மானியங்கள், கல்வி, முதியோர் உதவித் தொகைகள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், இந்த உதவிகள்/சேவைகள் மறுக்கப்படும் என்ற இடியை, மைய, மாநில அரசுகள் அதிரடியாகப் பொதுமக்கள் மீது இறக்கி வருகின்றன. மானிய உதவிகள் பெறுவதற்கு மட்டுமல்ல; வேலையில் சேருவதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, ஓய்வூதியம் பெறுவதற்கு, புதிய தொலைபேசி இணைப்பிற்கு, ஏன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குக்கூட ஆதார் எண் கேட்கப்படுகிறது. சுடுகாட்டில் அடக்கம் செய்ய பிணத்தின் ஆதார் எண் என்ன எனக் கேட்காதிருப்பது மட்டும்தான் பாக்கி. அந்த அளவிற்கு அரசின் அனைத்து மட்டங்களிலும் ஆதார் எண் இந்தியக் குடிமகனின் அடையாளமாகிவிட்டது.
சாலவன்பேட்டை என்ற ஊரில் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்கக் காத்திருக்கும் பொதுமக்கள்
அரசின் மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்கத் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இதுவரை 147 சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டது, அரசு. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுசனைக் கடிச்ச கதையாக, தற்போது ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணோடு இணைக்கும் நடைமுறை தமிழகத்திலும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இதுவரை நாடெங்கும் 69% ரேசன் அட்டைகள் அவற்றுக்கான ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கும் மைய அரசு, மீதம் உள்ள அட்டைகளை விரைந்து இணைப்பதற்குக் கெடு தேதிகளையும் நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இதுவரை நடந்த இணைப்பின் மூலம், ”2.33 கோடி போலி ரேசன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் 14,000 கோடி ருபாய் அளவிற்கு மானியம் மிச்சமாகியிருப்பதாகவும்” மைய அமைச்சர் பஸ்வான் கூறியிருக்கிறார். அதாவது, போலி ரேசன் கார்டுகளை ஒழித்து, ரேசன் கடை அரிசி கள்ளச் சந்தைக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் உயர்ந்த நோக்கில்தான் இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படுவதைப் போல நியாயவாதம் கற்பிக்கப்படுகிறது.
பொதுமக்களைப் பொருத்தவரையில், ஆதார் எண்ணைக் கொடுக்கவில்லை என்றால்,நைந்து, கிழிஞ்சு போன கார்டுக்குப் பதிலாக புது கார்டு கிடைக்காது, பொருள் கிடைக்காது என்ற பரிதவிப்பில் அரசின் இந்த வலுக்கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆதார் எண்ணைப் பதிந்து வருகிறார்கள். ஆதார் எண் இல்லாதவர்கள், அந்த எண்ணை வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதார் எண்ணை ரேசன் அட்டையோடு இணைத்துவிட்டால் போலி ரேசன் கார்டுகள் ஒழிந்துவிடும் என்பது, கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா என்ற புதிரைப் போன்றது. சமையல் எரிவாயு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்தபோதும் இதைத்தான் சொன்னார்கள். ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளைகள் டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் மடைமாற்றப்படுவது நின்றுபோய்விட்டதா, என்ன?
மதுரை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்காகப் புகைப்படம் எடக்க அரசு சேவை மையம் முன் காத்திருக்கும் பொதுமக்கள்
அரசின் உண்மையான இலக்கு போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பது அல்ல; மாறாக, உணவு மானியத்தைப் படிப்படியாக வெட்டுவது. இதன் முதல்படியாக, ரேசன் கார்டுகளோடு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கையும் இணைக்கிறார்கள். அடுத்து, மானிய விலையில் ரேசன் கடை மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை ரேசன் கடையில் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுமாறும், அதற்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உத்தரவு வரும். ஏற்கெனவே புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரடி மானியத் திட்டம் இனி நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதன் வெள்ளோட்டமாக, 39 மாவட்டங்களில் மண்ணெண்ணெய்க்கான மானியம் இனி வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்படும் என அறிவித்துவிட்டார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
மானிய விலையில் பொருளைக் கொடுத்தால் என்ன, மானியத்தை வங்கியில் போட்டால் என்ன – இரண்டும் ஒன்றுதானே எனச் சமப்படுத்துவதென்பது, போத்திகிட்டு படுத்தால் என்ன, படுத்துகிட்டு போத்திக்கிட்டால் என்ன என்பது போல சாதாரணமானது அல்ல. கையில் ஒரு நூறு ரூபாயோ, நூற்றைம்பதோ இருந்தால் ரேஷன் கடைக்குப் போய் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் – என அனைத்தையும் இன்று வாங்கிவிட முடியும். மானியத்தை வங்கியில் போடும் நேரடி உணவு மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்தப் பொருட்களை வாங்குவதற்கு குறைந்தது நானூறு, ஐநூறு ரூபாயாவது தேவைப்படும். மாதச் சம்பளம் வாங்கும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்திற்கு வேண்டுமானால் இந்தத் தொகை பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தினக் கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு, கிராமப்புற ஏழைகளுக்கு அப்படி இருக்கப் போவதில்லை.
இந்திய கிராமப்புறங்களில், குறிப்பாக வட இந்திய கிராமப்புறங்களில் ரேசன் கடைகள் தினந்தோறும் திறக்கப்படுவதில்லை. ரேஷன் கடை திறக்கப்படும் நாளன்று கையில் பணம் இருக்க வேண்டும். மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் திண்டாடும் ஏழைகள் – பழங்குடியின மக்களை, சந்தை விலையில் பொருட்களை வாங்குமாறு தள்ளுவதென்பது, அவர்களைப் பட்டினிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது.
நேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, ஒரு ரேஷன் அட்டைதாரர் பொருள் வாங்காவிட்டால், மானியம் வங்கிக் கணக்கில் சேராது. இதன் விளைவு என்னவென்றால், சந்தை விலையில் பொருளை வாங்குவதற்குரிய பணத்தைப் புரட்ட முடியாத ஏழைகள் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். வறுமைக் கோட்டுக்கான வரையறையை மாற்றி அமைத்து ஏழைகளை ஒழித்துக் கட்டியதுபோல, ஏழைகளைப் பொது விநியோகத்திலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மானியத்தைச் சேமிக்கப் போகிறது அரசு.
ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தாமலேயே, நைச்சியமான வழியில் அவற்றை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களாக மாற்றும் ரசவாதம்தான் நேரடி உணவு மானியத் திட்டம். பொதுமக்களைச் சந்தை விலைக்கு பொருட்களை வாங்குவதற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை, அவர்கள் அறியாமலேயே வெட்டுவது அரசுக்கு மிகவும் எளிதாகவிடும். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் அவற்றின் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் மெல்லமெல்ல வெட்டப்படும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை வந்த பிறகு, மிகச் சமீபமாக எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் இரண்டிரண்டு ரூபாயாக அரசு ஏற்றி வருவதை யாராலும் அறியமுடிகிறதா?
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் கொள்கையும் நடைமுறையும் இருப்பதால்தான், திறந்த சந்தையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடாமல் ஓரளவிற்காவது கடிவாளம் போட முடிகிறது. இந்தக் கொள்கையைக் கைவிடுவதென்பது, உணவுப் பொருட்களின் விலையை இனி வர்த்தகச் சூதாடிகள் தீர்மானிப்பதற்குத் தரப்படும் சுதந்திரமாகும். சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதற்குக் காத்திருக்கும் சூழலில் பொது விநியோக முறையில் வரவுள்ள நேரடி உணவு மானியத் திட்டம், மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உணவுப் பாதுகாப்பைக்கூட இல்லாது ஒழித்துவிடும். அப்படிபட்ட அபாயகரமான நிலை வந்த பிறகு எதிர்ப்பதைவிட, மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசின் நயவஞ்சகத் திட்டத்தை இன்றே எதிர்த்துப் போராட பொதுமக்கள் தயாராக வேண்டும். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?
எச்சரிக்கை: பெட்ரோல், பைப் வெடிகுண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்கும்பல்! விழிப்புடன் இரு!
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல் இருக்கின்றன.
மிகச் சமீபத்தில் கோவையில் சசிக்குமார் கொலையை முன்னிட்டு இந்துத்துவக் காலிகள் திட்டமிட்டு அரங்கேற்றிய தாக்குதல்களில் கடையுடைப்பு, பிரியாணி திருட்டு, செல்போன் கொள்ளை, வாகனங்களுக்கு தீ வைப்பு என்ற பட்டியலில் குண்டு வைப்பும் அடங்கியிருக்கிறது.
30-09-2016 அன்று தெற்கு கோவை, பொடனூர் பகுதி பள்ளிவாசல் மீது அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்ட பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். நாளிதழ்களில் பொடனூர் குண்டு வெடிப்பு சம்பவம் பெட்டி செய்தி அளவிற்கு கூட வரவில்லை.
காவிக்காலிகளின் வெடிகுண்டு பயங்கரவாதம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வலுவாக வேரூன்றியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பொதுமக்கள் இனி மிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு காவிக்கூட்டம் வெடிகுண்டு சம்பவங்களை இதுவரை எவ்விதம் அரங்கேற்றியிருக்கின்றனர் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
பொடனூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக திருப்பூர் மாவட்டம் அடுத்தடுத்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவங்களால் கலகலத்துப் போயிருந்தது. 29-02-2016 அன்று திருப்பூர் இந்து முன்னணி தலைவர் கோபிநாத் காரில் செல்லும் போது தன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கூறியிருந்தார். காரின் முன்பகுதி எரிந்த நிலையில் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் ஜிகாதி பயங்கரவாதிகள் இந்து தலைவர்களை குறிவைத்து கொல்கிறார்கள் என்று காவிக்கும்பல் வழக்கம் போல தன் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதை வைத்து திருப்பூரில் கலவரச் சூழலை உருவாக்க முனைந்தார்கள். வழக்குபதிவு செய்து முருகன் என்பவரை கைது செய்து விசாரித்ததில் கோபிநாத்தின் ஆலோசனையின் பெயரிலேயே கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முருகன் அதே இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபிநாத் இதற்கு முன்பாக தனக்கு தபால் வெடிகுண்டு வந்ததாக புரளியைக் கிளப்பியிருக்கிறார். பிடிபட்ட முருகன் தபால் வெடிகுண்டும் கோபிநாத்தின் திட்டம் தான் என்று தெரிவித்திருக்கிறார். தற்பொழுது முருகன் சிறையிலும் கோபிநாத்தும் பிற காவிக் கும்பலும் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கோபிநாத்தை தேடிவருகிறோம் என்று சொன்னதுடன் காவல்துறை தன் கடமையை முடித்துக் கொண்டது.
வேலூர் சத்துவாச்சேரியில் இந்து பயங்கரவாதிகளே குண்டு வீசிய பேருந்து
கோபிநாத்தைப் போன்றே இந்துமுன்னணியின் பல்வேறு நிர்வாகிகள் பெட்ரோல் குண்டுவீச்சு நாடகத்தில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வேலூர் சத்துவச்சாரி இந்து முன்னணி நிர்வாகி மகேஷ், தன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் கொடுத்திருக்கிறார். சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், தனக்குச் சொந்தமான பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். விசராணை தரப்பு இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதாகச் சொல்கிறது.
கோபிநாத், சீனிவாசன், மகேஷ் போன்ற காவி வானரங்களின் வெடிகுண்டு அரங்கேற்றங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. 2008 தென் காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆர்.எஸ்.எஸ் காலிகளே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வீசி கலவரத்தை நடத்த முயன்றனர் என்பதிலிருந்து இந்துத்துவ கும்பல் இதை ஓர் உத்தியாகவே செயல்படுத்திவருவதைக் காணலாம். இதில் தென்காசி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ரவி பாண்டியன், குமார் மற்றும் நாராயண சர்மா ஆகிய மூவரில் நாரயண சர்மாவிற்கு பைப் வெடிகுண்டு தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் உண்டு என்பது தனிக்கதை.
இந்த சம்பவங்களை தொகுப்பாக பார்க்கிற பொழுது, ஒவ்வொரு கலவரச் சூழலிலும் முன் தயாரிப்பாக பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் எங்கிருந்து வருகின்றன? காவிக்கூட்டம் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
சான்றாக மிகச் சமீபத்தில் 11-09-2016 அன்று இரவு, திருப்பூர் உகையனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நடத்திவரும் பனியன் கம்பெனியில் தீடிரென்று பெட்ரோல் குண்டு வெடிக்கிறது. இந்த சண்முகம் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணியின் பொருளாளர் ஆவார். இக்குண்டுவெடிப்பை முன்னிட்டு திருப்பூரில் கடையடைப்பு நடத்துவதாக இந்துவானரங்கள் கலவரச் சூழலைக் கட்டியமைத்தன. இச்சம்பவத்தின் விசாரணை நமக்கு அதிர்ச்சியான விசயத்தை முன்வைக்கிறது. அதாவது பெட்ரோல் குண்டு வெடித்த சமயத்தில் குண்டு வெடித்த பனியன் கம்பெனி வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததாம். இதில் இரண்டுவாய்ப்புகள் உள்ளன. ஒன்று காவி ஓநாய் ஹெச். ராஜா சொல்வதைப் போன்று பங்களாதேஷ் பயங்கரவாதிகள் கம்பெனியின் கதவைப் பூட்டிவிட்டு குண்டு போட்டிருக்க வேண்டும். அல்லது பனியன் கம்பெனியில் முன்கூட்டியே பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்திருக்க வேண்டும்.
பனியன் கம்பெனி போர்வையில் வெடிகுண்டு முன் கூட்டியே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது வெடிகுண்டை அசெம்பிள் செய்யும் போது வெடித்ததா? என்பதை காவல் துறை இதுவரை விசாரிக்கவேயில்லை! இதுவரை பல்வேறு வெடிகுண்டு புகார்கள் பொதுவெளிக்கு வந்துவிட்ட பிறகு இந்து முன்னணியாளர்களின் வீட்டிலும் தொழிற்சாலையிலும் முறையான சோதனையை காவல் துறை செய்திருக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பிற மாநிலங்களில் காவிக் கும்பல் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு மகராஷ்ட்ரா மாநிலம் நாண்டட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் வீட்டிலயே வெடிகுண்டு தயாரித்த பொழுது தற்செயலாக வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் காவிக்கும்பல் வெடிகுண்டு தயாரிப்பது வெளிச்சத்திற்கு வந்ததது. நாட்டையே உலுக்கிய மகராஷ்ட்ராவில் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு, மத்திய பிரதேசம் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜூதா விரைவு ரயில் குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் தான் திட்டமிட்டு இயக்கியது என்பது அம்பலமாகிப் போனது.
கோவை இந்து முன்னணி கலவரம் – புதிய வீடியோ ஆதாரம்:
வடமாநிலங்கள் அல்லாது கேரளாவிலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 20-08-2016 அன்று கேரளா கண்ணூர் மாவட்டம் பிஜேபி கட்சியைச் சேர்ந்த தீக்ஷீத் (வயது 23) வீட்டிலேயே வெடிகுண்டை அசெம்பிள் செய்து பொழுது வெடித்துச் சிதறி இறந்தார். 2008லும் இதே போன்று கண்ணூரில் பஜ்ரங்தளைச் சேர்ந்த பியுஸ் மிஸ்ரா மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த புபீந்தர் சிங், வீட்டில் வெடிகுண்டை கையாண்ட பொழுது வெடித்துச் சிதறி இறந்தனர். காவல் துறை இவர்களது வீட்டில் வெடிக்கப்படாமல் இருந்த பதினோறுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை பின்னர் கைப்பற்றி இருந்தனர்.
அடுக்கடுக்கான இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகு ஜமீன்தார் வீட்டு நாய்கணக்காக ஆர்.எஸ்.எஸ் காலிகள் வலம் வருகின்றனர். ஒரு பிரச்சனையின் முகாந்திரம் வெளியே தெரியும் பொழுதே, அதில் தலையிட்டு காப்பாற்ற வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நீதிமன்றம் இத்தகைய ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளுக்கு டவுசர் போடாமல் பேண்ட் போட்டு ஊர்வலம் நடத்தலாம் என்று அனுமதி அளிக்கிறது. பிரச்சனை டவுசர் பேண்டு தான் என்று வழக்காடு மன்றமே ஆர்.எஸ்.எஸ் விசயத்தில் அம்மணமாக நிற்கிறது!
மேலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தி இந்து, தினமலர், தினமனி போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் உண்மைகளை மறைத்து இந்துத்துவ காலிகளுக்கு போர்வை போர்த்துகின்றனர். இவ்வளவிற்கும் பிறகு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் இருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தானதாகும். இனியும் எங்காவது பெட்ரோல் வெடிகுண்டு, பைப் வெடிகுண்டு நடைபெற்றால் அதற்கு இந்த நீதிமன்றமும் அரசும் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
இதுவரை, ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘ஆடி மாத கூழ் ஊற்றுகிறோம்’, ‘விளக்கு பூஜை நடத்துகிறோம்’, ‘மாரியம்மனுக்கு மாவிளக்கு வைக்கிறோம்’ என்று ஊர்திருவிழாக்களை கைப்பற்றிதான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இந்த அளவிற்கு வளர்த்து எடுத்து இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது. திருவிழாக்களில் ஒவ்வொரு ஊர்மக்களும் காவிக் கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். வரவிருக்கும் பூஜை விடுமுறை, மொகரம் பண்டிகைகள் இந்துத்துவக் காலிகளுக்கு மிக வாய்ப்பான ஒன்று. தமிழ்நாட்டில் பேரணியாகச் செல்லும் இவர்கள் பெட்ரோல் மற்றும் பைப் வெடிகுண்டுகள் வைப்பதில் கவனம் செலுத்தவே செய்வர். எனவே மக்கள் மற்றும் இளைஞர்கள் வீதிக்கொரு கமிட்டியை அமைத்து இந்து முன்னணியினர் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை கண்ணும் கருத்துமாக ஆராய வேண்டும். அரசு தோற்றுப்போன பிறகு காக்கித்துறை காவித்துறையாக மாறிவிட்ட பிறகு நம்மை நாமே காத்துக்கொள்வதுதான் நம் முன் இருக்கும் ஒரே வழி!
“பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடரப் போவதில்லை” என்று சொன்ன மோடி அரசுக்கு உடனே பதிலடி கொடுத்தார், பாக். அரசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஸ் அஜீஸ். “ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாகச் சொல்வதே போர்ப் பிரகடனம் ஆகும். கார்கில், சியாச்சின் போர்களின்போதுகூட சிந்து தடுக்கப்பட்டதில்லை. எனவே, இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், சர்வதேச நீதிமன்றத்திலும் பாக். முறையிடும்” என்றார்.
“போரிடும் பகை நாடாக இருப்பினும், நதிநீரைத் தடுப்பதென்பது அந்நாட்டு குடிமக்களைப் பட்டினிக்குத் தள்ளும் போர்க் குற்றம் என்று கூறுகிறது ஜெனிவா ஒப்பந்தத்தின் 54 பிரிவு. காவிரியைச் சார்ந்திருக்கும் 25 இலட்சம் ஏக்கர் விவசாயத்தை, 40 இலட்சம் தஞ்சை விவசாயிகளை, குடிநீருக்குச் சார்ந்திருக்கும் 19 மாவட்ட மக்களை மரணத்துக்குத் தள்ளும் பாரதிய ஜனதா, தமிழகத்தை பாகிஸ்தானைவிடக் கொடிய பகைநாடாக நடத்ததுகிறதென நீங்கள் கருதவில்லையா?
