Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 707

புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ?

18

து கல்லூரியில் சேரும் காலம். கல்லூரியில் விரும்பிய பிரிவு கிடைக்குமா, நண்பர்கள் சேரும் கல்லூரியில் சேர முடியுமா என்று மாணவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ வேறு விதமான கவலைகள். மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.

முத்தூட்
ஒட்டுண்ணி அடகு நிறுவனங்கள்.

அப்பாவி பெற்றோர்கள் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்து பத்துகளை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கும் கனவுகளோடும் அந்தக் கனவுகளுக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி ஏற்படுத்தும் நிராசைகளோடும் கல்லூரி வாசல்களை மொய்த்து நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கும், அடுத்த வகுப்புக்குத் தேர்வாகிக் காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கூட இதே விதமான கவலைகள் தான்.

இந்த சமயத்தில் கடந்த வாரம் தினத்தந்தியில் வந்த விளம்பரம் ஒன்று நம்மை ஈர்த்தது – “அறிமுகம், ஸ்கூல் ரீ ஓப்பன் கோல்ட் லோன் மேளா” என்கிற பெயரில் முத்தூட் நகை அடகு நிறுவனம் கொடுத்த விளம்பரம் தான் அது. பார்த்த உடன் அதில் தொனித்த வக்கிரமும் ஆபாசமும் முகத்தில் அறைந்தது. மனிதர்களின் அடிப்படைத் தேவையான கல்வியை விற்றுக் காசு பார்க்கும் கல்வி வியாபாரிகள் அயோக்கியர்களென்றால், இவர்களோ ஒட்டுண்ணிகள். மக்களின் அச்சத்தையும், எதிர்பார்ப்புகளையும், நியாயமான ஆசைகளையும் சுரண்டித் தின்பவர்கள்.

இன்று தமிழகத்தின் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் பொருளாதார வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக இந்த நகை அடகு நிறுவனங்கள் மாறிப் போயுள்ளன. முத்தூட், முத்தூட் மினி, மணப்புரம் போன்ற பிரபலமான நிறுவனங்கள் நகை அடகு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களிலேயே புற்றீசல் போலப் பெருகி இன்று தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை விட அதிக கிளைகள் கொண்டவைகளாக தமிழகத்தைச் சுற்றி வளைத்துள்ளன.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கும் அதிவேகமாக கிளைபரப்பி வரும் இந்நிறுவனங்களுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளும் முன் இவர்களின் பிறப்பிடமான மலையாள தேசத்தின் மஞ்சள் பித்து குறித்து அடிப்படையான சில விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.

தங்கம்உலகின் மொத்த தங்க நுகர்வில் 50 சதவீதம் இந்தியாவிலும் சீனாவிலும் நடக்கிறது. இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு 2011-ம் ஆண்டில் சுமார் 986 டன்களாகவும், 2012-ம் ஆண்டு சுமார் 800 டன்களாகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய திசைகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

ஏரென்ஸ் தங்கச் சந்தை (Aeren’s Gold Souk) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொச்சியில் கடந்த 2011 மார்ச்சில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றைத் திறந்துள்ளது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியுள்ள இந்த வணிக வளாகம் தனிச்சிறப்பாக தங்க நகைக் கடைகளுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6.5 லட்சம் சதுர அடிகளில் அமைந்துள்ள கடைகளில் பல்வேறு சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் மட்டுமின்றி, நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

1947-க்குப் பின் மற்ற இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவாணியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

டாலரும் நகையும்
வெளிநாட்டு பணமும் நகை வணிகமும்

ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கியிருந்தது. இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை.

நகையும் அடகும், உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்த அளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி மற்றும் மணப்புரம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மற்றும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் நிறுவனத்திற்கு, இன்றைய தேதியில் நாடு முழுவதும் 25,000 ஊழியர்களும் 4,000 கிளைகளும் உள்ளன. 2009-ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து முன்றே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. முத்தூட்டின் கிளைகளில் சுமார் 85 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன.

1992-ம் ஆண்டு பங்குகள் வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தங்க அடகு நிறுவனம் மணப்புரம். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து சுமார் 300 கிளைகளைக் கொண்டுள்ளது. 22,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

நம்ப முடியாத இந்த வளர்ச்சியின் ரகசியம் என்ன?

அந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள கார்ப்பரேட் அடமானக் கடைகளாக வளர்ந்துள்ள தங்க அடகு நிறுவனங்களின் பொருளாதார இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக நகைக் கடன்கள் வாங்குவதாக இருந்தால் நம் மக்கள் உடனடியாக சென்று விழும் இடம் சேட்டுக் கடைகள் அல்லது பொதுத்துறை வங்கிகள். சேட்டுக் கடைகளில் நாம் கேட்கும் தொகை அப்படியே கிடைக்காது.

நகைக் கடன்
நகைக் கடன் நிறுவனம்

பொதுத்துறை வங்கிகளைப் பொருத்தமட்டில் நகைக் கடனுக்கான வட்டி விகிதம் முத்தூட் மணப்புரம் போன்ற நிறுவனங்களை விட மிகவும் குறைவு தான். பாரத ஸ்டேட் வங்கியில் நகைக் கடனுக்கு 14.45 சதவீத வட்டி. வேறு சில பொதுத்துறை வங்கிகளில் 12 சதவீதம் அளவுக்கும், கூட்டுறவு வங்கிகளில் 14.5 சதவீதத்திற்கும், விவசாய வங்கிகளில் 9 சதவீத அளவுக்கும் கூட நகைக்கடன் வசதி உள்ளது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் நகை அடகு பிடிப்பதற்கு சிக்கலான பல நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்பதோடு பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்னும், நகையின் மதிப்பில் 60 -70 சதவீத அளவுக்கே கடன் கொடுப்பார்கள்.

லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் நமக்கு 90 ஆயிரம் கடன் தேவை என்றால், பொதுத்துறை வங்கிகளில் சுமார் 60 ஆயிரம் தான் கிடைக்கும். இந்த இடைவெளியில் தான் தனியார் அடகு நிறுவனங்கள் நுழைகிறார்கள். லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட நகையின் மேல் 90 ஆயிரம் வரை கூட கடன் தரத் தயாராக உள்ளனர். திருட்டு நகையா இல்லையா என்பதை சோதிப்பதில்லை, அடையாளத்திற்கான ஆவணம் ஏதேனும் இருந்தால் போதும் வேறு சோதனைகள் கிடையாது. நகை அடகு அலுவலகத்தில் நுழைந்த பத்து நிமிடங்களுக்குள் கை மேல் காசு – ஆனால், வட்டி மட்டும் 25 சதவீதம்!

இது எப்படி சாத்தியமாகிறது? தொடந்து மக்களுக்குக் கடன் கொடுத்துக் கொண்டேயிருக்க இவர்களுக்கு எங்கேயிருந்து பணம் வருகிறது. இந்நிறுவனங்கள் திறந்திருக்கும் கிளை அலுவலகங்களில் அடகு பிடிக்கப்படும் நகைகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களோ, வங்கியில் இருப்பது போன்ற போதுமான காவலர்களோ இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். எனில், அடகு பிடிக்கப்படும் நகைகள் எங்கே பாதுகாக்கப்படுகின்றன? இங்கே தான் சூட்சுமம் இருக்கிறது.

மக்களிடம் அடகு பிடிக்கும் நகைகளை இந்நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளில் மறு அடமானம் வைக்கின்றன. ஏமாளி மக்களிடம் நகை அடகு பிடிக்கும் நிறுவனங்கள், சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த நகைகளைத் தங்களது சொத்துக்களாக (Assets) கணக்குக் காட்டிக் கொள்கின்றன. அடுத்து ஏதேனும் பொதுத்துறை வங்கியில் கார்ப்பரேட் தங்கக் கடன் என்கிற வகையில் மொத்தமாக நகைகளை அடகு வைத்து 8 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்கின்றன. பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.

விளம்பரங்கள்
‘கனவு’களை விற்று கொள்ளை அடிக்கும் தங்க நகை அடகு வியாபாரம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கும் என்கிற உத்திரவாதமற்ற நம்பிக்கை தான் இந்த மொத்த சூதாட்டத்திற்குமான அடிப்படை. தங்கத்தின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடையும் போது இந்த நகை அடகு நிறுவனங்கள் கட்டியெழுப்பியிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகையும் சடசடவென்று சரிந்து விழுந்தாக வேண்டும்.

தற்போது மழைக் காலத்துக் காளான்கள் போல் தங்க அடகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்து வருவதை குறைந்தபட்சம் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன்படி, நகையின் மதிப்புக்கு 60 சதவீத அளவுக்கே கடன் கொடுக்க வேண்டும், மொத்த கடன் வணிகத்துக்கும் நிறுவனங்களின் மூலதன மதிப்புக்குமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

எனினும், இந்நிறுவனங்களின் உயிராதாரமான நகை மறு அடகு விஷயத்தில் ரிசர்வ் வங்கி இன்னும் தலையிடவில்லை. மேலும், எந்தக் கட்டுப்பாடும் முறையான நெறிமுறைகளும் இன்றி கிளைகள் துவங்குவது, அதீதமான வட்டி விகிதங்கள் சுமத்துவது உள்ளிட்டவைகளிலும் ரிசர்வ் வங்கி பாராமுகம் காட்டி வருகிறது. தங்க விலை நிலவரம் நிலையற்றதாக மாறி வரும் நிலையில் இந்நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு விரிவுபடுத்த முற்பட்டுள்ளன. எனினும், இந்நிறுவனங்களின் அஸ்திவார கோட்பாடான ‘தங்க விலை எப்போதும் கூடிக் கொண்டேயிருக்கும்’ என்பதில் ஏற்பட்டிருக்கும் தள்ளாட்டம் விரைவில் இவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்களாக இருப்பதே. அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவும் அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவுமான தேவை அதிகம்.

தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தனிநபர்களால் வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை முட்டாளின் தங்கம் (Fools Gold) என்கிறார்கள். இவ்வாறு வாங்கிக் குவிக்கப்படும் தங்கத்தை மூலதன முடக்கம் என்பதாகப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவிலோ சாமானிய மக்களால் ஆபத்துக் காலத்தில் உடனடிப் பயன்தரத்தக்க முதலீடாகவே தங்கம் கருதப்படுகிறது. இது போன்ற நகை அடகு கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களை எந்தக் கூச்சமும் இன்றி வக்கிரமான முறையில் காசாக்குகின்றன.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முழு அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டுள்ள அரசோ கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்தி வருகிறது. காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, தொழிலாளரின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன எந்தக் பாதுகாப்புமற்று தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து விசிறியடிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும், நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும், நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், திடீர் வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் மக்களுக்கு அதீதமான நிதித் தேவைகளை ஏற்படுத்துகின்றன.

சம்பள வெட்டும் வேலையிழப்பும் தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெருக்கிச் சுருக்குகிறது. மக்கள் இந்த அடிமை அரசாங்கத்தால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர். நட்டாற்றில் விடப்பட்ட மக்களின் இந்த நெருக்கடி முத்தூட், மணப்புரம் போன்ற நவீன கார்ப்பரேட் ஈட்டிக்காரர்கள், ஈமு கோழி வளர்ப்பு, பிளேடு சீட்டுக் கம்பெனிகள் போன்றவற்றைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளது. இந்த சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு மாற்றியமைக்கப் போராடுவதன் ஊடாகத் தான் இது போன்ற திருட்டு கும்பல்களிடமிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

– தமிழரசன்

சத்யசாய் அபார்ட்மென்ட்ஸ் !

31

“என்ன சித்ரா? பக்கத்து போர்சன்ல புதுசா குடித்தனம் வந்தவாகிட்ட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தே! ஏதாச்சும் பிராப்ளமா?”

“இல்ல, இல்ல, தண்ணி இல்லையாம், மோட்டரு போடச் சொன்னாங்க, மெயின்ட்டனன்ஸ் எல்லாம் எவ்வளவு என்னான்னு விசாரிச்சாங்க, நானும் அவங்கள விசாரிச்சுட்டிருந்தேன்.”

“பசங்கள ஸ்கூலுக்கு அனுப்சாச்சு, போரடிக்குதா?” கேட்டுக்கொண்டே மாலதி வீட்டுக்குள் செட்டியார் வீட்டம்மா நுழைந்தார்.

“காத்தால வேலல்லாம் முடிஞ்சிருத்தா, நீங்க மத்யானம் சமையலுக்கே போயிருப்பேள், நான்தான் தேமேன்னு கதபேசிண்டிருக்கேன்” என்று செட்டியார் வீட்டம்மாவை ஒரு சிரிப்போடு உள்ளே இழுத்துக்கொண்டு… மாலதி திரும்பவும் விசயத்துக்கு வந்தாள்.

“சித்ரா! முன்னாடி எங்க குடி இருந்தாளாம்?”

“வியாசர்பாடியாம்!”

“என்னடி இது விவகாரமான ஏரியாவா இருக்கு!” கேட்ட மாத்திரத்தில் மாலதி கேலியாகவும், எச்சரிக்கையாகவும் முகக்குறிப்புக் காட்டினாள். வயசு அம்பத்தி நாலு ஆனாலும் செட்டியார் வீட்டம்மாவுக்கு காது கணீரென்று ஒலித்தது போல பாய்ந்து கொண்டு பேசினார், “எங்க வீட்ல சொல்வாரு, அந்தப் பக்கமெல்லாம் அடிதடி, வெட்டுக்குத்துன்னு ஏரியாவே கல்ச்சர் ஒரு மாதிரின்னு,” என்று பேசிக்கொண்டே வந்தவர், சற்று குரலைத் தாழ்த்தி வியாசர்பாடின்னா பெரும்பாலும் ‘அவங்காளா கூட இருக்கலாம்’!

“என்ன ‘இங்கு’ வக்கீறீங்க, தெளிவாகத்தான் சொல்லுங்களேன். இங்க யாரு இருக்கா?” சித்ரா வற்பறுத்த, “இவ ஒருத்தி, எல்லாத்தையும் புளி போட்டு விளக்கணும், பெரும்பாலும் அங்கெல்லாம் எஸ்.சி. தான் இருப்பாங்க,” இன்னுங்கூட சித்ரா முழு மனதாக நிறைவு காட்டாதவள் போல பார்க்க, கிசுகிசுத்தவாறு “அதான்! போதுமா?!”

“ஓ! புரியுது, புரியுது, இந்த காலத்துல பாலாஜி அம்மா, யார்? என்னன்னு? கேக்க முடியாது, அபார்ட்மெண்டல ஹவுஸ் ஓனர் விருப்பம், அவங்க அவங்க வாடகை பாத்து விடுறாங்க, பாரத விலாஸ் மாதிரி அபார்ட்மென்ட் ஆகிடுச்சி.”

“ஏய், பாரதவிலாஸ்ல மல்டி ஸ்டேட் தாண்டி, மல்ட்டி கேஸ்ட் இல்ல; நமகென்ன, நாம பாத்து நடந்துண்டா, நரகத்துலயும் பொழைக்கலாம்பா, அதுபோல கரெக்ட்டா வச்சுண்டா, பிரச்சனை இல்ல! ‘பாக்கலாம், உடனே தெரியாது இல்லைய, போகப் போக யார்னு தெரிஞ்சிடப்போவுது!”

“ஆமாம், சித்ரா, நீதான் பக்கத்து வீடு. பழக்க வழக்கத்த பாத்தா தெரிஞ்சுடப்போவுது, நான் மேல இருக்கறதால சரியா பாக்க முடியல, ரெண்டு புள்ள போல இருக்கு, கருப்பாதான் தெரியுதுங்க!” செட்டியார் வீட்டம்மா குத்து மதிப்பாய் பேச மாலதி வெடுக்கென சிரித்துவிட்டாள்.

“ஏண்டி! என்னப் பாத்து சிரிக்கிறே. நானும் கருப்பா இருக்கேன்னா! இது வேற கருப்புடி, அவுங்க கருப்பே தனி!”

ஆமாம் என்பதுபோல சித்ராவும் தலையாட்டிக் கொண்டே, “விடுங்க எல்லாருமே கருப்பாத்தான் இருக்காங்க, அத வச்சி சொல்லிட முடியாது, பிராமின்லயே பிளாக்கும் உண்டு, கூட்டுறவர்கள்ல ஒயிட்டும் உண்டு, பேச்ச பாத்தா டவுட்டாதான் இருக்கு!”

“சித்ராவுக்கு சொல்ல வேண்டியதில்ல, இன்னும் ஒரு வாரத்துல குலம், கோத்திரம், ஜாதகத்தையே புட்டு வச்சிடுவா. பாவம்! மனுஷாள வெறுக்கக் கூடாது, இருந்தாலும் அவா பழக்க வழக்கம் நமக்கு ஒத்துவர்றதுல்ல, இப்ப நாங்க கூடத்தான் நான் பிராமின், இருந்தாலும் நம்ப அபார்ட்மெண்ட்ல யாரும் பேதம் பாக்கல வித்தியாசம் இல்லாம பழகிக்கிறோம், அவங்களும் எடத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா பரவாயில்ல.”

