privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !

கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !

-

2008-ம் ஆண்டின் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பல நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் அனுப்பியது  தொடர்பான தொலைபேசி உரையாடல்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷன் சென்ற வாரம் டெல்லியில் வெளியிட்டார். அவை ஆம் ஆத்மி கட்சியின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உரையாடல் பதிவுகளின் நம்பகத்தன்மையை தான் சரிபார்க்கவில்லை என்றும், இவை நோக்கியா தொலைபேசி ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த உரையாடலின் ஒரு பதிவு சவுக்கு தளத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த உரையாடல்களின் பின்னணியையும், அவற்றில் பேசப்பட்ட விபரங்களையும் சுருக்கமாக பார்க்கலாம்.

நீரா ராடியா
டாடா, அம்பானி சகோதரர்கள் உட்பட கார்ப்பரேட்டுகள் நடத்தும் மோசடிகளின் உள் விவகாரங்களை அம்பலப்படுத்திய ராடியா பதிவுகள்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போன ஊழலை சமாளிக்க அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான திமுகவின் ஆ ராசாவை பதவி விலக வைத்தனர்.

மேலும், டாடா, அம்பானி உட்பட கார்ப்பரேட்டுகளுக்கு தரகர் வேலை பார்த்து வந்த நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் நவம்பர் 20-ம் தேதி ஓப்பன் மேகசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. டாடா, அம்பானி சகோதரர்கள் உட்பட கார்ப்பரேட்டுகள் நடத்தும் மோசடிகளின் உள் விவகாரங்கள் அந்த உரையாடல்களில் அம்பலமாகியிருந்தன. அவற்றில், 2009-ல் தி.மு.க காங்கிரசு  ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது தொடர்பாக ஆ ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் நீரா ராடியாவுடன் பேசிய பதிவுகளும் நீரா ராடியா கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளிடம் அண்ணா சாலையில் உள்ள வோல்டாசுக்கு (டாடா நிறுவனம்) சொந்தமான நிலத்தை கையளிப்பது குறித்து பேசிய பதிவும் வெளியாகியிருந்தன.

இந்த சூழலில் அந்த ஆண்டு (2010) நவம்பர் 23-ம் தேதி கனிமொழிக்கும் அப்போது தமிழ்நாடு உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்கும் இடையேயான உரையாடல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரையாடலில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக  திமுக சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றியும், தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா, ராடியாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தங்களை எச்சரிக்கத் தவறியது குறித்தும் பேசுகிறார்கள். இதை எல்லாம் தனக்கு யாருமே சொல்லியிருக்கவில்லை என்றும், டாடா-வோல்டாஸ் விவகாரமும் தனக்கு தெரியாது என்றும், கலைஞர் தொலைக்காட்சியை இழுத்து மூடி விடும்படியும் கருணாநிதி சொல்வதாக ஜாபர் சேட் குறிப்பிடுகிறார், எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று கனிமொழிக்கு உறுதி அளிக்கிறார். அதாவது ஐபிஎஸ் அதிகாரியாகவும் உளவுத் துறை தலைவராகவும் இருந்த ஜாபர் சேட் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவிற்கு நெருக்கமான அதிகார வர்க்க தரகராக இருந்து வேலை பார்த்திருக்கிறார்.

வெளியாகியிருக்கும் அடுத்த உரையாடலில் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி கருணாநிதியின் தனி உதவியாளர் சண்முகநாதன் ஜாபர் சேட்டுக்கு தொலைபேசுவதாக பதிவாகியிருக்கிறது. ஜாபர் சேட், 60, 20, 40 (கோடி) என்று பணம் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கிறார். கலைஞர் தொலைக்காட்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளம்பரக் கட்டணமாக அதைக் காட்டலாம் என்கிறார். ஏதோ பினாமி முதலாளியிடமிருந்து பணம் பெற்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த லஞ்சப் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டதாக கணக்கு காட்ட தமிழ்நாடு உளவுத் துறை தலைவர் உழைத்திருக்கிறார்.

ஜாபர் சேட்
திமுகவுக்கு தரகர் வேலை பார்த்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர் சேட்

இதைத் தொடர்ந்து டிசம்பர் 20-ம் தேதி ஆரம்பித்து 2011 பிப்ரவரி 3-ம் தேதி வரை கலைஞர் தொலைக்காட்சியிலிருந்து சினியுக் பிலிம்சுக்கு கடன் வாங்கிய ரூ 200 கோடி அசல் 8 தவணைகளாகவும் அதற்கான வட்டி 3 தவணைகளாகவும் அனுப்பப்படுகிறது.

பிப்ரவரி 2-ம் தேதி ஆ ராசா, முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெஹூரா, ஆ ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர் கே சந்தோலியா ஆகியோர் 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.

