சாராய ரவுடி ஜே.பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்காக தொழிற்சங்கம் கட்டியதற்காக அப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் வெற்றிவேல்செழியன் மீது பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வினவில் வெளியாகியுள்ளன. சத்யபாமா நிர்வாகத்தின் இந்த அடாவடிகளுக்கெதிராக தோழர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல்கலைக்கழக நிர்வாகமோ டஜன்கணக்கான முறை ஆஜராகாமல் வாய்தா ராணிக்கு இணையாக சாதனை படைத்தது. இதற்கிடையில் நிர்வாகம் தோழருக்கு தூண்டில் போட்டு பார்த்தது. உனக்கு என்ன விலை என்று தோழரை விலை பேச முயன்றது. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு பேசாம ஒதுங்கிக்கொள் என்றது. தோழரோ ஜேப்பியார் முகத்தில் காறித்துப்பினார்.
தோழர் வெற்றிவேல் செழியன்
இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் தோழர் வெற்றிவேல்செழியன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச்செயலாளராக உயர்ந்தார். கடந்த பத்தாண்டுகளாக சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கும் பு.ஜ.தொ.மு விற்கும் நடந்து வந்த இந்த போராட்டத்தில் இறுதியாக பு.ஜ.தொ.மு வெற்றிபெற்றது. “வெற்றிவேல்செழியன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, அவரை வேலைநீக்கம் செய்தது தவறு. எனவே வேலைநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து அவருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் இன்னபிற சலுகைகள் அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். வேலையிலும் அமர்த்த வேண்டும்” என்று தொழிலாளர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜேப்பியாரது பல்கலைக்கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே விரும்பத்தகாத கசப்பான இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது நிர்வாகம்.
தீர்ப்பை அடுத்து தோழர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு வேலைக்காக பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். தோழர் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்த போது பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தார், ஆனால் தீர்ப்பை மதிக்காத திமிர் பிடித்த நிர்வாகம் போக்குவரத்து மேலாளர் மூலம் தோழரை பழிவாங்கும் நோக்கத்துடன் ஆவணங்கள் எதுவுமற்ற ஒரு குப்பை லாரியை ஓட்டச் சொல்லியிருக்கிறது. தோழர் அதை ஓட்ட மறுத்திருக்கிறார். “இதற்கு முன்பு தான் ஓட்டிக்கொண்டிருந்தது கல்லூரி பேருந்து தான் எனவே மீண்டும் கல்லூரி பேருந்தை தான் ஓட்டுவேன்” என்று வாதிட்டிருக்கிறார்.
தோழர் மறுத்ததும், “கடந்த பத்தாண்டுகளாக நீங்கள் பயிற்சி இல்லாமல் இருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்” என்று கூறி ஆம்பூரில் உள்ள சத்யபாமாவின் தோட்டத்திற்கு (இந்த தோட்டத்திற்கும் ஓட்டுநர் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) செல்லுமாறு தோழரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து கூறியுள்ளார் மேலாளர். கடிதத்தை பெற்றுக்கொண்ட வெற்றிவேல்செழியன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
ஆனால் கிளம்பியவரை போகவிடாமல் வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன், “ங்கோத்தா பஸ் காசை வங்கிட்டு போய்யா, அதை வேற தனியா சொல்லணுமா” என்று திட்டியதோடு ஒருமையில் பேசியிருக்கிறார் மேலாளர்.
“சார் மரியாதையா பேசுங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க, ஆம்பூருக்கு போகணுமா வேணாமாங்கிறதை நான் வழக்கறிஞரை கலந்து பேசிட்டு முடிவு பண்ணிக்கிறேன்” என்றிருக்கிறார் தோழர்.
“நீ எவன வேணும்ணா பாருடா ங்கோத்தா. ஒன்னால ஜேப்பியாரோட மயிரை கூட புடுங்க முடியாதுடா…” என்று மீண்டும் இழிவுபடுத்தும் வார்த்தைகளில் பேசியுள்ளார்.
அதற்கு பதிலாக தோழரும் கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார். தோழர் கடுமையாக பேசியதற்கு மேலாளர் தோழரை அடித்துவிட்டான். அவன் அடித்ததும் தோழரும் அவனை திருப்பி அடித்துள்ளார்.
மேலாளர் கூறியதை ஏற்றுக்கொண்டு கிளம்பிய தோழரை வீணாக சண்டைக்கு இழுத்து தாக்கிய மேலாளர் கரீம், வெற்றிவேல்செழியன் தான் தன்னை தாக்கிவிட்டதாக சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் உடனடியாக ஒரு பொய் புகாரை அளித்தார். பு.ஜ.தொ.மு தரப்பிலும் மேலாளர் கரீம் மீது புகார் அளிக்கப்பட்டது. ஜேப்பியாரின் ஏவல் நாயாக இருக்கும் காவல் துறை நமது புகாரை கண்டுகொள்ளாமல் போலீசே கரீமை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் தோழர் வெற்றிவேல்செழியனை கைது செய்யவும் திட்டமிட்டது.
“மேலாளர் தான் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் என்பதால் அவருடைய புகாரை தான் எடுத்துக்கொள்ள முடியும்” என்று கூறி வெற்றிவேல்செழியன் மீது முதல் தகவலறிக்கை பதிந்தது. ஆனால் ஒருவரை கைது செய்வதற்கான உச்சநீதி மன்ற வழிகாட்டல்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு ஒரு கடத்தல் கும்பலை போல தமிழக காவல்துறை தோழரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
செம்மஞ்சேரி குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில் வெற்றிவேல்செழியனை தேடிப்பிடித்ததாகவும், மருத்துவ பரிசோதனை செய்ததில் (அப்படி எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை) அவர் தாக்கப்படவில்லை என்று உறுதியானதாகவும் எனவே அவர் தான் மேலாளர் கரீமை தாக்கியதாகவும் கூறி கைது செய்தனர். கைது செய்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை. தொழிலாளர்கள் மூலம் தகவலறிந்து பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் பழனியும் பிற தோழர்களும் காவல்நிலையத்திற்கு சென்றனர். முதல் தகவலறிக்கையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தோழர் பழனியை கையெழுத்திடுமாறு கூறியுள்ளார், “இது பொய்யான புகாரின் பெயரில் பதிவு செய்யப்படும் முதல் தகவலறிக்கை எனவே இதில் கையெழுத்திட முடியாது என்று தோழர் மறுத்துள்ளார்.
தோழர்கள் இவ்வாறு போலீசாருடன் வாதிட்டுக்கொண்டிருக்கும் போதே, ஒரு தொழில்முறை கடத்தல் கும்பலை போல திட்டமிட்டு செயல்பட்ட போலீசார் திடீரென்று ஒரு கால்டாக்சியை கொண்டு வந்து நிறுத்தி வெற்றிவேல்செழியனை இழுத்துக் கொண்டு போய் திணித்துக் கொண்டு பறந்து சென்றது.
குற்றவாளியை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தோழரை கடத்திச்சென்ற சோழிங்கநல்லூர் காவல்துறை அவரை தாம்பரம் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் தள்ளி ஜேப்பியாருக்கு விசுவாசமாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் நேற்று நடந்தன. தோழரை பிணையில் எடுப்பதற்கான வேலைகளை மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.
போலீசு என்பது நேரடியாகவே முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருந்து மக்களை கடித்து குதறுகின்றது. ஆனால் நீதி மன்றங்கள் அப்படி அல்ல. அவை பொதுவானவை, அனைவருக்கும் சமமானவை என்று மக்களால் கருதப்படுகின்றன. ஆனால் நீதி மன்றங்கள் எப்போதாவது சில முறைகள் சாதாரண மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரிதாக சில தீர்ப்புகளை வழங்கினாலும் முதலாளிகளும், ஆதிக்கசாதிகளும் அதை தங்களுடைய மயிருக்கு சமமாக கூட மதிப்பதில்லை என்பதை கள்ளச்சாராய ரவுடி ஜேப்பியாரின் இந்த வழக்கிலும் நாம் காணலாம்.
நீதி மன்றத்தின் தீர்ப்புகளை அவர்கள் இவ்வாறு மயிருக்கு சமமாக மதிக்காத போதிலும் அனைவருக்கும் சமமானதாக கருதப்படும் இந்த நீதி மன்றங்களால், இது தான் தீர்ப்பு என்று நீதி வழங்கிய இந்த நீதி மன்றங்களால் அவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை. இதுவரை அவ்வாறு எதுவும் செய்ததில்லை இனியும் எதுவும் செய்யப்போவதில்லை. அந்த வேலையை மக்கள் மன்றங்களால் மட்டுமே செய்ய இயலும். அத்தகைய மாற்று மக்கள் அதிகார மன்றங்களை கட்டி எழுப்புவோம். கல்வி வள்ளல்கள் என்கிற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் ஜேப்பியார் போன்ற கள்ளச்சாராய ரவுடிகளையும் மக்கள் விரோதிகளையும் தண்டிப்போம்.
கடந்த ஜூன் 10-ம் தேதியிட்ட தமிழ் இந்து நாளிதழில் டேப் காதர் எனும் லாவணிக் கலைஞர் பற்றிய செய்தி வெளியானது. அந்தக் கட்டுரை காதர் எனும் மூத்த கம்யூனிஸ்ட் தோழரைப் பற்றிய பதிவாக இல்லாமல் பெருமளவு மார்க்சிஸ்ட் கட்சியை குறை சொல்லும் பதிவாக வந்திருந்தது. அதற்கான மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்வினையோ அவர்களது சமகால தரத்துக்கு சற்றும் குறைவின்றி வெளியானது. “காதர் எனும் பாடகர் சில காலம் கட்சியில் இருந்தார். பிறகு 30 வருடங்கள் தொடர்பில் இல்லாமல் வடஇந்தியாவுக்கு பிழைக்க சென்றுவிட்டார். பிறகு அவரை ஒரு தோழர் எங்களிடம் அழைத்துவந்தார். எங்கள் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்த அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவரே வெளியேறி விட்டார்” என்பதாக இருக்கிறது மார்க்சிஸ்ட் நீலமேகத்தின் அறிக்கை.
அவ்வறிக்கையின் இறுதி வாசகங்கள்தான் ஜெமோவுக்கு இணையான ஒரு எழுத்தாளனை அடையாளம் காட்டியது. அதாவது மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் கட்சிக்காக உழைத்தவர்களை கைவிட்டதில்லையாம். அப்படியானால் காதர் எனும் ”பாடகர்” கட்சிக்காக பெரிதாக உழைத்தவரல்ல என நாம் பொருள் கொண்டாக வேண்டும். ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் எதிரானது என்பது தஞ்சைப் பகுதி நண்பர்களை விசாரிக்கையில் தெரிகிறது. நண்பர்களின் செய்தியில் உள்ள உண்மையின் சதவிகிதத்தையும் மார்க்சிஸ்ட் நீலமேகத்தின் அறிக்கையில் உள்ள பொய்யின் சதவிகிதத்தையும் நேரில் அறியும் ஒரு எளிய நோக்கத்தோடு அமைந்தது திரு டேப் காதர் அவர்களுடனான நமது சந்திப்பு.
ஆனால் அது ஒரு எளிதில் கடந்து போகக்கூடிய நிகழ்வாக இல்லை. அந்த சந்திப்பில் காதர் மார்க்சிஸ்ட் கட்சியின் புறக்கணிப்பு பற்றி குறிப்பிட்டது மிக சொற்பமே. இன்னும் சொல்வதானால் அவர் தமது குடும்பத்தினரின் புறக்கணிப்பைக்கூட ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டுவிட்டு முடித்துக்கொண்டார். நடமாட இயலாத அளவுக்கான உடல்நிலை, தொன்ணூறு வயது முதுமை, குடும்பத்தார் உடனில்லாத தனிமை என ஒரு மனிதனை நிலைகுலைய வைக்கும் சகல காரணிகளுக்கு இடையேயும் அவர்வசம் தமது கடந்தகாலம் பற்றிய எந்த சலிப்பும் இல்லை.
காங்கிரசும் திமுகவும் ஏதோ முந்தாநாள்தான் சீரழிந்து விட்டது போல சொல்லப்படும் சமகால கருத்துக்களை பகடி செய்கின்றன முன்பு அவர் பாடிய பாடல்கள். ஓட்டுக்கு பணம் தருவதும் கிரிமினல்கள் தேர்தலில் நிற்பதும் இந்தியக்குடியரசின் முதல் தேர்தலில் இருந்தே வழக்கத்தில் இருப்பதை நமக்கு அறியத் தருகின்றன அவரது அனுபவங்கள். சுதந்திரத்துக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு பலமான எதிரியாக இருந்த காலம் முதல் இப்போது நாதியற்றுப் போயிருக்கும் காலம் வரைக்குமான மார்க்சிஸ்ட் கட்சியின் சீரழிவு வரலாற்றுக்கு ரத்த சாட்சியாக இருக்கிறார் அவர்.
அவருடனான சந்திப்பை ஒரே பதிவில் எழுதிவிட இயலாது. ஒரு கேள்விக்கான பதிலை உரையாடலின் வேறுவேறு இடங்களிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் இதனை ஒரு பேட்டி வடிவிலும் தர இயலவில்லை. ஆகவே இதனை ஒரு சிறு தொடர் கட்டுரையாக தர முயற்சிக்கிறோம்.
1944 ல் கும்பகோணத்தில் இருந்த ஒரு மூக்கணாங்கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் அமைத்ததில் இருந்து துவங்குகிறது திரு.காதர் அவர்களின் அரசியல் வாழ்வு. விடுதலைக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்த தோழர்களுக்கு தகவல் தொடர்பாளராக பணியாற்றியிருக்கிறார். பிறகு சில மாதங்கள் பம்பாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு 1951-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி இணைந்திருக்கிறார் காதர். (இந்திய விடுதலைக்குப் பிறகு, வெள்ளையனைக் காட்டிலும் மோசமான ஒடுக்குமுறையை கம்யூனிஸ்டுகள் மீது கையாண்டது சமாதானப் புறா நேருவின் அரசு. பொதுவுடமை இயக்கம் வீரியமாக செயல்பட்ட தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல தோழர்களை சுட்டுக்கொல்லும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது).
குடும்பப் பொறுப்புகள் காரணமாக கட்சியின் முழுநேர ஊழியராக ஆகாமல் வாரம் நான்கு நாட்கள் பகலில் குடும்ப வருவாய்க்காக உழைப்பது எனவும் மாலை மற்றும் வாரத்தின் ஏனைய மூன்று நாட்களும் முழுமையாக கட்சிப் பணியாற்றுவது எனவும் திட்டமிட்டு அதன்படி செயல்படுகிறார் காதர். இந்த விதி தேர்தல் காலத்திற்கு பொருந்தாது, அப்போது தொடர்ந்து மூன்று மாதங்கள் கட்சிப்பணி மட்டுமே (அன்றைய காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மூன்று மாதகாலத்துக்கு நீடிக்கும்).
அப்போது சாதாரண கட்சி ஊழியர்களுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கட்சி வேலை எதுவும் இருக்காது. தோழர்கள் ஆளுக்கொரு பக்கமாக கிளம்பிச் செல்ல வேண்டும். அங்கே சந்திக்கும் மக்களின் பிரச்சனைகளை சரி செய்வதற்கான வேலைகளை செய்ய வேண்டும், அதனை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்துகொள்வதும் அவசியம். வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை சந்தித்துக்கொண்டு அவரவர் செய்த வேலைகளை பற்றி விவாதித்து அதில் கிடைக்கும் படிப்பினைகளின் அடிப்படையில் அடுத்த வேலைகளை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
திரு காதர், பிரச்சாரங்களின்போது பாடல் மற்றும் நாடகங்கள் வாயிலாக மக்களைத் திரட்டும் வேலைக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் கட்சிக்காரர் என்பதைத்தாண்டி ஒரு பாடகராகவே அப்போதைய தஞ்சை மக்களால் அறியப்பட்டிருக்கிறார். இந்தப் பணியில் குறிப்பிடப்படவேண்டிய மற்றுமோர் ஆளுமை திருமூர்த்தி பாகவதர் எனப்படும் திருமூர்த்தி.
பகலெல்லாம் பிரச்சாரத்துக்கு செல்லும் ஊர்களில் வீதிகளில் தள்ளுவண்டியில் பழைய இரும்புக்கு வெங்காயம் விற்கும் அவர் மாலை வேளையில் கட்சிப் பிரசாரத்தை மேற்கொள்வார். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட இவர்களது பாடல்களும் நாடகங்களும் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. ஒரு கூட்டத்தின் ஆரம்பத்தில் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்னொரு ஊரில் நடக்கும் கூட்டத்தின் இறுதியில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டுப் போவதென்பது மிக சாதாரணமாக நடக்குமளவுக்கு அவர்களுக்கான தேவை இருந்திருக்கிறது. (எங்கள் பாடல்களுக்காக மட்டுமே நீங்கள் இங்கே வந்திருப்பீர்களேயானால் இனி இங்கு நிகழ்ச்சி நடத்துவதையே நிறுத்திவிடுவேன் என திருமூர்த்தி பாகவதர் ஒரு கூட்டத்தின்போது மக்களை எச்சரித்திருக்கிறார்)
கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டும் ஒரு கலைஞனாகவும் சாதாரண மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு தொண்டராகவுமே இருந்ததால் அவர் தஞ்சை மாவட்ட அளவில் மட்டும் கட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி தனது குறைந்தபட்ச கொள்கைகளை உதிர்த்துவிட்டு ஒருசில சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற சீட்டுக்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படத்துவங்கிய காலகட்டத்தில் இருந்தே அவர்களுக்கு பிரச்சாரம் என்பது தேவையற்றதாகிறது. ஆகவே காலப்போக்கில் காதர் போன்ற கலையின் வாயிலாக பிரச்சாரம் செய்யும் கலைஞர்களும் கட்சிக்கு தேவையற்றவர்களாகிறார்கள். 70-களின் பிற்பகுதியில் தமக்கான வேலைகள் கட்சியில் கணிசமாக குறைந்துபோனதாக காதர் குறிப்பிடுவதன் பின்னிருக்கும் காரணம் இவைதான்.
பிறகு 1985-ல் காதர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தஞ்சையை விட்டு வெளியேறி பம்பாயிலும் ராஜஸ்தானிலும் சுமார் பதினைந்தாண்டுகாலம் வசித்து விட்டு மீண்டும் 2000-ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் வருகிறார். தஞ்சையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் சமையல்காரராக சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு நடமாடவியலாத சூழலில்தான் அவர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்திருக்கிறார் (சுமார் ஆறு மாதங்கள்). அலுவலகக் கழிவறையை சுத்தமாக வைத்திருக்கவில்லை எனும் காரணத்தால் அங்கிருந்து வெளியேறும்படி வேண்டுகோள் தொடர்ச்சியாக வைக்கப்பட, மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் உதவியோடு அங்கிருந்து வெளியேறி இப்போது தோழர் ராஜேந்திரன், செல்வி தம்பதியரின் பராமரிப்பில் வசிக்கிறார் காதர்.
திட உணவு எடுத்துக்கொள்ள இயலாத, எழுந்து நிற்கக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படும் தோழர் காதரின் வாழ்நாளை இந்த தம்பதியர்தான் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள் (காதரின் வார்த்தைகள் இவை). டேப் காதரின் மிகச்சுருக்கமான வாழ்க்கை வரலாறு இதுதான். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் இரண்டு லாவணிக் கலைஞர்களில் ஒருவர், தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினுடைய எழுபதாண்டுகால வரலாற்றின் ஆவணம் அவர் என்பதும் நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய கூடுதல் தகவல்கள்.
அவர் முன்னெடுத்த போராட்டங்களில் சிலவற்றை அறிந்துகொள்வதுஅன்றைய இந்தியாவையும் தமிழகத்தையும் அறிந்துகொள்ள உதவும் என்பதால் அவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
1950-களில் நடந்த தேர்தல்களிலேயே காங்கிரஸ் கட்சி பண விநியோகம் செய்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலான ஒத்தைரூபாய் தாரேன் பாடல் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாடப்பட்டதே. அப்போது ஒரு ஓட்டுக்குத் தரப்பட்ட ஒருரூபாயை குறிப்பிடும் விதமாக இடதுசாரிப் பாடகர்களால் பாடப்பட்டதுதான் “ஒத்தை ரூபாய் வேணாம் , உன் உப்புமா காபியும் வேணாம்.. ஓட்டுப்போட மாட்டேன்” எனும் பிரச்சாரப் பாடல்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் பொதுவுடமை பிரச்சாரப் பாடல்களை திராவிடர் கழக மேடைகளில் முன்னறிவிப்பின்றி பாடியிருக்கின்றார்கள் திருமூர்த்தி பாகவதர் குழுவினர். அதனை முழுமனதோடு அனுமதித்திருக்கிறார் பெரியார்.
டேப் காதருடன் செல்வி, ராஜேந்திரன்
தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண், பேருந்து ஓட்டுனரான தன் கணவரை தேடி பேருந்து நிலையம் வந்த போது காவலர்களால் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுகிறார். அவர் ஒரு சாராய வியாபாரி என போலி குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டு, அவர் வாயில் மாலத்தியான் எனும் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி அரசு மருத்துவர்கள் துணையோடு அவர் மரணத்தை தற்கொலையாக மாற்றியிருக்கிறார்கள் போலீசார். போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்தில் இருந்த நகர சுத்தி தொழிலாளர் சங்கத்தவர்கள் இந்த அக்கிரமத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்துக்கு கொண்டுவருகிறார்கள். இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட காதர் அந்த மரணத்திற்கான மறு பிரேதப் பரிசோதனையையும் மறு விசாரணையும் கோரி ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் அதற்காக பெரிய பிரச்சாரம் செய்திருக்கிறார்.
ஊர்வலத்தன்று ஒரு பெரும் படையான போலீஸ் தஞ்சை கீழவாசலை யாரும் நுழைய முடியாத அளவுக்கு முற்றுகையிடுகிறது. வெறும் ஏழுபேர் மட்டுமே இருந்த ஊர்வலத்தின் முன்னும் பின்னும் போலீசார் நெருக்கமாக நின்றிருக்கிறார்கள். அப்போது போலீசாரிடம், “என்னோடு சேர்ந்து கோஷம் போடுங்கள்” என வாக்குவாதம் செய்திருக்கிறார் காதர். பிரச்சனை முற்றி அங்கே காவல்துறை உயரதிகாரி தேவாரம் வரவழைக்கப்பட, அவரிடமும் காதர் அதையேதான் சொல்லியிருக்கிறார்
“பாதுகாப்பு தருவதாயிருந்தால் ஓரமாக நில்லுங்கள், எங்களோடு ஒட்டிக்கொண்டு நிற்பதாயிருந்தால் கோஷம் போடுங்கள்”. பிறகு போலீசார் தள்ளியிருக்கும்படி உத்தரவாகிறது. ஏழு பேரோடு ஆரம்பித்த அந்த ஊர்வலம் இரண்டாயிரம் பேரோடு முடிந்திருக்கிறது.
பிறகு இப்பிரச்சனையை சங்கரய்யா சட்டமன்றத்தில் எழுப்ப, இறந்த பெண்மணி ஒரு சாராய வியாபாரி என முதல்வர் கருணாநிதி சாதித்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்திய பிறகு மறுவிசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆர்.டி.ஓ விசாரணையில் காவலர்களின் குற்றம் ஊர்ஜிதமாகி 14 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிற்கு பிறகுதான் மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக்கூடாது, பெண்களை கைதுசெய்யும்போது பெண் காவலர்கள் உடனிருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் தமிழக அரசால் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்யவைத்திருக்கிறார். காங்கிரஸ் மற்றும் திமுகவினரின் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் தன் சக தோழர்களோடு எதிர்கொண்டிருக்கிறார். திருவையாற்றில் போலீசை கண்டித்து ஒட்டிய போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தியதை அறிந்து, மறுநாள் அதே போஸ்டர் செய்தியை ஒரு பெரிய பேனரில் எழுதி அதனை மக்கள் கூடுமிடத்தில் வைத்து ஒரு நாள் முழுக்க அதற்கு காவல் இருந்திருக்கிறார்.
மேற்சொன்ன காரியங்கள் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் வழக்கமாகவும் சாதாரணமாகவும் செய்பவைதான். ஆனால் காதர் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக நாம் சுட்டிக்காட்ட விரும்புவது இவற்றைதான், இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே ஓட்டுக்கு பணம் தரப்பட்டிருக்கிறது, கட்சிகள் ரவுடித்தனம் செய்திருக்கின்றன, ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அண்ணாதுரை-கருணாநிதி ஆட்சிகாலத்திலேயே போலீஸ் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் செய்திருக்கிறது. அதற்கு அரசு உடந்தையாக இருந்திருக்கிறது.
ஆக, இந்திய ஜனநாயகமாகமானது அது ஆரம்பமான காலந்தொட்டே மக்களுக்கு விரோதமானதாகத்தான் இருந்திருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயக அமைப்பை ஏற்றுக்கொண்டு அதனை சீர்படுத்திவிடலாமெனும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்திட்டம் படுதோல்வியடைந்து, இந்த போலிஜனநாயக அமைப்பானது கம்யூனிஸ்ட் கட்சியை சீரழித்ததுதன் நடந்திருக்கிறது.
(மார்க்சிஸ்ட் கட்சி டேப் காதரை புறந்தள்ளியதற்கும், காதர் அக்கட்சியைவிட்டு விலகியதற்கும் அடிப்படையான காரணங்கள் என்ன? ஒரு கம்யூனிஸ்டை இன்றைய பொருள்சார் குடும்ப அமைப்பு எப்படி கையாள்கிறது, லாவணி என்றால் என்ன? – அடுத்த கட்டுரைகளில்)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் சாதி ஆதிக்க வெறியாட்டம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரிவாள் வெட்டு,
சொத்துக்கள் சூறை, உடைமைகள் கொள்ளை !
சாதி வெறியர்களுடன் காவல்துறை கூட்டணி !
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள தெற்கு மணக்கரை ஊரில் தேவர் சாதி ஆதிக்க வெறியர்களால் தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சமூகத்தினரின் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் 8-க்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்ப்பட்டுள்ளன. நகை, பணம் கொள்ளையடித்து மூன்று நபர்களை வெட்டி தமது சாதி ஆதிக்க வெறியினை நிலைநாட்டியுள்ளனர்.
தெற்கு மணக்கரை தாமிரபரணி படுகையில் உள்ளது. இரு சமூகத்தினருமே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். தேவர் சாதியினர் வயல்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வது வழக்கம். சொந்தமாகவும் வயல்கள் வைத்துள்ளார்கள். இதனை ஏற்க மனமில்லாத தேவர் சாதி வெறியர்கள் வயலுக்கு நீர் பாய்ச்சும் போது முதல் வயல் தாழ்த்தப்பட்டவர் வயலாக இருந்தால், முறைப்படி நீரினை பாய்ச்சவிடாமல் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் பொருட்டு வாய்க்கால் மடையில் அரிவாள் மற்றும் செருப்பை வைப்பதும் அதை எடுத்து விட்டு நீர் பாய்ச்சினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைத் தாக்குவதின் மூலம் பல ஆண்டுகளாக அடாவடி செய்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆடு, மாடுகள் தேவர் சாதியினரின் வயல்களில் மேய்ந்தால் மாடுகளை வெட்டி விடுவதும் தண்டம் (அபராதம்) விதிப்பதையும் இன்று வரை வாடிக்கையாகச் செய்து வருகின்றனர். அதற்கு நேர் எதிராக இவர்கள் மாடுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரது வயலில் மேய்ந்தால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடம், “எங்ககிட்டயே அபராதம் கேட்பியா” என்று மிரட்டுவதும், தாழ்த்தப்ட்ட சமூகத்துப் பெரியோர்களைப் பேர் சொல்லி போடா வாடா என்று அழைப்பதும் ஆடு மாடுகளைக் களவாடிச் சொல்வதும் காவல் துறையில் புகார் கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களைக் காவல்துறையை வைத்தே மிரட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் திருவிழாவின் போது தமது சமூகத் தலைவர்களின் பாடலை மேளத்தில் வாசிப்பதையோ, கச்சேரியில் பாடுவதையோ தடைசெய்தே வந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த திருவிழாவில் சில இளைஞர்களின் முயற்சியினால் தமது சமூகத் தலைவர்களின் பாடல்களை பாடச் செய்துள்ளார்கள். இதனால் தேவர் சாதியினர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்கள்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேவர் சாதியினர் பகுதியில் உள்ள பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும். அப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அடிப்பதும் மிரட்டுவதும் தொடர்கிறது. ரேசன் கடை தேவர் சாதியினர் பகுதியில் உள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. ஊரில் ஏதும் பிரச்சனை என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் நடந்து வருகிறது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக தேவர் சாதியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடையைத் தாழ்த்தப்பட்ட மக்களின் பகுதியில் திறந்துள்ளார். இதனால் தேவர் சாதியினர் குடித்து விட்டு ஊருக்குள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வருவதும் கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை வாங்குவதுமாக அட்டூழியம் செய்து வந்துள்ளார்கள்.
