நவம்பர் 7 ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 100 -வது ஆண்டு தொடக்க விழா ! காரல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் விழா! நக்சல்பாரி பேரெழுச்சியின் 50-வது ஆண்டு துவக்கவிழா! சீன கலாச்சார புரட்சியின் 50-ஆண்டு நிறைவு விழா! கம்யூனிச அகிலத்தின் 150-துவக்க விழா!
பென்னாகரம் அரங்குகூட்டம்.
நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாளை ஒவ்வொரு ஆண்டும் பென்னாகரம் பகுதி விவிமு, புமாஇமு தோழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு ஐம்பெரும் விழாக்கள் என்பதால் இன்னும் அதிகமாக சிறப்புச்செய்யும் வகையில் தோழர்கள் திட்டமிட்டு அரங்குகூட்டமாக நிகழ்ச்சி நடத்தினர்.
இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இந்நாளை கொண்டாட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் பார்க்கும் இடமெல்லாம் சுவரொட்டியும் பென்னாகரம் வட்டாரத்தின் பல பகுதிகளில் தோரணங்களும் கட்டப்பட்டு காட்சி அளித்தது. பரவலாக துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். இதனைத் தொடர்ந்து, 8 கிளைப்பகுதிகளில் கொடியேற்றினர். பின்னர், இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டெம்போ ஸ்டேண்டில் முழக்கமிட்டு கொடியேற்றிய பிறகு அனைவரும் பேரணியாக அரங்குகூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தனர்.
இதற்கு முன்னதாக, தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7 உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் 07.11.2016 அன்று குடும்பம் குடும்பமாக நவம்பர் 7 விழா அரங்கு கூட்டத்தில் நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்களும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.
இந்த அரங்கு கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியும் விழா எடுக்கிறான். நம் மூதாதையர்களை அழித்துவிட்டு நம்மை விழா எடுக்க வைக்கிறார்கள்.. இதை மக்களும் விழாவாக கொண்டாடுகிறார்கள் இப்படி எதிரியார், நண்பன் யார் என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்கி எதிரியார் நண்பன் யார் என்பதை புரிய வைப்பதும் இன்றைய அரசியல் சூழலில் வெகு சீக்கிரமே புரட்சியை சாதிக்க விரைந்து செயல்படவேண்டும் என்பதே இந்த விழாக்களின் நோக்கம் என்றார்.
மாமேதை கார்ல் மார்க்சு தியாகத்தை பற்றிப்பேசிய முத்துக்குமார், நாம் செத்தாலும் பரவாயில்லை, நம் பிள்ளைகளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் நாமெல்லாம் நினைப்போம். பிள்ளைகள் பட்டினி கிடந்து சாவதை பார்த்துக்கொண்டு நம்மால் வாழ முடியாது ஆனால் நான்கு பிள்ளைகள் செத்து போன பிறகும் மார்க்ஸ் மக்களுக்காக வாழ்ந்தார், போராடினார். எந்த நிலையிலும் போராட்டத்தை கைவிடவில்லை மனித குலத்தையே தனது குடும்பமாக கருதினார். தனது உறவாக கருதினார். இதற்கான போராட்டத்தில் பல்வேறு துன்பங்களையே மகிழ்ச்சியாக கருதினார். இதற்கு நேர் எதிராக இருக்கும் முதலாளித்தும் தான் ஒருவனுடைய சுய நலத்திற்காக மனித குலத்தை பற்றி துளியும் அக்கறையின்றி இயற்கையை அழிக்கின்றனர். இன்றைக்கு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதற்கு முதலாளியின் இலாபவெறிதான் காரணம் முதலாளி இயற்கையை அழிக்கிறான். ஆக ஒருபுறம் மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவ கொள்ளைக்கூட்டம் மறுபுறம் இதற்கு எதிராக போராடும் மனித குலத்தை காக்கும் கார்ல் மார்க்ஸ்சின் வாரிசுகளாக புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கூட்டம். இதில் ஒவ்வொருவரும் யார் பக்கம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இந்த முடிவை 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எடுத்தார்கள் ரஷ்ய மக்கள். மனித குலத்தை காக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம்தான் தனக்கானது என முடிவு செய்தார்கள். மாமேதை தோழர் லெனின் தலைமையில் அணி திரண்டு ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ஒரு பொன்னுலகத்தை படைத்தனர். ரஷ்ய மக்கள் அதன் பிறகு கல்வி, மருத்துவம், குடியிருப்பு, போக்குவரத்து, மின்சாரம், பெண் விடுதலை என அனைத்தையும் பெற்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தனர். அது போன்று நம் நாட்டிலும் படைக்க வேண்டும். இன்றைக்கு மும்பையில் அம்பானி கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் லட்சகணக்கான மக்கள் வசிக்க வீடு இல்லை, இப்படி மலைக்கும் மடுவுக்குமான ஏற்றதாழ்வு இந்தியாவில் உள்ளது. மேலும் ஏழைகளுக்குள்ளே ஏற்றத்தாழ்வு உள்ளது. சாதிமாறி காதலித்தால் இங்கே உயிர் இருக்காது. கல்வி கடைசரக்காகிவிட்டது, படித்தாலும் வேலை இல்லை. பெண்கள் வாழவே முடியாத சமூகமாக, சமூகம் மாறிவிட்டது. அனைத்திலும் பகற்கொள்ளை நடக்கிறது. ஆனால் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சி நடத்தும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு தீர்வு, 1967 ஆம் ஆண்டு மே மாதம் வெடித்த நக்சல்பாரி எழுச்சிதான் என்றும் இதுதான் உண்மையான மக்கள் அதிகாரம், ஜனநாயகம் என்றார்.
இதை சாதிக்க வேண்டும் என்றால் நாம் அமைப்பாக திரள்வது மட்டுமின்றி, அந்த அமைப்பு கலாச்சார ரீதியாகவும் வலுவான அமைப்பாக இருக்கவேண்டும். இதை 1966 ல் சீனத்தில் மாவோ கலாச்சார புரட்சின் அவசியத்தை நடத்தும் வகையில் உணர்த்தினார். புரட்சிக்கு பிறகு தான் கலாச்சார புரட்சி செய்யவேண்டும் என்பது அல்ல. இப்போதே நிலபிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக சமரசமின்றி போராடவேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும் என்றார்.
பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் வழங்கினார். இதன்பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனியின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் முடிந்த அரங்கு கூட்டம் முடிந்தது. பின்னர் அந்த மண்டபத்திலேயே அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இவ்வாறு நடந்து முடிந்த இந்த விழா ஒரு மக்கள் விழாவாக மாறிவருகிறது என்றால் இது மிகையல்ல.
நுழைவுவாயில்
புரட்சிக்கர பாடல்கள்
பள்ளி சிறுமி இலக்கியா
இசைச்சித்திரம்
பார்வையாளர்கள்
தோழர் முத்துக்குமார்
தோழர் பரசுராமன்
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சி
தியாகிகளுக்கு வீரவணக்கம்
தியாகிகளுக்கு வீரவணக்கம்
தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தருமபுரி.
தொடர்புக்கு: 99433 12467
ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்த உடனே யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று. கூடவே மோடியின் இந்த நாடகத்தில் பாதிக்கப்பட்டோரும், பலனடைந்தோரும் யார் எனப் பார்க்கலாம்.
செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றுவதற்கு சென்னையில் உள்ள பல்வேறு நகைக்கடைகள் நவம்பர் 8 நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்தனவாம். இது குறித்து தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. செல்லாத ரூபாய்களை டிசம்பர் மாத இறுதி வரை வங்கியிலும், மார்ச் மாத வரையில் அடையாளச் சான்றுடனும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் நகைக் கடை முதலாளிகள் கிடைத்த வரை சுருட்டியிருக்கின்றனர்.
மற்ற கடைகள் போல விற்பனைப் பொருட்கள் சில்லறை விலையில் இங்கே இல்லை என்பதால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களில் புழங்கும் பல்வேறு முட்டாள் புதுப் பணக்காரர்களும், மேட்டுக்குடியினரும் தி.நகருக்கு படையெடுத்தனர். வந்தவர்கள் அனைவரும் கார்களில் வந்தனராம். நள்ளிரவில் பேருந்து சேவையும் இல்லை, இருந்திருந்தாலும் தமது பணத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு இங்கே வரவேண்டிய தேவையில்லை.
நான்கு இலட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் வந்த மேட்டுக்குடியினர் தங்களது கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் பெயரில் ரசீது வாங்கிக் கொண்டு நகைகளை வாங்கியிருக்கின்றனர். சிலர் பிடித்த நகைகளையும், பலர் கிடைத்த நகைகளையும் வாங்கிக் கொண்டனர். சிலர் தங்க நாணயம், மற்றும் தங்க கட்டிகளை வாங்கிச் சென்றனர். சாலைகளில் கார்கள் அணிவகுத்து நிற்க, போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நகைகள் அமோகமாக விற்றிருக்கின்றன.
நேற்று நள்ளிரவில் மட்டும் பல கோடிகளுக்கு நகை விற்பனை இருந்திருக்கும் என ஒரு நகை வியாபாரி தெரிவித்ததாக தினகரன் செய்தி கூறுகிறது.
இவர்களெல்லாம் தகவல் கிடைத்த உடன் பணத்தை புத்திசாலித்தனமாக தங்கமாக மாற்றிக் கொள்வதாக நினைத்து அப்படி அலை பாய்ந்திருக்கின்றனர். 500, 1000 ரூபாய்களை ஒன்றரை மாதத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ, நேரமோ இவர்களுக்கு இல்லை. மேலும் வங்கியில் மாற்றினால் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் என்றும் நினைத்திருக்கலாம். கூடவே அன்றாட வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், கழிவு மூலம் பணம் சுருட்டும் புதுப் பணக்காரர்களாகவும் இவர்கள் இருக்கலாம். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் இருக்கலாம். இவர்களில் பலர் ஓசியில் தொந்தி வளர்க்கும் கூட்டத்தினராக இருக்க வேண்டும். ஒரு வேளை முறைகேடு இன்றி பணம் சம்பாதித்திருந்தாலும், தங்கம் வாங்கினால் தப்பிப்பாய் என்று அவசரப்படும் அப்பாவிகளும் கூட இதில் இருக்கலாம்.
பாரம்பரிய பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளது கருப்புப் பணம் வரியில்லா சொர்க்கங்கள் என அழைக்கப்படும் வெளிநாட்டு தீவுகளில் பத்திரமாக இருப்பதால் அவர்கள் இப்படி ‘அற்பத்தனமாக’ நடக்க வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்த வரை கருப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைப்பட்டால் இந்தியாவில் தொழில் தொடங்கவோ சொத்துக்களை வாங்கவோ மொரிஷியஸ் போன்ற அன்னிய முதலீடுகளுக்காகவே ஆண்டு முழுவதும் சேவை செய்யும் நாடுகள் மூலம் சட்டப்பூர்வமாகவே அந்த பணத்தை கொண்டு வர முடியும்.
மோடிக்கு மட்டுமல்ல அவரது கூட்டாளிகளான அதானி, அம்பானி போன்ற கேடிகளுக்கும் இந்த கேடிகளுக்காக இந்திய பொருளாதாரத்தை இயக்கும் ரிசர்வ் வங்கி அறிஞர்களுக்கும் இது தெரியும். இருப்பினும் நாட்டு மக்களிடம் ஏதாவது செய்து காட்ட வேண்டிய தேவை மோடிக்கு இருக்கிறது. உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியவர் என்பதால் இந்த நள்ளிரவு தடை மூலம் இந்தியாவின் கருப்புப்பணத்தை நொடியில் கைப்பற்றிவிட்டார் என்று விரைவில் பாலிவுட்டில் படமும், பாராட்டு விழாவும் நடக்கலாம். தொடர்ந்து ஏதாவது செய்தால்தான் தனது வெத்துவேட்டு இமேஜை தக்கவைக்க முடியும் என்பது பாசிஸ்டுகளின் பாலபாடம்.
கருப்புப் பண மோசடி பாபா ராம் தேவுடன் கை தூக்குகிறார் கருப்புப் பண மீட்பு போராளி மோடி!
வோடோபோன், நோக்கியா போன்ற நிறுவனங்கள இங்கே வரிஏய்ப்பில் கொண்டு சென்ற பணம் எத்தனை ஆயிரம் கோடி? மோடி அரசும் சரி, அதற்கு முந்தைய மன்மோகன்சிங் அரசும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி? சமீபத்திய பனாமா லீக்சில் இந்திய முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பது எத்தனை இலட்சம் கோடி?
இவற்றையெல்லாம் யாரும் கொண்டு வரவோ மீட்கவோ முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு அருகில் இருக்கும் நாளில் மோடி இதை அறிவித்திருக்கிறார். பகவான் அமெரிக்காவின் உற்சவர் மாற்றத்தில் அடிமை இந்தியாவின் வாழ்த்தாகவும் இதை சொல்லலாம்.
ஏனெனில் அனைவருக்கும் ஆதார், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம், மானியங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும், வணிக நடவடிக்கைகளில் ரொக்க புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகமாக்குதல், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பாதுகாப்பு துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி, பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை விரைவு படுத்துதல், ரிலையன்சின் ஜியோ அனைத்தும் இந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு அறிவிப்போடு தொடர்புடையது.
சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள். இத்தகைய முட்டாள்களே மோடியின் பிரச்சாரத்தின் காலாட்படையாக கதறுகிறார்கள் அதாவது உளறுகிறார்கள்.
ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.
இதைத்தாண்டி ஜெயா கும்பல் பகிரங்கமாக கொடுக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? திருப்பூர் கன்டெயினர் விவாகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய மலை முழுங்கி கொள்ளை நடக்கும் நாட்டில் இந்த செல்லாத 500 ரூபாய் நோட்டு நாடகம் யாரை தண்டிக்கும்? இனி இந்தியாவில் லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தேவைகளை சட்டப்பூர்வமான பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சேவை செய்யும் உள்நாட்டு ஹவாலா நிறுவனங்கள் வரும்.
மோடியின் அறிவிப்பால் நேற்றிரவு இரவு உணவு இல்லாமல் அதாவது 500 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பட்டினி கிடந்தோர் பலர். அன்றாடக் கூலி வேலைகளுக்கு மாலையில் கொடுக்க சில்லறை இல்லை என்பதால் பல நூறு கட்டிடத் தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர். சில்லறை பிரச்சினைகளுக்காக சிறு வியாபாரிகளும், அன்றாடம் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் சாதாரண மக்களும் சொல்லணாத் துயரங்களை அடைந்திருக்கின்றனர்.
கருப்புப் பணத்தின் ஊற்று மூலமான முதலாளிளுக்கும், அவர்களின் எலும்புத் துண்டை கவ்வித் தின்னும் அதிகார வர்க்கத்திற்கும் இந்த அறிவிப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை. மோடியின் அறிவிப்பால் நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் அளவே அவர்கள் இதை பேசுகிறார்கள். கருப்புப் பணத்தை ஏதோ அந்தக் கால நம்பியாரின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியாகவே அவர்கள் கருதுகிறார்கள். மோடி அதை எப்படியாவது எடுக்க முயல்கிறார் என்று கொஞ்சம் நம்புகிறார்கள். இதுதான் மோடியின் நோக்கம். இதை அர்னாப் கோஸ்வாமி முதல் ரங்கராஜ் பாண்டே முதல் மாபெரும் வெற்றி என கூவுவார்கள்.
இத்தகைய ஊடகங்களுக்கு விளம்பரங்களையும், பிரதமர்களுக்கு புரவலர்களையும் அளிக்கின்ற முதலாளித்துவ உலகம் இந்த அறிவிப்பால் தனது இலாபத்தை கச்சிதமாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்.
1917 நவம்பர் 7 ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி தோழர் லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவப்பட்டு நூறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்துவமான நாளை மக்களுக்கு தெரியபடுத்தி நமது நாட்டிலும் ஓர் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ உழைக்கும் மக்களை, தொழிலாளி வர்க்கத்தை விடுதலையுணர்வூட்டி மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்பின் சார்பாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 07.11.2016 திங்கள் கிழமை அரங்குக்கூட்டம் நடைபெற்றது. அரங்கமெங்கும் நிரம்பி வழிந்தது மக்கள் வெள்ளம்.
