Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 587

ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு

0

kamas-vectra-posterசூர் கமாஸ் மோட்டார்ஸ் என்ற கனரக ஆலை கடந்த 1-ம் தேதி அன்று காலை முதல் புதுவிதமான முறையில் கதவடைப்பு செய்துள்ளது. இவ்வாலையில் நிரந்தரத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் 47 தொழிலாளர்களையும் ஆட்குறைப்பு செய்துள்ளதாக தன்னிச்சையாக சட்டவிரோதமாக அறிவித்து, ஆலையை மூடியுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை என்பது கமாஸ் ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. ஒசூரில் உள்ள பிற ஆலைகளுக்கு புதிய வகையில் சட்டவிரோதமாக தன்னிச்சையாக செயல்படுவதற்கு கமாஸ் ஆலையின் இந்த அடக்குமுறை என்பது முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கமாஸ் ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்றால், ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில தொழிலாளர்கள் அப்பாவித்தனமாக பேசினர். உண்மை நிலைமை என்ன? தனியார்மயத்தை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது கார்ப்பரேட் அடியாளான மோடி அரசு. ஆகையால், அரசே ஏற்று நடத்து என்ற கோரிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது.

கமாஸ் நிர்வாகம் படுகிரிமினலாக நடந்துள்ளது. இதனைப் பார்க்கும் யாரும் கமாஸின் கயவாளித்தனத்தை உணரமுடியும். அதனால், நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுக்கும் என்றும் சிலர் பேசுகின்றனர்.

இதேபோன்று நியாயமான கோரிக்கைதான், நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கை. உயர்நீதிமன்றமோ, நெய்வேலி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்டவிரோதம் என்கிறது.

மாருதி தொழிலாளர்களின் கோரிக்கையும் இதே போன்று நியாயமானதுதான். ஆனால், நீதிமன்றம் என்ன சொல்கிறது, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாருதி சங்க நிர்வாகிகளை பிணையில் விட மறுக்கிறது. அதாவது, விசாரிக்காமலே தண்டனை வழங்குகிறது. இது என்ன வகை நீதி?

கார்ப்பரேட் சர்வாதிகாரத்தின் ஒரு பகுதியாக உள்ள நீதிமன்றத்தின் சந்துகளில் இருந்து என்றைக்கோ ஒரு நாள் தப்பிப் பிழைத்து வரும் என்ற நம்பிக்கையில் நீதிக்காக அதன் வாயிலில் பிச்சை எடுப்பதா? அல்லது தொழிலாளர் வர்க்கமே நீதியை நிலை நாட்டுவதா? இதில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, இந்த அரசு கூறி வந்த எல்லா தொழிற்சங்க உரிமைகளையும் சட்டபூர்வமாக பறித்துவிட்டது. மிச்சமிருக்கும் உரிமைகளை அதிகார வர்க்கம் அமுல்படுத்தாத வகையில் அதன் கட்டமைப்பு சீரழிந்துவிட்டது. இந்த உண்மையின் தெளிவான வெளிப்பாடுதான், கமாஸ் நிர்வாகத்திற்கு எதிராக, அதன் சட்டவிரோத, கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் போடப்பட்ட 23-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திலும், தொழிலாளர் துறையிலும் தூங்குகின்றன; கமாஸ் ஆலையில் அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களும் ஆட்குறைப்பு (!) செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தொழிலாளர் வர்க்கத்தைச் சூழ்ந்துள்ள கார்ப்பரேட் கார்மேகங்களும், பிழைப்புவாத தொழிற்சங்க போதையும் தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையை உணர்த்தாமல் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் வாயிலில் பிச்சை எடுப்பதை மட்டுமே தீர்வாக முன்வைக்கின்றன.

தற்போது உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் சர்வாதிகார ஆட்சியில், தொழிலாளர்களின் குறைந்த பட்ச உரிமைகள் எல்லாம் மோடி அரசால் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை ஒரு ஆலையின் வரம்பிற்குள், அந்த ஆலை நிர்வாகத்திடம் போராடி உரிமைகள் பெறுவதற்கான வரம்புகள் குறைந்துவிட்டன.

தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டம் என்ற வரம்பைத் தாண்டி இப்போராட்டம் போக வேண்டியதை அத்தொழிலாளர்களும் உணர்ந்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள், குடும்பத்தினர், அருகில் உள்ள கிராம மக்கள், நகர மக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி, அப்பகுதி முழுவதும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலமே இந்த அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உரிமைகளை தக்க வைக்க முடியும்.

இதனை தனது சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளது கமாஸ் தொழிற்சங்கம். இங்கு சங்கம் கட்டப்பட்ட 5 ஆண்டுகளில் இவ்வாலை தொழிலாளர்கள் சில வெற்றிகளைப் பெற்று, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு சில அடி கொடுத்துள்ளனர் என்றால் புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு. தலைமையில் ஒசூர் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றதால்தான்! தற்போது கமாஸ் நிர்வாகம் தொடுத்துள்ள தாக்குதலையும் இந்த வழிமுறையில்தான் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

“தொழிலாளர்களுடைய போராட்டங்களது மெய்யான பலன் அதன் உடனடி விளைவில் அல்ல, தொழிலாளர்களது இடையறாது விரிவடையும் ஒற்றுமையில் காணக்கிடக்கிறது” என்று பேராசான் காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிடுவது போல, தொழிலாளர்கள் தங்கள் மீது விழும் ஒவ்வொரு அடக்குமுறையிலிருந்தும், முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தாங்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் எந்த அளவிற்கு தொழிலாளர்களின் ஒற்றுமையை வளர்த்தெடுத்துள்ளோம், விரிவுபடுத்தியுள்ளோம், உறுதிப்படுத்தியுள்ளோம் என்பதைக் கொண்டு அளவிட வேண்டும். பொருளாதார ரீதியான இலாப நட்டத்திலிருந்து அல்ல!

தற்போது கமாஸ் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இந்த திசையில் வளர்த்தெடுக்கப்படவேண்டும்! வளர்த்தெடுக்கப்படும்!

இதனை ஒசூர் தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரசுரத்தின் உள்ளடக்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சூர் கமாஸ் மோட்டார்ஸ் ஆலையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆலைமூடல் செய்துள்ளது ஆலை நிர்வாகம். ஒசூர் தொழிற்சங்க வரலாற்றில் இந்த ஆட்குறைப்பு தொழிலாளர் வர்க்கத்தின் மீதான புதுவித அடக்குமுறை!

ஒரு ஆலை ஆட்குறைப்பு செய்ய வேண்டுமென்றால், ஆலை நட்டத்தில் இயங்குவதை நிரூபிக்க வேண்டும்; நட்டத்தை சரி செய்ய பிற முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும்; தொழிலாளர்கள் உபரியாக இருப்பதை அரசுக்கு காட்டியிருக்க வேண்டும்; இதற்கு ஆட்குறைப்புதான் தீர்வு என விளக்கி அரசிடம் அனுமதி பெற வேண்டும்; இந்த அனுமதி கிடைத்த பின்னர்தான் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், கமாஸ் நிர்வாகமோ, இந்த வழிமுறைகள் எவற்றையும் பின்பற்றவில்லை.

அதுமட்டுமல்ல, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னை தொழிலாளர் ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாலை நிர்வாகத்தின் மீது சங்கத்தின் மூலம் தொடுக்கப்பட்ட 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், எந்தவித சட்டபூர்வ வழிமுறைகளையும் பின்பற்றாத ஆலை நிர்வாகம், சட்ட விரோதமாக கடந்த 01-08-2015 அன்று காலை முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் (47 பேர்) அனைவரையும் ஆட்குறைப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசு சொல்லி வருகின்ற சட்டம், நீதி போன்றவற்றையெல்லாம் கழிப்பறை காகிதம் போல தூக்கியெறிந்துவிட்டது.

இதற்கு முன்னர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது கமாஸ் நிர்வாகம். 2010-ம் ஆண்டு பணியிட மாற்றம் என்ற பொய்யான காரணத்தைக் கூறி 32 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. 14 தொழிலாளர்களை வடமாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது. அதன் பின்னர் 2013-ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆலையை மூடி 13 நிரந்தரத் தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தது.

முக்கியமாக, சங்கத் தலைவர், செயலர் உள்ளிட்ட 3 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. நிரந்தர உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்திவருகிறது. இவை மட்டுமின்றி, 2013-ம் ஆண்டு நிறைவடைந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர், இன்றுவரை ஊதிய உயர்வு வழங்க முன்வரவில்லை. 68 தொழிலாளர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய உற்பத்தியை 21 தொழிலாளர்களைக் கொண்டு செய்ய சொல்லி, 5 மடங்கு அதிகமாக உற்பத்திப் பளுவைத் திணிக்க முயல்கிறது. இவையெல்லாம் சட்ட விரோதமானவை என்று தொழிலாளர் துறையில் சங்கத்தின் மூலம் கொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

வெக்ட்ரா, டெட்ரா, கமாஸ் என்று ஆலையின் பெயரை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வந்த நிர்வாகம் தான் கமாஸ் நிர்வாகம். இதன் இந்திய முதலாளியான ரவி ரிஷி ஏற்கனவே இராணுவம் தொடர்பான ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் தயாரிப்பில் ஊழல் செய்தார் என்பதற்காக இந்த அரசால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான வி.கே.சிங்குக்கு 14 முறை இலஞ்சம் கொடுக்க முயற்சித்தவர்தான் இந்த ரவிரிஷி!

இவ்வாலையில் 2010-க்கு முன்னர் பணி புரிந்த 66 தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆலை நிர்வாகத்தின் இலக்கு. பு.ஜ.தொ.மு. தலைமை யில் சங்கம் கட்டியதன் மூலம் இதனை முறியடித்து முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அடி கொடுத்தனர் கமாஸ் தொழிலாளர்கள். ஆனால், அதன் பின்னர், சதித்தனமாகவும் சட்ட விரோதமாகவும் தனது நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது.

2010 முதல் 2015 வரையில் ஆலையின் கிரிமினல், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் தொடுத்த அனைத்து வழக்குகளும் தொழிலாளர் துறை அதிகாரிகள் அனைவரின் ஒத்துழைப்பில் இழுத்தடிக்கப்பட்டன. ஆகையால், ரசிய கம்பெனியான காமாஸ் ஆலை நிர்வாகம், ஆட்குறைப்பு என்ற இந்தத் தாக்குதலை தனியாக நின்று தொடுக்கவில்லை. இந்திய முதலாளி ரவிரிஷி கூட்டுடன், தொழிலாளர் துறை, போலீசு, கலெக்டர், நீதிமன்றம் என்ற அரசின் அனைத்து அங்கங்களின் ஒத்துழைப்போடுதான் செய்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலியான மோடி அரசு, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்து, தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றிவருகிறது. அதன் ஒருபகுதிதான் கமாஸ் முதலாளியின் இந்த அடக்குமுறை. நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக நடத்திவரும் போராட்டமும் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரானவையே.

ஆகஸ்டு 15 ‘சுதந்திர தின’த்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் நெய்வேலி தொழிலாளர்கள்! சட்டபூர்வமான இந்த போலி சுதந்திரத்தை புறக்கணிப்பது மட்டுமல்ல, இந்த சட்டத்திற்கு வெளியே தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதுதான் தீர்வு! அந்த வகையில், ஒசூர் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

  • கமாஸ் ஆலையின் ஆட்குறைப்பை முறியடிப்போம்! முதலாளித்துவ பயங்கர வாதத்திற்கு மீண்டும் அடி கொடுப்போம்!
  • எல்லா ஆலைகளிலும் நிரந்தர வேலைக் காகப் போராடுவோம்! ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டுவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! தொழிலாளி வர்க்க அதிகாரத்தை நிறுவுவோம்!

