Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 533

ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

1
ø;

காவிரியை முடக்கும் கர்நாடகா
தீர்ப்பை அமுல்படுத்த வக்கற்ற மோடி அரசு
நடுநிலை நாடகம் ஆடும் உச்சநீதி மன்றம்!
என்ற தலைப்பில் பென்னாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை பாலைவனமாக்கும் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா தளமான ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பிரச்சாரத்தை மக்கள் வெகுவாக ஆதரித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு 13-09-2016 அன்று பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் சிவா
தோழர் சிவா

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பகுதி தோழர் சிவா தலைமை தாங்கினார். அவரது உரையில், “நதிநீரை இரு மாநிலங்களுக்கும் முறையாக பங்கிட்டு கொடுப்பதுதான் நியாயமானது. ஆனால் இந்த ஆட்சியாளர்களால் இதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் இந்த தண்ணீரை கர்நாடகாவில் பன்னாட்டு கம்பெனிகாரன் பாட்டில் போட்டு விற்கிறான். அதுமட்டுமல்ல தமிழகத்தை விவாசயத்தை அழித்து பாலைவனமாக்கி அங்கே குவிந்திருக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு விவசாயம் செய்தால் இவர்கள் கொள்ளையடிப்பதை தடுப்பார்கள். அதனால் விவசாயத்தை அழித்தால் தான் இத்திட்டத்தினை நிறைவேற்ற முடியும். அதற்கான சதித்திட்டம் தான் இப்பிரச்சினைக்கான காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இவர்களால் மீனவர் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை என்று எதையும் தீர்க்க முடியாமல் இருக்கிறார்கள். இதனால் இனியும் இவர்களை நம்பி நாம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே இருமாநில உழைக்கும் மக்களும் ஒண்றிணைந்து போராடுவதன் மூலம்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

அடுத்ததாக விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றினார். அவரது உரையில், “கடந்த ஒருவாரமாக மக்களை அடித்து துரத்துகிறார்கள், பொருட்களை அடித்து துவம்சம் செய்கிறார்கள். இதைப்பற்றி பல கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்ன? ஏன் இவர்களால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்? பா.ஜ.க தென்னகத்தில் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான ஒரு துருப்புச் சீட்டாக இப்பிரச்சினையை எடுத்துள்ளனர். ஓட்டு பொறுக்குவதை தவிர வேறு எதுவும் கிடையாது.

தோழர் கோபிநாத்
தோழர் கோபிநாத்

இன்றைக்கு கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக இந்த காங்கிரசு, பி.ஜே.பி இந்த இரண்டு கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆறு, குளம், நதி கூறுபோட்டு விற்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இம்மசோதா.

தேசியக் கட்சிகளான கம்யூனிஸ்ட்கள் உட்பட நதிநீர் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடு கொண்டதாகத்தான் இருக்கின்றன. எனவே தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சுத்தமான பொய். மாறாக, இரண்டு மாநில மக்களையும் மோதவிட்டு ரத்தம் குடிக்கிறார்கள். அதோடு இயற்கை வளம், காடுகளை அழித்து மழை வருவதை தடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மழை கொடுத்த கொடையையும் விற்கிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு இரண்டு மாநில மக்களையும் இணைக்கும் மாற்று மக்கள் அதிகாரமே, நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்து மக்களே கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் இனவெறியை தடுப்போம், இரண்டு மாநில மக்கள் இணைத்து இதனை சாதிப்போம்” என்று கூறினார்.

அடுத்தாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் உரையாற்றினார். அவரது உரையில், “கடந்த 5-ம் தேதி தமிழக அரசு 50 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. உச்ச நீதி மன்றம் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடுங்க என்று இடைக்கால தீர்ப்பு கொடுத்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரசு கட்சியை சேர்ந்த சீத்தாரமையா முதலமைச்சர் தலைமையிலான அரசு இதனை ஒத்துக்கொள்ள முடியாது என்று மனுபோட்டனர். இருப்பினும் நாள் ஒன்றுக்கு 12,000 கன அடி 20-ம் தேதி வரைக்கும் திறந்து விடவேண்டும் என்ற தீர்ப்பு வந்த உடன் அங்கே திட்டமிட்டு வன்முறை தமிழக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனை பி.ஜே.பி திட்டமிட்டு நடத்துகிறது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி இந்தத் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி கொண்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர்கள் தண்ணீரை தமிழகத்திற்கு விடக்கூடாது என்று பேசியிருக்கிறார்கள். பா.ஜ.க ஒரு தேசிய கட்சியாக இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று பேசினர்.

வழக்கறிஞர் ஜானகிராமன்
வழக்கறிஞர் ஜானகிராமன்

இங்கே அ.தி.மு.க காவிரி பிரச்சினையை ஓட்டுக்காகக் கூட கையிலெடுப்பதில்லை. ஏனென்றால் காசு கொடுத்தால் ஓட்டை வாங்கி விடலாம் என்று இதை கண்டுகொள்ளவில்லை. 2007 காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. தமிழகத்தின் பங்கு 58% கர்நாடகாவின் பங்கு 36%, கேரளா, பாண்டிச்சேரிக்கும் 6% என்று தீர்ப்பு வழங்கியது. நம்மமுடைய பங்கை பெற்றுத்தர தமிழக முதல்வர் சட்டப் போராட்டம் நடத்துகிறார் என்று ஊடகங்கள் பேசிகொண்டிருக்கின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைக்கும் 100 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் குறுவை சாகுபடிக்கு கொடுத்தது 35 டி.எம்.சி தண்ணீர்தான். மீதி 65 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அணையில் இருக்கும் 65 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு சொந்தமானது.

ஆனால் செயலலிதா 50 டி.எம்.சி தண்ணீருக்காகதான் மனு போடுகிறார். உச்சநீதிமன்றோ, தமிழக அரசோ, கர்நாடக அரசோ நமக்கு பிச்சை போடுவதில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மனு போட்டிருக்க வேண்டும். அதை அமல்படுத்தும் நீதிமன்றமும் இதனை அமல்படுத்துவதில்லை. இது நாட்டாமை தீரப்பா? இல்லையா? இங்க இருக்கும் கட்சிகள் நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லுங்க என்று கூறுவதற்கு கூட வக்கற்றுபோய் இருக்கின்றனர்.

கர்நாடகாவில் மாண்டியா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், தமிழகத்தில் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவை இரண்டும் ஒன்றுதான். எனவே இயற்கை வளங்களை, மணல், கல்வி, நிலக்கரி, பெட்ரோல், ரோடு எல்லாமே கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திறந்து விடப்படுகிறது. தனியாரிடம் இருக்கிறது. இப்படி கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் தீர்க்க வக்கற்று இந்த அரசு கட்டமைப்பும், நீதி மன்றம் தோல்வி அடைந்து விட்டது.

ø;
ø;

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை டாக்டர் பலாத்காரம் செய்கிறான். ஓடும் ரயிலில் இராணுவ வீரர் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொள்கிறான். சிவகங்கையில் காவல் துறையைச் சேர்ந்த கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். கங்குலி என்ற நீதிபதி தன்னுடன் பணியாற்றும் பெண்ணை படுக்கை அறைக்கு அழைக்கிறான். பெத்த குழந்தையை பாலியல் வல்லூறவு செய்கிறான் தந்தை. இதையெல்லாம் எப்படி ஈவு இரக்கமில்லாமல் செய்கிறார்களோ, அதே போலத்தான் காவிரி பிரச்சனையும். வேலியே பயிரை மேய்வது போல விவசாயிகள் யாரெல்லாம் நமக்கு நன்மை செய்வார்கள் என்று எண்ணி கொண்டு இருந்தார்களோ அவர்கள் தான் இன்றைக்கு துரோகம் செய்து கொண்டுயிருக்கிறார்கள். எனவே தோற்றுபோன நீதி மன்றமும், கட்சிகளும், கர்நாடகாவில் இருக்கும் இனவெறி பாசிஸ்ட்களும், இந்துமதவெறி பாசிஸ்ட்களும், யார் கல்பர்கியையும், பன்சாராவையும் கொலை செய்தார்களோ அவர்கள்தான் தமிழகத்தின் நலனை, சட்ட பூர்வ உரிமையை, சட்டபூர்வ பங்கை மறுக்கின்ற இந்தத் தருணத்தை ஜனநாயக பூர்வமாக தீர்க்க வேண்டுமென்றால், விவசாயிகளே தங்கள் நலன்களுக்காக மக்கள் மன்றங்களை கட்டியமைத்துக்கொண்டு போராடுவதன் மூலம் தான் நம்முடை பிரச்சினையை தீர்க்க முடியும். இதற்கு மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நூற்றுக்கணக்கான மக்கள் இறுதிவரை நின்று கவனித்து சென்றனர். பகுதி மக்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டமாக அமைந்தது.

தகவல்;
மக்கள் அதிகாரம்
தருமபுரி.
தொடர்புக்கு; 8148573417

காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

0

1. சிறுவாணி உரிமை காக்க கோவையில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவை மண்டல மக்கள் அதிகாரம் மக்களிடையே பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முதற்கட்டமாக கேரளாவின் அகழி-கூலிக்கெடவிலிருந்து சித்தூர் வழியில் அட்டப்பாடி-சோலையாறு வழியே, ஓடி வரும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே வெங்கமேட்டு பகுதியில் மக்கள் அதிகாரம் சமீபத்தில் களஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டுகளிலேயே மேற்கண்ட பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ஆற்றின் வலது புறத்திலுள்ள இயல்பான மலைப்பகுதிகளை சிதைத்து தடுப்புச் சுவராக்கி, இடது புறத்திலுள்ள கரையெங்கும் சிறுமலைகளை போன்று ஜல்லிகள், மணல் குவியல்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்கே பாலத்தின்மீதிருந்து நீரை உறிஞ்சி நிரப்பிக் கொண்டிருக்கும் டேங்கர் லாரிகள் என அணைக் கட்டுவதை சொல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கடந்த ஆண்டே அணைக் கட்டுமான பொருட்களுக்காக கட்டப்பட்ட பாழடைந்த குடோன்கள், அவற்றின் கட்டுமான இயந்திரங்களை காண முடிந்தது. சற்று தொலைவுகளில் உள்ள பகுதிவாழ் மக்களிடம், இதுபற்றி கேட்டபோது அங்குள்ள ஆற்றுப்படுகைகளில், “ஆடுமாடுகளை மேய்த்தும், மீன்பிடித்தும், வனப்பொருட்களை சேகரித்து வாழ்ந்து வருகின்றோம்’ ஆற்றின் குறுக்கே உள்ள வழித்தடங்களையும் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்” என்றனர்.

இங்கு அணை கட்டப்பட்டால் இந்த உரிமையெல்லாம் பறிபோகும் என்பதையோ, தடுப்பணைகளால், நீர் மற்றும் மின்சாரத்தை அங்கு வரப்போகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அது சார்ந்த உல்லாச சுற்றுலா கேளிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்ற விவரமோ அப்பழங்குடி மக்கள் அறிந்திருக்கவில்லை. மேலும் அங்கிருந்து ஓடிவரும் நீரை அணைகட்டி தடுப்பதால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு வாழ் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரங்களை இழந்து கொங்கு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும்.

siruvani-dam-pp-demoசிறுவாணி ஆற்றின் குறுக்கை அணைகட்டும் கேரள அரசை கண்டித்து

ஆர்ப்பாட்டம்

பாலைவனம் ஆகுது தமிழகம்!
செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு!
சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே,
விழித்தெழு, வீறுகொண்டு போராடு!

எனவே அங்கு கட்டப்படும் தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா எல்லையான அட்டபாடி- ஆணைகட்டி பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காவல்துறை அனுமதிமறுக்கவே ஞாயிறு காலை கோவை மண்டலம் முழுவதும் (கோவை,கோத்தகிரி,உடுமலை,கரூர்) ஆர்ப்பாட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, திட்டமிட்டபடி 11-09-2016 ஞாயிறுமாலை 4 மணிக்கு, மக்கள் அதிகார கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையில்  கணுவாய் தடாகம் வழியாக பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் அதிகார கொடிகள் பிடித்து, சீருடை அணிந்து சென்று கொண்டிருக்கும் போது மாங்கரை சோதனைச்சாவடி பகுதியிலேயே 50-க்கும் மேற்பட்ட காவலர்கள், அவர்களின் காவல் வாகனங்களை நிறுத்தி தடுத்தனர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனே தோழர்கள் “போலி தேசியம் பேசும் மோடி அரசு, போலி நாடகமாடும் மாநில அரசுகளை அம்பலப்டுத்தியும், இனவெறியை தூண்டும் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை அம்பலபடுத்தும் விதத்தில் விண் அதிரும்” முழக்கங்களோடு தடுப்பை மீறி முன்னேற முயற்சித்து கைது செய்யப்பட்டனர். இதனை காத்திருந்த செய்தி ஊடங்கங்கள் படம் பிடித்ததோடு நம்மிடம் செய்தி சேகரித்தனர். பிறகு அங்கிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள சின்னதடாகம் பகுதியிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, இரவு 7 மணிக்கு விடுவித்தது காவல்துறை.

ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நடத்தப்பட்ட பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் கோவை வட்டார மக்களிடையே தடுப்பணையின் ஆபத்தை வீச்சாக கொண்டு சென்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவை

2. காவிரி உரிமை காக்க சென்னையில் ஆர்ப்பாட்டம்

காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு !!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதிமன்றம்!!!

ஆர்ப்பாட்டம்

சென்னை – குமணன் சாவடி | 14.09.2016 | மாலை 4 மணி

காவிரி , பாலாறு, சிறுவாணி, பவானி முல்லைப்பெரியாறு…
எல்லா நீரோட்டங்களையும் தடுக்கிறது தேசிய நீரோட்டம்!

பாலைவனமாகிறது தமிழகம்!
செயலற்று முடங்கிவிட்டது ஜெ.அரசு !

சாராய போதை, போலீசு பயம், சினிமா மயக்கத்தில்
வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச்சமூகமே!

விழித்தெழு ! வீறுகொண்டு போராடு !

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !

9

செப்டம்பர் 16, 2016 தேதியிட்ட ஃபிரண்ட்லைன் இதழில் வெளியான நவீன அறிவியல் வரலாறு துறையில் பணியாற்றும் மீரா நந்தா எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு (சாய்வு எழுத்துக்கள் அனைத்தும் மூலக் கட்டுரையில் அழுத்தம் தரப்பட்டவை)

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

ன்றைய உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் நவீன உலகை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அறிவு பாரம்பரியம் எதுவென்றால், அது நவீன அறிவியல்தான். புராதன அரேபிய, இந்திய, சீன நாகரீகங்கள் அறிவியல் தேடல்களில் பங்களித்தன என்பதில் ஐயமில்லை என்றாலும், நவீன அறிவியலின் பிறப்புக்கு வழிவகுத்த புரட்சிகரமான மாற்றங்கள் 16-ம் நூற்றாண்டிலிருந்து, 17-ம் நூற்றாண்டு வரை மேற்குலகில் நிகழ்ந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. நவீன அறிவியலின் அனைத்தும் தழுவிய செயல்முறைகளும், கோட்பாடுகளும், அவற்றின் ஐரோப்பிய தாய் வீட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவின. அத்தகைய பரவல் பெரும்பாலும் காலனிய ஆதிக்கத்தின் உடன் இணைப்பாக நிகழ்ந்தது.

பிளிம்ப்டன் 322
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உள்ள பிளிம்ப்டன் சேகரிப்பில் உள்ள பிளிம்ப்டன் 322. பிதாகரஸ் மும்மைகளை கியூனிஃபார்ம் எண்குறியீடுகளில் காட்டுகிறது. கி.மு 1900-1600 காலகட்டத்திலானது.

நவீன அறிவியல் ஐரோப்பாவில் உதித்தது என்ற உண்மையும், அது மேற்கத்திய நாடுகளின் நாடு பிடித்தல்கள் மூலமாகத்தான் உலகின் பிற பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது என்ற உண்மையும் பெருமைமிக்க கிழக்கத்திய புராதன நாகரீகங்கள் அனைத்துக்கும் வெறுப்புணர்ச்சி எனும் அளவில் ஆழமான மன உளைச்சலை ஏற்படுத்தின. வேறு எந்த நாட்டையும் விட பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பெரும் சுமையை மிக நீண்ட காலம் சுமந்த இந்தியாவில் இந்த மன உளைச்சல் அதிக ஆழமாக உணரப்படுகிறது.

பிரச்சனை இதுதான். நவீன அறிவியலும், அது பிறப்பித்த எண்ணற்ற தொழில்நுட்பங்களும் இல்லாமல் வாழவும் நம்மால் முடியவில்லை, மிகச் செழுமையான, மிகத் திறன் வாய்ந்த இந்த அறிவுப் பாரம்பரியம், என்ன ஆனாலும், ஒரு “மிலேச்ச” பாரம்பரியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. யாருடைய நாகரீகத்தை நாம் எகத்தாளம் செய்கிறோமோ, அந்த மாட்டிறைச்சி உண்ணும், ஆச்சாரமில்லாத, ஆன்மீக மேன்மைகள் கொண்டிராத “பொருள்முதல்வாதிகள்” இயற்கை அறிவைப் பொறுத்தவரையில் நம்மில் தலைசிறந்தவர்களை தோற்கடித்து விட்டார்கள் என்பது நமக்கு எரிச்சலூட்டுகிறது. எனவே, அறிவியலுக்காக ஏங்கியபடி “அறிவியல் வல்லரசு” ஆவதில் பெருமளவு பணத்தை கொட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நவீன அறிவியலின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். அதன் “பொருள் முதல்வாதத்தை”, அதன் “எளிமைவாதத்தை”, “ஐரோப்பிய மையவாதத்தை” கண்டனம் செய்கிறோம். மேற்கத்திய உலகின் பொருள்முதல்வாத முன்துருத்திகளின் அறிவியல் நமக்கு தேவைப்படுகிறது, ஆனால் ஜகத்குரு அந்தஸ்து நமக்கே உரியது என்ற ஆன்மீக உயர்வு மனப்பான்மையையும் நம்மால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

தொடக்கம் முதலே இந்த ஆசையும், வயிற்றெரிச்சலும், உள்ளார்ந்த “ஆரிய” உயர்வு மனப்பான்மையும் கலந்த மரணக் கலவைதான் நவீன அறிவியல்-தொழில்நுட்பத்துடனான இந்திய உறவின் தன்மையாக உள்ளது. பங்கிம்சந்திர சட்டோபாத்யாயா, விவேகானந்தா, தயானந்த சரஸ்வதி, அன்னி பெசன்ட் (மற்றும் சக பிரம்மஞான சபையினர்), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.கோல்வால்கர், இன்னும் எண்ணற்ற பிற குருக்கள், தத்துவஞானிகள், பிரச்சாரகர்கள் என இந்து மறுமலர்ச்சி கால சிந்தனையாளர்களின் எந்த மகத்தான படைப்பையும் படித்துப் பார்த்தாலும், கொதிநிலைக்கு அருகிலான இந்த அறிவியல் வயிற்றெரிச்சலும், கர்வபங்கமும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை எதிர் கொள்ள முடியும்.

வேதங்கள் அறிவியலின் தாயாக

யேல் சேகரிப்பு
யேல் பல்கலைக் கழகத்தில் உள்ள பாபிலோன் சேகரிப்பு, கி.மு 1900 என மதிப்பிடப்பட்டது. கர்ணத்தின் மேலாக எழுதப்பட்டுள்ள 1 24 51 10 என்பது 1+24/60+51/3600+10/2160000 = 1.41421296 என்ற 2-ன் வர்க்க மூலத்துக்கு 9 தசம இடங்களுக்கு துல்லியமாக உள்ளது. கர்ணத்தின் நீளம் 2-ன் வர்க்க மூலத்தை 30-ஆல் பெருக்கிக் கிடைப்பது, 60-ஐ அடியாகக் கொண்ட எண்முறையில் அது 42 25 35 என்று எழுதப்படுகிறது. பாபிலோனியர்களுக்கு சதுரத்தின் கர்ணத்தின் நீளம் பக்க நீளத்தை விட 2-ன் வர்க்க மூலத்துக்கு சமம் என்பதை அறிந்திருந்தார்கள்.

“நவீன அறிவியலை வேதக் கட்டமைப்புக்குள் பொருத்துவதன்” மூலம் இந்துக்கள் அவர்களது தர்ம பாரம்பரியங்களின் “வேறுபாட்டை” (“மேன்மை” என்று புரிந்து கொள்ள வேண்டும்) நிலை நாட்ட வேண்டும் என்ற ராஜீவ் மல்கோத்ராவின் அறிவுறுத்தலில் இந்த வெறுப்புணர்ச்சியின் மிகச் சமீபத்திய வெளிப்பாடு காணக் கிடைக்கிறது. இந்த சாதனையை எப்படி செய்ய வேண்டுமாம்? நமது பண்டைய முனிவர்கள் “ரிஷி நிலையில்” பெற்றுக் கொண்ட “மனித மனத்தினாலோ, சூழ்நிலைகளினாலோ மாசுபடுத்தப்படாத அழிவற்ற, அறுதி உண்மை” யான வேத ஸ்ருதியின் ஒரு ஸ்மிரிதியாக (புலனறிவையும், தர்க்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட மனித கட்டமைப்பு) நவீன அறிவியலை கருத வேண்டும் என்று மல்ஹோத்ரா பரிந்துரைக்கிறார்.

அதாவது, நடைமுறையில், நவீன அறிவியல் கோட்பாடுகளை வேத வகைப்பாடுகளின் ஒரு உட்பிரிவாக மாற்ற வேண்டும். எனவே, உதாரணமாக,

  • ஒரு அமைப்பின் துல்லியமான, அளவிடக்கூடிய வேலை செய்யும் திறனான ஆற்றல் என்ற இயற்பியல் கோட்பாடு, நமது யோக முனிகள் அறிந்திருந்த “ஷக்தி” அல்லது “அறிவார்ந்த ஆற்றலின்” ஒரு உள் வகையாக பொருள்கூறப்பட வேண்டும்.காரணமும் விளைவும் பற்றி ஆய்வு செய்வதால் இயற்பியல் என்ற அறிவியல் பிரிவு மொத்தமும் கர்ம வினை கோட்பாட்டின் “அனுபவவாத” இனங்களாக ஆகி விடும்.டார்வின் கோட்பாடு யோக சூத்திரங்களில் கற்பிக்கப்படும் ஆன்மீக பரிணாம வளர்ச்சியின் வெறும் பொருளாயத வடிவமே

என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

பிதாகரஸ் தேற்றம்
“சௌ பெய்” (சுமார் கி.மு 1000-600)-ல் தரப்பட்டுள்ள பிதாகரஸ் தேற்றத்தின் பட வடிவிலான நிரூபணம்

இந்த வழியில் நாம் நவீன அறிவியலை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம், அதேநேரம் ஆசீர்வதிக்கப்பட்ட நமது ரிஷி அந்தஸ்தின் புனித ஒளியை தக்க வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அது மட்டுமில்லை, அறிவியல் அறிவு என்ற நதியை, வேதங்கள் என்ற கடலில் கலக்க வைத்து விட்டால், இந்து தேசியவாதிகளின் மிக விருப்பமான கனவு நிறைவேறி இந்தியா “ஜகத்குரு” என்ற அந்தஸ்தை அடைந்து விடும்.

உண்மையில், வேத உலகப் பார்வைக்கும், நவீன அறிவியலுக்கும் இடையே நேரடி ஒற்றுமை இருப்பதாகக் கூறிக் கொள்வது இந்து தேசியவாதிகளின் நிகழ்ச்சிநிரலில் ஆரம்ப முதலே இருந்த ஒன்று. அது நமது அறிவியல் வயிற்றெரிச்சலுக்கான மிகவும் புத்திசாலித்தனமான தீர்வு. நவீன அறிவியல் நமது ரிஷிகளுக்கு ஏற்கனவே, எப்போதும் தெரிந்திருந்த வேத ஆன்மீக அறிவியல் என்ற பெருங்கடலில் போய்ச் சேரும் ஒரு சாதாரண துணையாறு மட்டும்தான் என்றால், மேற்குலகுதான் வேதங்களை பார்த்து வயிற்றெரிச்சல் பட வேண்டும். இது காயமடைந்த நமது நாகரீக கர்வத்துக்கு தைலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அறிவியலை கொண்டு போய் வேதங்களுடன் ஒட்ட வைக்கும் உத்தி வேதங்களுக்கு ஒரு அறிவியல் பளபளப்பை பூசுகிறது. இருப்பினும், இறுதிக் கணக்கில், வேதங்கள்-அறிவியலின்-தாய் என்பது ஃப்ளோரிஸ் கோகன் என்ற அறிவியல் வரலாற்றியலாளரின் வார்த்தைகளில் “ஒரு மகத்தான முட்டுச் சந்து”தான். ஏனென்றால், ரிஷிகள் தவிர்த்த சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடிய முறைகள் மூலம் புதிய கேள்விகளை எழுப்பவோ, புதிய விடைகளை வழங்கவோ எந்தவித திறனும் அற்றது அது.

