Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 565

கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் ?

2

ந்து முன்னணி கட்டப்பஞ்சாயத்து ரவுடி சசிகுமார்  கொலையையொட்டி காவிக் குரங்குகள் போட்ட வெறியாட்டத்தை வினவில் அம்பலப்படுத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாய் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தும்  தைரியமளித்து வந்தனர். அது குறித்த தொகுப்பு…

துடியலூர் என்பது கோவை மாநகரின் வடக்கு எல்லை. மாநகராட்சியின் முதல் வார்டு துடியலூர் தான். அதன் கவுன்சிலர் வத்ஸலா பாஜக வைச் சேர்ந்தவர். கொடுத்த கடனை கேக்க வீட்டுக்கு வந்தவரை வத்ஸலாவும் அவரது கணவரும் சேர்ந்து வீட்டிலேயே அடித்து இரண்டு நாள் கழித்து அந்த நபர் மாரடைப்பில் இறந்ததாகவும், அதற்கு காரணம் இவர்கள்தானென்றும் ஒரு வழக்கு பதிவாகி தற்போது விடுதலை அடைந்துள்ளனர். இது வத்ஸலா’வின் கடந்த கால அரசியல் வரலாற்றில் ஒரு அத்தியாயம். ABBA எனப்படும் பிராமணர் சங்கங்களின் மாநாடுகள் செயற்குழுக்கள் நடக்கும் இடம் துடியலூர்தான்.

பெரியநாயக்கன் பாளையம் சித்ராக்கா எனும்  சித்ரா இக்கலவரத்தின் முன்னணிப் படைகளுக்கு தலைமை தாங்கியவர்களுள் ஒருவர். இவரது கணவர் காளிதாஸ் அக்வாசாப் டெக்ஸ்மோ பம்ப் கம்பெனியில் வேலை செய்தவர். சி.ஐ.டி.யு வில் எஞ்சியினியரிங் பிரிவில் இருந்தவர். சித்ராக்கா சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி மோசடி செய்து பணத்தை வைத்து வழக்குகளை உடைத்து பின்னர், பாதுகாப்புக்காக அரசியலில் இணைந்த ஒரு கிரிமினல். கிரிமினல் நதிகளின் கடலான ஆர்.எஸ்.எஸ் ஸி-ல் பக்தி மற்றும் விநாயகர் சதுர்த்திக்கான விளம்பரங்கள் மூலம் ஐக்கியமாகி மதவெறி நாற்றத்தை துடியலூர் தாண்டி  பெரியநாயக்கன் பாளையம் பகுதி முழுக்க கிளப்பி ஒரு பஞ்சாயத்து தலைவராவது ஆகிவிட வேண்டும் என்பதே அம்மணியின் திட்டம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவை அரசு மருத்துவமனையில் துவங்கிய சசிக்குமாரின் பிண ஊர்வலம் துடியலூர் மின்மயானம் வரை நடந்தது. இந்த வன்முறை வெறியாட்டத்தின் கிளைமாக்ஸ் துடியலூர் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. துடியலூர் பகுதிக்கு சுமார் 3:00 – 3:30 வாக்கில் வந்த ஊர்வலம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கடைகளை நொறுக்குவது, ஆபாசமாக முழக்கமிடுவது, கடைகளுக்கு தீ வைப்பது, போலீஸ் ஜீப்புக்கு தீ வைப்பது எனத் தொடர்ந்து 5 மணி அளவில் காவல்துறை தடியடி நடத்த துவங்கிய 10 நிமிடங்களில் அந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதை முதலிலேயே செய்திருக்கலாம் என பொதுமக்கள் பலரும் ஆத்திரமாக பேசினர்.

துடியலூர் முதன்மைச் சாலைக்குமோ அல்லது அந்த மின்மயானத்துக்குமோ சம்பந்தமே இல்லாமல் உள் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர் கடைகளை வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். அதிலும் வத்ஸலாவின் முதல் வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகளை விட இரண்டாவது வார்டில் இருக்கும் இஸ்லாமியர் வீடுகள் அதிக தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. ஒன்றாவது வார்டு கவுன்சிலர் வத்ஸலா மீதான கொலைக் கேஸிற்காக அவரை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளின் கடை, வீடுகள் அதிக நேரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் போன் பண்ணி, “தைரியம் இருந்தா கடைக்கு வா” “உன் கடையைத் தான் உடைக்கிறோம்” என ஒவ்வொருவரையும் கூப்பிட்டுள்ளார்கள். “இவங்க கடை வீட்டை என்ன வேண்ணா பண்ணுங்க கேஸை முழுக்க நான் பாத்துக்கறேன் என வத்ஸலா அக்கா கொடுத்த உறுதிதான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள்.

பிணம் விழுந்து நான்கு நாள் கழித்து அஸ்தி கரைக்க நாங்க மேட்டுப்பாளையம் போகிறோம் என காவிக் குரங்குகள் கூற, அதற்கு காவல்துறை அவர்கள் குடும்பம் மட்டும் போனால் போதும், மேட்டுப்பாளையமெல்லாம் வேணாம்., உங்களுக்கு 30 கிலோமீட்டரெல்லாம் பாதுகாப்பு கொடுக்க முடியாது, கம்முனு பேரூர் போங்க என போலீஸ் கூறியதாகவும், அங்கே தண்ணியில்லை (நொய்யல்) என இந்த கும்பல் மறுக்க போலீஸ் தனது செலவில் தண்ணீர் ஏற்பாடு பண்ணித் தருவதாக கூறி பேரூர் அனுப்பியிருக்கிறது. இதையொட்டி மீண்டும் நாங்க பந்த் பண்ணுறோம் என அவர்கள் வதந்தியை துவக்க அது இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாங்கள் சந்திக்க சென்ற பாதிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய கடைக்காரரின் குடும்பம் எங்கோ வெளியில் செல்வதற்காக தயாராகி அமர்ந்திருப்பது போல தெரிந்தது. கிளம்பும் நேரத்தில் வந்துட்டோமா என வினவ, “இல்லைங்க,ஒரு ஃபங்சனுக்கு கிளம்பலாம்னு தான் இருந்தோம் இன்னிக்கு ஏதோ அந்தாளோட அஸ்தி கரைக்க போறாங்களாமா…? பந்த்னு சொன்னாங்க, அதான் போகாம அப்படியே உக்காந்துட்டோம்.” எனக் அவர்கள் கூற, முதல் பதிலே அவர்களின் அவல நிலையை பளிச்சென காட்டுகிறது. அதிலும் 35 வருடங்களாக குடியிருக்கும் தெருவில், ஊரில், தனது ஊரைச் சேர்ந்தவர்களால் தனது வீடுகளும் கடைகளும் அடையாளம் காட்டப்பட்டு வன்முறைக்குள்ளாகி தற்போது எந்நேரமும் ஒரு திகிலில் அச்சுறுத்தலின் கீழே வாழும் நிலை.

சோடா பாட்டில், கல் என அனைத்தையும்கடையிலும் வீட்டிலும் வீசியிருக்கிறார்கள். “எல்லா, உள்ளூர்க்காரனுக தான் ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் அக்கா பிரியாணி எப்ப கிடைக்கும்? எப்ப கிடைக்கும்? னு சிரிச்சிட்டே கேட்டவனுகதான். மொகத்துக்கு முன்னால இப்பிடி பேசிட்டு இப்ப முதுகுல குத்தாராணுக. வாழ விட மாட்டோம்னு சத்தம் போடுறான். பாகிஸ்தான் போங்கன்னு சத்தம் போடுறான்.” அருகிலிருந்த சிறுமியை காட்டி, “இந்த கொழந்த பொட்டு பூவு எல்லாம் வெச்சிக்கிட்டு நிக்குது. ஏம்மானு, கேட்டதுக்கு நாம இந்துன்னு சொன்னா நம்மை விட்டுருவாங்கள்ளம்மா…! அப்டின்னு சொல்லுது. இங்கிருந்த கம்யூனிஸ்டுகாரங்க (CPM) எங்களை அவங்க வீட்டுக்குள்ள போக சொல்லிட்டு, “வெளியே வராதீங்க உள்ளேயே இருங்கன்னு” பாதுகாப்பு கொடுத்தாங்க. இப்ப வரைக்கும் வேற எந்தக் கட்சியும் வரல. இந்த வார்டு கவுன்சிலர் தொகுதி எம்‌.எல்‌.ஏ.னு யாருமே வரல. போலீஸ் ஒருத்தர் கூட வரல. வயசுப் பொண்ணுக, சின்னக் கொழந்தைங்க… இருக்காங்க. வந்து கொள்ளையடிச்சுட்டு போறாணுக. எங்க கடைலயும் பூட்ட உடைக்க முயற்சி பண்ணிருக்கானுக பூட்டு ஸ்ட்ராங்க் ஒடைக்க முடில. மதினா பேன்ஸி அப்பாஸ் பாய்க்கு போன் பண்ணி, டேய், உன் கடையத்தான் ஒடைக்கிறோம். வாடா பாக்கலாம். தைரியம் இருந்தா வாடான்னு சொன்னான். விநாயகர் சதுர்த்தி வசூல்’ல கொடுத்தது பத்தல அவனுகளுக்கு. இன்னொரு பிரச்சினை வரும் பாத்துக்கறோம்னு சொல்லிட்டு போனானுக.”

பக்கத்தில் இருந்த ஒரு காய்லான் கடையில் பேசுகையில், “எட்டு மூட்டை பாட்டிலை தூக்கிட்டு போயிருக்கானுக. அதைத்தான் எல்லா பக்கமும் வீசுறதுக்கு பயன்படுத்தியிருக்கானுக. பிளாஸ்டிக் வேஸ்ட் இருந்தது ஒரு மூட்டை ஐம்பது நூறுதான் வரும் அதையும் தூக்கிருக்கானுக. மீன் கடைல இருந்து ரெண்டு கைலயும் மீனை தூக்கிட்டு போயிருக்கானுக. எல்லா பகுதியிலயும் வந்து முதல்ல கேமராவை தேடி அதை உடைக்கிறானுக. எங்களுக்கு தெரிஞ்சு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் யாரும் அரஸ்ட் ஆகல. எல்லாருமே சேர்ந்து போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கோம்.” அனைத்து பாதிக்கப்பட்டோரையும் இணைத்து எஸ்‌.டி‌.பி‌.ஐ கட்சியினர் போலீசில் புகார் கொடுத்திருப்பதாக சொன்னார்கள்.

“பல கடைகளுக்கு தீ வைக்க முயற்சி செய்திருக்காணுக. நடக்கல. மெயின் ரோட்டில் பி‌.ஜே.பி கொடி கட்டிய கடை மட்டும் பாதுகாப்பா இருக்கு. மற்றவை எல்லாத்தையும் ஒடைக்கிறாங்க. ஓம்னு போட்டிருந்த ஆட்டோ தப்பிச்சது மத்த ஆட்டோக்களை உடைச்சிட்டாங்க. நியாயமான கட்டணம் வாங்கும் மக்கள் ஆட்டோக்களை பி.ஜே.பி ஆட்டோக்காரனுக இந்த கலவரத்தை பயன்படுத்தி அடிச்சு ஒடச்சானுக. சில கடைகளில் காவிக் கொடியை கட்டி கடையை காப்பாத்தியிருக்காங்க.

kovai-hindu-munnai-riots-images-11துடியலூரில் அதிக சேதமடைந்தது ஏ‌.எம் பென்ஸ் எனும் செருப்புக் கடை. அந்த வரிசையில் இருக்கும் நாற்பது கடைகளை விட்டுவிட்டு இந்த கடை முஸ்லீம் கடை என்பதை அறிந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள். இந்த ஒரு கடைக்கு மட்டும்பல இலட்சம் சேதம். காவலர்கள் முன்னாடியே இது நடந்திருக்கிறது. கமிசனர் முன்னாடியே போலீஸ் ஜீப்பை எரிப்பவர்களுக்கு இது எம்மாத்திரம். சென்னை மொபைல்சிலும் திருட்டு ஏராளமாக நடந்திருக்கிறது. கடைக்குள் திருட வந்த இந்து முன்னணியினர் ஐம்பதிலிருந்து அறுபது பேர் வரை நிற்க வெளியே போலீஸ்காரர்கள்  5 பேர் நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.

kovai-hindu-munnai-riots-images-14எச்‌.எஸ்‌.ஆர் பிரியாணி கடை நான்கு இலட்சம் ரூபாய் சேதத்தை தாங்கி நின்று கொண்டிருக்கிறது. “ஆர்‌.எஸ்‌.எஸ் காரரை நண்பராக பெற்று என்ன பிரயோஜனம்? ஒண்ணுமில்ல பாய் என்றே எனக்குத் தெரிந்தவர்கள் கூறியவாறே கடையை அடித்து நொறுக்கினார்கள். மனித உயிருக்கு பாதுகாப்பில்லாத இடத்தில் நான் எப்படி உயிர் வாழ முடியும்” என அந்த பாய் கேட்கையில், என்ன சொல்லி தேற்றுவதேன்றே தெரியவில்லை.

அடுத்து மஹாலட்சுமி பேக்கரி. முந்தைய வார்த்தையை திரும்பப் படியுங்கள் அது மஹாலட்சுமி பேக்கரிதான். இந்துக்கடவுளின் பெயரை கொண்ட கடைதான். தினமும் பூசை, சாமி கும்பிடுவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்பவரின் கடைதான். என்ன பலன்…?

kovai-hindu-munnai-riots-images-07கடை துவங்கி 2 வருடம் தான் ஆகிறதாம். இன்னும் ஷட்டர் கூட இல்லையாம். இந்தக் கடையும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்., விநாயகர் சதுர்த்தி வசூலுக்கு 2000 கேட்டிருக்கிறார்கள். அதற்கு கடைக்காரர் தயங்கவே அடுத்து 2000 குடு என மிரட்டியிருக்கிறார்கள். 500தான் கொடுத்தாராம். அந்த ஐநூறையும் வாங்கிக் கொண்டு ‘பாத்துக்கறோம்’ எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்கள். அதனால் இந்த கடையையும் நொறுக்கிவிட்டார்கள்.

எவர் பிரஷ் எனும் இன்னொரு இந்து சமூகத்தை சேர்ந்தவரின் கடையையும் அடித்து உடைத்திருக்கிறார்கள். காரணம்., துடியலூர் பகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு நோட்டீஸ் ஸ்பான்சர் செய்த ஒரே காரணத்துக்காக அவரது கடையையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பா.ஜ.க-வின் கோவை மாவட்ட பொறுப்பாளரான  நந்தகுமாரின் உறவினர் இவர். எனினும் முசுலீம் கட்சிக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என்று நாள் குறித்து அடித்திருக்கின்றனர்.

இப்படி அனைத்துக் கடைகளிலும் திருடியவர்கள் பங்களா தேஷ் முஸ்லீம் என்று எச் ராஜாவும் வட இந்தியர்கள் என்று பொன் இராதாகிருஷ்ணனும் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். இவர்கள் வாந்தியை பொறுக்கித் தின்று அதை அச்சு ஊடகத்தில் எழுத்தாக கக்கியிருக்கிறது தமிழ் இந்து. அது உண்மை எனில் வட இந்தியர்களுக்கு கடைகளின் பெயரை தமிழில் படித்து முசுலீம் கடைகளை மட்டும் எப்படி அடிக்க முடிந்தது? இங்கே ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு முசுலீம்கள் மீதான வெறுப்பு இருப்பது போலவே தொழிலாளிகள் மீதான வன்மமும் இருக்கிறது.

பிணம் வண்டியில் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்னரே டூவீலரில் ஒரு டீம் மெதுவாக வருகிறது. அவர்கள் ஒவ்வொரு கடையாக கை காட்டுகிறார்கள். இந்த கடை, அப்புறம் அந்தக் கடை அதுக்கு பக்கத்துல இருக்கறத விட்டுட்டு அதுக்கு அடுத்த கடை என. பின்னால் நடந்து வருபவர்கள் போய் உடைக்கிறார்கள். போலீஸ் லத்தியோடு காவிக்கு பதில் காக்கிச் சட்டையை போட்டுக் கொண்டு ஊர்வலத்தில் வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் விடலைகள்.  இளம் கொள்ளிக் கட்டைகள். டே., “ங்கொம்மா” என்பது போன்ற பொருட்செறிவுள்ள மொழிகளில் சுற்றியுள்ள மக்களை விளித்து “நீங்கல்லாம் இந்துன்னா, எங்க பின்னாடி வாங்கடா” என்பது போன்ற அழைப்புக்கள். எல்லோரும் நல்ல மப்பில் மிதந்தவாறே கலவரம் செய்கின்றனர்.

‘வெறும் 2% இருக்கற துலுக்கணுக பின்னாடி எல்லா கட்சிக்காரனுகளும் போறானுக நாளைக்கு வெட்டுனது துலுக்கன்னு உறுதியாகட்டும் இங்க ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க’ என கத்திக் கொண்டே சென்றனர். அலி பாய் எனும் இஸ்லாமியருக்கு சொந்தமான தி சென்னை மொபைல்ஸ் தொடர் கடைகள் கோவையில் மொத்தம் 20 இருக்கின்றன. துடியலூர் கிளையை மொத்தமாக சிதைத்து விட்டார்கள். சிதைத்தது மட்டுமல்லாமல் திருடிக் கொண்டும் சென்று விட்டார்கள். உள்ளே சென்று தடுக்க முயன்ற பெண் காவலரை காதில் ரத்தக் காயம் வரும் வரை தாக்கி வெளியே துரத்தி விட்டார்கள். ரத்தினபுரி பகுதியை சேர்ந்த இந்து முன்னணிக்காரன் ஒருவன் தனது பகுதியில் குடியிருக்கும் இஸ்லாமியர் ஒருவரை முன் விரோதம் வைத்து அவரது வீட்டுக்கு சென்று அடித்து உதைத்திருக்கிறார்கள். வீட்டில் பொருட்களையும் உடைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர் கடை எதுவும் வைத்திருக்கவில்லை.

சேதம் குறித்த தகவல் அறிக்கைகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரோட்டில் ஒரு ஓரமாக பொது மக்களோடு பொது மக்களாக நின்று கொண்டிருக்கும் ஒரு உயரமான சிவந்த நடுத்தர வயது நபரும் அவருக்கு அருகில் சற்று உயரம் குறைவாக நின்றிருந்த இன்னொருவரும் கூட்டத்தில் கலவரம் செய்து கொண்டிருக்கும் சிலரை அருகில் அழைத்து இன்னும் எப்படி இந்த டைரக்ஸன்ல கொண்டு போகணும்னு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்‌.எஸ்‌.எஸ்.காரர்கள் போல தெரிந்தது என இந்த கலவரத்தை நேரடியாக பார்த்த கடைக்காரர் ஒருவர் கூறினார். உடைத்துக் கொண்டிருந்தவர்கள், அந்த வழிகாட்டுதலின் பின்னர் தான் தீ வைக்க துவங்கினர். தடியடி நடத்திய போலீஸ்‌ முதலில் சுற்றி நின்ற பொது மக்களை தாக்குகிறது. அதன் பின்னர் தான் கலவரக் காரர்களை அடித்தது. காவிகள் காவலர்களை தடுக்கிறார்கள் தாக்குகிறார்கள். தொப்பி வயர்லெஸ் குச்சி போன்றவற்றை பிடுங்கி வீசினர். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கலவரம் தடியடி நடத்தத் துவங்கிய பத்து நிமிடத்தில் பிணம் மின் மயானத்துக்கு சென்று கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தீயணைப்புப் படை, கலவரம் முடிந்த பின்னர் வரும் அதி விரைவுப் படை நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் படை என பூராப் படையும் பின்னர்தான் வந்தன.

தாக்கப்பட்ட கடைகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலவரத்தை சிறப்பான முறையில் ஒழுங்குப் படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான கோவை போலீஸ் கமிசனர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் பல இடங்களில் காவல் துறையினரே கடையடைப்பு நடப்பதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்து மத வெறிக்கு தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். காவிகள் போகாத பெரிய கடைகளுக்குச் சென்று “எதுக்கு தேவையில்லாத பிரச்சினை..?, எல்லோரும் கடையை மூடிட்டாங்கள்ல நீங்களும் மூடிருங்க.” என்பது போல் பேசியிருக்கிறார்கள். kovai-hindu-munnai-riots-images-10தொழில் நகரமான கோவையில்., பம்பு உற்பத்தி தொழிலின் கேந்திரமான பகுதியில் நடந்துள்ள இந்த கலவரம் ஆளும் வர்க்கத்துக்கு விருப்பமான ஒன்று. பல்வேறு வகைகளில் அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று. சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் பெஸ்ட் பம்ப்ஸ் என்‌டி‌சி ஆலைகள் முதல் ஏராளமான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஏமாற்றப் பட்டும் சங்கம் துவங்கிய காரணத்தால் மட்டுமே ஒடுக்கப்பட்டும் இருக்கும் கோவையில் போலீஸ் கண்காணிப்பும் சனநாயக உரிமைகள் ஒடுக்குமுறையும் சர்வ சாதாரணம். இன்று வரை 600 நாளைத் தாண்டி இன்னும் சட்டவிரோத கதவடைப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் முதலாளி வீட்டு கல்யாணத்தின் போது போராட்டம் நடத்துவதாக போட்ட போஸ்டருக்கு போஸ்டர் போட்டவர் முதல் ஒட்டியவர் வரை மிரட்டி சங்க முன்னணியாளர்களை முன்னெச்சரிக்கையாக பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி குண்டர் சட்டம் போட முனைகிறது. அதே சமயம் முதலாளி வீட்டு கல்யாணத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

kovai-hindu-munnai-riots-images-12காவிப் பொறுக்கிகள் சொல்லாமல் கொள்ளாமல் கலவரம் செய்வது காவல் துறைக்கோ உளவுத் துறைக்கோ தெரியாதததல்ல. வர்க்க நேர்மையோடு அறிவித்து போராட்டம் பண்ணும் தொழிலாளர்களை புரட்சிகர அமைப்பின் தோழர்களை சாதாரண பேருந்து சிக்னல் பிரச்சாரங்களுக்கே போலீஸ் ஒடுக்குமுறையை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் ஐந்து வரிகள் கொண்ட போஸ்டருக்கே கேஸ் வாங்கும் நிலை இப்போதைய சூழலில் நிலவுகிறது. இந்த மினி எமர்ஜென்சி நிலையை 1997 கலவரமும் அதைத் தொடர்ந்த குண்டு வெடிப்பும் கோவை மீது சுமத்தியது. இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் இல்லையில்லை இருபதாண்டு தயாரிப்புடன் மீண்டும் தலை தூக்கியிருக்கும் மதவெறி இந்த ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படும் பிரச்சினையை தொழிற்சங்க உரிமை முதல் அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். அதாவது ஆளும் வர்க்கம் விரும்பும் செயலை மற்றொருவரின் துணையுடன் வேறொருவரின் மீதான வெறுப்பு மூலம் இதை செய்கிறார்கள்.

கோவையில் தொழிலாளிகளுக்கு உரிமையில்லை என்பதும், இந்துமதவெறியர்கள் அரசு – போலீசு ஆசியுடன் கலவரம் செய்கிறார்கள் என்பதும் வேறு வேறு அல்ல.  தொழிலாளிகள் ஒன்றிணைந்து ஒரு பெரும் சக்தியாக எழக்கூடாது என்று நினைக்கும் அரசு இத்தகைய இந்துமதவெறியை திட்டமிட்டு வளர்க்கிறது. சூறையாடும் ‘இந்துக்களுக்கு’ அன்று தீபாவளி போனசாக பெரும் ஆதாயம் இருப்பது போலவே அடுத்து வரும் வசூல்களுக்கு அனைத்து வியாபாரிகளும் கட்டுப்படவேண்டும் என்பதை இந்து முன்னணி நிர்வாகிகளின் எதிர்கால ஆதாயமாக குறிப்பிடலாம்.

