கும்மிடிப்பூண்டி CRP மற்றும் டால்மியா ஆலைகளில் தலைவிரித்தாடுகிறது முதலாளித்துவ பயங்கரவாதம்!
முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்க தேவை ’தொழிலாளி வர்க்க ஒற்றுமை’ எனும் ஆயுதம்!
என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 11.06.14 அன்று மாலை 6 மணிக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது.
தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் K.M. விகந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது தொழிலாளிகளின் பிரச்சனை என்று நினைத்து கொண்டிருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணர்த்தும் வகையில் அது ஒவ்வொரு வர்க்கத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை பதியவைத்தார்.
அடுத்ததாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
“இந்த கூட்டத்தை சென்ற மாதம் 21-ம் தேதி நடத்த வேண்டுமென அனுமதி கோரியிருந்தோம். ஆனால் பிரதமர் பதவியேற்பு விழா என்று சொல்லி தட்டிக்கழித்தனர். இம்மாதம் 11-ம் தேதி நடத்த அனுமதி கோரிய போது தங்களால் அனுமதி வழங்க முடியாது, மாவட்ட கண்காணிப்பாளரிடம் சென்று அனுமதி பெற்று வாருங்கள் என்றனர். ஆலையின் நடவடிக்கைகளை கண்டித்து ஒரு கண்டனக் கூட்டம் நடத்தவே மாவட்ட கண்காணிப்பாளரின் அனுமதி பெற வேண்டுமெனில், தொழிலாளிகளை டிஸ்மிஸ், சஸ்பெண்டு செய்து, அவர்களை வாழவிடாமல் சித்ரவதை செய்யும் CRP, டால்மியா முதலாளிகளுக்கு ஆதரவாக போலிஸ் முன்னைக் காட்டிலும் தீவிரமாக செயல்படுவதை உணர்ந்து கொண்டபின் மாவட்ட கண்காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் ஒரே நேரத்தில் மனு அளித்து, அதை பத்திரிக்கையிலும் வெளியிடச் செய்தோம்.
கண்டனக் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கும் இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தை, நாம் அம்பலப்படுத்தி விடக்கூடும் என்றஞ்சிய போலிசு வேறு வழியின்றி 10-ம் தேதி இரவு 7 மணிக்கு அனுமதி வழங்கியது. இதுநாள் வரை அனுமதி மறுத்ததற்கான காரணத்தை மாவட்ட கண்காணிப்பாளரோ, துணை கண்கானிப்பாளரோ, காவல் துறை ஆய்வாளரோ கூறவில்லை.
ஏன் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது? அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் ஏன் சொல்லப்படவில்லை?
ஏனென்றால், அனுமதி கொடுத்தால் முதலாளிகளும், அவர்களின் அடிவருடிகளும் போட்டுக்கொண்டிருக்கும் ஜனநாயக முகமூடியை புஜதொமு கிழித்துவிடும் என்ற அச்சம் தான் காரணம்” என்று தோழர் சுதேஷ்குமார் போலிசை அம்பலப்படுத்தி பேசினார்.
“தமிழகத்தில் 2012-ம் ஆண்டில் புஜதொமு சங்கம் தான் அதிகப்படியான ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆலையை மூடுவதோ, உற்பத்தியை முடக்குவதோ எங்களின் நோக்கமல்ல, பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் முதலாளிகள் புஜதொமுவை முடக்கிவிட வேண்டுமென்றும் இல்லாமல் செய்து விட வேண்டுமென்றும் பகல் கனவு காண்கின்றனர். அது சாத்தியமில்லை. SRF கும்மிடிப்பூண்டியில் 2005-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தோழர் விகந்தர் இன்று மாவட்ட தலைவராகியுள்ளார். நீங்கள் டிஸ்மிஸ் செய்து, சஸ்பென்ட் செய்து புஜதொமு-வை இல்லாமல் செய்து விடலாமென கருதுவது பலிக்காது” என்று முதலாளிகளை எள்ளி நகையாடினார்.
“கும்மிடிப்பூண்டியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திலும், இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றவே இந்து மதவெறி பாசிஸ்டு நரேந்திர மோடி பிரதமராக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களை நீக்குவதும் அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்குவதும் முதலாளிகளின் நலன்களுக்காகவே தான். ஆக இந்த ஒட்டு மொத்த முதலாளித்துவ சித்தாந்தத்தையும் புவியில் இருந்து துடைத்தெறிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மாற்று” என்று பதிய வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக ”புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அது போகும் இடமெல்லாம் அதிருது கம்பனி” என்ற பாடல் உழைக்கும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.
இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக்கூட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் உறுப்பினர் தோழர் சதீஷ் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மாவட்டம்-9444213318
அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் சாம்பார் சாதம், பேருந்து நிலையங்களில் பத்து ரூபாய்க்கு அம்மா குடிநீரைத் தொடர்ந்து அம்மா உப்பு அறிமுகமாகியிருக்கிறது. உப்பிட்டவரை மறக்கக் கூடாது என்ற பழமொழியை பண்பாடாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்த உப்பு மட்டுமல்ல, அந்த இட்லியும் கூட இதே நோக்கத்திற்காகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
சரவண பவன்களும், வசந்த பவன்களும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் நாட்டில் அம்மா இட்லி இருந்தாக வேண்டுமல்லவா? கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக உழைக்கும் தமிர்களை ஆக்கிய பிறகு கஞ்சித் தொட்டி திறப்பது இருவகையில் இலாபம். ஒன்று வள்ளல் பட்டம். இரண்டு வறுமையின் கோபத்தை மட்டுப்படுத்துவது.
தண்ணீர் தனியார் மயத்தை அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டு பத்து ரூபாய் குடிநீர் வழங்குவது முன்னதை நியாயப்படுத்தவே அன்றி தடை செய்வதற்கு அல்ல. அந்த பார்வையில் இந்த உப்பு படலத்தையும் பார்ப்போம்.
தற்போது மூன்று வகையானன அம்மா உப்புகளை நியாய விலைக் கடைகள் மூலமாக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே 1997 முதல் ரேசன் கடையில் ரூ.2.50 மற்றும் ரூ.4.50 க்கு மக்களுக்கு உப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த உப்புகளையே விலையேற்றி அம்மா உப்பாக அறிவித்துள்ள ஜெயா அரசு மறுபுறம் இது தனியார் உப்பினை விட விலை குறைவுதான் என்று நியாயப்படுத்துகிறது.
அயோடின், இரும்பு சத்து கலந்த உப்பு ஒரு கிலோ தனியாரிடம் ரூ.22, ஆனால் அம்மா உப்போ ரூ.14 என்றும், அயோடின் மட்டும் உள்ள வெளிச்சந்தை உப்பு ரூ.14 என்றும், அம்மா உப்போ ரூ.10 என்றும், ரத்த அழுத்த பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கான குறைவான சோடியம் உள்ள உப்பு வெளிச்சந்தையில் ரூ.25 என்றும், அதே அம்மா உப்பு ரூ.21 என்றும் பத்திரிகைகள் விளம்பரம் செய்கின்றன.
புதிய உப்புகளுக்கான விற்பனை திட்டத்தை ஜெயா நேற்று 11.06.2014 அன்று தொடங்கி வைத்தார். இந்த உப்புகள் சிந்தாமணி, அமுதம், கூட்டுறவு விற்பனையகங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். நமக்குத் தெரிந்து இவை மட்டுமல்ல, மாவட்ட அளவில் இருந்த இத்தகைய கூட்டுறவு அங்காடிகள் இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையில் கால்வாசி கூட தற்போது இல்லை. அதன்படி பார்த்தால் இந்த உப்பு பரவலாக மக்களிடம் போய்ச் சேராவிட்டாலும், விளம்பரம் அசுர வேகத்தில் பரவும்.
முதலில் இந்தியாவில் உப்பு தொழில் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை பார்த்து விடுவோம்.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான இந்தியாவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் உப்பு உற்பத்தியாகிறது. இந்தியாவில் நான்கு விதமான முறைகளில் உப்பு தயாரிக்கப்படுகிறது. கடல் நீர், ஏரி நீர், நிலம், பாறைகளில் இருந்து உப்பு பெறப்படுகிறது.
குஜராத்தின் ஜாம்நகர், மிதாபூர், ஜகார், சிரா, பவாநகர், ரஜூலா, தஹேஜ், காந்திதாம், கண்ட்லா, மலியா, லாவண்பூர் ஆகிய இடங்களிலும், தமிழகத்தின் தூத்துக்குடி, வேதாரண்யம், கோவளம், மரக்காணம் போன்ற இடங்களிலும், ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணபட்டணம், சின்னகஞ்சம், இஸ்காபள்ளி, நவ்பாடா ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிரத்தின் பாண்டுப், பயண்டார், பல்கார் பகுதியிலும், ஒரிசாவின் கஞ்சம், சுமடி பகுதியிலும், மேற்கு வங்கத்தின் கோண்டாய் பகுதியிலும் கடலில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து உப்பு தயாரிக்கும் முறையானது ராஜஸ்தானில் உள்ள சம்பார் ஏரிப் பகுதியில் இருந்தும், நிலப்பகுதியில் தோண்டியெடுக்கும் உப்பானது கட்ச் பகுதியில் உள்ள தாரங்கதாரா, சந்தால்பூர் போன்ற இடங்களிலும், பாறை உப்பு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி பகுதியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய அளவில் 11,799 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஏறக்குறைய 6.09 லட்சம் ஏக்கரில் உப்பு இங்கு உற்பத்தியாகிறது. இதில் 87.6% நிலமானது பத்து ஏக்கருக்கும் குறைவான உப்பளத்தை பெற்றிருக்கும் சிறு உற்பத்தியாளர்கள் வசமே உள்ளது. 6.6% பேர் 10-100 ஏக்கர் உப்பளத்தை பெற்றுள்ள நடுத்தர உற்பத்தியாளர்களாகவும், 5.8% பேர் 100 ஏக்கருக்கு மேல் உள்ள பெருவீத உற்பத்தியாளர்களும் ஆவர். ஆண்டு சராசரி உற்பத்தி 215.80 லட்சம் டன்களாகும். இதில் 59 லட்சம் டன்கள் உணவு பயன்பாட்டுக்காகவும், 107 லட்சம் டன்கள் தொழிற்துறை பயன்பாட்டுக்கும் உதவுகின்றன. உப்பு பயன்பாட்டில் மனித நுகர்வை விட தொழிற்துறை பயன்பாடே அதிகம்.
1964, 1984 ஆம் ஆண்டுகளில் அயோடின் குறைபாட்டை நீக்க தேசிய அளவில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மூலமாக அயோடினை சேர்த்து அயோடினேற்றம் செய்யப்பட்ட உப்பு அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இந்த பிரச்சாரம் ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டது. இதை மறுத்து சாதா கல் உப்பே போதும் என்ற வாதங்களும் அறிவியல் உலகில் உண்டு. அதை தள்ளி வைத்து விட்டு பார்த்தால் அயோடின் உப்பு தயாரிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமல்ல. ஆனால் அப்படி விளம்பரம் செய்து பெரும் நிறுவனங்கள் உப்புசந்தையை ஆக்கிரமித்துள்ளன. எனவே இதை ஆரோக்கிய மேம்பாட்டுடன், வர்த்தக் நிறுவனங்களின் வளர்ச்சியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
மனித பயன்பாட்டுக்கு 60.5 லட்சம் டன் உப்பு மட்டுமே தேவைப்படுகின்ற போதே 175 டன் உப்பை அயோடினேற்றம் செய்து விட்டது இந்தியா. இந்தியாவில் தனிநபரின் உப்பு பயன்பாடு என்பது ஆண்டுக்கு 12 கிலோ ஆகும். இதற்காக செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்தாலும் இந்த நுகர்வு அதிகமாக வாய்ப்பில்லை. தற்போது டப்பா உணவு வகைகளில் அதிகம் உப்பு பயன்படுத்தப்படுவதால் உப்பு நுகர்வு அதிகரித்திருப்பதோடு, ரத்த அழுத்தமும், உடல் ஏடை கூடும் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன.
அயோடின் உப்புக்காக விளம்பரம் செய்த அரசு, ஊடகங்கள் இந்த டப்பா உணவுக்கெதிராக பிரச்சாரம் செய்வதோ தடை செய்யக் கோருவதோ கிடையாது. சிறு முதலாளி சாதா உப்பு விற்றால் குற்றம், பெரு முதலாளி அயோடின் உப்பு அதிகம் போட்டு சிப்ஸ் விற்றால் சரியானதாம்.
நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 76.7% குஜராத்திலும் (உடனே இது மோடியின் சாதனை என்று கோயிந்துகள் கிளம்பக் கூடும்), 11.16 சதவீதம் தமிழகத்திலும், 9.86 சதவீதம் ராஜஸ்தானிலும் உற்பத்தியாகிறது. ஆனால் 62% உற்பத்தி தனியார் பெருவீத உற்பத்தியாளர்களால் தான் நடக்கிறது. 28% மட்டும்தான் சிறுவீத உற்பத்தியாளர்களால் உற்பத்தியாகிறது. மொத்தமாக பார்த்தால் தனியாரிடம்தான் 98% உப்பு தயாரிப்பு இருக்கிறது. பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கியே தமது பிராண்டுகளை தயாரிக்கின்றன.
ஏறக்குறைய 1.11 லட்சம் தினக்கூலிகள் இத்துறையை நம்பி வேலை செய்கின்றனர். மழை, பனி போன்ற காலங்களில் இவர்களுக்கு அவ்வளவாக வேலை கிடைப்பதில்லை. கால்கள் பாளம் பாளமாக வெடிப்பதும், பணிப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் உப்பளத் தொழிலாளர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. கிடைக்கும் கூலியும் பொதுவான தினக்கூலியை விட மிகவும் குறைவாகத்தான் இருக்கும். சராசரியாக தினக்கூலி ரூ.100 க்குள்தான் இருக்கின்றது. இந்த தொழிலை விட்டு விலகிப்போனவர்களும் அதிகம். அதில் சிறு உற்பத்தியாளர்களும் அடக்கம்.
நாட்டின் உப்பு உற்பத்தியில் 20% மட்டும்தான் நவீனமயமாக்கப்பட்டுள்ளது, மீதி அனைத்துமே முழுக்க முழுக்க மனித உழைப்பை மட்டுமே சார்ந்துள்ளது. சரும வியாதிகளோ, அல்லது விபத்துக்களோ நேரிடும் சமயங்களில் உடனடியாக இவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை. நாள் முழுதும் நன்றாக வெயில் காயும் கோடையில் தான் இவர்களுக்கு மாதம் முழுதும் வேலை கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலைமை.
தினமும் உப்பு நீரிலும், உப்பிலும் கடும் வெயில் நிற்பதாலும், குடும்பமே உழைத்தாலும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானம் ஈட்டுவதே பெரும்பாடாக இருப்பதாலும், ஓய்வு எடுக்க நிழல் பகுதியே உப்பளங்களுக்கு அருகில் இல்லாமல் இருப்பதாலும் ஏறக்குறைய 55 வயதுக்குள்ளாகவே இவர்கள் முதுமையையும், வேலை செய்ய இயலாத நிலைமையையும் அடைந்து விடுகின்றனர். அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள இவர்களது வீடுகள் உப்பளத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பலரால் இங்கு குடியேற முடியவில்லை. தமிழகம் முழுக்கவே இதுவரை 250 வீடுகள்தான் அதுவும் தலா 200 சதுர அடி பரப்பில் இவர்களுக்காக அரசால் கட்டப்பட்டுள்ளது.
அம்மா உப்பு பாக்கெட் போடுவதற்கு செய்யப்பட்டும் விளம்பரங்களிலேயே பல நூறு உப்பளத் தொழிலாளிகளுக்கு வீடு கட்டித் தரலாம்.
பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்த பிரிவினரே இதில் தொழிலாளிகளாக பணிபுரிகின்றனர். வட்டிக்கு பணம் வாங்கிதான் அன்றாட பொழுதையே இவர்களில் பெரும்பாலானோர் கழிக்க வேண்டியதாகியுள்ளது. இந்த நிலைமையை ஈடுகட்ட இக்குடும்பங்களில் இருந்து தினக்கூலி ரூ.20-40 என்ற அளவில் குழந்தை தொழிலாளிகளும் உப்பள வேலைக்கு வருகின்றனர்.
வேலைக்கு எடுக்கும் பெரிய நிறுவனங்கள் அவர்களை ஒப்பந்த கம்பெனிகள் மூலமாகவே வேலைக்கு எடுக்கின்றன. தினசரி அதிகாலை 2 மணிக்கே கணவனும், மனைவியும் உப்பளத்தில் இறங்கியாக வேண்டும். பாத்திகளில் நீர் நிரப்புதலும், வெயில் வந்த பிறகு சேகரமான உப்பினை கூட்டி வேறு இடத்துக்கு கொண்டு வந்து குமித்து வைத்து, ஓலையால் மூடி வைக்கவும் வேண்டும். 45 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
ஆண்டுக்கு 35 லட்சம் டன்கள் வரை உப்பு இங்கிருந்து ஏற்றுமதியாகின்றது. குறிப்பாக இந்தோனேசியா, வியட்நாம், கொரியா, கத்தார், ஜப்பான், பிலிப்பைன்சு, நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சீனாவுக்குதான் முதன்மையாக ஏற்றுமதியாகிறது.
1953 முதலே உப்பு ஏற்றுமதி துவங்கி விட்டதெனினும் 2001 ல் இத்துறையும் தனியார்மயத்திற்கு நன்றாக திறந்து விடப்பட்டது. அப்போதுதான் 1.6 மில்லியன் டன் என்ற உச்சத்தை ஏற்றுமதி எட்டியது. அவந்தா, டாடா போன்றோர் இதில் கொடிகட்டிப் பறக்கின்றனர். குடிநீர், கனிம வளம் போன்ற இயற்கை வளங்களைப் போன்றுதான் உப்பு என்றாலும் இங்கும் தரகு முதலாளிகளின் அகோர இலாப பசிக்கு திறந்து விடப்பட்டது.
ஏற்றுமதியாகும் உப்புக்கு டன் ஒன்றுக்கு 35 முதல் 40 டாலர் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிலோ 24 பைசா. இந்த உப்பைத்தான் அயோடினைஸ்டு செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் இருபது வரை டாடா உப்பு என்ற பெயரில் மக்களின் தலையில் முதலாளிகள் கட்டுகிறார்கள்.
இந்திய உப்பு சந்தையில் 64% இவர்கள் கையில்தான் உள்ளது, அதாவது ஏறக்குறைய 6 மில்லியன் டன்கள். இதில் 65% உற்பத்தி செய்யும் டாடாவுக்கு அடுத்தபடியாக இந்துஸ்தான் யுனிலீவரின் அன்னபூரணா, நிர்மாவின் சுத் சால்ட், ஐடிசி இன் ஆசிர்வாத் உப்பு போன்றவை முன்னணியில் உள்ளன. அம்மா உப்பு பாக்கெட் போடுவதற்கு பதில் இந்த பெரு நிறுவனங்களை இங்கே உப்பு விற்க தடை விதித்தால் அதுதான் தமிழகத்தின் உப்பள தொழில் மற்றும் மக்களின் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். மாறாக டாடா தொழில் சீரும் சிறப்புமாக நடப்பதற்கே இந்த மலிவு விலை உப்புகள் சீன் போடுகின்றன.
பொதுவாக சிறு உற்பத்தியாளர்களுக்கு அடிக்கடி நடக்கும் மின்வெட்டும், கூலியின் அதிகரிப்பும் காரணமாக இலாபம் குறைந்து வருகிறது. இங்குள்ள சிறு மற்றும் நடுத்தர உப்பு உற்பத்தியாளர்கள் ஐடிசி மற்றும் யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே உற்பத்தி செய்கின்றனர். இவர்களது உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி குறைந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களோ டன் உப்பு ஒன்றுக்கு மிகவும் குறைவாக பணம் தருகின்றனர்.
அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த சிறு உற்பத்தியாளர்கள் நீடிக்க முடியாது என்ற நிலைமையால் அங்கு எந்த சிறு, நடுத்தர உப்பள அதிபர்களும் தமது குழந்தைகளுக்கு இத்துறையை சிபாரிசு செய்வது அருகி வருகிறது. உற்பத்தியாகும் உப்பளங்களின் பரப்பும் வெகுவாக குறைந்து வருகிறது.
உப்பு ஏற்றுமதி ஆண்டுக்கு 615 கோடி அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு ஈட்டித் தருகிறது. 2020ல் ஆண்டுக்கு 40 மில்லியன் டன்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்றும், அதில் 10 மில்லியன் டன் ஏற்றுமதிக்காக என்றும் உப்புக்கான இணை ஆணையர் ஆர்.எஸ். காஷ்யப் கூறுகிறார். இதிலிருந்தே உப்பு துறையில் டாடவும், லீவரும் ஏன் இறங்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு, குஜராத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உப்பு உற்பத்தியில் இருக்கிறது. பிரிட்டிஷார் காலத்தில் உப்புக்கு வரி கொடுக்க மறுத்து காந்தி உப்பு சத்தியாகிரகத்தை குஜராத்தின் தண்டியிலிருந்து துவங்கிய போது தமிழகத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் அந்த சட்டமறுப்பு இயக்கத்தை வேதாரண்யத்தில் துவங்கினர். அந்த வேதாரண்யத்தில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் உப்பளத்தில் 3500 ஏக்கர் சன்மார் குழுமத்திற்கும், 3500 ஏக்கர் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமாக இருக்கிறது. மீதமுள்ளதில் 3000 ஏக்கரை அரசு சிறு உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு தந்துள்ளது. ஆக உப்பளம் தரகு முதலாளிகளுக்கு. அவர்கள் தயாரித்த உப்பை சாப்பிட்டு காசு கொடுக்க வேண்டிய கடமை மக்களுக்கு.