2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த முதலாளிகளிடமிருந்து பணம் பெற்ற கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களும் முதலாளிகளும் கைது செய்யப்படலாம் என்று ஊகங்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. “சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 200 கோடி கடன் வாங்கினோம், அதை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டோம்” என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி பெயரில் அறிக்கை விடப்படுகிறது.

இந்தச் சூழலில் பிப்ரவரி 12-ம் தேதி ஜாபர் சேட், சரத்குமார் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்; கலங்கி போயிருக்கும் சரத்குமார் ‘சிபிஐ நேரடியாக இயக்குநர்களை கைது செய்யத்தான் போகிறார்கள், விசாரணை செய்து கொண்டிருக்கப் போவதில்லை’ என்று சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அவரிடம் சொன்னதாக கூறுகிறார்.

சரத்குமார் ரெட்டி
பொய் ஆவணங்களில் கையெழுத்து போட்ட கலைஞர் தொலைக்காட்சியின் எம்டி சரத்குமார் ரெட்டி

2008-ல் சினியுகிடமிருந்து வந்த ரூ 200 கோடி கடனாகத்தான் பெறப்பட்டது என்று காட்டுவதற்கு முன் தேதியிட்ட ஆவணங்களில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பதாகவும், புதிய செய்திகள் வர வர அவற்றை எதிர் கொள்ளும் விதமாக ஆவணங்களை மாற்ற வேண்டியிருப்பதால் குழப்பமாக இருப்பதாகவும், தான் அவற்றை நகல் எடுத்து படித்துக் கொண்டிருப்பதாகவும் ஷரத்குமார் சொல்கிறார். ‘பணப் பரிமாற்றம் நடந்த நேரத்தில் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி இயக்குனராக இருந்திருக்கிறார் அதன் பின்னர்தான் விலகினார்’ என்று அவர் சொல்வதைக் கேட்டு ஜாபர் சேட் அதிர்ச்சியடைகிறார். தன்னிடம் விபரத்தைச் சொல்லி விட்டதாக “பாஸிடம்” தெரிவித்து விடுமாறு சரத்குமார் ரெட்டியிடம் கூறுகிறார். தான் இப்படி தீயாக வேலை செய்வது முதல்வர் கருணாநிதிக்குத் தெரிந்திருந்தால்தான், தனது தரகர் வேலைக்கு தகுந்த வெகுமதியை பதவியாகவோ வேறு பயன்களாகவோ பெற முடியும் என்பது ஜாபர் சேட்டின் விருப்பம்.

வெளியாகியிருக்கும் அடுத்த உரையாடல் பிப்ரவரி 16-ம் தேதி 112 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாகி, பள்ளி ஒன்றில் காவலில் வைக்கப்பட்டிருந்த கனிமொழியிடம் ஜாபர் சேட் பேசுவது தொடர்பானது. சரத்குமார் பெயரில் வெளியிடுவதற்காக தான் தயாரித்த அறிக்கைக்கு “பாஸ்” ஒப்புதல் கொடுத்து விட்டதாகச் சொல்லி அதைப் படித்துக் காட்டி கனிமொழியின் கருத்து கேட்கிறார். “கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லப் போறோம்னு சொல்லுங்க” என்று கனிமொழி சொல்கிறார். அதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் பற்றிய மலிவான கிண்டல்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு சோறு போடுவதற்கு போலீஸ்காரர்கள் உணவுவிடுதிகளை மிரட்டுவது, ஜாபர் சேட் அசடு வழிய பேசி எதிர்காலத்தில் தன்னை டி.ஜி.பி ஆக்குமாறு கனிமொழியிடம் வழிவது என்று உரையாடல் தொடர்கிறது.

கனிமொழி
2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு லஞ்சம் அனுப்பிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி.

இதைத் தொடர்ந்து 2011-ம் பிப்ரவரி 18-ம் தேதி கனிமொழி சென்னையில் விசாரிக்கப்பட்டு, மே 20-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்படுகிறார், நவம்பர் 28-ம் தேதி பிணையில் வெளி வருகிறார்.

உரையாடல் பதிவுகளுடன் ரத்தன் டாடா, ஆ ராசாவை புகழ்ந்து கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் நகலையும், கனிமொழி இயக்குனராக இருந்த தமிழ் மையம் அறக்கட்டளைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடை விபரங்களையும் பிரசாந்த் பூஷண்  வெளியிட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த யூனிடெக் (ரூ 50லட்சம்), டாடா டெலி சர்வீசஸ் (ரூ 25 லட்சம்), ஈடிஏ ஸ்டார் (ரூ 10 லட்சம்), ஷ்யாம் டெலிகாம் (ரூ 10 லட்சம்), ரிலையன்ஸ் கேபிடல் (ரூ 25 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் தமிழ் மையம் அறக்கட்டளைக்கு கொடுத்த “டிப்ஸ்” விபரங்கள் வெளி வந்திருக்கின்றன.