ஒரு காலத்தில் தொழிலாளிகளின் போர்க்குணத்தை கண்ட கோவை இன்று முதலாளிகளின் பேயாட்டத்தில் சிக்கியுள்ளது. அதனால்தான் முதலாளிகளின் ஏவல்நாய்களான இந்துமுன்னணி போன்ற ஜந்துகள் வெறிபிடித்து அலைகின்றன. தொழிலாளிகள் ஒன்றிணையும் போது காவிக் குரங்குகள் கோவை மண்ணிலிருந்து விரட்டப்படும். அத்தகைய போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து நடத்தும்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்

0

1. ஜெயங்கொண்டம் – டாஸ்மாக் போதையில் ஓட்டுனர், 15 உயிர்கள் படுகொலை – ஜெயா அரசே முதல் குற்றவாளி

jayankondam-shutdown-tasmac-pp25-09-2016 இரவு 8.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகில் உள்ள கச்சிபெருமாள் கிராமத்தில் இருந்து மினிலாரியில் புதுகுடி கிராமத்திற்கு துக்க காரியத்திற்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது அவர்களின் கிராமத்திற்கு எதிரே சிமென்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது அந்த பகுதிவாழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை அறிந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை பட்டாளம் படை சூழ அவசர அவசரமாக காலை 7 மணி முதலே எடுத்துச் சென்று தனது சொந்த செலவில் அடக்கம் செய்தது அரசு.

இந்த நிகழ்வுக்கு டாஸ்மாக்தான் காரணம் என்பதை உணர்ந்த அதிகாரிகள், மக்கள் கோபம் கொண்டு கடைகளை அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று அஞ்சி ஜெயங்கொண்டம் முதல் உடையார்பாளையம் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அன்று காலை முதலே மூடி விட்டது. மக்கள் ஏதும் செய்யாத பட்சத்தில் மாலை மீண்டும் திறந்து விட்டது.

விபத்துக்குக் காரணம் மக்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை ஓட்டியவர் குடித்து இருந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு 90 விழுக்காடு மதுதான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். எத்தனை பேருடைய உயிரை எடுத்தாலும் டாஸ்மாக் கடையை மூடாத இந்த அரசுதான் முதல் குற்றவாளி.

ஜெயா அரசு டாஸ்மாக் நேரத்தை குறைப்பதாகக் கூறி நாடகமாடியது. ஆனால், காஐல 6 மணி முதலே டாஸ்மாக் சாராயம் விற்கப்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியம். மேலும், உடையார்பாளையம் பகுதியைச் சுற்றி பல இடங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதனால் காவல்துறை நன்றாக கல்லா கட்டுகிறது.

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக் கூடாது என்ற விதி இருந்தும் காவல்துறை இதை அமல்படுத்துவது இல்லை. அப்படி வாகனத்திடம் இருந்து ஒரு தொகை பெற்றுக் கொண்டு தங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கே இந்த சட்டம் காவல்துறைக்கு பயன்படுகிறது.

அரியலூர் மாவட்டம் தற்போது சுண்ணாம்பு கற்களுக்காக கற்பழிக்கப்படுகிறது. பல சுரங்கங்களில் இருந்து எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்படுகிறது. இதை ஏற்றிச் செல்லும் லாரிகள் விதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே ஏற்றிச் செல்கின்றன. இதற்கு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துணை போகின்றனர். இவர்களுக்கு அதிக வருவாயைத் தரும் கற்பகமரமாக இந்த சுரங்கத் தொழில் நடைபெறுகிறது. அப்படி ஏற்றி வந்த வாகனம்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், சென்ற மாதத்தில் காரைக்குறிச்சி கிராமத்தில் செயல்படும் மணற்குவாரியில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரி ஏறி, சிலால் கிராமத்தில் பச்சிளம் குழந்தை மாண்டது.

மேலும், இந்த கச்சிபெருமாள் கிராமத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் இருவர் மட்டும்தான் விபத்து நடைபெற்ற இடத்திலேயே இறந்தவர்கள், மற்ற அனைவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிர்காக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க முடியாததும் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம். எந்த மருத்துவ அவசரத்துக்கும் தஞ்சாவூர் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை.

ஜெயாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதும் அப்பல்லோவுக்கு போக முடியும். அரசு மருத்துவமனையே கதி என்று இருப்பவர்களுக்கு போஸ்ட் மார்ட்டமே உயர் சிகிச்சை.

இந்த நாட்டில் மருத்துவம், கல்வி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் சாமானியனுக்கு இல்லை என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூடாதவரை இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த டாஸ்மாக் கடைகளை கொலையாளிகளே மூடுவார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். இந்த சனியனை உழைக்கும் மக்களாகிய நமது அதிகாரத்தை நிறுவுவதன் வழியாகத்தான் மூட முடியும். அப்போதுதான் நமது பிற உரிமைகளையும் தேவைகளையும் பெற முடியும் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு.

தகவல்

மக்கள் அதிகாரம்,

ஜெயங்கொண்டம்

2. ஒகேனக்கல்

பரிசல் ஓட்டும் தொழிலை முடக்கி, வாழ்வுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு, சிறை

றட்சிக்கு பேர்போனது தருமபுரி மாவட்டம் என்றாலும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் இடம்தான் இம்மாவட்ட்த்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல். மேட்டூர் அணைகட்டிய போது அப்பகுதியில் கரையோரம் வசித்த மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். அப்படி இடம் பெயர்ந்த பகுதிதான் ஒகேனக்கல்லில் இருக்கும் ஊட்டமலை என்னும் கிராமம். இப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு எண்ணெய் மஜாஜ் செய்யும் தொழிலும்,சேவியர் சமூகத்தை சார்ந்த மக்கள் படகு ஒட்டுவதும்,மீன் பிடித்தொழிலும் 50, 60 வருடங்களாக ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக படகு (பரிசல்) ஓட்டும் தொழிலில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

hogenakal-people-power-1இங்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் இச்சுற்றுலா தலத்தை சுற்றி பார்க்க வரும் மக்களை படகு சவாரில் சுற்றி காட்டும் இத்தொழிலை நம்பிதான் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை படகு சவாரி செய்யும் போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரழந்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ச்சியாக படகு ஓட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மழை காலங்களிலும், தண்ணீர் வரத்து அதிகம் வரக்கூடிய காலங்களிலும் படகு சவாரி முற்றிலும் நிறுத்தப்படும். அப்போதும் உரிய நிவாரணம் ஏதும் வழங்குவதில்லை. இந்நிலையில் கடந்த 1 வருட காலமாகவே தண்ணீர் வரத்து இல்லாத காலங்களிலும், எப்போதும் அனுமதி கிடையாது என்று மறுத்துவருகிறது மாவட்ட நிர்வாகம்.

hogenakal-people-power-2முற்றிலும் அவர்களின் வாழ்க்கையே முடக்கி வறுமைக்கு தள்ளும் அதிகாரவர்க்கம். இதனையே நம்பி வாழ்ந்த வந்த தொழிலாளர்களுக்கு வேறு வேலையும் தெரியாது என்பதால் கடந்த 1 வருட காலமாக பல முறை போராடியும், மனுக்கொடுத்தும் மன்றாடியும் ஒன்றும் நடக்கவில்லை இவர்களின் பிரச்சினையை கண்டுகொள்ளவே இல்லை. எங்களுக்கு வேறு வேலை தெரியாது அதனால் இத்தொழிலை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது, வெளியூருக்கு போய் வேலையை தேடுங்கள் என்று திமிர்த்தனமாக பேசிய அதிகார வர்க்கத்தை பார்த்து அதிர்ந்து போன நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் சொல்லும் பிரச்சினை கேட்காமல் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தது போலீசு.

hogenakal-people-power-3திடீரென அவர்களின் படகை எடுத்து கவிழ்க்க முற்பட்ட காவல் துறையினரை படகை கவிழ்க்காதிர்கள் என்று தடுக்க போன தொழிலாளர்களை தாக்க ஆரம்பித்தது. இதனை பார்த்து ஓடி ஒளியாமல் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளாலும் ,திரும்பி தாக்கியும் பதிலடி கொடுத்தனர் அப்பகுதி மக்கள். உடனே இதனை பொறுத்தக்கொள்ளாத காவல் துறை அவர்களை பழித்தீர்க்கம் கொலை வெறியோடு அழைந்து வருகிறது. வீடு வீடாக சென்று போட்டோவை காட்டியும் ,பெயரை குறிப்பிட்டும் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. பெண்களையும் கைது செய்து சேலம் சிறைச்சாலையில் அடைத்துள்ளது. அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு செல்லும் வழியில் கடுமையாக தாக்கியிருக்கிறது. இப்படி மொத்த நிர்வாகமும் செயலிலந்து போனதற்கான இன்னும்மொரு சாட்சிதான் இப்பகுதி மக்கள் மீதான அடக்குமுறை.

hogenakal-people-power-4தற்போது பரிசல் ஓட்டும் தொழிலாளர்களை அத்தொழிலை இருந்து விரட்டி ஆயிரகணக்கான மக்களை வெளியேற்றிவிட்டு அத்தொழிலில் தனியாரை அனுமதிக்கும் சதித்திட்டம் அடங்கியிருக்கிறது.

hogenakal-people-power-5பாதிக்கப்பட்ட மகேஸ்வரி கூறும் போது, “ரோட்டுல கூடத்தான் பஸ் ஆக்ஸிரெண்டு ஆகுது, அதுக்காக பஸ்சையே உடுறதில்லையா? எதிர்பாராம நடந்த விபத்துக்கு எங்களை முற்றுலும் தொழில் பண்ணாம தடுக்குறாங்க” என்று உள்ள குமுறலை வெளிப்படுத்தினார்.

மகேஸ்வரிக்கு மூன்று ஆண் மகன் உள்ளனர். இவர்களில் 2 பேர் படகு ஒட்டும் தொழில் செய்து வருகிறார்கள். இன்னொரு மகன் எம்.எஸ்.சி, பிஎட் படித்துவிட்டு கடந்த 5 வருடங்களாக அரசு பணிக்காக தேர்வு எழுதி வருகிறார். அவ்வாறு எழுதி தேர்ச்சி அடைந்தாலும் எந்த போஸ்டிங்கும் போடவில்லை.

hogenakal-people-power-6“கவருமெண்டு வேலை வாங்கின பிறகுதான் கல்யாணம் பண்ணிபேன்னு சொல்லுறான் அதுக்குள்ள அவனுக்கு வயசே ஆயிடும், என்னைக்கு வேலை கெடக்குறது, என்னைக்கு கல்யாணம் பண்ணறது, எங்க ஆம்புளங்க சம்பாதனைய நம்பிதான் இருக்கிறோம். இப்ப இந்த தொழிலும் செய்யமுடில நாங்க என்ன பண்ணுறது, நான் இந்த மீனை வறுத்து விக்கிறேன். ஏதோ 1 பீஸ்,2 பீஸ் ஓடுனாத்தான் உண்டு. அதுவும் ஞாயித்து கிழமையா இருந்தா ஓரளவுக்கு வியாபாரம் இருக்கும்,எத்தனை நாளைக்கு பொறுத்து போறது, அதனாலதான் குடும்பத்தோட போராட்டம் பண்ணினோம். அன்னையிலிருந்து போட்டோவை காட்டியும், இன்னும் லிஸ்ட் இருக்குதுன்னு வீடு வீடா சுத்தி சுத்தி வர்றாங்க. இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க” என்று வேதனையை கொட்டித்தீர்த்தார்கள்.

வாழ்வுரிமைக்காக போராடிய மக்களை போலீசு கடுமையாக தாக்கியதையும், பொய்வழக்கு, சிறைப்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியது. இதைபார்த்த அதிகாரவர்க்கம் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதாக கூறி 10 தோழர்களை மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் கைது செய்ய சொல்லி இருக்கோம் என்று டிஎஸ்பி பரிசல் ஓட்டிகளை அழைத்து மிரட்டியுள்ளார். இங்கு யார் மக்கள் அதிகாரம் அமைப்பில் இருப்பது என்று விசாரித்துள்ளது காவல் துறை. நமது வாழ்வு சூறையாடும் போது போலீசு என்ற அச்சதை தூக்கியெறிந்து வீதிக்கு வருவது தான் போராடுவதுதான் தீர்வாக முடியும். இது வெகுதூரத்தில் இல்லை ?

[படங்களைப் பெரிதாகப் பார்த்து அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

பு.ஜ செய்தியாளர்
தருமபுரி

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

1

1.சென்னை

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் – சென்னையில் ஆர்ப்பாட்டம்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-posterகோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 அன்று நடைபெற்றது.

சசிகுமார் என்ற இந்துமுன்னணியினைச் சேர்ந்த நபர் கொல்லப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்ட இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காலிகள் கோவையை சூறையாடினர், போலீசோடு சேர்ந்து கொண்டு.

இந்த வெறியாட்டத்தை கண்டித்து அடுத்த நாளே வியாபாரிகளும் முற்போக்கு அமைப்பினரும் சுமார் 800 பேர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள் . இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி – எச்சு ராஜா பார்ப்பன மதவெறியை கக்குகிறார். தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எல்லாவகையிலும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி, “இந்த அரசுக்கட்டமைப்பு மக்களைக்காக்க வக்கில்லை அதுமட்டுமல்ல இதுதான் எதிரி; மக்களைக்காக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்பதை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகளையும் விநியோகித்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியது; மக்களிடையில் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றது.

அதன் படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 கொளுத்தும் வெயிலிலும் நடந்த ஆர்ப்பாட்டம் காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இருந்தது.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-vetrivel-chezhiyan
தோழர் வெற்றிவேல் செழியன்

இந்த கண்டன ஆர்ப்பட்டத்திற்கு மக்கள் அதிகாரம் சென்னைமண்டல ஒருங்கிணைப்பாளர் சென்னை தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை செயலர் வழக்கறிஞர் மில்டன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் குமரன், திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி  செயலர்தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலர் தோழர் ஆளூர் ஷானவாஸ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலர் தோழர் மா.சி.சுதேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் விடுதலை ராஜேந்திரன், மக்கள் அதிகாரத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-sudhesh-kumar
தோழர் மா.சி.சுதேஷ்குமார்

சாலையை கடந்து சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சவாரிக்கு போகாமல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை கேட்டுக்கொண்டு இருந்து இருக்கிறார். அப்போது ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் சிலர் “இவங்க எல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டாங்க, எவ்வளவு நேரம் ஆனாலும் இருப்பாங்க, தீவிரவாதிங்க” என்றிருக்கிறார்கள். இதைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரோ, “நல்லவங்க எல்லாத்தையும்,  போராடுறவங்க எல்லாத்தையும் தீவிரவாதின்னு அப்படியே சொல்ல வேண்டியதுதானே” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் மக்களை பாதுகாக்க வக்கில்லாத தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது.

தோழர் குமரன், தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தோழர் கணேசன், தோழர் காளியப்பன், தோழர் விடுதலை ராஜேந்திரன், தோழர் ஆளூர் ஷானவாஸ், தோழர் மில்டன் ஆகியோரின் ஆர்ப்பாட்ட உரைகள் விரைவில் தனிப்பதிவுகளாக வெளியிடப்படும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை
9176801656

2. திருச்சி

கோவையில் போலீசு உதவியுடன் BJP-RSS இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம் –

திருச்சியில் 04-10-2016 காலை 10 மணியளவில்

கண்டன ஆர்ப்பாட்டம்

kovai-hindu-munnani-riots-trichy-demoஇடம்: தந்தை பெரியார் சிலை, மத்திய பேருந்து நிலையம், திருச்சி.

தலைமை: தோழர் தர்மராஜ்,மாநில ஒருங்கிணைப்புக்குழு, மக்கள் அதிகாரம்.

கண்டன உரை:
திரு. திருச்சி வேலுச்சாமி,
தோழர் தமிழாதன், நாடாளுமன்ற தொகுதிச்செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
தோழர் சுரேஷ், நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் வாழையூர் குனா, கொள்கைபரப்புச் செயலாளர், புதிய தமிழகம்,
தோழர் கராத்தே வீரமுருகன், மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி,
தோழர் கந்தவேல் குமார், மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்,
தோழர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர் ஜீவா, மாவட்டசெயலர்,மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தோழர் காளியப்பன், மாநில தலைமைக்குழு, மக்கள் அதிகாரம்

பெரியார் பிறந்த மண் இது ஜனநாயக முற்போக்கு சக்திகளே அணிதிரள்வீர்!

தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி தஞ்சை திருவாரூர் நாகை
94454 75157 94431 88285 96263 52829 98903736020

3. புதுச்சேரி

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகளின் பாசிச வெறியாட்டத்தைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

ஆர் எஸ்.எஸ், பாஜக, இந்து முன்னணி, போலீசு உள்ளிட்ட பாசிச கும்பலின் தடைகளை கடந்து  04-10-2016 அன்று

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: சுதேசி மில் அருகில் நேரம் : மாலை 4.00 மணிக்கு

ஜனநாயக சக்திகள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம், புதுச்சேரி

போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்

0

1. கரூர்

ஜனநாயக உரிமைகளைப் பறித்தால்தான் ‘ஜனநாயகத்துக்கான’ தேர்தலை நடத்த முடியுமா?

kovai-hindu-munnani-riots-karur-protest-poster-129-09-2016 வியாழன் மாலை கரூர் பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயகம் மாத இதழை விற்பனை செய்து கொண்டிருந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேலையும் அவருடன் இருந்த மற்றொரு தோழரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இரவு 11 மணிக்கு மேல் நீதித்துறை நடுவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று முன்னிறுத்தி சக்திவேலை திருச்சி மத்திய சிறையிலும் மற்றவரை அரியலூர் சிறுவர் சிறையிலும் அடைத்தனர்.

இந்த வகையில் அதிரடியாக கைது செய்யுமளவுக்கு இவர்கள் செய்த குற்றம் என்ன? ஹவாலா கொள்ளையில் ஈடுபட்ட பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஒரு சுவரொட்டியும், கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலையை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சூறையாடியும் கொளுத்தியும் வெறியாட்டப் போட்ட இந்து மதவெறியர்களை கண்டித்து ஒரு சுவரொட்டியும் 27-09-2016 செவ்வாயன்று அதிகாலையில் ஒட்டியதுதான் இவர்கள் செய்த கொடிய குற்றமாம்.

ஒட்டிய சுவரொட்டிகளை அப்போதே நகரம் முழுக்க தேடியலைந்து கிழித்துப் போட்ட காவல்துறை, அந்த செயலுக்காக 29-ம் தேதி பேருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களை- இவர்கள்தான் ஒட்டினார்களா என்பதைக் கூட உறுதி செய்யாமல் அடாவடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

kovai-hindu-munnani-riots-karur-protest-poster-2காவல்துறை மக்களின் நண்பன் என்றும் சட்டத்தைப் பாதுகாப்பதுதான் அதன் கடமை என்றும் குற்றங்களைத் தடுப்பதற்காக 24 மணி நேரம் பணியாற்றுவதாகவும் கூறிக்கொள்கிறது காவல்துறை. ஆனால், கரூர் – பரமத்தி ஆய்வாளர் முத்துக்குமார், குளித்தலை நகர காவல் துணை ஆய்வாளர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோர் ஹவாலா நிழல் உலக தாதா கோடாலி ஸ்ரீதருடன் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது பற்றி செய்தித்தாள்களில் நாறுகிறது. இந்தப் பட்டியல் இவர்களோடு நிற்காமல் நீண்டு கொண்டே போவதையும் பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இது ஏதோ கரூரில் மட்டும் நடக்கும் பிரச்சினை அல்ல. காவல்துறை மொத்தமும் கீழிருந்து மேல் வரை இப்படிப்பட்ட கிரிமினல் கும்பலுடன் நெருக்கமாக இருப்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. அதை செய்தித்தாள் படிக்காத பாமரனுக்கும் தெரிவிக்கும் நோக்கில் எமது அமைப்பு சுவரொட்டியாகப் போட்டு ஒட்டியது குற்றம் என்கிறது காவல்துறை.

கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் கொலையால் கோவை மாநகரமே அல்லோலப்பட்டது. போலீசு வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தபட்டு தீக்கிரையாக்கப்பட்டது. மாற்று மத்த்தினரின் வழிபாட்டுத் தலங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இத்தனையும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் அரங்கேறியது. 10 கி.மீ தூரம் ஊர்வலம் செல்ல அனுமதித்து வெறியாட்டத்தை அனுமதித்தது. இந்த காலித்தனத்தை நடத்த அனுதித்த காவல்துறைதான் இதை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய ‘குற்றத்துக்காக’ எமது தோழர்களைக் கைது செய்து பொய் வழக்கு போட்டுள்ளது. இதற்காக காவல்துறை பயன்படுத்தியுள்ள சட்டப்பிரிவுகள், இரு பிரிவுகளுக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், காவல் துறை சட்டப்பூர்வமாக செயல்படுவதை பலவந்தமாக தடுத்தல் மற்றும் தமிழ்நாடு பொது இடங்களை (சுவரொட்டி ஒட்டி) அசிங்கப்படுத்துதல் என்பனவாகும்.

இந்து மதவெறிக் காலிகளுடன் கூட்டு சேர்ந்து பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை தாக்கி மோதலை உருவாக்கவும் தேர்தல் விதிமுறை அமுலில் உள்ளபோதே அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தி காலித்தனம் செய்யவும் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க ஆகிய அமைப்புகளை அனுமதிக்கும் காவல்துறை அதை கண்டிக்கும் எங்களை இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதாக அறிவித்து கைது செய்கின்றனர். ஹவாலா கொள்ளையனுடன் கூட்டு சேரந்து இவர்கள் மேற்கொள்ளும் ‘சட்டப்பூர்வ’ நடவடிக்கைகளை தடுப்பதாக சித்தரிக்கின்றனர்.

ஆபாச சுவரொட்டிகளால் அசிங்கப்படாத பொது இடங்களை எங்களது சுவரொட்டிதான் அசிங்கப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொள்கின்றனர். என்னே காவல்துறையின் கடமை உணர்ச்சி!

இப்படி அடிமுதல் நுனி வரை அழுகி நாறும் காவல்துறை தனது அடாவடி செயலுக்கு தேர்தல் நடத்தை விதிகளையும் துணைக்கு வைத்துக்கொள்கிறது. சுவரொட்டிகளை அவசர அவசரமாக பாய்ந்து கிழித்ததற்கும் எமது தோழர்களைக் கைது செய்ததற்கும் காவல் துறை கூறும் மற்றொரு காரணம், “தேர்தல் நடத்தை விதிகள்” அமுலில் இருக்கிறது என்பதாகும். தேர்தல் ஆணையம் என்கிற அதிகார வர்க்கமும் இதற்கு ஆமாம் போடுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளை ரத்து செய்து விட்டு நடத்தும் தேர்தல் மூலம் இவர்கள் ஜனநாயத்தை உயிர்ப்பிக்கப் போகிறார்களாம்.

எனவேதான் சொல்கிறோம் இது போலி ஜனநாயகம் என்று. இந்த அரசின் ஒவ்வொரு அங்கமும் அதற்கென்று அறிவிக்கப்பட்ட நெறிகளை அதுவே பின்பற்றாததுடன் அதற்கெதிரானதாகவும் மாறிவிட்டது. மொத்த அரசுக்கட்டமைப்பும் மக்களுக்கு வேண்டாத சுமையாகி விட்டதோடு மக்களுக்கு எதிரானதாக மாறி மக்களையே ஒடுக்குகிறது. இந்த கட்டமைப்பு நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பது ஒன்றே மாற்று என்கிறோம். இதுவே மக்கள் அதிகாரம்.

அந்த வகையில், கரூர் காவல்துறையின் இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப்ப்பெற வேண்டுமென கோருகிறோம். இந்த அடக்குமுறை தொடருமானால், சுவரொட்டி மட்டுமல்ல, துண்டுப்பிரசுரங்கள், தெருமுனைப்பிரச்சாரங்கள், வீடுவீடாக சென்று மக்களை சந்திப்பது என்ற பல வகையிலும் எமது கருத்தை மக்களிடம் கொண்டு சென்று இந்த மக்கள் விரோத அரசுக்கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம். எத்தகைய அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எமது ஜனநாயகக் கடமையை முன்னெடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
(பெ. கபிலன்)
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம், கரூர்.

2. கோவில்பட்டி

மக்கள் அதிகாரம் கோவில்பட்டி அமைப்பாளர் தோழர் ஆதி மீது கோவில்பட்டி போலீசு கொலைவெறித் தாக்குதல் !