தோழர் அம்பேத்கர்
இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமை தாங்கி பேசுகையில், 1917 க்கு முன்பு நடந்த பிரெஞ்ச் புரட்சியாக இருக்கட்டும், மன்னாராட்சியை வீழ்த்திய முதலாளித்துவ புரட்சியாக இருக்கட்டும் அந்த புரட்சிகள் எல்லாம் ஏற்கனவே நிலவிய சுரண்டல் அரசுக் கட்டமைப்பை மாற்றியமைக்கவில்லை. அதனை மென்மேலும் அழகு படுத்தி சுரண்டலை தீவிரப்படுத்த தான் உதவியது. அதாவது சுரண்டும் வர்க்கத்தை இடமாற்றம் செய்தது. மக்களின் உழைப்பை ஒரு சுரண்டும் வர்க்கம் வீழ்த்தப்பட்டு மற்றொரு சுரண்டும் வர்க்கம் உருவாகியது. ஆனால், ரசியாவில் நடந்த சோஷலிச புரட்சி உலகெங்கிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு விடிவெள்ளியாய் அமைந்தது. “உழைக்காதவனுக்கு உணவு இல்லை. உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற ஓர் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாள் தான் நவம்பர் 7 ரசிய புரட்சி. அந்த மகத்துவமான நாளை பாட்டாளி வர்கத்தின் விடுதலை நாளாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். ரசியப் புரட்சி நமக்கு மிகப்பெரும் அனுபவம். அது போல் இந்தியாவிலும் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ முடியும் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
தோழர் லோகநாதன்
அடுத்ததாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச் செயலர் தோழர். லோகநாதன் அவர்கள் பேசுகையில், பசி, பட்டினி, பஞ்சம், கொடிய வறுமை, பட்டினிச் சாவுகள் என்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் வாடிய போது இதற்கான காரணங்களை கண்டறிந்து இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்று ஓர் அறிவியல் பூர்வமான தத்துவத்தை முன்வைத்தார் காரல் மார்க்ஸ். அந்த தத்துவம் தான் கம்யுனிசம். உலகை கொள்ளையடிக்க துடிக்கும் முதலாளிகளின் சுரண்டலில் இருந்து உழைக்கும் மக்களை விடுதலை பெற வைக்கும் அந்த தத்துவத்திற்கு தன் வாழ்நாளையே அர்பணித்துக் கொண்டார். அந்த மாபெரும் தலைவரின் 200 ம் ஆண்டு விழா. உழைப்பை மையமாகக் கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. ஆனால் உழைப்பின் பயனை வெகு சிலர் அபகரித்துக்கொள்ளும் முதலாளித்துவத்தின் அய்யோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ். அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு வழிகளில் அதனை பிரச்சாரம் செய்து தனது போராட்டத்தை தொடங்கினார். தன்னை வர்க்க இறக்கம் செய்து கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து, மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
தோழர் மணிவாசகம்
அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் விருதை செயலர் தோழர். மணிவாசகம் அவர்கள் மார்க்சிய தத்துவத்தை கொண்டு போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியை நிறுவினார் தோழர் லெனின். மார்க்சியத்தின் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ரசிய போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டி தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவினார். முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யுனிசமே என்று முழங்கினார். உலகத்தில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும் முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முறியடிக்கப்பட்டது. உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத சாதனைகளைச் செய்தது தோழர் லெனின் தலைமையிலான ரசிய சோஷலிச அரசு என்பதன் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
தோழர் ஞானவேல்ராஜா
அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் செயலர் தோழர். ஞானவேல் ராஜா அவர்கள், உழைத்து வாழக்கூடிய மக்களும் நாட்டை ஆள முடியும் என்பதை நிருபித்து கட்டிய நாள் நவம்பர் 7. பல்வேறு கண்டம் தாண்டி இருக்கும் ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசு நிறுவப்பட்டது.. இந்தியாவில் நாம் என்ன செய்ய போகிறோம்? மாற்றம் வேண்டும் நினைக்கிறோம். அதற்கு தடையாக இருப்பது இந்து மதம். ஏனென்றால், அது பிறப்பிலேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டில் மக்களை பிரித்து வைத்துள்ளது. இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் கூறி ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த அடிமை சங்கிலியை நம்மால் உடைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தில், நாம் பொதுவுடைமை வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோம். அனைவரையும் சமமாக கருதியது. அது தான் நமது திராவிட பண்பாடு. ஆரிய பார்ப்பன கூட்டம் வந்த பிறகு சதி, சூழ்ச்சியின் மூலம் நம்மை அடிமையாக்கினான். இந்த ஆரிய கூட்டத்தை எதிர்த்த நமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இன்றைய இளைஞர் சமூதாயம் ஆண்டராய்ட் போனில் சிக்கிக்கொண்டுள்ளனர். பார்ப்பனிய பண்பாடு நம்மை மாற்றியுள்ளது. மனிதனாக வாழ தகுதி இல்லாத சூழல் நம் நாட்டில் நிலவுகிறது. இந்த பார்ப்பன பண்பாட்டை வீழ்த்த இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
தோழர் சுதேஷ்குமார்
இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தமிழ்நாடு, தோழர். சுதேஷ்குமார் அவர்கள் பேசுகையில், “நமது ஆசான் லெனின் கூறுகிறார், தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளும் போது தான் நமது இலக்கை அடைய முடியும் “என்றார். அப்படி பல்வேறு தோல்விகளில் இருந்து தான் ரசியாவில் முதல் சோஷலிச நாடு அமைந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மாடமாளிகையில் நிலப்பிரபுக்கள், மன்னர்கள், முதலாளிகள் என்று சுகபோகமாக இருந்தனர். மற்றொருபுறம் ஏழைமக்கள் பசி, பட்டினி, கல்வி இல்லை,மருத்துவம் இல்லை, உணவு இல்லை ,உடை இல்லை. என்று கொடிய வறுமையில் திண்டாடியது. அந்த மக்களின் தேவை உணவோ, உடையோ இல்லை. விடுதலை. ரசிய பாட்டாளி மக்கள், லெனின் தலைமையில் தங்களை புரட்சியில் இணைத்துகொண்டனர்.
இதற்காக ரசிய மக்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். புரட்சி நடந்தேறியது. அன்று ரசியாவில் இருந்த அதே நிலைமை தான் இன்று இந்தியாவில் நிலவுகிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்ட விருபுகிறார் மோடி. கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக மிரட்டுகிறார். விளைச்சல் இல்லாததாள் விவசாயிகள் தொற்கொலை செய்து கொள்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் பூமி வறட்சி நிலமாக்கப்பட்டு .குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு நிலம் தாரை வார்க்கப்படுகிறது. கோவையில் நெசவுத் தொழில் அழிக்கப்பட்டு நெசவு தொழிலாளிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும், நாட்டு மக்களும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுகாலனியாக நடவடிக்கைக்கு தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இந்து பாசிசம் வெறிபிடித்து அலைகிறது. இந்த இருபெரும் கொடிய பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வர்க்கமாக ஒன்று திரள வேண்டும். உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புரட்சிகர அமைப்பில் கரம் கோர்க்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த கூட்டத்தின் இடையிடையே மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர பாடல் பாடினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.
நவம்பர்– 7 சிவப்பின்மலர்ச்சி நவம்பர்புரட்சி!
சிவப்பெனில்
உவப்பே!
கருவறை உயிரோட்டம்
தாய்மையின் சிவப்பு.
மழலையின் செவ்வாயில்
மொழியின் சிவப்பு.
விண்வெளியில் பறந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் குடிமகன் என்றாலும் இந்தியாவின் தூரத்து சொந்தம் என்ற வகையில் அவரை இங்கே அப்துல் கலாம் வகையறா கனவான்களும், சீமாட்டிகளும் கொண்டாடுவர். அப்பேற்பட்ட நாட்டில்தான் சாமி கும்பிடுவதற்கு கூட பெண்களுக்கு அனுமதியில்லை.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!
சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமே வழிபடவேண்டும், மாத விலக்கு பருவத்திற்கு முந்தைய பிந்தைய பெண்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அவாள்கள் உருவாக்கிய விதி முறை. இது குறித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புக்களும், முற்போக்கு அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதன்படி 2006-ம் ஆண்டில், கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கு ஐயப்பனன் கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம்போர்டு மற்றும் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதநம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஏற்கனவே உத்திரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், தானே அதை மீறக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த வழக்கில் எல்லா பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று இதற்கு முன்னர் அச்சுதானந்தன் தலைமை தாங்கிய இடதுசாரி முன்னணி அரசு, 2007-ம் ஆண்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உ ம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. அவர்கள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். என்ன இருந்தாலும் இவர்கள் ‘மென்மையான’ இந்துத்துவா அல்லவா!
தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேட்கின்றனர். உடனே முந்தைய அச்சுதானந்தன் அரசு எடுத்த அதே நிலைப்பாடுதான் மாற்றமில்லை என்று தற்போதைய இடதுசாரி முன்னணி அரசு கூறியிருக்கிறது. உடனே தேவசம்போர்டு வழக்கறிஞர், “இப்படிமாநில அரசு அடிக்கடி நிலைப்பாடை மாற்றக்கூடாது. பெண்களை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டிருக்கிறார்.
பிறகு நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த ஆண்டு 2017 பிப்ரவரிக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த தள்ளிவைப்புக்கு காரணம் இது போன்ற பிரச்சினைகளை ஆறப்போட்டு கொல்வது மனுநீதிமன்றத்தின் வழக்கம். அது உண்மையெனும் விதமாக இந்துமதவெறியர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அணிவகுத்து, பெண்களை விடக்கூடாது, நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்
பொதுவாக சபரிமலை சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளர் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம்!
ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும் இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.
இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?
பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பார்ப்பான பூசாரியின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பார்ப்பானர் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறார். இதைக் கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. சபரிமலைக்கு சென்ற நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்தவர்கள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.
இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு ‘அறிவியல்’ விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்கலாம். மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.
சபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!
கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்குபவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா?
“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் அன்றைக்கு கோயிலின் தலைமைத் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை அன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?” என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.
மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.
இப்பேற்பட்ட மார்க்சிஸ்டுகள் இன்றைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலும் இந்த மகர ஜோதி குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார்களா? ஒரு மூடநம்பிக்கையை வருமானம் சார்ந்து மறைக்கும் போது இன்னொரு மூட நம்பிக்கை பாலினம் சார்ந்து ஒடுக்குகிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்தை கேள்வி கேட்கும் தைரியமோ, அறிவோ, தெளிவோ மாரக்சிஸ்டு கட்சியிடம் இல்லை. அப்படி பிரச்சாரம் செய்தால் ‘இந்துக்களின்’ வாக்கு போய்விடும் என்பது மார்க்சிஸ்டுகளின் பயம். மக்கள் மத்தியில் இதை பிரச்சாரம் செய்யாமல் நீதிமன்றத்தில் மட்டுமே கொண்டு வந்து விட முடியாது.
மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய வழக்கில் தீர்ப்பு கொடுத்திருக்கும் உச்சநீதிமன்றம் சபரிமலை வழக்கிலும் என்ன கொடுத்து விட முடியும்? ஒருவேளை பெண்கள் போகலாம் அதை முடிவெடுக்க வேண்டியது பந்தளம் மகாராஜா என்று கொடுத்து விட்டால், யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் பிரச்சினையை அமுக்கிவிடலாம். பிறகு பெண்களும் கோவிலுக்கு போக முடியாது. போக கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லையென லாவணியும் பாடலாம்.
“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார். ஆதிக்க சாதிவெறியைத்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்காமலே தடை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, இது போன்ற மதநம்பிக்கைகளை அப்படி பார்க்க முடியாது என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஷாநவாஸ்.
ஒருவேளை மசூதிகளில் பெண்கள் தொழ முடியாமை, மவுல்விக்களில் பெண்கள் இல்லாமை, புர்கா, தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் இசுலாமிய மதத்தின் தனித்துவத்தை பேணவும், அதை நீதிமன்றமோ, அரசோ திணிக்க முடியாது என்பதற்காக அவர் இப்படி சேம்சைடு கோல் போட்டிருக்கலாம்.
சபரிமலை விவகாரத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை வெறுமே நம்பிக்கை விவகாரமாக அவர் பார்க்கிறார். அப்படி எனில் நேரடி வன்முறை சாராமல், ஆதிக்கசாதிவெறியர்கள் நடத்தும் தீண்டாமைக் கொடுமைகளையும் அவர் தனிப்பட்ட மத,சாதி நம்பிக்கை என்று அவர் ஏற்க வேண்டும்.
மக்களின் நம்பிக்கை, உரிமை அனைத்தையும் மதச்சார்பின்மையில் இருந்து பார்க்காமல் எல்லா மதங்களுக்கும் உரிமை உண்டு, அனைத்தையும் அனுசரித்து போகவேண்டும் என்று போனால் அது இப்படித்தான் கேடி ராகவனோடு அணிசேர வேண்டியிருக்கும். இதையே அரசியல் ரீதியாக பா.ஜ.க வுடன் கூட்டணி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் கூறுகிறார். அப்போது கண்டனம் தெரிவித்த ஷாநாவாசை இப்போது ரவிக்குமார் திருப்பிக் கேட்டால் என்ன சொல்ல முடியும்?
ஒடுக்கப்படும் மக்களையெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஒடுக்குதலை நியாயப்படுத்துவது பார்ப்பனிய மரபு. “ஹரியின ஜனங்கள்தான் ஹரிஜனங்கள்” என்று காந்தி காலத்தில் துவங்கியது இந்த கணக்கு. மோடி பிரதமரானதும் துப்புறவுத் தொழிலாளிகளின் பணியை கடவுளின் பணியென்றார். அதே போல வீட்டில் மட்டும்தான் பெண் இருக்க வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வழியில்தான் “பாரத தேசம் பெண்களை தாயாக போற்றும் நாடு” என்று வானரக் கூட்டம் ஓதி வருகிறது.
நியாயமாக சபரிமலையில் பெண்களை அனுமதி, என்று தற்காப்பு நிலையில் இன்று பேசுவதை விட, பெண்களை இழிவுபடுத்தும் ஐயப்பனை கைது செய் என்று போராடுவதே சரியாக இருக்கும். சட்டப்படி கோவில் சொத்துக்களின் உரிமையாளரான அந்தந்த கோவில் கடவுள்களை ஒரு தனி நபராகவே சட்டம் கருதுகிறது. ஆகவே ஐயப்பன் சிலையை தூக்கி மத்திய சிறையில் அடைத்து விசாரியுங்கள் !
“அப்போது தான் பிறந்த எனது குழந்தையைப் பார்த்து நான் பயந்து விட்டேன். மருத்துவர்களே கூட எனது குழந்தையைப் பார்க்க பயந்தார்கள்..” ஐமென்ராஸின் குரல் மெல்லிய நடுக்கத்தோடு ஒலிக்கிறது. ஐமென்ராஸ் காங்கோ நாட்டின் தெற்குப் பகுதி நகரமான லுமூம்பாஷியை அடுத்துள்ள லூயிஸ்விஷி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிறந்த குழந்தையை ஒரு புதிரான நோய் தாக்கியிருந்தது.
ஹோலோப்ரோசென்சிபாலி (Holoprosencephaly) என்பது தான் அந்த புதிரான நோயின் பெயர். கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் – குறிப்பாக உலோகக் கழிவுகளால் மாசுபட்ட சூழலில் – பிறக்கும் குழந்தைகளை இந்நோய் தாக்குவதாக மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது. ஐமென்ராஸ் பிரசவித்த குழந்தையை இந்த நோய் தான் தாக்கியிருந்தது.
ஹோலோப்ரோசென்சிபாலி மாதிரிப்படம்
ஹோலோப்ரோசென்சிபாலி நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளின் முகம் அரூபமாகி விடும். கண், காது, மூக்கு, தலை, உடல் என உடலின் உறுப்புகள் எதையும் இனம்பிரித்துக் காட்ட முடியாதபடிக்கு – பிறந்தது ஆணா பெண்ணா என்று கூட பிரித்தறிய முடியாதபடிக்கு – வெறும் சதைப் பிண்டமாகவே அந்தப் புதிய உயிர் ஜனிக்கும். ஜனித்துச் சில மணி நேரங்களிலோ நாட்களிலோ இறந்தும் விடும்.
லுமும்பாஷி மட்டுமின்றி கோபால்ட் சுரங்கங்கள் நிறைந்த தெற்கு காங்கோவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வினோதமான பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு, கான்சர் போன்ற நோய்கள் பெரியவர்களைத் தாக்குகின்றன என்றால் ஒரு பாவமும் அறியாத பிறந்த குழந்தைகளையோ மருத்துவ அறிவியல் முன்பின் கேள்விப்பட்டிராத நோய்கள் தாக்குகின்றன.
தெற்கு காங்கோவில் பிறக்கும் குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் இன்னொன்று மெர்மெய்ட் சிண்ட்ரோம் (Mermaind Syndrome) – பிறந்த குழந்தையின் வயிற்றுப் பகுதிக்குக் கீழே உள்ள பிறப்புறுப்பு, கால்கள் என அனைத்தும் மொத்தமாக ஒரு தசைப் பிண்டமாக (கடற்கண்ணியின் உடலைப் போல்) தோற்றமளிக்கும்.
லுமும்பாஷி ஒரு சுரங்க நகரம். சுரங்கம் என்றால் நவீன தொழிற்துறை சாதனங்கள் கொண்டு அகழ்ந்தெடுக்கம் சுரங்கங்கள் அல்ல – மன்வெட்டி போன்ற கைக்கருவிகளைக் கொண்டு சுயேச்சையான தனிமனிதர்கள் தங்களது சொந்தமுறையில் தோண்டும் சுரங்கங்கள் (Artisan Mines). அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த வரைபடமோ, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தோண்டும் பாதையோ வரையறுக்கப்பட்டிருக்காது. குத்துமதிப்பாக பூமியைத் தோண்டிச் செல்லும் போது, எதிர்பார்த்த கணிமங்கள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.
ஒரு நாட்டின் இயற்கை வளங்களைக் கொண்டு அந்நாட்டின் செல்வத்தை மதிப்பிடுவதாக இருந்தால், இன்றைய தேதியில் சுமார் 15 ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு கண்டறியப்பட்ட தாதுப் பொருட்களும், இயற்கை வளங்களும் கொண்ட காங்கோ தான் பணக்கார தேசம். ஆனால், வளங்களின் மீது அந்த மக்களுக்கோ அரசுக்கோ உரிமை ஏதுமின்றி மொத்த நாடும் அந்நியர்களிடம் அடமானம் வைக்கப்பட்டிருப்பதால் காங்கோ இன்றைக்கு வறிய நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது.
பிணத்தைச் சுற்றும் வல்லூறுகளைப் போல் காங்கோவின் இயற்கை வளங்களைச் சூறையாட ஏகாதிபத்திய நாடுகள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக அந்நாட்டைத் தமது பிடியில் வைத்துள்ளன. வரைமுறையற்ற சுரண்டலுக்குத் தோதான கங்காணிகளே போதும் என மேற்கத்திய ஜனநாயக காவலர்கள் தீர்மானித்து விட்டபடியால், காங்கோவில் ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதெல்லாம் பெயரளவுக்குத் தான். அந்நாட்டின் பல்வேறு பிராந்தியங்கள் யுத்தபிரபுக்களின் தலைமையிலான ஆயுதக் குழுக்களால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன.