வருடத்தின் சில மாதங்கள் மட்டும் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கும். (படம் தி இந்து)
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வரை உப்பளம் உள்ளது. இங்குதான் தமிழகத்தின் பெரும்பகுதி உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு இங்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகிறது.12 ஆயிரம் ஏக்கர் உப்பளத்தை மாநில, மத்திய அரசுகள் சிறு, நடுத்தர உப்பள உரிமையாளர்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக குத்தகைக்கு எடுப்பவர்கள் உள் குத்தகைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் விடுவதும் மாநிலம் முழுக்க நடைபெறுகிறது. பல இடங்களில் சட்டபூர்வ அங்கீகாரம் பெறாத உப்பளங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்படும் தனியார் கம்பெனிகளில் டேக் மற்றும் தாரங்கதாரா போன்ற ரசாயன கம்பெனிகள் முன்னணியில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் 1974 ல் தமிழ்நாடு உப்பு கழகம் அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினை பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என ஒரு இலாபமீட்டும் அரசுத் துறை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுக்க பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அயோடின் ஏற்றம் செய்யப்பட்ட உப்பினையும் கூட ரூ.2.50 க்குதான் இந்நிறுவனம் விநியோகித்து வருகிறது. இது போக ரூ.4.50க்கு சுத்திகரிக்கப்பட தூள் உப்பையும் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. ஏறக்குறைய 42 மில்லியன் மக்கள் இதனால் பலனடைந்து வருகின்றனர். இப்படி மலிவு விலைக்கு கொடுத்து விட்டு இப்போது அதிக விலை விற்க வேண்டிய அவசியம் என்ன?
எதிர்காலத்தில் ரேசன் கடை மலிவு உப்பை ஊத்தி மூடிவிட்டால் மக்கள் அம்மா உப்பைத்தான் சார்ந்து வாழ வேண்டும். அம்மா உப்பு விற்கப்படும் அரசு கடைகள் அதிகமில்லை என்பதால் அனைவரும் டாடா, லீவரின் உப்பைத்தான் அருகாமை கடைகளில் வாங்க முடியும். அப்போது தமிழ்நாடு உப்பு கழக உப்பையே மலிவு விலைக்கு வாங்கி அதிகம் விற்க இந்த பெருநிறுவனங்கள் முன்வரும்.
தென்னிந்தியா முழுதும் மதிய உணவு திட்டத்தில் தமிழ்நாடு அரசு உப்புக் கழக உப்புதான் பயன்படுகிறது. இந்நிறுவனம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் பெரிய தொழிற்சாலை ஒன்றை நிறுவி உப்பு பிரித்தெடுத்து தரம் பிரிக்கும் வேலையை செய்து வருகிறது. இங்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வேலை செய்கின்றனர்.
தமிழ்நாடு உப்பு கழகம் மனித உபயோகத்திற்கான ஐந்து வகை உப்புக்களை உற்பத்தி செய்து வருகிறது.
ரேசன் கடைகள் மூடப்படவேண்டும், உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற உலக வர்த்தக கழகத்தின் ஆணை முழுவதும் அமல்படுத்தப்படும்போது இந்த உப்பு கழகமும் யாரோ ஒரு தரகு முதலாளி கைக்குச் செல்லும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. மாடர்ன் பிரட் விசயத்தில் அதுதானே நடந்தது.
ரேசன் கடையில் மலிவு விலையில் விற்கப்படும் உப்பினை விலையேற்றுவது என்பது மக்களை தனியார்மயத்துக்கு பழக்கப்படுத்தும் வேலையே ஆகும். அதையே மிகுந்த விளம்பரத்துடன் அம்மா அரசு மக்களுக்காக என்று பிரச்சாரம் செய்கிறது.
அம்மா குடி நீரால் இங்கே கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களின் இலாபம் குறைவதற்கு பதில் அதிகரித்திருக்கிறது. அது போல அம்மா உப்பினால் டாடா, லீவர், நிர்மா நிறுவனங்களின் உப்பு இலாபம் அதிகரிக்குமே இன்றி குறையப் போவதில்லை.
இத்தகைய மலிவு விலை விற்பனை என்ற உத்திக்கு பின்னே தனியார்மயத்தை நியாயப்படுத்தும் சதி மறைந்திருக்கிறது என்பதை மட்டும் இங்கே வலியுறுத்துகிறோம்.
வரலாற்றில் பல்வேறு சமூக காரணங்களால் தோற்றுவிக்கப்படும் பாரதூரமான முரண்பாடுகளை, குறிப்பிட்ட சமூகம் தீர்க்காத வரையில் அது ஆறாத வடுவாக மட்டுமல்ல உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆழமான புண்ணாகவும் அழுகிக் கொண்டிருக்கும்.
சுவாரஸ்யத்தை படைப்பதான முகாந்திரத்தில், திட்டமிட்டே அரசியல் நீக்கம் பெற்ற அல்லது மக்களுக்கு எதிரான அரசியலின் எழுத்துக்களால் மக்களை பாதிக்கும் சமூக பிரச்சினைகளை ஒருக்காலும் உள்ளன்போடு தொட முடிந்ததில்லை. மார்க்சிய/ சமூகவியல் ஆய்வு நூல்களே அந்த பணியை நிறைவு செய்து வருகின்றன.
கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள ‘அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.
1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கலவர விதை அதற்கும் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டது. 1949-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவில் திருட்டுத்தனமாக பாபர் மசூதியின் சுற்று சுவரை எறிக் குதித்து, அதன் வாயில் கதவை உடைத்து குழந்தை ராமன் சிலை நிறுவப்பட்டது. ராமன் சிலையை மசூதிக்குள் கொண்டு ஓடியவர் ஒரு சாது. வைணவ அகோரியான அவரது பெயர் அபிராம் தாஸ்.
‘அயோத்தி: இருண்ட இரவு’ நூல் அபிராம் தாஸின் இறப்பிலிருந்து நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறது. உணவுக்கே சிரமப்பட்ட தனது யதார்த்த நிலையிலிருந்து தப்பித்து, துறவு நிலை தரும் சில சௌகரியங்களுக்காக துறவியானவர் அபிராம் தாஸ். மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவிய அபிராம் தாஸுக்கு சில தனிப்பட்ட கணக்குகள் இருந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமன் கோயிலாக மாறினால் கிடைக்கும் காணிக்கையும், வருமானமும் பற்றியே அவரது சிந்தை சுழன்றது. இது அவரை மேலும் மேலும் இந்து மகா சபையின் திட்டத்துக்குள் உந்தித் தள்ளியது.
அபிராம் தாஸுடன் பாபர் மசூதிக்குள் நுழைய இருந்தவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் என்ற அயோத்தி நகர இந்து மகா சபை தலைவன். இறுதி நேரத்தில் அபிராம் தாஸை தனித்து விட்டு விட்டு அதே காலத்தில் கொல்கத்தாவில் நடந்த இந்து மகா சபை மாநாட்டிற்கு சென்று விட்டான். பரமஹன்ஸின் முடிவு அதிர்ச்சி அளித்தாலும், தனது ஒன்று விட்ட சகோதரரின் துணையுடன் இந்த சதிகார பணியை செய்து முடித்தார், அபிராம் தாஸ்.
பாபர் மசூதி இடிப்பை போன்றே மசூதிக்குள் சிலையை நிறுவியதும் விரிந்த அரசியல் சதித் திட்டத்தின் பகுதியே. அதனை அபிராம் தாஸின் தனிப்பட்ட ஆதாய நோக்கத்தில் விளைந்தது என்று மட்டும் சொல்ல முடியாது. காந்தி கொலையால் முடங்கியிருந்த இந்து மகா சபை – ஆர்.எஸ்.எஸ் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை; இல்லையேல் தனிமைப்பட நேரும் என்ற ஆபத்தை உணர்ந்திருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு சொல்லிக்கொள்ளுமளவு பெரிய செல்வாக்கு கிடையாது.
என்ன செய்தாவது இந்துக்களை திரட்ட வேண்டிய பதட்டத்தில் இருந்தார்கள். தனது சதி நோக்கத்தை மக்களிடம் மறைக்கின்ற அதே நேரத்தில், அந்த சதியையே மாபெரும் பொற்கால மீட்பு நடவடிக்கையாக பேசுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இது காந்தி கொலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்கிறார்கள் நூலாசிரியர்கள். காந்தி கொலை பகலில் செய்யப்பட்டது என்றால் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவும் குற்றச் செயல் இரவிலே நிகழ்த்தப்பட்டது.
பாபர் மசூதிக்குள் ராமன் சிலை நிறுவப்படுவதற்கு முன் உள்ள சூழல் பற்றிய நூலின் பதிவு முக்கியமானது. அது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியின் பிரச்சார உத்தியை பல வகைகளில் நினைவுபடுத்தும் ஒன்று. பா.ஜ.க என்றொரு அரசியல் கட்சி அப்போது இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை காங்கிரசே பூர்த்தி செய்தது.
அயோத்திக்கு ஒரு இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸில் ஐக்கியமாகியிருந்த சோசலிஸ்ட்கள் தனி அணியாக செயல்பட முடியாது என்ற நிலைமை உருவானது. இதை பயன்படுத்திக் கொண்டு காங்கிரசின் வலதுசாரிப் பிரிவு, கட்சியில் புதிய விதிகளை ஏற்படுத்தி சோசலிஸ்ட்டுகளை வெளியேற்றினார்கள். இந்த சோசலிஸ்ட்டுகள் தன்மையில் இப்போதிருக்கும் சமூக நீதிக் கட்சிகளை ஒத்தவர்கள். அகையால் இவர்களது பெயரில் சோசலிசம் இருப்பதை வைத்து மட்டும் முடிவு செய்ய கூடாது. அதே நேரம் இந்த பெயரவளவு சோசலிசத்தை கூட இந்துமதவெறியர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. சியாமா பிரசாத் முகர்ஜி (பின்னாளில் பா.ஜ.கவின் தாய் கட்சியான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்), பட்டேல் ஆகியோரின் வெளிப்படையான ஆதரவோடும் நேருவின் மவுன ஒப்புதலோடும் காங்கிரசிலிருந்து சோசலிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அபிராம் தாசு திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !
அப்படி வெளியேறியவர்கள் காங்கிரஸ் கட்சி மூலம் பெற்ற சட்டமன்ற/அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவிகளை உதறினார்கள். அப்படி ஒரு சோசலிஸ்டின் முடிவால் அயோத்தி நகரம் அமைந்திருக்கும் பைசலாபாத்தில் தேர்தல் வந்தது. மீண்டும் போட்டியிட்ட அவர் பெயர் ஆச்சார்ய நரேந்திர தேவ். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டவர் பாபா ராகவ தாஸ். இவர் உ.பியின் முதல்வராக இருந்த கோவிந்த வல்லப் பந்த்தின் ஆசி பெற்றவர். வல்லப பந்த் மோடியின் ஆதர்சமான வல்லபாய் படேலின் தீவிர ஆதரவாளர்.
இந்தியாவிலே நடந்த மதவெறி ஊட்டப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களில் இதுவும் முன்னோடியானது என்று சொல்லலாம். இந்து உணர்வை ஊட்டி தேர்தலில் அறுவடையை செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஆர்.எஸ்.எஸுக்கு தேர்தல் முடிவு அளித்தது. நரேந்திர தேவ் ஒரு நாத்திகர்; பாபா ராகவா தாஸ் இந்துக்களுக்கு ஆதரவானவர் என்று மக்களிடம் அன்றைய உ.பி காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பாபா ராகவ தாஸை வெளிப்படையாக ஆதரித்து இந்து மகா சபையும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. தேர்தலில் தேவ் வீழ்த்தப்பட்டார்.
வெற்றி பெற்ற பாபா ராகவதாஸ் தலைமையில் அந்த வருட அனுமன் ஜென்ம உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அங்கு ஒரு விசித்திரமான முடிவை அறிவித்தார் ராகவதாஸ். அது இந்து மகா சபை தயாரித்த அறிக்கை. ‘அனுமன் ஜென்ம உற்சவத்தை கொண்டாடிய அதே உற்சாகத்துடன் அந்த வருட ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை கொண்டாடப் போகிறோம்’ என்றார். இந்த அறிவிப்பின் முதல் பகுதியை விட அதன் அடுத்த பகுதி இந்து மகா சபையின் நோக்கத்தை அறியத் தருகிறது. ‘ராமன்-சீதை கல்யாண உற்சவத்தை ஒன்பது நாட்கள் நடத்துவது என்றும், ஒன்பதாம் நாள் குழந்தை ராமனை அவன் ‘பிறப்பிடத்துக்கு’ செல்ல பக்தர்கள் அனைவரும் கேட்டுக் கொள்வது’ என்றும் அறிவித்தார், ராகவ தாஸ். அதாவது ஒன்பதாம் நாள் இவர்கள் கேட்டுக் கொள்வதை அடுத்து ராமன் எழுந்து இவர்கள் கண்ணெதிரே தனது பிறந்த இடமான பாபர் மசூதிக்குள் சென்று அமர்வாராம். மக்கள் இப்படி வித்தியாசமான ‘அற்புத நிகழ்வுக்காக’ ஏங்க வைக்கப்பட்டார்கள். இந்த அற்புதத்தின் மறைவிலேயோ வெறி கொண்ட ஓநாய்கள் காத்துக் கொண்டிருந்தன.
ஒன்பது நாள் திருவிழாவின் இறுதியில் அவர்கள் ‘எதிர்பார்த்தது’ போல எதுவும் நடக்கவில்லை. குழந்தை ராமன் தானாக மசூதிக்குள் சென்று அமர்ந்து விடுவான் என்பதை மக்கள் ஏமாந்தது போல தாமும் ஏமாற, ஆர்.எஸ்.எஸ் என்ன அசடுகளின் கூடாரமா? எனில், ஆர்.எஸ்.எஸின் ஏமாற்றம் தான் என்ன? தமது வெறியூட்டும் நடவடிக்கைகளுக்கு பலியாகி கூட்டத்திலிருந்து யாராவது ஒருவர் ராமன் சிலையை எடுத்துக் கொண்டு மசூதிக்குள் ஓடுவார் என்ற ஆர்.எஸ்.எஸின் எதிர்பார்ப்பு தான் உண்மையில் பொய்த்து போனது. நாடகத்தின் உச்சம் தானாக அரங்கேற மறுப்பதால் திருவிழாவை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டித்தார்கள். ஏமாந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கி ஆற்றுபடுத்தினர். பதின்மூன்றாம் நாளும் இந்து மகா சபை ‘எதிர்பார்த்தது’ நடக்காமல் போகவே தமது திட்டத்தை வேறுவிதமாக நிறைவேற்ற துடித்தனர்.
இதற்காக ஒரு கூட்டத்தை ஜாம்பவன் கோட்டையில் கூட்டினர். கே.கே.நாயர், இந்து மகா சபை தலைவர்கள் கோபால் சிங் விஷாரத், ராமச்சந்திர பரமஹன்ஸ், அபிராம் தாஸ் மற்றும் சில சாதுக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திலே தான் திருட்டுத்தனமாக மசூதிக்குள் சிலையை நிறுவும் திட்டத்தை தீட்டினர். பகலில் சிலையை வைத்தால் அரசு நிர்வாகத்துடன் தேவையற்ற மோதல் ஏற்படும் என்று கே.கே நாயர் எச்சரித்தார். எனவே திருட்டுத்தனமாக சிலையை இரவில் நிறுவினால் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை அளிப்பதாக கே.கே. நாயர் உறுதி அளித்தார். கே.கே.நாயரின் இந்த ஆலோசனையை கூட்டம் ஆமோதித்தது.
இவையெல்லாம் நூலாசிரியர்களின் வளமான கற்பனைகள் அல்ல. பல்வேறு ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் அபிராம் தாஸின் சீடர் சத்தியேந்திர தாஸ் முதற்கொண்டு இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களே பின்னாளில் அளித்த வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டவை. மசூதிக்குள் சிலையை நிறுவும் பொறுப்பு அபிராம் தாஸிடமும், ராமச்சந்திர பரமஹன்சிடமும் (மசூதிக்குள் சிலை நிறுவப்பட இருந்த கடைசி மணித்துளியில் அபிராம் தாஸை தனியே தவிக்க விட்டுவிட்டு ஓடியவர்) ஒப்படைக்கப்பட்டது.
இங்கு முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முதலில் ஒன்பது நாட்கள் என்று தீர்மானிக்கப்பட்டு பிறகு அற்புதம் நிகழ தவறியதால் பதின்மூன்று நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட ராமன்-சீதை கல்யாணம் நடைபெற்ற ராம சபுத்ரா (மேடை) எனப்படுகின்ற கூரை வேயப்படாத மாடத்தின் பின்னணி குறித்த தகவல்களை நாம் பார்க்க வேண்டும்.
இது பாபர் மசூதி வளாகத்துக்குள்ளே அமைந்திருக்கிறது. 1857-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்களின் கலகத்தை நாமறிவோம். ஆங்கிலேய அரசை உ.பியின் மகந்துகள் (தலைமைப் பொறுப்பு வகிக்கும் அகோரிகள்) ஆதரித்து நின்றனர். அதற்கு கைம்மாறாக ஏராளமான நிலங்களை மகந்துகளுக்கு அளித்தனர், ஆங்கிலேயர்கள். ஒரு அகோரி, பாபர் மசூதியின் அருகாமையில் சிறிது நிலத்தை வரப்பிட்டு மேடை அமைத்தார். அந்த இடத்தை அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கியது ஆங்கிலேய அரசு. இப்படிப்பட்ட துரோகிகளாக இருக்கும் அகோரிகள்தான் இந்துமதவெறியர்களின் ஆன்மீக அடியாட்படையாக இன்றும் இருக்கிறார்கள்.
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி
ஆங்கிலேயன் வழங்கிய இடத்தை வைத்து அங்கு தான் முதலில் ராமன் பிறந்தார் என கதை கட்டி கோயில் எழுப்ப முயன்றனர். அதற்கு பைசாபாத் மாவட்ட அதிகாரி கே.கே நாயர் அனுமதி அளித்தார். கே.கே. நாயரின் உதவியாளர் குருத்தாட் சிங் இந்துக்களும், முஸ்லிம்களும் அருகருகே வழிபாடு செய்து கொள்ளட்டும் என்று அறிவித்தார். எனினும் பைசாபாத் துணை நிலை நீதிபதி இதற்கு அனுமதிக்கவில்லை. இந்த முதல் முயற்சியே விரிந்து பிறகு பாபர் மசூதியை கபளீகரம் செய்வது என்ற நிலைக்கு இந்துத்துவ சக்திகளின் கைகளுக்கு சென்றது.
பாபர் மசூதியை இரவில் காவல் காத்து வந்த போலீஸுக்கு கையூட்டு அளிக்கப்பட்டது. பிறகு சுவரில் தொத்தி ஏறிக் குதித்து அபிராம் தாஸ் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரர் (இந்து மகா சபையின் உள்ளூர் தலைவன் ராமச்சந்திர பரமஹன்ஸ் கடைசி நிமிடத்தில் பின் வாங்கியதால் அந்த இடத்தை நிரப்பியவர்) ஆகியோர் மசூதியின் பூட்டை உடைத்தனர். அங்கு அவர்களை எதிர்கொண்ட மெளல்வி இஸ்மாயிலை அடித்து துவைத்து துரத்தினர். பிறகு விடியும் வரை காத்திருந்தனர். விடியற்காலையில் ராமன் சிலைக்கு முன்னால் தீபத்தை ஏற்றினர். அயோத்தி காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ‘ காலையில் மசூதிகுள்ளே ஒளி தெரிந்தது; அது பொன்னிறமாக இருந்தது’ என்று காலையில் மசூதியின் பாதுகாப்பை ஏற்றிருந்த போலிஸ்காரர் விவரித்திருந்தார். அயோத்தியில் ராமன் ‘தோன்றியதற்கு’ இதனையே ஆதாரமாகக் காண்பிக்கத் தொடங்கினர், இந்துத்துவவாதிகள்.
ராமன் தோன்றிய அற்புதத்தை காண அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பார்க்க விரிவான ஏற்பாடுகளை இந்து மகா சபை செய்தது. மிகவும் தாமதமாக 23-ந் தேதி 10.30 மணிக்கு கே.கே நாயர் உ.பி அரசுக்கு அயோத்தி நிலைமை பற்றி அறிக்கை அளித்தார். அதில் ‘சில இந்துக்கள் மசூதிக்குள் சிலையை நிறுவி விட்டார்கள். பூசைகள் செய்து சிலையை அகற்ற எந்த பூசாரியும் முன்வரவில்லை. எனவே சிலையை அகற்ற முடியாது’ என்று அறிக்கையில் தெரிவித்தார், நாயர். இதனை சான்றாதாரங்களுடன் நூலில் தந்துள்ளனர் நூலாசிரியர்கள்.
பிள்ளையார் பால் குடித்தார், மேரியம்மா அழுதார், சாயிபாபா காலெண்டரிலிருந்து விபூதி கொட்டுகிறது என்றெல்லாம் இன்றைக்கும் இத்தகையத அற்புதங்கள் ஆங்காங்கே கடைவிரிக்கப்படுகின்றன. உள்ளூர் அளவில் வசூல் செய்ய பயன்பட்ட இந்த மோடிமஸ்தான் வேலையைத்தான் இந்துமதவெறியர்கள் நாடெங்கும் செய்வதற்கு அயோத்தியில் செய்தனர்.
தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுக்கும் கருணாநிதி, ஜெயயலலிதாவை போல இந்தியப் பிரதமர் நேரு, உ.பியின் பிரதமர் ( இது பகடி அல்ல; அன்று மாகாணங்களின் தலைவர்கள் பிரதமர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளனர் – இந்த குறிப்பும் நூலில் உள்ளது) கோவிந்த் வல்லப் பந்திற்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸின் சூழ்ச்சிக்கு பலியாகி பாபர் மசூதி முன்பு குவிந்திருந்த மக்களை படையை அனுப்பி வெளியேற்றி விட்டு சிலையை அகற்றுவதை எதிர்த்தார், மத்தியில் உள்துறை பொறுப்பை வகித்த வல்லபாய் பட்டேல். இதை பகிரங்கமாக கண்டிக்கவோ இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத நேருவோ ‘ உ.பி காங்கிரசுக்குள் மதவாதம் புகுந்து விட்டது’ என்று வருணித்தார். தன் கோபத்தை உ.பியின் பிரதமர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உணர்த்த அவரை சந்திக்க பின்னாட்களில் மறுத்தார நேரு. இதைத் தாண்டி இவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இவரைத்தான் மதச்சார்பின்மையின் சிற்பி என்கிறார்கள்.
