுத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்ச் 8 – ஆம் தேதி உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி பெ.வி.மு தோழர்.ஜெயமணி தலைமையில் மாலை அணிவித்து பெண் விடுதலைக்கான முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர். வெடிவெடித்து முழக்கமிட்டு, அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் சென்று பிரசுரங்கள் விநியோகித்து இனிப்பு கொடுக்கப்பட்டது.
மகளிர் தினம் என்பதையே அறியமுடியாத அளவு நிறைய பெண்கள் இருப்பதை அங்கே காண முடிந்தது. தேநீர் கடைகள், உணவகங்களில் பணியாற்றும் பெண்களிடம் சென்று பிரசுரம் கொடுத்து விளக்கப்பட்டது. அதன்பிறகு மாலை அரங்குக்கூட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள சுமங்கலி மகாலில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
தலைமையேற்ற பெ.வி.மு தலைவர் நிர்மலா இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டத் தீ பற்றியுள்ளது. மெரினாவின் போராட்டம் போட்ட விதை நெடுவாசலில் முளை விட்டுள்ளது. கோக், பெப்சி கம்பெனிகளை தடுத்து நிறுத்த கோரி, தாமிரபரணி தண்ணிரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நெல்லையில்கூடியுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்க சென்று தொடர்ந்து தமது உடமைகளை சிங்கள கடற்படைக்கு பறிகொடுத்து இறுதியில் 2O வயதில் உயிரையும் கொடுத்துவிட்டு மீனவ மக்களையும் போராட்டக்களத்தில் குதிக்க வைத்துள்ளான் அந்த இளைஞன் பிரிட்ஜோ. மகளிர் தின வரலாறும், போராட்டத்தை உள்ளடக்கியதுதான். ஐரோப்பா, அமெரிக்காவில் வீதியில் திரண்டபெண்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கு சாவுமனி அடித்தனர்.
இந்தப் போர்க்குணத்துக்கு தலைவணங்கி சோசலிசப் போராளி கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிப்பதன் தேவையை உலகுக்கு அறிவித்தார். தோழர் மாமேதை லெனினும் அதை வழிமொழிந்தார். ஆக இந்த போராட்டதினம், பெண்கள் மீதான கொடுமைகளை தொடர்ந்து பொசுக்கும் என்றார்.
தோழர் சிவானந்தம் குடும்பமும், மகளிர் எனும் தலைப்பில் பேசும் போது பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே என்பதை விளக்கினார்.
மனிதர்கள் தமது வாழ்க்கை மீதான பயம், அவமான உணர்ச்சி, வேதனை, தாழ்வு மனப்பான்மை, வாழ்வுக்கான வழிதெரியாமல் கையறு நிலை இவைகளை தனித்து பார்த்து திகைப்பதை விட இந்த சமூகமே அனைத்துக்குமான காரணிஎன்பதை உற்றுப் பார்ப்பதே முதன்மையானது.
சுயநலத்தை விட்டொழித்து பொதுநலத்தை பேணும் போது உடலில் உள்ள நோய்களும் ஓடிப்போய்விடும். அதை நடைமுறையில் சாத்தியமாக்கும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் வாரீர் என அறைகூவினார்.
அவரைத் தொடர்ந்து. பெண் விடுதலை இந்த கட்டமைப்புக்குள் சாத்தியமா? என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசினார்.
பெண்கள் இன்று ஒன்று திரள துவங்கியுள்ளார்கள். மெரினாவுக்கு பின் இன்று போராட்டம் என்றால் வருகிறார்கள். மெரினாவில் நாம் பறை அடித்து பாடும் போது பெண்கள் 5 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் என அனைவரும் அங்கு ஆதரவு தருகின்றனர்.
மாணவர்களை நாங்கள் தவறாக நினைத்திருந்தோம். போன், வாட்ஸ்அப், என உருப்படாம போகிறார்கள் என்று நினைத்திருந்தோம் அதே போதில் மெரினா புரட்சிக்கு வித்திட்டவர்கள் இவர்கள் தான் என்ற போது ஒரு தாய் அங்கே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
அடுப்படியில் கிடந்த பெண்ணின் நிலை மாறி உள்ளது. ஆனால் ஆணின் சிந்தனை மாறி உள்ளதா? அது இன்னும் வக்கிரமாக, இரக்கமற்றதாக மாறியுள்ளது. நிர்பயா துவங்கி, சுவாதி முதல் இன்று நந்தினி, ஹாசினி, ரித்திகா என எண்ணிலடங்கா பெண்கள், குழந்தைகள் ஈவிரக்கமற்று பாலியல் துன்புறுத்தலுக்கும் கொடுர ஆணாதிக்க வெறியாலும் குதறப்படும் நிலையை வார்த்தையால் சொல்ல முடியாது. அதிகாரியாலும் அடிமட்ட ஊழியர்களாலும் சிதைக்கப்பட்டு நடைப்பிணங்களாக எத்தனைபேர் வாழ்கின்றனர்.
சந்தேக கேசுன்னு ஸ்டேசனில் வைத்து மானபங்கம் செய்து வெளியில் தெரியாமலே புதைக்கப்பட்டனர். சிறுமிகள் எத்தனை பேர் பாலியல் துன்புறுத்தல் உறவினர்களால் செய்யப்பட்டு, புகார் கொடுக்க சென்று காவல்துறையை சேர்ந்த 10, 15 பேரால் கூட்டுபாலியல் வன்முறைக்குள்ளானது தமிழகமே அதிர்ச்சியடைந்தது.
நீதி கேட்டு நீதிமன்ற படியேறினால் அங்கும் பாலியல் வெறியர்கள். இந்த நிலைத் தொடர்ந்தால் பெண்கள் யாரிடம் பாதுகாப்புக்கு செல்ல முடியும். அதிகார வர்க்கம், காவல்துறை, நீதிமன்றம் என ஒட்டு மொத்த அருவருப்பான இந்தகட்டமைப்புதாரர்கள் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்தரமுடியாது.
சமூக விடுதலையை சாதிக்கும் போது பெண் விடுதலை தானாய் வரும், பெண்ணின் பாதுகாப்பு பலப்படும். இத்தகைய மாற்றத்தை நோக்கி பயணிப்போம், நன்றி என்றார்.
இறுதியில் பெ.வி.மு தோழர்களின் நாடகம் – பஞ்சாயத்தை கலைக்கிறான் பா.ஜ. என நெடுவாசலில் மக்களின் விவசாயத்தை காக்கும் போராட்டம் வெல்ல வேண்டும், அதை மடைமாற்றும் அரசியல்வாதிகளை தோலுரிப்போம், எனும் களத்தை வைத்து நடத்தப்பட்டது. புரட்சிகர பாடல்கள், நடனத்துடன் பெண் தோழர்களால் அரங்கேற்றப்பட்டது. சமூக விடுதலையே பெண் விடுதலை என மூன்று பெண் தோழர்கள் கவிதைவாசித்தனர்.
நன்றியுரையாக பெ.வி.மு தோழர். ஜெயமணி பேசினார். அரங்குநிறைந்த கூட்டமாக 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரங்கு வளாகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. சமீபகால பெண்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெறுவதை எடுத்துக்காட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, அது பெண் தோழர்களை மேலும் ஊக்கப்படுத்துவது போல் இருந்தது.
மகளிர் தின நிகழ்ச்சிக்கு இடம் தேடுவது பெரும்பாடானது.
ஜனநாயக நாடு என பேசும் விளக்கெண்ணைகள் உள்ள நாட்டில் ஒரு கூட்டம் போட மண்டபம் வாடகைக்கு கிடைக்கவில்லை, காரணம் மண்டப உரிமையாளிடம் போய் பேசும் போது என்ன அமைப்பு, என்ன விலாசம் இதை நீங்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுதி கொடுங்கள் இல்லையேல் மண்டபம் தர இயலாது என்றனர்.
ஏங்க மகளிர்தினத்தை பெண்களிடம் பேச எதுக்குங்க காவல்நிலையம் போகணும் என்றதற்கு, எங்களுக்கு இப்படி தாம்மா ஆர்டர் போட்டிருக்காங்க என்றனர். இறுதியாக ஏற்பாடு செய்த மண்டப உரிமையாளரிடம் என்ன பேசுறாங்க என கேட்டது போலீசு. அதற்கு அவர் “வாடகைக்கு கொடுக்கிறது மட்டும் தான் எங்க வேலை, யார் வருவாங்க என்ன பேசப் போறிங்க என்று கேட்பது நாகரீகமில்ல, அது எங்க வேலையும் இல்ல என மூக்குடைத்து அனுப்பியுள்ளார்.”
கடந்த மார்ச் 10-ம் தேதியில் தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மாருதி ஆலைத்தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளிகளில் 31 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக் குற்றமும், 18 பேர் மீது வன்முறை, தீயிடல், சூறையாடல் குற்றமும் திணிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளும் கூட்டணி சேர்ந்து கொண்டு தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்கத் தீவிரமாக முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
வன்முறை நடந்ததாகச் சொல்லப்படுகின்ற சம்பவத்தில் அதிகாரிகளும் போலிசும் காயமடைந்ததாக பொய்க் குற்றச்சாட்டை போலீசு புணைந்துள்ளது. போலிஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட அனைத்தும் பொய்யெனத் தெரிந்தும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகச் செயல்படுகின்ற போலிசையும், நீதிமன்றத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும், வருகின்ற 17-ம் தேதியன்று மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்க இருப்பதால் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நிரபராதிகள் என அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்கிற கோரிக்கையின் அடிப்படையில் 16.03.2017 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த திட்டமிட்டுள்ளது.
மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு எமது சங்கத்தின் கிளை / இணைப்புச் சங்க தொழிலாளர்களும், புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர் சங்கம், பெல் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி, கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகிய மாநில இணைப்புச் சங்கங்களும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஷேல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக பிலடெல்பியா நகரில் அமெரிக்க மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)
ஷேல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக பிலடெல்பியா நகரில் அமெரிக்க மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)
நெடுவாசல் போராட்டத்துக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறி வரும் பொய்களில் முதன்மையானது, இத்திட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை, காங்கிரசும் தி.மு.க.வும்தான் கொண்டு வந்தன என்பதாகும்.
காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் ஏற்கெனவே உள்ளன என்பது உண்மை. மீத்தேன் திட்டத்தை அனுமதித்துப் பின்னர் அதற்காக தி.மு.க. வருத்தம் தெரிவித்ததும் உண்மை. காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுவுக்கான ஆய்வுகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டதும் உண்மை.
ஆனால் காங்கிரசு, தி.மு.க.வின் மேற்கண்ட நடவடிக்கைகளும், தற்போது மோடி கொண்டு வந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் ஒன்றுதான் என்று பாரதிய ஜனதா சொல்கிறதே, அது கடைந்தெடுத்த பொய். அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் எடுப்பது எண்ணெயா, எரிவாயுவா என்று பார்க்கும் அதிகாரமும், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று சோதிக்கும் அதிகாரமும் இதற்கு முந்தைய அரசின் துரப்பணவுக் கொள்கையில் (New Exploration and Licencing Policy) அரசாங்கத்திடம் இருந்தது.
மார்ச் 2017-இல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கின்ற புதிய கொள்கை (Hydrocarbon Exploration and Licencing Policy – HELP), “கிணற்றை ஏலம் எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனி, அதிலிருந்து எண்ணெயோ, எரிவாயுவோ, மீத்தேனோ, ஹைட்ரோகார்பனோ எடுத்து விற்கலாம். எதை எடுக்கிறார்கள், எவ்வளவு எடுக்கிறார்கள் என்று அரசு கண்காணிக்காது. அவ்வாறு செய்வது கார்ப்பரேட்டுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருப்பதால், கண்காணிப்பை நீக்கவிட்டோம்” என அறிவிக்கிறது.
அதேநேரத்தில், நெடுவாசலில் போராடும் மக்களுக்குப் “பின்னால்” இருப்பவர்கள் யார், “சைடில்” இருப்பவர்கள் யார் என்றெல்லாம் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவு போடுகிறார் இல.கணேசன். கள்ளனைக் கண்காணிக்கக் கூடாது, காப்பானைத்தான் கண்காணிக்க வேண்டும் என்ற இந்த உன்னதமான கொள்கையை மோடிஜி அவர்கள் அவசரமாகக் கொண்டு வருவதற்கும் ஒரு தனிச்சிறப்பான காரணம் இருக்கத்தான் செய்கிறது.
கிருஷ்ணா-கோதாவரிப் படுகை எரிவாயு ஊழல் என்றழைக்கப்படும் மோடி – அம்பானி கூட்டுக்கொள்ளையை (19,700 கோடி ரூபாய்) சி.ஏ.ஜி. கண்டுபிடிக்க முடிந்ததற்கு முக்கியமான காரணம், எண்ணெய் எரிவாயு உற்பத்தியைக் கண்காணிப்பதற்கு அரசு கொண்டிருந்த அதிகாரம். அந்த அதிகாரத்தையே அரசிடமிருந்து பிடுங்கினால்தான் கார்ப்பரேட்டுகள் பூரண சுதந்திரத்துடன் கொள்ளையிட முடியும் என்பதனால்தான் புதிய (ஹெல்ப்) HELP கொள்கையை உருவாக்கியிருக்கிறார் மோடி. ஹெல்ப் கொள்கையின்படி நெடுவாசலில் சித்தேஸ்வரா நிறுவனம், மண்ணெண்ணெய் எடுக்கலாம், ஷேல் வாயு எடுக்கலாம், புதையல் கிடைத்தாலும் எடுக்கலாம். அரசாங்கம் கண்காணிக்காது.
நெடுவாசலின் “மண்ணெண்ணெய் குழாய்”, ஹைட்ரோகார்பன் குழாயாக மாற்றப்பட்ட கதை இதுதான்.
000
பிரிட்டனின் ப்ரெஸ்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப்படம்). ஷேல் எரிவாயு, மீத்தேன் திட்டங்களுக்கு எதிரான பிரிட்டிஷ் மக்களின் தொடர் போராட்டங்களால் அந்நாட்டில் இத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
வடக்கே பாண்டிச்சேரியில் தொடங்கி தெற்கே மன்னார் வரை நிலத்தில் 25,000 ச.கிலோ மீட்டரும், கடலில் 30,000 ச.கிலோ மீட்டரும் கொண்டது காவிரிப்படுகை (Cauvery Basin) என்ற அவர்கள் குறிப்பிடும் பகுதி. காவிரிப்படுகையில் இவர்கள் எடுக்கத் திட்டமிட்டிருக்கும் ஹைட்ரோ கார்பனின் பெயர், ஷேல் எரிவாயு.
இந்தியாவில் 584 டிரில்லியன் கன அடி ஷேல் வாயு இருப்பதாகவும் அதில் 96 டிரில்லியன் கன அடி காவிரிப்படுகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிக செலவில்லாமல் இலாபகரமாக எடுக்கத்தக்கதாக 9 டிரில்லியன் (9,00,000 கோடி) கன அடி ஷேல்வாயு காவிரிப்படுகையில் உள்ளது.
1990-களின் துவக்கத்தில் ஷேல் எனப்படும் ஒருவகை களிமண் பாறைகளில் இருக்கும் துளைகளுக்குள் எரிவாயு தங்கியிருப்பதை எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் கண்டுபிடித்தன. சில ஆண்டுகளுக்குப் பின், பூமியில் 5 கி.மீட்டருக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, அப்படியே பக்கவாட்டில் குடைந்து செல்வதற்கான தொழில் நுட்பமும் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு குடையப்பட்ட துளையின் வழியே வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீரை ஷேல் பாறைகளின் மீது பாய்ச்சி, அவற்றின் துளைகளுக்குள்ளே இருக்கும் எரிவாயுவை வெளியேற்றி எடுக்கின்ற “நீரியல் விரிசல் முறை”யும் (Fracking) கண்டுபிடிக்கப்பட்டது.
