Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 659

பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா

36

“எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சுப்பிரமணியன் சுவாமி சென்றவாரம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டார்.  பார்ப்பன சுப்பிரமணியன் சுவாமி ‘பார்ப்பனரல்லாத’ மோடியை ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்று சான்றிதழ் அளிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை பிரபல ‘கர்நாடக’ இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

நான் ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞன். இந்த தகுதி நான் நெருங்கிப் புழங்கும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிக்குழுவில், இயல்பாகவே என்னை வைத்து விடுகிறது. நான் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவன் என்பதை தனியாக ஒரு முறை சொல்லவும் வேண்டுமா, என்ன?

என்னுடைய கலை உலகில் இசைக்கலைஞர்கள், சபா நிர்வாகிகள், அமைப்பாளர்கள், விமரிசகர்கள் உள்ளிட்டோரில் அநேகமாக 99 சதவீதம் பேர், ‘உணவுச் சங்கிலியின் மேல் பகுதி’யைச் சேர்ந்த சலுகைபெற்ற பிரிவினர்தான். இந்தக் கலையை நேசிப்பவர்களில் ‘பார்ப்பனராகப் பிறக்காத’ சிலர் இருந்தாலும் அவர்களும் பல விதங்களில் பார்ப்பனத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் மற்றும் பிற “உயர் சாதி” ஆண்கள், பெண்கள் பலரிடமும் நான் பேசும் போது, பார்ப்பன வாழ்க்கை முறை, அதன் சடங்குகள், அடையாளம், மற்றும் பொதுவாக வேத மரபு ஆகியவற்றின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையை கவனித்திருக்கிறேன். பார்ப்பனர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புகள் மீது அவர்களுக்கு ஏகப்பட்ட பெருமிதம் இருக்கிறது. அவற்றைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற பிடிப்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீவிரம் இருக்கிறது. சம்பிரதாயங்களில் வலுவான நம்பிக்கையில்லாத குடும்பங்களில் கூட, வேதபாடசாலைகளுக்கு ஆதரவு, கோயில் புனரமைப்பு நடவடிக்கைகள், புனிதப் பசு பாதுகாப்பு திட்டங்கள் என இந்த பாதுகாப்புவாதத்தைப் பார்க்க முடியும்.

எருமை இந்த கணக்கில் சேராது. அது தாழ்ந்த சாதி. மிகவும் சம்பிரதாயமான குடும்பங்களில், காற்றினால் ஆன ஒரு சுவர் பார்ப்பனரல்லாதவர்களை சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுத்து விடும்; வீட்டுப் பணியாளர்கள் எதைத் தொடலாம், எதைத் தொடக்கூடாது என்பதற்கு தெளிவான கட்டுப்பாடுகள் உண்டு.

புதிர் இந்த இடத்தில்தான் வருகிறது. இந்தப் பிரிவினர், அநேகமாக இவர்கள் அனைவருமே, தம் இயல்புக்கு மாறாக, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கவதற்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்? அதுவும் மிகத் தீவிரமாக.

modi-cartoon-2மேல்தட்டுப் பிரிவினர் கடந்த காலத்தில் பிற சாதியினர் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு அவர்கள் காட்டும் ஆதரவின் தீவிரம் என்பது முற்றிலும் வேறானது. நமது மூளைகளிலிருந்து சாதிய சிந்தனை அழிக்கப்பட்டு விட்டது என்பது இதன் பொருளா? இல்லை என்பது நமக்கே தெரியும். அப்படியானால், எங்கிருந்து பிறந்தது (மோடியின் மீதான) இந்தப் பாசப் பிணைப்பு?

பார்ப்பனர்களும் உயர் வர்க்கத்தினரும் ஆதரித்து நிற்பது பார்ப்பன சாதியின் சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமல்ல; அவற்றைக் காட்டிலும் ஆழமான, பார்ப்பனியத்தை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். பார்ப்பனியம் என்பது இந்துக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தி வழிநடத்துகிறது. இதனை வடிவமைத்து, பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, இதனைக் கட்டுப்படுத்தி வரும் குழுதான் பார்ப்பனர்கள்.

பார்ப்பனியம் என்பது உண்மையிலேயே என்ன கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது? இதற்கு அளிக்கப்படும் தத்துவஞான விளக்கவுரைகளை நான் ஏற்கவில்லை. அவையெல்லாம் வெறும் சால்ஜாப்புகள். சமூக நடவடிக்கையின் வெளிப்பாடுகளில் பார்ப்பனியம் என்பதன் பொருள் முற்றிலும் வேறானது. பார்ப்பனியம் என்பது கட்டுப்பாடு, அதிகாரம், படிநிலை அதிகார அமைப்பு, கல்வி, அறிவு, தூய்மை, புனிதம் என்பவை தொடர்பானது. நம்முடைய சமூக கட்டுமானங்கள் அனைத்திலும் இந்தக் கருத்துகள் ஊடுருவியிருக்கின்றன. இந்த இலட்சியங்களை, அல்லது இவற்றில் சிலவற்றை எட்டுபவர்களுக்கு அது உணர்ச்சி பூர்வமான, மத ரீதியான மற்றும் அறிவு பூர்வமான மேலாதிக்க மனோநிலையை வழங்குகிறது.

இந்தக் கட்டுமானத்தில் மோடி எந்த இடத்தில் பொருந்துகிறார்? வளர்ச்சி குறித்து அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டிருக்கும் கதையின் மூலம், அவர் கல்வி, அறிவு, அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றின் பௌதிக வடிவமாகியிருக்கிறார். இத்தகைய பௌதிக வடிவமாக்கல்களை பார்ப்பனர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் (அவர்கள் தங்களைப் பற்றி அவ்வாறே கருதிக் கொள்வதால்).

இத்துடன் மோடி தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் வெளிப்படையான, தனிச்சிறப்பான இந்து மத பிம்பத்தை சேர்த்தால் கிடைப்பது மெருகேற்றப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஒரு சின்னம். மோடி எப்போதுமே சக்தி வாய்ந்தவராகவும், உறுதியானவராகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறார். இது வலிமையின் வெளிப்பாடாக மட்டுமின்றி, தலைவருக்கு மற்றவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்ற தெளிவான அதிகாரப் படிநிலையை உணர்த்துகிறது. அதாவது, பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் பணிவது போன்றது இது. அந்த வகையில், நரேந்திரமோடி பார்ப்பனியத்தை மிகப் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மோடியின் மீதான ஈர்ப்பு நடுத்தர வர்க்க பார்ப்பனர்களை பிடித்த வியாதி மட்டுமா என்று கேட்டால், இல்லை, பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அனைத்து தரப்பு பார்ப்பனர்கள் மத்தியிலும் அது பரவியிருக்கிறது. நரேந்திர மோடி என்ற அடையாளம் அவர்களை கவர்ந்திழுக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்கான அரசியல் காரணங்களை எவ்வளவுதான் வக்கணையாக பேசினாலும், கடைசியில் ஒருவர் வாக்களிப்பது தனது உணர்வுநிலையிலிருந்துதான். அந்த ஈர்ப்பு அடையாளப்படுத்தலிலிருந்து வருகிறது, நரேந்திரமோடியைப் பொறுத்த வரை அவர் உள்மயப்படுத்திக் கொண்ட பார்ப்பனியம் அந்த ஈர்ப்பைத் தருகிறது. மேலும், இங்கு அது இரட்டை அபாயமாக வெளிப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரிடமிருந்து பார்ப்பனியம் வெளிப்படுவது, சாதிய படிநிலையில் கீழ் தட்டுகளில் இருப்பவர்கள் தாங்களும் அதே உயர்நிலையை அடையலாம் என்ற நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, மோடியின் சாதியைப் பற்றி பலர் சிந்திப்பதேயில்லை என்ற சித்தாந்த சாத்தியமும் இருக்கிறது. சாதாரண நிலைமைகளில் இவ்வாறு சாதியை பார்க்க மறுப்பதை போற்றலாம். ஆனால், இங்கு இந்த சாதிக் குருட்டுக்கு காரணம் வேறு. ஒருவரது நிறம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது நமது சமூகத்தின் இன்னொரு அழுக்கான உண்மை. ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு வெள்ளையாக இருக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பார்ப்பனராக தோற்றமளிப்பார். யாராவது ஒரு தென்னிந்தியரிடம் மோடி எந்த சாதி என்று கேட்டுப் பாருங்கள், “அவர் ஒரு பார்ப்பனர் என்றுதான் நினைத்தேன்” என்று விடை வரும். ஒருவர் பார்ப்பனராக இல்லா விட்டாலும், வெள்ளையாக இருந்தால், ‘நிறத்தால் பார்ப்பனர்’ என எடுத்துக் கொள்ளப்படுவார்.

பார்ப்பனியத்துக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்திருக்கிறார், மோடி. தனது மதத்தை வெளிப்படையாக தோளில் தரித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதை பெருமையாக காட்டிக் கொள்கிறார். அவர் ‘மாற்றார்களை’ (முசுலீம்கள் என்று பொருள்) எதிர்த்து நிற்பதை மேல்தட்டு வர்க்கத்தினர் பெருமையாக உணர்கின்றனர். தங்களிடம் இல்லாததாக உணரும் விடாஉறுதியை பார்ப்பனர்கள் போற்றுகின்றனர். அந்த உறுதியோடு கூடவே பார்ப்பனியம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மேட்டிமைத்தனத்தையும் இணைப்பதன் மூலம் இந்த கௌரவ பார்ப்பனர் இந்து உலகத்தை ஒன்றுபடுத்துகிறார், அந்த சாதனையைத்தான் இந்துத்துவா என்று சொல்கிறார்கள்.

நன்றி : The Hindu
ஆங்கில மூலம் : The big paradox – by T.M. Krishna

டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘கர்நாடக’ இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில்  பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து  எழுதிய A Southern Music: The Karnatik Story என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயிரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக்கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச்சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

6

ப்ளஸ் டூ தேர்ச்சி : மண் பூரிக்கும் மலர்கள் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்!

  • துத்திப் பூக்களின்
    எளிமையும், ஈர்ப்பும்
    எங்கள் மாநகராட்சி
    அரசுப்பள்ளி மாணவர்கள்
    பாதைகள் மறிக்கும்
    முட்களைத் தாண்டி
    வெற்றிக்கொடி கட்டிய
    வேலிப் பூக்கள்!
  • புலர் பொழுதின் ஊக்கம்
    விடிவானின் அமைதிப் பேரழுகு
    எங்கள்
    அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
    வசதிகள் குறைவு
    எனினும், நூலாம் படைகள் தாண்டி
    ஓட்டை, உடைசல்களுக்கிடையே
    மங்கியத் தாழ்வாரங்களை
    ஒளிபூசி உயிர்ப்பிக்கும்
    சூரிய மலர்கள்
    எங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
  • பிளஸ் டூ ரிசல்ட்மினுக்கும் கவர்ச்சி இல்லை…
    மீடியாக்களின் பீற்றல் ஒளி இல்லை…
    ஆடம்பர விளம்பரமில்லை…
    அருகிய ஈரத்தில்
    இறுகிய மண்பசையில்
    கிடைத்த வாய்ப்பில்
    முளைத்த விதைகளாய்
    எழுந்த மணிகளே…
    அரசுப்பள்ளி மாணவர்களே!
    உங்கள் தேர்ச்சியில்
    உவக்கும் கிழக்கும்!
  • கட்டாய நன்கொடை இல்லாமல்,
    களவாட பல ட்யூசன் இல்லாமல்,
    உறவாடும் உழைப்பின் தரத்தால்
    கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
    அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
    உங்கள் மகத்தான சாதனைக்கு
    மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்!

– துரை.சண்முகம்

உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!

4

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் பாபர் மசூதியை எப்படிச் சதித்தனமான, சட்டவிரோதமான வழியில் இடித்துத் தள்ளி, அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கொட்டகை அமைத்து, அதனை ராமர் கோவிலாக்கியது என்பதற்கான ஆதாரங்களைச் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. தெகல்கா வார இதழின் நிருபராக இருந்த ஆஷிஷ் கேதான் குஜராத் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறி பயங்கரவாதிகளை இரகசியமாகப் பேட்டி எடுத்து அம்பலப்படுத்தியதைப் போல, பாபர் மசூதி இடிப்புச் சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு
இந்து மதவெறிக் கும்பலால் சதித்தனமாக இடிக்கப்படும் பாபர் மசூதி. அதனைத் திறந்த வாய் மூடாமல் வக்கிரமான குதூகலிப்போடு கண்டு சரிக்கும் உமாபாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி. (கோப்புப் படங்கள்)

1992, டிசம்பர் 6 அன்று இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. “அரசியல் சாசன வழியில் ராமர் கோவிலை அமைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” எனச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட யோக்கியனைப் போல இன்று பேசும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல், அன்று உச்ச நீதிமன்றத்திடம் மசூதியை இடிக்க மாட்டோம் எனப் பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு, சதித்தனமாக அம்மசூதியை இடித்துத் தள்ளியது. இத்துரோகத்திற்கு பா.ஜ.க. தலைமையிலிருந்த உ.பி. அரசு மட்டுமின்றி, காங்கிரசு தலைமையிலிருந்த மைய அரசும் துணை போனது.

குஜராத் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்று கூறி நியாயப்படுத்தி வருவதைப் போலவே, பாபர் மசூதி இடிப்பை உணர்ச்சிவசப்பட்ட கரசேவகர்களின் தன்னெழுச்சியான செயலாக, எதிர்பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சியாகக் கூறி, இதன் பின்னுள்ள சதித் திட்டத்தை மூடிமறைத்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ். குறிப்பாக, பாபர் மசூதி இடிப்புக்குத் தளபதியாகச் செயல்பட்ட எல்.கே. அத்வானி, “இது தனது வாழ்நாளில் நடந்துவிட்ட கறுப்பு தினம்” என முதலைக் கண்ணீர் விட்டு, தனக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தமேயில்லாதது போலக் காட்டிக் கொண்டார்.

இந்த மதவெறிக் கும்பல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும் நடத்திய கலவரங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். முசுலீம் தீவிரவாதம் நாட்டின் மீது கவிழ்வதற்குப் பாபர் மசூதி இடிப்புதான் முதன்மையான காரணமாக அமைந்தது. இன்று 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மோடி குறித்த மாயைக்குள் சிக்கியிருக்கும் இளைஞர்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது. கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள வீடியோ இந்த உண்மைகளை உரத்துப் பேசியிருக்கிறது.

சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த சாக்ஷி மகராஜ், ஆச்சார்யா தர்மேந்திரா, உமா பாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 23 பேர் அளித்த சாட்சியங்கள் இக்காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளன. “கரசேவகர்களுள் 38 பேர் பொறுக்கியெடுக்கப்பட்டு, அவர்களுக்குக் கட்டிடத்தின் மீது ஏறுதல், கோடரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களைக் கொண்டு கட்டிடங்களை இடித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்கேஜ் எனுமிடத்தில் அளிக்கப்பட்டதையும், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இப்பயிற்சி நடத்தப்பட்டதையும், பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி மசூதியை இடிக்க முடியா விட்டால், டைனமைட்டைப் பயன்படுத்தி மசூதியைத் தரைமட்டமாக்கும் தனித் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததையும்” உள்ளிட்டு, இச்சதி தொடர்பான பல உண்மைகளை கோப்ராபோஸ்ட் இணை ஆசிரியர் கே.ஆஷிஷிடம் இவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், “பா.ஜ.க. தலைவர் அத்வானி, அச்சமயத்தில் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங் ஆகியோருக்கு மட்டுமின்றி, பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் மசூதி இடித்துத் தள்ளப்படும் சதி திட்டம் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். “ராமஜென்மபூமி நடவடிக்கை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளியில் காணப்படும் இந்த ஆதாரங்கள் ஏற்கெனவே அம்பலமானவைகள்தான் என்றபோதும் குற்றவாளிகள் தமது வாயால் ஆர்.எஸ்.எஸ். இன் சதியையும் அதில் தமது பாத்திரத்தையும் கூறியிருப்பதுதான் இந்த வீடியோவை முக்கியமான இன்னொரு ஆதாரமாகக் கருத வைக்கிறது.

கலவரங்கள்
இந்து மதவெறிக் கும்பல் பாபர் மசூதி இடிப்புக்கு முன் நடத்திய பாகல்பூர் கலவரம் (இடது); மசூதி இடிப்புக்குப் பின் நடத்திய மும்பய்க் கலவரத்தின் கோரக் காட்சிகள் (கோப்புப் படங்கள்).

பாபர் மசூதி இடிப்பு பற்றி கோப்ராபோஸ்ட் தொகுத்த வீடியோ வெளிவரப் போகிறது எனத் தெரிந்ததுமே, அதைத் தடை செய்யக் கோரி தேர்தல் கமிசனிடம் புகார் அளித்தது பா.ஜ.க. “இது மதரீதியான பிளவை ஏற்படுத்தி, அமைதியான முறையில் தேர்தல் நடக்கும் சூழலைக் கெடுத்துவிடும்” எனப் பீதியூட்டியது. எனினும், தேர்தல் ஆணையம் இவ்வீடியோ வெளியிடப்படுவதற்குத் தடைவிதிக்க மறுத்து விட்டது. வீடியோ வெளியான பிறேகா, அதில் தமது வானரப் படையினரே வாக்குமூலங்கள் அளித்திருப்பது பற்றிப் பேச மறுத்துவிட்டு, “முசுலீம் வாக்குகளைக் கவருவதற்காகத் தேர்தல் சமயத்தில் வெளியிடுகிறார்கள் ” எனக் குற்றஞ்சுமத்தி, பிரச்சினையைத் திசை திருப்பியது அக்கும்பல்.

சாதாரண குற்றவாளிகள்கூடத் தமக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரங்களுக்கு முகங்கொடுக்க மாட்டார்கள் எனும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். கும்பல் தமக்கு எதிராக வெளியாகியுள்ள இந்த ஆதாரத்தைப் புறக்கணித்ததும், பிரச்சினையைத் திசைதிருப்ப முயன்றதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்தப் பிரச்சினையைப் பற்றி யார் பேச வேண்டுமோ அவர்கள் – தம்மை மதச்சார்பற்றவர்களாகவும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்களாகவும் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள், நடுநிலையாளர்களாகக் கூறிக் கொள்ளும் தேசியப் பத்திரிகைகள், முதலாளித்துவ அறிவுத்துறையினர் கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பற்றிப் பேசாமல், மௌனச் சாமியார்களாக நடந்து கொண்டதுதான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

2ஜி விவகாரத்தில் நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, அதனைத் தொலைக்காட்சி சீரியல் கதை போலத் தினமும் வெளியிட்டு கனிமொழியையும் ராஜாவையும் அம்பலப்படுத்திய தேசிய ஊடகங்கள், பாபர் மசூதி இடிப்பு குறித்து கோப்ராபோஸ்டிடம் இந்து மதவெறிக் கும்பல் அளித்த வாக்குமூலங்களை விளக்கமாக வெளியிடாமல் ஒதுங்கிக் கொண்டது தற்செயலானது அல்ல. ஒரு ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களை அம்பலப்படுத்துவதில் இத்துணை ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த ஊடகங்களுக்கு, பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய, அக்கிரிமினல் குற்றத்தில் தொடர்புடையவர்களை அம்பலப்படுத்துவதில் அக்கறை இல்லாமல் போனதன் மர்மம் விளங்கிக் கொள்ள முடியாததும் அல்ல. 2ஜி ஊழலில் தி.மு.க.வை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தேசிய ஊடகங்கள், பாபர் மசூதி இடிப்பு குற்றத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை விடுவித்துவிடும் நோக்கத்தை மறைத்துக்கொண்டு செயல்படுகின்றன. அதனால்தான் கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திய உண்மைகளை ஓரங்கட்டிய ஊடகங்கள், “தேர்தல் சமயத்தில் இந்த வீடியோவை வெளியிட வேண்டிய அவசியமென்ன?” என்ற இரண்டாம்பட்சமான கேள்வியை முன்னுக்குக் கொண்டு வந்து, பிரச்சினையைத் திசைதிருப்பும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டன.

பா.ஜ.க. வெளிப்படையான இந்து மதவெறி பாசிஸ்டுகள் என்றால், காங்கிரசு பசுத்தோல் போர்த்திய புலி. பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் பொம்மையை இந்துக்கள் வழிபடுவதற்குத் திறந்து விட்டது தொடங்கி அம்மசூதியை ஆர்.எஸ்.எஸ். கும்பல் இடித்துத் தள்ளுவதற்குப் பாதுகாப்பு கொடுத்தது வரை இப்பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இளைய பங்காளியாக காங்கிரசு நடந்து கொண்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., கோப்ராபோஸ்ட் காணொளியில் வெளியாகியிருக்கும் ஆதாரங்களைச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியாது எனக் கூறி நிராகரித்திருப்பதிலிருந்தே காங்கிரசின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டுவிடலாம்.

காங்கிரசு உள்ளிட்டுத் தம்மை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொண்டு திரியும் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் முசுலீம் வாக்குகளைப் பொறுக்கித் தின்னும் நோக்கத்தோடு மட்டும்தான் தம்மை மதச்சார்பற்ற கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளுகின்றனவே தவிர, அந்த வரம்பைத் தாண்டி இந்து மதவெறி பாசிசத்தை எதிர்ப்பதில் அவை அக்கறையும் கொண்டதில்லை; நேர்மையாகவும் நடந்து கொண்டதுமில்லை. பாபர் மசூதி இடிப்பு, பாகல்பூர் கலவரம், மும்பய்க் கலவரம், குஜராத் படுகொலை ஆகிய பயங்கரவாத குற்றங்களில் தொடர்புடைய அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி இக்கட்சிகள் ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போட்டது கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா உள்ளிட்ட சில தனிப்பட்ட நபர்கள் விடாப்பிடியாக நடத்திவரும் சட்டரீதியான போராட்டம் காரணமாகத்தான் ஓரிரு குஜராத் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.வின் இந்து மதவெறி பயங்கரவாதக் குற்றங்கள் மட்டுமல்ல, மோடியின் தனிப்பட்ட குற்றங்களைக்கூட – மாதுரி என்ற புனைபெயர் கொண்ட இளம்பெண்ணை போலீசை ஏவிவிட்டுக் கண்காணித்தது, தன்னைக் கல்யாணமாகாத பிரம்மச்சாரி போலக் காட்டிக்கொண்டு ஏய்த்து வந்தது – அம்பலப்படுத்தி இந்து மதவெறி பாசிச கும்பலைத் தனிமைப்படுத்துவதற்கு இம்‘மதச்சார்பற்ற’ கட்சிகள் எவ்வித முனைப்பையும் காட்டவில்லை. குஜராத் போலீசு துறையின் தீவிரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த போலீசார் மாதுரி என்ற இளம்பெண்ணை அவரது படுக்கையறை வரை கண்காணித்த, அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அதுவொரு மர்மப்படம் போலத் திகிலூட்டக்கூடியதாக, பல கிளைக் கதைகளைக் கொண்டதாக விரிவடைவதோடு, மோடி என்ற தனிப்பட்ட மனிதனின் தீக்குணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தபோதும், அவ்விவகாரம் ஆங்கிலப் பத்திரிகைகளில் சில நாள் விவாதிக்கப்பட்டதைத் தாண்டி வேறெந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

தான் திருமணமானவன் என்பதை ஒருபுறம் மறைத்துக்கொண்டு, மற்றொருபுறம் மாதுரி என்ற இளம் பெண்ணோடு சந்தேகத்திற்குரிய உறவைப் பேணி வந்திருக்கிறார், மோடி. சொந்த மனைவியை யாரும் தொடர்பு கொண்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் (யசோதா பென்) கட்டுக்காவலையொத்த நிலையில் வைக்கப்படுகிறார். மாதுரி விவகாரம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தீவிரவாத எதிர்ப்பு போலீசைக் கொண்டு அவர் கண்காணிக்கப்பட்டார். இந்த வேவு விவகாரத்தை அமுக்கிப் போட்டு, மோடியைப் பரிசுத்தமானவராகக் காட்ட கீழ்த்தரமான கட்டுக் கதையும் அவதூறும் அவிழ்த்து விடப்பட்டது.

