privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மோடியின் தீவிரவாதம் : அரசு மருத்துவமனையில் அகதிகளான மக்கள்

மோடியின் தீவிரவாதம் : அரசு மருத்துவமனையில் அகதிகளான மக்கள்

-

யிரம், ஐநூறு நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நடத்திய நாடகத்தின் அங்கமாக அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டு வாங்கப்படும் என்றார்கள். தமிழக அரசை நடத்திச் செல்பவர் அப்பல்லோவில் இருக்கும் போது மக்கள் அரசு மருத்துவமனைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள்? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

மணலி நிர்மலா:

Manali Nirmala (1)
நிர்மலா

நின்னது நிக்க திடீர்னு இப்படி அறிவிச்சா மக்கள் எப்படி சமாளிப்பாங்கன்னு ஒரு அறிவு வேணாம்? மத்த செலவை எப்படியோ சமாளிச்சாலும் மருத்துவச் செலவை என்ன செய்ய முடியும். விடிஞ்சா ஆப்ரேசன் செஞ்சவங்க செலவுக்கு என்ன செஞ்சுருப்பாங்க. பத்து நாளாயிட்டு, இன்னுமும் நான் ஒரு ரூபா பணம் மாத்தல. நான் இதய நோயாளி, பேங்கு வாசல்ல நிக்குற கூட்டத்த பாத்தேலே மயக்கம் வருது.

கருப்புப் பணத்த ஒழிக்கப் போறதா சொல்றாங்க, ஆயிரம் ஐநூறு அடிக்கிறவனுக்கு ரெண்டாயிரம் அடிக்க முடியாதாக்கும். எங்க ஏரியா பேங்குல வங்கி அதிகாரியே ஒரு பணக்காரனுக்கு 3 பேக்கு பணத்த மாத்தி குடுத்துட்டு, வரிசையில நின்னவங்களுக்கு பணம் இல்லன்னு சொல்லிட்டாரு. பணக்காரன் யாரும் வரிசையில நிக்கல.

நான் ஸ்கேன் எடுக்க வந்துருக்கேன். தண்ணிய குடிச்சுட்டு மூத்தரம் முட்டுது. இவ்வளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு நல்ல டாய்லெட் இல்ல. அதை மாத்த சொல்லி முதல்ல படம் புடிச்சு போடுங்க. நம்ம பணத்த நாம எடுக்குறதுக்கு திருடனப் போல கையில அடையாள மை வைக்கிறாங்களாம். நாட்டுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க லூசு தனமா ஏதேதோ செய்றாரு மோடி.

திருப்பத்தூர் வண்ணிநாதபுரம் மல்லிகா, சத்தியவாணி, காந்தா:

கருப்புப் பணம் பணக்காரங் கிட்ட இருக்கா? கல்லு மண்ணு தூக்குற சித்தாளு எங்க கிட்ட இருக்கா? திருடுனவன விட்டுட்டு சும்மாருக்க எங்களப் போல மக்களுக்கு தண்டனை தர்ரது என்ன ஞாயம்? இவ்ளோ சட்டதிட்டம் இருக்குற நாட்டுல கருப்புப் பணம் யாரு வச்சருக்கான்னு கண்டு பிடிக்க முடியாதா? அவங்க எப்படி பணம் சேத்தாங்கன்னு சோதன போடு! கேமரா வச்சு கண்டுபிடி! அத்த வுட்டுபுட்டு ஏழைங்க எங்கள வதைச்சு வயித்தெரிச்சல கொட்டிக்கிறியே வெக்கமில்லெ?

எங்க அண்ணன் குடிச்சே ஒடம்ப கெடுத்துகினு இங்க வந்து ஒரு மாசமா படுத்துருக்காரு. கூட இருந்தவங்ககிட்ட செலவுக்கு காசு கிடையாது. நாங்க வந்து தொணைக்கி இருந்துட்டு அவங்கள போகச் சொல்ல எங்கள்ட்ட காசு கிடையாது. பணம் செல்லாதுன்னு சொல்லி நாளு நாளு ஆச்சு. ஃபோனு மேல ஃபோனு அடிக்கிறாங்க. டவுனுனலதான் பேங்கு இருக்கு, போயி மாத்திரலான்னு நாலு குடும்பத்துல நாலு பேரு மெனக்கெடுறோம் முடியல. மேஸ்திரிகிட்ட 5 – நூறு ரூவா நோட்டா குடுய்யான்னு கெஞ்சி பாத்துட்டோம். இல்லன்னு ஆயிரம் சத்தியம் பன்றாரு.

