Monday, May 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 531

மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?

0

முந்தைய ஜெ. ஆட்சியில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளராக பணியாற்றியவரும், தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தவருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குநராகவும் கனிம வளத்துறையின் ஆணையராகவும் பணியாற்றிய அதுல் ஆனந்த் – ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், கனிமவளத்துறை – சுற்றுச்சூழல்துறைகளின் ஆறு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஜெ. அரசால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

jaya-mafia-rule-1
கடந்த ஆண்டில் “மக்கள் செய்தி மையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், காட்சிக்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர். (கோப்புப்படம்)

ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கான காரணங்களை விளக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ள நிலையில், இந்த உயரதிகாரிகளின் பணியிடை நீக்கத்துக்கு என்ன காரணம் என்பதைக்கூட ஜெ. கும்பல் தெரிவிக்க மறுக்கிறது. இருப்பினும், வைகுண்டராஜன் சம்பந்தப்பட்ட விவகாரம்தான் அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வைகுண்டராஜனோ, ஜெயாவின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது கட்சிக்கு கஜானாவாகவும்,ஜெயா டிவி மற்றும் ஜெ. கும்பலின் மிடாஸ் சாராய நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தவர். கடந்த 2013-ஆம் ஆண்டில் வைகுண்டராஜனின் தாதுமணல் கனிமச் சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய குற்றத்துக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமாரை தூக்கியடித்ததோடு, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அம்மா உத்தரவிட்டார். பின்னர், அம்மாவே நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் தாதுமணல் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ள நிலையில், தாதுமணற்கொள்ளை தொடர்வதற்காகவே அதை வெளியிடாமல் ஜெ. முடக்கி வைத்தார். இருப்பினும், ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்குமிடையே தாதுமணற் கொள்ளையில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், வைகுண்டராஜனை முடக்குவதற்காகவே ஜெ. அரசு தனியார் நிறுவனங்கள் தாதுமணல் எடுக்கத் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

”தாதுமணல் ஏற்றுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தற்போது அவருக்குச் சாதகமாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், நீதித்துறை மற்றும் மைய அரசின் அனுமதியோடு தாதுமணலை பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வைகுண்டராஜன் ஏற்றுமதி செய்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அதுல் ஆனந்தும் ஞானதேசிகனும் இந்த அறிக்கையைத் தயார் செய்ய உத்தரவிட்டு வழிகாட்டியுள்ளனர் என்பதாலேயே அம்மா அவர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்” என்று ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.

இந்த அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தைப் பற்றி எழுதும் ஊடகங்கள், விதிமுறைகள் பின்பற்றப்படாததை விளக்கி அதிகார வர்க்கத்துக்கு அனுதாபம் தேடும் வேலையைச் செய்கின்றன. ஆனால், இந்த அதிகாரிகள் கூட்டம்தான் அம்மாவின் பகற்கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர்கள்.

கடந்த ஆண்டில் “மக்கள்செய்திமையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங்களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும் பிளக்ஸ் பேனர் கட்டி காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் தற்போது ஜெயலலிதா பணியிடைநீக்கம் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் திவாலாக்கும் வகையில், தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி கமிசன் அடிக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குத் தேவையான நிலக்கரியை கூடுதல் விலைக்கு வாங்கி கமிசன் அடிக்கவும் ரூட்டு போட்டுக் கொடுத்தவர்தான் ஞானதேசிகன். அதனாலேயே அவர் அம்மாவின் முந்தைய ஆட்சியில் தலைமைச் செயலாளராக்கப்பட்டார். பிளக்ஸ் பேனரில் காணப்பட்ட அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள முக்கியஸ்தரும், முந்தைய அம்மாவின் ஆட்சியில் முதல்வரின் செயலாளராகவும் இருந்த ராம்மோகன் ராவ், பல்வேறு ஊழல்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அமைச்சர்கள் நடத்தும் பேரங்கள், கைமாறும் தொகை முதலான விவரங்களை ஜெயலலிதாவிடம் தெரிவித்து கங்காணி வேலை செய்ததாலேயே, தற்போதைய ஆட்சியில் அவர் தலைமைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.

jaya-mafia-rule-2இதேபோல, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனை, சட்டம் – ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் ஜெ. அரசு அண்மையில் நியமித்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெ. கும்பலின் வெற்றிக்காக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவை முறையாகச் செய்ததால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதேமுறையில் காரியத்தை முடித்துக் கொடுப்பதற்காகவே அவருக்கு இந்தப் பரிசு அம்மாவால் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் ஆட்சியில் கொள்ளைக்கும் ஊழலுக்கும் ஆலோசனையும் பாதுகாப்பும் அளிக்கும் போயஸ் தோட்டத்து ஏவலாட்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத்தான் பதவி நீட்டிப்பும், பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னென்ன வழிகளில், எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடித்து, ஆட்டையைப் போடாமல் அவர்கள் அம்மாவிடம் முழுமையாகக் கணக்கையும் பணத்தையும் ஒப்படைக்க வைக்கவே போயஸ் கொள்ளைக் கூட்டம் இரவும் பகலுமாக ஒரு கம்பெனி போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஐவர்குழு என்றழைக்கப்படும் அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் உளவுத்துறை மூலம் சோதனை நடத்தி பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்திடம் சேர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இந்த அமைச்சர்கள் மீது வழக்கு இல்லை, விசாரணை இல்லை. இதன் பின்னேயுள்ள பணப்பெட்டி பேரங்கள், இரகசியங்கள் பற்றியும் யாருக்கும் தெரியவில்லை.

தற்போது அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை நாடாளுமன்றத்திலேயே சாடி சவால் விடுகிறார். இதன் பின்னே உள்ள பணப்பெட்டி ரகசியங்கள் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை. சசிகலா புஷ்பா மூலம் ஜெ.வுக்கு எதிராக வைகுண்டராஜன் அரசியல் நடத்துவதாகவும், அதனால்தான் சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. பொதுக்கூட்டத்தில் விமர்சித்தால் எதிர்க்கட்சியினரை அவதூறு வழக்கு போட்டு மிரட்டும் ஜெயலலிதா, ஊடகங்கள் இப்படி எழுதியுள்ள போதிலும் கண்டும்காணாமல் இருக்கிறார்.

ஜெயாவின் ஆட்சியை, இது தி.மு.க. போன்ற குடும்ப ஆட்சி அல்ல, இந்த ஆட்சியில் 2-ஜி போல பெரிய ஊழல்கள் இல்லை, ஜெயலலிதா நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற மாயையைத் திட்டமிட்டே துக்ளக் சோவும் பார்ப்பன ஊடகங்களும் நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன. ஆனால் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு இப்போது பகிரங்கமாக வெளிவந்து, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளை ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கேடுகெட்டதொரு களவாணிக் கும்பலை ஒரு அரசாங்கம் என்று இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பதுதான் தமிழகத்துக்கு மானக்கேடானது.

– குமார்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை

1
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

“மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது”

யார் உயிர்வாழ வேண்டும், நாங்களா அல்லது உழவுக்குப் பயன்படாத மாடுகளா? இந்த அரசாங்கம் எதை விரும்புகிறது? என்று ஆத்திரமாகக் கேட்கிறார் ரேவாஜி சவுத்ரி என்ற மகாராட்டிர மாநில விவசாயி. தனது ஒரு ஜோடி காளைகளை விற்க முடியாமல் தவிக்கும் ஒரு விவசாயியின் கோபக்குரல் அது.

ஒரு மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 70 லிட்டர் தண்ணீரும், 200 ரூபாய் தீவனமும் வேண்டும். மகாராட்டிரத்திலோ பாலின் கொள்முதல் விலை லிட்டர் 24 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக வீழ்ந்து விட்டது. வறட்சி காரணமாகத் தண்ணீரும் இல்லை. நிலத்தை விற்று பால்மாடு வாங்கியவர்கள், இப்போது மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். மாடுகளை (அடிமாட்டுக்கு) விற்றால் 5 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் என்று மகாராட்டிர மாநில அரசு போட்டிருக்கும் சட்டம், மாடுகள் விவசாயிகளின் சொத்து என்ற நிலையை மாற்றி அவற்றை விவசாயியின் கடன் சுமையாக்கி விட்டது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.
பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

விவசாயிகளிடமிருந்து மாடுகளை வாங்கிய கசாப்புக் கடைக்காரர்களும் மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். கடன் காரணமாக கறிக்கடைக்காரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. இறைச்சி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழில்ளை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் இசுலாமியர்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“நகர்ப்புறத்து சேட்டுகள்தான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள். பயன்படாத மாடுகளையெல்லாம் நகரத்தில் விடுகிறோம். அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும்” என்கிறார் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவர் ரவிகாந்த் துப்கார். பா.ஜ.க.வின் அஷ்டி தொகுதி எம்.எல்.ஏ. பீம்ராவ் தோண்டே, மராட்டிய சட்டமன்றத்திலேயே இச்சட்டத்தை எதிர்த்து மாட்டுக்கறி உண்ணும் உரிமைக்காக குரல் எழுப்பியிருக்கிறார்.

மாதம் சுமார் 3 இலட்சம் மாடுகள் வெட்டப்பட்ட அந்த மாநிலத்தில் இப்போது பயனற்ற மாடுகளின் எண்ணிக்கை பல இலட்சங்களாகப் பெருகி வருகிறது. பராமரிக்க முடியாதவர்கள் தம் மாடுகளைக் கோசாலைகளுக்கு கொடுத்துவிடுமாறு முதல்வர் பட்நாவிஸ் கூறியது விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கிளறியிருக்கிறது. “50,000 ரூபாய் கொடுத்து வாங்கிய மாட்டை அரசாங்கத்துக்கு இலவசமாக ஓட்டிவிடவேண்டுமா?” என்று கொதிக்கிறார்கள் விவசாயிகள்.

“மாட்டை வெட்டினால் பத்து ஆண்டு சிறை” என்று சட்டம் போட்டு, மாடுகளுக்காகத் தனி மந்திரியும் போட்டிருக்கும் மாநிலம் ராஜஸ்தான். இங்கே ஜெய்ப்பூர் மாநகராட்சி நடத்தும் கோசாலையில் 100 ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை 15 பேர் செய்கிறார்கள். அவர்களுக்கும் 3 மாதமாக சம்பள பாக்கி. ஆகஸ்டு 2016-இல் அவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். அடுத்த சில நாட்களில் 500 மாடுகள் செத்துப்போயின. முறையான பராமரிப்பு இல்லாமல், சாணியிலும் சகதியிலும் உழன்று மாடுகள் நோயில் விழுகின்றன. 8000 மாடுகள் கொண்ட ஒரு கோசாலையில் மாதந்தோறும் 1053 மாடுகள் செத்துப்போவதாக அரசு ஆவணங்களே கூறுகின்றன.

மாடுகளைப் பராமரிக்க மாநிலம் முழுவதும் முகாம்கள் கட்டப்போவதாக பா.ஜ.க. அரசு கூறியபோதிலும் எதுவும் நடக்கவில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு 70 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர். இப்படியாக, “முப்பத்து முக்கோடி தேவர்கள் குடியிருக்கும்” கோமாதாவை, தேசியப் பேரிடராக மாற்றி விட்டது பா.ஜ.க. அரசு.

***

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

மாட்டிறைச்சித் தடை என்பது மதவெறி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது ஊரறிந்த விசயம். அக்லக் கொலை முதல் உனா தாக்குதல் வரை கோமாதாவின் பெயரால் நடத்தப்பட்டுள்ள அனைத்து தாக்குதல்களும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. மாட்டிறைச்சி என்பதை இந்து மத நம்பிக்கையின் மீதான தாக்குதலாகவே சங்க பரிவாரத்தினர் சித்தரிக்கின்றனர்.

ஆனால் மாட்டுக் கறித் தடைச் சட்டம் எதுவும் (இந்து) மத நம்பிக்கையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் கொண்டு வரப்படவில்லை. மாறாக, “வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்வது, பசு -அதன் கன்றுகள், பிற பால் தரும் விலங்குகள், பண்ணை விலங்குகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்வது” என்ற இந்திய அரசமைப்பின் உறுப்பு 48-இல் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் கோட்பாட்டின்படி, கால்நடைச் செல்வத்தைப் பெருக்குவதே சட்டத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

பால் தரும் “கால்நடைச் செல்வங்களில்” எருமை மாடுகள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன என்ற போதிலும் எருமையை வெட்டுவதையோ, ஏற்றுமதி செய்வதையோ எந்த சட்டமும் தடுக்கவில்லை. பசுவுக்கும் காளைக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்கும் இந்த “மதச்சார்பற்ற” சட்டத்தையும் அதற்குத் தரப்படும் அயோக்கியத்தனமான ‘அறிவியல் விளக்கத்தையும்’ உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடுவதையே குற்றமாக்கியிருக்கும் மராட்டிய மாநிலச் சட்டமும் செல்லத்தக்கதே என்று மும்பை உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. அதே நேரத்தில் வெளி மாநில – வெளிநாட்டு மாட்டுக்கறியை மகாராட்டிரத்துக்குத் தருவித்து விற்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை என்று விலக்கும் அளித்திருக்கிறது. “வெளிநாட்டவர்களும் பணக்காரர்களும் மும்பை நட்சத்திர விடுதிகளில் மாட்டுக்கறி சாப்பிடலாம் – தடையில்லை” என்பதே இத்தீர்ப்பு கூறவரும் கருத்து. “ஏழைக்கும் எருமைக்கும் ஒரு நீதி – பணத்துக்கும் பசுவுக்கும் (பார்ப்பானுக்கும்) ஒரு நீதி” என்பதுதான் இந்த தீர்ப்பின் உள்ளடக்கம்.

beef_3
“குடும்பத்துக்கே சோறு போட முடியாத நிலையில், மாட்டுக்குத் தீவனம் வாங்கிப் போட முடியுமா?” என வினவுகிறார், மரத்வாடாவைச் சேர்ந்த விவசாயி சதீஷ் சோலங்கி.

“மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாட்டுக்கறி உண்ணும் மக்கட்பிரிவினருடைய அடிப்படை உரிமையைப் பறிப்பதுடன் அவர்களை குற்றவாளிகளாக்குவதையும் அங்கீகரிப்பதால், இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது; உணவுப் பழக்கங்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது; விரும்பிய உணவை உட்கொள்வது உறுப்பு 21-இன் கீழ் உயிர் வாழும் உரிமை; பரம ஏழைகளான 30% மக்களுக்கு மலிவு விலையில் புரதச்சத்தை வழங்கும் மாட்டிறைச்சி அம்மக்களுடைய அடிப்படை உரிமை” – என்பன போன்ற வாதங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

பசுவதைத் தடைக்கு எதிராக இதுநாள்வரை இறைச்சிக் கடைக்காரர்கள்தான் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்றும், முதன் முறையாக உண்பவர்களின் கோணத்திலிருந்து எழுப்பப்படும் இக்கேள்விகள், பசு பாதுகாப்பு என்ற விசயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் முரண்பாடுகளை வெளிக்கொண்டு வரும் என்றும் கூறுகிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். மதச்சார்பின்மையின் பெயரால் பார்ப்பன மதவாதத்தைத் திணிக்கும் நடவடிக்கைகள் மோடி ஆட்சிக்கு வந்தபின் தீவிரமடைந்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் இந்த முயற்சி அரசியல் சட்டத்தை எழுதும்போதே தொடங்கி விட்டது.

***

சு வதைத் தடுப்பை, உறுப்பு 25-இன் கீழ் (மத உரிமை) இந்துக்களின் அடிப்படை உரிமையாக இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே நடந்திருக்கின்றன. “அவர்கள் வெளிப்படையாக சொல்லட்டும். பசுவைக் கொல்லக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை. எனவே, இதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று கேட்கட்டும். பொருளாதாரக் காரணங்களுக்காகத்தான் பசுவதை தடை கேட்பதாக கூறுவதென்பது கொல்லைப்புறம் வழியாக இந்து உணர்வைத் திணிக்கிறீர்கள் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்று அன்றைய அரசியல் நிர்ணயசபை விவாதத்தில் வெளிப்படையாக சாடியிருக்கிறார் அசாமைச் சேர்ந்த பிரதிநிதி சாதுல்லா.

caption-1“நம்முடைய இந்து சமூகம் அல்லது இந்திய சமூகம் பசுவை சமூக உறுப்பினராகவே கருதுகிறது. தன்னுடைய தாயை, மனைவியை, குழந்தைகளைக் கொலை செய்தவனைக் காட்டிலும், பசுவை பாதுகாக்க விரும்பாத மனிதனைக் கொல்வதற்கு இந்த நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளனர்” என்று ஆர்.வி.துலேகர் என்ற உறுப்பினர் அரசியல் நிர்ணய சபையிலேயே பேசியிருக்கிறார். துலேகருடைய மறுபிறவிகள்தான் உனா-வில் தலித் மக்களைத் தாக்கியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன?

அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 48 என்பது அடிப்படை உரிமையல்ல. அது வெறும் வழிகாட்டும் கோட்பாடுதான் என்ற போதிலும், காங்கிரசு கட்சிக்குள்ளேயே பார்ப்பன இந்து மதவாதம் பெரும் செல்வாக்கு செலுத்திய காரணத்தினால்தான் பல மாநிலங்களிலும் பசுவதை தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், மாட்டுக்கறி உணவு பரவலாக சமூகத்தின் உணவுப் பழக்கமாக இருந்த மாநிலங்களிலும், இந்து மதவாத அரசியல் செல்வாக்கு செலுத்தாத மாநிலங்களிலும் பசுவதைத் தடையைத் திணிக்க முடியவில்லை.

பசு வதைக்கு வட கிழக்கிந்திய மாநிலங்களில் முற்றிலுமாகத் தடையில்லை. அரசியல் சட்டப்பிரிவு 371(A) வடகிழக்கிந்திய மாநிலங்களுக்கு காஷ்மீரைப் போல சிறப்புரிமைகளை வழங்குவதாலும், அப்பகுதி முழுவதும் மாட்டுக்கறிதான் மக்களுடைய முக்கியமான இறைச்சி உணவு என்பதாலும் அங்கே தடை விதிக்க முடியவில்லை. கேரளா, தமிழகம், மே.வங்கம், அசாம் மாநிலங்களில் “பயனற்ற கால்நடை” என்பதற்கான சான்றிதழுடன் வெட்ட அனுமதி உள்ளது.

1950களில் பிகார், உ.பி. அரசுகள் பசுவை மட்டுமின்றி காளையை வெட்டுவதற்கும் முற்றாகத் தடை விதித்துச் சட்டமியற்றின. “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று இறைச்சிக் கடைக்காரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. “குரேஷி வழக்கு” என்றழைக்கப்படும் இவ்வழக்கில் 1958-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை விதித்தால், அத்தகைய தடை பயனுள்ள கால்நடைகளுக்கான தீவனத்தைப் பறிப்பதுடன் நாட்டின் வளங்களையும் வீணாக்கும். எனவே அத்தகைய தடை பொதுமக்களின் நலனுக்கு எதிரானது” என்று கூறியது. இது ஒரு மழுப்பலான தீர்ப்புதான் என்ற போதிலும், பசு வதைக்கு முற்றுமுழுதான தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

caption-22001-இல் வாஜ்பாயி அரசு, கால்நடைகளுக்கான தேசிய கமிசன் ஒன்றை அமைத்தது. ஜனசங்க கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவராக இருந்து, பின்னாளில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட குமன்மால் லோதா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். “கோல்வால்கரின் சீடர் என்ற முறையில் வாஜ்பாயி, பசுவதைத் தடையை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்க வேண்டும். பசுவதைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்துக்கு இணையான ஒரு சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும்” என்றெல்லாம் பரிந்துரைத்தார் லோதா. இந்த கமிசனின் உறுப்பினராக இருந்த எல்.என்.மோடி என்ற பிரபல கால்நடைத்துறை வல்லுநர் “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்கும் தடை விதிப்பதென்பது, பொருளாதார ரீதியாக நாட்டுக்கே பெரும் நாசத்தை விளைவிக்கும்” என்று கூறி லோதாவின் உளறல்களை எதிர்த்து ராஜிநாமா செய்தார். சட்டமியற்றும் முயற்சியை வாஜ்பாயி அரசு கைவிட்டது.

இதற்குப் பின்னர் 2005-இல் தலைமை நீதிபதி லகோதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய “மிர்சாபூர் தீர்ப்பு” என்று அழைக்கப்படும் தீர்ப்பு, முந்தைய குரேஷி தீர்ப்பை தலைகீழாக்கி, இன்று மகாராட்டிரம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இயற்றப்பட்டிருக்கும் கொடிய சட்டங்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

“மாடுகள் எந்தக் காலத்திலும் பயனற்றவை ஆவதில்லை” என்பதுதான் இந்த தீர்ப்புக் கூறும் கருத்து.

“மாடுகள் கறவைக்கோ உழவுக்கோ பயன்படாமல் போனபிறகும், அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தைக் கொண்டு தயாரிக்க கூடிய எரிவாயு, பூச்சிகொல்லிகள் மற்றும் இயற்கை உரத்தின் மூலம் ஒரு விவசாயி ஆண்டுக்கு 20,000 ரூபாய் ஆதாயம் பெறலாம். மாட்டுச்சாணம் என்பது கோஹினூர் வைரத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்கது” என்று இந்த வழக்கில் வாதாடியது திருவாளர் மோடியை முதல்வராகக் கொண்ட குஜராத் அரசு. அவ்வளவு ஆதாயம் இருந்தால் உழவுக்குப் பயன்படாத மாட்டை எந்த விவசாயியாவது விற்பானா என்ற கேள்வி நீதிமன்றத்துக்கு எழவில்லை. மேற்படி புள்ளிவிவரத்தை அளித்த கட்டுரையை, “ஆதாரமற்ற குப்பை” என்று 1996-இல் வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அதையும் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, மாட்டுச் சாணத்தை கோஹினூர் வைரமாக சித்தரித்த மோடி அரசின் வாதத்தைத் தனது தீர்ப்பில் மேற்கோளாகவே காட்டியிருக்கிறது.

“இந்தத் தீர்ப்பு முழுவதும் இத்தகைய எண்ணிலடங்காத ‘கோஹினூர் வைரங்கள்’ கொட்டிக் கிடக்கின்றன” என்று கேலி செய்கிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். “மாட்டுச்சாணி மற்றும் மூத்திரத்தின் மதிப்பை 1958-இல் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதா? அல்லது 1958-இல் இருந்ததைவிட மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்துக்கான சந்தை மதிப்பு 2005-இல் பன்மடங்கு உயர்ந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொரு வழக்கறிஞர்.

“1958 குரேஷி தீர்ப்பு” பாலும் நெய்ய்யும் சாப்பிட முடியாத ஏழைகளின் ஊட்டச்சத்து மாட்டுக்கறிதான் என்று அங்கீகரித்தது. 2005-இல் லகோதி வழங்கிய தீர்ப்போ, “ஊட்டச்சத்து என்பதை மாமிச உணவு அல்லது மாட்டுக்கறியுடன் மட்டும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும்?” என்று அறிவியலுக்கு எதிரான, அப்பட்டமான பார்ப்பனியக் கண்ணோட்டத்துடனும், ஏழைகள் குறித்த அலட்சியத்துடனும் கருத்து தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் பொருட்டு, “மொத்த மாமிச உணவு நுகர்வில் மாட்டுக்கறி என்பது 1.3% மட்டும்தான்” என்ற ஆதாரமற்ற ஒரு புள்ளி விவரத்தையும் தீர்ப்பில் அவிழ்த்து விட்டுள்ளது.

“மாட்டுக்கறி உண்பவர்கள் ஆகச் சிறுபான்மையினரே” என்ற கருத்தை வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், அந்தச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கத்தை பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்திலிருந்து எப்படித் தடை செய்ய முடியம்? “சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது மொத்த சமூகம் அல்லது நாட்டின் நலனோடு ஒப்பிடும்போது இரண்டாம் பட்சமானதுதான்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் நியாயம் போலத் தெரிகின்ற இக்கருத்து, பார்ப்பன இந்து மதவாதத்தை, சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணித்து அவர்களுடைய உணவு உரிமையைப் பறிக்கிறது. ஒரு உணவுப் பழக்கத்தையே தேச விரோதம் போல சித்தரிக்கிறது.

நமது உரிமைகள் எனப்படுபவை அனைத்தும் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டவை அல்ல. உண்பது, உறவு கொள்வது போன்றவை மனிதனின் இயற்கையான உரிமைகள். அவற்றைக் கொடுப்பதற்கோ பறிப்பதற்கோ எந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் அதிகாரம் இருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் மனிதனின் இயற்கையான உரிமைகளையும், சமூக உரிமைகளையும் பறிக்கின்ற பார்ப்பனியம்தான், யார் எதை உண்ண வேண்டும், உடுத்த வேண்டும் என்று விதிக்கிறது. இந்து சமூகத்தைப் பொருத்தவரை, “தீண்டத்தக்க” சாதிகளையும் “தீண்டத்தகாத” சாதிகளையும் பிரிக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு அளவுகோல் மாட்டுக்கறி உணவு. அந்த வகையில் மாட்டுக்கறித் தடையை நியாயப்படுத்தும் தீர்ப்பு, தீண்டாமையை நியாயப்படுத்துகிறது.

