Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 655

பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி

8

இன்டஸ் பொறியியல் கல்லூரி 290’களுக்கு பிறகான காட் (GATT) ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனம் அமலாக்கப்பட்டதின் விளைவால் கல்வி தனியார்மயம் தீவிரமாக்கப்பட்டது. திடீர் பணக்கார அரசியல்வாதிகளும், திடீர் பணக்கார ரவுடிகளும், சாராய, மணல், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், மொத்தத்தில் பணக்காரர் எவரும் கல்வி நிறுவனம் துவங்கலாம், கல்வித் தந்தை ஆகலாம்  எனும் நிலை தோன்றியது. இதனாலேயே புற்றீசல் போல கல்லூரிகளும் பள்ளிகளும் துவங்கப்பட்டன. அதிலும் பொறியியல் கல்லூரிகள் பல்கிப்பெருகின. இத்தகையதோர் கிரிமினல் கல்வி முதலாளியின் கொடூரமான லாப வெறிக்கு வாழும் உதாரணமாக கோவை ஆலாந்துறை அருகிலுள்ள இண்டஸ் பொறியியல் கல்லூரி ‘ஒளி’ வீசிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களிடையே பொறியியல் கல்விக் கொள்ளை ஆர்வம் குறைந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு இருண்ட கல்லூரியை அறிமுகப்படுத்துவது பயனளிக்கும். இந்த இண்டஸ் கல்லூரி மற்றும் ஈஸா காருண்யா போன்ற பல நிறுவனங்கள், மேற்கு தொடர்ச்சி மலை அருகாமையில் ஆக்கிரமித்துக் கொண்டு, வனபகுதி ஆக்கிரமிப்பு வழக்குகளில் உள்ளன. அதில் இந்த கல்லூரி மிக மோசம்.

வனப்பகுதிக்கும் ஊர்ப்புறத்திற்கும் இடையே “இடைதாங்கு மண்டலம்” என்று ஒரு பகுதி இருக்கும். இங்கு எந்த கட்டிடமும் இருக்க கூடாது என்பதே விதி. ஆனால் இந்த கல்லூரியில் அந்த இடைதாங்கு மண்டல குறியீட்டு கல்லே கல்லூரி வளாகத்தில்தான் இருக்கிறது. அடுத்து இன்னும் எத்தனை நாட்கள் இந்த கல்லூரி இருக்கும் என தெரியாத நிலையில் இங்கு படிக்கும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களின், 800 குடும்பங்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த திருட்டுக் கல்லூரி.

இந்த கல்லூரி மாணவர்கள் சமீபத்தில், அடிப்படை வசதிகளுக்காகவும் தரமான உணவுக்காகவும் செய்த போராட்டமும், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நிகழ்வையும் கவனித்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் அங்கே சென்றோம். கிளம்பும் போதே மணி மாலை 6 ஆகிவிட்டிருந்தது. ஆலாந்துறை சென்று விசாரித்ததில் பெரும்பாலானோர்க்கு அப்படி ஒரு கல்லூரி இருப்பதே தெரியவில்லை. மேலும் விசாரித்துக்கொண்டு சென்றோம்.

கல்லூரியின் முகப்பு என அவர்கள் இணைய தளத்தில் போட்டிருக்கும் படம். ஆனால் இப்படி ஒரு கட்டிடமே அங்கு இல்லை.

நாதே கவுண்டன் புதூர், காளிமங்கலம் செல்லும் வழியில் முதனத்மைச் சாலையிலிருந்து கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலை வனத்திற்குள்  செல்லும் சாலை அது. இருபுறமும் தெரு விளக்கு ஏதுமின்றி கும்மிருட்டாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யானையோ,சிறுத்தையோ அல்லது காட்டுப்பன்றியோ வரக்கூடிய சூழல். வீடுகளிலும் 7 மணிக்கு மேல் யாரும் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. ஊரை தாண்டி வனத்திற்குள் செல்லும் சாலையில் நடந்து, கிட்டத்தட்ட கல்லூரியை நெருங்கி விட்டோம். மலையின் அடிவாரத்திற்கே வந்து விட்டோம். மணி எட்டு இருக்கும். சாலையின் இடது புறம் நான்கு மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். ரொம்ப நல்லதாகவே போச்சு என நினைத்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசினோம்.

இறங்கியவுடன் “அட்மிஷனா…?” என கேட்டனர்.

இல்லை என கூறி புமாஇமு-வை அறிமுகப்படுத்திக் கொண்டு, கல்லூரியில் என்னதான் நடக்கிறதென்பதை தெரிந்து கொள்ள வந்ததை கூற…

அம்மாணவர்கள் விரக்தியுடன் பேசத் துவங்கினர்.

“நீங்களே பாருங்கண்ணா.,
ஆலாந்துறை யிலிருந்து காளி மங்களம் வரைதான் அரசுப்பேருந்து. அதுவும் மூன்று பேருந்து தான். அங்கிருந்து எப்பவுமே இரண்டு கிலோமீட்டர் நடந்து தான் வர வேண்டும். அந்த பேருந்தை விட்டு விட்டால் அவ்வளவு தான், எட்டு கிலோ மீட்டர் நடக்கணும். இத்தனைக்கும் இது யானை அடிக்கடி இறங்கும் பகுதி. இப்பவும் பஸ்ஸை விட்டுவிட்டு நடந்து வருகிறோம்” என்றார்கள்.  “

எப்படி பயமில்லாமல் வருகிறீர்கள்” என கேட்கவும், பழகி விட்டது என்கிறார்கள். “சரி, இப்போது எங்கே போய்விட்டு இவ்வளவு லேட்டாக வருகிறீர்கள்” என்று கேட்டவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரியில் சென்று அப்ளிகேஷன் வாங்கி வந்ததை கூறினார்கள். கல்லூரி மாறுமளவுக்கு அங்கே என்ன பிரச்சினை..?

“இந்த காலேஜ் தாண்ணா பிரச்சினை.

அஞ்சு மாசமா எந்த ஸ்டாஃப்க்கும் சம்பளம் கொடுக்கல, அதனால அவங்களும் பாடம் நடத்தல. கேண்டீன்ல சாப்பாடு எதுவுமே சரியில்ல… அண்ணா பல்கலை கவுன்சிலிங்க் மூலமா தெரியாம வந்து சேர்ந்துட்டோம். இப்ப TC தர மாட்டேங்குறான். குடிக்கவோ, குளிக்கவோ தண்ணி இல்லீங்க. எந்த பிரச்சினை எடுத்து ஸ்டிரைக் பண்ணாலும் டைரக்டர் வருவாரு (சிவகுமார்). பசங்கள்ட்ட ‘அப்பிடியே நாளைக்கு ரெடி பண்ணிறலாம், நாளை மறு நாள் செஞ்சுரலாம்னு’ சொல்லி சொல்லியே கலைச்சுருவாரு. நல்லா மண்டைய கழுவுவாரு. அடுத்த ஒரு வாரத்துக்கு நல்லா இருக்கும் அப்புறம் அவ்ளோதான் மறுபடியும் பழைய பஞ்சாங்கம்தான் தொடரும்.

ஸ்டாஃப் எல்லோருமே எங்களுக்கு சப்போர்ட்டு, பிரின்சிபாலும் எங்களுக்கு சப்போர்ட்டு. ஸ்டாஃப்ல முக்காவாசி பேரு M.E கூட கம்ப்ளீட் பண்ணல. எல்லாம் BE முடிச்சிட்டு வேலையில்லாம இருந்தவங்க அப்புறம் M.E கரஸ்ல பண்றவங்க. அவ்ளோதான்.

போன மாதம் முதல் வருட மாணவன் ஒருவன் சகித்துக்கொள்ள முடியாமல் TC வாங்க அவனின் பெற்றோரை  அழைத்து வர… கல்லூரி நிர்வாகமோ, “இப்பல்லாம் டைரக்டரா பாக்க முடியாது. TC யும் தர முடியாது நீங்க அப்டியே ஈசா வெள்ளிங்கிரி மலைனு சுத்தி பாத்துட்டு ஊரப்பாக்க போங்க”  என தெனாவெட்டாக பதில் சொல்லியிருக்கிறது.

இன்னொரு மாணவனின் தந்தையும் தந்தையின் நண்பர்களும் பையனை பார்க்கலாம் என வந்த பொழுது குடிக்கவோ…கழிவறை தேவைக்கோ கூட தண்ணியில்லாமல் தொட்டியில் இறங்கி மாணவர்கள் மொண்டு கொடுத்திருக்கிறார்கள்.

இண்டஸ் பொறியியில் கல்லூரி
கல்லூரியின் இணைய தளத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும் ஃகிராபிக் கட்டிடம். நேரில் சென்றால் யாரும் பார்க்க முடியாத பேய் மாளிகை!

இதிலும் ஹாஸ்டலில் உள்ள பெண்கள் நிலை ரொம்பவுமே மோசம். தண்ணியில்லாம என்னதான் செய்யறாங்களோ… வெளியவே வர மாட்டாங்கண்ணா. நீர்த்தேக்க தொட்டி சுத்தமாகவே பராமரிப்பில்லாமல் பாசி பிடித்து பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும். அந்த தண்ணில குளிச்சு நிறையா பேருக்கு ஸ்கின் டிசிஸ் வந்துருக்குது என்றனர். கைகளிலும் தோள் பட்டையிலும் நிறைய பேருக்கு கொப்புளங்களும் தேமலும் தென்பட்டன.

இன்ஸ்பெக்சன் வரும் பொழுது மட்டும் வெளியிலிருந்து வாடகைக்கு படித்த ஸ்டாஃப்களை கூட்டி வந்து பில்ட் அப் கொடுத்துவிடுவார்கள். மாணவர்கள் எங்களுக்கு ஐடி கார்டு மூணு மாசம் கழித்து தான் வந்துச்சு ஆனா அவங்களுக்கு ஒரே நாள்ல ஐடி கார்டு. இன்ஸ்பெக்சன் வர்ற அன்னிக்கு  எங்கள வெளியவே விட மாட்டாங்க. இல்ல லீவு விட்டு அனுப்பிருவாங்க… ஸ்டிரைக் பண்ணா ஒன் வீக் லீவு. தண்ணி யில்லானா லீவு, என்ன பிரச்சினைனாலும் லீவு. பாடம் இன்னும் ஒரு யூனிட் கூட கம்ப்ளீட் பண்ணலனா… அப்புறம் நாங்க எப்படிதான் படிக்கிறது. இதுனாலயே எல்லோருமே அரியரு. ஆனா பீஸு மட்டும் கரக்டா வாங்கிருவாங்கண்ணா….. வருசத்துக்கு அப்டி இப்பிடி னு கிட்டத்தட்ட 1 லட்சம் வாங்கிருவாங்க…

கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் கட்டய புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க அவ்ளோதான். ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணி விட்டுட்டாங்க…. வேற வழியில்லாம பிரின்சிபால் அவர் வீட்டிலிருந்து டேட்டா கார்டு கொண்டு வந்து கல்லூரி கோப்புகளை மாணவர் மதிப்பெண்களை அண்ணா யூனிவர்சிட்டிக்கு அப்லோட் பண்ணுனாரு. இந்த மாதிரியான கொடுமை எங்கயாவது  நடக்குமா…

ஒவ்வொரு ஸ்டாப்க்கும் 50,000 வரை சம்பளம் பெண்டிங்க். இது போக பிரின்சிபால், ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட் HOD எல்லாம் லச்சக்கணக்குல காலேஜ்க்கு கடன் கொடுத்துட்டு அதுவும் கெடைக்காம சம்பளமும் இல்லாம இருக்காங்க. காலேஜ் பஸ் மூணு இருக்குது. மூனுமே டீசல் போட காசில்லாம நிக்குது. ஆனா எல்லாத்துக்கு பீஸு வாங்குராங்க. பிளேஸ்மெண்ட் ட்ரெயினிங்னு காசு வாங்குநாங்க…. சென்னை சில்க்ஸ்ல அக்கவுண்டண்ட் வேலைக்கு வந்து MBA பசங்க ஒரு 4 பேரை கூட்டிட்டு போனாங்க அவ்ளோதான். ஒண்ணும் நடக்கல. I.V னு சொல்லி ஒவ்வொருத்தன் கிட்டயும் 10,000 வாங்குனாங்க இன்னிக்கு வரைக்கும் காலேஜ் கேட்ட தாண்டி கூட்டிட்டு போகல.

இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்க இன்னும் ஒரு அஞ்சாறு பசங்க அதே மாதிரி நடந்து வர.. அவர்களையும் இணைத்துக்கொண்டோம். மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவர்களும் வேறு கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்க போனவர்களே.

சரி, இது யானை வர இடம் காலேஜ்க்குள்ள போலாம் இல்லாட்டி நீங்க கிளம்புங்க என அவர்கள் கூற… கல்லூரிக்குள் செல்வது என முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

இவ்ளோ நேரம் கழித்து கல்லூரிக்குள் போறோமே என்று யாரும் எங்களை மறிக்கவில்லை. நாங்கள் கேட்டை திறந்து போக வாட்ச் மேன் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

காலேஜ்க்கு போர்ட்லாம் இல்லையா….?

இருந்துச்சு….. ரெண்டு நாளைக்கு முன்னாடி கலெக்டர் ஆபீசுக்கு போறதுக்கு முந்தின நாள் ஸ்ட்ரைக்லா தான் பசங்க ஒடச்சாங்கா….!

கல்லூரியின் மெய்ன் கெட் வழியாக யானை ஒரு முறை உள்ளே வந்து பின்னே உள்ள தொட்டியில் நீர் குடித்துவிட்டு சென்றிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை உள்ளே வந்து கல்லூரிக்குள் சுற்றி கொண்டிருந்த நாயை அடித்து இழுத்து சென்றிருக்கிறது.

கல்லூரிக்கு சுற்றுச்சுவர் ஒரு புறம் தான் இருக்கிறது. மறு புறம் சுவரே இல்லை நேரடியாகவே மலையின் அடிப்புறத்தில் இறங்குகிறது.

இப்படித்தான் ஒரு முறை மாணவர்கள் தரமான உணவு வேணும் என கேட்டு ஸ்டிரைக் செய்ய டைரக்டர் வந்து மாட்டி கொண்டார். அவரை சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி மாணவர்கள் சாப்பிட வைக்க….. வாயில் வைக்க முடியாத சாப்பாட்டை நல்லாதான் இருக்கு என வாய் கூசாமல் அவர் கூற…. சார் மனசாட்சியோட சொல்லுங்க உங்க பசங்க இந்த சாப்பாட்டை சாப்பிடுவாங்கலான்னு என ஒரு மாணவர்  கேட்க… அமைதியாக தலையை குனிந்து கொண்டாராம். இப்போதெல்லாம் அவர் வருவதே இல்லை.

இண்டஸ் பொறியியில் கல்லூரி.1
கழிப்பறைக்கே வசதி செய்யாத கல்லூரி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வேலை வாங்கித் தருமாம்!

கல்லூரிக்குள் சென்று அனைத்து பகுதிகளையையும் மாணவர்கள் காட்டினார்கள். செய்முறை வகுப்பகங்களில் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் பற்றாக்குறை. மொத்தமாகவே 2 அல்லது 3 லேத் தான் இருக்கும் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கும் மொத்த மாணவர்களுக்கும். மாணவர்களின் ஹாஸ்டலும் லேப் உம் ஒரே கூரையின் கீழ் கேபின் கேபினாக பிரித்திருக்கிறார்கள். லேபை பூட்டினாலும் ஹாஸ்டல் வழியாக சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடலாம். அடுத்து கேண்டீனுக்கு சென்றோம். நமக்கும் சாப்பாடு போட்டு கொண்டு வந்து தந்தார்கள். சகித்து கொள்ளலாம் என்ற அளவில் இருந்தது. ஆனால் இதுவே நல்ல சாப்பாடு எனவும் ஸ்டிரைக் நடந்த பின்புதான் இந்த அளவு சாப்பாடு எனவும் கூறினர். குடிக்க தண்ணீயே பல நாள் கழித்து இப்பதான் வருது என்று கூறினர். கழிவறை காண சகிக்காமல் கதவே இல்லாமல் இருந்தது.

இவர்கள் ஸ்டிரைக் செய்யும் பொழுதெல்லாம் ஒரு ஒருங்கிணைப்பும் தீர்மானமான முடிவும் இல்லாதிருக்க நிர்வாகம் பொய்யான வாக்குறுதி கொடுத்து கலைப்பது எளிதாகவே இருந்திருக்கிறது.

வரும் 5-ம் தேதி அனைவருக்கும் TC தருவதாக கூறியிருக்கிறார்களாம். அப்படி நடக்காவிடில் மறுபடியும் ஸ்டிரைக் என அறிவிப்போம் என கூறுகின்றனர். 2007 இல் துவங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்போது கிட்டத்தட்ட 400 ரெகுலர் மாணவர்கள் 200 ஹாஸ்டல் மாணவர்கள் 200 மாணவிகள் மொத்தமாக படிக்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதத்தினரின் கருத்து என்னவெனில்…

  • இந்த விஷயத்தை பெரிய பிரச்சினை ஆக்கி அம்பலப்படுத்த வேண்டும் தமிழ்நாடு முழுவதும் தெரியப்படுத்தி இதே போன்ற கல்லூரிகளை மூட வேண்டும். அல்லது அரசுடைமையாக்க வேண்டும். அங்கீகாரம் கொடுத்த அண்ணா பல்கலை உரிய பதில் சொல்ல வேண்டும்.
  • இந்த கல்லூரி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.எங்கள் அனைவருக்கும் வேறு கல்லூரியில் இடம் வாங்கி தர வேண்டும்.

இப்படியாக இம்மாதிரியான கல்விக்கொள்ளையர்கள், அவர்கள் கொழுத்த லாபம் அடைய சமூகத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகின்றனர்.

இது ஏதோ ஒரு கல்லூரியின் கதை மட்டுமல்ல. தமிழகம் ஏன் இந்தியாவின் பல கல்லூரிகளும் இப்படித்தான் இறங்குகின்றன. இன்று பெயரெடுத்திருக்கும் முன்னணி கல்லூரிகள் பலவும் பல ஆண்டுகளாக இப்படி இயங்கி பின்னர் பணத்தை சேர்த்து தம்மை கொஞ்சம் நவீனப்படுத்திக் கொண்டன. தேவைக்கு இன்றி, பன்னாட்டு நிறுவனங்களின் அடிமாட்டு கூலிக்கு மாணவர்கள் தேவை என்பதாலேயே இத்தகைய தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பெரும் வியாபாரமாக நடத்தப்படுகின்றன.

இந்த பொறியியல் மாயையிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் வெளியேற வேண்டுமென்றால் அவர்கள் மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களோடு தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஆயுசு முழுக்க  உழைத்து சேர்த்த உழைப்பை இத்தகைய கல்வி பிக்பாக்கெட் முதலாளிகள்  பறித்து கொண்டு போய்விடுவர்.

_________________________________________________________________________

தகவல் –  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை

3
கல்வி நமது உரிமை

kamaraj poster copyசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத கட்டண உயர்வை ஏற்க முடியாது என “மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க”த்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்த்தபட்ட கட்டணத்தை செலுத்த மறுத்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடந்த ஆண்டு இறுதி தேர்வு எழுதவிடாமல் தடுத்தது. பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாவட்டத்தில் உள்ள காவல் துறை, கல்வித் துறை, தாசில்தார் என அனைவரும் பேசிய பிறகும், துணை ஆட்சியர் கதைத்த பிறகும் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், “சிங்காரவேல் எனக்கு கூட அதிக பீஸ் வாங்க சொல்லி ஆர்டர் குடுத்துட்டார்”, என திட்டவட்டமாக மறுத்து விட்டார். அன்றைக்கு நடந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் 17-4-14 அன்று இறுதி நாள் அனைவருக்கும் மீண்டும் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி துறை அதிகாரி உத்திரவிட்டார். 24 மணி நேரத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கு இதற்கான காரணத்தை தெரிவித்தாக வேண்டும் எனவும் கூறினார்.

ஆனால் குறிப்பிட்ட இறுதி நாளில் தேர்வை மீண்டும் நடத்தாமல் தாளாளர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து கேட்டை இழுத்து பூட்டி விட்டார். மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர். கல்வித் துறை, “நாங்கள் விசாரிக்கிறோம். இயக்குநருக்கு தெரிவிக்கிறோம். எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை” என கைவிரித்தனர்.

அதே சமயத்தில் உயர்த்தபட்ட கட்ட்ணம் செலுத்த வில்லை என்பதற்காக எந்த மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதி மறுக்க கூடாது, துன்புறுத்த கூடாது என நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். நீதிபதிகள், அரசு வழக்கறிஞரை பார்த்து “கல்வி துறை செயலாளருக்கு அறிவுறுத்துங்கள் .காமராஜ் பள்ளி தொடர்பாக சிங்காரவேல் உத்திரவு நகலை வைத்து மீண்டும் வழக்கு தாக்கல் செய்யுங்கள்” என சொல்லி வழக்கு முடிக்கப்பட்டது.

நீதியரசர் சிங்காரவேல் அவர்கள் உயர்த்தபட்ட கட்டணத்தை அரசு இணையதளத்தில் ஏற்றவில்லை. இது குறித்து காமராஜ் பள்ளி நிர்வாகமும் அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை. உத்தரவு காப்பி கொடுங்கள் என சிங்காரவேல் கமிட்டியிடம் நாங்கள் கேட்ட போது “உங்களுக்கு தரமுடியாது” என மறுத்து விட்டனர். தகவல் அறியும் சட்டத்தில் கொடுங்கள் என கேட்டோம், அதுவும் வரவில்லை. இந்நிலையில் நமது வழக்கறிஞர்கள் நீண்ட விளக்கம் எழுதி உத்திரவு காப்பி கொடுக்க வேண்டும்.இல்லை என்றால் உங்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என வாதிட்ட பிறகு உயர்த்தப் பட்ட கட்டண உத்திரவு கிடைத்தது.

விடுமுறை கால நீதிமன்றத்தில், “காமராஜ்பள்ளி சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து நமது போராட்ட விவரங்கள்; அந்த பள்ளி 100 சாவீதம் எப்படி கட்டணத்தை உயர்த்த முடியும்? பெற்றோர்களை கருத்து கேட்க வேண்டும். பள்ளிகளை நேரில் சென்று, எந்த ஆய்வும் கமிட்டி செய்ய வில்லை. இதில் முறை கேடு நடந்திருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது வரை புதிய கட்டண உத்திரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டோம்.

8-5-2014 அன்று நீதியரசர்கள் சுதாகரன் -சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தடை உத்திரவு வழங்கியது. தமிழகத்தில் எந்த பத்திரிக்கையும் இச்செய்தியை வெளியிடவில்லை.

சிதம்பரத்தில் சுவரொட்டியாக அடித்து ஒட்டினோம். கல்வி துறை அதிகாரிகள் வாயடைத்து போனார்கள். காவல் துறை அதிகாரிகள் இனி பிரச்சினை வராது என மகிழ்ச்சியடைந்தார்கள். பெற்றோர்களால் நம்பமுடியவில்லை. ஆனால் காமராஜ் பள்ளி நிர்வாகம், “தடை உத்திரவு எனக்கு வரவில்லை.ஆகையால் டி.சி. வாங்கினால் கூட உயர்த்தப்பட்ட கட்டணத்தை கட்டினால் தான் தருவேன்” என மறுத்தார். இந்த ஆண்டு மாணவர்களுக்கு புத்தகம்,நோட்டு தரவேண்டுமானால் புதிய கட்டணத்தைதான் கட்ட வேண்டும் என பெற்றோர்களை திருப்பி அனுப்பினார்.

பெற்றோர் சங்கம் கூடியது. டி.சி. தரவில்லை என்றால் துணை ஆட்சியரை முற்றுகையிடுவோம். தடை உத்திரவை அமல் படுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்புவோம் என முடிவு செய்தனர். நிர்வாகிகள், “காமராஜ்பள்ளி தடை உத்திரவை ஏற்க மறுக்கிறது  நாங்கள் அனைவரும் பழைய கல்வி கட்ட்ணத்தை சுமார் 70 பேர் டி.டியாக எடுத்து வைத்திருக்கிறோம். பள்ளி நிர்வாகம் வாங்க மறுக்கறது”, என மாவட்ட துணை ஆட்சியரிடம் முறையிட்டார்கள். “எனக்கு அதிகாரம் இல்லை. போனால் போகட்டும் என உங்களுக்கு உதவி செய்தேன், என்னை மிகவும் தொந்திரவு செய்கிறீர்கள் என எரிச்சல் அடைந்தார் கல்வித் துறை அதிகாரி. டி.எஸ்பியிடம் சென்று உயர் நீதிமன்ற உத்திரவு நீங்கள் அமல்படுத்தி கொடுங்கள் என முறையிட்டோம். அவர் கல்வி துறை புகார் கொடுக்காமல் நான் என்ன செய்ய் முடியும்?மாவட்ட ஆட்சியர்தான் ஏதாவது செய்ய் வேண்டும் என கழட்டி கொண்டார்.

பெற்றோர் சங்கம் மீண்டும் கூடியது. இரண்டு நாள் கெடு கொடுப்போம். பள்ளி நிர்வாகம் பணிய வில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. காவல்துறை எங்கு போராட்டம் என கேட்டனர். போரட்டம் உண்டு, இடம் முடிவு செய்ய் வில்லை என பதிலளித்தோம்.

2-6-14 அன்று பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை. உத்திரவு அனைத்து பெற்றோர்களுக்கும்தான், யார் கொடுத்தாலும் வாங்கி கொள்ள வேண்டும், இல்லை என்றால் போராட்டம் நடத்துவொம் என எச்சரித்தோம். இறுதியில் நமது சங்க உறுப்பினர்கள் கொடுத்த அனைத்து டி.டியும் ஏற்கப்பட்டு புத்தகம் மற்றும் ரசீது வழங்கப்பட்டது. காரணம் இந்த பிரச்சினையை, நாளை போராட்டத்தால் தமிழக செய்தியாக மாற்றி விடுவார்கள். ஆனால் எத்த்னை முறை அத்து மீறினாலும் அதிகாரிகளை அவமான படுத்தினாலும் தனியார் பள்ளி முதலாளிகள் மீது சிறு நடவடிக்க்கை எடுக்கக்கூட அதிகாரிகள்  அஞ்சுகின்றனர்.

