Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 673

தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!

2

சென்னை மாநகர போலீசு எல்லைக்குட்பட்ட நீலாங்கரை (ஜெ-8) போலீசு நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளரான புஷ்பராஜ், வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகரில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதற்காக, சந்தேகத்தின் பேரில் தமீம் அன்சாரி என்ற 14வயது சிறுவனை சனவரி 7-ஆம் தேதியன்று இரவில் பிடித்துவந்து நீலாங்கரை போலீசு நிலையத்தில் மிருகத்தனமாக வதைத்துள்ளான். தந்தையை இழந்து படிக்க வசதியற்ற நிலையில் விதவைத்தாயுடன் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த அந்த ஏழைச் சிறுவன், தனக்கும் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கெஞ்சியும்கூட அவனைச் சட்டவிரோதமாக கொட்டடியில் அடைத்து வைத்துள்ளான். பின்னர் 8-ஆம் தேதியன்று பிற்பகலில் அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான். இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அச்சிறுவன், பின்னர் போலீசாரால் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டுள்ளான்.

தமீம் அன்சாரி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமீம் அன்சாரி.

போலீசு நிலையத்திலேயே தண்டனை வழங்கப்படுவது நியாயம் என்றால், வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களும் எதற்காக? தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எதற்காக? போலீசு பயங்கரத்தைப் பறைசாற்றும் இச்சட்டவிரோதக் கொடூரத்தைக் கண்ட பின்னரும், தானே முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய நீதித்துறையானது இதனை அலட்சியப்படுத்தியுள்ளது. அச்சிறுவனின் தாயாரான சபீனா பானு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னர்தான், அச்சிறுவனுக்கு அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், வருவாய் கோட்டாட்சியரை விசாரணை நடத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், அச்சிறுவனின் குடும்பத்துக்குப் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படுமென்றும் ஜெயலலிதாவின் அறிவிப்பைப் பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள், அதற்குமேல் இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனமோ, முக்கியத்துவமோ தராமல் அலட்சியப்படுத்துகின்றன. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உள்ளிட்டு சமூக அமைப்புகள் அனைத்தும் செயலற்றுக் கிடக்கின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிரான போராட்டங்கள் எதுவுமின்றி சமூகம் உணர்ச்சியற்று மரத்துப்போக் கிடக்கிறது.

கொலைவெறிபிடித்த போலீசு ஆய்வாளர் புஷ்பராஜ் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செயப்பட்டுள்ளானே தவிர, அவன் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செயப்படாமல் பிணையில் வெளிவரும் வகையில் – கவனக்குறைவால் துப்பாக்கியின் குண்டு வெடித்துவிட்டதாக வழக்கு போடப்பட்டுள்ளது. போலீசு வெறியன் புஷ்பராஜ், கடந்த 2011-ஆம் ஆண்டில் மெரினா போலீசு நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தபோது, திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் இழுத்துவரப்பட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தியபோதும், இதேபோல் தொடையில் சுட்டுள்ளான். பின்னர் இந்த விவகாரம் போலீசு அதிகாரிகளின் துணையுடன் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

சாமானியனுக்குப் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு, தான் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற திமிரோடு போலீசு நடந்து கொள்வதையும், சட்டத்துக்கு மேலான தனிவகை சாதியாக இருந்து கொண்டு சமூகத்தையே அச்சுறுத்தி வருவதையும் இத்தகைய கொடுஞ்செயல்கள் நிரூபித்துக் காட்டவில்லையா? போலீசின் கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை உழைக்கும் மக்கள் வாய் பொத்தி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

ஒருக்காலும் கூடாது. போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகப் பொதுக்கருத்தையும் போராட்டங்களையும் கட்டியமைப்பது உழைக்கும் மக்களின் உடனடி அவசியமாகும். இலஞ்ச ஊழல், அத்துமீறல், அடாவடி, அட்டூழியங்களில் ஈடுபடும் போலீசு வெறியர்களின் படங்களைப் பொது இடங்களில் பகிரங்கமாக வெளியிட்டு அக்கும்பலை அவமானப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களிடம் அத்துமீறினால் உடனடியாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை உருவாக்கி அக்கும்பலின் அதிகாரக் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.

– குமார்.
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

44

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு.

முருகன், சாந்தன், பேரறிவாளன்
முருகன், சாந்தன், பேரறிவாளன்

சில வாரங்களுக்கு முன்னர்தான் இதே போன்றதொரு வழக்கில், கருணை மனு மீதான தாமதத்தை ஏற்று வீரப்பன் வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர்களின் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. அப்போதே மூவர் தூக்கிற்கும் இதே மாதிரியான தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வழக்கிலும் மத்திய அரசு “தூக்கை ரத்து செய்யக்கூடாது, அதற்கு கருணை மனு முடிவு தாமதத்தை ஒரு காரணமாக ஏற்க முடியாது” என்றே வாதிட்டிருந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் “கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கருப்பையா மூப்பனார் அபிமானி ஒருவர் தொடுத்த வழக்கையடுத்து 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை எதிர்த்து கடுமையாக வாதிட்ட மத்திய அரசு தரப்பு, “ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல” என்றும், “முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதற்கு இவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றும், “இவர்கள் சிறையில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றும், “ஆட்சி மாற்றம், குடியரசுத் தலைவர் மாற்றம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டது, இதற்காக தண்டனையை குறைக்கக் கூடாது” என்றும் வாதிட்டது.

இந்த வாதத்தை நிராகரித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “கால தாமதம் ஏற்பட்டதற்கு அரசு காரணம் இல்லை என்பது நிரூபிக்கப்படவில்லை” என்றும், “நீண்ட காலம் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரூபிக்கத் தேவையில்லை” என்றும் கூறியிருக்கின்றனர். மத்திய அரசு இந்த வழக்கில் எப்படியாவது கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற முனைப்புடனே வாதங்களை வைத்தது. நீதியரசர் சதாசிவத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் அப்சல் குரு மீதான கருணை மனுவை ரத்து செய்து, அவரது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர கதியில் தூக்கிட்டு கொன்றதற்கு காரணமாக இருந்தார்.

காங்கிரசு கும்பலைப் பொறுத்தவரை அப்சல் குரு எனும் அப்பாவியை தூக்கிலிட்டு முழு காஷ்மீர் மக்களது எதிர்ப்பையும் துச்சமென புறந்தள்ளியதைப் பார்த்தால் மூவர் தூக்கு குறித்தும் அவர்களது கொலைகார மனநிலையை புரிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் காஷ்மீரை விட தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் அதிகம், அதனால் காங்கிரசு அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை விட ஒட்டு மொத்த இந்தியாவின் தொகுதிகள் அதிகம் என்பதே பதில்.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

அதாவது காஷ்மீரின் நியாயம் குறித்து தமிழகத்திற்கு தெரியாதது போல, தமிழகம் குரல் கொடுக்காதது போல தமிழகத்தின் மூவர் தூக்கு குறித்த நியாயம் ஏனைய இந்திய மக்களுக்கு தெரியாது. இது பொதுவில் தேசிய இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்பதால் உருவான நிலை அல்ல. இந்தியா முழுவதும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பார்ப்பனியம் சார்ந்த ‘தேசபக்தி’ மதிப்பீடுகளிலிருந்து மக்களிடையே இந்த பாராமுகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஈழ ஆதரவு என்பதை புலிகள் – பயங்கரவாத ஆதரவு என்றும், காஷ்மீர் மக்கள் ஆதரவை பாகிஸ்தான் சதி என்றும், வடகிழக்கு மக்களின் நியாயமான போராட்டத்தை சீன சதி என்றும்தான் ஊடகங்களும், கார்ப்பரேட் தேசிய கட்சிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே ஓதி வந்தனர்.

ஆகவே ஒரு தேசிய இனத்தின் துக்கப்படுதலால் வரும் நட்டத்தை விட இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசபக்த பூச்சாண்டி பொதுக்கருத்தின் இலாபம் அதிகம் என்பதே அவர்களது கணக்கு. இதில் காங்கிரசு, பா.ஜ.க என்ற வேறுபாடு இல்லை. அப்சல் குருவை அவசரமாக தூக்கிலிட்டது எதனால்? பா.ஜ.கவை விட நாங்கள்தான் தீவிர தேசபக்தர்கள் என்று ‘இந்துக்களிடையே’ காட்டி ஆதரவை காங்கிரஸ் அள்ள விரும்பியதே காரணம்.

ஒருவேளை மூவர் தூக்கு குறித்த வழக்கு பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தாலும் இன்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்படி வாதாடினார்களோ அப்படித்தான் பா.ஜ.க வழக்கறிஞர்களும் வாதாடியிருப்பார்கள். மேலும் ஆட்சியில் இல்லை என்றாலும் சு.சாமி, சோ இன்னபிற பா.ஜ.க நபர்கள் மூவர் தூக்கை உடன் நிறைவேற்ற வேண்டுமென்றே பேசி வந்தனர்.

எனவே இந்த வகையில் பரிசீலித்துப் பார்க்கும் போதுதான் இந்திய அரசும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின் செயல்பாடும் இருக்கும் என்பது புரிய வரும். தில்லை வழக்கில் இதே உச்சநீதிமன்றம் பார்ப்பன தீட்சிதர்களின் பொய்யான கருத்துக்கள், வாதங்களை ஆதரித்து தீர்ப்பு கொடுத்ததும் கூட இந்த அடிப்படையில்தான். அதனால்தான் மூவர் தூக்கு குறித்த தீர்ப்பிலும் அரசியல் நியாயம் ஒழிக்கப்பட்டு டெக்னிக்கல் காரணங்களே முதன்மையாக வைக்கப்படுகிறது.

மேலும், “இனிமேல் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனு மீதான முடிவுகளை எடுக்க காலக்கெடு விதிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இத்தகைய அரசியல் கைதிகளின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரித்து தூக்கு மேடையில் ஏற்றும் கொலைக்குடியரசின் செயல்பாடுகள் விரைவடைவதற்கு இது ஒரு தூண்டுதலாக அமையும். இன்று தூக்கு மேடையில் இருந்து தமிழக மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் எந்த வழக்காக இருந்தாலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கோரும் கருணை மனு, உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். அதில் மன்னிப்பு யாருக்கு, தூக்கு யாருக்கு என்பது இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களை வைத்து முடிவு செய்யப்படும்.

வேறு வகையில் சொன்னால் இதுகாறும் கருணை மனு தாமதம் என்ற வகையில் தூக்கிலிருந்து தப்பித்தவர்கள் இனி தப்பிக்க முடியாது. தமிழின ஆர்வலர்கள் போற்றும் தலைமை நீதிபதி சதாசிவம் அளித்திருக்கும் தீர்ப்பு இப்படித்தான் வேறு வகையில் நீதியைக் கொல்வதற்கும் காரணமாக இருக்கப் போகிறது. இருப்பினும் இந்த தீர்ப்பைக் கூட இந்திய ஆளும் வர்க்க அறிஞர் பெருமக்கள் சினத்துடன்தான் பார்ப்பார்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும்.

இந்த தீர்ப்பு குறித்து தேசிய-ஆங்கில ஊடகங்களில் பேசும் இந்திய அல்லது இந்துத்துவ நலன்களுக்கான அறிவாளிகள், தூக்குதண்டனைக்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தின் பாசிசத்தை வெறியுடன் கக்குவார்கள். குறிப்பாக அர்னாப்  கோஸ்வாமி எனும் அம்பி இன்றிரவு எத்தனை டெசிபலில் கத்துவார் என்பதை யாரும் அளவிடவே முடியாது.

தமிழ்நாட்டில் கூட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற காங்கிரஸ் பெருச்சாளிகளும், சோ போன்ற பா.ஜ.க பெருச்சாளிக்களும் அப்படித்தான் பேசுவார்கள். அதற்கு அச்சாரமாக பார்ப்பன தினமலர் “ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.” என்று நஞ்சை கக்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சித்திரவதை மூலம் வாங்கப்பட்ட பொய்யான வாக்குமூலங்கள் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்பதை மறைத்து விட்டு,  ‘தேச பற்றாளர்கள்’ என்ற முகமூடியின் பின்னிருந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது, தினமலர். மேலும் ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும். அப்படி விசாரிக்கப்பட்டால் இந்திய அரசு, இராணுவம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றவாளிகள் என்பதை சுலபமாக நிரூபிக்க முடியும். அதை மறைக்கத்தான் இவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவோடு இறந்தவர்களை வைத்து கருணை பேசுகிறார்கள். இந்த கருணையின் பின்னே இருப்பது பச்சையான ஒடுக்குமுறையே அன்றி வேறல்ல.

சாமானியருக்கு நீதி கிடைக்குமா என்று நீலிக்  கண்ணீர் வடிக்கும் இதே தினமலர் சங்கரராமன் என்ற சாமானியரை திட்டமிட்டு கொலை செய்த ஜெயேந்திரன் என்ற கொலையாளி, சாட்சியங்களை பிறழ் சாட்சியங்களாக மாற்றி புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடி தனது பார்ப்பன பாசத்தை காட்டியது.

அற்புதம் அம்மாள்
பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்?

மோடியின் ஊதுகுழலான தினமலர் போலவும், அதை விட தீவிரமாகவும் ஈழப் போராட்டத்தின் மீதும், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் மீதும் வன்மத்தை உமிழ்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்துதான் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கப் போவதாக மோசடி செய்கின்றனர் வைகோ, தமிழருவி மணியன் போன்றவர்கள்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஞானதேசிகன் “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி கூற முடியாது. ஆனால் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றவாளிகள் தான். குண்டுவெடிப்பில் தலைவர் ராஜிவ்காந்தி உள்பட பொதுமக்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களுக்காக யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு மட்டும் ஏன்? தீர்ப்பு பற்றி முழுவிவரம் தெரிந்த பிறகு பேசுறேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கூட்டணியில் மட்டுமல்ல தமிழக மக்களின் கருத்திலும் காலாவதியாகி வரும் காங்கிரஸ் கட்சி இதற்கு மேல் கருத்து சொன்னால் அதற்கு கருமாதிதான் என்பது ஞானதேசிகனுக்கு தெரியாதது அல்ல.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும், பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? ராஜீவ் கொலை வழக்கில் கொடுங்கோல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு பிரிவினரின் சித்திரவதை மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர். அந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெற்றப்பட்டவை என்பதையும், தவறாக பதிவு செய்யப்பட்டு மோசடியாக உருவாக்கப்பட்டவை என்பதையும் புலனாய்வு துறையின் அதிகாரி தியாகராஜன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மோசடியான சட்டத்தின் கீழ்தான் 1998-ம் ஆண்டு தடா நீதிமன்றத்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு 1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மத்திய, மாநில அரசுகள் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில்  “ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432, 433-ன் படி முடிவு எடுக்கலாம்” என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படி முடிவு எடுத்து விடுதலை செய்வதை அரசுகள் செய்யாது. மக்கள் போராட்டம்தான் அதை நிர்ப்பந்திக்கும் என்பது ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

மத்தியில் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே மக்கள் உரிமைகளை ஒடுக்கும் தடா, பொடா போன்ற சட்டங்களை உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதிலும், ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக போராடுபவர்களை அந்த சட்டங்களின் கீழ் தூக்கு மேடைக்கு அனுப்புவதில் ஒத்த கருத்துடன் இருப்பவர்கள். இதில் இவர்களது தமிழக ஏஜெண்டாக பாசிச ஜெயா இருந்து பல ஈழ ஆதரவு ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளை சிறையில் போட்டு அடைத்தார்.

மாநில அரசைப் பொறுத்த வரை 2000-ம் ஆண்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களில் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரித்தும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. இப்போது மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கூச்சமில்லாமல் பேசுகிறார் கருணாநிதி.

மூவர் தூக்குக்கு எதிரான மனு 2011-ம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்டு 30-ம் தேதியன்று தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிதாவின் அரசு, “கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றி விடவில்லை” என்றும் “தமிழ் மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்றும் அலட்சியமாக மனு தாக்கல் செய்தது.

2010-ம் ஆண்டு நளினி 20 ஆண்டு சிறையில் கழித்து விட்ட தன்னை விடுதலை செய்யக் கோரி அனுப்பிய மனுவை தி.மு.க தலைமையிலான மாநில அரசு நிராகரித்தது. தன் வயதான தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதம் பரோல் கேட்கும் நளினியின் மனுவைக் கூட, ‘சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என்றும், ‘அரசியல்வாதிகள் அவரை சந்தித்து தமது ஆதாயத்துக்காக  பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்றும் கூறி, மேலும் சில சட்டவாத நடைமுறைகளையின் அடிப்படையில் கடந்த வாரம் (பிப்ரவரி 11, 2014) எதிர்த்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தாமாக முன்வரப் போவதில்லை. ராஜீவ் கொலை வழக்கு நடத்தப்பட்ட மோசடியான நடைமுறையையும், ராஜீவ் கொலையின் அரசியல்  நியாயத்தையும் அம்பலப்படுத்தி போராடுவதன் மூலமே இவர்களை விடுவிக்க முடியும்.

எனவே தூக்கு மேடையிலிருந்து மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும், அவர்களோடு நளினையையும் தூக்கு மேடைக்கு அனுப்பிய காரணங்கள் இங்கே நியாயமென்றும் நீதியென்றும் இன்னமும் ஆட்சி செய்கின்றன. அவற்றை வெட்டி வீழ்த்தாத வரை நமது போராட்டத்திற்கும் முடிவு இல்லை.

மேலும் படிக்க

’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

3

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன்.

பெண் பத்திரிகையாளர்ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்?’’ என்றார்.

எதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…

‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா?’’ இது என் கேள்வி…

‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய் விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…

அந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.

ஏதோ ஒரு இதழை குறைவு கூறுவது போல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்!

பெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால்  இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மீகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது?

ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார்கள், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்சமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.

பொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

இதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலை பார்த்தால் எப்படியிருக்கும்? இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.

நன்றி : மு.வி.நந்தினி

மிளகுத் தண்ணீர் ஜனநாயகம்

3

டந்த 12-ம் தேதி பாராளுமன்றத்தில் ரயில்வே இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது  இந்திய ஜனநாயகத்தின் ‘மாண்பு’ பட்டொளி வீசிப் பறந்ததை அடுத்து வாயில்லா அப்பாவிப் பூச்சியான மன்மோகன் சிங் ”இந்த அவையில் நடந்த விஷயங்களைப் பார்த்து எனது இதயத்தில் ரத்தம் வடிகிறது” என்றார்.

New Delhi: Members in the Lok Sabha during the extended winter session in New Delhi onThursday. PTI Photo / TV GRAB (PTI2_13_2014_000024A)
பிப்ரவரி 12-ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடாளுமன்ற அமர்வில் உறுப்பினர்கள்.

ரயில்வே வரவு செலவு திட்டம்  தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை ஒரு கை பார்த்து விடும் முடிவோடுதான் வந்திருந்தார்கள். இந்த ஜனநாயக ஆர்வம் வரும் தேர்தலில் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக வந்திருக்கும் ஒரு இடைவெளிப் பணி. தி.மு.க உறுப்பினர்களுக்கு தமிழக மீனவர்கள் படும் துன்பங்கள் குறித்த போன ஜென்மத்து நினைவு திடீரென்று பீறிட்டு அடித்திருக்கிறது. ஆந்திரத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று  தர்மயுத்தத்தில் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

எல்லோரும் மைய மண்டபத்தில் நின்று ஜனநாயகத்தை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் சும்மா இருந்தால் அம்மாவின் ஆத்திரத்திற்கு ஆளாக நேரிடும் என்கிற கொத்தடிமைப் பார்வையோடு அ.தி.மு.க உறுப்பினர்களும் மைய மண்டபத்தில் குழுமியிருக்கிறார்கள். சும்மா குழுமினால் போதுமா, எனவே “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள் – எதற்காக நீதி என்று நமக்குத் தெரியாது; அவர்களும் எதற்காக நீதி கேட்கிறோம் என்று சொல்லவில்லை. அம்மாவின் அருள் பெற கத்தும் அந்த காக்கைகளுக்கு கோரிக்கை என்பது எந்தக் கந்தாயமாய் இருந்தால் என்ன?

பா.ஜ.கவினரும் மைய மண்டபத்தில் குழுமியிருக்கிறார்கள். இந்தக் குழப்பமான வரலாற்றுத் தருணத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு குழப்பம். இத்தனை கட்சிகளும் களத்தில் இறங்கும் போது நாம் மட்டும் கடமையை ஆற்றாமல் போனால் வரலாறு மன்னிக்காது என்று புரட்சிகரமாக சிந்தித்த உதிரிக் கட்சிகளான ”வலது” டி.ராஜா கட்சியும் ”இடது” பிரகாஷ் காரத் கட்சியும் மைய மண்டபத்திற்கு விரைந்தோடி இருக்கிறார்கள். பேப்பர் வெயிட்டுகள் பறக்க, மைக் செட்டுகள் சிதற, நாற்காலிகள் வானவீதி உலா செல்ல, கெட்ட வார்த்தைகளும், தள்ளு முள்ளுகளுமாக ஓட்டுக் கட்சி ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது. இதனால் பிரதமரின் இதயத்தில் ஆனந்தக் கண்ணீர்தான் வந்திருக்க வேண்டும். ‘ஜனநாயகத்தை’ சமாளிக்க இந்த கோமாளித்தனங்களை விட வேறு எதுவும் உதவுமா என்ன?

ராஜகோபால்
மிளகுப் பொடி ஸ்பிரே பயன்படுத்தி தாக்கிய காங்கிரசு உறுப்பினர் ராஜகோபால்.

இது 12-ம் தேதி கள நிலவரம். அதற்கடுத்த நாள் தெலுங்கானா மசோதா அறிமுகம் செய்யப்படும் நாள். கிறுக்குப் பிடித்த குரங்குக்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த கதையானது. பாராளுமன்றம் துவங்கும் போதே ஆந்திர உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தோடும் கைப் பையில் போதுமான அளவுக்கு ஜனநாயகத்தோடும் தான் நுழைந்துள்ளனர். தெலுங்கானா மசோதா வாசிக்கப்பட்டது என்று பரவலாக முதலாளித்துவ ஊடகங்களில் பேசிக் கொள்கிறார்கள், என்றாலும் களத்தில் நடந்ததை தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த வகையில் நம்மால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.

பன்னிரண்டு மணி அளவில் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த போர்களத்திற்குள் வியூகம் வகுத்து நுழையும் சீமாந்திராவைச் சேர்ந்த காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜகோபால், தனது கைப்பையில் வைத்திருந்த “மிளகு பொடி ஸ்ப்ரே” ஆயுதத்தை எடுத்து எதிரி அணிவரிசையைச் சேர்ந்த வீரர்கள் மேல் பீய்ச்சி அடிக்கிறார். அவர் களத்தில் பேரழிவு ஆயுதங்களோடு நுழைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த எதிரணியினர் தங்களது யுத்த தந்திரங்களை உடனடியாக மாற்றியமைக்கிறார்கள். மைக் செட்டுகளையும் கணினிகளையும் விசிறியடிக்கும் எதிரணியினர் ராஜகோபாலின் தெலுங்கானா எதிர்ப்பு அணிக்கு கடுமையான முறியடிப்பு தாக்குதலை தொடுக்கிறார்கள்.

ஜனநாயக காவலர் ராஜகோபாலின் களச் செயல்பாடுகளைப் பார்த்து நீங்கள் அவரை ஆனந்த விகடனில் வரும் அரசியல்வாதியைப் போல் பட்டா பட்டி அண்ட்ராயர், ஏற்றிக் கட்டிய வேட்டி, முறுக்கு மீசை, கன்னத்தில் மரு என்றெல்லாம் நினைத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஆந்திரத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற தொழில் அதிபர். வருடாந்திரம் 13 ஆயிரம் கோடி ரூபாய் புரளும் அளவிற்கு லாபம் கொழிக்கும் தொழிலை நடத்தி வருகிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான காங்கிரசைச் சேர்ந்த சாதாரண ஏழை தான் அவர்.