“ஏன் நாம கெடந்து மண்டைய பிச்சிகிட்டு, சித்ரா விடாம பேச்சுக்கொடு, பேசவுட்டாத்தான் விசயம் வெளியே வரும், நீ பேசி பாரு!” செட்டியார் வீட்டம்மா முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு கீதோபதேசம் செய்தார்.

“அய்யோ, மணி பதினொண்னு ஆகப் போறது, குளிச்சிட்டு வேலையப் பாக்கனணும், வீட்ல ‘டான்னு’ கிளம்பிடுவார்!” மாலதி குறிப்பு காட்ட கலைந்தனர்.

திப்பிலி ரசத்தை உறிஞ்சி ஒரு கனை கனைத்தபடி தெம்புவந்தவன் போல சாய்ராம் மெல்ல மாலதியை விசாரிக்க ஆரம்பித்தான், “என்ன? புதுசா வந்தவாள பத்தி மேட்டர் ஓடுது போல இருக்கு”!

“ஆமாம்! இதுக்கு முன்னாடி வியாசர்பாடில இருந்தாளாம், சித்ரா சொல்லிண்டிருந்தா”

“சரி, என்ன பொருள்லாம் வந்துச்சு, பாத்தியா?”

“கட்டில், பீரோ… எல்லாம் வந்துச்சு!”

“கட்டில், பீரோ, கல்யாணம் ஆனா எல்லாந்தான் வச்சிருப்பா, இது ஒரு பாய்ண்ட்டா? காஸ்ட்லியா வேற என்ன வந்துச்சுன்னா, அதுக்கு பதிலக் காணோம்!

“நைட்ல வந்ததால, சரியா கவனிக்கல, ஆளுங்கள பாத்தா ‘அவாள்தான்னு’ தெரியறது!”

“ஏய்! எவாளாவோ இருக்கட்டும் ஒரு வாஷிங்மெசின், பிரிட்ஜ், எல்.சி.டி. மாதிரி காஸ்ட்லி பொருளா இருந்தா, ஆளு என்ன பேக்ரவுண்டு, ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியும். மாசம் ஏழாயிரம் வாடகை தர ரெடியா வர்றான்னா ஒண்ணும் ஏப்ப சாப்பையா இருக்க மாட்டா! நீ முந்திண்டு வாய வுட்டு, மொக பொல்லாப்பு பண்ணின்டுறாதே! இப்பல்லாம் எல்லார் தயவும் தேவப்படறது, செட்டியார் வீட்லயும் பக்கத்துல பிள்ள விட்லேயும் சூத்ராளே நம்மகிட்ட விழுந்து விழுந்து தானா வந்து ஹெல்ப் பண்றாள்னா அவா லெவல் அவாளுக்கே தெரியும்! அது போலத்தான் வந்தவாளும், பக்கத்துல அவா வேற மாதிரி பேசினாலும், நீ பேச்சுல எரிச்சல காட்டிடாதே, ஆமாம்”

“தெரியும், தெரியும், பக்கத்துல இவா மட்டும் என்ன? நமக்கு எல்லாம் ஒண்ணுதான். டீட்டெய்லுக்காக விலாவாவாரியா பேசிண்டிருந்தேன், யார் யார் கிட்ட எவ்ளோ வச்சுக்கணுமோ அவ்ளோதான் வச்சுக்கணும்னு தெரியாதா? நீங்க பசங்கள மட்டும் கொஞ்சம் ஓவரா பழகிடாம இருக்க சொல்லி வையுங்கோ! என்ன?”

தலையாட்டிக் கொண்டே சாய்ராம் பைக்கை ஸ்டார்ட் செய்ய அது புகையை கக்கியது.

“ராகுலம்மா கொஞ்சம் வாங்களேன்!” சித்ரா கூப்பிட மாலதி சித்ரா வீட்டுக்குள் விரைந்தாள்.

பிராமணாள் காபி பார் - பெங்களூருவில் !
பிராமணாள் காபி பார் – பெங்களூருவில் !

மெதுவான குரலில் ஆரம்பித்தாள் சித்ரா, “பக்கத்தில, ஐ.சி.எப்.ல வேல செய்யிறாராம். அதான் பக்கமா இருக்குன்னு இங்க குடி வந்திருக்காங்க. சொந்த ஊர் செய்யாறாம். ரெண்டும் பசங்க, ஒருத்தன் செவன்த், ஒருத்தன் சிக்ஸ்த் எஸ்.பி. ஓ.ஏ வாம்! சி.பி. எஸ்.சி. சிலபஸ்லதான் படிக்கிறாங்க… அவங்களும் டிகிரியாம், ஹஸ்பெண்ட் சென்ட்ரல் கவர்மெண்ட்னால, பசங்கள பாத்துக்க வேலைக்கு போகலயாம்.” ஒப்பித்தாள்.

“இந்த காலத்துல டிகிரின்னா சர்ட்டிபிகேட்டயா வாங்கியா பாக்கப் போறோம்! சொல்றத கேட்டுக்க வேண்டியதுதான், எல்லாம் சரி, என்ன ஆளுங்கண்ணு தெரிஞ்சிச்சா! அத வுட்டுட்டியே!”

“அதுதான் புரிய மாட்டேங்குது! நான் வெஜ்தான்னு தெரியுறது, அவரப்பாத்தா செம கருப்பு, அவளும் மாநிறம்தான். நீங்க வெளில வர்றப்ப, துணி காயப்போடுற மாதிரி பாருங்களேன், பேச்செல்லாம் ‘அந்த’ மாதிரி தான் இருக்கு, ஒரு வேள ரொம்பநாளா மெட்ராஸ்ல இருக்கிறதால சிலபேர் அப்பிடி பேசலாம், யாரு கண்டா? எப்படியும் தெரியத்தான் போவுது!”

“ஏய்! பசங்க உசாரு! நேத்திக்கே அந்த சின்ன பையன்கிட்ட என்னடா சாப்பிட்டேன்னேன்! வாயத் திறக்கணுமே! பதிலே சொல்லாம ஓடிட்டான்!”

“பாவம்! பழக்கம் இல்லேல்ல, புதுசு. அதான் பேச மாட்டேங்கிறான் போல. ஆனா நேரத்துக்கு குக்கர் சத்தம் கேக்குது, பருப்பு வாசன வருது, இது வரைக்கும் நான் வெஜ் வாசன வரல, இனிமே தான் தெரியும், இப்பதான் வந்துருக்காங்க!”

“ஏன்? நான் பிராமின் எல்லாருந்தான் சாப்பிடறேள், அவா வீடு, அவா பாடு! நாம கேக்க முடியாது! எங்க ராகுலுக்கே அத்லட்டிக் பிராக்டிஸ் பண்ணனும்னா முட்டை சாப்பிடனும்னு டாக்டர் சொல்லிட்டா, அவா அப்பா பாயில் பண்ணி தர்றார். உனக்குதான் தெரியுமே, சாப்பிடறத பத்தி இல்ல, இருந்தாலும் ரொம்பவும் அதர் கேஸ்ட்டுன்னா ஆச்சாரமா இருந்துட்டதால ஒத்துக்க மாட்டேங்கறது ‘அவா’ பழக்க வழக்கம் நமக்கு ஒத்து வராது!”

“நானே, என் பையன ரொம்ப வச்சுக்காதன்னு சொல்லி வச்சிருக்கேன், ஏன்னா புள்ளங்க எதார்த்தமா பழகிட்டா, அப்புறம் வேணாம்னா கேக்காதுங்க, எங்க வீட்ல கூட நீயா போயி பேசாத, தானா கேட்டா பதில் சொல்றதோட வச்சுக்க, அந்தாள பாத்த மொகமே சரியில்லேன்னு சொன்னாரு!”

“ஏய் நாம பாட்டும் பேசிண்டிருக்கோம், பக்கத்துல காதுல விழாதே! அது வேற!” மாலதி திடீரென சுதாரிக்க “பக்கத்துல படிக்கட்டு தாண்டிதான சுவரு! கேக்காது, மேலும், புதுசா இருக்கறதால அவுங்க வெளியிலயே வர்றதில்ல, சரி, ரேசன் போனா சொல்லுங்க, நானும் வாரேன்!”

“ரேசன்னோன்னேதான் ஞாபகம் வருது, உனக்குதான் பழக்கம் இருக்கில்ல, புதுசா வந்தவங்களுக்கு அரிசி வேணாம்னா கேளு! நாம வாங்கிக்கலாம், இட்லிக்கு ஆகும்!”

“நீங்க வேற! அவங்க வெள்ள கார்டாம், கேட்டுப் பாத்துட்டேன்…”

“அட! வெள்ள கார்டா, அப்ப பெரிய இடந்தான். ஹ.. ஹிம்” என்று முனுகியவள் திடீரென ஞாபகம் வந்தவள் போல “அந்த லேடி பேரு என்ன?

“அபிராமி” சடாரென சித்ரா பதில் சொல்ல, “பேர வச்சி ஒண்னும் யோசிக்க முடியலயே! ஊம்…” மாலதி குழப்பத்தோடு நகர, கருப்பும், வெள்ளையுமாக பூனை கட்டை சுவரில் நடந்து வந்தது, அச்சத்தோடு மாலதியை பார்த்து முறைக்க, “தே… ச்சூ.. இது வேற கெடந்து குறுக்கும் நெருக்கும் அலையறது” என்று விரட்டிக் கொண்டே போனாள்.

பிராமி கதவைப் பூட்டி விட்டு வெளிக்கிளம்பவும், மாலதி வாசலில் நிற்கவும் எதேச்சையாய் அமைந்தது. மாலதியைப் பார்த்ததும் அபிராமி விருப்பத்துடன் புன்னைகைத்தாள். பதிலுக்கு, “என்ன வீடு செட்டில் ஆயிடுத்தா?” என்று மாலதி கேட்க, மேலிருந்து செட்டியார் வீட்டம்மாவும் இறங்கி வந்து சேர்ந்து கொண்டார்.

“ஊம்… எல்லாம் முடிஞ்சிடுச்சு!” என்று முகம் பார்த்து பதில் சொன்ன அபிராமியின் கழுத்தையே கவனித்த மாலதி “செயின் புது டிசைனா இருக்கு, நியு கலெக்சனா? “என்று விசாரிக்க “தாலி செயின்” என்று அபிராமி பிடித்து தெரியும்படி தூக்கிக் காட்டினாள்.

“இதென்ன புலிப்பல்லா, புள்ளையார் தாலியா?”

“எங்க வீட்டு தெய்வம் டிசைனு!”

அதற்கு மேல் கேட்கத் தயங்கினாள் மாலதி. “நேற்று பெருமாள் கோயில் வாசல்ல பாத்தேன், பெருமாள்தான் கும்பிடுவியா?” செட்டியார் வீட்டம்மா கொக்கி போட்டார்.

“இல்லைங்க, வேம்புலி அம்மன் கோயிலுக்கு போயிட்டு அப்புடியே வர்ற வழியில பெருமாள் கோயிலுக்கும் போயிட்டு வந்தேன்!”

செட்டியார் வூட்டம்மா விடுவதாயில்லை, “எங்க பால் காய்ச்சிரப்ப கூட அம்மா, அப்பாவ காணோம்!”

“அவங்களால ஊர்லேர்ந்து தனியா வர முடியாது! பிறகு பசங்க லீவுக்கு வருவாங்க!”

“வரட்டுங்களா? வீட்ல இன்னைக்கு நைட் சிப்டு, நான் பசங்களோட ரயில்வே குவார்ட்டர்ஸ்ல இருக்குற தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு வேலையா போறேன்… நைட்டு வந்துருவேன்… வாரேங்க…” அபிராமி பொறுப்போடு பேசி விட்டு நகர்ந்தாள்.

வாசல் கேட்டை தாண்டிவிட்டாளா, என உறுதிபடுத்திக் கொண்ட செட்டியார் வீட்டம்மா, “கேட்டியே, ஒழுங்கா கேட்டியா? எங்க வீட்டு தெய்வம் தாலின்னு சொன்னப்ப என்னா சாமின்னு கேட்டிருந்தா என்ன வகையறான்னு புரிஞ்சிருக்கும்! கேக்காம விட்டுட்டியே!”

“அதையே சுத்தி சுத்தி கேட்டா தப்பா எடுத்துகிட்டா? அதான் நினப்பு வந்தும் வேண்டான்னு விட்டுட்டேன்…” இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, புதிதாக குடித்தனம் வந்தவர்கள் போர்சனுக்கு எதிரே உள்ள காம்பவுண்டு சுவரை ஒட்டி ஆராய்ச்சி செய்தபடி நின்றிருந்த சித்ரா, மாலதியை ஜாடை காட்டி அழைக்க இருவரும் ஆர்வத்துடன் நெருங்கினார்கள். “வாங்க, தோ! பாருங்க புதுசு, புதுசா அபார்ட்மென்ட்ல என்னென்னவோ நடக்குது, பாருங்க புதையல!” சித்ரா கேலியாக இடத்தைக் காட்ட, மாலதிக்கு விழி அகன்றது.

“அய்யய்யோ! என்னடி இது, பாட்டில், பாட்டிலா கிடக்குது, லேபிள் மினு மினுக்க என்ன தைரியமா போட்ருக்கா! யாரா இருக்கும்?”

“கேள்வி கேக்குறபாரு! இந்த வீட்டுக்கு நேரா கெடக்கு யாரா இருக்கும்னு கேக்குற! குடிக்கிறவங்களுக்கு என்ன பயம் வேண்டி கெடக்கு! போனாளே! அவ வீட்டுக்காரராகத்தான் இருக்கும், புதுசா குடிவந்தா பழக்கத்த விட முடியுமா? இஷ்டத்துக்கு குடிச்சிட்டு இஷ்டத்துக்கு போட்டிருக்காங்க… “செட்டியார் வீட்டம்மா ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்தார்.

“வேற யாராவது போட்டிருப்பாங்களா! இங்க உள்ளவரே இப்படி போடுவாரா என்ன? அசிங்கம்னு நெனக்க மாட்டாரா?” சித்ரா சந்தேகப்பட, மாலதி ஆரம்பித்தாள்,

“அந்தாள கண்ணப் பாத்தாலே தெரியுது, செவ செவன்னு செவந்து கிடக்கறது, கண்ணு, மூஞ்செல்லாம் வீங்கி வடியறது, தெனம் குடி இருக்கும் போல இருக்கு! சந்தேகம் என்னடி! அந்தாளு மூஞ்சியும் கருகருனு மொகமும், முழிக்கறத பாத்தாலே தெரியலையா, மொடா குடிகாரன்னு, ரயில்வே வேற! வண்டி பிராட்கேஜ்ல ஓடுது! நேரம், காலம் கெடையாது, தினம்தான் ராத்திரி கேட்டு திறக்குற சத்தம் கேக்குதே! பாத்துகிட்டுதான இருக்கேன்! ராத்திரி குடிச்சிட்டு சத்தம் போடாம போட்டுடுவார் போல…” செட்டியார் வீட்டம்மா விவர மழை பொழிந்தார்.

“சைலண்ட்டா அவுரு போறது வர்றதப் பாத்தா சொல்லவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல, அவங்க அவங்க விருப்பம், டஸ்ட் பின்ல போட்டா தெரியப் போறதில்ல, பசங்க இருக்குற இடம், யாரு சொல்றது? ஒரு நாள் கவனிச்சிட்டு சொல்லிட வேண்டியது தான்!” சித்ரா புலம்பிக்கொண்டாள்

“கலகலன்னு பேசிடறவாள நம்பிடலாம், சைலண்ட்தான் டேஞ்சரே! அவா கல்ச்சர மாத்த முடியாது! கைல காசும் வந்துடுச்சு! அவா இஷ்டத்தக்கு எல்லாம் செய்வா! யாரு கேக்கறது? சொன்னா நமக்கு பொல்லாப்பு”

“அதுக்காக அபார்மென்ட்ல படிக்குற பசங்கல பாத்து கெடட்டுங்கிறியா? அவங்களுக்கு நாகரிகம் கெடையாது. நாம பொது இடத்துல எப்படி இருக்கனும்னு சொல்லித்தான் ஆகணும், இன்னொரு முறை பாத்தா நானே அந்த பொண்ணுக்கிட்ட சொல்றேன். நாம ஏன் பயப்படனும், இத இப்படியே விட்டா, நாளைக்கு வேற விசயத்துக்கு துணிச்சல் குடுத்துடும்” – செட்டியார் வீட்டம்மா இருவருக்கும் தெம்பு கொடுத்தார். வாடகை வருதுன்னு கண்டதுங்களையும் வுட்டா இப்படித்தான்… மூவரும் முனகிக் கொண்டே நகர்ந்தனர்.