மதவெறி பிடித்தாட்டிய உ.பி. காங்கிரசில் அன்று எழுந்த நிதானக் குரல் அக்ஷய் பிரம்மச்சாரியினுடையது. பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த ராம சபூத்ராவில் கோயில் கட்ட இந்து மதவெறியர்கள் முயன்ற போது அவர்களுக்கு எதிராக பைசாபாத் மாவட்ட அதிகாரியான கே.கே. நாயரிடம் புகார் மனு அளித்தார். அடுத்த நாள் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த வாசகங்களை சொல்லி சொல்லி அக்ஷய் பிரம்மச்சாரியை உதைத்துள்ளனர், இந்து மகா சபையினர். பாபர் மசூதியின் அருகாமையில் இருந்த கல்லறை தோட்டத்தை இந்து மத வெறியர்கள் சிதைத்த போதும் உடனடியாக அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு போனார், அக்ஷய் பிரம்மச்சாரி. அதன் பிறகே மசூதியை காவல் காக்க அரசு இரு காவலர்களை அனுப்பியது.
மசூதிக்குள் சிலையை வைத்த பிறகு கே.கே.நாயர் அதற்கு உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தி உ.பியின் உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு விடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அயோத்தியில் இருந்தே துரத்தப்பட்டார் பிரம்மச்சாரி. என்றாலும் இந்து மகா சபையின் பல்வேறு நடவடிக்கைகளை தன்னந்தனியாக எதிர்த்தார். இறுதியில், மசூதியை கோயிலாக மாற்றும் முயற்சிக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நூலை பற்றிய ஒரு பறவை பார்வை மட்டுமே.
தமது அளப்பரிய தகவல்களால் குறிப்பிட்ட அந்த வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு அனுபவத்தை நூலசிரியர்கள் தருகிறார்கள் என்றால் அது மிகையில்லை. சாவர்க்கர், டி.ஜி. தேஷ் பாண்டே, மகந்த் திக் விஜய் நாத் உட்பட இந்து மகாசபை தலைவர்களின் எண்ண ஓட்டத்தையும், நடவடிக்கைகளையும் பல்வேறு ஆவணங்கள், ஆதாரச் சான்றுகள் மூலம் இந்தியாவின் இளைய தலைமுறை மதச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை எதிர்மறையில் புரிந்து கொள்ள தந்து உதவியிருக்கிறார்கள், நூலாசிரியர்கள்.
பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை வைக்க தனது வலைபின்னலில் இருந்த கீழ்நிலை ஊழியர்களை கொண்டு தேர்ந்த திட்டமிடலுடன் செய்து முடித்த இந்து மகா சபை, அதே ஆண்டின் ராம நவமியை சிறப்பாக கொண்டாடியது. உ.பியின் மொரதாபாத்தில் பேசிய இந்து மகா சபையின் தலைவர் என்.பி காரே இவ்வாறு குறிப்பிட்டார். ”காந்தி ஜெயந்திக்கு கூடியவர்கள் வெறும் இருநூறு பேர். ஆனால், இந்து மகா சபையின் கூட்டத்துக்கு இங்கு திரண்டிருப்போர் இருபதாயிரம் பேர்” (பக்க எண்: 159) என்றார்.
அக்ஷய் பிரம்மச்சாரி தனித்து போராடியதற்கும், இந்து மகா சபை தலைவரின் இந்த கூற்றுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய பிணைப்பில் காலம் உருண்டோடியது. இந்து மதவெறியை மாய்க்கும் போராட்டத்தை வலுவிழக்க அன்று காங்கிரஸ் நேரடியாக ஒத்துழைத்தது; இன்று தனது பொருளாதார கொள்கைகளால் மறைமுக உதவியை செய்திருக்கிறது. காங்கிரஸ் வேறு பா.ஜ.க வேறல்ல என்ற உண்மையை மக்கள் உணரும் போது மட்டுமே இந்தியாவில் இந்துமதவெறி முற்றிலும் ஒழிக்கப்படும். அது வரை பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு கருத்தளவில் இந்நூல் உதவி செய்யும்.
புதிய கலாச்சாரம் இதழிலில் இதன் ஆங்கில நூல் அறிமுகக் கட்டுரையை பார்த்து விட்டு (இதை முன்னுரையில் புதிய ஜனநாயகம் இதழ் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.) “விடியல் பதிப்பகம்” இதனை உரிய அனுமதியுடன் தமிழாக்கி தந்திருக்கிறது. அதற்காக விடியலுக்கு நன்றி. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல் இது.
– சம்புகன்.
_________________________________
அயோத்தி: இருண்ட இரவு
பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு.
கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா
விலை- ரூ 150, பக்கம்-248
வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015
தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org
விருத்தாசலத்தில் 07.06.2014 அன்று நடந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டில் எழுத்தாளர் இமையம் ஆற்றிய உரை:
எழுத்தாளர் இமையம்
இந்த மாநாட்டின் நோக்கம் அரசு பள்ளிகள் சீரழிக்கபடுவது, அதை யார் சீரழித்தது, காரணம் என்ன? அரசு பள்ளிகள் யாருடைய சொத்து, அதை காப்பாற்றுபவர்கள் யார்? என்பதை தீர்மானிப்பது ஆகும்.
யாருக்கு நன்மை பயக்குமோ அவர்கள்தான், அதாவது பெற்றோர்களே தங்களுடைய சொத்தை தாங்களே சீரழிக்கிறார்கள். இத்தகைய மனோநிலையை உருவாக்கியவர்கள் யார்? தனியார்கல்வி தான் சிறந்தது. ஆங்கில வழியில் படித்தால்தான் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு போகலாம். இதற்காக எத்தகைய இழப்புகளையும் சந்திக்கலாம். எத்தகைய அவமானத்தையும் ஏற்கலாம். இது உண்மையில் நம்மை நாம் அழித்து கொள்வது ஆகும். நம் குழந்தைகளை நாமே முடமாக்குகிறோம்.
தனியார் பள்ளியில் படித்தால் தான் அறிவு வளரும் என, நடக்க முடியாத 3 வயது குழந்தையை வேனில் நீண்ட தூரம் பள்ளிக்கு அனுப்புகிறோம். உடல் ரீதியான ஊனத்தை வெல்லமுடியும். இத்தகைய மன ஊனத்தை என்ன செய்வது?
டாக்டராகிவிடலாம்,என்ஜினியராக ஆகிவிடலாம் அதற்கு தனியார் பள்ளிதான் ஒரே வழி என நாம் எல்லோரும் கற்பனையில் இருக்கிறோம். என்ஜினியர் நிலைமை இன்று பரிதாபமாக உள்ளது. எல்.கே.ஜி முதல் என்ஜினியரிங் வரை ஆங்கிலத்தில் படித்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பது ஒவ்வொருவரின் லட்சியம், கனவு. பெற்றோர்களுக்கும் அதுதான் கனவு.
ஆனால் 25 ஆண்டுகள் படித்து 7 ,8 ஆண்டுகளில் தனியார் கம்பெனி என்னை ரிட்டையர்மென்ட் செய்து விட்டது, முதுகு வலி,மன உளைச்சலால் இன்று அவதிப்படுகிறேன் என்றாலும் தனியார் பள்ளியில் படித்தவன் அறிவாளி, அரசு பள்ளியில் படித்தவன் முட்டாள், ஆங்கில வழியில் படித்தவன் அறிவாளி, தமிழ் வழியில் படித்தவன் முட்டாள் என்று பேசுபவர்களை எப்படி புரிந்து கொள்வது? ஒருவகையில் இது சாதி நம்பிக்கை போன்றதுதான்.
உலகத்தில் எந்த நாட்டிலும் தாய் மொழியில் பேசுவதை இழிவாக பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் ஒரு சமூகம் தமிழ்ச் சமூகம் மட்டும்தான். ஜெர்மனியில், பிரான்சில்,போலந்தில்,ரஷ்யாவில், ஜப்பானில்,சீனாவில் தாய்மொழிதான் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் கிடையாது. இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் ஆங்கிலத்தில் படித்தால் உயர்வானது என்ற கற்பனை இருக்கிறது. அது ஒருத்தனுக்கு ஏற்பட்டால் பரவாயில்லை, நாடு முழுவதும் இந்த கற்பனை விஷவிதையாக தூவப்பட்டுள்ளது. அதிலிருந்து தப்பித்தவர்கள்தான் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறர்கள்.
இந்த நோய்க்கூறை எப்படி சரிசெய்வது? அதற்கு உரிய மருந்து என்ன?
தாய் மொழியில் படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும், ஜீரணம் ஆகும், இதுதான் அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்ட உண்மை. காந்தி – நேரு கூட தாய் மொழயில்தான் கல்வி கற்க வேண்டும் என சொன்னார்கள். உலக தலைவர்கள், அறிவாளிகள் எல்லாம் தாய்மொழி கல்விதான் சிறந்தது என பேசுகிறார்கள். நாம் அவர்களை தலைவர்களாக ஏற்கிறோம். ஆனால் அதை பின்பற்றுவதில்லை.
துணிக்கடை விளம்பரம் போல் தனியார் பள்ளிக்கூடங்கள் விளம்பரம் செய்கின்றன. 50 பிளக்ஸ் போர்டு போட்டு விளம்பரம் செய்யும் ஜெயப்பிரியா என்ற பள்ளிக்கூடம், எல்.கே.ஜி பையனுக்கு குதிரை ஓட்ட சொல்லித்தாரானாம்! அந்த குழந்தையால் உக்காந்துகிட்டு போக முடியுமா? நமக்கு அறிவு வேணாமா? இன்னொரு பள்ளிக்கூடம் ஏ.சியிலேயே பாடம் சொல்லித்தரானாம்!
கல்விக்கு அடிப்படை என்ன! ஆசிரியர் வேணும், படிக்க புத்தகம் வேணும், படிக்க மாணவன் – இந்த மூன்றும் தான் கல்விக்கு அவசியம். இதை நீக்கி விட்டு எதை எதையே விளம்பரம் செய்கிறார்கள். பெற்றோர்களும் ஓடுகிறார்கள். பெற்றோர்களின் பேராசை அதிலும் கொடுர ஆசையாக இருக்கிறது. பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி என குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வதைக்கிறார்கள். இதை அரசும் வேடிக்கை பார்க்கிறது. மேலும் தனியார் பள்ளிகளை அரசு ஊக்குவிக்கிறது.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என அரசு கெஞ்சி பெறுகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் வசதி படைத்தவர்கள்தான். அவர்களுக்கான பணத்தை அரசு கொடுக்கும் என்கிறார்கள். இதனால் பயனடைபவர்கள் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் பிள்ளைகள்தான். அவர்களுக்காக போடப்பட்ட சட்டம் தான் தனியார் பள்ளகளில் 25% ஒதுக்கீடு.
அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம் என்பதால் மதிப்பு குறைவாக பார்க்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை, கழிப்பிடம் இல்லை, போதிய வகுப்பறை இல்லை, என பேசுகிறார்கள். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிட்டத்தட்ட பத்து ஏக்கரில் அமைந்துள்ளது. போதிய கட்டிடங்கள் இருக்கிறது. இன்னும் 5000 மாணவிகள் படிக்கலாம். பல வகுப்பறைகள் காலியாக உள்ளன. அது போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 13 ஏக்கரில் அமைந்துள்ளது. இன்னும் 5000 மாணவர்கள் படிக்கலாம். மரங்கள் சூழ இருக்கிறது. நீங்கள் நாளையே சென்று பாருங்கள், இது போல் கட்டமைப்பு விருத்தாசலத்தில் எந்த பள்ளிக்கும் கிடையாது.
நேற்று 20 பள்ளிகளை ஆய்வு செய்தோம். அவற்றில் போதுமான ஆசிரியர்கள், மாணவர்கள், இருக்கிறார்கள். போதுமான வகுப்பறையும் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் பொறுப்பானவர்களாக இல்லை. அது உண்மை.
எந்த அரசு ஊழியர் குழந்தையாவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஆசிரியருக்கு தன் மேலேயே ஒரு நல்லாசிரியன் என்ற நம்பிக்கை இல்லை. ஆசிரியர் குழந்தை யாராவது அரசு பள்ளிகளில் படிக்கிறதா? ஞாயிற்றுக்கிழமையானால் 20 கார்கள் நாமக்கல் தனியார் பள்ளிகளுக்கு போகின்றது. அதில் 18 கார் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை சென்று பார்க்கிறார்கள். தனியார் பள்ளிகளை உருவாக்கியதே அரசுபள்ளி ஆசிரியர்கள்தான். அரசு அதிகாரிகள்தான்.
பெற்றோர்களே! உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எல்.கே.ஜி முதல் +2 வரை தனியார் பள்ளிதான் தரம் என விரும்பி செல்லும் பெற்றோர்களே, அரசு நடத்தும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு, அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு அரசு வேலை வாய்ப்பிற்கு ஏன் வருகிறிர்கள்? இவைகள் தரமற்றது என ஏன் சொல்ல மறுக்கறீர்கள்? ரேசன் கடையில் பொருள் வாங்கணும், டாஸ்மாக் சாராயம் குடிக்கணும், அதற்கு அரசு வேணும். அரசு தரும் இலவச மிக்சி, கிரைண்டர் வேணும்!
ஆனால் அரசு பள்ளிகள் தரமற்றது, பிள்ளைகளை சேர்க்க மாட்டோம் என்பது சரியா? அரசாங்கம் என்பது நீங்கதானே, உங்களை நீங்களே பழிக்கிறீர்களே, உங்கள் மீது நீங்களே எச்சி துப்பிக்கொள்வதில்லையா? நிர்வாகம் சரியில்லை என உங்களையே கேவலபடுத்திக்கொள்வது முட்டாள்தனமாக தெரிவில்லையா?
அரசு பள்ளி சரியில்லை என்று சொல்லும் பெற்றோர்களே! என்றைக்காவது பள்ளிகூடத்திற்கு போய் ஆசிரியரிடம் ஏன் பாடம் நடத்தல, ஏன் பள்ளிகூடத்துக்கு லேட்டா வந்த, சத்துணவுல ஏன் உப்பு இல்ல, என யாராவது கேட்டதுண்டா? ஊகத்தில் அரசு பள்ளி சரியில்லை என்று பேசிக் கொண்டிருப்பது சரியா?
இன்றைக்கு ஆசிரியர் சமூகம், பொறுப்பற்றதாக சொரணையற்றதாக மாறிவிட்டது. நானும் ஒரு ஆசிரியர்தான். எனக்கு மாத சம்பளம் ரூ.45,000. என் மனைவியும் ஆசிரியர், அவர் சம்பளம் ரூ.51,000 கூட்டினால் 96,000. இது போன்று உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் காரில் வருகிறார்கள். ஒரு காலத்தில் ஆசிரியர் நடந்து வந்தார், சைக்கிளில் வந்தார் என கேள்வி பட்டோம், இன்று 18 லட்சரூபாய் ஏ/சி காரில் ஆசிரியர்கள் வருகிறார்கள். சொகுசாக இருக்கட்டும், அதை குற்றம் சொல்லவில்லை.
ஆனால் கடமையை செய்கிறார்களா? உன்னை நம்பி வந்த மாணவர்களுக்கு மனசாட்சிபடி பாடம் நடத்துகிறாயா என்று கேட்கிறேன். இவ்வளவு வசதி படைத்த வாழ்க்கை நிலமையில் இருக்கும் ஆசிரியர் எப்படி ஏழை மாணவன் தோளில் கைபோட்டு உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்பார்? ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?
ஆசிரியர்களும் ஒரு அதிகார வர்க்கமாக மாறிவருகிறார்கள். இதுதான் ஆபத்தானது. இதனால் ஆசிரியர் மாணவன் உறவின் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.
தனியார் பள்ளிகளில் டிசிப்பிளின் பற்றி பேசும் பெற்றோர்களே, டிசிப்பிளின் வேற, கட்டுப்பாடு வேற. எல்.கே.ஜிக்கு ஒரு லட்சம் கட்டுகிறீர்கள். ஆனால் வாட்சுமேன் கேட்டுக்கிட்ட உங்கள நிறுத்துறான். அப்பாயின்மெண்ட் குடுத்தாதான் முதல்வரை, தாளாளரை பார்க்க முடியும். அரசு பள்ளிகளில் நீங்கள் எப்போதும் சென்று ஆசிரியர்களை ,தலைமை ஆசிரியரை பார்க்க முடியும். உங்கள் பிள்ளைகளை பற்றிய குறைகளை சொல்ல முடியும். ஏன் ஆசிரியரை போய் ஏன் பாடம் நடத்தல என விரட்ட முடியும்.
அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு ஒரு பெயர் இருக்கும். அந்த சொட்டத் தலையன் வெளியில் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன் என பேசுவார்கள். எந்த பள்ளிகூட தலைமை ஆசிரியருக்கம் ஒரு பட்ட பெயர் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் இது போல் செய்ய முடியுமா?
படிப்பு என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். தனிமனித ஆளுமையை வளர்ப்பது, சுயசிந்தனையை வளர்ப்பது, முற்போக்கு சிந்தனையை வளர்ப்பது, தன்னைத்தானே தயாரித்து கொள்வது, சமூகத்தை புரிந்து கொள்வது, கடவுளே என்னை காப்பாற்று என்பதல்ல, சமூகத்தை புரிந்து கொள்வது அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வது! ஆனால் கல்வி என்பது வேலை,பணம், பதவி, என்பதற்காகதான் என தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.
நாம் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் பெற்றோரைப் பொருத்தவரை நாம் அழகானவர்கள். அதுபோல் அரசு பள்ளிகளை குறை சொல்லாமல் அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு ரூபாய் செலவில்லாமல் படிப்பதை நாமே புறக்கணித்து எட்டி உதைத்து விடக்கூடாது. நம்மை நாமே சூடு வைத்து கொள்வது, நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்வது ஆகும்.
எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள் என கூறி இந்த மாநாட்டிற்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த இரண்டொரு நாட்களிலேயே மீண்டும் மின் கட்டண உயர்வு வரப்போவதாக சங்கு ஊதப்பட்டு, மக்களின் மனவோட்டம் ஆழம் பார்க்கப்பட்டது. தமிழகமோ இந்த எச்சரிக்கை மணிக்கு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று வழமை போல அமைதி காத்தது. ஒருவேளை, அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் போல மலிவு விலை அம்மா மின்சாரம் அளிக்கப்படும் என்று தமிழர்கள் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டார்களோ என்னவோ!
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா அரசு மின் கட்டணத்தை 37 சதவீத அளவிற்குத் தடாலடியாக உயர்த்திய பொழுது, அதற்கான முழுப் பழியும் தி.மு.க. மீது சுமத்தப்பட்டது. முந்தைய தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மின் வாரியம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாய் நட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அதனை மீட்கத்தான் அம்மா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறி, மக்கள் மீது சுமத்தப்பட்ட மின் கட்டண உயர்வை ஜெயாவின் துணிச்சல் மிகுந்த நிர்வாக நடவடிக்கையாகத் தமிழகப் பத்திரிகைகள் சித்தரித்தன.
நியாயமாகப் பார்த்தால், மெச்சிக் கொள்ளப்பட்ட ஜெயாவின் திறமை மிகுந்த துணிச்சல்மிக்க இந்நடவடிக்கை மின்வாரியத்தின் நட்டத்தை கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையோ வேறு மாதிரியாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் இறுதியில் 45,000 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த தமிழக மின் வாரியத்தின் நட்டம் ஜெயாவின் மூன்றாண்டு கால ஆட்சியில் வருடத்திற்கு 10,000 கோடி ருபாய் என்ற அளவில் அதிகரித்து 75,000 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக, முந்தைய தி.மு.க. ஆட்சியைவிடக் கடுமையான மின்வெட்டைத் தமிழக மக்கள் சந்தித்துவரும் வேளையில், மின் கட்டணம் 37 சதவீதம் அதிகரிக்கப்பட்ட பிறகும் மின் வாரியத்தின் நட்டம் அதிகரித்திருப்பது முரண்பாடான விந்தைதான்.
தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டும் அதிகரித்திருக்கிறது; மின் வாரியத்தின் நட்டமும் அதிகரித்திருக்கிறது. எனவே, தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சி நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என இந்த விந்தைக்கு இயந்திரகதியில் விளக்கம் அளித்துவிட முடியாது. ஏனென்றால், இப்படிபட்ட விளக்கம் நட்டத்திற்குப் பின்னுள்ள பல உண்மைகளை, குறிப்பாகத் தமிழக மின்வாரியத்தைத் திட்டமிட்டே திவாலாக்கி வரும் குற்றவாளிகளைத் தப்பவிடும் ஓட்டைகள் நிறைந்ததும் ஆகும்.
தமிழக மின்வாரியத்தின் நட்டம் 75,000 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது என்ற செய்தி வெளியாவதற்கு சற்று முன்னர்தான் மின்வாரியத்தில் ஏறத்தாழ 24,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட எட்டு அமைப்புகள் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தி பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தின. அதனைத் தொடர்ந்து பி.ஜி.ஆர். எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனத்தால் மட்டுமே தமிழக மின்வாரியத்திற்கு ஏறத்தாழ 4,000 கோடி ரூபாய் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதைத் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார், தமிழ்நாடு மின் பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி. மின் நிலையங்களை நிறுவும் அனுபவமே இல்லாத இந்த உப்புமா கம்பெனியிடம்தான் வழுதூர் மின் நிலையத்தை நிறுவும் பணியும் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் விரிவாக்க நிலையத்தை அமைக்கும் ஒப்பந்தமும் முந்தைய தி.மு.க. அரசால் ஒப்படைக்கப்பட்டன. அதனின் விளைவுதான் இந்த 4,000 கோடி ரூபாய் நட்டம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி.
வழுதூர் மின்நிலையத்தில் 2007 நவம்பரில் 62 மெகாவாட் மின்னுற்பத்தியும் 2008 ஏப்ரலில் 92 மெகாவாட் மின்னுற்பத்தியும் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்ததாரராகிய பி.ஜி.ஆர்.நிறுவனத்தின் கத்துக்குட்டித்தனம் காரணமாக 14.06.2009 அன்றுதான் அம்மின்நிலையத்தில் 92 மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது. எனினும், அடுத்த ஓராண்டிலேயே அம்மின்நிலையம் படுமோசமாக பழுதடைந்தது. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட, மிகவும் தரங்குறைந்த டர்பைன் இயந்திரங்களை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து இம்மின் நிலையத்தை அமைத்ததுதான் இத்துணை கோளாறுகளுக்கும் காரணம் எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி.