பெப்பர் பொடி ஸ்பிரே காயமடைந்தவர்கள்
காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போர்க்கள காட்சிகளுக்கு வருவோம். ராஜகோபாலின் தாக்குதலில் பாதிப்படைந்த எதிரணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது – இன்னொருவர் எங்கே அடிவாங்கினார் என்று சரியாக புலப்படவில்லை, மாரடைப்பு ஏற்பட்டது. காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த களேபரங்களுக்கு இடையே தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த வீரர் வேணுகோபால் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி கூட்டத்திற்குள் சொழட்டி சொழட்டி வூடு கட்டினார் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

”நான் வைத்திருந்தது ஆயுதம் கத்தியில்லை. நேர்மையாக ஜனநாயக கடமை ஆற்றிய என்னைப் பற்றி அவதூறு செய்கிறார்கள்” என்று இதை கடுமையாக மறுத்துள்ள வேணுகோபால் ரெட்டி, தான் ஜனநாயகத்துக்கான போர் விதிமுறைகளுக்கு உட்பட்டு மைக்கை உருவித் தான் அடித்தேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

களத்திலிருந்து காயமடைந்த வீரர்கள் வெளியேறிய காட்சியை நீங்கள் கண்டிருக்க வேண்டும். சீமைப் பன்றிகளைப் போல் அசங்காமல் கசங்காமல் வளர்ந்த அந்த உடல்கள் சோர்ந்து தளர்ந்து போயிருந்தது. தண்ணீர் மின்சாரம் கேட்டோ, நிலப்பறிப்புகளுக்கு எதிராகவோ போராடும் சாமானிய மக்களைப் போல் கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு பழக்கமில்லாதவர்கள் அல்லவா? அது தான் சாதாரண மிளகுத் தண்ணீருக்கு அசந்து விட்டார்கள்.

இப்படியாக ஜனநாயகத்துக்கான தர்மயுத்தம் உச்சகட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாயத்து நடுவர் மீரா குமார் உடனடியாக ஆட்ட விதிகளுக்கு புறம்பாக கள்ள ஆட்டம் ஆடிய 16 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 17ம் தேதி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் பாராளுமன்ற களத்திற்கு வரும் எம்.பிக்களை சோதனையிட்டு பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இருந்தால் பறிமுதல் செய்வது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.

காங்கிரசு, பா.ஜ.க, காரத் கட்சி, டி.ராஜா கட்சி, தி.மு.க, அ.தி.முக என்று சர்வகட்சியைச் சேர்ந்த வீரர்களும் இதனால் கலக்கமடைந்திருப்பதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Indian Members of Parliament who were affected by pepper spray are taken to hospital in an ambulance at the Parliament house in New Delhi on February 13, 2014. India's parliament erupted in anarchy February 13 over a bill to create a new state, with angry MPs coming to blows, pulling out a microphone and pepper spraying the chamber, reports said. Ugly clashes also broke out outside the parliament building between supporters of the Telangana state and police, an AFP photographer at the scene said. AFP PHOTO/Prakash SINGH
ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இவர்கள் அலட்டிக் கொள்வதைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் ஜனநாயகம் பண்பட்டுள்ள தமிழகத்தில் சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பு எப்படி குண்டுக்கட்டாக காப்பாற்றப்படுகிறது என்கிற பாடத்தை நமது சபாநாயகர் தனபாலிடம் கேட்டால் தெளிவாக சொல்லிக் கொடுத்து விடுவாரே?

நடந்த சம்பவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானம் என்கிறார் ஜஸ்வந்த் சிங். இருக்காதா பின்னே கைகள் பேசிக் கொண்டிருக்கும் போது கத்திகளுக்கு என்ன வேலை என்கிற நியாயமான வருத்தம் அவருக்கு வந்ததில் வியப்பில்லை. ஆனால், வழக்கமாக பாராளுமன்ற மாண்பு குலையும் போதெல்லாம் சவுண்டு கொடுக்கும் “டி.ராஜா கட்சியும்” “பிரகாஷ் காரத் கட்சியும்” இந்த முறை ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது.

ஒருவேளை இந்தச் சண்டைகள் இல்லையென்றாலும் பாராளுமன்றம் ஒரு அரட்டை மடம்தான், பொழுது போக்கு ரோட்டரி கிளப்தான் என்பதில் மாற்றமில்லை. அதனால்தான் ஊடகங்கள் மற்றும் அறிவு ஜீவி கனவான்கள் இந்த தெருச்சண்டை ஜனநாயகத்தை மட்டும் எதிர்த்து விட்டு, ரோட்டரி கிளப் ஜனநாயகத்தை ஆதரிக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை குழாயடிச் சண்டையும், ரோட்டரி கிளப் நளினங்களும் வேறு வேறு இல்லை என்கிறோம்.

எப்படியிருந்தாலும், 12-ம் தேதி நடந்த சம்பவங்களை அடுத்து பிரதமரின் இதயத்தில் ரத்தம் வழிந்ததோ இல்லையோ, பகத் சிங்கின் கல்லறையிலிருந்து எக்காளச் சிரிப்பொலி வழிந்து கொண்டேயிருக்கிறது. அதன் அதிர்வுகள் பாராளுமன்ற சுவர்களில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

பிரதமரின் வருத்தத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை. சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட பன்னாட்டு சுரங்க நிறுவனங்களுக்கு நமது நிலத்தையும் காடுகளையும் மலைகளையும் அள்ளி ஒப்படைக்க வகைசெய்யும் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வைத்திருக்கிறார். இனி அந்த மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்கிற ஒரு சடங்கு மிச்சமிருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வேறு வருவதால், போட்டுக் கொண்ட டீலிங்கை கையிலிருக்கும் கடைசி கூட்டத் தொடரிலாவது முடித்து விட வேண்டும் என்பது அவரது தவிப்பு. இதை விட்டால் படியளந்த எசமான்கள் அடுத்து அமையவிருக்கும் அமைச்சரவையிடம் புதிதாக டீலிங் போட வேண்டியிருக்கும் அல்லவா?

அந்த உள்ளக் கொதிப்பைத் தான் ரத்தினச் சுருக்கமாக “இதயத்தில் ரத்தம் வழிகிறது” என்று வெளிப்படுத்தியிருக்கிறார். மன்மோகன் குறைவாக பேசினாலும் செறிவாகப் பேசுவார் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இவர்கள் தான் நமது ஓட்டுக் கட்சி ஜனநாயகம் பெற்றெடுத்த ஜனநாயகத்தின் குலக் கொழுந்துகள். இவர்களைத் தான் மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்து அனுப்புகிறார்கள். இந்திய ஜனநாயகத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓட்டுக்கட்சி ரத்தினங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்கிறதோ இல்லையோ, அவர்களை அனுப்பி வைத்த உங்களுக்கு உள்ளம் கூச வில்லையா?

–    தமிழரசன்.

தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!

6

சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின்படி 2009 -ஆம் ஆண்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போவிட்டது.

பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா விரும்புகின்ற நீதிபதிதான் அவரது வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றவாறு தீர்ப்பளித்த உத்தமர்களான சவுகான், பாப்டே ஆகியோர்தான் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள். குற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் இந்தப் புதிய நீதிநெறியின்படி, “அக்யூஸ்டு”களான திருட்டு தீட்சிதர்களால், வேண்டி விரும்பித் தெரிவு செயப்பட்டவர்களே இந்நீதிபதிகள் என்பது வழக்கு விசாரணை தொடங்கியவுடனேயே தெரிந்து விட்டது.

சிதம்பரம் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து கைப்பற்ற தனிச் சட்டம் இயற்றக் கோரியும், நந்தன் நுழைந்த தெற்குவாசலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறியக் கோரியும் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நீதிபதி பாப்டேயின் மகனுக்குத் தமிழக அரசு தனது வழக்குகளையும், கட்டணத்தையும் வாரி வழங்குவதை இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் வந்த ஒரு செய்தி அம்பலமாக்கியது. இது, இந்தத் தீர்ப்பின் யோக்கியதையை நிரூபிக்கும் கூடுதல் சான்று. மொத்தத்தில் வல்லுறவு செய்தவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்குமாறு தீர்ப்புக் கூறும் கட்டப்பஞ்சாயத்தைப் போல, கோயில் சோத்தைக் கொள்ளையடித்த தீட்சிதனுக்கே கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது இந்த பார்ப்பன “காப்” பஞ்சாயத்து.

தீட்சிதர்களின் திருட்டுத்தனங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை ஒரு நூற்றாண்டாக கூறிவருபவர்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரோ, ம.க.இ.க.வினரோ அல்ல. சக தீட்சிதர்கள்தான். அதேபோல கோயிலில் பார்ப்பனக் கும்பல் நடத்தும் கொள்ளையை விவரித்து, அதனைத் தடுத்து நிறுத்த அரசு தலையிட வேண்டும் என்று 1888-இலேயே சிபாரிசு செய்தவர்கள் நாத்திகர்களல்ல, நீதிபதி முத்துசாமி அயர் மற்றும் பாஷ்யம் அயங்கார் ஆகியோர். “கோயிலின் மீது அரசு கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள், தண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் திருடர்களைப் போன்றவர்கள்” என்று இந்து நாளேடே அன்று தலையங்கம் எழுதியதாக தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் சிறீவத்சன். (தி இந்து, 13.1.2014)

தில்லைக் கோயில் தீட்சிதர் சோத்தல்ல, அது பொதுக்கோயில் என்பது 1888 முதல் பல தீர்ப்புகளில் உறுதி செயப்பட்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளித்தான் இந்த தீவட்டிக் கொள்ளைத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் சாரத்தைப் புரிந்து கொள்ள அதன் பின்புலத்தைச் சுருக்கமாகவாவது தெரிந்து கொள்வது அவசியம்.

1951-இல் குமாரசாமி ராஜா தலைமையிலான மதறாஸ் மாகாண காங்கிரசு அரசு, 1927-இல் நீதிக்கட்சி ஆட்சியில் இயற்றப்பட்ட இந்து அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்தி, புதியதொரு சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி சிதம்பரம் கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை மேற்கொள்வதாக 28.8.51 அன்று அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தீட்சிதர்களாகிய தாங்கள் ஸ்மார்த்த பிராமண வகுப்பினர் என்றும், இது தனியொரு மத உட்பிரிவு என்றும், கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் தங்களைத் தவிர வேறு யாரும் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தியதோ, நிர்வாகம் செய்ததோ இல்லையென்றும், இந்திய அரசமைப்பின் 26(ஈ) பிரிவு, மத உட்பிரிவு அல்லது வகுப்பினருக்கு (religious denomination or section) வழங்கும் சிறப்புரிமை தமக்குப் பொருந்தும் என்பதால், தில்லைக் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தங்களது மத உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதிட்டனர்.

ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் எனப்படுவோர் கோயில் வழிபாட்டை எதிர்க்கின்ற (ஆகம வழிபாடு) வேள்வி வழிபாட்டை மட்டுமே (நிகம) போற்றுகின்றவர்கள். காலப்போக்கில் எல்லா பார்ப்பனர்களும் கோயில் வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர் என்ற போதிலும், பார்ப்பனியம் வேதங்களையே தனது ஆதாரப்புள்ளியாகக் கொண்டிருக்கிறது. காஞ்சி சங்கரமடம் உள்ளிட்ட பார்ப்பன நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களும் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள்தான். எனவே ஸ்மார்த்த பார்ப்பனர்கள் எனப்படுவோர் தனிவகையல்ல; சொல்லப்போனால், இவர்கள்தான் பார்ப்பன இந்து மதத்தின் மைய நீரோட்டம். மற்ற பார்ப்பனர்களைப் போல, பின்குடுமி போடாமல் முன்குடுமி போடுகிறார்கள் என்பது மட்டும்தான் தீட்சிதர்களின் “தனித்தன்மை”.

உண்மை இவ்வாறு இருந்த போதிலும், தீட்சிதர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீட்சிதர்கள் இந்து மதத்தின் ஒரு உட்பிரிவினர் என்றும், மடாதிபதிகளைப் போலக் கருதத்தக்கவர்கள் என்றும், ஆகையினால் அரசின் அறிவிக்கை செல்லாது என்றும் 1951-இல் தீர்ப்பளித்தனர். அரசியல் சட்டத்தின் 26(ஈ) பிரிவின் கீழ், மத உட்பிரிவினருக்கான சலுகையைப் பெறவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட மடத்தை அல்லது கோயிலை அந்த உட்பிரிவினர்தான் உருவாக்கி நிர்வகித்து வருகின்றனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், தில்லைக் கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், நாயக்கர்கள் முதல் பிச்சாவரம் ஜமீன் வரையிலான பலரால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, ஒரு மடத்தை உருவாக்கி நிர்வகிக்கும் மடாதிபதியுடன் தீட்சிதர்களை ஒப்பிட முடியாது என்பதால்தான், “மடாதிபதிகளைப் போலக் கருதத்தக்கவர்கள்” என்று தந்திரமாகக் குறிப்பிடுகிறது தீர்ப்பு.

சென்னை ஆர்ப்பாட்டம்
தில்லைக் கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக ஒப்படைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனத் தீர்ப்பை எதிர்த்து 6.1.2014 அன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

“கணவனைப் போலக் கருதத்தக்கவன்” என்ற சட்டத் தகுதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு விட்டதால், திருமணம் செய்யாமலேயே பெண்டாளும் உரிமையைப் பெற்று விட்ட தீட்சிதர்கள், கோயிலின் உடைமையாளர்கள் ஆகிவிட்டார்கள். 40 ஏக்கர் கோயிலும், 2700 ஏக்கர் நிலமும் தங்களுக்குச் சொந்தம் என்று நிரூபிப்பதற்கு கல்வெட்டு, செப்பேடு போன்ற எதையும் தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டவில்லை. தங்கள் முன்குடுமியைக் காட்டினார்கள் – முடிந்தது வழக்கு.

உயர் நீதிமன்றம் 1951-இல் வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து மதறாஸ் மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 1954-இல் இவ்வழக்கு அரசியல் சட்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நடத்தாமல், 1951-இல் குமாரசாமி ராஜா அரசு வெளியிட்ட அறிவிக்கையையே திரும்பப் பெறுவதாக சென்னை மாகாண காங்கிரசு அரசு அறிவித்ததால், அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இப்படியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பே இறுதித் தீர்ப்பானது. பிப்ரவரி 1954-இல் காங்கிரசு அரசின் அறிவிக்கையையே திரும்பப் பெற்ற காங்கிரசு முதலமைச்சர் ராஜாஜி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின் காமராஜ் முதல்வரான பிறகு 1959-இல் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. அதில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் தில்லைக் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்திருக்க முடியும்; செய்யவில்லை. அதன் பின்னர் தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களிலும் அத்தகைய திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. தமிழக அரசின் அறநிலையத்துறை சட்டம், 1959-இன் பிரிவு 45 மற்றும் 107 -இல் தீட்சிதப் பெருச்சாளிகள் புகுந்து தப்பிப்பதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருந்த சட்டப் பொந்துகள் அடைக்கப்படாமலேயே விடப்பட்டிருந்தன.

நிதி மோசடி, நகைக்களவு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 1987-இல் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியும் கூட “தீட்சிதர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளில் உதவுவது” என்ற அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டாரேயன்றி, கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றி விடவில்லை. இருந்த போதிலும் 1951 தீர்ப்பைக் காட்டி இதற்கும் இடைக்காலத் தடை பெற்றனர் தீட்சிதர்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்த வழக்கைத் தட்டியெழுப்பி நீதிபதி பானுமதியின் முன் விசாரணைக்கு கொண்டுவந்து, “தீட்சிதர்கள் தனி மத உட்பிரிவல்ல” என்று வாதிட்டது. அன்றைய தி.மு.க. அரசின் கீழான அறநிலையத்துறையும் அவ்வாறே வாதிட்டது. “தாங்கள் தனியான மத உட்பிரிவு என்பது ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட உண்மை” என்பதால், அதனை மீண்டும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று தீட்சிதர்கள் வாதிட்டனர். அதனை நீதிபதி பானுமதி நிராகரித்தார். “பக்தர்கள் தமிழ் பாடத் தடை என்ற பின்புலத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் மக்களின் வழிபாட்டு உரிமைதான் முதலிடம் பெற முடியுமேயன்றி, 26-ஆவது பிரிவின் கீழ் தீட்சிதர்கள் கோரும் தனி உரிமையல்ல” என்றும், “அவர்கள் கோரும் தனியுரிமை என்பது மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானது” என்றும் வாதிட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்றத்தில் வென்றது.

கோயில் கோபுரத்தில் கொடி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், பார்ப்பனியத்தின் வெற்றியையும் பறைசாற்றும் திமிரோடு, ‘குடியரசு’ தினத்தன்று தில்லை நடராசர் கோயில் கோபுரத்தின் உச்சியில் பார்ப்பன தீட்சிதர்களால் பறக்க விடப்பட்டுள்ள ‘தேசிய’க் கொடி.

தற்போது உச்ச நீதிமன்றத்தில், “தீட்சிதர்கள் தனி மத உட்பிரிவு அல்ல, இக்கோயிலும் அவர்கள் உருவாக்கியதல்ல, அவர்கள் வெறும் அர்ச்சகர்கள் மட்டுமே, கோயிலின் மீது அவர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது” என்று ம.உ.பா.மையத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதிகளோ, “தீட்சிதர்கள் தனிப்பிரிவு என்பதும் கோயிலின் மீது அவர்களுக்குள்ள உரிமையும் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட உண்மைகள்” (Res Judicata) என்றும், “அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்திய பானுமதியின் தீர்ப்பு, நீதித்துறை ஒழுங்கீனம்” என்றும் தமது தீர்ப்பில் கண்டித்திருக்கின்றனர்.

“இக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதோ, அவர்களால் உருவாக்கப்பட்டதோ இல்லை என்றாலும், அவர்கள் ஒரு மத உட்பிரிவு என்பதையும், பல நூற்றாண்டுகளாக அவர்கள்தான் கோயிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள் என்பதையும் ஏற்கெனவே (1951-இல்) நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அதனை மீண்டும் விசாரிக்க முடியாது…”, “முடிந்து போன விவகாரங்களைக் கிளப்புவது சமூகத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து குழப்பத்தை உருவாக்கிவிடும்”, “தோற்றுப்போனவர்கள் மீண்டும் வழக்கு தொடுத்தால், நீ ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டாய் என்பதே அவர்களுக்கான பதில் என்று காத்யாயன ஸ்மிருதி கூறுகிறது.”

“தீட்சிதர்களின் நிர்வாகச் சீர்கேடு, நிதிக்கையாடல் குறித்த பல விவரங்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. எனினும், அவற்றுக்குள் நாங்கள் செல்லவில்லை. ஏனென்றால், 1959 சட்டத்தின் கீழ் நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கான குறிப்பான காரணங்கள் 1987 ஆணையில் சோல்லப்படவில்லை”, “சீர்கேட்டைச் சரி செவதற்காகத்தான் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார் என்றால், அது சரி செய்யப்பட்டவுடனே கோயிலை தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்து விட்டு அரசு வெளியேறியிருக்க வேண்டும். அவ்வாறின்றி நிர்வாக அதிகாரி நீடிப்பதானது, அரசியல் சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு (அதாவது தீட்சிதர்களுக்கு) வழங்கியிருக்கும் சொத்துரிமையை பறிப்பதாகும்” – என்றவாறு போகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இது பார்ப்பன நாட்டாமைகளின் “காப்” பஞ்சாயத்து வழங்கியிருக்கும் தீர்ப்பு என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் விளக்கங்கள் அவசியமில்லை. தீர்ப்பே அதற்கான தன்னிலை விளக்கமாகத்தான் அமைந்திருக்கிறது. நமக்குத் தேவைப்படுவது, அன்று முதல் இன்று வரை தீட்சிதர்களிடம் தமிழக அரசு தோற்று வருவதற்கான விளக்கம்.

முதலாவதாக, குடிமக்களின் மத உரிமை மற்றும் மத நிறுவனங்களின் உரிமை தொடர்பான அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை, மக்களின் மத உரிமையைக் காட்டிலும், மத நிறுவனங்களின் உரிமைக்கே முதலிடம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க விடாமல் தடுப்பதையும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரன் சங்கராச்சாரியாக நீடித்ததையும், திருட்டு தீட்சிதர்களுக்கு தில்லைக் கோயிலை உடைமையாக்குவதையும், இசுலாமியப் பெண்கள் மீது ஷரியத் சட்டத்தைத் திணித்திருப்பதையும் சாத்தியமாக்கியிருப்பது இந்த இரு சட்டப் பிரிவுகளும், அதற்கு காலம்தோறும் உச்ச நீதிமன்றம் அளித்துவரும் விளக்கங்களும்தான். ஆகவே, பார்ப்பனச் சூது என்பது தற்போதைய தீர்ப்பில் மட்டும் இல்லை. அது அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது. (இது குறித்த விளக்கத்தை “இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?” என்ற புதிய கலாச்சாரம் வெளியீட்டில் காணலாம்)

இரண்டாவதாக, அன்று முதல் இன்று வரை, இந்த அரசியல் சட்டம் அனுமதிக்கும் வரம்புக்குட்பட்ட வகையில் கூட தில்லைக் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. 1954-இல் ராஜாஜி, தற்போது ஜெயலலிதா ஆகியோரின் நடவடிக்கைகளைப் பார்ப்பனப் பாசம் என்று பாமரனும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், 1959-இல் அறநிலையத்துறை சட்டத்தை திருத்திய காமராஜ் அரசு, தில்லைக் கோயில் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டதற்குக் காரணம் என்ன?

அதன்பின் பலமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கோயிலைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், மத்திய-மாநில மந்திரிப் பதவிகளும், அவற்றின் துணையுடன் உருவாக்கப்பட்ட தொழில் சாம்ராச்சியங்களும் – அதாவது தி.மு.க. வினரின் வர்க்க நலன் – பார்ப்பனக் கும்பலுடன் சமரசத்தையும் சரணடைவையுமே கோரியது. அதனால்தான் கருணாநிதியின் பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்துமே அரைக்கிணறு தாண்டும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. அ.தி.மு.க. வைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

மூன்றாவதாக, கோயிலைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை. காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளைத் தன்வயப்படுத்தி வைத்திருந்ததன் மூலம்தான், இந்து அறநிலையத்துறை சட்டத்தில் தாங்கள் தப்பிப்பதற்குத் தோதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படாமல் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள். தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளையும் அவர்கள் வெற்றிகரமாக முடக்கியிருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீதான நகைத்திருட்டு, போர்ஜரி, நில விற்பனை உள்ளிட்ட எந்தக் குற்றத்துக்கான வழக்கினையும் நடத்தி அவர்களைத் தண்டிக்க தி.மு.க, அ.தி.மு.க. அரசுகள் முயற்சிக்கவே இல்லை. 1997-இல் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலயா, “இத்தனை ஆதாரங்கள் இருந்தும் தீட்சிதர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் போடவில்லை?” என்று தனது தீர்ப்பிலேயே கேள்வி எழுப்பிய பின்னரும் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, “தீட்சிதர்களுக்கு எதிராக நீங்கள் கூறுபவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றனவா?” என்று நீதிபதி சவுகான் தெனாவெட்டாக கேட்க, “கெக்கெக்கே” என்று சுப்பிரமணிய சாமி சிரித்தார். இப்படியொரு சாதகமான நிலைமையை தீட்சிதர்களுக்கு ஏற்படுத்தித் தந்ததும் தி.மு.க, அ.தி.மு.க. அரசுகள்தான்.

இவையனைத்தும்தான் தீட்சிதர்களின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தொடுத்திருக்கும் இன்னொரு வழக்கு, எல்லா இந்துக் கோயில்களிலிருந்தும் அறநிலையத்துறையை வெளியேற்றுவதற்கானது. ஜெயலலிதாவின் கருத்தும் இதுவேதான் என்பதால், செம்மொழி நூலகத்தைப் போல அறநிலையத்துறையையும் இழுத்து மூடுவதற்கு ஜெ.அரசு ஒத்துழைக்கக்கூடும். இது பற்றி வைகோ முதல் நெடுமாறன் வரையிலான பாரதிய ஜனதாவின் ஆழ்வார் படைகள் மூச்சு விடப்போவதில்லை. தி.மு.க.வும் அறிக்கைக்கு மேல் எதுவும் செய்யப் போவதில்லை.