கமாஸ் ஆலையில் சட்டவிரோத ஆட்குறைப்பு: தீர்வு எங்கே?
சட்டத்திற்கு உள்ளே அல்ல
, வெளியே!
தொழிலாளர் வர்க்கமே
, ஒன்றிணைந்து போராடுவோம்!

என்ற தலைப்பில் ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு 12-08-2015 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் வகையில் ஒசூர் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கி, பு.ஜ.தொ.மு. தலைமையில் கமாஸ் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்! ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மீண்டும் அடி கொடுக்கப்படும்! அந்த நாளை வேகமாக நெருங்கி கொண்டுவர வைத்த கமாஸ் ஆலை நிர்வாகத்திற்கு நன்றி!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்
பதிவு எண்: 24/KRI
கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கம்.
தொடர்புக்கு: 97880 11784

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !

0

Crowd-Silhouettesடாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தை அதிரச் செய்துள்ளது. மாணவர்கள், பெண்கள், கிராம மக்கள், வழக்கறிஞர்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துப் பிரிவு மக்களும் ஒரே குரலில் மூடு டாஸ்மாக்கை என விண்ணதிர முழங்குகின்றனர். அறவழியில் தொடர்ந்து போராடி வந்த சசிபெருமாள் அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் கொல்லப்பட்டார்.

இதனைத்  தொடர்ந்து கலிங்கப்பட்டி, சென்னை, விருத்தாசலம், கோவை, திருச்சி,மதுரை எனப் போராட்டம் விரிவடைந்தது. மதுக்கடைகள் முற்றுகையிடப்பட்டு, சாணி வீசப்பட்டு,நொறுக்கப்பட்டன. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் சென்று டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி கைது செய்த போலீசு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது.பின்னர் சேத்துப்பட்டு காவல் நிலையம், புழல் சிறையில் வைத்து மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.மாணவிகளிடம் படுகேவலமாக நடந்து கொண்ட போலீசு, சிறையில் உளவுத்துறை போலீசு மூலம் சட்டவிரோதமாக மிரட்டுகிறது.

விருத்தாச்சலத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ, டாஸ்மாக் ஊழியர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.15 நாட்கள் ஆன பின்னரும் பிணை தர மறுக்கிறது போலீசின் கைக்கூலியாகச் செயல்படும் கடலூர் மாவட்ட நீதிமன்றம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் சி.ராஜூ கடந்த இருபது ஆண்டுகளாக சிதம்பரம் நடராசர் கோவில், சமச்சீர் கல்வி, வெள்ளாறு மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். குறிப்பாக மணல் மாபியாக்கள்  ராஜூவை குண்டர் சட்டத்தில் அடைக்கத் துடிக்கிறார்கள்.

இதே போல, டாஸ்மாக்குக்கு எதிராக கோவை, கரூர், விழுப்புரம், ஓசூர், பெண்ணாகரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்களை கைது செய்து துன்புறுத்தி, கிரிமினல் குற்றவாளிகள் போல் சித்தரித்து வருகிறது போலீசு.போஸ்டர் ஒட்டுபவர்கள் கூட சிறை வைக்கப்படுகிறார்கள்.போராடும் மக்களை தடியடி, சிறை என அச்சுறுத்தி ஜனநாயக உரிமைகள்,அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு அசாதாரண நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சட்டப்படியானது! போராட்டம் சட்ட விரோதமானது!……..?

ந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 47 “ மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324 “ நச்சு அல்லது அரிக்கும் தன்மையுள்ள பொருள் எதன் மூலமேனும், அல்லது மூச்சிழுத்தால், விழுங்கினால் அல்லது இரத்தத்தில் ஏற்றால் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் எதன் மூலமேனும் தன்னிச்சையாகக் காயம் விளைவிக்கும் எவரொருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை” என்கிறது. இதன்படி அரசே குற்றம் இழைக்கும் கிரிமினல் கூட்டமாக உள்ளது.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி  மக்களின்  வாழ்வுரிமையை  அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை என்பதுடன், சட்டத்தை அமல்படுத்தச் சொல்லிப் போராடுபவர்களைக் “குற்றவாளிகளாக” சித்தரிக்கிறது. தண்ணீர், மணல் கொள்ளை உட்பட எந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தையும் போலீசுதான் வந்து ஒடுக்குகிறது.நீதிமன்றமோ பொய்வழக்கு என்று தெரிந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு போலீசின் கைதை ஆதரிக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கூட மாஜிஸ்ட்ரேட்டுகள் மதிப்பதில்லை.நீதிமன்றங்கள் காவல் நிலைய அவுட்போஸ்ட் ஆகிவிட்டது.

அரசை, மாஜீஸ்ட்ரேட்டுகளைக் கண்டிக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் “ பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்ட முறை தவறு” என்று வழக்கை விசாரிக்கும் முன் சொல்லி, தமிழக நீதித்துறை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறார். இதே தலைமை நீதிபதி முன்பு டாஸ்மாக்கை மூடச் சொல்லி, வழக்குத் தொடுத்தபோது, டாஸ்மாக்கை நடத்துவதும், மூடுவதும் அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிடாது என்றார்.

madurai prpc (3)அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றால் போராட்டம் தவிர மக்களுக்கு என்ன வழி? கடந்த பத்து ஆண்டுகளாக பல ஆயிரம் மனுக்கள்,ஆர்ப்பாட்டங்கள்,உண்ணாவிரதங்கள், முற்றுகைகள் நடத்தி ஓய்ந்து போன பின்புதானே மக்கள் டாஸ்மாக்கை உடைக்கிறார்கள்! இதற்கு தலைமை நீதிபதியின் பதில் என்ன? மாணவர்கள் போராட்டத்தை விமர்சிக்கும் இவர் காவல்துறை கல்லூரி மாணவிகளிடம் மிகக் கேவலமாக, சட்ட விரோதமாக நடந்து கொண்டதை, காவல் நிலையத்தில், சிறையில் மாணவர்களைத் தாக்கியதைக் கண்டிக்காதது ஏன்? இரண்டாயிரத்துக்கு   மேற்பட்ட நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அரசு அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி வருடங்கள் கடந்து விட்டன.

சசிபெருமாள் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேல் ஆன பின்னரும்  அகற்றப்படவில்லை.இன்னும் பல்லாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அரசுக்கெதிராக உறங்குகின்றன.இவையெல்லாம் சட்டவிரோதம் இல்லையாம்; மாணவர் போராட்டம் மட்டும் தவறாம். இதேபோல்தான் வாழ்வுரிமைக்காகப் போராடும் என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தையும் சட்டவிரோதமானது என அறிவிக்கிறது நீதிமன்றம்.கோர்ட்டுக்கும் வரக்கூடாது;போராடவும் கூடாது; சாகுங்கள் என்கிறது நீதித்துறை.

அரசுக்கேற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் நீதிமன்றங்கள்!

ட்சி  மாறினால் காட்சிகள் மாறும்.நீதித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் வன்முறைக் களமாக மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டபோது அதைத் தவறென்று நீதிமன்றம் சொல்லவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எல்லா அட்டூழியங்களும் நடந்ததை நீதிமன்றம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் அரசின் நிலைபாட்டையே நீதிமன்றங்கள் எடுக்கும்.சட்டம் ரெண்டாம்பட்சம்தான்.

தமிழகத்தில் ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளையின் மதிப்பு பல லட்சம் கோடி என்பதுடன், மாநிலத்தையே பாலைவனமாக்கும் செயலாகும்.இக்கொள்ளையில் பிரதான பங்கு வகிப்பது அரசாங்கமும், ஆட்சியாளர்களும்தான்.இப்பிரச்சனைகள் பலமுறை நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.உரிய நடவடிக்கை இல்லையென்பதுடன், இந்த ஊழலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பங்காளி என்பதே முக்கியமானது.குறிப்பாக இவ்வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளனர். இவை எதுவும் சட்டப்படியானதல்ல என்பது தலைமை நீதிபதிக்கும் தெரியும். ஆனால் மீண்டும், மீண்டும் இந்த ஊழல் நீதிபதிகளுக்கே கனிமவள வழக்குகளை கையாளும் அதிகாரத்தை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அளிக்கிறார்.

நேர்மையான நீதிபதிகள் சிலருக்கு எப்போதும் இத்துறை அளிக்கப்படுவதில்லை. மதுரையில் கடந்த ஏப்ரல்,2015-ல் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஓய்வு பெற்ற நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார். ஆகஸ்டு மாதம் மீண்டும் மதுரை வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத் துறை தலைமை நீதிபதியால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தலைமை நீதிபதி தன்னை உத்தமன் போல் காட்டிக் கொள்ள, நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைக் காக்க தாதுமணல் கொள்ளை உத்தரவுக்குத் தடையும் விதிக்கிறார்.

மொத்தத்தில் வைகுண்டராஜன் காப்பாற்றப்படுகிறார்.அவரது கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. ஆட்சியாளர்கள்-அரசு அதிகாரிகள்-கனிமவள மாபியாக்கள்-ஊழல் நீதிபதிகள்- தலைமை நீதிபதி-அவரது ஆலோசனைக் குழு நீதிபதிகள் என அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த நாடகத்தில் ஏமாளிகள் மக்களே. நடந்ததில் பெரிய கூத்து கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு வழக்கறிஞராக இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர்  ஏ.எல்.சோமையாஜி, அரசின் சார்பில் வாதிடுகிறார்.

பணம் வாங்குவதைத்  தவிர உயர்,உச்சநீதிமன்றங்களில் நடக்கும் மிகப்பெரிய ஊழல் அரசு,பார்ப்பனீயம்,கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்வது. டாஸ்மாக் கடைகளை உடைத்தவர்களுக்கு பல லட்சம் டெபாசிட் கட்டச் சொல்லும் நீதிமன்றம், 22,000 கோடி மக்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற நோக்கியா கம்பெனிக்கு 200 கோடி மட்டும் கட்டச் சொல்லி தடை விதிக்கிறது. ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கில் ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தட்சிணாமூர்த்திக்கும், விசுவாச உளவுத்துறை அதிகாரி ராமானுஜத்துக்கும் தகவல் ஆணையர் பதவி, சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி வழங்கப்படுகிறது.நீதிமன்றம் மவுனம் காக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் நிலை இது என்றால் உச்சநீதிமன்றத்தின் நிலை மகாக் கேவலமானது. இந்திய தலைமை நீதிபதி ஹெ.எல்.தத்து மீது ஜெயலலிதா வழக்கில் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜூ, தத்து ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார் என ஆதாரங்களை வெளியிட்டார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கே.ஜீ.பாலகிருஷ்ணன், சதாசிவம் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது. டாஸ்மாக் போராட்டத்துக்குப் பிணை வழங்க மறுக்கும் நீதித்துறைதான் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கும், சல்மான்கானுக்கும் விரைந்து ஜாமீன் வழங்குகிறது.madurai prpc (2)

மொத்தத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படும் நீதித்துறை, சீரழிந்து நாசமானதுடன் அரசு-கார்ப்பரேட்-பார்ப்பனீயமயமாகி மக்களை ஒடுக்குவதுடன் ஆட்சியாளர்கள்-அரசு அதிகாரிகள்- கனிமவள மாஃபியாக்கள்-போலீசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதை யாரேனும் மறுக்க முடியுமா?  இந்த உண்மை சரியெனில் இந்த நீதிஅமைப்பில் நமது பிரச்சனைகளை எப்படித் தீர்க்க முடியும்? நீதி எப்படிப் பெற முடியும்? தான் சொல்லும் சட்டத்தை, விதிகளை தானே கடைபிடிக்க முடியாத அரசும், போலீசும், நீதித்துறையும் சட்டப்படி நடக்குமாறு மக்களை அறிவுறுத்தும் யோக்கியதையை இழந்து போனதே உண்மை.மாறிப்போன சூழல்களில் மாற்று என்ன?  என்பதைப் பற்றிச் சிந்திப்பதே சமூக அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

அட்டக்கு முறையை ஏவும் அரசு!
துணைநிற்கும் நீதிமன்றம்!
டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டம்!