அதே அரசியல் சட்டத்தின் உறுப்பு 38, மக்கள் நலனுக்கு உகந்த சமூக அமைப்பை உருவாக்குதல், வருவாய்-வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பது பற்றிக் கூறுகிறது. உறுப்பு 46, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட நலித்த பிரிவினரை சமூக அநீதியிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் பாதுகாப்பது பற்றி பேசுகிறது. இந்த தீர்ப்போ சிறுபான்மை, தலித், பழங்குடி மக்களின் ஊட்டச்சத்துள்ள மலிவான உணவைப் பறிக்கிறது. இறைச்சிக்கடை, தோல் பதனிடும் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போர் முதல் விவசாயிகள் வரையிலான கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடுகிறது. அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை போன்றவற்றை வழிகாட்டும் கோட்பாடுகளின் ஒளியில் விரிவுபடுத்தி பல தீர்ப்புகள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. இந்தத் தீர்ப்போ வழிகாட்டும் கோட்பாட்டை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறது

பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பெயரால் அடிப்படை உரிமைகளை வெட்டுகின்ற இந்தத் தீர்ப்பின் கண்ணோட்டம்தான், பசுவைப் பாதுகாப்பது என்ற பெயரில் மனிதர்களைக் கொல்லும் நடவடிக்கையில் வெளிப்படுகிறது. சமூகம், நாடு ஆகியவற்றை அதன் மக்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அரசியல் சட்டம் ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளையே பறிக்கிறது இந்தத் தீர்ப்பு என்று சாடுகிறார் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

“கால்நடைச் செல்வத்தைப் பேணி வளர்ப்பது” என்ற மதச்சார்பற்ற நோக்கத்துக்காகத்தான் இந்த சட்டம் என்று கூறுவது ஒரு பம்மாத்து. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிதி லகோதி, தனது தீர்ப்பிலேயே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். “இந்துக்கள் புனித நாட்களில் காளை மாடுகளை வழிபடுகிறார்கள். கோயில்களில் உள்ள நந்தி சிலையை வணங்குகிறார்கள்” என்றெல்லாம் சொல்லி, கோமாதா மட்டுமல்ல காளையும் வழிபாட்டுக்குரியதே என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனது தீர்ப்பின் மதச்சார்பை வெளிப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்.

தனது ஆதிக்க நோக்கத்தையும் அதனால் தான் பெறுகின்ற ஆதாயத்தையும் மறைத்துக் கொண்டு, வருண சாதி அமைப்பு முதல் மாட்டுக்கறி தடை வரையிலான அனைத்தையுமே அறிவியல் பூர்வமானவை என்று நியாயப்படுத்த முனைகிறது பார்ப்பனியம். ”ஹிந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கலையில் தேர்ந்திருந்தார்கள் என்பதற்கான சான்று விநாயகரே” என்று உளறும் நபர் பிரதமராக இருக்கும் நாட்டின் நீதிமன்றம், மாட்டுச் சாணியே கோஹினூர் வைரத்தினைக் காட்டிலும் உயர்ந்தது என்று கூறுவதில் வியப்பென்ன?

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதன் காரணமாகத்தான் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், விவசாயம் அழிந்து வருகிறது என்றும் கூறி மாட்டிறைச்சித் தடையை நியாயப்படுத்துகிறது பா.ஜ.க. ஆனால் மகாராட்டிரத்தில் இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் மாட்டுச் சந்தைகள் அழிந்து வருகின்றன. மாடுகளை வாங்க விவசாயிகள் தயாராக இல்லை. பல கிராமங்களில் மாடுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதெனக் கூறுகின்றன அம்மாநிலப் பத்திரிகைகள்.

காலப்போக்கில் வாலைத் தொட்டுக் கும்பிடுவதற்குக்கூட மாடு கிடைக்காமல், சிலையைத் தொட்டுக் கும்பிட வேண்டிய நிலையை பார்ப்பன பாசிசக் கும்பல் எய்தும். மொத்தத்தில், கத்தியின்றி ரத்தமின்றி மாடுகளை ஒழித்துக் கட்டும் பணியை சங்க பரிவாரமே சாதித்துக் காட்டும்.

– சூரியன்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

மாதாவைக் கொல் ! பாரத மாதாவுக்கு ஜே போடு !

1
1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்

சதியும் சாதியும்

ம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (பிகார்) முன்னாள் துணைவேந்தர், ஏ.கே. பிஸ்வாஸ் ”அவுட்லுக்” இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சமீப காலமாக ”பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தைக் காட்டி ஜே.என்.யு. மாணவர்கள் முதல் இசுலாமியர்கள் வரை அனைவரையும் மிரட்டி வரும் சங்க பரிவாரத்தின் அசிங்கமான பார்ப்பன இந்து மரபை இக்கட்டுரையில் அவர் எடுத்துக் காட்டுகிறார்.பெண்ணையும் தாயையும் போற்றும் மரபு உலகத்தில் வேறெங்குமே இல்லையென்பது போலவும், இந்து பண்பாடு தாயின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய மதிப்பின் காரணமாகத்தான் பாரதத்தை பாரதமாதா என்று அழைப்பதாகவும் அளக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

”நமது தேசியத்தின் அடிப்படையே பாரதமாதா தான். மாதா என்பதை நீக்கிவிட்டால் பாரதம் என்பது ஒரு துண்டு நிலம்தான் என்று ஆகிவிடும்” என்ற பா.ஜ.க. தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் மேற்கோளையும், அவர் படத்தையும் பாரதமாதா படத்தையும் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் அச்சிட்டு விநியோகிக்கிறது குஜராத் மாநிலத்தின் பரோடா மாநகராட்சி. ”பாரத் மாதா கி ஜெய்” என்று விண்ணப்பப் படிவத்தில் எழுதவில்லையென்றால் பள்ளியிலேயே சேர்க்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது குஜராத்தில் ஒரு பள்ளி.

பெற்ற தாயைப் படுகொலை செய்வதைத் தமது பண்பாடாக வைத்துக் கொண்டே, தேசத்தைத் தனது தாயாக மதிப்பதாகப் பித்தலாட்டம் செய்யும் நாட்டை உலகில் வேறு எங்காவது காண முடியுமா என்பது இக்கட்டுரையில் அவர் எழுப்பியிருக்கும் கேள்வி. வந்தே மாதரம் முழக்கமும், பாரதமாதா படமும் பிறந்த வங்காளத்தில்தான் பெண்களை உடன்கட்டையேற்றும் பார்ப்பனப் பண்பாடு உச்சத்தில் இருந்தது.

1829-இல் பென்டிங் பிரபுவால் தடை செய்யப்படும்வரை மதத்தின் பெயரால் பெண்களைக் கொலை செய்யும் ‘சதி’ என்ற ‘உடன்கட்டையேற்றுதல்’ புனிதமான மதப் பண்பாடாக இருந்தது. ஈவு இரக்கமில்லாமல் பெற்ற தாயையே உயிரோடு கொளுத்திய பிள்ளைகள், தமது நடவடிக்கையைப் பெருமையாகப் பறைசாற்றிக் கொண்டார்கள். தாயை உயிருடன் கொளுத்திய அந்த மைந்தர்களை அச்சமூகம் மதிப்புக்குரியவர்களாக கருதியது.

“தாய் நாடு சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று இன்றைக்கு பீற்றுகிறார்களே, தாய், தாய்நாடு என்ற சொற்களை உச்சரிப்பதற்குக்கூட இவர்களுக்கு அருகதை உண்டா?” என்று கேட்கும் பிஸ்வாஸ், அன்று நடந்த அந்தக் கொடுமையை சில வரலாற்றுப் பதிவுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார். இது அக்கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்
1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்

“சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரையிலான சொத்துக்கு வாரிசான ஒரு நடுத்தர வயது பார்ப்பன விதவையை அவளது கணவனின் உடலுடன் சேர்த்துக் கட்டி சிதையில் வைத்து எரித்தார்கள், அவளுடைய மைத்துனர்கள். பிறகு இது குறித்து புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய நீதிமன்றம், இந்தக் கொலை சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்று கூறி அவர்களை விடுவித்தது. 1829-இல் பெண்டிங் பிரபு உடன்கட்டையேறுதலை குற்றமாக்கி சட்டம் இயற்றும் வரை வங்காளத்தில் இதுதான் நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்காவிட்டால், ‘தயாபாகா’ என்ற முறைப்படி கணவனின் பெரும் சொத்துகள் அவளைச் சேர்ந்திருக்கும். எனவே, அது முழுக்க முழுக்க சொத்தை அபகரிப்பதற்காக நடந்த கொலை.

ஆயினும் என்ன? ஒரு இந்துவை அவன் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன. சப்தரிஷிகளில் ஒருவரும், ரிக் வேதத்தைத் தொகுத்தவர் என்று கூறப்படுபவருமான அங்கிர முனிவர், சதியை போற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“மனித உடலில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் உரோமங்கள் உள்ளன. கணவனுடன் உடன்கட்டையேறும் பெண் அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள். கணவனுடன் சிதையில் மரிக்கும் பெண், அவளது தாயின் குடும்பத்தையும் தந்தையையும் கணவனையும் புனிதப்படுத்துகிறாள். அவளுடைய கணவன், ஒரு பிராமணனைக் கொன்ற கொலைகாரனாகவோ, நன்றி கொன்றவனாகவோ, நண்பனைக் கொன்றவனாகவோ இருந்தாலும் உடன்கட்டையேறும் மனைவி அவனுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுகிறாள்.”

பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணைக் கொலை செய்யும்பொருட்டு, கணவனின் குடும்பம் முதல் தாய், தந்தை உள்ளிட்ட அனைவருக்கும் சொர்க்கம் குறித்து ஆசை காட்டப்படுகிறது.

உறவினர்கள் மட்டுமல்ல, சுடுகாட்டுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் படுகொலை நடவடிக்கையில் பங்கேற்கிறார்கள். சிதையைச் சுற்றி நிற்பவர்கள் அந்தப் பெண்ணின் மீது விறகுகளையும் வெண்ணையையும் வீசுகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு வீசுபவர்கள் ஒரு கோடி அசுவமேத யாகம் செய்த புண்ணியத்தைப் பெறுவார்கள் என்று ஆசை காட்டுகின்றன பார்ப்பன சாத்திரங்கள்.

இதன் காரணமாகத்தான் 1987-இல் ரூப் கன்வார் என்ற இளம் பெண் ராஜஸ்தானில் உடன்கட்டை ஏற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டு கணிமான இந்தியர்கள் வெட்கப்பட்டு தலை குனியவில்லை, கூனிக்குறுகவுமில்லை என்று கூறும் பிஸ்வாஸ், பிரம்ம புராணம் கூறும் சதி பற்றிய இன்னொரு வெறுக்கத்தக்க வழிகாட்டுதலை எடுத்துக்காட்டுகிறார்.

“ஒரு வேளை வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே இறக்க நேர்ந்தால், அவனுடைய மனைவி கணவனின் செருப்புகளையோ அல்லது அவனது உடைகளில் ஒன்றையோ தனது மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தீப்புகுந்து விட வேண்டும்” என்கிறது பிரம்ம புராணம். இப்படி ஒரு பெண் உடன்கட்டை ஏறிய சம்பவத்தை வங்காளம் பெருமையானதொரு நிகழ்வாக கொண்டாடியும் இருக்கிறது.

sati1796-ஆம் ஆண்டு, கல்கத்தாவிலிருந்து சுமார் 20 மைல் தொலைவிலிருந்த மஜில்பூர் என்ற கிராமத்தில், தாய் ஒருத்திக்கு அவளது மகன் செய்த கொடுமை அழிக்க முடியாதவொரு அவமானம்.

வார்ட் என்ற ஆங்கில அதிகாரி தான் கண்ணால் கண்ட காட்சியை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

பஞ்சா ராம் என்ற பார்ப்பனன் இறந்து விட்டான். மனைவி உடன்கட்டையேறத் தயாராகிவிட்டாள். மந்திரச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் சிதையுடன் சேர்த்து அவளைக் கட்டி வைத்துத் தீ மூட்டினார்கள். அப்போது இரவு நேரம். மழை பெய்யத் தொடங்கியது. தீ எரியத் தொடங்கியவுடன், பிணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல ஊர்ந்து வெளியேறி புதர்களுக்குள் ஒளிந்து கொண்டாள் அந்தப் பெண். சுற்றி நின்றவர்கள் சிதையில் ஒரு உடல்தான் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள். உறவினர்கள் கத்தினார்கள். அந்தப் பெண்ணைத் தேடினார்கள். மகன் அவளைக் கண்டுபிடித்து தரதரவென்று இழுத்தான். உடன்கட்டை ஏறிவிடு; அல்லது தண்ணீரில் முக்கிக் கொல்வோம், அல்லது தூக்கில் தொங்கவிடுவோம் என்றான் மகன். அவளோ பெற்ற மகனிடம் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடினாள். கொடூரமான முறையில் என்னை சாகடிக்காதே என்று கெஞ்சினாள். பயனில்லை. நீ சாகவில்லை என்றால் என்னை சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். எனவே நான் சாக வேண்டும். அல்லது நீ சாகவேண்டும் என்றான் மகன். அவள் உடன்கட்டையேற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவளுடைய மகனும் உடன் இருந்தவர்களும் சேர்ந்து அவளுடைய கையையும் காலையும் கட்டி நெருப்பில் தூக்கி வீசினார்கள்.

கருணை காட்டும்படி தனது மகனிடம் கெஞ்சும் தாயை எண்ணிப்பாருங்கள். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காத, இரக்கமே இல்லாத மகன், அந்த தாயின் மன்றாட்டை நிராகரிக்கிறான். இதயமே வெடிப்பது போல அவள் கதறுகிறாள். மகனோ, அவளை உயிருடன் விட்டால் தன்னுடைய சாதி போய்விடும் என்று அஞ்சுகிறான். தாயினும் உயர்ந்ததாக சாதி! சாதியைக் காட்டிலும் தாய் உயர்ந்தவளாக இல்லை.

“சொர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்தவள் தாய்” என்றா இந்தியர்கள் நம்புகிறார்கள்? சாதியை விடத் தாழ்ந்தவள்தான் தாய் என்றால், சொர்க்கமும் கூட சாதியைவிடத் தாழ்ந்ததுதான். என்ன சுவையான சமன்பாடு!

caption-1தாயும் தாய்நாடும் சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானவை என்பது காலம் காலமாக இந்தியாவெங்கும் ஓதப்படும் ஒருவகை மந்திரம். அதனைச் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. சாதியும் சாதிநாடும் சொர்க்கத்தினும் மேலானவை. தனது தாயைவிட சாதி பெரிது என்று கருதி, தாயையே உயிர் வாழ அனுமதிக்காத ஒரு ஒரு மனிதனுக்கு, தாய்நாடு என ஒன்று இருக்க இயலுமா?

அத்தகைய மகன்களுக்கு கற்பனையாக கூட ஒரு தாய்நாடு இருக்க முடியாது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது நாட்டை மிக உயர்வாக மதித்து அதனைத் தாய்நாடு என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் யாரும் தம்மைப் பெற்றெடுத்த தாயைப் படுகொலை செய்து கொண்டே, எங்கள் தாய்நாடு சொர்க்கத்தினும் மேலானது என்று பித்தலாட்டம் செய்வதில்லை” என்று தனது கட்டுரையை முடிக்கிறார் பிஸ்வாஸ்.

சதி வேறு சாதி வேறு அல்ல. சதி என்பது சாதியத்துடன் இணைந்த பெண் அடிமைத்தனம். பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம். அதனால்தான், “உன்னைக் கொல்லாவிட்டால், என்னை சாதியிலிருந்து நீக்கி விடுவார்கள்” என்கிறான் மகன். அதனால்தான், பெற்ற தாயைக் கொலை செய்த மகன், அன்றைய சமூகத்தால் கொண்டாடப்படுகிறான்.

அன்று மட்டுமா, இன்று?

நடந்த பழங்கதை அல்ல. கண்ணகி – முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் … — என இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு என்ன பொருள்? அன்று ஊரே கூடி நின்று ஒரு பெண்ணை உடன்கட்டை ஏற்றியது போல, இன்று ஊரே கூடி நின்று கண்ணகி- முருகேசனைக் கொலை செய்யவில்லையா? சங்கரைக் கொலை செய்து, தன் மகளையும் சாவுக்குத் தள்ளிய பெற்றோர், கம்பீரமாக சிறை செல்லவில்லையா? கோகுல்ராஜ் கொலையின் குற்றவாளி யுவராஜ், செயற்கரிய செய்த நாயகனாக கொண்டாடப்படவில்லையா?

சதி மாதாவும், சாதி மாதாவும், பாரத மாதாவும் வேறல்ல. எனவே, சதியும் சாதியும் தொடரவேண்டுமென்று விரும்பும் பாரத தேசத்தின் தவப்புதல்வர்களே, இரண்டு முஷ்டிகளையும் உயர்த்தி உரக்கச் சொல்லுங்கள், “பா..ரேத் மாதா கி.. ஜெய்ய்ய்!”

– அஜித்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

திருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்

0

1. ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக்குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை! – திருச்சி அறைக்கூட்டம்

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான கொள்கையாக உள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்பினர், புரட்சிகர அமைப்புகள், ஆசிரியர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் எதிர்த்து போராடி வரும் சூழலில் ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளான தந்தி தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களும், பார்ப்பன பத்திரிகைகளும் இக்கல்விக் கொள்கை சரியானது என நச்சுத்தனமான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.

nep-exposure-meeting-trichy-posterஇச்சூழ்நிலையில் இக்கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கமான பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் அகண்டபாரத அபாயத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக திருச்சி உறையூர் பகுதியில் 21-09-2016 அன்று மாலை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பல்வேறு பள்ளிக்கல்லூரி மாணவர்கள், புரட்சிகர தோழமை அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க-வின் பொருளாளர் தோழர்.சரவணன் தலைமை வகித்தார். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா கருத்துரையும், மாநில இணைப்பொதுச் செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையும் வழங்கினார்கள்.மேலும் திருச்சியில் புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அப்போது தோழர்.குமார் தங்கள் களப்போரட்ட அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். இடையிடையே புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இறுதியாக திருச்சி ம.க.இ.க-வின் தோழர்.பாவேல் நன்றியுரை வழங்கினார்.

தலைமையுரை – தோழர் சரவணன்:

nep-exposure-meeting-trichy-com-saravanan
தோழர் சரவணன்

“இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது. நாம் இக்கல்விமுறையை ஒழித்து அரசே ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில் தரமான இலவசக்கல்வியை கொண்டுவரவே போராடி வருகிறோம். ஆனால் இந்த மோடி அரசு புதியகல்விகொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசிரம குலக்கல்விமுறையை அமுல்படுத்தி அதில் 100% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முனைகிறது.

nep-exposure-meeting-trichy-1இந்திய தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானி குழுமம் அரசு வங்கிகளிடம் வாங்கிய கடனை வாங்க வக்கில்லாத அரசாங்கம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடமே ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் விளைவு மதுரை பொறியியல் மாணவர் லெனின் ரிலையன்ஸ் ரவுடி கும்பலால் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் ரிலையன்ஸ் கடைகளை முற்றுகையிட்டு போரடினர். ஆனால் இந்த மோடி அரசோ அம்பானி குழுமத்திடம் கைக்கோர்த்துக்கொண்டு அவர்களின் ஜியொ சிம்மை அறிமுகப்படுத்தி தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது. புதிய கல்விகொள்கைக்கும், ரிலையன்ஸிற்கும் எதிராக போராட வேண்டிய மாணவர்களோ இன்று ஜியோ சிம்மை பெறுவதற்கு நாள்முழுக்க கடைகள் முன் கையேந்தி நிற்பது எவ்வளவு கேவலமான செயல் என்பதை நாம் இத்தருணத்தில் உணர வேண்டும்” என மாணவர்கள் போராட்டத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

கருத்துரை தோழர் சத்யா:

தோழர் சத்யா
தோழர் சத்யா

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் அதிகப்படியான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. ஏனெனில் இப்புதிய குலக்கல்வி கொள்கை பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளின் கல்வி மறுப்பு கொள்கையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் விவசாயிகளும், மாணவர்களும் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயி வாங்கிய கடனை கட்ட முடியவில்லை; விளைந்த பயிருக்கு விலையில்லை; விவசாயத்திற்கு தண்ணீரில்லை; அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதேபோல், மாணவர்களை பொருத்தவரையில் கல்வி இலவசமில்லை; கல்விக்கட்டண கொள்ளை; படித்த படிப்புக்கு வேலையில்லை மற்றும் அதனால் கல்விக் கடனை கட்ட முடியவில்லை இப்படி பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தனியார்மயம், இத்தனியார் மயத்தால் தங்கள் பிள்ளைகளை இழந்த பல பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் இந்த அரசு தனியார் முதலாளிகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ய கூட்டம் போடுகிறது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் நூறு சதவிகித தனியார்மயத்தை கொண்டுவர முயற்சிக்கிறது இந்த மோடி அரசாங்கம். இப்படி ஒருபுறம் கல்வியை காசாக்கி கொண்டே மறுபுறம் கல்வியை காவிமயமாக்க துடிக்கிறது. அப்படி கல்வி காவி மயமாக்கப்பட்டால் குஜராத்தை போன்றதொரு ஆர்.எஸ்.எஸ் வேட்டைக்காடாக தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் மாறும்” என எச்சரித்துப் பேசினார்.

அனுபவ உரை தோழர் குமார் :

தோழர் குமார்
தோழர் குமார்

“மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் புதிய கல்விக்கொள்கையின் அபாயத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இலட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்துவருகிறோம். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 20, 2016 அன்று தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி புதிய கல்விகொள்கையின் நகல்களை மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள் முன்பு எரித்து எதிர்ப்பை தெரிவித்தோம். சென்னை மற்றும் கோவையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், விழுப்புரத்தில் போராடிய மாணவர்களை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்த காவல் துறையினரையும் ஜெயா-மோடி அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று கூறினார். மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இருந்தும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை உணராமல் இருக்கும் சூழலில் பு.மா.இ.மு தலைமையில் இப்போராட்டத்தை முழுவீச்சில் எடுத்து செல்வோம் என்றும் கூறினார்.

சிறப்புரை தோழர் காளியப்பன்:

nep-exposure-meeting-trichy-com-kaliappan
தோழர் காளியப்பன்

“புதிய கல்விக்கொள்கையானது அணுகுண்டின் அபாயத்திற்கு ஈடானது. மேலும் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டில் இது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவிலே இதுவரை பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவும் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் கல்வியாளர்களால் ஆய்வு செய்து வரையறுக்கப்பட்டவை. ஆனால் இதனை அவசர அவசரமாக வெறும் 3 மாத காலத்திற்குள்ளாகவே ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கிய பொறுப்புகளை வகித்து பணிபுரிந்த அதிகாரிகள் மட்டுமே வரையறுத்து சூழ்ச்சிகரமான முறையில் அதன் வரைவினை வெளியிட்டு இருக்கிறார்கள். இக்கல்விக் கொள்கையை மேலோட்டமாக பார்ப்போமேயானால் இந்தியாவின் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்துவது போல தோன்றும். ஆனால் உன்னிப்பாக பார்ப்போமேயானால் இது ஒரு தேன் தடவிய விசம் என்பது புரியும். உலக பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக கல்வியை அடகு வைக்கும் முறைதான் இந்த கல்விக் கொள்கை. உலகம் முழுவதுமே கல்வி என்பது தாய்மொழி வழியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை மறுத்து மாணவர்களின் திறமையை, அறிவு வளர்ச்சியை முற்றிலுமாக தடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான கொத்தடிமைகளை உருவாக்கவே முயற்சிக்கிறது. மேலும் வேத கலாச்சார குப்பையான சமஸ்கிருதத்தை அனைத்து பள்ளிக்கல்லூரிகளிலும் கட்டாயமாக திணித்து மாணவர்களை இயல்பிலேயே சிந்தனைரீதியாக சாதி-மத வெறியுடன் வளர்க்க நினைக்கிறது.

nep-exposure-meeting-trichy-5கட்டாய தேர்ச்சியின் காரணமாக மாணவர்களின் தரம் குறைந்து விட்டது, எனவே ஐந்தாம் வகுப்பு முதல் அவர்களை வடிகட்டி தரப்படுத்துகிறோம் என்கிறது இக்கல்விக் கொள்கை. அப்படி மாணவர்களின் தரம் குறைந்ததற்கு யார் காரணம் என்றால் இந்த அரசு தான். ஆனால் அதனை மறைத்து குறைந்த கற்றல் திறன் மாணவர்களை குழந்தை தொழிலாளியாக மாற்றி அவர்களின் உழைப்பை சுரண்டி குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வரத் துணிந்து விட்டது மோடி அரசு.

தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தடைக்கல்லாக இக்கல்விகொள்கை நிற்கப்போகிறது. மேலும் இனி அரசு புதிதாக எந்த கல்வி நிறுவனங்களையும் திறக்காது, பழைய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மானியமும் வழங்காது. தரமான கல்வி எனும் பெயரில் அதிக கட்டணங்களை வசூல் செய்யும் பன்னாட்டு பல்கலைகழங்கள் மட்டுமே அரசால் ஊக்குவிக்கப்படும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை இழுத்து மூடுவது. இதன் மூலம் அருகமை பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளின் லாபத்தை பெருக்குவது. இப்படி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவும், பார்ப்பனிய பனியா கும்பலின் நலனுக்காகவும் ஒரு கல்வி கொள்கையை உருவாக்கி ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டும்” என ஆய்வுப்பூர்வமாக விளக்கிப்பேசினார்.

கருத்தரங்கு உரைகளுக்கு இடையிடையே “நாமக்கட்டி ஆளப்போகுது”, “சமசுகிருதம் படிக்கப்போறியா?”, “எச்சரிக்கை! எச்சரிக்கை!” முதலிய ஆர்.எஸ்.எஸ்சின் அபாயம் குறித்த ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இளந்தோழர்களின் முன்முயற்சியால் அரங்கத்தில் புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை உணர்த்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பல்வேறு பள்ளிக் கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்கள் ஆர்வமாக கருத்தரங்கினை கவனித்தனர். புதிய கல்வி கொள்கையின் அபாயத்தை உணரும் வகையில் இக்கூட்டம் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

2.  மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூடும் வரை தொடர் போராட்டம்!

உழைக்கும் மக்களே அணிதிரண்டு வாரீர்! வாரீர்!

நாள்: 28.09.2016 நேரம்: காலை 11 மணி

manaparai-othakadai-tasmac-siege-noticeகெட்டது போதும்!
கெடுத்தது போதும்!
டாஸ்மாக்கால் பட்டது போதும்!
வீட்டை நாட்டை கெடுக்கின்ற
உயிரை, உடலை பாதிக்கின்ற
அரசு மதுபானக்கடையை
இழுத்து மூடுவோம்!

