Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 653

சிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !

8

.சி.யில் இருப்பவர்களுக்கு
எதார்த்தத்தின்
தட்பவெப்பம் மட்டுமல்ல
ஏழைகளின் கர்ப்பவெப்பமும்
தெரிவதில்லை!

nunguவெயில் நிக்க முடியல
சீக்கிரம்… சீக்கிரம் என்று
அய்ந்து நிமிட காத்திருப்பில்
ஆயிரம் கேள்வி கேட்கும் அவனுக்கு
அதுவே கதியான
அவள் வாழ்க்கை சுடுவதில்லை!

நுங்கின் ஈரம் காத்து
தலை ஆவியாகும்
அவள் கோலம் பார்த்தும்
‘ இதான் பகல் கொள்ளையா
பத்து ரூபாய்க்கு நாலுதானா ‘
என நுகர்வோனின்
வாங்கும் சக்தி
குலை, குலையாய் காய்க்கிறது!

“அய்யய்யோ… என்ன இப்புடி சொல்றீங்க
காய்ப்பு கிடையாது, டிமாண்டுங்க ”
பழிக்கஞ்சி பதைக்கிறாள்
நுங்கு விற்கும் பெண்.

ஒரு லிட்டர் கின்லேயை
இருபது ரூபாய்க்கு வாங்கி
நாக்கு மரத்துப் போகும் அவன்
சாமர்த்தியத்தில் உறைகிறான்,
“கொடுக்கலாம். கொடும்மா…
எல்லாம் எனக்கும் தெரியும்
இன்னும் ரெண்டு போடு!”

“ஏன்சார் நுங்குன்னா
ரோட்ல கெடக்கா
கழுத்தெலும்பு ஒடிய
நான் தூக்கி வந்தா
நீ இடுப்பெலும்ப ஒடிக்கிற மாதிரி
காய் கேக்குற!

அரக்கோணத்துல
ஆளுக்கொரு கை
ஆர்.பி.எஃப் எடுத்து,
இறங்குற ஸ்டேசன்ல
இன்னும் ரெண்டு போலீசு எடுத்து,
இப்ப இங்க நீ வேற,
மரத்துல பறிச்ச காய விட
என் கூடையில பறிச்ச காய்
கூடும் போல
இதுல நான் பகல் கொள்ளையா!
கட்டுப்படியாவாது சார்!
விழிநுங்கு வெடித்ததுபோல்
இமையோரம் சூடு கசிந்தது.

ரிலையன்ஸ் பிரெஷ் அம்பானியிடம்
வாயை மூடிக்கொண்டு
கேட்டதைக் கொடுத்தவன்,
தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம்
தத்துவம் பேசினான்,
“கிராமத்துல சிரிப்பா சிரிக்குது
இங்க டவுன்ல வந்து கிராக்கி பண்ணி
லாபம் பாக்குறீங்க
சரி ஒன்னாவது கொடு”!

“ஏன்சார், சொல்றேன்னு கோவிச்சுக்காத
இந்த முத்துன நுங்கோட மல்லுகெட்டலாம்
உன்னோட முடியல,
உனக்கு கட்டுப்படி ஆவலேன்னா ஆள வுடு!

ஆவடிக்கு தாண்டி அவனவன்
பிளாட்டு போட்டு நிலமே
காய்ஞ்சு கட்டாந்தரையா கெடக்கு,
ஏது பன மரம்?
இருக்கறதும் காய்ந்து மட்டக் கருகுது!
பன மரமே இல்ல!
பயிர் விளையாம நிலமே ரியல் எஸ்டேட்டா கெடக்கு,
ஊர் உலகம் தெரியாம
நீ வேற உயிர எடுக்குற? போய்யா!”
கையிலுள்ள இலைக்கொத்தால்
ஈ யோடு
அவனையும் ஓட்டினாள்!

இதயம் இல்லாதவனின்
மூளையைப் பார்த்து
உண்மையில்
நுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது!
_____________________

– துரை.சண்முகம்

அம்பானி ரயில் ஓட்டினால் என்ன நடக்கும் ?

4

மும்பை மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 8-ம் தேதி மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவானால் துவக்கி வைக்கப்பட்டது. மெட்ரோ சேவையை இயக்கும் அனில் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம் ரயில் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதலில் கூறியிருந்த முதல்வர் சவான் பின்னர் தனது முடிவைக் கைவிட்டுவிட்டு விழாவில் கலந்து கொண்டார்.

சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘ரிலையன்சு மெட்ரோ’ என்ற பெயர் கம்பெனி லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேட்டதற்கு பதிலாக “இதனை மும்பை மெட்ரோ என்றே குறிப்பிடுங்கள், ரிலையன்சு மெட்ரோ என அழைக்க வேண்டாம்” என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார் சவான்.

பிரு்த்விராஜ் சவான் தொடங்கி வைத்தல்
மும்பை மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டத்தை தொடங்கி வைக்கும் ‘டம்மி பீசு’ முதலமைச்சர் பிருத்விராஜ் சவான்.

மும்பை மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் திட்டமிடப்பட்ட இதனை இரண்டு ஆண்டுகளில் முடிப்பதாக திட்டம். அப்போது திட்டச் செலவாக ரூ 2,300 கோடி திட்டமிடப்பட்டது. ஆனால் ஆறு ஆண்டுகளில் முடிக்கப்பட்ட இத்திட்டத்தின் செலவு தொகை தற்போது ரூ 4,300 கோடியை அடைந்து விட்டதாக இத்திட்டத்தின் தனியார் பங்குதார நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்சு கட்டுமான நிறுவனம் கூறுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் வேலையை இழுத்தடிப்பதோடு, அதிக செலவும் செய்வார்கள். மாறாக, தனியார் நிறுவனங்கள் ‘திறமையாக’ குறித்த காலத்துக்கு முன்பே வேலையை குறைந்த செலவில் முடித்து விடுவார்கள் என்று கூறித்தான் தனியார்மயத்தை அமல்படுத்தி வருகிறது அரசு. அதன் விளைவு இப்படி பல்லிளிக்கிறது.

ரிலையன்ஸ் தனது திறமைக் குறைவிற்கான தண்டனையை மக்கள் மீது சுமத்த விழைகிறது. மெட்ரோ ரயிலுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்த ரூ 9 க்கு பதிலாக ரூ 10 என்றும், அதிகபட்ச கட்டணத்தை ரூ 14 க்கு பதிலாக ரூ 40 என்றும் உயர்த்த திட்டமிட்டிருக்கிறது. அரசு மின்சார ரயிலில் அதிகபட்ச கட்டணமே 14 ரூபாய்தான்.

மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்சு உட்கட்டமைப்பு நிறுவனமும், வெயோலியா போக்குவரத்து நிறுவனமும் இணைந்து 2006- ல் உருவாக்கியிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் என்ற தனியார் நிறுவனம் மூலமாகத்தான் இந்த ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் ரூ 9 முதல் 13 வரைதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு விலை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், அந்த நிபந்தனையை தூக்கி கடாசி விட்டு தன் கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ள மும்பை மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரத்தில் கட்டணத்தை ஏற்றியே தீருவேன் என்று அடாவடி செய்கிறது ரிலையன்ஸ்.

தனியார் துறையில் திட்டமிடல் சரியாக இருக்கும், நியாயமான விலை நிர்ணயம் இருக்கும் என்று பேசும் பல முதலாளித்துவ ஆதரவாளர்கள் ரிலையன்சின் திட்டத்திற்கான கால தாமதம் மற்றும் கட்டண உயர்வு பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

அனில் அம்பானி.
திருட்டுத்தனத்தில் கொட்டை போட்ட திருபாய் அம்பானியின் புத்திரர் அனில் அம்பானி.

ரிலையன்சை எதிர்த்து மும்பை பெருநகர அபிவிருத்திக் கழகம் மும்பை உயர்நீதி மன்றத்தை அணுகியது. மும்பை பெருநகர வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஈ.பி. பரூச்சா ‘இது மும்பை நகர மக்களுக்கும் தனியார் நிறுவனத்துக்குமான சண்டை’ என்றுதான் வர்ணிக்கிறார். அது தான் உண்மையும் கூட.

வழக்கு விசாரணையின் போது ‘பழைய கட்டணம் ஜூலை 9 வரைதான் பொருந்தும்’ என்றும், ‘அதன் பிறகு கட்டண உயர்வை தவிர்க்க முடியாது’ என்றும் ரிலையன்சு நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மத்திய மெட்ரோ ரயில் சட்டம் 2002-ன்படி கட்டண நிர்ணயம் செய்ய மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதிகாரம் இருப்பதாக ரிலையன்சு நிறுவனத்தினர் வாதிடுகின்றனர். 2002-ம் சட்டத்தின் 33-வது விதி முதன்முதலாக கட்டண நிர்ணயம் செய்யும் போது மெட்ரோ ரயிலின் நிர்வாகமே தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ள வழிவகுக்கிறது. ஆனால், மும்பை மெட்ரோவின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மெட்ரோ ஒன் நிறுவனத்தை ரிலையன்ஸ் கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறாக, தான் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட கட்டண நிபந்தனைகளை மீறுவதற்கு சட்டத்திலும் நடைமுறையிலும் உள்ள ஓட்டைகளை திறமையாக பயன்படுத்துகிறது ரிலையன்ஸ். திருட்டுத்தனத்தில் கொட்டை போட்ட திருபாய் அம்பானியின் புத்திரர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

பொதுத்துறை – தனியார் கூட்டு என்பது அரசு உதவியுடன் நடக்கும் தனியார் கொள்ளைதான் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்? 2002-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சட்டம் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்குகளான பா.ஜ.க ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மும்பை மெட்ரோ
மும்பை மெட்ரோ – மேட்டுக்குடியினருக்கு மட்டும்?

ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ஏற்றிக்கொள்ள ஏகபோக அனுமதி முதலாளிகளுக்கு எப்படி தரப்பட்டுள்ளதோ அதே போல தனியார் அரசு கூட்டு (public private partnership) என்ற பெயரில் மெட்ரோ ரயில் கட்டண நிர்ணயம் இப்போது அம்பானி கையில் போயிருக்கிறது. சாலை வழியாக போனால் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனம் ஆங்காங்கு சுங்கசாவடி அமைத்து வாகனங்களிடம் வசூல் செய்வது போல, மெட்ரோ ரயிலில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ரிலையன்சும் கட்டணம் என்ற பெயரில் மக்களை சட்டப்படி கொள்ளையிட ஏதுவாக அரசு சட்டம் இயற்றியுள்ளது. கொள்ளைதான் என்றாலும் சட்டப்படி நடப்பதால் நீதிமன்றம் அவர்களைத் தண்டிக்க முடியாது என்கிறது தனியார்மயம்.

ஏற்கெனவே குளிரூட்டப்பட்ட வண்டிகள், தானியங்கி கதவுகள் கொண்டதாக மெட்ரோ ரயில் சேவை இருப்பதால், இதனை பயன்படுத்த சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மும்பை வாசிகள் சற்றே தயங்கிக் கொண்டிருக்க, ரயில் கட்டண உயர்வு அவர்களை இதன் பக்கமே வரவிடாமல் தள்ளி விடுகிறது என்பதுதான் உண்மை. ஏழைகள் பயணிக்க முடியாத நவீன அக்கிரகாரமாக மெட்ரோ ரயில் மாற்றப்பட்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வழக்கமாக முதலாளிகள் வியாபாரம் போணியாகாத போது கொடுக்கும் சலுகையைப் போல இப்போதும் முதல் முப்பது நாட்களுக்கு ரூ 10-ஐ சலுகை கட்டணமாக ரிலையன்சு அறிவித்துள்ளது. ஏனெனில் பயணம் துவங்கிய முதல் வாரத்தில் 21 லட்சம் மக்களே இதில் பயணித்துள்ளனர். இவ்வளவுக்கும் இந்த 11.4 கி.மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களிலேயே மெட்ரோ ரயில் கடந்து விடுகிறது. இதே தூரத்தை சாலை வழியாக கடக்க மும்பையில் குறைந்தபட்சம் 90 நிமிடங்களாவது ஆகும். எனினும் மக்களின் வாழ்க்கை பொருளாதார நிலைமைகளில் இந்த கட்டணம் கொடுத்து பயணம் போவது பெரும்பான்மையினருக்கு சாத்தியமில்லை என்பதால்தான் வியாபாரம் போணியாகவில்லை. அதே நேரம் இது தொடரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. வேறு வழியின்றி குறைந்த நேரத்தில் பயணம் போய் ஆகவேண்டிய தேவை அதிகரித்து வருவதால் மக்கள் நீண்டகால நோக்கில் மெட்ரோவை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதுதான் ரிலையன்ஸ் எனும் வேட்டை நரி துணிந்து கட்டணத்தை உயர்த்தக் காரணம்.

சென்னை மெட்ரோ
உழைப்புச் சுரண்டலில் உருவாகும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

இப்போது சென்னை மற்றும் ஜெய்ப்பூரிலும் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று ஓரளவு பகுதி அளவில் முடியும் தறுவாயில் உள்ளன. 14,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சில இடங்களில் மட்டும் நிறைவு பெற்று விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுடன் ஒரு ஜப்பானிய வங்கியும் (Japan International Corporation Agency) கடன் கொடுத்துள்ளது. கடனுடன் திட்ட ஆலோசனையையும் கொடுத்து, பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களை விற்கவும் செய்துள்ளது இந்த வங்கி. உதாரணமாக ரயில் பெட்டிகள் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான அல்ஸ்டோமால் விற்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சேர்த்து அழுத தொகையைத்தான் நமது தலையில் பயண கட்டணமாக வசூலிக்க இருக்கிறது அரசு.

மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வட இந்திய  தொழிலாளிகளுக்கு தினச் சம்பளமாக ரூ 160 தான் தந்தார்கள் அதில் ஈடுபட்டிருந்த தனியார் கட்டுமான நிறுவனங்களான எல்&டி, சிசிசிஎல், ஆப்கான்ஸ் போன்ற நிறுவனங்கள். அவர்களது தேவையை பயன்படுத்திக் கொண்டு நாளொன்றுக்கு அவர்களிடமிருந்து 12 மணி நேர உழைப்பை உறிஞ்சினார்கள்.

மின்சார ரயிலில் சீசன் டிக்கெட்டுகள் பெரும்பாலும் மாதமொன்றுக்கு 20 கிமீ தூரம் வரை ரூ 85 க்கு கிடைத்து வருகிறது. மெட்ரோ ரயிலில் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படப் போவதில்லை. இங்கேயும் ரிலையன்சின் தந்திரமே வெல்ல வாய்ப்பிருக்கிறது. வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்தாவது பயணம் செய்ய காத்திருக்கும் நடுத்தர வர்க்கம் இதை எதிர்த்து போராடுமா என்பதும் கேள்விக்குறி.

மெட்ரோ ரயில் போன்ற தனியார் கட்டுமான திட்டங்களில் தொழிலாளிகள் நேரடியாக சுரண்டப்படுகிறார்கள். எந்திரங்கள், தொழில்நுட்பம், வண்டிகள், கடனுக்கு வட்டி என்று ஏகாதிபத்திய நிறுவனங்கள் மக்களை மறைமுகமாக சுரண்டுகின்றன. மாநகர அவஸ்தைகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் பயணிகளோ வேறு வாய்ப்புகள் இன்றி மெட்ரோவை தேர்ந்தெடுக்க வேண்டியது கட்டாயம் ஆகியிருக்கிறது. இப்படித்தான் தனியார் மயம் பல்வேறு முனைகளில் நம்மை கொள்ளையடிக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

–    கௌதமன்

4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !

11

விருத்தாசலம் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – 2014ல் பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு), கந்தசாமி கண்டர் கல்லூரி, நாமக்கல் “அரசு பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது” என்ற தலைப்பில் ஆற்றிய உரை:

professor-chandrasekarஇந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரியான தருணத்தில் அவசியமான தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் எங்கும் இல்லாத சூழலில் கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் பெற்றோர் சங்கம் இத்தகைய மாநாட்டை நடத்துகிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. எந்த தொழிலிலும் 200 சதவீதம், 300 சதவீதம் லாபம் கிடையாது. பங்குச் சந்தையில்கூட குறியீடு அதிகரிக்கும் போது இவ்வளவு அதிக லாபம் கிடைக்காது. ஆனால் இந்திய அளவிலும், தமிழகத்திலும் பள்ளிக்கூடம் நடத்தினால், கல்வி நிறுவனங்கள் நடத்தினால் பல மடங்கு உத்திரவாத லாபம் பெற முடியும். பள்ளிக்கல்வியை போல் உயர் கல்வியும் இத்தகைய சீரழிவுக்கு ஆளாகி இருக்கிறது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. கல்வி கட்டணம் ஆண்டுக்கு 12,900 ரூபாய் மட்டும் தான். ஆனால் சுயநிதி கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை ஊழல் என்றுதான் சொல்ல வேண்டும்.

பள்ளிக் கல்வியை எடுத்து கொண்டால் நாட்டின் உண்மையான செல்வம் மனித வளம்தான். அந்த வகையில் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின்பருவம் வரையிலான 12 ஆண்டு படிப்பு இன்றியமையாதது. அதை எவ்வாறு வழங்க வேண்டும்?

கல்வி சேவை என சொல்லுகிறார்கள்.  பல ஊர்களில் செல்வந்தர்கள் தங்களது நிலங்களை பள்ளிகளுக்கு தானமாக கொடுத்து அனைவரும் கல்வி கற்பதை வளர்த்தனர். கல்வி சேவை உண்மையாக விளங்கியது. இன்று கல்வியை விற்பவர்கள் யார்? சாராயம் விற்றவர்கள், காவல் துறையால் எச்சரித்து விரட்டபட்டவர்கள், எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் இவர்கள்தான் இன்று கல்வி தந்தைகள், கல்வி வள்ளல்கள்.

சென்னையில் ஒரு கல்வி நிறுவன உரிமையாளர் தனது நான்கு மகள்களுக்கும் ஆளுக்கு ஒரு பொறியியல் கல்லூரியை சீதனமாக கொடுக்ககூடிய மோசமான சூழலில் இருக்கிறோம். இந்த கால கட்டத்தில் உங்கள் இயக்கம் இப்படிப்பட்ட போராட்டத்தை எடுத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. தனிமனிதனால் எதையும் சாதிக்க முடியாது. சங்கமாக ஒன்று பட்டு போராடினால் எந்த துயரங்களையும் கடக்கலாம். வெல்ல முடியாத கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும். ஆசிரியர் இயக்கமானாலும், மாணவர் இயக்கமானாலும் தொழிலாளர் இயக்கமானாலும் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே வெல்லமுடியும்.

அந்த காலத்தில் செல்வந்தர்கள் கல்விக்காக தங்கள் நிலங்களை கொடுத்தார்கள், சேமிப்புகளை, நகைகளை கூட கொடுத்தார்கள். ஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக 10 சென்ட் நிலத்தை கூட அடமானம் வைக்கவும், நகைகளை விற்று படிக்க வைக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி கட்டணத்திற்கு என்று தமிழக அரசு மூன்று கமிட்டிகளை நியமித்தது. ஆனால் தனியார் பள்ளிகள் நிர்ணயம் செய்த கட்டணங்களை வசூலிப்பதில்லை என்பதை நாங்கள் எங்கும் உரக்க சொல்ல தயாராக இருக்கிறோம். கல்வி துறை அதிகாரிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியும். இந்த சூழலில் பெற்றோர்கள் மாணவர்கள், ஒன்று பட்டு போராட வேண்டியது அவசியமானது ஆகும்.

ஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் கல்வியை வணிகப் பொருளாக்கி தனியாரிடம் கொடுத்து விட்டு, தனியார் செய்த வணிகத்தை அரசு செய்கிறது. டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது. அதிலும் எலைட் பார் என சென்னையில் திறந்து அதன் வியாபார வளர்ச்சியை பெருக்கி, இப்போது மாவட்ட தலைநகரங்களில் எலைட் பார் திறக்க முயற்சி செய்து வருகிறது. பீர் என்ற மது பானத்தை குடிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், மாணவர்கள். டாஸ்மாக் பெருமளவு சமுதாயத்தை சீரழிக்கிறது.

பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து போராடினால் தனியார் கல்விக் கொள்ளையை முறியடிக்க முடியும். மேலும் ஆங்கிலம் படித்தால்தான், சாதிக்க முடியும் என விளம்பரம் செய்கிறார்கள். ஆங்கிலம் இல்லாமல் ஏன் முடியாது என்பதை நாம் திருப்பி கேட்க வேண்டும்.

என்னுடைய 18 ஆண்டுகால படிப்புகளில் இரண்டு ஆண்டு மட்டுமே ஆங்கிலம். கிராமத்திலிருந்து அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன். யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுமம் மூலம் பல கல்லூரிகளுக்கு தர நிர்ணயம் செய்யம் குழுவில் உறுப்பினராக பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன். தாய் மொழி தமிழ் உதவி புரிந்திருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியும். படிப்பதை தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போதுதான் அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.

“ஆங்கிலம் பேச தெரியவில்லையா கவலை வேண்டாம் 1 மாதம், 15 நாளில் ஆங்கிலம்” என விளம்பரம் செய்யபடுவதை நீங்கள் பார்க்கலாம். ஆங்கிலம் இல்லாமல் சாதிக்க முடியும் என்பதை நிருபிக்க சில உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். உலகில் ஏற்றுமதியில் முதல் 10 இடங்கள் உள்ள நாடுகள்

  1. சீனா
  2. அமெரிக்கா
  3. ஜெர்மனி
  4. ஜப்பான்
  5. பிரான்ஸ்
  6. தென் கொரியா
  7. நெதர்லாந்து
  8. ரஷ்யா
  9. இத்தாலி
  10. இங்கிலாந்து.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் அவரவர் தாய் மொழியில்தான் அரசு நிர்வாகம், கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிரான்சில்  ஆங்கிலம் பேச தெரிந்தவர்களை தேடிபிடிக்க வேண்டும். ஜெர்மனியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பு, பல்கலைக்கழகக் கல்வி அனைத்தும் ஜெர்மன் மொழிதான், அதுபோல் இரண்டாம் உலகப்போருக்குபின் வளர்ந்த ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் அனைத்திலும் ஜப்பான் மொழிதான் பயன்பாட்டுமொழி. தென்கொரியா இன்று நுகர்வு பொருள் உற்பத்தியில், எலக்ட்ரிகல் பொருள் உற்பத்தியில், ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

ஆங்கிலம் மூலம் சாதிக்கலாம் என்ற சிந்தனை அடிமைத்தனத்தின் விளைவு. ஆங்கிலேயர்கள் தங்களுக்கு உதவி செய்ய சிலரை ஆங்கிலம் படிக்க சொல்லி அவர்களுக்கு சில அற்ப சலுகைகளை வழங்கினர். அந்த அற்ப சலுகைகளுக்காக அனைவரும் ஆங்கிலம் கற்கும் மோகம் உருவாகி இன்று அனைத்து மக்களுக்கும் விருட்சமாக பரவியுள்ளது.