நேர்மையானவராக, அப்பழுக்கற்றவராக காட்டப்படும் மோடியின் அந்தரங்க வாழ்வு, மன்னர்களின் அந்தப்புர வாழ்க்கையைப் போல மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது. அவரது பொதுவாழ்வோ படுகொலைகளால் நிரம்பி வழிகிறது. குஜராத் படுகொலையில் மோடிக்கும் அவரது அரசிற்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி போலீசு அதிகாரிகள் சஞ்சீவ் பட், ராகுல் சர்மா, சிறீகுமார் மற்றும் ஜாகியா ஜாஃப்ரி ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். முசுலீம் தீவிரவாதிகளை எதிர்த்து நிற்கும் வலிமையான தலைவர் என மோடிக்கு பில்ட்-அப் கொடுப்பதற்காகவே சோராபுதீன், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டு பல போலிமோதல் படுகொலைகள் குஜராத்தில் நடத்தப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்ற, குஜராத் உயர் நீதிமன்ற விசாரணைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

பாபர் மசூதி இடிப்புச் சதியில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு உள்ள தொடர்பை லிபரான் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மும்ப கலவரத்தை பா.ஜ.க. – சிவசேனா இந்து மதவெறிக் கும்பல்தான் தூண்டிவிட்டு நடத்தியது என்பதை சிறீகிருஷ்ணா கமிசன் நிறுவியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் வடஇந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தியிருப்பதை ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த அசீமானந்தாவின் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்துணை சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசியல் அரங்கிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் இவை பயன்படுத்தப்படாமல் கரையான் அரிக்க விடப்பட்டிருப்பதுதான் நமது காலத்தின் கொடுந்துயராகும்.

– திப்பு
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு

77

யங்கரவாதிகள் வைக்கும் குண்டுகளை விட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்தான், அதிகம் குண்டுகளை வைப்பது மட்டுமல்ல அழிவுகளையும் செய்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசு பயங்கரவாதம் இப்படித்தான் அங்கீகாரமற்ற பயங்கரவாதத்தை வைத்து உயிர் வாழ்கிறது.

செப்டம்பர் 11, 2001-ல் நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து “நீங்கள் எங்கள் பக்கம் இல்லை என்றால் பயங்கரவாதிகள் பக்கம்தான்” என்று அறிவித்து விட்டு உலக அளவில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா உள்ளிட்டு பல நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வரும் சீனியர் புஷ், ஜூனியர் புஷ், கிளிண்டன், ஒபாமா குழுவினரின் அமெரிக்க அரசுதான் இந்த உலகின் ஆகப்பெரிய பயங்கரவாதி.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில்

இந்த பயங்கரவாதிகள் தமது மேலாதிக்க நோக்கிற்காக உருவாக்கிய அல்கைதா, பின்லேடன் போன்ற குட்டி பயங்கரவாதத்தை வைத்து மக்களிடையே அச்சத்தை ஊட்டி முதலாளிகளின் வயிறு வளர்க்கிறார்கள். அமெரிக்க பயங்கரவாதம் உலகளாவியது என்றால் அந்தந்த நாடுகளில் இத்தகைய ஆளும் வர்க்க பயங்கரவாதங்கள் அளவிலும், வீச்சிலும் குறைவென்றாலும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழகத்தின் ஜூனியர் புஷ்-ஆக விரும்பும் இப்போதைய முதல்வர் லேடி அல்லது எதிர்காலத்தில் பிரதமராக விரும்பும் கேடி மோடியை கொம்பு சீவி விடுவதற்கென்றே, கார்ப்பரேட் ஊடகங்களும் அவற்றின் தொழில்முறை பத்திரிகையாளர்களும், சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் என ஒரு பெரும் படையே வேலை செய்து வருகின்றது.

பெங்களூரிலிருந்து கவுகாத்தி செல்லும் காசிரங்கா விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் மே 1-ம் தேதி காலை 7.15-க்கு நுழைந்தது . சில நிமிடங்களுக்குள் S-4, மற்றும் S-5 பெட்டிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் சுவாதி என்ற 24 வயது கணிணி பொறியாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 14 பேர் காயமடைந்தனர். ஒரு குண்டு வெடிப்பில் ஒரு அப்பாவி இளம்பெண் இறந்ததற்கு வருந்துவதும், அந்த வருத்தத்தையே இசுலாமியர்களை கொல்ல வேண்டும் என்று வெறியாக திருப்புவதும் ஒன்றல்ல.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்பிற்கு நிகரான பயங்கரவாதச் செயலை குண்டு இல்லாமலே இணையத்தில் நடத்தினார் ஒரு ஆசாமி. யார் அவர்? கிழக்கு பதிப்பகத்தில் குப்பை கொட்டிக் கொண்டும், தனது உடலில் டன் கணக்கில் பார்ப்பனக் கொழுப்பையும் ஏற்றிக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னாதான் அந்த நபர். சரியாக 8.24 மணிக்கு இது குறித்த அவரது பேஸ்புக் நிலைத்தகவல் வெளியாகிறது. அதற்குள் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து, தகவல்களை திரட்டி, தீர்ப்பு எழுதியிருந்தார் அந்த இந்துமதவெறியர். ஆறு பேர் மரணம் என்று கேள்விக் குறியுடன் வாந்தி எடுத்திருந்தார் இவர்.

ஹரன் பிரசன்னா ஃபேஸ்புக்அவரது நோக்கம் குண்டு வைத்தவர்களின் நோக்கத்துக்கு இணையானதுதான், அப்பாவி மக்களை அச்சுறுத்துவதும், முடிந்த மட்டும் உயிர்ப்பலி நடத்துவதும்தான்.

சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு. ஆறு பேர் மரணம்? (மரணம் உறுதி செய்யப்படவில்லை.). :(( பதட்டமாக உள்ளது. ஜெயலலிதாவின் கையாலாகத்தனம் இது. பயங்கரவாதிகள் எந்த வகையில் வந்தாலும் அதை வேரறுக்கவேண்டிய அரசு, அவர்களின் வால் பிடித்தால் இப்படித்தான் நடக்கும். Innocence of Muslims, விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினையின்போதே அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை. தனது அரசியலுக்காக அதை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் ஒரே பிளஸ் பாயிண்ட்டும் இந்த ஆட்சியில் கோவிந்தா. இனியாவது அவர் விழித்துக்கொள்ளவில்லை என்றால், ஒட்டுமொத்த டாட்டா பைபைதான்.

–    முகநூலில் ஹரன் பிரசன்னா.

அதாவது தன் சார்பாகவும் தனது பாசிச பார்ப்பனிய இயக்கத்தின் சார்பாகவும் செயல்படும் அரசாங்கம், சிறுபான்மை முசுலீம் மக்கள் மீது, அரச பயங்கரவாத செயல்களை நிகழ்த்த கருத்து உருவாக்கம் செய்கிறார் ஹரன் பிரசன்னா. மேற்கண்ட இரண்டு திரைப்படங்கள் தொடர்பாக இசுலாமிய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை அனுமதிக்காமல், தடியடி, துப்பாக்கிச் சூடு, கைது, தூக்கு, போலி என்கவுண்டர், நாடுகடத்தல் என்று ஒடுக்கியிருந்தால் இப்போது குண்டு வெடித்திருக்காதாம். ஒரு குண்டு வெடித்து அழுகுரல் ஓய்வதற்குள் ஒரு ஆர்.எஸ்.எஸ் ‘குண்டு’ வெறியன் எப்படி ஆடுகிறார் பாருங்கள்!

ஹரன் பிரசன்னா
ஹரன் பிரசன்னா

இந்த நிலைத்தகவலின் பின்னூட்டங்களில் ஹரன் பிரசன்னாவை கண்டித்து வாதாடியவர் தமிழகத்தின் ‘மூத்த பத்திரிகையாளர்’ மாலன். அப்படி என்ன கண்டித்தார்? அதாவது குண்டு வெடித்து இரண்டு மணிநேரத்திற்குள் இதற்கு முதலமைச்சர்தான் பொறுப்பு என்று பேசுவது சரியா என்பதே மாலனது கேள்வி. இதே கேள்வியைத்தான் துக்ளக்கிலும் சோ கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதே சோ மற்றும் மாலனது ஆதங்கம். ஒரு நூல் இன்னொரு நூலை விட்டுக் கொடுக்காது என்ற நூல் விதிப்படி இது இயல்பான ஒரு நூல்தான். இவ்வளவிற்கும் ஹரன் பிரசன்னா ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கவில்லை. முசுலீம்களை ஒடுக்குவதில் மட்டும் அவர் அசால்ட்டாக இருக்கிறார் என்பதே இந்த இந்துமதவெறிக் குண்டனது ஆதங்கம்.

ஹரன் பிரசன்னா பதிவில் ஒட்டுமொத்த இசுலாமிய மக்கள் இழிவு படுத்தப்படுவதை விட ஜெயலலிதாவுக்கு கெட்டபெயர் வருவதை மாலனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆனால் இதே குண்டு வெடிப்பு கருணாநிதி ஆட்சியில் நடந்திருந்தால் இந்த நூல்கள் நாவலே எழுதி கண்டித்து கிழித்திருக்கும்.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்

அந்த பயத்தில்தான் கருணா நிதி இப்போது ஆட்சியில் இல்லை என்றாலும் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இலங்கை ஜாஹீர் ஹூசைனை கைது செய்து சரியாக விசாரிக்காததே என்று ஒரு அறிக்கையே விட்டு விட்டார். ஆட்சியில் இல்லை என்றாலும் அக்ரஹாரத்தின் ஆசிர்வாதம் இல்லை என்றால் தொழில் நடத்த முடியாது எனும் கருணாநிதியின் பயமே இந்த அறிக்கையின் பின்னணி. இதை ஃபேஸ்புக்கில் கொஞ்சம் தைரியமாக கண்டித்த விடுதலை சிறுத்தைகளின் ஆளூர் ஷாநவாசை உடன்பிறப்புகள் உண்டு இல்லை என்று பிய்த்து உதறி விட்டனர். அதிலும் அபி அப்பா போன்ற உ.பிறப்புகள், “இனி எந்தக்காலத்திலும் ஷாநாவாசிற்கு திமுக கூட்டணியில் தொகுதி கிடைக்கவே கிடைக்காது” என்று மிரட்டுமளவு சென்றுவிட்டனர். திமுகவில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்பது இந்த தேர்தலில் விருதுநகர், திருநெல்வேலி போன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கேட்டால் சொல்வார்கள் – கோடிஸ்வரர்களுக்கு மட்டும்தான் என்று.

இனி ஆளுர் ஷாநவாஸ் இந்த உடன்பிறப்புகளின் மனம் கோணாமலும், மார்க்க சகோதரர்களின் அவலங்களை பேச முடியாமலும் போகலாம். மீறி உண்மைகளை பேச வேண்டுமென்றால், அதற்கு ஓட்டுக் கட்சி அரசியல் பொருத்தமா, புரட்சிகர அரசியல் பொருத்தமா என்று அவர் பரிசீலிப்பாரா, தெரியவில்லை. போகட்டும், நாம் இப்போது மாலனுக்கு திரும்புவோம்.

1980-களில் திசைகள் இதழ் நடத்தியது முதல் இன்று புதிய தலைமுறை நடத்துவது வரை இடையில் குமுதம், குங்குமம், தமிழ் இந்தியா டுடே என்று பல இதழ்களில், இளைஞர்களுக்காக அரசவைக் கோமாளி அப்துல் கலாம் டைப்பில் மொக்கை உபதேசங்கள் போட்டு ‘சமூக சேவை’ செய்தவர் இந்த மாலன். சன் நியூஸ் தொலைக்காட்சி சேனலிலும் பரபரப்பாக பணியாற்றியவர். மாலனின் பார்ப்பனிய இந்துத்துவ கண்ணோட்டம் என்பது அருண் ஜெட்லி, காலம் சென்ற பிரமோத் மகாஜன் போன்ற லிபரல் வலதுசாரிகளின் மாடர்ன் காவி கலர் குழுவில் பொருந்தக் கூடியது. சில நேரம் சேது சமுத்திர திட்டத்தை, இந்து மத நம்பிக்கை அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று அம்மணமாகவும் வாதாடக் கூடியது. அப்போது லிபரல் போய், முழுக்காவி ஜட்டியில் இந்த மாலன் ஒரு சூப்பர் மேனாக தோன்றுவார்.

இப்பேற்பட்ட மாலன், மே 15, 2014 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் தனது ‘குண்டு வெடிப்பை’ நிகழ்த்தியிருக்கிறார். ஒரு வாரம் முன்பு ஹரன் பிரசன்னாவிடம் வாதிட்ட மாலனது புரட்சித் தலைவி போற்றி அறம் இப்போதும் அதையே வேறு முறையில் செய்கிறது. அதாவது முசுலீம் பயங்கரவாதத்துக்கு எதிராக எழுதி உம்மாவை பலி கொடுத்தால் அம்மாவை காப்பாற்றலாமாம். அதே பணியை காக்கி சட்டை போட்டு செய்யும் காவல் துறை கிளப்பிவிடும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் கட்டுரை எழுதுகிறார் மாலன்.

மேலும் இப்படி அம்மாவை காப்பாற்றுவதோடு மாலனுக்கு இப்போது படியளக்கும் பகவான் பச்சமுத்து பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பதால் அந்த வகையிலும் இந்த குண்டு பயங்கரவாத அரசியல் தேவைப்படுகிறது.

‘உழைப்பாளர் தின விடுமுறையை சோம்பலுடன் தொலைக்காட்சி பார்த்துக் கழிக்கலாம் என்ற டிவிப் பெட்டியை திறந்தவர்களுக்கு அதிகாலையிலேயே’ அதிர்ச்சி காத்திருந்ததாம். கட்டுரையை ஆரம்பிக்கும் போதே மாலன், நாராயணா, நாராயணா என்று உழைப்பாளர் தினத்தை போராட்டமாக எதிர் கொள்ளக் கூடாது என மக்கள் கருத்தாக உவமை போடுகிறார்.

அன்றைக்கு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது. இல்லாவிடில் குண்டு ஆந்திரத்தில் வெடித்திருக்கும். அதாவது திட்டமிட்ட கூடுர் ரயில் நிலையம் திருப்பதிக்கு அருகில் இருக்கிறதாம். அங்கு மோடி வருவதால் அவரை பார்க்க வருபவர்களை பீதியூட்டவே குண்டு வைத்திருப்பதாக பீதி கிளப்புகிறார். மேலும், கூடூர் அருகில் ரயில் ஓடிக் கொண்டிருந்த போது குண்டு வெடித்திருந்தால் அப்பாவி மக்களின் உயிர்ச்சேதம் அதிகமாகியிருக்குமாம். அப்படி நடக்கவில்லை என்று கடவுளுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறார். சரி, இப்படி புலனாய்வு புலி போல எழுதுவதற்கு என்ன ஆதாரம்? ஆதாரங்களை விட மோடிக்கு கொடி பிடித்தால் பச்ச முத்துவுக்கு மனது குளிரும் என்ற ஆதாயமே மாலனுக்கு முக்கியம்.

மாலன்
மர்ம திரைக்கதை எழுதும் மாலன்

கிழக்கு பதிப்பகத்தில் டவுன்லோடு பல்ப் பிக்ஷன்களையே இசுலாமிய பயங்கரவாதமாக கதை சொன்ன பா.ராகவன் போல கதை சொல்கிறார் மாலன். சென்னை ரயில்குண்டு வெடிப்பின் பின் இருக்கும் மர்மங்களையெல்லாம் ஒரு திரைப்படம் போல விளக்குகிறார். மும்பை தாக்குதலுக்கு பிறகு மேற்கு கடற்கரைகளில் இந்தியா தனது பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தி விடவே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தற்போது தமிழகத்தின் கிழக்கு கடற்கரையை குறி வைத்திருப்பதாகவும், வட மாநிலத்து இளைஞர்களை மூளை சலவை செய்து அனுப்பினாலும் உச்சரிப்பு காட்டிக் கொடுத்து விடுவதாலும், இலங்கை தமிழ் முசுலீம்களை மூளைச்சலவை செய்து தமிழகத்திற்குள் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

சரி இப்படி ஒரு உலக அரசியலை கற்றுத் தேர்ந்த மேதை தான் எழுதுவதற்கு ஒரு தர்க்கமோ இல்லை தரமோ இருக்க வேண்டும் என்று நினைக்க வில்லை போலும். தற்போது இலங்கையில் ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி அங்குள்ள இசுலாமிய மக்களை குறிவைத்து தாக்கி வருகிறது. அங்கேயே பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் இசுலாமிய மக்களிடமிருந்து பக்கத்து தமிழ்நாட்டில் பயங்கரவாதம் செய்ய ஏதோ டூர் போவது போல வருகிறார்கள் என்றால் இது என்ன விசுவரூபம் திரைக்கதையா?

மேலும் இவர்கள் சொல்வது போல ‘இசுலாமிய’ பயங்கரவாதம் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக பின்னணியிலிருந்து மட்டுமே வருகிறது. அதை மதத்துடன் மட்டும் இணைத்து பார்ப்பது அறிவீனம். காஷ்மீரில் தனது குடும்பத்தினரை இந்திய ராணுவத்திற்கு பலி கொடுக்கும் ஒரு இளைஞன், பழி வாங்க தனது உயிரை கொடுப்பது போல, மற்ற மாநிலங்களில் உள்ள முசுலீம்கள் மதமென்ற முறையில் வருந்தினாலும் உயிரைக் கொடுப்பது சாத்தியமற்றது. இது எல்லா போராட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. இந்தியாவில் இந்துமதவெறியர்களை ஜனநாயக முறையில் தண்டிக்க முடியாது என்பதை அவர்களது கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் மட்டுமே குண்டு வைப்பதற்கான மன எழுச்சியை பெற முடியும். ஆகவே இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்து குண்டு வைப்பது என்ற கருத்தே எந்த அடிப்படையிலும் சாத்தியமற்றதே.

ஆனால் இலங்கையை பௌத்த நாடு என்ற முறையில் அகண்ட பாரதத்தில் முடிந்து வைத்திருக்கும் இந்துமதவெறியர்கள் ராஜபக்சேவுடன் இயல்பான நட்பில்தான் இருக்கிறார்கள். எனவே இத்தகைய பூச்சாண்டியை கிளப்பி விட்டால் அதை நிரூபிப்பதற்கு ராஜபக்சேவும் உதவி செய்யலாம். கூடுதலாக இலங்கை தமிழ் முசுலீம்கள் மத்தியில் ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான நியாயத்தை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றுவதற்குமான ஆதரவையும் விதைப்பதில் மாலன் முன்னோடியாக நிற்கிறார்.

புலனாய்வு
புலனாய்வு செய்யும் படையினர்

பீகார் குண்டுவெடிப்பின் போது சிக்கிய இமிதாஸ் அன்சாரி என்ற தீவிரவாதி இதனை ஒப்புக் கொண்டாராம். அப்புறம் ஒரே மாதிரியான குண்டு என்ற கணக்கீட்டுடன், இந்தியன் முகாஜிதீன் கதைகளையும் கனகச்சிதமாக எழுதி உள்ளனர். அடுத்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் கைதான ஜாகிர் உசேன் திருச்சி சிறையில் முன்னர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகி இருந்த போது அங்கிருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பிருந்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறதாம். இப்படி மாலன் பயங்கரமாக ஆய்வு செய்து எழுதுகிறார்.

இந்த ஆய்வின் இலட்சணம் என்ன?

2012 செப்டம்பரில் தமீம் அன்சாரி என்ற வெங்காய வியாபாரியை தீவிரவாதி எனக் கைது செய்தது போலீசு.

தமீம் அன்சாரி மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை.

அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. (அ மார்க்சின் பேஸ்புக் நிலைத்தகவல்)

இப்படி பல கட்டுக்கதைகளும் சோடிக்கப்பட்ட அம்மா போலீசின் வழக்கை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து தமீம் அன்சாரியை விடுதலை செய்தது. ஆனால் அன்சாரி விடுதலை ஆவதற்கு முன்னாடியே இந்த வழக்கு போலியானது என்று வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம்.

இப்போது கட்டுரை எழுதும் மாலனோ “ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை, ஊகத்தின் பேரில் காவல்துறை செயல்பட்டுள்ளது என மதுரை உயர்நீதி மன்றக் கிளை அவரை விடுதலை செய்தது” என்று கூறி விட்டு தொடர்ந்து, “தமீம் அன்சாரி மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் ஆறு மாதங்களில் ஐந்து முறை இலங்கை சென்றதாகவும், இலங்கையிலுள்ள பாக். தூதரகத்திலுள்ள சில அதிகாரிகளின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட போலீஸ் கூறும் கதையை தனது பயங்கரவாத பிரச்சாரத்துக்காக அவிழ்த்து விடுகிறார்.

ஜாகிர் உசேன்
கைது செய்து அழைத்து செல்லப்படும் ஜாகிர் உசைன்.

முடிவாக இரண்டு எச்சரிக்கைகளை விடுக்கிறார் மாலன். ஒன்று இலங்கையை பாகிஸ்தான் உளவு அமைப்பு தனது துணைக் கேந்திர மையமாக பயன்படுத்துகிறது. இரண்டு, மதம் என்ற பெயரால் தமிழர்களை மூளைச்சலவை செய்து தனது பயங்கரவாத திட்டங்களில் ஈடுபடுத்துகிறது. இங்கே மாலன் முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு குறிப்பிட்டாலும் அந்த தமிழர்கள் முசுலீம்கள் மட்டும்தான். ஏன் அவர்களை இந்தியர்கள் என்று குறிப்பிடவில்லை? இந்து இந்தியாவுக்கு முசுலீம்கள் மட்டுமல்ல, தமிழர்களும் பிடிக்காது என்பது இங்கே மதச்சார்பற்ற பத்தியம் இருக்கும் மாலனிடமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இப்படி மதச்சார்பின்மை வேடத்தை போடத்தெரியாமல் மாலன் போட்டாலும் அவரது வார்த்தைகளில் அப்பட்டமாக இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது.

மூளைச் சலவை செய்யப்பட்டு ஒருவர் தனது உயிரை கொடுக்க முடியும் என்று மாலன் முதல் அமெரிக்க காலன்கள் வரை திரும்ப திரும்ப ஓதுவதில் ஒடுக்கப்படும் மக்கள் மீதான ஒரு மேட்டிமைத்தனமும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. ஏற்கனவே கூறியது போல பாலஸ்தீனத்தில் ஒரு இசுலாமிய பெண் தனது உயிரை பணயம் வைத்து இசுரேல் மீது தாக்குதல் நடத்துகிறாள் என்றால் அதற்கு பாரிய சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. அந்த நியாயங்களுக்கு பதில் சொல்லாதவரை, இந்த குண்டுகளை யாரும் தடுக்க முடியாது. அதை ஏதோ படிப்பறிவு அற்ற ஏழை முசுலீம் மரணத்திற்கு பிந்தைய மதத்தின் சொர்க்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்கிறான் என்பது வன்மமும் முட்டாள்தனமும் நிறைந்த கருத்து. இதையே திருப்பிக் கேட்டால் மேற்கண்ட பார்ப்பனக் கொழுப்பு ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஹரன் பிரசன்னா தனது உயிரை பணயம் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தின் மேல் குண்டுடன் பாய்வாரா? இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பாரதமாதாவை கடாசி விட்டு பதறி ஓடிவிடுவார்.

மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.

குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்பட்டவரின் புகைப்படம்
குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்பட்டவர் என்று போலீசும் ஊடகங்களும் பரப்பிய புகைப்படம்

குண்டு வெடித்த நாளில் ரயில் நின்றவுடன் இறங்கி அவசர அவசரமாக ஓடிய ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு “இதோ பிடித்து விட்டோம் தீவிரவாதியை” என்று தலைப்புச் செய்திகள் தீட்டினார்கள். மதுரையில் அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பெங்களூரு பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பாட்னாவில் மோடியை குறிவைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், சென்னையில் இப்போது வெடித்துள்ள குண்டிலும் கன் பவுடருடன் அம்மோனியம் நைட்ரேட் கலந்து தான் தயாரித்துள்ளனர் என்றும், எனவே ஒரே டீம்தான் செய்திருக்கும் என்றனர்; தற்போது இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரில் செயல்படும் அமைப்பினர்தான் இதனை நடத்தியிருப்பதாக செய்தி பரப்பினர்; அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களான யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் கைதான பிறகு தற்போது இந்த அமைப்பை வழி நடத்துபவன் அபுபக்கர் சித்திக் என்றும், அவன்தான் சென்னை குண்டு வெடிப்பதற்கு முன் 9 வது பிளாட்ஃபார்மில் ஓடுபவன் என்றும் கதை கட்டியது நக்கீரன் புலனாய்வு பத்திரிகை.

இதில் அல் உம்மா எனும் அக்மார்க் தமிழ் முசுலீம் குழுவை நாடு கடத்தி ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் இந்திய முஜாகிதீன் அமைப்பாக மாறியதாக கூசாமல் பொய் பேசுகிறது நக்கீரன்.