நரிமணம், குத்தாலம் போன்ற இடங்களில் ஏற்கெனவே இருக்கின்ற கிணறுகள் வழமையானவை (convenitional) என்றழைக்கப்படுகின்றன. ஷேல் கிணறுகள் வழமைக்கு மாறான ரகத்தை சேர்ந்தவை (unconventional). இரண்டும் ஒன்றுதான் என்று பா.ஜ.க.வினர் சித்தரிப்பது மிகப்பெரிய பித்தலாட்டம். ஷேல் வாயுக் கிணறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு பன்மடங்கு அதிகமானது.
தற்போது தஞ்சை டெல்டாவில் இருக்கும் பழைய வகை எரிவாயுக் கிணறுகள் ஒவ்வொன்றும் பத்து சதுர கி.மீ சுற்றளவில் உள்ள எரிவாயுவை உறிஞ்சி எடுக்கக் கூடியவை. எனவே தான், இந்த கிணறுகளுக்கான உரிமம் நூறு முதல் ஐநூறு சதுர கி.மீ. சுற்று வட்டாரத்துக்குத் தரப்படுகிறது. ஆனால், ஷேல் வாயுக் கிணறுகளைப் பொருத்தவரை அவற்றின் உரிமப் பரப்பளவு சுமார் 25,000 சதுர கி.மீ இருக்கும் என்கிறார் இந்திய எரிசக்தி துறையின் ஆலோசகர் அனில் குமார் ஜெயின். எனவே, காவிரிப் படுகை முழுவதும் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்படும் என்ற அச்சம் கற்பனையானதல்ல.
இந்த துளைகளுக்குள் 78 விதமான வேதிப் பொருட்களும் மணலும் கலந்த தண்ணீர், ஒரு சதுர அங்குலம் பாறையின் மீது சுமார் 6 டன் அழுத்தத்தைக் கொடுக்கின்ற வேகத்தில் செலுத்தப்படும். வேதிப்பொருட்கள் கலந்த மணல் பாறைகளின் மெல்லிய துளைகளுக்குள் இருக்கும் எரிவாயுவை விடுவித்து மேல்நோக்கி அனுப்பும்.
இந்த ஆழ்துளைகளின் சுவர்கள், இரும்பாலும் கான்கிரீட்டாலும் கவசமிடப்படுவதால் கசிவு ஏதும் ஏற்படாது என்று எரிவாயு நிறுவனங்கள் கூறிக்கொண்டாலும், கசிவு ஏற்படுவது உண்மை என்று அமெரிக்காவிலேயே நிரூபணமாகியிருக்கிறது.
எரிவாயுவுடன் மீத்தேனும் சேர்ந்தே வெளியேறும் என்பதால், அது நிலத்தடி நீருடன் காற்று மண்டலத்திலும் கலந்து அதனை நஞ்சாக்கும். பாறைகளின் இடுக்குகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளாக பூமியினுள் தங்கியிருக்கின்ற கடல் நீர், பன்மடங்கு உவர்த்தன்மை வாய்ந்தது. கதிர் வீச்சையும் வெளிப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது. இந்தக் கடல் நீரும் மேல் நோக்கி வந்து நிலத்தடி நீருடன் கலக்கும்.
பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரீல், மெத்தனால், ஹைட்ரஜன் புளூரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடக்கம். புற்றுநோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்களை, சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு அமெரிக்க ஷேல் வாயு நிறுவனங்கள் பூமிக்குள் செலுத்தியிருப்பதாக 2011-இல் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.
மாசுபட்ட இந்த நீரை மீண்டும் அவர்கள் பயன்படுத்துவதில்லை. பென்சில்வேனியாவிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இக்கழிவுநீர் ஆறுகளில் விடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. நம் ஊரில் என்ன நடக்கும் என்பதை திருப்பூர், ஆம்பூர், கடலூர் ஆகியவற்றுக்கு நேர்ந்திருக்கும் கதியிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.
ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுத் திட்டங்களின் விளைவாக அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் நடந்த நிலநடுக்கம் (கோப்புப்படம்)
பூமியில் குப்பையைப் புதைப்பது போல, அருகாமையிலேயே இன்னொரு கிணறு தோண்டி, கழிவுநீரை பூமிக்குள் செலுத்துகின்றன எரிவாயுக் கம்பெனிகள். இதனால் நிலத்தடி நீர் நஞ்சாவது மட்டுமல்ல, ஷேல் வாயு எடுக்கப்படும் மாநிலங்களிலெல்லாம் நிலநடுக்கம் அதிகரித்திருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் மேல் முதன்மையான பிரச்சினை தண்ணீர். நீரியல் விரிசல் முறைக்கு மிகப்பெருமளவு தண்ணீர் தேவை. ஷேல் கிணறுகள் இருக்கிற நீரை உறிஞ்சுவதுடன், மிச்சமிருக்கும் நீரையும் நஞ்சாக்கி விவசாயத்தையும் குடிநீரையும் அழிப்பதால், எல்லா நாடுகளிலும் இதனை மக்கள் எதிர்க்கின்றனர்.
உலகில் மிக அதிகமான ஷேல் வாயு இருப்பு உள்ள நாடு சீனா. அடுத்து அல்ஜீரியா. சீனாவில் ஷேல் வாயு இருக்கின்ற பகுதிகள் வறட்சிப் பகுதிகள் என்பதால் அப்பகுதிகளில் எடுக்கப்படுவதில்லை. அல்ஜீரியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டிருக்கிறது. பல்கேரியா, பிரான்சு போன்ற நாடுகளில் முற்றாகவும் ஜெர்மனியில் கணிசமாகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஷேல் வாயு எடுப்பதற்கு உதவுவதாக அமெரிக்கா கூறியபோதிலும், தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக அந்நாட்டு அரசு இதுவரை இதில் இறங்கவில்லை.
அமெரிக்காவைப் பொருத்தவரை, அங்குதான் ஷேல் வாயு எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பதுடன், எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அரசியலைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்திகளாகவும் இருக்கின்றன. அமெரிக்காவில் பெரும் நிலப்பரப்பு இருப்பதாலும், தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதாலும் ஷேல் வாயு எடுப்பது ஒப்பீட்டளவில் அதிகமாக நடக்கிறது. நீரும் சூழலும் நஞ்சாவது குறித்து எதிர்ப்புகள் இருந்த போதிலும், தமது அரசியல் செல்வாக்கின் மூலம் அந்த எதிர்ப்புகளை எரிவாயுக் கம்பெனிகள் முடக்கி விடுகின்றன.
ஷேல் வாயு நிறுவனங்களை அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்ய முடியாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டத்திலிருந்து நீரியல் விரிசல் நடவடிக்கைக்கு விலக்களித்தும் 2005-இல் அதிபர் புஷ் சட்டத்திருத்தமே நிறைவேற்றியிருக்கிறார்.
அம்பானியும் அதானியும்தான் மோடியின் புரவலர்கள் என்பது போல, ஜார்ஜ் புஷ்ஷும் துணையதிபர் டிக் செனியும் ஹாலிபர்ட்டன் என்ற எண்ணெய்க் கம்பெனியின் கைப்பிள்ளைகள். சுற்றுச்சூழல் சட்டத்தில் போடப்பட்டிருக்கும் இந்த ஓட்டைக்கு, “ஹாலிபர்ட்டன் ஓட்டை” என்றே அங்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். (நாமும் மோடியின் எரிசக்திக் கொள்கையை “ஹெல்ப் அம்பானி கொள்கை” என்று அழைக்கலாம்.)
ஷேல் வாயு எடுக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மூளை, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியவை; தோல் நோய்கள் முதல் புற்றுநோய் வரை பலவற்றையும் தோற்றுவிக்கக் கூடியவை என்று அமெரிக்க சூழல் ஆய்வு நிறுவனம் பல தரவுகளைத் தொகுத்திருக்கிறது. ஆனால், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபின் அத்தரவுகளை தனது ஆய்வறிக்கையிலிருந்தே நீக்கியிருக்கிறது.
இதுதான் அமெரிக்காவின் நிலை என்றால், இந்தியாவில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. 2022-இல் எண்ணெய் இறக்குமதியில் 10% குறைக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காகத்தான், காவிரி உள்ளிட்ட படுகைகளைப் பாலைவனமாக்குகிறார்களாம். இந்தப் பேரழிவுக்கு மோடி சூட்டியிருக்கும் பெயர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிப் பாதையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, இந்த அழிவுப்பாதையிலிருந்து நாம் நாட்டை மீட்க முடியாது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணியில் சக்தி சண்முகத்தின் நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை 6 வருடமாக இயங்கி வருகிறது. சுமார் 40 பேர் வரை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடும் கட்டுமான வசதிகளை கொண்ட இதில் 150 பேர் வரை விதிகளை மீறி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 11.03.17 காலை 10 மணியளவில் தரைச்சக்கர பிரிவில் முனைமருந்து செலுத்தும் வேலையில் ஒட்டம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் ஈடுபட்டிருந்த பொழுது அந்த அறையே வெடித்து சிதறியிருக்கிறது. இதில் அறைக்கு வெளியில் அமர்ந்து (விதிமீறி) உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களும் பலியாகினர். 5 பேர் உடல் சிதறி பலியாக, 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற நாகமல்லி ஃபயர் ஒர்க்ஸ் ஆலை
விபத்து நடந்த மறுநாள் காலை (12.03.17) மக்கள் அதிகாரம் சார்பாக நேரில் சென்று ஆலையை பார்வையிட்டோம். ஊர் மக்களை சந்தித்து விபத்து குறித்தும் விசாரித்தோம். அதில் தெரிய வந்ததை தொகுத்து தருகிறோம்.
காலையில் சென்றபோது நாகமல்லி ஆலையின் வாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் வண்டியில் வந்த சத்தம் கேட்டு கருவமரத்தின் பின்னிருந்து இருவர் வந்து விசாரித்தனர்.
வெடி விபத்தால் தரைமட்டமாகிக் கிடக்கும் கட்டிடம்
“உள்ளே போனா உங்க உசுருக்கு நாங்க பொறுப்பில்லை. எப்ப எதுவேனா வெடிக்கலாம்” என்று பீதியூட்டினார் காவலாளி அருணாச்சலம். எட்ட நின்று பார்க்கிறோம் என்று கேட்டை திறக்க வைத்து உள்ளே நுழைந்தோம். தொலைவில் இருந்த கட்டிடங்கள் வெடித்து சிதறியிருந்தாலும் அருகிலுள்ளவை பாதுகாப்பாக இருந்தன. அங்கு இறந்து போன 5 தொழிலாளிகளின் சாப்பாட்டுக்கூடைகள் இருந்தன.
நம்மை எச்சரிக்கையுடன் அனுகும் காவலாளி. கீழே இறந்தவர்களின் சாப்பாட்டுக் கூடைகள்.
அந்த அறையின் வெளிப்புற சுவரில் தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் என்று பொறுப்பு பெயர் மட்டும் பெயிண்டில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் இல்லை.
அந்த இடம் வரை நம்முடன் வந்தனர் காவலர்களில் 80 வயதான சின்னத்தம்பியின்ஒரு மகன் டிரைவராக இருக்க மற்ரொரு மகனும் அங்கு சட்டி காண்ட்ராக்டராக (பூச்சட்டி தயாரிப்பு) 10 பேரை வைத்து வேலை செய்துள்ளார். தரைச்சக்கரம் பிரிவு வெடித்தபோது சற்று தள்ளி இருந்ததால் உயிர் தப்பியுள்ளார். பெரியவர் சின்னத்தம்பி நான் மொதல்ல விவசாயக்கூலியா இருந்தேன். இப்ப எங்க விவசாயம் நடக்குது? என்னாலயும் முன்ன மாதறி உழைக்க தெம்பில்லை. அதான் இங்க கெடக்கேன்” என்றார்.
மற்றொரு காவலாளியான அருணாச்சலம் “நான் அப்பப்ப திடீர்னு ரவுண்ட்ஸ்க்கு வருவேன். முதலாளி சொன்னாலும் அப்படி வருவேன். ராத்திரி காவல் காக்குறவங்க எல்லாத்தையும் செக்பண்ணி பூட்டவைச்சுட்டு வெளியே கெடப்பாங்க. உள்ள ஒரு எலி கடிச்சா கூட வெடிச்சு செதறிடும்! இந்த கம்பெனில 4 பேர் நைட்டுல வாட்சுமேன், எதுக்கும் துணிஞ்சுதான் சுதாரிப்பா கெடப்பாங்க. பகல்ல இத விட ஆபத்து. வேலை நடக்கும்ல. எப்ப எதுவேனா நடக்கும்.” என்றார்.
தொழிற்சலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் விவரமின்றி கிடக்கும் அறிவிப்பு பலகை.
30 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துவந்த சுப்புராஜை ஊருக்குள் பார்த்து பேசினோம். இப்பொழுது பட்டாசு வேலைக்கு செல்கிறார். “மழை இல்லை. தீவனம் இல்லை. 2 வருசத்தில காய்ந்து வீணான கூழத்தை, தட்டையை காசுக்கு வாங்கி தீவனமாக போட்டதில் 1.25 லட்சம் நஷ்டம் வந்தது. பசும்பாலில் 4க்கு 1 தண்ணி கலக்கலாம். ஆனால் எருமைப்பாலில் 4க்கு 4 தண்ணி கலக்கலாம். வெளியே டீக்கடைக்கு ஊத்தினால் 35 ரூபாய் கிடைக்கும். ஆனால் அதிகாரிகள் நான் ஏதோ சட்டவிரோதமாக தொழில் செய்வதுபோல பிடித்து லஞ்சம் வாங்குவார்கள். கலப்படம் செய்ததாக அபராதம் போடுவார்கள். இவர்கள் தொல்லை தாங்காமல்தான் கம்பெனிக்கு ஊத்தினேன். அவர்கள் 25 ரூபாய்தான் தருகின்றனர். பிறகு எப்படி பால்மாடு வைத்து லாபம் பார்க்க முடியும். 8 ஏக்கர் சோவேரிக்கு(குத்தகை) விவசயமும் பார்த்தேன். இன்று குளம் குட்டைகளில் எருமைக்கு தேவையான நீர் இல்லை. நான் வேறு வழி இல்லாமல் எல்லாத்தையும் வித்துட்டேன். இப்ப 5மாடுதான் இருக்கு. ஃபயர் ஆபீசுதான் சோத்துக்கு வழி” என்றார்.
விதிமீறல்களை விளக்கும் கன்னிராஜன் ஸ்டேண்டர்டு பட்டாசு ஆலையின் முன்னால் ஊழியர்.
இறந்துபோன பெண்ணின் தெருவில் வசிக்கும் கன்னிராஜ் முன்னர் ஸ்டேண்டர்டு கம்பெனியில் நிரந்தர வேலையில் இருந்தவர். இவர் தனது ஆதங்கத்தை கொட்டினார். “சட்டப்படி எவனும் கம்பெனி நடத்துறதில்ல. இங்க கூட கலவை கலக்குற எடத்துல மேஜை மேல, விரிப்பை விரிச்சுதான் நின்னுக்கிட்டு வேலை செய்யனுங்கறது ரூல்ஸ். ஆனா கீழே உக்கார வச்சு வேலை வாங்கிறது மட்டுமில்ல, ஒரெ இடத்துல ராக்கெட், சட்டி(பூச்சட்டி), சிட்டுபுட்டு (ஒரு வகை பேன்சி ரகம்) மூனையும் செஞ்சுருக்குறாங்க. ஆனா தனித்தனியா செய்யனும்கறது விதி” என்று விபத்தின் பின்னுள்ள விதி மீறலை விளக்கினார்.