8.1.2010-இல் பழுதடைந்த வழுதூர் மின்நிலையம் 485 நாட்கள் கழித்து 11.5.2011 அன்று மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது. பி.ஜி.ஆர். நிறுவனம் பழுதடைந்த டர்பைன் இயந்திரத்தை மாற்றித் தர முன்வராததால், மின்வாரியமே 100 கோடி ரூபாய் செலவழித்து மின் நிலையத்தை இயக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுவொருபுறமிருக்க, மின் உற்பத்தி நடக்காத இக்காலக்கட்டத்தில், தமிழக மின்சார வாரியம் இந்திய எரிவாயு ஆணையத்திடம் செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி, அந்த ஆணையத்திடமிருந்து வாங்க வேண்டியிருந்த இயற்கை எரிவாயு கட்டணத்தில் 80 சதவீதத்தைத் தண்டத் தொகையாகச் செலுத்த வேண்டியிருந்தது. இந்த வகையில் தினம் ஒரு கோடி ரூபாய் வீதம் மின் நிலையம் இயங்காத 485 நாட்களுக்கும் 485 கோடி ரூபாயை தமிழக மின்சார வாரியம் தண்டத் தொகையாக அளித்தது.
இவ்வாறு போட்ட மூலதனத்துக்கும் (385 கோடி ரூபாய்) மேலாக 585 கோடி ரூபாயைச் செலவழித்து இயக்கப்பட்ட வழுதூர் மின் நிலையம் ஜூன் 2012-இல் மீண்டும் பழுதடைந்தது. இப்பழுதுகள் நீக்கப்பட்டு ஜனவரி 2013 முதல் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கிவிட்டதாகத் தமிழக அரசு அறிவித்தாலும், அம்மின் நிலையம் முழுத் திறனோடு இயங்கவில்லை. 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 67 மெகாவாட் மின்சாரம்தான் அம்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. வழுதூர் மின்நிலையத்தில் தமிழக மின்வாரியம் அடைந்த நட்டம் முழுவதையும் ஒப்பந்தப்படி பி.ஜி.ஆர். நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்நட்டம் முழுவதும் மின்வாரியத்தின் தலையில் சுமத்தப்பட்டு, பி.ஜி.ஆர். நிறுவனம் தப்ப வைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகள் பி.ஜி.ஆர். நிறுவனத்திடம் ஜூன் 2008-இல் ஒப்படைக்கப்பட்டது. இவ்விரிவாக்க மின்நிலையம் செப்.2011-இல் மின்னுற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும், அதன் பின் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் பி.ஜி.ஆர். நிறுவனம் மின் வாரியத்திற்கு மாதமொன்றுக்கு 107 கோடி ரூபாய் நட்ட ஈடாக தர வேண்டும் என்றும் ஒப்பந்த விதிகள் கூறுகின்றன. ஆனால், இவ்விரிவாக்க மின்நிலையம் செப்.2011-க்குப் பிறகு ஒன்பது மாதங்கள் கழித்து மே 2012-இல்தான் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. இந்த மின் நிலையம் அக்டோபர் 2013-இல் முழு உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், பிப்.2014-இல் பழுதடைந்து இன்றுவரை உற்பத்தியைத் தொடங்கவில்லை.
ஒப்பந்தப்படி மின் உற்பத்தியைத் தொடங்காமல் கடந்த 31 மாதங்களாக மேட்டூர் விரிவாக்க மின் நிலையம் முடங்கிப் போய் நிற்பதற்கு பி.ஜி.ஆர். நிறுவனத்தின் அனுபவமின்மையும், சீனாவைச் சேர்ந்த தாங்க் ஃபெங்க் என்ற நிறுவனத்திடமிருந்து தரமற்ற இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருப்பதும்தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. இந்த 31 மாத காலத்திற்கான தண்டத் தொகையான 3,200 கோடி ரூபாயை பி.ஜி.ஆர். நிறுவனத்திடமிருந்து மின் வாரியம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, இத்தொகை மின் வாரியத்தின் நட்டக் கணக்கில் சேர்க்கப்படுகிறதென்றும், இவ்வுண்மைகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூட யாரும் கேட்டுப் பெறமுடியாதவாறு தொழில் இரகசியம் என்ற பெயரில் அ.தி.மு.க. அரசால் பாதுகாக்கப்படுகிறதென்றும் அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.
பி.ஜி.ஆர். போன்ற தனியார் காண்டிராக்ட் கம்பெனிகளின் சட்டவிரோதமான, ஊழல் நிறைந்த மோசடிகளைக் காட்டிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின் கட்டணம், திறன் கட்டணம் என்ற பெயரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடித்து வருவதுதான் அவ்வாரியத்தை மீளமுடியாத நட்டத்தில் தள்ளி விட்டிருக்கிறது. அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து விநியோகிக்கும் மின்சாரத்தின் அடக்க விலையையும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தையும் ஒப்பிட்டாலே மின் துறையில் கார்ப்பரேட் பகற்கொள்ளை சட்டபூர்வமாகவும் தங்குதடையின்றியும் பல ஆண்டுகளாக நடந்துவருவதைப் புரிந்துகொண்டு விடலாம்.
தமிழக மின் வாரியத்தின் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை ரூ.2.30; நீர் (புனல்) மின்சாரத்தின் அடக்க விலை 0.30 பைசா; மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை ரூ.3.30 என்றிருக்கும்பொழுது தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனத்திடமிருந்து தமிழக மின் வாரியம் பெறும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.10.41 எனத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாஞ்சேட்கோ) நிர்ணயித்திருக்கிறது. இதுபோல பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ.8.55, ரூ.10.18, ரூ.10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பாற்பட்டு ஜி.எம்.ஆருக்கு ரூ.147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சோந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ.292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ.108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ.110 கோடி ரூபாய் 2013-14 ஆம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என டாஞ்சேட்கோ நிர்ணயித்திருக்கிறது. திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.
தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 சதவீதத்திற்கு மேல் உத்தரவாதமான இலாபம் கிடைக்கும்படியும் அவர்கள் போட்ட மூலதனத்தை நான்கைந்து ஆண்டுகளுக்குள் திரும்ப எடுக்கும்படியும் மின்சாரக் கட்டணமும் திறன் கட்டணமும் நிர்ணயிக்க வேண்டும் என்றவாறு மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இப்பகற்கொள்ளை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 12 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செயும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் இந்த அநியாயமான கட்டண நிர்ணயம் காரணமாக மின் வாரியத்தின் வருமானத்தில் ஏறத்தாழ முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04 ஆம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இது 2008-09 ஆம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04 ஆம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09 ஆம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எந்தளவிற்குத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது அதிகரிக்கிறதோ அதற்கு நேர்விகிதத்தில் மின் வாரியத்தின் நட்டமும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் இப்புள்ளிவிவரத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும்.
மின்சார வாரியம் நட்டத்தில் இருக்கும் நிலையிலும் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு ஏற்றபடியே ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. குறிப்பாக, ஜி.எம்.ஆர். நிறுவனத்துடனான 15 ஆண்டு ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அந்நிறுவனத்திடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.10.41 கொடுத்து மின்சாரம் வாங்கவும், ரூ.147 கோடி திறன் கட்டணம் செலுத்தவும் டாஞ்சேட்கோ முடிவெடுத்திருக்கிறது. இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.
இப்படி ஒருபுறம் அதிக விலை கொடுத்துத் தனியார் முதலாளிகளிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம், மறுபுறம் மானிய விலையில் தனியார் தொழிற்சாலைகளுக்கும், ஐந்து நட்சத்திர கேளிக்கை விடுதிகளுக்கும், கேளிக்கை பூங்காக்களுக்கும் அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு சந்தை விலையில் மின்சாரத்தை விற்பதற்கு மாறாக, மானிய விலையில் மின்சாரம் வழங்குவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. வளர்ச்சியின் பெயரால் நியாயப்படுத்தப்படும் இந்தச் சலுகையின் சுமை முழுவதையும் மக்கள் ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாக்கப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை எதிர்வரும் ஜூன் 1 முதல் முழுமையாக ரத்து செய்யப் போவதாக ஜெயா வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தப் பின்னணியிலிருந்து பரிசீலித்தால்தான் தமிழக மின்வாரியத்தை மீளமுடியாத படுகுழிக்குள் தள்ளிவிட ஆளுங்கும்பல் தயாராகி விட்டதையும், தமிழக மக்கள் மீது பெரும் மின் கட்டணச் சுமையை ஏற்றிவிட அவர்கள் நரித் தந்திரத்தில் இறங்கியிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். கடுமையான மின்வெட்டு நிலவும் சமயத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் பொதுமக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது, ஜெயா அரசு. இந்நடவடிக்கையால் மின்வெட்டு முழுமையாக ரத்தாகிறதோ இல்லையோ, மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான குறுக்குவழியில் ஜெயா அரசு இறங்கியிருக்கிறது என்பதே உண்மை.
மின்வெட்டை முழுமையாக நீக்குவதற்காக 3,800 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறுவதற்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜெயா, அம்மின்சாரத்தை என்ன விலைக்கு வாங்கப் போகிறோம் என்பதைத் தெரிவிக்காமல் விட்டிருப்பது தற்செயலானது அல்ல. வெளிச்சந்தையில் வணிக மின் உற்பத்தியாளர்களிடமிருந்து நீண்ட கால அடிப்படையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்வது புலி வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுவதற்கு ஒப்பானது. ஜி.எம்.ஆர். போன்ற சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் கந்துவட்டிக் கொள்ளையர்களை ஒத்தவர்கள் என்றால், வணிக மின் உற்பத்தியாளர்கள் மீட்டர் வட்டி கொள்ளைக் கும்பலைப் போன்றவர்கள். இந்த மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தின் விலையைச் சந்தையில் நிலவும் தேவையைக் கொண்டு, சந்தை சூதாட்ட விதிகளின்படிதான் தீர்மானிப்பார்கள். மேலும், மின்சார உற்பத்திக்கு மூலப் பொருளாகப் பயன்படும் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றைச் சர்வதேச விலைக்குத்தான் உள்நாட்டிலும் விற்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கோரி வரும் நிலையில் ஒப்பந்த காலம் முழுவதும் மின்சாரத்தின் விலை உயராமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
தனியாரிடமிருந்து பெறப்படும் மின்சாரத்தின் கட்டணம் நிலையானதாக இருக்காது என்பதால்தான், ஆண்டுக்கொருமுறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இதன்பொருள் மின்சாரம் என்பது அரசாங்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை கிடையாது, மாறாக, அதனை இலாபம் ஈட்டக்கூடிய சரக்காகப் பாவிக்க வேண்டும் என்பதுதான். மின்துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஒன்று அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் அல்லது இருட்டிலும் புழுக்கத்திலும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தமிழக மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.
1. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
2.அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
4. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இதுவரை ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற இந்தப் பிரிவை நீக்கி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் புகார் கொடுக்கலாம் என்று புதிய சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் சென்று பகுதிநேர வேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
6. அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7. சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. தமிழக அரசு காலம் தாழ்த்தாது மெட்ரிக் என்ற பெயரைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
8. அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டே மழலையர் பிரிவு தொடங்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
9. அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
10. ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. இதுதான் விஞ்ஞானபூர்வமான முறை என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
11. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றன. ஆகையால் மார்ச் மாதத்திலேயே விடுமுறை அளிக்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
12. அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது.
13. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள் ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.
14. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது எனத் தீர்மானிக்கிறது.
வை.வெங்கடேசன், மாநாட்டுக் குழுத்தலைவர்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு, விருத்தாசலம், தொடர்புக்கு 9345067646
_________________________________________
பேரணியில் எழுச்சியுடன் முழங்கிய முழக்கங்கள்!
மத்திய மாநில அரசுகளே
தடை செய் தடை செய்
கல்வி வியாபாரத்தை தடை செய்
அமல்படுத்து அமல்படுத்து
அனைவருக்கும் இலவசக் கல்வியை அமல்படுத்து
கல்வி பெறுவது மாணவன் உரிமை
கற்றுக் கொடுப்பது அரசின் கடமை
பிச்சையல்ல பிச்சையல்ல, இலவசக்கல்வி பிச்சையல்ல
சட்டம் போடு சட்டம் போடு
அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசு ஏற்க சட்டம் போடு
சாராயம் விற்ற ரவுடியெல்லாம்
கல்வி வள்ளல் ஆகிட்டான்
கல்வி கொடுத்த அரசாங்கம்
சாராயம் விக்குது சாராயம் விக்குது
மானக்கேடு வெட்ககேடு
கொள்ளையடிக்கிறான் கொள்ளையடிக்கிறான்
தனியார் பள்ளி தாளாளர் எல்லாம்
மாணவர்களை பணயமாக்கி
கட்டணக் கொள்ளையடிக்கிறான்.
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது
கல்வித் துறையும் காவல் துறையும்
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது
போராட்டம் இது போராட்டம்
மாணவர்களுக்கான போராட்டம்
கல்விக்கான போராட்டம்
HRPC போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
அனுமதியோம் அனுமதியோம்
தனியாருக்குத் தாரை வார்க்கும்
அரசுப் பள்ளிகளை அழிக்க நினைக்கும்
தனியார்மயத்தை அனுமதியோம்.
முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப் பள்ளிகளை அழிக்க வரும்
தனியார்மயத்தை முறியடிப்போம்.
சுதந்திர தின கொண்டாட்டமா
67 ஆண்டு பெருமை பேசுறான்
எல்.கே.ஜி.க்கு 50000
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
கல்வி கற்பது மாணவன் உரிமை
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை
கல்வி என்பது சேவையடா
கல்வி என்பது சேவையடா
அனுமதியோம் அனுமதியோம்
கல்வியை விற்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்
கட்டபொம்மன், திப்பு சுல்தான்
சின்னமலை, மருது பாண்டி
தியாகத்திற்கு பதில் சொல்
தமிழக அரசே பதில் சொல்
தனியார்மயத்தை ஆதரிக்கும்
அரசியல் கட்சிகளே பதில் சொல்
ஏமாத்துறான் ஏமாத்துறான்
சுதந்திரம்னு சொல்லி சொல்லி
மிட்டாய் கொடுத்து ஏமாத்துறான்
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
அரசுப் பள்ளியில் படித்தவன் எல்லாம்
ஐ.ஏ.ஏஸ். ஆகியிருக்கான்
தாய் மொழியில் படித்தவர் எல்லாம்
தலைமைப் பதவிக்கு போயிருக்கான்
பெற்றோர்களே பெற்றோர்களே
துள்ளி விளையாடும் பிள்ளைகளை
மார்க் எடுக்கும் எந்திரமாக
மனப்பாடம் செய்யும் மெசினாக
தனியார் பள்ளி மாத்துறான், கட்டணக் கொள்ளை அடிக்கிறான்.
புறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம் அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்
முறியடிப்போம் முறியடிப்போம்
தனியார்மயக் கல்வியை
முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப் பள்ளி நமது பள்ளி
தாய்மொழிக் கல்வி நமது கல்வி
காசு பெரிதா மானம் பெரிதா?
தாய் மொழியா? அந்நிய மொழியா?
பெற்றோர்களே சிந்திப்பீர்
ஆங்கிலம் படித்தால் அடிமைப் புத்தி
தமிழ் என்றால் தன்மானம்
அமல்படுத்து அமல்படுத்து தமிழக அரசே அமல்படுத்து
அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், தாய்மொழிக் கல்வியை அமல்படுத்து
வெல்லட்டும் வெல்லட்டும்
கல்வி உரிமை போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும்
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்
போராட்டம் இது போராட்டம்
HRPC போராட்டம் பெற்றோர் சங்கம் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
விருத்தாசலத்தில் 7-6-14 அன்று, மக்கள் மன்றத்தில், காலை 10 -30 மணிக்கு கம்மாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் கிருத்திகா, சரண்யா நினைவு அரங்கத்தில், கட்டணக் கொள்ளையால் உயிர்நீத்த மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் துவங்கியது மாநாடு. குழந்தைகள், பெற்றோர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் திரளாக மாநாட்டில் இறுதி வரை கலந்து கொண்டனர். கிருத்திகா, சரண்யாவின் பெற்றோர்கள் நமது அழைப்பை ஏற்று மாநாட்டிற்கு வந்திருந்தனர். அரங்கத்தினுள் வரும்போதும், இருக்கையில் அமர்ந்திருந்த போதும் கண்களில் நீர்வடிய அவர்கள் விசும்பி அழுதது அனைவரின் கண்களையும் பனிக்கச் செய்தது.
கடந்த மாதம் +2 தேர்வில், கம்மாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற சகோதரிகள் மகிழ்ச்சியை ஆசிரியர்களோடு பகிர்ந்து கொண்ட பிறகு வீட்டிற்கு சென்றனர். தந்தை தினக்கூலி வேலை செய்பவர். இருவரையும் படிக்க வைக்க முடியாது பணத்திற்கு எங்கே போவேன், ஒருவரை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்று தந்தை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட கிருத்திகா–சரண்யா சகோதரிகள் ஒரே உத்திரத்தில் இருவரும் ஒன்றாக தூக்கில் தொங்கி உயிர் விட்டனர். இலவச கல்வி உரிமைகள் அரசால் உத்திரவாதம் செய்யப்படும் போதுதான் இத்தகைய தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கந்தன் ஒன்றரை மாத காலம் மாவட்டம் முழுவதும் செய்த பிரச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ”பிரசுரம், சுவரெழுத்து , சுவரொட்டி, தெருமுனைப் பிரச்சாரம், வீடுவீடாக அழைப்பிதழ் கொடுத்து அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்த இம்மாநாட்டை சிறப்பிக்க வந்த அனைவரையும் நன்றியுடன் வரவேற்கிறேன்” எனக் கூறி அமர்ந்தார்.
தலைமையுரை ஆற்றிய மாவட்ட தலைவர் அய்யா வை.வெங்கடேசன் சமச்சீர் கல்வி முதல் இன்று கட்டணக் கொள்ளை வரை பெற்றோர் சங்கங்களின் போராட்ட அனுபவங்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.
”சட்டம் இருக்கலாம் அதை நடைமுறைப்படுத்த பெற்றோர்கள் சங்கமாகத் திரண்டு போராட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவார்கள். அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் கண்காணித்தால் நாம் தரமான கல்வி பெற முடியும். ஆயிரக்கணக்கில் நம் பணத்தை தனியார் பள்ளிகளிடம் பறிகொடுக்க வேண்டியதில்லை. தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும். அனைவரும் பெற்றோர்கள் சங்கத்தில் சேருங்கள். உங்கள் ஊரில் எங்கள் சங்கத்தின் கிளையைத் துவங்குங்கள். நாங்கள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறோம்” எனப் பேசி முடித்தார்.
ஓய்வு பெற்றவர்கள் நினைத்தால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும். தங்கள் கடந்தகால அனுபவங்களை மக்களுக்காக எதிர்காலத் தலைமுறைக்காகப் பயன்படுத்த முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். வயது வித்தியாசம் இன்றி இளைஞர்களோடு இணைந்து செயலாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகப் பேசி அமர்ந்தார், அய்யா வெங்கடேசன்.
அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது என்பதை பேராசிரியர் சந்திரசேகரன், (ஓய்வு பெற்ற முதல்வர், கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல்) பல்வேறு ஆதாரங்களுடன் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் புள்ளிவிபரங்களை அடுக்கி விரிவாகப் பேசினார்.
இலவசக் கல்வியின் கழுத்தை நெறிக்கும் தீர்ப்புகள் என்பதை நீதிபதிகள் எப்படி தங்கள் வாயாலே நிரூபிக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக ஆதங்கத்துடன் பேசி, பெற்றோர்கள் போராடுவதுதான் தீர்வு எனப் பேசினார். மேலும் கல்விக் கொள்ளையர்களாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எப்படி மக்கள விரோதிகளாக செயல்படுகிறார்கள். இன்றைக்கு இணைவேந்தராக இருப்பவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள் தான் என்பதை அம்பலப்படுத்தினார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இத்தகைய கல்விக் கொள்ளையர்கள் இருக்கிறார்கள். மக்கள் கருணை காட்டக் கூடாது.நேரடியாக எதிர்த்துப் போராட வேண்டும். நீதிமன்றம் தண்டிக்காது. மக்கள் மன்றத்தில் தண்டனை பெற வேண்டும். அப்போது தான் கல்விக் கொள்ளையைத் தடுக்க முடியும் என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
விருத்தாசலம் நகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அதிக தேர்ச்சி கொடுத்த 10, 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் சட்ட மன்றம் செய்யாததை ஆசிரியர் மன்றத்தில் செய்ய முடியும். எனவே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்ற ஆசிரியர்களைப் பெற்றோர் சங்கம் கௌரவிப்பதை தனது கடமையாகக் கருதுகிறது.
பெற்றோர் சங்கத்தைச் சார்ந்த ரேவதி, ஓய்வுபெற்ற பத்திரப் பதிவு அதிகாரி அன்பழகன் ஆகியோர் மாநாட்டில் 14 தீர்மானங்களை வாசித்தனர். அனைவரின் கரவொலிகளுடன் தீர்மானங்கள் நிறைவேறின.
மதிய உணவு அனைவருக்கும் வழங்கபட்டது. மதிய அமர்வு 3-00 மணிக்கு தொடங்கியது. பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா? மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா? என்ற தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் விவாதம் செய்தனர். HRPC மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் பெற்றோர் சங்கத்தை சேர்ந்த ரவிக்குமார் விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். எழுத்தாளர் இமையம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்றினார். அருள் செல்வன் என்ற மாணவன் சமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் போது HRPC மறியலில் கலந்து கொண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் , (நமது நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தில் உள்ள புகைப்படத்தில்,பேருந்தை மறித்த முன்வரிசை மாணவன், அப்போது 7 –ம் வகுப்பு படித்து வந்தார்.) தானாகவே முன்வந்து பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டு சிறப்பாக உரையாற்றினார். இது வெயிலின் தாக்கத்தைக் குறைத்து மிகவும் உற்சாகமாக மாலை அரங்கத்தை கலகலப்பாக மாற்றியது எனலாம்.
மாநாட்டை ஒட்டி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி,பேச்சுப் போட்டி,திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தபட்டன்.அதில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநாட்டில் அவ்வப்போது தாகம் தீர்ப்பது போல் ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுதோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் களைப்பை நீக்கி உற்சாகத்தடன் மாநாட்டைக் கவனிக்க வைத்தது.
மாலை 4-30 மணிக்கு மக்கள் மன்றத்திலிருந்து வானொலித் திடல் வரை பேரணி சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருதை மக்கள் சாலையின் இரு புறங்களிலும் ஆர்வமுடன் ஊர்வலத்தைப் பார்த்தனர்.