பேசிவிட்டு பெண்கள் வீட்டுற்குள் நுழைந்தவுடன், மெல்ல வெளியே வந்த சித்ராவின் கணவன் ஒரு நேரம் பார்த்து தலையைக் காட்டிய சாய்ராமை கண்ணால் குறிப்பு காட்டி அழைக்க, “அப்புறம் ரகு அந்த பிளம்பர வரச்சொன்னியே என்னாச்சு?” என்று பேசிக் கொண்டே முதுகில் நெளிந்த பூனூலை மேலும், கீழும் ஆட்டியபடி அபார்ட்மெண்ட்டின் பின் பக்கம் நகர்ந்தான்.

“சாயி, நல்ல வேல பண்ண நீ! பாட்டில இங்கயா போடுவ, மாடிலேந்து விட்டெறிந்தா கூட உடைஞ்சிருக்கும், முழு பாட்டிலையும் எல்லோரும் பாக்குற மாதிரி ஏன் இங்க போட்ட?..”

“அட! நான் மேலேந்துதான் போட்டேன், செத்தை கிடந்ததால உடையாம மாட்டிக்கிச்சு… நல்ல நேரம் புதுசா குடிவந்தவன் வேற ஆளா போனதால, அவன் தலயில விடிஞ்சிருச்சு, இல்ல நம்ம மேல சந்தேகம் வந்திருக்கும்! தப்பிச்சோம் போ! வீட்ல பேசினாலும்… அவங்க பாணியிலயே போ… அது சரி! போட்டது தான் போட்ட, எதுக்கு புதுசா குடிவந்தவன் வாசல்ல போட்ட?” ரகு வியப்பாய் கேட்க,

“பின்ன, நம்ப வீட்டுக்கு நேரா போடச் சொல்றியா! ஃபுல் அடிச்சும் நம்ப புத்தி மாறல பாத்தியா! அதான் விவரம்ங்கறது”

“சரி, சரி இதையே பேசாதே. வேற ஏதாவது பேசு…. “குரலை தாழ்த்தி சாய்ராம் வழிகாட்டினான்.

“பெரிய ஆளுப்பா, நீ!..”.

ரகுவும், சாய்ராமும் வெடித்துச் சிரிக்க நாக்கை நீட்டிக் கொண்டு காம்பவுன்ட் சுவரில் ஏறிய அரணை, பேச்சையும், சிரிப்பையும் பார்த்து பயந்து நடுங்கியது போல வெடுக்கென ஓடியது.

– துரை சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?

கேள்வி : மக்களைக் கண்காணிக்காமல் அரசு ஒன்றினைக் கட்டிக்காக்க முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எந்த நோக்கத்தோடும் உருவாக்கப்படும் அரசொன்றுக்கு எதிரிகளும் அவ்வரசுக்கெதிரான சூழ்ச்சிகளும் இருந்தபடிதான் இருக்கும். அவ்வாறான நிலையில் மக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்காமல் அரசொன்று தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக்கொள்வது? அரசும் கண்காணிப்பும் ஒரு நாணயத்தின் பிரிக்க முடியாத இரு பக்கங்களா?

சொந்த மக்களை உளவு பார்க்காத அரசொன்றினை எவ்வாறு உருவாக்குவது?

அரசு என்ற ஒன்றையே இல்லாதொழிப்பதன் மூலம்தான் கண்காணிப்பினை இல்லாதொழிக்கலாமா?

வினவின் விளக்கமான பதிலினை எதிர்பார்க்கிறேன்.

என்று ஸ்னோடன் கட்டுரை ஒன்றில் தோழரொருவர் கேட்டிருந்தார்.

அரசு, மக்கள் இரண்டையும் குறித்து முதலாளித்துவ அறிவுலகில் வைக்கப்படும் பொருள் மயக்கத்திலேயே பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றனர். ஒரு பொதுவான பொருளில் இவ்விரண்டையும் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை குறித்த குறிப்பான விளக்கத்தை ஆய்வு செய்யும் போது பாரிய அளவில் வேறுபடுகின்றன. அரசு என்றால் என்ன என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளும் போது மக்கள் மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளுக்கான பதிலையும் கண்டுபிடிக்கலாம்.

அரசு எனும் ஆட்சி செய்யும் உறுப்பு, ஒரு நாட்டில் நடுநிலையாக மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லும் பொருளே தவறு. அது தவறு என்பதோடு குறிப்பான பொருளை மறைப்பதற்காக வேண்டுமென்றே முன்வைக்கப்படுகிறது. அரசு என்பது எப்போதும் நடுநிலையான ஒன்றல்ல. அது ஒரு தரப்பினுடையதாகவே இருக்கும். சோசலிச அரசாகவே இருந்தாலும் இதுதான் உண்மை. ஆனால் பெரும்பாலான மக்கள் அரசு என்றால் நடுநிலையான ஒன்று என்றுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசு ஏன் நடுநிலையாக இருக்க முடியாது அல்லது இருக்கவில்லை? அதற்கு அரசு ஏன் தோன்றியது என்பதிலிருந்து பார்க்கலாம்.

புராதன பொதுவுடைமை சமூகம்
அரசு இல்லாத புராதன பொதுவுடைமை சமூகம்

புராதான பொதுவுடைமை அல்லது கானகங்களில் மக்கள் திரிந்த போது எளிமையாக கிடைத்ததை கூட்டு வாழ்க்கையாக உண்டு வாழ்ந்த காலங்களில் சமூகத்தில் வர்க்கப் பிரிவினை இல்லை. சொத்துடைமை வைத்து இருப்போர், இல்லாதோர் என்ற முரண்பாடு அப்போது இல்லை. பின்னர் சமூகங்கள் சொத்துடைமையை வைத்து வேறுபட்ட வர்க்கங்களாக பிரிய ஆரம்பித்தன. சரியாகச் சொன்னால் பிரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் அந்த சொத்துடைமை என்பது, யார் அதிகம் அடிமைகளை வைத்திருக்கிறார்கள் என்றும், பின்னர் யார் அதிகம் நிலத்தை வைத்திருக்கிறார்களெனவும் இருந்தன. தற்போது செல்வத்தை உற்பத்தி செய்யக்கூடிய நிலம், எரிபொருள், கட்டிடங்கள், ஆலைகள், தொழிலாளிகள், நிபுணர்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம் என்பதை வைத்து சொத்துடைமை தீர்மானிக்கப்படுகின்றது.

உடைமை வர்க்கங்களாகவும், உடைமையற்ற வர்க்கங்களாகவும் மனித சமூகம் பிரிந்ததோடு கூடவே வர்க்கப் போராட்டமும் ஆரம்பித்து விட்டது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும் இந்த முரண்பாடே தீர்மானிக்கின்றது. இந்த முரண்பாட்டில்தான் உடைமை வர்க்கங்களின் பிரதிநிதியாக அரசு தோன்றுகிறது. ஆரம்பத்தில் அரசனாகவும், இன்றைக்கு முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அரசாகவும் இருந்தாலும் உடைமை வர்க்கங்களின் பிரதிநிதி எனும் அடிப்படையில் இரண்டு அரசுகளும் ஒன்றே.

ஆனால் ஆரம்ப கால அரசர்கள் போல இன்றைய அரசுகள் தாங்கள் இன்ன கூட்டத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக அனைவருக்கும் பிரதிநிதி என்றும், அனைவரையும் அரசியல் சட்டப்படி நடத்தும் நடுநிலையான எந்திரம் என்பதாகவும் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்த அரசர்கள், இன்றைக்கு இருக்கிற சில சர்வாதிகாரிகள் தவிர நடப்புலகில் நிலவும் பாராளுமன்ற அரசு நடுநிலையாகத்தானே செயல்படுகிறது என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம்.

அமெரிக்க ஜனநாயகம்
சொத்துடைமையாளர்களின் ஜனநாயகம்

எல்ல நாட்டு ஜனநாயக அரசுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. அதன்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, பயண உரிமை, வாக்களிக்கும் உரிமை இவற்றினையெல்லாம் பார்த்தால் அரசு என்பது அனைவருக்குமான பிரதிநிதி என்பதாகத் தோன்றலாம். ஆனால் இந்த அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான உரிமையை பலரும் பார்ப்பதில்லை. அதுதான் சொத்துரிமை. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை, சொத்துக்களை அதிகரிக்கும் உரிமை, சொத்துக்களை பாதுகாக்கும் உரிமை என்பதாகவும் இதை விளங்கிக் கொள்ளலாம். ஆக இந்த உரிமைக்கு கட்டுப்பட்டுத்தான் மற்ற உரிமைகளுக்கு அனுமதி தரப்படும். இவற்றினை கேள்வி கேட்கும் நிலை வந்தால் மற்ற உரிமைகள் மறுக்கப்படும்.

போலி ஜனநாயகம் நிலவும் இந்தியாவிலோ, இல்லை முதலாளித்துவ ஜனநாயகம் உலவும் அமெரிக்காவிலோ இருக்கும் அரசுகள் முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன, பேசுகின்றன, போர் புரிகின்றன என்பதை அனைவரும் அறிவர் என்பதால் இங்கே எடுத்துக்காட்டுகளை பட்டியலிடவில்லை.

எனவே அரசு (State) என்பது சொத்துடைமை கொண்ட ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு சொத்துடைமை இல்லாத வர்க்கங்களை ஒடுக்குவதற்காக செயல்படுகிறது. அந்த வகையில் அரசு என்பது ஆயுதம், சிறை, இராணுவம், நிர்வாக எந்திரம், பாராளுமன்றம், நீதிமன்றம் முதலியவற்றைக் கொண்டு அந்த ஒடுக்குமுறையை செய்கிறது. அரசின் பல்வேறு உறுப்புகளில் ஒன்றுதான் அரசாங்கம் (Government). மக்களால் தேர்வு செய்யப்படும் பாராளுமன்றம், அதிபர், பிரதமர், அமைச்சரவையைத்தான் அரசாங்கம் என்கிறோம். ஒரு நாட்டில் அரசாங்கம் இல்லையென்றாலும் அரசு இருக்கும். சான்றாக தமிழகத்தில் கவர்னர் ஆட்சி இருக்கும் போதும், பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் காலங்களிலும் கூட அரசு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எனினும் பலரும் அரசு, அரசாங்கம் இரண்டையும் சேர்த்து ஒரு பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

ஆளும் வர்க்கங்கள் சார்பாக செயல்படும் அரசின் முக்கியமான நோக்கமே ஆளப்படும் வர்க்கங்களை ஒடுக்குவதுதான். அந்த வகையில் பெரும்பான்மை மக்கள் இந்த அரசுகளின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல கண்காணிப்பிலும் இருப்பார்கள் என்பது இயல்பானது. அந்த வகையில் முதலாளித்துவ அரசுகள் அந்த நாட்டு மக்களையும் பிறநாட்டு மக்களையும் ஒட்டுகேட்கிறது என்றால் அதில் ஆச்சரியம் தேவையில்லை. எண்ணிக்கையில் உடைமை வர்க்கங்களின் மனிதர்கள் சிறுபான்மையாக இருப்பதால் முதலாளித்துவ அரசுகளைப் பொறுத்தவரை கட்டுப்பாடும் கண்காணிப்பும் கடுமையாக இருக்கும்.

முதலாளித்துவ ஜனநாயகம்
ஜனநாயகத்தில் வாக்காளர்தான் மன்னர். (அவர் எத்தனை கோடி கொடுத்து ஏலம் எடுக்கிறார் என்பதைப் பொறுத்து)

ஏனெனில் பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கங்கள் மீதான எதிர்ப்பு கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் இதற்கு உரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்றால் இந்த முரண்பாடு மங்கிய நிலையில் இருக்கிறது என்று பொருள். அல்லது வர்க்கப் போராட்டங்கள் கூர்மையாகும் யதார்த்த நிலைமை இன்னும் கனியவில்லை என்றும் சொல்லலாம். ஆனால் இந்த அமைதி ஒப்பீட்டளவில் கொஞ்ச காலத்திற்குத்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பை விட மேற்குலகில் தற்போது அரசெதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் முதலாளித்துவ அமைப்பில் வர்க்க முரண்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது என்பதே.

ஆகவே அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இல்லை இந்தியாவின் அரசுகளோ தமது சொந்த நாட்டு மக்களை கண்காணிக்கும் தேவை முன்னெப்பொழுதை விடவும் அதிகரித்திருக்கிறது. முதலாளிகளின் பிரதிநிதியாக ஆளும் மேற்குலக அரசுகளோ இவர்களின் தரகு முதலாளிகள் ஆளும் ஏழை நாடுகளின் அரசுகளோ தத்தமது வர்க்க இயல்பின், தேவையின் காரணமாக பெரும்பான்மை மக்களை கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட உண்மைகளை விடுத்து இதை வெறுமனே தனிநபர் சுதந்திரம் என்று பேசுவது திசை பொருளற்றது.

முதலாளித்துவ அரசுகள் இருக்கும் நாட்டில் ஒரு தனி முதலாளியின் சொத்து சுதந்திரமே முக்கியமானது. அதற்கு உட்பட்டே குடிமக்களின் ஏனைய சுதந்திரம் இருக்கும். இல்லை, அமெரிக்க குடிமக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது என்று சொல்வோர் அரசு குறித்த முதலாளித்துவ மயக்கங்களில் மூழ்கிக்கிடப்போரே.

சாரமாகச் சொன்னால் அரசு எந்திரத்தின் பணியே ஒடுக்குமுறை எனும் போது மக்களைக் கண்காணிப்பதெல்லாம் ஒரு விசயமே அல்ல.

சரி, சோசலிச நாடுகளில் இத்தகைய கண்காணிப்பு இருக்குமா?

இதற்கும் அரசு குறித்த விளக்கமே பதிலளிக்கிறது. சோசலிச அமைப்பில் பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கமாக அமைகிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் மட்டும் ஆளப்படும் வர்க்கமாக இருக்கும். அந்த வகையில் சோசலிச அரசில்தான் பெரும்பான்மை மக்களுக்கு முற்றிலும் முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. முதலாளிகளுக்கு அந்த சுதந்திரம் இருக்காது அல்லது கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

சோசலிச அரசு
பெரும்பான்மை மக்களின் அரசு ரகசியமாக கண்காணிக்க தேவையில்லை.

அடுத்தது சோசலிச அரசில் மட்டும்தான் பெரும்பான்மை மக்கள் அரசு எந்திரத்தில் நுழைகிறார்கள். ஒரு பாட்டாளி வர்க்க அரசு உண்மையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதன் அரசு பாட்டாளி மயமாக மாற வேண்டும். உழைக்கும் மக்கள் அரசின் உள்ளே வந்து சேரும் போது அந்த அரசு உண்மையிலேயே மக்கள் அரசாக செயல்படுகிறது. ஒருவேளை இதில் தோல்வி அடைந்தால் அந்த சோசலிச அரசு தூக்கி ஏறியப்படும். அந்த இடத்தில் முதலாளிகள் வந்து அமர்ந்து கொள்வார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் சோசலிச அரசின் கண்காணிப்பு எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். சோசலிச அரசில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் முதலாளித்துவ வர்க்கங்கள்தான். ஆனால் அந்த கண்காணிப்பிற்காக சதித்தனமான வேலைகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. அதாவது முதலாளிகளின் சதித்திட்டத்தை ஒரு சோசலிச அரசு முறியடிக்க வேண்டுமென்றால் அதன் அரசு மக்கள் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். நாடெங்கும் உள்ள மக்களின் கண்காணிப்பில் சோசலிச அரசு இருக்கும் போது முதலாளிகளின் சதித்திட்டங்களை முறியடிப்பது சுலபம். அதே நேரம் அந்த சோசலிச அரசு மக்களின் கண்காணிப்பு, பங்களிப்பில் இல்லை என்றால் முதலாளித்துவ வர்க்கங்களை முறியடிக்க முடியாது.

எனவே கண்காணிப்பின் நோக்கம் எந்த வழியில் சுலபமாக தீர்க்கப்படுகிறது என்பதை வைத்தும் இதைப் புரிந்து கொள்ளலாம். சீனாவில் மாவோவின் காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட் பீரோ வரையிலும் முதலாளித்துவத்தை ஆதரிக்கும் நவீன திரிபுவாதிகள் ஊடுருவினார்கள். இந்த சதியை மாவோ மக்களிடையேயும், அணிகளிடையேயும் கொண்டு சென்றார். லியோ ஷோசி, டெங்சியோ பிங் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களெல்லாம் மக்கள், அணிகளால் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கையை சந்தித்தார்கள். இங்கே அவர்களது படுக்கையறையில் காமராவோ, செல்பேசி ஒட்டுக் கேட்போ தேவைப்படவில்லை என்பதை புரிந்து கொண்டால் சோசலிச அரசில் கண்காணிப்பு தேவையில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ அரசில் முதலாளிகளின் சொத்துரிமையை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்கள் மட்டுமல்ல முதலாளிகள் கூட கண்காணிக்கப்படலாம். ஏனெனில் முதலாளிகளின் சொத்துரிமையை விட தனிநபர் சுதந்திரம் முக்கியமானதல்ல. அல்லது முதலாளிகள் தமது வங்கி லாக்கர்களைத்தான் பாதுக்க விரும்புகிறார்களே அன்றி படுக்கை அறையின் பிரைவசியை அல்ல.