அருகிலுள்ள மருத்துவனை – தாயில்பட்டி என்று ஆலையில் எழுதிப்போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மருத்துவரோ, தீக்காயத்துக்கான சிகிச்சை வசிகளோ இல்லை. போனால் வலிக்கு ஊசிமட்டும் போட்டு சிவகாசிக்கு அனுப்புவார்கள் என்று அரசு மக்கள் மீது காட்டும் அக்கறையை கூறினர் தொழிலாளிகள்.
தொழிலாளியை இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யத்தூண்டியது எது? அதாவது இந்த பேன்சி ரக மருந்து கலவை – குறிப்பாக இங்கு தரைச்சக்கரத்தின் முனையில் கட்டியாக உறைந்திருக்கும் முனை மருந்து – கலந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசில் அடைக்கப்பட்டுவிடவேண்டும். நேரம் தாண்டினால் அது நீர்க்க ஆரம்பிக்கும். அதன்பின் அதை தொட்டாலே வெடித்து சிதறிவிடும். அதேபோல் சல்பர் அளவு சில மில்லிகிராம் கூடினாலும் கலக்கும்போதே வெடிக்கவும் செய்யும். காண்ட்ராக்ட் முறையில் செய்த வேலைக்கேற்பவே கூலி என்பதால் மொத்தமாக அளவுக்கு அதிகமாக மருந்தை கலந்து வேகவேகமாக பட்டாசு தயாரிக்கிறார்கள். அதிகரிக்கும் அளவால் வெடிவிபத்து நடக்கிறது.
இத்தகைய ஆபத்து நிறைந்த தொழிலில் பெண்கள் ஏன் வேலை செய்கிறார்கள்? வேறுவழி இல்லை என்று பெண்கள் விளக்கினர். மகளிர் குழுவில் அனைவரும் பணம் வாங்கியுள்ளனர். வாரம்தோரும் வசூலிக்க வருவார்கள். பிள்ளையின் படிப்பு, குடும்ப செலவு என ஒவ்வொருவரும் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் அட்டையை தந்துவிட்டு வசூல் வேட்டையை நடத்துகின்றனர். இதனால்தான் பெண்கள், வெடிக்கும் என்று தெரிந்தும் பட்டாசு வேலைக்கு செல்கின்றனர்.
நுண்கடன் வலையில் உழைக்கும் மக்கள்
கம்பெனியில எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி! வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியின் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் இந்த நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர். விபத்து (படுகொலை) நடந்துவிட்டால் கட்டப்பஞ்சாயத்து பேசி முதலாளியிடம் பணத்தை வாங்கித்தந்து வாயை அடைப்பது மட்டுமே இவர்களின் பணி.
பணம் தந்துவிட்டால் படுகொலைகளை தொடரலாம் என்கிறது அரசு. மக்களை பலிகடாவாக்கி, விவசாயத்தை, மாடு வளர்ப்பை அழியவிட்டு இந்த நிலைக்கு தள்ளிய அரசை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவதை உணராத வரை மக்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை. அந்த சிந்தனையை விதைக்கும் முகமாக இப்பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘முதலாளித்துவ கட்டமைப்பையே அகற்றினால் தான் பெண்ணுக்கு சுவாசம்’ என்று தோழர் துரை சண்முகத்தின் கவிதையைப் படித்த வினவின் வாசக நண்பர் ஒருவர், ‘முதலாளித்துவம்தான் பெண்ணுக்கு பல அக்கப்போர்களிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தது. நாப்கின், வாசிங் மெசின், டிஷ் வாசர், மைக்ரோவேவ் ஓவன், ரெடிமேட் உணவு, ரூம்பா ரோபாட், டயப்பர், பால்பவுடர், கருத்தடை சாதனம் போன்றவையல்லாம் முதலாளித்துவத்தின் சாதனைகள்’ என்று பட்டியலிட்டிருந்தார்.
வியப்பூட்டும் வகையில் நமது வாசகரை விட இந்தவருடம் பல முதலாளித்துவ ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் மிகவும் பெருந்தன்மையுடன் உழைக்கும் மகளிர் தினத்தில் (உழைக்கும் என்பதை மட்டும் தூக்கிவிட்டு) மகளிர் தினம், மகளிர் தின ஸ்பெசல் என்று விளம்பரங்கள், செய்திகள் என்று சக்கைப்போடு போட்டனர். அவற்றிலிருந்து சில செய்திகளை புகைப்படங்களாக இங்கு முன்வைக்கிறோம். முதலாளித்துவம் பெண்களை எப்படி பார்க்கிறது? நமது வாசக நண்பர் முன்வைக்கும் கருத்து எப்படிப்பட்டது? பதிலை அறிவதற்கு இவை உதவும்.
எகானமிக்ஸ் டைம்ஸ்-பனாச் சிறப்பிதழ், மகளிர் தின வாழ்த்துக்கள் என்று இலச்சினையை போட்டு சிறப்பிதழின் உள்ளே பல சங்கதிகளைச் சொல்லியிருக்கிறது.
எகானமிக்ஸ் டைம்ஸ், ‘இந்த மகளிர் தினத்தில் உங்களது காதலிக்கு கீழ்க்கண்ட அழகுசாதனப்பொருட்களை வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்’ என்று ஒரு செய்தியைப் போட்டிருக்கிறது.
இந்த சாதனைப் பட்டியலில் ஐபுரோ, நகப்பாலீசு, பேசியல் டச் அப் மற்றும் இது இன்னதென்று தெரியாத பல கருமாந்திரங்களும் அவற்றின் அடக்கவிலையும் இங்கு கச்சிதமாக தரப்பட்டிருக்கின்றன. இந்த அழகு சாதன பொருட்கள் இல்லை என்றால் ‘போட்டிகள்’ நிறைந்த ‘காதலர்கள் உலகில்’ நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்பதே இவ்விளம்பரக் ‘கவிதை’ முன்வைக்கும் கருத்து. இதயத்தின் மொழியாக பேசப்படும் காதல் இங்கே ‘இன்டெக்ஸ்’ பட்டியலாக உணர்த்தப்படுகிறது.
பெண் உரிமை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தப்பட்டியலில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட வஸ்துக்கள் பெண் கருப்பாக இருப்பதை அசிங்கம் என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறதே? தன்மானமுள்ள எவர் ஒருவரும் தன்னை அழகுபண்டமாக பார்க்கும் இந்த இழிவை ஏற்பாரா? ஒவ்வொரு மனித முகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுவதே அழகு எனும் இயற்கைக்கு எதிராக அனைவரும் ஐஸ்வர்யா போன்ற பார்பி பொம்மைகளாக மாறவேண்டும் என்றால் இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு வேறு என்ன வேண்டும்?
உழைக்கும் மகளிர் தினத்தில், எங்களுக்கு வேலை வேண்டும், வேலை நேரத்தை ஒழுங்கமைக்க வேண்டும், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை பெறவேண்டும், மருத்துவம், மகப்பேறு, குழந்தைநலத்தை காப்பதற்கான குறைந்தபட்ச அரசமைப்பு கூட இல்லாதிருப்பதை எதிர்த்து போராட வேண்டும் என்று சனநாயக அமைப்புகள், புரட்சிகர இயக்கங்கள் உழைக்கும் மகளிரை அணிதிரட்டும் பொழுது, உங்கள் காதலியை மேற்கொண்டு அழகுபடுத்துங்கள் என்று சொல்வதன் பின்னணியில் நுகர்வு மட்டுமல்ல பெண்கள் மீது ஆயிரம் ஆண்டுகளாக சுமத்தப்பட்டிருக்கும் பார்ப்பனிய கொடுங்கோன்மையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக இந்துப்பண்பாட்டின் காமசூத்திரம் ரஜோ, தமோ, சாத்வீக குணம் என்று பெண்களை பிரிக்கிறது. சாத்வீகமான பெண் அதிர்ந்து பேசமாட்டாளாம். கற்பூர வெற்றிலையுடன் கமகமக்கும் சிவப்பு செவ்வாயுடன் கணவனுக்கு சேவைசெய்ய காத்திருப்பாளாம். இங்கு கற்பூர வெற்றிலைக்குப் பதிலாக உதட்டிற்கு லேக்மே சாயம் பூசி பெண்களை சாத்வீகமாக்குங்கள் என்று சொல்கிறது முதலாளித்துவம்.
பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது.
வினவு செய்தியாளர்கள் சலவைத் தொட்டி, கடை வியாபாரிகள், தனித்து வாழும் முதியோர்கள் என்று பெண்களின் நிலையைக் காட்டினால், பெண்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஜாய்ண்ட் வென்ச்சர், தனியார் கந்துவட்டி நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள் பாருங்கள் என்கிறது எகானமிக்ஸ் டைம்ஸ். ஆனால் உழைக்கும் மகளிர் தினம் என்பதே இத்தகைய முதலாளிகளை ஒழிப்பதற்குத்தான்.
மேற்கண்ட படத்தில் பெண்கள் முதலாளிகளாக இருப்பதைப் பார்த்து எகானமிக்ஸ் டைம்ஸ் பெருமைப்படுவதைப் போலத்தோன்றும். ஆனால் அதுவல்ல நிசம்! பெண்களை முதலாளித்துவம் பாலியல் பண்டமாக நடத்துகிறது என்பதற்கு இந்தப் பத்திக்கு பக்கத்திலேயே மேட்டுக்குடிகளுக்கான (எலைட்) செக்ஸ் கிளப்பில் சேருவதற்கு உண்டான விளம்பர செய்தியை எகானாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்..
படத்தில் நீச்சல் உடையை மறைத்திருக்கிறோம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியுயார்க் நகரில் அமைந்துள்ள இந்த பாலியல் விடுதி, ஆண் பெண் இருபாலருக்கும் குழு பாலுறவு என்ற அழைக்கப்படும் குரூப் செக்ஸ், பாலுறவுத் துணையை அடிமையாக நடத்தும் ஜீனர்கள், தீம் செக்ஸ் போன்ற சேவைகளை வழங்குகிறதாம். இதற்கு கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 48 இலட்சமாம்!
நம் நாட்டில் பழங்குடியினர் இயற்கையை தாயாக பாவித்து போற்றி வளர்க்கும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட பழங்குடியினர் மீது இந்த அரசு பச்சை வேட்டை நடத்தி அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. எதற்காக? யாருக்காக? மில்லியன் டாலர் கனிம வளங்களை வேதாந்தா போன்ற தரகு முதலாளிகள் அபகரிப்பதற்காக.
இதுவரை இந்த கனிமவேட்டைக்காக சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட பெண்கள் எத்துணை பேர்? மத்திய துணைராணுவப்படையின் வன்புணர்வால் சீரழிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் எத்துணை பேர்? இயற்கையை தாயாக போற்றிப் பாதுகாக்கும் பழங்குடியினரின் நிலை இதுவென்றால் வேதாந்தா நிறுவனம் மேற்கண்ட படத்தில் பெண்களின் மேம்பாட்டிற்காக தனது நிறுவனம் உழைப்பதாக பிசினஸ் ஸ்டேண்டர்டு நாளிதழில் மகளிர் தின செய்தி வெளியிட்டிருக்கிறது.
இப்பொழுது சொல்லுங்கள் முதலாளித்துவத்தின் கீழ் பெண்களின் நிலை என்ன? உழைக்கும் மகளிர் தினம் என்பதே இந்த முதலாளித்துவத்தையும் இத்தகைய முதலாளிகளையும் ஒழிப்பதற்குத்தான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?
துப்பாக்கி சூட்டுக்கு மீனவர் பலி, காவிரி துரோகத்துக்கு விவசாயிகள் பலி, கொக்கே கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி ! தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு இந்தியாவே பலி !
தர்ணா போராட்டம்
இடம் : பெரியார் சிலை, மணப்பாறை.
நாள் : 15.03.2017, புதன் கிழமை.
நேரம் : காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை.
தலைமை : தோழர் மா. பாண்டியன் ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், மணவை
கண்டன உரை :
திரு மணவை துரை. காசிநாதன், தலைமை கழகப் பேச்சாளர், திமுக
தோழர் இரும்பொறை பிச்சை, நகர தலைவர், தி.க
தோழர் வீ. தனபால், திராவிடர் விடுதலைக்கழகம்
தோழர் கராத்தே வீர. முருகன், மாவட்ட செயலாளர், ஆதிதமிழர் கட்சி
திரு சூர்யா சுப்பிரமணியன், வையம்பட்டி
திரு வே. பாலசுப்பிரமணியன், மணவை தமிழ்ச்சங்க பொருளாளர்
திரு அறிவுச் செல்வன், சமூக ஆர்வலர்
தோழர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் ந. பிரபாகரன், மாநில து. பொ. செ, முற்போக்கு மாணவர் கழகம்
தோழர் தே. கோபி, புறநகர் மா. செ, புதிய தமிழகம்
திரு வழக்கறிஞர் தமிழ்மணி, சமூக ஆர்வலர்
திரு பசுலுதீன், தலைவர், மணவைத்தமிழ் கழகம்
தோழர் வை. கண்ணன், மக்கள் அதிகாரம், மணவை
சிறப்புரை :
தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
நன்றியுரை :
தோழர் ந.காளிதாஸ், மக்கள் அதிகாரம், மணவை
தகவல் : மக்கள் அதிகாரம் மணப்பாறை, தொடர்புக்கு – 98431 30911
நாள் : 16 மார்ச் 2017
நேரம் : மாலை 5 மணி
இடம் : ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஒசூர்.
அன்பார்ந்த தொழிலாளர்களே!
நீதித்துறையும், போலீசும், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானது தான் என்பதை மார்ச் 10 அன்று தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது. மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளர்களை விடுவித்த நீதிமன்றம், 31 தொழிலாளர்களைக் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக்குற்றமும், 18 பேர் மீது வன்முறை- தீயிடல்-சூறையாடல் குற்றமும் திணிக்கப் பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கான தண்டனை யை எதிர்வரும் மார்ச் 17 அன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு-முதலாளிகளது திட்டமிட்ட சதி!
கடந்த 18.7.2012 அன்று தில்லி மனேசர் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மாருதி-சுசூகி கார் தொழிற்சாலையில் வன்முறை வெடித்தது. நிர்வாகம் நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் அனுப்பி வைத்து இந்த வன்முறை -தீவைப்பு சம்பவத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறையின் போது அவானிஷ் தேவ் என்கிற மனிதவள அதிகாரி செத்துப் போனார். இந்த சாவை சாக்காக வைத்து 2,300 தொழிலாளர்களை வேலையைவிட்டே துரத்தப் பட்டனர். 148 தொழிலாளர்கள் மீது கொலை, வன்முறை, தீயிடல், சூறையாடல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்த வன்முறைக்கு யார் காரணம், அதிகாரியைக் கொன்றது யார் என்பது குறித்து பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரியதை அரியானா மாநில அரசு நிராகரித்தது. மாறாக, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை பிணையில் விடக்கூடாது என்று நீதிமன்றத்தில் போராடியது. இதனால், தொழிலாளர்களின் பல ஆண்டுகள் போராட்டத் தில்தான் பிணைகூட கிடைத்தது. இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு குர்கான்– மனேசார் தொழிற்பிராந்தியத்தில் இயங்கி வந்த நூற்றுக்கணக்கான பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்கவே முடியாத சூழலை உருவாக்கிட அரியானா மாநில அரசும், பன் னாட்டு முதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
போலீசு-நீதிமன்றம்-முதலாளிகளது கூட்டு!
வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த கூட்டணியின் செயல்பாடுகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்க தீவிரமாக முயற்சி செய்தது கண்கூடாகத் தெரிந்தது. தொழிலாளர்களது வன்முறையில் 90 போலீசு மற்றும் மாருதி அதிகாரிகள் காயமடைந்ததாகக் கூறிய போலீசு, ஒரே ஒரு தொழிலாளிக்கு கூட சிறுகாயமோ, கீறலோ ஏற்படவில்லை அப்பட்டமாக பொய்யைக் கூறியது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. ஆனால், இதே நீதிமன்றம் தான் 148 பேரில் 117 பேரை நிரபராதிகள் என்று விடுவித்துள்ளது. அப்படியானால் 90 அதிகாரிகளுக்கு – முக்கியமாக, கலவர தடுப்பு போலீசுக்கு – காயத்தை ஏற்படுத்தியது யார்? கும்பல் வன்முறை என்கிற குற்றச்சாட்டு போலீசால் இட்டுக்கட்டப்பட்டது தான் என்பது தெளிவாகவில்லையா?
போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள், தடயங்கள் பொய்யானவை என்பது பல சந்தர்ப்பங்களில் அம்பலமானது. போலீசு கொண்டு வந்த சாட்சிகளில் பலர் சம்பவம் நடந்தபோது தாங்கள் அந்த இடத்தில் இல்லை என்றும், பொய்சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றும் நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள் ளனர். செத்துப்போன அதிகாரியின் பிரேத அறிக்கை (போஸ்ட் மார்ட்டம்) நடந்திருப்பது கொலை என்று உறுதிப்படுத்தவும் இல்லை. தற்போது கொலைக்குற்றத்துக்கு ஆளாகி இருக் கின்ற 13 பேரின் பங்கு என்ன என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிலைநிறுத்தவுமில்லை. போலீசின் ’தயாரிப்பில்’ உள்ள இத்தனை ஓட்டை களையும் மீறி சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளியாக்கியுள்ளது, குர்கான் நீதிமன்றம்.
கற்க வேண்டிய பாடம் என்ன?
போலீசு, நீதிமன்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகத் தான் இருக்கிறது. ஆலை விபத்துக்கள், பாதுகாப்பற்ற வேலைநிலைமை போன்றவற்றால் முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களைக் கொன்று குவித்துவருகிறது. இலட்சக்கணக்கான தொழிலாளர்களது வேலையைப் பறித்தும், அச்சுறுத்தியும் பணிய வைத்து கொலை வெறியாட்டம் போடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளது சுண்டுவிரலை அசைக்கக்கூட துப்பற்றதாக தொழிலாளர் துறை புழுவைப்போல நெளிந்து கொண்டிருக்கிறது.
சங்கம் அமைக்க முயல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கவும், சங்கத்தின் மீது முதலாளி நடத்துகின்ற தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவும் உரிய சன்மானம் பெற்றுக் கொள்கிற தொழிலாளர் துறையும், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று கண்ணை மூடிக் கொள்கின்ற நீதித்துறையும் நம்மைப் பாதுகாக்காது என்பதே நாம் கற்க வேண்டிய முக்கிய பாடம். கொலை வழக்கு முதல் கலவரவழக்கு வரை பொய்யாக வழக்குகளைப் பதிந்து தொழிலாளி வர்க்கத்தை அச்சுறுத்துகின்ற போலீசுக்கு நாம் ஏன் பணிய வேண்டும்? கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை தான் மாருதி தொழிலாளர்களை மட்டுமல்லாமல், ஓட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாக்கும்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தருமபுரி -கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள் தொடர்புக்கு: 97880 11784
தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை ! காவி, முகத்திரையை கிழித்த மக்கள் அதிகாரம் !
தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை என்ற பாரதிய ஜனதாவின் போலியான இயக்கத்தை அம்பலபடுத்தும் விதமாக கோவை பகுதி மக்கள் அதிகாரம் சார்பாக தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை கோவை மக்களே! சீமாரை எடுப்போம்!! என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் கோவை நகரெங்கும் ஒட்டப்பட்டது. லெனின் நகர் பகுதியை ஒட்டிய காய்கடை மைதானத்தில் 12.03.2017 அன்று பா.ஜ.க நடத்திய பொதுக்கூட்ட இடத்தை சுற்றி நெருக்கமாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசும், மதவாத காலிகளும் மறைந்து நம் சுவரொட்டிகளை கிழித்தனர். தோழர்களோ விடாமல் அதற்கு மேலும் சுவரொட்டிகளை ஒட்டினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆணும் பெண்ணும் கரம் கோர்த்து போராடினால்
பெண் விடுதலை சாத்தியம் !
மார்ச் 8 உலக மகளிர் தினத்தில்நுகர்வுவெறியை பரப்புபவர்களையும் பாலியல் வன்முறையாளர்களையும் மக்களாகிய நாமே தண்டிக்க உறுதியேற்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை கிளை சார்பில் குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பெ.வி.மு-வின் சென்னை கிளை செயலாளர் தோழர் செல்வி தலைமை தாங்கி பேசும் போது மார்ச் 8 என்பது ஊடகங்களில் பத்திரிக்கைகளில் காட்டுவது போல் விதவிதமாக உடை அணிந்து விதவிதமாக உணவு சாப்பிட்டு கொண்டாடக் கூடிய நாள் இல்லை.
உழைக்கும் பெண்களை உழைப்பு சுரண்டலில் இருந்து விடுவிக்கவும் – அவர்களின் உண்மையான விடுதலைக்காகவும் போராடிய பெண்களின் ரத்தத்தில் மலர்ந்த போராட்ட நாள்.
பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு பெண்களின் உடை சரியில்லை – இரவு 9 மணிக்கு மேல் ஏன் வெளியில் போக வேண்டும் ? பெண்களை வளர்க்கும் முறை சரியில்லை என்று பாதிக்கப்படும் பெண்களின் மீதே பழிபோடும் காரணங்கள் தான் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் போரூர் மதனந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி எந்த மாதிரி உடை போட்டிருந்தாள் – வீட்டிற்குள்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது – பாலியல் படுகொலை செய்தவன் அவளுக்கும் அவன் குடும்பதிற்கும் நன்றாக தெரிந்து பழகிய நபர்தான் இவனுக்கு வயது 22 ஐடி நிறுவனத்தில் 45 ஆயிரம் சம்பாதிக்க கூடியவன். தன்னோடு வாக்குமூலத்தில் நான் தினமும் 150-க்கும் மேல் ஆபாச படங்களை பார்ப்பதால் என்னுடைய வெறியை, அது யாராக இருந்தாலும் தீர்த்து கொள்ள வேடும் என்ற உணர்ச்சிதான் தோன்றும். அதனால்தான் அப்படி நடந்துக் கொண்டேன் என்று சொல்லியிருக்கிறான்.
இப்படி இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்க லாப நோக்கத்தோடு பரப்பப்படும் ஆபாச இணையதளங்களால் ஏற்படும் வெறிதான் முதன்மை காரணம். இது ஏதோ வெளியில் நடக்க கூடிய பிரச்சினை. நமக்கு இல்லை என்று ஒதுங்கிப் போக கூடிய விசயமல்ல அல்லது போலீசு – நீதிமன்றம் – அரசியல்வாதிகள் பார்த்து கொள்வார்கள் என்று சும்மா விடக்கூடியதுமில்லை.
போலீசு – ஹாசினியோட பாலியல் படுகொலையை கண்டித்து அந்த பகுதியில் பெண்கள் போராடி கொண்டிருந்த நேரத்தில் காவல் துறை போட்டிருந்த வழக்கு குழந்தையை காணவில்லை என்பது மட்டும்தான். பிறகு போராட்டத்தில் பெ.வி.மு தோழர்கள் தலையிட்டு போராடிய போதுதான் அந்த வழக்கை ஆள் கடத்தல் – கற்பழிப்பு – கொலை – மூடி மறைத்தது போன்ற பல்வேறு வகையில் வழக்கு பதிவை மாற்றியுள்ளது. இதுதான் போலீசின் யோக்கியதை. இவர்கள் பாலியல் படுகொலைகளை தடுப்பார்களா? தண்டிப்பார்களா?
நீதி மன்றம் – கபாலி திரைப்படத்தை முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதற்காக 200 இணையத்தளங்களை முடங்கியது. ஆனால் இலவசமாக ஆயிரக்கணக்கில் உலாவரும் ஆபாச இணைய தளங்கள் அவர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்களா தடுப்பார்கள் – தண்டிப்பார்கள்?
இவர்களை நம்பி பயனில்லை. உழைக்கும் மக்களாகிய நாம்தான் பெண்கள் – குழந்தைகளின் பாதுகாக்கவும் – சீரழிவை பரப்புபவர்களை தண்டிக்கவும் – அவர்களை அடித்து விரட்டவும் களத்தில் இறங்க வேண்டிய காலம் இது.
வீதியில் இறங்கி போராடுவதன் மூலம்தான் இந்த நிலையை மாற்ற முடியும். அதற்காக பெ.வி.மு. உங்களோடு எப்போதும் களத்தில் நிற்கும். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வரை நம்முடைய போராட்டத்தை தொடருவோம் என்று உறுதியேற்கிறது என்று முடித்தார்.
பேராசிரியர் சாந்தி பேசுகையில் கிரண்பேடி – சிந்து – தீபிகா படுகோண் போன்றவர்களை வைத்து ஒட்டுமொத்த பெண் சமூகமே முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் படிப்பு – பொருளாதாரம் – அரசியல் ரீதியாக பின்தங்கிதான் உள்ளார்கள்.
ஆண் குழந்தைகளை வளர்க்கும் போது தன்னுடைய அக்கா, தங்கைகளை மதிக்கும் படி சொல்லி கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு. உனக்கு உள்ளது போன்றே அவர்களுக்கும் எல்லாவிதமாக உரிமைகளும் உள்ளது என்று சொல்லி வளர்க்கப்படும் போது பள்ளியில் – அலுவலகத்தில் தன்னுடன் இருக்கும் பெண்களை மதித்து நடக்கும் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். அதனால் சமூகத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு வீட்டிலிருந்தே மாற்றதை கொண்டு வர வேண்டும் என்ற உறுதியை இந்த மகளில் தினத்தில் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
தொழிற்சாலைகளில் பெண்களின் நிலை குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர் திலகவதி பேசும் போது பெண்கள் படிக்க வேண்டும் – பொருளாதாரத்தை ஈட்டிவிட்டால் மட்டுமே பெண் விடுதலையை சாதித்து விட முடியுமா ?
முதலாளித்துவம் சொல்வது போல் பெண்களின் வளர்ச்சி என்பது பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதே என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வேலைக்கு போகும் பெண்களின் சம்பளத்தை அவர்களின் அடிப்படை தேவைக்காக கூட செலவழித்துக் கொள்ளும் உரிமை இல்லாமல்தான் பெண்கள் இருக்கிறார்கள். கிராமபுறங்களில் ATM PIN கூட தெரியாது என்று கூறும் நிலையில்தான் இன்று பெண்களின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது.
நமது நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்கு ஒவ்வொரு துறைக்கும் ஒரு செக்டார் உள்ளது. ஆனால் பெண்களின் பாலியல் ரீதியாக பிரச்சினையை சொல்வதற்கு – தீர்ப்பதற்கு எந்த செக்டாரும் இல்லை என்பதுதானே உண்மை.
பெண்களின் வளர்ச்சி என்ற பேசும் மோடி அரசு முன்பு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டிற்கு செல்லும் வரைக்கும் பாதுகாப்புக்கு அந்த நிர்வாகம்தான் பொறுப்பு. ஆனால் தற்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. மேலும் மகப்பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தற்போது 3 மாதமாக மாற்றி கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட பெண்களிடமே நிர்வாகம் வற்புறுத்து வருகிறது.
பெண்கள் குடும்ப சுரண்டல் – உழைப்பு சுரண்டல் – பாலியல் – நோய் என்ற நான்கு முனை சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது.
அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கே இந்த நிலை என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை என்னவென்று சொல்வது. நுகர்வுவெறியை பரப்புவதற்கும் உற்பத்தியை பெருக்குவதற்கும் முதல் பலிக்கடா பெண்களே ! இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கு பெண்கள் சமூக பணியாற்ற வெளியே வந்தால் மட்டுமே பெண்விடுதலையை சாதிக்க முடியும் என்றார்.
அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி “தற்போது மாணவர்கள் – இளைஞர்கள் மறுகாலணியாக்க நுகர்வுவெறி கலாச்சாரத்தில் சிக்கி சீரழிந்து போய் இருக்கிறார்கள். இதனால் கல்லூரி மாணவர்கள் சிலர் திருடுவது – கொள்ளை அடிப்பது – கொலை செய்தாவது விலை உயர்ந்த மொபைல் – பைக் என்று தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என்ற கருத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்.
இந்த சீரழிவு கலாச்சாரத்தை தற்போதைய சினிமாக்களும் தன்னுடைய நுகர்வுவெறிக்காக இதெல்லாம் தவறு இல்லை என்ற வகையிலேயே காட்சிப்படுத்துகிறது. மறுபுறம் இணையதள ஆபாச படங்களை பார்ப்பது, சிறு குழந்தை என்றும் பார்க்காமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யத் தூண்டுகிறது.
அதையெல்லாம் விட கொடுமையானது பெண்கள் தங்களுடைய கருத்துகளை சொல்லக்கூட முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் டெல்லி பல்கலைகத்தில் படிக்கும் மாணவி தன்னுடைய தந்தை இறந்த்து போரால்தான் என்று கூறியதால் அந்த மாணவி பாகிஸ்தானின் உளவாளி, இந்த கருத்தை சொன்னதற்காகவே அவளை ‘கற்பழிப்பேன்’ என்று ஆர்.எஸ்.எஸ்-சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சார்ந்தவன் பகிரங்கமாக கூறியுள்ளான்.
இது போன்று பெண்களை அடிமைப்படுத்தும் – இழிவாக நடத்தும் பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத்தை ஒழிக்காமல் பெண் விடுதலை சாத்தியப்படாது. இதற்காக போராடும் பெண்கள் விடுதலை முன்னணியோடு தோளோடு தொள் கொடுத்து போராட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி எப்போதும் முன் நிற்கும்” என்று உறுதி கூறி முடித்தார்.
இறுதியாக சிறப்புரை ஆற்றிய பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை கிளை இணை செயலாளர் தோழர் அஜிதா பேசுகையில் “அப்பாக்கள் தினம் – அம்மாக்கள் தினம் – காதலர் தினம் ஆகிய தினத்தை போல பெண்கள் தினமும் கொண்டாட்ட நாளாக பத்திரிக்கைகளிலும் – ஊடகங்களிலும் சித்தரிக்கப்படுகிறது.
மார்ச் 8 என்பது கொண்டாட்ட நாள் அல்ல. அது போராடக் கூடிய நாள் என்பதால்தான் பெ.வி.மு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பெண்களுக்கு பிரச்சினை….. பிரச்சினை என்று சொன்னால் மட்டும் தீராது. அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பது பற்றிதான் நாம் பேச வேண்டியுள்ளது. இன்று பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. எந்தவித தப்புமே செய்யாமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லுகின்ற இந்த சமூகம் பெண்கள் வாழத் தகுதியானதா? என்ற கேள்வி எழும்புகிறது.
