தன்னுடைய மகளின் இறப்பிற்கு காரணமான சாம்சங் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ஒரு ஏழை தந்தையைப் பற்றியக் கொரிய திரைப்படம்தான் ‘இன்னொரு சத்தியம்”(Another Promise).
அனதர் பிராமிஸ் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
தன் மகள் யூ-மிக்கு, சாம்சங் நிறுவனத்தில் வேலை கிடைதத போது ஹூவாங்-சங்-கிக்கு பெருமையாகவே இருந்தது. அவரது டாக்சி ஒட்டும் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் சிரமப்பட்டு வந்தது. இனி யூ-மியின் வருமானம் தன் குடும்பத்தை காப்பாற்றலாம் என மகிழ்ந்தார். அது மட்டுமா, யூ-மி வேலைக்கு சேர்ந்திருக்கும் நிறுவனம் உலகிலேயே மிக முக்கிய நிறுவனமான “சாம்சங்”. தென் கொரியரான அவரை அது இன்னும் பெருமை அடையச் செய்தது. யூ-மிக்கு இந்த வேலை கிடைத்ததில் பெருமகிழ்ச்சி, அவளது வருமானம் இனி தன் இளைய சகோதரனின் படிப்பு செலவுக்கு உதவலாம்.
சு-வான் நகரில் இருந்த சாம்சங் நிறுவனத்தின் மின் குறைக்கடத்தி தொழிற்சாலையில் (semiconductor plant) தான் யூ-மிக்கு வேலை. காலக்சி போன்கள் முதல் டிஜிட்டல் தொலைக்காட்சிகள் வரை தயாரிக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு அவற்றை இயக்கும் மின்குறை கடத்தி பாகங்களை தயாரிக்கும் அத்தியவசியமான தொழிற்சாலை இது.
யூ-மி குடும்பத்தின் மகிழ்ச்சி சில ஆண்டுகளே நீடித்தது. குறைக்கடத்தி தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட நச்சு ரசாயனங்களின் மத்தியில் வேலை செய்ததால் யூ-மியை அரிதான வகை ரத்தப் புற்று நோய் தாக்கியது. ரத்தப் புற்று நோய் கண்டறியப்பட்ட 20 மாதங்களுக்கு பின் யூ-மி மருத்துவமனை செல்லும் வழியில் தன் தந்தையின் வாடகை டாக்சியின் பின் சீட்டிலேயே துடிக்க துடிக்க இறந்தார்.
ஹூவாங்-சங்-கி க்கு உலகமே இருண்டது. தன் மகள் ஏன் இறந்தாள் என அவருக்கு உண்மையில் பிடிபடவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு பின் யூ-மியுடன் வேலை செய்த ஒரு பெண்ணும் ரத்தப் புற்று நோயால் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டவுடன் தான் அவருக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது.
தன் மகள் செய்து வந்த பணியை பற்றியும், அவள் வேலை செய்த சூழல், அவளின் ரத்த புற்று நோய் பற்றியும் பலரிடம் விசாரித்தார் வாங். ஓய்வு ஒழிச்சல் இன்றி தகவல்களை திரட்டினார். தன் மகள் மட்டுமில்லை சாம்சங் நிறுவனத்தில் குறைகடத்தி தொழிற்சாலையில் பணி புரிந்து இறந்த பலரின் புற்று நோய்க்கும் நிறுவனமே காரணம் என்பதை உறுதியாக கண்டுபிடித்தார். ஆனால் சாம்சங்கை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை, ‘வாங்’கை புறகணித்தனர். ஊடகங்களுக்கு சென்றார். சாம்சங்கின் விளம்பரங்களில் வாழும் அவர்கள் பயந்தனர். “சாம்சங்கை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என வாங்கிற்கு அறிவுரை கூறினார்கள். வாங் விடுவதாக இல்லை.
கடந்த ஆறு வருடங்களாக வாங் சாம்சங் நிறுவனத்தை எதிர்த்து போராடி வருகிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யூ-மியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொழிற்சாலை முன்பு அமைதியாக போரட்டம் நடத்திய போது, சாம்சங் நிறுவன குண்டர்களால் தாக்கப்பட்டார்கள். தொடர்ந்து வாங் கண்காணிக்கப்பட்டார். உளவு பார்க்கப்பட்டார்.
அனதர் பிராமிஸ் கொரிய மொழித் திரைப்படத்தில் சுவரொட்டி
அவர் போராட்டத்தை பற்றி கேள்விப்பட்ட திரைப்பட இயக்குனர் கிம்-டே-யுன் இதை திரைப்படமாக எடுக்க முன் வந்தார். சாம்சங்கை எதிர்க்க எந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் முன் வராத நிலையில் தானே கொஞ்சம் பணம் போட்டார், சில தனி நபர்கள் கொஞ்சம் பணம் கொடுத்தனர். பணம் போதவில்லை. மிகப் பெரும் திருப்புமுனையாக சுமார் 7,000 பொது மக்கள் தயாரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க முன் வந்தனர். இந்த படம் கொரியாவின் மக்கள் மூலதனத்தில் (Crowd Source) வெளி வரும் முதல் படம் என்றும் சொல்கிறார்கள்.
படத்தை பற்றி அறிவிப்பு வந்த நாள் முதலே கிம்-டேயை பலர் பயமுறுத்தியுள்ளனர். ஆனால் கிம்-டே தெளிவாக இருந்தார் “நான் சாம்சங் நிறுவனத்துடன் சண்ட போடவில்லை, மாறாக சண்டை போடும் குடும்பங்களின் குரலை வெளி கொண்டு வர நினைக்கிறேன்” என்று கொஞ்சம் பாதுகாப்பாகவே சொன்னார்.
சாம்சங் நிறுவனம் இந்த செய்திகளை கேட்டு எரிச்சலடைந்தது. “யூ-மியின் மரணம் சாம்சங் குடும்பத்தில் ஒருவரின் மரணம், அதற்காக சாம்சங் நிறுவனம் வருத்தமடைகிறது. அதே நேரம் யூ-மியின் மரணத்திற்கும் குறைகடத்தி தொழிற்சாலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே சாம்சங் தொழிற்சாலைகள் “வேலை செய்ய ஏதுவான இடம்” என கொரிய சுகாதார துறையால் சான்றிதழ் பெற்றிருக்கின்றன.” என்று வாயடைக்கப் பார்த்தது சாம்சங் நிர்வாகம்.
ஒரு பெரும் தொழிற்சாலையில் ஓரிருவர் பாதிக்கப்பட்டால் சாம்சங் நிர்வாகம் சொல்வது சரிதான், பலர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என ஏற்கலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் குறைக்கடத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவது பெருகி கொண்டே வருகிறது. இதிலிருந்தே சாம்சிங் நிறுவனத்தின் சதியும் பொய்யும் அப்பட்டமாக தெரிகிறது.
குறைக்கடத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின ஆரோக்கியம் மற்றும் ஆபத்துக்கள் பற்றிய ஆதரவாளர்களின் குழுவான ஷார்ப் (SHARP) சுமார் 200 தொழிலாளர்கள் வரை பலவித புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்களை தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டை வாங்கி கொடுக்க வேண்டிய தென்கொரிய அரசின் கே-காம்-வெல் கழகமோ பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வஞ்சித்தபடி தான் இருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 36 பேர் இழப்பீடு கேட்டு மனுவளித்தனர் அதில் இருவருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கபட்டுள்ளது என்கிறார் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக வாதாடும் வழக்குரைஞர் லி-ஜோங்.
மேலும் அவர் கூறுகையில் ”சாம்சங் நிறுவனம் குறைகடத்தி தொழிற்சாலையைப் பற்றி கூறுவது வேடிக்கையான பொய். அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அந்த தொழிற்சாலையில் பயன்படுத்தும் ரசாயன பொருட்களின் பட்டியலை நாங்கள் பல முறை கேட்டும் ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்” என கேள்வி எழுப்புகிறார்.
வாங்-சங்கை போலவே தன் மகளை சாம்சங் நிறுவனத்தின் குறைகடத்தி பிரிவுக்கு பலி கொடுத்த இன்னொரு தந்தை கிம்-சி-நியு. அவர் மகளுக்கு சாம்சங் நிறுவனத்தில் பணி கிடைத்த போது கிம் பெருமையாக தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு விருந்தளித்தார். ஆனால் சில ஆண்டுகளில் அந்த மகிழ்ச்சி மறைந்தது. கிம்மின் மகள் மூளையில் கட்டியுடன் அவதிப்பட ஆரம்பித்தாள். இன்று அவள் பக்கவாதம் வந்து வீட்டில் முடங்கி யுள்ளாள். மூளையில் கட்டியை நீக்க நடந்த எண்ணற்ற அறுவை சிகிச்சைகள அவளை முடக்கி விட்டன.
கிம் இதை பற்றி கூறுகையில்,”என் மகள் சாம்சங்கில் பணிபுரிய சென்ற போது நான் பெருமை அடைந்தேன். ஆனால் எல்லாம் வீண். சாம்சங் நிறுவனம் வெளியில் இருந்து பார்க்கத் தான் அழகாக உள்ளது ஆனால் உள்ளே எல்லாம அழுக்கு” என்றார். மேலும் தன் போராட்டத்தை பற்றி கூறுகையில் “நான் என் மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளேன், நிச்சயம் சாம்சங் நிறுவனத்திற்கும் என் மகள் நோய்க்கும் உள்ள தொடர்பை நிருபிப்பேன்” என்கிறார்.
“நான் சாம்சங்கை எதிர்க்க போவதை பற்றி என் உறவினர்கள் பயமுறுத்தினார்கள், ‘சாத்தியமில்லை, வீண் முயற்சி’ என்றார்கள், ஆனால் அவர்கள் அப்படி என்னை முடக்கப் பார்ப்பதுதான் என்னை மேலும் உறுதியாக போராட உத்வேகப்படுத்துகிறது” என்றார்.
“யூ-மியின் மரணம் நிச்சயம் தற்செயலானது அல்ல, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தால் சாம்சங் நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களின் புற்று நோய் மரணத்திற்கும் வலுவான தொடர்புள்ளது” என்று வாதிடுகிறார் வழக்குரைஞர் லீ-ஜோங். உலகெங்கிலும் விற்கப்படும் சாம்சங் தொலைபேசிகளும், தொலைக்காட்சி பெட்டிகளும் இது போன்று சாம்சங் ஊழியர்களை களப்பலி கொடுத்து தயாரிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட ஊழியர்களின் படங்கள் அவற்றின் திரையில் தெரிவதில்லை.
ஆரம்பத்தில் வாங்-சங்கும் அரசின் கே-காம்-வெல் சென்று தான் தன் மகள் மரணம் குறித்து முறையிட்டார். ஆனால் கே-காம்-வெல், சாம்சங் நிறுவனம் குற்றமற்றது என வாங்கின் கோரிக்கையை நிராகரித்தது.
2011-ல் வாங்கின் போரட்டத்திற்க்கு கொரிய அளவில் ஒரு கவனம் கிடைத்தது, தென்கொரிய நிர்வாக நீதிமன்றம், கே-காம்-வெல்லின் “வாங்கின் நிராகரிப்பை” ரத்து செய்து தீர்ப்பளிக்கையில் “சாம்சங் நிறுவனத்தின் குறைகடத்தி தொழிற்சாலையில் உள்ள நச்சு ரசாயனங்கள் யூ-மியின் நோய்க்கு நேரடி காரணமாகவோ அல்லது நோய் வளரவோ காரணமாக இருந்திருக்கிறது” என கூறியது. இது வாங்கின் போரட்டத்தின் மிக பெரிய மைல்கல்.
தலைநகர் சியோலில் இருந்து சுமார் 200 மைலகளுக்கப்பால் வடகொரிய எல்லைப் பகுதியில் வாடகை கார் ஓட்டி பிழைக்கும் வாங் இந்த போரட்டத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் தன் ஊருக்கும், தலைநகருக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். தன் மகளின் மரணத்திற்கு அவருக்கு வேண்டியது பணம் அல்ல நீதி.அதற்காகவே அவர் போராடுகிறார். அவருடன் போர்குணத்துடன் போராடிய அவரின் நண்பர்களையும் உறவினர்களையும் சாம்சங் நிறுவனம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. தன் பக்கத்தில் நின்ற பலரின் துரோகமும் அவரை துவள செய்யவில்லை. மேலும் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஒரு முறை சாம் சங் நிறுவனம் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் வேணடாம் என்று மறுக்கவே சாம்சங் நிர்வாகத்தினர் எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்
அதற்க்கு ஏழை வாங் அளித்த பதில் தான் மிக முக்கியமானது.
“நான் உங்கள் பணத்தை நிச்சயம் ஏற்க மாட்டேன் அதுவும் எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்த பின் உங்கள் பணத்தை நான் ஏற்கவே மாட்டேன்” என்றார்.
உழைக்கும் வர்க்கத்தின் உறுதியும் நேர்மையும் இது தான்.
அரசு அங்கீகாரம் பெறாமலேயே போலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம். புதுக்கோட்டை – நாசரேத் : நல்ல சமாரியன் கல்வியியல் கல்லூரிக்கு எதிரான மாணவர் போராட்டங்கள்
நல்ல சமாரியன் கல்லூரி மாணவர் சேர்க்கை விளம்பரம்
கடந்த அக்டோபர் மாதம் (2013) நல்ல சமாரியன் கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் பெறாமலேயே திருட்டுத்தனமாக நூறு மாணவர்களை சேர்த்தது. போலியாக பத்திரிக்கைகளில் விளம்பரம், துண்டறிக்கை, இணையதள விளம்பரம் என விளம்பரப்படுத்தி மாணவர்களிடம் மோசடியாக ரூ 10,000 முதல் ரூ 50,000 வரை, எந்த மாணவரிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அந்தளவு பணத்தை பிடிங்கியுள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் கடைசி ஒரு வாய்ப்பு என மாணவர்கள் தங்களின் எதிர்காலம் கருதி கல்லூரி நிறுவனம் கேட்கும் பணத்தை இரவோடு இரவாக கொடுத்துள்ளனர். விடுதி கட்டணம் தனியாக வசூல் செய்துள்ளனர். இரண்டு மாதங்கள் ஆன பிறகும் எந்தவிதமான சீருடை, அடையாள அட்டை, புத்தகங்கள் என எதுவும் கொடுக்கவில்லை.
மாணவர்கள் தங்களுக்கு எதுவுமே தராத பட்சத்தில் நிறுவனத்தை பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் மரிய சூசை காலமானார். பிறகு இவரது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் கல்லூரி நிறுவனத்தை நடத்தாமல் கைவிடப் போவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தனர். பிறகு தான் அங்கீகாரம் வாங்காமலேயே கல்லூரி நடத்தியது பற்றி மாணவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், “இதற்கெதிராக போராட வேண்டும் அப்பதான் நாம் இந்த ஆண்டு தேர்வு எழுத முடியும். இல்லையென்றால் மீண்டும் ஒரு வருடம் படிக்க வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டும்” மற்றும் தமிழக அரசு TET தேர்வு நடத்துவதில் அதிக மாணவர்கள் எழுதுவதால் இதன் விதிமுறையில் அதாவது பி.எட் படிப்பை விட எம். பில் படிப்பு மட்டும் தகுதி தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுத்தால் மேலும் 2 ஆண்டு படித்து தேர்வு எழுத வேண்டும். வேலை கிடைப்பதும் குதிரை கொம்பாக உள்ளது” என்ற தனது எதிர்காலத்தை பற்றி அஞ்சினர்.
வசதி வாய்ப்பு உள்ள மாணவர்கள் சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தங்களது நம்பிக்கையை கைவிடாமல் ஜனவரி 31ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்பு 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளிருப்பு போராட்டமாக தனது போராட்டத்தை செய்ய ஆரம்பித்தனர். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பு.மா.இ.மு. சார்பாக கல்லூரியை சுற்றி உள்ள ஊர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இதை பார்த்த குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் (அதிமுக) பு.மா.இ.மு. செயலாளருக்கு போன் செய்து, “இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்” என நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசினார். அதற்கு பு.மா.இ.மு. செயலாளர், “நீங்கள் நினைப்பது மாதிரியான அமைப்பு நாங்கள் இல்லை. உங்களால் முடிந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவும் நிர்வாகத்தை தண்டிக்கவும் நடவடிக்கை எடுங்க. இல்லையென்றால் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக்கூறி அவர் முகத்தில் கரியை பூசினார். ஒருவார காலம் ஆன நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை உணர்ந்த மாணவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆவன செய்யுமாறு கோரி 11.02.14 அன்று மனு கொடுக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் சுமார் 40 பேர் தமது கோரிக்கைகளை முழக்கமிட்டபடி கொண்டு ஊர்வலமாக சென்றனர். அலுவலக வாயிலில் சுமார் 15 நிமிடம் முழக்கமிட்டு மாணவர்களின் கோரிக்கைகளை பொது மக்களுக்கு விளக்கி பேசினர்.
விஷயமறிந்து பறந்து வந்த போலீஸ் அதிகாரிகள், “அனுமதி வாங்காமல் முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து கலெக்டர் ஆபிசில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. இது சட்ட விரோதம்” என பேசினர்.
“கோரிக்கைகளை கூறி முழக்கமிட்டு வருவது எங்கள் உரிமை” என்றும், “கலெக்டரிடம் மனு கொடுக்கத்தான் வந்தோம். ஆர்ப்பாட்டம் செய்யவில்லை” என்றும் மாணவர்கள் கூறினர். “மோசடி செய்த கல்லூரி முதலாளிகளையும், புரோக்கர் செந்தில் மற்றும் அந்தோணி போன்றவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத நடவடிக்கை எடுங்கள்” என நியாயத்தை பேசியும் எதையும் உணராத எருமைத்தோல் போன்ற அதிகாரிகள் மற்றும் போலீசு மாணவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வேனில் தள்ளி கைது செய்தது. அரசின் கோர முகத்தையும் அடக்குமுறையையும் மக்கள் உணர்ந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மாணவர்களை கைது செய்யும் போது கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பற்றிய கூட்டத்தில் இருந்த மாவட்ட நீதிபதிகள் வாயிலில் வந்து காட்டுமிராண்டித்தனமாக போலீஸ் நடந்து கொண்டதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் சென்றனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை வந்து கேட்காமல் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தேர்தல் பணிகள் தான் முக்கியமானது எனக்கூறி வந்த மாணவர்களை கைது செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் உதவியாளர், “இந்த மாவட்டத்தில் வராது. புதுக்கோட்டையிலே போய் அதிகாரிகளிடம் கேளுங்கள்” என திமிராக பேசினார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.புமாதிமு தோழர்கள் மாவட்ட செயலாளர் செழியன் மற்றும் ஓவியா, கர்ணா, முத்துக்குமார் என மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களின் உரிமையையும், போராட்டத்தின் நியாயத்தையும் விளக்கி பேசினர். ஒவ்வொரு நேரத்திலும் தோழர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை கற்றுக் கொண்ட மாணவர்கள் நம்பிக்கை அதிகரித்து, போராட நம்பிக்கை வளர்ந்தது.
விஷயம் அறிந்த மாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அன்று இரவே கல்லூரி மாணவர் ஒருவருக்கு போன் செய்து, “கோரிக்கை சரியானது தான், புகார் கொடுங்கள். நான் உடனே அதிகாரிகளிடம் பேசி மாணவர்களை தேர்வு எழுத வழி வகை செய்கிறேன்” என பேசினார்.
ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் இன்று தங்களை தேடி போலீஸ் பேசியது மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கட்ட போராட்டத்திற்கு மாணவர்களுடன் இணைந்து பு.மா.இ.மு. சார்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கோரிக்கை மனுக்கள், பத்திரிகைச் செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மதம் சார்ந்த உலகில் சில நாட்களாகவே கசிந்து வந்த செய்தி இப்போது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தான் இசுலாத்தை ஏற்றுக் கொண்டது, தனது வீட்டார், தந்தை அனைவரும் அதை ஆதரிப்பதையெல்லாம் யுவன் சங்கர் ராஜா டிவிட்டரில் அறிவித்திருக்கிறார். கூடவே இந்த மத மாற்றத்தின் மூலம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவது புரளி எனவும் தெரிவித்திருக்கிறார்.
யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது.
பொதுவில் இசுலாம் மற்றும் இசுலாமியர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வாலும், யுவன் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதாலும் இந்த சாதாரண செய்தி கொஞ்சம் அதிர்ச்சி கலந்த பரபரப்பாய் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது. சென்னையைக் கலக்கிய மோடி எனும் செட்டப் செய்தியின் வீச்சையும் ஜோடனை வெற்றியையும் இந்த செய்தி குறைத்து விடுமோ எனும் கவலையும் இதில் அடங்கியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இருமதங்களிலும் இருக்கும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அவர்கள் சிறுபான்மை என்றாலும் இந்த மதமாற்றம் ஒரு தனிநபரது அந்தரங்க விசயம், அதை விவாதிப்பது சரியல்ல எனவும், முற்போக்கு மற்றும் இடதுசாரி கருத்துக்கள் கொண்டவர்கள் கூடுதலாக இதை பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதற்காக விவாதிக்கின்றனர். எனினும் இருதரப்பு மதவாதிகளின் விவாதம்தான் இவற்றில் முன்னணி வகிக்கிறது.
முதலில் பார்ப்பனியத்தை அரசியலிலும், மதத்திலும் ஏற்றுக் கொண்டோரை பார்க்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவர் இந்துமதவெறி அரசியலை அதற்குரிய இயக்கங்களில் சேர்ந்துதான் பெற வேண்டும் என்பதல்ல. பொதுவான சாதிய படிநிலை அமைப்பும், சடங்கு-சம்பரதாயங்களும், ஊடகங்கள் – கலாச்சார – அரசு அமைப்புக்களின் பார்ப்பனிய சார்பும் கூட ஒரு ‘இந்து’ குடிமகனது சிந்தனையை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றன.
“முசுலீம்கள் மதவெறியர்கள், எதற்கும் தம் மதத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், ஏட்டிக்கு போட்டியாக தாடி, குல்லா, கைலி என்று அடையாளத்தை பின்பற்றுபவர்கள், மாட்டுக்கறியை விரும்பி உண்பவர்கள், அதனால் வரும் துர்நாற்றத்தை தடுக்க ஃபாரின் செண்டை அடிக்கடி போடுபவர்கள், சளைக்காமல் குண்டு வைக்கும் தீவிரவாதிகள்” என்பதிலிருந்து விதவிதமாக இந்த வெறுப்புணர்வு மக்கள் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே ஒருவர் முசுலீம் மதத்திற்கு மாறுகிறார் என்றால் இத்தகைய மனநிலையிலிருப்போருக்கு இயல்பாகவே அதிர்ச்சியும், வெறுப்பும், கசப்பும் வருகிறது. அதுவே இந்துமதவெறி இயக்கத்தவர் என்றால் கூடுதல் வன்மத்துடன் அந்த வெறுப்புணர்வு பீறிட்டு வருகிறது.
தினமலர் மறுமொழிகளில் துவங்கி சமூக வலைத்தளங்கள் வரை இத்தகைய வெறுப்புணர்வு விதவிதமாய் வெளிப்படுகிறது. “ஜனனி ஜகம் நீ, ரமணர் மாலை, திருவாசகம் என ஆன்மீகத்தில் இசையோடு திளைத்தவரின் பிள்ளை செய்யக்கூடிய செயலா இது”, “இனி யுவன் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டலாம்”, “அவர் குண்டு வைக்காமல் இருந்தால் சரி”, “தாய்நாடு, தாய்மதம், தாய்-தந்தை அனைத்தையும் இழிவுபடுத்தி விட்டார்”, “சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மதத்தை விற்று விட்டார்”, “இசையை மறுக்கும் இசுலாத்தில் எப்படி காலம் தள்ளுவார்” என தினுசு தினுசாக இந்த எரிச்சல்கள் கொட்டப்படுகின்றது.
இதனால்தான் “இளையராஜாவுக்கு நெஞ்சுவலி வந்தது”, “அவரது தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவ மதத்திலிருந்து தாய்மதமாம் இந்து மதத்திற்கு மாறியதை யுவன் அசிங்கப்படுத்தி விட்டார்” என்றெல்லாம் கூட இவர்கள் அடுக்குகிறார்கள்.
ஒரு மதத்தை ஒருவர் பின்பற்றுவது, மாற்றிக் கொள்வது என்பது சட்டப்படியும், தார்மீக நெறிப்படியும் அவரது தனிப்பட்ட உரிமை, தேர்வு. இதில் சரி தவறு என்று வாதிடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமையும் இல்லை, அது ஜனநாயகமும் இல்லை. மின்னணுவியல் எந்திரங்களின் கடைக்குச் சென்று ஒருவர் தனக்குப் பிடித்த நிறுவனத்தின் சலவை எந்திரத்தை வாங்குவதை எவரும் விமரிசிப்பதில்லை. சரக்குத் தேர்வு அவர் உரிமையென மற்றவர்கள் ஏற்கிறார்கள். நுகர்வு கலாச்சாரத்தில் இருக்கும் இந்த ‘நாகரீகம்’ மதம் குறித்த விவகாரங்களில் இல்லை.
இகலோக பொருட்களோடு பரலோக ஆன்மீகத்தையும் இணைத்துப் பார்க்கலாமா என்று பக்தர்கள் கேட்கலாம். பரலோக ஆன்மீகத்தில் கூட எங்கே தள்ளுபடி அதிகம், வசதிகள் இருக்கும் என்று ஒரு பக்தன் முடிவு செய்வதில் தவறென்ன? இல்லையென்றால், இல்லாமல் கருத்தளவில் மட்டும் நம்பப்படும் பரலோகத்தில் எது உண்மை, பொய், நல்லது என்ற விவாதங்கள் எழும். ஆகவேதான் மதத்தை எற்பதோ, பின்பற்றுவதோ, மாற்றுவதோ ஒருவரது தனிப்பட்ட உரிமை. அவர் எந்தக் காரணத்திற்காக செய்தார், அந்தக் காரணங்கள் சரியா, தீர்வுக்கு அந்த மதம் உகந்ததா என்று கேட்பதும், விவாதிப்பதும் அடிப்படை ஜனநாயகமற்ற செயல்.
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே!
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா? அப்பருக்கு அளிக்கப்பட்ட அந்த உரிமை குப்பனுக்கும், சுப்பனுக்கும் மட்டும் இல்லையா? ஆனால் குப்பன் சுப்பன்கள் பால் பவுடருக்காகவும், ரொட்டிக்காவும் மதம் மாறுகிறார்கள் என்று அப்பரை வியந்தோதும் அன்பர்கள் இழிவுபடுத்துவார்கள். தனது வயிற்றுப்பசிக்கு ஒரு மதம் வாழ்வளிப்பதை ஏழையொருவர் ஏற்றுக் கொண்டு மாறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?
ஒரு ஏழையின் ஏழ்மையை விதியென்றும், பாவமென்றும் ஏற்று நடக்க கோரும் மதம்தான் அதிலிருந்து விடுதலை பெறுவதையும் எதிர்க்கிறது. ஏழ்மை எனப்படும் இகலோக வறுமையை போக்குவதற்கு வக்கற்றவர்கள் ஆன்மீக வறுமை குறித்து எகத்தாளம் பேசுவது மேட்டிமைத்தனமானது. ஆகவே ஒரு மனிதன் ஆன்மீகவாதிகளால் பட்டியலிடப்படும் எந்த ஒரு ‘அற்ப’ காரணங்களுக்காகவும் கூட மதம் மாறலாம், அதில் தவறில்லை என்கிறோம். இப்படி இருக்க யுவன் இந்த ‘காரணங்களுக்காகத்தான்’ மதம் மாறினார் என்று பேசுவது பொருளற்றது.
வெள்ளையர்கள் வந்து சர்வே எடுத்தபின் உருவான இந்து மதம் வரலாற்றில் இன்றிருப்பதைப் போல ஒருங்கிணைக்கப்பட்ட மதமாக இல்லை. ஆறு வகை மதங்கள். அதில் சைவம், வைணவத்தின் கொலைச்சண்டையெல்லாம் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. அம்பேத்கர் கூறியதைப் போல இந்து மதம் என்பது ஒரு மதத்திற்குரிய ஆன்மீக அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை; அது சமூக வாழ்வில் சாதிப் பிரிவினைகளோடு வாழ்வதற்கும், மீறுபவர்களை தண்டிப்பதற்குமான ஒரு குற்றவியல் சட்ட தொகுப்புத்தான்.
இத்தகைய வருணாசிரம, சாதியக் கொடுங்கோன்மையிலிருந்துதான் மதமாற்றத்தின் தேவை பிறக்கிறது. இந்தியாவில் கிறித்தவமும், இசுலாமும் அப்படித்தான் தமது அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டன. அதே நேரம் பார்ப்பனியத்தை வெல்ல முடியாமல் அவை தமது நோக்கத்தில் தோல்வியடைந்தாலும் தோன்றியதின் காரணங்களை மறுக்க முடியாது. காலனியாதிக்கத்தின் கிறித்தவம், முகலாய மன்னர்களின் ஆட்சி மதம் என்ற அந்தஸ்தில் இருந்த இசுலாம் போன்றவையால் ஏற்பட்ட மதமாற்றத்தை விட சமூக கொடுங்கோன்மையால் நடந்த மாற்றமே அதிகம். 1980 களில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்றம் வரை இதற்கு சான்றுகள் ஏராளம்.
எனவே தாய்மதமாம் இந்துமதத்திலிருந்து மதம் மாறலாமா என்று பொறுமும் இந்து பக்தர்கள் முதலில் தாய் மதத்தின் அநீதியை புரிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் ஏட்டிக்குப் போட்டியாக கிறித்தவம், இசுலாம் போல இந்துமதமும் மதமாற்றத்தை செய்ய நினைத்தாலும் முடியாது, ஏன்? இந்து மதத்தின் சகல அடையாளங்களையும், உரிமைகளையும் அல்லது உரிமை மறுப்புகளையும் வழங்குவது சாதி என்பதால் வெளி மதங்களிலிருந்து வருபவரை இங்கு என்ன சாதியில் வைக்க முடியும்? விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பிறிப்பிலிருந்தே ஒட்டிக்கொள்ளும் சாதியை நடுவழியில் வேறொன்றுடன் இணைக்கவோ, மாற்றிக் கொள்ளவோ முடியாது.
ஆக மத மாற்றம் குறித்து கசப்புணர்வு கொள்ளும் இந்துக்கள் தமது மதத்திற்கு யாரையும் வரவேற்க முடியாமல் கதவை இறுக மூடியிருக்கிறோமே என்பது குறித்து பரிசீலித்து பார்க்கட்டும். சாதிகளோடு மட்டும் மணமும், உறவும் கொண்டிருக்கும் ‘இந்துக்கள்’ அதையே பிற சாதி இந்துக்களோடு ஏன் கொண்டிருக்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும். இது புரிந்தால் யுவனது மதமாற்றம் குறித்து எந்த எரிச்சலும் இருக்காது.
மேலும் என்னதான் இந்துமதவெறியர்கள் பத்வா பிறப்பித்து விதிமுறைகளை உருவாக்கினாலும் ஒரு படித்தான இந்து மதம், பண்பாடு, வாழ்க்கை முறை என்பது இங்கே இல்லை. சாதி, வர்க்கம், மொழி, பிரதேசம், இனம் என்ற பிரிவுகளோடே இங்கு இந்து மதம் இருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இந்து மதத்தின் வேறுபாடுகள் தன்மையிலும் அளவிலும் அதிகம்.
காலை எழுந்து, நீராடி, துளசி மாடத்தை சுற்றி வந்து, கோலம் போட்டு, பூஜையறையில் பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து என்று பட்டயலிட்டு இதை செய்யாதவன் இந்து இல்லை என்றால் 99% மக்கள் இந்துக்கள் இல்லை என்றாகி விடும். கோனார் வீட்டின் முன் ஆட்டுப் புழுக்கைகளும், தேவர் வீட்டில் உப்புக் கண்டமும், மீனவர்கள் வீட்டில் கருவாடும், அலங்கரிக்கும் போது சுத்த பத்தமான துளசி மாடத்திற்கு எங்கே போவது? முதலில் சொந்த வீடு இருந்தால் அல்லவா துளசி மாடத்தை பற்றி யோசிக்க முடியும்.
துளசிமாடம் எனும் சிறு விசயத்திலயே இந்து மதம் அடிபடும் போது இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? பார்ப்பன மற்றும் ‘உயர்சாதி’ இந்துக்களின் பண்பாட்டைத்தான் அனைத்து இந்துக்களின் பண்பாடாக திணிக்கிறார்கள். அப்படித் திணித்தாலும் அது நடக்காது, நடக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டால் யுவனது மதமாற்றம் எந்த அதிர்ச்சியையும் அளிக்காது.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகங்களில் மதங்களுக்குரிய தனித்தன்மையும், சடங்குகளும் வெகு அபூர்வம். அங்கே ஒரே வீட்டில் இருவேறுபட்ட மதங்கள் இருக்கலாம். ஒரு திருமணத்தில் இரு மதங்கள் இருக்கலாம். என்றாலும் பிறப்பிலிருந்து, இறப்பு வரை மதங்களின் சண்டைகளும், பிரிவினைகளும், விதிமுறைகளும் அங்கே இருப்பதில்லை. சொல்லப் போனால் எளிய மக்களின் வாழ்க்கைக்கு கட்டுப்பட்டுத்தான் அங்கே மதங்கள் உயிர்வாழ முடியும். நாகூரூக்கும், வேளாங்கண்ணிக்கும், மாரியம்மன் கோவில்களுக்கும் மூன்று மத மக்களும் வேறுபாடின்றி அப்படித்தான் சென்று வருகின்றனர். ஏழை இசுலாமிய மக்கள் சென்னையின் குடிசைப் பகுதிகளில் உழைக்கும் ‘இந்துக்களோடு’ பிரச்சினைகளின்றி சமத்துவத்துடனும் தோழமையுடனும் வாழும் போது வசதி படைத்த இசுலாமியர்களுக்கு வசதி படைத்த இந்துக்கள் சுலபத்தில் வாடகை வீடுகள் தருவதில்லை என்பதையும் இங்கே பார்க்க வேண்டும்.