குடும்பம் தோறும்
குடிக்க வைத்து
வறுமையில் நாளும்
வாடவைத்து,
உழைத்த காசை உருவிகிட்டு
ஊரை கெடுக்கும் செயலை செய்ய
ஆட்சி எதற்கு? அதிகாரிகள் எதற்கு?

ஊட்டச் சத்து டானிக்கா – நீ
ஊருக்குள்ளே விற்கும் சரக்கு,
ஊரே திரண்டு மூட சொல்லியும்
போலீசை வைத்து திறப்பது எதற்கு?

வரம் வேண்டி தவமிருந்தாதான்
வாரம் இருமுறை குடிதண்ணி
கிடைக்குது!
வாழ்வை கெடுக்குற சரக்கு வண்டி
வாரம் முழுக்க வந்து போகுது!

படிக்கிற பிள்ளைக்கு நல்ல
பள்ளிக்கூடம் இல்லை!
வகுப்புகள் தோறும் வாத்தியார்
இல்லை!
சுத்தம் இல்லை! சுகாதாரம் இல்லை!
சுகாதார நிலையம் ஊருக்குள்
இல்லை!
ஆட்சியாளர்களே! அதிகாரிகளே!
நீங்கள், ஆள்வதும், வாழ்வதும்
யாருக்காக?
வருஷம் முழுக்க வழிபறி கொள்ளை!
வழி நெடுக பெண்களுக்கு
தொல்லை!
நாட்டில் நடப்பதை நாளும்
பார்க்கிறோம்
நாத்தம் பிடித்த கடையை மூடி
நல்வழிக் படுத்த ஓரணியில்
திரள்வோம்!

மக்களால் நான்!
மக்களுக்காக நான்!! – மகராசி நீ
சொல்வது உண்மைன்னா
மக்கள் சொல்கிறோம்
டாஸ்மாக் கடையை மூடு!

மக்கள் அதிகாரம்
மணப்பாறை
தொடர்புக்கு : 98431 30911,

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !

60

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்?

பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை. அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கருதினேன்.

எனது உத்தேசமான திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  அவர்கள் உடனே அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றனர். “அவரது கடவுச் சீட்டை மட்டும் வாங்கி விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். எனது பெற்றோர் மற்றும் மற்ற குடும்பத்தினருக்காக கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தேன்.  இந்த நடைமுறைகளெல்லாம் சுலபமாக முடிந்தது ஆச்சரியம்தான்.  முன்பதிவு செய்து எங்களது விமான பயணத்தைத் துவங்கினோம்.

அன்பான வரவேற்பு

Harsh-Mander-1
ஹர்ஷ் மந்தேர்

விமானம் லாகூரில் இறங்கியது. விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். என் அம்மா துவக்கத்தில் கொஞ்சம் பதட்டத்தோடு இருந்ததை கவனித்தேன். நாட்டிலிருந்து வன்முறையால் விரட்டியடிக்கப்பட்ட பழைய நினைவுகளாக இருக்க வேண்டும்; அல்லது இன்றைக்கு இதுவும் ஒரு அந்நிய நிலம் என்கிற நினைவாகவோ இல்லை பல இந்தியர்கள் நினைப்பது போல் எதிரியின் நாடு என்பதாகவோ நினைத்திருக்கலாம்.

இஸ்லாமாபாத் நோக்கிய பயணத்தின் போது, தனது குழந்தைப் பருவத்து பஞ்சாபி மொழியை எனது நண்பர்கள் பேசக் கேட்டதாலும், புதிய இடத்தை வேடிக்கை பார்த்து வந்ததாலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததை கவனித்தேன். இஸ்லாமாபாத் என்கிற நகரமே அவளது பஞ்சாப் நாட்களில் கிடையாது.

இஸ்லாமாபாத்தில் தமது பெற்றோருடன் வசித்து வந்த நண்பர்கள் பலர் வீடுகளுக்கு அழைத்தனர். எனது நண்பர்கள் பஞ்சாபி பாடல்கள் மற்றும் கவிதைகளால் மாலை நேரங்களை அலங்கரித்தனர்; அதை என் பெற்றோர் இரசித்தனர்.

எனது தாயாருக்கு மேலும் ஒரு கோரிக்கை இருந்தது. தான் குழந்தையாகக் கழித்த ராவல்பிண்டியின் அந்தப் பழைய இருப்பிடத்தை அவர் பார்க்க விரும்பினார். அதே போல தான் படித்த புகழ்பெற்ற ராவல்பிண்டி கோர்டான் கல்லூரியைக் காண எனது தந்தையும் விரும்பினார்.

வீடு திரும்பல்

தான் சிறுமியாக இருக்கும் போது வசித்த காலனியின் பெயர் காவல் மண்டி (Gawal Mandi) என எனது தாயார் நினைவுகூர்ந்தார். எனது நண்பர்களுக்கு அந்த இடம் பரிச்சயமாக இருந்தது; இப்போது அது உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பகுதியாக உருமாறியிருந்தது. நாங்கள் அங்கே சென்ற போது எனது தாயார் தனது பழைய வீட்டை கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது முடியாத காரியமாகத் தெரிந்தது.

அநேகமான வீடுகள் புதிதாகவும் நவீன பாணியிலும் கட்டப்பட்டவைகளாக இருந்ததால், அந்த இடமே புதிதாக இருந்தது. தங்கள் குருத்வாரா இருந்த கட்டிடத்தை எனது தாயார் கண்டுபிடித்தார். தற்போது அது ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது.  நாங்கள் அவரது பழைய வீட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அநேகமாக நம்பிக்கை இழந்திருந்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்து அது இன்னமும் நீடித்திருப்பது சாத்தியமில்லை என்று நம்பினோம்.

இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்
இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்

அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் எனது தாய் ஒரு பழைய வீட்டின் பலகணியில் இருந்த குமிழ் வடிவ அலங்காரத்தை நோக்கிக் கைநீட்டினாள். “எனக்கு மிக நன்றாக அது நினைவிருக்கிறது. எனது தந்தைக்கு அந்த அழகான வடிவமைப்பு குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. இந்த மாதிரி அழகான அலங்காரம் அந்தப் பகுதியில் எந்த வீட்டிலும் இல்லை என்று அவர் சொல்வார்” என்றாள் அவள்.

நாங்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த நடுத்தர வயது மனிதர் நாங்கள் யாரைக் காண வந்துள்ளோம் என விசாரித்தார். “திடீரெனக் குறுக்கிட்டு தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் எனது குழந்தைப் பருவத்தில் இந்த வீட்டில் தான் வசித்தேன். தேசப் பிரிவினையால் நாங்கள் இந்தியாவுக்குச் செல்வதவற்கும் முந்தைய காலம் அது. இது தான் எங்கள் வீடாக அப்போது இருந்தது என நினைக்கிறேன்” என்றாள் என் தாய்.

அந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பதிலளித்தார். ”அம்மா, ஏன் இது உங்கள் வீடாக இருந்தது என்று சொல்கிறீர்கள்?” என்றவர், “இப்போதும் இது உங்கள் வீடாகத் தான் இருக்கிறது. தயவு செய்து உள்ளே வாருங்கள்” என்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அது தான் தனது குழந்தைப்பருவ வீடு என்று எனது தாயார் விரைவிலேயே உறுதி செய்தார். கிட்டத்தட்ட ஒரு மோன நிலையில் அவர் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் வீட்டின் மொட்டை மாடிக்கும் சென்றார். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதோடு தொடர்புடைய தனது குழந்தைப்பருவத்தின் உடைந்து போன நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் தில்லிக்குத் திரும்பி பல மாதங்கள் ஆன பின்னும் அந்த வீடு தனது கனவுகளில் திரும்பத் திரும்ப வருவதாக சொல்லிக் கொண்டிருப்பார்.

அரை மணி நேரம் கழித்து வீட்டு உரிமையாளரிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்புவதாகக் கூறினோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர். ”நீங்கள் உங்கள் குழந்தைப்பருவ வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களோடு விருந்து சாப்பிடாமல் எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று கேட்டனர். எங்களது தயக்கங்களையெல்லாம் அவர்கள் புறந்தள்ளினார்கள். எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்களோடு வந்திருந்த பாகிஸ்தானி நண்பர்கள் என மொத்தம் எட்டு பேர்களுக்கும் சேர்த்து உணவு தயாரித்தனர். நாங்கள் திருப்தியாக உணவருந்தினோம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் கிளம்பவே அனுமதித்தனர்.

பாகிஸ்தானுக்கு ஓர் நாடோடிப் பாதை

நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும் எங்களது சாகசப் பயணம் குறித்த தகவல்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடையே பரவின. அடுத்த வருடம் தன்னையும் பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள தனது பழைய வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் எனது மாமியார். எனது பெற்றோரின் வெற்றிகரமான பயணம் அளித்த மகிழ்ச்சி எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்திருந்தது. பின்னர் வேறு சில வயதானவர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள, நானும் எனது மனைவியும் மொத்தம் ஆறு முதியவர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்றோம்.

இந்த முறை கிடைத்த அனுபவங்களும் கடந்த வருடம் கிடைத்தவைகளைப் போன்றே இருந்தன. தனது சக்கர நாற்காலியுடன் சென்றிருந்த எனது மாமியாரை அவரது பழைய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று காட்டினார் அதன் தற்போதைய உரிமையாளர். எங்களோடு சாப்பிட்டு முடித்தபின், “உங்கள் விவசாய நிலத்தைப் பார்க்க விருப்பமில்லையா” என்று எனது மாமியாரிடம் கேட்டனர்.

இரண்டு பயணத்தின் போதும் எனது மனைவி கடைகளுக்குச் சென்று உடைகளையும் காலனிகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கினார். எல்லா கடைக்காரர்களும் நாங்கள் இந்தியர்கள் என்பதை அறிந்து கொண்டால் விலைகளை கணிசமாக குறைத்தனர். ”நீங்கள் எங்கள் விருந்தாளிகள்” என்றனர். “எங்கள் விருந்தாளிகளிடமே நாங்கள் எப்படி லாபம் சம்பாதிப்போம்” என்றனர்.

இந்தப் பயணங்கள் குறித்த செய்திகள் பரவிய போது நான் தொடர்பில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆஷாகிராமைச் சேர்ந்த நண்பர்கள் தாங்களும் இதே போன்ற பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பார்வானியில் செயல்பட்டு வரும் ஆஷாகிராம் நிறுவனம், தொழு நோயாளிகள் மத்தியில் வேலை செய்து வருகிறது.

இவர்களுக்கும் கடவுச் சீட்டுகளை வழங்கியது பாகிஸ்தான் தூதரகம். இந்த முறை ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், செல்பவர்கள் அனைவரும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள். அவர்கள் உணவைத் தவிர பாகிஸ்தானில் இருந்த ஒரு வார காலம் முழுவதையும் மகிழ்ச்சியாக கழித்தனர். ஒவ்வொரு நாளின் இரவு வேளையிலும் பழச்சாறு வாங்க சாலையோரக் கடைகளைத் தேடியலைவார்கள். ஒவ்வொரு இரவிலும் ஒரு புதிய கடையைக் கண்டுபிடிப்பார்கள் – ஒவ்வொரு இரவு புதிய கடை உரிமையாளரும் இவர்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். “இந்தியாவிலிருந்து வரும் எங்கள் விருந்தினர்களிடம் நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். அந்த வாரம் முழுக்க இப்படித் தான் நடந்தது.

எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.

இதுவே எனது சமீபத்திய தேச துரோகச் செயல் குறித்த பிரகடனம்!

– ஹர்ஷ் மந்தேர்
மொழிபெயர்ப்பு : முகில்

நன்றி: scroll.in #SeditionThis: Why I believe Pakistanis are the most gracious people in the world

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

20

கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவைக் காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில் அறிந்திருப்போம்.

kovai-hindu-munnani-riot-ndlf-kovai-poster
கோவை பு.ஜ.தொ.மு போஸ்டர்

தமது தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூக ஆதாயங்களுக்காக இந்து முன்னணி என்ற மதவெறி பொறுக்கி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த கலவரம். சசிக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் வசூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஒரு ரவுடி. அதே போல விநாயகர் சிலைகள் வைப்பது அதற்கான மிரட்டல் வசூல்களை ஒழுங்குபடுத்துவது என்பது போன்ற ‘தொழில்களை’யும் செய்து வந்தவர். சசிக்குமார் அவருடைய வீட்டினருகே கொல்லப்பட்ட பின்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனே அங்கே இந்துமதவெறிக் கும்பல் அணிதிரட்டப்படுகிறது.

முதலில் சசிகுமார் மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை மீது கல் வீசி தாக்குகிறார்கள். பின்னர் பிணம் அரசு மருத்துவமனை உடற் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து முன்னணியின் பொதுச்செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன் எனும் நபர் செப்டம்பர் 23 தமிழகம் தழுவிய பந்த் என அறிவிக்கிறார். கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். அங்கேயே நூற்றுக்கணக்கானோர் திரள்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்படுகின்றனர். கொன்றது முஸ்லீம்கள் தான் என்ற தகவல் எந்த ஆதாரமுமின்றி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை வைத்து கும்பல் சேர்க்கப் படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மதப்பதட்டம் உருவாவதற்கான அனைத்து சூழல்களும் இருக்கையில் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை உடனே அடக்கம் செய்ய வைக்க வேண்டியதுதான் காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கை. ஆனால், மறுநாள் காலை அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை செயற்கையாக பந்த்தை அமலாக்கும் வரை உடற்கூறாய்வை தாமதப்படுத்தியிருக்கிறார்கள். காவல்துறை எப்படி துவக்கம் முதல் இறுதி வரை கலவரத்தை திட்டமிட்டபடி திறம்பட நடத்த தமது நடவடிக்கைகள் மூலம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதற்கு இது முதல் உதாரணம்.

kovai-hindutva-thugs-violence-30மறுநாள் காலை வழக்கம் போல கடைகளை திறந்தவர்களிடம் வண்டிகளில் கும்பல் கும்பலாக பகுதிகளுக்கு சென்று இன்று பந்த் திறக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறார்கள். மீறி பேசியவர்களின் கடைகளை உடைத்திருக்கிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி கண்ணாடியை உடைத்து செயற்கையான பதட்டத்தை அந்த பகுதியில் உருவாக்கி கடையடைப்பை சுமத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மூன்று மாவட்டங்களிலும், அதிலும் குறிப்பாக கோவையிலும் திருப்பூரிலும் முழு வீச்சில் அமலாகியிருக்கிறது.

திருப்பூரில் கல் வீச்சால் பதறி இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார். ஏராளமான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆக, முந்தைய நாள் முன்னிரவில் நடந்த சம்பவம் அறியாமல் தனது இயல்பு வாழ்க்கையை துவங்கிய இரு மாவட்டங்களையும் காலை 9 மணிக்குள் முடக்கி முற்பகல் திட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். இந்த முற்பகல் திட்டத்தின் மொத்தக் காட்சியிலும் போலீசு ஒரே ஒரு சீனில் கூட வராதது தற்செயல் அல்ல. ஒரு இடத்தில் கூட வந்து பந்த்தை தடுக்கும் நடவடிக்கையில் போலீசு ஈடுபடவில்லை.

kovai-hindutva-thugs-violence-36மதிய வாக்கில் உடற்கூறாய்வு முடிவடையும் போதே கிட்டத்தட்ட கோவையின் பிரதான பகுதிகள் துவங்கி மொத்த மாவட்டத்தின் இயக்கமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போது வரை காவல்துறை வைத்திருக்கும் எந்த சிறப்புப் படையும் மருத்துவமனைக்கு வரவில்லை. கொடி அணிவகுப்பு போன்ற முன்னேற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. “இன்னும் எதுவும் நடக்கவில்லையே” என காவல்துறை காத்திருந்தது போலவே அப்பட்டமாக தெரிந்தது. முந்தைய அனுபவங்களிலிருந்து இன்று என்ன நடத்த முனைகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

பிணத்தை ஊர்வலமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததும், அதற்கு 18 கிலோமீட்டர் சுற்றி துடியலூர் மின் மயானம் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்ததும் இவர்களது எண்ணத்தை தெளிவாகவே காட்டியது. பிணம் பிணவறையை விட்டு வெளியே வரும் முன்னரே காவிக் கும்பல் அருகிலிருக்கும் இஸ்லாமியர் பகுதியான கோட்டைமேட்டுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்ட அவர்கள் மறுக்க பதட்டம் கூடிய நிலையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த காவல்துறை  இந்து முன்னணி கும்பலைத் தடுக்கக் கூட முனையவில்லை. 1997-ல், இதே கோவையில் இதே உக்கடத்தில் அருந்ததிய இந்துக்களும் முஸ்லீம்களும் மோதிக்கொண்டிருக்கும் போதும் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வரலாறு.

kovai-hindutva-thugs-violence-01முசுலீம் மக்கள் வாழும் பகுதியின் வழியாகவே பிணத்தை கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறார்கள். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 1500 பேருடன் பிணத்தை முன்னெடுத்துக் கொண்டு பைக் பேரணியாக கிளம்பினார்கள். காவிகளுக்கு வந்த வழிகாட்டுதல், “முடிந்த வரை தாமதப்படுத்தி கொண்டு போக வேண்டும்; போகும் வழியில் எந்த கடை திறந்திருந்தாலும் அடிக்க வேண்டும்; பள்ளி வாசல் மீதும் சர்ச் மீதும் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வேண்டும்; அங்கு முன்னால் நிற்கும் ஆட்களை அடித்தாலும் தப்பில்லை; முசுலீம்கள் கடைகளை கண்டிப்பாக அடிக்க வேண்டும்; இறுதி இலக்கான துடியலூரை துவம்சம் செய்ய வேண்டும்” என்பதே. இது ஒரு காவியின் வாக்குமூலம். இதை காவல் துறையின் ஆதரவோடு செய்யப்போகிறோம் என்பது அவர்களுக்குள் கூடுதலாக ஒரு துளி உற்சாகம் தந்திருக்கும். அதுவும் கமிஷனர் முன்னாலேயே என்பது இன்னும் போதை ஏற்றும் விசயமல்லவா…! “போலீஸ்காரன் பக்கத்துல கெடந்த கல்லையே தூக்கி அடிச்சன்டா.. அவன் ஒண்ணுமே சொல்லல டா…..!” இதுவும் ஒரு காவி சொன்னதே.

kovai-hindutva-thugs-violence-20துடியலூர் வரும் வரை நூற்றுக்கணக்கான கடைகளை, ஏராளமான முஸ்லீம் அடையாளங்கள் தொனித்த வாகனங்களை அடித்து நொறுக்கி குப்புற கவிழ்த்துப் போட்டு, கண்ணில் பட்ட பள்ளி வாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்தபடியே வந்த காவிக் கும்பல், துடியலூரில் கிட்டத்தட்ட 20 கடைகளை சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தனர். ஒரு காவலரின் மண்டையை பிளந்த பின்னர் தான் காவல்துறை இங்கு தடியடிப் பிரயோகம் செய்து துரத்த, பதிலுக்கு துடியலூர் காவல்துறை ஆய்வாளரின் ஜீப்பை நடு ரோட்டில் போட்டு எரித்தனர்.

ஒரு முழு நாளையும் திட்டமிட்டு பயன்படுத்தி காவல்துறையின் சீரிய பங்களிப்போடு ஒரு கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்தப் பிணம் அரசு மருத்துவமனையில் இருக்கையிலேயே இந்த இந்து முன்னணி கும்பலை பற்றி ஓரளவு அறிந்த கோவை மக்கள் பலர் காலையிலேயே கலவர நெடியை உணர்ந்து விட்டார்கள். அறிவிப்பில்லாமல் கலவரங்கள் அமலுக்கு வருவதில்லை. ஆனால், காவல்துறை இதை அணுகிய விதம் என்பது மிக மிக ஆபத்தான போக்கிற்கான அறிகுறி. கொலை, கொள்ளையில் அப்பட்டமாக ஈடுபடும் இந்த காவல்துறைதான் இதே கொள்ளை கலவர கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றால் இங்கு சொல்லிக் கொள்ளும்  ஜனநாயகம் நரகலை விட அசிங்கமாக நாறுகிறது என்று பொருள்.

kovai-hindu-munnani-riot-pp-poster.கலவரம் முடிந்து இந்து முன்னணி, திருப்பூரில் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு போலீஸ் கைது பண்ணிக்கொண்டிருக்கிறது. கோவையில் நூறு வார்டில் கவுன்சிலர் கேண்டிடேட்டாக நிற்கவிருந்தவர்கள் எத்தனை பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் மிகக் குறைவு. மொத்தத்தில் அணிகளை தன்னுடைய வழக்கமான சூழ்ச்சியினால் சிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்துமதவெறியர்கள்.

தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவேன் என்று பகிரங்கமா பேட்டி கொடுத்து தூண்டி விட்டு கடைகளை  பள்ளிவாசலை உடைக்க சொன்னவன் அங்கே செயற்குழு கூட்டத்தில் பகிரங்கமாக ‘எழுச்சியுரை’ ஆற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கே போலீசும், ஐ.பி.எஸ்சும், ஏட்டையாக்களும் மிக்சர், காபியுடன் சகஜமாக இருக்கின்றனர். இதற்கு முந்தைய கலவரங்களில் எந்த இந்து கைதானானோ அதே காலாட்படை இந்துக்கள் மட்டும்தான், செல்போன் திருடுனவன் பிரியாணி திருடுனவன  என்று கைது செய்யப்படுகிறார்கள்.  ஊடகங்களும் இதை பெரிய செய்தியா 400 பேர் கைது என்று போடுகிறார்கள். ஆனால் முக்கியமான ரவுடிப்பட்டாளங்கள், தளபதிகள் ஒருவர் கூட காவல் துறையால் கைது செய்யப்படவில்லை.தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் போலிசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தே செய்திகளை வெளியிட்டன.

அச்சு ஊடகங்களும் இந்து முன்னணி களத்தில் செய்த வன்முறையை மென்மையாக எழுத்தில் மாற்ற கடும் பிரயத்தனப்பட்டனர். துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்திருக்கிறது துடியலூரில் அது மறைக்கப்பட்டிருக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் சித்ராக்கா என்ற பெண்மணி அடுத்த கவுன்சிலர் ஆகி ஓட்டுப் பொறுக்கும் ஆசையோடு பி.ஜே.பி-யில் வலம் வரும் ஒருவர். இவர் தலைமையில் நடந்த அட்டூழியங்கள் பலவும் மறைக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஒருவரின் செல்போன் கடையில் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து இந்து முன்னணியின் நாற்றம் வாட்ஸ்-அப்பில் மணக்கிறது. இதை இந்து முன்னணி போர்வையில் சமூக விரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து. இந்து முன்னணியே சமூக விரோத கும்பல் தானே?

மாநில அரசின்  பங்களிப்பு, கண்ணசைவு  இல்லாமல் ஒரு மாநகராட்சியை, தொழில் நகரை இப்படி முடக்க முடியாது.  காவி கொள்ளிக் கட்டைகள் திருப்பூரில் அடுத்த அடிக்கு ஆயத்தமாகிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை தூண்டி, முஸ்லீம்களை எதிர்நிலைக்குத் தள்ளி, அவர்களையும் அமைப்பாக – இந்து எதிர் அமைப்பாக மாற வேண்டிய சூழலை, மதப்பதட்ட சூழலை – கலவர நிலையை உருவாக்கும் இந்து முன்னணி, அதற்கு துணை நிற்கும் காவல் துறை இரண்டும் தான் முதன்மை குற்றவாளிகள்,

இக்கலவரத்தில். கைதான 378 வீர இந்துக்களில் எத்தனை பேர் பார்ப்பன இந்து? எத்தனை பேர் கவுண்ட இந்து? எத்தனை பேர் அருந்ததிய, இதர தாழ்த்தப்பட்ட இந்து? – எனக் கணக்கிட்டால்  இந்த கும்பலின் உண்மை முகம் தெரியும். 1997 கலவரத்தில் கெம்பட்டி காலனி குனியமுத்தூர் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அருந்ததிய சமூகத்தை சேர்ந்த கணிசமான மக்களை காலாட்படையாக பயன்படுத்தி கலவரத்தை நடத்தினர். இம்முறை கொஞ்சம் நகர்ந்து சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் என்று வந்து விட்டார்கள். ஆனால், எங்கு வந்தாலும் கேஸ் வாங்க ஒரு சாதி அதற்கு வெறியேத்த ஒரு சாதி திட்டம் போட்டு இயக்குவது ஒரு சாதி. இப்படி இது சாதியை பாதுகாக்கும் சாதி முன்னணி! பார்ப்பன – ‘மேல்’ சாதி இந்துக்கள் இயக்கங்களின் தலைமையில் வழிநடத்த, பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச் சாதி இந்துக்கள் வட்டார அளவில் தலைமை வகிக்க – அணிதிரட்ட, பிற்பட்டுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் களத்தில் தாக்குதலை நடத்துகிறார்கள். ஆக பார்ப்பனியத்தின் வருண தருமம் கோவை ஆர்.எஸ்.எஸ் கலவரத்திலும் அச்சு அசலாக அப்படியே செயல்படுகிறது.

இந்த தாக்குதலில் விநாயகர் ஊர்வலத்திற்கு காசு கொடுத்த இந்து வியாபாரிகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள். இனி கோவை வர்த்தகர்கள் அனைவரும் இந்த சூறையாடலுக்கு பயந்து மாமுல் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

இது ஒரு துவக்கம் தான்.  வளர்ச்சி கோஷமிட்டு ஆட்சியை பிடித்த மோடி கும்பலின் சுயரூபம் இதுதான். குஜராத் மாடல் என்பது இதுதான். குஜராத்தில் இன்னும் பா.ஜ.க கும்பல் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் நடைபெறுவதும் இதுதான். இந்த அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய பார்ப்பனிய கும்பல் நம் தமிழகத்தை நெருங்கி வந்துவிட்டது. கோவையின் தலைக்கு மேல் எந்நேரமும் மதவெறிக்கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

கருத்துத் தளத்திலும் நடைமுறைக் களத்திலும் பார்ப்பனி இந்துமதவெறி பாசிசத்தை முறியடிக்க வேண்டியது நம் கடமை!

