Monday, May 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 528

திரை விமரிசனம் : ஒரு நாள் கூத்து

6

ந்த படம் வெளிவந்து (ஜூன் 2016) நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இறைவி போன்ற ‘பேசப்பட்ட’ படங்களின் காலத்தில் இந்தப் படம் அதிகம் பேசப்படாமல் போனது அதிசயமல்ல. அந்த பேசாமைக்கு காரணம் காதல், திருமணம் குறித்து உள்ளது உள்ளபடி உரையாடுவதற்கு நம் சமூகம் இன்னமும் தயாராக இல்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் காவ்யா (நிவேதா); அப்பாவின் கௌரவத்தால் திருமணம் தள்ளிப் போகும் லக்ஷ்மி (மியா); நடுத்தர வர்க்கத்திற்கே உரிய நிபந்தனைகளால் திருமணத்திற்கு போராடும் சுசிலா (ரித்விகா) என மூன்று பெண்களின் திருமண – காதல் நிகழ்வுகளை எதிரும் புதிருமான வாழ்க்கை அனுபவங்களைச் சுற்றி இக்கதை பின்னப்பட்டிருக்கிறது.

கதையின் நாயகிகளான மூன்று பெண்களோடு அவர்களைச் சுற்றியும், பாதுகாத்தும், கடைத்தேற்றியும், காதலித்தும் வாழும் ஆண்களும்  கதையில் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

“நீ அழகா அடக்க ஒடுக்கமா இருக்கியாம், உன்ன கல்யாணம் செய்யறவன் கொடுத்து வைச்சவனாம்” என்று திண்டுக்கல் கல்லூரி நாட்களில் நெல்லைத் தோழி “ஏம்லே” சேர்த்துச் சொல்லும் போது லக்ஷ்மி “ஆமாம்ல” என்று வெட்கத்துடன் பெருமைப்படுகிறாள். இருப்பினும் அந்தப் பெருமை சடுதியில் சோகமாய் உருமாறுகிறது. சடுதிகளாய் வரும் காட்சிகளில் பலர் அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். “உங்களைத்தான் மனசுல நினைச்சிருக்கோம்” என்று அனைவரிடமும் ஏமாற்றுகிறார், அவளது அப்பா. நிலைக் கண்ணாடியில் ஒட்டுப் பொட்டை ரசித்துக் கொண்டே பொறித்தவளுக்கு பின்னர் அந்தப் பொட்டே ஒட்டாமல் கீறுகிறது.

வந்தவர்கள் தனது சொத்து, கௌரவத்திற்கு இணையாக இல்லை என்று கருதும் லக்ஷ்மியின் அப்பாவை கடைசியில் வரும் சென்னை இளைஞனது குடும்பத்தினர் அதே விதியைச் சொல்லி (உங்களத்தான் மனசுல வச்சுருக்கோம், போய்ட்டு நல்ல சேதி சொல்லுறோம் காத்திருங்க!) நிராகரிக்கின்றனர். ஆணும் பெண்ணும் காதலித்து மணம் செய்யும் வாய்ப்பில்லாத சமூகத்தில் பெற்றோர் ஏற்பாட்டால் வரும் வாய்ப்பைக் கூட விரும்பும் நிலைமை இல்லை. சென்னை இளைஞன் லக்ஷ்மியை மனதார விரும்புகிறான். அவனது பெற்றோரோ மறுக்கின்றனர். “உன் விருப்பம் முக்கியமல்ல, உன் பெற்றோரை பேசச் சொல்” என்கிறார் லக்ஷிமியின் அப்பா. மொட்டை மாடியில் தோழியின் உந்துதலுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னை இளைஞனோடு வாழச் செல்கிறாள் லக்ஷ்மி. கோயம்பேட்டில் அந்த இளைஞைனை பிடித்துச் செல்லும் குடும்பத்தார் அங்கே பரிதாபமாய் நிற்கும் லக்ஷ்மியை வக்கிரமாக திட்டுகிறார்கள்.

பணிவும் கனிவும் பாந்தமும் சாந்தமும் தனக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் அல்ல, வாழ்வைத் தடை செய்யும் விதிமுறைகள் என்று லக்ஷ்மி உணரும் போது கொஞ்சம் தைரியமடைகிறாள். சென்னைக்கு ‘ஓடிப்’ போன கதையை தோழியைப் பார்க்க போவதாக கூறி ஊர் – உறவு வாய்களை அடைக்கிறாள். அது இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் பிறக்கும் ஒரு வைராக்கியம். பசங்கல்லாம் ரொம்ப நல்லவன்ங்கடி என்று அதிரடியாக பேசும் நெல்லைத் தோழி பிறகு மணமாகி பிரிந்து முன்னாள் காதலன் இரண்டாம் மணம் செய்ததைக் கூறும் போது பசங்களின் உண்மை முகத்தை ஒப்புக் கொள்கிறாள். எனினும் அவன் கொடுத்த இரண்டு குழந்தைகளின் பொருட்டு இனி அவளும் அடக்க ஒடுக்கமாகத்தான் வாழ வேண்டும்.

லட்சுமிகளாக அழைக்கப்பட வேண்டியவர்கள் லக்ஷ்மிகளாக விரும்பும் போது லஷ்மியின் செல்வக் குறியீடு தடை போடுகிறது. லக்ஷ்மியை ‘ஒழுக்கத்துடன்’ வளர்த்திருப்பதால், தனது சொத்து-அந்தஸ்தை திருப்பதி படுத்தும் தரமான காளை மாடு கிடைக்கும் வரை, அவளை அடிமை மகளாக நடத்துவதை எவ்வித உணர்ச்சியுமின்றி நிதானமாக செய்கிறார் தந்தை. தந்தையின் ‘அருளி’ல் உறைந்திருக்கும் வில்லத்தனத்தை, உடன்பிறப்பின் கையறு நிலை கண்டு சாடுகிறாள் லக்ஷ்மியின் அக்கா!

லக்ஷ்மியை பார்த்ததுமே அதிரடியாக காதலிக்கும் சென்னை இளைஞன், எதிர்ப்பு வரும் போது லக்ஷ்மியை ஓடி வா என்று கலகக்காரனாக அழைக்கிறான். எனினும் இந்த நாகரிகமும், அதிரடி சாகசமும் பேருந்து நிலையத்தில் இழுத்துச் செல்லும் அம்மாவின் அடியாட்களை மறுக்கும் வலிமையாக அவனிடத்தில் இருக்கவில்லை. சொத்து – அந்தஸ்தில் முளைத்து எழுந்திருக்கும் அவனது வேரில் சமூகத்தின் நீரை உரிஞ்சும் சக்தி இல்லை என்பதால் அவனது ஆசை நிராசையாக தோற்றுப் போகிறது.

திருச்சியில் அப்பா நடத்தும் வசதியான சாம்ராஜ்ஜியத்தின் உதவியுடன் சென்னை ஐ.டி துறையை தெரிவு செய்யும் காவ்யா, திண்டுக்கல் லக்ஷ்மி போல கட்டுப்பெட்டி அல்ல. “நீங்க ஃபிக்ஸடா, சிங்கிளா” என்று ராஜ்ஜுடன் அறிமுகமாகி, செல்பேசிகளின் பேச்சுக்களில் காதலாகி, நள்ளிரவு பைக் சவாரியில் அடுக்குமாடி தம்பதியினராக கனவும் நனவும் இணைந்த திட்டத்தில் கலந்து பயணிக்கிறாள்.

திண்டுக்கல் அப்பா போல திருச்சி அப்பா அமைதியாக தனது அந்தஸ்து விதிகளை வைத்திருக்கவில்லை. கன்று அலைந்தாலும் பால்மடி தேடி வரவேண்டும் என்பதால் விட்டுப் பிடிக்கிறார். இதற்கு அவர் மெனக்கெடவேண்டிய அவசியத்தை ராஜ்ஜும் வைக்கவில்லை.

ஏழ்மைப் பின்னணியிலிருந்து முதல் தலைமுறையாக பழைய மகாபலிபுரம் சாலை வாழ்க்கையை தரிசிக்கும் அவனுக்கு எங்கே எப்படி நிலை கொள்வது என்பது சிக்கலாகிறது. எனக்கு என் குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதே என்ன செய்ய என்று காவ்யாவிடம் தடுமாற்றத்தை பகிர்கிறான். தனது பின்னணியைப் பற்றி, தந்தையைப் பற்றி, காரில்லாத தனது அந்தஸ்தைப் பற்றி காவ்யா அப்பாவிடம் எப்படி சொல்வது என்பதே அவனது தேவதாஸ் சோகத்திற்கு போதுமானது.

Oru-Naal-Koothu-Movie-posterதனது மகளின் சுதந்திரத்திற்கும், தன் மகள் விரும்பும் காதலனது தடைகளுக்கும் காரணமான “சொத்து-அந்தஸ்து” என்ற யதார்த்தமான உண்மையைக் கொண்டு இலாவகமாக விளையாடுகிறார், காவ்யாவின் அப்பா. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பரா நாடகத்தில் வரும் பீரங்கித் தொழிற்சாலையின் முதலாளி அண்டர்ஸாப்டோடு ஒப்பிடத் தகுந்தவர் இந்த தந்தை. சுதந்திரவாதம் பேசும் தனது மகனை அவன் வாயாலேயே அது முதலாளித்துவம் அருளிய பிச்சை என்று தெளியவைக்கும் அவரது திறமையை இங்கே காவ்யாவின் அப்பாவிடமும் காண்கிறோம்.

போக்குவரத்து நெருக்கடியால் சந்திக்க வரவில்லை என்ற சால்ஜாப்பை சொந்த ஆளுமையின் நெருக்கடி என்பதாக முதல் பார்வையிலும், முதல் கேள்வியிலும் ராஜ்ஜிடம் கிண்டுகிறார் அவர். எதிர்பார்த்தபடி பதட்டமடையும் ராஜ், தனது சுயமரியாதை கேலி செய்யப்படுவதை சகிக்க முடியாததோடு, தனது கனவுக் காதலும் நிறைவேறாது என்பதை அவலத்துடன் ஏற்க வேண்டியிருக்கிறது.

மகளின் சொந்த விருப்பத்திற்கு தடை சொல்லா தந்தையாக காட்சியளிப்பவர், ராஜ் ஏன் அவளை உடன் திருமணம் செய்ய முடியாது என்பதை மறுக்க முடியாதபடி விளக்குகிறார். திருமணப் பேச்சை ஆரம்பித்தால் குடும்ப பாரங்களை கரையேற்றிவிட்டு செய்வதாக ராஜ் கண்டிப்பாக கூறுவான் என்று சரியாக கணிக்கும் அவர், காதலி பெரிதா, குடும்ப பாரம் பெரிதா என்ற போராட்டத்தில் சிக்குண்ட ராஜ்ஜை மணந்தால் அங்கே மணம் வீசாது, சோகம் வாட்டியெடுக்கும் என்கிறார். இதற்கு மேல் காவ்யாவின் காதல் நீடித்திருக்க அடிப்படையில்லை.

எனினும் தனது தந்தை தனது காதலனை நாயென பகடி செய்து துரத்தி விட்டதாக கருதும் காவ்யா, அதையே தனது காதலனது விளக்கத்தால் பின்னர் அறிந்து கொண்டாலும் அவள் காதலுக்காக எந்த அதிரடி முடிவையும் எடுக்கவில்லை. காரும், சொந்த வீடும், தனித்துவமான வாழ்க்கையும் நிபந்தனைகளாக இருக்குமளவுதான் அவளது சுதந்திரத்திற்கு மதிப்பு. இந்த பேருண்மையை அறிந்ததால்தான் அவள் தந்தை பிடித்து வந்த அமெரிக்க மாப்பிள்ளைக்கு  தலையசைக்கிறாள். பிறகு அந்த திருமணமும் மாப்பிள்ளை தந்தையின் திடீர் மரணத்தால் நிறுத்தப்படுகிறது.

மூகூர்த்தமன்று நின்று போகும் திருமணத்திற்கு பையன்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சுற்றம் கூறும் போது வேண்டா வெறுப்பாக என்றாலும் தயக்கத்துடன் ராஜ்ஜை அழைத்து வரவா என்று கேட்கிறார். குடித்து விட்டு மட்டையாகிக் கிடக்கும் ராஜும் நண்பனோடு திருச்சியில் நடைபெறும் காவ்யாவின் திருமணத்திற்கு விரையும் போது இதைக் கேள்விப்படுகிறான். அப்போது தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று காதல் மேலோங்க விரைகிறான்.

“நீங்கள் நினைத்த போது பயன்படுத்திக் கொள்வதற்கு ராஜ் ஒரு “Back-up option” கிடையாது என்கிறாள் காவ்யா. தனது காதலனது சுயமரியாதையை இழக்க அவள் சம்மதிக்கவில்லை என்று நமக்கும் தோன்றலாம். ஆனால் யதார்த்தம் தந்தை சொல்லும் அந்தஸ்து வகைகளோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பழையைவை மறுக்கும் ஒரு புதுக்குருத்து போல இளம்பெண்ணான அவளது காதல் அப்படி கற்பனை செய்வதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அதே போன்று சுயமரியாதையை இழந்தாலும் காவ்யாவை கைப்பிடிப்போமா என்று யோசிக்கும் போது ராஜ்ஜிடமும் அந்த ஏக்கத்தை பார்க்கிறோம். ஏமாற்றங்களை எதிர்த்துப் போராட முடியாத தளைகளில் இரு இளம் மனங்கள் அலைபாய்கின்றன.

க்ஷ்மி ஒரு கட்டுப்பெட்டி, காவ்யா ஒரு சுதந்திரப் பறவை என்றால் சுசிலா யார்? அவள் எல்லாவற்றிலும் நடுவில் நின்று கொண்டு அல்லாடும் நடுத்தர வர்க்கம். அதாவது காதலிக்கும் வாய்ப்பிருந்தும், காதலின் செயற்கை வெளியை அன்றாடம் பார்ப்பவளாக இருப்பதாலும், ஒரு வானொலி பண்பலை அறிவிப்பாளராக வளவளவென்று பேசினாலும், பேச முடியாத பாலினம் மற்றும் ஒரு சராசரிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் அவள் அடங்கியே வாசிக்கிறாள். அவளது மாநிற சராசரி தோற்றம் குறை தேடுவோருக்கு ஒரு கூடுதல் அம்சம். லக்ஷ்மியைப் போன்ற கனவோ, காவ்யாவைப் போன்று தெரிவோ இல்லாமல் கிடைக்கும் வாழ்வு போதுமென்பவள் சுசிலா. ஆயினும் கிடைத்ததா?

அண்ணன் பெண் பார்த்து அலைவது போதாது என்று அவளும் இணைய மணமக்கள் தளங்களில் தேடுகிறாள். அந்த தேடலை உளவறிந்து பார்க்கும் சக அறிவிப்பாளரான சதீஷின் பார்வையில் அவள் ஒரு நெருப்பு. ஆனால் அந்த நெருப்பு தனது உள்ளுறை எரிபொருளால் எரிவதல்ல, பெண் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் என்று சுற்றத்தினர் ஊற்றும் சொற்களால் எரிகிறது.

ஒருவழியாக மகிழுந்து விற்கும்  நிறுவனத்தின் ஊழியன் அவளை சம்மதிக்கிறான். எப்படி? ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் மீது சந்தேகப்படும் ஊராருக்கு என்ன பதில் என்கிறான். கோவிலில் மண விசயமாக சுற்றும் நம்மை, தம்பதியினர் எனும் நினைப்போரால் அது உண்மையாகி விடாது அல்லவா, அது போல பார்ப்போரின் முன்முடிவும், தவறான எண்ணங்களுமே அப்படி தீர்மானிக்கும் என்கிறாள். இவளை மண முடிக்கலாம் என்று நண்பனது ஆலோசனையைக் கேட்டு சம்மதிக்கிறான் மகிழுந்து இளைஞன்.

அதே நண்பன் வேறு ஒரு உடன் பணியாற்றுபவனின் மணமகளைப் பார்த்து அவளைப் போன்ற அழகானவள் நமக்கில்லை என்று சொல்லும் போது மகிழுந்து இளைஞன் தடுமாற ஆரம்பிக்கிறான். அதாவது அழகிலும், நிறத்திலும், பணியிலும் தரம் குறைந்தவளை அவசரப்பட்டு ஏற்றுவிட்டோமோ என்று உள்ளே குமைகிறான். நவீன செல்பேசிகளையோ இல்லை சலவை எந்திரங்களையோ ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு கூட உடன் பாணியாற்றும் விற்பன்னர்களிடம் ஆலோசனை கேட்கும் போது வாழ்க்கைத் துணை குறித்த அவர்களின் மதிப்பீடு மிக முக்கியமல்லவா?

ஆனால் அந்த மதிப்பீடு வெறுமனே கார்களை அழகென்றோ, நவீன வசதியானதென்றோ, வட்டியில்லா கடனுக்கு கிடைக்குமென்றோ, நிறுத்தும் வசதி இல்லையென்றாலும் தெருவில் நிறுத்தலாமென்றோ வாடிக்கையாளர்களை வென்றெடுக்கும் ஒரு மகிழுந்து விற்பன்னரிடம் என்னவாக இருக்கும்? காரை எப்படியாவது தள்ளுபவனின் திறமை ஒரு காரிகையை பிடிப்பதில் மட்டும் எப்படி வேறுபடும்?

திருமணத்தை நிறுத்து, அந்தப் பெண்ணின் வாழ்வோடு விளையாடாதே என்று அந்த இளைஞனின் மேலாளர் எச்சரிக்கிறார். அவர் கார்களோடு பல காலம் பழகிய அனுபவஸ்தர். சுசீலாவின் ஃபேஸ்புக் படங்களையை மணிக்கணக்கில் மாற்றி மாற்றி பார்ப்பவனுக்கு அந்த காரை வாங்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. தனது ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு பல சுற்று போராட்டங்களுக்குப் பிறகு சுசீலாவிடம் அதுவும் அவள் பண்பலை நிகழ்ச்சியை துவக்கும் அவசரமான நேரத்தில் சட்டென்று தெரிவிக்கிறான்.

அவன் ஆசுவாசப்பட ஆரம்பிக்கும் நேரத்தில் சுசீலாவின் வதை படலமும் துவங்குகிறது. நிச்சயதார்த்தம் முடிவாகி, நாள் குறித்து, ஆடை அணிகலன் வாங்கி, மண்டபமும் பிடித்த பிறகு இந்த திருமணம் நின்றால் அவளை சுற்றி வந்து படையெடுக்கும் “என்னாச்சு” கேள்விகளுக்கும், இப்போதாவது முடிந்ததே என்று பெருமூச்சுவிடும் அண்ணன் மற்றம் குடும்பத்தாரின் கடமை அர்ப்பணிப்புகளுக்கும் என்ன சொல்வது? என்னை மணமுடித்து விட்டாவது ரத்து செய் என்று அவலத்தின் கடைசி எல்லை வரை சென்றும் கெஞ்சுகிறாள். அவனோ அழகற்ற ஒரு பெண்ணை இப்போதாவது மறுத்து விட்டோமே என்ற சுய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில் மறுக்கிறான்.

அதே நேரம் அவன் கெட்டவனும் அல்ல. சுசீலாவின் அண்ணனும், மாமாவும் வீடு ஏறி வந்து காத்திருந்த போதும் அவர்களின் முகம் பார்த்து மறுக்கும் தைரியம் அவனுக்கில்லை. பேசி கழுத்தறுத்துவிட்டோமென்ற குற்ற உணர்வு அவனிடம் இல்லாமல் இல்லை. சுசீலாவிடம் அதை வெளிப்படையாக காட்டுபவன், சுற்றத்தாரிடம் ஏன் காட்ட முடியவில்லை?

சுசீலாவோ தனது அண்ணனிடம் எப்படியாவது மகிழுந்து இளைஞனை பேசி சரி செய்யுமாறு நச்சரிக்கிறாள். அவள் நச்சரிக்கவில்லை என்றாலும் கருணாகரனுக்கும் வேறு வழியில்லை. இறுதியில் சாமி மலை இறங்குவது போல மகிழுந்து இளைஞன் மனம் மாறுகிறான். தான் அழகில்லை என்று கருதிய மதிப்பீட்டின் இன்பத்தை விட, கழுத்தறுத்தவன் என்ற குற்ற உணர்வின் துன்பம் அவனை மாற்றியிருக்க கூடும்.

ஆனால் அவனது மனமாற்றம் நடந்தேறும் தருணம் சுசீலாவும் “இனி நமக்கு செட்டாகாது” என்று மனம் மாறி முறித்துக் கொள்கிறாள். அடுத்த காட்சியில் அவளும் சதீஷும் ஒரே படுக்கையில்! “சீ இதுக்குத்தான இவ்வளவும், திருமண ஏற்பாடுகளை நினைச்சாலே கேவலமாக இருக்கிறது” என்பவள் இவ்வுறவின் பொருட்டு உன்னை மணமுடிக்குமாறு கேட்கமாட்டேன் என்று சதீஷிடம் சிரிக்கிறாள். அவனோ அப்படி கல்யாணம் செய்தால்தான் என்ன? என்று புன்னகைக்கிறான்.

கலகத்தின் திளைப்பில் அநாகரீகத்தை புரிந்து கொண்டவள் மீண்டும் திருமண பந்தத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் தேடலாம் என தனது ஆசையை அதாவது எல்லாம் பொருந்திய உறவை கண்டடைகிறாள். கோயம்பேடு தனியார் சொகுசு பேருந்து நிலையத்தில் ஒரு வாரம் கழித்து பெற்றோரோடு வந்து பேசுவேன் என்று சதீஷ் சொல்லும் போது ஒரு வாரமா என்று மலைக்கிறாள். ஐந்தாண்டுகள் அவள் பட்ட அவதிகளுக்கு இந்த ஒரு வாரமே மிக நீண்ட காலம் என்று தோன்றியிருக்கும். அது உண்மைதான்.

திருச்சிக்குச் சென்ற சதீஷ், எதிர்பாரா விதத்தில் திருமணம் நின்று போன காவ்யாவை மணக்கிறான். சுசீலாவுக்கு அந்த தகவல் தொலைபேசி மூலம் வருகிறது. அடுத்த கணத்தில் அவளது பண்பலை நிகழ்ச்சியும் ஆரம்பிக்கிறது” வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், மேடு பள்ளங்கள், தோல்விகள் எல்லாம் இருக்கும். என்ன ஃபிலாசபிக்கலா பேசுறேன்னு பாக்கிறீங்களா ஏதோ சொல்லணுமுன்னு தோணிச்சு அவ்வளவுதான்.” என்று முடிக்கிறாள்.

க்ஷ்மி, காவ்யா, சுசீலா ஆகிய மூவரின் கதைகளையும் ஒரு இடத்தில் முடிப்பதற்கும், பிறகு தொடர்வதற்கும் இயக்குநர் ஒரு சாலை விபத்தை சேர்த்திருக்கிறார். விபத்து, ரத்தம், மரணம், வேகமான பேருந்து போன்ற அதிரடிகளால் அல்ல, எனக்கு தரங்குறைந்த பட்டுடன் தாம்பளத்தில் அழைப்பிதழ் வைத்தான் போன்னற சில்லறை விசயங்கள் கூட ஒரு நாள் கூத்தை புரட்டி போட்டுவிடும். “காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படத்தில், புதுவையில் மதுவருந்தும் நண்பனை இலேசாக தூண்டி விட்டு அவனது காதலியை சந்தேகப்பட வைப்பான் அதே காதலியின் முன்னாள் காதலன். ஆகையால் அந்த விபத்து மையமில்லாமலேயே கூட இந்தப் படம் தனித்து மிளிரத்தான செய்யும்.

திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகளை நாம் ஒவ்வொருவரும் சில பல ஆண்டுகளை தனித்திருந்து அசை போடுவதால் செலவழிக்கிறோம். அந்த செலவால் வரவு என்ன? சில பல இன்பியல் கனவுகள், ஆசைகளைத் தாண்டி இருபாலாரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வின் சட்டதிட்டங்களையும், புரட்டிப் போடும் சதுரங்க ஆட்டத்தையும் நாம் ஒரு போதும் அறிய முடிவதில்லை. அறிவதற்கான அனுபவங்கள் கிடைத்து கனியும் போது மாற்றுவதற்கான முயற்சியோ தேடலோ இல்லை என்பதால் அதே சட்டதிட்டங்களை வாழையடி வாழையாக உபதேசிக்கும் பெரிசுகளாக மாறுகிறோம்.

திருமணம், காதலுக்கு இவ்வளவு விசித்திரமான, நுணுக்கமான, அநாகரிகமான சட்டதிட்டங்களை வைத்திருக்கும் பார்ப்பனிய சமூக அமைப்பு போல உலகில் வெறு எங்கும் இருக்குமா என்பது ஐயம். அதனால்தான் இந்த சட்டதிட்டங்களை மறைத்து திருநெல்வேலி அல்வாவை வெட்டும் திருப்பாச்சி அரிவாள் போல அவ்வளவு சுலபமாக ஆணும் பெண்ணும் பிரச்சினையே இன்றி காதலிக்கும் தமிழ்ப் படங்கள் இங்கே இளையோரின் சுய இன்ப அடையாளங்களாக மாறிவிட்டன. சமூகத்தின் பாதுகாப்பில் திளைத்திருக்க வேண்டிய இன்பம் சுயமாக எப்படி நீடிக்கும்?

வேட்டையாடும் ஆண்களும், வேட்டையாடப்படும் பெண்களும் உருவாக்கி வைத்திருக்கும் சமரசங்கள், காரியவாதங்கள், தயக்கங்கள், ஆசைகள், வேடங்கள் மற்றும் கலகங்களை மிகவும் நேர்த்தியான திரைக்கதையால் செறிவான உணர்ச்சியோட்டத்துடன் சித்தரிக்கிறது, ஒரு நாள் கூத்து திரைப்படம்.