இளையராஜாவின் தந்தை டேனியல் ராமசாமி கிறித்தவர் என்று கூறுவது உண்மையில்லை. வெள்ளையர்கள் ஆட்சியில் கோவில்பட்டியில் இருந்து கேரளாவின் எஸ்டேட் வேலைக்கு கங்காணி பதவியில் பணிபுரிவதற்காக செல்லும் ராமசாமி ஆங்கிலேயர்களின் பெயர் சூட்டும் வழக்கப்படி டேனியல் என்ற பெயரை பெறுகிறார். தமிழ்நாட்டு பெயர்கள் வாயில் நுழையாததால் தமது பணியாளர்களுக்கு அப்படி கிறித்தவப் பெயர்களை ஆங்கிலேயர்கள் சூட்டிக் கொள்கிறார்கள். இது தெரியாமல் பண்ணைபுரத்தில் சின்னத்தாயை மணம் புரிந்து வாழ்ந்த டேனியல் ராமசாமிக்கு இப்படி ஒரு கட்டுக்கதையை கூட உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்றும் பண்ணைப்புரத்தில் கிறித்தவ, இந்து என்ற மதவேறுபாடு இன்றி மக்கள் வாழ்வதை பார்க்கலாம். பாவலர் வரதராசன் இறந்த போது இளையராஜாவும், கங்கை அமரனும் சினிமாவில் ஆளாயிருக்கவில்லை என்பதால் ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே இறுதி அடக்க செலவை ஏற்றிருந்தார்கள். எனவே பண்ணைபுரத்தில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள வாழும் பகுதிகளில் இல்லாதவன் என்ற யதார்த்தத்தில் நிலவும் வர்க்கம் எனும் கூட்டுத்துவத்தை எந்த மதமும் பிரிக்க முடியாது.
ஆனால் பண்ணைபுரத்தில் இருந்து சென்னையில் குடியேறி நாடறிந்த இசையமைப்பாளராக வாழும் இளையராஜாவின் நிலை வேறு. இப்போது பண்ணைபுரத்தின் வாழ்க்கை மதிப்பீடுகள் அவரிடமோ, குடும்பத்திடமோ இல்லை. தனது இசையில் கலைக்கு உண்மையாக இருத்தல் என்ற முறையிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கர்வத்திலும் பார்ப்பனியத்தை கிண்டலடித்திருக்கும் இளையராஜா, கருத்தளவில் பார்ப்பனியத்தை மனதார ஏற்றுக் கொண்டு ஒரு ‘கருப்பு’ பார்ப்பனராகவே வாழ்ந்தார். இசையைத் தாண்டி அவரது பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்.
இசையைத் தாண்டி இளையராஜாவின் பேச்சிலும், வீட்டிலும், இசைப்பதிவு கூடத்திலும், பொருட்கள் முதல் முறைகள் வரை பார்ப்பனியத்தின் தடங்கள் ஏராளம்.
ரமணருக்கும், அரங்கநாதனின் கோபுரத்திற்கும், திருவாசகத்திற்கும் மனமுருகிய இளையராஜா சமகால வாழ்வில் ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்த சுவடுகள் குறித்து அமைதி காத்தார். ஆகவே யுவனின் மதமாற்றம் அவருக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். அதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி வந்ததா, நமக்குத் தெரியாது. ஒருக்கால் பண்ணைப்புரத்தின் சூழலிருந்தால் ராசையா இதை வெறுமனே கடந்து போயிருப்பார். தனது வாரிசுகள் மூன்று பேரும் மூன்று மதத்தில் இருந்தாலும் அவருக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் அக்கிரகாரம் கோலேச்சும் சென்னையிலும் – தமிழ் சினிமாவிலும் வாழும் இளையராஜாவுக்கு இது நிச்சயம் வலிதான். ஒரு வகையில் இது கூட அவரை ஏதேனும் ஒரு அளவுக்கு பண்படுத்தும் நல்ல சிகிச்சையும் கூட.
இதுவரை தான் பேசி வந்தது மதங்கள் கடந்த ஆன்மீகமா இல்லை இந்துத்வம் கட்டுப்படுத்திய ரணமா என்பதையெல்லாம் இளையராஜா யோசித்தல் நலம். அவரது வாழ்க்கை இசைதான் எனும் போது இத்தகைய அரசியல் பார்வை கொண்ட குறுக்கு விசாரணையை அந்த மகத்தான கலைஞன் மீது திணிக்கலாமா என்று ராசையா ரசிகர்கள் கேட்கலாம். அவரது இசையை நாங்களும் ரசிக்கிறோம். அதை எழுதியுமிருக்கிறோம். ஆனால் இங்கே எதை அவர் மீது விமரிசனமாக வைக்கிறோமோ அந்த பார்வையின் அடிப்படையில்தான் அவர் மீதான மரியாதையும் வியப்பும் ஏற்பட்டது. இதை இளையராஜா ஏற்காமல் போனாலும் அவரது இசைய ரசிக்கும் அரசியல் முன்னணியாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.
இறுதியாக இந்துமதவாதிகள் யுவனை மீட்பதற்கு விடும் அஸ்திரம் என்ன? இந்து மதம்தான் நெகிழ்ச்சியான மதம், இங்கே இருக்கும் சுதந்திரம் எங்கும் இல்லை, இசுலாத்தில் இசையமைப்பதற்கு கூட அனுமதி இல்லை என்று மன்றாடுகிறார்கள். இதிலும் ஒரு காப்பிரைட் திருட்டு இருக்கிறது. இந்து மதத்தின் ‘சுதந்திரத்திற்கு’ காரணம் பார்ப்பனியத்தின் இந்து ஞான மரபு அல்ல. சொல்லப் போனால் அத்தகைய சுதந்திர மறுப்பே பார்ப்பனியத்தின் ஆன்மா.
புத்தர், சமணர், சித்தர் முதல் பெரியார், அம்பேத்கார், பொதுவுடைமையாளர் வரை பார்ப்பனியத்தை மறுத்து வந்த மரபே இந்து மதத்தை அடித்து திருத்தி ஒரளவுக்கு வழிக்கு கொண்டு வந்தது. வைக்கம் போராட்டமா, தில்லை கோவில் மீட்பு போராட்டமா என்று சமீப கால வரலாற்றை பார்த்தாலும் அது பார்ப்பனியத்தை எதிர்க்கும் பெரியார், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பாக இருக்கிறது. எனவே கோவில்களில் அனைவரும் நுழைந்து கும்பிடுவதற்கோ, தமிழ் நுழைவதற்கோ ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதத்திற்கு காப்பிரைட் கோரும் கூட்டம் எதுவும் எதையும் கிழித்ததில்லை என்பதோடு எதிராகவும் இருந்திருக்கிறார்கள்.
ஒருக்கால் இசையமைப்பது கூடாது என்று இசுலாமியவாதிகள் அச்சுறுத்தினாலும் அதற்கும் இதே முற்போக்கு கூட்டத்தினர்தான் போராட முடியுமே அன்றி இந்துமதவாதிகள் அல்ல. இனி இசுலாமியவாதிகளின் பக்கம் போகலாம்.
இசுலாமியவாதிகள் கேட்கும் கேள்வி “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”
மதமாற்றம் ஒரு தனிநபரது அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை விமரிசிப்பவர்கள் மட்டுமல்ல, அதை கொண்டாடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உடனே இசுலாமிய வாதிகள் கேட்கும் கேள்வி, “எனில் பெரியார்தாசனது மதமாற்றம் குறித்து ஏன் விமரிசித்தீர்கள்?”. பெரியார்தாசன் இறை மறுப்பு, நாத்திகம், பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழின உரிமை என்று பல ஆண்டுகளாக முற்போக்கு மேடைகளில் பேசி வந்தார். அதனால் இந்த விமரிசனமும் கேள்விகளும் வருவது இயல்பு. இதையும் இந்துமதவாதிகளின் எரிச்சலையும் ஒன்றாக காண்பது அபத்தம். இப்படித்தான் தோழர் ஒருவர் பெரியார் தாசனிடம் கேட்டு அதற்கு அவர் ‘ஏன்’ மதம் மாறினேன் என்றே தெரியவில்லை என்று சொன்ன பதிலை ஆடியோவாக வினவிலும் வெளியிட்டிருக்கிறோம்.
தா.பாண்டியன் கட்சியில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வகுப்பை திறமையாக எடுக்கக் கூடியவரும், இந்திய கம்யூனிசக் கட்சியின் மாநில துணைத் தலைவருமாகவும் இருந்த சீனிவாசன் என்பவர் சேலத்தில் இல.கணேசன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இதை ஏதோ ஒரு ஓட்டுக்கட்சி மாற்றம் என்று எடுக்காமல் ஏதோ கம்யூனிசம் என்று பேசிவிட்டு இப்படி பாசிஸ்டுக் கட்சியில் சேர்ந்தாயே என்று கூடுதலாக விமரிசன அடி கொடுக்க வேண்டியிருக்கிறது, அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இது சரி என்றால் அதுவும் சரிதான்.
ஆனால் மதமாற்றம், மதத் தெரிவு என்பதை ஒரு ஜனநாயக உரிமையாக இந்துமதவாதிகள் மட்டுமல்ல இசுலாமிய மதவாதிகளும் ஏற்கமாட்டார்கள். துருக்கி, துனிஷியா போன்ற இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த ஜனநாயகம் சட்டத்திலும், மக்கள் பண்பாட்டிலும் நிலைபெற்றிருந்தாலும் ஷரியத் கொடுங்கோன்மை நிலவும் வளைகுடா நாடுகளில் ஜனநாயக வாசனையை அதுவும் கனவில் கூட முகர முடியாது. இந்தியாவின் இசுலாமியர்களில் ஏழைகளாய் இருப்போருக்கு வர்க்கம் என்ற அளவிலேயே இந்த ஜனநாயகம் இயல்பாக இருப்பதால் பிரச்சினை அல்லை. அவர்களைத் தவிர்த்து வணிகர்கள், நடுத்தர வர்க்க முசுலீம்கள்தான் அதிகமும் வளைகுடா வகாபியிச அடிப்படைவாதத்தில் விழுகிறார்கள். வகாபியிச இயக்கங்களும் அப்படித்தான் வளருகின்றன. மக்களையும் மாற்றுகின்றன.
மேலும் மதம் என்பது வளர்ந்த பிறகு, பகுத்தறிவின் துணை கொண்டு ஒட்டிக் கொள்ளும் ஒன்றல்ல. யார் பெற்றோர்கள் என்பதே பிள்ளைகளின் மதத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது. இப்போது யுவன் எடுத்த முடிவைப் போலத்தான் இசுலாத்தை வளர்ந்து ஆளான பிறகு கடைபிடிக்க வேண்டுமென்றால் அதை மதவாதிகள் ஏற்கமாட்டார்கள். இதிலிருந்தே தெரிகிறது, மதமும், மதத்தெரிவும் வலிந்து திணிக்கப்படுகிறதா, தெளிந்து எடுக்கப்படுகிறதா என்று!
யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்
இருப்பினும் யுவனின் மதமாற்றம் ஒரு இசுலாமியரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு வேறு ஒரு சமூக காரணம் இருப்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவில் இந்துமதவெறி இயக்கங்கள் மற்றும் அதற்கு பொருத்தமான அரசு, சமூக, ஊடக அமைப்பால் இங்கே இசுலாமியர்கள் என்றாலே அடக்குமுறையும், கைதும், அச்சுறுத்தலும் இயல்பாக இருக்கின்றன. வாடகைக்கு வீடு கிடைக்காது, வேலை கிடைக்காது, பொது இடத்தில் சந்தேகப் பார்வை என்று அவர்களை அன்றாடம் ரணமாக்கும் நடைமுறைகள் ஏராளம். ஒருவகையில் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதத்தை முன்வைக்கும் வகாபியச இயக்கங்கள் இங்கே எடுபடுவதற்கு கூட இந்த அநீதிதான் காரணமே அன்றி அல்லாவின் அருளோ, இல்லை இசுலாத்தின் தனிச்சிறப்போ அல்ல.
ஆதலால் யுவனின் மதமாற்றம் குறித்து ஒரு சாதாரண முசுலீம் மகிழ்ச்சி கொள்வதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இது தண்டிக்க முடியாத இந்துமதவெறியர்களை ஏதோ கொஞ்சம் வெறுப்பேற்றவாவது முடிகிறதே என்ற இயலாமை கலந்த திருப்திதான். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புகள் என்றைக்கு முடக்கப்படுகிறதோ அன்றுதான் இசுலாமிய மக்களை கருத்திலும், களத்திலும் ஜனநாயகப் படுத்துவது அவர்களது சொந்த விருப்பத்தின் பெயரில் நடக்கும்.
மதம் மாறும் உரிமையை ஆதரிக்கும் இசுலாமிய மதவாதிகள் காதலிக்கும் உரிமையை அனுமதிப்பதில்லை.
அதே நேரம் இந்த முயற்சியை பின்னுக்கிழுக்கும் வேலையை இசுலாமிய மதவாதிகள் செய்கிறார்கள். அப்படித்தான் யுவனின் மதமாற்றத்தை அவர்கள் மிகைப்படுத்துவதும் கொண்டாடுவதும். முக்கியமாக யுவனின் மதமாற்றம் இசுலாத்தின் வெற்றியாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு தனிநபர் இசுலாத்திற்கு மாறுவது இசுலாத்தின் வெற்றி என்றால் அதே தனிநபர்கள் செய்யும் குற்றங்களுக்கும் இசுலாம்தானே பொறுப்பேற்க வேண்டும்?
காரைக்கால் கூட்டு வன்புணர்ச்சியில் சில முசுலீம் இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் இது இசுலாத்தின் தோல்வி, மானக்கேடு, மதத்தின் போதாமை என்ற குரல்களை நாம் கேட்கவில்லை. இப்படிக் கேட்டால் தனிநபர்களை விமரிசியுங்கள், இசுலாத்தை குறை சொல்லாதீர்கள் என்பார்கள். என்றால் யுவனின் மாற்றத்தை வெற்றியாக சொல்வதும் உங்கள் கருத்துப்படியும் தவறுதானே? இசுலாமிய மக்கள் இன்றி இசுலாம் இல்லை. ஆனால் அந்த இசுலாமிய மதத்தை யதார்த்தமாக பார்க்காமல் வகாபியசத்தின் கண் கொண்டு செயற்கையாக பார்ப்பதுதான் பிரச்சினை.
தவ்கீத் ஜமாஅத்தின் கோவை ரஹ்மத்துல்லா சென்னை மண்ணடியில் பேசிய கூட்டம் குறித்து வினவில் விரிவாக எழுதியிருக்கிறோம். அதில் மதுரை ஆதினம் அருணகிரி வாயாலேயே புர்காதான் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்று அல்லா சொல்ல வைத்திருக்கிறான் என்று அவர் சொன்னதும் கூட்டத்தினர் அல்லா ஹூ அக்பர் சொன்னதும் இப்போதும் சிரிப்போடு நினைவுக்கு வருகிறது. மதுரை ஆதீனம் போன்ற நாடறிந்த பொறுக்கி சாமியார்களின் வாய்களில் வரும் பாராட்டைக் கூட இவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள்? இது ஓட்டுப் பொறுக்கி அரசியலின் மேடை பாராட்டுகள், கண்டனங்களின் தரத்தை விட இழிவல்லவா?
இப்படித்தான் இசுலாத்தின் மகத்துவத்தை கடை விரிக்க வேண்டுமா என்றால் அவர்களிடத்தில் பதிலில்லை. சாதாராண முசுலீம்களிடத்தில் “எப்பேற்பட்ட பிரபலங்கள் அதுவும் ஒரு இந்து சாமியார் கூட இசுலாத்தை பாராட்டுகிறார், பார், எனவே நீ மார்க்கத்தை கறாராக கடைபிடிக்க வேண்டும்” என்று தமது மதவாத ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். இந்த தந்திரம் இசுலாத்திற்கு வேண்டுமானால் ‘நற்பெயரை’க் கொண்டு வரலாமே அன்றி இசுலாமிய மக்களுக்கு எந்த விமோச்சனத்தையும் தந்து விடாது.
ஆகவே யுவன் எனும் ஒரு சினிமா பிரபலம் இசுலாத்திற்கு மாறியது இத்தகைய மதவாதிகளிடம் எத்தகைய புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபலம் இங்கே அரசியல் முதல் பாமரன் வரை செல்வாக்கு செலுத்துவதால் யுவனது மதமாற்றத்தை வைத்து இசுலாத்தின் இமேஜ் பல மடங்கு உயரும் என்பது இவர்களது உட்கிடக்கை. ஆனால் மதுரை ஆதீனத்தை மட்டுமல்ல, யுவன் குறித்தும் இவர்களுக்கு தெரியவில்லை.
இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ யுவனுக்கு இல்லை..
இளையராஜாவுக்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கை பின்புலமோ, அனுபவமோ, இல்லை அதற்கான சூழ்நிலைகளோ அவருக்கில்லை. யுவன் மாநகரத்தை சேர்ந்த ஒரு மேட்டுக்குடி பீட்டர். அவரது பேச்சுக்களைப் பார்த்தால் தமிழை தட்டுத்தடுமாறி பேசுவார், ஆங்கிலத்தில் இயல்பாக இருப்பார். உடல் மொழியும் அப்படித்தான். ஒருக்கால் அவர் இசையமைத்த தமிழ் சினிமாதான் அவருக்குரிய சமூகப் பார்வையை அளித்திருக்கும் என்றாலும் தமிழ் சினிமாவின் தரம் தெரியுமென்பதால் அதையும் நிறைய நம்பிக்கையாக சொல்ல முடியவில்லை. இசைச்சூழல் மிகுந்த குடும்பத்தில் அவரது தனித்த திறமையாலும் யுவன் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி வர்க்கம் என்ற முறையில் சராசரி தமிழ் மக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டவர். அத்தகைய தமிழ் வாழ்க்கையும் அவருக்கு தெரியாது.
அந்த சராசரி தமிழ் மக்களில்தான் சராசரி முசுலீம் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் யுவன் அலைவரிசையில் இசுலாமிய மக்களும் ஒன்ற முடியாது. ஒருக்கால் மதவாதிகள் முயன்று பார்த்தால்? பிரியாணி படத்தில் மஞ்சள் சேலை குத்தாட்டத்திற்கு யுவன் இசையமைத்த பாடலை ரசிக்க வேண்டும். அருணகிரியை ஆமோதித்தவர்கள் இதை ரசிப்பதில் என்ன பிரச்சினை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
யுவனது இசையை ரசிக்கும் ரசிகர்களுக்கு அவர் இந்துவாகவோ, இசுலாமியராகவோ இருப்பதில் பெரிய பிரச்சினை இல்லை. அவர்களுக்குத் தேவையான இசையை அளிக்கும் யுவன்தான் முக்கியமே அன்றி மதம் அல்ல. ஆனால் அந்த இசையின் மூலம் பிரபலமான யுவனையும் அவரது மதமாற்றத்தையும் தூக்கிபிடிக்கும் மதவாதிகளுக்கு அந்த இசை தேவையில்லை. இசையையோ, இல்லை சினிமாவையோ ரசிப்பதற்கு இன்னமும் இசுலாம் போதிய அனுமதி கொடுக்கவில்லை எனும் போது இவர்கள் யுவனது மதமாற்றம் குறித்து துக்கப்படுவதற்கு பதில் மகிழ்ச்சி அடைவது ஏன்? பிரபலமும் வேண்டும், ஹராமையம் பின்பற்ற வேண்டும் என்றால் இந்த முரண்பாட்டிற்கு விடையில்லை. ஆக இதன் பொருட்டாவது இசுலாமிய மதவாதிகள் யுவன் மதமாற்றம் குறித்து அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வெட்கத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
யுவனைப் போன்ற மேட்டுக்குடி இளைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பிரச்சினைகளும், அவற்றை அவர்கள் பார்க்கும் விதமும் வேறு. மண வாழ்க்கை பிரச்சினைகள், வியாபாரத் தொல்லைகள், வசதி குறித்த போதாமைகள் என்று இவர்களுக்கு வரும் பிரச்சினைகளின் அடிப்படையும் எளிய மக்களின் யதார்த்தமும் ஒன்றல்ல. அதனால் பிரச்சினைகளுக்காக இவர்கள் நவீன கார்ப்பரேட் சாமியார் வசம் போவதற்கும் அதையே ஒரு மத மாற்றத்திற்கு முகாந்திரமாக வைப்பதற்கும், பிறகு விரும்பா விட்டால் மாற்றிக் கொள்வதற்கும் எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. யுவனுக்காக கண்ணீர் வகுத்த மார்க்க சகோதரர்கள் இதன் பொருட்டாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதல் தவறு.
ஏழைகளையும் சரி, பணக்காரர்களையும் சரி எந்த மதமும் பெரிய அளவுக்கு மாற்றி விடாது. கோயம்பேடு சந்தைக்கு சென்று சந்தித்த ஒரு முசுலீம் தொழிலாளியிடம் தொழுவீர்களா என்று கேட்ட போது அதற்கு ஏது நேரம் என்று அவர் தெரிவித்தார். இதனாலேயே அவர் முன்னுதாரமான இசுலாமியர் இல்லையா? வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் மதம் இருக்கமுடியுமே அன்றி அனைவருக்கும் பொதுவான இசுலாம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இது வர்க்கத்திற்கு மட்டுமல்ல இனம், மொழி, சாதி, பண்பாடு என்று நாட்டுக்கு நாடு வேறுபடும் பல யதார்த்தங்களுக்கும் பொருந்தும். இவற்றையெல்லாம் அழித்து விட்டு தூய இசுலாம் ஒன்றைக் கொண்டு வருவதுதான் அமெரிக்க அடியாள் சவுதி முன்வைக்கும் வகாபியசம். ஆனால் என்னதான் தலைகீழாக நின்று கத்தினாலும் வகாபியிசத்தின் தூய இசுலாம் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று.
அல்லா பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
இன்னும் புரியும் விதத்தில் கேட்போம். யுவன் எனும் இளைஞனை நல்வழிப்படுத்தி ஆட்கொண்ட அல்லா, பாகிஸ்தானில் ஷியா பிரிவு முசுலீம் மக்களை அல்லும் பகலும் கொல்லும் சன்னி பிரிவு தீவிரவாதிகளை திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? யுவன் எனும் சினிமா பிரபலத்திற்கு நேரம் ஒதுக்கி பண்படுத்தும் வேலை பார்க்கும் இறைவனுக்கு ஷியா முசுலீம்களின் மரண ஓலத்தை நிறுத்துவதற்கு நேரம் இல்லையா?
ஈராக், ஆப்கான், சிரியா, பாலஸ்தீன் என்று பல நாடுகளில் இசுலாமிய மக்களைக் கொல்லும் அமெரிக்காவுக்கு அடியாளாக இருக்கும் சவுதி அரேபியாவை தண்டிக்காமல் அல்லா ஊக்குவிப்பது ஏன்? ஒரு இசுலாமிய மதவாதியின் மனதில் இத்தகைய கேள்விகள் ஏதும் குடையாமல் இருப்பதன் காரணம் என்ன? அதுதான் மதம் எனும் அபினின் மகிமை. வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடுவதற்கு பதில் அதை சகித்துக் கொண்டு வாழ்வதையே எல்லா மதங்களும் சொல்லுகின்றன.
அதனால்தான் அனைத்து மதங்களும் ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறையை ஆன்மீகத்தின் பெயரால் மக்களிடம் கொண்டு செல்கின்றன.
எனவேதான் மதம் என்பது ஒரு தனிநபரது தனிப்பட்ட வழிபாட்டு உரிமையாக மட்டும் இருக்க வேண்டும். இதைத்தாண்டி அவரது சமூக, அரசியல், பொருளாதார விசயங்களில் கட்டுப்படுத்தும் உரிமையை மதங்களுக்கு தரக்கூடாது என்கிறோம். அப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலாமிய வகாபியவாதிகளின் விருப்பம். இவர்கள்தான் யுவனது மதமாற்றத்தை களிப்பும், வெறுப்பும் கொண்டு பார்க்கிறார்கள்.
அந்த வகையில் ஒரு மனிதனுக்குரிய மதம் மாறும் ஜனநாயக உரிமையை மற்ற எவரையும் விட இந்த மதவாதிகள்தான் மறுக்கிறார்கள். அந்த மறுப்பை வேரறுக்கும் விதமாக மதங்களின் விஷப்பல்லை முறியடிக்கும் வேலையினை நாம் தொடர்வோம்.
சென்னை லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நடத்திய ‘ஐம்பூதம்’ சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். காலை முதல் மாலை வரையிலான நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதும், அனைவரும் இறுதிவரை கலைந்து செல்லாமல் இருந்ததும் ஆச்சரியமாகவே இருந்தது. அனைத்து வகைகளிலும் நமது சுற்றுச்சூழல் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப்படும் நிலையில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதும், அதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும் நம்பிகை அளிக்கும் அம்சமே. ஆனால் அங்கு என்ன பேசினார்கள் என்பதை மனதில் அசை போட்டால் அச்சமாக இருக்கிறது.
நீர், நிலம், காற்று, நெருப்பு, விசும்பு என்ற ஐம்பூதங்களைப் பற்றி பேசுவதுதான் நிகழ்ச்சி நிரல். காலை தொடங்கி மாலை வரையிலான இந்நிகழ்வில் பலரது பேச்சின் சாரம் என்னவென்று பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அறிவியலை கறாராக நிராகரித்தார்கள். ‘கடந்த 100, 150 ஆண்டு கால அறிவியலின் வருகைக்குப் பிறகுதான் நமது பழமை சீரழிக்கப்பட்டது; அதுகாறும் இருந்து வந்த தமிழ் வாழ்வின் தொன்மை அழிக்கப்பட, அறிவியலின் வளர்ச்சியேக் காரணம்’ என்பதே அன்றைய அமர்வின் சாரமான குரல். அறிவியலை மட்டுமல்ல… சிலர் அறிவையும் நிராகரித்தனர்.
‘அறிவு என்று நாம் குறிப்பிடுவது புலனறிவையே. அது தர்க்கம் செய்யக் கூடியது. புலன்களுக்கு அப்பாற்பட்ட மெய்யறிவே உண்மையானது’ என்றார் நெருப்பு குறித்து உரையாற்றிய செந்தமிழன்.(செந்தமிழன் – பாலை திரைப்பட இயக்குநர். தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசனின் மகன்)
மற்றவர்கள், ரசாயன உரத்தால் நிகழ்ந்த கேடுகள்; நமது நீர்நிலைகள் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன என்பது போன்ற தரவுகளை முன்வைத்து அறிவியலின் வன்முறை குறித்துப் பேசினார்கள். அதில் அறிவியல் பூர்வமான ஒரு ‘தர்க்கம்’ இருந்தது. ஆனால் செந்தமிழனோ அறிவு, அறிவியல், தர்க்கம் அனைத்தையுமே நிராகரிக்கக் கோருகிறார். அதை கொள்கைப் பூர்வமாக நிறுவவும் முயற்சிக்கிறார்.
ஏன் இவற்றை நிராகரிக்க வேண்டும்? ஏனென்றால் அறிவியல் வளர்ச்சி வந்த பிறகுதான் ரசாயன உரம் வந்தது. அறிவியல்தான் அணு உலையைக் கொண்டு வந்தது. அறிவியல்தான் தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தது. அறிவியல்தான் இந்த பூமியை நாசப்படுத்தியது. மொத்தத்தில் இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் மூலாதாரமாக இருப்பது அறிவியலே. ஆகவே அந்த அறிவியலை எதிர்க்க வேண்டும்; அதற்கு அடிப்படையாக இருக்கும் அறிவையும்; அறிவுக்கு அடிப்படையாக இருக்கும் தர்க்கத்தையும் எதிர்க்க வேண்டும். இதுவே அவரது வாதத்தின் சாரம். ஆனால் உண்மை என்ன?
மனித குல முன்னேற்றம்
அறிவும், அறிவியலும்தான் மனித குல வளர்ச்சியின் தோற்றுவாய். வெறும் பிண்டமாய் இந்த அண்டத்தில் பிறந்த மனிதன் தன் நெடிய உழைப்பால், அதன் மூலம் பெற்ற பட்டறிவால், அறிவை வளர்த்துக் கொண்டான். கிடைத்த அறிவை கொண்டு நடைமுறையில் ஈடுபட்டு அதை மேலும் மெருகூட்டினான். புதியனவற்றை கண்டடைந்தான். மூளை என்ற பருப்பொருள், புறநிலையோடு வினையாற்றி அவனுடைய அறிவின் சோதனைச் சாலையானது; அறிவியல் பிறந்தது. இன்று மனிதகுலம் எட்டிப் பிடித்திருக்கும் அறிவு முதிர்ச்சியின் ஒவ்வொரு இழையும் மதிப்பிட இயலாத அளவுக்கான மனிதர்களின் கூட்டு உழைப்பால் பின்னப்பட்டுள்ளது.
இன்றைய நமது ஆய்வு மனப்போக்கும், ‘பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்களே இல்லை’ என்ற அறிவும் நமக்கு வந்துசேர பல கோடி மனிதர்கள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பின் பலன் அறிவாக சேகரிக்கப்பட்டு, பெரும் அறிவியலாக வளர்ந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இந்த தொடர் ஓட்டத்தின் இறுதிப் படியில் இருந்து விலகி நின்றுகொண்டு, அறிவுத்துறையின் வரலாற்றுப் பங்களிப்பையும், அதன் தொடர்ச்சியையும் மறுதலிப்பது நீதியற்றது. அதாவது நமது இன்றைய சிந்தனைப் புலம் என்பது நாம் பிறந்து நாமே சுயமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அது இந்த பிரபஞ்ச இயக்கத்தின் நீட்சி. அதனால் அறிவு சொல்வதைக் கேட்காதே, அறிவியல் வேண்டாம் என்ற வாதம் தன்னளவிலேயே முரண்படுவதுடன், அது இப்பூமியின் இயங்கியலுக்கு எதிராகவும் உள்ளது.
இன்றைய குடியிருப்புகள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, இணையம், மருத்துவம் என்று அறிவியலின் சாதனையில்தான் நமது வாழ்க்கை ஓடுகிறது. இவை பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களது நலனைக் கொண்டிருக்க வேண்டும் என்று போராடுவது அறிவியலுக்கு எதிரான போராட்டம் அல்ல.
அதேபோல இவர்கள் தர்க்கத்தை நிராகரிக்கக் கோருகின்றனர். இதுதான் இருப்பதிலேயே அபாயமானது. ‘கேள்வி எல்லாம் கேட்காதே… சொன்னதை நம்பு’ என்கிறார்கள். நம்பிக்கை வரவில்லை என்றால் ‘யோக்கியன் கண்ணுக்கு கடவுள் தெரிவார்’ என்பதைப் போல, ‘உள்ளுணர்ச்சியால் உணருங்கள்’ என்கிறார்கள். இதைத்தான் நித்தியானந்தாவும், ஜக்கி வாசுதேவனும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் சொல்கிறார்கள். ‘புற உலகம் பிரச்னைகளால் சூழ்ந்திருக்கிறது. அவற்றில் இருந்து விடுபட கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள்’ என்று இந்த சாமியார்கள் சொல்வதன் அருஞ்சொற்பொருள்தான் இவர்கள் சொல்வதும். இரு தரப்பும் சொல்வது ‘அறியாமையே இன்பம்’. இன்பம்தான், ஆனால் யாருக்கு? 2ஜி ஊழல் குறித்தோ, வைகுண்டராஜனின் தாதுவளக் கொள்ளை குறித்தோ மக்கள் அறியாமல் இருப்பது ஆளும் வர்க்கத்திற்கு இன்பமான விசயம் அல்லவா?
என்ன சொல்ல வேண்டும்’ என்று முடிவு செய்வதே தர்க்கமும், அறிவும்தான்.
ஒரு விசயத்தில் லாஜிக்காக சிந்தித்து முடிவு எடுப்பது அல்ல… ‘இங்கே என்ன சொல்லப்படுகிறதோ’ அதன்படியே முடிவு எடுக்க வேண்டுமாம். ஆனால் ‘அங்கே என்ன சொல்ல வேண்டும்’ என்று முடிவு செய்வதே தர்க்கமும், அறிவும்தான். காலம் எல்லாம் பெரியார் இதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். ‘இந்த ராமசாமி சொல்றான்னு கேட்காத… நீயா சொந்தமா சிந்திச்சு முடிவு எடு’ என்றார். கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் ஆழ்மனங்களில் பதிய வைக்கப்பட்டிருந்த பார்ப்பனிய இந்து மத மூட நம்பிக்கைகளை தனது தர்க்க அறிவால் தகர்த்தெறிந்தார். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார். அவ்விதமான சிந்தனைப் போக்கை தமிழ் மனதில் ஆழப் பதித்தார். அது தவறு என்கிறார்கள் இவர்கள். எனில் எது சரி? செந்தமிழன் சொல்வது பொருளே இல்லாத உள்ளுணர்ச்சி. பொதுவாக எல்லோரும் கொஞ்சம் பொருளுடன் சொல்வது, பழைய தமிழ் மரபுக்கேத் திரும்பிப் போக வேண்டும் என்பது.
இது சற்று மசமசப்பான; தெளிவில்லாத பகுதி. பழைய தமிழ் மரபு என்றால் என்ன? தமிழ் மரபு என்பதே சாதி மரபாக இருந்துவரும் நிலையில் இவர்கள் முன்மொழியும் தமிழ் மரபு யாருக்கானது? அது தெளிவாக்கப்பட வேண்டும். நமது பழமையில் பற்றிக்கொள்ள வேண்டிய நல்ல அம்சங்கள் இருக்கின்றனதான். அதை மறுப்பதற்கு இல்லை. உலகின் எல்லா இனக்குழுவிற்குமே இப்படியான நற்கூறுகள் உண்டு. அவை அறிவியல் கண்டுபிடிப்புகளாலும், ஜனநாயகத்தின் கூறுகளாலும் ஆனவை. இவற்றைத் தவிர மற்ற கலாச்சாரக் கூறுகள் பொதுவில் வர்க்க ரீதியாகவம், பாலியல் ரீதியாகவும் பல்வேறு அடிமைத்தனங்களை ஒடுக்குமுறைகளை கொண்டவையே. இவற்றை மரபு என்ற பெயரில் தள்ள வேண்டுமே அன்றி கொள்வது கூடாது.
மொத்த உலகமும் காலத்தால் முன்நகர்ந்து வந்துவிட்ட நிலையில்; உற்பத்தி உலகமயமாகிவிட்ட நிலையில்; மூலதனம் எல்லை கடந்துவரும் நிலையில் நாம் மட்டும் பழைய மரபுக்கு எப்படித் திரும்ப முடியும்? நம்மாழ்வார், முன்புபோல மாட்டுவண்டி ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். இது எப்படி சாத்தியம்? அது பழமையை நோக்கிய ஏகாந்தமான ஏக்கம், அவ்வளவுதான். அறிவியலும், உலகமயத்தின் உற்பத்தியும் பெரும்பான்மை மக்களுக்கு கிட்டவில்லை, அவர்களின் நலன்களை கணக்கில் கொள்ளவில்லை என்ற நமது புரிதல் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலின் பாற்பட்டதே அன்றி அறவியலை நிராகரிக்கும் முட்டாள்தனம் அல்ல.