 கல்வி நமது உரிமை

கட்டணக் கொள்ளைக்காக வருடா வருடம் தனியார் பள்ளிகளால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை அதிகரிக்குமே தவிர குறையப் போவதில்லை. நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து அதன் தரம் உயர்த் போராடுவதுதான் சரியானது என பெற்றோர்களுக்கு சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தபட்டது.

சில பெற்றோர்கள் சரியென ஏற்றக் கொண்டனர். சில பெற்றோர்கள் அதன் குறைபாடுகளை பட்டியலிட்டனர். சில பெற்றோர்கள் மவுனமாக கலைந்து சென்றனர். சில பெற்றொர்கள் இந்த சங்கத்திற்கு வந்திருக்க கூடாது என முனகலுடன் சென்றனர். யாரும் தனியார் பள்ளிகளை சரியென வாதிடவில்லை. சகித்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது.

________________________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்

பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !

28
மோசின் ஷேக்
தாடியும், குல்லாவும் போட்ட காரணத்திற்காகவே கொல்லப்பட்ட மோசின் ஷேக்

மாராட்டிய மாநிலம் பூனா மாநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மோசின் ஷேக், இந்து ராஷ்டிர சேனா எனும் மதவெறி இயக்கத்தால், திங்கள் கிழமை 2.6.14 இரவு கொடூரமாக கொல்லப்பட்டார். பாஜக ஆட்சியின் முதல் ரத்தப் பலி துவங்கி விட்டது.

மராட்டிய அரசன் சிவாஜி, சிவசேனாவின் செத்துப் போன தலைவன் பால் தாக்கரே குறித்து கேலி செய்யும் படங்கள், கடந்த வாரம் பேஸ்புக்கில் உலா வந்தன. அதிகமும் பூனா மாநகரப் பகுதியிலேதான் இந்த படங்கள் பரவியிருக்கிறது. இதை எதிர்த்து, இந்துமதவெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள் பூனா மாநகரையே மையம் கொண்டிருந்தன.

முதலில் சிவாஜி, பால்தாக்கரே குறித்த படங்கள், அவை கேலிக்குரியதாகவோ இல்லை ஆட்சபணைக்குரியதாகவோ இருந்தால் என்ன பிரச்சினை? கலவரங்களுக்கு தலைமை ஏற்று, சிறுபான்மை மக்களை கொன்ற பாசிஸ்டுகளாத்தான் மோடி, தாக்கரேவை, நாங்கள் உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள், சிறுபான்மை இயக்கங்களும் பார்க்கின்றோம்.

மும்பை கலவரம் உள்ளிட்டு பல்வேறு பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ள பால் தாக்கரே எனும் ரவுடியை மகானென்று அவர்கள் அழைக்கட்டும்! நாம் ஏன் அழைக்க வேண்டும்? ஒருவேளை அந்த படங்கள் ஆட்சேபணைக்குரியது அல்லது சமூக நல்லிணக்கத்தை பிளவுபடுத்துகிறது என்று கருதினால் அவர்களே சொல்லுகின்ற கருத்து சுதந்திரத்தை கடாசிவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

ஏற்கனவே பெங்களூருவிலும், கோவாவிலும், மும்பையிலும் கூட ஃபேஸ்புக் பதிவுகளுக்காக இந்துமதவெறியர்களை குளிர்விக்கும் பொருட்டு, சிலர் கைது செய்யப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். தற்போது அந்த சட்டப்பூர்வ அடக்குமுறையையும் மீறி கொலை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருக்கின்றனர்.

அடுத்து இந்த ஃபேஸ்புக் படங்களுக்கும், கொலை செய்யப்பட்ட பூனா இளைஞருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அவர் இந்த படங்களை வெளியிடவில்லை. இந்த படங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வெகுவேகமாக பரவியிருக்கின்றது. அதன் மூலம் பலர் அந்த படங்களை பார்த்திருக்கலாம். இவற்றினை வைத்து பார்க்கும் போது இந்த படங்களை யார் வெளியிட்டிருந்தாலும் அது இந்துமதவெறியர்களுக்கே பயன்பட்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அதன்படி இந்துமதவெறியர்களே கூட இந்தப்படங்களை புனைபெயரில் வெளியிட்டிருக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஃபேஸ்புக்கின் அமெரிக்க தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கும் மராட்டிய போலீசு, பதில் கிடைக்க ஒரு மாதம் ஆகும் என்பதால் அந்த படங்களை போட்டவர்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டு தப்பித்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறது.

இதன் மூலம் சுற்றி வளைத்து அந்த படங்கள் வெளியிடப்பட்டதே கொலைக்கு காரணம் என்று நியாயப்படுத்துவது போல இருக்கிறது. நம்முடைய கேள்வி படங்கள் வெளியிட்டதால் கலவரம், கொலை என்று பேசுவதே தவறு.

இல்லையென்றால் கஜினி முகமது படையடுப்பு குறித்து நாம் வரலாற்று உண்மைகளை பேசுவது கூட இந்துமதவெறியர்களுக்கு சினத்தை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் கலவரம் செய்யலாம், தாக்கவும் செய்யலாம் என்றால் இது ஜனநாயக நாடா இல்லை ஹிந்து ராஷ்டிரத்தின் பாசிசமா?

மோசின் ஷேக் திங்களன்று மசூதியில் தொழுகை முடித்து விட்டு, தனது நண்பர் ரியாசோடு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஹிந்து ராஷ்டிர சேனையின் பயங்கரவாதிகள், ஹாக்கி மட்டைகள் மற்றும் கம்பிகளால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். உதவி கேட்டு ஓடியவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்த ஷேக் பிறகு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போனார்.

அவரது நண்பர் ரியாஸ் இந்த கொலைவெறித் தாக்குதலில் தப்பிப்பதற்கு காரணம், அவர் தாடியும், குல்லாயும் வைத்திருக்கவில்லை. இவை இரண்டும் இருந்ததால் மோசின் ஷேக், அவர் ஒரு ஐடி துறை ஊழியர் என்றாலும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். தாடியும், குல்லாவும் வைத்திருந்தால் அவன் பயங்கரவாதி என்று இந்த நாட்டின் அரசுகளும், ஊடகங்களும் சொல்லும்போது, இந்து பயங்கரவாதிகள் அந்த அடையாளங்களோடு வரும் முசுலீம் மக்களை வேட்டையாடுவதில் என்ன ஆச்சரியம்?

நடந்து முடிந்த தேர்தலில், பூனா தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்பி, அனில் ஷிரோல், இந்த கொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். “பேஸ்புக்கில் என்ன வெளியிட்டார்களோ அதற்கு எதிர் விளைவு இருக்கத்தானே செய்யும்” என்று பேசியிருக்கிறான் அந்த பன்னாடை! இதைத்தானே கோத்ரா ரயில் எரிப்பின் போது மோடியும் பேசியிருக்கிறார். தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே தொண்டனும்?

ஹிந்து ராஷ்டிர சேனா
கோட்சே, சாவர்க்கரின் வாரிசனா ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவன் தனஞ்செய் தேசாய் – (நீண்ட தலைமுடி உள்ளவன்)

ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவனான தனஞ்செய் தேசாய் மற்றும் சில நபர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சேனாவும், இதன் தலைவனும் கோட்சே மற்றும் சாவர்க்கரின் நேரடி மற்றும் உண்மை வாரிசுகளோடு தொடர்பு கொண்டிருப்பதாக ஊடக செய்திகளிலிருந்து புரிகிறது. சாவர்க்கரை ஆதரித்து கட்சி நடத்துவர்கள் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் தீவிரம் போதாது என்று கருத்துள்ளவர்கள். மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.

பிரதமரான பிறகு, சாவர்க்கரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலத்திய மோடி இந்த உண்மையான சாவர்க்கரின் சீடர்களையும் அரவணைப்பார் என்பதில் சந்தேகமில்லை. நம்மவா ஆட்சி மலர்ந்து விட்டது என்ற உளவியலே இந்த கொடூரமான கொலைக்கு முக்கியமான அடிப்படை.

இந்து ராஷ்டிரத்தின் பயங்கரவாதம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது! இதை மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா கண்டித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்துமதவெறியர்களால் வாழ்க்கை இழக்கும் இசுலாமிய இளைஞர்களிடமிருந்து நிறைய தீவிரவாதிகள் வருவார்கள். தனக்கு நியாயம் கிடைக்கவில்லை, கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவனை பயங்கரவாதம் சுலபமாக வென்றெடுக்கும்.

ஆனால் இந்துமதவெறிக் கூட்டத்திற்கு அந்த பிரச்சினை இல்லை. அவர்களுக்கு இந்த நாட்டின் அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் அனைத்தும் கையில் இருக்கிறது. இது போக மோடி ஜெயித்து விட்டதால் அவர்கள் தமது பயங்கரவாதங்களை சட்டப்படியே கூட செய்வார்கள்.

அதாவது பால்தாக்கரே குறித்து தவறான படம் போட்டார்கள், கஜினி முகமதுவின் நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்று சில காரணங்களை சொன்னால் போதும்.

பார்ப்பனிய இந்துமதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்காமல் இந்தியா ஒருபோதும நிம்மதியாக இருக்கமுடியாது.

நிம்மதி வேண்டுவோர் போராடுவோம், பார்ப்பனியத்தை பாடை கட்டி அனுப்புவதற்கு!

 

தண்ணீரில் தள்ளாடும் தாமரை மக்களை வருடுமா வதைக்குமா ?

6
மோடி அலை ஒரு உண்மைக் கதை

“ஏ புள்ள மயிலத்தாச்சி! பஸ்சு போற ரோட்லேர்ந்தா வார, அங்க என்னமோ காருல ரேடியா கட்டிகிட்டு அலோன்ஸ்சு செஞ்சுகிட்டு போற மாறி சத்தம் கேட்டுதே, ஏதாச்சும் எழவு சேதியா, ஒரு தொளப்பும்(சேதி) காதுல விழமாட்டேங்குது. அவைங்க சொல்றது ஒன்னும் புரியவும் மாட்டேங்குது, அதனாலேயே போவ வேண்டிய எழவெல்லாம் போக முடியாம போயிருது.”

“எப்பப் பாரு, ஒனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதே! ஒப்பாரி வச்சு அழுவறதுக்குன்னே ரெடியா இருப்ப, போயி வாய கழுவு. ஏதோ கட்சிக் காரங்க நாளான்னைக்கி திருச்சில கூட்டம் போடறாங்களாம் அதப் பத்தி சொல்லிக்கிட்டு போறாங்க”

“யாரு செயலலிதா வருதா திருச்சிக்கி?”

“க்கும்… இது ஏதோ புதுசா இருக்கு. ஏதோ சொன்னானுவொளே ம்…… தாமர கட்சியாம், இங்கரே சீட்டெல்லாம் குடுத்துருக்கானுவொ.” என்று மோடி வருகை குறித்த விளம்பர நோட்டிசை காண்பித்தாள், மயிலு பாட்டி.

“என்னாது தாமரையா! அவைங்க யாருடி? புதுசு புதுசா வாராங்க” என்று நக்கலாக சிரித்தாள், மயிலு பாட்டியின் அண்ணியான மரகதப் பாட்டி.

“இந்திரா காந்தி மருமக ரெண்டு பேரு இருந்தாகள்ள, அடிச்சுகிட்டு பிரிச்சுருப்பாங்க போல, அந்தம்மா கையி, இந்தம்மா தாமரையா இருக்கும் நமக்கு என்னத்த தெரியுது”

“மருமகளா இருந்தா பொம்பளப் படமுல்ல போட்ருக்கும் இதுல ஆம்பள படம் போட்ருக்கு” என்று நாட்டு நிலமையை அக்கு வேறு ஆணி வேறா அலசி ஆராஞ்சுட்டு இருந்தாங்க இரண்டு பாட்டிங்களும்.

இதுக்கு இடையில வந்த மயிலு மருமக “ஒப்புறான! பிள்ள, மாட்டு சாணிய  கையில பெனைஞ்சுட்டு இருக்கு, பாத்துக்கன்னு விட்டுட்டு போனா கதை பேசிட்டு இருக்கிங்க, வரட்டும் ஒங்க மகனுட்டேயே ஒங்க அம்மா செய்றது நாயமான்னு கேப்போம்.” என்று எரிச்சலுடன் பேச்சுக்கு தடை போட்டாள்.

திருச்சியில் கடந்த 2013, செப்டம்பர் மாதம் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் நடந்த ‘இளம் தாமரை’ மாநாட்டை முன்னிட்டு பிரச்சாரம் செய்ததை ஒட்டி ஒரு கிராமத்தில் நடந்த உரையாடல் இது. அந்த சமயம் மோடிங்கறது யாருன்னே தெரியாத ஒரு நிலைய அங்கு பல பேருட்ட  பாத்தேன். இப்ப தேர்தல் முடிஞ்சுருச்சு. டிவி, பேப்பரு புண்ணியத்தால மோடி அலை அடிச்சு, அவரு பிரதமராவும் ஆயிட்டாரு! இப்ப எந்த அளவு பாரதிய ஜனதா கட்சியையும் மோடியையும் கிராமத்து மக்கள் தெரிஞ்சு வச்சுருக்காங்க பாப்போமுன்னு நாலைஞ்சு கிராமத்துல உள்ள தெரிஞ்சவங்க பழக்கப்பட்டவங்கக் கிட்ட ஒரு ரவுண்டு பேசிப்பாத்தேன்.

தண்ணியில தள்ளாடும் தாமரை 1காட்டூர் கோமதி:

“என்ன கோமதி அக்கா! சித்திர திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் உங்க ஊருல நல்லபடியா முடிஞ்சுதா? மோடி பா.ஜ.க, கட்சியப்பத்தி உங்க ஊருல என்ன சொல்லிக்கிறாங்க?”

“யாருக்குடி அதெல்லாம் தெரியுது. மோடி கேடின்னு இந்த பேர கேட்டாலே எனக்கு சிரிப்புதான் வருது போ. எங்கூட்டுக்காரு எப்பயுமே சூரியனுக்கு போட சொல்லுவாரு! போடுவேன். ஆனா இந்த தடவ இந்த ஊருல படிக்கிற நாலஞ்சு எழஞ்செட்டு பயளுவொல்லாம் சேந்துகிட்டு தாமரைக்கி போடுங்கன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க. எம்மகவனும் அதுல சேந்துக்கிட்டு செங்கல்லு கலருல துண்டு ஒன்னு கட்டிகிட்டு தாமரைக்கி போடுங்க, ரோசாவுக்கு போடுங்கன்னு அலஞ்சுட்டு கெடந்தான்.”

” தாமரைக்கி எதுக்கு போடனுன்னு ஒம்மவன் ஏதாச்சும் சொன்னானா?”

“சொன்னான் சொன்னான். ஏதோ அவரு ஊருல நெறையா கம்பெனியெல்லாம் கொண்டு வந்துருக்காராம், நெறையா பேருக்கு வேல கெடைக்கிதாம். அதுமாரி பெரிய பெரிய கம்பெனிங்க நம்மூருக்கும் வரும் வேலை கெடைக்கும் அப்டி இப்புடின்னு ஏதோதோ சொன்னான்”

“ஊருக்குள்ள இருக்குற மத்த கட்சிக்காரங்க ஓட்டு கேட்டு வர்றது போல தாமரைக்கி ஓட்டு கேட்டு வந்தாங்களா?”

“அப்டி யாரும் வரல. எம்மவனாட்டோ இருக்குற வயசுப் பசங்க இங்கனைக்குள்ள பேசுறதோட சரி”

“நீ உன்னோட வீட்டுக்காரரு சொன்ன கட்சிக்கு ஓட்டு போட்டியா, ஓம்புள்ள சொன்ன கட்சிக்கு ஓட்டு போட்டியா?

“நான் சூரியனுக்குதான் ஓட்டு போட்டேன். நான் புது பொண்ணா இருக்கும் போதே எலக்சன் செலவுக்கு காசு வேணுன்னு, எங்கப்பாரு வூட்ல போட்ட நகைய வித்து சூரியன் கட்சுக்கு செலவு பன்னவரு எங்க வீட்டுக்காரு! மாத்தி போட்டா குடி வக்க மாட்டான் அந்தாளு. ஓட்டு போட்றதுல கூட ஆம்பள சொல்றததான் கேட்டாகனும் பொம்பள.”

“புருசனுக்கு பயந்து சூரியனுக்கு போட்ட சரி. புள்ள கேக்க மாட்டானா?”

கட்சி கட்சின்னு குடிச்சு அழிச்சான் அப்பங்காரன். இப்ப புள்ள கெளம்பியிருக்கான். இவங்கெடக்குறான் சின்ன பய, புதுசா மீசை மொளச்சுருக்கு, பெரிய மனுசதனம் வந்துருக்கு, மொதமொதன்னு ஓட்டு போடப்போறான்ல்ல, இந்த வயசுல இப்படிதான் சுத்துவாங்க. இந்த கட்சிக்காரன் நல்லது செய்ய மாட்டானா அந்த கட்சிக்காரன் நல்லது செய்ய மாட்டானான்னு பத்து திருப்பம் ஓட்டு போட்டு பாத்தா, எல்லா கச்சிக்காரனும் திருட்டு பயலுவதான்னு புத்தி வரும். இப்ப சொன்னா மண்டையில ஏறாது. சரி பேசிட்டே இருக்கோம், மேயப் போன பசுமாடு வந்துரும். அதுக்குள்ள கன்னுகுட்டி எங்கெருக்குன்னு தேடி கட்டலன்னா, குடிச்சிட்டு போயிரும், நாளைக்கி தண்டல் கட்ட முடியாது” ன்னு பேச்சை முடித்தாள்.

இதுவரைக்கும் பேசுனதுல இருந்து இளைஞர்கள் சிலருட்ட, மோடி அலை அடிச்சுருக்குன்னு தோணுச்சு. அவங்களையும் விசாரிக்கலாங்கற முடிவோட முதல்ல படிச்ச பெண்கள்ட்ட பேச ஆரம்பிச்சேன்.

பள்ளத்தூர் சத்தியா:

மோடி அலை 3சத்தியா கிட்ட போனுல வழக்கம் போல நலம் விசாரிப்பெல்லாம் முடிச்சிக்கிட்டு மெதுவா ஆரம்பிச்சேன் “எப்பவுமே ஊரு கதையையே பேசுரோமே தேர்தல், கட்சி, அரசியல் இப்புடி ஏதாவது பேசலாமா?” என்றேன்.

“எங்க வீட்டுக்காரு இல்லையேக்கா வெளியே போயிருக்காரு, வரோட்டி பேச சொல்றேன்”

“ஓங்கிட்டதாண்டி பேசனும்”

“நான் என்னத்த அரசியல் பேச. எனக்கு அரசியல்னாலே ஒண்ணும் தெரியாது. அது பிடிக்கவும் பிடிக்காது. டி.வியில நியூசு ஓடும்போது காதுல கொஞ்சம் வாங்குவேன். பெறவு அது எதுக்கு நம்பளுக்குன்னு, சீரியல்லக்கு மாத்திருவேன்” என்றாள் சமீபத்தில் பி.பி.ஏ படித்த அந்த பொண்ணு.

தெரியாதுன்னவள் கிட்ட மோடின்னா யாருன்னு தெரியுமான்னு ஒரு கேள்விய போட்டேன்.

“ம்…. தெரியும்.”

“அவரு என்ன கட்சி? எந்த பதவியில இருக்காரு?”

“அவரு கம்யூனிஸ்ட் கட்சி. ஆனா எந்த பதவில இருக்காருன்னு தெரியலையே!”

“தூக்கி வாரி போட்டது. “மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?”

“மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! எங்க அப்பா சொல்லிருக்காரு, கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்”

மோடிய கம்யூனிஸ்ட்டுன்னு கேட்ட அதிர்ச்சியில மீளாம “ சரிடி, மோடியப் பத்தி என்னத்த தெரிஞ்சுகிட்ட?” என்று கேட்டேன்.

“எங்க வீட்டுக்காரரு நியூசு பாக்கும் போது, மோடிய டி.வியில பாத்துருக்கேன். அதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது ஆள விடுக்கா” என்று பேச்சை துண்டித்தாள்.

பெறவு யோசிச்சுப் பாத்தேன். எங்க பக்கத்துல காவி, செவப்பு, செங்கல் கலரு எல்லாமே செவப்புன்னுதான் மக்கள் சொல்வாங்க. அதுக்கா இப்டியா?

ஆழிகுளம் விஜி:

சத்தியா சொன்ன பதில கேட்டதும், விஜிகிட்ட எப்புடி ஆரம்பிக்கிரதுங்கற கொழப்பத்தோடவே தொடங்குனேன்.

“உங்க ஊருல நடந்த தேர்தல் பத்தி எதாவது இருந்தா சொல்லேன்?”

“ம்… ஊருல சிறப்பா ஏதும் நடக்கல, வழக்கம் போலதான். ஆனா என்னோட போன்ல ஜெயலலிதா ஓட்டு கேட்டுச்சு அது ரெக்காடிங் பண்ணிதான், போன்ல வருதுன்னு தெரிஞ்சாலும், அந்த குரல கேட்ட உடனே ஒரு பயமும் படபடப்பும் வந்துச்சு. முதலமைச்சரே நேரடியா பேசுறது போல பாதில நிறுத்தவே பயமாருந்துச்சு” என்று பயம் மறக்காத பெண்ணாக பேசினாள்.

“சரி அது போகட்டும் அப்பறம் போசுவோம். இதசொல்லு நடக்குறது சட்டமன்ற தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா?”

“இது பிரதமரை தேர்ந்தெடுக்கிற தேர்தல்”.

“நீ யாரு பிரதமராக வரணுமுன்னு ஓட்டு போட்ட?”

“எனக்கு ஒடம்பு சரியில்ல இதோட ஓட்டு போட போவனுமான்னு தோனுச்சு அதுனால ஓட்டு போட போகல.”

“மோடிங்கறது யாருன்னு தெரியுமா? அவர் எந்த கட்சி?”

“மோடியா? அவரு பாரதிய ஜனதா கட்சி. பிரதமருக்காக நிக்கிறாரு.”

“பாரதிய ஜனதா இந்து மதவெறிக் கட்சின்னு சொல்றாங்க, முஸ்லீம் மக்கள ஒடுக்குதுன்னு சொல்றாங்க இதப்பத்தி தெரியுமா?”

“இந்த கேள்விக்கி பதில் ‘பாஸ்’ன்னு வச்சுக்க! அடுத்த கேள்விக்கி போ”

“ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அப்டின்னு சொல்றாங்களே அதப்பத்தி பத்தி கேள்வி பட்றிக்கியா?”

“யம்மாடி…. மோடி யாரு, என்னா கட்சின்னு எங்க ஐயரு வாத்தியாரு சொல்லிதான் எனக்கு தெரியும். இதுக்கு மேல என்ன, கேள்வி கேப்ப நீ”

“உங்க ஐயரு வாத்தியாரு போக, வேற யாரெல்லாம் மோடி பத்தி என்ன பேசிகிட்டாங்க?”

“எல்லாம் ஐயர் சாரு சொன்னதுதான். மோடி குஜராத்துல வளர்ச்சி கொண்டாந்துருக்காரு கம்பெனிகள்லாம் நெறையா தொறந்துருக்காரு வேல கெடைக்கும் ஒனக்கும் வேல கெடைக்கும் நீயும் தாமரைக்கி போடுன்னு சொன்னாரு ஆள விடுப்பா”ன்னு முடிச்சுக்கிட்டா.

____________

மோடி அலை 2டுத்து மோடிய ஆதரிக்கிற சில கிராமத்து இளைஞர்கள வலை வீசி தேடிப்பிடிச்சு பேசிப்பாத்தேன். பொதுவா அவங்க சொன்னது ‘குஜராத்து வளர்ச்சி’ங்கற வார்தையத்தான். குஜராத்துல பல வெளிநாட்டு கம்பெனிங்க இருக்கு அதுபோல தமிழ் நாட்டுக்கும் வந்தா நம்மளுக்கு வேல கிடைக்கும்னு சொன்னாங்க. ஆர்.எஸ்.எஸ். பத்தி கேட்டா யாருக்கும் தெரியல. 2002 குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலை பத்தி  கேட்டா யாருக்கும் ஒன்னும் தெரியல. ஆனா பா.ஜ.கட்சி, முஸ்லீம்களுக்கு எதிரானதுதான் என்றும், குண்டு வெடிப்புக்கு சாயுபுகதான் காரணம், அதனால் அவங்களை ஒடுக்குறது சரின்னு பேசுனாங்க.

எதவச்சு அவங்கள தீவிரவாதின்னு சொல்றீங்கன்னா, பேப்பர்ல டிவியில எல்லாம் பாக்குறோம்லன்னு கண்ண மூடிட்டு சொல்றாங்க. கூட்டிக் கழிச்சிப் பாத்தா ஹமாம் சோப்பு ரொம்ப நல்ல சோப்புன்னு நம்ம ஜனங்கள எப்படி பேச வச்சாங்களோ அது மாதிரிதான் மோடின்னா வளர்ச்சி, பாய்ங்கன்னா குண்டுன்னு ஒரு கருத்த உருவாக்கிட்டாங்க.

ஒரு நாற்பது வயசுக்காரரு சொன்னாரு “வாஜ்பாயி காலத்துலேருந்து எனக்கு பா.ஜ.காவ தெரியும். இந்த கட்சிய ஆதரிக்கணும், ஓட்டுப் போடனுன்னு ஆசை. ஆனா பா.ஜ.க. கூட்டணி கட்சிக்குதான் எங்க தொகுதியில சீட்டு ஒதுக்குனாங்க. இப்பதான் பாரதிய ஜனதா கட்சியே நேரடியா நிக்குது அதுனால சந்தோசமா அதுக்கு ஓட்டு போட்டேன்.”