கடந்த 03.06.2014 -ம் தேதி இரவு பொது தண்ணீர் தொட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தேவர் சாதியினர் மது அருந்த தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தேவர் சாதியினர் மீது தண்ணீர் தெறித்துள்ளது. இதனால் அவர்கள் வம்புச் சண்டை இழுத்துள்ளனர். சாதியைச் சொல்லித் திட்டி அடித்துள்ளனர்.
இது சம்பந்தமாக முறப்பநாடு காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புகார் கொடுத்துள்ளார்கள். அன்று தேவர் சமூகத்தினர் கோவில் திருவிழா என்பதால் காலையில் இரு சமூகத்தினரையும் வரச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்து மறுநாள் வரச்சொல்லி அனுப்பி வைத்துள்ளது காவல்துறை. காவல்துறையில் தமக்கு நியாயமான விசாரணையும் நடவடிக்கையும் இருக்காது என்று கருதிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 04-06-2014 அன்று காலை காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தேவர் சாதியினர், மாலை 5 மணி அளவில் 40-க்கும் மேற்பட்டோர் கத்தி, கம்பு, அரிவாள் ஆகியவற்றுடன் வந்து தாழ்த்தப்பட்டவரின் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கியும் நகை மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்தும் ரூ 20 லட்சத்திற்கும் மேலாகப் பொருளாதார இழப்பு ஏற்படுத்தியும் கண்ணில் பட்ட மற்றும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் வெட்டியுள்ளார்கள். காவல்துறை எப்போதும் போல் கண்துடைப்புக்காக சில நபர்களை மட்டும் கைது செய்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணை போகின்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இதைக் கண்டித்து ‘தேவர்சாதி ஆதிக்க வெறியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நெல்லை அமைப்புக் குழுவின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த சுவரொட்டி ஆதிக்கசாதி வெறியர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுத்திருந்த செல்பேசி எண்ணுக்கு நள்ளிரவில் கம்ப்யூட்டர் மூலமாகவும் வெளிநாடுகளிலிருந்தும், பொதுத் தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
“நாங்கள் எங்களுடைய செல்போன் எண்களை வெளியிட்டுள்ளோம். துணிவு இல்லாத நீங்கள் கோழைத்தனமாக ஏதேதோ எண்களில் இருந்து பேசுகிறீர்கள். எங்களுடைய முகவரி வெளிப்படையாக உள்ளது. உங்களுக்குத் துணிவு இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள் அல்லது எங்கள் முகவரிக்கு வாருங்கள், பேசுவோம். சாதி என்பது நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவு – நீயே சூத்திரனுக்குப் பிறந்தவன் என்று இழிவுபடுத்தப்படுகிறாய். அப்படியிருக்கும் போது நீ மற்றவர்களை இழிவுபடுத்துவது கேவலம் இல்லையா” என்று கடுமையாகக் கேட்டபின் அவர்களது தொல்லை அடங்கியது.
இப்படிப்பட்ட சாதி ஆதிக்க வெறியர்களின் அஸ்திவாரத்தில் தான் தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சி கட்டி எழுப்பப்பட்டுள்ளது. வடக்கே ராமதாசு இந்த வெறியர்களைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் வன்னிய சாதி வெறி அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார்.
கொடியன்குளம், மாஞ்சோலை, பரமக்குடி, வாச்சாத்தி, நத்தம் காலனி என்று இவர்களது வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரால் கட்சி நடத்தும் தலைவர்கள் இவர்களுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து ஆட்சியை, அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறி வருகின்றனர். தென் கோடி மாவட்டங்களில் தேவர் சாதி ஆதிக்க வெறியை எதித்துப் போராடி தங்களது உரிமைகளை நிலைநாட்ட தலித் மக்கள் புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து போராட முன்வர வேண்டும். சாதித் தலைவர்களை நம்பிப் போவதில் பயன் எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும்.
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், நெல்லை அமைப்புக்குழு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள கள்ளிபுரம், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீருக்காக ஓரிரு கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்துதான் தங்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். குடி தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பல அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தும், சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை செய்தும் அரசு இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
இந்நிலையில் ஜப்பான் நிதிஉதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை தனது தலைமையிலான அரசுதான் கொண்டுவந்தது என்று கருணாநிதியும், ஜெயாவும் போட்டிப் போட்டுக் கொண்டு உரிமை பாராட்டினார்கள். இது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்பட்டது. ஆனால் கள்ளிபுரம், அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் போன்ற கிராம மக்களுக்கு கானல் நீராகவே போனது. கிராம மக்கள் வலியுறுத்தும் போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் வரும்…
வன்னிய சாதி மக்கள் வாழும் எரங்காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் மினி டேங் தண்ணீர்தான் அண்ணாநகர் மக்களுக்கு குடிநீர். ஒரு கிலோ மீட்டர் உள்ள அங்கு மிதிவண்டி, இரு சக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருவார்கள். ஆனால் எரங்காட்டு மக்கள் முழுமையாக தண்ணீர் பிடிக்கும் வரை காத்திருந்து அவர்கள் பிடித்த பிறகுதான் தாழ்த்தப்பட்ட மக்களான அண்ணாநகர் மக்கள் பிடிப்பார்கள். இவ்வாறு தண்ணீர் பிடிக்க சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் நீண்ட நேரம் காத்திருந்தும் தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வாய் சண்டை ஏற்பட்டது.
இதை ஒட்டி இந்த இளைஞர் மீது போலிசில் புகார் தெரிவித்தனர். இரண்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட திட்டமிட்டது போலிசு. மக்களிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எஃப்.ஐ.ஆர் போடவேண்டாம் என்று வன்னிய மக்கள் கேட்டுக் கொண்ட பிறகும் போலிஸ் எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டது.
அரசு முறையாக தண்ணீர் கொடுத்தால் இந்த பிரச்சினை வராது என்பதை உணர்ந்த இப்பகுதியில் இயங்கும் விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 17.6.2014 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டுப் பெற்றார். இப்பிரச்சனை குறித்து பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி பிரச்சாரம் செய்யயப்பட்டது.
காலை 10.00 மணிக்கு ஒலி பெருக்கி வைத்து புரட்சிகர பாடல்களை போட்டு பிரச்சாரம் செய்தனர். “வட்டாட்சியர் உள்ளே இருக்கிறார். ஒலியை குறையுங்கள். 11 மணிக்குதானே ஆர்ப்பாட்டம், அப்போது ஒலிபெருக்கி வையுங்கள்” என்றது போலிசு. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்கள் அதை ஏற்க மறுத்தனர்.
வழக்கம் போல 50-லிருந்து 100 பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்ந்த போலிசு காலி குடங்களுடன் சாரை சாரையாக திரண்ட 500-க்கும் மேற்பட்ட மக்களைக் கண்டதும் கலக்கம் அடைந்தது. வட்டட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிறு சாலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டு வந்ததால் ஆர்ப்பாட்டம் மறியல் போல ஆனது. அந்த சாலை வழியே பேருந்துகள் கடந்து செல்ல முடியவில்லை. இதனால் போலிசே பேருந்துகளையும் இரு சக்கர வாகனங்களையும் வேறு வழித்தடத்தில் திருப்பி அனுப்பியது.
முதலில் பறை இசை முழங்க, பிறகு விண்ணதிர முழக்கம் எழுப்பினர் தோழர்கள். “குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட மனுக்கள் எல்லாம்…. போண்டா கடையில் கிடக்குது” என்று அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை எள்ளி நகையாடி உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கான போராட்டம் தான் ஒரே தீர்வு என முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தலைமையேற்று பேசிய தோழர் சிவா, “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நம் தாகம் தீர்க்க வந்ததல்ல. ஜப்பான் ஏகாதிபத்தியம் லாபம் பார்க்க வந்த திட்டமே” என்று பேசியதை சுற்றி நின்று மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.
அடுத்து பேசிய தோழர் அருண் கடந்த 15 ஆண்டு காலமாக தங்கள் பகுதி மக்கள் எத்தனை போராட்டங்களை செய்துள்ளோம் என்பதையும் அதிகாரிகளின் அலட்சியத்தை அம்பலப்படுத்தியும் பேசினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வக்கற்ற அரசு, அதற்காக போராடுபவர்களை கைது செய்வது, பொய் வழக்கு போடுவது, சாதிய முரண்பாடுகளைத் தீவிரப்படுத்துவது என்றவாறு செயல்படுவதை அம்பலப்படுத்தினர்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசும் போது “பூமியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அரசு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துவது எதற்காக, யாருக்காக” என்று கேள்வி எழுப்பினார். “தண்ணீர் வழங்குவது அரசின் கடமை. இதை வழங்காத கையாலாகாத அரசு அதிகாரிகளின் அதிகாரத்திற்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும்” என்றும் “கடமையை செய்வதற்கே கைதட்டு பெறும் இந்த கயவர்களின் நிர்வாகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்?” என்றும், “ஓட்டு வாங்கிச் சென்ற எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் எங்கே போய் தொலைந்தார்கள்” என்றும் “காலங்காலமாக நமது வாழ்நிலையை தகவமைத்து கொள்ளும் மக்கள் தங்களின் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியும். வேண்டாத சதை பிண்டமா இந்த அதிகார வர்க்கத்தை தூக்கியெறிவதுதான் ஒரே தீர்வு” என்று அம்பலப்படுத்தி, ஆக்ரோசமாக பேசியது அனைவரும் எழுச்சி கொள்ளும் வகையில் இருந்தது.
வட்டாட்சியர் அலுவலகம் அருகே சந்தை கூடியிருந்ததால் திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை சுற்றி நின்று கவனித்தனர். அதிகாரிகளின் இலஞ்ச லாவண்யத்தை அம்பலபடுத்தி பேசியபோது அலுவலகத்தின் மேலும் கீழும் நின்ற மக்கள் அவர்களின் உள்ளக்குமுறலை நாம் வெளிப்படுத்தியதை உணர்ந்து மகிழ்ச்சி பொங்க ஆச்சரியத்துடன் கவனித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு 10 தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியரை சந்தித்து மனுகொடுக்க சென்றார். தோழர்களிடம் மரியாதையாக கோரிக்கைகளை கேட்ட தாசில்தார் உடனே பென்னாகரம் குடிநீர் பிரிவு ஆபரேட்டரின் தொலைபேசி எண்ணைப் பெற்று அழைத்தார். அதற்கு அவர் “ஈ.பி-யில் உயர் மின்னழுத்தம்தான் இதற்கு காரணம், இதனால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை” என்றார்.
உடனே மீண்டும் ஈ.பி -க்கு போன் செய்தார். அங்கு உள்ளவர்கள் ஜே.ஈ-க்கு போன் செய்யுங்கள் என்றனர்.
ஜே.ஈ-க்கு தாசில்தார் போன் செய்த போது அவர் “நாங்கள் இதற்கு பொறுப்பல்ல, இது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட கன்ட்ரோலில் வருது” என்றார்.
ஒகேனக்கல் கன்ட்ரோலுக்கு போன் செய்த தாசில்தாருக்கு “தருமபுரி கன்ட்ரோல்” என்று பதில் கிடைத்தது.
தருமபுரி கன்ட்ரோலுக்கு போன் செய்த போது “இது கோயமுத்தூர் கன்ட்ரோல்” என்றனர்.
கோயமுத்தூருக்கு போன் செயத போது “இதற்கு சென்னைதான் தலைமை, அங்கே ஃபோன் செய்து கேளுங்கள்” என்று அங்கு பதில் கிடைத்ததும் எரிச்சல் அடைந்த தாசில்தார், “இதற்கு நானே ஒகேனக்கல்லிருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவேன்” என்று கூறியதும் கடமை உணர்ச்சியே இல்லாத போலிசும், தாலுக்கா அலுவலக ஊழியர்களும் பல்லைக்காட்டினர்.
ஒரு வட்டாட்சியருக்கே முறையான பதில் இல்லாத போது சாதாரண மக்களுக்கு எப்படி பதில் கிடைக்கும் என்று தோழர்கள் கேட்டபோது “அரசு நிர்வாகமே பலவீனமாகத் தான் உள்ளது”என்று வருத்தமாக பதில் அளித்தார்.
கடமை உணர்வு சிறிதுமின்றி காமெடி பீசாகி விட்டது முதலாளித்துவ அரசு நிர்வாகம் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இதன்பிறகு பி.டி.ஓ விடம் உடனே வருமாறு கடிந்து கொண்டார் வட்டாட்சியர். பி.டி.ஓ வந்ததும் 10 நாட்களுக்குள் பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறினார். அதுவரை லாரிமூலம் தண்ணீர் எடுத்து வந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தோழர்கள் கூறியதை அதிகாரிகள் ஏற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்பே மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வந்து விட்டது. அதற்கு முன்பு ஒரு அடி, இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் ஏற்றுவதற்கே பல காரணங்கள் கூறிவந்தனர். ஆனால் போராட்டத்திற்கு பிறகு தொட்டி முழுவதும் நீர் நிரம்பியது. போராட்டம் தான் தண்ணீரை வரவழைத்தது என்பதை உணர்ந்த மக்கள் தற்போது வி.வி.மு தோழர்களின் பின்னால் நம்பிக்கையோடு திரண்டு வருகின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீடு சொடுக்கவும்]
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி பென்னாகரம் (வட்டம்) தருமபுரி
“பிரதமரின் நேபாள பயணம் மகத்தான வெற்றி பெற்றது என்று கேள்விப்பட்டேன்…. இல்லை இல்லை லடாக் பயணம் … கொஞ்சம் இருங்க, வாய் தவறி விட்டது. பூடான் என்றுதான் சொல்ல வந்தேன்.”
பூடான் நாடாளுமன்றத்தில் மோடியின் ‘வீர’ உரை
“இன்றைக்கு பூடானையும் நேபாளத்தையும் குளறுபடி செய்யும் மோடி நாளைக்கு ஐநா அல்லது பிரிக் (BRIC) கூட்டங்களில் சொதப்பி இந்தியாவை அவமானப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்”
“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”
“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”
“நம்ம பிரதமர் சொன்னதை உண்மையாக்குவதற்கு மாண்புமிகு மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி என்.சி.ஈ.ஆர்.டி வரலாற்று புத்தகங்களை திருத்தி பூடானை நேபாளத்தின் பகுதியாக மாற்ற உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.”
சமீபத்தில் பூடான் பயணம் மேற்கொண்ட மோடி, இணையத்தில் இப்படி கலாய்க்கப்பட்ட போது, சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஜிங்குஜா அடிக்கும் மோடி இணையப் படை எங்கோ மாயமாகியிருந்தது.
ஜூன் 15, 16 தேதிகளில் பூடானுக்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பூடானுக்கு பதில் நேபாளம் என்று பேசி சொதப்பினார். “நான் ஜனநாயக மதிப்பீடுகளையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்த நேபாள…. பூடான் அரச குடும்பத்தை பாராட்டி என் உரையை ஆரம்பிக்கிறேன்.” என்று உளறியதோடு பின்னர் ஒரு இடத்தில் பூடான் என்பதற்கு பதில் லடாக் என்றும் பேசினார்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட தெற்காசிய நாட்டு தலைவர்கள்.
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பதவி ஏற்ற இந்துத்துவ பிரதமர் என்ற பூரிப்பில் தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடினார் மோடி. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு, நவாஸ் ஷெரீபை அழைத்ததில் இந்துமதவெறியரில் சிலர் அதிருப்தி என்று அந்த முடிசூட்டு விழா முழுமையாக பலனளிக்கவில்லை. இந்நிலையில், மோடியின் அடுத்த கட்ட விளம்பர அத்தியாயமாக வெற்றிகரமான வெளிநாட்டு பயணத்தை நடத்திக் காட்டுவோம் என்று சிந்தன் பைட்டக் நடத்தியிருக்கின்றனர் பா.ஜ.கவினர். “நம்ம ஏரியாவை விட்டு அமெரிக்கா, ஐரோப்பா என்று போனால் ‘மோடி அளவு’ பந்தாவுக்கு ஸ்கோப் குறைவு, ஏதாவது அசம்பாவிதமாக முட்டை வீசும் சம்பவம், அல்லது செருப்பு வீசும் சம்பவம் கூட நடந்து விடலாம். அதனால், முதலில் நம்ம பேட்டையான தெற்கு ஆசிய பிராந்தியத்தில் நாமதான் தாதா என்று உறுதி செய்து கொள்வோம்.” என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்படி தெற்கு ஆசியாவில் பயணம் மேற்கொள்வதிலும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. இலங்கைக்கு போகலாம் என்றால் ‘ஜெயலலிதா ஏதாவது கடிதம் எழுதி விடுவாரோ, வைகோ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி விடுவாரோ’ என்று யோசிக்க வேண்டும், வங்கதேசத்துக்குப் போகலாம் என்றால் மம்தா தீதியின் கண் உருட்டலை சமாளிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு போக வேண்டுமென்றால், ராஜ் தாக்கரேவிடம் முன் ஜாமீன் வாங்கிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நேபாளத்திற்கு போனால் மாவோயிஸ்டுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
அதனால், யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி.
ராஜதந்திரம் மிக்க இந்த ஒற்றை முடிவின் மூலம் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் மோடி. அவற்றில் முக்கியமானது, தினமணி உள்ளிட்டு நாடெங்கிலும் வெறும் வாயிலேயே மோடியின் பஜனை பாடும் பக்தர்களுக்கு மெல்லுவதற்கு நிறைய அவல் கிடைத்தது.
பூடான் மன்னருடன் மோடி
பூடானில் மொத்தமே ஏழேகால் லட்சம் மக்கள்தான் (மதுரை மாநகரை விட குறைவு, திருநெல்வேலியை விட கொஞ்சம் அதிகம்) வாழ்கிறார்கள்; 1949-லிருந்தே இந்திய அரசுதான் அந்நாட்டின் திட்டச் செலவுகளுக்கு நிதி கொடுத்து அதன் வெளியுறவுக் கொள்கையையும், பொருளாதாரக் கொள்கையையும் கட்டுப்படுத்துகிறது போன்ற விபரங்களை எல்லாம் யாரும் தேடிக் கொண்டிருக்கவா போகிறார்கள். இருந்தாலும் பூடான் போனாலும், வாஷிங்டன் போனாலும் வெளிநாட்டுப் பயணம், பயணம்தான். அந்த வகையில் மோடியின் முதல் வெளிநாட்டு பயணத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பூடான் அரசின் மொத்த ஆண்டு வருமானம் $27 கோடி (சுமார் ரூ 1,600 கோடி) ஆனால் செலவுகளோ ஆண்டுக்கு $35 கோடி (சுமார் ரூ 2,100 கோடி). இந்த செலவுகளில் சுமார் 60% ‘மானியமாக’ கொடுப்பது யார் என்று பார்த்தால் அது இந்திய அரசுதான். 1990 வரை பெருமளவு இயற்கை பொருளாதாரம் சார்ந்து வாழ்ந்து வந்த பூடானில் கடந்த 20 ஆண்டுகளில், 5 சதவீதமே உள்ள ஆளும் அரச குடும்பத்தினர் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், ஆடம்பர வீடுகள், நவீன நுகர்வு பொருட்கள் என்று வாழ்வதற்குத்தான் இந்த பணம் திருப்பி விடப்படுகிறதே தவிர, சாதாரண பூடான் மக்களின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடவில்லை.
இந்திய அரசோ இத்தகைய நிதி உதவி மூலம் பூடானில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான காண்டிராக்டுகளை இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வாங்கி தருவதோடு, இயற்கை வளங்களும் நீர்வளமும் நிறைந்த அந்நாட்டிலிருந்து மின்சாரத்தை மலிவு விலையில் வாங்கிக் கொள்கிறது. பூடானிலிருந்து பெறும் மின்சாரத்துக்கு விலையாக இந்திய அரசு கொடுக்கும் தொகையிலிருந்து வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல், கடனை கட்டவே கடன் வாங்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது பூடான்.
இத்தகைய நாட்டுக்கு சென்று திரும்பி ‘பூடான் கொண்டான்’ என்று பெயர் சூடிக் கொள்ளும் முயற்சியிலான மோடியின் பயணத்தை தினமணி பரபரப்பாக படம் பிடித்தது.
மோடியின் பயண முடிவு வெளியான ஜூன் 11-ம் தேதி பிரதமர் மோடி 15-இல் பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 14-ம் தேதி பிரதமர் மோடி நாளை பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 15 அன்று பிரதமர் மோடி இன்று பூடான் பயணம் செய்திகளை வெளியிட்டதோடு 16, 17, 18 தேதிகளில் மோடி பூடானில் வரவேற்கப்பட்டது, அங்கு அவர் நடத்திய உரைகள், வெளியிட்ட அறிக்கைகள், திறந்து வைத்த திட்டங்கள் என்று தடபுடல் செய்ததோடு இந்திய-பூடான் உறவு குறித்து இறுதியில் ஒரு தலையங்கத்தையும் தீட்டியது. மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு போனால், “உசிலையை வென்ற அழகிரி அண்ணே நீ வாழ்க” என்று உடன்பிறப்புகள் விளம்பரம் செய்வது போல தினமணி பரவசமாக எழுதியது.
உண்மை நிலவரம் என்ன?
மோடிக்கு பூடானில் அணிவகுப்பு மரியாதை
பூடானின் முந்தைய பிரதமர் ஜிக்மே தின்லே பிற நாடுகளுடன் குறிப்பாக சீனாவுடன் பூடானின் உறவை வளர்க்க முயற்சித்ததை பார்த்து கடுப்பான இந்திய ஆளும் வர்க்கங்கள் பூடானுக்கு பெட்ரோலிய மானியத்தை ரத்து செய்தும், பொருட்களின் ஏற்றுமதியை முடக்கியும் அந்நாட்டு அரச குடும்பத்தையும் ஆளும் குடும்பங்களையும் நிலைகுலையச் செய்திருந்தன.
உண்மையில் இந்தியாவுடன் இணைந்திருப்பது வரையில்தான் அந்நாட்டு மக்கள் மீதான மன்னர் மற்றும் அரச குடும்ப மேட்டுக்குடியினரின் ஆட்சிக்கு உத்தரவாதம். அந்த வகையில் பூடான் மன்னர் ஆட்சி இருப்பது வரை சீனாவுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாகவும் சரி, நடைமுறை ரீதியாகவும் சரி சாத்தியமில்லாத ஒன்று.
எனவே, அடுத்த தேர்தலில் முதல் சுற்றில் ஜிக்மே தின்லேயின் கட்சி முதலிடத்தை பிடித்தாலும் இறுதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு அடிபணிதலை உறுதியாக கடைப்பிடிக்கும் ஷெரிங் தோப்கே பிரதமராக்கப்பட்டார்.
இத்தகைய பூடானுக்கு போவது மோடியின் சூப்பர் மேன் இமேஜை தூக்கி நிறுத்த மட்டும் பயன்படவில்லை. மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த முதலாளிகளில் முக்கியமானவர்களான குஜராத்தி, மார்வாடி வியாபாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் கடமையும் மோடிக்கு இருந்தது. அரிசியில் ஆரம்பித்து பல்வேறு நுகர்பொருட்களை பூடானுக்குள் கொண்டு சென்று விற்கும் அவர்களது வர்த்தகத்துக்கு பாதிப்பு வராமல் பேசி உறுதி செய்து வருவதுதான் மோடிக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை.
இப்படி தரகு வேலை பார்க்க போன மோடிக்கு இந்த பயணத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை பற்றி
பாரோ விமான நிலையம் சென்றடைந்த மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோரை பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பும், பூடான் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாரோவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் மலைவழிப்பாதையில் பயணித்து, திம்புவுக்கு மோடி சென்றார். அப்போது சாலையின் இருமருங்கிலும் இந்தியா மற்றும் பூடான் நாட்டு தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர். சாலையின் சில இடங்களில் மோடியின் புகைப்படங்களுடன், அவரை வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
என்று தினமணி எழுதியிருந்தது. இது கிட்டத்தட்ட ஜெயலலிதா மதுரைக்கு விமானத்தில் வந்து இறங்கினால் மதுரை மேயரும் கவுன்சிலர்களும் வரவேற்பதற்கு சமமானது.
தமிழ்நாட்டில் லேடியானாலும் சரி, டெல்லியில் மோடியானாலும் சரி தம் உருவத்தை பெரிய கட்-அவுட்டுகளாக பார்க்கும் பூரிப்பு நோயை கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா மீதான ‘பாசத்தை வெளிப்படுத்தும் வகையில்’ பள்ளிக் குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து டார்ச்சர் செய்வது போல பூடானிலும் ஆளும் வர்க்கங்கள் தேசியக் கொடி ஏந்திய மகளிரை நிறுத்தி வைத்ததோடு, மோடியின் பிரமாண்ட கட் அவுட்டுகளை கூட செய்து நிறுத்தியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் லேடியானாலும் சரி, டெல்லியில் மோடியானாலும் சரி தம் உருவத்தை பெரிய கட்-அவுட்டுகளாக பார்க்கும் பூரிப்பு நோயை கொண்டிருக்கிறார்கள். அந்த நோயை பக்தி மணத்துடன் செய்வதில் அவர்களது அடிமைகளும் சளைப்பதில்லை.
16-ம் தேதி பூடான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்தான் மோடி வலிமையான இந்தியா, அமைதியான பூடான் என்றெல்லாம் பேசி நேபாளம், லடாக் எல்லாம் கலந்து அடித்து தனது முதல் வெளிநாட்டு சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இதையடுத்து, பூடான் நாடாளுமன்றத்தில் இருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் கொலாங்க்சு நீர் மின் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 600 மொகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
என்று தினமணி வெளியிட்ட செய்தியை “இந்த கூட்டு முயற்சியில் நீர் மின் திட்டத்துக்கு பணம் கொடுத்து, காண்டிராக்ட் எடுத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கிட்டத்தட்ட இலவசமாக உறிந்து கொள்வது இந்திய அரசின் பங்கு. பூடான் மக்களை சமாளித்து, திட்டத்தை நிறைவேற்ற இடம், நீர், சட்ட ஒழுங்கு சூழலை ஏற்படுத்தி தருவது பூடான் அரசின் பங்கு.” என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது என்று இந்தியா தெரிவித்தது.
பூடான் அரசை பணிய வைக்க இந்திய அரசு விதித்திருந்த தடைகள், பூடான் அரசு முறைப்படி பணிந்த பிறகு இப்போது விலக்கப்பட்டன, அவ்வளவுதான்.
குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர்
இந்த கவரேஜ் முடிந்து, ஒரு வாரம் யோசித்த பிறகு 18-ம் தேதி எழுதிய தலையங்கத்தில், “புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிரதமரின் முதல் அரசுமுறைப் பயணத்தை உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்துமே கூர்ந்து கவனிக்கும் என்பது தெரிந்து, திட்டமிட்டுதான் பூடானைப் பிரதமர் மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.”
என்று கண்டு பிடித்து சொன்னது தினமணி. உண்மையில் சென்ற ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய அரசு அழைத்திருந்த ஓமன் சுல்தான் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ததும் ஒரு ஃபோனை போட்டு பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்கியால் வாங்சுக்கை அழைத்து உட்கார வைத்தது இந்திய அரசு. அதுதான் இந்தியா பூடானுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவு. குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர்.