இயற்கை விவசாயத்தை வலியுறுத்திய நம்மாழ்வார் மாட்டு வண்டிக்கு திரும்ப வேண்டும் என்று சொன்னது ஒரு ஏக்கமே அன்றி யதார்த்தம் அல்ல.
‘‘பழமைக்குத் திரும்ப வேண்டும் என்றால் பழமையின் சிறுமைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு திரும்ப வேண்டும் என்பது இல்லை. அதன் நல்ல அம்சங்களை மீட்டு எடுக்கலாம்’’ என்று இதற்கு சிலர் விளக்கம் சொல்லலாம். ஆனால் அத்தகைய தெளிவான பிரிகோடு இவ்விசயத்தில் இல்லை. அதனால்தான் சூழலியல்; மாற்று மருத்துவம் பேசுவோர் தங்கள் மன விருப்பத்திற்கு ஏற்ப இதற்கு வியாக்கியானம் கொடுக்கிறார்கள். தமிழ் மரபில் இவ்வளவு வீராப்பாய் இருக்கும் செந்தமிழன் தனது பாலை படத்தை கூத்து கலை வடிவத்தில் கொண்டு செல்லாமல் அதிநவீன சினிமா வடிவத்தில் கொண்டு சென்றது ஏன்?
செந்தமிழன் பேசும்போது, ‘‘நமது முன்னோர்கள் வெறுமனே தர்க்க அறிவியல் பேசியவர்கள் அல்ல. அவர்கள் தமக்கு மேலான சக்திகளை வழிபட்டு, வழிபட்டுத்தான் அனைத்தையும் பதிவு செய்தார்கள். அவை எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுவது, குறுகிய மனப்போக்கு கொண்ட சுயநலம் என்பது என் வலுவான கருத்து’’ என்று சொன்னார்.
இதை எப்படி புரிந்துகொள்வது? தமிழ் மரபில் மூட நம்பிக்கைகளே இல்லையா? அல்லது ‘நெற்றியில் திருநீர் பூசுவது நீர்கொள்வதைத் தடுக்கும்’, ‘தோப்புக்கரணம் போடுவது உடற்பயிற்சி’, ‘வாசலில் கோலம் போடுவது எறும்புகளுக்கு உணவு’, – என மூட நம்பிக்கைகளுக்கு முற்போக்கு பெயிண்ட் அடித்தால் அவை இல்லை என்றுதான் ஆகிவிடுமா? இல்லை பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம், விதவைகள் எதிர்கொண்டால் காரியங்கள் நிறைவேறாது போன்றவற்றுக்கும் கூட முற்போக்கு பெயிண்ட் அடிக்க முடியாதா?
சிக்கல்கள் அனைத்தும் புறவயமாக இருக்கின்றன. தீர்வுகள் மட்டும் எப்படி அகவயமானதாக இருக்க முடியும்? மீத்தேன் வாயுத் திட்டம் டெல்டா மாவட்டங்களை சூறையாட கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் அபாயம் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்துதான் அணிதிரட்ட முடியுமேத் தவிர அகவயமாக இதற்கு தீர்வு காண்பது எப்படி? கெயில் நிறுவனம் குழாய்களை பதித்துக்கொண்டிருக்கும்போது நாம் உள்ளொளி தரிசனத்தை தேடிக் கொண்டிருந்தால் அது யாருக்கு ஆதாயம்? புற சிக்கல்களை உரத்துப் பேசி, தர்க்கக் காரணிகளைக் கண்டறிந்து, மக்களிடம் அறிவியல் பூர்வமாக விளக்கி பேச வேண்டும். இதை விட்டுவிட்டு ஆழ்மனம், உள்மனம் என்று பேசுவதும் இதை ஒரு கருத்தாக பரப்புவதும் ஆளும் வர்க்கத்திற்கு லாபம் தரக்கூடியது.
அது மட்டும் அல்ல… இத்தகைய வாதங்கள் எளிதில் இந்து மத நம்பிக்கைகளுடன் சென்று இணைந்து கொள்கின்றன. பாரம்பரியம், தமிழ்ப் பண்பாடு, சித்தர் மரபு, தமிழர் மரபு , இந்து மரபு என்பதாக இந்த இணைவு அமைகிறது. இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் மட்டுமல்ல… இன்று சித்த மருத்துவம், தொடு சிகிச்சை, அக்குபஞ்சர், யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும் அனேகம் பேர் இக்கருத்தின் சாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
தமிழினவாதம் பேசிய செந்தமிழன் எவ்வளவு இயல்பாக ஆர்.எஸ்.எஸ்-ஆல் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்!
செந்தமிழன் பேசும்போது இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார். சித்த மருத்துவம், மனித உடலை ஐந்து சக்கரங்களாகக் குறிக்கிறது என்ற அவர், ‘‘திருமூலருக்கு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆதிசங்கரர் இதையே வேறுவிதமாக சொன்னார். அவர் தனது சௌந்தர்ய லஹரியில் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாக கடவுள்களை குறிப்பிடுகிறார். கடவுள்களைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். ஆனால் அவர் சொன்ன செய்தி சரியானது. அதை நிராகரித்தால் இந்த பிரபஞ்சம் பற்றிய மெய்யறிவையும் நாம் நிராகரிக்கிறோம் என்று பொருள்’’ என்றார்.
இன்றைய அறிவியல் விளக்கிய பிரஞ்ச இயக்கத்தை அன்றே ஆதி சங்கரர் சொன்னார் என்பது ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாதிகள் அகண்ட பாரதத்தில் பொதிந்து வைத்திருக்கும் பொற்கால நம்பிக்கை. இது இந்து மதத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மத நூல்களை புரட்டி பார்க்கும் ஏனைய மதங்களுக்கும் பொருந்தும். தமிழினவாதம் பேசிய செந்தமிழன் எவ்வளவு இயல்பாக ஆர்.எஸ்.எஸ்-ஆல் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்!
தமிழ்த் தேசியத்தின் மீது ஒரு படலமாக படிந்துள்ள இந்து மரபு இதுபோன்ற முட்டாள்தன்மாக கருத்துக்களை உவகைமிகு உள்ளுணர்ச்சியுடன் அரவணைத்துக்கொள்கிறது. செந்தமிழன் சீமான் மும்பையில் தாக்கரே பெருமகனாருடன் முழங்கியதும், இன்று வைகோ மோடியுடன் கட்டிப்பிடித்து குலாவுவதும், நெடுமாறன் எங்கு சென்றாலும் அர்ஜுன் சம்பத்தை முதன்மைப்படுத்துவதும், யாழ்ப்பாணத்து வேளாள ஆதிக்கம் ஈழதமிழ் போராட்டத்தில் செல்வாக்கு செலுத்தியதும் வேறு, வேறு அல்ல. இவை அனைத்தும் ஒன்றின் மீது ஒன்று மேற்பொருந்தக் (superimpose) கூடியவை.
இன்று மாற்று மருத்துவம் பல வகைகளில் நன்மைத் தரக்கூடியதாக இருப்பது உண்மை. அனைத்தையும் குணமாக்கவில்லை என்றாலும் எளிய வழிகளில் பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் இதை உணர்கிறோம். இதை நிராகரிக்கும் அலோபதியினர் சொல்வது என்ன? ‘இது அறிவியல் பூர்வமானது இல்லை’ என்பதுதான். அதை அறிவியல் பூர்வமாக நேர்வழியில் நின்று தர்க்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். மாறாக அறிவியலையே நிராகரிக்கக் கூடாது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் அலோபதி மருத்துவத்தின் அறிவை நாம் மக்கள் நலன்பால் எதிர்கொள்வதற்கு அறிவியலே ஆயுதம் அன்றி மூடநம்பிக்கை அல்ல.
நவீன அறிவியல் பெரும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன அறிவியல் பெரும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மக்களை சோதனை எலிகளாக்கி ஈவு இரக்கமின்றி சம்பாதிக்கின்றனர். லாபவெறிக்காக புதிய, புதிய நோய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு தனிநபரும் ஏதோ ஒரு விதத்தில் நோயாளியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மருத்துவத்திற்கு செலவழித்து மாளவில்லை. இதனால் மக்கள் அலோபதி மருத்துவ முறையின் மீது நம்பிக்கை இழந்து மாற்று மருத்துவங்களை நோக்கி வருகின்றனர். அப்படி வருபவர்களை, மாற்று மருத்துவத்தின் நேர்மறை அம்சங்களை அறிவியல்பூர்வமாக விளக்கிக்கூறி ஏற்கச் செய்ய வேண்டுமே அன்றி மதவாத நம்பிக்கைகளின் மூலம் அல்ல. சித்த மருத்துவத்தை அரசு கல்லூரிகளில் அறிவியல்பூர்வமாக பயின்று வேலை செய்யும் மருத்துவர்களை விட சேலம் சிவராஜ் வைத்தியர்கள் அதிகம் செல்வாக்குடன் இருக்கின்றனர். இது அறியாமையின் விளைவே அன்றி ஆரோக்கியமான போக்கு அல்ல.
அறிவியல் தப்பு, தர்க்கம் தவிர், உள்ளுணர்வால் உணர் என்று போதிப்பதும், தர்க்க அறிவற்ற கூடுகளாக மாற்றுவதும், இறுதியில் இவை எல்லாம் பார்ப்பனிய இந்து மத மந்தைக்குள் அடைக்க முயற்சிப்பதில்தான் போய்ச்சேருகிறது. பல டசன் கார்ப்பரேட் இந்துமத சாமியார்கள் துவங்கி, தெருக்கோடியில் இருக்கும் சாதாரண சாமியாடிகள் வரை இத்தகைய கேள்விக்கிடமற்ற நம்பிக்கையை வைத்துத்தான் கல்லாவையும் கட்டுகிறார்கள், காலத்தையும் ஓட்டுகிறார்கள்.
‘அறிவியலே தவறு’ என்று இந்த ஓரத்துக்குப் போவதும், ‘எல்லாமே பழமையில் இருக்கிறது’ என்று அந்த ஓரத்துக்குச் செல்வதும் அறிவுக்குப் பொருத்தமற்றது. அறிவியல்தான் இன்று மனிதகுலத்தை ஆள்கிறது; அதுதான் முன்னேற்றத்தை வழிநடத்துகிறது. அதை முதலாளிகள் கைப்பற்றி வைத்துக்கொண்டு தங்கள் லாபவேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். அறிவியலையே கேடாக பயன்படுத்துகின்றனர். மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராக தடை விதிப்பதைப் போன்று ஜெய்ராம் ரமேஷ் மூலம் பாவ்லா காட்டியது மத்திய அரசு. ஆனால் கடந்த வாரம், ‘மரபணு மாற்றப் பயிர்களை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். அதுதான் அறிவியல் வளர்ச்சி’ என்று மன்மோகன் பேசுகிறார். இந்த அயோக்கியத்தனத்தை நாம் எதிர்க்க வேண்டும்; போராட வேண்டும்; அறிவியல் பூர்வமாக மக்களிடையே விளக்க வேண்டும்.
முதலாளித்துவத்தை எதிர்ப்பதை விடுத்து திசை தவறி அறிவியலை எதிர்ப்பது என்பது முதலாளிகளுக்குத்தான் நலன் பயக்குமே அன்றி மக்களுக்கு அல்ல. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பல்வேறு முழக்கங்கள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. மேலும் இன்றைய சமூக அமைப்பில் இருக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் அறிவியல், தனிநபர்கள் என்று போனால் நிலவும் அரசியல் அமைப்புத்தான் அதன் மூலகாரணம் என்பதை நாம் திரிப்பதாகிவிடும். “நிலம்” எனும் தலைப்பில் பேசிய அறச்சலூர் செல்வம் இயற்கை விவசாயம் குறித்தும் குறிப்பாக மான்சாண்டோவின் தாக்குதலையெல்லாம் நன்கு அம்பலப்படுத்தியவர்தான். ஆனால் அங்கு சென்னையில் அழிக்கப்பட்ட சதுப்புநிலக்காடுகள் குறித்து பேசும் போது அந்த நிலமாக இருந்த பள்ளிக்கரணை இன்று குப்பை மேடாக இருப்பதற்கு காரணம் அரசு அல்ல, குப்பைகள் போடும் நாம்தான் என்று ஒரே போடாக போட்டார்.
இது உலக வெப்பமயமாதலுக்கு குடிசைகளில் இருக்கம் குண்டு பல்பே காரணம், ஏழைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைதான் சுற்றுச் சூழலை கெடுக்கிறது எனும் பார்வையோடு தொடர்புடையது. ஏகாதிபத்தியங்கள்தான் இந்த பூவுலகை அழித்தும் வதைத்தும் வருகிறார்கள். அதையும் ஒரு ஏழையின் குண்டு பல்பையம் ஒப்பிட்டு பேசுவது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறை. பள்ளிக்கரணை குப்பை மேட்டிற்கு அரசு காரணம் அல்ல என்றால் திருப்பூரின் நொய்யல் நதியை கெடுத்ததில் அமெரிக்காவிற்கு பங்கில்லை, கூடங்குளம் அணுமின்நிலையத்தின் விளைவுகளுக்கு ரசியா பொறுப்பல்ல என்றும் பேசலாம். முதலாளிகளின் அரசுகளையும், ஏகாதிபத்தியங்களையும்தான் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டுமே அன்றி அதை மக்களுக்கு பொறுப்புவாக்குவது தவறு. மக்களிடம் நாம் இயற்கை குறித்த விழிப்புணர்ச்சியை விட அரசியல் விழிப்புணர்ச்சியைத்தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.
இன்றைய வாழ்க்கை அறிவியல் தொழில்நுட்ப புரட்சியால் நிறைந்த ஒன்று என்றால் அது அனைத்து மக்களுக்கும் கிட்டவில்லை, கிட்டவேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். மாறாக எல்லாவற்றையும் துறந்து காடுகளுக்கும், பழமைக்கும் செல்வோம் என்றல்ல. செந்தமிழனாக இருந்து தற்போது செந்தமிழனாந்தாவாக மாறிவரும் பலரும் இதை புரிந்து கொள்ளமாட்டார்கள். மக்களது வாழ்விற்கும் தீர்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளாத இத்தகைய கற்பனையில் வாழும் சாமியார்களுக்கு உணவும், உண்டியும், பேச வாய்ப்பும் கொடுப்பது மக்களின் அறிவியலே அன்றி உள்ளுணர்வு எனும் ஆன்மீக பெருங்காய டப்பா அல்ல.
திருச்சி- மேலப்புதூர் : புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி இழுத்து மூடல்! பெற்றோர்கள், ஆசிரியர்கள், பு.மா.இ.மு தலைமையில் சாலை மறியல் – கைது!
திருச்சி மாவட்டம் – மேலபுதூர் அருகே புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகளுக்கும், ஆதரவற்ற மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் தனியாக பள்ளி வளாகத்திற்குள்ளே விடுதி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் 536 மாணவிகள் தற்பொழுது தங்கி படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பள்ளி விடுதியில் குளியலறை வசதியும், குடிநீர் வசதியும் இல்லாமல் விடுதி இயங்கி வருகிறது எனவும், அதனை முறையாக பராமரிக்காததால் விடுதி காப்பாளரை பணிநீக்கம் செய்தும், புதிய காப்பாளரை நியமித்தும் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதிய காப்பாளர் வரும் வரை பள்ளி விடுதிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.
ஊருக்கு சென்ற மாணவிகள் 3-2-2014 அன்று விடுதிக்கு திரும்பி வந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் பள்ளியும் விடுதியும் முறையாக இயங்கியது. ஆனால் 5-2-2014 அன்று வந்த அதிகாரிகள் குழு விடுதியை ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் பள்ளி விடுதியை உடனடியாக மூடி மாணவிகளை விடுதியை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டனர். அதனை அமல்படுத்த வந்த அதிகாரிகள் மாணவிகளை இரவு என்று கூட பார்க்காமல், “வெளியேற வேண்டும், விடுதியை மூடப்பேகிறோம்” என்றனர்.
இதனால் அதிர்ந்த மாணவிகள் செய்வதறியாது திகைத்து அழுதனர். தங்கள் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளை இரவில் துரத்தும் அவல நிலையை தாங்க முடியாத பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு அவரவர் ஊர்களிலிருந்து ஓடிவந்தனர். இரவு முழுவதும் பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தங்க வைக்க சம்மதம் வாங்கிய பிறகு பிரச்சனை தீர்ந்தது என மன நிம்மதியோடு ஊர்களுக்கு சென்றனர்.
ஆனால் மறு நாள் காலை 6-2-2014 அன்றுகாலை 2 அரசுபேருந்தை எடுத்து வந்து மாணவிகளை திருச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களில் (ஏர்போர்ட் அருகில் உள்ள விடுதி, மணிகண்டம் என்ற இடத்தில் உள்ள விடுதி, சேவாசங்கம் என்ற பள்ளி விடுதி) என தனித்தனியே பிரித்து தங்க வைப்பதாக கூறி பேருந்தில் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஏறச்சொல்லி வற்புறுத்தினர். மீண்டும் நிர்வாகத்தினர் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் பதற்றத்துடன் ஓடி வந்தனர். வந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பேருந்து முன்பு அமர்ந்து ஏற மறுத்தனர்.
அதனால் என்ன செய்வது என தெரியாமல் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும் பிறகு எப்படியாவது பெற்றோர்களை சம்மதிக்க வைத்துவிடலாம் என நினைத்து மாணவிகளை அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பினர். அதன் பிறகு பள்ளிநிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்குள் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கலந்தாலோசிக்காமலே அவர்களை வெளியில் நிறுத்திவைத்து இவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.
இத்தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்தனர். அப்போது பெற்றோர்களிடம் “பெற்றோர்கள் இல்லாமலே நிர்வாகத்தினர் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பெற்றோர்களையும் மாணவிகளையும் ஏமாற்றும் செயல் என்றும், நம் முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பாதிப்படைவது நம் பிள்ளைகள், நம் முன் தான் பேசவேண்டும்.” என பு.மா.இ.மு தோழர்கள் பெற்றோர்களுக்கு புரிய வைத்தனர்.
மதியம் 2 மணி அளவில் பேச்சுவார்த்தை முடித்து வெளியில் வந்த நிர்வாகத்தினரிடம் “என்ன முடிவானது” என்று கேட்ட போது,
“மாவட்ட நிர்வாகத்திடம் கேளுங்கள்” என கூறினர்.
அவர்களோ “மாவட்ட ஆட்சியர் உத்தரவு மறுபரிசீலனை என்பதே இல்லை” எனக் கூறினர்.
இதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் நிர்வாகத்தினரை முற்றுகையிட்டு, “தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்றால் தங்கள் பிள்ளைகள் படித்தால்தான் முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்” என்றனர்.
அதற்கு மாவட்ட நிர்வாகம் “பிள்ளைகளின் படிப்பு தரத்தை மேம்படுத்தவும் படிப்பில் அதிக மதிப்பெண் வாங்கவும், அவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டும் தான் வேறு இடத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
அதற்கு பெற்றோர்கள் “பல வருடம் ஒன்றாக படித்துப் பழகிப்போன இடத்தை விட்டு கடைசி இரண்டு மாதத்தில் புதிதாக ஒரு இடத்தில் சென்று தங்கி படிக்கச் சொன்னால் அந்த சூழலோடு பொருந்திப் போக முடியாது” என்றும் “அவர்களை அலைக்கழிக்க வேண்டாம்” என்றும் கோரினர்.
அப்போது பள்ளி நிர்வாகம் சில தவறுகள் செய்வதாகவும் அதை மாற்றவே நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
அப்போது நமது தோழர்கள் “பள்ளி நிர்வாகம் நடத்துவது சரியில்லை என்றால் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்தட்டும். உண்மையில் மாணவர் நலன் தான் முக்கியம் என்றால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு முட்டாள் தனமானது அதை மாற்றி விடுதிக்கான நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்”என்றனர். இதை எதிர்பாக்காத அதிகாரிகள் என்ன பேசுவது எனத் தெரியாமல் விழித்தனர்.
அப்போது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் “மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், அது மட்டுமல்லாமல் ஆண்டிற்கு 5000 ரூபாய் என ஒரு மாணவர்க்கு வாங்குகிறோம். மற்றபடி வேறு எதற்கும் பணம் வாங்குவதில்லை. 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர். அதில் வங்கி கடனை அடைப்பதற்கே முடிகிறது” என்றனர். “அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் போதே நாங்கள் விடுதியை ஒழுங்காக நடத்த முடியும்” என்றனர்.
உடனே பெற்றோர்களும்,”அரசு ஏற்று நடத்த வேண்டும்” என்றனர். “வெளியே செல்ல எங்கள் குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம்” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே பெற்றோர்களின் பேச்சை மதிக்காமல் விடுதியை அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதைக் கண்டு பெற்றோர்களும், தோழர்களும் ஆத்திரம் அடைந்தனர். உடனே பெற்றோர்களை அழைத்து “நம் பேச்சை மதிக்காமல் கதவை இழுத்து மூடுகிறது. நாம் நியாயப்படி நம் நிலையை எடுத்துக் கூறி எந்தப் பயனும் இல்லை. போராடினால் தான் உரிமையை பெற முடியும்.” என கூறினர்.
பெற்றோர்கள் உடனே பள்ளியின் கதவை இழுத்து மூடி அதிகாரிகளை வெளியில் விடாமலும் பள்ளிக்கு வெளியே உள்ள சாலையை மறித்தும் பு.மா.இ.மு தலைமையில் போராட்டத்தில் இறங்கினர்.
அங்கு வந்த கண்டோன்மென்ட் காவல் துறையினர் “என்ன பிரச்சனை என்றாலும் எங்களுக்கு முன்னர் நீங்கதான் நிக்கிறீங்க, இந்த பிரச்சனையை தூண்டி விடுவதும் நீங்கள்தான்” என்றனர்.
அதற்கு தோழர்கள், “மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்களுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் தான் வருவோம்” என்றனர்.
கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடனேயே இறுதிவரை போலீசார் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். எவ்வளவோ பேசியும், மிரட்டியும் பார்த்தனர். ஆனால் தங்கள் பிள்ளைக்கு தரமான பாதுகாப்பான விடுதியை பள்ளிக்குள்ளேயே நடத்த வேண்டும் என்றும், அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற பிடிப்பில் பெற்றோர்களும் தோழர்களும் உறுதியாக நின்றனர்.
அடுத்த கட்டமாக மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் காவல் துறை சாலை மறியல் போராட்டம் நடத்திய தோழர்களையும், முன்னணியில் நின்ற சில பெற்றோர்களையும், பள்ளி ஆசிரியர்களையும் கைது செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் முட்டாள்தனமாக முடிவை எதிர்த்து பு.மா.இ.மு. நடத்திய இப்போராட்டமும், பெற்றோர்களின் உறுதியும் அன்றைய செய்திதாளில் பரபரப்பாக வெளியானது. இதனால் வேறு வழியில்லாமல் அதே விடுதியுடன் கூடுதலாக பள்ளிக்குள் இருந்த மற்றொரு விடுதியிலும் தங்கி படிக்க மாவட்ட நிர்வாகமும் இறங்கி வந்து ஒப்புக் கொள்ள நேரிட்டது.
அதன்படி பத்தாவது, பதினொறாவது, பன்னிரெண்டாவது மாணவிகள் பழைய விடுதியிலும், நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் மற்றொரு பள்ளிகளுக்குள் இருக்கும் விடுதியிலும் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெற்றோர்களும், மாணவிகளும் ஆறுதலடைந்தனர். மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தோழர்களும், ஆசிரியர்களும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டதும் பள்ளிக்கு சென்ற தோழர்களை உற்சாகமாக பெற்றோர்கள் திரளாக நின்று வரவேற்றனர். பெற்றோர்கள் நன்றியோடு கை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிகாரம் கையிலிருக்கும் தைரியத்தில், தடாலடியாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக முடிவு எடுத்த மாவட்ட ஆட்சியரின் தலையில் குட்டு வைக்கும் விதமாக பு.மா.இ.மு. நடத்திய இப்போராட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
9943176246
பு.மா.இ.மு. – வின் சுவரொட்டி முழக்கம்
திருச்சி- மேலப்புதூர் : புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி இழுத்து மூடல்! பெற்றோர்கள், ஆசிரியர்கள், பு.மா.இ.மு தலைமையில் சாலைமறியல் – கைது!
மாவட்ட நிர்வாகமே !
விடுதி மூடலுக்கு சுகாதார சீர்கேடு தான் காரணம் என்றால் விடுதியை அரசே ஏற்று நடத்த தயக்கம் ஏன்?
பள்ளிக்கு அருகமையில் விடுதி இருப்பதே சரியானது ! திசைக்கு ஒன்றாய் 4 விடுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளை அடைத்து வைக்கும் முட்டாள்தனமான முடிவை உடனே கைவிடு!
சுகாதாரம், சுகாதாரம் என்று கூச்சல் போடும் மாவட்ட ஆட்சியரே, அரசு எந்திரத்தை ஏவிவிட்டு அதிகாரத்திமிரை மக்களிடம் காட்டாதே!
இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சூதாட்டம் மற்றும் போட்டி முடிவுகளை திட்டமிட்டு தீர்மானிப்பது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டி தன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.
குருநாத் மெய்யப்பன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது வைக்கப்பட்டுள்ள சூதாட்டம் மற்றும் போட்டிகளை திட்டமிட்டு தீர்மானித்தல் இவற்றை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி இந்தக் குழு பணிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, மும்பை, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர் காவல் துறை அதிகாரிகள், இன்னாள் முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள், ஐபிஎல் அதிகாரிகள், இந்தியா சிமென்ட்ஸ் முதலாளிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும், சென்னை ஐபிஎல் அணியின் தலைவருமான தோனி உள்ளிட்ட இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், டெண்டூல்கர், கங்குலி, டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஐபிஎல் முதலாளிகள் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலியா, அங்கித் சவான் ஆகியோரை விசாரித்து வந்தடைந்த முடிவுகளை கமிட்டியின் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
குருநாத் மெய்யப்பனின் சூதாட்டங்களை நடத்திக் கொடுத்த சூதாட்டத் தரகர் விண்டூ தாரா சிங் கமிஷனின் முன்பு சாட்சி சொல்ல மறுத்து விட்டிருக்கிறார். “சூதாட்டம், போட்டிகளை முன்கூட்டியே தீர்மானித்து நடத்துவது இவை குறித்து தன் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் தனது செயல்கள் பற்றி கமிட்டியின் முன்பு வாக்குமூலம் கொடுக்க முடியாது” என்று குருநாத் மெய்யப்பன் தனது வழக்கறிஞர் மூலம் மறுத்து விட்டிருக்கிறார். ஆனாலும், தனக்கு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லை என்பதால் யாரையும் சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று பரிதாபமாக சொல்லியிருக்கிறது முட்கல் கமிட்டி.
குருநாத் மெய்யப்பனின் சூதாட்ட விபரங்கள் வெளியானவுடன், குருநாத் மெய்யப்பனுக்கும் சென்னை ஐபிஎல் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும், அதன் முதலாளி சீனிவாசனும் சாதித்தனர். குருநாத் மெய்யப்பன் சென்னை அணி பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டிருந்த அவரது டுவிட்டர் கணக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டது.
முட்கல் கமிட்டியின் விசாரணையில் சென்னை அணித் தலைவர் தோனியும், இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனும் (குருநாத் மெய்யப்பனின் மாமனார்), இந்தியா சிமென்ட்ஸ் அதிகாரிகளும் அவருக்கு இந்தியா சிமென்ட்சில் எந்த பங்கு உரிமையும் இல்லாததால் அவரை அணியின் உரிமையாளர் என்று கருத முடியாது என்றும் அவர் அணியின் ஒரு சாதாரண ஆதரவாளர்தான் என்றும் வாதிட்டிருக்கின்றனர். இந்தியாவின் கௌரவத்தையே தூக்கிப் பிடிப்பதாக கொண்டாடப்படும் இந்திய அணித் தலைவர் தோனி இந்தியா சிமென்ட்சிடம் வாங்கிய காசுக்குத்தான் விசுவாசமாக இருந்து பொய் சாட்சியம் அளித்துள்ளார்.
ஆனால், கமிட்டி தனது விசாரணையின் முடிவில், குருநாத் மெய்யப்பன்
அணியின் பயிற்சி அமர்வுகளின் போது உடன் இருந்ததையும்
அணியின் குழு கூட்டங்களில் பங்கேற்றதையும்
அணிக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் போது அணியின் பிரதிநிதியாக உட்கார்ந்திருந்ததையும்
அணி உரிமையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்ததையும்
ஐபிஎல் உரிமையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றதையும்
அணியின் பயணங்களில் சேர்ந்து தானும் பயணித்ததையும்
ஐபிஎல் உரிமையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் தன்னை சென்னை அணியின் உரிமையாளர் என்று சொல்லிக் கொண்டு கலந்து கொண்டதையும்
உறுதி செய்திருக்கிறது. குருநாத் மெய்யப்பனின் டுவிட்டர் புரொஃபைல் மாற்றப்பட்டது தொடர்பான விபரங்களையும் சரிபார்த்து உறுதி செய்திருக்கிறது.
பொய் சாட்சியம் அளித்த தோனி.
குருநாத் மெய்யப்பனை அணி உரிமையாளராகவும், அணியின் பிரதிநிதியாகவும் குறிப்பிடும் பிசினஸ் அட்டைகளையும், லெட்டர் பேடுகளையும் மும்பை காவல் துறை கைப்பற்றியிருக்கிறது. மேலும், இந்திய சிமென்ட்ஸ் நிறுவனமே கடந்த 6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஐபிஎல் பருவத்திலும் குருநாத் மெய்யப்பன் பெயரை பிரதிநிதியாக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள்களை அனுப்பியிருக்கிறது. அதன்படி கிரிக்கெட் வாரியம் அனுப்பிய சென்னை அணி கேட்ட பிரதிநிதிகளுக்கான ஒப்புதல் பட்டியலில் குருநாத் மெய்யப்பனின் பெயரும் சேர்க்கப்பட்டு அவர் இயக்குனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
இதன்படி, குருநாத் மெய்யப்பன் சென்னை அணியின் பிரிக்க முடியாக அங்கமாக விளங்கியதாகவும், சட்டப்படி அவர் அணி முதலாளி இல்லை என்றாலும், நடைமுறையில் அவர் அணி உரிமையாளராகவே செயல்பட்டார் என்றும் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் குருநாத் மெய்யப்பனுக்கு சென்னை அணியின் உள் விபரங்கள், குறிப்பிட்ட போட்டிகளுக்கான செயல் உத்திகள், மைதான நிலவரங்கள், போன்ற சாதாரண கிரிக்கெட் ரசிகருக்கு தெரிய வாய்ப்பில்லாத பல தகவல்கள் தெரிந்திருந்தன.
ஆனால், அணி உரிமையாளர்களும், அணியுடன் தொடர்புடையவர்களும் முறைகேடுகள் செய்வதை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஐபிஎல் முதன்மை செயல்பாட்டு அலுவலர் (சிஈஓ) சுந்தர ராமனோ, “எந்த ஒரு ஐபிஎல் அணிக்கும் உரிமையாளர் என்று யாரையும் தெளிவாகச் சொல்ல முடியாது” என்றும் “அணிகளின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ள கிரிக்கெட் வாரிய நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று அலட்சியமாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
ஐபிஎல் செயல்பாட்டு விதிகள், ஐபிஎல் ஒழுங்குவிதிகள், ஐபிஎல் ஊழல் ஒழிப்பு நெறிகள், ஆட்டக்காரர்களுக்கும், ஆட்ட அலுவலர்களுக்குமான ஐபிஎல் நெறிகள் ஆகியவற்றின் அடிப்படையில்
அணி உரிமையாளர்களும், அணியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்களும் தமது அணி பங்கெடுக்கும் போட்டிகள் தொடர்பாக பந்தயம் கட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அணியின் உள் வட்டங்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்களை அவை பந்தயம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிந்து வெளி ஆட்களுக்கு அறியத் தருவதும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டிகளில் அணியின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி தூண்டுவது, போட்டி முடிவுகளை மாற்றி அமைக்க முயல்வது போன்றவையும் ஊழல்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
ஊழல் செய்யுமாறு தூண்டி தன்னை அணுகுபவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு தெரிவிக்காமல் இருப்பதும் குற்றமாகும்.
மேலும், ஒரு அணியின் உரிமையாளரின் நண்பர்கள், உறவினர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அந்த உரிமையாளரும் குற்றம் இழைத்தவர் ஆகிறார். இந்த குற்றங்களை செய்பவர்கள் மீது ஐபிஎல் நிர்வாகம் தற்காலிக விலக்கம், அபராதம், நிரந்தர விலக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும். மேலும், குத்தகைதாரர் ஒப்பந்தத்திலும் கிரிக்கெட்டுக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அல்லது ஐபிஎல்லுக்கு நற்பெயரை கெடுக்கும் எந்த வித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டுள்ளது.
மும்பை காவல் துறை, டெல்லி காவல் துறை, சென்னை காவல் துறை போன்றவை இந்த வழக்குகள் தொடர்பாக திரட்டிய சாட்சியங்களின் அடிப்படையில்
குருநாத் மெய்யப்பன் சூதாட்டத் தரகர்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த விண்டூ தாரா சிங், சென்னையைச் விக்ரம் அகர்வால் போன்ற சூதாட்டத் தரகர்களுடன் தரகருடன் அவர் பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
சென்னை அணி விளையாடும் போட்டிகளில் போட்டிகள் நடந்து கொண்டிக்கும் போது கூட அணி ஜெயிப்பதாக மட்டுமின்றி, தோற்பதாகவும் பல முறை அவர் பந்தயம் கட்டியிருக்கிறார்.
என்று முட்கல் கமிட்டி தீர்மானித்திருக்கிறது.
சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே மே 12, 2013 அன்று ஜெய்ப்பூரில் நடந்த விளையாட்டில் சென்னை அணி 130-140 ரன்கள் எடுக்கும் என்று விண்டு தாராசிங்கிடம் குருநாத் மெய்யப்பன் பந்தயம் கட்டியிருக்கிறார். கடைசி பந்தில் எட்ஜ் வாங்கி பந்து எல்லைக் கோட்டை தாண்டியதில் அணியின் ஸ்கோர் 141-ல் முடிந்திருந்தது. “இது போட்டியை தான் விரும்பிய வண்ணம் கொண்டு போக அவர் முயற்சித்திருக்கிறார் என்று காட்டுகிறது. இது குறித்து மேலும் விசாரிக்க வேண்டும்.” என்று கமிட்டியின் அறிக்கை பரிந்துரைக்கிறது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை, 11-வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த அணி 141 மட்டுமே குவித்தது. இவை அந்த சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சென்னை அணிக்கும் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இவ்வாறு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்று பலர் கமிட்டியின் முன்பு கருத்து கூறியிருக்கின்றனர்.