அறிவியலின் வரலாற்றை திரித்துப் புரட்டுதல்

நவீன அறிவியலை ஒரு ஸ்மிரிதியாக மாற்றி விடும் இந்த செயல்திட்டத்துக்கு உதவியாக இருப்பது அறிவியல் வரலாற்றில் பெரும் அளவிலான, திரும்பத் திரும்ப செய்யப்பட்டு வரும் புரட்டல்கள்தான். இந்தப் புரட்டல்கள் தரவுகளின் மட்டத்திலும் தரவுகளுக்கு பொருள் கூறும் மட்டத்திலும் நடகிறது. பிற சக நாகரீகங்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு பண்டைய இந்தியாதான் முதலில் சாதித்தது என்ற பெருமையை நிலைநாட்ட முயலும் போது அல்லது புராணங்களுக்கு அப்படியே நேரடி பொருள் கற்பிக்கும் போது உண்மைகள் திரித்துப் புரட்டப்படுகின்றன. குவாண்டம் இயற்பியல், கணினி அறிவியல், மரபணுவியல், நரம்பு அறிவியல் முதலான நவீனகால அறிவியலை நமது பழமையான கடந்த கால முனிவர்களுடையதும், தத்துவஞானிகளுடையதும் ஆன சிந்தனைகளாக காட்டுவதன் மூலம் மேலும் அடிமைப்படுத்தும் புரட்டல்கள் செய்யப்படுகின்றன. “வேத அறிவியல்” என்ற பெரும் மாளிகை அத்தகைய புரட்டல்களின் மீது கட்டப்பட்டுள்ளது.

கம்போடிய கல்வெட்டு
இந்த கம்போடிய கல்வெட்டில் “சக்கர சகாப்தம் தேய்பிறையின் 5-வது நாளில் 605-ம் ஆண்டை எட்டியது” என்று பழைய கீமரில் எழுதப்பட்டுள்ளது. (வலது பக்கம்) காட்டப்பட்டுள்ள புள்ளி மனிதன் அறிந்துள்ள சுழியின் மிகப் பழமையான வடிவம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரட்டல்கள் அனைத்தும் நரேந்திர மோடி அரசின் முதல் ஆண்டில் காட்சிக்கு விடப்பட்டன. இப்போது எண்ணற்ற மாநில கல்வித் துறைகளிலும், சிந்தனை குழாம்களிலும், இயக்கங்களிலும் அது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 2014-ல் நரேந்திர மோடி நிகழ்த்திய கர்ணன்-விநாயகர் உரையும், ஜனவரி 2015 மும்பை அறிவியல் மாநாட்டின் நிகழ்வுகளும் இப்போது எல்லோருக்கும் தெரிந்தவை. இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும் பெரிய பனிப்பாறையின் கண்ணுக்குத் தெரியக் கூடிய விளிம்பு மட்டும்தான் இந்த உயர் அதிகார நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகள் ஊடகங்களில் அவற்றுக்கான குறுகிய கால இழிபுகழை ஈட்டினாலும், நடைமுறையில் செய்யப்படும் புரட்டல்கள் அறிவியல் வரலாற்றாளர்களின் தீவிரமான சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த அரை உண்மைகளை பிரித்து ஆராய்ந்து, பிற பழங்கால நாகரீகங்களிலிருந்து கிடைத்திருக்கும் சான்றுகளின் ஒளியில் சோதிக்கப்படா விட்டால், அவை மீண்டும் மீண்டும் பரப்பப்படும்.

பின்வரும் பகுதியில் இந்திய அறிவியலின் வரலாறு குறித்த மூன்று செல்ல உரிமை பாராட்டல்கள், தரவுகளின் அடிப்படையில் தேசியவாத கற்பனைகளிலிருந்து பிரித்துப் பார்க்கும் வகையில் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த உரிமை பாராட்டல்களில் இரண்டு கணிதத்துடன் தொடர்புடையவை : பழங்கால இந்தியாவின் கயிறு இழுப்பவரும், பலிபீடம் அமைப்பவருமான பௌதாயனர் என்பவர்தான் பிதாகரஸ் கோட்பாட்டின் உண்மையான கண்டுபிடிப்பாளர் என்கிறது ஒன்று. இரண்டாவது, இந்தியாதான் “சூன்யம்” அல்லது சுழியின் பிறப்பிடம் என்ற மிகவும் கொண்டாடப்படும் “உண்மை”. மூன்றாவது உரிமை பாராட்டல் மரபணுவியல் தொடர்பானது; மரபுவழி பண்புகள் பற்றிய பண்டைய இந்தியாவின் புரிதல் தொடர்பானது. (இவற்றையும், தொடர்புடைய மற்ற உரிமை பாராட்டல்களையும் “காவியில் அறிவியல் – அறிவியல் வரலாறு பற்றி கேள்வி எழுப்பும் கட்டுரைகள்” என்ற புத்தகத்தில் நான் பரிசீலித்துள்ளேன். இங்கு தரப்படும் வாதங்களின் வரலாற்று மற்றும் தொழில்நுட்பப் பின்னணியை தெரிந்து கொள்ள அந்த புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்).

பிதாகரஸ் தேற்றம்

நவீன கால துருக்கியை அடுத்த ஒரு தீவில் சுமார் கி.பி 570-ல் பிறந்த சிந்தனையாளர்-கணிதவியலாளர் பிதாகரஸ் இந்தியாவில் பெருமளவு வசவுகளுக்கு ஆளாகிறார். அவரது பெயரிலான தேற்றத்தை அவர் கண்டுபிடித்ததாக தவறாகவும், நியாயமற்றும் உரிமை தரப்படும் ஒரு நபராக அவர் பார்க்கப்படுகிறார். அதை உண்மையில் கண்டுபிடித்தவர், ஒரு பூசாரியும் கைவினைஞரும் கி.மு 800 முதல் கி.மு 200க்குள்ளான காலத்தினதாக கருதப்படும் “பௌதாயன சுல்வசூத்ரங்களை” இயற்றியவருமான நம்ம நாட்டு பௌதாயனர்தானாம். பௌதாயனரின் படைப்பு பிதாகரசின் காலத்துக்கு முற்பட்டதாக இருப்பதால், பிதாகரஸ் இந்தியாவுக்கு வந்து அந்தத் தேற்றத்தை (கூடவே இந்து மறுபிறவிக் கோட்பாடு, சைவ உணவுக் கோட்பாட்டையும்) இந்து சாமியார்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே, பிதாகரஸ் தேற்றத்துக்கு “பௌதாயனர் தேற்றம்” என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது இந்து மையவாத வரலாற்றாசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை. பிதாகரஸ் தேற்றத்தை கண்டுபிடித்த பெருமை மட்டுமில்லை, அந்தத் தேற்றத்துக்கான நிரூபணத்தை முதன்முதலில் தந்தவரும், விகிதமுறா எண்களை முதலில் புரிந்து கொண்டவரும், 2-ன் வர்க்க மூலத்தை முதலில் கணக்கிட்டவரும் என இன்னும் பல பெருமைகள் பௌதாயனருக்கு உரியவை என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு வரலாற்று மாநாட்டில் உரையாற்றிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் இந்த உணர்வுக்குத்தான் உருக் கொடுத்தார்.

சதுர்பூஜா கோயில்
இந்தியாவில் சுழிக்கு முதல் ஆதாரம் கண்டறியப்பட்ட இடம் மத்திய பிரதேசத்திலுள்ள சதுர்பூஜா கோயில். இந்தக் கோயில் இப்போது இருக்கும் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை விடப் பழமையானது, 876-ம் ஆண்டிலானது என்று மதிபிடப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலில் இப்போது வழிபாட்டுத் தலமாக இல்லை.

பௌதாயனருக்கு முதலிடம் கொடுக்கும் மேலே சொன்ன அனைத்து உரிமை பாராட்டல்களும் பொய். இந்தியாவுக்கு அப்பால் பார்வையை செலுத்தி சுல்வசூத்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்டத்தில் மற்ற முக்கியமான நாகரீகங்களில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று பார்க்கும் போது இந்த உரிமை கோரல்கள் காற்றோடு கலந்து மறைந்து விடுகின்றன. பௌதாயனர் பிறப்பதற்கு குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியர்கள் செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான உறவை புரிந்து வைத்திருந்தனர். மெசபடோமியர்கள் (அவர்களது அண்டை பகுதியினரான எகிப்தியர்களும்) ஒவ்வொரு முறையும் யூப்ரடிஸ்-டைக்ரிஸ் , நைல் நதிகள் வெள்ளம் பெருக்கோடி ஏற்கனவே குறித்திருக்கின்ற நில எல்லைகளை அடித்துச் சென்ற பிறகு மீண்டும் எல்லைகளை குறிப்பதற்காக நிலங்களை அளந்தனர். எகிப்திய ஆதாரங்கள் இன்னும் பிற்பட்ட காலத்திற்கானவையாக கிடைத்தாலும், மெசபடோமியர்கள் பிதாகரஸ் தேற்றத்தை அறிந்திருந்தார்கள் என்பதற்கும், பிதாகரஸ் மும்மை எண்களை கணக்கிட்டிருந்தார்கள் என்பதற்கும், 2-ன் வர்க்க மூலத்தை கணக்கிட கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதற்கும் ஆன ஆதாரங்கள் கி.மு 1800 காலத்திலானவையாக மதிப்பிடப்பட்டுள்ள, பௌதாயனருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சுட்ட களிமண் பலகைகளில் கிடைக்கின்றன.

கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் பராமரிக்கப்படும் முறையே பிளிம்ப்டன் 322, ஒய்பிசி7289 என்ற இரண்டு களிமண் பலகைகள் கியூனிஃபார்ம் எழுத்துக்களின் உலகின் முன்னணி நிபுணரான ஆட்டோ நியூகெபௌவரால் 1940-களில் பொருள் கூறப்பட்டன. அவரும், அவரது சக ஆய்வாளர்களும், பிளிம்ப்டன் இப்போது நாம் பிதாகரஸ் மும்மை எண்கள் என்று அறிவதன் அட்டவணை என்று நிறுவினார்கள். யேல் பலகை, போற்றத்தக்க வகை துல்லியத்துடன் 2-ன் வர்க்க மூலத்துக்கான கணக்கீட்டை காட்டுகிறது. இந்தப் பலகைகள் மட்டுமே பௌதாயனரின் முதன்மை பற்றிய உரிமை பாராட்டல்களில் துளை போடுகின்றன.

மெசபடோமியாவிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவையும் தாண்டினால் சீனர்கள், கன்ஃபூசியஸின் காலத்திலோ (சுமார் கி.மு 600) அதற்கு முன்னரே கூட இந்தத் தேற்றத்தை புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் அதற்கான நிரூபணத்தையும் கொடுத்திருந்தனர். இதற்கான சீன ஆதாரம் கி.மு 1100-க்கும் கி.மு 600-க்கும் இடைப்பட்ட காலத்தினதாக மதிப்பிடப்பட்டுள்ள “சௌ பெய் சுவான் சிங்” (“காலக் காட்டி மற்றும் வானத்தின் வட்ட பாதைகளுக்கான எண்ணியல் செந்நூல்”) என்ற நூலில் கிடைக்கிறது. பிற்காலத்தில் ஹான் பேரரசு காலத்திய (கி.பி 3-ம் நூற்றாண்டு) கணித நூல்கள், இந்தத் தேற்றத்தை முறைப்படுத்தி கௌ-கு கோட்பாடு என்று பெயர் சூட்டின.

சதுர்பூஜா பதிவு
எண் 270 மையத்தில் தென்பதும் சதுர்பூஜா கோயிலில் காணப்பட்ட இந்தப் பதிவில்தான் இந்தியாவில் “0”-வுக்கான முதல் தடயம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சீனர்களின் சாதனை, நிரூபணம் பற்றிய பிரச்சனையை நம் முன் எழுப்புகிறது. பலிபீடங்களை அமைப்பதற்கான கையேடான சுல்வசூத்திரங்கள் அனைத்து வகையான சிக்கலான வடிவகணித உருவங்களுக்கும் அவற்றின் உருமாற்றங்களுக்குமான மேம்பட்ட, புலமை வாய்ந்த உத்திகளை வழங்குகின்றன. ஆனால், இந்த வடிவகணித விதிகளை நிரூபிக்கவோ, நியாயப்படுத்தவோ அவை முயற்சிக்கவில்லை. மெசபடோமியர்களும், எகிப்தியர்களும் கூட நிரூபணத்துக்கான எந்த தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை.

அப்படியானால், பிதாரகஸ் தேற்றத்தின் முதல் நிரூபணம் எங்கிருந்து வந்தது? பிதாகரஸே அனைத்து வகையான செங்கோண முக்கோணங்களுக்கான பொதுவான நிரூபணத்தை வழங்கினாரா என்பது குறித்து தெளிவில்லை. கிரேக்க மரபில் இதற்கான முதல் தெளிவான நிரூபணம் பிதாகரசுக்கு 3 முழு நூற்றாண்டுகளுக்கு பிறகு வாழ்ந்த யூக்ளிட் இடமிருந்து கிடைக்கிறது. அனைத்து ஆதாரங்களும் பிதாகரஸ் தேற்றத்தின் முதல் நிரூபணமாக மேலே சொல்லப்பட்ட சீன நூலை சுட்டுகின்றன. அது யூக்ளிடுக்கு குறைந்தது 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. யூக்ளிடின் தர்க்கபூர்வமாக வந்தடையும் முறைக்கு மாறாக நிரூபணம் குறித்த சீன சிந்தனை, பொதுக் கோட்பாட்டை புரிந்து கொள்வதாக அமையும் ஒரு காட்சிப் படிவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தேற்றத்தின் முதல் இந்திய நிரூபணம் 12-ம் நூற்றாண்டில் பாஸ்கராவிடம்தான் காணப்படுகிறது. சீன அறிவியலின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜோசப் நீதாம் மற்றும் பலர் சுட்டிக் காட்டுவது போல, பாஸ்கராவின் நிரூபணம் சௌ பெய்-ல் தரப்பட்டுள்ள சீன சுவான்-து வரைபடத்தின் “நேரடி மறுபிரதி”யே.

இது அனைத்திலும் பிதாகரஸின் பங்கு என்ன? அவரது புகழுக்குக் காரணமான இந்தத் தேற்றத்தை, சிறு வயதில் சிறிது காலம் எகிப்தியர்கள் மத்தியிலும் மெசபடோமியர்கள் மத்தியிலிருந்தும் செலவிட்டபோது அவர் கற்றுக் கொண்டார் என்பதை கிரேக்க மரபு அங்கீகரிக்கிறது. அவரது கணிதவியல் சிந்தனைக்கு இந்தத் தேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்டத்தின் அடிப்படை நிதர்சனத்தை எண்கள் மற்றும் அவற்றின் விகிதங்களாக புரிந்து கொள்ள முடியும் என்ற அவரது உலகப் பார்வையை விகிதமுறா எண்களின் கண்டுபிடிப்புக்கு இட்டுச் சென்ற இந்தத் தேற்றம் கேள்விக்குள்ளாக்கியது. அறிவியலின் வரலாற்றில் பிதாகரஸின் மகத்தான முக்கியத்துவம் அவரது பெயரைக் கொண்ட தேற்றத்தின் அடிப்படையிலானது அல்ல, மாறாக, இயற்கையை கணிதவியல் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்ற முக்கியமான சிந்தனையின் அடிப்படையிலானது. இந்த புரிதல்தான் யோகான் கெப்ளர், கலிலியோ கலிலி போன்ற நவீன அறிவியலின் முன்னோடிகளின் முன்முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இயற்கையை கணிதமயமாக்குதல் துல்லியமான, அளவுவகைப்பட்ட அளவீடுகள் அடிப்படையிலான பரிசோதனைகளுடன் இணைக்கப்படும் போது, நவீன அறிவியல் என்ற தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக உருவெடுத்தது.

சுழியும் இந்திய மையவாதமும்

இந்தியா, அதாவது பாரதம், உலகுக்கு சுழியை வழங்கியது என்பது இந்து அறிவியல்களின் புனிதப் பசுவாக உள்ளது. நமது பங்களிப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால், உலகம் எண்ணுவதற்குக் கூட அறிந்திருக்காது, உயர் கணிதவியல் கிட்டத்தட்ட சாத்தியமற்று போயிருக்கும், தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடந்திருக்காது என்ற நம்பிக்கையில் பல தலைமுறை இந்தியர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

கலிலியோ கலிலி
கலிலியோ கலிலி – 17-ம் நூற்றாண்டு வானவியலாளர்

சுழி என்ற எண் இந்தியப் படைப்பு என்பது உண்மையிலேயே நிஜம்தானா? சுழி என்பது வேறு எங்கிருந்தும் எந்தத் தாக்கமும் இல்லாமல் இந்து மனதில் குறையின்றி பரிசுத்தமாக தோன்றியதா?

இந்திய அறிவியல் வரலாற்றியலாளர்களின் இயல்பான இந்திய மையவாதத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே இந்தக் கற்பனையை நாம் தொடர்ந்து பராமரிக்க முடியும். “கிரேக்க அற்புதம்”தான் அனைத்து அறிவியல்களின் முதன்மை தோற்றுவாய் என்று கருதும் ஐரோப்பிய மையவாதத்தின் பிரதி பிம்பமான இந்திய மையவாதம், புராதன செவ்வியல் (அதாவது இஸ்லாமியர்களுக்கு முந்தைய) இந்தியா எப்போதுமே வழங்குவதாக இருந்ததாகவும், மற்ற நாகரீகங்கள் ஆர்வத்துடனும் நன்றியுணர்வுடனும் பெற்றுக் கொண்டவையாக இருந்ததாகவும் நம்புகிறது. ஒப்பிடக் கூடிய சம காலகட்டத்தில் இந்தியாவிலும் வேறு ஒரு இடத்திலும் ஒரு கருத்து காணக் கிடைத்தால், நமது இந்திய மையவாத வரலாற்றாசிரியர்கள் அது இந்தியாவிலிருந்துதான் அங்கு போயிருக்க வேண்டும், அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க முடியாது என்று எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த இந்திய மையவாதம்தான் தசம இட மதிப்புகளுடன் சுழி மதிப்பை வெற்றிடமாக குறித்த சீனாவின் கழி எண்கள் தென்கிழக்காசியா வழியாக கடத்தப்பட்டிருப்பதன் சாத்தியங்களை காண்பதிலிருந்து இந்திய வரலாற்றாசிரியர்களை தடுக்கிறது. சீனாவிலிருந்து தென் கிழக்காசியா வழியாக சுழி கடத்தப்பட்டிருப்பதன் சாத்தியங்களை நீதாம் அவரது “சீனாவில் அறிவியலும் நாகரீகமும்” என்ற நூலின் மூன்றாம் பகுதியில் வாதிடுகிறார். இதற்கு மிக நெருக்கமான ஒரு சாத்தியப்பாட்டை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற கணிதவியல் வரலாற்றறிஞர் லாம் லே யோங் சமீபத்தில் முன்வைத்திருக்கிறார். மிகக் கவனமாக வாதிடப்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த சாத்தியப்பாடு உலகெங்கிலும் உள்ள தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஏற்பைப் பெறுவதோடு, கணிதத்தின் வரலாறு பற்றிய முக்கியமான பாடநூல்களிலும் இடம் பெறுகிறது. இந்தியாவில், இது காதடைக்கும் மௌனத்தைத்தான் எதிர் கொண்டிருக்கிறது.

இட மதிப்பு இல்லாமை

யோகானஸ் கெப்ளர்
யோகானஸ் கெப்ளர் (17-ம் நூற்றாண்டு ஜெர்மன் கணிதவியலாளரும், வானவியலாளரும்

சுழியின் இந்தியத் தோற்றம் பற்றிய வழக்கமான விளக்கங்கள் இரண்டு அசௌகரியமான ஆனால் மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை பூசி மெழுகிச் செல்கின்றன. அவை கி.பி 6-ம் நூற்றாண்டு வரையில் இந்திய எண் முறையில் இட மதிப்பு என்ற கோட்பாடு இல்லை, இரண்டாவதாக சுழிக்கான முதல் நடைமுறை ஆதாரங்கள் இந்தியாவில் இல்லாமல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள தென் கிழக்காசிய நாடுகளில் கிடைத்திருக்கின்றன என்ற இந்த இரண்டு உண்மைகளையும் மேலும் கவனமாகவும், திறந்த மனதுடனும் நாம் பரிசீலிப்போம்.

“இட மதிப்பு” என்றால் ஒரு எண்ணில் அது வகிக்கும் இடத்தைப் பொறுத்து எண்குறியீட்டின் மதிப்பு மாறுகிறது என்று பொருள்படுகிறது. இந்த (தசம இடமதிப்பு) முறையில், ஒரு எண் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், 9 எண்குறியீடுகளாலும், சுழிக்கான ஒரு குறியீட்டாலும் எழுதப்பட்டு விடலாம். பருண்மையான சின்னங்களை – உதாரணமாக 2-க்கான சின்னமாக கண்கள், 3-க்கான சின்னமாக நெருப்பு (மூன்று சடங்குக்கான நெருப்புகள்), 6-க்கான சின்னமாக உறுப்பு (வேதங்களின் ஆறு உறுப்புகள்) முதலியனவற்றை – பயன்படுத்தும் பூத சங்க்யா முறையிலான எண் முறையில் இட மதிப்புக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த எண் சின்னங்கள் பயன்படுத்தப்படும் வரிசை அவற்றின் மதிப்பை தீர்மானிக்கிறது என்ற வகையில் இட மதிப்புக்கான ஆதாரமாக அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த முறை கி.பி 3-ம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டில் இருந்து, 14-ம் நூற்றாண்டு வரையிலான செவ்வியல் சகாப்தத்தில் வானவியலாளர்களாலும், கணிதவியலாளர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூத சங்க்யா பாட்டு வடிவமாக்கவும், மனப்பாடம் செய்யவும் உகந்ததாக இருந்தாலும், கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கவில்லை. கணக்கிடுவதற்கு தேவை எண்குறியீடுகள், சின்னங்கள் அல்ல.

துணைக்கண்டத்தில் பிராமி எண்குறியீடுகள் தோன்றி சுமார் 900 ஆண்டுகள் வரை இந்திய எண்குறியீடுகளில் இடமதிப்பு குறித்த எந்த அடையாளங்களும் தென்படவில்லை. பிராமி எண்குறியீடுகள் அசோகரின் காலத்திற்கு (சுமார் கி.மு 300) அருகில் முதன்முதலில் தென்படுகின்றன அவை படிப்படியாக குப்தர்கள் காலத்தின் இறுதியில் (கி.பி 550) தேவநாகரி எண்குறியீடுகளாக உருப்பெறுகின்றன. புகழ்பெற்ற நானாகாட் குகை பதிவுகள் உட்பட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிராமி பதிவேடுகள் எதிலும் இட மதிப்புக்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. திடீரென்று குப்தர் காலத்தின் பிற்பகுதியில் (பெரும்பகுதி பின்னர் போலி என்று நிரூபிக்கப்பட்ட நிலம் வழங்குவதற்கான தாமிர பட்டயங்களில்) இடமதிப்பு பற்றிய குறிப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன, அதைத் தொடர்ந்து உடனடியாக வெற்றிடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் “சூன்ய பிந்து” அல்லது “சுழி பொட்டு” தோன்றுகிறது. இன்று நாம் அறிந்திருப்பது போன்ற வடிவில் சுழியின் முதல் பதிவு செய்யப்பட்ட ஆதாரம் 876-ம் ஆண்டிலானது என்று மதிப்பிடப்பட்ட குவாலியர் அருகில் உள்ள ஒரு கோயிலில் கிடைக்கிறது (இது குறித்து மேலும் கீழே).

900 ஆண்டுகளாக இடமதிப்பு இல்லாமல் இருப்பது முக்கியமானது, ஏனெனில் எண்களை எழுதுவதற்கான இடமதிப்பு முறை ஏற்கனவே இல்லாமல், சுழிக்கான எண்குறியீடு தோன்றியிருக்க முடியாது. இட மதிப்பு முறையில்தான் எந்த எண்ணும் இல்லாததை குறிக்க ஒரு குறியீடு தேவைப்படுகிறது. (உதாரணமாக, வெற்று இடங்களை சுட்டுவதற்கான சொல்லை பயன்படுத்தாமலே 2004 என்ற எண்ணை சொற்களில் கூறுவது சாத்தியமாகும், ஆனால் 2-க்கும் 4-க்கும் இடையே எதுவும் இல்லை என்பதை குறிக்காமல் அதை எண்குறியீடுகளால் எழுதுவது சாத்தியமில்லை. அப்படி எழுதும்போது சுழி என்ற எண்குறியீடு இல்லாமல், 2004க்கும் 24-க்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாது).