கடைசியாக, பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி கைதட்டுதல் என்பது கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக செய்யப்படுவது. எனவே ‘மாமன்னர்’ மோடி பேசி முடித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பவில்லை என்று யாரும் எழுதி மானத்தை வாங்கி விடாதீர்கள் என்று பத்திரிகையாளர்களை முன்கூட்டியே எச்சரித்திருந்தது இந்திய தூதரகம்
ஆனால், நாடாளுமன்றத்தில் 25 நிமிடங்களுக்கு இந்தியில் பேசிய மோடி தனது உரையை முடித்ததும் 72 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மை மறந்து கைத்தட்டியிருக்கின்றனர். அது பாரம்பரியத்தை முறித்து மோடிக்கு அப்ளாஸ் போடவா அல்லது பாரம்பரியப்படியே கெட்ட ஆவியை விரட்டியடிக்கவா என்பது பூடான் மக்களுக்குத்தான் வெளிச்சம்.
இதை
மோடி பூடான் நாடாளுமன்றத்தில் உரையை முடித்த உடன் பாரம்பரியத்தை மாற்றிய எம்.பி.க்கள்: பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி ஆமோதிப்பதற்காக எம்.பி.க்கள் கரவொலி எழுப்புவது கிடையாது. இந்நிலையில், பூடான் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் மோடியின் பேச்சு முடிந்தவுடன் எம்.பி.க்கள் அனைவரும் கைகளைத்தட்டி ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.
என்று பச்சை பெயின்ட் அடித்து காட்டிய தினமணி தனது தலையங்கத்தை,
ஏற்கெனவே, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் சீனாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் பூடானை மையப்படுத்தித் தனது காயை நகர்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது!
என்று முடித்திருந்தது.
உசிலையை மையமாக வைத்து, “அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணன், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான காயை நகர்த்துகிறார் என்று எழுதியதற்கு சமம்” தினமணியின் இந்த பூரிப்பு! அய்யோ பாவம் பூடானை வைத்து இப்படி பூரிக்க வேண்டிய அவசியம் என்ன?
(பூடானில் வேலை செய்த வினவு வாசகர் ஒருவர் அளித்த தகவல்களோடும் எழுதப்பட்டது)
‘தி லாஸ்ட் எம்ப்பரர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சீனாவின் கடைசி மன்னனான பூ ஈ கம்யூனிச புரட்சியில் எப்படி தனது அதிகாரம், பெருமிதம், கௌரவம், வசதிகள் அனைத்தையும் இழந்து பரிதாபத்திற்குரிய மனிதனாக மாறினான் என்பதை மிகுந்த அனுதாபத்துடன் அந்தப் படம் சித்தரித்திருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல.
பூ ஈ தனது சுய சரிதையை “மன்னனிலிருந்து குடிமகனை நோக்கி” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் கம்யூனிச அரசு தன்னை எப்படி மறுவார்ப்பு செய்தது, சொந்த வேலைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருந்த தன்னை எப்படி போராடி மாற்றினார்கள், மக்களை நேசிப்பதற்காக தான் உதறிய மேட்டிமைப் பண்புகள், இறுதியில் தான் ஒரு குடிமகனாக விடுதலை செய்யப்பட்டது அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அந்த புனரமைப்புப் போராட்டத்தைச் சுருக்கமாகத் தருகிறோம்.
இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் வடகிழக்கில் ஐப்பானின் பொம்மை அரசராக இருந்தவர், போரில் ஐப்பான் தோல்வியடைந்த பிறகு ரசியாவிற்கு ஓடுகிறார். சோவியத் யூனியனிலிருந்து 1950-இல் கம்யூனிச சீனாவிற்கு கொண்டு வரப்படும் பூ ஈ 19 ஆண்டு மறுவார்ப்பு பயிற்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசால் விடுதலை செய்யப்படுகிறார்.
_______________________
‘மன்சுகுவோ’ போர்க் குற்றவாளிகளான நாங்கள் சோவியத் ருசியாவில் ஓர் ஓட்டலில் தங்கினோம். எங்களுக்கு நல்ல உணவு, தேநீர் வழங்கப்பட்டது. எங்களைக் கவனித்துக் கொள்ள சேவகர்களும், செவிலிகளும், மருத்துவர்களும் இருந்தனர். பொழுதுபோக்குக்காக புத்தகங்கள், வானொலி, செய்தித்தாள் அனைத்தும் இருந்தன. எனக்கு முதலிலிருந்தே இந்த வாழ்க்கை பிடித்திருந்தது. நான் இங்கேயே தங்கிவிட அனுமதிகோரி சோவியத் அதிகாரிகளுக்கு மூன்று முறை கடிதம் அனுப்பியும் பதிலில்லை. என்னுடன் வந்த மற்றவர்கள் திரும்பிச் செல்லவே விரும்பினர்.
நாங்கள் சிறு சிறு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டோம். அங்கேயே ஒரு காலி மனையில் மிளகு, தக்காளி, பீன்ஸ் அனைத்தும் வளர்த்தோம். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் எனக்கு மிளகு மற்றும் தக்காளி உண்பது மிகவும் பிடிக்கும்.
அங்கிருந்த அதிகாரிகள் நாங்கள் படிப்பதற்கு ‘லெனினிசத்தின் பிரச்சினைகள்’, ‘சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’ போன்ற புத்தகங்கள் கொடுத்தனர். அவை எனக்குப் பயன்றறதாகத் தோன்றின. அவை எனக்குப் புரியவுமில்லை, அவற்றைப் புரிந்து கொள்ள நான் முயலவுமில்லை. மாறாக, என்னிடம் இருந்த நகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இப்படியான சிந்தனைகளால் என்னிடம் அடிப்படையில் எந்த மாற்றமும் தோன்றவில்லை. எனவே என் குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளவுமில்லை.
திருமணக் கோலத்தில் மன்னன் பூ ஈ
ஜூலை 31, 1950 அன்று சீனா திரும்பினேன். திரும்பும் வழிப்பயணத்தில் பீர், இனிப்பு எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் சீன மண்ணை மிதித்ததும் நான் கொல்லப்படுவேன் என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. ‘கம்யூனிஸ்ட்டுகள்’ நாகரிகமானவர்கள் என்று நான் நம்பவில்லை. என்னைப் பொறுத்த வரை அவர்கள் கொடிய மிருகங்கள். அன்றிரவு உறக்கம் வராது உலவிக் கொண்டிருந்தேன். அப்போது என் உறவினர் ஒருவர் ‘சர்வாதிகாரம்’ ‘ஜனநாயகம்’ என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நான் கோபம் கொண்டு ‘இன்னும் ஏன் சர்வாதிகாரம் பற்றிப் பேசி கொண்டிருக்கிறாய்’ என்று கத்தி, எவரேனும் ஜனநாயகம் தவறு என்று சொன்னால் அவர்க்ளைக் கொன்று விடுவதாகக் கத்தினேன். சிறிது நேரம் கழித்து என்னை உணரந்து ‘அப்படி ஏன் வெறித்துப் பாக்கிறாய்? என்னைச் சுட்டுத்தான் கொல்வார்கள்’ என்றேன்.
ஃபுன்ஜுனுக்கு வந்திறங்கினோம். சில சிப்பாய்கள் எங்களை ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட இடத்துக்குள் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அது சீனச் சிறை என்பதை நான் உணர்ந்தேன். நான் எனது உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்பட்டேன். எங்களுக்குக் கம்பளம், மெத்தை மற்றும் துவைக்க உதவும் சாதனங்கள் கொடுக்கப்பட்டன. நாங்கள் ஆபத்தில் இல்லை என்ற உணர்வும் நம்பிக்கையும் வந்தது.
எங்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டது. நாங்கள் குற்றவாளிகள் போல நடத்தப்படவில்லை. எங்களுக்கு நல்ல உடையும், சிகரெட்டும் கூட வழங்கப்பட்டன. செய்தித்தாள் படித்தோம், வானோலி கேட்டோம் சீட்டு விளையாடினோம். மேலும் பல புத்தகங்கள் கொடுத்தனர்; படித்தோம். அப்புத்தகங்களில் இருந்த பல சொற்கள் எனக்குப் புதிதாய் இருந்தன. அதைவிடவும் புதிதாய் இருந்தது கைதிகளைப் புத்தகம் படிக்கச் சொன்னதுதான்.
என் குடும்பத்தினரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். எனது மறுவார்ப்பில் மிக முக்கிய அம்சம் என்று அதைப் புரிந்து கொள்ள எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் முழுவதும் புதிய மனிதர்களாய் இருந்த வேறு ‘செல்’லில் தங்க முடியாது. கவர்னர் அனுமதியுடன் மீண்டும் பழைய இடத்துக்குப் போனேன். என்னை நானே கவனித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ளுமாறு அவர் கூறினார். ஆனால் அப்படிச் செய்ய எனக்குத் துளியும் விருப்பமில்லை. எனது உறவினர்களை தினமும் உடற்பயிற்சியின் போது சந்திக்க முடிந்தது. எனது உறவினர் எனது துணி மற்றும் காலுறையைத் துவைத்துக் கொடுத்தார்.
இவ்வாறு துவைக்கும் பிரச்சினை முடிய, வேறொன்று தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் எனது கம்பளமும், படுக்கையும் நான் சுற்றிவைத்ததில்லை. என் கால்கள் கூட நானாகக் கழுவிக் கொண்டதில்லை. ஒரு ஊசி, நூல் கத்தி போன்று எதுவுமே என் கையால் தொட்டதில்லை. என்னை நானே கவனித்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்.
ஒருநாள் உடற்பயிற்சியின் போது கவர்னர் என்னை அழைத்து “அனைவரது உடை போல்தான் உனக்கும் உடை கொடுக்கப்பட்டது! ஏன் உன்னுடையது அவர்களுடையதைப் போல் இல்லை?” என்றார். சற்றே குனிந்து, என் உடையைப் பார்த்தேன். மிகுந்த அழுக்குடன், ஒரு பை பாதி கிழிந்து தொங்கியது, ஒரு பொத்தான் இல்லாதிருந்தது, முட்டியில் மைக்கறை, காற்சட்டை ஒவ்வொன்றும் ஒரு நீளம். மேலும் என் காலணியில் (ஷு) பாதி லேஸ்தான் இருந்தது.
பிறரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும்படி கவர்னர் கூறினார். பிறரிடம் இருக்கும் நல்லதைக் கற்றுக் கொள்ளாமல் நான் முன்னேற முடியாதெனக் கூறினார். அவர் மிகவும் மென்மையாகப் பேசியும் எனக்கு ஆத்திரம் பொங்கியது. என் வாழ்வில் முதன்முறையாக எனது இயலாமை பலர் முன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்னுடன் இருப்போர் இரவு படுக்கும் முன் உடைமாற்றி அதைத் தலையணையின் கீழ் வைப்பதைப் பார்த்தேன்; கற்றுக் கொண்டேன். கவர்னர் சொன்னதன் அர்த்தம் அப்போது விளங்கியது.
அக்டோபரில் ஹார்பினுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கிருந்த முதன்மைக் காவல் அதிகாரி, இந்த அரசு எங்களைக் கொல்லாது என்றும், அது நாங்கள் எங்களை ஆராயவும், மறுவார்ப்பு செய்யவுமே சொல்கிறதென்றும் கூறினார். மேலும், மக்கள் அரசாங்கத்தில் பல குற்றவாளிகள் தங்களைப் பாதி மனிதர்களாக்கிக் கொள்ள முடியுமென்றார். கம்யூனிசத்தின் குறிக்கோள், உலகை மாற்றி அமைப்பதும் மனிதகுலத்தை மறுவார்ப்பு செய்வதுமே என்றார்.
மறுவார்ப்பு முகாமில் பூ ஈ
இப்போது கவர்னர் பேசினார், அவர் பேச்சில் சில வார்த்தைகள் மட்டும் ஆழமாக நினைவில் நின்றன. “நீங்கள் மரணம் பற்றியே சிந்திக்கிறீர்கள். இந்தத் தயாரிப்புகள் எல்லாமே மரணத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறீர்கள். ஏன் உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக் கொள்ளக் கூடாது? மக்கள் அரசு உங்களைக் கொல்வதனால் ஏன் படிக்கச் செய்கிறது?” கம்யூனிஸ்டுகள் அர்த்தமற்றவற்றை எப்போதும் பேசுவதில்லை என்று புரிந்தது.
நான் என் தண்டனைக்கு முன் எனது சுயசரிதை எழுத முடிவுசெய்தேன். எனது குடும்பம், குழந்தைப் பருவம், ஜப்பானியர்களுடன் அரசியல் தொடர்வு என்று பல எழுதிவிட்டு, இறுதியில் இப்படி முடித்தேன்:
“மக்கள் துன்புறுவதைப் பார்த்து, ஏதும் செய்ய முடியாது போனதால் நான் மிகவும் துயரப்பட்டேன். சீனப்படைகள் போராடி வடகிழக்கிற்குள் முன்னேறி, பல காலங்களாக ஏங்கிய சர்வதேச முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமென விரும்பினேன். 1945-ல் அது நிஜமானது.”
படிப்பில் எனது முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை. பிற வேலைகளில் என்னை நிறுவுவதே ஒரே வழியாக இருந்தது. உணவு வாங்குவதும், தரை துடைப்பதுமே முக்கிய வேலைகள். ஒருநாள் என் வாழ்வில் முதன்முறையாக நான் உணவு பரிமாறினேன். அச்சமயத்தில் ஒருவரது தலையில் காய்கறி சூப்பைக் கொட்டிவிட்டேன். அதன் பின்னர் என் முறை வரும்போதெல்லாம், பிறரும் உதவி செய்தனர். இன்னும் என் துணிகளைத் துவைக்க நான் பழகவில்லை. பின்னொரு நாள் நான் பதுக்கி வைத்திருந்த நகையெல்லாம் கவர்னர் மேசை மேல் வைத்து ஒப்படைத்தேன்.
“இதையெல்லாம் திருப்பித்தர மிகவும் மனப் போராட்டம் இருந்ததா?” என்று கேட்டார்.
“திருப்பிக் கொடுத்ததனால் மன்னிக்கப்படுவேன் என்று நினைப்பதாகக்” கூறினேன்.
“நீ அரசனாக இருந்த காரணத்தினால் அப்படி நினைத்தாய்” என்றார்.
நான் “ஆம்” என்றேன்.
பேரரசன் பூ ஈ – “எங்கிருந்தாலும் கழிவுகள் கழிவுகள்தான்”
அப்படி நான் நினைத்தது ஆச்சரியமாயில்லை என்றும் தவறை உணர்வோரையும், மறுவார்ப்புக்கு இணங்குவோரையும், கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே மன்னிக்கும் என்றார். ஏனெனில் மறுவார்ப்பை ஏற்று மாறிய மனிதர்கள் மிகவும் விலை மதிப்பற்றவர்கள். இந்நிகழ்ச்சி முடிந்து நான் என் அறைக்குத் திரும்பியதும் உடன் இருந்தோர் அனைவரும் என்னை மிகவும் பாராட்டினர். கம்யூனிஸ்டுகள் எப்போதும் உண்மையைப் பெரிதும் மதித்தனர்.
1952-ல் பெரிய கட்டிடத்திற்கு மாறினோம். நான் மிகவும் தீவிரமாகப் படிக்கத் துவங்கினேன். ஒரு நாள் நாலுமணி வேலையும் செய்தேன். ஒரு பென்சில் தொழிற்சாலைக்குப் பென்சில் வைக்கும் பெட்டிகள் செய்தோம். இதுவரை என் வாழ்வில் நான் ஒரு பென்சில் சீவியது கூடக் கிடையாது. பிறர் பல பெட்டிகள் செய்து முடித்த நேரத்தில் நான் ஒன்று கூட முடித்திருக்கவில்லை. அப்படி முடித்ததும் அது ஒரு பெட்டி போல் தோன்றவில்லை.
ஒரு அதிகாரி அந்தப் பெட்டியைக் கையில் எடுத்து “இதை ஏன் திறக்க முடியவில்லை, என்ன செய்திருக்கிறாய்”? என்று கேட்டதும் பயமும், ஏமாற்றமும் கலந்து தோன்றின. அந்த அதிகாரி நான் செய்ததைத் தூக்கியெறிந்தார். நான் சென்று அதைத் திரும்ப எடுத்துவந்தேன்.
“எங்கிருந்தாலும் கழிவுகள் கழிவுகள்தான்” என்றார். என்னை இவ்வார்த்தைகள் மிகவும் ஆத்திரமூட்டின.
“நீ என்னிடம் வீரத்தைக் காட்டுகிறாய், எளியோரை மிரட்டுகிறாய், வலியோரைக் கண்டு அஞ்சுகிறாய்” என்றேன்.
அவர் என்னை நோக்கி “நீ உன்னை இன்னும் அரசனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்” என்றார்.
மறுநாள் என்னருகில் உட்கார்ந்து நான் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவருக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொண்டேன். அன்று பெட்டி செய்யும் கேலையில் சிறு முன்னேற்றம் தெரிந்தது; கழிவுகள் இல்லை. அன்று மாலை சிறை அதிகாரிகள் எங்களுக்கு இனிப்புகள் கொண்டு வந்தனர். அவை எங்கள் உழைப்பில் வாங்கியவை. வாழ்வில் முதன் முறையாக என் உழைப்பின் பலனை அனுபவித்தேன். என் பங்களிப்பு மிக அதிகமில்லை எனினும் அந்தப் பலகாரங்கள் மிகவும் இனித்தன. இதற்கு முன் எப்போதையும் விட.
1955: புது வருடம் துவங்கியது. அதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கவர்னர் கேட்டார். நான் தண்டனைக்குக் காத்திருப்பதாக மட்டுமே நினைப்பதாகக் கூறியது கேட்டு எனது அவநம்பிக்கையைக் கடிந்து கொண்டார். அவரது வார்த்தைகள் என்னை அமைதிப்படுத்தின, ஆனாலும் என்னில் இருந்த அவநம்பிக்கை இருட்டை அழிக்கவில்லை. அது மேலும் என்னை சுய-பச்சாதாபத்தில் வீழச்செய்தது.
ஒருநாள், ஓய்வு நேரத்தில் ஒரு புகைப்படக்காரர் எங்களைப் படம் பிடிக்க வந்தார். சிறைத் தோட்டத்தைப் படம் எடுக்க வந்தார். அதுவரை என்னருகில் நின்று அங்கு நடந்த விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த சிறை அதிகாரி, “அவருடன் சேர்ந்து என்னைப் படமெடுக்க வேண்டாம்” என்று ஒதுங்கிச் சென்றார். உடனே என்னுடன் நின்றிருந்த எல்லோரும் விலகிச் சென்றனர்.
எங்களைப் பார்வையிட வந்த விடுதலை இராணுவ அதிகாரிகள் ‘என் படிப்பைப்’ பற்றி விசாரித்தனர். அவர்கள் என்னிடம் மிகவும் நட்புடன் நடந்து கொண்டனர். என்னைச் சிறிதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நினைத்த கம்யூனிஸ்டுகள் என்னை மனிதனாக நடத்தினர். ஆனால் என்னுடன் சிறையில் இருந்தோர் என்னருகில் நிற்கவும் விரும்பவில்லை. என்னை அவர்கள் மனிதனினும் குறைவாக மதித்தனர். அன்று ஓய்வு முடிந்து எங்களது இருப்பைப் பதிவு செய்யும் நேரத்தில் நான் தாமதமாககச் சென்றேன். லிட்டில் ஜு என்னப் பார்த்து “நீ எப்போதும் தாமதமாக வருகிறாய்” என்று கத்தினார். “நீ எப்போதும் உனக்காகப் பிறரைக் காக்க வைக்கிறாய். உனக்கு பிறரைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறை கூடக் கிடையாது. உனது சட்டைப் பொத்தான் கூட உனக்குச் சரியாய்ப் போடத் தெரியவில்லை” என்று கூறினார்.
பின்னொரு நாள், நாங்கள் விளையாட்டு மைதானத்தைக் கூட்டிக் கொண்டிருந்தோம். மே தினத்தை முன்னிட்டு நிறைய செடிகள் பயிரிட முடிவு செய்யப்பட்டது. முதலில் நான் ஒரு பெரிய குழியில் மண்ணிட்டு மூடும் வேலை செய்தேன். என் கண்பார்வை மங்கிவிட்டதால் பாதுகாப்பு கருதி, செடிகள் நடும் வேலை செய்ய மாற்றப்பட்டேன். சிறிது நேரம் அந்த வேலை செய்துகொண்டிருந்தேன்.
அப்போது செங் என்னிடம் வந்து மிகுந்த ஆத்திரத்துடன் என் கையிலிருந்த செடியைப் பிடுங்கி, ‘என்ன செய்திருக்கிறாய்?’ என்றார். என்னைக் களை பறிக்கச் சொன்னதாகக் கூறினேன். “என் கையிலிருப்பது களையா? அவை அனைத்தும் மலர்கள் என்பதைக் கூடப் பார்க்க உன்னால் முடியவில்லையா?” என்றார். அவர்முன் நான் தலைகுனிந்து நின்றேன். அங்கிருந்த அனைத்து மலர்களும், களைகளும் ஒரு நொடியில் காணாமல் போய்விடக் கூடாதா என்று மனம் விரும்பியது. “நீ உண்மையிலேயே உபயோக மற்றவன்” என்று பறிக்கக் கற்றுத் தருமாறு செங்கிடம் கூறினார். உடனே செங் “மலருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள் கூட இன்னும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.
ஒருநாள் மீண்டும் என் மூக்குக்கண்ணாடி உடைந்தது. மிகுந்த தயக்கத்துடன், தணிந்த குரலில், பிக்லீயிடம் சரி செய்து தருமாறு கேட்டேன். உனக்கு இன்னும் நான் சேவை செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று கத்தினான். இதுநாள் வரை உனக்கு எல்லோரும் சேவை செய்தது போதாதா என்று கேட்டவுடன் அவமானத்தால் என் தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
என் கண்ணாடியைச் சரி செய்யவும், மெத்தை, கம்பளம் தைக்கவும் பிறர் எனக்கு உதவினர். இந்த உதவிகள் இல்லையென்றால் நான் நாள் முழுவதும் இதிலேயே கழித்திருப்பேன். இந்த உதவிகளெல்லாம் என்னில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டே செய்யப்பட்டாலும் இந்த உதவிகளுக்கும் எனது மறுவாய்ப்புக்கும் எந்த ஒரு தொடர்பையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்ல. இவ்வுதவிகள் என் திறமையின்மையையே பறைசாற்றின. என்னப் பற்றிய விமரிசனங்கள் எனது காயங்களைத் திறந்து வலி உண்டாக்குவதாகவே இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் அரசும் என்னை உயிர் வாழ அனுமதித்தாலும் இந்தச் சமூகம் என்னைப் பொறுத்துக் கொள்ளாது. நான், அடித்துத் துன்புறுத்தப்படாவிட்டாலும் மக்கள் என் மீது காறி உமிழ்வர்.
பல நாள் மனப் போராட்டம், துன்பம் அனுபவித்த பிறகு – மாற்றம் என்பது என்னைப் பொறுத்தது, மற்றவர்கள் என்னை நடத்தும் முறையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஒரு ஞாயிறன்று நான் துவைத்து முடித்து ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டுருந்தேன். படிக்கப் புத்தகம் எடுத்துக் கொண்டு இருந்தபோது, இருவர் பேசுவது கேட்டது.
“நீ டென்னிஸ் விளையாடுவாயா?”
“எனக்குத் தெரியாது, ஆனால் பூ ஈ விளையாடுவார். நீ அவரைக் கேள்.”
“அவருக்கு அவகாசம் இருக்காது. அவர் எப்போது துணி துவைத்து முடிப்பார் என்று யாருக்கும் தெரியாது.”
“இல்லை. இப்போது துரிதமாவே செய்கிறார்.”
“நான் நம்பவில்லை.”
_இருவரும் மாறிமாறிப் பேசிக் கொண்டிருந்தனர். இது மிகவும் கோபமூட்டியது. என்னால் விளையாட முடியுமெனக் காண்பித்துக் கொள்வதைவிட, நான் துவைத்து முடித்துவிட்டேன் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விளையாடத் துவங்கினேன். விளையாடி முடித்ததும் கவர்னர் வந்து நான் இன்று நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும், துவைக்கப் பழகியதால், ஓய்வு நேரம் பிறரைப் போல் எனக்கும் கிடைக்கு மென்றும் கூறினார்.
அவர் மேலும், “இரண்டாவது உலகப்போர் மன்னனான உன்னைக் கைதியாக மாற்றியது. தற்போது உன் மனதில் ஒரு பெரிய யுத்தம், ஒரு மன்னன் தொழிலாளியாகும் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. மன்னன் என்பவன் யாரென்று நீ புரிந்து கொண்டுவிட்டாய். ஆனாலும் யுத்தம் இன்னும் முடியவில்லை. நீ இன்னும் உன்னை மற்றவர்களுக்குச் சமமாக நினைக்கவில்லை. நீ இன்னும் நன்றாக உன்னைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
துப்புரவுப் பணிகள் முடித்துத் திரும்பிய நாளன்று, அன்றாடப் பணிகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் நபர் “நீ கைகழுவிட்டுக் குழாயை மூடவில்லை. நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இது திரும்ப நடக்காமல் பார்த்துக் கொள்” என்றார். உடனே பிக்லீ “நீ இன்னும் அரசனாகவே நடந்து கொள்கிறாய், கதவு திறக்கும் போது கூட கைப்பிடியை உன் கையால் தொடுவதில்லை, ஒரு தாள் கொண்டு பிடித்துத் திறக்கிறாய். அது அழுக்கு என்று நினைக்கிறாய். இன்னும், ஏன் உன் மன அழுக்கு மாறவில்லை. நீ இன்னும் உன்னை எங்கள் எல்லோரையும் விடப் பெரியவனாகக் கருதுகிறாய்” என்று குற்றம் சாட்டினான். அப்படி எந்த உணர்வும் என்னில் இல்லை, ஆனாலும் என்னைப் பற்றிய சந்தேகங்கள் எனக்கே இருந்ததால் என்னால் மறுத்துப் பேச முடியவில்லை.
நான் என்னை மிகவும் உயர்ந்தவனாக மதிப்பிட்டிருந்தேன். ஒரு நாள் எங்களது மாற்றங்கள், சிந்தனைகள் பற்றிய விவாதம் வந்தபோது இதை உணர்ந்தேன். என் முறை வந்தபோது என்னில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றிக் கூறினேன். அப்போது ஒருவர் கேட்டார் “உன்னைப் போன்ற பின்னணியிலிருந்து வரும் ஒருவருக்கு ஜப்பானிய ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். இன்றளவும் உனது தனிப்பட்ட சிந்தனையிலும், உணர்விலும் அந்த எண்ணங்கள் உனக்கு இருக்கும். ஏன் அதை வெளிப்படுத்தவில்லை” என்று கேட்டார்.
“ஜப்பானியர்களைப் பொறுத்த அளவில் எனக்கு வெறுப்பு மட்டுமே உள்ளது. நீங்கள் சொன்னதை நான் மறுக்கிறேன்” என்றேன்.
கோபம் கொண்ட அவர் “அதை ஏன் கொஞ்சம் பண்பாகச் சொல்லக் கூடாது; நீ இன்னும் மிகப் பெரியவன் என்ற எண்ணம் உனக்கு இருக்கிறது” என்று கூற அந்த விவாதம் வளர்ந்து கொண்டே போனது. “நான் ஜப்பானுடன் தொடர்பு வைத்திருந்த காலத்தில், நான் டோக்கியோவுக்குப் போகுமுன்பு அவர்கள் எனக்கு மூன்று மில்லியன் யென் (Yen) கொடுத்ததாகவும், அதை நான் இன்றுவரை மறைத்து விட்டதாகவும்” சாடினார்.
இப்படியாகப் பல வேளைகளில் என்னையும் என் மாற்றங்களையும் என்னுடன் இருந்தோர் ஏற்க மறுத்தனர். அப்படிப்பட்ட ஒவ்வொரு முறையும் நான் எனது தவறான பழைய வாழ்வை எண்ணி மிகவும் வருந்தினேன். வெளி நாட்டிலிருந்து நாய்கள் வாங்கி, அவற்றுக்குத் தீனி வாங்கி, பராமரிப்புக்கு மருத்துவர்கள் அமர்த்தி, அவர்களுக்கு அளவிலா பொன்னும், பொருளும் தந்திருக்கிறேன். நோய் கொண்ட ஒரு மனிதனுக்காகக்கூட நான் அவ்வளவு கவலை கொண்டதில்லை, எனவே இன்று நான் இவ்வளவு மாற்றம் அடைந்தும் என்னைச் சுற்றியிருப்போர் என்னை ஏற்கவில்லை.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது, செப் 17-ஆம் நாள் பிறந்து 54 ஆண்டுகளுக்குப் பிறகு என் தாய்நாடு என்னை மனிதனாக்கிய நாள். உழைக்கும் மக்களுக்காக அவர்களே போராடி, அவர்கள்தம் அரசை நிர்மாணித்து, அந்த அரசு என்னைக் குடிமகனாக ஏற்ற நாள். கம்யூனிசம் வெற்றி கண்ட நாள். எனது சிறப்பு மன்னிப்பு அறிக்கை வாசித்து முடிக்கப்படுமுன் என் கண்கள் குளமாயின.