கோயில்கள் கொள்ளைக் கூடாரங்கள் என்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, அதனை மறுக்கவே முடியாத சூழலில்தான், அன்று அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இன்று பொதுத்துறை தனியார்மயம் போல, பொதுக்கோயில்கள் மீண்டும் பார்ப்பனக் கும்பலின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதன் விளைவாக, அவை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கூடாரங்களாகவும், பார்ப்பன இந்துவெறிக் கொலைகாரர்களாக பக்தர்களை மாற்றுகின்ற கொலைக்கூடங்களாகவும் மாற்றப்படும். தில்லைக் கோயில் தீர்ப்பு இதற்கான அபாய அறிவிப்பு.

– சூரியன்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்

0

பிப்ரவரி 4-ம் தேதி துவங்கிய தமிழக பால் உற்பத்தியாளர்களின் போராட்டம், ஆளுங்கட்சியாலும், அதிகாரிகளின் மிரட்டலாலும் பிப்ரவரி 7-ம் தேதி வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தி போராட்டம்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்திருந்தது. இது தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லாவிட்டால் 4-ம் தேதி போராட்டம் துவங்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளை துளியும் சட்டை செய்யவில்லை, எனவே, அரசின் செவிட்டு காதுகளுக்கு உரைப்பதற்காக பிப்ரவரி 4-ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தி போராட்டத்தை துவக்கினர்.

பால் உற்பத்தியாளர்களின் முதல் கோரிக்கை ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலையாக 30 ரூபாய் வழங்க வேண்டும், இரண்டாவது, கிராம கூட்டுறவு பால் சங்கங்களில் பணிபுரியும் 24,000 பணியாளர்களுக்கும் பணிப்பாதுகாப்பு தரப்பட வேண்டும், பணி வரன்முறைப்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும். மூன்றாவது, கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும். இவை தான் அவர்களுடைய முக்கியமான மூன்று கோரிக்கைகள்.

2011 நவம்பர் வரை ஒரு லிட்டர் பாலுக்கு அரசு கொடுத்து வந்த கொள்முதல் விலை ரூ 17.50, பிறகு பிப்ரவரியில் ரூ 2.50 உயர்த்தப்பட்டு 20 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 2013-ல் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானே முடிவு செய்து கொண்டு 3 ரூபாய் அதிகப்படுத்தி ரூ. 23 அளிக்க முடிவு செய்தது அரசு. ஆனால் விலை உயர்த்தப்பட்டதை உற்பத்தியாளர்களுக்கோ, சங்கத்திற்கோ முறையாக தெரிவிக்கவில்லை.

டாஸ்மாக்
டாஸ்மாக்கில் மக்கள் குடியை கெடுத்து பல்லாயிரம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டும் அரசு பாலுக்கு சில இலட்சங்களையோ இல்லை கோடிகளையோ ஒதுக்குவதில் என்ன பிரச்சினை?

பால் விவசாயிகள் கோரும் ரூ. 30 அளித்தால் நுகர்வோர் கொடுக்க வேண்டிய விலையும் அதிகம் வருமே என்று சிலர் நினைக்கலாம். இந்த நான்கைந்து ரூபாய் கூடுதல் செலவை பால் விலையை ஏற்றாமலேயே அரசு ஏற்கலாம். மேலும் பாலில் பல வகைகள் வைத்து விற்பதாலும், மொத்தத்தில் ஆவினது சந்தையையும், விற்பனையையும் அதிகப்படுத்தினால் இது பெரிய சுமை இல்லை. டாஸ்மாக்கில் மக்கள் குடியை கெடுத்து பல்லாயிரம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டும் அரசு பாலுக்கு சில இலட்சங்களையோ இல்லை கோடிகளையோ ஒதுக்குவதில் என்ன பிரச்சினை?

மேலும் பால் விவசாயிகள் இந்த விலை உயர்வை தமது இலாப நோக்கிலிருந்து கேட்கவில்லை. தமது பாலுக்குரிய அடக்க விலையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கால்நடைகளுக்கு போட வேண்டிய தீவனங்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.

தவிடு, பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு போன்றவையும், பிற தானியங்களும் இரண்டே ஆண்டுகளில் 53% விலை உயர்ந்துள்ளன. அதாவது கிலோ 15 ரூபாய்க்கு விற்ற பருத்திக்கொட்டை தற்போது 25 ரூபாய், கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பிண்ணாக்கு 40 ரூபாய். இதில் கலப்புத்தீவனம் தான் மிகவும் முக்கியமானது, கிலோ 12 ரூபாய்க்கு விற்ற கலப்புத்தீவனம் இன்று 18 ரூபாய். மூட்டை 200 ரூபாய்க்கு விற்ற உலர் தீவனங்களான வைக்கோலும், தட்டும், புல்லும் வறட்சி காரணமாக 400 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து விட்டன, அதுவும் எளிதில் கிடைப்பதில்லை. அத்துடன் இந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்கூலி, 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை ஏற்ற கூடாது என்றால் பால் விவசாயிகளுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனங்கள் அளிப்பதற்கு அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். அதையும் செய்யாமல், விலையையும் கூட்டாமல் இருந்தால் மக்கள் என்ன செய்வார்கள்?

கே.ஏ. செங்கோட்டுவேல்
பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல்

இந்த பிரச்சினைகளோடு, கோமாரி நோய் தாக்கி கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் இறந்துள்ளன. நோயிலிருந்து தப்பிப் பிழைத்த மாடுகளும் முன்னர் கறந்த அளவிற்கு பால் தருவதில்லை. கோமாரி என்பது காற்றில் பரவக்கூடிய நோய். மாடுகளுக்கு உடனடியாகவும், ஒரே நேரத்திலும் தடுப்பூசிகளை போட வேண்டியது தேவை. 2008-ம் ஆண்டிலேயே ஒரே நேரத்தில் பரவலாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை விவசாயிகள் வலியுறுத்தினர், ஆனால் அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இன்று ஒரு கிராமம், நாளை ஒரு கிராமம் என்று நோயின் தீவிரத்தை பற்றி கவலைப்படாமல் ஆமையை போல செயல்பட்டது அரசு. எனவே நோய் வேகமாக பரவியது, மாடுகளும் அதிகமாக மடிந்து போயின. இதனால் விவசாயிகள் பெரும் கடனாளியாகியுள்ளனர்.

“இந்த பிரச்சினைகளோடு எல்லோருக்கும் உள்ள பிரச்சினையான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் தான் கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம், இது தவறா” என்று நம்மிடம் பேசும் போது நியாயம் கேட்கிறார் தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல்.

பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்காக அதிகாரிகளும், அம்மாவின் அடிமைகளும் களத்தில் குதித்து தீயாய் வேலை செய்தனர். ஆவின் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளோடு, அ.தி.மு.க அடிமைகளும், கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களை தனியாக தனியாக அழைத்தும், வீட்டிற்கு சென்றும், ‘பால் வழங்குவதை நிறுத்தக்கூடாது, நிறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும், மட்டுமில்லாமல் அம்மா அறிவித்துள்ள எந்த இலவச பொருட்களும், சலுகைகளும் கிடைக்க முடியாதபடி செய்து விடுவோம்’ என்று மிரட்டியிருக்கின்றனர்.

எனவே வேறு வழியின்றி பிப்ரவரி 7-ம் தேதி தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நடந்துகொண்டிருந்த போது தனியார் நிறுவனங்கள் ஆவினை ஒழித்துக் கட்டும் நோக்கில் வழக்கமாக வழங்கிய விலையை விட உயர்த்திக் கொடுத்து மொத்த பாலையும் வாங்க முயற்சித்தன.

ஆவின் பால்
“பால்னாலே ஆவின் மட்டும் தாங்க பால், அது மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால்”

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக இயங்கிவரும் 12,000 கூட்டுறவு பால் சங்கங்களில் தற்போது 8,000 சங்கங்கள் மட்டும் தான் தொடர்ந்து இயங்கும் நிலையில் உள்ளன. இவற்றில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்குபவர்கள் 5 இலட்சம் பேர் தான். தமிழகத்தில் தினமும் ஒன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் ஆவின் 20 முதல் 25 இலட்சம் லிட்டரும், ஆரோக்கியா, திருமலா போன்ற தனியார் நிறுவனங்கள் 30 இலட்சம் லிட்டரும் கொள்முதல் செய்கின்றன, சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பவர்கள் போக இனிப்பு, தயிர், நெய் போன்ற பால் பொருட்கள் தயாரிக்கும் பெரும் பண்ணைகள், நிறுவனங்கள் சுமார் 50 இலட்சம் லிட்டரை எடுத்துக் கொள்கின்றன. 50 இலட்சம் லிட்டர் பால் சந்தைக்கே வருவதில்லை, உற்பத்தியாளர்கள் சொந்த உள்ளூர் விற்பனைக்கு வைத்துக் கொள்கின்றனர்.

“பால்னாலே ஆவின் மட்டும் தாங்க பால், அது மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால். தனியார் பால் அனைத்தையுமே சுத்தமான பால் இல்லை என்றும் சொல்லலாம். இரண்டு வகை பாலையும் பார்த்தீங்கன்னா நிறத்திலேயே வித்தியாசம் தெரியும். தனியார் நிறுவனங்கள் புளித்துப் போகாமல் இருப்பதற்கும், இன்னும் எது எதற்கெல்லாமோ ரசாயனத்தை கலக்கிறார்கள். விவசாயிடமிருந்து பாலை வாங்கிய பிறகு அது மக்களின் கைகளுக்கு வந்து சேர்கிற வரைக்கும் என்னென்ன தவறுகளை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை, தனியார் பாலில் அவ்வளவு வேலைகள் நடக்கிறது. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டு பளபளப்பான பாக்கெட்ல அடைச்சி கொடுத்திட்டா மக்களும் அதை தரமானதுன்னு நம்பி ஏமாந்துடுறாங்க” என்கிறார் செங்கோட்டுவேல். ஆவின் பாலில் இத்தகைய தரக்குறைவு ஒன்றுமில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

ஈரோடு போராட்டம்
2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நடத்திய போராட்டம்.

“ஆவினுடைய அழிவை தடுப்பதற்காகத்தான் எங்களுடைய போராட்டமே அறிவிக்கப்பட்டது. ஆவினை விட, தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ 5 முதல் ரூ 6 வரை கூடுதல் விலை கொடுக்கிறார்கள். இதனால், ஆவினுக்கு வரவேண்டிய பால் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு சென்றன. மற்றபடி யாருடைய மிரட்டலுக்கும் பயந்துகொண்டு நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. ஆவினை காப்பதற்குத் தான் இந்த போராட்டம் துவங்கப்பட்டது, அதே காரணத்திற்காகத்தான் தற்போது தற்காலிக வாபசும் பெறப்பட்டிருக்கிறது.”

“எந்த தொழிலிலும் போட்டி வேணுங்க, ஆனால் ஆவின் தனியார் நிறுவனங்களோட போட்டி போடுறதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவினுக்கு தினமும் 27 லட்சம் லிட்டர் பால் வந்து கொண்டிருந்தது. அது இப்போது 22 லட்சமாக குறைந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் அதிகாரிகளே உதவி செய்கிறார்களோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது” என்கிறார் செங்கோட்டுவேல்.

பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி கக்கூஸ் வரை அனைத்தையும் தனியார் முதலாளிகளின் கைகளில் ஒப்படைப்பது தான் தனியார்மயம், தாராளமயம் என்கிற மறுகாலனியாக்க கொள்கை. இக்கொள்கையின்படி ஆவினை ஒழித்துக்கட்டி விட்டு ஹட்சன், ஹெரிட்டேஜ் போன்ற ஏகபோக தனியார் முதலாளிகளை பால் விற்பனையில் அனுமதிப்பது தான் அரசின் திட்டம்.

மேலும் சிறு பால் உற்பத்தியாளர்களை ஒழித்து விட்டு பெரும் பண்ணைகளை கொண்டுவரும் முகமாகவும் இந்த சதி நடைபெறுகிறது. அதற்காகத்தான் இந்த குறைந்த கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆவின் ஒழிக்கப்பட்டால் பிறகு பாலும் மெல்லக் கொல்லும் தனியார்மயத்தின் விசமாக மாறும். பால் உற்பத்தியாளர்களின் இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம். எனவே இப்போராட்டத்தை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை.

–      வினவு செய்தியாளர்.

ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !

12

”கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்கு கருணை காட்டுங்கள், வழி நடத்துங்கள் என வேண்டிக் கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களை தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.”

கேஜ்ரிவால்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கேஜ்ரிவால்

பதவியை ராஜினாமா செய்த சமயத்தில் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய உரையின் ”பினிசிங் டச்சப்” தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. கேஜ்ரிவாலின் ராஜினாமாவும் அவரது சத்யாவேசம் பொங்கும் உரையும், அதன் இறுதியில் சென்டிமென்டலாக ஒரே போடாக போட்டுத் தாக்கியிருப்பதும் அவரது டி.ஆர்.பி ரேட்டிங்கை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்ளிலும் முதலாளித்துவ ஊடகங்களிலும் நடந்த விவகாரங்கள் குறித்த விவாதங்களில் கேஜ்ரிவாலின் மேல் பகுத்தறிவற்ற ஒரு பச்சாதாப உணர்ச்சி மேலோங்கி வருகிறது.

தில்லி தேர்தலில் 28 இடங்களை வென்று காங்கிரசின் தயவோடு ஆட்சியில் அமர்ந்த கேஜ்ரிவால், துவக்கத்திலிருந்தே தில்லி மக்களின் அன்றாட சவால்களைத் தீர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.  அதனால்தான் இந்த 49 நாட்களில் தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை எப்படியெல்லாம் ஏற்றுவது என்பதில் தான் அவரது கவனம் இருந்தது. இலவச குடி நீர் மற்றும் மின் கட்டண அறிவிப்பை நெருக்கமாக அலசிப் பார்த்தாலே அவரது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அந்த அறிவிப்புகளால் கேஜ்ரிவால் தலைப்புச் செய்திகளில் அடிபட்டதைத் தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே யதார்த்தமான் உண்மை.

கடைசியாக கடந்த வாரம் தனது பிரம்மாஸ்திரமான ஜன்லோக்பாலை ஏவியிருக்கிறார். தில்லி மாநில சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற விடாமல் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் எதிர்த்து வாக்களிக்கின்றன. “இதற்குக் காரணம் அதற்கு இரண்டு நாட்கள் முன் தனது அரசு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கே.ஜி பேசினில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுக்கு அதிக விலை வைத்து தில்லியில் விற்கப்படுவதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது தான்” என்று சொல்லும் கேஜ்ரிவால், “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் அம்பானிகளால் இயக்கப்படும் பொம்மைகள் என்றும் அதனால் தான் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் இவ்விரு கட்சிகளும் கைகோர்த்துக் கொண்டன” என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். முகேஷ் அம்பானிக்கு எதிராக வேறு ஒரு மாநிலத்தில் நடக்கும் எரிபொருள் துரப்பண நடவடிக்கையின் மூலம் ஏமாற்றப்படுவதை எதிர்த்து கொந்தளிக்கும் இதே கேஜ்ரிவால், தனது சொந்த மாநிலமான தில்லியில் மக்களின் தலையில் மின்சாரத்தின் பெயரில் மிளகாய் அறைக்கும் அனில் அம்பானிக்கு எதிராக இதே பரிமாணத்தில் பொங்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைகளுக்கும் தாம் செல்லத் தயார் என்றும், இதற்காக தனது அரசே போனாலும் பரவாயில்லை என்றும் அறிவித்துள்ள கேஜ்ரிவால் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு தில்லி அரசைக் கலைக்க கோரி மாநில ஆளுனரிடம் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தின் அதிகாரம் என்பது ஒரு கொலு பொம்மையின் அதிகாரம் என்பது கேஜ்ரிவால் அறியாத இரகசியம் அல்ல. கேஜ்ரிவாலே எழுதியிருக்கும் சுயராஜ்ஜியம் நூலில், சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் அங்கங்களுக்கு வெறுமனே சட்டமியற்றும் அதிகாரமும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இருப்பதாகவும், அரசின் அங்கங்களான அதிகார வர்க்கத்தினருக்கே முழுமையான அதிகாரங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது எதுவும் அவரது சொந்த கண்டுபிடிப்பல்ல. மார்க்சிய லெனினிய இயக்கங்கள் வெகு காலமாக தமது திட்டங்களிலும், ஆவணங்களிலும் குறிப்பிடுபவைதான். மேலும் இதற்கான தீர்வாக  இந்த அமைப்புக்குள்ளேயே   மொக்கையான சீர்திருத்த நடவடிக்கைகளத்தான் கோருகிறார். அதன்படி இதற்கும் மாலெ இயக்கத்தின் திட்டத்திற்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் கட்சி பிரமுகர்களுடன்

தலைநகர் தில்லி, ஹரியானாவின் குர்காவ்ன், உத்திரபிரதேசத்தின் காஜியாபாத் மற்றும் நோய்டா உள்ளிட்ட பகுதிகளோடு சேர்த்து ‘தலைநகர் பிரதேசம்’ (National Capital Teritory of Delhi) என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான மாநில அந்தஸ்து பெற்ற பிரதேசம் அல்ல. அரசியல் சாசனத்தின் படி, யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைகளோடு மேலதிகமாக சில விசேஷ உரிமைகளைக் கொண்டிருக்கும் பிரதேசமாகும்.

சாதாரணமாக ஒரு மாநில சட்டமன்றம், ஒரு சட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் அந்த சட்டம் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள அதே பொருளிலான சட்டத்தோடு முரண்படுமானால், பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டமே இறுதியாக செல்லும். தில்லி யூனியன் பிரதேசத்தைப் பொருத்தமட்டில், பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் கீழ் நிறைவேற்றும் சட்டத்தோடு முரண்படாமல் சட்டமியற்றிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஒரு வேளை முரண்படும் பட்சத்தில், பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டமே இறுதியாக செல்லும்.

மேலும், தில்லி சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்ட மசோதாக்களை அம்மாநிலத்தின் லெப்டினெண்ட் கவர்னர் மூலமாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நிறைவேற்ற முடியும். இது யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வைத்திருக்கும் அயோக்கியத்தனமான ஒரு சட்டவாத நடைமுறை. தற்போதய ஜன்லோக்பால் மசோதா விவகாரத்தில், லெப்டினெண்ட் கவர்னர் நஜீப் ஜங் ஏற்கனவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற அடிப்படையில் மசோதா தாக்கலாவதற்கு எதிரான அறிக்கையை தில்லி சட்டமன்றத்திற்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் அம்மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்றுவது இந்திய சட்டவாதத்திற்கு உட்பட்டே இயலாத காரியம் என்பதே உண்மை.

எதிர்பார்த்தபடியே மசோதா தோற்கடிக்கப்படுகிறது. இதில் பாஜகவும், காங்கிரசும் கை கோர்த்துள்ளமைக்கு ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதமான அணுகுமுறையே காரணம்.  ஊழல் ஒழிப்பு குறித்த பெயருக்காவது ஆம்ஆத்மி பெயர் எடுக்க கூடாது என்பது அவர்களின் எண்ணம். ஒருக்கால் அவர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது சட்டமாவது இயலாத ஒன்று. கேஜ்ரிவாலின் ராஜினாமாவைத் தொடர்ந்து  கவர்னர் சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கி வைக்கிறார். உடனே இதெல்லாம் தனக்குத் தெரியவே தெரியாது என்பது போல் நடிக்கும் கேஜ்ரிவால், கவர்னர் காலனிய காலத்து வைசிராய் போல் செயல்படுவதாக அங்கலாய்த்துள்ளார்.

ஆக, அவர் தில்லியின் ஆட்சியதிகாரத்தை மேற்கொள்வது என்ற தீர்மானத்தை எடுக்கும் போதே அரசு இயந்திரத்தின் இயல்புக்கு மீறி இங்கே ஜனநாயகம் செல்லாது என்பதை அறிந்தவராகவே அவர் இருந்துள்ளார். என்றாலும், அவரே சுட்டிக்காட்டிய இந்த அமைப்பு முறைகளின் அத்தனை போதாமைகளையும் மனதார ஏற்றுக் கொண்டு தான் பதவியில் அமர்கிறார் என்கிற பட்சத்தில் அதன் நடைமுறைகளுக்கும் சொல்லப்படும் மரபுகளுக்கும் அது கோரும் மதிப்பை அளிக்க வேண்டியது அவரது கடமையாகிறது.

தற்போது, தான் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்டிமென்ட் நாடகங்களை அரங்கேற்றி வரும் கேஜ்ரிவால், இந்த ‘பாதிப்பை’ முன் அனுமானித்தே பதவியில் அமர்கிறார். கேஜ்ரிவால் – அண்ணா ஹசாரே கும்பல் ஊழல் ஒழிப்பு குறித்து அடித்த சவடால்களும், காங்கிரசு குறித்த அவர்களது பிரச்சாரங்களும் அத்தனை எளிதில் நமக்கு மறந்திருக்காது. அத்தனைக்கும் காரணம் சில ஊழல் அரசியல்வாதிகள் தான் என்று தனியார்மயம், தாராளமயம் மற்றும் அவற்றை முன் தள்ளும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நலன்கள் என்கிற முழு பூசணிக்காயை காங்கிரசு என்கிற மீந்து போன பழைய சோற்றுக்குள் புதைக்க முற்பட்ட பிரச்சாரங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். என்றாலும், அதே காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில் அமர அவர் ஏன் முடிவெடுத்தார்?

ஏனெனில், அவரது நோக்கம் எல்லாம் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தல் தான். நிறைவேற சாத்தியமற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது, அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைக் குறித்து வாய் திறக்க மறுத்ததில் தொடங்கி தற்போது காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் ஒரே தராசில் தள்ளி எதிர் தராசை கவர முயற்சிப்பது வரைக்கும் அதைத் தான் துலக்கமாக உறுதிப்படுத்துகிறது. ராஜினாமா முடிவையும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகளையும் கூட ஒரே நேரத்தில் துவங்கியிருப்பது தற்செயலானதல்ல. இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. முக்கியமாக பாஜக ஒப்பாரி வைத்து அழுகிறது. மோடி கும்பலே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

’நரேந்திர மோடிக்கு’ பிடுங்கிய பேதி

கேஜ்ரிவால் வழக்கு
முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கேஜ்ரிவால்.

இப்படியாக மோடியும்,பாரதிய ஜனதா கட்சியினரும் தற்போது அண்டி கலங்கிப் போய் கிடக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது நிற்காமல் புடுங்கித் தள்ளும் பேதியின் வரலாறு டிசம்பர் மாத இறுதியில் இருந்தே துவங்குகிறது. டிசம்பர் மாதம் நடந்த நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் வென்ற பாரதிய ஜனதா, தனது வெற்றியைக் கொண்டாட முடியாமல் இஞ்சி தின்ற குரங்காக அவஸ்தைப்பட வைத்தது தில்லி மாநில தேர்தல் முடிவுகள்.

பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றாலும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்பதோடு ஆம் ஆத்மி கட்சி வென்ற 28 இடங்கள் பாரதிய ஜனதாவின் கண்ணில் ரத்தம் வழிய வைத்து விட்டது. ஊரெல்லாம் செல்லும் நமோ மந்திரம் தில்லியில் மண்ணைக் கவ்விய அதிர்ச்சியிலிருந்து பாரதிய ஜனதா மீள முடியாமல் தவித்தது. பாரதிய ஜனதாவின் அதிர்ச்சி விலகுவதற்குள் ஆம் ஆத்மி கட்சியின் இலவச குடி நீர் மற்றும் மின் கட்டணக் குறைப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்று மாற்றி ஒன்றாக போட்டுத் தாக்கின. சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற ஆம் ஆத்மியின் பிரகடனம் வணிகர்களிடையே செல்வாக்காக இருக்கும் பாஜகவின் இடத்தை கேள்விக்குள்ளாக்கியது.

இப்படியாக பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது. மேலும், தேர்தல் பரப்புரைகளுக்காக பாரதிய ஜனதா மேற்கொண்ட அதே ‘வதந்திக் கம்பேனி’ உத்தியை ஆம் ஆத்மி கட்சியும் திறமையாக பயன்படுத்திக் கொண்டது. இணையம் மற்றும் ஊடகங்களில் வெளிச்சம் பெறுவது எப்படி என்கிற பாடத்தில் பாரதிய ஜனதா இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே ஆம் ஆத்மி முனைவர் பட்டம் முடித்து விட்டிருந்தது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் கலையில் கேஜ்ரிவால் மோடியை அசால்டாக தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடக்கூடியதாக இருந்தார். இது பாரதிய ஜனதாவிடம் பற்றியெறிந்த கவலையில் பெட்ரோலை ஊற்றியது.