கண்டன கருத்தரங்கம்

நாள்:22.08.2015  மாலை 5.00 மணி
இடம்: செய்தியாளர்கள் அரங்கம்,பிரஸ் காலனி,மாட்டுத்தாவணி எதிர்புறம், மதுரை.

தலைமை:வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

துவக்க உரை: வழக்கறிஞர் திருநாவுக்கரசு,
தலைவர், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம்

 கண்டன உரை:

 டாஸ்மாக் நடத்துவது சட்டப்படியானது! எதிர்த்துப் போராடுவது சட்டவிரோதமானது! சரியா?
– வழக்கறிஞர் தி.லஜபதிராய்,உயர் நீதி மன்றம் ,மதுரை

 டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போர்-ஒடுக்கும் அரசு,நீதிமன்றங்கள்! மாற்று என்ன?
வழக்கறிஞர் திரு.ப.திருமலை ராஜன்,முன்னாள் பொதுச் செயலாளர்,
கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு,ஈரோடு

அனவரும் வருக!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை ,தொடர்புக்கு:98653 48163, 94434 71003

பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !

6

ds poem 3சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

ஃபுல்லுக்கும் சுதந்திரம்
குவார்ட்டருக்கும் சுதந்திரம்
போலீசுக்கும் சுதந்திரம்
பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம்
எதிர்த்து யாரும் கேட்டாக்கா
பொய் வழக்கு நிரந்தரம்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

பாட்டிலுக்கு சுதந்திரம்
`பாருக்கும்’ சுதந்திரம்
பாட்டிலுக்கு சல்யூட் வைக்கும்
ஏட்டையாவுக்கு சுதந்திரம்
எதிர்த்து யாரும் கேட்டாக்கா
இடுப்பெலும்பு முறிஞ்சிடும்

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..ds poem 1

குடிகார தேசமாக
டாஸ்மாக்கு சுதந்திரம்
குறிஞ்சி, முல்லை, மருதமெல்லாம்..
குடிச்சு சாக சுதந்திரம்
இனி குடிக்கலேன்னு மறுத்தாலும்
அரசு, குரல்வளைய நெறிச்சிடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

ஆற்று மணல அள்ளி விற்க
மாஃபியாவுக்கு சுதந்திரம்
கிரானைட்டுக்கு வெடிவைக்க
குண்டர்களுக்கு சுதந்திரம்
கேனு கேனா தண்ணி உறிய
பெப்சி.. கோக்குக்கு சுதந்திரம்
ஏன்னு யாரும் கேட்டாக்கா
இருக்காது உயிர் போயிடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்

கழனி, காடு நிலத்தை பிடுங்க
கார்ப்பரேட்டுக்கு சுதந்திரம்
கரண்டு, கல்வி இயற்கையை சுரண்ட
அம்பானி, அதானிக்கு சுதந்திரம்
ஒரு தரம்.. இரண்டுதரம்.. மூணுதரம்
நாட்டை அமெரிக்காவுக்கும்
அந்நிய கார்ப்பரேட்டுக்கும் அடிமையாக்கும்
மோடி கும்பல் ஜோடிசேர சுதந்திரம்
மூணு வர்ண கொடியை ஏற்றும்
“நாலு வர்ண” பாசிசத்துக்கு சுதந்திரம்!

ds poem 2அன்னிய திமிருக்கு அடி பணியாமல்
மண்ணின் மானம் காத்த மருதுபாண்டி நெஞ்சுரம்
அடிமை விலங்கை அழித்தொழிக்க
ஆர்த்தெழுந்த ஒண்டிவீரன் போர்த்திறம்,
அல்லல்பட்டு செக்கிழுத்து
அடக்கு முறைக்கு சவால் விட்டார் வ.உ.சிதம்பரம்
பொதுவுடமை இந்தியாவை கனவுகண்ட
பகத்சிங் தோழர்களின் இன்னுயிர்
இந்த மண்ணின் அடிஉரம்…..
இது கார்ப்பரேட் ஆண்டைகளின்
காட்டுதர்பாருக்கா அடங்கிடும்,
போராட்ட தலைமுறை புதிது புதிதாய் எழுந்திடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்
மக்களை ஏய்ப்பது இனி தகர்ந்திடும்!

__________________________

துரை.சண்முகம்

கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

0

US fraud (4)_1கோக் கோலாவில் பூச்சி மருந்து, நெஸ்லே மேகி நூடுல்சில் காரீயம் என்று நஞ்சு கலந்து விற்கும் கார்ப்பரேட் லீலைகள் இந்தியாவில் அத்திபூத்தாற் போலத்தான் வெளிருகின்றன.

அது போன்ற சமயங்களில் “இது போன்ற சட்ட விதி மீறல்கள் இந்தியாவில் தான் நடக்கும், நம்ம ஊருல தான் சட்டத்த மதிக்கறது இல்லை. அமெரிக்காவுல பாருங்க எல்லாரும் சட்டத்தை மதிப்பாங்க மக்கள் எல்லாம் படிச்சவங்க விவரமானவங்க” என்று முதலாளித்துவத்தை விதந்தோதும் அறிஞர்கள் பல உண்டு.

உண்மையில் அமெரிக்க ‘சொர்க்க’த்தில் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை எப்படி மதிக்கின்றன?

ஒமாஹா-நெப்ராஸ்காவை மையமாகக் கொண்டு 2,60,000 ஊழியர்களுடன் அமெரிக்கா முழுதும் இயங்குகிறது கான்ஆக்ரா (ConAgra Foods) எனும் நிறுவனம். மக்காசோளம் முதல் மாட்டிறைச்சி வரை உணவுப் பொருட்களை பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறது இந்நிறுவனம். ஹன்ட்ஸ் (Hunt’s ), ஹெல்தி சாய்ஸ் (Healthy Choice), மேரி காலண்டர்ஸ் (Marie Callender’s), பீட்டர் பேன் (Peter Pan) போன்ற முத்திரைகளுடன் “இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது” (made with all natural ingredients) என்ற வாசகத்துடன் இவற்றை விற்பனை செய்கிறது.

ஆனால், கான்ஆக்ராவின் உணவுப் பொருட்களில் பதப்படுத்தும் இரசாயனங்கள், செயற்கை சுவையூட்டிகள், நிறமூட்டிகள் (Colouring), ஹார்மோன்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உயிர்கள் (Genetically Modified Organisms) உள்ளிட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி – 2007 ல் “பீட்டர் பான்” என்ற அதனது தயாரிப்பை சாப்பிட்ட 628 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கான் ஆக்ரா நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக எ.கோலி பாக்டீரியா தொற்றிய இறைச்சியை விற்பனை செய்ததாகவும், இதை மறைப்பதற்கு அமெரிக்க விவசாயத்துறை துணையாக இருந்தது என்பதும் அம்பலமானது.

ஜெனரல் மில்ஸ் (General Mills) தயாரிக்கும் உணவுப் பொருட்களில் ட்ரைசோடியம் சல்ஃபேட் (Trisodium Sulphate) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதியல் நச்சுப் பொருட்கள் அடங்கியுள்ளன என்று அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாரியம் எச்சரிக்கை செய்தாலும் அதைப் பற்றி கடுகளவும் கவலைப்படாமல் “எங்கள் உணவுப் பொருட்களில் சிறிதளவே TSP பயன்படுத்துகிறோம்” (அதாவது, சிறிதளவு விஷம் மட்டுமே கலக்கிறோம்) என்று கூறியிருக்கிறது. மேலும், பியூடிலேடட் ஹைட்ராக்சி டொலுவீன் (Butylated Hydroxytoluene) என்ற ரசாயனம் கலந்த உணவுப் பொருட்களையும் ஜெனரல் மில்ஸ் சந்தைப்படுத்தி வந்திருக்கிறது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு டப்பாக்களில் “மரபணு மாற்றம் செய்யப்பட உணவுப் பொருள் – (GMO) என்று அடையாளப்படுத்த வேண்டும்” என்ற சட்டங்களுக்கெதிராக லாபியிங் செய்து வந்தது.

கிராப்ட் பூட்ஸ் (Kraft Foods) நிறுவனத்தின் MAC ‘N என்ற பாலாடைக் கட்டியின் மஞ்சள் நிறம் (சீஸ்) மிகவும் பிரபலமானது. அந்த நிறத்துக்கு காரணமான YELLOW-5, YELLOW – 6 போன்ற நிறமூட்டிகளை பயன்படுத்துவதால் தோல் புற்றுநோயும், அதீத செயல்பாடு (ஹைபர்ஆக்டிவிட்டி), மூச்சிறைப்பு (ஆஸ்துமா) இன்னும் பல்வேறு நோய்க் கூறுகள் தூண்டப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பொதுவாக உடலுக்கு ஊறு விளைவிக்கும் வேதியல் பொருட்களை பயன்படுத்தும் போது அதை மக்களுக்கு அச்சிட்டு தெரியப்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கடுகளவிற்கும் இந்நிறுவனம் மதிப்பதில்லை.

US fraud (2)_1அமெரிக்காவில் சட்டங்களை மதிக்காமல் இஷ்டத்திற்கு ஆட்டம் போடும் கிராஃப்ட் நிறுவனம் ஐரோப்பாவில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இந்த இரட்டை வேடத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் மக்கள் முன் தொடர்ச்சியாக அம்பலபடுத்தியுள்ளனர். அதன் பின்னரே இந்த நிறமூட்டிகளை நீக்க அந்த நிறுவனம் ஒப்பு கொண்டிருக்கிறது.

மேலும், மார்ச்-2015-ல், கிராஃப்ட் புட்ஸ் பாலாடைக்கட்டி பொதிகளில் உலோகத் துண்டுகள் காணப்பட்டதால் 65 லட்சம் பொதிகள் திரும்ப பெறப்பட்டன.