காங்கோ : ஒரு சுருக்கமான வரலாறு.
நவீன தொழிற்துறைப் புரட்சிக்கு முன்னதாகவே ஐரோப்பியர்கள் ஆப்ரிக்க கண்டத்தில் நுழைந்து விட்டனர். துவக்கத்தில் அவர்களுக்கு இயற்கை வளங்களை ஆப்ரிகாவின் விட மனித வளமே நாவில் எச்சிலூற வைத்தது. 1480ல் போர்ச்சுகீசியர்கள் காங்கோவில் கால் பதித்தனர். தங்கம் வெள்ளி வைரம் மற்றும் அரிய வகை அலங்காரக் கற்கள் என அள்ள அள்ளக் குறையாத இயற்கைச் செல்வங்கள், அவற்றை இயற்கைக்கு பாதிப்பேற்படுத்தாத வண்ணம் மேலாண்மை செய்த உள்ளூர் அரசு, உழைக்கச் சலிக்காத மனித வளம் என அந்த நாடு ஐரோப்பிய காலனியவாதிகளின் கண்களில் பொன் முட்டையிடும் வாத்தாகவே தெரிந்தது.
குறிப்பாக இலகுவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகாத வலுவான மரபணு பாரம்பரியம் கொண்ட கருப்பின மக்கள் ஐரோப்பியர்களின் கண்களுக்கு சிறந்த அடிமைகளாகத் தெரிந்தனர். தங்களை இருகரம் நீட்டி அன்போடு வரவேற்ற காங்கோலியர்களை வஞ்சகமாக வீழ்த்திய போர்ச்சுகீசிய காலனியவாதிகள், அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டனர். காடுகளில் திரியும் மிருகங்களை பொறிவைத்துப் பிடிக்கும் அதே வழிமுறைகளில் கருப்பின மக்களைப் பிடித்து கூண்டுகளில் அடைத்து கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்தனர்.
“ஆதித் திரட்சி” என்று மார்க்ஸ் குறிப்பிட்ட இந்த காட்டுமிராண்டித்தனங்களின் வழியாகத் தான் பிற்காலத்தில் ஏற்பட்ட தொழிற்துறைப் புரட்சிக்கான மூலதனத்தை ஐரோப்பிய முதலாளிகள் திரட்டினர். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு நாகரீகம் குறித்தும் ஜனநாயகம் குறித்தும் வகுப்பெடுக்கும் மேற்கத்திய கனவான்களின் கொழுப்புக்கு அடிப்படை ஆப்ரிகாவில் அவர்கள் தின்று தீர்த்த மனித உயிர்கள் தாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி மலிவான இயற்கை வளங்களைக் கோரிய போது ஐரோப்பியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த காலனிய நாடுகளில் தீராத வெறியோடு கனிம வளங்களைத் தேடியலைந்தனர். அந்த வகையில் ஆப்ரிக்க வளங்கள் முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளாக இருந்த ஆப்ரிக்க தேசங்களை வளங்களுக்காக கசக்கிப் பிழிந்தனர்.
உலகின் இரண்டாவது பெரிய ஜீவநதியால் வளப்படுத்தப்பட்ட காங்கோ பூமியின் கீழ் செம்பு, தங்கம், கோபால்ட், யுரோனியம், கோல்டன் மற்றும் கச்சா எண்ணை புதைந்து கிடப்பதை அறிந்த ஐரோப்பியர்கள் அந்த நிலத்தைக் கட்டுப்படுத்த தங்களுக்குள் கழுத்தறுப்புப் போர்களைத் துவங்கினர். இறுதியில் முதலாளித்துவ நாடுகள் தங்களது இராணுவ மற்றும் போர் வெற்றிகளின் பலாபலன்களுக்கேற்ப ஆப்ரிக்க கண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளைக் கிழித்த போது காங்கோ பெல்ஜியத்தின் கைகளில் விழுந்தது.
அது இயந்திர வாகனங்களின் சக்கரங்களுக்கு ரப்பர் டயர் கண்டுபிடிக்கப்பட்ட சமயம். காங்கோவின் காடுகளில் செழித்து வளர்ந்திருந்த ரப்பர் மரங்களும், அப்பாவிக் காங்கோலியர்களுக்கும் பெல்ஜியத்தின் பிடியில் விழுந்தது. பெல்ஜிய படைகள் அணியணியாக கிளம்பிச் சென்று கூட்டம்கூட்டமாக காங்கோலிய மக்களை பிடித்து வருவார்கள். அவர்களில் பெண்களைப் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டு ஆண்களை வனாந்திரப் பகுதிகளுக்கு விரட்டியடிப்பார்கள். ஒவ்வொரு ஆணும் பல நாட்கள் ஊணுறக்கமின்றி காடுகளில் சுற்றித் திரிந்து, தலை கொள்ளாத ரப்பர் கோந்துகளைச் சேகரித்து திரும்பினால் சில மணிநேரங்களுக்கு தங்களது மனைவிமார்களைப் பார்க்க முடியும்.
“காங்கோ ரப்பர்” என்பது மேட்டுக்குடி ஐரோப்பியர்களுடைய அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெல்ஜிய முதலாளிகள் அடிமைகளின் இரத்தக் கண்ணீரைத் தொட்டு பணக்கட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை கருப்பர்களை நேரடியாக வதைத்து வந்த பெல்ஜிய காலனியவாதிகள், அதன் பின், காங்கோலியர்களிலேயே கருங்காலிகளைக் கண்டறிந்து அவர்களின் தலைமையில் ஆயுதக் குழுக்களை ஏற்படுத்தினர். 1960ம் ஆண்டு வரை உள்ளூர் மக்களைக் கொண்டே எந்தச் சிக்கலுமின்றி பெல்ஜியத்தின் சுரண்டல் தொடர்ந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிச முகாம் உலகெங்கும் செல்வாக்குப் பெற்றதை அடுத்து காலனிய நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் வேகமெடுத்தன. காங்கோவில் பாட்ரீஸ் லுமும்பாவின் தலைமையில் தேசிய விடுதலை இயக்கம் தீர்மானகரமாக முன்னேறி வந்தது. இறுதியில் 1960 ஜூன் 30ம் தேதி பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றது காங்கோ. சுதந்திரம் பெற்ற போது மொத்தமிருந்த ஐயாயிரம் அரசுப்பணியிடங்களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே காங்கோலியர்கள் இருந்தனர்.
விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாட்ரீஸ் லுமும்பா, அந்த சமயத்தில் உலகு தழுவிய அளவில் சமூக ஏகாதிபத்தியமான சோவியத்துக்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பணிப்போரில் எந்த அணியிலும் சேராத அணிசேராக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகவே அறிவித்தார். அதே நேரம் சொந்த நாட்டில் ஐரோப்பிய சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்டும் திட்டங்களையும் அறிவித்தார்.
பெல்ஜியத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும், காங்கோ ராணுவத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பெல்ஜிய அதிகாரிகளே விடுதலைக்குப் பின்னும் நீடித்து வந்தனர். இது தவிற உள்ளூர் அளவிலும் பல்வேறு கருங்காலி ஆயுதக்குழுக்களை பெல்ஜியம் பராமறித்து வந்தது. இவர்களைக் கொண்டு கணிம வளங்கள் மிகுந்த கடாங்கா பகுதியை தனி நாடாக பிரித்து தங்களது பொம்மை ஆட்சியை நிறுவ மேற்கத்திய நாடுகள் முயன்றன.
வேறு வழியில்லாத நிலையில், இராணுவ உதவிகளைக் கோரி சோவியத்தை நாடினார் பாட்ரீஸ் லுமூம்பா. மொத்த நாடும் அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடும் குழுக்களின் நாய்ச் சண்டையில் ஆழ்ந்திருந்த வேளையில் , இராணுவத்தில் இருந்த தங்களது கைக்கூலியான ஜோசப் மோபுடுவைக் கொண்டு ஒரு திடீர் சதிப்புரட்சியை அரங்கேற்றின மேற்கத்திய நாடுகள். பாட்ரீஸ் லுமூம்பா 1960 செப்டெம்பரில் கைது செய்யப்பட்டு பின் 1961 ஜனவரி 17 / 18 தேதிகளில் கொடூரமான முறையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.
இன்றைய தேதிவரை தீராத உள்நாட்டுப் போர்களின் பிடியில் காங்கோ சிக்க வைக்கப்பட்டுள்ளது. மொத்த நாடும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. காங்கோவின் இயற்கை வளங்களைச் சுரண்ட வரும் பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் யுத்த பிரபுக்களுடைய கூட்டணி பலாபலன்களை கணக்கிட்டே தங்களது கிளைகளைத் துவங்குகின்றன.
காங்கோவில் உள்ள பல சுரங்கங்கள் சட்டவிரோத மாபியாக்கள் மற்றும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், அங்கே தொழிலாளர் உரிமை, பாதுகாப்பான வேலைச் சூழல், வேலை செய்வதற்கான வயது வரம்பு, வேலை உத்திரவாதம், குறைந்தபட்ச கூலி, மருத்துவ வசதிகள் என எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
திடீரென கிராமங்களுக்குப் படையெடுக்கும் ஆயுதக் கும்பல்கள், சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசமின்றி மக்களை மந்தைகளைப் போல் ஓட்டி வருவார்கள். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்படும் மக்களைக் கொண்டு அந்த ஆயுதக் குழுவின் கட்டுபாட்டிலிருக்கும் சுரங்கம் சில ஆண்டுகளுக்குச் செயல்படும். ஆயுதக் குழுக்களுக்கிடையே நடக்கும் சண்டைகளின் வெற்றி தோல்விகளுக்கேற்ப சுரங்கங்களின் உரிமையும் அடிமைகளின் உரிமையும் கைமாறும்.
இந்த முறையிலான “உற்பத்தியின்” விளைவாக கிடைக்கும் மலிவான கச்சாப் பொருட்களுக்காக முதலாளித்துவ நாடுகள் காங்கோவின் அரசியல் நிலைமை குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை. மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் அவ்வப்போது தங்கள் முதலாளிகள் சம்பாதிக்கும் “இரத்தப் பணம்” குறித்து சம்பிரதாயமான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதும், அந்த எதிர்ப்பின் தன்மைக்கேற்ப சில வெற்று உத்திரவாதங்களையோ வெத்து வேட்டு விதிமுறைகளையோ அந்நாடுகள் அறிவிக்கும்.
ஆனால், இவை எதுவும் காங்கோவில் வழிந்தோடு இரத்த வெள்ளத்திற்கு அணை போடுவதாக இல்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் காங்கோவில் மாத்திரம் சுமார் ஐந்து லட்சம் பேர் வரை ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். பல பத்து லட்சம் மக்கள் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் விளைந்த நோய்களுக்கு பலியாகியுள்ளனர். பல பத்து லட்சம் மக்கள் அடிமைகளாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் நமக்கு என்ன பங்கிருக்கிறது?
உலகின் மொத்த கோபால்ட் உற்பத்தியில் சுமார் 45 சதவீதம் காங்கோவில் இருந்து வருகிறது. இதில் ஆகப் பெரும்பான்மை கையால் தோண்டப்படும் சுரங்கங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இராண்டாயிரமாவது ஆண்டில் சுமார் 2,698 டன்களாக இருந்த கோபால்டின் தேவை, 2015ல் 32,657 டன்களாக உயர்ந்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் கோபால்டின் தேவை சுமார் 75000 டன்களைக் கடக்கும் என்கிறது அவிசென்னி எனர்ஜி என்ற ஆய்வு மையம்.
கையால் தோண்டப்படும் சுரங்கம் எங்கே இருக்கும்? அது எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். வீட்டின் புழக்கடையில், ஊரின் மைதானத்தில், ரயில் பாதையின் கீழே, என லுமும்பாஷியின் பூமியை எங்கே குடைந்தாலும் அந்த மண்ணிலும், பாறைத் துணுக்குகளிலும் கோபால்ட் தாது படிந்து கிடக்கிறது.
வேறு வருமான வாய்ப்பு ஏதுமில்லாத மக்கள் மண்வெட்டி போன்ற சாதாரண கைக்கருவிகள் கொண்டு தங்களுக்குத் தெரிந்த இடங்களில் பூமியைத் தோண்டிச் செல்கின்றனர். சுமார் மூன்றடி விட்டத்தில் தோண்டப்படும் இந்த சுரங்கங்கள் பூமிக்கடியில் பல மைல்களுக்கு (எலி வளைகளைப் போல்) நீளும். முன்பின் தெரியாத நம்மைப் போன்றவர்கள் உள்ளே நுழைந்தால் திக்கு திசை தெரியாமல் உள்ளேயே அலைந்து திரிந்து மரணிக்க வேண்டியிருக்கும்.
இந்த சுரங்கத்தினுள் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் மண்கொத்திகளோடு நுழைகின்றனர் மக்கள். வெளிச்சத்திற்காக முன் நெற்றியில் பொருத்தப்பட்ட ஒரு சிறு விளக்கு தவிற கையுறைகளோ காலுறைகளோ ஏதுமில்லை. ஒரு நாளைக்குப் பத்திலிருந்து பண்ணிரண்டு மணிநேரங்கள் வேலை செய்து தோண்டி எடுத்த தாது படர்ந்த மண்ணைத் தலைச் சுமையாக வெளியே கொண்டு வருகின்றனர்.
சுரங்கத்தினுள் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் ஏற்படலாம். திடீரென மீத்தேன் வாயு கசியலாம், நீரோட்டம் குறுக்கிட்டு தண்ணீர் பீய்ச்சியடித்து மொத்த சுரங்கத்தையும் மூழ்கடிக்கலாம். பூமியினுள் பல நூறு அடியாழத்தில் மண்ணைக் குடைந்து கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு என்ன நேர்ந்ததெனத் தெரிந்தோ தெரியாமலோ மரித்துப் போகலாம். அவ்வாறு காங்கோவில் புதைந்து போனவர்களின் எண்ணிக்கை கூட அந்த அரசாங்கத்திடம் இல்லை – ஒருவேளை அப்படி ஒரு கணக்கெடுப்பு நடந்தால் அது தங்கள் நாட்டைச் சுரண்டும் ஆண்டைகளின் மனசாட்சியை அசைத்துப் பார்த்து விடுமென்ற அச்சத்தில் சுரங்க மரணங்களை காங்கோலிய கைக்கூலி அரசு கணக்கிடுவது கூட இல்லை.
இவ்வாறாக சுரங்கத்தில் கைகளால் சேகரிக்கப்படும் தாது மண்ணை அருகில் உள்ள ஓடைகளில் மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கழுவிச் சுத்தம் செய்கின்றனர். பின்னர் எஞ்சியதை மூட்டைகளாக கட்டி அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கே இடைத்தரகர்களால் தாது மண் தரம் பிரிக்கப்பட்டு மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சம் ஆயிரம் காங்கோலிய பிராங்குகள் (1 அமெரிக்க டாலர்) கொடுக்கப்படுகிறது.
இடைத்தரகர்களிடமிருந்து “ஹுவாயு கோபால்ட்” போன்ற சீன அல்லது ஐரோப்பிய கோபால்ட் நிறுவனங்களுக்கு இந்த கச்சாப் பொருள் கைமாறுகிறது. உள்ளூர் கோபால்ட் நிறுவனங்களின் ஆலைகளில் சுத்திகரிக்கப்படும் கோபால்ட், பின் சீனா, ஜப்பான், ஐரோப்பா அல்லது தென் கொரியாவில் உள்ள லித்தியம்-அயான் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்குச் செல்கிறது.
இன்றைய தேதியில் உலகில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் – அயான் மின்கலன்களில் (பேட்டரி) பயன்படுத்தப்படும் கோபால்ட்டில் ஏறக்குறைய சரிபாதி காங்கோவைப் பூர்வீகமாக கொண்டது தான். இந்தக் கட்டுரையை மடிக்கணிணியிலோ, நுண்ணறிபேசியிலோ (Smart Phone) நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தால் – உங்கள் கைப்பேசி அல்லது கணிணியில் காங்கோவின் ரத்தம் உறைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நுண்ணறிபேசிகளின் காலமாக உள்ளது. உண்ணும் உணவைத் தருவிக்க ஒரு செயலி, உறங்குவதை நினைவூட்ட ஒரு செயலி, விளையாடுவதற்கு செயலிகள், திரைப்படம் பார்க்க, பாடல் கேட்க என கேளிக்கைகளுக்குத் தனித்தனிச் செயலிகள், உரையாடுவதற்கும், சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் செயலிகள் – என இளைஞர்களின் வாழ்க்கையை நுண்ணறிபேசிகள் ஆக்கிரமித்து வருகின்றன.
நுண்ணறிபேசிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆற்றல்கூடிய மின்கலன்கள் தேவை. அதுவும் விலை மலிவாகத் தேவை. மின்கலன்களின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க கோபால்டின் அளவும் கூடும். நுண்ணறிபேசிகளின் பிரகாசத்தின் பின் காங்கோவின் எங்கோ ஒரு மூலையில் உள்ள இரத்தக்கறை படிந்த இருண்ட சுரங்கம் ஒன்றுள்ளது. அந்தச் சுரங்கத்தினுள் முகமறியாத ஒரு மனிதன் தனது உயிரையும், தங்கள் மக்களின் ஆரோக்கியத்தையும், அந்த நாட்டின் எதிர்காலத்தையும் பணயம் வைத்து இறங்கும் மனிதனே இந்த நூற்றாண்டின் மகத்தான தொழில்நுட்ப சாதனை உள்ளங்கையினுள் அடங்க காரணமாயிருக்கிறான்.