குருநாத் மெய்யப்பன் வழக்கறிஞருடன்
யாருடைய ஆசீர்வாதத்தோடு குருநாத் மெய்யப்பனும், சென்னை ஐபிஎல் அணியும் இந்த சூதாட்டங்களையும், போட்டிகளை தீர்மானிப்பதையும் செய்து கொண்டிருந்தார்களோ, அந்த சீனிவாசன்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கட்டுப்படுத்துவதோடு, ஐசிசியிலும் தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராகி வருகிறார். இந்த கிரிக்கெட் வாரியம்தான் கிரிக்கெட்டில் ஊழலை ஒழித்து விளையாட்டை தூய்மைப்படுத்தும் என்று நம்பச் சொல்கிறார்கள்.
ராஜஸ்தான் அணியின் முதலாளி ராஜ் குந்த்ரா டெல்லி காவல் துறையிடம் தான் பந்தயம் கட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு பின்னர் அதை திரும்பப் பெற்றிருக்கிறார். ஆனால், ராஜ் குந்த்ராவின் நண்பர் உமேஷ் கோயங்கா அவர் பந்தயம் கட்டியதாக சாட்சி அளித்திருக்கின்றார். அணி வீரர்களிடமிருந்து நேரடியாக போட்டி பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும்படி உமேஷ் கோயங்காவுக்கு ராஜ் குந்த்ரா அனுமதி அளித்திருக்கிறார். தான் இங்கிலாந்து குடிமகன் என்றும், அங்கு இருப்பது போல இந்தியாவில் பந்தயம் கட்டி சூதாடுவது சட்டபூர்வமானது என்று நினைத்ததாகவும் அவர் டெல்லி காவல் துறையிடம் கூறியிருக்கிறார். ராஜ் குந்த்ரா மீதும் குற்றங்கள் நிரூபணம் ஆகியிருப்பதாகவும், அவற்றை மேற்கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கமிட்டி அறிக்கை கூறுகிறது.
ராஜஸ்தான் அணியில் விளையாடிய அஜித் சாண்டிலியா மே 5, 2013 அன்று பூனே அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் தான பந்து வீசிய இரண்டாவது ஓவரில் 14 ரன்கள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டு அதை செய்திருக்கிறார். அதற்காக ரூ 20 லட்சம் பேரம் பேசப்பட்டிருக்கிறது.
மே 9, 2013 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த் ஒரு ஓவரில் 14 ரன்கள் விட்டுக் கொடுப்பதாக சூதாட்ட தரகர்களுடன் சொல்லி விட்டு அதை செய்திருக்கிறார்.
மே 15, 2013 அன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அஜித் சாண்டிலியாவுடன் திட்டம் தீட்டி அங்கித் சவான் ஒரு ஓவரில் 12 ரன்கள் விட்டுக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள், ரன் ரேட், சிக்சர், செஞ்சுரி என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் போது, மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் தமக்கு வரவிருக்கும் சூதாட்ட பணத்தை கணக்கு போட்டுக் கொண்டு விளையாடியிருக்கின்றனர்.
இந்த கிரிக்கெட் வீரர்களைத் தவிர முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய வீரர் அமித் சிங் சூதாடுவதற்கு இடைத்தரகராக இருந்ததாகவும், ராஜஸ்தான் அணி வீரர் ஹர்மீத் சிங், சித்தார்த் திரிவேதி ஆகியோர் சூதாடிகள் தம்மை அணுகியதை நிர்வாகத்திடம் சொல்லத் தவறியதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முட்கல் கமிட்டியின் விசாரணையை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்பதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசியின் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த ஊழல்கள் தொடர்பான விசாரணை விபரங்களை முட்கல் கமிட்டியிடம் கொடுக்காமல் ஐசிசியின் ஊழல் ஒழிப்புப் பிரிவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவும் திட்டமிட்டு இழுத்தடித்து நாடகமாடியிருக்கின்றன. கிரிக்கெட்டில் மோசடிகளை தடுப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், பன்னாட்டு கிரிக்கெட் குழுமமும் பின்பற்றும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று குழு கருதுகிறது.
சரத்பவார் தலைவராக இருக்கும் போது லலித் மோடியின் தூண்டுதலின்படி பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணிகளை வாங்குவதை அனுமதிக்கும்படி விதிகள் திருத்தப்பட்டுள்ளது. அணி உரிமையாளர்களே, கிரிக்கெட் வாரிய அலுவலர்களாகவும் இருப்பது சூதாட்டம், போட்டிகளை முன்கூட்டியே தீர்மானித்து விளையாடுவது போன்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முடக்கி விடுகின்றன என்று ஊரறிந்து உண்மையை இந்த கமிட்டியும் தரவுகளின் அடிப்படையில் வந்தடைந்திருக்கிறது.
இருப்பினும், முட்கல் கமிட்டியும் ஐபிஎல் என்ற வணிக சூதாட்டத்தின் வரம்புகளுக்குள் நின்றே தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
அதாவது, கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்க டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லட்சுமணன், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே போன்ற மூத்த புனிதமான வீரர்கள் இளைய வீரர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்க வேண்டும் என்றும் சூதாடுதல் பற்றி காட்டிக் கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்து அவற்றை விசாரிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் பல விளையாட்டு வீரர்களுக்கு பலன் அளித்துள்ள நல்ல வடிவம் என்பதால் ஐபிஎல் ஒரு சுயேச்சையான வணிக அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அப்படி இளம் வீரர்களுக்கு மூத்த புனிதர்கள் வழிகாட்டும் போது, “அண்ணே நீங்க விளம்பரங்கள்ல நடிச்சி, சட்டைல விளம்பரம் போட்டுகிட்டு கோடீஸ்வரன் ஆகிட்டீங்க. எங்களுக்கெல்லாம் இதுதான் ஒரே வாய்ப்பு” என்று கேட்டால் அவர்களது போதனை அத்தோடு முடங்கி விடும். ஐபிஎல் சுயேச்சையாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் வாரியத்தோடு இருந்தாலும் சரி, மேலும் மேலும் ரசிகர்களை மொட்டை அடிக்க வேண்டும் என்று அடங்காத தாகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த டிராகுலாவின் குருதி தாகம் அடங்கி விடப் போவதில்லை.
இதனால்தான் இப்படி மோசடி, சூதாட்டமாக நடைபெறும் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கலாம் என்றும், அப்படி சட்டபூர்வமாக்கினால் இவற்றை முறைப்படுத்தலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் முட்கல் கமிட்டியிடம் கூறியிருப்பதை தனது பரிந்துரைகளில் கமிட்டி சேர்த்திருக்கிறது. சாட்சிக்காரனிடம் விழுவதை விட சண்டைக்காரனிடமே விழுவது மேல் என்பது கமிட்டியின் கருத்து போலும். இறுதியில் கிரிக்கெட் எனும் விளையாட்டு லாட்டரி சூதாட்டத்தை விட கேடு கெட்ட பெட்டிங் எனும் சூதாட்டத்தின் மூலதனத்தை வைத்து கல்லா கட்டும் விளையாட்டாக மாறிவிட்டது. இதனால் கள்ள சந்தையில் புழங்கும் பல ஆயிரம் கோடிபணத்தை இனி கிரிக்கெட் அணி முதலாளிகள் சட்டப்பூர்வமாகவே திரட்டமுடியும்.
இந்த வழக்கு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 7-ம் தேதி தொடரும். ஆனால், முட்கல் கமிட்டி அறிக்கையில் சொல்லியிருப்பவற்றை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் எந்த தடையும் இன்றி நடக்கலாம் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. விசாரணை, தீர்வுகள், பரிந்துரைகள் என்ற நாங்கள் ஒரு புறம் பேசிக் கொண்டிருப்போம். ஆனால், முதலாளிகள் தமது லாப வேட்டையையும், சூதாட்ட கொள்ளையையும் தொடர்வதற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தப் போவதில்லை என்று நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
“பதவி எங்களுக்கு துண்டு போன்றது அது போனால் கவலை இல்லை ஆனால் கொள்கை எங்களுக்கு வேட்டி போன்றது” இது அண்ணாவின் புகழ் பெற்ற வாக்கியம். ஓட்டு பொறுக்கி திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இந்த வேட்டி எப்போதும் இடுப்பில் இருந்ததில்லை. இது சொன்ன அண்ணாவிலிருந்து இன்று வை.கோ வரைக்கும் பொருந்துகிறது.
கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
“கலிங்கப்பட்டியிலிருந்து கமலாலயம் வரை” இந்த நெடிய பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வேட்டியை பறி கொடுத்ததோடல்லாமல் மற்ற திராவிட இயக்க பிழைப்புவாதிகள் பெற்ற மேல்துண்டைக் கூட பெற முடியாமலேயே இருந்திருக்கிறார் வைகோ. உச்சகட்டமாக, கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி போயஸ் தோட்டத்தில் மையம் கொண்டிருந்த புரட்சி புயல் அன்புச் சகோதரியின் ‘கவனிப்பால்’ கரை சேர முடியாமல் “சீச்சீ இந்த தேர்தல் பழம் புளிக்கும்” என்று தாயகத்திலேயே முடங்கிய கூத்தும் நடந்தது. அன்று கலிங்கப்பட்டியில் கிளம்பிய வை.கோவிடம் பெயரளவுக்கு கொள்கை என்று திராவிட இயக்க கொள்கைகள் ஏதேனும் ஒருவேளை ஒட்டிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.
இவர் 93-ல் திமுக-வில் இருந்து பிரிந்து மதிமுக ஆரம்பித்த போது தமிழக ஆட்டுக்குட்டிகளை இரட்சிக்க இந்த இரட்சகராக அந்தக் காலத்து ‘முற்போக்கு’ வாதிகள் இவரை தூக்கிபிடித்தனர். ஆனால் திமுக-விலிருந்து மதிமுக பிரிந்தது என்பது கொள்கை வேறுபாடினால் இல்லை, வாரிசுப் போரில்தான். அன்றைய புதிய ஜனநாயகம் மட்டுமே, “துணிவுமிக்க செயல்வீரர், மொழி-இனப்பற்றாளர், உணர்ச்சிமிகு பேச்சாளர் என்கிற திறமை வைகோ விற்கு இருக்கலாம்; இவை மட்டுமே எந்த விதத்திலும் திமுக விற்கு மாற்றுத் தலைமையையோ மாற்றுப் பாதையையோ தந்துவிட முடியாது. கருணாநிதிக்கு பின் கட்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்; அவ்வளவு சுலபமாக ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சரியாக கணித்து எழுதியது. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள் சிலர் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் பின்னாளில் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் மதிமுகவிலிருந்து விலகி விட்டனர்.
வைகோவும் வெகு சீக்கிரமாகவே தன்னை அம்பலப்படுத்திக் கொண்டார். உண்மையான திராவிட இயக்க வாரிசு என்று சொல்லிக் கொண்டே, அன்றைய நிலையில் பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், தமிழகத்தில் மண்டைக்காடு கலவரம் என கொலை வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்த பார்ப்பன பாசிச பாஜக மற்றும் தமிழகத்தையே மொட்டை அடித்து மக்கள் மத்தியில் அம்பலப்பட்டிருந்த ஜெ-சசி கும்பல் ஆகியோருடன் 98-ல் கூட்டணி வைத்தார். 2002 குஜராத் படுகொலைகளுக்கு பின்னரும் பாஜக அமைச்சரவையில் பங்கேற்று மோடி உள்ளிட்ட இந்துத்துவா கொலையாளிகளை காப்பாற்ற பிரச்சாரம் செய்தார். அதுவும் அத்வானியே,’இந்த வேலைக்கு வை கோபால்சாமிதான் சரியானவர், நீங்கள் பேசுங்கள்’ என்று நம்பி பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, பார்ப்பனியத்தின் விசுவாசமான அடியாளாக இருந்து வேலை செய்தார். அப்படி அடியாள் வேலை செய்ததை இன்றளவும் வெட்கமில்லாம்ல, சிறு கூச்சநாச்சம் கூட இல்லாமல் பெருமையாக வேறு சொல்லி திரிகிறார்.
2011-ல் ஜெ-வும் அடித்து துரத்த போக்கிடம் இல்லாமல் அரசியல் அனாதையாக சுற்றி திரிந்து தற்போது மீண்டும் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
பின்னர் 2001-ல் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். பொடா-வுக்கு பின்னர் வாரிசு சண்டையில் யாரை எதிர்த்து தனியே வந்தாரோ அந்த கருணாநிதியுடன் வெட்கமே இல்லாமல் கூட்டணி சேர்ந்தார். அண்ணன்-தம்பி என்று இருவரும் தழுவிக் கொண்டனர். பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட் பேரம் படியாததால் தன்னை பொடாவில் உள்ளே வைத்து நொங்கெடுத்த பாசிச ஜெயா உடன் அன்பு சகோதரியே என்றபடி கூட்டணி சேர்ந்தார். 2009-ம் ஆண்டு ஈழப்பிரச்சினையை வைத்து இங்கே அதிமுக கூட்டணிக்கு ஆதாயம் தேட நினைத்தார். 2011-ல் ஜெ-வும் அடித்து துரத்த போக்கிடம் இல்லாமல் அரசியல் அனாதையாக சுற்றி திரிந்து தற்போது மீண்டும் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறார். இப்படி தேர்தலுக்கு தேர்தல் புரட்சி புயல் சுழண்டு சுழண்டு ஊரையே சுற்றி வந்த போதும், பாவம் அதை யாரும் மதிப்பதில்லை.
இப்படியாக 98-ல் தான் ஆரம்பித்த இடத்திற்கே இரண்டாவது முறையாக வந்து, வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் முன்பு போல் சொல்லிக் கொள்ளும் உதார்கூட இன்று இல்லை. நான் ஏறமாட்டேன், ஏறமாட்டேன் என விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் அடம்பித்து, தங்கள் பேரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, யாருமே இல்லாத பிஜேபி பேருந்தில் அவசர அவசரமாக ஜன்னல் வழியே கருப்புத்துண்டை போட்டு சீட் பிடித்து, யாரும் துண்டை எடுத்து கடாசிவிட்டால் என்ன செய்வது என்று, கவலையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த கவலையில் தான் “தமிழகத்தில் பா.ஜ.க பெரிய சக்தியாக வளரும்” என்று கூட சொல்லி பார்க்கிறார். மோடியை காத்திருந்து சந்திக்கிறார். நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்தை தன்னை கருணாநிதி அழைக்கிறார், பொன்னார் அழைக்கிறார் எனும் போது, தான் வலிய போய் நின்றாலும் தமிழருவி மணியன், ஜூனியர் விகடன் திருமாவேலன் தவிர யாரும் தன்னை மதிப்பதில்லை என்ற மனக்குறை வை.கோ வுக்கு இல்லாமல் இல்லை.
சீட் பேரம் முடியாமல் மோடி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று கூட சொல்லிப் பார்த்தாகி விட்டது.
சீட் பேரம் முடியாமல் மோடி கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று கூட சொல்லிப் பார்த்தாகி விட்டது, எதுவும் நடந்தபாடில்லை. விரக்தியுற்ற அடிமையின் விசுவாசத்துடன் நரவேட்டை மோடி மற்றும் ‘குஜராத் மாயையை’ முன்னின்று பரப்பி வருகிறார். இந்த மாயையை அகற்றும் வரலாற்றுக் கடமையை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் செய்து கொண்டிருக்கும் போது வைகோ பார்ப்பன பாதந்தாங்கியாக வலம் வருகிறார்.
சேது சமுத்திர திட்டம் என்னால் தான் வந்தது என்றும், நான் தான் நடைபயணம் சென்றேன் என்றும் இத்தனை காலம் உறுமிய வை.கோ, இன்று பா.ஜ.க கூட்டணிக்கு பிறகு “என்னம்மா அங்க சத்தம்” என சு.சாமி கேட்கும் முன்னரே முந்திக்கொண்டு “சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலுக்கு கேடு” என்று இன்று இறுமி பின் வாங்குகிறார்.
பெரியாரை செருப்பால் அடிப்பேன், பெரியார் சாதி வெறியன் என்று பேசுகிறான் பார்ப்பன பிஜேபி யின் எச்.ராஜா. அதை கேட்டு பல்லிளித்துகொண்டு இன்னும் இரண்டு சீட்டு போட்டு கொடுங்க என்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் வை.கோ. தமிழகத்தில் சீந்த ஆள் இல்லாமல் அரசியல் அநாதைகளாக இருந்த இந்துமதவெறியர்களுக்கு வாழ்வளித்தது. இப்படி பேசுவதற்கு தைரியம் கொடுத்தது கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட இயக்க வரிசுகள் தான்.
எச்.ராஜா பெரியாரை அடிப்பதற்கு செருப்பு எடுத்து கொடுக்கும் விபீஷ்ண வேலையை செய்வதே வைகோ என்ற கோடாரி காம்பு தான். நாளை இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் அதிகாரத்திற்கு வந்து, பெரியார் சிலையை அவமதித்தால் பார்ப்பனிய சங்க பரிவாரங்களை மட்டுமல்ல வை.கோ வையும் சேர்த்து தான் நாம் பதம் பார்க்க வேண்டும். இது தான் பெரியாரை மதிப்பவர்களது செயலாக இருக்க முடியும். பெரியாரை அசிங்கப்படுத்துபவர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் வைகோ போன்றவர்கள் பெரியாரையோ, திராவிட இயக்க பெயரை பயன்படுத்தவோ எள்ளளவும் தகுதியற்றவர்கள்.
வைகோ கொள்கை இல்லாதவர் தான், மாறி மாறி கூட்டணி வைப்பவர் தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், மக்களுக்காக போராடுகிறார் என்று இன்னும் சிலர் அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்பதை சற்று பரிசீலித்து பார்த்தாலே விளங்கும். மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்களுக்க் செல்வது, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸில் ஆரம்பித்து எலிசெபத்து ராணி வரை பேசுவது இடையிடையே கண்ணீர் சென்டிமென்ட, ஆக்சனுக்கு சில சவடால்கள், என தன்னை முன்னிறுத்திக்கொண்டு திரும்ப வருவது என்பது தான் இவரது போராளி தன்மை.
கூடங்குளமோ, ஈழப்பிரச்சனையோ தன் கட்சிக்காரர்களை திரட்டி என்றும் இவர் போராடியதில்லை. கட்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவழைக்கும் இவரால் மக்கள் போராட்டங்களுக்கு அப்படி செய்ய முடிவதில்லையே ஏன்? யாராவது போராடுவார்கள் என்றால் அங்கு தொண்டர்கள் புடைசூழ சென்று பேசுவார், அவ்வளவுதான். மதிமுக தமிழக மக்களுக்காக இந்த இந்த பிரச்சனைக்காக திட்டமிட்டு முன்னணியாக நின்று போராடியிருக்கிறதா என்றால் ஏதும் இல்லை. கூடங்குளமோ, ஸ்டைர்லைட்டோ இன்னபிற பிரச்சினைகளில் வாய்ஸ் கொடுத்தால் அந்தந்த பகுதிகளில் கொஞ்சம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதைத் தாண்டி வைகோவுக்கு வேறு ‘உயரிய’ நோக்கங்கள் இருந்ததில்லை.
லெட்டர் பேடு தமிழ்தேசிய இயக்கங்களும் இன்னபிற உதிரி இயக்கங்களுக்கும் வை.கோவை அழைத்தால் தங்கள் போராட்டமும் செய்தியில் பேசப்படும் என்ற நன்மை இருப்பதால் இவரை அழைக்கிறார்கள். இவர்கள் மூலம் வைகோவும் தன் போராளி தலைவன் என்ற இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் எந்தப் பிரச்சினைகளுக்காக போராடினாரோ அந்த பிரச்சினைகளின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அம்பலப்பட்டு போகிறார். இவரை அழைப்பவர்களும் இதை தட்டிக் கேட்காமல் வேறு என்ன செய்வது என்று இந்த சந்தர்ப்பவாதத்திற்கு சாமரம் வீசுகிறார்கள்.
இடிந்தகரை சென்று போராட்டத்தை ஆதரிப்பதாக பேசினார். ஆனால் இடிந்தகரை மக்களை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய, அன்னிய கைக்கூலிகள் என்று இன்றளவும் பிரச்சாரம் செய்யும் பாஜக கும்பலுடன் கூட்டணி சேர்ந்து இத்தனை நாள் தான் போட்டது நாடகம் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார். “இடிந்தகரை மக்களை தாக்கிய இந்துத்துவா சக்திகளுடன் எப்படி கைக்குலுக்க முடிகிறது உங்களால்” என்று எந்த தொண்டனும் இவரை கேட்கவில்லை.
காவிரியில் தண்ணீர் தராமல், காங்கிரசு மட்டுமல்ல, கர்நாடக பி.ஜே.பி அரசினாலும் கொல்லப்பட்ட தஞ்சை விவசாயிகள் பிணத்தின் மீது நின்று கொண்டே பி.ஜே.பி உடன் கைகுலுக்குகிறார். காவிரிக்காக போராடுவதாக பம்மாத்து செய்கிறார். காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என்பது தான் பிஜேபி நிலைப்பாடு என்று தெரிந்தும் கூட்டணி வைக்கிறார் என்றால் இவருடைய போராட்ட குணத்தின் யோக்கியதை என்ன? இதையெல்லாம் மக்கள் யோசிக்கமாட்டார்கள் எனுமளவுக்கு அவரது சந்தர்ப்பவாதம் பீடு நடை போடுகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு என்ன சொல்கிறது பிஜேபி? அணையை காப்பாற்ற மோடி பேசுவாரா? இப்படி காங், போலிக் கம்யூனிஸ்டுகளோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்வதையே தொழிலாக கொண்ட பிஜேபி யிடம் கூட்டணி வைத்து தமிழ் மக்களை விற்கும் துரோக வேலையை தான் வைகோ செய்கிறார். ஆனால் மேடைகளில் பேசும் போது கருப்புத் துண்டை முறுக்கியவாறு இவர் பேசும் தமிழர் உரிமைக்கான எனர்ஜி எங்கேயிருந்து வருகிறது என்பதுதான் தெரியவில்லை.
மொழிவாரி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத மோடியுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் உரிமையை காப்பாற்ற போகிறாராம் இந்த சூரப்புலி.
மோடி திருச்சி கூட்டத்தில் “மொழிவாரி மாநிலங்களை பிரித்து தேசத்தை துண்டாக்கி விட்டது காங்கிரஸ்” என்று மொழிவாரி மாநிலத்திற்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மொழிவாரி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத மோடியுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் உரிமையை காப்பாற்ற போகிறாராம் இந்த சூரப்புலி.
“இல்லை, இல்லை… ஈழப்பிரச்சனைக்காகத் தான் எங்கள் சுயமரியாதையை அடகு வைத்து இத்தனை கூட்டணி மாறினோம். இப்போதும் ஈழ இன அழிப்புக்கு துணை போன காங்கிரசை வீழ்த்த தான் பாஜக வை ஆதரிக்கிறோம்” என்று கூட வைகோவோடு வேறு வழியின்றி இருக்கும் தம்பிகள் வாதாடலாம்.
ஈழ இனப்படுகொலை என்பது காங்கிரஸ், பிஜேபி என அனைவரும் சேர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாக்க நலனுக்காக செய்த ஒன்று என்பது குறித்து வினவில் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதில் வைகோ உள்ளிட்ட தமிழினவாதிகளின் பங்கு குறித்தும் பலமுறை எழுதப்பட்டிருக்கிறது.
இன்று ஈழத்தமிழர்களின் பெயரால் எந்த மோடியை ஆதரிக்கிறாரோ அந்த மோடி, 2009-ல் போர் உச்சத்தில் நடந்து மக்கள் கொல்லப்ப்ட்டு கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? கொலைகார இலங்கை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார். 2009-ல் குஜராத்தில் நடந்த மோடியின் வைபரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ( Vibrant Gujrat Investers Summit) இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் மலிந்த மொரகொடாவுடன் சுற்றுலாதுறையில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதன்படி இலங்கையின் கடற்கரையில் உல்லாச சுற்றுலா விடுதிகளை குஜராத்தும், குஜராத்தில் இலங்கையும் கட்டிதருவார்கள். “இனப்படுகொலைக்கு பின்னர் இன்று தன் போர்குற்றத்தை மறைக்க சுற்றுலாவை பயன்படுத்துகிறான், அதனால் ஈழத்தில் கலைநிகழ்ச்சிகளுக்கு, விருது விழாக்களுக்க்கு, படப்பிடிப்புகளுக்கு செல்லாதீர்கள்” என்று தமிழினவாதிகள் கூறுகிறார்கள் அல்லவா அப்போதே குஜராத் அரசுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
பாஜக உடன் கூட்டணி சேர்வதற்கு, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அவர் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது போன்று ஒரு பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார் வைகோ. ஈழ விசயத்தில் வாஜ்பாயின் யோக்கியதை என்ன? “புலிகள் யாழ்கோட்டை முற்றுகையை விலக்கி கொள்ள வேண்டும் இல்லையேல் புலிகளை இந்திய ராணுவம் அழித்தொழிக்கும்” என்று அறிவித்தவர் தான் வாஜ்பாய். இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக அன்று புலிகளை பின்வாங்க கோரி இந்திய ஆளும் வர்க்கம் சார்பாக தரகு வேலை பார்த்தார் வைகோ.
அதுமட்டுமல்ல இவர் ஏற்றி போற்றும் வாஜ்பாயும் ரனில் விக்கரமசிங்கேவும் அக்டோபர் 2003ல் புதுடில்லியில் விடுத்த கூட்டறிக்கை பின்வருமாறு கூறுகிறது.
“இலங்கையின் பாதுகாப்பில் இந்தியா அக்கறைகொண்டிருக்கிறது, இலங்கையின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் காக்கும் கடப்பாடு கொண்டிருக்கும்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் ஏதும் இலங்கையின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு என்னும் சட்டகத்திற்குள்ளேதான் உருவாக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் போராடும். (இச்சமயம் புலிகள் பயங்கரவாதிகள் என்று ஐரோப்பிய் யூனியன், அமெரிக்கா, கனடா ஆகியவை தடை செய்திருந்தன).
பாதுகாப்பு கூட்டுறவுக்கான ஒப்பந்தமொன்றுக்கான அடிப்படையை உருவாக்க இரு அரசுகளின் பாதுகாப்பு துறை செயலர்கள் விரைவில் சந்தித்து பேசுவார்கள்.
2000-ம் ஆண்டில் 700 சிங்களப் படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி 2002 முதல் 2000 ஆக உயர்த்தப்பட்டது
இந்த வருகைக்கு முன்பு அதிகாரிகள் மட்டத்தில் “ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டாளி ஒப்பந்தம்” (Comprehensive Economic Partnership Agreement- CEPA) பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்திருந்தன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் பரஸ்பர முதலீடுவதற்கான தடைகளை அகற்றி தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்துவதாகும்.
“இலங்கை தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று இலங்கையில், ஆர்.எஸ்.எஸ் இன் சேவா பாரதி தான் சேவை செய்கிறது. நீ பண்ணல. நீ போனா ராஜபக்சே உன்னை அன்னைக்கே காலி பண்ணிடுவான்.”
இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை தீவை கொள்ளையடிக்க திறந்துவிடுவற்கான பொருளாதார ஒப்பந்தங்கள், கொள்ளையடிப்பதற்கு வசதியாக ‘முதலீட்டிற்கு உகந்த சூழலை’ உருவாக்குவதற்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சிங்கள அரசுடன் இராணுவ கூட்டு என்ற திட்டத்தின் ஆரம்ப நிலையில் வாஜ்பாய் பிரதமர் என்றால் அதன் இறுதி நிலையில் மன்மோகன் சோனியா இருந்தார்கள். வாஜ்பாய் காலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டது என்றால் காங்கிரஸ் காலத்தில் முடித்து வைக்கப்பட்டது.
ஆனால் வாஜ்பாயை நல்லவர் என்று கூறுவதன் மூலம் ஈழத்தமிழர்களை ஏமாற்ற முயல்கிறார் வைகோ. காவிகளின் ஈழஎதிர்ப்பு வேலைகள் இன்று இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்திற்குள்ளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சீமானுக்கு எதிராக காவிகள் நடத்திய கூட்டத்தில் சீமானை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் சில முக்கியமான உண்மைகளை உளறி இருக்கிறான் எச்.ராஜா.
“இலங்கை தமிழ் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று இலங்கையில், ஆர்.எஸ்.எஸ் இன் சேவா பாரதி தான் சேவை செய்கிறது. நீ பண்ணல. நீ போனா ராஜபக்சே உன்னை அன்னைக்கே காலி பண்ணிடுவான்.” என்று பேசி இருக்கிறான்.
மற்றவர்கள் சென்றால் காலி செய்துவிடும் ராஜபக்சே ஆர்.எஸ்.எஸ் ஐ அனுமதிப்பதன் மர்மம் என்ன? அதை விளக்குகிறார். ஆர்.எஸ்.எஸ் இன் தமிழக தலைவர் டாக்டர் எம்.எல். ராஜா. 2013 மார்ச் 19-ல் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.எஸ் இன் மாநில தலைவர் டாக்டர்.எம்.எல். ராஜா வின் பேட்டி பின்வருமாறு செல்கிறது
“ஆர்.எஸ்.எஸ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களிடையே பணியாற்றி வருகிறது. நான் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு சென்று வந்துள்ளேன். தமிழ் மக்களிடம் அச்சம் கணிசமாக குறைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் (இலங்கை) ஒற்றுமைக்கு தான் இருக்கிறதே ஒழிய பிரிவினைக்கு அல்ல.
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, பாதுகப்பு, அரசியல் உரிமை வழங்கவேண்டும். இலங்கையில் கூட்டாட்சி முறை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். “
இதன் படி போர் நடந்த காலத்திலும் அதற்கு பின்னும் சிங்கள பேரினவாதத்திற்கு கட்டுப்பட்ட இலங்கை என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ் அங்கு செயல்பட்டு வருவது தெளிவாகிறது. (ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரதத்தில் ஈழமும் ஒரு சமஸ்தானம் என்பதை நினைவில் கொள்க.)
மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் என்.ஜீ.ஓ வும் இலங்கையில் செயல்படுகிறது. சுனாமியை காரணமாக வைத்து இந்த வானரங்கள் அங்கு படையெடுத்தன. இதனால் தான் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட போன்ற சர்வதேச அமைப்புகள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் அங்கு செயல்படமுடிகிறது. இதை தங்களின் வாயாலேயே ஒப்புக்கொள்கிறார்கள். அதையே எச்.ராஜா பெருமையாகவும் பேசுகிறான். தான் ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது இல்லாத போதும் கூட என்.ஜி.ஒ மூலம் ஈழத்திற்கு எதிராக வேலை செய்யும் இந்த இந்துத்துவ கும்பல் மூலம் ஈழம் கிடைக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் வைகோ உள்ளிட்ட தமிழினவாதிகள்.
ராஜபக்சேவிடம் சுஸ்மா சுராஜ் நெக்லஸ் பரிசு வாங்கி வந்ததும், ராஜபக்சே போர் குற்றவாளி இல்லை என்று பா.ஜ.க அறிவித்திருப்பதையும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அரச விருந்தாளியாக ராஜபக்சே வரவேற்கப்படுவதையும், பா.ஜ.க வின் சுப்பிரமணிய சாமி ராஜபக்சேவுக்கு ஆதரவாக லாபி செய்வதையும் இந்த பின்னணியில் பரிசீலிக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்க நலன் என்ற அஜெண்டாவில் தான் காங், பிஜேபி இரண்டும் செயல்படுகின்றன. முக்கியமாக இந்துத்துவா கும்பல் இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் ஈழத்தில் நுழைந்தும் வேலை செய்கிறது.
இலங்கை அரசின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருக்கும் மோடி உள்ளிட்ட பா.ஜ.க வினர் தான் இன்று வைகோ வின் நண்பர்கள். ‘என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே’ என்று இவர் நாளை ராஜபக்சேவுடன் நண்பேண்டா என்று ஜே போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சென்னை வண்டலூர் பொதுக்கூட்டத்தில் தமிழ் சென்டிமெண்டை கவர மோடியின் இந்தி வாய் பாரதிதாசனின் பாடலை பேச, மதிமுக சார்பில் அங்கு பேசிய மல்லை சத்யாவோ மகாபாரதத்தை பேசினார். விபிஷணர்களின் வித்தைக்கு இதை விட என்ன சான்று வேண்டும்?
இதில் வைகோவை தேரோட்டும் கண்ணனாகவும், மோடியை வில்லேந்திய அர்ஜுனனாகவும் பிளக்ஸ் வைத்து மதிமுக அடிப்பொடிகள் அழகு பார்க்கின்றன. ஆனால் இது மோடியையும், கடவுளர்களையும் இழிவுபடுத்துவதாகும் என்று பாஜக தலைவர்கள் கண்டித்திருக்கின்றனர். செய்வது ஒரு வார்டு கவுன்சிலர் அடியாள் வேலை என்றாலும் இந்தியாவைக் கைப்பற்ற நான்தான் மோடிக்கு உபதேசம் செய்கிறேன் என்றால் வைகோவின் உதாரை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
பார்ப்பனிய புராணங்களை ஆராய்ச்சி செய்து இந்துமதவெறியர்களை குஷிப்படுத்தி வரும் வை.கோவிற்கு ஆரியமாயை நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நினைவுபடுத்துகிறோம். அண்ணாவின் இந்த வரிகள் வைகோவுக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது. அந்த வகையில் ஆரியமாயையில் திராவிட விபீஷ்ணர்களும் இருக்கிறார்கள்.
“பேச நா இரண்டுடையாய் போற்றி
தாசர் தம் தலைவா போற்றி
வஞ்சக வேந்தே போற்றி
பயங்கொள்ளி பரமா போற்றி
எம் இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லா கேடே போற்றி”
– ரவி
பாஜகவின் ஈழ ஆதரவு தொடர்பான தகவல்கள் : நன்றி டிசம்பர் 2013 உயிர் எழுத்து இதழில் வெளியான “முற்றமும் அரங்கமும்” என்ற எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரை, மற்றும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் – வெளியீடுகள்.
2008-ம் ஆண்டின் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பல நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் அனுப்பியது தொடர்பான தொலைபேசி உரையாடல்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷன் சென்ற வாரம் டெல்லியில் வெளியிட்டார். அவை ஆம் ஆத்மி கட்சியின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உரையாடல் பதிவுகளின் நம்பகத்தன்மையை தான் சரிபார்க்கவில்லை என்றும், இவை நோக்கியா தொலைபேசி ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த உரையாடலின் ஒரு பதிவு சவுக்கு தளத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்த உரையாடல்களின் பின்னணியையும், அவற்றில் பேசப்பட்ட விபரங்களையும் சுருக்கமாக பார்க்கலாம்.