பாதிப் பய இது வடக்க உள்ள கட்சி, மதவாத கட்சின்னு சொல்றாங்களேன்னு கேட்டதுக்கு “மொதல்ல நாம நல்லாருப்போம் பிறகு பங்காளி, மாம மச்சானப் அப்பறம் பாத்துக்கலாம்னு நெனப்போம்ல, அதுபோலதான் இதுவும். பா.ஜ.க இந்து மதத்து மேல அக்கறையா இருக்காங்க. அதெத்தான்  மதவாதம்ன்னு சொல்றாய்ங்க, முஸ்லீம் மக்கள ஒடுக்குதுன்னு சொல்றாங்க. மதவாதம் இல்லன்னு சொல்ற காங்ரஸ்சு கட்சி ஆட்சியல மட்டும் குண்டு வெடிக்கலையா, முஸ்லீம்கள கைது பண்ணலையா.” என்று  அந்த வட்டாரத்து சாதிவெறிக்கு இதுவரை வக்காலத்து வாங்கியவரு, இப்ப இந்து மத வெறிக்கு ஆதரவா பேசுறாரு.

பாமக, கொங்கு வேளாள கவுண்டரு கட்சிங்கல்லாம் எப்படி ஆர்.எஸ்.எஸ் அரசியல இயல்பா பேசுறாங்கன்னு இப்ப புரியுது.

இவங்ககிட்ட பேசுனதுல இருந்து, இந்த தேர்தல்ல இருந்துதான் பாரதிய ஜனதா, மோடி, இந்து மதம் அப்புடிங்கற கோணமே கிராமத்துல பரவ ஆரம்பிச்சிருக்குன்னு தெரியுது.  கிராமங்களல்ல ஆதிக்க சாதி வாழ்க்கையில கூட விவசாயம் காரணமா மத்த சாதி மக்கள்கிட்ட கொஞ்சம் அனுசரணையாக இருக்கணும்கிறது விதி. இந்த கிராமத்துல கூட இப்ப பழைய தீண்டாமைங்க, தண்டனையெல்லாம் கிடையாது.

காலனி மக்கள் ஊருக்குள்ள எல்லா இடத்துக்கு போறதும், வாறதும், உண்டு. திருவிழா, தேர்தல்ன்னு எதுவும் சாதி பிரச்சினையா வாரது இல்ல. இதுனால ஆதிக்க சாதி ஆட்சி கிடையாதுன்னு இல்ல. ஆனா இப்போ அறிமுகமாயிருக்கிற முசுலீம் எதிர்ப்பு இப்படி இல்ல. இது முழுக்க முழுக்க பொய் பிரச்சாரத்துக்கு நம்ம மக்க பலியாயிருக்கங்கன்னுதான் தோணுது.

வட இந்தியாவுல ஜாட், குர்மி, ரஜபுத்திரர்னு ஆதிக்க சாதிங்கதான் பாஜகவோட அடித்தளமா இருக்கிற மாதிரி தமிழ்நாட்டுலயும் வன்னியர்,தேவர், கவுண்டர்னு மாத்திட்டாங்கன்னா என்ன செய்யப் போறோம்? இப்பவே தருமபுரியல அன்புமணி அப்பிடிதானே ஜெயிச்சாரு?

மோடி ஆட்சியில வளர்ச்சி வராதுங்கிறத மக்கள் கொஞ்ச நாளுல தெரிஞ்சிக்குவாங்க! ஆனா அது பிரிவினையை, துவேசத்தை, வெறிய கொண்டு வருதுங்கிறத நாமதான் புரியவைக்கணும்!

–    சரசம்மா

பிரேசில் கால்பந்து அணியை தோற்கடிக்கும் பிரேசில் மக்கள்

2
பிரேசில் போராட்டங்கள் 5

பிரேசில் போராட்டங்கள் 8லகக்கோப்பை கால்பந்து போட்டிகள்,  பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது,  பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள்.

இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில்,  உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274  கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என  சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர  புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செலவு 900 மில்லியன் டாலர்(ரூ. 5340 கோடி).  இங்கிலாந்தின் வெம்பிலே மைதானத்திற்கு அடுத்தபடியாக அதிக செலவுமிக்க மைதானங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது இந்த மைதானம்.

இந்த கட்டுமானங்களில் மதிப்பிடப்பட்டதை விட செலவு அதிகரித்ததற்கு ஊழலே காரணம் என்று பிரேசில் அரசு கண் துடைப்பு விசாரணைகளை அறிவித்திருக்கிறது. போட்டி நடத்துவதன் மூலம் முதலாளிகள் சட்டபூர்வமாக கொள்ளையடிப்பதை அனுமதித்து விட்டு, குட்டி திருடர்களை பிடித்து என்ன ஆகப்போகிறது?

கால்பந்து கிளப்கள் எதுவும்  இல்லாத நகரங்களில் கட்டப்பட்டு வரும் மைதானங்கள் உலககோப்பை போட்டிகளுக்கு பிறகு யாரும் பயன்படப் போவதில்லை.  இருப்பினும் வல்லரசுக் கனவு இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்?

இந்த செலவுகள் போக பல நாடுகளிலிருந்தும், இரசிகர்கள் வந்து போக விமான நிலையங்கள், தங்க விடுதிகள் உள்ளிட்டு நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை மேம்படுத்த 7 பில்லியன் டாலர் (ரூ. 41,538 கோடி) செலவில் செய்யப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக ஒரு போட்டிக்கு 62  மில்லியன் டாலர் (ரூ.367 கோடி) செலவாகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மக்கள் எதிர்ப்பிற்கிடையே நடந்து முடிந்த கான்ஃபிடரேசன் கோப்பை, இந்த ஆண்டு கால்பந்து உலககோப்பை, 2016-ல் ஒலிம்பிக் என அடுத்தடுத்து பிரம்மாண்டமான சர்வதேச போட்டிகளை நடத்திவருகிறது பிரேசில். தேசம், தேச பெருமிதம் என்ற பெயரால் இந்த செலவுகள் நியாயப்படுத்தப்படுகிறது.

மற்றொரு புறத்தில் அதே அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிசுருக்கி வருகிறது. குடிநீர் வினியோகமும், பொது வினியோகத் திட்டமும் நிதி இல்லை என்று கூறி முடக்கப்படுகின்றன.  பிரேசில் மக்களில்  சுமார் 10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். நிலமற்ற கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் 4 கோடி பேரில், சுமார் 20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கு குடியேறி அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளில் வசிக்கின்றனர். பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லை. போக்குவரத்து கட்டணங்கள் அதிக அளவில் உயர்த்தப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் விளைவாக நகரங்களில் வீட்டு வாடகை அதிகரித்து அதை செலுத்த இயலாமல் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

இந்த பின்னணியில் தான்  உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்வது, மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கான்பெடரேசன் கோப்பை போட்டிகளின் போதே மக்கள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய போராட்டங்களில் மாணவர்கள்,தொழிலாளர்கள், வீடில்லாதவர்கள், அரசு ஊழியர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

உலககோப்பைக்கு எதிரான போராட்டங்களுடன், தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றன தொழிற்சங்கங்கள். பல ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்காத அரசு உலககோப்பை போட்டிகளுக்கு ஆடம்பர செலவு செய்வது அவர்களின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள், தெரு சுத்தம் செய்வோர், பேருந்து ஓட்டுநர்கள் ஆகியோர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 50 நகரங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. “உலககோப்பை நடக்காது, வேலைநிறுத்தங்கள் தான் நடக்கும்” என்று இம்மக்கள் முழக்கமிடுகின்றனர்.

பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள், “நிய்மாரைவிட (பிரேசிலின் நட்சத்திர வீரர்) விட ஆசிரியர்கள் மதிப்புமிக்கவர்கள்” என்று முழக்கமிட்டனர். விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடுவதை குறைத்து மருத்துவம் மற்றும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

‘நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தினர்’  துவக்க போட்டி நடைபெற இருக்கும் சாவ் பாவ்லோ நகர மைதானத்திற்கு அருகில் உள்ள காலி இடங்களை கைப்பற்றி போராடி வருகிறார்கள். சுமார் 7000 பேர் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கி வருகிறார்கள். வீட்டு வாடகை உயர்வை கண்டித்தும், நியாயமான விலைக்கு வீடுகள் கோரியும், உலகக் கோப்பைக்கு அரசு செலவிடும் தொகையை குறைக்க கோரியும் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த வனீசா கவுடோ கூறுகையில் “மைதானம் கட்டும் பணியில் வேலை செய்பவர்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  மைதானத்தை கட்டும் நிறுவனத்திற்கு (ஒடிபிரக்ட்) எங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளோம். அரசு யாருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை மாற்ற விரும்புகிறோம். எங்களுக்கு பல கோடிகளிலான மைதானங்கள் தேவையில்லை. நிலச்சீர்திருத்தமும், அனைவருக்கும் நாகரிகமான ஒரு வீடும்தான் தேவை.” என்கிறார்.

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி நகரங்களில் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. “ஒரே மாதத்தில் எனது வீட்டுவாடகை $135 லிருந்து $ 360 ஆக உயர்ந்துள்ளது.இது குறைந்தபட்ச சம்பளத்தைவிட அதிகம். இனியும் என் மகன்களால் என்னை பராமரிக்க இயலாது. உலககோப்பை மகிழ்ச்சியானது தான். ஆனால் எங்களை போன்ற  வாடகை செலுத்த முடியாதவர்களுக்கு அதனால் எந்த நன்மையுமில்லை மகிழ்ச்சியுமில்லை.” என்கிறார் தற்காலிக கூடாரத்தில் தங்கி போராடிவரும் 64 வயதான தையற் தொழிலாளி பெட்ரினா ஜோஸ்ஃபினா.

பிரேசிலின் பழங்குடி மக்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். தங்களின் நிலஉரிமைக்கு எதிராக பிரேசில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி,ஏற்கனவே தொடர்ச்சியான பல போராட்டங்களில்  ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் கட்டப்பட்டிருக்கும் புதிய மைதானத்தில் உலக கோப்பையை காட்சிக்கு வைக்கும் தினத்தில் வில் அம்புகளுடன் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் உலககோப்பை எதிர்ப்பாளர்களும் இணைந்து கொண்டனர். மைதானத்தை நோக்கி முன்னேற முயன்ற  இவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்கமுயன்றனர் போலீசார். பதிலுக்கு பழங்குடி மக்களும் போலீசார் மீது வில் எய்ததால் இரு தரப்பிற்கும் இடையில் மோதல் மூண்டது. இதில் அம்பு தைத்து ஒரு   போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

பிரேசிலின் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. சாவ் பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தை கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் இரப்பர் குண்டுகள் மூலம் கலைக்க முயன்றது போலீஸ். உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் சமயத்தில் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்காக அதிக அளவில் போலீசை குவித்து வன்முறையை ஏவிவருகிறது அரசு.

கலைஞர்கள், ஓவியங்கள் மூலமாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். வழக்கமாக பிரேசில் அணிக்கு ஆதரவாக வரையப்படும் சுவர் ஓவியங்களுக்கு பதிலாக இம்முறை உலககோப்பை போட்டிகளுக்கு எதிரான சுவரோவியங்கள் தான் அதிகம் காணக் கிடைக்கின்றன. அதிலும், பசித்த கண்கள் மற்றும் ஒட்டிய வயிறுடன் ஒரு சிறுவன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க அவனுக்கு கால்பந்தை பறிமாறுவது போன்ற ஒவியம் சமூகவலைத் தளங்களில் அதிகம் பரவிவருகிறது. இது பற்றி பிரேசிலின் முன்னாள் வீரர் சிகோ கூறுகையில், “முன்னாளில் இது போன்ற தருணங்களில் உலக கோப்பை ஜூரம் மக்களை தொற்றியிருக்கும், ஆனால் இம்முறை நிலைமை மோசமாக இருக்கிறது. தோரணங்களையும், சுவரோவியங்களையும் பார்க்க முடியவில்லை. போராட்டங்களினால் இரசிகர்கள் பின்வாங்கிவிட்டார்கள் என்று கருதுகிறேன். ஆயினும் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலைமை சரியாகிவிடும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கௌரவத்திற்கு பேசப்படும் கிரிக்கெட்டை போலல்லாமல் பிரேசிலில் கால்பந்து உண்மையிலியே ஒரு மக்கள் விளையாட்டுதான். ஆனாலும் உலகமயமாக்கத்தில் அங்கேயும் கால்பந்தை சந்தைப்படுத்தப்பட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்களின் வாழ்க்கை சுமை அவர்களது கால்பந்து மோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 55% பிரேசில் மக்கள் உலகக்கோப்பை போட்டிகளுக்கு எதிராக கருத்து கூறியிருக்கிறார்கள். உலகக்கோப்பை போட்டிகளுக்கு பதிலாக கல்வி, மருத்துவம், போக்குவரத்தில் முதலீடு செய்யலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் அரசோ,  உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டால் போராட்டம் ஓய்ந்துவிடும், எந்த மைதானத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடினார்களோ அங்கே தேனீக்களை போல மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என  நம்புகிறது. அதையும் மீறி போராடுபவர்களை ஒடுக்க காவல்துறையையும், இராணுவத்தையும் இறக்கிவிட்டுள்ளது. ரிசைஃப் போன்ற  நகரங்களில் போலீசாரும் ஊதிய உயர்வுக்காக போராடிவரும் நிலையில் இராணுவம் நேரடியாகவே இறங்கியிருக்கிறது. போலீசாருக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க எஃ.ப்.பி.ஐ வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு நமக்கான அரசு அல்ல. இந்த அரசிடம் முறையிட்டு பலனில்லை. அரசை கைப்பற்றினால் தான் தீர்வு என்பதை பிரேசில் மக்கள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தான் இந்த போராட்டங்கள் காட்டுகின்றன. இந்த போராட்டங்கள் மூலம் அரசை வீழ்த்தக்கூடிய புரட்சிகர கட்சிகள் தோன்றி வளரும் போது பிரேசில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

புகழ்மிக்க பிரேசில் அணி, உலகக் கோப்பையை வெல்வதைவிட,  பிரேசிலின் எளிய மக்கள் இந்த போராட்டத்தில் வெல்வதே,  இன்றைய தேவையாக உள்ளது.

–    ரவி

படங்கள்

பிரேசில் போராட்டங்கள் 1

பிரேசில் போராட்டங்கள் 2

பிரேசில் போராட்டங்கள் 3

பிரேசில் போராட்டங்கள் 4

பிரேசில் போராட்டங்கள் 5

பிரேசில் போராட்டங்கள் 6

பிரேசில் போராட்டங்கள் 7

மேலும் படிக்க:

மழலையர் பள்ளி துவக்கு – திருச்சியில் ஆர்ப்பாட்டம்

1

னித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளையின் சார்பில் மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் துவங்கி நடத்திடக் கோரி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் முன்னால் 04.06.2014 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100 பேர் தங்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். எழுச்சிமிக்க முழக்கங்களை தோழர்களும் பொதுமக்களும் எழுப்பியவுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிளர்ச்சியாளன் தலைமை தாங்கினார், கிளைத் தலைவர் தோழர் காவிரிநாடன் சிறப்புரையாற்றினார். அவர் தன்னுடைய சிறப்புரையில்…

“மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் உடனே துவங்கி நடத்த வேண்டும். அதன் மூலம் பணம் பறிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்கள் செல்வதை தடுக்க முடியும், சென்னை மாநகராட்சியில் இது சாத்தியமாகும் போது தமிழ்நாடு முழுவதும் ஏன் இந்த வகுப்புகளை தொடங்கி நடத்த முடியாது” என கேள்வி எழுப்பினார். மேலும் கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை உடனடியாக அரசுடைமையாக்க வேண்டும், தாய் மொழியான தமிழில் கல்வி வழங்க வேண்டும், தொடக்கக் கல்வியிலிருந்து உயர்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க வேண்டும். காசுள்ளவனுக்கே கல்வி, காசில்லாதவனுக்கு கல்வி இல்லை என்ற நவீன மனுநீதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரிவாக விளக்கினார். இறுதியாக மக்கள் அனைவரின் இலவசக் கல்வி பெறும் உரிமைக்காக போராடுவதுதான் ஒரே தீர்வு என்பதை நிறுவும் விதமாக பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் அடங்கிய குழு கோரிக்கை மனுவினை மாவட்ட கல்வி அலுவலரிடம் நேரடியாக வழங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரட்டும் விதமாக பர்மா காலனி, திடீர்நகர், காஜாபேட்டை, கெம்ஸ்டவுன் ஆகிய பகுதிகளில் மெகா போன் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 3000 துண்டறிக்கைகள் வினியோகிக்கப் பட்டது. நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. நமது கோரிக்கைகளை பெரும்பாலான மக்கள் வரவேற்று ஆதரித்தனர்.

* பெரிதாக பார்க்க படங்களின் மீது அழுத்தவும்

________________________________________________

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம் – திருச்சி கிளை

________________________________________________

அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !

7

பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பாக இதே அந்நிய முதலீட்டை 26% லிருந்து 100% ஆக உயர்த்த வர்த்த அமைச்சர் ஆனந்த் சர்மா முயன்ற போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதனால் அன்று இவர்கள் எதிர்ப்பினால்தான் காங்கிரஸ் இதை நிறைவேற்றவில்லை என்பதல்ல. அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. மற்றபடி மன்மோகன் சிங்கும் இதே நடவடிக்கையை அன்றே செய்ய நிறையவே முயற்சி செய்தார்.

ரசிய உதவியுடன் தயாரிக்கப்படும் டி 72 டாங்கி - இனி ரசியாவே இங்கு தயாரித்தால் அது உள்நாட்டு தயாரிப்பாம்!
ரசிய உதவியுடன் தயாரிக்கப்படும் டி 72 டாங்கி – இனி ரசியாவே இங்கு தயாரித்தால் அது உள்நாட்டு தயாரிப்பாம்!

மோடி அரசு பொறுப்பேற்ற இரண்டு நாட்களிலேயே வணிக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் பாதுகாப்புத் துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பா.ஜ.க அரசு கூறுகிறது. இறக்குமதியை குறைப்பதால் நமக்கு அந்நிய செலவாணி கையிருப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்நிய முதலீடு இங்கே வந்து, அதை வைத்து தயாரிப்பது உள்நாட்டு தயாரிப்பாம்; அன்னிய முதலீடு இங்கிருந்து எடுத்துச் செல்லும் இலாபத்தால் அந்நிய செலவாணி இருப்பு அதிகரிக்குமாம்!

நேரு காலம் தொட்டே இந்திய இராணுவத்தில் துப்பாக்கி தொட்டு விமானம் வரை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்த இறக்குமதி பிரம்மாண்டமாக வளர்ந்து, இன்று இங்கேயே ராணுவ தளவாடங்களைத் தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் தற்போது பா.ஜ.க அரசு செய்து வருகிறது.

தற்போதைய பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான அனுமதியில், நேரடியாக வரும் நிறுவனங்களின் அந்நிய முதலீட்டின் அளவை 49 சதவீதமும் அதிகரித்துள்ளார்கள். மேலும் இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் முதலீடு செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மாத்திரம் செய்து சம்பாதிக்கவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசின் அனுமதி தரப்பட்டுள்ளது.

அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிப்பது மாத்திரமின்றி வேலை வாய்ப்புகளும் பெருகும் என்று சொல்கிறது அமைச்சக குறிப்பு. உலகின் மிக அதிகமாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆண்டுக்கு 8 பில்லியன் டாலர்கள்  வரையிலான ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. மார்ச் மாதம் நமது அன்னிய செலவாணி கையிருப்பே 11 பில்லியன் டாலர்கள்தான். கடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் 13.4% அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஏறக்குறைய தனது தேவையில் 65% தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த இலட்சணத்தில் தான் அப்துல் கலாம் வகையறாக்கள் 2020-ல் இந்தியா வல்லரசு ஆகப்போவதாக கனவு காணச் சொல்கின்றனர். இரவல் ஆயுதத்தில் சொந்த வல்லரசுக் கனவு!

நிர்மாலா சீதாராமனின் முதல் பணியே அமெரிக்காவை குளிர்வித்திருக்கும்!
நிர்மாலா சீதாராமனின் முதல் பணியே அமெரிக்காவை குளிர்வித்திருக்கும்!

பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு சாத்தியம் என்றவுடன் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கும் என்ற வாதமே மோசடியானது என்பதை யாரும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். உள்நாட்டில் வந்து தொழில் தொடங்கிய நோக்கியா போன்ற கம்பெனிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு நாம் எதாவது செய்ய முடிந்ததா? அது இந்த நிறுவனங்களுக்கு பொருந்தாதா? இன்றைக்கு இந்தியாவுக்கு வரும் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் கிடைக்கும் லாபத்தை டாலராகத்தானே வெளியே கொண்டு போவார்கள். இதனை தடுக்க முடியுமா? இதனால் அந்நிய செலவாணி கையிருப்பு குறையாதா? என்ற கேள்விகளை திட்டமிட்டே தவிர்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு மாத்திரம் இந்தியா 190 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கு ஏற்கெனவே சிக்கோர்ஸ்கி, லாக்கி மார்ட்டின் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100% ஆக உயர்ந்துள்ளதால் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் நேரடியாக இங்கு வந்து தொழில் தொடங்க முடியும். நூறு சதவீதம் இந்தியர்களை வேலைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களில் அந்நியர்களை பணிக்கமர்த்த முடியும் என்ற விதிவிலக்கும் உள்ளது. சாதாரண ஒப்பந்த தொழிலாளிகளை மாத்திரம் இந்தியாவில் இருந்து எடுத்துக் கொண்டு பொறியாளர்கள் போன்ற அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களை தங்களது நாட்டில் இருந்தே கொண்டு வந்து விடுவார்கள், அல்லது எங்கே குறைவான கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கிறார்களோ அந்த நாட்டிலிருந்து  ஆட்களை தருவித்து விடுவார்கள்.

நிறுவனம் வெளியேறும் போது எதையும் எடுத்துக்கொண்டு போக அனுமதி கிடையாதாம். ஆனால் தொழில் நடக்கும் போது லாபத் தொகையை எடுத்துப் போன பிறகு கடைசியில் அரசு வங்கிகளின் கடன் மூலமாக பெற்ற கட்டிடங்களை அப்படியே விட்டுப் போவதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த நட்டமும் இருக்கப் போவதில்லை தான். பழைய என்ரான் மோசடி கதைதான் நடக்கும். அதாவது அவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கும் சேர்த்து மக்களின் வரிப் பணத்தில் வட்டி கட்டிக் கொண்டிருப்போம்.

இந்த நிறுவனங்களுக்கு தடையற்ற இலவச மின்சாரம், தண்ணீர், இடம் எல்லாம் மக்களிடமிருந்து பறித்து கையளிக்கப்படும். பதிலுக்கு மண்ணைப் பறிகொடுத்த மக்கள் அங்கு போய் செக்யூரிட்டி கார்டுகளாக – ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் பணிபுரிய வேண்டியிருக்கும். அன்று நாட்டின் பாதுகாப்பே பறிபோய் விடும் என்று காங்கிரசை பலமாக எதிர்த்து நின்ற பா.ஜ.க, இன்று தான் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பாதுகாப்பை நல்ல விலைக்கு விற்பதில் அவசரம் காட்டுகிறது.

பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறைக்கு அருண் ஜேட்லியே பொறுப்பாக இருப்பதிலிருந்தே இந்த அந்நிய முதலீட்டின் பாகாசுரப் படையெடுப்பை புரிந்து கொள்ள முடியும். 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதித்தால் தொழில்நுட்ப விசயங்களை பகிரத் தேவையில்லை, 75%, 100% எனில் பகிர வேண்டும் என்ற மூன்று விதமான பரிந்துரைகளை தொழில் கொள்கை மற்றும் விரிவுபடுத்தல் துறை முன்வைத்த போது, மத்திய அரசு 100% சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்பதில் உறுதியாக இருந்தது.

2008-ல் அசோசெம் என்ற முதலாளிகள் சங்கம், அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரை இருப்பதற்கு ஆதரவு தந்தது. இந்தியாவில் தொழில் தொடங்கும் பாதுகாப்புத் துறை தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை பகிர்வதை விதிகளின்படி கட்டாயம் எல்லாம் ஆக்கவில்லை, ஒரு ஆலோசனையாக மட்டுமே அரசு சொல்லி உள்ளது. எனவே 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தந்தால் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்து விடும் என்பதற்கு எந்த உத்திவாதமும் இல்லை. எப்படி கடைசி வரையும் இந்திய விவசாயி மாண்சான்டோ நிறுவன விதைகளுக்காக காத்திருக்க வேண்டியதிருக்குமோ அதே போலத்தான் இந்திய ராணுவமும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதிருக்கும். இதுதான் இந்துத்துவா சக்திகள் காப்பாற்றும் இந்திய இறையாண்மையின் பாதுகாப்பு இலட்சணம்.

ஆயுத இறக்குமதியின் இந்தியாவே முதலிடம்! இனி ஆயத நிறுவனங்களின் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம்!
ஆயுத இறக்குமதியின் இந்தியாவே முதலிடம்! இனி ஆயத நிறுவனங்களின் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம்!

இதனால் வேலை வாய்ப்பு பெருகுகிறதோ இல்லையோ ஆயுத தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவன பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் இப்போதே இருமடங்கு அதிகரித்துள்ளது. பிபவவ் டிபன்ஸ் நிறுவனத்தின் பங்கு 30 ரூபாயிலிருந்து 66 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் நிகில் காந்தி கூறுகையில் ”100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காமல் எப்படி தொழில்நுட்பத்தை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நாம் பெற முடியும்” என்று தர்மாவேசத்துடன் கேட்கிறார்.  ”இந்தியாவில் அவர்களும் சம்பாதிப்பதற்கு சம வாய்ப்பை வழங்க வேண்டுமல்லவா” என்றும் கோருகிறார்.

கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் சமீப காலம் வரை கொஞ்சம் குறைவான இலாபத்தில் தான் ஓடிக் கொண்டிருந்தது. இதன் உற்பத்தியில் 60 சதவீதம் ராணுவ தளவாட பொருட்களுக்கானது. இந்த ஆண்டு இதன் மதிப்பு 6600 கோடி ரூபாய். 2016-17-ல் 12,000 கோடி ரூபாயாக உயரும் என்கிறார்கள். இந்நிறுவனத்தின் அசையா சொத்தின் மதிப்பு 6072 கோடி ரூபாய்கள் மட்டுமே. இந்த ஆண்டு ரூ.2.72 கோடி மட்டுமே இலாபமாக ஈட்டவுள்ள இந்நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் ஆண்டுக்கு ரூ.280-290 கோடி வரை இலாபமாக ஈட்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஏறக்குறைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு 17 மடங்கு அதிகரிக்குமாம். இந்தப் பங்குகளின் பரிவர்த்தனையை யார் கண்காணிக்கப் போகிறார்கள். பிபவவ் டிபன்சும் அதன் உரிமையாளரும் பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டால் பலனடையப் போகும் பலருக்கும் ஒரு வகை மாதிரி. பன்னாட்டு கம்பெனியும், இந்திய அரசும் இந்த அனுமதி மூலம் வெற்றி-வெற்றி (win-win) பாலிசியை அமல்படுத்தப் போவதாக அந்நிறுவன முதலாளி புளங்காகிதம் அடைகிறார். ஒரே போட்டியில் ஒருவர் தோற்காமலேயே இரு தரப்பும் வெற்றி பெற முடியும் என்கிறது, முதலாளித்துவ அறிவுத்துறையின் மோசடியான வாதம். ஆனால் அரிசியும் உமியும் கொண்டு வந்து ஊதிஊதித் தின்னும் இந்த விளையாட்டில் ஆதாயம் என்னவோ அரசுக்கல்ல என்று மட்டும் உறுதியாக நாம் சொல்ல முடியும்.

அடுத்து ரயில்வே, அடிப்படை கட்டுமானத் துறை போன்றவற்றிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். இதன் சாரத்தை மோடியின் முதல் நூறு நாட்கள் திட்டத்தின் 10 முக்கிய அம்சங்களிலேயே கோடிட்டு காட்டியுமிருக்கிறார்கள். அதாவது உலகளாவிய முதலீட்டாளர்களை கவர்வதுதான் அவர்களது திட்டம். இதுதான் 15 பக்க கொள்கை விளக்க அறிக்கையாக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் விரிவுபடுத்தல் துறையின் சார்பில் பிற மத்திய அரசின் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் மொத்த தேசிய வருமானத்தை 4.5 சதவீதங்களில் இருந்து உயர்த்த முடியும் என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வரவு காரணமாக இது இன்னும் இரண்டு சதவீதம் உயரும் என்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உற்பத்தி துறையில் 0.2% சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நாட்டின் இறக்குமதியை சார்ந்து உற்பத்தி துறை இருக்க கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கை என்கிறார்கள். ஆனாலும் இதற்கு பிறகும் இறக்குமதியை சார்ந்துதான் இந்திய ராணுவம் பெரும்பாலும் இயங்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஐரோப்பியத் துப்பாக்கிகளை இனி கப்பல்செலவின்றி இந்தியாவிலேயே தயாரிக்கலாம்! இலாபத்தை அப்படியே எடுத்தும் செல்லலாம்!
ஐரோப்பியத் துப்பாக்கிகளை இனி கப்பல்செலவின்றி இந்தியாவிலேயே தயாரிக்கலாம்! இலாபத்தை அப்படியே எடுத்தும் செல்லலாம்!

நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். 2010-12 ஆம் ஆண்டுகளில் 183 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தளவாடங்கள் மட்டுமே ஏற்றுமதியாகின. 2019-ல் இதன் மதிப்பு 750 பில்லியனாக உயர வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு, இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. உள்நாட்டு உற்பத்தி இந்த இலக்கை எட்ட முடியாமல் போனாலோ, வெளிநாடுகளில் தேவை குறைவாக இருந்தாலோ இது சாத்தியமில்லை என்கிறது அரசு.

இந்திய ராணுவ தளவாட சந்தையானது சிலி, ஈகுவேடர், கொலம்பியா, பொலிவியா போன்ற தென்னமெரிக்க நாடுகளையும், சில ஆப்ரிக்க, ஆசிய நாடுகளையும் மையமாக கொண்டே இயங்குகிறது. இந்த ஏற்றுமதியாளர்கள் பல வரி விலக்குகளையும் மானியங்களையும் அரசிடமிருந்து கோரியுள்ளனர். தீவிரவாத எதிர்ப்புப் போர்க்கருவிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க உதவும் கருவிகள் என இந்த உற்பத்தி, பெரும்பாலும் வளரும் ஏழை நாடுகளை குறிவைத்தே இயங்குகிறது. அரசு தனியாக மானியம் தர முடியாது என்ற போதிலும், குறைந்தபட்ச மாற்று வரிவிதிப்பையும், இலாப பங்கீட்டு வரியையும் விலக்கிக் கொள்வதன் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பாதுகாப்புத்துறைக்கான தளவாட உற்பத்திக்கு அரசு ஊக்கமளிக்கும் என்றுதான் தெரிகிறது. இதில் உள்நாட்டு முதலாளிகளுக்கு நிகராக பன்னாட்டு முதலாளிகளும் இனி பங்குபெறுவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

பன்னாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களை நேரடியாக வரவழைத்த பிறகு அவர்களை வைத்து அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் வேலையுடன், இரவில் கூட துல்லியமாக குண்டு போடுவதற்கான உபகரணங்கள், விமான எதிர்ப்பு ரேடார்கள், ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது அரசு. அதற்கு தடையாக இருக்கும் அரசியல் அதிகார சோம்பேறித்தனத்தை உடைக்கவிருப்பதாக பா.ஜ.க ஏற்கெனவே கூறியிருந்தது. அடுத்து துறைமுகங்களையும், கனிம சுரங்கங்களையும் இணைக்கும் அதிவேக சாலைகளையும், ரயில்வே பாதைகளையும் போடுவது என்ற திட்டத்தையும் சொல்லியிருந்தனர்.

மொத்த தேசிய வருமானத்தில் 1.7 அல்லது 1.9% என இதுவரை இருந்தது போல ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக 2.5% ஒதுக்கப் போவதாக சொல்லி இருந்தனர். சீன எல்லைக்கருகில் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்கெல்லாம் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமோ ராணுவ பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி நிறுவனம் மூலமோ ஆயுதங்களை தயாரிப்பது சாத்தியமில்லை என்றும் பா.ஜ.க அரசு முடிவு செய்து விட்டது. ஆனாலும் சீனாவை பகை நாடாக காட்டி உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு துறையில் தனியார்மயம் வந்தால் மட்டும்தான் சாத்தியம் என்றும் அவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

சீன எல்லையை சாலைகள், பாதுகாப்பு எந்திரங்கள் மூலமாக பாதுகாக்க முற்படும்போதே உள்நாட்டு கனிம வளத்தை கடல் வழியாக முதலாளிகள் கடத்திப் போக சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து துறைமுகம் வரை தடையேயில்லாத பறக்கும் சாலைகளை அமைக்கின்றனர். இதனை எதிர்த்துக் கேட்பவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி கொல்வதற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய தேசிய வருமானத்தில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படுகிறது.

சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கருகில் 73 தந்திரோபாய சாலைகள், 14 ரயில்வே லைன்கள், ஹெலிபேடுகள், முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய இறங்குமிடங்கள் என பாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்கள். அந்தமான் தீவிலும் கூட பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தப் போகிறார்கள். இது போக விண்வெளி, இணையம் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் இணைந்து செயல்படும் மையமான அமைப்பு ஒன்றை நிறுவி தங்களது பாசிச கண்காணிப்பு ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு தனியாரிடமிருந்துதான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைக் காட்டுவதற்காக அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரித்தல், உறுதியான ராணுவக் கட்டமைப்பு என்று பீலா விடுகிறார்கள்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ என்ற பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 50 ஆய்வகங்களும், 5 பாதுகாப்பு துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களும், நான்கு கப்பல் கட்டும் தளங்களும், 39 தளவாட தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் ஆய்வுகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இனி இத்துறை ஊற்றி மூடப்படும். அல்லது அன்னிய முதலீட்டு தயாரிப்புகளுக்கு சான்றிதழ் தரும் நிறுவனமாக மாற்றப்படும்.

பன்னாட்டு கம்பெனிகள் வழங்கும் தளவாடங்கள் தரமானவை என்ற மூட நம்பிக்கை பரவலாக பொதுபுத்தியில் உறைந்திருப்பதால் மக்களும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக திறந்து விடுவதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலின் போது மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு காவல்துறைத் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரே அணிந்திருந்த புல்லட் ஃபுரூப் ஜாக்கெட் அவரது உயிரை காப்பாற்றவில்லை. அது தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியாரின் தரம் என்பது அவர்களுக்கு கிடைக்க இருக்கும் இலாபத்தை பொறுத்தது.

ஃபோர்பர்ஸ் நிறுவன பீரங்கியை இந்தியாவில் வந்து உற்பத்தி செய்தால் இடைத் தரகர்கள் இல்லாத நிலைமை ஏற்படும் என்கிறார்கள். லஞ்ச ஊழல் நடக்காது என்கிறது பா.ஜ.க. அதாவது ராஜீவ் மாட்டியது போல இனி யாரும் மாட்ட தேவையிருக்காது என்கிறார்கள். அதாவது சட்டவிரோதமாக இதுவரை கமிசன் பரிமாறப்பட்டதற்கு பதிலாக பங்குச்சந்தை மூலமாக சட்டப்படி நேரடியாக நாட்டைச் சூறையாடலாம் என முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது பாஜக.

தேசபக்திக்காக அதிகம் கூச்சலிடுபவர்கள் தான் வேகமாக தேசவிரோதிகள் என்று அறியப்படுகிறார்கள்.

–    கௌதமன்.

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

116

பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி. அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி. அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.

இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.

கஜினி படையெடுப்பு
கஜினி படையெடுப்பு

அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.

ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.

கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.

ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.

ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?

இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.

பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

***

சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.

சோமநாதபுரம் கடற்கரை
சோமநாதபுரம் கடற்கரை (இன்று)

சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.

கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.

இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.

துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:

ன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.

சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.

உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.

‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.

மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.

கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜினி பேரரசு
கஜினி பேரரசு

இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.

இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.

சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.

இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.

வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.

சமண நூல்களின் குறிப்புகள்:

இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:

கஜினி முகமது
கஜினி முகமது

சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.

11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.

சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.

ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.

கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.

1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.

கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.

சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.

கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.

மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!

ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?

அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.

‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’

இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.

அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக  இருக்கும்.

சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.

சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.

பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:

“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.

(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.

இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:

“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.

கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.

ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.

காங்கிரசும் கஜினி முகமதுவும்:

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.

“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.

இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.

பாடநூல் புரட்டு!

மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.

“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”

“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”

‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!

***

ராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.

இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.

மன்னனின் பெருந்தன்மை

கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள்  காட்டுகிறார்.

“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள்  கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன்.  ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”

முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?

– அஜித்
___________________________________
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 1999
___________________________________

ஆம்வே தலைவர் கைது – நல்லதா, கெட்டதா ?

3

ம்வே இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வில்லியம் எஸ். பிங்க்னே மூன்று வெவ்வேறு வழக்குகளில், ஆந்திர மாநில காவல்துறையால், கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெறிமுறைகளை மீறிய, பணச் சுழற்சி திட்டங்களை செயல்படுத்துவதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஹரியானா குர்கானில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்வே இந்தியா தலைவர் வில்லியம் பிங்கியும், மேலாண்மை இயக்குநர் அனுஷ் புத்ராஜாவும் கைது செய்யப்பட்டனர்.
ஆம்வே இந்தியா தலைவர் வில்லியம் பிங்கியும், மேலாண்மை இயக்குநர் அனுஷ் புத்ராஜாவும் கைது செய்யப்பட்டனர் – படம் நன்றி: தி இந்து

உலகெங்கிலும் பல நாடுகளில் தங்களது திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி பெறலாம் என்றும் வளமான வாழ்வைப் பெறலாம் என்றும் கூறி மக்களை தங்கள் வலையில் விழ வைத்து ஏமாற்றும் பொன்சி என்ற பிரமிட் சந்தைப்படுத்தும் திட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும், பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்​று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​த‌டை (PCMCS)​ ச‌ட்​ட‌த்​தின் மூலம் ஏமாற்று திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து இதே பிரமிடை வேறு பெயர்களில், பொருளில் வைத்துக் கொண்டு உலகெங்கும் மோசடியை தொடரவே செய்கின்றனர். தோசையின் பெயர்கள் மாறுபட்டாலும் மாவு என்னவோ அதே ஊசிப்போன பழைய மாவுதான்.

PCMCS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடப்பா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வில்லியம் பிங்க்னியை ஜாமினில் விடுதலை செய்ய கர்நூல் நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் ஆந்திர போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கிடையில் மற்றொரு நிதிமுறைகேடு வழக்கில் கம்மம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவைப்பெற்று கடப்பா சிறையிலிருந்த வில்லியம் பிங்க்னியை, ஆந்திர – தற்போது தெலுங்கானா – கம்மம் போலீசார் தங்களது காவலில் எடுத்துக் கொண்டனர்.

வழக்கை விசாரித்த கம்மம் நீதிமன்றம் அவரை வராங்கல் மத்திய சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து வராங்கலில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு நிதிமுறைகேடு வழக்கில் வராங்கல் போலீசார் தங்களது காவலில் எடுத்துகொண்டுள்ளனர். விதிமீறல்கள் தொடர்பாக அவர் மீது ஆந்திராவில் மட்டும் 9 வழக்குகள் இருப்பதாக, போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆம்வேயால் அதிகம் ஏமாற்றப்பட்ட மக்கள் மற்ற மாநிலங்களை விட ஆந்திராவில் இருப்பது தெரிகிறது.

இக்கைது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆம்வே நிறுவனம், இந்தியா முழுவதிலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தாங்கள் மத்திய, மாநில சட்டங்களை முறையாக பின்பற்றி வருகிறோம், கைது குறித்து தங்கள் நிறுவனத்துக்கு எந்த முன் தகவலும் கொடுக்கவில்லை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றது, தங்களது தொழில் குறித்து இது தவறான கருத்தை பரப்புகிறது என்றெல்லாம் அடுக்கியுள்ளது.

நேரடி விற்பனை தொழில் துறைக்காக சட்ட ரீதியான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் நேரடி விற்பனை சங்கிலி தொடர் திட்டங்கள் பொன்சி – பிரமிட் திட்டங்களாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன; சட்டரீதியான கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதுடன் PCMCS சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துவதாகவும் ஆம்வே அதில் கூறியுள்ளது.

இந்நிறுவனத்தின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழும் போதெல்லாம், நேரடி விற்பனை திட்டங்கள் பிரமிட்-பொன்சி திட்டங்களாக தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக இவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் முதலைகளின் கண்ணீரைத்தான், முதலாளிகளின் ‘துயரைத்தானே’ இந்த அரசு தேசிய சோகமாக கருதி நடவடிக்கை எடுக்கிறது.

மேலும் மயிர்பிளக்கும் சிக்கலான வழிகாட்டும் நெறிமுறைகளை காட்டி பொருட்களை நேரடி விற்பனை செய்வதே தங்களது செயல்முறை என்றும் அதன் மூலமே விற்பனை சங்கிலியின் உறுப்பினர்களுக்கு கமிஷன் வழங்குவதாக கூறுகிறது ஆம்வே. நதிகள் வேறானலும் சேருமிடம் கடல் போல இவர்கள் சங்கிலி தொடர் கமிஷனுக்கு புதிய மோசடி விளக்கத்தை தருகிறார்கள்.

ஆனால், நடைமுறையில் விற்பனை மட்டுமே கமிஷனை பெற்று தராது. உறுப்பினர்கள் தங்களுக்கு கீழே படிநிலையில் உறுப்பினர்களை சேர்த்தால் மட்டுமே கமிஷன் பெற முடியும். மேலும், புதிய உறுப்பினரை ஈர்ப்பதற்கு மற்ற பிரமிட் திட்டங்களைப் போலவே விரைவாக எளியமுறையில் அதிக வருவாயை ஈட்டமுடியும் என்று ஆசை காட்டியே சேர்க்கின்றனர். தனக்கு கீழே அதிக உறுப்பினர்களை சேர்ப்பதையே கடின உழைப்பு என்கின்றனர். இந்த கடின உழைப்பு மற்றவரிடம் ஆம்வேயில் விற்பனை ஏஜெண்டாக சேர்ந்தால் கோடிசுரவராக மாறலாம் என்ற மோசடி மாயையை உருவாக்குவதையே செய்கிறது. தரகர்களின் உழைப்பு என்பது எப்போதும் இப்படித்தான்.

amway scam 1நடைமுறையிலிருக்கும் சந்தைக்கு மாற்றாக “முற்போக்கானதாக” நேரடி விற்பனை திட்டத்தை ஆம்வே போன்ற நிறுவனங்கள் சொல்லிக் கொண்டாலும், தங்களது நேரடி விற்பனை பிரமிட் படிநிலைகளில் பலருக்கும் கமிசன் பிரித்து கொடுக்கப்படுவதற்கும் வெளிச்சந்தையில் பல இடைத்தரகர்களை கடந்து நுகர்வோரை வந்தடைவதற்கும் பாரிய வேறுபாடில்லை. மட்டுமின்றி விற்பனை சங்கிலியின் மூலம் தமது விலை உயர்ந்த பொருட்களை எந்த வித விளம்பர செலவும் இன்றி விற்பனை செய்து கொள்கிறது இந்நிறுவனம்.

1998 முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆம்வே 100 மில்லியன் டாலர்கள் (ரூபாய் 600 கோடி) வரையிலான முதலீட்டை செய்துள்ளது. ஆம்வேயின் 2012ம் வருடத்தின் விற்பனை 2500 கோடியாகும்.

ஆம்வே போன்ற பல்லடுக்கு விற்பனை சங்கிலியில் சுமார் 90%க்கும் மேற்பட்டோர் தோல்வியை சந்திப்பதாகவும் சில வருடங்களிலேயே திட்டத்தை விட்டு வெளியேறிவிடுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக இதன் படி 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் 90 லட்சம் பேர் இந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு தங்களது உழைப்பையும், பணத்தையும் இழந்துள்ளார்கள்.

ஒரு அமெரிக்கர், அதுவும் பல கோடிகள் முதலீடு செய்திருக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளி கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த நீதிமன்றங்கள், சட்டங்கள் குறித்த பிரமையை ஏற்படுத்தலாம். நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் அதிகார அமைப்பு, நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள் முறையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதை இக்கைது நடவடிக்கைகள் காட்டுவதாகவும் சிலர் நினைக்கலாம். பாதுகாப்புத் துறையிலேயே முழுமையான அன்னிய முதலீட்டை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் மோடி அரசு, ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தை மட்டும் தடை செய்யும் என்று நினைப்பது மடமை. மேலும் இக்கைது முழுக்கவும் நீதிமன்றங்களால் செய்யப்பட்டனவே அன்றி இதற்கும் மோடியின் உதாருக்கும் ஒரு தொடர்புமில்லை.

எனவே இக்கைது நடவடிக்கைகளால் யார் பயனடையப் போகிறார்கள்? பாதிக்கப்பட்டோருக்கு எவ்வகையான நிவாரணத்தை இக்கைது நடவடிக்கை வழங்கும்?

இப்போது கைது நடவைக்கைகளை மேற்கொண்டாலும், அதிகார வர்க்கம் 1998-ல் நேரடி விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதியளித்த போது, ஆம்வே போன்ற நிறுவனங்கள் நேரடி விற்பனை என்ற முகமுடியுடன் வரும் பிரமிட் திட்ட நிறுவனங்கள் என்று அறிந்தே தான் அனுமதித்திருக்கின்றனர்.

வில்லியம் பிங்க்னி கைது இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை பாதிக்கும் என்று இந்திய தரகு முதலாளிகள் சங்கமான ஃபிக்கி தெரிவித்துள்ளது. டெல்லியிலுள்ள அமெரிக்க சேம்பர்ஸ் (AMCHAM) அமைப்பும் இக்கைது நடவடிக்கை முதலீட்டு சூழலை சீர்குலைக்கும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், இக்கைது நடவடிக்கைக்கு க‌ண்​ட​ன‌த்தை தெரி​வி‌த்​‌து‌ள்​ள‌ ‌கேரள     வ‌ர்‌த்​தக ச‌பை ​(KCCI)​ தனது அறி‌க்​‌கை​யி‌ல்,​​ “காலாவதியான 1978ஆ‌ம் ஆ‌ண்​டி‌ன் பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்​று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​(த‌டை)​ ச‌ட்​ட‌த்​தி‌ல் ம‌த்​திய அரசு திரு‌த்​த‌ம் ‌கொ‌ண்​டு​வர ‌வே‌ண்​டு‌ம் என்றும் ​ ‌நேரடி வி‌ற்​ப​‌னை​யி‌ல் நிறுவனங்களுக்கு இ‌ந்​த‌ச் ச‌ட்​ட‌த்​தா‌ல் ஏ‌ற்​ப​டு‌ம் பிர‌ச்​‌னை​க‌ளை ஆ‌ய்வு ‌செ‌ய்‌து,​​ ‌தொட‌ர்‌ந்‌து ‌தொழி​லி‌ல் ஈடு​ப​டு​வ​த‌ற்​கான உக‌ந்த சூழ‌லை ஏ‌ற்​ப​டு‌த்த ‌வே‌ண்​டு‌ம் என்றும் ‌தெரி​வி‌த்து‌ள்​ள‌து.​ இ‌ந்​தி​யா​வி‌ல் ‌நேரடி வி‌ற்ப‌னை வ‌ர்‌த்​த​கம் ரூ.7,160 ‌கோடி அள​வி‌ற்கு வள‌ர்ச்சி ‌பெ‌ற்​று‌ள்ளதாகவும், உக‌ந்த ச‌ட்ட ரீதி​யிலான ‌தொழி‌ல் சூழ‌லை ஏ‌ற்​ப​டு‌த்​தி‌க் ‌கொடு‌த்​தா‌ல்,​​ 2020-ம் ஆ‌ண்​டு‌க்​கு‌ள்,​​ ‌நேரடி வி‌ற்​ப‌னை வ‌ர்‌த்​த​க‌ம் ரூ.35,000 ‌கோடி‌யை எ‌ட்​டு‌ம்” எ‌ன்றும்‌ தெரி​வி‌த்து‌ள்​ள‌து.

அதாவது இக்கைதை எதிர்த்தும், ஆம்வேக்கு ஆதரவாகவும் சகல முதலாளித்துவ சங்கங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. ஆம்வே மீதான குற்றச்சாட்டு கிரிமினல் குற்றம் அல்ல என்றும், அது வெறுமனே நுகர்வோருக்கும், கம்பெனிக்கும் இடையிலான பிரச்சனை என்றும் அதற்கு கிரிமினல் குற்றவாளியைப் போல முன்னறிவிப்பின்றி கைது செய்ய தேவையில்லை என்றும் அவை தெரிவிக்கின்றன.

amway scam 2இதற்கு முன்பே ஆந்திர நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆம்வே மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் இந்நிறுவனம் எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. இதே போல நிதிமுறைகேட்டுக் குற்றச்சாட்டின் கீழ் சென்ற ஆண்டு முன்பு கேரள காவல்துறையினரால் வில்லியம் பிங்க்னே கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருக்கும் போது பிணையில் விட்டிருக்கிறது கேரள நீதிமன்றம்.

மேலும், போபால் படுகொலையின் கொலைகாரன் ஆண்டர்சனையே பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு விமானமேற்றி அனுப்பி வைத்த பெருமையை உடைய நம் நாட்டில் தற்போதைய வழக்கிலும் கூட பிங்க்னே விரைவில் வெளியே வருவார். அடுத்த ஆம்வே ஆண்டு கூட்டத்தில் திரும்பவும் ஆவி எழுப்பும் சடங்குளையும், ஆம்வேயால் முன்னேறிய சாட்சிகளையும் காட்டுவார்.

ஆனால், இக்கைதின் மூலம் ஆம்வே நிறுவனம் பல்வேறு முதலாளிகளுக்கு நல்ல விளைவுகளையே கொண்டு வரப்போகிறது. தற்போது ஆம்வே மட்டுமின்றி அனைத்து முதலாளிகளும் பரி​சு‌ச் சீ‌ட்டு ம‌ற்று‌ம் பண சுழ‌ற்சி தி‌ட்​ட‌ங்​க‌ள் ​த‌டை (PCMCS)​ ச‌ட்​ட‌த்தில் திருத்தம் கொண்டுவர அரசை நிர்பந்தித்து வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளின் நாயகன் மோடி தனது அமைச்சரவை மூலம் ஒரு அவசர சட்டதிருத்தத்தை கொண்டு வந்து இன்று பெயரளவில் இருக்கும் தடைகளையும் தகர்த்து இப்பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை சுதந்திரமாக ஏமாற்றி சூறையாட வழி செய்து கொடுப்பது நிச்சயம்.

ஆனால் நிதி மூலதன சூதாடிகள் பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றின் மூலம் மக்களை பொன்சி திட்டங்களைப் போலவே சூறையாடி வரும் போது, நமது போராட்டம் ஒட்டுமொத்தமாக மறுகாலனியாக்கத்தை வீழ்த்துவதோடு இணைக்கப்படவேண்டும். இதன்றி ஆம்வே முதலான மோசடி முதலாளித்துவ நிறுவனங்களை வீழ்த்துவது கடினம். இங்கே பிரச்சினை என்பது சட்டபூர்வமாக சுரண்டுவது, ஏமாற்றுவதற்கும், சட்ட விரோதமாக செய்வதற்கும் இடையே உள்ள முரண்படுதான். இந்த நட்பு முரண்பாட்டை தீர்ப்பதையே தற்போதைய கைது நடவடிக்கைகள் செய்யப் போகிறது. ஆகவே நாம் முதலாளித்துவத்தோடு பகை முரண்பாடு கொள்ளாத வரைக்கும் ஆம்வேக்கள் ஆட்டம் போடவே செய்வார்கள்.

–    மார்ட்டின்.

மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !

1
அமெரிக்க கொடியின் ஆசிர்வாதத்தோடு இந்தியக் கொடி! பாரத மாதாவின் தவப் புதல்வி மல்லிகா ஷெராவத்!!

சாதிப் படிநிலையில் கீழே உள்ள ஆண்களை காதலிக்கவோ அல்லது திருமணம் செய்யவோ நம் நாட்டு ஆதிக்க சாதிப் பெண்களுக்கு உரிமை கிடையாது. யாரும் மீறி முயன்றால் கவுரவக் கொலை நிகழ்த்தி நம் ‘பாரத’ப் பண்பாட்டை தூக்கி நிறுத்துவது சங்க பரிவாரங்கள் மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களின் முக்கியமான வேலை.

அடங்கிக் கிடப்பதே பெண்களின் நல்லியல்பாகவும் மறுத்தால் ஒடுக்கியும் வரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்கள் மறுபுறம் அதே பெண்களை நதி, தாய்நாடு, தெய்வம் என்று தொழுவதாக பீற்றிக் கொள்ளுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் பெண்களை மரியாதை செய்யும் இலட்சணம் இப்படிப்பட்டதே!

மல்லிகா ஷெராவத்தின் நடிப்பை விட ஆர்.எஸ்.எஸ் நடிப்பு அட்டகாசம்!
மல்லிகா ஷெராவத்தின் நடிப்பை விட ஆர்.எஸ்.எஸ் நடிப்பு அட்டகாசம்!

அதனால்தான் உ.பி.-‘யில் யாதவ ஆதிக்க சாதி வெறியர்கள் இரு தலித் பதின்ம வயது சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, தூக்கிலேற்றிய நிகழ்வு குறித்து பாஜக கூட்டம் அகிலேஷ் யாதவ் அரசை மட்டும் கண்டித்திருக்கிறதே அன்றி, ஆதிக்க சாதிவெறியை அல்ல. முசாபர்நகர் கலவரத்தில் ஜாட் ஆதிக்க சாதிகளின் வாக்குகளை அறுவடை செய்த சங்க பரிவாரத்திற்கு இங்கே யாதவ சாதி வாக்குகளை அள்ளுவதற்கு இந்த பாராமுகம் நிச்சயமாக உதவி செய்யும்.

இந்தியாவில் ஏதாவது ஒரு பெண்ணுக்கு பாதிப்பு என்றால் மற்றவர்கள் அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்தால், இந்துமத வெறியர்கள் மட்டும் அந்த பிரச்சினையின் மூலம் பாரதப் பண்பாடு எப்படி ‘பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று  கண்டுபிடித்து போராடுவார்கள்.

அப்படித்தான் ஒரு சினிமா சுவரொட்டியில் பாரத மாதாவை இழிவுபடுத்தும் வண்ணம் தேசிய கொடியை ஆபாசமான ஆடையாக அணிந்து விட்டார் எனக் கூறி பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக போராடத் தயாராகி உள்ளனர், ஆர்.எஸ்.எஸ் வானரக் கும்பல்கள்.

மல்லிகா ஷெராவத், கவர்ச்சி வேடங்களுக்காக பெயரெடுத்த ஒரு பாலிவுட் நடிகை. பரபரப்பான செய்திகளில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது இத்தகைய கவர்ச்சி நடிகைகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. ஏற்கெனவே அமெரிக்க தேசிய கொடியை படுக்கையாக பயன்படுத்தி ‘பாலிடிக்ஸ் ஆப் லவ்’ என்ற திரைப்பட சுவரொட்டியில் போஸ் கொடுத்தது, ரியாலிட்டி ஷோ மூலமாக தனக்கு சுயம்வரம் நடத்தியது என அவ்வப்போது காசே செலவு செய்யாமல் செய்திகளில் தலைகாட்டி விளம்பரத்தை பெற்றுக் கொள்ளும் மல்லிகா ஷெராவத், ஏறக்குறைய சினிமா உலகிலிருந்து ஓய்வுபெறும் சந்தை பறிபோன நடிகையாக இருக்கிறார்.

இதன் பொருட்டே அவர் சர்ச்சைகளின் நாயகியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தேவை இருக்கிறது. இப்போது இந்த முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதிகளும் உதவி செய்கிறார்கள். அவர் கதாநாயகியாக நடிக்கும் “தி டர்ட்டி பாலிடிக்ஸ்” என்ற திரைப்படத்தின் சுவரொட்டிகள் கடந்த வாரம் மும்பையில் வெளியாகின.

இந்திய தேசியக் கொடி அல்லது காங்கிரசு கட்சியின் கொடியிலுள்ள வண்ணங்களால் (காவி, வெள்ளை, பச்சை) ஆன ஒரு துண்டை மாத்திரம் கட்டிக் கொண்டு, பாதி உடல் தெரியும் வண்ணம் ஒரு அரசாங்க சைரன் பொருத்திய அம்பாசிடர் கார் மீது அமர்ந்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். வலது கை விரலில் கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் போல ஒரு வீடியோ சிடி இருக்கிறது. படத்தின் பின்புறமாக ராஜஸ்தான் மாநில சட்டசபை காட்டப்படுகிறது.

இந்த புகைப்படத்தை தனது முகநூலின் முகப்பிலும் மல்லிகா ஷெராவத் பகிர்ந்திருக்கிறார். உடனடியாக தேச பக்தர்களும், இந்துமதவெறி ஆதரவு சக்திகளும், மல்லிகா தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக பின்னூட்டங்கள் மூலமாக கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை சிடி தான் அசோக சக்கரம். மற்றபடி பின்னூட்டமிட்ட பல ஆண்களுக்கும் ஷெராவத்தையும் ‘தனிப்பட்ட’ முறையில் பிடிக்கும், தேசிய கொடியையும் பிடிக்கும் என்பது அவர்களே மறுக்கமுடியாத முரண்பாடு. இதன்றி பாஜக முன்னாள் செயலர் சஞ்செய் ஜோஷியின் ‘சிடி’, கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் பிட்டு படம் பார்த்தது, பாஜகவின் ஞானகுரு ஆஸ்ரம் பாபுவின் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் தற்கால பாரத பண்பாட்டின் மைல் கற்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 67 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தி டர்ட்டி பாலிடிக்ஸ் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அதன் விளம்பர தூதுவராகவும் மல்லிகா ஷெராவத் தான் சென்றிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த அரைகுறை உடைகளைப் பற்றிதான் அங்கே பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு அவரை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். படத்துக்கு ஜாக்கி வைத்து தூக்குவதற்காகத்தான் அந்த அரைகுறை ஆடைகள் என்பதை அனைவரும் தெரிந்துதான் இருந்தார்கள். இது ஒரு தனிக்கதை.

இந்திய இறையாண்மை பறிபோனதை விடவா இந்த பட சுவரோட்டியின் மூவர்ணக் கொடி மரியாதை முக்கியம்?
இந்திய இறையாண்மை பறிபோனதை விடவா இந்த பட சுவரோட்டியின் மூவர்ணக் கொடி மரியாதை முக்கியம்?

2013 துவக்கத்திலேயே மல்லிகா ஷெராவத்துக்கும், தி டர்ட்டி பாலிடிக்ஸ் பட இயக்குநர் கே.சி.பொக்காடியாவிற்கும் ‘மிரட்டல்’கள் வந்தன. 2011-ல் செப்டம்பர் 1-ம் தேதி காணாமல் போன ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஆரம்ப சுகாதார மையத்தை சேர்ந்த செவிலியர் பன்வாரி தேவியின் கதை இது என்பதுதான் இந்த மிரட்டலுக்கான காரணம். செப்டம்பர் 1-ம் தேதி பன்வாரி தேவி (வயது 36) காணாமல் போனார். அதுபற்றி அவரது கணவர் அமர் சந்த் போலீசில் புகார் தெரிவித்தார். தனது மனைவியை காங்கிரசு கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மஹியால் மர்தேனா கடத்திக் கொண்டு போய் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, பின் கொன்று விட்டதாக அவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மாநிலத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. காங்கிரசு ஆட்சியை கலைக்க கோரினர். அமைச்சருடன் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மல்கான் சிங், ஷாபுதீன், சோஹன்ராம், பால்தேவ் ஆகியோர் கைதாகினர். இக்குற்றச்சாட்டில் ஷகிராம் பிஸ்னோய் என்பவர் சரணடைந்தார். இத்துடன் பன்வாரியின் கணவர் அமர் சந்தும் கைதானார்.

பன்வாரி தேவி, கைதான அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகவும், அதனை வீடியோவாக பிடித்து வைத்துக் கொண்டு அமைச்சரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.  இந்த வழக்கில் அவரது கணவரும் குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாகவும் குற்றவாளிகள் தெரிவித்திருந்தனர்.

ஜலிவாடா கிராமத்தை சேர்ந்த பன்வாரி தேவியின் அஸ்தி ஜலோடா கிராமத்திற்கருகில் ராஜீவ் காந்தி கால்வாயில் கரைக்கப்பட்டது. அவருடைய சில எரியாத எலும்புத் துண்டுகளும், மோதிரமும் கால்வாயில் இருந்து கைப்பற்றப்பட்டன. நூறு நாட்களில் வேகமாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. பன்வாரி தேவியின் கடைசி மகளுக்கு தந்தை, கைதான எம்.எல்.ஏ மல்கான் சிங்தான் என்பதை டி.என்.ஏ சோதனை மூலம் சிபிஐ நிரூபித்தது. பன்வாரி தேவி பதிவு செய்ததாக இரண்டு சிடிக்களை கைப்பற்றியிருப்பதாக சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்திருந்தது.

காங்கிரசு எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர்களின் இந்த ‘சாதனையை’ தணிக்கும் பொருட்டு, பன்வாரி தேவியின் மூன்று குழந்தைகளுக்கும் கல்வி உதவி அளிப்பதாக மாநில முதல்வராக அப்போது இருந்த காங்கிரசின் அசோக் ஹெக்லாட் உறுதி கூறியிருந்தார்.

இந்த கதையை வைத்துதான் தி டர்ட்டி பாலிடிக்ஸ் படம் எடுத்துள்ளார்கள். படத்தில் ஒம் பூரி, நஷ்ருதீன் ஷா, அனுபம் கெர், ஷாக்கி ஷெரப், கோவிந்த் நாம்தேவ், அசுதோஷ் ராணா, ராஜ்பால் யாதவ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் இந்த பிரபலங்களால் ஆதாயமில்லை என்று முடிவு செய்திருக்கும் படத் தயாரிப்பாரளர்கள், படத்தை ஓட்டுவதற்காக மல்லிகா ஷெராவத்தை திரையில் பன்வாரி தேவியாக ‘காட்டும்’ பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.

ஹரியாணா மாநிலத்தில் ஒரு வசதியான ஜாட் சாதி குடும்பத்தில் பிறந்த மல்லிகா ஷெராவத்திடம் படத்தைப் பற்றி கேட்டதற்கு, அமெரிக்க ஆங்கில உச்சரிப்புடன் அவர் கூறியது ”இது எப்படி ஒரு பெண் செவிலிக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது, எப்படி கடைசியில் அவள் கொல்லப்படுகிறாள் என்பதை சொல்கிறது. எப்படி அவள் அரசியல்வாதிகளால் மிக மோசமாக வல்லுறவுக்குள்ளானாள், துன்புறுத்தப்பட்டாள் என்பதை பதிவு செய்து ஊடகங்களிடம் தருமளவுக்கு அவளுக்கு தைரியமிருந்தது”.

ஆனால் இந்த தைரியம் மல்லிகாவுக்கோ இல்லை இயக்குநர் உள்ளிட்ட படத்தின் படைப்பாளிகளுக்கோ இல்லை. அதனால்தான் ஷெராவத்தை ஆபாசமாக காட்டி தமது படைப்பின் வர்த்தக நலனை உறுதி செய்து கொண்டனர்.

இப்படத்தின் சுவரொட்டியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைக்க கோரி பலவித அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் படத்தின் இயக்குநருக்கு தரப்பட்டன. ராஜஸ்தானை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் வழக்கு போடப் போவதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பு துவங்கும்போதே அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரசார் கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை தங்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடக் கூடாது என்ற கவலை.

படத்தின் இயக்குநருக்கோ அல்லது மல்லிகா ஷெராவத்துக்கோ பன்வாரி தேவியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதோ அல்லது இனி பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதோ நோக்கமாக இருந்திருக்க முடியாது. இதனை இயக்குநரும் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார். மல்லிகா ஷெராவத்தும் குறைந்து வரும் தனது சந்தை மதிப்பை மீட்டெடுக்கவே இப்படத்தில் நடித்திருக்கிறார். இல்லையென்றால் பன்வாரி தேவியை இழிவு படுத்தும் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க முடியுமா என்ன?

ஏற்கெனவே வித்யா பாலன் நடிப்பில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டிருப்பதாக சொல்லி கல்லா கட்டிய பாலிவுட்டைப் பொறுத்தவரை, பன்வாரி தேவி திரைக்கு வராத ஒரு சில்க் ஸ்மிதா. அதனால் அவரது வரலாற்றை இழுத்து வந்து வெண்திரையில் காட்டுகிறார்கள். ஆபாசப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தயாரிப்பாளர்கள், அதில் சமூகத்திற்கு உபதேசம் செய்யும் கருத்துகளை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். சதையை பார்க்க வரும் ரசிகன் கதையையோ இல்லை அதில் ஒரு நீதியையோ எதிர்பார்க்க மாட்டான். ஆனாலும் கவர்ச்சிக் கதைகளுக்கு அப்படி ஒரு அறம் தேவைப்படுகிறது.

பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டு ஏன்?
பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டது ஏன்?

ஷகிலா படங்கள் தமது பாரதப் பண்பாட்டை இழிவு படுத்துகிறது என்று போராட முடியாதவர்கள் ஷெராவத்திற்கு மட்டும் வருவது ஏன்?  ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை. இந்த தேசத்தின் பண்பாடு, ஒரு பெண்ணை அடிமை போல நடத்துவதை பெருமையாக கருதுபவர்கள், அந்த தேசத்தின் கொடி சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முரணல்ல.

”மூவர்ண கொடியை நாட்டுக்காக போராடி உயிர்நீத்த போர் வீரர்கள் மீது மட்டும்தான் போர்த்த முடியும்” என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதன்படி அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போடும் இராணுவ, போலீசின் ‘வீரத்திலும்’ தேசக் கொடியின் பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது.

இப்போது ராஜஸ்தானில் வசுந்துரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருவதால் ஷெராவத்துக்கு பின்புறமாக ராஜஸ்தான் சட்டசபையை காட்டியது கூட தங்களை அவமதிப்பதாகத்தான் அர்த்தம் என்று அவர்கள் சொல்லிக் கொள்கின்றனர். கூடவே காங்கிரசும் இந்தக் கொடியை தங்களது கட்சிக் கொடி என்று உரிமை பாராட்டுகிறது. அதனால் சுவரொட்டியை திரும்ப பெறுமாறு வலியுறுத்துகிறது.

காங்கிரசும், பாஜகவும் இந்தியாவின் இறையாண்மையை போட்டி போட்டுக் கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்யும் தருணத்தில் தங்களது அம்மணத்தை மறைக்க இத்தகைய சில்லறை பிரச்சினைகளை கையிலெடுக்கின்றனர். பன்றிகளின் கூடரம் ஆகிவிட்ட பாராளுமன்ற, சட்ட மன்றங்களின் மீது இவர்களுக்கு இருக்கும் பற்றும் சுயமரியாதையும், ஷகிலா படங்களில் இருக்கும் அறச்சீற்றத்தை நினைவுபடுத்துகிறது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருக்கையில் அவரது பாதங்களுக்கருகே இந்திய தேசிய கொடி இருந்த புகைப்படத்தை பார்த்த இதே இந்துத்துவா தேச பக்தர்கள் முன்னர் அதனை பிரச்சினையாக்கினார்கள். அதற்காக சானியா மன்னிப்பு கேட்ட பிறகுதான் பிரச்சினை தீர்ந்தது. 2000-ல் மாலினி ரமணி என்ற ஆடை வடிவமைப்பாளர் தனது உடையை மூவண்ண கோடுகளும், நடுவில் நீல நிற சக்கரமும் கொண்டதாக வடிவமைத்திருந்த காரணத்துக்காக கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து நடிகை மந்திரா பேடியும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு இதுபோன்ற ஆடையுடன் வந்த காரணத்துக்காக இந்துத்துவா சக்திகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகினார்.

இப்படி பெண்கள், அதுவும் விளையாட்டு வீரங்கனைகள் மற்றும் நடிகைகளின் பிடியில் இருந்து நாட்டின் சுயமரியாதையை காப்பாற்றும் தேசபக்த சிங்கங்கள் எதற்கும் ஏகாதிபத்தியங்களின் மூலதனம் இங்கே வந்து சூறையாடுவதும், தேசமே ‘கற்பழிக்கப்படுவதும்’ கண்களுக்கு தெரியவில்லை. மட்டுமல்ல அந்த வன்புணர்ச்சியின் தரகர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். ஆகவே நம் கேள்வி எளிது. ஒரு விபச்சாரத் தரகன் ‘கற்பு’ குறித்து வகுப்பு நடத்த முடியுமா?

ஒரு அமைச்சர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதுடன், கொலையும் செய்துள்ளார். பிறகு குற்றவாளிகள் கொலையான பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்கவும் செய்துள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையில் கூட தடயங்கள் எதுவும் கிடைக்காதவாறு குற்றவாளிகள் திட்டமிட்டு சாம்பலை ஆற்றில் கலந்து விட்டிருந்தார்கள்.

இத்தகைய பெண்ணைத்தான் இப்போது ஒரு சகுனி போன்ற பண்புடைய ஒரு விபச்சாரி என்றும், ஒரு அமைச்சரை வலையில் விழ வைத்து சம்பாதிக்க முயன்றாள் என்றும் சித்தரிக்கிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த அமைச்சரல்லவா சாம்பலாக ஆற்றில் கலந்திருக்க வேண்டும்? பன்வாரி தேவிக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருக்கும் பட்சத்தில் அவள் ஏன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்?

பெண்கள் குறித்த எல்லா செய்திகளும் ஆண் வாசகர்களின் பரபரப்புக்கு தீனி போடும் பொருட்டே இப்படி எழுதப்படுகின்றன. மேட்டுக்குடி மைனர் செய்யும் தவறுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் ஊடகங்கள் அதையே ஒரு பெண் செய்தால் அவளின் ‘சுய ஒழுக்கத்தை’ காரணம் காட்டி குற்றாளிகளுக்கு ஆதரவாக வாதிடுவார்கள். தவறே செய்யவில்லை என்றாலும் ஏழைப் பெண்கள் தொடர்பான வழக்குகளில் அவர்களது நடத்தை மட்டும் இழிவாக பேசப்படும். இதனால்தான் நமது நாட்டில் பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுதலையாகியுள்ளனர்.

தொன்னூறுகளில் (1992) ராஜஸ்தானில் பெருமளவு பேசப்பட்ட இன்னொரு பன்வாரி தேவி (வயது 50) வழக்கில், பாலியல் வல்லுறவுக்குள்ளான அந்த சமூக சேவகி நேரடியாக குற்றம்சாட்டிய ஆண்கள் ‘உயர்’சாதியினர் என்ற காரணத்தால் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை தீண்டியிருக்க மாட்டார்கள் என்றும், ஆகவே பன்வாரி தேவி வல்லுறவுக்குள்ளாகவேயில்லை என்றும் கூறி குற்றவாளிகளான ஐந்து ஆதிக்க சாதியினரையும் ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.

அமெரிக்க கொடியின் ஆசிர்வாதத்தோடு இந்தியக் கொடி! பாரத மாதாவின் தவப் புதல்வி மல்லிகா ஷெராவத்!!
அமெரிக்க கொடியின் ஆசிர்வாதத்தோடு இந்தியக் கொடி! பாரத மாதாவின் தவப் புதல்வி மல்லிகா ஷெராவத்!!

உச்ச நீதிமன்றம் வரை சென்ற பன்வாரி தேவியின் விடா முயற்சியால் தான் இன்றைக்கு பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க வகை செய்யும் விசாகா கமிட்டி அமைவதற்கான ஒரு தீர்ப்பு பெறப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக காவல்துறையில் புகார் அளித்தார் என்பதற்காக பன்வாரி தேவி ஆதிக்க சாதியினரால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1974-ல் பீகாரில் இரு காவலர்கள் ஒரு தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூட இப்படித்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெண்மணி படுகொலையில் கூட கோபால கிருஷ்ண நாயுடு போன்ற ‘உயர்’சாதியை சேர்ந்த நபர் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்று சொன்னது நீதிமன்றம். இதுதான் நீதிமன்றத்தின் பார்வையும் கூட.

இப்படி நீதி மன்றம் போய்தான் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற எண்ணத்தால்தான் பாலியல் குற்றவாளிகள் பலரும் பாலியல் வல்லுறவோடு, கொலையையும் சேர்த்தே செய்து விடுகின்றனர். 2011-ல் ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்றால், 2014-ல் உபி இரண்டு தலித் சிறுமிகள்.

ஆணாதிக்கம் கோலோச்சும் பார்ப்பனிய சமூக அமைப்பில் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல்களை பிறப்புரிமையாகத்தான் பல ஆதிக்கப் பிரிவு ஆண்களும் கருதிக் கொள்கிறார்கள். சமூக வாழ்விலும், குடும்ப வாழ்விலும் தங்களது சக பயணி என்ற அந்தஸ்தை பெண்களுக்கு வழங்குவதை அவர்களது பார்ப்பனிய ஆணாதிக்க மனோநிலை தடுக்கிறது. அதிலும் அமைச்சர், அதிகாரிகள் போன்ற பொறுப்புகளில் ஆண்கள் இருந்து, அவர்களுக்கும் கீழான சமூகப்படி நிலை அந்தஸ்தில் பெண்கள் இருக்க நேரிட்டால், தங்களது பாலியல் தேவைகளுக்கான நுகர்பொருட்களாகத்தான் பெண்களை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் தங்களது நுகர் பொருள் நுகர்பவனை கேள்வி கேட்பதை அவர்கள் அனுமதிப்பதில்லை. சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் மரணமும், வேசிப் பட்டமும் அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.

பழைய பன்வாரி தேவியை வல்லுறவுக்குள்ளாக்கி நடைபிணமாக்க முயன்றனர் ஆதிக்க சாதியினர். புதிய பன்வாரி தேவியை கொலையும் செய்து விட்டனர். கூடவே வேசிப் பட்டமும் அளிக்க தயாராகி விட்டனர். இவர்களே சொல்வது போல பன்வாரி தேவி ஒரு ‘வேசி’ என்று வைத்துக் கொண்டாலும் அவளை கொல்வதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்? அல்லது அந்த பெண்ணை வேசி போல துன்புறுத்தியது யார்? இது அவளது விருப்பமா இல்லை நிர்ப்பந்தமா?

பழைய பன்வாரி தேவி கதையை வைத்து நமக்கு கிடைத்தது ‘பாவந்தர்’ இந்தி திரைப்படம். புதிய பன்வாரி தேவியை முன்வைத்து தி டர்ட்டி பாலிடிக்ஸ். இதைத் தாண்டி படம் ஓட வேண்டும் என்ற பரபரப்புக்காக இப்போது கவர்ச்சி + தேசியக் கொடி + மல்லிகா ஷெராவத், அதற்கு ஆதரவாய் தேவலோக ரம்பைகளின் ரசிகர்களான ஆர்.எஸ்.எஸ் இன் எதிர்ப்பு.

–    கௌதமன்

அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

1

நூல் அறிமுகம் : பிரெக்டின் கெலிலியோ கெலிலி

அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

கி.பி பத்தாம் நூற்றாண்டில் பாரசீக அறிஞர் அல்பெருணி அன்றைய இந்தியாவின் சாதி, மதச் சமூகத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் தனது நூலொன்றில் அற்புதமாகப் படம் பிடித்தார்.

பிரெக்ட்
பெர்தோல்ட் பிரெக்ட்

அன்றைய அறிவியலாளர்களான வராகமிகிரர், பிரம்ம குப்தர் இருவரையும் பற்றிக் கூறும்போது, “இவ்வறிஞர்களுக்கு சூரிய – சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பது நன்றாகத் தெரியும். இவர்கள் அறிவியல் விவரங்களைக் கணக்கிட்டு கிரகணம் பற்றித் துல்லியமாக தமது ஆய்வு நூல்களில் விளக்கி வரும் போது திடீரென்று ராகு பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற பிராமணர்களின் பழைய நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச் சொல்ல வேண்டியிருப்பது பற்றி,” அல்பருணி வருத்தப்படுகிறார்.

17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ திருச்சபைக்குப் பயந்து தனது வானியல் ஆய்வுகளைக் கைவிடுகிறார். மனச்சாட்சிக்கு விரோதமான கலிலியோவின் வாழ்வை சமகால நாடகமாக்கியிருக்கிறார், பிரெக்ட் என்ற ஜெர்மனியின் மார்க்சியக் கலைஞர்.

பிரெக்டின் நாடகத்தில் இரண்டு விதமான கலிலியோக்களைக் காண்கிறோம். ஒருவர் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த உண்மையான கலிலியோ. இவரைத் தெரிந்து கொள்வதற்கு மறுமலர்ச்சிக்கால வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருப்பது அவசியம்.

***

ழமையான கிரேக்க நாகரீகம் தான் ஆரம்பகால அறிவியல் சாதனைகளைப் படைத்தது. அரிஸ்டாட்டிலும் அவருக்குப் பின் 5 நூற்றாண்டுகள் கழித்து வந்த தாலெமியும் (கி.பி.2-ஆம் நூற்றாண்டு) பூமியை மையமாக வைத்து சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் சுழல்கின்றன எனும் வானியல் கோட்பாட்டைப் படைத்தனர். பின்பு கிரேக்கத்தின் அறிவுத் துறை வரலாறு அரேபியாவுக்கு இடம் பெயர்ந்தது. அரேபிய அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கிரேக்க அறிவியல் 13-14-ம் நூற்றாண்டுகளில் மீண்டும் ஐரோப்பா வந்தது. அன்றைய உலகின் மையமாக இருந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை தாலமியின் பூமி மைய வானியல் கோட்பாட்டினை வரவேற்று அங்கீகரித்தது.

