privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?

முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?

-

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும், இதற்கெதிராக கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள சிறப்புச் சட்டம் செல்லாது; சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு தான் சொந்தம் என்கிற கேரள அரசின் வாதத்தை உச்சநீதி மன்றம் தவறானது என்று நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு நதி கேரளத்தில் தோன்றினாலும் (நீதிபதிகள் கூறியிருப்பது போல கேரளாவில் தோன்றுகிறது என்பது தவறு, பெரியாறு தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள சிவகிரியில் தோன்றுகிறது, முல்லையாறு கேரள பகுதியில் தோன்றுகிறது) அதன் பாதை தமிழகத்தில் சுமார் 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வந்து செல்வதால், அதை மாநிலங்களுக்கிடையே ஓடும் நதி என்று தான் கருத முடியும். எனவே, முல்லைப்பெரியாறு நதியை கேரளா மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழகத்துக்கும் நதியில் சம உரிமை உண்டு என்று கூறி, முல்லைப்பெரியாறு கேரளாவிற்கு தான் சொந்தம் என்பதற்கு கேரள அரசு வைத்த வாதங்கள் அனைத்தையும் நிராகரித்துள்ளது.

புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அணையின் உறுதியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அணை வலுவுடனும், பாதுகாப்புடனும் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளதால் புதிய அணை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2006-ல் 152 அடி நீரைத்தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த போது அதை முறியடிப்பதற்காக அப்போது ஆட்சியிலிருந்த சி.பி.எம் போலிக்கம்யூனிஸ்டு அரசு, உடனடியாக சட்டசபையை கூட்டி எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு ‘கேரள நீர்ப்பாசனம், பராமரிப்புச் சட்டம்’ என்கிற சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றி உச்சநீதி மன்றத் தீர்ப்பை முறியடித்தது. தற்போது அந்த சட்டம் சட்டவிரோதமானது என்றும், அந்த சட்டத்தை எந்த வடிவிலும் செயல்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் தலைமையில் மூவர் குழு ஒன்றையும் உச்சநீதி மன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு மத்திய நீர் வள ஆணையப் பிரதிநிதி தலைவராக இருப்பார். குழு பிரதிநிதிகளாக தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்த இருவர் இருப்பர். இக்குழுவிற்கான அலுவலகம் எங்கே அமைய வேண்டும் என்பதை கேரள அரசு தீர்மானிக்கும். குழுவின் முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தான் தீர்ப்பின் முழு விவரம். இந்த தீர்ப்பை கண்டித்து கேரளாவில் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று செல்லவில்லை. தீர்ப்பை எதிர்த்து வரும் 30ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரளாவில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று சி.பி.எம் கட்சி கூறியுள்ளது. ஒருவேளை சகாக்களுக்கு வர்க்கக்கண்ணோட்டம் வந்துவிட்டதோ என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த பிரச்னைக்காக அவர்கள் தனி போராட்டம் நடத்தப்போகிறார்களாம்.

போலிக்கம்யூனிஸ்டு தலைவர் அச்சுதானந்தன் இப்போதே அதற்கான பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். அணை உடைந்தால் 35 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும். இந்த வழக்கில் கேரள அரசு சரியாக வாதிடாததே தோல்விக்குக் காரணம். அணை பலவீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்க கேரள அரசு தவறிவிட்டது என்று பயபீதியூட்டி இனவெறியை தூண்டும் வேலையை துவங்கியுள்ளார்.

தீர்ப்பு குறித்து தமிழகத்தில் அனைவரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். தேனி மாவட்டத்தில் மக்கள் இணிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிக் கொண்டிருகின்றனர். தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்கள் அனைவரும் வெற்றி வெற்றி என்று குதிக்கின்றனர். கேரள போலிக்கம்யூனிஸ்டுகள் இனவெறியை தூண்டிவிடுவதற்கு தயாராகி வருகின்றனர். தமிழக போலிகம்யூனிஸ்டு தலைவர் ஜி.ராமகிருஷ்ணனோ நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி என்று அறிக்கை விடுகிறார். என்ன ஒரு பிழைப்பு இது, இதற்கு வைகோவே பரவாயில்லை போலிருக்கிறது.

இப்படி அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ‘புரட்சித் தலைவி’ இந்த தீர்ப்பை தமிழக மக்களுக்கே அர்ப்பனித்துவிட்டார். ஆனால் நாம் தலையில் வைத்து கூத்தாடுமளவிற்கு இது ஒன்றும் புரட்சிகரமான தீர்ப்போ, இதுவரை வழங்கப்படாத தீர்ப்போ அல்ல. 2006 ஆம் ஆண்டிலேயே 142 அடி வரை நீரைத்தேக்கலாம் என்றும், பேபி அணையில் சில மராமத்துகளை செய்த பிறகு 152 அடி வரைக்கும் கூட தேக்கிக்கொள்ளலாம் என்றும் இதே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்த தீர்ப்பை கேரள அரசு மயிரளவிற்கு கூட மதிக்கவில்லை. தனிச்சட்டத்தை இயற்றி முறியடித்தது.