கோபால்ட் மட்டுமின்றி நவீன உலகின் மின்னணு நுகர்பொருட்கள் பலவற்றில் பயன்படுத்தப்படும் மூலக் கூறுகளும், அடிப்படைக் கணிமங்களும் இதே போன்ற வழிமுறைகளில் நம்மிடம் வந்து சேர்பவை தாம். நவீன விஞ்ஞான சாதனங்கள் அனைத்தும் முதலாளித்துவத்தின் சாதனைகள் எனக் கருதுவோர் அதன் பின் பரிதவிக்கும் நாடுகளின், மக்களின் உயிர்களைப் பற்றி சிந்திப்பார்களா?
ஜெர்மானிய மொழியில் கோபால்ட் என்ற சொல்லுக்கு “தீங்கிழைக்கும் கெட்ட ஆவி” என்ற ஒரு பொருளுண்டு. பதினேழாம் நூற்றாண்டின் சுரங்கத் தொழிலாளர்கள் கோபால்ட் சுரங்கங்களில் நிகழும் விபத்துகளுக்கு கெட்ட ஆவியே காரணமெனக் கருதியே இந்தப் பெயரைச் சூட்டினார்களாம். உண்மையில் மரணத்தைப் பரிசளிக்கும் அந்தக் கெட்ட ஆவி கோபால்ட் அல்ல – முதலாளித்துவமே.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் 1898-ஆம் ஆண்டு பால் ராப்சன் பிறந்தார். அவரது தந்தை வர்ஜீனியாவில் அடிமையாக இருந்து சுதந்திர மாநிலங்களுக்கு தப்பி ஓடியவர். தனது தந்தையிடம் இருந்தே அடிமை வாழ்வின் வலிகளையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் தெரிந்து கொள்கிறார். கல்வியிலும் விளையாட்டுக்களிலும் திறமை மிக்கவராகவே திகழ்கிறார் ராப்சன், ஆனாலும் அவர் எங்கு சென்றாலும் நிறவெறி அவரைத் துரத்தியது.
பால்ராப்சன்
கருப்பர்கள் விளையாடமுடியாது என கல்லூரி கால்பந்தாட்ட அணியில் சேர்க்கப்படாமல் விலக்கப்படுகிறார், பட்டம் பெற்ற பின்னரும் வழக்கறிஞர் தொழிலை செய்ய முடியாமல் விரட்டப்படுகிறார், மக்களின் துயரங்களை தன் நாடகங்களில் பிரதிபலிப்பதாலும் திரைப்படங்களில் பேசியதாலும் அவரிடம் இருந்து நிறுவனங்கள் துண்டித்துக் கொள்கின்றன.
இவற்றியெல்லாம் மீறி தனது கம்பீரக் குரலாலும் மக்களின் வாழ்வை பிரதிபலிப்பதாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ராப்சன். 1927-ல் லண்டனில் தங்கினார். அடிமை உலகிலிருந்து வந்த ராப்சன் இங்கிலாந்தின் வரவேற்பிலும், வசதியிலும் மூழ்கவில்லை. லண்டன் வருடங்களில் சோசலிச அரசியலைக் கற்றுக் கொண்டார். வேல்ஸில் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து இரண்டறக் கலந்தார். நிறவெறியில்லாமல் வெள்ளையினத் தொழிலாளர்கள், கறுப்பர்களுடன் சேர்ந்து வாழ்வதையும், போராடுவதையும் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு அவரது விடுதலை வேட்கை கறுப்பின மக்களோடு நில்லாமல், தொழிலாளர்கள், பாசிசத்திற்கு எதிராகப்போராடும் மக்கள், தேசங்கள் என விரிந்து சென்றது.
“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
1934-ல் சோவியத் நாட்டில் ராப்சன் மேற்கொண்ட பயணம் சோசலிசத்தின் நடைமுறையை அவருக்குக் காட்டியது. “முதன்முறையாக தன்னை ஒரு நீக்ரோவாக இல்லாமல், மனிதனாக நடத்தியது சோசலிச பூமிதான்”, என்று குறிப்பிட்ட ராப்சன் சோவியத் மக்களுடன் கொண்ட நட்பு அவர் இறப்பு வரை நீடித்தது.
அவரின் கம்பீரக்குரலில் பாடப்பட்ட சோவியத் தேசியகீதம் மற்றும் அதன் தமிழாக்கம் கவிதை வடிவில். சேர்ந்து பாடுங்கள் – பகிருங்கள்.
(வீடியோவில் இப்பாடல் 1945 வெற்றி அணிவகுப்பில் பாடப்பட்டதாக இருக்கிறது. அது தவறு.)
Soviet/ USSR Anthem in English – By Paul Robeson.
English lyrics of this version
United forever in friendship and labour,
Our mighty republics will ever endure.
The great Soviet Union will live through the ages.
The dream of a people their fortress secure.
CHORUS:
Long live our Soviet Motherland, built by the people’s mighty hand.
Long live our People, united and free.
Strong in our friendship tried by fire.
Long may our crimson flag inspire,
Shining in glory for all men to see.
Through days dark and stormy where Great Lenin led us
Our eyes saw the bright sun of freedom above
and Stalin our Leader with faith in the People,
Inspired us to build up the land that we love.
CHORUS:
Long live our Soviet Motherland, built by the people’s mighty hand.
Long live our People, united and free.
Strong in our friendship tried by fire.
Long may our crimson flag inspire,
Shining in glory for all men to see.
We fought for the future, destroyed the invader,
and brought to our homeland the Laurels of Fame.
Our glory will live in the memory of nations
and all generations will honour her name.
CHORUS:
Long live our Soviet Motherland, built by the people’s mighty hand.
Long live our People, united and free.
Strong in our friendship tried by fire.
Long may our crimson flag inspire,
Shining in glory for all men to see.
சோவியத் ஒன்றியத்தின் தேசிய கீதம், தோழர் பால் ராப்சன் அவர்களால்
பாடப்பட்டது.
தோழமை உழைப்பிலே ஒற்றுமை நிலைக்க
நம் கம்பீரக் குடியரசுகள் காலத்தை வெல்லும்
மாபெரும் சோவியத் ஒன்றியம் காலமெல்லாம் வாழும்
தம் கோட்டையின் உறுதியில் மக்கள் கனவுகள் வாழும்
சேர்ந்திசை
வலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த
எம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க
ஒன்றுபட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க
தீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க
உணர்வெழுச்சி தருகின்ற எம் செங்கொடியே வாழ்க
அதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க
இருள் சூழ்ந்த புயல் வீசும் நாட்கள் – அன்று
மாமனிதர் லெனின் எம்மை வழிநடத்த, சென்றோம்
சுதந்திரத்தின் கதிரொளியை கண்ணாரக் கண்டோம்
மக்கள் பால் நம்பிக்கை கொண்ட
தலைவர் ஸ்டாலின் தந்த ஊக்கமிது – எழுப்பினோம் நேசமிகு நாட்டை !
சேர்ந்திசை
வலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த
எம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க
ஒன்று பட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க
தீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க
உணர்வெழுச்சி தருகின்ற செங்கொடியே வாழ்க
அதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க
வருங்காலம் காக்கவே ஆயுதம் எடுத்தோம்
ஆக்கிரமித்த படைகளை பகையும் முடித்தோம்
எம் தாய்த்திரு நாட்டினைப் போற்றுவோர் பெருக
அதன் பெரும்புகழ் உலகின் நினைவினில் வாழும்
தலைமுறை வந்து தலைமுறை போகும்
எமது தாயகம் அதன் நினைவினில் நிற்கும்.
சேர்ந்திசை
வலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த
எம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க
ஒன்று பட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க
தீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க
உணர்வெழுச்சி தருகின்ற செங்கொடியே வாழ்க
அதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க
மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு !
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு !!
முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வாழ்க்கையில் நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூறலாம். கோடிக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லை. வேலை இருந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. தினமும் 10, 12 மணி நேரம் உழைக்கிறோம். நல்ல வீடில்லை, உணவில்லை, உடையில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் பல குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன. கொடிய வறுமையால் தாயே குழந்தையை விற்கிறாள்.
கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பால் இல்லை. ஆனால் கோடிக் கணக்கில் பால் உற்பத்தியாகிறது. அனைவருக்கும் உண்ண உணவிருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நோய்களால் இறக்கின்றனர். நாட்டில் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு கிடைப்பதில்லை.
இதற்கு யார் காரணம்? என்ன காரணம்? இந்த நிலை மாறுமா, மாறாதா? என்பது நம் அனைவருக்குமே உள்ள கேள்விதான். இது போன்ற கேள்விகளுக்கு அன்றே அறிவியல் பூர்வமாக விடையளித்த மாமேதை தான் கார்ல் மார்க்ஸ். 1818 ஆம் ஆண்டு மே, 5-ல் ஜெர்மனியில் பிறந்த மார்க்ஸ், பெரும்பான்மை மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் உழல்வதற்கான காரணத்தை ஆய்வு செய்து தீர்வையும் முன்வைத்தார். அதுதான் கம்யூனிசம் எனும் தத்துவம், அதற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டார்.
மக்களின் வறுமையைப் போக்க சிந்தித்த மார்க்சின் குடும்பம் கொடிய வறுமையில் வாடியது. மார்க்சின் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. மார்க்சின் வாழ்க்கையை எழுதிய ஹென்றி ஓல்கவ் “குழந்தைகள் பிறந்தபோது பாலுக்கு காசில்லை; இறந்தபோது சவப்பெட் டிக்கு காசில்லை” என்று மார்க்சின் வாழ்க்கையை குறிப்பிட்டுள்ளார். எனினும், மார்க்ஸ் தனது ஆய்வுப்பணிகளை நிறுத்தவில்லை. இப்பணியில் மார்க்சின் மற்றொரு உருவகமாக உடனிருந்தவர் அவருடைய நண்பரும் மற்றொரு மாமேதையுமான ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ். இவர்கள் உருவாக்கிய தத்துவம் தான் கம்யூனிசம், அது சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் அறிவியல்பூர்வமான விளக்கத்தையும், தீர்வையும் கூறியது. மார்க்ஸ் பிறந்து இப்போது இருநூறு ஆண்டுகள் துவங்குகிறது. மார்க்சியம் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் துவங்கிவிட்டது.
மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு, போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டினார், ஆசான் லெனின். மார்க்சிய ஒளி யில் தொழிலாளர்கள், விவசாயிகளைத் திரட்டி, ரசிய போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, தொழிலாளர்களின் ஆட்சி, அதிகாரத்தை நிறுவினார். “முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!” என்று முழங்கினார். உலக வரலாற்றில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முடி வுக்கு வந்தது. வரலாற்றில் எந்த அரசும் செய்திராத சாதனைகளைச் செய்தது, ரசிய சோசலிச அரசு.
சோசலிசத்தின் சாதனைகள்:
நிலப்பிரபுக்கள், பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய நாடான ரசியாவை ஐந்தே ஆண்டுகளில் மின்சாரமயமாக்கினர். வறுமை ஒழிக்கப்பட்டது. கல்வியில் காலனிய இந்தியாவுக்கு பின் இருந்த ரசியா, புரட்சிக்கு பின் இங்கிலாந்துக்கு முன்னே சென்றது. உலகிலேயே முதல்முறையாக இலவசக் கல்வி வழங்கிய நாடு ரசியாதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. கல்விக் கேற்ற வேலையும், ஊதியமும் வழங்கப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது.
மருத்துவத்தை இலவசமாக வழங்கிய நாடும் சோசலிச ரசியாதான். ஆலோசனைகள் முதல் அறுவை சிகிச்சைகள் வரை அனைத்தும் இலவசம். இவை ரசியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டவருக்கும் வழங்கப்பட்டன. பேருந்து ரயில், மெட்ரோ ரயில் அனைத்திலும் மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. வேலைக்குச் செல்பவர்களுக்கு கட்டணமே இல்லை. அனைவருக்கும் அரசே சொந்த வீடு கட்டிக் கொடுத்தது. அதற்கான தொகையை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினர்.
ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்டி, பெண்களின் அடிமைச்சங்கிலி தகர்க்கப்பட்டது. ஆண்களைப் போல பெண்களும் அனைத்து துறைகளி லும் பணியாற்றினர். ஆபாசப் பத்திரிக்கைகள், சினிமாக்கள் தடை செய்யப்பட்டன. விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. அனைவரும் தேர்தலில் போட்டியிடலாம். சோவியத் என்கிற மக்கள் அதிகாரம் செலுத்துகின்ற அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் இருந்தது. ஊருக்குள் அவை தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். சோவியத்துகளின் உயர்ந்த வடிவமான சுப்ரீம் சோவியத்துதான் பாராளுமன்றம். பாராளுமன்றத்திற்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண மக்கள். தேர்ந்தெடுக்கவும், தவறிழைத்தால் திரும்ப அழைக் கவும், தண்டிக்கவும் மக்களுக்கு அதிகாரம் இருந்தது.
தோழர் லெனினுக்கு பிறகு ஸ்டாலின் வந்தார். அவருடைய ஆட்சி யில் ரசியா மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியது. பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியது. அமெரிக்கா போன்ற வல்லரசு களின் பொருளாதாரத்தையே பின்னுக்குத்தள்ளிவிட்டு பிரமிக்கும் உச்சத்தை எட்டியது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த பாசிச இட்லர் ஒழித்துக்கட்டப்பட்டான்.
பூவுலகில் ஒரு சொர்க்கத்தைப் படைத்த சோசலிசத்தின் சாதனை களை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போது ரசியப் புரட்சியின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. உழைக்கும் மக்களை ஆட்சியில் அமர்த்திய அந்த நாள்தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள். கொண்டாடினால் மட்டும் போதுமா? இல்லை, நமது நாட்டிலும் அத்தகையதோர் புரட்சியை நமது நாட்டின் சூழலுக்கேற்ற “புதிய ஜனநாயகப் புரட்சியை” நடத்தி முடிக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. இன்று, மோடி தலைமையிலான அரசு உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கி வருகிறது. மறுபுறம், மதவெறிக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கிறது. இந்திய மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கார்ப்பரேட் பயங்கரவாதத்தையும், பார்ப்பன இந்துமதவெறிப் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டாத வரை எந்தப் பிரச்சினையும் தீராது. நாம் அனுபவிக்கின்ற அனைத்து கொடுமைகளும் ஒழிய வேண்டுமென்றால் அடக்கி, ஒடுக்கப்படுகின்ற அனைத்து வர்க்கங்களையும் பாட்டாளிகளின் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டி, உழைக்கும் மக்களுக்கான ஆட்சி, அதிகாரத்தை நிறுவும் புதிய ஜனநாயகப் புரட்சியை நாம் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு, மார்க்சியத்தை நெஞ்சில் ஏந்தி நவம்பர் புரட்சி நாளில் அணிதிரள்வோம்!
முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என சூளுரைப்போம் !
தெருமுனைக்கூட்டம்மற்றும் கலைநிகழ்ச்சிகள்
7.11.2016 மாலை 5 மணி
சென்னையைச் சுற்றி நான்கு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மக்கள்கலைஇலக்கியக்கழகம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பெண்கள் விடுதலை முன்னணி 9551869588, 9445112675, 8807532859, 9841658457
“கொடி” திரைப்படத்தில் வட்டம், மாவட்டம், அமைச்சர், அடுக்கு மொழி வருவதால் அது ஒரு அரசியல் படமென்று குறியீடுகளுக்கு நேர்ந்து விடப்பட்ட சில அப்ரண்டிஸ்டுகள் நினைக்கிறார்கள். இல்லை, இது குடும்பத்துடன் களிக்க வேண்டிய “மாஸ்” மசாலா என்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதற்கு ஆதாராமாய் மேலும் சில ‘வரலாற்றுத்’ தகவல்கள்!
லொடுக்கு பாண்டியாக ஆளானவர் கருணாஸ். பிறகு வள்ளியூர் சித்ரா திரையரங்கில் வெளியாகும் தேவர் சாதி நடிகர்களின் படங்களுக்கு சுவரொட்டி ஒட்டி பழக்கப்பட்ட சொந்தங்களுக்கு பசை கிடைக்காத காலம் வந்தது. அதாவது போற்றிப் பாடடி வகையறாக்கள் அனைத்தும் சந்தை இழந்து அதிலும் கார்த்திக் போன்ற ஜீவராசிகளெல்லாம் ஊடகங்களின் காமடி டிராக்கின் ஆஸ்தான ஜீவனான பிறகு ஒட்டுவதற்கு குட்டிச் சுவரொ, வெட்டிச் சுவரொட்டியோ இன்றி சொந்தங்கள் தவித்தன. அம்மாவின் கட்டிங் மட்டும் இருந்தென்ன பயன்?
லொடுக்கு பாண்டியாக இருந்து ஆளான கருணாஸ் ‘தேவர்’
இச்சூழலில் இடம் காலி, ஏதும் மடம் கிட்டுமா என்று தேவர் ஸ்டாராக கிளப்பிவிடப்பட்ட கருணாஸ், சில அல்லக்கைகளோடு அம்மாவிடம் விழுந்து எம்.எல்.ஏ-வாக ஆகியும் விட்டார். அதே போல வடிவேலின் நகைச்சுவை பட்டாளத்தில் வாழ்க்கை பெற்ற சிங்கமுத்து ஏதோ சொத்து விவகாரத்தில் கைப்பிள்ளையை துண்டித்து விட்டு சமத்துப் பிள்ளையாக அம்மாவின் உள்வட்டத்தில் பேசி அ.தி.மு.கவின் ஆல்டைம் சிறப்பு ஆபாசப் பேச்சாளராக போனார்.
ஏனிந்த வரலாற்றுக் குறிப்பு? ஐயா, இந்தப் படத்தில் இவர்களெல்லாம் அரசியல்வாதிகளாக வருகிறார்கள்; எனில் இந்தப் படத்தில் அரசியல் எப்படி அக்கப்போராக இருக்கும் என்பதற்கே இவ்விளக்கம். கூடுதலாக சிவப்பு மல்லி காலத்தில் விஜயகாந்தை போராளியாக்கி “சட்டம் ஒரு இருட்டறை” பேசிய இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் (நடிகர் விஜயின் தந்தை) படத்தில் ஜனநாயகக் கழகக் கட்சித் தலைவராக வருகிறார்.