ஆங்கிலம்தான் முக்கியம் என பேசபவர்கள் நவீன உலகுக்கு ஆங்கிலம் அவசியம் என வாதிடுகிறார்கள். உலகில் நான்கில் ஒரு பங்கு மக்கள் கூட ஆங்கிலம் பேசுவதில்லை. அடுத்து, ஊரோடு ஒத்து வாழ ஆங்கிலம் தேவை என பேசுகிறார்கள். சமீபத்தில் பாராளுமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஒருவர் இந்தியில் பேசினார். அதற்கு சொன்ன காரணம் தாய் மொழியில் படித்தால், பயன்படுத்தினால் தான் செயல் திறன் வளரும் என்பதுதான். அதற்கான உரிமை வேண்டும் என பேசினார். அரசு நிர்வாகம், வணிகம் ஆகிவற்றை தம்தம் நாடுகளில் தாய் மொழியில் பயன்படுத்த வேண்டும் அப்போதான் செழுமையடையும்.

அடுத்து தகவல் தொழில் நுடபத்துறைக்கு ஆங்கிலம் அவசியம் என பேசுகிறார்கள். தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அனைத்தும் பயன்பாடும் தாய்மொழியில்தான் இருக்கிறது.

உலகில் அடுத்த 30 ஆண்டுகள் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். மனித வளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். தாய்மொழி கல்வி அத்தகைய வளத்தை திறன் மிக்கதாக வளர்ச்சியடையச் செய்வதில் முழு பங்காற்றுகிறது. கல்வியில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஆங்கிலோ இந்தியன் என பல பிரிவுகள் இருந்தன. இன்று சமச்சீர் பாடத்திட்டம் வந்த பிறகு மேற்கண்ட பிரிவுகள் தேவையில்லை என உங்களது பெற்றோர் சங்கம் மெட்ரிக் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வழக்கு போட்டுள்ளீர்கள். அது சரியானதுதான். தனியார் பள்ளிகள் இதை வைத்து கட்டணம் பறிக்கின்றன.

+1 மாணவர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்கள் 2 முதல் 3 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இராமநாத புரம், நாமக்கல் மாவட்டத்தில் எலைட் பிரிவு என தொடங்கி சில மாணவர்களை தனியே பிரித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்துள்ளனர்.

அரசு பள்ளி தரமில்லை என சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் தனியார் பள்ளிகளின் பங்காளிகள் என்பதை மறக்ககூடாது. ஒரு சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாமல் இருக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் 53 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பெற்றோர்கள் அரசு பள்ளிகளை பயன்படுத்த வேண்டும். சக்திக்கு மீறி கடன் வாங்கி சிரமப்படாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்தால் மேற்படிப்புக்கு உதவி செய்ய முகம் தெரியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். நானே 100 பேருக்கு மேல் மாணவர்களுக்கு உதவி பெற்று தந்திருக்கிறேன். அதன் மூலம் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என படித்து வருகிறார்கள்.

இந்த பகுதி பின்தங்கி இருக்கிறது. பெண்களை மேல் படிப்பு படிக்க வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை. பள்ளி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து முடிக்க விரும்புகின்றனர். தங்கள் பொறுப்பை பெற்றோர்கள் தட்டி கழிப்பதனால்தான் கம்மாபுரம் ஊரில் இரு மாணவிகள் தம் உயிரை தாமே மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் நடந்தது. ஆனால் தற்போது தேர்ச்சி விகிதத்தில் முதல் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை நாம் பார்க்க வேண்டும். அரசு போட்டித் தேர்வுகளில் சார். ஆட்சியர், அதிலும் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு பெண்கள் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாரதி கண்ட புரட்சி சமுதாய மாற்றம் வருகிறது. அத்தகைய மாற்றத்தில் பெற்றோர்களாகிய நீங்களும் ஈடுபட வேண்டும். சிரமம், சிக்கல் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள்தான் வி.ஏ.ஓ.போன்ற தேர்வில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுகின்றனர். தனியார் பள்ளிகள் பாடத்திட்டம் கொள்ளை லாபம் அடிப்பதற்காகதான் இருக்கிறது. தற்போது உலக அளவில் பாடத்திட்டம் பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் மூலம் உருவாக்குகிறார்கள். IGCSE (integrated general certificate secondary education) இந்தியா முழுவதும் 310 இடங்களில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். 18 மாநிலங்களில் பெரும் நகரங்களில் வரவிருக்கிறது.

பெற்றோர்களாகிய நாம் தான் இத்தகைய பள்ளிகூடங்கள் வருவதற்கு காரணம். சுகாதாரமான குடிநீர், தரமான கல்வி, மருத்துவம் தன் குடி மக்களுக்கு தருவது அரசின் கடமையாக இருக்க வேண்டும். உண்மையான வளர்ச்சி என்பது சாதாரண மக்களுக்கு அனைத்தும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதில்தான் இருக்கிறது.

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு ஒப்பிட முடியாது என்பதற்கு பல் வேறு உதாரணங்கள் சொல்ல முடியும். தனியார் பள்ளிகள் கவர்ச்சிகரமாக கட்டிடங்கள், குளிரூட்டப்பட்ட வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பு என விளம்பரம் செய்கின்றன. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு இது போன்று இல்லை என பிரச்சாரம் செயகிறார்கள். அனைத்து பள்ளிகளும் இது போல் இல்லை. மேலும் தனியார் பள்ளிகளில் பணி புரிபவர்கள் அரசு பள்ளிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது பங்குதாரர்கள், விருப்ப ஓய்வு பெற்று தனியார் பள்ளியில் பணிபுரிவது என அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் குறிப்பிட தகுந்த பங்கு ஆற்றுகிறார்கள்.

தனியார் பள்ளிகள் “மெமரி பேஸ்ட் லேனிங்” அதாவது உருப்போடுதல் முறையில் மாணவர்களை தயாரித்து 1192, 1196 என மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். அரசு பள்ளியில் அத்தகைய பயிற்சி இல்லை. மேலும் 10-வது பாடத்தை 9-ம் வகுப்பிலே படிக்க வைப்பது, 12-ம் வகுப்பு பாடத்தை 11-வது வகுப்பில் படிக்க வைப்பது என முறைகேடாக ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் கல்வி கற்பிக்கிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது அல்லாமல், கூடுதலாக மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம், தேர்தல் வாக்காளர்கள் சேர்த்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு, ரேசன் கார்டு பரிசோதனை என பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன் கல்வியும் கற்பிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் காலை 7 முணி முதல் இரவு வரை படிப்பு படிப்பு என மாணவர்கள் குறிப்பிட்ட வேலைக்கு பழக்கப்படுத்துகிறார்கள். மேலும் இங்கு மாணவர்களுக்கு கட்டாய தனிபயிற்சி கல்வி உண்டு. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தனிபயிற்சி அதாவது “டியுசன்” குற்றமாக கருதப்படுகிறது. அரசு பள்ளியில் படித்தவர்தான் இந்திய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம். அது போல் நிர்வாக துறைகளில் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் ஐ.ஏ.எஸ்.போன்ற பதவிகளில் அரசுபள்ளி மாணவர்கள்தான் வருகிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிக்கு தான் செல்கிறார்கள்.

அரசு பள்ளியில் சைக்கிள், மதிய உணவு, சாமட்ரி பாக்ஸ், நோட்டு புத்தகம், லேப்டாப் என அனைத்தும் பாராபட்சம் இல்லாமல் இலவசமாக அரசு தருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் ரூ 45,000, பிறகு கலை நிகழ்ச்சிகளுக்கு உடைகள், அதற்கு கட்டணம், விழாக்களுக்கு, சுற்றுலா, தேர்வுகளுக்கு, ஸ்போக்கன் இங்கிலீசு என அனைத்தும் பணமாக பெற்றோர்களிடமிருந்து பறிக்கபடுகிறது. இலவசம் என்றால் இன்றைய நேற்றைய முதல்வர் வழங்குவது அல்ல. அவைகள் அனைத்தும் நமது வரிப்பணம்.

ஆரம்பகல்வியில் அரசு பள்ளிகளில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். படிப்படியாக மேல்நிலை கல்வியில் தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். 2012-13 ஆண்டில் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது கல்வி துறை தாக்கல் செய்த புள்ளி விபரங்கள்.

வகுப்பு தனியார்பள்ளிகள் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி
1 முதல் 5 வரை 8,68,772 14,63,767 8,47,432
6 முதல் 8 வரை 1,92,775 13,84,000 5,76,000
9 மற்றும் 10 90,997 7,20,381 2,92,370

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களை, மீனை காத்திருந்து கொத்தி தூக்கும் கொக்கு போல் தனியார் பள்ளிகள் ஏஜெண்ட் வைத்து ஊருக்கு ஊர் போய் மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, “450 மதிப்பெண் இருந்தால் ஹாஸ்டல் ஃப்ரி, 480 இருந்தால் ஹாஸ்டல் பிளஸ் கல்வி கட்டணம் ஃப்ரி வீடு எடுத்து தருகிறோம்” என சொல்லி நன்றாக படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளிகள் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்க்கின்றனர். இதன் மூலம் தாங்கள் தேர்ச்சி விகிதத்தை உத்திரவாதப் படுத்துகின்றனர். சராசரி மாணவனை நன்றாக படிக்க வைப்பது தான் கல்வியின் சாதனை, ஆசிரியரின் திறமை எனலாம். நன்றாக படிக்கும் மாணவனை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதுதான் தனியார் பள்ளிகள் சாதனை. இதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேணடும். செய்திதாள்களை பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டும். டாக்டர், என்ஜினியர் என்பதை தவிர ஏராளமான படிப்புகள் இருக்கிறது. இத்தகைய படிப்புகளில் நடுத்தர வசதி படைத்தவர்கள் தான் படிக்கிறார்கள். சாதாரண குடும்பத்து மாணவர்கள் படிக்க பெற்றொர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி. சேர்ந்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை ஆசிரியர், தலைமை ஆசிரியரோடு கலந்து பேச வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் சில உரிமைகளை வழங்குகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் எதையும் மதிப்பதில்லை. நீதிபதிகள் கட்டண நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் மீறி பல் மடங்கு பணம் பெற்றோர்களிடம் வசூலிக்கிறார்கள். கல்வி துறை அதிகாரிகளும், அமைச்சரும் கண்டு கொள்வதில்லை. தனியார் பள்ளிகள் இப்படி அத்து மீறி நடப்பது அனைவருக்கும் தெரிந்தே தான் நடக்கிறது. சட்டப்படி உள்ள எந்த உரிமைகளும் நமக்கு தானாக கிடைக்காது. வீரம் தீரம் செறிந்த மக்கள் போராட்டங்களால் தான் சட்டத்தில் உள்ள உரிமைகளை கூட நாம் வென்றெடுக்க முடியும். அதற்கு சங்கமாக திரண்டு போராட வேண்டும் என கேட்டு கொண்டு, இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி அமைகிறேன். வணக்கம்.

தகவல் :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக !

2

பா.ஜ.கவின் வசுந்தர ராஜே தலைமையிலான இராஜஸ்தான் மாநில அரசு தொழில்துறை தாவா சட்டம் 1947, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1971, தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகிய தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக திருத்துவதற்கான அமைச்சரவை குறிப்பை தயாரித்திருக்கிறது. இது தொடர்பான மசோதாக்களை அடுத்த மாதம் மாநில சட்டசபையில் தாக்கல் செய்து, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள்
குறைந்த கூலிக்கு அதிக உழைப்பு சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளிகள்

90 சதவீதத்துக்கு மேற்பட்ட இந்திய உழைக்கும் மக்கள் முறைப்படுத்தப்படாத துறைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் பணிபுரிந்து வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். உதாரணமாக 1990-களுக்குப் பிறகு, வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவதாக விளம்பரப்படுத்தி, கொண்டு வரப்பட்ட வாகன உற்பத்தித் துறையில் 56 சதவீதம் பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். உற்பத்தித் துறை முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 52 சதவீதம் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளிகள் என்பது வெறுமனே பெயர்ச்சொல் மட்டுமல்ல, குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை சுரண்டும் ஒரு வினைச் சொல்லும் கூட.

கடந்த 10 ஆண்டுகளாக நிரந்தரத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் முறைசாரா துறையிலேயே 100% வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு மட்டும் ஒப்பந்த வேலை வாய்ப்புகள் 39% அதிகரித்தன. நிரந்தர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவே இல்லை.

தாங்கள் விரும்பியபடி நினைத்த நேரத்தில் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் உரிமை வேண்டும் என்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள்தான் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களின் காரணமாக இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் முதலாளிகள் கூறுகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் ஆகக் குறைந்த பட்ச கூலி கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் உரிமை வேண்டும்; விரும்பிய நேரத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும்; பற்றாக்குறை கூலிக்கு எதிராகவோ, வேலை நேர அதிகரிப்பை மறுத்தோ, பாதுகாப்பற்ற பணிச்சூழலை கண்டித்தோ முணு முணுத்தால் கூட வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், உரிமைகளற்ற கொத்தடிமைகளாக தொழிலாளர்களை வேலை வாங்கி தமது லாப வேட்டையை நடத்துவதற்கு ஏற்றபடி சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதுதான் முதலாளிகளின் விருப்பம்.

சிறுதொழில்கள்
அழிக்கப்படும் சிறுதொழில்கள்

சட்டங்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும், அவற்றை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் பழகுனர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என தொழிலாளர்களை சட்ட விரோதமாக சுரண்டி வரும்  முதலாளிகள் தற்போது இந்த சட்டங்களையே ஒழித்துக் கட்ட கோருகின்றனர்.

சட்டவிரோதமாக தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொழிலாளர் நலத் துறை முதல் அடிமட்ட காவல் துறை அதிகாரிகள் வரை அவர்களது எச்சில் காசை பொறுக்கி பிழைத்து வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை புறக்கணிப்பதில் நாட்டிலேயே முதல் இடம் வகிப்பது, மோடி ஆண்ட குஜராத் மாநிலம்தான் என்பதும், மோடி கார்ப்பரேட்டுகளின் டார்லிங் ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல.

இந்நிலையில் குஜராத்தில் ஒளிரும் வெளிச்சத்தை இந்தியா முழுவதும் ஏற்றப் போவதாக பிரச்சாரம் செய்து மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது, மோடி தலைமையிலான பா.ஜ.க. பெயரளவில் மிஞ்சியிருக்கும் பணி பாதுகாப்பு சட்டங்களையும் ரத்து செய்வதன் மூலம் தொழிலாளர் போராட்டங்களை சட்ட விரோதமாக்கி முதலாளிகளுக்கு வெளிச்சம் காட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது புதிய அரசு.

முதலாளிகளின் லாப வேட்டைக்காக விவசாயத்திலிருந்து விரட்டி அடிக்கப்படும் கூலித் தொழிலாளர்கள், காடுகளிலிருந்து துரத்தப்படும் பழங்குடி மக்கள், அழிக்கப்பட்டு வரும் நெசவு, கைத்தொழில், மீன் பிடிப்பு துறைகளின் சிறு உற்பத்தியாளர்கள் என்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களுக்கு விசிறியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த உத்தரவாதமும் இன்றி முதலாளிகளின் தேவைக்கேற்ப அலைக்கழிக்கப்படுவதற்கு சட்டம் வகை செய்ய வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் மத்திய-மாநில கூட்டு பட்டியலில் உள்ளதால், மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. எனவே இந்த துறையை மாநில பட்டியலில் சேர்த்து மாநிலங்கள் தமக்குள் போட்டி போட்டு முதலாளிகளுக்கு சாதகமாக சட்டங்களை திருத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

வசுந்தரராஜே சிந்தியா
மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

இந்த ஆலோசனையை அமல்படுத்துவதற்கு முதலாளிகள் தேர்ந்தெடுத்திருக்கும் முதல் மாநிலம் இராஜஸ்தான். தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தின் டெல்லி-மும்பை பிரிவு, சரக்கு போக்குவரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரயில் பாதை (DFC), மற்றும் டெல்லி-மும்பை தொழில் தாழ்வாரம் ஆகியவற்றின் பகுதியாக இருப்பதால் இராஜஸ்தான் மாநிலம் முதலாளிகள் மொய்ப்பதற்கான மையமாக உருவெடுத்து வருகிறது. செயின்ட் கோபேன், ஹீரோ, ஹோண்டா, லாஃபார்ஜ் ஆகிய நிறுவனங்கள் இராஜஸ்தானை நோக்கி படையெடுத்திருக்கின்றன.

மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

ஜூன் 4-ம் தேதி டாடா குழும முதலாளி ரத்தன் டாடா ராஜஸ்தான் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய அடுத்த நாள் அம்மாநில அரசு தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்களை அறிவித்திருக்கிறது. முதலாளிகளின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றிக் கொடுக்கும் ஊழியர்கள்தான் அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் என்பதில் இன்னமும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா, என்ன?

இராஜஸ்தான் அரசாங்கம் முன் வைத்திருக்கும் திருத்தங்களின்படி 300 தொழிலாளர்கள் வரை வேலை நீக்கம் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. தற்போதைய விதிமுறைகளின்படி 100 தொழிலாளர்களுக்கு மேல் வேலை நீக்கம் செய்ய அனுமதி பெற வேண்டும். கடந்த 2000-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தொழிலாளர்களை யாரையும் கேட்காமல் வேலையிலிருந்து துரத்தும் வரம்பை 100 தொழிலாளர்களிலிருந்து 1,000 ஆக உயர்த்துவதற்கு நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரைத்திருந்தார். தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த சட்டத் திருத்தம் கைவிடப்பட்டது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் கொலு வீற்றிருக்கும் மோடி அரசில் இந்த சட்டங்கள் படிப்படியாக நீர்க்கப்பட்டு எத்தனை தொழிலாளர்கள் இருந்தாலும், யாரையும் கேட்காமல் தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டு ஓடி விடலாம் என்று வழி வகை செய்யப்படும்.

சுபீர் கோகரன்
புரூக்கிங்ஸ் என்ற அமெரிக்க சிந்தனை குழாமின் இந்திய இயக்குனரும், முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னருமான சுபீர் கோகரன்.

இரண்டாவதாக, தற்போது 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் இனிமேல் 50 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தாது. நடைமுறையில் முதலாளிகளால் செல்லாக் காகிதமாக்கப்பட்டு விட்ட இந்த சட்டமும் நீர்த்துப் போகவிருக்கிறது.

மூன்றாவதாக, 20 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்றும் மின்சாரம் பயன்படுத்தாத நிறுவனங்களை பொறுத்த வரை இந்த வரம்பு 40 தொழிலாளர்கள் என்றும் மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் லஞ்சம், ஊழல் என்று கவலைப்படாமல் தொழிற்சாலை சட்டம் பரிந்துரைக்கும் வேலைநாள் வரையறை, பாதுகாப்பான பணிச் சூழல், ஆண்/பெண் பாகுபாடு காட்டாமை, குறைந்த பட்ச கூலி போன்றவற்றை முதலாளிகள் அலட்சியப்படுத்துவதற்கு வழி வகை செய்யப்படும்.

இராஜஸ்தான் அரசின் சட்ட திருத்தங்களுக்கு மோடியின் மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு மற்ற மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு சட்ட திருத்தங்களை நிறைவேற்றும் என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சப்புக் கொட்டுகின்றனர்.

‘இந்த சட்டங்களை புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்துவதாக திருத்தலாம், ஏற்கனவே செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பழைய சட்டத்தை கடைப்பிடிக்கலாம்’ என்று புரூக்கிங்ஸ் என்ற அமெரிக்க சிந்தனை குழாமின் இந்திய இயக்குனரும், முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னருமான சுபீர் கோகரன் கூறியிருக்கிறார். தொழிலாளர்களிடையே, பழைய தொழிலாளர்கள், புதிய தொழிலாளர்கள் என்ற  பிரிவினையை உருவாக்கி, இந்த திருத்தங்களுக்கு எதிராக போராடுவதை முறியடிக்கலாம் என்று நயவஞ்சகமாக இதனை பரிந்துரைத்திருக்கிறார் கோகரன். முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்றவாறு அரசுகளின் கொள்கைகளை மாற்றியமைக்கும் வேலைகளை செய்து வரும் சிந்தனை குழாமில் பணிபுரியும் இவர் முதலாளிகளின் கைக்கூலியாக கருத்து சொல்வதில் ஆச்சரியமில்லை. ஆனால், இவர் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியாகவும் பணி புரிந்திருக்கிறார் என்பதிலிருந்து இந்த அரசு யாருடைய நலனுக்கானது என்று தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற கருங்காலி தொழிற்சங்க அமைப்போ, “பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் சட்டங்களை மறுபரிசீலனை செய்யத்தான் நாங்கள் ஒத்துக் கொண்டோம், இப்போது இராஜஸ்தான் அரசு செய்யவிருப்பது சீர்திருத்தம், அதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று மோசடி செய்கிறது. முயல்களுடன் ஓடிக் கொண்டே, நாய்கள் வேட்டையாட உதவும் பாரதிய மஸ்தூர் சங்கம் போன்ற ஆளும் வர்க்க அமைப்புகளை தொழிலாளர்கள் துரத்தி அடிக்க வேண்டும்.