Satyavani, Kantha, Malika  (1)
சத்தியவாணி, காந்தா, மல்லிகா

நாங்க எல்லாம் ஒரே குடும்பத்த சேத்தவங்க. ஒடம்பு சரியில்லாத அண்ணன  பாக்க வர்ரதுக்கு 1000-க்கு 100 கமிசனக் கொடுத்து மாத்திட்டு வந்தோம். பேங்குக்கு போயி வரிசையில நின்னா பாதி பேருக்குதான் பணம் தர்ராங்க. ஒருநா ரெண்டுநா பொழப்புக் கெட்டுப் போகுது. கையெல்லாம் காச்சுப்போக கல்லு, மண்ணுத் தூக்கி சம்பாரிச்சக் காசுக்கு தெண்டம் குடுத்துட்டு வர்ரோம்.

எங்க ஊருல புருசன இழந்த அம்மா ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்காக நெலத்த வித்துட்டு 70 லெச்சம் பணம் வச்சுருந்துச்சு. பணம் செல்லாதுன்னு சொன்னதும் தூக்கு போட்டு செத்துப் போச்சுன்னு சொல்லிக்கிறாங்க. ஒரு பொண்ண கல்யாணம் செய்ய கிலோக் கணக்குல கேக்குறான். எல்லாத்தையும் செல்லாதுன்னும் கருப்பு பணமுன்னும் சொன்னா எப்படி பொண்ணக் கட்டிக் குடுக்குறது?

சொத்து வித்தவங்க, சின்னக் கம்பனி நடத்துறவங்க, பிள்ளைங்கப் படிப்புக்காக வச்சுருக்கவங்க, எங்களப் போல ஆளுங்களுக்கு வேலை கொடுக்குற மேஸ்திரிங்க இவங்கள்ளாம் கருப்பு பணம் வச்சுருக்காங்கனு பயம் காட்டுனா அவங்க எப்படி பொழக்கிறது?

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோபால்: (அலுவலக உதவியாளர்)

Retired govt staff from chengalpattu
கோபால்

எனக்கு மாசம் பத்தாயிரத்து ஐநூறு பென்சன் வரும். இப்ப ஒரு பத்து பைசா எடுக்க முடியல. வீட்டு செலவுக்கு பாலு தண்ணி எதுவும் வாங்க முடியல.

தங்கச்சி மகனுக்கு தலையில கட்டி. 9-ந் தேதி ஆப்ரேஷன். அவன் பொண்டாட்டி கைக்கொழந்தக்காரி. உதவிக்கி யாரும் இல்ல. எம்மகன் அவன் ஃபிரண்டுகிட்டெல்லாம் கேட்டுப் பிச்ச எடுக்காத கொறையா 200 ரூபா கொண்டு வந்தான். செங்கல்பட்டு பக்கம்தான் எங்க ஊரு. ஊரு கடந்து சாப்பாடு எடுத்து வர முடியல. காபி குடிக்கக் கூட யோசிச்சுட்டு பட்டினி பசியா குத்திருக்கோம். கைப் பிள்ளைய வச்சுகிட்டு ஒரு வேளை சாப்பாட்டோட கெடக்குது அந்த பொண்ணு. இங்க செலவுக்கு கையில ஐஞ்சு காசு இல்லாமெ தவிச்சுகினு இருக்கேன்.