பாகிஸ்தானுக்கு எதிரான போர்ப் பதற்றம் நிலவுகின்ற சூழலிலும் வாகா எல்லை வழியாக சுமார் 185 லாரிகளில் சரக்குகள் வந்து போகின்றன; பேருந்துகள் செல்கின்றன. ஆனால், கர்நாடக எல்லைக்குள் தமிழகப் பேருந்துகளோ, லாரிகளோ அனுமதிக்கப்படுவதில்லை. தடுப்பவர்கள் கன்னட அமைப்பு என்ற போர்வையில் உலவும் பாரதிய ஜனதா காலிகள். ஒருமைப்பாடு பேசும் இந்தப் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானைக் காட்டிலும் கேவலமாகத் தமிழகத்தை நடத்துவதை நீங்கள் காணவில்லையா?
தமிழர்கள் கட்டிய கோவிலில் எந்தப் பார்ப்பான் மணியாட்ட வேண்டும் எனத் தீர்ப்பு கூறவும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தின் மருத்துவ இடங்களைத் ‘தேசியமயமாக்கவும், பேரழிவு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைக்கவும், சேதுக்கால்வாய்க்காக நடைபெற்ற கடையடைப்பைக் காட்டி, தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிடுவதாக மிரட்டவும் நாக்கைச் சுழற்றிக் கொண்டு பேசிய உச்சநீதி மன்றம், காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசிடம் வாலைக் குழைக்கிறதே, சட்டம், நீதி என்ற இந்தப் பித்தலாட்டத்தை இனிமேலும் நாம் நம்புவதும், கட்டுப்படுவதும் மடமையில்லையா?
எல்லா நெறிமுறைகளையும் மீறி சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், வெங்கய்யா நாயுடு என ஒரு கும்பல், கர்நாடகத்துடன் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு எதிராகச் சதி செய்கிறது. மோடி தங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார் கர்நாடக பா.ஜ.க.வின் ஜெகதீஷ் ஷெட்டர். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் உத்தரவிட உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை; அதனை ஏற்பதும் நிராகரிப்பதும் மத்திய அரசின் விருப்பம் என்று உச்சநீதி மன்றத்தில் பேசுகிறது மோடி அரசு. “இதைவிட காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு கிடையாது என்று மைய அரசு நேரடியாகச் சொல்லியிருக்கலாம் என்று பா.ஜ.க. அபிமானியான தினமணியே புலம்புகிறது. இது தமிழ்நாட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் நடத்தும் போர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?
பா.ஜ.க.வும் காங்கிரசும் தமிழகத்தில் தலையெடுக்கவே இயலாததுதான், இந்த தேசியக் கட்சிகளின் ஓரவஞ்சனைக்கு காரணம் என்பது பகுதியளவே உண்மை. தமிழகத்தின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு, திராவிட இயக்க மரபுதான் இந்த மதவெறியர்கள் இங்கே காலூன்ற முடியாததற்குக் காரணம். இவர்களை இந்துக்களின் பிரதிநிதிகளாக எண்ணியிருந்தவர்களும் கோவையில் அவர்கள் நடத்திய காலித்தனத்தைப் பார்த்தபின் தெளிந்து விட்டார்கள். ஆர்.எஸ். எஸ். பா.ஜ.க. கும்பல்தான் தமிழ்ச் சமூகத்தின் கொடிய எதிரி. இந்தச் செய்தியைத் தமிழகம் முழுதும் கொண்டு செல்வோம். எதிரிக்குரிய இடத்தை அவர்களுக்குக் காட்டுவோம்.
_____________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________
நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்
கடலூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “நீர்நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் கடைவீதிகள், பேருந்துகள், தேநீர் விடுதிகள், அரசு அலுவலகங்கள் என மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் கடந்த ஒருவார காலமாக கடலூர் வட்டாரத்தில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் விக்னேஷ் மகாலில் 9.10.2016 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதிவாழ் மக்கள் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு அரங்கத்தை நிரப்பினர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தின் பொருளாளர் திரு.பூங்குன்றன்,
சைமா சாயப்பட்டறை கழிவு (கோப்புப் படம்)
“சாயப்பட்டறைகளின் கழிவுகளால் கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளை நாசமாக்கி நஞ்சாக்கியவர்கள் சவுத் இந்தியன் மில்ஸ் அசோசியசன் என்கிற சைமா சாயப்பட்டறை கொலைகாரர்கள். தங்கள் பகுதியில் விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் அழித்து உருவான சாயப்பட்டறைகளை எதிர்த்த மக்களின் போராட்டங்களை அரசும், போலிசும் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு ஒடுக்கியது. இங்கே அரசு மக்களின் நலனுக்காக எங்கே உள்ளது. எனவே உண்மையில் மக்களுக்கான அரசு வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம் வேண்டும்” என்று பேசினார்.
அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சேகர்,
“இப்ப ஆயுத பூஜைநேரம், இன்றைக்குக் கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறீர்கள் என்றால் உண்மையில் என்னால் நம்மவே முடியவில்லை. இப்போதல்லாம் பக்தி முத்தி போயி எல்லாம் குறிசொல்லும் காலமாகி போய்விட்டது. இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைக்கு விடை தெரியாமல் தவிக்கிறோம். அது காவேரி பிரச்சனை அது நம்ம பிரச்சனை அதாவது தமிழ் நாட்டோட பிரச்சனை. இன்னொரு பிரச்சனைக்கு கோயில் கோயிலா போவது, மொட்ட போடறது, பால்குடம் எடுப்பது, மண்சோறு சாப்பிடறது என்று கரைவேட்டி போட்ட கட்சிக்காரங்க இப்ப அப்பல்லோவ சுத்தி மஞ்ச வேட்டியா தெரியுது. போனவருடம் இதே சீசனில் மழையில் தவித்தோம் அரசாங்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை, இந்த வருடம் அரசாங்கம் அப்பல்லோவிலேயே செயல்படுது. காவேரி பிரச்சனைக்கும், காவேரி தாயோட பிரச்சனைக்கும் ஒரே தீர்வு, சாமி வந்து குறிசொன்ன சரியா இருக்குமா?” என்ற போது அரங்கம் முழுக்க கரவொலி எழுப்பினார்கள் மக்கள்.
பன்னாட்டு முதலாளிகளுக்கு மோடியின் சேவை (கோப்புப் படம்)
“சிங்கிள் பெஞ்ச், டபுள் பென்ச், ட்ரிபில் பென்ச் என்று பல பென்ச் வந்தாலும் உமாபாரதி, மல்லிகா அர்ஜீன் கார்கே போன்றவர்களின் கண் பார்வையில்தான் அது இயங்குது. கர்நாடகாவில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்க எத்தகைய கீழ்த்தரமான வேலைகளையும் செய்து இனவெறியை தூண்டும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளன சமீபகால சம்பவங்கள். எனவே இனியும் நாம இப்படி இருந்தோம்னா செத்து மடிந்துதான் போகவேண்டும். மொத்த தமிழ்நாடும் கார்ப்பரேட்டு கம்பனிகளோட வளர்ச்சிக்காக மாறிபோய் விட்டது. வேதாந்தா கம்பெனியை விரட்ட ஆதிவாசி மக்கள் வில்லின் நுனியில் அதிகாரத்தை செலுத்தினார்கள். விரட்டியடிக்கப்பட்டது வேதாந்தா நிறுவனம். இங்கே நம்முடைய கனிமவளங்களை சுரண்டி நீர்நிலைகளை அழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளையும், பயங்கரவாத பூச்சாண்டி காட்டி பயங்கரவாதம் செய்யும் காவி தீவிரவாதிகளை வீழ்த்த வேண்டும்” என்று உரையாற்றினார்.
பெருமாள் ஏரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க செயலாளர் திரு சண்முகம் பேசியபோது, “நீர்நிலைகள் பாதுகாப்பை அரசாங்கம் எந்த வகையிலும் சரிசெய்யாது. 25 வருடமா வெள்ளம் வடிவதற்கு யோசன சொல்லி போராடிவருகிறோம். மழைக்காலத்தின்போது மொத்த தண்ணீயும் இங்கதான் வந்து சேருது. இதுக்கு கடல்ல கலக்கிற இடம் ஒரேவழி தான். அதுவும் வளைந்து நெளிந்து போவும், வாய்க்காவும் எதுவும் சுத்தமா இருக்காது, தண்ணீ தேங்கிப் போயி பயிரெல்லாம் அழிந்து நாங்க சாகிறோம். இந்த வெள்ள தண்ணீயை வடியவைக்க இரண்டு முகத்துவாரம் வேணும்முன்னு போராடி வருகிறோம். எந்த அதிகாரியும் செய்யல, ஒன்னு ஒன்னுக்கும் மனுகொடுத்து கேட்டாலும் விவசாயிகள் அலையணும், லஞ்சம் கொடுக்கணும் அப்பதான் ஃபைல் அதிகாரிங்க டேபிளில் இருந்து நகரும்.
கடலூர் வெள்ளம் (கோப்புப் படம்)
பொதுப்பணித்துறைன்னு ஒன்னு இருக்குது, ஆனால் அது பொதுப்பணியை செய்யறது இல்ல, மணல் அள்ளறதுலயும், கட்டட காண்ட்ராக்டிலேயும், கமிசன் பணியைதான் பார்க்குது. அப்பறம் எப்படி நாம நல்லாயிருப்போம். எங்க கிராமத்த சுத்தி இருக்கிற குளங்கள எங்க சொந்த முயற்சியில நாங்களே ஜே.சி.பி வைத்து பல கிலோமீட்டர் சுத்தம் செய்து இருக்கிறோம். அடுத்த மழைக்கு பெருமாள் ஏரியை சுத்த செய்யலைன்னா பெரிய அழிவு வரும்.
போன மழையின்போது புதிய தலைமுறை டிவி வந்ததது. நீர்நிலைகளை சுத்தம் செய்வது சம்மந்தமாக விவாதம் நடத்துச்சி. அப்போ என்னை பேட்டி எடுத்தாங்க. அவங்க தேர்வு செய்து இருக்கிற குளத்தை சுத்தம் செய்வதற்கு எங்க ஊரில் இருக்கும் ஆட்களையும் என்னையும் கூப்பிட்டாங்க. எங்க ஊரு பெருமாள் ஏரியையே சுத்தம் செய்ய காணோம். 14 கிமீ நீளம் 1 கிமீ அகலம் 20 மீட்டர் தண்ணீரை தேக்கலாம். இதச் செய்யறதுக்கு அரசாங்க அதிகாரிங்க கிட்ட கேட்டுக்குட்டு இருக்கிறோம். எங்க ஊருகாரங்க வருவது இருக்கட்டும், அப்படியே வந்தாலும் ஒருநாள் இரண்டுநாள் வரலாம். ஆனால் இப்ப உள்ள நிலைமையில சாத்தியமில்ல, இதுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவர்கள் வருவார்களா? இல்ல பச்சமுத்து வருவாரா? அவர் மகன்தான் வருவாரா? நீங்க சொல்லி கொடுப்பதை பேசறதுக்கா நாங்க இருக்கிறோம். எங்க பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தெரியாது, உங்க விளம்பரத்துக்காக எங்ககிட்ட வராதிங்க என்று சொன்னதுபோது அவர் கோபித்து கொண்டார்” என்று அம்பலப்படுத்தியபோது அரங்கில் சிரிப்பொலியுடன் கைதட்டினர்.
அடுத்து பேசிய தி.மு.க மாணவரணி செயலாளர் திரு இள.புகழேந்தி, “வரலாறு என்பது கங்கைக் கரையில் இருந்து துவங்குவதாக தவறாக உள்ளது, அது காவேரியில் இருந்து துவங்கப்பட வேண்டும். ஏற்கனவே நம் திராவிடன் வரலாறும், தமிழன் வரலாறும் இரட்டடிப்பு செய்ததுபோல் இப்போது இந்த கயவர்கள் நம்முடைய ஆறுகளையும், ஏரிகளையும் அழித்து நம்முடைய விவசாயத்தை அழித்து நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி ஆட்சியாக மாறிபோய்விட்டது.
“காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான்” (சுப்பிரமணியசாமி)
இயற்கை அழிந்தால் உயிரினம் அழியும், ஆசியாவிலேயே மிகப்பெரிய டெல்டா பகுதியாக உள்ள இப்பகுதியில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் அழிந்துள்ளன. இந்நிலையில் ஒருவர் பறந்துகொண்டு இருக்கிறார், இன்னொருவர் படுத்து கொண்டு இருக்கிறார். பறந்து கொண்டு இருப்பவர் தன்னுடைய நாடு எது என்று தெரியாமல் உலக நாடுகளை சுற்றிகொண்டிருக்கிறார். அவர்தான் நரேந்திர மோடி. இன்னொருவர் படுத்துக் கொண்டு அப்பல்லோவில் இருக்கிறார். எல்லா பிரச்சனைகளையும் மறைப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனையை பெரிதாக்கி அதையே பேசவைத்து திசைமாற்றுவது இவர்கள் குணம். நபர்கள் வேறு என்றாலும் இவர்கள் சிந்தனையும், செயலும் ஒன்றுதான். கர்நாடகாவில் கலவரம் செய்கின்ற காவேரி நீரை தர மறுக்கின்றவர்களின் நோக்கமும் ஒன்றுதான். அது என்ன நோக்கம்? தமிழன், தமிழர்கள் மீதான வெறுப்புணர்ச்சியையும், பகையுணர்ச்சியையும் வளர்ப்பதன் மூலம் ஆட்சியை பிடிக்க அவர்கள் செய்யும் சூழச்சி. அங்கே ஆட்சியை பிடிக்க சூழ்ச்சி, இங்கே ஆட்சியை தக்க வைக்க சூழ்ச்சி.
நாம் போராடுகிறோம். பேருந்துகளை நிறுத்துகிறோம், கடைகளை மூடுகிறோம், மறியல் செய்கிறோம், ஆர்ப்பாட்டம் செய்கிறோம், கைது செய்யப்படுகிறோம். ஆனால் ஒரு பார்ப்பனிய பயங்கரவாதி அமைதியாக இருந்துகொண்டு பேசுகிறான். “காவேரிக்காக ஏன் போராட்டம், கடல் தண்ணியை நல்ல தண்ணீயாக்கினால் விவசாயம் செய்யலாம், குடிக்கலாம், குளிக்கலாம்” என்று நக்கல் செய்கிறான். இவனைப் போன்ற நாய்களையெல்லாம் பார்த்த இடத்தில் செருப்பால் அடிக்க வேண்டும்.
நான் தி.மு.க-வைச் சேர்ந்தவன் என்பதற்காக அப்படி சொல்லவில்லை. உண்மையிலேயே தமிழர்கள் நாத்திகவாதிகள், சுயமரியாதைகாரர்கள், அவர்கள் இழிவானவர்கள், என்கிற விசமத்தனமான பார்வைதான் சுப்பிரமணிய சுவாமிக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் உள்ளது. இங்கே எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள். எனவே ஆணையங்கள், தீர்ப்புகள், நிபுணர் குழுக்கள், மேலாண்மை வாரியம் போன்றவை தீர்வை தராது.
நாலு பேரு இருந்தா டிமாண்டு 400 பேர் இருந்தால் கமாண்டு இதுதான் மக்கள் அதிகாரம். இந்த நாட்டை பாதுகாக்கவும், இயற்கையை பாதுகாக்கவும், போராடுவோம். வ.உ.சி, சுப்பரமணிய சிவா, திருப்பூர் கொடிகாத்த குமரன் போன்றவர்கள் பாதையில் நாட்டை காப்போம். தந்தை பெரியாரின் பாதையில் ஆர்.எஸ்.எஸ், மோடி, சுப்பரமணியசாமி போன்ற பயங்கரவாதிகளை வீழ்த்த மக்கள் அதிகாரமாக ஒன்றிணைவோம்” என்று முடித்தபோது அரங்கில் நீண்டநேர கரவொலி ஒலித்தது.
இறுதியாக மக்கள் அதிகார மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேசுகையில்,
“காவேரி சிக்கல் என்பது தண்ணீர் சிக்கல், நதிநீர் சிக்கல்களை உள்ளடக்கியது. கடந்த 150 கால வரலாற்றில் எப்போதுமே இருதேசிய இனங்களுக்கும் இடையில் இப்படிப்பட்ட மோசமான பதற்றம் இருந்ததில்லை. தமிழர்களை அடித்த ஒவ்வொருவனும் 91 கலவரத்தை தெரியுமா என்று சொல்லி சொல்லி அடித்துள்ளார்கள், வாட்டாள் நாகராஜன் என்ற கன்னட இன வெறியனின் அடியாட்கள். பி.ஜே.பி, ஆர்,எஸ்,எஸ்-காரர்கள் உண்மையிலேயே கர்நாடக மக்கள்மீது உள்ள பாசத்தால் செய்யவில்லை. இவர்கள் இனவெறியை தூண்டுவதன் மூலம் அரசியல் உள்நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. உங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வேண்டுமா என்று கர்நாடக மக்களுக்கு வெறியூட்டுகிறார்கள்.
உண்மையில் தண்ணீர் வேண்டும் என்பவர்கள் கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர விடுதிகள், உல்லாச மாளிகைகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றிற்கு தண்ணீர் தேவை, இதற்காகவே காவேரியை சீரழித்து உள்ளார்கள். இவை மட்டுமின்றி பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 900 ஏரி, குளங்கள் இருந்தன. அவை எல்லாம் இன்று குடியிருப்புகளாக மாறிவிட்டன. உலகமயமாக்கலின் விளைவாக பெரிய குடியிருப்புகள், மேட்டுக்குடியினருக்கு தண்ணீர் தேவையாக உள்ளது. இதற்காகவே தமிழகத்தின் டெல்டா அழிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன. ஆற்றின் நீர்நிலைகள் அனைத்தும் தொழிற்சாலைகளால் நஞ்சாக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த நீராதாரங்கள் அழிக்கப்படுவதோடு அதோடு விவசாய நிலங்களும் அழிந்து போய்வருகின்றன. இதை செய்கின்றவர்கள் அரசியல், அதிகாரவர்க்க கிரிமினல்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலீசு கிரிமினல்கள். இந்த கூட்டணிதான் அனைத்தையும் இயக்குகிறது.
தோழர் காளியப்பன் உரை
இன்று தமிழகத்தின் ஆறுகளில் மணல்கொள்ளை, நீலகிரி மற்றும் ஆந்திர காடுகளில் மரங்கள் வெட்டி காடுகள் அழிப்பு, மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில், செயில் குழாய் பதிப்பு கூடங்குளம் அணுஉலை என்று மொத்த நாடும் இந்த கிரிமினல் கும்பலால் அழிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் உத்தரவுகளை அதிகாரிகளே மதிப்பதில்லை, நீதித்துறையின் உத்தரவுகளை எந்த மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நாட்டைகாக்கும் அரசு கட்டமைப்பு என்பது எதையும் பாதுகாக்க முடியாமல், அமுல்படுத்த முடியாமல் தோற்றுபோய் விட்டன என்பதை ஒவ்வொரு போராட்டங்களும், சம்பவங்களும் உணர்த்துகின்றன.
காவல்துறையும், நீதித்துறையும் மக்களுக்காக தாம்செய்ய வேண்டிய கடமையிலும், பொறுப்பிலும் இருந்து விலகி ஓடிபோனது மட்டுமல்லாமல் நியாயமான கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அடக்கி ஒடுக்குகின்ற கட்டமைப்பாக மாறிவிட்டது.