நடிகை சங்கவியின் கவர்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்களை வரவழைத்து கூடவே மகனையும் அறிமுகப்படுத்தி இவர் இயக்கிய படங்களுக்கு காசு கொடுத்த விடலைகள், ஒரு கட்டத்தில் பார்க்க பார்க்க அணிலும் அனகோன்டாவாக கண்ணுக்குத் விரியும் எனும் விதிமுறைப்படி விஜய்யை ஏற்றுக் கொண்டார்கள். உடனே தனது வெத்துவேட்டு சிவப்பு பட வசனங்கள் கூட தேவையின்றி அடுத்த முதலமைச்சர் நம்ம பையன்தான் என பிறந்தநாள், மூன்று சக்கர வண்டி, ரசிகர் மன்றம், கொடி… இறுதியில் கதையில் குத்து வசனங்கள் என கனாக் கண்டார் எஸ்.ஏ.எஸ். இவரென்று அல்ல, ஆளாளுக்கு கோட்டை, கோப்பு என கொப்பளிப்பதைக் கண்ட ஜெயா ‘சிறப்பு’ கவனம் எடுத்து வெள்ளித்திரை விட்டேத்திகளை கவனித்தார். ஓடு “தலைவா” ஓடு என கொடநாட்டுக்கு பறந்து சென்று தவம் கிடந்தும், விஜயின் படங்கள் வெளியாவதற்கே ததிங்கிணத்தோம் போட்டன. அதன் பிறகே அனகோன்டாவின் ஆக்ரோச கிராபிக்ஸ் அணிலின் சேட்டையாக வீடு திரும்பியது.
இப்படி அடிமேல் அடிபட்ட எஸ்.ஏ.எஸ்ஸும் இப்படத்தில் ஒரு கட்சித் தலைவராக நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் இது எப்பேற்பட்ட ‘அரசியல்’ படம்?
அடுத்த முதலமைச்சர் நம்ம பையன்தான் என பிறந்தநாள், மூன்று சக்கர வண்டி, ரசிகர் மன்றம், கொடி… இறுதியில் கதையில் குத்து வசனங்கள் என கனாக் கண்டார் எஸ்.ஏ.எஸ்.
படத்தில் வரும் ஜனநாயகக் கழகத்தின் பச்சைக் காவிக் கொடியில் நெற்கதிர் முத்திரையும், குடியரசுக் கழகத்தின் சிவப்புக் கொடியில் அரிவாளைப் போன்ற ஆங்கிய யூ வடிவோடு ஒரு நட்சத்திரமும் இருக்கின்றன. கட்சிகளின் பெயர்களில் அமெரிக்க வாடையும், கொடிகளின் அசைவில் கம்யூனிஸ்டுகளின் அடையாளமும் தெரிகின்றன. மற்றபடி கட்சிக் கூட்டங்கள், பேச்சுக்கள், சதியாலோசனைகள் அனைத்திலும் திராவிட இயக்கங்களை, குறிப்பாக தி.மு.கவைக் குறிவைத்து அடுக்கு மொழி, ஆபாச பேச்சு, மது மாது விவகாரம் என்று கதை போகிறது.
ஆக இவையெல்லாம் Zoom + (பூதக்கண்ணாடி) இல்லாமலே தெரிகிறது. மேலும் அம்மா தரப்பில் எந்த ஆட்சேபணையும் இருக்க கூடாது என்பது திரைக்கதையில் மட்டுமல்ல, நடிகர்களிடமும் அந்த பயம் வந்துவிடக் கூடாது என கருணாஸும், சிங்கமுத்துவும் இதில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைத்தான் “கொடி”யின் இயக்குநரும், ஒரு காரசாரமான மசாலாவிற்கு தேவைப்படும் பின் களமாகவே அரசியல் இருக்கிறது என்று சத்தியம் செய்கிறார். கூடுதலாக படையப்பாவில் ஆடியதால் புரட்சித் தலைவியால் பட்டிபார்க்கப்பட்ட சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். இத்தகைய நிஜ அரசியலை கனவிலும் பார்க்க விரும்பாத வெற்றிமாறன் போன்ற சினிமா படைப்பாளிகளும் தயாரிக்கிறார்கள் என்றால் இங்கே என்ன அரசியல் இருக்கும்?
அதே நேரம் “கொடி” படத்தில் அரசியல் இல்லாமல் இல்லை. அதாவது ஆபத்தில்லாத அரசியல்! “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” போன்ற காளிமுத்து கப்சாக்கள், அதே கப்சாக்களை பேசும் மழலை மொழிச் சிறுவர்கள், மாற்றுக் கட்சியினரை அலங்காரப் பேச்சில் அதாவது எதுகை மோனையில் எகத்தாளமாக பேசுவது, அதிகாரப் போட்டி, அதற்கான சதித் திட்டங்கள் போன்ற ஊசிப்போன மஸ்கட் அல்வாவை போட்டு இழுக்கிறார்கள்.
மலையாளப் “பிரேமம்” படத்தில் புகழடைந்த அனுபமாவை தெரிவு செய்ததை யுரேகாவாக உருகுகிறார் இயக்குநர். அதே மலையாளப் படங்களில் தமிழர்களை மஞ்சள் பை பாண்டிக்காரனென்றும், வேட்டி, வெள்ளைச் சட்டை, கருப்பு கண்ணாடி சகிதமான அதார் உதார் அரசியல்வாதிகளாக காட்டுவார்களே அதுதான் இயக்குநரின் பார்வையும் கூட.
ஒரு மாவட்டத்தில் கழகங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது யார் என்பனவெல்லாம் இன்று பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல. ஆனந்த விகடன், தி இந்து போன்ற ஊடக குருமார்கள் நடுத்தர வர்க்கத்திடம் உருவாக்கியிருக்கும் “அரசியலே சாக்கடை, லஞ்சமென்றால் கவுன்சிலர், தலைவரென்றால் நடிப்பு, நல்ல எம்.எல்.ஏ வென்றால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் போன்ற நமத்துப் போன படிமங்களைத்தான் இன்றும் அரசியலின் அடிப்படையாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினார் சாலை போடுவதோ இல்லை முதலமைச்சர், பிரதமர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளின் காலைப் பிடித்து, கூத்தாடி பிற வசதிகளைக் கொண்டு வருவதுதான் அவரின் நல்ல தன்மைக்கு ஆதாரம் என்று இவ்வூடக கோமாளிகள் படுத்துகிறார்கள். ஆக தனிப்பட்ட முறையில் ஜால்ரா, செல்வாக்கு இருந்தால் அந்த தொகுதியில் தேனாறு ஓடுமாம். இதுதான் ஜனநாயகமென்றால் இங்கே மாமாக்களே கோலேச்ச முடியும்.
படத்தில் படிக்கத் தெரியாதவனெல்லாம் கல்வி அமைச்சர் என்று கிண்டலடிக்கப்பட்டு, பொய்யாக படித்து பட்டம் வாங்கினார் என நீதிமன்றத்தால் பதவி இறக்கப்படுகிறார். நீதிமன்றத்திலேயே அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் தமிழ் கேலி செய்யப்படுகிறது.
படிக்காத கைநாட்டெல்லாம் இங்கே ஆள்கிறது எனும் கூற்று கூட சமஸ் வகையறாக்களின் அரசியல் விமர்சனம்தான். ஒரு பேச்சுக்கு படிக்காத காமராஜரை இவர்கள் கோடிட்டாலும் அவர் நல்லவர், லஞ்சம் வாங்காதவர் என்று புனிதப்படுத்துவார்கள். ஊழல் குற்றச்சாட்டு உண்மையென நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தேர்தல் காலத்தில் கன்டெய்னரின் மூலம் பணம் கடத்தி இன்றுவரை மர்மமாக வைத்திருக்கும் அதிகாரத்தோடு, தற்போது கைநாட்டு மூலம் இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் சின்ன ஒதுக்கீட்டை செய்பவரே இங்கே முதலமைச்சர் எனும் போது, “கொடி” படைப்பாளிகள் அரசியல் என்று முன்வைப்பது எதை?
ஜெயலலிதா எனும் தலைவரின் ஆட்சியை வெறுமனே கவுன்சிலரோ, அலகு குத்தும் மகளிர் அணியோ, பிரியாணிக்கு ஆள் பிடிக்கும் மாவட்டமோ தீர்மானிக்கவில்லை.
ஜெயலலிதா எனும் தலைவரின் ஆட்சியை வெறுமனே கவுன்சிலரோ, அலகு குத்தும் மகளிர் அணியோ, பிரியாணிக்கு ஆள் பிடிக்கும் மாவட்டமோ தீர்மானிக்கவில்லை. அம்மாவின் அயோக்கியத்தனத்தை ஆதரிக்கும் பாண்டே கேள்வி நேரத்தில் முதுகு சொறிகிறார், மல்லையா விமானம் அனுப்புகிறார், அம்பானி தனது சானல் திறப்புக்காக தேதி கேட்கிறார், உயர்நீதிமன்ற நீதிபதி அம்மாவுக்காக காந்தி கணக்கு போடுகிறார், மத்திய நிதியமைச்சரோ பேரம் பேசுகிறார், மோடி வாழ்த்து தெரிவிக்கிறார்! ஜெயாவின் கால் பணிந்து கோப்புக்களைப் பார்த்த நத்தம் விஸ்வநாதனே இன்று வெளிநாடுகளில் சொத்து, இடைத் தேர்தலில் ஒரு வாக்கிற்கு பத்தாயிரம் பணம் என்று கற்பனைக்கெட்டாத வகையில் துருத்திக் கொண்டு இருக்கும் போது இயக்குநர் குழாயடிச் சண்டையாக அரசியலைக் காட்டுவது எதற்கு?
அரசியல் என்பது அனைவரின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் செயலைப் பற்றியது என்றால் அந்தக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பான பிரிவினரை – முதலாளிகள், அதிகாரிகள், நீதிமன்றங்கள், இராணுவம்-போலீசு துறை – ஊடக முதலாளிகள் – விட்டுவிட்டு கலெக்டர் ஆபீஸ பியூனையும், கட்சி ஆபிசின் குட்டி ரவுடிகளையும் காட்டுவது அயோக்கியத்தனம்.
படத்தில் ஸ்கார்பியன் பாதரச ஆலையை மூடும் போராட்டத்தில் கருணாஸ் தீக்குளிக்கிறார். அப்போது மூடப்பட்ட ஆலையின் பாதரசக் கழிவுகளை அகற்றச் சொல்லிப் போராடும் என்.ஜி.வோவாக முட்டை மாலதி (அனுபமா) வருகிறார். தம்பி தனுஷான அப்பாவி அன்புவை காதலிக்கும் இவர் வெள்ளை லெக்கான் கோழி முட்டைகளுக்கு வண்ணமடித்து நாட்டுக் கோழி முட்டையாக விற்கிறாராம். எதற்கு? பாதரசக் கழிவால் ஐ.சி.யுவில் மூச்சை நிறுத்த இருக்கும் சிறுமிக்காக பணம் சேர்க்கவாம். இந்தக் கருமத்தைப் பார்த்து இந்தப்படத்தில் வரும் பாதரசக் கழிவு பிரச்சினை என்பது கொடைக்கானலில் யூனிலிவர் மூடிய தெர்மோமீட்டர் பாதரச ஆலையின் பிரச்சினை என்று எந்த ஊடகங்களுமே திரை விமர்சனத்தில் சொல்லவில்லை என்று வருத்தப்படுகிறார், சூழலியளார் நித்தியானந்த் ஜெயராமன். ரொம்பக் முக்கியம்!
பாதரசக் கழிவுக்காக திருட்டு முட்டை விற்கலாம் என்றால் அதை ஏன் இப்படி சில்லறையாக கஷ்டப்பட வேண்டும்? அப்பளக் கம்பெனி அர்ஜூன் போல ஹைடெக்காக திருடி தானம் பண்ணலாமே? போபாலில் யூனியன் கார்பைடு கொலையால் இன்றளவும் வாழ்விழந்து போராடும் மக்களெல்லாம் இப்படித்தான் திருட்டுத்தனம் செய்து வாழ்கிறார்களா? பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையால் குதறப்படும் மக்களை இதை விட இழிவு செய்ய முடியுமா? இதற்காகவே இயக்குநரை கொடைக்கானல் மக்கள் முச்சந்தியில் வைத்து விளக்குமாற்றால் விசாரிக்க வேண்டும்.
மேலும் கொடைக்கானலில் யூனிலீவர் கம்பெனிதான் பாதரசக் கழிவின் சூத்திரதாரி எனும் போது அதை ஏதோ அமைச்சர், மாவட்டம், கட்சி ஊழல் என்று மடை மாற்றுவதை என்னவென்பது? ஹிந்துஸ்தான் லீவரை பினாமி பெயரால் கூட வில்லன் என்று சொன்னால் என்ன நடக்கும்? வெற்றிமாறனோ, தனுஷோ கல்லா கட்ட முடியாது, இயக்குநர் துரை செந்தில் குமாரோ கதை சொல்ல முடியாது! பிறகு இவர்களுக்கு கதையில் எதற்கு இந்த அரசியல் பின்னணி?
அரசியல் என்ற பெயரில் இத்தகைய லோக்கல் ரவுடிகளை வில்லனாக்கிவிட்டு இந்த அமைப்பு முறையில் சட்டப் பூர்வமாகவே மாஃபியாக்களாக செயல்படும் பெரு ரவுடிகளான முதலாளிகள், நிறுவனங்களை மறைக்கிறார்கள்.
கொடி தனுஷ், ருத்ரா த்ரிஷா இருவரின் பாத்திர வார்ப்பும் லோக்கல் அரசியல்வாதிகளின் அக்கப்போர்களைப் போன்று மலிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. இருவரும் எதிரெதிர் கட்சிகளில் குறிப்பிடத்தக்க உள்ளூர் தலைவர்களாக உருவாகி எம்.எல்.ஏவாக போட்டி போடுகிறார்கள். மடியில் தலை சாய்த்து காதலிக்கவும் செய்கிறார்கள். அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று இயக்குநர் இந்தக் காதலுக்கு நியாய தத்துவம் சொல்கிறார். அந்தப் படிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் தோழரும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஆண் உறுப்பினரும் காதலிக்க முடியுமா? இல்லை வி.சி.கவின் ஆண் பிரமுகரும், பா.ம.கவின் பெண் பிரமுகரும் மணம் செய்ய முடியுமா?
இதெல்லாம் சாத்தியமில்லை என்றால் தனிப்பட்ட வாழ்வில் ஒரு மாதிரியும், பொது வாழ்வில் வேறு மாதிரியும் இருக்க சாத்தியமில்லை. அல்லது இரண்டு கட்சிகளுக்கும் ஒத்த அலைவரிசை வேண்டும். காங்கிரசின் அமைச்சரவையில் அன்புமணி பங்கேற்றதும், காங்கிரஸ் தலைவரின் மகளை அவர் மணம் செய்திருப்பதும் இயல்பான கொள்கைப் பொருத்தப்பாட்டில்தான்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் யார் ஆண்டாலும் ஒருவருக்கொருவர் பிசினசுக்கு இடையூறு இல்லாமல் இருப்பர் என்று இந்தக் காதலை சிலர் நியாயப்படுத்துகிறார்கள். அப்படியெனில் அது திருட்டுத்தனமே அன்றி கொள்கைப்பூர்வமான நல்லறம் சார்ந்தல்ல. கதையிலும் கூட த்ரிஷா, தனுஷின் காதல் கூட ‘கொள்கையினால்’ பிரிந்து கொலை வரைக்கும் போகிறது. அது வேறு பிரச்சினை!
“டேய் போடா” என்கிறார் கொடி தனுஷ். “அண்ணே பாத்துப் போண்ணே” என்கிறார் அன்பு தனுஷ். இந்த டபுள் ஆம்லேட் திறனை, கவர் வாங்கும் மற்றும் வாங்காத விமர்சகர்கள் சிலாகிக்கிறார்கள்.
வழக்கமாக புரோட்டாவிற்கு ஒரு முட்டை ஆம்லேட் சாப்பிடுவோம். கொஞ்சம் காசும், வயிறும் இருந்தால் டபுள் ஆம்லேட் சாப்பிடுவோம். “டேய் போடா” என்கிறார் கொடி தனுஷ். “அண்ணே பாத்துப் போண்ணே” என்கிறார் அன்பு தனுஷ். இதுவே மாபெரும் வெரைட்டி நடிப்பு என்று இந்த டபுள் ஆம்லேட் திறனை, கவர் வாங்கும் மற்றும் வாங்காத விமர்சகர்கள் சிலாகிக்கிறார்கள். ஒழியட்டும். சரி இன்னும் தனுஷால் “மன்மதராசா” பாணி வடிவேலுவின் இடுப்பாட்ட நடனத்தை தாண்டி விஜய் போல கொஞ்சமாவது நளினமாகக் கூட ஆட முடியவில்லையே?
த்ரிஷாவின் நடிப்பு தனுஷையே தோற்கடித்துவிட்டதென அண்ணன் உண்மைத்தமிழனே (அண்ணே எப்படி இருக்கீங்க?) நிலை மறந்து பாராட்டுகிறார். சதா காலம் தயிர்சாதம் செய்யும் மாமி திடீரென நாட்டுக்கோழியை அடித்து சமைத்தால் ஏற்படும் அதிர்ச்சியால் உணரச்சிவசப்பட்டு வந்த வார்த்தை இது! த்ரிஷாவைப் பொறுத்தவரை உச்சரிப்பில் 1,2,3 என்று ஐந்திற்குள் வார்த்தைகளை நம்பரால் சொன்னவருக்கு இதில் மேடையில் ஒரு பத்திருபது எண்களை பேச வைக்கிறார்கள். அவ்வளவே! எனினும் த்ரிஷாவின் மொத்த சினிமா வாழ்க்கையை கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் குழப்பம், கொஞ்சம் சிரிப்பு எனும் நான்கு காலரைக்கால் கொஞ்சல் உணர்ச்சிகளால் ஒப்பேற்றியவரை மாபெரும் நடிகர் என்று சொன்னால் அல்பசீனோவே தற்கொலை செய்ய மாட்டாரா?
சாவித்ரியும், சரிதாவும் கோலேச்சிய நடிப்பில், ஆனந்த விகடன் அட்டைப் படத்தினால் மிஸ் சென்னையாகி, நடிகையாக போஸ் கொடுத்தவரின் நடிப்பே இப்படி ரசிக்கப்படுகிறது என்றால் அது முன்னர் சொன்ன கவுன்சிலர் அரசியலின் மறுபக்கம் எனலாம். த்ரிஷா போன்ற மேட்டுக்குடிப் பெண் மேடையிறங்கி கட்சி அரசியல் பேசும் போது, என்ன இருந்தாலும் இந்த பெண் “டி.சி.எஸ்”-ல் மேனேஜராக இருக்க வேண்டியது இப்படி கஷ்டப்படுதே என்று சாதாரணப்பட்டவர்களுக்கு தோன்றுமில்லையா?
இதில் த்ரிஷாவை வில்லியாகவும், கொடியை நல்லவனாகவும் காட்டியிருப்பது குறித்து ஆல் பர்ப்பஸ் அங்கிள்கள் பெண்ணியக் குறியீடு பேசுகிறார்கள். கமான் அங்கிள்ஸ்… கூல் டவுண்!….. பாதரசக் கழிவு குறித்த ஆவணங்களை மறைப்பது, கட்சி செல்வாக்கை காப்பாற்றுவது போன்ற அஜால் குஜால் வேலைகளை செய்யும் கொடி தனுஷ் எப்படி நல்லவர்? எந்த வேலை வெட்டியும் இல்லாதவர் மினிஸ்டர் காட்டனில் ஜீப்போடு வலம் வருகிறார். ஏது காசு? கட்சியில் விசுவாசமாக இருப்பதற்காக மக்களை கைவிடலாம் என்று சாகிறவர் நல்லவர் என்றும், அதே கட்சி ஒன்றில் தலைவராக ஆவதற்கு ‘திட்டம்’ போடுகிறவர் கெட்டவர் என்றால் என்ன எழவிது?
“ஒன்று நாம் தலைவனாக வேண்டும், இல்லையென்றால் நமக்கு ஒரு தலைவன் வேண்டும்” என்பதே தமிழ் மக்களின் அரசியல் அடையாளம் என்று பத்தாயிரத்து பதினொன்னாவது தத்துவம் ஒன்றை நேர்காணலில் துணிந்து வெளியிடுகிறார் “கொடி” படத்தின் இயக்குநர். அவரையொத்த வயதினரான தனுஷையும், தயாரிப்பாளர் வெற்றிமாறனையும் அழைக்கும் போதெல்லாம் மறக்காமல் சார் போட்டு பேசும் இயக்குநரின் அடையாளம் என்ன? ஏன் வெறும் தனுஷ், வெற்றிமாறன் என்று பேசினால் பட வாய்ப்பு கிடைக்காதா?
இப்படி மனதிலும், அறிவிலும் ஆயிரத்தெட்டு அடிமைத்தனத்தையும், முட்டாள்தனத்தையும் கொண்டிருப்பவர்கள் தமிழக அரசியல் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் உபதேசிப்பதற்கு வெட்கப்படுவதில்லை. இத்தகைய அம்மணாண்டிகள் கோவணான்டிகளின் டிரஸ்ஸிங் சென்ஸு பற்றி கவலைப்படுவதாய் கடுப்பேற்றுகிறார்கள் மை லார்ட்!
ஐயா! நாலு பாட்டு, ஏழு ஃபைட்டு, எண்பது சீன், எண்ணூறு பிரிண்ட் என்று நீங்கள் படம் எடுத்தீர்களென்றால் எங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லை. அதில் அரசியல், தத்துவம், மெசேஜ் என்று மிகவும் மெனக்கெட்டு சித்திரவதை செய்யாதீர்கள் என்பதை மட்டும் மெத்தப் பணிவோடு சொல்லிக் கொள்கிறோம்.
கன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி!
ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. “பொதுச் சொத்தின் அவலம்’ (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
காரட் ஹார்டின்
1968 டிசம்பரில் ’சயின்ஸ்’ என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளி வர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.
ஹார்டின் முன்வைக்கும் ‘அறிவியல் பூர்வமான’ ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:
“இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கட்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய ’தண்டனை’ வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம்; அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்” என்று கூறுகிறார் ஹார்டின்.
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் ’அறிவியல்’ ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை ’இன்னொரு அமெரிக்கக் குப்பை’ என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் ’குப்பை’ தான் இன்று உலக வங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள ’நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்’ என்பதே ’ஹார்டின் சட்டம்’ தான்.
“மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது; ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12,000” என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?
“எனக்குப் பிள்ளையில்லை; நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்போகிறதா?” என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.
பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்
“உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்” என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், ’இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு’த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.
“இது பேராசை அல்ல. இயற்கையைப் பாதுகாப்பதற்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி” என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.
“தனக்குச் சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான்; ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி” என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.
சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் ’அறிவியல் பூர்வமான’ இந்தக் காரணத்தைத்தான் பொதுவுடைமைக் கொள்கையை எதிர்ப்பதற்கும் முதலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம், இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும், உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப்படுகிறது.
பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே ’இயல்புணர்ச்சி’தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.
எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.
எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரண்பாடானவை. முதலாளித்துவ சொத்துடைமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையைத் தக்கவைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.
இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.
சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைத் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை.
’சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு’ என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வெவ்வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.
ஆனால், “சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை” என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.
எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.
***
அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிப்போக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார் அவர் அந்தக் குழாயின் உரிமையாளர் அல்ல.
விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.
தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள்.
ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார்; சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. “தனியார்மயம்தான் இதற்குத் தீர்வு” என்று உடனே குரல் கொடுக்கிறார்.
வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.
ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இலவசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.
மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.
”தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது” என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.
முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் ’நமக்குச் சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்’ பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.
முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.
முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள்.
ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு ’சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்’, ’புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்’, ’காற்றிலிருந்து மின்சாரம்’, ’கடல் நீரிலிருந்து குடிநீர்’ என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?
பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெய்க் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும் பெப்சி தாகமும்தான், ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.
இந்தப் பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம்; மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.
’இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு’. அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.
நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல; தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ’தண்ணீருக்குப் பதிலாக கோக்’ என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.
இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளும் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவச் சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.
குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாயம் அழிந்தது. திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஓடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.
இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.
இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதி உன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்துப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?
“சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில் (முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்… பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன.”
“உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன் (முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை” என்றார் எங்கெல்ஸ்.
முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை ’மன்னித்து’ 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100-இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளும் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் ’கவலை’ கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம்; நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை; ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!
மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்
“இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது” என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.
இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. “ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு…” என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.
“மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்” என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.
இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. “ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்” என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவப் போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைச் சின்னாபின்னமாக்கி மன நோயாளிகளைப் பெருக்குகிறது.
பல லட்சம் ஆண்டுகளாய் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்திச் சிதைக்கிறது. “இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்” என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல; அது லாபத்தின் மீதான காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிரை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!
முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம்; இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்து போன உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்க விரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்திப் பொருட்களாகக் கருதுகிறார்.
சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது; ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம்
யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். “பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் ’மனித உணர்ச்சி’யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!” என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.
அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது; ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் – என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.
இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக…, உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. “இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது” என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.
தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. “தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்’ இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.
இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.
***
உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.
“பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ஹார்டின். “இரண்டும் ஒன்றுதான்” என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.
எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:
“ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் – அவ்வளவுதான். ’ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல’, தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.”
நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா 1917 – 2017
மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.
1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.
வரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.
முதலாளித்துவம்
எவ்வளவு மோசமானது என்பதற்கு,
முன்னேறிய கம்யூனிசத்தை
நாமறியாமலே மறுக்கும்
முட்டாள்தனமே சாட்சி!
ஒண்ணுக்கு போவதிலும்
உன்னிடம் காசு பிடுங்கும்
முதலாளித்துவச் சுரண்டலின் மேல்
அப்படியென்ன கவர்ச்சி!
”கடவுளால் முடியாததை
கம்யூனிஸ்ட் செய்தான்,
பிச்சைக்காரனே இல்லாத நாடு
சோவியத் ரசியா”
பெருமை பொங்கினார் பெரியார்.
”திருட்டுத் தேவையே இல்லை
பூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா
இரும்புத்திரை இல்லை
இரும்புத் தொழிற்சாலையைத்தான்
நிறையப் பார்த்தேன்” – என
பூரித்துப் போனார் கலைவாணர்
வல்லரசாகப் போவதாய்
வக்கணை பேசும் முதலாளித்துவத்தில்
செருப்பை நிம்மதியாய்
வெளியில் விட யோக்கியதை உண்டா?
முதலாளித்துவம்
பலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்
முதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க
சமூகம் உள்ளதா அதனிடம்!
இளரத்தம்
சுண்டக் காய்ச்சும் வேலை!
எந்தப் பணி பாதுகாப்புமின்றி
பணி நிரந்தரமில்லையென பயமுறுத்தியே
எந்திரத்தை உயிரூட்ட
இளம் தொழிலாளர் கொலை,
விழிப்பசை தீர களைத்து
குடல்பசை தடவி
குறுகலான தகரக் கொட்டகையில்
பாதி தகனம்!
மிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்!
தெருவோடு போகும் பெண்
கருவோடு திரும்புகிறாள்,
முனகவும் சக்தியில்லாத
மூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கோ
வீட்டிலுள்ளவர்களாலேயே விபரீதம்
முதலாளித்துவ நுகர்வு முற்றி
ரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்!
மனிதனை நுகரும்
மறுகாலனிய கொடூரம்
முதலாளித்துவம் இருக்கும் வரை
புழுவாய் நெளியும்.
ரசியப் புரட்சியின் சவுக்கை எடுத்தால்தான்
முதலாளித்துவக் கழிவுகள் ஒழியும்!
ரத்த ஞாயிறு முடிந்திடவில்லை…
ஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…
ஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்
மேலாதிக்கவெறியோடு மோடியின் நாஜிப்படை…
நத்தம் காலனி விளைச்சலின் மீது
நவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி!
நவம்பர் புரட்சியும் முடிந்திடவில்லை…
தொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே
தருணம் நழுவாமல்
இயங்குவதற்குப் பெயர்தான் புரட்சி!
இங்கிலாந்தின் பிரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் அறிவியலாளர்கள் ஒரு எந்திரனை உருவாக்கியிருக்கிறார்கள். அது உணவு வகைகளை சாப்பிட்டு செரிப்பதன் மூலம் தனது சக்தியை எடுத்துக் கொள்ளுமாம். கூடுதலாக அது வளர் சிதை மாற்றத்தின் படி இறந்தும் போகுமாம்.
எதிர்காலத்தில் இந்த எந்திரன்கள், மனிதர்களைப் போன்ற உடல் அமைப்பையும் பெறுவார்களாம். இதற்கு முன் கடின வகைப்பட்ட எந்திரன்கள் ‘சாப்பிடுவதை’ பார்த்திருந்தாலும், இந்த மிருதுவான எந்திரன், விலங்குகளைப் போன்ற உடல் அமைப்பை அதாவது வாய் வயிறு இத்யாதியுடன் இருப்பான் என எந்திரவியல் பேராசிரியர் ஜோனாதன் ரோசிட்டர் கூறியிருக்கிறார். அந்த வகையில் இது சுற்றுச்சூழலுக்கு அணியமான எந்திரனாகவும் இருக்குமாம்.
சரி, இந்த எந்திரன் வேறு எதற்கெல்லாம் பயன்படுவான்?
சுவிட்சர்லாந்தில் விபச்சாரம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே எந்திர விபச்சாரத்திற்கு என்ன பிரச்சினை?
மனித உரிமை ஒப்பந்தங்களுக்கு பிரபலமானது “ஜெனிவா ஒப்பந்தம்”! சுவிட்சர்லாந்து நாட்டில் பிரபலமான இந்த ஜெனிவா மாநகரத்தில் “பாலியல் குறி களியல் கேஃப்” ஒன்று வர இருக்கிறது. அதன் பொருள் என்ன? fellatio café அதாவது வாய் வழி பாலியல் உறவு கொள்ளுதல். blow jobs என்றழைக்கப்படும் இந்த பாலுறவு ‘சேவை’களை எந்திரன்களே மேற்கொள்ளுமாம்.
மனித உரிமைகளின் சொர்க்கத்தில் பாலியல் சுதந்திரம் இல்லையா, பாற்கடல் இன்பத்திற்கு எதற்கய்யா எந்திரன் என்று கவலைப்படுகிறீர்களா?
சுவிட்சர்லாந்தில் 1942-ம் ஆண்டு முதலே விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. அப்பேற்பட்ட புண்ணிய பூமியில் தொழில் செய்யும் ஃபேஸ்கேர்ல் (Bradley Charvet, Geneva firm Facegirl) கம்பெனியாரின் பிராட்லி சார்வெட் ஐயாதான் மேற்படி திட்டத்தை அறிவித்துள்ளார்.
பல்வேறு ஆய்வுகளின் படி காலையில் உறவு கொள்ளும் ஆண்கள் தங்களது அன்றாட அலுவலக வேலைகளை திறம்பட செய்கிறார்களாம். அதன்படி காலையில் ஒரு காஃபி அருந்திவிட்டு கூடவே வாய் பாலுறவு கொள்ளும் போது அதுவும் மலிவான விலையில் பத்து நிமிடத்தில் கிடைக்கும் போது வேறு என்ன வேண்டும் என்கிறார் இந்த தொழில் முனைவர். இந்த காஃபி செக்ஸ் சேவையின் விலை கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் இருக்கலாம். சட்ட அங்கீகாரம், பாலுறவு தேவை, காலை காஃபி புத்துணர்ச்சி என்று அனைத்தையும் கோர்த்திருக்கிறார் இந்த முதலாளி.
கீழைத்தேய நாடான தாய்லாந்தில் காஃபி கிளப் சென்று ஒரு காஃபிக்கு உத்திரவு கொடுத்துவிட்டு, ஐ பேடில் ஒரு விலை மாதை தெரிவு செய்து அவளுக்கும் உத்திரவு போட்டால் ஓரல் செக்சும் கிடைக்கும்.
இத்தகைய காணக் கிடைக்காத அரிய புத்துயிர்ப்பான யோசனை இவருக்கு எப்படிக் கிடைத்தது? கீழைத்தேய நாடான தாய்லாந்தில் இத்தகைய ‘சேவை’ காஃபி கிளப்புகளில் இருக்கிறதாம். அங்கே சென்று ஒரு காஃபிக்கு உத்திரவு கொடுத்துவிட்டு, ஐ பேடில் ஒரு விலை மாதை தெரிவு செய்து அவளுக்கும் உத்திரவு போட்டால் ஓரல் செக்சும் கிடைக்கும்.
எனினும் இந்த தொழில் முனைவோரின் தொழில் உத்தியை வரவேற்கும் அளவு சுவிட்சர்லாந்து முதலாளித்துவம் இன்னும் வளரவில்லை என்பது இலாப பகவானுக்கு ஒரு குறைதான். விபச்சாரத்திற்கு சட்டம் அனுமதித்தாலும், பொது இடங்களில் பணம் கொடுத்து கிடைக்கும் இந்த செக்ஸ் ‘சேவைகளை’ உணவு வழங்கல் சார்ந்த சுவிட்சர்லாந்து சட்டம் தடை செய்திருக்கிறதாம்.
இருப்பினும் பிராட்லி சார்வெட் எனும் அந்த கண்ணியமான கனவான் முடங்கிவிடவில்லை. உடனே அந்த விபச்சார சேவையை செக்ஸ் எந்திரன்கள் செய்யமுடியுமா என்று விசாரித்து வருகிறாராம். செக்ஸ் குற்றங்களுக்கும், செக்ஸ் வக்கிரங்களுக்கும் புண்ணிய பூமியான அமெரிக்கவில் இருக்கும் நிறுவனம் ஒன்றோடு நிஜ உலகத்திற்கு தேவைப்படும் பெண் எந்திரன்களை தயாரிக்க முடியுமா என்று பேசி வருகிறார் சார்வெட். இதன் உத்தேச விலை இரண்டு லட்சத்திற்கும் அதிகம் வரலாமாம்.
இத்தகைய பாலுறவு எந்திரன்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் எட்டு எந்திரப் பெண்களை பணியில் அமர்த்தி ஒரு கப் காஃபிக்கு சுமார் 4,000 ரூபாய் விலை வைத்து ஐயா தனது தொழிலை ஆரம்பிப்பாராம். எந்திரங்களோடு உறவு கொள்ளும் போது விரைவிலேயே மனிதர்கள் அதற்கு அடிமையாவார்கள், காரணம் எந்திரன்கள் யாரும் இந்த உறவுகள் போதும் நிறுத்து என்று சொல்வதில்லை என்கிறார் உலக எந்திர செக்ஸ்வியல் மாநாட்டில் பங்கேற்ற ஒரு நிபுணர்.
எது எப்படியோ ஜெனிவாவில் செக்ஸ் காஃபி நிலையம் திறக்க முடியுமெனில் விரைவிலேயே இலண்டனிலும் திறக்கப் போவதாக சார்வெட் தெரிவித்திருக்கிறார். நம்மூரில் கும்பகோணம் டிகிரி காஃபியின் பிரபலத்தைப் போன்று ஐரோப்பாவிலும் இத்தகைய பாலுறவு காஃபி கிளப் பிரபலமடையலாம்.
பாலுறவு எந்திரன்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் எட்டு எந்திரப் பெண்களை பணியில் அமர்த்தி ஒரு கப் காஃபிக்கு சுமார் 4,000 ரூபாய் விலை வைத்து ஐயா தனது தொழிலை ஆரம்பிப்பாராம்.
இத்தகைய சேவைகள் முதலாளிகளின் பணப்பையை தீர்க்கலாமே ஒழிய ஆண்களின் பாலியல் தேவைகளை தீர்ப்பதாக சொல்வது ஏமாற்று என்கிறார்கள் சில அதி உயர் நுகர்வு விழிப்பாளர்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்தும், ஆசிய நாடுகளிலிருந்தும் அகதிகளாக வெளியேற்றப்படும் மக்கள், மத்திய தரைக் கடலில் கொல்லப்படுகிறார்கள். அகதிகளின் வாழ்வுரிமையை மறுத்து இப்படி கொன்று குவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் கனவான்களுக்கு இத்தகைய ‘காஃபி சேவை’ அளிப்பது குறித்து எப்படியெல்லாம் கவலைப்படுகிறார்கள், பாருங்கள்!
மேலைத்தேய நாடுகளில் நடக்கும் சட்டப்பூர்வ விபச்சாரத்திற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பெண்களும், குழந்தைகளும் கடத்தி வரப்படுகிறார்கள். அந்தக் கொடூரமான கதைகளை கேட்போர் எவருக்கும் உறுப்புக்கள் எழுச்சி பெறாது. அப்பேற்பட்ட அவலத்தில் சாகும் அகதிகளைக் கட்டாயப்படுத்தி நடக்கும் விபச்சாரம் மற்றும் அதன் எண்ணிறந்த துறைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் இந்த நாடுகளின் அரசுகள் இருக்கும் போது எந்திரன்கள் மட்டுமல்ல விரைவேலேயே நாய், பூனை, குரங்கு, மாடு வழி செக்ஸ் சேவைகளும் வரலாம்.
ஆண்-பெண் உறவில் நாகரீகம், காதல் போன்ற பரிணாம வளர்ச்சிகளை கொன்று விட்டு அனைத்தையும் காசு வழி உறவாக்கும் போது பொம்மைகள் வழி பாலியல் உறவு வந்துதானே தீரும்!
தீபவளியை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் சிவகாசி பட்டாசு நிறுவனம் ஒன்று அமைத்திருந்த கடையின் முகப்பு – வினவு புகைப்படம்
தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜனுக்கு வயது 45 . இவருக்கு வேலைக்கு போகும் மனைவியோடு 12-வது படிக்கும் ஒரு மகனும் மற்றும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும் இருக்கின்றார்கள்.
கடந்த 8 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் வேதியல் இரசாயனங்கள் கலக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் குடிக்கின்ற தேநீரே எட்டு – பத்து ரூபாய் என ஆகிவிட்டாலும் இவருடைய அன்றாட கூலி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 200 ரூபாய் மட்டுமே. உயிரைப் பணயம் வைத்து பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர் இன்று பெறும் கூலி ரூ.400 மட்டுமே!
பட்டாசு ஆலையில் தொழிலாளி ( மாதிரிப் படம் )
தீபாவளிக்கு 15,000 ருபாய் போனசாக கிடைப்பதாய் கூறுகிறார். அதுவும் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் கலக்கும் வேலையில் ஈடுபடுவதால் மட்டுமே கிடைக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலையின் ஏனையத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமையும் கிடையாது. சட்டத்திற்கு புறம்பாய் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, காலாவதியான உரிமங்களைக் கொண்டு கொள்ளை இலாபம் அடிக்கும் பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் தங்களது தொழிலாளர்களை பட்டினி போட்டே வதைக்கிறார்கள்.
சீனப்பட்டாசுகள் தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறார் ராஜன். ஆனால் சீனத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச உரிமைகள் கூட இங்கே இல்லை என்பதை அவர் அறியமாட்டார். சீனப்பட்டாசுகளைத் தடை செய்தால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நல்லமுறையில் நடக்கும் என்பதால் ஆதரிக்கும் ராஜன், இந்த நல்ல முறையில் தொழிலாளிகளின் ஊதியம் கெட்டவிதமாக இருப்பதை விதியே என ஏற்கிறார்.
சிவகாசியில் இதுவரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநூறு தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். இது உயிருக்கு ஆபத்தான தொழில் தான் ஆனால் அதை விட்டாலும் வேறு வழியில்லை பிழைக்க வேண்டுமே ! என்கிறார்.
சட்டவிரோதமாக வேலை வாங்கப்படும் சிறுமி ( மாதிரிப் படம் )
குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி கேட்டதற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் இங்கில்லை என்று பலகைத் தொங்கவிட்டு இருப்பார்கள். ஆனால் உள்ளே சிறுவர், சிறுமியர் பலர் வேலை செய்கிறார்கள். எப்படியும் அவர்களுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும். அவர்களை வேலைக்கு வைப்பதால் கம்பனிகளுக்கு தான் கொள்ளை இலாபம் என்று உண்மையைச் சொல்கிறார். அது கூட பரவாயில்லை, பட்டாசுக்கு தாள் ஓட்டும் வேலைகளில் ஈடுபடும் சிறுவர்கள் பசியின் காரணமாக பசையை ( கோதுமை – மைதாவில் செய்யப்படுவது) சாப்பிடாமல் இருக்க அதில் யூரியாவை கலந்து விடுகிறார்களாம், முதலாளிகள். இப்பேற்பட்ட கந்தக பூமியில் தொழிலாளிகளுக்கு என்ன மதிப்பு இருக்கும்?
தனது மகளும் மகனும் பட்டாசுக்கு தாள் சுத்துதல் உள்ளிட்ட பட்டாசு சம்மந்தமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார். இப்படி முழு குடும்பமே வேலை செய்யாமல் அங்கே வாழ முடியாது என்பது நிலைமை. இதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள் என்று ஏழைப் பெற்றோர்களை விமரிசிக்கின்றனர், ஓய்வு நேர மனிதாபிமானிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்!
சரி, போனஸ் கொடுப்பதைத் தவிர உங்களுக்கு வேறு என்னவிதமான உரிமைகள் பட்டாசு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்று கேட்டதற்கு, மாதம் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் (நேரடியாக எண்ணைய் மில்லில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது ) கொடுக்கிறார்கள். “தலைக்கு எண்ணெய் தேய்த்து கண்ணில் சற்று எண்ணெய் விட்டால் தான் கண்ணுல மருந்து எதாச்சும் இருந்தால் கூட எரிச்சல் எடுக்காது” என்று அந்த எண்ணெய் தானத்தின் பயனைக் கூறுகிறார்.
ஸ்டாண்டர்ட், காளிமார்க் போன்ற பெரிய நிறுவனங்களில் கூலி மிகவும் குறைவு. 170-200 ரூபாய் வரைக்கும் தான் கூலியாய் கிடைக்கும். அவர்களுக்கு தினமும் டீ பேட்டா 25 ருபாய் கிடைக்கும். தினமும் இரண்டு வாழைப்பழங்கள் கொடுப்பார்கள். சிவகாசியில் ஸ்டாண்டர்ட் நிறுவனம் 150 இடங்களில் இயங்குவதாக கூறுகிறார் அவர். தனது பட்டாசு ரகங்களில் தரமிருப்பதாக விளம்பரம் செய்யும் ஸ்டாண்டர்டு நிறுவனம தொழிலாளிகளை நடத்தும் விதம் இதுதான்.
சரி விபத்து ஏற்பட்டு உயிரிழப்போ கைகால் இழப்போ ஏற்பட்டால் இழப்பீடு தருவார்களா என்று கேட்டதற்கு, “அங்கீகாரம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தான் பல மருந்து கம்பெனிகளும் நடக்கின்றன. தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை கிடையாது. இந்த நிலையில் இழப்பீடு பெறுவது என்பது பெரும்பாலும் முதலாளியைப் பொருத்தே இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் இல்லை,” என்கிறார்.
சரி உங்களது வேலை நேரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, கோடைகாலம் தவிர பிற மாதங்களில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் வேலை செய்வோம். 10 மணிக்கு பிறகு கடுமையான வெயிலினால் சூடேறத் துவங்கும் மருந்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். கோடை காலத்தில் காலை 5 மணிக்கு போய் 9 மணிக்கு திரும்பி விடுவோம், என்றார். இப்படி அன்றாடம் எப்போது வெடிக்கும் எனும் அபாயத்திலியே தொழிலாளிகள் வேலையைச் செய்கின்றனர்.
மற்ற பட்டாசுகளை விட பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனக் கலவை மிகவும் ஆபத்தானது என்கிறார் ராஜன். ஒரு இழையின் கனத்தை கூட தாங்காத அந்த ஆபத்து எப்போதும் வெடிக்க காத்திருக்கும் ஒரு கண்ணி வெடிக்கு சமமானது. அதனால் தான் தேவைக்கு போக மிஞ்சியிருக்கும் பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனத்தை அன்றாடம் உடனடியாக அழித்துவிடுவோம் என்கிறார்
சிவகாசி தொழிலாளி ராஜன் (அமர்ந்திருப்பவர்).
அவரது கம்பெனியில் மொத்தம் 8 அறைகளும், அறை ஒன்றிற்கு 25 கிலோ மருந்து இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு குறிப்பிட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. 100 – 10000 வாலா பட்டாசுத் தயாரிப்பில் அவர் ஈடுபடுகிறார்.
ராஜன் வேலை செய்யும் கம்பெனி கலெக்டர் லைசன்சு, மெட்ராஸ் லைசன்சு மற்றும் நாக்பூர் லைசன்சு என்று மூன்று விதமான லைசன்சுகளை வாங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். பெரிய வெடிகள் தயாரிக்க நாக்பூர் லைசன்சு வேண்டும். ஒரு லைசன்சு வாங்கிவிட்டு மற்ற வகை பாட்டாசுகள் தயாரிக்கக் கூடாது. அதிகாரிகள் வந்து சோதனை போடுவார்கள் என்று கூறுகிறார். அந்த சோதனை மாமூலுக்கு பயன்படுமளவுக்கு உயிர் பாதுகாப்பு பயன்படுமா என்பதை அதிகரித்து வரும் விபத்தைக்களை வைத்து முடிவு செய்யலாம்.
தீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.
தீபாவளி தவிர ஓணம், தசரா, வட இந்தியர்களின் பிற விழாக்கள் என பட்டாசுகள் பிற மாநிலங்களுக்கும் விற்கபடுகிறதாம். ராஜனுக்கு கிடைக்கும் 400 ரூபாய் கூலியானது குடும்பச் செலவுக்கு போதாது என்பதால் அவரது மனைவி பொன்வண்டு சோப்பு டீலராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இட்லி மாவு தயாரித்து விற்பதிலும் ஈடுபடுகிறார்.
அவர் வேலை செய்யும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு நேரடி விற்பனைக்காக சென்னை வந்திருக்கிறது. சென்னையில் வர்த்தக மையத்தின் எதிர்புறத்தில் அமைந்திருந்த அந்நிறுவனத்தின் கடையில் பணிபுரிய சிவகாசியிலிருந்து 40 தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தீபாவளியின் குறியீடான பட்டாசுகளைத் தயாரிக்கும் இவர்களுக்குத் தீபாவளி கிடையாது.
படம், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்
(2016 தீபாவளியன்று எடுக்கப்பட்ட நேர்காணல்)
இந்தியப் போலி மார்க்சிஸ்டுகளின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது சீடர்களின் மார்க்சிய வரலாற்று ஆய்வுகளும் முடிவுகளும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் ”இந்துத்துவ”க் கோட்பாடுகளும் அடிப்படையில் வேறானவை அல்ல. முன்னவை வஞ்சகமும் துரோகமும் நிறைத்து மூடி மறைக்கப்பட்ட தத்துவ வரலாற்றுப் புரட்டுகள்; பின்னவை பகிரங்கமான பாசிச வெறி நிரம்பியவை. பொதுவில் இதை நிருபிக்கும் வகையில் இத்தொடரின் முதற்பகுதி அமைந்தது; குறிப்பாக ஆரியர் ஆக்கிரமிப்பு அழிவு வேலைகளை மூடிமறைத்து நியாயம் கற்பிக்கும் முயற்சியில் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிருபிக்கும் வகையில் இரண்டாம் பகுதி அமைந்தது. வருணாசிரம் சாதிய அமைப்பு ஆகியவற்றை உருவாக்கி ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.
அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர்.
வருணாசிரம சாதிய அமைப்பு முறை ஆரிய பார்ப்பன ஆதிக்கத்துக்காக அவர்களால் உருவாக்கப்பட்டதில்லை; சமூகப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தன்னியல்பான தேவையின் அடிப்படையில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையின் காரணமாகத் தானே தோன்றியதுதான் என்று கூறித் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் நம்பூதிரியும் அவரது சீடர்களும்.
“வாழ்க்கையின் தேவையிலிருந்து எழுந்த தொழில் பிரிவினையே இந்த நால்வருண முறையின் அடிப்படையாக இருந்தது. மற்ற நாடுகளில் பெரும்பாலும் அடிமை. ஆண்டை என்ற இரு வர்க்கத்தினராகவே இருந்தனர். இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆண்டைகளே மூன்று வருணத்தினர் – வர்க்கத்தினர் – ஆயினர். அடிமைகள் சூத்திரர்கள் ஒரு வருணம் – ஒரு வர்க்கமாயினர்” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்.26)
“சிந்துநதி நாகரிகம் நலிவுற்று ஒரு சூன்யநிலை தோன்றியிருந்த நிலையில் தான் வடஇந்தியாவில் கங்கை நதி நாகரிகத்தின் பிரதிநிதிகள் – ஆரியர்கள் ஆதிக்க நிலையைப் பெறுவது சுலபமாக இருந்தது. ஆரியர்கள் இங்கு வந்த போது வளர்ந்து கொண்டிருந்த விவசாயம், சிறு அளவிலான கைத்தொழில்கள், பண்டப்பரிவர்த்தனை ஆகிய உற்பத்தி விநியோக முறை தங்குதடையின்றி நடைபெறுவது சமூக வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக இருந்தது. இந்த உற்பத்தியை மேலும் பெருக்குவது, சமுதாயத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பில் ஈடுபடாமல் அறிவுத்துறையில் மட்டுமே ஈடுபடுவதற்காக உழைப்பவர் ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்காக மட்டும் உற்பத்தி செய்வதோடன்றி உழைக்காமல் வாழும் பகுதியினருக்காகவும் உழைப்பது, உபரி உற்பத்தி செய்வது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் தேவையாகிறது; இதற்கேற்ப சமுதாயத்தின் வாழ்க்கை முறை உருவாக்கப்பட்டது. இதற்கேற்ப அறிவுத்துறையில் மட்டும் ஈடுபடுவோர் பிரதானமாக புரோகிதத் தொழிலில் ஈடுபடுவோர் பிராமணர்களாயினர். குலத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் சத்திரியர் ஆயினர். வேளாண்மையிலும் பண்ட உற்பத்தியிலும் ஈடுபடுவோர் வைசியர்களாயினர். உடலுழைப்பில் ஈடுபட்டு பொருளுற்பத்தி செய்வோர் சூத்திரர்களாயினர். இந்த நான்கு பிரிவினரும் நான்கு வருணமாக அழைக்கப்பட்டது” (மார்க்சிஸ்டு 1993 டிச பக்.28)
இந்த நால் வருணமுறைதான் இந்திய சமுதாயத்தின் அடிமைமுறை. இது மிகக் கொடுமையானது என்றாலும் உலகின் எல்லா நாடுகளும் அவற்றின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் அடிமை ஆண்டை முறையைக் கடந்துதான் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளன. இதுதான் சமூக விஞ்ஞானம் உணர்த்தும் உண்மை. இந்திய அடிமைச் சமுதாயமான நால் வருண அமைப்பு முறை யாராலும் முன்னதாகத் திட்டமிட்டு, உருவாக்கப்பட்டதல்ல. ஆரிய, திராவிட இன மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அமைப்பு இது. இத்தகைய அமைப்பு தோன்றிய பின் அதனை உறுதிப்படுத்தவும், அதில் ஆதிக்கம் பெற்றவர்கள் அதனை நிரந்தரப்படுத்தவும் தான் அதற்குத் தெய்வீகத்தன்மை கற்பித்தனர்.