அறநூறு கோடி செலவுல நம்ம கட்சி அமைச்சரே பொண்ணுக்குக் கல்யாணம் செய்யறப்ப, கருப்பு பணத்த ஒழிக்க ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாட்ற மக்கள வதைச்சத நெனச்சு மோடி வெக்கப்படனும். அம்பது நாள்ல எல்லாம் சரியாகிடும் அப்படிங்கறாறு. ஐநூறு வருசம் ஆனாலும் இதெல்லாம் மாறாது. காலங்காலமா பாத்துட்டுதானே இருக்கோம். ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் பணக்காரனாதான் இருக்கான். நான் அடிக்கிறா மாறி அடிக்கிறேன் நீ ஓடுறா மாறி ஓடுங்கறதுதான் மோடி கருப்பு பணம் வச்சுருக்கவங்க கிட்ட போட்ருக்க ஒப்பந்தம். என்ன திட்டம் போட்டாலும் கருப்ப ஒழிக்க முடியாது.

அரக்கோணம் பரித்திப்புத்தூர் தவசி:

Arakkonam Davasi's mother (2)
தவசியின் தாயார்

எங்க அம்மாவுக்கு கழனி காட்டுல கெடந்த ஆணி குத்திருச்சுங்க. டாக்டர்கிட்ட காட்டிட்டுதான் இருந்தோம் எப்படியோ புரையோடி போச்சு. அரக்கோணம் டாக்டருங்க கால எடுக்கணுன்னு சொன்னதால இங்க கொண்டு வந்தோம். ஆபரேசன் செஞ்சு சரிபடுத்திரலாம் ரெண்டு நாள் கழிச்சு வந்து அட்மிஷன் போடுன்னு சொன்னாங்க.

பணம் செல்லாம போச்சு. ரெண்டு நாள் அரக்கோணம் பேங்குக்கு போய் பணம் எடுக்க முடியாம வந்துட்டேன். ரெண்டு நாளுமே வரிசையில நின்ன பாதி பேருக்குதான் பணம் கெடைச்சுது. பணம் எடுக்க அலைஞ்துல வயலுக்கு தண்ணி பாச்ச முடியாம பயிரு சோம்பி கெடக்குது. எங்க அம்மா வேற வலி தாங்காம வீட்டுல கத்தித் தொலைக்கிது. நேத்துதான் 1000-த்துக்கு 100 குடுத்தா சில்லறை வாங்கித் தர்ரதா ஒருத்தர் சொன்னாரு. அத வாங்கிட்டுதான் இன்னைக்கி வந்தோம்.

அந்த நேரம் பாத்து ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. பணமே கெடைக்கலங்க. கமிஷனுக்கு வாங்கிட்டு இன்னைக்கு (17.11.2016) வந்தா இதயத்தை பாக்குற டாக்டர் வரலை, நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க. பணம் புரட்டி இப்ப கொண்டு வரவே ரொம்ப லேட்டாச்சு. இன்னொரு மொற காரு வச்சு கொண்டு வரவெல்லாம் வசதி கெடையாது அதான் என்ன செய்றதுன்னு தெரியாம நின்னுகினு இருக்கோம்.”

சென்னை புறநகரைச் சேர்ந்த பெண் ஒருவர்:

Unknown Chennai woman (1)“ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அறிவுப்புக்கு ஒரு வாரம் முன்னாடி இருந்து எனக்கு காய்ச்சல். புத்தி சுவாதினம் இல்லாத அம்மாவை தவிர எனக்கு யாரும் இல்ல. அம்மாவ பாத்துக்க யாரும் இல்லாததால எங்கூடவே கூட்டிட்டு வர்ரேன். எனக்கு குளிர் நடுக்கம் நிக்க முடியல. அசிங்கமா பேசுற அம்மாவை கட்டுப்படுத்த முடியல. (வினவு செய்தியாளர்களையும் திட்டினார் அந்தம்மா)