கோவையில் RSS, BJP கும்பலின் காலித்தனம்!

உழைக்கும் மக்களே!

கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட்
புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக
முசுலீம் கடைகள் சூறையாடல்!
அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு!

குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி
உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே
காவி படைகளின் வெறியாட்டம்!

வானரப்படையின் வன்முறைக்கு துணைபுரிந்த
கோவை போலீசு கமிசனர் அமல்ராஜை கைது செய்து,
சிறையில் அடைக்க போராடுவோம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்க
அரசை நிர்ப்பந்திப்போம்!

இந்து முன்னணி, RSS, PJP ஆகிய இந்து மதவெறி கும்பலை
தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்போம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

சிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள்

1

புதிய கல்விக் கொள்கை 2016! கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி!

nep-rsyf-meeting-posterமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 25, 2016 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் நகரின் போல்நாராயணன் பிள்ளை தெருவில் நடைபெற்றது.

சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டபோது, “நீங்க எதாவது நாலு செவுத்துக்குள்ள வச்சி பேசுங்க, உங்களுக்கு பொது இடத்துல பேச அனுமதி கொடுத்தா, மக்கள எல்லாரையும் நீங்க, மூளைசலவை செய்து, தீவிரவாதிகளா மாத்திடுவீங்க” எனக் கூறி கருத்தரங்கம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு சென்றது பு.மா.இ.மு. ஆனால், நீதிமன்றம், நாம் பேசும் கருத்து மக்களை பற்றிக் கொள்ளும் என பயந்து, கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்துவிட்டது. பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது, அதிலும் 5 மணியிலிருந்து 9 வரைதான் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

nep-rsyf-meeting-poster-on-the-wallபொதுக்கூட்டத்திற்காக பல்வேறு இடங்களில் தோழர்கள் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தோழர் கோவன் படம் இருந்ததை பார்த்து, “கோவன் பாடல் பாடுவார்னு போட்டிருக்கு, அவர் வருவாரா” என க்யூ பிரிவு போலீசு, தோழர்களுக்கு போன் செய்து கேட்டது.

24-09-2016 அன்று இரவு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போது, நான்கு, ஐந்து போலீசுகள் தோழர்களை அழைத்து, “ஏய் இங்க வாடா, என்ன ஒட்டுற” என்றது. ‘போலீசு கூப்பிட்டா பயப்பட நாங்க கோழைகள் அல்ல, மக்களுகாக போராடுபவர்கள், போஸ்டர் ஒட்டுரோம்” என கூறிவிட்டு தொடர்ந்து போஸ்டர் ஒட்டினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

com-raju-state-coordinator-pp-tn
வழக்கறிஞர் சி. ராஜு

பொதுக்கூட்டத்தை விருதை பகுதி செயலர் தோழர் மணிவாசகன் தலைமை ஏற்று நடத்தினார். வழக்கறிஞர் சி.செந்தில் (இணைச்செயலாளர், மக்கள் அதிகாரம். கடலூர் மாவட்டம்) தன் எதிர்ப்பை பதிவு செய்தார். திரு.ரமேஷ் (அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம், சென்னை) பேசுகையில், இந்த புதிய கல்விக்கொள்கை எப்படிப்பட்ட அபாயம் என்பதை பல உதாரணங்களுடன் விளக்கினார்.

வழக்கறிஞர். சி.ராஜூ (மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு) பேசுகையில், “இந்த அரசு தோற்றுபோய் விட்டது, ஒருபோதும் இது உழைக்கும் மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை. IAS, IPS என எந்த அதிகாரிகளிடம் சென்றாலும் நம் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. கல்விக்கொள்ளை, மணல் கொள்ளை, காவிரி பிரச்சினை எதுவாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் தீரவேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதே ஒரே மாற்று” என மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தோழர் கணேசன்
தோழர் கணேசன்

தோழர். கணேசன், (மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு தமிழ்நாடு) பேசுகையில், “வரலாற்றில் பார்க்கும் போது, இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர், போலீசு அதிகாரியின் மகன். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.” என மாணவர்கள், பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

தோழர்கள், பொதுமக்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர், இந்த பொதுக்கூட்டத்தை கேட்டனர். பொதுக்கூட்டத்தின் முடிவிலேயே, 20-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள், பு.மா.இ.மு-வில் தாமாகவே முன்வந்து உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
88703 81056

இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !

15

puthiya-jananayagam-september-2016பெல்லட் குண்டுகளால் சல்லடைபோலத் துளைக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்களின் முகங்கள், மோடி அரசின் கோரமான பாசிச முகத்தை உலகுக்கு அம்பலமாக்கியிருக்கின்றன. மாதக் கணக்கில் தொடரும் ஊரடங்கு உத்தரவையும் மீறி நடந்துவரும் இந்தப் போராட்டத்தில், அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கும் இந்தியப் படைக்கு எதிராக, காஷ்மீர் இளைஞர்கள் கையில் ஏந்தியிருப்பது – கல். ஆதி மனிதன் கண்டறிந்த முதல் ஆயுதம். இது காஷ்மீரின் புதிய கற்காலம்.

அதிநவீன ஆயுதங்களுடன் அணிவகுத்து நிற்கும் இந்தியப் படையைக் கற்களால் எதிர்கொண்டு வீழ்த்திவரும் இளைஞர்கள் சிலரை, களத்தில் நேர்காணல் செய்திருக்கிறார் ”அவுட்லுக்” பத்திரிகையாளர் சவுகத் ஏமோட்டா. (அவுட்லுக், 12 செப், 2016). காஷ்மீர் மக்களின் மன உணர்வை ஒரு இலக்கியம்போலப் படம்பிடித்துக் காட்டும் அக்கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்.

தினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர்கள் காஷ்மீரை ஆக்கிரமித்திருந்த காலத்தில், ஸ்ரீநகரில் உள்ள குன்றின் மீது ஒரு கோட்டையைக் கட்டியிருந்தார்கள். கோட்டையிலிருந்து முகலாயப் படை சிப்பாய்கள் வெளியேவரும்போது, காஷ்மீரி இளைஞர்கள் கையில் கற்களுடன் ஸ்ரீநகரின் தெருக்களில் திடீரென்று தோன்றுவார்கள். அந்த சிப்பாய்களின் மீது கல்லெறிவார்கள். கல்லடி தாங்காத சிப்பாய்கள் பின்வாங்கி, கோட்டைக்குள் ஓடி ஒளிவார்கள். இப்படி முகலாயஆக்கிரமிப்பை எதிர்த்துநின்ற அந்த இளைஞர்கள்,“திலாவார்” (வீரநெஞ்சினர்) என்று மக்களால் கொண்டாடப்பட்டனர்.

அவுட்லுக் இதழுக்கு காஷ்மீர் மக்களின் போராட்ட நியாயம் குறித்து பேட்டியளித்த இளைஞர்கள்
அவுட்லுக் இதழுக்கு காஷ்மீர் மக்களின் போராட்ட நியாயம் குறித்து பேட்டியளித்த இளைஞர்கள்

நான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தொன்மை வாய்ந்த அந்தக் கல், கோபம் கொண்ட இன்றைய காஷ்மீர் இளைஞர்களின் கையிலும் விருப்பத்துக்குரிய ஆயுதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த முகலாயக் கோட்டையிலிருந்து கல்லெறி தூரத்திலிருக்கிறது ஸ்ரீநகரின் நவ்ஹட்டா என்ற பகுதி. காஷ்மீரிலேயே கல்லெறியும் போராட்டம் மிகத் தீவிரமாக நடந்துவரும் பகுதி இதுதான்.

கல்லெறியும் இளைஞர்கள் பெரும்பாலும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்பத்தில் புழங்குபவர்கள். அவர்களுடைய உள்ளங்களில் ஏன் இத்தனை வெறுப்பு? விடுதலை குறித்த அவர்களது கருத்து என்ன? தங்கள் உயிரையே பணயம் வைக்குமாறு அவர்களைத் தூண்டுவது எது? இந்தியப் படையினர் சொல்வதுபோல அவர்கள் கூலிக்குக் கல்லெறிபவர்களா? கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சூழலில், இந்தக் கேள்விகளுக்கு பதில் கேட்டு கல்லெறியும் இளைஞர்களைத் தேடிச் சென்றது அவுட்லுக் ஏடு. சந்தித்த நான்கு இளைஞர்களும் காமெராவின்முன் முகமூடியை அகற்ற மறுத்து விட்டனர். முழுப்பெயரை சொல்வதற்கும் மறுத்து விட்டனர்.

ஒரேவிதமான அனுபவ இழை அந்த இளைஞர்கள் அனைவரையும் இணைத்தது. எல்லோருமே இந்தியப் படையினரின் கையில் அடி, உதை, சித்திரவதைகளை அனுபவித்திருக்கின்றனர். அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். கல்லெறிவது என்பது இந்தியாவே வெளியேறு என்று சொல்லும் அரசியல் பிரகடனம் என்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

ஒரு நல்ல வேலை, சம்பளம் என்பதெல்லாம் இந்தப் பையன்களின் மனதில் இல்லை. பாகிஸ்தானும் பிரிவினைவாத அமைப்புகளும் காசு கொடுப்பதனால்தான் இளைஞர்கள் கல்லெறிகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கேட்டு அவர்கள் சிரிக்கிறார்கள். (பணம் கொடுக்கப்படுகிறது என்ற கூற்று அதிகாரிகளாலும் நிரூபிக்கப்படவில்லை) தாங்கள் எறியும் கற்கள் காஷ்மீரிலிருந்து இந்தியாவை உடனே விரட்டிவிடும் என்றெல்லாம் அவர்கள் நம்பவில்லை. அது தோட்டாக்களையும், பெல்லட் குண்டுகளையும்தான் வரவழைக்குமென்றும் அதன் விளைவாகத் தங்களுக்கு கண்பார்வை போய்விடும் அல்லது உயிரே போய்விடும் என்றும் அவர்களுக்குத் தெரியாமலும் இல்லை.

kashmir_2சில பத்திரிகைகள் இந்த இளைஞர்கள் எல்லோரும் இசுலாமிய தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், இந்த இளைஞர்களைப் போராட்டத்துக்கு வரவழைத்திருப்பது இசுலாம் அல்ல. அவர்களது முகமூடிகளில் பாக். ஆதரவு முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன. சிலர் பாக். ஆதரவு முழக்கங்களை எழுப்பியிருக்கிறார்கள். ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியைக்கூட உயர்த்திக் காட்டியிருக்கிறார். ஆனால், எந்த ஒரு இளைஞரும் இசுலாம் என்ற சொல்லையோ, காஷ்மீரை இசுலாமியமயமாக்குவது பற்றியோ எங்களிடம் தவறிக்கூடப் பேசவில்லை.

இனி அவர்களுடைய கதையை அவர்களுடைய சொற்களிலேயே கேட்போம்.

ஃபரூக், வயது-17, மாணவன்:

எனக்கு மூன்று சகோதரிகள். அப்பாவுக்கு வயதாகிவிட்டது. குடும்பம் என்னை நம்பித்தான் இருக்கிறது. நான் போலீசின் பார்வைக்குள் வந்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். இன்றோ நாளையோ நான் கைது செய்யப்படுவேன், அல்லது கொல்லப்படுவேன். கைது செய்யப்பட்டால் என்னை விடுவிப்பதற்கு உள்ளூர் போலீசு அதிகாரியிடம் என் அப்பாவும், சகோதரிகளும் கெஞ்ச வேண்டியிருக்கும், இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாமலில்லை.

படையினர் மீது கல்லை எறியும்போது நான் கொல்லப்படுவேன் என்று தெரிந்துதான் செய்கிறேன். கைது அல்லது மரணம் குறித்து எனக்கு பயம் வரவில்லையே. முன்னர் என் குடும்பத்தினர் என்னைத் தடுப்பார்கள். இப்போதெல்லாம் அவர்களும் தடுப்பதில்லை. மரணம் என்பதை இவ்வளவு பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், வாழ்வது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது இல்லையா?

அனைத்துக் கட்சிக் குழுவோடு வந்த சி.பி.எம்.இன் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரியும் சி.பி.ஐ.இன் டி.ராஜாவும், ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சயீத் அலி ஷா கீலானியைச் சந்திப்பதற்காக, தாழிட்டுக் கிடக்கும் அவர் வீட்டு வாசல்கதவின் அருகே கால்கடுக்க காத்து நின்ற பிறகும், அவர்களை கீலானி சந்திக்க மறுத்துவிட்டார்
அனைத்துக் கட்சிக் குழுவோடு வந்த சி.பி.எம்.இன் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரியும் சி.பி.ஐ.இன் டி.ராஜாவும், ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சயீத் அலி ஷா கீலானியைச் சந்திப்பதற்காக, தாழிட்டுக் கிடக்கும் அவர் வீட்டு வாசல்கதவின் அருகே கால்கடுக்க காத்து நின்ற பிறகும், அவர்களை கீலானி சந்திக்க மறுத்துவிட்டார்

கடந்த 50 நாட்களில் ஒருநாள்கூட நான் இரவு வீட்டில் தங்கவில்லை. பெற்றோரும் சகோதரிகளும் என்னைப் பார்க்க வேண்டுமென ஏங்குகிறார்கள். என்ன செய்வது, விடுதலை என்பது எளிதாக கிடைப்பதில்லையே! 2010 போராட்டத்தின்போது என் நண்பர்கள் பலரை நான் இழந்திருக்கிறேன்.அப்போது எனக்கு வயது 11. இந்த ஆண்டு என் கண்முன்னே யாசிர் என்ற பையன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையெல்லாம் நேருக்குநேர் பார்க்கிறோம். போராடுவதற்கு எங்களை வேறு யாராவது ஒருவர் தூண்ட வேண்டுமா என்ன?

கல்லெறிவதற்கு யாரோ எங்களுக்குக் காசு கொடுக்கிறார்கள் என்று சொல்வது கீழ்த்தரமான அவதூறு. கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான். கடைசி இந்தியச் சிப்பாய் இங்கிருந்து வெளியேறும்வரை இந்த இயக்கம் ஓயாது. நான் காஷ்மீர் விடுதலையைக் கண்ணால் பார்க்காமலேயே செத்துவிடலாம். ஆனால் இன்று இந்த இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பது எங்கள் ஒவ்வொருவரின் கடமை.

பஷீர், வயது-19, சேல்ஸ்மேன்:

caption-1கல்லெறிவது என்பது கிரிக்கெட் அல்ல. துப்பாக்கியைக் கையில் எடுக்கும் போராளிக்கும் எங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு வடிவம் இது. பாலஸ்தீனத்தில் கல்லெறியும் போராட்டம் நடத்துபவர்களை யூதர்கள் (இசுரேல்அரசு) 20 ஆண்டு சிறை வைப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்படி ஒரு கொடுங்கோல் சட்டத்தைக் காஷ்மீரிலும் கொண்டுவருவார்கள். ஆனால் அவையெல்லாம் எங்களைக் கல்லைப்போல மென்மேலும் இறுகச் செய்வதற்குத்தான் பயன்படும்.

பாகிஸ்தான் தலைக்கு 500 ரூபாய் தருகிறது என்று சொல்கிறார்கள். ஐநூறு ரூபாய்க்காக நான் உயிரைக் கொடுப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? உயிர் என்ன அவ்வளவு மலிவா? போலீசு மீது கல்லெறிந்தால் என்ன நடக்கும்? சித்திரவதை, சிறை, குடும்பத்துக்கு நிரந்தரமாக போலீசு துன்புறுத்தல்! வெறும் 500 ரூபாய்க்காக எவனாவது இதையெல்லாம் வரவழைத்துக் கொள்வானா?

கண்ணீர்ப் புகைகுண்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கண் இமைகளில் பற்பசையைத் தேய்த்துக் கொள்கிறோம். நாக்குக்கு அடியில் உப்பை வைத்துக் கொள்கிறோம். அமைதியான போராட்டத்தை அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் ஒடுக்கும்போது எங்களுக்கு வேறு என்னவழி இருக்கிறது? நாங்கள் சொல்ல விரும்புவதை இந்தக் கற்களின் மூலமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

2008-இல் அமர்நாத் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை எதிர்த்த போராட்டத்தின் போதுதான் நான் முதன்முதலாகக் கல்லைக் கையில் எடுத்தேன். அன்று நான்ஒரு சிறுவன். அன்றிலிருந்து இந்தியாவுக்கு எதிரான எனது வெறுப்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2008-இலும் 2010-இலும் நடந்ததைப்போல, தலைமை எங்களை விலைபேசிவிடக் கூடாதே என்பதுதான் என் கவலை.

kashmir_4
அரசுப் படையினரால் இழுத்துச் செல்லப்பட்ட பிறகு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களின் அருகே கதறி அழும் தாய். (கோப்புப் படம்)

உங்களுக்குத் தெரியுமா? என் சகோதரன் போலீசில் வேலை பார்க்கிறான். ஆனால், என்னைப் பொருத்தவரை ஒரு சி.ஆர்.பி.எப். சிப்பாய்க்கும் அவனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இந்தியாவின் ஆட்கள். இந்தியா எங்களை ஏறி மிதிக்கிறது என்பதை அவனும் ஒப்புக்கொள்கிறான். ஆனால் அந்தப் பக்கம் நிற்பது என்று அவன் முடிவு செய்து விட்டான். சில நேரங்களில் எங்களுக்குள் பேச்சு தடித்து கைகலப்பாகிவிடும். ஒருவிதத்தில், இந்தியாவை எதிர்த்து நான் வீட்டிலும் போராடுகிறேன். வெளியிலும் போராடுகிறேன்.

வாமிக், வயது-15, மாணவன்

சமீபத்தில் என் அடிவயிற்றில் குண்டு பாய்ந்துவிட்டது. என்னைக் கொலை செய்வது என்ற முடிவுடன் மிகவும் பக்கத்திலிருந்து ஒரு போலீசுக்காரன் சுட்டான். அல்லாவின் அருளால் நான் விரைவில் குணமடைந்துவிட்டேன். “போராட்டத்துக்கு போகாதே”என்று அப்பாவும் அம்மாவும் என்னிடம் கெஞ்சுகிறார்கள். நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன், “நான் தியாகியாக விரும்புகிறேன்.”

caption-2கொஞ்ச நாட்களுக்கு முன் என் நண்பன் இர்ஃபானைச் சுட்டுக் கொன்றார்கள். அவனுக்கு வயது 18. அவன்மேல் ஸ்ரீநகரின் எல்லா போலீசு ஸ்டேசனிலும் சேர்த்து மொத்தம் 21 எப்.ஐ.ஆர்.கள் இருந்தன. அவனுக்கு ஒரு விதவைத் தாய், திருமண வயதில் இரண்டு சகோதரிகள். அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்ற கவலை இல்லாதிருந்தால், அவன் என்றைக்கோ போராளி இயக்கத்தில் சேர்ந்திருப்பான்.

எனக்கு துப்பாக்கி கிடைக்கவில்லை. அதனால் கல்லை எடுக்கிறேன். எங்களுடைய கற்கள் இந்தியப் படையினரை விரக்தியடையச் செய்துவிட்டன. அதனால்தான் தங்களுடைய கைக்கூலிகளை எங்களுக்குள் ஊடுருவ வைத்திருக்கிறார்கள்.

2010 போராட்டத்தின்போது கூலிக்கு மாரடிக்கும் பி.டி.பி. (மெகபூபா) கட்சியினர் எங்களோடு சேர்ந்துகொண்டு கல்லெறிந்தார்கள். இப்போது 2016-இல் தேசிய மாநாட்டுக் கட்சிக்காரர்கள் சிலபேர் ஊடுருவியிருக்கிறார்கள். இந்த“போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு கூலிப் படையினர்”காசு வாங்கிக்கொண்டு கல்லெறிகிறார்கள் என்று சொல்லட்டும். நான் ஒத்துக்கொள்கிறேன்.

பாகிஸ்தானும் ஹுரியத்தும் எங்களுக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே, அது நகைப்புக்குரிய குற்றச்சாட்டு. உண்மையைச் சொன்னால், இந்தக் கல்லெறியும் போராட்டம் பல அரசியல்வாதிகளின் திட்டத்தில் மண்ணைப் போட்டிருக்கிறது. போராட்டம் உயிரோடு இருக்கும்வரை இவர்களால் எங்கள் மீது எந்த ஒப்பந்தத்தையும் திணிக்க முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் எந்த ஹுரியத் தலைவரையும் நேரில் பார்த்ததுகூடஇல்லை. என்னுடைய இரண்டு தாய் மாமன்கள் போலீசில் இருந்தார்கள். அதில் ஒருவரிடம் பேசியே ராஜினாமா செய்ய வைத்திருக்கிறேன்.

caption-3எதிர்விளைவுகளைச் சொல்லி சிலர் பயம் காட்டுகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். காயத்துக்கு கட்டுப் போடுவதற்காகக்கூட நான் பகல் நேரத்தில் நடமாட முடியாது. இதுதான் இங்கே நிலைமை. எதிரிகளுக்கு நான் சொல்கிறேன். “கல்லெறியும் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால், கல்லெறியும் இளைஞர்கள்அத்தனை பேரையும் நீங்கள் கொல்ல வேண்டும். இந்தியப் படையினரால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் இங்கே 50,000 பேர் இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்!”

ரயான், வயது-15, மாணவன்:

கல்லெறிந்தே இந்தியாவை விரட்டிவிட முடியாது என்பது எனக்கும்தெரியும். “நீங்கள் எங்கள் நிலத்தை ஆள முடியும், எங்கள் மனத்தை ஒருபோதும் ஆள முடியாது”என்று இந்தியாவுக்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம். ஒரு எட்டு வயதுச் சிறுவனைஅடித்தே கொல்லும் காட்சியைக் கண்ணால் பார்த்த பிறகு, எப்படி உங்களால் சாதாரணமாகச் சிந்திக்க முடியும்? 1990களைப்போல இன்று துப்பாக்கிகள் எளிதாக கிடைத்தால், இன்று ஒரு மக்கள்திரள் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும். அன்று நடைபெற்றதைவிட வலிமையாக நடக்கும். அதில் முதல் ஆளாக நான் சேர்ந்திருப்பேன்.

காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அமைதியான முறையில்தான் பிரச்சினையை தீர்க்க முயன்றார்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் ஏமாற்றப் பட்டோம். டெல்லியை நம்பியது எங்கள் தலைவர்கள் செய்த தவறு. டெல்லி எங்களை எந்த அளவு அடக்க முயல்கிறதோ, அந்த அளவு அதற்கு எதிரான ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பும். விடுதலை என்பது தொலைவில் இருக்கலாம். ஆனால் எதிர்ப்புணர்வு என்பது எங்கள் இரத்தத்திலேயே இருக்கிறது. நாங்கள் நிறுத்த மாட்டோம்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

0

1. நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! – மக்கள் அதிகாரம்

pp-kaveri-side-bar‘எங்கள் இரத்தத்தை வேண்டுமானால் தருகிறோம்; தண்ணீர் தரமுடியாது’ என்று சாகிறான் கன்னடன். ‘தண்ணீருக்காக உயிரையும் கொடுக்கிறேன்’ என்று கொளுத்திக் கொள்கிறான்., தமிழன். இம்மாதிரிப் போக்குகள் வளரலாம், தவிர குறையாது. ஆகவேதான் வருங்காலத்தில் தண்ணீருக்காக உலகப் போரை வெடிக்கலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது அதனால், தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்து விடுமா? இனியாவது நாம் நிம்மதிப் பெருமூச்சு விட முடியுமா? முடியாது!

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாதவாறு தண்ணீர்ப் பிரச்சினை தமிழ்நாட்டுக்குத் தனிச் சிறப்பான, சிக்கலான பிரச்சினை. துறைமுகமில்லாத நாட்டைப் போல, தனக்கு மட்டுமே உரிய நீராதாரங்கள் இல்லாதது தமிழ்நாடு; இது தனது விவசாயம், தொழில், குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறு, சிறுவாணி-பவானி, காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகியவற்றை நம்பியே இருக்கிறது. இந்த நீராதாரங்கள் எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து தொடங்குகின்றன. அவற்றின் வடிகால் பகுதியாகவுள்ள தமிழகத்தின் உரிமை சட்டப்படியானது; நியாயமானதுதான்.

ஆனாலும், தமிழகம் வாதாடி, போராடிப் பெற வேண்டியுள்ளது. புதிய அணைகள், தடுப்பணைகள் கட்டியும் பல்வேறு விதங்களில் நீர்வரத்து தடுக்கப்படுகின்றது; மறுக்கப்படுகின்றது. அதனால் அண்டை மாநில மக்களுடனான முரண்பாடும் மோதல்களும் தீராதவையாகவும் அதிகரித்துவரும் பிரச்சினையாகவும் உள்ளது. இந்த நிலைக்கு என்னதான் காரணம்? என்னதான் தீர்வு?

இதில் அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, இங்கும் கண்டும் காணாமல் விடப்படும் பல உண்மைகள் உள்ளன. நீர் ஆதாரங்களும் நீர்நிலைகளும் தெரிந்தே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. முல்லைப் பெரியாறிலும் குடகுவிலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுற்றுலாத்தலங்களும், நட்சத்திர விடுதிகளும், கோடைக்கால மாளிகைகளும், காபி தோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. மழைப்பொழிவு குறைவதோடு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அருகி வருகின்றன.