சோசலிச அரசில் பெரும்பான்மை மக்களுடைய அரசில் சொந்த மக்களை உளவு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதோடு அந்த மக்கள் ஆதரவு இருக்கும் வரையிலும் முதலாளித்துவ வர்க்கங்களை கண்காணிப்பதை வெளிப்படையாகவே செய்ய முடியும். திருட்டுத்தனம் எதுவும் தேவையில்லை.

வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் முடியும் வரை, கம்யூனிசம் அதைச் சாத்தியமாக்கும் வரையிலும் அரசுகள் என்பன இப்படித்தான் இருக்கும்.

‘ அழகி ‘ ஒரு அற்ப மனிதனின் அவலம் !

16

( “அழகி” திரைப்பட விமரிசனம் – 2002-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை )

“கண்ணீர் வடிப்பதென்பது சிந்திப்பதாகும்” என்றார் ஒரு கலை விமரிசகர். “ஒரு கலைப்படைப்பில் துன்பியல் நாயகனின் அனுபவத்தில் பங்கு பெற்று அவனுக்காக அனுதாபப்படுகையில் தான் படும் சொந்தத் துன்பத்தின் மூலமாக ரசிகன் தூய்மைப் படுத்தப் படுகிறான். அவனுடைய வாழ்வு ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறது” என்பது இதன் பொருள்.

தமிழ் மக்கள் தம் அன்றாட வாழ்வில் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைக் காட்டிலும், சொந்த வீட்டு எழவுக்கு அழுத கண்ணீர் அதிகம். “கண்ணீர் வடிப்பது என்பது சிந்திக்க மறுப்பதாகும்” என்பதுதான் நாம் அனுபவத்தில் கண்டிருக்கும் உண்மை.

‘அழகி’ படத்தைப் பற்றிக் கேட்டால், ‘நல்லபடம்’, ‘அழகான சித்தரிப்பு’, ‘சொல்ல வந்த கதையை அழகாய்ச் சொல்லியிருக்கிறார்’ என்று ராஜதந்திரிகளின் மொழியில் பலர் கருத்து கூறுகின்றனர். “அழகான ரோஜா மலரொன்றைக் கண்டேன்” என்று சொல்பவரிடம் “ரோஜா மலர் என்ன கருத்தைச் சொல்ல முயல்கிறது?” என்று நாம் கேட்கப் போவதில்லை. அது அழகை நுகர்கின்ற அனுபவம். அவ்வளவே.

ஆனால் அழகி எனும் திரைப்படம் வெறும் அழகு நுகர்ச்சி அனுபம் அல்ல. ஒருவேளை கருத்துக் கூற முடியாத அளவுக்கு அந்த அழகியல் அனுபவத்தில் ரசிகன் கிறங்கி விட்டான் என்றால், அத்திரைப்படம் கூறும் கருத்தும் வெளிப்படுத்தும் உணர்ச்சியும் அவனுக்குள் நெருடல் ஏதுமின்றி இறங்கிவிட்டதென்றே பொருள். எனவே, விமரிசனம் அவசியமாகிறது.

*

அழகிடத்தின் பெயர் ‘அழகி’யானாலும், கதாநாயகன் சண்முகத்தின் (பார்த்திபன்) துயரம் தோய்ந்த முகம்தான் படத்தின் மையப்பாத்திரம். ஆரம்பப் பள்ளியில் சிநேகிதமாகத் தொடங்கி உயர்நிலைப் பள்ளியில் காதலாக வளர்ந்த தனலட்சுமி – சண்முகத்தின் உறவு திடீரென அறுபடுகிறது. டாக்டர் படிப்புக்கு சண்முகம் சென்னை போக, இரண்டாம் தாரமாகத் தன் அக்காள் புருசனுக்கே வாழ்க்கைப் படுகிறாள் தனம் (நந்திதாதாஸ்); இதனைக் கேள்விப்பட்டு மனம் ஒடிந்து போகிறான் சண்முகம்.

உதவி கேட்டு வரும் தனத்தின் கணவனுக்கு சண்முகம் வேலை வாங்கித் தருகிறான். தன் வீட்டில் பார்த்த பெண் வளர்மதியை (தேவயானி) வரதட்சிணை வாங்கித் திருமணமும் செய்து கொள்கிறான். தனத்தை மறந்து அவனுடைய வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. திடீரென ஒருநாள் சென்னையின் சாலையோரத்தில் நடைபாதை வாசியாக, கட்டிடத் தொழிலாளியாகத் தனத்தைச் சந்திக்கிறான். கணவனை இழந்து தன்னந்தனியாய்த் தன் மகனுடன் தவிக்கும் தனத்திற்கு உதவத் துடிக்கிறது சண்முகத்தின் மனது.

காரணம் – முன்னாள் காதலி என்ற பாசமா, இன்னும் அவனது நெஞ்சில் எஞ்சியிருக்கும் காதலா, வாழ்ந்து கெட்ட அவளது ஏழ்மை தோற்றுவித்த இரக்கமா…. எல்லாமுமா?

சண்முகம் அவளை நேரே தன் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கலாம். ஏனோ தனது பணக்கார நண்பரின் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்த்து விடுகிறான். “எசமான் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னால் வேலைக்காரி மகனுக்குப் பிரியாணி கேட்கிறதா” என்று தனத்தை ஏசுகிறாள் மூத்த வேலைக்காரி. பணக்கார நண்பரின் மகனோ தனத்தின் பையனுடைய கையிலிருந்து புத்தகத்தைப் பிடுங்கி “உனக்கெல்லாம் எதுக்குடா புத்தகம்” என்று விரட்டுகிறான் மகன். “நாம் இந்த வீட்டை விட்டுப் போய் விடலாம்” என்கிறான் தனத்தின் மகன். “சண்முகம் சார் மனசு கஷ்டப்படும். அப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று மகனைச் சமாதானம் செய்கிறாள் தனம். இதை மவுன சாட்சியாகப் பார்த்திருந்து கண் கலங்குகிறான் சண்முகம்.

“நண்பர் வீட்டில் தனத்தைக் கவுரவமாக நடத்தவில்லை. எனவே அவளை நம் வீட்டுக்கு அழைத்து வந்துவிடலாம்” என்று இப்போதாவது மனைவியிடம் சண்முகம் தன் விருப்பத்தை நேரடியாகத் தெரிவித்திருக்கலாம். ஆனால் கைக்குழந்தையைக் கவனிக்க முடியாத நிலைமை பற்றி மனைவி பேசுகின்ற சந்தர்ப்பம் பார்த்து “தனத்தை வீட்டோடு வைத்துக் கொண்டால் நமக்கும் உபயோகமாக இருக்கும்; அவளுக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறி மனைவியின் ஒப்புதலைப் பெறுகிறான். ஆனால் சண்முகத்தின் வீட்டிற்கு வருவதற்குத் தயங்குகிறாள் தனம். “எனக்காக இந்த உதவியைக் கூடச் செய்ய விருப்பமில்லைன்னா விடு” என்று சின்னதாக ஒரு பிளாக்மெயில் செய்து அவளைச் சம்மதிக்க வைக்கிறான்.

சண்முகத்தின் வீட்டில் அவனது படுக்காயறையைச் சுத்தம் செய்ய நுழைந்து, கனவுக் காட்சியில் அவனுடன் ஒரு டூயட் பாடி, முடிவில் சண்முகம் – வளர்மதி திருமணப் புகைப்படத்தை கை தவறிப் போட்டுடைக்கிறாள் தனம். வேலைக்காரி தனத்தை சண்முகத்தின் மாமியார் மிக மோசமாக ஏசுகிறாள். சண்முகம் மறைவில் நின்று கண்கலங்குகிறான். சண்முகத்தின் பெயரை உச்சரித்ததற்காக இன்னொரு முறை எல்லோர் முன்னாலும் வசவுகளைச் சுமக்கிறாள் தனம். இதையும் சகித்துக் கொள்கிறான் சண்முகம். “என்னால் தானே உனக்கு இந்தத் துன்பமெல்லாம்” என்று மறைமுகமாக அவளுக்கு ஆறுதல் கூறுகிறான். அவளோ சண்முகத்துக்காக எல்லா அவமானங்களையும் சுமக்கத் தயாராக இருக்கிறாள்.

இறுதியாக, சண்முகத்தின் இளம் பருவத்தோழன் கட்டையன் மூலம் “சண்முகம் – தனம் காதல் விவகாரம்” தற்செயலாகத் தெரிய வந்தவுடன் மனைவி வளர்மதி நிம்மதி இழக்கிறாள். அடுத்து நண்பர் வீட்டில் நடக்கும் விருந்தில் தனத்தை அவமானப்படுத்துகிறாள் வளர்மதி; சண்முகத்தின் வைப்பாட்டி என்று தனத்தை கந்துவட்டிக்காரன் ஏளனம் செய்ய, அதைத் தொடர்ந்து நடக்கும் சண்டையில் சண்முகம் அடிவாங்குவதை வெறுப்புடன் வேடிக்கை பார்க்கிறாள் வளர்மதி.

இத்தனைக்குப் பிறகும், சண்முகம் தன் மனைவியைக் கண்டிக்கவில்லை. ‘தனம் தன்னுடைய இளம்பருவக் காதலி’ என்பதை அவளிடம் கூறவுமில்லை. பொறுக்க முடியாமல் மனைவி வளர்மதி கேட்கும் போதுதான் அதை ஒப்புக் கொள்கிறான். “எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது” என வருந்துகிறான். “யார்தான் இளம்பருவத்தில் காதலிக்கவில்லை?” என்று கேட்டுவிட்டு நான் உனக்குத் துரோகம் நினைத்ததில்லை என்று கூறி மனைவியிடம் கண் கலங்குகிறான். “எனக்கு உங்கள் மீதும் சந்தேகமில்லை; தனத்தின் மீதும் சந்தேகமில்லை. ஆனால் பயமாக இருக்கிறது. அவளைப் போகச் சொல்லி விடுங்களேன்” என்கிறால் வளர்மதி. அதற்கு முன் தனமே போய் விடுகிறாள். “வளர்மதியின் இடத்தில் நானிருந்தால் இதைத்தான் செய்திருப்பேன்” என்று கடிதமும் எழுதிவைத்துவிட்டுப் போகிறாள் தனம்.

*

“அழகி படத்தில் குணசேகரன் நடித்திருக்கிறாராமே. என்ன கதாபாத்திரம்?” என்று படம் பார்க்கும் முன்பாக ஒரு நண்பரிடம் கேட்டபோது “படத்தில் வில்லங்கமே அவராலதான்” என்று பதில் சொன்னார் அந்த நண்பர்.

அப்பாவியான கட்டையன் மட்டுமல்ல அடிமைச் சிந்தனையில் ஊறிப்போன வேலைக்காரியும், ஆதிக்கச் சிந்தனையில் ஊறிய மாமியரும் ரசிகனின் பார்வையில் வெறுக்கத்தக்க வில்லிகளாகி விடுகிறார்கள்; ஆனால் உண்மையான வில்லனான சண்முகமோ ரசிகனின் பார்வையில் பரிதாபத்துக்குரிய துன்பியல் நாயகனாகி விடுகிறான்.

ரசிக சண்முகங்கள்!

சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும். அதற்கெல்லாம் பயந்து நாம் அடக்கி வாசிக்க முடியாது. இது எம்.ஜி.ஆர். கதையோ, ரஜினி கதையோ அல்ல. இயக்குநரே சொல்வது போல ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கக் கூடிய கதை. இத்தகையதொரு சூழலில் சண்முகம் செய்ததைதான் நீங்களும் செய்திருப்பீர்களென்றால் சண்முகத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அற்பத்தனம் என்பது யாதெனில்….

அழகிநடைபாதையோரத்தில் சண்முகம் தனத்தைச் சந்திக்கின்ற அந்தத் தருணம் வரை, “உன் குற்றமா, என் குற்றமா, யாரை நானும் குற்றம் சொல்ல” என்று பாடல் ஒலிக்கிறதே அந்தத் தருணம் வரை, சண்முகம் குற்றமற்றவன் என்றே ஒப்புக் கொள்வோம். ஒரு கூலிக்காரியாக, நடைபாதை வாசியாக, கணவனை இழந்த கைம்பெண்ணாக, தாயாக, அநாதையாக தனத்தைச் சந்தித்த சண்முகம் அவளை நண்பர் வீட்டில் வேலைக்காரியாக ஏன் சேர்த்து விட வேண்டும்?

நேரே தன் மனைவியிடம் வந்து அவளைப் பற்றிக் கூறி, பள்ளிப் பருவத்தில் தங்களுக்குள் இருந்த பருவம் வராக் காதலைப் பற்றியும் கூறி, தனத்தை வீட்டிற்கு அழைத்து வர மனைவியிடம் ஒப்புதல் கேட்டிருக்கலாமே. வளர்மதி அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், ஒரு வேலைக்காரியாக இல்லாமல், சமமான தோழியாக தனம் அவர்களுடன் வாழ்ந்துருக்க முடியுமே! வளர்மதி மறுத்திருக்கக் கூடும். அப்படியானால் அவளுடன் போராடியிருக்கலாம். இனிமையான அமைதியான மணவாழ்க்கையில் ஒரு சிறிய சலனம் ஏற்படிருக்கும்; ஒருவேளை, அத்தகைய போராட்டம் வளர்மதி என்ற அன்பு மனைவியின் அதுவரை தெரியாத அற்பத்தனங்களையும் சண்முகத்திற்கு அடையாளம் காட்டியிருக்கும்.

சண்முகத்தைப் போன்ற மனிதர்கள் தமது சொந்தத் தவறுகளும் அற்பத்தனங்களும் மற்றவர்களுக்கு வெளிப்பட்டு விடுமே என்று மட்டும் அஞ்சுவதில்லை. மனைவி முதலான தமது சொந்தங்களின் அற்பத்தனங்கள் அவர்கள் வாயாலேயே அதிகாரபூர்வமாகத் தங்கள் முகத்தின் மீது உமிழப்படுவதை எண்ணியும் நடுங்குகிறார்கள். உறவுகள் உண்மைத்தீயில் புடம் போடப்படுவதைக் காட்டிலும், பொய்யின் நிச்சயமற்ற கதகதப்பில் பேணப்படுவதையே பாதுகாப்பானதாகக் கருதுகிறது அற்பத்தனம்.

பயங்கள் பலவிதம் !

இறுதிக் காட்சியில் மனைவி குறுக்கு விசாரணை செய்யும் போது உண்மையை ஒப்புக் கொள்ளும் ‘நல்லவனான’ சண்முகம் முதலிலேயே அவளிடம் இதைச் சொல்லாததற்குக் காரணம் – பயம். தனத்திற்கு அடைக்கலம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தைக் காட்டிலும், தன்னுடைய நடத்தையின்மீது மனைவிக்குச் சந்தேகம் வந்து விடுமோ என்ற பயம்!

மனைவிக்கு வேறுவிதமான பயம் “உங்கள் மீதும் தனத்தின் மீதும் எனக்குச் சந்தேகமில்லை. இருந்தாலும் பயமாயிருக்கிறது” என்கிறார் வளர்மதி. “இதுவரை நீங்கள் வரம்பு மீறவில்லையென்பதை வேண்டுமானால் நம்புகிறேன். ஆனால் இனியும் மீற மாட்டீர்கள் என்று நம்ப முடிவில்லை” என்பதுதான் வளர்மதி கூறும் பயத்தின் பொருள்.

பழசையெல்லாம் மறந்து விடுமாறு சண்முகத்திற்குப் புத்திமதி சொல்லும் தனமும், அறிவுரை சொல்லி முடித்தபின் “எனக்குப் பயமாயிருக்கிறது” என்கிறாள். “இதுவரை நாம் வரம்பு மீறவில்லை என்பது உண்மை. ஆனால் மீறமாட்டோம் என்பதற்கு உத்தரவாதமில்லை” என்பதுதான் தனம் வெளிப்படுத்தும் பயம்.

இரண்டு பெண் பாத்திரங்களும் உண்மையைப் பேசி விடுகின்றனர். ஆனால் சண்முகம் நடிக்கிறான். தனத்தின் நினைவாக அவளது செருப்பை ஒளித்து வைத்திருக்கும் சண்முகம், தனது தடுமாற்றத்தை யாரிடமும் மனம் திறந்து கூறுவதில்லை. ஆனால் சண்முகமும் பயப்படுகிறான்; தனது பலவீனம் வெளிப்பட்டுவிடக் கூடாதே என்பதுதான் அவனது பயம்.

ஆணாதிக்கத்தின் பரந்த உள்ளம் !