இனி இவர்கள் செய்ய தவறியதை நாம் செய்வோம், தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இரட்டை வேடம்போடும் தமிழினத்தின் மீதான வெறுப்புடன் ஓரவஞ்சனை செய்யும் மோடி அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவோம். தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான வருமானவரித் துறை, ரயில்வே, தொலைபேசி, கஸ்டம்ஸ், தபால் அலுவலகங்கள் போன்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மூடுவதன் மூலமாகத்தான் இந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை பணிய வைக்க முடியும். எங்கெல்லாம் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எங்கெல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளதோ அங்கெல்லாம் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து கொள்ளும், மாற்று அரசு நிர்வாகமாய் நாமே முன்னேறுவோம்” என்று கூறி முடித்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சென்னை வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நடந்து வந்தேன். நிழலுக்காக தேடியதில் கிடைத்த ஒரு சர்ச் வளாகத்தில் ஒதுங்கினேன். என் களைப்பறிந்து தண்ணி தந்தது மட்டுமல்லாமல் மின் விசிறியை போட்டவரைப் பார்த்தேன். உழைப்பறிந்த ஒருவருக்கு மற்றவரின் களைப்பை புரிந்து கொள்வது மிகவும் எளிது என்பதை சொல்லாமல் உணர்த்தியது அந்தோணியின் செய்கை.
திருத்தணியை அடுத்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. 36 வயதாகும் இவருக்கு 28 வயதுடைய மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்தோணி சென்னையில் உள்ள இந்த தேவாலயத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்.
திருத்தணியில இருந்து இங்க எப்படி வேலை கிடைச்சு வந்திங்க?
மாதிரிப் படம்
திருத்தணியில உள்ள திருச்சபையில மெம்பரா இருக்கேன். நான் பிள்ளைகள வச்சுகிட்டு படுற கஸ்டம் எல்லாம் ஃபாதருக்கு தெரியும். அங்க சொல்லி வச்சுருந்ததால இங்க வேலை இருக்கு போறியான்னு கேட்டாங்க. அவங்க ஏற்பாட்டுலதான் இங்க வேலைக்கு வந்தோம்
குடும்பத்தோடவா வந்துருக்கிங்க?
ஆமா! சர்ச்சு நிர்வாகத்துலேயே பள்ளிக்கூடமும் இருக்கு. பசங்கள அதுல சேத்துருக்கேன். என் சம்சாரமும் பள்ளிக்கூடத்துல பசங்கள பாத்துக்கற ஆயா வேலை பாக்குது.
நீங்க என்னென்ன வேலை செய்றீங்க?
இந்த சர்ச்சு வளாகம் முழுசும் கூட்டி பெருக்கி சுத்தமா வச்சுக்கனும். ஃப்ரேயர் ஹால நீட்டா வச்சுக்கனும். மொத்த இடத்துக்கும் தண்ணி டேங்குல ஏத்தனும். செடிகளுக்கு தண்ணி விடனும். கேன் வாட்டர் எடுத்து வந்து ஆபிஸ் ரூம், க்ளாஸ் ரூம், ஃப்ரேயர் ஹால் எல்லா எடத்துலயும் போடனும். எலக்ட்ரிக், ப்ளம்பிங், கார்பெண்டர் வேல எதுல பிரச்சனையின்னாலும் சரி செய்யனும்.
சர்ச்சுல கல்யாணம், ஞானஸ்தானம், இப்படி ஏதாவது விசேசம் நடந்தா சாமினா பந்தல், சேரு, சமையல் பாத்திரம் எல்லாம் சர்ச்சு நிர்வாகத்து மூலமா வாடகைக்கு கொடுக்குறாங்க. அதை பொறுப்பா கணக்கு பாத்து கொடுக்கனும். திருப்பி வாங்கனும். இது போக எந்த வேலை சொன்னாலும் செய்வேன்.
உங்க சம்சாரம் என்ன வேலை பாப்பாங்க?
சம்சாரம் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், டாய்லெட் சுத்தப்படுத்தனும். பிள்ளைங்கள பாத்துக்கனும், சோறு ஊட்டனும், ஒன்னுக்கு ரெண்டுக்கு போனா அதை பாக்கனும்.
எவ்வளவு சம்பளம் குடுக்குறாங்க?
எனக்கு 5000 என் சம்சாரத்துக்கு 2000 தாராங்க.
சென்னையில் இந்த சம்பளம் உங்களுக்கு குடும்பம் நடத்த போதுமானதா இருக்கா?
நன்கொடையா வர்ற அரிசியில 20 கிலோ கொடுப்பாங்க. மத்தபடி குடும்பத்துக்கான செலவு நம்மளது. மூணு பிள்ளைகளுக்கும் படிப்புக்கு காசு கிடையாது. உடம்புக்கு எந்த நோயி வந்தாலும் வயித்தியம் பாக்கறதா சொன்னாங்க. அட்டை ஓடு போட்ட ரூமு குடுத்துருக்காங்க (அஸ்பெஸ்டாஸ்). கரண்டுக்கு காசு கெடையாது. இது எல்லாத்தையும் கணக்கு போட்டா முன்ன பாத்த வேலைக்கி இது எவ்வளவோ மேலு. ஆண்டவர் நல்ல வழியத்தான் காட்டிருக்காருன்னு படுது.”
இதுக்கு முன்னாடி என்ன வேலை பாத்திங்க?
சமையல் மாஸ்டரா இருந்தேன்.
அந்த வேலையை பத்தி சொல்லுங்க?
அந்த வேலையை பத்தி என்னத்தங்க சொல்றது. 8 வருசமா இந்த வேலைதான் பாத்தேன். 2000 பேருக்கு ஆடர் எடுத்து சமைப்பேன். சீசனுக்கு 4, 5 கல்யாணம் வரும். மத்த மாசத்துல 1, 2 வர்ரதே தடுமாற்றம்தான். சம்சாரமும் கூட ஹெல்பரா வருவாங்க. இருந்தும் கட்டுபடி ஆகலை.
என்ன வகை சமையல் செய்வீங்க? வருமானம் என்ன கிடைக்கும்?
சைவம் அசைவம் ரெண்டும் செய்வேன். கறியும் அரிசியும் ஒன்னா கலந்த தம் போட்ட பிரியாணி செய்ய 1 கிலோ அரிசிக்கி 70, 80 பேசுவோம். சோறு தனி கிரேவி தனியா செஞ்சு ரெடி பன்ற பிரியாணின்னா 100 ஆகும். 100 இல்லேன்னா 150 கிலோ அரிசிக்கிதான் ஆடர் கிடைக்கும். 4 ஹெல்பர் வேணும். சைவமுன்னா ஹெல்பரு இன்னும் அதிகமாகும். அவங்க சம்பளம் போக என்னத்த மிஞ்சும் சொல்லுங்க.
பெரிய ஆர்டர் எல்லாம் ஏன் உங்க கைக்கு கிடைக்கிறதில்லை?
இப்பெல்லாம் இணையத்துலேயே ஆர்டர் எடுக்குறாங்க. அந்த வசதியெல்லாம் நமக்கு கெடையாது. எனக்கு கிடைச்ச சின்ன ஆர்டர் கூட பல நேரம் நேரடியா வராம இணையத்துல உள்ள தரகருங்கதான் பேசிவிடுவாங்க. எல்லாம் தரகர் இல்லாம நடக்காது.
விவசாயி ஆன நீங்க எப்படி சமையல் கத்துகிட்டிங்க?
என்னத்தங்க விவசாயம். எங்க அப்பாதான் விவசாயம் பாத்தாரு. நான் கூடமாட எல்லா வேலையும் செய்வேன். எங்களுக்கு கொஞ்சம் நிலம் சொந்தமா இருந்துச்சு. குத்தகைக்கு கொஞ்சம் விவசாயம் செஞ்சோம். பாடு பட்டதுதான் மிச்சம். நாங்க நாலு பிள்ளைங்க வயித்துக்கு சாப்பாடு நல்ல துணிமணி வாங்கிக்க முடியாது.
பிறகு அப்பா கூட சேந்து விவசாய கூலி வேலைக்கி போனேன். நண்பர்களோட சேந்து பெயிண்டிங் வேலைக்கி போனேன். 18 வயசு ஆச்சு என்னடா பொழப்பு இது கையுக்கும் எட்டாமெ வயித்துக்கும் பத்தாமென்னு வெறுத்துப் போயி வீட்ட விட்டு வேலை தேடி வெளிய வந்தேன். ரயில்வே கேண்டின்ல வேலைக்கி சேந்தேன்.
சமையல் தெரியாதப்ப எப்படி கேண்டின்ல வேலைக்கி சேந்திங்க?
சமையல்காரரா சேரல. கேண்டின்ல உள்ள சாப்பாட்ட ரயில் பயணிகள்ட்ட விக்கற சேல்ஸ் மேனா வேலைக்கி சேந்தேன்.
அதுல எப்படி மாச சம்பளமா?
மாதிரிப் படம்
மாச சம்பளமா? வயித்தெரிச்சல கெளப்பாதிங்க. ஒரு சாப்பாட்டுக்கு 2, 3 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கி 200 அல்லது 300 கிடைக்கும். விஜயவாடவுல இருந்து சென்னைக்கி வர்ர ரயில்ல, நாங்க அஞ்சு பேரு சேந்து இந்த வேலையை பாத்தோம். லாப நஷ்டத்த பிரிச்சு எடுத்துக்குவோம். சாப்பாட்டுக்கு மூனு மணி நேரத்துக்கு முன்னமே யாருக்கு என்ன சாப்பாடு தேவையின்னு ஆர்டர் எடுத்து ஸ்டேசன்ல இருக்குற கேண்டினுக்கு போன்ல சொல்லிருவேம். தயாராயிரும்.
சாப்பிடறவங்கள பாத்துட்டு பக்கதுல இருக்கவங்க திடீர்னு சிலபேர் சாப்பாடு கேப்பாங்க. அதுக்காக கூடுதலா 100 சாப்பாடு எடுப்போம். ஆர்டர் குடுத்த சிலபேர் பாதி வழியிலேயே இறங்கிருவாங்க. இல்ல வேணாம்னு சொல்லுவாங்க. மிஞ்சுன சாப்பாட்ட வந்த வரைக்கும் லாபன்னு அன்ரிசர்வேசன்ல கூட பாதி விலைக்கி தருவோம். இப்படி எது வேணுனாலும் நடக்கும் சூழ்நிலைக்கு தகுந்தபடி லாப நஷ்டம் வரும். உத்தரவாதமா எதுவும் சொல்ல முடியாது.
விக்கலேன்னா சாப்பாட்ட என்ன செய்வீங்க?
குப்பையில போட வேண்டியதுதான். ஆனா எடுத்த சாப்பாட்டுக்கு பைசா கொறையாம தெண்டம் கட்டியாகனும். பழக்கப்பட்டதால முன் பணம் கட்டாம கேண்டின் மாஸ்டர் மேற்பார்வையில சாப்பாடு எடுத்துக்கலாம். ஆனா எத்தன சாப்பாடு எடுக்குறோமோ அத்தனைக்கும் நாமதான் பொறுப்பு. விக்கலேன்னு திருப்பிக் கொடுக்க முடியாது. கொஞ்சமா எடுக்க வேண்டியதுதானேன்னு திட்டுறது மட்டும் இல்லாமெ மறு நாளைக்கி சாப்பாடு குடுக்க மாட்டாங்க.
சாப்பாடு குடுக்கறது, நம்ம கிட்ட காசு வாங்கறது இதுக்கு எல்லாம் இன்சார்ஜ் கேண்டின் மாஸ்டர்தான். அவரை தாசா பண்ணிகிட்டு சமையல் கட்டு வரைக்கும் போவேன். கூடமாட ஒத்தாசை பன்னுவேன். காய் நறுக்குவேன், அரிசி கழுவுவேன், மாவு பெசஞ்சு குடுப்பேன். இதுக்கெல்லாம் காசு கிடையாது. விக்காத சாப்பாட்டுக்கு மறு நாள் காசு குடுக்குறேன்னு சொன்னா சரி போடான்னு சொல்வாரு அவ்வளவுதான்.
இருவது வயசுல இந்த வேலைக்கி போனேன். அப்படியே அவர் கூட இருந்து சமையலையும் கத்துகிட்டேன். கல்யாணம் வேற ஆச்சு. இதுலேயே இருந்தா சரிபட்டு வராதுன்னு வெளிய வந்தேன்.
எந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?
இருவத்தி ஆறு வயசுல கல்யாணம் ஆச்சு. காலையில 4 மணிக்கி வேலைக்கி போனா ராத்திரி மணி 1, 2 ஆயிரும் வீடு திரும்ப. சம்சாரம் சொன்னுச்சு “நீ மட்டும் சிரமப்படுற உனக்குதான் சமையல் தெரியும்ல நீ வந்துரு நானும் உதவியா வேலை செய்றேன் விசேசங்களுக்கு சமைப்போம்”ன்னு சொன்னதும் கரண்டிய கையில எடுத்துட்டேன்.
இத்தன வேலை செஞ்சதுல ஒரு மன அமைதிங்கறதே இருக்காது. சம்பாதிக்கிறது ஒரு மடங்குன்னா கடன் ரெண்டு மடங்கா இருக்கும். கடனை அடைக்கனும் பிள்ளைங்க படிப்பு அதுங்களுக்கு தேவையான நல்லது கெட்டது எதுவுமே முடியாம பரபரன்னு ஓடிகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல வாழ்க்கையே வெறுத்து போச்சு. பிள்ளைங்கள பெத்துட்டு வாழ்கைய வெறுத்துட்டு ஓட முடியுமா அதுங்களுக்காக வாழந்து தானே ஆகனும்.
இங்க வேலைக்கி வந்த பிறகு மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு. சம்சாரம் மொகத்துல சிரிப்ப பாக்குறேன். பிள்ளைங்க இங்கிலீசு படிப்பு படிக்கிறாங்க. எல்லாத்துக்கு மேல ஆண்டவர் கூட இருக்குற பாக்கியம்.
இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் சர்வதேச போதை பொருள் வலைபின்னலின் முக்கிய தலைவனாக செயல்பட்டுவந்தது தெரியவந்துள்ளது. விமானப்படையின் கமாண்டராக செயல்பட்டுவந்த ராஜசேகர் ரெட்டி என்ற அந்த அதிகாரி தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போதை பொருள் கடத்தல் மட்டுமல்லாமல் அதை தயாரிக்கும் வேலையையும் ஒருங்கிணைத்துள்ளார் இவ்விமானப்படை அதிகாரி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தனது நண்பராண வெங்கட்ராம ராவ்(37) மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து “ஆம்ஃபிடமின்” என்ற போதை பொருளை தயாரித்து பல நாடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர். இதற்கென ஹைதராபாத்தில் பிரத்யேக ஆய்வக வசதிகளுடன் கூடிய போதை பொருள் உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். ஹைதாராபாத்தில் தயாரிக்கப்பட்டு தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளுக்கும் விற்பனை செய்துவந்துள்ளனர். அவ்விஞ்ஞானி மற்றும் அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர விமானப்படையின் மேலும் பல அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாதிரி படம்
“சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் “மெத்தாம்பெடாமைன்” என்ற போதை பொருளுடன் ஜீவன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் சென்னை மண்டல் போதைபொருள் தடுப்பி பிரிவு இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா.
தமிழகத்தில் சமீப காலமாக டாஸ்மாக் போதையோடு விதவிதமான நவீன போதை பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைபொருள்கள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் ஆர்.கே நகர் பள்ளி அருகில் மாணவர்களிடம் போதை சாக்லேட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையின் மொத்த விற்பனையாளர் கணேஷ் சுக்லாவிடம் விசாரணை நடத்துதாக அப்போது அறிவித்திருந்தது தமிழக அரசு.
சென்னை பள்ளி மாணவர்களிடம் வெகு வேகமாக பரவி வரும் மதுவல்லாத பிற போதைபொருள்கள் குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ராஜா கூறியதாவது “கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மதுவல்லாத பிற போதை பொருள் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளை பொருத்தவரை “கூல் லிப்”(COOL LIP) என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஒரு வகையான போதை பொருள் புழக்கத்தில் உள்ளது. ஹான்ஸ் புகையிலை போன்று வாயில் ஒராமாக வைத்துக்கொள்ளப்படும் இப்போதை பொருளை வகுப்பறையிலேயே பயன்படுத்துகிறார்கள். மாணவர்களையே கஞ்சா விற்பனை பிரதிநிதியாக்கி பள்ளிகளில் விற்கவைக்கிறார்கள் கஞ்சா வியாபாரிகள். இவர்கள் மூலம் பள்ளிகளின் ரூ.30-க்கே கஞ்சா கிடைக்கிறது. மேலும் பெண்களுக்கு பிரசவத்தின் போது தரப்படும் மாத்திரைகளை பயன்படுத்தியும் போதை ஏற்றிக்கொள்கிறார்கள்.
உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள். மேலும் கஞ்சா, ஊசி மூலம் போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கமும் இப்பிரிவு மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது.
இதற்கென தனிச்சிறப்பான வலைபின்னல்கள் செயல்படுகின்றன. கணிசமான மாணவர்கள் இவ்வகையிலான போதை பழக்கத்திற்கு ஆழாகியிருக்கின்றனர் ” என்று அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார்.
“உலகில் 15-64 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் அதாவது போதை பொருள் பயன்படுத்த வாய்ப்புள்ள சந்தையில் 18% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இப்பிரிவினரை குறிவைத்து போதை பொருள் சந்தையின் முக்கியமான இலக்காக இந்தியா இருக்கும்” என்றும் எச்சரிக்கிறது 2014-ல் வெளியிடப்பட்ட போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அமைப்பின் அறிக்கை. 2004 ஐ.நா மற்றும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சக புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் 1.07 கோடி பேர் மதுவல்லாத போதை பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் 8 லட்சம் பேர் கஞ்சாவிற்கும், 2 லட்சம் பேர் ஒப்பியத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் போதைப் பொருள் பயன்படுத்துவதில் முதன்மையாக உள்ளது. அம்மாநிலத்தில் 67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது.
போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலம் பஞ்சாப்
பஞ்சாபின் போதை புழக்கத்தை பற்றிய வினவில் விரிவான கட்டுரை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். ( பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை ! ). அம்மாநிலத்தின் போதை மருந்து பிரச்சணைக்கு காரணம் எல்லை தாண்டிய பயங்கரவாத கும்பல் தான் என்று பிரச்சாரம் செய்துவந்தது ஆளும் பா.ஜ.க – அகாலிதள கும்பல். ஆனால் ’தேசபக்த’ ராணுவத்தினர் போதை பொருள் வலைபின்னலில் நதிமூலமாக இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விமானப்படை அதிகாரியின் கைதின் மூலம் தெரியவந்துள்ளது. இராணுவத்தை கேள்விகேட்பதே மாபெரும் தேசதுரோக செயலாக பிரச்சாரம் செய்யப்படுவதும் அதற்கு மக்கள் பலியாவதும் இராணுவ கிரிமினல்களுக்கு வசதியாக உள்ளது. யாரும் தங்களை கேள்விகேட்க முடியாது என்பதும் அப்படி கேட்டால் அவகளது தேசபக்தியை சந்தேகத்துள்ளாக்கி அவர்களை மதிப்பிழக்க செய்ய முடியும் என்ற தைரியம் தான் இராணுவ கிரிமினல்களின் மூலதனமாக இருக்கிறது. போதையும், போலீசும், ராணுவமும் வேறு வேறல்ல. ஒன்றுக் கொன்று பொருத்தமான நலன்களுடன் இவைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. போதை பொருள் ஒழிப்பிற்காக நாம் ஒரு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.
சென்னை பூந்தமல்லியில் மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலர் தோழர் பிரின்ஸ் என்னரசு பெரியார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தோழர் சுந்தரவள்ளி, மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் திரளாக தோழர்களும், ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கிற்கு மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல குழு உறுப்பினர் தோழர் அமிர்தா தலைமை தாங்கினார்.
இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்
– பிரின்ஸ் என்னாரசு பெரியார்
”இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்தால் இந்துத்துவாவிற்கு எதிராக மாறுவோம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் திட்டமிட்டே கலவரங்களை உருவாக்குகிறார்கள். மேலும் நதிநீர் இணைப்பு பேசப்படுகிறது. ஆனால் இன்று நதிநீர் இணைப்பு சாத்தியமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இது யாருக்கு சாதகம், பாதகம் என்று நாம் ஆய்ந்து பார்க்க வேண்டும்.
முல்லை பெரியார் அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கட்டிடங்களாக மாறியுள்ளன. அந்த அணையினுடைய நீர் மட்டத்தை உயர்த்தினால் அந்த கட்டிடங்களில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். பெரும் முதலாளிகளின் சொத்து பாதிக்கப்படும் என்ற காரணத்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். இது எல்லாவற்றையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் நர்மதா அணை பிரச்சனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
தோழர் . பிரின்ஸ் என்னாரசு பெரியார்
மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கும் தொழிற்சாலைகளை நாம் தொழில் வாய்ப்பாக பார்த்தோம். ஆனால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வரும் சாயப்பட்டறை கழிவுகளால் நாம் நம் நீராதாரங்களை இழந்திருக்கிறோம். ஒரு ஜீன்ஸ், ஒரு டி-சர்டை உருவாக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்று சொல்லப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் அரசின் புறம்போக்கு நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது. சென்னையைச் சுற்றிருந்த நீர்நிலைகளை தான் இன்று நாம் வாழ்விடங்களாக மாற்றியிருக்கிறோம். காரணம் மக்கள் தொகையும், பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 120 கோடியை தாண்டியிருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இடம் விரிவாகவில்லை. இடங்களை ஆக்கிரமிக்க வேண்டிய நிலையில் எளிதாக கிடைப்பது நீர்பிடிப்பு இடங்கள் தான். பல்லாயிரம் ஏக்கர்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை பற்றி பேசுவதில்லை. யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஊடகமும் எழுப்பாது. அரசு நான்கு ஏக்கரில் ஒரு பேருந்து நிலையம் அமைத்தால் அதை ஊடகங்கள் குற்றஞ் சாட்டுகிறது. ஏனென்றால் தங்களின் முதலாளிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களை குற்றம் சாட்டமுடியாது என்ற நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆக நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தே நமக்கு மிக தாமதமாக வந்து சேர்கிறது. இந்த பிரச்சனை என்பது காவிரியோடு, முல்லை பெரியாரோடு, பாலாறோடு, கிருஷ்ணா நதியோடு, வைகையோடு முடிவதில்லை, ஆக்கிரமித்திருக்கிற நீர்நிலைகளோடு மட்டும் முடிவதில்லை. மிக பரந்துப்பட்டளவில் இதைப்பற்றிய பார்வை தேவைப்படுகிறது. இதை மக்களிடத்தில் பரவலாக கொண்டு செல்ல வேண்டிருக்கிறது” என பேசினார்.
நேர்மையான மக்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம் ! – தோழர் சுந்தரவள்ளி
”இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் கருந்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு விரைவாக வளர்ந்து வரும் இயக்கமாக உள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு இந்த சமூகத்தில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக நிற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாம் தண்ணீர் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் தீச்சட்டி எடுத்து தெரு தெருவாக அம்மாவிற்காக காவடி எடுக்கிறார்கள். மீனவருடைய பிரச்சனையை மீனவருடைய பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு நெசவாளியின் பிரச்சனையை நெசவாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு தொழிலாளியின் பிரச்சனையை தொழிலாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். அதே போலத்தான் ஒரு விவசாயினுடைய பிரச்சினையை கூட இத்தனை ஆண்டு காலம் விவசாயினுடைய பிரச்சனையாக மட்டுமே பார்த்தோம். விவசாயி கடன் கட்டவில்லை என்றால் கைது, ஆனால் பல கோடி கொள்ளையடித்த முதலாளியின் ரேசன் அட்டையை மட்டும் முடக்குகிறது அரசு. அவன் தான் தினமும் ரேசன் கடையில் நின்று பாமாயில், மண்ணெண்ணெய் வாங்க போகிறானா? எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது இந்த அரசு.
தோழர் . சுந்தரவள்ளி
காவிரிப் பிரச்சினையை இரண்டு மாநிலங்களின் பிரச்சனையாக மட்டும் சுருக்கி பார்க்க முடியுமா? ஜல்லிகட்டு பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக சொன்ன மோடி அரசு, ஏன் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை அமுல்படுத்த மறுக்கிறது? காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த உடனே தண்ணீர் பிரச்சனை தீரும் என்பது மூட நம்பிக்கை. ஏற்கனவே கர்நாடகாவில் மாற்றி மாற்றி காங்கிரசும், பி.ஜே.பியும் தான் ஆட்சிக்கு வருகிறார்கள். அதனால் ஓட்டு வங்கியாக மக்களை பயன்படுத்த இரண்டு கட்சிகளும் செயல்படுகிறார்கள். அதனால் தான் இந்த பிரச்சனை தீர்க்கபடாமல் இருக்கிறது. தமிழகமே வறண்டு போய் கொண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகள் தெளிவாக சுரண்டுகின்றன. ஒரு பக்கம் கோக் கம்பெனி தண்ணீரை உறிஞ்சு எடுக்கிறான். கேரளாவில், ஒரு பிளாச்சிமடா என்ற கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து தலைவர் பிளாச்சிமடாவிற்குள் கொக்கோ கோலா கம்பெனி வர கூடாது என்று கூற முடிகிறது. ஆனால் இந்திய அரசால் தடைவிதிக்க முடியாது.
பன்னாட்டு கம்பெனிகள் நம்முடைய தண்ணீர் வளத்தை பல விதத்தில் சுரண்டுகின்றன. தாமிரபரணி தண்ணீர் கொள்ளையடிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை குறித்து இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அறிவில்லை, தமிழர்களுக்கு அறிவு உண்டு. கோயில்களுக்கு முன்பு குளம் இருந்தது. அது ஊரில் நீராதாரமாக இருந்தது. ஆனால் இன்று மதுரை நீதிமன்றமே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது. ஏரி, குளங்களை அழித்துவிட்டோம். காவிரிக்காக போராடும் அதே நேரம் உள்ளூரில் இருக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டிருக்கிறது. நீரை ஒரு கருவியாக வைத்து நம்மை காலில் விழ வைக்கும் வேலையை பா.ஜ.க அரசாங்கம் செய்கிறது.
கர்நாடகாவை எதிர்ப்பதோடு நம்முடைய போராட்டம் சுருங்கி விட கூடாது. உள்ளூரில் நீராதாரங்களை காப்பாற்றுவதுடன் மத்திய அரசு நமக்கு எதிராக இருப்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக போராடும் அதே நேரத்தில் உள்ளூர் நீர்நிலை காப்பாற்ற போராடும் போது தமிழகத்திற்கான நீராதாரங்களை நாம் பெற முடியும். அத்துனை வேலைகளிலும் நாம் ஒன்றாட இணைந்து செயல்பட வேண்டிருக்கிறது. அதற்கான ஒரு வழித்தடத்தை உண்மையிலேயே மக்கள் அதிகாரம் தொடங்கியிருக்கிறது. இந்த அமைப்புடன் இன்னும் முற்போக்கு இயக்கங்களை ஒன்று திரட்டி கொண்டு ஒரு நேர்மையான மக்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம்”
ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல்மயமாகியிருக்கிறது !
– தோழர் ராஜு, மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்
”தண்ணீர் விட மாட்டேன் என்கிறது கர்நாடக அரசு, மைய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றமும் சொன்னது சரிதான் என்று சொல்லிவிட்டது. இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் வருவது உத்திரவாதம் கிடையாது. விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இழுத்தடித்தால் பருவமழை வந்துவிடும். இப்படி அவர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளை மக்கள் பிரச்சனையை தீர்ப்பார்கள் என்று அவர்கள் பின்னால் போக முடியாது. பிரச்சினை தீர்ப்பது என்பது காவிரியோடு முடிவதில்லை. நீர்நிலைகள் முழுவதும் நாம் பாதுகாக்க வேண்டும். யார் நீர்நிலைகளை அழித்தார்களோ, ஆற்றை கொள்ளையடித்தார்களோ, அவர்களை வைத்து கொண்டு அவர்களிடம் மனு கொடுத்து எப்படி காப்பாற்ற முடியும்? மணற் கொள்ளை சம்பந்தமாக பொதுப்பணித்துறை பொறியாளரிடம் பேசினால் காசு வாங்காத கட்சிகள் யாரும் கிடையாது.
தோழர் . ராஜூ
இந்த மணற் கொள்ளை என்பது அதிகாரிகள் தான் செய்கிறார்கள், ஆட்சியாளர்கள் தான் செய்கிறார்கள், நீதிமன்றங்கள் அதை பாதுகாக்கிறது. நிலத்தடி நீர் பல மடங்கு குறைந்து விட்டது. இதை பார்த்து தான் மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஆனால் சாதி கலவரத்தை தூண்டுவது, பொய் வழக்கு போடுவது, மத கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போடுவது என்று ஒடுக்குகிறார்கள். ஒரு தாசில்தாரோ, போலீஸ்காரர் ஒருத்தரோ உண்மையிலேயே பிடிக்க போனால் அவர்களை கொலை செய்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக எல்லா ஆறுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆற்றின் மணல் மீண்டும் வந்த சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது. இது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். யாரை வைத்து இதை தடுக்க போகிறோம். நீராதாரங்களை காப்பாற்ற போகிறோம்.
இந்த கட்டமைப்பு பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை சொல்வது என்ற ஆற்றலை இழந்து நிற்கிறது. தோற்றுப்போய்விட்டது, மக்களுக்கு வேண்டாத சுமையாக மாறிவிட்டது. மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. அதனால் இந்த அரசு கட்டமைப்பில் முறையிட்டு இவர்களிடம் நாம் பிரச்சனையை தீர்க்க முடியாது. இந்த கட்டமைப்பிற்கு வெளியில் தான் மாற்று இருக்கிறது.
காவிரி பிரச்சனை 100 ஆண்டுகளாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்ட இந்த பிரச்சனை இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது ஒரு சாதகமான விசயம்.
காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு கிடையாது, மத்திய அரசிற்கும் கிடையாது, கர்நாடக அரசிற்கும் கிடையாது, தமிழக அரசிற்கும் கிடையாது. வழக்கு போட்டால் முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறார்கள். இது என்ன ஜெ-வினுடைய சொத்து குவிப்பு பிரச்சனையா? தனியாக பார்ப்பதற்கு. தமிழகத்தினுடைய பிரச்சனை. அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என ஏன் செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, என்கிறான். பேச்சு வார்த்தை நடத்தி தீர்க்க முடியவில்லை என்பதால் தானே நீதிமன்றத்திற்கு 30 வருடத்திற்கு முன்பே இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிரச்சினையை மத்திய அரசு தான் தீர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குறைத்து கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு உண்மையாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கமில்லை. ஆனால் கர்நாடகாவில் வெறித்தனமாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் ”வாழு வாழவிடு” என்கிறது. மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கூடாது என்கிறார். காங்கிரஸ் அடிக்கடி கூடி உச்சநீதிமன்றத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது. உன்னுடைய தீர்ப்பு ஒன்றும் என்னை கட்டுபடுத்தாது என்கிறான்.
இதில் கட்டமைப்பு நெருக்கடி என்பது, இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்க்கணும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் பிரச்சனையை உருவாக்குகிறது. மோடி பிரச்சனையை தீர்க்கனும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் அதிகரிக்கிறது. சுவாதி கொலையில் ஏன் சி.சி டி.வி வைக்க வில்லை என்று நீதிமன்றம் கேட்கிறது. சி.சி.டி.வி வைக்காதது தான் சுவாதி கொலைக்கு காரணாமா? சேலம் வினுப்பிரியா போலிசிடம் போன பிறகும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, தற்கொலை செய்து கொண்டார். அதனால் போலீசிடம் போனாலும் அது தான் கதி. காவிரி பிரச்சனை லட்சக்கணக்கான விவசாயிகளின் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை.
பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்று சொல்லி அதிகாரத்தை பிடிப்பதில்லை. மற்ற கட்சிகளை போல் அதை செய்தேன், இதை செய்தேன் என்று பேசுவதில்லை. சாதி, மத, இன கலவரத்தை வைத்து பிணந்தின்னி கழுகை போல தான் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அதை தான் அவர்கள் யுத்தியாக, சாதனையாக வைத்திருக்கிறார்கள். இது தான் அவர்களின் அடிப்படை சித்தாந்தம். கர்நாடகாவில் சிறுபான்மை தமிழர்களை எதிரியாக உருவாக்குகிறான். பெரும்பான்மை கன்னடர்களை வாக்குவங்கியாக மாற்ற முயல்கிறான்.
கர்நாடாகா அரசு விவசாய நிலபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. பெங்களூருக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறான். நீச்சல் குளத்திற்கு கொண்டு செல்கிறான். போராடும் விவசாயிகளுக்கு சாதாரண மக்களுக்கு போதுமான அளவு காவிரி நீர் போவதில்லை. அங்கு குடகுமலையில் கேளிக்கை விடுதிகள் கட்டுகிறான், காபி தோட்டங்களை போடுகிறான், தனியார்மய, தாராளமய கொள்கையின் இயற்கை அழிப்பால் பொதுவிலேயே மழை குறைந்துவிட்டது. அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரில் தண்ணீர் விநியோக உரிமையை பன்னாட்டு கம்பெனிகள் வைத்திருக்கிறான். எவ்வளவு பிரச்சனையிருந்தாலும் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை தனியாருக்கு தண்ணீர் தருவதாக தான் உள்ளது. எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பற்றி பேச வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் பேசாது, மத்திய அரசு பேசாது. எந்த அமைப்பிடம் போய் கேட்பது. இதை தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.
தமிழ்நாடு பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இவையெல்லாம் வேறூன்றிய நாடு. அவனால் நம்மை அழிக்க முடியவில்லை. தமிழ் சமஸ்கிருதம் கலக்காமல் தனியாக நிற்கிறது. மலையாளம் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதத்தை கலந்து விட்டான். ராமனை செருப்பால் அடிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம். பிள்ளையாரை புறக்கணிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம்.
கெயில் குழாய் பதிப்பு பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு எதிராக சொல்கிறான். கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் அங்கு மேலும் இரண்டு அணு உலைக்கு அனுமதி கொடுக்கிறார்கள். போராடுகிற மக்கள் மீது அரசுக்கு எதிராக போர் தொடுப்பது என்ற வழக்கு போடப்படுகிறது. யாருக்கு ஆதரவாக இருக்கிறது மத்திய அரசாங்கமும் நீதிமன்றமும். காவிரியில் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியுமா? காவிரியில் தண்ணீர் வந்தால் மீத்தேன் வாயுவை எடுக்க முடியுமா? நிலக்கரி எடுக்க முடியுமா? விவசாயிகள் நிலங்களை விட்டு விரட்டப்படனும். தண்ணீர் விட்டாலும் கடைமடை பகுதிக்கு போகுமா? பாசன வசதி இருக்கிறதா? லட்சக்கணக்கான விவசாயினுடைய எதிர்காலம் குறித்து எந்த திட்டமும் இல்லை. தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியது இல்லை. ஒட்டுமொத்த ஜீவராசிகளுக்கு உரியது. எதிர்கால தலைமுறைக்கு உரியது. இந்த அரசு என்பது இயற்கை வளங்களின் காப்பாளர் தான். உரிமையாளர் கிடையாது. காப்பாளர் விற்க முடியாது. தண்ணீர் வந்து விவசாயம் செய்தால் விளைப்பொருளுக்கு பணம் தருவதில்லை. கரும்பு ஆலை முதலாளிகள் கரும்புக்கு 850 கோடி பணம் தரவில்லை. எல்லா வகையான போராட்டங்கள் செய்தும் வரவில்லை.
எல்லா பிரச்சனைக்கும் இந்த கட்டமைப்பில் தீர்வு இல்லை. கல்வி பிரச்சனை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, போலீசே திருடுவது, கொலை, கொள்ளையை தடுக்க முடியாததது என எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் இந்த முடிவிற்கு வர முடியும். ஆகவே ஜனநாய முற்போக்கு சக்திகள் இணைந்து இற்றுப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிவோம்.”
தகவல் : மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு 91768 01656
1. எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை!
2. பா.ஜ.க.-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?
3. பாக். மீது தாக்குதல் : சண்டையா… சண்டைக் காட்சியா? “அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
4. கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி! செத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே! உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை).
5. கோவை தாக்குதல்: திருப்பியடிப்போம்!
6. ராம்குமார் மரணம் : போலீசைத் தண்டிக்க என்ன வழி? சுவாதி கொலையிலும் ராம்குமாரின் மர்மமான மரணத்திலும் போலீசும் நீதித்துறையுமே கூண்டிலேற்றி விசாரிக்கப்பட வேண்டிய முதன்மைக் குற்றவாளிகள்.
7. ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு! ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும்.
8. ஆர்.எஸ்.எஸ்.-இன் பார்ப்பனக் குசும்பு! மாவலி மன்னன் நினைவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை, அந்த அசுர குல அரசனைச் சதி செய்து கொன்ற வாமன அவதாரத்தின் நினைவாகக் கொண்டாடக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்.
9. “பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள்! பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கு லைசன்சு வழங்கியிருக்கிறது மோடி அரசு.
10. இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை! தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
11. ஏழைகளைச் சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும் அப்பாவிகளைத் தெருநாயாக அலையவிடும் நாட்டில், நுண்கடன் நிறுவனங்கள் ஏழைகளின் வீடுதேடி வந்து அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுப்பது ஏன்?
12. மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு! ஹவாலா திருடர்களையே ரூட் போட்டு திருடும் தமிழக போலீசை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? சரியான பெயரைத் திருடர்கள்தான் சொல்ல வேண்டும்.
13. தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் சட்டவிரோதமான சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; சோதனை நடத்திய வருமான வரித் துறையும் கண்டுகொள்ளவில்லை.
உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் பிஸ்ரக். இக்கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இக்கிராமத்தில் கோவிலில் நிறுவி வழிபடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலையை சேதப்படுத்திய இந்துமத வெறியர்கள் கோவிலையும் தாக்கியுள்ளனர்.
பார்ப்பனிய செல்வாக்குள்ள வடமாநிலங்களில் நவராத்திரி தசரா திருவிழாவில் இராவணன் உருவப்பொம்மைகளை எரித்து இராவணனின் சாவை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இக்கிராமத்தில் நவராத்திரி நாட்களை துக்க தினமாக கடைபிடிக்கிறார்கள். மேலும் தசரா அன்று இராவணனுக்காக யாக குண்டம் வளர்த்து வழிபடுகிறார்கள். இக்கிராமத்தின் பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நடக்கும் இவ்வழிபாட்டிற்காக ஆண்டு தோறும் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கோவில் மட்டுமல்லால் அப்பகுதியின் பல கோவில்களில் நவராத்திரிக்கு பதிலாக இராவணன் யாகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் நவரத்திரி கொண்டாடினால் ராவணனின் கோபத்திற்கு தாங்கள் ஆளாக நேரிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்
இக்கிராமத்தில் சமீபத்தில் இராவணனுக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி(09-08-2016) அன்று சிலை மற்றும் பிரகாரம் நிறுவுவதற்கான வேலைகள் முடிந்து சிலை நிறுவப்படவிருந்தன. இச்சமயத்தில் மற்ற பகுதிகளை சேர்ந்த இந்து மத வெறியர்கள் இராவண சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழாவின் இரண்டு நாட்களுக்கு முன்னர் 9-08-2016 அன்று வெளியூரிலிருந்து ஐந்து கார்களில் வந்த இந்துமத வெறியர்கள் கோவில் முன் தகராறு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் நிறுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலைகளை உடைத்துள்ளனர். பின்னர் தங்கள் கையிலிருந்த துப்பாக்கிகளை காட்டி இராவண சிலை நிறுவினால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்துள்ள கிராமமக்கள் பசுப்பாதுகாப்பு குழுக்களை சேர்ந்தவர்களும், பிற கோவில்களின் தலைவர்களும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தாங்கள் வழிபடும் இராவணனை கொடூரமானவராக காட்ட முயலுவது துரதிர்ஷ்டம் வரபோவதற்கான அறிகுறி என்றும் அப்பகுதி மக்கள் கவலைப்படுகின்றனர். ஒருவகையில் இந்தியாவில் நடக்கும் பா.ஜ.க ஆட்சி கொண்டு வந்திருக்கும் கேடுகாலத்தை மக்களின் இந்த நம்பிக்கை கவித்துவமாக சுட்டிக் காட்டுகிறது போலும்.
இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளை(11-10-2016) தசாரா நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் இக்கிராமத்தினர் இராவணனுக்காக வழிபாடு செய்ய தயாராகி வருகிறார்கள். இது குறித்து ஸ்ரீ பாபா மோகன் ராம் கோவில் அர்ச்சகர் அகிலேஷ் சாஸ்திரி கூறுகையில் “முந்தைய ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் இராவணனுக்கான பூஜைகள் நடக்கும் என்று என்னிடம் மக்கள் கூறியிருக்கிறார்கள். இராவணன் சிலை நிறுவமுடியாவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும்” என்கிறார்.
இந்து மத வெறியர்களின் அச்சுறுத்தலுக்காக இக்கிராம மக்கள் பணியவில்லை. இக்கிராம தலைவர் அஜய் பாடி கூறிகையில் “ எங்கள் வழக்கமான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. கிராமத்தில் கண்காணிப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்த உள்ளோம். எவன் எங்களை தடுக்க வருகிறான் என்று பார்ப்போம்”. “உடைக்கப்பட்ட இராவண சிலைகளுக்கு பதிலாக மாற்று சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.சிலை கிடைக்கப்பெற இரண்டு மாதங்கள் ஆகும். அது வந்ததும் முன்னர் எந்த இடத்தில் நிறுவப்பட இருந்ததோ அதே இடத்தில் நிறுவுவோம்” என்று ஆணித்தரமாக கூறுகிறார். மேலும் இராவண சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காசிபார் பகுதி கோவிலை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகிறார் கிராம தலைவர் பாடி.
இந்து மத வெறியர்களால் சேதமாக்கப்பட்ட இராவணை சிலை இருந்த இடம்
கான்பூர் அருகிலுள்ள ஒரு கோவிலிலும் “ ஜெய் லங்கேஷ், லங்காபதி நரேஷ் கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் தசாரா என்று இராமனுக்கு பதிலாக இராவணனை வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது. இதே போல மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலங்களின் வசிக்கும் அசுர் என்ற பழங்குடி இன மக்கள் நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை துக்க தினமாக அனுசரிக்கிறார்கள். துர்காவின் 9 நாள் போர் என்ற புராணகதைகள் அவர்கள் ஏற்பதில்லை. தங்கள் மன்னர் மகிஷாசுரன் சதி செய்து வீரமரணமடைந்ததாக கருதுகிறார்கள்.
அப்பழங்குடி பிரிவைச்சேர்ந்த சுஷ்மா அசுர் என்ற பெண் தங்கள் வரலாறை ஆவணப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறார். அவர் கூறுகையில் “ராவணனும் மகிஷாசுரனும் எங்கள் முன்னோர்கள். அவர்களை சதி செய்து கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடுவது தொடரக்கூடாது. இந்திய புராண பழங்கதைகளை ஆவணப்படுத்தியதில் ஆதிக்க சாதியினர் கை மேலோங்கியிருந்தது. அதனால் பழங்குடிகளின் பக்கசார்பிலான கதைகள் புறக்கணிக்கப்படுகின்றன.” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதுகிறோம். அசுர் பழங்குடியினர் தங்கள் பண்பாட்டின்படி மகிஷாசுரனுக்கு வீர வணக்க நாள் நிகழ்வுகள் கடைபிடிப்பதையும் இந்துமத வெறியினர் எதிர்க்கிறார்கள். தங்கள் பக்க புராணகதைகளை வெளியில் பிரச்சாரம் செய்யவும் பழங்குடிகளை தடை செய்கிறார்கள் இந்துமத வெறியர்கள். ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியினரின் பக்க சார்பிலான துண்டறிக்கைகளை வெளியிட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் பேசினார் ஸ்மிருதி இராணி.
ஐதராபாத், ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியின் கதைப்படி விழா எடுப்பதை தடுத்து அசுரர் தினம் கொண்டாடுவதை எதிர்த்து பிரச்சனை செய்கிறது நிர்வாகமும் ஏ.பி.வி.பி கும்பலும். ஆரிய பார்ப்பனர்களின் ஒற்றை கலாச்சாரத்தையே இந்திய பாரதீய கலாச்சாரமாகவும் பிற திராவிட, பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை நைச்சியமாகவும், பலாத்காரமாகவும் அழிக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்கிறது பார்ப்பனியம். தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டு மகிஷாசுரன், இராவணன் கொல்லப்பட்ட புராணகதைகளின் நாட்களை கொண்டாடுபவர்கள் மேற்கண்ட கிராமமக்கள் மற்றும் பழங்குடியின மக்களிடமிருந்து கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. இந்தியாவை ஆரிய பார்ப்பன் சமஸ்கிருதமயாக்கும் பா.ஜ.கவின் அரசியலை முறியடிக்க இதுபோன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை வரித்துக்கொள்வது தேவையாக இருக்கிறது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், ஏகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குப் புத்தாண்டு பரிசு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது. அந்தப் பரிசின் பெயர் “கிளெமோன்ஸோ” என்ற பழைய விமானம் தாங்கி போர் கப்பல். பிரெஞ்சு கப்பற்படையில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுவிட்ட இந்தப் போர் கப்பல், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஆலங் துறைமுகத்தில் உடைக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் கிளெமோன்ஸோ என்கிற விமானம் தாங்கி போர் கப்பல்
ஆலங் துறைமுகத்தில் இந்தக் கப்பல் உடைக்கப்பட்ட பின் 30 கோடி ரூபாய் பெறுமான பழைய இரும்பு கிடைக்கும். எனினும், இந்தக் கப்பல் வெறும் மூன்று கோடி ரூபாய்க்கு தான் விற்கப்பட்டுள்ளது. வியாபார அளவுகோலின் படி பார்த்தால், பழைய இரும்புக்காக இந்தக் கப்பலை வாங்கிய நிறுவனத்திற்கு கொழுத்த இலாபம்தான். ஆனால், இந்தக் கப்பல் ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கும்; அத்துறைமுக வட்டாரத்தின் சுற்றுச்சூழலுக்கும் என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பதை இப்பொழுது கூற முடியாது. ஏனென்றால், இந்தக் கப்பலை உடைக்கும் பொழுது, நெஞ்சகப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) தகடுகள், நூற்றுக்கணக்கான டன் அளவில் கழிவாகக் கிடைக்கும். இந்தக் கல்நார் கழிவை அறிவியல் ரீதியாக அப்புறப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இல்லாததால், இந்தக் கல்நார் கழிவு இக்கப்பலை உடைக்கும் கூலித் தொழிலாளர்களையும்; அத்துறைமுக வட்டாரச் சுற்றுச்சூழலையும் மோசமாகப் பாதிக்கும் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.
கல்நார் தகடுகள் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதனைத் தொழிற்துறையிலோ, வீட்டு உபயோகத்திற்கோ பயன்படுத்துவது பிரான்சு நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான இந்தக் கப்பலை, பிரான்சிலேயே உடைக்காமல், இந்தியாவின் தலையில் கட்டியுள்ளனர். ஆனால், இந்திய அரசோ அந்நியச் செலாவணி வருமானம் என்ற கண்ணாடியை மாட்டிக் கொண்டு, இந்தக் கப்பலின் வருகையைப் பார்க்க வேண்டும் என நியாயப்படுத்துகிறது.
ஆலங் துறைமுகம்
பிரான்சில் இருந்து கடந்த ஆண்டின் கடைசி நாள் (2005 டிச. 31) இரவில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுவிட்ட இந்தக் கழிவுக் கப்பல், பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆலங் துறைமுகத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், “இந்தக் கப்பலை இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது; பிரான்சிலேயே உடைக்க வேண்டும்” என பிரான்சு உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்களையடுத்து, இந்திய உச்சநீதி மன்றம், இந்தக் கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைய இடைக்கால தடை விதித்திருக்கிறது. மேலும், இந்தக் கப்பலில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அபாயகரமான கழிவுகள் எவ்வளவு உள்ளன என்ற விவரத்தைத் தருமாறு பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.
தில்லியின் அழகுக்காகத் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, அவர்கள் நகரை விட்டுத் துரத்தியடிக்கப்பட்ட பொழுது; வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஆதிவாசிகள் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொழுது, எந்த நீதிமன்றம் அவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க முன்வந்தது? இந்தக் கழிவுக் கப்பல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம் என்பதால், உச்சநீதி மன்றத்தின் “நடுநிலையான நியாய உணர்ச்சி” விழித்துக் கொண்டுவிட்டது.
இந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுகள்தான் இருப்பதாகவும்; எஞ்சியவற்றை இந்தியாவிற்கு அனுப்பும் முன் பிரான்சிலேயே அப்புறப்படுத்திவிட்டதாகவும் பிரெஞ்சு அரசு கூறுகிறது. ஆனால், இந்தக் கப்பலில் இருக்கும் கல்நார் கழிவுகளை அகற்ற பிரெஞ்சு அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட, “டெக்னோப்யூர்” என்ற பிரான்சு நிறுவனம், பிரெஞ்சு அரசு கூறுவதை மோசடி என்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தங்களின் சொந்த செலவில் இந்தியாவிற்கு வந்து உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், “இந்தக் கப்பலில் இன்னும் 500 டன்னுக்கு மேல் கல்நார் கழிவுகள் இருப்பதாக” வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தக் கப்பலில் பல ஆண்டுகள் வேலை பார்த்து, அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு கப்பற்படையைச் சேர்ந்த எடினி லீ குலிசெர், லீடஃப் என்ற இரு முன்னாள் ஊழியர்கள், “இந்தியாவிற்கு வரும் அந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுதான் இருக்கும் என்பது கேலிக்குரியது” என ’தி இந்து’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளனர்.
ஆலங் துறைமுகத்தில் எந்தவித பாதுகாப்பு கவசமின்றி இரும்பை உடைக்கும் கூலி தொழிலாளி
இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள பேசல் மாநாட்டு ஒப்பந்தம், சுற்றுச் சூழலை மாசடையச் செய்யும் அபாயகரமான கழிவுப் பொருட்களை ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவும், பிரான்சும் இந்த விதிமுறைகளை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.
உச்சநீதி மன்றம் பேசல் ஒப்பந்தத்தைக் காட்டியே, இந்தக் கழிவுக் கப்பல் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடை செய்திருக்க முடியும். ஆனால், மாண்புமிகு நீதிபதிகளோ, தாங்கள் விதித்துள்ள இடைக்காலத் தடையைச் செல்லாக் காசாக்கும் வண்ணம், “வேண்டுமானால் எண்பது கோடி ரூபாயை பிணைத் தொகையாகக் கட்டிவிட்டு இந்தக் கப்பல் இந்தியாவிற்குள் நுழையலாம்” என்ற சலுகையை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அளித்துள்ளனர்.
இந்தக் கழிவுக் கப்பல் ஏற்றுமதியை நியாயப்படுத்துவதில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைவிட, இந்திய ஆளுங்கும்பல்தான் முன்னணியில் நிற்கிறது. “குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம் பிரான்சுக்கே சென்று, இந்தக் கப்பலை ஆய்வு செய்திருப்பதாக” குஜராத் கடல்சார் வாரியம் கூறியிருக்கிறது. இந்தக் கப்பலை உடைப்பதற்கு ஏலம் எடுத்துள்ள சிறீராம் நிறுவனத்தின் சகோதர நிறுவனம்தான் குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம். வேலிக்கு ஓணான் சாட்சி.
குஜராத்தில் உள்ள ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரிசாவையும், பீகாரையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், தலைக்கவசம் கூட இல்லாமல், சுத்தியலையும், ஆக்ஸா பிளேடையும், காலாவதியாகிப் போன வெல்டிங் மிஷின்களையும் கொண்டு, தினந்தோறும் மரணத்தோடு போராடி, வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உடைந்த கப்பல்களில் இருந்து அவர்கள் எடுத்துவரும் பிளாஸ்டிக் ஷீட்டுகள்தான், அவர்கள் வீட்டுக் கூரைகள். அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கழிப்பறைகூட அத்துறைமுகத்தில் கிடையாது.
கிளெமோன்ஸோ
ஒரு கப்பலை உடைக்கும் பொழுது ஒரு தொழிலாளி மரணமடைவது நிச்சயம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள், குஜராத் ஆலங் துறைமுகத்திலும், வங்காள தேசத்திலும் (கப்பலை உடைக்கும் பொழுது) 110 கூலித் தொழிலாளர்கள் பலியாகிவிட்டதாகச் சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. கை கால்களை இழந்து முடமாகிப் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிலேயே வராது.
கப்பலை உடைத்து எடுக்கப்படும் பழைய இரும்புக் கழிவுகளுக்குத் தரும் மதிப்பைக் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் தருவதில்லை. ஒரு சராசரித் தொழிலாகக் கூட அங்கீகரிக்க முடியாத இந்தக் கப்பல் உடைப்பை, ஒரு தொழிற்துறையாக அங்கீகாரம் அளித்திருக்கிறது, இந்திய ஆளும் கும்பல்.
இந்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், “பிரெஞ்சுக் கப்பலில் உள்ள கல்நார் கழிவுகளை சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அகற்றும் தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இருப்பதாகவும்; அனைத்தும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நடப்பதாகவும்” அறிக்கைவிட்டு, இந்தக் கப்பல் பேரத்தை நியாயப்படுத்தியிருக்கிறது.
ஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால “வல்லரசாகவும்” தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை தள்ளிக் கொண்டு வருகிறது. ஓரங்கட்டப்பட்ட கப்பல்கள் மட்டுமின்றி, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் நுகர்ந்து தள்ளும் பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது. 2020-இல் இந்தியா “வல்லரசாக” மாறப் போவதில்லை; மேற்குலகின் குப்பைத் தொட்டியாகத்தான் மாறப்போகிறது!
இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் வரிசையில் இன்னுமொரு ஆதிக்க சாதிவெறிப் படுகொலை !
நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் சாதி பெண்ணை காதலித்ததற்காக அருந்ததிய இளைஞர் சிவகுருநாதனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் தேவர் சாதி வெறியினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தின் இளைஞர் சிவகுருநாதன், அருந்ததி சாதியைச்சேர்ந்தவர். எம்.எஸ்.சி முடித்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் செவிலியர் வேலை கிடைத்து பாப்பம்பட்டி-நெய்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தேவர் சாதியைச் சார்ந்தவர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள். படம் நன்றி: நக்கீரன்.
தாங்கள் காதலை பெற்றோர்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி. “சக்கிலிய பயலை எப்படி காதலிக்கலாம்”, என்று ஆத்திரமுற்ற பெற்றோர் பெண்ணிற்கு பணியிட மாற்றம் பெற்று செங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவும் பயனளிக்காமல் போகவே கடந்த 20 நாட்களாக அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
வீட்டிலும் உணவை மறுத்து தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் நிலையை கண்டு எரிச்சலைடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இப்பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதென திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படியில் கஸ்தூரியின் தாய் மாமா உள்ளிட்ட உறவினர்கள் சிவகுருநாதனை தங்களிடம் வந்து பேசுமாறு அழைத்துள்ளனர். தங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டதாக கருதியஅப்பாவி கஸ்தூரியும் சிவகுருநாதனை வரவழைத்துள்ளார். சிவகுருநாதனும் அது உண்மையென நம்பி மேல இலந்தைகுளம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் குறித்து போலீசாரிடம் பேசியதிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சக்திவேல் எங்களிடம் கூறியதாவது,” பெண் வீட்டிற்கு சென்ற சிவகுருநாதனை சாதி வெறியுடன் வீட்டின் உள்ளே கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. வாசலிலேயே தடுத்து அருகில் இருக்கும் கோவிலில் வைத்து பேசிக் கொள்ளலாம் என்று அழைத்து சென்றிருக்கிறார்காள். அங்கு பெண்ணின் தந்தை, தாய் மாமா, மற்றும் சில இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்ணின் தந்தை மாற்று திறனாளி, கால் ஊனமானவர்.
அவர்கள் கஸ்தூரியை மறந்துவிடுமாறும் தங்களால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் கூறி மிரட்டியிருக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு எப்படி மகளைக் கொடுக்க முடியும் என்று சாதிவெறியோடு கூறியிருக்கிறார்கள்.
தான் படித்து நல்ல வேலையில் இருப்பதாகவும் அதே போல கஸ்தூரியும் நல்ல வேலையில் இருப்பதால் கஸ்தூரியை தன்னால் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று அவர்களிடம் சுயமரியாதையுடன் பேசியிருக்கிறார் சிவகுருநாதன். இப்படி அவர் விடாப்பிடியாக மறுத்து பேசவே சாதிவெறியேறிய நபர்கள் அவரை கொலை செய்திருக்கிறார்கள். அப்பெண்ணின் மாமாவும் தற்போது சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். மாற்றுதிறனாளியான கஸ்தூரியின் தந்தை மட்டும் இக்கொலையை செய்திருக்க முடியாது.
இது வாக்குவாதத்தால் வந்த உணர்ச்சி வசப்படுதலால் செய்த கொலை அல்ல. ஊர்மானம், சாதி மானம் என்று வெறியேறி திட்டமிட்டு குழுவாக சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். கொலை நடந்த சமயத்தில் இரண்டு இளைஞர்கள் தெருவழியே ஓடியதை கிராம மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவ்விளைஞர்கள் குறித்து கஸ்தூரியின் மாமாவிடம் விசாரணை நடந்துவருவதாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி என்னிடம் கூறினார்” என்கிறார் சக்திவேல்.
தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன். படம் நன்றி: நக்கீரன்.
மேலும் சிவகுருநாதன் தானாக பெண்வீட்டிற்கு சென்றார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பதை மறுக்கிறார் சக்திவேல். சிவகுருநாதன் மற்றும் கஸ்தூரியின் செல்போன்களை கைப்பற்றியுள்ள போலீசார் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கஸ்தூரி மற்றும் அவர்களது வீட்டின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருக்கிறார் என்பதை உறுதிசெய்துள்ளதாகவும், சங்கரன்கோவில் டி.எஸ்.பி தன்னிடம் தெரிவித்த தகவலை தெரிவித்தார் சக்திவேல்.
இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் அக்கிராமத்தினரிடம் விசாரித்து கூறியதாவது ”பெண்வீட்டாரின் அழைப்பின் பேரின் சிவகுருநாதனும் அவரது நண்பர்களும் பெண்வீட்டிற்கு பேச சென்றிருக்கிறார்கள். வீட்டின் வாசலில் வைத்தே சிவகுருநாதனை கம்பியால் அடித்திருக்கிறார் பெண்ணின் அம்மா. இதை எதிர்பார்க்காத சிவகுருநாதனும் அவரின் நண்பர்களும் ஓட முயற்சித்திருக்கிறார்கள்.ஆனால் சிவகுருநாதன் மீது அடி பலமாக இருக்கவே அவரால் ஓட முடியவில்லை.