ராடியா தொலைபேசி பதிவுகளில் இடம் பெற்ற டாடா, அம்பானி உட்பட பெருந்தலைகளின் ஊழல்கள் மீது மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இன்றுவரை குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் ராடியாவின் உரையாடல்கள் சட்டப்பூர்வமாக எந்த பங்கையும் ஆற்றுவதை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. மேலும் தனது தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்பட்டது, தனது உயிர்வாழும் உரிமையை பாதிக்கிறது என்று டாடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

தற்போது ஜாபர் சேட்டின் உரையாடல் பதிவுகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டு 2ஜி ஊழல் பற்றிய விவாதத்தை மீண்டும் கிளறி விட்டிருக்கின்றன. “இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகளை செய்வதற்கான தொழில்நுட்ப வல்லமை சி.பி.ஐ.யிடம்தான் இருக்கிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டு தன் வசம் இருக்கும் பதிவுகளை தேர்தல் நேரத்தில் வெளியிட்டு, தன்னுடன் கூட்டணியில் சேரும்படி திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ்” என்று நக்கீரன் இதழ் கூறுகிறது. “அப்படி இல்லை, இது ஜாபர்சேட்டே தனது உரையாடலை பதிவு செய்ததுதான்” என்று சவுக்கு கூறுகிறது. சுப்பிரமணிய சாமி, சோ போன்ற பார்ப்பன தரகர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “திமுக மட்டும்தான் ஊழலின் உறைவிடம்” என்ற தமது பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய கசிவுகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தேர்தல் அரசியல் கூட்டணி கணக்குகளை மனதில் கொண்டு இந்த உரையாடல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம். வெளியிட்டவர்கள் அந்த நோக்கம் அறியாமல் கூட பயன்பட்டிருக்கலாம். ஊழல் ஒழிப்புக் கட்சி என்ற தமது பிம்பத்தை வளர்க்க முயலும் ஆம் ஆத்மி இதை தனது கட்சி செல்வாக்கை உயர்த்தும் விதமாக பயன்படுத்தியிருக்கிறது.

எனினும் 2ஜி எனும் காங்கிரஸ் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழலை வெறுமனே கலைஞர் டிவி, கனிமொழி, திமுக, ஜாபர் சேட் என்று சுருக்கி புரிந்து கொள்வது அபத்தமான ஒன்று. இந்த ஊழலில் திமுக இருக்கிறது என்றாலும் மேற்சொன்ன பெரும் பெருச்சாளிகள் இதை தமது பங்கை மறைப்பதற்கு திமுகவை மட்டும் பலிகடாவாக்க முயல்வது, அதையும் ஒரு சில தனிநபர்களின் தவறு என்று குறுக்கி தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சட்டபூர்வமாகவே 2 ஜி, நிலக்கரி ஒதுக்கீட்டை மன்மோகன் சிங் அரசு நியாயப்படுத்தி வருகிறது. இது கொள்கை முடிவு, ஊழலல்ல என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி நீதிமன்றங்களிலும் இந்த வழக்குகள் இந்த முட்டுச் சந்திற்குள்ளேதான் சுற்றி வருகிறது. எனவே இந்த உரையாடல்களில் வெளியாகியிருக்கும், தகவல்களை இத்தகைய அடிப்படையிலிருந்தே புரிந்து கொள்வது சரி.

ஸ்வான் டெலிகாமுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் சம்பாதித்த பெருந்தொகையில் ஒரு சிறு துளியைக் கிள்ளி கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கிறார் ஷாகித் பால்வா என்ற முதலாளி. அந்தப் பணம் அவருக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டியிலிருந்து குசேகான் காய், கனி நிறுவனத்துக்குப் போய், அங்கிருந்து சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு இறுதியில் கலைஞர் தொலைக்காட்சிக்கு 6 தவணைகளில் வந்து சேர்ந்திருக்கிறது. இறுதியில் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தவுடன் வேறு வழிகளில் பணத்தைத் திரட்டி கடனாக வாங்கினோம், திருப்பி விட்டோம் என்று கலைஞர் தொலைக்காட்சி கணக்கு காட்ட முயற்சித்திருக்கிறது.