போலீஸ் பக்ரூதின் குழுவிடம் விசாரித்த போது அபுபக்கர் சித்திக்தான் அடுத்த தலைவன், என்றும், தற்போது கடத்தி வரப்பட்ட 100 கிலோ வெடிமருந்தில் 50 கிலோ மீதியிருப்பதாகவும், இது ஒரு ஒத்திகைதான் என்றும், மோடி ஆட்சிக்கு வந்து இசுலாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் பதிலடி கொடுக்க தயராக இருப்பதாகவும் கதை கட்டினார்கள். ஏற்கெனவே பிடிபட்டவர்கள் மூலமாக மீதியுள்ள வெடிமருந்துகளை கைப்பற்றியிருக்கலாமே என நக்கீரன் தரப்பில் கேட்டதற்கு அதிகாரிகள் ” அது ஒரு பெரிய டீம், அந்த டீமிற்குள் சின்ன சின்ன டீம்கள் நிறைந்திருக்கும். ஒரு டீமில் இருப்பவர்களும் இன்னொரு டீமில் இருப்பவர்களும் எந்தவித தொடர்பிலும் இருக்க மாட்டார்கள். எல்லா டீம்களையும் இணைத்திருக்கும் அபுபக்கர் சித்திக் பிடிபட்டால் மட்டுமே எங்கெங்கே எவ்வளவு வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருக்கிறது? எங்கெங்கே யார் யார் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள முடியும்” என்றார்களாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் அபுபக்கர் சித்திக் பற்றி அந்த அதிகாரி ”அபுபக்கர் சித்திக் தனது ஆட்கள் மூலம் நடத்தும் டேஞ்சரஸ் ஆபரேஷ்ன்களின்போது அருகே ஸ்பாட்டில் இருந்து அதை கண்காணிக்க கூடியவன். ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி மர்டரின்போது அபுபக்கர் சித்திக் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். அதே போல பெங்களூரு, பாட்னா போன்ற குண்டுவெடிப்புகளின் போதும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். எனவே கௌகாத்தி ரயில் குண்டுவெடிப்பிலும் அவன் ஸ்பாட்டில் இருந்திருக்கலாம். அவனது தற்போதைய புகைப்படம் எங்களிடம் இல்லாத்தால் அவன் அலட்சியமாக தப்பிச் செல்கிறான். போலீஸ் பக்ரூதின் டீமிடம் விசாரித்த வகையில் அபுபக்கர் சித்திக் 6 அடி உயரம் கொண்டவன். வழுக்கை தலையுடன் இருப்பவன். பளீரென்று ஹெடெக் ஆசாமியாக உலவுகிறவன். ரயிலில் இருந்து அவசரமாக ஓடுபவன் சித்திக்காகத்தான் இருக்க வேண்டும். விரைவில் அவனை மடக்கி விடுவோம்” என்றாராம்.

கடைசியில் பார்த்தால் அன்று ஓடியவர் கேரளாவை சேர்ந்த ஐடி பொறியாளர் என்றும், அன்று விடுமுறைக்காக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த அவர் ரயில் தாமதமானதால் விமானத்தை பிடிக்க ஓடியிருப்பதும் தற்போது வெளியாகவே இப்போது அவரை அப்பாவி என்கிறது சிபிசிஐடி. கதை எழுதிய போது அபுபக்கர் எப்போதும் அசைன்மெண்ட் நடக்கும்போது ஸ்பாட்டில் இருப்பார் என்று நக்கீரன் கூறிய கதை எல்லாம் புஸ்வாணமானதுதான் மிச்சம். ஆனால் இந்த புஸ்வாணம் இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பிலிருந்தும், பொது வாசகரிடம் இருக்கும் இந்துத்துவ உளவியலை திருப்தி செய்யும் மோசடியான ஊடக தர்மத்திலிருந்தும் வெளிப்படுகிறது.

குண்டுவெடிப்புக்கு முந்தைய தினம்தான் இலங்கை கண்டியை சேர்ந்த வியாபாரி ஜாகிர் உசேன் என்பவரை தீவிரவாதி என்று சொல்லி க்யூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். இந்தியாவினுள் ஊடுருவதற்கு இலங்கையை பயன்படுத்த முடிவு செய்த பாகிஸ்தான் உளவுத் துறை அங்குள்ள முஸ்லீம்களுக்கு பயிற்சி கொடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்புவதாக கிளப்பி விட்டன பத்திரிகைகள்.

ஜாகிர் உசேன் குறித்து தற்போதும் ஊடகங்களில் புதிது புதிதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில் தனிப்பட்ட கிரிமனல் குற்றங்களை தவிர்த்து அவர் பாக் உளவாளி என்று இவர்கள் கூறும் காரணங்கள் எந்த வித அடிப்படையற்றும் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே மேலே எழுதியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இவரைப் போலவே இன்னும் 25 பேரை ட்ரெயின் பண்ணி தமிழகத்தில் ஐஎஸ்ஐ இறக்கி விட்டிருப்பதாக உசேன் விசாரணையில் கூறியதாக கிளப்பி விட்டிருக்கிறது ஜூவி. மோடியின் குட்புக்கில் ஏற்கனவே இடம்பிடித்து விட்டாலும் இனி சூப்பர் குட் புக்கை நோக்கி போக வேண்டும் என்பதால் ஜுவியின் இந்த வேகம் புரிந்து கொள்ளக் கூடியதே.

போலீசால் சோடிக்கப்பட்ட பொய் வழக்கில் சிறையில் இருந்த தமீம் அன்சாரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஜாகிர் உசைன் தீவிரவாதி என்று போலீசும் ஊடகப் புலிகளும் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் தமீம் அன்சாரியை குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஜாகிர் உசைனும் அப்படி விடுதலை ஆகிவிட்டால், பெயர் கெட்டுப் போகும் என்பதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லலாமா என்று இப்போது அம்மா போலிசு ஆலோசித்து வந்தாலும் வரலாம். அப்படி வரவில்லை என்றாலும் மாலன், ஜூவி போன்ற அக்மார்க் பார்ப்பன ஊடகங்கள் அதை இலக்கிய நயத்துடன் எடுத்துக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் முதலில், கவுகாத்தி போகும் ரயிலில் ஜோலார்பேட்டை, காட்பாடியில் ஏறியவர்களை சந்தேகப்பட்டார்கள். முன்பதிவு செய்யாத பயணசீட்டு எடுத்து விட்டு முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்தவர்கள்தான் காரணம் என்றார்கள். அப்போது பேசப்பட்ட செல்பேசி அழைப்புகளை ஆராய்ந்தார்கள். பெங்களூருவில் தட்கலில் பதிவு செய்தவர்கள் கொடுத்த ஆதாரங்கள் போலியானவை என்ற ரீதியில் விசாரணையை நீட்டித்தார்கள். குற்றவாளியை நெருங்கி விட்டதாக அடுத்து தகவல்களை காவல்துறையினர் கசிய விட்டனர்.

இப்போது குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்து துப்பு எதுவும் துலங்கவில்லை என்றும் தகவல் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு எனவும் கூறியிருக்கின்றனர். கடைசியில் எல்லா திரைக்கதைகளும் முதல் காட்சி முடிவதற்குள்ளேயே டப்பாவிற்குள் போய்விட்டன.

குண்டு என்றால் அது முசுலீம்தான் வைக்க வேண்டுமென்று நம்பாதீர்கள் என அசீமனாந்தாவே இப்படி ஆதார பூர்வமாக கூறிவிட்ட பின்னரும் ஊடகங்கள் இப்படித்தான் இந்துமதவெறியுடன் எழுதுகின்றன. இதே வேகமும் கற்பனையும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய குண்டு வெடிப்புகளில் இவர்கள் காட்டுவதில்லை. ஒரு சமூக குற்றத்தை உள்ளது உள்ளபடியும் அதே நேரம் சமூக நல்லிணக்கத்தை நோக்கியும் இருக்க வேண்டும் என்பது இவர்களது நோக்கமல்ல.

இதனால் இந்த குண்டுவெடிப்பு யாரால் நடத்தப்பட்டிருக்கும், அல்லது படவில்லை என்ற கேள்விக்கு வினவு பதிலளிக்கவில்லை. ஏனெனில் அது குறித்து இன்னும் நமக்கு போதிய தகவல்கள் ஆதாரங்களுடன் தெரியவரவில்லை. இது இந்துமதவெறியர்கள் மோடியின் இமேஜைக் கூட்டுவதற்காக வைத்திருக்கலாம் என்று சிலர் கருதினாலும் அப்படி குண்டு வைத்து வெற்றி பெற வேண்டிய பலவீனமான நிலையில் பாஜக இல்லை. அல்லது எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதோ சில திறை மறைவு இந்துமதவெறிய இயக்கங்கள் இதை பாஜகவின் நலனுக்காகவும் செய்திருக்கலாம். அல்லது, இந்துமதவெறியர்களின் கலவரங்களால் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பறிகொடுத்த சில இசுலாமிய இளைஞர்கள் கூட வைத்திருக்கலாம். ஆனால் அது தற்கொலைப் பாதை என்பதையும் அதன் மூலம் இந்துமதவெறியை வீழ்த்த முடியாது, முசுலீம் மக்களுக்கு மேலும் துன்பத்தையே இத்தகைய குண்டு வெடிப்புகள் கொண்டு வரும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. எப்படியிருப்பினும் இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டிக்கிறோம்.

இந்துக்களோ இல்லை முசுலீம்களோ உழைக்கும் மக்கள் என்ற வகையில் அணிதிரண்டு போராடுவதன் மூலமும், அந்த போராட்டத்தின் மூலம் இந்துமதவெறியை வீழ்த்துவதே இத்தகைய குண்டுவெடிப்புகளிலிருந்து மக்களை காக்கும்.

இந்த முயற்சி நடக்க கூடாது என்பதற்கே தமிழ் ஊடகங்களும், மாலன் போன்ற அறிஞர்களும்தான் இசுலாமிய பயங்கரவாதம் குறித்து தமிழ் மக்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். விதிகளையும், நீதிகளையும் வகுக்கிறார்கள். பார்ப்பன இந்துமதவெறி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பதற்கு மோடி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. புதிய தலைமுறை, நக்கீரன், ஜூவி போன்ற பத்திரிகைகளின் கருத்துக்களை கவனித்தாலே போதும்.

தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவதற்கு நாம் இன்னும் அதிகம் போராட வேண்டும். போராடுவோம்.

உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

15

ந்திய வங்கிகள் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்த 406 வாராக் கடன் கணக்குகளின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

24 வங்கிகளில் உள்ள இந்த 406 வாராக் கடன் கணக்குகளின் மதிப்பு ரூ 70,300 கோடி. இந்த கணக்குகளோடு வெளியிடப்படாத பிற வாராக்கடன் கணக்குகளையும் சேர்த்தால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு செப்டம்பர் 2013-ல் ரூ 2.36 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மார்ச் 2008-ல் ரூ 39,030 கோடியாக இருந்தது.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 4.95 லட்சம் கோடி. 5 ஆண்டுகளில் வாராக் கடன்களின் மதிப்பு 1.97 லட்சம் கோடி மட்டுமே அதிகரித்தது என்றால் மீதி என்ன ஆனது? ஒன்று, வசூலிக்க முடியவில்லை என்று வங்கிகள் கை விட்டு விடுகின்றன அல்லது கடனாளிகளுக்கு புதிய கடன்களை கொடுத்து பழைய கடனை சரி செய்து கொள்கின்றன, வாராக் கடனாக இருந்தது இப்போது புது கடனாக மாறி விடுகிறது.

இவ்வாறு 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் வசூலிக்க முடியாததாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ 2.04 லட்சம் கோடி. புதுக் கடன் கொடுத்து திருப்பி வரக் கூடிய கடன்களாக மாற்றப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 3.25 லட்சம் கோடி.

முதலாளி
ஓவியம் – முகிலன்

தொழில் முனைவு, வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் கார்ப்பரேட்டுகள், தமது முந்தைய திட்டங்களில் குவித்த லாபத்தில் ஒரு பகுதியை (ரூ 1,000 கோடி என்று வைத்துக் கொள்வோம்) மூலதனமாக போடுகின்றன. எஞ்சிய பகுதிக்கு வங்கியில் கடன் (ரூ 9,000 கோடி என்று வைத்துக் கொள்வோம்) வாங்கிக் கொள்கின்றன. இதற்கு மேல் குஜராத் போன்ற இடங்களில் மோடி பாணியில் குறைந்த விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என்று வளைத்துப் பொடுகின்றன. அதாவது, இவர்கள் கொடுக்கும் ‘வேலை வாய்ப்பு’, ‘வளர்ச்சி’ அனைத்துமே யாரிடமிருந்தோ எடுத்த பணத்தில் நடைபெறுகின்றன. உண்மையில் தொழிலாளர்களின் உபரி உழைப்பை சுரண்டி லாபத்தை குவித்து தம்மை வளர்த்துக் கொள்வதுதான் அவர்களது நோக்கம்.

சந்தை சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தமது திட்டத்தில் வெற்றியடைந்தால் லாபத்தை எடுத்துக் கொண்டு, வளர்ச்சிப் பணி என்ற பெயரில் மக்களை ஏமாளியாக்கி, தமது கொள்ளைக்கு வசதி செய்து தரும் நாட்டை விற்கும் மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும் அடுத்த மாநிலத்துக்கு அல்லது இன்னொரு நாட்டிற்கு தமது அடுத்த சுற்று சுரண்டலை நடத்த போய் விடுவார்கள்.

தோல்வியடைந்தால் புதுப்பிக்கப்பட்ட கடன்கள், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், வாராக் கடன்கள் என்று வங்கிகளை மொட்டையடித்து நாமம் போட்டு விடுவார்கள். என்ன நடந்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கை ஆடம்பரத்துக்கோ, ஏற்கனவே குவித்து வைத்த மூலதனத்துக்கோ எந்தக் கேடும் வருவதில்லை.

வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள சில நிறுவனங்களை பார்த்தால் அந்த உண்மை தெரியவரும். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷரில் ஆரம்பித்து, வகை வகையான பெயர்களில் கடன் கொடுக்காமல் மோசடி செய்திருக்கும் முதலாளிகள் சொந்த வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

  • கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
  • வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
  • எலக்ட்ரோதெர்ம் இந்தியா –  ரூ 2,211 கோடி
  • ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
  • ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
  • எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
  • சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
  • இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
  • ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
  • ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
  • வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி

ஏப்ரல் 18, 2014 நிலவரப்படி இந்திய வங்கித் துறையில் மொத்த வைப்புத் தொகை அளவு ரூ 78.69 லட்சம் கோடி, கொடுக்கப்பட்டிருக்கும் கடன்களின் மதிப்பு ரூ 60.36 லட்சம் கோடி. இவற்றில் சுமார் 10% வாராக் கடன்கள் என்று பாரிசைச் சேர்ந்த சிந்தனை குழாம் மதிப்பிட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 2015 வாக்கில் 14% ஆக உயரும் என்று ஃபிட்ச் என்ற தர நிர்ணய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலில் 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று வானத்தையும் பூமியையும் புரட்டிப் போட்ட பத்திரிகைகள் இந்த பகற்கொள்ளையை பற்றி இரண்டு பத்தி செய்தி மட்டும் வெளியிட்டு விட்டு மோடியின் ‘வளர்ச்சி’ புராணம் பாடஆரம்பித்து விட்டன.

கார்ப்பரேட் சூதாட்டத்துக்கு கடன்
கார்ப்பரேட் சூதாட்டத்துக்கு கடன்

இந்த கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தி, ஸ்பான்சர் வாங்கி, ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜியுடன் கூட்டணி ஒத்து வராமல் ஒதுங்கியிருக்கிறார்; அவரது அரசியல் சீடர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதில் மும்முரமாக இருக்கிறார்; அண்ணா ஹசாரேவின் இலக்கிய மற்றும் காந்திய சீடர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும். ஆனால் இந்த உத்தமர்கள் யாரும் கார்ப்பரேட் முதலாளிகள் அடித்திருக்கும் இந்த பகல் கொள்ளை குறித்து வாயை திறப்பதில்லை. காரணம் இவர்களது வாழ்வே அந்த வராக் கடன் முதலாளிகளின் தயவில்தான் நடக்கிறது.

கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் ஃபிளெக்ஸ் பேனரில் கட்டி அவமானப்படுத்துவதன் மூலம் வங்கித் துறையை பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும், வேண்டுமென்றே கடனை கட்டாமல், அவற்றை வாராக் கடனாக ஆக்கியிருக்கும் முதலாளிகளின் பெயரைக் கூட வெளியில் விடாமல் அவர்களது கௌரவத்தை காத்து வருகின்றன.

வங்கி ஊழியர்கள் சங்கம்தான் இந்த ரகசிய பட்டியலை கைப்பற்றி வெளியிட்டிருக்கிறது. “ரூ 1 கோடிக்கு அதிகமாக கடன் கட்டாமல் வைத்திருப்பவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்” என்றும், “வேண்டுமென்றே கடன் கட்டாமல் வைத்திருப்பதை குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும்” என்று வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. கருப்பு பணம் இருப்பதாகவும் அதை அடுத்த ஃபிளைட்டில் கொண்டு வரப்போவதாகவும் வீரம் காட்டும் புலிகள் எவையும் இந்த வராக் கடன் கொள்ளை முதலாளிகள் குறித்து மௌனவிரதம் இருக்கின்றன. சட்டபூர்வ கடனையே வாங்க முடியாதவர்கள், சட்ட விரோத கருப்பு பணத்தை கொண்டு வருவார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம்.

கந்து வட்டி போட்டு மக்களை சுரண்டும் தனியார் வங்கிகளைப் பொறுத்த வரை கடந்த 4 ஆண்டுகளில் (2009 முதல் 2013 வரை) வாராக் கடன்களின் மதிப்பு ரூ 46,231 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆனால், “பொருளாதார வளர்ச்சி 9%-லிருந்து 5% ஆக குறையும் போது கடன்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்படுவது இயல்பானதுதான்” என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கொச்சார். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனிநபர் கடன்களில் பிரச்சனைகளை சந்திக்கவில்லை, கார்ப்பரேட் கடன்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது,  தனிநபர்கள் கடன் கொடுக்க வேண்டியிருக்கும் போது குண்டர்களை அனுப்பி, சொத்தை பறிமுதல் செய்து வசூலித்து விடும் வங்கி, கார்ப்பரேட்டுகளின் கடன்களை வாராக்கடனாக காட்டி மழுப்புகின்றது. மேலும் தனியார் வங்கிகளின் வராக்கடன்கள் என்பது அவைகளின் பினாமி தொழில்கள் மற்றும் முதலாளிகள் நலனுக்காகவும் திசை திருப்பப்படலாம். இல்லையென்றால் தமது பணம் வரவில்லை என்று இவர்கள் ஓய்ந்து போக மாட்டார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தின் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் மந்திரவாதியாக அமெரிக்க நிதி நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனோ, “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்திருப்பது கவலை தரக்கூடியதுதான். ஆனால் அது சரியாகி விடும் என்று நம்புகிறேன்” என, ‘நம்பிக்கைதானே எல்லாம்’ என்று சீரியசாகவே அசடு வழிந்து தனது எஜமானர்களுக்கு தொண்டு செய்கிறார்.

‘பொருளாதார சுணக்கமும், உயர் வட்டி வீதங்களும் சேர்ந்து நிறுவனங்கள் கடன்களை திரும்பி செலுத்துவதை கடினமாக்கியிருப்பதால் வாராக் கடன்கள் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றன’ என்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். அதாவது பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்து, வட்டி வீதம் குறைவாக இருந்தால் இவர்கள் தொழில் முனைவு செய்து கடன் கட்டி பொறுப்பாக நடந்து கொள்வார்களாம். இல்லை என்றால், கடன் வாங்கி நாமம் போடுவார்களாம்.

இதுதான் முதலாளிகள் நாட்டை வளர்க்கும் லட்சணம். இந்த முதலாளிகளுக்காகத்தான் மோடியும், காங்கிரசும், ஜெயாவும், திமுகவும் கட்சி நடத்துகின்றன. இத்தகைய கட்சிகள்தான் தேர்தலை தீர்மானிக்கின்றன. அந்த தேர்தலில் நீங்கள் ஓட்டு போடுவதைத்தான் ஜனநாயக கடமை என்று ஊடகங்கள் சாமியாடுகின்றன.

ஆக சுற்றி வளைத்து ஏன் பேச வேண்டும்? மல்லையா போன்ற மங்காத்தா முதலாளிகள், மக்கள் சேமித்த அரசு வங்கிப் பணத்தை, கடனாக பெற்று நாமம் போடுவதற்குத்தான் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள், சரிதானே?

மேலும் படிக்க

தேர்தல் குறித்து நாட்டுப்புற மக்கள் கருத்து

4

ந்த தேர்தல் பத்தி விவசாயம் செய்யற சாதாரண கிராமத்து மக்கள் என்ன சொல்கிறாங்க, தெரிஞ்சுக்குவோன்னு பல பேர்ட்ட பேசினேன். அதுல ஒரு சிலர் பேசியத இங்கே சொல்றேன்.

மதியானம் ஒரு மணி மண்டைய பொளக்குற வெயிலில, மாங்கு மாங்குன்னு காயவச்ச உளுந்துச் செடிய தடிக்காம்பால அடிச்சிட்டு இருந்த சின்னப்புள்ள சித்தப்பா, எளப்பாற நெழலுக்கு வர்ர வரைக்கும் காத்துருந்து, மெதுவா பேச்சுக் கொடுத்தேன்.

“என்னா சித்தப்பா நீங்க மட்டும் ஒத்தையில நின்னு உளுந்தடிக்றீங்க, சித்தி இல்லையா?

“டவுணுக்கு ஜெயலலிதா வந்ததுக்கு குழுவு (மகளிர் குழு) பொம்பளையெல்லாம் வரணுமுன்னு நம்மூரு பெரசிடண்டு ட்ராக்டருல கூப்புட்டு போனாருல்ல, இவளும் போயிருந்தா. நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, பிரியாணிய தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வயித்தால போயி வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக்கெடக்கா. வேல கெடக்கு போகவேணான்னு சொன்னேன். எதுக்கு வரலேன்னு பெரசிடண்டு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு பயந்துகிட்டு போனா, இப்ப கவுந்தடிச்சு படுத்துருக்கா. சண்டி மாட்ட வச்சுகிட்டு வண்டி ஓட்றது போலதான் அவளோட நான் பொழப்பு நடத்துறது”

“கட்சி கூட்டத்துக்கு போகவும், ஓட்டு போடவும் காசு வாங்கறது தப்புன்னு தோணலையா?”

“தப்புதான் என்ன செய்றது. இந்த உளுந்து பயிரு வெதச்சு புடுங்க ஆன செலவு ஏருவோட்ட, வெதவாங்க, தண்ணி பாச்ச, பயிரெடுக்க ஆளு கூலின்னு 2000 ஆச்சு. இது விளைஞ்சா 1000 ரூவாக்கி கூட விக்காது, பாடுபட்டதுக்கு கூட வெலையில்ல, நம்ம நெலம இப்புடி இருக்க காசு குடுத்தா வேணான்னா சொல்ல முடியும். கோயில்ல திருடிட்டு மன்னிச்சுருன்னு உண்டியல்ல காசு போட்றது போலதான் அவனுவொ நமக்கு காசு குடுக்குறது. எல்லாமே நம்ப காசுதான்”

“ஜெயலலிதாவ பாக்க நீங்க போவலையா?”

“உச்சி வெய்யில்ல நின்னா எனக்கு மண்டகுத்த வந்துரும், நாளு நாளைக்கி மண்டைய கட்டிகிட்டு குப்புறப் படுத்துக்கனும். இந்த வேலையெல்லாம் யாரு செய்வா அதான் நான் போகல.”

“நீங்க எந்த கட்சிக்கு ஓட்டு போடப் போறீங்க?

உரிமைகளற்ற மக்கள்

“எந்த கட்சிக்கி ஓட்டு போட்றோம்ன்னு யார்டையும் சொல்ல கூடாதுன்னு சொல்றாங்க. சொன்னா ஏன் எனக்கு போடலைன்னு வேற கட்சிக்காரங்க சண்டைக்கு வருவானுவ. பெறவு லோனு கீனு ஏதும் இவுனுவள கேட்டு வாங்க முடியாது.  நம்ம பிள்ள நீ கேக்குற யார்டையும் சொல்லாத, நான் ரெட்டலைக்கிதான் போடப் போறேன். எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து நான் ரெட்டலைக்கிதான் போடுவேன், மாத்தி போட்டது இல்ல.”

“ரெட்டலைகிதான் போட்றேன்னு சலிப்பா சொல்றீங்க. புடிக்கலன்னா மாத்தி போட வேண்டியதுதான?

“இருந்த ஒரே கட்சில இருக்கனும், மாறுனா துரோகம் செய்றது மாறிதான் அதுக்குதான் நான் மாறல”

“கட்சுக் காரங்களே மாத்தி மாத்தி கூட்டணி சேத்துக்குறாங்க நீங்க என்ன சித்தப்பா இப்புடி சொல்றீங்க?

“அவைங்க பணக்காரங்க, எதுவேனா செய்வாங்க, நாம நேர்மையா இருக்கனும்ல தாயி”

“நேர்மை எல்லாம் பேசிகிட்டு தி.மு.க. கரை போட்ட வேட்டி கட்டிருக்கீங்க, இது என்னா கணக்கு?”

சிரித்தார். “இது எங்கக்கா மொவனோட வேட்டி. ஓரமா கொஞ்சோண்டு கிழிஞ்சு போச்சு, கட்ட மாட்டேங்குறான்னு எங்கக்கா குடுத்துச்சு. பத்து தையலு போட்டு நஞ்சுப் போன  என்வேட்டிக்கி இது தேவலான்னு கட்டிகிட்டேன். கறையா முக்கியம், வேட்டிதான் முக்கியம்.”

“அப்ப செயலலிதா ஆட்சி நல்லாச்சின்னு சொல்றீங்களா?

“ம்…… அப்புடி சொல்லல. முன்னடிதான் தப்பு பன்னுச்சு இப்ப பரவால்ல நெறையா நல்லது செய்து”

“அப்புடி என்ன நல்லது செஞ்சுருக்கு?

“என்னா அப்புடி சொல்லிபுட்ட மிக்சி, கிரைண்டர், காத்தாடி குடுக்குது. இலவசமா அரிசி குடுக்குது. எம்மகளோட கல்யாணத்துக்கு 50,000 ஆயிரம் பணம் குடுத்துருக்கு. இது பத்தாதா. என்னா ஒன்னு, கொஞ்சம் கரண்ட மட்டும் ஒழுங்கு பன்னி விட்டுச்சுன்னா தேவலாம்”

“உங்க பொண்ணுக்கு படிச்சதுக்கு பணம் கொடுத்துச்சு சரி! வேல கொடுத்துச்சா? வேல கெடச்சுருந்தா அந்த புள்ள, நூறு, பத்தாயிரம்னு சம்பாரிச்சுருக்குமே, அத யோசிக்கலையே நீங்க?

“ஊருகாட்டுல எம்மகளாட்டம் ஆயிரம் பேரு படிச்சுட்டு இருக்குதுவொ எல்லாருக்கும் கெவுருமெண்டு எங்கேருந்து வேல குடுக்கும்.”

“சரி! குடுத்தத வச்சுகிட்டு குடும்பத்த நடத்தாம இந்த வயசுலயும் வயல் வேலையும் பாத்துக்கிட்டு கேரளா, திருப்பூருன்னு கல்லு ஒடைக்கவும், சாயப் பட்டறைக்கும் எதுக்கு சம்பாரிக்க போறீங்க”

“முன்ன மாரியா நெலம இருக்கு, வெல வாசி கூடிப் போயி கெடக்குது. ஆத்துல தண்ணி வந்தாத்தான் வயல்ல வேல அதுவும் நாலு, அஞ்சு மாசம் தான் இருக்கும். பொட்டப் புள்ளைய வச்சுருக்கமே அதுக்கு செய்றத செஞ்சு கட்டிகுடுக்கனுமே! பொறவு என்னத்த செய்யறது”

“வேலை இல்ல, வெலவாசி ஏறிப்போச்சு அப்ப இதுக்கெல்லாம் வழி பண்ணாத அரசு, அரிசியும் பருப்பும் குடுத்துட்டா சரியாப் போச்சான்னு யோசிக்கிறது சரியா சித்தப்பா?

“நீ என்னா சொல்ல வர்ர. அப்பன்னா சூரியனுக்கு போடலான்னு சொல்றீயா?

” இல்லப்பா, அரசியல்ல யாருமே உதமங்க கெடையாது. மாத்தி மாத்தி ஓட்டு போட்டு மட்டும் என்னத்த கண்டோம்?

“யாருக்குமே போடலன்னா ஓட்டு வீணாப் போயிருமுல்ல”

“உங்களுக்கு நெனவு தெரிஞ்ச நாள் முதலா ஓட்டு வீணா போகாம போட்றீங்களே, அதுனால உங்க வாழ்க்க நெலம ஏதும் மாறிருச்சா?”

“பத்து வெரலால பாடுபட்டாதான் அஞ்சு வெரலால அள்ளி திங்க முடியுன்னு எங்கப்பா சொல்லுவாரு. அதுதான் நம்ம பொழப்பு. ஓட்டு போடலன்னா மட்டும் நாம என்ன குபேரனா ஆவப் போறோம், அப்பையும் இது போலதான் மண்ண கிளறிக்கிட்டு கெடக்கனும். ஓட்டு போடாம வீணா போறத விட, ஓட்ட போட்டா எவனோ ஒருத்தெ நல்லாருந்துட்டு போறான் போ” என்று தன் இயலாமையின் ஆதங்கத்தோடும், ‘தான் கெட்டாலும் அடுத்தவன் நல்லாருக்கட்டும்’ என்ற சாதாரண உழைக்கும் மக்களுக்கு உள்ள யதார்த்தமான மனநிலையோடும் பேசினார்.

இதுதான் பொதுவாக கிராமத்து ஜனங்களோட நிலமை. நாம நல்லா இல்லேங்கிறதுக்கு காரணமே இப்படி நல்லா இல்லாத அரசியல் கட்சிங்களும், கவருமெண்டும்தாங்கிறது, அவங்களுக்கு கொஞ்சமா புரிஞ்சாலும், அதுக்கு என்ன செய்ய முடியும்னு விதி மேல பழிய போட்டு பொழப்பை ஓட்டுறாங்க.

அடுத்து புளி கொட்ட எடுத்துட்டு இருந்த அத்தாச்சியிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“தேர்தல் வருதே அதப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?”

புளி சுவை நாக்குல பட்ட சுளிச்ச முகத்தோட “அதப் பத்தியெல்லாம் என்னாடி தெரியும் நான் சொல்றதுக்கு” என்றார்.

“நீங்க எதுக்காக ஓட்டு போட்றீங்க? அத சொல்லுங்க!”

“கட்டாயம் ஓட்டு போடனுமாம். போடலன்னா நாம செத்ததுக்கு சமன்னு சொல்றாங்க”

“நீங்க ஓட்டு போட்டது, போடாதது எல்லாம் யாருக்கு தெரியப் போவுது?

“ஓட்டு போட்ற எடத்துலதான் பேரு எழுதி சீட்டல்லாம் குடுக்குறாங்கல்ல, போடலன்னா அப்ப தெரிஞ்சு போயிரும்ல?”

“சரி தெரிஞ்சு போகுதுன்னே வச்சுக்குவோம் என்ன செஞ்சுருவாங்க?”

“என்ன…. தலையா எடுத்துப் புடுவாங்கெ. பயிர் லோனு வந்தா தரமாட்டாங்கெ, பயிரு வெள்ளத்துல போனா இழப்பீடு தரமாட்டாங்கெ, எதுக்காச்சும் ஒரு கையழுத்து வேணுன்னு வி.ஓ, பெரசிடண்டுன்னு போனோன்னா இழுத்தடிப்பாங்கெ. என்னோமோ ஊரு நெலவரமெ தெரியாத மாரி பேசுற.”

“நீங்கதான் ஓட்டு போட்றது கடமை. போடலன்னா செத்ததுக்கு சமமுன்னு சொன்னீங்க. இப்ப பயந்துகிட்டு ஓட்டு போட்றாப்போல பேசுறீங்க எதுதான் உண்மை?”

“எம்மவளும், மருமவனும் படிச்சவங்க. அவங்கதான் சொன்னாங்க ஓட்டு போடாம இருக்க கூடாது அது நம்மளோட உரிமைன்னு. மெட்ராசுல இருந்து ஓட்டு போட்றதுக்குன்னே ஊருக்கு வர்ராங்க. ரெண்டு மாசத்துக்கு முந்தியே ரயிலுக்கெல்லாம் டிக்கெட்டு எடுத்துட்டாங்க. எவ்வளொ முக்கியமான வேலை இருந்தாலும் அத விட்டுட்டு, செலவு பன்னிக்கிட்டு வருவாங்க அவங்களுக்கு தெரியாததா நமக்கு தெரியப் போவுது. என்ன நான் சொல்றது”

“அததான் நான் கேக்கறேன். வெளியூர்ல இருந்தெல்லாம் வேலையெல்லாம் உட்டுட்டு வந்து ஓட்டு போட வேண்டிய அவசியம் என்னா?

“வெளியூர்ல இருந்தாலும் கோயில் திருவுழாவுக்கு வந்து தாம் பங்கு வரிய குடுத்துட்டு போகனுங்கற கடம இருக்குல்ல, இல்லன்னா உரிம போயிரும், அதுபோலதான் ஓட்டு போட்றதும். திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்க இப்ப புரியுதா!”

அத்தாச்சி சொன்னது மாதிரி பல மக்கள் இப்பவும் ஓட்டு போடறது ஒரு சடங்கு, சம்பரதாயம், அத வுட்டுக் கொடுக்க முடியாதுன்னு உடும்பு பிடியா பேசுறாங்க.

நாங்க பேசும்போது பக்கத்துலேயே இருந்தும், காதுல வாங்காதது போல தன் வேலையில் கவனமாக இருந்த செல்வி, சென்னையில் ஒரு பெரிய மொதலாளிகிட்ட வீட்டோட தங்கி கணவன் மனைவி இருவருமா வேல செய்றாங்க. செல்வியிடம் பேசினேன்.

“என்ன செல்வி வாயே தொறக்க மாட்டேங்குற. நீ சொல்லு ஓட்டு எதுக்க போட்றோம்?

“என்ன பொருந்த வரைக்கும் ஓட்டு போட்றது நம்மோட உரிமை, கடமை. நம்ம உரிமைய என்னைக்கும் உட்டுத் தரப்புடாது”

“நீ கடமையா நெனைக்கிற இந்த ஓட்டு உரிமை ஒனக்கு என்ன செஞ்சுருக்கு?

“எனக்குன்னு தனியா எதுவும் செய்ய வேண்டாம். பொதுவா எல்லா மக்களுக்கும் நல்லது செஞ்சா போதும்.”

“பொதுவான்னா எத சொல்ற?”

உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள்“நமக்கு கை கால் நல்லாருக்கு, எங்கேயோ ஓடியாடி பொழச்சுக்கலாம். ஆனா இல்லாதப்பட்ட பிள்ளைங்க, அனாதப் பிள்ளைங்க, கை, காலு, கண்ணுன்னு ஊனமான பிள்ளைங்க எவ்வளோ பேரு இருக்காங்க. அவங்களுக்கு நல்ல படிப்பு, இருக்க எடம் இப்புடி எதாச்சும் செய்யலாம். ஆனா பதவிய புடிச்சு ஆட்சிக்கி வந்த உடனே சொத்து சேக்குறதுலேயே அவைங்களுக்கு பொழப்பு சரியாப் போவுது, நம்மள மறந்தர்ரானுவொ”

“இல்லாதப் பட்டவங்களா இருக்குறதுக்கும், பிள்ளைங்க அனாதையா போறதுக்கும் காரணம் என்ன?

“வேல இல்லாததும் வறுமையும் தான் காரணம்.”

“அப்ப இத சரி செஞ்சா, நீ சொல்ற பிள்ளைங்க பிரச்சன தீந்துரும்ல?

“சரிதான், ஆனா எவெஞ் செய்றான். மக்களுக்கு நல்லது செய்யனுன்னா நெறையா கம்பனிங்க தொறக்கலாம். எல்லாருக்கும் வேல கொடுக்கலாம். இப்ப பாரு பிள்ளைய புடுச்சு வச்சுகிட்டு, ஒரு நாள் லீவு குடுக்குறான் மொதலாளி. அப்புடியெல்லாம் இல்லாமெ நம்ம தேவைக்கி வேலைக்கி போகலாம், பிள்ளைய, பாத்துக்கலாம் சந்தோசமா இருக்கலாம், உயிர பணயம் வச்சு வேல செய்ய வேண்டியதில்ல. தேர்தல் வரும்போது மட்டும் மக்கள் நலம் மயிரு நலம்னு பேசுவானுவொ, அப்பறோம் மறந்துருவானுவொ”

“அப்ப ஓட்டு போடறதுக்காக நீ ஊருக்கு வரலையா?

“இல்ல இல்ல. ஒரு நாளுதான் லீவு தந்தாரு எங்க மொதலாளி. எங்க போனா தங்கிருவேன்னு  எவ்வீட்டுக்கார்ட்ட பிள்ளைய விட்டுட்டு நீ மட்டும் போய்ட்டு வான்னு சொல்லிட்டான் அந்தாளு. எங்க அம்மா செத்தப்பவே மூணு நாளுதான் லீவு குடுத்தான். இன்னும் ரெண்டு நாள் தங்கி ஓட்டு போட்டுட்டு போனா சம்பளம் தரமாட்டான். வாங்குன கடனுக்கு வட்டி கட்ட முடியாமெ கைய பெசஞ்சுகிட்டு நிக்கனும். வட்டிப் பணம் குடுக்கத்தான் வந்தேன், இன்னைக்கி ராத்திரி பேயிருவேன்” என்று தன் குடும்ப கடமையில் தேர்தல் கடமையை மறந்தாள் செல்வி.

டிவி புண்ணியத்துல நம்ம நாட்டுப்புறத்து ஜனங்க இப்படித்தான் தேர்தலை புரிஞ்சு வச்சுருக்காங்க. ஓட்டுப் போடறது நம்மளோட யோக்கியதைன்னு சித்தப்பா சொன்னா, லோனு கிடைக்காதுன்னு பயந்துகிட்டு, கூடவே சடங்கு சம்பரதாயமுன்னு அத்தாட்சி சொல்லுது. செல்வியோ சென்னையில வாழுறதால கொஞ்சம் விவரமா பேசுனாலும் என்னத்த செய்யன்னு சலிச்சிக்கிது.

வீணாப் போன தேர்தல் அரசியல இவங்க ஏதோ ஒரு விதத்துல புரிஞ்சிருக்காங்க. அதை தெளிவுபடுத்தி மாத்து அரசியல, போராட்டத்தோட கொண்டு போன இதே ஜனங்க முன்னாடி நின்னு போராடுவாங்க. நீங்க என்ன சொல்றீங்க?

–    சரசம்மா

தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!

3

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, தமிழக மக்கள் மீது வேறொரு முடிவு இடியாய் இறங்கியுள்ளது. மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ 12 வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்கியிருப்பதுதான் நட்டத்துக்கு காரணம். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்குவதற்குப் பதிலாகத் தனியார் முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கியிருப்பதில் கோடிக்கணக்கில் இலஞ்சம் கைமாறியிருக்கும் என்ற போதிலும், இந்த முடிவே இல்லாத கட்டண உயர்வுக்குக் காரணம் மின்சாரம் தனியார்மயம்தான்.

உரிமைகள் அற்ற ஜனநாயகம்
படம் : நன்றி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமல்ல, நிலக்கரிச் சுரங்கங்களும் எண்ணெய் எரிவாயு வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் விற்கப்படுவதால், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் விலையும் இனி கார்ப்பரேட் முதலாளிகளால்தான் தீர்மானிக்கப்படும். அடுத்ததாக முகேஷ் அம்பானியின் கொள்ளை இலாபத்துக்காக எரிவாயு விலை பன்மடங்கு உயர்த்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை மட்டுமின்றி, மின் கட்டணமும் பன்மடங்கு உயரும். எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். காப்பீட்டுத் துறை, சுரங்கங்கள், இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியார்மயம், விவசாய மானிய வெட்டு, தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் ரத்து போன்ற அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.

மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன. இப்படித் தனியார்மயக் கொள்ளைக்கு மென்மேலும் வழியமைத்துக் கொடுக்கும் விதத்தில் ஆட்சி நடத்துவதைத்தான் வளர்ச்சி என்றும் சிறந்த அரசாளுமை என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. டில்லியில் ஒரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டு அதன் விளைவாக, மேற்கூறிய தனியார்மய நடவடிக்கைககள் தள்ளிப்போடப்பட்டால், இந்தியாவிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற நேரிடும் என்றும், அதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் திடீரென்று கவிழும் நிலை ஏற்படுமென்றும் “மூடி” என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் சென்ற மாதம் வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதற்கேற்ப காங்கிரசும் பா.ஜ.க.வும் ‘வளர்ச்சி’ என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு தமது தேர்தல் அறிக்கைகளின் வழியாக உத்திரவாதம் அளித்துள்ள நிலையில், யார் தலைமையில் எத்தகைய கூட்டணி ஆட்சி அமைந்தாலும், அது கார்ப்பரேட் கொள்ளையர்களின் நோக்கத்தைச் செயல்படுத்துவதாகவே இருக்கும் என்பது நிச்சயமாகி விட்டது.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய நாள் முதல் நடந்து வருவது இதுதான். நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாக எந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் பெயரளவிலான சுயேச்சைத்தன்மையும் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அதிகாரம் முழுவதும் ஒழுங்குமுறை ஆணையங்கள், நிபுணர் குழுக்கள் என கார்ப்பேரட் விசுவாச அதிகார வர்க்கத்திடமும் உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கும் மாற்றப்பட்டு விட்டன.

இன்னொருபுறம், ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை போன்ற அரசின் உறுப்புகள் அனைத்தும் தாங்களே கூறிக்கொள்ளும் விதிகள், மரபுகள் ஆகியவற்றைத் தூக்கியெறிந்து விட்டு, இலஞ்சம், மோசடி, பித்தலாட்டம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகள்தான் தங்கள் விழுமியங்கள் என்று அம்மணமாக நிற்கின்றன. இந்த அரசுக் கட்டமைப்பு நிமிர்த்தவே முடியாத வண்ணம் உளுத்துச் சரிந்து விட்டது என்று புலம்பும் நிலையை ஆளும் வர்க்க சித்தாந்தவாதிகளே எய்தி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறப்படுவோர் முதல், அதிகாரிகள், நீதித்துறை உள்ளிட்ட அனைவரும் மக்களின் எதிரிகளாக, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் அடியாட்படையாக அணிவகுத்து நிற்கின்றனர்.

தங்களைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் தப்பபிப்பிராயங்களை அவர்களே ஒவ்வொன்றாக நொறுக்கி வருகின்றனர். வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தும் அரசு, தானே கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அணுசக்தித்துறை செய்ய மறுத்த போதிலும், அணு உலைக்கு அனுமதி வழங்கும் உச்ச நீதிமன்றம், அம்பானியின் எரிவாயுக் கொள்ளையை ஆதரித்து நிற்கும் சர்வகட்சிக் கூட்டணி – இந்த அரசமைப்பின் யோக்கியதையைப் பறைசாற்றும் எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. வாக்குரிமை ஒன்றை மட்டும் காட்டி, மக்களுக்கு ஜனநாயகம் இருப்பதாகப் பேசுவது மாய்மாலம் என்று விளங்கவில்லையா? ஓட்டுப் போடுவது ஜனநாயகக் கடமையல்ல, மடமை என்பது இப்போது புரியவில்லையா?

மின்கட்டண உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, தண்ணீர் வணிகம், மீதேன், ஜிண்டால், கூடங்குளம், விசைத்தறிகளின் அழிவு, தாதுமணற்கொள்ளை, ஆற்று மணற்கொள்ளை – எனப் பிரச்சினை எதுவானாலும், இந்த அரசு அதற்கு வைத்திருக்கும் இறுதித் தீர்வு, அடக்குமுறை ஒன்றுதான். இருக்கின்ற வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மக்கள் முன் இருக்கும் ஒரேவழி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதான். போராட்டங்கள் – எழுச்சிகள் மூலம் தமக்கான மாற்று அதிகாரத்தை நிறுவிக் கொள்வதுதான் மக்கள்முன் இருக்கும் ஒரே தீர்வு.
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்

11

புரட்சி என்பது தெருவில் போராட்டம், போர்க்களம் என்பதோடு முடிவதில்லை. அது, சமூக வாழ்க்கை முழுவதும் விரிவாக மாற்றி அமைக்கப்படுவதில் தொடர்கிறது என்பதை புரிய வைப்பதில் உரிய பங்காற்றுகிறது “புரட்சியில் இளைஞர்கள்” எனும் சிறுநூல். உள்ளூர் சீர்குலைவு சக்திகளையும், சுற்றி வளைக்கும் ஹிட்லரின் நாசிசம், உலக முதலாளித்துவ சக்திகளின் சதித்தனங்கள் இவைகளை எதிர்த்து உலகின் முதல் சோசலிச அரசை நிறுவுவதில் ஒரு தலைமுறையின் பொறுப்புணர்வை வருங்காலத்திற்கும் வழங்குகிறது இந்நூல். முக்கியமாக அக்காலகட்டத்தில் புரட்சி என்பதை இளமையின் குறிக்கோளாக வகுத்துக் கொண்ட இளைஞர்களின் நாட்குறிப்பு, கடிதம், உரை ஆகியவைகளின் வழி புரட்சிகர உணர்வின் பன்முகப் பதிவாக விரிகின்றன காட்சிகள்.

புரட்சியில் இளைஞர்கள்சமூகத்துக்கான உணர்ச்சிகளை தன்னுணர்ச்சிகளாகத் கொண்டிருப்பதை இயல்பானதாக வெளிப்படுத்துகிறார்கள் இந்த இளைஞர்கள். ஏதாவதொரு ஒரு சமூக அமைப்பில் ஒட்டிக்கொண்டு பிழைப்பது எனும் மானுட தாழ்நிலையை வெறுத்து, மனிதகுலம் முழுமைக்குமான சமத்துவ சகவாழ்வு என்பதற்கும் குறைவாக எதையும் ஏற்க மறுக்கும் பிடிவாத கருத்தழகாய் மிளிர்கிறார்கள் இந்த உண்மை மனிதர்கள்.

இவான் வசீலியெவிச் பாபுஷ்கின் – இவர் ஒரு பீட்டர்ஸ்பர்க் தொழிலாளி. சிறை, சித்ரவதைகளுக்கு அஞ்சாதது மட்டும் இவர் வீரமல்ல, எந்தச் சூழலிலும் பழைய சமூக அமைப்புக்குள் மனிதகுலம் சிறைப்பட்டிருப்பதை சகித்துக் கொள்ளாத தொழிலாளரின் விடுதலைக்கான சலியாத வாழ்க்கைப் போராட்டம்தான் இவர் நமக்கு கற்றுக் கொள்ளத்தரும் வீரப்பண்பு. ஜாரின் கொலைப்படை உளவுபார்க்கும் தருணத்திலும் சக தொழிலாளிகளை அமைப்பாக்கும் அயராத உழைப்பு, புரட்சிகர இதழான இஸ்க்ராவை தொழிலாளரின் மத்தியில் ரகசியமாக கொண்டு செல்லும் நெளிவு சுளிவான வேலை, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளிகளுக்கான செய்திகளை திரட்டித் தரும் வர்க்க பேரார்வம், இதன் வளர்ச்சிப்போக்கில் அவரே இஸ்க்ரா நிருபராக, உறைபனி சைபீரியாவில் தீப் பிடிக்கும் பேச்சாளராக, கருத்துக்களத்தில் சுரண்டும் வர்க்கத்திடமிருந்து பாட்டாளிகளை வென்றெடுக்கும் அறிவுக் கூர்மையாக, நாட்டின் புரட்சிகர நாடித்துடிப்பாக இயங்கிய பாபுஷ்கினைப் பார்க்கையில், புரட்சி என்பதன் பன்முக ஆளுமையின் தேவையை நாமும் உணர்கிறோம். ஜாரின் சிறையிலிருந்து தப்பித்து லண்டனுக்கு போன பின்பும், தனக்கு தாய்மொழி தவிர வேறு அயல்மொழி தெரியாத சுழலிலும் புரட்சிக்கு பொருத்தமாய் அங்கும் தன்னை ஒரு இலக்கு நோக்கிய வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளும் பாபுஷ்கினின் வாழ்வின் சுறுசுறுப்பு வீணடியும் நமது நாட்களையும், இளமையையும் சுய நினைவு கொள்ளச் செய்கின்றன.

புய்னாக்ஸ்கி எனும் இளைஞன் பதினாராவது வயதில் போல்சவிக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறான். சோசலிச தாய்நாட்டைக் காப்பதற்கான போர்க்களத்தில் முப்பது வயதிலேயே முடிக்கப்படுகிறது அவனது வாழ்க்கை! மரணத்தின் வாசலில் கூட தன்னைப் பற்றியல்ல, தாய்நாட்டின் சோசலிச லட்சியங்களுக்காகவே சிந்திக்கும் அந்த மனிதத் தன்மை கம்யூனிச புரட்சியாளர்களுக்கே உரியது! கம்யூனிஸ்டுகள் என்றால் காதல், மகிழ்ச்சி எதுவுமே இருக்காது என புழுதி கிளப்பும் பேர்வழிகளுக்கும் சேர்த்து புய்னாக்ஸியின் ” காதலிக்கான கடிதம் ” புதிய கண்ணோட்டங்களை திறக்கிறது.

“காதல் எவ்வளவுதான் வலியதாய் இருந்தாலும் என்னுடைய கருத்தோட்டத்துக்கு பொருந்த வேண்டும்” என அவர் முன்மொழியும் உணர்ச்சி துணிச்சல் எத்தனை பேருக்கு உண்டு?  “சொந்த நலத்தை நிறைவேற்றிக் கொள்வதும் பொது நலத்தைப் போராடிப் பெறுவதும் அறிவார்ந்த விதத்தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப்பட வேண்டும்” என்ற புய்னாக்ஸ்கியின் வரிகள், மட்டுப்படாத அவரது மனிதகுலக் காதலையும் வெளிப்படுத்துகிறது. இவ்வளவு தெளிவாக அவர் காதலிக்கு கடிதம் எழுதும் சூழல் என்ன தெரியுமா? எதிரிப் படைகளிடம் பிடிபட்டு மரணக் குழிக்கு சுட்டுத் தள்ளப்பட அவர் அழைத்துச் செல்லப்படும் தருணத்தில்தான் தனது காதலின் சித்தாந்த வலிமையை காதலிக்கு வழங்குகிறார். பெண்களை பிரபல செல்வாக்காலும், மிரட்டலாலும் பிடிக்க ,இலக்கியமும் எழுதிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ கழிசடைகள், எழுத்துக்களில் சுகம் தேடும் வாசகப்பரப்பை தொடர்ந்து தனது சொந்த நலனுக்கான மந்தைகளாக வைத்திருக்கும் பேர்வழிகளுக்கு மத்தியில், புய்னாக்ஸியின் எழுத்தும், கருத்தும், தனது காதலியை தனது சொந்த மகிழ்ச்சியின் உடைமையாக ஆக்காமல், “தாத்தூ” என்ற அந்தப் பெண்ணை இளங் கம்யூனிஸ்ட்டு கழகத்தின் தலைவியாக மனிதகுல காதலுக்கு உயர்த்துகிறது.

“மூன்று சூரியன்களின் கதிர்கள்
என்னை முழுக்காட்டுகின்றன,
எல்லோருக்கும் பொதுவான சூரியன்,
சோவியத் ஆட்சி,
முடிவில் நீ….
நீ எனது கதிரவள்”

என்று தனது காதலின் அன்பை உலகுக்கு அர்த்தப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார் அந்த முப்பது வயது கம்யூனிஸ்ட்.

‘கம்யூனிசம், அமைப்பு என்றாலே கட்டுப்பாடு, மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் வாழ முடியாது, புரட்சி வந்தா ஜாலி போய் விடும்’ என்று மருள்பவர்களுக்கு இன்பத்தின் உதாரணமாக தனது வாழ்வை வழங்குகிறார் செக்மரியோவ் எனும் இளம் கம்யூனிச புரட்சியாளர். விவசாயக் கல்லூரி மாணவரான இவர் சோசலிச அரசின் கூட்டுப்பண்ணை அமைப்பில் தீவிரமாக பங்காற்றியவர். “கட்சி சொல்வதை அப்படியே சாப்பிடுவார்கள், அது தவிர வேறு ஒன்றும் தெரியாது”, என்று ஹார்லிக்ஸ் பேபிகள் கிளப்பும் பீதிக்கு நடைமுறையில் பதில் சொல்கிறார் செர்மரியோவ். இருபத்திரெண்டு வயதிலேயே கல்வியில் மாநிலத்திலேயே முதலிடம், அரசாங்க பண்ணையின் உதவி இயக்குநர், தவிர எழுத்தறிவின்மையை போக்க மக்களிடம் பொறுமையுடன் போராடி வகுப்புகளை நடத்தும் புதிய சூழலில், புதிய வேலைகள், என பல தன்மைகளில் ஒரு கம்யூனிஸ்டு இயங்க வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு புதுப்புது விசயங்களுக்கு தலை கொடுத்து இயங்கிய அனுபவத்தையும் கொண்டதாக விளங்குகிறது இளங் கம்யூனிஸ்ட்டு செக்மரியோவின் வாழ்க்கைக் குறிப்புகள்.

“எதுக்கு இந்த அமைப்பு, சதா சல்லை பிடித்த வேலை, உனக்கு உள்ளது ஒரு வாழ்க்கைதான், ஆகவே, அதில் நீ அதிக இன்பம் பெற வழி தேடு! முடிந்தவரை உனக்கு அதிக வசதியாக இருக்கும்படி எங்கும் முயற்சி செய்!” என்று புத்தி புகட்டும் தனிமனித தத்துவவாதிகளுக்கு பொறுப்பாக பதில் சொல்கிறது செக்மரியோவின் “இன்பம் பற்றி” எனும் நாட்குறிப்பு. “இன்பக் கேளிக்கைகளும் செயலின்மையும் அல்லது வயிராற உண்டு உறங்குபவனின் மட்டித்தனமான திருப்தியும் மனிதனுக்கு ஆழ்ந்த உணர்ச்சிகளை ஏற்படுத்த முடியுமா?” என்று நெருக்கமாக கேட்பதுடன், “இன்பம் என்றால் என்ன?” என்று வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து நாட்குறிப்பு சுட்டிக்காட்டும் பகுதிகளை நீங்களே உங்கள் சொந்த அனுபவத்தோடு பொருத்திப் படித்தால் புது இன்பம் கிடைக்க வழி உண்டு.

“பண்படாத பொருள் என்னுடைய கைகளின் உதவியால் உணர்வுள்ள தொழிலாளியாக உருவாகும் போது, அவனுக்குள் வர்க்க உணர்வை நான் தூண்டி எழுப்பும் போது… எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எனது ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அப்போது நான் உயிருள்ள நபர்! என் மனச்சோர்வு அகன்று விடுகிறது!” சொல்வது யார் தெரியுமா? சோசலிசத்துக்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட பத்தொன்பது வயது மாணவி லிஸீனவா. மாஸ்கோ தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் பணியாற்றும் அந்த தருணத்தைதான் அந்த இளம் பெண் உணர்வுபூர்வமாக நேசித்து “அனயீதாவுக்கு” எழுதும் கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.

“தொழிலாளி வர்க்கம்தான் வளர்ச்சி பெறும் வர்க்கம்” என்று அந்த வயதிலேயே தனது புரட்சியின் லட்சியத்தை உறுதி செய்கிறார். உயர்கல்வி படித்து, பாரின் ரிட்டனாகி எவனோ ஒரு எம்.என்.சி. கம்பெனியில் குப்பை கொட்டும் வாயிலிருந்து இப்படி ஒரு உற்சாகத்தை பணி நிறைவை பார்க்க முடியுமா? சமூகத்துக்கான உழைப்பு சகல இன்பத்தையும் வென்று விடுகிறது என்பதை கவிதையாக வழங்குகிறது லிஸீனாவின் “விரைவில் வெயில் அடிக்கும்” எனும் கடிதம்.

இந்நூலின் முதல் தலைப்பிலும், இரண்டாம் தலைப்பிலும் தோழர் லெனினது உரைகள் புரட்சி, வாழ்க்கை, வர்க்க கண்ணோட்டம் பற்றி பன்முக கருத்துக்களை அறிவுறுத்துகின்றன. “இத்தகைய மனிதர்கள் இல்லா விட்டால் ரசிய மக்கள் என்றென்றைக்கும் அடிமை மக்களாக, அடிவருடி மக்களாக இருந்திருப்பார்கள்” என்று லெனின் கூறுவதைக் கேட்கையில், அது ரசியாவைத் தாண்டி நம் காதுக்கும் உரைக்கிறது.

புரட்சிகர சித்தாந்தமில்லாமல், புரட்சிகர மனிதர்கள் இல்லை, இந்நூலின் தலைசிறந்த தலைமுறையின் இளைஞர்கள், – நாளை நாம் போற்றுவோம் என்பதற்காக வாழ்ந்து காட்டவில்லை. நடைமுறை சாத்தியம்தான் என்று கம்யூனிச சித்தாந்தத்தை வருங்காலம் பின்பற்றவே வழிகாட்டுகிறார்கள் அவர்கள்! அந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்… உங்கள் செயல்பாடுகளின் வழி!

– துரை. சண்முகம்.

நூல்: புரட்சியில் இளைஞர்கள் கடிதம் – உரை – நாட்குறிப்பு
பக்கம்: 48
விலை: 25

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டம், 10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367

பதினெட்டு தலைப்புகளைக் கொண்டதாக மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட இந்நூலின் ஐந்த தலைப்புகளை மட்டும் கொண்டது இச்சிறு நூல். இந்நூலின் முழுத்தொகுப்பையும் விடியல் பதிப்பகம் – கோவை வெளியீட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?

7

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும், இதற்கெதிராக கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள சிறப்புச் சட்டம் செல்லாது; சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு தான் சொந்தம் என்கிற கேரள அரசின் வாதத்தை உச்சநீதி மன்றம் தவறானது என்று நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு நதி கேரளத்தில் தோன்றினாலும் (நீதிபதிகள் கூறியிருப்பது போல கேரளாவில் தோன்றுகிறது என்பது தவறு, பெரியாறு தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள சிவகிரியில் தோன்றுகிறது, முல்லையாறு கேரள பகுதியில் தோன்றுகிறது) அதன் பாதை தமிழகத்தில் சுமார் 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வந்து செல்வதால், அதை மாநிலங்களுக்கிடையே ஓடும் நதி என்று தான் கருத முடியும். எனவே, முல்லைப்பெரியாறு நதியை கேரளா மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழகத்துக்கும் நதியில் சம உரிமை உண்டு என்று கூறி, முல்லைப்பெரியாறு கேரளாவிற்கு தான் சொந்தம் என்பதற்கு கேரள அரசு வைத்த வாதங்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளது.

புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அணையின் உறுதியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அணை வலுவுடனும், பாதுகாப்புடனும் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளதால் புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2006-ல் 152 அடி நீரைத்தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த போது அதை முறியடிப்பதற்காக அப்போது ஆட்சியிலிருந்த சி.பி.எம் போலிக்கம்யூனிஸ்டு அரசு, உடனடியாக சட்டசபையை கூட்டி எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு ‘கேரள நீர்ப்பாசனம், பராமரிப்புச் சட்டம்’ என்கிற சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றி உச்சநீதி மன்றத் தீர்ப்பை முறியடித்தது. தற்போது அந்த சட்டம் சட்டவிரோதமானது என்றும், அந்த சட்டத்தை எந்த வடிவிலும் செயல்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் தலைமையில் மூவர் குழு ஒன்றையும் உச்சநீதி மன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு மத்திய நீர் வள ஆணையப் பிரதிநிதி தலைவராக இருப்பார். குழு பிரதிநிதிகளாக தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்த இருவர் இருப்பர். இக்குழுவிற்கான அலுவலகம் எங்கே அமைய வேண்டும் என்பதை கேரள அரசு தீர்மானிக்கும். குழுவின் முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தான் தீர்ப்பின் முழு விவரம். இந்த தீர்ப்பை கண்டித்து கேரளாவில் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று செல்லவில்லை. தீர்ப்பை எதிர்த்து வரும் 30ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரளாவில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று சி.பி.எம் கட்சி கூறியுள்ளது. ஒருவேளை சகாக்களுக்கு வர்க்கக்கண்ணோட்டம் வந்துவிட்டதோ என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த பிரச்னைக்காக அவர்கள் தனி போராட்டம் நடத்தப்போகிறார்களாம்.

போலிக்கம்யூனிஸ்டு தலைவர் அச்சுதானந்தன் இப்போதே அதற்கான பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். அணை உடைந்தால் 35 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும். இந்த வழக்கில் கேரள அரசு சரியாக வாதிடாததே தோல்விக்குக் காரணம். அணை பலவீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க கேரள அரசு தவறிவிட்டது என்று பயபீதியூட்டி இனவெறியை தூண்டும் வேலையை துவங்கியுள்ளார்.

தீர்ப்பு குறித்து தமிழகத்தில் அனைவரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். தேனி மாவட்டத்தில் மக்கள் இணிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிக் கொண்டிருகின்றனர். தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்கள் அனைவரும் வெற்றி வெற்றி என்று குதிக்கின்றனர். கேரள போலிக்கம்யூனிஸ்டுகள் இனவெறியை தூண்டிவிடுவதற்கு தயாராகி வருகின்றனர். தமிழக போலிகம்யூனிஸ்டு தலைவர் ஜி.ராமகிருஷ்ணனோ நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி என்று அறிக்கை விடுகிறார். என்ன ஒரு பிழைப்பு இது, இதற்கு வைகோவே பரவாயில்லை போலிருக்கிறது.

இப்படி அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ‘புரட்சித் தலைவி’ இந்த தீர்ப்பை தமிழக மக்களுக்கே அர்ப்பனித்துவிட்டார். ஆனால் நாம் தலையில் வைத்து கூத்தாடுமளவிற்கு இது ஒன்றும் புரட்சிகரமான தீர்ப்போ, இதுவரை வழங்கப்படாத தீர்ப்போ அல்ல. 2006 ஆம் ஆண்டிலேயே 142 அடி வரை நீரைத்தேக்கலாம் என்றும், பேபி அணையில் சில மராமத்துகளை செய்த பிறகு 152 அடி வரைக்கும் கூட தேக்கிக்கொள்ளலாம் என்றும் இதே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த தீர்ப்பை கேரள அரசு மயிரளவிற்கு கூட மதிக்கவில்லை. தனிச்சட்டத்தை இயற்றி முறியடித்தது.

கேரள அரசின் தனிச்சட்டம் சட்டவிரோதமானது, இரு மாநில அரசுகளுக்கு சொந்தமான அணைக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தது. 2006 ஆம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசும் ஒரு வழக்கைத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பை கேரள அரசு மலம் துடைக்கும் காகிதமாக பயன்படுத்தியதை மறந்துவிட்ட உச்சநீதி மன்றம் கேரள அரசின் வழக்கை புதிய வழக்கை போல எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியது.

அதன் பிறகு 2006 நவம்பரில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கடற்படை சிப்பாய்களை அனுப்பி அணையின் வலிமையை சோதித்ததுடன், அணை உடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஒத்திகையும் நடத்தினார். பிறகு கேரள அரசு ரூர்கி ஐ.ஐ.டி வல்லுனர்களை வைத்து அணை பலவீனமாக இருக்கிறது உடனடியாக உடைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை பெற்றது. இவ்வளவு பிறகும் கேரளாவுடன் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை கூறியது. எனவே 2006 ஆம் ஆண்டும் உச்சநீதி மன்றம் இதே போன்ற ஒரு தீர்ப்பை தான் வழங்கியது. அதிலிருந்து சில அமசங்களில் மட்டும் தான் இந்த தீர்ப்பு வேறுபட்டுள்ளது. ஆனால் 2006 முடிந்து இப்போது எட்டாண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்திற்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

1979 முதலே இப்படித்தான் அணை உடையப்போகிறது, அணை உடையப்போகிறது என்று பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரத்தை தூண்டி விட்டுக்கொண்டு, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தண்ணீரை விட மறுத்து வருகிறது கேரள அரசு. நீதிமன்றமும் அதை கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு முறையும் புதிய புதிய வழக்குகளை விசாரிப்பதை போல விசாரித்துக்கொண்டிருக்கிறது. எனவே இதற்கு முன்பு நடந்ததை போல இல்லாமல், இந்த தீர்ப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றால் நாம் போராட வேண்டும், நாம் போராடாமல் இது அமலாகாது.

தீர்ப்பில் கூறியுள்ளவற்றை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்கான அம்சங்கள் அந்த தீர்ப்பிலேயே இருக்கின்றன. ஒன்று, முல்லைப்பெரியாறு கேரளாவில் தோன்றுகிறது என்று கூறியிருப்பது. இது தவறு, நீதிமன்றத்தின் இந்த தவறான கருத்து ஆறு நம்முடையது தான் என்கிற கருத்தை கேரள மக்களிடம் மேலும் வலுப்படுத்தும். இரண்டு, மூவர் குழுவை மத்திய அரசின் தலைமையிலும் அதில் கேரள அரசை பிரதிநிதியாகவும் சேர்த்திருப்பது. தீர்ப்பை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்கு இதுவே போதுமானது. இந்த குழு தமிழக பொறியாளர்களையும் பிரதிநிதிகளையும் கொண்டதாக மட்டும் தான் இருக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கோ, கேரள அரசுக்கோ வேலையில்லை.

மூன்றாவது, மூவர் குழுவுக்கான அலுவலகத்தை எங்கே அமைப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமையை கேரளாவிற்கு வழங்கியிருப்பது. இந்த விசயத்தில் கேரள அரசு வேண்டுமென்றே அலைக்கழிக்கும் இழுத்தடிக்கும். அந்த உரிமை தமிழகத்திற்கு வேண்டும். நான்காவது மூவர் குழுவின் முழு செலவினங்களையும் தமிழக மக்கள் தலையிலேயே கட்டியிருப்பது. மூவர் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதி தலைவர், கேரள அரசின் பிரதிநிதியாக ஒருவர், தமிழக அரசின் பிரதிநிதியாக ஒருவர் என்று மூன்று அரசுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால் செலவை மூன்று அரசுகளும் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்த செலவையும் தமிழகத்தின் தலையிலேயே சுமத்துவது எப்படி சரி?

எனவே இது ஒரு முழுமையான தீர்ப்பு அல்ல. தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல, ஆனால் நடக்காத காரியமும் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மூவர் குழு அப்படியே முழுமையாக அமுலாக்கிவிடும் என்று நாம் கனவு கண்டுகொண்டிருந்தால் இன்னும் ஒரு ஐந்தாண்டுகள் கழித்து இதைவிட புரட்சிகரமான ஒரு தீர்ப்பை வழங்க உச்சநீதி மன்றம் தயாராக இருக்கிறது. உச்சநீதி மன்றம் இது போல எத்தனை தீர்ப்புகளை வேண்டுமானாலும் வழங்கும் ஆனால் தண்ணீர் வராது. தண்ணீர் வேண்டுமானால் அது போராட்டத்திலிருந்து தான் கிடைக்கும்.

மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா ?

25

‘மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP-கார்ப்பரேட் கொள்ளையின் சின்னம்’ என்ற பதிவில் ‘சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம்’ பிரச்சனையை தீர்க்கும் வழியல்ல என்றும் முதலாளித்துவ இலாப வெறியை அம்பலப்படுத்தி அரசியல் ரீதியில் எதிர்ப்பதுதான் தீர்வு என்பதோடு, இந்த வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் திளைக்கும் சில இடதுசாரி குழுக்களின் செயல்பாடுகளை பிழைப்புவாதம் என்ற விமர்சனத்தையும் வைத்திருந்தோம். மறுமொழியாக நமது வாசகர்கள் லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்கள், மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடிக்கு தீர்வாக இருக்குமென்றும் சில வாதங்களை வைத்திருக்கின்றனர்.

லினக்ஸ் - சுதந்திர மென்பொருள்இது தொடர்பாக, அதாவது சுதந்திர மென்பொருள்கள், அதைச் சார்ந்த சமூக இயக்கங்களின் கூறுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி அறிவுஜீவித் துறையினர் மற்றும் மாணவர்களின் மீதான பார்வையை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்த பிழைப்புவாத கம்யூனிஸ்டு கட்சிகளில் பல்வேறு பிரிவினர்கள் இருந்தாலும் இரண்டு பிரிவினரை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, பிழைப்புவாத தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போகிற தொழிலாளர்கள். இரண்டு, தனியார்மய தரகு முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கருத்தரங்குகள், விவாதங்கள் என்ற அளவில் மட்டுமே அறிவுவாதத்தை கொண்டு செல்லமுடிகிற அறிவுத்துறையினரும் மாணவர்களும். இந்த இருவகை பிரிவினரை விட அதிகமாக ஜெயலலிதா போன்றவர்களின் காலை நக்கிப் பிழைக்கிற வகையறாக்கள் மக்கள் முன் தானாகவே அம்பலப்பட்டு போனார்கள்.

சுரண்டலை உணர்ந்து கொள்வதிலும் அதற்கெதிராக போராடுவதிலும் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களே முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர நம்பிக்கையூட்டும் ஜனநாயக சக்திகளில் இந்த அறிவுஜீவித்துறையினரும் மாணவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வகையில் மென்பொருள் பிரச்சனையில் இவர்கள் வைக்கிற கோரிக்கைகளின் தன்மைகளை கறாராக நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் அறிவுத்துறையினராலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சமூக இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிண்டி அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், சென்னை ஐஐடி மற்றும் எம் ஐ டி மாணவர்களும் பேராசிரியர்களும் இதில் அடக்கம்.

சென்னை ஐஐடி, ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு ஒரு கேந்திரமான கண்ணி என்ற நிலையிலும் விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள் என்ற பெயரில் மூலை முடுக்கெங்கும் இந்துத்துவவெறியை கிளப்புவதே பிரதானமாக இருக்கிற நிலையிலும் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் போன்ற சமூக ஜனநாயக கோரிக்கைகள் முன்னெடுத்து செல்லப்படுவதை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. ஏனெனில் இன்றைய சூழலில் இந்திய சமூகம் பாசிசத்தை நோக்கி தள்ளப்படும் முன்முயற்சிகள் தடையின்றி அரங்கேற்றம் செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் பொழுது அறிவுத்துறையினரின் இது போன்ற செயல்பாடுகள் பாசிஸ்டுகளுக்கு மத்தியில் அவசியமே.

லினக்ஸ் எதிர் விண்டோஸ்
லினக்ஸ் எதிர் விண்டோஸ்

அதே சமயம், மிகவும் கேடான அழுகிநாறும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை வெறும் அறிவுஜீவித்தனமான கருத்தரங்குகளினாலோ அல்லது மயிர்பிளக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவாதங்களினாலோ மட்டும் முறியடித்துவிட முடியாது. இந்த வகையில் தங்களை இடதுசாரிகள் என்று அறிவித்துக் கொள்கிற மாணவர்களும் அறிவுத்துறையினரும் தமது கோரிக்கைகளில் புரட்சிகர கூறுகளை உள்ளடக்குவதும் அதைச் சார்ந்து பாட்டாளிவர்க்க நலன்களை முன்னிலைப்படுத்துவதுமே முதன்மையானதாக இருக்கமுடியும்.

முதலாவதாக சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் என்று சொல்வதின் பின்னணியில் இருக்கிற நிலைப்பாடுகள் என்ன என்று தமிழக நிலைமைகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைப்பாடும் இதில் ஒன்று. ஆனால் தமிழக அரசு கொண்டு வந்த இலவச மடிக் கணினித் திட்டம் இந்த நிலைப்பாட்டை சுக்குநூறாக்கியது. மைக்ரோசாப்ட் தமிழகத்துடன் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி தமிழ்நாட்டை அகலத் திறந்துவிடுவதன் குரூரத்தை முதலில் அனுபவித்தவர்கள் நமது பள்ளி மாணவர்களே என்பதைச் சொல்லிவிட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) சுமார் 9.12 இலட்சம் மடிக்கணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. ஒரு மடிக்கணினியின் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து ஐந்து ஆண்டுகளில் வினியோகிக்கப்பட வேண்டிய 68 இலட்சம் மடிக்கணினிகளுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை திட்டமதிப்பீடாக அறிவித்தது எல்காட் (ஒரு மடிக்கணினியின் விலை பின்னர் 18,000 ரூபாயாக தொழில்நுட்ப ஏலத்தில் உயர்த்தப்பட்டது தனிக்கதை.)

மடிக்கணினியின் இயங்குதளத்தை பொறுத்தவரை விண்டோஸ் ஸ்டார்ட்டரும் லினக்ஸ் இயங்குதளமும் சேர்த்தே நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மையில் லினக்ஸ் இயங்குதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனேக சுதந்திர மென்பொருள்கள் உண்டு. அவற்றுள் தமிழ் தட்டச்சு, அறிவியல் பயன்பாடுகள் இருக்கிறது என்பது போக வருடா வருடம் மென்பொருள்களையும் இயங்குதளத்தையும் காசு கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS)  தமிழ் வழியான லினக்ஸ் தளத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தி வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

இது அரசுத் திட்டம் என்கிற பொழுது எதற்கு தேவையேயில்லாமல் மைக்ரோசாப்ட் இயங்குதளம் நிறுவப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான கூட்டமைப்பு தனது ஆட்சேபனையை பதிவு செய்தது. எத்தனையோ வகையான சுதந்திர மென்பொருட்கள் இருக்கும் பொழுது விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது முழுக்க முழுக்க மைக்ரோசாப்டிற்கு சேவை செய்கிற வேலையேயன்றி இது எந்த வகையிலும் இலவச மடிக்கணினித் திட்டமாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தது.

எல்காட் ஐ.டி. பூங்கா
கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்ய வைக்கப்பட்ட எல்காட்.

இருந்த போதிலும் செப்டம்பர் 2011-ல் லினக்ஸ் இயங்குதளமும் நிறுவப்படாது என்று அறிவித்தது எல்காட் நிறுவனம். அதற்கு எல்காட் முன்வைத்த காரணம் உலகப் பிரசித்தி பெற்றது. காசு கொடுத்து (சுமார் ரூ 2000 விலை) வாங்கிய விண்டோஸ் இயங்குதளத்துடன் இணையாக லினக்ஸையும் சேர்த்து நிறுவுவதற்கு கணினி ஒன்றிற்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டிவரும் என்று ரூ 10,200 கோடிக்கான திட்டத்தில் தனது சிக்கன நடவடிக்கையை கூச்சமின்றி அறிவித்தது. வேண்டுமானால் தேவைப்படும் மாணவர்களுக்கு பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS) மூலம் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவ எல்காட் உதவி செய்யும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான ஜாம்பவான் மற்றும் போராளி ரிச்சர்டு எம் ஸ்டால்மேன், சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கெடுத்ததோடு மட்டுமில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை லினக்சுடன் இணையாக நிறுவும் அரசின் செயல் “மதிய உணவிற்கு தண்ணீருடன் விஸ்கியையும் சேர்த்துத் தருவதைப் போன்றது” என்று மைக்ரோசாப்டுடான தரகுத்தனத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.

தமிழக சுதந்திர மென்பொருட்களுக்கான கூட்டமைப்பு, முதலாளித்துவத்தின் கொடூரத்தை நன்கு அறிந்திருந்தும் தமிழக அரசுக்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையே நடந்த லாபியிங் வேலைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தாமால் ஜெயலலிதாவிற்கு ஒன்றுமே தெரியாததைப் போல மார்ச்-9, 2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியது. அக்கடிதத்தின் முதல் பத்தியே இப்படியாக தொடர்கிறது:

“டியர் மேடம்,

6-3-2012 அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ஜீன் பிலிப்ஸ் கோர்டியஸ் அவர்கள் தங்களைச் சந்தித்தது எங்களுக்கு தெரியவந்தது. அவர் இச்சந்திப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘தகவல் தொடர்பு அறிவு இயக்கத் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக 2005இல் தமிழக அரசிற்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீதான அம்சங்களை விளக்கியிருந்தார். திரு ஜீன் தமிழகத்தில், தனது கம்பெனி மேலும் முதலீடுகளை செய்ய விரும்புவதாகக்  கூறியிருந்தார் (ஆக ELCOT, மடிக்கணினிகள் தொடர்பாக அனைத்து நிறுவனங்களுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது வெறும் கண்துடைப்பு மட்டுமே! அரசு எப்படி யாருக்காக இயங்குகிறது என்பதற்கான பார்வையை இங்கு நாம் தவறவிட்டுவிடக் கூடாது). தமிழக அரசுடனான இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை மைக்ரோசாப்ட் ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. 2002இல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது இந்தியப்பயணத்தின் போது, இதே போன்ற முதலீட்டுத் திட்டங்களை கூறியிருந்தார். இந்த வகையில், இது தொடர்பான சில உண்மைகளை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம். மைக்ரோசாப்டால் முன்மொழியப்படும் இது போன்ற முதலீடுகளுக்கு லாபம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதை முதலிலேயே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…………………………………………………………………………………….” என்பதாக அக்கடிதம் நீள்கிறது.

மைக்ரோசாப்ட்
இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே.

இறுதியில் இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே. தற்பொழுது இந்த மடிக்கணினிகள் சுடுதண்ணீர் வைக்கும் அளவிற்கு சூடாக இருப்பதாக அறிகிறோம். இது தனிக்கதை என்பதால் நமது பார்வையை இயங்குதளம் ஒட்டியே கொண்டு செல்வோம்.

செயல்பாடு என்பதன் அடிப்படையில் சுதந்திர மென்பொருளுக்கான கூட்டமைப்பு, உச்சபட்சமாக கருத்தரங்களை நடத்தியும் குறைந்த பட்சமாக ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியதுமாக மட்டுமே இருந்தது. இதைத் தாண்டி நடத்திய போராட்டம் என்றளவிலான கூட்டங்கள் அரசுக்கு எந்தவித தார்மீக அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. மேலும் இவையனைத்தும் மக்களுக்கான இயக்கமாக அல்லாமல் வெறும் கருத்தரங்குகளாக மட்டுமே கொண்டு செல்லும் அளவிற்கு அடிப்படையாக அமைந்தது இவர்களின் அரசு குறித்த தவறான பார்வைகளே. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான ஒடுக்குமுறைக் கருவி. இவர்களோ அதை அனைவருக்கும் பொதுவானது என்றும், அதை சில பல சட்ட வழி முயற்சிகளில் திருத்தி விடலாம் என அப்பாவித்தனமாக நம்புகின்றனர்.

மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், அத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களது நலனுக்காக கட்சி நடத்தும் ஜெயலலிதாவின் அரசியலும் வேறு வேறு அல்ல. இதில் ஜெயலலிதாவுக்கு ஏதும் தெரியாது போல இவர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். மிடாஸ் நிறுவனம் மூலம் தரகு முதலாளிகளாகவும் கொள்ளையடிக்கும் அதிமுக தலைமைக்கு, மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், சதித்தனங்களும் எப்படி தவறாக தெரியும்?

சென்ற பதிவில் இதைச் சுட்டிக்காட்டும் பொருட்டு, மென்பொருள் விசயத்தில் முதலாளித்துவத்தின் இலாப வெறி குறித்து பருண்மையாக அறியமுடிகிற அறிவுத்துறையினர் மெக்டோனால்ட் உணவுவிடுதிகள் என்ற வகையில் சுதந்திர உணவுவிடுதிகள் நடத்துவதைத்தான் பிரதானப்படுத்துவார்களா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருந்தோம். ஆக தீர்வு என்ற வகையில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் இந்த புளுத்து நாறும் அரசமைப்பில் ‘இரங்கத்தக்க சீர்திருத்தங்களைக்’ கூட பெறமுடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபுறம் இருக்க லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள் இதுதான்.

  • தமிழகத்தில் இதுபோன்ற சுதந்திர மென்பொருட்கள் பயன்படுத்துகிற வாய்ப்பை முறியடித்தது யார்?
  • இங்கும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு முதலைகள் ஏன் லாபியிங் வேலைகளில் ஈடுபடுகின்றன?
  • இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற தரகர்களான ஆளும் வர்க்கத்தையும் அரசமைப்பையும் புரிந்து கொள்ளாமல், மாற்றாமல் லினக்ஸ் போன்ற தளங்களை எப்படி மக்களுக்குச் சாதகமானதாக மாற்ற இயலும்?
  • சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?
லினக்ஸ் மேசைக்கணினி
மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன

இரண்டாவதாக மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன என்பதையும் நாம் பரிசிலீக்க வேண்டும். அமெரிக்கா போன்ற முதாலாளித்துவ நாடுகளிலேயே கூட முதலாளிகளைக் காறித்துப்பும் அளவிற்கு இணையத்தில் வீச்சான பிரச்சாரங்களைக் கொண்டு செல்கின்றனர். சென்ற பதிவில் ‘முதலாளிகள், வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்ப்பதற்கு நம்மை பழக்கப்படுத்துகின்றனர்’ என்ற ஒரு வாதத்தை வைத்தோம்.

பேராரசிரியர் லாரல் டேக் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்:  நம்மை அறியாமலேயே நாம் நம் “விருப்பத்திற்கு மாறாக விற்பனைப் பண்டமாக” மாற்றப்படுகிறோம் என்பதை ஒரு உண்மையான ஆய்வாளருக்கே உரிய திறமையுடன் நிருபிக்கிறார். வருடத்திற்கு 140 பில்லியன் டாலர்கள் அள்ளுகிற பேஸ்புக், லைக்குகள் (Likes) மற்றும் பிரெண்ட்சிப் சேரிங்குகளைத் (Friendship Sharings) தான் பெரிதும் சார்ந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் வைக்கும் “பேஸ்புக் நமக்கு கூலிதரவேண்டும் (Wages For Facebook)” என்பதன் அடிப்படையிலான அறிக்கை (“Our fingerstips have become distorted from so much liking. Our feelings have gotten lost from so many friendships”) சில அறிஞர்களுக்கு சுய உணர்ச்சி செத்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இது தவிர Riseup.net போன்ற சிறு குழுக்கள் அமெரிக்க அரசு நம்மைக் கண்காணிப்பதை அனுமதிக்க இயலாது என்றும் அரசியல் சமூக பொருளாதார தளத்தில் அதிகாரங்கள் மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று சியாட்டலில் இருந்து கொண்டே அரசை எதிர்த்துப் போராடுகிற போராளிகளுக்கு யாரும் ஊடுருவிப் பார்க்க இயலாத மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது. இதுதவிர எட்வர்ட் ஸ்னோடன், ஜீலியன் அசாஞ்சேயின் விக்கி லீக்ஸ் போன்றவர்களின் பங்களிப்புகள் முதலாளித்துவத்துவ ஆளும் வர்க்க அடக்குமுறைகளை அம்பலப்படுத்த உதவுகிறது.

அமேசான் போன்ற நிறுவனங்கள் கிண்டில் சேவைகள் என்ற பெயரில் இணையதளப் புத்தகங்களை வைத்து வர்த்தகம் செய்கிற பொழுது காசு கொடுத்து வாங்க முடியாத பல்வேறு புத்தகங்களை Libgen போன்ற இணையதளங்கள் “அறிவு விற்பனைக்கு அல்ல” என்ற மானிட பண்புகளின் அடிப்படையில் சுதந்திரமாக தறவிறக்க வழிவகை செய்கிறது.

இவையெல்லாம் ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தும் நல்ல முயற்சிகள் என்றாலும் இவையே அமெரிக்காவை வீழ்த்தி புரட்சியை கொண்டு வந்து விடாது. அப்படி புரட்சி வராமல் அறிவுத் துறையினரும் கட்டற்ற மென்பொருள் மூலம் விண்டோசை வீழ்த்தி விட முடியாது.

இவைகளை தொகுப்பாக பார்க்கிற பொழுது இவ்வியக்கங்களின் புறவயக் கூறுகள் “முதலாளித்துவம் தனக்கு சவக்குழிதோண்டுவோரையே மேலாக உற்பத்தி செய்கிறது” என்பதை நிரூப்பித்துக் காட்டுகிறது. இந்த வகையில் இணையங்களையும் மென்பொருட்களையும் மற்றும் முதலாளித்துவத்தின் பிற ஸ்தாபனங்களையும் பிரச்சார வடிவங்கள் மற்றும் போராட்ட முறைகள் என்ற அளவிலே மட்டுமே ஏகாதிபத்தியங்களை ஒழிக்க விரும்பும் புரட்சிகர அமைப்புகள் பயன்படுத்தும். ஏனெனில் நமக்கு பிரதான கடமையாக இருப்பது இந்த அநீதியான அரசமைப்பை கைப்பற்றி உழைக்கும் மக்களின் கூட்டிணைவில் பாட்டாளி வர்க்கத் தலைமையில் மாற்று மக்கள் அரசை அமைப்பதே.

இதைப் புறந்தள்ளி ‘வெறும் இணையம் தான் புரட்சி; தொழில்நுட்பம் தான் வளர்ச்சி’ என்று பார்க்கிறவர்கள் இறுதியில் முதலாளிகளின் நலனுக்காகத்தான் வேலை செய்ய முடியும். அவர்கள் தான் பன்சால் தலைமையில் இரவும் பகலுமாக குஜராத்தை குவாஞ்சோவாக காட்டுவார்கள்! தன்னையே படமெடுத்து டிவிட்டருக்கு அனுப்புவார்கள்! “பாசிசம், அழுகிநாறும்  முதலாளித்துவத்திற்கு முட்டு கொடுக்கும் வன்முறையான முயற்சி” என்று சொல்வதை நிரூபிக்க வேண்டுமானால் மோடியின் செல்பீ புகைப்படத்தை பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் பதிவை நாம் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை நடத்தும் இடதுசாரி மாணவர்களையும் அறிவுத்துறையினரை  முன்வைத்தே வினவியிருக்கிறோம். ஒரு கம்யுனிஸ்ட் போராளி, இயக்கம் என்பதை கீழிருந்து மேல்நோக்கிய பாய்ச்சலாக பார்க்கிறார். சான்றாக ‘பாட்டாளி வர்க்க அரசு’ எதைப் பெற்றால் அதை எடுக்க முடியும் என்பதை நாம் தெலுங்கானாவின் நிலமீட்புப்போராட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள இயலும். நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நிஜாம் அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் வர்க்கம் நிலத்தை மீட்டெடுப்பதிலே ஆளும் வர்க்கம் மரண அடி வாங்கியது; நிலப்பிரபுக்கள் ஓடி ஒளிந்தனர். இருந்த போதிலும் தொட்டி கொமரய்யாவை முதல் ஆளாக விவசாயி வர்க்கம் இழந்தது. இந்திய ராணுவம் நிஜாம் அரசுக்கு சார்பாக விவாயிகள் வர்க்கத்தை வெறி கொண்டு அடக்கியது. நிலத்தை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆண்டைக்கு எதிரான போராட்டத்தில் தொட்டி கொமரய்யா என்ன ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம் சி ஏவா பயின்றார்?

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவை கூரிய அரசியல் பார்வையும், குறையாத வர்க்க உணர்வும்தான். இதன்றி இந்த சமூக அமைப்பில் நாமே நேரடியாக எந்த சேவைகளை துவங்கினாலும் அவை வெற்றி பெறாது. சான்றாக தமிழ் வழிக் கல்வி பள்ளிகளை நாம் ஆரம்பிப்பதால் கல்வியில் தனியார் மயம் ஒழியாது, ஆதரவற்றோருக்கான பள்ளிகளை நாம் துவங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது, தொழிலாளிகளே முதலாளிகளாக நடத்தும் தொழிற்சாலைகள் முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமல்ல. அது போல ஏகாதிபத்தியங்களை வீழ்த்தாமல் அவர்களின் தொழில் நுட்ப ஆக்கிரமிப்பை நாம் வீழ்த்துவது குறித்து நினைக்கக் கூட முடியாது.

இதை ஒரு கம்யுனிஸ்ட் நெஞ்சிலே ஏந்தியிருப்பாரேயானால் சிங்கூரில் தொழிலாளர்கள் சுடப்பட்டிருப்பார்களா? ஜெயலலிதாவின் காலை நக்கிப் பிழைப்பார்களா? பாசிஸ்டுகளுக்கு பாதை வகுத்து கொடுத்தது எது? என்பதை பாராளுமன்ற ஜனநாயகப் பாதையில் பீடை நடை போடும் இடதுசாரிகளில் சிலராவது பரிசீலிப்பார்களா, தெரியவில்லை.

‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பது அறிவுவாதமாக மட்டுமே இருப்பதும் கைதட்டி கலைந்து செல்கிற கருத்தரங்கமாக இருப்பதும் களையப்பட வேண்டும். அறுதியிட்டுச் சொல்வதென்றால் பாட்டாளி வர்க்க அரசை ஆணையிலே வைப்பதற்கான செயல்திட்டத்தை நோக்கி நகருவதும் புரட்சிகர அமைப்புகளில் திரள்வதும் தன்னை ஒர் அணியாக மீட்டெடுத்துக் கொள்வதிலும் தராளமய தனியார்மய மறுகாலனியாதிக்க நாடுகளின் சமூக ஜனநாயகவாதிகள், அறிவுத்துறையினர் மற்றும் மாணவர்கள் செய்யவேண்டிய ஆகப் பெரும் முதற் கடமை. சமூகத்தின் புறவயமான நிலைமைகளும் தொட்டி கொமரய்யாவும் இவர்களிடம் இதைத்தான் கோருகிறார்கள்.

(குறிப்பு: சென்ற பதிவில் முதலாளித்துவம் மோசம் என்றால் எப்படித்தான் சம்பாதிப்பது என்று முக்கியமான கேள்வி ஒன்றை வைத்திருந்தார் வாசகர் ஒருவர். இது போக இந்திய மென்பொருள் துறையினரின் மறுமொழிகளையும் சேர்த்து அடுத்த பதிவில் பார்ப்போம். வினையாற்றுங்கள்)

–    மெக்கானிக் நாசர்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

  1. ELCOT determines technical requirements for free laptops-The Hindu (26-06-2011)
  2. Free laptops not to have open source software-The Hindu (03-09-2011)
  3. It’s no ‘free laptop’ as long as it has proprietary software-The Hindu (06-02-2012)
  4. Proposal to adopt Microsoft’s proprietary software in schools: FSF India sends Letter to Chief Minister of Tamil Nadu;
  5. Political Principles of Riseup team
  6. Should Facebook pay its users?
  7. வீரஞ்செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டம் (1946-1951)
  8. எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்;

ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்

10

”எந்த பத்திரிகை?”

”வினவு அப்படின்னு ஒரு இணைய பத்திரிகை இருக்கு. அது சார்பா வந்திருக்கோம்”

“ஓ… இன்னாத்துக்கு ரிப்போர்டு எடுக்கறே?”

பேருந்து டெப்போ
பேருந்து டெப்போ

“போக்குவரத்து துறை ஊழியர்களோட வேலை நிலைமை, அந்த துறையோட நிலவரம் பற்றி எங்க வாசகர்களுக்கு ஒரு அறிமுகம் மாதிரி….”

“போட்டோ எடுக்க கூடாது சரியா?”

”சரி, உங்க பேரு?”

“ஹ, பாத்தியா… போட்டோவே வோணாம்னு சொல்றேன், நீ பேரு இன்னான்னு கேட்கிறியே.. சரி, சீனிவாசன்னு வச்சிக்கயேன்”

“நீங்க இங்கே என்ன வேலை செய்யறீங்க?”

“உள்ற பணிமனைன்னு ஒன்னு இருக்கே… அதாம்பா வொர்க் சாப்பு. அதுல மெக்கானிக்கா கீறேன். பேரு போட மாட்டேன்னு சொல்லு, மேல பேசலாம்”

“ஏன் பேரு போட்டா என்ன பிரச்சினையா?”

”உனுக்கு இன்னா தெரியும். இங்கெ அதிகாரிங்க எதுக்குடா மெமோ குடுக்கலாம்னு அலையறானுங்க. இன்னாத்துக்கு வம்பு வச்சிக்கினு?”

“ஏன் உங்களுக்கு யூனியன் எல்லாம் தான் இருக்கே. தொழிலாளர்களுக்கு பிரச்சினைன்னா வரமாட்டாங்களா?”

“த்தூத்தெரிக்க… தப்பா நென்சிக்காத சார். பொறுக்கிங்க சார். பொறுக்கித் திங்கற பசங்க.. மெமோ மேல மெமோ குடுத்து சாவடிக்கிறான் சார். இந்த நாயிங்க ஒத்தனும் ஏன்னு கேக்க வரமாட்டான்.. சங்கத்துல சேரு, சந்தா கட்டு, தீக்கதிருக்கு சந்தா கட்டுன்னு தூக்கினு வருவான்”

“ஆமா… நீங்க தப்பு செஞ்சா தானே மெமோ குடுக்க முடியும். ஒழுங்கா வேலை செய்தா ஏன் மெமோ குடுக்க போறாங்க. மத்த ஊர்ல எல்லாம் அரசு பேருந்துகள் எப்படி இருக்கு. நம்ம ஊர்ல பாருங்க எல்லாம் ஓட்ட ஒடசலா ஓடிகிட்டு இருக்கே?”

“உனுக்கு இன்னாபா தெரியும். நாங்கெல்லாம் தொழில்காரங்க. எங்க கண்ணு பாக்க ஒரு வண்டிய கூட ரிப்பேரோட ஓட விட மாட்டோம். தோ, போவுது பாத்தியா.. நம்ப பாய் ஓட்டினு போறாப்லயே இந்த வண்டி. இது ஒரு வாரமா செட்டுல நின்னுகினு இருந்திச்சி. கியர் ராடு கட் ஆயி கெடந்திச்சி. ஏற்கனவே நாலு தபா பத்த வச்சி பத்த வச்சி ஓட்டியாச்சி… புதுசு கேட்டு இண்டெண்ட் போட்டு சலிச்சி போயிட்டோம். இந்த செட்டுல மொத்தம் 184 வண்டிங்க லைன்ல ஓடுது சார். ஆறு வண்டிங்க ஸ்பேர். அத்தினி ஸ்பேர் வண்டியுமே இப்ப லைன்ல தான் ஓடினு இருக்கு. எப்பயும் பத்து வண்டிக்கு மேல ஸ்பேர் இல்லாம செட்டுல நிக்கும். தோ, நம்ப பாய் வண்டிக்கு கூட கடேசி வரைக்கும் ஸ்பேரே தரல. அப்பால இருக்கற ராட பத்த வச்சி இன்னிக்கு காலைல தான் ரெடி பண்ணேன்”

“அப்படி ஏன் பண்றீங்க? ஸ்பேர் தரலைன்னா வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?”

“சொன்னா கேட்டுக்கறா மாதிரி ஆளுங்களா சார் டிபார்ட்மெண்டுல அதிகாரியா இருக்கான்? ஸ்பேர் இல்லன்னு அவனுக்கே நல்லா தெரியும். தெரிஞ்சும் ஏன் வண்டிய அட்டெண்ட் பண்ணலைன்னு ஒரு மெமோ குடுப்பான். ஏன் டிலே பண்றீங்கன்னு கேட்டு ஒரு மெமோ வரும். தோ.. பத்த வச்சி அனுப்பிருக்கனே… இது எங்கனா கால தூக்கினு நின்னுச்சினா அதுக்கு ஒரு மெமோ வரும். சார், இந்த போலீசுகாரனுக்கு கேஸ் கணக்கு காட்றதுக்கு டார்கெட்டு வச்சிருக்கானுங்களே… அது மேரி எங்க அதிகாரிங்களுக்கு ஒரு மாசத்துக்கு இத்தினி மெமோ குடுக்கனும்னு டார்கெட் வச்சிருக்கானுங்க சார்.. வருசத்துக்கு 260 வேலை நாளாவது குறைந்தபட்சம் வேலை பார்த்திருக்கணும். அதில் 259 நாளுக்கு ஒழுங்கா வேலை பார்த்துட்டு 260வது நாள்ல ஒரு வண்டி ஒக்காந்துகிச்சின்னாலும் இன்க்ரிமென்டை அடுத்த ஆறு மாசத்துக்கு தள்ளி வச்சிடுவானுங்க. ஒழுங்கா ஸ்பேர் பார்ட்ஸே இல்லாம எப்டி சார் வண்டிய சரி பண்ண முடியும்?”

“சுத்தமா உதிரி பாகங்கள் வாங்கவே இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?”

”அப்டி நான் சொன்னேனா? அது அந்த மாதிரி இல்ல சார். இப்ப நீதான் ஸ்பேர் பார்ட்ஸ் வெண்டாருன்னு வச்சிக்க. தோ நம்ப டீ மாஸ்டரு தான் அதிகாரின்னு வச்சிக்க. நீ இன்னா பண்றே… அவரை மாசத்துக்கு ஒருக்கா கண்டுக்கறே. ‘ஐயா அதிகாரி.. இந்த இந்த ஸ்பேரெல்லாம் என் கொடோன்ல குமிஞ்சி போச்சி. இதுக்கு டெண்டரு விடு’ அப்படின்னு கேட்கறே. சொல்லி வச்சா மாதிரி அதுக்கு டெண்டர் கேட்பாரு நம்ப அதிகாரி. நீ இன்னா பண்றே.. அதாம்பா இப்ப நீ தானே வெண்டாரு… நீ இன்னா பண்றே அத்தினி பொருளையும் கொண்டாந்து எறக்கிட்டு துட்டு வாங்கினு போயிடறே… அடுத்த மாசமே தோ இருக்காரே நம்ப டீ மாஸ்டரு… அதாம்பா அதிகாரி, அவரு குலுமணாலிக்கு குடும்பத்தோட டூர் போறாப்ல. புரியுதாபா?”

”ம்ம்.. புரியுது.. இதுக்கு ஆடிட் எதுவும் கிடையாதா?”

”அதெல்லாம் இருக்கு. ஆடிட் பண்றவன் யாரு? அவனும் இன்னொரு அதிகாரி தானே? இந்த அதிகாரிங்க இருக்கானுங்களே இவனுங்களுக்கு மோட்டாருன்னா இன்னான்னு தெரியுமா, ட்ரான்ஸ்போர்ட்டுன்னா இன்னான்னு தெரியுமா? நான் முப்பது வருசமா இந்த லைன்ல இருக்கேன். எந்த வண்டில என்னா பிரச்சின வரும், எந்த ஸ்பேர் எப்ப போவும், எத்தினி நாளுக்கு ஒருவாட்டி சரிவீஸ் பண்ணனும் எல்லாம் எனக்குத் தெரியும். ஒரு வண்டியோட ஒரு மாச ட்ரிப் ஷீட்டை ஒரு பார்வை பார்த்தாலே சொல்லிடுவேன், அடுத்த ஆறுமாசத்துக்கு அது ரப்சர் பண்ணாம ஓடனும்னா இன்னா இன்னா செய்யனும்னு எனக்கு தெரியும்…”

”அப்ப நீங்க அதிகாரிங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே?”

”ம்க்கும்… நாங்க சொல்லி அவனுங்க புடுங்குனானுங்க. போ சார்… நாங்கெல்லாம் படிக்காத முட்டாளுங்க; எங்க கிட்டயெல்லாம் நின்னு பேசுனா அவனுங்க ஜபர்தஸ்து கொறஞ்சிடும் சார். இவனுங்க எதுனா டிகிரி படிச்சிகினு, கெவருமெண்டு பரிச்சை எழுதி பாஸ் பண்ணி, எவனுக்காவது மால் வெட்டி போஸ்டிங் வாங்கினு வந்திருக்கானுங்க. ஆனா, ஒருத்தனுக்கும் மோட்டார் லைன் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. மெமோ குடுக்க மட்டும் தான் தெரியும். மெமோ குடுத்து மெமோ குடுத்து எங்க வவுத்துல அடிக்க தெரியும். வெண்டாரு, காண்டிராக்டருங்க கழிஞ்சி போட்டத வழிச்சி நக்க தெரியும். கீழேர்ந்து மேல வரைக்கும் நல்ல உறிஞ்சி எடுத்துட்டானுங்க சார். எந்த மாடல் வண்டி பிரச்சின பண்ணுமோ அதையே சொல்லி வச்சா மாதிரி வாங்கித் தள்றானுங்க சார்”

”எந்த மாடல் நல்லா ஓடுது?”

”நம்ம ஊருக்கு எந்த மாடலுமே நல்லா ஓடாது. ஹா ஹா ஹா…”

”ஏன்?”

“நீ வேற ஸ்டேட்ல விசாரிச்சி பாரு. ஒரு வண்டி ஒரு சிப்டுக்கு அதிக பட்சமா 800 பேசஞ்சரை சொமக்குது. இந்த மெட்ராஸ்ல, சராசரியா ஒரு சிப்டுக்கு ஓரு வண்டி குறைஞ்சது 1000 த்திலேர்ந்து 1500 வரைக்கும் டிக்கெட் அடிக்குது. இன்னா சொல்ல வர்றேன்னு புரியுதா? ரெண்டு வண்டி ஓட வேண்டிய ரூட்டுக்கு ஒரு வண்டி தான் ஓடுது. இத நான் மட்டும் சொல்லலை, அசோக் லேலண்டு கம்பெனிகாரனே மாநகர போக்குவரத்து கழகத்தை வச்சி கேஸ் ஸ்டடி பண்ணிருக்கான். நாங்க ஒரு ஆறு மாசம் முன்னே அவங்க பேக்டரிக்கு ட்ரெயினிங் போயிருந்தப்போ சொன்னான்”

“நீங்க சொல்றதை பார்த்தா எந்த கம்பெனி வண்டியா இருந்தாலும் பிரச்சினை தானே?”

”நான் சொன்னது பொதுவான நெலமை. இதுல லைலேண்டு வண்டி கொஞ்சம் தாக்கு பிடிச்சி ஓடும். டாடா வண்டிங்க சுத்த வேஸ்ட்”

“எப்படி சொல்றீங்க?”

”லைலேண்டு வண்டியா இருந்தா 50,000 கிலோமீட்டருக்கு ஒரு தபா புல் மெயிண்டனன்ஸ் சர்வீஸ் செய்தாலே போதும். டாடா வண்டியா இருந்தா 8,000 கிலோ மீட்டருக்கு ஒரு வாட்டி செய்யனும். அது மட்டுமில்லாம, லைலேண்டு வண்டி சர்வீஸ் பன்றதுக்கு ஈஸி. உள்ற இருக்கற ஸ்பேரெல்லாம் சுலுவா கழட்டி மாட்டிறலாம். டாடா வண்டின்னா ஒரு ஸ்பேரை கழட்டறதுக்கு தொட்டு தொட்டு எல்லா எழவையும் உருவிப் போடணும். அதுவுமில்லாம அவன் வண்டிக்கு ஸ்பேர் கிடைக்கறதும் கஷ்டம். அவனோட டிப்போ பூந்தமல்லில இருக்கு. எதுனா வோணும்னா அங்க ஓடனும். லைலேண்டு வண்டியோட ஸ்பேரெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி பத்த வச்சி அட்ஜஸ்ட் பண்ணி கொஞ்ச நாளைக்கு ஓட்டலாம். டாடா வண்டின்னா போச்சின்னா மாத்தியே தான் ஆகணும்”

“அப்புறம் ஏன் அதை வாங்கறாங்க?”

”அதை நான் எப்படி கேட்க முடியும்? செண்ட்ரல் கெவர்மெண்டு ஸ்கீம்ல வர்ற வண்டி எல்லாமே டாடா வண்டியா தான் இருக்கு”

“நீங்க சொல்ற வியாக்யானம் எல்லாமே உங்க பொறுப்பை கை கழுவறா மாதிரியே இருக்கே. நீங்க சொல்றதை வச்சி பார்த்தா இங்கே எல்லா பேருந்துமே ஓட்டை உடைசலா தான் இருக்கும். அதுக்கு ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு இல்லே அர்த்தம் வருது? சில பேரு அதனால தான் தனியார் கிட்டே பேருந்து சேவையை ஒப்படைச்சிடலாம்னு சொல்றாங்க”

”இருப்பா இரு.. சொம்மா அடுக்கிக்கினே போவாதே. தனியாரு வேணும்ன்னு சொல்றவனை இங்கே அனுப்பு. என் ப்ரெண்டு தான் கே.பி.என் டிப்போல வேலை செய்யறான். பேச வைக்கிறேன். அத்தினி வண்டிலயும் எதுனா ஒரு பிரச்சினையோட தான் ஓட்றான்.  என்னின்னு எது புட்டுக்கும்னே சொல்ல முடியாது. பெங்களூர் வண்டி ஒண்ணு பத்தி எரிஞ்சி செத்து போனாங்களே அது தனியாரு வண்டி தானே? பச்சமுத்து மாதியான ஆளுங்களுக்கெல்லாம் துட்டு தான் தான் சார் எல்லாமே.. மத்தபடி நீ சொகுசா போகனும்னு அவனுக்கு ஆசையெல்லாம் இல்லே. ஒரு வண்டிக்கு இத்தினி இன்வெஸ்ட்மெண்டுன்னா அதிலேர்ந்து எத்தினி துட்டு உருவ முடியும்னு தான் பார்ப்பான்.. போட்ட காசுக்கு மேல எடுக்க என்ன வேணும்னாலும் செய்வான்.. அவன் வண்டியெல்லாம் வெளியே பார்க்க தான் சார் ஷோவா வச்சிருக்கான்”

”அவனை விடுங்க… உங்க துறையை ஒழுங்கா செயல்பட வைக்க வேற வழியே இல்லையா?”

”ஏன் சார் இல்லை. இருக்கு சார்”

“அப்ப முதல்ல அதை சொல்லுங்க”

”டிபார்ட்மெண்ட்ல என்னா பிரச்சினை அதுக்கு என்னா செஞ்சு எப்டி சரி பண்ணலாம்ன்னு யாருக்கு தெரியுமோ அவங்க சொல்றாபடி நிர்வாகம் நடந்தாலே போதும் சார்”

“புரியறா மாதிரி சொல்லுங்கண்ணே”

“இப்ப ஒரு வண்டியோட கண்டக்டர் அதிகமா கலெக்சன் காட்றாரு. இன்னொரு வண்டியோட கண்டக்டர் கம்மியா கலெக்சன் காட்றாரு. ஒரு ரூட்ல 15,000 கலெக்சன் ஆகுது. இன்னொரு ரூட்ல ஆயிரம் ரூபா தான் கலெக்சன் ஆகுது. இப்ப ஒழுங்கான நிர்வாகம்னா என்னா செய்யணும்?”

“……”

”நல்லா கலெக்சன் காட்ற கண்டக்டர்களுக்கும் மற்றவங்களுக்கும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யணும். எந்த ரூட்ல போட்டாலும் நல்லா கலெக்சன் காட்ற திறமை இருக்கிற கண்டக்டர்களை வச்சி குறைவா கலெக்சன் ஆகிற ரூட்டை ஆய்வு செய்யணும். அந்த ரூட்ல சேர் ஆட்டோ ஓடுதா, அங்கே ஸ்டூடன்ஸ் அதிகமா, ஆபீஸ் போறவங்க அதிகமா, கூலி வேலை செய்யறவங்க அதிகமா, பேக்டரிக்கு போறவன் அதிகமா அப்படின்னு விவரமா பார்த்து எந்த நேரத்துல வண்டி எடுக்கணும், எத்தனை வண்டி விடணும் அப்படின்னு அவங்க சொல்றதை நிர்வாகம் அமுல் படுத்தணும். ஏன்னா ஒரு ரூட்டை பத்தி அந்த ரூட்ல தினமும் ஓடிகிட்டு இருக்கிற டிரைவர் கண்டக்டர்களுக்குத் தான் தெரிஞ்சிருக்கும். மாணவர்கள் அதிகமானா குறிப்பிட்ட நேரத்திலயும், பேக்டரி ஒர்க்கர் அதிகம்னா குறிப்பிட்ட நேரத்திலயும் எடுத்தா தான் சரியா கலெக்சன் ஆகும்”

”அதே மாதிரி, ஒரு அளவுக்கு மேலே கலெக்சன் ஆகிற ரூட்டா இருந்தா புதுசா ஒரு வண்டிய அந்த ரூட்ல விடலாம். கல்லா கட்றதை மட்டும் பாத்தாலும் பிரச்சினை தான் வரும். ஒண்ணு, பேசஞ்சர் இத்தனை நெரிசல்ல போகனுமான்னு ஆட்டோவுல போவான் அப்படி இல்லேன்னா ஓவர் லோடு அடிச்சி வண்டி கண்டமாகும். அதுவுமில்லாம லோடு கம்மியா இருக்கேன்னு ஒரு குறிப்பிட்ட ரூட்ல வண்டிய நிப்பாட்டவும் முடியாதில்லையா?”

“வண்டி மெயிண்டனன்ஸ் எடுத்திகிட்டீங்கன்னா.. இப்ப என்னா நடக்குது??? ஒரு வண்டியோட கண்டக்டரும் டிரைவரும் எதுனா ரிப்பேருன்னா மெயிண்டனன்ஸ் ரெஜிஸ்டருல எண்ட்ரி போட்டு ஷெட்டுல கொண்டாந்து விட்டுட்டு போயிடுறாங்க. எங்க மெக்கானிக்குங்களுக்கு அந்த வண்டி எந்த ரூட்ல ஓடுது.. அந்த ரூட்ல ரோடு ஓட்டையா, ட்ராபிக் அதிகமா எதுவும் தெரியாது. இதே ஒரு ரூட்டை பத்தி கண்டக்டர்களும் டிரைவர்களும் மெக்கானிக்கும் கலந்து பேசினா ஒரு வண்டிக்கு அடுத்த ஆறு மாசத்துக்கு என்னென்ன பிரச்சினை வரும்னு நாங்களே புட்டு புட்டு வச்சிருவோம். அதுக்கு தகுந்தா மாதிரி வண்டிய சர்வீஸ் பண்ணிடலாம். கலெக்சன் அதிகமா காட்டுற ரூட்ல ஓடற வண்டிங்களை நாங்களே ஆய்வு செஞ்சு நல்ல ஸ்பேர் பார்ட்ஸ் போட்டு நல்லா கண்டிசனா வச்சிருப்போம். எந்த வண்டிகள்ல எந்த மாதிரி பிரச்சினை வரும், எந்த சீசன்ல எந்த ஸ்பேர் போகும், எந்த ஸ்பேர் அடிக்கடி போகும்னு எங்களுக்குத் தான் சார் தெரியும். நாங்களே தேவையான ஸ்பேரை தேவையான அளவுக்கு வாங்கி ஸ்டாக் வச்சிக்க போறோம்..”

”ஏங்க அப்ப அதிகாரிகளை என்ன செய்ய சொல்றீங்க?”

”ஆணியே புடுங்க வேணாம்கிறேன். அதிகாரிங்களே தேவையில்லை சார்… இன்னாத்துக்குன்னு கேக்கறேன். ஒவ்வொத்தனுக்கும் கெவருமெண்டுலேர்ந்து ஏ.சி ரூமு  குடுத்திருக்கான்…அது போக தனி ஜீப்பு, அதுக்கு டீசலு, டிரைவரு, பஞ்சப்படி, பயணப்படி… இப்படி ஏகப்பட்ட சலுகை. ரெவின்யூக்கு தனி ஜி.எம் ஒருத்தனாம்.. பைனான்ஸ்க்கு தனி ஜி.எம் ஒருத்தனாம்… எந்த ஊர்லயாவது ரெட்டை மாட்டு வண்டிங்கறதுக்காக ரெண்டாளு ஓட்டி பாத்திருக்கீங்களா சார்? அரசு போக்குவரத்து துறை ஆபீசுக்கு போங்க… சைடுல வீங்குன எவனைக் கேட்டாலும் ஜி.எம்னு சொல்வான்… இன்னாத்துக்குன்னு கேக்கறேன்… நாங்க தெருத் தெருவா அலைஞ்சி… வெயில்ல கஷ்டப்பட்டு.. பப்ளிக் கிட்ட பாட்டு வாங்கி சம்பாதிச்சி கொண்டாந்தா.. இவனுங்க எங்க காசைத் தின்னுட்டு எங்களுக்கே மெமோ குடுக்கறானுங்க. இந்த அதிகாரிங்க எதுக்குன்னு கேக்கறேன்..? எங்க கிட்ட குடுத்தா நாங்களே அருமையா நிர்வாகத்தை நடத்துவோமே சார்?”

”வேற எதுனா சொல்றீங்களா..?”

“நேரமாச்சு பிரதர்.. உள்ற போகனும். பார்க்கலாம் வர்ட்டா…?”

–      வினவு செய்தியாளர்

நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்

4

சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான முருகன், இன்னொரு விபத்தில் காயமடைந்த 23 வயதான ரவி ஆகிய இருவரும் மே 5-ம் தேதி அதிகாலையில் 4.30 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்ததன் காரணமாக செயற்கை சுவாசம் தடைபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள்
பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள் (படம் : நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா)

உயிர் காக்கும் மருத்துவமனைகளுக்குக் கூட தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியாத லேடியின் தமிழக அரசுதான், மோடியின் குஜராத் அரசை விட சிறப்பாக செயல்படுகிறது என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார் அம்மா. தேர்தல் முடிவுகள் வெளியான  பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி  நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடுமா?

$100 கொண்டு வரும் வெளிநாட்டவரை மனம் குளிர வைத்து கையில் இருக்கும் பணத்தை செலவழிக்க வைப்பது போல $1 லட்சம் டாலர் கொண்டு வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிலம், வரிச்சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் என்று குளிப்பாட்டி குஜராத்தை ‘முன்னேற்றி’யிருக்கிறார் மோடி.

மோடி பாணியில் பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள். எப்படி என்று கேட்கிறீர்களா?

இம்மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு உடம்பு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கே சொகுசு வாகனத்தை அனுப்பி அழைத்துக் கொள்வது, குணமானதும் பத்திரமாக அதே போன்ற சொகுசு வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவதில் ஆரம்பித்து அடுக்கடுக்காக அதி ஆடம்பர வசதிகளை தயாரித்திருக்கின்றன.

மருத்துவமனைக்குள் கொண்டு போகப்பட்டதும் ஐந்து நட்சத்திர வசதியிலான அறைக்குள்  கிங் சைஸ் (ராஜ அளவு) படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். விருந்தினரை (நோயாளி) கவனிப்பில் திணறடிக்கும் மருத்துவர் அணி மட்டுமின்றி, கார்ப்பரேட் சி.ஈ.ஓ அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் அமைச்சர் போன்ற பை நிறைய பணத்தை குவித்துள்ள யாராயிருந்தாலும் தமது அலுவலக பணிகளை மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்ட நடத்துவதற்கான வைஃபை இணைய இணைப்பு, எல்.ஈ.டி தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்புகள் என வசதிகள் அறையில் நிறைந்திருக்கும். சாப்பிடுவதற்கு இன்னதுதான் வேண்டும் என்று கறாராக இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளை பரிமாறும் நட்சத்திர சமையல் கலைஞர்கள் தயாராக இருப்பார்கள்.

சொகுசு அறை
ஃபோர்டிஸ் சொகுசு நோயாளி அறை

திருப்பதியில் நிலவும் இந்து தர்மம் போல வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம், முன்பதிவு தரிசனம் என்று காசுக்கேற்ற மருத்துவ சேவை கிடைக்கிறது. அப்பல்லோ குழுமங்களின் மருத்துவமனையில் நோயாளிக்கான மொழிபெயர்ப்பாளர், தனி ஊழியர்கள் அனைவரும் தங்கி ‘நோயாளி’க்கு சேவை செய்யும் வகையில் சமையல் அறை இணைக்கப்பட்ட அறைக்கான ஒரு நாள் வாடகை ரூ 30,000 மட்டும்தான்.

தெற்கு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையின் சொகுசு அறைகளுக்கான ஒரு நாள் வாடகை ரூ 37,000-தான். ஓபராய் ஐந்து நட்சத்திர விடுதியில் இதே செலவில் இரண்டு இரவுகள் தங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது. மும்பையின் ஹீராநந்தானி மருத்துவமனையின் அதிசொகுசு அறைக்கான தினசரி வாடகை ரூ 30,000.

பாரதத் தாய்  ஐஸ்வர்யா ராய் தன் தங்கக் குழந்தையை பெற்றெடுக்கப் போன மருத்துவமனையில் ஒரு நாள் அறை வாடகை ரூ 20,000. மருத்துவ செலவு இதை விட பல மடங்கு ஆகும். ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்கான பேக்கேஜ் ரூ 4 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை ஆகிறது.

ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் மின்வெட்டு உத்தரவாதத்துடன் கூடிய உயிரைப் பறிக்கும் சேவை கிடைக்கும் போது அப்போல்லோக்களும், ஃபோர்டிஸ்களும் பல நாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத வகையில் சேவைகளை வழங்குவதாக பீற்றிக் கொள்கின்றன.

அப்பல்லோ சொகுசு அறை
அப்பல்லோ சொகுசு நோயாளி குடியிருப்பு.

“பல நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம். மங்கோலிய நோயாளிக்கு மங்கோலிய மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார் அப்பல்லோ குழுமத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அனுபம் சிபல்.

“வெளியூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் முன்பதிவு செய்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் பிரார்த்தனை தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் சிபல். “ஒரு ரசிய நோயாளி ரசிய பாரம்பரிய தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பினாலோ யூத ஆலயத்துக்கு போக விரும்பினாலோ அதையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் அவர். வெளியூர் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டு பார்ப்பன இந்துமத பிரார்த்தனை தேவைகளையும் இந்த மருத்துவமனைகள் நிறைவேற்றி வைக்கின்றன. சில மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடவும் சிறப்பு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆய்வுக் கழகத்தின் மண்டல இயக்குனர் தில்பிரீத் பிரார், “10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல மருத்துவமனைக்கு போய் மருத்துவருக்கு காத்திருக்க வேண்டிய காலம் போய் விட்டது. இப்போது நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மாறிவிட்டிருக்கின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.

அதன்படி, காசு இருக்கும் நுகர்வோருக்கு (நோயாளிகளுக்கு) தடையற்ற மின்சாரம், தடையற்ற ஆக்சிஜன் மட்டுமின்றி, கூட வரும் உறவினர், நண்பர் கூட்டம் பொழுதுபோக்குவதற்கு வசதியாக திரைப்பட அரங்குகள், உணவு வளாகங்கள், நீராவி குளியல் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்கள் கூட வழங்கப்படுகிறது.

“சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வழங்கும் காலம் என்று வரும்” என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதற்கு பதிலாக ‘அமெரிக்கா அல்லது மத்திய கிழக்குடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆடம்பர மருத்துவத் துறை இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது’ என்கிறார்கள் நிபுணர்கள். அந்நாடுகளில் 5 நட்சத்திர மருத்துவமனைகளில் ஒரு தளம் முழுவதும் ஆடம்பர சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

1% மேட்டுக் குடியினருக்கு ஐந்து நட்சத்திர மருத்துவ வசதி, 99% உழைக்கும் மக்களுக்கு உயிர் வாழக் கூட உரிமை மறுப்பு, இதுதான் நவீன இந்தியா, மோடியின், மன்மோகன் சிங்கின் வளரும் இந்தியா, ஏன் ஏகாதிபத்தியங்களின் உலகமும் கூட.

–    அப்துல்

மேலும் படிக்க

தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !

4

க்கள் போராடும் பல சந்தர்ப்பங்களில், “சட்டத்தை யாரும் கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று ஆளும் வர்க்கம் எச்சரிப்பதுண்டு. ஆனால் “உங்கள் சட்டம் எங்கள் கால் செருப்புக்கு சமம்” என தனியார் பள்ளி முதலாளிகள் அரசின் “கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்  – 25 சதவீதம் நலிந்த, ஏழை பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை” காலில் போட்டு மிதித்து திமிரை காண்பித்து விட்டனர்.

கல்வி உரிமை போராட்டம்
கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள்

அரசாங்கம் கூறியவாறு, கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை தராததால், இந்த 2014 – 2015 கல்வியாண்டில் 25 சதவித ஒதுக்கீட்டை ஏற்க முடியாது, அனுமதிக்க முடியாது என அரசுக்கு சவால் விட்டனர் கல்வி முதலாளிகள். அரசு கடன் பாக்கிக்காக பால் உற்பத்தியாளரோ, கரும்பு விவசாயிகளோ போராடினால் போலீசை விட்டு அடிப்பது இதே அரசுதான்.

அதே போல தனக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளிகளோ, விமான நிலைய ஊழியர்களோ வேலை நிறுத்தம் செய்தால் வேலையை விட்டு தூக்கி விடுவோம் என மிரட்டும் இந்த அரசு, கல்வி வியாபாரிகளின் கண் சிவந்தவுடன் ஓடோடி வந்து பழைய பாக்கியை தந்து விடுகிறோம், வந்து கடையைப் போடுங்கள் என பேரம் பேசி உடனே அவர்களின் உண்டியலுக்கு உத்திரவாதம் தந்துள்ளது.

எந்த அளவுக்கு கல்விக் கடையில் தள்ளுமுள்ளு நடக்கிறதோ அந்த அளவு தனியார்மயத்தின் தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் இந்த பிள்ளைக்கறி பேய்கள், பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 5 பிரிவுகளுக்கு மேல் தொடங்கக் கூடாது, மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தக் கூடாது எனும் அரசு விதிகளை விலக்க வேண்டும், பள்ளி வாகனங்களுக்கான கட்டுப்பாடு, பர்மிட் விதிகளை தளர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளுக்கான சலுகைகளை வழங்கவேண்டும், என எரிகிற வீட்டில் புடுங்குகிறவரை ஆதாயம் பார்த்திருக்கிறது.

ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு போனபோது, மிரட்டி உட்கார வைத்து, சாலையில் திருடர்களைப் போல துரத்தி, துரத்தி வேட்டையாடிய இந்த அதிகார வர்க்கம்தான், சமுதாயத்தின் அடிப்படை உரிமையான கல்வி விசயத்தில் தனியார் பள்ளி முதலாளிகளின் திமிரடிக்கு, காலைக் கழுவி குடிக்கிறது.

கல்வி உரிமை சட்டம்
இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுப்படுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்கிறது.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம். நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் ஒரு சாதாரண தொழிலாளிகள் பழக்கடையோ, ஐஸ் வண்டியோ போட்டால் கூட சுங்கம் வசூலிக்கும் அதிகார வர்க்கம், இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுபடுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்பதிலிருந்து இது முழுக்க முழுக்க தனியார்மயத்திற்கான, முதலாளிகளுக்கான ஏவல் அரசு என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்த 25 சதவீத ஒதுக்கீட்டால், இந்த கல்வி வள்ளல்கள் இழந்தது தான் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஈரோடு பகுதியைச் சேர்ந்த தனியார்பள்ளி முதலாளி விஜயலெட்சுமி என்பவர் தன் பேச்சிலேயே “பள்ளியில் சேர்க்கும் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும்தான் நாங்கள் வாங்க மாட்டோம், மற்றபடி, யூனிபார்ம், டை, ஷூ, லஞ்ச், புத்தகங்கள், ட்ரான்ஸ்போர்ட், எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும், ஸ்கூல் பீசை கூட கட்ட முடியாதவர்கள் பெற்றோர்களா?” என சாபமும் விடுகிறார்.

ஒரு பிள்ளை, கல்வி பயில்வதற்கான அடிப்படை சாதனங்கள் எதையும் உரிமையாக வழங்காத இந்த பகல் கொள்ளைக்காரர்கள், வெறும் உட்கார இடம் கொடுப்பதையே, ( அந்த இடத்துல இன்னொரு பீசை பார்த்துருப்பேன்… எனும் வெறியோடு… ) பெரும் இழப்பாக சித்தரிக்கிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனிய கொள்கையால் விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை போண்டியாக்கி அவர்களிடமிருந்து பிடுங்கிய இடத்தில் கல்லாவைத் திறந்து உட்கார்ந்திருக்கும் இந்த கொள்ளைக் கும்பல் ஏதோ மக்களுக்கு பிச்சை போடுவது போல பேசுவதும், பீசை வைத்து குழந்தைகளை கொல்லும் இந்த பயங்கரவாதிகளுக்கு அரசு பணிந்து போவதும் ஏதோ கொடுக்கல் வாங்கல் உறவினால் மட்டும் அல்ல.

கல்வி உரிமை
தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

உலகவர்த்தக கழகத்தின் ஆணைப்படி, கல்வி மட்டும் அல்ல, தண்ணீர், மருத்துவம், போக்குவரவு எந்த சேவையையும் இனி மக்களுக்கு காசுக்கு மட்டுந்தான் வழங்கவேண்டும், அரசு மானியம், இலவசம் என்பதையெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். தனியார், வெளியார் முதலாளிக்கு தங்கு தடையின்றி அனைத்து சேவை, தொழில்களை திறந்துவிடவேண்டும் என்ற அரசு கொள்கையின் அடிப்படையில்தான் இத்தனை பயங்கரங்களும் அரங்கேறி வருகின்றன. தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

தொலைக்காட்சி விவாதத்தில் (சன் நியூஸ்) வெங்கடாஜலம் என்ற கல்வி முதலாளி மக்களுக்கு கல்வி இலவசம் என்ற விவாதமே கூடாது. பேச்சுக்கே இடமில்லை, போய் அரசு பள்ளியைத் திற, ஏன் எங்ககிட்ட வார என்று பகிரங்கமாகவே தனது வர்க்கத் திமிரை காட்டுகிறார். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! “இவ்வளவு சிரமப்பட்டுட்டு, நஷ்டப்பட்டுட்டு உன்னை எவன் பள்ளிக்கூடம் நடத்த சொன்னான்? போய் பேசாமல் மசாஜ் சென்டர் வச்சி மகராஜனா பெரிய இடத்து கால் கைய புடிச்சு பொழச்சுக்க! எல்லா பள்ளிக் கூடத்தையும் அரசே ஏற்று நடத்தட்டும்” என்கிறோம். இன்னொரு வெள்ளுடை கொள்ளையன் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன். அங்குதான் ஆபாச படம் ஓட்டுகிறார் என்றால், இந்த விசயத்திலும் ஆபாச பாடம் நடத்துகிறார். பெத்த பிள்ளைக்கு, படிக்க செலவு பண்ண முடியாதுங்குறான், போய் சாராயக் கடைல குடிக்கிறான், என மக்களை மிகவும் இழிவுபடுத்தி தங்கள் கொள்ளைக்கு நியாயம் பேசுகிறார்.

குவார்ட்டர், ஆஃப், ஃபுல், லுன்னு அது அதற்கு ஒரு ரேட் வச்சி ஓட்டுற மாதிரி எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஃபஸ்ட்டு, என்று வகுப்புக்கு ஏற்ற ரேட்டு வச்சி கல்வியை சரக்காய் ஓட்டும் இந்த கும்பல் மக்களுக்கு புத்தி சொல்ல கிளம்பிவிட்டது. நீ சட்டப்படி ஸ்டெடியா நில்லுடான்னா, அவன குடிக்கிறத நிறுத்தச் சொல் என்பது என்ன யோக்கியதை? உண்மையில் டாஸ்மாக் போதையை விட ஆபத்தானது, இந்த தனியார்பள்ளி போதைதான், தண்ணியடிப்பவனுக்கு விடிந்த பிறகாவது தெளிந்து விடுகிறது, தனியார்பள்ளியில் விழுந்தவனுக்கு கடைசி வரை தெளிவதில்லை, காசை கடைசி வரை இழந்து கறிக்கோழி ஆவதுதான் மிச்சம், அரசு பள்ளி சரி இல்லை என்றால், அதை சரியாக்க போராட வேண்டுமே ஒழிய, தரமாக இருப்பது போன்று ஃபிலிம் காட்டும் எதிர்த்த வீட்டுக்காரனை அப்பா என்று அழைக்க முடியுமா?

தனியார் மோகம்
தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான்.

தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான். சென்ற ஆண்டு நெல்லையில் ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி, மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். அவரது அப்பா ஒரு பாய் வியாபாரி, தினமும் அவர் படிக்கும் பள்ளியைச் சுற்றி தன் தந்தை பாய், பாய் என கூவி விற்கும் குரல், என் குடும்பத்தின் நிலையை மாற்ற எனக்குள் வைராக்கியமாய் வளர்ந்து, எனது சோர்வை, பசியை மறந்து இந்த அளவுக்கு படித்து தேர்ச்சியாகி முதலாவதாக வர வைத்தது என்று சொன்னார். இங்கும் கூட வர்க்க உணர்வுதான் கல்வி உணர்வை விழிப்படைய வைத்திருக்கிறது.

இந்த உழைக்கும் வர்க்க உணர்விலிருந்து கல்வி அனைவருக்கும் பொது உரிமை என போராடினால் நம்மாலும் சாதிக்க முடியும். இரண்டு ஆண்டு குறிப்பிட்ட சதவித லாபத்தை இழப்பதற்கே முதலாளிகளுக்கு இவ்வளவு வெறி வருகிறதென்றால், சாகும் வரை தனியார் முதலாளிகளுக்கு சகல வளங்களையும், உரிமைகளையும் இழக்கும் நமக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும்?

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவும், பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கவும் போராட்டத்தை துவக்க வேண்டும். கல்விக்கு எதுக்குடா காசு? குடிக்க கடை திறக்கும் அரசே படிக்க பள்ளியை திற என வீதியில் இறங்கவேண்டும். எதுக்கு 25 சதவீத பிச்சை, பித்தலாட்டம்! 100 சதவீதம் உயர்கல்வி வரை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் முழு உரிமையாக இருக்க வேண்டும், சமுதாயத்தின் சகல சொத்துக்கள், வளங்களை தனியாரும், பன்னாட்டு மூலதனம் கைப்பற்றும் போது, மக்களுக்கு கல்வி உட்பட அனைத்து சேவைகளையும் முழு உரிமையாக்க மக்களுக்கான அதிகார அமைப்புகளை உருவாக்கினால்தான் இனி எஃபார் ஆப்பிள் என ஏங்குவதற்கு பதில் அ ஃபார் அனைத்தும் மக்களுக்கே என்று இந்த அரசுக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க முடியும்.

எல்.கே.ஜி.க்கு ஒரு லட்சமா? என பீதியில் உறைவதை விட, எல்லா பள்ளிகளையும் அரசுடைமையாக்கு என வீதியில் இறங்கினால்தான்… பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வழியை காட்ட முடியும்! கொள்ளையடிப்பவனுக்கு டொனேசன் கொடுக்க கியூவில் நிற்பதை விட, உரிமைக்காக போராட ரோட்டில் நிற்பது ஒன்றும் கேவலமானதல்ல!

–  துரை.சண்முகம்

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

1

தேவாரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டு கொள்ளாமல் கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு துவங்கப்பட்டது.

இது ஒரு ஆராய்ச்சி படிப்புதான். இந்த நியூட்ரினோ கதிர்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்ற கருத்து அறிவியல் அறிஞர்களாலும் , அதிமேதாவிகளாலும் திணிக்கப்பட்டது. அதனை மீறி எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல் துறை வழக்குப் போடுவதாக மிரட்டி அடக்கியது.

ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்படுள்ள இந்த திட்டம் எப்படி செயல்படவிருக்கிறது என்று யாருக்குமே தெரியாத புதிராகவே இருக்கிறது. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த இதுவரை இந்த அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனால் அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் . அவருடைய கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் ஆராய்ச்சி மற்றும் அணுக்கழிவுகள் கொட்டுவது என்ற பேரில் இது சார்ந்த துறையினர் உரிமம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்ற உண்மை நம் உதிரத்தை உறைய வைக்கிறது.

இன்று இந்த பகுதியில் விவசாய நிலங்கள் எல்லாம் முகம் தெரியாத நபர்களால் இரகசியமாக வாங்கி குவிக்கப்படுகிறது. அண்மையில் இந்த பகுதியில் பணியாற்றி வரும் மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கு நியூட்ரினோ அலவன்ஸ் என்ற சிறப்பு சலுகை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, மக்கள் எந்த ஆதரவோ, ஆலோசனையோ, ஆறுதலோ கூட சொல்ல ஆளின்றி அனாதைகளாக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

சாக்குளத்து மெட்டு, இராமக்கல் மெட்டுச் சாலை போன்றவை இந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வகை செய்பவை. குறைந்த அளவு பணம் செலவிட்டாலே போதுமானது , ஆனால் மலை வளம் கெட்டுவிடும் , மிருகங்களுக்கு பாதுகாப்பு போய்விடும் என்று கதைகள் பல சொன்ன அரசாங்கம்தான் பல மைல்கள் மலையை குடைகிறது. மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள் என்ற உண்மையை நிருபிக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த திட்டத்தில் இந்திய அணுசக்தி கழகம் அங்கம் வகிக்கிறது . அரை குறை விவசாயத்தையும் அழித்து இந்த பகுதியிலிருந்து யாரோ சில முதலாளிகளுக்கு மட்டும் பயன் தரக்கூடிய நியூட்ரினோ திட்டத்தின் உண்மை நிலவரத்தை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயனளிக்காத திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், விவசாயிகளையும் , விவசாயத்தையும் காக்கும் படியான ஆக்கப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும்.

இதற்காக உழைப்பாளிகளின் உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடி வெற்றி பெற்ற, சரித்திரப்புகழ் பெற்ற தொழிலாளர் தினமான மே 1ஆம் நாளில் சபதமேற்போம் என்று அறைகூவல் விடப்பட்டது.

வாகனப்பேரணி

மே நாள் காலை 10.30 மணிக்கு மே நாள் வாகனப் பேரணி தேனிமாவட்டம் ராசிங்காபுரம் கிராமத்தில் இருந்து தொடங்கியது. பேரணியில் தேனி , மதுரை மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டார்கள். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பேரணியை தேவாரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் கே. பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். பேரணி திம்மி நாயக்கன் பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் , புதூர் , டி. புதுப்பட்டி, தம்மிநாயக்கன் பட்டி, மரவபட்டி, எரணம் பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம் பட்டி, ரோட்டுப்பட்டி, வழியாக தேவாரம் வந்தடைந்த்து. பேரணி சென்ற இடங்களில் மக்கள் மத்தியில் நியூட்ரினோ திட்டம் பற்றி மக்கள் ம்த்தியில் தோழர்கள் விளக்கஉரையாற்றினார்கள். கடுமையான வெயிலிலும் தோழர்கள் உற்சாகமாக பயணமானார்கள். மக்கள் மத்தியில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

மாலை தேவாரம் நகரத்தின் பல்வேறு வீதிகள் வழியாக பேரணி நடத்தப்பட்டது . தேவாரம் பேருந்து நிலையத்தில் உசிலை வட்டார விவிமு செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் செங்கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு பேரணி ஆர்பாட்டத் திடலை வந்தடைந்த்து.

ஆர்ப்பாட்டம்

மாலை 5,30 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது, ஆர்ப்பாட்டத்திற்கு தேவாரம் பகுதி விவிமு செயற்குழு உறுப்பினர் தோழர் கே. முருகன் தலைமை தாங்கினார். தேவாரம் ஏரியாச் செயலாளர் தோழர் பாக்கியராஜ், உசிலைவட்டாரச் செயலாளர் தோழர். குருசாமி, தேனி மாவட்டச் செயலாளர் தோழர் . பா.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மதுரை மாவட்ட மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.லயோனல் அந்தோணிராஜ்  கண்டனஉரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் குறித்த நாடகம் நடத்தப்பட்டது.

நான்கு ஆண்டுகளாக எந்த சலனமும் இல்லாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து நடந்துவரும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு தொடக்கமாக ஆர்ப்பாட்டம் இருந்த்து. தோழர்கள் பிரச்சாரம் செய்த கிராமங்களில் உள்ள மக்கள் தோழர்களின் கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
தேனி – மதுரை மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி

கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

3

திகாலையில் பரபரப்பாக இயங்கும் தமிழகத்தின் பேருந்து, ரயில் நிலையங்களில் சரிவரத் தூங்காத சிவந்த கண்களோடு அவசரஅவசரமாகத் தாங்கள் வேலை செயுமிடத்திற்குப் பயணிக்கும் அவர்களின் முகங்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமானவைதான். கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய, சிறிய நகரங்களில் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வானுயர் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், பிரம்மாண்ட மெட்ரோ ரயில், விமான நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளில் அற்பக்கூலிக்குப் பணியாற்றி வருவதும், இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவிதமான தொழிற்சங்க உரிமையும் இன்றி மிகக் கொடூரமான முறையில் சுரண்டப்பட்டு வருவதும் பார்த்துபார்த்துப் பழகிப் போவிட்ட விசயமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் புலம்பெயர்ந்த ஆண் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், பெண்கள் அதையும் தாண்டி விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமையும் நடந்திருப்பது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெம்ஸ் அக்ரோ கொத்தடிமைகள்
நாமக்கல் – மணிக்கட்டுப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ நிறுவனத்தில் கொத்தடிமைகளாக தள்ளப்பட்டு, பின் மீட்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சத்தீஸ்கரைச் சேர்ந்த இடைத்தரகன் டிஜுராம் கொர்ரம், அம்மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு பழங்குடிப் பெண்களை ரயில் மூலம் திருப்பதிக்குச் செல்லலாம் என ஆசை காட்டி நாமக்கல்லிற்குக் கடத்தி வந்து, மணிக்கட்டிப்புதூரிலுள்ள ஜெம்ஸ் அக்ரோ என்கிற காய்கறிகளைப் பதனிட்டு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமையாக விற்றுச் சென்றுவிட்டான்.

ராஜேஸ்வரி சலம்
ஜெம்ஸ் அக்ரோ ஆலையில் கொத்தடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த பழங்குடியினப் பெண்களை சத்தீஸ்கர் மாநில அரசு உதவியோடு மீட்ட ராஜேஸ்வரி சலம்.

இவர்களைப் போன்றே பல சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் அந்நிறுவனத்தில் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். இப்பெண்கள் காய்கறிகளைப் பதனிட அசிடிக் அமிலம் அடங்கிய வினிகரில் கைகளை நனைத்தபடி ஒருநாளுக்கு 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரிப்பு, ஒவ்வாமை போன்ற கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சோறு, தேங்காய் எண்ணெய், குளியல் சோப்பு மற்றும் மாதச்சம்பளமாக 100 ரூபாய் கொடுத்து, இப்பழங்குடியினப் பெண்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டியிருக்கிறது, ஜெம்ஸ் அக்ரோ. அவர்கள் பல நாட்களில் நள்ளிரவில் எழுப்பப்பட்டு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து நின்றால் தனியறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, முதலாளிகளாலும் அவர்களின் கங்காணிகளாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாய் வதைக்கப்படுவதை உணர்ந்தாலும், வெளியே தப்பிக்க முடியாதபடி, ஒற்றைக் கழிப்பறை கொண்ட அறைகளில் அவர்களனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறார் அந்த பன்னிரெண்டு பெண்களில் ஒருவரான ராஜேஷ்வரி சலம். அக்கொத்தடிமைத் தொழிற்சாலையில் இருந்து தப்பி தன் சொந்த மாநிலமான சத்தீஸ்கரை அடைந்த சலம், அம்மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்து, தன்னுடன் வேலை செய்த 60 பழங்குடிப் பெண்களையும் அக்கொத்தடிமை முகாமிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இச்சம்பவம் வெளியே வந்த சமயத்தில், ஈரோட்டிலுள்ள ஒரு தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த 24 சத்தீஸ்கர் பழங்குடிப் பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், கடந்த பிப்ரவரியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 117 பழங்குடியினர் ஜம்முவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 48 குழந்தைகள் உட்பட 23 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் கடத்தல்காரர்களால், பனிரெண்டு லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளனர். குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுக்கப்பட்டு இவர்கள் ஜம்முவிலுள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர். காலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 3000-க்கும் அதிகமான செங்கற்களை அறுக்கும் இவர்களுக்கு, வாரச்சம்பளமாக குடும்பத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இயற்கை உபாதைக்குச் செல்லும்பொழுது கூட அங்குள்ளவர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுற்ற குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக்கூட இவர்களை அனுமதிக்காமல், சிறைக் கைதிகளைவிடக் கேவலமாக நடத்தியிருக்கின்றனர் செங்கல் சூளை முதலாளிகள். கடைசியில் அவர்களுடன் இருந்த 31 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ், அங்கிருந்து தப்பித்து தன்னார்வ நிறுவனங்களுக்குத் தகவல் தந்த பிறகே அம்மக்கள் மீட்கப்பட்டனர்.

11-c-1

கொத்தடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், போலீசு கண்காணிப்பாளர், வட்டாட்சியர், தொழிலாளர் நல ஆணையர் – என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இருந்தபோதும், அவர்களின் கண்களுக்குக் கீழ்தான் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது. இக்கும்பல் தங்களின் அதிகாரத்தை முதலாளிகளிடமிருந்து இலஞ்சம் வாங்குவதற்குப் பயன்படுத்துகிறதேயொழிய, கொத்தடிமைகளாகச் சுரண்டப்படும் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு ஒருக்காலும் பயன்படுத்துவதில்லை என்பதை இச்சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

வெளியே தெரிந்த செய்திகளுக்கு அப்பால், சத்தீஸ்கரின் பழங்குடியினப் பெண்கள் மும்பை, டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் தென்பகுதிகளில் உள்ள பெருநகரங்களுக்குக் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதும் நடந்து வருகிறது. திரையில் தொடர்ச்சியாக மாறிக் கொண்டேயிருக்கும் பிம்பங்கள் போல, இம்மக்களது வேலை மற்றும் வாழ்நிலையில் வலுக்கட்டாயமாக பல மாற்றங்கள் அடுத்தடுத்து திணிக்கப்பட்டதுதான் அவர்களின் அவல நிலை அனைத்திற்கும் காரணமாகும். கார்ப்பரேட் பகற்கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் தலைவிரித்தாடும் சத்தீஸ்கரில், ‘நாட்டின் வளர்ச்சி’ என்கிற பெயரில் பல கொடூரங்கள் இம்மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. இவர்களின் பூர்வீக வாழ்விடமான மலைகளில் உள்ள அரிய கனிம வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுப்பதற்கு வசதியாக, இம்மக்கள் வலுக்கட்டாயமாகத் தமது சொந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். இந்த கார்ப்பரேட் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது ‘மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் மீது “காட்டுவேட்டை” என்ற பெயரில் அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வாழ்வாதாரங்களை இழந்து அகதி நிலைக்குத் தள்ளப்படும் பழங்குடியின மக்களை ஆசை காட்டிக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக விற்பது ஒரு தொழிலாகவே அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.

11-c-2

சத்தீஸ்கரில் மட்டும் இதுவரை 9,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை 90,000- யும் தாண்டும் என அங்குள்ள சமூகநல அமைப்புகள் கூறுகின்றன. குறிப்பாக பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர், ராய்காட், பலாவ்டா பஜார், ஜன்ஞ்கீர் சம்பா, ஜக்தல்பூர் போன்ற இடங்களில் ஆள்கடத்தல் கோலோச்சுவதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. கடந்த நான்காண்டுகளில் நாராயண்பூர் மற்றும் கன்கெர் மாவட்டங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். ரூபாய் 5,000-லிருந்து 50,000 வரை விற்கப்படும் இப்பெண்கள் பெருநகரங்களில் உள்ள புதுப் பணக்காரர்களின் வீடுகளில் வேலையாட்களாகவும், தொழிற்சாலைகளில் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாகவும், பல சமயங்களில் விபச்சாரத்திலும் பலவந்தமாகத் தள்ளப்படுகிறார்கள்.

தமிழகம் உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் வேலை தேடி புலம் பெயரும் இத்தொழிலாளர்கள் இத்தகயை கொடிய அவலநிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது, அத்தகைய அவல நிலையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தமிழர்களின் தாயகமாக தமிழ்நாடு நீடிக்க அதிக எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கக் கூடாது என்றும் இனவெறியைத் தூண்டிவிடும் போராட்டங்களை நடத்துகின்றன, த.தே.பொ.க., நாம் தமிழர் போன்ற தமிழினவாத அமைப்புகள். மகாராஷ்டிராவில் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மராட்டியம் மராட்டியர்களுக்கே சொந்தம் எனக்கூறி, இம்மக்களை விரட்டக் கோருகின்றனர். தங்கள் வாழ்விடங்களிலிருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக விற்கப்பட்டு அவல வாழ்வில் வதைபடும் இம்மக்களை எதிரிகளாகச் சித்தரிப்பது வக்கிரத்தின் உச்சமாகும்.

11-c-3

அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க கருப்பின மக்கள் நவீன அமெரிக்காவை உருவாக்கியதைப் போல, இன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்குபவர்கள் ஒரிசா, பீகார், சத்தீஸ்கர் போன்ற ‘வளர்ச்சி’யற்ற மாநிலங்களிலிருந்து வெளியேறிவரும் தொழிலாளர்கள்தான். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம் – தாராளமயம் நாடெங்கும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைத்தான் உருவாக்கியிருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான் தொழிலாளர்களை அகதிகளாகச் சிதறடிக்கிறது. முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டலுக்கு இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி அவசியமான ஒன்றாகும். எனவே, சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர் கொத்தடிமைகளாக விற்கப்படுவதையும், விபச்சாரத்தில் தள்ளப்படுவதையும் கிரிமினல் ஆள்கடத்தல் கும்பலின் நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. வேலைவாய்ப்பு, முன்னேற்றம், வளர்ச்சி – என ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் வாப்பந்தல் போடுகிறார்களே, அந்த மோசடியின் விளைவுகள்தான் இவை.

– அன்பு
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________