இறுதிக் காட்சியில், “எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது” என்று தன் மனைவியிடம் சொல்கிறான் சண்முகம். தன் நடத்தை மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்று கருதும் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தவிர்த்து, உண்மையிலேயே வெளிப்படையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒரு மனிதன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதிலிருந்து உலகம் அவனை மதிப்பிடுவதில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதிலிருந்துதான் அவனை மதிப்பிடுகிறது; அவனது விருப்பத்தையும் ஊகிக்கிறது. தனத்திற்கு உதவி செய்வதில் மனிதபிமானம் தவிர ‘வேறு’ எந்த நோக்கமும் சண்முகத்திற்குக் கிடையாது என்பதை நம்புவதாக இருந்தால், “துவக்கத்திலேயே வளர்மதியிடம் அவன் ஏன் உண்மையைச் சொல்லவில்லை?” என்ற கேள்வி எழுகிறது.

ஆண் வர்க்கத்தின் சார்பாக இதற்கு அளிக்கப்படும் விடை இதுதான்! “குறுகிய சிந்தனை கொண்ட பெண்கள் ஆண்களின் பரந்த உள்ளத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. எனவே இந்த மாதிரி விசயங்களையெல்லாம் அவர்களிடம் உடைத்துச் சொல்லிவிட முடியாது.”

ஒருவேளை வளர்மதிக்கு ஒரு முன்னாள் காதலன் இருந்து, அவனை அழைத்துவந்து இன்னாரென்று செல்லாமல் வீட்டிலே தங்க வைத்தால்? “இயற்கையிலேயே ஆணாதிக்கச் சுபாவம் கொண்ட ஆண்கள் பெண்களின் இரக்க மனத்தைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் ‘இவன் என் முன்னாள் காதலன்’ என்ற உண்மையை நான் கணவனிடம் சொல்லவில்லை” என்று வளர்மதி அதற்கு விளக்கம் சொன்னால்….?

அபாயகரமான அவலம் !

அழகிபல படங்களில் நாம் காண்பதைப் போல இறுதிக் காட்சியைக் கீழ்க்கண்டவாறு அமைத்திருந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

“தனம் இந்த விட்டில்தான் இருப்பாள். உனக்குச் சம்மதமில்லையென்றால் நீ வெளியே போடீ” என்று சண்முகம் பொங்கி எழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? படம் முழுவதும் ரசிகர்களின் கண்களிலிருந்து தோண்டித் தோண்டியெடுக்கப் பட்ட கண்ணீர் அந்தக் கணமே வறண்டு போகும். சண்முகத்தின் பணிவும் கையறு நிலையும், தவிப்பும்தான் அவனை ஒரு துன்பியல் நாயகனாக்குகிறது. வளர்மதியோ, கணவனின் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய வறட்டுப் பிடிவாதக்காரியாக, புத்தி கெட்டுப் போய்க் காரியத்தைக் கெடுத்த ஆத்திரக்காரியாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாள்.

எப்போதுமே ஆதிக்க வர்க்கம் அகம்பாவத்தோடு நடந்து கொள்ளும் நேரங்களில் அது வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் அது தன்னை அவல நிலையில் இருத்திக் கொள்ளும்போது மிகவும் அபாயகரமானதாகி விடுகிறது. ஆதிக்க வர்க்கத்தின் அவலத்திற்கு அடக்கப்பட்ட வர்க்கமே கண்ணீர் வடிக்கும் கேலிக்கூத்து இங்கேதான் தொடங்குகிறது.

“ஐயோ…. யாருமே இல்லையா” என்ற அவலக்குரலுடன் திரைக்குள் வருகிறாள் தனம். ஆனால் அந்தக் கணத்தோடு அவளது அவலம் முடிந்து விடுகிறது; சண்முகத்தின் அவலம் தொடங்கிவிடுகிறது. “என்னல்லாம் மறந்துட்டீல்ல”, “எனக்காக இந்த உதவியக்கூட செய்ய முடியலன்னா விடு”, “உன்னுடைய செருப்பை வச்சிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா?” – என்று சரம் சரமாக சென்டிமெண்ட் அம்புகளை வீசுகிறான் சண்முகம். இரக்க உணர்ச்சியால் உந்தப்பட்டு, சண்முகத்திற்காக எதையும் இழக்கச் சித்தமாகிறாள் தனம். அடிமைத்தனம் பரவச நிலையை எய்துகிறது.

அடிமைத்தனத்தின் பரவசம் ஆதிக்க உணர்வின் வருத்தம் !

சண்முகத்தால் அருளப்பட்ட இந்த வாழ்க்கையில் தனம் அடைந்த ஆதாயங்கள் என்ன? தனத்தின் கூற்றுப்படி “ரோட்ல கிடந்தவளுக்கு இது பெரிய வாழ்க்கை”. மேட்டுக்குடி வர்க்கத்தின் பயன்படுத்திய மிச்சங்களும், அதிலிருந்து முளைத்த நடுத்தர வர்க்கமாகிவிடும் கனவும் ‘ஆதாயங்கள்’! சண்முகத்தைச் சந்தித்ததால் தோன்றிய மனப்போராட்டமும், ஒரு வேலைக்காரி என்ற முறையில் அவள் பட்ட அவமானங்களும், சண்முகத்துக்காக அவற்றைச் சகித்துக் கொள்ள நேர்ந்த கொடுமையும் அவளது இழப்புகள்.

ஒரு வேலைக்காரி என்ற முறையில் அவள் இழிவுபடுத்தப் படும் போதெல்லாம் அதை எதிர்க்க முடியாத கையறு நிலையை சண்முகம் வெளிப்படுத்துகிறான். பழைய பிளாஸ்டிக் செருப்புக்காகத் தனத்திடம் அவன் நடத்தும் போராட்டத்தைக் கூட, அவளுடைய சுயமரியாதைக்காக மற்றவர்களிடம் அவனால் நடத்த முடியவில்லை. தனம் யார் என்பதை மறைத்ததன் காரணமாக மட்டும் தான் அவள் மவுனம் சாதிக்க நேர்ந்தது என்று கருத இடமில்லை. “ஸ்கூட்டரை விற்று நண்பனுக்கு உதவி செய்தேன்” என்ற சாதாரண விசயத்தைக் கூட வெளிப்படையாக மனைவியிடம் சொல்ல முடியாத கோழை சண்முகம். பணக்கார வீட்டில் பெண்ணெடுத்து, வரதட்சிணையாக வீட்டை வாங்கிக் கொண்டு, தன்மானத்தை அடகு வைக்கச் சம்மதிக்கும் ஒரு மனிதன் அடுத்தவரின் மானத்துக்கு எப்படிப் போராட முடியும்? போராட முடியாது; வருத்தப்பட முடியும். தனத்திற்கு நேரும் அவமானங்களுக்காக சண்முகம் வருந்தத்தான் செய்கிறான். ஆனால் தான் போராடத் தவறியதற்காக அவன் வருந்தவில்லை.

சூழ்நிலையின் கைதிகள் !

துவக்கத்தில் திருமணம் செய்ய முடியாமல் தனத்தை இழக்க நேர்ந்தது முதல், இறுதியில் வேலைக்காரியாக நீடிக்க முடியாமல் அவள் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது வரை அனைத்துமே ‘யாரையும் குற்றம் சொல்ல முடியாத’ விதியின் விளையாட்டாகவே அவனுக்குத் தோன்றுகிறது.

சூழ்நிலையின் கைதிகளாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், – அவர்கள் எவ்வளவு தாராளமனம் கொண்டவர்களாக இருந்த போதிலும் – சுய விமரிசனம் செய்து கொள்வதில்லை. “ஒரு நல்ல மனம் கொண்ட நடுத்தர வர்க்க ஆணாதிக்கவாதி” என்ற முறையில் சண்முகம் இயல்பாகத்தான் சிந்திக்கிறான். தனது மனைவி, குடும்பம், தகுதி ஆகியவற்றுக்ககுச் சேதம் ஏற்படாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு அவன் தனத்துக்கு உதவ விரும்புகிறான். இப்படியொரு நிபந்தனை வைத்துக் கொள்வது குறித்து அவன் வெட்கமொ குற்றவுணர்வோ அடையவில்லை. அது இயற்கையானதாகவும் நியாயமானதாகவுமே அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

நடுத்தரவர்க்கம் ஏழைக்கு உதவும்போது அது, ஏழையின் தேவைகளையும் விருப்பங்களையும் கேட்டறிவதில்லை. தனது பெருந்தன்மை குறித்த மயக்கத்திலும், ஆன்ம திருப்தியிலும் திளைக்கிறது. இவையெதையும் பரிசீலிப்பதையோ கேள்விக்குள்ளாக்குவதையோ அது விரும்புவதில்லை.

நாம் பரிசீலிப்போம். ஒருவேளை தனம் இன்னாரென்று வளர்மதக்குத் தெரிய வராமல் போயிருந்தால்? தொடர்ந்து சண்முகத்தின் வீட்டில் அவள் வேலைக்காரியாகவே நீடித்திருக்க வேண்டியதுதானா? சண்முகம் தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்க, தனம் தனது கடந்தகாலக் காதல் குறித்த நினைவுகளுடன் காலம் தள்ள வேணுமா? “சிந்தனை வடிவத்திலான இந்தச் சின்னவீடு” சண்முகம் தனக்குத்தானே செய்து கொள்ளும் உதவியா, தனத்திற்குச் செய்யும் உதவியா? ஒருவேளை அந்த இளம் விதவைக்கு வேறொருவனை மறுமணம் செய்து வைப்பது கடந்தகாலக் காதலுக்குச் செய்யும் துரோகமாகி விடுமா?

சண்முகத்தின் வீட்டிற்குள் தனம் நுழையும் அந்தக் கணத்திலிருந்து ‘அழகி’ ஒரு திகில் படமாகிவிடுகிறது. பலவீனமானதொரு தருணத்தில் சண்முகமும் தனமும் பாலியல் ஒழுக்க நெறியை மீறிவிடுவார்கலோ என்ற அச்சம் திரைக்கதையால் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. ஒழுக்கம் ‘மீறப்பட்டது கனவில்தான்’ என்ற விசயம் தெளிவானவுடன் தங்களது நல்லொழுக்கம் உறுதி செய்யப்பட்ட திருப்தியில் ரசிக சண்முகங்கள் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்கள்.

தர்க்க ரீதியான கேள்விகளால் அழகியல் உணர்வுகளை அறுத்துப் பார்வைக்கு வைப்பது, கலாரசிகர்களுக்கும் கவிதை மனம் கொண்டோருக்கும் வெறுப்பைத் தரலாம். ஆனால், இவையனைத்தும் எதார்த்த வாழ்வில் ஒரு சாதாரண மனிதன் எழுப்பக்கூடிய கேள்விகள்தான். “கறுப்பு – வெள்ளை எனப் பிரித்துக் கூறமுடியாத பகுதிகளும், இனம் புரியாத உணர்வுகளும், விடை தெரியாத கேள்விகளும் இருக்கத்தானே செய்கின்றன” என்று கூறிக் கொண்டு, அதையே கலையென்றும் அழகென்றும் சிலாகித்துக் கொண்டு, அத்தகைய நிழலான பகுதிகளில் ஆணாதிக்கக் கோழைகளும், கொட்டைபோட்ட காரியவாதிகளும் ஒளிந்து கொள்ளவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அற்ப மனிதனுக்கு அனுதாபம் ஏன் ?

“சண்முகம் ஒன்றும் புரட்சிக்காரனல்ல; உங்களையும் என்னையும் போன்று குறைகளும் பலவீனங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதன் – அவ்வளவுதான்” என்று ரசிக சண்முகங்கள் வாதிடலாம். “சண்முகம் ஏன் ஒரு சராசரி மனிதனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்” என்பதல்ல நம் கேள்வி. “இந்தச் சராசரி மனிதனின் அற்பத்தனங்கள் இடித்துரைக்கப் படாமல் அனுதாபத்துடன் சித்தரிக்கப்படுவது ஏன்” என்பதுதான் கேள்வி.

தங்கர் பச்சான்ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வும் படைப்பாளியின் வாழ்வும் பிரிக்க முடியாதவை. சண்முகம் முழுமையாகவே ஒரு கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தைச் செதுக்கி உருவாக்கும் போக்கில் அதன் படைப்பாளி (தங்கர் பச்சான்) ஏறத்தாழ அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து பார்த்து விடுகிறார். அதே நேரத்தில் தனது சொந்தக் கண்ணோட்டத்தில் அந்தப் பாத்திரத்தை மதிப்பிடவும் செய்கிறார்.

செய்ய வேண்டியதைச் செய்யத் தவறிய குற்றவாளியாக, செய்யக் கூடியதைச் செய்ய முயலாத கோழையாகச் சண்முகத்தை அவரால் மதிப்பிட முடியவில்லை. சண்முகத்தின் உருவில் அவர் தன்னையே காண்கிறார். சோகம் பூசப்பட்ட குரலில் தன் கதையை வருணிக்கும் சண்முகத்தின் குரல் “நான் விதிக் காற்றில் சிக்கிய சருகு” என்கிறது; கண்ணீர் ததும்பும் அவனது முகமோ “எனது துயரம் ஒரு விடை தெரியாத புதிர்” என்கிறது.

சினிமாத்திரை எனும் பிரம்மாண்டமான கண்ணாடியில் தங்களுடைய பிம்பம் கண் கலங்குவதைக் கண்ட ரசிக சண்முகங்கள் உடனே தங்களது கண்ணிலும் நீரை வரழைத்துக் கொண்டு, கலைக்கு ஏற்ப எதார்த்தத்தைச் சரி செய்து கொள்கிறார்கள். இனி, நடுத்தர வர்க்கத்தின் அற்பமனிதர்கள் அனைவரும் தங்களைத் துன்பியல் நாயகர்களாகக் கருதிக் கொள்ளலாம்.

ஆனாலும் இதில் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. திரையரங்கில் தன் நிழலைப் பார்த்துக் கண்கலங்குவது எளிது; நிஜவாழ்க்கையில் “நான் செய்யத் தவறியது இதுதான்” என்று தெளிவாகத் தெரியும்போது கையறு நிலையைக் கற்பித்துக் கொண்டு கண்கலங்குவது கடினம். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த முரண்பாடுகளைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பதால், இந்த அறிவே அவன் ஆட்பட விரும்பும் போலியான உணர்ச்சிகளை அவ்வப்போது உறிஞ்சிக் காய வைத்துவிடுகிறது.

கையறுநிலையின் சொர்க்கம் !

னது சொந்த அறிவு குத்திக் காட்டும் உண்மையிலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் தப்பித்துப் போலி உணர்ச்சிகளில் அடைக்கலம் புகுவதற்கும், அதன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் பெறவும் அவன் முயற்சிக்கிறான். அறிவு என்பது ஒரு சாபக்கேடாகவும் அறியாமையே மாபெரும் வரப்பிரசாதமாகவும் தோன்றும் மனநிலை இது. தனது சமூக மதிப்பீடுகளுக்கும் தனது சொந்த நடைமுறைக்கும் இடையே நியாயப்படுத்த முடியாத பிணக்கு ஏற்பட்டு விட்டதைத் தனது சொந்த அறிவே சுட்டிக் காட்டும்போது அறியாமையை வழிபடுகிறார்கள் இத்தகைய மனிதர்கள். இவர்கள் அறிவாளிகளாக இருக்கும் பட்சத்தில் அறியொணாவாதம் இவர்களின் ஆயுதமாகிவிடுகிறது.

அறிவு முதிர்ச்சியுறாத இளம்பருவத்தின் மகிழ்ச்சி, உளவியல் முரண்பாடுகள் தோன்றாத ‘சுதந்திரமான’ பழைய பொற்காலம், அதன் இனிமை, குதூகலம், கள்ளம் கபடமற்ற தன்மை, தாய்மடி….! இதோ, மூளைக்குள்ளேயே கிளிசரின் தயராகிவிட்டது! குற்றவுணர்வின் நரகத்திலிருந்து தப்பித்து, கையறு நிலையின் சொர்க்கத்திற்குள் நுழைகிறான் சண்முகம். திரையரங்கின் முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் ரசிக சண்முகங்களும் தேவதைக் கதையின் கனவிற்குள் நுழையும் பிள்ளைகள் போலத் தம் இளமைக் காலத்திற்குள் நுழைகிறார்கள்.

திரையரங்குக்கு வெளியில் நிறுத்தியிருக்கும் புத்தம்புதிய மோட்டார் சைக்கிளையும், செரிமானமாகாமல் நெஞ்சில் வந்து இனிக்கும் சரவண பவன் சிற்றுண்டியையும் மறந்து, “இதுதான்…. இதுதான்…. நாங்கள் இழந்த சொர்க்கமும் இதுவேதான்” என்று மல்லாக் கொட்டையையும் மரத்தடிப் பள்ளியையும் கண்டு கண்கலங்குகிறார்கள். முன்வரிசையில் அமர்ந்திருக்கும் பஞ்சம் பிழைக்க வந்த மக்களோ தங்கள் கிராமத்தை உள்ளபடியே பார்த்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் கட்டையனும் இருக்கக்கூடும்.

‘ அழகி ‘யலின் அரசியல்

“இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே, அது ஏன், ஏன்… நண்பனே” என்ற கேள்வியை சிவாஜி கணேசன் 30 ஆண்டுகள் முன்னமே கேட்டுவிட்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சண்முகமாவது அதற்கு விடை சொல்வான் என்று எதிர்பாத்தால், அந்த நாள் ஞாபகத்தை இன்னும் கொஞ்சம் ஆழ உழுதிருக்கிறான், அவ்வளவு தான்.