டாடா, அம்பானி சகோதரர்கள் உட்பட கார்ப்பரேட்டுகள் நடத்தும் மோசடிகளின் உள் விவகாரங்களை அம்பலப்படுத்திய ராடியா பதிவுகள்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போன ஊழலை சமாளிக்க அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான திமுகவின் ஆ ராசாவை பதவி விலக வைத்தனர்.
மேலும், டாடா, அம்பானி உட்பட கார்ப்பரேட்டுகளுக்கு தரகர் வேலை பார்த்து வந்த நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் நவம்பர் 20-ம் தேதி ஓப்பன் மேகசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. டாடா, அம்பானி சகோதரர்கள் உட்பட கார்ப்பரேட்டுகள் நடத்தும் மோசடிகளின் உள் விவகாரங்கள் அந்த உரையாடல்களில் அம்பலமாகியிருந்தன. அவற்றில், 2009-ல் தி.மு.க காங்கிரசு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது தொடர்பாக ஆ ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் நீரா ராடியாவுடன் பேசிய பதிவுகளும் நீரா ராடியா கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளிடம் அண்ணா சாலையில் உள்ள வோல்டாசுக்கு (டாடா நிறுவனம்) சொந்தமான நிலத்தை கையளிப்பது குறித்து பேசிய பதிவும் வெளியாகியிருந்தன.
இந்த சூழலில் அந்த ஆண்டு (2010) நவம்பர் 23-ம் தேதி கனிமொழிக்கும் அப்போது தமிழ்நாடு உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்கும் இடையேயான உரையாடல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரையாடலில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக திமுக சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றியும், தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா, ராடியாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தங்களை எச்சரிக்கத் தவறியது குறித்தும் பேசுகிறார்கள். இதை எல்லாம் தனக்கு யாருமே சொல்லியிருக்கவில்லை என்றும், டாடா-வோல்டாஸ் விவகாரமும் தனக்கு தெரியாது என்றும், கலைஞர் தொலைக்காட்சியை இழுத்து மூடி விடும்படியும் கருணாநிதி சொல்வதாக ஜாபர் சேட் குறிப்பிடுகிறார், எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று கனிமொழிக்கு உறுதி அளிக்கிறார். அதாவது ஐபிஎஸ் அதிகாரியாகவும் உளவுத் துறை தலைவராகவும் இருந்த ஜாபர் சேட் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவிற்கு நெருக்கமான அதிகார வர்க்க தரகராக இருந்து வேலை பார்த்திருக்கிறார்.
வெளியாகியிருக்கும் அடுத்த உரையாடலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி கருணாநிதியின் தனி உதவியாளர் சண்முகநாதன் ஜாபர் சேட்டுக்கு தொலைபேசுவதாக பதிவாகியிருக்கிறது. ஜாபர் சேட், 60, 20, 40 (கோடி) என்று பணம் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கிறார். கலைஞர் தொலைக்காட்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளம்பரக் கட்டணமாக அதைக் காட்டலாம் என்கிறார். ஏதோ பினாமி முதலாளியிடமிருந்து பணம் பெற்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த லஞ்சப் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக கணக்கு காட்ட தமிழ்நாடு உளவுத் துறை தலைவர் உழைத்திருக்கிறார்.
திமுகவுக்கு தரகர் வேலை பார்த்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர் சேட்
இதைத் தொடர்ந்து டிசம்பர் 20-ம் தேதி ஆரம்பித்து 2011 பிப்ரவரி 3-ம் தேதி வரை கலைஞர் தொலைக்காட்சியிலிருந்து சினியுக் பிலிம்சுக்கு கடன் வாங்கிய ரூ 200 கோடி அசல் 8 தவணைகளாகவும் அதற்கான வட்டி 3 தவணைகளாகவும் அனுப்பப்படுகிறது.
பிப்ரவரி 2-ம் தேதி ஆ ராசா, முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெஹூரா, ஆ ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர் கே சந்தோலியா ஆகியோர் 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.
2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த முதலாளிகளிடமிருந்து பணம் பெற்ற கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களும் முதலாளிகளும் கைது செய்யப்படலாம் என்று ஊகங்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. “சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 200 கோடி கடன் வாங்கினோம், அதை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டோம்” என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி பெயரில் அறிக்கை விடப்படுகிறது.
இந்தச் சூழலில் பிப்ரவரி 12-ம் தேதி ஜாபர் சேட், சரத்குமார் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்; கலங்கி போயிருக்கும் சரத்குமார் ‘சிபிஐ நேரடியாக இயக்குநர்களை கைது செய்யத்தான் போகிறார்கள், விசாரணை செய்து கொண்டிருக்கப் போவதில்லை’ என்று சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அவரிடம் சொன்னதாக கூறுகிறார்.
பொய் ஆவணங்களில் கையெழுத்து போட்ட கலைஞர் தொலைக்காட்சியின் எம்டி சரத்குமார் ரெட்டி
2008-ல் சினியுகிடமிருந்து வந்த ரூ 200 கோடி கடனாகத்தான் பெறப்பட்டது என்று காட்டுவதற்கு முன் தேதியிட்ட ஆவணங்களில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பதாகவும், புதிய செய்திகள் வர வர அவற்றை எதிர் கொள்ளும் விதமாக ஆவணங்களை மாற்ற வேண்டியிருப்பதால் குழப்பமாக இருப்பதாகவும், தான் அவற்றை நகல் எடுத்து படித்துக் கொண்டிருப்பதாகவும் ஷரத்குமார் சொல்கிறார். ‘பணப் பரிமாற்றம் நடந்த நேரத்தில் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி இயக்குனராக இருந்திருக்கிறார் அதன் பின்னர்தான் விலகினார்’ என்று அவர் சொல்வதைக் கேட்டு ஜாபர் சேட் அதிர்ச்சியடைகிறார். தன்னிடம் விபரத்தைச் சொல்லி விட்டதாக “பாஸிடம்” தெரிவித்து விடுமாறு சரத்குமார் ரெட்டியிடம் கூறுகிறார். தான் இப்படி தீயாக வேலை செய்வது முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்திருந்தால்தான், தனது தரகர் வேலைக்கு தகுந்த வெகுமதியை பதவியாகவோ வேறு பயன்களாகவோ பெற முடியும் என்பது ஜாபர் சேட்டின் விருப்பம்.
வெளியாகியிருக்கும் அடுத்த உரையாடல் பிப்ரவரி 16-ம் தேதி 112 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாகி, பள்ளி ஒன்றில் காவலில் வைக்கப்பட்டிருந்த கனிமொழியிடம் ஜாபர் சேட் பேசுவது தொடர்பானது. சரத்குமார் பெயரில் வெளியிடுவதற்காக தான் தயாரித்த அறிக்கைக்கு “பாஸ்” ஒப்புதல் கொடுத்து விட்டதாகச் சொல்லி அதைப் படித்துக் காட்டி கனிமொழியின் கருத்து கேட்கிறார். “கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லப் போறோம்னு சொல்லுங்க” என்று கனிமொழி சொல்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் பற்றிய மலிவான கிண்டல்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு சோறு போடுவதற்கு போலீஸ்காரர்கள் உணவுவிடுதிகளை மிரட்டுவது, ஜாபர் சேட் அசடு வழிய பேசி எதிர்காலத்தில் தன்னை டி.ஜி.பி ஆக்குமாறு கனிமொழியிடம் வழிவது என்று உரையாடல் தொடர்கிறது.
2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்சம் அனுப்பிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி.
இதைத் தொடர்ந்து 2011-ம் பிப்ரவரி 18-ம் தேதி கனிமொழி சென்னையில் விசாரிக்கப்பட்டு, மே 20-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்படுகிறார், நவம்பர் 28-ம் தேதி பிணையில் வெளி வருகிறார்.
உரையாடல் பதிவுகளுடன் ரத்தன் டாடா, ஆ ராசாவை புகழ்ந்து கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் நகலையும், கனிமொழி இயக்குனராக இருந்த தமிழ் மையம் அறக்கட்டளைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை விபரங்களையும் பிரசாந்த் பூஷண் வெளியிட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த யூனிடெக் (ரூ 50லட்சம்), டாடா டெலி சர்வீசஸ் (ரூ 25 லட்சம்), ஈடிஏ ஸ்டார் (ரூ 10 லட்சம்), ஷ்யாம் டெலிகாம் (ரூ 10 லட்சம்), ரிலையன்ஸ் கேபிடல் (ரூ 25 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் தமிழ் மையம் அறக்கட்டளைக்கு கொடுத்த “டிப்ஸ்” விபரங்கள் வெளி வந்திருக்கின்றன.
ராடியா தொலைபேசி பதிவுகளில் இடம் பெற்ற டாடா, அம்பானி உட்பட பெருந்தலைகளின் ஊழல்கள் மீது மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இன்றுவரை குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் ராடியாவின் உரையாடல்கள் சட்டப்பூர்வமாக எந்த பங்கையும் ஆற்றுவதை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. மேலும் தனது தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்பட்டது, தனது உயிர்வாழும் உரிமையை பாதிக்கிறது என்று டாடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
தற்போது ஜாபர் சேட்டின் உரையாடல் பதிவுகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டு 2ஜி ஊழல் பற்றிய விவாதத்தை மீண்டும் கிளறி விட்டிருக்கின்றன. “இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை செய்வதற்கான தொழில்நுட்ப வல்லமை சி.பி.ஐ.யிடம்தான் இருக்கிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டு தன் வசம் இருக்கும் பதிவுகளை தேர்தல் நேரத்தில் வெளியிட்டு, தன்னுடன் கூட்டணியில் சேரும்படி திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ்” என்று நக்கீரன் இதழ் கூறுகிறது. “அப்படி இல்லை, இது ஜாபர்சேட்டே தனது உரையாடலை பதிவு செய்ததுதான்” என்று சவுக்கு கூறுகிறது. சுப்பிரமணிய சாமி, சோ போன்ற பார்ப்பன தரகர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “திமுக மட்டும்தான் ஊழலின் உறைவிடம்” என்ற தமது பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய கசிவுகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தேர்தல் அரசியல் கூட்டணி கணக்குகளை மனதில் கொண்டு இந்த உரையாடல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம். வெளியிட்டவர்கள் அந்த நோக்கம் அறியாமல் கூட பயன்பட்டிருக்கலாம். ஊழல் ஒழிப்புக் கட்சி என்ற தமது பிம்பத்தை வளர்க்க முயலும் ஆம் ஆத்மி இதை தனது கட்சி செல்வாக்கை உயர்த்தும் விதமாக பயன்படுத்தியிருக்கிறது.
எனினும் 2ஜி எனும் காங்கிரஸ் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழலை வெறுமனே கலைஞர் டிவி, கனிமொழி, திமுக, ஜாபர் சேட் என்று சுருக்கி புரிந்து கொள்வது அபத்தமான ஒன்று. இந்த ஊழலில் திமுக இருக்கிறது என்றாலும் மேற்சொன்ன பெரும் பெருச்சாளிகள் இதை தமது பங்கை மறைப்பதற்கு திமுகவை மட்டும் பலிகடாவாக்க முயல்வது, அதையும் ஒரு சில தனிநபர்களின் தவறு என்று குறுக்கி தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சட்டபூர்வமாகவே 2 ஜி, நிலக்கரி ஒதுக்கீட்டை மன்மோகன் சிங் அரசு நியாயப்படுத்தி வருகிறது. இது கொள்கை முடிவு, ஊழலல்ல என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி நீதிமன்றங்களிலும் இந்த வழக்குகள் இந்த முட்டுச் சந்திற்குள்ளேதான் சுற்றி வருகிறது. எனவே இந்த உரையாடல்களில் வெளியாகியிருக்கும், தகவல்களை இத்தகைய அடிப்படையிலிருந்தே புரிந்து கொள்வது சரி.
ஸ்வான் டெலிகாமுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் சம்பாதித்த பெருந்தொகையில் ஒரு சிறு துளியைக் கிள்ளி கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கிறார் ஷாகித் பால்வா என்ற முதலாளி. அந்தப் பணம் அவருக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டியிலிருந்து குசேகான் காய், கனி நிறுவனத்துக்குப் போய், அங்கிருந்து சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு இறுதியில் கலைஞர் தொலைக்காட்சிக்கு 6 தவணைகளில் வந்து சேர்ந்திருக்கிறது. இறுதியில் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தவுடன் வேறு வழிகளில் பணத்தைத் திரட்டி கடனாக வாங்கினோம், திருப்பி விட்டோம் என்று கலைஞர் தொலைக்காட்சி கணக்கு காட்ட முயற்சித்திருக்கிறது.
அதாவது, மாபெரும் இந்திய அலைக்கற்றை கொள்ளையில் கருணாநிதி கட்சியின் கனிமொழி கோஷ்டியின் பங்காக ரூ 200 கோடி லஞ்சம் அனுப்ப முயற்சி செய்யப்பட்டு அது தோல்வியடைந்திருக்கிறது. லஞ்சமே 200 கோடி ரூபாய் என்றால் லஞ்சம் கொடுத்தவர் எத்தனை கோடி சம்பாதிக்க உத்தேசித்திருந்திருப்பார். அதை புரிந்து கொள்ள சுமார் 6 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
ஆ ராசா
2008 ஜனவரி மாதம் 10-ம் தேதி டெல்லியின் வழக்கமான ஒரு குளிர்கால நாளாக விடிந்திருந்தது. நகரைச் சூழ்ந்திருந்த பனி மூட்டத்தினால் ரயில், விமான சேவைகள் தாமதமாகிக் கொண்டிருந்தன. இத்துடன் 2010-ல் நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகள் தெற்கு டெல்லி போக்குவரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தன.
மத்திய டெல்லியில் உள்ள தகவல் தொடர்புத் துறையின் தலைமை அலுவலகமான சஞ்சார் பவனில் வேறு வகையான தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருந்தது. நெரிசலில் சிக்கி குப்புற தரையில் கீழே விழுந்த ஒருவரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.
அந்தக் கூட்டம் கோயிலில் சுண்டல் வாங்குவதற்கு கூடியிருந்த பக்தர்களின் கூட்டம் இல்லை. இந்தியாவில் செல்பேசி சேவைகள் வழங்குவதற்கான 122 உரிமங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் ரூ 1,671 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி வரைவோலைகளையும் கொண்டு வந்திருந்த கோடீஸ்வர முதலாளிகள் அல்லது அவர்களது பிரதிநிதிகளின் கூட்டம் அது. வரவேற்பு பகுதிக்கு போக முயற்சித்த எச்எஃப்சிஎல் (ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக்) என்ற நிறுவன முதலாளியே பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
2ஜி உரிமங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக 2007-ம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி தொலைதொடர்புத் துறை அறிவித்திருந்தது. கடைசி தேதியான அக்டோபர் 1-க்குள் 550 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
ரத்தன் டாடா, அனில் அம்பானி
விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முதல் நாளான செப்டம்பர் 25-ம் தேதி அன்று பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று முடிவு செய்தது தொலை தொடர்புத் துறை. அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பம் அனுப்புவதற்கு தயாராக யார் இருந்திருக்க முடியும்? இந்த அறிவிப்பு வெளியாகப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தவர்கள்தான் அதை செய்திருக்க முடியும்.
25-ம் தேதி விண்ணப்பம் கொடுத்தவர்களில் தேவையான ஆவணங்களையும், உரிமத் தொகையையும் யார் முதலில் கட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை என்று 2008 ஜனவரி 10-ம் தேதி மதியம் 1.47-க்கு அறிவித்தது தொலை தொடர்புத் துறை. மாலை 3.30 முதல் ஆவணங்களையும் பணத்தையும் சமர்ப்பிக்கலாம் என்று 2.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்த 45 நிமிடங்களில் ரூ 1,671 கோடி தொகை தயார் செய்து வந்தவர்களுக்கு முதல் உரிமை கொடுக்கப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன.
இதுதான் மேலே பார்த்த முதலாளிகளின் நெரிசலுக்கான பின்னணி. அன்றைக்கு சுண்டல் வாங்கிப் போன முதலாளிகளில் ஒருவர்தான் டிபி ரியாலிட்டியின் முதலாளி ஷாகித் பால்வா. டி பி ரியாலிட்டி, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரின் தொகுதியான பாரமதியைச் சேர்ந்த டைனமிக்ஸ் டெய்ரி நிறுவனத்திலிருந்து முளைத்தது. அதாவது, ஷாகித் பால்வா சரத் பவாரின் பினாமி.
ஷாகித் பால்வா
உரிமம் பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே ஸ்வான் டெலிகாமின் 40% பங்குகளை துபாயின் எடில்சாட் நிறுவனத்துக்கு ரூ 4,200 கோடிக்கு விற்றார் ஷாகித் பால்வா. அதாவது ரூ 1,671 கோடி மட்டும் போட்டு 2ஜி உரிமம் வாங்கியதால் ஸ்வான் டெலிகாமின் சந்தை மதிப்பு ரூ 10,500 கோடியாக உயர்ந்திருந்தது. உரிமம் பெற்ற இன்னொரு நிறுவனமான யூனிடெக் வயர்லெசின் 67.2% பங்குகளை அதன் முதலாளிகள் நார்வேயின் டெலினார் நிறுவனத்துக்கு ரூ 6,200 கோடிக்கு விற்றனர். அதாவது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ 9,200 கோடி.
அதாவது ரூ 1,671 கோடி கொடுத்து சுமார் ரூ 10,000 கோடி சந்தை மதிப்பிலான உரிமங்களை சுருட்டத்தான் ஷாகித் பால்வா முதலான முதலாளிகள் முண்டியடித்திருக்கிறார்கள்.
தொலைபேசி சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு விடுவது மற்றும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைகளை வகுப்பதற்கும், முண்டியடித்தலில் முதலிடம் பிடிப்பதற்கும் இந்த முதலாளிகள் செய்த ஏற்பாடுகள் 2ஜி ஊழலாக வெடித்து வெளியாகின..
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை விடாப்பிடியாக ஆ ராசா கடைப்பிடித்ததற்கும், ’24-ம் தேதி அறிவிக்கப் போகிறோம், 25-ம் தேதியே கொடுக்கும் வகையில் விண்ணப்பத்தை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு முறை முதல் முன்தகவல் பெறுவதற்கும், ‘மதியம் 3.30-க்கு ரூ 1,671 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லப் போகிறோம், தயாராக இருங்கள்’ என்று இரண்டாவது முன் தகவல் பெறுவதற்கும் ஷாகித் பால்வா கட்டிய கப்பம்தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு போன ரூ 200 கோடி என்று வைத்துக் கொள்ளலாம்.
அதாவது “இன்பர்மேசன் இஸ் வெல்த்”. ‘தாய் தந்தையரை சுற்றி வருவது உலகையே சுற்றி வருவதற்கு சமம்’ என்ற தகவலை தெரிந்த பிள்ளையார் ஞானப் பழத்தை லபக்கிக் கொண்டது போல முன் கூட்டியே தகவல் தெரிய வந்தவர்கள் உரிமங்களை உருவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி உரிமங்களை உருவி விழுங்கும் முதலாளிகளின் வாயோரம் சிதறும் எச்சிலை தகவல்களை கொடுத்தவர்கள் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கலைஞர் தொலைக்காட்சி பொறுக்கிய தொகைதான் ரூ 200 கோடி.
2ஜி அலைக்கற்றை ஊழல்
ஸ்வான் டெலிகாம் பங்குகளை வாங்குவதற்கு ரூ 4,200 கோடி கொடுத்த எடில்சாட் முதலாளி என்ன இளிச்சவாயனா? ஷாகித் பல்வாவுக்கு சும்மாவா பணத்தை தூக்கிக் கொடுத்தான். அடுத்து வரும் ஆண்டுகளில் அந்தப் பணத்தைப் போல பல மடங்கு தொகையை இந்தியாவிலிருந்து கொண்டு போகத்தான் அந்த பணத்தை இறக்கியிருக்கிறான். அதாவது, இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் கட்டும் மொபைல் கட்டணத்திலிருந்து போட்ட முதலுக்கு லாபம் சம்பாதித்து விடலாம் என்ற சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ரூ 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கும், ரூ 8,629 கோடி ஷாகித் பால்வாவுக்கும் போயிருக்கிறது.
இது போன்று இந்த சுண்டல் வரிசையில் முதலிடம் பிடித்து உரிமங்களை வென்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 9. மேலே சொன்ன ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுடன், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் டெலிகாம், சென்னையைச் சேர்ந்த சிவசங்கரனின் எஸ் டெல், மலேசிய முதலாளி அனந்தகிருஷ்ணனின் ஏர்செல் மேக்சிஸ், எம்டிஎஸ் மற்றும் வீடியோகானுக்குச் சொந்தமான டேட்டாகாம். உரிமங்களைப் பெற்ற இரண்டு நிறுவனங்கள் அவற்றை கைமாற்றி விடுவதன் மதிப்பே தலா சுமார் ரூ 10,000 கோடி என்றால், 9 நிறுவனங்களும் செல்பேசி சேவை தொடங்கி அடிக்கப் போகும் லாபம் பல மடங்கு இருக்கும். அந்த அடிப்படையில் தணிக்கை அதிகாரி மதிப்பிட்ட ரூ 1.76 லட்சம் கோடி இழப்பையும் புரிந்து கொள்ளலாம்.
உரிமங்களை வழங்குவதில் அரசுக்கு இழப்பு என்பதெல்லாம் கற்பனை என்று முதலாளித்துவ அறிஞர்களும், கபில் சிபல் முதலான அமைச்சர்களும், வாதிட்டனர். ‘அலைக்கற்றை இருந்தால் போதுமா, கோபுரம் நாட்ட வேண்டும், சேவை தொடங்க வேண்டும், வாடிக்கையாளர் பிடிக்க வேண்டும், அதன் பிறகு பில் போட வேண்டும், பணம் வாங்க வேண்டும், அதற்குப் பிறகு சம்பாதிக்கப் போவதை வைத்து இப்போதே இழப்பு’ என்று எப்படி சொல்கிறீர்கள் என்று நியாயம் பேசினார்கள்.
ஆனால், உண்மையில் சிஏஜி சொன்ன ரூ 1.76 லட்சம் கோடியை விட இன்னும் பல மடங்கு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
2ஜி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் அனில் அம்பானி.
உதாரணமாக, 2007-ம் ஆண்டு செல்பேசி சேவைகளை வழங்கி வந்த ஹட்சிசன் என்ற ஹாங்காங் நிறுவனத்திடமிருந்து 66.3% பங்குகளை இங்கிலாந்தின் வோடபோன் நிறுவனம் ரூ 50,000 கோடி கொடுத்து வாங்கிக் கொண்டது. அதாவது, அலைக்கற்றை உரிமம் பெற்று, செல்போன் கோபுரங்கள் அமைத்து, இந்திய மக்களுக்கு சேவையை விற்று, பில் போட்டு, பணம் வசூலித்து சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 75,000 கோடி. அவ்வளவு பணத்தை முதலாகப் போட்ட முதலாளிகள் இந்திய சந்தையில் செல்பேசி சேவைகளை விற்பதன் மூலம் அதற்கு ஈடான லாபத்தை ஆண்டு தோறும் சம்பாதிக்க முடியும்.
இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஏர்டெல் நிறுவனம் 2012-ம் ஆண்டு வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ 71,450 கோடி வசூலித்து அதில் கருவிகளுக்கான தேய்மானம் உட்பட அனைத்து செலவுகள், கடன்களுக்கு வட்டி, உரிமத் தொகை, வரிகள் உட்பட அனைத்தையும் கழித்த பிறகு ரூ 4,200 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது.
2013-ம் ஆண்டு இறுதியில் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து இந்தியச் சந்தையின் 90 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ 2.5 லட்சம் கோடி வசூலித்திருக்கின்றன. இதுதான் 2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக முதலாளிகள் நடத்திய தள்ளுமுள்ளின் பின் இருக்கும் சூட்சுமம்.
1980-களில் தொலைத் தொடர்பு கருவிகள் உற்பத்தியை தனியாருக்கு விட்டதில் தொடங்கி, 1990-களில் தொலைபேசி சேவை வழங்கும் துறையை படிப்படியாக தனியார் மயமாக்கியதன் பொருள் நம் எல்லோரையும் கூட்டாக மொட்டை அடிக்க முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது என்பதுதான்.
அப்படி கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களில் அவர்களுக்குள் அடித்துக் கொண்ட 20 ஆண்டு வரலாற்றின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல். 1990-களில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராமில் ஆரம்பித்து, ஐக்கிய முன்னணி அரசின் பேனி பிரசாத் வர்மா, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜக்மோகன், பின்னர் பிரதமர் வாஜ்பாயி, பிரமோத் மகாஜன், அருண் ஷோரி வரை முறை வைத்து முதலாளிகளுக்கு கடை திறந்து விட்டார்கள். இதற்காகவே பிஎஸ்என்எல் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதற்கு பெரும் சதியே நடந்தது.
இந்தியா முழுவதற்கும் விண்ணப்பம் கொடுத்து விருப்பப்பட்ட இடத்தில் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று சுக்ராமால் சலுகை காட்டப்பட்டது ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக்ஸ் நிறுவனம் (பின்னர் ரிலையன்ஸ் அம்பானியால் வாங்கப்பட்டது).
1990-களின் இறுதியில் ஒப்பந்தப்படி அரசுக்கு உரிமத் தொகையை கொடுக்காமல் ரூ 500 கோடிக்கு டிமிக்கி கொடுத்த முதலாளிகளுக்கு உதவுவதற்கு விதிகளையே மாற்றி தொகையை தள்ளுபடி செய்து உதவியது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு.
2002-ல் முறையான உரிமம் இல்லாமலேயே உள்ளூர் இணைப்புக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் சேவை வழங்கிய ரிலையன்சுக்கு கதவைத் திறந்து விட்டது பிரமோத் மகாஜன் தலைமையிலான அமைச்சகம்.
2004-ல் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் அனந்த கிருஷ்ணனுக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்க வைத்தார் அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன்.
இவ்வாறாக இந்திய மக்களிடமிருந்து சம்பாதிப்பதற்கு முதலாளிகள் நடத்தியசண்டைப் போட்டியில் ஒரு தரப்புக்கு உதவி செய்து நோண்டித் தின்றவர்கள் ஏராளம்.
இந்தக் கொள்ளையில் அன்னிய முதலாளிகளும் பங்கேற்க வசதியாக தொலை தொடர்புத் துறையில் அன்னிய முதலீட்டின் அளவு 27%, 49%, 74% என்று படிப்படியாக அதிகரித்து சென்ற ஆண்டு 100% அன்னிய முதலீடும் அனுமதிக்கப்பட்டுள்ளது..
காலையில் எழுந்ததும், ‘பல் தேய்ச்சாச்சு, ஆய் போய்கிட்டு இருக்கேன்’, ‘இன்னைக்கு பலகாரத்துக்கு இட்லியும் கெட்டி சட்டினியும்’ என்று நெருங்கிய நட்புகளுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் அனுப்புவதிலிருந்து, பேருந்தின் முன் பக்கம் ஏறியவர் பின்பக்கம் ஏறியவருக்கு கால் அடித்து டிக்கெட் எடுத்து விடச் சொல்வது, கிரிக்கெட் அப்டேட்ஸ், தினசரி ஜோதிடம், போட்டிகள், இணையம், செக்ஸ் சாட் என்று நூற்றுக் கணக்கான வழிகளில் நூற்றுக்கணக்கான முறை ஒவ்வொருவரும் தமது தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 10 செலவழித்தால் கூட, மாதம் ரூ 300, ஒரு வருடத்துக்கு ரூ 3,500 வரை செலவழிக்கிறார். 90 கோடி வாடிக்கையாளர்களும் ரூ 3 லட்சம் கோடி செலவழிக்கிறார்கள். இதுதான் லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்கப்படுவதன் நிதர்சனம்.
“கொள்ளையா? 1990-களுக்கு முன்னே எல்லாம் யார்கிட்டயும் போனே கிடையாது சார். மொத்தமே 70 லட்சம் இணைப்புகள்தான் இருந்தன, 30 லட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தாங்க. இப்போ பாருங்க நகரங்களில் மூட்டை தூக்குற தொழிலாளரில் ஆரம்பிச்சி, கிராமப் புற விவசாய கூலித் தொழிலாளர்கள் வரை செல்பேசி வைச்சிருக்காங்க. எவ்வளவு வாய்ப்பு பெருகியிருக்குது பாருங்க, இதுதான் வளர்ச்சி. கடையில போய் அடையாள சான்றும், முகவரி சான்றும், போட்டோவும் கொடுத்தா தொலைபேசி இணைப்பு கிடைத்து விடுகிறது. இதுவல்லவா வளர்ச்சி.”
ஆமாம், நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம், கடைசி இந்தியன் வரை சில பத்து ரூபாய்கள் கொடுத்தால் தொலைபேசி இணைப்பு பெற்று, சில நூறு ரூபாய்கள் கொடுத்து வாங்கிய தொலைபேசி கருவியில் பேச வைத்திருக்கின்றன தனியார் மய, தாராள மய கொள்கைகள். ஆனால் நாட்டில் 50%-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை, சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 50%-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பீடிக்கப்பட்டுள்ளனர். 30 கோடி தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து உத்தரவாதமாற்ற நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள்.
கழிப்பறை வசதி கொடுத்தும், ஊட்டச் சத்து வழங்கியும், நிலையான வேலைவாய்ப்பு அளித்தும் சம்பாதிக்க முடியாத இந்திய தரகு முதலாளிகள்தான் கடைக்கோடி இந்தியன் வரைக்கும் செல்பேசியை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இது வளர்ச்சியா? வீக்கமா?
சரியாகச் சொன்னால் அத்தியாவசியம் என்ற பெயரில் செல்பேசியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி உழைக்கும் மக்களை அதில்சிக்க வைத்து அவர்களது சம்பளத்தில் கணிசமான தொகையை இந்த நிறுவனங்கள் கடத்திச் செல்கின்றன. சேவை, தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு தொழிலாளியை மறைமுகமாகவும் சுரண்ட முடியும் என்பதால் இவை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.
இந்திய நாட்டை கொள்ளை அடிப்பதில் அதன் இயற்கை வளங்களை, காடுகளை, கனிம வளங்களை வெட்டி கொண்டு போவதும், குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்டி பொருட்கள் செய்து கொண்டு போவதும் ஒரு புறம். உழைத்துச் சேர்த்த பணத்தை பாக்கெட்டிலிருந்து திருடிச் செல்வது அந்த கொள்ளையின் மறுபுறம். அத்தகைய கொள்ளைதான் இந்த 2-ம் தலைமுறை, 3-ம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடுகளும், அவற்றின் மூலம் வழங்கப்படும் செல்பேசி சேவைகளும். கழிப்பறை இல்லாத, ஊட்டச் சத்து இல்லாத இந்தியன் செல்பேசியில் பேசப் பேச முதலாளிகளின் கல்லா நிறைகிறது.
தொலைதொடர்பு வசதிகள் மூலம் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்து விடலாம் என்று முதலாளித்துவ அறிஞர்கள் திட்டம் போட்டுக் கொடுக்கிறார்கள். அதாவது ஏர்டெல் முதலாளி ஆண்டுக்கு லாபம் சம்பாதிப்பதன் மூலம் இந்திய விவசாயி பணக்காரர் ஆகி விடுவாராம். எப்படி என்று கேட்டால். அரசு கொள்கைகள் பற்றிய தகவல்களை பெற்று, மைய ஓட்டத்தில் கலந்து விடுவார்களாம். கல்வி, தொலைதூர மருத்துவ வசதி இவற்றின் மூலமும் பலன் கிடைக்குமாம். அரசு நிர்வாகத்தை மக்கள் கண்காணிப்பதன் மூலமாக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிந்து செலவுகள் குறையுமாம். கிராமப் புறங்களில் செல்போன் ரீசார்ஜ் கடை வைப்பது, சுற்றுலா வழிகாட்டிகளாக வேலை செய்வது போன்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமாம். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்குமாம்.
ஆனால், இதற்கு அடிப்படை கல்வி அறிவு வேண்டும், கிராமங்களுக்கு சாலை போட வேண்டும், தடையில்லாத மின்சாரம் வேண்டும், கடன் வசதிகள் வேண்டும் என்று பல “டும்”கள் இருக்கின்றன. கோவணம் மட்டும் எஞ்சியிருக்கும் விவசாயி தொழில்நுட்பத்தின் மூலம் முதலாளிகளை சந்தையில் எதிர் கொண்டு தன் ஏழ்மையை ஒழித்துக் கொள்வார் என்றால், ஏற்கனவே கோட்டு சூட்டு போட்டு ஆண்டிலியா மாளிகைகளில் குடியிருக்கும் முதலாளிகள் சொர்க்கத்துக்கே போய் விடா விட்டாலும், தமது சொத்து மதிப்பில் பல பத்தாயிரம் கோடிகளை ஏற்றிக் கொள்வார்கள் என்பது மட்டும் நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது.
செல் பேசி மூலம் சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டு பொருளாதார ரீதியாக ஏழைகளும், விவசாயிகளும் முன்னேற முடியும் என்றால் அதே சேவையை பயன்படுத்தி ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் முதலாளிகள் ரியல் எஸ்டேட் சூதாட்டங்கள் முதல், கிரிக்கெட் சூதாட்டங்கள் வரை, பங்குச்சந்தை, நுண்கடன் வசதிகள், ஆம்வே புதுப் புது வழிகளில் கொள்ளை அடிக்க வழி செய்து கொடுத்திருக்கின்றன இந்தத் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள்.
இப்போது உரிமம் பெற்று கொள்ளை அடிக்க உத்தேசித்த ஷாகித் பால்வா மீது வழக்கு, கைது. அந்தக் கொள்ளைக்கு உள்தகவல் கொடுத்து உதவி செய்த ஆ ராசா மீது வழக்கு, கைது. அந்த கொள்ளைப் பணத்தில் ஒரு துளியை லஞ்சப் பணமாக பொறுக்கிக் கொண்ட கலைஞர் தொலைக்காட்சியின் சரத்குமார் மீதும் கனிமொழி மீதும் வழக்கு, சிறை.
நேற்று முளைத்த ஸ்வான் டெலிகாம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் அனுப்புவதை மூன்று லெட்டர்பேட் நிறுவனங்கள் மூலம் கைமாற்றி அனுப்பியிருக்கிறது. பழம் தின்று கொட்டை போட்ட டாடாக்களும், சிவசங்கரன்களும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் கருப்புப் பணத்தை லஞ்சமாக கைமாற்றியிருக்கலாம். அப்படி லஞ்சம் கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் என்ன ஆனார்கள்?