நடக்கும் சம்பவங்களை பார்த்தால் பல நாட்கள் தூக்கம் வருவதில்லை. அந்த அளவிற்கு கொடூரமாக பாலியன் கொலை நடத்தேறுகிறது. ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து, இரண்டு மார்பகங்களை அறுத்து, பிறப்புறுப்பில் ஈட்டியை சொருகி கொலை செய்கின்ற அளவுக்கு மனிதத் தன்மையற்றவனாக கொடூரமாக மாற்றியது எது? சமூகத்தின் பெண்களின் நிலையை மாற்ற போராடக் கூடிய பெண்கள் அமைப்பை சார்ந்தவர்கள் உட்பட பெண்கள் அனைவரும் அச்சத்தோடுதான் வாழ்கிறோம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இப்போது நிலவும் சூழலில் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதாக் வாழ்கிறோம்.
ஒரு மூன்று வயது குழந்தை பேசுவதை – நடப்பதை – ரசிக்க வேண்டிய மனிதன் எப்படி இந்த குழந்தையை எது பாலியல்ரீதியில் துன்புறுத்தி கொலை செய்து குப்பை தொட்டியில் தூக்கிப் போடும் மனநிலைமை உருவாக்கியது என்பதை சிந்திக்க வேண்டும்? சிறுவயதில் இருந்தே பெண்ணடிமை தனத்தை புகுத்தி வளர்க்கப்படுவதில் தொடங்கி – கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற அடிமைத்தனத்தை பெண் தானாகவே ஏற்று கொள்ளும் தன்மையில் பழக்கப்படுதியுள்ளது இந்த சமூகம்.
பெண் என்பவள் ஆணுக்கு அடிமை. அவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டவள் என்ற சிந்தனை ஊட்டப்பட்டவர்கள் ஆண்கள். இந்த சிந்தனைதான் பெண் என்பவள் தன்னுடைய விருப்பத்திற்கு ஆட்பட வேண்டியவள் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. பெண்கள் விண்வெளிக்கே சென்று ஆய்வு செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக சொன்னாலும் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் நிலை மாறிவிட்டதா?
பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது பெண்களின் மீதே பழி போடும் நிலைதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. நிர்பயா பாலியல் படுகொலைக்கு பிறகு சட்டங்களை கடுமையாக்க வெண்டும் – பொது இடங்களில் CCTV கேமிரா பொறுத்த வேண்டும் – கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கருத்து பல கூறப்பட்டது. சட்டங்கள் போட்டாகிவிட்டது – CCTV கேமிரா பொருத்தப்பட்டுவிட்டது – குற்றங்கள் குறைத்துள்ளதா? காவல்துறை தடுத்துள்ளதா?
ஆந்திராவின் சட்டமன்ற அவை தலைவர் “காரை ஷெட்டில் வைத்து பூட்டி வைப்பது போல் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி வைத்தால் குற்றங்கள் நடக்காது” என்று கூறியுள்ளார். இந்த கெடுகேட்ட அரசியல்வாதிகளா குற்றங்கள் அதிகரிக்காமல் தடுப்பார்கள்? பெண் நீதிபதியின் இடுப்பை கிள்ளிப் பார்க்கும் ஆண் நீதிபதியால் குற்றங்களை தடுக்க முடியுமா ? கடந்த 20 நாட்களில் தொடர்ச்சியாக நடந்த பாலியல் படுகொலைகளை இவர்கள் போட்ட சட்டமோ – CCTV கேமிராவோ – ஓட்டுக் கட்சிகளோ – போலீசோ – நீதிமன்றமோ தடுத்ததா?
பெண்களை பாதுகாக்கும் அரண்கள் என்று சொல்லும் இவர்கள்தான் முதன்மையான குற்றவாளிகள் என்று நாங்கள் சொல்கிறோம். குறிப்பாக இன்று பெண் என்பவள் செண்டிற்காகவும் – டிஸ்கவர் பைக்கிற்காகவும் சோரம் போகிறவளாக சித்திரிக்கும் TV விளம்பரங்களை நாம் கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்கிறோம். நமக்கு ஏன் எந்த உறுத்தலும் வருவதில்லை?
அடுத்து சினிமா – அன்றைய சினிமாவில் பெண் காதலிக்க மறுத்தால் தாடி வளர்த்து கொண்டு ஆண் தன்னை வருத்தி கொள்வதாக காட்சிப்படுத்தப்பட்டது. தற்கால சினிமா தன்னை விரும்பவில்லை என்றால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனையை இளைஞர்களுக்கு ஊட்டி வளர்கிறது.
அடுத்து பத்திரிக்கை – ஆயிரக்கணக்கில் மக்கள் புழங்கக் கூடிய பொது இடங்களில் டைம்பாஸ் போன்ற பத்திரிக்கையில் ஆபாசமாக பெண்களின் படங்களை போஸ்டர் போட்டு விளம்பரப்படுத்தி – 8-வது படிக்கக் கூடிய மாணவர்களையும் பள்ளி புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து பார்க்க கூடிய விதமாக விற்பனை செய்ததை நாம் ஏன் பாதிப்பு என்று உணரவில்லை?
அடுத்து இணையதளங்கள். படுக்கை அறை காட்சிகளையும் கையடக்க செல்லில் நடுக்கூடத்திற்கு கொண்டு வந்து 10 வயது சிறுவன் கூட பார்க்கும் வகையில் உலாவருவதை ஏன் தடுக்க முடியவில்லை? அரசு சொல்லும் புள்ளி விவரப்படி இணையத்தில் அதிகமாக பாலியல் காட்சிகள்தான் பார்க்கப்படுகிறது – பகிரப்படுகிறது என்று தகவல் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் பெண் என்பவள் வீட்டிற்கு அடங்கி ஒடுங்கி போக வேண்டியவள் – இன்னொருபுறம் நுகர்ந்து பார்க்க கூடிய ஒரு பொருள் என்ற இரட்டை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியம். இதற்கு மெரினா போராட்டம் நம் கண்முன்னே உள்ள சிறந்த உதாரணம். போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் தான் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – தான் ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ இருவருக்கும் ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.
அதுபோல இந்த சமூக மாற்றத்திற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து போராட வேண்டியது அவசியம். அதற்காக இங்கு வந்துள்ள ஆண்கள் அனைவரும் தங்களுடைய வீட்டு பெண்களோடு கரம் கோர்த்து களத்தில் இறங்கி போராடி சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையை சாதிக்க முடியும். அதற்காக பெண்கள் விடுதலை முன்னணி உங்களை அறைகூவி அழைக்கிறது” என்று கூறி முடித்தார்.
பிறகு நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது.
இதில் பெண்கள் – ஆண்கள் – குழந்தைகள் உட்பட 250 மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். பேருந்திற்காக காத்து நின்றவர்களும் – பகுதியில் உள்ள வியாபாரிகளிடமும் இந்த ஆர்ப்பாட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை – 98416 58457
வளர்ச்சி என்ற பெயரில் மோடி ஏவிவிட்டிருக்கும் ஹைட்ரோகார்பன் பேரழிவை எதிர்த்து நெடிய போராட்டத்தை நடத்திவரும் நெடுவாசல் பகுதி விவசாயிகள்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: வளர்ச்சியல்ல, திருட்டு!
– தோழர் மருதையன்
“நமக்கு வேறு வேலை இல்லையா, ஒவ்வொன்றுக்கும் இப்படிப் போராட முடியுமா? எதற்காக இவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறோம்?” என்று நெடுவாசல் போராட்டம் பற்றி சமூக ஊடகமொன்றில் கோபமாக கேள்வி எழுப்பியிருந்தார் ஒரு பெண். இது தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகள் பற்றிய பிரச்சினை மட்டுமே என்று அவரும் அவரைப் போன்ற பலரும் புரிந்து கொண்டிருக்கக் கூடும். இது வெறும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான பிரச்சினை அல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அரசமைப்பு தொடர்பான பிரச்சினை.
நெடுவாசலில் விளைநிலங்களையும் நீராதாரங்களையும் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வணிகர்கள் கோக், பெப்சி விற்பதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். வரலாறு காணாத வறட்சியை அச்சத்துடன் எதிர்நோக்கியிருக்கிறது தமிழகம். இந்தச் சூழலில், “தாமிரபரணியிலிருந்து கோக், பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடையில்லை” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். வீணாக கடலுக்குப் போகும் தண்ணீரைத்தான் கொடுக்கிறோம். அதனால் பாதிப்பில்லை என்று கூறியிருக்கிறார் சசிகலா அரசின் வழக்கறிஞர்.
கங்கைகொண்டான் “சிப்காட் வளாகத்தில் உள்ள மற்ற நிறுவனங்கள் தாமிரபரணித் தண்ணீரைப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்காமல், கோக் – பெப்சியை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள். உற்பத்திக்கு தண்ணீரைப் பயன்படுத்தும் ஆலைகளுக்கும், தண்ணீரை உறிஞ்சி விற்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கும் கோக் – பெப்சிக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள் என்று மாண்புமிகு நீதியரசர்களை நாம் கருதவியலாது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற அரசியல் சட்டத்தின் சமத்துவ உணர்ச்சியால் உந்தப்பட்டுதான் பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதற்கு கோக்-பெப்சிக்கு உள்ள உரிமையை அவர்கள் உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.
“கோக் பெப்சியை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்” என்று உயர் நீதிமன்றம் கேட்டதைப் போலத்தான், “நரிமணத்திலும் குத்தாலத்திலும் தடுக்காமல், பாஜக எம்.பியின் கம்பெனியை மட்டும் நெடுவாசலில் ஏன் தடுக்கிறீர்கள்” என்று வெடிக்கிறார் எச்.ராசா. “தாமிரபரணி தண்ணீரை எடுப்பதால் பாதிப்பில்லை” என்று கூறும் சசிகலா அரசின் முதல்வர் எடப்பாடி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்” என்று போராட்டக் குழுவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். எனவே போராட்டத்தை உடனே முடிக்க வேண்டும் என்று மக்களை நிர்ப்பந்திக்கிறது போலீசு. மாணவர்களையும், மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் கிராமங்களிலிருந்து வெளியேற்றுமாறு விவசாயிகளை மிரட்டுகிறது.
00000
தாமிரபரணி தண்ணீரை கோக்கும் பெப்சியும் கொள்ளையடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்ததைக் கண்டித்துப் பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி நடத்திய போராட்டம்.
“ஒரு ஆபத்தும் இல்லை” என்கிறார் பொன்னார். “தியாகம் செய்யுங்கள்” என்கிறார் இல.கணேசன். “மக்களின் ஒப்புதல் இல்லாமல் அமல்படுத்த மாட்டோம்” என்கிறார் மத்திய அமைச்சர். “உடனே கலைந்து போ” என்று மிரட்டுகிறது போலீசு.
நடந்து கொண்டிருப்பது வழிப்பறித் திருடர்களுடனான விவாதம். மத்திய அரசு, மாநில அரசு, காவல்துறை, நீதிமன்றம் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதால் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்ற உண்மை இல்லாமல் ஆகிவிடாது.
கழுத்து சங்கிலி அறுப்பவனோடு விவாதம் நடத்தி தன்னுடைய நகையை ஒரு பெண் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? எனினும் இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் அத்தகையதுதான். “சங்கிலி சும்மாதானே கழுத்தில் கிடக்கிறது. அதை அறுத்து விற்றால் உனக்கு கொஞ்சம் ராயல்டி தருவேன். எனக்கு ஒரு பைக் வாங்குவேன். அதனால் என்பீல்டு கம்பெனிக்கு வியாபாரம் ஆகும். பல தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கும். மெக்கானிக் ஷாப்புக்கு வேலை பெருகும். அவர்களுக்கெல்லாம் ஊதியம் கிடைத்தால் அதை வைத்து அரிசி, பருப்பு வாங்குவார்கள், வணிகர்களுக்கு வியாபாரம் ஆகும், விவசாயிகளாகிய நீங்கள் நெல்லும் காய்கனியும் விற்று பணம் பார்க்கலாம். இந்தியாவின் ஜி.டி.பி சீனாவை விட அதிக வேகத்தில் வளரும். யோசித்துப்பார். இந்த தேசத்துக்குப் பயன்படாமல், அந்தச் சங்கிலி உன் கழுத்தில் தொங்கி என்ன பயன்?” என்கிறான் திருடன்.
வளர்ச்சி பற்றி திருவாளர் மோடியும், ஆளும் வர்க்கங்களும் அளிக்கும் வியாக்கியானங்கள் அனைத்தும் சங்கிலித் திருடனின் வியாக்கியானங்களே. “வேஸ்டாக கடலுக்குப் போகும் தண்ணீரை எடுத்து பாட்டிலில் அடைத்து கின்லே, அக்குவா பினா என்று பெயர் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குகிறோம். தமிழக அரசுக்கு ஆயிரம் லிட்டருக்கு 15 காசு ராயல்டியும் கொடுக்கிறோம். தண்ணீர் கடலுக்குப் போனால் ராயல்டி கிடைக்குமா யுவர் ஆனர்” என்று கோக்-பெப்சி எழுப்பும் கேள்விக்கும் சங்கிலித் திருடனின் கேள்விக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 31 இடங்களில் நான்கைத் தவிர மற்றவையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நியக் கம்பெனிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம். தேவைப்பட்டால் நீட்டிக்கலாம். இவர்கள் எடுக்கின்ற எண்ணெய் எரிவாயுவை உலக சந்தை விலையில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் விற்க உரிமை உண்டு. அந்த விலையில்தான் இந்திய அரசும் வாங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
நெடுவாசல் மண்ணில் துளை போட்டு ஆய்வு செய்ய முடிந்த ஓஎன்ஜிசி யிடம், எரிவாயு எடுப்பதற்குப் பணமில்லையாம். கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பாரதிய ஜனதா எம்பியிடம் பணம் இருக்கிறதாம், அதனால் கொடுத்தார்களாம். அவர் 500 பேருக்கு வேலை கொடுப்பாராம். தமிழக அரசுக்கு மொத்தமாக 40 கோடி ரூபாய் ராயல்டி கொடுப்பாராம்.
சங்கிலித் திருடனின் மேற்படி நியாயத்தின்படி பெண்ணின் கழுத்தில் நகை “சும்மா” தொங்குவதும், பாரதிய ஜனதாவைச் சார்ந்த கார்ப்பரேட் முதலாளியால் கொள்ளையிட முடியாமல் நெடுவாசல் வயலுக்கு அடியில் மீதேனும் ஷேல் வாயுவும் “சும்மா” கிடப்பதும், பி.ஆர்.பிக்கு பயன்படாமல் மலைகள் “சும்மா” நிற்பதும், கோக் – பெப்சி நிறுவனங்களின் பாட்டிலுக்குள் அடைபடாமல் தாமிரபரணி ஆறு “சும்மா” ஓடுவதும் குற்றம். இவற்றை விற்றுக் காசாக்க முடியாமல் தடுப்பவர்கள் தேசத்துரோகிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள்.
இது திருட்டு என்பதைப் புரிந்து கொள்ள ஏழாம் அறிவு எதுவும் தேவையில்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படையாக இருந்து மத்திய மாநில அரசுகள் நடத்தும் திருட்டு. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய முதன்மையான விசயம்.
“திருடுவது சரி” என்று அரசாங்கமோ நீதிமன்றமோ கூறவியலாது என்பதனால், திருட்டுக்குப் பெயரை மாற்றி “வளர்ச்சி” என்று கவுரவமாக அழைக்கிறார்கள். “வளர்ச்சி அவசியமானதுதான். ஆனால் அதை அடையும் முறைச் சரியாக இருக்கவேண்டும்” என்று விவாதம் நடத்துகிறார்கள்.
திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதற்கு முன்னால், மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டுமாம். அதாவது கழுத்துச் சங்கிலியை கழற்றித் தருவதன் நன்மையை, அதனால் ஏற்படப் போகின்ற பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றியெல்லாம் அந்தப் பெண்ணுக்கு விளக்கி மனப்பூர்வமாக கழற்றிக் கொடுக்க வைத்திருக்க வேண்டுமாம். மக்களின் ஒப்புதலோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுதல் என்று இதற்குப் பெயர்.
பறிகொடுப்பவனின் ஒப்புதலோடு திருட்டு, அடிமையின் ஒப்புதலோடு ஆதிக்கம்! ஒப்புக்கொள்ள மறுத்தால்? “பிடுங்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு” (act of state) என்று எச்சரிக்கிறார் பாரதிய ஜனதாவின் வக்கீல் பா.ராகவன். “ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் ஒப்புதல் வாங்க முடியுமா” என்கிறார் வானதி சீனிவாசன். “ஒருமுறை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து விட்டால், எண்ணியதை எண்ணியபடி கொள்ளையிடும் உரிமை அரசுக்கு உண்டு” என்பதுதான் இவர்கள் கூறவரும் நியாயம். தாலி கட்டிய ஆண் எடுத்துக்கொள்ளும் தாம்பத்திய “உரிமை”யைப் (வல்லுறவு) போன்ற நியாயம்!
“ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருக்க முடியுமா” என்று சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பிய அந்தப் பெண்ணின் ஆதங்கத்துக்கு, “ஒவ்வொன்றுக்கும் ஒப்புதல் வாங்க முடியுமா” என்ற வானதி அம்மையாரின் திமிர்ப் பேச்சுதான் பதில். இது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் மக்களுக்கும் திருடனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். திருடனை மக்கள் பிரதிநிதி என்றும் சட்டபூர்வமான அரசமைப்பு என்றும் இன்னமும் நம்பிக்கொண்டிருந்தால் அது நம்புகிறவர்களின் பிழை. “நாங்கள் திருடர்கள்தான்” என்று அவர்கள் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். சிங்கூர், கலிங்க நகர், கூடங்குளம் ஆகியவற்றின் வரிசையில் இப்போது நெடுவாசல்.
00000
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை பகுதியில் மீனவ மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம். (கோப்புப் படம்)
இது “திருட்டு” என்ற உண்மையை மறைப்பதற்கான முதல் கவசம் “வளர்ச்சி” என்ற வாதம். இரண்டாவது கவசம் “அறிவியல்”. நிலத்தடி நீரும் சூழலும் அழிந்து விளை நிலமெல்லாம் பாலைவனமாகும் என்று அஞ்சுகிறான் விவசாயி. இரண்டாயிரம் ஆண்டு விவசாயப் பாரம்பரியம் கொண்ட அந்த தஞ்சை உழவனைப் பார்த்து “நீ விஞ்ஞானியா” என்று கேட்கிறார் பொன்னார்.
ராமேசுவரம் கடலுக்கடியில் இருக்கும் மணல் திட்டுக்கு ராமர் பாலம் என்று பெயர் சூட்டி, சேதுக்கால்வாய் திட்டத்தை பாரதிய ஜனதா தடுத்தது. “ராமன் கட்டிய பாலம் என்கிறீர்களே, ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கருணாநிதி கேட்டவுடன், “தலையை வெட்டுவேன்” என்றார் பாஜக வைச் சார்ந்த வேதாந்தி என்ற சாமியார் எம்.பி. மணல் திட்டை அழித்தால் தலையை வெட்டலாமெனில், விளைநிலத்தை அழிப்பவனது உறுப்புகளில் எதை வெட்டலாம் என்று பொன்னார் தான் சொல்ல வேண்டும். நெடுவாசல் என்பது இயற்கை உருவாக்கிய மணல் திட்டல்ல, விவசாயிகளின் வியர்வை உருவாக்கிய விளைநிலம். அந்த உழவர்களைப் பார்த்து, “நீ என்ன விஞ்ஞானியா” என்று கேட்கும் மனிதருடைய நாக்கு சோறு தின்னும் நாக்குத்தானா என்பதையும் விசாரித்துத்தான் பார்க்க வேண்டும்.
எந்த விஞ்ஞானி ராமன் பாலத்தையும் ராம ஜென்ம பூமியையும் ஒப்புக்கொண்டான்? பாஜக வுக்கும் விஞ்ஞானத்துக்கும் என்ன தொடர்பு? “மகாபாரத காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கு பிள்ளையாரே சாட்சி” என்று மோடிஜியின் வாயிலிருந்து பிரிந்த மீதேன் வாயுவை எதிர்கொள்ள முடியாமல் இந்திய விஞ்ஞானிகள் பலர் சுருண்டு விழவில்லையா? அரசியலுக்கு அஞ்ஞானம், பொருளாதாரத்துக்கு விஞ்ஞானமா?
“நீரியல் விரிசல் முறையைக் கையாண்டால் சூழல் நஞ்சாகும், நிலத்தடி நீர் அழியும், விளைநிலம் பாலைவனமாகும்” என்பது அனுபவபூர்வமான உண்மை. இந்த உண்மையைச் சொல்வதற்கு பத்து விஞ்ஞானிகள் இருந்தால், “எந்த ஆபத்தும் இல்லை” என்று சொல்வதற்கு மோடி இருபது விஞ்ஞானிகளை கையில் வைத்திருப்பார். “அணு மின்சாரம்தான் பசுமை ஆற்றல்” (green energy) என்று சாதிப்பதற்கும், “கதிர் வீச்சால் புற்றுநோய் வராது” என்று சத்தியம் செய்வதற்கும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தயாராக இருந்ததை நாம் கூடங்குளம் போராட்டத்தின்போது பார்க்கவில்லையா?
நேற்றைய அறிவியலின் அவதானிப்பை இன்றைய அறிவியல் மறுக்கலாம். அறிவியலாளர்களிடையே கருத்து வேறுபாடும் இருக்கலாம். பிரச்சினை அதுவல்ல. நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் எழுப்பும் கேள்வி, அறிவியலின் நம்பகத்தன்மையைப் பற்றியதல்ல. அறிவியலாளர்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள் எனப்படுவோரின் நம்பகத்தன்மை பற்றியது. சுருங்கக் கூறின் இந்த அரசமைப்பின் நம்பகத்தன்மை பற்றியது.
எரிவாயுக் கிணறு அமைந்துள்ள நரிமணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்கள் தரிசாகிவிட்டன, மக்கள் பல விதமான தோல் நோய்களால், புற்று நோயால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகளிலேயே வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இருப்பினும், “நரிமணம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் கொடுத்த சான்றிதழைக் கையில் வைத்துக் கொண்டு, “எந்த பாதிப்பும் கிடையாது” என்று கூச்சல் எழுப்புகிறார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.
மைய அரசு தமிழகத்தின் மீது ஏவிவிட்டுள்ள மற்றொரு பேரழிவுத் திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குக் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதி. (கோப்புப் படம்)
பொதுப்பணித்துறையின் யோக்கியதை என்ன? காவிரி, தாமிரபரணி, பாலாறு வெள்ளாறு உள்ளிட்ட தமிழகத்தின் ஆறுகள் அனைத்திலும் எடப்பாடி, சேகர் ரெட்டி கும்பல் 30 அடி ஆழத்துக்கு மணலை அள்ளியிருக்கிறது என்பது தமிழகம் அறிந்த உண்மை. இருப்பினும் “ சேகர் ரெட்டி 3 அடிதான் அள்ளியிருக்கிறார்” என்று “அம்மா” மீது சத்தியம் செய்கிறார்கள் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள். பூமிக்கு மேலே எல்லோருடைய கண்ணுக்கும் தெரிகின்ற 30 அடி பள்ளத்தை 3 அடி என்று சாதிக்கும் பொறியாளர்கள், பூமிக்கு கீழே உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருப்பதாக சான்றிதழ் தருகிறார்களாம் அதை விவசாயி நம்பவேண்டுமாம்.
நெடுவாசலில் தோண்டப்போவது எத்தனை அடி? எடுக்கப்போவது எரிவாயுவா, எண்ணெயா, மீதேனா, ஷேல் வாயுவா? எதுவும் சொல்லவில்லை. ஷேல் வாயு எடுப்பதுதான் அவர்களுடைய திட்டம். அதை மறைப்பதற்குத்தான் ஹைட்ரோ கார்பன் என்ற பித்தலாட்டம். எவ்வளவு எடுப்பார்கள்? எவ்வளவு கணக்கு காட்டுவார்கள்? யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது.
ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை எதற்காவது கணக்கு உண்டா? பொதுப்பணி, சுற்றுச்சூழல், வருவாய், வனம், தொல்லியல், நீர்ப்பாசனம் என்று சகலவிதமான துறை வல்லுநர்களின் உதவியோடுதான் பல லட்சம் டன்கள் கடத்தப்பட்டன, கடத்தப்படுகின்றன. இயற்கை வளங்களைப் பாதுக்காக்கப் பொறுப்பேற்றுள்ள துறைகள்தான் அவற்றை சூறையாடத் துணை நிற்கின்றன. பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், கணக்கு காட்டாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இரும்புக் கனிமத்தின் அளவு மட்டும் ஒரு கோடி டன். அவர்தான் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதாரத்தூண். இந்த யோக்கியர்கள்தான் மோடி அரசாங்கத்தை நம்பச் சொல்கிறார்கள்.
“15 ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மண்ணெண்ணெய் எடுக்கப் போகிறோம் என்று சொல்லி என் நிலத்தை இரண்டாண்டு குத்தகைக்கு கட்டாயப்படுத்தி வாங்கினார்கள். இப்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகிறோம் என்கிறார்கள். என்னைக் கேட்காமலேயே என் நிலத்தை யாரோ ஒரு கார்ப்பரேட் கம்பெனி லாபம் சம்பாதிப்பதற்காக 15 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருக்கிறார்களே, இது என்ன நியாயம்? அன்று மண்ணெண்ணெய் இன்று ஹைட்ரோ கார்பனா? இந்த அநீதியை நியாயப்படுத்தும் ராகவன் அவர்களே, பதினைந்து ஆடுகளுக்கு முன்னரும் உங்கள் பெயர் ராகவன்தானே!” என்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக பிரதிநிதியை எள்ளி நகையாடினார் சந்திரபோஸ் என்ற விவசாயி.
00000
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய்த் துரப்பணவு செய்வதை எதிர்த்து, நாகப்பட்டிணம் மாவட்டம், குத்தாலத்தில் நடந்த முற்றுகைப் போராட்டம். (கோப்புப் படம்)
இதற்கெல்லாம் பாஜக நாக்குமாறிகள் வெட்கப்பட மாட்டார்கள். அவர்கள் விவாதம் நடத்துவதன் நோக்கமே வேறு. சென்ற கணம் வரை “கழுத்துச் சங்கிலி அந்தப் பெண்ணுடைய உடைமை” என்று ஊரார் எண்ணிக்கொண்டிருந்தனர். இப்போது “அறுக்கலாமா, கூடாதா” என்ற இடத்துக்கு விவாதத்தைக் கொண்டு வந்து விட்டார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள்.
பாபர் மசூதி பிரச்சினை நினைவிருக்கிறதா? “மசூதிக்கு அடியில் கோயில் இருக்கிறது” என்றுதான் முதலில் ஆரம்பித்தார்கள். அது மசூதிதான் என்ற கருத்து மெல்ல விலகி, “மசூதியா கோயிலா” என்ற விவாதம் தொடங்கியது. பிறகு “தோண்டிப் பார்த்தால்தானே இருக்கிறதா இல்லையா என்று தெரியும்” என்று “நியாயம்” பேசினார்கள். திடீரென்று ஒரு நாள் இடித்து விட்டார்கள். நெடுவாசலுக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறது என்று கதையைத் தொடங்கியிருக்கிறார்கள். அதே அயோத்தி கதைதான். இசுலாமியர்களின் இடத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் என்பதுதான் வித்தியாசம்.
மற்றபடி, சங்கிலியை அறுப்பதுதான் திருடனின் நோக்கம். இதை ஒருபோதும் மறந்து விடலாகாது. மரியாதைக்குரிய பாரதப் பிரதமரும் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்டுமான திருவாளர் நரேந்திர தாமோதர் மோடிஜி அவர்களை ஒரு சங்கிலித் திருடனுடன் ஒப்பிடுவது தேசத்துரோகம் என்று தேச பக்தர்கள் சிலர் கருதக்கூடும். இந்த ஒப்பீட்டுக்கு தீய உள்நோக்கம் ஏதும் இல்லை. இது ஐ.எஸ்.ஓ 2001 தரச்சான்று பெற்ற உண்மை.
கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில், மக்களின் கையில் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கினார் மோடி. கைப்பற்றப்பட்ட கருப்புப் பணத்தை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்போகிறோம் என்று ஆசை காட்டினார். நமது பணம் அம்பானிகள், அதானிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்குப் பெயர் “கருப்புப்பண ஒழிப்பு” நடவடிக்கையாம்.
சந்திரபோஸ்களின் நிலத்தை சித்தேஸ்வராவுக்கும் அம்பானிகளுக்கும் கொடுக்கும் நடவடிக்கைக்கு HELP என்று பெயர் வைத்திருக்கிறார் மோடி. அதாவது Hydrocarbon Exploration and Licencing Policy. இது மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் இந்த நடவடிக்கை, “சும்மா” கிடக்கும் எண்ணெய் வயல்களை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கிறது. அவற்றை விற்றுப் பணமாக்கி (monetizing the oil fields) பொருளாதாரத்தை வளர்க்குமாறு கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் மோடி.
அடுத்து வரவிருப்பது, சங்கிலி அறுப்பு நடவடிக்கை. “தங்கத்தை எதற்கு “சும்மா” பீரோவில் வைத்திருக்கிறீர்கள். அதை வங்கியிடம் கொடுங்கள். பொருளாதாரத்தை வளர்க்கிறோம். தங்கப் பத்திரம் தருகிறோம்” என்றவாறு 2015 தீபாவளிக்கு முந்தைய “மன் கி பாத்” உரையில் பேசியிருந்தார் மோடி. எதுவொன்றும் சும்மா இருப்பது மோடிஜிக்கு பிடிக்காது. அது சும்மா இருக்கும் பணமானாலும் சரி, சும்மா இருக்கும் நகையானாலும் சரி, சும்மா இருக்கும் நிலமானாலும் சரி.
பணத்தைப் பிடுங்கப் பட்டுவிட்டது. தாய்மார்களே தாலி பத்திரம்! விவசாயிகளே, நிலம் பத்திரம்!
” எனக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்பதை அறிந்திருந்தும் நான் எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்” என புதுதில்லி ’டிஸ் ஹசாரி’ நீதிமன்ற நீதிபதியின் முன்னால் டிசம்பர் 18, 2010 அன்று, பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தனது பங்கையும், ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கையும் விரிவாகப் பதிவு செய்தார் அசிமானந்தா. சுமார் 5 மணிநேரம், அசீமானந்தா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கியது.
தனது வாழ்க்கையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோடு சேர்ந்து செய்த சதித்திட்டங்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் கலவரங்களைப் பற்றி கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை, 4 தவணைகளாக ’கேரவன்’ இதழுக்கு சுமார் 9 மணிநேரத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். அவ்விதழ் 2014-ம் ஆண்டில் அந்த நேர்காணலைச் சுருக்கி வெளியிட்டது. இந்த நேர்காணலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க விட்டது.
இப்பேற்பட்ட அசிமானந்தாவைத் தான் தற்போது அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில், ’போதுமான சாட்சி இல்லாத’ காரணத்தால் விடுதலை செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மிகவும் பழமை வாய்ந்த தர்காவான அஜ்மீர் தர்காவில் அக்டோபர் 11, 2007 அன்று மாலை நேரத்தில் ரம்ஜான் நோன்பு முடித்து இஃப்தார் விருந்து நடக்கையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர், 17 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த உடனேயே இசுலாமியத் தீவிரவாதிகள் தான் குண்டுவைத்தனர் எனக் கதை விட்டு, உடனடியாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது போலீசு.