கோவையில் இந்து முன்னணி காலிகள் போலீசின் துணையுடன் நடத்திய கலவர வெறியாட்டத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டி ஒட்டிய தோழர் ஆதி நள்ளிரவில் போலீசால் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைத்து தாக்கப்பட்டார்.

kovai-hindu-munnani-riots-pp-demo28-09-2016 அன்று இரவு 11 மணியளவில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு தோழர் ஆதி வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டாரா என்பதை நோட்டம் விட்டு இரண்டு போலீசு அவரைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. அவர்கள் போஸ்டர்களை தின்னத்தான் செல்கிறார்கள் என்பதை யூகித்து தோழர் ஆதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். ஒரு இடத்தில் நமது போஸ்டரை பார்த்தவுடன் இரண்டு போலீசும் கிழித்துள்ளனர். தோழர் ஆதி “எதுக்காக போஸ்டரை கிழிக்கிறீங்க, கிழிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். “போஸ்டரை கிழிக்க எவனக் கேக்கணும்” என்று திமிராக பேசியுள்ளனர். அதற்கு மேல் தோழர் ஆதியை பேசவிடாமல் “எங்களயே கேள்வி கேக்குறியா’’ என்று கூறி இரண்டு போலீசும் அடித்துள்ளனர். அடித்தது மட்டுமில்லாமல் “இன்னும் ஒரு மணி நேரத்தில் போலீசு யாரென்று காட்டுறோம் பார்றா’’ என்று கூறி தோழர் ஆதியை அவர்களோடு பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர். அடித்து கூட்டிச் சென்றவர்களில் ஏட்டு ராஜாவும் ஒருவர்.

பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிவன் அருள் கந்தசாமி என்ற ஸ்பெஷல் பிராஞ்சைச் சேர்ந்த SSI இருந்துள்ளார். அவரிடம் விசயத்தைச் சொல்லியுள்ளனர். அப்போது கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் அங்கு இல்லை. பவுல்ராஜூக்கு போன் போட்டு சிவன் அருள் கந்தசாமி பேசியுள்ளார். பின்னர் எந்த கேள்வியும் கேட்காமல் தோழர் ஆதியின் சட்டையையும், வேட்டியையும் வலுக்கட்டாயமாக கழட்டி, அவரை தாறுமாறாக அடித்துள்ளார். தலையிலிருந்து கால் வரை உடலின் எல்லா பக்கங்களிலும் அடித்துள்ளார். தோழர் வலியால் துடித்ததை பார்த்து சிரித்து விட்டு “என்னடா பொட்ட மாதிரி கத்துற, மக்கள் அதிகாரம்னா என்னடா பெரிய பு…..யா?’’ என்று ஆபாசமாக திட்டியுள்ளார்.

அப்படியும் வெறி அடங்காமல் பூட்ஸ் காலால் தோழரின் முகத்தில் வைத்து மிதித்ததில் தோழரின் உதடு கிழிந்துள்ளது. இரண்டு கால்களையும் நீட்டச் சொல்லி இரு பாதங்களிலும் மிருகத்தனமாக அடித்ததில் இரண்டு பாதங்களும் நடக்க முடியாத அளவிற்கு வீங்கியுள்ளது.

kovai-hindu-munnai-riots-com-aadhi-arrest-2கடந்த மூடு டாஸ்மாக்கை இயக்கத்தின் போது டாஸ்மாக் சாராயத்தை விற்கும் ஜெயா அரசினை அம்பலப்படுத்தி ஒட்டிய போஸ்டர்களை இதே போல் போலிசு கிழித்தது. அப்போது தோழர் ஆதி ஊர்மக்கள் பார்க்க போலீசாருடன் வாக்குவாதம் செய்து சுவரொட்டியைக் கிழித்தது தவறுதான் என்று பகிரங்கமாக நம் தோழர்களிடம் சம்பந்தப்பட்ட போலீசை மன்னிப்புக் கேட்க வைத்தார். அன்றிலிருந்து தோழர் ஆதி மீது வன்மம் கொண்டிருந்தது போலீசு.

அதேபோல் மே 5, 2016 அன்று டாஸ்மாக்கை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அன்று அதிகாலையிலேயே தோழர் ஆதியை வீட்டில் வைத்து கைது செய்தது போலீசு. தோழர் கைதானபோதும், போராட்டம் திட்டமிட்டபடி நடந்தது. பிற தோழர்களிடமிருந்து ஆதியை தனிமைப்படுத்தி போராட்டத்தை முடக்க நினைத்த போலீசு மூக்கறுபட்டது. மேலும் கைதான தோழர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்றால், எங்கள் தோழர் ஆதியை ஒப்படை என்று மண்டபத்திற்குள் போலீசுக்கு நிபந்தனை விதித்தனர். வேறு வழியின்றி போலீசும் தோழர் ஆதியை மண்டபத்திற்கு அழைத்து வந்து தோழர்களிடம் ஒப்படைத்தது. அன்றும் மூக்கறுபட்டது போலீசு. இதுதான் இன்று தோழர் மீது கொலைவெறி கொண்டு தாக்கியதற்கு காரணம்.

நள்ளிரவில் கைது செய்துவிட்டு அமைப்புக்கு அல்லது குடும்பத்திற்கு தகவல் தர அனுமதிக்காமல் சட்டவிரோதமாக (செல்போனையும் பறித்து) நடந்து கொண்டது.

காலையில்தான் தோழர்களுக்கு தகவல் தெரிந்தது. தோழர்கள் நேரில் போய் பார்த்த போது எந்த முதலுதவியும் கொடுக்காமல் தோழரை அடைத்து வைத்திருந்தனர். தோழர் ஆதி மீது நான்கு பிரிவுகளில் (294(B), 353, 506(i), TNOPP- DA ACT) வழக்கு போட்டு கோர்ட்டிற்கு கூட்டி வந்து ரிமாண்ட் செய்தனர். தோழருக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் போலீசு குறியாக இருந்தது. அதேநேரம் நமது வழக்கறிஞர்கள் போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலை நீதிபதியிடம் விளக்கி போலீசின் மீது நடவடிக்கையையும், தோழர் ஆதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் போராடியதன் விளைவாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செக் அப்புக்காக அனுப்பப்பட்டார். அங்கேயும் எப்படியாவது தோழரை 70 கி.மீ.க்கு அப்பால் உள்ள பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று டாக்டர்களிடம் தங்கள் வேலையைக் காட்டிப் பார்த்தனர். ஆனால் மருத்துவர் தோழரின் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு கோவில்பட்டி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். காவல்துறையின் சதிக்கு துணைபோக மறுத்துவிட்டார்.

kovai-hindu-munnai-riots-com-aadhi-arrest-1நாம் போலீசின்மீது நடவடிக்கை எடுப்போம் என்பது உறுதியான நிலையில் வேறு வழியில்லாத போலீசு எல்லா வழிகளிலும் தோழருக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அன்று முழுக்க தோழர்களும், அவர்களது குடும்பத்தாரும் பார்ப்பதற்கோ, உணவு கொடுப்பதற்கோ கூட அனுமதிக்கவில்லை.

தலைமை மருத்துவரை விலைபேசமுடியாத நிலையில் அவருக்கும் மேலே மேல்மட்டத்தில் சரிக்கட்டி தன் வேலையை சாதித்துக்காட்டினர் காக்கி மிருகங்கள். இரவோடு இரவாக தோழர் ஆதிக்கு கடுமையான காயங்கள் இருந்தபோதும் சட்டத்திற்குப் புறம்பாக டிஸ்சார்ஜ் செய்து சிறையில் அடைத்துள்ளது கிரிமினல் போலீசு. அதன் பின்பும் மருத்துவரிடம் சென்று தோழர் ஆதிக்கு உடம்பில் காயங்கள் இல்லை என்ற வகையில் சர்ட்டிபிகேட் வழங்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளது.

மேலே சொன்னது ஒரு கிரிமினல் குற்றவாளியின் மீதான போலீசின் தாக்குதல் அல்ல. மக்களுக்காகப் போராடும் ஒரு தோழரின் மீதான கிரிமினல் போலீசின் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

கோவையில் இந்து முன்னணிக் காலிகள் பஸ் கண்ணாடிகளை நொறுக்கி, ஆட்டோக்களை எரித்து கடைகளை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றபோதும், அதன் பின்னர் தமிழகம் முழுக்க இந்து மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுக்கவே போலீசின் காட்டாட்சி வரைமுறையின்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சங்கர் மீதான தேவர்சாதிவெறிப் படுகொலையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய காரணத்திற்காக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் அரிராகவனை கைது செய்து சிறையிலடைத்தது. அரசைக் கண்டித்தோ அதிகார வர்க்கத்தைக் கண்டித்தோ போஸ்டர் ஒட்டினால் எப்.ஐ.ஆர் போட்டு மிரட்டுவது, மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு துணை போவது என எல்லா வகையிலும் கிரிமினல் தனமாகவும், காட்டுமிராண்டித் தனமாகவும், சட்ட விரோதமாகத்தான் நடந்து வருகிறது.

அதாவது ரியல் எஸ்டேட் கும்பல்கள், கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்கள், மாபியா முதலாளிகளின் அடியாள்படையாகத்தான் போலீசு இங்கு செயல்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மட்டுமல்ல, சாதாரண அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்புவதை கூட விரும்புவதில்லை. அப்படிக் கேட்பவர்களை குறிவைத்து சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொடூரமாக ஒடுக்குகிறது. அதனால்தான் ஏன் போஸ்டரை கிழிக்கிறீங்க என்று தோழர் கேட்டதும் அதற்கு மிருகங்களைப் போல் தோழர் மீது பாய்ந்துள்ளனர் போலீசு காலிகள். மனித உணர்வு என்பதே இல்லாத அதிகார வெறிகொண்ட மிருகங்களாகவும், ஆணாதிக்கப் பொறுக்கிகளாகவும் போலீசு சீரழிந்து நாறுவதைத்தான் மேற்கண்ட சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சிவகாசி ஜெயலட்சுமி புகழ் போலீசானது இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாக்குதல் , சிவகங்கை சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது முதல் மூன்று போலீஸ் காலிகளின் திருட்டுக் குற்றங்கள் வரை போலீசின் கிரிமினல் குற்றம் என்பது அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அதிகாரவெறி, பண வெறி, காம வெறி பிடித்தலையும் போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் போராட்டங்களை முன்னெடுக்காமல், மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து இந்தக் கிரிமினல்களை வீதியில் வைத்து தண்டிக்காமல் வேறு எந்த வழியிலும் நமக்குத் தீர்வில்லை. தற்போது தோழர் ஆதி பிணையில் வெளி வந்துள்ளார் என்றாலும் போலீசை அம்பலப்படுத்தி, மக்கள்  பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எமது போராட்டம் தொய்வின்றி தொடரும்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவில்பட்டி

கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…

1
child-labour-1
பேனாவைப் பிடிக்க வேண்டிய கரங்கள் தீக்குச்சிகளை அடுக்கும் சமூக அவலம்

னி இந்தியாவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலம் என்பது அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாய் ஆகிவிடும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது மோடி அரசு. அவரது அரசு விவாதத்திற்கு விட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கனவைக் காவு வாங்கும் விதத்தில் உள்ளதென்றால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்கள் ஏழைக் குழந்தைகளைச் சட்டபூர்வ கொத்தடிமைகளாக வைத்து, அவர்களது உழைப்பையும் இளமையையும் உறிஞ்சிக் கொள்ளும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்யும் சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அச்சட்டங்கள் அக்கொடுமையைப் பெயரளவிற்குக்கூட ஒழித்துவிடவில்லை. ஒருபுறம் அச்சட்டங்கள் பல்வேறு ஓட்டைகளோடும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் சலுகைகளோடும் உருவாக்கப்பட்டிருந்ததோடு, இன்னொருபுறத்தில் அவை சோளக்காட்டு பொம்மைகளாகவே இருந்து வந்தன.

1980-களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த பிரச்சாரங்கள் பொது வெளியில் தீவிரமாக நடைபெறத் தொடங்கிய பிறகு, ஏற்கெனவே இருந்துவந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் 1986-இல் மைய அரசால் கொண்டுவரப்பட்டது. இப்புதிய சட்டமும்கூட குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாகத் தடை செய்யவில்லை. மாறாக, அச்சட்டம் 14 வயதுக்குக் கீழான குழந்தைகளை எந்தெந்த தொழில்களில் பணிக்கு அமர்த்தலாம், எந்தெந்த தொழில்களில் பணிக்கு அமர்த்தக் கூடாது என வரையறுக்க மட்டுமே செய்தது.

ஆலை உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள்: இளமையை உறிஞ்சி, உழைப்பைச் சுரண்டி
ஆலை உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள்: இளமையை உறிஞ்சி, உழைப்பைச் சுரண்டி

இந்தச் சட்டம் எந்தளவிற்கு மொன்னையானது என்பதை 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. அக்கணக்கெடுப்பு இந்தியாவெங்கும் 43,53,247 குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. இவர்கள் அனைவரும் ஐந்து வயதிலிருந்து 14 வயதிற்குட்டபட்ட குழந்தைத் தொழிலாளர்கள் என்பதும், இக்குழந்தைகள் முழு நேரமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதும் அக்கணக்கெடுப்பின் வழியாகத் தெரிய வந்தன. இம்முழு நேர குழந்தைத் தொழிலாளர்களுக்கு அப்பால், மேலுமொரு 57 இலட்சம் குழந்தைகள் வருடத்தில் ஆறு மாதங்கள் பல்வேறு விதமான வேலைகளில் அமர்த்தப்படுவதும் அக்கணக்கெடுப்பின் வழியாக அம்பலத்திற்கு வந்தது.

இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாகத் தடை செய்வது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள உடன்படிக்கைகள் (conventions) 138 மற்றும் 182 ஆகியவற்றுக்கு இசைவாகக் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது என்ற முகாந்திரங்களின் அடிப்படையில், 1986-ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, அரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது, மோடி அரசு.

14 வயதுக்குக் கீழான குழந்தைகளை எந்தவொரு தொழிலிலும் வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வதாகக் கூறும் இப்புதிய சட்டம், அதேசமயத்தில், அக்குழந்தைகளைப் பள்ளி நேரம் முடிந்த பிறகும், பள்ளி விடுமுறை நாட்களிலும் தமக்கு உதவியாக, குடும்பத் தொழிலில் ஈடுபடுத்துவதற்குப் பெற்றோர்களுக்கு அனுமதியளிக்கிறது.

ஏழைக் குடும்பங்களின் நிலை கருதி, இப்படியொரு விலக்கு அளித்திருப்பதாகக் கூறும் மோடி அரசு, குடும்பத் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை முதலாளி – தொழிலாளி என்ற நிலையில் பார்க்க முடியாது என்றும், குழந்தைகள் கைவினைஞர்களாக வளர்வதற்கு இது வாய்ப்பளிக்கும் என்றும் கூறி இந்த விலக்கை நியாயப்படுத்தி வருவதோடு, இப்புதிய சட்டம் இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறி வருகிறது.

caption-1ஏழ்மையைச் சாக்கிட்டு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சலுகை அளிப்பது நயவஞ்சமானது மட்டுமல்ல, இந்த விலக்கு ஒரு முகமூடி. ஏழை குடும்பங்களின் பெயரால் காண்டிராக்டு முதலாளிகள் குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகை. பட்டாசு, தீப்பெட்டி, பீடித் தொழில்களிலும்; செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும் “இந்திய”க் குடும்பங்களின் நிலைமைகளே, இந்தத் திருத்தத்தால் பலன் அடையப் போவது ஏழை பெற்றோர்களா அல்லது அவர்களின் எஜமானர்களா என்பதை எடுத்துக்காட்டிவிடும்.

இனி, டூ வீலர் மெக்கானிக் ஷாப்களில், நகர்ப்புற தேநீர்க் கடைகளில், உணவு விடுதிகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் குறித்து விசாரித்தால், ”அவன் என் உறவுக்காரன்” எனக் கூறித் தப்பித்துக் கொள்ளும் ஓட்டையை இச்சட்டத் திருத்தம் சிறுவர் உழைப்பைச் சுரண்டும் அனைவருக்கும் வாரி வழங்கியிருக்கிறது.

மோடி அரசு குறிப்பிடும் இந்தியத் தன்மை என்பது சாதிரீதியான வேலைப் பிரிவினைக்கு வக்காலத்து வாங்கும் பூடகமான சொல்லாடல் தவிர வேறில்லை. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த குருமூர்த்தி, “நாடார், கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சாதிகள் தொழிலில், வர்த்தகத்தில் ஈடுபட்டு, வெற்றி பெற்ற கதைகளைக் காட்டி, சாதியை இந்தியாவின் வரமாக”க் குறிப்பிட்டு வருகிறார். இதன் அடிப்படையில் சாதிரீதியான குலத்தொழில், சாதியப் படிநிலை ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல், சாதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என நாடகமாடி வருகிறது. எனவே, குடும்பத் தொழிலில் ஈடுபடுவதால் குழந்தைகள் கைவினைஞர்களாக மலருவார்கள் எனத் தேன் தடவிச் சொல்லப்படும் மோடி அரசின் வாதத்தைக் கீறிப் பார்த்தால், குலத்தொழில் இழிவைக் குழந்தைகளின் தலையில் சுமத்தும் கயமைத்தனம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

“குயவனின் குழந்தைகள் மண்பாண்டத் தொழிலையும், செருப்பு தைக்கும் தொழிலாளியின் குழந்தைகள் அறுந்த செருப்புகளைத் தைப்பதையும், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் சாக்கடை குழிக்குள் இறங்குவதையும்” உறுதி செய்யும் மனுதர்மத்தையும்; கூலி ஏழைகளின் குழந்தைகள் கூலித் தொழிலாளர்களாகவே மறுஉற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் முதலாளித்துவ தர்மத்தையும் சேர்த்துப் பிசைந்து இப்புதிய சட்டத்தை உருவாக்கியிருக்கிறது, மோடி அரசு.

18 வயது வரையில் உள்ள அனைவரையும் சிறுவர்களாகக் கருத வேண்டும் என வரையறுக்கிறது சிறுவர் சீர்திருத்தச் சட்டம். இதற்கேற்றபடி, குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்யும் வயது வரம்பை 18 ஆக உயர்த்த வேண்டும் என குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடிவரும் அனைத்துச் சமூக ஆர்வலர்களும் கோரி வருகின்றனர். ஆனால், மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டமோ, 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துவதற்கும் தாராள அனுமதி அளித்திருக்கிறது.

1986 குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் 18 வகையான நேரடி உற்பத்தித் தொழில்களையும், 65 வகையான பதனீட்டுத் தொழில்களையும் அபாயகரமான தொழில்களாக வகைப்படுத்தி, இந்த 83 தொழில்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்திருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கை எண் 138-க்கு ஏற்ப இந்த அபாயகரமான தொழில் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்டுப் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கோரி வந்த நிலையில், மோடி அரசு இப்பட்டியலின் எண்ணிக்கையை வெறும் மூன்றாகச் (சுரங்கத் தொழில், வெடிமருந்துத் தொழில் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிற தொழில்கள்) சுருக்கி, 1986 சட்டம் தடைவிதித்திருந்த பெரும்பாலான தொழில்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்ட பதின்வயது சிறுவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதித்திருக்கிறது.

மேலும், புதிய சட்டத்தில் அபாயகரமான தொழில்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதை நீக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறது, மோடி அரசு. கையூட்டு வாங்கிக் கொண்டு எதையும் செய்து கொடுப்பதற்குத் தயாராக உள்ள அக்கும்பல், சிறுமிகள் விபச்சாரத்தில் தள்ளப்படுவதைக்கூடச் சட்டபூர்வ தொழிலாக அறிவித்துவிடத் தயங்காது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை சப்ளை செய்யும் காண்டிராக்டர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அவுட் சோர்சிங் முறையில் ஆர்டர்களைப் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு, மற்ற ஏழை நாடுகளைக் காட்டிலும் குறைவான கூலியில் பொருட்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் இந்தியாவை உலகின் ஏற்றுமதி கேந்திரமாக மாற்றும் கனவோடு அறிவிக்கப்பட்டுள்ள “மேக் இன் இந்தியா” திட்டத்தின் வெற்றிக்கு இந்தத் திருத்தம் ஒரு பம்பர் பரிசு எனச் சொல்லத் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால், மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம், பழைய சட்டங்களைக் காட்டிலும் ஆகக் கொடிய அபாயங்களும், பிற்போக்குத்தனங்களும் நிறைந்த, 1800-களில் நிலவியதைப் போன்ற குழந்தைகள், சிறுவர்கள் மீதான கட்டுப்பாடற்ற முதலாளித்துவச் சுரண்டலுக்கு நாட்டை நெட்டித் தள்ளியிருக்கிறது.

“குழந்தைத் தொழிலாளர்களைப் புரிந்துகொள்ளுதல்” என்ற ஐ.நா. மன்றத்தின் அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் முறையை அனுமதிக்கும்பொழுது, அவர்கள் கற்றல் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

அரியானா மாநிலத்திலுள்ள பிவானி பகுதியைச் சேர்ந்த கிராமப்புற ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில், “மற்ற குழந்தைகளை ஒப்பிடும்பொழுது, வயல் வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளின் கற்றல் திறன் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதோடு, படிக்க, எழுத, கணக்குப் பாடங்களைச் செய்ய அவர்கள் மிகுந்த சிரமப்படுவதாகத்” தெரிவித்திருக்கின்றனர்.

”ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 குழந்தைகளுள் 33 குழந்தைகள்தான் 12-ஆம் வகுப்பிற்குச் செல்வதாக”க் குறிப்பிடுகிறது, ”குழந்தை நிவாரணமும் நீங்களும்” (CRY) என்ற தன்னார்வ அமைப்பு.

ஏழைக் குழந்தைகளின் கல்வியுரிமையை, கற்றல் திறனை அவர்கள் மீது திணிக்கப்படும் உழைப்புச் சுமை பாதிப்பதை இந்த விவரங்கள் நிறுவுகின்றன. இந்நிலையில் 14 வயதுக்குக் கீழான குழந்தைகளைக் ‘குடும்ப’த் தொழிலில், பதின்வயது சிறுவர்களை முதலாளித்துவ நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்ள சட்டபூர்வமாகவே அனுமதித்திருப்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியுரிமையைக் மறுக்கும் சமூகவிரோத நடவடிக்கையாகும்.

இப்படிக் குழந்தை உழைப்பு காரணமாகக் கற்றல் திறன் குறைவாக உள்ள ஏழைக் குழந்தைகளைக் கைதூக்கிவிடுவதற்குப் பதிலாக, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் அவ்வாறான குழந்தைகளுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது என அகம்பாவத்தோடு அறிவிக்கிறது, புதிய கல்விக் கொள்கை. அவர்கள் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் உடல் உழைப்பிற்குத்தான் லாயக்கு என முடிவு செய்து அவர்களின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வஞ்சகத் திட்டமும், தப்பித் தவறி அவர்கள் பத்தாம் வகுப்பைத் தொட்டுவிட்டால், அவர்களுக்கு அறிவியல், கணித, ஆங்கில அறிவு தேவையில்லை என முடிவு செய்து, அவர்களை ஒதுக்கி வைக்கும் திட்டமும் புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டிலுள்ள மொத்த குழந்தைத் தொழிலாளர்களுள் 80 சதவீதக் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றும், 20 சதவீதக் குழந்தைகள் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையும், புதிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் அபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

– குப்பன்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

0

ணவை ஒத்தக்கடை டாஸ்மாக் கடையை (கடை எண் 10,400) மூட வலியுறுத்தி 28-09-2016 அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-manaparai-siege-01அமையபுரம், வேங்கைகுறிச்சி, பழைய கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஜென்ம விரோதியாக தமிழக அரசின் இந்த டாஸ்மாக் கடை இருக்கிறது. குறிப்பாக பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு மீளாத துயரத்தை அன்றாடம் ஏற்படுத்தும் வகையிலேயே மேற்கண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

தினம்தோறும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளை பார்க்கும் போதே மனம் பதறுகிறது. வெட்டிக் கொலை, குத்திக் கொலை, வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு என பல குற்றங்களுக்கு டாஸ்மாக் போதையே  காரணமாக அமைகிறது.

இத்தகைய பாதிப்புகளில் மக்கள் குமுறிக் கொண்டு இருந்த சூழலில் தான் மக்கள் அதிகாரம் அப்பகுதி மக்களோடு கைகோர்த்தது.

shutdown-tasmac-manaparai-siege-03தொடர்ச்சியாக அரசின் சட்டவிரோத, சமூக விரோத செயல்களை துணிவோடு எதிர்க் கொண்டு போராடி வரும் “மக்கள் அதிகார”த்தை பல கிராமங்களில் மக்களே விரும்பி அழைத்து டாஸ்மாக்கை மூட உதவ கோரினர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு 22 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆய்வு செய்த அதிகாரிகள், “மேற்கண்ட கிராமங்களில் பள்ளியோ, மருத்துவமனையோ, பிற அடிப்படை வசதிகளோ இல்லை. அதனால் டாஸ்மாக் கடை இருக்கலாம்” என முடிவு செய்தனர். அதிகாரிகளின் இத்தகைய கோமாளித்தனமான முடிவுகளை கண்டிக்கும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையிலும் செப்டம்பர் 12 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-manaparai-siege-02“எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம்” என எச்சரித்தனர். “உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்” என அப்போதே எச்சரிக்கப்பட்டது.