இந்தப் படத்தில் வரும் மையப் பாத்திரங்கள் அனைவரும் அவரவர் நோக்கில வெளிப்படுத்தும் இரு துருவ வெளிப்பாடுகளை இயக்குநர் துல்லியமாக  கொண்டு வருகிறார். அதே நேரம் மூன்று பெண்கள் அவர்களைச் சுற்றி மூன்று விதமான ஆண்கள், குடும்பங்கள் அனைத்தையம் வியப்பூட்டும் விதத்தில் ஓரிழையில் இணைத்து ஒரு கதையாக அதுவும் யதார்த்தத்தோடு போட்டி போடும் அனுபவமாக கையளிப்பது சவாலான விசயம். பல காட்சிகள் சேர்ந்து கூற வேண்டிய உணர்வையும் – உணர்ச்சியையும் இப்படத்தின் கூரிய உரையாடல்கள் ஆழமாக கொண்டு வந்திருக்கின்றன. காட்சி ஊடகத்தை வாழ்க்கை குறித்த ஒரு வலுவான கண்ணோட்டம் பயன்படுத்தும் போது மட்டுமே இத்தகைய சாதனை சாத்தியம்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  • இளநம்பி

தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்

0

த்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் பங்களாக்களிலும் பண்ணை வீடுகளிலும் நடந்த வருமான வரிச் சோதனை ஒரு பரபரப்புச் செய்தி என்பதைத் தாண்டி, எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இன்றி அமுங்கிப் போனது தற்செயலானது அல்ல. இத்துணைக்கும் அவர்கள் இருவரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், தொழில்களில் போட்டுள்ள முதலீடுகள் பற்றிச் சில புலனாய்வு பத்திரிகைகளில் கசிந்துள்ள செய்திகள், இந்த விவகாரம் சாதாரணமான ஊழல், கமிசன் கொள்ளை அல்ல – என எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், இந்த வருமான வரிச் சோதனை தமிழக, தேசிய ஊடகங்களிலோ, அரசியல் வெளியிலோ காத்திரமான விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல், தாலுகா ஆபிஸ், டிராபிக் போலீசு லஞ்ச விவகாரம் போல ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது.

ஜெயா-சசி கும்பலுக்கு அனைத்துமாக விளங்கிய ஐவரணியில் ஒருவராக இருந்தவரும், கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவருமான நத்தம் விசுவநாதன் மலை முழுங்கி மகாதேவன் என்பதைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தன. அவை அனைத்தும் உண்மை என்பதைக் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வருமான வரிச் சோதனை நிரூபித்திருக்கிறது.

கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்... சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)
கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்… சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)

கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரது குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாயும் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது என்பதோடு, நத்தம் விசுவநாதன் – அவரது மகன் அமர்நாத்; சைதை துரைசாமி – அவரது மகன் வெற்றி துரைசாமி; ஓ.பன்னீர் செல்வம் – அவரது மகன் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளின் பினாமியாக அன்புநாதன் இருந்து வருவதும் இந்தச் சோதனையின் வழியாக அம்பலமாகியிருக்கிறது.

நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மந்திரிகளும், சைதை துரைசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளும் இலஞ்சம், கமிசன், அதிகாரமுறைகேடுகளின் வழியாகக் குவித்த பல்லாயிரம் கோடி ரூபாய்களை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கடத்திச் சென்று, அங்கு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு அன்புநாதன்தான் ஏஜெண்டாகச் செயல்பட்டிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் அன்புநாதன் 90 நாடுகளுக்குச் சென்று திரும்பியிருப்பதை அவரது கடவுச்சீட்டு உறுதி செய்கிறது. இந்த 90 நாடுகளுள், தாய்லாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்(சீனா) ஆகிய நாடுகளில் அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்காக அன்புநாதன் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதை தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகிய ஊடகங்கள் அம்பலப் படுத்தியுள்ளன.

* துபாயில் உள்ள டய்ரா சிட்டியில் 1,900 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வணிக வளாகம் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் வாரிசுகளுக்காக மனோஜ்குமார் கார்க் என்பவரின் பெயரில் அன்புநாதன் மூலம் வாங்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் விசாரித்து வரும் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் தற்பொழுது கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருப்பவன்தான் இந்த மனோஜ்குமார் கார்க்.

* இந்தோனேஷியாவிலிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்த ஊழல் வழக்கில் தமிழக மின்சார வாரியமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த ஊழலால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 1,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்திற்குச் செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை ஏற்றுமதி செய்த அந்த திவ்ய தேசத்தில் நத்தம் விசுவநாதனுக்குப் பத்துக்கும் மேற்பட்ட நிலக்கரி வயல்கள் சொந்தமாக உள்ளதோடு, அதே எண்ணிக்கையில் நிலக்கரியை ஏற்றிவரும் சரக்குக் கப்பல்களும் சொந்தமாக இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.

தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்
தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்

* துபாயின் டய்ரா சிட்டிக்கு அருகிலேயே 10,000 கோடி ரூபாய் முதலீடு கொண்ட சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை, துபாயைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் நத்தம் விசுவநாதன் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலைக்கும் தமிழகத்தைச் சூரிய ஒளி மின்சாரப் பூங்காவாக மாற்றும் ஜெயாவின் திட்டத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்துத் தோண்டினால், பூதம்கூட வெளியே வரலாம்.

* தாய்லாந்தைச் சேர்ந்த காசி கோர்ன் வங்கி, சிங்கப்பூரைச் சேர்ந்த கிட் ஹுவாத் டிரேடிங் கம்பெனி, சீனாவைச் சேர்ந்த லோக்ஸ்லே ஹோல்டிங்கஸ், சீன கம்யூனிகேஷன் வங்கி ஆகிய நிறுவனங்களில் நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., ஆகியோரின் பணம் அன்புநாதன் மூலம் முதலீடு செய்யப்பட்டிப்பதாகக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.

* பெங்களூரிலுள்ள மடிவாலா பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்தை அன்புநாதன் மூலம் 50 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதற்குரிய வருமான வரியைக் கட்டாமல் சைதை துரைசாமி ஏய்த்திருப்பதாக வருமான வரித்துறையே குறிப்பிடுகிறது.

* நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் பங்குதாரராக உள்ள பிரிமியர் இன்டியா இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்குச் சொந்தமான வி.எம்.டி. நிறுவனம், எடிசன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவை மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கித் தரும் தரகு வேலையில் ஈடுபட்டுள்ளன. அமர்நாத்தும், வெற்றி துரைசாமியும் தங்களின் தகப்பனார்களின் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியே இந்தத் தொழிலில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார நிலையத்தை அமைத்துவரும் அதானி குழுமத்திற்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, அதனைப் பலமடங்கு இலாபத்திற்கு அக்குழுமத்திற்கு விற்றுக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.

நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.
நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.

இந்த நிலக் கொள்ளைக்கு அப்பால், சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் நடத்தி வரும் சித்தார்த் எனர்ஜி என்ற சூரிய ஒளி மின்சார நிறுவனம், கிரெசண்டோ இன்ஃபோ டெக் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்; கோவையைத் தலைமையகமாகக் கொண்டு வைர வியாபாரம் நடத்திவரும் கீர்த்திலால் ஜூவல்லரியில் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி குடும்பத்தின் முதலீடு; இலண்டனில் ஓக்லி பிராப்பர்டி சர்வீஸ், நியூயார்க்கில் ஒரு ஹோட்டல், மலேசியாவில் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் நத்தம் விசுவநாதனின் முதலீடுகள் – என இந்த இருவரும் தனியாகவும் கூட்டாகவும், சொந்தமாகவும் பினாமிகளின் பெயரிலும் நடத்திவரும் தொழில் சாம்ராஜ்ஜியம் மலைப்பு ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.

வருமானவரித் துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ள இந்த இருவரின் சொத்துக் குவிப்பு மட்டும் கேள்விக்குரியது அல்ல. இவர்களின் இந்தச் சட்டவிரோதமான சொத்துக் குவிப்பில் ஜெயா கும்பலின் பங்கு, பாத்திரம் என்ன, அதாவது சைதை துரைசாமியும், நத்தம் விசுவநாதனும் எந்தெந்த தொழில் முதலீடுகளில் ஜெயா கும்பலின் பினாமிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் மற்ற எல்லாவற்றையும்விட விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான விடய மாகும்.

2011 அம்மாவின் பொற்கால ஆட்சியில், கமிசன் அடிப்பதற்காகவே அரசு மின்சார நிலையங்களும், திட்டங்களும் முடக்கப்பட்டு, தனியார் மின்சார நிலையங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பாக, யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூரிய ஒளி மின்சாரத்தை, ஏழு ரூபாய்க்கு அதானி குழுமத்திடமிருந்து வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 525 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.
நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.

25 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசிடமிருந்து வாங்க வேண்டிய எல்.ஈ.டி. விளக்குகளை வாங்காமல் புறக்கணித்துவிட்டு, அதே விளக்குகளை 145 கோடி ரூபாய் செலவில் தனியாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தார், சென்னை நகர மேயரான சைதை துரைசாமி.

இப்படி பல்வேறு ஊழல்கள், அதிகார முறைகேடுகள் மூலம்தான் அவர்கள் இருவரும் சொத்துக்களைக் குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், நகராட்சி கக்கூசுகள்கூட அம்மாவின் ஆணைக்கிணங்கவே திறக்கப்படும் தமிழகச் சூழலில், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையை நிர்ணயிப்பதும், மத்திய அரசிடமிருந்து குறைந்த விலையில் எல்.ஈ.டி. பல்புகளை வாங்க மறுப்பதும் அம்மாவிற்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

நத்தம் விசுவநாதனும், சைதை துரைசாமியும் புறங்கையில் வழியும் தேனை நக்கியிருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்கள் அம்மாவுக்குத் தெரியாமல் அமுக்கியதன் காரணமாகத்தான், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பு, ஜெயா கும்பலின் நம்பகமான வட்டத்திலிருந்து சைதை துரைசாமி ஓரங்கட்டப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஐவரணியினர் போயசு தோட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

ஐவரணி மட்டுமே ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தின. அதில் தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை, வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்களை, தனது விசுவாசமிக்க போலீசு, உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு கைப்பற்றிக் கொண்டார், ஜெயா. அதேசமயம், அந்த ஐவரணியில் கொட்டை போட்ட பேர்வழியான நத்தம் விசுவநாதன் வெளிநாட்டில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைத் தமிழகப் போலீசைக் கொண்டு கைப்பற்ற முடியாது என்பதால், வருமானவரித் துறை ஏவப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையே அம்மாவுக்குத் தெரிந்துதான், அவரது சம்மதத்துடன்தான் நடந்தது எனப் பத்திரிக்கைகள் குறிப்பிடுவதிலிருந்தே, வருமானவரித் துறை ஜெயாவின் ஏவல் நாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த கண்டெய்னர் பணக் கடத்தல் விவகாரத்தில் ஜெயாவைக் காப்பாற்றிவிட்ட மோடி – அருண் ஜெட்லி – வெங்கைய்யா நாயுடு கூட்டணி, அவருக்காக இதையும் செய்யும், இதற்கு மேலேயும் செய்யும்.

natham-captionஊடகங்களிலும், அரசியல் வெளியிலும் மிகப் பெரிய அளவிற்குப் பேசப்பட்ட 2ஜி ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்குக் கைமாறியதாகக் கூறப்படும் தொகை வெறும் 200 கோடி ரூபாய்தான். அதைச் சாக்கிட்டே, தி.மு.க.வும், கருணாநிதி குடும்பமும் ஊழல், அதிகார முறைகேடுகளின் மறுபெயராகவும், தேச விரோதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டனர். கருணாநிதி குடும்பத்தினர் பலரும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆ.ராசா, கனிமொழி மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு, பிணையில் விடப்பட்டனர்.

ஆனால், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி விவகாரத்தில் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் அதிகார முறைகேடுகளின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், ஹவாலா வழியில் பணம் கடத்தப்பட்டிருப்பதும் அம்பலமான பிறகும், அது தேச நலனுக்கு எதிரான குற்றமாக ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை. தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ்களைத் தாண்டி, மற்ற பத்திரிகைகள், குறிப்பாக ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தக் கொள்ளை குறித்த செய்திகளைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. இந்த இருவர் தாண்டி, ஹவாலா பணம் கடத்தலில் மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தோ, இந்த இருவரின் சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதலமைச்சர் ஜெயாவிற்கும் உள்ள தொடர்பு குறித்தெல்லாம் ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; ‘‘சோதனை” நடத்திய வருமானவரித் துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழலைவிட, பார்ப்பன சாதிப் பாசம் பெரிதல்லவா!

– குப்பன்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு !

0

tn-policeகொடூரமான சித்திரவதைகள், கொட்டடிக் கொலைகள், பாலியல் வன்முறைகள் – என பயங்கரவாத அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துவரும் வன்முறைக் கும்பலாக ஏற்கெனவே தமிழக போலீசு அம்பலப்பட்டுப் போயுள்ளது. போதை, விபச்சாரம், ஆற்றுமணல், தாதுமணல் கடத்தலுக்குத் துணைபோகும் கிரிமினல் கும்பலாகவும் சீரழிந்து கிடக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, இப்போது ஹவாலா கொள்ளைக் கூட்டமாக வளர்ந்து புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது, தமிழக போலீசு.

கடந்த ஆகஸ்டு மாதம் 25 -ஆம் தேதியன்று கேரளாநோக்கி சென்ற காரை போலீஸ் உடையில் இருந்த சிலர் கோவை மதுக்கரை செக்போஸ்ட் அருகே வழிமறித்து, காரில் இருந்தவர்களை மிரட்டி கீழே இறக்கிவிட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனர். அந்தக் காரில் வந்த கேரளத்தின் மலப்புரம் தங்க நகைக்கடை அதிபர் அன்வர் சதா என்பவர், தனது கார் கடத்தப்பட்டதாக கோவை மதுக்கரை போலீசிடம் புகார் கொடுத்தார். பின்னர் இதற்கென ஒரு தனிப்படை அமைத்து, ஆகஸ்டு 27 தேதியன்று அந்தக் காரை பாலக்காடு அருகே போலீசார் கண்டறிந்து மீட்டுள்ளனர்.

ஹவாலா கொள்ளையர்கள்:  கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.
ஹவாலா கொள்ளையர்கள்: கரூர்-பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையமு ஏட்டு தர்மேந்திரன்.

இது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், காரையும் அதிலிருந்த ரூ.3.93 கோடி பணத்தையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியுள்ள ரூ.2 கோடியை தங்களுக்கு வழிகாட்டி உதவி செய்த கரூர் பரமத்தி போலீசு ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை போலீசு ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் ஏட்டு தர்மேந்திரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு 2 தேதியன்று கரூரில் ஒரு பால்பண்ணை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளையைத் துப்பறிய நியமிக்கப்பட்ட தனிப்படையைச் சேர்ந்தவர்கள்தான் மேற்குறிப்பிட்ட மூன்று போலீசாரும். இந்த தனிப்படையினர் கோவைக்குச் சென்றபோது, ஆகஸ்டு 25 அன்று ஹவாலா பணத்துடன் நகைக்கடை அதிபர் அன்வர் சதா செல்வதை கோடாலி சிறீதர் என்ற ஹவாலா ஏஜெண்டு மூலம் அறிந்துள்ளனர். அதன்படியே, தமது விசுவாச கூலிப்படையினரான மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோருக்கு போலீசு சீருடையை அணிவித்து, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.3.93 கோடியைத் திட்டமிட்டு சுருட்டியிருக்கின்றனர். அந்தக் காரில் இருந்த பணம் ஹவாலா பணம் என்பதாலேயே, கார் உரிமையாளர் அது பற்றி போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை.

கடத்தப்பட்ட காரைத் தேடிச் சென்ற போலீசுக்கு, கார் கடத்தல் மட்டுமின்றி ஹவாலா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதும், தமது துறைசார்ந்த போலீசே இந்தக் கொள்ளையை நடத்தியுள்ள விவகாரமும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், காரில் இருந்த ஹவாலா பணம் பற்றி இத்தொழிலில் தொடர்புடைய பெரும் புள்ளிகளுக்கும் போலீசு உயரதிகாரிகளுக்கும் தெரியும் என்பதாலும், இந்த வலைப்பின்னலில் உள்ள பல போலீசு உயரதிகாரிகளின் தொடர்புகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதாலும், வேறு வழியின்றி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையைச் சிக்க வைத்துவிட்டு, தாங்கள் கடமை தவறாமல் பணியாற்றுவதாகக் காட்டிக் கொண்டு போலீசு உயரதிகாரிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஹவாலா என்ற அரபிச் சொல்லுக்கு பரிமாற்றம் என்ற பொருள். சட்டபூர்வமான வரியைத் தவிர்த்து, வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு இணையான கட்டமைப்புடன் கிரிமினல் மாஃபியாக்களின் மூலம் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை தரகர்கள் மூலம் விரைவாகப் பரிமாற்றம் செய்வதுதான் ஹவாலா தொழில். இத்தகையதொரு மிகப் பெரிய மாஃபியா வலைப்பின்னலில் ஒரு சாதாரண போலீசு ஆய்வாளர் தொடர்பு கொண்டிருந்தாகவும், தனது அதிகாரத்தைக் கொண்டு அவர் இக்கொள்ளையை நடத்தியதாகவும் நம்பச் சொல்கிறது தமிழக போலீசு. ஆனால், இந்த ஹவாலா கொள்ளைக்கு தென்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்கெனவே நாகர்கோவிலில் இதே பாணியில் ரூ.63 லட்சம் ஹவாலா பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், இத்தகவல் கிடைத்ததும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுவதற்குள் அதில் ரூ. 23 லட்சத்தை மேலதிகாரிகளுக்காக மறைத்துவைத்துவிட்டு, கைப்பற்றியது ரூ.40 லட்சம்தான் என்று சாதித்ததாகவும் செய்திகள் வருகின்றன.

tn-police-thiefகேரள மாநிலமானது இத்தகைய ஹவாலா பணப் பரிமாற்றங்களுக்கான முக்கிய மையமாக உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணத்தை அனுப்புவது சுலபமாக இருப்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இத்தகைய ஹவாலா பணக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. எந்தெந்த செக்போஸ்ட்டின் வழியாக ஹவாலா பணம் கடத்திச் செல்லப்படுகிறது என்பது தமிழக போலீசு உயரதிகாரிகளுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது. பணக் கடத்தலுக்கு குறிப்பிட்ட செக்போஸ்ட் வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து அதற்கு கமிசன் பெறுவதோடு, ஹவாலா புள்ளிகளின் செல்வாக்கையும் அதிகார பலத்தையும் பொறுத்து சில நேரங்களில் கடத்தப்படும் ஹவாலா பணத்தை போலீசே கொள்ளையடிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காகவே போலீசு உயரதிகாரிகள் தனிப்படை என்ற பெயரில் போலீசு குழுக்களை அமைத்து நேரடியாகவே கொள்ளையில் ஈடுபடுபடுவதோடு, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையுடன் கூட்டணி கட்டிக் கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைப் பங்குபோட்டுக் கொள்வதாக இத்தொழில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இத்தகைய தனிப்படை போலீசாருக்கு விடுதிகளில் சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்படுவதும், திட்டமிட்டுக் கொடுத்து வழிகாட்டி உதவிய போலீசு உயரதிகாரிகளுக்குக் கீழ்நிலை போலீசார் கப்பம் கட்டி விருந்துகள் வைத்து குளிப்பாட்டுவதும் நடக்கின்றன. இதனாலேயே தற்போதைய ஹவாலா கொள்ளையில் சிக்கிய இந்த மூன்று போலீசாரும் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

tn-police-captionஒரு கொலையோ, கொள்ளையோ நடந்தால் அதுபற்றி போலீசுக்குக் குடிமக்கள் தெரிவிக்க வேண்டும்; போலீசார்தான் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்; மற்றவர்கள் இதில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு துறை இயங்குவதால், அதன் சட்டவிரோத – சமூகவிரோதக் குற்றங்களைப் பற்றி யாரும் வாய் திறக்க முடியவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல் மாஃபியா கும்பலைவிட மோசமான கொள்ளைக் கூட்டமாகத் தமிழகப் போலீசுத்துறை வளர்ந்து நிற்கிறது.

இதர கிரிமினல் குற்றங்களை ஒப்பிடும்போது ஹவாலா பரிமாற்றம் என்பது மிகக் கொடிய கிரிமினல் குற்றம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அரித்துச் சிதைக்கக் கூடியதாக உள்ளதால் இது தேசவிரோத, மக்கள் விரோத கொடிய குற்றம். அந்தக் குற்றக் கும்பலிலே ஒரு அங்கமாகத் திகழும் அளவுக்கு தமிழக போலீசு கிரிமினல்தனத்தில் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது. நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் இந்தச் சட்டவிரோத – சமூகவிரோத கும்பல்தான், குற்றங்களைத் தடுத்து நாட்டையும் மக்களையும் காத்து வருவதாகச் சொல்லப்படுவதை இனியும் நம்பி ஏமாற முடியுமா?

– குமார்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

ரிலையன்ஸ் ஜியோ : அம்பானி – மோடியின் கொடுங்கனவு ! சிறப்புக் கட்டுரை

2

ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு!

“ஜியோ என்பது இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் புதிய தலைமுறைக்கான சேவை” என்று முகேஷ் அம்பானி செப்டெம்பர் 1-ஆம் தேதி அறிவித்தபோது, பங்குச் சந்தையில் ஒரு சூறாவளி வீசியது. அம்பானியின் வாயில் கிளம்பிய வார்த்தைகள் அவரது காதைச் சென்றடையும் முன்னரே, முதலாளித்துவ ஊடகங்கள் தங்களது வாசகர்களிடம் காதில் அதைக் கொண்டு சேர்த்தன. அம்பானி உதிர்த்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஏழெட்டு விதமான பொருள் விளக்கங்களையும் கடைவிரித்தன. சமூக வலைத்தளங்களில் அனல் பறந்தது. இலவசங்களுக்கு எதிராகக் குடுமி அவிழச் சாமியாடும் நடுத்தர வர்க்கத்தினர் அம்பானி வழங்கும் இலவசங்களைப் பெறுவதற்காக, பாய் – தலையணையுடன் ஜியோ அலுவலக வாசலில் இடம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழா
இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முகேஷ் அம்பானியினு குடும்பம் பங்கேற்க, பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுக விழா.

முதலில் “அனைத்தும் இலவசம்” என்றனர் அம்பானி கம்பெனியினர். பின்னர் “குரல் அழைப்புகள் இலவசம், இணைய டேட்டாவுக்கு மட்டும் காசு” என்றனர், பின்னர் “டேட்டா இரவில் மட்டும்தான் இலவசம்” என்றனர், பின்னர் “இரவு எனப்படுவது அதிகாலை 2 மணிக்குத் துவங்கி காலை ஐந்து மணிக்கு முடியும்” என்றனர். மெல்ல மெல்ல சுருதி இறங்கியது. “கூட்டிக் கழித்துப் பார்த்தால் குரல் அழைப்புகள் இலவசம் என்று சொல்லி விட்டு, அதை டேட்டாவுக்கு வசூலிக்கும் தொகையில் ஈடுகட்டிக் கொள்கிறான்” என்றும், “செல்போன் சேவையை இலவசமாக கொடுத்து விட்டு பெட்ரோல் விலையைக் கூட்டி விட்டான்” என்றும் சமூக வலைத்தளங்களின் “140 எழுத்து” விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த உண்மை உலகுக்குத் தெரியவருவதற்குள் பங்குச்சந்தையில் ஏர்டெல் ரூ.13,000 கோடிகளையும், ஐடியா 3000 கோடிகளையும் இழந்திருந்தன.

அம்பானி தொடுக்கும் இலவச யுத்தம்!

ஜியோவின் வருகை, செல்பேசித் துறையில் ஒரு மாபெரும் கழுத்தறுப்புப் போட்டியைத் துவங்கி வைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் ‘இலவசப் போரை’ச் சமாளிக்க, அவரது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருக்கிறது. விலைக் குறைப்பால் போட்டி நிறுவனங்களை அழித்தொழித்துவிட்டு மொத்தச் சந்தையையும் தனியாளாக தின்று தீர்த்து விடவேண்டும் என்கிற வெறியில், “இன்னும் ஒரே ஆண்டுக்குள் பத்து கோடி இணைப்புகளை வழங்கவும், அடுத்த சில ஆண்டுகளில் தொண்ணூறு சதவீத சந்தையைக் கைப்பற்றவும்” ஜியோவின் உயரதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

reliance-jio-modi
இந்தியப் பிரதமரையே தனது விளம்பரத் தூதராகப் பயன்படுத்திக் கொண்டு வெளிவந்த ரிலையன்ஸ் ஜியோவின் விளம்பரம்

தனது மொத்த நிதிக் கையிருப்பான 24,000 கோடியில் நாலில் மூன்று பங்கை (18,000 கோடி) முதலீடாக இறக்கியுள்ளார் முகேஷ் அம்பானி. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிக அதிக முதலீட்டுடன் துவங்கப்பட்ட தொழில் இதுதான் என்கிறது முதலாளித்துவ உலகம். நாடு முழுவதும் தொழில்நுட்ப மற்றும் அலைக்கற்றை உட்கட்டமைப்புடன் துவங்கப்பட்ட முதல் நிறுவனம் ஜியோ. கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கான கண்ணாடி இழைக் கம்பிகளை (Fibre Optic Cables) பதித்துள்ள ரிலையன்ஸ், சுமார் 30,000 கோபுரங்களையும் நிர்மாணித்துள்ளது.