“ஆழ உழுவதுதான் அழகியல்” என்பார்கள் கலா ரசிகர்கள். நாம் இந்த ‘அழகி’யலின் அரசியலை லேசாகக் கிளறி மட்டும் பார்ப்போம். படத்தின் முதல் காட்சியிலேயே நமக்கு வேடிக்கையானதொரு ‘தடயம்’ கிடைக்கிறது. தனத்தின் பிள்ளையை வளர்க்கும் சண்முகம், அவனது பள்ளி ஆவணத்தில் ‘காப்பாளர்’ என்று குறிக்கப்பட்ட இடத்தில் கையொப்பமிடுகிறான். ஆண்கள் ‘இயற்கையிலேயே’ பெண்களின் காப்பாளராகி விடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கமும், மேட்டுக்குடியினரும் கூட தத்தம் சமூகத்து ஏழை எளியவர்களின் காப்பாளர்களாகத்தான் தம்மைக் கருதிக் கொள்கிறார்கள். கருணாநிதியும் முஸ்லீம் மக்களின் காப்பாளராக இன்னமும் தன்னைக் கருதிக் கொள்கிறார்.

குஜராத்தில் பாரதீய ஜனதா நடத்திவருவதைப் போன்றதொரு படுகொலையை அவர் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டார் என்பதை இந்தத் தருணத்திலும் உறுதியாகச் சொல்லலாம். எனினும் பாரதீய ஜனதாவை அவரால் தட்டிக் கேட்க முடியவில்லை.

தனது மாமியாரைத் தட்டிக் கேட்க முடியாத சண்முகத்தின் நிலையைப் போன்றதொரு ‘அரசியல் அவல நிலை’ இது. தனது கட்சியின் நலனுக்கு ஊறு நேராது என்ற உத்திரவாதம் மட்டும் இருந்தால் அவர் முசுலீம்களுக்கு ஏதேனும் செய்யவே விழைகிறார். திருவாரூரின் வீதிகளில் கருப்புக் கொடியேந்தி நடந்து சென்ற கள்ளங்கபடமற்ற நேர்மையான மாணவப் பருவம் அவரது நினைவில் நிழலாடக் கூடும். அவரும் கண்கலங்கக் கூடும்!

குஜராத்தின் சண்முகங்கள் !

குஜராத் முசுலீம் அகதிகளில் தற்போது தம் வீடுகளுக்குத் திரும்பியபோது அண்டை வீட்டுக்கார இந்துக்கள் அவர்களைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்களாம். “எதற்காக அழுதீர்கள்? எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி அழுதீர்களா, அதனைத் தடுக்க முடியாத கோழைகளாக நீங்கள் ஒளிந்து கொண்டதை எண்ணி அழுதீர்களா?” என்று முசுலீம்கள் அவர்களைக் கேட்க முடியுமா என்ன?

கண்ணீரையும், கலையையும் தர்க்க ரீதியான கேள்விகளால் அறுப்பதை அழகியல் ஆராதனைக்காரர்கள் அனுமதிப்பதில்லையே! “அழகியது – நல்லது – ஒழுக்க ரீதியில் சரியானது” ஆகிய இவற்றுக்கிடையில் பிரிக்க முடியாததொரு இயங்கியல் உறவு உள்ளது என்பதை அவர்கள் ஏற்பதில்லை.

கோழைத்தனத்திலும் சுயநலத்திலும் கலையழகைக் காண முடியுமென்றால், ஒரு அற்பவாதி துன்பியல் நாயகனாக முடியுமென்றால், அவனுடைய கண்ணீரும் நம் கண்களைக் குளமாக்குமென்றால், குஜராத் படுகொலை பற்றித் தீட்டப்படும் சித்திரத்தின் துன்பியல் நாயகர்கள் – வேறு யார்…..? கண் கலங்கி நின்ற அந்த அண்டை வீட்டுக்கார இந்துக்கள் தான்!
________________________________________
புதிய கலாச்சாரம், ஜூன் 2002
_________________________________________

ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !

23

(1992-ல் எழுதப்பட்ட கட்டுரை)

தத்தின் பெயரால் நாட்டைக் குறுக்கு நெடுக்காகப் பிளப்பதற்குத் தனது மதவெறிக் கோடரியைப் பாரதீய ஜனதா இறக்கியிருக்கும் இடம் அயோத்தி. அயோத்தியோ, மதுராவோ, வாரணாசியோ… இடம் எதுவானாலும் நோக்கம் தான் முக்கியம். எனினும் இடத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்கிறது!

1857அன்று வார்சாவின் லெனின் கப்பல் கட்டும் கூடத்தில்தான் போலந்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சியின் முதல் முழக்கத்தை எழுப்பியது. இன்று அமெரிக்காவின் செல்லப்பிள்ளை வாலேசாவைப் பெற்றெடுத்ததும் அதே கப்பல் கட்டும் கூடம்தான்!

புராணக் குப்பைகளிலிருந்து கிளறி எடுத்து ராமனைத் தேசிய நாயகனாக்கியிருக்கிறது பாரதீய ஜனதா. ஆம்! தேசிய நாயகன் – ராமன், தேசிய வில்லன் பாபர்! ராமாயண்த்தின் காலம்? 2000 ஆண்டுகளுக்கு முன்னதா, மூவாயிரமா, ஐயாயிரம், பத்தாயிரமா? புராணப் புனை சுருட்டுகளுக்குக் கால நிர்ணயம் செய்யும் கேலிக் கூத்து தேசிய முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

பிளவின் துவக்கப்புளியாகவும், பொய்களின் பிறப்பிடமாகவும், எந்த அயோத்தி இன்று உலகப் புகழ்பெற்றுவிட்டதோ, அதே அயோத்தி, அதே பைசாபாத் மாவட்டம் ஒற்றுமையின் முதல் குரலாகவும், போர்க்குணத்தின் பிறப்பிடமாகவும் இருந்த காலமும் ஒன்றுண்டு. மிகப் பழங்காலமல்ல நூற்று முப்பதே ஆண்டுகளுக்கு முன்னர்தான்.

இதே பைசாபாத் மாவட்டம் ஓர் உண்மையான தேசிய நாயகியைப் பரிசளித்தது. தேசப் பற்றின் வடிவமாக நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான இளைஞர்களைப் பெற்றுத் தந்தது. ராபர்ட் கிளைவ்களாலும், வெல்லெஸ்லி, டல்ஹவுசிகளாலும் நிரப்பப்பட்ட நமது வரலாற்று நூல்களில் இவர்களுக்கு இடமில்லாமல் போனதில் வியப்பில்லை. ‘சிப்பாய்க் கலகம்’ என்று வெறுப்புடனும், அச்சத்துடனும் வெள்ளையனால் சித்தரிக்கப்பட்ட முதல் சுதந்திரப்போரின் நாயகர்களும் அவர்களது வீர வரலாறும் டில்லி ஆவணக் காப்பகங்களின் புழுதியில் புதைந்து கிடக்கின்றன.

அவத் சமஸ்தானம் என்றழைக்கப்பட்ட இன்றைய அயோத்தியின் அரசியான ஹஸ்ரத் மஹலைப் பற்றி 1959 பிப்வரி 1-ம் தேதி ஸ்டேட்ஸ் மேன் நாளேட்டில் எஸ்.என்.சந்தா என்பவர் ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர் “1857 – உலகிற்குச் சொல்லப்படாத கதைகள்” என்ற தனது நூலில் முதல் சுதந்திரப் போரின் நாயகர்கள் பலரை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரும் நமது வரலாற்றுப் பாடநூல்களில் இந்த வீரப் புதல்வர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

முஸ்லீம்கள் தங்கள் தேசப்பற்றை ‘இரண்டு முறை’ நிரூபிக்க வேண்டும் என்று கருதுவோருக்கு சவுக்கடி கொடுக்கும் முகமாக, பைசாபாத் மாவட்டத்தின் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சில விடுதலை வீரர்களின் வரலாற்றை மட்டும் அந்நூலிலிருந்து சுருக்கித் தருகிறோம்.

war-of-independenceஇன்றைய உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோ அன்று அவத் எனும் ராச்சியத்தின் தலைநகரம். அந்த ராச்சியத்தின் 12 பிராந்தியங்களில் ஒன்று தான் பைசாபாத். டெல்லி முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக 1720-ல் அவத் தனி நாடாயிற்று. பெயரளவிற்கு டெல்லி முகலாயப் பேரரசுடன் இணைந்திருந்தது. லக்னோவிற்குப் பதில் பைசாபாத் அதன் தலைநகரமானது.

அன்று வங்காளத்தில் குடியமர்ந்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அவத் மன்னர்களுடன் நெருங்கிய உறவு கொண்டனர். வர்த்தக உறவு என்ற பெயரில் நாடுபிடிக்கும் சதியில் ஈடுபட்ட வெள்ளையர்கள் இங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். மன்னன் வாஜித் அலிகானின் ஆட்சி சீர்குலைந்து போனதால் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து மன்னனைக் கல்கத்தாவுக்குக் கொண்டு சென்று தமது கண்காணிப்பில் வைத்துக் கொண்டனர். தமது மண்ணும், மரியாதையும் பிடுங்கப்பட்டதால் மக்கள் ஆத்திரம் கொண்டனர்.

இந்தியாவின் வடபகுதியிலும், கிழக்கிலும் உறுதியாகக் காலூன்றிக் கொண்ட பிரிட்டிஷ் காரர்கள் மேற்கிலும் தெற்கிலும் கூடக் கணிசமான இடங்களைப் பிடித்துக் கொண்டனர். மற்ற இடங்கள் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களாகச் சிதறிக் கிடந்தன. 1856-ல் இந்திய வரைபடம் இருந்த நிலையை ஒருமுறை பார்த்தால் இது விளங்கும். பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்க அஞ்சி குறுநில மன்னர்கள் பலர் வரிசையாகச் சரண்டைந்தனர். இறுகிய முகத்துடனும் இரக்கமற்ற இதயத்துடனும் புதிதாய் வரிவசூலுக்கு வந்த கலெக்டர்களையும், கமிஷனர்களையும் கண்ட மக்களோ ஆத்திரம் கொண்டனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் பெரும்பான்மையாக இருந்த இந்திய – இந்துக்கள், முஸ்லீம்கள் இருவருமே – சிப்பாய்கள் மத்தியிலும் இக்கோபம் பரவியது. அவத் சமஸ்தானத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியுடன் இணைக்கப்பட்டதைக் கேட்டுக் கொதிப்படைந்தனர்.

சிப்பாய்களின் உள்ளக் குமுறல் மங்கள் பாண்டே என்ற சிப்பாயின் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்களாகச் சீறி வெடித்து. மங்கள் பாண்டேயால் சுடப்பட்டு, படுகாயமடைந்த பிரிட்டிஷ் அதிகாரிகளைக் காப்பாற்றவோ, மங்கள் பாண்டேயைக் கைது செய்யவோ முடியாது என மற்ற சிப்பாய்கள் மறுத்தனர். ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷார் அந்தப் படைப்பிரிவையே கலைத்தனர். மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டான்.

இன்றைய அயோத்தியைத் தன்னகத்தே கொண்ட பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான் மங்கள் பாண்டே. மங்கள் பாண்டேயின் தியாகம் உ.பி. மாநிலம் முழுவதும் புரட்சித்தீயை மூட்டியது. கலைக்கப்பட்ட படைப்பிரிவிலிருந்து ஊர் திரும்பிய சிப்பாய்கள் மாநிலமெங்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்று குவித்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் உயிர்தப்ப ஓடி ஒளிந்தனர். அவத் மீண்டும் சுதந்திர சமஸ்தானமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

1857-இன் அந்த மாபெரும் எழுச்சியின் கதாநாயகர்கள் உலகிற்கு தெரியாத மிகச் சாதாரண மனிதர்கள். அவர்களது நாட்டுப் பற்றும், ராணுவத் திறமையும், வீரசாகசமும் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயங்கள்!

ஹசரத் மஹல் : மாதருள் மாணிக்கம்

பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்ட வாஜித் அலிகானின் மனைவிதான் பைசாபாத்தில் நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புக் கிளர்ச்சியின் தலைவி. அவளது வரலாறு அபூர்வமானது.

பெரும் கொந்தளிப்பை அவத் சமஸ்தானம் சந்திக்கத் தொடங்கியிருந்த காலத்தில் அவள் ஒரு ஒன்றுமறியா நாட்டுப்புறப் பெண். இரண்டு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாத குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண் மன்னனுடைய கையாட்களின் கண்களில் சிக்கினாள். அழகும், செல்வமும் மன்னர்களின் உடைமையன்றோ! பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டி பெற்றோரை மயக்கி சம்மதிக்க வைத்து, மன்னனின் ஆசைநாயகியாக்க அவளை அழைத்துச் சென்றனர் காவலர்கள்.

hazrat-mahalமன்னனின் ஆசை நாயகியாகிவிடுவது ஒன்றும் அன்றைக்கு சாதாரண விசயமல்ல; முதலில் அந்தப் புரத்தில் பணிப்பெண்ணாகச் சேர வேண்டும்; பிறகு மன்னன் விரும்பினால் நடனப் பெண்ணாகலாம்; அதன் பின் ஆசைநாயகியாக (பேகம்), பிறகு மஹல் (அரசி) பட்டம். எல்லாம் மன்னனின் விருப்பத்தைப் பொருத்தது.

இந்த நாட்டுப்புறப் பெண் இப்படி ‘பதவி உயர்வு’ பெற்று மேலேறிக் கொண்டிருந்தபோது ஆட்சியோ மெல்லக் கவிழ்ந்து கொண்டிருந்தது. அவள் அரசியாகி ஒரு ஆண் மகவையும் பெற்றெடுத்தாள்.

1856-இல் மன்னன் வாஜித் அலிஷா பட்டத்தை இழந்தான். கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டான். தலைநகர் லக்னோவில் இருந்த பிரிட்டிஷ் கமிஷனர் சர் ஹென்றி லாரன்ஸ் கைக்கு அதிகாரம் மாறியது. நாடே கொந்தளித்தது. ஆங்காங்கே பிரிட்டிஷாரைக் கொன்று குவித்தவாறே சிப்பாய்கள் தலைநகரம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயப் பெண்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக ஒரு கோட்டைக்குள் இருத்திவிட்டு சிப்பாய்களை லக்னோவின் எல்லையிலேயே முறியடிக்கப் புறப்பட்டான் ஹென்றி லாரன்ஸ்.

ஆயிரமாயிரமாய் அலையலையாய் வந்து தாக்கிய இந்திய சிப்பாய்களிடம் படுதோல்வியுற்று கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் ஹென்றி லாரன்ஸ். வெற்றி பெற்ற சிப்பாய்களுக்கோ அடுத்து என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தலைவனில்லை. மன்னனோ கல்கத்தாவில் பிடிட்டிஷாரின் பிடியில். அவர்கள் பட்டத்தரசிகளை அணுகினார்கள். அவர்களது பிள்ளைகளில் யாரையேனும் மன்னனாக அறிவிக்குமாறு மன்றாடினார்கள். இந்த ‘அதிர்ஷ்டத்தின்’ பயங்கரத்தை எண்ணி நடுங்கிய அரசிகள் மறுத்தனர். பிரிட்டிஷாரிடம் சரண்டைந்துவிட அறிவுரை கூறினர்.

தூக்குமேடையாகவும் சிம்மாசனமாகவும் தோற்றம் தந்த அந்த பொறுப்பை ஏற்க ஹசாத் மகல் – அந்த நாட்டுப்புறத்துப் பெண் – முன்வந்தாள். தன் 10 வயது மகனை மன்னனாக்கித் தானே காப்பாளராகப் பெறுப்பேற்றுக் கொண்டாள்.

“இந்த பேகம் பெரும் ஆற்றலையும், திறமையையும் காட்டுகிறாள்; பிரிட்டிஷாருக்கு எதிராக சாகும்வரை போராட்டம் என அறிவிக்கிறாள்; பிரிட்டிஷ் அரசு என்ன செய்யப் போகிறது? இவர்களைக் கலகக் கும்பலாகக் கருதப் போகிறதா, மரியாதைக்குரிய எதிரிகளாக நடத்தப் போகிறதா?” என்று ஹசரத் மஹலின் திறமையை வியந்து எழுதினார் அன்றைய பிரிட்டிஷ் டைம் பத்திரிக்கையின் போர்முனைச் செய்தியாளர் ரஸ்ஸல்.

புரட்சி அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் புரட்சிக்காரர்களையே நியமித்தாள் ஹசாத் மஹல். பிரிட்டிஷார் ஒளிந்திருந்த கோட்டையை 3 மாதங்கள் தொடர்ச்சியாகத் தாக்கினாள். அவத் சமஸ்தானம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரிட்டிஷ் எதிர்ப்பு கிளர்ச்சியை மக்களிடம் தூண்டிவிட்டாள்.