1990-கள் முதல் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தையை ஊதிப் பெருக்கி, நாட்டு மக்களை மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை? அந்த முதலாளிகளுக்கு தொலைத்தொடர்பு துறையை திறந்து விட்டு நாட்டை மறுகாலனியாக்க பாதையில் கொண்டு செல்லும் காங், பாஜக முதலான ஆளும் வர்க்க கட்சிகளுக்கு என்ன தண்டனை?
முதுபெரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார், கடந்த டிசம்பர் 30 அன்று காலமாகி விட்டார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடிவந்த அவரது மறைவு தமிழக மக்களுக்கு ஈடுசெய முடியாத பேரிழப்பாகும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் பிறந்த நம்மாழ்வார், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று, கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பண்ணை மேலாளராகப் பணியாற்றினார். சிட்டுக் குருவிக்கும் சிற்றெறும்புக்கும் சேர்த்து சமைத்து பல்லுயிர் பேணும் அறத்தைக் கொண்ட மரபில் வந்த நம்நாட்டு விவசாயத்தைப் பசுமைப் புரட்சி என்ற பெயரால் நாசமாக்கும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டு அதிருப்தியுற்று, இயற்கைவழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் மாபெரும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பசுமைப் புரட்சியின் போது அரசாங்கம் இரசாயன உரங்களை ஊக்குவித்துக் கொண்டிருந்த போது, அவர் கிராமந்தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து அதன் பாதிப்புகளை அறிவியல்ரீதியாக உணர்த்தி, இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார். ஒற்றை மனிதனாகத் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம், இன்று பலரை இயற்கை வேளாண்மையின் பக்கம் திருப்பியிருக்கிறது.
நம் நாட்டின் மரபுரிமையாக உள்ள வேப்பமரத்துக்கான காப்புரிமையை அந்நிய ஏகபோக நிறுவனங்கள் தமக்கானதாகத் திருடிக் கொண்டபோது, அதனை எதிர்த்து வந்தனா சிவா முதலானோருடன் இணைந்து போராடி அப்பாரம்பரிய உரிமையை அவர் மீட்டெடுத்தார். பி.டி.கத்தரியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை எதிர்த்த அவர், அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி.க்கு எதிராகப் பேச வைத்தார். அரச்சலூர் செல்வம், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோர் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி.கத்தரியின் கேடுகளை எடுத்துச் சோல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவு பெற்றதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்த அவர், காடுகள் இல்லையேல் மழையும் ஆறுகளும் இல்லாமல் போய் விவசாயமே பொய்த்துவிடும் என்பதை உணர்த்தி பல போராட்டங்களில் முன்னின்றார். இயற்கை விவசாயப் பயிற்றுநர்களை ஒடுக்குவதற்காக, கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேளாண் மன்றச் சட்டத்தை முறியடித்ததிலும் அவரது பங்கு முக்கியமானது.
ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானியான மாசானபு ஃபுகோகா மற்றும் பெர்னார்ட், ரேச்சல் கார்சன், குமரப்பா, தபோல்கார் முதலான இயற்கை வேளாண் வித்தகர்களின் மூலம் அறிந்த தொழில்நுட்பத்தையும், தனது அனுபவ அறிவினால் உணர்ந்ததையும் அவர் சாமானிய விவசாயிகள் புரிந்து கொள்ளும் மொழியில் விளக்கினார். வெள்ளைத்தாடியுடன் தமிழக உழவனின் தோற்றத்தில் துண்டு போர்த்திய வெற்றுடம்புடன் எளிமையாகத் திகழ்ந்த அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பேரழிவுத் திட்டத்துக்கு எதிராக, கடந்த டிசம்பர் மாதத்தில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இயற்கை எய்தியது மிகவும் வேதனைக்குரியதாகும்.
கரூர் மாவட்டம் , கடவூரிலுள்ள “வானகம்” எனும் தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார் (கோப்புப் படம்).
பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்காடாக விவசாய நிலங்கள் மாற்றப்பட்டு, இரசாயன உரங்களின் நச்சுக் குவியலாலும் மரபீணி மாற்றப் பயிர்கள் எனும் இயற்கை அழிப்புத் திட்டங்களாலும் பாழ்பட்டுள்ள தமிழக விவசாயத்தை, அந்த அழிவிலிருந்து காப்பாற்ற அவர் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி இயற்கை வேளாண்மை முறைகளை மீட்டெடுத்தார். இரசாயன உரத்துக்கு மாற்றாக, பயிர் சுழற்சி வேளாண்மை முறையின் மூலம் அதை ஈடுசெய்ய முடியுமென்பதை அவர் அறிவியல் ரீதியாகச் செயல்படுத்திக் காட்டினார். கேடு விளைவிக்கும் மரபீணி மாற்றப் பயிர்களை எதிர்த்த அவர், பாரம்பரிய ஒட்டு ரகங்களை உருவாக்கினார்.
உழவுக்கும் உண்டு வரலாறு, தாய்மண்ணே வணக்கம், பூமித்தாயே, எந்நாடுடைய இயற்கையே போற்றி, இனி விதைகளே பேராயுதம், வயிற்றுக்குச் சோறிட வேண்டும், நோயினைக் கொண்டாடுவோம் – என 15-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள அவர், அதிக மகசூலால் பிரபலமான மடகாஸ்கரின் ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மைநெல் சாகுபடியை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்படும் துரித உணவினால் ஏற்படும் கேடுகளை விளக்கி, நமது பாரம்பரிய உணவு தானியங்களின் மகத்துவத்தை உணர்த்தியதோடு, அதிக விலையுள்ள ஆப்பிளை வாங்கிச் சாப்பிடுவதைப் பெருமையாகக் கருதும் நம் நாட்டில், அதைவிட அதிகச் சத்துக்களைக் கொண்ட கொயாப்பழம் மலிவு விலையில் கிடைப்பதை விளக்கித் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இன்று நாசமாக்கப்படுவது விவசாயமும் விவசாயிகளும் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நச்சு ஆலைகள், இயற்கை மூலவளங்கள் கொள்ளையிடப்படுதல், சிறு தொழில்களும் சில்லறை வணிகமும் நசுக்கப்படுதல் – என நாடும் மக்களும் கேள்வி முறையின்றிச் சூறையாடப்படுகின்றனர். இத்தகைய பேரழிவுக்குக் காரணமாக இருப்பது ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கக் கொள்கைகள். நாட்டையும் மக்களையும் சூறையாடும் மறுகாலனியாதிக்கத்தைப் போராடி முறியடிக்க அரசியல் கிளர்ச்சிகளும் அரசியல் புரட்சிகளும் இன்று உடனடித் தேவையாகியிருக்கிறது.
ஆனால் நம்மாழ்வார், விவசாயத்தில் மறுகாலனியாக்கத்தின் கொடிய விளைவுகளை மட்டும் எதிர்த்தாரே தவிர, இதற்குக் காரணமாக உள்ள அரசியல் கட்டமைப்பை எதிர்க்கத் துணியவில்லை. இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகாரக் கொள்கைகளை முடமாக்கிவிட முடியும் என்று நம்பினார். அவர் எவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடினாரோ, அவற்றைத் திணித்த அரசியல் கட்டமைப்பை எதிர்த்து நிற்காமல், அந்தக் கட்டமைப்பில் உள்ளவர்களுடனும், தன்னார்வக் குழுக்களுடனும் இணைந்து செயல்பட்டார். சாமானிய மக்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுசேர்க்கும் களமாகவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பார்த்தார். ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கத்தால் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டு வரும் சூழலில், அரசியல் பார்வையின்றி யாரெல்லாம் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக நிற்கிறார்களோ அவர்களுடனெல்லாம் இணைந்து நின்றார். ஏகாதிபத்தியங்களைப் புரவலர்களாகக் கொண்ட தன்னார்வக் குழுக்கள் முதல் இந்துவெறியர்களின் சுதேசி ஜக்ரான் மஞ்ச் வரை அனைவருடனும் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றார். இத்தகைய பலவீனங்கள் அவரிடமிருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகர விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வூட்டி இயற்கைவழி வேளாண்மையை மீட்டெடுக்க இடையறாது போராடிய மகத்தான இயற்கை வேளாண் விஞ்ஞானியாவார்.
மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு விசுவாசமாக நிற்கும் எதிரிகளுடனும், ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களுடனும் இணைந்து போராடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வழி வேளாண்மைப் பாதுகாப்பு முதலானவற்றை ஒருக்காலும் மீட்டெடுக்க முடியாது என்பதை அவரது ஆதரவாளர்கள் உணர்ந்து, மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் அவர் கண்ட கனவை நனவாக்க முன்வரவேண்டும்.
விதிமுறைகளை மீறி முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்திய திருச்சி உறையூர் அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளி அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி. இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் 2009 மற்றும் தமிழக அரசாணை எண்.60 ன் படி கூறப்பட்ட மாணவர் சேர்க்கை விதியின்படி, “மே மாதம் இறுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கவும், ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்” என அரசு உத்தரவு போட்டுள்ளது. இதனை துளிகூட மதிக்காமல், “ஜனவரி மாதமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது” என மேற்கூறிய பள்ளியின் முன்பாக விளம்பர பேனர் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் பேனர் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்திற்கு சென்று அந்த பேனரை புகைப்படம் எடுத்து வந்தனர். பின்பு மாணவர் சேர்க்கை நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த பள்ளியின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசிய நம் தோழர், தன் பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பேசிய போது எதிர் முனையில் பேசிய பெண் சந்தோஷத்துடன் ‘நீங்கள் இப்பொழுதே வாருங்கள் உங்கள் பிள்ளையை சேர்த்துக் கொள்கிறோம், ஆனால் கட்டண விவரத்தை நேரில் மட்டுமே கூறுவோம்” என்றார். இந்த உரையாடல் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடப்பதை உறுதி செய்து கொண்டோம்.
இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் 2009 என்பது நலிவடைந்த மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆனால் பல தனியார் பள்ளிகள் இதனை ஏற்க மறுத்து முன்கூட்டியே காசு கொடுப்பவருக்கு சீட் கொடுத்து விட்டு 25% இட ஒதுக்கீட்டை கேட்டு போகும் நலிவடைந்த பிரிவினருக்கு சீட் இல்லை என்று அடாவடியாக மறுக்கும் நிலை ஊரறிந்த ரகசியம்.
அதன்படி கல்வியை வியாபாரமாக்கி விற்பனை பண்டமாக்கிய பெரும் கல்வி முதலைகள், சட்டத்தை மதிக்காமல் வழக்கம் போல் டிசம்பர் ஜனவரி மாதத்திலேயே மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன. இதனை அம்பலப்படுத்தியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்தோம்.
அதன்படி 29.01.14 காலை 11.00 மணி அளவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருச்சி மாவட்ட பு.மா.இ.மு. செயலர் தலைமையில் சென்ற தோழர்கள் அரபிந்தோ பள்ளியின் அடாவடித்தனத்திற்கெதிராகவும் பகற்கொள்ளைக்கெதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். இதனை அப்பகுதியில் வாழும் பெருவாரியான உழைக்கும் மக்கள் பார்த்து ஆதரவளித்தார். ஆர்ப்பாட்டத்தை கேள்விப்பட்டு உடனடியாக காந்தி மார்க்கெட் காவல் துறையினர் வந்தனர்.
“விதிகளை மீறி அனுமதி வாங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், இது தவறு. உடனே கலைந்து செல்லுங்கள்” என்றும் “கைது செய்வோம்” என்றும் மிரட்டினர்.
அதற்கு நம் தோழர்கள் “அரசு விதிகளை மீறி செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம்” எனவும், “இது பொது மக்களுக்கோ காவல் துறையினருக்கோ எவ்வித இடையூறையும் ஏற்படுத்த போவதில்லை” என்றும் கூறினர்.
அதற்கு காவல்துறை “எங்களிடம் ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நாங்களே பந்தோபஸ்து கொடுத்திருப்போம். நீங்கள் கேட்டு எப்போது இல்லை என்றிருக்கிறோம்” என்று பேசி சமரசம் செய்ய முயன்றனர்.
“சரி இப்போது கேட்கிறோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்க வேண்டும்” என்றவுடன் அதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.
பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் செழியன், மாவட்ட இணைச்செயலாளர் சாருவாகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் ஆகியோர் சிஈஓ வை பார்க்க சென்றனர். ஆனால் அவர் வேறொரு பள்ளி ஆய்விற்கு சென்றிருந்ததால் நம்மிடம் போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது அவரிடம் “அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி ஜீன் மாதம் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கையை விதிகளுக்கு புறம்பாக ஜனவரியிலேயே தொடங்கி விட்டனர். அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளோம்” என்றனர்.
அதற்கு அவர் ‘சார் ஸ்கூல் இன்ஸ்பெக்சன்ல இருக்கேன், நீங்கள் என் பிஏவிடம் கொடுத்து விட்டு போங்க” என்றார்.
நாமும் பிஏவிடம் சென்று விஷயத்தை விளக்கி பேசியும் “மெட்ரிக் பள்ளிக் கல்வித்துறையின் அறிக்கையான விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையை செய்யும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற செய்தி குறிப்பையும் கூறி, அந்தப்பள்ளி வாசலில் உள்ள விளம்பரப் பலகையின் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரி எழுத்துப்பூர்வமான புகாரும் அளித்தோம்.
வெளியில் வந்ததும் காவல் துறையினரே, “தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த நீங்கள் செய்யும் செயல் சரியானது தான். இருந்தாலும் செய்தி ஊடகங்களில் வந்தவுடன் அதைப் பார்த்து எங்கள் உயரதிகாரிகள் எங்களிடம் கத்துவார்கள்” என்று தம் கையறு நிலையை கூறி, “அடுத்த கட்டமாக எதுவும் செய்து விட வேண்டாம். நாங்களும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்” என்றனர்.
முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு நாம் மீண்டும் பேசிய போது, “சி.பி.எஸ்.சி பள்ளியில் ஏப்ரல் மாதம் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அதற்கு எதிராக இந்தப் பள்ளி செயல்பட்டு வருவதை எங்கள் ஆய்வு குழு மூலம் நாங்களும் உறுதி செய்துள்ளதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை (உரிமம் ரத்து) எடுக்கப்படும்” என்று கூறினார்.
நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவாக எனக்கூறிக் கொண்டு தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் 25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூட முடியாமல் பகற்கொள்ளை அடிப்பதிலும் அரசு உத்தரவுகளை மதிக்காமல் காற்றில் பறக்க விடுவதிலும் முன்னணியில் நிற்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் சார்பாக போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி
9943176246.
“மத்தியிலும், மாநிலத்திலும் தாமரை ஆட்சி அமைந்திட சபதம் ஏற்க தாமரை சங்கமம் மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அடுத்து திருச்சியில் மோடி பங்கேற்ற இளம் தாமரை மாநாடு லட்சோப லட்சம் தொண்டர்களின் வருகையால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வண்டலூரில் நடக்கவிருக்கும் திறந்தவெளி மாநாடு பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கும்” என்று பொன்னாரின் “உற்சாகமான” பேட்டியை ஜூனியர் விகடனில் படித்த பிறகு ‘பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கப் போகும்’ திறந்த வெளிக் கூட்டத்தை போய் பார்த்து வரலாம் என்று புறப்பட்டோம்.
‘பி.ஜே.பியை உலக அளவில் கொண்டு சேர்க்கப் போகும்’ கூட்டத்தில் மோடி. உள்ளூர் அளவில் ‘தொண்டர்கள்’ எப்படி வந்தார்கள் என்பது இரகசியம்.
கூட்டத்தில் பேசுவதைக் கேட்பதற்காக செல்ல வேண்டாமென்றும், கூட்டத்திற்கு யார் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எப்படி அழைத்து வரப்படுகிறார்கள், கூட்டணிக் கட்சிகளின் பங்கேற்பு எப்படி போன்றவற்றை மட்டும் அறிந்து வரலாமென்று முதலிலேயே திட்டமிட்டோம்.
கோயம்பேடு அருகில் பா.ஜ.க கொடிகள், மோடி பொதுக்கூட்ட பேனர்கள் கட்டப்பட்டு நான்கு வேன்கள் நின்றிருந்ததை பார்த்தோம். வண்டியில் ஏற்கனவே இருந்த சிலருடன் இன்னும் ஓரிருவர் ஏறிக்கொண்டிருந்தனர். உள்ளே நிறைய காலி இருக்கைகள் தென்பட்டன. நாமும் இவர்களுடன் சேர்ந்து கொண்டால் பாஜக ‘தொண்டர்களின்’ நேரடி கருத்தை அறியலாமே என்று நினைத்தோம்.
வண்டியில் இருந்தவர்களிடம், “நாங்களும் மோடி கூட்டத்துக்குத்தான் போறோம், வண்டில ஏறிக்கலாமா?” என்று கேட்டதும், “சார் கிட்ட கேளுங்க” என்று முதல் வண்டியை நோக்கி கைகாட்டினார்கள். சார் எனப்பட்டவரை அணுகினோம். சற்றே அளவுக்கதிகமான தொந்தியும், வெள்ளை வேட்டி சட்டையும், நெற்றியில் மேல் நோக்கி இழுக்கப்பட்ட நாமமுமாக புன்னகைத்தபடியே ஒருவர் நெருங்கினார். “நாங்களும் மோடிகூட்டதிற்குத்தான் போறோம். வண்டியில ஏறிக்கலாமா” என்று கேட்க, “யூ ஆர் வெல்கம். போகும் போது உங்க போன் நம்பரை மட்டும் கொடுத்திட்டு போயிடுங்க” என்று கையை குலுக்கி கொஞ்சம் வித்தியாசமாக புன்னகைத்தார். இலவச சவாரியை அளிக்கும் பெருந்தன்மையுடன் கட்சியை கட்டும் அவரது தொழில் நேர்த்தியும் குறிப்பிடத்தக்கது. எனினும், அசுரர்களையோ இல்லை சாத்தான்களையோ ஏற்றிச் செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது.
கடைசி வண்டியில் ஏறிக்கொண்டோம். அந்த வண்டியில் ஏழெட்டு பேர் இருந்தார்கள் பதின்ம வயது சிறுவர்கள் இரண்டு மூன்று பேர், மற்றவர்கள் 20 வயதுகளில். எளிய உழைக்கும் மக்கள் போலத்தான் தெரிந்தார்கள். “பரவாயில்லையே, ஒரு காலத்தில் அய்யிரு கட்சி என்று அறியப்பட்ட பாஜகஇல் ஏழை எளிய குப்பன்களும், சப்பன்களும் இருக்கிறார்களே” என்று பலரும் ஆச்சரியப்படலாம்.
ஒரு இளைஞர் புகையிலையை மென்று வெளியே துப்பிக்கொண்டிருந்தார். அடுத்த சீட்டில் ஒரு சிறுவன் மற்றொரு இளைஞரின் மடியில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தான். பின் இருக்கையில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருக்க இன்னொருவர் ஜன்னலோரம் உட்கார்ந்து காலை நீட்டியிருந்தார். யோசித்துப் பார்த்தால் மோடி ஜுரம் இங்கே சோர்வாய் கடுத்துக் கிடந்தது.
வண்டியை எடுக்கச் சொல்லி உத்தரவு வந்தது. பையன்கள் ஜன்னலின் வெளியில் எட்டி எட்டிப் பார்த்து “டேய் இது எந்த இடம்டா” ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து “நீங்கல்லாம் சென்னைதானே. எந்த பகுதியிலேர்ந்து வரீங்க” என்று விசாரித்தோம்.
“நாலு வண்டியா! பரவாயில்லயே. எப்பைல இருந்து கட்சியில் இருக்கீங்க?”
“நான் இந்த கட்சி இல்ல சார். விஜயகாந்த் கட்சி. யாரு மாறுனாலும் நான் மாற மாட்டேன் எப்பவும் விஜயகாந்த் தான்” அருகில் இருப்பவரை பார்த்தபடியே சொன்னார். இவர் கையில் தேமுதிக கொடியின் வண்ணங்களில் பேண்டு அணிந்திருந்தார்.
“நாங்க எப்பவுமே அம்மா கட்சிக்குத்தான் ஓட்டு போடுவோம்” என்று இன்னொருவர் மேலும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
“இந்த கூட்டத்திற்கு வர்றீங்களே? உங்க தலைவர் பா.ஜ.க உடன் கூட்டணி வெச்சிட்டாரா?” என்று விஜயகாந்த் ரசிகரை கேட்டோம்.
கோயம்பேடு கே.என். முதலாளியின் வண்டி.
“இல்லங்க. எங்க முதலாளி தான் எங்கள கூட்டிட்டு போறாரு. இத்தினி பேரு இருக்காங்கனு காமிக்க; இந்தியா ஃபுல்லா இருந்து ஆளுங்க வாராங்களாம்.” “கோயம்பேட்டுல் K.N கடைனு இருக்குல அதோட ஓனர் இவரு தான். அவரு பேரு உண்மையில கண்ணன் ரெட்டி. அவரு பேரதான் சுருக்கி கடைக்கு வைச்சி இருக்காரு. 4, 5 கடை வெச்சி இருக்காரு, நிறைய சொத்து, ஆந்திரா பக்கத்துலயும் சொத்து இருக்கு. இரண்டு பொண்ணுங்க.”
“நீங்க எல்லாருமே அவர்கிட்ட தான் வேலபாக்குறீங்களா?”
“நான், அவரு கடைக்கு பக்கத்து கடையில வேல பாக்குறேன். அவரு கடை ஆளுங்க, அக்கம் பக்கம் கடைல வேலை பார்க்கறவங்கன்னு எல்லாரையும் வர சொல்லிருக்காரு.”
“இன்னைக்கு கடை வேலை இல்லையா,”
“ராத்திரி 12 மணி, 1 மணிக்கு லோடு வரும் போது இறக்கிக் கொண்டு கடையில போடறதுதான் நம்ம வேலை. பகல் 11, 12 மணி வரை வேலை இருக்கும். அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டு தூங்கி ரெஸ்ட் எடுப்போம். இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு கிளம்பிட்டோம்.”
“இன்னைக்கு இங்க வந்துட்டதால நைட்டு போய் வேல பாக்கமுடியாதுல? சம்பளம் தந்துருவாரா?”
“எல்லாருக்குமே இப்போ சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க, 200 ரூவா தாரேனு சொல்லி இருக்காரு, திரும்பி வரும் போது குவார்ட்டரும் தாரேனு சொல்லி இருக்காங்க.”
வண்டியில் ஏறும் போது நாமக்காரரின் மர்மம் புன்னகை நினைவுக்கு வந்தது. “மத்தவங்கள எல்லாம் காசு கொடுத்து கூட்டிட்டு போனா இந்த மாக்கானுக வலிய வர்ரானுவளே” என்று நினைத்திருப்பார் போல. நம் பங்குக்கு வரவேண்டிய 200 ரூபாயும், சரக்கும் அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும். அதற்குத்தான் அந்த சிரிப்பா?
“இரண்டு மாசம் முன்னால இதே ‘நரேந்தர்’ வந்தப்ப ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல ஒரு கிரவுண்ட்ல பேசினாரு. இப்படித் தான் எங்கள கூட்டிட்டு போனாங்க. அன்னிக்கு சீக்கிரமா முடிஞ்சிட்டு. இன்னைக்கு தான் எவ்ளோ நேரம் ஆகுனு தெரியல.”
நாடே மோடி மோடி என்று ஜபிக்கும் போது நமது தொழிலாளிகளுக்கு நரேந்தர் என்ற உச்சரிப்பைத் தாண்டி ஏதும் வரவில்லை. அக்டோபர் மாதம் சென்னை வந்த மோடி விமான நிலையத்தில் இறங்கியதும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரை நிகழ்த்தினார் என்ற தினமலர் செய்தியின் மர்மமும் புரிய ஆரம்பித்தது.
செப்டம்பர் மாதம் திருச்சியில் நடந்த இளம் தாமரை மாநாட்டில் பேசிய பாஜக மாநில தலைவர் பொன்னார், “இன்றைய தினமணி இதழில் உண்மையைச் சொல்லும் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளைப் போல பாஜக மாநாட்டுக்கு வரும் கூட்டம் பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் வரும் கூட்டம் அல்ல. தாங்களே கட்டணம் செலுத்தி வரும் கூட்டம்” என்று முழங்கியதை கேட்டு பிரமித்திருந்தவர்களுக்கு இடி மேல் இடியாக இறங்கும் விஷயங்கள். திமுக, அதிமுகவிலாவது, உள்ளூர் பெருந்தலைகள், காண்டிராக்டில் அடித்த பணத்தை செலவழித்து கொஞ்சம் கட்சி சார்புள்ள ஆட்களைத் திரட்டிக் கொண்டு போகிறார்கள். இங்கோ, தேசிய நீரோட்டத்திலிருந்து வந்து கொட்டும் பணத்தை, மோடி என்ற பெயரே கேட்டிராத, நரேந்தர் என்ற ஏதோ தாடிக்காரர் வருகிறார் என்று வரும் கேப்டன் கட்சி, அம்மா கட்சி இளைஞர்களுக்கு கொடுத்து திரட்டி வருகிறார்கள். பாஜக உண்மையிலேயே மாறுபட்ட கட்சிதான்.
வண்டி ஏர்போர்ட்டை கடந்து கொண்டிருந்தது. ஒரு சிறுவன் தலையை வெளியில் விட்டு விமானத்தை பார்க்க முயற்சி செய்ய அவனை அதட்டி உள்ளே அமரச்செய்தார்கள் மற்றவர்கள். விமானத்தை கண்டு குதூகலமாகியிருந்தான் அந்த சிறுவன். கிட்டத்தட்ட அனைவரும். “ஏம்பா முன்ன பின்ன இத பாத்தது இல்லயா? ” என்று ஒருவர் மற்றவர்களை நையாண்டி செய்துகொண்டிருந்தார்.
“ஒங்களுக்கெல்லாம் சொந்த ஊரு எங்க…”
“விருத்தாச்சலம் பக்கமுங்க… நெல் விவசாயம் செய்வோம். மழை பெஞ்சாத்தான் விவசாயம் நடக்கும். அது வேலைக்காவலைன்னு கூலி வேலைக்கு வந்துட்டோம். 5 வருசமா சென்னையில தான் இருக்கேன். வேலை செய்றது, தங்கறது எல்லாம் கோயம்பேடுல தான் எல்லாம். வெளியில எப்பயாச்சு தான் வரமுடியும். இத எல்லாம் பாக்க முடியும். நைட்டு மூட்ட தூக்குனா பகல்ல தூங்கிருவோம். இப்படித் தான் ஓடுது.”
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து என சுற்றுலா செல்லும் கார்ப்பரேட் பணக்காரர்களின் கொள்ளையை கொள்கையாய் கொண்ட கட்சி நடத்தும் கூட்டத்திற்கு தாங்கள் அடிமாடுகள் போல அழைத்துச் செல்லப்படுவதைக் கூட உணராமல், சுற்றுலாவின் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஐந்து ஆண்டு கோயம்பேடு வாழ்கையில் அவர்கள் உதயம் திரையரங்கையோ, மீனம்பாக்கம் விமானநிலையத்தையோ அறிந்திருக்கவில்லை. ஆனால் பச்சமுத்துவின் கல்லூரி கூட்டத்தில் பேசிய மோடி “கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை இங்கேயே ஆரம்பியுங்கள்” என்று எஸ்.ஆர்.எம் அடிமை மாணவர்களுக்கு போதித்திருக்கிறார்.
வண்டி தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் வரும் போது, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கை காட்டி நிறுத்தி, “நானும் கூட்டத்துக்குத்தான் போறேன்” சொல்லிவிட்டு ஏறிக் கொண்டார். சற்று குள்ளமான நபர், பெரிய உடம்பு, பெரிய மீசை. கையில் ஏதோ ஒரு பை வைத்திருந்தார். அமர்ந்ததும் பையை கீழே வைத்து விட்டு, சிறிது நேரத்திற்கு மூச்சு வாங்கி கொண்டே இருந்தார்.
“நீங்க எந்த ஊருலேர்ந்து சார்” என்று பேச்சுக் கொடுத்தோம்.
“சொந்த ஊரு சிவகங்கை, காஞ்சிபுரத்துக்கு ஒரு வேலையா வந்தேன். அப்படியே மாநாட்டையும் பார்த்துட்டு போகலாம்னு….”
சிவகங்கையிலிருந்து வந்திருப்பவர்கள் பந்தலில் எங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்பதை போனில் யாருடனோ விசாரித்துக் கொண்டார்.
“உங்க ஊருல இருந்து எத்தன பேரு வந்திருக்காங்க சார்?”
“இதே மாதிரி நாலு அஞ்சி வண்டில வந்திருக்காங்க?”
“அப்போ சிவகங்கை தொகுதில கட்சிக்கு நிறைய செல்வாக்குன்னு சொல்லுங்க”
“அப்படில்லாம் இல்லங்க. கட்சி நிர்வாகிங்க ஆளுக்கு பத்துப் பேர கூட்டிட்டு வரணும்னு ஏற்பாடு. போக வர போக்குவரத்து வசதி, சாப்பாடு, செலவுக்குக் பணம்னு ஆளுங்க வருவாங்க. ஆனா கூட்டத்திற்கு வாரவங்க அவங்க அவங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவாங்க.”
இப்படி மற்ற கட்சி தொண்டர்களையும் அவுட்சோர்ஸ் எடுத்து பலம் காண்பிக்கும் பாஜகவின் உத்தி நாடாளும் கட்சிக்கோ, சமத்துவ மக்கள் கட்சிக்கோ கூட கிடையாது என்பதை நினைத்தால் புல்லரித்தது.
அவரிடம் “மத்தபடி பிஜேபி இந்த தடவை எப்படி வாய்ப்புங்க…” என்று கேட்டோம்.
“நல்ல வளர்ச்சிங்க. ஸ்டேட் முழுக்க பரவலா ஆதரவுஅதிகமாயிருக்குன்னு சொல்றாங்க…”
“வரமாட்டாருனு தான் சொல்றாங்க. பேச்சுவார்த்தை முடியலைல. விஜயகாந்த் 15 க்கு மேல கேக்குறாரு போல. மத்தவங்களும் 10 கேக்குறாங்க. விஜயகாந்துக்கு ஒவ்வொரு தொகுதிலயும் அறுவதாயிரம் ஓட்டு இருக்கும். வை.கோவுக்கு முப்பதாயிரம் ஓட்டுகிட்ட இருக்கும். இவங்க வெற்றி தோல்விய நிர்ணயிப்பாங்க. மத்தபடி இவங்க பெரிய ஆளு எல்லாம் இல்ல. இப்படி அடிச்சிக்கிட்டு தனியா நின்னா அது அந்த அம்மாவுக்கு தான் லாபம். விஜயகாந்த் காசு வாங்கிகிட்டு தனியா கூட நிக்க வாய்ப்பு இருக்கு. பாப்போம்………………………………………………”
கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்கோர், மைதானம் என்று பழைய வரலாறுகளை கிளறி, பத்திரிகைகளில் வந்த கருத்துக்களை கலந்து கட்டி அடிப்பது போல, அவர் ஒரு மினி கருத்தாளராக கலக்கினார்.
“திமுக கூட கூட்டணிக்கு வாய்ப்பு இருக்குனு சொல்றாங்களே? அப்போ இன்னும் பிரச்சனையாகும்ல.”
“அப்படினா வை.கோ வை கழட்டி விட்டுற வேண்டியதுதான்” என்றார் ஒரே போடாக. பா.ஜ.க வின் சாதாரண தொண்டன் வரை வை.கோவை வெறும் உப்புக்குச் சப்பாணியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. வெளியில் எட்டிப் பார்த்தால், ‘திராவிட’ இயக்க வாரிசுகள் வைத்திருந்த “குருட்சேத்திர போர்க்களத்தில் தேரோட்டும் கிருஷ்ணன் இடத்தில் வைகோ முகம் பொருத்தி, வில்லேந்திய அர்ஜூனனாக மோடி தேரில் உட்கார்ந்திருக்கும்” பேனர் கண்ணில் பட்டு தொலைத்தது. கிருஷ்ண பகவான் வைகோவை குறித்து ராமன்-கிருஷ்ணனை வைத்து பிழைப்பை நடத்தும் கட்சியின் தொண்டர் என்ன ஒரு எகத்தாளமாக நினைக்கிறார்?
பெருங்களத்தூர் பாலத்தில் ஏறுவதற்கு முன்பு இடது புறம் ரோட்டோரமாக கோட்டை முகப்பு போல பெரிதாக எழுப்பி, பாஜக கொடிகள், மோடி படங்கள் என்று வைத்திருந்தார்கள். கூட்டம் நடக்கும் இடம் வண்டலூர் என்றுதானே போட்டிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, வேன் அந்த வளைவின் அருகில் நின்றது.
அந்த வளைவின் கீழ் ஒரு ஷாமியானா போட்டு ஒரு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைகளின் மீது குடிநீர் பாக்கெட்டுகள், டேப்ளாய்ட் அளவில் மோடி படம் போட்ட பளபள நோட்டிசுகள் வைத்திருந்தார்கள். ஒரு தம்பி கீழே இறங்கி குடிநீர் பாக்கெட்டுகளை வாரிக் கொண்டு வந்து வேன் உள்ளே எல்லோருக்கும் வினியோகித்தான். “போற வழியில குடிக்கவும் வச்சுக்கலாம்” என்று தாராளமாக அள்ளிக் கொடுத்தான்.
தொலைக்காட்சி சோப்புத் தூள் விளம்பரத்திலிருந்து அப்போதுதான் வெளியில் வந்தவர் போல பளீர் வெள்ளையில் சட்டை, பேன்ட் போட்டிருந்த, அன்றைய குளிர்கால வெயிலிலும் முகம் சிவந்து போயிருந்த, பெரிய தொப்பையுடனான ஒருவர் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். ஏதோ சிந்தனையில் மூழ்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “நாம போட்டிருக்கிற பணத்துக்கெல்லாம் ஏதாவது தேறுமா” என்று கணக்கு போடும் சேட்டு போலவே தெரிந்தார்.
அப்பாவி பெண்களே ஐ.ஜே.கே படையினர்.
பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் தாண்டி கொஞ்ச தூரத்தில் மைதானத்துக்குள் வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். அங்கிருந்து வண்டலூர் வரை நடந்து போக வேண்டியதுதான்
வண்டி நிறுத்துமிடத்தில் பத்து பத்து பெண்களாக கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். ஐ.ஜே.கே (IJK) என்று எழுதப்பட்டிருந்த சேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு, தலையில் பாரிவேந்தர், மோடி படம் போட்ட ஒரு பேப்பரை கட்டி விட்டிருந்தார்கள். “சுய உதவிக் குழுவா” என்று விசாரித்தால், “ஆமா..” என்றார்கள்.