தற்போதைய ஜன்லோக்பால் மசோதா விவகாரத்திலும் பாரதிய ஜனதா ‘நானும் ரவுடி தான் நானும் ஊழலுக்கு எதிரி தான்’ என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஜன்லோக்பால் மசோதா தாக்கலாவதை தாங்கள் எதிர்த்ததற்கும் அம்பானிக்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று அம்பானியைத் திட்டியாக வேண்டும், இல்லை வெண்டைக்காயை வெட்டி விளக்கெண்ணையில் கழுவிய கணக்காக ஏதாவது சப்பைக்கட்டு கட்டி வழிய வேண்டும் என்கிற நெருக்கடி பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மசோதாவை எதிர்க்கும் போக்கில் காங்கிரசோடு பாரதிய ஜனதாவையும் இணை வைத்துப் பேசும் கேஜ்ரிவாலின் பரப்புரை ஏஜெண்டுகளையும் எதிர்கொண்டாக வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மோடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. எனினும் பாராளுமன்றத் தேர்தலில் எல்லா மாநிலங்களிலும் மோடி அலை இருக்காது, பிராந்திய கட்சிகளை வளைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பது அதன் கணக்கு. அதற்கு தோதாக ஆம் ஆத்மி போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளை பிரிப்பார்கள், பாஜக தள்ளாடும் என்று காங்கிரஸ் பெருச்சாளிகள் முதலில் மகிழ்ந்தார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் பெருச்சாளிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் ஆம் ஆத்மியின் பிரபலங்கள் போட்டியிடுவதால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். இப்படி இரு தேசியக் கட்சிகளும் தின்னவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறுகின்றன.

இந்த சூழ்நிலையில் மற்றுமொரு ஓட்டுக் கட்சியாக தனது அதிகாரத்தினை பெருக்கிக் கொள்ள ஆம் ஆத்மி துடிக்கிறது. தில்லி ஆட்சியை பணயம் வைத்து அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு அலையை எழுப்ப முயல்கிறார்கள்.  அதற்குத்தான் இத்தனை அதிரடிக் காட்சிகள். அரசியலற்ற வலதுசாரி கொள்கைகளை வைத்திருக்கும் ஆம் ஆத்மி மற்ற இரு தேசிய கட்சிகளை விட ஆளும் வர்க்கத்தின் செல்லக் குழந்தையாக மாறுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அடித்தளமோ, காரணங்களோ இல்லாத வெறும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் வைத்து ஒரு கட்சி எழ முடியுமென்றால் அதுவும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ மகிமைதான்.

எனவே, இனி நடக்கும் கூத்துகளில் இந்திய ஓட்டுச்சீட்டு போலி ஜனநாயகத்தின் மாண்பு கொடிகட்டிப் பறக்கும்.

ஊர்ப்புறங்களில் அந்தக் காலத்தில் சில வினோதமான பிச்சைக்காரர்கள் வருவார்கள். நல்ல நெடுநெடுவென்ற உயரத்தில் ஆஜானுபாகுவான ஆகிருதியோடு மேல் சட்டை அணியாமல் கெண்டைக் காலில் இந்த பெருமாள் கோயில் பந்த சேவைக்குச் செல்பவர்கள் கட்டுவது போன்ற சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஜல் ஜல் என்று வருவார்கள். அவர்கள் கைகளில் சணல் கயிற்றை முறுக்கிச் செய்த சாட்டைக் கயிறு ஒன்று இருக்கும். முதுகில் இரத்தத் திவலைகள் அப்பியிருக்கும்.

கையிலிருக்கும் சாட்டையை லாவகமாக சொடுக்கிச் சுழற்றி தங்களையே அடித்துக் கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அது பார்க்கத் தான் அடி போல இருக்கும். உண்மையில் அந்த சாட்டைக் கயிறு சுழன்று லாவகமாக அவர்கள் முதுகை மென்மையாக முத்தமிடுவது போல் ஒற்றியெடுத்துச் செல்லும். இதைப் பார்க்கும் சிலர் அஞ்சி மிரள்வார்கள், சிலர் அது சும்மா செட்டப் என்பதை அறிந்து இரசிப்பார்கள்.. நாலைந்து நிமிடம் தன்னையே ‘அடித்துக்’ கொள்ளும் பிச்சைக்காரர்கள் கடைசியில் முகத்தில் ஒருவிதமான பரிதாப உணர்ச்சியை வலிந்து வரவழைத்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் பிச்சையெடுக்க வருவார்கள் – ஒரு நசுங்கிய மஞ்சள் நிற டால்டா டப்பாவை நீட்டியபடி.

பயந்தவர்கள் காசு போடுவார்கள், நாடகமென்று அறிந்தவர்கள் சிரித்துக் கொண்டே விலகி விடுவார்கள். இதில் ஒரு அறிவாளி இருந்தான். அவனுக்கும் இது நாடகம் என்று தெரியும். ஒரு நாள் பொறுக்கமுடியாமல் “யேல அந்த சவுக்கு வாரை இங்கெ குடுலே. நான் நாலு விளாரு விளாருதேன். பொறவு துட்டு குடுக்கேன்” என்று முன் வந்தான். பிச்சைக்காரர் ஓடியே போய் விட்டார். அதன் பிறகு அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு மட்டும் வர மாட்டார்கள்.

கேஜ்ரிவால் டால்டா டப்பாவொடு ஓட்டுக் கேட்டு வருகிறார். பாரதிய ஜனதா ஆலோசனைக் கூட்டங்களில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவிகள் பரிதாப படுகிறார்கள். நாம் தான் முன்வந்து சாட்டைக் கயிற்றை கையிலெடுக்க வேண்டும். அப்போது ஆம் ஆத்மி மட்டுமல்ல, நேற்றைய வித்தைக்காரர்க்ளான காங்கிரசும், பாஜகவும் கூட ஓட வேண்டியிருக்கும்.

– தமிழரசன்.

மேலும் படிக்க

நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?

5

ழல் முறைகேடுகளும் மறுகாலனியாக்க கொள்ளைகளும், இந்த அரசமைப்பை ஆளும் வர்க்கத்தின் அடியாட்படை என்று பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு நாளும் அம்பலமாக்கி வருகின்றன. இந்த அரசமைப்பின் மீது மீண்டும் மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதெப்படி என்ற சவாலை எதிர்கொண்டுவரும் ஆளும் வர்க்கம், நிதிஷ் குமார், சவுகான் போன்ற அரசியல்வாதிகளையும், துர்காசக்தி நாக்பால், கெம்கா போன்ற சில அதிகாரிகளையும், குறிப்பிட்ட சில நீதிமன்றத் தீர்ப்புகளையும் காட்டி மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது. அன்னா ஹசாரேயின் அரசியல் கோமாளித்தனத்தை “ஸ்பான்சர்” செய்து மாபெரும் மக்கள் இயக்கமாக காட்டுகிறது.

கேஜ்ரிவால் ஆர்ப்பாட்டம்
ஊழல் எதிர்ப்பு நாயகனின் கலகக்காரன் நாடகம் : தனது அரசின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இரு டெல்லி போலீசாரை நீக்கக் கோரி, அரவி்ந்த் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய முற்றுகைப் போராட்டம்.

காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒரு கட்சி என்ற முறையில் மதிப்பிழந்து போவிட்டதால், அக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட “தேசத்தின் மீட்பர்”களாக மோடியையும் ராகுல் காந்தியையும் காட்டி, அவர்களுக்கிடையிலான “ஒண்டிக்கு ஒண்டி”யில்தான் தேசத்தின் எதிர்காலமே நிர்ணயிக்கப்படவிருப்பது போன்ற தோற்றத்தையும் ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது. மதிப்பிழந்து போன பழைய அப்போஸ்தலரான மன்மோகன் சிங்கை ஓரங்கட்டி, வரவிருக்கும் தேர்தலில் மோடிக்கு முடிசூட்டி இந்த சுற்று ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஆளும் வர்க்கம் அமைதி கொண்டிருந்த நேரத்தில், மூன்றாவது மீட்பராக களத்தில் குதித்திருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.

ஆளும் வர்க்கம், தான் எழுதிய லோக்பால் திரைக்கதையில் ஊழல் ஒழிப்பு நாயகன் என்ற பாத்திரத்தை மட்டும்தான் கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால், ஊடக வெளிச்சத்தில் நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்ட அந்த நாயகன், தனது இமேஜுக்குப் பொருத்தமான திரைக்கதையைத் தானே தெரிவு செய்து கொண்டிருக்கிறார். ஊழல் ஒழிப்பாளர் என்ற வரம்பைத் தாண்டித் தன்னை எளிய மனிதனின் பிரதிநிதியாகவும் காட்டிக் கொள்ள விரும்புவதால், அதிகார எதிர்ப்பு கலகக்காரனின் பாத்திரத்தையும் அவர் ஏற்றிருக்கிறார். அதன் விளைவுதான், சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவர் நடத்திய தர்ணா போராட்டம்.

முதலமைச்சருக்குரிய “புனித” மரபுகளை மீறி, கேஜ்ரிவால் முச்சந்தியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவே, முதல்வரிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சரையும், குடியரசு தினக் கொண்டாட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை டில்லி போலீசுக்கு ஏற்பட்டு விட்டது. முதல்வர் போராடலாமா என்பது முதல் கேள்வி. அப்படியே போராடினாலும், டில்லி மாநகரில் போராட்டங்களுக்கென்றே ஒதுக்கிவிடப்பட்டிருக்கும் ஜந்தர் மந்தரில் அமர்வதற்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் வீட்டுக்கு முன்னால் துண்டை விரித்துப் படுத்து, குடிமக்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியைக் காட்டலாமா என்பது இரண்டாவது கேள்வி.

கேஜ்ரிவால் அத்துமீறிவிட்டதாக ஆளும் வர்க்கம் அவர் மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது. “அராஜகவாதி, மாவோயிஸ்டு, பொறுப்பில்லாத தெருச்சண்டைக்காரர்” என்று பாரதிய ஜனதாவும் காங்கிரசும் மட்டுமின்றி, எல்லா ஊடகங்களும் அவரைச் சாடுகின்றன. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருந்த ஏர் டெக்கான் விமானக் கம்பெனியின் முதலாளி கேப்டன் கோபிநாத், கேஜ்ரிவாலின் ஆதரவாளர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, நீதிபதி ஹெக்டே முதலான பலரும் இந்த அத்துமீறிய நடவடிக்கையால் அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். “சிறந்த அரசாளுமைக்கு மாற்று, கவர்ச்சி அரசியல் அராஜகம் அல்ல” என்று தனது குடியரசு தின உரையில் கேஜ்ரிவாலைக் குத்திக் காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

சோம்நாத் பாரதி
டெல்லி சட்ட அமைச்சம் சோம்நாத் பாரதி உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதை டெல்லி போலீசார் ஏற்க மறுத்ததை அடுத்து இரு தரப்புக்குமிடையே நடந்த விவாதம்.

ஆம் ஆத்மி கட்சியின் சமூக அடித்தளமாக இருப்பவர்களும், அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஆங்கில சானல்களில் பார்த்து அதன் மூலம் சமூக உணர்வு தூண்டப் பெற்றவர்களுமான உயர் நடுத்தர வர்க்கத்தினரும் கூட, முதல்வர் கேஜ்ரிவால் இத்தகைய புரட்சி”யில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கவில்லை என்பது ஆங்கில நாளேடுகளுக்கு அவர்கள் எழுதும் வாசகர் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.

அன்னா (ஹசாரே)வின் தம்பிகளாக இந்திய அரசியல் அரங்கிற்குள் திடீர்ப் பிரவேசம் செய்திருக்கும் இவ்வர்க்கத்தினரின் நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் விசித்திரமானவை. விடுதலைப் போராட்டக் காலத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் அல்லது அறுபதுகள், எழுபதுகளில் நக்சல்பாரி இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் போன்றோரிடம் காணப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இலட்சியவாதமோ மக்கள் பற்றோ இவர்களிடம் கிடையாது. இவர்களில் ஆகப்பெரும்பான்மையோர் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் ஆதாயங்களைப் பெற்றவர்கள்; அதுதான் நாட்டை முன்னேற்றும் வழி என்றும், அக்கொள்கைகளைச் சரியாக அமல்படுத்தி வெற்றி காண விடாமல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் ஊழல்கள்தான் தடையாக இருக்கின்றன என்றும் கருதுபவர்கள்; இவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள், பல்வேறு தொழில்முறை தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் உயரதிகாரிகள்.

கேஜ்ரிவால் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்தானெனினும் எளிய மனிதனின் உளவியல் புரிந்தவர். எளிய மனிதர்களையும் இவர்களையும் இணைக்கின்ற ஒரே சரடான ஊழல் ஒழிப்பு என்ற முழக்கம், எளிய மனிதனின் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பது கேஜ்ரிவாலுக்குத் தெரியும். அதனால்தான் மின் கட்டணக் குறைப்பு, இலவசத் தண்ணீர் போன்ற சாதாரண மக்களின் உடனடிக் கோரிக்கைகளைத் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அவர் சேர்த்துக் கொண்டார்

டாடா மற்றும் அம்பானியின் நிறுவனங்கள் மின்சாரத்தின் விலையைச் செயற்கையாக உயர்த்தியதன் விளைவுதான் கட்டண உயர்வு என்று கூறி, அந்த நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உத்தரவிட்டார். ஆனால் மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செயும் அதிகாரம் படைத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, மின் கட்டணத்துக்கு கூடுதல் சர்சார்ஜ் விதித்து கேஜ்ரிவாலின் முடிவைக் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. அடுத்து டெல்லியில் பத்து மணி நேர மின்வெட்டு வரவிருப்பதாக டாடா, அம்பானி நிறுவனங்கள் அச்சுறுத்தியிருக்கின்றன. கார்ப்பரேட் மின் நிறுவனங்களின் யோக்கியதை என்ன என்பதை என்ரானில் தொடங்கி பல முதலாளிகளும் நிரூபித்திருந்த போதிலும், இந்தக் கொள்ளைக்குக் காரணம் மின்சாரம் தனியார்மயம்தான் என்று கேஜ்ரிவால் கூறவில்லை, கூறவும் மாட்டார். ஏனென்றால், தனியார்மயத்தை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கூறுவது, தன் மீது வலதுசாரி அல்லது இடதுசாரி என்ற முத்திரை விழுவதற்கு வழிவகுக்குமென்றும், அத்தகைய கொள்கைகளோ சித்தாந்தங்களோ இல்லாமலிருப்பதே சிறந்த கொள்கை என்றும் அவர் கருதுகிறார்.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களின் “அராஜக” நடவடிக்கைகளை கண்டித்து பா.ஜ.க கட்சியினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டில்லியில் கடை போடுவதற்கு ஷீலா தீட்சித் அரசு அளித்திருந்த அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தபோது கூட, தான் பன்னாட்டு முதலீடுகளுக்கு எதிரி அல்ல என்றும், சில்லறை வணிகத்தில் அவர்களை அனுமதிப்பது வேலை வாப்பைப் பாதிக்கும் என்பதால் மட்டுமே அதனை எதிர்ப்பதாகவும் அவர் தன்னிலை விளக்கமளித்தார். தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று சமீபத்தில் ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியமும் செய்தார்.

இருப்பினும், “முந்தைய அரசு வால் மார்ட்டுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி சில்லறை வணிகத்தில் அவர்கள் நுழைவதை தடுப்பதென்பது, இந்தியாவின் மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடும் என்றும், நாட்டை வாழைப்பழக் குடியரசாக மாற்றிவிடும்” என்றும் சீறினார் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. கேஜ்ரிவாலின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு நீண்ட நாட்களாக நன்கொடை அளிப்பவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ, நாற்பதுகளின் கொள்கைகளெல்லாம் இன்றைக்குப் பொருந்தாது என்றும், உலகமயமாக்கல் கொள்கையை அனுசரித்துச் செல்லுமாறும் கேஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

கேஜ்ரிவாலைப் பொருத்தவரை தனக்கு கொள்கையோ சித்தாந்தமோ கிடையாதென்றும், தான் இடதுசாரியல்லவென்றும் பலமுறை தெளிவுபடுத்தி யிருக்கிறார். இருந்த போதிலும், நான் ஒரு எளிய மனிதன் என்று தனது குல்லாவிலேயே பிரகடனம் செய்து கொண்டிருக்கும் ஒரு மனிதன், குல்லாவுக்குப் பொருத்தமான முறையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? டில்லி வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் குபீரென்று கட்சிக் கிளைகள் வேறு கிளம்புகின்றன. தமிழகத்தில் மேலிடப் பார்வையாளர் வந்து கோஷ்டித்தகராறைத் தீர்க்கும் அளவுக்கு கட்சி வெகுவேகமாக வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் சுமார் 300 தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதால், தேசத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு, வால்மார்ட்டை விரட்டுவது முதலானவை தொடர்பான விவாதத்தைக் கிளப்பினால் பிரபலமடையலாம் என்ற போதிலும், அந்த விவாதம் தவிர்க்கவியலாமல் தனியார்மய எதிர்ப்புக்கு இட்டுச் செல்லும் என்பதால், இத்தகைய ஆபத்துகள் ஏதும் இல்லாத அதிகார எதிர்ப்பு நடவடிக்கையொன்றை திட்டமிட்டே தெரிவு செய்திருக்கிறார் கேஜ்ரிவால்.

இப்படித் தெரிவு செயப்பட்டதுதான், டில்லி போலீசுக்கு எதிராக கேஜ்ரிவால் நடத்திய போரட்டம். மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி போலீசை அம்மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற கட்சிகளே நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளால் அடித்தட்டு வர்க்கம் முதல் உயர் நடுத்தர வர்க்கம் வரையிலான அனைத்துப் பிரிவினரின் வெறுப்புக்கும் டில்லி போலீசு இலக்காகியிருப்பதால், தனது அதிகார எதிர்ப்பு நடவடிக்கைக்கான குறியிலக்காக டெல்லி போலீசைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கேஜ்ரிவால்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களின் “அராஜக” நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி, டில்லியின் மையப் பகுதியில் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது, வரதட்சிணைக் கொடுமை குறித்த புகார் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக ஒரு பெண் கொல்லப்பட்டது, உகாண்டா நாட்டைச் சேர்ந்த போதை மருந்துக் கடத்தல் மற்றும் விபச்சாரக் கும்பல் மீது குடியிருப்பு பகுதி மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது – ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் ராக்கி பிர்லா மற்றும் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு போலீசை வற்புறுத்தியிருக்கின்றனர். ஆதாரமில்லாமல் கைது செவதோ சோதனை போடுவதோ இயலாது என்று போலீசு மறுத்ததாம்; உடனே, அமைச்சர் நேரடியாகக் களத்தில் இறங்கினார். இந்த நடவடிக்கையின் போது சோம்நாத் பாரதியும் தொண்டர்களும் சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு கருப்பினப் பெண்களை வேசிகள் என்று ஏசியதாகவும், தாக்கியதாகவும், நிறவெறிக் கண்ணோட்டத்தில் இழிவுபடுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது பாரதிய ஜனதா. அமைச்சரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்த போலீசாரை தற்காலிகப் பணிநீக்கம் செய வேண்டும் என்று கோரியது ஆம் ஆத்மி கட்சி. இதன் தொடர்ச்சிதான் கேஜ்ரிவாலின் போராட்டம்.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ நடத்தும் போராட்டங்களில் கல்லெறிவதும், பொதுச்சோத்துகளை எரிப்பதும், சூறையாடுவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். ஆம் ஆத்மி கட்சியினர் போலீசின் மீது நடவடிக்கை கோரினர் என்பதற்கு மேல், கல்லெறியோ, பேருந்து எரிப்போ, வன்முறையோ எதுவும் நடந்து விடவில்லை. இருந்த போதிலும், இப்போராட்டத்தின் விளைவாக “குடியரசு’ தின விழா ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நின்று, மக்கள் அவதிக்குள்ளாகினர் என்றும், ஒரு முதலமைச்சரே பொறுப்பில்லாமல் அராஜகத்தைத் தூண்டி விடுவதாகவும் காங்கிரசு, பா.ஜ.க., ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் சாடினர். இலஞ்ச-ஊழல், லாக்கப் வல்லுறவு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட எல்லா கிரிமினல் குற்றங்களுக்கும் புகழ் பெற்ற டெல்லி போலீசை, சட்டத்தை மீறாத புனிதர்கள் போலவும், சட்டத்தை மீறுமாறு அமைச்சர் அவர்களைத் தூண்டியதாகவும் சித்தரித்தன ஊடகங்கள். முதலமைச்சரே முன்நின்று போராடிய போதிலும், இரண்டு போலீசாரை சம்பளத்துடன் விடுப்பில் அனுப்பியதற்கு மேல் வேறு எதையும் கேஜ்ரிவால் சாதிக்கவியலவில்லை.

“எது அராஜகம்? 1984 சீக்கியர் படுகொலையும், ரத யாத்திரையும், 2002 குஜராத் படுகொலையும் அராஜகமா, நாங்கள் நடத்தியது அராஜகமா?” என்று ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. வுக்கும் காங்கிரசுக்கும் எதிர்க்கேள்வி எழுப்பினர். ஊடகங்கள் தங்களுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு செய்வதாகக் குறைபட்டுக் கொண்டனர்.

மின்சாரம் மற்றும் தண்ணீர் தனியார்மயத்தை மையப்படுத்தி பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் எதிர்ப்பில் போய் முடியும் என்பதால், அதனைத் தவிர்த்துவிட்டு போலீசு விவகாரத்தை கேஜ்ரிவால் கையிலெடுத்துக் கொண்டதைப் போலவே, மின்கட்டணக் குறைப்பை எதிர்த்தால் மக்களிடமிருந்து தனிமைப்பட நேரிடும் என்பதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க.வும் காங்கிரசும் ஆளும் வர்க்கங்களும், போலீசு பிரச்சினையின் பின்னால் ஒளிந்து கொண்டு விட்டனர். எல்லா விதமான சட்டவிரோத நடவடிக்கைகளையும் போலீசை வைத்தே செய்து முடித்துக் கொள்ளும் கட்சிகளும் ஆளும் வர்க்கமும், ஆம் ஆத்மியின் அராஜகத்தால் அரசமைப்பே சீர்குலைந்து விட்டது போலவும், ‘குடியரசு’ தின விழாவையே கேஜ்ரிவால் சீர்குலைத்து விட்டதாகவும் சாடினர். “இரண்டு போலீசாரை விடுப்பில் அனுப்பி கேஜ்ரிவாலுடன் சமரசம் செய்து கொண்டதன் மூலம் உள்துறை அமைச்சர் ஷிண்டே குடியரசு தின அணிவகுப்பைக் காப்பாற்றியிருக்கலாம், ஆனால் இந்தியக் குடியரசை பலவீனப்படுத்திவிட்டார்” என்று சாடினார் பா.ஜ.க. வின் அருண் ஜெட்லி.

நேற்றுவரை ஊழலை ஒழிக்க வந்த நம்பிக்கை நட்சத்திரமாகச் சித்தரிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை ஒரே நாளில் அராஜகவாதியாகவும் தேசவிரோதியாகவும் புரட்டிப் போட்டுவிட்டன ஊடகங்கள். அதற்கு காரணம் மறியல் போராட்டம் மட்டுமல்ல. போலீசை மக்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும் என்று கூறியது, கார்ப்பரேட் நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்தியது போன்ற நடவடிக்கைகள்தான். எந்த விதத்திலும் மக்களுக்குப் பதில் சோல்லக் கடமைப்பட்டிராத, மக்களை ஏறி மிதிக்கின்ற இந்த அரசையும், அதன் ஊழல்களையும் உள்ளிருந்தே தான் திருத்தியமைக்கப் போவதாக கூறுகிறார் கேஜ்ரிவால். சூது, திருட்டு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றையே தமது தொழில்முறைகளாக கூர் தீட்டி வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், தன் இயல்பில் நேர்மையானதென்றும் அதிலிருக்கும் சில கருப்பு ஆடுகளை மட்டும் களையெடுத்துவிட்டால், முதலாளி வர்க்கம் நாட்டிற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்றும் நம்பச் சோல்கிறார்.