சமீபத்தில் “மரபணு மாற்றம் செய்யப்பட்ட” உணவுப் பொருட்களை “இயற்கை உணவு” என்று பொய் விளம்பரம் செய்து விற்றதால் ஹெய்ன்ஸ் (Heinz) நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அடூட் வோல்ப்சன் (Ahdoot Wolfson) என்ற சட்ட நிறுவனத்தின் சார்பாக குற்றம் சாட்டியிருக்கும் டெப்பி பனாப்சேகா (Debbie Banafsheha), “இது ஏமாற்ற கூடிய, நியாயமற்ற, தவறான செயலாகும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிறுவனம், 70%-க்கும் அதிகமான அளவு மக்காசோளம் அடர்கரைசல் (சிரப்) உள்ளிட்டு தக்காளி கூழ் (சாஸ்) வரைக்கும் அனைத்து வணிகமுத்திரை பொருட்களிலும் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட சோளம் ஒரு பூச்சுக்கொல்லி என்று ஏற்கனவே அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியம் (EPA) வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொக்கோ கோலா (coca cola) நிறுவனத்தைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. குளிர் பானங்களில் உடலை சீரழிக்கும் அரை டஜன் வேதியல் ரசாயனங்களை இந்நிறுவனம் சேர்க்கிறது. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை சர்க்கரையை FDA 1969-ல் தடை செய்த பின்னர் அதே சர்க்கரை WHO-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் பானங்களில் பயன்படுத்தப்படும் அக்சல்ஃபேம் பொட்டாசியம் (Acesulfame Potassium) சர்க்கரையை காட்டிலும் 200 மடங்கு இனிப்புச் சுவை மிகுந்தது. இது நரம்புகளைத் தூண்டுவதன் மூலம் கடைசியாக நரம்பு மண்டலத்தையே பாதிக்கிறது. இந்த செயற்கை சர்க்கரை மூளைப் புற்று நோயை தூண்டக்கூடிய வேதியல் இரசாயனத்தையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் “தற்காலிகமாக” தடை செய்யப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே (Nestle) குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தும் 3 நிறுவனங்களில் ஒன்று. மற்ற இரு நிறுவனங்கள் அப்போட் (ABBOTT) மற்றும் மீட் ஜான்சன் (MEAD JOHNSON). மரபணு மாற்றப்பட்ட பொருட்களில் (GMO) இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் மனிதர்களுக்கு உகந்தது என்று இன்னும் ஆய்வகங்களில் நிரூபிக்கப்படவில்லை. எனினும் இந்நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் உள்ள உப்பு, சர்க்கரை, சோளம் உள்ளிட்டு பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே.

US fraud (3)_1நெஸ்லே, தடை செய்யப்பட்ட மெலமைன் (melamine) என்ற உயிர்க்கொல்லி இரசாயனத்தை பயன்படுத்தியதால் 2008-ல் 50,000 சீனக் குழந்தைகள் பாதிக்கப்ப்டட்டன. மரபணு மாற்றம் செய்யப்பட உணவுப்பொருள்களுக்கு (GMO – Product) ஆதரவான பிரசாரத்திற்கு கலிபோர்னியாவில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் டாலர்கள் பணம் வாரியிறைத்த இந்நிறுவனம் அதற்கு சில அறிவியலாளர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறது. 2012-ல் மட்டும் 9,200 கோடி டாலர் விற்பனை செய்திருக்கும் இந்நிறுவனம், அதன் மோசடித்தனத்தை மறைக்கவும் GMO – லேபில் சட்டத்திற்கெதிராகவும் 1 கோடி டாலருக்கு மேல் பணத்தை வாரியிறைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்டு உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜி.எம் லேபிலிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

பெப்சிகோ (PepsiCo) GMO லேபிலிங் சட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 2.5 கோடி டாலர் செலவு செய்திருக்கிறது. மான்செண்டோ, டூபன் மற்றும் பெப்சிகோ இந்த மூன்று நிறுவனங்கள் தான் GMO லேபிளிங் சட்டத்திற்கு எதிரான லஞ்சத்துக்கு அதிகமாக நிதியுதவி செய்கின்றன. பெப்சி மற்றும் கோக்கில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு கலவையை (Molecule formula) மாற்ற வேண்டும் என்று கலிபோர்னியா மாகாண அரசு சட்டமே இயற்றி இருக்கிறது, இருந்தும் இன்றளவும் பீத்துடைக்கும் காகிதம் அளவிற்கே இந்நிறுவனங்கள் அந்த சட்டத்தை மதித்து வருகின்றன.

காம்ப்பெல்லின் சூப் (Campbell’s Soup Company) நிறுவனத்தின் சராசரியான சூப் கப்பில் 850 மில்லி கிராம் சோடியம் கலந்திருக்கிறது. உணவு உட்கொண்ட பிறகு அருந்தும் இந்த சூப்பினால் மாரடைப்பு, நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலக்குறைவுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு எதைப் பற்றியும் கடுகளவும் மதிக்காத இந்நிறுவனங்கள் அது தொடர்பான சட்டங்களை மாற்றவும், தமது பொருட்களை விளம்பரங்களின் மூலம் விற்கவும் பெருமளவு பணம் செலவிடுகின்றன.

கார்ப்பரேட் லாபத்துக்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் பல நூறு உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவத்தின் அருகதை இதுதான்! ஆராதிப்பீர்களா, அடித்து விரட்டுவீர்களா?

– பாலு

மேலும் படிக்க:

போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !

6

 

Hosur tasmac protest (1)மூடு டாஸ்மாக் கடையை என்று சாணி எறிந்து வலியுறுத்திய ஓசூர் ஆர்ப்பாட்டம் 11-08-2015 அன்று நடந்தது. உடன் கைது செய்யப்பட்டாலும் இரவு 9 மணிக்கு கைக்குழந்தையுடன் இருந்த தோழர்.தமிழ்ச்செல்வி மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்ற தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர்களை கைது செய்து கொண்டு சென்ற போலீசு எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருக்கிறது என்பதை தோழர் தமிழ்ச்செல்வி தெரிவித்த வாக்குமூலத்தை இங்கே வெளியிடுகிறோம்.

“போராட்டத்தை முடித்துக் கொண்டு நானும் தோழர்களும் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அங்கே, உளவுப் பிரிவு போலீசார் என்னையும் மற்ற தோழர்களையும் போட்டோ எடுத்தனர். அதன் பின்னர் எங்களை சுற்றி வளைத்தனர்.

தோழர்கள் முனியப்பன், முருகேசன், மணி, தீபன், விஜி ஆகியோருடன் நானும் மக்களைப் பார்த்து முழக்கமிட்டேன். இது பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மக்களுக்கு என்ன என்று புரிந்து கொள்வதற்காகவும், போலீசு தீவிரவாதிகளை சுற்றி வளைப்பது போல சுற்றி வளைப்பதையும், டாஸ்மாக்குக்கு எதிராக நாங்கள் போராடியதையும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் நாங்கள் முழக்கமிட்டோம்.

அதன் பின்னர், ஒசூர் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் வந்த போலீசு படை எங்களை சூழ்ந்து கொண்டு கைது செய்தனர்.

தீபன், முனியப்பன், குமார், மணி ஆகியோரை ஒரு ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோவில் இடம் இல்லாததால், தோழர்.முருகேசனும் நானும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் இருவரையும் போலீசு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். நாங்கள் முற்றுகையிட்ட டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்றனர். போலீசார் மட்டும் கடையை சென்று பார்த்தனர். சாணியை வெளியே எல்லாம் அடித்துள்ளீர்கள், கடை ஊழியர்கள் மீது ஏன் அடித்தீர்கள் என்று கேட்கத் தொடங்கிய போலீசிடம் தோழர்கள் விளக்கம் கொடுத்தனர். வேண்டும் என்று அடிக்கவில்லை என்று பேசினர்.

அப்போது தோழர்.முருகேசனுக்கு போன் வந்தது. போனை அவர் பேச முயற்சித்த போது, பேசாதே என்று கூறி போலீசார் தடுத்தனர். அப்போது, தோழரின் கை தெரியாமல் போலீசு மீது பட்டது. இன்ஸ்பெக்டரும் சப் இன்ஸ்பெக்டரும் சேர்ந்து கொண்டு தோழரை என்னையே எதிர்க்கிறியா என்று கூறி அடிக்கத் தொடங்கினர்.

police tortureஇதன் பின்னர், போலீசு நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசு லாக்கப்பில் வைத்து இருவரும் பூட்ஸ் காலால் மாறி மாறி உதைத்தனர். தோழரின் காலின் மீது ஏறி நின்று உதைத்தனர். இதனை தடுக்க முயன்ற என்னை அங்கிருந்த ‘பெண்’ போலீசு ஒருவர், இவளுக்கு நாலு போடுங்க என்றார். “பொட்ட பையன், நீ எல்லா ஒரு தலைவராடா?” என்று எல்லா ஆபாச வார்த்தைகளையும் சொல்லி திட்டினர், அடித்தனர்.

அடிக்காதீங்க என்று சொன்ன என்னை, “நீ எவனையாவது வச்சிருப்ப, பல்லிளிச்சிக்கிட்டு புருசன் பொண்டாட்டியா வந்திருக்க” என்று ஆபாசமாக பேசத் தொடங்கினார். உடனே, அந்தப் பெண் போலீசு, “சார் கோபாமா இருக்காரு அவரை எதிர்த்து கேட்காதே” என்று என்னை அடக்க முயற்சித்தார். நானோ தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தேன்.

தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர். அவரால் நடக்க முடியாத அளவில் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண் போலீசு, டாய்லட் போக போகும் போது, அந்தப் பக்கமா போய் உட்காரு என்று சொன்னார். என்னால் நடக்க முடியாமல் இருக்கேன் என்று தோழர்.முருகேசன் சொன்னதற்கு, இவனுக்கு கொடுத்த அடி எல்லாம் பத்தாது, இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி இன்னும் நாலு போடனும் என்றார்.

இரவு 8 மணிக்கு என்னை மட்டும் விடுவித்தனர். மற்ற 4 தோழர்களை இரவு அழைத்து வந்தனர். ஆனால், அவர்களுடன் என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆனால், தோழர்களின் முகம், கைகள் வீங்கி புடைத்துப் போயிருந்தன. ஒருவரின் உதடு அதிகமாக வீங்கி இருந்தது.

போலீசு தோழர்களை நடத்திய விதம் இதுதான். தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களை இப்படித்தான் போலிசு நடத்துகிறது. இதன் பொருள், “குவாட்டர் பாட்டில் தான் அரசு சொத்து! குடி கெடுப்பதுதான் அரசின் கடமை! டாஸ்மாக்கை மூடு என்பது தேசவிரோதம், மூடச் சொல்பவர்கள் பயங்கரவாதம்!”

கைது செய்யப்பட்ட தோழர்கள் முருகேசன், முனியப்பன், மணி, தீபன், குமார் ஆகியோர் மீது ஒசூர் நகர போலீசு ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள்:

Cr.No.812/2015 Hosur Town Police Station

குற்றங்களாக பதிவு செய்யப்பட்ட சட்டங்கள், பிரிவுகள்

  1. IPC 147 – கலகம் விளைவித்தல்
  2. IPC 294B – ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
  3. IPC 341 – எந்த ஒரு ஆளையும் சட்டவிரோதமாகத் தடுத்தல்
  4. IPC 353 – பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தாக்குதல்
  5. IPC 355 – ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற உட்கடுத்துடன் தாக்குதல்
  6. IPC 506(1) – குற்றமுறு மிரட்டல்
  7. தமிழ்நாடு சொத்து சேதப்படுத்துதல் தடுப்பு சட்டம் பிரிவு 3 – பொருட்களுக்கு தீங்கு விளைவித்தல்
  8. தமிழ்நாடு திறந்த வெளிக் குற்றங்கள் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 –

பிறகு தோழர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கே ஏற்கனவே பென்னாகரம் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் இருக்கின்றனர்.

ஆனால் தமிழக போலிசாருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். உங்கள் அடக்குமுறை எங்களையோ மக்களையோ முடக்கிவிடாது. டாஸ்மாக் கடைகளை மூடாமல் ஓயாது எங்களது போராட்டம்!

தகவல்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு 99623 66321

இருபதில் அந்தமான் – அறுபதில் சமையலறை

1

workerசெல்வராசு, சென்னை தி. நகரிலுள்ள ஒரு கட்டுமான நிறுவன ஊழியர் குடியிருப்பில் சமையல் மாஸ்டர்.

“சீதைய தேடி கடல் தாண்டி இலங்கைக்கு போலாமா, வேண்டாமான்னு ஒரு வாரமா கரைல நின்னு பேசிகிட்டே இருக்காய்ங்க தம்பி. டக்குன்னு அடுத்த சீனு போறானுக இல்ல, ஒன்னும் நமக்கு புரிய மாட்டேங்குது” என்றார் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே.