இதேக் காலகட்டத்தில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பில், குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வைத்து பெண் சாமியார் சாத்வி ப்ரக்யா தாக்கூரையும் , இராணுவ அதிகாரி புரோகித்தையும் கைது செய்து விசாரித்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசு. அங்கு விசாரணையில் கிடைத்த துப்புகளின் அடிப்படையில் மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜுக்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முக்கியக் குற்றவாளியான சுவாமி அசிமானந்தாவை 2010-ம் ஆண்டு இறுதியில் கைது செய்தது சிபிஐ. பழங்குடி இன மக்களுக்கு இந்து மத வெறியை ஊட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.ஆல் உருவாக்கப்பட்ட அமைப்பான வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தின் முழு நேர ஊழயர் தான் அசிமானந்தா. சிறையில் அடைக்கப்பட்ட அசிமானந்தா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தாம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரை 2 நாட்கள் போலீசின் தலையீடின்றி நீதிமன்றக் காவலில் வைத்து விட்டு பின்னர் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது தில்லி ’டிஸ் ஹசாரி’ நீதிமன்றம்.
டிசம்பர் 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜரான அசிமானந்தா, மாலேகானில் 2006, 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள், சம்ஜுக்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தமது பங்கையும், பின்னிருந்து சதித்திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பங்கையும் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். குறிப்பாக அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாருடன் இணைந்து செய்து முடிக்குமாறு மோகன் பாகவத் நேரடியாகத் தம்மைச் சந்தித்துக் கூறியது குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு டிசம்பர் 24 அன்று இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் மிக முக்கியப் ‘பங்காற்றி’யிருக்கிறது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ). அசிமானந்தாவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டிய ஆர்.எஸ்.எஸ்.-ன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரை வெறும் விசாரணைக்கு மட்டும் அழைத்து விட்டு வழக்கிலிருந்து என்.ஐ.ஏ. விடுவித்துவிட்டது. ஒரு படி மேலே போய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை விசாரணைக்குக் கூட கூப்பிடவில்லை. அப்படிப்பட்ட இந்த அமைப்பு தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையையும் கையிலெடுத்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட சாத்வி ப்ரக்யாவிற்கு எதிராக அரசுத் தரப்பு வக்கீலாக ஆஜரானார் மூத்த வழக்கறிஞர் ரோகினி சாலியன்.
வழக்கை நடத்திய தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரி சுஹாஸ் வார்கே இவ்வழக்கில் சாத்விக்கு தண்டனைக் கிடைக்காதபடி அரசுத் தரப்பிலிருந்து கொண்டே வாதிடுமாறு தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவித்து மறுத்துவிட்டதாகவும் ரோகிணி சாலியன் பகிரங்கமாக பத்திரிக்கைகளுக்குத் தெரிவித்தார். அந்த அளவிற்கு இந்துத்துவாவின் ஆதரவாளர்களால் நிரம்பி வழியும் ஒரு அமைப்பே ”தேசிய புலனாய்வு முகமை”.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் அஷ்வினி குமார் சர்மாவும் 2015-ம் ஆண்டு பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தேசிய புலனாய்வுக் கழகத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும் எதிர்தரப்பு வக்கீல்கள் அரசுத்தரப்பு சாட்சிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு, பிறழ்சாட்சி அளிக்க பேரம் பேசுவதாகவும், அரசுத் தரப்பு சாட்சிகளை, கோர்ட்டில் ஆஜராவதற்கு முந்தைய நாள் இரவே ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு எதிர்த்தரப்பு வக்கீல்களால் பகிரங்கமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேசியப் புலனாய்வு முகமை நினைத்திருந்தால், அரசுத் தரப்பில் பிறழ்சாட்சி சொன்னவர்களின் அலைபேசி எண்களில் பேசியவர்கள் பட்டியலை வைத்து, எதிர்தரப்பின் (ஆர்.எஸ்.எஸ்.) பேரத்திற்குப் படிந்து அவர்கள் பிறழ்சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்று நிரூபித்திருக்க முடியும் என்றும் அஷ்வினிக் குமார் சர்மா கூறியுள்ளார். ஆனால் தேசியப் புலனாய்வுக் கழகம் அவ்வாறு செய்யவில்லை. அந்த அளவிற்கு தேசியப் புலனாய்வுக் கழகம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புக்களின் ஒன்றாகிவிட்டது.
போலீஸ் கொட்டடியில் தாம் கொடுக்கும் வாக்குமூலத்தை, ஒரு சாட்சி மறுதலித்துப் பேசும் போது அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்திய தண்டணைச் சட்டப்பிரிவு 164-ன் படி நீதிபதிக்கு முன்னால் அளிக்கப்படும் வாக்குமூலத்தைச் சாட்சி மறுதலித்தால் அது குறித்த பின்னணியை விசாரிக்கவும், அதன் பிறழ் சாட்சியத்தை ஏற்காமல் புறக்கணிக்கவும் நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. ஆனால் ’நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு’ என்பது போல, சிறப்புக் குடுமி மன்றம் தனது இந்துத்துவ சேவையைச் சாட்சிகள் வழுவியதைக் காரணமாக வைத்து ‘சந்தேகத்தின் பலனை ”குற்றவாளிக்கே” சாதகமாக்கி அசிமானந்தாவை வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறது!!
இந்தச் சாட்சியங்கள் எல்லாம் 2011-ம் ஆண்டு நீதிமன்றத்தில், சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக் கூடாது என தங்களுக்கு அலைபேசியில் மிரட்டல் வருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், வழக்கு விசாரணைத் தேசிய புலனாய்வுக் கழகத்தின் கீழ் வேகமாகச் சென்றிருக்கிறது. 2014-க்குப் பின்னர் முக்கிய சாட்சிகள் ஒவ்வொருவராக பிறழ்சாட்சியாளர்களாக மாறத் தொடங்கினர். இத்தனைக்கும் நீதிபதியின் முன்னிலையில் இவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தைத் தான் இவர்கள் மறுதலித்துக் கூறியிருக்கிறார்கள். நீதிமன்றம் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக போலீசால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பென்-ட்ரைவ் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லாத போதும், ”தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆவணங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை” என ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழிகாட்டுதல் கொடுத்திருந்தும், சாய்பாபா உடலளவில் 90% செயல்பட முடியாத மனிதர் எனத் தெரிந்திருந்தும், அவரைப் பழி வாங்கவும், இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுபவர்களை மிரட்டவும் தான் பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஆல் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளை துல்லியமாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அசிமானந்தாவை, ”சாட்சிகள் போதவில்லை” என்ற மொன்னைக் காரணத்தைக் கூறி விடுதலை செய்திருக்கிறது தேசியப் புலனாய்வு மையத்தின் சிறப்பு நீதிமன்றம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காவிகளின் குண்டுவெடிப்புகளும், வன்முறைகளும் வரைமுறையின்றி நடத்தப்படுவதற்கு, இத்தீர்ப்பின் மூலம் பச்சைக் கொடியைக் காட்டியிருக்கிறது நீதிமன்றம். காவி இருளை விரட்ட, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பின் மூலமும் நமக்கு உணர்த்தியிருக்கிறது நீதிமன்றம்!!
பாகிஸ்தானைச் சேர்ந்த அல்டாஃப் கனானியின் முழுநேரத் தொழிலே சர்வதேச ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வது தான். இவரது ‘கனானி பணப் பரிமாற்ற நிறுவனம்’ பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமான ஹவாலா பணப் பரிவர்த்தனைகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது. சீனா, கம்போடியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களுக்கும், அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு பின்னர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தாலிபான், லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்-ஈ-முகம்மது, அல்கொய்தா உள்ளிட்ட குழுக்களுக்கும், தாவூத் இப்ராகிம் போன்ற நிழலுலக தாதாக்களுக்கும் ஹவாலா பணப் பறிமாற்றச் சேவைகளை பல ஆண்டுகளாகச் செய்து வந்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பனாமாவில் கனானியைக் கைது செய்தது. ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கனானிக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்தியாவின் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் தொடர்பு இருப்பதை அமெரிக்க அரசின் கருவூலத் துறை உறுதி செய்துள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக இந்தியாவில் இராணுவத்திற்கு வாங்கும் தளவாடங்களுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனம் தரகு வேலை செய்து தயாரிப்பு நிறுவனத்திடமும், விற்பவரிடமும் கமிஷன் வாங்கினால் குற்றம். அதுவே அமெரிக்காவில் சட்டப்பூர்வ தொழிலாக – லாபி – நடக்கிறது. பிறகு தனது தேவைக்கேற்ப தாலிபான்களை கஞ்சா உற்பத்தி செய்ய வைப்பது, ஆயுதங்கள் – நிதி அளிப்பது, பிறகு தடை செய்வது என அமெரிக்கா உலகமெங்கும் செயல்படுகிறது.
தாவுத் இப்ராகிமை தப்ப விட்டது ஏன்?
இவர்களைப் பொறுத்தவரை ஜனநாயகரீதியாக தேர்தல் நடக்கும் ஈரான் சர்வாதிகார நாடு, சர்வாதிகாரியாகவே ஆளப்படும் சவுதி அரேபியா நேச நாடு. ஆகவே ஜனநாயகம், நிதி முறைகேடுகள், பயங்கரவாதம் என்பதற்கு அமெரிக்கா சொல்லும் விளக்கம் அதன் வல்லாதிக்க நலனோடு தொடர்புடையவை. இப்படித்தான் பாகிஸ்தான் கனானியை அவர்கள் கைது செய்து வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் தாவுத் இப்ராகிம் குறித்தே நாம் பார்க்க இருக்கிறோம். காரணம் இந்தியாவில் காங்கிரசு அரசோ இல்லை பாஜக அரசோ இரண்டுமே பாக்கில் மறைந்திருக்கும் தாவுத் இப்ராகிமை பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக ஆறு வாரத்திற்கு ஒரு முறை சபதம் எடுக்கின்றன. அதுவும் சங்கிகளின் பா.ஜ.க-வின் சவுண்டு இன்னும் அதிகம்.
கடந்த ஆண்டு கனானியுடனான தாவூத்தின் தொடர்பு குறித்து அமெரிக்க அரசுத் துறையின் 31-வது சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அறிக்கையில், பண மோசடி மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் குறித்துப் பேசும் இரண்டாம் பாகத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த தகவல்கள், இந்த ஆண்டு மார்ச் 3 அன்று வெளியிடப்பட்ட 32-வது ஆண்டறிக்கையில் காணப்படவில்லை.
கனானியுடனான தாவூத் இப்ராகிம் தொடர்பு குறித்த தகவல்கள், இந்த ஆண்டு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டிருந்தன. காரணம் இருவருக்குமிடையிலான உறவை நிறுவும் ஆதாரங்களை அமெரிக்க அரசால் இந்தியாவிடமிருந்து வாங்க முடியவில்லை. இது குறித்து அதே அறிக்கையில் விளக்கமளித்திருக்கும் அரசுத் துறை, தாவூத் உள்ளிட்ட ஹவாலா நிதி மோசடியாளர்கள் குறித்து தகவல்களும் துப்புகளும் கொடுத்தும், விசாரணைத் தரவுகளை வைத்து அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்று கூறியுள்ளது. மேலும், இந்தியா சட்டரீதியான உதவிக் கோரிக்கைகளுக்கு பெருமளவில் உதவினாலும் அதற்கு முன் உள்ள “அமைப்புரீதியான சவால்களைச்” சமாளிக்க முடியாமல் திணறுவதாகக் கூறியுள்ளது.
வெறிநாயைக் கொல்வதென்றாலும் விசாரித்துத்தான் கொல்ல வேண்டும் என்ற ‘நீதி’க்கேற்ப அமெரிக்காவிலே எல்லாம் ‘சட்டப்படி’ சரியாக இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். தாவுத் இப்ராஹிம் விசயத்தில் இந்தியா சொதப்பியதால் அது ஏன் என்ன என்று சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் அந்த அறிக்கை, இந்தியாவில் ஹவாலா பணத்தைக் கட்டுப்படுத்துவது, குறித்தும் முறைகேடான பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான சட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளது. சமீபத்தில் மோடியால் மக்களின் தலையில் இடியாய் இறக்கப்பட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கோ, ஹவாலா பண மோசடிகளைத் தடுப்பதற்கோ துளியும் உதவாது என்பதையும், முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் கல்வி நிலையங்கள், ட்ரஸ்டுகள், ரியல் எஸ்டேட், கட்சிநிதி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலேயே இந்தியாவில் நடக்கின்றன என்று தெரிவிக்கிறது. அதோடு இத்தகைய முறைகேடான பணப் பறிமாற்றங்களை முடக்க எவ்வித நடவடிக்கைகளும் அரசு சார்பில் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது இந்த அறிக்கை.
கருப்புப் பணத்தை பணமதிப்பழிப்பின் மூலம் சாதிப்பேன் என சவடால் அடிக்கும் மோடி.
ஆக மொத்தம் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினரால் ஆண்டவனாக தொழப்படும் அமெரிக்க அரசே மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காறித் துப்பிவிட்டது.
ஊழலை ஒழித்து, கருப்புப்பண பேர்வழிகளையும், ஹவாலா பேர்வழிகளையும் அடியோடு ஒழித்துக்கட்டுவதே தமது இலட்சியம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்தவர் மோடி. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்க ணக்கிலும் 15,00,000 ரூபாயை போடுவேன் எனச் சவடால் அடித்தவர் மோடி. அப்படிப்பட்ட ’ஹவாலாப் பண எதிர்ப்புப் போராளி’யான மோடியே திணறும் அளவிற்கு ‘அமைப்புரீதியான சவால்கள்’ அப்படி என்ன தான் வந்துவிட்டன ?
ஆட்சியில் அமர்ந்ததும், எல்லா நாடுகளையும் ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்த மோடியை, கருப்புப்பணத்தை எப்போது பிடித்துக் கொண்டு வருவீர்கள் என்று மக்கள் கேட்டவண்ணமிருந்தனர். அச்சமயத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட கருப்புப்பண இந்தியர்களின் பட்டியல் மக்கள் மத்தியில், “கைப்புள்ள கைல அருவாளோட கெளம்பிட்டான் .. இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ..” என்று ஒரு ஆவலை ஏற்படுத்தியது.
பெயர்ப்பட்டியலில் உள்ள கருப்புப் பண முதலைகளிடம் இரகசியமாக விசாரணை நடத்தி அபராதம் மட்டும் வசூலிக்கப்படும் என்றும், அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத்திலேயே அறிவித்து மக்களுக்கு கரியைப் பூசினார் மோடி. “அப்போ அந்த 15 இலட்ச ரூபாய் பணம் ?” என்று கேட்ட மக்களிடம் அது தேர்தலுக்காக எடுத்து விட்ட உதார் என்று வெளிப்படையாக பேசினர் பாஜக தலைவர்கள்.
பனாமா லீக்ஸ் அம்பலப்படுத்திய கருப்புப்பண நாயகர்கள் – ஹரீஸ் சால்வே, டாஃபே நிறுவன உரிமையாளர் மல்லிகா சீனிவாசன், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன்
அடுத்ததாக பனாமா நாட்டு வங்கிகளில் கருப்புப்பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல், இணைய ஹேக்கர்களால் வெளியானது. அமிதாப் பச்சன், ஐஸ்வரியாராய், ஹரிஷ் சால்வே, டாஃபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதானி குழுமத்தின் வினோத் அதானி என ஒரு பெரும் பட்டியலே வெளியானது. இவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் பெயரளவிலான விசாரணையோடு ஊற்றி மூடியது மோடி அரசு.