இந்தச் சிலிர்ப்பான நிமிடங்களை அனுபவிக்க நான் கடந்து வந்த பாதையினைச் சற்றே நினைத்துப் பார்க்கிறேன். அந்த வலியெல்லாம் இந்த நொடியில் மறந்து போகிறது. இந்தச் சிறப்பு மன்னிப்பு, பலருக்குத் தங்கள் குடும்பத்தைச் சேரும் ஒரு வாய்ப்பாக அமையவிருந்தது. என் குடும்பத்தினர் யாரும் உயிருடன் இருப்பினும் இம்மக்களைப் போல என்னைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. இவர்களுக்கு முன்னால் எனக்குப் பரிச்சயமான எவரும் ‘உண்மையான’ மனிதனாவது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்க முடியாது. இங்கிருந்து விடுதலையாவது, உண்மையையும் ஒளியையும் பெற்ற உலகைப் புரிந்து கொள்ளும் விடுதலையாகவே நான் கருதுகிறேன்.
– மேகலை
_________________________________ புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2004
_________________________________
மோடியின் அரசு பயணிகளின் ரயில்வே கட்டணத்தை 14.2% அதிகரித்துள்ளது. சரக்கு கட்டணத்தை 6.5% உயர்த்தியுள்ளது. கூடவே பயணிகளின் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளனர். பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் அன்றாடம் நகரங்களுக்கு வேலைக்கு சென்று வர ரயிலில் சீசன் டிக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். ரயில் கட்டண உயர்வு காரணமாக அவர்களது மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் துண்டு விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
படம் : நன்றி http://www.apherald.com
ஏற்கெனவே பாஜக அரசு சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் அதிகரிக்கப் போவதாக தங்களது கொள்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இம்மாத துவக்கத்தில் டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இப்போது கூடுதலாக ரயில் கட்டண உயர்வு சாமான்ய மக்களின் தலையில் வந்து இடியாய் விடிந்திருக்கிறது. கேட்டால் ‘இது ஏற்கெனவே காங்கிரசு எடுத்த முடிவு, நாங்கள் தேர்தலுக்காக ஒத்திப் போடப் பட்ட இக்கட்டண உயர்வை இப்போது அமல் படுத்துகிறோம்’ என்று பாஜக இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்துகிறது. சரி, காங்கிரசு அரசின் முடிவு என்றால் இவர்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட்டார்கள்? கட்சியையே காங்கிரசில் இணைத்திருக்கலாமே?
முன்னர் மதுரை-சென்னை 2 ம் வகுப்பு படுக்கைக் கட்டணம் ரூ 227 ஆக இருந்தது. இப்போது ரூ 38 அதிகரித்துள்ளது. இதுபோக சாதாரண வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து கட்டணமோ ரூ 325. தனியார் பேருந்தெல்லாம் சாமான்ய மக்களால் நினைத்தே பார்க்க இயலாது. திருச்சிக்கே ரூ 1000 வரை வசூலிக்கும் சொகுசுப் பேருந்துகள் எல்லாம் உள்ளன. அதுவும் கிராக்கி இருக்கும் சனி, ஞாயிறு என்றால் இன்னும் கூடுதல் கட்டணம் எல்லாம் வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் மக்கள் உயிரே போனாலும் ரயிலில் கம்பியை பிடித்துக் கொண்டாவது பயணித்து தொலைப்பது என்ற முடிவுக்கே வருகிறார்கள். ரயில் பயணத்தையும் தெரிவு செய்கிறார்கள்.
முன்னர் ரயிலில் ரூ 5-க்கு 20 கிமீ பயணம் செய்ய முடிந்தது, அதனை தற்போது 15 கிமீ ஆக சுருக்கி உள்ளார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓடும் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களில் கட்டணமும், சீசன் கட்டணமும் இருமடங்கு முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சென்னை கடற்கரை-கிண்டி வரை முன்னர் ரூ 5 என இருந்த கட்டணம் இப்போது ரூ 10 ஆக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் இந்த தூரத்திற்கு ரூ 85 ல் சீசன் கட்டணம் இருந்து வந்தது. தற்போது இது ரூ 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 15 தடவை பயணிப்பதற்கான கட்டணம் மட்டுமே சீசன் டிக்கெட்டாக வசூலிக்கப்பட்டது. அதனை இப்போது 30 தடவையாக உயர்த்தியுள்ளனர்.
மக்கள் உயிரே போனாலும் ரயிலில் கம்பியை பிடித்துக் கொண்டாவது பயணித்து தொலைப்பது என்ற முடிவுக்கே வருகிறார்கள். ரயில் பயணத்தையும் தெரிவு செய்கிறார்கள்..
செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு முன்னர் ரூ 15ல் வர முடிந்தது. அது முப்பது ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு இப்போது பத்து ரூபாயில் வருவது இனி இருபது ரூபாயாகவும் இருக்கும். அரக்கோணத்திலிருந்து சென்னை மூர்மார்க்கெட்டுக்கு ரூ 15லிருந்து ரூ 30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டுக்கு எடுக்கப்படும் சீசன் டிக்கெட் எனில் இந்தக் கட்டண உயர்வு மிகவும் அதிகமாக இருக்கும்.
சென்னையை சுற்றியிருக்கும் கிராமப்புற பகுதிகளில் இருந்து சென்னைக்கு விவசாய விளைபொருட்களை அன்றாடம் கொண்டு வந்து விற்கும் சிறு விவசாயிகள், சென்னையை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்ய போகும் வியாபாரிகள், செங்கல்பட்டு, காட்பாடி போன்ற சிறு நகரங்களில் இருந்து அன்றாடம் சென்னைக்கு வந்து போகும் தினக் கூலிகள், மாணவர்கள் எனப் பல பிரிவினருக்கும் இந்த சீசன் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தியது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.
நகரங்களுக்குள் இருக்கும் அதிக வாடகை, விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் புறநகரப் பகுதிகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனாலும் அன்றாட வேலைகளுக்காக நகரங்களுக்கு சென்று வர வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். வேறு வழியில்லாததால் இக்கட்டண உயர்வை சகித்துக் கொள்ள பழகியிருக்கிறார்கள். மறுபுறமோ பேருந்து கட்டணக் கொள்ளை காரணமாக மக்கள் தெரிவு செய்வதற்கான ஒரே வாய்ப்பாக ரயில் பயணம் மட்டும்தான் இருக்கிறது. தமிழகத்திலும் பேருந்து கட்டணம் மோடியின் அன்புச் சகோதரி 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடுமையாக உயர்த்தப்பட்டது.
ஏறக்குறைய சென்னை மற்றும் புறநகர்ப் ரயில்களில் தினசரி 10 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். முன்னரே இவர்கள் குறைவான தொகையில் சீசன் டிக்கெட் எடுத்திருப்பினும், மீதித் தொகையை பரிசோதகர் மூலம் வசூலித்து விடுவோம் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 28 லட்சம் டன் அளவுள்ள பொருட்கள் இந்திய ரயில்வே மூலமாக நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சிமெண்டு, பெட்ரோலியம், உணவுப் பொருட்கள், உரங்கள் என இந்த பட்டியல் மிக நீண்டது. தற்போது சரக்கு கட்டணத்திற்கு 3% சேவை வரியும் விதித்திருப்பதன் மூலம், நேரடியாக அது மக்களிடையே விலைவாசி உயர்வாக வந்துதான் முடியும்.
போராட்டம் ஒன்றே வழி என உணரும்போது மட்டுமே மக்கள் இந்த ரயில் டிக்கெட் உயர்வுக்கு எதிராகவும் போராட முடியும்.
மோடி வந்தால் நிர்வாகம் நன்றாக இருக்கும், நாடு விரைவாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும், வல்லரசாகும் என்றெல்லாம் சொல்லிதான் தேர்தலில் வெற்றி பெற்று வந்தது பாஜக. ஆனால் ஏற்கெனவே காங்கிரசு திட்டமிட்ட கட்டண உயர்வைத்தான் தாங்கள் அமல்படுத்துவதாக சொல்கிறார்கள் பொன்.ராதாகிருஷ்ணனும், சதானந்த கவுடாவும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் ரூ 900 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், செலவுகளை சமாளிக்கவே கட்டண உயர்வு என்றும் கூறியிருக்கிறார்கள். தற்போது பயணிகள் ரயிலுக்காக அரசு ஆண்டுதோறும் ரூ 26,000 கோடியை மானியமாக அளித்து வருகிறது. இப்போது இந்தத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருவதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார்.
ஆசியாவிலேயே பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையை நேரடி அந்நிய முதலீடு, கட்டண உயர்வு மூலமாக தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்க பார்க்கிறது மோடி அரசு. அதனால்தான் ஜேட்லி இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்த நமக்கு உலக தரத்திலான ரயில் வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கிறார். பெரும்பான்மை மக்கள் மலிவு காரணமாகவே ரயிலில் பயணிக்கிறார்களே அன்றி சொகுசு வசதிகளை ஏதிர்பார்த்து அல்ல. அது சதாப்தியிலும், ஏசி கோச்சுகளிலும் மட்டுமே பயணிக்கும் மக்களுக்கான கவலை. அந்த வகையில் ஜேட்லி மட்டுமல்ல முழு பாஜ கட்சியுமே மேட்டுக்குடியின் நலனைத்தான் பிரதிபலிக்கிறது
இந்தக் கட்டண உயர்வு வரும் 25-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார். ரயில் கட்டண உயர்வு ஒரு கடினமான முடிவு என்ற போதிலும் அது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டண உயர்வு ஒரு கசப்பு மருந்து என்கிறார் வெங்கையா நாயுடு. சரியான நேரத்தில் தரப்படும் மக்களுக்கான மருந்துதான், கட்டண உயர்வு என்றால் அதற்கு பெயர் மருந்தல்ல, விஷம்.
தொழிலாளிகளும், நடுத்தர மக்களும் இந்த கட்டண உயர்வால் தமது மாத சம்பளத்திலிருந்து சில பல நூறு ரூபாய்களை எடுத்து ஒதுக்கவேண்டும். மற்ற செலவுகளைப் போல ரயில் கட்டணம் தேவையில்லை என விலக்கி வைக்க முடியாது. வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கே இது அடிப்படையாக இருக்கிறது. அதனால்தான் எப்படியும் மக்கள் வழிக்கு வருவார்கள் என அரசு துணிந்து இந்த கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.
போராட்டம் ஒன்றே வழி என உணரும்போது மட்டுமே மக்கள் இந்த ரயில் டிக்கெட் உயர்வுக்கு எதிராகவும் போராட முடியும்.
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல், புலனாய்வில் முக்கியமான உதவியாக இருக்கும் என்று கருப்பு பணம் பற்றிய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் நீதிபதி எம்.பி. ஷா கூறியிருக்கிறார். ஆனால் இந்த புலனாய்வு என்ன சாதித்து விடும்?
எம்.பி.ஷா
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் திருட்டுத்தனமாக பதுக்கியுள்ள கருப்பு பணம் பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பலர் உச்சநீதி மன்றத்தில் 2009-ல் வழக்கு தொடுத்திருந்தனர். 2011 ஜூலை 2-ம் தேதி ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் எம்.பி ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு, அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு போட்ட மனுவை கடந்த மே 1-ம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் மூன்று வாரத்திற்குள் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என உத்திரவிட்டது. சாதனை ஏதும் நிகழ்த்தவியலாத, இத்தகைய சட்டத்தின் பொந்து விளையாட்டைக் கூட ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. எனினும் உச்சநீதிமன்றம் அந்த விளையாட்டை கொஞ்சம் அதிகமாய் விளையாட விரும்பியது.
இந்நிலையில் மே 27-ம் தேதி மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் நீதிபதிகளைத் தவிர ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், மத்திய நேர்முக வரிகள் வாரிய தலைவர், வருவாய் துறை செயலர், சிபிஐ மற்றும் ஐபி இயக்குநர்கள் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவும் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படியே அமைக்கப்பட்டிருந்தாலும், பாஜக ஆதரவு கோயாபல்ஸ்சுகள் இதை ஏதோ மோடியின் மாபெரும் கருப்புப் பண மீட்பு சாகச நடவடிக்கையாக கிளப்பி வந்தனர்.
படம் : நன்றி http://www.mid-day.com
உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியது போன்ற அரசியல் கிராஃபிக்ஸ் விளம்பரங்கள் மூலம் அம்பலப்பட்டு நின்ற மோடி, வெளிநாடுகளில் முறைகேடாக பதுக்கப்பட்டுள்ள இந்திய பணத்தையும் ‘அது போலவே’ எடுத்து வருவார் என்பது போல தற்போதும் செய்திகள் வெளியாகின்றன. உண்மை நிலவரம் என்ன?
அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியில் போட்டிருப்பது வெறும் 3 சதவீதம் கருப்பு பணத்தைத்தான். போதை மருந்து உள்ளிட்ட சட்டவிரோத கும்பலிடம் தான் 33 சதவீத கருப்பு பணம் இருக்கிறது. பெரும்பான்மையான 64 சதவீத கருப்பு பணத்தின் இருப்பிடமே அமெரிக்காவின் டெலாவர் மாநிலம்தான். அங்குள்ள பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தான் இதன் ஊற்றுமூலம். இவை தாராளமாக நாடுகளுக்குள் வந்துபோக சட்டபூர்வமாகவே தாராளமயம் தனியார்மயம் காலகட்டத்தில் அனுமதி தரப்பட்டு விட்டதால் இனி கடத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 35 லட்சம் கோடி ரூபாய் வரை கருப்பு பணம் திரட்டப்படுகிறது. 2002 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கருப்பு பணம் ரூ 21 லட்சம் கோடி. 2011-ல் மட்டும் ரூ 5 லட்சம் கோடி வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக வாஷிங்டனைச் சேர்ந்த ரிசர்ச் அண்டு அட்வகசி அமைப்பு கூறுகிறது. மேலும் கருப்பு பணத்தை வரியில்லா சொர்க்கங்களில் பதிவான லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு கிடைக்கும் லாபத்தில் ஈவுத் தொகை அளிப்பதன் மூலமாகவும், உரிமத் தொகை அளிப்பதன் மூலமாகவும் வெள்ளையாக்கும் நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே நடந்து வருகின்றன.
ஆண்டுதோறும் உருவாக்கப்படும் கருப்பு பணத்திற்கு கார்ப்பரேட் முதலாளிகளும், நிறுவனங்களும் முறையாக வரி கட்டினால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ 7.5 லட்சம் கோடி ரூபாய் வசூலாகும் என்றும், அது ஆண்டு தோறும் வசூலாகும் மொத்த வரிப்பணத்தை (ரூ.6.4 லட்சம் கோடி) விட அதிகம் என்றும் கூறுகிறார் ‘இந்தியாவின் கருப்பு பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார். கருப்பு பணம் என்பதே கார்ப்பரேட்டுகளின் பணம் தான் என்பதை புள்ளிவிபர ஆதாரங்களுடன் சுட்டி காட்டுகிறார்.
கார்ப்பரேட்டுகளின் மீதான அதீத வரிவிதிப்பு காரணமாகத்தான் கருப்பு பணம் உருவாவதாக முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லி வரும் மாய்மாலத்தையும் தனது ஆய்வில் போட்டு உடைக்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி என்ற நிறுவன ஆய்வாளர் தேவ்கர். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகியன அமல்படுத்தப்பட்டு, 1991 முதல் முதலாளிகளுக்கு நேர்முக வரிகள் படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகுதான் வரி ஏய்ப்பும், கருப்பு பண வெளியேற்றமும் அதிகரித்தன என்கிறார் தேவ்கார்.
உண்மையில் கருப்பு பணம் வங்கிக் கணக்குகளில் நிரந்தரமாக பதுக்கி வைக்கப்படுவதில்லை. கருப்பு பணம் பரிமாறப்படும் உலக வர்த்தகத்திற்கான வழித்தடம் மட்டுமே அது. அந்த தீவுகளில் பெயர்ப்பலகை மட்டுமே இருக்கும். அந்நிறுவனத்தின் பெயரால் உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தை, அன்னியச் செலவாணி சந்தை, சரக்கு சந்தை இவற்றில் நடக்கும் சூதாட்டம்தான் முக்கியமானது.
இந்த சூதாட்டத்தில் வெற்றிபெற வல்லுநர்களையும், அவர்களைக் கொண்டு புதிய சூதாட்ட கருவிகளையும் உருவாக்க பன்னாட்டு நிதி நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். நாடுகளின் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி எப்படித் தப்பிப்பது என்று கண்டு கொண்டிருக்கிறார்கள். டாட் காம் குமிழியை 2000-ல் உருவாக்கியது, அதற்கு முன்னரே தென் கிழக்காசியாவை திவாலாக்கியது, சப்பிரைம் குமிழியை உருவாக்கியது, கிரீசையும், ஸ்பெயினையும் திவாலாக்கியது இவர்கள்தான்.
உலக கோடீசுவரர்களின் செல்வம் 1997-ல் 5.7 லடசம் கோடி டாலராக (சுமார் ரூ 300 லட்சம் கோடி) இருந்து 2009-ல் 32.8 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ 1900 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இதை வைத்து உலகின் வரியில்லா சொர்க்கத் தீவுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பண மதிப்பு மட்டும் 21 லட்சம் கோடி முதல் 32 லட்சம் கோடி டாலர் வரை (சுமார் ரூ 1200 லட்சம் கோடி முதல் ரூ 1900 லட்சம் கோடி வரை) இருக்கும் என்கிறது டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்.
கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, அத்வானி ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த 2011-ல் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சீவ் பிரசாத், சுனிதா பல்தாவா, அமித் குமார் ஆகியோர் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டனர். 2009-10ல் 3,800 கோடி டாலராக இருந்த எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி 2010-11ல் 6,800 கோடி டாலராக உயர்ந்திருந்தது. ஆனால் இந்திய பங்குச்சந்தையை மையப்படுத்தி அனைத்து எஞ்சினியரிங் நிறுவன கணக்குகளை பரிசீலித்துப் பார்த்தபோது ஏற்றுமதி 138 கோடி டாலர் மட்டுமே அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அப்படியானால் மீதியுள்ள 2,862 கோடி டாலர் எங்கிருந்து வந்தது? அது போலவே 2009-10ல் ரூ 8,500 கோடி ரூபாய்க்கு நடந்த தாமிரம் ஏற்றுமதி 2010-11ல் ரூ 36,700 கோடியாக உயர்ந்திருந்தது. இந்த மதிப்பு இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.
2008-ல் 22 லட்சம் டாலர்களாக இருந்த பஹாமா தீவுகளுக்கான இந்திய ஏற்றுமதி 2010-ல் 280 கோடி டாலர்களாக உயர்ந்தது. காரணம் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் பஹாமா தீவுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாக கள்ளக்கணக்கு காட்டியிருந்தனர். இவ்வளவுக்கும் அந்த தீவின் மொத்த மக்கட்தொகையே வெறும் 3.5 லட்சம் தான். நிச்சயமாக இவ்வளவு பெட்ரோல் அங்கு தேவையே படாது. அதாவது அம்பானி கருப்பை வெள்ளையாக்கும் உத்திகளில் இதுவும் ஒன்று.
2007-ல் ஹட்ச் எஸ்ஸார் லிமிடெட் என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின் 67% பங்குகளை தன்வசம் வைத்திருந்த ஹட்சிசன் டெலிகாம் இன்டர்நேசனல் என்ற பன்னாட்டு நிறுவனம் அவற்றை ரூ 52,300 கோடி ரூபாய்க்கு வோடாஃபோன் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றது. இந்தியாவில் இருந்த ஹட்ச் நிறுவன சொத்துக்களும் வோடாஃபோன் நிறுவனத்தின் கைகளுக்கு மாறியது. இந்த விற்பனை மீது ரூ 11,000 கோடி மூலதன ஆதாய வரியாக பிடித்தம் செய்து தம்மிடம் தருமாறு வோடாஃபோன் நிறுவனத்துக்கு இந்திய வருவாய்த்துறை உத்திரவிட்டது.
இதற்கு வருவாய்துறைக்கு அதிகாரம் இல்லையென மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தது ஹட்சிசன் எஸ்ஸார் இந்திய நிறுவனத்தின் 67% பங்கு உரிமையாளர் கேமென் தீவினை சேர்ந்த சி.ஜி.பி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட். பரிவர்த்தனை கேமென் தீவுக்குள் நடந்திருப்பதால் இதற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே இப்பரிவர்த்தனையில் இந்திய அரசுக்கு வரி விதிக்கும் அதிகாரமும் கிடையாது என்று வாதிட்டது வோடாஃபோன் நிறுவனம்.
மும்பை உயர்நீதி மன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து வோடாஃபோன் நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தது. வோடோஃபோனுக்காக காங்கிரசின் அபிஷேக் சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், லண்டனில் இருந்து வந்த சட்ட வல்லுநர்களும் சேர்ந்து வேலை செய்து வாதாடினர். ஜனவரி 20, 2012-ல் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூவர் அமர்வு வோடாஃபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வோடாஃபோனுக்கு விதிக்கப்பட்ட வரியை ”மூலதனத்தின் மீதான மரண தண்டனை” என்று கண்டித்திருந்தார் நீதிபதிகளில் ஒருவரான ராதா கிருஷ்ணன். காங்கிரசு, பாஜகவோடு, நீதிபதிகளும் கருப்புப் பணம் மற்றும் மோசடிப் பணம் மீது கொண்டிருக்கும் மரியாதையை இந்த மரண தண்டனை கவலை எடுத்தியம்புகிறது.
படம் : நன்றி http://www.tehelka.com
இந்தியாவின் உண்மை பொருளாதாரத்தைப் போல 7 மடங்கு பணம் பங்குச்சந்தை, நாணய சந்தை, ஆன்லைன் வர்த்தகத்தில் வைத்து சூதாடப்படுகிறது. இதில் யாருடைய பணம் எனத் தேடிப் போனாலும் திருடனை ஆதாரத்துடன் பிடிக்கவே முடியாது. அப்படியே நிரூபிக்க முடிந்தாலும் அதற்கான வரிப்பணத்தை பெற்றாலே பெரிய விசயம்தான்.
சிறப்பு புலனாய்வுக் குழுவோ, நேர்மையான சில நீதிபதிகளோ இவற்றை தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதுடன், “சூப்பர் மேன்” மோடி இந்த கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காகத்தான் அவரது கார்ப்பரேட் ஆதரவாளர்களால் நிதி கொடுத்து ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அடுத்த சில மாதங்களுக்கு வெளிநாட்டு வங்கிகளுக்கு கடிதம் எழுதுதல், வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வது, வருமான வரித் துறை பதிவுகளை ஆய்வு செய்வது என பல்வேறு வழிகளில் சிறப்பு புலனாய்வுக் குழு புலனாய்வு செய்தாலும் கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பண பாய்ச்சலில் கை வைக்கப் போவதில்லை. இறுதியில் இந்திய மேட்டுக்குடி அதிகார வர்க்கம் சில பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய் சரக்கு அடித்து விட்டு வந்த செலவுதான் மிஞ்சப் போகிறது. அம்பானி, அதானிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த செலவையும் இந்திய மக்களே எற்க வேண்டும்.
ஒருவேளை ஐரோப்பிய வங்கிகளும், நாடுகளுமே தகவல்களை தர முன்வந்தாலும் அவை ராணுவ ரகசியம் போலத்தான் காப்பாற்றப்படுமே தவிர, அதுபற்றிய தகவல்கள் வெளிவரவோ அல்லது கருப்பு பணம் அரசால் கைப்பற்றப்படுவதோ நடக்கவே போவதில்லை. உச்சநீதி மன்றம் இப்படி வரும் தகவல்களை வருவாய் துறை செயலருக்கு இணையான பதவிகளில் இருப்பவர்களிடம் மட்டுமே கொடுத்து வைத்து அரசு ரகசியமாக காப்பாற்ற வேண்டும் என உத்திரவிட்டுள்ளது. இந்த உண்மையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால், பா.ஜ.க ஆரம்ப கட்டத்தில் சீன் போடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். திருடர்களை அம்பலப்படுத்தாமல் இராணுவ ரகசியத்தைப் போல காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?
கருப்பு பணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாஸ்திரி பவனில் நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்து விட்டதாக குற்றம் சாட்டிய ராம் ஜெத்மலானிக்கு பதில் சொன்ன பழைய சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் அனைத்து ஆவணங்களும் பத்திரமாக புதுதில்லி வடக்கு பிளாக்கில் இருப்பதாக கூறியிருந்தார். பத்திரமாக இருக்குமே தவிர மக்களின் பார்வைக்கு வெளியிடப்படாது என்பதை சொலிசிட்டர் ஜெனரல் போகிற போக்கில் ஒரு கவிதையைப் போல சொல்லி விட்டு போகிறார்.
அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களை கருப்பு பண விவகாரம் தொடர்பாக பெற்றிருப்பதாகவும், வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்துதான் பெற்றுள்ளதாகவும், மீறி வெளியிட்டால் இன்னுமுள்ள தகவல்கள் கிடைக்காது என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இப்படிப் பெற்ற தகவல்களும் கூட ஜெர்மன், பின்லாந்து போன்ற பெரிய நாடுகளே தந்திருந்தாலும் அவை அதிகாரப்பூர்வமற்றவை என்பதால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அப்போதைய காங்கிரசு அரசு தெளிவாக கூறி விட்டது. இதற்கு பதிலாக கையில் இருக்கும் விவரத்துடன் வருமான வரித்துறையில் சம்பந்தப்பட்ட நபர் சொல்லியுள்ள வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்து, மீதிப் பணத்திற்கு அவரிடம் வரி வசூலிக்க சொல்லி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, இப்போது சுவிஸ் வங்கிக்கு போய் பணம் போடுவது என்பதே காலாவதியான முறையாகி விட்டது. கருப்பு பணத்தை கையாளும் சந்தையில் ஸ்விஸ் வங்கி மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறது. முதல் இடத்தை பிடித்திருப்பது அமெரிக்காவில் ஒரே முகவரியில் 2.17 லட்சம் நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கும் டெலாவர் மாநிலம்தான். இரண்டாம் இடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்ப்பரேட் வரி ஏய்ப்பு மற்றும் நிதி சுதந்திர மையமான லக்சம்பர்க். நான்காவது இடம் சில ஆயிரம் மக்களை மட்டுமே கொண்ட கேமன் தீவுகள் என்ற வரியில்லா சொர்க்கம். ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது காலனிய காலத்தில் கொள்ளையடித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்களின் பணத்தை இப்போதும் மூலதனமாக பராமரிக்கும் சிட்டி ஆஃப் லண்டன் என்ற லண்டனுக்குள்ளேயே இயங்கும் நிழல் நகரம்.
இப்போது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமெரிக்காவின் டெலாவருடனும், நிழலுலக லண்டன் மாநகரத்துடனும் பொருளாதார ரீதியிலான உறவுகளை துண்டிக்க முடியாது. அல்லது அங்கு வைக்கப்பட்டுள்ள இந்திய தரகு முதலாளிகளின் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் பெறுமான வங்கிக் கணக்குகளை முடக்கவும் இயலாது.
மூன்றாவதாக, பார்ட்டிசிபேட்டரி நோட் (பங்கேற்கும் குறிப்பு) மூலமாக முதலீடு செய்பவர் யார் எனத் தெரிவிக்காமலே அந்நிய நாட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இப்போது முடியும். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் ரூ 1.73 லட்சம் கோடி ரூபாய் இந்த வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளதாக மத்திய பொருளாதார புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை மூலமாகத்தான் கார்ப்பரேட்டுகளும், மூலதன சூதாடிகளும், பண முதலைகளும் தங்களுக்கு தேவையான கருப்பு பணத்தை கொண்டு வரவும், வெளியேற்றவும் செய்கின்றனர். பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களும், ரூபாய் மதிப்பில் ஏற்படும் சுனாமிகளும் சேர்ந்து இந்த பணப் பரிமாற்றத்துக்கு உதவி செய்கின்றன. இப்படியான தாராளமயத்தை சேர்ந்து பாஜகவும் ஆதரிக்கிறது. எனவே இந்த 64 சதவீத பணத்தை இப்போதைய மோடி அரசும் கைப்பற்றப் போவதில்லை.