அதாவது, மாபெரும் இந்திய அலைக்கற்றை கொள்ளையில் கருணாநிதி கட்சியின் கனிமொழி கோஷ்டியின் பங்காக ரூ 200 கோடி லஞ்சம் அனுப்ப முயற்சி செய்யப்பட்டு அது தோல்வியடைந்திருக்கிறது. லஞ்சமே 200 கோடி ரூபாய் என்றால் லஞ்சம் கொடுத்தவர் எத்தனை கோடி சம்பாதிக்க உத்தேசித்திருந்திருப்பார். அதை புரிந்து கொள்ள சுமார் 6 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

ஆ ராசா
ஆ ராசா

2008 ஜனவரி மாதம் 10-ம் தேதி டெல்லியின் வழக்கமான ஒரு குளிர்கால நாளாக விடிந்திருந்தது. நகரைச் சூழ்ந்திருந்த பனி மூட்டத்தினால் ரயில், விமான சேவைகள் தாமதமாகிக் கொண்டிருந்தன. இத்துடன் 2010-ல் நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகள் தெற்கு டெல்லி போக்குவரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தன.

மத்திய டெல்லியில் உள்ள தகவல் தொடர்புத் துறையின் தலைமை அலுவலகமான சஞ்சார் பவனில் வேறு வகையான தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருந்தது. நெரிசலில் சிக்கி குப்புற தரையில் கீழே விழுந்த ஒருவரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

அந்தக் கூட்டம் கோயிலில் சுண்டல் வாங்குவதற்கு கூடியிருந்த பக்தர்களின் கூட்டம் இல்லை. இந்தியாவில் செல்பேசி சேவைகள் வழங்குவதற்கான 122 உரிமங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் ரூ 1,671 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி வரைவோலைகளையும் கொண்டு வந்திருந்த கோடீஸ்வர முதலாளிகள் அல்லது அவர்களது பிரதிநிதிகளின் கூட்டம் அது. வரவேற்பு பகுதிக்கு போக முயற்சித்த எச்எஃப்சிஎல் (ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக்) என்ற நிறுவன முதலாளியே பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

2ஜி உரிமங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக 2007-ம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி தொலைதொடர்புத் துறை அறிவித்திருந்தது. கடைசி தேதியான அக்டோபர் 1-க்குள் 550 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

டாடா, அனில் அம்பானி
ரத்தன் டாடா, அனில் அம்பானி

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முதல் நாளான செப்டம்பர் 25-ம் தேதி அன்று பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று முடிவு செய்தது தொலை தொடர்புத் துறை. அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பம் அனுப்புவதற்கு தயாராக யார் இருந்திருக்க முடியும்? இந்த அறிவிப்பு வெளியாகப் போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தவர்கள்தான் அதை செய்திருக்க முடியும்.

25-ம் தேதி விண்ணப்பம் கொடுத்தவர்களில் தேவையான ஆவணங்களையும், உரிமத் தொகையையும் யார் முதலில் கட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை என்று 2008 ஜனவரி 10-ம் தேதி மதியம் 1.47-க்கு அறிவித்தது தொலை தொடர்புத் துறை. மாலை 3.30 முதல் ஆவணங்களையும் பணத்தையும் சமர்ப்பிக்கலாம் என்று 2.45 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அடுத்த 45 நிமிடங்களில் ரூ 1,671 கோடி தொகை தயார் செய்து வந்தவர்களுக்கு முதல் உரிமை கொடுக்கப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன.

இதுதான் மேலே பார்த்த முதலாளிகளின் நெரிசலுக்கான பின்னணி. அன்றைக்கு சுண்டல் வாங்கிப் போன முதலாளிகளில் ஒருவர்தான் டிபி ரியாலிட்டியின் முதலாளி ஷாகித் பால்வா. டி பி ரியாலிட்டி, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரின் தொகுதியான பாரமதியைச் சேர்ந்த டைனமிக்ஸ் டெய்ரி நிறுவனத்திலிருந்து முளைத்தது. அதாவது, ஷாகித் பால்வா சரத் பவாரின் பினாமி.

ஷாகித் பால்வா
ஷாகித் பால்வா

உரிமம் பெற்ற சில மாதங்களுக்குள்ளாகவே ஸ்வான் டெலிகாமின் 40% பங்குகளை துபாயின் எடில்சாட் நிறுவனத்துக்கு ரூ 4,200 கோடிக்கு விற்றார் ஷாகித் பால்வா. அதாவது ரூ 1,671 கோடி மட்டும் போட்டு 2ஜி உரிமம் வாங்கியதால் ஸ்வான் டெலிகாமின் சந்தை மதிப்பு ரூ 10,500 கோடியாக உயர்ந்திருந்தது. உரிமம் பெற்ற இன்னொரு நிறுவனமான யூனிடெக் வயர்லெசின் 67.2% பங்குகளை அதன் முதலாளிகள் நார்வேயின் டெலினார் நிறுவனத்துக்கு ரூ 6,200 கோடிக்கு விற்றனர். அதாவது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ 9,200 கோடி.