அந்நியப் பெரும் ஆலைகளுக்கும், சூயஸ், கோக், பெப்சி போன்ற அந்நிய தண்ணீர் கார்ப்பரேட்டுகளுக்கும் நீர்நிலைகள் தாரை வார்க்கப்படுகின்றன. பெருநகரங்களில் அமைக்கப்படும் நட்சத்திர நீர்க் கேளிக்கை விடுதிகள், குவியும் பலவகைத் தொழில்கள், கட்டுமானங்கள் புதிய குடியேற்றங்கள் போன்றவைக்காக பெருமளவு தண்ணீர் திருப்பி விடப்படுகின்றது. மேலும், ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகளில் ஆலைக் கழிவுகள், பெருநகரக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வரன்முறையில்லாத மணற்கொள்ளையால் அவை நாசமாகின்றன. ஆக்கிரமிப்புகளால் அவை காணாமல் போகின்றன. தூர்வாராமல் நீர்வழித் தடங்கள், ஆறுகள், கண்மாய்கள் என நீர்நிலைகள் பலவும் மேடு தட்டிப் போயுள்ளன.

வளர்ச்சிக்கானவை, வேலை வாய்ப்புக்கானவை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் இந்த நாசகார வேலைகளைச் செய்கின்றன. இவற்றால் நாம் வளர்ச்சியடைந்தோமா? விவசாயம் சீரழிந்து போனது, வேலையில்லாத இளைஞர்கள் நகரத் தெருக்களில் விசிறியடிக்கப்பட்டார்கள். விவசாயம், தொழில் இரண்டுமே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

செல்வம் குவிக்கும் உலகப் பணக்காரர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளின் வரிசையில் 12-வது இடத்தை இந்த நாடு பிடித்து விட்டது. இந்த வளர்ச்சி அம்பானி, அதானி, டாடா, மிட்டல் போன்ற பனியா, பார்சி, சேட்டுகள்-ஜெயின்கள்-மார்வாடிகளுக்குத்தான். அந்நிய, ஏகாதிபத்திய, பன்னாட்டு, நாடுகடந்த நிதிமூலதன மற்றும் தொழிற்கழகங்களுக்குத்தான். இவர்களோடு நாட்டின் நீர், நிலம், காடுகள், மலைகள், கனிம வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் கொள்ளையடிக்கும் கிரிமினல் குற்றக் கும்பல்களுக்குத்தான். பன்னாட்டு கம்பெனிகளால் ரசாயனக் கழிவுகளும் மருத்துவக் கழிவுகளும் பேராபத்தை விளைவிக்கும் அணுக் கழிவுகளும் கப்பல் மூலம் கன்டெய்னர்களில் கொண்டு வந்து நம் மண்ணில் கொட்டப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் நமது மக்களுடைய எதிரிகளின் நலன்களுக்காகத்தான் வகுக்கப்படுகின்றன. மற்றபடி, இயற்கை வளங்களை பாதுகாத்து, பராமரித்து விவசாயிகளின், மக்களின் தேவைகளுக்காகத் திட்டமிடப்படுவதோ, செயல்படுத்தப்படுவதோ கிடையாது.

நதிநீர் பங்கீடுகளில் தமிழகத்தின் சட்டபூர்வமான, நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசோ தனது அரசியல் நலன் கருதி, கண்டும் காணாமல் இருந்து ஓர வஞ்சனை செய்கிறது. அதேசமயம் தமிழகத்துக்கு எதிராக மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலைகள், அணுக்கழிவுகளைக் கொட்டும் நியூட்ரினோ கிடங்கு போன்ற அழிவுத் திட்டங்களை அடாவடியாகத் திணிக்கிறது. தமிழர்களுக்கு எதிராக வடமொழித் திணிப்பு, உயர்கல்வி, உயர் வேலை வாய்ப்புகளை பறிக்கும், கைப்பற்றும் சதிகளையும் செய்கிறது. தமிழக அரசும், நீதிமன்றங்களும் இதற்கு உடந்தையாக உள்ளன.

அண்டை மாநில அரசுகளிடம் நதிநீர் உரிமைகளுக்காகப் போராடுவதாக நாடகமாடும் ஆட்சியாளர்கள் இங்குள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் பராமரிக்கும் கடமைகளைக் கைவிட்டு அவற்றை நாசமாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். காவிரியிர் நீர் வந்தாலும் விவசாய நிலங்களுக்குப் போய்ச் சேராது. தமிழ்நாட்டுக்கு நதிநீர் உரிமைகளை மறுக்கும் கேரளத்துக்கும், கர்நாடகத்துக்கும் ஆந்திராவுக்கும் தினமும் ஆயிரக்கணக்கில் இங்கிருந்து ஆற்று மணல் கடத்தப்பட்டு அவை குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி வழிகின்றன. முள்காடுகளால் மூடிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களிலிருந்து தொடங்கும் ஆறுகளை நம்பியே உள்ள தமிழ்நாட்டில் கிரானைட் கொள்ளையர்களால் கால்வாய்கள், கண்மாய்கள் மூடப்பட்டன. நீர்ப் பிடிப்புப் புறம்போக்குகள், ஏரிகள், கண்மாய்கள், குளம் – குட்டைகள் தனியார் கல்வி மற்றும் வீடு-வீட்டுமனை முதலைகளாலும், அரசு-அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சீரழிவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணமே ஏற்கனவே ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான்- அரசுக் கட்டமைப்பும்தான். அவர்களிடமே போய் மனு கொடுத்து, மன்றாடி எதையும் சரி செய்துவிட முடியாது. அவை அனைத்தும் தோற்றுப் போய் விட்டன. மக்களுக்கு எதிரானவையாகி விட்டன. இந்த ஆக்கப் பணிகளை எல்லாம் ஏற்கனவே இலஞ்ச ஊழல் சாக்கடையில் சிக்கி நாறும் அரசியல் வாதிகள், அரசு அதிகார வர்க்கத்தை நம்பிச் செய்ய முடியாது.

மத்திய அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராக தமிழகத்தின் நியாய உரிமைக்காக விடாப்பிடியாகப் போராட வேண்டும்.

அதேசமயம் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள், நீர் நிலைகள், புறம்போக்குகள், ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள் மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். காடுகள் வளர்ப்பு, மழைநீர்ப் பெருக்கம், மண் அரிப்புத் தடுப்பு, ஆறுகள் – ஓடைகளின் நீர் வழித்தடங்கள், ஏரிகள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, அவையும் புதிய தடுப்பணைகளும் நீர்நிலைகளும் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். உள்ளூர் மக்கள் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களை கண்காணிக்கவும் தவறு நடந்தால், மக்களே தண்டிக்கும் உரிமையும் அவர்களுக்கே வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம் என்கிறோம்.

உங்கள் ஊரில் நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்பு, ஏரி, குளம், கண்மாய் தூர் வாராமல் இருப்பது; ரசாயன சாயப்பட்டறை, சாக்கடை கழிவுகளால் சிதைக்கப்படும் ஆறுகள் பற்றிய தகவல்களை எங்களிடம் தாருங்கள். அவற்றுக்கு எதிராகக் கரம் கோர்ப்போம்!

pp-kaveri-banner

தகவல்

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுச்சேரி
அலுவலகம் : எண் 16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை – 83
தொடர்புக்கு : 99623 66321 மின்னஞ்சல் : ppchennaimu@gmail.com

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்போம்! மோடி அரசின் வஞ்சகத்தை முறியடிப்போம்! – உசிலையில் ஆர்ப்பாட்டம்

ன்றைய சூழ்நிலையில் அரசு துறைகள் அனைத்தும் அதனதன் வேலையைச் செய்யாமல், தோற்றுப்போய் எதிர்மறை சக்திகளாகி மாறி வருகின்றன என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக கர்நாடக அரசு தீர்ப்பை அமல்படுத்தாமல், மதிக்காமல் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதோடு, பெங்களூரில் கர்நாடக இனவெறியர்களால் தமிழர்களை தாக்கி, பஸ்களை தீயிட்டு கொளுத்தியது, மத்திய அரசு வேடிக்கை பார்க்குது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை  உசிலை பஸ் நிலையம் எதிரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். குருசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் தோழர் மோகன், மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் நாகராசன் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க அமைப்பினர்கள், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக் குழு அய்யனார் குளம் ஒருங்கிணைப்பாளர், உசிலை விடுதலை சிறுத்தைக் கட்சிகள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் சந்திரபோஸ் தனது தலைமை உரையில், “டெல்டா மாவட்ட விவசாயிளையும் நிலங்களையும் திட்டமிட்டே இந்த அரசு அழித்து வருகிறது. மீத்தேன், கெயில்குழாய் திட்டம் நிறைவேற்றுவதற்காக விவசாயிகளை வெளியேற்ற கட்டப் பஞ்சாயத்து நடத்தும் மத்திய, மாநில அரசுகள் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் காவிரி நீரைக் கொண்டு வருவதற்கு தடையாக உள்ளன. தமிழ்நாட்டில் கண்மாய்களையும், ஏரிகளையும் தூர்வாராத அரசு காவிரிநீரை எப்படி கொண்டு வரும். கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையே கண்மாய்களை அழிக்க துணை போகிறது.

மக்களிடம் கலவரம் செய்தே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கையை வைத்துள்ள பி.ஜே.பி, நாகராஜன் (ஆர்.எஸ்.எஸ் கருங்காலி) போன்ற நபர்களை வைத்து இனவெறியைத் தூண்டிவிட்டு தமிழர்களை தாக்கியுள்ளார்கள். டெல்டா மாவட்டப் பகுதிகளில் விவசாயிகளிடம் நிலத்தை எடுப்பதற்காக கட்டப் பஞ்சாயத்து நடத்திய பி.ஜே.பி, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் ஓட்டுக் கட்சிகளை இனியும் நம்பிப் பயனில்லை, நம் உரிமையை மீட்க போராட்டம் ஒன்றுதான் தீர்வு” என்று பேசினார்.

தென்மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தனது உரையில்… “தமிழகத்திற்கு வரும் நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருகின்றன. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை 1892-ல் மைசூர் அரசு வரையறை செய்துள்ளது. அன்றுமுதல், இன்றுவரை காவிரியில் தமிழகத்திற்கான உரிமை தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கர்நாடக அரசு மதிக்காமல் மீறுகிறது. இல்லாத தண்ணீரை நாம் கேட்கவில்லை. அணை கர்நாடகாவில் இருந்தாலும் இயற்றப்பட்ட விதிகளின்படி நீரின் அளவைப் பொறுத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத்தான் கேட்கிறோம். தீர்ப்பை அமல்படுத்த வக்கற்ற பி.ஜே.பி அரசு கருங்காலிகளை தூண்டிவிட்டு பெங்களூரில் தமிழக லாரி ஓட்டுநரையும், பேருந்துகளையும் தாக்கி தீயிட்டு கொளுத்தி வருகிறது.

லாரி ஓட்டுநர்களை அடித்தவர்களை தேடிப்பிடித்து அடிக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழகத்திற்கு வரும் கர்நாடக பேருந்துகளை, நபர்களை தாக்குவது சரியான தீர்வு இல்லை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக புதிய அணைகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் நீர் சேகரிப்பு என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. ஆறுகளின் நீராதாரம் மணல். அந்த மணலை மணற்கொள்ளையர்கள் வரைமுறை இல்லாமல் அள்ளிக் கொள்வதற்கு அரசு அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள். அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து மக்களின் எதிர்நிலை சக்திகளாக மாறி விட்டன. மனித மிருகங்களாக மாறிவிட்ட அதிகாரிகளையும் மணல் கொள்ளையர்களையும் செருப்பால் அடித்து மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம். தமிழகத்தில் பி.ஜே.பி-யை இயங்க விடாமல் செயலிழக்கச் செய்வதற்கு போராட்டம் ஒன்றே தீர்வு” என்று பேசினார்.

சிவகங்கை மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராசன் தனது உரையில்

“கர்நாடக இனவெறியர்களின் தாக்குதலுக்கு தமிழ்நாடே எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் எதற்காக தேவையில்லாமல் போராட்டம் நடத்துறீங்க, கடல்நீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாமே என்று மொன்னைத்தனமாக பேசி வருகிற மாமாக்காரன் சு.சாமிக்கு எட்டுக் கோடி மக்களின் செருப்பை காணிக்கையாக்குவோம்.

நடந்தாய் வாழி காவேரி என்று புராணங்களிலே கூறியுள்ளது போல் காவிரி ஓடி வந்தால் நாடு செழிக்கும். அண்டை நாடுகளில் இருந்து வரும் நதிநீரை யாரும் நிறுத்துவது இல்லை. உலக நதிநீர் பங்கீட்டு குழுமம் வரையறை வைத்து முறைப்படி கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், கோக், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு ஆறுகளை தாரைவார்த்து கொடுத்ததால் தண்ணீர் காசுக்கு விற்கும் சரக்காக மாறி விட்டது. நம்ம தண்ணீரை நாமே காசு கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு இந்த அரசு தள்ளியுள்ளது. அதாவது நம்ம செருப்பைக்க ழற்றி நம்மையே அடிக்கிறான். இந்த அரசுக் கட்டமைப்பு முறை தவறி விட்டது. இனியும் நாம் அதை சுமக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கி எறிந்து விட்டு புதிய ஜனநாயகம் படைப்போம். அதற்கு மக்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடுவதே தீர்வு” என்று கூறினார்.

தேனி மாவட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தனது உரையில்

“இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் காவிரி நதிநீர் பிரச்சனையில் நம்முடைய எதிரி யார் என்று விளக்குவதற்காக நடத்தப்படுகிறது. காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை வழங்கு என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் உள்ள அப்பாவி விவசாயிகளை யாரும் தமிழர்களை தாக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தவில்லை. இனவெறி பிடித்த கலவரத்தை தூண்டியே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள்பிடித்து வந்து இந்த இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கரும்பு விவசாயத்திற்காக எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லக் கூடிய கர்நாடக அரசு பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளை அழித்து அதில் அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி, பல பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது. ஏரிகளை அழித்து கரும்பு விவசாயிகளை வீதிக்கு விரட்டியுள்ளது. 270-க்கும் மேற்பட்ட லாரிகளில் தமிழகத்துக்கு வரும் காய்கறிகள் தடைபட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் இருக்கும் மத்திய அரசுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ்நாடிடல் இருந்து நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவோம்! மத்திய அரசை முடக்குவோம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்பவர்களை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை.

கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

3

kovai-hindutva-thugs-violence-30கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதற்காகவே பார்ப்பன இந்துமதவெறியர்கள் காத்திருந்தார்கள். இந்தக் கொலையை முகாந்திரமாக வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் வானரக் கூட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி, அனுமன் சேனா போன்ற தினுசு தினுசாக 50-க்கும் மேற்பட்ட கும்பல்களில் உள்ள காலிகள் கோவை அரசு மருத்துவமனையில் கலவரம் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் கூடினர். சசிகுமாரின் பிணத்தைப் பெற்றுக்கொண்டு முசுலீம்கள் அதிகம் வாழும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு வழியாகத்தான் கொண்டு செல்வோம் என்று கூறியபோது காவல் துறை மென்மையாக அனுமதி மறுத்தது. உடனே மருத்துவமனையில் இருந்த 1000 பேர் கொண்ட இக்கும்பல் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கியது. பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் சென்று முசுலீம்களைத் தாக்க முற்படும் பொது அவர்களும் திருப்பி தாக்கினர்.

kovai-hindutva-thugs-violence-33பிறகு காவி பயங்கரவாத கும்பல் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சவத்தை பெற்றுக்கொண்டு சுமார் 18 கிலோமீட்டர் வம்படியாக ஊர்வலம் சென்றது. ஊர்வல வழியில் தென்பட்ட கடைகள் அனைத்தையும் குறிப்பாக இசுலாமியர் கடைகளை தெரிவு செய்து அடித்து நொறுக்கியது. அதே நேரம் இந்துமதவெறியர்களுக்கு அவ்வப்போது விரும்பியோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பண உதவி செய்யும் ‘இந்துக்களின்’ கடைகளும் சூறையாடப்பட்டன. கூடுதலாக இந்துமதவெறியர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள முசுலீம் மக்களின் கடைகளை குறித்து வைத்துக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

​​kovai-hindutva-thugs-violence-08இதையெல்லாம் தடுத்து தண்டிக்கவேண்டிய காவல்துறை கலவரத்தை நடத்த அனுமதியை கொடுத்துவிட்டு கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தாலோ பொது மக்கள் அடிப்படை பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினாலோ சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கும் காவல் துறை கலவரங்களை நடத்துவதற்கென்றே இந்து மதவெறி அமைப்புகளுக்கு 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

இந்தக் கலவரத்தில் 60 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது, எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, ஒரு செல்போன் கடையில் காஸ் கட்டிங் செய்து ஷட்டரை ஓட்டை போட்டு செல்போன்கள் திருடப்பட்டன. பூக்கடை மார்க்கட் பகுதியில் உள்ள மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. புது பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதியில் 2000 மேற்பட்ட கற்களை எறிந்து கண்ணாடி மற்றும் மேற்க்கூரைகள் உடைக்கப்பட்டன. இதற்காகவே வண்டி நிறைய கற்களையும், சோடாபாட்டில்களையும் , உருட்டுக்கட்டைகளையும் குவித்துக் கொண்டு இந்துமதவெறியர்கள் கலவரம் நடத்தினர்.

kovai-hindutva-thugs-violence-35இவையெல்லாமே காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் கண்முன்னே நடந்தது. இனி அவர் தனது பெயரை அமைதிராஜ் என்று வைத்துக் கொள்ளலாம். இறுதியாக காவல்துறை வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டாலும் சொரணையேதுமின்றி லேசானதடியடியை மட்டும் காவல் துறை நடத்தியது. முசுலீம் மக்கள் மற்றும் வணிகர்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதற்கான எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. சசிகுமாரின் உடலை உடல் கூறு ஆய்வு செய்து காலை 6 மணிக்கே ஒப்படைக்க தயாராகஇருந்தும் காவல்துறை மதியம் 12 மணிவரை அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. இப்படி இந்து அமைப்புகள் கலவரம் நடத்துவதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 18 கிலோமீட்டருக்கு ஊர்வலமாக செல்ல அனுமதியும் கொடுத்துள்ளது, காவல் துறை.

kovai-hindutva-thugs-violence-36நத்தம் காலனி இளவரசன் இறந்தபோது ஊர்வலம் நடத்த அனுமதிமறுத்த இதே காவல்துறைதான், தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்து போன தங்களது உறவினர்களை பொது பாதை வழியாக கொண்டுசெல்ல அனுமதி மறுத்த போது அதை எதிர்த்து போராடிய மக்களை அடித்து விரட்டிவிட்டு சவத்தை தானே அடக்கம் செய்தது.

இப்படி சாதாரண மக்களின் உரிமையை பறிக்கும் காவல் துறை எப்படி கலவரக்காரர்களுக்கு துணை போனதுஎன்பதை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரத்தின் சார்பாக கோவை, உடுமலை, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதில் உடுமலையைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் சக்திவேல், மணிகண்டன்,தங்கவேல் ஆகியோர்களை கலவரம் ஏற்படுத்துவார்கள் என்று கூறி 151 சி.ஆர்.பி.சி பிரிவிகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது உடுமலை காவல் துறை. கோவையில் செய்தி சேகரிக்க சென்ற தோழர் மூர்த்தியை கைது செய்து மாலையில் விடுவித்தது.

​​kovai-hindutva-thugs-violence-31போலீசை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவோ பார்ப்பனிய இந்துமதவெறியர்களின் இயல்பான கூட்டாளியாக இருப்பதால், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தனது வன்முறையை எந்த பயமுமின்றி செய்து வருகிறது. இப்படி அ.தி.மு.க அரசின் ஆசீர்வாதத்தோடு இந்துமதவெறியர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். இதை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களோ வன்முறைக் காட்சிகளை மட்டும் பரபரப்பு எனும் மலிவான சந்தையை குறிவைத்து வெளியிடுகின்றன.

கலவர சமயத்தில் மட்டுமல்ல, சமாதான காலத்தில் கூட இந்த காவல் துறை மக்களை பாதுகாக்காது என்பது உறுதி. கொட்டடிக் கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றை சீருடையுடன் செய்யும் இந்த காவல் துறையும் அதை பாதுகாக்கும் இந்த அரசும் இருக்கும் வரை இந்துமதவெறியர்களின் அட்டகாசங்கள் குறையாது. இவர்களை தூக்கி எறியாமல் அமைதி இல்லை என்பதைஉணர்ந்திடுவோம் ! மக்கள் அதிகாரம் படைத்திடுவோம்!

பொதுமக்களே!

  • இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது!
  • திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது!
  • மதவெறி, இனவெறி, சாதிவெறி – ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!
  • செயல் இழந்த அரசுக் கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி :
மக்கள் அதிகாரம் – கோவை/உடுமலை/கோத்தகிரி

இந்து முன்னணி சசிக்குமார் கொலை!
போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம்!
செயலற்று முடங்கியது அரசு நிர்வாகம்!

தமிழக அரசே!

  • வெறியாட்டம் போடும் காவிக் கும்பலை கைது செய்! சிறையிலடை! வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கு!
  • இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்!

உழைக்கும் மக்களே!

  • சசிகுமார் மரணத்தை காட்டி பெரியார் பிறந்த மண்ணை காவிமயமாக்கும் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
  • மதவெறி அமைப்புகளை புறக்கணிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு – கோவை

JNU மாணவர் தேர்தல் : இடதுசாரிகள் வெற்றி ஏன் ? நேர்காணல்

1

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை 2016 மாணவர் தேர்தலில் இடதுசாரிகள் அணி வெற்றி பெற்றிருப்பதை அறிவீர்கள். ஜே.என்.யூ-வில் கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற அரசின் அடக்குமுறைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் இது அதிகம் கவனிக்கபட்டது. இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யை இடதுசாரிகள் அணி தோற்கடித்துள்ளது. மாணவர் சங்கத்தின் முக்கியமான 4 பதவிகளுக்கான தேர்தலிலும் இடதுசாரிகளே வெற்றி பெற்றிபெற்றிருக்கிறார்கள்.

இத்தேர்தல் குறித்தும், அரசின் அடக்குமுறைகளுக்கு பிந்தைய ஜே.என்.யூ நிலைகுறித்தும் JNU மாணவர் ஆனந்த் (புதிய பொருள்முதல்வாதிகள்) அவர்களுடன் ஒரு நேர்காணல்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

வணக்கம். என்னுடைய பெயர் ஆனந்த். நான் டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வருகிறேன். எனது துறை சர்வதேச சட்டம். பல்கலையில் இயங்கும் ”புதிய பொருள்முதல்வாதிகள்” என்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன். இந்த அமைப்பு பல்வேறு போராட்டங்களை எடுத்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவன் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு தோழர் கோவன் பாட்டிற்காக கைது செய்யப்பட்டபோது அப்போதைய ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் கண்ணையாகுமாரின் தலைமையில் நாங்களும் இணைந்து போராட்டத்தை நடத்தினோம். 2011-ல் மாட்டுக்கறி திருவிழா நடத்தவேண்டும் என்று தீர்மானம் செய்து அந்த உரிமைக்காக மிகப்பெரிய அளவில் ஜே.என்.யூ-ல் போராடிய அமைப்பு எங்களைடையது.

ஜே.என்.யூ-வை பற்றி சொல்லுங்கள் ?

ஜே.என்.யு ஒரு காம்பவுண்ட் சுவருக்குள் அனைத்துமே இருக்கிற மாதிரியான ஒரு பல்கலைகழகம். இதில் பல்வேறு துறைகள் இருக்கிறன. இதை நாங்கள் பள்ளிகள்(school) என்போம். உதரணாமக ஸ்கூல் ஆப்ஃ இண்டர்நேசனல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆஃப் சோசியல் சிஸ்டம்ஸ், ஸ்கூல் ஆஃப் லேங்குவேஜ் இது போல.. அந்த பள்ளிகளுக்குள் சென்டர் இருக்கும். உதாரனமாக ஸ்கூல் ஆஃப் இண்டர்நேசல் ஸ்டடிஸ் என்ற பள்ளியில் சென்டர் ஃபார் ஆப்பிரிகன் ஸ்டடிஸ்,சென்டர் ஃபார் லத்தின் அமெரிக்கன் ஸ்டடிஸ் என சின்ன சின்ன துறைகளாக இருக்கும். இது தான் ஜே.என்.யு.இங்கே கிட்டதட்ட 8000 மாணவர்களுக்கு மேல் படிக்கிறார்கள். 1000-த்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். 2008-ல் தான் தமிழ் துறை ஆரம்பித்தார்கள். இதில் எம்.பில், பிஎச்டி என 30-40 மாணவர்கள் படிக்கிறரகள்.

ஸ்கூல் ஆஃப் இண்டர்நேசனல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆஃப் லேங்குவஜ், ஸ்கூல் ஆஃப் சோசியல் சிஸ்டம்ஸ்… இந்த மூன்று பள்ளிகள் தான் மிகப்பெரிய பள்ளிகள். மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அதே போல் அரசியல் செயற்பாடுகளும் இந்த மூன்று பள்ளிகளில் தான் முக்கியமாக இருக்கும். இந்த மூன்று பள்ளிகளில் எந்த அமைப்பினர் பலமாக இருக்கிறர்களோ அவர்கள் தான் மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெறுவார்கள்.

பல்கலையில் இடதுசாரி சிந்தனைகள் முன்னணியில் இருப்பது ஏன்?

ஜே.என்.யூ ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு இடதுசாரி சிந்தனை உள்ள வளாகமாகத் தான் இருந்து வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பார்த்தால் நேருவின் சிந்தனை. எப்படிப்பட்ட விமர்சனங்களையும் அரசாங்கத்தின் மீது வைக்கலாம்; விமர்சனங்கள் இருக்கக்கூடிய பல்கலைகலைகழகம் தான் உண்மையான பல்கலைகழகம் என்று ஜவஹர்லால் நேரு சொல்லியிருக்கிறார். ஒரு இடத்தில் எதையும் பேசலாம் எந்த விமர்சனத்தையும் வைக்கலாம், அரசை எதிர்த்து ஒரு சமூதாயத்த எதிர்த்து விமர்சனம் வைக்கலாம் என்று சொல்லும்போதே இயற்கையாகவே இடதுசாரி சிந்தனைகள் தான் அந்த இடத்தை கைப்பற்றி கொள்கின்றன.