நிரந்தர தொழிலாளர்-ஒப்பந்த தொழிலாளர், புதிய தொழிலாளர்-பழைய தொழிலாளர் என்று தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஆளும் வர்க்க சூழ்ச்சிகளையும் அதற்கு அடியாளாக இருக்கும் பாஜக அரசுகளையும் முறியடித்து அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும்.

–    அப்துல்

மேலும் படிக்க

மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !

1

மோடி அலையா? அல்லது மோடி சுனாமியா? இல்லை, காங்கிரசு எதிர்ப்பு அலையா? நடந்து முடிந்த பதினாறாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் கொண்டு போய் அமர்த்தியது  எது என்ற பட்டிமன்றத்தை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவை எதுவுமே கிடையாது. வழமையான திருகு சுற்றுப்பாதையில் பயணப்படும் தரகு முதலாளிகளின் அரசியல், பொருளாதாரம் கிரமமான முறையில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருக்கடியில் சிக்கிக்கொள்வதும், வெறுப்பில் மக்கள் மூழ்குவதும்  எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப் போவதாக ஒரு இரட்சகர் தோன்றி வாக்காளர்களை ஏய்த்து ஆட்சியைப் பிடிப்பதும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவதும் நாம் காணாததில்லை. ஆனால், இப்போது ஏதோ புதிய பாதையில்  புதிய பயணம் தொடங்கி நாடு எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளும் நிச்சயம் தீர்க்கப்படும் என்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பல தேர்தல் கூத்துகளை அரங்கேற்றி, செயற்கையாக அலையும் சுனாமியும் எழுப்பப்பட்டது.

கங்கை பூஜை
தனது பிரதமர் கனவு நனவானவுடனேயே, பார்ப்பன சடங்கு – சம்பிரதாயங்களின்படி கங்கை நதிக்குப் பூஜை செய்யும் நரேந்திர மோடி.

அந்தப் பிரமை இப்போதும் பராமரிக்கப்படுகிறது. காங்கிரசு, பவார், முலயம், மாயாவதி, லாலு, நிதிஷ், கருணாநிதி, ”இடதுசாரிகள்” ஆகியோரின் படுவீழ்ச்சிகளோடு ஒப்பிட்டு, மோடியின் வெற்றி குறித்து ஊடகங்களால் ஊதிப்பெருக்கிக் காட்டப்படுகிறது. முன்பும், இந்திராவும், ஜனதாவும், ராஜீவும் கூட இந்த மாதிரியான தேர்தல் வெற்றிகளைப் பெற்றார்கள். அடுத்த சில ஆண்டுகளிலேயே தலைகுப்புற வீழ்ந்தார்கள். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் துணையில்லாமல் அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்குக் கூட நாடாளுமன்றத்தில் பலம் பெறாத போதும் மோடி இமாலய சாதனையை  எட்டிவிட்டதாக ஒரு பிம்பம் வரையப்படுகிறது.

இதையும் கூட, இந்த நாட்டுக்கேயுரிய அரசியல் நிலைமைகளுக்கேற்ப பார்ப்பன பாசிசப் பஞ்ச தந்திரங்களைப் பயன்படுத்தியே ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.கவினர் சாதித்துள்ளனர்.  சாதிரீதியாகவும் மதரீதியாகவும் நாட்டு மக்களைக் கூறுபோட்டு ஒருமுனைப்படுத்தினர். மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அரசியல் ஆதிக்கக் கும்பல் ஆகிய இரட்டைக் கவட்டிகளை ஊன்றிக்கொண்டு சாதித்தனர்.

கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள அச்சு, தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய ஊடக பீரங்கிகள், இட்லரின் கோயபல்சு-கோயரிங் புளுகுணிகளே அதிசயக்கக் கூடிய வகையில் மோடி துதிபாடும் பாசிச பிரச்சாரங்களைக் கொண்டு இந்திய மக்களின் காதுகளைத் தகர்த்தன. மோடியைச் சுற்றி அரசியலற்ற, சின்னத்தனமான கவர்ச்சி மோகத்தைக் கட்டமைத்தனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – முன்னேற்றம் மற்றும் திறமைமிகு நிர்வாகம் என்ற கவர்ச்சி முழக்கத்தை முன்தள்ளிய  ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல், அதற்குள் தனது பார்ப்பன – பாசிச அரசியல் ஆதிக்க இந்துத்துவா செயல் திட்டத்தையும் மோடி- அமித் ஷா  மதவெறிக் கிரிமினல் கொலைக் குற்றங்களையும் தந்திரமாகவும் சதித்தனமாகவும் ஒளித்து வைத்துக் கொண்டனர்.

தானே பீற்றிக்கொள்ளும் கொள்கை-கோட்பாடு களுக்கு மாறான, எதிரான ஊழல்வாதிகள், பிழைப்புவாதிகள், கட்சிமாறிகள், சாதியவாதிகள், பிராந்தியவாதிகள், சமூகவிரோதிகள், தேசத்துரோகிகள் ஆகியோருடன் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டனர். நீண்டநாள் கட்சி விசுவாசிகளையும் ஓரங்கட்டி விட்டு சினிமாக்காரர்கள், கருப்புப்பண, கள்ளச்சந்தை, கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தினார்கள்.

முசாஃபர் நகர் அகதிகள்
உ.பி முசாஃபர் நகரில் ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறிக் கும்பல் ஜாட் சாதியினரைத் தூண்டி விட்டு நடத்திய கலவரத்தால் பாதிக்கப்பட்டு, ஜூலா என்ற கிராமத்திலுள்ள மசூதியில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள முசுலீம்கள் (கோப்புப்படம்)

பாசிச பஞ்ச தந்திரங்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல,  நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலுக்குச் சாதகமாக அமைந்து விட்டன. மறுகாலனியாதிக்க, தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கப் புதிய பொருளாதாரக் கொள்கையின் எதிர் விளைவுகளைப் புரட்சிகர, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் பொருத்தமான, அவசியமான மாற்றுக்களை முன்வைத்துப் பயன்படுத்தத் தவறி விட்டன. ஒருபுறம் போலி மதச்சார்பின்மை, போலி சீர்திருத்தம், போலி ஜனநாயகம்-முற்போக்கு, போலி இடதுசாரி அரசியல் பேசும் சக்திகள்; மறுபுறம், வலது கடைக்கோடி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க பார்ப்பன பாசிசக் கும்பல் மற்றும் பிழைப்புவாதிகள், சாதியவாதிகள் அடங்கிய கூட்டணி; இரண்டில் பின்னதை நாட்டு மக்கள் தெரிவு செய்து கொண்டார்கள். இது ஏன்? எப்படி நிகழ்ந்தது?

கடந்த கால் நூற்றாண்டு காலமாக அமலாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கையாலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க போன்ற பிற்போக்கு சக்திகளாலும் வர்க்க ரீதியிலும், சாதிரீதியிலும், மதரீதியிலும்  இந்திய சமூகம் முனைவாக்கப்பட்டது (polarized) ஓட்டு வங்கிகளாகத் திரட்டப்பட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு நுகர்பொருள் சந்தையைப் பெருமளவு விரிவாக்குவதற்காக வரம்பு மீறிய ஊதியங்களும் எளிய வட்டிக் கடன்களும் பன்மடங்கு வாரி வழங்கப்பட்டு, அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப்பிள்ளைகளாக மேல்தட்டு ஊழியர்கள், அதிகாரிகள் அடங்கிய  ஒரு மேட்டுக்குடி உருவாக்கப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற உயர் தொழில் நுட்பம் சார்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில், சந்தைக் கூட்டாளிகள் இணைந்தனர். கார்ப்பரேட் ஊடகம் இவர்களிடம் அரசியலற்ற, சமூக மதிப்பீடற்ற,  சுயநலக் காரியவாதம், நுகர்வுக் கலாச்சாரம், பண்பாட்டுச் சீரழிவு-பிற்போக்கு, குட்டி முதலாளிய அற்பவாதம், சித்தாந்தம் ஆகியவற்றை விதைத்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் பலன்களால் கொழுத்த இந்த சுயநலப் பிரிவினர் மோடியின் வளர்ச்சி, முன்னேற்றக் கொள்கை தமக்கு மேலும் ஆதாயங்களைக் கொண்டுவந்து குவிக்கும் என்று நம்பினார்கள்.  பார்ப்பன எதிர்ப்பு திராவிட மற்றும் இடதுசாரி இயக்கங்கள் காலூன்றாத பகுதிகளில் பிற்பட்ட சாதியினர் தாமே ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் சாதிவெறி, மதவெறியை வரித்துக் கொண்டவர்களானர்கள். இவர்களோடு 2,3 தலைமுறையாக சமூகநீதி, இடஒதுக்கீடுக் கொள்கையின் பலன்களைப் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்ட்ட சாதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில், சந்தைக் கூட்டாளிகளான இசுலாமியர்களும் ஒருசேர ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் சாதிவெறி, மதவெறியுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி, மற்றும் அதானி.
புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை தாம் மட்டும் அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற பேராசையில் மூழ்கிக் கிடந்த மகாராஷ்டிரா-குஜராத் தாழ்வாரப் பகுதியைச் சேர்ந்த தரகு முதலாளிகளுள் சிலர் (இடமிருந்து) ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி, மற்றும் அதானி.

இதன் பலன்களை அதிகபட்சமாக அறுவடை செய்துகொள்ளும் விதமாக ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றக் கொள்கைகளைப் பசப்பிக் கொண்டே, வாக்காளர்களைச் சாதிரீதியிலும், மத ரீதியிலும்  முனைவாக்கப்படுத்தும் சதிகளிலும் தந்திரங்களிலும் வல்லவரும், மோடியின் வலதுகரமுமான அமித் ஷா களத்தில் இறக்கப்பட்டார். முசாஃபர்நகர் மதவெறிப் படுகொலைகளை நடத்தி ஜாட் சாதியினரை இசுலாமியருக்கு எதிராகத் திரட்டியதில் இருந்து தேர்தல் முடிவுகள் வந்ததும் மீண்டும் மீரட்டில் மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றியது வரை இசுலாமியர்கள் எவ்வாறு மதவெறிக் கூட்டத்தால்  சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்ற கதையை நாடே அறியும்.

சரண்சிங், திகாய்த் தலைமையில் ஒன்றுசேர்ந்து பல போர்க்குணமிக்க விவசாய போரட்டங்களைக் கண்ட ஜாட் சாதியினரும் இசுலாமியர்களும் இப்போது கொலைவெறி கொண்ட எதிரெதிர் சக்திகளாக நிற்கிறார்கள். இதுதான் மோடி-அமித் ஷா கும்பலின் வெற்றிச் சூத்திரம்.  தாக்குதலுக்கு அஞ்சி இசுலாமியர்கள் வாக்குச் சாவடிகளை அண்டாமலிருப்பதும் அதையே மோடி-அமித் ஷா கும்பல் சாதகமாக்கிக் கொள்வதுமான ”குஜராத் மாடல்” வேறு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூத்திரத்தின் மறுபக்கம் ஒன்றுண்டு. அயோத்தி பாபரி மசூதி இடிப்புக்குப் பிறகு உ.பி., பீகாரில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன பாசிச கும்பலின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்டுக் கிடந்தது. மாயாவதியின் தலித்-பார்ப்பன- இசுலாமியர் கூட்டும், முலாயம்  சிங்கின் யாதவ்-இசுலாமியர் கூட்டும் மாறிமாறி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  கும்பலை முடக்கி வைத்திருந்தது. பீகாரில் லாலுவின் யாதவ் – இசுலாமியர் கூட்டும் பா.ஜ.க.- நிதிஷின் ஜனதா கூட்டணியும் முறிந்த பிறகு பூமிகார் – குர்மி- இசுலாமியரின் கூட்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  அல்லாத ஆட்சி அமையவும் காரணமாயிருந்தது. இந்தமுறை மேற்படி சாதிகளின் தலைவர்கள், பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதி கொடுத்தும் தனக்குச் சாதகமான சாதி, மத முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டது, மோடி-அமித் ஷா கும்பல்.

மோடி-அமித் ஷாவின் உருவில் தமது இயல்பான கூட்டாளியைக் கண்ட மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் தமது ஏகபோக ஊடக ஆதிக்கத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் எடியூரப்பா,  ரெட்டி சகோதரர்களின் இலஞ்சம்-ஊழல், அதிகார முறைகேடுகளைப் பின்னுக்குத் தள்ளினர்; காங்கிரசு கூட்டணி அரசின் இலஞ்சம்-ஊழல், அதிகார முறைகேடுகளை மட்டும் முதன்மைப்படுத்தினர். தாமே மிகப்பெரிய கருப்புப் பண முதலைகளாக இருந்தபோதும், அன்னா ஹசாரே, ராம்தேவ் முதலிய எடுபிடிகளை முன்னிறுத்தி கருப்புப்பண எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அதற்கு காங்கிரசு கூட்டணி அரசை இலக்காக்கினர். பல ஆயிரம் கோடி ரூபாய்களையும் ஏகபோக ஊடகங்களையும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.  கும்பலின் ஆணையில் திரட்டிக்கொடுத்து அதன் வெற்றியை எளிதாக்கினர்.

***

ர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலின் அரசியல் தலைமையாக மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் இருந்தபோதும், அதன் பொருளாதாரப் புரவலர்களாக எப்போதும் மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் இருந்திருக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தின் வேரும் விழுதும் இவர்கள்தாம். பரம்பரை வட்டி லேவாதேவி மூலதனம், காலனிய காலத்தில் போதைப் பொருள் கடத்தல், தரகுத்தொழில் மூலதனம் இவற்றைக் கொண்டு தோற்றமெடுத்த இவர்கள்  காங்கிரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். இரண்டினுடனான அரசியல் கள்ளக்கூட்டைக் கொண்டு  இப்போது இந்திய ஆளும் வர்க்கத்தின் முதன்மைச் சக்தியாக வளர்ந்து நிற்கிறார்கள்.

03-caption

1947 அதிகார மாற்றத்துக்குப் பிந்திய காலத்தில் அடிப்படைக் கட்டுமானத் துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகள் தேவையானபோது அரசுத் துறை மூலதனத்தைச் சார்ந்து நின்ற இவர்கள், அரசுத் துறையுடன் ஒப்பந்தத் தொழில்கள், உடனடிக் கொள்ளை இலாபம் தரும் நுகர்பொருள் உற்பத்தி, ஏகாதிபத்தியத்துடனான தரகுத் தொழில்கள், பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 1990-களில் தனியார்மயம்- தாராளமயம்- உலகமயமாக்கம் புகுத்தப்பட்ட பிறகு, அரசுத்துறைத் தொழில்களையும் மூலதனத்தையும் கைப்பற்றிக் கொள்வதற்கும் ஏகாதிபத்தியத்துடனான தரகுத் தொழில்களுக்குமான வாய்ப்புகள் பெருமளவு திறந்து விடப்பட்டன. முந்திக்கொண்ட மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்கள். வாஜ்பாய் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. ஆட்சியின்போது அரசுத்துறைத் தொழில்களைத் தனியாருக்கு விற்பதற்கென்றே அதன் அரசியல் கோயபல்சு அருண்சோரியை சிறப்பு அமைச்சராக்கிப் பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கொள்ளை இலாபம் தரக்கூடிய அலைக்கற்றை உரிமங்கள் வாரிவழங்கப்பட்டன. ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்பொருளுக்கான சந்தை மேலும் விரிவாகத் திறந்து விடப்பட்டது.

இதைக்காட்டி ”இந்தியா ஒளிர்கிறது” என்ற முழக்கத்தை முன்வைத்துத் தேர்தலை எதிர்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. தோல்வி கண்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசுக் கூட்டணி இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை முன்தள்ளியது. மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகளில் பலர் இந்திய மற்றும் அன்னிய மூலதனத்துடன் கூட்டுச்சேர்ந்து தேசங்கடந்த தரகு முதலாளிகளாக வளர்ந்தார்கள். நாட்டில் நுகர்பொருள் சந்தை நிறைவு நிலையை எட்டிவிட்ட நிலையில் அவர்கள் அடிப்படைக் கட்டுமானத் தொழில்களிலும்  இயற்கைக் கனிம வளங்களைச் சூறையாடுவதிலும் இறங்கினர். விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அணு, அனல் மின் நிலையங்கள், சில்லறை வர்த்தக சங்கலித் தொடர்கள், காப்பீடு, வங்கி – என முதலீடுகளை விரிவுபடுத்தினர்.

ஆனால், தனியார்மய-தாராளமய-உலகமயமாக்கத்தின் பலன்களைத் தாம் மட்டுமே அறுவடை செய்துகொண்டு நாடு முழுவதும் தனது பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்வதற்கான பேராசையில் மூழ்கிக் கிடந்த மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளியக் கும்பல்,  புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும் அதன் பலன்களைப் பங்கு போட்டுக்கொள்ளவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகியவற்றை  மையங்களாகக் கொண்ட புதிய கார்ப்பரேட் தரகு முதலாளிகளைக் களத்தில் கண்டனர்.

நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, கலாநிதி மாறன்
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக சென்னை – ஹைதராபாத் – பெங்களூரு ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முளைத்துள்ள புதியவகைப்பட்ட தரகு முதலாளிகள் (இடமிருந்து) நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, கலாநிதி மாறன்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்படுவதற்கு முன்பிருந்து மும்பைதான் நாட்டின் பொருளாதாரத் தலைநகராகவும், மராட்டியம்-குஜராத் ஆகிய தாழ்வாரம்தான் பொருளாதார ரீதியில் முதன்மையானதாகவும் இருந்து வருகிறது. இப்போதோ ”குஜராத் மாடலின்” சாதனை என மோடி பீற்றிக்கொள்வதை ஜெயலலிதாவும் ரிசர்வ் வங்கி ஆய்வுகளும் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.  இது பிற பிராந்திய, புதிய கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வளர்ச்சியைக் குறிக்கிறது.

இதோடு  முக்கியமாக ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, பாக்சைடு, செம்பு ஆகிய தாதுக்களைச் சூறையாடுவதில் ஈடுபட்டுள்ள ஸ்டெர்லைட்-வேதாந்தா, எஸ்ஸார், ஜிண்டால், மிட்டல், டாடா, அதானி, அம்பானி ஆகிய குழுமங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.   கார் தொழிற்சாலை அமைப்பதில் டாடாவும், அணு, அனல் மின் நிலையங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அம்பானியும் அதானியும் மிட்டலும் நிலங்களைக் கையகப்படுத்துவதில் தாமதங்களை எதிர்கொண்டபோது மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள்  ஆத்திரமடைந்தனர். காங்கிரசுக் கூட்டணி அரசு தடைபோடுவதாக அவர்கள் கருதினர்.

இந்தத் தொழில் முனைவுகளுக்கு கிழக்கே மேற்கு வங்கம் (சிங்கூர்), ஒடிசா, வடக்கே உத்திரப் பிரதேசம், அரியானா-தில்லி புறநகர், தென்கிழக்கே சத்தீஸ்கர், மேற்கே மராட்டியம், குஜராத்திலேயே மக்கள் எதிர்ப்பு கடுமையாகியது. அவற்றை ஒடுக்கி மக்கள் வாழ்வுரிமைகளைப் பறிப்பதிலும் இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு-தொழில் கூட்டுக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடியின் உருவில் – குஜராத் மாடலில் – தமது இயல்பான கூட்டாளியை மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் கண்டனர்.

அதனாலேயே, ஜெர்மானிய ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகள் இட்லரை அதிபராக்கியதைப் போலவே மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் பணத்தைத் தண்ணீராகக் கொட்டி  மோடியைப் பிரதமராக்கியும் விட்டனர். அகில உலகையும் தனது ஏகாதிபத்தியக் காலடி ஆதிக்கத்தில் கொண்டுவர எத்தனித்த இட்லருக்கு என்ன நேர்ந்தது என்பதை வரலாறு அறியும். ஆனால், தெற்கு ஆசியாவையே  தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அகண்ட பாரதக் கனவு என்னவாகும்?

மீரட் கலவரம்
தேர்தல் முடிவுகள் வெளிவந்து மோடி-பா.ஜ.க. கும்பல் அதிகாரத்தில் அமர்வது உறுதியானவுடனேயே உ.பி.யில் மீரட் நகரில் நடந்த கலவரம்.

2007 உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம், இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க-வீக்கம், பணவீக்கம் காரணமாக விலையேற்றம், ஏற்றுமதி-இறக்குமதி சமன்பாட்டில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தித் துறையில் கடும் வீழ்ச்சி, ஆலைகள் மூடல் ஆகிய நெருக்கடிகள் தொடங்கியபோதே பெரும் ஊழல் விவகாரங்கள் அம்பலப்பட்டு நாடே நாறியது. இவற்றினிடையே  நாட்டு மக்கள் எதிர்த்தபோதும்  கூட்டணிக் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்ட போதும்  மறுகாலனியாக்கம் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைளை அமலாக்குவதில் சோனியா – மன்மோகன் – மான்டேக்சிங்- சிதம்பரம் கும்பல் அழுந்தி நின்றது. விளைவாக, அதன் அரசியல் அழிவை நாடே கண்டது.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க .மோடி கும்பலின் ஆட்சியில் அன்னிய, உள்நாட்டு முதலீடுகளைத் தாராளமாக அனுமதித்து, வரி-வட்டிக் குறைப்பு செய்து சந்தையைப் பரவலாக்கினால் தமது தொழில் வளர்ச்சியும் சீரானதாகவும், அதற்கான அரசியல், பொருளாதார நிலைமைகள் உறுதியானதாகவும் அமையும் என்று  மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் நம்புகின்றனர். கர்நாடகா எடியூரப்பா, ரெட்டி கும்பலை இணைத்துக் கொண்டிருந்தாலும் அப்பழுக்கில்லாத மோடியின் ஆட்சியில் இலஞ்சம்- ஊழல் ஒழிக்கப்படும், பொருளாதாரச் சீர்திருத்தம் தடையின்றி, தாமதமின்றி விரைவாக்கப்படும்; அதனால் தமது வாய்ப்பு, வசதிகள் மேலும் பெருகும் என்று நகர்ப்புற மேட்டுக்குடி சப்புக்கொட்டுகிறது.