நவீன “இந்து-அரேபிய” முறையிலான குறியீட்டு முறைக்கு கோட்பாட்டு ரீதியில் ஒத்த இடமதிப்புடன் கூடிய முதல் தசம முறை முதல் முதலில் கி.மு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது. இந்த முறை சாதாரண மக்கள் தினசரி வாழ்க்கையில் கணக்கிடும் நடைமுறை வழக்கத்திலிருந்து தோன்றி மேலே அரசு அதிகாரிகள், வானவியல் அறிஞர்கள், துறவிகள் என சமூகத்தின் அனைத்து பிரிவினர் மத்தியிலும் பரவியது. அது சுமார் 14 மி.மீ நீளத்திலான சிறு குச்சிகளாலான கணக்கிடும் கம்பிகளை பயன்படுத்தியது. ஏதாவது ஒரு சமதளத்திலும் வரையப்பட்ட நெடுங்கோடுகளில் கம்பிகள் நகர்த்தப்பட்டன. வலமிருந்து இடமாக ஒவ்வொரு நெடுங்கோடும் 10-ன் அடுத்தடுத்த வர்க்கத்தை குறித்தது. 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்குறியீடுக்கும் கம்பிகளின் குறிப்பிட்ட வடிவமைப்பு தரப்பட்டிருந்தது. 10-க்கு அதிகமான எண்கள் கழிகளை இடது நெடுங்கோட்டுக்கு நகர்த்துவதன் மூலம் குறிக்கப்பட்டன. கழிகளின் திசை நெடுந் திசைக்கும், குறுக்கு திசைக்கும் என மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் எண்களை வாசிப்பது எளிதாக்கப்பட்டிருந்தது. நாம் “சூன்ய” அல்லது சுழி என்று அழைக்கும் எண் “காங்” என்று பெயரிடப்பட்டு ஒரு வெற்று நெடுங்கோட்டால் குறிக்கப்பட்டது. சீன கணிதவியலாளர்கள் படிப்படியாக இன்று நாம் அல்ஜீப்ரா சமன்பாடுகள் என்று புரிந்துகொள்பவற்றுக்கு தீர்வு காண இந்த கழி முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர். கணக்கிடுவதற்கான இந்த முறை 12-ம் நூற்றாண்டில் அபாகஸ் முறையால் பதிலீடு செய்யப்படுவது வரை பயன்பாட்டில் நீடித்தது.

இந்தியாவில் சுழியின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள சீன கழி எண்குறியீடுகள் ஏன் முக்கியமானவை என்பது விரைவில் தெளிவாகும். ஆனால், கி.மு 1-ம் நூற்றாண்டு முதலே நாம் விரிவான தொடர்புகள் வைத்திருந்த ஒரு அண்டை நாட்டில், இடமதிப்புடன் எந்த எண்ணும் இல்லாததை குறிக்க வெற்று இடங்களை பயன்படுத்திய ஒரு முழுமையான தசம முறை பயன்பாட்டில் இருந்தது என்பதை அங்கீகரிப்பது முக்கியமானது. தேவநாகரி எண்குறியீடுகளில் 900 ஆண்டுகள் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து ஒப்பீட்டளவில் திடீரென்று தசம இட மதிப்பு தோன்றியதற்கு நமது அண்டை நாகரீகத்துடனான தொடர்பு காரணம் என்பது சாத்தியங்களின் வரம்புக்கு உட்பட்டதுதான்.

சுழிக்கான பௌதீக தடயம்

இன்று நாம் அறிந்திருப்பது போன்ற சுழியின் முதல் பௌதீக தடயம் இந்தியாவில் கிடைக்கவில்லை, கம்போடியாவில் கிடைத்தது என்ற இரண்டாவது அசௌகரியமான உண்மைக்கு இப்போது நாம் திரும்புவோம். கம்போடிய தடயம், “சக்ர சகாப்தம் தேய்பிறையின் 5-வது நாளில் 605-வது ஆண்டை எட்டியது” என்ற பதிவுடன் கூடிய கல் தூணிலிருந்து கிடைத்திருக்கிறது. 605-ல் “0” ஒரு புள்ளியால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு 683 ஆண்டிலானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (இந்தப் பதிவுடன் கூடிய தூண் கேமர் ரூஜ் ஆட்சியின் கீழ் தொலைந்து போய் 2013-ல் அமீர் ஏசல் என்ற அமெரிக்க-இஸ்ரேலிய கணிதவியலாளரால் மீள்-கண்டுபிடிக்கப்பட்டது). அதே போன்று சுழியின் இடத்தில் ஒரு புள்ளியை வைத்திருக்கும் பதிவேடுகள் சுமத்ரா, பங்கா தீவுகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கம்போடிய தூணுக்கு சமகாலத்தினதாக மதிப்பிடப்படும் பதிவுகளில் கிடைத்திருக்கின்றன.

இந்தியாவில் சுழிக்கான முதல் பௌதீக தடயம் குவாலியருக்கு அருகில் விஷ்ணுவுக்கு கட்டப்பட்டுள்ள ஒரு சாதர்பூஜா கற்கோயிலில் கண்டறியப்பட்டது. கோயிலின் சுவரில் மீதான பதிவேடு கோயிலுக்கு தானம் செய்யப்பட்ட 270 x 187 ஹஸ்தம் நிலம் பற்றி கூறுவதுடன், கடவுளுக்கு தினமும் 50 மாலைகள் வழங்குவதாக உறுதியளிக்கிறது. எண்கள் நாகரி எழுத்தில் எழுதப்பட்டு, வெற்று இடங்களை குறிக்க சிறிய வெற்று வட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பதிவேடு 876-ம் ஆண்டிலானதாக, கம்போடிய பதிவேட்டுக்கு முழுதாக 2 நூற்றாண்டுக்கு பிந்தையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா சுழியின் பிறப்பிடம் என்றால் சுழிக்கான ஆதாரம் இந்தியாவுக்கு முன்னதாக தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தென் கிழக்கத்திய சுழிகள் இந்தியாவின் தாக்கத்தினால் தோன்றியவை என்று வைத்துக் கொண்டால் கூட அவை ஏன் காலத்தால் முந்தையதாக உள்ளன?

ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் நீதாமால் முன் வைக்கப்பபட்டு லாம் லே யோங் ஆல் உறுதி செய்யப்படுகிறது. தென்கிழக்காசியாவில்தான் “இந்திய கலாச்சாரத்தின் கிழக்கத்திய மண்டலமும், சீன கலாச்சாரத்தின் தெற்கத்திய மண்டலமும் சந்தித்தன” என்கிறார் நீதாம். ஏராளமான வணிகர்கள், அரசு அதிகாரிகள், படைவீரர்கள், புத்த மத பயணிகள், பிட்சுக்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இந்த கலாச்சார தொடர்பு மண்டலம் வழியாக பயணித்திருப்பார்கள். அவர்கள் சீன எண்ணும் கழிகளையும், எண்ணும் பலகைகளையும் – இரண்டுமே கையில் கொண்டு செல்ல வசதியாவை – எடுத்து வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட இந்த எல்லை மண்டலத்தின் குடிமக்கள் அவர்களிடம் ஏற்கனவே வழக்கத்திலிருந்த எண் குறியீடுகளை கணக்கிடும் கழிகளின் தர்க்கத்துடன் இணைத்திருப்பார்கள் என்பது நடந்திருக்கக் கூடியதே. அது இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும், சீன கணக்கிடும் பலகைகளின் வெற்றிடங்கள் ஒரு புள்ளியிலிருந்து வெற்று வட்டமாக மாறி இன்று நமக்கு பழக்கமான சுழியாக ஆகியிருக்கும். “சுழி மதிப்புக்கான எழுத்து சின்னம் ஹான் எண்ணும் பலகைகளின் வெற்றிடத்தின் மீது போடப்பட்ட இந்திய மாலை” என்கிறார் நீதாம். வேறு வகையில் சொல்வதானால், தசம இடத்துக்கும் வெற்று இடத்துக்குமான கோட்பாட்டு அடிப்படை சீனாவில் தோன்றியது; அந்தக் கோட்பாட்டுக்கு இன்று நாம் சுழி என்று அறியும் சின்னத்தை இந்தியா வழங்கியது.

நமது மிகவும் போற்றப்படும் சாதனைகளில் ஒன்றை, நமது மிக மதிக்கப்படும் புகழுக்கான உரிமையை கேள்விக்குள்ளாக்குவதால் இந்த விளக்கம் இந்திய உணர்ச்சிகளை கிளறி விடப் போகிறது. இந்திய ஆதாரங்களில் உள்ள இடைவெளிகளுக்கான விளக்கம் அளிப்பதற்கான மிகவும் பொருத்தமான கோட்பாடு இதுதான். இதை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு மேலும் ஆய்வு செய்வதிலிருந்து நமது இந்தியமையவாதம்தான் தடுத்து நிறுத்துகிறது.

புராணங்களையும் வரலாற்றையும் கலந்து குழப்புதல்

கிரிகோர் மெண்டல்
மரபணுவியலை உருவாக்கிய கிரிகோர் மெண்டல்

அறிவியலின் வரலாற்றை திரித்து புரட்டுவதான மூன்றாவது மற்றும் இறுதி வழக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகள் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு இன்று தெரிந்திருப்பவற்றை இன்னொரு சகாப்தத்த்தைச் சேர்ந்த உரைகளிலும் அறிவியல்களிலும் பொருத்த முயற்சிப்பதன் மூலம் நடைபெறும் திரித்துப் புரட்டல் வகை மாதிரிகளை அது உருவகப்படுத்துகிறது.

நரேந்திர மோடியின் கர்ணன்-விநாயகர் உரையின் உள்ளடக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. மகாபாரதத்தின் கர்ணனை ஒரு செயற்கைக் கருத்தரிப்பு குழந்தையாக மாற்றிய அவர், “அதன் பொருள் அன்றைக்கே மரபணுவியல் இருந்திருக்கிறது” என்றார். விநாயகரின் யானைத் தலை “அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வல்லுநர் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம்” – அத்தகைய வல்லுனர் இரு உயிரினங்களுக்கிடையே தலை மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா அரசியல்வாதிகளும் ஏதோ ஒரு சமயத்தில் அடித்து விடும் வெற்று வாய்வீச்சுக்களில் ஒன்றாக இந்த உரையை தாண்டிச் சென்று விடலாம். ஆனால், மோடி ஒரு வாழ்நாள் சுயம் சேவக் – புராணக் கதைகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் இடையே எந்த எல்லையையும் மதிக்காத ஷாகா கலாச்சாரத்தின் ஒரு உருவாக்கம். ஷாகா விளக்கங்கள், தற்காலத்திய கருத்துக்கள், குறிக்கோள்கள், ஊக்குவிப்புகள், ஆசைகளை கடந்த காலத்திற்கு கடத்திச் செல்லும் காலப் பிறழ்வுகளால் நிரம்பியவை. இத்தகைய “வரலாறு” இரட்டை சிந்தனையையை தோற்றுவித்து, மகத்தான கடந்தகாலம் பற்றிய பதிவுகளை உருவாக்குவதால் முழுப் பொய்களை விட இன்னும் அபாயகரமானது என்கிறார் எரிக் ஹாப்ஸ்வாம். அறிவியலுக்கு பொருத்தப்படும் போது அது கடந்த காலங்களின் அறிவியலை இன்று நமக்கு தெரிந்திருப்பதன் முன் அறிவிப்புகளாக, முன்னோடிகளாக மாற்றுகிறது.

“[மகாபாரத காலத்தில்] மரபணுவியல் இருந்திருக்க வேண்டும்” என்ற மோடியின் கூற்றை எடுத்துக் கொள்வோம். இது ஏதோ அரசியல்வாதியின் வெற்று வாய்வீச்சு மட்டுமல்ல. இது இந்தியாவில் சாதீய பழக்கங்களை பிறப்பு அடிப்படையில் நியாயப்படுத்தும் நீண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தது. வர்ண கட்டுமானத்திற்கான அத்தகைய சித்தாந்த ஆதரவு, பின்னர் நாஜி கொடூரங்கள் பிறப்பு அடிப்படையிலான “அறிவியலை” இழிவுபடுத்தியது வரை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியர்கள் மத்தியில் (கற்றறிந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உட்பட) பரவலாக இருந்தது. நமது சம காலத்தில் கூட சக கோத்ர திருமணங்களுக்கு எதிரான காப் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த மரபியல் தர்க்கங்கள் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய “மரபணுவியல்” போர்வை அளிப்பது மத மூடநம்பிக்கைகள், பொருளாதார நலன்கள், சாதி, பாலின பாகுபாடுகளின் அடிப்படையிலான ஒடுக்குமுறை பழக்கங்களுக்கு பகுத்தறிவு அடிப்படையை கொடுப்பதாக முடிகிறது.

மரபணு (ஜீன்) கண்டுபிடிப்பதற்கு முன்பு “மரபணுவியல்” இருந்திருக்க முடியாது என்பது தெளிவு. கிரிகோர் மண்டலின் (1822-1884) பணி 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறு ஆய்வு செய்யப்படுவது வரை மரபு வழி பண்புகளுக்கான உறைவிடமான தனித்த ஒரு அலகு மரபணு என்பது அறியப்பட்டிருக்கவில்லை.

மகத்தான சார்லஸ் டார்வின் (1809-1882) கூட எல்லா செல்களாலும் ரத்தத்தில் உதிர்க்கப்படும் “ஜெம்யூல்கள்” எனப்படும் துகள்களின் கலவையின் மூலம் மரபுவழி பண்புகள் கடத்தப்படுகின்றன என்று கருதினார். பின்னர் ஹூயுகோ டி விரைஸ் மற்றும் பிறரால் உறுதி செய்யப்பட்ட மெண்டலின் களைப்பற்ற, பொறுமையான பணி, ஒன்றுடன் ஒன்று கலக்காத தனித்த மரபு அலகுகள் குறித்த கருத்தை தோற்றுவித்தது. இந்த மரபு அலகுகள் குரோமோசோமில் உட்கார்ந்திருக்கின்றன என்பதும், குரோமோசோம்கள் என்பவை இரட்டைச் சுழல்வட்ட டி.என்.ஏ (டி-ஆக்ஸி-ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்பதும் 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.

கறாராகச் சொல்ல வேண்டுமானால், மரபணுக்கள் என்ற கருத்தாக்கத்துக்கு முன்பு “மரபணுவியல்” உலகில் எங்குமே இருந்திருக்க முடியாது. அதனால், மரபுவழி பண்புகள் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று பொருள் இல்லை. எல்லா நாகரீகங்களையும் போலவே பண்டைய இந்தியர்களும் மரபுவழி பண்புகள் பற்றி சிந்தித்திருக்கின்றனர். அந்த சகாப்தத்தின் நிலைமைகளில் அவர்களது மிக “அறிவியல் பூர்வமான” கோட்பாடு ஆயுர்வேதத்தை உருவாக்கிய நூலான சரக சம்ஹிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரக சம்ஹிதையின்படி, எந்த ஒரு உயிருள்ள பிறவியின் உருவாக்கமும் இரண்டு பங்களிப்பாளர்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; தாய், தந்தை, தனது முந்தைய ஸ்தூல சரீரத்தின் மரணத்துக்குப் பிறகு சூக்கும சரீரத்தில் வசிக்கும் ஒரு ஆத்மா என மூன்று பங்களிப்பாளர்களை கொண்டிருக்கிறது. இந்த சூக்கும சரீரம் “கண்ணுக்குத் தெரியாமல் அதன் கர்மாவின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கர்ப்பத்துக்குள் கடத்தப்படுகிறது” என்று எஸ்.என் தாஸ்குப்தா இதை விளக்குகிறார். அதுதான் கர்ப்பப் பையில் கருத் தரித்தலை தொடங்கி வைக்கிறது. குழந்தையின் பிறப்புக்கு உயிரியல் பெற்றோர் அவசியமானவர்கள் ஆனால் போதுமானவர்கள் அல்ல. இறந்து கொண்டிருக்கும் ஒரு நபரிடமிருந்து அனைத்து கடந்த கால நினைவுகள், சம்ஸ்காரங்களுடன் கூடு தாவும் சூக்கும சரீரம்தான் மரபுவழி பண்புகளுக்கான அடிப்படையாக உள்ளது.

இதுதான் மகாபாரத காலத்தில் இருந்த “மரபணுவியல்”. இதற்கும் “மரபணுவியல்” என்று நாம் புரிந்திருப்பதற்கும் இடையே சமதை, தொடர்ச்சி உள்ளது என்ற கருத்துருவாக்கம் நகைப்புக்கிடமானது.

இந்துத்துவா படைவீரர்கள் இது போன்ற அபத்தங்களில் உழல்வதற்கு, பண்டைய இந்து தேசத்துக்கு புகழ் சூட்டுவதைத் தாண்டி இன்னும் ஆழமான, சொல்லப்படாத காரணம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. மரபணுவியலில் ஏற்பட்டுள்ள உண்மையான முன்னேற்றங்கள், கூடு விட்டு கூடு பாயும் ஆன்மா என்ற அவர்களது சரக்கை முற்றிலும் பொருத்தமற்றதாகவும், உயிர் பற்றிய விளக்கத்துக்கு தேவையற்றதாகவும் ஆக்கி விட்டது என்று அவர்களுக்குத் தெரிகிறது. செயற்கை வேதிப் பொருட்களை பயன்படுத்தி செயல்படும் உயிரினங்களை உருவாக்கும் செயற்கை உயிரியலின் காலத்தில் நாம் வசிக்கிறோம். பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு “அறிவியல்” என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் தேசியவாதத்தையும் தாண்டிச் செல்கிறது: இந்து மதத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதற்கான இறுதிக்கட்ட தற்காப்பு உத்தி அது.

“மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையேயான போராட்டத்தின் அம்சங்களை மழுப்புவது மதத்தை நியாயப்படுத்துவதற்கான நம்பிக்கையற்ற முயற்சிதான். ஒவ்வொரு முறை மதம் அதன் பாரம்பரிய நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க நேரிடும் போது, அது முன்பு பிடித்து வைத்திருந்த மையத்திலிருந்து பின்வாங்க நேரிடும்போதும் இது கையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.” என்கிறார் புகழ்பெற்ற சிரிய தத்துவஞானி சாதிக் அல் அசம்

இதுதான் இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சலின் உண்மையான தோற்றுவாய்.

மூலக்கட்டுரை, படங்கள் : நன்றி Frontline

தமிழாக்கம்: அப்துல்

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2

12
சிந்து சமவெளி நாகரிகம்

ஆரியப் படையெடுப்பும் நம்பூதிரியின் நயவஞ்சகமும்

பார்ப்பன சனாதன – இந்துமத வெறி பாசிசத்தை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை விட, உண்மையில் போலி மார்க்சிஸ்டுகள் தாம் மிகவும் அபாயகரமானவர்கள் என்று கடந்த ‘புதிய கலாச்சார’த்தில் குறிப்பிட்டிருந்தோம். ஏனென்றால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களைப் போல பகிரங்கமான முறையில் பார்ப்பனியத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் காப்பதற்காகக் களத்தில் வந்து நிற்பதில்லை. மாறாக கம்யூனிசத்தின் பேரால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் புகுந்து கொண்டு நயவஞ்சகம் துரோகம், தத்துவ – வரலாற்றுப் புரட்டு ஆகிய மறைமுக வழிகளில் இதைச் செய்கிறார்கள்.

Group-Photo-of-Mundas-dravidas-nagasஆரியர்களின் ஆக்கிரமிப்பு; அதற்கு முன்பு இந்த துணைக்கண்டத்தில் நிலவிய சமூக அமைப்பு அதன் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சி; ஆரியர்கள் உருவாக்கிய பார்ப்பன சனாதன மதம், வருண – சாதி அமைப்பு; அதற்கு எதிராக புத்த-சமண மதங்கள், ஒடுக்கப்பட்ட வருண சாதி எழுச்சிகள்; அவற்றை அடக்குவதற்கு பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அட்டூழியங்கள்; பார்ப்பன சனாதன மதமே அனைத்து மக்களின் ”இந்து” மதமென்று ஆதிசங்கரன் முதலியோர் செய்த பித்தலாட்டங்கள்; அதன் தொடர்ச்சியாக ”இந்துத்துவம்” தான் இந்தியப் பண்பாடு – தேசியம் என்கிற பெயரில் நடக்கும் பாசிச மோசடி ஆகிய அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் நிலைப்பாடுகளுக்கு இசைவான கண்ணோட்டத்தையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகள் என்கிற பெயரில் சி.பி.எம்.மின் சித்தாந்த குரு சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முன்வைக்கிறார்கள்.

ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் அல்ல. மத்திய ஆசியாவில் இருந்து அதிகபட்சம் போனால் நான்காயிரம் ஆண்டுகளுக்குள்ளாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தேறிய நாடோடிகளின் கூட்டம், அவர்களின் வருகைக்கு முன்பு இங்கு திராவிடர்கள். முண்டாக்கள். நாகர்கள் என்று வேறு பிற பூர்வகுடியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களில், குறிப்பாக திராவிடர்கள், ஆரியர்களைக் காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியுற்ற உற்பத்திமுறையையும், நாகரிகம், பண்பாட்டையும் கொண்டிருந்தனர்.

well_harappa
மொகஞ்சதரோ

இது பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால் அறியப்படும் ”சிந்து சமவெளி நாகரிகம்” மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இது நகர நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட அடிமைச் சமுதாயத்தின் ஆரம்ப நிலையில் இருந்தது; அப்போது தோன்றியிருந்த சமூக அமைப்பின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு, சிறு அளவிலான, நிரந்தரமான நகரப்படைகளே இருந்தன.

இப்படிப்பட்ட சமூக அமைப்புகளின் மீது அவற்றைக் காட்டிலும் பின்தங்கிய சமூக குழுக்கள் தாக்குதல் தொடுத்து வெற்றி கொள்வது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. அடிமைச் சமுதாய அமைப்பின் உச்சநிலையில் இருந்த கிரேக்கத்தையும், ரோமாபுரியையும், ஜெர்மானிய காட்டுமிராண்டிச் சமுதாயத்தினர் தாக்கி ஒடுக்கவும் ஆக்கிரமிக்கவும் முடிந்தது இதற்குச் சான்றாகும். அதேபோல ஆரியர்கள் உற்பத்திமுறை, நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றில் பின்தங்கியிருந்தாலும், எதிரிகளைத் தாக்கி அழிக்கவும். தப்பி ஓடவும் தேவையான விரைந்து செல்லும் குதிரைகள், ரதங்கள். கனரகப் பொருட்களை ஏற்றிச் செல்லும் காளை வண்டிகள் ஆகியவற்றைப் பெற்றிருந்ததோடு பெண்கள் உள்ளிட்ட அவர்களது நாடோடிக் கூட்டம் முழுவதுமே ஆயுத பாணியாக இருந்தது. இதன் காரணமாக இந்தியப் பூர்வகுடி சமூகங்களின் மீது அலை அலையாகப் படையெடுத்து தாக்குதல்கள் நடத்தி முதலில் சிந்து, பிறகு கங்கை சமவெளிகளை ஆரியர்கள ஆக்கிரமித்தனர். அவர்கள் வென்றடக்கிய இந்தியப் பூர்வகுடியினரை ”தாசர்கள்” – அடிமைகளாக்கினார்.