சாதாரணமாக பொதுமக்கள் மத்தியில் எது நகைப்பிற்குரியதோ அந்த விசயங்கள் எல்லாம் ஜே.என்.யூ-க்குள் தலைகீழாக இருக்கும். உதாரணமாக மோடியை கிண்டல் செய்தால் பெரும்பாலான மக்கள் அதை ஒரு காமெடியாக, சிந்தனையாக, சிரிப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் ஜே.என்.யூ-க்குள் ஒரு மாணவர் குஜராத்திலிருந்து வருகிறார் என்றால் அவர்களை கேலிப்பொருளாக பார்க்கும் ஒரு பண்பு இருக்கிறது. நீங்கள் குஜராத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளவே தயங்கக்கூடிய நிலைமை தான் இருக்கிறது

உள்ளுக்குள் பயங்கரமான பிற்போக்குவாதியாக இருக்கலாம்; ஆனால் ஜே.என்.யூ மாணவரகள் மத்தியில் முற்போக்காக காட்டித் தான் ஆகனும். இல்லை என்றால் அந்த சமுதாயத்தில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி தன்னை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள் தான் இன்றைக்கும் வலதுசாரி சக்திகளாக ஜே.என்.யூ-வுக்குள் சிறிய அளவுக்கு இருக்கிறார்கள்.

கண்ணையா குமார் கைதுக்கு பிறகு தற்போதைய 2016 மாணவர் சங்க தேர்தல் வரை நடந்தவை பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் ?

பிப்ரவரி 9–ம் தேதி நடந்த நிகழ்ச்சி அனைவரும் அறிந்தது தான். அதன் பிறகு அரசு மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை, மாணவர்கள் மீது ஏவப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தலைமறைவானார்கள். கண்ணையா குமார் கைது செய்யப்பட்டர். பிறகு இரண்டாம் கட்ட போராட்டம் எப்பொழுது ஆரம்பித்தது என்றால் அந்த மாணவர்கள் மீது தண்டனை ஏவப்பட்டபோது. குறிப்பாக கண்ணையா குமார் அவர்களுக்கு தண்டணைத் தொகையாக ரூ.20,000 உமர்காலித்திற்கு ஒரு செமஸ்டர் தடையும், அனிர்பனுக்கும் ஐந்து ஆண்டுகள் வளாகத்திற்குள் வரமுடியாது என்ற அளவிலும் தண்டனை கூறப்பட்டது. அந்த தண்டனை அநீதியானது என்று  மிகப்பெரிய போராட்டட்தை தொடங்கி 10-15 நாட்களுக்கு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம். இறுதியில் தனிப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் அந்த தடை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்று மறுபடியும் ஒரு சில மாற்றங்களுடன் அந்த தடை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.இது தான் பிப் 9-லிருந்து எலெக்சனுக்கு முன்பு வரை நடந்த விசயம்.

ஜே.ன்.யூ மாணவர்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறை என்ன விளைவை ஏற்படுத்தியது?

இந்த போராட்டத்தின் மூலமாக ஆளும் வர்க்கம் குறிப்பாக ஏ.பி.வி.பி-பி.ஜே.பி போன்ற அமைப்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான். போராட்டம் தீவிரமாக ஆக ஆக  ஒரு சில மாணவர்கள் அதாவது ஒரு பள்ளியின் தலைவரும், மைய ஏ.பி.வி.பி-யின் துனை தலைவரும் அவ்வமைப்பிலிருது வெளியேறினார்கள். ஒரு நீண்டகால தத்துவார்த்த ரீதியான வகையில் மனுஸ்மிருதி என்பதை ஏ.பி.வி.பி ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்று கேள்வி வைத்தார்கள். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அம்பேத்கர் மனுஸ்மிருதி எரித்த நாளில் வெளியே வந்த மாணவர்களும் மனுஸ்மிருதியை ஜே.என்.யூ வளாகத்திற்குள் எரித்தார்கள்.
ஸ்மிருதி இராணி மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்தார்கள். இதற்கும் மற்ற வளாகத்தில் நடந்த மாணவர் பிரச்சனைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பார்த்தால் தொடர்பு இருக்கிறது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஸ்மிருதி இராணியை நியமித்தார்களோ அதை அவர் சரியாக நிறைவேற்றவில்லை. ஒரு பெரிய பிரச்சனையில் கொண்டு நிறுத்திவிட்டார். எந்த இடத்திலேயும் அவர்கள் வெற்றியடையவில்லை. எந்த வளாகத்திலும் ஏ.பி.வி.பி தத்துவத்தை உள்ளே நுழைக்க ஸ்மிருதி இராணி சரியான ஒரு ஆயுதமாக பயன்படவில்லை என்ற காரணத்தினால் தான் அவர்களை மாற்றினார்களே ஒழிய அவர்கள் திட்டத்தை கைவிடவில்லை.

ஜே.என்.யூ 2016 மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி தோல்வியடைந்தது ஏன்?
கடந்த ஆண்டே சென்ட்ரல் பேனலில் ஏ.பி.வி.பி துணை செயலாளராக இருந்தது. அதற்கு முன்னர் வாஜ்பாய் காலத்தில் தலைவராக இருந்தார்கள். இவ்வாண்டு AISA- க்கு எதிராக பிரசாரம் நடந்தது. ஒரு பாலியல் குற்றத்தில் அதன் முன்னாள் மாணவர் ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டை ஒட்டி அதை வைத்து பிரச்சாரம் செய்தார்கள். அதனால் எனக்குதெரிந்த வரை ரொம்ப நம்பிக்கையாக இருந்தாரக்ள். நாங்கள் எல்லாவற்றிலேயும் ஜெயிப்போம் எங்கள் பக்கம் ஆதரவு இருக்கிறது என்று தான் எண்ணினார்கள்.முன்னர் ஏ,.பி.வி.பி பல்வேறு பதவிகளில் வென்றிருந்தாலும் இன்று அதிகாரத்தில் இல்லை. ஓட்டு எண்ணிக்கையில் இருந்தாலும் பதவியில் இல்லை. ஜீரோவாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் ஏ. பி.வி.பி ஜே.என்.யூ-வின் சுதந்திர ஜனநாயகா அமைப்பு மேலே நடத்திய தாக்குதல் தான். இதனால் தான் மாணவர்கள் மத்தியில் பொதுவாகவே ஒரு பயமும் ஒரு அதிருப்தியும் பாதுகாப்பற்ற உணர்வும் வந்திருக்கிறது. இந்த ஏ.பி.வி.பி வந்தால் நாளைக்கு நமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும். ஏ.பி.வி.பி அரசியல் என்பது வன்முறை பொறுக்கித்தனமான அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதை கண்கூடாக மாணவர்கள் பார்க்கிறர்கள். ஜே.என்யூ வின் விவாதம் எப்படி இருக்கும் என்றால் கருத்தியல் ரீதியானதாக இருக்குமே ஒழிய வன்முறையாக இருக்காது.

ஜே.என்.யூ மாணவர் சங்க தேர்தல் எப்படி நடக்கும்?

ஜே.என்.யூ -வுக்கு என்று ஒரு சாசனம் இருக்கிறது. அரசியல் சாசனம் இருக்கிறது. லிங்டோவிற்கு முன்னர் எப்படி இருக்கும் என்றால் கிட்டத்தட்ட ஒருமாத காலம் தேர்தல் திருவிழா என்றே சொல்லலாம். வெளியில் தேர்தல் திருவிழா என்றால் பிரியாணி பொட்டலம், சாராயம், ஓட்டுக்கு காசு, நடிகர் நடிகைகள் குத்தட்டம் இந்த மாதிரி தான் நமக்கு தெரிந்த தேர்தல் திருவிழா நடக்கும். நமது பொதுக்கூட்டங்களில் கேள்வி கேட்கும் உரிமை எல்லாம் கிடையாது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இங்கு உட்கார்ந்திருப்பவர்கள் பிரியாணி பொட்டலத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். இது தான் தேர்தல் மாநாடு.
ஆனால் ஜே.என்.யூ- வில் ஒரு பொதுக்கூட்டம் என்றால் அவர்கள் பேசும் நேரத்திற்கு இரண்டு மடங்கு நேரம் மாணவர்கள் அவர்களை நோக்கி கேள்வி கேட்பாரக்ள். அதற்கு நேரம் ஒதுக்கப்படும். அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகணும். அப்படி சொல்வதில் தடுமாறுதல் ஏற்பட்டால் பலகீனமாக போய் முடியும். அவர்கள் தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள்
ஒரு ஒரு டீக்கடையிலும், தாபாவிலும் மாணவர்கள் உட்கார்ந்து இரவு ஒரு மணி வரை விவாதம் செய்வார்கள். இவர் சரியானவரா இந்த உறுப்பினர் சரியாக வருவாரா? இந்த உறுப்பினரின் கொள்கை ஜே.என்.யூ -வை பாதுகாக்குமா என்று விவாதம் நடக்கும்.

பல்வேறு பள்ளிகளின் பொதுக்குழு கூட்டம் நடக்கும் அக்கூட்டத்தில் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தாங்கள் கடந்த ஆண்டில் என்ன வேலை செய்திருக்கிறோம்; இந்த வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என்று அவர்களின் அறிக்கையை சமர்பிக்கவேண்டும். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடக்கும். அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும். மாணவர்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறும் இல்லை என்றால் தோற்கடிக்கப்படும்.இதில் வெளிப்படையாக தண்டிப்பது கிடையாது. திருப்பி அழைக்கும் உரிமை மாதிரியும் இதை சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு தார்மீக பிரச்சணை ஏற்படும், பண்பில்லாதவன் தேர்தெடுத்தும் சரியாக செயல்படாதவன் என்று பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாணவர்களோ அல்லது கட்சிக்கே அவமானமாக முடியும்.

இது முடிந்த பிறகு அடுத்து வரும் தேர்தலுக்காக தேர்தல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். இதில் எல்லா கட்சியினரும் நடுநிலையானவர்கள் என்று தோன்றக்கூடிய மாணவர்களை நிறுத்தி தேர்ந்தெடுக்க வைப்பார்கள். இது எப்படி இருக்கும் என்று பார்த்தால் இந்திய தேர்தல் முறையில் நம் தேர்தல் அதிகாரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. அரசாங்கம் ஐ.ஏ.எஸ் அதிகாரியை தேர்தல் அதிகாரியாக நியமிக்கிறது. அவர் அரசாங்கத்தின் அடியாளாக இருந்து தேர்தல் நடத்துகிறார். மக்களிடம் கருத்து கேட்பதில்லை.ஆனால் ஜே.என்.யூ வில் தேர்தல் கமிசன் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மாணவர்கள். இம்மாணவர்கள் தங்களுக்குள் ஒரு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுப்பார்கள். இப்படி தான் தேர்தல் அமைப்பு இருக்கும். அதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். தேர்தல் நடக்கும். தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் கமிசன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைக்கும். தேர்தல் கமிசன் இவர் தான் தலைவர், துணைத்தலைவர் என்று கூறுவதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்
அகடமிக் கவுன்சில் போன்று முக்கியமான கமிட்டிகளில் மாணவர் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். நிர்வாகம் தேர்தல் கமிசன் கொடுத்த லிஸ்டை ஏற்றுக்கொள்ளும். நிர்வாகத்தில் தகுதிக்குரிய இடத்தை கொடுக்கும். இது லிங்டோவுக்கு முன்னாடி இருந்தது.

லிங்டோ கமிட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் தேர்தல் நடப்பதற்கு முன்னரே ஜி.ஆர்.சி என்று ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். அந்த அமைப்பு நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சின்ன கமிட்டி. ஆந்த கமிட்டிதான் முழுமுழுக்க இந்த தேர்தல் நடத்தக்கூடிய பொறுப்பாகவும் அந்த தேர்தல் ஆணையத்திற்கும் மாணவர் சங்கத்திற்கும் உரிமை வழங்கும் அமைப்பாகவும் இருக்கிறது. எந்த சமயத்திலும் தேர்தல் கமிசன் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கலைக்கக்கூடிய உரிமை ஜி.ஆர்.சி க்கு இருக்கிறது.

முன்னர் தேர்தலில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். வயது வரம்பு கிடையாது. லிங்டோவிற்கு பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் ஒருவர் ஒரு முறைதான் போட்டியிட முடியும். அவர் தோற்றுப்போனால் கூட அடுத்த முறை போட்டியிட முடியாது. இது மிகப்பெரிய ஜனநாயக மீறல். வயது வரம்பு என்று ஒன்று இருக்கிறது. பி.எச்.டி படித்தால் 30வயசுக்கு மேல் நிற்க கூடாது. இந்திய சூழலில் படித்துவிட்டு வேலை பார்க்கிறான். மூனு வருசம் குடும்பத்திற்கு வேலைபார்த்து குடும்ப பிரச்சனைகளை முடித்துவிட்டு படிக்க வருபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களை தேர்தலில் நிற்கும் வாய்ப்பை மறுக்கும் ஜனநாயக மறுப்பாக தான் மாறிவிட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க எல்லா கல்லூரிகளிலும் பல்கலைகழகத்திலும் இது அமல்படுத்தப்படுகிறது. இதனால் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகமும் பறிபோகிறது. இதனால் பல அமைப்புகள் எங்களின் புதிய பொருள்முதல்வாதிகள் அமைப்பும் உள்ளிட்டு இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம். தீவிர இடதுசாரி மாணவர்களும் இந்த நிலைப்பாட்டை தான் எடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தல் சடங்காக குறுகிவிட்டது என்பது தான் உண்மை.

ஜே.என்.யூ 2016 தேர்தல் முடிவுகளை எப்படி பார்ப்பது.ஏ.பி.வி.பிக்கு உண்மையில் தோல்வியா?

இந்த முறை பிப்-9 நிகழ்ச்சிக்குப் பிறகு முன்னாடி பார்த்த மாதிரி மிகப்பெரிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் அடக்குமுறை மாணவர்கள் மத்தியில் இருந்தது. அடக்குமுறைக்கு எதிரான ஒட்டுமொத்தமான முற்போக்கு மாணவர்களின் ஒற்றுமை தேவைப்படும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவாகத் தான் AISA என்ற சி.பி.ஐ (எம்.எல் –லிபரேசன்), அமைப்பும் SFI என்ற சி.பி.எம் என்ற அமைப்பும் இடதுசாரி ஒற்றுமை என்ற அடிப்படையில் சேர்ந்து போட்டியிட்டனர். நாம் ஒன்று சேரவில்லை என்றல் ஏ.பி.வி.பி பொறுப்புக்கு வந்துவிடுவார்கள் என்ற அடிப்படையில் இடதுசாரி ஒற்றுமை என்று ஆரம்பித்தார்கள். இந்த இரண்டு முக்கியமான பெரிய கட்சிகள் சேர்ந்து தான் ஏ.பி.வி.பி-யை தோற்கடித்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஏ.பி.வி.பி-யின் தோல்வியா என்று பார்த்தால் அது கேள்விக்குறியான விசயம் தான். ஏ.பி.வி.பி தனது ஓட்டை இன்றைக்கும் தக்கவைத்திருக்கிறர்கள். அதைவிட கொஞ்சம் அதிகமாகத்தான் இம்முறை வாங்கியிருக்கிறார்கள். ஓட்டுமொத்தமாக பார்க்கும் போது இது மகிழ்ச்சியான விசயம் தான். ஏனென்றால் ஏ.பி.வி.பிக்கு போனமுறை பல கவுன்சிலர்கள் இருந்தார்கள். 13 முதல்14 கவுன்சிலர்கள் இருந்தார்கள். இன்று1 கவுன்சிலர் தான். ஆனால் ஓட்டு வாங்கியிருக்கும் எண்ணிக்கையை பார்க்கும் போது அவர்கள் அதை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மையான விசயமாக இருக்கிறது.

ஜே.என்.யூ நிலைமைகளுக்கு மாறாக டெல்லி பல்கலைகழகத்தில் ஏ.பி.வி.பி வெற்றி பெறுவது ஏன்?

டெல்லி யூனிவர்சிட்டி என்று பாத்தால் இடது சாரி சக்திகள் மிக மிக குறைவு. டெல்லி பல்கலைகழகத்தில் காங்கிரசும், பிஜேபியும் தான் மாறி மாறி பதவிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு எப்படி தேர்தல் நடக்கும் என்று பார்த்தால் நமது எம்.எல்.ஏ , எம்.பி தேர்தலுக்கும் டெல்லி பல்கலைகழக தேர்தலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. சாராயம் , பார்ட்டிக்கு கூட்டிக்கொண்டு போவது பணம் தருவது இது போல எல்லாமும் நடக்கும். இன்னமும் மிகப்பிற்போக்கான விசயம் என்னவென்றால் அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு. சாதரண, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் டெல்லி பல்கலைகழக தேர்தலில் நிற்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விசயம். ஆதிகக் சாதியினர் பொதுவாக ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த தேர்தலில் போட்டியிடுவார்கள். இது போன்ற பிற்போக்காகத்தான் ஏ.பி.வி.பி வெற்றி பெறும் கேம்பஸ் இருக்கிறது. இதுபோன்று பிற்போக்காக இருப்பதால் தான் ஏ.பி,வி.பி போன்ற அமைப்புகளோ அல்லது காங்கிரஸ் போன்ற அமைப்புகளோ பதவிக்கு வர முடிகிறது.

பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் ஆணும் பெண்ணும் பேசக்கூடாது. ஆணும் பெண்ணும் சேர்ந்து போனால் அவர்களை தாக்குவது அதுபோல அந்த பல்கலைகழகத்தின் உள்ளே மாணவர் ஆசிரியர் உறவு எப்படி இருக்கும் என்றால் ஆண்டான் அடிமை உறவுபோல இருக்கும்.காலை தொட்டு கும்பிடுவது, காலை கழுவுவது. பல்கலைகழகத்தின் உள்ளே ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடக்கும் .இந்த அளவுக்கு பிற்போக்குத்தனமான கேம்பசில் ஏ.பி.வி.பி போன்ற அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த முடியும். ஜே.என்.யூ போன்ற முற்போக்கான , ஜனநாயக பூர்வமான, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுக்க கூடிய இடத்தில் ஜனநாயக விரோத கொள்கைகளை கொண்டிருக்ககூடிய ஏ.பி..வி.பி போன்ற ஜனநாயாக விரோத அமைப்பு ஒரு போதும் வரமுடியாது என்று நிச்சயம் சொல்லலாம்.

BAPSA என்ற அமைப்பு இரண்டாம் இடம் வந்திருக்கிறதே. அவர்களைப் பற்றி சொல்லுங்கள்?

பிர்சா,அம்பேத்கர், பூலே என்று பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் அமைப்பு என்று இவ்வமைப்பு சொல்லிக்கொள்கிறது. இடதுசாரிகளை தான் தங்களின் முதன்மையான எதிரியாக கருதி இவர்கள் செயல்படுகிறார்கள். அடையாள அரசியல் என்ற வகையில் செயல்படுகிறார்கள். இவர்களின் தாய் அமைப்பான UDSF தான் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் அன்புமணியை முதல் முறையாக வளாகத்திற்குள் அழைத்துவந்தது. தற்போது இவர்கள் கூட்டுவைத்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்புதான் சமீபத்தில் அன்புமணியை அழைத்து வந்தவர்கள். அதற்கு எதிராக BAPSA போராடினார்கள். பிற மாணவர் அனைவரும் பங்கேற்றார்கள்.
பீகாரின் முன்னால் முதல்வர் மாஞ்சி பி.ஜே.பி கூட்டணியில் ஐக்கியமான பிறகும் அவரை அழைத்து வந்து கூட்டம் நடத்தினார்கள். அதை நாங்கள் விமர்சனம் செய்தோம். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தலித் மாணவி ஒருவர் இடதுசாரி மாணவர் அமைப்பில் செயல்படுவதை விமர்சித்து அம்மாணவிக்கு திறந்த மடல் எழுதினார்கள்.

ஆண்டு தோறும் டிசம்பர் 6 அன்று ஒட்டுமொத்த மாணவர்கள் சார்பில் அம்பேத்கர் நினைவுநாளும், பாபர் மசூதி இடிப்பு நாளும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தாங்கள் தான் இதை தலைமை தாங்குவோம் என்று அறிவித்தார்கள். அம்பேத்கருக்கு தாங்கள் தான் உரிமை கொண்டவர்கள் எனவும், பாபர் மசூதி இடிப்புக்கு முஸ்லீம் மாணவர் அமைப்பு தலைதாங்குவது என்றும் அவர்கள் அறிவித்தார்கள். JNUSU சார்பில் கூட்டம் நடத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரண்டு ஊர்வலங்கள் வளாகத்தில் நடைபெற்றன.

அதுபோல SFI,AISA போன்ற அமைப்பின் அரசியலும் இதற்கு ஒரு காரணம். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மனுஸ்மிருதியை எரிப்பதை வளாகத்தில் முதலில் செய்தவர்கள் UDSF மாணவர்கள் தான். அதை அப்போது பிருந்தா காரத் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டவனை அச்சுறுத்தும் புதிய தனிமங்கள் – அறிவியல் கட்டுரை

4
டிமிட்ரி மெண்டலீவ்
தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய டிமிட்ரி மெண்டலீவ்

டந்த ஜூன் 8, 2016 அன்று வேதியியல் துறை தனது நான்கு புதிய குழந்தைகளுக்கு – தனிமங்களுக்கு – பெயர் சூட்டி தனிம வரிசை அட்டவணையில் (Periodic Table) சேர்த்துள்ளது.

தாங்கள் வேத காலத்திலேயே அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டதாக உதார்விடும் “பாரத கலாச்சார”கொழுக்கட்டைகளின் காலத்தில்தான் இந்த பெயர் சூட்டல் நடந்துள்ளது. அநேகமாக இந்த புதிய தனிமங்கள் அன்றே அனுமான் கிஷ்கிந்தாவில் கண்டறிந்தான் என்று அவர்கள் எழுதினாலும் ஆச்சரியமில்லை.அறிவியல் கண்டுபிடிப்புகளின் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டே, கடவுள் படைத்த பொருட்களிலிருந்து தானே இவை உருவாக்கப்பட்டுள்ளன என்று அனைத்து மதங்களும் ஆவேசமாகச் சொல்கின்றன. அவை பொய் என்பதை அறிவியல் நிரூபிக்க நிரூபிக்க மதங்களின் இரைச்சலும் கர்ண கடூரமாக அதிகரித்து வருகிறது.

தாமிரம்
தாமிரம் தனிமங்களுக்கு ஒரு உதாரணம்

ஆதியிலிருந்து அணு ஈறாக அந்தம் வரை அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டன என்று மதங்கள் கூறுகின்றன. ஆனால், கடவுளால் ஏன் யுரேனியத்திற்கு மேற்பட்ட தனிமங்களை படைக்க முடியவில்லை என்பதற்கு அவர்களிடம் பதிலில்லை. அறிவியல் வளர்ந்து, விஞ்ஞானிகள் தான் கடவுளர்களின் உதவியின்றி யுரேனியத்திற்கு மேற்பட்ட தனிமங்களை படைக்க வேண்டியிருந்தது.

எந்த ஒரு பண்டைய நாகரீகத்தின் பாரம்பரியத்திலிருந்தும் நவீன அறிவியல் எப்படி வேறுபடுகிறது என்பதற்கு அறிவியலின் கடந்த 4 நூற்றாண்டு பாய்ச்சலில் கண்டறியப்பட்ட தனிமங்கள் பற்றிய அடிப்படையையும் அவை எப்படி புதிய தனிமங்களின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றன என்பதையும் பார்க்கலாம்.

தனிமம் 117-ன் அணு உட்கரு
தனிமம் 117-ன் அணு உட்கரு

வேதியியல் கோட்பாடுகளின்படி, உலகில் கிடைக்கும் பொருட்களின் அடிப்படைக் கட்டமைப்பு அலகுகளான (Building Blocks) தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி வகையான அணுவால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது வேதியியல் வினைகளின் மூலம் மேலும் சிறிதாக உடைக்கப்படவோ, மாற்றப்படவோ முடியாத அடிப்படைப் பொருள் தனிமம் எனப்படுகிறது. இயற்கையின் இந்த அமைப்பை மதவாதிகள் எந்தக் காலத்திலும் புரிந்து கொள்ள முடியாது.

அணுவினுள் ஒரு உட்கருவும் அதைச் சுற்றி வரும் எலக்ட்ரான் எனப்படும் எதிர்மின் துக(ள்க)ளும் உள்ளன; உட்கருவில் புரோட்டான் எனப்படும் நேர்மின் துக(ள்க)ளும், நியூட்ரான் எனப்படும் மின் தன்மையற்ற சமன்மின் துக(ள்க)ளும் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

அலுமினியம் அணுவின் எலெக்ட்ரான் ஷெல்கள்
அலுமினியம் அணுவின் எலெக்ட்ரான் ஷெல்கள்

ஒரு தனிமத்தின் அணு எண் (Atomic number) உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. நிறை எண் (Mass number) உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையைக் குறிக்கிறது. அணு எண் வரிசைப்படி தனிம வரிசைப் பட்டியலில் (Periodic Table) தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டவணையின் ஒரே நெடுவரிசையில் இடம் பெற்றுள்ள தனிமங்கள் ஒத்த வேதிப் பண்புகளை கொண்டுள்ள ஒரே மாதிரியான தனிமங்களாக (உதாரணம் : உலோகங்கள், அலோகங்கள் முதலியன) உள்ளன. இந்த அட்டவணையில் உள்ள வெற்றிடங்களில் எந்த பண்பிலான தனிமம் இடம் பெற வேண்டும் என்று கணிப்பதிலும், அத்தகைய புதிய தனிமத்தை கண்டுபிடித்து சேர்ப்பதிலும் அறிவியல் தொடர்ந்த வெற்றிகளை ஈட்டியுள்ளது. அத்தகைய வெற்றியின் சமீபத்திய உதாரணம்தான் அணு எண்கள் 113, 115, 117, 118 கொண்ட தனிமங்கள். தனிம வரிசை அட்டவணையை பார்வையிட Dynamic Periodic Table என்ற சுட்டியை அழுத்தவும்.