இந்த வேகத்தைத் தொழில்முனைவு சாகசம் என வர்ணிக்கும் ஊடகங்கள், இதற்கு பின் உள்ள சட்ட விதிமீறல்களையும், ஊழல் முறைகேடுகளையும், அரசின் கள்ளத்தனமான ஆதரவையும் மொத்தமாக மூடி மறைக்கின்றன. உஜ்ஜயினி, நாசிக், நாக்பூர், கொச்சி உள்ளிட்டுப் பல நகரங்களில் ரிலையன்ஸின் செல்பேசி கோபுரங்களுக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றம், ரிலையன்சின் செல்பேசி கோபுரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டது. இவையனைத்தையும் விதிகளுக்குப் புறம்பாக முறியடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

இந்திய தொலைதொடர்புத் துறையைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி செய்து வரும் முயற்சிகளின் முழு பரிமாணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், 2010 ஆண்டு அரசு நடத்திய மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கற்றை ஏலம் என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2ஜி = 1,76,000,00,00,000 என்றால், 4ஜி = 000000000000000?

reliance-jio-orissa-q
ரிலையன்ஸ் ஜியோவின் சிம் கார்டை வாங்குவதற்காக ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டம்.

“ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை நாம் மறந்திருக்க மாட்டோம். 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக சி.ஏ.ஜி. அறிக்கை மேற்படித் தொகையை முன்வைத்த போது, வடக்கே அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்., பாபா ராம்தேவ் தொடங்கி தெற்கே ஜெயலலிதா வரையிலான உத்தமர்கள் சத்தியாவேசம் கொண்டு சாமியாடினர். “திராவிட இயக்கம் என்றால் ஊழல், ஏலம்தான் ஊழலை ஒழிக்கும் வழி” என்ற இரண்டு தத்துவங்கள் 2ஜி ஊழலின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர், இந்த ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்பது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் 22,000 கோடியாகவும், 30,000 கோடியாகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதெல்லாம் தனிக்கதை. யோக்கியமான முறை எனச் சொல்லப்பட்ட ஏல முறை எப்படி நடந்தது என்பதற்கு வருவோம்.

2010 ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மன்மோகன் அரசின் கீழ் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை ஏலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய இடைவெளியில் நடந்தன. நான்காம் தலைமுறை அலைக்கற்றையை ஏலம் எடுப்பவர்கள், அதனை இணைய இணைப்பு (data) வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; செல்பேசி இணைப்புகள் வழங்க (voice) பயன்படுத்தக் கூடாது என்று ஏல அறிவிப்பில் கறாராகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

reliance-jio-caption-13ஜி அலைக்கற்றையை ஏலமெடுப்பதற்கு ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தம் நிதிக் கையிருப்பில் பெரும்பகுதியைச் செலவிட்டன. 4ஜி என்பது இணைய சேவைக்கு மட்டுமானது என்று கூறப்பட்டிருந்த காரணத்தால், இந்நிறுவனங்கள் அந்த ஏலத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, மொத்தமுள்ள 22 சேவை பிராந்தியங்களில் (Service Circles) ஏர்டெல் 15 பிராந்தியங்களிலும், வோடஃபோன் 5 பிராந்தியங்களிலும் 4ஜி உரிமத்தை ஏலம் எடுத்தன.

இந்நிலையில், முன்பின் கேள்விப்பட்டிராத இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் லிமிடெட் (IBSPL) என்கிற தனியார் நிறுவனம், இந்தியாவின் அனைத்து சேவைப் பிராந்தியங்களிலும் 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் கோரி விண்ணப்பித்தது. செல்பேசி சேவை வழங்கிய முன் அனுபவமோ, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ இல்லாத இந்த நிறுவனத்தைச் சுருக்கமாக “உப்புமா கம்பெனி” என்றும் அழைக்கலாம்.

4ஜி ஏலத்தில் பங்குபெறும் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தகுதி மிகவும் தளர்வாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், வெறும் 2.5 கோடி ரொக்க மதிப்பும், 14 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமும் கொண்ட மேற்படி உப்புமா கம்பெனி, சுமார் 12,847 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை ஏலத்தில் வென்றது.

இங்கே 2ஜி வழக்கை சற்று நினைவு படுத்திக் கொள்வோம். அதில் சி.பி.ஐ. வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானது “தகுதியற்ற உப்புமா கம்பெனிகளுக்கு ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கொடுத்தார்” என்பதாகும். ஐ.பி.எஸ்.பி.எல். என்பது ஒரு உப்புமா கம்பெனி மட்டுமல்ல, அதன் புரமோட்டரான ஹிமாச்சல் புயூச்சரிஸ்டிக் கம்யூனிகேசன்ஸ் என்கிற நிறுவனம், தொண்ணூறுகளில் சுக்ராம் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது நடந்த முதற்பெரும் தொலைத்தொடர்புத் துறை ஊழலில் கையும் களவுமாக பிடிபட்ட நிறுவனமாகும்.

reliance-jio-caption-24ஜி ஏலம் முடிந்த மறுநாளே ஐ.பி.எஸ்.பி.எல் நிறுவனத்தை முகேஷ் அம்பானி கையகப்படுத்தினார். அலைக்கற்றையை ஏலம் எடுத்த கம்பெனியை வேறொரு கம்பெனி விலைக்கு வாங்குவது என்ற உத்தி 2ஜி-யிலும் கையாளப்பட்டது. அங்கே அது ஊழல் என்று அழைக்கப்பட்டது என்பதையும் இங்கே நினைவில் கொள்க. தான் நேரடியாக களத்தில் இறங்காமல், தனது பினாமியை இறக்கிவிட்டதன் மூலம், அலைக்கற்றை ஏலத்தில் போட்டி ஏற்பட்டிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டினார் அம்பானி. இந்த 4ஜி ஊழலுக்கு எத்தனை சைபர் போடலாம் என்பதை குருமூர்த்திஜி அல்லது சு.சாமிஜி என்ற இரண்டு உத்தமர்கள் மட்டும்தான் சொல்ல முடியும்.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனம் கொடுத்த வங்கி உத்திரவாதப் பத்திரமே போர்ஜரி செய்யப்பட்டது என்று தனது 2014 ஆண்டு வரைவறிக்கையில் சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியிருக்கிறது. வங்கி வேறொரு நிறுவனத்துக்கு வழங்கியிருந்த உத்திரவாதப் பத்திரத்தில் அந்நிறுவனத்தின் பெயரை வெள்ளை மை வைத்து அழித்து விட்டு, அதன்மீது ஐ.பி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் பெயர் கையால் எழுதப்பட்டிருந்தது. அதாவது கொஞ்சமும் அச்சமின்றி போர்ஜரி வேலை வெளிப்படையாக செய்யப்பட்டிருந்தது.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. முன்வைக்கும் இன்னொரு வாதம், ஒதுக்கப்படும் அலைக்கற்றையை இரட்டைப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பதில் ஆ.ராசா பாரபட்சமாக நடந்து கொண்டதன் மூலம் சாகித் பல்வாவுக்குச் சாதகமாக செயல்பட்டார் என்பதாகும். ஆனால், 4ஜி அலைக்கற்றையை இணைய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 2010-இல் ஏலம் விட்டு, பின்னர் 2013-இல் அதை இணையம் மற்றும் செல்பேசி சேவை இரண்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மன்மோகன் அரசு மாற்றியது. இவ்வாறு மாற்றியதன் மூலம் அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டதாக 2014-ஆம் ஆண்டின் சி.ஏ.ஜி. வரைவறிக்கை குறிப்பிடுகிறது.

“முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற முறையில் எல்லோருக்குமான சமமான போட்டி வாய்ப்பு (Level playing Ground) மறுக்கப்பட்டது” என்பது 2ஜி வழக்கின் இன்னொரு குற்றச்சாட்டு. 2010-இல் நடந்த 4ஜி ஏல விதி களின்படி செல்பேசி இணைப்புகளுக்கான உரிமத்தை ஏலம் எடுத்த மற்ற நிறுவனங்கள் அரசுக்கு 4 சதவீதக் கட்டணம் செலுத்தின. ஏல விதிகளை 2013-இல் மாற்றியதன் மூலம், டேட்டாவுக்கான அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமான, ஒரு சதவீதத்தைக் கட்டிவிட்டு அதையே செல்பேசி அழைப்புகளுக்கும் பயன்படுத்திக் கொண்டார் அம்பானி.

காங்கிரசின் ஊழலுக்கு மோடி வழங்கிய ஆதரவு!

reliance-jio-dominationசி.ஏ.ஜி. வரைவு அறிக்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஏலத்தில் 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் செய்த முறைகேடுகளை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷன். 2014 தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பதற்கு 2ஜி ஊழலைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா, இந்த 4ஜி ஊழலில் காங்கிரசுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதி பதிகள், பினாமி நிறுவனத்தைப் பயன்படுத்தி அலைக்கற்றையை அபகரித்தது, வங்கி உத்தரவாதப் பத்திரங்களில் மோசடி செய்தது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தனர். பாரபட்சம் என்ற காரணத்தை சொல்லி, 122 உரிமங்களை 2ஜி வழக்கில் ரத்து செய்து, மறு ஏலம் நடத்தச் சொன்ன உச்சநீதி மன்றம், அம்பானிக்கு கட்டணத்தில் பாரபட்சமாக சலுகை காட்டப்பட்டிருப்பது பற்றி தான் முடிவெடுக்க முடியாதென்றும், அதை விசாரிக்க வேண்டியது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்தான் என்றும் தீர்ப்பு கூறியது. அதுமட்டுமல்ல, வங்கி உத்தரவாதப் பத்திரத்தில் செய்யப்பட்டிருக்கும் போர்ஜரி பற்றி மத்திய நிதியமைச்சகம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி பிரசாந்த் பூசணின் வழக்கை மொத்தமாகத் தள்ளுபடி செய்தது.

இதுதான் ரிலையன்ஸ் ஜியோவின் சுருக்கமான ஊழல் வரலாறு. இருப்பினும் அம்பானியின் கடைமுன் காத்திருக்கும் நடுத்தர வர்க்க கனவான்களைக் கேட்டால், “அம்பானி அயோக்கியன் என்பது எங்களுக்கும் தெரியும். திருடிய காசுதானே, இலவசமாக கொடுக்கும்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பதில் சொல்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பதை விசாரித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

எலி ஏன் அம்மணமாக ஓட வேண்டும்?

reliance-jio-modi-brand“இலவசம் என எதுவும் இருக்கக் கூடாது – குடி தண்ணீர் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரு விலை இருக்க வேண்டும்” என்பது தனியார்மய சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் தத்துவம். அவ்வாறிருக்க மொபைல் சேவையை இலவசமாக அளிக்கும் தரும சிந்தனை முகேஷ் அம்பானிக்கு ஏன் வர வேண்டும்?

பெருநகரங்களில் ஷாப்பிங் மால்களில் உள்ள வைஃபை (கம்பியில்லா) இணைய இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்கும் நிறுவனம், தனது இணைய இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர், என்ன பொருளைத் தேடுகிறார், என்னென்ன பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறார் – என்பன போன்ற விவரங்களை வடிகட்டி, அந்த மாலில் உள்ள கடைகளுக்கு உடனுக்குடன் விற்பனை செய்கிறது. இதன் மூலம் மாலில் உள்ள கடைக்காரர்கள், குறிப்பிட்ட வாடிக்கையாளர் தங்கள் கடைக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவரது பர்சைக் காலி செய்வதற்கான திட்டத்துடன் தயாராக இருக்கின்றனர்.

ஒரு ஷாப்பிங் மாலில் நடக்கும் விவர (data) ஜேப்படியை நாடு முழுக்க விரிவுபடுத்தினால், அதற்குப் பெயர்தான் ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ தனது செல்பேசி சேவையை 4ஜி அலைக்கற்றையில் செயல்படும் VoLTE (வோல்ட்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் அனைத்துமே இணைய நெறிமுறையின் (Internet protocol – IP) அடிப்படையிலேயே செயல்படும். சுருக்கமாகச் சொன்னால், ஜியோவின் செல்பேசி சேவை மூலம் நீங்கள் பேசுவது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளாக (data packets) மாற்றப்பட்ட பின்னரே கடத்தப்படுகின்றது. இவற்றைப் பதிவு செய்து சேமிப்பது எளிது. மேலும், பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகளை இடைமறிப்பதும், ஆய்வு செய்வதும் சேவை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் எளிது.

‘டேட்டா”தான் புதிய எண்ணெய் !

reliance-jio-caption-3“ரிலையன்சைப் பொருத்தமட்டில் டேட்டாதான் புதிய எண்ணெய்” என்றார் முகேஷ் அம்பானி. இந்த வாசகம் அம்பானியின் கண்டுபிடிப்பல்ல. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் கணித வல்லுநர் கிளைவ் ஹம்பி வெளியிட்ட கருத்து. தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தாரக மந்திரமே இந்த வாசகம். கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது அதிலிருந்து பல்வேறு பயன்பாட்டுக்கான பொருட்கள் கிடைப்பதைப் போல, ஒரு வாடிக்கையாளரின் டிஜிட்டல் தரவுகளைச் சலித்துப் பிரித்து வகைப்படுத்தி விற்பதன் மூலம் அதனைப் பணம் காய்ச்சி மரமாகப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள்.

தம்மிடம் குவியும் டிஜிட்டல் டேட்டாக்களைக் கொண்டு ரிலையன்சால் என்ன செய்து விட முடியும்? ஆழ்தரவுப் பொட்டல ஆய்வு முறை (Deep packet inspection) ஒன்றைத் தங்கள் நிறுவனம் பின்பற்றுவதாக பத்திரிகை ஒன்றிடம் பீற்றிக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் உயரதிகாரி ஒருவர், அதன் தொழில்நுட்ப சாத்தியங்கள் மலைக்கச் செய்வதாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் மூலம் ஜியோ செல்பேசி சேவையைப் பயன்படுத்துபவர்களின் பேச்சு, செயல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பதிவு செய்து, சேமித்து, பிரித்து ஆராய முடியும்.

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய தொழில்நுட்பத்திலும் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் வசதி உள்ளது. எதிர்க்கட்சியினரையோ, ‘பிரச்சினைக்குரியவர்களாக’ அரசால் கருதப்படும் நபர்களையோ ஒட்டுக் கேட்பதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், ஜியோவின் மூலம் கைபேசியை அல்லது இணையத்தை ஒருவர் பயன்படுத்தினால், அவரது எல்லாவிதமான நடவடிக்கைகளையும் பேச்சுகளையும் டிஜிட்டல் தரவுகளாக பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.

“வைத்துக் கொள்ளட்டுமே, நாம் என்ன பாராளுமன்றத்திற்கு குண்டு வைப்பது பற்றியா பேசப்போகிறோம்?எதற்குப் பயப்பட வேண்டும்?” என்று சிந்திக்கும் அளவுக்கு நீங்கள் அப்பாவியாக இருப்பீர்களேயானால், கேளுங்கள். உங்கள் வருமானம், கடன், சொத்து, உங்கள் வர்த்தக இரகசியங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் பற்றிய விபரம், உங்கள் மாதாந்திர மளிகை சாமான் பட்டியல், உங்கள் காதல், உங்கள் பிள்ளைகளின் கல்வி, உங்கள் குடும்பத்தினரின் நோய்கள், உங்கள் அரசியல் கருத்து, உங்களுக்கு விருப்பமான இசை, சினிமாக்கள் – என அனைத்து தரவுகளும் அம்பானியின் கையில் இருக்கும். மொத்தத்தில் “நான் – எனது” என்று ஒரு மனிதன் சொல்லிக் கொள்ளத்தக்க அனைத்தும், உங்களுக்கு மட்டுமே சொந்தமான உங்கள் தரவுகள் அனைத்தும் அம்பானிக்கு சொந்தமாகி இருக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அம்பானியின் உடைமையாகியிருப்பீர்கள்.

“செயலி சார்ந்த பயன்பாட்டுச் சூழல்” (App based ecosystem) ஒன்றைப் படைக்கவுள்ளாதாக அறிவித்துள்ளார் அம்பானி. அதன் பொருள், நமது அனைத்துப் பயன்பாடுகளும், செயல்களும், அன்றாட நடவடிக்கைகளும் அம்பானி வழங்கியுள்ள சில செயலிகளின் மூலமே நடக்கும் – வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், செயலிகளே நமது தேவைகளையும் அவற்றைப் பூர்த்தி செய்யும் வழிவகைகளையும் நமக்கு வழங்கும். செயலிக்கு அப்பாற்பட்ட சொந்தத் தேர்வுகள் என எதுவும் இருக்க முடியாது – இருக்கக் கூடாது என்பது அம்பானியின் திட்டம். அதாவது, இந்தியாவின் மொத்த நுகர்வுச் சந்தையையும் அம்பானி தனது பிடிக்குள் கொண்டு வர முடியும்.

விளம்பரத் தூதர் மோடியின் கனவை நனவாக்குகிறார், விளம்பரதாரர் அம்பானி!

reliance-jio-anil-ambani-sunil-mittal
ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கியிருக்கும் கழுத்தறுப்புப் போட்டியால் ஆடிப்போயுள்ள தரகு முதலாளிகள் (இடமிருந்து) ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பாரதி மிட்டல்.

இதனை வெறும் வணிகச் சந்தைக்கான ஆயுதம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இன்னின்ன நபர்கள் இன்னின்ன கொள்கை உள்ளவர்கள், அதிலும் இவர்களெல்லாம் தீவிரமானவர்கள் என்று தரம் பிரித்து அவர்களை அரசுக்கு அடையாளம் காட்ட முடியும். அரசியல் எதிரிகளின் பலவீனங்களை அறிந்து அவர்களை முடக்கவும், அழிக்கவும் முடியும். உங்களது விருப்பங்கள், தெரிவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகள் என சகலத்தையும் ரிலையன்ஸ் ஜியோ அறிய முடியும். மீப்பெரும் மின்தரவு ஆய்வு (Big Data Analysis) எனச் சொல்லப்படும் இந்த ஆய்வின் மூலம், நீங்கள் குறிப்பான ஒரு தருணத்தில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் ஏறத்தாழ கணிக்க (Artificial Inteligence) முடியும்.

அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும் என்பது மோடிக்குத் தெரியாததல்ல. நாட்டு மக்களை தனது அடிமைகளாக மாற்றுவதற்கு முன், மோடியே தனது அடிமைதான் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவித்தார் அம்பானி. செப்டம்பர் 2-ஆம் தேதி ஆங்கில நாளேடுகளின் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்ததை அனைவரும் காறி உமிழ்ந்தனர். ஆனால், மோடி கவலைப்படவில்லை.

மோடியின் “டிஜிட்டல் இந்தியா” என்ற கனவை நனவாக்குவதே தனது லட்சியம் என்று அந்த விளம்பரத்தில் அறிவித்திருந்தார் அம்பானி. விளம்பரதாரர்கள்தான் தமது கனவை நனவாக்கிக் கொள்ள விளம்பரத் தூதர்களைப் பயன்படுத்துவார்கள். தன்னுடைய விளம்பரத்தூதரின் கனவை நனவாக்கும் பொறுப்பை அம்பானி எதற்காக ஏற்க வேண்டும்?

“படுக்கையறையைத் தாளிடுவது அடிப்படை உரிமையல்ல” – மோடியின் அட்டார்னி ஜெனரல்!

reliance-jio-caption-4ஏனென்றால், “டிஜிட்டல் இந்தியா” என்பது மோடி கூட்டுக்கனவு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தில், தேசிய ஊடக ஆய்வு மையம் (National Media Analytics Centre) அமைப்பது, இந்திய மக்கள் அனைவரிடமிருந்தும் கட்டாயமாக மரபணு மாதிரிகளைத் திரட்டுவது (DNA profiling)என்பன போன்ற திட்டங்களை உள்ளடக்கிய மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவின்படி, ஒவ்வொரு இந்தியனும் ஒரு எண் (டிஜிட்). அந்த எண்ணின் (அதாவது குடிமகனின்) நடவடிக்கைகள் குறித்த அத்தனை தரவுகளையும் கண்காணிப்பில் வைக்கும் ஏற்பாடுதான் டிஜிட்டல் இந்தியா.

ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கில், குடிமக்களின் கருவிழி மற்றும ரேகைகளைப் பதிவு செய்வதென்பது அவர்களுடைய தனியுரிமையில் (Right to Privacy) தலையிடுவதாகும் என்று அரசுக்கு எதிரான வாதம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, “இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி குடிமக்களுக்கு தனியுரிமை கிடையாது” என்றார் மோடி அரசின் அட்டார்னி ஜெனரல். அதாவது, அரசாங்கம் குடிமக்கள் அனைவரையும் குற்றப் பரம்பரையாக நடத்தலாம், உங்கள் முகநூலை வேவு பார்க்கலாம், படுக்கையறையை எட்டிப் பார்க்கலாம்; அதுமட்டுமல்ல, அம்பானியும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை யாருக்கும் விற்கலாம் என்பதே இதன் பொருள். இவற்றையெல்லாம் தடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்புகள்கூட இல்லாத நிலையில், மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற கனவு, இந்தியர் களின் கொடுங்கனவாக மாறிவிடும் என்று பல அறிவுத்துறையினரும், டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏற்கனவே எச்சரித்திருக்கின்றனர்.

பாசிசக் கொடுங்கனவு!

கேளுங்கள்! இணையப் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் அமெரிக்காவை விஞ்சி உலகின் முதல் இடத்தை அடுத்த ஆண்டில் பிடிக்கப்போகிறது. இந்தச் சூழலில்தான் இந்தியச் சந்தையை ஏகபோகமாகப் பிடிக்கப் பார்க்கிறது ரிலையன்ஸ் ஜியோ. பாசிசம் என்பதற்கு முசோலினி அளித்த விளக்கத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்றான் முசோலினி.

இது பனியாவின் ஏகபோகமும் பார்ப்பன பாசிசமும் இணைந்த கொடுங்கனவு. ஜியோ என்ற இந்திச் சொல்லுக்கு வாழ்ந்துகொள் என்று பொருள். அடிமை வாழ்க்கையை இந்தியர்களுக்கு வழங்குகிறார் அம்பானி – இலவசமாக!

பின்குறிப்பு:

அனானிமஸ் ஹேக்கர்ஸ் எனும் இணையதளம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் செயலிகளின் மூலம் களவாடப்படும் நமது தனிப்பட்ட தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. மோடி கூட்டுக்கனவு மெய்ப்படத் தொடங்கிவிட்டது.

– சாக்கியன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

ராம்குமார் மரணம்: போலீசைத் தண்டிக்க என்ன வழி?

5
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ‘கூராய்வு அவரது உடலின் மீது மட்டும் நடத்தப்பட்டால் போதுமானதா என்பதே நம் கேள்வி.

“கூராய்வின்போது அதனை உடனிருந்து கண்காணிப்பதற்கு தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்” என்பது ராம்குமார் குடும்பத்தினரின் கோரிக்கை. “அது அரசு மருத்துவர்களின் நாணயத்தைச் சந்தேகத்துக்கு ஆளாக்குகின்ற தவறான முன்மாதிரி ஆகிவிடும்” என்று கூறி அக்கோரிக்கையை உச்சநீதி மன்றம் நிராகரித்துவிட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியின் சடலம். (உள்படம்) சுவாதி.

கண்காணிப்பை மறுப்பதன் மூலம்தான் நிறுவனங்களின்  மீதான மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நீதிமன்றத்தின் கருத்து நகைப்புக்குரியது. மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களில் தலையாயவையான போலீசின் மீதும் சிறைத்துறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பாருங்கள்!

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தவுடனே, ஆகப் பெரும்பான்மையான மக்கள் அது கொலைதான் என்று ஆணித்தரமாகக் கருதினார்கள். இது போலீசைப் பற்றியும் சிறைத்துறை பற்றியும் இந்த ஒரு வழக்கின் மூலம் மக்கள் மனதில் உருவான கருத்தல்ல. விஷ்ணுப்பிரியா, கோகுல்ராஜ், ராமஜெயம் கொலை வழக்குகளிலும், எஸ்.ஆர்.எம். பச்சமுத்து, அன்புநாதன், கோவை கன்டெயினர், சேலம் ரயில் கொள்ளை போன்றவற்றிலும், சிவகாசி ஜெயலட்சுமி தொடங்கி கரூர் ஹவாலா திருட்டு வரையிலான எண்ணற்ற வழக்குகளின் வழியாகவும்  தனது “திறமை, ஒழுக்கம், நேர்மை பற்றி போலீசே மக்களிடம் உருவாக்கியுள்ள கருத்து.

ராம்குமாரின் தற்கொலை குறித்து போலீசு கூறிய கதை என்ன? “புழல் சிறையின் சமையல் அறைக்குச் சென்று, பத்தடி உயரத்தில் இருந்த சுவிட்சு பெட்டியை உடைத்து, மின் கம்பியைக் கடித்தும், தனது உடம்பில் சுற்றிக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்” என்பது முதல் கதை. “அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்காகத் திறந்துவிடுமாறு கேட்டு, திறந்தவுடன், தடாலென சுவிட்சு பெட்டியை உடைத்து, மின் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார்” என்பது இரண்டாவது கதை.

“சமையல் அறை சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட காட்சி பதிவாகவில்லை” என முதல் கதைக்குத் தோதாக துணைக்கதை சொன்ன சிறைத்துறை, இரண்டாவது கதைக்கு ஏற்ப, “உடைந்துபோன சுவிட்சு பெட்டி, சிறை அறையின் கதவுக்கு வெளியே உள்ள தண்ணீர்க்குடம்” ஆகியவற்றின் படத்தை வெளியிட்டிருக்கிறது. நிறுவனங்களின் கவுரவத்தைப் பாதுகாப்பதில் பேரார்வமிக்கவரான நீதிபதி சந்துருவாலேயே போலீசின் இந்தக் கதைகளைச் சகிக்க இயலவில்லை எனும்போது சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

“இது கொலையல்ல” என்று சந்தேகிப்பதற்கு நம் முன் உள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான். சிறைத்துறை யினரோ போலீசோ இதனைச் செய்திருக்கும் பட்சத்தில் இவ்வளவு முட்டாள்தனமாகவா செய்திருப்பார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. “இவ்வளவு அலட்சியமாக செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால்தான் இதை போலீசு செய்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது” என்பதுதான் இதற்கான பதில். எந்தக் குற்றத்துக்காகவும் தாங்கள் தண்டிக்கப்படமாட்டோம் என்ற திமிர்தான், அவர்களுடைய இந்த அலட்சியத்துக்கான அடிப்படை.

ramkumar
ராம்குமார்

ஒரு கொலைக்குற்ற வழக்கில் புலனாய்வு நடத்திக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதென்பது நமக்குச் சாத்தியமற்றது. சுவாதி கொலையையே எடுத்துக் கொள்வோம். தன்னுடைய காதலை நிராகரிக்கும் பெண்ணைக் கொலையும் செய்யலாம் என்ற அளவுக்கு ஆணாதிக்க வெறித்தனம் பரவியிருக்கின்ற பண்பாட்டுச் சூழலில், ராம்குமாரோ அல்லது வேறொரு இளைஞனோ சுவாதியைக் கொலை செய்திருக்கலாம்.