வீட்டுப் பக்கத்துல உள்ள டாக்டர்ட ஒரு வாரமா ட்ரீட்மெண்ட் எடுத்தும் நிக்கல. ரத்தம் டெஸ்ட் செய்ய சொன்ன மறு நாள் பணம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. சரி அரசு ஆஸ்பத்தரிக்கு வரலான்னா பஸ்சுக்குக் கூட காசு இல்ல. பேங்குல பணம் இருந்தும் வரிசையில நின்னு எடுக்க முடியல. எப்படியோ வந்து ரத்தம் டெஸ்டுக்கு கொடுத்து நாலு நாள் ஆச்சு. இன்னைக்கி வந்தா எலி காய்ச்சல் போல இருக்கு, பெட்டுல சேருங்கன்னு சொல்லிட்டாங்க.  அட்மிஷன் போட்டுட்டா வெளிய வரமுடியாது. செலவுக்கு காசு இல்லாம உள்ள எப்படி இருக்க முடியும். எப்படியாவது ஏ.டி.எம்-ல பணம் எடுத்துட்டு போகலான்னு வந்தேன். நல்ல காலம் வாசல்ல வண்டி நிக்குது. ஆனா (நடமாடும் ஏ,டி,எம்). வரிசையப் பாத்தா பணம் தீந்துடுமோன்னு பயமா இருக்கு. சரி நான் போறேங்க……

மருத்துவமனை துப்புறவுத்துறை ஒப்பந்த ஊழியர்கள் – பெண்கள்:

“மோடி பணம் செல்லாதுன்னு சொன்ன அன்னைக்குத்தான் எங்களுக்கு சம்பளம் போட்டாங்க. கத்த கத்தையா ஆயிரமும் ஐநூறுமா 6,000 பணம் இருக்குது. பணந்தான் இருக்கெங்காட்டி அன்னைய நெலமைக்கி ஒரு டீ குடிக்க முடியல. அன்னைக்கி நைட்டு டூட்டி சம்பளம் வாங்கச் சொல்லோ நல்லா பிரியாணி துண்ணலான்னு வீட்டாண்ட இருந்தும் எதுவும் எடுத்துகினு வரல. பசிவேற இந்த கோடியில இருந்து அந்த கோடி வரைக்கும் ஒரு கடக்காரனும் செல்லாது செல்லாதுன்றான். இன்னா பன்னுவே சொல்லு.

mobile ATM GH (1)
நடமாடும் ஏ.டி.எம்

விடிய விடிய கக்கூசு நாத்தத்துல கூட்டிப் பெருக்கி அள்ளிட்டு காலையில ஒரு வா காபிக்கி வழியில்ல. கை நெறையோ துட்டுக்கிது, அத்தையா துண்ண முடியும். ஒரு நா லீவு குட்க மாட்றான் இந்த துக்கிரிப் பையெ. பேங்கு வாசல்ல கீவு கட்டி நிக்குது ஜனம். இன்னா செய்வ சொல்லு. சரி செலவுக்கு என்ன செய்யலான்னு பாத்தா 2000 நோட்டுதான் தர்ரான்றாங்க அதுக்கு சில்ற ஆரு தருவா.

நம்புனா நம்பு, நம்பாங்காட்டி போ. ஒரு சாரிடான் மாத்தர வாங்க முடியாம லோலுபட்டேன். அண்ணாச்சி கடையத் தொறந்தா கடனுக்கு வாங்கி சோறு பொங்கு இல்லாங்காட்டி சும்மாருன்னு வீட்டுல சொல்லிகினு வந்துருக்கேன். எங்க பொண்ணுங்க ரெண்டும் பாத்தரத்துக்கு பாலிஷ் போட்ற வேலைக்கு போகுது. அவங்கள போய் வரிசையில நின்னு மாத்திகினு வாங்கன்னா லீவு இல்லன்னுதுங்க. இன்னா பன்னுவ. நூறு  ரூபாய் கமிஷனுக்குதான் மூவாயிரம் மாத்துனேன். இன்னுமும் மீதிப் பணம் மாத்தாதே கெடக்கு. கையில இருக்கற துட்டு இன்னைக்கி காலியாபூடும். நாளைக்கி இன்னா செய்றது ஒன்னியும் புரியல.