அட்டவணையின் (இப்போதைக்கு) இறுதி வரிசையில் இடம் பெறும் இந்த கனமான தனிமங்களின் சிறப்பியல்புகள் என்ன? அவை கண்டுபிடிக்கப்பட ஏன் இவ்வளவு காலம் பிடித்தது என்று பார்க்கலாம்.

அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர்மின் துகள் அணுக்கருவுக்குள் விழுந்து விடாமலும், அதை விட்டு தொலைதூரத்திற்கு ஓடிவிடாமலும் பிடித்து வைத்திருப்பது எது? அணுக்கருவில் நேர்மின் துகளையும், சமன்மின் துகளையும் பிணைத்து வைத்திருப்பது எது? இவற்றின் மூலம் அணுவை நிலையாக வைத்திருப்பது எது? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஹீலியம் அணுக்கரு
2 புரோட்டான், 2 நியூட்ரான் உடன் ஹீலியம் அணுக்கரு

உட்கரு வல்விசை (nuclear strong force), உட்கரு மென்விசை (nuclear weak force), மின்காந்த விசை (electromagnetic force), ஈர்ப்பு விசை (Gravitational Force) ஆகிய அடிப்படை விசைகளே, அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் இயங்குவதற்கு காரணம் என்கிறது இயற்பியல். இந்த அடிப்படை விசைகள் இயற்கை அல்லது பருப்பொருள் இயக்கத்தின் அடிப்படை இயல்பாக இருக்கும் போது பரப்பிரம்மத்தையும், அல்லாவையும், கர்த்தரையும் அடிப்படை மூலவராக கற்பிக்கும் அபத்தத்தை என்னவென்பது?

உட்கரு வல்விசை அணுக்கருவினுள் இருக்கும் நேர்மின் துகளையும், சமன்மின் துகளையும் பிணைத்து வைத்திருக்கிறது. அதேசமயம் மின்காந்த விசை நேர்மின் துகள்களுக்கிடையில் விலக்கு விசையை ஏற்படுத்துகிறது. அணு வல்விசையானது மின்காந்த விசையை விட வலிமையானது என்றாலும் அதன் வீச்சு (Range) மின்காந்த விசையின் வீச்சை விட மிகக் குறைவு. இவ்விரு விசைகளின் சமநிலையில் தான் அணுக்கரு நிலைத்திருக்கிறது. அதே போல ஒரு அணுவை சுற்றி இருக்கும் எதிர்மின் துகள்களும், உட்கருவில் இருக்கும் நேர்மின் துகள்களும் மின்காந்த விசையால் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்கின்றன; இவறறின் சமநிலையில் அணு நிலைத்திருக்கிறது. இயற்கையின் இயக்கத்தில் பொருட்களின் இயக்கம் என்பது இப்படி எதிர்த்தும் சேர்த்தும் நடந்து வருகிறது. பூமி சூரியனை சுற்றி வருவதும், ஆண் – பெண் பாலின வேறுபாட்டால் மனித குலம் தன்னை தக்கவைத்துக் கொள்வதும் இத்தகைய இயக்கத்தினால்தான். மதங்களோ இத்தகைய புரிதலின்றி இயற்கையின் சீற்றங்களைக் கண்டு அஞ்சி அத்தகைய பிரச்சினைகளை கடவுளின் சோதனை என்று முடக்கிக் கொள்கின்றன.

அணு எண் 20 கொண்ட கால்சியம் வரையிலான லேசான தனிமங்களின் உட்கருவில் புரோட்டான், நியூட்ரான்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும் 1:1 என்ற விகிதமே ஈர்ப்பு வல்விசையையும், விலக்கு மின்காந்த விசையையும் சமநிலையில் வைத்தது அணுக்கருவின் நிலைத்தன்மையை உறுதி செய்யப் போதுமானது.

சில தனிமங்கள் கதிரியக்க துகள்களை வெளியிடுகின்றன
சில தனிமங்கள் கதிரியக்க துகள்களை வெளியிடுகின்றன

அணுக்கருவில் அடங்கியிருக்கும் துகள்களின் எண்ணிக்கையும் அதனால் அணுக்கருவின் அளவும் அதிகரிக்க அதிகரிக்க, நேர் மின் துகள், சமன்மின் துகள் இடையிலான அணு வல்விசையின் ஈர்ப்பை (attraction) விட மின்காந்த விசையின் விலக்கம் (repulsion) வலிமையடைகிறது. இவ்விலக்கு விசை அதிகரித்தால் கதிரியக்கம் மூலமாக அணுக்கரு சிதைவுற்று (Decay) வேறொரு சிறிய தனிமமாக மாறிவிடும்.

எனில், கால்சியத்தை விட பெரிய அணுக்கருவைக் கொண்ட கனமான தனிமங்களில் அணுக்கரு எப்படி நிலையாக இருக்கிறது? புரோட்டான்களின் எண்ணிக்கையை விட கூடுதலான சில நியூட்ரான்களை சேர்த்துக் கொண்டு அணு வல்விசையை பெருக்கி, மின்காந்த விலக்கு விசையை சமன் செய்துவிடுவதன் மூலம் அணுக்கரு நிலைத்தன்மையை உறுதி செய்து கொள்கிறது.

குரோமியம் எலெக்ட்ரான் ஷெல் அமைப்பு
சிக்கலான குரோமியம் எலெக்ட்ரான் ஷெல் அமைப்பு

வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கையை கொண்ட ஒரே தனிமத்தின் (ஒரே அணு எண், மாறுபட்ட நிறை எண்) வகைகள் ஐசோடோப்புகள் (Isotopes) எனப்படுகின்றன. உதாரணமாக, இரும்பை எடுத்துக் கொண்டால், அதன் அணு எண் 26; அதாவது அதன் புரோட்டான் எண்ணிக்கை 26. நியூட்ரான் எண்ணிக்கையும் 26-ஆக இருக்கும் பட்சத்தில் அதன் நிறை எண் 52. ஆனால், நிறை எண் 52 உள்ள இரும்பு நிலையான தனிமம் இல்லை. நிறை எண் 56, 57, 58 (நியூட்ராண் எண்ணிக்கை முறையே 30, 31, 32) கொண்ட இரும்பு ஐசோடோப்புகள் தான் நிலையானவை. புரோட்டான் எண்ணிக்கை 26-ம், நியூட்ரான் எண்ணிக்கை 30-ம், நிறை எண் 56-ம் கொண்ட இரும்பே நம் பூமியில் அதிகமாகக் கிடைக்கும் இரும்பாகும்.

சரி, புரோட்டான் எண்ணிக்கையை விட கூடுதல் நியூட்ரான்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய தனிமம் வரை உருவாக இயலும்? யுரேனியம் (அணு எண் 92) வரை மட்டுமே இயற்கையாக உருவாக முடியும் என்பதை அறிவியல் கண்டும் விண்டும் சொல்லியிருக்கிறது. இயற்கையாக நமக்குக் கிடைக்கும் தோரியமும் (அணு எண் 90), யுரேனியமும் (அணு எண் 92) கூட அந்தந்த தனிமங்களின் ஐசோடோப்புகளே.

தனிம வரிசை அட்டவணை
தனிமங்களின் அட்டவணையை பூர்த்தி செய்யும் புதிய தனிமங்கள்

இந்த தனிமங்களில் பெரும்பகுதி இயற்கையில் கண்டறியப்பட்டவை, சில தனிம வரிசை அட்டவணையின் வழிகாட்டல்படி செயற்கையாக உருவாக்கப்பட்டவை. அறிவியல் கண்டுபிடித்து சொல்லியிருக்கும் இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் எப்படி முதன்முதலில் உருவாயின? பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் அசைவுகளால்தான் தோன்றியதா?

தனிம அட்டவனையில் முதல் ஐந்து தனிமங்களான ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம், பெரிலியம், போரான் போன்றவை பெரும்பாலும் பிரபஞ்சத்தின் துவக்கமான பெருவெடிப்பின் ஆரம்ப மணித்துளிகளிலேயே உருவாகிவிட்டன. அவற்றை விட பெரிய அணுக்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களினுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பால் உருவாகின. இரும்பு உள்ளிட்டு, பாதரசம் போன்ற அணு எண் 80 கொண்ட கனமான தனிமங்கள் வரை அத்தகைய நட்சத்திரங்களினுள் உருவாகின.

அதற்கும் மேல் கனமான யுரேனியம் வரையிலான தனிமங்கள் மற்றும் ஐசோடோப்புகள் ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்து போகும் கட்டத்தை அடைந்து வெடித்துச் சிதறும் சூப்பர் நோவாவில் கிடைத்த அளப்பறிய ஆற்றலை பயன்படுத்திக் கொண்டு அணுப்பிணைப்பை மேலும் நகர்த்தி உருவாகின. யுரேனியம் வரையிலான தனிமங்களின் ஐசோடோப்புகள் மட்டுமே இயற்கையில் உருவாகி காணக்கிடைக்கின்றன.

 JINR ஆய்வு மையம்
மாஸ்கோவில் உள்ள JINR ஆய்வு மையத்தினுள்

அணு எண் 84-க்கு மேற்பட்ட தனிமங்கள் கதிரியக்க தனிமங்கள் எனப்படுகின்றன. இவை நிலையில்லாததால் படிப்படியாக சிதைவுற்று – கதிரியக்கத்தை வெளியிட்டு – வேறொரு தனிமமாக மாறிவிடுகின்றன. இந்த சிதைவுறும் வேகம் ஒவ்வொரு தனிமத்துக்கும் வேறு படுகிறது. ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அணுக்கள் ஒவ்வொன்றாக சிதைவுற்று அதன் அளவு பாதியாக மாறும் காலம் அத்தனிமத்தின் அரை ஆயுட்காலம் எனப்படுகிறது. இயற்கையில் அதிகமாகக் கிடைக்கும் யுரேனிய ஐசோடோப் U238-ன் அரை ஆயுட்காலம் சுமார் 446 கோடி ஆண்டுகள். அதாவது ஒரு கிராம் U238, அரை கிராம் U238 ஆகவும், கதிரியக்கத்தை வெளியிட்டது போக மீதமுள்ளது தோரியம் மற்றும் இன்ன பிறவாகவும் சிதைவுறும் காலம் சுமார் 446 கோடி ஆண்டுகள்.

கதிரியிக்க தனிமங்களை சிதைவுறாமல் நிலைப்படுத்துவதற்கான ஆய்வுகளும் தற்போது நடந்து வருகின்றன.

அணு எண் 92-க்கு மேற்பட்ட இயற்கையில் கிடைக்காத தனிமங்கள் எப்படி உருவாக்கப்பட்ட என்று பார்க்கலாம். துகள் முடுக்கிகளில் (Particle Accelerators) தனிமங்களின் அணுக்களையும், நியூட்ரான்களையும் அதிவேகத்தில் (ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு பங்கு வேகத்திற்கும் மேல்) மோத விடுவதன் மூலம் அணுக்கருக்களை பிணைத்து இயற்கையில் கிடைக்கும் தனிமங்களை விட பெரிய உட்கருக்களைக் கொண்ட தனிமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முற்பட்டனர்.

  • 1939-ம் ஆண்டின் இறுதியில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் யுரேனியம் அணுவின் மீது நியூட்ரான்களை மோதவிடுவதன் மூலம் அணு எண் 93 கொண்ட புதிய தனிமம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது நெப்டியூனியம் (Neptunium) எனப் பெயரிடப்பட்டது.
  • 1941-ம் ஆண்டு யுரேனியம் அணுவின் மீது ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டியூட்டிரியத்தின் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்ட உட்கருவை மோதவிடுவதன் மூலம் அணு எண் 94 கொண்ட புதிய தனிமம் புளுட்டோனியம் உருவாக்கப்பட்டது.
நாகசாகி
ஏகாதிபத்திய போரில் நாசகாரியாக செயல்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு (நாகசாகி அணுகுண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தனிமம் புளூட்டோனியம் பயன்படுத்தப்பட்டது)

இந்த பரிசோதனைகளின் போது கனமான கதிரியக்க தனிமங்களின் அணுக்கள் மீது நியூட்ரான்கள் மோதும் போது அணுக் கருச் சிதைவு ஏற்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட லேசான தனிமங்களின் அணுக்களாக பிளவுறுகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் வரை இராணுவ ரகசியமாக பாதுகாக்கப்பட்ட புளுட்டோனியத்தின் அணுப் பிளவு 1945-ல் ஜப்பான் நாகசாகியின் மீது அமெரிக்கா போட்ட அணு குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டு இலட்சக் கணக்கான மக்களை காவு வாங்கியது. பெருமளவு ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய அணுப்பிளவு உலகை அடக்கி ஒடுக்குமுறை செலுத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில் சிக்கி நாசகார ஆயுதமாக மாறியது என்பது இந்த வரலாற்றின் ஒரு கிளைநிகழ்வு.

  • 1944-ல் இருந்து 1958 வரை வரிசையாக அணு எண்கள் 95-லிருந்து 102 வரையிலான தனிமங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1956-ல் சோவியத் யூனியனில் அணு ஆராய்ச்சி கூட்டு நிறுவனம் (JINR) துவங்கப்பட்டு ரசியாவும் களத்தில் இறங்க தனிம அட்டவனையின் 7-வது வரிசையின் (அணு எண் 103 முதலான) இடங்களும் ஒவ்வொன்றாக பூர்த்தியடையத் துவங்கின.
  • 2004-ல் ஜப்பானைச் சேர்ந்த ரைக்கன் நிஷினா ஆய்வு மையத்தைச் (RIKEN Nishina Center) சேர்ந்த விஞானிகள் அணு எண் 113 கொண்ட தனிமத்தை உருவாக்கினர்.2006-ல் ரசிய அணு ஆராய்ச்சி கூட்டு நிறுவனமும் (JINR), அமெரிக்காவின் லிவர்மோர் (Livermore) ஆய்வகமும் இணைந்து அணு எண் 118 கொண்ட தனிமத்தை உருவாக்கினர்.

    2010 – 2012 காலத்தில், JINR-ம், அமெரிக்காவின் ஒக் ரிட்ஜ் தேசிய ஆய்வகமும் (Oak Ridge National Laboratory) இணைந்து அணு எண் 115 மற்றும் 117 கொண்ட தனிமங்களை உருவாக்கினர்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்நான்கு தனிமங்களின் அரை ஆயுட்காலம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கை விடக்குறைவு. ஆகையால் இத்தனிமங்களை உருவாக்கி வகை பிரித்துக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

டிசம்பர் 30, 2015 அன்று தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலின் அனைத்துலக ஒன்றியம் (IUPAC) நான்கு புதிய தனிமங்களின் இருப்பையும், கண்டுபிடிப்பையும் உறுதி செய்தது. அவை முறையே நிஹோனியம் (Nihonium), மாஸ்கோவியம் (Moscovium), டென்னிஸ்ஸின் (Tennessine) மற்றும் ஒகனஸ்சென் (Oganesson) என்று பெயர் முன்மொழியப்பட்டு தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை புது வகையான அணுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ளலாம்; அதனால் இதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சொல்வதைக் காட்டிலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

தனிம அட்டவணையின் ஏழாவது வரிசை நிறைவு பெற்றுவிட்டது. ஆய்வுகள் நடக்கின்றன; எட்டாவது வரிசை விரைவில் துவங்கவும் கூடும். நிலையில்லா தனிமங்கள் நிலைத் தன்மை பெற்றுவிடவும் கூடும்.

கடவுளின் ஆயுட்காலம் குறைந்து வருவதையும் மதங்களின் பிடியிலிருந்து அறிவியலை முற்றிலும் விடுதலை செய்வதற்கான காலம் கனிந்து வருவதயுமே மனிதனின் புதிய கண்டுபிடிப்புகளான இந்த தனிமங்களுக்கான வேதி பெயர்சூட்டல் குறிப்பால் உணர்த்துகிறது.

– மார்ட்டின்

மேலும் படிக்க:

(படங்கள் நன்றி : bbc.com)

உணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் !

10

உணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள்!

‘உன் கூட செக்ஸ் வைச்சுக்கிட்டா, இன்னைக்கு நைட்டு எனக்கு உணவு வாங்கித் தரணும்” இந்தக் குரல் ஒலிக்கும் இடம் அமெரிக்கா! இந்தக் குரலுக்குச் சொந்தமானவர்கள் அமெரிக்க பதின்ம வயது இளைஞர்கள்.

us-teensஎந்த அமெரிக்கா என்பது உங்களுக்கு சற்று குழப்பமாயிருக்கும் இல்லையா? ஏனெனில் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்கள் வெனிசுலா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில், மக்கள் பிச்சை எடுத்து பிடுங்கித் தின்று வாழ்கிறார்கள் என்று அமெரிக்க சனநாயக மேன்மை குறித்து ஓயாது ஒழியாது பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அல்லவா?! சந்தேகம் தேவையில்லை. உணவுக்காக தன் உடலை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா” எனப்படும் அமெரிக்க வல்லரசு நாட்டில் வாழும் பதின்ம வயது சிறுவர் சிறுமிகள் தான்!

அமெரிக்காவில் 10 முதல் 17 வயதுடைய 68 இலட்சம் இளம் வயதினர் உணவு-பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்கள். இதில் 29 இலட்சம் இளைஞர்கள் ஆகக் குறைவான உணவுப் பாதுகாப்பையும், மீதியுள்ள 40 இலட்ச இளைஞர்கள் குறுகிய உணவுப் பாதுகாப்பையும் பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

“அர்பன் இன்ஸ்டியூட்” மற்றும் “பீட் அமெரிக்கா” (Feed America) எனும் இரு நிறுவனங்கள் வறுமையில் வாடும் அமெரிக்க சிறுவர் சிறுமிகள் அன்றாடம் வறுமையை எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து நடத்திய ஆய்வு முடிவுகள் அமெரிக்க இளைஞர்கள் உணவிற்காக விபச்சாரத்தில் தள்ளப்படுவதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள், சிகாகோ, போர்ட்லேண்ட், வாசிங்டன் டி.சி, சான் டியாகோ, இல்லினாய், கரோலினா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மாகாணங்களில் ஏழ்மையான நிலையில் வாழும் பத்துக்கும் மேற்பட்ட சமூகங்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

மிகக் குறைந்த வருவாயுடைய இந்த சமூகப் பிரிவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர்களை 20 குழுக்களாக பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 20 குழுக்களில், 8 குழுக்களில் பெரும்பான்மையாக ஆப்ரிக்க-அமெரிக்கர்களும், 5 குழுக்களில் பெரும்பான்மையாக இலத்தீன் அமெரிக்கர்களும், 4 குழுக்களில் பெரும்பான்மையாக அமெரிக்க வெள்ளை இனத்தவரும், மீதமுள்ள 3 குழுக்களில் அனைவரும் கலந்து என 13 முதல் 18 வயதுடைய 193 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களின் உணவு பாதுகாப்பின்மை தேசிய குழந்தைகளுக்கான உணவு பாதுகாப்பின்மை விகிதமான 21.4% விட இரண்டு சதவீதம் அதிகமாக உள்ளது. பத்தில் ஒன்பது பேரின் வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் அமெரிக்க தேசிய சராசரி குடும்ப வறுமையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

“சாத்தியமற்ற தேர்வுகள்” (impossible choices) எனும் தலைப்பில் வெளிவந்த இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க பதின்ம வயது இளைஞர்கள் வறுமையை எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பதை கீழ்வருமாறு தொகுத்திருக்கிறது.

  • பசி என்று வருகிற பொழுது, பெரும்பாலான இளைஞர்கள் வெறும் வயிற்றோடே இருக்கின்றனர். சிகாகோவைச் சேர்ந்த சிறுமி “என் இரு உடன் பிறந்தவர்களும் நன்றாக இருப்பதற்காக நான் சாப்பிடாமல் கூட இருப்பேன். அவர்கள் நன்றாக இருப்பது தான் எனக்கு முக்கியமானது” என்கிறாள்.
  • “மெக்டோனால்டில் ஒரு சில டாலருக்கு கிடைக்கும் உணவு போதுமானது. ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் ஆரோக்கியமான உணவுப்பொருள் 5 டாலருக்கு குறைந்து இருப்பதில்லை. வாங்குவதற்கும் சாத்தியமில்லை; போதவும் செய்யாது” என்கிறாள் கிழக்கு ஓரிகானைச் சேர்ந்த சிறுமி.
  • “கிடைப்பதை வைத்து உயிர் வாழ முடிகிறது. ஆனால் அடிப்படையான வாழ்வை வாழ முடியவில்லை” என்கிறாள் போர்ட் லேண்டைச் சேர்ந்த சிறுமி.
  • “கடந்த கோடை காலத்தில் குறைந்தது முப்பது தடவையாவது எனது மதிய உணவை தேவைப்படும் சிறு குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்கிறாள் இதே போர்ட் லேண்டைச் சேர்ந்த சிறுமி.

கீரின்ஸ்பாரோ நகர்ப்புறத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் தங்கள் வீட்டில் சமைப்பதற்கு பாத்திரங்கள் கிடையாது என்கிறார்கள். பணம் கிடைத்தாலும் அதை பாத்திரச்சாமான்கள் வாங்க பயன்படுத்துவதில்லை என்கின்றனர். மானியத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப்படும் உணவுப்பொருள்கள் பாதி மாதத்திலேயே தீர்ந்து விடுகிறது என்கிறார்கள்.

இவ்வளவு வறுமையில் வாடும் இளைஞர்கள் தங்கள் பசியைப் போக்க பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர்.

  • அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டு, சில பாடங்களில் வேண்டுமென்றே தோல்வியுறுவது, அடுத்த வருடத் தேர்வில் மீண்டும் தோல்வியுறுவதன் மூலம் பள்ளியில் கிடைக்கும் உணவுத் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம் என்கிறார்கள். உலகுக்கே கல்விக் கொள்கை வகுக்க ‘வழிகாட்டும்’ உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கான ‘ஊக்கம்’ இதுதான்
  • சிறைச்சாலைக்குச் சென்றால் உணவு நன்றாக இல்லாவிட்டாலும் மூன்று வேளை உணவு கிடைப்பது உறுதி, தலைக்கு மேல் ஒரு கூரை இருக்கிறது என்கிறார்கள் சிலர். பதின்ம வயதினரில் ஆணாக இருந்தால் கடைகளில் சிறு பொருள்களைத் திருடுவது, ஷு, பைக், கார்களில் உள்ள இசைக்கருவிகளைத் திருடுவது என்று ஒவ்வொரு நாளையும் சமாளிப்பதாகச் சொல்கிறார்கள்.
  • “நான் யாரிடமிருந்தும் திருடுவதைப் பற்றி பேசவில்லை. நான் அங்கு போவது போன்று எது தேவைப்படுகிறதோ அதை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிடுவேன். இதைத்தான் நான் செய்கிறேன். இது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எதாவது தேவையென்றால் இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டி வரும்” என்கிறார் சிகாகோவைச் சேர்ந்த இளைஞர்.
  • சாண்டியாகோவைச் சேர்ந்த இன்னொரு இளைஞர், “மார்க்கெட்டில் பொருள்களை தானியங்கி இயந்திரத்தில் கொடுத்து பில் போடும் போது, சில பொருள்களை பில் போடாமல் விட்டுவிடுவேன்” என்கிறார்.

கடையில் திருடும் பழக்கம் 7 அல்லது 8 வயது முதலே ஆரம்பித்துவிடுவதாகச் சொல்கின்றனர். பொருள்களை எடுத்து மாட்டிக்கொண்டால் அதே கடையில் வேலை கேட்டு பொருளுக்கான பணத்தை திருப்பித் தருவதாகச் சொல்கின்றனர். இதையெல்லாம் தாண்டி ஆண் பிள்ளைகள், போதை மருந்துக் கும்பலிடம் சிக்கி, போதை மருந்து வியாபாரம் செய்வதாக ஆய்வில் தெரியவருகிறது.

சிறுமிகளின் நிலைமை இதற்கு இணையாக விபச்சாரத்தில் போய் முடிகிறது. ஆய்வில் பங்கேற்ற பத்து சமூக பிரிவினருமே வறுமையை எதிர்கொள்ள உடலை விற்பது வாடிக்கையானது என்கின்றனர். சிறுமிகளின் உடலை நுகர்வதில் இனம், புவியியல் என எந்த வேறுபாடுமின்றி அனைத்துக் குழுவில் உள்ளவர்களும் பாலியல் சுரண்டலின் பரந்துபட்ட தன்மையை ஆய்வில் தெரியப்படுத்திருக்கின்றனர்.

  • வறுமைக்காக சிறுமிகள் கிழவர்களுடன் உடலை சுரண்ட அனுமதிக்கிற போக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வாசிங்டனைச் சேர்ந்த சிறுமி, தனக்குத் தெரிந்த 17 வயது சிறுமி 40 வயது ஆண் நபருடன் தன் தேவைகளுக்காக டேட்டிங்கில் ஈடுபவதாக பகிர்ந்திருக்கிறாள்.
  • இதே போன்று தனக்குத் தெரிந்த பதினோறு வயது சிறுமி தன் குடும்ப கஷ்டத்தை சமாளிக்க பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்பிலேயே பாதியில் நிறுத்தியதுடன் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதை நினைவுபடுத்துகிறாள் சிகாகோ சிறுமி.
  • நடுநிலைப்பள்ளிகளில் மாணவிகள் தங்களது தேவைகளைக் குறித்து துண்டு அறிக்கையை பொதுவெளிகளில் ஒட்டுகின்றனர் என்று இளைஞர்கள் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.