கேளாத காதில் ஊதிய சங்காகவே அதுவும் அமைந்தது. இதனை தொடர்ந்து கடையை மூடும் முற்றுகை போராட்டம் நடத்த 1 வாரம் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை திரட்டினோம்.

செப்டம்பர் 27-09-2016 அன்று முற்றுகை என அனைத்து கிராமங்கள், நகரம் என சுவரொட்டி ஒட்டப்பட்டது. திட்டமிட்ட நாளன்று காவல்துறை படையோடு வந்து அந்த கிராம மக்களை அச்சுறுத்தும்படி குவிந்தனர், கடையைச் சுற்றி தடுப்பரண் அமைத்தனர்.

shutdown-tasmac-manaparai-siege-04இவர்களின் சதிவேலையை முன்னரே அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பேரணியாக கடையை நோக்கி முழக்கங்களுடன் முன்னேறினர். பள்ளி சிறுவர், சிறுமிகள், முன்வரிசையில் நிற்க அதனை தொடர்ந்து பெண்கள் அணி வகுத்தனர். தோழர்கள் படை அரணாக இருபுறமும் அணி வகுக்க குடிமகன்கள் சுற்றி நின்று கவனிக்க பேரணி நகர்ந்தது.

மக்களின் ஆவேசமான பேரணியும் முழக்கம், கொடி, பேனர்களுடன் முன்னேறுவதை கவனித்த காக்கிச்சட்டைகள் தாம் அமைத்த தடுப்பரண் வரைக்கூட பொறுமை காக்கவில்லை. தடுப்பரணை தாண்டி அதிகாரிகள், தாசில்தார், டாஸ்மாக் அதிகாரிகள் என பேரணியை இடைமறித்து நைச்சியமாக பேசி போராட்டத்தை கைவிட வைக்க முயற்சித்தனர். “உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, அதிகாரம் இல்லை, அவகாசம் வேண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு” என அனைத்து ஆயுதங்களையும் வீசி பார்த்தனர்.

அனைத்தையும் ஏற்க மறுத்து மக்கள் ஆவேசமாக முன்னேற முயன்றனர். கையில் சாணிவாளி, துடைப்பம் சகிதமாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த, அறிவிப்பு வெளியிட்ட பெண்களை சகிக்க முடியாமல் அனைவரையும் கைது செய்ய தனது போக்கிரித்தனத்தை போலீசு காட்டியது. பெண்கள், குழந்தைகள் முதியோர் என பேதம் பார்க்காமல் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். எதிர் கொண்டு போராடிய 32 நபர்களை கைது செய்து மக்களை விரட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கைது செய்தபின் கூடியிருந்த மக்களிடம், “மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேடப்படும் குற்றவாளிகள், கொள்ளையர்கள்” என அவதூறு பிரச்சாரத்தை கிளப்பி இவர்களோடு சேராதீர்கள் என மக்களை மிரட்டியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“எந்த ஊரில் தேடப்படும் குற்றவாளிகள் ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டி போலீசை வரவழைத்து போராடுவார்கள்” என போலீசாரின் முகத்தில் கரியை பூசி உள்ளனர்.

shutdown-tasmac-manaparai-siege-12கைது செய்து வையம்பட்டி திருமணமண்டபத்தில் அடைக்கப்பட்ட பிறகும் எமது போராட்டம் தொடர்ந்தது. பறிமுதல் செய்த மெகா பேனர், படம் பிடித்த கேமரா, மெமரிகார்டு அனைத்தையும் கொடுத்தால்தான் முகவரி உள்ளிட்டவைகளை அளிக்க முடியும், மதிய உணவும் அருந்த மாட்டோம் என முடிவாக அறிவித்தனர்.

எரிச்சலடைந்த வையம்பட்டி ஆய்வாளர் “நான் எத்தனையோ போராட்டங்கள், கட்சியை பார்த்து இருக்கிறேன். உங்களை போல பார்த்தில்லை. எதுக்கும் கட்டுப்பட மாட்டேங்கீறிங்களே“ என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பினார்.

shutdown-tasmac-manaparai-siege-11அவரை அருகில் அழைத்து உட்காரவைத்து ஜனநாயம், மக்கள் சமத்துவம் பற்றி பேசி, “எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். நீங்கள் பொறுமையாக அணுக வேண்டும்” என போதிக்கப்பட்டது. “நான் பொறுப்பேற்கிறேன், உடனடியாக பிடித்தவர்களை வெளியே அனுப்புகிறேன். படக்கருவிகளை கொடுக்கிறேன் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார். அதன் பிறகே போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது.

மாலை 6.45 வரை வெளியே விடலாமா, சிறையில் அடைக்கலாமா ? என மேலதிகாரிகள் தீவிர ஆலோசனை செய்தனர். இறுதியாக விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட பின் ஒத்தக்கடை டாஸ்மாக் வழியாக முழக்கம் மிட்டவாறே போராட்டம் முடியவில்லை மீண்டும் தொடருவோம் என கிராமங்கள் வழியாக சென்று கைதான மக்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அடுத்த கட்ட போராட்டம் பற்றி விரைவில் போராட்ட கமிட்டி கூடி முடிவு செய்ய உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

இப்போராட்டத்தை மக்கள் அதிகாரம் மணப்பாறை பகுதி ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை ஏற்று நடத்தினார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர்.தர்மராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி, ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்(பெண்கள், சிறுவர், சிறுமியர்) கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம், மணப்பாறை,
திருச்சி மாவட்டம்.

நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !

2

“மருத்துவராக விரும்பும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது; அப்படியே எழுதினாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை; அவை பல்வேறு தில்லுமுல்லுகளும் மோசடிகளும் செய்வதோடு, அக்கல்லூரிகளில் காணப்படும் நன்கொடை, கட்டணக் கொள்ளை மாணவர்களை அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. நாடு முழுவதும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றெல்லாம் காரணங்களை அடுக்கி, இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டி, தகுதியும் திறமையும் மிக்க மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்குத் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு ) மட்டும்தான் ஒரே வழி எனச் சாமியாடிய உச்சநீதி மன்றம், இத்தேர்வை இந்தக் கல்வியாண்டு தொடங்கியே நடத்த வேண்டும் என்ற கட்டப் பஞ்சாயத்து உத்தரவை கடந்த ஏப்ரல் மாதம் அளித்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடப்பதோ உச்சநீதி மன்றம் உதார் விட்டதற்கு நேர் எதிராக இருக்கிறது.

neet-1
தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) வெற்றி பெற எங்கள் பயிற்சி மையத்தில் சேருமாறு நடுத்தர வர்க்க மாணவர்களுக்குத் தூண்டில் போடும் விளம்பரம்.

நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,715 இடங்கள் உள்ளன. மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, மொத்தமுள்ள இடங்களில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 85 சதவீத இடங்களை அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அகில இந்திய ஒதுக்கீடு போக (15 சதவீதம்) மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவை மாநில அரசுகளின் ஒதுக்கீட்டிற்கு இடங்களைத் தருவதில்லை. அவை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தவிர, மீதி 85 சதவீத இடங்களையும் தாமே நிரப்பிக் கொள்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீடு இடங்கள்தான் தனியார் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பணங்காய்ச்சி மரங்களாக உள்ளன.

இந்தக் கல்வியாண்டைப் பொருத்தவரை, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான (22,715 இடங்கள்) மாணவர் சேர்க்கை, நீட் தேர்வுக்கு முன்னதாக இருந்துவந்த நடைமுறைப்படி மாநில அரசுகளால் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும், தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை உள்ளடக்கிய 30,000 இடங்களுக்குத்தான் தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) தேர்ச்சி அடைந்துள்ள நான்கு இலட்சம் மாணவர்களும் போட்டியிடுகின்றனர்.

தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, ” அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமின்றி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மைய அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்யும். இதன் மூலம் தனியார் கல்லூரிகள் அடிக்கும் நன்கொடை, கட்டணக் கொள்ளையிலிருந்து தப்பித்துவிடலாம்” என நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கனவு கண்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலோ அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு (3,521 இடங்கள்) மட்டும் ஒற்றைச்சாளர முறையில், நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்-தரவரிசை அடிப்படையில், இணையம் மூலம் கலந்தாய்வு நடத்திவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 26,500 இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொறுப்பை அந்தந்த கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களிடமே தந்திரமாக ஒப்படைத்துவிட்டது.

neet-2அதாவது, “அந்தந்த மாநில அரசுகள் விரும்பினால், தமது மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச்சாளரக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம்” எனக் கூறி நழுவிக் கொண்டுவிட்டது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் கல்வி வள்ளல்களின் செல்வாக்கு இருப்பதோடு, தனியாரின் கொள்ளையும் இலாபமும்தான் அரசின் கொள்கையாக மாறிவிட்டதாலும் தமிழகம் உள்ளிட்டுப் பெரும்பாலான மாநிலங்கள் இந்தக் கலந்தாய்வை நடத்த முன்வரவில்லை.

மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்துவதைக் கைவிட்டுவிட்டதைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியும், மருத்துவப் பல்கலைக்கழகமும் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வினை எழுத வேண்டியிருப்பதாகக் கண்ணீர் வடித்த கற்றறிந்த நீதிபதிகளின் மரியாதைக்குரிய மூளையில், தங்களுடைய தீர்ப்பின் விளைவாக மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து, மெடிக்கல் சீட்டில் விலை விசாரித்து அலைபாய்வது கடுகளவும் உரைக்கவில்லை.

நீட் தேர்வில் மாணவர்கள் வாங்கியிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என மருத்துவக் கவுன்சில் தனியார் கல்லூரிகளுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் எத்துணை மாணவர்கள் விண்ணப்பித்தனர், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்ன, விண்ணப்பித்த மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதா, தரவரிசையின் அடிப்படையில்தான் மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, சேர்க்கை நடைபெற்றதா என்பதையெல்லாம் கண்காணிப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் எந்தவொரு ஏற்பாடும் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த நிபந்தனை சோளக்காட்டு பொம்மையைவிடக் கேலிக்குரியது.

மாநில அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களிடமும்கூட இலட்சக்கணக்கில் பணம் பிடுங்கத் தனியார் கல்லூரிகள் தயங்கியதே இல்லை; அந்த ஒதுக்கீட்டிலேயே ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அப்பழுக்கற்ற விதத்தில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள் என அப்பாவிகள்கூட நம்பமாட்டார்கள். நீட் தேர்வு மதிப்பெண்ணைக் காட்டிலும், பணப்பெட்டியின் எடைதான் மாணவர்களின் சேர்க்கையைத் தீர்மானிக்கவுள்ள நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் விதித்திருக்கும் நிபந்தனை தனியார் கல்லூரிகளின் திருவிளையாடல்களை மறைக்கும் முகமூடி தவிர வேறில்லை.

neet-caption-1நீட் தேர்வுக்கு முன்னால், தாங்களே ஒரு மோசடியான தேர்வை நடத்தி, அதில் இலட்ச இலட்சமாய்ப் பணத்தைக் கொடுத்த மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்து, அவர்களைத் தமது கல்லூரிகளில் சேர்த்து வந்த தனியார் கல்லூரி முதலாளிகளை, அந்தச் சிரமத்திலிருந்து விடுவித்திருக்கிறது, உச்சநீதி மன்றம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வு. தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையில் நடத்தும் மோசடிகளுக்கு ஒரு சட்டபூர்வ தகுதியை, பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியும் கொடுத்துவிட்டது.

போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறைவாகவும் உள்ளதால், முதலாளித்துவ “சந்தை” விதி மருத்துவ இடங்களின் ரேட்டை எகிற வைத்துவிட்டது. “கடந்த ஆண்டு 10 இலட்ச ரூபாயாக இருந்த எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் ஆண்டு கல்விக் கட்டணம் நீட் தேர்வுக்குப் பிறகு 21 இலட்சமாகவும்; சிறீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் 15 இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளதென்றும், இதற்கு அப்பால், ஒரு இலட்ச ரூபாய் முதல் மூன்று இலட்ச ரூபாய் வரை பிற கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்; இவற்றுக்கும் மேலே ஒவ்வொரு கல்லூரியும் தனது தரத்திற்கு ஏற்ப 40 இலட்ச ரூபாய் முதல் 85 இலட்ச ரூபாய் வரையிலும் நன்கொடை வசூலிப்பதாகவும்” டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால், மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருக்கும் மாணவர்கள், அத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள் என்பதைவிட, கல்லூரியில் நுழைவதற்கு அவர்களது பெற்றோர்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பணமிருக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. மேலும், 26,500 இடங்களைத் தமது பிடியில் வைத்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், அந்த இடங்களில் ஒரு சில நூறு இடங்களை அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் மொய் வைப்பதைக் கழித்துவிட்டுப் பார்த்தால்கூட, போட்டியிடும் மாணவர்களிடம் கறக்கவுள்ள நன்கொடை மூலம் அவர்களிடம் இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் சேருவதற்கான வாய்ப்பை நீட் தேர்வு திறந்துவிட்டிருக்கிறது.

இதனையெல்லாம் நீதிமன்றங்கள் தடுக்க முன்வரவில்லை எனக் குறைபட்டுக் கொள்வது அறிவீனம். மாறாக, நீதித்துறைதான் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் செக்யூரிட்டி பொறுப்பைக் கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக, கேரள மாநில சி.பி.எம். கூட்டணி அரசு, அம்மாநிலத்திலுள்ள தனியார் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, அவ்விடங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்லூரி முதலாளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், “மாநில அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்துவதை மைய அரசு நிபந்தனையாக விதிக்கவில்லை” எனத் தனியார் கல்லூரிகள் வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, கேரள அரசின் உத்தரவை ரத்து செய்துவிட்டது, அம்மாநில உயர்நீதி மன்றம்.

இந்திய மருத்துவக் கல்வியை உலகத் தரத்துக்குக் கொண்டு செல்லப் போவதாகக் கூறிக்கொண்டு உச்சநீதி மன்றம் நீட் தேர்வை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளால்அம்பலப்பட்டுப் போன இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்கும் வரை, அதனின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி லோதாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியையும் அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி சமீபத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்த 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளுள் உ.பி. மாநிலத்தில் அமைந்துள்ள சரசுவதி மருத்துவக் கல்லூரி, ம.பி.யில் அமைந்துள்ள சாக்ஷி மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை எங்கள் கல்லூரி சரி செய்யவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவற்றுக்கும் சேர்த்து அங்கீகாரம் அளித்த கூத்தையும் நடத்தியிருக்கிறது, லோதா கமிட்டி. நாட்டின் மருத்துவர் தேவையை ஈடுசெய்யும் நல்லெண்ணத்தில்தான் இந்த அங்கீகாரத்தை அளித்திருப்பதாகக் கூறி, தனது அயோக்கியத்தனத்திற்குப் பட்டுக்குஞ்சமும் கட்டிவிட்டது.

இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அதனிடத்தில் தேசிய மருத்துவ கமிசனை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள நிதி ஆயோக், தனது பரிந்துரையில், ”இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க தனியார் முன்வருவார்கள். அதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” எனக் கூறியிருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சட்டவிரோத நன்கொடையை ஒழிப்பதற்கு அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் வழி என்பதுதான் இந்தப் பரிந்துரையின் பொருள்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் நீட் தேர்வு, தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் ஏழை மாணவர்களை மருத்துவப் படிப்பிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த ”தேசிய” பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை பட்டா போட்டுக் கொடுக்கும் சதித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது. லோதா கமிட்டியும், நிதி ஆயோக்கும் மருத்துவக் கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியிருப்பதுடன், மருத்துவர் தொழிலைக் கருப்புப் பணக் குடும்ப வாரிசுகளின் தனியுரிமையாக மாற்ற முயலுகின்றன. தரமான மருத்துவக் கல்வி, தகுதியான மருத்துவர்கள் என ஆளும் வர்க்கம் போடும் கூச்சலின் பின்னே மறைந்துள்ள உண்மை இதுதான்.

தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், கனிவு பொங்கும் முகத்துடன், சிகிச்சைக்கு எத்தனை ஆயிரம் செலவாகும் என்று நோயாளிகளிடம் கூறுவதைப் பார்த்திருக்கிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில், “ஐயா, தாங்கள் இந்த டாக்டர் பட்டத்தை எத்தனை கோடிக்கு வாங்கினீர்கள்?” என்று நோயாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. பணம் கொடுத்துப் பட்டம் வாங்கும் உரிமையை உத்திரவாதம் செய்திருக்கும் மாண்புமிகு நீதியரசர்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்ற தகவல் அறியும் உரிமையையாவது குடிமக்களுக்கு வழங்கலாம். அதுதானே ஜனநாயகம்!

– ரஹீம்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

2

கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவ பாசிசத்தின் நவீன ஏஜெண்டுகள்!

மிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ் – சத்யஜோதி தம்பதியினர், தனது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்த பின்னர், அவர்களை மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்றும், அவர்களை மீட்டுத் தரும்படியும் அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் கிரிமினல் மோசடிகள் மீண்டும் சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளன.

jaggi-vasudev-3
தனது மகள்கள் இருவரையும் மூளைச்சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்துள்ளார் என்று புலம்பும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் காமராஜ்.

முனைவர் காமராஜ் மட்டுமின்றி, ஈஷா சமஸ்கிருத குருகுலப்பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம்கட்டி சேர்க்கப்பட்ட தனது இருமகன்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டுமகேந்திரன், பொறியாளராக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த தனது மகன் ரமேஷை மூளைச்சலவை செய்து ஈஷாயோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஈஷா யோகா மையத்தில் இதுவரை எல்லாம் சரியாக நடந்து வந்ததாகக் கருதியவர்களோ, துணுக்குற்று திரும்பிப் பார்க்கிறார்கள்.

ஈஷா யோகா மையத்தின் மீது இப்போது புகார் சொல்லும் இந்த வர்க்கத்தினர் இந்துக்களாக இருப்பதால், இயற்கையாகவே ஜக்கி போன்ற சாமியார்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய சாமியார்களின் உபதேசங்கள் அறிவியலுக்குப் புறம்பானதாக இருந்தபோதிலும், ஆட்டு மந்தைக் கூட்டமாக அவர்களை ஆதரிக்கிறார்கள். இத்தகைய சாமியார்கள், இந்து மதம் என்பது பிற மதங்களைப் போல ஒரு மதமல்ல, அது வாழ்க்கை முறை, பண்பாட்டு முறை என்று சித்தரிக்கின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வது, காலையில் வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போடுவது, யோகா செய்வது, தியானம் செய்வது, பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி செய்வது முதலானவையெல்லாம் உடற்பயிற்சிகளாகவும் இந்து மதத்துக்கே உரிய பண்பாடாக இருப்பதாகவும் நவீன விளக்கமளிக்கிறார்கள். இவற்றின் மூலம் இந்து நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தினரை ஈர்ப்பது அவர்களுக்கு எளிதாகிறது.

jaggi-vasudev-1
ஜக்கி வாசுதேவ்

தன்னைத் தாராளவாதியைப் போல காட்டிக் கொள்ளும் ஜக்கி, நீங்கள் எந்த மதத்தின் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்கிறார். அதேசமயம், பசுவதைத் தடுப்புச் சட்டத்தைப் பற்றி கேட்டால், கால்நடைகள் நமது செல்வங்கள்; மாடு வளர்ப்பதென்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று மீனுக்கும் தலையும் பாம்புக்கு வாலுமாக ஈரோட்டமான கருத்தின் மூலம் சுற்றிவளைத்து இந்துத்துவத் திட்டத்தை ஆதரிக்கிறார். இத்தகைய சாமியார்கள் யோகம், தியானம், கட்டிப்புடி வைத்தியம் – என பல்வேறு வழிகளிலும் மிதமானதாகவும் நைச்சியமாகவும் இந்துத்துவத்துக்கு ஆதரவான கருத்தியல் அடித்தளத்தை உருவாக்குவதால், இந்துத்துவ அமைப்புகளும் அவர்களை ஆதரிக்கின்றன. இத்தகைய சாமியார்களை வாழ்க்கை நெறிகளைக் கற்பிப்பவர்களாகவும், நன்னெறிகளைப் போதிப்பவர்களாகவும் பார்ப்பன ஊடகங்கள் கௌரவிக்கின்றன.

உலகமயம் திணிக்கும் கொத்தடிமைத்தனம், வேலைப்பளு, உரிமைகள் பறிப்பு முதலான முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு இணங்கி வாழ்வதற்கு யோகா, தியானம் – என இந்து நடுத்தர வர்க்கத்தினரின் மனதைப் பண்படுத்தி சாந்தப்படுத்துவதாலும், இந்துத்துவத்துக்கு கருத்தியல் அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாலும் இத்தகைய சாமியார்கள் ஆளும் வர்க்கங்களால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளார்கள். சிறீசிறீ ரவிசங்கரின் “வாழும்கலை”அமைப்பு நடத்திய விழாவால் யமுனை நதிக்கரையும் சுற்றுச்சூழலும் நாசமாகியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தபோதிலும், பிரதமர் மோடி அந்த விழாவில் பங்கேற்று பாராட்டுகிறார். அரியானாவின் பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்வுக்கு கேபினட் அமைச்சர் தகுதியை வழங்கியுள்ளது. ராம்தேவ்வுக்கு ஏற்கனவே ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரது ஆயுர்வேத நிறுவனத்திற்கு இப்போது மோடி அரசு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கிறது. ஜக்கியைப் பற்றி புகார்கள் வந்துள்ள நிலையில், அவர் நடத்தும் ”கிராமோத்சவ்” விழாவில் மத்திய அமைச்சரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.

கோவை - வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

தனியார்மய – தாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள இந்து நடுத்தர வர்க்கத்தினரோ, வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சலுக்குத் தீர்வாக யோகாசனம், தியானம் முதலானவற்றால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று குருட்டுத்தனமாக நம்புகின்றனர். இத்தகைய சாமியார்களின் மையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்கள் யோகா, தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். அதேசமயம், ஜக்கியின் ஆக்கிரமிப்புக்கும் சுற்றுச்சூழல் நாசத்துக்கும் எதிராக அப்பகுதிவாழ் மக்களும் சமூக ஆர்வலர்களும் போராடியபோதிலும், ஜக்கியின் யோகா மையத்தில் நடக்கும் கிரிமினல் மோசடிகள், கொலைகள், அட்டூழியங்களை பற்றி விரிவான ஆதாரங்களுடன் செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இவர்கள் அவற்றைக் கண்டும்காணாததுபோல இருக்கின்றனர்.

முற்றும் துறந்த ஒரு சாமியாருக்கு எதற்காக இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்கள், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன – என்று இயல்பாக எழும் கேள்விகூட இவர்களது மனதில் எழுவதில்லை. இத்தகைய சாமியார்கள் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கட்டணக் கொள்ளை நடத்துவதைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவதுமில்லை. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை இத்தகைய சாமியார்கள் நடத்திக் கொண்டிருப்பது இந்த வர்க்கத்தினருக்கு முரண்பாடாகத் தெரியவில்லை. இந்துஸ்தான் லீவர்தான் போன்ற ஏகபோக நிறுவனங்கள்தான் தொழில் செய்ய வேண்டுமா, சாமியார்கள் செய்யக் கூடாதா என்று அவர்களின் கார்ப்பரேட் வர்த்தகத்தை இவர்கள் அங்கீகரித்து ஆதரிக்கவே செய்கின்றனர்.

ஈஷா யோகா மையத்திலிருந்த முனைவர் காமராஜின் இரு மகள்களையும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர், 18 வயதானவர்கள் தங்களது வாழ்வைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என்ற சட்ட விதியைக் காட்டி, ஒருவர் இல்லறத்தையோ, துறவறத்தையோ தேர்ந்தெடுப்பதென்பது அவரது தனிநபர் உரிமை என்றும், அதில் அரசோ, நீதித்துறையோ தலையிட முடியாது என்றும் நீதித்துறை தெரிவித்திருக்கிறது. சாமியாரான பெண்களோ, தங்களது சொந்த விருப்பத்தின் பேரில்தான் இந்த முடிவை எடுத்ததாகப் பேட்டியளிக்கிறார்கள். ஜக்கியிடம் சாமியாராகியுள்ள தனது வாரிசுகள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மனநல மருத்துவர் முன்னிலையில் அவர்களை வாக்குமூலம் அளிக்கச் செய்ய வேண்டுமென்றும் முனைவர் காமராஜ் கோருகிறார்.