நான்காவதாக, வரியில்லா சொர்க்கங்களான மொரிசியஸ் போன்ற குட்டி தீவுகள் மூலமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் கருப்பு பண பொருளாதாரத்தின் முக்கிய அடிப்படையாக உள்ளன.. இந்தியாவுக்குள் 2009-ல் இப்படி வந்த முதலீடு நாட்டுக்குள் வந்த மொத்த அந்நிய முதலீட்டில் 21%. 2000-11 வரை வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.8% மொரிசியசிலிருந்தும், 9.17% சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளன. இந்தியாவின் மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கருப்பு பணம்தான்.
இவ்வாறு வரியில்லா சொர்க்கம் மூலமாக வந்து போகும் அந்நிய முதலீடுகளை சிறப்பு புலனாய்வுக் குழுவோ மோடி அரசோ நிறுத்த முடியாது. ஏனெனில் இதெல்லாம் சட்டப்படி சரி எனத் தம்மை நிறுவிக் கொண்டவை. அரசே டாஸ்மாக் கடையை திறந்த பிறகு எப்படி கள்ளச் சாராயத்துக்கு தேவையில்லாமல் போய் விட்டதோ, அதே போல தாராளமயம் வந்த பிறகு கருப்பு பணம் என்று தனியாக ஏதுமில்லாமல் போய் விட்டது.
2000-ல் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மூலமாக இந்திய தரகு முதலாளிகளும் இங்கிருந்தபடியே இந்தியாவுக்குள் முதலீடு செய்து மோசடியைக் கண்டுபிடித்த சில வருவாய்த் துறை அதிகாரிகள் இந்நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியையும், வரி கட்ட தவறியதற்காக அபராதத்தையும் செலுத்தும்படி தாக்கீது அனுப்பினர். உடனடியாக மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் கீழிறங்கத் துவங்கியது. இந்தியாவில் இருந்து வெளியேறப் போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் மிரட்ட துவங்கினர். உடனடியாக அப்போது நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வின் யஷ்வந்த் சின்கா ”மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்த தேவையில்லை” என மத்திய நேர்முக வரிகளுக்கான வாரியத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதற்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. ”இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது, வரி ஏய்ப்பை ஊக்குவிப்பதுதான் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்” என்று கூறி டெல்லி உயர்நீதி மன்றம் யஷ்வந்த் சின்காவின் சுற்றறிக்கையை ரத்து செய்தது. ”அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளை கொடுத்தே ஆக வேண்டும்” என்று உச்சநீதி மன்றத்தில் பாஜக அரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதி மன்றமும் அரசுக்கு ஆதரவாக வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு சட்டபூர்வ நடவடிக்கைதான் என்று தீர்ப்பளித்தது.
2012 மே மாதம் வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களை பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஒரு சட்டமே கொண்டு வந்தார் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அந்த சட்டத்தில் வரி ஏய்ப்பு குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை வருவாய்த் துறைக்கு மாற்றி விட்டது அரசு. வரி ஏய்ப்பு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருந்து கார்ப்பரேட்டுகளை காப்பாற்றியிருந்தது அரசு.
இச்சட்டம் வரப் போவதாக சொன்னவுடனேயே அமெரிக்கா இந்தியாவை மிரட்டத் துவங்கியது, முதலாளித்துவ பத்திரிகைகளோ பன்னாட்டு நிதி முதலீடுகளுக்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதாக அலறின. உடனடியாக இந்த சட்ட அமலாக்கத்தினை ஓராண்டுக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார் பிரணாப் முகர்ஜி.
மோடி சிறப்பு புலனாய்வுக் குழுவின் மூலம் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குள் கட்டி இழுத்து வருவார் என்கின்றன ஊடகங்கள். நடப்பது சூதாட்டம், இதில் நியாயமாக வரி கட்டிய பிறகுதான் சூதாடியிருக்கிறானா என்பதை மட்டும்தான் இவர்கள் விசாரிக்கப் போகிறார்கள். சட்டப்படியே சூதாட்ட கிளப்புகளை நடத்த அரசு அனுமதி தந்த பிறகு யாரைப் போய் பிடிக்கப் போகிறார்கள் இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் என்பது தான் நம்முன் உள்ள மையமான கேள்வி.
எப்படியோ விரைவில் யார் இந்த மோடி, எதற்காக இந்த பாஜக அரசு போன்ற கேள்விகளுக்கு நாம் சொன்ன விடையை இனி மக்கள் தமது சொந்த அனுபவத்தில் உணரப் போகிறார்கள்.
மோடிக்கு கொடிபிடித்த அறிஞர் கூட்டம் மட்டும் அதை ஏற்காமல் தமது அம்மணத்தையே உடை என சாதிக்க கூடும்!
– கௌதமன்.
( வினவு, புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரைகளின் சேர்க்கையுடன்)
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு – தின்னத்தானே போகும். தமிழருவி, புரட்சிப்புயல், கேப்டன், மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல விளக்குமாருகள் சேர்ந்து, பாஜக வை சுத்தப்படுத்தி, சிங்காரித்து பதவியில் அமர வைத்தன. உட்கார்ந்தவுடனேயே அது தனது புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டது.
போர்ஜரி சர்டிபிகேட் புகழ், அன்னை சீதாதேவி, ஸ்மிருதி இரானி அம்மையார், “வேதம் மற்றும் உபநிடதங்களை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அடுத்து வந்திருக்கிறது இந்தி திணிப்பு.
இந்து-இந்தி-இந்தியா என்ற தனது கொள்கையை திணிப்பதில் பார்ப்பன பாசிச கும்பலுக்கு உள்ள வெறித்தனத்தைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை. வாய்ப்பு கிடைத்தவுடனே அவற்றை சாத்தியமான வழிகளில் எல்லாம் திணிப்பதுதான் பார்ப்பன இந்துத்துவா சக்திகளின் நடைமுறை. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தித் திணிப்பை பிற பெரும்பான்மை இந்தி பேசாதவர்கள் மீது துவங்கி உள்ளனர். வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்திருந்தது.
தற்போது கடந்த மே 27 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரவிட்டிருக்கின்றனர். அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கறாராகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
உடனடியாக கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ”ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவர் மீது அரசாணை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலின் ஆரம்பம்தான் இது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ”1938ல் இந்தியை கட்டாய பாடமாக்கிய போதும், 1965ல் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சிகளையும், கிளர்ச்சியையும் வரலாறு விரிவாக பதிவு செய்திருக்கிறது.” ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போகவில்லை” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
”எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைத்தையுமே மத்திய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும். இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், இந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமே இது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.
தமிழகம் மட்டுமின்றி பரூக் அப்துல்லா, மாயாவதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தள் எனப் பலரும் தங்களது எதிர்ப்பை இம்மொழித்திணிப்புக்கெதிராக பதிவு செய்துள்ளனர். பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் பெருகவே, வேறு வழியில்லாத ஜெயலலிதாவும் மோடிக்கு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவதற்கு 1963ல் மத்திய அரசால் தரப்பட்ட உறுதிமொழியை நினைவுபடுத்தி, உத்திரவை வாபசு பெறும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.
கருணாநிதியின் அறிக்கைக்கு யோக்கியமாக பதில் சொல்ல வக்கில்லாத காவி கிரிமினல்கள் தங்களது வழக்கமான வார்த்தை பித்தலாட்டத்தில் இறங்கி விட்டனர். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் ”அமைச்சகம் நாட்டின் எல்லா மொழிகளையும் முன்னேற்றப் பாடுபடும்” என்று உறுதியளிக்கிறார். இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று சமாளிக்கிறார்கள்.
தமிழ் இந்து நாளேடோ, ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி, கருணாநிதியை கிண்டல் செய்யும் சாக்கில் தமிழகத்தின் மொழிப் போராட்டத்தை கிண்டல் பண்ணியிருக்கிறது. தமிழ், தமிழினம், தமிழிசை, தமிழ் வழிபாடு, தமிழ் ஆட்சிமொழி என்று சொன்னவுடனேயே பார்ப்பனக் குஞ்சுகளின் செவியில் அது நராசராமான வார்த்தைகளாகத்தான் ஒலிக்கும் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
1938ல் தாளமுத்து நடராசன் துவங்கி, 1965ல் சின்னச்சாமி என்ற திமுக தொண்டன் துவங்கி ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தி ஆட்சிமொழிக்கெதிராக தீக்குளித்துப் போராடிய தமிழகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்த மரபின் தொடர்ச்சிதான், தமிழ் இசைக்கான போராட்டம், ஆலயத்தில் தமிழ் வழிபாட்டுக்கான போராட்டம், தில்லையில் தேவாரம் பாடும் போராட்டம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தும். தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் அன்று முதல் இன்று வரை பார்ப்பனக் கும்பல் எதிரியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
தற்போது ஆட்சியதிகாரத்தில் பார்ப்பன பாசிசம் அமர்ந்து விட்டது. இல்லை, தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் போன்ற தமிழின விரோதிகள் மோடிக்கு பல்லக்குத் தூக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். குடியைக் கெடுத்த இந்தக் கோடரிக் காம்புகள் இப்போது இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன அறிக்கை விடுகிறார்கள். இந்த அறிக்கை பிரிவினைக்கு வித்திடும் என்று எச்சரிக்கை விடுகிறார் கோமாளி வைகோ. குறைந்த பட்சம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவின் பிரிவினையை வைகோ அறிவிக்கட்டும். தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாசமாக்கும் விதத்தில் பாரதிய ஜனதாவுக்கு காவடி எடுத்த இந்த துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.
இந்து-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவதும் வேறு வேறல்ல. மோடியின் பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிரான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்பட்டும்.
காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாயும் வசதியும், ஊரச் சுத்தி கோயில் குளங்களும், மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்தும், கோடை காலத்தில் சிலுசிலுவென நீரோடையுமாய் ஓடும் வடிகால் (ஓடை) ஆறும், ஆத்துத் தண்ணி பாயாத மேட்டு பகுதியில் விவசாயத்துக்கு கிணறு என்று எந்நேரமும் தண்ணீருக்கு பஞ்சமில்லாத ஊருதாங்க அது.
ஆத்து தண்ணியில ஒதுங்கியிருக்கும் ஓரி மண்ணெடுத்து (நைசான மணல்) வெள்ளாவியில் துணி தொவச்சு ஆத்துல அலசி காய வைக்கும் சலவைத் தொழிலாளி ஒரு பக்கம்; ராமநாதபுரத்து வறட்சிய தாங்க முடியாம ஆடுகள ஓட்டிக்கிட்டு பொழப்பு தேடி வந்த கீதாரிகளுக்கு (ஆடு மேய்ப்பவர்கள்) ஆத்தங் கரையோரம் பச்சப் பசும் புல்லும் தண்ணியும் தந்து, தாயாக தானிருந்து தாகத்த தீத்து வைக்கும் மறுபக்கம் என்று இருந்த ஊரு இன்னைக்கி வெளியில போய்ட்டு வந்து காலு கழுவக் கூட தண்ணி இல்லாத அவல நிலைய காண சகிக்கலங்க.
கரை புரண்டோடும் காவிரி ஆறு பாயும் தஞ்சாவூர சேந்ததுதான் இந்த கிராமம். இந்த ஒரு கிராமம் மட்டும் இல்லைங்க இந்தப் பகுதில உள்ள அநேக கிராமமும் இப்படிதான் தண்ணிக்கி தத்தளிச்சு நிக்குது. எங்க பாத்தாலும் பயிரும் பச்சையுமா, வாழையும், கரும்புமா வெள்ளாம வெளச்சலோட செழிப்பா இருந்த இந்தப்பக்க ஊருகள், வெளஞ்ச வெள்ளாமையில பூச்சியடிச்சா மாதிரி சுட்டி சுட்டியா அங்கங்க பச்சையும் சருகுமா இருக்கு.
இந்தப் பகுதி முழுக்கவும் காவிரி ஆத்துத் தண்ணிய நம்பிதான் விவசாயம் நடந்துச்சு. ஆத்துல தண்ணி வர்றதப் பொறுத்து ஒரு போகம் ரெண்டு போகம்னு நெல்லு விவசாயம் நடக்கும். நெல் அறுவடை முடிச்சதும் பிறகு தண்ணி அதிகம் தேவப்படாத எள்ளு, உளுந்து, பயிரு, கடலையின்னு பயிரிடுவாங்க. நெலமும் கொஞ்ச காலம் சும்மா இருந்தாத்தான் நல்லா வெளையும், மண்ணுக்கும் கொஞ்சம் ஓய்வு குடுக்கணும்னு கடும் கோடையில ஒரு ரெண்டு மாசம் நிலத்த சும்மா போட்ருப்பாங்க. ஊருக்குள்ள வெள்ளாம வெளச்ச இல்லாத இந்த சமயத்துல கோட மாடு மேச்சல்னு ஆளு நின்னு மாடு மேய்க்காம அவுத்துடுவாங்க. அதுவா மேஞ்சுட்டு வந்துரும்.
பணக்காரங்க பயனடையும் வகையில அரசாங்கத்துல ஒரு திட்டம் வந்தது. அரசு வங்கி மூலமா எட்டு ஏக்கருக்கு மேல நெலம் உள்ளவங்களுக்கு போர்வெல் போட 50% மானியத்துல லோன் கொடுத்தது அரசாங்கம். (இப்ப போர்வெல் போடுறவங்களுக்கு லோன் கொடுக்க தகுதியா இந்த அளவு நெலம் தேவையில்லை.) அந்தப் பகுதியில உள்ள பெரும் பணக்காரர்கள் ஊருக்கு அஞ்சு, ஆறு போரு போர்வெல் போட்ருந்தாங்க. அதிக நெலம் உள்ள இவங்க மூணு போகமும் விவசாயம் செய்வாங்க. அக்கம் பக்கம் இருக்கும் ஒரு சில சிறு, குறு விவசாயிகளுக்கு காசுக்கு தண்ணி கொடுத்து அவங்களும் கொஞ்சம் விவசாயம் பண்ணுவாங்க.
ஊர்குள்ள போர்வெல் ஆரம்பமான 1985-1990 காலகட்டத்துல 400, 450 அடி ஆழம் போர் போட்டு 150 அடியில மோட்டார் பொருத்துனாலே தண்ணி வந்துரும். தண்ணி ஊத்துற வேகத்த எதுத்து நிக்கவே முடியாது, ஆள தள்ளிடும். ஆத்துல தண்ணி வந்து மழைக்காலம் ஆரம்பம் ஆச்சுதுன்னா மோட்டாரே தேவையில்ல. தானாவே தண்ணி பூமிக்கி மேல குழாய் வழியா பொங்கி வழியும். ஏறக்கொறய ஆறேழு மாசம் தண்ணி தானாவே ஊத்திக்கிட்டு கெடக்கும். ஊர் மக்கள் குடிதண்ணி இங்கதான் பிடிச்சுக்கிட்டு போவாங்க. இது கற்பனையும் இல்ல, வெகு காலமும் ஆயிரல. ஒரு இருவத்தஞ்சு வருசத்துக்குள்ள அழிஞ்சு போன நெசம். நடந்து போன மாற்றம்.
இன்னைய நெலமைக்கி இந்த ஊருல மட்டும் 65 ஆழ்குழாய் போர்வெல் இருக்கு. ஆரம்பத்துல ஒரு போர்வெல் வச்சுருந்த பணக்காரங்க இன்னைக்கி 2 – 3 வச்சுருக்காங்க. 150 அடியில மோட்டர் வச்சாலே தண்ணி வந்தது இப்ப 450 அடியில பொருத்துனாதான் தண்ணி வருது. நிலத்தடி நீர் அளவு கொறஞ்சதால, தண்ணியோட வேகமும் கொறஞ்சு பாதி குழாய் அளவுதான் தண்ணி வருது. தண்ணிய சிக்கனப்படுத்த நெலத்துக்கு அடியில் பைப்பு பொருத்தி நேரா வயல்ல பாச்சுராங்க. வாய்க்கால்ல ஓட விடாம செஞ்சுட்டாங்க.
அந்த நாள்லேருந்து இந்த நாள் வரைக்கும் குடி தண்ணிக்கி அலஞ்ச திரியிறாங்க மக்கள். ஊர சுத்தி ஆறும், குளமும் இருந்ததால கிணறு அதிகம் கெடையாது. குடி தண்ணி பயன்பாட்டுக்கு மட்டும் தான் கிணறு. ஊருக்குள்ள ஊராட்சி குடிநீர் டேங்கு வந்தது. குழாய் தண்ணி வருது. இனி குடிதண்ணிக்கி பஞ்சம் இல்லன்னு நெனச்சு மக்கள் கிணத்த பராமரிக்காம பாழாப் போச்சு. ஆயிரம் குடும்பம் இருக்கும் ஒரு ஊருக்கு ஒரு கைப் போரும் சின்னதா ஒரு டேங்கும் தண்ணி தேவைய தீத்து வைக்கெல. அப்பப்ப காரணம் இல்லாமலே தண்ணி வராது, குழாயடி சண்ட வர்றதுதான் மிச்சம். தேர்தல் சமயமும், பஞ்சாயத்து தலைவர் புதுசா பொறுப்பேற்கும் சமயமும் தண்ணி நெலம தற்காலிகமா மாறுமே ஒழிய, இன்னைக்கி வரைக்கும் தண்ணிக்கி தாளம் போட்டுத்தான் நிக்குது மக்கள்.
இப்ப ஊருக்குள்ள குடிதண்ணிக்கின்னு மூணு போரு போட்டுருக்காங்க. ஆனா அது சாதாரன மக்களுக்கு வந்து சேர்றது இல்ல. ஊர்ல உள்ள போர்வெல் பணக்காரங்களுக்குதான் உதவியா இருக்கு. வீட்டுக்குன்னு சொந்தமா பைப்பு இழுத்துக்குறாங்க, தண்ணி வரத்து பத்தலன்னு நேரடியா பைப்பு இணைப்புலேயே மோட்டார் பொருத்தி தண்ணிய உறிஞ்சுராங்க. சாதாரண மக்கள் பைப்பு இழுக்கவும் வசதி இல்லாம, இது போல ஆளுங்கள எதுத்து கேட்கவும் துணிச்சல் இல்லாம போர்வெல்லயே தண்ணி எடுக்குறாங்க.
இந்தப் பகுதி கிராமங்கள்ல விவசாய நிலத்த அதிக பணம் கொடுத்து வாங்கி தண்ணிய அதிகமா உரிஞ்சுற ராட்சச போர் போட்டு நிலத்தடி நீர இடைவிடாது உறிஞ்சி விக்கிறாங்க. சாதாரண ஏழப்பட்ட மக்கள் கல்யாணத்துல கூட தண்ணிப் பாட்டில் வச்சாத்தான் பெருமை என்ற நிலைய உருவாக்கி லாபம் பாக்குறாங்க. “சென்னையில தண்ணியெல்லாம் காசு குடுத்து வாங்குவாங்களாம்” என்று ஆச்சர்யமாக பேசிய மக்கள் “நம்ம பக்கமும் கேணு தண்ணியெல்லாம் காசு குடுத்து வாங்க வேண்டிய நிலம வந்துருச்சு. டவுணுக்கும் நாட்டுப்புறத்துக்கும் எந்த மாத்துக் கலப்பும் இல்லாம போச்சு”ன்னு உலகமயமாக்கத்தின் பாதிப்பை இயல்பா பேசுறாங்க.
முன்னெல்லாம் கோடை காலத்துல குளத்துல, ஓடையில குளிக்க, துணி துவைக்க, மாடு குடிக்க, மாடு குளிப்பாட்டன்னு தண்ணி தேவை முடிஞ்சுரும். குடிக்கவும், பாத்தர பண்டம் கழுவவும் தண்ணி எடுத்தா போதும். இப்ப தண்ணியோட நெலம சீரழிஞ்சு போனதால எப்படா போர் காரங்க தண்ணி தொறந்துடுவாங்க புடிக்கலாம்னு அலையிறாங்க மக்கள். தண்ணி எடுக்கப்போன ஒரு அம்மாவ பாத்தேன், தன்னோட ரெண்டு வயசு பெண் குழந்தைகிட்ட காலியான ‘அம்மா தண்ணி’ பாட்டில்ல புடிச்சு கொடுத்து எடுத்துட்டு வரச் சொல்லிட்டு, இவங்க ரெட்டக் குடம் போட்டு தூக்கிட்டு வர்றாங்க.
இது போக ஊர்ப் பொது குளங்கள் எல்லாமே மீன் வளர்ப்புக்கு ஏலத்துக்கு விடப்படுது. இது பத்தாதுன்னு விவசாய நெலத்தையும் குளம் வெட்டி மீன் வளக்குறாங்க. அதிக எடைக்கி மீன்கள் சீக்கிரம் வளரவும் லாப வெறிக்காகவும் கண்ட கண்ட ரசாயன உரங்களையும் போட்டு தண்ணி பச்சை நெறத்துலயும், மேற்பரப்பு தங்க நெறத்துலயும் இருக்கு. இந்த தண்ணிய மாடு குடிக்க முடியாது. மனுசங்க கால நெனச்சுட்டாலே தோலே உருஞ்சுரும் அளவுக்கு அரிப்பெடுக்குது. சாவு வீட்ல பொணத்த குளிப்பாட்ட குளத்துல தண்ணி எடுப்பது இந்த பகுதியில முறை. ஆனால் அதுக்குக் கூட இந்த தண்ணிய யாரும் எடுக்கறது இல்ல. அந்த அளவு ஊருக்குள்ள உள்ள எந்த குளத்துத் தண்ணியும் பயன்படுத்த முடியாம இருக்கு.
மழை காலங்கள்ல தேவையில்லாத தண்ணிய ஓடையில திருப்பி விடுவாங்க. கோடையில பெய்யிற மழை தண்ணியும் ஓடைக்கிதான் வந்து சேரும். கிராமத்துல சொற்பமான விலைக்கி வெவசாய நெலத்தையெல்லாம் வாங்கி கட்டுமனைக்கி பிளாட் போட்டு விக்கிறான் ரியல் எஸ்டேட் தொழில் செய்றவன். ஓடைக்கி தண்ணி வர்ற வழியே இல்லாம எங்கயும் ஆக்ரமிப்பு. வடிகாலுன்னு ஒண்ணு இல்லாம ஓடைக்கி தண்ணி வந்து சேர வழியே இல்லாம செஞ்சுட்டாங்கெ.
எப்படியெல்லாம் நீர் நிலையோடு இருந்த ஊர் இன்னைக்கி இருக்கும் நிலைய பாக்கும் போது கண்ணுல ரத்த கண்ணீரே வருது. காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாஞ்ச ஊருல தடுக்கி விழுந்தா தண்ணியில என்ற நெலம போயி, போற போக்க பாத்தா கிராமத்துலயும் கூட பேண்ட சூத்தக் கழுவ பேப்பர குடுத்துடும் போல இந்த உலகமயமாக்கம்.
ராத்திரி பத்து மணிக்கி ஒரு அம்மா பக்கத்து வீட்டுக்காரற திட்டுது “தொட்டி நெறையா தண்ணி ஊத்தி வச்சுருந்தேன். காத்தொட்டி தண்ணிய காணல. மோண்டுட்டு (எடுத்துட்டு) போய்தாரு. தண்ணிக்கி எங்கங்க எடருபட்டு தூக்க வேண்டியதா இருக்கு. குந்துன எடத்துல இருந்து திருடறதுக்கு எப்புடிதான் மனசு வருதோ” இருட்டுல போன் பேசிட்டு இருந்த நான் அவரு காலு கழுவ ரெண்டு சொம்பு தண்ணி எடுத்ததையும், கை கால் கழுவுனதையும் பாத்துக்கிட்டுதான் இருந்தேன்.
கிராமத்துல யாரு வீடா இருந்தாலும் கை, கால் கழுவுறதுங்கறது சாதாரண ஒண்ணுதான் ஆனா அந்தம்மாவாள சாதாரணம்னு எடுத்துக்கவும் முடியல, பாத்துட்டு இருந்த என்னாலயும் பச்சத் தண்ணிக்காக இப்படி திருட்டுன்னு எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறிங்கன்னு சொல்லவும் முடியல. காசு கொடுத்து வாங்கற மத்த பொருட்களைப் போல இயற்கையா கிடைக்கிற தண்ணிக்கி நெருக்கடி ஏற்பட்டு போச்சுங்கற அவல நிலைய பாத்து வாயடச்சு நிக்க மட்டும் தான் முடிந்தது.
நமக்கே தெரியாம நம்ம ஒடம்புல உக்காந்து ரத்தம் உறிஞ்சுர கொசுவப் போல நம்ம வாழ்வாதாரத்துக்கு தேவையான தண்ணிய நாலா பக்கமும் உறிஞ்சுராங்க, சேதப்படுத்துறாங்க. முன்ன இருந்த ஒட்டு மொத்த நிலமையும் தலைகீழா மாறி தண்ணிக்கி தவிக்கிது ஜனம். பச்சை பசுமையோடும் நீர் வளத்தோடும் வாழ்ந்த மக்கள் வறட்சியில் சிக்கி தொண்ட காஞ்சு கவலைக்கிடமா போகும் காலம் வெகு தூரத்துல இல்லங்கறத எப்போது உணரப் போறோம்.
அரசு மருத்துவமனை செவிலியர்களின் பணி குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற போது, அரசு செவிலியர்கள் என்றால் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள், பொறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள் என்று பொதுப் புத்தியில் உறைந்திருப்பதற்கு மாறாக அனைவரும் சுறுசுறுப்புடன் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நின்று சில நிமிடங்களுக்கு மேல் பேசமுடியாத அளவுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடிக் கொண்டும், நோயாளிகளை பராமரிக்கும் வேலையிலும் மூழ்கியிருந்தார்கள்.
ஆரம்பத்தில் பேசிய ஒரு சிலர் சொல்லி வைத்தாற்போல் ‘மேட்ரனை (தலைமை செவிலியர்) பாருங்கள், நாங்கள் வெளி ஆட்கள் யாரிடமும் பேசக்கூடாது’ என்று கூறினார்கள். ஏதாவது பேசினால் வேலைக்கு ஆபத்து என்று அஞ்சினார்கள். ஜனநாயகம், பேச்சுரிமை என்று பலரும் பேசினாலும் தனியார் நிறுவனங்களும் சரி, அரசு நிர்வாகமும் சரி தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு வைத்திருப்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
இதையும் மீறி மதியம் உணவு இடைவேளை சமயத்தில் சிலரிடம் பேச முடிந்தது.
அரசு மருத்துவமனைகளில் அரசு நிரந்தர ஊழியர்களான செவிலியர்கள், பெருமளவிலான ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளும் கூட வேலை செய்கின்றனர். செவிலியர் மாணவிகளின் பாடத்திட்டம் செய்முறை வகுப்புகளையே பிரதானமாக கொண்டிருப்பதால் ஏறக்குறைய இவர்களும் செவிலியர் வேலையைத்தான் செய்கிறார்கள். ஆண் செவிலியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. இவர்கள் போக உதவிச் செவிலியர்களும் உள்ளனர்.
முதலில் உதவி செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். இவர்களது பாடத்திட்டத்தின் படி காலை 7 மணி முதல் 1 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். மதியம் 2-4 வரைதான் வகுப்பறை கல்வி. மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் அதுவும் கிடையாது. முழுநேரமும் மருத்துவமனையில்தான் வேலை. இவர்களுக்கு படிப்பும், வேலையும் வேறு வேறு அல்ல. இதற்காக சம்பளமோ, உதவித் தொகையோ எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக வேலையும் செய்து, கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கிறது. பல கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இத்தகைய செவிலியர் மாணவர்களே பணிச்சுமையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவர்களின் பிரதான வேலை மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப நோயாளிகளின் உணவு பழக்கங்களை முறைப்படுத்துவது, நோயாளிகளை பாராமரிப்பது போன்றவை. இது போக செவிலியர்கள் கூறும் பிற வேலைகளையும் செய்கிறார்கள். சமயங்களில் தரையை சுத்தம் செய்யும் வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. செவிலியர்களுக்கு மூன்று ஆண்டு பட்டய படிப்பு போல, உதவி செவிலியர்களுக்கு ஒரு ஆண்டு பட்டய படிப்பு இருக்கிறது. ஏதாவது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
மருத்துவமனை வேலை எப்படி இருக்கிறது? என்று கேட்டோம்.
“ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பல்வேறு விதமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வேலை முடிந்து போன பிறகு சரியாக சாப்பிட முடியாது, தூங்க முடியாது. தீயில் கரிந்து வருபவர்களை பார்த்த பிறகு எப்படி சாப்பிட முடியும். நேத்திக்கு நீங்க வந்திருந்தீங்கன்னா இந்த இடத்தில் நின்று பேச முடியாது. அவ்வளவு நாற்றம். இப்போ கூட ஒருத்தர் அட்மிட் ஆகியிருக்காரு பெரிய புண். அதை சுத்தம் பண்ணி விடணும். போகப் போக பழகிருச்சி. இதை மனசுக்கு புடிச்சு தான் செய்யுறோம், வேண்டா வேறுப்பா யாரும் இந்த வேலைய செய்ய முடியாது”
“அன்னிக்கு ஒரு தாத்தா பாட்டி உள் நோயாளியா வந்தாங்க. அவங்க பையன் தான் கொண்டு வந்து சேத்தாரு அதோட சரி அப்புறம் வரதே இல்ல. வயசானவங்கல்ல, இருந்த இடத்திலேயே சிறுநீர், மலம் எல்லாம் போயிருவாங்க. நாங்க தான் பாத்துகிட்டோம். அவங்க போகும் போது என் தலையில் கைவெச்சி நல்லாயிருமானு சொன்னாங்க. இதுக்குமேல என்ன வேணும்” கண்கள் பிரகாசிக்க நெகிழ்ச்சியுடன் கூறினார், அந்த மாணவி.
“மருத்துவர்களை விட நாங்க தான் அதிக நேரம் நோயாளிகளோடு இருக்கிறோம். அதுனால மக்கள் எங்க மேல அன்பா இருப்பாங்க. குணமாகி போனவங்க கூட எதுனா வேலையா இந்த பக்கம் வந்தாங்கன்னா எங்கள பாக்க வருவாங்க. எப்படி இருக்கீங்கனு கேட்டுட்டு போவாங்க. சந்தோசமா இருக்கும்”
“இதையும் மீறி சிலர் எங்களை ‘சம்பளம் வாங்குறீங்கல்ல…’-ன்னு திட்டுவாங்க. எங்களுக்கு சம்பளம் கிடையாதுனு அவங்களுக்கு தெரியாது” என்கிறார் பாவமாக.
உதவி செவிலியர்களின் நிலைக்கும் செவிலியர்களின் நிலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தற்போது செவிலியர்களை, அரசு மருத்துவமனை வேலைகளுக்கு எடுப்பதில்லை. உற்பத்தி தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி சுரண்டுவது போல மருத்துவத் துறையிலும் ஒப்பந்த முறையில் தான் செவிலியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசு ஊழியராக நியமித்தால் அடிப்படை ஊதியம் மட்டும் மாதம் ரூ 19,000 மேல் கொடுக்க வேண்டியிருப்பதால் மாதம் ரூ 5,000 சம்பளத்திற்கு ஒப்பந்த செவிலியர்களை நியமிக்கிறார்கள். சில ஆண்டுகள் வேலை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களும் வேலை செய்கிறார்கள். தூண்டிலில் சிக்கிய புழு போலத்தான் இவர்களது நிலையும்.
செவிலியர்களுக்கு மூன்று ஷிஃப்டுகள் உள்ளன. காலை 7-1 வரை மதியம் 1-7 வரை இரவு 7-7 வரை என்ற அட்டவணைப்படி பணிபுரிகிறார்கள். இது தான் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்றாலும் இதன்படி கறாராக நடப்பதில்லை. “அவசர கேஸ்னா இருந்துதான ஆகனும். ஆப்பரேசன் தியேட்டர்ல இருக்கோம். மணி ஆயிருச்சின்னு கிளம்பவா முடியும்?. எப்போ முடியுதோ அப்பத்தான் கிளம்ப முடியும். சில சமயம் சீக்கிரமா முடியும். சில சமயம் இரவு வரை இருக்க வேண்டி இருக்கும்” என்றார் ஒரு செவிலியர்.
போதிய ஊழியர்கள் இல்லாததும் இவர்களின் வேலை நேரம் அதிகரிப்பதற்கு ஒரு காரணம். அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். ஆயினும் போதிய செவிலியர்கள், பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.
30 ஆண்டு அனுபவமுள்ள மூத்த செவிலியர் இதை விளக்கி கூறினார்.
“தம்பி இங்க எல்லாமே பற்றாக்குறைதான். இப்ப பாரு இந்த வார்டுல நாலு மாடி இருக்கு. ஒரு மாடிக்கு இரண்டு நர்ஸ் வெச்சாக்கூட 8 பேர் இருக்கணும். ஆனா நாங்க இரண்டு பேருதான் இருக்கோம். இதுகூட பரவாயில்ல. இரவு பணியில ஒருத்தி மட்டும் தான் இருக்கா. அவ தான் எல்லா நோயாளிகளுக்கும் ஊசி போடனும், ஏதும் அவசர தேவைனா பாத்துக்கனும், புதுசா அட்மிட் ஆகுறவங்களையும் பாத்துக்கணும். எப்படி முடியும். ஆனாலும் பாத்துக்குறோம். எங்க வாழ்க்கையே டென்சன்ல தான் ஓடுது. இதனாலயே எங்க எல்லாருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழவு நோய் எல்லாம் இருக்கு.”
“வேலைக்கு போதிய ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்க்காமல் புதிய புதிய துறைகளை உருவாக்கிடுறாங்க. மருத்துவர்கள் கொஞ்ச நேரம் பாத்துவிட்டு போயிருவாங்க. நாங்கள் தான் 24 மணி நேரமும் உடன் இருந்து பார்க்கணும். ஆனா அதுக்கு போதிய ஆட்கள் இல்லை.”
“இதனாலேயே எங்களுக்கு லீவ் கிடைப்பதில்லை. வருசத்துக்கு 34 நாள் லீவிருக்கு. பேப்பர்ல தான் இருக்கும், எடுக்க முடியாது. ஆள் பற்றாக்குறை. இப்போ எல்லோருக்கும் கோடை விடுமுறை, எங்களுக்கு கிடையாது. பசங்களை வீட்டில் வெச்சி வெளியே பூட்டிட்டு வந்திருக்கேன்.”
இங்கு கடுமையான பணிச்சூழலுக்குப் பின்னர் வீட்டிற்குச் சென்று வீட்டு வேலைகளையும் இவர்தான் செய்கிறார். “கணவர் உதவி பண்ணிணா நல்லாத்தான் இருக்கும். ஆனா நம்ம கலாச்சாரம் அப்படி இல்லைல. நாங்க தான பாத்துக்கனும்” என்கிறார். முதலாளித்துவ வகைப்பட்ட அரசு சுரண்டல் பணி நிமித்தமும், பார்ப்பன ஆணாதிக்க சமூகத்தின் சுரண்டலை வாழ்க்கை நிமித்தமும் சேர்த்து அனுபவிக்கிறார்கள் நமது செவிலியர்கள்.
கடுமையான பணிச்சுமை, ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம், எப்பொழுதும் நோயாளிகளோடு புழங்குவது, தாங்கள் கவனமுடன் பராமரிக்கும் நோயாளிகள் இறப்பது போன்றவற்றால் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள். ஆயினும் கார்ப்பரேட் நிறுவனங்களது நடுத்தர வர்க்க ஊழியர்களின் மன உளைச்சல், மன அழுத்தத்திற்கு இருக்கும் ஊடக மற்றும் வெகுஜன கவனம் இவர்களுக்கு இல்லை. புதிதாக வேலைக்கு வரும்போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் இவர்கள் நாளடைவில், இதுதான் வாழ்க்கை என்று பழகிக் கொள்கிறார்கள்.
“கவுன்சிலிங், உடற்பயிற்சி, ஆசனம் மாதிரி ஏதுமில்லையா?”
“அதெல்லாம் தெரியாது. தெரிஞ்சாலும் பண்றதுக்கு நேரமில்லை, காலையில் 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை பாத்துட்டு 7 மணிக்கு மருத்துவமனை வந்துறோம். திரும்ப வீட்டுக்குபோன பிறகும் வீட்டு வேல பாக்கனும். இதுக்கு நடுவுல அதெல்லாம் எப்படி பண்ண முடியும்” என்கிறார்கள்.
“மருத்துவமனை நிர்வாகம் எதுவும் செய்வதில்லையா?”
“நோய் தொற்றிக்கொள்ளாமல் இருக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டி.டி, ஹெப்பாடிடஸ் இன்ஜெக்சன்னு சில தடுப்பூசிகள் போட்டுக்க சொல்லுவாங்க. அவ்வளவுதான்”
நோயாளிகளின் உடனடி தொடர்பில் இருப்பவர்கள் செவிலியர்களே என்பதால் மருத்துவமனையின் செயல்பாட்டில் அதிருப்தி கொள்ளும் நோயாளிகளின் கோபத்திற்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களின் வேலை அழுத்தங்களுக்கிடையே இதையும் பொறுமையுடன் சமாளிக்கிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதில்லை. மருத்துவதுறை தனியார் மயமாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் பாராமுகமாக கைவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம். சில சமயங்களில் போதிய மருந்துகள் கூட கைவசம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது செவிலியர்கள் தான் அதை சமாளிக்கிறார்கள்.
“படுக்கை பிரச்சனை இருக்கு. பற்றாக்குறைனு வரும் போது யாருக்கு அத்தியாவசியமா தேவைப்படுதோ அவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்டிப்பா படுக்கை தேவை. அதுனால டிஸ்சார்ஜ் ஆகுற மாதிரி யாராவது இருந்தாங்கன்ன அவங்களை தரையில் படுக்க சொல்லிட்டு இவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். இது புரிஞ்சிக்காம மத்த நோயாளிகள் எங்ககூட சண்டை போடுவாங்க. நாங்க என்ன எங்களுக்கா சார் கேக்குறோம். அதை புரிஞ்சிக்காம சண்ட போடுவாங்க. மருத்துவர்கள் இந்த நோயாளிக்கு படுக்கை ஏற்பாடு பண்ணுங்கனு சொல்லிட்டு போயிருவாங்க. நாங்க தான் இவங்க கோவத்தை சமாளிச்சி ஏற்பாடு பண்ணணும். எல்லா சமயமும் ஒரே மாதிரி இருக்க முடியாதுல்ல, சமயத்துல எங்களுக்கும் கோபம் வரும் என்ன செய்றது”
“மருந்து பற்றாக்குறை பொதுவா வருவதில்லை. சில சமயங்களில் நீரிழவு நோய் மருந்துகள் தட்டுப்பாடு வரும். அப்போது வெளியிலிருந்து வாங்க சொல்லுவோம்” என்கிறார்கள் செவிலியர்கள்.
உயர்கல்வி பயின்று சமூக அந்தஸ்துடன் இருக்கும் மருத்துவர்கள், சாதாரண செவிலியர்களான உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?
“அவங்களுக்கு காரியம் ஆகணும்னா, வார்டுல நல்லா பேசுவாங்க. வெளியில பாத்தா கண்டுக்க மாட்டாங்க. ஆண், பெண் இரண்டு பேருமே இப்படித்தான். வழிஞ்சி பேசுற ஒரு சில டாக்டர்களும் இருக்காங்க.”
உதவி செவிலியர் ஒருவரிடம் இதை கேட்டபோது “மருத்துவர்கள் எங்களை மரியாதையாக தான் நடத்துவாங்க. எங்களுக்கு “நன்றி” கூட சொல்லுவாங்க” என்றார் பெருமிதமாக.
பணியிடங்களில் பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு இவர்களும் விதிவிலக்கில்லை.
சில மாதங்களுக்கு முன்பு கீழ்பாக்கம் மருத்துமனையில் ஒரு ஆண் செவிலியருக்கும் பெண் செவிலியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த ஆண் செவிலியரும், நோயாளி ஒருவரும் இணைந்து அப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்திருக்கினறனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண் செவிலியர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை ஒரு செவிலியர் தெரிவித்தார்.
பணியிடத்தில் இவ்வளவு பிரச்சனைகளையும் சந்தித்து வேலை செய்யும் தங்களை சமூகமும், குடும்பமும் மிக மோசமாக பார்ப்பதாக சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
“பொதுவா நர்ஸ் வேலைனா கல்யாணம் பண்ண யோசிக்குறாங்க. ஏதோ தப்பான வேலை மாதிரி பாக்குறாங்க. இதையும் மீறி, ‘வேலை பாக்குறா, சம்பளம் வரும்னு’ கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பின்னாடி இரவு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பது, நர்ஸ் வேலை பற்றி இருக்கும் தவறான பார்வை இவற்றால் குடும்பத்தில் பிரச்சனை வருது. நிறைய விவாகரத்து நடக்கிறது. தற்கொலைகளும் நடக்குது. என்னை பொறுத்த வரைக்கும் நர்ஸ் வேலை பாக்குறவங்க நம்மளை புரிஞ்சிகிட்டவங்களை பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா பிரச்சனைதான். ஆனா அதுக்கு வீட்டுல ஒத்துக்கமாட்டாங்க.” என்றார் ஒரு செவிலியர் பயிற்சி மாணவி.
இவர் கூற்றுக்கு ஆதாரமாக அவரிடம் புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாவிடினும் பத்திரிகைகளின் நர்ஸ் ஜோக்குகள், சினிமாவின் மலிவான காமெடிகள் என செவிலியர்கள் பற்றி பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்வையை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
அனுபவமிக்க செவிலியர்கள் இதை வேறு விதமாக சொல்கிறார்கள். இது செவிலியர்களுக்கு மட்டுமேயுள்ள பிரச்சனையல்ல, வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்குமான பிரச்சனை என்கிறார்கள்.
“ஆண்களுக்கு தங்கள் மனைவி இரவு பணிக்கு செல்வதும், தங்களைவிட அதிகம் சம்பளம் வாங்குவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் பிரச்சனை வருகிறது.” என்கிறார்கள்.
பொதுவில் செவிலியர்களிடம் பேசிய போது அவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டு வேலை மீது ஆசை இருப்பதை பார்க்க முடிந்தது. அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த வேலைமுறை, போட்டி தேர்வு போன்ற காரணங்களால் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்து விட்டதே இதற்கு காரணம். இங்கு நாலாயிரத்தும் ஐயாயிரத்துக்கும் சிரமப்படுவதை விடுத்து மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆனால் பலர் வெளிநாடுகளில் எவ்வளவு சம்பளம் என்று கூட சரியாக அறிந்திருக்கவில்லை. ஆனால் இங்கு கிடைக்கும் நாலாயிரத்தைவிட நிச்சயம் அதிகம் என்று நம்புகிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு மூன்று ஆண்டு அனுபவம் தேவை. வெளிநாட்டு வேலைக்கு வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் அதற்கும் போட்டித் தேர்வு எழுத வேண்டியிருப்பதும் இவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது.
அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள், வகுப்பறை பாடங்களை விட செய்முறையாக கற்றுக் கொள்வது அதிகமாக இருப்பதால்தான் போட்டித்தேர்வு குறித்து அஞ்சுகிறார்கள்.
பேசிக்கொண்டிருக்கும் போதே அவசரஊர்தி மணி எழுப்பிக் கொண்டே உள்ளேவர நம்மிடம் விடைபெற்றார்கள்.
மறுகாலனியாக்க கொள்கைகளின் காரணமாக அரசுபொதுமருத்துவமனைகளை அரசு பாராமுகமாக கைவிட்டாலும், அவை ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள் தான் முதன்மையான காரணம் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
உதாரணமாக ஒன்றை சொல்லலாம். சமூகசேவை செய்கிறேன் என்ற பெயரில் சில என்.ஜி.ஓ பேர்வழிகள் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு போய்விடுகிறார்கள். ஊர் பெயர் தெரியாத அவர்களை இந்த செவிலியர்களும் மருத்துவர்களும் தான் கவனித்துக்கொள்கிறார்கள். சேர்த்து விட்ட என் ஜி வோக்களோ அதை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக போட்டுவிட்டு வள்ளல் இமேஜை உயர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களுக்கு அதெல்லாம் கிடையாது.
சமயங்களில் தங்கள் சொந்த காசை கூட செலவழித்து அவர்களை பராமரிக்கிறார்கள். வழியற்ற நோயாளிகள், வயதானவர்களுக்கு உணவு, உடை, கிடைக்காத மருந்துகள் என்று அவ்வப்போது செய்கிறார்கள். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதை செய்வதில்லை.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இது சாத்தியம். விபத்தில் அடிபட்டவர் தங்கள் ஊழியர் இல்லை என்பதால் தாம் நிறுத்தி வைத்திருக்கும் ஆம்புலன்ஸை அனுப்ப மறுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் இருக்கிறதா என்பதை சோதித்து அறிந்த பின்னரே, சிகிச்சை ஆரம்பிக்க ஒத்துக்கொள்ளும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். இந்த பணம் புடுங்கி மருத்துவமனைகளை ஒழித்து சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க வேண்டியதன் தேவையை கண்கூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த அரசு மருத்துவமனைகளும் இத்தகைய செவிலியர்களும் இல்லை என்றால் நமது மக்கள் அன்றாடம் காக்கை குருவி போல கேட்பாரின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் நீங்கள் அரசு மருத்துவமனைகளை பார்த்து வரவே செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கை என்பது இத்தகைய ஏழைகளிடமிருந்து எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு குற்ற உணர்ச்சி அடைய முடியும்.
– வினவு செய்தியாளர் குழு.
(மாதந்தோறும் வினவு செய்தியாளர் குழு இப்படி ஒரு பிரிவினரிடம் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி எழுதி வெளியிடுகிறோம். இதில் நீங்களும் கலந்து கொள்ள விருப்பமா? இப்போதைக்கு சென்னை, பெங்களூரு நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் vinavu@gmail.com)
“இந்த நாளைப் பற்றி நான் நிறைய கனவு கண்டிருக்கிறேன். இன்று ஒரு வழியாக சுதந்திர மனிதனாகி விட்டேன். எங்க அம்மா, குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடப் போறேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது வாழப் போறேன்” என்கிறார் செய்யாத குற்றத்துக்காக 25 வருடம் சிறையில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த ஜோனாதன் ஃபிளெமிங்.
விடுதலை செய்யப்பட்ட ஃபிளெமிங்
25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வந்ததாக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் நகர நீதித்துறை அறிவித்திருக்கிறது. இப்போது 52 வயதான ஃபிளெமிங் 1989-ம் ஆண்டு அவரது நண்பர் டேரில் “பிளாக்” ரஷ் என்பவரை சுட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், கொலை நடந்த நேரத்தில் தான் ஊரிலேயே இல்லை என்றும் ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட் சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் சொன்னதை போலீசும், நீதித் துறையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஃபிளெமிங் ஃபுளோரிடா சென்றதற்கான விமான பயணச் சீட்டுகள், அங்கு எடுத்த வீடியோக்கள், புகைப்பட அட்டைகள் இவற்றை காட்டியும் அவரது வாதத்தை நிராகரித்தது அரசு தரப்பு. ‘ஃபுளோரிடாவிலிருந்து இன்னொரு விமானத்தில் வந்து நண்பரை சுட்டு கொலை செய்து விட்டு போய் மீண்டும் அடுத்த நாள் திரும்பியிருக்கலாம்’ என்று வாதிட்டனர். ஃபிளெமிங் தனது நண்பர் ரஷ்ஷை சுட்டதை நேரில் பார்த்ததாக ஒரு பெண்ணை சாட்சி சொல்ல வைத்தனர்.
அதன் அடிப்படையில் 1990-ம் ஆண்டு ஃபிளெமிங் சிறைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்குள்ளாகவே, ‘போலீஸ் தன்னை வேறொரு வழக்கில் விடுவிப்பதற்காக அவர்கள் சார்பில் தான் பொய் சாட்சி சொன்னதாக’ கூறி அந்தப் பெண் தனது சாட்சியத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருப்பினும், அடுத்தடுத்த மேல் முறையீடுகளிலும் ஃபிளெமிங்கின் தண்டனை ரத்து செய்யப்படவில்லை.
மகனை கட்டித் தழுவும் தாய் பேட்ரிசியா
அந்தப் பெண் தான் கைது செய்யப்பட்டதாக கூறியது தொடர்பான காவல் துறை பதிவுகள் இப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஃபிளெமிங் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், கொலை நடந்த சில மணி நேரம் முன்பு அவர் ஃபுளோரிடா தங்கும் விடுதியிலிருந்து பேசிய தொலைபேசி உரையாடலுக்கான ரசீது இருந்தது தெரிய வந்துள்ளது. ஃபிளெமிங் தங்கியதாக சொன்ன ஹோட்டலில் விசாரணை நடத்திய காவல் துறையினரிடம் விடுதி ஊழியர்கள் பலர் அவரை பார்த்ததாக கூறியதும் அப்போதே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஃபிளெமிங் கொலையை செய்திருக்க முடியாது என்ற நிறுவும் இந்த ஆதாரங்களை வேண்டுமென்றே மறைத்து, பொய் சாட்சியின் அடிப்படையில் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கின்றன போலீசும், நீதித்துறையும்.
இப்போது வெளியான இந்த தகவல்களின் அடிப்படையில் ஃபிளெமிங் குற்றமற்றவர் என்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஃபிளெமிங்
ஃபிளெமிங்கின் 72 வயதான தாயார் பேட்ரிசியா தன் மகனை கட்டித் தழுவி “இதற்காக நான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்” கண்ணீர் பொங்க கூறினார். 25 வருடங்களுக்கு முந்தைய வழக்கு விசாரணையின் போது ஃபிளெமிங்குடன் தானும் ஃபுளோரிடா சென்றிருந்ததாக பேட்ரிசியா சொன்ன சாட்சியத்தை நிராகரித்திருந்தது அமெரிக்க நீதித் துறை.
புரூக்ளின் நகர நீதித்துறை 1980-களிலும், 1990-களிலும் நடத்திய பல வழக்குகள் இப்போது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. சித்திரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலங்கள், மிரட்டி பெறப்பட்ட சாட்சியங்கள், அரசுத் தரப்பின் முறைகேடுகள், நம்பத் தகாத காவல்துறை அதிகாரிகள் என்று அடுக்கடுக்காக குவிந்த ஆதாரங்களைத் தொடர்ந்து புரூக்ளின் நகரின் நீதித்துறை நூற்றுக் கணக்கான கொலை வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ், “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்” என்ற காவல் துறையின் போக்கு இந்த தவறான தண்டனைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது. இந்த வகையிலும் சரி, பொதுவில் வெள்ளையர்களின் குற்றங்களை விட கருப்பர்களின் குற்றங்கள், சமயத்தில் அவை குற்றங்களே இல்லையென்றாலும், ஃபிளெமிங் போன்ற கருப்பினத்தவர்கள் அமெரிக்க போலீஸ்-நீதித் துறையினரால் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம்
இந்தியாவிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், ‘இசுலாமிய’ பயங்கரவாதம் என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் இந்துத்துவ சக்திகளின் தாக்கத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
2002-ல் குஜராத் காந்திநகரில் அக்சர்தாம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 6 அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் வாக்குமூலம் பெறப்பட்டு தூக்கு, சிறைத் தண்டனை வழங்கப்பட்டனர். அவர்களை சென்ற மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு தொடர்பாக காஷ்மீரில் இருந்து போலீசால் பிடித்து வரப்பட்ட அப்சல் குரு, ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்தி செய்ய’ தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சென்ற ஆண்டு இந்திய அரசால் கொல்லப்பட்டார். இஷ்ரத் ஜகான் என்ற கல்லூரி பெண் மோடியின் குஜராத் அரசின் ரத்த தாகத்துக்கு பலியாக போலீஸ் உயர்அதிகாரிகளால் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டார்.
2002-ம் ஆண்டு மோடியின் சொந்தக் கட்சிக்காரர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொல்லப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் 12 பேர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நூற்றுக் கணக்கான முஸ்லீம் கைதிகள் செய்த/செய்யாத குற்றங்களுக்காக சிறையில் வாடுகின்றனர். முசுலீம்கள் மட்டுமல்ல தலித்துக்களும் பிற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகளும் பெரும் அளவில் செய்யாத குற்றத்திற்காக சிறை வைக்கப்படுவதும், காவல் துறையின் ‘சீரிய’ பணிகளுக்காக கணக்கு காண்பிக்கப்படுவதும் இந்தியாவில் சகஜம். சந்தேகக் கேஸ்களுக்காக கைது செய்யப்பட்டு கொட்டடியில் கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.
அமெரிக்காவில் சில வழக்குகளிலாவது, உள்ளூர் அரசியல் போட்டியின் காரணமாக, நிரபராதிகள் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு காலம் தாழ்ந்து ஒரிரு உண்மைகள் வெளியாகிறது. இந்தியாவில் ஒடுக்கப்படும் பிரிவினரான தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள் இவர்களுக்கு நீதித்துறையில் நியாயம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர்களை பாராளுமன்றத்திலிருந்தே விரட்டியடித்து அரசியலைத் தூய்மைப்படுத்துவதே எனது பணியாக இருக்கும். மே 16-ம் தேதிக்குப் பின் அது தான் எனது வேலையாக இருக்கும்” – பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி உதிர்த்த முத்துக்கள் இவை.
உச்சஸ்தாயியில் இருந்து கீழே படிப்படியாகத் தானே இறங்க வேண்டும். ஒரேயடியாக பல்டியடித்தால் சுதி தப்பி விடுமல்லவா? அதனால் தான் கடந்த பதினோராம் தேதி பாராளுமன்றத்தில் பேசிய மோடி, “கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்களின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து ஓராண்டுக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் கோரப் போவதாக அறிவித்தார்.
மேலும் பேசிய மோடி, ”வெளியே இருக்கும் பொது மக்களுக்கு பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கிரிமினல்கள் என்பது போல் தோன்றுகிறது. இதை உடனடியாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேட்க நன்றாக இருக்கிறதா?
இந்துத்துவ டவுசர்களின் கருத்துக்கும் பொய் தானே அழகு? அதனால் நாம் தாழம்பூவை மட்டும் பார்த்தால் போதுமா, அது உட்கார்ந்திருக்கும் அந்த ஒய்யாரக் கொண்டையையும் பிரித்துப் பார்த்து விடுவோம்.
வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துவிவரங்கள் மற்றும் இதர விவரங்களின் அடிப்படையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 185 எம்.பிகளின் மேல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது பாராளுமன்றத்தில் உள்ள, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, இந்திய தேர்தல் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தின் தவப்புதல்வர்களில் 34 சதவீதம் (மூன்றில் ஒருவர்) பேர் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இது கிரிமினல் வழக்குகளின் கணக்கு மட்டும் தான்; கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியது, போஜரி, 420 உள்ளிட்ட இன்னபிற சிவில் வழக்குகளின் கணக்கு இன்னமும் வெளியாகவில்லை.
இந்த 185 கிரிமினல்களில் 87 பேர் மீது மதக் கலவரங்களைத் தூண்டியதாகவும், வகுப்புகளுக்கிடையே மோதல்களைத் தூண்டியதாகவும் வழக்குகள் உள்ளன. இதில் 49 பேர் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனையைச் சேர்ந்தவர்கள் (பா.ஜ.க 41, சிவசேனா 8).
அந்த கிரிமினல் கும்பலில் இருந்து 13 எம்.பிக்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துள்ளார் மோடி. அதாவது 30 சதவீத அமைச்சர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். அதில் எட்டு அமைச்சர்கள் (18 சதவீதம்) கொலை முயற்சி, ஆள் கடத்தல், சமூக அமைதியைக் குலைத்தல் உள்ளிட்ட தீவிரமான குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்கிறது தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்கிற இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு ஒன்று.