இவை எல்லாம் வரலாற்று வல்லுநர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்ட உண்மைகள். ஆனால் ஆரிய இனவெறியும், நிறவெறியும் பிடித்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஏற்பதில்லை. அவர்கள் 1960 வரை ஒரு விதமாக வாதித்து வந்தனர். அதன்படி ”ஆரியர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து உலகம் முழுவதும் குடியேறிய வெள்ளை நிற இன பூர்வ குடிமக்கள் அவர்கள் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறை, நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்ததால், காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த இந்தியப் பூர்வகுடி இனத்தவரை வென்றடக்கவும், தமது வளர்ந்த சமூக அமைப்பை நிலைநாட்டவும் முடிந்தது”. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சித்தாந்த குருக்களுடைய நூல்களில் ”இந்துத்துவ”, ”இந்துராஷ்டிர” கோட்பாடு இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

ஆனால் சமீப ஆண்டுகளில், இந்த நாட்டின் மீது முழு முதல் உரிமை கொண்டாடுவதற்காக ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் வேறொரு வாதம் புரிகின்றனர். இதன்படி, ”ஆரியர்களும் இந்தநாட்டின் பூர்வகுடிகள் தாம் வந்தேறிகள் அல்ல. ’ஆரியர்கள்’ என்கிற சொல் கல்வி கேள்விகள், ஒழுக்கத்தில் சிறந்த மேன்மக்கள் என்பதையே குறிக்கிறது. தனி பூர்வகுடி (RACE)யை அல்ல. சிந்து சமவெளி நாகரிகத்தைப் படைத்தவர்கள் ஆரியர்களே. சிந்து என்பது திரிந்து அந்நியர்களால் இந்து என்றழைக்கப்படுகிறது. இந்துக்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் உருவாக்கிய வேதங்களை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம்-கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம்” என்கின்றனர். இவ்வாறு இந்த மண்ணுக்கும், நாட்டுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பார்ப்பனர்கள் முழு முதல் உரிமை கொண்டாடுகின்றனர். ”அதன்மூலம் இசுலாமியரும் கிறித்தவரும் அந்நிய மண்ணைப் புனிதமாகக் கருதுபவர்கள்; இந்த நாட்டின் மீது விசுவாசம் வைப்பவர்கள் அல்ல. ஆகவே, அவர்களைக் கொன்றொக்க வேண்டும், வென்றடக்க வேண்டும், அல்லது துரத்தியடிக்க வேண்டும்” என்கிற ”இந்துத்துவ”க் கோட்பாட்டுக்குப் பொருத்தமாக வைக்கப்பட்டதே இந்த இரண்டாவது வாதம். அயோத்தி பாபரி மசூதியானது ராமன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று நிருபிக்குமாறு தனது அகழ்வாய்வு மற்றும் வரலாற்று வல்லுநர்களை முடுக்கி விட்டதைப் போலவே இந்த வாதத்துக்கும் ஆதாரங்களை உருவாக்குமாறு இப்போது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் சிலரைப் பணித்துள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் குருநாதராக பி.ராமமூர்த்தி!

பி.ராமமூர்த்தி
பி.இராமமூர்த்தி

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் மேற்கண்ட இரண்டு வாதங்களுக்கும் மாறி மாறி வலுச்சேர்க்கும் இனப்பாசத்தோடு, சி.பி.எம். கட்சியின் சித்தாந்தக் குருமார்கள் நடந்து கொள்கின்றனர். காலத்துக்கும் இடத்திற்கும் பொருத்தமான முறையில் எழுதுவதன் மூலம் இதைச் செய்கின்றனர்.

“ஆரியப் படையெடுப்பு ஆக்கிரமிப்பு” குறித்து முன்பு நாம் தொகுத்தளித்த முடிவுகள் நமது நாட்டு மற்றும் மேலை நாட்டு வரலாற்று வல்லுநர்கள் மட்டுமல்ல, இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் ஏற்றுக் கொண்டுள்ள ”சோவியத் ஒன்றிய” ஆய்வாளர்களும் நிரூபித்துள்ளவை தாம். ஆனால் மாண்டுபோன கம்யூனிச துரோகி பி. ராமமூர்த்தி இது குறித்து பின்வருமாறு எழுதியுள்ளார்.

”ஆரியர்கள் என்று பெயர் கொண்டு எந்தக் கூட்டத்தினரும் வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. அதனால் தான் அந்த ஆரியர்கள் என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றி நடத்திய ஆராய்ச்சிகளில் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பிராமணிய மதத்தை உண்டாக்கியவர்கள் பிறப்பினால் மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தியபோது, அதை நிலை நாட்டுவதற்காக பிராமண சத்திரிய வைசிய ஜாதியினரை ’ஆரியர்’ என்று சொல்லிக் கொண்டார்கள். ‘ஆரியர்’ என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ’மேலோன்’ என்பதாகும். மக்கள் பேசி வந்த பிராக்ருதம், பைசாசி, பாலி முதலிய மொழிகளில் ‘ஆரியர்’ என்ற சொல் கிடையாது. காளிதாசன் எழுதிய சகுந்தலத்தில் யஜமானுடைய குடும்பத்தினரிடம் உரையாடுவதைக் காணலாம். யஜமானுடைய மகனை அவன் ’ஐயா அத்தா’ என்று அழைப்பதைக் காணலாம். அதாவது இது ’ஆரிய புத்ரர்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிராக்ருதச் சொல். தமிழ் நாட்டிலும் ஐயா என்ற அழைக்கும் பழக்கமுள்ளதைக் காணலாம். தன்னைக் காட்டிலும் மேலோன் என்பது அதன் பொருள்” (பி. ராமமூர்த்தியின் ”ஆரிய மாயையா? திராவிட மாயையா?” விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், பக்-256)

’ஆரியர்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ’மேலோன்’ என்று பொருளாம். இருக்கட்டுமே. அதனால் ஆரியர்கள் என்கிற பூர்வகுடி இனம், மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறியது என்பது எப்படித் தவறாகிவிடும். அப்படி வந்தவர்கள் தாம் ஆரியர்கள் என்பதும் மாந்தவியல், அகழ்வாய்வு மற்றும் மொழி ஆய்வுகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே, சி.பி.எம். கட்சியின் சித்தாந்த தலைமைக் குரு சங்கரன் நம்பூதிரி மேலும் ”திறமை”யாகத் திரித்துப்புரட்டி பின்வருமாறு எழுதுகிறார்:

நம்பூதிரிபாடின் கண்டுபிடிப்புகள்!

நம்பூதிரி
நம்பூதிரிபாட்

”ஆரியர்கள், திராவிடர்கள் என்ற இரண்டு மனித வம்சாவழியினர் மட்டும் தான் இருந்தனர் என்பதும் முதல் பகுதியினர் இரண்டாவது பகுதியினரை ஆக்கிரமித்து ஆதிக்கம் பெற்றனர் என்ற கருத்தும் ஆதாரமற்றது என்று இந்த அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இந்தியாவுக்குள் நுழைந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்ற ஒரே மனித வம்சத்தினர் அல்ல. அவர்களிலேயே பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். வாழ வழிதேடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லவும் புதிய இடங்களில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் பெறவும் முயற்சித்தவர்கள் பல்வேறு கோத்திரங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குள்ளேயே பல நேரங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களது ஆக்கிரமிப்புகளுக்கு இரையான பிரதேசங்களைச் சார்ந்தவர்களும் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவ்வாறு கோத்திர வர்க்க சமூகம் வீழ்ச்சியடையும் நிகழ்ச்சிப் போக்குகளுக்கிடையில் குடியிருப்பதற்கான இடம், ஆடு மாடுகளை மேய்ப்பதற்கான வசதி, உணவுப் பொருட்களை சேகரிப்பது உற்பத்தி செய்வது ஆகிய பிரச்சினைகளிலும் பரஸ்பரம் மோதிக் கொண்டிருந்த பல்வேறு மக்கட் பகுதியினரில் ஒரு பிரிவினருக்குத்தான் ’ஆரியர்கள்’ என்ற பெயர் கிடைத்துள்ளது”.

”இந்தப் பெயர் அவர்களுக்குக் கிடைத்ததற்காக காரணங்குறித்து சில அறிஞர்களின் கருத்து இதுதான்: சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வந்த வளர்ச்சி ஒரு பிரிவினரை மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான கலாச்சார நிலைக்கு இட்டுச் சென்றது. அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வான ஒரு மொழியை உருவாக்கினர். இவ்வாறு ஒரு உன்னத நிலையை அடைந்த மொழி ஆரிய மொழி என்று அறியப்படத் தொடங்கியது. இதுதான் பின்னர் சமஸ்கிருத மொழியாக வளர்ச்சியடைந்தது”.

”இந்த மொழியைப் பயன்படுத்திய முன்னேறிய பகுதியினர் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதாவது ’ஆரியர்கள்’ என்கிற ஒரு மனித வம்சத்தைச் சேர்ந்தவர்களல்ல. பல்வேறு வம்சா வழியினரில் ஒரு சிறுபிரிவினர் அடைந்த முன்னேற்றத்தைக் குறிக்கிற ‘ஆரியமொழி’யை உருவாக்கி அதனைப் பயன்படுத்தி ரிக் வேதம் முதலிய நூல்களை இயற்றவும் செய்தவர்கள் ’ஆரியர்கள்’ ஆனார்கள்.

மொகஞ்சதரோ, ஹரப்பா நாகரிகம்
மொகஞ்சதரோ, ஹரப்பா நாகரிகம்

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்ப்பதற்காகவே, சங்கரன் நம்பூதிரி தனக்கேயுரிய தந்திரமான முறையில் வாதங்களை முறுக்கி, மழுப்பி, புரட்டிப் புரட்டி வைப்பதை இதில் காணலாம். முதலில் ‘ஆரியர்களின் வருகை’ என்று குறிப்பிடுகிறார். பிறகு இந்தியாவுக்குள் நுழைந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்ற ஒரே மனித வம்சத்தினர் அல்ல என்கிறார். அப்படி என்றால் ஆரியர்கள் தவிர வேறு மனித வம்சத்தினர்களும் வந்தார்களா? அவர்கள் எந்தெந்த வம்சாவழியினர்? என்ற கேள்விகளும் எழுகின்றன. இதற்குப் பதில் சொல்வதற்குப் பதில் பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்குள் நுழைந்து வந்தார்கள் என்கிறார். பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? அவை எல்லாம் ஒரே வம்சாவழியை பூர்வகுடி இனத்தை சேர்ந்ததாக ஏன் இருக்கக்கூடாது. ஒரே வம்சாவழிக்குள் பல கோத்திரங்கள் இருப்பது சமூகங்களின் வரலாற்றில் எங்கும் காண்பதுதானே? இது எப்படி ஆரியர்களின் படையெடுப்பை மறுப்பதாகும்? மேற்கண்ட வாதங்கள் மூலம் ஆரியப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் ஆதாரமற்றது என்று நிராகரிக்கிறார் சங்கரன் நம்பூதிரி.

வெளியிலிருந்து குடியேறிய பல்வேறு மனித வம்சாவழியினர் (பூர்வகுடியினர்), இங்கேயே இருந்த பல்வேறு வம்சாவழியினர் (பூர்வகுடியினர்) இந்த எல்லா பூர்வகுடியினங்களின் பல்வேறு கோத்திரங்களை சேர்ந்த பல்வேறு மக்கள் பிரிவினருக்குள் பல்வேறு பிரச்சினைகளுக்காக நடந்த மோதல்கள்-என்னும் நிகழ்ச்சிப் போக்கில் உயர்வான கலாச்சார நிலையை எட்டிய, உன்னதமான சமஸ்கிருத மொழியையும், அதில் வேதங்கள் முதலிய நூல்களையும் படைத்த ஒரு பிரிவு மக்கள்தான் ”ஆரியர்கள்” என்று ஒரு வரையறுப்பும் தருகிறார், சங்கரன் நம்பூதிரி.

இப்படி இந்தியாவிலேயே உருவாகிய ஆரியர்கள், சிந்து கலாச்சாரத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உருவான சூனியநிலையில் அப்பிரசேத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்; அப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்கு ”இரையானவர்களை” தாசர்களாக அடிமைகளாக்கியும் தாமே ஆண்டைகளாகியும் ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கினார்கள் என்கிறார் சங்கரன் நம்பூதிரி.

நாகரிகம்
திராவிடர்கள், ஆரியர்களைக் காட்டிலும் பன்மடங்கு வளர்ச்சியுற்ற உற்பத்திமுறையையும், நாகரிகம், பண்பாட்டையும் கொண்டிருந்தனர்.

இதன் மூலம் பின்வரும் முடிவுக்கு வருகிறார்: ஆரிய ஆக்கிரமிப்புக்கு முன்பு வட இந்தியாவில் இருந்தது புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தின் வடிவிலான கோத்திர வர்க்க சமூகம்; அதைத் தகர்த்து வருண அடிப்படையிலான அடிமைச் சமூகத்தை உருவாக்கியதன் மூலம் ஆரியர்கள் முற்போக்கு பாத்திரமாற்றினர்; பின்தங்கிய சமூக அமைப்பும், கலாச்சார சூன்யநிலையும் நிலவிய போது, அதைவிட முன்னேறிய சமூக அமைப்பையும், கலாச்சாரத்தையும் ஆரியர்கள் உருவாக்கினர். ஆனால் தென்னிந்தியாவில் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஆரிய ஆக்கிரமிப்பால் நடக்கவில்லை. திராவிட பூர்வகுடி இனத்தினராலேயே ஏற்பட்டது என்கிறார் சங்கரன் நம்பூதிரி. ஆக, ஆரியப்படையெடுப்பு – ஆக்கிரமிப்பு, ஆரிய – திராவிடப் போர்கள் ஆகிய அனைத்தும் ஆதரமற்ற முடிவுகள் என்று நிராகரிக்கிறார்.

வரலாற்றுப் புரட்டின் நோக்கம் என்ன?

இந்தியத் துணைக் கண்டத்துப் பூர்வகுடி இனங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அழிவு வேலைகள் செய்து, தனது இன ஆதிக்க சமூக – மத அமைப்பை உருவாக்கியது மட்டுமல்ல, அவற்றுக்கான பாரம்பரியப் பெருமை பாராட்டி, மீண்டும் உயிர்ப்பிக்கவும், இனவெறி – நிறவெறி பாசிசத்தை நிலைநாட்டவும் முயலுகின்றனர், ‘ஆரிய இன வாரிசுகள்’. அவர்கள் மீது இந்த நாட்டு மக்கள் நியாயமான வெறுப்பும் கோபமும் கொண்டிருக்கின்றனர். இதை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் புனையப்பட்டது தான் சங்கரன் நம்பூதிரியின் வரலாற்று ஆய்வு முடிவுகள். ஆரியர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்; இந்த நாட்டின் கலாச்சார தத்துவ-மத வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் காரணமானவர்கள் என்பதே அவரின் வாதங்கள். ஆனால், இதற்கான ஆதாரங்கள், ஆய்வுகள் எதுவும் அவர் முன்வைக்கவில்லை. வெறும் கோட்பாடுகளும், முடிவுகளும் மட்டுமே எழுதியுள்ளார்.

ஆனால் சங்கரன் நம்பூதிரியின் மலையாள ஆராய்ச்சி முடிவுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் தமிழில் மொழி பெயர்ப்பும், பாஷ்யமும் (பொழிப்புரைகளும்) எழுதும் ’குட்டி சித்தாந்த குரு’ பி.ஆர்.பரமேசுவரன். தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனிய எதிர்ப்பு நிலைமைகளுக்குப் பொருத்தமாக பின்வருமாறு எழுதுகிறார்.

பரமேசுவரனின் பித்தலாட்டம்!

Kosambi-dd
டி.டி.கோசம்பி

”ஆரியர்கள் மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குறிப்பாக சொல்வதென்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான் என்று கூறுகிறார் டி.டி. கோசாம்பி” (மார்க்சிஸ்ட் மாத இதழ் நவ. 1990 பி.ஆர். பரமேசுவரன் பக். 35-36). ”இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களும் இங்கிருந்த பூர்வகுடி மக்களுடன் நீண்டகாலம் யுத்தம் செய்து இறுதியில் அவர்கள் மீது வெற்றி பெற்றனர். உண்மையில் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த முதல் அன்னியர்கள் ஆரியர்கள்தான்”. (மேற்படி, – 40 பக்)

”ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் இந்திய உபகண்டத்தின் ஒரு பரந்த பிரதேசத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே – கி.மு. 3250-லேயே இருந்ததாக இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் நிறுவனர் ஜான் மார்ஷல் வரையறுத்துக் கூறியுள்ளார். கி.மு. 1700 வரை இந்நாகரீக சமுதாய வாழ்க்கை முறை நீடித்து இருந்து வந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் இச்சமுதாயத்தில் ஏற்பட்ட உள் முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம், பூகம்பம், சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாறுதல், வறட்சி – இத்தகைய பல்வேறு காரணங்களால் பல பகுதிகள் புதையுண்டு போயின. எஞ்சியவர்கள் பலவீனமடைந்தனர். இறுதியாக ஆரியர்களின் படையெடுப்பு ஹரப்பா – மொகஞ்சதாரோ நாகரீகத்தின் – சிந்து நாகரீகத்தின் தனித்தன்மையை முற்றாக அழித்தது”.

“ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு காரணங்களினால் ஹரப்பா – மொகஞ்சதாரோ நாகரீகம், சிந்து நாகரீகம் அழிந்து வந்த காலத்தில் தான் ஆரியர்கள் இந்திய உபகண்டத்துக்குள் நுழைந்தனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எவ்வழியாக வந்தனர்? இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாகவோ அல்லது ஈரான் வழியாகவோ வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மத்திய ஆசியப் பகுதியிலிருந்து (முன்னாள் சோவியத்தின் உஸ்பெக் குடியரசுப் பகுதி) புறப்பட்ட ஆரியப்பூர்வகுடியினர் பல்வேறு காலங்களிலும் பல்வேறு மார்க்கங்களிலும் இந்திய உபகண்டத்தில் குடியேறினர். கி.மு. இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் என்பது தான் பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் கருத்து”.

”ஆரியர்கள் பல கோத்திரங்களாக இந்தியா வந்தனர். யமுனை, கங்கை நதிக்கரைகளில் குறிப்பாக கங்கை நதிக்கரையில் இவர்கள் குடியேறினர். ஆகவே ஆரிய நாகரீகம் கங்கை நதிக்கரை நாகரீகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் பரவியிருந்த ஹரப்பா-மொஹஞ்சதாரோ நாகரீகத்தை உருவாக்கிய திராவிட இன மக்களுடன் போரிட்டும். இரண்டற இணைந்தும் தங்களை இங்கு நிலைநாட்டிக் கொண்டனர். இந்திய உபகண்டத்தில் ஆரியர்களின் குடியேற்றம் பல்வேறு முறைகளில் நிகழ்ந்தது. சோவியத் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ள ’இந்தியாவின் வரலாறு’ என்னும் நூலில் இவ்வாறு கூறுகின்றனர்”.

ஜான் மார்ஷல்
ஜான் மார்ஷல்

”பல்வேறு பிரதேசங்களில் இந்தோ -ஆரியர்களின் குடியேற்றம் ஒரே மாதிரியாக நிகழவில்லை என்பது கூறாமலே விளங்கும். பல்வேறு இனக் குழுக்களோடு அவர்களுடைய பரஸ்பர பாதிப்பும் வெவ்வேறு வகையில் நிகழ்ந்தது. மொழிஇயல், தொல்பொருள் இயல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது பஞ்சாபில் ஆரியர்கள் முதன்மையாக திராவிட இனக்குழுக்களுடன் கலந்து பழகத் தொடங்கினார்கள். தன்மயமாக்கும் நிகழ்வு முறை இங்கே கணிசமாக விரைவில் நடந்தேறியது. முன்னர் மிக உயர்ந்த நிலையிலிருந்த பண்பாட்டின் ஒரு சில மரபுகள் அனேக வட்டாரங்களில் இன்னும் எஞ்சி இருந்தமையால் ஆரியர்கள் வட்டார மக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டார்கள். கிழக்கு பஞ்சாபில் சில பிரதேசங்களில் வட்டார இனக் குழுக்கள் ஆரியர்களைத் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே, அவர்கள் புதிய நிலப்பரப்புகளில் குடியேறியவாறு விரைந்து கிழக்கே சென்றார்கள். வேத இனக் குழுக்களின் மொழியிலும் இது பிரதிபலித்தது. திராவிட மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளின்மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக் வேதத்தின் மற்றும் பிற வேத சம்ஹிதைகளின் மொழி இயல் பகுப்பாய்வுகள் காட்டியது. ஆனால், இந்த பரஸ்பர பாதிப்பு நீடிக்கவில்லை”.

”இந்தியாவின் கிழக்குப் பிரதேசங்களில் வசித்த முண்டா இனக் குழுக்களுடன் இந்தோ – ஆரியர்களின் பரஸ்பர பாதிப்பு வேறு வகையில் நிகழ்ந்தது. பல முண்டா இனக் குழுக்கள் வேத இனக் குழுக்களால் காட்டுப் பிரதேசங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டன”. (“மார்க்சிஸ்டு” மாத இதழ், பி.ஆர். பரமேசுவரன் பக். 22–27)

ஆக, மேற்கண்டவற்றில் இருந்து பார்க்கும்போது சி.பி.எம்.மின் குட்டி சித்தாந்தக் குரு பி.ஆர். பரமேசுவரன் எழுதி வருவன பல விசயங்களில் ராமமூர்த்தி, நம்பூதிரியின் கோட்பாடுகள், முடிவுகளுக்கு மாறாக இருப்பது தெரிகிறது. ஆரியர்கள் அன்னிய பூர்வகுடியினர் தாம். வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் தாம் மொகஞ்சதாரோ – ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட பூர்வகுடி இனத்தவருடையது தான் என்பதை ஆதாரங்களுடன் ஒப்புக் கொள்கிறார் பரமேசுவரன்.

தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன
தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன

அதே சமயம் தன்பங்குக்கு நம்பூதிரியின் வரலாற்றுப் புரட்டுகள் சிலவற்றை நியாயப்படுத்தவும் செய்கிறார். பரமேசுவரன் சிந்துச் சமவெளி நாகரீகம் உள்முரண்பாடு-போர்களினாலோ, இயற்கை சீற்றங்களினாலோ அழிந்து போய் அங்கு ஒரு கலாச்சார சூனியநிலை நிலவிய போது, அப்பகுதியை ஆக்கிரமித்த ஆரியர்கள் ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கி முன்னேறினர் என்கிற சங்கரன் நம்பூதிரியின் கண்டுபிடிப்பை பரமேசுவரன் நியாயப்படுத்துகிறார். ஆனால் அவரே காட்டியுள்ள மேற்கோளில் டி.டி.கோசாம்பி பின்வருமாறு எழுதியுள்ளார்.

”ஆரியப் பண்பாடு என்று பேசும் போது அதன் பொருளைத் தெளிவாக்குவது அவசியம். கி.மு. மூன்றாயிரமாவது ஆண்டு காலத்தின் பெருநகரப் பண்பாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆரியர்கள் நாகரீகமற்றவர்கள் அவ்வுயர்ந்த பண்பாடுகளை அவர்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் அநேக தடவைகள் சின்னா பின்னமும் செய்துள்ளனர். அவ்வாறு தாக்குண்ட மக்களுக்கு ஆரிய எழுச்சி ஏற்படுத்திய அழிவுகள் அனேக தடவைகள் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளன” (1990 நவம்பர் மார்க்சிஸ்ட் இதழில் மேற்கோள் பக். 36-37).

ஆரியர்களின் ஆக்கிரமிப்பு – அழிவு பற்றிய இந்தக் கருத்தை மேற்கோள்காட்டிய அதே பரமேசுவரன் பின் வருமாறும் எழுதுகிறார்: இந்தியாவின் பூர்வகுடி மக்களான திராவிடர்கள் உருவாக்கிய மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் அழிந்து போனபின் புதையுண்டு போனபின் ஏற்பட்ட நாகரித்தின் சூழ்நிலையில் ஆரியர்கள் இந்தியாவந்தடைந்தனர் என்பதே வரலாற்றாசிரியர் பலரின் கருத்து. பி.ஜே.பி. இந்து வகுப்புவாதக் கும்பல் கூறுவதுபோல், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்களல்லர் என்பதுதான் உள்நாட்டு, அயல்நாட்டு வரலாற்று ஆசிரியர் பெரும்பாலோரின் கருத்து” (193 அக் மார்க்சிஸ்ட் இதழ் பக் 31)

ஹரப்பா நாகரிகம்
மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் திராவிடர் உருவாக்கியது என்பதையும் அவருக்கு இடித்துரைக்க வேண்டும்?

”ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்களல்லர்” என்று பி.ஜே.பி. இந்து வகுப்புவாதக் கும்பலுக்கு மறுப்புச் சொல்லும் பரமேசுவரன் அதே கருத்தை சுற்றி வளைத்துச் சொல்லும் நம்பூதிரிக்கும் தானே மறுப்புச் சொல்ல வேண்டும்? மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரீகம் திராவிடர் உருவாக்கியது என்பதையும் அவருக்கு இடித்துரைக்க வேண்டும்?

ஆனால், அவ்வாறு செய்யாதது மட்டுமல்ல, ஆதாரங்கள் பல இருந்தபோதும் தீராத பிரச்சினைகள் என்று சந்தேகம் எழுப்பும் வகையில் அவரே பின் வருமாறு மழுப்பியுள்ளார்.

நம்பூதிரிக்கு முட்டுக்கொடுக்கிறார். பரமேசுவரன்!