தனது இருபதாவது வயதிலிருந்து வறுமையை விரட்டியடிக்க, வயிற்றுப் பிழைப்புக்கென யோசிக்காமல் கடல்தாண்டியவர் அவர். தொலைக்காட்சி தொடரின் இழுவை கணக்குகள் அவருக்கு புரிவதில்லை.

70, 80-களில் ராமனாதபுரம் மாவட்டம் பரமகுடி விவசாயிகள் பலர் வயிற்று பிழைப்புக்காக அந்தமான் தீவுகளுக்கு கப்பல் ஏறினர். அப்படிச் சென்ற சில தொடர்புகளை நம்பி 1981-ல் தனது 20 வயதில் கப்பல் ஏறினார் செல்வராசு.

டிஜில்பூர் எனும் சிறு தீவு, அங்கே பொதுப்பணித்துறை கட்டிட வேலைகளை எடுத்துச் செய்த அங்கிருந்த ஒரு தமிழ் ஒப்பந்தக்காரரிடம் 6 ரூபாய் தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்கிறார். அதே நேரத்தில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வெளியில் ஊதியம் 25 ரூபாய்.

“வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே போதல தம்பி, வேல முடிஞ்ச உடன ஒரு ஓட்டல்ல கூட மாட ஒத்தாச வேலைக்கு போனேன், அங்கனயே தங்கி, சாப்ட்டுகிட்டேன். தூங்க கூட நேரம் கெடைக்காது. மிச்சம் புடிச்சு மாசம் 500 ரூபாய்க்கு கொறயாம வீட்டுக்கு மணிஆர்டர் அனுப்புவேன்.

Aberdeen Bazar
போர்ட் பிளேயர் – அந்தமான் தலைநகரம்

ஏழு வருசம் வேல பாத்தேன். ஒண்ணும் செட் ஆகல மறுபடியும் ஊருக்கு வந்து வெவசாயம் பாத்தேன். கல்யாணம் பண்ணிகிட்டேன், சமாளிக்க முடியல. வீட்டம்மாவ கூட்டிகிட்டு திரும்பவும் அந்தமானுக்கு போய்ட்டேன். ரெண்டு வருசத்துக்கு ஒருதடவ ஊருக்கு வந்துபோவோம். கப்பல்ல 80 ரூபா டிக்கேட்டு அப்போ. என் மொதோ ரெண்டு பசங்களும் அங்கன தான் பொறந்து வளந்தாய்ங்க, ஊருக்கு வந்த பின்னாடி ஒரு பொண்ணு பொறந்தா.”

நாங்க இருந்த தீவு போர்ட் பிளேயர்லேர்ந்து ரெண்டு நாள் கடல் பயணத்துல இருக்கு அதேன் கெழக்க நம்ம நாட்டோட கடைசி தீவு, பூரா காடும் மலையும் தான். சனம் கம்மி, பெங்காலி, உ.பி, மலையாளி, தமிழன்னு எல்லா ஸ்டேட்டும் கலந்து இருக்கும். போர்ட் பிளேயர்தான் எங்களுக்கு மெட்ராஸ் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்.

காட்டாத்துத் தண்ணில குளோரின கலந்து அரசாங்கம் குடுக்கும், அரிசி, பருப்பு, எண்ணைலேர்ந்து மளிகை சாமான், மணல், சிமெண்ட் எல்லாமும் போர்ட் பிளேயர்லேர்ந்து மழயா இருந்தாலும் புயலா இருந்தாலும் கப்பல்ல வந்துடும்.

பொழச்சு கெடக்கணுமே தம்பி….ஒரு ஹோட்டல் நடத்துனேன். கூலி வேலைக்கு போறவங்களுக்கு மாசம் பூரா 3 வேளையும் சாப்பாடு 300 ரூபாய்க்கு போட்டோம், அந்த காசு குடுக்கவே அவங்களால முடியல, அவங்களுக்கு சம்பளமும் சரியா வரல. கொஞ்ச நாளைக்கு அப்புறம் நஷ்டத்தோட கடைய நடத்த முடியல, மூடிட்டோம்.

oldmanமலைய வெட்டி, மரத்த வெட்டி சேத்த கொஞ்ச நெலத்தயும் நேவி கோட்டர்சு வருதுன்னு அரசாங்கம் புடிங்கிகிச்சு.

மிச்சமிருந்த நெலத்த வித்து மூத்த மவன் குடிச்சே அழிச்சுட்டான், சின்னவன் படிச்சுகிட்ருக்கான். ஊருல வந்து பாத்தா வெவசாயம் பண்ணுனவனெல்லாம் மெட்ராசுக்கு பொழைக்க ஓடியாந்துட்டாய்ங்க. மகளுக்கு கல்யாணம் பண்ணனும், குடியிருக்க வீடு இல்ல என்ன பண்றது? குடும்பத்த அங்கன விட்டுட்டு 400 ரூபா தெனச் சம்பளத்துக்கு, சமையல் வேலைக்கு இந்த கம்பெனில வந்து சேந்துட்டேன்.

ரெண்டு வருசத்துக்கு முன்ன கடன வாங்கி நகைய வச்சி பொண்ணு கல்யாணத்த முடிச்சேன். இன்னும் லச்ச ரூபா கடன் இருக்கு, 20 வயசுல அந்தமான்ல வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தாம அர வயிரும் கால் வயிறுமா தன்னந்தனியா ஓட்டுனேன், இப்போ 60 வயசிலயும் அப்டியேதான் ஒழச்சுகிட்டு இருக்கேன்.

  • எட்கர்

பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் போலீசு பயங்கரவாதிகள் !

1

anna school 1 (1)குடிகெடுக்கும் சாராயக் கடையின் மீது கல்லெறிந்தார்கள் என்பதற்காக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதை நாடறியும். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களையும் தாக்குவோம் என்று நிரூபித்திருக்கிறது ஜெயா ஆசி பெற்ற தமிழக போலிசு.

ஆம். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சாலைமறியல் செய்ததற்காக, சென்னையில் பள்ளி மாணவர்கள் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டத்தில் முன்னின்ற 4 பள்ளி மாணவர்களை டி.சி. கொடுத்து வெளியேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி.

சென்னை பூந்தமல்லி, கல்லறைத் தோட்டத்தில் உள்ளது அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை தொலைக்காட்சிகளில் கண்டு ஆத்திரமுற்ற பள்ளி மாணவர்கள், தமது கண்டனத்தை அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று விழைந்தனர். இப்பள்ளியில் பயிலும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சக மாணவர்களை அணிதிரட்டினர். பு.மா.இ.மு. தோழர்களிடமிருந்து முழக்கங்களையும், கண்டன சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் பெற்று பள்ளி மாணவர்களே போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

கடந்த ஆகஸ்டு-7 அன்று, பள்ளி முன்பாக அணிதிரண்ட மாணவர்கள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் செய்தனர். ”உடனடியாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்; புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்” என்பதே அப்பள்ளி மாணவர்களின் கோரிக்கை.

பொது விசயத்துக்காக பள்ளி மாணவர்கள் தெருவில் இறங்கியிருப்பதை கண்டு, பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், பொதுமக்களும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மறியலால் பூந்தமல்லி சாலையின் போக்குவரத்து முடங்கியது. ரோந்து போலீசால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்து போலீசு படை வந்தது. ”என்னடா பிரச்சினை உங்களுக்கு? எதுக்குடா ரோட்டை மறிக்கிறீங்க..? 5 நிமிசம் டைம் தரேன். ஒழுங்கா கலைஞ்சி ஓடிடுங்க…” என்று மிரட்டல் விடுத்தார், காவல் உதவி ஆய்வாளர் ராஜா. ”டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்கச் சொல்லுங்கள்.. இப்பவே கலைகிறோம்..” என்று தமது கோரிக்கையில் உறுதியாக நின்றனர் பள்ளி மாணவர்கள்.

‘‘நீங்கெல்லாம் சொன்னா கேட்கமாட்டீங்கடா… எடுடா அந்த லத்தியை…” என்று சினிமா வசனம் பேசியபடியே, லத்தியை சுழற்றினார் ராஜா. மாணவர்கள் சிதறி ஓடவில்லை. ”எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்று எதிர்த்து நின்றனர். பலர் கூடியிருக்க பள்ளி மாணவன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பதை சகித்துக் கொள்ள முடியாமல், முன்னைவிட மூர்க்கத்தனமாக லத்தியை சுழற்றுகிறார், காவல் உதவி ஆய்வாளர் ராஜா.

“வெறிநாய் துரத்துவதைப் போல மாணவர்களை விரட்டியடித்தனர். ஒரு மாணவன் ஓட முடியாமல் நடுரோட்டில் விழுந்த போதிலும், அவன் சட்டையைப் பிடித்து இழுத்து லத்தியால் அவனை மிருகத்தனமாக அடித்தனர். போக்குவரத்து நெரிசலுக்கிடையே, திக்குத் தெரியாமல் ஓடி முட்டுச் சந்தில் சிக்கிய மாணவர்களையும் அடித்து துவைத்தனர். அருகிலுள்ள சர்ச்சுக்குள் ஓடிய மாணவர்களையும் அடித்து இழுத்து வந்தனர். இவ்வாறு பள்ளி மாணவர்களிடம் சூரத்தனம் காட்டி மடக்கிப் பிடித்த 8 மாணவர்களை போலீசு வேனில் அள்ளிப் போட்டுச் சென்றனர்.” என்றார் சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர்.

பள்ளியின் முகப்பிற்கும் மறியல் நடத்திய இடத்திற்கும் ஏறத்தாழ அரை கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்கும். வகுப்பறை வரையில் மாணவர்களை விரட்டிச் சென்றனர் போலீசார். உதவி ஆய்வாளர் ராஜா சுற்றுச் சுவற்றை எகிறிக் குதித்து மாணவர்களை விரட்டினார். வகுப்பறை வகுப்பறையாகப் புகுந்து, மறியலில் பங்கெடுத்த மாணவர்களை தேடினார். விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களிடமும், ”நீ கலந்துகிட்டியா? நீ கலந்துகிட்டியா?” என்று கேள்வி கேட்டு, ”உங்களையெல்லாம் போட்டோ புடிச்சிருக்கு… அத வச்சி கண்டுபிடிச்சுக்கிறோம். அப்ப இருக்கு உங்களுக்கெல்லாம்” என்று மிரட்டினார்.

போலீசு வேனில் அள்ளிச் சென்ற 8 மாணவர்களிடம் யார் உங்களைத் தூண்டிவிட்டா? யார் உங்களைப் போராடச் சொன்னது? ஆளை மட்டும் காண்பி, உன்னை விட்டு விடுகிறேன்.” என்று, பாபநாசம் சினிமா போல ஒரே கேள்வியை தனித்தனியேக் கேட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். மதியம் 12 மணிவாக்கில் இழுத்து செல்லப்பட்ட இம்மாணவர்களை மாலை 3.30 மணியளவில்தான் விடுவித்தனர். அன்றைய தினம் யார் யாரெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான விவரத்தைக் கொடுக்குமாறு பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டினர்.

வழக்கத்துக்கு மாறாக, 3.30 மணிக்கே பள்ளியை மூடவைத்தனர். பள்ளியை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களையும் நுழைவாயிலில் நின்றுகொண்டு, சட்டவிரோதமான முறையில் வீடியோ காமிராவில் மாணவர்களின் முகத்தை பதிவு செய்தனர். 11,12-ஆம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த வருகைப் பதிவேடுகளையும் அள்ளிச் சென்ற போலீசார், போராட்டம் நடைபெற்ற அன்று யார் யாரெல்லாம் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்ற விவரத்தை சேகரித்து வைத்திருக்கின்றனர்.