ஒரு முஸ்லிம் இளைஞனைக் காதலித்த காரணத்தினாலோ, அல்லது கருவுற்ற காரணத்தினாலோ அவளுடைய உற்றார் மூலமாகவே அவள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொலை நடந்தவுடனே அதனை பிலால் என்ற இசுலாமிய இளைஞனுடன் தொடர்புபடுத்திய சங்கப் பரிவாரத்தினர், உ.பி.யில் லவ் ஜிகாத் என்றொரு பொய்க் காரணத்தை ஜோடித்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் நடத்தியதைப் போல, இந்தக் கொலையின் பின்னணியிலும் ஒரு திட்டத்துடன் இருந்திருக்கலாம். இந்தக் காரணங்களுக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஊகிக்க முடியாத, வேறு ஏதோவொரு காரணத்துக்காக,  கூலிப்படையினரால் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

சுவாதி கொலை ஒரு கொடூரமான சம்பவம் என்பதைத் தாண்டி, அக்கொலையைப் பயன்படுத்தி கலவரத்தைத் தூண்டுவதற்கு பார்ப்பன  இந்து மதவெறிக் கும்பல் தீவிரமாக முயன்றதை யாராலும் மறுக்கவியலாது.  இருப்பினும், அந்தக் கொலை நடந்தவுடனே சமூக வலைத்தளங்களில் மதவெறி, சாதிவெறியைத் தூண்டி கருத்துப் பரப்பிய ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பார்ப்பன வெறியர்களை போலீசு விசாரிக்கக்கூட இல்லை. அதே போல, ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன் அவருக்கே தெரியாமல் அவரைப் பிணயில் எடுக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு வழக்கறிஞரின் பாத்திரமும் விசாரிக்கப்படவில்லை.

கொலை செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன் யாரோ ஒரு இளைஞன் சுவாதியைக் கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு அவள் எதிர்ப்பு காட்டாதது ஆச்சரியமாக இருந்தது என்றும், அந்த இளைஞன் ராம்குமார் அல்ல என்றும் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் கூறியிருக்கும் சாட்சியத்தின் திசையில் எந்த விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

“சுவாதியின் பெற்றோர் விசாரணைக்கு பெரிதும் ஒத்துழைத்தார்கள்” என்று வலிந்து அறிவித்தார் காவல்துறை ஆணையர். கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, “இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே ராம்குமாரின் படம் வெளியிடப்பட்டது. இவையனைத்தும் ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் முறைக்கு எதிரானவை.

கைது செய்யப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்ற காரணத்தினால், சிறையில் அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சை தரப்பட்டதாக போலீசு கூறியது. “தற்கொலைக்கு முயன்ற ஒரு கைதியைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சிறையில் என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?” என்று  கேள்விக்கு போலீசிடமிருந்து பதில் இல்லை.

“ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்” என்று சவடால் பேசிய போலீசு 3 மாதங்களுக்குப் பின்னரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் ராம்குமார் பிணையில் வெளியே வந்து பேசத்தொடங்கினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டுத்தான், அவர் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்று சந்தேகிப் பதற்கு போதுமான முகாந்திரங்கள் போலீசின் நடவடிக்கைகளில் உள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்கோ, மறுப்பதற்கோ ராம்குமார் உயிருடன் இல்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போலீசுதான் இரண்டு கொலைகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். “ராம் குமார் மரணத்தின் பின்னுள்ள உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி போடப்பட்ட மனுவை நிராகரித்ததுடன், தமிழக போலீசின் விசாரணை சரியான திசையில் செல்வதாகப் பாராட்டும் தெரிவித்திருக்கிறார் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி. இதை அவர் கவனிக்கவில்லை போலும்!

அப்படியானால், வேறு எந்த நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தச் சொல்வது? “இன்ன நீதிபதி விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்” என்று கேட்பதும், “இன்ன மருத்துவர் கூராய்வை பார்வையிட வேண்டும்” என்று கேட்பதும், அந்நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதாகிவிடாதா?

ராம்குமார், சுவாதி போன்றோரின் உயிரைக் காட்டிலும் நிறுவனங்களின் மாண்பல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!

– திப்பு
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

காவிரி தமிழ் மண்ணின் பண்பாடு ! கம்பம் கருத்தரங்கம்

0
திரு.செங்குட்டுவன்.
திரு.செங்குட்டுவன்.

தேனி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு , நீர்நிலைகளின் மீதான அதிகாரத்தை மக்கள் கைப்பற்றவேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி  கடந்த 13-10-2016-அன்று  வாணியர் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒரு வாரகாலமாக முற்போக்கு ஜனநாயக சக்திகளை சந்திப்பது, விவசாயிகள், அரசு ஊழியர்கள் மத்தியிலும், கம்பம் நகரில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடமும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருத்தரங்குக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் ஒருங்கிணைப்பாளர்,
தோழர். ஈஸ்வரன் காவிரிப் பிரச்சனையின் வரலாறை விளக்கி தலைமை உரையை துவக்கி வைத்தார்.

தோழர்.வி.இராசேந்திரன்
தோழர்.வி.இராசேந்திரன்

அடுத்து பேசிய ஏ.ஐ.டி.யு.சி. தேனிமாவட்ட துணைத் தலைவர் தோழர்.வி. இராசேந்திரன், ”காவிரி என்பது வெறும் ஆறு மட்டுமல்ல, சங்ககாலப் பாடலாக, குழந்தைகளின் பெயராக, சினிமாப் பாடலாக, தமிழர்களின் கலாச்சாரத்துடன் நெருக்கமான தொடர்புடையது. சேது சமுத்திரக் கால்வாய்க்கு எதிராக மாநிலமக்கள் நடத்திய பந்தை அன்றைய தமிழக அரசு ஆதரித்ததால், உச்சநீதிமன்றம் ஆட்சியைக் கலைப்போம் என்று நேரடியாக மிரட்டியது. ஆனால் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று கர்நாடகா சவால் விடும்போது மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது.” என்று அமபலப்படுத்தினார்.

எஸ்,ஆர்.கணேசன்
எஸ்,ஆர்.கணேசன்

பென்னிகுயிக் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எஸ்.ஆர். கணேசன், ‘நம் நாட்டின் பரம எதிரியாக சொல்லப்படும் பாகிஸ்தானுடன் எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் சிந்துநதி நீரைப் பகிர்ந்துகொள்கிறோம். உண்மையில் நமக்கு எதிரியாக இருப்பவர்கள் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மத்திய-மாநில அரசுகள்தான். இதைப் புரிந்துகொண்டு போராடும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளால்தான் இதற்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

திரு.செங்குட்டுவன்.
திரு.செங்குட்டுவன்.

தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.செங்குட்டுவன், “ பல்லாண்டுகளாக தொடரும் காவிரி நீர் பிரச்சனையை நம் அரசியல்வாதிகளால் தீர்த்து வைக்க முடியாது என்பதுதான் நமக்கு அனுபவமாக இருக்கிறது. மீத்தேன்வாயு,கெயில் திட்டம் என அடுத்தடுத்து தமிழக மக்களின் வாழ்வுரியைப் பறிக்கும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாகப் போய்விட்டது. நாடு விடுதலையானாலும் விவசாயிகள் இன்னும் விடுதல் பெறவில்லை! எனவே நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க விவசாயிகள்தான் ராணுவம் போல களத்தில் இறங்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

திரு.மணிகண்டன்.
திரு.மணிகண்டன்.

பாலார்பட்டி கிராம பென்னிகுயிக் விவசாயிகள் சங்க செயலாளர் திரு,மணிகண்டன்,”அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுப் போடச்சொல்லி நமது விவசாயிகளைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள். ஓட்டுக்குப் பணத்தை வாங்குவதையும், அதை அடுத்தவனுக்குப் பிரித்துக் கொடுப்பதையும் பெருமையாகப் பேசுகிறான். இந்த அடிமைப் புத்தியினால்தான் காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யாமல் இருப்பதைப் பார்த்தும் மவுனமாக இருக்கிறோம். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எல்லாம் வாத்துகூட்டம்    மாதிரி டில்லிக்கு மொத்தமா போயிட்டு மொத்தமா திரும்பி வர்றாங்க. அங்க இவங்கள ஒரு பயலும் திரும்பிப் பார்க்கல. இதுக்குப் பிறகும்  இவங்கள நம்பி என்ன ஆகப் போகுது? என ஒரு விவசாயியின் மனக்குறையை வெளிப்படுத்தினார்.

திரு.குரு இளங்கோ
திரு.குரு இளங்கோ

திமுக-வின் முன்னாள் ஒன்றியச்செயலாளர் திரு.குரு இளங்கோ அவர்கள்,” நீராதாரம் செழித்திருக்கும் நாட்டில்தான் மக்களின் வாழ்வும், கலாச்சாரமும், நாகரீகமும் செழித்திருக்கும். ஒரு காலத்தில், கோயில் இருக்கும் இடமெல்லாம் குளமிருக்கும். பாசனக் குளங்கள் தனியாக இருக்கும்.ஆனால் இன்று 5௦௦ குளங்களுக்கு மேல் நான்குவழிச் சாலைக்கும்,அடுக்குமாடி வீடுகளுக்கும் அழிக்கப்பட்டுவிட்டது.1௦,௦௦௦க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்ந்து போய்விட்டன. இதனால்தான் நிலத்தடிநீர் வற்றிப்போய் விட்டது. இந்தியா ஒரு பல்தேசிய இனங்களின் கூட்டமைப்பு. கூட்டமைப்பு என்பது கண்ணாடிப் பாத்திரம் மாதிரி. ஒரு இனத்தின் தேவையும், உரிமையும் மறுக்கப்படும்போது ஒருமைப்பாடு என்பது சிதறிவிடும்! இதுவரை ஆண்ட மத்திய அரசுகள் நம்மை இதை நோக்கியே தள்ளுகின்றன!” என்றார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் தாலுக்கா செயலர் தோழர் முருகன், மாநிலத்தின் உள்நாட்டுக் குளம் ஏரிகளின் பராமரிப்பில் மாநில அரசியல்கட்சியினரின் அலட்சியத்தையும், ஆக்கிரமிப்புகளையும் எடுத்துக் கூறி,நீர்நிலைகளின் அதிகாரத்தை விவசாயிகள் கைப்பற்றுவதுதான் தீர்வு என்று விளக்கினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், “பாக்கட் தண்ணீருக்கும், பாட்டில் தண்ணீருக்கும் நாட்டில் பஞ்சமில்லை! இலவச நீருக்குத்தான் இப்போது பிரச்சனை. காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லை என்பதுதான் பிரச்சனை! காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல. தமிழர்களின் தாய்.! வாழ்வு!. பண்பாடு!. பொருளாதாரப் பிணைப்பு!”

தோழர்.காளியப்பன்
தோழர்.காளியப்பன்

“1970 வரை 5 லட்சம் ஏக்கர்தான் கர்நாடகாவின் பாசனப்பரப்பாக இருந்தது. ஆனால் இன்று ஒப்பந்த விதிமுறைகளை மீறி 2௦ லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தி விட்டார்கள். காவிரி நீரைப் பதுக்குவதற்காக ஏராளமான ஏரிகளை வெட்டி வைத்துள்ளனர். 2007-ல் வந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட 3 வருடமாகிறது. வெளியிட்ட பின்னும் தீர்ப்பை அமுல்படுத்த முடியவில்லை!

நிர்வாகப் பொறுப்பிலுள்ள மத்திய அரசு, கர்நாடகாவின் அடாவடியைக் கண்டிக்கவில்லை. மாறாக சட்டவிரோதமாக செயல்படும் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது!

கர்நாடகாவில் தனது தீர்ப்பை அமுல்படுத்த முடியாமல் தோற்றுப்போய் நிற்கிறது உச்சநீதிமன்றம்! சட்டத்தின் ஆட்சியை இவர்களால் நிலைநாட்ட முடியவில்லை. சட்ட விரோதமாக செயல்படும் கர்நாடகாவை ஆதரிப்பதன் மூலம் சட்டவிரோதமான நிலைக்கு அரசு அமைப்பே சீரழிந்துவிட்டது! இனிமேலும் இந்த அமைப்பு முறைக்குள் தீர்வுகாண முடியாது!” என்று விரிவாகப் பேசினார்.

சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக மாற்றுக் கட்சியை சேர்ந்த ஜனநாயகவாதிகளும், இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, கம்பம் அறநிலையத்துறை வளாகத்தில் உள்ள கருப்பத்தேவர் மண்டபத்தில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நமது போஸ்டரில் “மோடி அரசு” என்ற வாசகம் இருப்பதைக் கண்டு கொதித்துப்போன இந்துமுன்னணி கும்பல் வழக்கம்போல பேடித்தனமான வேலைகளில் இறங்கியது. அறநிலையத்துறை மீது மண்டப உரிமையாளர் வழக்கு போட்டிருப்பதைக் காரணமாக வைத்து, “தீவிரவாதிகளின் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கிறார்” என்று மேலதிகாரிகளுக்கு புகார் செய்தனர். தனது வழக்குக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மண்டப உரிமையாளர், நிகழ்ச்சி  நாளன்று நமக்கு அனுமதி மறுத்துவிட்டார். உடனடியாக மாற்று மண்டபம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போதே, பெயர் சொல்லத் துப்பில்லாத ஒரு அனாமத்து தோழர் மோகனுக்கு போன்செய்து “காவிரி பிரச்சனையில் எப்படி மோடி அரசைக் குற்றம் சொல்லலாம்? திமுக-அதிமுக-காங்கிரசுதான் காரணம்.” என்று வாக்குவாதம் செய்தான். தோழர் பொறுமையாக கூறிய விளக்கத்தைக் கூட கேட்காமல், “அடுத்து எங்க கூட்டம் நடத்தப் போறீங்க? உங்கள்கூட்டத்திற்கு நாங்கள் வரலாமா? எங்களுக்கு பேச வாய்ப்பு தருவீர்களா?” என்று மிரட்டும் தோரணையில் கேட்டான். “தாராளமாக வாங்க. ஆனால் பேச அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டார், ஒருவேளை கூட்டத்திற்கு வந்து கலாட்டா செய்வார்கள் என்று ஆவலோடும், தயாரிப்புடன் காத்திருந்தோம். இறுதிவரை ஒரு வானரமும் வரவில்லை!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தேனி மாவட்டம் ஒருங்கிணைப்புக் குழு.

பாகிஸ்தானில் ஒடும் சிந்து நதியை இந்தியா தடுக்க முடியுமா ?

13
சிந்துநதி

லக வங்கியின் முன்முயற்சியில் 1960-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்தான சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், மிகச் சிறந்த அரச தந்திரத்திற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. மேற்படி ஒப்பந்தம் 1965, 1971 மற்றும் 1999-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்களையும் அவை உண்டாக்கிய ரத்த வெள்ளத்தையும் கடந்து இன்றும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் கடந்த 2016 செப்டெம்பரில் நடந்த ஊரி தாக்குதலைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறுகல் நிலையை அடைந்துள்ளது. இந்தியத் தரப்பில் வாதாடும் சிலர் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். அதன் மூலம் இராணுவ வழித் தீர்வுக்கு வெளியே பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமெனக் கருதுகின்றனர்.

Inuds River
பரந்து விரிந்துள்ள சிந்து நதி

காஷ்மீரின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 75 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது ஊரி நகரம். இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள இந்நகரத்தில் பல இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. கடந்த செப்டெம்பர் 18-ம் தேதி அங்குள்ள இராணுவ முகாம் ஒன்றின் மேல் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளில் நால்வரும், இந்திய வீரர்களில் 18 பேரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என இந்தியா குற்றம் சாட்டியது.

காஷ்மீர் பிரச்சினையை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மூன்று போர்களையும், அதையொட்டிய முரண்பாடுகளையும் கடந்து சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தமும் அது வழங்கும் நீர் பங்கீட்டுக்கான முறைமைகளும் எந்தச் சிக்கலும் இன்றி பின்பற்றப்படுகிறது.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேற்கு நோக்கிப் பாயும் ஜீலம், செனாப் ஆகிய கிளை நதிகளின் நீரைப் பெரும்பான்மையாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகின்றது. அதே நேரம், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளின் நீர் இந்திய பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவது

ஊரி தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு சிந்து நீர் பங்கீடு தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான கட்டுரை ஒன்றில் “சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடுவோம் என்கிற அச்சுறுத்தலை இந்தியா கையில் எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் தடையற்ற குடிநீர் தேவை மற்றும் அந்த நதி உற்பத்தியாகும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பை இணைக்க வேண்டும்” என்று எழுதினார் பிரம்மா செலானே.

வெளியுறவு மற்றும் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட மற்றவர்களும் இந்திய-பாகிஸ்தான் நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் காலாவதியாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்திய அரசாங்கம் இது குறித்து மிகக் குறைவாக அதிகாரப்பூர்வமாக எதிர்வினையாற்றி உள்ளது. “அதைப் போன்ற ஒப்பந்தங்கள் செயல்பட வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் இருக்க வேண்டியது அவசியம்” என்று இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், மேலும் விவரங்களுக்குள் செல்லவில்லை.

நடுவர்

நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததோடு அது தொடர்பாக எழும் முரண்பாடுகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் ஆணையம் ஒன்றை நியமிக்கும் பொறுப்பில் உள்ள உலக வங்கியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, உலகவங்கியின் பாத்திரம் விதிகளுக்கு உட்பட்டதாகவும் குறைவாகவுமே உள்ளதாக உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் போர் ஆராய்ச்சித் துறையில் ஆசிரியராக பணியாற்றும் அஷோ ஸ்வய்ன், உலக வங்கியின் நிலைப்பாடு குறித்து ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார். சிந்து நதி நீர்பங்கீட்டு ஒப்பந்தத்தின் சில அம்சங்களில் கையெழுத்திட்டுள்ள உலக வங்கி, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் முடிவில் தலையிட முடியாதென்றும், மாறாக அமல்படுத்தும் போது எழும் முரண்பாடுகளை மட்டுமே கையாளும் என்றும் தெரிவிக்கிறார். முரண்பாடுகள் எழும் போது அதிகபட்சமாக ஒரு “நடுநிலையான வல்லுநரையோ” அல்லது தீர்ப்பாயம் ஒன்றையோ நியமிக்க முடியும். தண்ணீரைத் தடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியாவால் பாதிப்பு உண்டாக்க முடியுமா என்று கேட்ட போது, பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரை உடனடியாக தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்தியாவிடம் தண்ணீரைத் தேக்கி வைக்க போதுமான கட்டமைப்புகள் இல்லை என்கிறார் ஸ்வய்ன்.
“இந்தியா தனது அணைகளின் மட்டத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நீண்ட காலமாகும். இதில் இன்னொரு கோணமும் உள்ளது. ஒருவேளை இந்தியா அவ்வாறு முடிவு செய்தாலுமே கூட, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து நீரை வெளியே கொண்டு வர முடியாது. புவியியல் காரணங்கள் குறுக்கே நிற்பதால் இம்மூன்று நதிகளின் (சிந்து, ஜீலம், செனாப்) நீர் அவற்றின் படுகைகளிலேயே தேங்கி விடும். இந்தியாவால் சில காலத்திற்கு அந்த ஆறுகளின் சப்ளையை தடுக்க முடியும், ஆனால் அவற்றை மடைமாற்ற முடியாது” என்கிறார் ஸ்வய்ன்.

ஒப்பந்தத்திற்கு உட்பட்டு செயலாற்றுவது

புதுதில்லியைச் சேர்ந்த “பாதுகாப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச்” சேர்ந்த உத்தம் சின்ஹாவும் ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களோடு முரண்படுகிறார்.

”பாகிஸ்தானுக்கு புரிதல் உண்டாக்க வேண்டும் என்பதற்காக சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை கைவிடும் அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. ஒப்பந்த சரத்துகளில் உள்ளபடியே சிந்து நதியின் மேற்கத்திய படுகையின் நீரை விவசாயத்திற்கும், மின் உற்பத்திற்கும் பயன்படுத்துவது மற்றும் 36 லட்சம் சதுர ஏக்கர் பரப்பிற்கு நீரைத் தேக்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே பாகிஸ்தானுக்கு உணர்த்த முடியும்” என்கிறார் உத்தம் சின்ஹா.

”ஒப்பந்தத்தை முற்றாக கைவிடுவது என்பது நமது சொந்த நலன்களுக்கும் சர்வதேச நிலைபாடுகளுக்குமே கூட எதிராக முடியும். அவ்வாறு செய்வது நம்முடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளிடையே அச்சத்தை உண்டாக்குவதுடன் சர்வதேச அளவில் நமக்கு அவப்பெயரையும் பெற்றுத் தந்து விடும்” என்கிறார் உத்தம் சின்ஹா.

”ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகுவது உலகவங்கியை இந்த தாவாவிற்குள் இழுத்து விட்டு விடும். மேலும் பாகிஸ்தானியர்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டி மேலும் வன்முறைக்கு அடிகோலி விடும்” என்கிறார் சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் ஆராய்ச்சியாளரும், லாகூரைச் சேர்ந்தவருமான அசீம் அலி ஷா.

ஊடகங்களில் பரபரப்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், ஒப்பந்தத்தில் முக்கிய தரப்புகளான இந்திய அரசு மற்றும் உலகவங்கி ஆகியோர் தரப்பில் கடைபிடிக்கப்படும் மௌனமானது, ஒப்பந்தம் தற்போதைக்கு பாதுக்காப்பாகவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. ”சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை காப்பாற்ற எனது தலையைக் கூட அடமானம் வைப்பேன். அந்த ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தையும் நான்கு போர்களையும் சமாளித்து இன்னும் உயிருடன் தான் இருக்கிறது” என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா.

இம்மூன்று நதிகளின் பிறப்பிடமான தங்கள் மாநிலத்தின் தேவையைக் கணக்கில் கொள்ளாத சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என 2003-ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஒருமனதான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

”ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்பது போன்ற அறிக்கைகளை வெறுமனே பிரச்சாரமாகத் தான் பார்க்க முடியுமே தவிர அதில் ராஜதந்திர தெரிவு ஏதுமில்லை” என்கிறார் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியர் மேதா பிஷ்ட். இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆறு நதிகளில் இரண்டின் நதிக்கரை தேசமாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சிந்து நதியும் சட்லெஜும் திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாகப் பாய்கிறது. இந்த நதிகளின் நீரைப் பங்கிடுவது தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.

இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை திசைதிருப்புமானால், இந்தியாவுக்குச் செல்லும் நீரைத் திசைதிருப்புவோம் என சீனா மறைமுகமாக உணர்த்தியுள்ளது என்கிறார் ஒரு மூத்த விமர்சகர். அவ்வாறான ஒரு சூழல் இம்மூன்று நாடுகளிலும் வெள்ளத்தையும் கடும் சேதத்தையும் விளைவிக்கக் கூடும். இது போன்ற ஒப்பந்தங்கள் நல்லெண்ணங்களின் அல்லது பரஸ்பர நம்பிக்கைகளின் அடிப்படையில் அன்றி அந்தந்த தேசங்களின் நலன்களின் அடிப்படையிலேயே உயிர்ப்புடன் உள்ளதை இது உணர்த்துகிறது.

நன்றி: Athar Parvaiz
மூலக்கட்டுரை: ndus Waters Treaty rides out latest crisis
தமிழாக்கம்: முகில்

காவிரியும் பா.ஜ.க-வின் துரோகமும் – கரூர் கருத்தரங்கம்

0

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம், கர்நாடக அரசின் அடாவடித்தனமான நடவடிக்கை, தற்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என திமிராக நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல்பாடு, எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், ஆகமொத்த ஒட்டுமொத்த இந்த அரசு கட்டமைப்பே மக்களை ஆள தகுதியிழந்துவிட்டது; இதனை விளக்கும் வகையில் “காவிரி பிரச்சினையில் எதிரி யார்? செய்யவேண்டியது என்ன? ” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக கரூரில் 09-10-2016 அன்று மாலை 4.00 மணியளவில் திருநீலகண்டர் சத்திரத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

karur-meeting-water-bodies-protestion-01இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். விளக்க உரையாக கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் ளு.சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்கள்.

கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தனது தலைமை உரையில், “தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகா அரசு அடாவடித்தனமாக நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் தண்ணீர் தரும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இருமாநில பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்காமல், ஓரவஞ்சனை செய்கிறது மோடி அரசு. எனவே தேசிய கட்சிகளை விரட்டிவிட்டு, மக்களே அதிகாரத்தை கைபற்றும் வகையில் திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

karur-meeting-water-bodies-protestion-08கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் மு.ராமசாமி, “அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக மக்களுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து மக்களை சீரழித்துள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியிருப்பதில் எந்த பயனுமில்லை. கரூர் மாவட்டத்தில் நீரின் நிறம் மாறி சாக்கடையாக ஓடுகிறது. அமராவதி ஆறு இன்று பொய்த்துப் போய் பொட்டல்காடாகவும், சுடுகாடாகவும் மாறிவருகிறது. பொதுப் பணித்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உள்ளிட்ட அனைத்து அரசு நிர்வாகமும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகவே உள்ளன. குடிக்க நீர் இல்லாமல் சாக்கடை நீரை குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மாசுபடுகிறது. இதற்கு எதிராக சங்கத்தின் சார்பில் நாங்கள் பல போராட்டங்களை நடத்தியும் இருக்கிறோம். அரசியல் கட்சிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். முதலாளிகளுக்கு சேவை செய்யும் இக்கட்சிகளை விரட்டுவோம்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் சண்முகசுந்தரம், “காவிரியில் விவசாயம் செய்து வரும் டெல்டா மாவட்டங்கள் இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலேயே விவாசயம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் வேலைகளை செய்து வருகிறது. கர்நாடக அரசு பல கம்பெனிகளுக்கு காவிரி நீரை தருகிறது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு மட்டும் பிரச்சினை செய்து வருவது நாடகமே. இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. எனவே காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வரை, தொடர்ந்து போராட வேண்டும்” என்று கூறினார்.

karur-meeting-water-bodies-protestion-03ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் இரா.முல்லையரசு, “காவிரி பிரச்சனையை எப்பொழுது மக்கள் அதிகாரம் கையில் எடுத்ததோ, அப்பொழுதே இந்த அரசின் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆமாம் தோழர்களே மக்கள் அதிகாரம் ஒரு பிரச்சினையில் தலையிட்டால் முடிவு காணும்வரை பின்வாங்க மாட்டார்கள் என்று எங்களுக்கும் தெரியும், அரசு நிர்வாகத்திற்கும் தெரியும். மக்கள் அதிகாரம் சுவரொட்டி ஒட்டினாலே அடுத்து என்ன செய்வது என்று தூங்காமல் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தனது பணியை செய்கின்றனர் காவல் துறையினர். அதனால்தான் கடந்த வாரம் சுவரொட்டி ஒட்டிய தோழர் சக்திவேல், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது மக்கள் அதிகாரம் என்பது அவர்களுக்கும் தெரியும். இன்று தமிழகத்தில் 2 மணிநேரம் டாஸ்மாக் கடையின் வேலை நேரம் குறைக்கப்பட்டதற்கு முழுமையாக காரணம் மக்கள் அதிகாரம்தான் என பெருமையாக கூறுகிறேன். மக்கள் அதிகாரம் பேராட்டம் நடத்தி ஆதித்தமிழர் பேரவை எப்பொழுதும் துணைநிற்கும்” என்று கூறி தனது விளக்கவுரையை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ், “காவிரி பிரச்சினையில் தேசிய கட்சிகள் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றன. இயற்கை வளங்களை அழித்தும், காடு மலைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு, முதலாளிகளுக்கு எப்படி இயற்கை வளங்களை அள்ளித் தரலாம் என்று இந்த அரசு திட்டம் தீட்டுகிறதே தவிர மக்களின் உயிராதாரமான பிரச்சனை என்ன? அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று எண்ணாமல், அதைப்பற்றி அக்கறை கொள்ளாத யோசிக்காத அரசு நிச்சயமாக மக்களுக்காக அரசகாக இருக்க முடியாது” என்று பல சான்றுகளுடன் விளக்கி பேசினார்.

கரூர் மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, “டெல்டா பகுதிகளில் பெரும்பாலான விவசாய நிலங்கள் பொட்டல் காடுகளாகவே காட்சியளிக்கிறது. கரூர் அருகில்உள்ள வாங்கல், தளவாபாளையம், வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளில் இன்று கோரை பயிரிட்டு விவசாயம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெறும் 150 ஆண்டுகளே விவசாயம் செய்து வருகிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகமோ 1000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீரில் விவசாயம் செய்து வருகிறது. காவிரி நீர் விவசாய நிலங்களை சென்றடைவதற்குள் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை ஆள்வதற்கு இந்த அரசு தகுதி இழந்த நிலையில், மக்களே அதிகாரம் படைத்தவர்களாக களம் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றுகூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், “மக்கள் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளாத ஒரு அரசு நிச்சயமாக அது மக்களுக்கானதாக இருக்க முடியாது. காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிமை உள்ளது என்று வரலாற்று ஆதாரங்கள் இருந்தும், தண்ணீரை பிச்சை போடுவது போல கர்நாடக அரசு செய்வதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் உச்சநீதிமன்றம், இவை அனைத்துமே இன்று மக்களுக்கு எதிராக நிற்கின்றது என்பதை நம் கண்முன்னே பார்க்கிறோம். இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், நதிகள் என்று சர்வதேச அளவில் பிரித்து கையாள பல விதிகள் இருந்தும், அவற்றையெல்லாம் சட்டவிரோதமாக, இயற்கை விதிகளுக்கு முரணாக இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. வெளிநாடுகளில் நீதிமன்றங்களில் மக்கள் நலனுக்கு எதிராக இருக்கும் நீதிமன்ற தீர்ப்புகளை, மக்களே அதிகாரத்தை நிறுவி நீதிமன்றங்களின் தீர்ப்புகளை செல்லா காசாக்கி இருக்கிறார்கள். ஆகவே மக்களை திறம்பட ஆளுகின்றோம் என்று இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை, மற்றும் அனைத்து அரசு நிர்வாகமும் எப்படி மக்களுக்கு எதிராக உள்ளது என்பது மட்டுமல்லாமல் முழுமையாக மக்களுக்கு எதிராக வேலையை செய்துகொண்டிருக்கிறது. மக்களே அதிகாரத்தை கைப்பற்றி இந்த அரசை தூக்கி வீசும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று சிறப்புரையாற்றினார்.

இறுதியாக புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் அரங்க கூட்டத்தில் பேசிய அனைத்து பேச்சாளர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்களோடு கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக நடந்த மேற்கண்ட அரங்க கூட்டத்தில் கோவை, கரூர், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதி தோழர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம், கரூர்
செல்: 9791301097

கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை

2

சுமார் 1500 பேர் வசிக்கும் அந்த கிராமத்தின் டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக மகளிர்குழு பற்றி பேச்சு திரும்பியது. 20 பேர் ஒருகுழு வீதம் 25 குழுக்கள் இருப்பதாகவும் சராசரியாக ஒவ்வொருவரும் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் ஒருவர் கூறினார். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கோடி 25 லட்சம் ரூபாய்! இவ்வளவு ரூபாயா நம்ம ஊருக்குள்ள புழங்குது? என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!

“என்னப்பா சொல்றீங்க…நம்ம ஊரே பெரிய கடன்காரப்பய ஊரால்ல இருக்கு” என்று ஒருவர் வாயைப் பிளக்க, அருகில் இருந்தவரோ, பேப்பர் பேனாவை எடுத்து ஊரில் நிலத்தை அடகுவைத்து பேங்கிலும், தனியாரிடமும் கடன்வாங்கியவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்தக்கணக்கும் ஒருகோடி ரூபாயை தாண்டி நின்றது!

ஒரு சிறிய விவசாயகிராமம் இரண்டு கோடிரூபாய் கடனில் உயிர்வாழ்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை!

அப்படியானால், நம்ம ஊரின் கடன் எவ்வளவு இருக்கும்? என்று மனதிற்குள் கணக்குப் போடுவதற்கு முன், நம்மில் யாரும் குடும்பத்தோடு சென்று இவர்களிடம் கையேந்தி கடன் கேட்காமலே வீடு தேடிவந்து கடன் கொடுக்கிறானே யார் இவன்? ஏன் கொடுக்கிறான்? அவன் பின்னணி என்ன? நம்மை கடனாளி ஆக்குவதால் அவனுக்கு என்ன லாபம்? என்று அறிந்துகொள்வது அதைவிட முக்கியமானது!

womens-self-help-group-2
20 பேர் ஒரு குழு வீதம் 25 குழுக்கள்

கடன் கொடுப்பவர்கள் யார்?

இவர்கள் இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறார்கள்.

1) சுயஉதவிக் குழுக்கள் (SHG):

குறிப்பாக பெண்கள் மட்டும் 10,15,20 பேர் கொண்ட குழுவாக இணைந்து சுயஉதவிக் குழுக்கள் என்ற பெயரில் இயங்குபவர்கள். பெரும்பாலும் தன்னார்வக்குழுக்கள் தலைமையில் செயல்படும் இவர்கள், நேரடியாக பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் தங்களின் மாத சந்தா பணத்தைச் சேமித்து, அதனை தங்களுக்குள் வட்டிக்குவிட்டு, பிறகு அதனை முறையாக வசூலித்து வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும்! இதே காலத்தில், குழு உறுப்பினர்களுக்கு கூடை பின்னுதல், மண்புழு உரம் தயாரிப்பு, தையல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு 6 மாதகால நடைமுறைக்குப் பின் சம்பந்தப்பட்ட வங்கியில் குழுவின் பெயரில் கடன் பெற்று, கற்றுக்கொண்ட சுய தொழில்கள் மூலம் சம்பாதித்து, கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும்! வாங்கும் கடனுக்கும், தவணை செலுத்தாதவர்களுக்கும் மொத்தக்குழுவும் பொறுப்பு ஏற்கவேண்டும்! நாடுமுழுவதும் சுமார் 30 லட்சம் சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன!

2) வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC):

microfinance-debtஇவர்கள் “பொதுமக்களிடமிருந்து சேமிப்பு நிதி திரட்டக்கூடாது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள்! ஏற்கனவே செயல்பட்டுவரும் சுய உதவிக்குழுக்களைத் தவிர்த்து, இவர்கள் தனியாக பெண்கள் குழுக்களை அமைத்து, நேரடியாக கடன்வழங்கி வருகிறார்கள். ‘மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்’ என்று அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன! சமீபகாலமாக, அரசு வங்கிகளுடன் இணைந்து செயல்படும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கையை விட, இந்த தனியார் நிறுவனங்களின் குழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது!

இவ்விரு பிரிவினரும் சேர்ந்து “கடந்த ஆண்டில் மட்டும் (2015) நாடுமுழுவதும் வழங்கிய மொத்த கடன்தொகை சுமார் 48,882 கோடி ரூபாய்! இதில், வங்கி அல்லாத தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கியது மட்டும் 34,298 கோடி ரூபாய்!” என்று, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பான சன்-தன் (SAN-DHAN) கூறுகிறது!

1,000 ரூபாய் முதியோர் பென்சனுக்கும், ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும், அப்பாவிகளை தெருநாயாக அலையவிடும் நாட்டில், இவ்வளவு பெரிய தொகையை ஏழைகளின் வீடுதேடிவந்து கடனாகக் கொடுக்க நோக்கி காரணம் என்ன? இவர்களுக்கு ஏனிந்த திடீர் அக்கறை?

கடன் கொடுப்பது எதற்காக?

“கிராமப்புற ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டு, நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், வறுமையை ஒழிக்கப் போகிறோம்!” என்கின்றன நம் மத்திய-மாநில அரசுகள்!

womens-self-help-group
இவர்களிடம் பல ஆண்டுகளாக கடன்பெறும் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

“குறிப்பாக, கிராமப்புற பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறுவியாபாரம், மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுத்துவதன் மூலம் தங்கள் வறுமையை தாங்களாகவே ஒழித்து கொள்வதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்” என்று ‘பெண்களுக்கான உலகவங்கி’(WOMENS WORLD BANKING -WWB) என்ற அமைப்பு கூறுகிறது!

“கிராமப்புற ஏழைகளை சிறுதொழிலில் ஈடுபடுத்தி, உற்பத்தியை சந்தைப்படுத்த உதவுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது” என விளக்கமளிக்கிறது மதுரை- கருமுத்து தியாகராஜன் செட்டியார் குடும்பத்தின், மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம்!

ஆக, கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழித்து, அவர்களின் வாழ்வில் 10,000 வாட்ஸ் பல்பை ஒளிர விடுவதுதான் எங்கள் நோக்கம் என்கிறார்கள்! ஆனால், இவர்களிடம் பல ஆண்டுகளாக கடன்பெறும் பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

கடனாளிகளின் அனுபவம் என்ன?

foreign-investors-to-eradicate-poverty-in-trichy
வறுமையை ஒழிக்க திருச்சியில் அன்னிய முதலீட்டாளர்கள்

“நான் மூணுமுறை கடன் வாங்கியிருக்கேன். முதல்முறையா 5,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு 15,000, அடுத்து ஒருவருசம் கழிச்சு இப்போ 25,000 ரூபாய் வாங்கியிருக்கேன். இதுல என்ன தொழில் பண்ண சொல்றீங்க? ஆடு-மாடு வளர்க்கனும்னா அதை மேய்க்கிறதுக்கும், பராமரிக்கிறதுக்கும் ஒரு ஆளு தனியா வேணும். ஆறு மாசம் கழிச்சுதான் அதை விக்க முடியும். மாடுன்னா வருமானம் பார்க்க ஒரு வருசமாவது ஆகும். அதுவரைக்கும் எப்படி தவணை கட்டுறது?”என்று எதார்த்தமாக கேட்கிறார் ஒரு உஜ்ஜிவன் நிறுவன பெண் பயனாளி!

“இந்தத் தெருவுல நாலுகடை இருக்கு. இதுல நான் ஐந்தாவதா ஒரு கடை வச்சா என்ன வியாபாரம் நடக்கும்? தெருவுல நாலுபேரு கடன் சொல்லிட்டு போயிருவா…அப்புறம் எந்தக்காசுல கடைக்கு சாமான் வாங்குறது? எதை வச்சு தவணை கட்டுறது? கூலிவேலைக்கு போயி கட்டுறதுதான் எங்களுக்கு ஈசியான வழி. வேற வழியில்லைங்க!” என்கிறார் இன்னொருபெண்!

12-வது படித்துவிட்டு தையல் தொழில்செய்யும் இரு குழந்தைகளுக்கு தாயான மீனா, “நைட்டி, சுடிதார், லெக்கின்ஸ், பாவாடை, கடைசியா ஜாக்கட் கூட ரெடிமேடுல வந்துருச்சு. வயசான பொம்பளைகள்தான் இன்னமும் பாவாடை- ஜாக்கட் போடுறாங்க. அன்றாடம் கைச்செலவு அளவுக்கு கிடைக்கும். ஆம்பளைங்க மாதிரி ரெடிமேடு கடைக்குப் போனா கொஞ்சம் சம்பாதிக்கலாம். ரெண்டு புள்ளைகளை வச்சுக்கிட்டு எப்படி வெளியே போகமுடியும்?” என்று புலம்புகிறார்!

microfinance-father-mohamed-yunus
நுண்கடன் முறையின் தந்தை முகமது யூனுஸ்

வாய்ப்புள்ள சில பெண்கள், வாங்கிய கடனை முதலீடு செய்து சிறு வியாபாரம், கந்துவட்டி கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். அப்படி ஒரு பெண்ணிடம் பேசியபோது, “எம்புருசன் செத்து ரெண்டு வருசமாச்சு தம்பி! பொம்பளைப் பிள்ளையை கட்டிக்கொடுத்துட்டேன். இன்னொரு ஆம்பளைப்பய இருக்கான். இன்னும் ரெண்டு வருசம் அவன படிக்கவச்சு, அவனுக்கு நல்லது கெட்டது செய்யனும்னா எங்கப்பா போறது? ஒருஆள் வருமானத்துல குடும்பத்த ஓட்டனும்ல. அதான், கூட வேலைசெய்யிற நாலு பொம்பளைகளுக்கு கொடுத்து வாங்குறேன். நான் வேற என்ன தொழில் செய்யிறது?” என்று பரிதாபமாக கேட்கிறார்!

ஒரு பெண் பயனாளியின் கணவர்,”காலேஜில படிக்கிற பையனுக்கு பீஸ் கட்ட 15,000 ரூபாய், பத்து வட்டிக்கு வாங்கினோம். பொண்டாட்டி வாங்குன கடன்ல, அதை அடைச்சிட்டு இப்ப இவங்களுக்கு தவணை கட்டுறோம்! மகளிர் கடனில் மாதம் 2 ரூபாய் வட்டிதான். நம்மளுக்கு 8 ரூபாய் வட்டி மிச்சம்!” என்று தன் வறுமையை சாதுரியமாக வென்றுவிட்டதாக சந்தோசப்படுகிறார்!

இவ்வாறு தங்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்குத்தான் கடன் பயன்படுகிறது என்ற உண்மை, கடன் வழங்கும் நுண்கடன் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் தெரியாத விசயமில்லை!

“கிராமங்களில் கடன் பெறுபவர்களில் 7 முதல் 15% பேர்தான் தொழில் செய்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் நட்டத்தில்தான் உள்ளனர். எனவே நுண்கடனால் எவ்வித சமூகப்பயனும் ஏற்படுவதில்லை” என்று தனது வாடிக்கையாளர்களிடம் நடத்திய மதுரா நிறுவனத்தின் ஆய்வின் முடிவு கூறுகிறது! மேலும், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட மலேகாம் கமிட்டியின்(MALEGAM COMMITTEE)-யின் அறிக்கை இன்னும் வெளிப்படையாக, “பெரும்பாலான கடன்கள் நுகர்வுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது” என்று கூறுகிறது! எனவே, கடன் தொகையையும் அதற்கான கந்து வட்டியையும் பெண்களின் கூலி உழைப்பிலிருந்துதான் வசூலித்துக் கொள்கின்றன நிதிமூலதன நிறுவனங்கள்.

ஆக, நுண்கடன் திட்டங்கள் மூலம் ஏழ்மை ஒழிப்பு-வறுமை ஒழிப்பு- பெண்களின் சுயமுன்னேற்றம் என்பதெல்லாம் நடைமுறைக்கு உதவாத நடவடிக்கைதான் என்பதை ‘வளர்ச்சித்திட்ட அறிவாளிகளே’ ஒத்துக்கொள்கிறார்கள்! என்றால், இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன?

நுண்கடன் என்றால் என்ன?!

“நுண்கடன் என்றால், சந்தை மற்றும் வர்த்தக அணுகுமுறைக்கு உதவும் வகையில், ஏழைகளுக்கு வழங்கும் பலவித பொருளாதார சேவையை குறிக்கிறது! இது சேமிப்பு, ஆயுள்காப்பீடு, பணபரிமாற்றம் மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்” என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் RP.கிறிஸ்டன், துறைசார்ந்த விளக்கம் தருகிறார்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“பொருள்கள் மற்றும் சேவைத்துறையின் சங்கிலித்தொடர் சந்தையில், பொதுமக்களை இணைக்காவிட்டால் நவீன பொருளாதார முறையே நொறுங்கிவிடும் என்பதிலிருந்துதான் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ற தத்துவம் தொடங்குகிறது!” என்று நுண்கடன் தத்துவத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டுகிறார் மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் KM.தியாகராஜன்!

மேலும், ”கிராமப்புறங்களில் சொத்து ஏதுமற்ற ஏழைகள் (UNDOCUMENTED COMMUNITIES) 40% பேர் உள்ளனர். இவர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் இவர்களை நவீன பொருளாதார அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதுதான் முதல்படி! அடுத்து, பயனாளிகளின் (கடனாளிகள்!) அடையாள ஆவணங்களை (ரேசன், வாக்காளர், ஆதார் அட்டைகள்) சேகரிப்பது மூலம், கடன்பெறுவதை ஒழுங்குபடுத்தி, அதனை கண்காணிக்கும் அமைப்புகளையும் உருவாக்குவது இதன் 2-வது படி!” என்று விவரிக்கிறார் KM.தியாகராஜன்!

அமெரிக்க நிபுணரின் வரையறையும், அதற்கு விரிவுரையாக மதுரையின் KM.தியாகராஜன் கூறும் விளக்கமும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது! அதாவது, இல்லாதவன் கையில் கடனாக காசைக் கொடுத்து கடையில் விற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தயாரிப்புப் பொருள்களை வாங்க வைப்பதுதான் இக்கடன் திட்டத்தின் நோக்கம் என்கின்றனர்! ஆனால், இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அவற்றின் விரிவான பின்னணியும் நெருங்கிப் பரிசீலித்தால் இவர்கள் கூறுவதையும் தாண்டி, வேறுசில நோக்கங்களும் இருப்பதைக் காணலாம்!

வறுமை ஒழிப்பின் பின்னணியில் அமெரிக்க கவுச்சி!

நாட்டில் செயல்படும் 500 நுண்கடன் நிறுவனங்களில் முதல் 10 பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்களில் பெரும் பான்மையினர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அமெரிக்காவின் “ஞானப்பால்” குடித்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்! மதுரா நிறுவனத்தின் தலைவர், தாரா தியாகராஜன், கிராம விடியலின் வினோத் கோஸ்லா, பி.எஸ்.எஸ் –நிறுவனர் டாக்டர். ரமேஷ் பெல்லம்கொண்டா, உஜ்ஜிவன் நிறுவனர் சமித்கோஷ், பந்தன் நிறுவனர் சந்திரசேகர்கோஷ் ஆகிய அனைவரும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் எம்.பி.ஏ.பட்டம் பெற்றவர்கள்! இவர்கள்தவிர, இந்தியாவின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள், அரசு மற்றும் நபார்டுவங்கியின் ஓய்வுபெற்ற உயரதிகாரிகள்தான் இந் நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வெறும் 100 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கும் இந்த நுண்கடன் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடிகளை கடனாக வழங்குவதற்குத் தேவையான பெருமளவு நிதியை வெளிநாடுகளின் நிதி முதலீட்டு வங்கிகள், மற்றும் நிறுவனங்கள் மூலமாகவே திரட்டுகின்றன! உதாரணமாக,

1) சென்னையில் செயல்பட்டுவரும் ஆசீர்வாத் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தில், (மணப்புரம் கோல்டு பைனான்சுக்கு சொந்தமானது) அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் இயங்கும் லோக்-கேப்பிட்டல் என்ற நுண்கடன் முதலீட்டு நிறுவனம் முதல்கட்டமாக 7 கோடியை முதலீடு செய்துள்ளது!

2) உஜ்ஜிவன் நிறுவனத்தில், மொரீசியஸ் யுனைடட் கார்ப்பரேசன், நெதர்லாந்து டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் ஆகியவையும் உலகவங்கியின் முன்னாள் தலைவர் வொல்ஃபென்ஷனும் முதலீடு செய்துள்ளார்!

3) திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிராம விடியல் நிறுவனம், உலக அளவில் லாபகரமாக இயங்கிவரும் சிறு-நடுத்தர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தொழிலாகக் கொண்ட மைக்ரோவெஸ்ட் என்ற அமெரிக்க நிதி முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதி பெறுகிறது! (கிராம விடியல் நிறுவனத்தை தற்போது ஐ.டி.எஃப்.சி என்ற தனியார் நிதி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது)

4) நாட்டின் மிகப்பெரிய நுண்கடன் நிறுவனமான பந்தன் நிறுவனம், கலடியம் இன்வெஸ்ட்மென்ட் என்ற சிங்கப்பூர் நிதி நிறுவனம், மற்றும் சர்வதேச நிதிக் கழகம் என்ற உலக வங்கியின் துணை நிறுவனத்திடமிருந்தும் முதலீடு திரட்டுகிறது!

5) தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், DEVELOPING WORLD MARKETES-DWM என்ற அமெரிக்க நிறுவனம் முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது!

இவ்வாறு, ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப் போவதாக சொல்லும் நுண்கடன் நிறுவனங்களில், உலக கந்துவட்டிக் கம்பெனிகளான சர்வதேச நிதி முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது ஏன்?

ஏழ்மையை அல்ல…ஏழைகளை ஒழிப்பதே நோக்கம்!

shg-coverage-india-map-2014
இந்தியாவில் நுண்கடன் பரவல்

மனித சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது மூலதனத்தை பெருக்கிக் கொள்வதற்கான சந்தையாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் பன்னாட்டு முதலாளிகள், பின்தங்கிய நாடுகளின் வறுமையையும் ஒரு சந்தையாகவே பார்க்கிறது!

“இந்தியாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தேவை” (THE DEMAND FOR MFI IN INDIA) என்ற உலகவங்கியின் 1994, 1998-ம் ஆண்டின் ஆய்வறிக்கை, இந்தியாவில் உள்ள “ஏழைகளின் சந்தையை” எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறது பாருங்கள்: “இந்தியாவில் 7.5 கோடி குடும்பங்களில் உள்ள 40 கோடிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்! இதில் 6 கோடிபேர் கிராமங்களிலும்,1.5 கோடிபேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். இவர்களின் ஒருவருட கடன்தேவை 12 பில்லியன்டாலர்! (இன்றைய மதிப்பில் 79,200 கோடி ரூபாய்)” இதன் தற்போதைய மதிப்பீடு 2 லட்சம் கோடிரூபாய் என்கிறது நபார்டு வங்கி!

மேலும், 2005-ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 60 கோடிபேர் வறுமையின் பிடிக்குள் இருப்பதாகவும், இவர்களின் ஒருவருட கடன் தேவை 100 பில்லியன் டாலர்! என்று ஏழைகளின் உலக சந்தை நிலவரத்தையும் கூறுகிறது உலகவங்கி!(காண்க: www.theatlantic.com/business/archive/2011/01/lies-hype-and-profit-the-truth-about-microfinance/70405/)

இவ்வளவு பெரிய சந்தையை இழக்க விரும்பாததாலும், சிறு முதலீடு என்றாலும் உத்தரவாதமான கடன் வசூலும், லாபமும் இதில் இருப்பதாலும்தான் சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்திய நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன! இதனை ஊக்கப்படுத்தும் வகையில்தான் மத்திய அரசின் கொள்கை முடிவுகளும் உள்ளன!

நவீன கந்துவட்டி நிறுவனங்கள்!