Sanitory Workers (4)
துப்புரவுப் பணியாளர்கள்

இந்தா மாறி ஒரு திட்டம் கொண்டாந்தா இன்னா மாறி பாதிப்பு வருன்னு முன்னங்காட்டி ரோசன பன்னிருக்கனும்ல. அத்த வுட்டுபுட்டு மக்கள் அலையவுட்ரியே, இது நல்ல மன்சனுக்கு அழகா. திடிர்னு சொலங்காட்டி எவ்வளோ பிரச்சின ஆயிபோச்சு. ஏதோ புத்திகெட்டு சொல்லிட்டேன்னு ஒத்துகினாலும் மனசு ஆறிப்பூடும். அத்த வுட்டுப்போட்டு 500 நோட்டு அட்சிகினே இருக்கோம் வந்துகினே இருக்கு, பணம் தர்ர மிசினு செஞ்சுகினு இருக்கோம்ன்னு இன்னான்னாவோ பீலா வுட்டுகினுருந்தா இன்னா அர்த்தம்.

நானும் எங்கூட்டு ஆம்பளையும் இங்கதான் வேல செஞ்சுகினுருக்கோம். எங்க ரெண்டு பேருக்குமே பேங்குல அக்கோண்டு, அடயாள அட்ட கெடையாது. எம்பொன்னுகிட்ட நேத்துதான் 7000 பணம் குடுத்து அவ அட்டையில மாத்திகினு வாம்மான்னே. இந்த இன்னைக்கி மை வைக்கிறதா சொல்றாங்க. எம்பொண்ணு பணத்த எப்புடி மாத்துவா, நா எப்புடி மாத்தப் போறோன்னு தெரியல. நம்மூட்டு துட்ட நாம மாத்துறதுக்கு அடையாளம் எதுக்குங்கறேன்.

ஆதார் அட்ட எடுங்க போங்குல கணக்கு வைங்க கேஸ் மானிய காசு அதுல வந்துருன்னு சொல்லிட்டு வர்ரதே இல்லை. பேங்குல பணமிருந்தும் கார்டு தேச்சா வரலன்னு சொல்றா எம்பொண்ணு. எதுவானாலும் நேரடியா குடுத்து வாங்குனா இன்னான்னு கேப்ப, இப்ப யார கேக்க முடியும். எல்லாம் ஆளே இல்லாம மிஷின வச்சு ஓட்ட போறாரு மோடி.

கருப்பு பணத்த யாராலும் ஒழிக்க முடியாது. நல்லவனுக்கு ஒரு வழி. திருட்டு பயலுக்கு ஆயிரம் வழி. திருடன் செவுரு ஏறுவான், வேலி தாண்டுவான் ஏன் கொலை கூட செய்வான். அவன இட்டாந்து எந்த வழியில சொத்து சேத்தான்னு கண்டுபிடி. அதுக்கு எத்தினியோ வழி கீது. நகை, சிலை, எஸ்டேட், பங்களா, சொத்து இப்பிடி யாரெல்லாம் வச்சுருக்கான்னு பாத்து அங்க போயி அதிரடி நடவடிக்க எடு. அது ஒங்களால முடியும். நாட்ட ஆளுர மகராசனுக்கு அது முடியாம இருக்குமா. அத்த வுட்டுப்போட்டு இன்னாத்துக்கு ஏழைங்களையும், கஷ்டப்பட்டு வேலைக்கி போயி நாலு காசு வச்சுருக்க அப்பாவிங்களையும் அலைய வுட்ற.

இந்த பணம் செல்லாதுன்னு சொல்லங்காட்டி ஒரு கல்யாணமே நின்னு போச்சுன்னு டிவியில காட்றாங்க. ஐநூறு கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ணாங்கன்னு மோடி ஆளுங்கள டி.வி-ல காட்றாங்க. இத்தெல்லாம் அந்த மோடி கண்ணுக்குத் தெரியாதாம்மா? சாதார்ண மக்களாண்ட உள்ளதுதான் தெரியுமாமா? எங்க வூட்டாண்டெ கடை வச்சுருந்த அண்ணாச்சி யாவாரமே கெட்டுப் போச்சு. சில்ற கெடைகெலன்னு மூடிட்டாரு. மோடி இன்னுரு வாட்டி எலஷ்சன்ல நின்னுருவாரு? பாக்கலாம்.

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்