ஆனால், கார்ப்பரேட் தரகு முதலாளிகளை இழுவை எந்திரமாகக் கொண்டு இயங்கும் பொருளாதாரத்தில் இலாபவெறியும் இலஞ்சம் – ஊழலுமே அதன் எரிசக்தியாக இருக்கும். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, மோடி போன்ற பொறுக்கி அரசியல் பாசிச ஆட்சியாளர்கள்  முதலும் கடைசியுமாக நம்பும் காரியம் அதிகாரக் குவிப்புதான். அதிகார வர்க்கம், போலீசு, இராணுவத்தின்  கைகள் அவிழ்த்து விடப்பட்டு அவற்றில் வரம்பில்லா அதிகாரம் குவிக்கப்பட்டால் நிர்வாகத் திறமையும், துணிச்சலும் தானாக வந்துவிடும் என்று நம்புகிறவர்கள். எல்லா அமைச்சகங்களுக்கும் இணையான அதிகாரமிகு வல்லுநர்களை பிரதமர் அலுவலகத்தில் நியமித்து விட்டார் மோடி.

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.  அரசியல் தலைமையான மோடி-அமித் ஷா கும்பல்  ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே ”மன்மோகனாமிக்சின்” மறு அவதாரம்தான் ”மோடினாமிக்ஸ்” என நிரூபிக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு, தொழில் கூட்டுக்கு  இருந்த தாமதங்களை – தடைகளை நீக்கி மக்கள் வாழ்வுரிமைகளைப் பறிப்பதற்கான இலக்குகளைக் குறித்து விட்டது. இத்தகைய நாசகர நடவடிக்கைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் காஷ்மீருக்கு 370 சுயாட்சி சட்டம், பொது சிவில் சட்டம், அயோத்தி ஆகிய பிரச்சினைகள் மீது விவாதத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இவற்றோடு மேலும் பல நாசகர பாசிச பயங்கரவாத மதவெறி, சாதிவெறி அரசியலையும் இணைத்துக் கொண்டுள்ள அக்கும்பல் தன்னுடைய அரசியல் அழிவோடு நாட்டையும் மக்களையும் சாதி, மதரீயில் பிளவுபடுத்தி,  இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துப் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது.  அதேசமயம், புதிய பொருளாதாரக் கொள்கையின் பலன்கள் மறுக்கப்பட்டு, வெளியே  நெட்டித்தள்ளப் படுகிறார்கள், அடித்தட்டு மக்கள். இவர்கள்தாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் எதிர்மறைத் தாக்குதல்களையும், விளைவுகளையும் தூக்கிச் சுமப்பவர்கள். மலிவான உழைப்புச் சந்தையை உருவாக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும் தேசிய எல்லைகளைக் கடந்து குடிபெயரும் தொழிலாளர்கள் தொழில் மையங்களில் குவிகின்றனர். கீழே நடக்கும் இவ்வாறான வர்க்க முனைவாக்கம், மேலே நடக்கும் இன, சாதிய, மத முனைவாக்கத்துக்கு மாற்றானதாக, எதிரானதாக புரட்சிகர அரசியலுக்குச் சாதகமானதாக அமைகிறது.

இவ்வாறானதொரு வர்க்க முனைவாக்கத்தின் மீதும் புரட்சிகர அரசியலின் மீதும் நம்பிக்கை வைப்பதற்கு மாறாக, இடஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சீர்திருத்தம் காங்கிரசு, முலாயம் – மாயா – லாலு – நிதிஷ் – மம்தா பாணிப் போலி மதச்சார்பின்மை மீது ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைத்தனர். விளைவு,  பிற்போக்கு சாதி, மத முனைவாக்கத்திலும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. எதிர்ப்புரட்சி சக்திகளிடம் அதிகாரத்தை சரணடையச் செய்வதாகவும் முடிந்துள்ளது.

ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2014
______________________________

வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?

0

கழிப்பறையா பிரச்சனை, எப்போதும் ‘வேசி’கள்தான் !

ரு நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஐந்தாவது நிமிடத்திலேயே எனது காரில் திரும்ப ஏறிக் கொண்ட அனுபவம் எனது வாழ்வில் முதன்முதலாக இந்த வருடம் ஏப்ரல் 7-ம் தேதி நடந்தது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஷாம்லியின் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட  வந்திருந்தார். அவரது அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேச இருந்தார்.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறைக்கு எதிரான குரல் (படம் நன்றி : டெக்கான் குரோனிக்கிள்)

டிராக்டர்களில் வந்திருந்த பதின்ம வயது பையன்கள், பேருந்துகளின் மேற்கூரைகளில் ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள் என அந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சுமார் நாற்பதாயிரம் ஆண்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த ஒரே பெண் நான்தான்.

பாதங்கள், விரல்கள் மற்றும் முகத்தை தவிர எனது உடல் பாகங்கள் அனைத்தையும் நான் அணிந்திருந்த சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டா மறைத்திருந்தன. இருப்பினும், ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்து கூரையில் வைத்து புணர்ச்சி செய்கிறேன் !’ என்று கூச்சலிட்டார்கள், அவர்கள். துணிச்சலுடன் எதிர்த்து தட்டிக் கேட்பது அவர்களை வெட்கப்பட வைத்து இந்த கூச்சலை நிறுத்தி விடும் என்று நினைத்து நான் அவர்களிடம், ’இப்படி பேச எவ்வளவு தைரியம் உங்களுக்கு?’ என்று எதிர் குரல் கொடுத்தேன்.

ஆனால், என் பார்வையில் தெரிந்த தூரம் வரை  பேருந்து கூரைகளில் அமர்ந்திருந்த அனைவரும்  ’யேய்! யேய்!’ என்று சத்தம் போட்டார்கள். தங்கள் மொபைல் போனில் சாத்தியமான எல்லா கோணங்களிலும் என்னை படம் பிடித்தனர். அவமானமும், கோபமும் பொங்க நான் என் காரை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

கடைசியில் ஒரு வயதான மனிதர் என்னருகே வந்து, ‘ஏம்மா, உன் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொள். இந்த பசங்க இப்படித்தான்’’ என்று ஆலோசனை சொல்லி விட்டு போனார். நான் விரும்பிய முறையில் நடமாடுவதற்கு எனக்கு இருக்கும் உரிமைக்கான பெண்ணிய விவாதத்தை தவிர்த்து விட்டு,  உள்ளுக்குள் பல குழப்பங்கள் இருந்தாலும் அந்த பெரியவரின் வார்த்தைகளை மதித்து தலையையும், முகத்தையும் மூடிக் கொண்டேன். அதன் பிறகு நடக்கும் போது சற்று பாதுகாப்பை உணர்ந்தேன்.

அடுத்த அரை மணி நேரம் காரில் காத்துக் கொண்டிருந்த  போது உடன் பணிபுரியும் என்னுடைய ஆண் சகாக்கள் மீது கோபம் பொங்கியது. ஒரு ஆணாக அந்த கூட்டத்துக்கு செல்ல அவர்களுக்கு இருந்த சவுகரியம், ஒரு பெண்ணாக எனக்கு வாய்க்காத நிலையை நினைத்து ஆத்திரம் அடைந்தேன்.

எனது அம்மா இது போன்றதொரு கதையை எனக்கு முன்பு சொல்லியிருந்தார். 1970-களில் பதின்ம வயதில் இருந்த எனது அம்மாவும் அவரது சகோதரியும்  உத்திர பிரதேச கிராமம் ஒன்றில் நடந்த அவர்களது அத்தை மகன் திருமணத்துக்கு சென்றிருந்தனர். அந்த திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் அவர்கள் இருவர் மட்டுமே. வழக்கமாக அது போன்ற நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவை. பெரிய மனிதர்கள் யாரும் தங்கள் வீட்டு பெண்களை திருமண வரவேற்பு ஊர்வலங்களில் பங்கு கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.

‘இரண்டு பதுரியாக்கள் (வேசிகள்)’ திருமண ஊர்வலத்தில் பங்கெடுக்கும் செய்தி அந்த கிராமம் முழுக்க பரவியது. அவர்களை பார்ப்பதற்கு ஒட்டு மொத்த கிராமமும் திரண்டு வந்திருக்கிறது. இவர்கள் இருவரையும் நடனமாட சொல்லி குரல் கொடுத்திருக்கின்றனர். ‘பதுரியா’ என்பது பாலியல் தொழிலாளிகளுக்கான உத்திர பிரதேச சொல், அந்த காலத்தில் வட இந்திய திருமண வரவேற்பு ஊர்வலங்களில் ‘பதூரியாக்கள்’ கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; ஆடல், பாடல் மூலம் ஆண்களை மகிழ்விக்க வேண்டும்.

ஊர்வலத்திற்கு சென்றிருந்த இரு சகோதரிகளின் நிலை தர்மசங்கடமானது. ஊர்வலத்திலிருந்து பாதுகாப்பாக கடத்தி செல்லப்பட்டு அவர்களது பொறுப்பற்ற நடத்தைக்காக மணப்பெண்ணின் வீட்டில் கடுமையாக கண்டிக்கப்பட்டார்கள்.

பதூன் இரட்டை பாலியல் கொலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இரு சிறுமிகள் கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதும், பகனா கும்பல் வன்புணர்ச்சியில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்கள் நீதி வேண்டி இரண்டு மாதங்களாக தேசத்தின் தலைநகரில் போராடி வருவதும் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால் இந்தியாவின் கிராமத்து பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறார்கள் என்று பலர் தர்மாவேசம் கொள்கிறார்கள்.

கழிப்பிடங்கள் மிகவும் அவசியம் தான். திறந்தவெளியில் மலம் கழித்தல் பல்வேறு சிரமங்களையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகிறதுதான். ஆனால், இந்தியப் பெண்கள் மலம் கழிக்க வெளிவரும் போது மட்டும் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று கருதுவது முட்டாள்தனமானதும், நகைப்புக்கிடமானதும் ஆகும். எனக்கு தெரிந்த வரையில் மலம் கழிக்க சேர்ந்து போகும் போதுதான் கிராமத்து பெண்கள் தங்களுக்கிடையே பேசிக் கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

யூனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ’இணைந்த கண்காணிப்பு திட்ட அறிக்கை 2010’-ன் கூற்றுப்படி 72 கோடி இந்திய ஆண்களும் பெண்களும் திறந்தவெளியில் காலைக்கடன்களை கழிக்கிறார்கள்.

இந்திய அரசின் சுகாதாரத்துக்கான இயகத்தின் நல்லெண்ண தூதர் வித்யாபாலன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது வீட்டில் கழிப்பிடம் இல்லை என்று சொன்ன மாமியாரிடம், “பொது இடத்தில் உங்கள் மருமகளின் முக்காடை விலக்கக் கூட  நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். ஆனால், அவளை திறந்தவெளியில் மலம் கழிக்க மட்டும் அனுப்புகிறீர்களே?’’ என்று கேட்டார்.

அந்த கருத்து நல்ல நோக்கத்தோடு சொல்லப்பட்டிருந்தாலும் ஆணாதிக்க ஒழுங்குகளின் அடிப்படையில் சுகாதார பிரச்சனைகளை அணுகுவது பிற்போக்கானது.

பாலியல் வன்புணர்ச்சியை கழிப்பிட வசதியின்மையுடன் இணைத்து கொச்சைப் படுத்துவது மிக மோசமான அணுகுமுறையாகும். இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது. மத்தியதர வர்க்கம் பாதுகாப்பு குறைபாடுகளுக்காக போலிசை ஏன் சபிக்கிறது? பாலியல் வன்புணர்ச்சிக்கு குற்றவாளிகளை தூக்கில் தொங்கவிடும் நீதியை ஏன் கோருகிறது?

கழிப்பிடம் கட்டுவது போன்ற எளிமையான, உடனடியான மற்றும் நல்ல உணர்வு தரும் தீர்வுகள் தான் நமக்கு வேண்டும். இந்தியா கேட்டில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்தல் போராட்டத்தில், முசாஃபர்நகரில் நடந்தது போன்ற வகுப்புக் கலவரங்கள், அல்லது பகனா பாலியல் வன்முறையில் பெண்களின் உடல்கள் ஒரு சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் போர்க்களங்களாக பயன்படுத்தப்படுவது குறித்த அசகவுரியமான, நுட்பமான கேள்விகள் பேசப்படுவதில்லை. ஏனெனில் அவை இந்தியாவின் வல்லரசு பிம்பத்தோடு பொருந்தாத பிரச்சினைகள்.

எத்தனை பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினாலும், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்புணர்ச்சிகள் 2009-ல் இருந்ததை விட  30 சதவீதம் உயர்ந்திருக்கும் உண்மையும் ஒரு புறம் இருந்தாலும், தொடர்பான சமூகவியல் கேள்விகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் கார்ப்பரேட் வளர்ச்சி மாதிரியிலிருந்து பிரிக்க முடியாமல் பிணைந்துள்ள மகிழ்ச்சியான ஆணாதிக்க (தந்தைவழி) குடும்ப அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படக் கூடாது.

பாலியல் வன்முறையோடு தொடர்புடைய உரையாடல்கள் உண்மையான அக்கறையுடன் நிகழ்த்தப்படும் வரை பொது வெளிகளுக்கு செல்ல நேரும் போதோ, தமது சொந்த அறையில் இருக்க நேரும் போது கூட – எனது அம்மா, நான், பதூன் பெண்கள் என இந்தியப் பெண்கள் அனைவரும் ஆபத்தால் சூழப்பட்டிருக்கிறோம்.

நன்றி : டெக்கான் குரோனிக்கிள் Toilets or not, paturiyas always- Neha Dixit
தமிழில், சம்புகன்

ஆட்டோவை மட்டுமல்ல அரசமைப்பையும் ஓட்டுவோம் !

53

திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்

உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கிறது.

  • ஊரை அடிச்சு உலையில் போடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழுறானுங்க!
  • ஒரு ஆட்டோ வைச்சு நாம பிழைக்கப்படுற பாட்டை என்னான்னு சொல்றது! எப்படி தீர்ப்பது?

ன்பார்ந்த தோழர்களே,

ஆட்டோ என்றாலே அடாவடி பேர்வழிகள், அதிகப் படியான கட்டணம் வசூலிப்பவர்கள், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் என்று அதிகார வர்க்கத்தினரும், நுகர்வோர் அமைப்பினரும் தொடர்ந்து அவதூறு செய்கின்றனர்.

1 குவளை தேநீர் 7 ரூபாய்க்கு விற்கும் நாட்டில், 1 லிட்டர் பெட்ரோலில் 50 ரூபாய் வரை வரி பிடுங்கும் அரசு, 15 நாளைக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை தீர்மானிக்க முதலாளிக்கு அனுமதி அளித்தவர்கள் தான் ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுனர்
பொருத்தமான துணையின்றி அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ பொதுமக்கள் செல்வதில்லை. ஆனால் தனது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆட்டோ ஓட்டுனர்களை நம்பி அனுப்புகின்றனர் என்பதே உண்மை.

ஆண்டு முழுவதும் நட்டம் என கூறும் எண்ணெய் நிறுவனங்களின் சொத்து பல்லாயிரம் கோடியாக பெருகி வழிகிறது. ஆனால், ஆட்டோக்களுக்கு எண்ணெய் ஊற்ற முடியாமல் அளவு ஸ்கேலை விட்டுவிட்டு பார்த்து வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலையோரம்தான் சொத்து. கொள்ளைகளுக்கெல்லாம் கொள்கை என பெயர் வைத்த அரசு குடிமக்களையெல்லாம் குற்றவாளியாக பார்க்கிறது. நாள்முழுவதும் காத்திருந்து 4 சவாரி எடுப்பதற்கு நாம் படுகிற பாட்டை எப்படி புரிய வைப்பது, இந்த உலகத்திற்கு எப்படி சொல்வது?

இந்த மலை முழுங்கி மகாதேவன்கள் சித்தரிப்பது போல ஆட்டோ டிரைவர்கள் மக்களை ஏமாற்றி, கார் பங்களா என சொத்து சேர்த்துள்ளனரா? அல்லது எம்.பி, எம்.எல்.ஏ ஆவதற்காக அரசியலில் குதித்துள்ளனரா? ஒரு புண்ணாக்கும் கிடையாது. வேகாத வெயிலிலும், மழையிலும், தெருவில் காத்துக் கிடந்து 4 சவாரி எடுத்தால் தான், தன் வயித்துக்கும், குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த முடியும். இதுக்கு தான் இம்புட்டு பாடுபடுகிறோம்.

அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன்களை போல, ஆயிரம் துயரங்களை சுமந்து மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்பட்டு வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். பொருத்தமான துணையின்றி அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ பொதுமக்கள் செல்வதில்லை. ஆனால் தனது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆட்டோ ஓட்டுனர்களை நம்பி அனுப்புகின்றனர் என்பதே உண்மை.

பெற்ற பிள்ளைகளை பராமரிக்க கூட நேரமில்லாமல் மக்கள் அவதிப்படும் இந்த உலகமயமாக்கல் காலத்தில் மக்களின் குடும்ப உறுப்பினராகவே ஆட்டோ கலந்துள்ளது.

ஆனால் நாட்டில் அன்றாடம் நடப்பதோ வேறு. பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை பார்த்தாலே தெரியும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள், பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சதித்தனம். இந்த அத்தனை குற்றத்திற்கும் காரணமாக இருப்பது இந்த அதிகார வர்க்கத்தினரும், அரசியரல்வாதிகளும்தான்.

இன்னொரு புறம் அலைக்கற்றை ஊழல், தாதுமணல் கொள்ளை, நிலக்கரி, கிரானைட் என பல லட்சம் கோடி கொள்ளையடித்த மேற்படியாளர்கள் வெளிப்படையாகவே உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்த குற்றவாளிகள் தடுக்கப் படவோ, தண்டிக்கப்படுவதோ இல்லை. இவர்களின் கொள்ளை சட்ட பூர்வமாக அங்கீகாரம் பெற்று நடக்கின்றது.

ஆனால் உழைக்கும் மக்களின் தொழிலான ஆட்டோ மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அமைப்பு சாரா தொழில், சிறு தொழிற்சாலை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுகின்றன. நகரத்தை விட்டு பிடுங்கியெறியப்படுகின்றன. இதற்கு அற்பத்தனமான காரணங்களை கூறி நியாயப்படுத்துகின்றனர். நகரத்தை பணக்கார ஊதாரிகளுக்கு தாரைவார்க்கவே இத்தனை சதித்தனம் செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும்.

நமது வாழ்க்கையை பாதுகாக்க ஆட்டோவை மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள், அரசமைப்பு அனைத்தையும் சேர்த்து ஓட்ட வேண்டும்.

ஆட்டோ தொழிலை ஒழிக்க துடிக்கும் அதிகார வர்க்க சதிவலையை முறியடித்து தொடர்ந்து போராடிவரும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் 14-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி S.R.C கல்லூரி அருகில் உள்ள சுருதி மஹாலில், 15.6.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் தொடர்பான விவரங்களை பின்னர் தருகிறோம்.
______________________________

இவண்

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
திருச்சி மாநகர் – மாவட்டம், தொடர்புக்கு : 9788183999

பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !

6

ன்புள்ள வன்னியச் சாதியை சார்ந்த அப்பாவி பொது மக்களே….

கொலைஉங்களிடம் பேச இப்படி ஒரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் இனி ஒரு முறை வாய்க்க கூடாது என்பதே எங்கள் விருப்பம். ஆனால் பேசுவதற்கான காரணமும் இருக்கிறது. வட மாவட்டங்களில் பாமகவினர் வன்னிய மக்களை வாக்கு வங்கி அரசியலுக்காக திரட்டியது போல வேறு சாதித் தலைவர்கள் தங்கள் சமூக மக்களை திரட்டியதில்லை. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அன்புமணியின் வெற்றி ஒரு சான்று.

இத்தகைய சூழ்நிலையில் வன்னிய சாதி வெறி என்பதும் வெறும் தலித் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல அது ஏழை வன்னியர்களையும் எப்படி நாசமாக்கி நடு வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது ஏழை வன்னிய சாதிப் பெண் பூங்கொடி சிதைக்கப்பட்ட கதை. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன் பாளையம் கிராமம் பெரும்பாலும் வன்னிய மக்கள் வாழும் ஊர். அதே ஊரில்தான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் ஆத்தூர் பகுதியில் வறுமை காரணமாக தொழில் இல்லாமல்போனதால் சென்றாயன் பாளையத்திற்கு வந்து குடியேறியது பரமசிவம் குடும்பம். பரம்பரை பரம்பரையாக தறி நெய்யும் தொழில் செய்யும் பரமசிவத்தின் அப்பா. அந்த ஊருக்கு தன் பிள்ளைகளோடு வந்தார். பரமசிவம் அதே ஊரில் உள்ள வன்னியப் பெண்ணை திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனும் ஆனார்.

இதோ விகடனுக்கு பரமசிவமே வழங்கியிருக்கும் வாக்குமூலம்-

“பரம்பரையா தறி நெய்யிற வேலைதான் எனக்கு. சொந்தமா தறி போடுற அளவுக்கு வசதி இல்லை. கூலிக்குத்தான் தறி போட்டுட்டு இருந்தேன். மூத்தவன் ஒரு பையன், அடுத்து ரெண்டு பெண் குழந்தைங்க. அதுல பூங்கொடி மூத்தவ. பெண் குழந்தைகளைக் கரை சேர்க்கணுமேனு, மூணு பைசா வட்டிக்குக் கடன் வாங்கி சொந்தமாத் தறி போட்டேன். அஞ்சு வருஷமாச்சு… கடனை அடைக்க முடியலை. விடிய விடியத் தறி அடிச்சாலும் வாய்க்கும் வயிறுக்கும் மட்டும்தான் சரியா இருக்கும். மூணு குழந்தைகளையும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கவைக்க ஆசை. ஆனா… எங்கே போறது..? எங்க குடிசைக்கு கதவே கிடையாது. ஒரு கம்பளிப் படுதாவைப் போட்டுத்தான் மூடி வைச்சிருப்போம். ஒருவேளை கதவு இருந்திருந்தா, என் மக உயிரோடகூட இருந்திருக்கலாம். கதவு இல்லாத வீட்டுக்குள்ள நடு ராத்திரி புகுந்து என் பொண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டானுங்க அந்தப் பாவிங்க!”