“சிந்து சமவெளி நாகரீக மக்கள் எழுத்து வடிவம் கொண்ட மொழியினையும் கொண்டிருந்தனர். அந்த எழுத்து வடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டெடுத்துள்ளனர். ஆனால், அவைகளை இன்று வரையிலும் யாராலும் படித்தறிய முடியவில்லை. ஆகவே அவை இன்றைய இந்திய மொழிகளில் எதனையும் ஒத்ததாக இல்லை என்பது தெளிவாகிறது”

”ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர்களா? அனைவரும் திராவிடர்களா? வேறு இனத்தவர் எவரும் இருந்ததில்லையா? அவர்களின் பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தனர் என்பது போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு விடைகான வேண்டியுள்ளது. உலக நிலப்பிரப்பில் முதன் முதலாக குரங்கிலிருந்து மனிதனாக மாறிய நிகழ்ச்சிப்போக்கு நடந்தேறிய பிரதேசங்களில் இந்தியக் கண்டமும் ஒன்றாக இருக்கலாம் என்பது சில சோவியத் விஞ்ஞானிகளின் கருத்து. ஆகவே இந்திய உபகண்டத்து மக்கள் வேறு எங்கிருந்தாவது வந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை”. (’93 டிசம்பர் மார்க்சிஸ்ட்’ இதழ் பக்:22-23)

சிந்து சமவெளி நாகரீக மொழி – எழுத்து திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் திராவிட முண்டா நாகா ஆகியோர் இந்தியத் துணைக் கண்டப் பூர்வகுடி இனத்தவர்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னும் குழப்பும் நோக்கத்துடனேயே எழுதுகிறார், பரமேசுவரன் ஏனென்றால், ”திராவிட மொழிகள் இந்தோ – ஆரிய மொழிகளின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக் வேதத்தின் மற்றும் பிற வேத சம்ஹிதைகளின் மொழி இயல் பகுப்பாய்வுகள் காட்டின” என்று சோவியத் அறிஞர்களின் முடிவுகளை மேற்கோள் காட்டும் பரமேசுவரன் ”சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களை யாரும் படித்தறியவில்லை; அவை இன்றைய மொழிகளில் எதனையம் ஒத்ததாக இல்லை” என்று சாதிக்கிறார்.

hinduism
வேத நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும், பிறகு இஸ்லாமிய, கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்களும் ஆரம்ப சரித்திர காலகட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் தான்!

எவ்வாறாயினும் ஆரிய ஆக்கிரமிப்பு – அழிவு வேலைகளை மறைத்து அல்லது அவர்கள் அவ்வளவு ஒன்றும் அழிவை ஏற்படுத்திவிடவில்லை. அதற்கு மாறாக ஆக்கப் பணிகள் புரிந்துள்ளனர் என்று சித்திரிப்பதே அவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தோடு ஆரியர்களின் புகழை ஏற்றிப் போற்றும் வகையில் இன்னொரு புளுகையும் அவிழ்த்து விட்டுள்ளார்.

இமாலயப் புரட்டு!

”மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஆரிய பூர்வகுடியினர் கிழக்கில் இந்தியா, ஈரான் போன்ற நாடுகளுக்கும் மேற்கில் கிரீஸ் ரோம் போன்ற நாடுகளுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்றனர். இன்று இந்துவும் இசுலாமும், கிறித்தவமும் முற்றிலும் மாறுபட்ட முரண்பட்ட மதங்களாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், இவைகளைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர்கள் அனைவரும் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு திசைகளை நோக்கிச் சென்றவர்கள் தான் என்பது சிந்தனைக்குரிய செய்தியல்லவா?” தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்கள் இதைப்பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
“வேத நாகரீகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும், பிறகு இஸ்லாமிய, கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்களும் ஆரம்ப சரித்திர காலகட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் தான்!”

அரபு, செமட்டிக் பூர்வ குடியினத்தவர்களே இஸ்லாமிய கிறித்துவ மதங்களை உருவாக்கியவர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இருந்தபோதும், நாஜி இட்லரையும், அவரது சித்தாந்த குரு நீட்சேயையும் மிஞ்சும் அளவுக்கு, உலக மதங்களையும், பண்பாடுகளையும் உருவாக்கியவர்கள் தமது பூர்வகுடி முன்னோர்களான ஆரியர்களே என்று சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள்.

– தொடரும்.

புதிய கலாச்சாரம் ஜூலை 94

தொழிலாளிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது மோடி அரசு

0

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்ட உரைகள் (தொடர்ச்சி..)

குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா ப.சிவக்குமார்

rsyf-meeting-against-new-education-policy1932 தொடங்கி இந்தியை எதிர்க்கிறோம். இந்த மண்ணில் சி.என்.அண்ணாதுரை எழுதிய ஆரிய மாயை வந்த போது கடுமையான எதிர்ப்பை தி.மு.க சந்தித்தது. பெரியார் பிள்ளையாரை போட்டு உடைத்தார், அந்த மண்ணில் இன்று பிள்ளையார் விஸ்வரூபமாக எடுத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளப் போகின்றோமா? அன்று மெக்காலே கல்வி முறை உடலால் ரத்தத்தால் இந்தியனாக, சுவையாலும் சிந்தனையாலும் ஆங்கிலேயனாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதுபோல் இன்று வேதமய – சமஸ்கிருதமயக் கல்வி புகுத்தப்படுகிறது, இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி முறியடித்த வரலாறுக்குத் சொந்தக்காரர்கள் பச்சையப்பன், மாநிலக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் கல்லூரி பள்ளி மாணவர்கள். இத்தகைய மாணவர்கள் இளைஞர்களால்தான் இன்றைக்கு புதியக் கல்விக்கொள்கையை முறியடிக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைத் தக்க வைக்கவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வருகிறார்கள். இது இந்துமதவெறி பாசிசத்தை நோக்கி, வேத கலாச்சாரம் நோக்கி மட்டுமல்ல, அடுத்து, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் வரும், சிறப்புக் கல்வி மண்டலம், IES – வரப் போகிறது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து எடுத்து விடப்போகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை ஒரு பக்கம் வணிகமயத்தையும், இன்னொரு பக்கம் காவிமயத்தையும் கொண்டு வருகிறது. இதற்கு எதிரான போராட்டம் என்பது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் போல் மாணவர்கள் மத்தியில் இருந்து துவங்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக் புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணம் சதித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தினார், அவர் உரையில் இருந்து,

ramesh-patnaik-aifrte-1
அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக் (வலது)

ஏப்ரல் 30 ல், TSR.சுப்ரமணியன் கமிட்டி அளித்த அறிக்கையை பொது தளங்களில் வெளியிட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரும்பவில்லை. குறிப்பாக மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி உரிமை பற்றிய ஒரு அறிக்கையை வெளியிடாமல் மக்களை / நாட்டை இருட்டில் வைப்பது என்பது ஜனநாயகமற்றது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தற்போது – பு.க.கொ – சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ஜூலை 31-க்குள் மக்களிடம் கருத்து கேட்டது. அந்த ஆவணம் எதிர்பார்த்தபடி, வணிகமயமாக்கலையும், சாதீய பிளவுகளையும் உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள மோசமான ஆவணம் இது. கல்வியில் வணிகமயமாக்கலை ஒழிப்பதற்கு பதிலாக அதற்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வகை செய்துள்ளது. மேலும் ஆளும் வர்க்கத்துக்கு உகந்த கொள்கையான PPP (பொதுத்துறை தனியார் கூட்டு) என்பதை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, தற்போதுள்ள அரசு இயல்பாகவே பொதுக்கல்வி முறை, பொதுப் பள்ளி முறை பற்றி பேசாது. உலகமயமாக்கல் மூலம் கல்விச் சேவையில் வர்த்தகத்தை நிறுவுவதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவதற்கான அடிப்படையை உருவாக்குகிறது.

மறுபக்கத்தில் அரசு மீண்டும் மனு தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மத, மொழி, இன சிறுபான்மையினருக்கு கல்வியை மறுப்பது என்பது மட்டுமல்லாமல் இந்தப் பிரிவினரை திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்து மீண்டும் சாதிய குலக்கல்வி முறைக்குள் தள்ளுகிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படாது. ஆனால், மாற்றுப் பள்ளிகள் என்ற பெயரில் குழந்தை தொழிலாளர் முறை நிறுவனப்படுத்தப்படும் என்கிறது.

ramesh-patnaik-aifrte-2திறந்த நிலை பள்ளிகள், திறந்த நிலை கல்லூரிகள், மற்றும் திறந்த நிலை கல்வி பெறும் வசதிகள் என்றும், திறம் மேம்பாட்டுப் பயிற்சி என்றும் மாணவர்கள் மீது அரசு திடீர் தாக்குதல் நடத்த உள்ளது. எனவே, சாதி,மத,பாலின,மொழி,இன அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட பிரிவினர்களான பெரும்பான்மையினர் முறையான கல்வியைப் பெற முடியாது. இவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆரம்பக் கல்விக்கு அடுத்தக்கட்டமாக, 5ம் வகுப்பிற்கு பிறகு இனி கல்வி மறுக்கப்படும்.

ஆவணத்தில் எந்த இடத்திலும் இடஒதுக்கீடு தேவை குறித்தும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், எல்லா நிலைகளிலும், எதிலும் இடஒதுக்கீடு செய்வது குறித்து பேசவே இல்லை. அதேபோல், ஏழ்மையான சமூக ரீதியில் பின் தங்கியவர்களை பள்ளி/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு வருவதற்கேற்ப விடுதிகளை அமைப்பது குறித்தும், மற்ற அடிப்படையான வசதிகளை செய்வது குறித்தும் குறிப்பிடப்படவே இல்லை.

தேசிய இனங்களின் மொழிகளுக்கு முக்கியத்துவமில்லை. 5ம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழிவழிக் கல்வி அனுமதிக்கப்படும். மேலும் ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்வதற்கேற்ப மலிவான உழைப்புச் சந்தையை ஏற்படுத்தவே தாய்மொழிவழிக்கல்விக்கு எதிராக அரசு தெளிவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி அளவில் சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பான்மையினருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட பண்பாடு, மதம், மொழி, சாதி, பாலினம் ஆகியவை குறித்த பெருமைகள் சமஸ்கிருதம் மூலம் திணிக்கப்படும்.

இந்திய வரலாற்றின் மத்திய காலப் பகுதி (RSS இதனை முசுலீம்களின் காலம் என்கிறது) பற்றி அந்த ஆவணத்தில் இல்லை. இந்த மண்ணின் நாகரிக வளர்ச்சிக்கு அந்த காலத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சார்ந்த அரசின் இந்த அணுகுமுறை என்பது மற்ற மத, இன, மொழி சிறுபான்மையினரின் பங்களிப்புகளை அலட்சியம் செய்கிறது அல்லது குறைத்து மதிப்பிடுகிறது என்பதாகும். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக உரிமைகள் குறித்து பேசும் போது, மாணவர்கள் – ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மீது தடை விதிக்கும் வகையிலும் நவீன தாராளவாதமாக்கலும், சாதிய வன்முறைகளுக்கும் ஏதுவானதாக உள்ளது புதிய கல்விக் கொள்கை.

பாடத்திட்டத்தை மையமாக்குவது மற்றும் நிர்வாகத்தின் அதிகாரத்தை குவிப்பது மூலம் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது என்பதும், இன்னொரு பக்கம் கல்வி முறையை உலக சந்தைக்கேற்ப உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் மாற்றுவது என்பதையும் செய்கிறது. இந்த புதியக் கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யக் கூடியதாக உள்ளது இதன் மூலம் கல்வியை மேலும் வணிகமயமாக்குவது, சாதிய ஏற்றத்தாழ்வை உருவாக்குவதையும் செய்ய விரும்புகிறது.

உலக வர்த்தகக் கழகத்தின் கீழ் ஒப்பந்தங்களை போட்டு நிறைவேற்றி கல்விச் சேவையில் வர்த்தகத்தை நுழைக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள், பல்கலைகழகங்களின் தன்னாட்சி குறித்து அஞ்சுகிறது. கல்வியை வணிகமயமாக்கும் திட்டத்தை எதிர்க்கும் எத்தகைய சக்தியையும் அழிக்க நினைக்கிறது. ஆட்சியில் உள்ள கட்சியின் புதிய தாராளவாத – பாசிசத்தை அஜெண்டாவாக அரசின் இந்த கல்வி கொள்கையில் வெளிப்படுகிறது. அரசியல் சாசன நெறிகளை மீறுகிறது.

இந்த நாட்டின் மக்கள், மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதை முறியடிக்க வேண்டும், கல்வி வணிகமயமாவதை ஒழிக்க வேண்டும், அரசால் நடத்தப்படக் கூடிய பொதுக் கல்வி முறைக்கு போராட வேண்டும். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச, கட்டாய, தரமான கல்வி கிடைக்க போராட வேண்டும். பழமையான மூடபக்திக்கு எதிராக அறிவியல் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இந்தியா பல்தேசிய இன-மொழி-பண்பாட்டைக் கொண்டது, கல்வி முறையும் இவையனைத்திற்காகவும் இருக்க வேண்டும்.

சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலான சமூக மாற்றம் ஏற்பட கல்வி முறை ஆதாரத் தூணாக வேண்டும். இந்தியாவின் பல்தேசிய – மத- மொழி, சமூக – பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப, ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, சமத்துவமான கல்வி முறையை உருவாக்க உழைப்போம்!

சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ் உரையாற்றுப்போது,

சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ்
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ்

80% மக்களுக்கு இனி கல்வி இல்லை என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்விக் கொள்கை இரண்டு முக்கியமான விசயங்களை முன் வைக்கிறது,

1) இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான ஒரு செயல் தந்திரம்
2) ஏகாதிபத்தியத்திற்குத் தேவையான கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது

இவற்றைத் தான் இது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த வாரம் நிர்மலா சீதாராமன் பேசியதைப் பாருங்கள்,

“இந்தியாவில் ஸ்கில்டு லேபர் நிறைய பேர் இருக்கிறார்கள், கோடிக்கணக்கில் உள்ளனர், இவர்கள் எல்லாரையும் நாங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு சர்வதேச அளவில் இருக்கும் சட்டங்கள் எல்லாம் கடுமையாக உள்ளது, இந்த சட்டங்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டும்” என உலக வர்த்தக கழகத்தில் இந்தியா முன்மொழிந்துள்ளது என்கிறார்.

அப்படியென்றால் 80% மக்களுக்கு கல்வி கொடுக்காமல் எல்லோருக்கும் தொழில்பயிற்சி கொடுத்து அவர்கள் எல்லோரையும் ஸ்கில்டு லேபராக மாற்றுவது – இவர்கள் எல்லாரையும் கொத்தடிமைகளாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது.

அதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவைக் காலனியாக்கிய போது தேயிலைத் தோட்டங்களுக்காக, ரயில்வே போடுவதற்காக, எங்கெல்லாம் காலனி பிடித்தானோ அங்கெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இங்கிருந்து கொத்தடிமைகளாக ஏற்றுமதி செய்தான் – பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில். அது பழைய நிலை.

இது புதிய கொத்தடிமை முறை. அதே போல் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உயர்கல்வி. புதிய கல்வி கொள்கை சொல்வது என்ன – எல்லா அரசு பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களுக்கும் அரசு மானியம் கொடுக்கக் கூடாது. நீங்களே பணம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதாவது லட்சக்கணக்கில் மாணவர்களிடமிருந்து வாங்குங்கள் என்கிறது. இதன் மூலம் யாரிடம் பணம் இருக்குதோ, அவர்கள் மட்டுமே படிக்க முடியும். பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியை மறுத்து வெறும் உடல் உழைப்பில் ஈடுபட வைத்து, ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் கல்வியைக் கொடுப்பது. எதை மனு தர்மம் சொன்னதோ, எதை பார்ப்பனர்கள் முன்வைத்தார்களோ, அதே விசயத்தைத் தான் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது. அது முன்பிருந்த மனுதர்மம், இது புதிய குலக்கல்வி முறை.

சமஸ்கிருதம் மேன்மையானது என்று பொய்யான கதைகளை பரப்புகிறார்கள். சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறது என்கிறான். சமஸ்கிருதம் வாயிலாக வேத கலாச்சாரத்தை சொல்லிக் கொடுக்க நினைக்கிறான்.

சமஸ்கிருதம் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதாம், எனவே ஒன்றாம் வகுப்பிலிருந்து PH.D வரை எல்லாருக்கும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்கிறான் – இவன் சொல்லும் கலாச்சாரம் யாருடையது – அது வேத கலாச்சாரம், அது பார்ப்பனர்களுடைய கலாச்சாரம். எனவே இவன் முன்வைக்கும் சமஸ்கிருதம் என்பது இவன் முழுமையாக கட்டியமைக்க நினைக்கிற இந்து ராஷ்டிரத்திற்கான கனவு. நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ் எப்படி அந்தக் கனவை வைத்திருக்கிறானோ, அந்தக் கனவை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயல்வடிவம் தான் புதிய கல்விக் கொள்கை.

ஆனால் இந்து ராஷ்டிரம் என்பது வெறும் இந்துத்துவாவை மட்டும் திணிப்பதல்ல – இந்து ராஷ்டிரம் என்பது – உழைக்கும் சாதியின் மீது பார்ப்பனர்கள் கொண்டிருந்த வெறுப்பு, வன்மம், அதே போல் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளிகள் கொண்டிருந்த வெறுப்பு. இந்த வன்மமும் வெறுப்பும் சேர்ந்தது தான் – கொத்தடிமைகளாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்பது.

இன்றைக்கு வந்த செய்தி – இந்தியாவில் எல்லாருக்கும் நிலையான குடியுரிமை வழங்கப் போகிறார்களாம், ஆனால் மோடி அரசு முன்வைப்பது – வெறும் 10 கோடி இருந்தால் போதும் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் குடியுரிமையை வாங்கி விடலாம். ஆர்.எஸ்.எஸ். வைக்கக் கூடிய இந்து ராஷ்டிரம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக் கூடியது. இந்த இந்து ராஷ்டிரத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், உழைக்கும் சாதிகளுக்கு இடம் கிடையாது. ஆக பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.

இது வெறும் சமஸ்கிருத திணிப்பு மட்டும் கிடையாது. இந்து ராஷ்டிரத்தைக் கட்டுவது, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக் கூடிய சிந்திக்கும் திறனற்ற கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது. ஆக இப்படிபட்ட கல்வி கொள்கையை நாம் கட்டாயம் எதிர்த்தாக வேண்டும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

அவர்கள் வாழ்க்கை நெடுக எத்தனை எச்சரிக்கைகள் !

2

நினைவுகள் உயிர்பெறும்

(நுங்கம்பாக்கம் – சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே அடிபட்டு இறந்த 4 வடமாநிலத் தொழிலாளர்களின் நினைவாக…)

nungambakkam-workers-killed
காண்போர் இதயத்தின் துண்டுகளாய் கதறிய இருப்புப் பாதையின் கற்கள், தொழிலாளர்களின் ரத்தத்தில் துடித்து அடங்கியது.

ண்டவாளம் விண்டுவிட
அவர்களின்
கடைசி நேர
பரிதாப அலறலில்
காற்று நடுங்கியது.
காண்போர்
இதயத்தின் துண்டுகளாய்
கதறிய இருப்புப் பாதையின்
கற்கள்,
தொழிலாளர்களின் ரத்தத்தில்
துடித்து அடங்கியது.

எச்சரிக்கையாய் அவர்கள்
இருப்புப் பாதையை
கடந்திருக்கலாம்தான்…
எத்தனை எச்சரிக்கைகள்
அவர்கள் வாழ்க்கை நெடுக…

எந்தக் காரணத்தைக் கொண்டும்
இடையில்
ஊருக்குச் செல்லக் கூடாது
என்ற ‘ஏஜென்டின்’ எச்சரிக்கை,

north-indian-construction-workers-3
எந்தப் பணிப்பாதுகாப்பு உரிமையும் கோரக் கூடாது என்ற வேலையின் எச்சரிக்கை

எந்த வேலை கொடுத்தாலும்
சேர்ந்து செய்ய வேண்டும்
என்ற ‘காண்ட்ராக்ட்டின்’ எச்சரிக்கை,

எந்த உத்திரவாதமும் கேட்கக் கூடாது
எந்த கம்பெனியோடும்
நேரடி அடையாளம் கிடையாது
எந்தப் பணிப்பாதுகாப்பு உரிமையும்
கோரக் கூடாது
என்ற வேலையின் எச்சரிக்கை,

எட்டு மணிக்கெல்லாம்
‘ஸ்பாட்ல’ இருக்கனும்
என்ற பணியிடத்து எச்சரிக்கை.

இப்படி,
வாழ்வு நெடுக
பிறர் எச்சரிக்கையாலேயே
வழிநடத்தப்படும் தொழிலாளிக்கு,
வாழ்க்கைப் பற்றிய
தன்னெச்சரிக்கைக்குக் கூட
வழி இல்லாத சூழல்தான் !

சாவின் சத்தம்
நெருங்கும் போதும்
கவனிக்க இயலாமல்
அவர்களைச்
சமன் குலைத்த
வாழ்வின் அதிர்வுகள்
எதுவோ?

voter-id-card
வாழ்ந்தார்கள் என்ற அடையாளம் தெரியாத உடல்களை வாக்காளர் அட்டை மட்டும் அடையாளம் காட்டியது.

வாழ்ந்தார்கள்
என்ற அடையாளம் தெரியாத
உடல்களை
வாக்காளர் அட்டை மட்டும்
அடையாளம் காட்டியது.

“அப்படி என்ன அலட்சியம்?
செல்போன் பேசிட்டே போயிருக்கலாம்…
சேர்ந்து ஜாலி அரட்டையாயிருக்கலாம்…” என
சாவுக்கான புறநிலையின் மீது
வரும் சந்தேகம்
அவர்கள்
வாழ்க்கை நிலைமையின் மீது
வருவதில்லை !

சாவு மூட்டையாய்
அவர்களை அழுத்திய
வாழ்வின் அடையாளம்
முதுகுப் பைகளாய்
ஏக்கம் நிரம்பிக் கிடக்கின்றன.

migrant_workers_2
அவர்கள் சாவுக்கு அவர்களே பொறுப்பு ! சரி அவர்கள் வாழ்வுக்கு ?

இரங்கும் உலகம் கூட
எச்சரிக்கிறது,
அவர்கள் சாவுக்கு
அவர்களே பொறுப்பு !

சரி
அவர்கள் வாழ்வுக்கு ?

ஒடிசா, பீகார், ஜார்கண்ட்…
என,
கனிம வளங்கள் ததும்பும் மண்ணில்
கை வைக்கும் அன்னிய முதலாளிகள்
உலகப் பணக்கார வரிசையில்
இடம்பெறும் போது,
மண்ணின் மைந்தர்கள்
வாழ இடம்பெயர்ந்து
அனாதைப் பிணங்களாக
வீழும் நிலைக்கு யார் பொறுப்பு?

அவர்கள்
வாழ இடம்பெயர்ந்ததற்கான
காரணங்களிலேயே
சாக இடம்பெயர்ந்ததற்கான
காரணங்களும் உள்ளதை
உணர்வதற்கு,
இரக்கத்தின் பிடிப்பு மட்டும்
போதாது
வர்க்கத்தின் துடிப்பும் வேண்டும்!

odhisha-ambulance-denied
அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம்

அழுது கதறும் பிள்ளையை
அழைத்துக் கொண்டு
இறந்த மனைவியின் உடலை
தோளிலேயே தூக்கிக்கொண்டு
ஊருக்கு பல மைல் நடக்கும்
ஒடிசாவின் துயரம் கூட,
ரயிலில்
அடித்துத் தூக்கி எறியப்பட்ட
ஒடிசாவின் பிள்ளைகளுக்கு
வாய்க்குமா தெரியவில்லை !

யாருக்கோ உழைத்து,
யாருக்கோ செத்து
ஊருக்கு போகுமோ
பிணங்கள் !

காசில்லாமல் ஏழைகளுக்கு
பிண ஊர்தியும்
அரசிடம் கிடைக்காத நாட்டில்
இலவசமாக
சாவு வருவதற்கு மட்டும்
எந்தத் தடையும் இல்லை!

துடித்து அடங்கிய
இறுதித் தவிப்பில்,
அவர்கள் தாயை
அவர்கள் உறவை
அவர்கள் தாய்மண்ணை
அவர்கள் வர்க்கத்தை
இழந்த
துயரத்தைச் சுமக்க
வார்த்தைகளால் முடியாது
வர்க்கம் வேண்டும் நமக்கு !

north-indian-construction-workers-1
வட மாநிலமாயினும் தென்பகுதி ஆனாலும் சரி… எங்கிருப்பினும் எங்கள் தொழிலாளியே எங்கிறப்பினும் எங்கள் தொழிலாளியே…!

என்ன நினைப்பில்
வழித்தடம் நடந்து
உயிர்த்தடம் இழந்த
தொழிலாளர்களே !