அக்கிராம் தெருக்களின் வழியே ஓடிய அவரது நண்பர்களை பக்கத்து கோனார் சாதி தெருக்கார்கள் ஏதோ திருடிவிட்டி ஓடும் நபர்கள் என பிடித்து விசாரித்திருக்கிறார்கள். பின்னர் ஆட்டோவில் ஏறி அவர்கள் சென்றதாக தெரிகிறது. அடிபட்டு சுருண்டு விழுந்த சிவகுருநாதன் பின்னர் அருகில் இருக்கும் கோவில் வாசலில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.” என்கிறார்.
போலீசாரிடம் பேசியதிலிருந்து சக்திவேல் கூறுவதிலும், கொலை நடந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுவதிலும் சில தகவல்கள் வேறுபட்டாலும் இது ஒரு திட்டமிடப்பட்ட தேவர் சாதிவெறி கொலை என்பது மட்டும் உறுதி. தற்போது தன் உறவினர்களையும், கொலையில் ஈடுபட்ட இளைஞர்களையும் காப்பாற்றும் நோக்கில் சரணடைந்துள்ளார் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணப் பெருமாள்.
சிவகுருநாதன் குடும்பம்
சிவகுருநாதனின் தந்தை சின்னகண்ணு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கிறார். அவரது இரண்டு சகோதரகள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். முதல் தலைமுறை இளைஞராக எம்.எஸ்.டி படித்து வேலை பார்த்து வரும் சிவகுருநாதன் தனது படிப்பும் வேலையும் தங்களது காதலுக்கு கைகொடுக்கும் என்று நம்பியிருக்கிறார். அதனடிப்படையில் பெண்வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். ஆனால் சாதிவெறி அவரைக் கொன்று விட்டது.
சிவகுருநாதனது தந்தையை மிரட்டி கொல்லப்பட்டவரது உடலை அவர்களது வழக்கப்படி புதைக்காமல் எரிக்க வைத்திருக்கிறது போலீசு. தலித் சாதிகளிலேயே கடை நிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சிவகுருநாதனது தந்தையும் தேவர் சாதிவெறியையோ இல்லை அந்த சாதிவெறியை காத்து நிற்கும் அதிகார வட்டங்களையோ எதிர்த்து நிற்கும் நிலையில் இல்லை.
சிவகுருநாதன் ஒரு நிலையான வேலையில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்தவர். அவரது காதலும் விடலைப் பருவ காதல் அல்ல. அதே போல கஸ்தூரியும் தேவர் சாதிவெறிக்கு பெயர் போன வட்டாரத்தில் இருந்து வந்தாலும் அதை தள்ளியெறிந்து உண்மையாக காதலின் பக்கம் நின்றிருக்கிறார். இப்படி அநேக ‘பொருத்தங்களுடன்’ இருந்த ஒரு காதல் இணையை பிரித்து காதலனை கொன்றிருக்கிறார்கள் தேவர் சாதி வெறியர்கள்.
சாதி மாறி காதலித்தால் அதுவும் தலித் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காதலித்தால் அதை பண்பாட்டு ‘சீரழிவு’ என்று நரித்தனமாக எதிர்க்கும் ராமதாஸ்கள் நிறைந்திருக்கும் தமிழகத்தில், கோவைப் பகுதியில் கோகுல்ராஜ்களைக் கொன்று விட்டு நெல்லைப் பகுதிகளில் தெனவெட்டாக திரியும் யுவராஜ்களின் காலத்தில் சிவகுருநாதனது காதல் எப்படி நிறைவேறும்?
இந்துமதவெறியர்கள் தமது இயக்க இருப்பையும் விஸ்தரிப்பையும் அதிகரிப்பதற்கு இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களையே நம்பியிருக்கின்றனர். அதே போன்று தமிழ் தேசியம் பேசும் இனவாதிகளும் ஆதிக்க சாதிவெறியை கண்டிக்காமல் தமிழன் என்ற பெயரில் ஆதரிக்கின்றனர். ஓட்டுக் கட்சிகளோ, அதிகாரி – போலிஸ் வட்டாரங்களோ ஆதிக்க சாதி இட்ட சட்டங்களை நிறைவேற்றும் கருவிகளாக செயல்படுகின்றனர்.
அதனால்தான் இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா? பிறப்பால் தேவர் சாதியில் பிறந்திருப்போரும், ஏனைய ஆதிக்க சாதிகளின் பெயர்களை சான்றிதழ்களில் பயன்படுத்துவோரும் இத்தகைய கொலைகளை பகிரங்கமாக கண்டிப்பதோடு, பொதுவெளியில் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல் நாம் காட்டுமிராண்டிகளின் காலத்திற்கு திரும்ப வேண்டியிருக்கும்.
“நான் ஏழு வயசுல நெசவு தொழிலுக்கு வந்தேன். இந்த ஊருக்குள்ள தொழில்ல என்ன அடிச்சுக்க யாராலும் முடியாது. நூலுக்கு பாவு போட்றதுல இருந்து தறியில உள்ள ஆசாரி வேலை மொதக்கொண்டு நானே பாத்துருவேன். தறி சத்தத்த கேட்டே எந்த எடத்துல பிரச்சனையின்னு சொல்லிருவேன். இருந்தாலும் இந்த தொழில நம்பி நிதமும் வயிறார சாப்பிட முடியுமான்னா முடியாது. பல நாள் பட்டினி கெடந்த அனுபவமெல்லாம் உண்டு. சொந்தமா தறி வச்சுருக்கேன். ஆனா சக்திக்கு மீறி கடனாளியா இருக்கேன்.”
இரண்டு தலைமுறை நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் 32 வயதான குமார். பல வருடங்கள் கூலி நெசவுக்கு போனவர் தற்போது சொந்த தறியில் நெய்கிறார். கூட்டுறவு சங்கதில் உறுப்பினராக இல்லையென்றாலும் அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்காக நெசவு நெய்கிறார். ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் தறியே பெரும் இடத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. தறி ஓசையை தாலாட்டாக கேட்டு வளரும் குழந்தைகளுக்கு படுக்குமிடமே அறையின் பாதையாக இருக்கும் இடம்தான்.
“இது போல எத்தன நாளைக்கி பட்டினி கெடக்க முடியும். பல பேர் நெசவ விட்டுட்டு சமையல் மாஸ்டர், சப்ளையருன்னு வேற வேலைக்கி போறாங்க. எத்தன கஸ்டம் வந்தாலும் என்னால போக முடியல. இந்த தொழில நேசிக்கிறேன். புடவை நெய்யும் பேது ஒரு புள்ளி மாத்தி வந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது அம்மா.”
குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் – மாதிரிப் படம்
“மனைவி உழைப்பையும் சேத்துதான் என்னால இந்த தொழில உயிரோட வச்சுருக்க முடியுது. மத்த வேலைகளப் போல இல்ல நெசவு. தறி குழிக்குள்ள எறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும். ஒரு நூல் இழை மாறாம கண்ணு பாக்கணும். தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும். குழந்தையப் போல தறியில கையி துறுதுறுன்னு விளையாடணும். நெய்யும் போது மேல் வேலைக்கி உதவியாளர வாய் கூப்பிட்டுட்டே இருக்கனும். தறியின் வாசத்தை மூக்கு சுவாசிச்சுட்டே இருக்கனும். இது மட்டும் இருந்தா பத்தாது கலை ரசனையும் வேணும்.”
“தறி நெய்றத விட அதுக்கு மேல் வேலைதான் அதிகம் செய்யனும். என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் தறியில ஒரு நூல் அறுந்துட்டா ஒடனே ஓடி வந்து எடுத்து தருவா என் மனைவி. இருந்தும் என் முன் கோபத்துல எத்தனையோ தடவ அவள நான் திட்டியிருக்கேன்.”
இடையில் புகுந்தார் மனைவி அஞ்சலி. “நூல் பாவு போட மேல் ஆள் வச்சுக்க முடியாம நாங்க ரெண்டே பேருதான் போடுவோம். எத்தன தடவ சொல்லிக் கொடுத்தாலும் ஏதாவது தவறு செஞ்சுருவேன். கூடவே வேலை பளு கடன் சுமை அதனால கொஞ்சம் கத்துவாரு. ஒரு பட்டுப் புடவை உருவாகனுன்னா மொத்த குடும்பமும் பாடுபடனும். என்னால முடிஞ்சத செய்வேன்.”
“எங்க வீட்டுக்காரரு தறி அறுக்கும் போது கொஞ்சம் குடிப்பாரு. மத்தபடி எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இருந்தும் எங்களால கடன் இல்லாம இருக்க முடியல. சாண் ஏறுனா முழம் சறுக்குது. மழை காலத்துல நூல் இழையெல்லாம் ஈரப்பதமாயி தறி ஓடாது. வேலையும் சில நேரம் இருக்காது. வேலையை சேத்து செஞ்சு விட்ட இடத்தை நெரப்ப முடியாது. அதுக்கு உண்டான நேரத்த குடுத்து ஒவ்வொரு இழையாதான் பாத்து பாத்து நெஞ்சாகனும். அதுக்குள்ள வட்டியே கடன் தொகையை தாண்டிரும். சொந்த தறியில விடியவிடிய கூட நெய்யலாம். கூலிக்கு போறவங்க பாடு ரொம்ப மொசம்.”
பல ஆயிரங்களில் மின்னும் பட்டாடை
“எங்க அப்பா நூல் தறி கைலி, பாய் நெய்வாரு. இவருதான் பட்டுத்தறி நெய்றவரு மாப்பிள்ளையின்னதும் பட்டு புடவை அவர் கையால நெஞ்சு தருவாறுன்னு எதிர்பாத்தேன். 5000 ரூபாய்க்கு வாங்கிதான் கொடுத்தாங்க. இனியாவது தருவாரான்னுஆசையா இருக்கு.” என்றார் ஏக்கம் கலந்த காதலுடன் தன் கணவனை பார்த்தபடி.
“எனக்கும் ஆசைதான். ஆனால் சத்தியமா என்னால முடியாது” என்றார் குமார்.
“என்னோட அஞ்சு வயசு பொண்ணுக்கு ஒரு பட்டு பாவாடை நெஞ்சு குடுக்கனுன்னு ஆசை. ஆனா கொழந்தை ஆசையா கேக்குற தீனியையே வாங்கி கொடுக்க முடியல. பட்டுல பாவாடையோ, சேலையோ நெய்ய அதுக்கான பொருள் வாங்க ஆயிரக் கணக்குல மொத்தமா அத்தன பணத்துக்கு நான் எங்க போக. சொன்னா நம்ப மாட்டிங்க. எங்க கல்யாணத்துக்கு எடுத்த அந்த ஒரு பட்டுப் புடவையையும் தாங்காத வறுமைக்கி வித்து சாப்பிட்டோம்.”
“இந்த வருசம் (2016) வந்த மழை வெள்ளத்துக்கு யார் வீட்டுலயும் தறி ஓடல. ரெண்டு மாசம் முடங்கி போச்சு. பத்து வருசமா வேலை செஞ்ச முதலாளிக்கிட்ட போயி குடும்பமே பசி பட்டினியா இருக்குது ஏதாவது உதவி செய்ங்கன்னு கேட்டதுக்கு ஏங்கிட்டயா நீ வேலை செய்றன்னு அவமான படுத்திட்டு 500 பணம் கொடுத்தாரு. எங்க கஷ்ட காலம் வாங்கிக்க வேண்டிய நெலமை.”
“சொந்தமா தறி வச்சுருந்தாலும் கூலிக்கு வேலைக்கி போனாலும் தறியில உக்கார்ர எங்க வீட்டு அடுப்பு பல நாள் அணைஞ்சுரும். ஆனா அதை விக்கிற முதலாளிங்க கார், பங்களான்னு பளபளப்பா இருக்கானுங்க. அவனோட பந்தாவுக்கும் பவுசுக்கும் நாமதான் காரணம்னு தெரியுது. என்ன செய்ய முடியும். காசு அவங்கிட்டதானே இருக்கு கை நீட்டி கடன் வாங்கிதான் ஆகனும். அவன் சொல்றத கேட்டு அடிமையா வேலை செஞ்சுதான் ஆகனும்.”
“கூட்டுறவு சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விசைத் தறி மோட்டார் கொடுக்குறாதா சொல்றாங்க. நெசவாளர் குடும்பத்துக்கு 200 யூனிட் கரண்ட் இலவசம்னாங்க. கரண்டாபீசுக்கும் வீட்டுக்கும் அலஞ்சு பாத்துட்டேன் கெடைக்க மாட்டேங்குது. எதுவும் ஒழுங்கா உரியவனுக்கு போய் சேர்ரது இல்ல.”
“அவ்வளவு ஏன்! இந்த மாசம் தேசிய கைத்தறி நெசவாளர் சிறப்பு விருது கொடுத்தானுங்க. அங்கையும் அரசியலுதான். ஆளுங்கச்சிய சேந்த கட்சிக்காரங்க அவங்களுக்கு வேண்டிய கூட்டுறவு சங்கத்த சேந்த அம்மாவுக்கு மோடி கையால விருது வாங்கி கொடுத்தானுங்க. அந்தம்மா என்னமோ தறி குழிக்குள்ள உக்காந்து நெஞ்சாமாதிரி. அதுக்கு ஒரு பாராட்டு விழா காஞ்சிபுரத்துல வச்சானுங்க. எவ்வளோ ஏக்கத்தோட போனோம் தெரியுமா? நமக்கு பரிசு குடுக்க வேண்டாம். ஒரு துண்டு போட்டு பாராட்டி ஊக்குவிக்கலாம்.” என்றார்.
அடுத்து, சோமசேகரன் என்ற 70 வயது நூல் தறி நெசவாளரை பார்க்க அவர் வீட்டுக்கு போனோம். தறியும் நடைபாதையும் கொண்ட சின்ன அறையில் கையை தூக்கினாலே இடிக்கும் அஸ்பெட்டாஸ் கூறைக்கு கீழே கைலி நெய்து கொண்டிருந்தார் அந்த பெரியவர். தறிக்குள் போகவோ வெளியே வரவோ முடியாத இட நெருக்கடிக்குள் இருந்தது அறையின் அமைப்பு. அவரை நெருங்கி பேசலாம் என அருகில் போன நான் அதிர்ந்து விட்டேன்.
லுங்கி நெய்யும் நெசவுத் தொழிலாளி – மாதிரிப்படம்
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது. முறையாக வேலை இருந்தால் ஒரு நாளைக்கி 80, 100 ரூபாய் கூலி கிடைக்குமாம். இத்தனை வயது உழைப்பில் பிள்ளைகளுக்கு உரிய வயதில் முறையான திருமணம் கூட செய்து கொடுக்க முடியாதவராய் வயித்து பாட்டுக்கு தறி தொழிலோடு போராடுகிறார்.
“ஒரு கைலி நெய்ய மூனு நாள் ஆகும். வீட்டம்மா பரூடத்துல நூல் ஏத்தி திரிச்சு தருவாங்க. நெய்ய தேவையான பொருள் செலவு போக ஒரு கைலிக்கி 250, 300 கெடைக்கும். கைலியின் அளவை பொருத்து 400 முதல் 600 வரை குடுப்போம். தறி தொழிலே அழிஞ்சு போச்சு. இந்த வயசுல வேற வேலைக்கு போக முடியாது. என்ன செய்றதுன்னு தெரியல போயிட்டு இருக்கு பொழப்பு.”
“அச்சு மரம் பிடித்த கை இன்னைக்கி சாம்பார் வாளி பிடிக்குது” என்றார் நெசவுத் தொழிலைக் கைவிட்ட மூர்த்தி.
“எந்தங்கச்சி தறி மிதிப்பா, நூல் இழைப்பா, நெசவுல எல்லா வேலையும் தெரியும். நொடிஞ்சுப் போன இந்த தொழிலாலும், குடிகார புருசனாலும் பிள்ளைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு ஒழுங்க போட முடியல. தறி நூலைக் கூட அடகு வச்சுட்டு குடிக்கிறான் அவ புருசன். இப்ப ஓட்டல்ல பாத்திரம் கழுவுற வேலைக்கி போறா. எந்த நேரமும் தண்ணியில ஊறி கையும், காலும் பொணம் போல இருக்கு. கால் நரம்பு சுருட்டு நோய் எந்தங்கச்சி உட்பட பல பெண்களுக்கு தொழில் சார்ந்த நோயாவே இருக்கு.”
“முக்கியமா மூகூர்த்த வேலைக்கி நெசவாளிங்க போறதே வயிரற சாப்பிட்டு மிச்சம் மீதி இருந்தா வீட்டுக்கு பொண்டாட்டி பிள்ளைக்கி எடுத்துட்டு வரலான்னுதான். கல்யாண வீட்டுல போட்ற பலகாரமெல்லாம் இந்த வீட்டு பிள்ளைங்க கண்ணுல கூட பாத்துருக்காது. புதையல் வருமான்னு எதிர் பார்க்கும் மன நிலையில குழந்தைங்க பெத்தவங்கள பலகாரத்துக்காக எதிர் பார்ப்பாங்க. எல்லாத்த விட கொடுமையான விசயம் அன்னதான சாப்பாட்டுக்கு கோயில்ல காத்துருப்பதும், வயசானவங்க கடைத்தெருவுல செலவுக்கு கை நீட்டுறதும் பாக்க முடியலிங்க.”
உழைக்கிற வரைக்கும் கூடவே இருந்த தன்மானம் உழைப்பை பிடுங்கிய பிறகு பறி போய் விட்டது. மன்னர் காலம் முதல் முதலாளி காலம் வரை கௌரவத்தின் அடையாளமாக பட்டு நெய்து கொடுத்த நெசவாளர்களின் வாழ்க்கை நைந்து போன கந்தல் துணியாக உள்ளது.
பட்டுக்கு பெயர் போன காஞ்சியில் தான் பல்லவர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் உள்ளன. கோயில் கட்டுமானமும், கலை நுட்பமும் நம் கண்ணை கவரும் நேரம், அதில் ஈடுபட்டோரின் உழைப்பின் வலியும் உயிர் பலியும் நாம் அறியோம். அப்படிதான் பளபளக்கும் பட்டுக்கு பின்னே நைந்து கிடக்கிறது நெசவாளர்களின் வாழ்க்கை.
குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாக திரிந்த மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் உடையும் முக்கியமானது. அதனால்தான் உழவும், நெசவும் எல்லா நாடுகளிலும் அந்தக் காலத்தில் முக்கியமான தொழில்களாக இருந்தன. உழவன் ஏர் பிடித்தான். நெசவாளன் தறி பிடித்தான். ஆண்டிகளின் கோவணமானாலும், அரசனின் பட்டாடையானாலும் அடிப்படையில் மனிதனின் மானம் காக்கும் மகத்தான தொழிலாக நெசவு இருக்கிறது. இன்றைக்கு நெசவை பெரும் எந்திரங்களும், ஆலைகளும் செய்து வந்தாலும் கையால் நெய்யப்படும் தறிகளே அவற்றின் தோற்றம். அந்த நெசவாளர்களோடு ஒரு நாள் செலவழித்த போது உடைகளின் கதை புரிந்தது. நெய்பவர்களின் வியர்வை தெரிந்தது.
தமிழகத்தில் மற்ற பகுதி மக்களை விட பொருளாதாரத்தில் இத்தகைய கைத்தறி நெசவாளர்கள் மிகவும் வறிய நிலையில் காலம் தள்ளுகிறார்கள். சோத்துக் கஞ்சியே அவர்களது வீட்டில் ஆடம்பர உணவு. கோழித் தலையும், காலும் அவர்களுக்கு அசைவ விருந்து. தி நகர் கடைகளில் பட்டுச் சேலைகளை விதவிதமான தேடி எடுக்கும் கைகள் அந்த பட்டின் பின்னே வழியும் ரத்தத்தை ஒரு போதும் அறியாது.