என்பவர் அதற்கு மேல் பேச முடியாமல் கேவிக் கேவி அழுகிறார்.

கதவே இல்லாத ஏழை வன்னியர் பரமசிவத்தின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பத்து வயதுக் குழந்தை பூங்கொடியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்தது பூபதி கும்பல் . 5 பேர் கொண்ட பூபதி கும்பல் பாலியல் வன்முறை செய்யும் போதே குழந்தைபூங்கொடி செத்துப் போக பிறப்புறுப்பில் இருந்து கசிந்த ரத்தத்தை மறைக்க மஞ்சளையும், பவுடரையும் அள்ளிப் பூசியிருக்கிறார்கள். அப்படியும் ரத்தம் நிற்காமல் கொட்ட பக்கத்து விட்டில் திருடிச் சென்ற சேலையில் பூங்கொடியை கட்டித் தூக்கி ஒரு மரத்தில் தொங்க விட்டுச் சென்று விட்டது பூபதி கும்பல். மறு நாள் குழந்தையை க் காணாமல் தேடிய போது குற்றவாளி பூபதி தானும் சேர்ந்து தேடுவது போல நடித்திருக்கிறான். ஆனால் பூங்கொடியை அடக்கம் பண்றதுக்கு முன்னாடியே பூபதியும்அவனோட கூட்டாளி களும்தான் இந்தக் காரியத்தைப் பண்ணியிருக்கானுங்கனு தெரிந்து விட்டது. அஞ்சு பேரையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.

பரமசிவம்
பரமசிவம்

பூங்கொடி சிதைக்கப்பட்ட சம்பம் நடந்தது இந்த வருடம் பிப்ரவரி 14 -ம் தேதி தூக்கில் தொங்கவிடப்பட்ட பூங்கொடியின் உடல் கண்டெடுக்கப்பட்டது மறு நாள் 15 -ம் தேதி. செய்தியை அறிந்து சேலம் மக்கள் கொந்தளித்தனர். சென்றாயன் பாளையம் மக்களும் கொதித்துப் போனார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது பெருவாரியான பெண்கள் அவர்களை தாக்க திரண்டதால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி குற்றவாளிகளை காப்பாற்றியது போலீஸ்.

சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. கடந்த 31- ம் தேதி பூபதிக்கும், மறு நாள் ஜூன் 1- ம் தேதி ஏனைய நால்வருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் உத்திரவாதத்துடன் கூடிய ஜாமீனை வழங்கி விட்டது. மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணிக்கு வாழப்பாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குற்றவாளிகளுக்கான நிபந்தனை. எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

பூங்கொடியை சீரழித்துக் கொன்ற கொலைகார வன்னியர்கள் சென்றாயன் பாளையத்திற்குள் வந்து குடியேறி விட்டார்கள். பூங்கொடியின் அப்பா பரமசிவமோ அந்த ஊருக்குள் வாழ முடியாமல் தனது பூர்வீக கிராமமான சேலம் ஆத்தூருக்கே திரும்பிச் சென்று விட்டார். காரணம் ஒரே சாதியாகவே இருந்தாலும் சென்றாயன் பாளையத்தில் எவரும் பரமசிவம் குடும்பத்தோடு பேசுவதில்லை. பேசுவதில்லை என்பது மட்டும் அல்ல. குற்றவாளிகளுக்கு எதிராக எவரும் சாட்சியம் சொல்லத் தயாராக இல்லை. விளைவு – போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை.

பரமசிவமே சொல்கிறார் வாசியுங்கள்.

“என் பொண்ணு இறந்தது தெரிஞ்சு பல ஊர்ல இருந்து வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னாங்க. டெல்லி, சென்னையில இருந்து முக்கியமான ஆளுங்கள்லாம் வந்தாங்க. அதனால என் பொண்ணு கொலைக்கு நியாயம் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா, இப்போ சென்றாயன்பாளையத்தில் என் சொந்த சாதி சனம்கூட அந்தச் கொலைகாரங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்லத் தயாரா இல்லை. காரணம், பயம்!

நேத்து என் குழந்தைக்கு நடந்தது, நாளைக்கு இந்த ஊர்ல யாருக்கு வேணும்னாலும் நடக்கலாமேனு யாரும் யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. ‘நேர்ல பாக்காம நாம எப்படி ஒரு ஆள் மேல பழி சொல்றது?’னு கேக்கிறாங்க. குழந்தையைத் தூக்கிட்டுப் போய் கொல்றவன், ஊர்ல தாக்கல் சொல்லிட்டா போவான்? மனச்சாட்சி உள்ள ஒருத்தராவது எனக்காகப் பேசுவாங்கனு பாக்குறேன், ம்ஹூம்… கொஞ்ச நாளா ஊர்ல யாரும் எங்ககிட்ட சாதாரணமாக்கூட பேசுறது இல்லை. என் மூத்த பையன் எட்டாவதும், கடைசி பொண்ணு இரண்டாவதும் படிக்கிறாங்க. பூங்கொடிக்கு இப்படி ஆனதும் பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போகப் பயந்தாங்க. ‘அப்பா எனக்கு வெளில போகவே பயமா இருக்குப்பா’னு பொண்ணு அழுவுறா. சொந்தக்காரங்க, சுத்துபத்தா இருக்கிறவங்க நம்பிக்கை குடுத்தாத்தானுங்க நாங்க அந்த ஊர்ல வாழ முடியும்.”

ஆக மொத்தம் ஒரு ஒரு ஏழை வன்னியனுக்கு ஆதரவாக வரவோ, பூங்கொடியை சிதைத்த கொலை பாதகர்களுக்கு எதிராக பேசவோ யாரும் தயாராக இல்லை. தன் சாதிக்காரன் என்கிற அளவில் கூட பரமசிவத்தோடு சென்றாயன் பாளையம் மக்கள் நிற்க தயாராக இல்லாமல் போக எது காரணம்? அச்சமா? அச்சம்தான் என்றால் அந்த அச்சம் எங்கிருந்து வருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

குற்றவாளிகள்
பூங்கொடி என்ற இளம் தளிரை வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்றவர்கள்

பூபதியின் உறவினர்கள் இன்னும் பாமகவில் தொடரும் நிலையில் அவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்ற அச்சம் சென்றாயன்பாளையம் வன்னிய மக்களை பம்மி பதுங்க வைக்கிறது. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, நில பேரங்கள் என வன்னியர் சாதிசங்கம், பாமக அடையாளத்தோடு ஈடுபடும் இந்த கும்பலை பகைத்துக் கொண்டால் ஊருக்குள் வாழ முடியாது என்ற அச்சம் மக்களிடம் நிலவுவதால் அவர்கள் பரமசிவத்திற்காக வாய் திறக்க அஞ்சுகிறார்கள். ஆக, வன்னிய மக்களை அச்சுறுத்துவது வேறு சாதியல்ல, வன்னியர் சங்கம்.

ஆரம்பத்தில் மக்கள் சிலர் பூங்கொடி கொலை பற்றி பேசிய போது “நீ உன் கண்ணால பார்த்தியா?” என்று கேட்டு அவர்களை அமைதியாக்கியிருக்கிறது இந்த கும்பல். இதுதான் ராமதாஸ் உருவாக்கியிருக்கும் வன்னிய பாசம். இந்த சாதிப்பாசம்தான் தருமபுரியில் திவ்யா, இளவரசன் என்ற இளம் காதலர்களைப் பிரித்தது. இளவரசனை காவு வாங்கியது. தற்போது அன்புமணியை ஜெயிக்க வைத்திருக்கிறது.

இயல்பான ஒரு காதலுக்கு தண்டனையாக தலித் மக்களின் வீடுகளைக் கொளுத்தி, இளவரசனின் உயிரையும் பறித்த ராமதாசின் சாதிவெறி அரசியல், பூங்கொடிக்கும் அவள் தந்தை பரமசிவத்துக்கும் வழங்கியிருக்கும் நீதி என்ன?

நத்தம் காலனியையே கொளுத்திய வன்னிய சாதிவெறி, குறைந்த பட்சம் பூபதியின் கடை மீது ஒரு கல்லையாவது எறிந்ததா? அல்லது அவனை ஊர் விலக்கம் செய்ததா? குற்றவாளி வன்னியன் கம்பீரமாக உலா வர, பாதிக்கப்பட்ட வன்னியர் பரமசிவமும் அவரது குடும்பமும் அல்லவா ஊரை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது!

ராமதாஸ் ஊட்டிய சாதி வெறி என்ன மனநிலையை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது? பூங்கொடிக்கு நீதி வழங்குவதன்மூலம் சாதி மானத்தை காப்பாற்ற அவர்கள் நினைக்க வில்லை. மாறாக, பூபதி உள்ளிட்ட 5 கிரிமினல்களைக் காப்பாற்றுவதன் மூலம், தங்கள் சாதி மானத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

“நம்ம சாதிப் பசங்களுக்கு எதிராக போலீசுக்குப் போக கூடாது. சாட்சி சொல்லக்கூடாது”. இதுதான் பரமசிவத்திடம் ஊரார் எதிர்பார்த்த உன்னதமான சாதி அறம். அதாவது பெத்தவன் பறி கொடுத்த பிள்ளையைப் பற்றிய கவலைப்படக் கூடாதாம். வன்னிய சாதி மானம் கப்பல் ஏறி விடக் கூடாதாம். இந்த சாதிப் பாசம்தான் பாதிக்கப்பட்ட பரமசிவத்தின் குடும்பத்தை சென்றாயன் பாளையத்தில் வாழவிடாமல் துரத்தியிருக்கிறது.

பூங்கொடி
பூங்கொடி

சாதி அரசியலால் எந்த சாதியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கமும் என்றைக்கும் பயன் பெற்றதில்லை. மாறாக, சுயநிதிக் கல்விக்கொள்ளையர்கள், மணல் திருடர்கள், கிரானைட் திருடர்கள், அரசியல் தரகர்களும் பூபதியைப் போன்ற கிரிமினல்களும்தான் சாதி அரசியலால் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்.

வன்னிய சாதிப்பாசமானாலும் சரி, வேறு எந்த சாதிப்பாசமானாலும் சரி அது நீதிக்கும் நடுநிலைக்கும் எதிராக சிந்திப்பதற்கு மட்டுமே மக்களைப் பயிற்றுவிக்கும். தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.

“இளவரசனின் மரணத்தை கொலை என்று நிரூபிக்க முடியுமா?” என்று கேட்ட சாதிவெறியர்களின் அதே வாதத்திறமைதான், “பூபதி உள்ளிட்ட 5 பேர்தான் பூங்கொடி என்ற இளம் தளிரை வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்றதை நிரூபிக்க முடியுமா?” என்று கேட்கிறது.

இளவரசனுடைய பெற்றோருடைய கண்ணீருக்கும், பரமசிவத்தின் கண்ணீருக்கும் என்ன வேறுபாடு? இளவரசனுடைய பெற்றோரின் கண்ணீரைத் துடைக்கவாவது ஆயிரக்கணக்கான மக்களின் கரங்கள் நீண்டன. தீண்டாமைக்கும் சாதிவெறிக்கும் எதிரான அமைப்புகளும் மக்களும் தமிழகம் முழுவதும் குரல் கொடுத்தார்கள்.

ஆனால் பரமசிவத்தின் கதி? சொந்த சாதிக்காரர்கள் யாரும் அவருடைய கண்ணீரைத் துடைக்க கை நீட்டவில்லை. மாறாக சொந்த சாதிதான் அவரைப் பழி வாங்கிவிட்டது. குற்றவாளிகள் கம்பீரமாக உலா வர, பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளியை கூனிக்குறுகி ஊரை விட்டே ஓட வைத்து விட்டது.

தன்னையும் தனது குடும்பத்தின் சொத்துக்ளையும் பெருக்கிக் கொள்வதற்கு பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்ட ராமதாசுக்கு ஆதரவாக அன்புமணிக்கு வாக்களித்த சாதி உணர்வு, பரமசிவம் என்ற நெசவாளிக்கு அனுதாபம் கூடக் காட்டவில்லையே, வன்னிய சாதி மக்களை இத்தகைய இழி நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்?

பரமசிவத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு காரணம் ராமதாசும் அன்புமணியும் காடுவெட்டி குருவும் தூண்டிய சாதிவெறிதான். வட மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மை வன்னிய மக்களிடம் நிலம் கிடையாது. உழைத்து வாழக்கூடிய கூலித் தொழிலாளர்கள் என்பதால் இயல்பாகவே தலித் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்கிறவர்கள் வன்னிய மக்கள்.

‘நக்சலைட்டுகள் வேட்டை’ என்னும் பெயரில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வால்டர் தேவாரத்தால் வேட்டையாடப்பட்ட இளைஞர்களுள் பெரும்பான்மை இளைஞர்கள் வட மாவட்டங்களைச் சார்ந்த வன்னியர்கள்தான். அப்புவும் பாலனும் மார்க்சிய லெனினிய இயக்கமும் ஊட்டி வளர்த்த ஜனநாயகப் பண்பாடு காரணமாகத்தான் பெருமளவு சாதி மறுப்பு திருமணங்கள் மிகவும் இயல்பாக அங்கே நடந்து வந்தன.

சித்திரை விழாவில் பேசிய காடு வெட்டி குரு, “நாங்கள் வன்னியர் சங்கத்தை துவங்கியதன் மூலம் இளைஞர்கள் நக்சலைட் தீவிரவாதிகளாக மாறாமல் வன்னிய சமூகத்தை நாங்கள் காப்பாற்றினோம்” என்றார். உண்மையில் வன்னியர் சங்கம் போன்ற எல்லா சாதிச் சங்கங்களாலும் காப்பாற்றப்படுபவர்கள் பூபதியைப் போன்ற கிரிமினல்கள்தான்.

சாதி அரசியல், திவ்யாவைப் போன்ற பெண்களின் காதலை முறிக்கிறது. பூங்கொடி போன்ற சிறுமிகளைத் தூக்கில் தொங்க விடுகிறது. இளவரசனை மட்டுமல்ல திவ்யாவின் தந்தையையும் மரணத்துக்கு தள்ளுகிறது. ஏழைத்தொழிலாளி பரமசிவத்தை தனிமைப்படுத்தி விரட்டுகிறது.

சாதிச் சங்கம் குற்றவாளிகளைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, தத்தம் சாதியைச் சேர்ந்த மக்களை குற்றத்தில் உடந்தையாக்குகிறது. சாதியின் பெயரால் அவர்களுடைய சிந்தனையை ஊழல் படுத்துகிறது. அவர்களை மனச்சாட்சியற்றவர்களாக்குகிறது.

இதை நாங்கள் சொல்லவில்லை. தனது சொந்த அனுபவத்திலிருந்து பரமசிவம் சொல்லியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள்.

_______________________________________

படங்கள் : நன்றி விகடன்

மேலும் படிக்க: விகடன் கட்டுரை

நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

58

ந்தானம் வகைப்பட்ட ‘சவுண்டு’ காமடி படையெடுப்பில் காணாமல் போன விவேக், நாயகனாய் விசுவரூபமெடுத்திருக்கும் திரைப்படம் “நான்தான் பாலா”.

நான்தான் பாலா - வினவு 2டைட்டில் காட்சியில், “பத்மஸ்ரீ விவேக்” வந்ததுமே “சின்னக் கலைவாணர்” பட்டம் விலக்கப்பட்டது குறித்த கேள்வி எழுந்தது. அநேகமாக இந்த பட்ட மாற்றம் முன்னாடியே கூட நடந்திருக்கலாம், நமக்கு தெரியவில்லை.

சின்னக் கலைவாணர் பட்டத்தை பெருமையாக பார்த்த நாட்களில் கூட விவேக்கின் நகைச்சுவை பாதுகாப்பாகவே இருக்கும். அல்லது பாதுகாப்பை நோக்கிய பரிமாணத்தில் இருந்தது. சாதி, மத இன்னபிற சமூக பிரச்சினைகளில், நகைச்சுவைக்கு முடிவில்லா கற்பனை வாய்ப்பிருந்தாலும், குறிப்பிட்ட பிரிவினரை எந்த எல்லை வரை கிண்டல் செய்யலாம் என்பது அந்த கற்பனையை, புத்தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அந்த கட்டுப்பாட்டை மீற வேண்டும், ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும், அறுவை சிகிச்சைக்கு பயம் எதற்கு என்ற தைரியமெல்லாம் நகைச்சுவையின் சமூக பொறுப்போடு தொடர்புடையது.

அது இல்லாமல் வெறுமனே கிச்சு கிச்சு மூட்டும் ஏட்டிக்கு போட்டியான முரண்பாடு போல பார்த்தால் அதில் சப்தம் இருக்கலாமே ஒழிய சரக்கு இருக்காது. சந்தானம் வரவில்லை என்றாலும், சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையை விவேக் என்றோ அடைந்து விட்டார்.

“சாமி” போன்ற படங்களில் முற்போக்கு பார்ப்பனராக நடித்த விவேக் இங்கே அதையே சிவாஜி வகை சீரியஸ் பாத்திரமாக, நாயகனாக நடித்திருக்கிறார். ஏழைகளின் அவலத்தை விட பண்ணையார்களின் கருணையை காட்டினால் அடிமைத்தனத்தில் ஊறியிருக்கும் மக்களால் வரவேற்கப்படும் என்பதே “பா’ வரிசைப் படங்களின் வரலாற்றுக் காலம் உருவாக்கியிருக்கும் சித்திரம்.

எனினும் இன்றைக்கு பண்ணையார்களின் இடம் பொருளாதார அளவில் குலையவில்லை என்றாலும், கருத்தளவில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த யதார்த்தத்தை படத்தின் இயக்குநரோ இல்லை நாயகனோ அறிந்து வைத்திருக்கவில்லை.

சமூக மாற்றம் குறித்த பகத்சிங்கின் புரட்சிப் பார்வைக்கும், காந்தியின் சீர்திருத்த பார்வைக்கும் உள்ள வேறுபாடுகளை மேலோட்டமாக புரிந்து வைத்திருக்கும் அறிஞர் பெருமக்கள் கூட இதில் எந்த பார்வைக்கு வாய்ப்பும், வளர்ச்சியும், எதிர்காலமும் உண்டு என்று ஆய்ந்து தெளிவதில்லை. ஆகவே மேன்மக்களால் பயிற்றுவிக்கப்படும் சமூக மாற்றம் ஒரு தேங்கிய பிற்போக்காகத் தெரியாமல், ஜோடனையான வளர்ச்சியாக மட்டும் தெரிவது ஆச்சரியமல்ல.

கும்பகோணம் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார் விவேக். தட்டில் காணிக்கையை போடுமாறு அடம்பிடிக்கும் தஞ்சை கோவில்களின் அர்ச்சகர் போலன்றி தட்டில் போடக்கூடாது, உண்டியலில் போடுங்கள் என்று விளக்கம் சொல்பவர். இப்படி ஆரம்பத்திலேயே விவேக் அநியாயத்திற்கு நல்லவரான ஒரு பார்ப்பன பூசாரி என்பது பதிய வைக்கப்படுகிறது. இதனாலேயே இந்த நல்லவர் அடுத்தடுத்த காட்சிகளில் என்ன பேசுவார், செய்வார் என்பது ஒரு சில குறியீடுகளைப் பார்த்த உடனேயே புரிந்து விடுகிறது. மேலே குறிப்பிட்ட பண்ணையார் வகை கருணையை நோக்கி கவனம் குவிக்கும் படமிது என்பதும் உரக்க அறிவிக்கப்படுகிறது.

நான்தான் பாலா - வினவு 3இதை, ஏதோ படத்தை விறுவிறுப்பு இல்லாமல் எடுத்ததன் விளைவு என்று குமுதம் – விகடன் விமரிசனங்களை படித்து சினிமா ஆய்வை செய்து வரும் மொக்கைகள் வேறுபாடின்றி எழுதலாம். அப்படி இல்லை. ஒரு நல்லவனின் போராட்டத்தில், நல்லதை அடைவதற்கு தன்னிடமுள்ள கெட்டவைகளை அவன் எப்படி சிரமப்பட்டு இழந்தான் என்பதை ஆழமாக உணரும் பட்சத்தில் அங்கே கிளிஷே காட்சிகளுக்கும், கிளி ஜோசியத்திற்கும் இடமில்லை. ஆனால் சமூக இயக்கத்தை இப்படி ஃபார்முலாவாக பார்க்கும் நமது இயக்குநர்களில் பெரும்பாலானோர் சுட்டுப் போட்டாலும் அதன் உயிர்ப்பை உணர்ந்தவர்கள் அல்லர்.

அதனால்தான் இந்த படம் செயற்கையாக நகர்கிறது. தலித் வக்கீல் ஒருவரது வீட்டிற்கு விவேக் செல்கிறார். வெளியே அம்பேத்கர் படம். வழக்கமாக சினிமா போலிஸ் ஸ்டேசன்களில் இருக்கும் அம்பேத்கர் படம் இங்கே இருப்பதே, குறியீடாய் அந்த வக்கீல் என்ன சாதி என்பதை சொல்லி விடுகிறது. அதனால் அடுத்து மனதை உருக்கும் காட்சி ஒன்று வரப்போகிறது என்றும் தெரிந்து விடுகிறது.

வீட்டிற்கு வெளியே நின்று பேசும் விவேக், வக்கீல் அம்மாவிடம் குடிநீர் வாங்கி குடிக்கிறார். ஐயர் பிள்ளை நம்ம வீட்டில் குடிக்கும் ஆச்சரியம் குறித்து அம்மாவும், மகனும் குற்ற உணர்வில் இருக்க, “இதிலென்ன வேறுபாடு, எல்லாரும் பகவானது குழந்தைகள் (அரிஜன்)” என்று நெகிழாமல் சாதாரண லா பாயிண்டாக சொல்கிறார் விவேக். அவ்வளவு ஊறிப்போன விசயமாம் அது.

சேரிப் பிரிவினை, தீண்டாமை கொடுமைகள் காரணமாக வாழும் தலித் மக்கள், ஒரு பார்ப்பனரின் பெருந்தன்மை பார்த்து பரவசப்படுகிறார்கள். குற்ற உணர்வு அடைய வேண்டிய பார்ப்பனர்களோ பெருமித உணர்வு அடைகிறார்கள். பாதிப்பு அடைந்த பிரிவினர் கூட பாதிப்பு உருவாக்கிய பிரிவினரின் ‘கருணையை’ சிலேகிக்கும் இந்த காட்சிகள் உண்மையில் பெரும் வன்முறையை நியாயப்படுத்துகிறது.

எளிமையாக சொல்வதென்றால் சேரி, ஊர், அக்ரகாரம் பிரிவினை மூலம் தீண்டாமை தொடங்கி தெய்வம் வரை பிரிவினைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி காத்து வரும் பார்ப்பனியம் தனது ஆன்மாவை மறைத்து இவையெல்லாம் பார்ப்பனியம் அல்ல, நல்ல பார்ப்பனியம் வேறு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும். இதையே நல்ல இந்துமதம் என்று ஆர்.எஸ்.எஸ் சிலாகிக்கிறது. இந்த அணுகுமுறையில் இருப்பது அந்த கொடுங்கரத்தை கொடுத்துச் சிவந்த கரம் என்று மாற்றும் தந்திரமே அன்றி வேறல்ல.

நான்தான் பாலா - வினவு 5திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் பெற்றோர், அதனால் அவர்களை வெளியேறச் சொல்லும் அக்ரஹாரம் என்று படம் முழுவதுமே இந்த முற்போக்கு பார்ப்பனர், தான் யார் என்பதை உரக்கச் சொல்கிறார். சோவின் எங்கே பிராமணன் இந்த இடத்தில் நினைவு கூர்வதற்கு பொருத்தமானது. நாம் விமரிசிக்கும் எவையும் உண்மையான பிரமாணர்களின் அழகல்ல, அவர்கள் வேறு என்று சோவோ இல்லை இந்த படமோ திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. அதைக் கொஞ்சம் செண்டிமென்டாகவும், மாடி வீட்டு மனிதர்களின் வள்ளல்தனமாக காட்டும் போது ஒடுக்கப்படும் பிரிவினர்கள் கூட ஒடுக்கப்படுதலின் கருணை முகம் கண்டு ஏமாறலாம்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் காட்டூரான் எனும் தாதாவின் அடியாளான பூச்சி, கும்பகோணம் சென்று ஒரு கொலை செய்து விட்டு தற்செயலாய் விவேக்கை சந்திக்கிறான். கோர்ட்டில் அபராதம் கட்டி தந்தையை மீட்பதற்கு வழியில்லாமல் பெருமாளிடம் புலம்பும் விவேக் நிலையை பார்த்து பூச்சி பண உதவி செய்கிறான். பிறகு பெற்றோர் இறந்ததும், அந்த ரவுடியின் பணத்தை ஒப்படைக்க கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் பயணிக்கிறார் விவேக்.

வரதராஜ பெருமாள் கோபுரத்தின் அருகே மாடி வீட்டு அறையில் இருக்கும் பூச்சி, அங்கேயே விவேக்கை தங்கச் சொல்லி நட்பாகிறான். பிறகு போளி விற்கும் பெண்ணுடன் விவேக் காதல், பூச்சி செய்த கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் விவேக்கிடம் பேரம் பேசி, பூச்சியை அப்ரூவர் ஆகச் சொல்கிறது. இல்லையென்றால் என்கவுண்டர் என்று சொல்லும் டிஎஸ்பியிடம் வாக்கு கொடுத்து அப்ரூவராக்கும் வேலையை விவேக் செய்கிறார்.

இது தெரிந்து  காட்டூரான், பூச்சியை கொல்ல, விவேக் காட்டூரானை கொன்று ஏழு வருடம் தண்டனை பெற்று பின்னர் காதலியை மணப்பதாக சொல்கிறார். படம் முடிகிறது.

இடையிடையே துரியோதனன், கர்ணன், தர்மம், நட்பு என்று ஏதோதோ பேசி ஏராளமாய் வதைத்து துன்புறுத்துகிறார்கள். ஒரு ஐயங்கார் பூசாரி, ஒரு கொலைகார ரவுடியை திருத்தும் கதை என்று ஒன்லைனை தீர்மானித்து விட்டு கூட இயக்குநர் இதை விரித்திருக்கலாம். நல்லவன் கெட்டவன் நட்பு, போராட்டம் என ஃபார்முலாக்களை வைத்திருக்கும் கோடம்பாக்கத்தின் ஒன்பது கதைகளில் ஒன்றனவும் இதைச் சொல்லலாம்.

கதையின் ஒருவரி செய்தி இதுவென்றாலும் இதை விரிக்கும் போது இயக்குநரின் சமூக கண்ணோட்டமே அதை திரைக்கதையாக கட்டுகிறது. பார்ப்பனியம் மற்றும் ரவுடியிசம், மேல் தோற்றத்தில் வேண்டுமானாலும் சைவம்-அசைவம், சாது-வில்லன், மென்மை-வன்மை என வேறுபடலாம். இதை தனிநபர்களது பிரச்சினை என பார்க்காமல் சமூக இயக்கத்தில் வைத்து பார்த்தால் இந்த பாத்திரங்களின் மேற்கண்ட சித்தரிப்பு எதிர்மறையாகவோ இல்லை ஒற்றுமையாகவோ கூட மாறலாம்.

தமிழகத்தில் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக இருக்கும் ஊர்களில் கோவிலை நம்பி வாழும் பார்ப்பனர்கள், இதர சாதி வணிகர்கள் அனைவரும் ஒரு ரியல் எஸ்டேட் தரகனது அனைத்து மோசடிப் பண்புகளையும் ஒருங்கே கொண்டிருப்பார்கள். அதிலும் கோவிலின் மையமான பூஜை புனஸ்காரத்தை கையில் வைத்திருக்கும் பூசாரிகள், கோவிலுக்கு வரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பில் இருப்பதால் அவர்களது பார்வை, அணுகுமுறை அனைத்தும் ஒரு அதிகாரத் திமிர் கொண்ட போலிஸ்காரனது போலவும் இருக்கும்.

நான்தான் பாலா - வினவு 1கோவில்கள் நகரமான கும்பகோணத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் மேற்கண்ட இலக்கணத்தைவிட இன்னும் தீவிரமானவர்கள். நஞ்சை வளம், கலை இலக்கிய பண்பாட்டு வளம் இன்ன பிற வாழ்க்கை வசதிகளால்  மற்ற பார்ப்பனர்களை விட எங்கேயும் தமது இடம் என்று முடிவு செய்யும் ஒன்றை விடாமல் பறித்துக் கொள்வார்கள். மதம், அரசு மற்றும் சுற்றுலா வருமானம் அனைத்தும் உருவாக்கிய அதிகாரத்தில் திளைத்தவர்களது பண்பை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட கும்பகோணத்தில் ஒரு ஒதுக்கப்பட்ட மடமாக இருந்து காஞ்சிபுரத்திற்கு மாறியதுதான் காஞ்சி சங்கரமடம். இந்த மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, திருட்டு மடம் என்று மற்ற சங்கரமடங்கள் கூறிவருகின்றன. என்றாலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆஸ்தான குரு போன்ற இடத்தை இந்த மடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் பிடித்தது. இன்றைக்கும் செத்துப்போன சீனியர் சங்கராச்சாரியின் படத்தையும், வார்த்தைகளையும் பிதுக்கித்தான் பக்தி இதழ்கள் பிழைக்கின்றன. அதே நேரம் அவரது பிரச்சினைக்குரிய சூத்திர – தமிழ் – பெண்கள் சம்பந்தமான அருள்வாக்குகளை அவர்கள் வெளியிடுவதில்லை.

இப்பேற்பட்ட எவர்கிரீன் சீனியர் கண்டுபிடித்த ஜெயேந்திரன் எனும் ச.சாரிதான் சங்கரராமன் எனும் கேள்வி கேட்ட பார்ப்பனரை இல்லாதொழிக்கிறார். அந்த வழக்கையும் இல்லாத ஒன்றாக்கி விட்டார். பூச்சி எனும் ரவுடியை திருத்தும் பாலா எனும் ஐயங்காரின் கதையை இங்கே பொருத்தி பாருங்கள். பூச்சி குடியிருக்கும் மாடிக்கு அருகில் இருக்கும் வரதராஜபெருமாள் கோவிலின் வளாகத்தில்தான் சங்கரராமன் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்பேற்பட்ட பெருமாளை சாட்சியாக வைத்தும், ஆசீர்வாதத்தோடும்தான் ஒரு ரவுடி திருத்தப்படுகிறார் என்றால் என்ன சொல்ல?

இங்கே லோக குரு என்று போற்றப்பட்ட ஒரு ச.சாரி கூலிக்கு கொலை செய்யும் கும்பலை அமர்த்தி, மடத்திற்கு வரவழைத்து ஆசிர்வாதம் மற்றும் காணிக்கை கொடுத்து கோவிலில் வைத்து கொன்றிருக்கிறார் என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது?

தயிர்சாதம் மற்றும் நெய் பொங்கல் சாப்பிட்டு சாத்வீக குணம் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனர் அசுர குணத்திற்குரிய கொலையை செய்வது சாத்தியமா என்று கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை வேண்டுவோர் பார்ப்பனியம் என்றால் என்ன என்பதைப் புரிந்திருப்பது நல்லது.

இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று  பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார்.

முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?

பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.

இசுலாமிய நாடான வங்கதேசத்தின் பெண் சபாநாயகர், மோடியுடன் கைகுலுக்குகிறார், பாக் அணி கிரிக்கெட் ஆடும் போது பாக்கிஸ்தான் மாநகர முசுலீம் பெண்கள் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கைதட்டுகிறார்கள், துனிசியா நாட்டை சார்ந்த வாலிபால் பெண்கள் அணி மேற்கத்திய அணிகளின் உடை பாணிகளோடு ஆடுகிறார்கள் என்று இதற்கு ஏராளம் ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனியத்தைப் பொறுத்த வரை இறை குறித்த கொள்கைகளில் – ஓரிறை, பல கடவுள்கள், உருவ வழிபாடு, உருவ வழிபாட்டை மறுக்கும் இறை நம்பிக்கை, வேதத்தை ஏற்று கடவுளை மறுக்கும் நாஸ்திகம் – என்று பல வேறுபாடுகள் இருந்தாலும், ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வாழ்வியல் குறித்த கொள்கைகளில் பிரிவினையோ, அனுமதியோ கிடையாது. அதாவது ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மறுத்தால் பார்ப்பனியத்தை ஆளும் வர்க்க சித்தாந்தமாக கொண்டிருக்கும் அரசுகள், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும். அதனால்தான் பார்ப்பன இந்துமதத்தில், மதம் சம்பந்தமான அம்சங்கள் இல்லை என்றும், கிரிமினல் சட்ட விதிமுறைகள் மட்டுமே இருப்பதாக அம்பேத்கர் விளக்கினார்.

இறை வழிபாடு, உடை, உணவு குறித்த அம்சங்களில் ‘இந்துக்கள்’ வேறுபட்டாலும், வருணாசிரம தர்மம், சாதி எனும் சமூகக் கட்டமைப்பை ஏற்பதில் ஒன்றுபடுகின்றனர். இறை வழிபாடு தவிர்த்த மற்ற அம்சங்களில் இசுலாமியர்கள் வேறுபடுகின்றனர். ஆகவே இரண்டிலும் எது பிரதானமானது என்பதை வைத்தே ஒன்றில் தனிநபர்கள், இயக்கமாகவும், மற்றதில் ஒட்டு மொத்த அமைப்பையே விமரிசித்தும் எழுத வேண்டியிருக்கிறது.

இந்த வேறுபாட்டிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு?

சாதி ஏற்றத் தாழ்வுதான் ஒரு மதத்தின் அடிப்படை எனும் போது அந்த அடிப்படையை சித்தாந்தரீதியாக ஷத்ரியர்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்காக உருவாக்கியும், காப்பாற்றியும் வருவதில் அறிவுத் துறை வேலை செய்து வருகின்ற மேல் பிரிவினரான பார்ப்பனர்களின் நல்ல பண்பு என்றால் என்ன என்பதே நமது கேள்வி!

சாதி பிரிவினையை வர்க்கமாக பார்த்தால் ஏழைகள், ஏழைகளாக இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை மதம், அரசு இதர தடிக்கம்புகளால் அமல்படுத்துகிற ஒரு பார்ப்பனரிடம் மனித நேயம் எப்படி என்னவாக இருக்கும் என்பதே நமது கேள்வி! பணக்காரர்களின் நலனுக்காக இயங்குவதையே தனது இருத்தலின் நியாயம் என்று கருதுகிற பார்ப்பன இந்துமதத்தில் ஏழைகளின் நியாயத்தை ஒரு பார்ப்பனர் எப்படி ஏற்பார்?

ஒருக்கால் ஏற்கிறார் என்றால் அது விவேக் போல இருக்குமா? நிச்சயம் இருக்காது. இப்படத்தில் விவேக் சித்தரிக்கும் பாத்திரம் இதுதான் உண்மையான பார்ப்பனியம் என்பதாகவும், கேடுகளுக்கு காரணம் அதை புரிந்து கொள்ளாத தனிநபர்களின் பிரச்சினை என்றும் திரிப்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

பார்ப்பனிய இந்து மதத்தினை புரிந்து கொண்டு மாற நினைக்கும் ஒருவரது முதல் உணர்ச்சியே தனது சமூக அந்தஸ்தால்  தான் அடைந்த சலுகை குறித்த குற்ற உணர்ச்சிதான். இந்த சலுகைகள் மற்ற மக்களின் உரிமைகளை பறித்துத்தான் கிடைத்தது என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார். இப்படித்தான் இன்னபிற நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் இருந்து அவர் மாறுகிறார். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களோடு இணைந்து கொள்கிறார். இதை பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல ஏனைய சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனினும் சாதிகளின் படிவரிசைக்கேற்ப இந்த மாற்றத்தின் அளவு மாறுபடும். ஆதலாம் மாற நினைக்கும் ஒரு பார்ப்பனர் இந்த அறுவை சிகிச்சையை செய்யாமல் மனிதனாக மாற முடியாது.

இருப்பினும் பார்ப்பனியத்தை விமரிசிக்கும் போதெல்லாம் சில வாசகர்கள் அப்பாவி பார்ப்பனர்களையும் சேர்த்து விமரிசிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான அநீதியான இந்த சமூக அமைப்பை ஏற்கவில்லை என்று ஒருவர் மனமுவந்து வரும் போது பார்ப்பனியம் எனும் அடையாளத்தில் தன்னை வைத்து பார்க்க மாட்டார். மாறாக அப்படி பேசுபவர்களை திருத்தவே முற்படுவார். மறுத்தால் அவர் தனது அடையாளங்களின் ஆதாயங்களை இன்னும் இழக்கத் தயாராக இல்லை என்றே பொருள். அதை உணர எந்த மக்களை பார்ப்பனியம் வதைத்து சிதைத்திருக்கிறதோ அந்த மக்களோடு வாழ்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியோ மருந்தோ இல்லை.

தனது பிற்போக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்படும் போது அதை இழப்பதின் அருமையை உணர்ந்தவர்கள் அதை இழப்பாகவோ தியாகமாகவோ உணரமாட்டார்கள். கேன்சர் கட்டிகளை வெட்டாமல் வைத்து அழகு பார்த்து ஆராதிக்க முடியுமா என்ன?

ஆகவேதான் ஜெயேந்திரன் – சங்கரராமன் கதைதான் பார்ப்பனியத்தின் ஆகச்சிறந்த சான்று என்பதால் அதை மறைப்பதற்கு இத்தகைய படங்களோ, இல்லை கதைகளோ, இல்லை ஊடகங்களின் உபதேசங்களோ தேவைப்படுகின்றது.

ஆரம்ப கால படங்களில் சமூக அமைப்பின் ஒரு சில மையங்களை விமரிசித்த விவேக் பின்னர் ஒரு அப்துல் கலாம் வகைப்பட்ட மொக்கையாக மாறியதின் கவித்துவமான நீதி இந்த படம். சிவாஜியின் மிகை உணர்ச்சியை கிண்டல் செய்தவர் பின்பு தானே அப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார்.

இயக்குநர் பாலாவின் சீடரான ஆர்.கண்ணன்தான் இந்தப் படத்தின் இயக்குநராம். உண்மையில் குருவின் கீர்த்திக்கு குறைவில்லாமல்தான் படம் எடுத்திருக்கிறார். ஆனாலும் விவேக் ஐந்து நிமிடம் கழித்து அழுவார் என்று ஐந்து நிமிடத்திற்கு முன்பேயே திரைக்கதையும், இசையும் முன்னுரைக்க, பின்னர் அவர் அழ, ஐந்து நிமிடம் கழித்து ஐயர் அழுதார் என சில பாத்திரங்கள் பேசிக் கொள்ள, இசையும் அதை மீட்ட, வெல்டன் பாலா!

பாஜக ஆட்சியில் “பத்மஸ்ரீ விவேக்”கின் நான்தான் பாலா பொருத்தமாத்தான் வந்துள்ளது. காஞ்சிபுரம் ரவுடியை திருத்திய இந்த கும்பகோணம் ஐயங்காருக்கு அடுத்த தேசிய விருது கிடைக்காதா என்ன?

மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !

4

ர்வாதிகாரிகளும் பாசிஸ்டுகளும் பல்வேறுவிதமான தில்லுமுல்லுகள், அடக்குமுறைகள் மூலம் தொடர்ச்சியாக தேர்தல்களில் வென்று, நீண்ட காலத்திற்கு பதவியில் பசை போல ஒட்டிக் கொண்டிருப்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.  நரேந்திர தாமோதரதாஸ் மோடி 2002-க்குப் பிறகு குஜராத்தில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும், 16-வது நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தல்களிலும் வென்றிருப்பதை அப்படிப்பட்ட சர்வாதிகாரிகளின் வெற்றியோடு மட்டுமே ஒப்பிட முடியும்.

அக்ஷர்தாம் அப்பாவி முசுலீம்கள்
அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கில் மோடி அரசால் மோசடியான முறையில் சிக்க வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள அப்பாவி முசுலீம்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளையும் ஊடகங்களையும் பக்கபலமாக வைத்துக்கொண்டு, ஆதிக்க சாதி மற்றும் இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு, சிறுபான்மை முசுலீம்களை நிரந்தர அச்சத்தில் வைத்துதான் அவர் தனது வெற்றியைச் சாதித்து வந்திருக்கிறார்.  குறிப்பாக, குஜராத்தில் போலீசு-உளவுத் துறை மூலம் அரசு பயங்கரவாத, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியதன் மூலம்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை முதல்வராகப் பதவியில் அமர முடிந்தது.  இந்த சமூக விரோத கிரிமினல்தனத்தைத் தாண்டி அவரது தேர்தல் வெற்றிகளுக்கு வேறெந்த அடிப்படையும் கிடையாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த மே 16 அன்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

குஜராத்தில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோவில் மீது செப் 2002-ல் நடைபெற்ற தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஆறு முசுலீம்களையும் அப்பாவிகள் எனக் குறிப்பிட்டு விடுதலை செய்த அத்தீர்ப்பு, மோடியின் ஆட்சி சிறுபான்மை முசுலீம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே கேடுகெட்ட ஒரு கிரிமினல் கும்பலின் ஆட்சி என்பதையும் எடுத்துக் காட்டியது.  இந்தியாவின் 15-வது பிரதமராகப் பதவியேற்றுள்ள நபரின் அச்சமூட்டக்கூடிய, அதேசமயம் அருவெறுக்கத்தக்கதுமான கிரிமினல்தனத்தை எடுத்துக்காட்டிய இத்தீர்ப்பு பொதுவெளியில் விரிவாக விவாதிக்கப்படாமல், காங்கிரசு உள்ளிட்ட எதிர்த்தரப்பாலும் ஒதுக்கப்பட்டு ஒரு சாதாரண செய்தி போல கடந்து போனதுதான் இந்து மதவெறிக் கும்பலின் தேர்தல் வெற்றியை விட அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும்.

லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனக் கூறப்பட்ட இரண்டு பேர் ஏ.கே 56 ரக துப்பாக்கியைக் கொண்டும் கையெறி குண்டுகளை வீசியும் நடத்திய அத்தாக்குதலில் குஜராத் கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த இருவர், தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு சிப்பாய், குஜராத் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் மற்றும் 28 பக்தர்கள் உள்ளிட்டு 32 பேர் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலை நடத்திய இருவரும் தேசிய பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றத்தால் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆறு முசுலீம்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஜந்தர் மந்தரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

“குஜராத்தில் நடந்த கலவரத்திற்குப் பழி தீர்க்கும் நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக”க் கூறிய மோடி அரசு, குஜராத் மற்றும் உ.பி.யைச் சேர்ந்த ஆறு முசுலீம்களைக் கைது செய்து, அவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.  இந்த ஆறு பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக் குற்றஞ்சுமத்தியதோடு, இத்தாக்குதலைச் சர்வதேச முசுலீம் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் நோக்கத்தில், இத்தாக்குதலோடு தொடர்புடைய 28 குற்றவாளிகள் பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் பீதி கிளப்பி விட்டது.