”பேருந்து நிறுத்தத்தில் எவனும் நிற்கக்கூடாது” என்று விரட்டியடித்த போலீசார், பூந்தமல்லி போக வேண்டியவனை போரூருக்கும், போரூருக்குப் போகவேண்டியவனை சிறீபெரும்புதூருக்கும் அனுப்பிவைத்தனர். பக்கத்து தெருவில் இருப்பவன்கூட அன்றைக்கு இரண்டு பேருந்தில் பயணம் செய்துதான் வீடுபோய் சேர முடிந்தது.

மறுநாள் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் மிரட்டத் தொடங்கினர். ”படிக்கிற பசங்களுக்கு எதுக்குப் போராட்டம் சாலை மறியல் எல்லாம். 10 ந்தேதி திங்கட்கிழமை 11, 12 வது பசங்க எல்லாம் அவங்க அவங்க அப்பா அம்மாவைக் கூட்டிவரனும்… மீட்டிங் இருக்கு… போராட்டத்தில கலந்துகிட்டவங்களுக்கெல்லாம் டி.சி. கொடுக்கப்போறோம்” என்று பீதியூட்டினர்.

சொன்னது போலவே, பெற்றோர்களுடன் 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டார்கள். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், நான்கு காவலர்கள் வந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல; திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆணையர்., உள்ளூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

‘‘மதுவுக்கு எதிராக போராடறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டலாம். அதெயெல்லாம் விட்டுட்டு சாலைமறியல் ஏண்டா பன்னுறீங்க? உங்களை யாருடா தூண்டிவிட்டது?” என்று கூட்டத்தை தொடங்கிவைத்தார் காவல் ஆய்வாளர் வினோத்குமார்.

‘‘உங்களையெல்லாம் உள்ள புடுச்சி போட எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு? உங்க மேல எஃப்.ஐ.ஆர். போட முடியாதா? ரெண்டு பேப்பர் ஒரு பேனா இருந்தா போதும். அதுவும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. கவெருமெண்டே கொடுத்துடுது. என்ன ஒரு பத்து நிமிசம் எங்க டையம் வேஸ்ட் ஆகும். நாங்க நினைச்சா இப்பவே எஃப்.ஐ.ஆர். போடலாம். ஏன் போடாம இருக்கோம்… பாவம் பசங்களாச்சே… கேசோட நாளைக்கு காலேஜில ஜாயின் பன்ன முடியாதே… பாவம் னுதான் போடாம இருக்கோம்… இதுதான் உங்களுக்கு கடைசி சான்ஸ்… இனியும் கேட்கலைன்னா கேசுதான்.. டி.சி. கொடுத்து உடனே அனுப்பி வச்சுருவோம்.” என்று வெளிப்படையாகவே மிரட்டினார் போலீசு உதவி ஆணையர்.

‘‘கண்டவன் பேச்ச கேட்டிட்டு போராட்டம்லாம் பன்னி லைஃப்-ஐ கெடுத்துக்காதீங்க… அம்மாவுக்கு எப்போ எதை பன்னனும்னு நல்லா தெரியும்… டாஸ்மாக் கடையை மூடிட்டா கள்ளச்சாராயம் பெருகிடும்… கண்டதுல தண்ணியை கலந்து போதையேத்திக்கிறானுங்க… அதனால மக்கள்தான் சாவாங்க.. அதான் அம்மா அமைதியா இருக்காங்க… 15-ஆம் தேதி நல்ல முடிவையும் அறிவிப்பாங்க… அதனால போராட்டம்லாம் திரும்ப பன்னாதீங்க.. இப்பவே மேலெடத்தில இருந்து டார்ச்சர்… பத்து பேரையாவது டி.சி.யை கொடுத்து அனுப்புங்கனு சொல்றாங்க… நான் தான் பாவம் பசங்கனு தடுத்து வச்சிருக்கேன்… பாத்து நடந்துக்கோங்க… நீங்கெல்லாம் யாருடா? என் தங்கச்சி புள்ளைங்க… அக்கா புள்ளைங்க மாதிரிடா… நல்லா படிச்சமா, பள்ளியை விட்டு போனமா, நல்ல காலேஜ்-ல சேந்தமானு போகாம ஏன்டா இப்படி பன்றீங்க? இனி எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லனும் சரியா.. .என்னோட நம்பர எல்லோரும் எழுதிக்கோங்க… 94440 23452 … இனி யார் வேனாலும் என்கிட்ட உரிமையோட எதுவும் கேட்கலாம்.” என்று மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பவரைப் போலப் பேசி வஞ்சகமான முறையில் மிரட்டல் விடுத்தார், எம்.எல்.ஏ. மணிமாறன்.

இதனைத்தொடர்ந்து, செவ்வாய்கிழமை பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, ”மேலிடத்தில இருந்து டார்ச்சர்.. என்னால ஒன்னும் பன்ன முடியாது.. 4 பேருக்காவது டி.சி.யை கொடுத்து அனுப்பச் சொல்லியிருக்காங்க.. இனிமே, போராட்டம் பன்னினா எல்லோருக்கும் டி.சி.தான் கிடைக்கும்” என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த மாணவர்களின் பெயர்களை இங்கே தவிர்க்கிறோம்.

உள்ளூர் இன்ஸ். தொடங்கி, ஏ.சி., எம்.எல்.ஏ., கல்வித்துறை அதிகாரிகள் வரையில் பள்ளிக்கு ஓடிவருகிறார்கள் என்பதிலிருந்தே, பள்ளி மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அரசு எந்தளவுக்கு பீதியடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. பள்ளி மாணவர்களின் போராட்டம் அரசின் முகமூடியை கிழித்திருக்கிறது.

இந்நிலையில், அப்பள்ளி மாணவர்களை சந்தித்து அன்று நடைபெற்ற போராட்டம் குறித்தும், போலீசு, கல்வித்துறை அதிகாரிகளின் மிரட்டல்கள் குறித்தும் பேசினோம். ”பச்சையப்பா பசங்கள அடிச்சா நீங்க ஏன் ஸ்டிரைக் பன்றீங்க?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, ”என்னன்னா இப்படி கேட்டிட்ட… எங்க அண்ணணுங்கன்னா அவங்கெல்லாம்.. இந்த ஸ்கூல்ல படிச்சவங்க பாதிபேரு அங்கதான் படிக்கிறாங்க… நியாயமா போராடுன அவங்கள அந்த அடி அடிச்சு அரெஸ்ட் பன்னி வச்சிருக்காங்க.. அவங்கள வெளிய விடனும்.. அதுக்காக நாங்க பன்றோம்..” என்று உணர்ச்சியுடன் பதிலளித்தினர் அப்பள்ளி மாணவர்கள்.

‘‘சாராயக் கடையை மூடச்சொல்லி அரசியல் கட்சிகள்தான் போராடிட்டு இருக்காங்கல்ல… பள்ளிக்கூட பசங்க நீங்க ஏன் போராடுறீங்க?”

‘‘குடியினால என்ன பாதிப்புனு மத்தவங்களவிட எங்களுக்கு நல்லாவே தெரியும்னா.. எங்கப்பா குடிகாரர். ஆட்டோ ஓட்டுறத நிறுத்தி நாலு வருசம் ஆச்சு. எங்கம்மாவோட மாச சம்பளம் 4500 வச்சுதான் எங்கம்மா குடும்பத்தை நடத்துது. லீவுல புரூட்டி கம்பெனிக்கு லோடுமேன் வேலைக்கு போயி அந்த காச வச்சுதான் என் படிப்பு செலவ பாத்துக்கிறேன்.” இது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனின் குரல். ”கல்லூரி செல்லும் அக்கா. கூலி வேலை செல்லும் தாயார். குடியினால் தந்தையை பிரிந்து வாழ்கிறது குடும்பம்.” – இது மற்றொரு மாணவனின் குடும்ப அவலம்.

‘‘டி.சி.யை கொடுக்கிறது, போலீசு மிரட்டுறதெல்லாம் மேட்டரே இல்லைன்னா… 4500 ரூபாய் மாச சம்பளத்தை வச்சிகிட்டு எங்கம்மா கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிது.. அவங்க மனம் கஷ்டப்படுமேன்னுதான்னா யோசிக்கிறேன்” என யதார்த்தமான உணர்ச்சியை வெளிப்படுத்தினார் மாணவன் ஒருவன்.

அன்றாடம் குடித்துவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் நிகழும் சண்டைகள்; தாயார் ஒருவரின் வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய அவலம்; பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குழந்தை தொழிலாளியாய் மாற வேண்டிய நிர்ப்பந்தம்; தந்தை உயிருடன் இருந்தும் நிர்கதியில் நிறுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள்; கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் விதவைத் தாய்மார்களின் அன்றாடப் பிழைப்புக்கானப் போராட்டங்கள் – என குடியினால் ஏற்படும் பாதிப்புகளை சொந்தமுறையில் உணர்ந்தவர்கள் இப்பள்ளி மாணவர்கள்.

அதனாலேயேதான் தெருவில் இறங்கிப் போராடினார்கள். மாணவர்களின் போராட்டத்தை தூண்டியவரை கைது செய்யவேண்டுமெனில் போயஸ் தோட்டத்திற்கல்லவா போலீசு போயிருக்க வேண்டும்; மாறாக, மதுரவாயலில் பு.மா.இ.மு. தோழர்களைத் தேடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனம்!

  • இளங்கதிர்

 

அரசின் அடக்குமுறையை முறியடிப்போம் – மக்கள் அதிகாரம் அறிக்கை

0

Flag 400 pixஅருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு!
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!

மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு

________________________________________________________________

நெ.5/9, எஃப்.எம்.பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 01.
தொடர்புக்கு: 99623 66321

பத்திரிகைச் செய்தி                   12/08/2015

மிழகத்தில் அரசே குடிவெறியைத் திட்டமிட்டு மக்களிடம் திணித்து தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கைத் திறந்ததன் மூலம் பெண்களின் தாலியறுத்து, இளைஞர்களை, மாணவர்களைச் சீரழித்து மனிதப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதை இனம் கண்டு, இதற்கு எதிராக ‘மூடு டாஸ்மாக்கை! கெடுவிதிப்போம் ஆகஸ்ட் 31” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகமெங்கும் நடத்தி வருகின்றது. ‘மூடு டாஸ்மாக்கை’ இயக்கத்தையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஏற்கனவே தமிழ்நாடெங்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இதே பிரச்சினைக்காக அறவழியில் தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு மதுக்கடைகளை நொறுக்கி போராடத் தொடங்கினர்.

pennagaram tasmac protest (4)எங்களின் இரண்டு மாதப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் திரண்டு சென்று அருகிலிருந்த ஷெனாய் நகர் டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி முன்னணியாளர்களைக் கைது செய்தது போலீசு. சுமார் 30 பேரைப் பிடித்துச் சென்ற போலீசு அவர்களில் 15 மாணவர்களை மட்டும் விட்டு விட்டு, 15 பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது. மேலும் ஜி7 சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்தும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது, போலீசு.

இவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. போராடுகின்ற மாணவர்களைப் பிளவுபடுத்தி, ஆட்கொணர்வு மனுவை வலுவிழக்கச் செய்யும் வஞ்சக நோக்கத்தோடு, சிறையிலிருந்த மாணவர்களில் இருவர் மீதான வழக்குகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு அவர்களை மட்டும் விடுவித்துள்ளது அரசு. இந்த இருவரைத் தவிர பிறர் எல்லாம் ‘வன்முறை கும்பல்’ என்றும் ‘கிரிமினல்’ என்றும் வாதிடுகிறது. ஊடகங்களையும் அவ்வாறு சித்தரிக்கும்படி தூண்டுகிறது. இவர்கள் பிணையில் வருவதற்கு வழக்காடிய போது இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என வாதிட்டு பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு. ஆனால், இவர்கள் மீதுள்ள வழக்குகள் எதுவும் கிரிமினல் வழக்குகள் அல்ல. மாணவர்களின், மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக போலீசார் போட்டுள்ள பொய் வழக்குகள்தான்.