வட மாநிலமாயினும்
தென்பகுதி ஆனாலும் சரி…
கனடாவின் ‘ரெஸ்ட்டாரண்டில்’
வேலை செய்யும்
ஈழத் தமிழனாயிருந்தாலும் சரி,
கத்தாரின் பாலை வெயிலில்
ஆடு மேய்க்கும்
தமிழகத் தமிழனாயிருந்தாலும் சரி,
மணலியின் பாய்லரில்
ரத்தம் கொதிக்கும்
வட மாநிலத் தொழிலாளியாயிருந்தாலும் சரி,

எங்கிருப்பினும்
எங்கள் தொழிலாளியே
எங்கிறப்பினும்
எங்கள் தொழிலாளியே…!

தப்பிக்க எத்தனித்து
அடிபட்டு
விறைத்து நீண்டிருக்கும்
உங்கள் விரல்களை
வர்க்கமாய் பற்றிக் கொள்கிறோம்
இழப்பின் வலியோடு !

செத்த துயரம் பெரியது
வாழ்வின்
மொத்தத் துயரமோ கொடியது!
சாவின் கொடூரத்தில்
நினைவிழந்த
உங்கள் இறப்புக்கு
இப்போதைக்கு ஈர அஞ்சலி!

உங்களுக்கு வழங்கப்பட்ட
வாழ்வின் கொடூரங்களுக்கு
மலர் வளையம்
வைக்கப்படும்பொழுது
உங்கள் நினைவுகள்
உயிர்பெறும் !

– துரை சண்முகம்

கிண்டி சுரங்கப்பாதை

0
vadivammal (1)
எங்க சாதியில நல்ல வசதி உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா நான் பொண்ணு எடுத்தது, கொடுத்ததுன்னு எல்லாருமே இந்த(வறுமை) நிலையிலாதான் இருக்கோம். – வடிவம்மாள்.

டிக்கொண்டிருக்கும் சென்னையின் வாழ்க்கையில் சுரங்கப் பாதைகள் ஒரு முக்கியமான வழித்தடம். அலுவலகங்களையும், வீடுகளையும், நோய்களையும், சிகிச்சைகளையும், கேளிக்கைகளையும், அத்திவாசிய பயணங்களையும் பிரித்து விடுகின்றவைதான், அந்த வழித்தடங்கள். ஒரு சுரங்கப் பாதையில் அன்றாடம் கடந்து போவோர் ஆயிரக்கணக்கில் இருக்கும். அந்த ஆயிரக்கணக்கான மக்களின் சில அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், சுரங்கப் பாதை வியாபாரிகள். கிண்டி சுரங்கப் பாதையில் தரைக்கடை வியாபாரம் செய்யும் பெண்களைச் சந்தித்தோம்.

“ஏதோ வயித்து பொழப்புக்காக இங்கன குந்திகினு யாவாரம் பாத்துகினுக் கீரேன். அதுக்கு ஏதுனாச்சும் பெரச்சன வந்துருமுங்களா? கடைய எதுவும் எடுத்துருவிங்களா?”. நாங்கள் பேச முயற்சித்த அனைவரும் முதலில் வெளிப்படித்திய இந்த வார்த்தைகளே அவர்களது அஞ்சி நடுங்கும் வாழ்க்கையை ஒரு முன்னோட்டமாக விளக்குகின்றது.

வடிவம்மாள், வயசு 65. நான்கு பிள்ளைகளுக்கு தாய். தினமும் வண்ணாரப்பேட்டையில் இருந்து கிண்டிக்கு வந்து கூடையில் நாகப்பழம், நெல்லிக்காய் விற்கிறார். குடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் கணவன் ஒரு மீன்பாடி வண்டி தொழிலாளி. வடிவம்மாளுக்கு சொந்த ஊர் சேலம் கள்ளக்குறிச்சி. சென்னை வந்து முப்பது வருடங்களாகி விட்டன. ரெண்டு பொண்ணு, ஒரு பையன் திருமணத்தை முடித்து விட்டார். 29 வயதாகியும் வேலைக்கு போகாத கடைசி மகன் நிதமும் குடிப்பதற்கும் சேர்த்து உழைக்கிறார்.

“எனக்கு கல்யாணம் ஆகயில 14 வயசு. மறுவருசமே எம்மூத்த பையன் பொறந்தான். அப்பறம் வருசையா மூனு பிள்ளைங்க. ஊருல காடு கழனி வேலையின்னு எல்லாம் பாத்தாச்சு. வறுமை தீந்த பாடுல்ல. பிள்ளைகள வளக்கனுமேன்னு சென்னைக்கு வந்தோம். வந்த நாள் முதலா பழ யாவாரம் தான்..”

“நாங்க 24 மனை செட்டியார். 8 மனை  வீட்டுல பொண்ணு குடுப்போம் 16 மனை வீட்டுல பொண்ணு எடுப்போம். எங்க சாதியில நல்ல வசதி உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா நான் பொண்ணு எடுத்தது, கொடுத்ததுன்னு எல்லாருமே இந்த(வறுமை) நிலையிலாதான் இருக்கோம். மூக்குத்தி கூட பித்தளதான். எங்க தாலி என்னமோ நாமம் போட்ட தாலிதான் ஆனா என் தாலிக்கயிறு வெறும் கயிறுதான்.”

vadivammal (3)
பிள்ளைகளை வீட்டுல போயி கூட பாத்துக்கறது இல்ல. ரோட்டுல பாத்துக்கிட்டா உண்டு.

மஞ்சள் பூசக்கூட நேரமில்லாமல் கயிறு கருத்துப் போயிருந்தது.

“சென்னைக்கு வந்த புதுசுல ரொம்பவும் கஸ்டம். ஒரு வேள சாப்புட சோறு இருக்காது. எத்தன நாள் ஒடச்ச கடலையே (பொட்டுக் கடலை) தின்னுட்டு தண்ணிய குடிச்சுட்டு சத்தம் போடாம படுத்துருக்கும் எம்புள்ளைங்க? பெரியவன் மட்டும் 12-வது படிச்சான். மத்தவங்க 5, 6 வரைக்கும் படிச்சாங்க. அவங்களையும் யாவாரம் பாக்க கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப பிள்ளைங்களும் இந்த தொழில்தான் செய்றாங்க.”

“பிள்ளைகள் சென்ட்ரல் ஸ்டேசன்ல தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, பைனாப்பிள் விக்கிறாங்க. இதுல எவ்வளவு கெடைச்சுற போகுது! அவங்களுக்கு பொண்டாட்டி, பிள்ளையின்னு தனி குடும்பமாச்சு. பேர பிள்ளைங்க கெவுருமெண்டு பள்ளிக் கூடத்துல படிக்குது. அவங்க பசி பட்டினி இல்லாதிருந்தா போதாதா? நாமும் எதுக்கு பாரமா? பிள்ளைகளை வீட்டுல போயி கூட பாத்துக்கறது இல்ல. ரோட்டுல பாத்துக்கிட்டா உண்டு.”

“நான் அப்பிடி இப்படி பழமெல்லாம் வாங்கி விக்க மாட்டேன்! கெட்டு போன பழத்த கொடுத்தா வேலைக்கு போற ஆபிசருங்க சாப்பிட்டு ஒடம்புக்கு ஏதாவது நோவு வந்துருச்சுன்னா? பாவம் அவங்க பொழப்பும் கெட்டுடும், நம்ம பொழப்பும் கெட்டுடும். எம்மேல இறக்கப்பட்டு பத்து இருவது சும்மா தருவாங்க. நான் வாங்க மாட்டேன். நான் சும்மா கையேந்தலயே? யாவரத்துக்குத்தானே கை நீட்டுரேன். பழத்துக்கு மட்டும் குடுங்குங்க சாமின்னுவேன். அவங்க ஆயிரமா சம்பாதிச்சாலும் கஸ்டப்பட்டுத்தானே சம்பாதிக்கறாங்க.”

“ஒரு நாளைக்கி 200 ரூபா கெடைக்கும். வீட்டுக்கு 2,500 ரூவா வாடகை கொடுக்கனும். மழை, உடம்புக்கு நோவுன்னா யாவாரத்துக்கு வர முடியாது. முதியோர் பணம் வாங்குனா கொஞ்சம் கைகொடுக்குமுன்னு நாயா பேயா அலையிரேன்! வாங்கவே முடியல. இங்கன வேலைக்கி போறவங்க வாரவங்க தாயா பிள்ளையா பழகுறாங்க. கையில கொண்டு போற சாப்பாடு ஏதோ காரணத்தால சாப்பிடாம தினமும் யாராச்சும் கொடுப்பாங்க. நான் சாப்பிட்டது போக யாருக்காச்சும் கொடுப்பேன். அவங்க அனுசரணைதான் இங்கன இத்தன காலம் குந்திகினு இருக்கேன்.”

“எனக்கு பெரிய வேதனையே என் சின்ன பையன்தான். நெதமும் நான்தான் சாராயம் குடிக்க 100 ரூபா பணம் கொடுக்கனும். தப்பி தவறி வேலைக்கு போனா ரெண்டு நாளைக்கி வச்சு குடிக்கிறான். கையில காசு இல்லன்னா தகாத வார்த்தையில ஏசுறான், அடிக்கிறான். இந்த வயசுலயும் நாந்தான் கோயம்பேடு போயி பழம் வாங்கி சுத்தம் பண்ணி தாளிச்சு (சின்ன நெல்லிக்காயை தாளிப்பது) ரயிலாண்ட எடுத்து வர்றேன். படுத்தே கெடப்பான் பாவி.”

ஏதோ வாழ்ந்தாச்சு இன்னும் கொஞ்ச காலம்.!” என்றார் வடிவம்மாள். வறுமையும், குடும்ப பிரச்சினைகளும் அவரை அரித்துத் தின்னாலும், யாரிடமும் கை நீட்டக் கூடாது என்று இந்த வயதிலும் போராடுகிறார். அவருடைய ‘ஆரோக்கியத்தின்’ இரகசியம் கூட இந்த போராட்ட குணமாக இருக்கலாம்.

அடுத்தாக செல்வி அம்மாவைப் பார்த்தோம். மகள் அங்கம்மாவோடு சேர்ந்து பூ, பழம் விற்கிறார். 2 மகள், 2 மகன், 1 மருமகன், 2 பேரக் குழந்தைகள் என கூட்டு குடும்பமாக மடுவங்கரையில் இரண்டு அறை கொண்ட அஸ்பெஸ்டாஸ் போட்ட சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் செல்வியம்மாளின் கணவர் வியாபாரம் முடிந்து போகையில் ஒரு கார் மோதி அவரைக் கொன்று விட்டது.

அதனால் அம்மாவுக்கு துணையாகவும் வீட்டு வருமானத்திற்காகவும் மகள் அங்கம்மா வந்துவிட்டார்.

guindy subway (1)
ஸ்டேசன்ல டூட்டி பாக்குற போலீசு மனசாட்சி உள்ளவரா இருந்தா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். இங்க வைக்காத அங்க வைக்காதன்னு கொடைச்சல் கொடுத்தா காயோட கடையை தூக்கிக்குனு ஓடனும்

“பத்து வருசமா எங்க வீட்டுக்காரரு கிண்டியிலதான் பழ யாவாரம் செஞ்சாரு. அவரு செத்ததும் என்ன செய்றதுன்னு புரியல. வீட்டுலேயே உட்காந்துருக்கவும் முடியல. பசங்களுக்கு கல்யாணம் பன்னணும். 4 வருசமா  என் பெரிய பையனும் வேலை இல்லாம இருக்கான். பெரிய பொண்ணும் வீட்டோட இருக்கு. எல்லாத்தையும் மனசுல வச்சு திரும்பவும் யாவரத்துக்கு வந்துட்டேன்.”

“நானும் என் பெரிய பையனும் பத்து வருசமா சென்னை ரேஸ் கோர்ஸ்ல வேலை செஞ்சோம். கேசு நடக்குதுன்னு ரேஸ் கோர்ச மூடிட்டாங்க. அதுலேருந்து வேற எந்த வேலைக்கும் போக மாட்டேங்குறான். சின்னவன் கோல்ஃபு மைதானத்துல பந்து பொருக்கி போட்ற வேலை செய்றான். நாலு பேரும் நாலு பத்து ரூவா சம்பாதிச்சாதான் ஒரு நாள் பொழுத நிம்மதியா கழிக்கலாம். ஒரு நாள் ஒருத்தர் படுத்துட்டா அடுத்த நாள் செய்ற ஒவ்வொரு செலவையும் யோசிக்கனும்.”

அம்மாவுடன் இணைகிறார் அங்கம்மாள்.

“என் வீட்டுக்காரு கொத்தனாரு. வேலை அசதியில குடிக்கவும் செய்வாரு. எங்க அப்பா எறந்ததும் அம்மாவுக்கு துணையா நானும் வர்றேன். எடுத்து செய்யறேன். அரசு பள்ளிக்கூடத்துலதான் எம்பிள்ளைங்க படிக்குது. தங்கச்சி அனுப்பி வைப்பா. நானும் அம்மாவும் விடியக் காலையிலேயே கோயம்பேடு போயி பூ, பழம் வாங்கி வருவோம். முழுசா யாவாரம் நடந்தா தலைக்கி 300 வருமானம் கெடைக்கும். மீந்து போச்சுன்னா மறுநாள் விப்போம். பாக்க ஃப்ரஷ்சா இல்லன்னா வாங்க மாட்டாங்க. வந்த விலைக்கி யாராச்சும் பெரியவங்களுக்கு கொடுத்துருவோம்”.

ஆண்களின் மரணம் செல்வி போன்ற ஏழை குடும்பத்துப் பெண்களின் போராட்டத்தை இருமடங்காக்கி வதைக்கிறது. இவர்களுக்கு எப்படி வாழ வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் என்ற தெரிவுகளெல்லாம் கிடையாது.

அடுத்ததாக மற்றுமொரு கூட்டு குடும்பத்தை சந்தித்தோம். தேவகி, கற்பகம், சிதம்பரம் மூவரும் உடன்பிறப்புக்கள். வேலூர் ஆம்பூரை சேர்ந்தவர்கள், அப்பா காலத்திலிருந்து கிண்டி ரயில் பாதையில் காய் கடை நடத்தி வருகிறார்கள். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வாங்குபவருக்கு வருமளவு எல்லா காயுமே பிஞ்சாகவும் புதிதாகவும் இருந்தன.

“எங்க கூட சேத்து ரெண்டு வேலையாளு வச்சுருக்கோம். தினம் 300 ரூபா கூலி கொடுத்து சாப்பாடு டீ வாங்கி கொடுத்துருவோம். கோயம்பேட்டில் மூட்டையா எடுக்கும் காய்களை இந்த மரத்தடியில் கொட்டி தரம் பிரிச்சி சுத்தப்படுத்தி வெட்ட வேண்டியதை வெட்டி எடை போட்டு கவர்ல போட்டு கட்டி சுரங்க பாதைக்கு கொண்டு வர்றது இவங்க வேலை. இவர்ங்களோட நாங்களும் ஒரு ஆள் கூடமாட இருப்போம்.”

“காய் வாங்கினது, ஆட்டோ செலவு, ஆளுக்கு கூலி, சாப்பாட்டு செலவு எல்லாம் போக எங்களுக்கு தலைக்கி 500 ரூவா கிடைக்கும். முன்னெல்லாம் வாங்கும் போது எடை போட்டு தருவோம். இப்ப இருக்குற அவசர நெலையில வேலைக்கி போறவங்க யாரும் நின்னு நிதானிச்சு வாங்கிட்டு போக முடியல. அதனாலதான் எதை எடுத்தாலும் பத்து ருவான்னு பாக்கெட்டு போட்டு விக்கிறோம். நம்பிகை வச்சு பிரிச்சு பாக்காம வாங்குறாங்க. துரோகம் செய்யாம நல்ல காயாதான் வாங்கி வச்சுருப்போம்.”

“ஸ்டேசன்ல டூட்டி பாக்குற போலீசு மனசாட்சி உள்ளவரா இருந்தா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். இங்க வைக்காத அங்க வைக்காதன்னு கொடைச்சல் கொடுத்தா காயோட கடையை தூக்கிக்குனு ஓடனும். மாசம் ஒரு தடவை கேசுக்காக (இலஞ்சம்) பணம் வாங்குவாங்க”.

“நாங்க வாணிபச் செட்டி சாதிய சேந்தவங்க. நானும் அக்காவும் வியாபாரத்துக்கு வந்த இடத்துல பழக்கம் ஏற்பட்டு எஸ்.சி சாதியில கல்யாணம் செஞ்சுகிட்டோம். என் ரெண்டு பொண்ணும் டிகிரி படிச்சுருக்கு. அக்கா பசங்க தினக் கூலி வேலைக்கி போறாங்க. ஆரம்ப காலத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டு, இப்ப எப்படி யாவாரம் செய்றதுன்னு கத்துக்கிட்டோம். ஏதோ சாப்பாட்டுக்கு வழியிருக்கு,” என்றார் தேவகி.

Mariyammal
“என்ன நல்லா படம் பிடிங்க. எம் பொண்ணு நாப்பதாயிரம் சம்பளத்துக்கு கிடைக்கிற வேலைக்கு படிக்கிறா” என்றார் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த மாரி, பரிதாபமாக.

தங்கள் கடையில் வேலை செய்யும் மாரியம்மாவைப் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பற்றி பேசுகிறார் தேவகி.

“மாரி நெய்வேலி பக்கமுங்க. வீட்டுக்காரங்கிட்ட கோச்சுகிட்டு 20 வருசத்துக்கு முன்னாடி மூணு பிள்ளைகளை தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்துட்டா. கிண்டி ரயிலடியிலேயே ராப்பகலா இருந்துருக்கா. சின்ன வயசுக்காரி, ஊரும் உலகமும் சும்மா இருக்குமா. சீரழிஞ்சு போச்சு அவ கதை. அந்த வழியா வேலைக்கி போறவங்க பாவப்பட்டு பொம்பள பிள்ளைகள பாண்டிச்சேரியில ஒரு ஆஸ்ரமத்துல சேத்து விட்ருங்காக. இப்ப நல்லா படிச்சுருக்குதுங்க அந்த பிள்ளைங்க.”

“ஆனா மாரிதான் ஒரு மாறியா ஆயிட்டா. பையன் ஒரு பலகார கடையில வேலை செய்யறான். அப்பப்ப வந்து பாத்துட்டு போவான். பெண்ணுகள பாக்கனுன்னா மாரி பாண்டிச்சேரி போவா. இருவது வருசமா இந்த எடந்தான் மாரிக்கி எல்லாம். யார் வேலை சொன்னாலும் கேட்பா. குடுக்குறத வாங்கிப்பா, இங்கனேயே படுத்துக்குவா.”

“என்ன நல்லா படம் பிடிங்க. எம் பொண்ணு நாப்பதாயிரம் சம்பளத்துக்கு கிடைக்கிற வேலைக்கு படிக்கிறா” என்றார் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த மாரி, பரிதாபமாக.

நடந்த கொடுமைக்கும், பிள்ளைகளின் பிரிவுக்கும் மாற்றாக மாரி தஞ்சமடைந்திருப்பது மதுவிடம். ஆரம்பத்தில் சில மிருகங்கள் மாரியை குடிக்க வைத்து அவர்கள் வெறியை தீர்த்து கொண்டன. நாளடைவில் அதுவே அவருக்கு பழக்கமாகிப் போனது.

மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.

அதைக் காணச்சகிக்காமல் திரும்பிய போது வழியில் பார்வையற்ற வியாபாரிகளைச் சந்தித்தோம்.

பார்வையற்றோர்
எல்லாம் வித்தா ஒரு பாக்கட்டுக்கு 40 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மூனு பாக்கெட் வித்தா பெரிசு. ஆனா பல நாள் ஒரு பாக்கெட் கூட விக்காது.

“ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் 60 ரூபாய்க்கு எடுப்போம். ஒரு மிட்டாய் 5 ரூபான்னு 100 ரூபாய்க்கி விப்போம். எல்லாம் வித்தா ஒரு பாக்கட்டுக்கு 40 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மூனு பாக்கெட் வித்தா பெரிசு. ஆனா பல நாள் ஒரு பாக்கெட் கூட விக்காது.”

மற்றவர்கள் போல் எதையும் தரம் பிரித்து வியாபாரம் செய்ய முடியாது. தடவிப் பார்த்து எடுத்து கொடுக்கும் பொருளாகத்தான் பார்வையற்றோர் வியாபாரம் செய்கிறார்கள். மின்சார இரயிலில் தட்டு தடுமாறி ஏறி நடைபாதை கடந்து நாள் முழுதும் இடைவிடாமல் ஓடுபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட உத்திரவாதமில்லை என்றால் இவர்களின் வறுமைக்கு விடிவே இல்லை.

“குடும்பத்தை இழந்த பார்வையற்ற 5 பேரு ஒண்ணா வீடு எடுத்து அம்பத்தூர்ல தங்கியிருக்கோம். நாங்க வேற ஸ்டேசன்ல வேலை செய்றோம். இவங்க எங்க பிரண்ட்டு பாத்துட்டு போகலான்னு வந்தோம். இவங்களுக்கு கணவன் குழந்தை எல்லாம் இருக்காங்க. நல்லா பாத்துக்குறாங்க ஆனாலும், இவங்களுக்கும் வருமானம் தேவைப்படுது. எங்களுக்கு இதுல கெடைக்கிற காசு மட்டும் போதாது, ஊனமுற்றோர் உதவி தொகை. சில நல்ல நண்பர்கள் உதவி இது எல்லாம் சேந்துதான் வாழ்க்கை ஓடுது.”

பாதையோர வியாபாரிகள் பெரும்பாலானோர் போன தலைமுறையில் இருந்து தமது வாழ்க்கையை இங்கே தொடர்கின்றவர்கள். தெருவில் நிற்பதற்கே தயக்கப்படும் உள்ளங்களுக்கு தெருவிலேயே விற்று, வாழ்ந்து, ஓடிக் கொண்டிருப்பதன் பரிமாணம் அவ்வளவு லேசில் பிடிபடாது.

விவசாயம் நலிந்து ஊரிலிருந்து விரட்டிய வாழ்க்கை இங்காவது நல்ல பாதையைக் காட்டியிருக்கிறதா என்றால் இல்லை. எளிய மனிதர்களை அரவணைத்து ஆதரிக்க வேண்டிய அரசும், சமூக அமைப்பும் இங்கே இல்லாததால் இவர்கள் இன்னமும் கொடிய காட்டிற்குள் செல்லும் வழி மங்கிய ஒத்தையடிப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

  • வினவு செய்தியாளர்கள்

யோகா – நாடே ஆகுது ஸ்வாகா ! கோவன் புதிய பாடல்

0

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புதிய பாடல். தோழர் கோவன் மேடையில் பாடுகிறார் – வீடியோ

ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

1

நான் ஒன்றைப்பற்றிப் பேசும்போது
இன்னொன்றைப் பற்றிப் பேசுவதுபோல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் –
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.

refugeeமன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப் போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றன.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும் சந்தேக நபர்
ஸ்ரீரீநகரில் இந்தியப்படையினரால் கொண்டு செல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போனவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும் புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில் சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில் கடித்துக் குதறுகின்றன.
வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால் அனுமதி மறுக்கப்படுகிறான்.

எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக் கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாங்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.

துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்து கொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமற் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளுக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.

innondrai-patri-backகாஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த் தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப் போர்
இலங்கை விவசாயிகளின் விமோனசத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.

எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.

– சி.சிவசேகரம்
இன்னொன்றைப் பற்றி – கவிதை தொகுப்பு
தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு – கொழும்பு.

பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு

1

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கைசமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னைமதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களின் உரை:

comrade raju 2“எவ்வளவு நேரம் படம் பார்த்தாலும் கிளைமாக்ஸ் என்ன என்பதில் தான் விறுவிறுப்பு உள்ளது. அதை மாதிரி ரமேஷ் பட்னாயக் முடிந்தளவிற்கு கூர்மையாக புதிய கல்விக் கொள்கை பற்றி கூறினார். ஐந்தாவதிலேயே பாஸ் – பெயில் கொண்டு வர வேண்டும், இடஒதுக்கீடு கிடையாது, சமஸ்கிருதத்திற்கு வாத்தியாரைப் போடணும், அரசாங்க பள்ளிக்கூடம், கல்லூரிகளில் ஆசிரியர் –மாணவர்களின் யூனியன் எல்லாம் வைக்க முடியாது – இந்தியாவின் இறையாண்மையைப் பற்றி, மொழியைப் பற்றி, பேச்சுரிமையைப் பற்றி, சமத்துவத்தைப் பற்றி எந்த விதமான அறிவிப்பும் அதில் கிடையாது.