இது தான் ஹவாலா மூலம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மோடி பிடித்துக் கொண்டு வந்த இலட்சணம். அன்புநாதனின் ஆம்புலன்ஸ் விவகாரமும், போயஸ்தோட்டத்தின் கண்டெய்னர் விவகாரமும் தான் மோடியின் உள்நாட்டு ஹவாலாப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் இலட்சணங்கள்.
அடுத்து மும்பை குண்டுவெடிப்பு தொடங்கி இந்தியாவின் வர்த்தக தலைநகரத்தை கட்டுப்படுத்துகிறார், பாலிவுட் திரையுலகத்தை ஆட்டிப் படைக்கிறார், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார், பாக்கின் ஐ.எஸ்.ஐ-தான் அவரை மறைத்து வைத்திருக்கிறது என்று தாவுத் இப்ராஹிம் குறித்து இங்கே ஊடகங்களும், இந்துத்துவா அமைப்பினரும் அடிக்கடி உச்சரிப்பார்கள். எனில் தேசபக்தியை ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் மோடி அரசு உடனே தேவையான தரவுகளை வழங்கி அமெரிக்கா மூலம் தாவுத் மீதும், பாக் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஒருவேளை தாவுத் பிடிபட்டால் அதனால் பாதிக்கப்படும் பிரிவினரில் பாஜக முதலாளிகளும் உண்டோ? இல்லையென்றால் அமெரிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஒரு இனோவா கார் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய சூப்பர் மேன் மோடிக்கு, இத்துப்போன அரசு அலுவலக கோப்புக்களை கூட அமெரிக்காவிற்கு அனுப்ப முடியவில்லையா?
கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாகவும், வரி மோசடியை கழுத்தைப் பிடித்து ஒடுக்கப் போவதாகவும் மோடி விட்ட அத்தனை சவடால்களும் வெறும் வாயால் சுட்ட வடை தான் என்று ஏற்கனவே அம்பலமாகியிருக்கிறது. தற்போது அதனையே சர்வதேச அளவில் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கை.
20 வருசமா கடை வச்சிருக்கேன். மத்தியானம் 2 மணிக்கு வந்தா 7 – 8 மணிக்கு மேல ஆயிடும். பூ கோயம்பேடு மார்க்கெட்டுல இருந்து வாங்கியாருவேன். 12 மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினா வாங்கிட்டு இங்க வந்து சேர ரெண்டு ரெண்டரை ஆயிடும்.
ஏன்க்கா காலையில போயி வாங்குறதில்லை?
மத்தியானந்தான் லோடு வரும். காலையில 100ரூவா பூவ 150 ரூவா சொல்லுவாங்க.
நீங்க மட்டும் பூ வுக்கு அதிக வெல வெக்காமலா இருப்பீங்க?
ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு பூ வாங்கியாருவேன். 200-ல இருந்து 300 ரூவா லாபம் வரும். மார்கட்டுல என்ன வெல வித்தாலும் மொழம் 40 ரூபாய்க்கு மேல யாரும் நம்மகிட்ட வாங்க மாட்டாங்க. ஒரு சீசன்ல பூ கிராக்கியா இருந்துச்சுன்னா அப்ப பூ வாங்காம வந்துருவோம். வியாபாரம் பண்ற வெலைன்னா தான் வாங்கியாருவோம். ஒரு பூ வெல அதிகமா இருந்துச்சுன்னா, அத கொஞ்சமும், வெல கம்மியான பூ கூடுதலாவும் வாங்கி அன்னிக்கு சமாளிப்போம். எந்த பொருளுக்கும் விக்குற வெலை தான வெக்க முடியும்? இதுல ஒரு மொழத்துக்கு இவ்வளவு வெல சொல்றியேன்னு நம்மள திட்டிட்டு வேற போவாங்க.
சரி இப்படி பூ கட்டி வித்து எவ்வளவு சம்பாதிச்சிருப்பிங்க?
நீ வேற, வாயிக்கும் வயித்துக்குமே சரியா இருக்கு. வீட்டுக்காரர் கூலி வேல தான் செய்யுறாரு. குடிக்கவும் செய்வாரு. குடுத்தா உண்டு, குடுக்கலைன்னா கேட்க முடியாது. இதுல குடும்பத்த எப்படி நடத்துறது? வீட்டு வாடகை ரூ.5000, கரண்டு ரூ.700-ல இருந்து 1000 – 1500. அப்புறம் தண்ணிக்கு. இதுலயே ஏழு-எட்டாயிரம் போயிடுது.
கரண்ட்டுக்கு ரூ.700 ஆ?
ஆமா, ஒரு யூனிட்டுக்கு 7 ரூபா. 100 யூனிட்டுன்னாக்கூட எவ்வளவு வரும் நீயே சொல்லு?
அத வீட்டுக்காரங்க எடுத்துப்பாங்க.. நமக்கு ஏன் கொடுக்குறாங்க?
சரி, லோன் போட்டு பொக்கே கடை மாதிரி பெருசா வைக்கலாம் இல்லையா?
கலாய்க்குறீயா? வீட்டுச் செலவுக்கு கடன் வாங்குனாலே கட்ட முடியலை. இதுல லோன் வேறயா? யார் லோன் குடுப்பா? ஆயிரத்தெட்டு சூரிட்டி கேட்பான், அதுக்கு நான் எங்க போவேன்?
ஒரு நாள் பூ மீந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க? மறுநாள் அதயே வச்சு வித்துடுவீங்க தான?
மீந்துச்சுன்னா மறுநாள் யூஸ் பண்ண முடியாது வேஸ்ட்தான். ஃபிரிட்ஜுல வச்சாக்கூட வேஸ்ட் தான். அன்னிக்கு நஷ்டம் தான் என்ன பண்றது.. மீந்ததை நான் எங்க வீட்டாண்ட இருக்குற மாதாக் கோயில்லயும், அம்மன் கோயில்லயும் சாமிக்கு போட்டுடுவேன்.
நீங்க என்னக்கா உக்காந்தே சம்பாதிக்குறீங்க, உங்களுக்கு என்ன பெருசா கஷ்ட்டம் இருக்கப்போவுது ?
ஏன்பா நீயும் உக்காந்து பூ..வ கட்டிப் பாரு அப்பதெரியும் தோள்பட்ட, கழுத்து, இடுப்பு அதெல்லாம் வலி பின்னி எடுக்கும். அப்பவும் வேலய செஞ்சுகிட்டு தான் இருப்பேன். ரொம்ப முடியலனா டாக்டர்கிட்ட போவேன். அவரும் இந்த வேலையாலதா பிரச்சின அதிகமா வலி மாத்திர சாப்புடக்கூடாது. தைலம் வேணும்னா தேச்சு பழகிக்கங்னு சொல்லி ஆயில்மெண்ட் எழுதி குடுப்பாரு.
20 வருசமா சேட்டு வீட்டுல சமையல் வேலை செஞ்சேன். மாசம் 9 ரூபா சம்பளத்துல இருந்து 320 ரூபா வரைக்கும் ஒரு வீட்டுல வேல பாத்தேன். அப்புறம் ஒரு வருசம் ஒன்ரை வருசம் ஒடம்பு சரியில்லைன்னு வேலைக்கு போவல. இப்ப வேலை பாக்குறது ஒரு முஸ்லீம் வீடு. 5000 ரூ. சம்பளம்.
சேட்டு வீட்டுலயா? அவங்க வெஜ் ஆச்சே?
நான் வேலை பாத்தது சிந்தி சேட்டு. அவங்க கறி, மீன்…ல்லாம் சாப்பிடுவாங்க. நாங்க எஸ்.சி தான் ஆனாலும் அவங்க சாதி பாக்க மாட்டாங்க. பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி…பா வேலை பாக்குறது?
பி.எஃப். இ.எஸ்.ஐ எல்லாம் இருக்கா?
அதெல்லாம் இல்லைப்பா… அந்த அய்யா வக்கீலு, அவருகிட்ட நான் கேட்டேன். வயசானப்புறமா எங்களுக்கு எதாவது வர்ராமாதிரி செய்யக்கூடாதான்னு.. அதெல்லாம் கம்பெனியில வேலை பாக்குறவங்களுக்கு தான். உங்களுக்கு கிடையாதுன்ன்னு அந்த அய்யா சொல்லிட்டாரு. நீங்க தான் சேத்துவச்சிக்கணும்னு சொல்லிட்டாரு.
உங்க வீட்டுக்காரர் என்ன பன்னுறார் ?
1983-ல கல்யாணமாச்சு அடுத்த வருசம் பையன் பொறந்தான், 85-ல் பொண்ணு. 86-ல் வீட்டுக்காரர் விட்டுட்டு போயிட்டார். இங்க இருக்குறவங்க எல்லாம் சொந்தக்காரங்க தான் யாரும் உதவி பண்ணல. அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க தான் தைரியம் சொல்வாங்க. உனக்கு மணியாட்டம் புள்ளைங்க இருக்கு அதுங்கள நல்லா பாத்துக்கோன்னு ஆறுதல் சொல்லுவாங்க.
நீங்க என்ன தான் கஷ்ட்டப்பட்டலும் வீட்டுக்காரர் இல்லாததது உங்களுக்கு சங்கடமா இல்லையா?
எல்லாரு வீடு மாதிரியும் நம்ம வீட்டுல இல்லையேன்னு எப்படி தோணாம இருக்கும்? தீபாவளி, பொங்கல்னா மத்த புள்ளைகளை பாத்து நம்ப புள்ளைங்க ஏங்கிடக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன். அத வச்சு கூட வேணுமுன்னா கடன வாங்கி நல்லா வாங்கித் தருவேன்.. காலையிலயும், மதியமும் வீட்டுவேலை முடிச்சிட்டு வந்த ஏன் சும்மா உட்காரனுமின்னு அரிசிய வறுத்து வெல்லம் போட்டு கொண்டு போயி அப்பல்லாம் பொரி உருண்ட விப்பேன், அதுல ஒரு 10-20 கிடைக்கும்.
செல்வியின் பாதுகாப்பில் விடப்பட்டிருக்கும் அண்டை வீட்டுக் குழந்தை.
வீட்டு வேலைக்கு போகும் போது கொழந்தைங்களை யாரு பாத்துகிட்டாங்க?
அதுக்கு நம்ம என்ன ஆளா வச்சிக்கமுடியும்? வீட்டு வேலைக்கு போகும் போது குழந்தைகளை பக்கத்து வீட்டுல பாத்துக்க சொல்லிட்டு போவேன். இதோ அவனுக்கு 2 வயசு ஆகுது. இந்த பையனோட அம்மாவும் வீடு வேலைக்குதான் போவுது. காலையில அங்கன்வாடியில விட்டுட்டு போயிருச்சு. நான் மத்தியானம் வரும் போது கூட்டியாந்தேன். இன்னும் (நாம் பேசும் போது மணி மாலை 6) அவ வரலை. நாங்க தான் பாத்துக்கறோம்.
வீட்டு வேலைக்கு போற எடத்துல பொருளெல்லாம் எடுத்துட்டு வந்துடுவாங்கன்னு ‘சிலர்’ சொல்லுறாங்களே?
ஒரு குண்டூசிய கூட எடுக்க மாட்டோம். என் வீட்டப் பாரு எடுத்துகிட்டு வந்தா நான் ஏன் இப்புடி இருக்கேன். திருட்டு புத்தி இருந்தா 20 வருசம் ஒரே வீட்டுல வேலை பாத்திருக்க முடியுமா?
சரி வீட்டு வேலைக்கு வெளிநாட்டுல கூட நெறையா வாய்ப்பு இருக்கே நீங்க அப்புடி எங்கயாவது போய் சம்பாதிச்சு இருக்கலாமே?
அட போ..ப்பா செத்தா இங்க தூக்கிப் போடவாவது ஆள் இருக்கு அங்க போனா? இப்ப இல்ல புள்ளைங்க சின்னதா இருக்கும் போது என்ன நான் வேல பாத்த வீட்டம்மா கூப்பிட்டுச்சி. ஆனா நான் புள்ளைங்கள வுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டேன்.
பெண்கள் வீட்டுலயும் வேல பாக்குறாங்க, வெளியவும் வேலைக்கு போறாங்க. ஆனா ஆம்பளைங்க வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டேங்குறாங்களே ஏன்?
இந்த கேள்விய பொம்பளைங்ககிட்ட கேக்கக்கூடாது. ஆம்பளைங்க நீங்கதான சொல்லனும்..
சரி உங்களுக்கு மகளிர் தினம்னா தெரியுமா?
அட எனக்கு அப்புடி ஒரு நாள் இருக்குன்னு தெரியும். எங்க வீட்டாண்ட தெருவுல சின்னதா பசங்க மீட்டிங் மாதிரி போடுவாங்க அத போய் பாப்பேன். அவ்ளதான்.
சரி நீங்க பெண்களுக்கு எதாவது சொல்லனும்னா என்ன சொல்ல நினைகிறீங்களா?
உங்களோட சொந்த உழப்ப நம்புங்க… ஆம்பளைங்கள நம்பாதீங்க.
சசிகலா, வயது 47
என்னக்கா உங்க பேரக்கேட்டாலே பெரிய ஆளா இருப்பிங்க போல ?
சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
இங்க தான் பீஃப் பிரியாணி கடை வச்சிருக்கேன். பொறந்து வளந்தது எல்லாம் சென்னை தான் அப்பா போஸ்ட் ஆபிஸ்ல வேலை செஞ்சாரு நான் ஒன்பதாவது படிக்கும் போது அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாததால படிப்ப நிப்பாட்டிட்டு வீட்ட பாத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் வேல பாத்துக்கிட்டு இருக்கே..ன். ஆரம்பத்துல வீட்டு பக்கத்திலேயே சமையல் வேலைதான். அப்புறம் எங்க அக்கா வீட்டுக்காரு இந்த கடய வச்சிருக்காரு, இதுல வேல பாக்குறேன். கல்லாவ நான் தான் பாத்துகிறேன்.
உங்க வீட்டுக்காரு, பசங்க எல்லாம் என்னக்கா பன்னுறாங்க?
நான் கல்யாணமே பண்ணிக்கல..பா. எனக்கு எங்க சொந்தகாரங்க அக்கம் பக்கத்துல கல்யாணம் பண்ணி பொம்பளைங்க படற கஷ்ட்டத்த பாத்து அதுலயே வெறுத்து போச்சி. அப்படியே தள்ளிப்போட்டு கல்யாணமே செஞ்சுக்காம இருந்துட்டேன்.
நீங்களே சமைப்பீங்களா இல்ல ஆள் வச்சி செய்றீங்களா?
முன்னாடி நான் செஞ்சிட்டு இருந்தேன் இப்ப முடியல. அதனால ஒரு மாஸ்டர், கூட ஒரு ஆளு கட பாத்துக்க இருக்காங்க. நான் காலைல 11 மணியில இருந்து சாயந்தரம் 4 வரைக்கும் இருந்துட்டு போயிடுவேன்..பா.
சரி முடியலன்னா வேல எதுவும் செய்யாம இருக்கலாமே?
வீட்டுல இருந்தா தம்பி பசங்க, அக்கா புள்ளைங்களுக்கு விசேசம்னா செய்யனும். அப்ப போய் யாருகிட்ட நிக்க முடியும். நம்ம உழச்சி நாளு காசு வச்சிருந்தாதானே அடுத்தவங்களுக்கு செய்ய முடியும்.