கேரள அரசின் தனிச்சட்டம் சட்டவிரோதமானது, இரு மாநில அரசுகளுக்கு சொந்தமான அணைக்கு இந்த சட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்தது. 2006 ஆம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசும் ஒரு வழக்கைத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பை கேரள அரசு மலம் துடைக்கும் காகிதமாக பயன்படுத்தியதை மறந்துவிட்ட உச்சநீதி மன்றம் கேரள அரசின் வழக்கை புதிய வழக்கை போல எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியது.

அதன் பிறகு 2006 நவம்பரில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கடற்படை சிப்பாய்களை அனுப்பி அணையின் வலிமையை சோதித்ததுடன், அணை உடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஒத்திகையும் நடத்தினார். பிறகு கேரள அரசு ரூர்கி ஐ.ஐ.டி வல்லுனர்களை வைத்து அணை பலவீனமாக இருக்கிறது உடனடியாக உடைக்க வேண்டும் என்கிற பரிந்துரையை பெற்றது. இவ்வளவு பிறகும் கேரளாவுடன் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை கூறியது. எனவே 2006 ஆம் ஆண்டும் உச்சநீதி மன்றம் இதே போன்ற ஒரு தீர்ப்பை தான் வழங்கியது. அதிலிருந்து சில அமசங்களில் மட்டும் தான் இந்த தீர்ப்பு வேறுபட்டுள்ளது. ஆனால் 2006 முடிந்து இப்போது எட்டாண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்திற்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

1979 முதலே இப்படித்தான் அணை உடையப்போகிறது, அணை உடையப்போகிறது என்று பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரத்தை தூண்டி விட்டுக்கொண்டு, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தண்ணீரை விட மறுத்து வருகிறது கேரள அரசு. நீதிமன்றமும் அதை கண்டுகொள்ளாமல் ஒவ்வொரு முறையும் புதிய புதிய வழக்குகளை விசாரிப்பதை போல விசாரித்துக்கொண்டிருக்கிறது. எனவே இதற்கு முன்பு நடந்ததை போல இல்லாமல், இந்த தீர்ப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றால் நாம் போராட வேண்டும், நாம் போராடாமல் இது அமலாகாது.

தீர்ப்பில் கூறியுள்ளவற்றை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்கான அம்சங்கள் அந்த தீர்ப்பிலேயே இருக்கின்றன. ஒன்று, முல்லைப்பெரியாறு கேரளாவில் தோன்றுகிறது என்று கூறியிருப்பது. இது தவறு, நீதிமன்றத்தின் இந்த தவறான கருத்து ஆறு நம்முடையது தான் என்கிற கருத்தை கேரள மக்களிடம் மேலும் வலுப்படுத்தும். இரண்டு, மூவர் குழுவை மத்திய அரசின் தலைமையிலும் அதில் கேரள அரசை பிரதிநிதியாகவும் சேர்த்திருப்பது. தீர்ப்பை அமுல்படுத்த விடாமல் தடுப்பதற்கு இதுவே போதுமானது. இந்த குழு தமிழக பொறியாளர்களையும் பிரதிநிதிகளையும் கொண்டதாக மட்டும் தான் இருக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கோ, கேரள அரசுக்கோ வேலையில்லை.

மூன்றாவது, மூவர் குழுவுக்கான அலுவலகத்தை எங்கே அமைப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமையை கேரளாவிற்கு வழங்கியிருப்பது. இந்த விசயத்தில் கேரள அரசு வேண்டுமென்றே அலைக்கழிக்கும் இழுத்தடிக்கும். அந்த உரிமை தமிழகத்திற்கு வேண்டும். நான்காவது மூவர் குழுவின் முழு செலவினங்களையும் தமிழக மக்கள் தலையிலேயே கட்டியிருப்பது. மூவர் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதி தலைவர், கேரள அரசின் பிரதிநிதியாக ஒருவர், தமிழக அரசின் பிரதிநிதியாக ஒருவர் என்று மூன்று அரசுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால் செலவை மூன்று அரசுகளும் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்த செலவையும் தமிழகத்தின் தலையிலேயே சுமத்துவது எப்படி சரி?

எனவே இது ஒரு முழுமையான தீர்ப்பு அல்ல. தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல, ஆனால் நடக்காத காரியமும் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மூவர் குழு அப்படியே முழுமையாக அமுலாக்கிவிடும் என்று நாம் கனவு கண்டுகொண்டிருந்தால் இன்னும் ஒரு ஐந்தாண்டுகள் கழித்து இதைவிட புரட்சிகரமான ஒரு தீர்ப்பை வழங்க உச்சநீதி மன்றம் தயாராக இருக்கிறது. உச்சநீதி மன்றம் இது போல எத்தனை தீர்ப்புகளை வேண்டுமானாலும் வழங்கும் ஆனால் தண்ணீர் வராது. தண்ணீர் வேண்டுமானால் அது போராட்டத்திலிருந்து தான் கிடைக்கும்.