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வைத்திருந்த திருச்சபை, கல்வி – அறிவியல் -இறையியல் – அரசியல் போன்ற முக்கியத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி, நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குக் கோட்டையாக விளங்கியது. அதனுடைய இறையியல் பணியும், விவிலிய விளக்கமும் அதற்காகவே பயன்பட்டது. எனவே, திருச்சபை பூமியின் மையம் என்பதை நிறுவ பூமிதான் அண்ட வெளியின் மையம் என்று விளக்கிய தாலமி கோட்பாடு அவர்களின் அங்கீகாரம் பெற்றது. தவறெனச் சொன்னவர்கள் திருச்சபையின் மதவிரோத குற்ற விசாரணைக் குழுவான இன்க்விஸிசன் பயங்கரவாதிகளால் தண்டிக்கப்பட்டார்கள்.

பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற விளக்கிய போலந்து நாட்டுப் பாதிரி கோப்பர் நிக்கஸ் திருச்சபையால் முடக்கப்பட்டார். அதையே உரத்து முழங்கிய இத்தாலியைச் சேர்ந்த ஜோர்தனோ புருனோ நாத்திகன் எனக் குற்றம் சாட்டப்பட்டு எரிக்கப்பட்டார். கோப்பர் நிக்கசின் ஆய்வுப்படி தயாரிக்கப்பட்ட வானியல் வரைபடங்கள், நேரக்கணிப்பு, பஞ்சாங்கம் ஆகியவற்றை ஏற்ற திருச்சபை அவரது கோட்பாட்டை மட்டும் மதவிரோதம் என்று அறிவித்தது.

தனது தொலைநோக்கியின் மூலம் கோப்பர்நிக்கசின் வானியல் கொள்கையை நிரூபித்த இத்தாலியின் கலிலியோவும் திருச்சபையால் சிறை வைக்கப்பட்டார். இறுதியில் தனது ஆய்வையே தவறென மறுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருப்பினும் தனது ‘டிஸ்கோர்சியா’ என்ற நூலில் தாலமி கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும், கோப்பர்நிக்கசின் கோட்பாட்டை ஆதரிப்பவனுக்கும் நடைபெறும் உரையாடலின் மூலம் தனது கொள்கையை மனிதகுலத்திற்குப் பறைசாற்றிவிட்டு 1642-ம் ஆண்டில் கலிலியோ மடிந்தார்.

கலிலியோ காலத்து ஐரோப்பியச் சமூகம் நவீன கால வரலாற்றின் தொடக்கமும், மனிதகுல வரலாற்றின் திருப்புமுனையும் ஆகும். ரோஜா யுத்தம், சிலுவை யுத்தம் போன்ற பெரும் போர்களினாலும், காலரா-பிளேக் போன்ற கொள்ளை நோய்களினாலும் அக்கால மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. யாரைச் சுரண்டிக் கொழுத்தார்களோ அந்தப் பண்ணையடிமைகளுக்குக் கூட வேலையும், கால்வயிறுக் கஞ்சியும் கொடுக்க முடியாமல் நிலவுடைமை ஆளும் வர்க்கம் திணறியது. பழைய உலகம் அழுகியபோது புதிய உலகமும் பிறப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தது.

கலிலியோ கலிலீ
கலிலியோ கலிலீ

புதிய கடல் வழிகள் அறியப்பட்டன. நீராவி – விசைத்தறி எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறு, நடுத்தர பட்டறைத் தொழிற்சாலைகள் தோன்றி சந்தைக்கான உற்பத்தியைத் தொடங்கின. வேலை இழந்த பண்ணையடிமைகள் நகரத்தை நோக்கிப் படையெடுத்தனர். அரசியல் அரங்கில் திருச்சபை, நிலப்பிரபுக்கள், பேரரசர்கள் ஒருபுறமும்; சிற்றரசர்கள், வணிகள்கள், பட்டறை முதலாளிகள் மறுபுறமும் முரண்படத் தொடங்கினர். மத அரங்கில் ஜெர்மனியின் மார்டின் லூதர் திருசபையை எதிர்த்து புராட்டஸ்டண்டு மதத்தை தோற்றுவித்தார். திருச்சபையின் மண்ணுலக ராஜ்ஜியத்தில் மூன்றிலொரு பங்கு பிரித்து சென்றது. அறிவியலறிஞர்களினால் விண்ணுலக ராஜ்ஜியமும் தகர்க்கப்பட்டது. நிலவுடைமைச் சமூகத்தை அழித்து 18-ம் நூற்றாண்டில் நடைபெற இருந்த முதலாளித்துவ புரட்சியின் கொதிநிலைக் களனாக இருந்த இக்காலம் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்ற வரலாற்றில் புகழப்படுகிறது.

மறுமலர்ச்சிக்கால அறிஞர் பெருமக்களைத்தான் மார்க்சியப் பேராசான் ஏங்கெல்ஸ் மாபெரும் மனிதர்கள் என்று புகழ்ந்துரைக்கிறார். விரிவாகப் பயணம் செய்வதிலும், பன்மொழிப் பயிற்சியிலும், பல்துறைத் திறமைகளிலும் ஈடுபாடு கொண்ட அம்மாமனிதர்கள் பேசியும், எழுதியும், வாளெடுத்தும் தம் காலப் போராட்டத்தில் பங்கேற்றனர். படிப்பறை ஆராய்ச்சி மட்டும் செய்வது அப்போது இழிவாகக் கருதப்பட்டது. இத்தகைய மறுமலர்ச்சிக் கால அறிவியலாளர்களில் கலிலியோவும் ஒருவர்.

எத்தகைய ஒரு புரட்சியினை உருவாக்கப் போகிறோம் என்பதை மறுமலர்ச்சிக்கால மாவீரர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்வகையில் அவர்கள் வரலாற்றின் கருவியாகச் செயல்பட்டனர். வரலாற்றுணர்வை விளக்குகின்ற தத்துவமும், சமூக அறிவியலும் அப்போது குழந்தைப் பருவத்திலிருந்தன. இயற்கையை, அதன் இயக்கத்தை, தனித்தனித் தோற்றங்களாக மாறா நிலையில் வைத்துப் பார்த்த அன்றைய அறிவு, சமூகத்தை புரிந்து கொள்ளவும் அந்தப் பார்வையையே பயன்படுத்தியது.

எனவேதான் திருச்சபையையும், விவிலியத்தையும் மனதார ஏற்றிருந்த கலிலியோ தன் அறிவியில் ஆய்வுகளை திருச்சபை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அப்போது முளைவிடத் தொடங்கியிருந்த முதலாளித்துவ சமூகமும், முகிழ்த்து வந்த தெளிவற்ற வர்க்கப் போராட்டமும் கலிலியோவின் குழப்பத்தை நமக்கு உணர்த்தும்.

ஆயினும் பிரெக்டின் இன்னொரு கலிலியோ இத்தகைய குழப்பங்களுக்கு விடை தருகிறார். காரணம் மறுமலர்ச்சி காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரையும், இனிமேலும் வரக்கூடிய ஒரு அறிவியலாளனின் வாழ்க்கை இயக்கத்தை இந்த புதிய கலிலியோவிடம் காண்கிறோம். தத்துவத்திற்கும் – அறிவியலுக்கும், அறிவியலுக்கும் – சொத்துடமை வர்க்கச் சமூகத்திற்கும், தூய அறிவியல் விதிகளுக்கும், சமூக அறிவியலின் தேவைகளுக்கும், உள்ள முரண்பாடுகளை பொருத்தமான காட்சியமைப்புகளுடனும், அழகான நகைச்சுவையுடனும், இயல்பான துணைப் பாத்திரங்களின் சித்தரிப்புடனும் பிரெக்ட் இந்நாடகத்தைப் படைத்திருக்கிறார்.

தத்துவத்தை உயிராகவும் நடைமுறையை உடலாகவும் கொண்ட மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டத்தைக் கற்றுத் தேர்ந்த ஒருவரே இத்தகைய வரலாற்றுணர்வு கொண்ட, கலையழகு மிளிருகின்ற ஒரு இலக்கியத்தைப் படைக்க முடியும். பிரெக்ட் அந்நாடகத்தில் வரலாற்றுக் கலிலியோவை இன்றைய நவீன அறிவியலாளனையும் இணைத்து ஒன்றாகப் படைத்திருப்பதன் காரணம் என்ன?

மேற்கண்ட முரண்பாடுகளிலிருந்து அறிவியலின் ஆரம்பகால அவஸ்தையையும், நவீன அறிவியலின் அவலநிலையையும், நேர்மறையில் ஒரு அறிவியலாளனது இலக்கணங்கள் என்ன என்பதையும் வாசகர்கள் உணர வேண்டும் என்பதே நாடகத்தின் கருவும், நாடகாசிரியரின் நோக்கமும் ஆகும்.

***

  • அறிவுத் தேடலுக்காக அல்ல ஆடம்பரக் கனவுகளுக்காகவே கல்வி என்பதற்கு இன்றைய கணினி மோகம் ஒரு எடுத்துக்காட்டு. அன்றோ அந்த மோகம் அறிவியலாக இருந்தது. தனக்கு விருப்பமில்லாமல் தாயாரின் தொந்தரவிற்காக அறிவியல் கற்க வரும் பணக்கார வாலிபனிடம் கலிலியோ கேட்கிறார். ‘இயற்பியலை ஏன் கத்துக்கணும்? குதிரை வளர்ப்பைப் பத்தி படிக்கலாமே?’
  • கலிலியோவின் தொலைநோக்கியை வைத்து பார்க்கம் கனவான்களில் ஒருவர், ‘இனி மொட்டை மாடியில் நம் வீட்டுப் பெண்கள் குளிக்கக் கூடாது’ என்கிறார். மற்றொருவர் தொலைவில் படகில் தெரியும் மீனை பொரித்துச் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்கிறார். இன்னுமொருவர் தொலைநோக்கிக்கு என்ன விலை வைக்கலாம் என்று வியாபாரக் கணக்குப் போடுகிறார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார். இன்றும் பழிவாங்கும் அமெரிக்க டயனோசர்கள், வீட்டு வேலை செய்யும் ஜப்பானிய ரோபட்டுகள், ஜாதகம் கணிக்கும் இந்தியக் கம்ப்யூட்டர்கள், ஆஸ்திரேலிய யானை குட்டி போட்டதை உலகச் செய்தியாக காட்டும் தொலைக்காட்சிகள் என இந்த விளையாட்டு தொடருகிறது. அதனால்தான் ஒரு அறிவியலாளன் தன் ஆய்வையே ஒரு வியாபாரமாக செய்வதற்கு மட்டும் சுதந்திரம் உண்டு என்று கலிலியோ புலம்புகிறார்.
  • தொலைநோக்கி மூலம் பால்வெளி மண்டலத்தின் நட்சத்திரக் கூட்டத்தை நண்பனுக்குக் காட்டுகிறார் கலிலியோ. ‘திருச்சபையின் அறிவை எதிர்க்கும் இந்தக் காட்சியை யார் நம்புவார்கள்’, நண்பர் கவலையடைகிறார். “நாளைக்கு பயணம் என்றால் இன்று தன் சுமையிழுக்கும் கழுதைக்கு ஒரு கட்டுப் புல்லை அதிகமாகப் போடும் கிழவி, மழை வருவதை உறுதி செய்து கொண்டு தலையில் குல்லா போடும் பள்ளிச் சிறுவன் என சாதாரண மக்கள் – தங்கள் வாழ்க்கையில் பகுத்தறிவைப் பயன்படுத்தும் பாமரர்கள், அறிவியல் ஆய்வுகளை நிச்சயம் ஏற்பார்கள்”. நம்பிக்கை கொள்கிறார் கலிலியோ, திருப்தியுறாத நண்பரோ, ‘உன்னைப் பார்க்கும் போது சிதையின் மேல் நிற்பது மாதிரி தெரியுது’ (புருனோவை திருச்சபை எரித்ததை நினைக்கிறார்) என்று பதறுகிறார்.

    தொலைநோக்கி
    வானியல் ஆய்வுகளுக்குப் பயன்பட வேண்டிய தொலைநோக்கி ஒரு விளையாட்டு – வியாபாரப் பொருளாக பயன்படுவது பற்றி கலிலியோ நொந்து கொள்கிறார்.
  • இங்கே சமஸ்கிருதத்தைப் போல ஐரோப்பாவில் லத்தீன் ஆதிக்கம் செலுத்திய காலம். கலிலியோவின் சீடரும், கண்ணாடிக்குச் சாணைபிடிக்கும் தொழிலாளியுமான ஒருவருக்கு லத்தீன் தெரியாது. அறிஞர் பெருமக்கள் லத்தீனில் விவாதிக்கும் போது கலிலியோ நமது மொழியிலேயே (இத்தாலிய மொழி) விவாதிக்க வேண்டும் என மல்லுக்கட்டுகிறார். அறிஞர்களோ அறிவின் மேன்மையே பாழ்பட்டுவிடும் என்று பார்ப்பனர்களைப் போல சாபமிடுகிறார்கள். போப்பிடம் பேசும் இன்க்விசிஷன் தலைவனொ, ‘இந்தக் கயவன் கலிலியோ தன் வானசாஸ்திர நூல்களை லத்தீனில் எழுதாமல் செம்படவச்சி பாஷையில், ஆட்டுரோமம் விற்பவர்களின் பாஷையில் எழுதுகிறான்’ என கோபம் கொள்கிறான்.
  • தன் ஆய்வு வசதிக்காக அருகாமை நாட்டிற்கு குடிபெயர விரும்பும் கலிலியோ அந்நாட்டின் அரசனுக்கு (10 வயது சிறுவன்) முழு அடிமைத்தனத்தோடும் மிகுந்த பணிவுடனும் ஒரு கடிதம் எழுதுகிறார். பின்பு ‘என்னை மாதிரி ஒருவன் கவுரவமான பதவியை அடையணும்னா குப்புறப்படுத்து கும்புடு போடறதைத் தவிர வழியில்லப்பா’ என்று விளக்கம் தருகிறார். பில்கேட்சை இதயக் கோவிலில் வழிபடும் கணினி இளைஞர்கள், இந்த விசயத்தில் மட்டும் கலிலியோவை மிஞ்சுகிறார்கள்.
  • அரிஸ்டாட்டிலின் விளக்கம் தவிர வேறு எதையும் ஏற்கமாட்டோம் என்று தொலைநோக்கி வழியாகக் கோள்களை பார்க்க மறுக்கும் அறிஞர்களிடம், ‘உண்மைகள் பிறப்பது அதிகாரத்தின் அதட்டலிலிருந்து அல்ல; நடைமுறை அனுபவங்களிலிருந்தே அவை உதிக்கின்றன’ என்று சீறுகிறார் கலிலியோ. “பண்டிதராகிய நீங்கள் உங்களின் பத்தாம்பசலித்தனமான கருத்துக்களை கைவிட வேண்டும்” அவரது சீடரான கண்ணாடித் தொழிலாளியும் வாதிடுகிறார்.
  • தங்களது அறிவார்ந்த விசயங்களில் ஒரு தொழிலாளி எப்படித் தலையிடலாம் என்று கோபமடையும் அறிஞர்களிடம், பல்வேறு உழைக்கும் பிரிவினரிடம் தான் கற்றுக் கொண்டதைப் பட்டியலிடும் கலிலியோ, அம்மக்கள் மட்டுமே ஐம்புலன்களையும் பட்டறிந்து உண்மைகளை ஏற்பவர்கள், அந்த உண்மைகள் தங்களை எங்கு கொண்டு செல்லுமோ என்று கவலை கொள்ளாதவர்கள் என்கிறார். இன்றும் அறிவை அதிகாரத்தோடு பயன்படுத்தும் கல்லூரிப் பேராசிரியர்களும் அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களை ஆட்டு மந்தையாகவும், கீழ்பணிவையே கடமையாகக் கொண்ட அடிமைகளாகவும்தானே கருதுகிறார்கள்!
  • பிளேக் நோயின் வருகையினால் நகரமே காலியாகிறது. காலி செய்ய இயலாத ஆதரவற்றவர்களுடன் கலிலியோவும் தங்குகிறார். தனது ஆய்வை விட்டகல அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் “எந்த வசதியுமில்லாத இந்தியாவில். தம்மாத்துண்டு சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்” என்று அமெரிக்கா போவதை நியாயப்படுத்துகிறார்கள் ஐ.ஐ.டி.யின் இளம் விஞ்ஞானிகள்.
  • “மனித குலத்தைச் சுமந்திருக்கும் இப்பூவுலகை அண்டவெளியின் ஒரு சாதாரண கோளாக்கி பூலோகத்தையும், பரலோகத்தையும் வேறுபாடில்லாமல் ஆக்கிவிட்டீர்களே, இன்னும் சில நாட்களில் மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று கூறுவீர்களோ” என்று கேட்கும் பாதிரி ஒருவனுக்கு கலிலியோ தரும் பதில் சுவாரசியமானது! எப்போதும் சட்டைப் பையிலிருக்கும் தனது கல்லைக் கீழே போட்டு, “இல்லை சுவாமி (மனிதனுக்கும் கீழோ இந்த அற்பக்கல்) இது… எப்படிக் கீழே விழ முடியும்? அதை நான் மேலே எழும்பச் செய்கிறேன்” என்று குனிந்து எடுக்கிறார். பொறுக்க முடியாத பாதிரி தரும் பதில் ‘திமிர் பிடித்த பன்றி’
  • அறிவியல் ஆர்வம் காரணமாக கலிலியோவின் மாணவராகிறான் ஒரு இளம் பாதிரி. தனது பெற்றோரைப் போன்ற பரம ஏழைகள் தமது துன்ப துயரங்களைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது எதனால், இவையெல்லாம் விதி எனக் கற்பித்து ‘நம்பிக்கை’யளிப்பது விவிலியமும், திருச்சபையும் தானே, அவற்றைக் கேள்வி கேட்டால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்படி ‘அமைதியாக’ வாழ முடியும், என்று வாதிடுகிறான் அந்த மாணவன். அது அறியாமையின் அமைதி, தனது தொலை நோக்கி கொண்டு கோள்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் நெருக்கமாகப் பார்க்கும் மக்கள் தங்கள் துயரங்களுக்குக் காரணம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள், ‘ஐயம்கொள் ஆய்ந்து பார்’ என்ற நமது ஆய்வுமுறை அவர்களுக்கு இகலோக விடுதலையைக் கொண்டுவரும் என வேறு ஒரு இடத்தில் பதிலளிக்கிறார் கலிலியோ.
  • “நமது ஆய்வு உண்மையாக இருந்தால் நம்முடைய உதவியில்லாமல் அது வெற்றியடையணுமே” என்கிறான் மாணவன். “இல்லை, நாம் எந்த அளவு வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுக்கே உண்மையும் வெற்றி பெறும்” என்கிறார் கலிலியோ. அதற்கு மக்களிடமிருக்கும் ‘புனிதமான பொறுமையை’ ‘நியாயமான கோபமாக’ மாற்ற வேண்டும். இந்த உண்மை தெரியாமல் இருப்பவன் முட்டாள்; தெரிந்தே பொய் என்று சொல்பவன் அயோக்கியன் என்று சினமடைகிறார் கலிலியோ.
  • ‘ஹெரெஸ் என்ற கவிஞனின் பாடல் ஒன்றில் ‘இருக்கை’ என்ற சொல்லை போடச் சொன்னால் அந்தக் கவிஞன் சம்மதிப்பானா? என்னுடைய பிரபஞ்சக் கோட்பாட்டில் வளர்ச்சி – தேய்வு இல்லாத ஒரு வெள்ளிக் கோளைக் கொண்டு வந்து பொருத்தினால் என்னுடைய அழகியல் உணர்வு புண்படாதா என்று அறிவியலின் விதியை அழகியலோடு உவமை சேர்த்து ஒரு கவிதைக் கேள்வியைக் கேட்கிறார் கலிலியோ.
  • “அவர்கள் சிரிக்கும் போது எனக்கு வயிறு கலங்குகிறது, ஏன் அப்படிச் சிரிக்குறீர்கள் புரியவில்லையே” கலிலியோவின் வேலைக்காரம்மாள் கேட்கிறார். “குருமார்களுக்கு ஆலய மணி ஒலிப்பது எப்படியோ அப்படித்தான் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு சிரிப்பு என்று அப்பா அடிக்கடி கூறுவார்” பதிலளிக்கிறார் கலிலியோவின் மகள். ஆன்மீகத்தின் பொய்யொழுக்கமும், அறிவியலின் உண்மைக் கொண்டாட்டமும் அழகிய முரண் உவமையாகச் சேர்ந்திருக்கக் காரணம். இரண்டும் இருபிரிவினரிடத்தில் கொண்டிருக்கும் முக்கியத்துவம் தான்.
  • “நமது ஆய்வை முழு நம்பிக்கையோடு அல்ல, ஓரளவு நம்பிக்கையோடு தான் தொடங்க வேண்டும். நமது ஊகமும், முடிவுகளும் மாறலாம். ஒவ்வொன்றையும் துருவித் துருவித் திரும்பத் திரும்பக் கேள்விகளை எழுப்ப வேண்டும். இன்று சரி எனக் கண்டதை நாளையே மறுக்க வேண்டி வரலாம். நமது வேகம் நத்தையைப் போல மாறலாம். இறுதியில் தோற்றுப் போய் குப்புற விழலாம். சோர்வு வரலாம். ஆயினும் மீண்டும் மீண்டும் ஆய்வு. அதுவே நமது தெளிவான இறுதி முடிவைத் தரும். அப்போது அதை எதிர்ப்பவர்களை இரக்கம் காட்டாமல் எதிர்ப்போம்” என்று அறிவியல் ஆய்வில் வழிமுறையைக் கூறுகிறார் கலிலியோ. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவைப் புரிந்து, முரணை வென்று வரும் புரட்சி நமது நினைவுக்கு வருகிறது.
  • திருச்சபையின் வீட்டுச்சிறைக் கண்காணிப்பில் தனது இறுதி நாட்களைக் கழிக்கும் கலிலியோ தனது பழைய மாணவனைச் சந்திக்கிறார். தன்னைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் சுயவிமரிசனம் செய்கிறார். “மனிதகுலத்தின் சுமைகளைக் குறைப்பதுதான் அறிவியலின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். அறிவியல் அறிவியலுக்கே என்று தூயகலைவாதம் பேசினால் அறிவியல் முடங்கிவிடும்; நமது கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை அடக்குவதற்கும், பின்னடையச் செய்வதற்கும் தான் பயன்படும்; இத்தகைய அறிவியலாளர்களின் வெற்றிக் குரல் மனிதகுலம் பயத்தால் எழுப்பும் கூக்குரலாக எதிரொலிக்கும்.”

“அறிவியலாளனான எனக்கு ஒரு வாய்ப்பிருந்தது. என்கால அறிவியல் சாதாரண மக்களையும் சென்றடைந்தது. இந்த அரிய சூழ்நிலையில் நான் ஒருவன் உறுதியாகப் போராடியிருந்தால் அது மாபெரும் விளைவுகளை உருவாக்கியிருக்கும், மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ‘ஹிப்போக்ரெடசின் உறுதி மொழி’ போன்று அறிவியலாளர்களும் மனிதகுல மேன்மைக்காக மட்டுமே எங்களின் ஞானத்தைப் பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கும். ஆனால் இன்றைய நிலையில் எதற்கு வேண்டுமானாலும் தங்களை விற்றுக் கொள்ளும், சில்லறைச் சுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் அடிமை விஞ்ஞானிகளின் ஒரு தலை முறையை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான்… என்னுடைய தொழிலுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்னைப் போன்ற துரோகிக்கு அறிவியலாளர்களின் குழுவில் இடமில்லை”

***

பிரெக்டின் நாடகத்திலிருந்து எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பத்தாலும், பக்க அளவு கருதியும் இந்நூலறிமுகத்தை முடித்துக் கொள்கிறோம். இத்தகைய கருத்துச் செறிவான நூலை விறுவிறுப்புடனும், நயத்துடனும், அதே சமயம் எளிமையுடனும் தி.சு.சதாசிவம் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கும் இந்த அரிய நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்தாருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். நாடகத்தைச் செறிவுடன் உணரும் வாசகருக்கு ஏராளமான முக்கியமான செய்திகள் இருக்கின்றன. அதற்கு கீழ்க்கண்ட நூல்களைச் சேர்த்துப் படிப்பது பயனளிக்கும்.

  1. ஏங்கெல்சின் ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற கட்டுரை.
  2. ஏங்கெல்சின் ‘கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்’ என்ற கட்டுரை.
  3. நவீன ஐரோப்பிய வரலாறு.
  4. ஜார்ஜ் தாம்சனின் ‘மனித சமூக சாரம்’
  5. மாவோவின் ‘அறிவுத் தோற்றம்’ பற்றிய கட்டுரை.

நாடகத்தைப் படித்து முடித்ததும் வாசகர்கள் சிந்திக்க வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கின்றன. அன்று திருச்சபையால் கட்டி வைக்கப்பட்ட அறிவியல் இன்று எதனால் கவ்வப்பட்டிருக்கிறது? இன்று கோள்களின் சுழற்சி உட்பட ஏராளமான அறிவியல் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்திருந்தால் அறியாமையும், மூடநம்பிக்கையும், ஏழ்மையும் இன்னும் ஏன் அகலவில்லை? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடிகிறாதா?

இல்லையென்றால் மீண்டும் நாடகத்தைப் படியுங்கள்.

– வேல்ராசன்
_________________________________________________
புதிய கலாச்சாரம் ஜனவரி 2001
_________________________________________________

நூல் : கெலிலியோ கெலிலி
ஆசிரியர் : பெர்தோல்ட் பிரெக்ட்
தமிழில் : தி.சு.சதாசிவம்
விலை : ரூ 60

வெளியிட்டோர் :
அலைகள், 25 சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை – 24

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று, 10 அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2

விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !

0

Manadu Posterன்பார்ந்த பெற்றோர்களே ! வணக்கம்

ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பெரும்பான்மையான நாடுகளில் தாய்மொழியில்தான் அனைவரும் கல்வி கற்கிறார்கள். கல்வியை பொதுப் பள்ளிகள் மூலமாக அந்த நாடுகளின் அரசுதான் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அருகமை பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேஷன் கடை போன்று அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்கும் அருகாமை பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

10, +2 தேர்வு முடிவுகளை, 100% தேர்ச்சி, மாநிலத்தில் முதலிடம், மூன்றாவது இடம் என நாள்தோறும் பத்திரிகையில் வரும் தனியார் பள்ளிகளின் விளம்பரங்கள் ஆடித் தள்ளுபடிக்கு வரும் வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரத்திலிருந்து எந்த வகையில் வேறுபட்டது? மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதற்கு பதிலாக, கல்வியையும், மாணவர்களையும் விற்பனை சரக்காக்கி, பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மாற்றுவதை நாம் அனுமதிக்க முடியுமா?

உங்களுக்கு தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம். தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம். அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573, தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000. ஆனால் அரசுப் பள்ளிகளின் சாதனை மறைக்கப்பட்டு தனியார் பள்ளிகளை தவிர வேறு இல்லை என்பது போல் திட்டமிட்டு விளம்பரம் செய்கிறார்கள். இதன் நோக்கம் அரசுப் பள்ளிகளை முடமாக்கி கல்வி வியாபாரத்தை விரிவுபடுத்துவதன்றி வேறு என்ன? இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணை போகிறார்கள்.

‘மார்க் எடுக்கும் மாணவர்கள் அறிவாளிகள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் முட்டாள்கள் அல்லது படிக்க முடியாதவர்கள்’ என்ற தவறான கருத்து இன்றைய கல்விமுறையில் உருவாக்கப்படுகிறது. இது களையப்பட வேண்டும். வகுப்பறை என்பது ஒரு தலைமுறை மாணவர்கள் தம் சிந்தனையை உருவாக்கிக் கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதநேயம் சார்ந்த வகுப்பறை சூழல் வேண்டும். கட்டிடங்கள் கல்வியை கற்பிக்காது. ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு உள்ள ஆசிரியர் சமூகத்தால்தான் சரியான கல்வியை கற்பிக்க முடியும்.

அனைவருக்கும் இலவச கல்வி உரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக உள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பள்ளிகளின் தரம் உயர்த்த போராடாமல் கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டண சுமையை வாழ்நாள் முழுவதும் தங்கள் தோளில் சுமப்பது ஏன்?

ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இலட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.

கன்னடம், தெலுங்கு போன்று ஆங்கிலமும் ஒரு மொழி. அமெரிக்காவில் ஆங்கிலம் பேசிதான் பிச்சை எடுக்கிறான். ஆனால் ஆங்கில வழியில் படித்து மம்மி,டாடி என்றால் தான் அறிவாளிகள் என்ற, விஞ்ஞானத்திற்கு புறம்பான கருத்து மக்கள் மீது ஆழமாக பல்வேறு வடிவங்களில் வியாபார நோக்கில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.

இதனால் தங்கள் பிள்ளைகளை ஏ.டி.எம் மெஷினாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பித்து பிடித்து ஓடுகிறார்கள். மாணவர்களை மார்க் எடுக்கும் எந்திரமாக்கி பிராய்லர் கோழியாக மாற்றும் தனியார் பள்ளியில் தள்ளும் கொடுமை இங்குதான் நடக்கிறது.

தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு அரசு கல்லூரிகளுக்கு வருவது ஏன்? பச்சமுத்து உடையார், சண்முகம் முதலியார், ஜே.பி.ஆர் சாராய உடையார் என தனியார் நடத்தும் கல்லூரிகளுக்குப் போகாமல் இருப்பது ஏன்?

ஆங்கில வழியில் படித்து விட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார். தாய்மொழியில் படித்தவர்கள், சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகளாக, விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்றைக்கு பல துறைகளில் உயர்பதவி வகிக்கிறார்கள்.

பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராடினால் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பெற முடியும்.

கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை உடனே துவங்க முயற்சியுங்கள். அனைத்திற்கும் நாங்கள் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.

நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவார்கள்.

தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் சிறு தொகை கூட பல போராட்டங்களை உயிர்ப்பிக்கும்.

நிதி தாருங்கள், மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

7.6.2014, சனி
விருத்தாசலம்

மாநாடு – பேரணி
மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு

பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி
வானொலித்திடல், விருத்தாச்சலம்

மாநாடு

7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.

காலை அமர்வு – 10 மணி

தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!

பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்

இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!

வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?

உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்

கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!

தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

விவாத அரங்கம்

மதிய அமர்வு 2.30 மணி

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும்

மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா?
பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா?

தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

ஒருங்கிணைப்பு

திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்

பரிசளிப்பு நிகழ்ச்சி

பேச்சுப்போட்டி

விடுதலைப் போரின் வீரமரபு

ஓவியப்போட்டி

டாஸ்மாக் – சீரழிவு

திருக்குறள் ஒப்புவித்தல்

கல்வி, ஒழுக்கம் அதிகாரம்

போட்டிகள் ஒருங்கிணைப்பு

திரு க. செல்வக்குமார்,  திரு ஆ. செல்வம்,
திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்

பேரணி மாலை 5 மணி

துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்

துவக்கி வைப்பவர்
திரு.வி சோமசுந்தரம், தலைவர், விருத்தாசலம்
தமிழ்நாடு செராமிக் & ரெப்ராக்டரீஸ் மேனுபேக்சரர் அசோசியேசன்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி, வானொலித்திடல், விருத்தாசலம்

நம் பிள்ளைக்காக நாம் போராடாமல் யார் போராடுவது?

தலைமை
வழக்கறிஞர் ரெ புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

முன்னிலை
வழக்கறிஞர் சி.செந்தில், துணைச்செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

திரு.ஜி.ராமகிருஷ்ணன், நகர தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு மு.முஜிப்பூர் ரஹ்மான், நகர செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சேத்தியாதோப்பு

உரையாற்றுவோர்

துரை.சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை

இமயம்,
எழுத்தாளர், விருத்தாசலம்

கோ பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, இலங்கியனூர்,
மாநிலத் தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை
வழக்கறிஞர் ச. செந்தில்குமார்,
இணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.

தொடர்புக்கு:

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121

ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

16

டந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்
கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்

15, 14 வயதுடைய அந்த இருவரும் சகோதரிகள். வீட்டில் கழிவறை வசதியில்லாத காரணத்தால் அருகிலுள்ள மறைவான பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு போகின்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள், உசைத் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றனர். ஆனால் அங்கிருந்த சர்வேஷ் யாதவ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் புகாரை பெற்றுக்கொள்ளாமல் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் சகோதரிகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார்கள்

மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தருகிறார்கள். ஆயினும் அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக வராமல் இழுத்தடிக்கின்றனர். கோபமடைந்த பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகுதான் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தூக்கில் தொங்கிய பிணங்களை போலீசார் கைப்பற்றுவதற்கு போராடியவர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் பகுஜன் சமாஜவாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் மவுரியா, காங்கிரசு கட்சியின் பிரிஜபால் சாக்கியா போன்றோர் தலையிட்டு மக்களை அமைதிப்படுத்திய பிறகுதான் போலீசாரால் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிந்தது.

புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த காவலர்கள் சர்வேஷ் யாதவ், ரக்ஷ்பால் யாதவ், ராம் விலாஸ், சத்ரபால் யாதவ் என  நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக டி.ஐ.ஜி. ரத்தோர் கூறியுள்ளார். அவர்களில் சர்வேஷ் யாதவ் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர் என்பதால் அவர் மாத்திரம் கைதும் செய்யப்பட்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த பப்பு யாதவ் மற்றும் அவரது சகோதரர்கள் பிரிஜேஷ், அவதேஷ் ஆகியோர் உள்ளிட்ட ஏழு பேர் இக்கும்பல் வல்லுறவில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அனைவருமே ஆதிக்க சாதியான யாதவர் சாதியை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் பப்பு யாதவும், பிரிஜேஷூம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாதவ குலத்திலகமான கண்ணனை முன்னிறுத்தி சாதிப்பெருமை பேசும் இந்த சாதிவெறியர்கள் உண்மையிலேயே கிருஷ்ணனது வாரிசுகள்தான். வருணக்கலப்பினால் தர்மம் குலையும் என்று கீதையில் ஊளையிட்ட பகவானது பார்ப்பனிய ஆதிக்கம் இங்கே தலித் மக்களின் மீதான இரக்கமற்ற வன்முறையாக கொலையாக நடந்தேறியிருக்கிறது.

உஷைத்-லிலாவன் சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்களோ உஷைத் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரினர். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர்களை உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு சகோதரிகளும் பாலியல் வல்லுறவினால் மாத்திரம் இறக்கவில்லை, தூக்கிலிடப்பட்ட பிறகுதான் இறந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்கிறார்கள் போராடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள்.

கிராம மக்களும் போலீசும்பதூன் மக்களவை உறுப்பினர் தர்மேந்திர யாதவ் (முலாயம் சிங்கின் மச்சான்) சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். இப்பகுதியில் ஆதிக்க சாதியாக இருக்கும் அவரது சாதியினர்தான் இப்பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநிலத்திலும் அவர்களது ஆட்சிதான் நடைபெறுகிறது. சம்பவ இடத்திற்கு அவரோ அல்லது அவரது கட்சியினரோ நேரில் வரவில்லை. அகிலேஷ் யாதவ் நான்கு போலீசாரை இடைநீக்கம் செய்திருப்பதை மாபெரும் நடவடிக்கையாக முன்னிறுத்துகிறார். இவர் அறிவித்த கருணைத் தொகையை அந்த சகோதரிகளின் பெற்றோர்கள் தூக்கி வீசியிருக்கின்றனர். கொலைகாரர்களை கைது செய்து தண்டனை கொடுக்காமல், கொலைகாரர்களின் சார்பில் நட்ட ஈடு கொடுப்பது போன்ற இந்த தந்திரத்தை மக்கள் புரிந்தே வைத்திருக்கின்றனர். சமூகநீதிக் காவலராக தன்னை அகில இந்திய அளவில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் காட்டிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதை பொறுத்த வரை இன்னபிற ஆதிக்கசாதிகளுடன் இணைந்துதான் அவரது கட்சியினர் செயல்படுகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே குற்றச் செயலில் ஈடுபட்ட யாதவர் சாதியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் முனைப்பு காட்டுவதில்லைதான். ஆதிக்க சாதியின் அரசியல்தான் சமூகநீதிக் கட்சிகளின் அரசியலாக வெளிப்படுகிறது.

இதற்கிடையில் நடந்த சம்பவத்திற்கு ஒரு நீதி விசாரணை தேவை என்று அகில இந்திய பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசிடமிருந்து அறிக்கை கோரியிருக்கிறார். முசாஃபர் நகர் கலவரத்திற்கு பிறகு இந்துக்கள் என்ற முறையில் ஒன்றுதிரண்டுள்ள ஆதிக்க சாதியினர் பெருவாரியாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை உ.பி.யில் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகும் கூட பா.ஜ.க ஒரு வெற்று மிரட்டலுக்காக அகிலேஷ் சிங் யாதவை மிரட்டிப் பார்க்கிறது. மற்றபடி சாதிவெறியை பொறுத்தவரையில் பாஜகவின் இளைய பங்காளியாகத்தான் சமாஜ்வாதி கட்சியும் செயல்பட்டு வருகிறது என்பது எல்லோருக்குமே தெரியும்.

உத்திர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜாட் சாதிவெறியும், இந்துமத வெறியும் கைகோர்த்துதான் அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் செயல்படுகின்றன. அதனை உறுதி செய்து ஓட்டுக்களாக மாற்றத்தான் அமித் ஷாவை உத்திர பிரதேசத்துக்கு முன்னரே அனுப்பி வைத்தார் மோடி. அதுதான் முசாஃபர் நகரில் கலவரமாக வெடிக்கும் போது பயன்படுத்தப் பட்டது. ஏற்கெனவே வாஜ்பேயி ஆட்சி காலத்தில் தான், ஹரியானாவில் செத்த மாட்டை தோலுரித்த காரணத்துக்காக ஐந்து தலித்துகளை தோலை உரித்துக் கொன்று தொங்க விட்டார்கள் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள். இப்போது மோடி ஆட்சி வந்திருப்பதால் தைரியமாக தலித் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதுடன் நில்லாது, பொது இடத்தில் தூக்கிலும் ஏற்றி விடுகின்றனர். ஜாட் சாதிவெறியின் அபிமானத்தை பெற்றிருக்கும் பாஜக இனி யாதவ சாதிவெறியர்களின் அபிமானத்தை பெற்றால்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும். இது ஒன்றே இவர்கள் யார் பக்கம் என்பதை அறியத்தரும்.

போலீஸ் படை குவிப்புஇந்த குற்றச்செயலில் காவல்துறையினரும், ஆதிக்க சாதியினரும் திட்டமிட்டே ஈடுபட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வல்லுறவில் ஈடுபடும் காவலர்கள் பெரும்பாலும் துறைசார்ந்த விசாரணையை தாண்டி கைது போன்ற நடவடிக்கைக்கெல்லாம் உள்ளாவதில்லை. இந்த அதிகாரவர்க்க தைரியமும், ஆதிக்க சாதித் திமிரும்தான் தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவாக அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும் எல்லாக் கட்சிகளின் அரசாங்கங்களும் தமது ஆட்சிக்கு  காவல்துறையை நம்பியே இருக்கின்றன. இதனால் இயல்பாகவே காவல்துறையின் அதிகாரத்திமிர் அதிகரித்து வருகிறது.

போலீசையும், ராணுவத்தையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பாசிஸ்டுகளின் கொள்கை. நீதிவிசாரணையை விட ஒரு போலி என்கவுண்டர் மூலமாக தீர்ப்பையே எழுதி விடலாம் என்பதுதான் அவர்களது ‘ஜனநாயக’ வழிமுறை. சுதந்திரம் என்பதற்கு இவர்களைப் பொறுத்த வரையில் குடிமக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடல் என்றுதான் பொருள். அரசுக்கெதிரான போராட்டங்களை போலீசு நசுக்கி எறிவதற்கு உபகாரமாக அவர்கள் செய்யும் இதுபோன்ற குற்றங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். தில்லி மருத்துவ மாணவி மீதான வன்புணர்ச்சி மற்றும் கொலையில்  குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்று கூவியவர்கள் இங்கே யாதவ மற்றும் போலிஸ் குற்றவாளிகளை அப்படி தண்டிக்க வேண்டும் என்று மறந்தும் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களை தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆகவே அம்மக்கள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என காவல்துறை நினைக்கிறது. அடக்குவது என்ற பெயரில் அத்துமீறலாம், அயோக்கியத்தனம் என்பதை தமக்கு வழங்கிய உரிமையாகவே போலீசு கருதுகிறது. ஆதிக்க சாதி மற்றும் நிலவுடமையாளர்களுக்கு இது கிராமத்தில் அவர்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான உரிமையாகவே கருதப்படுகிறது.

இப்போது கைதான காவலர் மீது சதித் திட்டம் தீட்டியதாகவும் (பிரிவு 120B), மற்ற ஆதிக்க சாதியினர் மீது கொலை (302), பாலியல் வல்லுறவில் (376) ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தனித்தனியாக வழக்குகளைப் பிரித்து பதிவு செய்வதே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மக்களின் கோபத்திற்கு வடிகாலாக இடைநீக்கம், கைது போன்ற நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் எடுக்கிறது. சாதியும், வர்க்கமும் இணைந்துதான் தலித் சகோதரிகள் மீதான வன்முறையாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒருவேளை அப்பெண்களின் வீடுகளில் கழிப்பறை இருந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காதில்லையா ? என்று சிலர் அறிவாளி போன்று கேட்கிறார்கள். கழிப்பறை தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஆனால் கழிப்பறை இருந்துவிட்டால் இந்த வன்புணர்ச்சி கொலை நடக்காது என்ற முட்டாள்தனத்தை எப்படி புரியவைப்பது? மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் பிள்ளைகளை படிக்க வைத்து வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பியிருந்தார் பையாலால் போட்மாங்கே என்ற தலித். 2006 செப்டம்பர் 29-ம் தேதி அவரது மனைவி, மகள், மகன்கள் என அனைவரும் அவர் கண்ணெதிலே கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொல்லப்பட்ட போது அவர் உடைந்து தான் போனார். அவரது மகள் 17 வயது பிரியங்கா வல்லுறவில் இறந்த பிறகும் தொடர்ந்து மொத்த ஊரும் சேர்ந்து அந்த கொடூரத்தை மீண்டும் இழைத்தது. இதுதான் ஆதிக்க சாதிவெறியின் ஆணாதிக்க மனோபாவம். இதுதான் இன்று உத்திர பிரதே மாநில் கத்ரா கிராமத்திலும் வெளிப்பட்டுள்ளது. ஆகவே கழிப்பறை கட்டியிருந்தால் ஆதிக்க சாதிவெறியர்கள் இன்னும் கொடூரமாக நடப்பார்கள் என்பதுதான் எதார்த்தம்.

பீகார், ஜார்கண்டில் ஆதிக்கசாதிவெறியர்களுக்கும் அவர்களின் குண்டர் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமே இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவார்கள்.

பீடித் தொழில் – ஒரு பார்வை

5

ரிரு ரூபாய்களில் விற்கப்படும் மினி சிகரெட் முதல் பத்திருபது ரூபாய்களில் விற்கும் உள்நாட்டு-வெளிநாட்டு கிங்ஸ் சிகரெட்டை புகைப்போர் உலகம் தனி. புகை பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றாலும் அதற்கு பலியாகியிருப்போர் பலர். ரூபாய்களில் வாங்கி புகைக்க முடியாத சாதாரண  உழைக்கும் மக்கள் இன்றும் பீடியைத் தான் பயன்படுத்துகிறார்கள். இன்றளவும் உடலுழைப்பு வேலை செய்யும் தொழிலாளர்கள் பரவலாக பீடி பயன்படுத்துவதை பார்க்கலாம். பெருகி வரும் வாழ்க்கை பிரச்சினைகளின் பதட்டத்தை சிறு அளவில் தணிப்பதாக நம்பி புகை பிடிக்கும் பழக்கம் இங்கே வேரூன்றியிருக்கிறது. புகை பிடிப்பதை குறைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அரசு ஆண்டுக்காண்டு சிகரெட், பீடி விலையை ஏற்றுகிறது.

பீடி சுற்றும் பெண்கள்
பீடி சுற்றும் பெண்கள்

இதனால் புகை பிடிக்கும் பழக்கம் குறைகிறதா இல்லை மக்கள் அதற்கு அதிகம் செலவு செய்கிறார்களா? இதில் பின்னதுதான் நடக்கிறது என்பது சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகரித்து வரும் இலாபத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் பீடி தயாரிக்கும் சிறு நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளும் இந்த அதிக வரியினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் பீடியின் விலையை சிகரெட் போல ஏற்ற முடியாது. இந்த சுமையை இவர்களே தாங்கிக் கொள்வதால் முன்பு போல பீடி தொழில் இயங்கவில்லை.

சாதாரண மக்களுக்கான பீடி எப்படி தயாராகிறது? அந்த தொழில் எப்படி இயங்குகிறது?

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் பீடி தொழில் அதிகமும் பிரசித்தம். பெண்கள் தான் பெருமளவில் பீடி சுற்றும் வேலையில் கணிசமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலை என்பதால் பெண்கள் மத்தியில் முன்பு இந்த தொழில் பிரபலமாக இருந்து வந்தது. தற்போதும் குறைந்து விட்டாலும் இப்போதும் பெண்களே வேலை செய்கின்றர்.

வறுமை, பெண்களுக்கு படிப்பு தேவையில்லை, திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும், தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என பல காரணங்களால் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பல பெண்கள் பீடி சுற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். பீடித் தொழிலில் ஒரு ஆள் பார்க்கும் வேலை செய்யும் தகுதி அடைந்தால் ஒரு கார்டு கொடுப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் அனுபவத்தில் இரண்டு மூன்று  கார்டுகள் பெறும் போது, அதாவது ஒரு ஆள் மூன்று ஆட்கள் வேலை செய்யும் நிலை அடையும் போது, அவர்களுக்கு திருமண சந்தையில் கிராக்கி அதிகம். அதாவது வரதட்சணை பேரத்தில் கொஞ்சம் கருணை காட்டப்படுவார்கள். இதனாலேயே இந்த தொழிலுக்கு நேர்ந்து விடப்பட்டவர்கள் பலர். அதுவுமன்றி பொருளாதாரம் நலிவுற்றிருக்கும் இக்காலத்தில் வீட்டு கைச்செலவுக்கு பணம் கிடைப்பதால் பல பெண்களும் இவ்வேலையை விரும்பியே செய்கிறார்கள்.

“முன்னாடியெல்லாம் நானும் என் தங்கச்சியும் சேந்து மூன்று கார்டு சுத்துவோம். வீட்டுக்கு தெரிஞ்சி இரண்டு கார்டு, யாருக்கும் தெரியாம மூணாவது கார்டு. அது எங்களுக்கு தாவணி எடுக்கவும், வளையல் எடுக்கவும் உதவும். அப்படி எடுக்கும்போது தான் எங்க மூணாவது கார்டு வீட்டுக்கே தெரியவரும்…….” என்று தன் மலரும் நினைவை கூறுகிறார், ஒரு பெண் தொழிலாளி.

டெலிபோன் பீடி
டெலிபோன் பீடி

ஒரு காலத்தில் யானை மீது விளம்பர ஊர்வலம், கோவில் கொடைகளுக்கு ஸ்பான்சர் செய்து அதன் நடுவில் தங்கள் பீடி விளம்பரம் செய்வது என்று கோலோச்சிய பீடி தொழிலின் இன்றைய நிலை என்ன?

இன்று  தட்டி போர்டு விளம்பரத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது அத்தொழில். “முந்திலாம் யானை மேல பீடி வெளம்பர போர்ட வெச்சி வெளம்பரம் பண்ணுவோம். இன்னைக்கு தொழில் முடங்கி போச்சி. ஒரு காலத்துல சோறு போட்ட தொழிலுங்கிறதால விடாம பண்ணுதேன்” என்று பீடி தொழிலின் இன்றைய நிலை சொல்லும் மீரா சாகிப், ஒரு பீடி கம்பெனி ஏஜென்டாக இருக்கிறார்.

பீடி தொழிலில் பீடி சுற்றுபவர்கள், பீடி நிறுவனம் இவர்களுக்கு நடுவே மீரா சாகிப் போன்ற ஏஜெண்டுகள் எனும் மூன்றாம் தரப்பினரும் உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் தான் பீடி தொழிலாளிகளுக்கு பீடி கம்பெனிகளுக்கும் பாலமாக இருப்பவர்கள். நாம் பேசிக் கொண்டிருக்கும் மீரா சாகிப், குஜராத்தை சேர்ந்த டெலிபோன் பீடி என்ற நிறுவனத்திற்கு ஏஜென்டாக இருக்கிறார். அந்த நிறுவனம் இவருக்கு இலை, புகைத்தூள் மற்றும் கூலியாட்களுக்கான சம்பளம் ஆகியவற்றை கொடுத்து விடும். இவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களிடம் மூலப்பொருட்களை விநியோகித்து, பீடியாக மாற்றி குஜராத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கு இவருக்கு கமிசன் கிடைக்கும். தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் இப்படி தனியாக ஏஜெண்டுகளைக் கொண்டிருப்பதில்லை. தாங்களே நேரடியாக அனைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார்கள்.

இந்திய அளவில் மங்களூரை சேர்ந்த கணேஷ் பீடி அதிகமாக விற்பனையாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 10-ம் நம்பர், செய்யது பீடி, காஜா பீடி, எம்.எஸ்.பி, சந்திரிகா பீடி, மோகம், பாலகன் போன்று 25 நிறுவனங்களுக்கு மேல் உள்ளன. இதைப் போன்று குஜராத்தின் டெலிபோன், மலபார் பீடி, சேஷாய் பீடி போன்ற நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களின் ஏஜெண்டுகளோ இல்லை நேரடி கம்பெனிகளோ பல சிறு கிராமங்களுக்கு மையமான ஒரு ஊரில் தங்கள் கிளைகளை திறந்திருக்கிறார்கள்.  பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட விரும்புபவர் ஏதாவது ஒரு ஏஜென்டிடம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்ந்தவுடன் அவர்களுக்கு என்று  தனியாக ஒரு கணக்கு துவங்கப்பட்டு அதற்கான புத்தகம் வழங்கப்பட்டு விடுகிறது. இந்த புத்தகம் தொழிலாளி பெற்றுக்கொண்ட மூலப்பொருட்கள், சமர்ப்பித்த பீடி எண்ணிக்கை போன்ற கணக்குகளை பராமரிக்க பயன்படுகிறது. சிலர் இரண்டு மூன்று புத்தகங்களும் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு பெண், மூன்று நபர்கள் செய்யும் வேலையை செய்கிறார் என்று பொருள். இதைத்தான் மூன்று கார்டு என்று ஏற்கனவே பார்த்தோம்.

பீடி சுற்றுவதற்கான இலை மற்றும் தூளை ஏஜெண்டே கொடுத்து விடுவார். அதற்கு பணம் எதுவும் தரத் தேவையில்லை. அரைக்கிலோ இலைக்கு 200 கிராம் தூள் என்ற விகிதத்தில் மூலப்பொருட்கள் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்தி ஒரு கட்டுக்கு 25 பீடிகள் என்ற விகிதத்தில் நாற்பத்தியைந்து கட்டுகளை ஏஜெண்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரை கிலோ இலையில் 25X45=1125 பீடிகள் தயாரிக்க வேண்டும். இதற்கு ரூ 145 சம்பளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. தமிழகத்தின் பத்தாம் நம்பர் பீடி, இதே வேலைக்கு ரூ 155 சம்பளமாக தருகிறது. இந்த நிறுவனம தான் தமிழகத்தில் அதிக மார்க்கெட் கொண்ட நிறுவனம் என்கிறார் சாகிப் பாய்.