அவத் சமஸ்தானத்தின் சில பகுதிகளைத் தருவதாக பேரம் பேசி நேபாள மன்னன் ராணா ஜங் பகதூரை பிரிட்டிஷார் விலை பேசினர். அதைவிடக் கூடுதலான பகுதிகளைத் தானே தருவதாகவும் அந்நியனுக்கு விலைபோக வேண்டாமென்றும் கூறி அந்த ஒப்பந்தத்தை பேகம் முறியடித்தாள். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த இந்தியப் படை வீரர்களையும், தளபதிகளையுமே ரகசியமாகச் சந்தித்தாள் ஹஸ்ரத் மஹல்.

“உங்களுடைய சகோதரர்களை நீங்கள் கொல்லக் கூடாது. எங்கள் மீது வெற்றுத் தோட்டாக்களைச் சுடுங்கள். வெடி மருந்துகளை வெள்ளையனைக் கொல்வதற்கு ஒதுக்கி வையுங்கள்” என்று நேரடியாகப் போர்முனைகளுக்குச் சென்று பார்வையிட்டாள்.

ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் படைகளை ஒன்றுதிரட்டி பிரிட்டிஷார் நடத்திய தாக்குதலை புரட்சி அரசாங்கம் தாக்குப் பிடிக்க இயலவில்லை. 10 மாதங்கள் மட்டுமே அது நீடித்தது. தோல்வியடைந்த போதும் ஹசரத் பிரிட்டிஷாரிடம் சிக்கவில்லை. புரட்சியில் முன்னணி வகித்த 16,000 வீரர்களுடன் லக்னோவிலிருந்து தப்பிச் சென்று பவுண்டி கோட்டையில் முகாமிட்டு அங்கிருந்து பிரிட்டிஷாரை தொடர்ந்து தாக்கினாள்.

இதற்கிடையில் விக்டோரியா மகாராணியின் பொது மன்னிப்பின் கீழ் சமரசம் பேச பிரிட்டிஷார் ஹசரத்தை அழைத்தனர்; ஹசரத் ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் வதந்தியைப் பரப்பினர். இதை வன்மையாக மறுத்தும் போராட்டத்தைத் தொடருமாறும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தாள் ஹசரத். பவுண்டி கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினர்; ஹசரத் தலைமறைவானாள்.

தனக்கு நெருக்கமான சிறிய அளவு போர் வீரர்களுடன் உணவும், போதிய ஆயுதமுமின்றி இமயமலை அடிவாரத்திலுள்ள தெராய் காடுகளில் நாடோடியைப்போல அலைந்து திரிந்தாள். பின்னர் தன் மகனுடன் சாதாரண குடிமக்களாக நேபாளத்தில் வாழ்ந்து 1874-இல் காலமானாள்.

மதகுருவா, புரட்சிக்காரனா?

நல்ல உயரம், கட்டான உடல், நீண்ட நாசி, ஊடுறுவும் கண்கள், தோள்களில் பரவும் நீண்ட கருமுடி, மார்பில் புரளும் தாடி. சுருங்கக் கூறின் ஒரு முஸ்லீம் பக்கீரின் தோற்றம் – அவருக்கு பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் மோதல் எதுவும் கிடையாது; ஆனால் இறுதி மூச்சுள்ளவரை அவர் பிரிட்டிஷாரை எதிர்த்தார். அவரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

அவருக்குப் பல பெயர்கள் – அமானுல்லா ஷா, அகமத் அலி ஷா, சிக்கந்தர் ஷா… ஆனால், வரலாற்று ஆவணங்கள் அவரை பைசாபாத் மௌல்வி என்றே சுருக்கமாக அழைக்கின்றன. பெயரைப் போலவே அவரது பூர்வீகமும் குழப்பமானது. சென்னை ராஜதானியிலுள்ள ஆற்காடு தான் அவர் சொந்த ஊர் என்கிறது ஒரு ஆவணம்; திப்பு சுல்தானின் சொந்தக் காரர் என்று சொல்கிறது இன்னொரு ஆவணம்; இல்லை அவர் வடமேற்கிந்தியாவின் மூல்தானைச் சேர்ந்தவர் என்றும் ஒரு ஊகம். இதில் முடிவு எதுவும் கிடையாது.

battle-fieldஎப்படியோ இருக்கட்டும்; அவரது சொந்த ஊர் பைசாபாத் அல்ல. அவர் எதற்காக அங்கே வந்தார்? அயோத்தி அருகில் உள்ள அனுமான கார்ஹி எனுமிடத்தில் இந்துமத வெறியர்களால் கொலை செய்யப்பட்ட ஒரு மவுல்வியின் மரணத்துக்குப் பழிவாங்கத் தான் வந்தார் என்கிறது ஒரு பிரிட்டிஷ் ஆவணம்.

பைசாபாத்தில் நுழைவதற்கு முன்னரே, அதாவது 1857-க்கு முன்னரே அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டிருந்தார் என்கிறது இன்னொரு ஆவணம்.

மௌல்வியை ஒரு மதவெறியனாகச் சித்தரிக்கும் முதலில் குறிப்பிட்ட பிரிட்டிஷ் ஆவணம் பொய்யானது என்று சம்பவங்கள் சாட்சி பகிர்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதற்காக பைசாபாத் மாவட்டக் கலெக்டரால் சிறைவைக்கப்பட்டார் மவுல்வி. பிரிட்டிஷாருக்கு எதிராகச் சிப்பாய்களின் எழுச்சி தொடங்கிப் பரவிய போது, சிப்பாய்கள் பைசாபாத் சிறையைத் தகர்த்தனர்; மவுல்வி உள்ளிட்ட அனைத்துக் கைதிகளையும் விடுவித்தனர். மவுல்வியே தங்கள் தலைவர் என அறிவித்தனர். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சிப்பாய்கள் மத்தியில் மவுல்விக்கு இருந்த செல்வாக்கிற்கு இதுவே நல்ல சான்று.

வெற்றி பெற்ற சிப்பாய்கள் தோற்றவர்களைத் துன்புறுத்துவதும் கொள்ளையடிப்பதுமே பண்பாடாக இருந்த ஒரு காலத்தில், அதற்குத் தடை விதித்தார் மொவுல்வி. சிறையிலிருந்து வெளியே வந்தவுடனே லக்னோ நகரில் புரட்சி சிப்பாய்களைக் கொண்ட காவல் நிலையங்களை தோற்றுவித்தார். மக்களிடையே மவுல்விக்குப் பெருகிவரும் செல்வாக்கைக் கண்டு பேகம் ஹஸ்ரத் மகாலின் அமைச்சர்களுக்கே அச்சம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு மோதலும் நடந்தது. இம்முரண்பாட்டைத் தவிர்க்க மவுல்வி தனது இருப்பிடத்தைப் புறநகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். பிரிட்டிஷாரிடமிருந்து லக்னோ நகரைக் காக்கும் போரில், மவுல்வியின் துருப்புக்களும் பேகத்தின் துருப்புக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டனர். 1857 நவம்பர் முதல் 1858 பிப்ரவரி வரை சுமார் 3 மாத காலம் லக்னோ நகரின் எல்லையிலேயே பிரிட்டிஷ் துருப்புகளைத் தடுத்து நிறுத்தியது மவுல்வியின் படை.

லக்னோவை பிரிட்டிஷார் கைப்பற்றியவுடன் புரட்சிக்காரர்கள் அனைவருமே நகரிலிருந்து தப்பிவிட்டனர். ஆனால் மவுல்வி மட்டும் அங்கேயே தலைமறைவாக இருந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். லக்னோவின் வீழ்ச்சிக்குப் பின் மவுல்வி வாழ்ந்தது மூன்றே மாதங்கள் தானெனினும், அக்குறுகிய காலதில் தனது ராணுவத் திறமையால் பிரிட்டிஷாரை அவர் கதிகலங்கச் செய்தார்.

லக்னோவிலிருந்தபடியே இரண்டே மாதங்களில் நகருக்கு 25 கி.மீ தொலைவில் உள்ள பாரி என்னும் கிராமத்தைத் தனது ராணுவத் தளமாக மாற்றினார் மவுல்வி. 3000 சிப்பாய்களுடனும் 18 பீரங்கிகளுடனும் அந்தத் தளத்தைத் தாக்கினான் பிரிட்டிஷ் தளபதி ஹோப் கிராண்ட். பிரிட்டிஷ் படைகளுக்குப் போக்குக் காட்டியவாறே பின்வாங்கி ரோகில்கண்ட் பகுதிக்குள் நுழைந்தது மவுல்வியின் படை.

ரோகில்கண்ட் பகுதியின் முக்கிய நகரமான பரேலி புரட்சிக்காரர்கள் வசம் இருந்தது. அதை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் படையை திசைதிருப்பும் முகமாக அவர்களைத் தாக்கத் தொடங்கினார் மவுல்வி. தில்ஹொர் எனும் நகரில் மவுல்வியிடம் அடிவாங்கிய பிரிட்டிஷ் படை பெரும் இழப்புகளுடன் தப்பியது. பரேலியின் மீது பிரிட்டிஷார் கவனம் செலுத்த விடாமல் அடுத்ததாக ஷாஜகான் பூரைத் தாக்கி கோட்டையைக் கைப்பற்றியது மவுல்வியின் படை. எனவே ஷாஜஹான் பூரை மீட்க தனது படையில் ஒரு பகுதியை பிரிட்டிஷார் அனுப்ப வேண்டியதாயிற்று. ஷாஜகான்பூரை பிரிட்டிஷார் கைபூற்றியவுடன் மவுல்வியின் படை சந்தீ, பவாயான் நகரங்களை நோக்கி நகர்ந்தது.

பவாயான் சமஸ்தானத்தின் மன்னன் ஜகர்நாத்சிங் பிரிட்டிஷாரின் கூட்டாளி. பவாயானை மவுல்வி தாக்கக்கூடும் என்பதை பிரிட்டிஷார் ஏற்கனவே மன்னனுக்குத் தெரிவித்திருந்தனர். மவுவ்வியை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க எப்படியாவது முயலுமாறும் கோரியிருந்தனர்.

இந்தச் சதியை அறியாத மவுல்வி, பவாயான் மன்னனை புரட்சிக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்; 5000 பேர் கொண்ட தனது குதிரைப் படையையும், காலாட்படை மற்றும் பீரங்கிப் படைகளையும் தொலைவில் நிறுத்தி விட்டு சிறிதளவு வீரர்களுடன் கோட்டை நோக்கி நடந்தார்.

மன்னனின் தம்பி பல்தேவ் சிங், கோட்டை வாயிலில் மவுல்வியை ‘வரவேற்றான்’. பிரிட்டிஷாரால் வரிவசூலுக்காக நியமிக்கப்பட்ட தாசில்தார், தாலுக்தார் பதவிகளை ஒழிக்கும்படியும் சுயாட்சி பிரகடனம் செய்யும்படியும் கோரினார் மவுல்வி. கோரிக்கையை பல்தேவ் சிங் மறுத்தான். சொல்லி வைத்தாற் போல கோட்டை மதிலின் மேலிருந்து பாய்ந்த தோட்டாக்கள் மவுல்வியைத் துளைத்தன.

மவுல்வியின் தலையைத் துண்டித்து ஷாஜகான்பூர் கலெக்டரிடம் சமர்ப்பித்து 50,000 ரூபாய் சன்மானம் வாங்கிக் கொண்டான் ராஜா ஜகர்நாத் சிங். மவுல்வியின் தலை ஷாஜகான்பூர் கலெக்டர் அலுவலக வாயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தன் இறுதி மூச்சுள்ளவரை எதிரியைக் கலங்கச் செய்த தாய்த்திரு நாட்டின் வீரப் புதல்வன், எதிரியின் வாளால் மடியாமல் சொந்த நாட்டின் துரோகிகளால் கொல்லப்பட்டதல்லவோ பெரும் துயரம்! தனது வீரத்தால் இறவாப் புகழ் பெற்ற மவுல்வி இறக்கும் போது அவரது வயது 40.

ரோஹில் கண்டின் கிழச்சிங்கம்

இன்றைய உத்தரப்பிரதேசத்தின் பரேலி, மொராதாபாத் ஷாஜகான்பூர், பதுவான், பிஜ்னோர் மாவட்டங்கள் அடங்கிய பகுதிக்கு அன்று ரோகில் கண்ட் என்று பெயர். 1957 மே 10-ம் தேதி மீரட்டில் சிப்பாய்களின் எழுச்சி தோன்றிய மூன்றே வாரங்களில் ரோகில்கண்ட் சுதந்திரப் பிரகடனம் செய்தது. சுமார் 11 மாதங்கள் நீடித்திருந்த இந்த சுதந்திர அரசாங்கத்தின் தலைநகர் பரேலி; தலைமை தாங்கி பிரிட்டிஷாருடன் யுத்தம் நடத்தியவர் சுமார் 80 வயது நிரம்பிய கான் பகதூர் கான்.

மன்னர் குலத்தைச் சேர்ந்த கான் பகதூர்கான் அதிகாரத்திற்கு வந்தவுடன் செய்த முதல் பணி ஆத்திரத்தில் திசை தெரியாமல் கலகம் செய்து கொண்டிருந்த சிப்பாய்களை ஒழுங்கு படுத்தியதுதான். ஒழுங்கு படுத்தப்பட்ட சிப்பாய்களில் ஒரு பகுதியினர் முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த டில்லி சக்ரவர்த்தி பகதூர் ஷாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டனர். உள்நாட்டில் பிரிட்டிஷ் வரிவிதிப்பு முறைகள் ரத்து செய்யப்பட்டு புதிய வரிவிதிப்பு முறை அறிவிக்கப்பட்டது.

அடுத்து இந்து – முஸ்லீம் ஒற்றுமையில் கவனம் செலுத்தினார் கான் பகதூர் கான். தாகூர் சாதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள் முகலாய ஆட்சியைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்; கான் பகதூரின் அரசுக்கு வரி கட்ட மறுத்தனர். சோபாராம் என்ற இந்துக்கள் இருவரை அமைச்சர்களாகவும் கான் பகதூர் நியமித்த பின்னரும் இந்நிலைமை தொடர்ந்தது. நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு இந்துக்களைத் தூண்டிவிட பிரிட்டிஷார் ஆயிரக்கணக்கில் செலவிட்டனர்.

இந்து – முஸ்லீம் ஒற்றுமையைச் சாதிக்க கான் பகதூர் எதையும் செய்யத்தயாராக இருந்தார். அவரது கீழ்க்கண்ட பிரகடனம் மத நல்லிணக்கத்தின் வரலாற்றில் குறிப்பிடதக்கதொரு சான்று.

“இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகிய அனைவரின் உயிருக்கும், உடைமைக்கும், மத நம்பிக்கைகளுக்கும் ஐரோப்பியர்கள் எதிரிகள். எனவே தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இருதரப்பினரும் முயலவேண்டும். இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்துவிட்டால் கைப்பிடியளவேயுள்ள ஐரோப்பியர்களை ஒழித்துக்கட்டுவது வெகு சுலபம். முஸ்லீம்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; ஆனால் இந்துக்கள் இதில் அலட்சியமாக உள்ளனர்.

இசுலாமியர்கள் பசு மாமிசம் பயன்படுத்துவது (பசுக்களைக் கொல்வது) இந்து மத நம்பிக்கைக்கு முரணாக இருப்பது தான் இந்துக்கள் பங்கேற்காததற்கு காரணம் எனத் தோன்றுகிறது. பசுமாமிசம் உண்ண வேண்டுமென்பது அல்லாவின் ஆணை அல்ல என்பதால் இசுலாமியர்கள் இப்பழக்கத்தைக் கைவிடுவதில் தவறில்லை. பசுக்களைப் பாதுகாப்பதை கருணை மிக்க செயலாக இந்துக்கள் கருதுவதால், அவர்கள் ஐரோப்பியர்களுக்கெதிரான போரில் ஈடுபடும் பட்சத்தில், அவர்களது நாட்டுப்பற்றை, பாராட்டி, எனது சமஸ்தானம் முழுவதும் பசுவதையைத் தடை செய்வேன்.

இப்போதைக்கு கசாப்பு வெட்டும் கூடங்கள் தவிர, இந்துக்கள் வசிக்கும் எந்த நகரத்திலும் முஸ்லீம்கள் – தங்கள் குடியிருப்புகளில் கூட – பசுக்களைக் கொல்லக் கூடாது என ஆணையிடப்படுகிறது… இதை மீறுபவர்களுக்கு 6 மாத சிறையும் அபராதமும் விதிக்கப்படும். எனினும் பசுவதையை முற்றிலுமாகத் தடை செய்வது ஐரோப்பியர்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதுடன் இணைந்த விசயம். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற இந்துக்கள் யாரேனும் தவறுவார்களேயானால் பசுவதையினால் நேரும் பாவத்திற்கு அவர்களே பொறுப்பாவார்கள்…”

மத மாச்சரியங்களைக் கடந்து வெகுவிரைவிலேயே கான் பகதூர் தனது தலைமையை நிலை நாட்டிக் கொண்டார். ராஜதந்திரத்தில் மட்டுமல்ல, இராணுவப் போர்த்தந்திரங்களிலும் தனது தலைமையை நிரூபித்தார் கான் பகதூர். இழந்த பகுதிகளைப் பிடிக்க பிரிட்டிஷார் உடனே போர் தொடுப்பார்கள் என்பதையும், பிரிட்டிஷாரைக் காட்டிலும் புரட்சி சிப்பாய்களின் ஆயுத வலிமை குறைவு என்பதையும் அவர் சரியாகவே கணித்திருந்தார். எனவே கொரில்லா யுத்த முறையையே பிரதானப் போர் முறையாகக் கையாண்டார்.