பேரணிக்கு காவல்துறை தடைவிதித்த உத்திரவுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று தான் பேரணி நடத்தப்பட்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் போலீசார் வந்திருந்தனர். கடலூர் மாவட்டத்தில் காவல்துறை யாருக்கும் பேரணி நடத்த அனுமதி கிடையாது என்ற நடைமுறையை அமல்படுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு கடலூரில் நடந்த கல்வி உரிமை மாநாட்டிற்கு காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக சந்தித்து HRPC வழக்கறிஞர்கள் பேசினார்கள். எஸ்.பி.”யாருக்கும் தருவதில்லை. அதனால் உங்களுக்கும் தர முடியாது. நமது மாவட்டத்திற்கு வேண்டாம்” எனப் பதிலளித்தார். சிதம்பரத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு பேரணிக்கு அனுமதி தர மறுத்து விட்டார். இந்த முறை நேரடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். அதில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு வரிசையாக செல்லவேண்டும்.மாலை 4முதல் 5 மணிக்குள் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடன் உத்திரவு வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்புடன் எழுச்சியாக நடந்த பேரணி விருதை நகரின் கல்வி மூடநம்பிக்கையை சேதப்படுத்தியது.
மாலை 6-00 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் HRPC மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். சிதம்பரம் பகுதி பெற்றோர் சங்க செயலாளர் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தாங்கள் நடத்திவரும் போராட்டங்கள் பற்றி விளக்கினார். சேத்தியாதோப்பு பகுதி அமைப்பாளரும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான தமிழரசன் அவர்கள் ”அரசுப்பள்ளி தான் சிறந்தது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை, அதனால் ஏற்படும் பிரச்சினையை நம்மால் தீர்க்க முடியாது. அதிகாரிகள் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” எனப் பேசினார்.
HRPC மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் ”நீதிமன்றங்கள், அதிகாரிகளை நம்பிப் பயனில்லை.பெற்றோர்கள் களத்தில் இறங்கிப் போராடினால்தான் ஏதாவது நடக்கும். சட்டம் சரியில்லை. அதில் இருக்கும் ஒன்று இரண்டு நல்லதும் நடக்கவில்லை. சங்கமாக அணிதிரள வேண்டும்” என்று பேசினார்.
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 8-ம் வகுப்பு நகராட்சிப் பள்ளி மாணவன் கவிராஜ் கட்டபொம்மன் பற்றி பொதுக்கூட்டத்தில் பேசியது பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.10,12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்துப் பாராட்டியது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் பெரும்திரளாகக் கலந்து கொண்டனர்.
சேரன் என்பவர் மாநாட்டை முன்னிட்டு நமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுடன் கிராமத்தில் வீடு வீடாக பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது
”வெளி நாட்டில் நான் ஆடு மேய்த்தவன். அதனால் யாரும் வெளிநாட்டுக்கு போகாதீர்கள். சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தை நானும் பாத்தேன். டெய்லர் வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று துபாய் போனேன். அங்கு சென்றவுடன் வெள்ளை ஜிப்பா கொடுத்து ஆடு மேய்க்கச் சொன்னார்கள். வருத்தம் இருந்தாலும் ஒரு பக்கம் சந்தோசம். ஆடு மேய்க்க வெள்ளை ஜிப்பாவா?. மாலை வரும்போது முதலாளி சவுக்கால் என்னை அடித்தான். காரணம் என் ஜிப்பாவில் மண் ஒட்டியிருந்தது. கீழே உட்கார்ந்தால், படுத்தால் ஜிப்பா காட்டிக் கொடுத்து விடும். நான் அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்தேன். மாணவர்களிடம் வெளிநாடு செல்ல வேண்டாம் என அறிவுரை சொன்னேன். அடுத்த நாள் ஆடு வருது எனக் கிண்டல் செய்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை.கேட்பவர்கள் கேட்கட்டும். என்னுடைய திருப்திக்காக நான் விமான நிலையம்,பேருந்து நிலையம், இரயில் நிலையம் எனப் பிரச்சாரம் செய்கிறேன். மூன்று வேளை சோத்துக்காக தான் தமிழர்கள் வெளிநாடு செல்கிறார்கள். வடிவேல் போல் செண்ட் அடித்துக் கொண்டு இங்கு வறட்டுக் கௌரவாமாக வாழ்கிறார்கள். எனக்கு நேர்ந்த அனுபவம் யாருக்கும் நேரக் கூடாது. அதனால் பெற்றொர்களே உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து இங்கேயே வேலை பார்க்கச் சொல்லுங்கள்”
– என எதார்த்தமாக பறை ஓசைக்கு ஏற்ப உழைப்பவன் உடல் மொழி பேசுவது போல் மக்களிடம் உணர்ச்சியாக சேரனின் மொழி அனுபவம் சென்றடைந்தது.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் பாக்கியராஜ், எழுத்தாளர் இமையம், ம.க.இ.க. துரை.சண்முகம், வழக்கறிஞர் ராஜு ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக நடைபெற்ற ம.க.இ.கவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை விருதை நகர மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். இரவு 10-20 க்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. வெளியூர் தோழர்களுக்கும்,நண்பர்களுக்கும் பார்சல் மூலம் உணவு வழங்கப்பட்டது.
ஒலிபெருக்கி நகரத்தின் நாலாபக்கமும் கேட்கும் அளவிற்கு நீண்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியின் உரையை இருந்த இடத்திலேயே கேட்க முடிந்தது. துணை ஆய்வாளர்கள் மட்டத்தில் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
ஒன்றரை மாத மாநாட்டுப் பிரச்சாரத்தில், பெற்றோர் சங்கம்,மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீட்டில் கணவன்-மனைவிக்கிடையே அரசுப் பள்ளியா?தனியார் பள்ளியா? எனத் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள், அரசுப் பள்ளியில்தான் படிப்பேன், தனியார் பள்ளியில் நிறைய ஹோம்வொர்க் கொடுக்கிறார்கள் என 2-ம் வகுப்பு குழந்தை தந்தையிடம் வாதம் புரிந்து வருவதும் நடந்தது. இறுதியில் இந்த ஆண்டு சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு,2-ம் வகுப்பு,6-ம் வகுப்பு,7-ம் வகுப்பு,9-ம் வகுப்பு,11-ம் வகுப்பு என அரசுப் பள்ளியில், அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனை மாநாட்டுக்கு கிடைத்த வெற்றியாக குறிப்பிடலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் மாநாடு நடத்தியது போல் உணர்ந்து தேடி வந்து நிதிகொடுத்ததும்,மாணவர்களை மாநாட்டில் அவசியம் கலந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதும் மாநாட்டின் சிறப்பு. தேக்கு மர வளர்ப்பு, காந்தப் படுக்கை,வி.கே.என். ஃபைனான்ஸ் கம்பெனி போன்ற வியாபாரங்கள் மக்களை ஏமாற்றி ஓடிப் போனதைப் போல் தனியார் பள்ளி ஆங்கிலவழிக் கல்வி மக்களிடம் பணம் பறிக்கவே என்பதை மாநாட்டுக்கு வந்தவர்கள் உணர்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல.
நம்பிக்கையூட்டும் மாநாட்டின் புகைப்படப் பதிவுகள் – பெரிதாக பார்க்க படம் மீது சொடுக்கவும்.
மாநாடு நிகழ்ச்சிநிரல் பேனர்
தோழர் ராஜு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்.
வரவேற்புரை – செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர், மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், கடலூர் மாவட்டம்.
தலைமையுரை – வெங்கடேசன், மாவட்ட தலைவர், மா.க.உ.பெ.சங்கம், கடலூர் மாவட்டம்.
பார்வையாளர்கள்
பேராசிரியர் ந.சி.சந்திரசேகர், முதல்வர் ஓய்வு, கந்தசாமி கந்தர் கல்லூரி, நாமக்கல்
பள்ளியிறுதி தேர்வில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த விருதை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பாராட்டும் விதத்தில் தலைமையாசிரியை தமிழ்ச்செல்விக்கு பொன்னடை போர்த்துகிறார், ம.உ.பா.மை வழக்குரைஞர் மீனாட்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி ஏற்புரை
ம.உ.பா.மை வழக்குரைஞர் மீனாட்சி உரை.
புமாஇமு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் உரை
மாநாட்டு தீர்மானங்களை வாசிக்கிறார், அன்பரசன், மா.க.உ.பெ.ச செயற்குழு உறுப்பினர்
மா.க.உ.பெ.ச சார்பில் தீர்மானங்களை வாசிக்கிறார் ரேவதி.
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
மாணவர் விவாத அரங்கம்
விவாத அரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாரட்டு
10,12 வகுப்பு மாணவர்களை கணிதத்தில் 100 சதவீத தேர்ச்சி சாதனை நிகழ்த்திய ஆசிரியர் சாலன், டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பாராட்டப்படுகிறார்.
திருக்குறள் போட்டியில் வென்ற எல்கேஜி சிறுமிக்கு எழுத்தாளர் இமயம் சான்றிதழ் அளிக்கிறார்.
ஓவியப் போட்டியில் வென்ற சிறுமி
பேச்சுப் போட்டியில் கட்டபொம்மன் குறித்து உரையாற்றி வென்ற மாணவன் கவிராஜன், எட்டாம் வகுப்பு, விருதை நகராட்சி மேலநிலைப் பள்ளி
ஓவியப் போட்டியில் வென்ற மாணவி
ஓவியப் போட்டியில் வென்ற மாணவன்
மாணவர் விவாத அரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
மாணவர் விவாத அரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
மாணவர் விவாத அரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
மாணவர் விவாத அரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பேரணிக் காட்சி
பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள்
வெளிநாட்டு அனுபவம் குறித்து பேசும் சேரன்
உரை – தமிழரசன், ஓய்வு தமிழாசிரியர், சேத்தியா தோப்பு மா.க.உ.பெ.ச தலைவர்.
மாணவன் கவிராஜன் உரை
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
எழுத்தாளர் இமயம்
. கோ. பாக்கியராஜ், த.ஆசிரியர், அரசினர் நடுநிலை பள்ளி, இலங்கியனூர்
10,12 தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு
காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமமானது என்றாலும், நம் நாட்டில் காலம் தாழ்த்திக் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா வட்டத்திலுள்ள சுண்டூர் கிராமத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் 8 பேரை கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற வழக்கில் ரெட்டி சாதிவெறியர்களை அண்மையில் ஆந்திர உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்றும், அரசு தரப்பு வழக்குரைஞர் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ம ரெட்டி, ஜெஸ்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடறிந்த இந்த வழக்கில் மனுநீதியையே தனது தீர்ப்பாக அறிவித்துள்ளது.
1991-ஆம் ஆண்டில், சுண்டூர் கிராமத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டு தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட ரெட்டி சாதிவெறியர்கள், எட்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கியதோடு, அவர்களைக் கோடரியால் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்று, அவர்களது உடல்களை சாக்குப் பையில் கட்டி துங்கபத்ரா கிளை ஆற்றில் வீசியெறிந்தனர். ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகத்தின் துணையுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியுடன் போராடியதன் விளைவாக, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2005-ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான சிறப்பு நீதிமன்றம், சுண்டூரிலேயே விசாரணைக்காக அமைக்கப்பட்டது.
ரெட்டிகளின் கொலைமிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்நீதிமன்றத்தில் குற்றவாளிகளைத் தாழ்த்தப்பட்டோர் அடையாளம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இச்சிறப்பு நீதிமன்றம், 2007-ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும், 35 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. எஞ்சிய 123 பேர் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்தது. தண்டிக்கப்பட்ட ரெட்டி ஆதிக்கசாதி வெறியர்கள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏழாண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த ஆந்திர உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நரசிம்ம ரெட்டி, ஜெஸ்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைத்து சாதிவெறியர்களையும் விடுதலை செய்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று தீர்ப்பளித்துள்ளது.
நாடளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காததைக் கண்டு வேதனைப்படும் சுண்டூர் கிராம மக்கள், ”எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால், யார்தான் அவர்களைக் கொன்றார்கள்? தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டு, தங்களது உடல்களை சாக்குப்பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் குமுறுகின்றனர்.
ஒரு பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு எவ்வாறு ஆணாதிக்கத் திமிருடன் அணுகப்படுகிறதோ, அவ்வாறே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வழக்குகளையும் சாதியாதிக்கக் கண்ணோட்டத்துடன்தான் நீதித்துறையும் போலீசும் அதிகாரவர்க்கமும் அணுகுகின்றன. சுண்டூர் படுகொலை வழக்கு மட்டுமல்ல, இதற்கு முன்னர் 1985-ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் கரம்சேடுவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நாயுடு சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று ஆதிக்க சாதிவெறியர்களை ஆந்திர உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
1996-ஆம் ஆண்டில் பீகாரின் பதானிதோலாவில் 21 தாழ்த்தப்பட்டோர் பட்டப்பகலில் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செயப்பட்டனர். 1997-இல் அரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் பதவியில் இருந்த போது, லட்சுமண்பூர் பதே கிராமத்தில் ஆதிக்க சாதிவெறியர்களின் பூமிகார் சேனா நடத்திய கொலைவெறியாட்டத்தில் 58 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளை தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்ததற்கு மேல் அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
கடந்த 2012-ஆம் ஆண்டில் பதனி தோலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 ஆதிக்க சாதிவெறியர்களை பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. 2013-இல் லட்சுமண்பூர் பதே வழக்கில் சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்று கூறி அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாதிவெறியர்கள் அனைவரையும் பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செதது. பீகாரின் நக்ரிபஜார், மியான்பூர், நாராயண்பூர், காக்டி பாகா ஆகிய இடங்களில் நடந்த தாழ்த்தப்பட்டோர் மீதான படுகொலை வழக்குகளிலும் பாட்னா உயர்நீதி மன்றம் சாதிவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்துள்ளது.
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கயர்லாஞ்சி வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை 2010-இல் அளித்த தீர்ப்பில், இது சாதிய வன்கொடுமை அல்ல என்றும் நிலப்பிரச்சினையால் உருவான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாயாது என்றும் தீர்ப்பளித்தது. தமிழகத்தில், மேலவளவு படுகொலை நடந்து 9 ஆண்டுகள் முடிந்து விட்டதைக் காட்டி இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் நழுவிக் கொண்டது. திண்ணியம் வழக்கிலும் இதே போல ஆதிக்க சாதிவெறியர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப்பட்டனர்.
இவையனைத்தும் இன்றைய இந்திய அரசுக் கட்டமைவானது, அதன் அங்கங்களான போலீசு, இராணுவம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்கானதுதான் என்பதையும், இன்றைய அரசியலமைப்பு முறையானது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானதாக இருப்பதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் சட்டப்படியான மனித உரிமைகளையும் கூட செயல்படுத்த வக்கற்றுக் கிடப்பதையும் மெப்பித்துக் காட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான இட ஒதுக்கீடுகளும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களும் இம்மக்கள் வாழ்விலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் சாதிக்கவில்லை என்பதையும், இத்தகைய முயற்சிகள் மூலம் சாதியாதிக்கத்தை ஒருக்காலும் தகர்த்தெறிய முடியாது என்பதையுமே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.
போலீசும், உளவுத் துறையும், நீதித் துறையும் தமது கடமையைச் சரியாகச் செதிருந்தால் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வகையில் கூறப்படும் வாதங்கள், அறிந்தோ அறியாமலோ இந்த அரசு பற்றிய பிரமைகளைத்தான் வளர்க்கின்றன. ஆனால் இன்றைய அரசியலமைப்பு முறையானது, சாதி – தீண்டாமை முதலான கேடுகெட்ட பிற்போக்கு விழுமியங்களை ஒழிக்கும் நோக்கில், சமுதாயத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் சட்டங்களை உருவாக்கவில்லை.
இருப்பினும், சாதிய வன்கொடுமைகள் நிகழும்போதெல்லாம், தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைச் செய்து சாதிவெறியர்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சி, சமுதாய மாற்றம் – என்ற திட்டம் மிகத் தொலைவில் இருப்பதாகவும், உடனடித் தீர்வாக சட்டத் திருத்தம்தான் தற்போதைக்குக் காரிய சாத்தியமானது என்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் வாதிடுகின்றன.
அம்பேத்கர் தற்போதைய அரசமைப்பில் பங்கேற்று தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறுதான் கூறியிருக்கிறார்; ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை; பல்வேறு கட்சிகளில் சிதறியுள்ள தாழ்த்தப்பட்டோர் தனியொரு வாக்குவங்கியாக உருவெடுத்து தேர்தல் அரசியல் மூலம் பெறும் அதிகாரத்தின் மூலமும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமும்தான் அவர்கள் விடுதலை பெற முடியும் என்று தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் கட்சிகளும் தீர்வை முன்வைக்கின்றன. தலித்துகளின் உணர்வுகளை தலித் அல்லாதவர்களால் ஒருக்காலும் உணர முடியாது என்று அடையாள அரசியலைச் செயல்படுத்துகின்றன.
ஆனால் அடையாள அரசியல் என்பதே மற்ற சாதியின் இருப்பை அங்கீகரித்து, எல்லா சாதிகளும் தத்தமது அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஆதரிக்கிறது. இதனால் ஆதிக்க சாதிகளும் தாழ்த்தப்பட்டோரும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதிக்க சாதிகள் தமது சாதியப் பிடியை மேலும் உறுதிப்படுத்திக் கெட்டிப்படுத்துவதுதான் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைப் போலவே வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூச்சல் போட்டு வன்னிய சாதிவெறியர்களை ராமதாசு கும்பல் அணிதிரட்டிக் கொண்டது.
ஏற்கெனவே சமூக ரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன் அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இந்த ஆதிக்க சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் இத்தகைய சாதிகளில் தோன்றியுள்ள புதியவகை தரகு வர்க்கங்கள் இன்று சாதிக் கட்சிகளின் புரவலனாக இருந்து சாதியப் பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியலுக்கு வழியமைத்துக் கொடுப்பதோடு, தீண்டாமையைத் தங்களது பிறப்புரிமையாக அறிவிக்கும் அளவுக்கு கொட்டமடிக்கின்றன.
டெல்லியில், ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய நாடும் அதன் மனசாட்சியாக உள்ள ஊடகங்களும், பாலியல் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் நாள்தோறும் இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராகவோ, சாதிவெறியர்களை விடுவிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகவோ இப்படி தார்மீக ஆவேசத்தைக் காட்டவில்லை. எந்த தாழ்த்தப்பட்ட இயக்கமோ, தலைவர்களோ சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு பற்றிக் கருத்து தெரிவித்ததாக செய்திகளும் வரவில்லை. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சுண்டூர் தீர்ப்பை ஓர் அரசியல் பிரச்சினையாக வைத்துப் போராடவும் முன்வரவில்லை.
மேலிருந்து கீழ்வரை தாழ்த்தப்பட்ட போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சியின் நடந்த கொடூரத்தை எப்படியெல்லாம் முடக்கினார்கள் என்று அம்பலப்படுத்துகிறார் முனைவர் ஆனந்த் தெல்தும்டே. சுண்டூரில் ரெட்டி சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டம் இன்று மாலா, மடிகா என தாழ்த்தப்பட்டோரிடையே உட்பிரிவுகள் அடிப்படையில் அடையாள அரசியலால் பிளவுபட்டுப் போய், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல பிழைப்புவாதிகள் ஆதிக்க சாதிக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆதாயமடைவதில் முடிந்துள்ளது. ராம்தாஸ் அதாவலே, ராம்விலாஸ் பஸ்வான், ராம்ராஜ் என்கிற உதித்ராஜ் ஆகிய தாழ்த்தப்பட்டோரது அடையாள அரசியல் தலைவர்கள், இந்துவெறி பா.ஜ.க.வின் விசுவாசப் பிழைப்புவாதிகளாகச் சீரழிந்துள்ள கதையை ‘’மூன்று ராமன்களின் அனுமன் சேவை” என்ற கட்டுரையில் முனைவர் ஆனந்த் தெல்தும்டே திரைகிழித்துக் காட்டுகிறார்.
அடையாள அரசியலானது, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியானாலும், ஆதிக்க சாதியானாலும் சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியலானது, ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. பீகாரில் சாதிவெறியாட்டங்கள் கட்டுக்குள் இருந்ததற்குக் காரணமே அன்றைய நக்சல்பாரி புரட்சிர அரசியலும் போராட்டங்களும்தானே அன்றி, சட்டத்தாலோ, அடையாள அரசியலாலோ சாதிய ஒடுக்குமுறையைத் தடுக்க முடியவில்லை. வர்க்கப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டும்போதுதான் சாதி என்பது தமது வர்க்க நலனுக்கே எதிரானது என்பதை ஆதிக்க சாதி மக்கள் உணர முடியும். தம்மிடமுள்ள ஆதிக்க சாதி கருத்தோட்டங்களைக் களைந்து கொள்ளவும் முடியும்.
இந்நிலையில் கூடுதலான சீர்திருத்தங்களாலோ, மேலும் கடுமையான சட்டங்களாலோ, அடையாள அரசியலாலோ சாதிவெறிக் கொடுமைகளுக்கு ஒருக்காலும் தீர்வு காண முடியாது. மாறாக, கெட்டி தட்டிப் போயுள்ள சாதியாதிக்கச் சமுதாயத்தைத் தகர்த்தெறியக்கூடிய உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக-அரசியல் புரட்சிதான் இன்றைய தேவையாக உள்ளது.
கடந்த மே முதல் நாளிலிருந்து 31 டிசம்பர் 2015 வரை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செயப்படும் மாம்பழம், பாவற்காய், கத்திரிக்காய், புடலை மற்றும் சேப்பங்கிழங்கு ஆகியவற்றை அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை செய்துள்ளன. 2013-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செயப்பட்ட 207 சரக்கு பெட்டகங்களில் பழ ஈ இருந்ததாலும், இந்தப் பழ ஈ அரோப்பிய நாடுகளில் நுழைந்தால் அந்நாடுகளின் விவசாயம் பாதிக்கும் என்பதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று அய்ரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். நூறாண்டுகளுக்கும் மேலாக அய்ரோப்பிய நாடுகளுக்கு இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ள போதிலும், தற்போதையத் தடையினால் ஏறத்தாழ ஒரு கோடியே 60 இலட்சம் மாம்பழங்களின் சந்தை வாய்ப்பை இந்திய விவசாயிகள் இழந்துள்ளனர். அய்ரோப்பிய ஒன்றியத்தின் சந்தையைக் கணக்கில் கொண்டு ஒழுங்கமைப்பட்ட இந்த மாம்பழ உற்பத்தியானது, தற்போது மீளமுடியாத சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
இது போன்ற செய்தி ஒன்றும் புதிதல்ல. நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செயப்பட்ட மிளகாய், பால் பவுடர், முட்டை, இறைச்சி, மக்காசோளம், சோயா, பாசுமதி அரிசி, திராட்சை, தேன், வேர்க்கடலை போன்ற உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகள் தடை போடுவதென்பது பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. 2012-இல் ஜப்பான் இந்திய மாம்பழத்தைத் தடை செய்தது. அய்ரோப்பிய ஒன்றியம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியத் திராட்சையைத் தடை செய்திருந்தது.