கொள்கை வேண்டாம், சித்தாந்தம் வேண்டாம், அமைப்பு வேண்டாம் – தன்னியல்பாக கோபத்தில் கிளர்ந்தெழும் மக்கள்திரளே போதும் என்று எகிப்து, துனிசிய, வால் ஸ்டிரீட் எழுச்சிகளைக் கொண்டாடிய முதலாளி வர்க்கத்தின் அறிவுத்துறைக் கூலிப்பட்டாளங்கள், தற்போது அந்த எழுச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகளானதேன் என்று விளக்கமளிப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய- லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள் – இவையில்லாமல் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் வீழ்த்த இயலாது.

ஊழலற்ற முதலாளித்துவத்தையும் அதிகார வர்க்கத்தையும் நமக்கு காட்டப்போவதாகக் கூறிவருகிறார் கேஜ்ரிவால். அதற்கு முன் அவர் ஒரு கோமாளியாக அடையாளம் காட்டப்பட்டு விடுவார்.

– தொரட்டி
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
( ஆத் ஆத்மி கட்சி, புதுதில்லி ஆட்சியிலிருந்து பதவி விலகியிருப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. )
___________________________________

தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?

76

சும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை பறந்து, அங்கிருந்து பசும்பொன்னுக்கு ஹெலிகாப்டரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய்.

தேவர் சிலைக்கு தங்கக் கவசம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு 13 கிலோ தங்கத்தில் கவசம் அணிவித்து வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு என்று ‘ஜனநாயகத்தை’ ஆராதிக்கும் அறிஞர்கள் மல்லுக் கட்டுவார்கள். சரி, புரோட்டோகாலுக்கு இருக்கும் மரியாதை அரசின் மதச்சார்பின்மைக்கும், சாதி சார்பின்மைக்கும் கிடையாதா?

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியது நினைவிருக்கிறதா? “சாதி, இன, மத, சமூக ரீதியாக துவேசத்தையும், பிளவுகளையும், மோதல்களையும் தூண்டிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசின் ‘நீதி நெறி பிறழா சத்திய ஆவேசத்தை’ முழங்கினார் ஜெயா. இதன்படி பார்த்தால் நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று.

பசும்பொன் முத்துராமலிங்கத்தை யார் ஆராதிக்கிறார்கள்? பொதுவில் தேவர் சாதி வெறியர்கள் – சங்கங்கள்தான் அவரை ஒரு சாதிக்குரிய கடவுளாக சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், தேவரால் எதிர்க்கப்பட்ட நாடார் முதலான மற்ற சாதிகளும், இன்னபிற ஜனநாயக – புரட்சிக அமைப்புகளும் முத்துராமலிங்கத்தை சாதிவெறியராகத்தான் கருதுகின்றனர். ஆனால் பொதுவில் ஆதிக்கசாதிக்கு வாக்கு அதிகம் என்பதால் பசும்பொன் தேவரை அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் தேசியத் தலைவர் என்று வெறும் வாயிலில் பந்தல் போட்டு தேவர் சாதி வெறியர்களை மகிழ்விக்கிறார்கள். இப்படி ஒருவரின் இருப்பே ‘டிஸ்பியூட்டு’க்குள் இருக்கும் போது  அரசு இவர்களே சொல்லிக்கொள்ளும் விளக்கப்படியும் அந்த தலைவர் குறித்து குறைந்த பட்சம் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அல்லவா இருக்க வேண்டும்?

ஜெயலலிதா பூஜை
தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவது அ.தி.மு.க கட்சிதான்

முக்கியமாக தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்தின் காலத்திலும் சரி, இப்போதும் சரி ஆதிக்க சாதியான தேவர் சாதிக்கும், தாழ்த்தப்பட்ட பள்ளர் அல்லது ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதிக்கும் முரண்பாடும், கலவரங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. 90-களின் பிற்பகுதியில் துவங்கி பல மாதங்கள் நீடித்த கொடியங்குளம் கலவரத்தின் பாதிப்புகளே இன்னமும் மறைந்திருக்கவில்லை. இடையில் தேவர் குருபூஜை என்று அந்த துவேசத்தையும், கலவரத்தையும் தேவர் சாதியைச் சேர்ந்த சில சங்கங்கள் அரசு, கட்சிகளின் உதவியுடன் அதிகப்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் ஒரு ‘நடுநிலைமையான’ அரசு என்ன செய்ய வேண்டும்? இவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசு சார்பிலோ இல்லை ஆளும் கட்சி சார்பிலோ இத்தகைய ஆதிக்க சாதி ஆராதானைகளை செய்வது மாபெரும் குற்றமாகும். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் கொண்டாடுவதை ஒரு அரசும், கட்சியும் பின்பற்றுவதை விட சாதி மோதலை தூண்டிவிடும் விசயம் வேறு ஏது? நியாயமாக குருபூஜைகளை தடை செய்ய வேண்டிய அரசும், அந்த தடையை ஆதரித்திருக்க வேண்டிய கட்சிகளும் நேர்மாறாக பூஜைகளுக்கு ஷிப்டு போட்டு தலைவர்களையும், பரிசுகளையும் அனுப்பி வருகின்றன.

ஆகவே ஜெயலலிதா தான் முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காடுவெட்டி குருவுக்கு ஒரு நீதி, சசிகலா கட்சிக்கு ஒரு நீதி என்று இருக்க முடியாது. தமிழ்நாட்டில் சாதிய முரண்பாடுகளையும், துவேசத்தையும் பெரும் அளவில் தூண்டி வருவதில் முன்னணி வகிப்பது அ.தி.மு.க கட்சிதான் என்பதற்கு வேறு விளக்கம் தேவையில்லை.

ஆனால் அரசு என்ற முறையில் இப்படி ஆதிக்க சாதி சார்பாக களமிறங்க ஜெயலலிதாவுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. வாக்குகளை அறுவடை செய்தாக வேண்டும். பெரும்பான்மை தேவர் சாதி ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் போகும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அந்த உறவை இன்னும் இறுக்கமாக்கிக் கொள்ள இந்த கவசத்தை அணிவித்திருக்கிறார். தவிரவும், கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்.

பரமக்குடி தாக்குதல்
பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது.

ஏற்கெனவே, பரமக்குடியில் தலித்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெயலலிதா அரசின் போலிஸ் ஏழு தலித்களின் உயிரைப் பறித்தது. அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன், ‘துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர காவல்துறைக்கு வேறு வழியில்லை. சொல்லப்போனால் அன்றைய துப்பாக்கிச் சூட்டின் மூலம், அதைவிட பெரிய கலவரம் ஒன்றை தடுத்துள்ள காவல்துறையின் செயல் பாராட்டத்தக்கது’ என்று கூறியது. காவல்துறையின் வெறியாட்டத்தை அடியோடு மூடிமறைத்த, அரசின் சாதிவெறி ஆதரவை தூக்கிப்பிடித்த அந்த அறிக்கையை கடந்த தேவர் ஜெயந்தியின்போது வெளியிட்டு முக்குலத்தோரை அகம் குளிர வைத்த ஜெயலலிதா, இப்போது தேவர் சிலையின் தேகம் குளிருமே என்று தங்கச் சொக்காய் மாட்டிவிட்டுள்ளார். தங்கக் கவசம் தந்த தங்கத் தலைவி, கவசம் தந்த காவிய நாயகி என்ற விளம்பர வாசகங்களை வரும் தேர்தலில் எதிர்பார்க்கலாம்.

ஆனால் இராமநாதபுரம் போன்ற ஆதிக்க சாதி கட்டுமானம் இறுக்கமாக உள்ளப் பகுதியில், அரசின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் பெரும் விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது. ஆதிக்கச் சாதிக்கு ஆதரவான அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது.

இறுதியில் பகையையும், வெறுப்பையும் என்றென்றைக்குமானதாக மாற்றும் இத்தகைய சிலைகளும், கவசங்களும் அப்பகுதியின் உழைக்கும் மக்களை நிம்மதியிழக்கச் செய்கிறது. கலவரங்களும், வன்முறைகளும் மூளும்போது அதில் பலியாவது இத்தகைய எளிய உழைக்கும் மக்களே. அவர்களின் மனதில் படிந்திருக்கும் சாதிவெறியை எளிதில் தூண்டிவிட்டு இறையாகச் செய்து விடுகின்றனர். தற்போதைய தங்கக் கவசத்திலும் இத்தகைய வன்முறை கூறுகள் அதிகம் உள்ளதை இப்போதேக் காண முடிகிறது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம்
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.

மொத்தம் மூன்று பாகமாக இருக்கும் இந்த தங்கக் கவசம் தற்போது தேவர் சிலையின் மீது மாட்டப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கவசம் அகற்றப்பட்டு, வங்கி லாக்கரில் வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது கழற்றிக் கொண்டுவந்து மாட்டிவிட்டு, எல்லோரும் பூ தூவி முடித்ததும் எடுத்துச் சென்று மறுபடியும் லாக்கரில் வைத்துவிடுவார்கள். இருக்கும் பிரச்னை போதாது என்று இது வேறு.

ஏற்கெனவே பழனி நவபாஷான சிலையை சுரண்டிவிட்டார்கள்; திருச்செந்தூர் முருகனின் தங்கவேலைத் திருடி விட்டார்கள் என்று ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதையே இன்னும் கண்டுபிடித்தப் பாட்டைக் காணோம். இப்போது இதுவேறு. கவசத்தை சுரண்டிவிட்டார்கள், வளைத்துவிட்டார்கள் என்று வரும் ஆண்டுகளில் எவனாவது ஏழரையைக் கூட்டி அது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும் சாத்தியங்கள் அதிகம்.

இத்தகைய சில்லறைப் பிரச்சினைகளே மாபெரும் கலவரங்களை தூண்டிவிடும் என்பதிலிருந்தே அரசும், கட்சிகளும் சாதி சார்பாக இருக்க கூடாது என்பதை புரியவைத்துவிடும்.

இந்த கவசத்தை யாருடைய கோரிக்கையின் பெயரால் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார் என்பது முக்கியமானது. 2010-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா பசும்பொன் சென்றபோது அங்கு வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ‘தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதை தொடர்ந்துதான் இந்த கவசம்.

‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த ஆதீனம் கோரிக்கை விடுத்தாராம்… அதை ஏற்றுக்கொண்டு இந்தம்மா தங்க கவசம் கொடுத்தாராம். பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாதது மட்டுமல்ல… போராடியவர்களை மிரட்டி பின்வாங்கச் செய்தது ஜெயலலிதாவின் அரசு. ஆனால் தேவர் சிலைக்குத் தங்க கவசம் அணிவிக்கச் சொல்லி ஒரு அனாமத்து சொன்னதும் உடனடியாக அதை நிறைவேற்றிவிட்டார். காரணம் ஒரு அனாமத்து கோரியிருந்தாலும் தென்தமிழக ஆதிக்க சாதி வாக்குகள் லம்பாக கிடைக்குமென்ற சுயநலத்தான் இதற்கு அடிப்படை. பால் விவசாயிகள் போன்று வர்க்க, தொழில் ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடாமல் சாதி ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த ஆதிக்க சாதி ஆராதனைகள் பயன்படுமில்லையா?

ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு சிலைகளெல்லாம் இரும்புக் கூண்டிற்குள் பூட்டப்பட்டு போலீசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலையை அவமதித்து விட்டார்கள் என்று அன்றாடம் ஒரு கலவரம் நடக்கும் போது தங்க சிலை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாளைக்கு போட்டியாக மற்ற தலைவர்களுக்கு பிளாட்டினக் கவசம், வைர அங்கி, அதற்கு வசூல், கோரிக்கை, அரசு, கட்சிகள் ஏற்பு, பின்னர் அதைக் காணோம் என்று கிளப்பினால் தமிழக அரசின் ஒரே செயல்பாடாக சிலை பாதுகாப்பு பணி ஆகிவிடாதா?

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்கள் பெயரை வரிசையாக வைத்து பின்னர் அது ஆதிக்க சாதிகளுக்கிடையேயான அடையாளச் சண்டையாக மாறியது நினைவிருக்கிறதா? இறுதியில் அரசு அந்த பெயர்களை ரத்து செய்து இனி பெயரே வேண்டாமென்று முடிவெடுத்ததும் ஜெயலலிதாவுக்கு தெரியாதா? இப்படி பட்டுத் தெரிந்து கொண்ட பிறகும் இப்படி சாதிவெறிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் செயலை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விட ஆதிக்க சாதிகளின் வாக்குகளை அள்ளிக் கொள்வது, அதுவும் சாதிவெறியை தூண்டிவிட்டு திரட்டுவதை எல்லா சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் கண்டிக்க வேண்டும்.

பரமக்குடி போலீஸ் வன்முறை
பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் வன்முறை

ஐந்து கோடி செலவழித்து தங்க கவசம் பூட்டுவதற்கு பதில் கல்லூரிகள், பூங்காக்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் முதலானவற்றை ஆரம்பித்திருக்கலாமே என்று சேவ தமிழ்ஸ்’ முதலான தமிழார்வ அறிஞர் பெருமக்கள் அ.தி.மு.கவிற்கு வகுப்பு எடுக்கிறார்கள். குறிப்பிட்ட சாதி,மதவெறி குறித்த பிரச்சினைகள் வரும் போது ஆதிக்க சாதி, பெரும்பான்மை மதவெறியை கண்டித்தால் அந்த பிரிவு மக்களிடம் அந்நியப்படுவோம் என்று அந்தக்காலத்து போலிக் கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த திடீர்ப் புரட்சியாளர்கள் வரை செய்யும் பச்சையான சந்தர்ப்பவாதமே இது.

அதற்குத்தான் சிலைப் பிரச்சினையை திசை திருப்பி அப்துல் கலாம் டைப்பில் பொருளாதார நல்லெண்ண அபிப்ராயங்களாக கவலைப்படுகிறார்கள். அதன்படி இவர்கள் அம்மா குடிநீர், அம்மா அரிசி, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களுக்கு சுவரொட்டி அடித்து பாராட்டியிருப்பார்கள் போலும். மேலும் கோவில்களை விட கழிப்பறைகளே தேவை என்று மோடி சொல்லியிருப்பதை வைத்துப் பார்த்தால் இந்த சேவ தமிழ்ஸ் அறிஞர்கள் அவருக்கும் வாழ்த்து தெரிவிப்பார்களோ, தெரியவில்லை. மசூதியும் வேண்டாம், கோவிலும் வேண்டாம், பள்ளிகளே வேண்டும் என்று போலி கம்யூனிஸ்டுகளின் தமுஎகச கவிராயர்கள் எழுதிய கவிதைகளை, மில்லியன் கணக்கில் பார்த்த மண்ணில் சேவ்தமிழ்ஸ்சின் கவிதை ஆச்சரியமான ஒன்றல்ல.

இதில் நாம் கவனிக்க வேண்டியது இந்த விஷயத்தில் ஜெயலலிதா மட்டும்தான் குற்றவாளியா? போலி கம்யூனிஸ்டுகள் முதல் நேற்று முளைத்த சீமான் வரையிலும் யாரும் இதுகுறித்து ஒரு சொல்லும் சொல்லவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் முத்துராமலிங்கத்தை வாக்கு வங்கி காரணமாக ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காத்தான் அவரை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றெல்லாம் ஜெயா பேச முடிகிறது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் பசும்பொன் குருபூஜையில் முன்வரிசையில் இடம்பிடிக்கப் போட்டிப் போடுகின்றனர். இவர்கள் வேறு வேறு அணிகளில் இருக்கலாம். கட்சிக் கொடிகளின் வண்ணங்கள் மாறலாம். அவர்களின் சின்னங்கள் மாறலாம். ஆனால் ஆதிக்க சாதிவெறியை தூண்டி விட்டு குளிர்காயும் இவர்கள் அனைவரும் ஒரே அணிதான்.

இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்.

–    வளவன்

சென்னை ஐஐடியில் இந்துமத வெறியர்களின் ரவுடிக் கூச்சல் !

18

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி (IIT for Society) என்ற மாணவர்களது கூட்டமைப்பானது ‘மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்’திற்கான கருத்தரங்கு ஒன்றை கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி, சென்னை) நடத்தியது. குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற மனித உரிமை அமைப்பின் செயலர் தீஸ்தா சேதல்வாத் இதில் கலந்து கொண்டு ‘மனித உரிமைகளும், சமூக அமைதியும்’ என்ற தலைப்பில்  சென்னை ஐஐடியில் உள்ள மைய விரிவுரை அரங்கில் உரையாற்றினார். 2002 குஜராத் கலவரத்திற்கு காரணமான இந்துமதவெறியர்களை நீதிமன்ற வழக்குகள் மூலம் வெளியுலக கவனத்திற்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெரும் வெறுப்புடனும், சினத்துடனும் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி
ஐ.ஐ.டி ஃபார் சொசைட்டி – தீஸ்தா சேதல்வாத் உரை நோட்டிஸ்

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு” ’மோடி பாணி அரசியல் முன்னுக்கு வரும் இன்றைய சூழலில் முற்போக்காளர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம், அடுத்த தலைமுறையை பாசிசத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாப்போம்’’ என்று தனது அரைமணி நேர உரையில் தீஸ்தா சேதல்வாத் அறைகூவல் விடுத்தார்.

ஆனால் அடுத்து நிகழ்ந்த கேள்வி-பதில் பகுதியில் ஐ.ஐ.டி மாணவர்கள் என்ற போர்வையில் இந்துமத வெறியர்கள் திட்டமிட்டு கலகம் செய்தனர். கேள்விகள் என்ற பெயரில் பல அவதூறுகளை தீஸ்தா மீது திரும்ப திரும்ப வீசினர். பல முறை அவர்களது கேள்விகளில் சொல்லப்பட்ட தகவல்களே தவறு என சேதல்வாத் சுட்டிக் காட்டியபிறகும் ஊளையிட்டு தங்களது தரத்தை  நிரூபித்துக் கொண்டது, மக்கள் பணத்தில் படித்து உயர் அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டம். கல்வித் துறையில், அதுவும் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப துறையிலேயே மோடிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதிலிருந்து நாடு எத்தகைய அபாயத்தில் இருக்கிறது என்பதை உணரலாம். நிகழ்ச்சியின் இடையே அவர்களது அநாகரீக நடத்தையை பொறுக்காமல் ஆசிரியர் ஒருவரே வந்து அறிவுரை நிகழ்த்தி விட்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

திட்டமிட்ட ரீதியில் ஆணும் பெண்ணுமாக சுமார் முப்பது பேர் மூன்று திசைகளில் பரவலாக (திட்டமிட்டு) உட்கார்ந்து கொண்டு இந்த அராஜகத்தை நிகழ்த்தினர். அரசியல் ரீதியில் பேசியதை விட தனிப்பட்ட ரீதியில் விசமத்தனமாக அவதூறு செய்த அவர்கள், ஆணாதிக்க ரீதியில் சில வசைகளையும், இந்து தேசிய வெறியின் போதையில் வம்படியான சிற்றுரைகளையும் நிகழ்த்திய வண்ணம் இருந்தனர். கேள்விகளை விட ஊளையிட்ட நேரம் அதிகமாக இருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரத்தில் சேதல்வாத் தன் உரையை முடித்த பிறகும், ஒன்றரை மணி நேரம் கேள்வி-பதில் பகுதி நீடித்தது. ஓரிரு முறைகளில் இந்துமதவெறி மாணவர்கள் இந்நிகழ்வை தங்கள் விரும்பியபடி மாற்றி சீர்குலைத்தனர். ஒரு கேள்வியை முழுமையாக கேட்காமாலும், கேட்ட பின் அமராமலும்,  சேதல்வாத் பதில் சொன்னாலும் அவ்வப்போது குறுக்கிட்டு திரும்ப திரும்ப கேள்விகளை அடுக்கி ஒரு தெருச்சண்டையை போல மாற்றினர். அந்த முயற்சி பலராலும் ஆட்சேபிக்கப்படவே மூன்று நான்கு முறைக்கு மேல் அவர்கள் வாயடைக்கப்பட்டனர்.

இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்ட பிறகும் சேதல்வாத்திடம் “நீங்கள் ஏன் இந்துக்கள், பெரும்பான்மையினரது அரசியல் என்று பிரித்து பார்க்கின்றீர்கள். பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரிக்காமல் பொதுவாக மனிதர்கள், மனிதாபிமானம் என்று பார்க்கலாமே’’ என்றெல்லாம் கேள்வி என்ற பெயரில் முட்டாள்களுக்கே உரிய அறிவுரையெல்லாம் கூறினர். உடனே கை தட்டுவதற்கு முப்பது பேரும் தயாராக இருந்தனர். அவர்களில் ஒரு பெண் கேள்வி கேட்கையில் ‘”உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு மோசடியானதா என்றெல்லாம் எனக்கு தேவையில்லை. நிபந்தனைகளுக்குட்பட்ட ஜாமீனில் மாத்திரமே வெளிவரத் தக்க அந்த மோசடி வழக்கில் ஜாமீனுக்கு மனுப் போட்டுள்ளீர்களா?” என நக்கலாகக் கேட்டார்.

மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி
97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மோடி அரசின் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானி மற்றும் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி.

‘2002 குஜராத் படுகொலைகளைப் பற்றி பேச குஜராத் போக வேண்டியிருப்பதால் அவசியம் கருதி மனு போட்டு நான் வெளியூர்களுக்குப் பிரயாணம் செய்ய அனுமதி பெற்று விட்டேன். சட்டம் இந்த அளவில் தான் என்னை அனுமதித்துள்ளது. அதனை நான் பயன்படுத்துகிறேன். இப்போதும் சரி, எப்போதும் சரி தேவைப்படும் போது முன் ஜாமீன் பெறுவேன்’’ என்று பதிலளித்தார் சேதல்வாத்.

பாபர் மசூதி இடிப்பிலிருந்து, நாடெங்கிலும் பல்வேறு கலவரங்களில் சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துமதவெறிக் கூட்டம்தான் சட்டத்தை காலில் போடும் செருப்பு அளவுக்கு கூட மதிப்பதில்லை என்பதை சேதல்வாத் கூறத் தவறி விட்டார். அடுத்து ‘‘குல்பர்கா காலனியை ஏன் தொடர்ந்து பேசி ஒரு அருங்காட்சியமாக மாற்ற முயல்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர். குல்பர்கா காலனி அருங்காட்சியகமா என அங்கு உயிர்நீத்த இசுலாமியர்களைக் கேட்டால் தெரிந்து விடும். ஆனால் இந்துமதவெறியர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. “நரோதா பாட்டியாவில் வீரதீரமாகப் பாசிசத்தை எதிர்த்துப் போரிட்ட பெண்களைப் பாருங்கள். என்றுமே அந்த வரலாற்றை உலகுக்கு அறிவிக்கவே இவ்வாறு செய்கிறோம். இதில் தவறு என்ன?’’ என்று சாட்சியாய் பதில் கொடுத்தார் தீஸ்தா. கேள்விகள் என்ற பெயரில் வக்கிரங்களை முன் வைத்தனர்.

குறிப்பாக கேள்வியே “நீங்கள் சொன்ன கதை…’’ என்று சேதல்வாத் கூறியதெல்லாம்கற்பனை என்று நிறுவும் விதமாகத்தான் இருந்தது. ‘‘எனக்கு கதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் ஒரு பத்திரிகையாளனாக அவர்கள் சொன்னதைப் பதிவு செய்தேன்..’’ என்று சேதல்வாத் பதில் சொன்ன போதும், அதனை மறுத்து அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவை ஆதாரம் என்று முன்வைத்தனர். இந்து பெரும்பான்மையினரது சமூக வாழ்வு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் கூச்சலிட்டனர். முதலில், ஆதாரங்கள் என்று அவர்கள் சொல்ல வருபவை எதுவும் வெளி வரவே இல்லை என மறுத்து, “பொய் சொல்வது உங்களுக்கு வழக்கம் தானே’’ என்றும் சூடாகப் பதில் சொன்னார் தீஸ்தா. மேலும் தீஸ்தா சேதல்வாத், இம்மியளவும் அச்சமில்லாமல் நேருக்கு நேர் தலை நிமிர்ந்து அவர்களுக்கு நறுக்காகப் பதில் சொல்லிய  தருணங்களில் மாத்திரம் ஜனநாயக சக்திகள் ஓரளவு கை தட்டினர். மற்றபடி மொத்த கேள்வி நேரப் பகுதியையும் மோடி ரசிகர்கள்தான் கைப்பற்ற முயன்றனர். அதுவே அன்றைய அவலமும் என்றாலும் அதை தடுத்த நிறுத்துமளவு கூட்டத்தின் ஜனநாயக உணர்வு இல்லை என்பது வருத்தமான விசயம்.

அடுத்து ஒருவர் ‘‘எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மோடி வந்து பட்டம் வழங்கியதைப் பற்றி என் நண்பன் குறை கூறினான். நான் நேற்று என் பட்டத்தை மோடியிடமிருந்து தான் பெற்றேன்’’ என்றார். ‘‘அதற்காக வெட்கப்படுங்கள்’’ என்றார் தீஸ்தா சேதல்வாத். இதையெல்லாம் வைத்து அந்த கூட்டம் ஊளையிட்டபடியே இருந்தது.

தீஸ்தா சேதல்வாத்
குஜராத் படுகொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்)

சில உருப்படியான கேள்விகளும் இருந்தன. குறிப்பாக மாணவர் ஒருவர் இப்படி கேட்டார், “இந்தியாவின் மிக உயர்ந்த அறிவாளி மாணவர்கள் கற்பதாகச் சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியெல்லாம் நடக்கும் சென்னை ஐ.ஐ.டிக்குள் மட்டும் 3 கோவில்கள் இருக்கின்றன. இது அவமானகரமானதில்லையா? மற்ற மதத்தவர்க்கு வழிபாட்டு இடங்கள் இல்லையே?’’ எனக் கேட்டார். ‘’இதுதான் நமது ஜனநாயகத்தின் வெளிப்பாடு’’ என்று பதில் சொல்லி கிண்டல் செய்தார் சேதல்வாத்.ஆனாலும் இந்த மதவெறி மற்றும் முட்டாள்கள் கூட்டம் இதற்கெல்லாம் அசருவதில்லை. பேச்சாளரது பதிலுக்கு முன்னரே ஊளையிடத் துவங்கும் டைம்ஸ் நவ் அருணாப் கோஸ்வாமியின் வாரிசுகள் இவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு 1948-லேயே தடை நீக்கப்பட்டதைப் பற்றி ஊளையிட்ட அக்குரங்குப் படைகளுக்கு அது எப்படி பெறப்பட்டது என்ற உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை. மன்னிப்பு, கெஞ்சுதல், எழுதிக் கொடுத்தல் என்று “இனி கலாச்சார அமைப்பாக மட்டுமே தொடருவோம்” எனக் கோல்வால்கர் காலில் விழாத குறையாக எழுதிக் கொடுத்துத்தான் தடை நீக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ஒரு மாணவி “தீஸ்தா என்ற தனிநபரைத் தாக்குவதற்காகவே இந்த ஆட்கள் கேள்வி கேட்கிறார்கள்’’ என்று நச்சென்று  கூறினாலும் அது இந்துமதவறியர்களுக்கு கேட்கவும் செய்திருக்காது.

ஒன்று மட்டும் நிச்சம், இந்துமதவெறியர்களை சட்டம், நீதி, ஜனநாயகத்தின் பெயரால் ஒரு போதும் தண்டிப்பதோ, ஒரு கலந்துரையாடல் மூலம் திருத்துவதோ முடியாது. அவர்களுக்கு புரியும் மொழியில் புரியும் விதத்தில் அவர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்கள் ஒரு போரையே நடத்த வேண்டியிருக்கும். அத்தகைய தெருச்சண்டைகள் மூலம்தான் இவர்களுக்குரிய வரலாற்றுச் சமாதியை நம்மால் எழுத முடியும். எழுதுவோம்.

–  வசந்தன்.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்

0
ஆர்ப்பாட்டச் சுவரொட்டி
ஆர்ப்பாட்டச் சுவரொட்டி
  • கடல் வளம் அழிக்கும் தரகு முதலாளிகள்! கைக்கூலிகளாக நிற்கும் அரசு அதிகாரிகள்!
  • இழந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, தொடங்கியிருக்கிறது நாட்டுப்படகு மீனவர் போராட்டம்!

னிதனின் முதல் உணவு மீன் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலும் அவ்வளவாக மாறாத ஒரு உணவு வகை உள்ளதென்றால் அது மீனுணவாகத்தான் இருக்க முடியும். விதவிதமான மீன்களை விதவிதமாகச் சமையல் செய்து ருசித்து உண்ணும் மக்களில் பெரும்பாலோர் மீனவரின் வாழ்நிலை குறித்து சாதாரணமாகக் கூடச் சிந்திப்பதில்லை. எல்லாத் தொழிலாளிகளின் நிலையினைப் போலவேதான் மீன்பிடித்தொழிலாளர்களின் அவலநிலையும் உள்ளது.

மீன்பிடித்தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, சிறிய அளவுகளிலான நாட்டுப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். இரண்டு, பெரிய அளவிலான மோட்டார்களைக் கொண்டு இயக்கப்படும் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பவர்கள். தொடக்க காலங்களில் கட்டுமரங்கள் மூலமாகவே மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். அதன் பின்னர் கட்டுமரமானது சிறிய படகுகளானது. இதைத்தான் நாட்டுப்படகுகள் அல்லது வல்லம் என்று அழைக்கிறார்கள்; அதன் பின்னர் இப்படகுகளில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டது. பின்னர் பெரிய அளவு சக்திகளைக் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் வந்தன. அதுபோலவே மீன்களைப் பிடிக்கப் பயன்படும் வலைகளும் கூட சாதாரணமான வலைகளிலிருந்து இன்று மிகப்பிரம்மாண்டமான இரட்டைமடி வலைகள் மற்றும் சுருக்குமடி வலைகள் போன்றவைகள் வரை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பிரச்சினையும் இதிலிருந்தே ஆரம்பமாகிறது.

பாம்பன் பாலம்
பாம்பன் பாலம்

இப்போது போராட்டம் நடத்துபவர்கள் நாட்டுப்படகுகளின் மூலமாக மீன்பிடித்தொழில் செய்துவருகின்ற மீனவத் தொழிலாளிகள். விசைப்படகுகள் மூலமாக மீன்பிடிப்பவர்கள் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளால் ஒட்டுமொத்த மீனவளத்தையும் அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடிப்பதற்கு மீன்கள் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் இவர்களின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே, சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை வைத்து இவர்கள் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், இது முதன் முறையாக நடத்தப்படும் போராட்டம் அல்ல.

1983 ஆம் ஆண்டில்,

  1. சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்தக்கூடாது;
  2. வாரத்தில் நான்கு நாட்கள் நாட்டுப்படகு மீனவர்களும் மூன்று நாட்கள் விசைப்படகு மீனவர்களும் மீன்பிடித்துக் கொள்ள வேண்டும்;
  3. இறால் பண்ணைகளை அமைக்கக்கூடாது
கழுத்தறுக்கும் மின்விசைப்படகு
கழுத்தறுக்கும் விசைப்படகு

என்கிற கோரிக்கைகளுக்கான நீண்ட போராட்டத்தை நாட்டுப்படகு மீனவர்கள் நடத்தினர். மிகவீச்சாக நடைபெற்ற இப்போராட்டம் 1995 – 96 களில் விசைப்படகுகளுக்குத் தீ வைப்பது வரை போனது. பிறகு, நான்கு – மூன்று நாட்கள் கோரிக்கை மட்டும் நிறைவேறியது. அதன்பின்னர் நடைபெற்ற போராட்டங்கள் மூலமாக சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்த அரசு தடைவிதித்தது. ஆனாலும், இந்த வலைகளை விசைப்படகு உரிமையாளர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பயன்படுத்தியே வருகிறார்கள். இதுதான் தொடர்ச்சியாகப் பல்வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாகிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, பிடித்துச் செல்லப்படுவது பற்றி நாம் தினமும் செய்திகளில் படிக்கிறோம். இதை வைத்து ஓட்டுக் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் நாமறிவோம். அவ்வாறு தாக்கப்படுகிற, பிடித்துச் செல்லப்படுகிற தமிழக மீனவர்கள் விசைப்படகு மீனவர்கள்தான். சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளை இவர்கள் பயன்படுத்துவதால் இலங்கைப்பகுதியில் உள்ள மீன்களையும் இவர்கள் அரித்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். இதனால் இலங்கைப்பகுதி நாட்டுப்படகு மீனவர்களும் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள். கடந்த 27-ம்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கைத் தமிழ்மீனவர்களின் கோரிக்கைகூட இந்த சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைத் தமிழக மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான். தொழிலாளிகளாய் உள்ள நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற வேலையைத்தான் இந்த விசைப்படகு மீனவர்கள் செய்கிறார்கள்.

போராடும் மீனவத் தொழிலாளர், பாம்பன்
போராடும் மீனவத் தொழிலாளர், பாம்பன்

இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் விசைப்படகு வைத்துள்ளவர்கள் சுமார் 2,500 பேர். ஒரு விசைப்படகின் விலை குறைந்தபட்சம் முப்பது லட்சத்திலிருந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இவற்றின் உரிமையாளர்களாக மீனவர் சங்க நிர்வாகிகளும், ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பினாமிகளும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள முதலாளிகள். கடலுக்கே செல்லாமல் கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய்களைத் தினந்தோறும் சம்பாதிக்கும் முதலாளிகளாக இவர்கள் உள்ளனர்.

நாட்டுப்படகு வைத்துள்ளவர்கள் யார்?

இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் மட்டும் நாட்டுப்படகு வைத்துள்ளவர்கள் சுமார் 25,000 பேர். இதில் பாம்பன் பகுதியில் மட்டும் சுமார் 5,000 படகுகள் உள்ளன. 5 தொழிலாளர்கள் சம்பளம் ரூபாய் 2,500, டீசல் செலவு ரூபாய் 5,000 ஆக ஒரு நாள் கடலுக்குப் போகவேண்டுமென்றால் அதற்கான செலவே குறைந்தபட்சமாக ரூபாய் 7,500 தேவைப்படுகிறது. கடலுக்குப்போய்விட்டு வெறும் படகாகக் கரைக்குத் திரும்பினால் அன்று 7,500மும் நட்டம். விசைப்படகுக்காரர்கள் வலைகளைப் போட்டு இழுத்தபிறகு அந்த இடத்தில் ஓரளவாவது மீன்கள் வர சுமார் ஏழு நாட்களாகும். வலைகளை விரித்து சுமார் ஆறுமணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து இழுத்தால்தான் நாட்டுப்படகுக்காரர்களுக்கு ஓரளவு மீன்களாவது கிடைக்கும். ஆனால், விசைப்பட்குக்காரர்கள் இரண்டே மணிநேரத்தில் மொத்தத்தையும் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

கருவாடாகிய மீன்
கருவாடாகிய மீன்

விசைப்படகுகள் பயன்படுத்துவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால், அதில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை. இவ்வலைகளைப் பயன்படுத்துவதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக்கடலின் மீன்வளமே அழிகிறது. இந்தியா முழுவதுமே இப்படித்தான் நடக்கிறது. இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது. மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் இதில் பிடிபடுகின்றன. அழிபடுகின்றன. அதுமட்டுமல்லாமல், இராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள பல தனியார் தீவுகளில் இளைப்பாறுவதற்காகக் கூட நாட்டுப்படகு மீனவர்கள் நிற்க முடியாது, தப்பித்தவறி நின்றுவிட்டால் 500, 1000 தண்டம் கட்டவேண்டும். அதுபோல இவர்களின் வலைகளில் பால்சுறா எனப்படும் மீன் இனம் சிக்கினால் கைதுசெய்து விடுகிறார்கள். எத்தனையோதரம் அரசிடம் முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை என்கிறார், போராட்ட ஒருங்கிணைப்பாளரும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவருமான அருள்.

அரசின் நிலை என்ன?

மீனவத்தொழிலாளர்
மீனவத்தொழிலாளர்

இது சட்டவிரோதமான செயல். இப்படியான சட்டவிரோதமான செயல்கள் நடப்பது அரசிற்கும் தெரியும். இருப்பினும் கூட, மாவட்ட நிர்வாகமும் சரி, மீன்வளத்துறையும் சரி, தமிழக அரசும் சரி, இதைக் கண்டுகொள்வதே இல்லை. மீன்பிடித்தொழிலாளிகளின் நலன்களை அலட்சியப்படுத்துகிறார்கள். விசைப்படகு மீனவர்களால் அரசு அதிகாரிகளுக்குக் கட்டப்படும் கப்பம் ஒரு படகிற்கு ரூபாய் 5,000. இது ஒரு நாளைக்கு மட்டும்தான். இப்போது நடைபெறும் நாட்டுப்படகு மீனவரின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைக் காட்டிக்கூட அதிகாரிகள் கப்பத்தொகையைக் அதிகமாகக்கேட்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகள்தான் விசைப்படகுத் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்தக் குற்றத்திற்கும் உடந்தையாக இருக்கின்றன.

இலங்கையின் மீதான தனது மேலாதிக்க நலன்களுக்காக கச்சத்தீவுப்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இல்லையென்று தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுத்துள்ளது மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கம்.

தீர்வு என்ன?

வெல்வோமா
வெல்வோமா

மீனவர் பிரச்சினை என்பது வெறும் மீனவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. அது ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினை. போலிக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் சங்கமோ அல்லது தனித்தனியான நபர்களின் முயற்சியால் மட்டுமே செயல்படுகிற சங்கமோ இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது.

கடலினிடையே மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அதேபோல தொழிலாளி வர்க்கத்தினரிடையே நீந்தும் மீன்களாக மீனவர்கள் முன்வரவேண்டும்.

ஒருபுறம் விசைப்படகு முதலாளிகளின் சட்டவிரோத அக்கிரமம்; மறுபுறம் வாழ்வாதாரமான கோரிக்கைகளைக்கூட அலட்சியப்படுத்தும் அரசு, இவைகளுக்கிடையில் கரையில் போடப்பட்ட அனாதை மீனாகத் துடிக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு புரட்சிகரமான சங்கம்தான். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர சங்கங்களை மீனவர்கள் தொடங்குவதனால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் ரீதியில் அணிதிரண்டு சமரசம் செய்யாமல் போராட முடியும்.

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர்.

பாஜகவை பதம் பார்த்த புதிய தலைமுறை பாரிஜி !

10

மோடியின் சென்னை பொதுக்கூட்டத்தில் கர்ஜித்த பாரிவேந்தரின் பேச்சை நேரிலோ, யூ டிபிலோ பார்க்க முடியாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இந்தியாவை உய்விக்க வந்த பா.ஜ.க-ஐ.ஜே.கே கூட்டணி, அதன் ‘விடிவெள்ளி’ மோடி, தமிழகத்தின் ‘வலுவான’ மாற்று அணி’, அதன் கொள்கைகள், கூட்டணி ஏற்பட்ட வரலாறு அனைத்தையும் தரிசிக்க வைக்கிறது அன்னாரின் உரை. அதை பா.ஜ.க அணியின் கொள்கை அறிக்கை ஆவணம் என்று  குறிப்பிட்டால் கூட மிகையல்ல.

பச்சமுத்து உரை
ஐஜேகே, பாஜக நடத்திய வண்டலூர் திறந்த வெளி பொதுக்கூட்டத்தில் பச்சமுத்து உரை.

இனி வண்டலூருக்குச் செல்வோம்.

பாரிவேந்தர் பேசுவார் என்று தமிழிசை அறிவிக்கிறார். உடனே மைதானம் குலுங்கி, விசில் சத்தம் காதை பிளந்தது, தொண்டர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பேசும் போது, ஒரு அனக்கம் கூட இல்லை. மெதுவாக மைக்கை பிடிக்கிறார் பாரிஜி. சில மணித்துளிகள் தொண்டர்களின் ஆரவாரத்தை புன்முறுவலுடன் இரசிக்கிறார். வாங்குற காசுக்கு மேற கூவுறாய்ங்களோ என்று கூட அவருக்கு ஒரு ஐயம் வரும் அளவுக்கு ஆரவாரம். “அமெரிக்க ஜனாதிபதி வாழ்க” என்று யாராவது சொல்கிறார்களா என்ற ஆசை கூட அந்த நிமிடங்களில் இல்லாமல் போயிருக்காது.

கையை சிறிதளவு உயர்த்தி கூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு அடுத்து அவர் பேசியது,

“மோடி அவர்கள் வருவார்கள்… வருவார்கள்… அவர் முன்னால் பேசலாம் என்று காத்து இருந்தேன். கூட்டணி தலைவர்கள் எல்லோரும் பேசி விட்ட நிலையில் மேலும் காலம் தாழ்த்த முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் உரையாற்றுகிறேன்” என்று ஆரம்பித்தார். நமது செல்வாக்கை மோடி பார்க்காமல் போய்விட்டாரே! என்ற வருத்தம் முகத்தில் தெரிந்தது. வைத்த கட்டவுட்டை ஜெயா பார்க்கவில்லையோ என ஒரு அதிமுகவின் வித்தவுட்டுக்கு வரும் மனக்கிலேசம் இது. மாரியம்மன் கோவில் அன்னதான சுவரொட்டியில் தனது பெயர் எழுத்தளவு சிறியதாகி விட்டதோ என்று ஒரு ‘வள்ளலுக்கு’ வரும் கவலையும் இதுதான்.

“ஐ.ஜே.கே என்பது வயதில் இளையது, ஆனால் தோழமையில் மூத்தது. எப்படி மூத்தது?”  என்று கேட்டு விட்டு இந்த இலட்சிய கூட்டணி கருவாகிய வரலாற்றை விளக்குகிறார்.

அதாகப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜர் அரங்கத்தில் பாரிவேந்தரின் பிறந்த நாள் விழா நடந்திருக்கிறது. அரங்கம் நிரம்பி வழிந்திருக்கிறது. அவரே இதை சொல்லிக் கொள்கிறார். பணத்தை வீசினால் பந்தலை நிரப்பப் போகிறது கூட்டம், என்றாலும் அதிலும் மப்பு இருக்கத்தானே செய்யும். திடீரென “பொன்னார் வருகிறார், பொன்னார் வருகிறார்” என பராக் பராக் சொல்லியிருக்கிறார்கள். பொன்னார்ஜிக்கு பாரிஜி அழைப்பிதழே கொடுக்கவில்லையே என வேந்தருக்கு அதிர்ச்சி.

பொன். இராதாகிருஷ்ணன்
பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவில் கூட்டணி கட்சியை கண்டெடுத்த பாஜக மாநிலத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன்

பிறந்த நாள் விழா கூட்டத்தில் பாரிஜியை வாழ்த்திப் பேசுகிறவர்கள் எல்லாம் ஐ.ஜே.கே கட்சியின் கொள்கைகளை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த பொன்னாருக்கு அடடே நம்ம கொள்கையும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே என்று மண்டையில் குண்டு பல்பு எரிந்திருக்கிறது. பிறகென்ன “யாயும் ஞாயும் யாராகியரோ” என்று அவர் பாட “செம்புலப் பெயல் நீர்போல”  என அந்த மேடையிலேயே இரு கட்சிகளும் கூட்டணியாகி விட்டார்கள். இது தான் இந்த கொள்கை கூட்டணியின் வரலாறாம். இது உண்மையாக இருந்தால் பாரிஜி சிறிய வயதில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஏதும் போய் வார்க்கப்பட்டிருப்பாரோ, தெரியவில்லை. இதன்றி இவர்களை இணைக்கும் கொள்கை வேறு ஏது? இதற்கு அடுத்த நாள் மோடி பதிலளித்தார்.

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மோடி “மிகப் பெரும் இளைஞர் சமுதாயத்தைக் கொண்ட இந்தியாவில், எஸ்.ஆர்.எம். போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களே சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இந்த நிலை மாறும் வகையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள், கல்வித் துறையில் கால் பதிக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றன. அவர்களை இத்துறையில் அனுமதிக்க வேண்டும்” என்று தனியார்மய கல்விக் கொள்ளை தான் தங்களை இணைத்த அந்தக் கொள்கை என தெளிவுபடுத்தினார்.

ஆனால், முந்தைய நாள் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இதற்கு நேர் மாறாக, “அரசாங்கம் என்பது ஏழைகளுக்காக இருக்க வேண்டும். பணக்காரர்கள் மருத்துவ வசதி வேண்டுமென்றால் பணம் செலவழித்து பெற்றுக் கொள்வார்கள், பணக்காரர்களின் குழந்தைகள் படிக்க வேண்டுமென்றால் பணம் செலவழித்து தனியார் பள்ளிக்குப் போக முடியும். ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிகளும்தான் புகலிடம்” என்று காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட ஏழைகளுக்கு ஏற்றபடி பேசியிருந்தார். அதே போல எஸ்.ஆர்.எம் பட்டமளிப்பு விழாவில் காசு கொடுத்து படிக்க வந்த கூட்டம் என்பதால் அங்கே தனியார் மய கொள்ளைக்கு ஆதரவாக பேச்சு. முன்னது நடிப்பு, பின்னது உண்மை.

ஏழைகளின் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படித்தால் போதும், எஞ்சினியர், டாக்டர் எல்லாம் பணக்காரர்களுக்குத்தான் என்பதுதான் மோடி மற்றும் பாரிவேந்தரின் கொள்கை.

மோடி எஸ்ஆர்எம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில்
மோடி எஸ்ஆர்எம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் : ஏழைகளின் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படித்தால் போதும், எஞ்சினியர், டாக்டர் எல்லாம் பணக்காரர்களுக்குத்தான் என்பதுதான் மோடி மற்றும் பாரிவேந்தரின் கொள்கை.

அடுத்து வண்டலூர் பேச்சில் வரலாற்றிலிருந்து சுயமுன்னேற்றதுறைக்கு தாவினார் பாரிஜி. “உலக நாடுகளிலிருந்தும், டெல்லியிலிருந்தும் வருபவர்கள் எல்லாம் எனக்கு விசன் (Vision) இருப்பதாக கூறுவார்கள். முதலில் அதை நான் நம்பவில்லை. ஆனால் அது உண்மைதான் என்று இப்போது புரிகிறது.” என்று தன்னடக்கமாக கூறிக்கொண்டார். பா.ஜ.க தான் வெற்றிபெரும் என்று தனக்கு விசன் இருந்ததால் தான் அன்றே பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துக் கொண்டதாக கூறினார். ஒருக்கால் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திற்கு மாநிலம் எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், டி.வி, பத்திரிகைகள் பட்டையைக் கிளப்பும் என்பது இந்த விசனுக்கு அடிப்படை.

பாரிஜியின் விசன் இவ்விதம் வேலை செய்தது என்றால், பொன்னாரின் விசன் புதியதலைமுறை சேனல், எஸ்.ஆர்.எம் காலேஜ் சீட், நன்கொடை வசூல், வேந்தர் மூவீஸ் வரவு என விரிந்திருக்க வேண்டும். இதைத் தாண்டி இந்த விசன்களில் வில்லங்கமோ, விதண்டாவாதமோ ஏதுமில்லை.

இவ்வாறு கூட்டணியின் வரலாற்றை சொல்லி முடித்துவிட்டு அடுத்த கியரைப் போட்டார்.

“பா.ஜ.க உடன் எங்களுக்கு இருப்பது இயற்கையான கூட்டணி. நேச்சுரல் அல்லை (natural ally). எப்படி?”  அவரே விளக்குகிறார் “பி.ஜே.பி மூன்றெழுத்து, ஐ.ஜே.கே மூன்றெழுத்து. இரு கட்சிகளின் பெயர்களிலும் நடுநாயகமாக ‘ஜே’ இருக்கிறது. ஜே என்றால் ஜெயம் வெற்றி. இருவருக்கும் கொள்கை ஒன்றாக இருக்கிறது” மாபெரும் தத்துவத்தை உதிர்த்த பெருமிதத்தில் மேடையில் இருந்த எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டவர்களின் ரியாக்சனை, புன்முறுவலுடன் திரும்பி பார்க்கிறார். “கவித, கவித..இப்படில்லாம் பேசி கேட்டதே இல்லப்பா”  என்று சொன்னார்களோ என்னவோ மீண்டும் தொடர்ந்தார்.

அதுதான் வண்டலூர் கூட்டத்தின் மறை பொருள் இரகசியம்.

“நான் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு மோடியை அழைக்க போயிருந்தேன், அப்படியே அன்று மாலை ஐ.ஜே.கே கட்சியின் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுங்கள், என் சக்தியை, பலத்தை உங்களுக்கு காட்டுகிறேன். மாநாடுகளும், ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று மக்களை கூட்டுவதும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று”  என்று மோடியிடம் அவர் கூறியிருக்கிறார். “பட்டமளிப்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்கிறேன், ஆனால் பொதுக்கூட்டம் குறித்து தமிழக பா.ஜ.க வுடன் கலந்து பேசுங்கள்” என்று மோடி கூறியிருக்கிறார்.

ஐஜேகே பச்சமுத்து
“மாநாடுகளும், ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று மக்களை கூட்டுவதும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று” – ஐஜேக கட்சி கூட்டம், பாரிவேந்தர் பச்சமுத்து.

அதன் படி மாநில பா.ஜ.கவுடன் பேசி “பா.ஜ.க வும், ஐ.ஜே.கே வும் இணைந்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்” என்று கூறி இந்த பொதுக்கூட்டத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மட்டுமல்ல நிதிமூலமும் தான் தான் என்பதை பறைசாற்றினார். ஆண்டை வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த அடிமைகளைப் போல மல்லை சத்தியாவும், கொங்கு ஈஸ்வரனும் இவர் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“எங்களைப் போன்றவர்கள் யாருக்காக பல்கலைக் கழகம் வைத்திருக்கிறோம்.? 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக. ஆனால் குழந்தைகளுக்கு பல்கலைக்கழகம் வைத்திருப்பவர் மோடி. அதைக் கொண்டு தாயின் கருவிலிருந்து 5 வயது வரை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்.” என்று சிறிது நேரம் மோடி புராணம் பாடினார். குஜராத்தில் கொடிகட்டிப் பறக்கும் வாடகைத் தாய் தொழிலை பற்றிக் கூறினாரா இல்லை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு வீதத்தில் குஜராத் நாட்டிலேயே 21-வது மோசமான இடத்தில் இருப்பது, குறித்தா தெரியவில்லை. எனினும் தன்னால் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டத்திற்கு உண்மைகள் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏதோ இலவச கல்வி கொடுப்பதாக அடித்து விட்டார். இத்தனைக்கும் அவரது சாம்ராஜ்ஜியம் நடுத்தர வர்க்கத்திடமிருந்து பல கோடி நன்கொடைகளை கொள்ளையடித்து கட்டப்பட்டது.

“மது ஒழிப்பிற்கு தமிழக தலைவர்கள் நடந்து நடந்து தமிழகத்தில் எத்தனை கிமீ சாலைகள் உள்ளன என்று அளந்து விட்டார்கள்,  ஒன்றும் முடியவில்லை, ஆனால் குஜராத்தில் மோடி மதுவிலக்கைக் கொண்டு வந்திருக்கிறார்” என்று 1961-லிருந்தே குஜராத்தில் அமலில் இருக்கும் மதுவிலக்கின் பெருமையை மோடியின் பாதங்களில் சமர்ப்பித்தார். கல்லூரியை வைத்தவனுக்கு வரலாற்றை மாற்றி எழுத முடியாத என்ன? போகிற போக்கில் வைகோவின் பாத யாத்திரையை எள்ளி நகையாடினாலும், கைப்புள்ள இந்த அடிக்கெல்லாம் மிரளமாட்டான் என மல்லை சத்யா ஜாலியாக எடுத்துக் கொண்டார்.

பச்சமுத்து பிறந்தநாள் விழா
கடந்தத தேர்தலில் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தது ஐ.ஜே.கே.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழித்தது ஐ.ஜே.கே தான் என்றால் நம்புவீர்களா? மோடியிடம் “2011-ல் தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தோம். அது நடந்திருக்கிறது. எங்கள் கொள்கையில் வெற்றி பெற்றிருக்கிறோம். நாங்கள் தெற்கில் முடித்து விட்டோம். நீங்கள் வடக்கே குடும்ப ஆட்சியை முடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாராம். அதற்கு மோடி “ஐ வில் டூ இட்” என்றாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக  புல் ஃபார்முக்கு முன்னேறிக் கொண்டிருந்தார் பாரிஜி.

“நாட்டை முன்னேற்ற ஐந்து T களை (Talent,Tradition,Tourism,Trade,Technology) சொல்கிறார் நரேந்திர மோடி. அவர் இன்னும் ஒரு டீ யை சேர்த்திருக்க வேண்டும்.” என்று கூறிவிட்டு அமைதியானார். அவரே சஸ்பென்சை உடைத்து “அது தான் நமோ டீ. அது தான் நாட்டை ஆளப் போகிற டீ. அதையும் சொல்லி இருக்க வேண்டும்.” முகத்தில் அவ்வளவு பெருமிதம். இந்த விவகாரத்தில் டி.ராஜேந்தருக்கு கூட இத்தனை செருக்கு இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். அத்தோடு விடவில்லை இன்னும் தொடர்ந்தார்.

“நான் வழக்கமாக எனது பல்கலைக் கழகத்தில் ஐந்து ‘E’ களை (Education,Employment,Electricity,Eradication of liqour,Empowerment of Women) சொல்லுவேன். என் ஐந்து ‘E’ யும் மோடியின் ஐந்து T  யும் சேர்ந்து மொத்தம் 5 ET.  அதாவது ET = ஈட்டி.  உங்களுக்கு தெரியும் ஈட்டி என்றால் கூர்மையான போர் வாள் போல. பி.ஜே.பி யும் ஐ.ஜே.கே யும் சேர்கிற போது ஒரு போர் படையாக, இதோடு தோழமை கட்சிகளும் சேர்கிற போது பெரிய போர்ப் படையாக மாற்றி காட்ட முடியும்,” பாரிஜி பேசிக்கொண்டே போக  ஜெயமோகனின் மகாபாரதத் தொடரே தோற்றுவிடும் போல இருந்தது. புரிந்ததோ,புரியலையோ கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு மட்டும் குறையவில்லை.

இந்து தத்துவஞான மரபில் ஈட்டிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும் என்று அந்தக்கால அத்வைத ஆதிசங்கரரோ, இல்லை இந்தக் கால சில்லறைத்துவ அரவிந்தன் நீலகண்டனோ கூட யோசித்திருக்க முடியாது. ஜெயமோகனது அறம் சிறுகதை தொகுப்பிற்கு பாரிஜி குரூப் விருது கொடுத்திருப்பதால் பகரமாக பாரிஜியின் உரையை விஷ்ணுபுரம் வாசகர் வட்ட கம்பெனி எழுதிக் கொடுத்திருக்குமோ என்னமோ. இல்லையெனில் ஈட்டி எனும் புது வார்த்தைக்கு இத்தனை பெரிய டெரரான பொருள் விளக்கம் தங்கத் தமிழுக்கு கிடைத்திருக்காது.

மோடி - பச்சமுத்து
5E பச்சமுத்துவும், 5T மோடியும்.

“மோடிக்கு ஐந்து ஆண்டுகள் கொடுத்துப் பாருங்கள், பின் அவரை காலாகாலத்துக்கும் மாற்ற முடியாது”, என்ற பேசிய பாரிஜி அவசர நிலையை கொண்டு வந்து சர்வாதிகாரியாகி விடுவார் என்பதை வாய்தவறி சொல்லியிருந்தாலும் பிறகு ஷார்ப்பாக விழித்துக் கொண்டு “மக்கள் மகிழ்ச்சியில் மாற்ற மாட்டார்கள்” என்று கூறி சமாளித்தார். ஒரு வேளை மக்கள் மகிழ்ச்சியில்லை என்றாலும் மோடியை மாற்ற முடியாது என்பதால் மகிழ்ச்சியின் இலக்கணத்தைத்தான் மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் போல. எதுவாக இருந்தாலும் பாரிஜியின் பேச்சு வரலாறுதான், அதை யாரும் மாற்ற முடியாது.

கூட்டணிக் கட்சிகள் குறித்து ஏதும் பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களையும் மாற்ற விரும்பவில்லை அவர். “இனி பி.ஜே.பி யார் முன்னும் வரமாட்டார்கள். நீங்கள் தான் அவர்கள் முன் மண்டியிட்டு கெஞ்ச வேண்டும்.” என்று யாருக்கோ சொன்னார். இதே சமயத்தில் மோடியின் வருகைக்காக ஹோட்டலில் வைகோ காத்திருந்தார் என்பதை அடுத்த நாள் செய்தித் தாளில் தெரிந்துகொண்டோம்.

அனைத்துக்கும் உச்சகட்டமாக,

“எங்களைப் பொறுத்தவரை இ.ஜ.க ஒரு தேசியக் கட்சி. பெயரிலேயே இந்தியா என்று வைத்திருக்கிறோம், பெயரில் மட்டுமல்ல கட்சி துவங்கிய மூன்றாவது மாதத்திலேயே பீகாரில் 10 இடங்களில் போட்டியிட்டோம். பல்லாயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்றோம். இத்தனைக்கும் நான் பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள் நினைத்தால், பிஜேபி விரும்பினால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்களைக் கொடுக்க தயராக இருக்கிறோம், அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என பேசி தமிழக பா.ஜ.கவிற்கு தான் போட்ட பிச்சையினை அடிப்படையாக வைத்து ஒரு நாக்அவுட் பஞ்ச் கொடுத்தார். இதில் பொன்னாருக்கு மாரடைப்பே வந்திருக்க வேண்டும். இருந்தாலும் கருவூலத்தின் கடவுள் என்பதால் பாரிஜியை அவர் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

முன்னதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தனது உரையில் 1967-க்கு பிறகு தமிழகத்தில் இப்பொழுது தான் தேசியக் கட்சி தலைமையில் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று மொட்டையாக பேசி சென்றிருந்தார். பாரிஜி பேச்சில் தான் அந்த தேசிய கட்சி பா.ஜ.க அல்ல ஐ.ஜே.கே என்று புரிந்தது.

அடுத்து அறிவிப்பு செய்ய வந்த தமிழிசை சவுந்தரராஜனின் முகத்தில் பாரிவேந்தரின் மருந்து குடித்த கோணல் தென்பட்டது. கடுகடுப்பாக, இல கணேசனை பேச அழைத்தார். அவர் அதை விட கடுப்பாக ஒரு பள்ளி தலைமையாசிரியர் போல கூட்டத்தை கடிந்து கொண்டு பேசினார்.

குத்துவாங்கிய பிஜேபியினர் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தனர். அங்கிருந்த பா.ஜ.க தொண்டர்களின் மனநிலையை இப்படி படம்பிடிக்கிறது ஒரு அம்பியின் முகநூல் குறிப்பு.

“பா.ஜ.க.விற்குக்கு இவர் தான் Sponsor. கட்டவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது, விஜிபி மைதானத்தை ஏற்பாடு செய்தது போன்றவை முற்றிலும் இவர் செலவு. ஆகையால் இவர்கள் அடித்த கூத்துகளையெல்லாம் பா.ஜ.க.வினர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவரது (பாரிவேந்தரது) தேவை ஒரு சீட்.”

பொங்கச் சோறு வேணும் ஆனால் பூசாரித்தனம் பண்ணக் கூடாது என்றால் எப்படி?

நாங்கள் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க-வின் யோக்கியதை இது தான். காசு கொடுத்தால் தேர்தலில் சீட், மேடையில் இடம், கல்விக் கொள்ளைக்கு துணை எல்லாம் கிடைக்கும்.

பச்சமுத்துவின் பணமும் ஊடகமும் பா.ஜ.க வுக்கு தேவை, தன் கல்விக்கொள்ளையை பிரச்சனை இல்லாமல் விரிவுபடுத்த பச்சமுத்துக்கு பா.ஜ.க தேவை. இவர்கள் உண்மையிலேயே நேச்சுரல் அல்லையன்ஸ் தான். அந்த வகையில் மக்களின் இயற்கையான எதிரிகள் இவர்கள்தான் என்பதற்காவது இந்த நேச்சுரல் அல்லையன்ஸை நாம் பாராட்ட வேண்டுமல்லவா?

ரவி

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

5

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்

பாகம் – 1

அசீமானந்தா
இந்து தீவிரவாத பயங்கரவாதத்தின் மிக பிரபலமான முகம் அசீமானந்தா.

“ஸ்வாமிஜியை கூப்பிடு,” என்று சிறை அதிகாரி உத்தரவிட்டார். இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வெளியேறி சிறை வளாகத்துக்குள் விரைந்தார்கள். சுவர்களுக்கு வெளியே நூறு மனிதர்கள் ஒரே நேரத்தில் ஓலமிடுவது போன்ற காதைப் பிளக்கும் சத்தம் அறை முழுவதும் பரவியது. 2012 ஜனவரி தொடக்கத்தில் ஒரு நாளில் அம்பாலா மத்திய சிறையின் பார்வையாளர்கள் நேரம் இது.

2006-க்கும் 2008-க்கும் இடையே நாடு முழுவதும் பொது மக்கள் மீது பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஸ்வாமி அசீமானந்தா சில நிமிடங்களுக்குப் பிறகு சிறை அதிகாரியின் அலுவலக வாயிலில் தோன்றினார். அவர் காவி வேட்டியும் முட்டி வரை தொங்கிய காவி குர்த்தாவும் அணிந்திருந்தார். அவரது உடைகள் மிடுக்காக தேய்க்கப்பட்டிருந்தன. கம்பளியால் ஆன குரங்குக் குல்லாய் ஒன்று அவரது நெற்றி வரை இழுத்து விடப்பட்டிருந்தது; ஒரு காவி போர்வை அவரது கழுத்தை சுற்றி சுற்றப்பட்டிருந்தது. என்னைப் பார்த்து அவர் கொஞ்சம் குழம்பியது போலத் தோன்றியது. நாங்கள் பரஸ்பரம் வணக்கம் சொல்லிய பிறகு, அவர் என்னை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் வெள்ளை வேட்டி, குர்த்தா அணிந்த குமாஸ்தாக்கள் பெரிய பெரிய லெட்ஜர்களில் ஆழ்ந்திருந்தார்கள். கதவுக்குப் பின்புறம் இருந்த பெரிய மரப் பெட்டியின் மீது அவர் உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த மேஜையிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக் கொள்ளும்படி என்னிடம் கூறினார்.  இயல்பாக விருந்தாளியை உபசரிப்பது போல அவர் என் வருகையின் நோக்கம் குறித்து கேட்டார். “உங்கள் வாழ்க்கை கதையையும் உலகுக்கு யாராவது சொல்ல வேண்டுமே” என்றேன் நான்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசீமானந்தாவிடம் நான் எடுத்த 4 பேட்டிகள் இப்படித்தான் ஆரம்பமாயின. குறைந்தது 82 பேரைக் கொன்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, கிரிமினல் சதித் திட்டம், தேச துரோகம் ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளை அவர் இப்போது எதிர் கொண்டு வருகிறார். இன்னும் இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது; அவற்றில் முறையாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணை  இன்னும் தொடங்கவில்லை. அந்த 5 தாக்குதல்களும் மொத்தம் 119 பேரைக் கொன்றிருக்கின்றன. இந்திய சமூக நல்லிணக்கத்தை அரித்துக் குலைப்பதாக அவை நிகழ்ந்திருக்கின்றன. அசீமானந்தாவின் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.

எங்கள் உரையாடல்கள் வளர வளர, அசீமானந்தா மேலும் மேலும் நட்புடனும், திறந்த மனதுடனும் பேசினார். அவரது வாழ்க்கை குறித்து அவர் சொன்ன வரலாறு, பிரமாதமானதாகவும், அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது. அவர் நடத்திய வன்முறை செயல்கள் குறித்தும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள் குறித்தும் அவர் வெறித்தனமான பெருமை கொண்டிருந்தார். அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்துத்துவத்தை விசுவாசமாக வளர்த்துக் கொண்டிருந்தார். அதில் பெரும்பகுதி காலத்தில் அவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் (வி.கே.ஏ) சார்பாக, சங்கத்தின் பார்வையிலான இந்து மதத்தையும் அதன் பார்வையிலான இந்து ராஷ்டிரத்தையும் பரப்பும் வேலையை செய்து வந்திருக்கிறார். தனது அறுபது வயதுகளை எட்டியிருக்கும் அசீமானந்தா தனது வாழ்வின் பல்வேறு கட்டங்களின் ஊடாகவும் தனது நம்பிக்கைகளின் தீவிரத்தை ஒரு போதும் நீர்த்துப் போகச் செய்திருக்கவில்லை.

1949-ம் ஆண்டு மோகன்தாஸ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டு அம்பாலா சிறையிலேயே புதைக்கப்பட்டனர். அவர்களது கூட்டுச் சதியாளர் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. “கோபால் கோட்சேவை வைத்திருந்த அதே சிறை அறையில்தான் நான் வைக்கப்பட்டிருக்கிறேன்” என்று அசீமானந்தா பெருமையுடன் கூறுகிறார்.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்
குண்டு வெடிப்பில் சிதைக்கப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரசின் முன்பதிவு இல்லாத பெட்டியின் உள்பக்கம்.

இன்றைக்கு, இந்து தீவிரவாத பயங்கரவாதத்தின் மிக பிரபலமான முகமாக அசீமானந்தா விளங்குகிறார். இந்த குண்டு வெடிப்புகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை சந்தித்த பத்திரிகையாளர்கள், அவரை அதீதமான திமிர் பிடித்தவராகவும், சகிப்புத் தன்மை இல்லாதவராகவும் சித்தரிக்கிறார்கள். சிறை கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் அந்த இருண்ட அறையில் நான் சிறை வாசத்தினால் அடங்கிப் போயிருந்த ஆனால், குற்றவுணர்வு அறவே இல்லாத ஒரு மனிதரை சந்தித்தேன். “எனக்கு என்ன நேர்ந்தாலும் அது இந்துக்களுக்கு நல்லதுதான். அது மக்களின் மத்தியில் இந்துத்துவத்தை கிளரச் செய்யும்” என்று அவர் சொன்னார்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே நிலையத்தின் 18-வது நடைமேடையிலிருந்து தனது வழக்கமான பயணத்தை தொடங்கியது. சம்ஜவுதா அல்லது “நட்புறவு எக்ஸ்பிரஸ்” இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இரண்டே ரயில் இணைப்புகளில் ஒன்று. அன்று ரயிலில் பயணித்த சுமார் 750 பயணிகளில் முக்கால் பங்கு பேர் ஊருக்குத் திரும்பும் பாகிஸ்தானியர்கள். நள்ளிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு – ரயில் தனது பயணத்தைத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு – 16 பெட்டிகள் கொண்ட ரயிலின் முன்பதிவு செய்யாதவர்களுக்கான பெட்டியில் எளிதில் கிடைக்கும் பொருட்களால் செய்த வெடிகுண்டுகள் (ஐ.ஈ.டிக்கள்) வெடித்தன. இரவைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த ரயில் இப்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

பெட்டிகளிலிருந்து வெளியில் போகும் கதவுகளை குண்டு வெடிப்புகள் இறுகச் செய்து அடைத்து விட, பயணிகள் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். “அந்தக் காட்சி கொடூரமாக இருந்தது. எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் பெட்டிகளில் நிரம்பியிருந்தன” என்று ஒரு ரயில்வே பரிசோதகர் ஹிந்துஸ்தான் டைம்சுக்கு பேட்டி அளித்திருந்தார். சம்பவ இடத்தில் சூட்கேசுகளில் பொதியப்பட்டிருந்த இரண்டு ஐஈடிக்கள் பின்னர் கண்டறியப்பட்டன. அந்த குண்டுகளில் PETN, TNT, RDB, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற வேதிப் பொருட்கள் இருந்தன. அந்தத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

அசீமானந்தா குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தாக்குதல்களில் இது இரண்டாவதும் மிகக் கொடூரமானதுமான தாக்குதல். சம்ஜவுதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் இப்போது முதல் குற்றவாளி; 2007-ம் ஆண்டு மே மாதம் 11 பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி; 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்க்காவில்  மூன்று பேரைக் கொன்ற குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளி. மேலும், செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008-ல் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த 37 பேரின் உயிரைப் பறித்த இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளிலும் குற்றவாளியாக  அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்திரேஷ் குமார்
ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் சதியாளர்களுக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதய ரீதியாகவும் ஆதரவு அளித்தார்.

இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை, மும்பை பயங்கரவாத எதிர்ப்பு அணி (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான் ஏடிஎஸ், தேசிய புலனாய்வு ஏஜன்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் வெவ்வேறு  கால கட்டங்களில் விசாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தது ஒரு டஜன் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. முறையாக குற்றம் சாட்டப்பட்ட முப்பத்தியொரு பேர்களில் அசீமானந்தாவின் நெருங்கிய தொடர்புகளான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் இந்தூர் மாவட்டத்தின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி ஆகிய இருவரும் அடங்குவர். இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா மையமான பங்கு வகித்தார் என்று அனைத்து புலனாய்வு அமைப்புகளும் முடிவு செய்திருக்கின்றன. அசீமானந்தா தானாகவே சொன்ன விபரங்களின் அடிப்படையிலும், அவர் இந்த தாக்குதல்களுக்கு திட்டமிடும் அமர்வுகளை ஏற்பாடு செய்தார்; இலக்குகளை தேர்ந்தெடுத்தார்; வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு நிதி வழங்கினார்; குண்டு வைத்தவர்களை பாதுகாத்தார்; மேலும் பிற வழிகளில் உதவி செய்தார் என்று தெரிகிறது.

டிசம்பர் 2010-லும், ஜனவரி 2011-லும் டெல்லியிலும் அரியானாவிலும் உள்ள நீதிமன்றங்களில் கொடுத்த இரண்டு வாக்குமூலங்களில் அசீமானந்தா தான் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதை ஒத்துக் கொண்டார். அவர் வாக்குமூலம் அளித்த சமயத்தில், தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு வாக்குமூலத்தையும் அளிப்பதற்கு முன்பு அவர் 48 மணி நேரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே மனதை மாற்றிக் கொள்வதற்கு அவருக்கு போதுமான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இரண்டு முறையும், அசீமானந்தா குற்றங்களை ஏற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்து, அவரது வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதல்கள் குறைந்தது ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இசைவோடுதான் நடந்ததாக அவரது ஒப்புதல் வாக்குமூலத்திலும், அவரது சக கூட்டு சதியாளர்கள் தமது ஒப்புதல் வாக்குமூலங்களிலும் கூறியிருக்கின்றனர்.

2011-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி அசீமானந்தா வழக்கறிஞர் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டார். அடுத்த நாளே அவர் தனது ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்தார் அவை சித்திரவதையின் மூலம் வாங்கப்பட்டவை என்றார். விசாரணை நீதிமன்றத்தின் முன்பு அவர் சமர்ப்பித்த ஒரு விண்ணப்பத்தில், “அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவது ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது அதிர்ச்சியூட்டுவதும், வேண்டுமென்றே செய்யப்பட்டதும் ஆகும். ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக இந்த வழக்கை அரசியலாக்கி, ஊதிப் பெருக்கி, ஊடகங்களிலேயே ஒரு விசாரணை நடத்தி முடித்து, இந்து பயங்கரவாதம் என்ற கருத்தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் வாதிடும் வழக்கறிஞர்கள் அனைவரும் சங் பரிவாரின் உறுப்பினர்கள் என்று அசீமானந்தாவும், தொடர்புடைய பல வழக்கறிஞர்களும் என்னிடம் கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ்-சின் சட்டப் பிரிவான அகில பாரதிய அதிவக்தா பரிஷத் கூட்டங்களில் இந்த வழக்கை விவாதிப்பதாக ஒரு வழக்கறிஞர் சொன்னார்.