மேலும், இவ்வமைப்புகள் நடத்திய ஆய்வின் படி மத்திய அமைச்சர்களின் 91 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேற்படி ஆய்வு வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்த அஃபிடவிட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ள அமைச்சர்கள்
ஆய்வை நடத்தியது என்.ஜி.ஓ என்பதால் தங்களது அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஒரு மகஜரில் எழுதி நேராக கொண்டு போய் மோடியிடமே கொடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் மோடி என்ன சொன்னார் என்பதைப் பற்றி அவர்களும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை, அந்தக் காகிதங்கள் தில்லி சன்சாத் மார்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு குப்பைத் தொட்டி வடிவ கட்டிடத்தின் உள்ளே இருக்கும் எந்தக் கழிப்பறையில் தொங்க விடப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களும் நம்மிடம் இல்லை. போகட்டும்.
கிரிமினல்கள் ஓட்டுக்கட்சி அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புதிய நிகழ்வோ புதிய இரகசியமோ இல்லை. இந்திய அரசியலை நெருக்கமாக கவனிக்கும் எவருக்கும் அது தெரிந்த உண்மை தான். என்றாலும் முசுலீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒடுக்கி வைக்க வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டிருக்கும் இந்துத்துவத்தின் ஆன்மாவையும், கார்ப்பரேட் உலகத்திற்கு செருப்பாக இருக்க உறுதியெடுத்த உடலையும் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா அரசின் அதிகார அடுக்குகளில் இத்தனை கிரிமினல்கள் நிறைந்திருப்பது தான் நமது கவனத்திற்குரியது.
தேர்தலுக்கு முன்பிருந்தே மோடி கார்ப்பரேட்டுகளின் விருப்பத்திற்குரியவராக இருந்து வந்தவர். மோடியின் வெற்றியைத் தொடர்ந்து மும்பை தலால் வீதியில் பற்றிக் கொண்ட உற்சாகத்தின் அளவு இருபத்தையாயிரம் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். பொதுமக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்திக்க தயங்கி பொதுத்துறை மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான கதை மெல்லத் திறந்து விட்ட காங்கிரசை விட எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாத ஈவிரக்கமற்ற கிரிமினல் கும்பலான பாரதிய ஜனதாவே கார்ப்பரேட்டுகளின் விருப்பத் தேர்வாக இருந்தது.
அந்தவகையில் மதம், அரசியல், பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிரிமினல்கள் தேவைப்படுகிறார்கள். அதைத்தான் மேற்கண்ட புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த கிரிமினல்களை வீழ்த்த போலி ஜனநாயகம் பயன்படாது என்பதை உண்மையான ஜனநாயகத்தை தேடிவருவோர் புரிந்து கொள்ளட்டும்.
பிரபஞ்சத்தில் நாம் அறிந்த கோள்களிலேயே நமது பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலைப் பெற்றுள்ளது. இங்கு வியத்தகு எண்ணிக்கையிலான உயிரினங்கள் வாழ்கின்றன. நமது பூமியில் எங்கு நோக்கினும் நுண்ணுயிரிலிருந்து மிகப்பெரும் விலங்கினங்கள் வரை ஏதாவது ஓர் உயிரினத்தை காணமுடியும்.
உயிரினங்களின் தோற்றம்
பூமியில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ள சுமார் அறுபது இலட்சத்திலிருந்து பத்து கோடி வகையான உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனிச்சிறப்பான உடல்கூறு வடிவமைப்பை பெற்றுள்ளன.
இப்படி தனிச்சிறப்பான உருவ வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்கள் எப்படி, எப்போது தோன்றின? திகைப்பூட்டும் எண்ணிக்கையிலான இத்தனை வகைகளும், தொகுப்புகளும் இருக்க காரணமென்ன?
உயிரினங்களின் தோற்றம் பற்றிய இக்கேள்விகளுக்கு மதங்கள், ‘ஒவ்வொரு உயிரும் தனித்தனியாக, தனிச்சிறப்பான வடிவமைப்புடன் கடவுளால் படைக்கப்பட்டது’ என்று தத்துவ உலகில் கருத்து முதல்வாதம் என அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தபடைப்புக் கொள்கையை முன் வைக்கின்றன.
கத்தோலிக்க திருச்சபை ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பாவில் பைபிளின் படைப்புக் கொள்கையே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக நிலவி வந்தது. பைபிளின் படி சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களையும், பறவையினங்களையும் ஆறாம் நாளில் விலங்கினங்களையும், பாலூட்டிகளையும் படைத்து கடைசியாக ஏழாவது நாளில் மனிதர்களை படைத்தார்; களிமண்ணிலிருந்து ஆதாமையும், அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தார்.
பைபிளுக்கு 557 ஆண்டுகளுக்கு பின் உருவான, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா’வின் திருப்பெயருடன் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினார்.
பார்ப்பன புராணங்களின்படி ஈரேழுலோகங்களையும், அவற்றிலுள்ள உயிரினங்களையும், நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தார். அப்பிரம்மனை படைத்ததே தங்களுடைய விஷ்ணுதானென்றும், இல்லை விஷ்ணுவையும் படைத்தது சிவன் தானென்றும் கோஷ்டிப்பூசல்கள் நிலவினாலும், ‘அனைத்தும் ஏதோ ஒரு கடவுளால் படைக்கப்பட்டது’ என்ற படைப்பு தத்துவத்தையே முன்வைக்கின்றனர்.
தத்துவத் துறையை பொறுத்த வரை, 19-ம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் மத்தியிலும் அரிஸ்டாட்டிலின் ஆதியும் அந்தமும் அற்ற நிலையான உலகம் என்ற இயக்க மறுப்பியல் கோட்பாடு ஆதிக்கம் செலுத்தியது.
சார்லஸ் டார்வின்
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சரியென்று நம்பப்பட்ட, நிலவி வந்த கருத்துகளிலிருந்து வேறுபட்டு விளக்கமளிக்க முற்பட்டார் சார்லஸ் டார்வின். ஆனால், முதன் முதலாக படைப்பு கொள்கையை மறுத்து பரிணாம வளர்ச்சியை முன்வைத்தவர் டார்வின் அல்ல.
அறிவியலும் அனைத்து அறிவுத் துறைகளும் திருச்சபையில் கட்டுண்டு கிடந்த காலத்தில் பெரும்பாலான அறிவியலாளர்களும், கல்வியாளர்களும் பாதிரிமார்களாக இருந்த போதிலும், இறைவனின் படைப்புகளை முழுவதுமாக அறிந்து கொள்ள இயற்கையை ஆய்ந்து இறை இயற்கையியல் (theological naturalism) என்று பெயரிட்டு விவரங்களை திரட்டி வந்தனர்.
18-ம் நூற்றாண்டில் சுவீடனை சேர்ந்த உயிரியலாளர் கரோலஸ் லின்னயேஸ் (Carolus Linnaeus) உயிரினங்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு உயிரையும் இனம், பேரினம், குடும்பம், குடும்பங்களை உள்ளடக்கிய வரிசை அதற்கும் மேல் பைலா (Phyla), அதற்கும் மேல் ராஜ்ஜியம் என ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்தி வைத்தார்.
பிரான்சை சேர்ந்த பஃபோன் (Georges-Louis Leclerc Comte de Buffon) என்ற அறிவியலாளர் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து மாற்றமின்றி நிலைத்திருக்கவில்லை என்றும் உயிரினங்கள் தோன்றும் போதே வெவ்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து தோற்றம் – வடிவம் அமைகிறது என்றும் ஒரு விதமான பரிணாம கோட்பாட்டை முன் வைத்திருந்தார்.
முன்னதாக 17-ம் நூற்றாண்டில் பாறை அடுக்குகளில் எலும்புகள், உயிரின படிவங்கள் கண்டறியப்பட்டன. அக்காலத்திய டேனிஷ் அறிவியலாளரும், பாதிரியாருமான நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolus steno) திரவ நிலையிலிருந்த குழம்புகள் குளிர்ந்து கெட்டிப்பட்டு பாறைகளாவதையும், புதிதாக குளிர்ந்து உருவாகும் புதிய பாறை பழைய பாறையின் மீது படிந்து பாறை அடுக்குகள் உருவாவதையும் விளக்கிக் கூறி கண்டறியப்பட்டவை தொல்லுயிர் எச்சங்கள் என்றார். அவரது கருத்துகள் தொல்லுயிரியல் துறைக்கு அடிப்படையாக அமைந்தன.
18-ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் தங்கள் பகுதியில் இல்லாத உயிரினங்களின் தொல்லுயிர் புதைபடிவங்களை கண்டறிந்தனர். அவை உலகின் வேறு பகுதிகளில் வாழ்வதாக நம்பினர். பிரான்சை சேர்ந்த ஜார்ஜ் குவியர் (George Cuvier) புதைபடிவங்களில் கண்டறியப்பட்ட சில உயிரினங்கள் உலகின் எப்பகுதியிலும் வாழ்வதற்கான சான்றாதாரங்கள் இல்லை என்று கண்டறிந்து அவை அருகி அழிந்து போன உயிரினங்கள் என்பதை முன்வைத்தார்.
இதன் மூலம் கடவுளால் படைக்கப்பட்டு மாற்றமின்றி நிலைத்திருப்பதாக மதவாதிகள் சொல்லும் உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்து அருகி அழிந்திருக்கின்றன என்றும் புதிய உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்றும் கருதுவதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது.
லாமார்க்
இப்பின்னணியில், டார்வினுக்கு முன்னரே 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ழான் லாமார்க் (Jean-Baptiste Lamarck) என்ற பிரான்சை சேர்ந்த விஞ்ஞானி படைப்பு தத்துவத்தை நிராகரித்து பரிணாமக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார். உயிரினங்கள் தமது வாழ்நாளிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடல்கூறில் மாற்றமடைந்து அத்தனிக்கூறினை தமது சந்ததிகளுக்கு கடத்துகின்றன (Transfer) என்றும் எளியதிலிருந்து சிக்கலானவையாக வளர்ச்சியடையும் இயற்கை விதி பரிணாம வளர்ச்சியை இயக்குவதாகவும் கூறினார். வளர்ச்சி ஏணிப்படி வடிவில் நடப்பதாக நம்பினார்.
இந்த கோட்பாடு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய மாபெரும் பாய்ச்சலை விளக்க முயன்ற போதிலும், அழிந்துபோன உயிரினங்களை பற்றியும், உயிரினங்களுக்கிடையிலான விடுபட்ட இணைப்புக் கண்ணிகளை பற்றியும் முரணின்றி விளக்குவதில் வெற்றியடையவில்லை. இன்று நம் கண்களுக்கு முன் பரிணாம வளர்ச்சி ஏன் நடக்கவில்லை என்பதற்கு இக்கோட்பாடு விடையளிக்க முடியவில்லை. எனவே இந்த கோட்பாடு மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது மட்டுமின்றி, சக அறிவியலாளர்கள் மத்தியிலும் அங்கீகாரத்தை பெறவில்லை.
எளியதிலிருந்து சிக்கலானதாக வளர்ச்சியடையும் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் காட்டினர். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்ல் வான் பேயர் (Karl von baer) என்ற எஸ்டோனிய அறிவியலாளர் வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களிடையே இருந்த குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கரு வளர்ச்சி படிநிலைகளை பரிணாம வளர்ச்சி நிலைகளில் அர்த்தமுள்ள தொடராக காண முடியாது என விளக்கினர்.
19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, முறையான கல்வியறிவு இல்லாத வில்லியம் ஸ்மித் (William smith) என்ற சர்வேயர் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பாறை அடுக்குகளை ஒப்பிட்டு, ஒவ்வொரு அடுக்கிற்கும் குறிப்பான வரலாற்று காலத்தை கணக்கிட்டு அதன் மூலம் நிலவியல் வரைபடத்தை உருவாக்கினர். பாறை அடுக்குகளின் வரலாறு, தொல்படிமங்களின் வரலாறாகவும், உயிரினங்களின் வரலாறாகவும் ஆனது.
உலக நிலவியல் அமைப்பு பல திடீர் மாற்றங்களையும், சீற்றங்களையும் சந்தித்ததால் தான் இப்போதைய நிலையை அடைந்தது என்று நம்பப்பட்டது. இது அழிவமைவு கோட்பாடு எனப்பட்டது. டார்வினின் சமகாலத்தவரான சார்லஸ் லயல் (Charles Lyell) அது வரை நிலவியல் அமைப்பை விளக்கிய அழிவமைவு கோட்பாட்டை நிராகரித்து சீர்மாற்ற கோட்பாட்டை முன்வைத்தார். கண்களுக்கு புலப்படாத சிறுக சிறுக நடந்த சீரான படிப்படியான மாற்றங்களாலேயே பூமி இப்போதைய நிலையை அடைந்தது என்றார்.
உயிரினங்களின் தோற்றம் பற்றி இத்தகைய கோட்பாடுகள் நிலவிய சூழலில் அவற்றுக்கு ஒரு தீர்மானகரமான அறிவியல் உள்ளடக்கத்தை கொடுத்த டார்வின் 1809-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் நாள் இங்கிலாந்தின் சுரூஸ்பெரியில் (Shrewsbury) ராபர்ட் டார்வின் என்ற மருத்துவரின் மகனாக பிறந்தார். சார்லஸ் டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின் மருத்துவத் தொழில் செய்து வந்த அதே வேளை இயற்கையியல் அறிஞராகவும் இருந்தார். தன்னைப் போலவே தனது மகனும் சிறந்த மருத்துவராக வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்திற்கேற்ப தனது 16-ம் வயதில் மருத்துவம் படிக்கச் சென்றார் டார்வின். தனது தாத்தாவின் தாக்கத்தால் சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவராக இருந்த டார்வினுக்கு மருத்துவச் சொற்பொழிவுகளை கேட்பதிலும், அறுவைச்சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் ஆர்வம் ஏற்படவில்லை.
டார்வினை பாதிரியார் ஆக்க விரும்பிய அவரது தந்தை, அன்று இறையியல் கற்று பாதிரியார் ஆக வேண்டுமானால், கேம்பிரிட்ஜில் பட்டம் பெற வேண்டும் என்ற தேவையை முன்னிட்டு அவரை 1828-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பட்டப்படிப்பில் சேர்த்தார்.
டார்வின் கால கல்வியாளர்களை பொறுத்தமட்டில் இயற்கை விஞ்ஞானத்தின் – விலங்கியல், உயிரியல், நிலவியல், இயற்பியல் போன்ற – ஒவ்வொரு துறை மட்டுமல்ல, அவற்றின் சிறப்புப் பிரிவுகளும் கூட, ஒன்றை ஒன்று சாராமல் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை, கற்க வேண்டியவையாக இருந்தது. புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவியலாளர்கள், கல்வியாளர்களால் நிரம்பியிருந்த போதிலும், மதத்தில் கட்டுண்டு ஆதி முதல் இன்று வரை அனைத்தும் மாறாமல் இருந்து வருகின்றன என்ற இயக்கமறுப்பியல் சிந்தனையில் சிக்கியிருந்தது.
கேம்பிரிட்ஜில் சார்லஸ் டார்வினும், கிருத்துவம் முன்வைத்த உலகமும் உயிர்களும் தோன்றிய கோட்பாட்டை ஐயம் திரிபுற கற்றார். அப்போது அவருக்கு அக்கருத்துக்கள் தவறாக தோன்றவில்லை. அங்கு நிலவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கற்றுத் தேர்ந்த டார்வின் அப்பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோவின் (John Henslow) நெருங்கிய நண்பரானார்.
ஹென்ஸ்லோ
முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியை தொடர்ந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்காக இயற்கை வளங்களை சுரண்டுவதற்கும், வணிகத்தை பெருக்குவதற்கும், சந்தைகளைக் கைப்பற்ற புதிய காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிகள், கடல்நீரோட்டங்கள், நிலப்பகுதிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து விவரங்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல்பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது.
அக்கப்பலின் இரண்டாவது பயணத்தின் கேப்டனாக ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) நியமிக்கப்பட்டார். இப்பயணத்தில் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானியை’, அழைத்துச் செல்ல அவர் விரும்பினார். ஜான் ஹென்ஸ்லோவின் மூலம் அப்போது 22 வயதான டார்வினுக்கு கேப்டன் பிட்ஸ்ராயின் நட்பும், அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
பீகிள் கப்பலில் பயணம் செய்த டார்வின், ஐந்தாண்டுகளில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல்வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.
டார்வினுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியை முன்வைத்த அறிஞர்கள் அனைவரும் ஊகத்தை அடிப்படையாக கொண்டும், பரிணாமம் நீண்ட-காலப்போக்குடைய விதிகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் விளக்கினர். ஆனால் டார்வின் இயற்கையில் கிடைத்த சான்றாதாரங்களை கொண்டு உயிரினங்களின் தோற்றத்தை முரணின்றி விளக்குவதன் மூலம் பரிணாமக் கொள்கையை வந்தடைந்தார்.
டார்வின், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் வெவ்வேறு அறிவியல் துறை கண்டுபிடிப்புகள், கோட்பாடுகளில் சரியானவற்றை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள முயன்றதோடு, பீகிள் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தில் தான் கண்ட தனிச்சிறப்பான வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்களின் ஒற்றுமை- வேறுபாடுகளை ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முயன்றார்.
தனது பயணத்தின் போது கோடானுகோடி உயிரினங்களில் பெரும்பாலானவை ஒத்தவடிவமைப்புடன் சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட தொகையினங்களாக இருப்பதையும் அறிந்து கொண்ட டார்வின் உயிரினங்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டன என்ற படைப்புக் கொள்கையை சந்தேகிக்க ஆரம்பித்தார்.
சான்றாக நமது பூமியில் வியப்பூட்டும் வகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான குரங்கினங்களும், சுமார் 315-க்கும் மேற்பட்ட ஓசனிச்சிட்டு குருவிகளும் (Hummingbird), ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால் இனங்களும், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டு-பூச்சியினங்களும், 2.5லட்சத்துக்கு மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களும் உயிர் வாழ்வதாக இன்று வரை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது, இன்னும் கண்டறிய வேண்டியவையோ ஏராளம்.
தென்அமெரிக்க காடுகளில் தீக்கோழி போன்ற, பறக்கமுடியாத ரியா (Rhea) பறவைகளின் இருவெவ்வேறு வகைகளை டார்வின் கண்டார். மிகச்சிறு வேறுபாடுகளை கொண்ட இரு ஒத்த பறவைகளை கடவுள் ஏன் படைக்கவேண்டும்? அவரது பயணம் தொடர தொடர மர்மம் இன்னும் தீவிரமடைந்தது.
தென்அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக்பெருங்கடலில் உள்ள காலபகாஸ் (Galapagos) தீவுகளில் அவர் பார்த்த ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகளும் அவருடைய சிந்தனையை தூண்டின. காடுகளில், சதுப்புநிலத்தில், ஆற்றில், கடலில் இப்படி ஒவ்வொரு இடத்திலும் வாழும் ஆமை இனங்கள், தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப பிரத்யேகமான வெவ்வேறு வடிவமைப்பை பெற்றிருந்தன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிலா தனிச்சிறப்பானவை அல்ல என்றும் அவற்றுக்கிடையே காணும் சிறுசிறு வேறுபாடுகள் உயிரினங்கள் தத்தமது சூழ்நிலைகளுக்கு தகவமைத்து கொண்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தென்னமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் சில தொல்லுயிர் புதைபடிவங்களை (Fossil) காணுற்றார் டார்வின். அதில் ஒன்று நிலத்தில் வாழும் தேவாங்குகளை ஒத்த உடலமைப்பை கொண்டிருந்தது. அவை நாம் காணும் தேவாங்குகளைவிட பலமடங்கு பெரியவையாக இருந்தன.
டார்வின் காலத்தில் பிரபலமான உயிரியலாளர் ரிச்சர்ட் ஓவன். தொல்லியல் புதை படிவங்களை ஆய்வதிலும் உடற்கூறியலிலும் வல்லுனரான இவர் டைனோசர்களின் புதைபடிவங்களை முதன்முதலில் வகைப்படுத்தினார். லண்டன் இயற்கை அருங்காட்சியகத்தை தோற்றுவித்து அதில் பல உயிரின மாதிரிகளை சேகரித்தார். ஆயினும், 19-ம் நூற்றாண்டு உயிரியலாளர்களைப் போல ஓவனும் கூட ஒவ்வொரு தனிச்சிறப்பான உயிரினமும் பிரத்யோகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டது என்ற படைப்பு கொள்கையையே நம்பினார்.
தான் கண்டெடுத்த தேவாங்கை ஒத்த புதைபடிவத்தை ரிச்சர்ட் ஓவனுக்கு அனுப்பி வைத்தார் டார்வின். அதை ஆய்ந்தறிந்த ஓவன், அது அழிந்து போன தேவாங்கு இனம் என்று வகைப்படுத்தி அதற்கு டார்வினின் பெயரை சூட்டினார். இவ்வளவு பெரிய உயிரினம் இப்போது ஏன் அழிந்து போனது?. ஆபிரகாமிய மதவாதிகளோ, “நோவாவின் படகில் இடம் கிடைக்காததால் அவை அழிந்து போனதாக” கருதினர். “கல்லுக்குள் தேரைக்கும் படியளந்தான் பரமன்” என்று கதை விடும் இந்து மதவாதிகளிடமோ அழிந்து இல்லாது போன உயிரினங்கள் குறித்து விளக்கம் இல்லை.
டார்வின் ஐந்தாண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய உடனேயே தனது பரிணாம கொள்கையை முன் வைத்து விடவில்லை. அவர் சேகரித்திருந்த சான்றுகளும் குறிப்புகளும் பரிணாம கொள்கையை முரணின்றி விளக்குவதற்கு அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. ஆயினும், டார்வினுக்கு, அவர் சேகரித்த குறிப்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்கள் பெரும் புகழை பெற்றுத்தந்தன. இவற்றால் டார்வின் கர்வமுற்று சும்மா இருந்து விடவில்லை. அன்றாடம் காணும் உயிரினங்கள், நிகழ்வுகளை மிகக்கூர்மையாக கவனிக்க ஆரம்பித்த டார்வின் தனது குறிப்புகள், சான்றுகளை ஆராய்ந்து மறு பரிசீலனை செய்தார்.
பல்வேறு பாலூட்டிகளின் எலும்புக்கூடுகள் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருப்பதை விரிவாக ஆராய்ந்தார். அவற்றின் மூட்டெலும்புகள் ஒரே வரிசையில் இருப்பதையும், அவை வெவ்வேறு உயிரினங்களுக்கு ஏற்ற வகையில் மறுவடிவம் பெற்றதென்றும் கண்டறிந்தார்.
மேலும், விலங்குகள், பறவைகள் மீனினங்கள் ஆகியவற்றின் உயிர்க்கருக்களுக்கிடையே, கரு வளர்ச்சியிலிருந்த ஒற்றுமை, வேற்றுமைகள் டார்வினின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு உயிரினம், பேரினம், குடும்பம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உறுதியானது. மனிதனின் உடலமைப்பை ஒத்ததாக குரங்கின் உடலமைப்பு இருப்பதும் அவர் கவனத்தை ஈர்த்தது.
டார்வின் தமது காலத்தின் குதிரை, முயல், புறா, நாய் – பிராணி வளர்ப்பு ஆர்வலர்களிடம் கவனமாக தகவல்களை திரட்டினார். ஆதி ஓநாயிலிருந்து தோன்றிய நாய்களை தமது விருப்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப விதவிதமான நாய்களாக மனிதர்கள் உருவாக்கியுள்ளதை கண்டறிந்தார். அதாவது செயற்கை தேர்வின் (artificial selection) மூலம் மனிதர்கள் உயிரினங்களில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றனர்.
இதேபோல் ஏன் இயற்கையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப ஒரு குடும்பத்திற்குள் வெவ்வேறு வகைகளை – தனித்தனி இனத்தை- உருவாக்கியிருக்கக் கூடாது? எனில் இயற்கைத் தேர்வை நிகழ்த்துவது யார்?
சமூக அறிவியல் துறையில் தவறான நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட ஒரு கருத்திலிருந்து உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினின் கோட்பாட்டுக்கு அடுத்த உந்துதல் கிடைத்தது.
காரலஸ் லின்னேயஸ்
தாமஸ் மால்துஸ் எழுதிய முதலாளித்துவ பிரிட்டனில் மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயங்களை பற்றிய கட்டுரையில், ‘மக்கள் தொகை பெருக்கம் தான் மக்களிடையே இடையறாது நடக்கும் போராட்டங்களுக்கான காரணம்’ என்றும் ‘உணவுப் பற்றாக்குறையும், நோய்களும் தவிர்க்கவியலாமல் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன’ என்றும் கூறியிருந்தார். அதாவது ஏழைகள் பட்டினியில் வாடுவதும், நோய் வந்து சாவதும் இயற்கையின் (அல்லது இறைவனின்) திருவிளையாடல் என்று ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக மத போதகராக இருந்த மால்துஸ் மக்கள் தொகை பற்றிய தனது கோட்பாட்டை முன் வைத்திருந்தார். முதலாளித்துவமும் அதற்கு முந்தைய வர்க்க சமூகங்களும் நிலவிய காலகட்டங்களில் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களும், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் இயல்பான வளர்ச்சிக்கான காரணிகள் என்று கூறுவதுதான் மால்துசின் நோக்கம்.
ஆனால், மால்தூசின் கட்டுரைகளை படித்த டார்வின், அந்த மோசடியான கோட்பாட்டை, பல லட்சம் ஆண்டுகள் கால ஓட்டத்தில் உயிரினங்களிக்கிடையே இடையறாது நடக்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான உக்கிரமான போராட்டத்துக்கு வரித்துக் கொண்டார். உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான வளங்களும் சூழ்நிலையும் எல்லா உயிர்களுக்கும் சமமாகவும் வரம்பின்றியும் அமைவதில்லை. இயற்கை சூழ்நிலைகளில் உயிர்த்திருப்பதற்கான நிகழ்தகவு (probability) அனைத்து உயிர்களுக்கும் சமமானதாக இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதியானவை வாழ்கின்றன, தகுதியற்றவை சாகின்றன என்ற கருதுகோளை முன்வைத்தார்.
உயிரினங்கள் சூழ்நிலைக்கு தகவமைத்துக் கொள்வதன் மூலம் தமது உடல்கூறில் சிறு சிறு மாற்றத்தை பெறுகின்றன. இயற்கை உயிரினங்களை தகவமைத்துக் கொள்ள நிர்பந்திக்கிறது. அச்சூழ்நிலையில் உயிர்த்திருந்து, இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றதான உடற் கூறுகளை பெற்றவை உயிர்த்திருந்தன, மற்றவை அருகி அழிந்தன. உயிர்த்திருந்தவை தாம் பிழைத்து வாழ்வதற்கு உதவிய தனிக்கூறை தமது சந்ததிகளுக்கு பாரம்பரிய பண்புகளாக கடத்தியதன் (Transfer) மூலம், படிப்படியாக வளர்ச்சியடைந்தன. இம்மாற்றங்கள் நிலைபெறுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்ற கோட்பாட்டை வந்தடைந்தார். இவ்வறாக, “பரிணாமத்தை எளியதிலிருந்து சிக்கலானதாக வளரும் வளர்ச்சி விதி தீர்மானிக்கவில்லை. மாறாக தகவமைத்து (Adaptation) உயிர்த்திருக்கும் போராட்டங்களே தீர்மானிக்கின்றன” என்ற ”இயற்கை தேர்வு” கொள்கை உருவம் பெற்றது.
ஜார்ஜஸ் குவியர்
ஆதியில் தோன்றிய ஒரு உயிரே பிரிந்து சூழ்நிலைகளில் தம்மை தகவமைத்துக் கொண்டதன் மூலம் படிப்படியாக கோடானு கோடி உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என சிந்தித்த டார்வின் தனக்கு முந்தைய அறிஞர்கள் முன்வைத்த ஏணிப்படி முறையிலான பரிணாம வளர்ச்சியை மறுத்து ஒரு புள்ளியில் தோன்றி கிளை கிளையாக பிரியும், மரத்தை போன்ற பரிணாம வளர்ச்சி பைலோஜெனிக் மர (phylogenic Tree) வரைபடத்தை வரைந்தார். இயற்கை தெரிவு கோட்பாட்டு முடிவுகளுக்கு வந்த பிறகும் கூட தனது கண்டுபிடிப்பை டார்வின் உடனடியாக வெளியிட்டு விடவில்லை.