உணவுப் பொருட்களுக்கான சரக்குப் பெட்டகங்களது எஃக்கின் தரம், பூசப்பட்டுள்ள பெயிண்ட்டில் கலந்துள்ள வேதியியல் பொருட்களின் வீரியம் முதலானவற்றை வைத்து அவை நீலம், பச்சை, ஆரஞ்சு – என தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன . தரமான சரக்குப் பெட்டிகளில் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செயப்படவில்லை என்று காரணம் காட்டி, கடந்த 2005-ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் அமெரிக்கா 251, கனடா 239, மெக்சிகோ 200, அய்ரோப்பிய ஒன்றியம் 16 – என இந்திய உணவு மற்றும் விவசாயப் பொருட்களைக் கொண்ட பெட்டகங்கள் நிராகரிக்கப்பட்டு, அப்படியே கடலில் கொட்டப்பட்டன. இவ்வாறு ஜப்பான், அமெரிக்கா, அரோப்பிய ஒன்றியம் ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பொருட்களை உள்ளே விடாமல் நிராகரிப்பதில் முன்னணியில் உள்ளன.
மறுபுறம், அடிப்படை உணவுகளான அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெ வித்துகளை உற்பத்தி செய்யும் பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாற்றுப்பயிர் விவசாயத்திற்கு விவசாயிகளை இழுத்துச் செல்கிறது இந்திய அரசு. கூடுதல் பொருளாதார மதிப்பு கொண்ட விவசாயப் பயிர்களை உற்பத்தி செயுமாறு விவசாயிகளுக்கு வழிகாட்டி, இதை அ.மல்படுத்த இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காகத் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (National Horticultural Mission – NHM) முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்றுமதியைக் குறிவைத்து பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், நறுமணப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது. இத்தகைய சந்தைக்கான உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் அரசு கூறுகிறது. இந்த அடிப்படையில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்பட்டவைதான் இந்திய மாம்பழங்கள். ஆனால், அதுவும் இப்போது தடை செய்யப்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
1995-இல் உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் (WTO), நாடுகளுக்கு இடையில் நடக்கும் ஏற்றுமதி-இறக்குமதியை நெறிமுறைப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதில் உறுப்பினராக உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சட்டத்தைக் கொண்டு உலக வர்த்தகத்தை இக்கழகம் நெறிப்படுத்துகிறது. தற்போது 159 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இக்கழகம், உலகாளவிய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதியைக் கட்டுப்படுத்த “விவசாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Agreement on Agriculture)” உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், உள்நாட்டுச் சந்தையைத் திறத்தல் , ஏற்றுமதிக்கான மானியத்தை ஒழுங்கமைத்தல், உற்பத்திக்கான உள்நாட்டு மானியத்தை வெட்டுவதைப் பற்றிய விதிகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகள் (Sanitary and phyto sanitary regulations) மற்றும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஆகிய ஐந்து அம்சங்கள் அடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தப்படி ஏகாதிபத்திய நாடுகள் தங்களது உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கப் போடப்பட்டிருக்கும் சுங்கவரியை 36 சதவீதமும், ஏழை நாடுகள் 24 சதவீதமும் குறைக்க வேண்டும். மேலும், சுங்க வரியைத் தவிர இதர வர்த்தகத் தடைகளும் நீக்கப்பட வேண்டும். ஏழை நாடுகள் -ஏகாதிபத்திய நாடுகள் என்ற பாரபட்சமின்றி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் நாட்டில் 1986-88ல் கொடுக்கப்பட்ட மானியச் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்திக்கான உள்நாட்டு மானியம், ஏற்றுமதிக்காகக் கொடுப்படும் மானியம் முதலானவற்றையும் குறைக்க வேண்டும். இவற்றை 2000 மற்றும் 2004-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதே உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியுள்ள விதியாகும்.
இந்தியா போன்ற ஏழை நாடுகள் விவசாய பொருட்கள் உற்பத்திக்கோ அல்லது ஏற்றுமதிக்கோ 1986-88இல் கொடுத்த மானியம் என்பது மிகவும் குறைவு. ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்த மானியமோ மிகவும் அதிகம். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ஆகும் செலவில் 90 சதவீதத்தை 1986-88 இல் ஜப்பானிய வல்லரசு விவசாயிகளுக்கு மானியமாகக் கொடுத்தது. மறுபுறம், தனது சந்தையைப் பாதுகாத்துக் கொள்ள ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெண்ணெய்க்கு 500 சதவீத அளவுக்கு சுங்க வரி விதித்தது. அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் முதலான ஏகாதிபத்திய நாடுகளிலும், கனடா, ஆஸ்திரேலியா முதலான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான் இருந்தது.
உலக வர்த்தக கழக விதியின்படி, விவசாய மானியத்தைக் குறைக்கச் சொல்லி ஏழை நாடுகளை நிர்பந்தித்து வந்த அமெரிக்க அரசோ, தான் வழங்கும் மானியத்தில் சல்லிக்காசு கூடக் குறைக்கவில்லை. அமெரிக்காவில் 1996-2010க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயத்திற்கான உள்நாட்டு மானியம் 61 லிருந்து 130 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு 2010-ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு வழங்கிய மானியம், 1995-ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது இரு மடங்காக, 13,000 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நாடுகள் நேரடி மானியத்தை மறைமுக மானியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தப்பித்துக் கொள்ளும் தந்திரத்திலும் ஈடுபட்டன. மறுபுறம், ஏழை நாடுகளின் உணவுச் சந்தையை ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையிடுவதற்கான ஏற்பாடாகவே தோஹாவிலும் அண்மையில் பாலியிலும் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாடுகள் அமைந்தன.
இவற்றையெல்லாம் தாண்டி ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்குள் இந்தியாவின் விவசாய பொருட்கள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம்தான் மாம்பழ ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை. மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவர உயிர்களுக்கு ஒவ்வாத வேதியியல் பொருட்கள் மற்றும் நோய் உருவாக்கும் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒவ்வொரு ஏற்றுமதி பொருளிலும், உயிர்களுக்கு ஒவ்வாத பொருட்கள் மற்றும் நோய்க் கிருமிகளின் அளவுகள் அதிகபட்சமாக எவ்வளவு அனுமதிக்கப்படலாம் என்பது உலக வர்த்தக கழகத்தின் சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகளின்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில்தான் ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்விதிகள் உயிரினங்களை நேசிப்பதற்கான சட்டமாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் இந்த விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை; ஒவ்வொரு நாடும் தமது உள்நாட்டின் தனிச்சிறப்பான தேவைக்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கத்துக்கு ஏற்ப உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. அதாவது, உலக வர்த்தகக் கழகத்தால் உருவாக்கப்பட்ட பொதுவான விதிகளைப் பின்பற்றாமல், ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்கு ஏற்ப புதிய விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த விதிகளைக் கொண்டுதான் இந்திய மாம்பழத்தைத் தடை செய்தது அய்ரோப்பிய ஒன்றியம். இதுவும் கூட சிலருக்கு நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால் விசயம் என்னவென்றால், மேலைநாடுகள் உருவாக்கும் சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகள் என்றும் நிலையாக இருந்தில்லை.
சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார விதிகளுக்கு ஏற்ப விவசாயத்தை ஒழுங்கமைத்து நாம் பயிரிடும் பொழுது ஒரு விதி இருக்கும்; அறுவடை செய்யும் பொழுது இன்னொரு விதி; சரக்கு கப்பலில் ஏற்றிக் கொண்டுபோய் சேர்க்கும்பொழுது இன்னொரு புதிய விதி – என அவ்வப்போது புதுப்புது விதிகளை உருவாக்கி ஏழை நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதியாவதை ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டே தடுத்து வருகின்றன. இதனால் புலி வாலைப் பிடித்தவன் கதையாக ஏற்றுமதியை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் நிலைகுலைந்து போவது தொடர்கதையாகி விட்டது.
இந்த விதிகளின் உள்நோக்கமே இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளில் நுழைந்துவிடக் கூடாது என்பதுதான். ஏற்கெனவே சூப்பர் 301 சட்டத்தை அமெரிக்கா வகுத்துக் கொண்டு தனது சந்தைக்கு காப்புநிலையை ஏற்படுத்திக் கொண்டதைப் போலத்தான் இத்தகைய விதிகள் அடுத்தடுத்து உருவாக்கப்படுகின்றன. திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன்கள் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று ஏகாதிபத்திய நாடுகள் இறக்குமதி செய்வதற்குக் கெடுபிடிகளைக் காட்டியதைப் போலவே, இந்தியாவின் உணவு மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதிலும் புதுப்புது நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்றன. கடைசியில், ஏற்றுமதிக்கான விவசாயத்தின் மூலம் இந்திய விவசாயிகள் மேலும் நட்டமடைவதுதான் நடந்துள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்கள், உணவுப் பதப்படுத்தல் முதலானவற்றின் மூலம் தனியார் முதலாளிகள் மேலும் சலுகைகளையும் மானியங்களையும் பெற்று ஆதாயமடைந்துள்ளார்களே தவிர, விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கூட இதன் மூலம் கிடைக்கவில்லை.
உலக வர்த்தகக் கழகம் என்பதே உண்மையான, நியாயமான, சுதந்திரமான உலக வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல. ஏகாதிபத்திய நாடுகள் தங்களது சந்தையைப் பாதுகாத்துக் கொண்டே ஏழை நாடுகள் மீது தங்களுடைய வர்த்தக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம். எனவே, ஏகாதிபத்திய நாடுகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேறுமாறு விவசாயிகள் போராடுவதும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்து, நியாயமான பரஸ்பர நல்லுறவுகளின் அடிப்படையில் புதியதொரு உலக வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்திய விவசாயிகள் இந்த நச்சுச் சுழலிலிருந்து விடுபட முடியும்.
ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம் ! பார்ப்பன எதிர்ப்பு தமிழ்மரபை மீட்டெடுப்போம் !!
பார்ப்பன பாசிசம் ஆட்சியைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில், தமிழ் மொழியின் இருப்பைக் காலி செய்திடும் அதிகாரத் திமிர் எல்லாத் தளங்களிலும் கோலோச்சுகின்றது. உயர் கல்வியில் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளிலும் இனி தமிழ் இல்லை என்றாக்கிட ஜெயலலிதா ஆங்கிலக் கல்வியைத் திணிக்கின்றார். இன்று சமஸ்கிருதப் பண்பாடும், ஆங்கில மோகமும் வெறிகொண்டு ஆடுகின்றன. தமிழை உயர்த்திப் பிடிப்போரைக் கேவலமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வை சகலரிடமும் விதைக்கப்படும் சூழலில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சோன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.
1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்பிற்காகத் தமிழகத்திற்கு வந்தார். சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.
அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது. அதுவரை, இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும், அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.
ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளந் தெளிவாக நிரூபித்தது. 1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல 4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.
வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.
திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது. அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ். எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர் .எஸ். எஸ். ஐ வளர்க்கின்றனர்.
இன்று மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் பாசிச ஆட்சி வந்துள்ள சூழலில் மீண்டும் சமஸ்கிருத மேலாக்கம், சமஸ்கிருதப் பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட உள்ளது. மக்களிடமும் சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டின் பேரில் கூடுதலான பற்று விதைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர்விளங்கா வழிபாடுகளைக் கொண்டுவருவது வரை பார்ப்பனிய மீட்சி நடந்து வருகின்றது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார் – என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொருபுறம், தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கின்றது. தாய்மொழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழியைக் கொண்டுவந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது. இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், ”பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.
மதச்சார்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையே தந்திருக்கின்றன. எனினும் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இப்படி ஒரு முடிவின் தவிர்க்கவியலாமையை நாம் புரிந்து கொள்ள முடியும். தேர்தல் பிரச்சாரத்தின் முதல் சுற்றிலேயே தான் படுதோல்வி அடையவிருப்பதை காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ ஒப்புக் கொண்டு விட்டது. ஒருவேளை பாரதிய ஜனதா கட்சிக்குப் பதிலாக மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், அது விரைவிலேயே பதவிச் சண்டைகளால் தன்னைத்தானே கவிழ்த்துக் கொண்டு, ”வலிமையான நிலையான மோடியின் ஆட்சி” வருவதற்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும்.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றிராமல், அ.தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட ”மதச்சார்பற்ற” கட்சிகளின் ”தயவில்” ஆட்சி அமைத்திருந்தால் அக்கட்சிகள் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் கடிவாளம் போட்டிருப்பார்கள் என்று நாம் நம்புவதற்கு இடமிருக்கிறதா? குறைந்தபட்ச செயல்திட்டமொன்றை அறிவித்து இயங்கிய ”மிதவாதி” வாஜ்பாய் ஆட்சியில்தான் இந்துத்துவ பாடத்திட்டத் திணிப்பு முதல் கார்கில், நாடாளுமன்றத் தாக்குதல், கிறித்தவர்கள் மீதான தாக்குதல், குஜராத் படுகொலை வரையிலான அனைத்தும் அரங்கேறின. ஆகவே, மாநிலக் கட்சிகள் எனப்படுபவை தாங்கள் அளிக்கும் ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளையோ, இன்ன பிறவற்றையோ கேட்டிருக்குமேயன்றி, இந்துத்துவக் கொள்கையை விட்டுக் கொடுக்கும்படி மோடியிடம் கேட்டிருக்கப் போவதில்லை. மொத்தத்தில், ஆட்சியதிகாரத்தில் அமர விடாமல் மோடியைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குள் இல்லை என்பதே உண்மை.
காங்கிரசைப் பொறுத்தவரை அது பாரதிய ஜனதாவின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளுக்கு எல்லாக் காலங்களிலும் துணை நின்றிருக்கிறது; மோடி, அத்வானி உள்ளிட்ட எல்லா குற்றவாளிகளையும் காப்பாற்றி விட்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. மாநிலக் கட்சிகளோ பல சந்தர்ப்பங்களில் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. ”மதச்சார்பின்மை” என்பது இக்கட்சிகளுடைய முகமூடியே அன்றி முகமல்ல என்பதால், இவர்களை மதச்சார்பின்மையின் காவலர்களாக எண்ணி மயங்குவதிலோ, இவர்கள் மோடியைக் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று கனவு காண்பதிலோ பொருளேதும் இல்லை.
மேலும், மோடியின் வெற்றியை ”மதச்சார்பின்மைக்கு ஆபத்து” என்ற கோணத்தில் மாத்திரம் அணுகுவதும் தவறு. இது காங்கிரசின் மிதவாத இந்து மதவாதத்தையும், பிற கட்சிகளின் மதச்சார்பின்மை வேடத்தையும், காங்கிரசு உள்ளிட்ட எல்லாக் கட்சிகளாலும் அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகளையும் மறைமுகமாக அங்கீகரிப்பதாகி விடும்.
இந்திய தரகு முதலாளிகள், தங்களது மறுகாலனியாக்கக் கொள்ளையைத் தீவிரமாகவும் தடையின்றியும் நடத்துவதற்கான உத்திரவாதமாகவும், எதிர்ப்புகளைப் பிளந்து அழிக்கும் ஈட்டியாகவும் பார்ப்பன பாசிச மோடியை மதிப்பிடுகிறார்கள். மோடியின் ஆட்சி என்பது பார்ப்பன பாசிசத்தின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மூலதனத்தின் சர்வாதிகாரம். மோடியின் இந்த உண்மை முகத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதனால்தான் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்க கொள்கைகளால் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள், காங்கிரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது என்ற பெயரில், எண்ணெய் சட்டியிலிருந்து தப்ப முயன்று எரியும் அடுப்புக்குள் விழுந்திருக்கிறார்கள்.
“சக்கரவர்த்தி’ மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட தெற்காசிய ‘குறுநில மன்னர்கள்’
தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மந்திரவாதியால் உருவாக்கி ஏவி விடப்படும் பூதத்தைப் போல, இந்திய தரகு முதலாளி வர்க்கத்தால் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் தீய சக்தியே மோடி. இதனைப் புரிந்து கொள்ளாமல், ”மோடி பிரதமராகியிருப்பது குறித்து கவலைப்படவேண்டிய வர்கள் சிறுபான்மை மக்களே” என்று யாரேனும் எண்ணிக்கொண்டிருந்தால், அவர்களுடைய தப்பெண்ணத்தை அகற்றி, ”நான் உங்கள் அனைவரின் எதிரி” என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குத் தனது நடைமுறையின் மூலம் மோடி விரைவிலேயே புரிய வைப்பார்.
***
ஆளும் வர்க்க ஊடகங்களால், ஒரு மசாலா கதாநாயகனைப் போல இந்தியா முழுவதும் மேடையேற்றப்பட்ட மோடி என்ற முப்பரிமாண ஹோலோகிராம், தனது பேராற்றல் குறித்துத் தானே கொண்ட மயக்கத்தினால், இந்த தேசத்தைக் காக்க வந்த மீட்பனாகத் தன்னைக் கருதிக்கொண்டு உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் விடுகிறது. ஆனால், இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக ஏற்றுமதி வாய்ப்புகள் சுருங்கி விட்டதாலும், பணக்கார வர்க்கத்தையும், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட உள்நாட்டு நுகர்பொருள் சந்தை விரிவடைய வழியின்றித் தேங்கி நிற்பதாலும், தொழில் உற்பத்தி துறைகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன. முதலாளிகளுக்கும் நுகர்வோருக்கும் குறைந்த வட்டியில் கடனை வாரி வழங்குவதற்கு பணவீக்கம் தடையாக இருக்கிறது. வட்டி வீதத்தைக் குறைத்தால், அது பணவீக்கத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, அந்நிய நிதி மூலதனத்தின் வெளியேற்றத்துக்கும் வழி வகுக்கும். முதலாளி வர்க்கம் விரும்பும் வரிச்சலுகைகளையும் ஊக்கத்தொகைகளையும் வாரி வழங்க இயலாமல் பட்ஜெட் பற்றாக்குறை மோடியை தடுக்கும். கிரெடிட் சூயிஸ் என்ற முதலீட்டு வங்கியின் ஆகஸ்டு 2013 அறிக்கையின்படி, அரசுடைமை வங்கிகளின் வாராக்கடன் 6.3 இலட்சம் கோடி ரூபாய். கடனாளிகளில் மோடியின் புரவலர்களான அதானி, அம்பானி, எஸ்ஸார், வேதாந்தா உள்ளிட்ட தரகு முதலாளிகளும் அடக்கம். தங்களுடைய கடனில் குறைந்தபட்சம் 3 இலட்சம் கோடியைத் தள்ளுபடி செய்யுமாறு கோருகிறார்கள் தரகு முதலாளிகள். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அந்தச் சுமையனைத்தையும் மக்களின் தலை மீது இறக்குவார் மோடி. ”சப் கா விகாஸ்” (அனைவருக்கும் முன்னேற்றம்) என்பன போன்ற மோடியின் பஞ்ச் டயலாக்குகள் விரைவிலேயே நகைச்சுவைத் துணுக்குகளாகும்.
மோடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டக் கோருகிறது. காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை ரத்து செய்வது, தரகு முதலாளிகளின் நில ஆக்கிரமிப்பை எளிதாக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்துவது, சுரங்க நிறுவனங்கள் காடுகளை விழுங்குவதற்குத் தடையாக இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களை அகற்றி கனிம வளக் கொள்ளையையைத் துரிதப்படுத்துவது, பழங்குடியினர் உரிமைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வது, அரசுத்துறை வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளைத் தனியார்மயமாக்குவது – என இந்தப் பட்டியல் நீள்கிறது. கடுமையான மக்கள் போராட்டங்களைச் சந்திக்காமல் இவற்றை மோடியால் நிறைவேற்றித் தர முடியாது.
தங்களுக்கு மானியம் வழங்குவது, பொதுச் சொத்துகளைக் கொள்ளையிட வழியமைத்துக் கொடுப்பது, சந்தைகளை உருவாக்கிக் கொடுப்பது போன்ற பணிகளை செய்யும் பணிப்பெண்ணாக அரசு இருக்க வேண்டுமேயன்றி, தங்களை நெறிப்படுத்துகின்ற அதிகாரம் கூட அரசுக்கு இருக்கக் கூடாது என்பது தரகு முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது.
புதிய தாராளவாதத்தின் தலையாய இந்தக் கொள்கையை அமல்படுத்துவதில், மோடி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது உள்துறை, தொழில்துறை, மின்சாரம், பெட்ரோகெமிக்கல், துறைமுகம், சுரங்கம், கனிம வளங்கள் ஆகிய துறைகள் அனைத்தையும் தன் வசமே வைத்திருந்தார். இவை அனைத்தும் அதானி, அம்பானி, டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்களின் தொழில்களோடு தொடர்புடைய துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துறைகளில் முதலாளிகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, இரண்டே நாட்களில் எல்லா தொழில்களுக்கும் உரிமம் வழங்கினார் மோடி என்பதுதான் டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் அனைவரும் மோடியைப் புகழ்வதற்கான காரணம்.
சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அவற்றின் சட்டதிட்டங்களும் காகிதத்தில் இன்னும் உயிரோடு இருக்கும்போதே, அவற்றை முடமாக்கி, முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு வழி செய்து கொடுப்பதுதான் மோடியின் ஒற்றைச் சாளர நிர்வாக முறை. ”குறைவான அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற மோடியின்முழக்கத்துக்குப் பொருள், அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது மட்டுல்ல; மாறாக, முதலாளிகளை மேற்பார்வையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரசு கொண்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் வெட்டிக் குறைப்பது என்பதும்தான்.