காமராஜ் போன்ற நடுத்தர வர்க்க மெத்த படித்த மேதாவிகள், தமது சொந்த பாதிப்பிலிருந்து மட்டுமே கார்ப்பரேட் சாமியார்களின் லீலைகளை, மோசடிகளை எதிர்த்தாலும், அந்த வர்க்கத்தின் பெரும்பான்மையினர் இச்சாமியார்களின் தாசர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். நித்யானந்தா போன்றவர்கள் நடிகையோடு கூத்தடித்தாலும் அவனைச் சாமியார் என்கிறார்கள். சங்கராச்சாரி என்ற கிரிமினல் பேர்வழி, ஆச்சாரம் வழுவாத ஒரு பார்ப்பானையே வெட்டிக் கொன்றாலும் பார்ப்பனர்கள் அக்கொலைகாரனை இன்னமும் இந்து மதத்தின் அத்தாரிட்டியாக அங்கீகரிக்கிறார்கள்.

இந்து நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தின் இத்தகைய இயலாமையையும் அறியாமையையும் சாதகமாக்கிக் கொண்டு, ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களோ ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தோடு சட்டத்துக்கு அப்பாற்பட்ட தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

– தனபால்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

துப்புரவு தொழிலாளி செத்தால் ஜெயா அரசுக்கு கவலை இல்லை !

0

உங்களுக்குள் ஆதிக்க சாதிப் புத்தி இல்லையா?”

கையால் மலம் அள்ளும் பணியையும் உலர் கழிப்பிடங்கள் கட்டுவதையும் தடை செய்யும் 2013-ஆம் ஆண்டு சட்டத்தைக் கண்டிப்போடு நடைமுறைப்படுத்தக் கோரி, “எங்களைக் கொல்லாதீர்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்துத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய நாடு தழுவிய பேரணி, அசாமில் டிசம்பர் 10, 2015-இல் தொடங்கி, அம்பேத்கரின் 125 பிறந்த தின நிறைவு நாளான 13, ஏப்ரல் 2016 அன்று டெல்லியில் முடிவடைந்தது. இப்பேரணி நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான், சென்னை, துரைப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் அடைபட்டுப் போன பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய இறங்கிய நான்கு தொழிலாளர்களுள், மூன்று பேர் விஷவாயு தாக்கி இறந்து போனார்கள்; மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.

manual-scavenging-1
நாடு சுதந்திரமடைந்து எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், தாழ்த்தப்பட்டோருக்கு அடிமைத் தொழிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை.

மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவத்தைத் தமிழக போலீசு 2013-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வழக்காகப் பதிவு செய்யவில்லை. அதிகார வர்க்கத்தின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தூய்மைப் பணியாளர் சங்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் போராடிய பிறகுதான் அச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், இறந்து போன அந்த மூன்று தொழிலாளர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து உயிர் பிழைத்த மற்றொரு தொழிலாளிக்கும் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி கொடுக்க வேண்டிய இழப்பீடைத் தர மறுத்து வருகிறது, தமிழக அரசு.

நாடு ‘சுதந்திரமடைந்து’ 46 ஆண்டுகள் கழித்துதான், கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலைத் தடை செய்யும் சட்டத்தை மைய அரசு இயற்றியது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து 2013-இல் அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இப்புதிய சட்டம் தொடர்பாகத் தூய்மைப் பணியாளர் இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், “அவசரமான, ஆபத்தான காலங்களில்கூட மலக் குழிகள் மற்றும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்வதற்கு மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது; 1993-ஆம் ஆண்டு தொடங்கி, பணியின்போது இறந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்க வேண்டும்” என 2014-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, "இந்தியாவில் 26 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதையும், அதில் கிட்டதட்ட எட்டு இலட்சம் கழிப்பிடங்கள் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதையும், நாடெங்கும் 1,80,657 மலம் அள்ளும் தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதையும், இவர்களுள் 98 சதவீதப் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்பதையும்''  பதிவு செய்தது.
2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “இந்தியாவில் 26 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதையும், அதில் கிட்டதட்ட எட்டு இலட்சம் கழிப்பிடங்கள் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதையும், நாடெங்கும் 1,80,657 மலம் அள்ளும் தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதையும், இவர்களுள் 98 சதவீதப் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்பதையும்” பதிவு செய்தது.

“உச்சநீதி மன்றம் உத்தரவு வெளியான பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடெங்கும் 1,370 தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது விஷவாயு தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் 26 பேருக்கு மட்டுமே நட்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் 8 பேருக்கு மட்டும்தான் பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்கப்பட்டிருப்பதாக”க் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெஜவாடா வில்சன்.

அனைத்து மாநில அரசுகளுமே உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதில் அலட்சியமாக நடந்து வருகின்றன என்றபோதும், தமிழகத்தை ஆளும் அ.தி,மு.க. அரசுதான், இவ்வளவு நட்ட ஈட்டுத் தொகையை வழங்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் வழக்காடி வருகிறது. சென்னை மாநகராட்சி மூன்று இலட்ச ரூபாய்தான் நட்ட ஈடு அளிக்க முடியும் எனத் தீர்மானமே நிறைவேற்றி, உச்சநீதி மன்ற உத்தரவை மறுத்திருக்கிறது.

* * *

கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலை இன்னமும் பகிரங்கமாக நடைமுறைப்படுத்தி வருகிறது இந்திய ரயில்வே துறை.
கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலை இன்னமும் பகிரங்கமாக நடைமுறைப்படுத்தி வருகிறது இந்திய ரயில்வே துறை.

1993-க்குப் பிறகு தமிழகத்தில் பாதாளசாக்கடை அடைப்பை நீக்க அதனுள் இறங்கியபோது, விஷவாயு தாக்கி இறந்துபோன 150 தூய்மைப் பணியாளர்களுக்கும் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தமிழக அரசு பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி “மாற்றத்திற்கான இந்தியா” என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாடம் நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் அரசுத் துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மட்டும்தான் இழப்பீடு வழங்க முடியுமென்றும், காண்டிராக்டர்கள் கீழ் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கோ, தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட சாக்கடை அடைப்புகளை நீக்கப் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி இறந்து போனவர்களுக்கோ இழப்பீடு வழங்க முடியாது என்றும் வாதிட்டு வருகிறது, தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த வாதமே மோசடியானது. அரசுத் துறைகளில் பணியின் போது இறந்துபோன தூய்மைப் பணியாளர்களுக்கும் அ.தி.மு.க. அரசு உச்சநீதி மன்ற உத்தரவுப்படி பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்கவில்லை என்பதே உண்மை. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், “அரசு, தனியார் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, பணியின்போது இறந்து போகும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடை அரசு அளிக்க வேண்டும்” என உச்சநீதி மன்றம் தனது உத்தரவு குறித்து விளக்கம் அளித்திருந்தும் ஜெயா அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

கையால் மலம் அள்ளும் தொழிலைத் தடை செய்யும் சட்டத்தை நாடெங்கும் கண்டிப்போடு நடைமுறைப்படுத்தக் கோரியும் இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உச்சநீதி மன்ற உத்தரவுப்படியான நிவாரணம் வழங்கக் கோரியும் தூய்மைப் பணியாளர் இயக்கத்தினர் நாடு தழுவிய அளவில் நடத்திய பேரணியின்(பீம் யாத்ரா) ஒரு பகுதி. (கோப்புப் படம்)
கையால் மலம் அள்ளும் தொழிலைத் தடை செய்யும் சட்டத்தை நாடெங்கும் கண்டிப்போடு நடைமுறைப்படுத்தக் கோரியும் இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உச்சநீதி மன்ற உத்தரவுப்படியான நிவாரணம் வழங்கக் கோரியும் தூய்மைப் பணியாளர் இயக்கத்தினர் நாடு தழுவிய அளவில் நடத்திய பேரணியின்(பீம் யாத்ரா) ஒரு பகுதி. (கோப்புப் படம்)

உச்சநீதி மன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக உயர்நீதி மன்றத்தில் ஆணவத்தோடு தெரிவித்துள்ள ஜெயா அரசு, தமிழகத்தில் இறந்துபோன 41 தூய்மைப் பணியாளர்களின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்திருக்கிறது.

ஜெயா அரசைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பத்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு கொடுப்பது அதீதமானது; அவரது அரசு போடும் ஒரு இலட்ச ரூபாய், இரண்டு இலட்ச ரூபாய் பிச்சை நிவாரணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டு வாயை மூடிக் கொள்ள வேண்டும் என அகம்பாவத்தோடும் ஏளனத்தோடும் நடந்து வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் கத்திக் குத்துப்பட்டு இறந்து போன முனுசாமி என்ற தலைமைக் காவலருக்கு முதலில் ஐந்து இலட்ச ரூபாய் நிவாரண உதவியை அறிவித்த ஜெயா, அதன் பிறகு, எந்த வித சட்டம் அல்லது மரபுக்கும் உட்படாத வண்ணம் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியை வாரி வழங்கினார். மேலும், பணியின் போது இறந்து போகும் போலீசாருக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவித்து, தன்னை போலீசின் காவல் தெய்வமாகக் காட்டிக் கொண்டார்.

தூய்மைப் பணியாளர்களின் சமூக விடுதலை, உரிமைகளுக்காகப் போராடி வரும் பெஜவாடா வில்சன்.
தூய்மைப் பணியாளர்களின் சமூக விடுதலை, உரிமைகளுக்காகப் போராடி வரும் பெஜவாடா வில்சன்.

அதே நேரத்தில், பணியின் போது இறந்து போன தூய்மைப் பணியாளருக்கு சட்டம் கொடுக்கச் சொல்லும் நிவாரண உதவியை அளிக்க மறுப்பதற்கு, இந்தத் தொழில் இழிவானது, இந்தத் தொழிலில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட சாதியினர் இழிவானவர்கள் என்ற பார்ப்பன சாதிப் புத்தி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

சத்துணவு பணியாளர்கள் தொடங்கி சாலைப் பணியாளர்கள் வரை தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பிரிவு போராடினாலும், உடல் ஊனமுற்றோர் தொடங்கி விவசாயிகள் ஈறாக சமூகத்தின் எந்தப் பிரிவும் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும், அவற்றையெல்லாம் மூட்டைப் பூச்சி போல நசுக்கிவிட வேண்டும் என்ற பார்ப்பன பாசிச புத்தி கொண்ட ஜெயா, தாழ்த்தப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்ட பிரிவினரான தூய்மைப் பணியாளர்கள் தமக்கு வழங்க வேண்டிய சட்டபூர்வ நிவாரணத்தைக் கோரினால், அதற்காகப் போராடினால் பொறுத்துக் கொள்வாரா?

பணியின் போது இறந்துபோன அந்த போலீசுக்காரனின் சாவைவிட, தூய்மைப் பணியாளர்களின் அகால மரணங்கள் எந்தவிதத்தில் குறைந்தது? சாமானியர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பதும், கொள்ளையர்களோடு கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு பங்கு போட்டுக் கொள்வதும்தான் போலீசின் பணி. போலீசு ”கடமையாற்றுவது” நின்றுபோனால், சமூகத்திற்கு நட்டமேதும் இல்லை. ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இல்லையென்றால்….? நகரங்கள் அனைத்தும் நரகமாகிவிடாதா?

அவர்கள் குப்பையில் கைவைக்காமல் போனால், மலக்குழிக்குள் இறங்க மறுத்தால் நகரத்தின் மக்கள்தொகை முழுவதும் கொள்ளை நோய் வந்து சாக வேண்டியிருக்கும். தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருநாளும் பொது சமூகத்தின் நலனுக்காக, அதனின் சுகாதாரத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்பதே உண்மை. பெருமழை, வெள்ளத்தின்பின்னே குப்பைக் காடாக, தொற்று நோய்களின் கிடங்காகக் கிடந்த சென்னையை வாழத்தக்கதாக மாற்றியவர்கள் அவர்கள் என்பதை நன்றியுள்ள யாரும் மறந்துவிட முடியாது.

* * *

manual-scavenging-caption-1தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தனிக் குவளை, தனிச் சுடுகாடு, தனிக் குடியிருப்பு உள்ளிட்ட வன்கொடுமைகளிலேயே மிகக் கொடூரமானது, குப்பையை, மலத்தை, சாக்கடை கழிவுகளை அள்ளிச் சுத்தம் செய்யும் அடிமைத் தொழிலை அவர்கள் மீது சுமத்தியிருப்பதுதான். இந்த இழிவைத் தடைசெய்வது என்ற பெயரில் 1993-ஆம் கொண்டுவரப்பட்ட சட்டம் மனித மலத்தை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதை மட்டுமே தடை செய்ததே தவிர, மலக்குழிகள், திறந்தவெளி மற்றும் பாதாளச் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதைத் தடை செய்யவில்லை. மேலும், இந்த அரைகுறையான, ஒப்புக்குச் சப்பாணியான சட்டத்தைக்கூட 1997 வரை அரசிதழில் மைய அரசு வெளியிடவில்லை. 2000-ஆம் ஆண்டு வரை எந்தவொரு மாநில அரசும் மத்திய சட்டத்தின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றவும் இல்லை.

கழிப்பறை காகிதத்திற்கு இருக்கும் மதிப்புகூட 1993 சட்டத்திற்கு இல்லாதிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர் இயக்கம் உள்ளிட்ட சில தன்னார்வக் குழுக்களும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேரும் இணைந்து, இந்த அடிமைத் தொழிலை உடனடியாக நாடெங்கும் தடை செய்யுவும், தூய்மைப் பணியாளர்களின் மறுவாழ்வுக்கு நிவாரணம் வழங்கவும் கோரி பொதுநல வழக்கொன்றை 2003-இல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்தனர்.

இந்த வழக்கு ஏறத்தாழ 11 ஆண்டுகள் உச்சநீதி மன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது. மைய அரசும் மாநில அரசுகளும் 1993-ஆம் இயற்றப்பட்ட சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது போலவும்; ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே இல்லை என்றும், அவர்கள் அனைவரும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டவிட்டது போலவும் உச்சநீதி மன்றத்தில் சாதித்தன. இந்தப் பொய்களையும் புனைசுருட்டுகளையும் முறியடிக்கும் விதத்தில் பல்வேறு ஆதாரங்களை உச்சநீதி மன்றத்திடம் தூய்மைப் பணியாளர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் எடுத்து வைத்தன.

manual-scavenging-caption-2குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “இந்தியாவில் 26 இலட்சம் உலர் கழிப்பிடங்கள் இருப்பதையும், அதில் கிட்டதட்ட எட்டு இலட்சம் கழிப்பிடங்கள் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்படுவதையும், நாடெங்கும் 1,80,657 மலம் அள்ளும் தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதையும், இவர்களுள் 98 சதவீதப் பேர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்பதையும்” பதிவு செய்தது.

தமிழகத்தில் மனிதர்களால் சுத்தப்படுத்தப்படும் 27,659 உலர் கழிப்பிடங்களும் ஏறத்தாழ 1,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் இருப்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவுகள் நிறுவின.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த போராட்டங்களின் காரணமாக, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் அடிமைத் தொழிலும், தொழிலாளர்களும் இருப்பது உலகு தழுவிய அளவில் அம்பலப்பட்டுப் போன நிலையில்தான், இந்திய அரசு தனது கௌவரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்து 1993-இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து 2013-ஆம் ஆண்டில் புதிய சட்டத்தை அறிவித்தது.

இப்புதிய சட்டம் உலர் கழிப்பிடங்களையும், கையால் மலம் அள்ளுவதையும் தடை செய்ததோடு, மலக் குழிகள் (septic tanks), திறந்தவெளி சாக்கடைகள் ஆகியவற்றில் ஏற்படும் அடைப்புகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வதையும் தடை செய்தது. மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளுதல், கழிவு நீர் அடைப்புகளைச் சுத்தம் செய்தல் ஆகியவற்றை 2019-க்குள் முற்றிலுமாக ஒழித்து விடுவதை இலட்சியமாக அறிவித்தது, இச்சட்டம். இதற்காக மாநில, மத்திய அளவிலும் கண்காணிப்பு கமிட்டிகளை அமைப்பது, தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, அதற்காகப் பல்வேறு நிதியுதவி திட்டங்கள் எனத் தடபுடலாக இயற்றப்பட்டிருந்தாலும், இவை எதுவும் நடைமுறையில் தூய்மைப் பணியாளர்களின் துயரத்தைக் கடுகளவுகூடத் துடைக்கவில்லை.

2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சட்டத்தை ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து, நத்தை வேகத்தில் 2015-இல்தான் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்களைக் கணக்கெடுக்கும் பணி மைய அரசு விதித்த கெடுவுக்குள் நடைபெறவில்லை என்பதோடு, அதற்குப் பிறகு நடத்தப்பட்ட இக்கணக்கெடுக்கும் பணி வெறும் கண்துடைப்பாக முடிந்து போனது.

இச்சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட வேண்டிய கண்காணிப்புக் குழுக்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படவேயில்லை. இக்குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில், அவை அதிகார வர்க்க போட்டி, பொறாமைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், கீதா ராமசாமி என்ற சமூக ஆர்வலர்.

தனியாரும், உள்ளூர் அரசு நிர்வாக அமைப்புகளும் கழிவு நீர் அடைப்புகளை அகற்றுவதற்குத் தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்துவது நாடெங்கும் பரவலாக நடந்து வந்தாலும், இச்சட்ட மீறலுக்காக யார் மீதும் வழக்குப் பதியப்படுவதில்லை. மலக்குழிக்குள்ளும், பாதாளச் சாக்கடையில் இறக்கிவிடப்படும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறந்துபோனால்கூட, அவ்வழக்குகள் 2013-ஆம் சட்டப்படியோ, வன்கொடுமைச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்படாமல், மிகச் சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.

வன்கொடுமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அளவிற்குக்கூட, மனிதக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் திறந்தவெளி கழிவறைகள் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கிறது, அதிகார வர்க்கம். அரியானாவைச் சேர்ந்த ஒரு அதிகாரி, “தூய்மைப் பணியாளர்கள் கையால் மலத்தை அள்ளினாலும், அக்கழிவைத் தமது தலையில் சுமந்தபடி செல்வதில்லை; அதனால், தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கையால் மலத்தை அள்ளும் தொழிலாளர்களே இல்லை” என்று அறிக்கை அளித்திருக்கிறார்.

இரயில்வே துறை தனது இரயில்களிலும் இரயில்வே நிலையங்களிலும் உள்ள 80,000 உலர் கழிப்பிடங்களையும், இரயில்வே பாதைகளையும் சுத்தப்படுத்துவதற்கு மனிதர்களைப் பயன்படுத்துவது ஊரே அறிந்த உண்மை என்றாலும், அத்துறை, “கையுறைகளை மாட்டிக்கொண்டு மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்வதால், தனது துறையில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே இல்லை” என்று சாதிக்கிறது.

இச்சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ வழக்குத் தொடர முடியாது. அந்தப் பொறுப்பும் கடமையும் அதிகார வர்க்கத்திடம் ஒப்படைக்கிறது, 2013-ஆம் ஆண்டு சட்டம். அதேபொழுதில், தனது கடமையைச் செய்யத் தவறும் அதிகார வர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி அவர்களுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது.

* * *

மனித மலத்தை மனிதனைச் சுமக்க வைக்கும் அநாகரிகத்தை இன்னமும் அனுமதித்துக் கொண்டே, நாட்டின் வளர்ச்சி குறித்து, அறிவியல் சாதனைகள் குறித்துப் பீற்றிக் கொள்வது அருவருக்கத்தக்க வெட்கக்கேடு. சாக்கடை, மலக்குழி அடைப்புகளைச் சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதன் மூலம் இந்த சாதிரீதியான அடிமைத் தொழிலை ஒழித்துக் கட்டிவிட முடியும். கை ரிக்சா, கைவண்டி போன்ற நாகரிக சமுதாயத்துக்கு ஒவ்வாத தொழில்களை ஒழித்துக் கட்டிய அரசும் சமூகமும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே சுமத்தப்பட்டுள்ள இந்த அடிமைத் தொழிலை இன்னுமும் ஒழிக்காமல் இருப்பதன் காரணம் வெளிப்படையானது. அது, சமூகத்தின் பொதுப்புத்தியிலும், அரசாங்கத்திலும் ஊறிப்போயுள்ள இந்து ஆதிக்க சாதிப் புத்தி.

கும்பமேளா போன்ற இந்து மத திருவிழா கூட்டங்களில் சிக்கிச் செத்துப் போகும் பக்தர்களுக்கு இழப்பீடு அளிப்பதில் தாராள மனதோடு நடந்துகொள்ளும் இந்த ஆதிக்க சாதிப்புத்திதான், விஷவாயு தாக்கி இறந்து போகும் தூய்மைப் பணியாளருக்குப் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க மறுக்கிறது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை விடுவிப்பது என்ற பெயரில் அவர்களைப் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்குமாறு தள்ளிவிடுகிறது. தூய்மை இந்தியா குறித்து நாக்கைச் சுழற்றிப் பேசும் அரசும் சமூகமும் வெள்ளத்தால் ஊரே நாறிப் போகும் அவசர காலங்களில்கூட, அதனைச் சுத்தம் செய்யும் பெரும் பொறுப்பைத் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டும் சுமத்திவிட்டு, ஒதுங்கிக் கொள்கிறது. பார்ப்பன பித்தலாட்டமான ”தூய்மை இந்தியா” திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாயை ஒதுக்கும் மோடி அரசு, மறுபுறம் தூய்மைப் பணியாளர்களின் நிவாரண ஒதுக்கீடை 4,000 கோடி ரூபாயிலிருந்து வெறும் 10 கோடி ரூபாயாக வெட்டுகிறது.

அனைத்திற்கும் மேலாக, இந்த அநாகரிகமான அடிமைத் தொழிலைத் தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்துவதைத் தீண்டாமைக் குற்றமாகப் பார்க்க மறுப்பதோடு, இந்த இழிதொழிலை ஒழித்துக் கட்டப் போவதாக அறிவித்துக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கழிப்பறை காகிதமாக்கி வீசுகிறது.

– செல்வம்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

வல்லரசுக் கனவும் இந்தியப் பெண்களின் நிலையும்

0

ந்திய நாட்டின் பாதுகாப்பிற்கான நிதியாதாரம் ஆண்டாண்டு அதிகரிக்கும் அதேநேரத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்கொடுமைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உலகின் 6-வது பெரிய இராணுவ செலவாளியாக ‘பெருமைப்’ படும் இந்தியா, சமூகப் பாதுகாப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் கூட இல்லை. இதற்காக யார் வெட்கப்படுகிறார்கள்?

money-spent-military
பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுனர்கள் இந்த ஒதுக்கீடு போதாதென்றும் இது விழுக்காடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடுகளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்

இந்தியாவின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி 2004-2005 ஆண்டில்  இருந்து ஆண்டுதோறும் அதிகரித்து 2016-2017 ஆண்டில் 3,40,922 கோடிகள்(ஓய்வூதியம் உள்ளிட்டு) என எகிறி இருக்கிறது. இது 2016-2017 ஆண்டிற்கான வரவுசெலவில் 17.4 விழுக்காடும்,  மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(G.D.P) 2.3 விழுக்காடும் ஆகும். பாதுகாப்புத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் அக்மார்க் தேசபக்தர்கள் இந்த ஒதுக்கீடு போதாதென்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3  விழுக்காடுகளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சீனா தனது இராணுவ வலிமைக்காக அதிக நிதியை ஒதுக்குவதால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்க இந்தியாவும் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டும் என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அதே சீனா  தன்னுடைய மக்களுக்காக ஒதுக்கும் சமூகப்பாதுகாப்பு நிதியோடு இவர்கள் ஒப்பிடத் தயாரில்லை. மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு மெல்லிய அளவில் முரண்படும் சீனாவின் இராணுவ வலிமையோடு இந்தியா எப்படி போட்டி போட முடியும்? அதிகபட்சம் இந்த பூச்சாண்டியை காட்டி விலை போகாத அமெரிக்க ஆயுதங்களை இந்தியாவின் தலையில் கட்டுவதைத் தவிர வேறு என்ன நடக்கும்?