சின்ன வயதிலேயே பள்ளிக் கூடத்திலேயே அந்த மதவாதக் கருத்துக்களை பரப்பிவிட்டால் பத்தாண்டுகள் கழித்து பெரியார் – அம்பேத்கர் எல்லாம் மறந்து போய் ராமர் தான் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தாரு – மகாபாரதத்துல தசரதன் தான் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டிற்கு அடிப்படையே என ஒரு 50 வருடத்திற்குப் பிறகு வரலாற்றையே மாற்றி விடுவார்கள். அந்த தசரதனின் மனைவிகள் தான் இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராடியவர்கள் என என்னென்னவோ எழுதி விடுவார்கள். இதெல்லாம் கொண்டு வரணும்-னு அவன் நினைக்கிறான், ஊருக்குள்ள ஒரு திருடன் வர்ரான்னா போலிசுக்காரன் அந்த ஒரு திருட்டுப் பயல பிடிச்சி உள்ள போடணும்னு நினைக்க மாட்டான், ஊருக்குள்ள எவனும் நடமாடக் கூடாது என்பான்.

அந்த மாதிரி பழைய கல்விக் கொள்கையே இங்க தடுமாறிக்கிட்டு இருக்கு, SRM பச்சமுத்து பற்றி பத்திரிக்கையில நிறைய எழுதுகிறாகள். 30 வருடம் முன்னால் அவர் 7 ரூபாய் சம்பளத்தில் இருந்தார், இன்றைக்கு 20,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு, என பெருமையாக எழுதுகிறான், எப்படி வந்தது என புலனாய்வு செய்ராங்க. 84-ல் ஒரே ஒரு பாலிடெக்னிக், 2016 –ல் 130 நாடுகளில் எங்கெல்லாமோ கல்வி நிறுவனம் வைத்துள்ளார், டெல்லி, ஹாங்காங் என பயோரியா பல்பொடி விக்கிற மாதிரி முழுக்க பல்கலைக்கழகம் வைத்துள்ளார். இது காட்டுவது என்ன? ஒட்டுமொத்த கல்வி கட்டுமானமும் தோற்றுப் போனது என்பதைத்தான்.

நூற்றாண்டுகளாக இருக்கக் கூடிய ஆங்கிலத்தை இன்றைக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் கிடையாது என சொல்கிறார்கள். ஆங்கிலம் கற்றுக் கொடுப்போம்-னு தமிழ் பத்திரிக்கையில, டிவியில போடுறான், நெட்-ல போடுறான், LKG, UKG, ல மம்மி,டாடி, அது, இது சால்ட்,பெப்பர்னு என்னென்னவோ சொல்லிக் கொடுக்கிறான். ஆனால் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, சிந்திக்க வைக்கணும், ஒரு கணக்கைப் போட்டு சொன்னா அதனுடைய அடிப்படையில நீ மற்ற கணக்கைப் போடனும், ஒரு திருக்குறளை சொல்லிக் கொடுத்தால் அந்த முறையில் நீ அடுத்தடுத்த குறளைப் படிக்கணும், கற்றல் – கற்பித்தல் என்பது ஜனநாயகம் உள்ளதாக – அறிவியல்பூர்வமாக இருக்கணும்.

ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் என்ன செய்வான், அதிகாரி என்ன செய்வான், ஒரு போலீசுக் காரன் என்ன செய்வான்.. அதைத்தான் புதிய கல்விக்கொள்கை செய்ய உள்ளது. சமஸ்கிருதத்தையும் இந்துத்துவா கொள்கையையும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவான கல்வியை சரக்காக பண்டமாக விற்பதன் மூலம், திறந்து விடுகிறான்.

comrade raju 1நீ ஐந்தாவதில் பெயிலாக்கினால் என்ன நடக்கும்.ஐந்தாவது வரை நீ சொல்லிக் கொடுக்கக் கூடிய நமக்கு பயன்படாத அறிவியல்,ஜனநாயகத்துக்கு எதிரான பிற்போக்கு, பகுத்தறிவுக்கு எதிரான பாடத்திட்டத்திலிருந்து நீ ஒரு மாணவனை வெளியேற்றினால் அவன் அம்பேத்கரை படிப்பான், பெரியாரைப் படிப்பான், மார்க்சியத்தைப் படிப்பான், அவனுக்கு நீ பதில் சொல்ல முடியாது. இது தான் நடக்கப் போகிறது. நீ இந்து ராஷ்டிரமா ஆக்கிடலாம்னு நினைக்கிற, ஒரு 5 வருஷத்துக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் மூடி பாருங்க, நாடு வெளங்கிரும், நாடு அப்ப தான் வளர்ச்சியடையும். கல்லூரியிலிருந்து வரக் கூடியவன் அறிவாளியாவதில்லை, ஜனநாயகப் பூர்வமாக வருவதில்லை, ஆற்றல் மிக்கவனாக இருப்பதில்லை, இது போன்ற புரட்சிகர அமைப்பில் இருப்பவன் தான் ஆற்றல் மிக்கவனாகிறான். அறிவாளியாக வர்ரான், ஜனநாயகமாக வருகிறான்,

பெரியார் சொன்னது போல, பார்ப்பானுக்கு முன்புத்தியும் கிடையாது, பின்புத்தியும் கிடையாது. அந்த மாதிரி வேலை தான் செய்றான் இப்ப. ஒரு ரயில்ல கொள்ளையடிச்சுட்டான்னு சொல்லி ஆய்வு பண்றானுங்க. ஐ.ஜி வர்ரான், உள்ள போறான், மேல பாக்குறான், ஓட்டை தெரியுது, அப்புறம் மேல ஏறி பாக்குறான், உள்ள இருக்குற கம்பார்ட்மெண்ட் தெரியுது – திரும்பிப் போயிடுறான் – அடுத்த 2 நாள் கழித்து எஸ்.பி வர்ரான் – அவன் கீழ பாக்குறான் – மேல ஓட்டை தெரியுது. இந்த மாதிரி இந்த ஓட்டையையே கிட்டத்தட்ட 10 தடவை நான் பார்த்துவிட்டேன். DIG, RPF வர்ரான். விருத்தாச்சலத்தில் வந்து ஆய்வு செய்றான், ஒன்னுமேயில்ல விருத்தாச்சலம் –னு பேர் போட்டுருக்கு. வெறும் தண்டவாளம் –அங்க என்னத்த ஆய்வு பண்றான்னு தெரியில.

இப்ப என்ன பண்றான் அந்த திருடன் யார், அந்த ஆங்கில பட கதாநாயகன் யார்னு தேடுறாங்க! எதையும் கண்டுபிடிக்கல, மத்திய தடயவியல் துறை வந்தது, கடைசியில வெறும் அட்டைப்பெட்டியைக் கொண்டு போய் கேஸ் property என கோர்ட்டில் கொடுத்துள்ளனர். ஒரு டி.எஸ்.பி தலைமையில 50 கோடி பணம் டிரெயின்ல வருது, அதுல துப்பாக்கியோட காவல் வேற. எங்க அடிச்சான்னே தெரியில, எப்படி அடிச்சான்னே தெரியில . இது தான் உன்னுடைய தோல்வி, அப்ப இந்த அரசு கட்டமைப்பில் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வர்ரான்.

இதுல புதிய கல்விக் கொள்கை – நல்லதாவே இருக்கட்டும், எப்படி நீ அமுல்படுத்துவ – அமுல்படுத்த முடியாது. தனியார் பள்ளிக் கூடத்தில LKG வைத்திருக்கிறான், 20,000 வாங்கு-ன்னு சொன்னா – 30,000 வாங்குகிறான் – என் இஷ்டம் என்கிறான். சொல்லிக் கொடுக்குற வாத்தியார எப்படி வச்சிருக்கிற – அவன கொத்தடிமையா வச்சிருக்கிறே – அவனோட – டிசி, கிசி எல்லாம் வாங்கிகிட்டா முடிஞ்சுப் போச்சு. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் இன்று எங்க இருக்குது – பெரிய கிரிமினல் கும்பலாக இருக்கிறான் – கருப்புப் பணம் – நீங்க 20 கோடி, 30 கோடி, 40 கோடி கொடுத்தனா – எவனுக்காவது ரசீது இருக்கா – செக் போட்டு வசூல் பண்ண வேண்டியது தான?

comrade raju 3இப்படி படிக்கிற அந்த டாக்டர் கிட்ட போய் நாம வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியுமா – இப்படி படிக்கிறவன் கிட்ட ஒரு பாலம் கட்ட சொன்னா கட்டுவானா – இந்த கருப்புப் பணம் – ஆக்கிரமிப்பு – மாஃபியா – கிரிமினல் கும்பலு – இவனுங்க தான் கல்வி முதலாளிகள் – இவன் எப்படி சொல்லிக் கொடுத்து ஒரு அறிவாளிக் கூட்டத்தை உருவாக்க முடியும். இவன் பணம் சம்பாதிப்பதற்காக வர்ரானே தவிர – standard standard என்கிறான். உன் standard என்ன சொல்லு பார்ப்போம்

தரமான ஒரு பேராசிரியரை வெளிநாட்டிலிருந்து வரவைக்கிறேன் என்கிறான் – வெளிநாட்டிலிருந்து வரவைத்து என்ன பேச போகிறான் – விநாயகனுக்கு யானைத்தலை இருக்கு – அந்தக் கதை எல்லாருக்கும் தெரியும் – அப்பவே கண்டுபிடிச்சது – plastic surgery –க்கு அவர் தான் உதாரணம் என்கிறான். அப்பவே புஷ்பக விமானம் கண்டுபிடிச்சோம்னு சொல்றான். மெட்டல் எப்ப வந்தது, குண்டு எப்ப வந்தது?இந்தக் கல்வி முறை கிரிமினல் கும்பலிடம் இருக்கிறது. எஸ்.வி.எஸ் கல்லூரி தெரியும். நீதித்துறை பற்றி, கனிமவளக் கொள்ளை பற்றி தெரியும், ஸ்வாதி கொலை பண்ணது ரயில்வே ஸ்டேசன்ல – போலீசு எங்க போனான், ஏன் ரயில்வே ஸ்டேசன்ல சிசிடிவி வைக்கல – ஏன் ஏன் என கத்துறான்.

சேலத்தில் வினுப்பிரியா – என்னை ஆபாசமாக போட்டான் – என புகார் செய்தும் போலீசு எதுவும் செய்யவில்லை.  தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை மனு, புகார் கொடுத்துள்ளார், ஏன் பாதுகாக்கவில்லை போலீசு? எனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என பெண்ணைக் குத்திக் கொல்கின்ற அந்த கருத்தை என்ன செய்ய போகிறது அரசு. ஆணாதிக்க சாதி வெறி கருத்தை அழிக்காமல், குற்றவாளியை தண்டிப்பது பற்றி பேசுவதால் பிரச்சினை தீருமா?

இவர்களது தீர்வுக்கு அப்பாற்பட்ட வகையில் வெளியில் உண்மை இருக்கிறது. அதைத் தான் கட்டமைப்பு நெருக்கடி என சொல்கிறோம். அதை தீர்ப்பது என்பது இவர்களால் முடியாது. ஆடைக் கட்டுப்பாடு,ஆண்மை நீக்கம் தீர்வல்ல, தனித்தனி பிரச்சினைக்கு தனித்தனி தீர்வு கிடையாது.

அரசியல் அமைப்புச் சட்டமே ஃபெயிலியராகிவிட்டது. அடிப்படை உரிமைகள் அனைத்தையும் தூக்கி காற்றில் போட்டுவிட்டது. அனைத்தும் செயலிழந்து தோற்றுப்போய்விட்டது. நாடு முழுவதும் பிரச்சினை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் அதிகாரம் தான் மாற்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த பிரச்சினைக்கும், தனித்தனியாக தீர்க்க முடியாது. நாட்டிற்கு, மொழிக்கு எதிராக மோடி அரசு எப்படி செயல்படுகிறது என மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். குலக்கல்வி அறிவித்த ராஜாஜி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இன்று பு.க.கொ. அமுல்படுத்தும் மோடி அரசை என்ன செய்வது என மக்கள் மத்தியில் கொண்டும் செல்ல வேண்டும். கருணாநிதி மதயானை உள்ளே வருகிறது என்கிறார். அவரால் களத்திற்கு வர முடியாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதயானையை – operation வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கொன்றே தீர வேண்டும் – செயல்பாட்டிற்கு வந்தாலும் வராவிட்டாலும் கருவிலேயே அதை சிதைக்க வேண்டும் என மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்றோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது”.

இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !

1
108 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

வங்க கூட பெரிய்ய தொல்ல சார். ரெண்டு நாளாகுது டூட்டி மாத்தி விடுங்கடான்னு கேக்கேன். மாத்தி விட மாட்டேங்குறானுவ, ஊருக்கு போனவன் வரல. இன்னும் அரை நாளு பாத்துருங்காரு ஓனரு. நா மனுசனா இல்ல, மாடா? எனப் பொரிந்தார், அவரது கண்கள் ரத்தச் சிவப்பாயிருந்தது.

108 ஆம்புலன்ஸ்
கோப்புப் படம்

முத்துராஜ், வயது 31 சென்னை மாநகரின் தனியார் தொடர் மருத்துவமனை ஒன்றில் அவசரகாலஊர்தி ஓட்டுனர் , திருநெல்வேலிக்காரர்.

“எங்க ஓனருக்கு பதிநாலு ஆம்புலன்ஸ் இருக்கு பாத்துக்கங்க, எல்லாமே பெரிய்ய பெரிய்ய ஆஸ்பத்திரிக்கு காண்ட்ராக்ட்டுல ஓடுது, 365 நாளும், 24 மணி நேரமும் வண்டி ஆஸ்பத்திரி வாசல்ல ரெடியா நிக்கனும், வேல எப்டீன்னு உங்களுக்கே தெரியும், மெட்ராஸ் டிராஃபிக்ல கேஸ் சீரியஸ்னஸ் பொறுத்து பறக்கனும். எவனும் ஆம்புலன்சுக்கு வழிவிடமாட்டானுங்க. சொந்தகாரங்க வேற, வண்டில ஒக்காந்துகிட்டு டென்சன்ல நம்மள வெறட்டுவாங்க.

ஆம்புலன்ஸ் ஓட்டுரதுக்கு எல்லா டிரைவரும் செட்டாவ மாட்டாங்க சார், நெரய்ய டென்சன், கண்ணு முழிப்பு, ரத்தம், கைகால் போன கேசுங்க, அழுக சத்தம், நைட்டு நிம்மதியா தூங்க முடியாது, அசதி ஒன்னுதான் என்ன தூங்க வைக்கும்.

முந்தா நா ஒருத்தரு புதுசா வேலைக்கு வந்தாரு, ஆக்சிடெண்ட்டு ஸ்பாட்டுக்கு போனவரு ரத்தத்த பாத்துட்டு ஒரே வாந்தி, மயக்கம். நேத்து ஊருக்கே போய்ட்டாரு.

பத்தாவது படிச்சுகிட்ருந்தப்போ அப்பா செத்துட்டாரு, இருந்த வெவசாய நெலத்த வித்து அக்காவுக்கு கல்யாணம் பண்ணோம், அம்மா ஊருலதான் இருக்காங்க. நா இவருகிட்ட பத்து வருசமா ஓட்டிகிட்டு இருக்கேன், எட்டாயிரம் ரூவா சம்பளம். டெய்லி பேட்டா நூறு ரூவா. ஆக மொத்தம் பதினோராயிரம் ரூவா, ரூமுக்கு ஆயிரம் புடிச்சுக்குவாங்க. இந்த சம்பளத்துக்கு சிட்டில வாடக கட்டி, குடும்பத்தோட இங்க வாழ முடியுமா? அதுக்கு யோசிச்சுகிட்டு தான் இன்னும் கல்யாணத்த தள்ளி போட்டுகிட்ருக்கேன்.

தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.

நா ஓட்டுறேன்லா அந்த வண்டில ஐ.சி.யூ ல இருக்க எல்லா மிசினும் இருக்கு, சிக்கிம், அகமதாபாத் வரைக்கும் ஓட்டிருக்கேன். போன மாசம் ஒரு கொழந்தைக்கு இதயத்துல ஏதோ பிரச்சனன்னு அகமதாபாத்லேந்து இங்க வந்துருந்தாங்க. ஒருமாசம் இருந்தாங்க. ஒரு நா, அடுத்த நாள் காலைல அகமாதாபாத்ல ஒரு ஆஸ்பத்திரிக்கு போயே ஆகனும்னு சொல்லிட்டாங்க,

நைட்டு 11 மணிக்கு வண்டியெடுத்து அடுத்த நா மதியம் 2 மணிக்கு போய் சேந்துட்டோம், 1800 கி.மீ தூரம், 15 மணி நேரத்துல போய் சேத்தோம். அந்த கொழந்தயோட அம்மா அப்பா இப்ப போன் பண்ணி இங்லீசுல என்னன்னமோ சொன்னாங்க, கொழந்த நல்லாருக்காம் ஓனர் சொன்னாரு.

செல வயசானவங்க சொந்த ஊருல தான் உசுரு போகனும்னு சொல்லிடுவாங்க, ”போறவரைக்கும்” தாங்குற மாதிரி இன்ஹேலர் போட்டு ஏத்திட்டு போய்டுவோம், ஊருல எறக்கிட்டு வண்டி ரிவர்ஸ் எடுக்கரதுக்குள்ள உசுரு போய்யிரும். தப்பித்தவறி போகும் போதே செத்துட்டாங்கன்னா சொந்தக்காரங்க நம்பள திட்டுவாங்க, சரின்னு பொறுத்துத்தான் போகனும்.

செத்தவங்க நெலம பரவாயில்ல படுத்த படுக்கையா இருக்குற வயசானவங்க நெலம இன்னும் மோசம், பெரிய்ய பெரிய்ய பிளாட்ல இருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு அட்மிட் பண்ணும் போதும், டிஸ்சார்ஜ் பண்ணும் போதும் ஒத்தாசைக்கு ஒரு கை கூட குடுக்க மாட்டாங்க. மூத்தரப்பையோட நாந்தான் தூக்கி கொண்டுபோய் படுக்க வச்சுட்டு வருவேன். தொடவே அசூச பாக்குரானுவலே எப்டி வச்சு பாத்துப்பானுங்கன்னு யோசிப்பேன்.

ஞாயித்துக்கெழம லீவா? தூங்குற நேரம் மட்டும் தாங்க வேல கெடயாது. பி.எஃப்.-லாம் கெடையாதுங்க சம்பளம் ரெண்டாயிரம் ரூவா ஏத்தி கேட்டதுக்கே ஓனர் ஏசுராரு.

ஊருக்கு போய் பொழச்சுக்கலாம்னுதான் ஆசதான், வெவசாய வேலைக்கு டிராக்டர் ஓட்டுவேன், ஆனா மாசத்துல பத்து நா வேல கெடச்சா பெருசு. கார் வாங்கி கால் டேக்சி ஓட்டி, இன்ஸ்டால்மெண்ட் கட்டி வயித்தக்கழுவரதுக்கு இதுவே பரவால்லன்னு தோனுது, இல்லன்னா வட்டிக்கு வாங்கி ஃபாரின் போகனும். எந்தச் சொத்தும் இல்லாதவனுக்கு சொந்தக்காரன்கூட கடன் கொடுக்க யோசிக்குறான். இதெல்லாம் யோசிச்சாலே தலய வலிக்கி.

இந்த ஆஸ்பத்திரில வேல செய்யுர வார்ட் பாய், ஆயாம்மா, கேண்டீன் மாஸ்ட்டர், செக்கியூரிட்டி, எல்லோரும் என்ன மாரிதாம். அவங்கவங்க கிராமத்த விட்டுட்டு இங்க பொழைக்க வந்து 20, 25 வருசம் இருக்கும். நல்லா ஒழைக்குறவங்க. ஆனா இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது.

டாக்டரு நல்ல கைராசிக்காரரு, சின்ன கிளினிக்கா இருந்துச்சாம், இன்னைக்கு கொழந்தைங்களுக்கு ஒன்னு, நரம்புக்கு ஒன்னு, கிட்னிக்கு ஒன்னு ஓ.பிக்கு (வெளி நோயாளிகள் பிரிவு) ஒன்னு, ஐ.பிக்கு (உள் நோயாளிகள் பிரிவு) ஒன்னு, மல்டி ஷ்பெசாலிட்டி ஒன்னுன்னு, சிட்டிக்குள்ள ஏழு பிரான்ச் இருக்க பெரிய்ய ஆஸ்பத்திரி. டயாலிசிஸ்க்கு அவ்வளவு பேர் வருவாங்க. 11 பெட் இருக்கு அதுக்கு மட்டும். ஒரு தடவ டயாலிசிஸ் பண்ண 2500 ரூபா. மூனு ஷிப்ட் ஓடும். ஒரு நாளைக்கு 20, 30 பேர் வருவாங்க. ஆஸ்பத்திரிக்கு நல்ல வருமானம். இருந்தாலும் இங்க வேல செய்யிரவனுக்கே காசு வாங்கிகிட்டுதான் வைத்தியம் பாப்பானுங்க, எங்க சித்தப்பாவுக்கு ஸ்டேன்லில சேத்துதான் ஆப்ரேசன் பண்ணுனேன், இங்க பணம்கட்ட நம்மளால முடியுமா சொல்லுங்க?

வர்ரேன் சார், பேசண்ட்டு டிஸ்சார்ஜ் ஒன்னு இருக்கு அப்புறம் ராவுகாலம் வந்துருச்ச்சு, எமகண்டம் வந்துருச்சுன்னு கத்துவானுவ.”

முத்துராஜ் சொல்வது உண்மையா? ”உழைப்பால்” உயர்ந்த மருத்துவர் மற்றும் மருத்துவமனையின்’கை’ராசிக்கு பின்னால் இருப்பது என்ன? அதில் மருத்துவமனை தொழிலாளார்களின் உழைக்கும் கைகளில்லையா?.

அவசர கால ஊர்தி ஓட்டி ஊரார் உயிரைக் காக்கும் தொழிலாளி, ஒருவேளை விபத்துக்குள்ளானால் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே கூட சிகிச்சை பெற முடியாது என்பது முரண்பாடில்லையா?

– செவத்தையா

புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ? தோழர் கணேசன்

3

ganesan rsyf 3மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கைசமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னைமதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.த.கணேசன் ஆற்றிய உரை:

“புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று கல்வியாளர் போர்வையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்களும், அதன் ஆதரவாளர்களும் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தொலைக்காட்சிகளில் பேசுகிறர்கள். இதற்கு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பலரும் ஆட்பட்டு ஆமாம், அதில் என்ன பிரச்சினை உள்ளது என கேட்கின்றனர்.

என்ன பிரச்சினை இருக்கு? பார்ப்பனிய சாதி தீண்டாமை கொடுமையால் பெரும்பான்மை மக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி கிடைக்காத நாட்டில், காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை என்று பெரும்பான்மை ஏழை மக்களை கல்வி நிறுவனங்களில் இருந்து விரட்டியடிக்கும் நாட்டில்,5 ம் வகுப்பிற்கு மேல் இனி கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை.

ganesan rsyf 1இதன் நோக்கம் என்ன தெரியுமா? பார்ப்பனிய நரி ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி  முறையை உயிர்ப்பிப்பதுதான். அதாவது, பிள்ளைகள் அவனவன் அப்பன் தொழிலை செய்யணும். பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி என்றும், பார்ப்பன – வேதக் கலாச்சாரம்தான் இந்திய கலாச்சாரம் எனும் புதிய கல்விக் கொள்கையை எப்படி வரவேற்க முடியும்?

சமஸ்கிருத திணிக்கும் மோடி அரசின் முயற்சியை பலரும் ஒரு மொழிப் பிரச்சினையாக அணுகுகிறார்கள். இது ஒரு மொழி பிரச்சனையல்ல.  பல தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, வராலாற்று அடையாளங்களை அழித்துவிட்டு ஒற்றை மொழி – ஒற்றை தேசியம் – ஒற்றை பண்பாடு எனும் ஆர்.எஸ்.எஸ் –ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் 1000 அரசு பள்ளிகளில் அரசு சம்பளத்தில் RSS ஆசிரியர்கள் ஷாகா பயிற்சி நடத்த இருக்கிறார்கள். ராஜஸ்தான், குஜராத் என தான் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பாடப்புத்தகத்தில் இந்துத்துவா கருத்துக்களை புகுத்திவிட்டார்கள். அதை நாடு முழுவதும் செய்யத்தான் இப்போது சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணிக்கிறார்கள்.ganesan rsyf 2

இதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தனியார்வசம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை. உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவத் துடிக்கிறார்கள். இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது இந்த புதிய கல்விக்கொள்கை.

1965-ல் இந்தித் திணிப்பை  விரட்டியடிக்க தமிழகத்தில் இருந்து தீப்பிழம்பாக மாணவர்கள் கிளம்பியதைப் போல  இன்று நம்மை நெருங்கி வரும் புதிய கல்விக் கொள்கை – சமஸ்கிருத திணிப்பு எனும் அபாயத்தை முறியடிக்க மாணவர்கள் கொதித்தெழ வேண்டும் “.

உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

22
paza karuppaiya
மதுரவாயல் பு.மா.இ.மு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் திரு பழ. கருப்பையா

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தி.மு.க வை சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா ஆற்றிய உரை!