அதாவது ரூ 1,671 கோடி கொடுத்து சுமார் ரூ 10,000 கோடி சந்தை மதிப்பிலான உரிமங்களை  சுருட்டத்தான் ஷாகித் பால்வா முதலான முதலாளிகள் முண்டியடித்திருக்கிறார்கள்.

தொலைபேசி சேவைகளை தனியார் நிறுவனங்களுக்கு விடுவது மற்றும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைகளை வகுப்பதற்கும், முண்டியடித்தலில் முதலிடம் பிடிப்பதற்கும் இந்த முதலாளிகள் செய்த ஏற்பாடுகள் 2ஜி ஊழலாக வெடித்து வெளியாகின..

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை விடாப்பிடியாக ஆ ராசா கடைப்பிடித்ததற்கும், ’24-ம் தேதி அறிவிக்கப் போகிறோம், 25-ம் தேதியே கொடுக்கும் வகையில் விண்ணப்பத்தை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு முறை முதல் முன்தகவல் பெறுவதற்கும், ‘மதியம் 3.30-க்கு ரூ 1,671 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லப் போகிறோம், தயாராக  இருங்கள்’ என்று இரண்டாவது முன் தகவல் பெறுவதற்கும் ஷாகித் பால்வா கட்டிய கப்பம்தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு போன ரூ 200 கோடி என்று வைத்துக் கொள்ளலாம்.

அதாவது “இன்பர்மேசன் இஸ் வெல்த்”. ‘தாய் தந்தையரை சுற்றி வருவது உலகையே சுற்றி வருவதற்கு சமம்’ என்ற தகவலை தெரிந்த பிள்ளையார் ஞானப் பழத்தை லபக்கிக் கொண்டது போல முன் கூட்டியே தகவல் தெரிய வந்தவர்கள் உரிமங்களை உருவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி உரிமங்களை உருவி விழுங்கும் முதலாளிகளின் வாயோரம் சிதறும் எச்சிலை தகவல்களை கொடுத்தவர்கள் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கலைஞர் தொலைக்காட்சி பொறுக்கிய தொகைதான் ரூ 200 கோடி.

2ஜி அலைக்கற்றை ஊழல்
2ஜி அலைக்கற்றை ஊழல்

ஸ்வான் டெலிகாம் பங்குகளை வாங்குவதற்கு ரூ 4,200 கோடி கொடுத்த எடில்சாட் முதலாளி என்ன இளிச்சவாயனா? ஷாகித் பல்வாவுக்கு சும்மாவா பணத்தை தூக்கிக் கொடுத்தான். அடுத்து வரும் ஆண்டுகளில் அந்தப் பணத்தைப் போல பல மடங்கு தொகையை இந்தியாவிலிருந்து கொண்டு போகத்தான் அந்த பணத்தை இறக்கியிருக்கிறான். அதாவது, இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் கட்டும் மொபைல் கட்டணத்திலிருந்து போட்ட முதலுக்கு லாபம் சம்பாதித்து விடலாம் என்ற சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ரூ 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கும், ரூ 8,629 கோடி ஷாகித் பால்வாவுக்கும் போயிருக்கிறது.

இது போன்று இந்த சுண்டல் வரிசையில் முதலிடம் பிடித்து உரிமங்களை வென்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 9. மேலே சொன்ன ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுடன், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் டெலிகாம், சென்னையைச் சேர்ந்த சிவசங்கரனின் எஸ் டெல், மலேசிய முதலாளி அனந்தகிருஷ்ணனின் ஏர்செல் மேக்சிஸ், எம்டிஎஸ் மற்றும் வீடியோகானுக்குச் சொந்தமான டேட்டாகாம். உரிமங்களைப் பெற்ற இரண்டு நிறுவனங்கள் அவற்றை கைமாற்றி விடுவதன் மதிப்பே தலா சுமார் ரூ 10,000 கோடி என்றால், 9  நிறுவனங்களும் செல்பேசி சேவை தொடங்கி அடிக்கப் போகும் லாபம் பல மடங்கு இருக்கும். அந்த அடிப்படையில் தணிக்கை அதிகாரி மதிப்பிட்ட ரூ 1.76 லட்சம் கோடி இழப்பையும் புரிந்து கொள்ளலாம்.

உரிமங்களை வழங்குவதில் அரசுக்கு இழப்பு என்பதெல்லாம் கற்பனை என்று முதலாளித்துவ அறிஞர்களும், கபில் சிபல் முதலான அமைச்சர்களும், வாதிட்டனர். ‘அலைக்கற்றை இருந்தால் போதுமா, கோபுரம் நாட்ட வேண்டும், சேவை தொடங்க வேண்டும், வாடிக்கையாளர் பிடிக்க வேண்டும், அதன் பிறகு பில் போட வேண்டும், பணம் வாங்க வேண்டும், அதற்குப் பிறகு சம்பாதிக்கப் போவதை வைத்து இப்போதே இழப்பு’ என்று எப்படி சொல்கிறீர்கள் என்று நியாயம் பேசினார்கள்.