பட்டு நெய்யும் தொழிலாளிகளுக்கு நைந்து போன கைலிதான் உடை! இத்தகைய சர்வ வறுமை வாழ்க்கை இல்லாமல் சர்வ இலட்சணப் பட்டு இல்லை!
பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கூறி அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை முற்றுகையிட திரளும் மக்கள்
தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் முற்றுகை இவற்றைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றி விடுவதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் மண்டல மேலாளர் முற்றுகை, மீண்டும் டாஸ்மாக் கடைகள் முற்றுகை என்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடந்த அனைத்து போராட்டங்களிலும் போலீசின் மூலம் அச்சுறுத்துவது, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவது என்ற நிலையில் துளியும் சோர்வின்றி, எங்களை சீரழிக்கின்ற இரு டாஸ்மாக் கடைகளையும் மூடும்வரை போராடுவோம் என்ற உறுதியுடன் 04-10-2016 அன்று பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரம், மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியின் அணி திரட்டலில் முற்றுகையிட மக்கள் தயாராயினர்.
கடந்த கால போராட்டங்களின் போது கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, காக்கிச் சட்டை போலீசு மூலமும் உளவுத் துறை போலீசு மூலமும், டாஸ்மாக் கடைகளின் முன்பு நூற்றுக் கணக்கான போலீசை குவித்தும் மக்கள் திரளாமல் தடுக்க எடுத்த முயற்சியில் தோற்றுப் போன அரசு இம்முறை மக்களிடம் தங்கள் தடுப்பு நடவடிக்கைள் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு இரு கடைகளுக்கு மட்டும் கடுமையான பாதுகாப்பு கொடுத்தது.
இரு கடைகளையும் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் திட்டமிட்டபடி 04-10-2016 அன்று காலை 12.00 மணிக்கு தலைமையில் முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் சென்று விடுவார்கள் என்று நினைத்த போலீசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடையை மூடினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறியவர்களை எளிதாக கைது செய்ய முடியவில்லை. பெண்கள் பலரையும் பலவந்தமாக தூக்கிச் சென்றே கைது செய்தார்கள். கைது செய்து மண்டபம் அழைத்து சென்றபோதும் வேனிலிருந்தும் மக்கள் இறங்க மறுத்து விட்டனர். இறங்கி மண்டபத்தினுள் செல்லாமல் மைதானத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். போலீசின் மிரட்டலுக்கும், கெஞ்சலுக்கும் சிறிதும் அடிபணிய மறுத்து மைதானத்திலேயே அமர்ந்து தொடர்ந்தது போராட்டம். வயதான பெண்களை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்க மறுத்து மிரட்டியது போலீசு. மைதானத்தில் அமர்ந்து போராடுவது பொது மக்களுக்கு தெரிந்து விடாதபடி வாசலில் வாகனத்தை நிறுத்தி மறைத்தனர் போலீசார்.
கடையை முற்றுகயிட்ட பெண்கள்
“உருவத்தைத்தானே மறைக்க முடியும், குரலை மறைக்க முடியுமா இவனுகளால” என்று பாட்டி ஒருவர் இயல்பாகக் கூறிக் கொண்டே முழக்கத்தைத் தொடர்ந்தார். மதியம் உணவு உண்ண மாட்டோம் என்று மக்கள் அறிவித்து விட்டனர். இம்முறை பெயர், முகவரி கேட்பதை போலீசாரே தவிர்த்து விட்டனர். கடந்த முறைகளில் மக்கள் தர மறுத்திருந்தனர் என்ற பாடம் அவர்களுக்கு நினைவு வந்திருக்கும்.
உடல்நலம் குன்றியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிஸ்கட்டுகளை வாங்கி வந்திருந்தனர் ஊர் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும். பிஸ்கட்டுகளை கொடுக்க விடாமல் அது ஏதோ வெடிகுண்டு போல தீவிரமாக பாதுகாத்தது போலீஸ். அதையும் மீறி பிஸ்கட்டை கொடுத்து விட்டதால், பயங்கரவாதிகளை கையும் களவுமாக பிடித்து விட்டதாக எண்ணி மிரட்டத் தொடங்கிய போலீசாரிடம், “கொள்ளைக் காரனிடமும், கொலைகாரனிடமும், கற்பழித்தவனிடமும் காட்டாத வீரத்தை பிஸ்கட் கொடுத்தவர்களிடம் காட்டுகிறீர்கள், நாங்கள் குற்றவாளிகள் அல்ல, போராளிகள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தனர், மக்கள்.
“நீங்கள் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு அடங்காதவர்கள்தானே” என்று ஆணாதிக்க திமிரில் வக்கிரமாக பேசிய ஒரு சார்பு ஆய்வாளாரிடம், “உன் வீட்டுப் பெண்களுக்கும் சேர்ந்துதான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் கண்ணியமாக போராடுகிறோம். நீ எப்படி இவ்வாறு பேசலாம், மரியாதையாகப் பேசு” என்று எச்சரித்தனர், பெண்கள்.
மாலை 5.30 மணிக்கு, “உங்களை விடுவித்து விட்டோம்” என்று அறிவித்தனர் போலீசார். “நீங்கள் விடுவித்தாலும் கடையை முடாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சிறையில் அடைத்தாலும் இரு கடைகளையும் அடைக்காமல் வீட்டுக்குச் செல்லப் போவதில்லை” என்று மக்களும் திருப்பி அறிவித்தனர்.
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் செல்கின்றோம்” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்து சென்று விட்டனர் போலீசார். இரவு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்தது. “நாங்கள் எத்தனை நாளானாலும் இங்கிருந்து போராடுவோம். அதிகாரிகளா, நாங்களா என்று பார்த்து விடலாம்” என்று போராட்டம் வேகமடைந்தது.
மண்டபத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள்
போராட்டத்திற்கு ஆதரவளித்து மண்டபத்திற்கு வெளியில் நின்ற ஊர் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களை நேரடியாக போராட்டத்திற்குள் வரவழைத்து விட்டது, அதிகாரிகள் போலீசாரின் இந்த நடவடிக்கை. போராட்டம் விரிவடைந்தது. மேலும் பல ஆண்களும், பெண்களும் வந்தனர். இம்முறை முன்னின்று அணிதிரட்டியது வெளியில் நின்று ஆதரவளித்த ஊர் நிர்வாகிகளும், உறவினர்களும், பிரமுகர்களும். போராட்டம் அவர்களுடையதாகவும் மாறியது.
பதறியடித்து ஓடி வந்தனர் விட்டுச்சென்ற போலீசார். அணிதிரண்டு வந்த மக்கள் மண்டபத்தில் உள்ளவர்களுடன் இணைந்து விடாதவாறு தடுத்து விட்டனர். தாசில்தார் வந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், மக்களின் கோபத்தை, ஆத்திரத்தை தடுக்க இயலவில்லை. டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மண்டப வாசலிலேயே முழக்கமிட்டனர், உறுதியுடன் போராடினர். உள்ளாட்சி தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களையும் இழுத்துக் கொண்டது இந்தப் போராட்டம்.
வரமுடியாது என்று ஆணவத்துடன் இருந்த அதிகாரிகளை வரவழைத்து விட்டது மக்களின் உறுதி. தாசில்தார் வந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். “கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்” என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை கேள்வி கேட்டனர் பெண்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் “அடுத்த ஒரு மாதத்தில் ஒரு கடையையும் அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் அடுத்த கடையையும் இடம் மாற்றி விடுவதாக ஆட்சியர் என்னிடம் உறுதி கூறியுள்ளார்” என்று கூறியும் யாரும் ஏற்கத் தயாராயில்லை. எஸ்.பி நேரில் வந்தாக வேண்டிய சூழல். எஸ்பி ஃபோனில் கூறியதை நேரில் வந்து கூறியும் யாரும் ஏற்கவில்லை.
“நீங்கள் நாளையே மாற்றலாகி சென்று விட்டால் நாங்கள் யாரிடம் போய்க் கேட்போம்? இதற்கு முன்பும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரி எழுதிக் கொடுக்கும் போது நானே கடையை மாற்றும் அதிகாரம் பெற்றவர் என்று கூறித்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தார். இன்றுவரை அவர் பதில்கூட சொல்லவில்லை.” “நான் மாவட்ட அதிகாரி கூறுகின்றேன்” என்று எஸ்.பி கூறியதும். “இதற்கு முன்பு எழுதிக் கொடுத்ததும் மாவட்ட அதிகாரிதானே” என்று மக்கள் மடக்கினர்.
“தற்பொழுது இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடுகின்றோம்” என்று கூறிப் பார்த்தார். இரண்டு கோரிக்கையையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை மக்கள். வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை செல்பேசியில் அழைத்து பேசிய எஸ்.பி, “ஒரு கடை இன்றுமுதல் மூடப்படுவதாகவும், இன்னொன்று இன்றிலிருந்து (04-10-206) 30 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்றும் கலெக்டர் கூறி விட்டார்” என்று கூறினார்.
“கலெக்டர் கூறுவதை நாங்கள் எப்படி நம்புவது? எழுதிக் கொடுங்கள். இன்றே மூடுவதாகக் கூறிய டாஸ்மாக் கடையை இப்போதே சீல் வையுங்கள்” என்று கலெக்டரின் வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கினர். எஸ்.பி “இதற்கு நான் பொறுப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் கடிதம் கொடுத்து விடுகின்றேன். நீங்கள் கஷ்டப்பட்டு போராடுவதை புரிந்து கொண்டதால் உங்களுக்கு உதவி செய்யவே நான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்” என்றும் கூறினார். மேலும் இதை ஒலிபெருக்கி மூலம் அனைவரிடமும் பகிரங்கமாக அறிவித்தார்.
“இந்த வாக்குறுதிக்கு மாறாக கடைகள் திறக்கப்பட்டால் நாங்கள் மீண்டும் போராடுவோம்” என்று எஸ்.பியிடம் அறிவித்து விட்டு இரவு 10.30 மணியளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலைந்து செல்லாம்ல உடனே ஒன்று கூடி, “இது முழு வெற்றியல்ல, அரசாங்கம் சொன்னது போல் நடந்து கொள்ளுமா என்று தொடர்ந்து கண்காணிப்போம்! இருகடைகளும் நிரந்தரமாக அகற்றப்படும்வரை தொடர்ந்து போராடுவோம், நாளை கடை திறக்கப்பட்டால் மீண்டும் கடையை முற்றுகையிடுவோம்” என்று முடிவெடுக்கப்பட்டது. மறுநாள் இருகடைகளும் திறக்கப்படவில்லை. 06-10-2016 அன்று எஸ்.பி கூறியபடி ஒரு கடை மூடப்பட்டுள்ளது.
பெண்கள் பெரும்பான்மையாகவும், குறைந்த எண்ணிக்கையில் ஆண்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட போராட்டம் சாதி, மதம், எல்லைப் பிரச்சனை, மக்கள் அதிகாரம் மீதான தீவிரவாத அமைப்பு என்னும் அவதூறுகள் இவை அனைத்தையும் உடைத்து, பெருமளவு ஆண்களையும் இணைத்து, இந்து முன்னணி, கிறிஸ்தவ மத அமைப்புகள் இவற்றின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தி, மக்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரிகளின் ஆட்சியாளர்களின், அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணிய வைப்பதன் மூலமே மக்கள் தங்கள் உரிமைகளை பெற முடியும் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கின்றது. இதை புரிந்து கொண்டு எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க விடாப்பிடியாக போராடுவது ஒன்றே தீர்வு என்று மக்கள் தயாராகி வருகின்றனர். இதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதால்தான் மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு என்று அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டனர்.
முன்னதாக 21-09-2016 அன்று நடந்த முற்றுகை போராட்டம் பற்றிய செய்தி
கன்னியாகுமரி மாவட்டம், பேயன்குழி – நுள்ளிவிளை பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரு டாஸ்மாக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கூறி, மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் 12-04-2016-ம் தேதி இரு கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தை பற்றி சிறிதும் அஞ்சாமல் நள்ளிரவு வரை விடாப்பிடியாக வீரமிகு போராட்டத்தை பெண்களும், ஆண்களும் நடத்தியதால் தேர்தல் முடிந்ததும் (ஜூன் 20, 2016) இரு கடைகளையும் அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை இருகடைகளும் அதே இடத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
உழைக்கும் மக்களிடம் உள்ள நேர்மையும், வாக்கு நாணயமும், அதிகாரிகளிடமும், அதிகாரவர்க்கத்திடமும் இருக்காது என்பதையும், டாஸ்மாக்கை நமது பகுதியில் இயங்க விடாமல் தங்கள் அதிகாரத்தை போராட்டத்தின் மூலம் நிறுவுவது மூலமே டாஸ்மாக்கை மூட முடியும் என்பதையும் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்ட பெண்களும், ஆண்களும், அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினர். தீவிரவாதிகள் போராடுகிறார்கள், கிறிஸ்தவர்கள் போராடுகிறார்கள், எல்லைப் பிரச்சனைக்காகப் போராடுகிறார்கள் என்று பரப்பிய பொய் அவதூறுகளையெல்லாம் முறியடித்து உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து மீண்டும் 21-09-2016-ம் தேதி பேயன்குழி – நுள்ளிவிளை கடைகளை முற்றுகையிட்டனர்.
போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவே கிராமம் கிராமமாக தெருத்தெருவாக, உளவுத்துறை போலீசார் சுற்றி திரிந்தும் போராட்டத்திற்கு தயாரான திரளான பெண்களையும், ஆண்களையும் தடுக்க இயலவில்லை. போராட்டம் அறிவிக்கப்பட்ட அன்று வழிநெடுக காலை நூற்றுக்கணக்கான போலீசை குவித்து டாஸ்மாக் கடைகள் முன்பு பெண்கள் கூடி விடாதவாறு பெண்களை தடுக்க எடுத்த முயற்சியால் காக்கிச்சடை போலீசாருக்கும் தோல்வியே மிஞ்சியது.
போலீசின் அச்சுறுத்தலையும் மீறி டாஸ்மாக்கடையின் முன்பு திரளான பெண்களும், ஆண்களும் கூடி முற்றுகையிட்டனர்.
“போராட்டத்திற்கு அனுமதியில்லை, கலைந்து செல்லுங்கள்” என்று காவல்துறை அறிவித்தது.
“உங்கள் அனுமதி எங்களுக்கு தேவையில்லை” யென்று போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினர் பெண்கள்.
“உங்கள் பிரதிநிதிகளை கலெக்டரிடம் அழைத்துச் செல்கின்றோம், கோரிக்கையை அவரிடம் கூறுங்கள்” என்று காவல்துறை கூறியது.
“கலெக்டரை நாங்கள் ஏன் சென்று பார்க்க வேண்டும். அவரை வேண்டுமானால் இங்கு வரச்சொல்லுங்கள், நாங்கள் பலமுறை அவரை சந்தித்துவிட்டோம். இனிமேல் சந்திக்க ஒன்றுமில்லை, கடையை மூடுமாறு கலெக்டரிடம் சொல்லுங்கள்” என்று போலீசிடம் கூறிவிட்டனர் பெண்கள்.
சிறிது நேரத்தில் பெண்களையும், ஆண்களையும் கைது செய்து மண்டபத்தில்சிறை வைத்தது போலீசு. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்து அழைத்து சென்ற போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஏராளமான பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை திருப்பி அனுப்பியது போலீசு.
“மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இங்கு வந்து தான் எழுதிக் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கூற வேண்டும். அதுவரை உணவருந்த மாட்டோம், பெயர், முகவரி தரமாட்டோம்” என்று கோரிக்கை வைத்து மண்டபத்திலும் போராட்டம் தொடர்ந்தது.
“கடையை மூடுங்கள் என்று கோரவில்லை. உங்களிடம் கோரிக்கை வைப்பதும் வீண, கடையை நாங்களே மூடிக் கொள்கின்றோம்” என்று தங்கள் கோரிக்கையையும் நிலைப்பாட்டை மண்டபத்தில் காவல் துறையினரிடம் தெளிவுபடுத்தினர் பெண்களும், ஆண்களும்.
மாலை 5 மணியாகியும் அதிகாரிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை.
“நாங்கள் தகவல் கொடுத்துவிட்டோம், தொடர்ந்து முயற்சி செய்கின்றோம், ஆனால் அதிகாரிகள் வர மறுக்கிறார்கள், நாங்கள் என்ன செய்வது, நாங்கள் பலமுறை இரண்டு கடைகளையும் மூடுமாறு அறிக்கை எழுதி அனுப்பியுள்ளோம், இன்று காலையும் கூட கலெக்டருக்கு நிலைமையை தெரிவித்துள்ளோம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வராமல் மீண்டும் மீண்டும் எங்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள், நாங்கள் என்ன செய்வது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
500 கடைகளை மூடப்படும் என்ற அறிவிப்பு வந்த காலகட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்று “எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றீர்களா” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்று கேட்டபோது, “இரு கடைகளையும் மூட வேண்டும் என்று நாங்கள் மேலே எழுதி அனுப்பிவிட்டோம்” என்று அங்குள்ள ஊழியர்கள் கூறினர்.
போலீசார் கூறியது, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியது, அதிகாரி வந்து பதில் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வராதது ஆகிய நிலைமைகளை மண்டபத்தில் வைத்து விவாதித்தனா. பெண்கள் உறுதியாகவும், விடாப்பிடியாகவும், போலீசுக்கு அஞ்சாமலும் கடைகளை நடத்த விடாமல் போராடினால் மட்டுமே டாஸ்மாக் சாராயக்கடைகளை மூட முடியும் என்பதையே அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் நடத்தைகள் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துவதை சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டனர்.
மேலும், “கடையை மூட வேண்டும் என்று அறிக்கை மேலே உள்ளவர்களுக்கு எழுதியதாக டாஸ்மாக் அதிகாரிகளும், போலீசும் கூறுகின்றனர், மேலே உள்ளவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்று அவர்களே கூறுகின்றனர் அப்படியெனில் அந்த மேலே உள்ளவர்கள் யார்? மேலே உள்ளவர்கள் என்றால் சாராய ஆலை முதலாளிகளா? நம்மை சாராய ஆலை முதலாளிகள் தான் ஆள்கின்றார்களா” என்றும் பெண்கள் கேள்வி எழுப்பினர்.
“போலீசுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்! எத்தனை முறையானாலும் போராடுவோம்! குடும்பத்தினரையும், குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு போராடுவோம்! சிறை சென்றும் போராடுவோம்! கடைகளை மூடும் வரை விடாப்படியாக போராடுவோம்” என்று சூளுரைத்து மாலை 6.00 மணியளவில் அன்றையதினம் கலைந்து சென்றனர் திரளான பெண்களும், ஆண்களும்,
“மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் ஏன் போராடுகிறீர்கள், அரசியல் கட்சிகளை அழைத்து போராடுங்கள், எம்.எல்.ஏ-வை கூப்பிடுங்கள்” என்று திட்டமிட்டே உள்நோக்கத்துடன் கூறி வருபவர்களிடம், பிரச்சாரம் செய்பவர்களிடம், “நீங்கள் கூறுபவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக போராட தயாராகவில்லை, மக்கள் அதிகாரம் மக்களுக்கான அமைப்பு, நாங்கள் தான் மக்கள் அதிகாரம்” என்று பதிலடி கொடுத்து அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பெண்கள்.
போராட்டப் படங்கள் : பெரிதாக பார்க்க படங்களை அழுத்தவும்!
போராட்டம் குறித்து வந்த பத்திரிகை செய்திகள்: பெரிதாக பார்க்க அழுத்தவும்
இவண், மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம்.
போயஸ் தோட்டமோ, கொட நாடு எஸ்டேட்டோ எங்கும் மர்மம்தான்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது ஏன்? இன்று வரை இந்தக் கேள்விக்கான பதில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் அதிகாரப் பூர்வ செய்தி அறிக்கைகளில் தள்ளாடுகிறது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல், இரண்டாம் நாளிலேயே வழக்கமான உணவு எடுக்கிறார் என்று கூறியது பிரதாப் ரெட்டியின் மருத்துவமனை.
சரி, ஏதோ சாதா காய்ச்சல் அதற்கு சிறப்பு சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார் என்றார்கள். பிறகு முழு பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக மேலும் சில நாட்கள் இருப்பார் என்றார்கள். கடைசியில் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர், தில்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்தது. சாதா காய்ச்சலுக்கு ஏன் லண்டன், தில்லி சிறப்பு மருத்துவர்? என்றால் பதிலில்லை.
ஊடகங்களைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்போரின் மருத்துவப் பிரச்சினைகள் தனிப்பட்ட விசயம், அதை பொது வெளியில் பகிர்வது தேவையற்றது என்பது நிலைப்பாடாம். இதை தந்தி பாண்டே முதல் இந்து தலையங்கம் வரை உபதேசிக்கிறார்கள். கூடவே “இருப்பினும் மக்களின் சந்தேகங்கள் போக்கப்படவேண்டும்” என்று பயந்து கொண்டே ஒரு பின் குறிப்பு போடுகிறார்கள்.
நோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு?
உடனே “அம்மா நலமாக இருக்கிறார், எந்தப் பிரச்சினையும் இல்லை, வதந்திகளை நம்பாதீர்கள்” என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. நம்புகிறார்கள், நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.
இது போக திருமாவளவன் துவங்கி தா.பா கட்சியினர் வரை அப்பல்லோவின் முதல் தளம் சென்று அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து “ஆமாம், அம்மா நலம்தான்” என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆளுநருக்கு மட்டும் மருத்துவர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அண்ணா சாலையின் கிரீம்ஸ் சாலை பிரிவில் துவங்கி, அப்பல்லோ இரண்டாம் தளம் வரை பத்து கட்ட பாதுகாப்பு, தடையரண்களை போலீசு ஏற்படுத்தி அங்கேயே முகாமிட்டிருக்கிறது.
அம்மா கொடநாடு சென்றால் கூடவே செல்லும் தமிழக அரசின் உயரதிகாரிகள் இப்போது அப்பல்லோவில். ஊடக செய்தியாளர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து கூடவே செய்திகளையும் அளிக்கிறது தமிழக செய்தித்துறை.
டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் தைரியமாக முந்தாநாள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம், இது பொது நல வழக்கு அல்ல, பொது விளம்பர வழக்கு என இன்றைக்குக் கண்டுபிடித்திருக்கிறது.
தமிழக சட்டமன்றம் என்றாலே விதி எண் 110 என்றாக்கினார்கள். அம்மா இருக்குமிடம் போயஸ் தோட்டமோ இல்லை கொடநாட்டு தோட்டமோ அதுதான் தலைமைச் செயலகம் என்று அதிகாரிகள் அங்கே நின்றார்கள். இதை யாராவது எழுதினால் அவதூறு வழக்கு. பாயும் என்பதை நிலை நிறுத்தினார்கள்.
தமிழக செய்தி ஒலிபரப்பு விளம்பரத் துறை ஃபோட்டோ ஷாப் படங்களோடு அம்மா ஆட்சி மகிமைகளை எடுத்துரைத்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்பது என்றுமே மர்மமான ஆட்சிதான். மன்னார் குடி கும்பல், உளவு-போலீசு அதிகாரிகள், சோ முதலான பார்ப்பனக் கும்பல் ஆகியோர் மட்டும்தான், ஆகம விதிப்படி அம்மா அமர்ந்திருக்கும் கர்ப்ப கிருகத்துக்குள் நுழையும் அதிகாரம் படைத்தவர்கள். அம்மா இட்லி முதல் எலைட் பார் வரை எல்லா கொள்கை முடிவுகளும் அங்கேதான் எடுக்கப்படும். வெங்கய்யா நாயுடு, ஜெட்லி, மோடி, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட இயற்கைக் கூட்டாளிகளுக்கு மட்டும் ஸ்பெசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது.
இப்போது கருவறையில் நுழைவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடத்தில் சசிகலா, இளவரசி போன்றோர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பிறகு பிரதாப் ரெட்டி மற்றும் பிற மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க இயலாது என்பதால் அனுமதிக்கப்படுகிறார்கள். ஸ்பெசல் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
அமைச்சர்கள் எல்லாம் பத்தாவது கட்ட பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே சூடம் கொளுத்தி, சாமியாடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, “என்ன, அம்மா நிலவரம் பற்றி ஏதாவது தெரியுமா? நான் கேட்டேன்னு சொல்லிடாதீங்க என்று பத்திரிகையாளர்களிடம் பணிவோடு விசாரிக்கிறார்கள்.“ காபினெட் என்று அழைக்கப்படும் கூட்டம், பகல் எல்லாம் கிரீம்ஸ் ரோடு பரோட்டாக் கடை ஓரமாக தேவுடு காத்து விட்டு, இருட்டிய பின் ஏ.சி ரூமுக்கு தூங்கப் போய்விடுகிறது.
மண் சோறு மண்ணாங்கட்டிகளெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்!
இப்படியான சூழ்நிலயில் உள்ளாட்சித் தேர்தல் முடிவை எடுத்தது யார்? அதற்கு அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தது யார்? தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென முடிவு செய்தது யார்? காவிரி வழக்கில் மோடி அரசு செய்துள்ள அயோக்கியத்தனத்தை கண்டு கொள்ளாமல் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவு செய்திருப்பது யார்?
ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?
தமிழ்நாடு இயங்குகிறது. தமிழர்கள் எல்லோரும் முறையாக பல் விளக்கி, காலைக்கடன் கழிக்கிறார்கள். அம்மா உணவகத்தில் இட்லி தின்கிறார்கள். டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்திய பின்னரும், பாரதிய ஜனதாக் கட்சியின் “ஜி” க்கள் அனைவரும் அச்சமின்றி சந்தோசமாக நடமாடக்கூடிய அமைதிப்பூங்காவாக தமிழகம் இருக்கிறது. அம்மா நலமாக இருக்கிறார் என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?
தமிழகத்தின் உரிமைக்கு எதிராக முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவின் துரோகம், காவிரியில் தொடரும் கர்நாடகவின் வஞ்சகம், கர்நாடக அரசியல் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல், இனவெறி அமைப்புகளின் காட்டுமிராண்டித்தனம், ஆர்,எஸ்,எஸ்.கும்பலின் திட்டமிட்ட கலவரம், தமிழக நலனுக்கு எதிராக அநீதி இழைக்கும் மத்திய மோடி அரசு, உச்சநீதிமன்றத்தின் கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புகள், ஆகிய அனைத்தும் அணிவகுத்து நிற்பது உண்மைதான். இருப்பினும் நாம் விடைதேட வேண்டிய வேறு சில கேள்விகளும் இருக்கின்றது!
நீர் பற்றாக்குறையுள்ள நம் மாநிலத்தில் இயற்கையாக உள்ள நீர்நிலைகளை தமிழகஅரசு முறையாகப் பராமரிக்கிறதா? பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீரைத் திறமையாகப் பயன்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நம் மாநிலஅரசு என்ன முயற்சிகள் எடுத்துள்ளது? காவிரியில் கர்நாடகாவையும், முல்லைப் பெரியாறில் கேரளாவையும் எதிர்த்து போர்க்குரல் எழுப்புவதற்கு ஓட்டுக்கட்சிகள் தகுதியானவர்கள்தானா? தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் தகுதி தமிழக அரசுக்கு இருக்கிறதா?
பழந்தமிழரின் நீர் மேலாண்மை
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 4௦ சதவீத பரப்பளவில்தான், அதாவது 13௦ லட்சம் ஏக்கரில்தான் விவசாய நிலங்கள் உள்ளது. இதில், ஆற்றுக் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறுவது 2௦ லட்சம் ஏக்கர். ஏரிகள்-குளங்கள் மூலம் பாசனம் பெறுவது 15 லட்சம் ஏக்கர். கிணறுகள் மூலம் பாசனம் பெறுவது 4௦ லட்சம் ஏக்கர். ஆக மொத்தம் 75 லட்சம் ஏக்கர்தான் நீர்ப்பாசன வசதியுடைய நிலங்கள்! மீதி 55 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள்தான்!
பாசன வசதிபெற்ற 75 லட்சம் ஏக்கர் நிலங்களில், சுமார் 4௦ லட்சம் ஏக்கரில் அதிக அளவில் நெல்லும், மற்றும் கரும்பு, வாழை, தென்னை, போன்ற பணப்பயிர்களும், மீதியுள்ள 35 லட்சம் ஏக்கரில் பிற காய்கறிகளும், தானியங்களும் பயிரிடப்படுகின்றது! இவற்றுக்கு ஒரு ஆண்டு நீர் தேவை 1,5௦௦ டி.எம்.சி! இதுதவிர, வளர்ந்துவரும் தொழிற்சாலைகளுக்கும், குடிநீர் தேவைக்கும் 2௦௦ டிஎம்சி- யையும் சேர்த்தால், தமிழகத் தின் ஒரு ஆண்டுத்தேவை 1,7௦௦ டிஎம்சி! இதுதான் வேளாண்மைத்துறை அதிகாரிகளும், நீரியல் வல்லுனர்களும் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கும் புள்ளி விவரங்கள்!
வறண்டு போன விருதுநகர் குண்டாற்றின் நடுவே ஊற்றைத் தேடும் பெண்மனி
தமிழகத்தின் மொத்த நீர் தேவையான 1,7௦௦ டிஎம்சி-யில், காவிரியில் தமிழகத்தின் உரிமையாக கர்நாடக அரசு திறந்து விடவேண்டிய நீரின் அளவு வெறும் 192 டிஎம்சிதான். ஆனால், கர்நாடகா காவிரித் தண்ணீரை திறந்து விடாததால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து விட்டது போல ஓட்டுக்கட்சிகளும், மீடியாக்களும் ஊதிப்பெருக்குகின்றன! காவிரி நீர் போக மீதி 1,5௦௦ டிஎம்சிக்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்பதையும், தனது சொந்த மாநில மக்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறையுடன் நடந்து கொள்கிறது? என்பதையும் கேள்விக்குள்ளாக்காமல் திட்டமிட்டே திசைதிருப்பி வருகின்றனர்!
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்! இயற்கையின் கொடையாக கிடைக்கும் இவ்வளவு நீர்வளத்தில் பாதியளவு நீரை சேமித்து வைக்கும் திறன் இருந்தால் கூட, இன்று நாம் அண்டை மாநிலங்களிடம் நீருக்காக கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது. மழைநீரைத் தாங்கி தேக்கி வைத்திருக்கும் ஏரி-குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டிய தனது கடமையை மாநில அரசு திட்டமிட்டே புறக்கணித்து வருவதால், 80 சதவீத மழைநீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டு, வெறும் 2௦ சதவீத நீரைத்தான் நாம் பயன்படுத்த முடிகிறது!
தூர்வாராமல் புதர்மண்டிப்போன கோவை அல்லிகுளம் ஏரி
பொதுப்பணித்துறை ஆவணங்கள் தமிழகத்தில் 39,242 ஏறி-குளங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இதில் 1௦௦௦-க்கும் மேற்பட்டவை கிரிமினல் அரசியல்வாதிகளாலும், ரியல் எஸ்டேட்டு முதலாளிகள், மற்றும் கிரானைட் கொள்ளையர் களாலும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன! சுமார் 2௦௦ ஏரிகள்-குளங்களை தின்று விழுங்கிதான் இன்றைய சென்னை மாநகரம் பிரம்மாண்டமாக நிற்கிறது! மதுரை-மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும், வானளாவிய அதிகாரமுள்ள சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையும் ஏரிகளை அழித்து கட்டப்பட்டதுதான்! திருச்சி கொட்டப்பட்டு குளத்தை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்த செய்தி சமீபத்தில் அம்பலமானது! இருக்கும் பல குளங்களும் அதிகாரிகளுடன் துணையுடன் முறைகேடான ஆவணங்கள் மூலம் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதி குளங்கள் நகராட்சி, பேரூராட்சியின் குப்பைக் கிடங்குகளாக சீரழிந்து கிடக்கிறது!
குட்டையாகிப் போன நொய்யால் ஆறு
குளங்களைத் தூர்வார ஜப்பானிடம் வாங்கிய 4௦௦ கோடி ரூபாய் கடனுக்கு கணக்கு காட்டுவதற்காக ஓரிரு குளங்களின் கரையை உயர்த்தியதைத் தவிர, ஏரி-குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு துரும்பைக் கூட அசைக்கவில்லை!
பாலாறு தோல்கழிவுகளின் குப்பையாகவும், நொய்யல் ஆறு சாயப்பட்டறையின் கழிவுநீர் குட்டையாகவும் மாறிப்போனதற்கு ஆந்திர அரசைக் குற்றம் சுமத்த முடியுமா? தாமிரபரணியின் ஆற்றுநீரை கோக் கம்பெனி கொள்ளையடிக்க அனுமதித்ததும், போராடிய மக்களை அடித்து உதைத்து சிறையில் தள்ளியதற்கும் கர்நாடகா அரசைக் காரணம் சொல்ல முடியுமா? பெரியாற்று நீரைக் கொள்ளையடிக்க பெப்சிக் கம்பெனிக்கு அனுமதி வழங்கியதற்கும், நியூட்ரினோ ஆய்வகத்திற்காக தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை பெரியாற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்வதற்கும் கேரளா அரசா உத்தரவிட்டது? நீர்தேக்க அணைகளில் மேடிட்டுக் கிடக்கும் மண்ணை அகற்றி அணைகளை ஆழப்படுத்தாமல் இருப்பதற்கு கன்னடரும், மலையாளியும் தடை போட்டார்களா? நம் ஆற்றுமணலைக் கடத்திச் சென்று அண்டை மாநிலங்களில் விற்று கோடிகோடியாக சம்பாதித்தது தெலுங்கனா? கன்னடனா? மலையாளியா? தண்ணீருக்கே உத்தரவாதமில்லாத இடத்தில் வெறும் கால்வாயை மட்டும் வெட்டி கொள்ளையடிப்பவன் மராட்டியனா?
ஆற்றுமணல் கொள்ளையில் ஈடுபடும் ’பச்சைத்தமிழர்கள்’
இவ்வளவு அக்கிரமங்களையும் செய்தவர்கள் எல்லாமே பச்சைத் தமிழர்கள்! இன்று ஒட்டுக்கட்சிகளின் பெருந்தலைகளாக உலா வருபவர்களில் பலரும் இவ்வகை பச்சைத் தமிழர்கள்தான். தமிழ், தமிழன், தமிழக உரிமை என்று கழுத்து நரம்பு புடைக்க முழங்கும் இனவாதத் தலைவர்கள் கூட மேற்கண்ட கிரிமினல் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை! அண்டை மாநிலத்தவரின் அக்கிரமங்களுக்கு எதிராக துடித்து எழும் இவர்களின் முறுக்கு மீசை, அதையே தனது இனத்தான் செய்வதைக் காணும்போது தொங்கி விடுகிறது! இதுதான் இவர்களின் “இனமான உணர்வு”!
நமது நீர் வளங்களை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழக மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்! விவசாயத்தின் உயிர்நாடி தண்ணீர்! ஓடும் மழைநீரை தாங்கி நிறுத்தி, மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஏரிகளும், குளங்களும்தான்! ஏரி-குளங்களை அழிப்பதன் பொருள் விவசாயத்தையே ஒழித்துக்கட்டுவதுதான்! தொடர்ச்சியாக தமிழத்தை ஆண்டுவரும் கட்சிகள் இதைத்தான் செய்து வருகின்றன. நமது ஆறுகளை கோக்-பெப்சி கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நீண்டகாலக் குத்தகைக்கு விடும் தமிழக அரசு, தண்ணீர்கேட்டுப் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசக்கூட மறுத்து அவமதிக்கிறது! நமது ஆற்று நீரையே பாட்டிலில் அடைத்து தனக்கு ஒட்டுப்போட்ட மக்களுக்கே 1௦ ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கிறது!
குப்பைக் கிடங்காக மாறிப் போன காளிங்கராயன் கால்வாய்
ஆறுகளை மட்டுமல்ல, கால்வாய் பாசனத்தையே தனியார்மயமாக்க திட்டம் வகுத்திருக்கிறார்கள். தமிழக அரசின் “விவசாயிகள் நிர்வகிக்கும் பாசனமுறைச் சட்டம்-2000” (FARMER’S MANAGEMENT IRRIGATION SYSTEM ACT)- “பாசனக்கால்வாய்களை இனி விவசாயிகளே பராமரித்துக் கொள்ளவேண்டும். இதற்கென ஒவ்வொரு பாசனப்பரப்பிலும் உள்ள விவசாயிகளை ஒரு சங்கமாக்கி, அதன் நிர்வாகிகளிடம் அனைத்து நிர்வாகமும் ஒப்படைக்கப்படும். பாசனம் பெறும் விவசாயிகளிடம் ஒரு ஹெக்டேருக்கு 250 முதல் 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படும். தேவைப்பட்டால் சிறப்புக் கட்டணமும் வசூலித்து, பாசனக் கால்வாய்களை விவசாய சங்கங்களே பராமரித்துக் கொள்ளவேண்டும். தொழில்நுட்ப உதவிகள் செய்வதும், கண்காணிப்பதும் மட்டுமே அரசு அதிகாரிகள் வேலை!” என்று கூறுகிறது.
உலகவங்கியின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட இருக்கும் இச்சட்டம், அமுலானால் சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டு நிரந்தரமாக விரட்டியடிக்கப் படுவார்கள்! நம் விளை நிலங்களை பன்னாட்டுக்கம்பெனிகளும், புதுவகைப் பணக்கார்களும் கைப்பற்றிக் கொள்வார்கள்! இறுதியில், உணவுக்காக அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்! நாடு முழுவதும் இதுபோன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களை மத்திய அரசும் அமுல்படுத்தி வருகிறது.
ஆறுகள், ஏரி-குளங்களை, அழிப்பதோடு மட்டும் இவர்கள் நிற்கவில்லை. மீத்தேன், கெயில், சிறப்புப் பொருளாதார மண்டலம், போன்ற ‘வளர்ச்சித் திட்டங்களு’க்காக நமது விளைநிலங்களையும் நேரடியாகப் பறித்துக் கொள்கிறார்கள்!
இவ்வாறு, விவசாயிகளையும், விவசாயத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்டத் துடிக்கும் இம்மக்கள் விரோதிகளா நமது விவசாயத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்? தன் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை, ஆறுகளை காப்பாற்ற வக்கற்ற அரசுக்கு, அண்டை மாநிலங்களிடம் நம் உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? விவசாயத்தை ஒழித்துக் கட்டும் எதிரிகளிடமே “விவசாயத்தைக் காப்பாற்று” என்று போராடினால் நமக்கு நியாயம் கிடைக்குமா?
விவசாயத்தைக் காப்பாற்றும் பொறுப்பும், தகுதியும் நமக்குத்தான் உண்டு. எனவே நமது நீர்நிலைகளை இந்த எதிரிகளிடமிருந்து நாம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்! ஏரி-குளங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை விவசாயிகளே நேரடியாக இடித்து தள்ளவேண்டும்! நீர்நிலைகளின் மீது விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவேண்டும்! இதுதான் மக்கள் அதிகாரம்! இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் நம்முன் உள்ள ஒரேவழி. போராட்டம் இல்லாமல் வாழவே முடியாது என்பதுதான் காலத்தின் கட்டாயம்!