இலட்சக்கணக்கான கோடிகள் பாதுகாப்பிற்காக கொட்டினாலும் ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் அவரது பாதுகாப்பிற்கான கவசவாகனங்கள் மற்றும் விமானம் கூட அமெரிக்காவில் இருந்துதான் கொண்டு வரப்பட்டது. ஆக தன் அதிபரின் பாதுகாப்பைக் கூட இந்தியாவை நம்பி விடாத அமெரிக்காதான் இந்தியாவை வைத்து சீனாவை மிரட்ட போகிறதா என்ன?

Rape_case
ஒபாமாவைப் பாதுகாக்க பம்பரமாய் சுற்றி வேலை செய்த இந்திய அரசு தமது சொந்தப் பெண்களைப் பாதுகாக்க என்ன செய்தது?

ஒபாமா விஜயத்தின் போது டெல்லியைச் சுற்றி 400 கிலோமீட்டர் சுற்றுவட்டதிற்குள் விமானங்கள் பறக்கத்தடை, டெல்லி மெட்ரோ ரயில்நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான பாதைகள் அனைத்தும் முன்னதாகவே கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது என ஆண்டை அமெரிக்கா காலால் இட்ட ஆணைகள் அனைத்தையும் சிரம்மேல் போட்டு நிறைவேற்றியது மோடி அரசு.

இந்த இலட்சணத்தில் மோடியின் ஆப்ரிக்கப் பயணத்தை ஒட்டி ஆப்ரிக்கா நாடுகளின் வி.ஐ.பிக்களை பாதுகாப்பது எப்படி என்றும் முக்கியமான பாதுகாப்புக் கட்டமைப்பைப் குறித்தும் இந்தியாப் பயிற்சி அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படிப் பார்த்தால் வி.ஐ.பி பாதுகாப்பு குறித்து இந்தியா என்ன பாகிஸ்தான் கூட ஆப்ரிக்காவுக்கு சொல்லிக் கொடுக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் மக்களைப் பாதுகாக்காமல் தலைவர்களை மட்டும்தானே பாதுகாக்கின்றன?

ஒபாமாவைப் பாதுகாக்கவும் மோடியை காப்பாற்றவும் பம்பரமாய் சுற்றி வேலை செய்யும் இந்திய அரசு, தமது சொந்தப் பெண்களைப் பாதுகாக்க என்ன செய்தது? உலகமே அதிர்ந்து நின்ற நிற்பயா வன்புணர்வுப் படுகொலைத் தொடங்கி வினுப்ரியா தற்கொலைவரை பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கே என்ன வாழ்கிறது? வினுப்பிரியா புகார் கொடுத்த போது போலீஸ் திமிராக நடந்து கொண்டதுதான் இந்நாட்டின் யதார்த்தமெனில் யார் புகார் கொடுப்பார்கள்? யார் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்?

rape-cases
தலைநகரம் டெல்லி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவின் சராசரியை விட மூன்றுமடங்கு அதிகமாக முன்னிலையில் உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில்(2014-15) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தேசியக் குற்றப்பதிவு மையத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தலைநகரம் டெல்லிதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவின் சராசரியை விட மூன்றுமடங்கு அதிகமாக உள்ளது. 2015-ம் ஆண்டின் முதல் 8 மதங்களில் பதியப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கான வழக்குகள் 7,124- ல் ஒரு வழக்கு மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளது. இந்த விதத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலும் இந்தியாவின் தலைநகரம் என்ற இழிபெயரை காத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு முதல் 40,000 கோமாதாக்கள் காப்பற்றப்பட்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிசத் ஓநாய் கண்ணீர் விடும் அதே மண்ணில் கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட கொடுமைகளின் எண்ணிக்கை மட்டும் 1,75,593 ஆகும். கணக்கில் வராதது ஏராளம். சொந்தப்பெண்களை இப்படி கொடுமைப்படுத்தும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள்தான் மாடு முதல்நாடு வரை சீன் போடுகிறார்கள்.

rapeபாரதமாதாவின் கிராமங்களில் ரேப் என்பதே கிடையாது, ரேப் என்பதே மேற்கத்திய கலாச்சாரத்தின் இறக்குமதி என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அடித்துவிடுகிறார். சரிதான். இந்தியாவில் ரேப் என்பது குற்றமல்ல, பார்ப்பனிய சமூக அமைப்பு பெண்களுக்கு வழங்கும் தண்டனை என்பதால் ரேப்பை குற்றமாக பார்க்கும் மேற்கத்திய பார்வையை இந்த கிழக்கத்திய ஜந்து நிராகரிக்கிறது. அதனால்தான் இவர்கள் பில் கிளிண்டனை கிருஷ்ண பரமாத்மா என்று வாழ்த்தின. மோனிகா லிவிகின்ஸ்கி – கோபியர் முதலான பெண்களின் காவலர்களுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்!

காஷ்மீர், இந்தியாவின் மையப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படைகள் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் வன்முறைகள் தனி.

“இந்தியாவில் பயணம் செய்யும்போது, அது குழுப்பயணமாக இருந்தால் கூட பெண்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும்” என்று தனது மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவர்களின் இணையப் பக்கத்திலேயே இந்த எச்சரிக்கை ஜொலிக்கிறது.

ஒரு நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, எனவே கவனமாக இருங்கள் என்று ஒரு நாடு கூறுகிறது என்றால் இதையெல்லாம் மானக்கேடாக பார்க்க பாரதமாதா தேசபக்தர்கள் தயாரில்லை. இந்த இலட்சணத்தில் இந்தியாவின் இராணுவ வல்லமை, அணுகுண்டு, ஏவுகணை தொழில்நுட்பம் போன்றவற்றை வைத்து காலரை நிமிர்த்தி என்ன பயன்? இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பெண்  தாக்குதலுக்கு உள்ளாகிறாள் என்ற உண்மை இருக்கும் போது இந்த நாடும் மக்களும் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?

– சுந்தரம்.

செய்தி ஆதாரம்:
India ranks lower than even Nepal
You’re quick to put CCTV cameras for Obama, why not for Indians: Delhi High Court to government
India to teach Africa how to protect VIPs
Crimes against women reported every two minutes in India
Foreign travel advice India
Gang rape videos on sale in India amid rise in violent crimes against women

மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?

0

முந்தைய ஜெ. ஆட்சியில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளராக பணியாற்றியவரும், தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தவருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குநராகவும் கனிம வளத்துறையின் ஆணையராகவும் பணியாற்றிய அதுல் ஆனந்த் – ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், கனிமவளத்துறை – சுற்றுச்சூழல்துறைகளின் ஆறு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஜெ. அரசால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

jaya-mafia-rule-1
கடந்த ஆண்டில் “மக்கள் செய்தி மையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், காட்சிக்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர். (கோப்புப்படம்)

ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கான காரணங்களை விளக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ள நிலையில், இந்த உயரதிகாரிகளின் பணியிடை நீக்கத்துக்கு என்ன காரணம் என்பதைக்கூட ஜெ. கும்பல் தெரிவிக்க மறுக்கிறது. இருப்பினும், வைகுண்டராஜன் சம்பந்தப்பட்ட விவகாரம்தான் அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வைகுண்டராஜனோ, ஜெயாவின் நம்பிக்கைக்குரியவராகவும், அவரது கட்சிக்கு கஜானாவாகவும்,ஜெயா டிவி மற்றும் ஜெ. கும்பலின் மிடாஸ் சாராய நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்தவர். கடந்த 2013-ஆம் ஆண்டில் வைகுண்டராஜனின் தாதுமணல் கனிமச் சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய குற்றத்துக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமாரை தூக்கியடித்ததோடு, அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அம்மா உத்தரவிட்டார். பின்னர், அம்மாவே நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் தாதுமணல் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ள நிலையில், தாதுமணற்கொள்ளை தொடர்வதற்காகவே அதை வெளியிடாமல் ஜெ. முடக்கி வைத்தார். இருப்பினும், ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்குமிடையே தாதுமணற் கொள்ளையில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், வைகுண்டராஜனை முடக்குவதற்காகவே ஜெ. அரசு தனியார் நிறுவனங்கள் தாதுமணல் எடுக்கத் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

”தாதுமணல் ஏற்றுமதி தொடர்பாக நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தற்போது அவருக்குச் சாதகமாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், நீதித்துறை மற்றும் மைய அரசின் அனுமதியோடு தாதுமணலை பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வைகுண்டராஜன் ஏற்றுமதி செய்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான அதுல் ஆனந்தும் ஞானதேசிகனும் இந்த அறிக்கையைத் தயார் செய்ய உத்தரவிட்டு வழிகாட்டியுள்ளனர் என்பதாலேயே அம்மா அவர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்” என்று ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.

இந்த அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தைப் பற்றி எழுதும் ஊடகங்கள், விதிமுறைகள் பின்பற்றப்படாததை விளக்கி அதிகார வர்க்கத்துக்கு அனுதாபம் தேடும் வேலையைச் செய்கின்றன. ஆனால், இந்த அதிகாரிகள் கூட்டம்தான் அம்மாவின் பகற்கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர்கள்.

கடந்த ஆண்டில் “மக்கள்செய்திமையம்” என்ற அமைப்பின் சார்பில், “தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் – சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்” என்ற தலைப்பில், அவர்களின் திருவுருவப் படங்களையும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையும் பிளக்ஸ் பேனர் கட்டி காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் முதல் இடத்தில் இருந்த ஞானதேசிகன், நான்காவது இடத்தில் இருந்த அதுல் ஆனந்த் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் தற்போது ஜெயலலிதா பணியிடைநீக்கம் செய்திருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் திவாலாக்கும் வகையில், தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி கமிசன் அடிக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குத் தேவையான நிலக்கரியை கூடுதல் விலைக்கு வாங்கி கமிசன் அடிக்கவும் ரூட்டு போட்டுக் கொடுத்தவர்தான் ஞானதேசிகன். அதனாலேயே அவர் அம்மாவின் முந்தைய ஆட்சியில் தலைமைச் செயலாளராக்கப்பட்டார். பிளக்ஸ் பேனரில் காணப்பட்ட அந்த 12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள முக்கியஸ்தரும், முந்தைய அம்மாவின் ஆட்சியில் முதல்வரின் செயலாளராகவும் இருந்த ராம்மோகன் ராவ், பல்வேறு ஊழல்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அமைச்சர்கள் நடத்தும் பேரங்கள், கைமாறும் தொகை முதலான விவரங்களை ஜெயலலிதாவிடம் தெரிவித்து கங்காணி வேலை செய்ததாலேயே, தற்போதைய ஆட்சியில் அவர் தலைமைச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.

jaya-mafia-rule-2இதேபோல, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனை, சட்டம் – ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாகவும், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாகவும் ஜெ. அரசு அண்மையில் நியமித்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெ. கும்பலின் வெற்றிக்காக வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவை முறையாகச் செய்ததால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதேமுறையில் காரியத்தை முடித்துக் கொடுப்பதற்காகவே அவருக்கு இந்தப் பரிசு அம்மாவால் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் ஆட்சியில் கொள்ளைக்கும் ஊழலுக்கும் ஆலோசனையும் பாதுகாப்பும் அளிக்கும் போயஸ் தோட்டத்து ஏவலாட்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத்தான் பதவி நீட்டிப்பும், பதவி உயர்வும் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களும் அதிகாரிகளும் என்னென்ன வழிகளில், எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று உளவுத்துறையை வைத்து மோப்பம் பிடித்து, ஆட்டையைப் போடாமல் அவர்கள் அம்மாவிடம் முழுமையாகக் கணக்கையும் பணத்தையும் ஒப்படைக்க வைக்கவே போயஸ் கொள்ளைக் கூட்டம் இரவும் பகலுமாக ஒரு கம்பெனி போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ஐவர்குழு என்றழைக்கப்படும் அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் உளவுத்துறை மூலம் சோதனை நடத்தி பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்திடம் சேர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இந்த அமைச்சர்கள் மீது வழக்கு இல்லை, விசாரணை இல்லை. இதன் பின்னேயுள்ள பணப்பெட்டி பேரங்கள், இரகசியங்கள் பற்றியும் யாருக்கும் தெரியவில்லை.

தற்போது அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை நாடாளுமன்றத்திலேயே சாடி சவால் விடுகிறார். இதன் பின்னே உள்ள பணப்பெட்டி ரகசியங்கள் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை. சசிகலா புஷ்பா மூலம் ஜெ.வுக்கு எதிராக வைகுண்டராஜன் அரசியல் நடத்துவதாகவும், அதனால்தான் சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. பொதுக்கூட்டத்தில் விமர்சித்தால் எதிர்க்கட்சியினரை அவதூறு வழக்கு போட்டு மிரட்டும் ஜெயலலிதா, ஊடகங்கள் இப்படி எழுதியுள்ள போதிலும் கண்டும்காணாமல் இருக்கிறார்.

ஜெயாவின் ஆட்சியை, இது தி.மு.க. போன்ற குடும்ப ஆட்சி அல்ல, இந்த ஆட்சியில் 2-ஜி போல பெரிய ஊழல்கள் இல்லை, ஜெயலலிதா நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற மாயையைத் திட்டமிட்டே துக்ளக் சோவும் பார்ப்பன ஊடகங்களும் நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன. ஆனால் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு இப்போது பகிரங்கமாக வெளிவந்து, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளை ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கேடுகெட்டதொரு களவாணிக் கும்பலை ஒரு அரசாங்கம் என்று இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பதுதான் தமிழகத்துக்கு மானக்கேடானது.

– குமார்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை

1
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

“மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது”

யார் உயிர்வாழ வேண்டும், நாங்களா அல்லது உழவுக்குப் பயன்படாத மாடுகளா? இந்த அரசாங்கம் எதை விரும்புகிறது? என்று ஆத்திரமாகக் கேட்கிறார் ரேவாஜி சவுத்ரி என்ற மகாராட்டிர மாநில விவசாயி. தனது ஒரு ஜோடி காளைகளை விற்க முடியாமல் தவிக்கும் ஒரு விவசாயியின் கோபக்குரல் அது.

ஒரு மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 70 லிட்டர் தண்ணீரும், 200 ரூபாய் தீவனமும் வேண்டும். மகாராட்டிரத்திலோ பாலின் கொள்முதல் விலை லிட்டர் 24 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக வீழ்ந்து விட்டது. வறட்சி காரணமாகத் தண்ணீரும் இல்லை. நிலத்தை விற்று பால்மாடு வாங்கியவர்கள், இப்போது மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். மாடுகளை (அடிமாட்டுக்கு) விற்றால் 5 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் என்று மகாராட்டிர மாநில அரசு போட்டிருக்கும் சட்டம், மாடுகள் விவசாயிகளின் சொத்து என்ற நிலையை மாற்றி அவற்றை விவசாயியின் கடன் சுமையாக்கி விட்டது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.
பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

விவசாயிகளிடமிருந்து மாடுகளை வாங்கிய கசாப்புக் கடைக்காரர்களும் மாட்டை விற்க முடியாமல் தவிக்கிறார்கள். கடன் காரணமாக கறிக்கடைக்காரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. இறைச்சி, தோல் பதனிடுதல் உள்ளிட்ட தொழில்ளை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் இசுலாமியர்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“நகர்ப்புறத்து சேட்டுகள்தான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள். பயன்படாத மாடுகளையெல்லாம் நகரத்தில் விடுகிறோம். அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும்” என்கிறார் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவர் ரவிகாந்த் துப்கார். பா.ஜ.க.வின் அஷ்டி தொகுதி எம்.எல்.ஏ. பீம்ராவ் தோண்டே, மராட்டிய சட்டமன்றத்திலேயே இச்சட்டத்தை எதிர்த்து மாட்டுக்கறி உண்ணும் உரிமைக்காக குரல் எழுப்பியிருக்கிறார்.

மாதம் சுமார் 3 இலட்சம் மாடுகள் வெட்டப்பட்ட அந்த மாநிலத்தில் இப்போது பயனற்ற மாடுகளின் எண்ணிக்கை பல இலட்சங்களாகப் பெருகி வருகிறது. பராமரிக்க முடியாதவர்கள் தம் மாடுகளைக் கோசாலைகளுக்கு கொடுத்துவிடுமாறு முதல்வர் பட்நாவிஸ் கூறியது விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கிளறியிருக்கிறது. “50,000 ரூபாய் கொடுத்து வாங்கிய மாட்டை அரசாங்கத்துக்கு இலவசமாக ஓட்டிவிடவேண்டுமா?” என்று கொதிக்கிறார்கள் விவசாயிகள்.

“மாட்டை வெட்டினால் பத்து ஆண்டு சிறை” என்று சட்டம் போட்டு, மாடுகளுக்காகத் தனி மந்திரியும் போட்டிருக்கும் மாநிலம் ராஜஸ்தான். இங்கே ஜெய்ப்பூர் மாநகராட்சி நடத்தும் கோசாலையில் 100 ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலையை 15 பேர் செய்கிறார்கள். அவர்களுக்கும் 3 மாதமாக சம்பள பாக்கி. ஆகஸ்டு 2016-இல் அவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். அடுத்த சில நாட்களில் 500 மாடுகள் செத்துப்போயின. முறையான பராமரிப்பு இல்லாமல், சாணியிலும் சகதியிலும் உழன்று மாடுகள் நோயில் விழுகின்றன. 8000 மாடுகள் கொண்ட ஒரு கோசாலையில் மாதந்தோறும் 1053 மாடுகள் செத்துப்போவதாக அரசு ஆவணங்களே கூறுகின்றன.

மாடுகளைப் பராமரிக்க மாநிலம் முழுவதும் முகாம்கள் கட்டப்போவதாக பா.ஜ.க. அரசு கூறியபோதிலும் எதுவும் நடக்கவில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு 70 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் ஒஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர். இப்படியாக, “முப்பத்து முக்கோடி தேவர்கள் குடியிருக்கும்” கோமாதாவை, தேசியப் பேரிடராக மாற்றி விட்டது பா.ஜ.க. அரசு.

***

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரில் அமைந்துள்ள ஹிங்கோனியா கோசாலை ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, உணவு, பராமரிப்பின்றி இறந்துபோன மாடு அப்புறப்படுத்தப்படுகிறது.

மாட்டிறைச்சித் தடை என்பது மதவெறி அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது ஊரறிந்த விசயம். அக்லக் கொலை முதல் உனா தாக்குதல் வரை கோமாதாவின் பெயரால் நடத்தப்பட்டுள்ள அனைத்து தாக்குதல்களும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. மாட்டிறைச்சி என்பதை இந்து மத நம்பிக்கையின் மீதான தாக்குதலாகவே சங்க பரிவாரத்தினர் சித்தரிக்கின்றனர்.

ஆனால் மாட்டுக் கறித் தடைச் சட்டம் எதுவும் (இந்து) மத நம்பிக்கையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் கொண்டு வரப்படவில்லை. மாறாக, “வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்வது, பசு -அதன் கன்றுகள், பிற பால் தரும் விலங்குகள், பண்ணை விலங்குகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்வது” என்ற இந்திய அரசமைப்பின் உறுப்பு 48-இல் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் கோட்பாட்டின்படி, கால்நடைச் செல்வத்தைப் பெருக்குவதே சட்டத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

பால் தரும் “கால்நடைச் செல்வங்களில்” எருமை மாடுகள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன என்ற போதிலும் எருமையை வெட்டுவதையோ, ஏற்றுமதி செய்வதையோ எந்த சட்டமும் தடுக்கவில்லை. பசுவுக்கும் காளைக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்கும் இந்த “மதச்சார்பற்ற” சட்டத்தையும் அதற்குத் தரப்படும் அயோக்கியத்தனமான ‘அறிவியல் விளக்கத்தையும்’ உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடுவதையே குற்றமாக்கியிருக்கும் மராட்டிய மாநிலச் சட்டமும் செல்லத்தக்கதே என்று மும்பை உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. அதே நேரத்தில் வெளி மாநில – வெளிநாட்டு மாட்டுக்கறியை மகாராட்டிரத்துக்குத் தருவித்து விற்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை என்று விலக்கும் அளித்திருக்கிறது. “வெளிநாட்டவர்களும் பணக்காரர்களும் மும்பை நட்சத்திர விடுதிகளில் மாட்டுக்கறி சாப்பிடலாம் – தடையில்லை” என்பதே இத்தீர்ப்பு கூறவரும் கருத்து. “ஏழைக்கும் எருமைக்கும் ஒரு நீதி – பணத்துக்கும் பசுவுக்கும் (பார்ப்பானுக்கும்) ஒரு நீதி” என்பதுதான் இந்த தீர்ப்பின் உள்ளடக்கம்.

beef_3
“குடும்பத்துக்கே சோறு போட முடியாத நிலையில், மாட்டுக்குத் தீவனம் வாங்கிப் போட முடியுமா?” என வினவுகிறார், மரத்வாடாவைச் சேர்ந்த விவசாயி சதீஷ் சோலங்கி.

“மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மாட்டுக்கறி உண்ணும் மக்கட்பிரிவினருடைய அடிப்படை உரிமையைப் பறிப்பதுடன் அவர்களை குற்றவாளிகளாக்குவதையும் அங்கீகரிப்பதால், இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது; உணவுப் பழக்கங்களை கிரிமினல் குற்றமாக்க முடியாது; விரும்பிய உணவை உட்கொள்வது உறுப்பு 21-இன் கீழ் உயிர் வாழும் உரிமை; பரம ஏழைகளான 30% மக்களுக்கு மலிவு விலையில் புரதச்சத்தை வழங்கும் மாட்டிறைச்சி அம்மக்களுடைய அடிப்படை உரிமை” – என்பன போன்ற வாதங்களை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பலர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

பசுவதைத் தடைக்கு எதிராக இதுநாள்வரை இறைச்சிக் கடைக்காரர்கள்தான் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்றும், முதன் முறையாக உண்பவர்களின் கோணத்திலிருந்து எழுப்பப்படும் இக்கேள்விகள், பசு பாதுகாப்பு என்ற விசயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் முரண்பாடுகளை வெளிக்கொண்டு வரும் என்றும் கூறுகிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். மதச்சார்பின்மையின் பெயரால் பார்ப்பன மதவாதத்தைத் திணிக்கும் நடவடிக்கைகள் மோடி ஆட்சிக்கு வந்தபின் தீவிரமடைந்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் இந்த முயற்சி அரசியல் சட்டத்தை எழுதும்போதே தொடங்கி விட்டது.

***

சு வதைத் தடுப்பை, உறுப்பு 25-இன் கீழ் (மத உரிமை) இந்துக்களின் அடிப்படை உரிமையாக இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே நடந்திருக்கின்றன. “அவர்கள் வெளிப்படையாக சொல்லட்டும். பசுவைக் கொல்லக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை. எனவே, இதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று கேட்கட்டும். பொருளாதாரக் காரணங்களுக்காகத்தான் பசுவதை தடை கேட்பதாக கூறுவதென்பது கொல்லைப்புறம் வழியாக இந்து உணர்வைத் திணிக்கிறீர்கள் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்று அன்றைய அரசியல் நிர்ணயசபை விவாதத்தில் வெளிப்படையாக சாடியிருக்கிறார் அசாமைச் சேர்ந்த பிரதிநிதி சாதுல்லா.

caption-1“நம்முடைய இந்து சமூகம் அல்லது இந்திய சமூகம் பசுவை சமூக உறுப்பினராகவே கருதுகிறது. தன்னுடைய தாயை, மனைவியை, குழந்தைகளைக் கொலை செய்தவனைக் காட்டிலும், பசுவை பாதுகாக்க விரும்பாத மனிதனைக் கொல்வதற்கு இந்த நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளனர்” என்று ஆர்.வி.துலேகர் என்ற உறுப்பினர் அரசியல் நிர்ணய சபையிலேயே பேசியிருக்கிறார். துலேகருடைய மறுபிறவிகள்தான் உனா-வில் தலித் மக்களைத் தாக்கியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன?

அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 48 என்பது அடிப்படை உரிமையல்ல. அது வெறும் வழிகாட்டும் கோட்பாடுதான் என்ற போதிலும், காங்கிரசு கட்சிக்குள்ளேயே பார்ப்பன இந்து மதவாதம் பெரும் செல்வாக்கு செலுத்திய காரணத்தினால்தான் பல மாநிலங்களிலும் பசுவதை தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும், மாட்டுக்கறி உணவு பரவலாக சமூகத்தின் உணவுப் பழக்கமாக இருந்த மாநிலங்களிலும், இந்து மதவாத அரசியல் செல்வாக்கு செலுத்தாத மாநிலங்களிலும் பசுவதைத் தடையைத் திணிக்க முடியவில்லை.