ஆனால், உண்மையில் சிஏஜி சொன்ன ரூ 1.76 லட்சம் கோடியை விட இன்னும் பல மடங்கு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.

அனில் அம்பானி
2ஜி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் அனில் அம்பானி.

உதாரணமாக, 2007-ம் ஆண்டு செல்பேசி சேவைகளை வழங்கி வந்த ஹட்சிசன் என்ற ஹாங்காங் நிறுவனத்திடமிருந்து 66.3% பங்குகளை இங்கிலாந்தின் வோடபோன் நிறுவனம் ரூ 50,000 கோடி கொடுத்து வாங்கிக் கொண்டது. அதாவது, அலைக்கற்றை உரிமம் பெற்று, செல்போன் கோபுரங்கள் அமைத்து, இந்திய மக்களுக்கு சேவையை விற்று, பில் போட்டு, பணம் வசூலித்து சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 75,000 கோடி. அவ்வளவு பணத்தை முதலாகப் போட்ட முதலாளிகள் இந்திய சந்தையில் செல்பேசி சேவைகளை விற்பதன் மூலம் அதற்கு ஈடான லாபத்தை ஆண்டு தோறும் சம்பாதிக்க முடியும்.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஏர்டெல் நிறுவனம் 2012-ம் ஆண்டு வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ 71,450 கோடி வசூலித்து அதில் கருவிகளுக்கான தேய்மானம் உட்பட அனைத்து செலவுகள், கடன்களுக்கு வட்டி, உரிமத் தொகை, வரிகள் உட்பட அனைத்தையும் கழித்த பிறகு ரூ 4,200 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது.

2013-ம் ஆண்டு இறுதியில் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து இந்தியச் சந்தையின் 90 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ 2.5 லட்சம் கோடி வசூலித்திருக்கின்றன. இதுதான் 2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக முதலாளிகள் நடத்திய தள்ளுமுள்ளின் பின் இருக்கும் சூட்சுமம்.

1980-களில் தொலைத் தொடர்பு கருவிகள் உற்பத்தியை தனியாருக்கு விட்டதில் தொடங்கி, 1990-களில் தொலைபேசி சேவை வழங்கும் துறையை படிப்படியாக தனியார் மயமாக்கியதன் பொருள் நம் எல்லோரையும் கூட்டாக மொட்டை அடிக்க முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டது என்பதுதான்.

அப்படி கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களில் அவர்களுக்குள் அடித்துக் கொண்ட 20 ஆண்டு வரலாற்றின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல். 1990-களில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராமில் ஆரம்பித்து, ஐக்கிய முன்னணி அரசின் பேனி பிரசாத் வர்மா, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜக்மோகன், பின்னர் பிரதமர் வாஜ்பாயி, பிரமோத் மகாஜன், அருண் ஷோரி வரை முறை வைத்து முதலாளிகளுக்கு கடை திறந்து விட்டார்கள். இதற்காகவே பிஎஸ்என்எல் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதற்கு பெரும் சதியே நடந்தது.

  • தொலைத் தொடர்பு அமைச்சர்கள்இந்தியா முழுவதற்கும் விண்ணப்பம் கொடுத்து விருப்பப்பட்ட இடத்தில் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று சுக்ராமால் சலுகை காட்டப்பட்டது ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக்ஸ் நிறுவனம் (பின்னர் ரிலையன்ஸ் அம்பானியால் வாங்கப்பட்டது).
  • 1990-களின் இறுதியில் ஒப்பந்தப்படி அரசுக்கு உரிமத் தொகையை கொடுக்காமல் ரூ 500 கோடிக்கு டிமிக்கி கொடுத்த முதலாளிகளுக்கு உதவுவதற்கு விதிகளையே மாற்றி தொகையை தள்ளுபடி செய்து உதவியது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு.
  • 2002-ல் முறையான உரிமம் இல்லாமலேயே உள்ளூர் இணைப்புக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் சேவை வழங்கிய ரிலையன்சுக்கு கதவைத் திறந்து விட்டது பிரமோத் மகாஜன் தலைமையிலான அமைச்சகம்.
  • 2004-ல் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் அனந்த கிருஷ்ணனுக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்க வைத்தார் அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன்.

இவ்வாறாக இந்திய மக்களிடமிருந்து சம்பாதிப்பதற்கு முதலாளிகள் நடத்தியசண்டைப் போட்டியில் ஒரு தரப்புக்கு உதவி செய்து நோண்டித் தின்றவர்கள் ஏராளம்.