அருகில் இதுபோல நெற்றியில் பாரிவேந்தரை பொறித்திருந்த ஒருவரை அணுகினோம்.
“இது என்ன கட்சிங்க, புதுசா இருக்கே” நெற்றி பட்டையை காண்பித்து கேட்டோம்
“இதுவா, இது ஒடையாரு (உடையார்) கச்சி, உங்களுக்குத் தெரியாதா”
“அப்படியா, அது என்ன கட்சி, கேள்விப்பட்டதே இல்லையே?”
சரி சரி… என்றபடியே நடந்தோம். பச்சமுத்துவின் கட்சி கூட எத்தனை செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது!
மோடியை கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது ஆலோசகர்கள்.
வழியெங்கும் விதவிதமான் பிளெக்ஸ் பேனர்கள். பேனர் வைப்பதில் ஜெயா ஆட்களுக்கு தாங்கள் குறைந்தவர்கள் இல்லை நிரூபித்திருந்தார்கள். ஆட்சியை பிடித்துவிட்டால் ஒன்றுக்க்கு பத்தாக திரும்ப எடுத்துவிடலாம் என்ற கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.
ராயபுரம் பகுதி, ரெட்டேரி பகுதி, மடிப்பாக்கம் பகுதி என்று வேன் வேனாக ஆட்கள் இறங்கி சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார்கள். பெரிய அளவுக்கு கூட்டமோ, நெரிசலோ இல்லை. ஏதோ காலை நேர வாக்கிங் போவது போல அமைதியாக போனது. யாரோ குழு பேண்ட் வாத்திய செட்டை அழைத்து வந்திருந்தது. மற்றபடி பெரிதாக ஆரவாரம் இல்லாமலேயே அந்த 4 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்து கொண்டிருந்தோம்.
இரண்டு பேர் ஒரு பேனரை பிடித்திருந்தார்கள். தொலைக்காட்சியில் மோடி பேசிக் கொண்டிருக்க, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது ஆலோசகர்கள் முகத்தில் முடிச்சுடன், கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மோடியை கலாய்ப்பதற்கு யாரோ பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த படத்தை கர்மசிரத்தையாக பிளெக்ஸ் செய்து பிடித்துக் கொண்டு போகும் இது போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை பாஜகவை யாரும் அடிச்சிக்க முடியாதுதான்.
வண்டலூர் உயிரியில் பூங்காவைக் கடக்கும் போது பலரது கவனம் அங்கு திரும்பியது. முன் வாசலில் நின்றிருந்த காவலர் ஒருவர் “இன்னைக்கு நேரம் முடிஞ்சிருச்சி. இனிமேல் இங்க போக முடியாது, போங்க போங்க” விரட்டிக் கொண்டிருந்தார். திருப்போரூர் சாலையைக் கடந்து, கிரெசன்ட் கல்லூரியைத் தாண்டி, சில நூறு மீட்டர்கள் தொலைவில் மாநாட்டு வளாகத்துக்கு வந்தே விட்டோம்.
மோடி முகமூடிகள், மோடி பற்றிய புத்தகங்கள் என்று விற்க முயன்ற ஓரிருவருக்கு எதுவும் போணியாவதாக தெரியவில்லை. கடைசியில் இலவசமாக கொடுத்தார்களோ என்னமோ தெரியவில்லை.
வாடிப்பட்டி மேளம் முழங்க நமோ பேரவை என்ற பேனருடன் சிலர் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். நல்ல மப்பில் ஆடிக்கொண்டிருந்த மோடி ரசிகர்களை சைடு கட்டி நுழைவாயிலை அடைந்தோம். கூட்ட முடிவில் பழைய பேப்பர் சேகரிக்கும் தொழிலாளிகளுக்கு ஏகப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் கிடைத்திருக்கும்.
“மோடியின் வருகையில் சென்னை குலுங்கியது, தொண்டர்கள் குவிந்தார்கள்” என்று மாலை பத்திரிகைகளின் போஸ்டர் செய்திகள் அலறியதற்கு மாறாக, அரை பங்கு மைதானம் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும்படி காலியாக கிடந்தது.
“போலீஸ்காரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வெளியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான எங்கள் தொண்டர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் காட்டாற்று வெள்ளம் போன்றவர்கள். தடுக்க நினைத்தால்…………….” என தமிழிசை சௌந்தர்ராஜன் சிவகாசி அணுகுண்டு போல பல நூறு டெசிபலில் மைக் மூலம் போலீசை மிரட்டிக்கொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தோம்.. நமோ பேரவை குத்தாட்ட குரூப்பை தவிர வெளியில் பெரிதாக கூட்டம் ஏதும் இல்லை. போலீசுகாரர்கள் தான் ஆயிரக்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை இவர்களைத்தான் பி.ஜே.பி தொண்டர்கள் என்கிறாரோ? குஜராத் முதல் கோவை வரை காவிக்கும் காக்கிக்கும் அப்படி ஒரு ரத்த பிணைப்பு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும், அதை இப்படி வெளிப்படையாகவா தமிழிசை பேசுவார்!
இதையே அடுத்த நாள் தினமலரில், “அவர் (தமிழிசை) பேசியதும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் எழுந்து நின்று, போலீசாரை நோக்கி, தொண்டர்களை உடனே அனுப்புங்கள் என ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர்” என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த மெய் கூச்செரியும் அனுபவத்தை நேரில் போயிருந்தும் நாம் அனுபவிக்க முடியவில்லையே என்று வருத்தமாயிருந்தது. ஒரு வேளை நாம் கவனிக்காத வேளையில், கவனிக்காத மூலையில் தினமலர் நிருபருக்கு மட்டும் பாஜக தொண்டர்களின் ஆவேசம் சிறப்பாக வெளிப்பட்டிருந்திருக்கலாம்.
கூட்டத்தில் மற்ற தலைவர்கள் பேச ஆரம்பிக்கும் போது இருந்த ஆரவாரத்தை விட பச்சமுத்து பேச ஆரம்பிக்கும் போது தான் கைத்தட்டல் ஆரவாரம் அதிகமாக இருந்தது. பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் வரை நடப்பவர்கள் மத்தியிலும் சரி, மைதானத்தில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியிலும் சரி, பச்சமுத்துவின் படம் பொறித்த தலை மகுடம் அணிந்தவர்களின் குழுக்கள் கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டனர். இது மோடி கூட்டமா, பாரிவேந்தர் கூட்டமா என்கிற அளவுக்கு ஐ.ஜே.கே ‘தொண்டர்கள்’ நிறைந்திருந்தார்கள்.
பச்சமுத்து பெயர் கூட தெரியாத ஐஜேகே படையினர்
மைதான திரைகளில் பாரிவேந்தரின் மந்தகாசம் தவழும் பெரிய மனித முகத்தை காட்டும் போதெல்லாம், மற்ற பேச்சாளர்கள் அவரது பெயரை சொல்லும் போதெல்லாம் கைத்தட்டலும், விசிலும் பறந்தன.
பாரிவேந்தர் பேசுவார் என்று தமிழிசை அறிவித்ததும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. பாரிவேந்தர் மைக்கின் முன் சில நிமிடம் அமைதியாக நின்று ஆரவாரத்தை ரசித்து விட்டு பின்னர், தொண்டர்களை அமைதியாகுமாறு கையை காட்டியும் அடங்கவில்லை. அவர் பேச ஆரம்பிக்கும் வரை ஆரவாரம் நீடித்தது.
“மோடி வருவார் வருவார், அவர் முன்னால் பேசலாம் என்று ஆவலாய் இருந்தேன். தற்போது வேறு வழியில்லாமல் அவர் வருவதற்கு முன்பாகவே பேசுகிறேன்” என ஆரம்பித்தவர், “…. ஐ.ஜே.கே தொண்டர்களே, பீகார் மாநில ஐ.ஜே.கே நிர்வாகிகளே, மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களே!” என செல்ஃப் எடுத்து இறுதியில் “நாங்களும் தேசியக் கட்சி, நீங்களும் தேசியக் கட்சி, பிஜேபி விரும்பினால் இந்தியா முழுக்க ஐ.ஜே.கே போட்டியிடும்” என்று பேசி முடித்தது வரை பாரிஜியின் பேச்சு முழுக்க சரவெடி. அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் ஆர்ப்பரிப்பதும் அடங்கவேயில்லை அவ்வளவு எழுச்சி. மேலும் பாரிஜி காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டமும் வாங்கிய கூலிக்கு மேல் கூவும் விதமாக தங்கள் விசுவாசத்தை கடைசி வரை காட்டினார்கள்.
பாரிஜி பேசியதை தனி பதிவாகவே எழுதலாம். அந்த அளவுக்கு வரலாறு, தத்துவம், கொள்கை, விவரங்கள் அனைத்தையும் ரவுண்டு கட்டி அடித்து, அனைவரையும் மிரள வைத்தார். அந்த சமயத்தில் பொன்னார் உள்ளிட்ட பாஜக தலைகளின் ரியாக்சனை காண்பிக்காமல் காமிராக்கள் பாரிஜியை மட்டுமே போகஸ் செய்தது நிச்சயம் ஒரு மனக்குறைதான். ஏதோ ஒரு சுவையை அனுபவிக்க முடியாமல் இழந்து விட்டது போல் இருந்தது.
மோடி அலையை பார்க்கலாம் என்று வந்தால் பாரிவேந்தர் சுனாமி நம்மை போட்டுத் தாக்கவே அங்கிருந்து கிளம்பினோம். என்னடா இது பி.ஜே.பிக்கு வந்த சோதனை என்றபடியே சில பிஜேபியினரும் வெளியேறியதை பார்க்க முடிந்தது.
அடுததநாள் ஞாயிறு காலை தினமலரை புரட்டினால் “மோடி அலை, குலுங்கியது சென்னை” “பல லட்சம் தொண்டர்கள் திரண்டார்கள்” என்று விதவிதமான செய்திகள். ‘ஒரு வேளை, பாஜக மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும் 10 பேருக்கு சமம்’ என்ற கணக்கில் அந்த எண்ணிக்கையை வந்தடைந்திருப்பார்களோ?
எவ்வளவு முக்கினாலும், அந்த மைதானத்தில் 50,000 பேருக்கு மேல் அடைக்க முடியாது. அதிலும் கால் வாசி மைதானம் காலியாக இருந்தது. நாம் பார்த்தது வரையில் 30,000 பேர் இருந்திருப்பார்கள். வெளியிலும் சென்னையிலிருந்து வண்டலூர் சாலையிலும், வண்டலூரிலிருந்து செங்கல்பட்டு திசையிலும் வாகன நெரிசலோ, மக்கள் நெரிசலோ இல்லை. தினமலர் கூறும் அந்த பல லட்சம் பேர் ஃபோட்டோஷாப்பின் மகத்துவமாக இருக்க சாத்தியமில்லை.
அனைத்து செய்தித்தாள்களும் காட்சி ஊடகங்களும் இதையே வேறு வேறு விதமாக வாந்தி எடுத்திருந்தன. இதில் தினமலர், தினமணி, விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கும், தந்தி, மாலைமலர் போன்ற ‘சூத்திர’ பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் இல்லை.
கூட்டத்திற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் பேச்சு கொடுத்திருந்தாலே அவர்கள் காசுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது தெரிந்திருக்கும். இருந்தும் இப்படி எழுதி வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயம் இந்த ஊடக வியாபாரிகளுக்கு. இது, தன் வாசகர்களையும் மக்களையும் ஏமாளிகளாகவும், கிள்ளுக்கீரைகளாகவும் நினைக்கும் ஊடகத் திமிர் அன்றி வேறேதுமில்லை.
டெல்லி சட்ட மன்ற தேர்தலின் போது மோடியின் கூட்டங்களில் லட்சக் கணக்கானோர் கூடியதாக சொன்னதும், “கொல்கத்தா கூட்டத்தில் 40,000 டீக்கடைக்காரர்களை அழைத்திருக்கிறோம்” என்று பெருமையாகக் கூறிக் கொண்டதும், “அந்த ஊர்ல இவ்வளவு லட்சம், இந்த ஊர்ல இவ்வளவு லட்சம்” என்று இவர்கள் பீற்றிக்கொள்ளும் கூட்டங்கள் எல்லாம் இப்படி கட்டமைக்கப்பட்ட சீட்டுக் கட்டு கோபுரங்கள்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
“இது, தானா வளந்த உடம்பு இல்ல, காசு குடுத்து வரைஞ்ச உடம்பு” என்ற வடிவேலு நகைச்சுவை இவர்களுக்கு சரியாக பொருந்தும். மோடியின் பிம்பத்தை காசுக்காக வரைந்து கொடுக்க ஆளும் வர்க்க ஊடகங்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் “கூட்டதிற்கு வந்த ‘சிலர்’ கட்சியினரால் அழைத்து வரப்பட்டவர்கள், அவர்களுக்கு மோடியின் பெயரோ அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதோ கூட தெரியவில்லை. அவர்களில் ஒருவர் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் கூட்டம்’ என்று கூறி தன்னை அழைத்து வந்திருப்பதாக தெரிவித்தார்” என்று பெட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது.
மோடியின் ஊதுகுழலான டைம்ஸ் ஆஃப் இந்தியாவே இப்படி ஒரு பெட்டிச் செய்தி வெளியிடும் அளவுக்கு சென்னை கூட்டத்தின் லட்சணம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஊடகங்கள் கூறுவது போல சென்னை கூட்டத்தில் எந்த எழுச்சியும் இல்லை வெங்காயமும் இல்லை. கார்ப்பரேட் ஊடகங்களும், பார்ப்பன ஊடகங்களும், அதை படித்து விட்டு பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் பார்த்தசாரதிகளும இருக்கும் வரை இந்த ஊடகங்களுக்கும், காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வாங்கி “வெற்றி வெற்றி” என ஊர்வலம் வரும் ‘புல்லட் பாண்டி’ மோடிக்கும் எந்த குறையும் வரப்போவதில்லை.
புராணங்களில் பகவானின் விசுவரூப தரிசனத்தை புரூடா விட்டு பார்ப்பன-ஷத்திரியர்கள் தங்களது வருணாசிர ஒடுக்குமுறையை தக்கவைத்தார்கள். இப்போது ஊடகங்கள் வாயிலாக இந்துமதவெறியர்கள் தமது கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை தக்கவைக்க மோடியின் விசுவரூபத்தை இட்டுக்கட்டி எழுப்ப முயல்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை 5.2.2014 அன்று கொல்கத்தாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். “இடதுசாரி கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம் – கம்யூ, திரிணாமுல் கலக்கம்” என்பதாக தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் இந்த கூட்டத்தைக் கொண்டாடின. மம்தா போன்ற மேற்கு வங்கத்து ஜெயாக்களையே பிரவேசிக்க வழியேற்படுத்திய போலிக் கம்யூனிஸ்டுகளது மாநிலம் மோடிக்கும் மட்டும் அருள்பாலிக்காதா என்ன?
கொல்கத்தாவில் மோடி நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்.
ஆனால் தினமலர் கொண்டாடுவது போல மம்தா இந்தக் கூட்டத்தைப் பார்த்து கலங்கினாரோ இல்லையோ மோடி மட்டும் நிச்சயமாக திரிணாமுல் கட்சியைப் பார்த்து கலங்கியிருக்கிறார். இதை நாம் கூறவில்லை, மோடியின் பேச்சே பகிரங்கமாக தெரிவிக்கிறது.
முதலில் மூன்றாவது அணி குறித்து மோடி உதிர்த்த முத்துக்களை பார்ப்போம். சில நாட்களுக்கு முன்புதான் “மக்களவை தேர்தலில் 3-வது அணி குறித்த பேச்சு, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே பெரிதும் உதவும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான அருண் ஜேட்லி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சோகப்பாட்டு பாடியிருந்தார். மூன்றாவது அணியினால் மோடி அணிக்கு லாபம் என்றால் அதை பாராட்டுவதற்கு பதில் ஏன் இப்படி மீசையில் மண் ஒட்டவில்லை என்று முறுக்க வேண்டும்?
உண்மையில் மூன்றாவது அணி குறித்து மோடி கும்பல் எப்படி மிரண்டு போயிருக்கிறது என்பதற்கு அவரது கொல்கத்தா பேச்சே சான்று.
மோடி பேசியதாவது:
“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை மூன்றாவது அணியினர் அறிந்து கொள்வார்கள். மூன்றாவது அணி என்ற ஏற்பாடே, இந்தியாவை மூன்றாம் தர நாடாக ஆக்குவதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களில் மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அதனால்தான் அந்த மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் எதிலும் மூன்றாவது அணியைச் சேர்ந்தோரின் ஆட்சி இல்லை.
இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்தாக்கத்துக்கு விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. தேர்தல் வரும்போதெல்லாம் மதச்சார்பின்மை, ஏழை மக்களின் நலன் போன்ற விஷயங்களை பற்றி மூன்றாவது அணியினர் பேசத் தொடங்கி விடுகின்றனர். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சியின் பலன்கள் முஸ்லிம்களை சென்றடையும் வகையில் செயல்பட்டதில்லை. முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் எப்போதும் கருதுகின்றனர்.
குஜராத்தில் சிறுபான்மையினரின் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அரசுக்கு அரசியல் சாசனம் மட்டும்தான் மதப் புத்தகமாக இருக்க வேண்டும். தேசியவாதத்தில் மட்டுமே நம்பிக்கை இருக்க வேண்டும்” இப்படித்தான் கொல்கத்தாவில் பொங்கியிருக்கிறார் மோடி.
மம்தா பானர்ஜி – மம்தாவுக்கு கிடைக்கும் கணிசமான எம் பிக்கள், தேவைப்பட்டால் நமக்கும் படியளக்க வேண்டும் என்று அவருக்கு ஜே போடுகிறார் மோடி.
முதல் தரமா, மூன்றாவது தரமா என்று முத்திரை குத்தும் அளவிற்கு மூன்றாவது அணி அவ்வளவாக வொர்த் இல்லை என்பது வேறு விசயம். ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் காங் கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றுதான் கூறப்படுகிறதே அன்றி பெரும்பான்மை கிடைக்கும் என்று சொல்லவில்லை. இன்னும் பாஜக அணியை விட மூன்றாவது அணிக்குத்தான் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் அந்த சர்வேக்கள் தெரிவிக்கின்றன. மோடியின் பீதியும், வயிற்றெரிச்சலும் இந்த எண்கள் காரணமாகவே அன்றி வளர்ச்சி குறித்தோ வாந்தி குறித்தோ அல்ல.
மேலும் மூன்றாவது அணியில் மதில் மேல் பூனைகளாக காத்திருக்கும் சந்தர்ப்பவாத கட்சிகளை வழிக்கு கொண்டு வரும் விதமாகவும் மோடி குரூப் பேசியும் எழுதியும் வருகிறது. ஜெயிக்கிற குதிரை மீது சூதாடுங்கள் என்று அவர்கள் வெளிப்படையாகவே 3-வது அணி கட்சிகளை அழைக்கிறார்கள்.
மேற்கே வளம் கொழிப்பதற்கு அங்கே மூன்றாம் அணி ஆளவில்லை என்றும் கிழக்கே வறுமை தாண்டவமாடுவதற்கு மூன்றாவது அணி ஆள்கிறது என்றும் தனது வழக்கமான பனியா பாயிண்டுகளை வீசுகிறார் மோடி.
சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் மேற்கில் பாஜகவோடு காங்கிரசும்தான் ஆள்கின்றது, ஆண்டது. அதனால் காங்கிரசை காவிக் கூட்டம் ஆதரிக்க வேண்டியதுதானே? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் சந்தர்ப்பவாதிகளுக்காகவே உயிர் வாழ்கிறது என்றால் அதில் காவிக் கும்பல் கொட்டை போட்டது.
அடுத்து மராட்டியம், குஜராத்தில் முதலாளிகள் கொழிக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படை கிழக்கின் ஏழைகள் வந்து கொத்தடிமை போல வேலை பார்ப்பதுதான். இவர்களைத்தான் வங்க தேச அகதிகள், உ.பி, பீகார் வாலாக்கள் என்று வெறுப்பை உமிழ்ந்தவாறு அடித்து துரத்த வேண்டும் என்று இந்துமத வெறியர்கள் கூப்பாடு போடுகிறார்கள். குஜராத்தில் முசுலீம் மக்களின் தனிநபர் வருமானம் அதிகம் என்று மோடி வீசும் பொய்கள் ஒருபுறம் இருக்கட்டும். கலவரத்தில் கொல்லப்பட்டும், தொழிலை இழந்தும் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் குஜராத் முசுலீம் மக்களை விட கிழக்கு மாநிலங்களின் முசுலீம் மக்களது வாழ்க்கை கொஞ்சம் மேம்பட்டதுதான்.
அடுத்து வங்கத்து சென்டிமெண்டை கவருவதற்கு கொட்டை போட்ட காங்கிரசு பெருச்சாளி பிரணாப் முகர்ஜியை ஜாக்கி வைத்து தூக்குகிறார் மோடி. பிரணாப்பிற்கு பிரதமர் ஆவதற்கு தகுதி இருந்தும் காங்கிரசு ஆக்கவில்லை என்று உருகுகிறார் மோடி. இந்திரா காந்தி காலம் முதல், ராகுல் காந்தி காலம் வரை எமர்ஜென்சி முதல் 2ஜி-நிலக்கரி ஊழல் வரை அனைத்து பாசிச, ஊழல் நடவடிக்கைகளிலும் காங்கிரசின் முக்கிய தளபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியை மோடி இப்படி பாராட்டுகிறார் என்றால் சோனியாவும், ராகுலும் இதைவிட பாராட்டுக்குரியவர்கள் ஆயிற்றே?
பிரணாப் முகர்ஜி – மேற்கு வங்க மாநிலத்தில் இந்து தேசிய உணர்வு செல்ஃப் எடுக்காது என்று தெரிந்து வங்க தேசிய உணர்வை, பிரணாப் முகர்ஜி எனும் பெருச்சாளியை வைத்து அள்ள நினைப்பதுதான் மோடியின் கீழ்த்தரமான அரசியல்.
அப்பேற்பட்ட பிரணாப்பை குடியரசுத் தலைவர் ஆக்கியதும் இதே காங்கிரசு கும்பல்தானே? மேற்கு வங்க மாநிலத்தில் இந்து தேசிய உணர்வு செல்ஃப் எடுக்காது என்று தெரிந்து வங்க தேசிய உணர்வை, பிரணாப் முகர்ஜி எனும் பெருச்சாளியை வைத்து அள்ள நினைப்பதுதான் மோடியின் கீழ்த்தரமான அரசியல். மேலும் ஒருக்கால் தான் ஆட்சியில் பிரதமராக அமர்ந்தால் இதே முகர்ஜி ஏதும் குடைச்சல் கொடுக்க கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையுடன் இப்போதே சோப்பு போடுகிறார் மோடி. கரையும் இந்த சோப்பை போய் இரும்பு என்று வியப்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?
இதே போன்று மம்தா பானர்ஜியையும் மோடி விமரிசிக்காததோடு பாராட்டவும் செய்திருக்கிறார். சோப்புதான் என்று வந்த பிறகு மம்தாவாக இருந்தால் என்ன, முகர்ஜியாக இருந்தால் என்ன? மாநிலத்தில் மம்தா ஆட்சியும், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியும், மத்தியில் தனது ஆட்சியும் இருந்தால் அது மேற்கு வங்க மாநில மக்களுக்கு பொற்காலம் என்று ஆசை காட்டியிருக்கிறார் இந்த நரவேட்டை மோடி.
இதே மம்தா பானர்ஜி கூட காங்கிரசு பாசறையிலிருந்து வந்தவர் என்பதோடு போலிக் கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருந்து மாநிலத்தை கைமாற்றியவர். வரும் தேர்தலில் அவருக்கு கிடைக்கும் கணிசமான எம் பிக்கள், தேவைப்பட்டால் நமக்கும் படியளக்க வேண்டும் என்று கணக்கின்பாற்பட்டு மம்தா பானர்ஜிக்கு ஜே போடுகிறார் மோடி. அதே நேரம் மம்தா பானர்ஜி மூன்றாவது அணிக்கு போய்விடக் கூடாது என்பதற்கும் அந்த அணியை குறித்து விமரிசிக்கிறார்.
ஆனால் மோடியின் பச்சையான சுயநலத்தை தின்று விழுங்கும் சக்தி படைத்த மம்தாவோ அண்ணா ஹசாரே ஆதரவு பெற்று, மாநிலத்திலும் கணிசமான எம்பிக்கள் வென்று மூன்றாவது அணியின் பிரதமராக வர முடியுமா என்று தனி ரூட்டை ஆரம்பித்திருக்கிறார். ‘மாபெரும்’ இந்திய தேசத்தின் பிரதமர் பதவியை மாநிலத்தில் 30, 40 எம்பிக்களை வைத்து வென்று விடலாம் என்ற அளவிற்கு இங்கே தேர்தல் கூட்டணியும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும் சிரிப்பாய் சிரிக்கிறது.
ஓட்டுப் பொறுக்கி கட்சிகளில் கொள்கை கிடையாது, சந்தர்ப்பவாதக் கூட்டணியும், பதவி பேர ஆதாயங்களும் மட்டுமே இருக்கும் என்பது ஆண்டுக்காண்டு அதிகமாய் சந்தி சிரித்தாலும், காவிக் கும்பல் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா. என்றாலும் தேர்தலுக்கு பிறகு சூழ்நிலை மாறி அவர் ஆதரவு தமக்கு தேவைப்படும் என்பதால் பாஜகவினர் அம்மா பெயரை மறந்தும் கூட விமரிசிக்க மாட்டார்கள். அந்த வகையில் அம்மா கூட்டணியில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு கூட தமிழகத்து காவிக் கும்பலிடம் கொஞ்சம் மரியாதை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றியினால் பீதியடைந்திருக்கும் பாஜக கும்பல் வரும் நாட்களில் சந்தர்ப்பவாதத்தில் புது சாதனையே படைக்கும். ஆயினும் ஆட்சியைப் பிடிப்பதில் இருக்கும் சந்தர்ப்பவாதம், ஆட்சியில் அமர்ந்த பிறகு பாசிசத்தை நோக்கி அதிவேகத்தில் பயணிக்கும். அந்த பதவி வெறிதான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலம்தான் இத்தகைய சந்தர்ப்பவாதங்களை பகிரங்கமாக பேசுகிறது, முன்வைக்கிறது.
ஆகவே நரவேட்டை மோடி இந்துமதவெறியில் மட்டுமல்ல, சந்தர்ப்பவாதத்திலும் சாதனையாளர்தான்.
மசாலா: விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்த தாமரைக் கண்ணன் இயக்கும் சினிமாவின் பெயர் சூறையாடல். சூறையாடல் பற்றி டைரக்டர் கூறியதாவது: காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை அவற்றை சரியாக கையாளாவிட்டால் என்ன நடக்கும்? அவை நம்மையே சூறையாடிவிடும் என்பதுதான் படத்தோட மெயின் லைன்.
மருந்து: இந்த மூணு குணங்களை நாங்க புரிஞ்சிக்கிட்டா சென்டிமெண்ட், செக்ஸ், ஆக்சன்னு மக்கமாரை ஏமாத்தி நீங்க கல்லா கட்ட முடியுமாடே? அது சரிவே, சீரியல் டைரக்டரு சினிமா எடுத்தா கிளிசரின்னு எத்தனை லிட்டரு வாங்குவீரு?
___________
மசாலா: இந்து மத மகான் ஸ்ரீராமானுஜரின் சரித்திரம் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்க பிரபல நடிகை ஸ்ரேயா, டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார். “சாதி வேறுபாடற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்த மகனானின் வாழ்க்கையே இந்தப் படம்.” என்கிறார் இயக்குனர் ரவி.வி.சந்தர்.
மருந்து: ராமானுஜரா நடிக்கிறதுக்கு கிருஷ்ணன்னு ஒரு அனாமதேயத்த போட்டு, டில்லி ராணிக்கு மட்டும் கவர்ச்சியா ஸ்ரேயாவ போட்டுக்கிறாரு நம்ம டைரக்டர் நைனா. படத்துல கவர்ச்சி இருக்கும் போது சாதி இல்லே, மதம் இல்லேன்னு ரசிகருங்கோ ஏன் ஃபீல் பண்ணப் போறான்?
___________
மசாலா: “கள்ளப்படம்” எனும் புதிய படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தை இயக்கும் டைரக்டர் ஜெ.வடிவேல், இசை அமைப்பாளர் கே, கேமராமேன் ஸ்ரீராம் சந்தோஷ், எடிட்டர் குகன் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். “சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் நான்கு இளைஞர்கள் தமது பண்பாட்டை பாதுகாக்கும் நாட்டுப்புற கலையை குறிப்பாக கூத்து கலையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க போராடுறாங்க. டைரக்டர், கேமராமேன், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என நான்கு பேருமே நண்பர்கள். புரட்யூசர் கிடைக்காம அவஸ்தைப்படுறாங்க, கடைசியில அவுங்க படம் எடுத்தாங்களா, இல்லையாங்றதுதான் கதை. இதில் நடிக்க நிறைய நடிகர்கள்கிட்ட பேசினோம். யாருமே செட்டாகல, நாங்களே நடிச்சிட்டோம்,” என்றார் இயக்குநர்.
மருந்து: கூத்து மேல அக்கறை இருந்தா அத்த கத்துக்கிணு ஊர் ஊரா நடத்துறது வுட்டுட்டு சினிமா புடிச்சு காம்பிச்சா கூத்துக்கு இன்னாபா லாபம்? நாட்டுப்புற கலைங்கள வெச்சு என்ஜிவோக்காரன் பண்றது பிசினெஸ்னா, சினிமாக்காரன் பண்றது நான்சென்ஸ்.
__________
மசாலா: “இசையமைப்பவர்கள், ஹிட் கொடுத்து பெரிய இசையமைப்பாளரான பிறகு சின்ன பட்ஜெட் படங்கள் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை. ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்கள் நான் இயக்குவது போன்ற 2 கோடி பட்ஜெட் கொண்ட படங்களுக்கு இசையமைக்க மாட்டார்கள். அப்படியே அவர்ஒத்துக்கொண்டாலும், இந்த பட்ஜெட்டில் அவருக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெரிய இசையமைப்பாளர்களும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க வேண்டும். அந்த நிலை சினிமாவில் உருவாக வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற தெகிடி படத்தில் ஆடியோ விழாவில் பேசினார் டைரக்டர் சீனுராமசாமி. பேசினார்.
மருந்து: சீனு அண்ணாச்சி, உங்க இரண்டு கோடி பட்ஜெட்டுல ரஜினியும், ஷங்கரும் நடிக்கவோ இயக்கவோ முடியாதுங்கிறத நீங்க ஒத்துக்கிட்டீகண்ணா, ரஹ்மான மட்டும் எப்படி எதிர்பாக்கீக? அமெரிக்கா அரசுகிட்ட கருணையையும் சினிமா நட்சத்திரங்ககிட்ட கலைச் சேவையையும் எதிர்பாக்கது தப்பு அண்ணாச்சி!
____________
மசாலா: உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்துக்கு முதலில் வரிவிலக்கு கிடைக்கவில்லை. அதனால் எனது படம் வரி விலக்கு பெற தகுதியானதே என்று சொல்லி, நீதிமன்றத்தை நாடி அதன்பிறகு வரி விலக்கு கிடைத்தது. இப்போது அவர் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. படத்தில் ஆபாசம், வன்முறை என எந்த முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும் வரிவிலக்கு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த உதயநிதி மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
மருந்து: கதைக்குள்ள செக்ஸ், வயலன்சுன்னு என்ன கருமாந்திரம் இருந்தாலூம் பெயருல தமிழ் இருந்தா வரிவிலக்குன்னு உதயநிதியோட தாத்தா கொண்டு வந்த சலுகையை, கதைக்குள்ளேயும் சரக்கு இருந்தாதான் தருவேன்னு அதிமுக ஆத்தா மாத்தி கட்சி சார்புல யூஸ் பண்ணுது. ஆனா ஒண்ணுடே, உதயநிதியோட கதையெல்லாம் ஒரு சினிமான்னு தியேட்டருக்கு போய் பாக்கான் பாரு அவனோட தியாகத்த நினைச்சாத்தாம்லே கதி கலங்குது!
__________
மசாலா: பிரபல கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு சென்னை சாஸ்திரி நகரில் அடுக்குமாடி வீட்டில் பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு முடிந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புவனேஸ்வரி மீது கூறப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிமன்றம், அவருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.
மருந்து: தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில மகளிர் அணித் தலைவியா சமூக சேவை செய்யுற தானைத் தலைவிய பிரபல கவர்ச்சி நடிகைன்னு போட்டு ஏம்டே மானத்த வாங்குதீக!
____________
மசாலா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏவோன் தனது இந்திய விளம்பர தூதராக அசினை நியமித்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் அசின் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அசின் தோன்றும் பொது நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியில் அசின் பேசியதாவது: படத்துக்கு படம் இடைவெளிவிட்டு அவகாசம் கொடுத்து நடித்தாலும் தனித்தன்மையுள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். நல்ல படங்களுக்காக காத்திருக்கவும் தயார். அதேபோல நல்ல கதையாக இருந்தாலும் யாருடனும் நடிக்கத் தயார். என்றார்.
மருந்து: மார்க்கெட் இருக்கும் போது முன்னணி ஸ்டார்களோட நடிக்கதும், மத்தவங்க கேட்டா முறைக்கதும், மார்க்கெட் இல்லாத போது சோப்போ, சீப்போன்னு ஷோ ரூம் திறப்பு, பெறவு விளம்பரம்னு ஒதுங்கி, அப்டியும் படம் இல்லேன்னா நல்ல படம், நல்ல கதை, புதுமுகங்களோட கூட நடிப்பேன்னு……… எம்மா எல்லா மகராசிங்களும் ஒரே டயலாக்க போட்டு கொல்லுதீக!
__________
மசாலா: ‘தூம் 3’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மருந்து: இந்தி மசலாப் படங்கள பாத்துட்டுதாம்லே மத்த மொழிக்காரனுவ நடிகைங்கள நடிக்க விடாம துணிங்கள மட்டும் குறைக்க சொல்லுதான். பெண்கள உரிச்சு உப்புக் கண்டம் போடற பய முன்னிலைப்படுத்தறான்னா பெண்கள் அமைப்புல இருக்குற அக்காமாருங்க உசாரா இருக்கணுமாக்கும்.
_________
மசாலா: ஏப்ரல் 11-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தோடு அமிதாப் பச்சனின் ‘பூத்நாத் ரிட்டன்ஸ்’ படமும் வெளியாகவிருக்கிறது.