ஆட்கொணர்வு மனுவை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அந்தளவு வரை நீதிமன்றம் சென்று கொண்டுள்ளது. அண்மையில் இவ்வழக்கில் ஆளைக் கொணரும் உத்தரவைத் தராமல் ஒரு நபர் விசாரணை என்று வஞ்சக நாடகம் ஆடுகின்றது. மாணவர்கள் பிணை கேட்கப் போவதில்லை என எழுதிக் கொடுத்து அரசின் மூஞ்சில் கரி பூசி விட்டனர்.

Hosur tasmac protest (2)விருத்தாச்சலம் நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராடியது, விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடை முற்றுகை ஆகிய இரு வழக்குகளிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பிணை தரவும் அரசு கடுமையாக எதிர்க்கின்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் சி.ராஜூ கடந்த இருபது ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை எடுத்துப் போராடி வந்திருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக, சிதம்பரம் நடராசர் கோவிலில் மொழித் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது, நடராசர் கோவிலை தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்டு இந்து அறநிலையத்துறை வசம் கொண்டுவருவது, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நிலைநாட்டுதல், உயர்நீதிமன்றத்தில் தமிழ், சமச்சீர் கல்விக்கான போராட்டம், தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டுதல், வெள்ளாறு மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துதல் போன்ற பல்வேறு இயக்கங்களை முன்னின்று நடத்தியவர், வழக்கறிஞர் ராஜூ. இதன் காரணமாகவே அவர் மீது குறி வைத்து பொய் வழக்குகளைப் போட்டுப் பிணையில் விட மறுக்கிறார்கள். வழக்கறிஞர் ராஜூ மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கண்டித்து விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல, டாஸ்மாக்குக்கு எதிராக கோவை, கரூர், விழுப்புரம், ஓசூர், பெண்ணாகரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்களை கைது செய்து துன்புறுத்தி, கிரிமினல் குற்றவாளிகள் போல் சித்தரித்து வருகிறது, அரசு.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், ரவிச்சந்திர பாபு ஆகியோர் ‘மது விலக்குக்காக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தியவர்களை குற்றப்பின்னணி கொண்டவர்களாகக் கருதக் கூடாது; போராட்டம் நடத்துவது அரசியல் சட்ட அடிப்படை உரிமை. அரசியல் சட்டப் பிரிவு 47 இன்படி மது விற்பனையைத் தடை செய்வது மாநில அரசின் கடமை. அந்த அரசியல் சட்டக் கடமையைத்தான் மாணவர்கள் செய்துள்ளனர்’ எனக் கூறியுள்ளனர்.

மேற்கண்ட டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டம் மற்றும் அதற்கெதிரான அரசின் அடக்குமுறை உணர்த்துவது யாதெனில், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப் போய், எதிர் நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed and Opposite force) மாறிவிட்டன. மது மற்றும் மணற்கொள்ளையை அரசியல் சட்டப்படி தடுக்க வேண்டிய அரசே, அதற்கு எதிராக செயல்படுவது இதற்குத் துலக்கமான உதாரணம். ஆகவே இந்த அரசியல் அமைப்பு மக்களுடைய எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு தகுதி இழந்துவிட்டது. எனவே மக்கள், டாஸ்மாக் ஒழிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க அதிகாரத்தைக் கையில் எடுப்பதே ஒரே தீர்வு.

shut tasmac 1எனவே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, சென்னை பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், மற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைத் தனிமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும், போலீசின் சதிகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டாம். மக்களது நியாயமான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும். போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை துணிவுடன் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்

  • டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிக் கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, பச்சையப்பன் கல்லூரி பு.மா.இ.மு. மாணவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்!
  • டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்கு!
  • பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்து!
  • அரசு டாஸ்மாக்கை மூடாவிட்டால் மக்களே அதிகாரத்தைக் கையிலெடுத்து அவரவர் ஊர்களில் டாஸ்மாக்கை மூடவேண்டும்!

இவண்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு

2

 புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 டீஸர்:

“டாஸ்மாக்கை மூடு” என்ற குரல் தமிழகம் முழுவதும் எழத் தொடங்கியவுடன், ஆங்காங்கே மக்கள் போராடத் தொடங்கியவுடன், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு, படிப்படியாக மதுவிலக்கு”என்று விதம் விதமாக எல்லோரும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

கடையை மூடுவதற்கு தேர்தல் வரை எதற்கு காத்திருக்க வேண்டும்? பல ஊர்களில் பெண்கள் திரண்டு வந்து போராடி டாஸ்மாக் கடைகளை உடைப்பதையும் பூட்டுவதையும் நாம் பார்க்கவில்லையா? லட்சக்கணக்கில் உறுப்பினர்களை வைத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் இப்போதே தங்கள் தொண்டர்களைத் திரட்டி கடைகளை மூடலாமே! கடைகளை மூடுவதற்கு அரசதிகாரம் எதற்கு? முதல்வர் பதவி எதற்கு?

இது போகாத ஊருக்கு வழி. இவர்களுக்கு ஓட்டுப்போட்டோ, அரசாங்கத்துக்கு மனுப்போட்டோ ஒருக்காலும் டாஸ்மாக்கை மூட முடியாது. ஏனென்றால்,டாஸ்மாக் இல்லையென்றால் அரசு கஜானாவே காலி என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டுவிட்டது. மேலிருந்து கீழ் வரை ஆளுங்கட்சியினரும், அதிகார வர்க்கத்தினரும் கூட்டு சேர்ந்து கொண்டு முறையான வரி வருவாயை சூறையாடுகிறார்கள். பாதிக்குப் பாதி லஞ்சத்தை வாங்கிக்கொண்டு வீட்டு வரி, சொத்து வரி முதல் மின் கட்டணம் வரையிலான முறையான வருவாய்களை வசூலிக்காமல் விடுகிறார்கள், அல்லது முறைகேடாகத் தள்ளுபடி செய்கிறார்கள்.

சந்தையில் ஒரு லோடு 16,000 ரூபாய்க்கு விற்கும் ஆற்று மணலை வெறும் 600 ரூபாய்க்கு விற்று விட்டு மீதியை கீழிருந்து மேல்வரை பங்கு போட்டு தின்கிறார்கள். கிரானைட், கனிம வளம், காட்டு வளம், தண்ணீர் உள்ளிட்ட எல்லா பொதுச் சொத்துகளும், போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத் துறைகளும் இப்படி சூறையாடப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்கெனவே கட்டி வந்த வரிகள் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த வருமானங்களை ஈடுகட்டத்தான் சாராயம் விற்கிறது அரசு.

மல்லையா போன்ற சாராய முதலாளிகளைப் போலவே, ஜெயா-சசி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்ற ஓட்டுப் பொறுக்கிகளும் சாராய முதலாளிகளாகவே இருக்கின்றனர். மாவட்ட அளவில் அ.தி.மு.க கிரிமினல் கும்பல்கள்தான் பார் நடத்தி கலப்பட சாராயம் விற்கின்றனர். இந்தக் கும்பலும் மாவட்ட நிர்வாகம், போலீசு உள்ளிட்ட ஒரு பெரிய வலைப் பின்னலும் இதன் பின்னால் இயங்குகிறது. டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருகின்ற வருமானத்துக்கு இணையான வருமானத்தை இந்தக் கும்பலும் சுருட்டுகின்றது. ரத்தம் சுவைத்த இந்த மிருகங்கள் மது விலக்கை அமல்படுத்தும் என்று நம்புவது மடமை.

சமூகம் நாசமாவது பற்றி இந்த அரசோ கட்சிகளோ கவலைப்படவில்லை, உண்மையில் மகிழ்ச்சியடைகின்றனர். ஏனென்றால், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை, வேலையில் இருப்பவர்களுக்கு நியாயமான ஊதியம் இல்லை, விவசாயம் அழிந்து மக்கள் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வெறுப்பிலும் ஆத்திரத்திலும் இருக்கும் இளைஞர் சமுதாயத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் இந்த அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் ஓட்டுப் பொறுக்கிகளையும் டாஸ்மாக் கடைதான் கவசமாக இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, இந்த அரசிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ, தேர்தலில் வாக்களிப்பதன் மூலமோ டாஸ்மாக்கை மூடிவிடலாம் என்று நம்புவதே முட்டாள்தனமானது. நம் கண் முன்னே இளைய தலைமுறை கெட்டழிவது கண்டு நெஞ்சம் நடுங்குகிறது. இனி பொறுப்பதற்கில்லை; மக்கள் இழப்பதற்கும் எதுவுமில்லை. நம்முடைய தெருவில், நம்முடைய ஊரில் சாராயக்கடை கூடாது என்றால் அதை நாம் அமல் படுத்த வேண்டும். நம்மை மீறி கடையை நடத்துவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை அமல்படுத்துவதுதான் ஜனநாயகம். அதற்கு எதிராக அரசின் எந்த அதிகாரம் வந்து நின்றாலும் அதனைத் எதிர்த்து நிற்க வேண்டும்.

இந்த வழியில் அல்லாது வேறெந்த வழியிலும் டாஸ்மாக்கை மூட முடியாது. இந்த உண்மையை இவ்வெளியீட்டில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளும், நேர்காணல்களும், கள ஆய்வுகளும் வாசகர்களுக்கு உணர்த்தும்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

Graphic1

______________________________

இதழில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்:

  • செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு
  • டாஸ்மாக் ஒழிப்பு – ஒரு ஒழுக்கப் பிரச்சினையல்ல!
  • குடியால் தொலைந்த குடும்பம் “வள்ளியின் கதை”
  • ஜெயா-சசி கும்பலின் ஆந்திர சாராயப் பங்காளி “ஜனநாயகப் பூங்கா – சாராயப் பூக்கள்”
  • பார்ப்பனியமும் பட்டை சாராயமும் சுரா,சோம லித்வேனிய மது, மத்ய சுவாகா….”
  • டாஸ்மாக் அருளும் இலவசங்கள்: வரமா – வக்கிரமா?
  • மதுவை ஒழிக்க முடியுமா?
  • சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்
  • பயந்து வாழும் துப்புறவு பெண் தொழிலாளிகள்
  • எனிசி கோனியாக் – பாரிசின் விலையுர்ந்த சரக்கு அம்மாவின் டாஸ்மாக்கில்
  • சூளகிரியில் மக்கள் சூறாவளி டாஸ்மாக் கடையை பூட்டிய நீண்ட போராட்டம்
  • ஊத்திக் கொடுத்த தாய்மாமனுக்கு 307 என்றால் தாய்க்கு என்ன செக்சன்?
  • குடியில் இந்தியா – நெ.1
  • உப்பு, குடிநீர், உணவகம் வரிசையில்.. அம்மா சாராயம் எப்போது?

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

மூடு டாஸ்மாக்கை….. மூடு – ம.க.இ.க-வின் புதிய பாடல்

5

 

shut tasmac 1மூடு டாஸ்மாக்கை மூடு – பாடல் வரிகள்….