அரசின் பொதுத்துறை வங்கிகளின் சராசரி வட்டி விகிதம் 9% தான்! சுயஉதவிக் குழுக்களுக்கு இவ்வங்கிகள் 7 முதல் 9.65% வட்டிக்குத்தான் கொடுக்கின்றன! செய்முறைக்கட்டணம், அபராதம், கட்டாய இன்சூரன்ஸ் ஏதும் அரசு வங்கிகளில் பிடிப்பதில்லை. ஆனால் நுண்கடன் நிறுவனங்களை மட்டும் 26% வரை வட்டி வசூலித்துக்கொள்ள இந்திய ரிசர்வ்வங்கி அனுமதியளித்துள்ளது! ஆனால், நடைமுறையில் பல நிறுவனங்கள் 40% அளவுக்கு வட்டி வாங்குகின்றன!

உஜ்ஜீவன் நிறுவனம், 15,000 ரூபாய் கடன்பெறும் தனது பயனாளியிடம் ஒருவருட வட்டியாக 2117 ரூபாய் (23%) வசூலிக்கிறது. இதில் 70% வட்டியை முதல் 5 மாத தவணையிலேயே பிடித்துக் கொள்கிறது! இதுதவிர, ஒவ்வொருவரிடமும், செய்முறைக் கட்டணம் 171 ரூபாயும், கட்டாய இன்சூரன்சாக 208 ரூபாயும் பிடித்துக் கொள்கிறது! இதன்படி நாடுமுழுவதும் இந்நிறுவனத்திற்கு 22 லட்சம் பயனாளிகள் இருப்பதைக் கணக்கிட்டால் தோராயமாக, வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 9300 கோடி ரூபாய் வருமானம் வருகிறது! செய்முறை கட்டணமாக மட்டும் கிடைப்பது 37 கோடி ரூபாய்! இந்தியாவில் செயல்படும் முதல் 10 பெரிய நிறுவனங்கள் சுமார் 4.50 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்படியானால் நுண்கடன் நிறுவனங்களின் ஒருவருட லாபத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! மேலும், சிறுகடன் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ரிசர்வ்வங்கியின் விதிமுறைக்கு மாறாக, செல்ஃபோன், லேப்டாப், மளிகை சாமான்கள் விற்பனையிலும் ஈடுபட்டு கொள்ளையடிக்கின்றன இந்நிறுவனங்கள்!

“கந்துவட்டிக்காரனிடம் கூட இன்னைக்கு இல்லைனா நாளைக்கு தர்றேன்னு சொல்லாம். ஆனால் இவர்களிடம் அது நடக்காது. ஒரு ரூபாய் பாக்கின்னாலும் வாங்காமல் வீட்டைவிட்டு நகர மாட்டன். அந்த அவமானத்திற்குப் பயந்தே நகையை அடகுவைத்து ஒருமுறை தவணை கட்டினேன்” என்கிறார் கூலிவேலை செய்யும் ஈஸ்வரி! ஈஸ்வரிகளின் தன்மானமும், வாங்கிய கடனை திருப்பிக்கட்ட வேண்டும் என்ற நேர்மை யும்தான் நுண்கடன் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நிதி முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு உரமாக இருக்கிறது!

தமிழக அரசின் கந்துவட்டித் தடைச்சட்டத்தால் சிறிதுகாலம் அடங்கியிருந்த கந்துவட்டிக் கும்பல், தற்போது நுண்கடன் நிறுவனங்களின் பாணியில் தனியாக பெண்கள்குழு அமைத்து தங்கள் ‘பைனான்ஸ்’தொழிலை சட்டபூர்வமாக நடத்திவருகிறார்கள்!

ஜார்கண்ட், சத்தீஸ்கரில் நுண்கடன்

கந்துவட்டி கார்ப்பரேட்டுகள்!

2013-ம் ஆண்டில் வங்கித்துறையைத் தனியாருக்கு திறந்துவிடுவது என கொள்கை முடிவை அறிவித்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட. எஸ்.கே.எஸ், பந்தன், உஜ்ஜிவன் போன்ற 10 முக்கிய நுண்கடன் நிறுவனங்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள் (NON-PROFIT) என்பதிலிருந்து விலகி, லாபநோக்கிலான (FOR PROFIT) சிறுநிதி வங்கிகள் (SMALL FINANCE BANKS) என்ற பெயரில் ரிசர்வ்வங்கியின் அனுமதியுடன் தனியார் வங்கிகளாக மாறிவிட்டன! இந்திய வங்கித்துறையின் இம்மாற்றத்திற்கு பிறகுதான் இதுநாள் வரை, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து கொள்ளையடித்த சர்வதேச நிதிநிறுவன முதலாளிகள், நுண்கடன் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதை தீவிரப்படுத்தி யுள்ளனர். இதன்மூலம் அதிக முதலீடுகளையும், செயல்படும் பரப்பையும் அதிகரித்துக் கொண்டு பெரும்நிதி நிறுவனங்களாக நுண்கடன் நிறுவனங்கள் உருமாறி வருகின்றன!

உதாரணமாக, ஆசியாவின் இரண்டாவது பெரிய நுண்கடன் நிறுவனமான எஸ்.கே.எஸ் என்ற இந்திய நுண்கடன் நிறுவனத்தில், சர்வதேச முதலீட்டு நிறுவனமான குவாண்டம் குரூப் ஆஃப் ஃபண்ட் 26% பங்குமுதலீடு செய்துள்ளது! மேலும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி 28.12 கோடியும், ஜேபி.மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ், பிர்லாசன் போன்ற பங்குசந்தை சூதாட்டக் கம்பெனிகள் மட்டும் இதில் 300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன! இதனால் இந்த நிறுவனம் ஒருலட்சம் கிராமங்களில், 46 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 11,000 கோடிக்குமேல் கடன் வழங்கும் பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது! (காண்க: times of India business/Jul 29, 2010 மற்றும் http://www.vccircle.com/news/micro-finance/2010/03/26)

அன்னிய முதலீட்டைப் பெற்ற நுண்கடன் நிறுவனங்கள், கிராமங்களில் ஓரளவு பணப்புழக்கம் அதிகமுள்ள, பணப்பயிர் விவசாயம் நடக்கும் பகுதிகளை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, புதிதாக தங்களின் கடன் வலையை நகர்புறங்களில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, போன்ற சிறுவணிகர்களை குறிவைத்து வீசத்தொடங்கி விட்டனர்! இவ்வாறு கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிப்பதற்காக மத்திய-மாநில அரசுகளால் கொண்டுவரப்பட்ட நுண்கடன் திட்டங்கள், இறுதியில் வெறும் வட்டி-லேவாதேவி நிறுவனங்களாக சீரழிந்துவிட்டன!

இக்கொடுமையைக் கண்ட நுண்கடன் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பங்களாதேஷின் முகம்மது யூனுஸ் என்பவர், “நுண்கடன் என்பது உள்ளூர் வட்டித்தொழில் செய்பவர்களை ஒழிப்பதற்குத் தானே தவிர, வட்டித்தொழில் செய்பவராக மாறுவதற்கல்ல” என்று நொந்துகொள்ளும் அளவில்தான் நம் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது!

கொள்ளையர்களின் கூட்டாளிகள்!

smile
“ஸ்மைல்”

நுண்கடன் திட்டம் என்பதே, உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது சிட்பி- என்ற சிறுதொழில் வளர்ச்சி வங்கியும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!

இந்தியாவில் நுண்கடன் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக “நீண்டகால மற்றும் பொறுப்பான நுண்கடன் விரிவாக்கத் திட்டம்”-ன் கீழ் உலகவங்கி 2686 கோடி ரூபாயை கடனாக வழங்கியது! இதில் 23% அளவுக்கு சிட்பி வங்கி முதலீடு செய்யும்! இரண்டு தொகையையும் சேர்த்து நுண்கடன் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வட்டியில் கொடுத்து, முறையாக செயல்படுத்துவது சிட்பி வங்கியின் பொறுப்பு! உலகவங்கி கொடுக்கும் கடனுக்கு 0.75% வட்டியுடன் 35 வருட காலத்தில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்கிறது இதற்கான ஒப்பந்தம்! ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி ஆகியவையும் இதுபோல, சிட்பி-யுடன் பல்வேறு நிதி ஒப்பந்தங்களை செய்துள்ளன!

தவிர,“தேசிய கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கம்”(NATIONAL RURAL LIVLIHOOD MISSION) என்ற 2011-ல் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு மத்தியஅரசு 33,000 கோடியை ஒதுக்கியது! உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத்திட்டம் என்று வர்ணிக்கப்படும் இதற்கு, உலகவங்கி 6,600 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது! ஏனென்றால் கிராமப்புற ஏழைப்பெண்களை சுயவேலை வாய்ப்புள்ளவர்களாக உயர்த்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது! அதாவது நுண்கடன் நிறுவனங்கள் செய்த அதே வேலையை, தன்னார்வக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தப் போகிறார்கள். அதனால்தான் உலகவங்கிக்கு இதில் ஆர்வம் பொங்கி வழிகிறது! (2015 முதல் இத்திட்டத்தை “தீன்தயாள் அந்யோதயா யோஜனா” என பெயர் மாற்றம் செய்துள்ளது தேசபக்த மோடிஅரசு!!)

உலகில் நுண்கடன் நிறுவனங்களின் சராசரி கடன்திருப்புதல் திறன் அல்லது கடன்வசூல் திறன் என்பது 95 சதவீதமாக உள்ளது! உலகளவில் சுமார் 10,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன! இவற்றின் லாபவிகிதம் ஆப்பிரிக்க நாடுகளில் 30.90 சதவீதம்! ஆசிய நாடுகளில் 30.20 சதவீதமாக உள்ளது! இதுதவிர, செய்முறைக் கட்டணம், சேவைவரி, தவணை தவறிய கடனுக்கு அபராதம், இடைக்காலக் கடன் என பலவழிகளில் 30 முதல் 60 சதவீதம்வரை வட்டி வசூலிக்கின்றன! நுண்கடன் நிறுவனங்களின் இத்தகைய அசுர வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டுத்தான் சர்வதேச நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன! இந்த உண்மையை மறைப்பதற்காக, பாசிச ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி!’ என்பதைப்போல, ஏழைகளைச் சுரண்டும் கொள்ளைத் திட்டங்களுக்கு “வறுமை ஒழிப்பு” “பெண்களின் சுயமுன்னேற்றம்” என்று பெயரிட்டு மக்களை ஏய்க்கிறார்கள்!

வலைப்பின்னல் கூட்டணி!

மிக எளிதாக தோன்றும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் வெகு கவனமாக திட்டமிட்டு கட்டியமைக்கப்பட்டவை! நுண்கடன் நிறுவனத்தை தொடங்குவது எப்படி என்பதில் தொடங்கி, மக்களை அணுகும் முறை, பண நிர்வாகம், தவணை வசூலிக்கும் முறைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவங்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளும் நுட்பங்கள், வங்கி நிர்வாக முறைகள் ஆகியவை பற்றி உலகத்தரத்தில் பயிற்சியளிக்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் (ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி.தேர்வுக்கான பயிற்சி மையங்கள் போல) மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக உள்ளன!

பில்கேட்ஸ், ராக்பெல்லர், மூடி, வால்மார்ட், மெட்லைஃப், இன்டெர் அமெரிக்கன் வளர்ச்சிவங்கி, ஐரோப்பிய மறுகட்டமைப்பு வளர்ச்சி வங்கி ஆகிய கார்ப்பரேட்டுகளின் நன்கொடைகளில்தான் இம்மையங்கள் இயங்குகிறது! இதில், நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களை பிடித்துதரும் புரோக்கர் நிறுவனங்களும் தனியாக உள்ளன! இவற்றில் அக்சியன் (ACCION) மற்றும் பெண்களுக்கான உலகவங்கி (WWB) ஆகியவை முக்கியமானவை! இவை பல்வேறு வழிகளில் இந்திய ஆளும்வர்க்கத்துடனும் அரசியல், மற்றும் அதிகார வர்க்கத்துடனும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன!

உதாரணமாக, பெண்களுக்கான உலக வங்கியை (WWB) உருவாக்கியவர்களில் ஒருவர் எலாஃபட் (ELA BHATT) என்ற இந்திய குஜராத்திப் பெண்! இவர் இந்திய திட்டக்கமிசனின் முதல் பெண் உறுப்பினர் (1989)! பத்மஸ்ரீ, பத்மவிபூசன், இந்திராகாந்தி அமைதி விருது, ராமன் மக்ஸசே ஆகிய அனைத்து விருதுகளையும் பெற்றவர்! மேலும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்!! மத்திய அரசின் பல்வேறு பெண்கள் அமைப்புகளில் இன்றும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்! இந்தியாவில் இயங்கும் தன்னார்வக் குழுக்களின் நம்பிக்கை நாயகி என்பதால் ஹிலாரி கிளிண்டனின் ‘கதாநாயகி’ ஆனவர்!

ACCION- என்ற அமெரிக்க நிறுவனம், தனது நிர்வாகப் பயிற்சி மையங்களை இந்தியாவில் 9 மாநிலங்களில் நிறுவி தமிழ்,மலையாளம் உட்பட பிராந்திய மொழிகளில் பயிற்சியளித்து வருகிறது! தன்னிடம் பயிற்சி பெற்ற நுண்கடன் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களையும் ஏற்பாடு செய்து தருவதுதான் இதன் சிறப்பம்சம்!

குழப்பமாகத் தெரியும் நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரு சித்திரமாக வரையத் தொடங்கினால், கிராமத்திற்கு கடன்வசூலிக்க வரும் நிறுவன ஊழியரில் ஆரம்பித்து, நிறுவனத் தலைவர்- அமெரிக்க படிப்பு- வங்கி நிர்வாகப் பயிற்சி- சர்வதேச நிதி நிறுவனங்கள்- உலகவங்கி என்று படிப்படியாக மேலே சென்று, பிறகு மத்திய அரசு- ரிசர்வ் வங்கி- சிட்பி, நபார்டு வங்கிகள்- 26% வட்டி- நுண்கடன் நிறுவனக் கிளைகள் என்று படிப்படியாக கீழிறங்கி நம் கிராமத்திற்கே வந்து நிற்கிறது! இதில் ஏழைகளுக்கு இருக்கும் ஒரே வேலை கடன் வாங்குவது, வட்டிகட்டுவது மட்டும்தான்!

தோற்றுப்போன அரசமைப்பை தூக்கி எறிவோம்!

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக இருந்த விவசாயத் தொழிலே முற்றாக சீரழிக்கப்பட்டு விட்டது! இதனால் வாழ்விழந்த சிறு-குறு விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளிகளும், தங்களின் சொற்ப வாழ்வை தக்கவைத்துக் கொள்வதற்காக திருப்பூர், கோவை, கேரளா, ஆந்திரா, மும்பை என்று ஓடிச்சென்று, கொத்தடிமைகளாக 12-14 மணிநேரம் உழைத்துச் சாகிறார்கள். அங்கும் அவர்களை விடாமல் வறுமை துரத்துகிறது! அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், எட்டாக் கனியாகிவிட்ட கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், ஆகியவற்றை இரவுபகலாக குடும்பத்தோடு உழைத்து சம்பாதித்த பணத்தால் சமாளிக்க முடியாத அவல நிலையில் தான், கையேந்தி கடன்வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்!

உழைக்கும் மக்களின் இந்த அவலம்தான் நேற்றுவரை வாரவட்டி, மீட்டர்வட்டி கொள்ளையர்களுக்கு சாதகமாக இருந்தது! இதையே வர்த்தகரீதியில் ஒழுங்குபடுத்தி, கார்ப்பரேட்டு பாணியில், சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்க உருவானவைதான் இந்த நுண்கடன் நிறுவனங்கள்!

நுண்கடன் நிறுவனங்களில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் லாபவெறிக்காகத்தான் நம் உணவுப்பொருள் உற்பத்தியை பாழடித்து, ஏற்றுமதிக்கான விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது! விதை, உரம், பூச்சிமருந்துகளுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட்டது!
இதனால்தான் நிலத்தை இழந்த சிறு விவசாயிகளும், வேலையிழந்த கூலிவிவசாயிகளும் கிராமத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர்!

இன்று வறுமை ஒழிப்புத்திட்டத்திற்கு நிதிஉதவி செய்யும் உலகவங்கிதான், பேனா, பென்சில், தீப்பெட்டி, மற்றும் கைத்தறி, நெசவு, கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த சிறுதொழில்கள்களை நாசமாக்கியது! அன்னியப்பொருள்களை தாராள இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசை மிரட்டியது!

“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்! கிராமப்புற வறுமையை விரட்டுவேன்!” என்று முழங்கும் மோடி அரசுதான், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதி வழங்கியது! கிராம வங்கிகளையும், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளையும் தனியாருக்கு தாரைவார்க்க சட்டம் இயற்றுகிறது!

இப்படி பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை எல்லாம் ஒழித்துக்கட்டிய மக்கள் விரோத கிரிமினல்களே இவர்கள்தான்!
வாழ்விழந்து, வறுமையின் பிடியில்சிக்கி விழிபிதுங்கி நிற்கும் ஏழைகளுக்கு, 5,000, 10,000-ஐ வீசியெறிந்து “நீயே உன் வறுமையை ஒழித்துக்கொள்!” என்று இழிவுபடுத்துகிறார்கள்!

ஜாய் கீரு - கென்யா பேராசிரியர் ஆய்வாளர்
நைரோபி பல்கலை.யின் (கென்யா) பொருளாதாரப் பேராசிரியர் ஜாய் கீரு

80-களில் கொண்டுவந்த ‘ஒருங்கிணைந்த ஊராக வளர்ச்சித் திட்டத்தில்’ தொடங்கி, இன்றைய ‘தீன்தயாள் அந்யோதயா யோஜனா திட்டம்’ மற்றும் தமிழகஅரசு கொண்டுவந்த, ‘புது வாழ்வு’ ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டங்கள் உட்பட எண்ணற்ற வறுமையொழிப்பு திட்டங்களும் அதிகாரிகளையும், கிரிமினல் அரசியல்வாதிகளையும் தான் வாழவைத்தது.! ஏழைகளை வறுமையிலிருந்து மீட்பதற்குப் பதிலாக, மேலும் கடன்காரனாக்கி, மீளவேமுடியாத வறுமையின் கோரப்பிடியில் மாட்டிவிட்டுள்ளன!

நுண்கடன் நிறுவனங்கள் என்பது, தனது நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, சுதந்திரமாக வாழவைக்க முடியாத இந்த அரசுக் கட்டமைப்பின் அவமான சின்னங்கள்! இனிமேலும் நாட்டையும், மக்களையும் ஆள அருகதையற்ற அரசின் அடையாளங்கள்!

வறுமையின் கொடுமையில் நிற்கும் அப்பாவிகளின் ஒரே சொத்தான உழைப்பையும், வட்டியின் பெயரால் சுரண்டித்தின்று உயிர்வாழும் அளவுக்கு இக்கட்டமைப்பு தோற்றுப் போய்விட்டதன் குறியீடுகள்!

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நடந்த டீக்கடைப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஒருவர், “திடீர்னு எல்லாப்பயலும் ஒன்னாவந்து எங்க கடனையெல்லாம் இப்பவே திருப்பிக் கொடுங்கடான்னு கேட்டா என்னா செய்யுறது?” என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஒரு பெரியவர் “ஒன்னு கடன் வாங்குனவய்ங்க எல்லாம் மருந்தக் குடிச்சு சாகணும். அல்லது, நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து அவய்ங்களை சுட்டுக் கொன்னுபுடனும். இதான் ஒரேவழி!” என்று பதில் கூறினார்.

இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கு, வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?

-மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் அக்டோபர், 2016 புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றுள்ளது)

எழுத உதவியவை:

  1. http://blogs.worldbank.org/endpovertyinsouthasia/
  2. times of India business TNN | Jul 29, 2010,
  3. http://www.vccircle.com/news/micro-finance/2010/03/26
  4. Whatever happened to microfinance? C.P.CHANDRASEKHAR/JAYATI GHOSH
  5. Status_of_Microfinance_in_India_2012-13 /NABARD
  6. RBI guideline to mfi,s/www.rbi.org.in
  7. Microfinance: Getting Money To the Poor or Making Money Out Of the Poor? joy mueni maina kiiru
  8. Document of The World Bank
  9. Report No: ICR00003711
  10. IMPLEMENTATION COMPLETION AND RESULTS REPORT

காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்

0
தோழர் கிட்டுராஜா

“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மதுரையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையுரையில் பேசியதாவது

madurai-pp-conference-on-water-bodies-protection-03
தோழர் குருசாமி

“பல ஆண்டுகளாகவே கர்நாடகாவிடம் கேட்டு கேட்டுதான் தமிழகம் தண்ணீர் பெற்று வந்துள்ளது. ஆனால் கன்னட இனவெறியர்கள் தமிழகம் அவர்களிடம் மிரட்டி பெறுவதாகவே இனவெறியை தூண்டுகிறார்கள்.

ஆனால் இங்கு நிலைமை சென்ற 1 மாத காலமாக அ.தி.மு.க.வை தவிர ஏறக்குறையாக அனைத்து கட்சிகளும் போராடி வரும் சூழ்நிலையில் அங்கு இனவெறியை திட்டமிட்டு தூண்டுகின்ற பா.ஜ.க.வும் அனைவரிடமும் கைகோர்த்து கொண்டு இங்கு போராடுவதை போல் காட்டிக்கொள்கிறது. ஆகையால் இங்கு இந்த போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது, இதில் யார் நண்பர், யார் எதிரி என்று எப்படி இனம் காணுவது? எப்படி பிரித்து அறிவது?

தாலி கட்டியதற்காகவே ஒரு பெண் தன் கணவர் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் அடங்கிபோக வேண்டும் என்று கூறும் ஆணாதிக்க சிந்தனை போல் தேசிய ஒருமைப்பாடு தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லும் மத்திய அரசு போடும் கூப்பாட்டை எப்படி பார்ப்பது”

தோழர் கிட்டுராஜா, தந்தை பெரியார் திராவிடக் கழகம்

தோழர் கிட்டுராஜா
தோழர் கிட்டுராஜா

“இந்த இந்திய அரசு ஒரு ஆரிய பார்ப்பன அரசு, வெள்ளைக்காரன் காலத்தில் 450 டி.எம்.சி தண்ணீர் பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. சுதந்திரத்திற்கு பின்பு 1972-ல் இருந்து 1992 வரை போராடி உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 205 டி.எம்.சி கிடைக்க உத்தரவிட்டது. மறுபடியும் 2007ல் இறுதி தீர்ப்பாக 192 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு தரவேண்டும் என உத்தரவிட்டது.

தமிழகம் எப்போதுமே ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராகவே வந்துள்ளது. 47-க்குப் பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கும் போதுகூட தமிழகத்திடம் ஓரவஞ்சனையோடு தான் நடந்துள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காடுகளின் பரப்பளவோடு தமிழகத்தின் காடுகள் குறைவாகவே பகிரப்பட்டன. ஆறுகளின் பரப்பளவும் அவ்வாறே சூழ்ச்சியோடு பகிரப்பட்டது. எல்லா காலங்களிலும் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று தான் தன் நிலை எடுத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நாம் சாதி, மதம் கட்சிகள் கடந்து ஒரு அணியில் நின்று போராட வேண்டும். இந்த முயற்சியை யார் செய்தாலும் அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் துணைநிற்கும். அப்படியொரு வாய்ப்பை வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்புக்கு என்றைக்கும் நாங்கள் துணை நிற்போம்” என்று கூறி முடித்தார்.

தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்

madurai-pp-conference-on-water-bodies-protection-01
தோழர் கனியமுதன், வி.சி.க மாநில துணை பொது செயலாளர்.

“நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் அதிகாரம் முன்வைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களிடம் இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கின்றனஅப்படி நீர்நிலைகளை மக்கள் பராமரித்தபோது அவை சீராக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று ஆற்றுமணல் கொள்ளை காடுகளை அழித்தல் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என அனைத்தையும் அரசோ(அ) அரசின் துணையோடு பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனால் மேலும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் வற்றி வருகிறது. சில வருடங்களில் தண்ணீர் மிகபெரிய அச்சுறுத்தலாக மாறபோகிறது. தங்கம் காணாமல் போனது என்று இல்லாமல் 2 குடம் தண்ணீர் காணவில்லை என்றுதான் காவல் நிலையத்திற்கு புகார் வரப்போகிறது. இந்நிலையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் அதிகாரம் இன்று துவக்கி வைத்துள்ளது. அதில் எந்தச் சூழலிலும் வி.சி.க மக்கள் அதிகாரத்தோடு துணை நிற்கும்.”

தோழர் பேரறிவாளன், தமிழ் புலிகள் பொது செயலாளர்

madurai-pp-conference-on-water-bodies-protection-08
தோழர் பேரறிவாளன்

“நீர்நிலைகள் மீதான அதிகாரம் மட்டும் இல்லை அனைத்து விதமான அதிகாரங்களும் மக்களுக்கு புறக்கணிக்கப்படுகிறது. நம் தமிழக முதல்வர் அப்பல்லோவில் இன்று உள்ளதால் அதன் கட்சிக்காரர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் மருத்துவமனையின் முன்பு பூஜை நடத்திக் கொண்டுள்ளனர். வெள்ளைக்காரன் காலத்தில் பொருளாதார சமத்துவத்திற்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இல்லை. அதேபோல் நீர் நிலைகளும் ஆதிக்க சக்திகாரர்களின் கையில்தான் உள்ளது. அவற்றிற்கெதிராக போராடி அனைத்து அதிகாரமும் மக்களுக்கே வழங்க வேண்டும். அதில் நாங்கள் எப்பவுமே மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு துணையாக இருப்போம்”

எஸ்.மகபூப் ஜான்
எஸ்.மகபூப் ஜான்

எஸ்.மகபூப் ஜான், மாநில இணைப்பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி

72-ல் நடந்த காவேரி பிரச்சனையில் நடந்த கலவரத்தின் போது பெங்களூருவில் மாட்டிக்கொண்டு காடுகளில் வழியே தப்பி வந்ததையும் ஒவ்வொரு முறை ஏற்படும் இந்த கலவரத்தில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை தன் நேரடியான அனுபவத்தின் மூலமாக வெளிப்படுத்தினார். “எங்கள் தலைவர் வைகோவாகட்டும், ம.தி.மு.க தொண்டகர்களாகட்டும் மக்கள் பிரச்சனை எங்கும் நாங்கள் முதலில் நிற்போம் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த மக்கள் அதிகாரம் எடுத்துள்ள இந்த போராட்டத்தில் நாங்கள் என்றைக்கும் துணை நிற்போம்” என்று கூறினார்.