டெண்டு இலை
டெண்டு இலைகளை சுமந்து செல்லும் டோங்கிரியா கோண்டு இனப் பெண். (பீடியில் புகையிலை தூளை வைத்து சுருட்டப்படும் இலை இதுதான்).

கொடுக்கப்பட்ட இலைகளைக் கொண்டு பீடி இலக்கை அடைவது சற்று கடினம் தான். அதை அடைய இலை வெட்டுவதிலிருந்து நூல் சுற்றுவது வரை பல வித்தைகள் உள்ளன.  இவற்றில் எதில் சொதப்பினாலும் கைக்காசை செலவழிக்க வேண்டி வரும். உதாரணமாக பீடி இலையிலிருந்து தேவையான இலையை வெட்டி எடுப்பது என்பது ஒரு கலை.  ஏஜெண்ட் கொடுக்கும் இலையை பதப்படுத்தி அதிலிருந்து எந்த அளவுக்கு அதிகமாக உபயோகமான பகுதிகளை கத்தரித்து எடுக்கிறோமோ அந்த அளவுக்கு 1125 என்ற இலக்கை அடையமுடியும். இலை வெட்டும் திறமையின்மையினாலோ அல்லது மோசமான இலை காரணமாகவோ சமயங்களில் இலக்கை அடைய முடியாமல் போகலாம். அப்படியெனில் சம்பந்தப்பட்ட நபர் சொந்த செலவில் இலைகளை வாங்கி சமாளிக்க வேண்டும். இந்த இலைகள், பெரும்பாலும் அதே ஏஜெண்டிடமிருந்தும், வெளிச்சந்தைகளிலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அரைகிலோ இலை ரூ 100 என்ற விலையில் விற்கப்படுகிறது. எப்போதாவது சில சமயங்களில் இலக்கை மீறி அதிக எண்ணிக்கையில் பீடி சுற்றி விட்டால் அதில் கிடைக்கும் மீதமான பீடியை  வரும் காலங்களில், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதை கணக்கில் கொண்டு சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.

நிறுவனத்தின் அளவுகோல்களுக்கு ஏற்றபடி சுற்றா விட்டாலும் பிரச்சனை தான்.  ஒவ்வொரு நிறுவனத்தின் பீடியும் நீளம், பருமன், பீடி நூல்களின் வண்ணம் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அந்த பீடிகளை தரம் இல்லை என்று  நிறுவனத்தினர் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் ஏற்படும் இழப்பையும் தொழிலாளிதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சம்பளத்தை பொறுத்தவரை 200 கிராம் புகைத்தூளுக்கு (1125 பீடிக்கு) ரூ 145 முதல் 155 வரை கிடைக்கிறது.  சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் 1,125 பீடி சுற்றிவிட முடியும். இதையே முழுநேரமாக செய்தால் 300 கிராம் தூள் வரை சுற்றலாம். தினம் 145 வீதம் வைத்துக்கொண்டால் மாதம் ரூ 4,000 முதல் ரூ 5,000 வரை தான் இவர்களின் சம்பளம் இருக்க முடியும். வீட்டில் சும்மா இருப்பதற்கு இதாவது கிடைக்கிறதே என்றுதான் பலர் இந்த தொழில் செய்கிறார்கள். இந்த சம்பளத்தில்  சேமநலநிதியும் பிடிக்கப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் இந்த சம்பளத்தில் சீட்டு கட்டுகிறார்கள். பணம் தேவைப்படும் நேரங்களில் பி.எஃப் கணக்கை முறித்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

சில நிறுவனங்களில் வார சம்பளமாகவும், சில நிறுவனங்கள் மாத சம்பளமாகவும் தருகின்றன. இந்த குறைந்த சம்பளத்திற்காக பீடி தொழிலாளர்கள் இழப்பது அதிகம். எப்பொழுதும் புகைதுளோடு புழங்குவதால், பீடிசுற்றும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கூட காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட பின்னரும் வேறு வழியின்றி பீடி சுற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

தங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக சேமநல நிதி, இ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை போன்றவற்றை பெற்றிருந்தாலும் இவை பெயரளவிற்குதான் உள்ளன.  பீடி சுற்றுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாகவும் ஆனால அப்படி ஓய்வூதியம் யாரும் பெற்றதுபோல தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

பீடி ஏஜென்டுகள் வேறு விதமான பிரச்சனைகள் சந்திக்கிறார்கள்.

மங்களூர் கணேஷ் பீடி
மங்களூர் கணேஷ் பீடி

“தமிழகத்தில் வட இந்திய கம்பெனிகள் தான் அதிக அளவில் பீடி உற்பத்தி செய்கின்றன என்றாலும் அவற்றின் உற்பத்தி மையங்கள் தென் தமிழகத்தில்தான் இருந்து வந்தன. தற்பொழுது வட இந்தியாவிலும் பீடி சுற்றும் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் தமிழகத்தை விட குறைந்த கூலியில் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் 200 கிராம் தூளுக்கு சம்பளம் வெறும் ரூ 100 தான்.

அதுபோக இலை மற்றும் புகைத்தூளை அங்கிருந்து கொண்டுவந்து பீடியாக்கி மீண்டும் அங்கு கொண்டு செல்ல செலவு இருமடங்காவதோடு, பல்வேறு வரிகளும் கட்ட வேண்டியிருப்பதால் தமிழகத்தை சமீப காலமாக தவிர்த்து வருகிறார்கள் வட இந்திய முதலாளிகள். இதனால் வட இந்திய நிறுவனங்களுக்கு வேலை செய்யும் என்னை போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுபோக இப்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் இல்லை. புதிதாக பீடி தொழிலுக்கு யாரும் வருவதும் இல்லை. இப்போ எல்லோரும் குளத்து வேலைக்கு (நூறு நாள் வேலை திட்டம்) சென்று விடுகிறார்கள்” என்கிறார் மீரா சாகிப்.

அது போக வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறிவிட்டதால் பீடி நிறுவனங்கள் தங்கள் சந்தையை கணிசமான அளவில் இழந்துள்ளன. 80-களில் மாதத்திற்கு ஒரு கோடி பீடி  செய்து அனுப்பிக் கொண்டிருந்த மீரா சாகிப் தற்போது 7 லட்சம் பீடி தான் சப்ளை செய்கிறார். “இப்போ எல்லாரும் சிகரெட்டு, பாக்கு அது இதுனு மாறிட்டாங்க. யாரும் பீடியை விரும்புறதில்லை. அரசாங்கமும் பீடிக்கு விளம்பரம் செய்ய கூடாதுனு சொல்லுது” என்று சந்தையின் வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்கிறார் அவர். முன்னர் வள்ளியூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், புளியங்குடி  உள்ளிட்ட ஊர்களில் டிப்போக்களை கொண்டிருந்த இவரது நிறுவனம் தற்போது திருநெல்வேலி, புளியங்குடி என இரண்டாக குறைந்து விட்டது.

தமிழகத்திலிருந்து தினம் எவ்வளவு பீடி உற்பத்தியாகிறது என்று கேட்டபோது

“அது தெரியாது. ஆனால் டெலிபோன் நிறுவனம் தினசரி ஒரு கோடி பீடிகளை  தமிழகத்திலிருந்து எடுத்து சென்றது ஒரு காலம். இப்போது அது  20 லட்சம் பீடிகளாக குறைந்து விட்டது. அப்பொழுது  டெலிபோனுக்கு மட்டும் என்னை போன்று 170 நபர்கள் ஏஜென்டுகளாக இருந்தோம். இப்போ 60 பேர் தான் இருக்கிறோம்.” என்றார்.

ஏஜென்டுகளைப் பொருத்தவரை, ஆயிரம் பீடிக்கு ஐந்து ரூபாய் வீதத்தில் கமிசன் கிடைக்கிறது. நிறுவனம் கொடுக்கும் மூலப்பொருட்களுக்கு, 52 கிலோ இலைக்கு 1 லட்சம் பீடி என்ற வீதத்தில் இவர்கள் சப்ளை செய்ய வேண்டும். இலை எப்படி மோசமாக இருந்தாலும் இவர்கள் பீடி எண்ணிக்கையை குறைக்க முடியாது. இதனால் ஏற்படும் சுமை இறுதியாக பீடி தொழிலாளர்கள் தலையில் தான் விழும். மீரா சாகிப்பும் இதை தான் சொல்கிறார்.

தினேஷ் பீடி
கேரள தொழிலாளர் கூட்டுறவு தினேஷ் பீடி

“உங்களுக்கு மாசம் எவ்வளவு  கிடைக்கும் ? “

“அது புள்ளைகள எவ்வளவு களவாங்குதமோ அத பொருத்து.  நம்மள எவ்வளவு களவாங்குறானோ அந்த அளவு கம்பெனிகாரனுக்கு லாபம்” என்று  ‘புள்ளைகள்’ அனைவருக்கும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் சாகிப்.

தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தான் முதலாளிகளின் லாபம் என்பதை அனுபவபூர்வமாக சொல்கிறார் இந்த பாய். ஆனால் மெத்த படித்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் இதை ஒப்புக் கொள்வதில்லை. மேலும் மீரான் பாயிடம் பீடி தொழில் செய்வது இசுலாத்திற்கு விரோதமில்லையா என்றுகேட்ட போது, “இஸ்லாத்தில் அப்படி இருப்பதாக தெரியவில்லையே” என்றவர், “ஒருவேளை அப்படியே இஸ்லாத்துக்கு விரோதமென்றாலும் வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் செய்துதான் ஆகவேண்டும்” என்றார். ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பது வர்க்கமா, மதமா என்று இதைவிட அழகாக யாரும் விளக்க முடியாது.

தங்களுக்கு கிடைக்கும் ஐந்து ரூபாய் கமிசனில் தான் இவர்கள் தங்களது அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநெல்வேலியிருந்து இலை மற்றும் புகைத்தூளை எடுத்து ஒவ்வொரு ஊர் அலுவலகத்திற்கும் கொண்டு சேர்க்க ஆகும் செலவுகள், ஒவ்வொரு கிராமத்திலும் ஆபீஸ் ரூம் வாடகை, பின்னர் பீடியை  டிப்போவிற்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவு போன்ற பல செலவுகளை இந்த ஐந்து ரூபாய் கமிசனிலிருந்து தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிலில் நஷ்டம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்ட ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள் என்கிறார் மீரான். இது போக புகைத்தூளினால ஏற்படும் அனைத்து வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படுகின்றன. ஆயினும் வேறு வழியில்லாததால் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.

உலகம் பீடியிலிருந்து நவீனமாக சிகரெட்டுக்கு மாறிவிட்டதன் பின்னணியில் புதிய தலைமுறையினர் யாரும் பீடித்தொழிலுக்கு வருவதில்லை.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் காத்துக்கொள்ள பீடி உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஒருக்கால் புகை பிடிக்கும் பழக்கம் குறைவதன் நீட்சியாக இந்த அழிவை எடுத்துக் கொள்ளலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.

ஐ.டி.சி ஏகபோகம்
ஐ.டி.சி ஏகபோகம்

சிகரெட்டுக்கு அதிக வரி போட்டாலும் புகை பிடிப்போரே அதன் சுமையை சுமக்கின்றனர். நிறுவனங்களுக்கோ இலாபம் பல மடங்குகளில் அதிகரிக்கிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஐ.டி.சி எனும் பன்னாட்டு நிறுவனம், 2012-13-ம் ஆண்டில் மட்டும் 27,136 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றிருக்கிறது. இதில் இலாபம் மட்டும் 8,694 கோடி ரூபாயாகும். இது போக நுகர்பொருள் தொழில், ஓட்டல் என்று நிறைய தொழில் செய்யும் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் சிகரெட் மட்டும் 56% பங்கை அளிக்கிறது. ஆனால், நிறுவனத்தின் இலாபத்தில் சிகரெட்டின் பங்கு 82% ஆகும். அதாவது, விளம்பரம் செய்யத் தேவையில்லாத, போட்டி இல்லாத சிகரெட் விற்பனையில் குறைந்த செலவில் அதிக கொள்ளை அடிக்கிறது ஐ.டி.சி. இந்தியாவின் ஒட்டு மொத்த சிகரெட் சந்தையில் ஐ.டி.சியின் பங்கு  80% வரை இருக்கிறது.

சிகரெட் விளம்பத்திற்கும் தடை இருந்தாலும் ஐ.டி.சியின் ஏகபோகம், மற்றும் பல்வேறு பதிலி விளம்பரங்களால் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தல் தொடர்வதாலும் ஐடிசியின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்தே வருகிறது. எனவே பீடியின் அழிவை ஐ.டி.சியின் பொலிவோடு சேர்த்து பார்க்க வேண்டும். சிகரெட்டுக்கு வரிபோடும் மத்திய அரசு அதை நிறுவனத்தின் தலையில் சுமத்துவதில்லை. ஒரு வேளை புகை பிடிக்கும் பழக்கம் குறைய வேண்டும் என்றால் சிகரெட் உற்பத்தியை நிறுத்துவதுதான் சரியான அணுகுமுறை, அதை விடுத்து வரி போடுவது என்பது பன்னாட்டு முதலாளிகளின் ஆதாயத்திற்கே வழிவகுக்கும்.

இந்தியாவின் புகையிலை நுகர்வில் 48% பீடியின் பங்காக இருக்கிறது. சிகரெட்டை விட பீடியில் கார்பன் மோனாக்சைடு, நிகோட்டின், தார் போன்ற உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். எனினும் சாதாரண மக்கள் தமது வருமானத்தில் இதை விடுத்து பில்டர் சிகரெட்டுக்கு மாறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. உடல் நலனை பீடி மட்டும்தான் கெடுக்கிறது என்று அட்வைசு செய்யும் நண்பர்கள் முதலில் இந்த தொழிலாளிகளின் கடும் உழைப்பு வேலைகளுக்கு மாற்று என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். அதற்கு தீர்வுகாணாமல் குடியும், புகைபிடிக்கும் பழக்கமும் ஒழிவது சிரமம்.

17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் புகையிலை சாகுபடி இந்தியாவிற்கு அறிமுகமானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் பீடி புழக்கத்திற்கு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் குஜராத்தின் பட்டேல் சாதியைச்சேர்ந்த முதலாளிகள்தான் பீடி தொழிலை ஆரம்பித்திருக்கின்றனர்.

தற்போது சுமார் 30 இலட்சம் இந்திய மக்கள் பீடித்தொழிலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பீடி தொழில் ஆரம்பத்திலிருந்தே குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வந்தது. தற்போது ஏனைய குடிசைத் தொழில்களுக்கு கிடைத்த மானிய வெட்டு, சலுகை ரத்து பீடி தொழிலுக்கும் பொருந்தும்.

மங்களூர் கணேஷ் பீடி எனும் முதலாளியின் நிறுவனம் பீடித்தொழிலில் ஏக போகம் செலுத்திய போது கேரளாவின் பீடி தொழிலாளிகள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தொழிலாளர் கூட்டுறவு சங்க தயாரிப்பாக தினேஷ் பீடி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் இயக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கேரள ‘சகா’க்களின் ( தோழர் எனும் வார்த்தையின் மலையாள வார்த்தை சகா) ஒரு அடையாளமாக தினேஷ் பீடி இருந்தது. இன்றும் கூட கேரளாவில் சராசரி மலையாளிகளின் அடையாளமாக பீடி இருக்கிறது என்று கூற முடியும். அதே நேரம் சேட்டன்களும் சிகரெட்டுக்குத்தான் மாறி வருகின்றனர் என்பதை மறுக்க வேண்டியதில்லை.

பீடியை விட அதிகம் ஆபத்துள்ள நேரடி புகையிலை பொருட்களை விழுங்கும் பான் வகையைச் சேர்ந்த புகையிலை பொருட்களே தற்போது அதிகம் நுகரப்படுகின்றன. சில வருடங்களிலேயே இதன் பாதிப்பு பாரதூரமாக வெளிப்படுகிறது. இரண்டு ஷிப்டுகள் தொடர்ந்து வேலை பார்ப்பது, தொடர்ந்து கண் விழிப்பது என்று பல்வேறு இடர்ப்பாடுகளை இத்தகைய புகையிலை பொருட்கள் ‘தணிக்கின்றன’. இறுதியில் அந்த தொழிலாளிகளின் உயிரும் கூட சராசரி இந்தியர்களின் ஆயுளை விட குறைந்த காலத்திலேயே சீக்கிரமே இயங்காமல் நின்று விடுகிறது.

தன்னார்வக் குழுக்களின் ஆரோக்கியக்கேடு என்பதாக மட்டும் பீடி பிடிப்பதை பார்க்காமல், பொருளாதார ஏற்றத்தாழ்வின் அவலமாக பீடி தொழிலை பார்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். ஆரோக்கியத்தின் பொருட்டு புகை பிடிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றால் முதலில் ஐ.டி.சி நிறுவனம் இழுத்து மூடப்படவேண்டும். அப்போதும் கூட பீடித்தொழிலுக்கு மாற்றை அரசு உருவாக்க வேண்டும்.

–    வினவு செய்தியாளர்.

புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !

6

“பாராளுமன்றம் டம்மி! ஆணையங்களின் காலை நக்கும் ‘ஜிம்மி’”! என்ற முழக்கத்தின் கீழ் மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மின் துறை ஆணையம் முற்றுகை! 29 பேர் கைது!

கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண உயர்வுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அறிவித்த ஜெயலலிதா, இரண்டு தினங்களுக்கு முன் இனிமேல் தமிழகத்தில் மின் வெட்டே இருக்காது எனவும் பெருமையாக அறிவித்தார். ஆனால், இதுவரை நடந்த மின் வெட்டிற்கும், மின் கட்டண உயர்வுக்கும் காரணம் யார் என்ற உண்மையை மறைத்து விட்டார். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியோ, இவை எல்லாம் தெரிந்தும் தனக்கு எதுவும் தெரியாதது போல் பம்மிக் கொண்டார்.

கடந்த ஆண்டு மே முதல் இவ்வாண்டு மே வரை ஆறு முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது மக்களின் மீது தாளாத சுமையாக மாறியுள்ளது. இதனால், இம்முறை மின் கட்டண உயர்வை அறிவித்தவுடனே மக்கள் தன்னிச்சையாக தாங்கள் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மின் கட்டண உயர்வுக்கும், மின் வெட்டிற்கும் உண்மையில் யார் காரணம் என்பதையும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படிப்பட்ட போராட்டங்களைக் கட்டியமைப்பது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில், புதுச்சேரி மின் துறை ஆணையத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வுக்குக் காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் எம்.எல்.ஏ, க்களோ, எம்.பி. க்களோ அல்ல. இவர்கள் அனைவரும் எந்தவித அதிகாரமுமற்ற டம்மி பீஸ்கள் தான். இதை தனது வாயாலேயே ஒத்துக் கொண்டு விட்டார் தமிழக முதலமைச்சர். பம்மிக் கொண்டார் புதுச்சேரி முதலமைச்சர்.

அப்படியென்றால், மின் கட்டணத்தை உயர்த்துவதும், அதை அமல்படுத்த இவர்களுக்கு உத்தரவிடுவதும் மின் துறை ஆணையம் தான். இவர்கள் தான் உண்மையில் அதிகாரம் படைத்தவர்கள். வறுமையைப் பற்றியோ, விலைவாசி உயர்வினால் மக்கள் படும் அவதிகளைப் பற்றியோ அறியாத கலெக்டர், தாசில்தார், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மேட்டுக்குடி வர்க்கத்தினர் இவர்கள். முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடியாட்கள். பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ இவர்களின் கட்டளைக்கு ஓடும் ஏவல் நாய்கள் தான்.

மக்களின் சேவைத்துறையாக இருந்த மின் துறையைத் தனியாருக்குக் கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி, அதை தனியார் முதலாளிகளுக்கு சலுகை விலையில் வழங்குகின்றனர். இதனால், தமிழக மின் துறைக்கு ரூ 75,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மின் துறையிலோ ரூ 900 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த வருவாய் இழப்பையும், அதிக விலைக்கு வாங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவையும் மக்களின் தலையில் சுமத்தி தனியார் முதலாளிகளின் கொள்ளையை உத்திரவாதப்படுத்துகின்றனர். இந்தக் கொள்ளை தான் மின் கட்டண உயர்வுக்குக் காரணம். இந்நிலைமைகளை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 28.05.2014 அன்று மதியம் 3.00 மணியளவில் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முழக்கமிட்டுக் கொண்டே ஊர்வலமாக சென்று, சாரம், சத்யா நகரில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மின் துறை ஆணையத்தின் மக்கள் குறை தீர்வு அவை அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அலுவலக வாயிலைத் தாண்டி அலுவலகத்தினுள் சென்று அமர்ந்தோம். முழக்கங்கள் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. காவல் துறை, “எந்தப் பிரச்சினையென்றாலும் வெளியில் நின்று தான் முறையிட வேண்டும், அலுவலகத்தினுள் வரக்கூடாது” என சொல்லிப் பார்த்தது. பின் மிரட்டிப் பார்த்தது. ஆனால், தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கத்தைத் தொடர்ந்தவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில், “நாங்கள் உங்களைக் கைது செய்வோம்” என்று மிரட்டினர். “எங்கள் கோரிக்கைகள் மக்களுக்கானது. அதனால், நாங்கள் கைதாக மாட்டோம்” என அறிவித்தோம். இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் முழக்கங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் முழக்கமிடும் தோழரை தனியாக பிரிக்கப் பார்த்தது. ஆனால், தோழர்கள் தங்களுக்குள் சங்கிலி போன்ற பிணைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதனால், காவல் துறையினரால் தனியாக பிரிக்கமுடியவில்லை. அதைப் பார்த்த காவல் துறை அதிகாரி, சிறிது நேரம் கத்தி ஓய்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களைப் பிரிக்கலாம் என சற்று நேரம் அமைதியாக இருந்தனர். ஆனால், நேரம் செல்ல செல்ல பல முனைகளி லிருந்து முழக்கம் இடைவிடாது தொடர்ந்த வண்ணம் இருந்தது. இனி பொறுத்து பயனில்லை என்பதை உணர்ந்த காவல்துறை அதிகாரி, கூடுதல் காவலர்களை வரவைத்து தோழர்களைக் குண்டுகட்டாக தூக்கியும், தரையோடு தரையாக இழுத்துக் கொண்டு வந்தும் வெளியில் தள்ளிக் கைது செய்ய முடிந்தது. இதே போல் பெண் தோழர்களைக் கைது செய்ய ஆண் காவலர்கள் முயற்சித்தபோது, இதைக் கடுமையாக கண்டித்து பேசியவுடன் காவலர்கள் பின் வாங்கினர். அதன்பின் அந்த பெண் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த பின் நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி, “சம்மந்தப்பட்ட துறைக்குச் சென்று முறையிட வேண்டும். மேலும், அலுவலகத்தினுள் வந்து போராட்டம் செய்வது சட்டவிரோதமானது” என்றார்.

“சம்மந்தப்பட்ட துறைக்கு வந்து தான் முறையிட்டுள்ளோம். மேலும், மனு கொடுத்து முறையிடுவதால் பலன் ஏற்படவில்லை” என் நாம் கூறினோம்.

“என்னிடம் மனு கொடுங்கள் நான் சம்மந்தப்பட்ட துறையிடம் தங்களை அழைத்துச் செல்கிறேன், பிரச்னையை அங்கு முறையிடலாம்” என்ற அந்த காவல் துறை அதிகாரியிடம்,

“ஏற்கனவே, இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள லியோ பாஸ்டனர்ஸ் என்ற நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடிய போது, அங்கிருந்த காவல்துறை எஸ்பி, தங்களது கோரிக்கைகளைக் கடிதமாக தரச்சொல்லிக் கேட்டு வாங்கினார். ஆனால், அது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அந்த கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலைக் கேட்டபோது, இது தொழிலாளர் சம்மந்தப்பட்ட பிரச்சினை இதில் நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று பதில் அளித்திருந்தார்” என்ற கடந்த கால அனுபவத்தைக் கூறி

“இது போலவே இப்போதும் நடக்கும். இது மக்களுக்குத் தீர்வு தராது” என விளக்கிப் பேசி “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கைதாகி பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

முற்றுகைப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

புதுவை அரசே! புதுவை அரசே!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின் கட்டண உயர்வினை
ரத்து செய்! ரத்து செய்!

புதுவை அரசே! புதுவை அரசே!
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள
தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க
உழைக்கும் மக்களை பலியிடாதே!

புதுவை அரசே! புதுவை அரசே!
புதுச்சேரி மின் துறையில்
900 கோடி ஊழல் செய்த
மின் துறை அதிகாரிகளின்
பதவியைப் பறித்து சொத்தைப் பறித்து
தண்டனை வழங்கு! தண்டனை வழங்கு!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
போராடுவோம்! போராடுவோம்!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின்கட்டண உயர்வினை
ரத்து செய்யப் போராடுவோம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
தனியார் முதலாளிகள் கொள்ளைக்கான
கூடுதல் மின் கட்டணத்தை
செலுத்த மறுப்போம்! செலுத்த மறுப்போம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
அதிகாரத்தைக் கையிலெடுத்து
நியாயமான கட்டணத்தை
நிர்ணயிப்போம்! நிர்ணயிப்போம்!

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த
எம்.எல்.ஏ. – வுக்கு அதிகாரமில்லை!
எம்.பி. – க்கும் அதிகாரமில்லை!
ஆணையங்கள் என்ற பெயரில்
கொட்டமடிக்கும் அதிகாரவர்க்க
கும்பலுக்கே முழு அதிகாரம்!

கல்வியில் தனியார்மயம்!
மருத்துவத்தில் தனியார்மயம்!
தொலைபேசியில் தனியார்மயம்!
மின்சாரத்தில் தனியார்மயம்!
தண்ணீரிலும் தனியார்மயம்!
விலைவாசி உயர்வுக்கும் கட்டண உயர்வுக்கும்
காரணமே தனியார்மயம்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும்
தனியார்மயக் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மக்களுக்கு அதிகாரம் வழங்கும்
மக்கள் சர்வாதிகார மன்றங்களைக்
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி
தொடர்புக்கு : 95977 89801