தற்போது மத்திய அமைச்சகங்கள் இந்தத் திசையில்தான் மாற்றியமைக்கப்படுகின்றன. தனித்தனி அமைச்சர்களின் அதிகாரமும், அமைச்சர்கள் குழுவின் அதிகாரமும் பிடுங்கப்படுகிறது. தரகு முதலாளிகளுடன் நிரந்தரமான நேரடித் தொடர்பில் உள்ளவர்களும், அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்களுமான அதிகார வர்க்கத்தினரின் கையில் அதிகாரம் குவிக்கப்பட்டு, எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகளும் நேரடியாக மோடியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு அமைச்சர்கள் பொம்மைகளாக்கப்படுகின்றனர். சொல்லிக்கொள்ளப்படும் அதிகாரப் பகிர்வு, துறைசார் வேலைப்பிரிவினை, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு ஆகிய கோட்பாடுகளைக் குப்பையில் வீசி விட்டு, எல்லா அதிகாரங்களையும் தானே கையிலெடுத்துக் கொள்ளும் மோடியின் இந்தப் பாணியை திறமையென்றும் வேகமென்றும் போற்றுகின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
இருப்பினும், ”குஜராத் மாடல்” என்றழைக்கப்படும் மோடி மஸ்தானின் மை டப்பா மர்மம் தற்போது விலகத் தொடங்கி விட்டது. ”உள்கட்டுமானத் துறை, இயற்கை வளங்களை அகழ்ந்தெடுத்தல், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றில் தேங்கியிருக்கும் கோப்புகள் மீது நூறு நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்ற உத்தரவும், மோடியின் பத்து கட்டளைகளும் அதானி, அம்பானி, எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளின் கொள்ளையுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. இவையன்றி இராணுவ தளவாடத் துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் அருண் ஜேட்லி. காங்கிரசு அரசின் டீசல் விலை உயர்வுக்கு எதிராக சண்டமாருதம் செய்த பா.ஜ.க., மன்மோகனின் அடியொற்றி டீசல் விலை உயர்வை அறிவித்திருக்கிறது. வழக்கம்போல தமிழக மீனவர்களைக் கைது செய்து மோடியின் பதவியேற்பு விழா நாடகத்தை அம்பலமாக்குகிறார் ராஜபக்சே.
திறமை, உறுதி, துரிதமான முடிவெடுக்கும் திறன் என்ற பெயர்களில் ஆளும் வர்க்கத்தால் சந்தைப்படுத்தப்பட்டு, அறிவிழந்த காரியவாத நடுத்தர வர்க்கத்தினரால் மெச்சிக் கொள்ளப்பட்ட மோடியின் ஆட்சி பல்லிளிப்பதற்கு அதிக காலம் தேவைப்படாது. மோடியின் தோல்விகளும் முறைகேடுகளும் அம்பலமாகத் தொடங்கியதும், ஊடகவியலாளர்கள் அமைச்சர்களின் திறமையின்மையைப் பற்றி முதலில் அங்கலாய்ப்பார்கள். பின்னர் மோடியின் எதேச்சாதிகார நிர்வாக முறையை ”ஆராய்ந்து கண்டுபிடித்து” ஆய்வுக்கட்டுரை எழுதுவார்கள்.
மறுபக்கம், நாட்டின் கவனத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டே திசை திருப்பும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குதல், ராமன் கோவில், வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல், பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளைக் கிளறுவதன் மூலம் கிளப்பப்படும் காவிப்புழுதி, மோடியின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை மறைக்க பார்ப்பன பாசிசக் கும்பலுக்குப் பயன்படும். ஆயினும், பார்ப்பன பாசிசத்தின் வர்க்க அரசியல் உள்ளடக்கம், அதாவது, திறமையான நிர்வாகம், வளர்ச்சி என்ற மோடியின் முழக்கங்களுக்கும், இந்துத்துவக் கொள்கைக்கும் இடையிலான தொப்பூள்கொடி உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகும்.
தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதால், இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சராசரியாக ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், சராசரியாக ஐந்தாண்டு கல்விக் கட்டணமாக (Tution Fees) மட்டும் ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, சாராய உடையாரின் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ரூ.9 லட்சத்தை ஆண்டு கல்விக் கட்டணமாகவும், பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் கல்லூரி ரூ.7 லட்சத்தையும் நிர்ணயித்திருக்கிறது.
இத்தொகை கல்விக் கட்டணம் மட்டும் தான். இது தவிர நூலகத்திற்கான கட்டணம், கருத்தரங்குகளுக்கான கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம், விடுதி மற்றும் பேருந்துக் கட்டணம், சுற்றுலாக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்ற வகைகளில், இக்கல்லூரிகள் மேலும் சில லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இவை மட்டுமின்றி நன்கொடை கட்டணமாக (capitation fees) ரூ. 40 லிருந்து 80 லட்சம் வரை தனியாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பெரிய தொகையை மக்களிடமிருந்து கொள்ளையடித்து அக்கொள்ளை பணத்தை கொண்டுதான் இக்கல்விக்கூடங்களின் முதலாளிகள் தங்களை கல்வி வள்ளல்களாக சித்தரித்து வெட்கமின்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்டணங்களைப் பார்த்தால், மருத்துவம் ஒரு சேவை தொழில் என்று யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
ஆக, தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வெளிவர ஒரு மாணவர் ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இளநிலை படிப்புக்கான கட்டணம் மட்டுமே. முதுநிலை படிப்புக்கு மேலதிகமாக 2 லிருந்து 3 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளையோடு ஒப்பிடும் போது அரசுக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.11,500 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 20,000 மட்டுமே. தமிழகத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் இளநிலை மருத்துவர் படிப்பு 2810 இடங்களும் இருக்கின்றன. இதன்படி தனியார் மருத்துவ கல்வி வியாபாரத்தின் தமிழக சந்தை மதிப்பு 2810 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு நிர்ணயம் செய்யும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 25% உயர்ந்திருக்கிறது. நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சென்ற ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்திருந்தது. இந்த ஆண்டு கட்டணத்தில் ரூ.10,000 உயர்த்தியிருக்கிறது.
அரசு நிர்ணயித்திருக்கும் இக்கட்டணம் நூலகம், விடுதி போன்ற இதர கட்டணங்களை உள்ளடக்கவில்லை என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மேலதிக கட்டணத்தையே வசூலிக்கின்றன. மேலும், இந்நிர்ணயம் அரசு கோட்டா இடங்களுக்கான (Govt. Quota Seats) கட்டணத்தை மட்டுமே கட்டுப்படுத்துவதால், நிர்வாக கோட்டா இடங்களுக்கான கட்டணத்தை தங்களுடைய விருப்பம் போல நிர்ணயித்து கொள்ளையை எந்த தடையுமின்றி நடத்துகின்றன.
இது மட்டுமின்றி, அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம் ராமச்சந்திரா, எஸ்.ஆர்.எம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்தாதென்பதால் அவை நடத்தும் கட்டணக்கொள்ளைக்கு அளவே இல்லை. அரசு இக்கட்டண கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதோடு, அதை கண்டு கொள்ளாமல் மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது. கல்வி தனியார் மயம்தான் அரசு கொள்கை எனும்போது இந்த ஆதரவு மேலும் மேலும் பகிரங்கமாக மாறி வருவது கண்கூடு. தேர்தலின் போது சென்னைக்கு வந்த மோடி, பச்சமுத்து கல்லூரிக்குச் சென்று இந்தியா முழுவதும் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் வரவேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. பச்சமுத்துவும் தனது பிசினஸை இந்தியா முழுவதும் விரிவுபடுத்துவதற்காகவே பாஜக கூட்டணியில் சேர்ந்திருப்பார்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்திருக்கும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே ரசீது கொடுக்கின்றன அதனால் வங்கிகள் அக்கட்டணத்தை மட்டுமே கடனாக கொடுப்பதால் கல்விக் கடன் பெற்று படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அவதியுறுகின்றனர்.
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படித்து திரும்ப சுமார் ரூ. 20 லட்சம் மட்டுமே செலவாகும் என்பதை இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர், படித்து முடித்து வெளியே வந்தால், அவருக்கு அரசு வேலை கிடைக்கும் பட்சத்தில் ரூ. 40,000 வரை சம்பளமும், அதே தனியார் மருத்துவமனைகளில் ரூ. 20 முதல் 25 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. இப்பின்னணியில் கல்விக்கடன் பெற்று மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியுறுவதும் நடக்கிறது. அரசு அமல்படுத்திவரும் கல்வி தனியார்மயக் கொள்கையினால் இக்கல்வி வள்ளல்களின் கொள்ளை மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து மருத்துவ கல்வி வரை நீள்கிறது.
இது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. மற்றொருபுறம், இப்பெருந்தொகையை செலவழித்து மருத்துவம் பயிலும் ஒரு மருத்துவர், தனது தொழிலை சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இம்மருத்துவர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுப்பதற்காக மருத்துவம் குறித்த சமூக நெறிமுறைகள், மதிப்பீடுகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள்.
அதாவது மருந்து கம்பெனிகள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற மற்றும் விலை அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது, மருத்துவ சோதனை நிறுவனங்கள் கொடுக்கும் கமிசனுக்காக தேவையற்ற சோதனைகளை பரிந்துரை செய்வதிலிருந்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்தும் சோதனைகளுக்கு நோயாளிகளை சோதனை எலிகளாக்குவது என்று எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர்.
இன்னொரு புறம் மருத்தவம் படிப்பது என்பது வரதட்சணை சந்தையில் பெரும் விலை போகும் சரக்கு என்பதால் அப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது என்பதே அது கௌரவத்திற்கு படிப்பது என்றாகி விடுகிறது. இப்படி கௌரவம் பார்த்து படிப்பதும், அதற்கு செலவழிப்பதும் சாதாரண மக்களால் முடியாத ஒன்று. லஞ்சம், ஊழல், கழிவு, குறுக்கு வழி என்று பணம் பார்க்கும் கணிசமானோர் இப்படி செலவழித்து படிக்க வைக்க தயாராக இருக்கின்றனர்.
காசில்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை உருவானதில் இத்தனியார் மருத்துவக் கல்லூரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை போல மருத்துவத் துறையே முற்றிலுமாக மக்களை கொள்ளையிடும் துறையாகியிருக்கிறது. இவ்வகையில் கல்வி தனியார்மயம் கல்வி கற்கும் மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாதிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தையுமே அரித்து தின்கிறது.
கம்யூனிசப் புரட்சியாளரும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யின் நிறுவனர்களில் ஒருவருமான தோழர் சுனிதிகுமார் கோஷ் கடந்த மே 11 அன்று தனது 96-வது வயதில் காலமாகி விட்டார். வாழ்நாள் முழுவதும் மார்க்சிய-லெனினியத்தை தனது உயிர்மூச்சாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர் அவர்.
வங்கத்தின் தெபகா குத்தகை விவசாயிகள் எழுச்சிக் காலத்தில் (1946-47) கம்யூனிச இயக்கத்தின் ஆதரவாளராக இருந்த தோழர் கோஷ், கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து ஊக்கமுடன் செயல்பட்டார். இருப்பினும், அக்கட்சியின் புரட்டல்வாதப் பாதையால் அதிருப்தியுற்று 1956-இல் அதிலிருந்து விலகி அரசியலிருந்தே ஒதுங்கியிருந்தார். இந்திய – சீனப் போரைத் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பிளவுபட்டு சி.பி.எம். கட்சி உருவானபோது அதில் இணைந்து செயல்பட்டார்.
பின்னர் அக்கட்சியும் திருத்தல்வாதப் பாதையில் சென்று துரோகமிழைக்கத் தொடங்கியதும் 1966-ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகிய அவர், 1967-ஆம் ஆண்டு வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்த நக்சல்பாரி எழுச்சியை பேருற்சாகத்துடன் ஆதரித்து கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அகில இந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டி (AICCCR) -இன் உறுப்பினராகச் செயல்பட்ட அவர், 1969-இல் உருவான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் மத்திய கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
சுனிதி குமார் கோஷ் எழுதிய நூல்களில் ஒன்று
கட்சியின் பொதுச்செயலாளரான சாருமஜூம்தார் மறைவுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியானது பல குழுக்களாகப் பிளவுபட்ட நிலையில் 1974- இல் உருவான மத்திய அமைப்புக் கமிட்டியின் (சி.ஓ.சி. சி.பி.ஐ. எம்-எல்.) அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக அவர் இயங்கினார். 1977-இல் அக்குழு கலைக்கப்பட்ட பின்னர், இந்தியக் கம்யூனிசப் புரட்சி இயக்கத்தின் வரலாற்றை ஆவணங்களுடன் தொகுத்தளிக்கும் மிக முக்கியமான பணியை மேற்கொண்டார். அகில இந்திய பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டியாலும், பின்னர் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியாலும் வெளியிடப்பட்ட ”லிபரேஷன்” இதழில் 1967 முதல் 1972 வரையிலான ஆவணங்களின் தொகுப்பு அவரது மேற்பார்வையில் 1992 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது.
இது மட்டுமின்றி, ”இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் – தோற்றம், வளர்ச்சி, பண்புகள்” என்ற இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிய விரிவான நூலை 1985-இல் எழுதினார். இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளே என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார். ”இந்தியாவின் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்”, ”இந்திய சீனப் போர் – இமாலய சாகசம்”, ”நக்சல்பாரி: முன்பும் பின்பும் – நினைவுகளும் மதிப்பீடும்”, ”இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (இரண்டு தொகுதிகள்)”, ”ஏகாதிபத்தியத்தின் கிடுக்கிப் பிடியில் இந்திய வேளாண்மை”, ”துயரம் தோய்ந்த வங்கப் பிரிவினை” – ஆகிய மிக முக்கியமான நூல்களை அவர் எழுதினார். அவரது படைப்புகளும் கட்டுரைகளும் இந்திய மற்றும் வெளிநாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஏடுகளில் வெளிவந்துள்ளன.
”எனக்கு உணவும் உறைவிடமும் அளித்துப் பாதுகாத்து எனது லட்சியத்திற்குத் துணை நின்ற எனது தோழர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டுள்ளேன். அது என்னால் திருப்பித் தர முடியாத கடன்” என்று அடக்குமுறைக் காலத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்த தோழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் தான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். புரட்சிகர குழுக்களுடன் தொடர்பு கொண்டு இயங்கியதோடு, அடக்குமுறைகளையும் பல்வேறு இடர்பாடுகளையும் இழப்புகளையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு, மார்க்சிய- லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு எமது வீரவணக்கம்!
பாலியல் வக்கிரத்துடன் ஒரு ஆசிரியர் மாணவியிடம் நடந்து கொள்வதை வெறுமனே பாலியல் சில்மிஷம் அல்லது பாலியல் தொல்லை என்று சொல்லி எளிதில் உங்களால் கடந்து செல்ல முடியுமா? தினமலர், தினமணி, தினகரன், நக்கீரன் என எல்லா தமிழ் நாளிதழ்களும், பத்திரிகைகளும் இப்படித்தான் எழுதுகின்றன.
நடந்துள்ளது ஒரு பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை என்பதையும், அதன் ஆணாதிக்க வக்கிரத்தையும் புரிந்துகொள்வதில் இருந்து விலகி வாசகர்களை ஒரு கிளுகிளுப்பான உலகத்தில் இழுத்துச் செல்வதில் சில்மிஷம் என்ற வார்த்தைக்கு முக்கிய பங்கிருக்கிறது. ‘பாலியல் தொல்லை’ என்ற வார்த்தையும் கூட அந்த வக்கிரக் குற்றத்தை தீவிரமான வன்முறையாக பார்க்காமல் மெல்லிய தவறாக சித்திரிப்பதோடு படிப்பவரின் சிந்தனையிலும் அதை பதிய வைக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில், முதல் சில இடங்களில் வரக் கூடிய, கல்வியறிவில் முன்னேறிய ஒரு மாவட்டம். கல்வியறிவில் முன்னணியில் இருந்தாலும் சமூக தரத்தில் அந்த மாவட்டமும் மற்ற மாவட்டங்களோடு சேர்ந்து பின்வரிசையில்தான் இருக்கிறது. அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம் தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பட்டியில் அக்கிராமத்தில் உள்ள மாவூத்து சாலையில் வசிக்கும் சடையாண்டி என்பவரது மகள் தங்கம்மாள் (வயது 14) எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
சந்திரசேகரன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியின் போது இப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தவர் இதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சந்திரசேகர் (வயது 24). தற்போது டி.கிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வருகிறார்.
அப்போதிருந்தே மாணவி தங்கம்மாளிடம் தான் அவளை காதலிப்பதாக சொல்லி, கையைப் பிடித்து இழுப்பதும், கட்டிப் பிடிப்பதும், கைவைப்பதுமாக பல்வேறு சித்திரவதைகளை செய்து வந்திருக்கிறார், சந்திரசேகர். தன்னுடைய பாலியல் வக்கிரங்களை அப்பெண் மறுத்த போதிலும் பிடிவாதமாகவே அரங்கேற்றி இருக்கிறான் அந்தப் பொறுக்கி. பொறுத்துப் பார்த்த அச்சிறுமி அவனது போக்கு குறித்து ஒரு கிராமத்து சிறுமி என்ற அளவில் பொறுத்துப்ப போனவள் பிறகு பொறுக்க முடியாமல் தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். இந்த சிறுமி மட்டுமல்ல, பாலியல் வக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இப்படித்தான் தனக்குள்ளேயே போட்டு வைத்துக் கொண்டு இறுதியில்தான் வெளியே பேசுகிறார்கள். அந்த அளவுக்கு நமது சமூகம் பெண்களை அடிமைகளாக நடத்தி வருகிறது.
உடனே அந்த சிறுமியின் பெற்றோர்கள் சந்திரசேகரின் பெற்றோரிடமும் இதனைக் கூறி அவனைக் கண்டித்திருக்கிறார்கள்.
இக்கண்டிப்பினால் ஒரு கிராமத்து சிறுமி மூலம் யாருக்கும் தெரியாமல் தவறு செய்து கொண்டிருந்த தனது சுய கவுரவம் பாதிக்கப்பட்டதாக கருதிய சந்திரசேகர் அச்சிறுமியை பழிதீர்க்க காத்திருந்தான். கடந்த மே 31-ம் தேதி ஊர் பொதுக்கழிப்பறை அருகே நடந்து சென்று கொண்டிருந்த தங்கம்மாளை வழிமறித்த சந்திர சேகர் அவளை கட்டிப் பிடிக்கவும், முத்தமிடவும் ஆரம்பிக்கவே, அப்பெண் கூச்சலிடத் துவங்கினார். உடனே சந்திரசேகர் ”சத்தம் போடாதே. என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உனக்கும் ஊரில் இருக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு உள்ளதாக ஊரில் சொல்லி விடுவேன்” என்று கூறி மிரட்டியுள்ளான். வேறு வழியில்லாததால் அமைதியான அச்சிறுமி உடனடியாக அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டாள்.
இனிமேல் தனது வாழ்க்கையை பிரச்சினைகளின்றி தொடர முடியும் என்று அப்பேதைச் சிறுமி நம்பவில்லை. மீண்டும் மீண்டும் சந்திரசேகரனது பிரச்சினையை பெற்றோரிடம் எடுத்துச் சொன்னாலும் கிராமத்தில் ‘நீ இடம் கொடுக்காமலா அவன் கையைப் பிடித்து இழுத்திருப்பான்’ என பிறர் சொல்லவே அது வழிவகுக்கும் என்று யோசித்தாருக்கவும் கூடும். இப்படியாக தற்கொலை செய்து தன்னையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள் அந்த பதினான்கு வயது சிறுமி. பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து அன்றே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.
முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 90 சதவீதத்திற்கும் மேல் உடலில் தீக்காயம் பட்டு விட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜூன் 4-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவளது மரண வாக்குமூலத்தின் படி ஜூன் 1-ம் தேதி சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது சிறுமிகளை பலாத்காரம் செய்தல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது’ என எழுதுகிறது நக்கீரன். இந்த செய்தியில் வக்கிர புத்தியுள்ள ஆண்களுக்கு வேண்டுமானால் பரபரப்பும், கிளுகிளுப்பும் இருக்கலாம். ஒரு இளம் மொட்டு கருக்கப்பட்டு, தற்கொலை செய்யும்படி ஒரு பொறுக்கியின்ன் பாலியல் வக்கிரத்தால் தூண்டப்பட்டிருக்கிறது. படிப்பவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களிடையே ஒரு சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துமாறு செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நக்கீரனுக்கோ விற்பனைக்கான பரபரப்பு இருக்கிறது. அதனால் படிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியை கிளப்புவதற்கு பதில் ஏதோ கிளுகிளுப்பான படம் பார்ப்பது போன்ற ரசனையை ஏற்படுத்திகிறது.
தினமலரும் சில்மிஷம் என்றுதான் எழுதுகிறது. தினமலரில் சந்திரசேகர் அடிக்கடி சில்மிஷம் செய்தார் என்பதுடன், ‘காதலிப்பதாக சொல்லி டார்ச்சர் செய்தார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காதல் கடிதம் கொடுத்தது போலவும், அதையே பல முறை அப்பெண்ணிடம் கொடுத்தார் என்பது போலவும் புரியவைக்க முயற்சிக்கிறது தினமலர். ஆனால் அப்போதுதான் பருவ வயதை எட்டியுள்ள ஒரு சிறுமியை அவளது அனுமதியே இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிடில் உனது நடத்தையை ஊருக்கு மத்தியில் கேவலப்படுத்துவேன் என்று மிரட்டுவதும் தான் தினமலரின் அகராதியில் காதல் டார்ச்சர் போலும்.
தினமலர் நாளிதழில் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தால் கட்டாயம் இந்த சில்மிஷம் குறித்து கேட்க வேண்டும். இல்லையேல் நாளையே உங்களுக்கும் இத்தகைய பிரச்சினை ஏதும ஏற்பட்டால் அதுவும் இப்படித்தான் வக்கிரமாக எழுதப்படும்.
பாலியல் தொல்லை காரணமாக தங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாக தினகரனும், தினமணியும் எழுதுகிறது. ஆனால் சந்திரசேகர் செய்த காரியம் ஏதோ பெரிய வன்முறை போலன்றி சிறிய அளவு தவறு அல்லது பாலியல் குறித்த கொஞ்சம் பலவீனமாக நடந்து விட்டார் என்ற தோற்றத்தை தான் இது படிப்பவர்களிடம் ஏற்படுத்துகிறது. மானம், உயிர் வாழ்தல் என எல்லாவற்றுக்கும் எதிராக ஒரு மிரட்டலை விடுத்துள்ள சந்திரசேகர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்து, கொன்று இருக்கிறான் என்பது தான் அப்பட்டமான உண்மை.