இந்தக் கொள்ளையில் அன்னிய முதலாளிகளும் பங்கேற்க வசதியாக தொலை தொடர்புத் துறையில் அன்னிய முதலீட்டின் அளவு 27%, 49%, 74% என்று படிப்படியாக அதிகரித்து சென்ற ஆண்டு 100% அன்னிய முதலீடும் அனுமதிக்கப்பட்டுள்ளது..

காலையில் எழுந்ததும், ‘பல்  தேய்ச்சாச்சு, ஆய் போய்கிட்டு இருக்கேன்’, ‘இன்னைக்கு பலகாரத்துக்கு இட்லியும் கெட்டி சட்டினியும்’ என்று நெருங்கிய நட்புகளுக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் அனுப்புவதிலிருந்து, பேருந்தின் முன் பக்கம் ஏறியவர் பின்பக்கம் ஏறியவருக்கு கால் அடித்து டிக்கெட் எடுத்து விடச் சொல்வது, கிரிக்கெட் அப்டேட்ஸ், தினசரி ஜோதிடம், போட்டிகள், இணையம், செக்ஸ் சாட் என்று நூற்றுக் கணக்கான வழிகளில் நூற்றுக்கணக்கான முறை ஒவ்வொருவரும் தமது தொலைபேசியை பயன்படுத்துகின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு ரூ 10 செலவழித்தால் கூட, மாதம் ரூ 300, ஒரு வருடத்துக்கு ரூ 3,500 வரை செலவழிக்கிறார். 90 கோடி வாடிக்கையாளர்களும் ரூ 3 லட்சம் கோடி செலவழிக்கிறார்கள். இதுதான் லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்கப்படுவதன் நிதர்சனம்.

“கொள்ளையா? 1990-களுக்கு முன்னே எல்லாம் யார்கிட்டயும் போனே கிடையாது சார். மொத்தமே 70 லட்சம் இணைப்புகள்தான் இருந்தன, 30 லட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தாங்க. இப்போ பாருங்க நகரங்களில் மூட்டை தூக்குற தொழிலாளரில் ஆரம்பிச்சி, கிராமப் புற விவசாய கூலித் தொழிலாளர்கள் வரை செல்பேசி வைச்சிருக்காங்க. எவ்வளவு வாய்ப்பு பெருகியிருக்குது பாருங்க, இதுதான் வளர்ச்சி. கடையில போய் அடையாள சான்றும், முகவரி சான்றும், போட்டோவும் கொடுத்தா தொலைபேசி இணைப்பு கிடைத்து விடுகிறது. இதுவல்லவா வளர்ச்சி.”

ஆமாம், நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம், கடைசி இந்தியன் வரை சில பத்து ரூபாய்கள் கொடுத்தால் தொலைபேசி இணைப்பு பெற்று, சில நூறு ரூபாய்கள் கொடுத்து வாங்கிய தொலைபேசி கருவியில் பேச வைத்திருக்கின்றன தனியார் மய, தாராள மய கொள்கைகள். ஆனால் நாட்டில் 50%-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை, சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 50%-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பீடிக்கப்பட்டுள்ளனர். 30 கோடி தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து உத்தரவாதமாற்ற நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கழிப்பறை வசதி கொடுத்தும், ஊட்டச் சத்து வழங்கியும், நிலையான வேலைவாய்ப்பு அளித்தும் சம்பாதிக்க முடியாத இந்திய தரகு முதலாளிகள்தான் கடைக்கோடி இந்தியன் வரைக்கும் செல்பேசியை கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இது வளர்ச்சியா? வீக்கமா?

சரியாகச் சொன்னால் அத்தியாவசியம் என்ற பெயரில் செல்பேசியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கி உழைக்கும் மக்களை அதில்சிக்க வைத்து அவர்களது சம்பளத்தில் கணிசமான தொகையை இந்த நிறுவனங்கள் கடத்திச் செல்கின்றன. சேவை, தொழில் நுட்பம் என்ற பெயரில் ஒரு தொழிலாளியை மறைமுகமாகவும் சுரண்ட முடியும் என்பதால் இவை வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.

இந்திய நாட்டை கொள்ளை அடிப்பதில் அதன் இயற்கை வளங்களை, காடுகளை, கனிம வளங்களை வெட்டி கொண்டு போவதும், குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்டி பொருட்கள் செய்து கொண்டு போவதும் ஒரு புறம். உழைத்துச் சேர்த்த பணத்தை பாக்கெட்டிலிருந்து திருடிச் செல்வது அந்த கொள்ளையின் மறுபுறம். அத்தகைய கொள்ளைதான் இந்த 2-ம் தலைமுறை, 3-ம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடுகளும், அவற்றின் மூலம் வழங்கப்படும் செல்பேசி சேவைகளும். கழிப்பறை இல்லாத, ஊட்டச் சத்து இல்லாத இந்தியன் செல்பேசியில் பேசப் பேச முதலாளிகளின் கல்லா நிறைகிறது.