வசனம்:
மூடு டாஸ்மாக்கை,
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்
கெடு விதிப்போம் ஆகஸ்டு 31

பாடல்:

மூடு டாஸ்மாக்கை மூடு
நீ….
மூடு டஸ்மாக்கை மூடு

நீ
ஓட்டுப் போட்டு மூடுவான்னு
காத்திருப்பது கேடு..

மூடு டாஸ்மாக்கை மூடு..நீ……
மூடு டாஸ்மாக்கை மூடு

shut tasmac 2இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சு சாகணும்
எத்தன தாலி அறுந்து விழணும்..
எத்தனை தாலி அறுந்து விழணும் (கோரஸ்)

எத்தன கட்சிகள் கொள்ளையடிக்கணும்
எத்தன தேர்தல் வந்து போகணும்

எத்தன தேர்தல் வந்து போகணும் (கோரஸ்)

இது தப்புன்னு நல்லா தெரிஞ்ச பின்னும்
இப்பவே மூடு ஏன் தயங்கணும்

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு… (கோரஸ்)

கூட்டம் சேக்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம்
ஓட்டு வாங்க சாராயம் (கோரஸ்)

கோஷம் போட சாராயம்
கொடி பிடிக்க சாராயம்
கொடி பிடிக்க சாராயம் (கோரஸ்)

shut tasmac 3சாராய ஊறலில்தான் கட்சி வளருது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது
உன்ன ஊறுகாயா தொட்டுக்கத்தான் தேர்தல் நடக்குது (கோரஸ்)

அட கடைய மூட எதுக்கு ஓட்டு
போடு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு.. (கோரஸ்)

அப்பனும் மகனும் கடையிலே
ஆளிருந்தும் துணையில்லே
ஆளிருந்தும் துணையில்லே (கோரஸ்)

சுத்தி சுத்தி இன்னும் கடன வாங்கி
மானம் போகுது தெருவிலே
மானம் போகுது தெருவிலே (கோரஸ்)

விலையில்லா பொருளால
வாழ்க்கை விலை போனது கடையிலே
வாழ்க்கை விலை போனது கடையிலே (கோரஸ்)

விளக்கு அணைஞ்சு போச்சு வீட்டிலே….

விளங்குமா இந்த பொம்பள

மூடு டாஸ்மாக்கை மூடு..
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)

கெட்ட குடி நம்ம குடி
அறுந்த தாலி நம்ம தாலி
அறுந்த தாலி நம்ம தாலி (கோரஸ்)

பத்தியெறியது எங்க வயிறு
குடிய பாக்கு வெச்சு அழச்சதாரு
பாக்கு வெச்சு அழச்சதாரு (கோரஸ்)

shut tasmac 4அட வேணான் இது எங்க ஊரு
அதிகாரம் பண்ண கலெக்டர் யாரு?

மூடு டாஸ்மாக்கை மூடு…
மூடு டாஸ்மாக்கை மூடு (கோரஸ்)

குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்க வரும் போலிசுக்கு அஞ்சாதே

மூடு கடையை – அட
எவன் வருவான் பாப்போம்

நம்ம ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது
அடிச்சு தூக்கு………………..

___________________________________

பாடல்: மையக் கலைக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம்

வெளியிடுவோர்: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு…
99623 66321

______________________________________________________

பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!

1
Exif_JPEG_420
பால் உற்பத்தியாளர்கள் 1
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மிழகத்தில் ஆவின் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 2011-ல் ஜெயா அரசு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே அதிரடியாக பால் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியா, ஹட்சன், ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்களும் பல மடங்கு விலையை உயர்த்தி கொள்ளை இலாபமடித்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 மட்டுமே உயர்த்தி கொடுத்தனர். அந்த பாலை பயன்படுத்தும் பொதுமக்கள் மீது ரூ.6.25 விலை உயர்வு திணிக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு அறிவித்தபடி 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை கைவிட்டு 25% பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. மீதி 75% பாலை கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்த கார்ப்பரேட் பால் உற்பத்தி நிறுவனங்கள், திடீரென பாலை வாங்க மறுப்பது, குறைந்த விலைக்கு கேட்பது, வாரத்திற்கு 1, 2 நாள் விடுமுறை என்று பால் உற்பத்தியாளர்களை அலைய விடுவது, என்று பால் உற்பத்தியாளர்களை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர்.

கிரானைட், மணல், தண்ணீர், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்தி, கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதித்தது போல, பாலிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஜெயா அரசு துடித்து வருகிறது. அதனால், தற்போது அரசு கொள்முதல் செய்துவரும் ஆவின் பாலையும் (அதாவது 25 லட்சம் லிட்டரையும்) நிறுத்திவிடத் துடிக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் சேர்ந்து பால் உற்பத்தியாளர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

பால் உறப்பத்தியாளர்கள் 2
பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பால் உற்பத்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டும் அரசின் முயற்சிக்கும் உணவுத் தற்சார்பை ஒழித்து முற்றிலும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை உருவாக்குவதோடு, குறைந்தப் பட்ச சத்துணவான பாலையும் பறிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் அமைந்துள்ளது. பால் கொள்முதல் விலை குறைப்பு, பால் வாங்க மறுப்பு, பால் வாங்குவதற்கு விடுமுறை ……இவற்றினை எதிர்த்து தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்னாகரம் விவசாயிகள் சிலரின் அனுபவம்:

பென்னாகரத்தில் உள்ள தாசம்பட்டி கிராமம், ஒரு காலத்தில் பார்ப்பதற்கு பசுமையாக தோற்றமளித்த இந்த பகுதி பருவ மழையின்மையால் விவசாயம் பொய்த்து போய் இன்று களையிழந்து இருக்கிறது. இதனால், விவாசாயத்தை விட்டு விட்டு கர்நாடகா, கோவை என கட்டிட வேலைக்கு சென்று எப்படியாவது குடும்பத்தை நடத்தி விடலாம் என்று போனால் அங்கேயும் 10,15 நாள் மட்டுமே வேலை இருக்கிறது, அதன் பிறகு வேலை கிடைப்பதில்லை. இந்நிலையில் தான் பால் மாடு வாங்கியாவது, வளர்த்தால் குடும்பத்தை ஓட்டிவிடலாம் என்று வளர்த்து வந்தவர்களின் எண்ணத்தில் இடியாய் இறக்குயிருக்கிறது இந்த பால் கொள்முதல் விலை குறைப்பு.

தனலட்சுமி கூறும் போது, காலையில் 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குடும்ப வேலைகளை முடித்து, பிறகு 7 மணிக்குள் பாலை கறந்து சொசைட்டிக்கு போய் ஊற்றிய பிறகு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதன் பிறகு, மாட்டுக்கு புல் அறுத்து வரவேண்டும், தீவனம் வைக்க வேண்டும், வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி, அடுத்தடுத்து இரவு 10 மணி வரைக்கும் உழைத்து அன்றாடம் பாலை ஆரோக்கியாவுக்கு ஊற்றி வரும் தனலட்சுமி, அவருடைய ஆரோக்கியத்தை இழந்து நிற்கிறார்.

milk 4
நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் பால் கோவா தொழிலில் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது.

மேலும் அவர் கூறும் போது, பாலுக்கு ஏற்ற விலை இல்லை, 4 வகையான தீவனம் இருக்கிறது. இதில் மாங்காய் தீவனம் போட்டால் தான் பால் கெட்டியாக, கொழுப்பும் கிடைக்கிறது. இந்த தீவணத்தை ரூ.1400க்கு வாங்கி போடுகிறேன். இதுவும் 1 மாதம் கூட வருவதில்லை. என்ன செய்வது, வேற வழியில்லாமல் இந்தத் தொழிலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது வாரச் செலவு, கடனுக்கு சரிகட்ட முடியும் என்றுதான் வளர்த்து வருகிறேன். இதிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.

வறட்சியின் பிடியால் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியால் நகரத்திற்கு ஓடுவது, அங்கேயும் வேலை இல்லாமல் போனதால் பால் மாட்டை வாங்கியாவது பிழைப்பை நடத்தலாம் என்று நினைத்தாலும் போதிய தீவனம் இல்லை. முதலாளித்துவ நிறுவனங்கள் தீவனங்களின் விலையை, பல மடங்கு உயர்த்தி விட்டதால் அநியாய விலைக்கு வாங்கி மாடுகளை பாராமரிக்க வசதியில்லை, தீவனத்தை குறைத்தால் பாலும் குறைகிறது. ஏற்கனவே கடன் சுமையால் திக்குமுக்காடும் விவசாயிகள் ரூ.40,000க்கு வாங்கிய மாட்டை தற்போதுரூ.10,000, 8,000 என நஷ்டத்துக்கு விற்று விட்டு, கல்லுமலைக்கும், மீண்டும் நகரத்தை நோக்கி ஓடுவது என்ற நிலையில், இனி வாழவே முடியாது என்கிற நிலைமையை உருவாக்கி ஒட்டு மொத்தமாக விவசாயிகளையே, நாடோடிகளாக மாற்றி விட்டார்கள்.

பால்கோவா உற்பத்தியாளரின் அவலம்!

பென்னாகரத்தை ஒட்டி பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் இரண்டு செயல்பட்டுகின்றன. இதில் கே.எம்.எம். பால்கோவா தொழில் செய்பவர் கூறும் போது, “நாங்கள் 35 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆனால் இந்த ஓர் ஆண்டில் மட்டும் நிறைய நஷ்டங்களை சந்தித்து விட்டோம். குறிப்பாக 20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுயிருக்கிறது. 2, 3 வருடத்திற்கு முன்பு 15 பேர் வேலைக்கு அமர்த்தி, வேலை செய்தோம். பால் கோவாவும் நிறைய ஆர்டர் கிடைக்கும். இங்கு இருக்கும் சுற்று வட்டார மக்கள் எங்களிடம் தான் பால் எடுத்து வருவார்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

milk 2
அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம்.

என்றைக்கு ஆரோக்கியாவும், ஹட்சனும் வந்ததோ அன்றையிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் அங்கு போக ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விலையை உயர்த்தி கொடுக்கிறார்கள். அதனால் இங்கு பால் எடுத்து வந்தவர்களும் அங்கு போய்விட்டார்கள். இதனால் எங்களிடம் ஏற்கனவே பழக்கமானவர்கள் தான் பால் ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஆரோக்கியாவும், ஹட்சனும், பால் கொள்முதல் செய்ய மறுத்தாலும், குறைந்த விலைக்கு கேட்பதாலும், அதிக விலைக்கு தீவனம் போட்டு குறைந்த விலைக்கு பால்கொள்முதல் செய்வதால் அவர்களிலும் பல பேர் கட்டுபடியாகமல் மாட்டையே விற்றுவிட்டு வேற வேலைக்கு சென்று விட்டதாக கூறினார்.

அதிக விலை கொடுத்து பால் வாங்கி பால்கோவா செய்தாலும், குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதனால் தயாரித்த பால்கோவா வை ஐசிலே வைத்து பாதுகாத்து கொஞ்சம், கொஞ்சமாக விற்று வருகிறோம். என்ன செய்யறது, இவ்வளவு நாளா செய்து வந்துட்டோம். அதனால விடவும் முடியாமல், தொழிலை செய்யவும் முடியாமல், தவிக்கிறோம் என்று வேதனையோடு கூறினார்.

ஒட்டுமொத்தமாக பால்கோவா செய்பவர்களுக்கு தொழில் இனிப்பாக இல்லை, பாலை உற்பத்தி செய்பவர்கள் ஆரோக்கியமாக இல்லை. சொந்த மக்களையே நாடோடிகளாக்கி அலைய விடும் இந்த அரசமைப்பை மாற்றி மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கும் வரை மக்கள் தமது நிம்மதியை பெற முடியாது.

  • புஜ செய்தியாளர், பென்னாகரம்.