தோழர் விஜயராஜன், CPM மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழர் விஜயராஜன்
தோழர் விஜயராஜன்

“தமிழ்நாட்டின் இயற்கை வடிவமைப்பு இயல்பாகவே நீர் வேண்டி மற்ற மாநிலங்களை நம்பி உள்ளோம். தனியார் மயம் தாராள மயம் உருவாக்கிய சிக்கலில் இன்று அனைத்து துறைகளும் வேலை இழந்து மாநிலம் விட்டு மாநிலம் பல்வேறு இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். தமிழகத்திலும் வேறு மாநிலத்து இளைஞர்களும் வந்து தங்கி வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த நீர்ப்பரச்சனையில் ஏதோ கர்நாடகம், தமிழகம் தான் பிரச்சனை என்பது போல் இதை எடுத்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒன்று பட்டு போராடி நாம் சாதிக்க வேண்டும். அதை மக்கள் அதிகாரம் இன்று துவங்கியுள்ளதை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சியில் நானும் நான் சார்ந்துள்ள சி.பி.எம் கட்சியும் துணை நிற்போம்.”

தோழர் கணேசன், பு.மா.இ.மு ( மாநில ஒருங்கிணைப்பாளர்)

madurai-pp-conference-on-water-bodies-protection-07
தோழர் கணேசன்

“வான் பொய்த்தாலும் தான் பொய்யா காவிரி என்பது பொன்மொழி. ஆனால் அந்த காவிரியின் நிலை தணிகைச் செல்வன் என்று கவிஞர் தனது கவிதையில் ஒரு வரியில் குறிப்பிட்டுள்ளார், ‘காவிரியில் பயணம் செய்ய இப்போது ஓடம் தேவையில்லை ஓட்டகம் ஒன்றே போதும்.” தமிழகத்தின் 19 மாவட்ட மக்களுடைய நீராதாரமான குடிநீரான காவிரியின் நிலை ஏறக்குறைய 25 லட்சம் ஏக்கர் விவசாயிகளுடைய காவிரியின் நிலை, ராஜஸ்தான் பாலைவனத்தை போல மோசமான நிலையில் இருப்பதைத்தான் அந்த கவிதை குறிப்பிடுகிறது.

1991-ல் 192 டி.எம்.சி தண்ணீர் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி அதற்கு முன்னதாக இருந்த இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி தண்ணீரென்பதை அதற்கு மேலாக கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில்192 டி.எம்.சி தான் என்று இறுதி தீர்ப்பு வழங்கி காவிரிநதி நீர் நடுவர் மன்றம் கூறி பிரச்சனையை முடித்து வைத்தது.

ஆனால் உண்மை என்ன? அங்கு கர்நாடகம் கொதித்து எழுகிறது. கர்நாடகத்தில் மிகப்பொரிய வன்முறை வெறியாட்டம் தமிழர்களுக்கு எதிராக ஒரு சிறுபான்மையினரான தமிழகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக (அ) சிறுபான்மையினராக வாழக்கூடிய அந்தப் பகுதியில் கன்னட இன வெறியாளர்கள் மிகப்பெரிய வெறியாட்டத்தை நடத்தினார்கள்.

madurai-pp-conference-on-water-bodies-protection-10அதற்குப் பிறகு உச்சநீதிமன்றம் பல முறை தமிழக மேல்முறையீடு கர்நாடக மேல்முறையீடு என்று இப்படியும் அப்படியுமாக சென்று  இறுதியாக அதில் சொல்லப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஒருங்காற்றுக் குழு இரண்டையும் சேர்த்து அமைக்கலாம் என்று பலமுறை வாய்தாவிற்கு சென்று வந்துவிட்டோம். இறுதியாக தமிழகம் எதிர்பார்த்து ஏங்கிக்கிடக்கும் காவிரி நீர் எப்போது வரும்? எப்படி வரும்? தஞ்சாவூருக்கு வருமா? டெல்டாவுடைய கடைமடை பகுதிக்கு வருமா? வந்து சேர வாய்ப்பு இருக்கிறதா? குறுவை சாகுபடி போய்விட்டது. அடுத்து சம்பா காத்திருக்கிறது. விவசாயம் செய்ய முடியுமா விளைச்சல் வீட்டிற்கு வருமா என்று எதிர்பார்த்து விவசாயிகளின் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாக உச்சநீதிமன்றம் கருதிவிட்டது.

3-ம் தேதியே கர்நாடக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று தெளிவாக சொல்லி விட்டது. காவிரி நடுவர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் இனி கனவிலும் இல்லை என்று நாங்கள் கூறவில்லை, மத்திய அரசு தெளிவாக அறிவித்து விட்டது. அதில் 108 சட்ட சிக்கல் இருக்கிறது. அதனை சரிகட்டி வருவதற்குள் தமிழகம் பிணக்காடாக மாறிவிடும். மேலும் அதற்கு உத்தரவாதமும் இல்லை. அப்படி அமைப்பதென்றால் 2005-ல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம். அதில் என்ன பிரச்சனை?

56 அங்குலம் மார்பளவு கொண்ட தேசிய நாயகன் மோடிக்கு இது சாதாரண பிரச்சனைதானே, காங்கிரஸ்தான் சரியில்லை என்று பிரச்சாரம் செய்யும் பி.ஜே.பி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியதுதானே, ஆனால் அப்படி செய்ய மாட்டோம் என காங்கிரஸைப் போல தடுமாறாமல் தெள்ளத் தெளிவாக மத்திய பி.ஜே.பி அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதிச் சான்று வழங்கியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், இந்தப் பிரச்சனையை பாராளுமன்றத்தில் வைத்துதான் தீர்க்க முடியும், எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க நீ யார்? என்று கேட்கும் வகையில் தெள்ளத் தொளிவாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க முடியாது என்று ஆளும் மத்திய பி.ஜே.பி அரசு கூறிவிட்டது.

madurai-pp-conference-on-water-bodies-protection-11இதற்குப் பிறகு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்போம் என்று கூறுவது பி.ஜே.பி அரசின் நாடகத்தை தெளிவாக புரிய வைப்பதாக உள்ளது. நம்மால் கூட இவ்வளவு அருமையாக மக்களுக்கு பி.ஜே.பி.யை பற்றி விளக்கியிருக்க முடியாது. இந்த 1 ½ மாத கால போராட்டத்தில் பி.ஜே.பி தனிமைப்பட்டு நிற்கிறது. ஆனால் அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதற்குள் நாள் செல்ல வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த உரி தாக்குதலுக்கு பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுப்பதாக கூறி சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதாக மோடி அரசு நாடகமாடி வருகிறது. ஆனால் முதலில் மோடி அரசு சிந்து நதி ஒப்பந்தத்தை  பரிசீலிக்கத்தான் எத்தனித்தது. இதுவரை பாகிஸ்தானுடன் நடந்த எந்த போரின்போதும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா பரிசீனை செய்ததில்லை. இந்த சிந்து நதி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதன் மூலம் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்து விடலாம் என்று மோடி அரசு வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ஆலோசகர். ‘உலகில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையேயான நீர் ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக ஒரு அரசு மீறுமானால் அது போர்க்குற்றத்திற்கு சமம். எனவே, சிந்து நதி ஒப்பந்தத்தை மீறினால் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நினைவுபடுத்திவிட்டார். ஆனால் மத்திய அரசிற்கு அதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேசிய ஒருமைப்பாடு என்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது, நாட்டின் தேசிய வெறியை தூண்டிவிடுவது என்பதுதான்.  ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துக்கள், முழக்கங்கள் யாவும் தேசத்திற்கு எதிரானவை என்பது  மட்டுமே அவர்கள் கொள்கை.

அந்த அமைப்பைச் சேர்ந்த ஏதோ ஒரு கடைக்கோடி தொண்டன் இறந்தாலும் (சமீபத்தில், கோயம்புத்தூரில் சசிக்குமார் இறந்தது போல) சங் பரிவார அமைப்புகளின் இந்து இனவெறியை கிளப்புவதுபோல் இந்துத் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், என்று துக்ளக், சோ போன்றவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றனர். சிந்து நதி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் மீதான நிலைப்பாடுதான் மத்திய அரசிற்கு தமிழகத்தின் மீதும் இருக்கிறது. 1 ½ மாதங்களுகுக்கு முன்பு 65 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வரவேண்டியிருந்தது.  இந்த ஆண்டு நமக்கு சேரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீர்ல் 35 டி.எம்.சி தண்ணீர்தான் வந்துள்ளது. மீதி 65 டி.எம்.சி நீரில் 20 டி.எம்.சி நீரையாவது கொடு என்று உச்சநீதி மன்றம் ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது. அந்தக் கட்டாயத்தின் பேரில் கர்நாடக அரசு 20 டி.எம்.சி தண்ணீரை திறந்து விடுகிறது. அதற்குள் பெங்களுரு, மைசூர் போன்ற நகரங்களில் பா.ஜ.க காலிகள் ஒரு வெறியாட்டத்தை நிகழ்த்தினர்.

கர்நாடக வாழ் தமிழர்கள் பாகிஸ்தானியர்களா? அல்லது முஸ்லீமா? அப்போது அந்த கலகக்காரர்களுடன் ஒரு பெண் கைது செய்யப்படுகிறார். அவர், தனக்கு 100 ரூபாயும் பிரியாணியும் வாங்கித்தருவதாக கூறிதான் பா.ஜ.க.காரர்கள் அழைத்தார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலை பா.ஜ. அமைப்பினர்தான் நடத்தவேண்டும், என்பதல்ல.  நாடு முழுவதும் 200-துணை அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறான்.  கட்டுவிரியன் போட்ட குட்டிகள் போல அனைத்திலும் விஷம் நிரம்பியிருக்கும்.  தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது.

ஈழத்தில் போர்க்காலத்தில் ஈழத்தமிழர்கள் தவித்ததுபோல் கர்நாடகத்தில் தமிழர்கள் அகதிகளாக தவிக்கிறார்கள்.  மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.  கர்நாடக பி.ஜே.பி.யின் கர்நாடக மாநில தலைவர் ஜெகதீஷ் ஷட்டர், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை மோடி காப்பாற்றிவிட்டார் என்று பேசுகிறார். வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் மற்றும் சட்ட அமைச்சர் சதாநந்த கௌடா ஆகியோர் காங்கிரசுடன் சேர்ந்து பேசி தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீர்மானத்தை முன்கூட்டியே நிறைவேற்றிவிட்டார்கள். அதனால்தான் அணையை திறந்தவுடன் அங்கே வன்முறை வெறியாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், என்த ஒரு கர்நாடக மக்களோ, விவசாயிகளோ பேராடவில்லை. பா.ஜ. மற்றும் இதர இனவெறி கும்பல்கள்தான் போராடியிருக்கின்றனர்.

1991-ம் ஆண்டு தண்ணீருக்கு வழியில்லாமல் டெல்டாவைச் சேர்ந்த மக்கள் எலிக்கறியைத் தின்ற போது இந்த பார்ப்பன ஜெயலலிதா அரசு இரங்கவில்லை, இப்போது காவிரி பிரச்சனையில் மட்டும் தனது பார்ப்பன பற்றை வெளிப்படுத்துகிறது. காவேரி, 40 லட்சம் விவசாயிகளின் பிரச்சனை. தமிழக அரசு இதற்காக துரும்பைக்கூட அசைக்கத் தயாராக இல்லை, ஆனால் தமிழன் அங்கே செத்து மடிந்துகொண்டிருக்கிறான். எனவே பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க-விற்கும் பெரிய வேறுபாடில்லை, அது ஏ-டீம், இது பி-டீம்.

சுப்பிரமணிய சுவாமி, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தச் சொல்கிறார்.  இன்னும் 1 வாரத்தில், மோடி ஜெயலலிதாவை சந்திக்க விருப்பதாக சொல்கின்றனர். எனவே சுப்பிரமணியின் பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுதான் சுப்பிரமணிய சாமியின் பேச்சு.  அவர்களுடைய அஜெந்தாவிலே, அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளதாக்கைப் போன்றது இந்தியாவின் கர்நாடகா, பெங்களுர் போன்ற பகுதிகள் இந்தப் பகுதியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவை காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது ஆபத்தானது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.  மேலும் சில முக்கியமான கருத்துக்களைக் கூறி எனது உரையை முடிக்கிறேன்.

மீத்தேன் திட்டம், கெயில்திட்டம், நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் மற்றும் அணுமின் நிலையத் திட்டம் போன்றவற்றை வேண்டாம் என்ற போதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது மோடி அரசு. அதற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ராஜதுரோக வழக்கு பதிவு செய்துள்ளது இந்த அரசு. இருப்பினும் இந்த டெல்டாமாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளனர். எனவே, டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் விடாமல் காவிரி பிரச்சனையை 2 வருடங்களுக்கு நீட்டித்தால் அந்த நிலங்கள் தரிசாகிவிடும். பிறகு இயல்பாகவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்ற உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது. அடுத்த முக்கியமான பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்தே விட்டாலும் கடைமடைப்பகுதி வரை நீர் செல்லும் அளவிற்கு தமிழகத்தில் காவிரி ஆற்றின் நிலை இல்லை. 30 அடி ஆழத்திற்கும் கீழ் மணற்கொள்ளை நடத்தப்பட்டிருக்கிறது, சில இடங்கள் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. அதையும் மீறி தண்ணீர் வந்தால் விளைவித்த நெல்லுக்கு விலையில்லை. கரும்புக்கு பல கோடி கடன் பாக்கி என்ற நிலையில் தண்ணீர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்ற மனநிலையே விவசாயிகளிடையே நிலவுகிறது.

இவ்வாறு வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் 905 மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதாக உள்ளது. வளர்ச்சி என்றால் இது யாருக்கான வளர்ச்சி? மதுரையில் கூட ஏரிகளை ஆக்கிரமித்துத்தான் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. அத்தகைய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா? மதுரை மாநகராட்சி அலுவலகமும் ஒரு ஏரியில்தான் அமைந்துள்ளது. அங்கு சென்று புகாரளிக்க முடியுமா? இப்படி எல்லாவற்றையும் ஆக்கிரமித்து நிற்கும் இந்த அரசு அதிகாரம் தோற்றுப்போய்விட்டது. தோற்றுப்போனவர்களிடம் நீதி கிடைக்காது.  நம் நீர் நிலைகளைப் பாதுகாக்க நம் கையில் அதிகாரம் இல்லாமல் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு கெஞ்சிக்கொண்டிருக்க முடியுமா? இந்தப் பிரச்சனையில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு மக்கள் அதிகாரம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் இணைந்து கொண்டு அனைத்து கட்சிகளும் மக்கள் அதிகாரத்தை நிறுவவதற்கு துணை நிற்போம்.  குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி என்றென்றும் களத்தில் நிற்கும் என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

மாநில செயற்குழு உறுப்பினர் மக்கள் கலை இலக்கிய கழகம் தோழர் கதிரவன்

madurai-pp-conference-on-water-bodies-protection-06
தோழர் கதிரவன்

“கடந்த 20-ம் தேதி சுப்ரீம் கோட் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதில் அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ இது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்கு அதிகாரம் இல்லை இதில் சட்ட சிக்கல் உள்ளது என கர்நாடக முதல்வர் சீத்தராமையா எதை சொன்னாரோ அதையே மோடி அரசும் சொல்கிறது. எப்போதுமே தமிழ் இனம் சார்ந்த பிரச்சனைக்கு மத்திய அரசு எதிராகவே செயல்பட்டு உள்ளதை பல ஆதாரங்களோடு விளக்கிய அவர் மேலும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் சாதி ஆதிக்க சக்திகளிடம் தான் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளது அதை அவர்களிடமே கோரி எப்படி பெறமுடியும் என கேள்வி எழுப்பினார். ஆகையால் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மீதான அதிகாரத்தை நிலைநிறுத்துவது தான் ஒரே தீர்வு அதைத்தான் மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்துகிறது. அதற்கு என்றைக்கும் ம.க.இ.க களத்தில் நிற்கும்”

மதுரையில் போலிசின் நெருக்கடியில் பல இடங்களில் நமக்கு அரங்குகள் கிடைக்கவில்லை. பின்பு மாட்டுத் தாவணியில் செய்தியாளர்கள் அரங்கம் நமக்கு கொடுக்க ஒப்புக்கொண்டனர். 100 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் அமர முடியாது என்பதால் காணொளி மூலம் வெளியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்களை வெளியில் அமர வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இறுதி நிகழ்ச்சியாக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவடைந்தது.

செய்தி
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
தொடர்புக்கு – 9894312290

ஊடகங்கள் – பத்திரிகையாளர்கள் : கருத்துப் படங்கள்

0
தொலைக்காட்சி

அறிவாளிகளை உருவாக்கும் (Idiot box) முட்டாள் பெட்டி !

முட்டாள் பெட்டிடிவி தான் என்னை அறிவாளியாக்கியது யாராவது டிவியை ஆன் செய்தால் உடனே நான் பக்கத்து அறையில் கதவை தாளிட்டுக் கொண்டு படிக்கத் தொடங்கி விடுவேன் !

வதந்திக்கும் புலனாய்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வதந்திக்கும் புலனாய்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?வதந்தியை ஆலைகளில் உற்பத்தி செய்தால் ? அதனை புலனாய்வு இதழியல் என்றும் அழைத்துக் கொள்ளலாம் !

உண்மையான ஊடகவியலாளரின் பணி என்ன?

உண்மையான ஊடகவியலாளரின் பணி என்ன?ஆதாரங்கள் இல்லாத நம்பிக்கைகளை நிராகரிப்பதற்கு ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது!
– ஆம்! அதுதான் ஊடகவியலாளரின் பணி.

யார் யார் வாய்க் கேட்பினும் !

அபிப்ராயங்கள்நம் காதில் படும் செய்திகள் பல உண்மைத்தரவுகள் அல்ல, அவை அபிப்பிராயங்கள் !

எழுத்தாளராவது எப்படி?

எழுத்தாளராவது எப்படி?
எழுதுங்கள், எழுதியதை திருத்தி எழுதுங்கள். இரண்டும் செய்ய முடியாத போது படியுங்கள். வேறு குறுக்கு வழி எதுவுமில்லை !

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

பாக் மீது தாக்குதல் : சண்டையா சண்டைக் காட்சியா ?

2
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு நடத்திக் கொண்டிருப்பது, சண்டையா, அல்லது இது வெறும் சண்டைக் காட்சியா? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. மோடி அரசைப் பொருத்தவரை இது சண்டைக் காட்சி. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்து நடத்தப்படும் நாடகம். “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிப் பார்த்துக் காசு கிடைக்கவில்லையென்றால், “நாச காலம் வருது” என்று மிரட்டிக் காசு பறிக்கும் குடுகுடுப்பைக்காரனைப் போல, வாக்களித்த மக்களுக்கு ‘அச்சே தின்’ எதையும் காட்ட முடியாத மோடி, ‘சண்டைக் காட்சி’யைக் காட்டி ஓட்டு அறுவடைக்கு முயற்சிக்கிறார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் உரி தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியச் சிப்பாய்களின் சடலங்களைக் காட்டித் தேசிய வெறியைத் தூண்டும் முயற்சி.

உரி இராணுவ முகாம் மீதான தாக்குதல், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மோடியை, ஒரு விதத்தில் காப்பாற்றியிருக்கிறது. வேறொரு விதத்தில் இக்கட்டிலும் ஆழ்த்தியிருக்கிறது. “56 அங்குல மார்பு கொண்ட மாவீரன்” என்ற முறையில் மோடி ஏதாவது செய்தாக வேண்டும். அதே நேரத்தில் பாக். இராணுவத்திற்கு உண்மையிலேயே ஆத்திரமூட்டும்படி ஏதும் செய்துவிடவும் கூடாது. இவ்விரு நிபந்தனை களுக்கு இடைப்பட்ட சந்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உருவாக்கிய “கலைப்படைப்பு”தான் செப் 29 அன்று அரங்கேற்றப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்.

“அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தனது கூற்றை நிரூபிக்கும் பொருட்டு, தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவம் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதாக கூறப்படும் பகுதிகளுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று மக்களிடம் பேச விட்டிருக்கிறது பாக். அரசு. பிம்பேர், சம்ப், சமானி ஆகிய மூன்று மாவட்ட எல்லைப்புறக் கிராமங்களைப் பார்வையிட்ட வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் நிருபர் பமேலா கான்ஸ்டபிள், “எல்லைப்புறத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்று மக்கள் சொல்கிறார்களே தவிர, பல போராளிகள் கொல்லப்பட்டதாக இந்தியா சொல்வதை உறுதி செய்யும் விதத்தில் அவர்கள் எதுவும் கூறவில்லை” என்கிறார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் ஐ.நா குழுவினரும், “இந்தியா கூறுவதைப் போன்ற துப்பாக்கிச் சண்டை எதையும் நாங்கள் பார்க்கவில்லை” என்றே கூறியிருக்கின்றனர்.

சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சண்டைக் காட்சியை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சண்டைக் காட்சியை வடிவமைத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

“அதிக பட்சம் 200 மீட்டர் தூரத்துக்கு பாக். எல்லைக்குள் சென்று சுட்டிருக்கக் கூடும்” என்று சில பாக். பத்திரிகையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஷான் ஸ்நோ என்ற இராணுவத்துறை வல்லுநர், “துல்லியமாக இலக்கைத் தாக்கு வதற்கான (Surgical Strike) ஆற்றலை இந்திய இராணுவம் இன்னமும் பெற்றுவிடவில்லை. அப்படியொரு தாக்குதல் நடத்தியதற்கான விவரங்கள் எதையும் இந்தியா அளிக்கவுமில்லை” என “டிப்ளமாட்” என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் தரவுகளுடன் எழுதியிருக்கிறார்.

செப் 29 தாக்குதலைப் பற்றி இந்திய இராணுவத் தலைமையகம் (DGMO) வெளியிட்ட அறிக்கையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதேயொழிய, கோட்டைக் கடந்து சென்று தாக்கியதாக அந்த அறிக்கை கூறவில்லை. எத்தனை இலக்குகள் தாக்கப்பட்டன என்றோ, என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றோ, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ, கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ எந்த விவரமும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “அடிவாங்கிய பாக். இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடிய மேற்படி விவரங்களை, இந்தியர்களுக்கு ஏன் மறைக்க வேண்டும்?” என்று பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கும் மோடி அரசிடம் பதில் இல்லை.

இருந்த போதிலும் “வெற்றி, வெற்றி” என்று ஊடகங்கள் மூலம் சவுண்டு கிளப்பி, பாக். எதிர்ப்பு தேசவெறியை நாடு முழுவதும் பா.ஜ.க. தூண்டியிருப்பதால், ராகுல் காந்தி முதல் கருணாநிதி வரையிலான அனைவரும் மோடிக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்து விட்டனர். இருப்பினும் நடந்து கொண்டிருப்பது நாடகம் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.

india-pak-caption-1எங்கள் ஆட்சிக் காலத்தில் பலமுறை இராணுவம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. நாங்கள் அரசியல் ரீதியில் அதற்கு உரிமை கொண்டாடியதில்லை. இராணுவத்தின் செயலுக்கு மோடி அரசு உரிமை கொண்டாடுவதாலும், பாகிஸ்தான் அதனை மறுப்பதாலும், வீடியோ ஆதாரத்தை வெளியிடுவதுதான் சரியானது என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம். “வீடியோ ஆதாரம் இருக்கிறது, தக்க நேரத்தில் வெளியிடுவோம்” என்று முழங்கிய ராஜ்நாத் சிங் பதிலளிக்கவில்லை. “நம்முடைய இராணுவத்தின் வீரத்தில் நம்பிக்கையில்லாமல் ஆதாரம் கேட்கிறீர்களா?” என்று ரவி சங்கர் பிரசாத் ஆஜராகிறார். “ஆதாரம் கேட்பவனெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” என்கிறார் உமா பாரதி.

“வீடியோ ஆதாரத்தை வெளியிட மோடி அரசு ஏன் அஞ்ச வேண்டும்? அது சொல்லிக் கொள்ளும்படியான ஆதாரமாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பா.ஜ.க.வினர் சொல்வது போல, அது பயங்கரமான தாக்குதலாக இருக்கும் பட்சத்தில், அந்த வீடியோ காட்சி பாகிஸ்தான் மக்களின் கோபத்தைத் தூண்டி, அதனைச் சமாளிக்கும் பொருட்டு, பாக். இராணுவம் இந்தியா மீது போர் தொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடும் என்று மோடி அரசு அஞ்சுவதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு அச்சம் இருக்கும் பட்சத்தில், சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி ஊடகங்களில் அன்றாடம் அடித்து விடப்படும் சரக்குகள், ஒரு போருக்கு வழி வகுக்கும் என்று மோடி அரசுக்குத் தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.