தொலைதொடர்பு வசதிகள் மூலம் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்து விடலாம் என்று முதலாளித்துவ அறிஞர்கள் திட்டம் போட்டுக் கொடுக்கிறார்கள். அதாவது ஏர்டெல் முதலாளி ஆண்டுக்கு லாபம் சம்பாதிப்பதன் மூலம் இந்திய விவசாயி பணக்காரர் ஆகி விடுவாராம். எப்படி என்று கேட்டால். அரசு கொள்கைகள் பற்றிய தகவல்களை பெற்று, மைய ஓட்டத்தில் கலந்து விடுவார்களாம். கல்வி, தொலைதூர மருத்துவ வசதி இவற்றின் மூலமும் பலன் கிடைக்குமாம். அரசு நிர்வாகத்தை மக்கள் கண்காணிப்பதன் மூலமாக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிந்து செலவுகள் குறையுமாம். கிராமப் புறங்களில் செல்போன் ரீசார்ஜ் கடை வைப்பது, சுற்றுலா வழிகாட்டிகளாக வேலை செய்வது போன்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமாம். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்குமாம்.

ஆனால், இதற்கு அடிப்படை கல்வி அறிவு வேண்டும், கிராமங்களுக்கு சாலை போட வேண்டும், தடையில்லாத மின்சாரம் வேண்டும், கடன் வசதிகள் வேண்டும் என்று பல “டும்”கள் இருக்கின்றன. கோவணம் மட்டும் எஞ்சியிருக்கும் விவசாயி தொழில்நுட்பத்தின் மூலம் முதலாளிகளை சந்தையில் எதிர் கொண்டு தன் ஏழ்மையை ஒழித்துக் கொள்வார் என்றால், ஏற்கனவே கோட்டு சூட்டு போட்டு ஆண்டிலியா மாளிகைகளில் குடியிருக்கும் முதலாளிகள் சொர்க்கத்துக்கே போய் விடா விட்டாலும், தமது சொத்து மதிப்பில் பல பத்தாயிரம் கோடிகளை ஏற்றிக் கொள்வார்கள் என்பது மட்டும் நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது.

செல் பேசி மூலம் சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டு பொருளாதார ரீதியாக  ஏழைகளும், விவசாயிகளும் முன்னேற முடியும் என்றால் அதே சேவையை பயன்படுத்தி ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் முதலாளிகள் ரியல் எஸ்டேட் சூதாட்டங்கள் முதல், கிரிக்கெட் சூதாட்டங்கள் வரை, பங்குச்சந்தை, நுண்கடன் வசதிகள், ஆம்வே புதுப் புது வழிகளில் கொள்ளை அடிக்க வழி செய்து கொடுத்திருக்கின்றன இந்தத் தொலை தொடர்பு தொழில் நுட்பங்கள்.

இப்போது உரிமம் பெற்று கொள்ளை அடிக்க உத்தேசித்த ஷாகித் பால்வா மீது வழக்கு, கைது. அந்தக் கொள்ளைக்கு உள்தகவல் கொடுத்து உதவி செய்த ஆ ராசா மீது வழக்கு, கைது. அந்த கொள்ளைப் பணத்தில் ஒரு துளியை லஞ்சப் பணமாக பொறுக்கிக் கொண்ட கலைஞர் தொலைக்காட்சியின் சரத்குமார் மீதும் கனிமொழி மீதும் வழக்கு, சிறை.

நேற்று முளைத்த ஸ்வான் டெலிகாம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் அனுப்புவதை மூன்று லெட்டர்பேட் நிறுவனங்கள் மூலம் கைமாற்றி அனுப்பியிருக்கிறது. பழம் தின்று கொட்டை போட்ட டாடாக்களும், சிவசங்கரன்களும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் கருப்புப் பணத்தை லஞ்சமாக கைமாற்றியிருக்கலாம். அப்படி லஞ்சம் கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் என்ன ஆனார்கள்?

1990-கள் முதல் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தையை ஊதிப் பெருக்கி, நாட்டு மக்களை மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு என்ன தண்டனை? அந்த முதலாளிகளுக்கு தொலைத்தொடர்பு துறையை திறந்து விட்டு நாட்டை மறுகாலனியாக்க பாதையில் கொண்டு செல்லும் காங், பாஜக முதலான ஆளும் வர்க்க கட்சிகளுக்கு என்ன தண்டனை?

செழியன்

மேலும் படிக்க