மருந்து: இத்தனாம் தேதி வடக்க ஒரு வயசான குதிர, தெக்க ஒரு ஓய்ஞ்சு போன கழுதை விட்ட போடப் போவுதுங்கிறதெல்லாம் கொண்டாடுற அளவுக்கு வரலாறுன்னா அவ்வளவு கேவலமாடே?
___________
மசாலா: ஆமிர்கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியை, மீண்டும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மருந்து: போன தபா அழ, சிரிக்க, கைதட்ட, உச்சு கொட்டன்னு ஆடியன்ஸ செட்டப் பண்ணாமேரி இந்த தபா இன்னா மாமு புதுமை?
____________
மசாலா: திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.. தனிமையில் வாழவே விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
மருந்து: ஏன் ராசா, மான் கறி தின்ன வழக்கிலயும், காரேத்திக் கொன்ன வழக்கிலயும் தீர்ப்பு வேற மாதிரி வருமுன்னு கனா கினா ஏதும் கண்டியா?
___________
மசாலா: ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.
மருந்து: தெலுங்கு கங்கை திட்டத்துக்கோசரம், கிருஷ்ணா ஆத்து தண்ணி தமிழனுக்கு கிடைக்கலேன்னாலும், கூவத்தாண்ட குந்தியிருக்கும் கோலிவுட்டிலேர்ந்து குப்பைங்க ரீல் ரீலாய் தெலுங்கு நாட்டுக்கு மாட்லாட போய்க்கிணுகீதாம். தமிழன்டா!
____________
மசாலா: முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இப்போது வசந்த் டி.வி.யில் வாய்மையே வெல்லும் என்று அதே நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் நிர்வாகி அசோகன், போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும். அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை மிரட்டியது. இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.”.
மசாலா: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி. மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை. தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியது எபிசோடுக்கு பத்து லட்சம்.
மசாலா: கேப்டன் தினமும் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனில் கலந்து கொண்டு காட்சிகளை வசனங்களைக் கேட்டு கருத்து சொல்கிறாராம். அதே போல மகனை அன்பாகக் கண்டித்து தினமும் எக்ஸர்சைஸ் செய்ய வைத்து 10 கிலோ எடை குறைய வைத்திருக்கிறாராம்.
மருந்து: தேமுதிக மாவட்ட செயலருங்க அத்தனை பேரும் சண்முக பாண்டியன் படத்த வாங்கி பத்து நாள் ஓட்டலேன்னா சஸ்பெண்டுதான்னு மச்சான் சதீஷை வுட்டு ஒரு காட்டு காட்டுனாத்தான் படத்த ஓட்ட முடியும். இத வுட்டு கருத்து சொல்றேன், கிலோவை குறைக்கிறேன்னு இறங்கினா படமும் தேறாது, பையனும் இளைக்க மாட்டான்.
______________
மசாலா: பத்மபூஷண் விருது பெற்ற கமலஹாசன், “ இந்தப் பெரும் பெருமைக்குத் தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மருந்து: தகுதி வரும் போது அவார்டை வாங்கிக்கிறேன், இப்ப வேண்டாம்னு கொடுத்தீங்கண்ணா இப்புடி அநியாயத்துக்கு அடக்கம் காட்டவேணாமே ராசா!
______________
“நீங்க நல்லா வேலை செஞ்சா கம்பெனி வளரும், உங்களுக்கும் குரோத் (வளர்ச்சி). இன்கிரிமென்ட் குறைவா இருக்கேன்னு கவலைப்படாதீங்க, லேர்னிங் (கற்றல்)தான் உங்க கேரியருக்கு முக்கியம். அடுத்த வருஷம் கம்பெனியோட லாபம் அதிகமானா தானா இன்கிரிமென்டும் அதிகமாயிரும். கவலைப்படாம போயி மோட்டிவேஷனோட (ஊக்கமா) வேலை செய்யப் பாருங்க. ஆல் த பெஸ்ட்”.
டெக்டோபஸ் (தகவல் தொழில்நுட்ப துறை ஆக்டோபஸ்)
தகவல் தொழில் நுட்பத்துறையில் எச் ஆர் (மனித வளத்துறை) மேலாளர்களின் இத்தகைய இனிப்பான வார்த்தைகளை கேட்காதவர்கள் இருக்க முடியாது.
“ஐடி துறையில யூனியன் எல்லாம் கெடையாதுங்க. நாங்க கம்பெனியோட கன்சல்டன்ட்ஸ், அசோசியேட்ஸ். என் திறமை, என் கடும் உழைப்பு, என் முயற்சியில நான் முன்னேறிடுவேன். அடுத்தவங்கள பத்தி நான் ஏன் கவலைப்பட மாட்டேன். அதனால, நாங்க கம்யூனிஸ்ட்டு யூனியன்லாம் வைக்க மாட்டோம். எங்களுக்கு போக வர பஸ் அல்லது கேப் வசதி, ஏசி போட்ட ஆபிசு, ஐந்திலக்க சம்பளம். கம்பெனியே எங்களை நல்லா கவனிக்கும் போது நாங்க ஏன் யூனியன் வைக்கணும். ”
இப்படி பேசாத அல்லது நினைக்காத தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களும் அதிகம் இருக்க முடியாது. ஆனால் இப்படி நிறுவனத்திற்கு விசுவாசமாக உழைக்கும் ஊழியர்களை ஐ.டி நிறுவன முதலாளிகள் பதிலுக்கு எப்படி மரியாதை செலுத்துவார்கள்?
மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஊழியர்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களை ஏமாற்றுவது தகவல் தொழில்நுட்பத் துறை முதலாளிகளின் வழக்கமாக இருக்கிறது என்பது பலருக்கும் தெரியுமா? அமெரிக்காவில் அப்படி கூட்டு சேர்ந்த முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவன முதலாளிகளின் கதை இப்போது அம்பலமாகியிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி தனி நபர் கணினி யுகத்தை ஆரம்பித்து வைத்தவராக போற்றப்படுபவர், தளுக்கான, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் என்று அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி மேட்டுக்குடியினருக்கான மின்னணுக் கருவிகளின் ‘புரட்சி’யை நடத்தியவர்.
கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எரிக் ஷ்மித் (நிறுவனர் செர்ஜி பின்) – கூகிள் தேடுபொறி, ஜிமெயில் என்று இணைய உலகில் முன்னணியில் செல்வாக்கு செலுத்தும் நபராக இருக்கிறார்.
கூடவே கணினி புராசஸர் தயாரிக்கும் இன்டெல் நிறுவனம், பலவிதமான வரைகலை மென்பொருட்கள் செய்யும் அடோப் நிறுவனம், ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசைக்கு புகழ் பெற்ற லூகாஸ் பிலிம்ஸ், அனிமேஷன் தொழில்நுட்பத்துக்கு பேர் போன பிக்சார், கணக்கியல் மென்பொருள் தயாரிக்கும் இன்ட்யூட் இவர்கள் முதலாளித்துவத்தின் அடிநாதமான தொழில் முனைவு, சந்தைப் போட்டி, புதியன உருவாக்குதல் இவற்றில் தேர்ந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆனால், உண்மையில் இவர்கள் எல்லாம் ஒண்ணாம் நம்பர் கிரிமினல்கள், தாம் ஏற்றுக் கொண்ட அறங்களையே போட்டு மிதிக்கும் மாஃபியாக்கள், சட்டங்களை கழிப்பறை காகிதமாக மதிக்கும் கேடிகள், தமது மோசடி செயல்களை திறமையாக மறைக்க முயலும் போக்கிரிகள் என்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதித் துறை மூலம் மறைக்க முடியாமல் கசிந்திருக்கின்றன.
தமது லாபத்தை அதிகரிப்பதற்காக சீனாவிலும், இந்தியாவிலும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்களில் வியர்வைக் கூடச் சூழலில் தொழிலாளர்களைச் சுரண்டி, பல நூறு தொழிலாளர்களை தற்கொலைக்குத் தள்ளி தமது பொருட்களை செய்து வாங்குவது மட்டுமின்றி, அமெரிக்காவில் பணிபுரியும் உயர் தொழில்நுட்ப ஊழியர்களையும் தமக்குள் கூட்டு சேர்ந்து இவர்கள் ஏமாற்றியிருக்கின்றனர். இவர்களது கூட்டுச் சதி நடவடிக்கைகளினால் 2005 முதல் 2009 வரையிலான 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் $9 பில்லியன் (ரூ 54,000 கோடி) ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்க நீதித்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மதிப்பிடுகின்றன.
பிக்சாரும் லூகாஸ் ஃபில்மும்
முதலாளிகள் தமக்குள் போட்டி போடக் கூடாது என்பது ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகாசின் கோட்பாடு.
இத்தகைய சதித் திட்டங்களுக்கு முன்னோடியாகவும், தாதா நம்பர் 1 ஆகவும் இருந்தவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 1980-களின் மத்தியில் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களுக்குப் புகழ் பெற்ற ஜார்ஜ் லூகாஸிடமிருந்து அவரது நிறுவனத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவை வாங்கி பிக்சார் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய போது, ஜார்ஜ் லூகாஸ் தனது முதலாளித்துவ கோட்பாட்டை வரையறுத்திருக்கிறார்.
“நிறுவனங்கள் ஊழியர்களுக்காக தமக்குள் போட்டி போடக் கூடாது, அது இயல்பான (முதலாளிகளுக்கிடையேயான) தொழில்துறை போட்டி நிலைமையை பாதிக்கும்” என்று லூகாஸ் கருதினார். “ஊழியர்களை எடுப்பதற்காக மற்ற நிறுவனங்களுடன் சம்பள போட்டிச் சண்டையில் நாம் இறங்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கோட்பாடு” என்கிறார் அவர். அதை ஏற்றுக் கொண்ட பிக்சார் நிறுவனம் போட்டி தவிர்க்கும் ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதாக லுகாசுக்கு உறுதியளித்து.
அந்த ஒப்பந்தத்தின்படி லூகாசின் நிறுவனமும் பிக்சாரும்
ஒரு நிறுவனம் மற்றதின் ஊழியர்களை வேலை தருவதாகச் சொல்லி அணுகக் கூடாது.
மாற்று நிறுவனத்தின் ஊழியர் தானாகவே வேலை கேட்டு அணுகினாலும், அவருக்கு தெரியாமலேயே அவரது தற்போதைய நிறுவனத்திற்கு தகவல் சொல்லி விட வேண்டும்.
ஒரு ஊழியருக்கு வேலை கொடுக்கும் போது தருவதாகச் சொன்ன சம்பளம் இறுதியானது. ஊழியரது தற்போதைய நிறுவனம் ஊதியத்தை கூட்டிக் கொடுப்பதாக சொன்னால், அதற்கு இணையாக சம்பளத்தை ஏற்றக் கூடாது.
அதாவது, “ஊழியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடக் கூடாது. அது இரண்டு பேரின் லாப ஈட்டலுக்கும் நல்லது” என்று ஒப்பந்தம். ஆனால் இந்த அறம் முதலாளிகளுக்கு மட்டும்தான், ஊழியர்களுக்கு அல்ல.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இடுபொருட்களை வாங்கும் சந்தைகளிலும், உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தைகளிலும் ரகசிய கூட்டு வைத்துக் கொள்வதன் மூலமாகவோ, அரசுகள் மூலம் போர் நடத்தி போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகவோ, அவற்றை விலைக்கு வாங்கி விடுவதன் மூலமாகவோ, போட்டியை தவிர்த்துக் கொள்வது முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சமாக மாறி ஆண்டுகள் பல ஆகி விட்டது. இருப்பினும், முதலாளித்துவத்தின் மகத்துவத்தையும் சந்தைப் போட்டியின் புனிதத்தையும் பற்றி இவர்கள்தான் வாய் கிழிய உலகெங்கும் பாடம் நடத்துகிறார்கள்.
அமெரிக்காவில், ஒரே துறையில் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து போட்டியை தவிர்ப்பதற்காக ஷெர்மன் கூட்டுச்சதி எதிர்ப்பு சட்டம், கிளேய்டன் கூட்டுச்சதி எதிர்ப்பு சட்டம் போன்றவை இருந்தாலும், அவை ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்த்துக் கொள்வதற்கு தேவைப்படும் போது மட்டும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்படுத்தப்படுகின்றன. அது போல அமெரிக்க நீதித் துறை இப்போது சிலிக்கன் பள்ளத்தாக்கு முதலாளிகள், ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் செய்து கொண்ட கள்ளக் கூட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. சொல்லப் போனால் இந்த வழக்கும் கூட ஏதோ ஒரு வகையில் வேறு சில முதலாளிகளுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம்.
இத்தகைய வழக்குகள் கார்ப்பரேட் உலகின் செயல்பாடுகளின் வகை மாதிரிகளை வெளிச்சம் போட்டு காட்டி அவற்றை தலைமை ஏற்று நடத்தும் உத்தமர்களின் யோக்கியதையை திரை கிழிக்கின்றன என்ற வகையில் நமக்கும் உதவுகின்றன.
பிக்சாரும் ஆப்பிளும்
2004-ம் ஆண்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிக்சார் நிறுவனம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் அனுமதி பெற்ற பிறகே ஆப்பிள் ஊழியர்களில் யாருக்கும் வேலை கொடுக்க முன் வந்தது பிக்சார். பிக்சார் தானாக அந்த ஊழியரை அணுகியிருந்தாலும் சரி, அல்லது அந்த ஊழியர் பிக்சாருக்கு தானாகவே விண்ணப்பித்திருந்தாலும் சரி இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.
2007-ம் ஆண்டு பிக்சார், ஆப்பிள் நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் பிக்சாருக்கும், லூகாஸ் பிலிமுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை போன்றே தமது நிறுவனங்களுக்கு இடையேயும் போட்டுக் கொள்வதாக முடிவு செய்திருக்கின்றனர். பிக்சார் மேலாளர் லோரி, “லூகாஸ் பிலிமுடனான ஒப்பந்தத்தைப் ஆப்பிளுடனும் பின்பற்றப் போகிறோம்” என்று தனது ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார். “அதாவது நாமோ நம்மால் அமர்த்தப்படும் ஆள் எடுக்கும் (பிடிக்கும்) நிறுவனங்களோ வேலை தருவதாகக் கூறிக் கொண்டு எந்த ஒரு ஆப்பிள் ஊழியரையும் நேரடியாக அணுகக் கூடாது. ஆப்பிள் ஆள் எடுக்கும் துறையையும் இதன்படி நடந்து கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.
ஆப்பிளும் கூகிளும் – கூட்டுக் களவாணிகள்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் – கூகிள் சிஈஓ எரிக் ஷ்மித் போட்டுக் கொண்ட போட்டி போடா ஒப்பந்தம்
இத்தகைய கள்ளக் கூட்டு ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்வதற்கு ஒரே நபர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடைமுறையை பயன்படுத்தி வருகின்றன கார்ப்பரேட்டுகள். உதாரணமாக பில் கேம்ப்பெல் என்பவர் இன்ட்யூட் நிறுவனத்தின் இயக்குனராகவும், ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை இயக்குனராகவும், கூகிள் நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்து வரும் கார்ப்பரேட் தரகர். அவரது ஆலோசனையின்படி ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் கூகிள் முதன்மை செயல்பாட்டு அலுவலர் எரிக் ஷ்மித்தும் ஊழியர்களுக்காக போட்டி போடா ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
அந்த “கனவான்களுக்கிடையேயான ஒப்பந்தத்துக்கு” முன்பு 2005-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கூகிளுக்கு எதிராக போர் பிரகடனமே செய்திருக்கிறார். ஆப்பிளின் சஃபாரி (இணைய உலாவி) பிரிவிலிருந்து யாரையும் எடுப்பதை தவிர்க்கும்படி கூகிளின் செர்ஜி பின்னை எச்சரித்த அவர் ”இவர்களில் ஒருவரைக் கூட நீங்கள் எடுத்தாலும் அதை போராகத்தான் நான் கருதுவேன்” என்று மிரட்டியிருக்கிறார்.
ஆப்பிளுடன் ஒரு ஒப்பந்தம் குறித்து முடிவு செய்வது வரை ஆப்பிள் ஊழியர்களை வேலை கொடுப்பதாக அணுகுவதை நிறுத்தி வைக்குமாறு செர்ஜி பிரின் உடனடியாக தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
“கூகிள் நிறுவனம் ஆப்பிளிலிருந்து யாரையும் வேலைக்கு எடுக்கும் முயற்சிகளை எரிக் ஷ்மித் நேரடியாக தலையிட்டு உறுதியாக தடுத்து நிறுத்தியிருக்கிறார்” என்று பில் கேம்பெல் ஸ்டீவ் ஜாப்சுக்கு மின்னஞ்சல் அனுப்பி சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஆப்பிள் மனித வளத் துறை மேலாளர் டேனியல் லம்பெர்ட், கூகிளை தொந்தரவு செய்யக் கூடாதவர்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். “ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களை பணிக்கு எடுக்கப் போவதில்லை என்ற ஒப்பந்தத்தை சமீபத்தில் நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, அவர்கள் அப்படி ஏதாவது செய்வதாக உங்களுக்குத் தெரிய வந்தால் எனக்கு தவறாமல் அறியத் தாருங்கள். அதே போல் நம் பக்கமும் ஒப்பந்தத்தை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
கூகிளின் மனித வளத்துறை மேலாளர் அர்னன் கெஷூரி தயாரித்த “ஆள் எடுப்பதற்காக அழைக்கக் கூடாத நிறுவனங்கள்“ பட்டியலின் வரைவு எரிக் ஷ்மித், லேரி பேஜ் (கூகிள் நிறுவனர்), செர்ஜி பின் (கூகிள் நிறுவனர்), ஷோனா பிரவுன் (மூத்த துணைத் தலைவர்) ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தரப்பட்டது. அதாவது, இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதோ ஓரிரு நபர்களால் திருட்டுத்தனமாக செய்யப்பட்டவை இல்லை, இவை கார்ப்பரேட் உயர்மட்ட மேலாளர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
“கூகிளின் போட்டியாளர்களுடன் இந்த பட்டியலை பகிர்ந்து கொள்வதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா” என்று ஷோனா பிரவுன் கேட்ட போது, “வாய் மொழியாக மட்டும் பகிர்ந்து கொள்ளலாம். எழுத்தில் அனுப்பினால் பின்னர் வழக்குகளில் மாட்டிக் கொள்ள நேரிடும்” என்று எரிக் ஷ்மித் அறிவுரை கூறியிருக்கிறார். பெயரளவில் இருக்கும் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இவர்கள் கில்லாடிகள்தான்.
2007-ம் ஆண்டு ஆப்பிள் ஊழியர் ஒருவரை கூகிள் பணிக்கு அமர்த்த முயற்சித்ததை அறிய வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், “உங்கள் மனித வளத்துறை இது போன்ற செயல்களை நிறுத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்ற குறிப்பை எரிக் ஷ்மித்துக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்குள், கூகிள் அந்த நிகழ்வோடு தொடர்புடைய மனித வளத் துறை மேலாளரை வேலை நீக்கம் செய்து ஒரு எச்சரிக்கும் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதன் மூலம், இனிமேலும் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வதை தடுத்திருக்கிறது.
இத்தகைய ஒத்துழைப்புகளுக்கு வசதியாக எரிக் ஷ்மித் ஆப்பிள் இயக்குனராக 2009 வரை பணியாற்றியிருக்கிறார்.
ஆப்பிளும் அடோபும் – ஆண்டானும் அடிமையும்
கூகிளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ், அதே மாதிரியான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி அடோப் நிறுவனத்தை கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
ஆப்பிள் போட்டியை தவிர்க்க விரும்புவதை அடோப் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.
2005-ம் ஆண்டு மே 25-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், அடோப் முதன்மை செயல்பாட்டு அலுவலர் புரூஸ் சிசனிடம், ஆப்பிளின் ஊழியர்களை அடோப் வேலைக்கு எடுப்பதாக புகார் கூறினார்.
புரூஸ் சிசன், “உயர் மட்ட ஊழியர்களை எடுக்கக் கூடாது என்றுதான் நாம் ஒத்துக் கொண்டோம். அதே போல தொடரலாம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் விரும்பினால் இது குறித்து மேற்கொண்டு பேசலாம். எதுவாயிருந்தாலும் நாம் இருவரும் ஒத்தக் கருத்துக்கு வருவதை விரும்புகிறேன்” என்று பணிவுடன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவரது பதிலில் திருப்தியடையாத ஸ்டீவ் ஜாப்ஸ், “அப்படியா சரி, மூத்த இயக்குனர் அல்லது துணைத் தலைவர் மட்டத்தில் அல்லாத அடோப் ஊழியர் யாரையும் அணுகலாம் என்று எங்கள் ஆள் எடுப்பவர்களிடம் சொல்லி விடுகிறேன். இதுதான் உங்க விருப்பமா?” என்று அடோப் ஊழியர்களை குறி வைத்து தன் நிறுவனத்துக்கு கடத்தப் போவதாக மிரட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
புரூஸ் சிசன் உடனடியாக சரணடைந்திருக்கிறார்ர். “நாம் இருவரும் எந்த ஊழியரையுமே அணுக வேண்டாம் என்ற ஒப்பந்தத்தையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு இது சம்மதமானால், எங்கள் ஆட்களிடம் முறையாக தகவல் தெரிவித்து விடுகிறேன்” என்று மண்டியிட்டு பாதம் பணிந்திருக்கிறார். $100 பில்லியன் டாலர் ஆப்பிள் என்ற கோலியாத்துக்கு முன்பு குள்ளமணியாக நிற்கும் $3 பில்லியன் டாலர் அடோபுக்கு வேறு வழியிருக்கவில்லை.
தன் நிறுவனத்தின் பிற உயர்மட்ட மேலாளர்களிடம் இது குறித்து விளக்கிய புரூஸ் சிசன், “ஸ்டீவ் ஜாப்சிடம் மேல் மட்ட ஊழியர்களை தவிர மற்றவர்களை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று நான் சொன்னால், அவர் வேண்டுமென்றே அடோப் ஊழியர்களை கடத்த முயற்சித்து தனது வாதத்தை நிரூபிக்கப் பார்ப்பார். அவர்களை அசாதாரணமான ஊதியங்கள் கொடுத்து இழுத்து விடுவார்” என்று புலம்பியிருக்கிறார்.
அடுத்த நாள், அடோப் நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் தெரசா “புரூசும், ஸ்டீவ் ஜாப்சும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி நாம் எந்த ஆப்பிள் ஊழியரையும் அணுகக் கூடாது. அவர்களும் நம் ஊழியர்களை அணுக மாட்டார்கள்” என்று தனது ஊழியர்களிடம் அறிவித்திருக்கிறார்.
இன்டெலும் கூகிளும் – ஒன்றுக்குள் ஒன்று
இன்டெல் முதன்மை செயல்பாட்டு அலுவலர் பால் ஒத்தெல்லினி 2004-ம் ஆண்டு கூகிள் இயக்குனர் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார். இயக்குனர் கூட்டம் நடக்கும் போது மட்டும் தலையைக் காட்ட வேண்டிய அந்த கஷ்டமான வேலைக்காக அவருக்கு 2007-ம் ஆண்டு $2.3 கோடி (சுமார் ரூ 110 கோடி) வருமானம் வந்தது. இது தவிர, கூகிள் பங்குகளை வாங்கும் உரிமையின் மூலமாகவும் பல நூறு கோடிகள் சம்பாதித்து வந்தார்.
ஐடி பெருநிறுவனங்கள்
எனவே, இன்டெல் நிறுவனத்துடன் ஆள் எடுப்பு தடுப்பு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில் கூகிளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. இன்டெலுடனான கூகிளின் ஒப்பந்தத்தில் உயர்மட்ட கார்ப்பரேட் தரகரான பில் கேம்பெலும் பங்களித்திருக்கிறார். “எந்த ஒரு இன்டெல் ஊழியருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு முன்பு கூகிள் இன்டெல் தலைவர் பால் ஒத்தெல்லினியிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று 2006-ம் ஆண்டிலேயே பில் கேம்பல், கூகிளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
2007-ம் ஆண்டு பால் ஒதெல்லினி இன்டெல் மனித வளத்துறை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “கூகிளுடன் ஊழியர் சேர்ப்பதில் போட்டியை தவிர்க்கும் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். கூகிளின் எரிக் ஷ்மித் பால் ஒதெல்லினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் “இன்டெலுடனான எங்கள் ஆள் எடுப்பு கொள்கையை நான் சரி பார்த்து விட்டேன். எங்கள் மனித வளத் துறையினர் யாரும் இன்டெல் அல்லது அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்களை நேரடியாக அணுகவோ, தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவோ, மின்னஞ்சல் அனுப்பவோ செய்ய மாட்டார்கள். அப்படி ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தால் உடனேயே தெரியப்படுத்தவும்.” என்று உறுதி செய்திருக்கிறார்.
இன்டெல் மனித வளத் துறை ஊழியர் ஒருவர் பால் ஒத்தெல்லினியிடம், “கூகிள் உயர் மட்ட ஊழியர்களை நாம் அணுகுவதை தடை செய்யும்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா” என்று மின்னஞ்சலில் கேட்டிருக்கிறார். பால் ஒத்தெல்லினி, “எழுத்தில் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆனால், எனக்கும் எரிக் (ஷ்மித்)-க்கும் மத்தியில் ஒரு வாய் வழி ஒப்பந்தம் உள்ளது” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
2007-ம் ஆண்டு அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரை கூகிள் வேலைக்கு எடுக்கப் போவதாகத் தெரிய வந்ததும், பால் ஒத்தெல்லினி “எரிக், இது குறித்து நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா” என்று ஒரு தகவல் அனுப்பியிருக்கிறார். அடுத்த நாளே, “அந்த மேலாளர் இன்டெலுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறார் என்று தெரிய வந்தால் அவரை வேலையை விட்டே நீக்கி விடுவோம்” என்று எரிக் ஷ்மித் பதில் எழுதியிருக்கிறார்.
இன்டெலும், பிக்சாரும்
அக்டோபர் 2008-ல் பிக்சார் ஊழியர்களை அணுகுவதில்லை என்று இன்டெல் பிக்சாருக்கு உறுதியளித்தது.
கூகிளும் இன்ட்யூட்டும்
பில் கேம்பெல் தான் இயக்குனராக பணி புரிந்த இன்ட்யூட் கூகிளுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். ஜூன் 12, 2007-ல் இன்ட்யூட் கூகிளின் அணுகலை தவிர்க்க வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் முழுமையாக சேர்க்கப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களை பின்பற்றி ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியங்களை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்ள வசதியாக இந்நிறுவனங்கள், பல்வேறு பதவிகளுக்கு தாம் கொடுக்கும் ஊதிய விகிதங்கள் பற்றிய விபரங்களை தமக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம், ஒரு நிறுவனம் கூட தவறிப் போய் கூடுதல் சம்பளம் கொடுத்து மற்றவர்கள் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆப்பிளும் பாம் நிறுவனமும் – நசுங்கி மறைந்து போன பாம்
பாம் நிறுவனத்துடனும் இதே போன்ற ஒப்பந்தத்தில் நுழைய ஆப்பிள் நிறுவனத்தின் ஜாப்ஸ் முயற்சித்தது வெற்றியடையவில்லை.
“மரியாதையாக நல்ல முடிவு எடுங்கள்” பாம் நிறுவனத்தை மிரட்டினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ், பாம் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் எட்வர்ட் கொல்லிகனை அழைத்து, “உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்டு ஊழியர் யாரையும் நாம் இருவரும் பரஸ்பரம் எடுப்பதில்லை” என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும்படி கோரியிருக்கிறார். பாம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஆப்பிள் வசம் இருக்கும் வடிவுரிமை (patent)களை பயன்படுத்தி அதற்கு எதிராக பழிவாங்கும் வழக்குகள் தொடரப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
எட்வர்ட் கொல்லிகன் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அது தவறு என்றும் சட்ட விரோதம் என்றும் அவர் மறுத்தார். “உங்கள் வடிவுரிமை வழக்குகளுக்கு எதிராக எங்கள் வடிவுரிமைகளை பயன்படுத்துவோம்” என்று அவர் பதிலளித்தார்.
அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், “நம் இரு நிறுவனங்களின் நிதி வலிமை ஏற்றத் தாழ்வு நீங்கள் அறியாதது இல்லை. வழக்குகளை நடத்துவதற்கு யார் அதிக பணம் செலவழிக்க முடியும் என்றும் உங்களுக்குத் தெரியும். உங்கள் வடிவுரிமை கையிருப்பை இன்னும் ஒருமுறை கவனமாக பரிசீலித்து மரியாதையாக நல்ல முடிவு எடுங்கள்” என்று அன்பாக மிரட்டியிருக்கிறார்.
கடைசியில், தமது ஊழியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ஸ்டீவ் ஜாப்சின் கோரிக்கையை ஏற்க மறுத்த எட்வர்ட் கொல்லிகனின் பாம் நிறுவனம் இன்று அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய் விட்டிருக்கிறது (எச்.பி. நிறுவனத்தால் விழுங்கப்பட்டிருக்கிறது). அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஆட்கொல்லி மிருகத்தின் தாக்குதலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அறங்களைப் பின்பற்ற நினைக்கும் யாரும் சந்தையிலிருந்து ஈவு இரக்கமின்றி துடைத்து எறியப்படுவார்கள் என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் நன்கு அறிந்த உண்மை.
இவர்களோ, இவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களோ அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள் கிடையாது. 2011-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாய் $108 பில்லியன் (சுமார் ரூ 5.5 லட்சம் கோடி), கூகிள் $38 பில்லியன் (சுமார் ரூ 2 லட்சம் கோடி), இன்டெல் $54 பில்லியன் (சுமார் ரூ 3 லட்சம் கோடி), அடோப் $3 பில்லியன் (சுமார் ரூ 16,000 கோடி), இன்டியூட் $3.8 பில்லியன் (சுமார் ரூ 20,000 கோடி) என்று பல ஆயிரம் கோடிகளில் கொழிக்கும் நிறுவனங்கள் இவை.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசையும், தாமிரம், உருக்கு, கப்பல் தொழில் துறைகளை அடக்கி ஆண்ட ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம்.
இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் விற்பனையை அதிகரித்துக் கொண்டே போவது, சட்டரீதியாகவோ, சட்ட விரோதமாகவோ செலவுகளைக் குறைத்து லாபத்தை பெருக்குவது, அதன் மூலம் பங்குச் சந்தையில் பங்கு விலை உயர்வதை உறுதி செய்வது என்பது இந்நிறுவனங்களின் அடிப்படை கோட்பாடு. தாம் வைத்திருக்கும் நிறுவன பங்குகளின் விலை உயர்வதன் மூலம் தாமும் பணக்காரர்கள் ஆகிக் கொள்கின்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிவிபரங்கள் பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவின் பணக்கார 10 சதவீதத்தினர் நாட்டின் 50%-க்கும் அதிகமான வருவாயை தமக்கென ஒதுக்கிக் கொள்ள முடிந்திருப்பது 1990-களுக்குப் பிறகு அமலாக்கப்பட்டு வரும் இத்தகைய கட்டற்ற, சட்டங்களுக்கு அடங்காத முதலாளித்துவ நடைமுறையின்படிதான்.
“எல்லாமே சந்தைதான், எதுவுமே போட்டிதான், அதன் மூலம்தான் மனித குலத்தையே வாழ வைக்கும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் “என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் இந்த கார்ப்பரேட் முதலைகள், தத்தமது நிறுவனங்களின் லாப வேட்டையை பெருக்கிக் கொள்ள ஒருவருக்கொருவர் கள்ள உறவு வைத்துக் கொண்டிருக்கின்றனர். நிறுவன லாபத்தை உறுதி செய்து கொள்ள ஊழியர்களின் முதுகில் குத்தியிருக்கின்றனர்.
மைக்ரோசாப்ட் மீது தொடரப்பட்டு சொதப்பப்பட்ட ஏகபோக முறியடிப்பு வழக்கு.
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை சந்தை போட்டிக்கு விரோதமானது என்று கூக்குரலிடும் இந்த கனவான்கள், தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழிற்சங்கம் அமைப்பதை கொலைபாதக நடவடிக்கையாக சித்தரிக்கும் இந்த அறிவாளிகள் கூட்டு சேர்ந்து கொண்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் சந்தைப் போட்டியை ஒழித்துக் கட்டியிருக்கின்றனர்.
இந்த ‘உத்தமர்கள்’ மாட்டிக் கொண்டிருக்கின்றனர், வழக்கு நடத்தி ஒரு சில ஆயிரம் கோடிகள் அபராதம் கட்டி விட்டு தமது தொழிலை தொடர்வதிலும் அவர்களுக்கு தடங்கல் இருக்கப் போவதில்லை. 1990-களில் இதே அமெரிக்க நீதித் துறை மைக்ரோசாப்ட் தனிநபர் கணினிகளில் இயங்கு தள சந்தையில் தனது ஏகபோக ஆதிக்கத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு போட்டு, இறுதியில் நீதி மன்ற நடைமுறைகளின் ஓட்டைகள் வழியாக அந்நிறுவனத்தை தப்பிக்க வைத்தது வரலாறு. இன்றும் அந்தச் சந்தையில் மைக்ரோசாப்டின் ஏகபோக ஆதிக்கம் தொடர்கிறது என்பதுதான் நிதர்சனம்.
கார்ப்பரேட் முதலாளிகள் ஊழியர்களையும், சமூகத்தையும், அரசுகளையும் முடிந்த வழிகளில் எல்லாம் ஏமாற்றிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு நாளொரு ஆதாரமும் பொழுதொரு சாட்சியமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களே,
உங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவோ, இல்லை பணிச்சூழல் பிடிக்கவில்லை, ஊதியம் போதவில்லை, புதியன கற்றல் வேண்டும் என்று எந்த காரணங்களுக்காகவோ நிறுவனத்தை மாற்ற வேண்டும், புதிய வேலை தேட வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களா? அதில் அப்பாவியாக இருந்து விடாதீர்கள், ஏனெனில் நீங்கள் விண்ணப்பிக்கும் புதிய நிறுவனத்திற்கு உங்கள் விண்ணப்பம் போய்ச்சேர்ந்த அடுத்த கணத்திலேயே உங்களது பழைய நிறுவனத்திற்கு தகவல் போய்ச்சேர்ந்து விடும். நீங்கள் எங்கு வேலை பார்க்க வேண்டும் என்பது உங்களது கைகளில் இல்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இந்த கொத்தடிமை முறை இவ்வளவு செல்வாக்கோடு இருக்கும் போது கொத்தடிமைகளின் நரகமான இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் தொழிற்சங்கமாக போராடுவது ஒன்றே வழி என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா?