privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாவிழுப்புரத்தில் மக்கள் வெள்ளம் - நவம்பர் புரட்சியின் உற்சாகம் !

விழுப்புரத்தில் மக்கள் வெள்ளம் – நவம்பர் புரட்சியின் உற்சாகம் !

-

1917 நவம்பர் 7 ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி தோழர் லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவப்பட்டு நூறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்துவமான நாளை மக்களுக்கு தெரியபடுத்தி நமது நாட்டிலும் ஓர் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ உழைக்கும் மக்களை, தொழிலாளி வர்க்கத்தை விடுதலையுணர்வூட்டி மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்பின் சார்பாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 07.11.2016 திங்கள் கிழமை அரங்குக்கூட்டம் நடைபெற்றது. அரங்கமெங்கும் நிரம்பி வழிந்தது மக்கள் வெள்ளம்.

தோழர் அம்பேத்கர் 1
தோழர் அம்பேத்கர்

இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமை தாங்கி பேசுகையில், 1917 க்கு முன்பு நடந்த பிரெஞ்ச் புரட்சியாக இருக்கட்டும், மன்னாராட்சியை வீழ்த்திய முதலாளித்துவ புரட்சியாக இருக்கட்டும் அந்த புரட்சிகள் எல்லாம் ஏற்கனவே நிலவிய சுரண்டல் அரசுக் கட்டமைப்பை மாற்றியமைக்கவில்லை. அதனை மென்மேலும் அழகு படுத்தி சுரண்டலை தீவிரப்படுத்த தான் உதவியது. அதாவது சுரண்டும் வர்க்கத்தை இடமாற்றம் செய்தது. மக்களின் உழைப்பை ஒரு சுரண்டும் வர்க்கம் வீழ்த்தப்பட்டு மற்றொரு சுரண்டும் வர்க்கம் உருவாகியது. ஆனால், ரசியாவில் நடந்த சோஷலிச புரட்சி உலகெங்கிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு விடிவெள்ளியாய் அமைந்தது. “உழைக்காதவனுக்கு உணவு இல்லை. உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற ஓர் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாள் தான் நவம்பர் 7 ரசிய புரட்சி. அந்த மகத்துவமான நாளை பாட்டாளி வர்கத்தின் விடுதலை நாளாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். ரசியப் புரட்சி நமக்கு மிகப்பெரும் அனுபவம். அது போல் இந்தியாவிலும் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ முடியும் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தோழர் லோகநாதன்
தோழர் லோகநாதன்

அடுத்ததாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச் செயலர் தோழர். லோகநாதன் அவர்கள் பேசுகையில், பசி, பட்டினி, பஞ்சம், கொடிய வறுமை, பட்டினிச் சாவுகள் என்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் வாடிய போது இதற்கான காரணங்களை கண்டறிந்து இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்று ஓர் அறிவியல் பூர்வமான தத்துவத்தை முன்வைத்தார் காரல் மார்க்ஸ். அந்த தத்துவம் தான் கம்யுனிசம். உலகை கொள்ளையடிக்க துடிக்கும் முதலாளிகளின் சுரண்டலில் இருந்து உழைக்கும் மக்களை விடுதலை பெற வைக்கும் அந்த தத்துவத்திற்கு தன் வாழ்நாளையே அர்பணித்துக் கொண்டார். அந்த மாபெரும் தலைவரின் 200 ம் ஆண்டு விழா. உழைப்பை மையமாகக் கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. ஆனால் உழைப்பின் பயனை வெகு சிலர் அபகரித்துக்கொள்ளும் முதலாளித்துவத்தின் அய்யோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ். அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு வழிகளில் அதனை பிரச்சாரம் செய்து தனது போராட்டத்தை தொடங்கினார். தன்னை வர்க்க இறக்கம் செய்து கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து, மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தோழர் மணிவாசகம்
தோழர் மணிவாசகம்

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் விருதை செயலர் தோழர். மணிவாசகம் அவர்கள் மார்க்சிய தத்துவத்தை கொண்டு போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியை நிறுவினார் தோழர் லெனின். மார்க்சியத்தின் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ரசிய போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டி தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவினார். முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யுனிசமே என்று முழங்கினார். உலகத்தில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும் முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முறியடிக்கப்பட்டது. உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத சாதனைகளைச் செய்தது தோழர் லெனின் தலைமையிலான ரசிய சோஷலிச அரசு என்பதன் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