பொடா நீதிமன்றம் இந்த ஆறு பேரில் ஆதாம் அஜ்மீரி, சாந்த் கான், முஃப்தி அப்துல் மன்சூரி ஆகிய மூன்று பேருக்குத் தூக்கு தண்டனையும்; முகம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும்; அப்துல் மியான் காத்ரிக்கு 10 ஆண்டும், அல்தாப் ஹுசைனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.  இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.  இதற்கு எதிராக அல்தாப் ஹுசைனைத் தவிர மீதி ஐந்து பேரும் தொடுத்த வழக்கில் மூன்று பேரின் தூக்குத் தண்டனை, முகம்மது சலீமுக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, அப்துல் மியானுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை ஆகியவற்றை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், ஐந்தாண்டு சிறை தண்டனையைக் கழித்து விடுதலையாகிச் சென்றுவிட்ட அல்தாப் ஹுசைனின் மீதான குற்றச்சாட்டையும் தானே முன்வந்து ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “இந்த ஆறு பேருக்கும் அளிக்கப்பட்ட தண்டனை அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது” எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்திருப்பது ஒருபுறமிருக்க, இந்த வழக்கை நடத்திய மோடி அரசின் மீது நீதிபதிகள் வைத்துள்ள விமர்சனங்கள் பாரதூரமாகக் கவனிக்கத்தக்கவை.

“அரசு தரப்பின் சாட்சியங்களும் வாதங்களும் முக்கியமான ஒவ்வொரு தருணத்திலும் சிதறிச் சின்னாபின்னமாகிப் போயிற்று.  வழக்கின் விசாரணை கட்டத்தில் தொடங்கி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க மாநில அரசு அனுமதி அளித்தது, அதன் அடிப்படையில் பொடா நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டித்தது, அத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது வரையிலும் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது” என இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், வீ.கோபால கௌடா ஆகிய இருவரும் ஒருமனதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அக்ஷர்தாம் கோவில் மீதான தாக்குதல் செப். 25, 2002 அன்று நடந்தது.  இத்தாக்குதல் பாகிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத சதிச் செயல் எனக் கூறப்பட்டாலும், தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு வரையிலும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை.

குஜராத் கொலைகள்
காங்கிரசின் துணையோடு மோடி அரசால் நடத்தப்பட்ட போலி மோதல்களில் படுகொலை செய்யப்பட்ட (இடமிருந்து) இஷ்ரத் ஜஹான், சாதிக் ஜமால், சோராபுதின், துளசிராம் பிரஜாபதி மற்றும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட கவுசர் பீ. (கோப்புப் படங்கள்).

இப்படிப்பட்ட நிலையில், குறிப்பாக அக்ஷர்தாம் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள் நெருங்கும் நிலையில் இந்த வழக்கு ஆகஸ்டு 28, 2003 அன்று குஜராத் குற்றப்பிரிவுக்குத் திடீரென மாற்றப்பட்டது.  மறுநாளே இத்தாக்குதலில் தொடர்புடைய குஜராத்தைச் சேர்ந்த ஐந்து முசுலீம்கள் கைது செயப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.  உ.பி.யைச் சேர்ந்தவரும் காஷ்மீரில் மெக்கானிக் ஷாப் நடத்திவருபவருமான சாந்த் கான் ஆகஸ்டு 31, 2003 அன்று காஷ்மீரில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் வழக்கு பொடா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.  இச்சூழ்நிலைகள், கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஆறு முசுலீம்கள் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதையும், அவர்களைத் தண்டித்து விட வேண்டும் என்ற தீய நோக்கத்துடனேயே பொடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு கொண்டுவரப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விடுதலை செயப்பட்ட முகம்மது சலீம், “அக்ஷர்தாம் கோவில் தாக்குதல், ஹரேன் பாண்டியா கொலை, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு – இந்த மூன்றில் ஏதாவது ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் தன்னைச் சித்திரவதை செய்ததாக”ப் பத்திரிகையாளர்களுடன் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டு, இதுநாள் வரை மறைக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினார். “ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தைத் தன்னிடம் காட்டி, அது போலவே உருது மொழியில் கடிதமொன்றை எழுதும்படித் தன்னை போலீசார் மூன்று நாட்கள் தொடர்ந்து சித்திரவதை செய்ததாக”க் கூறுகிறார், முஃப்தி அப்துல் மன்சூரி.

சித்திரவதை செய்யப்பட்டுத்தான் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதை தீர்ப்பிலும் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், இந்த வாக்குமூலங்களையும், குற்றவாளிகளுள் ஒருவர் போலீசு தரப்பு சாட்சியமாக மாறியதையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டனர்.  மேலும், “இத்தாக்குதல் குறித்த உண்மைகளைத் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்தும் விசாரணை அதிகாரியோடு கலந்து ஆலோசித்த பிறகும்தான் குஜராத் உள்துறை அமைச்சர்  பொடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை; உள்துறை அமைச்சர் தனது அறிவைச் செலுத்தி பொடாவின் கீழ் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்ததாகத் தெரியவில்லை.  இதன் காரணமாகவும், சட்டவிதிகளின் படியும் இந்த வழக்கு பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டிருப்பது செல்லத்தக்கதல்ல.  விசாரணை அதிகாரியும், பொடா நீதிமன்றமும் பொடா சட்டவிதிமுறைகளின்படி குற்றவாளிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறவில்லை.  எனவே, பொடா சட்டவிதிகளின் படியே இந்த வாக்குமூலங்கள் செல்லத்தக்கதல்ல” எனத் தீர்ப்பளித்திருக்கும் நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான அரசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டனர்.

அகமதாபாத் ஆர்ப்பாட்டம்
குஜராத்தில் அடுத்தடுத்து பல போலிமோதல் படுகொலைகளை நடத்திய மோடி அரசை நீக்கக் கோரியும், அப்படுகொலைகள் அனைத்தையும் சி.பி.ஐ விசாரக்கக் கோரியும் ஜன் சங்கர்ஷ் மஞ்ச் என்ற அமைப்பினர் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்).

“இந்த வழக்கு குறித்து பொடா நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் வந்தடைந்துள்ள ஒத்த முடிவுகள் உண்மைக்குப் புறம்பானதாகவும் சட்டப்படி தவறானதாகவும் உள்ளன” என்றும்,  “மிகுந்த கவனத்தோடும் திட்டமிட்ட வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள அரசு தரப்பின் கதையாடல் அவநம்பிக்கையும் சந்தேகமும் கொள்ளத்தக்கது” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இந்த வார்த்தைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பொய்யாக, மோசடியாக வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்பது தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.

2003-ம் ஆண்டில் குஜராத்தின் உள்துறை அமைச்சகத்தைத் தனது பொறுப்பில் வைத்திருந்த மோடிதான் இந்த வழக்கை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல் அளித்தார்.  உள்துறை அமைச்சர் தனது அறிவைச் செலுத்தி இந்த ஒப்புதலை வழங்கவில்லை எனத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கு, மோடி ஒருதலைப்பட்சமாகவும் தீய உள்நோக்கத்துடனும்தான் அப்பாவி முசுலீம்கள் மீது பொடா சட்டத்தை ஏவி விட்டிருக்கிறார் என்பது தவிர வேறெந்த விளக்கத்தை அளிக்க முடியும்?

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், சுயேச்சையான சாட்சியங்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.  குறிப்பாக, தாக்குதலின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்ட ‘தீவிரவாதிகளிடமிருந்து’ கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதத்தைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய தடயமாகக் காட்டியது, குஜராத் போலீசு.  இக்கடிதம் முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இதனை நம்பத்தகுந்த சாட்சியமாக ஏற்றுக்கொள்ளவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

அப்பாவி முசுலீம்களைப் பிடித்து வந்து, அவர்களைச் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராகப் பொய் சாட்சியங்களைத் தயாரித்து, இந்த மோசடிகள், அத்துமீறல்கள் அனைத்தும் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே பாசிச கருப்புச் சட்டமான பொடாவின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது மோடி அரசு என்பதை இந்தத் தீர்ப்பு அம்பலப்படுத்தி விட்டது.  நாடெங்கும் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கிலேயே மோடி அரசு இத்துணை தூரம் மோசடியாக நடந்து கொண்டிருக்குமானால், குஜராத்தில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறப்படும் மற்ற ‘பயங்கரவாத’ வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ள முசுலீம்களின் கதி என்னவாக இருக்கக் கூடும்?  குற்றம் எதுவும் செய்யாமலேயே தண்டனை அனுபவித்துவரும் முசுலீம்களின், அவர்களது குடும்பத்தாரின் மனோநிலை எப்படியெல்லாம் குமுறிக் கொண்டிருக்கும்?

இந்த ஆறு பேரையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகூட அரைகுறையானதுதான்; புண்ணுக்குப் புனுகு தடவுவது போன்றதுதான்.  குற்றம் எதுவும் செய்யாமலேயே சிறைத்தண்டனை அனுபவித்திருக்கும் இவர்களின் மறுவாழ்வு குறித்துப் பேசாத, இவர்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிய மோடி கும்பலை, போலீசு அதிகாரிகளை, நீதிபதிகளைத் தண்டிப்பது குறித்துப் பேசாத தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?  அதனால்தான் தூக்குதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் முஃப்தி அப்துல் மன்சூரி, ”இந்த விடுதலை வெறுமையானது; கடந்த 11 ஆண்டு கால ஒவ்வொரு நொடியிலும் நீதி கொன்று புதைக்கப்பட்டுவிட்டது” என விரக்தி மேலிடக்  கூறுகிறார்.

05-captionஇது அவரின் மனநிலை மட்டுமல்ல; ஹரேன் பாண்டியா கொலை வழக்கில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில், இவை போன்று இன்னும் பல்வேறு வழக்குகளில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டு, பல ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையடைந்திருக்கும் ஒவ்வொரு முசுலீமின் மனநிலையும் இப்படித்தான் விரக்தியடைந்திருக்கும்; அல்லது பழிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

முசுலீம்கள் மீது இழைக்கப்படும் இந்த அநீதிகளுக்குக் காரணமான இந்து மதவெறி பாசிச கும்பலைத் தண்டிக்கத் துணியாமல், அதன் கையில் அரசு அதிகாரத்தை ஒப்படைத்துள்ள சமூகத்திற்கு; சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியும் மறுவாழ்வும் பெற்றுத் தரும் பொறுப்பைச் சுமக்கத் தயாராக இல்லாத சமூகத்திற்கு, முசுலீம் தீவிரவாதம் குறித்துக் குற்றஞ்சொல்வதற்கு எந்தவிதமான தார்மீக அடிப்படையும் கிடையாது.

***

க்ஷர்தாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்; அவர்கள் யார் என்பது இன்று வரை சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை.  குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு முசுலீம்களும் தீவிரவாதிகள் கிடையாது, அப்பாவிகள் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு, விடுதலையடைந்து விட்டனர்.  அப்படியென்றால், இத்தாக்குதலை நடத்தியது யார்?  இவ்வுண்மையைக் கண்டுபிடிக்க முயலாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு பொய்வழக்கை மோடி அரசு நடத்திவந்த காரணமென்ன? இந்தத் தாக்குதல், மோடி, தன்னைத் தீவிரவாதத்துக்கு எதிரான வலிமைமிக்க தலைவராகக் காட்டிக்கொள்ள நடத்தப்பட்ட நாடகமாக ஏன் இருக்கக் கூடாது?

கடந்த பத்தாண்டுகளாக மைய ஆட்சியில் இருந்த, சி.பி.ஐ., ஐ.பி., ரா என போலீசையும் உளவுத்துறைகளையும் கையில் வைத்திருந்த காங்கிரசு கட்சியும் இந்தக் கேள்வியை எழுப்பவில்லை என்பதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகும் மோடி அரசின் மோசடிகளை, அத்துமீறல்களை அம்பலப்படுத்த அக்கட்சி துணியவில்லை என்பதும் ஒதுக்கித் தள்ளக்கூடிய விசயமல்ல.

முசுலீம்களுக்கு எதிரான மோடியின் இந்து மதவெறி பிடித்த நடவடிக்கைகளை  எதிர்க்கும் பம்மாத்து நடவடிக்கைகளில் கூட காங்கிரசு கட்சி ஈடுபட்டதில்லை.  மாறாக, காங்கிரசு கட்சியும், அதன் தலைமையில் இருந்த மைய அரசும் கடந்த பத்தாண்டுகளாக மோடியின் பயங்கரவாதக் குற்றங்களில் பங்காளியாகச் செயல்பட்டு வந்தது என்பதுதான் உண்மை.

குஜராத் அரசில் வருவாய்த்துறை இணையமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கடந்த 2003-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மோடி அரசு தானே முன்வந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.  இப்படுகொலை தொடர்பாக 12 முசுலீம்களைக் கைது செய்த சி.பி.ஐ., அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சித்தரித்தது.  இம்முசுலீம்கள் கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டாலும், குஜராத் உயர் நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் அனைவரையுமே விடுதலை செய்து விட்டது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமெனக் கோரி வருகிறார் ஹரேன் பாண்டியாவின் மனைவி.  இக்கோரிக்கையை சி.பி.ஐ. நேரடியாக நிராகரித்து விட்டதென்றால், பா.ஜ.க.வோ விசாரணைக் கமிசனைக் கோரும் நாடகத்தை நடத்தி வருகிறது.  உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரசும் பா.ஜ.க.வும் பங்காளிகளாக நடந்து வருவதற்கு இதுவொரு சான்று.

இழிபுகழ் பெற்ற இஷ்ரத் ஜஹான் போலி மோதல் படுகொலை வழக்கில் கொல்லப்பட்ட நால்வரையும் குஜராத் போலீசிடம் பிடித்துக் கொடுத்தது, அவர்களைக் கொல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியது, அதற்கான ஆயுதங்களை குஜராத் போலீசுக்குக் கொடுத்து உதவியது ஆகிய அனைத்திலும் மைய அரசின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர் ராஜேந்தர் குமார் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்குப் பங்கிருப்பது தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு அகமதாபாத் நோக்கி காரில் வந்துகொண்டிருப்பதாக ஒரு மோசடியான உளவுத் தகவலை உருவாக்கி அளித்ததே மைய அரசின் உளவுத் துறைதான். மேலும், இவ்வழக்கில் இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட பிரானேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், மத்திய உளவுத்துறையின் ஆள்காட்டி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

இப்போலி மோதல் கொலை வழக்கை விசாரிக்கக் கோரி குஜராத் உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்த வழக்கில் அவர்கள் நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என மைய அரசின் உள்துறை அமைச்சகம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்து, மோடி அரசின் படுகொலைக்கு முட்டுக் கொடுத்தது.  இவற்றின் அடிப்படையில்தான் மோடி கும்பல் இந்தப் பச்சைப் படுகொலையை, நாட்டைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் காட்டி வருகிறது.

இப்படுகொலை நடப்பதற்குச் சற்று முன்னதாகவும், அதற்குப் பின்னரும் குஜராத் அரசின் துணை உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும், படுகொலையை நடத்திய போலீசு அதிகாரிகளுக்கும் இடையே தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன.  இது மட்டுமின்றி, இப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட  வன்சாரா, சிங்கால் உள்ளிட்ட பல போலீசு அதிகாரிகளும் மோடி, அமித் ஷா ஆகிய இருவரின் ஒப்புதலோடுதான் அந்நால்வரையும் சுட்டுக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  எனினும், இப்படுகொலை வழக்கில் அமித் ஷாவைக் குற்றஞ்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை எனத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் தெரிவித்து, அச்சதிகாரனைக் காப்பாற்றியிருக்கிறது, சி.பி.ஐ.

துளசிராம் பிரஜாபதியைக் கடத்திச் சென்று போலி மோதலில் படுகொலை செய்த போலீசு அதிகாரிகளுக்கும் குஜராத் முதல் அமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகவும் தீவிரவாதத் தடுப்பு போலீசு படையின் இணையதளப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்த பாரக் ஷாவிற்கும் இடையே அக்கொலையை நடத்துவதற்குத் திட்டம் தீட்டப்பட்ட காலத்தில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.  இத்தொலைபேசி உரையாடல்கள் துளசிராம் பிரஜாபதி போலி மோதல் கொலையும் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்குத் தெரிந்துதான், அவரது ஒப்புதலுடன்தான் நடந்தது என்பதற்கான ஆதாரங்களாகும். எனினும், இவ்வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., மோடியைக் காப்பாற்றும் நோக்கில் இத்தொலைபேசி உரையாடல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள மறுத்து விட்டது.

குஜராத்தைச் சேர்ந்த சாதிக் ஜமால் என்ற முசுலீம் இளைஞர் கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரியில் அம்மாநில தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இவரை லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாகவும், மோடியைக் கொல்வதற்காகவே அவர் குஜராத்திற்கு வந்ததாகவும் கட்டுக்கதையை உருவாக்கியதில் குஜராத் போலீசுக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரா காங்கிரசு கூட்டணி அரசிற்கும் மைய அரசின் புலனாய்வுத் துறைக்கும் முக்கிய பங்குண்டு.  மகாராஷ்டிரா போலீசில் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்டு எனப் பெயர்பெற்ற கிரிமினல் பேர்வழியான தயா நாயக், சாதிக் ஜமாலை குஜராத் போலீசிடம் கள்ளத்தனமாக ஒப்படைத்ததும், அவர் அங்கிருந்து குஜராத்திற்குக் கடத்திவரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதும் இப்பொழுது அம்பலமாகியிருக்கும் உண்மைகள்.

மோடி அரசின் பயங்கரவாதக் குற்றங்களுக்கு மட்டுமல்ல, காவி பயங்கரவாதத்தின் இளைய பங்காளியாக நடந்து கொள்வதுதான் காங்கிரசின் பரம்பரை பழக்கம்.  காங்கிரசு ஆட்சி மற்றும் கட்சியின் துணையின்றி பாபர் மசூதி இடிப்பையும் மும்பை கலவரத்தையும் இந்து மதவெறிக் கும்பலால் நடத்தியே இருக்க முடியாது.  மகாராஷ்டிரா காங்கிரசு கூட்டணி அரசு மும்பை கலவரம் குறித்த கிருஷ்ணா கமிசன் அறிக்கையை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது என்றால்,  குஜராத் படுகொலை குற்றத்திலிருந்து மோடியை விடுவித்த ராகவன் அறிக்கையை காங்கிரசு கட்சி கேள்விக்குள்ளாக்கியதே இல்லை. டெல்லி சீக்கியப் படுகொலை, நெல்லி முசுலீம் படுகொலை உள்ளிட்டு பல்வேறு இடங்களில் காங்கிரசே இந்து மதவெறியைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மாலேகான், அஜ்மீர், சம்ஜௌதா விரைவு ரயில் உள்ளிட்டு பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்தியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைப் பயங்கரவாதிகளென அம்பலப்படுத்த காங்கிரசு முனையாமல் இருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, முசுலீம் தீவிரவாதம், பாக். தூண்டிவிடும் எல்லைதாண்டிய பயங்கரவாதம் குறித்தும், அதனை ஒடுக்குவது குறித்தும், தேச ஒற்றுமை-ஒருமைப்பாடு குறித்தும் பா.ஜ.க.விற்கும், காங்கிரசு கட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது.  ஓட்டுப் பொறுக்குவதற்காக மதச்சார்பின்மை வேடம் போடும் காங்கிரசின் மூளையில் நயவஞ்சகம் நிறைந்த மென்மையான இந்துத்துவா கொள்கைதான் மறைந்திருக்கிறது.  அதனால்தான் நாடெங்கும் இந்து மதவெறி அரசியல் ஆழமாக வேரூன்றி வரும் இவ்வேளையில், அதனை எதிர்க்க வழியின்றி முடமாகிக் கிடக்கிறது, காங்கிரசு கட்சி.

குப்பன்.
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2014
____________________________

புதிய ஜனநாயகம் – ஜூன் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜூன் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1. பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம் ! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம் !! – புரட்சிகர அமைப்புகளின் மே தினப் போராட்டங்கள்
  2. காவியிருளில் மறைந்திருக்கும் மூலதனத்தின் சர்வாதிகாரம்
  3. மோடி அலை : கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !
  4. தோழர் சுனிதிகுமார் கோஷ்-க்கு வீரவணக்கம்!
  5. மோடியின் குற்றங்கள் : காங்கிரஸ் கையிலும் இரத்தக் கறைகள்!
  6. “நீங்கள் எங்களோடு இல்லையென்றால், நீங்களும் மாவோயிஸ்டுகள்தான்!” – அறிவுத்துறையினருக்கு எதிராகத் தொடரும் அரச பயங்கரவாதம்!
  7. அ.தி.மு.க.வின் வெற்றி… தேர்தல் ஆணையத்துக்கு நன்றி!
  8. முகுல் சின்ஹா : இந்துவெறி பாசிசத்துக்கு எதிரான போராளி!
  9. ம.க.இ.க.வின் எட்டாவது மாநாடு : புதிய பண்பாட்டுப் படையைக் கட்டுவதை நோக்கி
  10. ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம்! பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!!
  11. மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து!
  12. சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற அரசியல் மாயைகள் கலையட்டும்!
  13. மே தினத்தில் சாராய விருந்து : முதலாளித்துவ வக்கிரத்த முறியடித்தது பு.ஜ.தொ.மு.!
  14. மாம்பழ ஏற்றுமதி விவசாயம் : சிலந்தி வலையில் சிக்கிய விவசாயிகள்!
  15. இலங்கை ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சேவின் வரவேற்பு! – மோடியின் முகத்திரை கிழிக்கும் ஆர்ப்பாட்டங்கள்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

தாய்மொழி, அரசுப் பள்ளிகளுக்காக தஞ்சை – திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம் !

0

1. தமிழில் கற்பிக்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிக் கொள்ளையர்கள் : தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் கற்க வேண்டும் என்ற 2005-ம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி அமைப்புகள் வழக்கு தொடுத்திருப்பதையும், தமிழ் மொழிக்கு எதிராக செயல்படும் போக்கையும் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை கிளை சார்பில் 12/06/2014 அன்று மாலை தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்.

2. அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் தள்ளிய கல்வித்துறையை கண்டித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

னித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையின் சார்பாக 11.06.2014 அன்று அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தை கடைசி இடத்திற்கு தள்ளிய கல்வித்துறை அதிகாரிகள்,ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போதிய ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட கிளையின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்க சென்றபோது ‘நீங்க கல்வி விசயமாக போராட்டம் செய்றீங்க நல்ல விசயம் தான். ஆனால் போராட்டம் எல்லாம் தப்பு, எல்லாம் தலைவிதிபடி தான் நடக்கும்’ என்று கூறிய காவல் துறைக்கு உறைக்கும் விதமாக, “தலைவிதி என்று நினைத்திருந்தால் சுதந்திரத்திற்காக போராடி இருக்க முடியுமா? பெரியாரும், அம்பேத்கரும் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு போய் சம்பாதிக்கணும், ஆனா போராட்டம் கூடாதா ?” என்று பேசினார். “சமச்சீர் கல்வியை எங்களது அமைப்பும்,தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் இணைந்து போராடித்தான் நடைமுறைப்படுத்தினோம். போராடினால் தான் தீர்வு, போராடினால் மட்டும் தான் தீர்வு. தனியாக போராடாதீர்கள், எங்களோடு இணைந்து போராடுங்கள். இல்லையென்றால் கூடங்குளத்தில் போராடும் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு அரசியல் பிழைப்புக்கு போய்விட்டதைப்போல் தான் நடக்கும்” என்று மக்களை போராட ஈர்க்கும் வகையில் உரையாற்றினார்.

அடுத்ததாக கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர் தோழர் கருணாமூர்த்தி “அரசுப்பள்ளி சீரழிந்து வருவதற்கு காரணம் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைதான். அவற்றை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் அமல்படுத்துகின்றன. ஓட்டுபொறுக்கி கட்சிகளை சேர்ந்த MLA, MP-க்களே கல்வி வியாபாரிகளாக இருக்காங்க.சட்ட மன்றம், நாடாளு மன்றம், நீதி மன்றம் அனைத்தும் மறுகாலனியாக்கத்தின் கருவிகளாக உள்ளன. இந்த பிரச்சினையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதன் மூலம்தான் அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை கொண்டு வரமுடியும். இதற்கு தேவை ஒரு புதிய ஜனநாயக புரட்சி” என்று பேசினார்.

அடுத்து பேசிய புதிய ஜனநாய தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்.முருகேசன், அரசுப்பள்ளி தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர்கள், அதிகாரிகளின் போக்கை இடித்துரைத்தும் தனியார் பள்ளி கொள்ளைக்கான காட்ஸ் ஒப்பந்தத்தை பற்றியும் அதன் விளைவாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப் படுவதையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் பள்ளியில் அரசு செலவில் படிக்க, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் இரண்டு ஆண்டுக்கு 56,000 ரூபாய் ஒதுக்குவதிலிருந்து அவர் தனியார் பள்ளியின் ஏஜண்டாக செயல் படுகிறார் என்றும் அரசுப்பள்ளியில் போதுமான ஆசிரியர் இல்லாத சூழ்நிலையிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கஷ்டப்பட்டு பாடம் நடத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வைத்தால் அவர்களை தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு தள்ளிவிடும் இந்த செயலை கண்டித்தும்,விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என தங்களுடைய கோரிக்கைகளுக்காக தனித்தனியாக போராடுவதை தவிர்த்து நமது பொது எதிரியான தனியார்மயத்திற்கு எதிராக் ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் தான் நம்முடைய கோரிக்கைகளை வெல்லமுடியும் என்றும் பேசினார்.

இறுதியாக மனித உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட கிளையை சேர்ந்த வழக்கறிஞர் தோழர் கண்ணன்: சூத்திரனும்,பஞ்சமனும் படிக்க கூடாது, படித்தால் நாக்கை வெட்டணும் என்று அன்றைக்கு பார்ப்பனியம் உழைக்கும் மக்களுடைய கல்வி உரிமையை பறித்தது என்றால் இன்றைய சுதந்திர இந்தியா காசில்லாதவனுக்கு கல்வி இல்லை என்ற சூழலை உருவாக்குகிறது. எதற்கெடுத்தாலும் மேலை நாடுகளை பார் என்று சொல்லும் அறிவு ஜீவிகள் அந்நாடுகளில் கடைபிடிக்கப்படும் தாய்மொழி வழிக்கல்வி, அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி என்ற விஞ்ஞானபூர்வ முறையில் அனைவருக்கும் கல்வி கொடுக்காதது ஏன்? 1994-காட்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக காசில்லாதவன் படிக்க முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும், சமச்சீர் கல்வியின் வெற்றிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆற்றிய பங்கையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களையும், ஒழுங்கீனங்களையும் கண்டித்து உரையாற்றினார்.

ஆர்பாட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி, “தோழர் நீங்க நாக்கை புடுங்கிக்கொள்கிற மாதிரி அதிகாரிகளை பேசுறீங்க” என்று பாராட்டினார்.

தோழர்கள் பேருந்து பிரச்சாரம் செய்த போது மாவட்ட ஆட்சியர் தனியார் பள்ளிக்கு ஆதரவாக செயல்படுவதை விளக்கி பேசியது மக்களிடம் ஆதரவு, வரவேற்பும் பெற்றது. பெண் ஆசிரியை ஒருவர், “40,000  ரூபாய் நாங்க மட்டும் தான் வாங்குறோமா, வேற அதிகாரிங்க வாங்கலையா” என்றதற்கு “மற்ற அதிகாரிகள் தவறு செய்தால் அந்த துறையை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்தால் ஒட்டு மொத்த சமுகமே பாதிக்கும்” என்று தோழர்கள் பதில் சொன்னதை அங்கிருந்த பொது மக்கள் ஆதரித்து, “அவர் சொல்வது சரிதான், நீ சும்மா இரும்மா, அவர் பேசட்டும்” என்றனர்.

துண்டுப் பிரசுரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மனித உரிமைபாதுகாப்புமையம்-தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்ட கிளை

கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

91

ங்கை நதியில் எச்சில் துப்பினாலோ, பாலித்தீன் பைகள் போன்ற குப்பைகள் போட்டாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற மோடி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையிலேயே கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதை வாக்குறுதியாக அறிவித்திருந்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென உமா பாரதியின் தலைமையில் ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தது.

சரி, இவ்வளவு மெனக்கெடும் அளவிற்கு கங்கையை அசுத்தமாக்கியது யார்? இதுவும் ஐஎஸ்ஐ ‘சதி’யாக இருக்குமோ?

பாகிஸ்தானா, பார்ப்பனியமா?
பாகிஸ்தானா, பார்ப்பனியமா?

விடை தேடினால் அது பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைகளையே காரணமாக காட்டுவதால், தண்டனையும், அபராதமும் இந்துக்களிடம்தான் நிறைவேற்ற வேண்டும். எனில் சுத்த கங்கை அபராதத்தின் தொகை சில தினங்களிலேயே திருப்பதி மெகா வசூலை முறியடிப்பது உறுதி.

கங்கை நதியைச் சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே நிலவுகின்றன. இறந்தவர்களை கங்கைக் கரையில் எரியூட்டினால் பிறப்புச் சங்கிலி அறுந்து மறுபிறப்பிலிருந்து தப்பலாம், கங்கையில் குளித்தால் பாவங்கள் அகலும், அந்த நதியானது சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் களைந்து கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கங்கையின் ‘புனிதத்தை’ நிலைநாட்ட பின்னப்பட்டுள்ள மூடத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.

’இந்துக்கள்’ நம்பும் புனிதமான சுத்தமான கங்கைதான், இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமாக மாசடைந்த ஐந்து நதிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் நூறு கோடி லிட்டர் கழிவுகள் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் கங்கையின் கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளும் அடங்கும். அன்றாடம் சேரும் இந்த கழிவுகளை விட புனித நீராடல்களாலும் புனித சடங்குகளாலும் உருவாக்கப்படும் கழிவுகள் கணக்கு பிரம்மாண்டமானது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கை நதிதீரத்தில் எரிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பிணங்கள் அப்படியே ஆற்றில் வீசப்படுகின்றன. வாரணாசியில் சுமார் நூறு சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் பெரிய சுடுகாடான மணிகர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.

பிணத்தை எரிக்க விறகு வாங்கும் வசதியில்லாத ஏழைகள் தங்கள் உறவினர்களின் சடலங்களை அப்படியே நதியில் எரிந்து விடுகிறார்கள். இவர்களது கணக்கில் மூடநம்பிக்கையை விட வாழ்நிலை பிரச்சினைகளே இருக்கிறது. எனவே கங்கை நதிப் பரப்பெங்கும் வெந்தும் வேகாததுமான நூற்றுக்கணக்கான பிணங்கள் நாள்தோறும் மிதந்து சென்றவாறே உள்ளன.

சாவின் நகரம் வாரணாசி!

கங்கை மாசு காரணம் யார் 3இங்கே சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள மணிகர்னிகாவில் எரியூட்டப்படுகின்றன – சில நாட்களில் இங்கே எரியூட்டப்படும் பிணங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்து விடுகின்றது.  குழந்தைகளை வளர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள் குழந்தைகளை உயிரோடு கங்கையில் வீசும் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் நடக்கின்றது.

மேலும் ஒவ்வொரு கும்பமேளா நிகழ்வின் போதும் சுமார் எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி பக்தர்கள் வரை கங்கையில் முங்கியெழுகிறார்கள். சாதாரண நாட்களில் வாராணாசியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 60,000 பேர் கங்கையில் குளிக்கிறார்கள். கும்பமேளா நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் நீரில் உயிரியல் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம் அளவுக்கும் பிற நாட்களில் 4.8 மில்லி கிராம் அளவுக்கும் உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட உயிரியல் கழிவுகளின் அளவான லிட்டருக்கு 2 மில்லி கிராம் என்பதை விட இரண்டு பங்கு அதிகமாகும்.

வாழ்வின் கறைகளான பாவங்களை தீர்த்து விட்டு மறு ஜென்மத்தில் வசதியாக பிறப்பதற்கான கையூட்டாக மாறிவிட்ட கங்கை குளியல் மற்றும் கங்கா மரணம்தான் இன்றைக்கு அந்த நதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய இழி நிலை ஏற்படுமளவுக்கு போன ஜென்மத்தில் கங்கை என்ன பாவம் பண்ணியதோ, தெரியவில்லை.

மணிகர்னிகா பகுதி மட்டுமின்றி, வாரணாசி நகரைத் தழுவிச் செல்லும் கங்கையின் நதிக்கரையோரங்களெல்லாம், சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகளாலும் அவை இட்ட சாணக் குவியலாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சொந்த இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத கோமாதாக்களும் தங்களது பங்குக்கு கழிவுகளை நதியில் கலக்கிறார்கள்.

இப்படி இந்து பக்தர்களாலும் அந்த பக்தர்களால் “கடவுளின் புரோக்கராக” கருதப்படும் அகோரி சாமியார் கும்பல்களாலும் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட கங்கா மாதா, பீகாருக்குள்ளும் அதைத் தொடர்ந்து வங்கத்தினுள்ளும் நுழைகிறாள். இங்கோ அவளுக்கு வேறு விதமான பிரச்சினைகள். இங்கே இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜையறைக் கழிவுகளை கங்கையில் எரிந்தால் புண்ணியம் என்று நம்புகிறார்கள். மேலும் துர்கா பூஜை விமரிசையாக நடக்கும் பிரதேசங்கள் இவை என்பதால், ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிக்குழம்பினால் வார்க்கப்பட்ட துர்கா மாதா சிலைகள் கங்கையில் தான் கரைக்கப்படுகின்றன. அந்தப் படிக்கு உ.பியை விட்டு அகன்றாலும் கங்கா மாதாவுக்கு நிம்மதி இல்லை.

கங்கை மாசு காரணம் யார்இந்தச் சீரழிவுகளால் கங்கையை நம்பி வாழும் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும் ஏராளமான ஊர்வன விலங்குகளும் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் சுமார் 40 கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். கங்கை அதன் மூலத்திலிருந்து வாரணாசியை அடைந்து சீரழிவதற்கு முன்பே பல பெரிய அணைக்கட்டுகளைக் கடந்து வரவேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தெஹ்ரி அணையிலிருந்து தான் தில்லி நகருக்கான குடிநீரை உறிஞ்சியெடுத்து கொள்ளையடிக்கும் உரிமை பன்னாட்டுத் தொழிற்கழகமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  கங்கா மாதாவின் கையை அந்நிய நாட்டு கம்பேனி பிடித்து இழுந்த இந்த சம்பவம் நிகழ்ந்த போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி.

பார்ப்பனிய மூடத்தனங்கள் ஒரு பக்கத்திலிருந்து கங்கையை அரித்துத் தின்கின்றன என்றால், மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை இன்னொரு புறத்திலிருந்து குதறித் தீர்க்கிறது. வாணாசியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர்கள் தொலைவில் மெஹ்திகன்ச் என்கிற சிறுநகரம் ஒன்றில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் தொழிற்சாலை அங்கே உள்ள நிலத்தடி நீரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் முற்றாகக் குடித்துத் தீர்த்து, காட்மியம் நிறைந்த தனது ஆலைக் கழிவை கங்கையில் கலந்து விசமாக்கியுள்ளது. கோகோ கோலாவுக்கு உரிமம் வழங்கியதும் அதே ’உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான அரசு தான்.

உலகிலேயே மிக வேகமாக அழிந்து வரும் நதிகளின் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் கங்கை நதியின் மரணத்தை நோக்கிய அந்தப் பயணம் இந்துக்களின் நம்பிக்கைகளை மாத்திரமின்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ளியிருக்கிறது.

கங்கை நீரில் மிக அதிகப்படியாக காணப்படும் காட்மியம், ஆர்சனிக், புளோரைடு, நைட்ரேட், குளோரைட் போன்ற வேதியல் கலவைகளும், கோலிபார்ம் பாக்டீரியாக்களும் அந்த நதி நீரை நுகரும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய் பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில் கங்கை வடிகால் பகுதிகள், உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.

கங்கை மாசு - காரணம் யார்

கங்கை நதியை சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் புத்தம் புதிய கண்டு பிடிப்பல்ல. கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே கங்கை நதியை ஒட்டி வாழும் மக்களிடையே நதியின் மரணம் குறித்த ஆதங்கமும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்தே வருகிறது. இந்தக் கோரிக்கையின் பின்னே மதம் புனிதம் போன்றவைகள் இருந்தாலும், தங்கள் பொருளாதார வாழ்க்கையோடும் பிழைப்போடும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அந்நதியின் மறுபிறப்பை அம்மக்கள் நீண்ட காலமாகவே எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எண்பதுகளில் இருந்தே கங்கையைக் காக்க ஏராளமான இயக்கங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சூழலியல் தன்னார்வ குழுக்களில் இருந்து இந்து மத மடங்கள் வரை அவரவர் சொந்த நோக்கங்களுக்காக கங்கையைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எனவே தான், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் ஓட்டுக் கட்சித் தேர்தல் வாக்குறுதிகளில் கங்கையைக் காப்பது என்கிற அம்சம் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. கங்கையை மீட்பதற்கான பல்வேறு திட்டங்களும் கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்த புதிய கண்டுபிடிப்பல்ல. 1986-ல் மத்திய அரசால் கங்கை செயல் திட்டம் துவங்கப்பட்டு பின்னர் பிரதமரை தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளன. கடைசியாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2,600 கோடி ரூபாய் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டது.

இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளாலும், பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியும் செய்ய முடியாத பணியைத் தான், எச்சி துப்புவதைத் தடுப்பதன் மூலம் செய்து முடித்து விடுவேன் என்கிறார் மோடி. சோழியன் குடுமி சும்மா ஆடும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.

மோடி வாரணாசியில் போட்டியிட்டதில் இருந்து அமித் ஷாவை உத்திரபிரதேச பாரதிய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது, முசாபர்பூர் கலவரம், கங்கா மாதா மோடிக்கு அனுப்பிய ‘அழைப்பு’, கங்கையின் புனிதத்தை மீட்பேன் என்று மோடி பிரச்சாரத்தின் போது அடித்த சவடால் உள்ளிட்டு சகலமும் பாரதிய ஜனதாவின் தேர்தல் திட்டத்திற்கு உட்பட்டே நடந்தேறியது.

கங்கை மாசு காரணம் யார் 4பல கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சி குறித்த அளப்புகளும் இறுதியில் இந்துத்துவ பல்லிளிப்புகளுமாக பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகுமுறை படு நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தலின் பிந்தைய கட்டத்தில் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகள் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா தனது ’வளர்ச்சி’ முகமூடியை கழற்றி எறிந்து விட்டு உண்மையான இந்துத்துவ முகத்தோடு நின்றது.

கீழ்மட்டத்தில் கலவரங்களைத் தூண்டும் கிரிராஜ் கிஷோர், ப்ரவீன் தொகாடியா, அமித்ஷா வகையறாக்களின் வெறியூட்டும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த அதே நேரம் மேல் மட்டத்தில் மோடி கங்கையின் புனிதம், வாரணாசியின் புராணப் பெருமை போன்ற ’சட்டை கசங்காத’ இந்துத்துத்துவ பாணி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேலதிகமாக கங்கை நதியை நம்பி வாழும் 40 கோடி மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கும் கங்கையின் புனித மீட்பர் அவதாரம் அவருக்கு தேவைப்பட்டது.

ஆனால், கங்கையின் புனிதம் உண்மையில் எச்சில் துப்பியதால் தான் கெட்டதா? இல்லை. அந்த நதியில் கலக்கும் பிணங்களும், இதர மதச் சடங்குகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் தான் கங்கையின் சீர்கேட்டுக்கு பிரதானமான காரணம். இதில் எதையுமே மோடி தொட முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை.

தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த இறங்கினால் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்காக அவரால் தொடர முடியாது. மதச் சடங்குகளைக் கட்டுப்படுத்த முனைந்தால் ஆர்.எஸ்.எஸ் உடனடியாக மோடிக்கான கோட்சேவை அனுப்பி வைக்கும். கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் எச்சில் துப்பாதீர்கள் என்று நம் குரல்வளையைப் பிடிக்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதும் பார்ப்பனிய மூட்த்தனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும், அதன் சுமையை மக்களின் மேல் ஏற்றுவதும் தான் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ‘இந்துத்துவ’ அரசியல் பாணி. வெற்று சவடால்களுக்குப் பின்னுள்ள இந்த உண்மையான நோக்கங்களை நாம் புரிந்து கொள்வதும் அதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும் தான் இவர்களை முறியடிப்பதற்கான முன்தேவை.

–    தமிழரசன்

மேலும் படிக்க

“மன்னியுங்கள் நெய்மார்” – உலகக் கோப்பை கால்பந்து வீடியோ

2
கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் ஆர்ப்பாட்டக்காரர்

பிரேசிலில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த போராட்டங்களுக்கு ஆதரவாக யூடியூபில் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகக் கோப்பையை விளம்பரப்படுத்த பல கோடி செலவில் உருவாக்கப்பட அதிகாரபூர்வ பாடலை விட இந்த பாடல்கள் பிரேசிலை உண்மையாக பிரநிதித்துவப்படுத்துகின்றன.

I am sorry Neymar

2014 FIFA உலகக் கோப்பை
பிரேசிலுக்கு நல்வரவு

மன்னியங்கள் நெய்மார்,
இந்த உலகக் கோப்பையில் உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மெதுவாக மறைந்து
போகும் நம் மக்களை பார்த்து சோர்கிறேன்.
FIFA-வோ ‘தரங்கள்’ பற்றி கவலைப்படுகிறது.

நம்முடைய தலைவர்கள்
தில்லுமுல்லு செய்யும் திருடர்கள்
மன்னியுங்கள் நெய்மார்
இந்த முறை உங்களுக்கு ஆதரவளிக்க முடியாது.

ஃபெரைரா (1994 பிரேசில் பயிற்சியாளர்),
டெட்ரா (போட்டித் தொடர்) மக்களை அவ்வளவு சந்தோஷப்படுத்தியது.
ஆனால், 10 பில்லியன்
உலகக் கோப்பை நடத்த செலவழிக்கும் நாம்
உண்மையான சேம்பியனா?
அழகான, மகத்தான மைதானங்கள் இருக்கின்றன
ஆனால், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும்
செயலிழக்க செய்யப்படுகின்றன.
ஃபெரைரா,
இரண்டு பிரேசில்களுக்கும் இடையே ஒரு பாதாளம்.

மன்னியுங்கள் ஃபெலிப்போ (2002 பிரேசில் பயிற்சியாளர்)
காஃபு (2002 ஆட்டக்காரர்) உலகக் கோப்பையை தூக்கிக் காட்டிய போது
அந்த புனிதமான தருணம்
ஜார்டிம் ஐரீனை (பிரேசிலில் சாஃபுவின் ஊர்) பிரேசிலின் சின்னமாக மாற்றியது.
ஆனால், வாக்களிக்கப்பட்ட வசந்தம் வரவேயில்லை.
ஒரு கோலை (goal) விட மதிப்பு வாய்ந்தது வாழ்க்கை
சொல்லப்பட்ட முன்னேற்றங்கள் எங்கே போயின
மன்னியுங்கள் ஃபெலிப்போ
நம்முடைய நாடு செழித்து விடவில்லை

எனக்கு தெரியும் ரசிகரே,
என்னுடைய எளிய, நேரடியான இந்தக் கருத்து
அணியை இறுதி வரை ஆதரிப்பதிலிருந்து
ஏழைகளான உங்களை தடுத்து விடப் போவதில்லை.
அதிகவிலை டிக்கெட் வாங்க முடியாது என்றாலும்
அணியை நேசிப்பதை நீங்கள் விடப் போவதில்லை.
எனக்கு தெரியும் ரசிகரே.
நீங்கள் செய்வதுதான் சரி.

உலகக் கோப்பையை தடுத்து நிறுத்துவோம்!
உலகக் கோப்பையை தடுத்து நிறுத்துவோம்!
உலகக் கோப்பையை தடுத்து நிறுத்துவோம்!
உலகக் கோப்பையை தடுத்து நிறுத்துவோம்!

பிரேசில் ஆட்டக்காரர் நெய்மார்
உலகக் கோப்பை கால் பந்து போட்டியில் பிரேசிலின் நெய்மார்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

படங்கள் : நன்றி டெய்லிமெயில் – யு.கே