E.M.S நம்பூதிரி
இதுதான் நமதுநாட்டில் நால் வருணமுறை தோன்றியதன் வரலாறு என்று புளுகுகிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள். அதுமட்டுமல்ல இந்த நால்வருண முறையினால் இந்தியா சகல துறைகளிலும் முன்னேறியது என்று ஏகமாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
“இந்த அமைப்பு தோன்றிய பின் இதுதான் இந்தியாவின் பொருளாதார, அரசியல், கலாச்சார வளர்ச்சியை உருவாக்கியது. இந்த சமுதாயத்தின் பெரும்பாலோராக இருந்த சூத்திரர்களின் – அடிமைகளின் உடலுழைப்பினால் உற்பத்தி பெருகியது. அவர்களின் தேவைக்கு மேல் உபரி ஏற்பட்டது. அதனை உண்டு உடலுழைப்பில் ஈடுபடாமல் அறிவுத் துறையில் மட்டும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஒரு பகுதியினருக்குக் கிடைத்தது. இதனால் கல்வி, கலாச்சாரத் துறைகளில் சமுதாயம் முன்னேற வாய்ப்புக் கிடைத்தது. இது சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவியது”
“நால் வருணமுறையும் சாதீய முறையும் இந்தியச் சமுக வளர்ச்சிப் போக்கின் பொருளுற்பத்தி, விநியோக முறையின் தவிர்க்க முடியாத விளைவுகளாகவே தோன்றின. ஆனால் இவைகளுக்குத் தெய்வீகத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியதுதான் ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தினர் செய்த கொடுமை, வேதங்கள் இதற்கும் பயன்பட்டுள்ளன. ஆனால், இக்காலத்தில்தான் இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும்பங்காற்றின. இக்காலத்தில் இந்திய உபகண்டத்தில் பல்வேறு பிரிவு மக்களின் மொழிகள் வளர்ச்சியடைந்தன. பல மொழிகளுக்கு எழுத்தும் இலக்கணமும் தோன்றின. பல மொழிகளில் புகழ்பெற்ற இலக்கியங்களும் இதிகாசங்களும் தோன்றின. கலைகளும் கலாச்சாரங்களும் பெரும் அளவில் வளர்ச்சிபெற்றன – விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் இந்திய நாடு ஒரு கட்டம் வரை முன்னேறியது. …..கி.பி. முதலாம் நூற்றாண்டுமுதல் 12ம் நூற்றாண்டு வரை இந்தக் கண்டுபிடிப்புகள் நடைபெற்றுள்ளன. தத்துவத் துறையில் இந்தியா மிகவும் முன்னேறிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக். 33 – 35)
நன்றி: பிபிசி
ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிஸ்டுகள் கூட இந்த அளவு ஆரிய ஆக்கிரமிப்புக்கும், அவர்கள் உருவாக்கிய நால்வருண முறைக்கும் வக்காலத்து வாங்க முடியாது. நால் வருணமுறைக்கு தெய்வத்தன்மை கற்பித்து நிரந்தரமாக்கியது தவிர ஆரியப் பார்ப்பனர்கள் வேறு எந்தவிதத் தவறும் அநீதியும் புரிந்துவிடவில்லை; சமூக, பொருளாதாரத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு யாருடைய நலனையும் பாதிக்கவில்லை; மாறாக முன்னேற்றத்துக்கே உதவியது. இந்த சமூக அமைப்பு திராவிட இன மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு, நிர்ப்பந்தம் – வன்முறை, மூலம் திணிக்கப்பட்டதல்ல என்பதே போலி மார்க்சிஸ்டுகளின் வாதம்.
பூணூல் அணியும் உரிமையுடைய இரட்டைப் பிறப்பாளர்களான பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தினராக ஆரியர்கள் மட்டுமே வைக்கப்பட்டனர்; அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர் உட்பட இந்தியப் பூர்வகுடிமக்கள் அனைவரும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டனர். இதை ஒப்புக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள் இத்தகைய பூர்வகுடி இனப் பிரிவின் அடிப்படையிலான நால்வருண சமூக அமைப்பு, ஒரு அடிமைச் சமுதாய அமைப்பு என்பதையும் ஒப்புக்கொண்டு, அதனால் அடிமைகளின் மீதான ஒடுக்குமுறை எதுவும் கிடையாது; திராவிட – சூத்திரர்களின் உடலுழைப்பு உபரி மட்டுமே ஆரியர்களால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது; அதுவும் அறிவுத்துறையில் ஈடுபடும் சமூகநலன் கருதியே செய்தார்கள் என்பதாக வாதிடுகிறார்கள்.
“இதுதான் இந்தியாவின் முதல் சாதிய முறை அல்லது சாதீயத்திரை போர்த்தப்பட்ட அடிமைமுறை. ஆரம்ப காலத்தில் இதில் தொடக்கூடாமை, தீண்டாமை போன்ற பாகுபாடுகள் இருக்கவில்லை. தொழில் பிரிவினை மட்டுமே இருந்தது. இந்த நால் வருணத்தினருக்கு இடையில் மண உறவு உட்பட எல்லா விதமான உறவுகளும் இருந்தன. இதன் மூலம்தான் ஆரிய – திராவிட இன வேறுபாடுகள் மறைந்தன. தொடக்கூடாமை, தீண்டாமை எல்லாம் சமுதாய வளர்ச்சியின் இன்னொரு கட்டத்தில் நிலப் பிரபுத்துவ காலத்தில்தான் தோன்றியது” (மார்க்சிஸ்ட் 1993 ஜூலை, பக்.3).
வெள்ளை நிறவெறியும் இனவெறியும் பிடித்த ஆரியர்கள் கருப்பு நிறமும் வேறு இனத்தையும் சேர்ந்த மக்களிடம் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதையும், அடக்குமுறை சுரண்டலையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே நால் வருணமுறை. ஆனால், ஆரிய – திராவிட இனக் கலப்பு, நாகரிகக் கலப்பிற்குப் பிறகு ஏற்பட்டதுதான் என்றும் கூட தானே முன்னுக்குப் பின் முரணாகவும் போலி மார்க்சிஸ்டுகள் எழுதுகின்றனர்.
வலது புறம் சாவர்க்கர் நடுவில் கோல்வாக்கர்
“ஆரியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் முன்னேறிப் பரவிய காலத்தில், அவர்களுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த மக்களின் பண்பாட்டையும் நாகரீகத்தையும் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு ஆரியர்களும் திராவிடர்களும் இதரப் பூர்வகுடி மக்களும் இணைந்து, ஆரிய திராவிட நாகரீகங்கள் இணைந்து – இந்திய நாகரீகம் வளரத் தொடங்கியது. இந்தியாவில் இவ்வாறு வளர்ச்சியடைந்த நாகரீகம் முழுமையான ஆரிய நாகரீகமோ – வேத நாகரீகமோ – திராவிட நாகரீகமோ அல்ல. இரு இன மக்களும் இரண்டற இணைந்தது போலவே இரு இனங்களின் நாகரீகங்களும் இணைந்து உருவானதுதான் பிற்கால இந்திய நாகரிகம் அல்லது வேத நாகரீகம். இரண்டு இன மக்களும் அவர்களின் நாகரீகங்களும் இரண்டற இணைந்த போதிலும் ஆதிக்க நிலையில் ஆரியர்களும் அவர்களின் தத்துவமான வேதங்களுமே இருந்தன” (மார்க்சிஸ்ட்1993 டிச, பக்:28)
இரண்டு இனமக்களும், அவர்களின் நாகரீகங்களும் இரண்டறக் கலந்த பின் ஆரியர்களாகிய ஒரு இனத்தவரும், அவர்களின் தத்துவமான வேதங்களும் ஆதிக்கநிலை பெற்றிருந்ததாக போலி மார்க்சிஸ்டுகள் கூறுகின்றனர். இது சுய முரண்பாடாக அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு – அழிவு வேலைகளை முடி மறைக்கவும் அதன் காரணமாக அவர்கள் மீது இந்தியப் பூர்வகுடிமக்கள் கொண்டிருக்கும் நியாயமான ஆத்திரத்தை மழுங்கடிக்கவும் செய்யப்படும் பித்தலாட்டம்தான் இந்த இனக்கலப்பு – நாகரீகக் கலப்பு என்கிற வாதம்.
இதற்கு ஆதாரமாக போலி மார்க்சிஸ்டுகள் தமது சித்தாந்த மூலமாக மனு தர்மத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள். அது பின்வருமாறு :
“நால் வருணத்தாருக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள் இங்கேதான் தோன்றின என்று கூறப்பட்டுள்ளது, தெளிவாக இல்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. சூத்திரர்கள் மற்ற வருணத்தாருடனான – மற்ற வருணத்தாரின் இனக்கலப்பு சர்வசாதாரணமாக இருந்து வந்துள்ளது. இந்த இனக்கலப்பின் மூலம் தான் பண்டைய ஆரிய – திராவிட நிறவழி இனங்கள் பெரும்பாலும் மறைந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. எப்படியும் நால் வருணத்தாருக்கிடையே இனக் கலப்பு நடைபெற்று வந்தது என்று மனுதர்மம் கூறுகிறது” (மார்க்சிஸ்ட் 1993 ஆக, பக்:32, 33)
இது ஒரு அப்பட்டமான பித்தலாட்டம். நால் வருணத்தாரிடையே கலப்பு மணத்தை மனுதர்மம் ஏற்றதாக அனுமதித்ததாக எங்கேயும் போலி மார்க்சிஸ்டுகளால் ஆதாரம் காட்ட முடியவில்லை. அவர்களே எடுத்துக்காட்டுமாறு “கலப்பால் பிறந்தவர்களுக்குரிய ஒழுக்க மரபுகள்” தான் மனுதர்மத்தில் உள்ளது. இதன் பொருள் எப்படி கலப்பு மணத்தை நால்வருணமுறை ஏற்றதாகக் கருதமுடியும். அதற்கு மாறாக கலப்பு மணத்தால் பிறந்தவர்களை சங்கர சாதியினர் என்று இழிநிலையில் வைப்பதும், சூத்திரர்களுக்குக் கலப்பு மண உரிமையை தடை செய்வதும்தான் மனுதர்மத்தில் உள்ளது.
சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது
“கலப்பு மணம் புரிதல் இன்று ஒரு புரட்சிகரமான காரியமாகப் பலர் கருதுகின்றனர். சாதீயப் பாகுபாடு அந்த அளவுக்கு இன்னும் நீடிக்கிறது. ஆனால், நால் வருண காலத்திலேயே கலப்பு மண முறை நடைமுறையில் இருந்தது என்று மனுதர்மம் கூறுகிறது.”
“பிராமணன் கீழ் மூவருணங்களிலும் சத்திரியன் பிராமணன் தவிர்த்த பின் வருணங்களிலும் சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் பெண் ஏற்கலாம். சூத்திரன் கலப்பு மணத்திற்கு வழியற்றவனாவான்”
“இதிலிருந்து பல விஷயங்கள் தெளிவாகிறது. வேலைப் பிரிவினை தான் அதன் அடிப்படையான அம்சம். சூத்திரன் மற்ற மூவருணத்துக்கும் சேவகம் செய்யும் உடலுழைப்பாளியாக தாசனாக – அடிமையாக இருந்தான்”
“அதே நேரத்தில் பிராமணர்களும் சூத்திரர்களும் நால் வருணத்தின் இரு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்கிடையில் சாதீய உயர்வு தாழ்வு இருந்ததில்லை. அதன் காரணமாகத்தான் அந்த நால்வருணத்தாரிடையில் கொடுக்கல் வாங்கல் சார்ந்த மூன்று வருணத்தாரும் சூத்திரர்களுடன் – திராவிடர்களுடன் மண உறவு கொண்டனர். அதன் காரண மாகத்தான் ஆரிய – திராவிட இனக்கலப்பு மிக வேகமாக நடந்தேறியது. இன்று இந்திய உபகண்டத்தில் வாழ்வோரை ஆரியர் – திராவிடர் என்று பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” (மார்க்சிஸ்ட் 93 ஆக பக்:49)
இதைவிட துணிச்சலான, அப்பட்டமான பித்தலாட்டம் வேறென்ன இருக்க முடியும் சூத்திரனுக்குக் கலப்புமணம் தடை செய்யப்பட்டதாக மேற்கோள் காட்டிவிட்டு, அவன் அடிமை – தாசன் என்று வரையறுப்பதாகக் கூறிக் கொண்டே அவனிடம் சாதீய உயர்வு தாழ்வு பாராட்டவில்லை, கொடுக்கல் வாங்கல் இருந்தது என்று புளுகுகிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள். அவர்கள் மேற்கோள் காட்டிய மனுவின் தர்மப்படி ஒவ்வொரு மேல் வருணத்தவனுக்கும் கீழ் வருணப் பெண்ணை ஏற்க உரிமை உண்டு; ஒவ்வொரு கீழ்வருணத்தவனும் மேல் வருணத்தவனுக்குள்ள அந்த உரிமையை ஏற்கவேண்டும் என்பதுதான் பொருளாகிறது. அப்படிக் கலப்பு மணத்தால் பிறந்தவர்களை நால்வருண அமைப்புக்குள் வைக்க மறுத்து அதற்கு வெளியே வைத்து இழிவாக நடத்தினர் என்பதுதான் உண்மை. இதை இந்தப் போலி மார்க்சிஸ்டுகளே வேறோரு இடத்தில் ஒப்புக் கொள்கின்றனர்.
“நால்வருண சமுதாயம் அதற்கு அவசியமான, ஆனால் இழிவான தொழில்களைச் செய்வதற்காக சண்டாளர் என்ற ஐந்தாவது ஒரு பிரிவினரை (பஞ்சமர்) வருண அமைப்புக்கு வெளியே தோற்றுவித்தது; அல்லது சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது. ஏற்கனவே குறிப்பிட்ட அதே பகுதியில் பக்கம் 236-ல் 36-வது சூத்திரம் இவ்வாறு கூறு கிறது”.
“கொடுங்குணம், இழிசெயல், ஒழுக்கமின்மை, தீயமொழி, வன்முறை ஆகிய செயல்கள் ஒருவனை இழிபிறப்பாளன் எனக் காட்டும் சூத்திரம் 38 இவ்வாறு கூறுகிறது:
“சாதிக் கலப்பு மறைவானதே, சங்கர சாதியார் (கலப்புச் சாதியினர்) நால் வருணத்தினரைப் போலவே வெளியே தோன்றினும் தொழில் கொண்டு சாதி அறியலாம்; சங்கர சாதியார் ஊருக்குப் புறம்பே, மலை, மலர்ச்சோலை, தோப்பு. சுடுகாட்டின் பக்கம் இவ்விடங்களில் வாழ்க. அங்கே பலரறியத் தம் தொழில் புரிக; சண்டாளர் ஊருக்கு வெளியே வாழ்க, உலோக ஏனம் பயன்படுத்தற்க; இவர் தொட்ட பாத்திரம் துலக்கினும் துய்மையாகாது. இரும்பும் பித்தளையுமே இவர் நகை; சண்டாளர் உடைந்த சட்டியிலேயே உணவுண்க. எவரும் இவருக்கு நேரே உணவு பரிமாறக் கூடாது. பணியாளரை ஏவி உணவிடுக. பிணத்தின் மீதிடும் ஆடைதான் இவர்க்கு உடை; சண்டாளர் தம் சாதியிலேயே பெண் கொள்ளுதலும் கொடுப்பதும் செய்க. நாய், கழுதை வளர்க்கலாம். மாடு வளர்க்கக் கூடாது.”
வர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள்
இதுபோன்ற இன்னும் பல கொடுமையான விதிகளுக்குட்பட்டுத்தான் இம்மக்கள் வாழ வேண்டியிருந்தது என்பது மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது. நால் வருணமுறையில் ஆரியர் வழிவந்த முதல் மூன்று வருணத்தினருக்கும் சூத்திரர்கள் அடிமைகள். அது போதாதென்று நால் வருணம் முழுமைக்கும் அடிமைகளாக சண்டாளர் உருவாக்கப்பட்டனர். (மார்க்சிஸ்ட் 93 ஆக, பக்:43)
“இவை கடவுளின் பேரால் மனிதனுக்கு மனிதன் இழைத்த கொடுமைகள்” என்று ஒருபுறம் புலம்பிக் கொண்டே இந்த போலி மார்க்சிஸ்டுகள் இவற்றுக்குக் காரணமான ஆரியர்களையும், வேதங்களையும் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்காக மகத்தான பங்களிப்புகள் செய்திருப்பதாகப் பெருமையாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.
“ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கும் வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப்பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை” – இப்படிப் பீற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இதே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குருவை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு கேள்விகள் எழுப்புகின்றனர்:
“ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுவதைக் கேளுங்கள்:
“வர்ண வியவஸ்தா என்று கூறுவதையே நமது இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக ஏற்றத்தாழ்வு அல்ல; பிற்காலத்தில் தான் இது திரித்துக் கூறப்பட்டது. பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார்தான் இப்படிப் பிரச்சாரம் செய்தனர். (நூல் – சிந்தனைக் கோவை)
“வருணாசிரம முறையில் சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்கிறார் கோல்வால்கர். பிராமணர்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்களாம் எப்படி பிராமணர் என்ற ஒரு சாதி முழுமையும் அறிவுத் திறமைமிக்கவர்களாவார்கள்? பிறவியிலேயே அறிவுத்திறமை வந்து விடுமா? சூத்திரர்கள் தங்கள் தொழிலை செய்வதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்கிறார்களாம் தங்கள் தொழில் என்பது என்ன? சூத்திரர்களில் ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட குலத்தொழில் தானே? இதுதானே சாதீய முறையின் அடிப்படை. இந்த நான்கு வருணத்தினரில் சூத்திரர்கள் மட்டும்தானே தொழில் செய்வோர் – பொருளுற்பத்தியில் ஈடுபடுவோர் – மற்ற மூன்று பிரிவினரும் இவர்கள் உற்பத்தி செய்யும் உபரியைச் சுரண்டுவோர் தானே? உடலுழைப்பில் ஈடுபடாமல் வாழ்வோர்தானே? சூத்திரர்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் மேல்சாதியினர் அனைவரிலும் அறிவுத் திறமையால் பிராமணன்தான் மிகவும் உயர்ந்தவன். இவையனைத்தும் நிரந்தரமான ஏற்பாடு. இதுதான் இந்திய அடிமைமுறை. இதனை மூடி மறைக்க இது ஒரு சமூக அமைப்பு; இதில் ஏற்றத் தாழ்வு இல்லை என்று வாதாடுகிறார் கோல்வால்கர். அவர் எழுதியுள்ள வரிகளிலேயே அந்த ஏற்றத்தாழ்வு பளிச்சென்று தெரிகிறது.” (மார்க்சிஸ்ட் 1993 மார்ச், பக்: 27,28)
இங்கே போலி மார்க்சிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை நோக்கி எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் இவர்களே தெரிவித்துள்ள “மார்க்சிய வரலாற்று ஆய்வுகளோடு” ஒப்பிட்டுப் பார்த்தாலே இவர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்கார்கள் என்பது புரியும் உண்மையில் இவ்விரு பிரிவினரும் தமது மூதாதையர்களான ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் இரட்டை நாயனங்கள் என்பது தெளிவாகவே விளங்கும்.