தோழர் ஞானவேல்ராஜா
தோழர் ஞானவேல்ராஜா

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் செயலர் தோழர். ஞானவேல் ராஜா அவர்கள், உழைத்து வாழக்கூடிய மக்களும் நாட்டை ஆள முடியும் என்பதை நிருபித்து கட்டிய நாள் நவம்பர் 7. பல்வேறு கண்டம் தாண்டி இருக்கும் ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசு நிறுவப்பட்டது.. இந்தியாவில் நாம் என்ன செய்ய போகிறோம்? மாற்றம் வேண்டும் நினைக்கிறோம். அதற்கு தடையாக இருப்பது இந்து மதம். ஏனென்றால், அது பிறப்பிலேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டில் மக்களை பிரித்து வைத்துள்ளது. இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் கூறி ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த அடிமை சங்கிலியை நம்மால் உடைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தில், நாம் பொதுவுடைமை வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோம். அனைவரையும் சமமாக கருதியது. அது தான் நமது திராவிட பண்பாடு. ஆரிய பார்ப்பன கூட்டம் வந்த பிறகு சதி, சூழ்ச்சியின் மூலம் நம்மை அடிமையாக்கினான். இந்த ஆரிய கூட்டத்தை எதிர்த்த நமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இன்றைய இளைஞர் சமூதாயம் ஆண்டராய்ட் போனில் சிக்கிக்கொண்டுள்ளனர். பார்ப்பனிய பண்பாடு நம்மை மாற்றியுள்ளது. மனிதனாக வாழ தகுதி இல்லாத சூழல் நம் நாட்டில் நிலவுகிறது. இந்த பார்ப்பன பண்பாட்டை வீழ்த்த இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் சுதேஷ்குமார்
தோழர் சுதேஷ்குமார்

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தமிழ்நாடு, தோழர். சுதேஷ்குமார் அவர்கள் பேசுகையில், “நமது ஆசான் லெனின் கூறுகிறார், தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளும் போது தான் நமது இலக்கை அடைய முடியும் “என்றார். அப்படி பல்வேறு தோல்விகளில் இருந்து தான் ரசியாவில் முதல் சோஷலிச நாடு அமைந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மாடமாளிகையில் நிலப்பிரபுக்கள், மன்னர்கள், முதலாளிகள் என்று சுகபோகமாக இருந்தனர். மற்றொருபுறம் ஏழைமக்கள் பசி, பட்டினி, கல்வி இல்லை,மருத்துவம் இல்லை, உணவு இல்லை ,உடை இல்லை. என்று கொடிய வறுமையில் திண்டாடியது. அந்த மக்களின் தேவை உணவோ, உடையோ இல்லை. விடுதலை. ரசிய பாட்டாளி மக்கள், லெனின் தலைமையில் தங்களை புரட்சியில் இணைத்துகொண்டனர்.

இதற்காக ரசிய மக்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். புரட்சி நடந்தேறியது. அன்று ரசியாவில் இருந்த அதே நிலைமை தான் இன்று இந்தியாவில் நிலவுகிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்ட விருபுகிறார் மோடி. கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக மிரட்டுகிறார். விளைச்சல் இல்லாததாள் விவசாயிகள் தொற்கொலை செய்து கொள்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் பூமி வறட்சி நிலமாக்கப்பட்டு .குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு நிலம் தாரை வார்க்கப்படுகிறது. கோவையில் நெசவுத் தொழில் அழிக்கப்பட்டு நெசவு தொழிலாளிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும், நாட்டு மக்களும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுகாலனியாக நடவடிக்கைக்கு தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இந்து பாசிசம் வெறிபிடித்து அலைகிறது. இந்த இருபெரும் கொடிய பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வர்க்கமாக ஒன்று திரள வேண்டும். உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புரட்சிகர அமைப்பில் கரம் கோர்க்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்தின் இடையிடையே மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர பாடல் பாடினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:

  • விவசாயிகள் விடுதலை முன்னணி,
  • புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
  • புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
  • விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி.

தொடர்புக்கு: 95977 89801.

நவம்பர்– 7 சிவப்பின் மலர்ச்சி நவம்பர் புரட்சி!

சிவப்பெனில்
உவப்பே!

கருவறை உயிரோட்டம்
தாய்மையின் சிவப்பு.
மழலையின் செவ்வாயில்
மொழியின் சிவப்பு.

சாதிகள் தரைமட்டம்
காதலின் சிவப்பு.
சங்கமிக்கும் பொதுஉணர்வில்
தோழமைச் சிவப்பு.

வைகறைச் சூரியன்
புத்துணர்ச்சியின் சிவப்பு.
வர்க்க உணர்வே
வாழ்வின் சிறப்பு!
வசந்தம் வேண்டுமா?
இசைந்திடு.. சிவப்பு!

சிவப்பு என்றால்
சிலருக்கு மட்டும் பிடிக்காது.

யார் அந்தச் சிலர்?

கந்து வட்டிக்காரன்
கள்ளச்சாராய பேர்வழி
கிரானைட் கொள்ளையன்
மணல் மாஃபியா

ரியல் எஸ்டேட் முதலை
சுரண்டும் பெருமுதலாளி
சொகுசு எழுத்தாளன்
ஆதிக்க சாதிவெறியன்
ரத்தம் குடிக்கும் மதவெறியன்…

இவர்களை
நமக்கு மட்டும்
பிடிக்குமா என்ன?

பின் எப்படி
நமக்கு பிடிக்காமல் போகும்
சிவப்பு!

அந்தச் சிவப்பின் உவப்பு
ரசியப் புரட்சி!

மனிதப் பரிணாமத்தின்
புதிய உணரச்சி.
மானுட அழகின்
படிமலர்ச்சி!

புதிய மனிதனின்
இதயம் பெற
பெருகுவோம்… சிவப்பு!

துரை. சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க