அதே காலத்தில் ஆசிய கண்டத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வந்த மற்றொரு இயற்கை அறிவியலாளர் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலசும் (Alfred Russel Wallace) உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் கொள்கையை உருவாக்க முயன்று வந்தார். அவருக்கும் டார்வினுக்கும் தொடர்பு ஏற்பட்டது, இருவரும் ஒருவருக்கொருவர் அறிவியல் தகவல்களை பரிமாறி உதவிக் கொண்டனர்.
1858-ம் ஆண்டு வாலஸ், டார்வினுக்கு ஒரு கடித்ததை எழுதினார். அக்கடித்தம் டார்வினை வியப்பில் ஆழ்த்தியது. அக்கடித்த்தில் வாலஸ் தனது பரிணாம கொள்கையை விளக்கியிருந்தார். அதில் வாலசும் தனது சொந்த முயற்சியில் ”இயற்கைத் தேர்வு” கொள்கையை முன்வைத்திருந்தார்.
டார்வின் மற்றும் வாலஸ் இருவரின் கோட்பாடுகளையும் லண்டன் லின்னியன் சங்கத்தில் சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை சார்லஸ் லயல் செய்தார். 1858-ம் ஆண்டு இருவரின் கோட்பாடுகளும் லின்னீயன் சமூகத்தில் வாசிக்கப்பட்ட போது ஆசிரியர்கள் இருவருமே அங்கு இல்லை; அவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை.
ஓராண்டுக்கு பின் 1859-ல் டார்வின் பீகிள் பயணத்திலிருந்து பெற்ற சான்றாதாரங்களை கொண்டு எழுதப்பட்ட தனது புகழ் பெற்ற, “உயிரின்ங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டார்.
டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராக கடவுள் படைப்புவாதத்தை தூக்கிப் பிடித்தவர்களுக்கு முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த முழுமையான உயிரமைப்புகளுக்கு ஒரு வடிவமைப்பாளர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார். இன்றும் இசுலாமிய, கிருத்தவ மதவாதிகள் இவ்வாறே வாதிடுகின்றனர்.
மனிதன் அறிவார்ந்த வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டிருந்தால், மனிதக் குழந்தை பிறக்கும் போதே ஏன் வளர்ச்சியடைந்த மனிதனைப் போல் நடப்பது, பேசுவது, சிந்திப்பது போன்ற செயல்களை செய்வதில்லை?
ரிச்சர்ட் ஓவன்
மதவாதிகள் மட்டுமின்றி ஓவன் போன்ற அறிவியலாளர்களும் டார்வினின் கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர் எல்லா உயிரினங்களும் ஒரே ஆதி உயிரிலிருந்து தோன்றியதெனில், ஒவ்வொரு உயிரினத்திற்கும் இடைப்பட்ட இணைப்பு சங்கிலி அறுந்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். பிற்காலத்தில் ஓவன் பறவையும் மீனும் சேர்ந்த கலவையாக இருந்த ஆர்ச்சியோபெட்ரிக்ஸ் (Archaeopteryx) புதைபடிவத்தை கண்டுபிடித்தார். பெரும்பாலான இணைப்பு கண்ணி உயிரினங்கள் – மூதாதை உயிரினங்கள் அருகி அழிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது. தொல்லுயிர் ஆய்வாளர்கள் அவற்றை புதைபடிவ சான்றுகளாக கண்டறிந்து வருகிறார்கள்.
மேலும், தென்னமெரிக்க அமேசான் காடுகளில் வாழும் ஹோட்ஜின் (hoatzin) பறவை ஆர்ச்சியோபெட்ரிக்சைப் போலவே தனது காலில் உள்ளதைப் போன்ற கூர் நகங்களை இறக்கைகளின் நுனியிலும் கொண்டிருக்கின்றன. கிழக்கு ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் பிளாட்டிபஸ் (platypus) என்னும் பாலூட்டி வியத்தகு வகையில் பல விலங்குகளின் கலவையாகவும், பாலூட்டி மற்றும் ஊர்வனவற்றின் கலவையாகவும் இருக்கிறது. இவை தான் அழியாமல் இன்று உயிருடன் இருக்கும் இணைப்பு சங்கிலிகள்.
டார்வினுக்கு பிறகு 20-ம் நூற்றாண்டில் கதிரியக்க தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனிமங்கள் இயற்கையாகவே கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை தொடர்ந்து வெளியிட்டு நிறையை இழக்கின்றன. இத்தனிமங்கள் தமது அணுநிறையில் பாதியளவை இழப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ‘அரை ஆயுட்காலம்’ எனப்படுகிறது.
புவியின் பாறை அடுக்குகளில் உள்ள கரிம பொருட்களின் அரை ஆயுட்காலத்தை கணக்கிடுவதன் மூலம் பாறைகளின் வயதை கண்டறிய கரிமக் காலக்கணிப்பு நுட்பம் உருவாக்கப்பட்டது. இக்கணக்கீட்டு முறையின் மூலம் தொல்லுயிர் எச்சங்களின் வயதை அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றின் மூலம் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்றும், நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்றும் கண்டறிந்துள்ளனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். டார்வின் முன்வைத்த படிப்படியான மாற்றம் ஏற்பட தேவையான நீண்ட காலக்கெடு இயற்கை வரலாற்றில் இருந்தது கண்டறியப்பட்டு விட்டது.
சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
ஆனால், டார்வினுக்கு பின்னர் உயிரியல் துறை பல முன்னேற்றங்களை அடைந்து குரோமோசோம்களினுள் உள்ள மரபணுக்களின் மூலம் பாரம்பரிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் அறிந்தவற்றில் மிகச்சிறிய பாக்டீரியாவான மைக்ரோ பிளாஸ்மா ஜெனிட்டலியம் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. எளிமையான உடலமைப்பை கொண்டிருக்கும் நாடாப்புழுவில் சுமார் 16,000 மரபணுக்கள் இருக்கின்றன. மனித உடலிலோ சுமார் 30,000 மரபணுக்கள் மட்டுமே இருக்கின்றன.
டார்வின் தனது இயற்கை தெரிவுக்கு உயிரினங்களுக்கிடையிலான ஒற்றுமையை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. வேற்றுமையையும் கணக்கிலெடுத்துக் கொண்டே பரிணாம மர வரைபடத்தை உருவாக்கினார்.
1990-களில் பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களை குறிநீக்கம் செய்து படியெடுத்து வைக்கும் திட்டங்கள் துவக்கப்பட்டன. 2000-ம் ஆண்டு கிரேக் வெண்டர் என்ற ஆய்வாளரும் அவரது குழுவினரும் மனித மரபணுக்களை குறிநீக்கம் செய்தனர். இவ்வாய்வுகள் டார்வினின் பரிணாம மரத்தை (வரைபடத்தை) சரியென்று நிருபிக்கின்றன. உதாரணமாக மனிதனுக்கும் சிம்பன்சி குரங்குகளுக்கும் இருக்கும் மரபணு வேறுபாடு 0.2% மட்டுமே (ஆயிரத்தில் 2 பங்கு).
இன்றும் பரிணாம வளர்ச்சியை மறுக்கும் மதவாதிகள் டார்வினுக்கு முந்தைய பரிணாம கோட்பாடுகளில் இருந்த குறைபாடுகளை முன்வைத்தே கேள்வியெழுப்புகின்றனர். உதாரணமாக எல்லா குரங்கும் ஏன் மனிதனாகவில்லை? இப்போது ஏன் குரங்கு மனிதனாக மாறுவதை நாம் காண முடியவில்லை. பரிணாமம் தற்போது ஏன் நிகழவில்லை? போன்ற கேள்விகள் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சியை மனதிற்கொண்டு 19-ம் நூற்றாண்டிலேயே கேட்கப்பட்டு டார்வினின் கோட்பாட்டால் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டவைதான்.
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடையவில்லை. மாறாக ஒரு பொது மூதாதை உயிரினத்திலிருந்து மனிதனும் குரங்கும் இயற்கை தெரிவின் மூலம் மாற்றமடைந்து வெவ்வேறு உயிரினங்களாக மாறின. மேலும் மாற்றங்கள் சிறுக சிறுக படிப்படியாக நடக்கின்றன. அவை பரிணாமத்தில் பிரதிபலிக்க ஆயிரத்தில் தொடங்கி இலட்சம் கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் தான் நம்மால் அவற்றை கண்டுணர இயலவில்லை.
மேலும் பூச்சிக் கொல்லிகளில் இருந்து தம்மை தகவமைத்து பாதுகாத்துக் கொள்ளும் பூச்சிகள், கொசு மருந்துகளால் பாதிப்படையாத கொசுக்கள் என இன்றும் தகவமைத்தல் நடந்து கொண்டுதானிருக்கிறது.
இயற்கை தெரிவு அதுவரை நிலவிவந்த மதவாத முகாம்களைச் சேர்ந்த கருத்துமுதல்வாத மற்றும் இயக்கமறுப்பியல் தத்துவ, சிந்தனை முறைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து குப்பைக்கு வீசியெறிந்ததுடன் அறிவியல் பூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாததிற்கு நிருபணமாகவும் இருக்கிறது.
ஆனால் இன்றும் மதவாதிகள் பரிணாமம் என்பது டார்வின் முன்வைத்தது ஒரு கோட்பாடே அன்றி உண்மை அல்ல என்கின்றனர். பரிணாமம் என்பது இயற்கையில் நடக்கும் எதார்த்த உண்மையாகும். இயற்கை தெரிவு என்பதே டார்வின் முன்வைத்த கோட்பாடாகும்.
முன்னர் டார்வினை மூர்க்கமாக எதிர்த்த கத்தோலிக்க பாதிரிகள், இன்று அனைத்து உயிர்களுக்கும் மூதாதையான ஆதி உயிரிலிருந்தே தோன்றின என்ற பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த ஆதி உயிரை படைத்தது தங்களது கடவுள் தானென்று வெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர்.
வேத காலந்தொட்டு தனது ஒடுக்குமுறை கோட்பாடுகளை கைவிடாமலேயே எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் சனாதான மதமோ இவை அத்தனையும் பத்து அவதாரங்களின் மூலம் அன்றைக்கே சொல்லப்பட்டு விட்டதாகவும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளனைத்தும் தங்களது இந்து தத்துவ மரபை நிருபணம் செய்யும் சான்றாதாரங்களே என்றும் வழமைபோலவே பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இசுலாமியர்களும் குரானின் வசனங்களுக்கும் அறிவியியல் கண்டுபிடிப்புகளுக்கும் முடிச்சு போட்டு எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டதாக தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதாவது எல்லா மதவாதிகளும் இயற்கையில் இல்லாத தங்களது இருத்தலுக்கான வாய்ப்புகளை அறிவியலிடம் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு சமாளிக்க முயல்கின்றனர்.
மற்றொரு புறம் டார்வினின் பரிணாமக் கொள்கையை குறுக்கித் திரித்து வறட்டுத்தனமாக சமூகத்திற்கு பொருத்துகின்றனர் சிலர். 18-ம் நூற்றாண்டில் மால்துஸ் தமது கட்டுரைகளில் அன்றைய முதலாளித்துவ சமூகத்தில் நிலவிய பட்டினிச்சாவுகள், வேலையின்மை போன்ற கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை இயற்கை நியதியாக முன்வைத்து மனித சமூக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில் உருவான முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் நிலவிய சமூக அவலங்களை எக்காலத்திற்கும் பொருந்தும் இயற்கை விதியாக்கி சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முட்டுக்கொடுத்தை, சமூக வரலாற்றின் இயக்க விதிகளை கண்டறிந்த மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.
நவீன மால்தூசியர்கள் இன்றும் கூட தகுதியானவை பிழைத்திருக்கும், வலியவை உயிர்வாழும் போன்ற டார்வினுடைய கோட்பாட்டை கொண்டு முதலாளித்துவ சுரண்டலையும் ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துகின்றனர்.
தகுதியான பண்புகளை சந்ததிக்கு கடத்தும் மரபு விதிகளை செயல்முறைபடுத்தி தகுதியற்றவை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை தடுப்பதாக கூறி இனப்படுகொலைகளும் கூட நியாயப்படுத்தப்படுகின்றன. டார்வினின் கோட்பாட்டை பின்பற்றியே நாஜிக்கள் ஆரிய இனத்தின் புனிதப்பண்புகளை உயர்த்துவதற்காகவும் பரவலாக்குவதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் இனப்படுகொலைகளை நடத்தியதாகவும் அவதூறு பரப்பப்படுகிறது.
இயற்கையை கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை மனிதன் தனது செயல்பாடுகளால் தீர்மானித்து மாற்றியமைக்கும் சமூக நிகழ்வுகளுக்கு பொருத்துவதும், டார்வினின் இயற்கை தெரிவு கோட்பாட்டிற்கும் நாஜிக்களின் இனப்படுகொலைக்கும் முடிச்சு போடுவதும், டார்வினின் கோட்பாடுகளை பற்றிய அறிவீனம் மட்டுமின்றி திட்டமிட்ட அவதூறுமாகும்.
டார்வின் முன்வைத்த இயற்கை தேர்வு கோட்பாட்டில் எவ்வித புனித பண்புகளையும் குறிப்பிடவில்லை. உயிர்கள் சூழ்நிலையில் உயிர்த்திருப்பதற்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பண்புகளை, உயிர்கள் அப்பண்புகளை பெறுவதற்கு இயற்கை நிர்பந்திப்பதாகவும் தான் கூறினார். இனப்படுகொலையாளர்கள் இயற்கை தெரிவு கோட்பாட்டை பின்பற்றவில்லை, மாறாக செயற்கை தெரிவு நடைமுறையையே பின்பற்றுகின்றனர், அத்தகைய நடைமுறைகள் இயற்கையானவை அல்ல, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கை தெரிவை மறுக்கும் கடவுள் படைப்பு கோட்பாடும் கூட ஒருவகையில் இத்தகைய செயற்கை தெரிவு நடைமுறையே என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனுடைய சமூக ரீதியான போராட்டத்தில் இயற்கைத் தேர்வின் பங்கான கூட்டுழைப்புதான் முக்கிய பங்காற்றியிருக்கிறது. இந்தக் கூட்டுழைப்புதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, தொகுத்து, ஆய்வு செய்து, புதியவற்றை கண்டுபிடித்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் இந்த இயற்கைத் தேர்வு தன்னுணர்வு பெற்று உணர்வுபூர்வமாக அதை முன்னெடுக்கும் போராட்டத்தினை நடத்துகிறது.
இன்றைக்கு இயற்கைத் தேர்வும் அது சார்ந்த பரிணாமும் மனிதனின் புரிதலுக்குள் வந்து விட்டபடியால் அதில் மனித அறிவும் இனி வினையாற்றும். அதாவது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்த செயல்பாடுகளில் மனிதனின் அறிவு பாரிய மாற்றத்தை கொண்டு வரும், வந்திருக்கிறது. ஒட்டு ரக விதைகள், குளோனிங், பிராயலர் கோழி, லெக்கான் கோழி, சீமைப் பசு என்று அதற்கு ஏராளம் சான்றுகளைக் கூறலாம். எதிர்மறையில் இவை உயிரியில் ஆயுதங்களாகவும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் இருக்கின்றது. அதே நேரம் இப்போதும் போராட்டத்திற்கான களம் நின்றுவிடவில்லை. மனித சமூகத்தில் இருப்பவனும், இல்லாதவனும் பிரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் ஏழைகள் அல்லது உழைக்கும் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவியல் உண்மையாக மார்க்சியம் நிறுவியிருக்கிறது. அப்போது இயற்கைத் தேர்வும் அது உருவாக்கிய மனிதனின் செயற்கைத் தேர்வும் இணைந்து பொது நலனின்பாற்பட்டு ஒரு உன்னத இயற்கை அமைப்பை காப்பதற்கு வேலை செய்யும். அப்போது டார்வின் விதித்திருந்தபடி இயற்கைத் தேர்வில் தோற்க இருக்கும் உயிரினங்கள் கூட காக்கப்படும்.
இது டார்வினின் கோட்பாட்டிற்கு மாறானதல்லவா என்று சிலர் கேட்கலாம். இல்லை. இயற்கை தன்னைத் தானே அறியாமல் காப்பாற்ற முயற்சி செய்ததற்கும், தன்னை அறிந்து கொண்டு காப்பாற்ற முயற்சி செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அதாவது ஒட்டு மொத்த இயற்கையும் கூட எளிமை எனும் இயக்கத்திலிருந்து சிக்கல் எனும் வளர்ச்சியை நோக்கி மாறுகிறது. அனிச்சை முயற்சிகள் திட்டமிட்ட முயற்சிகளாக மாறுகின்றன. இறுதியில் கடவுளை படைத்த மனிதனே இயற்கையின் பாதுகாவலனாக மாறுகிறான். இதற்கு டார்வின் போன்ற அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை அறிவியல் மட்டும் போதுமானதல்ல. சமூக அறிவியலான மார்க்சியத்தின் புரட்சிகள் தேவைப்படுகிறது.
கல்லூரி ஆண்டு மலரில், நரேந்திரமோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒருவராக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டமைக்காக அக்கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திரிசூர் அருகேயுள்ள குன்னங்குளம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு மலரில், “மனிதமுகங்களின் வழியே உலக வரலாற்றை கூறுவது” என்ற வகையில் ஆன்மீகம், இலக்கியம், உலக தலைவர்கள், எதிர்மறை ஆளுமைகள், விளையாட்டு என்று ஐந்து தலைப்புகளில் பலரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘எதிர்மறை முகங்கள்’ என்ற தலைப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒசாமா பின்லேடன், ஹிட்லர் ஆகியோர் படங்களுடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. சந்தன கடத்தல் வீரப்பன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படங்களும் இதில் அடக்கம்.
இதில் மோடியை சேர்த்தமைக்காக, கடந்த மாதம் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் குட்டி, ஆண்டுமலரின் மாணவ ஆசிரியர் பிரவீண், கல்லூரி தரப்பின் நிர்வாக ஆசிரியர் கோபி, ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் நிகில், சியாம், ஜேம்ஸ் அச்சக உரிமையாளர் ராஜீவ் உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120-B (கிரிமினல் சதி), 153 (கலவரத்தை தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) 34 (ஒரே நோக்கத்திற்காக பலர் இணைந்து கிரிமினல் குற்றம் செய்தல்), 500 (அவதூறு), 501 (அவதூறை பிரசுரித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்.
கல்லூரியின் தற்போதைய முதல்வர் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். ஆயினும் கல்லூரியில் ‘அதிரடி’ சோதனை நடத்திய போலீஸ் ‘கிரிமினல் சதி’ மற்றும் ‘கலவரத்திற்கு’ பயன்பட்ட ‘அதிபயங்கர ஆயுதங்களான’ ஆண்டுமலர் பிரதிகள், DTP செய்த கணினி, வன்தகடு (ஹார்ட் டிஸ்க்) ஆகியவற்றை கைப்பற்றி சென்றுள்ளது.
இது தங்களின் கருத்துரிமையை பாதிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரிகையின் மாணவ ஆசிரியர் பிரவீன் ஆண்டுமலரை திரும்ப பெறும் கல்லூரியின் முடிவையும், அரசின் கைதையும் எதிர்த்துள்ளார். ”நாங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு இந்திய குடிமகனாக மோடியை விமர்சிக்க எங்களுக்கு உரிமையுள்ளது. நாட்டின் பிரதமரை அவமதிக்கும் நோக்கில் இதை செய்யவில்லை. மலரின் உள்ளடக்கம் கடந்த அக்டோபர் மாதமே ஆசிரியர்களுடன் விவாதித்து முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து இதை வெளியிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
குன்னங்குளம் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்வர் மீதான நடவடிக்கையின் தொடர்ச்சியாக குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி இதழில் மோடியை பற்றி ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறுக்கெழுத்து புதிர் பகுதியில் நாயையும் மோடியையும் இணைத்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. (நமோ என்பதை கண்டுபிடிக்க “நாயின்ட மோன்” என்று குறிப்பு கொடுத்திருந்தார்கள் என்று போலீஸ் கூறுகிறது).
குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட முசுலீம் மக்களை காரில் அடிபட்ட நாய்க்குட்டியுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்க மோடிக்கு இருக்கும் சுதந்திரம் அவரை நாயின்ட மோன் என்று கூப்பிட மாணவர்களுக்கு கிடையாதா? அடுத்து குஜராத்தில் மோடி மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டை ஒட்டித்தான் இம் மாணவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு?
குன்னங்குளம் அரசு பால்டெக்னிக் கல்லூரி ஆண்டு இதழ் அட்டைப் படம்
அடுத்து மோடியை எதிர்மறை ஆளுமைகளில் ஒன்றாக போட்ட விவகாரத்தை பார்ப்போம். ஹிட்லர், பின்லேடன், புஷ், வீரப்பன், பிரபாகரன் போன்றோருடன் மோடி படம் போடப்பட்டதில் இந்துமதவெறியர்களுக்கு என்ன சிக்கல்? இதில் ஹிட்லர், புஷ்ஷோடு போட்டதில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பிரச்சினை ஒன்றும் இல்லை.
ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கோல்வால்கர், ஹிட்லரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசியதை “ஞானகங்கை” நூலில் பார்க்கலாம். கோல்வால்கர் காலம் தொட்டு இன்று மோகன் பகவத் காலம் வரை அமெரிக்க அதிபர்கள் காலை தொட்டு நக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு புஷ் மீதும் பிரச்சினை இல்லை. அதாவது ஹிட்லர், புஷ் கூட மோடி படம் இருந்தால் அது இந்துமதவெறியர்களுக்கு கௌரவம். மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றவர்களை பார்ப்போம். பின்லேடன், வீரப்பன், பிரபாகரன் போன்றோரை ஹிட்லர், புஷ் போன்ற உலக மேலாதிக்க பாசிஸ்டுகளின் கணக்கோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. மேலும் இவர்களின் தவறுகள், பிரச்சினைகளின் தன்மை வேறு. குறிப்பான ஒடுக்குமுறை, சுரண்டல் அமைப்புக்கு எதிராக தோன்றி வளர்ந்தும், அது ஒடுக்கும் சக்திகளால் திசைதிருப்பப் பட்டும் போனதால் வந்த பிரச்சினைகள்தான் இவர்களது தவறுகள். இவர்களில் பிரபாகரனும், வீரப்பனும் ‘இந்துக்கள்’. பின்லேடன் மட்டும் முசுலீம் என்பதால் இவர் கூட மோடியா என்று இந்துமதவெறியர்கள் கோபம் கொண்டிருக்க கூடும். அதாவது தாம் ஒழிக்க விரும்பும் இசுலாமியர்களின் ‘தலைவனோடு’ நமது தலைவன் இடம் பெறுவதை சகிக்க முடியாது என்பதே அவர்களது எரிச்சல். மற்றபடி இதில் பாசிஸ்டுகளோடு ஜனநாயகத்தை கலக்கலாமா என்று அவர்கள் எழுப்பினால் அது யாராலும் சகிக்க முடியாத கருத்தாக மட்டுமே இருக்கும்.
ஆனால் அமெரிக்காவின் புஷ்ஷும், ஜெர்மனியின் ஹிட்லரும் முழு உலகை தமது ஆளுகைக்குள் கொண்டு வர முயன்றவர்கள். அதற்காக எண்ணிறந்த மக்களை கணக்கு வழக்கில்லாமல் கொன்றவர்கள். இத்தகைய வில்லன்களோடு மட்டும் மோடியின் படத்தை போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதே நமது கருத்து.
இரண்டு கல்லூரி மாணவர்களும் சி.பி.எம் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆயினும் இது வரை மாணவர்கள் கைதுக்கு எதிராக சி.பி.எம் போலிகள் போராடியதாக எந்த செய்தியும் இல்லை.
இந்துத்துவ பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள் இது போன்ற பல கைதுகள் நடந்து விட்டன. ஜனநாயகத்தின் வாசனை கூட மக்களுக்கு கிடையாது என்பதை இவர்களது நடவடிக்கைள் காட்டுகின்றன.
கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் மோடியை விமர்சித்து முகநூலில் எழுதியதற்காக கோவாவை சேர்ந்த ஜோடங்கர் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுத்தது கோவா பா.ஜ.க அரசு. இத்தனைக்கும் ஜோடங்கர் ஒரு பா.ஜ.க அனுதாபி. ஆனால் மோடியை கட்சி முன்னிறுத்துவதை பிடிக்காமல் மோடி போன்ற கொலைகாரன் ஆட்சிக்கு வந்தால் கோவாவிலும் குஜராத்தை போன்ற இன அழிப்பு தொடரும் என்ற அபாயத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் பதியப்பட்டன. தங்கள் பங்கிற்கு மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அவருக்கு முன்பிணை மறுத்தன.
அடுத்த சில நாட்களில் மோடியை கிண்டல் செய்து வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதற்காக கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்ட பல்கலைகழக எம்.பி.ஏ மாணவர் சையது வாக்கஸ் கைது செய்யப்பட்டார். இவை பத்திரிகைகளில் வெளிவந்த சில உதாரணங்கள் மட்டுமே.
பழைய அச்சு ஊடகம் முதல் நவீன வாட்ஸ்அப் வரை சொல்லிக் கொள்ளப்படும் கருத்து சுதந்திரம் எப்படி ‘கொடிகட்டி பறக்கிறது’ என்பதை மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. அதிலும் ஜனநாயக மறுப்பையே தனது சித்தாந்தமாக கொண்ட பார்ப்பன பாசிச பா.ஜ.க ஆட்சியை பிடித்த பிறகு மக்களின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் முன்னைவிட அதிகரித்து வருகிறது.
முகநூலில் யாரோ ஒருவர், கொலைகாரன் பால்தாக்ரேவை விமர்சித்ததற்காக பூனே நகரில் கலவரம் செய்தது இந்துத்துவ கும்பல். தலையில் குல்லா அணிந்துவந்த ஒரே குற்றத்திற்காக இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். அதை ‘முதல் விக்கெட் விழுந்துவிட்டது என்றும் தமிழகத்திலும் அப்படி செய்ய வேண்டும்’ என்று முகநூலில் இந்துத்துவ சில்லறைகள் கொண்டாடுகிறார்கள். ‘எங்கள் ஆட்சி வந்துவிட்டது’ என்ற அதிகார போதை உந்தித்தள்ள ‘யாரும் கேள்விகேட்க முடியாது’ என்று வெறியில் ஊளையிடுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிட்லரது கொள்கை மட்டுமல்ல நமஸ்கார முறைகளும் ஒன்றுதான்
பா.ஜ.க இதில் முன்னணியில் நின்றாலும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இந்துத்துவ பெரும்பான்மை அரசியலை பல்வேறு அளவுகளில் கடைப்பிடிக்கின்றன. மோடியை விமர்சித்தவர்களை கைது செய்த கர்நாடகா மற்றும் கேரளாவின் ஆட்சி பொறுப்பில் இருப்பது, காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியை சேர்ந்த மோடி விமர்சிக்கப்பட்டிருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற வகையில், தங்கள் வர்க்கத்தின் அதிகாரம் சாதாரண மாணவர்களால் கேலிப்பொருளாக்கப்படுவது அவர்களையும் அச்சுறுத்துகிறது. மேலும் பாபர் மசூதி இடிப்பிலிருந்து குஜராத் கலவரம் வரை காங்கிரஸ், பா.ஜ.க.வின் கூட்டாளியாக தான் எப்பொழுதும் செயல்பட்டிருக்கிறது என்பதால் காங்கிரஸ் அரசின் கைது நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்றல்ல.
தங்களை தாராளவாதிகள் (லிபரல்கள்) என்று அழைத்துக்கொண்டு மோடியை ஆதரித்த முதலாளித்துவ ‘கருத்துரிமை காவலர்கள்’ எவரும் இதுவரை இந்த கைதுகள் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளும் மோடியை அவமதித்து விட்டார்கள் என்ற கோணத்தில் தான் செய்தியை கொண்டு செல்கின்றன. தாங்கள் சொல்லிக்கொள்ளும் கருத்துரிமை, ஜனநாயகம் பறிபோகிறது என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
காவி இருள் கவ்வி வரும் சூழலில் இந்த கைதுகளை கண்டித்து உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. இல்லையேல் 2002 குஜராத்தில் கலவரமோ இனப்படுகொலையோ ஒன்றும் நடக்கவில்லை என்று கூட வரலாற்றை மாற்றுவார்கள். அதை மறுத்தால் மோடியை இழிவுபடுத்திவிட்டதாக நம் மீது வழக்கு போடுவார்கள்!