“சவுண்டு மட்டும்தான் வரவேண்டும், சண்டை வரக்கூடாது” என்றுதான் இந்த ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. இருப்பினும் “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்பதற்கு பயங்கரமான வியாக்கியானங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. “இது பாக். இராணுவத்தின் மீதான தாக்குதல் அல்ல, ஆக்கிரமிப்பும் அல்ல, தீவிரவாதிகளைத் தடுத்து அழிக்கும் நடவடிக்கை மட்டுமே” என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் “துல்லியத் தாக்குதல்” என்று இராணுவம் இதற்குப் பெயரிட்டிருக்கிறது. தாக்குதல் முடிந்த மறு கணமே பாக். இராணுவத் தலைமையையும், சர்வதேச பிரதிநிதிகளையும் அழைத்து, “இந்த நடவடிக்கை இத்துடன் முடிந்து விட்டது” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது மோடி அரசு.

india-pak-protest
காஷ்மீரிலிருந்து இந்தியாவை வெளியேறக் கோரி காஷ்மீர் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்ட ஊர்வலம்: முற்றுப் பெறாத போர். (கோப்புப் படம்)

அதாவது சண்டை 29 இரவே முடிந்து விட்டது. ஆனால், சவுண்டு மட்டும் ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர் கிஷாலய் பட்டாசார்ஜி கூறுவது போல “இந்த யுத்தம், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தகவல் ஊடகங்கள் வழியே நடத்தப்படும் உளவியல் யுத்தம்.” வல்லரசு இந்தியா குறித்த போதையில் திளைக்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்காக, அர்னாப் கோஸ்வாமியைப் போன்ற ஆங்கிலம் பேசும் பார்ப்பன மேட்டுக்குடி லும்பன்கள், டி.வி. ஸ்டூடியோக்களில் நடத்திக் காட்டும் யுத்தம். தினமணி மதியைப் போன்ற அசடுகளை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தும் யுத்தம்.

மற்றபடி நடப்பது சண்டையா, காட்சியா என்று அம்பானிக்கும் அதானிக்கும் தெரியும் என்பதால், இது பற்றி பங்குச்சந்தை அலட்டிக் கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த “சலுகை பெற்ற நாடு” என்ற வணிக அந்தஸ்தை மோடி ரத்து செய்தது குறித்து அந்நாட்டு முதலாளிகளும் கவலைப்படவில்லை. இந்திய பாக். வணிகத்தில் அதிக ஆதாயமடைபவர்கள் இந்திய முதலாளிகள்தான் என்பதால், இதனை ரத்து செய்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.

வெறும் சண்டைக் காட்சியாகவே இருக்கும் நிலையிலும் இது எல்லையோர கிராம மக்களைத்தான் பாதித்தது. 553 கி.மீ எல்லையுள்ள பஞ்சாப் – பாக். எல்லைப்புறத்தில், பத்து கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற 1,871 கிராமங்களிலிருந்து அறுவடைக்கு நிற்கும் பயிர்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் விவசாயிகள்.

“சிப்பாய்களெல்லாம் முகாமில் இருக்கும்போது எங்களை மட்டும் ஏன் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்பவர்களிடம், “நாங்கள் கிராமத்தைக் காலி செய்யச் சொல்லவில்லை. உங்களுக்கு உத்தரவிட்டிருப்பது மாவட்ட நிர்வாகம்” என்று கூறுகிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் எஸ்.எஸ்.சர்மா (The Hindu, 5.10.2016). இது பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அம்மாநிலத்தின் பா.ஜ.க. கூட்டணி அரசு நடத்தும் இரக்கமற்ற நாடகம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

india-pak-caption-2“எல்லையில் போர் மேகங்கள் சூழ்கின்றனவா, அப்படியென்றால் தேர்தல் நெருங்கி விட்டது என்று பொருள்” என்ற பஞ்சாபி கவிதையை காங்கிரசு கட்சியினரே தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். “பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடங்குவதன் மூலம் உ.பி. தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது மோடியின் திட்டம்” என ஆகஸ்டு மாதத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார் மாயாவதி. இப்படியெல்லாம் பேசினாலும், போர்வெறி மோடிக்கு தரக்கூடிய ஆதாயத்தை எண்ணி எதிர்க் கட்சிகள் அஞ்சவும் செய்கின்றனர்.

“பாகிஸ்தானின் அணு ஆயுதத்தைப் பார்த்து அஞ்சிய காலமெல்லாம போய்விட்டது. அணு ஆயுதப் போர் மூண்டால், பத்து கோடி இந்தியர்கள் ஒருவேளை சாகலாம். அப்புறமும் 110 கோடிப் பேர் மிச்சமிருப்போம். ஆனால், பாகிஸ்தான் என்ற நாட்டைத் துடைத்து ஒழித்துவிடுவோம்” என்று பார்ப்பனக் கொழுப்பெடுத்த சு.சாமி உளற, “போர் என்று வந்துவிட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்” என்று பதிலுக்குப் பிதற்றினார் பாக். இராணுவ அமைச்சர்.

இவையெல்லாம் செயலுக்கு வர முடியாத உளறல்கள் மட்டும்தானா? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எழுப்பி வரும் போர்வெறிக் கூச்சலும், இராணுவ மோதல்களும் அவர்கள் விரும்புவது போல, தேர்தலுக்கு மட்டும் பயன்படும் துருப்புச் சீட்டுகளாக முடிந்து விடுமா அல்லது இந்த சண்டைக்காட்சி அபாயகரமான ஒரு சண்டைக்கு வழி வகுத்து விடுமா? இதற்குத் தீர்மானமான ஒரு பதிலைக் கூற இயலாது.

puthiya-jananayagam-october-2016-kashmirபாகிஸ்தானை மட்டம் தட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தின் காரணமாக ஆத்திரம் கொண்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களோ, அல்லது இந்தியாவிலேயே இருக்கும் அவர்களுடைய ஆட்களோ, ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற அச்சம் பா.ஜ.க. தலைமைக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால் மக்களுக்கு ஏற்படும் அழிவு பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அத்தகைய தாக்குதல், தங்களுக்கு இந்து வாக்குகளைப் பெற்றுத் தருமா, அல்லது தோல்விக்குத் தள்ளிவிடுமா என்பது மட்டுமே அவர்களது கவலை.

தமக்குக் கடுகளவும் உரிமையில்லாத காஷ்மீரை மையப்படுத்தி இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்தி வரும் இந்தச் சண்டையில் காஷ்மீர் மக்களின் உரிமையை இரு நாட்டு அரசுகளுமே நிராகரிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானை முறியடித்து, காஷ்மீரை இந்தியா தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மோடிக்கும், மோடியைத் தோற்கடிக்க விரும்புகின்ற காங்கிரசு முதல் ஆம் ஆத்மி வரையிலான கட்சிகளுக்குமிடையில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைக்காட்சியாகத் தோற்றம் தரும் தற்போதைய மோதல், சண்டையாக மாறலாம், மாறாமலும் போகலாம். ஆனால், ஒரு உண்மையான சண்டை, உள்நாட்டுப் போர் -ஏற்கெனவே காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. அது நான்கு மணி நேரத்தில் முடிந்து விட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் அல்ல. பல பத்தாண்டுகளாக நடந்து வரும் போர்.

அந்தப் போர் முடிவுக்கு வரும் வரை அல்லது காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, பாகிஸ்தானுடனான போர் அபாயத்திலிருந்து நாம் தப்பிக்க இயலாது. “எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரை இந்திய ஆளும் வர்க்கம் நெடுநாளாகப் பயன்படுத்தி வருகிறது. “காஷ்மீரின் சாபம் என்று இதனை அழைப்பது, உண்மைக்கு நெருக்கமானதாக அமையும்.

– சூரியன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!

2

கோவையில் கடந்த செப்டம்பர் 22 அன்று இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு, கோவையின் பல பகுதிகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேவர முடியாத அளவுக்குப் போலீசின் ஆசியுடன் பகிரங்கமாகவே வெறியாட்டம் போட்டிருக்கிறது, இந்து முன்னணி. கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் கடைகளையும் பேருந்துகளையும் தாக்கி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது.

kovai-hindu-munnani-riots-1இந்த வெறியாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, எண்ணற்ற இரு சக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. திருப்பூரில் கல்வீச்சைக் கண்டு பதறி பேருந்திலிருந்து இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார்.

kovai-hindu-munnani-riots-2இந்து முன்னணியின் பொதுச் செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன், சசிகுமாரின் மரணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 23 அன்று தமிழகம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், சசிகுமாரின் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யாமல், இந்து வெறியாட்டத்துக்கான அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை தாமதப்படுத்தி, இப்பாசிசக் கும்பல் வன்முறை வெறியாட்டங்களை நடத்த தொடக்கம் முதல் இறுதிவரை உறுதுணையாக இருந்துள்ளது, கோவை போலீசு.

kovai-hindu-munnani-riots-3தொழில் நகரமான கோவையில் தொழிலாளர்களும், அடிப் படைப் பிரச்சனைகளுக்காக சாமானிய மக்களும் போராட்டம் நடத்தும்போது, அவற்றை ஒடுக்கி, போராடுபவர்களைச் சிறையில் அடைக்கும் போலீசு, கற்கள், சோடாபாட்டில்கள், பெட்ரோல் குண்டுகள், உருட்டுக் கட்டைகளுடன் தயாரிப்போடு வந்து இந்த ரவுடித்தனங்களை இந்து முன்னணி நடத்துவதற்கு உறுதுணையாக நின்றது. ஆணவக் கொலை என்றால் சவ ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்து அவசரமாக சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல கட்டாயப்படுத்தும் போலீசு, தாழ்த்தப்பட்டோரின் இறுதி ஊர்வலத்தை பொதுப்பாதை வழியாகக் கொண்டு செல்ல அனுமதிக்காததை எதிர்த்துப் போராடுவோரை ஒடுக்கி சவத்தை தானே அடக்கம் செய்யும் போலீசு, இந்துவெறி குண்டர்கள் துடியலூர் வரை 18 கி.மீ. தொலைவுக்கு சவ ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. வேறு எந்த ஓட்டுக் கட்சிக்காரர்களுக்கும் இப்படி சவ ஊர்வலம் நடத்த அனுமதிக்காத போலீசு, கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட குண்டர்களுடன் பிணத்தை வைத்துக் கொண்டு இந்துவெறி பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த தாராள அனுமதியளித்தது.

kovai-hindu-munnani-riots-51998 கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அந்நகரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டபோது, அதற்கு உறுதுணையாக இருந்ததைப் போலவே, இப்போதும் போலீசு துணை நின்றுள்ளது. துடியலூர் மயானத்துக்கு வரும்வரை நூற்றுக்கணக்கான

கடைகளைத் தாக்கிச் சூறையாடி, வாகனங்களை அடித்து நொறுக்கி, கண்ணில்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்து வெறியாட்டம் போட்டது, இந்து முன்னணி. போலீசின் முன்னிலையிலேயே துடியலூரில் மட்டும் ஏறத்தாழ 20 கடைகளைச் சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தது.

kovai-hindu-munnani-riots-captionஇருப்பினும், தங்களது தலைவர் கொல்லப்பட்டதற்கு ஊர்வலம் நடத்தி இப்படி தாக்குகிறார்கள் என்றால் அவர்களின் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கக்கூட முன்வராமல் ஊடகங்கள் பூசி மெழுகின. முஸ்லீம் ஒருவரின் செல்போன் கடையில் இந்துவெறி குண்டர் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து நாறியபோதிலும், இதை மூடிமறைத்து இந்து முன்னணி போர்வையில் சமூகவிரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவோர் தமது கட்சிக்குள்ளேயே வெட்டு குத்துகளில் இறங்குவது அன்றாடச் செய்தியாகியுள்ளது. ரியல் எஸ்டேட், கந்துவட்டி, சினிமா, கல்லூரிகள், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களைச் செய்வோராக அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் சீரழிந்துள்ள நிலையில், பல்லாயிரம் கோடி புழங்கும் இத்தகைய தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர்அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் மற்றும் பெண் விவகாரம் என்றும், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய்கடை முருகனின் கொலைக்குக் காரணம் நிலத் தகராறு என்றும் அம்பலமானது. சென்னை கோயம்பேட்டில் கந்துவட்டித் தொழில் நடத்திவந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டுப் பெண்களை வேசிகள் என்று ஆபாசமாகத் திட்டியதால் கடந்த 2013 கொல்லப்பட்டார். ஓசூரில் கடந்த செப்.19 அன்று விசுவ இந்து பரிசத்தின் மாவட்டச் செயலாளர் சூரி வெட்டிக் கொல்லப்பட்டதற்கு கட்டப் பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் தகராறு என்று போலீசே கூறுகிறது.

கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரும் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து மற்றும் விநாயகர் ஊர்வலத்துக்கான களிமண் பொம்மைகளை வைத்து, அதற்கான வசூல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற ‘தொழில்’களையும் செய்து வந்தவர்தான். மற்றைய ஓட்டுக் கட்சிகளைச் சேர்ந்த கிரிமினல்கள் வெட்டிச் சாய்க்கப்படும்பொழுது, அவை வெறும் முன்விரோதக் கொலைச் சம்பவங்களாகப் பதிவாகி மறைந்து விடுகின்றன. ஆனால், இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த கிரிமினல்கள் கொல்லப்படும்போதெல்லாம், தமிழகத்தில் இந்துத்துவ தலைவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் நாட்டுக்காக உழைத்த மாபெரும் தியாகிகளைப் போலவும், இந்து சமூகத்தைப் பாதுகாக்க வந்த மாமனிதரைப் போலவும் சித்தரிப்பதைத் திட்டமிட்டே இந்துத்துவ பரிவாரங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் மீது அபாண்டமான சந்தேகம், பழிபோட்டு மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றி, இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவது என்ற திட்டத்துடன் இந்துவெறி கும்பல் இயங்கி வருகிறது.

தற்போதைய வன்முறை வெறியாட்டங்களில் முஸ்லிம் கடைகள் மட்டுமின்றி, ஏராளமான இந்து வியாபாரிகளின் கடைகளையும் தாக்கி இந்துவெறி குண்டர்கள் சூறையாடியுள்ளனர். இப்பாசிச கும்பலின் நோக்கம் சிறுபான்மையினரான முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது மட்டுமல்ல. பயங்கரவாதத்தை ஏவி ஒட்டு மொத்த சமூகத்தையும் பீதியில் உறைய வைப்பதுதான் என்பதை இந்த வெறியாட்டங்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், எத்தகையதொரு அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, இந்துவெறி பாசிச கும்பலை முளையிலேய கிள்ளியெறியும் வகையிலான போராட்டங்களைக் களத்திலே தொடுப்பதும், இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசிக்கும் ஊடகங்களையும், துணைநிற்கும் அம்மா போலீசையும் விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதுமே இன்று தமிழக மக்களின் முன்னுள்ள முக்கிய கடமையாக உள்ளது.

–  குமார்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

அடிமைகள், அவுட்சோர்சிங், இஸ்ரேல்,மோடி – கேலிச்சித்திரங்கள்

0
அவுட்சோர்ஸ்

நவீன அடிமைகள் !

நவீன அடிமைகள்
நவீன அடிமைகள்

பழங்கால அடிமைகளுக்கும், தொழில்நுட்பத்தின் நவீன அடிமைகளுக்கும் என்ன வேறுபாடு? தமக்கு சுதந்திரம் இல்லை என்பதை பழங்கால அடிமைகள் அறிந்திருந்தார்கள். நவீன அடிமைகளோ தாம் அடிமைப்பட்டிருப்பதையே சுதந்திரம் என்று நம்புகிறார்கள்!

_________________________

அமெரிக்க வீட்டுப் பாடத்திற்கும் இந்தியா ?

அவுட்சோர்ஸ்

இல்லை மகனே, உன்னுடைய பள்ளி வீட்டுப்பாடத்திற்கெல்லாம் இந்தியாவுக்கு ‘அவுட்சோர்ஸ்’ கொடுக்க முடியாது!

_________________________

செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு!

இஸ்ரேல் செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு !
இஸ்ரேல் செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு !

இஸ்ரேல் செல்லுமிடமெல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு!
நெதர்லாந்து செல்லும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமென் நெதன்யாகூ-வுக்கு அங்கே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?
கார்ட்டூன்: Anthony Garner (Ant), Spain, City: Barcelona
நன்றி: Cartoon Movement

_________________________

காங்கிரீட் காடுகளாய் புடைத்து நிற்கும் நகரங்கள் !

காங்கிரீட் காடு
காங்கிரீட் காடுகள்

காங்கிரீட் காடுகளாய் புடைத்து நிற்கும் நகரங்களில் பொது மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு இடமேது?
கேலிச்சித்திரம்: ஐரோப்பாவின் மால்டா நாட்டைச் சேர்ந்த Steve Bonello.
நன்றி: Cartoon Movement

_________________________

மோடிக்காக (அக்கப்)போரில் இறங்கும் ஊடகங்கள்!

மோடிக்காக அக்கப்போர்
மோடிக்காக அக்கப்போரில் ஈடுபடும் ஊடகங்கள்

கார்ட்டூன் நன்றி : Tanmaya Tyagi

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்

0

கானல் நீராகும் காவிரி நீர்…
நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!

தருமபுரியில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்

மாவட்டம் முழுவதும் வீச்சான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு 10-10-2016 அன்று மாலை மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.

muthukumar-pp
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்

இக்கூட்டத்துக்கு மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், “தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பருவமழை பொய்த்தும், குறைந்தும் வருகிறது. அச்சு ஊடகங்கள் மாதத்திற்கு 4,5 பத்திரிகைகளை கொண்டு வருகின்றனர், இதற்காக மரங்களை அழித்துதான் காகிதத்தை பெறுகின்றனர், அதோடு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், எஸ்டேட் கட்டுவதும், மேட்டுக்குடியினர் கும்மாளம் அடிப்பதற்கும் என்று மேற்கு தொடர்ச்சி மரங்களை அழித்துவருவதும் அதிகரித்திருக்கிறது, அதோடு இந்தியாவிலேயே நகரமயமாக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான். தமிழகத்தில் ஒர் ஆண்டிற்கு மழையினால் கிடைக்கும் தண்ணீர் 4,323 டி.எம்.சி. இந்த மழை நீரை சேமிக்க நீர் நிலைகள் இல்லை, எல்லாம் அழிக்கபட்டிருக்கிறது. தமிழகத்தின் இலக்கியமும் பொருளாதாரமும் காவிரியோடு பிணைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதனை பாதுகாக்க சமூக போராளிகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

pennagaram-pp-conference-on-protection-of-water-bodies-3அடுத்தாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசுகையில், “காவிரி ஆற்றில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழம்பூவும், மூலிகைச் செடிகளும் பூத்துக் குலுங்கும், பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும், அதோடு தண்ணீரை குடித்தால் போது வாசனையாக இருக்கும். அந்த வாசனைகள் எல்லாம் அழித்து இன்றைக்கு கழிவு நீரை கலந்து பச்சை நிறமாக வருகிறது. காவிரி நீருக்கும், தருமபுரிக்கும் தொடர்பு இருக்கிறது. தஞ்சாவூரில் விளையும் நெல்லை இன்றைக்கு 60 சதவீத மக்கள் பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தும் பெரிய அளவில் போராட்டம் இல்லாமல் இருப்பது வேதனையான விஷயம்.

கெயில் குழாய் திட்டத்தால் விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லை என்றும், டாஸ்மாக் பிரச்சினையில் ரெட் ஒயின் உடலுக்கு நல்லது என்றும், பாலியல் இணையங்களை தடை செய்ய முடியாது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குகிறது நீதித்துறை. இப்படி மேட்டுக்குடி நலன்களுக்காவே பேசுகிறார்கள், பார்ப்பன நீதிபதிகள் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்குகிறார்கள். எனவே தோல்வியடைந்த நீதிமன்றத்தை வைத்துக்கொண்டு நீதியை பெறமுடியாது மாற்று மக்கள் அதிகாரம் சொல்லும் தீர்வால்தான் தீர்க்க முடியும்” என்றார்.

thiruppathi-army
முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி

கடந்த ஒருவருட காலமாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன்களுக்காக அங்குள்ள நீர், நிலைகளை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்திவருபவர் முன்னாள் இராணுவ அதிகாரி கர்னல் திருப்பதி. ஓய்வு பெற்றவுடன் பல அரசு உயர் பதவிகளுக்காக அவரை அழைத்த போதிலும் அதற்கு செவிசாய்க்காமல் மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு போராடி வருபவர். அவர் பேசுகையில்,

“தண்ணீருக்காக உலகப் போரே நடக்கும் என்கிறார்கள். அதுதான் உண்மை. ஏனென்றால் 10,20 ஆண்டுகளுக்கு முன்பு குளம், குட்டை, ஏரி, ஆறுகளில் நாமெல்லாம் நீச்சல் அடித்து மகிழ்ந்தோம். அதுமட்டுமல்லாமல் 30,40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அடியில் நிலத்தடி நீர் இருந்தது. ஆனால் இன்றைக்கு 1000 அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கிறது. காரணம் மேலை நாடுகள் அவர்களின் வளர்ச்சிக்காக நம்முடைய இயற்கை வளத்தை அழித்து நம்மை குப்பைத்தொட்டி போல பயன்படுத்துகிறார்கள். இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியே பெய்யக்கூடிய மழைநீரையும் சேமிக்கவில்லை.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசும் செய்யவில்லை. இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் லஞ்ச ஊழலில் திளைக்கிறார்கள். உயிர் காப்பது நீர் இதை பாதுகாப்பதை விட வேறு என்ன வேலை இருக்கிறது? 1 குவார்ட்டருக்கும், 1 பொட்டலம் பிரியாணிக்கும் தன்மானத்தை இழக்காமல் வாழ வேண்டும் அதற்கு ஒரு நல்ல அரசாங்கத்தை அமைத்தால் தான் நம்ம பேரக் குழந்தைகளையாவது இந்த அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும்” என்றார்.

vc-pandiyan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன்

அடுத்தாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் பேசுகையில், “தமிழகத்திற்கு சாபகேடாக இருப்பது தண்ணீர் பிரச்சினை, பல நாடுகளில் சண்டையில்லாமல் தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் தமிழகத்திற்கு காவிரி பிரச்சினை தீராத பிரச்சினையாக இருக்கிறது. தழிழகத்தில் உருவாகும் நீர் நிலைகள் இல்லை. இதனால் அண்டைய மாநிலங்களை நம்பியே இருக்கிறோம். இப்பிரச்சினையில் நடுநிலையாக இருந்து தீர்க்க வேண்டிய மத்திய அரசாங்கம், மதவாதம் பிடித்த பி.ஜே.பி அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று வருகின்ற சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்கிறார்கள், ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க தண்ணீர் தர மறுப்பதில்லை. ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லூரி கட்டி நீர் ஆதாரங்களை அழித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக எல்லா நதிகளையும் இணைக்க வேண்டும், தேசியமயமாக்க வேண்டும்” என்றார்.

krishnan-thi-ka
திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன்

திராவிட கழகம் தருமபுரி மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ணன் பேசுகையில், “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே கவிஞன் பூங்குன்றனார் பாடினார். காவிரிப்பிரச்சினை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நீதி மன்றத்திலே வழக்கு நடந்து வருகிறது, ஒரு வழக்கு தொடுத்தவனே செத்து போனாலும் வழக்கு நடக்கிறது. நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லாத போது இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.

1924-ல் நீர் நிலைகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. காவிரி ஆறு 800 கிலோ மீட்டர் ஓடுகிறது, நம்ம தமிழ் நாட்டில் 417 கிலோ மீட்டர் ஓடுகிறது. அங்கே தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் தடுப்பணை கட்டக்கூடாது என்பதுதான் ஒப்பந்தம். 1947-லிருந்து 1967 வரைக்கும் 20 ஆண்டுகளாக காங்கிரசு ஆட்சியில் கபிணி அணை, சொர்ணமுகியில் ஒரு அணை என்று பல அணைகள் கட்டப்படுகிறது. அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் இதை கேட்கவில்லை, மற்றொரு புறநாநூறு பாடல் வரிகளை போல தீதும் நன்றும் பிறர் தரா வாரா என்று தமிழர்கள் தூங்கிக் கொண்டதனால் பல அணைகளை கட்டிவிட்டனர். இன்றைக்கு சாதிக்கு, கட்சிக்கு, சாராயத்துக்கு அடிமையாகி இருக்கிறோம். வரலாற்று ரீதியாக பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே நாம் தேசியக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டாட்சி உருவாக்க வேண்டும். இதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

pennagaram-pp-conference-on-protection-of-water-bodies-5
மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்

மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசுகையில்,

சுயசார்பாக இந்த நாட்டை வழிநடத்துகின்ற, தீர்மானிக்கின்ற திறமை அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் மக்களுக்கு கடமையாற்ற வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தகுதியை இழந்து நிற்கின்றனர். இந்த உண்மையைத்தான் நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்று இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சசிசேகர் சொல்கிறார். நீதி மன்றம் சட்ட விதியில் இருந்து நீதி வழங்காமல் சொந்த விருப்பத்திற்கு செயல்படுகிறார்கள். அதுவும் ஒரு சாரருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இந்தியா முழுவதும் நீர் நிலைகளை அழித்து பெருநகரமாக மாற்றிவிட்டனர். நகரமயமாக்கலால் நீர் நிலைகள் அனைத்தும் கழிவு நீர் குட்டைகளாக மாறிவிட்டன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பச்சமுத்து கல்லூரி இவையெல்லாம் ஏரிகளை அழித்துதான் கட்டப்பட்டிருக்கிறது. இதனை எல்லாம் யார் அழித்தது. நீர் நிலைகளும், நீர் வழித்தடங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருக்கும் ஐ.டி துறைக்காக சதுப்பு நிலங்களை அழித்துதான் கட்டியிருக்கிறார்கள். இது அரசுதான் செய்கிறது. 1970 வரை நீர் நிலைகள் கிராம மக்கள் பராமரிப்பில் இருந்தது. அதன் பிறகு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் போன பிறகு நகரமயமாக்கலுக்கு, கிராமப்புற பொருளாதாரத்தை அழித்தது, நீர் நிலைகளை அழித்து பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்காக ஆடுகின்ற அரசாங்கமாக இருக்கிறது. எனவே மக்கள் அதிகாரத்தை நிறுவததுதான் ஒரே மாற்று” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நீர் நிலைகள் மீதான ஆக்கிரமிப்பிற்கு யார் காரணம் என்பதையும், அதற்கு எதிராக நாம் எப்படி போராடுவது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு 8148573417