பசு வதைக்கு வட கிழக்கிந்திய மாநிலங்களில் முற்றிலுமாகத் தடையில்லை. அரசியல் சட்டப்பிரிவு 371(A) வடகிழக்கிந்திய மாநிலங்களுக்கு காஷ்மீரைப் போல சிறப்புரிமைகளை வழங்குவதாலும், அப்பகுதி முழுவதும் மாட்டுக்கறிதான் மக்களுடைய முக்கியமான இறைச்சி உணவு என்பதாலும் அங்கே தடை விதிக்க முடியவில்லை. கேரளா, தமிழகம், மே.வங்கம், அசாம் மாநிலங்களில் “பயனற்ற கால்நடை” என்பதற்கான சான்றிதழுடன் வெட்ட அனுமதி உள்ளது.

1950களில் பிகார், உ.பி. அரசுகள் பசுவை மட்டுமின்றி காளையை வெட்டுவதற்கும் முற்றாகத் தடை விதித்துச் சட்டமியற்றின. “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று இறைச்சிக் கடைக்காரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. “குரேஷி வழக்கு” என்றழைக்கப்படும் இவ்வழக்கில் 1958-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை விதித்தால், அத்தகைய தடை பயனுள்ள கால்நடைகளுக்கான தீவனத்தைப் பறிப்பதுடன் நாட்டின் வளங்களையும் வீணாக்கும். எனவே அத்தகைய தடை பொதுமக்களின் நலனுக்கு எதிரானது” என்று கூறியது. இது ஒரு மழுப்பலான தீர்ப்புதான் என்ற போதிலும், பசு வதைக்கு முற்றுமுழுதான தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

caption-22001-இல் வாஜ்பாயி அரசு, கால்நடைகளுக்கான தேசிய கமிசன் ஒன்றை அமைத்தது. ஜனசங்க கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவராக இருந்து, பின்னாளில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட குமன்மால் லோதா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். “கோல்வால்கரின் சீடர் என்ற முறையில் வாஜ்பாயி, பசுவதைத் தடையை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்க வேண்டும். பசுவதைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்துக்கு இணையான ஒரு சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும்” என்றெல்லாம் பரிந்துரைத்தார் லோதா. இந்த கமிசனின் உறுப்பினராக இருந்த எல்.என்.மோடி என்ற பிரபல கால்நடைத்துறை வல்லுநர் “பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்கும் தடை விதிப்பதென்பது, பொருளாதார ரீதியாக நாட்டுக்கே பெரும் நாசத்தை விளைவிக்கும்” என்று கூறி லோதாவின் உளறல்களை எதிர்த்து ராஜிநாமா செய்தார். சட்டமியற்றும் முயற்சியை வாஜ்பாயி அரசு கைவிட்டது.

இதற்குப் பின்னர் 2005-இல் தலைமை நீதிபதி லகோதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய “மிர்சாபூர் தீர்ப்பு” என்று அழைக்கப்படும் தீர்ப்பு, முந்தைய குரேஷி தீர்ப்பை தலைகீழாக்கி, இன்று மகாராட்டிரம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இயற்றப்பட்டிருக்கும் கொடிய சட்டங்களுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

“மாடுகள் எந்தக் காலத்திலும் பயனற்றவை ஆவதில்லை” என்பதுதான் இந்த தீர்ப்புக் கூறும் கருத்து.

“மாடுகள் கறவைக்கோ உழவுக்கோ பயன்படாமல் போனபிறகும், அவற்றின் சாணம் மற்றும் மூத்திரத்தைக் கொண்டு தயாரிக்க கூடிய எரிவாயு, பூச்சிகொல்லிகள் மற்றும் இயற்கை உரத்தின் மூலம் ஒரு விவசாயி ஆண்டுக்கு 20,000 ரூபாய் ஆதாயம் பெறலாம். மாட்டுச்சாணம் என்பது கோஹினூர் வைரத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்கது” என்று இந்த வழக்கில் வாதாடியது திருவாளர் மோடியை முதல்வராகக் கொண்ட குஜராத் அரசு. அவ்வளவு ஆதாயம் இருந்தால் உழவுக்குப் பயன்படாத மாட்டை எந்த விவசாயியாவது விற்பானா என்ற கேள்வி நீதிமன்றத்துக்கு எழவில்லை. மேற்படி புள்ளிவிவரத்தை அளித்த கட்டுரையை, “ஆதாரமற்ற குப்பை” என்று 1996-இல் வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அதையும் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, மாட்டுச் சாணத்தை கோஹினூர் வைரமாக சித்தரித்த மோடி அரசின் வாதத்தைத் தனது தீர்ப்பில் மேற்கோளாகவே காட்டியிருக்கிறது.

“இந்தத் தீர்ப்பு முழுவதும் இத்தகைய எண்ணிலடங்காத ‘கோஹினூர் வைரங்கள்’ கொட்டிக் கிடக்கின்றன” என்று கேலி செய்கிறார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். “மாட்டுச்சாணி மற்றும் மூத்திரத்தின் மதிப்பை 1958-இல் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதா? அல்லது 1958-இல் இருந்ததைவிட மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்துக்கான சந்தை மதிப்பு 2005-இல் பன்மடங்கு உயர்ந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொரு வழக்கறிஞர்.

“1958 குரேஷி தீர்ப்பு” பாலும் நெய்ய்யும் சாப்பிட முடியாத ஏழைகளின் ஊட்டச்சத்து மாட்டுக்கறிதான் என்று அங்கீகரித்தது. 2005-இல் லகோதி வழங்கிய தீர்ப்போ, “ஊட்டச்சத்து என்பதை மாமிச உணவு அல்லது மாட்டுக்கறியுடன் மட்டும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும்?” என்று அறிவியலுக்கு எதிரான, அப்பட்டமான பார்ப்பனியக் கண்ணோட்டத்துடனும், ஏழைகள் குறித்த அலட்சியத்துடனும் கருத்து தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் பொருட்டு, “மொத்த மாமிச உணவு நுகர்வில் மாட்டுக்கறி என்பது 1.3% மட்டும்தான்” என்ற ஆதாரமற்ற ஒரு புள்ளி விவரத்தையும் தீர்ப்பில் அவிழ்த்து விட்டுள்ளது.

“மாட்டுக்கறி உண்பவர்கள் ஆகச் சிறுபான்மையினரே” என்ற கருத்தை வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், அந்தச் சிறுபான்மையினரின் உணவுப் பழக்கத்தை பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்திலிருந்து எப்படித் தடை செய்ய முடியம்? “சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது மொத்த சமூகம் அல்லது நாட்டின் நலனோடு ஒப்பிடும்போது இரண்டாம் பட்சமானதுதான்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் நியாயம் போலத் தெரிகின்ற இக்கருத்து, பார்ப்பன இந்து மதவாதத்தை, சிறுபான்மை மதத்தினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணித்து அவர்களுடைய உணவு உரிமையைப் பறிக்கிறது. ஒரு உணவுப் பழக்கத்தையே தேச விரோதம் போல சித்தரிக்கிறது.

நமது உரிமைகள் எனப்படுபவை அனைத்தும் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டவை அல்ல. உண்பது, உறவு கொள்வது போன்றவை மனிதனின் இயற்கையான உரிமைகள். அவற்றைக் கொடுப்பதற்கோ பறிப்பதற்கோ எந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் அதிகாரம் இருக்க முடியாது. பிறப்பின் அடிப்படையில் மனிதனின் இயற்கையான உரிமைகளையும், சமூக உரிமைகளையும் பறிக்கின்ற பார்ப்பனியம்தான், யார் எதை உண்ண வேண்டும், உடுத்த வேண்டும் என்று விதிக்கிறது. இந்து சமூகத்தைப் பொருத்தவரை, “தீண்டத்தக்க” சாதிகளையும் “தீண்டத்தகாத” சாதிகளையும் பிரிக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு அளவுகோல் மாட்டுக்கறி உணவு. அந்த வகையில் மாட்டுக்கறித் தடையை நியாயப்படுத்தும் தீர்ப்பு, தீண்டாமையை நியாயப்படுத்துகிறது.

அதே அரசியல் சட்டத்தின் உறுப்பு 38, மக்கள் நலனுக்கு உகந்த சமூக அமைப்பை உருவாக்குதல், வருவாய்-வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பது பற்றிக் கூறுகிறது. உறுப்பு 46, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட நலித்த பிரிவினரை சமூக அநீதியிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் பாதுகாப்பது பற்றி பேசுகிறது. இந்த தீர்ப்போ சிறுபான்மை, தலித், பழங்குடி மக்களின் ஊட்டச்சத்துள்ள மலிவான உணவைப் பறிக்கிறது. இறைச்சிக்கடை, தோல் பதனிடும் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போர் முதல் விவசாயிகள் வரையிலான கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடுகிறது. அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, உயிர்வாழும் உரிமை போன்றவற்றை வழிகாட்டும் கோட்பாடுகளின் ஒளியில் விரிவுபடுத்தி பல தீர்ப்புகள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. இந்தத் தீர்ப்போ வழிகாட்டும் கோட்பாட்டை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறது

பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பெயரால் அடிப்படை உரிமைகளை வெட்டுகின்ற இந்தத் தீர்ப்பின் கண்ணோட்டம்தான், பசுவைப் பாதுகாப்பது என்ற பெயரில் மனிதர்களைக் கொல்லும் நடவடிக்கையில் வெளிப்படுகிறது. சமூகம், நாடு ஆகியவற்றை அதன் மக்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அரசியல் சட்டம் ஒரு குடிமகனுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளையே பறிக்கிறது இந்தத் தீர்ப்பு என்று சாடுகிறார் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

“கால்நடைச் செல்வத்தைப் பேணி வளர்ப்பது” என்ற மதச்சார்பற்ற நோக்கத்துக்காகத்தான் இந்த சட்டம் என்று கூறுவது ஒரு பம்மாத்து. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிதி லகோதி, தனது தீர்ப்பிலேயே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். “இந்துக்கள் புனித நாட்களில் காளை மாடுகளை வழிபடுகிறார்கள். கோயில்களில் உள்ள நந்தி சிலையை வணங்குகிறார்கள்” என்றெல்லாம் சொல்லி, கோமாதா மட்டுமல்ல காளையும் வழிபாட்டுக்குரியதே என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனது தீர்ப்பின் மதச்சார்பை வெளிப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்.

தனது ஆதிக்க நோக்கத்தையும் அதனால் தான் பெறுகின்ற ஆதாயத்தையும் மறைத்துக் கொண்டு, வருண சாதி அமைப்பு முதல் மாட்டுக்கறி தடை வரையிலான அனைத்தையுமே அறிவியல் பூர்வமானவை என்று நியாயப்படுத்த முனைகிறது பார்ப்பனியம். ”ஹிந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கலையில் தேர்ந்திருந்தார்கள் என்பதற்கான சான்று விநாயகரே” என்று உளறும் நபர் பிரதமராக இருக்கும் நாட்டின் நீதிமன்றம், மாட்டுச் சாணியே கோஹினூர் வைரத்தினைக் காட்டிலும் உயர்ந்தது என்று கூறுவதில் வியப்பென்ன?

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதன் காரணமாகத்தான் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், விவசாயம் அழிந்து வருகிறது என்றும் கூறி மாட்டிறைச்சித் தடையை நியாயப்படுத்துகிறது பா.ஜ.க. ஆனால் மகாராட்டிரத்தில் இந்த சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் மாட்டுச் சந்தைகள் அழிந்து வருகின்றன. மாடுகளை வாங்க விவசாயிகள் தயாராக இல்லை. பல கிராமங்களில் மாடுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதெனக் கூறுகின்றன அம்மாநிலப் பத்திரிகைகள்.

காலப்போக்கில் வாலைத் தொட்டுக் கும்பிடுவதற்குக்கூட மாடு கிடைக்காமல், சிலையைத் தொட்டுக் கும்பிட வேண்டிய நிலையை பார்ப்பன பாசிசக் கும்பல் எய்தும். மொத்தத்தில், கத்தியின்றி ரத்தமின்றி மாடுகளை ஒழித்துக் கட்டும் பணியை சங்க பரிவாரமே சாதித்துக் காட்டும்.

– சூரியன்
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

மாதாவைக் கொல் ! பாரத மாதாவுக்கு ஜே போடு !

1
1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்

சதியும் சாதியும்

ம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (பிகார்) முன்னாள் துணைவேந்தர், ஏ.கே. பிஸ்வாஸ் ”அவுட்லுக்” இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சமீப காலமாக ”பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தைக் காட்டி ஜே.என்.யு. மாணவர்கள் முதல் இசுலாமியர்கள் வரை அனைவரையும் மிரட்டி வரும் சங்க பரிவாரத்தின் அசிங்கமான பார்ப்பன இந்து மரபை இக்கட்டுரையில் அவர் எடுத்துக் காட்டுகிறார்.பெண்ணையும் தாயையும் போற்றும் மரபு உலகத்தில் வேறெங்குமே இல்லையென்பது போலவும், இந்து பண்பாடு தாயின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய மதிப்பின் காரணமாகத்தான் பாரதத்தை பாரதமாதா என்று அழைப்பதாகவும் அளக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.

”நமது தேசியத்தின் அடிப்படையே பாரதமாதா தான். மாதா என்பதை நீக்கிவிட்டால் பாரதம் என்பது ஒரு துண்டு நிலம்தான் என்று ஆகிவிடும்” என்ற பா.ஜ.க. தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் மேற்கோளையும், அவர் படத்தையும் பாரதமாதா படத்தையும் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் அச்சிட்டு விநியோகிக்கிறது குஜராத் மாநிலத்தின் பரோடா மாநகராட்சி. ”பாரத் மாதா கி ஜெய்” என்று விண்ணப்பப் படிவத்தில் எழுதவில்லையென்றால் பள்ளியிலேயே சேர்க்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது குஜராத்தில் ஒரு பள்ளி.

பெற்ற தாயைப் படுகொலை செய்வதைத் தமது பண்பாடாக வைத்துக் கொண்டே, தேசத்தைத் தனது தாயாக மதிப்பதாகப் பித்தலாட்டம் செய்யும் நாட்டை உலகில் வேறு எங்காவது காண முடியுமா என்பது இக்கட்டுரையில் அவர் எழுப்பியிருக்கும் கேள்வி. வந்தே மாதரம் முழக்கமும், பாரதமாதா படமும் பிறந்த வங்காளத்தில்தான் பெண்களை உடன்கட்டையேற்றும் பார்ப்பனப் பண்பாடு உச்சத்தில் இருந்தது.

1829-இல் பென்டிங் பிரபுவால் தடை செய்யப்படும்வரை மதத்தின் பெயரால் பெண்களைக் கொலை செய்யும் ‘சதி’ என்ற ‘உடன்கட்டையேற்றுதல்’ புனிதமான மதப் பண்பாடாக இருந்தது. ஈவு இரக்கமில்லாமல் பெற்ற தாயையே உயிரோடு கொளுத்திய பிள்ளைகள், தமது நடவடிக்கையைப் பெருமையாகப் பறைசாற்றிக் கொண்டார்கள். தாயை உயிருடன் கொளுத்திய அந்த மைந்தர்களை அச்சமூகம் மதிப்புக்குரியவர்களாக கருதியது.

“தாய் நாடு சொர்க்கத்தைவிட உயர்ந்தது என்று இன்றைக்கு பீற்றுகிறார்களே, தாய், தாய்நாடு என்ற சொற்களை உச்சரிப்பதற்குக்கூட இவர்களுக்கு அருகதை உண்டா?” என்று கேட்கும் பிஸ்வாஸ், அன்று நடந்த அந்தக் கொடுமையை சில வரலாற்றுப் பதிவுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார். இது அக்கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்
1980-களின் இறுதியில் இந்து மதவெறி அமைப்புகளின் ஒத்துழைப்போடு உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட ரூப் கன்வரை தெய்வமாக்கும் சித்திரம்

“சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரையிலான சொத்துக்கு வாரிசான ஒரு நடுத்தர வயது பார்ப்பன விதவையை அவளது கணவனின் உடலுடன் சேர்த்துக் கட்டி சிதையில் வைத்து எரித்தார்கள், அவளுடைய மைத்துனர்கள். பிறகு இது குறித்து புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய நீதிமன்றம், இந்தக் கொலை சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்று கூறி அவர்களை விடுவித்தது. 1829-இல் பெண்டிங் பிரபு உடன்கட்டையேறுதலை குற்றமாக்கி சட்டம் இயற்றும் வரை வங்காளத்தில் இதுதான் நடந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்காவிட்டால், ‘தயாபாகா’ என்ற முறைப்படி கணவனின் பெரும் சொத்துகள் அவளைச் சேர்ந்திருக்கும். எனவே, அது முழுக்க முழுக்க சொத்தை அபகரிப்பதற்காக நடந்த கொலை.

ஆயினும் என்ன? ஒரு இந்துவை அவன் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கும் சாத்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன. சப்தரிஷிகளில் ஒருவரும், ரிக் வேதத்தைத் தொகுத்தவர் என்று கூறப்படுபவருமான அங்கிர முனிவர், சதியை போற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“மனித உடலில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் உரோமங்கள் உள்ளன. கணவனுடன் உடன்கட்டையேறும் பெண் அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள். கணவனுடன் சிதையில் மரிக்கும் பெண், அவளது தாயின் குடும்பத்தையும் தந்தையையும் கணவனையும் புனிதப்படுத்துகிறாள். அவளுடைய கணவன், ஒரு பிராமணனைக் கொன்ற கொலைகாரனாகவோ, நன்றி கொன்றவனாகவோ, நண்பனைக் கொன்றவனாகவோ இருந்தாலும் உடன்கட்டையேறும் மனைவி அவனுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுகிறாள்.”

பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணைக் கொலை செய்யும்பொருட்டு, கணவனின் குடும்பம் முதல் தாய், தந்தை உள்ளிட்ட அனைவருக்கும் சொர்க்கம் குறித்து ஆசை காட்டப்படுகிறது.

உறவினர்கள் மட்டுமல்ல, சுடுகாட்டுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் படுகொலை நடவடிக்கையில் பங்கேற்கிறார்கள். சிதையைச் சுற்றி நிற்பவர்கள் அந்தப் பெண்ணின் மீது விறகுகளையும் வெண்ணையையும் வீசுகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு வீசுபவர்கள் ஒரு கோடி அசுவமேத யாகம் செய்த புண்ணியத்தைப் பெறுவார்கள் என்று ஆசை காட்டுகின்றன பார்ப்பன சாத்திரங்கள்.

இதன் காரணமாகத்தான் 1987-இல் ரூப் கன்வார் என்ற இளம் பெண் ராஜஸ்தானில் உடன்கட்டை ஏற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டு கணிமான இந்தியர்கள் வெட்கப்பட்டு தலை குனியவில்லை, கூனிக்குறுகவுமில்லை என்று கூறும் பிஸ்வாஸ், பிரம்ம புராணம் கூறும் சதி பற்றிய இன்னொரு வெறுக்கத்தக்க வழிகாட்டுதலை எடுத்துக்காட்டுகிறார்.

“ஒரு வேளை வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே இறக்க நேர்ந்தால், அவனுடைய மனைவி கணவனின் செருப்புகளையோ அல்லது அவனது உடைகளில் ஒன்றையோ தனது மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு தீப்புகுந்து விட வேண்டும்” என்கிறது பிரம்ம புராணம். இப்படி ஒரு பெண் உடன்கட்டை ஏறிய சம்பவத்தை வங்காளம் பெருமையானதொரு நிகழ்வாக கொண்டாடியும் இருக்கிறது.

sati1796-ஆம் ஆண்டு, கல்கத்தாவிலிருந்து சுமார் 20 மைல் தொலைவிலிருந்த மஜில்பூர் என்ற கிராமத்தில், தாய் ஒருத்திக்கு அவளது மகன் செய்த கொடுமை அழிக்க முடியாதவொரு அவமானம்.

வார்ட் என்ற ஆங்கில அதிகாரி தான் கண்ணால் கண்ட காட்சியை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

பஞ்சா ராம் என்ற பார்ப்பனன் இறந்து விட்டான். மனைவி உடன்கட்டையேறத் தயாராகிவிட்டாள். மந்திரச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் சிதையுடன் சேர்த்து அவளைக் கட்டி வைத்துத் தீ மூட்டினார்கள். அப்போது இரவு நேரம். மழை பெய்யத் தொடங்கியது. தீ எரியத் தொடங்கியவுடன், பிணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்ல ஊர்ந்து வெளியேறி புதர்களுக்குள் ஒளிந்து கொண்டாள் அந்தப் பெண். சுற்றி நின்றவர்கள் சிதையில் ஒரு உடல்தான் இருக்கிறது என்பதை சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள். உறவினர்கள் கத்தினார்கள். அந்தப் பெண்ணைத் தேடினார்கள். மகன் அவளைக் கண்டுபிடித்து தரதரவென்று இழுத்தான். உடன்கட்டை ஏறிவிடு; அல்லது தண்ணீரில் முக்கிக் கொல்வோம், அல்லது தூக்கில் தொங்கவிடுவோம் என்றான் மகன். அவளோ பெற்ற மகனிடம் தன்னை விட்டுவிடுமாறு மன்றாடினாள். கொடூரமான முறையில் என்னை சாகடிக்காதே என்று கெஞ்சினாள். பயனில்லை. நீ சாகவில்லை என்றால் என்னை சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். எனவே நான் சாக வேண்டும். அல்லது நீ சாகவேண்டும் என்றான் மகன். அவள் உடன்கட்டையேற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவளுடைய மகனும் உடன் இருந்தவர்களும் சேர்ந்து அவளுடைய கையையும் காலையும் கட்டி நெருப்பில் தூக்கி வீசினார்கள்.

கருணை காட்டும்படி தனது மகனிடம் கெஞ்சும் தாயை எண்ணிப்பாருங்கள். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காத, இரக்கமே இல்லாத மகன், அந்த தாயின் மன்றாட்டை நிராகரிக்கிறான். இதயமே வெடிப்பது போல அவள் கதறுகிறாள். மகனோ, அவளை உயிருடன் விட்டால் தன்னுடைய சாதி போய்விடும் என்று அஞ்சுகிறான். தாயினும் உயர்ந்ததாக சாதி! சாதியைக் காட்டிலும் தாய் உயர்ந்தவளாக இல்லை.

“சொர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்தவள் தாய்” என்றா இந்தியர்கள் நம்புகிறார்கள்? சாதியை விடத் தாழ்ந்தவள்தான் தாய் என்றால், சொர்க்கமும் கூட சாதியைவிடத் தாழ்ந்ததுதான். என்ன சுவையான சமன்பாடு!

caption-1தாயும் தாய்நாடும் சொர்க்கத்தைக் காட்டிலும் மேலானவை என்பது காலம் காலமாக இந்தியாவெங்கும் ஓதப்படும் ஒருவகை மந்திரம். அதனைச் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. சாதியும் சாதிநாடும் சொர்க்கத்தினும் மேலானவை. தனது தாயைவிட சாதி பெரிது என்று கருதி, தாயையே உயிர் வாழ அனுமதிக்காத ஒரு ஒரு மனிதனுக்கு, தாய்நாடு என ஒன்று இருக்க இயலுமா?

அத்தகைய மகன்களுக்கு கற்பனையாக கூட ஒரு தாய்நாடு இருக்க முடியாது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது நாட்டை மிக உயர்வாக மதித்து அதனைத் தாய்நாடு என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் யாரும் தம்மைப் பெற்றெடுத்த தாயைப் படுகொலை செய்து கொண்டே, எங்கள் தாய்நாடு சொர்க்கத்தினும் மேலானது என்று பித்தலாட்டம் செய்வதில்லை” என்று தனது கட்டுரையை முடிக்கிறார் பிஸ்வாஸ்.

சதி வேறு சாதி வேறு அல்ல. சதி என்பது சாதியத்துடன் இணைந்த பெண் அடிமைத்தனம். பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனம். அதனால்தான், “உன்னைக் கொல்லாவிட்டால், என்னை சாதியிலிருந்து நீக்கி விடுவார்கள்” என்கிறான் மகன். அதனால்தான், பெற்ற தாயைக் கொலை செய்த மகன், அன்றைய சமூகத்தால் கொண்டாடப்படுகிறான்.

அன்று மட்டுமா, இன்று?