நான் அவரை பேட்டி கண்ட போது, தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவோ, அவரது ஒப்புதல் வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்பட்டவை என்பதாகவோ சொல்லப்படுவதை அசீமானந்தா மறுத்தார். அவர் குண்டு வெடிப்புகளுக்காக சிபிஐயால் கைது செய்யப்பட்ட போது, “அனைத்தையும் பற்றி சொல்வதற்கு இதுதான் சரியான தருணம்” என்று தீர்மானித்ததாக கூறினார். ”இதற்காக நான் தூக்கிலிடப்படலாம், ஆனால் எனக்கு ஏற்கனவே வயதாகி விட்டிருக்கிறதே” என்றார்.

எங்கள் உரையாடல்கள் வளர வளர, அசீமானந்தாவின் சதித் திட்டம் பற்றிய அவரது விவரிப்பு மேலும் மேலும் துல்லியமாகி வந்தது. எங்களது மூன்றாவது மற்றும் நான்காவது பேட்டிகளில், அவரது பயங்கரவாத செயல்கள் ஆர்.எஸ்.எஸ்-சின் இப்போதைய  தலைவரும் அப்போதைய பொதுச் செயலாளருமான மோகன் பாகவத் வரையிலான உயர் மட்ட தலைமையின் ஒப்புதலை பெற்றிருந்தன என்றார். “இதைச் செய்து முடிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், இது சங்க பரிவாரத்துடன் இணைக்கப்படக் கூடாது” என்று இந்த வன்முறை சதித் திட்டம் குறித்து பாகவத் சொன்னதாக அசீமானந்தா என்னிடம் கூறினார்.

மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் (சர்சங்-சாலக்) மோகன் பாகவத்.

ஜூலை 2005-ல் நடைபெற்ற ஒரு சந்திப்பைக் குறித்து அசிமானந்தா என்னிடம் கூறினார். சூரத்தில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் உள்வட்டக் கூட்டத்துக்குப் பிறகு மோகன் பாகவத்தும், மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் அதிகாரம் உடைத்த ஏழு உறுப்பினர் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ள இந்திரேஷ் குமாரும் மற்ற மூத்த சங்க தலைவர்களும் இரண்டு மணி நேர கார் பயண தொலைவில் உள்ள அசீமானந்தா வாழ்ந்து வந்த குஜராத்தின் டாங்ஸிலுள்ள கோயிலுக்கு பயணித்தார்கள். கோயிலிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் போடப்பட்ட கூடாரம் ஒன்றில் மோகன் பாகவத், இந்திரேஷ் குமார் இருவரும் அசீமானந்தாவையும் அவரது கூட்டாளி சுனில் ஜோஷியையும் சந்தித்தனர். இந்தியா முழுவதும் உள்ள பல இஸ்லாமிய இலக்குகளில் குண்டு வைக்கும் திட்டம் குறித்து ஜோஷி, மோகன் பாகவத்துக்கு விளக்கினார். இரண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். “சுனிலுடன் சேர்ந்து இதில் நீங்கள் பணி புரியுங்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம், ஆனால் நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்” என்று மோகன் பாகவத் அவரிடம் கூறியிருக்கிறார்.

“பிறகு அவர்கள் என்னிடம், ‘சுவாமிஜி நீங்கள் இதைச் செய்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். நீங்கள் செய்தால் எதுவும் தவறாகப் போய் விடாது. அது குற்றச் செயலாக பார்க்கப்பட மாட்டாது. அதை ஒரு பயங்கரவாத செயலாக நாம் செய்ததாக யாரும் சொல்ல மாட்டார்கள். மாறாக, அது சித்தாந்தத்துடன் இணைக்கப்பட்டு விடும். இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை நிச்சயம் செய்யுங்கள். உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு’ என்று கூறினார்கள்” என்று அசீமானந்தா தொடர்ந்தார்.

புலன் விசாரணை அமைப்புகள் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகைகளில் இந்திரேஷ் குமார் சதியாளர்களுக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதய ரீதியாகவும் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவை எதுவுமே மோகன் பாகவத் மட்டத்திலான மூத்த தலைவர் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இந்திரேஷ் குமார் ஒரு முறை சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் புலன் விசாரணையை மேற்கொண்ட தேசிய விசாரணை ஏஜன்சி அசீமானந்தா, பிரக்யா சிங் தரப்புக்கு மேல் ஆர்எஸ்எஸ் தலைமைக்குள் இந்த சதித்திட்டத்தின் வேர்களை ஆய்வு செய்யவில்லை. (குண்டுகளை உருவாக்கி, வைத்தவர்கள் உள்ளிட்டு சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்தவராக சொல்லப்படும் சஞ்சய் ஜோஷி டிசம்பர் 2007-ல் மர்மமான சூழலில் கொல்லப்பட்டிருந்தார்.)

இந்தத் தாக்குதல்களில் இந்திரேஷ் குமாருக்கு பங்கு உள்ளது என்று குற்றச்சாட்டுகள் 2010-ம் ஆண்டு வெளியானதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அவர் பின்னால் அணி திரண்டிருக்கிறது. ஒரு ஆர்.எஸ்.எஸ் சர்சங்-சாலக் இது வரை செய்திராதபடி இந்திரேஷ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சியும் அவரை ஆதரித்தது. அவர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட போது பா.ஜ.கவின் தேசிய பத்திரிகை தொடர்பாளர் மீனாட்சி லேகி அவரது வழக்கறிஞராக செயல்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரின் வழக்கறிஞர், “சர்சங்-சாலக் ஆகக் காத்துக் கொண்டிருக்கும் இந்திரேஷ் குமார் தனது முன்னேற்றத்தில் மிகவும் துடிப்பானவர்” என்று என்னிடம் கூறினார்.

புலன் விசாரணை அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன் பெயரை சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையை என்னை பார்க்க அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான ஆதாரங்களின் அடிப்படையில் அதை ஏன் தடை செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்கும் நோட்டீஸ் ஒன்றை அதன் பொறுப்பாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பும்படி அந்த அறிக்கை கோருகிறது. உள்துறை அமைச்சகம் அந்த பரிந்துரையின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

1948-ல் காந்தி கொல்லப்பட்ட பிறகு ஒரு சிறிய காலமும், 1975-ல் அவசர நிலை காலத்தின் போதும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் தடை செய்யப்பட்டது போல தடை செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயம் ஆர்.எஸ்.எஸ்-சின் மீது எப்போதுமே கவிந்து இருக்கிறது. அதன் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத வன்முறை குற்றங்கள் சுமத்தப்படும் போதெல்லாம், நாதுராம் கோட்சே தொடர்பாக எடுத்த அதே நிலைப்பாட்டைத்தான் ஆர்.எஸ்.எஸ் எடுக்கின்றது. குற்றமிழைத்தவர்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த எந்த கேள்வியும் எழவில்லை என்றும், ஏனெனில் அவர்கள் அனைவரும் சங்கத்திலிருந்து ஏற்கனவே விலகி விட்டவர்கள் அல்லது அமைப்புடன் தொடர்பு இன்றி சுயேச்சையாக செயல்படுகின்றனர் அல்லது வன்முறையை தழுவியதன் மூலம் அமைப்பிலிருந்து தனிமைப்பட்டு விட்டனர் என்று ஆர்.எஸ்.எஸ் கூறி விடுகிறது.

ஆனால், அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்-சுக்கு ஒரு பெரிய தலைவலியாக வந்திருக்கிறார். அசீமானந்தா கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் 1952-ல் உருவாக்கப்பட்டதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மையமாக விளங்கும் வனவாசி கல்யாண் ஆசிரமத்துக்கு பணி புரிவதில் அர்ப்பணித்திருக்கிறார். தாக்குதல்களை திட்டமிட்ட சமயத்தில், அசீமானந்தா அவருக்காகவே உருவாக்கப்பட்ட வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சமயப் பிரிவின் தேசியத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்திருக்கிறார். பயங்கரவாத சதித் திட்டத்தை துவங்குவதற்கு முன்பாகவே, அவர் பின்பற்றும் நடைமுறைகளில் ஒருங்கிணைப்பட்ட மதக் கலவரங்கள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட வன்முறைகள் மிகப் பிரபலமானவையாக இருந்திருக்கின்றன.

2005-ம் ஆண்டு மத்தியில் மோகன் பாகவத்தும், இந்திரேஷ் குமாரும் பயங்கரவாத சதித்திட்டத்தில் அசீமானந்தாவின் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டார்கள். ஆனால், அசீமானந்தா ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது மற்றும் மிகவும் போற்றப்படும் தலைவரான எம்.எஸ். கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருக்கு ரூ 1 லட்சம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பழுத்த பாஜக தலைவரும் முன்னாள் கட்சித் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கினார். இந்திரேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளைக் குறித்த முழுமையான விசாரணையிலிருந்து அவர் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அசீமானந்தாவுடன் தனது உறவுகளை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக மறுப்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.

–    தொடரும்

தமிழாக்கம் – பண்பரசு

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான் 

படங்கள் நன்றி : கேரவான்

முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !

2

.பி. மாநிலத்திலுள்ள முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடந்த இந்து மதவெறிக் கலவரம், குஜராத் முசுலீம் படுகொலைக்குப் பிறகு மிகப்பெரும்பாலான முசுலீம்கள் மீது இழைக்கப்பட்டிருக்கும் கொடூரமான அநீதியாகும். குஜராத் படுகொலைகளோடு ஒப்பிட்டால், முசாஃபர் நகர் கலவரத்தில் விழுந்த முசுலீம் பிணங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனாலும், இந்து மதவெறிக் கும்பலும் ஜாட் சாதிவெறியர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய இந்தக் கலவரத்தைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளவிட முடியாது.

முசாஃபர் நகர்
உ.பி. அகதி முகாம்களின் குழந்தைகள் குளிரில் விறைத்துச் செத்துக் கொண்டிருந்த பொழுது, கலை நிகழ்ச்சி நடத்தி ரசித்துக் கொண்டிருந்த உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் உருவ பொம்மையை எரித்து போபால் விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இக்கலவரத்தின் காரணமாக இவ்விரு மாவட்டங்களின் கிராமப்புறங்களிலிருந்து 50,180 முசுலீம்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக உ.பி. அரசு அறிவித்திருக்கிறது. அரசுசாரா நிறுவனங்களோ கிராமப்புறங்களிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்ட முசுலீம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு இலட்சம் வரை இருக்கக் கூடும் எனக் கூறி வருகின்றன. குஜராத் படுகொலைகளின்பொழுது அகதிகளாக்கப்பட்ட முசுலீம்களின் எண்ணிக்கையோடு உ.பி. நிலையை ஒப்பிட்டால், உ.பி. அரசின் புள்ளிவிவரமே அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான்.

முசாஃபர்நகர் கலவரம் நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட பிறகும், அகதிகளாக வெளியேறியிருக்கும் முசுலீம்களில் பெரும்பாலோர் தமது சொந்த கிராமத்திற்கு இதுவரை திரும்பிச் செல்லவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகாவது திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதற்கும் வழியில்லை. ஏனென்றால், “திரும்பிச் சென்றால் மீண்டும் ஜாட் சாதிவெறியர்களால் தாக்கப்படுவோம்; மீண்டும் கலவரம் வெடிக்கக் கூடும்” என அவர்கள் அச்சப்படுகின்றனர். “முசுலீம்கள் ஜாட் சாதியினரை நம்ப மறுக்கிறார்கள். முசுலீம்கள் தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதை ஜாட்டுகள் விரும்பவில்லை” என்றவாறு தீவிரமான சமூகப் பிளவுகளை இந்தக் கலவரம் உருவாக்கியிருக்கிறது.

“குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்; தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கோருகிறார்கள் பாதிக்கப்பட்ட முசுலீம்கள். முசுலீம்களின் காவலன் என்று சுயதம்பட்டம் அடித்துவரும் சமாஜ்வாதி கட்சி அரசோ அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல; நிவாரணம் என்ற பெயரில் சமாஜ்வாதி அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்துவிட்டன.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு அல்லது ஜாட் சாதிவெறியர்களால் அச்சுறுத்தப்பட்டு கிராமங்களிலிருந்து வெளியேறிய முசுலீம்களைத் தங்க வைப்பதற்கு 41 முகாம்கள் உ.பி. அரசால் அமைக்கப்பட்டன. எனினும், தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கும் அற்பமான வசதிகள்கூட, இந்தச் சொந்த நாட்டு அகதிகளுக்குச் செய்து தரப்படவில்லை. வெட்ட வெளியில் தார்பாயினால் அமைக்கப்பட்ட கூடாரங்களில்தான் ஒவ்வொரு முசுலீம் குடும்பமும் தங்க வைக்கப்பட்டனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்டு எந்தவொரு அடிப்படையான வசதியும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

இது குறித்து பத்திரிகை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “முகாம் என்ன ஐந்து நட்சத்திர விடுதி போலவா இருக்கும்” எனத் திமிராகவும் அகங்காரத்தோடும் பதில் அளித்தார், ஒரு உயர் அதிகாரி. அகதிகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் அளிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதும்கூட அக்டோபர் முதல் வாரத்திற்குள்ளாகவே தடாலடியாக நிறுத்தப்பட்டது. அகதிகளாகத் தஞ்சமடைந்த இடத்தில் உணவுக்கு உத்தரவாதமில்லை, ஆண்களுக்கு வேலையில்லை, சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல வழியில்லை – என இப்படி பல அவலங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு முசுலீம்கள் தள்ளப்பட்டனர்.

இவை மட்டுமா? வெட்டவெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் குளிர்கால இரவு நேரத்தைக் கழிப்பது சாவை நேருக்குநேர் எதிர்கொள்வதற்கு ஒப்பானதாக அமைந்தது. பல்வேறு முகாம்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளும், சிறுவர்களும் குளிராலும் பனியாலும் நிமோனியா காச்சலுக்கு ஆளாகி இறந்துபோன செய்தி டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே அம்பலமானது. ஆனால், சமாஜ்வாதி அரசு இந்தப் பரிதாபகரமான சாவுகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முசுலீம் அகதிகள் முகாம்களில் குளிரால் விறைத்துக் கொண்டிருந்தபோழுது, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலயம் சிங் யாதவும் தமது சொந்த கிராமத்தில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பாலிவுட் நடிகர்-நடிகைகளை அழைத்துவந்து குத்தாட்டம் நடத்தி ரசித்துக் கொண்டிருந்தனர். “உலகிலேயே அதிகக் குளிர் வீசும் சைபீரியாவில்கூட யாரும் குளிரால் இறந்து போனதாக வரலாறு கிடையாது” என எகத்தாளமாகக் கூறி, முகாம்களில் நடந்த மரணங்களை மூடி மறைத்தார் அம்மாநில உள்துறைச் செயலர். இந்தச் சாவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட பிறகுதான், குளிரால் 11 பேர் மட்டுமே இறந்து போனதாக ஒரு இமாலயப் பொய்யை அவிழ்த்துவிட்டது, உ.பி. அரசு.

இதன் பிறகு நடந்ததோ இன்னும் கொடூரமானது. முகாம்கள் அனைத்தையும் மூடிவிடும் முடிவை எடுத்து அமல்படுத்தத் தொடங்கியது, சமாஜ்வாதி அரசு. முகாம்களில் தங்கியிருக்கும் முசுலீம்களில் ஒரு பகுதியினருக்கு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளிக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, முகாம்களிலிருந்து முசுலீம்களை வெளியேற்றும் நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. சொந்த கிராமத்திற்குத் திரும்புவதைவிடப் பசி, குளிர், மரணம் ஆகிய ஆபத்துக்களினூடே, எந்தவிதமான வசதியும் அற்ற முகாம்களில் இருப்பதே மேல் எனக் கருதிய முசுலீம்கள் தம்மை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்க்கத் தொடங்கிய பொழுது, அவர்களைச் “சதிகாரர்கள்” எனக் குற்றஞ்சுமத்தினார், முலயம் சிங். உ.பி. மாநில அமைச்சர் சிவபால் சிங், “முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளே அல்ல; அரசு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மதரஸாக்களால் ஏற்பாடு செயப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்” என நாக்கில் நரம்பில்லாமல் பேசி இழிவுபடுத்தினார்.

மதச்சார்பற்ற கட்சி எனக் கூறிக் கொள்ளும் சமாஜ்வாதிக் கட்சியின் இலட்சணம் இதுவென்றால், மதச்சார்பின்மையையும், முசுலீம்களின் நலனைப் பாதுகாப்பதையும் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த யோக்கியர் திருவாளர் ராகுல் காந்தி, “ஆள் பிடிப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இந்த முகாம்களை வட்டமிடுவதாக”ப் பீதி கிளப்பி விட்டார்.

குஜராத் படுகொலையின் பின் அமைக்கப்பட்ட அகதி முகாம்களை அம்மாநில அரசு புறக்கணிப்பது குறித்துக் கேட்டபொழுது, “நாங்கள் பிள்ளை பெறும் தொழிற்சாலைகளை நடத்த விரும்பவில்லை” என ஏகடியமாகப் பதில் அளித்தார், மோடி. ராகுலோ இன்னும் ஒருபடி மேலே போ, முகாம்களைத் தீவிரவாதிகளைப் பிரசவிக்கும் இடமாக அடையாளம் காட்டுகிறார்.

முகாம்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்த அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நட்ட ஈடு பெற்றவர்களிடம், “இனி நானோ எனது குடும்பத்தாரோ எந்தச் சூழ்நிலையிலும் எனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டோம்; அரசு கொடுத்த நிவாரண பணத்தைக் கொண்டு வேறு எங்காவது நானே எனது சொந்த முயற்சியில் குடும்பத்தைக் குடியமர்த்திக் கொள்வேன்” என்பன உள்ளிட்டுப் பல நிபந்தனைகளை விதித்துப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈட்டை அளித்திருக்கிறது, சமாஜ்வாதி அரசு.

இந்து மதவெறிக் கும்பலும் ஜாட் சாதிவெறியர்களும் சட்டவிரோதமான பயங்கரவாதப் படுகொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மூலம் முசுலீம்களைக் கிராமங்களிலிருந்து துரத்தியடித்தனர் என்றால், ‘மதச்சார்பற்ற’ சமாஜ்வாதி அரசோ பணத்தின் மூலம் சட்டபூர்வமான முறையில் ஏழை முசுலீம்களைத் தமது சொந்த கிராமங்களிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த முயலுகிறது. இந்த வகையில் இந்து மதவெறிக் கும்பலின் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் கையாளாக ‘மதச்சார்பற்ற’ சமாஜ்வாதி செயல்பட்டிருக்கிறது என்றே கூறலாம். பா.ஜ.க.வும் மோடியும் அம்பலமான இந்து மதவெறியர்கள் என்றால், காங்கிரசும் சமாஜ்வாதிக் கட்சியும் நண்பன் என்ற போர்வையில் செயல்படும் துரோகிகள் என்பதுதான் வேறுபாடு.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

பென்குயினுக்கு அருந்ததி ராய் கண்டனம்

12

சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமயங்களின் வரலாற்றுத் துறை பேராசிரியரான வென்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூல் பென்குயின் நிறுவனத்தால் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட து.

வெனடி டோனிகர்
வெனடி டோனிகர்

இந்துக்கள் : மாற்று வரலாறு என்ற புத்தகத்தில் இந்திய சமூக அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பெண்களின் தரப்பிலிருந்து இந்திய வரலாற்றை ஆய்வு செய்து முன் வைத்திருக்கிறார் வெனடி டோனிகர் .

இந்நூல் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த சிக்ஷா பச்சாவோ ஆந்தோலன் சமிதி என்ற இந்துத்துவா அமைப்பு  வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ்சின் கல்விப் பிரிவாக செயல்பட்டு வருகிறது.

நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பென்குயின்,  “இந்துக்கள்” புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் புத்தக கடைகளிலிருந்து திரும்பப் பெற்று கூழாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

தனது சின்ன விஷயங்களின் கடவுள் (God of Small Things), வெட்டுக்கிளிகளுக்கு காது கொடுத்தல் (Listening to Grasshoppers),  உடைந்த குடியரசு (Broken Republic) போன்ற நூல்களை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்தின்  இந்த முடிவைக் கண்டித்து அருந்ததி ராய் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை இங்கு தருகிறோம்.  

அருந்ததி ராய் பென்குயின் நிறுவனத்துக்கு எழுதிய கடிதம்

அருந்ததி ராய்
அருந்ததி ராய்

வென்டி டானிகரின் “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூலை ‘பாரதத்தின்’ புத்தக நிலையங்களிருந்து திரும்பப் பெற்று அதனைத் தூளாக்க நீங்கள் முடிவு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிகம் தெரிய வராத ஒரு இந்து அடிப்படைவாத இயக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வெளியே போட்டுக் கொண்ட  ஒப்பந்தத்தை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள் என்று தயவு செய்து எங்களுக்கு சொல்லுங்கள். நீங்கள் யாரென்பதை மறந்து விட்டீர்களா ? உலகில் பழமையும், பெருமையும் கொண்ட பதிப்பகங்களுள் ஒன்றல்லவா, பென்குயின் ? பதிப்பகங்கள் லாபமீட்டும் வர்த்தகமாக மாறுவதற்கு முன்பிருந்தே நீங்கள் பதிப்புத் துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். சோப், கொசு மருந்து போன்ற அழிந்து போகும் பொருட்களில் ஒன்றாக புத்தகங்கள் மாறுவதற்கு முன்னரே நீங்கள் இருக்கிறீர்கள்.

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்கள் அல்லவா, நீங்கள். அவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்பட்ட தருணங்களில் ஒரு பதிப்பகத்தார் எப்படி துணை நிற்க வேண்டுமோ அப்படி துணை நின்றீர்கள். மிகவும் மோசமான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் எழுந்த போது , கருத்து சுதந்திரத்துக்காக போராடியிருக்கிறீர்கள்.

ஆனால், இப்போது அது மாதிரி எந்த சூழலும் இல்லை. பத்வா விதிக்கபடவில்லை; புத்தகத்துக்கு தடை இல்லை; நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால், நீங்கள் சரிந்து விழுந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அருவருக்கத்தக்க அவமானத்தை உங்களுக்கு தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் இராப்பூச்சி போன்ற ஒரு அமைப்பிடம் சரணடைந்துள்ளீர்கள். ஏன் ? ஒரு சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த  வேறு யாருக்கு இருப்பதை விடவும் அனைத்து ஆதாரங்களும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக நின்றிருந்தால் அறிவுச் சமூகத்தின் பேராதரவு உங்கள் பக்கம் மலை போல் குவிந்திருக்கும். எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர் – நீங்கள் அடையாளப்படுத்திய எழுத்தாளர்கள்முழுமையாக இல்லை என்றாலும் – ஆதரவளித்திருப்பார்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். உங்களை அச்சுறுத்தியது எது ? உங்கள் எழுத்தாளர்களான என்னைப் போன்றோரிடமாவது அதனைப் பகிரும் குறைந்தபட்சக் கடமை உங்களுக்கு இருக்கிறது.

இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு
இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். ஆம், இது அசிங்கமான சூழல் தான். எனினும் அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.

இந்த பிரச்சினையை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள ? இனிமேல் நாங்கள் இந்துத்துவ ஆதரவு புத்தகங்களை மட்டுமே எழுத வேண்டுமா? இல்லை என்றால் புத்தக பிரதிகள் அனைத்தும் ‘பாரதத்தின்’ (உங்கள் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை) புத்தக நிலையங்களிலிருந்து நீக்கப்பட்டு, தூளாக்கப்படும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டுமா?  பென்குயின் மூலம் தமது புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்களுக்கு என்று பென்குயின் ஏதேனும் ஆசிரிய நெறிமுறைகள் வழங்குமா ? ஒரு கொள்கை விளக்க அறிக்கை அளிக்கப்படுமா ?

இப்படி ஒன்று நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இது உங்கள் எதிரி பதிப்பகத்தின் பொய்ப்பிரச்சாரம் என்று சொல்லுங்கள். அல்லது முட்டாள் தின நையாண்டி ஒன்று மு்ன் கூட்டியே கசிந்து விட்டது என்றாவது சொல்லுங்கள். தயவு செய்து ஏதாவது சொல்லுங்கள். நடந்தது உண்மையில்லை என்று அறிவியுங்கள்.

இதுவரையிலும் என் எழுத்துக்களை பென்குயின் பதிப்பித்தது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. ஆனால், இப்போது ?

நீங்கள் செய்தது எங்கள் அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது.

– அருந்ததிராய்

தமிழில், சுக்தேவ்.

மேலும் படிக்க