ஒரு குக்கிராமத்தில் வாழும் 14 வயது சிறுமிக்கு உலகம் என்ன பெரிதாக தெரிந்திருக்க முடியும். அந்த சின்ன உலகத்தையும், இள வயதின் துள்ளல் மிகுந்த விளையாட்டுக்களையும் சுருக்கிக்கொண்டு, தீயின் நாக்குகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கலாம் என முடிவு செய்த போது அந்தப் பிஞ்சின் மனம் எவ்வளவு தூரம் வெம்பிப் போய் இருக்கும். பேய்களையும், அரக்கர்களையும், பூதங்களையும், இருட்டையும் பார்த்தே பயப்பட தோன்றும் அந்த சிறுமிக்கு ஆண்களும் அப்போது வில்லன்களாகத்தானே தோன்றியிருப்பார்கள்.
இந்தக் கொடூரத்தை இழைத்தவன் ஒரு ஆண் என்பதற்காக வெறுமென பாலியல் தொல்லை என்று சொல்லி மட்டும் எப்படி ஒரு மனிதனால் கடந்து செல்ல முடியும். பத்திரிகை விற்க வேண்டுமென்பதற்காக எல்லா பத்திரிகைகளும் சந்திரசேகர் அச்சிறுமிக்கு இழைத்த அதே கொடுமையை இன்னும் பெரிதாக பரந்த அளவில் செய்கின்றன என்பதுதான் உண்மை.
சந்திரசேகன் போன்றவர்களை எல்லாம் பொது இடத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொல்ல வேண்டும். அப்படியானால் தான் இனி இப்படி செய்ய முயல்கிறவர்கள் பயப்படுவார்கள் என்று சிலர் சொல்லக் கூடும். இன்னும் சிலரோ அவனது ஆண்மையை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றி விட வேண்டும் எனத் தீவிரமாக வாதிடவும் கூடும். ஆனால் இந்த தீவிரக் கோபம் எய்தவனை விட்டு அம்புகளிடம் மட்டும் காண்பிப்பது ஏன்?
அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது இத்தகைய பொறுக்கிகளையும் அவர்களது குற்றங்களையும் மறைமுகமாக ஆதரித்தும், ஊக்குவித்தும் எழுதும்,பேசும் ஊடகங்களுக்கும், சினிமாத் துறைக்கும்தான் தேவைப்படுகிறது. இவர்கள்தான் சமூகத்தில் இத்தகைய குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தயார் செய்கிறார்கள். இந்த பத்திரிகைகளின் பார்வையில் வளர்ந்திருக்கும் சமூகமும் தனது பொதுச் சிந்தனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
இரவில் தனியாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண்ணை பாலியல் நோக்குடன் பார்ப்பது யார்? பேருந்தில் கூட்டத்தில் அயர்ந்து போய் விழும் ஒரு பெண்ணின் கைகளை சந்தர்ப்பமாக கருதும் கைகள் இல்லையா? பணி உயர்வும், ஊக்கத் தொகையும் பெறுவது ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவளது அந்தரங்க வாழ்வினை காரணாமாக காட்டி பேசுவது யார்? ஒரு பெண்ணின் கவனக்குறைவால் அவளது ஆடை நெகிழ்ந்திருக்கும் சமயங்களில் சில பார்வைகள் மகிழ்வது ஏன்? தன்னிடம் வேலை செய்யும் இள வயது பெண் கூலித் தொழிலாளியை ஒரு பண்ணையார் பாலியல் வக்கிரத்துடன் பார்ப்பது சகஜம் என்றால் காரணம் என்ன? இயல்பாக ஆண்களிடம் பேசும் ஒரு பெண்ணை ஆண்கள் மட்டுமே கூடியிருக்கும் ஒரு சபை எப்படி மதிப்பிடுகிறது?
இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம் வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?
இந்திய நிலபிரபுத்துவ சமூக கட்டமைப்பு பெண்களை போகப் பொருளாக, ஆணுக்கு அடங்கி நடப்பவளாகவே கட்டமைத்திருக்கிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன், கணவனுக்கு முன் எழுந்து, கணவனுக்கு பிறகு தூங்கச் செல்பவளே உண்மையான பத்தினி என்று ஏகத்துக்கும் பெண்களை அடிமையாகவும், இரண்டாந்தர குடிமகளாகவும் தான் பார்ப்பனிய இந்து மரபு இதுவரை நடத்தி வந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் செத்துப் போன சங்கராச்சாரிகள் வரையிலும் வேலைக்கு போகும் பெண்கள் யோக்கியமானவர்கள் இல்லை என்ற கருத்தும் விஷமத்தனமாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சங்கராச்சாரிகளுக்கும், சந்திரசேகரனுக்கும் பெண்கள் குறித்த இந்த பார்வையில் வேறுபாடு இல்லை.
மறுபுறம் ஐடி, இணையம், டெபிட் கார்டெல்லாம் வந்த பிறகும் பல படித்த, வேலைக்கு போகும் பெண்களே இதனை ஏற்றுக் கொண்டுதான் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கணவனுக்கு அடிமைகளாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகருக்கோ ஒரு உலகமே தெரியாத கிராமத்து இளந்தளிர் கையில் கிடைத்திருக்கிறது. தன்னைத் தவிர யாரையும் அவள் திருமணம் செய்ய முடியாதவாறு சூழ்நிலைகளை கட்டியமைக்க கிராமத்தில் வாய்ப்பிருப்பதால் அதற்கும் முயல்கிறான். இதிலிருந்து தப்பிக்க முடியும், எதிர்த்து போராட முடியும் என்ற தைரியத்தை பெற வாய்ப்பற்ற சமூக சூழலால் அச்சிறுமி உலகத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.
பரவி வரும் உலகமயமாக்கலின் துணை நிகழ்வான நுகர்வுக் கலாச்சாரமும் பெண்களை போகப் பொருளாகத்தான் பாவிக்கிறது. இணையம், பத்திரிக்கை எல்லாம் பாலியல் வக்கிரம் மிக்க காட்சிப் படிமங்களால், அத்தகைய கதைகளால் நிரம்பி வழிகிறது. எல்லாற்றையும் அனுபவிக்கத்தான் இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருப்பதாக உலகமயம் ஒவ்வொரு ஆணுக்கும் தனித்தனியாகவே விளம்பரங்கள், சமூக வாழ்வு மூலம் போதிக்கிறது.
ஏற்கெனவே நம்முடைய பாரம்பரிய அமைப்பின் பெண்ணடிமைத்தனம் ஆண்களை குரங்காக மாற்றியிருக்கிறது. கூடவே வரும் இந்த நுகர்வுக் கலாச்சாரம் அவனை கள் குடித்த குரங்காகவே மாற்றி விட்டது எனலாம். இதில் சந்திரசேகரும் அவன் கதையை படிப்போரும் விதிவிலக்கல்ல. எப்போது ஒரு ஆண், பெண்களை சக சமூக பயணியாக கருத துவங்குகிறானோ அப்போதுதான் சமூக மனிதர்கள் என்ற நாகரிக கட்டத்தை நாம் அடைய முடியும்.
செய்தி – ஞாநி சங்கரன்: போர்க் குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் இலங்கை மீது சர்வதேச நடவடிக்கை தேவை என்பதை கடுமையாக வலியுறுத்தும் அதே சமயத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கவில்லை என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு என்று டெல்லியில் சற்று முன் நான் சந்தித்த யோகேந்திர யாதவ் என்னிடம் தெரிவித்தார். நமக்குப் பிரச்சினை உள்ள எந்த நாட்டு தலைவரானாலும் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதைக் கைவிடமுடியாது என்று யோ தெரிவித்தார்.
நீதி: கலெக்டர் ஆபீஸ் அலுவலக உதவியாளர்களின் லஞ்சத்திற்கு எதிராக யுத்தம் துவங்கியிருக்கும் சூப்பர் ஹீரோக்களை, இப்படி இனப்படுகொலை, ஈழத்தமிழர் பிரச்சினை, கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற ‘குழாயடி சண்டை’களுக்கு கருத்து சொல்ல கேட்பதே பெரிய வன்முறை!
@@@@@@@@@@@@@@@
செய்தி – மாலன் நாராயணன்: நேற்று ஜெயலலிதா மூன்று அமைச்சர்களைப்ப் பதவி நீக்கம் செய்தார். இன்று அகிலேஷ் 36 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். மாயாவதி கட்சிப் பொறுப்பில் உள்ள அனைவரையும் டிஸ்மிஸ் செய்திருக்கிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி எனச் சொல்பவர்கள் இந்த ஜனநாயக நடவடிகைகளை என்ன சொல்லப் போகிறார்களோ?
நீதி: ஜெயலலிதா சர்வாதிகாரியென அழைக்கப்படுவது பொறுக்காமல், இப்படி உ.பி போய் பாயசம் கேட்கிறார் மாலன்! அறிஞர்களின் ஜல்லிசை காக்கைகளின் கத்தல் போல இருக்காதாம், ஏற்றுக் கொள்கிறோம்!
@@@@@@@@@@@@@@
செய்தி – Skp Karuna எஸ்கேபி கருணா: குளிரூட்டப்பட்டப் பாலைவனக் காற்றையே எட்டு நாட்களாக சுவாசித்த எனக்கு, எனது தென்னந்தோப்பின் தென்றல் இப்போதைய சொர்க்கம்!
நீதி: குளிரூட்டப்பட்ட பாலைவன நாடுகளுக்கு சுற்றுலா போயும், குளிர் சூழந்த அலுவலகங்களிருந்தவாறு கல்லூரி தொழில் பார்த்தும், அவதிப்படும் ஒரு தியாகியை புரிந்து கொண்டு ஆராதிக்கும் தென்றலே! இன்று முதல் நீ தியாகத் தென்றல் என்று அழைக்கப்படுவாயாக!
@@@@@@@@@@@@@@@@
செய்தி – வால் பையன்: காமமும், நாமமும், நீண்ட ரோமமும் இருந்தால் அவன் தான் சாமியார்.
நீதி: இந்த மூன்று ‘மு’க்களோடு, குற்ற பயமும், சுயமரியாதை மானமும், உண்மைக் கோபமும், சமூக ஒழுக்கமும் எனும் நான்கு ‘மு’க்கள் இல்லாதவனும் அதே சாமியார்தான்.
@@@@@@@@@@@@@@@
செய்தி – யெஸ். பாலபாரதி: எழுத்தில் நம்பிக்கையளிக்கக்கூடியவன்னு ஆளாளுக்கு பட்டியல் போடுற மாதிரி, இனிமேல் எழுதவேண்டாம் நம்பிக்கையற்ற எழுத்தாளர் பட்டியல் ஒண்ணு போலடாமான்னு யோசிச்சிங். முன்னிருக்கையை காலி பண்ணாமலேயே இருக்காங்கப்பா.. நிறைய பேரு..!
நீதி: பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழிப் படி வாழும் எழுத்தாள மகான்களை இப்படி முன்னிருக்கையிலிருந்து தூக்குவது சாத்தியமில்லை. பின்னிருக்கையில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் தொழிலாளிகளும், ஏனைய உழைக்கும் மக்களும் ஏழுத்தாயுதத்தை ஏந்தும் போது முன்னிருக்கைகள் தானே ஓடி ஒளியும்.
@@@@@@@@@@@@@@@@@
செய்தி – Ramasamy Alagarsamy ராமசாமி அழகர்சாமி:
கதை எழுதும் எழுத்தாளர்கள் யோகக்காரர்கள். பட்டியல் மட்டும் போட்டால் போதும். ஆனால் நம்மிடம் பட்டியல் போடச் சொல்பவர்கள் அதற்கான காரணத்தையும் சொல்லச் சொல்கிறார்கள். எழுதும் அளவுக்கேற்ப பட்டியலில் இடத்தை அளிக்க வேண்டும். முதல் இடம் கொடுத்தால் முழுப்பக்கம் எழுத வேண்டும். முக்கால் பக்கம் எழுதினால் இரண்டாம் இடம் கொடுக்கலாம், அரைப்பக்கம் எழுதினால் மூன்றாமிடம். இடமே இல்லையென்றால் எழுத வேண்டிய அவசியமே இல்லை. 25 பேரைப் பட்டியல் போடச் சொல்லிக் காரணம் சொல்லச் சொன்னால் நாக்குத் தள்ளிப் போகும். இந்த ஆட்டைக்கு நான் வரலன்னு சொல்லிட்டு ஓடிப் போறதத் தவிர வேறெ வழியில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை!
நீதி: பட்டியலும், பரப்பளவும் போட்டுத்தான் ஒரு எழுத்தாளனின் கீர்த்தி ஒளி வீசுகிறது என்றால் இது எழுத்தாளனின் தர வரிசைப் பிரச்சினையில்லை, தரம் பற்றிய பிரச்சினை!
@@@@@@@@@@@@@@@@@
செய்தி – விநாயக முருகன் இன்றைய எகனாமிக்ஸ் டைம்ஸில் சன்னிலியோனின் சின்ன பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் இப்படி சொல்லியுள்ளார்: “There is Nothing More Sexy Than a Smart Business Man.” பெண்கள் எப்போதும் எதார்த்தவாதிகள்தான்.
நீதி: சன்னி லியோன் பெண் என்பதாலேயே அவருடைய கருத்து பெண்களுடைய எதார்த்தத்தை பிரதிபலிக்குமென்றால், விநாயக முருகன் எழுத்தாளர்களின் பிரதிநிதியாகவும், அவர்களின் ‘எதார்த்தத்தை’ பிரதிபலிக்க கூடியவராகவும் நிச்சயமாக இருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@
செய்தி – R Muthu Kumar முத்துகுமார்: சபாநாயகரானார் சுமித்ரா மகாஜன்! வாழ்த்துகள்!
# மங்கையர் மலர், அவள் விகடன், குமுதம் சிநேகிதி, சினேகிதி, குங்குமம் தோழி சமூகத்தின் கவனத்துக்கு….
நீதி: “சமையல் கரண்டியிலிருந்து சபாநாயகர் மணி வரை” சுமித்ரா மஹாஜன் ஒரு மஹாராணியான வரலாறு – என்று புத்தகம் போட உள்ள கிழக்கு பதிப்பகத்தை விட்டுவிட்டீர்களே முத்து!
@@@@@@@@@@@@@@@@@@
செய்தி – தமிழ் ஸ்டுடியோ அருண்: சினிமா எனும் அதி உன்னதக் கலை…
எனக்கு பிடித்த எழுத்தாளர் ஒருவர், கோடம்பாக்கத்து குளுவான்களே தங்களை உயர்த்தி பேசிக்கொள்ளும்போது, இலக்கியவாதிகள் அப்படி தங்களை உயர்த்தி பேசிக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்று எழுதி இருந்தார். பல ஆண்டுகளாக தமிழ்கூறும் நல்லுலகில் இப்படியான மிக மோசமான பார்வையை பார்த்து வருகிறேன். இலக்கியம் உன்னதமான கலை, சினிமா நீசக் கலை என்கிற மேதாவிகளின் கோட்பாடு எனக்கு புரிவதில்லை. சினிமா, இலக்கியம் இரண்டும், அதனதன் வடிவங்களில் தனித்து உயர்ந்து நிற்கும் கலை. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா என்றால் ஏதோ தீண்டத்தகாத ஒரு கலையாக பாவிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இங்கே வெளிவரும் வணிகக் குப்பைகள்தான். உருப்படியான சினிமா எடுக்கப்பட்டிருந்தால், இப்படியான தர்க்கங்கள் எழுந்திருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு இலக்கியத்தின் மதிப்பு தெரியும். அதன் கலைத் தன்மை அறிந்து அதனை மெச்சுவதில் நான் ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகவே சினிமாவை, அதன் தமிழ்நாட்டு அளவீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, நீச்சக் கலையாக பார்ப்பதில் அருவருப்புதான் உண்டாகிறது.
நீதி: சினிமாவையும் சினிமா மாந்தர்களையும் பட பூஜை முதல் ரிலீஸ் வரை ஆராதித்தும், அவர்கள் ஓய்வுபெறும் போது அரசியல் சிம்மாசனத்தில் வைத்தும் அழகு பார்க்கும் தமிழகம், என்னைக் கிள்ளினான் என்று அச்சில் ஐந்து அரை டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும், டிஜிட்டலில் ஐம்பது கால் டிக்கெட்டுகளை காட்டிக் கொண்டும் சண்டை போடும் இலக்கிய உலகத்தை எங்கே கண்டது, என்னவாகக் கொண்டது?
ஒன்று நிச்சயம், நல்ல சினிமாவுக்காக நாட்பட போராடும் மேதகு அருண் அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை, இலக்கியமும் புரியவில்லை, இரண்டையும் இயக்கும் அரசியலையும் அறியவில்லை. ஆனாலும் துணிந்து இப்படி கருத்து சொல்லும் ‘வீரத்திற்கு’ வாழ்த்துக்கள்!
@@@@@@@@@@@@@@@@@
செய்தி – Suresh Kannan சுரேஷ் கண்ணன்: உயிர்மையில் அதிஷா அதிஷா சிறுகதையை வாசித்தேன். அவர் ஓர் இளம் எழுத்தாளர் என்பதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் நல்லவிதமாகத்தான் சொல்ல வேண்டும். அவ்வகையில் அவரது சிறுகதை ஒரு நல்ல முயற்சி. சுவாரசியமான நடை. ஆனால் அவர் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நல்லது. புகழ்ந்து வரும் கடிதங்களுக்கு (அவரே எழுதியது உட்பட) மயங்க வேண்டாம். சிறுகதையில் அவர் கையாளும் மொழியின் மீது மேலதிக கவனம் செலுத்த வேண்டும். வெகுஜன இதழ்களின் தட்டையான மொழியில் இருக்கிறது. அதிஷாவிற்குள் திறமையான ஒரு குழந்தை எழுத்தாளர் ஒளிந்துள்ளார். அது இந்தச் சிறுகதையில் அபாரமாக வெளிப்படுகிறது. மற்றபடி கதையின் பிரச்சாரத் தொனியை இயன்ற அளவிற்கு நுண்ணியமாக கையாள அவர் எடுத்திருக்கும் முயற்சி அவ்வளவாக கைகூடி வரவில்லை. அதிஷா ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக மலர வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும் ஆர்வமும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது.
நீதி: ஏன் என்னவென்று தெரியாமல் தவறிழைக்கும் குழந்தைகளை பல நேரங்களில் மிரட்டியும், கொஞ்சம் அடித்தும் கூட திருத்த வேண்டியிருக்கும். அண்ணன் சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கும் குழந்தை எழுத்தாளர்கள் தொடர்பான இந்த விமரிசனத்தில், வன்முறையின் சுவுடு கூட இல்லாத ட்ரிபிள் காந்திய விமரிசினத்தை பார்க்கும் போது, குழந்தை எழுத்தாளர் மட்டுமல்ல குழந்தை விமரிசகர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@
செய்தி – Kumaresan Asak குமரேசன், தீக்கதிர் ஆசிரியர்: “நீங்கள் சொன்னதை மக்கள் ஏற்கவில்லையே, இனி என்ன செய்யப்போகிறீர்கள்?” “மக்கள் ஏற்கிற வரையில் சொல்வோம், மக்கள் ஏற்கிற வகையில் சொல்வோம்.”
நீதி: போயஸ் தோட்டத்திலிருந்து ஏன் வெளியேற்றப்பட்டோம் என்ற விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தோட்டம் செல்லும் பட்சத்தில் இந்த விளக்கத்தை எப்படி தொடர்ந்து சொல்ல முடியும்? இரண்டு வரின்னாலும் கொஞ்சம் கவனமா எழுதணும் தோழர்!
@@@@@@@@@@@@@@@@
செய்தி – கடற்கரய் மத்தவிலாச அங்கதம்: …….மார்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போனால் கடைவியபாரிகள் ‘வாங்க அக்கா..வாங்க அக்கா’ என சண்டைக்கு நிற்பதைப்போல வம்புக்கு நின்கிறார்கள். ஒரு மார்க்கெட் உள்ளே சென்று ஆசுவாசமாக வேண்டிய பொருளை வாங்கும் சந்தர்பத்தை நமக்கு வியபாரிகள் கொடுப்பதேயில்லை. முதலில் நமக்கு தேவையாக காய்கறிகள் அவர்களிடம் உள்ளதா? நாம் விரும்பும் விலையோடு ஒத்து போகிறதா? என்பதை பொறுத்தி பார்க்கவே விடுவேனா என்கிறார்கள்.
ஏன் இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு அடிபிடி? ஏன் இவ்வளவு பதற்றம்? ஒன்றுமே புரியவில்லை. அப்படியே அழைத்தவர் கடையைவிட்டு அடுத்த இடம் நகர ஆரம்பித்தார் நம்மை அழைத்த வியபாரி ‘ஒருமையில் போ..போ..அங்க இணாமா கொடுப்பாங்க வாங்கினு போ’ என்று நம்மிடம் எரிச்சலை உண்டாக்கும் விதத்தில் வார்த்தையை அடுக்குகிறார். நாம் விரும்பு பொருளை நாமே தேர்ந்தெடுக்கவும்..அதை வாங்கவும் நமக்கு சுதந்திரம் இல்லையா? வியாபாரிகள் எனும் போர்வையில் தாதாயிசத்தோடு ஒரு நுகர்வோரை அனுகும் முறையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
நீதி: இந்த ‘லோ கிளாஸ்’ தாதா வியாபாரிகளிடமிருந்து காப்பாற்றத்தானே ‘ஹை கிளாஸ்’ ரிலையன்ஸ் ஃபிரஷ், வால்மார்ட், நீல்கிரிஸ், ஹெரிட்டேஜ் என்று ஏகப்பட்ட நாகரீக கடைகள் உள்ளது. ஆனாலும் லோ கிளாசிடம் ஐம்பது காசுக்கு பேரம் என்ற பெயரில் நீங்கள் நடத்தும் யுத்தத்தை, காதில் ரத்தம் வழிய அன்றாடம் சந்திக்கும் அம்மக்கள் அதை ஃபேஸ்புக்கில் எழுதி வெளியட முடியாது என்பதால் நீங்கள்தான் யோக்கியவான்கள்!