சிடிசி-2015 அறிக்கையின்படி 41% உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லியதுதான் அமெரிக்காவின் சுரண்டல் உலகை நம்மிடம் அம்பலப்படுத்திய அறிக்கையாக இருந்தது. ஆனால் இந்த ஆய்வு, பல சிறுமிகள் உணவுக்காக உடலை விற்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

உணவுக்காக உடலை விற்பதை எப்படி அடையாளம் காண்பது? அமெரிக்காவில் இப்படிச் செய்வதற்கு பரிவர்த்தனை டேட்டிங் (Transactional dating) என்கிறார்கள். உடலை விற்பதற்கு பணம் வாங்குவதற்குப் பதிலாக உணவையும் பொருள்களையும் வாங்கிக்கொள்ளும் அவலத்தைக் காட்டுகிறது இது. இப்படிச் செய்வது, தற்பொழுது இருக்கும் நிலைமையில் சரிதான் என்று விளக்கம் அளிக்கிறார்கள் இளைஞர்கள். ‘பணம் வாங்கினால் தானே விபச்சாரம். உணவுக்காகவும் பிற தேவைகளுக்காவும் இதில் ஈடுபடுவது விபச்சாரத்தை விட பரவாயில்லை. அப்படித்தான் சிறுமிகள் தங்கள் வாழ்க்கையை சமாளித்து வருகின்றனர்’ என்கிறான் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞன்.

உணவுக்காக உடலை விற்கும் குழந்தைகள் பற்றிய இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் சமூக நலத்திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆய்வை நடத்திய நிறுவனங்களுள் ஒன்றான “பீட் அமெரிக்கா”, அமெரிக்காவில் உணவு வங்கிகள் எனப்படும் 200 கஞ்சித் தொட்டிகளை நடத்தி வருகிறது. 300 கோடி உணவு பொட்டலங்கள் 4.6 கோடி ஏழைகளுக்கு 60,000 மேற்பட்ட மையங்களில் இருந்து வழங்கிவருவதாக சொல்கிறது இந்த அமைப்பு. உணவுக்காக விபச்சாரம் எனும் அவலத்தைப் போக்க மேலும் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கவும், கோடைகாலங்களிலும் பள்ளிகளில் உணவுத் திட்டத்தை நீட்டிக்கவும் பரிந்துரைக்கிறார்கள் இவர்கள்.

food-service
இலவச உணவு, வேலை வாய்ப்புகள் கொடுத்து ஏழைகளுக்கு உதவுவதற்கான சமுதாய முயற்சிகளில் ஒன்று

ஆய்வை நடத்திய மற்றொரு நிறுவனமான “அர்பன் இண்ஸ்டியுட்” எனும் சிந்தனைக் குழாம் அமெரிக்காவின் சமூக நலத்திட்டங்கள் தோல்வியுற்றதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஆய்வில் பங்கேற்ற பல்வேறு இளைஞர்கள் ஏற்கனவே அமெரிக்க வறுமை ஒழிப்புத்திட்டத்தின் பயனாளர்களாக இருப்பவர்கள் தான். அவர்களது நிலைமைதான் இப்படி உணவுக்காக உடலைவிற்கும் அவலத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள்.

கடந்த இருபது வருடங்களில் குறை-வருவாய் பிரிவினரின் வேலைவாய்ப்பு முற்றிலும் அருகிப்போனதையும், கூலி உயர்வே இல்லாதிருப்பதும், விலைவாசி உயர்வையும் காரணம் காட்டி சமூக நலத்திட்டங்களின் வீச்சு பெருக வேண்டும் என்று சொல்கிறது ஆய்வு முடிவு. நேரடி பணப்பட்டுவாடாவை கிட்டத்தட்ட மடைமாற்றி நிறுத்திவைத்திருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் அரசு இந்த அடித்தட்டு ஏழைகளுக்கு விரிவான முறையில் வழங்க முன் வரவேண்டும் என்று சொல்கிறது. கூடுதல் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தை மேம்படுத்தி பயனாளர்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது ஆய்வறிக்கை.

ஆய்வை நடத்துவதற்கு போர்டு பவுண்டேசனும் இத்தகைய சிந்தனைக் குழாம்களுக்கு நிதி வழங்கியிருப்பதிலிருந்து ஓர் உண்மை வெளிப்படுகிறது. அமெரிக்க சமூக நலத்திட்டங்கள் தோல்வியுற்றுவிட்டன என்பதை எடுத்துக்கூறி நிலைமையைச் சமாளிக்க வேறு ஏதாவது திட்டம் தீட்டப்படாவிட்டால் அமெரிக்க கார்ப்பரேட் கும்பலுக்கு சிக்கல் என்பதை நாசூக்காக இந்த ஆய்வு உணர்த்தியிருக்கிறது.

இதில் நாம் பெறும் பாடம் இதுதான். இவர்கள் சொல்வது போல அமெரிக்க வல்லரசின் சமூக நலத்திட்டங்கள் தோல்வியுறவில்லை. அது அடிப்படையிலே போங்கானது. விபச்சாரத்தில் தள்ளிவிடும் தன் நிதர்சன நிலைமையை அறிவித்து முழுக்கவும் அம்மணமாக நிற்கிறது அமெரிக்க சமூக நலத்திட்டங்கள்.

ஆனால் உலகெங்கிலும் களநிலைமையோ, சுரண்டலுக்கு எதிராக மக்களிடம் எழும் கொந்தளிப்பை அடக்கி ஆள்வதற்கு முதலாளித்துவ கும்பல் தற்காப்பு நிலையில் இருப்பதற்குத் தோதான சமூக நலத்திட்டங்களின் காலம் காலாவதியாகிவிட்டதைச் சொல்கிறது. இப்பொழுது முதலாளித்துவ கும்பல் மூர்க்கத்தனமாக மக்களைத் தாக்கிவருகிறது.

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் அமெரிக்காதான் சொந்த நாட்டு மக்களை நரகத்தில் தள்ளியிருக்கிறது. விரைவில் அமெரிக்க ஏழைகளும் அகதிகளாய் வெளிநாடுகளுக்கு ஓடும் காலம் வரலாம். எனினும் அப்போதும் அமெரிக்காவை வெட்கம்கெட்டு ஆதரிப்பதற்கும், ஜே போடுவதற்கும் இங்கே இலக்கியம் முதல் அரசியல் வரை பல்வேறு அற்பங்கள் அணிவகுக்கும்.

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்

  1. Impossible Choices
  2. US teens often forced to trade sex work for food, study finds

அவர்களுக்குத் தேவை அடிமைகள் !

1
அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம்
இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்
இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்

அகதிகள் வருகையினால் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பதாகவும், தங்களுடைய வேலைகளை பறிப்பதால் பொருளாதாரச்சுமை ஏற்படுவதாகவும் ஐரோப்பியர்கள் கருதுகிறார்களாம். இப்படி ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அகதிகளுடைய வருகையால்  தீவிரவாத சாத்தியக்கூறுகள் அதிகரித்து இருப்பதாகவும் அதில் கூறியுள்ளனர்.

ஸ்ழழாத்வெஜ்(Szazadveg ) என்ற நிறுவனம் நடத்திய புராஜெக்ட் 28  என்ற மற்றொரு கருத்துக்கணிப்பு அடுத்தைந்து ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பாவிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பார்கள் என 91 விழுக்காடு ஐரோப்பிய மக்கள் கருதுவதாக கூறுகிறது.

இங்கிலாந்தின் சன் பத்திரிக்கை 2015 ம் ஆண்டு நவம்பரில் தனது முதல் பக்கத்தில் “இங்கிலாந்தில் வாழும் இசுலாமியர்களில் 5 ல் ஒருவர் ஜிகாதிகள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அகதிகளுக்கு எதிராக கருத்துக்கள் இப்படி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக ஐரோப்பிய முதலாளித்துவம் தீவிரமாக அகதிகளை வரவேற்கிறது. இதற்கு காரணம் அகதிகள் மீதான அன்பு அல்ல மாறாக அகதிகளைக் கொண்டு ஐரோப்பாவின் உழைப்புச் சந்தைக்கான பற்றாக்குறையைத் தீர்ப்பதுதான்.

மூப்படைதல் 21 ம் நூற்றாண்டு ஐரோப்பாவின் ஒரு மிகப்பெரிய சமூகப்பொருளாதார சாவாலாகும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு தன்னுடைய இணையப்பக்கத்தில் கூறியிருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஐரோப்பிய நாட்டுமக்களின் வயதைப் பற்றிய ஒருப் புள்ளிவிவர அறிக்கை, 2013-ம் ஆண்டு 813 இலட்சமாக இருந்த ஜெர்மனியின் மக்கள்தொகை 2060- ல் 708 இலட்சமாக குறைந்துவிடுமென்று எச்சரித்து இருக்கிறது.

 ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.
ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

2025 ஆண்டிற்குள் 20 விழுக்காடுகளுக்கும் அதிகமான ஐரோப்பிய மக்கள் 65 வயதை கடந்து இருப்பார்கள். இதன் காரணமாக துப்புரவு மற்றும் சமூகசேவைகளில் ஈடுபடும் ஐரோப்பியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதை எப்படி ஈடுகட்டுவது?

அடுத்தடுத்த ஆண்டுகளில் 5 லட்சம் அகதிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக ஜெர்மனியின் துணையதிபர் சிக்மார் காப்ரியேல்(Sigmar Gabriel) 2015-ல் கூறியிருந்தார். 2014-ல் 2 லட்சம் அகதிகளை மட்டுமே எதிர்பார்த்து இருந்த ஜேர்மனி 2015-ல் கிட்டத்தட்ட 8 லட்சம் அகதிகளை வரவேற்கத் தயாராக இருந்தது.

அகதிகளின் வருகை, ஜெர்மனி மக்களுக்கான நிதி மற்றும் சமூகநலன்களில் தற்காலிகமாக சிலப்பிரச்சினைகளைத் தோற்றுவித்தாலும் நீண்டகால நோக்கில் ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கு நன்மையையே விளைவிக்கும் என்று சிக்மார் காப்ரியேல் வலியுறுத்தி இருந்தார்.

ஜெர்மனியின் மிகப்பெரிய நிறுவனங்களான டாய்ச்சி அஞ்சல் மற்றும் டைம்லேர்(Automobile) உடனடியாக அகதிகளை உழைப்புச்சந்தைக்கு அனுப்ப தொழிலாளர் சட்டங்கள் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

chart2ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வதற்காக கிட்டத்தட்ட 2.3 பில்லியன் டாலர்கள் நிதியொதுக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை விரைவாக உழைப்புச்சந்தைக்கு அனுப்பி மொழி மற்றும் திறன் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஜெர்மானிய முதலாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு(BDA) தங்களது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அகதிகளை அங்கீகரிப்பதில் காலத்தாமதம் செய்துகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம் மற்றும் ஐரோப்பாவிற்கு அகதிகள் தேவைப்படுகிறார்கள் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையரான பியர் மாஸ்கோவிசி (Pierre Moscovici).

அகதிகளின் வருகை தங்களது பொருளாதாரத்திற்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று ஐரோப்பிய முதலாளிகள் கருதும் அதேவேளையில் ஐரோப்பிய மக்களின் கருத்து அகதிகளின் வருகையால் ஏற்படும் சமூகபொருளாதார மற்றும் கலாச்சார சவால்களை எதிர்நோக்குவது என்ற அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஐரோப்பிய மக்கள் கணிசமான அளவில் இனவெறி, நிறவெறி செல்வாக்கில் இருக்கின்றனர். இதன் அடிப்படையில் தான் மேற்சொன்ன கருத்துகணிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒருபுறம் முதலாளிகள் தமது உழைப்புச்சந்தைக்கு மலிவான கூலியில் ஆள் கிடைப்பதால் தமது லாபத்தை அதிகரிக்கலாம் என்று அகதிகளை ஆதரிக்கின்றனர். மறுபுறம் ஊடகங்கள்  தமது சமூகப் பொருளாதாரம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் அகதிகளால் பாதிக்கப்படும் என்று தமது மக்களை பயபீதியில் ஆழ்த்துகின்றன.

அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம்
அகதிகள் ஒரு பொருளாதாரச் சுமையல்ல மாறாக அவர்கள் ஒரு மனிதவளம்

சிரியா, ஈரான், லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்களுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக ஐரோப்பிய கண்டத்திற்கு புலம்பெயருவதில்லை. அந்நாடுகளில் அமரிக்க-ஐரோப்பிய வல்லாதிக்கங்கள் செய்யும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் அதன் உடனடி விளைவுகளான உள்நாட்டுப்போர்கள் மற்றும் கலவரங்கள், தீவிரவாத அமைப்புகள் மற்றும் இவற்றின் தொடர்விளைவுகளான சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகளின் பொருட்டே தூரத்தேசங்களுக்குத் தூக்கி எறியப்படுகின்றனர்.

ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் அமெரிக்கா ஈன்றெடுத்தப் பிள்ளைகள்தான் என்று இன்று அமெரிக்கர்களே மறுக்க முடியாது. சதாம் உசேன் காலத்தில் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இல்லாமலிருந்தும் பொய் பேசி சதி செய்து ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது. அதற்கு ஐரோப்பிய வல்லரசுகளும் துணைநின்றன.

வளைகுடாப் பகுதியில் இருக்கும் அளப்பரிய எண்ணெய் வளத்திற்காகவும் அப்பகுதியில் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் அந்நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்தது முதல் அதன் தொடர் விளைவுகளை ஈராக்கிய மக்கள் இன்றும் அனுபவிதித்து வருகிறார்கள்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, ஈரான் மற்றும் சிரிய நாடுகளின் அரசுகளை கவிழ்க்க அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களுக்கு சவூதி அரேபியா வழியாக அமெரிக்கா பணம் மற்றும் ஆயுத பட்டுவாடா செய்வதும் அம்பலபடுத்தப்பட்ட உண்மையாகும்.

இதனால் அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை. இத்தொடர் விளைவுகளை தான் ஊடகங்கள் உள்நாட்டுப்பிரச்சினை என்று சடுதியில் முடித்துக்கொள்கின்றன. சவூதி அரேபியா உள்ளிட்ட பணக்கார வளைகுடாநாடுகள் தமது சொந்த இசுலாமிய மக்கள் ஒருவரைக் கூட அகதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை.
அழித்தொழிக்கப்பட்ட மக்களில் எஞ்சியவர்கள் அகதிகளாக புலம்பெயருவதை தவிர வேறுவழியில்லை.

இதன் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான அளவிற்கு கூடியுள்ளதாக ஐ.நாவின் அகதிகள் நிறுவனம் (UNHCR) கூறியுள்ளது. ஏகாதிபத்தியங்களால் உலகஅமைதிக்காக 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக 2015-ம் ஆண்டில் 6 கோடி மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இப்படி தாய்நாட்டில் இருந்து வேறுநாடுகளுக்குத் துரத்தியடிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் மத்தியதரைக் கடலின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் ஒருபகுதியினர் உணவு, உடை, உறைவிடம், மருந்து கிடைக்காமல் மாண்டுபோயுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் வடமாநிலங்களில் மறுகாலனியாக்கம் மற்றும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையால் துரத்தப்படும் மக்கள், காட்டுவேட்டையினால் நசுக்கப்படும் பழங்குடிமக்கள், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவத்தால் நிற்கதிக்கு ஆளாகும் மக்கள் என பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் உள்நாட்டு அகதிகளாகச் சிதறிக் குறைந்தகூலிக்கு உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுவதை முதலாளித்துவம் இன்முகத்துடன் வரவேற்கிறது.

இனவெறியர்களோ வடஇந்தியர்கள் தமிழனின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என்றும் அவர்களின் வருகைக்கு பின்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்றும் இனவெறியைத் தூண்டுகிறார்கள்.

அகதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள். தீவிரவாதிகளும் அப்படிதான். இருவரும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறையால் பிறக்கிறார்கள். முதலாளித்துவத்தின் உச்சநிலை ஏகாதிபத்தியம் என்றார் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்தின் உச்ச நிலை இது வரை மனிதகுலம் கண்டறியா கேட்டறியா எண்ணிக்கையில் அகதிகளை உருவாக்கியுள்ளது எனில் மனிதகுலம் தன் விடுதலையை அடைய ஏகாதிபத்தியத்தை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

– சுந்தரம்

மேலும் படிக்க:
Over half of Europeans link terrorism to refugee influx – PEW survey
91% of EU citizens believe ISIS will pose threat to Europe in next 5yrs – poll
Does the Sun’s claim about UK Muslims’ sympathy for jihadis stack up?
Migrants could help solve Europe’s aging problem
Germany Works to Get Migrants Jobs
SAUDI ARABIA REFUSES TO TAKE EVEN A SINGLE SYRIAN REFUGEE
Global forced displacement hits record high
UNHCR: 2,500 refugees drowned on way to Europe in 2016

காவிரி பிரச்சினை மோடி அரசே முதன்மை குற்றவாளி !

0

ன்பார்ந்த உழைக்கும் மக்களே

cauvery-pala-noticeகடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் பிரதமரோ, இந்தியாவின் உட்சப்பட்ச அதிகார அமைப்பான உச்சநீதி மன்றமோ இப்பிரச்சினையில் தலையிடவில்லை. கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் இல்லை. நேரில் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

வன்முறைக்கு யார் காரணம்?

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் துவங்கின. தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொழில்முறை கிரிமினல்களுக்கே உரிய முறையில் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. கன்னட இனவெறியின் பெயரால் இதை பின் நின்று தூண்டிவிட்டு இயக்கியது பா.ஜ.கவும் அதன் குரங்குப்படைகளான ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி கும்பலும் தான்.

வரவிருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்காக காவிரி பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு கன்னட இனவெறியை தூண்டிவிட்டிருக்கிறது இந்து மதவெறி கும்பல். கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது பா.ஜ.க விற்கு புதிதல்ல. மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், பல மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பதற்கும் இந்து முஸ்லீம் கலவரங்களையே பா.ஜ.க பயன்படுத்துகிறது. மோடியும் மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிடாததற்கு இது ஒரு காரணம்.

காவிரியில் தண்ணீர் இல்லையா?

கர்நாடகாவிற்கே போதிய நீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தர முடியும் என்று சில கர்நாடக அறிஞர்கள் கேட்கின்றனர். இது உண்மையா? உண்மை தான். கோடைக்காலங்களில் கர்நாடகாவில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுவதும், காவிரியில் போதுமான நீர் இல்லாததும் உண்மையே. கோடைக்காலத்தில் பெங்களூருவில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வட கர்நாடகாவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல குடும்பங்கள் மூன்று மாதங்களுக்கு திருமணங்களையே தள்ளி வைக்கின்றன. இது உண்மை தான் என்றாலும், அதற்காக காவிரியில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.

ஒரு நதி உருவாகின்ற இடத்திற்கு மட்டும் அது சொந்தமல்ல. அது எங்கெல்லாம் பாய்கிறதோ அங்குள்ள அனைவருக்கும் சொந்தமானது. அதிலும் கடைமடைப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது தான் சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதி. ஏனெனில், வெள்ளப்பெருக்கு ஏற்ட்டால் அதிக பாதிப்புகளை சந்திப்பது கடைமடைப்பகுதி தான். எனவே தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி, கேரளாவிற்கும் கூட காவிரியில் உரிமை உள்ளது. பற்றாக்குறை காலங்களிலும் இருப்பதை சமமாக பிரித்துக்கொள்வதே சரியானது.

நீர் குறைய யார் காரணம்?

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள குடகுமலையிலிருந்து தான் காவிரி துவங்குகிறது. இப்பகுதி அடர்ந்த கருங்காடாகும். உலகமயமாக்கல் கொள்கை அமுல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் இப்பகுதியில் உள்ள பெரிய காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு முதலாளிகளின் லாபவெறிக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் டீ, காபி, ரப்பர், தேக்குத் தோட்டங்களும், சுரங்கங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்த காடு சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அதற்காக இங்குள்ள நீர்நிலைகளும், காடுகளும் அழிக்கப்பட்டு வார இறுதி வக்கிரக் கொண்டாட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான கூர்க் ரிசார்ட்டுகளும், நட்சத்திர விடுதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இம்மலையில் உள்ள காடுகளும், நீர்நிலைகளும் அழிக்கப்பட்டதன் விளைவாக மழைப்பொழிவு குறைந்து இயற்கை சமநிலை குலைந்துவிட்டது. (முதலாளிகள் குலைத்துவிட்டார்கள்) காவிரியில் நீர் குறைய இதுவே காரணம். எதிர்காலத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாவிட்டால் காவிரி ஆறு இல்லாமல் கூட போகலாம்.

அடுத்து, காவிரியிலிருந்து பெங்களூருக்கு நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இதில் 52% நீர் வீணடிக்கப்படுகிறது, அதாவது 72 கோடி லிட்டர். தண்ணீரை வீணடிக்கும் மெட்ரோ நகரங்களில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

உலகமயமாக்கல் கொள்கை அமுல்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த இயற்கைச் சூழலும், ஏரி, குளங்களும் அழிக்கப்பட்டு லட்சக்கணக்கான சதுர அடிகளில் ஆயிரக்கணக்கான பிரம்மாண்ட ஐ.டி பூங்காக்களும், பன்னாட்டு நிறுவனங்களும், ஷாப்பிங் மால்களும், உல்லாச, ஆடம்பர விடுதிகளும், இரவு நேர கிளப்புகளும், நீர் விளையாட்டு பூங்காக்கள், செயற்கை கடல்கள், கோல்ப் மைதானங்கள், நட்சத்திர விடுதிகள், குதிரைப் பந்தய மைதானங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு தினமும் பல லட்சம் லிட்டர் காவிரி நீர் வீணடிக்கப்படுகிறது. இது தவிர பெப்சி, கோக் ஆலைகளுக்கு தனியே 13 லட்சம் லிட்டர் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய நீர் பன்னாட்டு கம்பெனிகளுக்கு திருப்பிவிடப்படுகிறது. இதனால் பெங்களூர் மக்களுக்கு கோடைகாலத்தில் நீர் கிடைப்பதில்லை. தினமும் 72 கோடி லிட்டர் காவிரி நீர் பன்னாட்டு கம்பெனிகளால் வீணாக்கப்படுவதை கன்னட மக்கள் அறிந்தால் என்னவாகும்? அவர்களை அந்தளவுக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கு தான், ஆளும் வர்க்கமும், அரசியல் கட்சிகளும் இனவெறியை தூண்டிவிடுகின்றன.

விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் கொள்கை.

தமிழர்களையும் கன்னடர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதன் மூலம் அரசும் ஆளும் வர்க்கமும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. இல்லையென்றால் இத்தகைய மோதல்களை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கை என்பது விவசாயத்தை அழித்து முதலாளிகளை கொழுக்க வைக்கும் கொள்கையாகும். காவிரி பாசன பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் திட்டம் அத்தகையதே. இத்திட்டம் வந்தபோது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் போர்க்குணத்துடன் எதிர்த்ததால் நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், முதலாளிகளுக்கான இந்த அரசு மீண்டும் அதை கொண்டுவரலாம். அப்போது எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமானால் விவசாயம் இருக்கக்கூடாது.

விவசாயம் செய்தால் மக்கள் நிலத்தை காக்க மீதேனை எதிர்த்துப் போராடுவார்கள். எனவே விவசாயத்தை ஒழிக்க வேண்டும், விவசாயத்தை ஒழிக்க வேண்டுமானால் ஆற்றில் தண்ணீர் வரக்கூடாது. காவிரி நீர் கோரி வழக்கு போட்டால் தண்ணீரைத் திறக்கச்சொல்லி நீதிமன்றம் பேருக்கு ஒரு உத்தரவிடும். பிறகு நீதிமன்றமே அதை மதிக்காது. பா.ஜ.க வோ உள்ளுக்குள்ளிருந்து கன்னட இனவெறியை தூண்டிவிடும். கர்நாடகம் பற்றி எரியும், பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வராது. நீரின்றி விவசாயம் அழியும். வேலை தேடி விவசாயிகள் நகரங்களுக்கு சென்றால், முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பார்கள். மீதேன் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாம்.

நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார்கள் என்று வழக்குரைஞர்கள் மீது பாய்ந்து பிராண்டி சஸ்பெண்ட் செய்யும் நீதிபதிகள், தமது உத்திரவை மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கும், மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு அதிகாரம் செய்யும் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தாமல் அமைதி காப்பதற்கும், மாநிலத்தின் உரிமைக்காக மாநில அரசு போராடதததற்கும் பின்னால் இத்தகைய மறுகாலனியாக்க காரணங்கள் இருக்கின்றன. கன்னட இனவெறியை தூண்டிவிடுவதற்கும் இது போன்ற காரணங்கள் உள்ளன.

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

40 ஆண்டுகளாக இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான். காவிரி பிரச்சினையால் தமிழக கன்னட மக்களிடையே உள்ள பகை அனைந்துவிடாமல் நெருப்பை ஊதிவிடுவதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. எனவே, தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதிலும் பார்ப்பன பா.ஜ.க வுக்கு தமிழகத்தின் மீது எப்போதும் ஒரு வகை வெறுப்பும் பகைமையும் உண்டு. காரணம் தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபும், திராவிட இயக்கமும் தான். இந்த பிரச்சினையில் மட்டுமில்லை பொதுவாகவே பா.ஜ.க வுக்கும் இந்துமதவெறி கும்பலுக்கும் தமிழகத்தின் மீது வண்மமும், வெறுப்பும், காழ்ப்பும் உண்டு.

எனவே, தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் நடத்தும் மத்திய அரசை பனியவைக்கும் போரட்டங்களை தமிழகம் முழுவதும் வீச்சாக நடத்துவதே இப்பிரச்சினைக்கான தீர்வா அமையும். தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரி செலுத்தப்படக்கூடாது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தையும் செயல்படவிடாமல் முற்றுகையிட்டு முடக்க வேண்டும். நெய்வேலியிலிருந்து மின்சாரத்தையும், நரிமணத்திலிருந்து எண்ணெயையும் நிறுத்த வேண்டும். அத்துடன் தமிழகத்தில் கட்சி நடத்திக்கொண்டு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் கும்பலை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்தி விரட்டியடிக்க வேண்டும். இத்தகைய கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே மத்திய அரசை பனிய வைத்து காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை – தொடர்புக்கு : 95518 69588