நடந்த பழங்கதை அல்ல. கண்ணகி – முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் … — என இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு என்ன பொருள்? அன்று ஊரே கூடி நின்று ஒரு பெண்ணை உடன்கட்டை ஏற்றியது போல, இன்று ஊரே கூடி நின்று கண்ணகி- முருகேசனைக் கொலை செய்யவில்லையா? சங்கரைக் கொலை செய்து, தன் மகளையும் சாவுக்குத் தள்ளிய பெற்றோர், கம்பீரமாக சிறை செல்லவில்லையா? கோகுல்ராஜ் கொலையின் குற்றவாளி யுவராஜ், செயற்கரிய செய்த நாயகனாக கொண்டாடப்படவில்லையா?

சதி மாதாவும், சாதி மாதாவும், பாரத மாதாவும் வேறல்ல. எனவே, சதியும் சாதியும் தொடரவேண்டுமென்று விரும்பும் பாரத தேசத்தின் தவப்புதல்வர்களே, இரண்டு முஷ்டிகளையும் உயர்த்தி உரக்கச் சொல்லுங்கள், “பா..ரேத் மாதா கி.. ஜெய்ய்ய்!”

– அஜித்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016
_________________________________

திருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்

0

1. ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக்குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை! – திருச்சி அறைக்கூட்டம்

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான கொள்கையாக உள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்பினர், புரட்சிகர அமைப்புகள், ஆசிரியர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் எதிர்த்து போராடி வரும் சூழலில் ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளான தந்தி தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களும், பார்ப்பன பத்திரிகைகளும் இக்கல்விக் கொள்கை சரியானது என நச்சுத்தனமான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்.

nep-exposure-meeting-trichy-posterஇச்சூழ்நிலையில் இக்கல்விக்கொள்கையின் உண்மையான நோக்கமான பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனமயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் அகண்டபாரத அபாயத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக திருச்சி உறையூர் பகுதியில் 21-09-2016 அன்று மாலை கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

பல்வேறு பள்ளிக்கல்லூரி மாணவர்கள், புரட்சிகர தோழமை அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கத்திற்கு திருச்சி மாவட்ட ம.க.இ.க-வின் பொருளாளர் தோழர்.சரவணன் தலைமை வகித்தார். ம.க.இ.க வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சத்யா கருத்துரையும், மாநில இணைப்பொதுச் செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையும் வழங்கினார்கள்.மேலும் திருச்சியில் புதிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம் நடத்திய பு.மா.இ.மு மாணவர்கள் மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அப்போது தோழர்.குமார் தங்கள் களப்போரட்ட அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். இடையிடையே புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இறுதியாக திருச்சி ம.க.இ.க-வின் தோழர்.பாவேல் நன்றியுரை வழங்கினார்.

தலைமையுரை – தோழர் சரவணன்:

nep-exposure-meeting-trichy-com-saravanan
தோழர் சரவணன்

“இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது. நாம் இக்கல்விமுறையை ஒழித்து அரசே ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அவரவர் தாய்மொழியில் தரமான இலவசக்கல்வியை கொண்டுவரவே போராடி வருகிறோம். ஆனால் இந்த மோடி அரசு புதியகல்விகொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசிரம குலக்கல்விமுறையை அமுல்படுத்தி அதில் 100% கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முனைகிறது.

nep-exposure-meeting-trichy-1இந்திய தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானி குழுமம் அரசு வங்கிகளிடம் வாங்கிய கடனை வாங்க வக்கில்லாத அரசாங்கம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திடமே ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் விளைவு மதுரை பொறியியல் மாணவர் லெனின் ரிலையன்ஸ் ரவுடி கும்பலால் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் ரிலையன்ஸ் கடைகளை முற்றுகையிட்டு போரடினர். ஆனால் இந்த மோடி அரசோ அம்பானி குழுமத்திடம் கைக்கோர்த்துக்கொண்டு அவர்களின் ஜியொ சிம்மை அறிமுகப்படுத்தி தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது. புதிய கல்விகொள்கைக்கும், ரிலையன்ஸிற்கும் எதிராக போராட வேண்டிய மாணவர்களோ இன்று ஜியோ சிம்மை பெறுவதற்கு நாள்முழுக்க கடைகள் முன் கையேந்தி நிற்பது எவ்வளவு கேவலமான செயல் என்பதை நாம் இத்தருணத்தில் உணர வேண்டும்” என மாணவர்கள் போராட்டத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

கருத்துரை தோழர் சத்யா:

தோழர் சத்யா
தோழர் சத்யா

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் அதிகப்படியான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. ஏனெனில் இப்புதிய குலக்கல்வி கொள்கை பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளின் கல்வி மறுப்பு கொள்கையாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் விவசாயிகளும், மாணவர்களும் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயி வாங்கிய கடனை கட்ட முடியவில்லை; விளைந்த பயிருக்கு விலையில்லை; விவசாயத்திற்கு தண்ணீரில்லை; அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதேபோல், மாணவர்களை பொருத்தவரையில் கல்வி இலவசமில்லை; கல்விக்கட்டண கொள்ளை; படித்த படிப்புக்கு வேலையில்லை மற்றும் அதனால் கல்விக் கடனை கட்ட முடியவில்லை இப்படி பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தனியார்மயம், இத்தனியார் மயத்தால் தங்கள் பிள்ளைகளை இழந்த பல பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் இந்த அரசு தனியார் முதலாளிகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்ய கூட்டம் போடுகிறது. மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியில் நூறு சதவிகித தனியார்மயத்தை கொண்டுவர முயற்சிக்கிறது இந்த மோடி அரசாங்கம். இப்படி ஒருபுறம் கல்வியை காசாக்கி கொண்டே மறுபுறம் கல்வியை காவிமயமாக்க துடிக்கிறது. அப்படி கல்வி காவி மயமாக்கப்பட்டால் குஜராத்தை போன்றதொரு ஆர்.எஸ்.எஸ் வேட்டைக்காடாக தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் மாறும்” என எச்சரித்துப் பேசினார்.

அனுபவ உரை தோழர் குமார் :

தோழர் குமார்
தோழர் குமார்

“மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் புதிய கல்விக்கொள்கையின் அபாயத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக இலட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்துவருகிறோம். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 20, 2016 அன்று தமிழகம் முழுவதும் மாணவர்களை திரட்டி புதிய கல்விகொள்கையின் நகல்களை மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள் முன்பு எரித்து எதிர்ப்பை தெரிவித்தோம். சென்னை மற்றும் கோவையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், விழுப்புரத்தில் போராடிய மாணவர்களை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்த காவல் துறையினரையும் ஜெயா-மோடி அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று கூறினார். மேலும், இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இருந்தும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை உணராமல் இருக்கும் சூழலில் பு.மா.இ.மு தலைமையில் இப்போராட்டத்தை முழுவீச்சில் எடுத்து செல்வோம் என்றும் கூறினார்.

சிறப்புரை தோழர் காளியப்பன்:

nep-exposure-meeting-trichy-com-kaliappan
தோழர் காளியப்பன்

“புதிய கல்விக்கொள்கையானது அணுகுண்டின் அபாயத்திற்கு ஈடானது. மேலும் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டில் இது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவிலே இதுவரை பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவும் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் கல்வியாளர்களால் ஆய்வு செய்து வரையறுக்கப்பட்டவை. ஆனால் இதனை அவசர அவசரமாக வெறும் 3 மாத காலத்திற்குள்ளாகவே ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கிய பொறுப்புகளை வகித்து பணிபுரிந்த அதிகாரிகள் மட்டுமே வரையறுத்து சூழ்ச்சிகரமான முறையில் அதன் வரைவினை வெளியிட்டு இருக்கிறார்கள். இக்கல்விக் கொள்கையை மேலோட்டமாக பார்ப்போமேயானால் இந்தியாவின் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்துவது போல தோன்றும். ஆனால் உன்னிப்பாக பார்ப்போமேயானால் இது ஒரு தேன் தடவிய விசம் என்பது புரியும். உலக பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக கல்வியை அடகு வைக்கும் முறைதான் இந்த கல்விக் கொள்கை. உலகம் முழுவதுமே கல்வி என்பது தாய்மொழி வழியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த கல்விக்கொள்கை தாய்மொழி கல்வியை மறுத்து மாணவர்களின் திறமையை, அறிவு வளர்ச்சியை முற்றிலுமாக தடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான கொத்தடிமைகளை உருவாக்கவே முயற்சிக்கிறது. மேலும் வேத கலாச்சார குப்பையான சமஸ்கிருதத்தை அனைத்து பள்ளிக்கல்லூரிகளிலும் கட்டாயமாக திணித்து மாணவர்களை இயல்பிலேயே சிந்தனைரீதியாக சாதி-மத வெறியுடன் வளர்க்க நினைக்கிறது.

nep-exposure-meeting-trichy-5கட்டாய தேர்ச்சியின் காரணமாக மாணவர்களின் தரம் குறைந்து விட்டது, எனவே ஐந்தாம் வகுப்பு முதல் அவர்களை வடிகட்டி தரப்படுத்துகிறோம் என்கிறது இக்கல்விக் கொள்கை. அப்படி மாணவர்களின் தரம் குறைந்ததற்கு யார் காரணம் என்றால் இந்த அரசு தான். ஆனால் அதனை மறைத்து குறைந்த கற்றல் திறன் மாணவர்களை குழந்தை தொழிலாளியாக மாற்றி அவர்களின் உழைப்பை சுரண்டி குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வரத் துணிந்து விட்டது மோடி அரசு.

தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தடைக்கல்லாக இக்கல்விகொள்கை நிற்கப்போகிறது. மேலும் இனி அரசு புதிதாக எந்த கல்வி நிறுவனங்களையும் திறக்காது, பழைய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மானியமும் வழங்காது. தரமான கல்வி எனும் பெயரில் அதிக கட்டணங்களை வசூல் செய்யும் பன்னாட்டு பல்கலைகழங்கள் மட்டுமே அரசால் ஊக்குவிக்கப்படும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை இழுத்து மூடுவது. இதன் மூலம் அருகமை பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளிகளின் லாபத்தை பெருக்குவது. இப்படி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவும், பார்ப்பனிய பனியா கும்பலின் நலனுக்காகவும் ஒரு கல்வி கொள்கையை உருவாக்கி ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் இந்த அபாயத்தை முறியடிக்க வேண்டும்” என ஆய்வுப்பூர்வமாக விளக்கிப்பேசினார்.

கருத்தரங்கு உரைகளுக்கு இடையிடையே “நாமக்கட்டி ஆளப்போகுது”, “சமசுகிருதம் படிக்கப்போறியா?”, “எச்சரிக்கை! எச்சரிக்கை!” முதலிய ஆர்.எஸ்.எஸ்சின் அபாயம் குறித்த ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இளந்தோழர்களின் முன்முயற்சியால் அரங்கத்தில் புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை உணர்த்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பல்வேறு பள்ளிக் கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்கள் ஆர்வமாக கருத்தரங்கினை கவனித்தனர். புதிய கல்வி கொள்கையின் அபாயத்தை உணரும் வகையில் இக்கூட்டம் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

2.  மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூடும் வரை தொடர் போராட்டம்!

உழைக்கும் மக்களே அணிதிரண்டு வாரீர்! வாரீர்!

நாள்: 28.09.2016 நேரம்: காலை 11 மணி

manaparai-othakadai-tasmac-siege-noticeகெட்டது போதும்!
கெடுத்தது போதும்!
டாஸ்மாக்கால் பட்டது போதும்!
வீட்டை நாட்டை கெடுக்கின்ற
உயிரை, உடலை பாதிக்கின்ற
அரசு மதுபானக்கடையை
இழுத்து மூடுவோம்!

குடும்பம் தோறும்
குடிக்க வைத்து
வறுமையில் நாளும்
வாடவைத்து,
உழைத்த காசை உருவிகிட்டு
ஊரை கெடுக்கும் செயலை செய்ய
ஆட்சி எதற்கு? அதிகாரிகள் எதற்கு?

ஊட்டச் சத்து டானிக்கா – நீ
ஊருக்குள்ளே விற்கும் சரக்கு,
ஊரே திரண்டு மூட சொல்லியும்
போலீசை வைத்து திறப்பது எதற்கு?

வரம் வேண்டி தவமிருந்தாதான்
வாரம் இருமுறை குடிதண்ணி
கிடைக்குது!
வாழ்வை கெடுக்குற சரக்கு வண்டி
வாரம் முழுக்க வந்து போகுது!

படிக்கிற பிள்ளைக்கு நல்ல
பள்ளிக்கூடம் இல்லை!
வகுப்புகள் தோறும் வாத்தியார்
இல்லை!
சுத்தம் இல்லை! சுகாதாரம் இல்லை!
சுகாதார நிலையம் ஊருக்குள்
இல்லை!
ஆட்சியாளர்களே! அதிகாரிகளே!
நீங்கள், ஆள்வதும், வாழ்வதும்
யாருக்காக?
வருஷம் முழுக்க வழிபறி கொள்ளை!
வழி நெடுக பெண்களுக்கு
தொல்லை!
நாட்டில் நடப்பதை நாளும்
பார்க்கிறோம்
நாத்தம் பிடித்த கடையை மூடி
நல்வழிக் படுத்த ஓரணியில்
திரள்வோம்!

மக்களால் நான்!
மக்களுக்காக நான்!! – மகராசி நீ
சொல்வது உண்மைன்னா
மக்கள் சொல்கிறோம்
டாஸ்மாக் கடையை மூடு!

மக்கள் அதிகாரம்
மணப்பாறை
தொடர்புக்கு : 98431 30911,

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் !

60

உலகிலேயே கருணை மிக்கவர்கள் பாகிஸ்தானிகள் என நான் நம்புவதேன்?

பிரிவினையின் போது நிலவிய கொந்தளிப்பான சூழலின் விளைவாக எனது தாய், அவளது பிறந்த ஊரான ராவல்பிண்டியை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின் அவள் அங்கே திரும்பவே இல்லை. அவளுக்கு 75 வயதான போது – ஒரு வேளை சாத்தியப்பட்டால் – அவளது பிறந்த ஊருக்கும் அங்குள்ள வீட்டுக்கும் அழைத்துச் செல்வதே மிகச் சிறந்த பரிசாக இருக்கும் எனக் கருதினேன்.

எனது உத்தேசமான திட்டத்தை பாகிஸ்தானில் உள்ள நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  அவர்கள் உடனே அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றனர். “அவரது கடவுச் சீட்டை மட்டும் வாங்கி விடுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். எனது பெற்றோர் மற்றும் மற்ற குடும்பத்தினருக்காக கடவுச் சீட்டு கோரி விண்ணப்பித்தேன்.  இந்த நடைமுறைகளெல்லாம் சுலபமாக முடிந்தது ஆச்சரியம்தான்.  முன்பதிவு செய்து எங்களது விமான பயணத்தைத் துவங்கினோம்.

அன்பான வரவேற்பு

Harsh-Mander-1
ஹர்ஷ் மந்தேர்

விமானம் லாகூரில் இறங்கியது. விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். என் அம்மா துவக்கத்தில் கொஞ்சம் பதட்டத்தோடு இருந்ததை கவனித்தேன். நாட்டிலிருந்து வன்முறையால் விரட்டியடிக்கப்பட்ட பழைய நினைவுகளாக இருக்க வேண்டும்; அல்லது இன்றைக்கு இதுவும் ஒரு அந்நிய நிலம் என்கிற நினைவாகவோ இல்லை பல இந்தியர்கள் நினைப்பது போல் எதிரியின் நாடு என்பதாகவோ நினைத்திருக்கலாம்.

இஸ்லாமாபாத் நோக்கிய பயணத்தின் போது, தனது குழந்தைப் பருவத்து பஞ்சாபி மொழியை எனது நண்பர்கள் பேசக் கேட்டதாலும், புதிய இடத்தை வேடிக்கை பார்த்து வந்ததாலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததை கவனித்தேன். இஸ்லாமாபாத் என்கிற நகரமே அவளது பஞ்சாப் நாட்களில் கிடையாது.

இஸ்லாமாபாத்தில் தமது பெற்றோருடன் வசித்து வந்த நண்பர்கள் பலர் வீடுகளுக்கு அழைத்தனர். எனது நண்பர்கள் பஞ்சாபி பாடல்கள் மற்றும் கவிதைகளால் மாலை நேரங்களை அலங்கரித்தனர்; அதை என் பெற்றோர் இரசித்தனர்.

எனது தாயாருக்கு மேலும் ஒரு கோரிக்கை இருந்தது. தான் குழந்தையாகக் கழித்த ராவல்பிண்டியின் அந்தப் பழைய இருப்பிடத்தை அவர் பார்க்க விரும்பினார். அதே போல தான் படித்த புகழ்பெற்ற ராவல்பிண்டி கோர்டான் கல்லூரியைக் காண எனது தந்தையும் விரும்பினார்.

வீடு திரும்பல்

தான் சிறுமியாக இருக்கும் போது வசித்த காலனியின் பெயர் காவல் மண்டி (Gawal Mandi) என எனது தாயார் நினைவுகூர்ந்தார். எனது நண்பர்களுக்கு அந்த இடம் பரிச்சயமாக இருந்தது; இப்போது அது உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பகுதியாக உருமாறியிருந்தது. நாங்கள் அங்கே சென்ற போது எனது தாயார் தனது பழைய வீட்டை கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அது முடியாத காரியமாகத் தெரிந்தது.

அநேகமான வீடுகள் புதிதாகவும் நவீன பாணியிலும் கட்டப்பட்டவைகளாக இருந்ததால், அந்த இடமே புதிதாக இருந்தது. தங்கள் குருத்வாரா இருந்த கட்டிடத்தை எனது தாயார் கண்டுபிடித்தார். தற்போது அது ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது.  நாங்கள் அவரது பழைய வீட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அநேகமாக நம்பிக்கை இழந்திருந்தோம். இத்தனை ஆண்டுகள் கழித்து அது இன்னமும் நீடித்திருப்பது சாத்தியமில்லை என்று நம்பினோம்.

இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்
இந்தியர்களை மாலையுடன் வரவேற்கும் பாகிஸ்தானியர்கள்

அங்கிருந்து கிளம்பும் சமயத்தில் எனது தாய் ஒரு பழைய வீட்டின் பலகணியில் இருந்த குமிழ் வடிவ அலங்காரத்தை நோக்கிக் கைநீட்டினாள். “எனக்கு மிக நன்றாக அது நினைவிருக்கிறது. எனது தந்தைக்கு அந்த அழகான வடிவமைப்பு குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. இந்த மாதிரி அழகான அலங்காரம் அந்தப் பகுதியில் எந்த வீட்டிலும் இல்லை என்று அவர் சொல்வார்” என்றாள் அவள்.

நாங்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த நடுத்தர வயது மனிதர் நாங்கள் யாரைக் காண வந்துள்ளோம் என விசாரித்தார். “திடீரெனக் குறுக்கிட்டு தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் எனது குழந்தைப் பருவத்தில் இந்த வீட்டில் தான் வசித்தேன். தேசப் பிரிவினையால் நாங்கள் இந்தியாவுக்குச் செல்வதவற்கும் முந்தைய காலம் அது. இது தான் எங்கள் வீடாக அப்போது இருந்தது என நினைக்கிறேன்” என்றாள் என் தாய்.

அந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பதிலளித்தார். ”அம்மா, ஏன் இது உங்கள் வீடாக இருந்தது என்று சொல்கிறீர்கள்?” என்றவர், “இப்போதும் இது உங்கள் வீடாகத் தான் இருக்கிறது. தயவு செய்து உள்ளே வாருங்கள்” என்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

அது தான் தனது குழந்தைப்பருவ வீடு என்று எனது தாயார் விரைவிலேயே உறுதி செய்தார். கிட்டத்தட்ட ஒரு மோன நிலையில் அவர் அந்த வீட்டிலிருந்த ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் வீட்டின் மொட்டை மாடிக்கும் சென்றார். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதோடு தொடர்புடைய தனது குழந்தைப்பருவத்தின் உடைந்து போன நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் தில்லிக்குத் திரும்பி பல மாதங்கள் ஆன பின்னும் அந்த வீடு தனது கனவுகளில் திரும்பத் திரும்ப வருவதாக சொல்லிக் கொண்டிருப்பார்.

அரை மணி நேரம் கழித்து வீட்டு உரிமையாளரிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்புவதாகக் கூறினோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர். ”நீங்கள் உங்கள் குழந்தைப்பருவ வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களோடு விருந்து சாப்பிடாமல் எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று கேட்டனர். எங்களது தயக்கங்களையெல்லாம் அவர்கள் புறந்தள்ளினார்கள். எங்கள் குடும்பத்தினர் மற்றும் எங்களோடு வந்திருந்த பாகிஸ்தானி நண்பர்கள் என மொத்தம் எட்டு பேர்களுக்கும் சேர்த்து உணவு தயாரித்தனர். நாங்கள் திருப்தியாக உணவருந்தினோம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான் கிளம்பவே அனுமதித்தனர்.

பாகிஸ்தானுக்கு ஓர் நாடோடிப் பாதை

நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும் எங்களது சாகசப் பயணம் குறித்த தகவல்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினரிடையே பரவின. அடுத்த வருடம் தன்னையும் பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ள தனது பழைய வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் எனது மாமியார். எனது பெற்றோரின் வெற்றிகரமான பயணம் அளித்த மகிழ்ச்சி எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்திருந்தது. பின்னர் வேறு சில வயதானவர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள, நானும் எனது மனைவியும் மொத்தம் ஆறு முதியவர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்றோம்.

இந்த முறை கிடைத்த அனுபவங்களும் கடந்த வருடம் கிடைத்தவைகளைப் போன்றே இருந்தன. தனது சக்கர நாற்காலியுடன் சென்றிருந்த எனது மாமியாரை அவரது பழைய வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று காட்டினார் அதன் தற்போதைய உரிமையாளர். எங்களோடு சாப்பிட்டு முடித்தபின், “உங்கள் விவசாய நிலத்தைப் பார்க்க விருப்பமில்லையா” என்று எனது மாமியாரிடம் கேட்டனர்.

இரண்டு பயணத்தின் போதும் எனது மனைவி கடைகளுக்குச் சென்று உடைகளையும் காலனிகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கினார். எல்லா கடைக்காரர்களும் நாங்கள் இந்தியர்கள் என்பதை அறிந்து கொண்டால் விலைகளை கணிசமாக குறைத்தனர். ”நீங்கள் எங்கள் விருந்தாளிகள்” என்றனர். “எங்கள் விருந்தாளிகளிடமே நாங்கள் எப்படி லாபம் சம்பாதிப்போம்” என்றனர்.

இந்தப் பயணங்கள் குறித்த செய்திகள் பரவிய போது நான் தொடர்பில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆஷாகிராமைச் சேர்ந்த நண்பர்கள் தாங்களும் இதே போன்ற பயணங்கள் செல்ல ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பார்வானியில் செயல்பட்டு வரும் ஆஷாகிராம் நிறுவனம், தொழு நோயாளிகள் மத்தியில் வேலை செய்து வருகிறது.

இவர்களுக்கும் கடவுச் சீட்டுகளை வழங்கியது பாகிஸ்தான் தூதரகம். இந்த முறை ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், செல்பவர்கள் அனைவரும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள். அவர்கள் உணவைத் தவிர பாகிஸ்தானில் இருந்த ஒரு வார காலம் முழுவதையும் மகிழ்ச்சியாக கழித்தனர். ஒவ்வொரு நாளின் இரவு வேளையிலும் பழச்சாறு வாங்க சாலையோரக் கடைகளைத் தேடியலைவார்கள். ஒவ்வொரு இரவிலும் ஒரு புதிய கடையைக் கண்டுபிடிப்பார்கள் – ஒவ்வொரு இரவு புதிய கடை உரிமையாளரும் இவர்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். “இந்தியாவிலிருந்து வரும் எங்கள் விருந்தினர்களிடம் நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர். அந்த வாரம் முழுக்க இப்படித் தான் நடந்தது.

எனது அறுபதாண்டு கால வாழ்க்கையில் நான் பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். ஆனால், பாகிஸ்தானில் பார்த்ததைப் போன்ற கருணை மிக்க மனிதர்களை நான் எங்குமே கண்டதில்லை.

இதுவே எனது சமீபத்திய தேச துரோகச் செயல் குறித்த பிரகடனம்!

– ஹர்ஷ் மந்தேர்
மொழிபெயர்ப்பு : முகில்

நன்றி: scroll.in #SeditionThis: Why I believe Pakistanis are the most gracious people in the world