“நான் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ள மாநாடுகளில் பேசியுள்ளேன். ஆனால் ரொம்பப் பெரிய வியப்பு – இவ்வளவு இளைஞர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் கீழ் கூடியிருக்கிறீர்கள் என்றால், இன்னொரு 10 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை மாற்றிவிடுவீர்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவிகள் எல்லாம் கொள்கை பிடிப்புள்ள இந்த அமைப்பில் இருப்பது பாராட்டுதற்குரியது.

ஏனென்றால் இளமை என்பது முனைப்பு மிக்கது, அறிவால் பெரும் வளர்ச்சியடையக் கூடிய வயது அது. ஆனால் இன்றைய இளைஞர்கள் சினிமா கதாநாயகர்கள் ரசிகர்களாக தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள். அப்படிப்பட்ட சாதாரண இளைஞர்களைப் போல் இல்லாமல், நீங்கள் தியாகிகளுக்கு உணர்வோடு வீர வணக்கம் செலுத்துகிறீர்கள். இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். உண்மையிலேயே இந்த நாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். சிந்தனை எல்லாம் வர்க்க அடிப்படையில் அமைந்தால் சாதிகளெல்லாம் தகர்ந்து போகும். இன்றைய உலகமயமாக்கல் – தாராளமயமாக்கல் காரணமாக நீங்கள் ஏற்றிக் போற்றுகின்ற சோசலிசத்தின் தேவை கூடியிருப்பதாக கருதுகிறேன்.

இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு. அதுவும் கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே சினிமா டிக்கெட் வாங்க வந்த கூட்டம் போல் கூடியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். புரட்சிகர அமைப்பில் நடைபெறுகிற கூட்டத்தைக் கேட்பதற்கு 50, 100 பேர்கள் தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என நான் எண்ணவே இல்லை.

maduravoyal rsyf meetingகம்யூனிஸ்டுகள் இன உணர்வாளர்களாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பினர், சோசலிசம் பேசுகிறவர்கள், மொழி, இன உணர்வாளர்களாக இருக்கிறீர்கள் என்பது பாராட்டுவதற்கு உரியது.

மொழிவழியாக ஒரு இனம் தன்னை அடையாளம் கண்டு கொள்வது இயல்பானது. பிறப்பிலேயே மொழிவழியாக நாம் தமிழர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகம் நம்முடையது.

பார்ப்பனர்கள் – வேத நாகரிகத்தை சேர்ந்தவர்கள். திராவிடம் என்பது ஆரியத்திற்கு மாற்று. உனக்கு வேத நாகரிகம் – எங்களுக்கு சிந்து சமவெளி நாகரிகம், உனக்கு செம்மொழி சமஸ்கிருதம் – எங்களுக்கு தமிழ், உனக்கு சிறந்த பெண் – பாஞ்சாலி – எங்களுக்கு கண்ணகி, உனக்கு வேதம் – எங்களுக்கு திருக்குறள், உனக்கு கீதை – எங்களுக்கு சங்க இலக்கியம், உனக்கு ஆயுர்வேதம் – எங்களுக்கு சித்த மருத்துவம்.

எவண்டா இன்றைக்கு சமஸ்கிருதம் பேசுறான்? பெரிய சங்கராச்சாரியாரோடு அது செத்து தொலைந்தது. கோவிலில் கிளிப்பிள்ளை போல பேசுகிறார்கள் சமஸ்கிருதத்தை. நமது பூசை முறை வேறு, (எல்லாவற்றையும் கழுவி பூவிடுவது, லிங்க வழிபாடு) அவனது பூசை முறை வேறு. (யாகம், அக்னி வழிபாடு) உன்னுடைய கடவுளை இழந்துவிட்டாய், எங்களுடைய கடவுளை பற்றிக் கொண்டாய். எங்கள் கருவறையில் உனக்கென்ன வேலை.

ஆரிய மேட்டிமையை, சமஸ்கிருத மேலாண்மையை எதிர்த்தால் ஒழிய நாம் சுயமரியாதை வாழ்வை பெற முடியாது. திருவனந்தபுரத்தில் சென்று விவேகானந்தர் – we are all hindus – என்ற போது We are not hindus என்றார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. பாரதி- தமிழை பாராட்டினாலும் அடிப்படையில் பார்ப்பனன். அவன் சமஸ்கிருதத்தை தெய்வ பாஷை என்கிறான். ஆரியத்தைவிட மேலாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். சமஸ்கிருதம் செத்துத் தொலைந்து வெகு காலமாகிவிட்டது. அதில் நவீன அறிவியல், தொழில்நுட்பம், எதுவும் இல்லை.

பாரதியின் உள்மனதில் ஆரியர்கள் தான் அறிவு பரம்பரையினர். நமக்கு பாரதி தாசன் உள்ளார். அவர் கூறியது போல விழிப்புற்று எழுவோம்!”

காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?

3

emotionalவேறு வழியின்றி விநாடிக்கு 15,000 கன அடி காவிரி நீரை திறந்து விடுகிறது, கர்நாடக அரசு. மாண்டியா, மைசூரூவில் நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள், அனைத்துக் கட்சி கூட்டம் எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப கர்நாடக காங்கிரசு அரசு திறந்து விடுகிறது. இருப்பினும் இந்த நீர் கூட தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு போதுமானதல்ல என்று விவசாயிகள் கூறுகின்றனர். தமிழக தரப்பில் விநாடிக்கு 26,000 கன அடி நீர் கேட்கப்பட்டது. கர்நாடகம் 10,000 அடி என்று சொன்னது. இறுதியில் இரண்டும் நடுவில் உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நீர் திறப்பதை எதிர்த்தன. ஆனால் 2012-ம் ஆண்டில் இதே போன்றொரு முடிவைத்தான் அப்போதைய பா.ஜ.க அரசு எடுத்ததாக முதல்வர் சித்தராமையா நினைவுபடுத்துகிறார். உண்மைதான், அதே போன்று அப்போது அந்த முடிவை எதிர்த்து காங்கிரசு போராடியதும் உண்மைதான்.

காவிரியை வைத்து கர்நாடக கட்சிகள் நடத்தும் இந்த போங்காட்டம் ஒருபுறமிருக்க இந்த பிரச்சினை குறித்து அவர்கள் தரப்பில் முன்வைக்கும் வாதம் என்ன?

ஒராண்டின் சராசரியான பருவமழையை அதாவது ஜூன் முதல் மே வரை கணக்கிட்டால் கர்நாடக அணைகளில் வரும் நீரின் அளவு 242 ஆயிரம் மில்லியன் கன அடி. அதன்படி 2007 நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு படி ஒராண்டில் கர்நாடக அரசு 192 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்.

ஆனால் தற்போது போதுமான நீர் வரத்து இல்லை, தங்களிடம் 51 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது என வாதிடும் கர்நாடக அரசு, அதுவும் தென் கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது என்கிறது. சென்ற ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் 25 டி.எம்.சி நீர் இருந்தாலும் இந்த ஆண்டு 18 டி.எம்.சி மட்டுமே உள்ளது என்றும் வாதிடுகிறது.

இதை இன்னும் அடுத்த கட்டமாக விரிக்கும் சில அறிஞர்கள், நடுவர் மன்றம் நீர் அதிகம் உள்ள காலத்தை கணக்கிடுவது போல நீர் வறண்ட வருடங்களை கணக்கிடவில்லை என்கிறார்கள். இதுதான் காவிரி முரண்பாட்டிற்கு காரணம் என்று மேதாவித்தனமாகவும் பேசுகிறார்கள். கர்நாடகத்தைப் பொறுத்தவரை காவிரி தனது சொந்தம், தமிழகத்திற்கு தருவது தானம் என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்குகிறார்கள்.

காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமான நதியல்ல. சரியாகச் சொன்னால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தம். காவிரியின் அமைவிடம், ஆற்றின் ஓட்டம், வரலாற்று ரீதியான அதன் பயன்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் இந்த நான்கு மாநிலங்களின் காவரி நீர்ப் பகிர்வை முடிவு செய்ய முடியும்.

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் படி பற்றாக்குறை இல்லாத ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரியில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; பற்றாக்குறை ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் குறைகிறதோ அந்த பற்றாக்குறை இதே வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

அதன்படி பார்த்தால் நீர் அதிகம் வந்தாலும் சரி, குறைவாக வந்தாலும் சரி தமிழகத்தின் பங்கு 58%, கர்நாடகவின் பங்கு 37%, கேரளாவின் பங்கு 4%, புதுச்சேரியின் பங்கு 1% தரப்படவேண்டும். ஆனால் கர்நாடக ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் இந்த உண்மையை மறுத்து ஏதோ காவிரியில் பஞ்சம், நீரில்லை, குடிநீருக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அயோக்கியத்தனமாக பேசுகிறார்கள், நியாயத்தை திரிக்கிறார்கள்.

ஒரு நதியின் தாழ்வாராப் பகுதியின் உரிமையை மறுக்கக் கூடாது என்பது உலகெங்கும் நதிப் பகிர்விற்காக உருவாக்கப்பட்டுள்ள பொது விதி. அதை கர்நாடகம் மறுப்பதே இந்த முரண்பாட்டின் அடிப்படையே அன்றி வறண்டு போன காவிரி அல்ல.

மேலும் முழு கர்நாடகமும் இதற்காக வீறு கொண்டு போராடவில்லை. மாண்டியா, மைசூரூ போன்ற காவிரிப் பாசன பகுதிகள் மட்டுமே போராடுகின்றன. அமைதிக் காலங்களில் 20 “பைட்டர்களோடு” உலா வரும் வாட்டாள் நாகராஜ் போன்ற இனவெறியர்கள் இத்தகைய காவிரி சீஸனில் அந்த இருபதை இருநூறாக்கலாமா என்று புடைக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு காவிரி வறண்டு போவதையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

இந்த முரண்பாட்டை நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பதற்கு வக்கற்ற மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து தற்காலிக உத்தரவுகளை போட்டு தீர்வை தள்ளிப் போகின்றன. ஒரு வகையில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இத்தகைய நீர் தொடர்பான தேசிய இன முரண்பாடு அவர்களுடைய அனைத்தும் தழுவிய அடக்கு முறை மற்றும் சுரண்டல்களுக்கு வரம்பிற்குட்பட்ட அளவில் வலு சேர்க்கும். இது ஒரு துணைக் காரணம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதை தீர்க்காமல் வெட்டி நியாயத்தோடு இந்திய தேசியம் பேசும் கட்சிகளையும், அரசு, நீதி அமைப்புக்களையும் எதிர்த்துப் போராடுவதோடு தேவைப்பட்டால் பொருளாதார முற்றுகையும் கூட செய்ய வேண்டியிருக்கும். எனினும் இத்தோடு மட்டுமே இந்தப் பிரச்சினை முடிந்து விடாது. கர்நாடக மக்களிடம் தமிழகத்தின் நியாயம் குறித்து பிரச்சாரம் செய்வதையும் அதற்குரிய கருத்துப் போராட்டத்தை நடத்துவதும்தான் இறுதியில் நமது நியாயத்தை வெற்றிபெறச் செய்யும். ஏனெனில் ஒரு படை நடத்தி இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அதே நேரம் இந்திய தேசியத்திற்கு அத்தாரிட்டியாக இருக்கும் மத்திய அரசு சட்டப்படி நடக்க முடியவில்லை என்றால் அந்த வெட்டியான சட்ட அமைப்பை கலைப்பதுதான் சரி.

இதைத் தாண்டி தமிழின இனவாதிகள் பலர் காவிரி பிரச்சினையின் போது தமது இருப்பை காட்டிக் கொள்ள அதிக ஒலி கொடுக்கின்றனர். அத்தகைய நீர்த்துப் போன ஒலிகளில் ஒன்று “இனியாவது திராவிடம், இந்தியம் பேசுபவர்கள் திருந்தட்டும்” என்பது. மாண்டியா விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையாக காவிரி இருப்பதை இவர்கள் கன்னட மக்களின் இனப்பெருமை சார்ந்த முரண்பாடாக மாற்றுகிறார்கள். மேலும் மாண்டியா விவசாயிகளுக்கு காவிரி மட்டுமல்ல, மறுகாலனியாக்க நடவடிக்கைகளும் மிகப்பெரிய வில்லனாக அச்சுறுத்துகின்றது. அங்கேயும் விவசாயிகள் தற்கொலை நடக்கிறது.

640px-Kaviri_at_Thiruvaiyaruதமிழகத்திலேயே இத்தகைய நீர் பிரிக்கும் பிரச்சினைகள் கிராமம், மாவட்ட அளவில் இருக்கத்தான் செய்கின்றன. காவிரியின் கடைமடைப் பகுதிக்கு வந்து சேர வேண்டிய நீர் சமீப ஆண்டுகளாக வருவதில்லை, மேட்டூர் முதல் திருச்சி வரையிலான பகுதிகளிலேயே எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தஞ்சை பகுதி விவசாயிகள் கருதுவதும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு பொது நோக்கத்திற்காக தனது நுகர்வை சுருக்கியோ, ரத்து செய்தோ தேவைப்படும் மக்களுக்கு கொடுப்பது என்பது இரு தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒரு தேசிய இனத்திற்குள்ளேயே வந்தாக வேண்டிய பண்பாட்டு மாற்றமாகும். அதன்படி பார்த்தால் இனவாதமோ இனவெறியோ இதை ஒருபோதும் கொண்டு வராது.

சென்னை மழை வெள்ள நாட்களில் சீமானும் அவரது தம்பிகளும் ஒரு மொட்டை மாடியில் மூன்றுநாட்களாக சிக்கிக் கொள்கிறார்கள் என்று வைப்போம். அக்கூட்டத்தில் இரண்டு வட இந்திய குழந்தைகளும், மூன்று வயதான மலையாளிகளும், ஐந்து கன்னடத் தொழிலாளிகளான பெண்களும் உள்ளனர். மீதி இருபது பேர் ‘சுத்தமான’ தமிழர்கள், இளைஞர்கள் மற்றும் ஆண்கள். மூன்று நாட்களாக உதவிகள் வரப்போவதில்லை. இருப்பது ஐந்து கிலோ அரிசி மட்டுமே.

அதை யார் சமைத்து உண்ணுவது? தமிழகத்தை தமிழன் ஆண்டால்தான் விடுதலை எனவே இதை நானும், நாமும் மட்டுமே உண்ணுவோம் என்று சீமான் கூறினால் தம்பிகளே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். காரணம் குறிப்பிட்ட அவசர நிலையில் யாருக்கு பாதிப்பு யாருக்குத் தேவை என்பதை வைத்தே அத்தியவாசிய தேவைகளை அளிப்பது குறித்து முடிவு செய்ய முடியும். இதுதான் மனித குலம் தனது பரிணாம மற்றும் நாகரீக வளர்ச்சியில் கண்டடைந்த வரலாற்று முன்னேற்றம். இல்லையேல் கிழவிகள் வேட்டைக்கு பயன்படுவதில்லை என்று வேட்டை நாய்களுக்கு உணவாக போட்ட காட்டுமிராண்டி நிலையிலேயே நாம் இருந்திருப்போம்.

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 90-களில் நடத்திய இறால் பண்ணை அழிப்பு போராட்டத்தின் போது 1000-த்திற்கும் மேற்பட்ட தோழர்கள், மக்கள் இரு வார காலமாக திருச்சி சிறையில் இருந்தனர். சிறையில் தோழர்கள் ஒரு கமிட்டியை தெரிவு செய்து தமது சிறை வாழ்க்கையை நிர்வகித்தனர். அரசியல் ரீதியான உரை, கலைநிகழ்ச்சி மட்டும் அவர்களது நிர்வாக நடவடிக்கை அல்ல. சிறைவாசம் செய்யும் தோழர்களை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் ரொட்டி, பழம், பிஸ்கெட்டு, பீடி, சிகரெட்டு அனைத்தையும் அந்தந்த தோழர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியாது. புகை வஸ்துக்கள் மட்டும் அப்படியே  சமமாக பிரிக்கப்பட்டு புகை பிடிப்போருக்கு கொடுக்கப்படும். ஒரு தோழருக்கு ஐந்து பீடிக்கட்டுக்கள் வந்தால் பிரித்த பிறகு அவருக்கு ஐந்து பீடிகள் மட்டுமே கிடைக்கும். உணவு வகைகளை அப்படி பிரிக்க முடியாது.

காரணம் சிறைக்கமிட்டி அந்த உணவு வகைகளை பிரித்து நோயுற்றோர், குழந்தைகள், முதியோர் என்று வரிசைப்படி விநியோகிக்கும். இலாபத்தை வைத்து மட்டும் சந்தையை நடத்தம் முதலாளித்துவத்திற்கு மாற்றான சோசலிச சமூகத்தின் பண்பாடு இது. ஆரம்பத்தில் இந்த முறை புதிதாக வந்த சில தோழர்களுக்கு உடன்பாடில்லை. நமது குழந்தைகளுக்கு வரும் பிஸ்கெட்டை வேறு நபர்கள் உண்ணலாமா என்று வெளியே தெரியாத ஏக்கமும், அவஸ்தையும் இருந்தது உண்மை. பிறகு நாட்பட அவர்கள் இதை உணர்ந்து ஏற்கிறார்கள். சிறை அனுபவம் குறித்து பேசும் போது சில புதிய பெண் தோழர்கள் தமது அனுபவமாக இதை பேசினர்.

தமிழகத்தில் வறண்ட மாவட்டங்கள் உள்ளது போலவே வளமான மாவட்டங்கள் உள்ளன. அனைத்து வசதிகளும் உள்ள நகரங்களைப் போலவே அடிப்படை வசதிகளே இல்லாத சிறுநகரங்கள் பல உள்ளன. வழுக்கிச் செல்லும் சாலைகளுக்கு இணையாகவே, கரடு முரடான சாலைகளும் உள்ளன. ஓட்டைக் கூரை பேருந்துகளோடு உல்லாச பேருந்துகளும் இங்கே ஓடுகின்றன. ஆக இதை சரியாக்குவது என்பது கிட்டத்தட்ட காவிரி நீரை பிரிப்பது மாதிரிதான்.

தேசிய இன விடுதலையோ இல்லை சமூத்தை அடியோடு மாற்றும் புரட்சிகளோ இத்தகைய சுயநலமறுப்பை நடைமுறையில் மக்களிடம் சாதிக்கும் போதே தமது நோக்கத்தில் வெற்றிபெறுகின்றன.

ஆகவே இனவெறியால் இருதரப்பு மக்களிடமும் பகை முரண்பாட்டைத்தான் தோற்றுவிக்க முடியும். அதே நேரம் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியாவை வைத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்தும், இந்திய அரசின் உதவியோடு காவிரி நீரை மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்தும் நாம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த வேண்டும். மறுபுறம் கர்நாடக மக்களிடமும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இனவெறியர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.

மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல் – பொதுக்கூட்ட படங்கள்

0

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக அலையலையாக திரண்ட மாணவர்களால் நிறைந்தது மதுரவாயல்!

செப்டம்பர் – 1, சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்!

பொதுக்கூட்ட ஏற்ப்பாடுகள் (15)தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நுழைவாயிலான மதுரவாயல் – கோயம்பேடு பகுதி அன்று மாணவர்களால் நிறைந்திருந்தது. திரும்பிய திசையெங்கும் பு.மா.இ.மு கொடிகளும், சுவரொட்டிகளும், பேனர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட அனைவரையும் அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது.

மோடி அரசு நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைப்பதற்காக டி.எஸ்.ஆர் சுப்ரமணியன் எனும் ஓய்வுபெற்ற முன்னாள் அமைச்சரவைச் செயலர் தலைமையில் 5 பேர் கொண்ட  குழுவை அமைத்தது. இக்குழு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்தது. மோடி அரசோ அதனை முழுமையாக வெளியிடாமல் “தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள” என்ற ஒரு ஆவணத்தை மட்டும் அதுவும் ஆங்கிலத்தில் வெளியிட்டது. கூடவே மக்களிடம் கருத்து கேட்கும் நாடகத்தை நடத்திவிட்டு, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த தயாராகி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் கல்வியாளர், அதிகார வர்க்கத்தினர் அடங்கிய குழுவால் ரகசியமாக தயாரிக்கப்பட்டு, சதித்தனமாக அமுல்படுத்த முயன்று வரும் இந்த புதிய கல்விக் கொள்கையானது பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை முற்றிலுமாக மறுக்கும் கொள்கை என புமாஇமு இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக அம்பலப்படுத்தியது.

செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் தனது இந்து-இந்தி-இந்தியா எனும் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொள்வதையும் மறுபுறம், கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டதுதான் இந்த புதிய கல்விக்கொள்கை என்பதை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி(RSYF) கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை சுமார் 3 லட்சம் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தியது. ஆரிய – பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் வகையில் 6000 சிறு வெளியீட்டை வினியோகித்தது.  இப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் வீச்சான பிரச்சாரம் மேற்கொண்டதன் தொடர்ச்சியாக சென்னை பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பிரச்சாரத்திற்கு இடையில் கடந்த ஜூன் 28-ம் தேதி சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், ஜூலை 24-ம் தேதி புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் மாணவர்களைத் திரட்டி தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது மாணவர்கள் மத்தியிம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவர்கள் மட்டும் சுமார் 1500-த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு பொது நோக்கத்திற்காக தமிழக மாணவர்கள் இப்படி அணிதிரள்வது அபூர்வமானது என்றார் ஒருவர். பல்வேறு மாவட்டப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிச் சீருடையுடனும், பு.மா.இ.முவின் சீருடையுடனும் சாரை சாரையாக அணிவகுத்து வந்தார்கள். புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பியவாறும், பறையிசை முழங்கியவாறும் கம்பீராமாக பேரணியாக வந்தது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

தி.மு.க வைச் சார்ந்த எழுத்தாளர் திரு.பழ. கருப்பையா அவர்கள் கூடியிருந்த மாணவர்கள் இளைஞர்கள் கூட்டத்தை பார்த்துவிட்டு ‘’இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டம் – சோசலிசத்தின் மீது பற்று கொண்ட கூட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கூட்டம் – கடைசி வரை கட்டுக்கோப்பாக இருப்பது வியப்பு. அதுவும் கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே சினிமா டிக்கெட் வாங்க வந்த கூட்டம் போல் கூடியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். புரட்சிகர அமைப்பில் நடைபெறுகிற கூட்டத்தைக் கேட்பதற்கு 50, 100 பேர்கள் தான் இருப்பார்கள் என்று கருதினேன். ஆனால் இப்படி ஆயிரக்கணக்கில் இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என நான் எண்ணவே இல்லை’’ என்றார்.

மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் எதிரில் மாலை சுமார் 5.30 மணியளவில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.த.கணேசன் தலைமை தாங்கினார். தி.மு.க வைச் சார்ந்த எழுத்தாளர் திரு.பழ.கருப்பையா, அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர். திரு. ரமேஷ்பட்நாயக், குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர். திரு. ப.சிவக்குமார், சென்னை ஐ.ஐ.டி யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு.ரமேஷ், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்.சி.ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுத்தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

கூட்டம் 6.45 மணியை நெருங்கிய போது மழைத்துளி விழத்தொடங்கியது. ஆனாலும் சலசலப்பின்றி தொடர்ந்து கூட்டம் நடந்தது. அடுத்து, மழை சற்று அதிகமாக பெய்தது அப்போதும் யாரும் கலைந்து செல்லவில்லை. கொட்டும் மழையிலும் கூட்டம் தொய்வின்றி நடந்தது. சுமார். 7.15 மணியளவில் மழை கனமாக பெய்தது. அப்போது தவிர்க்கமுடியாமல் கூட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டது.

இயற்கை ஏற்படுத்திய இந்த தடையை உடைத்து மாற்று ஏற்பாடு செய்து கூட்டத்தை எப்படியாவது நடத்திமுடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பு.மா.இ.மு தோழர்கள் விரைந்து ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்தனர். மழை சற்று விட்டபின்பு அனைவரையும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று கூட்டத்தை முழுமையாக நடத்தி முடித்தனர். மழையில் நனைந்திருந்த மாணவர்களும், பொதுமக்களும், பெண்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

கல்லூரி, பள்ளிகளில் பாடம் நடக்கும் போதோ, வீட்டில் போரடிக்கும் போதோ சினிமா, கிரிக்கெட், உலா என்று அலைபாயும் மாணவர் சமூகம் இப்படி கட்டுக் கோப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிவகுப்பதை உளவுத்துறை போலிசார் குறித்து வைத்திருப்பார்கள். குறிப்பை மோடி அரசிடம் கொடுக்கட்டும். முடிவை மாணவர்களும் மக்களும் எடுப்பார்கள்.

(பொதுக்கூட்டத்தின் உரைகளை அடுத்தடுத்து வெளியிடுகிறோம்.)

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.