லக்னோவை பிரிட்டிஷார் கைப்பற்றி விட்டால் தன்னை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்பதைக் கான் பகதூர் அறிந்தே இருந்தார். எதிர்பார்த்தது போலவே லக்னோ வீழ்ந்தது; ஆனால் கான் பகதூர் சரணடைவதாக இல்லை. பரேலி மீது பிரிட்டிஷார் மும்முனைத் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தடையாக வந்து மோதின புரட்சி சிப்பாய்களின் கொரில்லாப் படைகள்.

பரேலியை நெருங்குவதற்கே பிரிட்டிஷ் படைகளுக்கு ஒரு மாதம் பிடித்தது. மே 5-ம் தேதி பரேலி மூர்க்கமானதொரு போர்க்களமானது. கான் பகதூரின் படைக்குத் துணையாக தோற்கடிக்கப்பட்ட பேகம் ஹசரத் மஹலின் படைகள், மவுல்வியின் படைகள், மன்னன் ஃபெரோஸ் ஷாவின் படைகள் மற்றும் ரோகில் கண்டின் போர்ப்பரம்பரையினரான காஜிகள் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

போர்க்களத்தை நேரில் கண்டவரும், மயிரிழையில் அங்கிருந்து உயிர் தப்பியவருமான ‘பிரிட்டிஷ் டைம்’ பத்திரிக்கை நிருபர் ரஸ்ஸல் தனது அனுபவத்தைக் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்.

“திடீரென்று எங்கும் ஒரே கூச்சல், குழப்பம்; நான் அமர்ந்திருந்த பல்லக்கு திடீரென கீழே போடப்பட்டது. எனது பல்லக்குத் தூக்கிகள் பேயறைந்த முகத்துடன் அலறிக் கொண்டே ஓடினர். மனிதர்களும் மிருகங்களும் முட்டிமோதித் தடுமாறின; யானைகள் பிளிறிக் கொண்டே வயல்களில் இறங்கின; ஒட்டகங்கள் தலைதெறிக்க ஓட தொடங்கின; குதிரைகள், பெண்கள், சிறுவர்கள் – எல்லாம் அலையலையாகச் சாலையை நோக்கிப் பாய்ந்தன.

indian-independence-war-hangingஐயோ, கடவுளே… நான் காண்பது என்ன! சில நூறு கஜங்கள் முன்னே எங்களை நோக்கிக் காற்றைப் போல, பெரும் அலையைப் போல எழும்பி வரும் நூற்றுக்கணக்கான வெள்ளுடை தரித்த வீரர்கள், வெயிலில் மின்னும் அவர்களது வாட்கள், கர்ச்சிக்கும் அவர்களது குரல், இடியென முழங்கும் குதிரைகளின் குளம்போசை… காற்றும் வானமும் நடுங்கின.

அவர்கள் முன்னேற முன்னேற எங்களது படையினரின் மண்டையோடுகள் நொறுங்கின, வயல்வெளிகளில் ரத்தம் பெருகி ஓடியது. அந்தக் கணத்தில் எனது கண்கள் பார்த்ததைச் சொல்ல நாவெழும்ப வில்லை; ஒரு மணிநேரத்தில் கூட அந்த ஒரு கணத்தை என்னால் விவரித்து எழுத முடியாது! எனக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான் – இதோ மரணம், அவமானகரமான மரணம், பரிதாபமான மரணம்!”

கான் பகதூரின் ‘காஜி’ படைவீரர்களுடைய தாக்குதல் அது. மாபெரும் போர்கள், அளப்பரிய தியாகங்களுக்குப் பின்னரும் நவீனமான, வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் ராணுவத்தை கான் பகதூரால் வெல்ல இயலவில்லை. பரேலி வீழ்ந்தது. கான் பகதூர் தனது சிப்பாய்களுடன் தப்பிச் சென்றார் ஏறத்தழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் கைக்கூலியாய் மாறிய நேபாள இந்து மன்னன் ஜங் பகதூர், எண்பது வயதான பழுத்து முதிர்ந்த அந்த விடுதலைப் போராளியைப் பிடித்து வெள்ளையனின் கையில் ஒப்படைத்தான்.

கான் பகதூர் பரேலிக்குக் கொண்டு வரப்பட்டார்; ‘விசாரணை’ நடந்தது. மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கெதிராகக் கலகம் செய்த குற்றத்திற்காக, கான் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.
___________________________________________________________________
புதிய கலாச்சாரம், டிச-ஜன-பிப் 1992
___________________________________________________________________

போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !

5

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது அரசு கட்டணத்தை ஒரு சில பெற்றோர்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, “புத்தகம் நோட்டுகள் இருப்பு இல்லை” என அலைக்கழிக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர்களை ஒருங்கிணைத்து மிகுந்த தடைகளுக்கு இடையில் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.

போஸ்டர்“கல்வித்துறை அதிகாரிகளை தூங்கவிடக் கூடாது, பள்ளி முதலாளியின் அடியாள் படைக்கு அஞ்சத் தேவையில்லை, கல்வி உரிமைக்கான நெடிய போராட்டத்தில் கூலிக்கார அடியாட்கள் என்ன செய்ய முடியும்?” என விளக்கி பேசினோம். நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளோம். பிரச்சாரம் நகர மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. வீனஸ் குமார் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற பிரச்சாரம் தோல்வி அடைந்துள்ளது.

சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புத்தகம் தர மறுத்த்து பற்றி புகார் செய்தோம். அவரோ, “என் வரம்பு மீறி பள்ளி நிர்வாகத்திடம் பேசியுள்ளேன். அவர்கள் என் மீது வருத்தப்படுவதாக கேள்வி பட்டேன். அது, கல்வித் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலை” என தெரிவித்தார்.

நமது சங்கத்தினர் “உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி தாருங்கள், கல்வித்துறை அதிகாரிகளை நாங்கள் செயல்பட வைக்கிறோம். எங்கள் போராட்டம் அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்கு எதிராக நடத்துகிறோம். நீங்கள் சொல்வது போல் ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு எதிராக இல்லை” என்றோம்.

டி.எஸ்பி.யோ “போராட்டத்தில் உதாரணத்திற்கு வீனஸ் பள்ளியைதான் அனைவரும் பேசுவார்கள். அதனால் அசாதாரண நிலை உருவாகும்” என இரண்டு முறையும் நமது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியுள்ளார்.

நாம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் எந்த போராட்டமாக இருந்தாலும் எஸ்.பியிடம் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என அனைத்து ஆய்வாளர்களும் ஒரே மாதிரி கூறுகிறார்கள்.

கூட்டம்சேத்தியாதோப்பில் எஸ்.டி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அதோடு ”அன்குவாலிபைடு பீஸ்” என்று சுமாராக படிக்கிறார் எனக்காரணம் கூறி அந்த மாணவனிடம் ரூ 4000 கடந்த ஆண்டு வசூலித்து இருக்கிறார்கள். கட்டணத்தை அச்சடித்த பிரசுரத்தை பள்ளி வளாகத்தின் முன்பு பெற்றோர்களிடம் விநியோகித்தோம். கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளோம். மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சேத்தியாதோப்பு கிளை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டோம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் எஸ்.பி., “பள்ளி நிர்வாகத்திடம் பேசி பிரச்சினையை தீர்க்க சொல்லியிருக்கிறார். நானும் பேசியுள்ளேன். கோர்ட்டுக்கு எல்லாம் வேனாம் சார்” என பவ்யமாக கூறினார். இதே ஆய்வாளர் பிரசுரம் கொடுத்த சேத்தியாதோப்பு கிளை அமைப்பாளர் பாலு மகேந்திரனிடம் ”பள்ளியிடம் பணம் கேட்டாய் என வழக்கு போட்டு உன்னை ரிமாண்ட் செய்வேன்” என மிரட்டினார்.

இந்நிலையில் எஸ்.டி.எஸ். பள்ளியின் பெற்றோர்கள் நமது சங்கத்துடன் இணைந்து 28-6-13 அன்று மாலை 5-00 மணிக்கு சேத்தியாதோப்பு, அள்ளுர் லெட்சுமி திருமண மண்டபத்தில் அரங்கு கூட்டம் நடத்த உள்ளோம். இதற்கான சுவரொட்டி சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் ஒட்டியுள்ளோம்.

“பல மடங்கு கட்டணம், தனியார் பள்ளி முதலாளியை தட்டிக் கேட்க முடியும், தகுதியற்ற ஆசிரியர் பாடம் நடத்தினால் கேள்வி கேட்க முடியும், என் பள்ளி இஷ்டம் இருந்தால் படி இல்லையென்றால் டி.சி.வாங்கிச்செல் என பள்ளி முதலாளி பேசினால் அவன் தலையில் கொட்டுவதற்கு நமக்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாது காப்பு மையம் இருக்கிறது” என்ற நம்பிக்கையை கிராம மக்களிடம் ஏற்படுத்தியுள்ளோம்.

தரமான கல்வி எது? தனியார் பள்ளியின் தரம் என்ன என்பதை மக்களிடம் பேசுகிறோம். வேறுவழி என்ன என திருப்பி கேட்கிறார்கள். மாவட்டம் முழுவதும் நமது சங்கத்தினர் நடத்தும் போராட்டத்தால், தனியார் பள்ளி முதலாளிகளும், கல்வித் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் எரிச்சலாக பார்ப்பதுடன், பெற்றோர்களிடம் பற்றி பரவி விடக் கூடாது என்பதில் அரசு நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கினறனர்.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
கடலூர் மாவட்டம்
தொடர்பு 9345067646

மோடியின் உத்தர்கண்ட் சாதனை ஒரு விளம்பரச் சதி !

75

மோடியின் இமாலாய ஜாலம்.

த்தர்கண்டிலும், இமாச்சல் பிரதேசத்திலும் நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில், ஜூன் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது.

இமாலய ஜாலம்
மோடியின் இமாலய ஜாலம்

இந்த ஜாலம் ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?

மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?

மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும். 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.

டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.

அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.

உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன. வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.

எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்கோ வேர்ல்ட்வைட் என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம். துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.

கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது. அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது. அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.

அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.

மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.

அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.

துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.

ராம்போ மோடி
ராம்போ மோடி

ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.

மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.

இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.

அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.

ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது. ஆனால், அவரது சமீபத்திய இமாலய ஜாலம் அப்பட்டமான, கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா

உழைப்புக்கு கணக்கில்லை !

11

“ஏன் சித்தப்பா இந்த வயசுலயும் மூட்டைத் தூக்குற, இந்த தள்ளாத வயசுல எதுன்னா ஒன்னு நடந்துச்சுன்னா என்ன செய்வே. நானும் சின்ன வயசுலேருந்து ஒன்ன பாத்துக்கிட்டுதான் இருக்கேன். அந்த ரெண்டு துண்டு நெலத்த வச்சுகிட்டு நடவு சீசன்ல நடவு செய்யற, அறுப்புக்குப் பிறகு உளுந்து, பயிறு போடுற, கோடையில வெண்டை-கொத்தவரை போட்ற, ஓச்சல் இல்லாம உழைக்கிற, போறப்ப என்னத்த வாரிகிட்டு போகப்போறியோ? தெரியல” என்றேன்.

அவர் மனதில் தேங்கிக் கெடந்த ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார்.

உழைப்பு
உழைப்பே வாழ்க்கை

“எண்பது வயசாகுது எனக்கு, பதினைஞ்சு வயசுலேருந்து வெவசாயம் பண்றேன். எங்கப்பன் கட்டிவச்சுட்டு போன வீட்டுக்கு ஒழுகாம ஓலை மாத்த முடியல என்னால. என்னத்த ராப்பகலா ஓடி ஓடி ஒழைச்சாலும், வயித்துக்கும் வாயிக்குமே சரியாப் போவுது.

வெவசாய மொறைதான் மாறியிருக்கே தவிர, நம்மள மாதிரி பாடுபட்டு ஒழைக்கிற மனுசங்க நெலமை இன்னும் மாறவே இல்ல. ஏக்கர் கணக்குல நெலம், பத்து ஏரு, வண்டி, மாடுன்னு வச்சுருந்தவனெல்லாம் இன்னைக்கு டிராக்டர், குபேட்டா, கதிரறுக்குற – அடிக்குற மெசினு, மோட்டார் வண்டின்னு போய்ட்டே இருக்கானுவ. அவனுவளுக்கு பொளைக்க வழி தெரியுது.

நம்மெல்லாம் கால் ஏக்கரு, அரை ஏக்கரு வச்சிருந்தாலும் கையில ஏரு மாடும் வச்சுருந்தோம், உழுதது போக மத்தவனுக்கு கூலிக்கு ஏரு ஓட்டுனோம். இப்ப ஒண்ணுமே இல்லாம போச்சு, இருந்ததும் போச்சே நொள்ள கண்ணான்னு ஏரு ஓட்டவும், கதிரருக்கவும், அறுத்த கதிர ஏத்திக்கிட்டு வரவும், அவனுவகிட்ட எதிர் பாத்து நிக்கிற நெலமையா போச்சு.

பெரும்பாலான நம்ம சனமெல்லாம் வெவசாயத்த விட்டுப்புட்டு டவுன பார்க்க கூலி வேலைக்கி போறாய்ங்க. இதுல பத்துரூவா கெடைக்குமா, அதுல பத்துரூவா கெடைக்குமான்னு வயித்துப்பாட்டுக்கு திண்டாட வேண்டியிருக்கு. ஒரு வருசமா இப்ப வாங்கிருவோம் அப்ப வாங்கிருவம்ன்னு டயரு போன சைக்கிளுக்கு டயரு மாத்தாம பஞ்சர் ஓட்டியே காலத்த ஓட்றேன். இதுதான் என்னையப் போல வெவசாயம் பண்றவனோட நெலமை!

‘உழுதவன் கணக்கு பாத்தா ஒழக்கும் மிஞ்சாது’ வெவசாயம் பண்ணி நம்ம ஒன்னும் கப்ப சீமானா ஆக முடியாது. வயிறுன்னு ஒண்ணு இருக்கே? அதுக்குத்தான் இந்த பாடு. நம்ம கிட்ட இருக்குற கையிருப்பு உழைப்பு ஒன்னுதான். ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் ஒழச்சுட்டு போகவேண்டியதுதான்.”

தன் ஒட்டுமொத்த வர்க்கத்தோட நிலைமையைப் தான் ஒருவராக புலம்பி தீர்த்தார்.

அக்கறையாக விசாரிப்பதாக நினைத்துக் கொண்டு, வெவசாயத்தோட நெலமை புரிஞ்சும், சித்தப்பா மனசு வருத்தப்படும்படி கேட்டுவிட்டேன் என்பது உண்மைதான். வெவசாயம் செஞ்சு முன்னுக்கு வர முடியாது என்று அவர் புலம்புவதும் உண்மைதான். ஓடி ஓடி ஒழைச்சாலும் வெவசாயி வீடு வெறும் வீடாதான் இருக்கும். இருக்குறத அடகு வச்சு, வட்டிக்கு வாங்கி விவசாயம் பண்ணுவாங்க. கதிரறுத்ததும் கடனடைப்பாங்க. இப்படியே வட்டமா சுத்திக்கிட்டே இருக்கும். இந்த வட்டம் சுத்தி சுத்தி தேஞ்சு புள்ளியாப் போயி பிறகு காணாம போயிடும்.

ஒரு சாதாரண சிறு வெவசாயியோட வீடுகளில் கறவை மாடு, காளைமாடு, ஆடு, கோழின்னு வளர்ப்பாங்க. அதோட கழிவுகளை எருக்குழி வெட்டி ஒரு வருடத்துக்கு போட்டு வைப்பாங்க. ஒருவருட காலத்தில், சாணம் எருவாகி விடும். தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பிக்கும் காலத்தில் எருவள்ளி வயலில் போடுவாங்க.

ஆத்துல தண்ணி வந்ததும் நாத்துவிட ஆரம்பிக்கணும். நாத்தாங்காலுக்கு (நாத்து விடும் இடம்) மட்டும் வேலை பரபரப்பா நடக்கும். நாத்துவிட்டு முப்பது, முப்பத்தஞ்சு நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். பத்து நாட்களுக்கு முன்பே நடவு ஆளுக்கு பணம் கொடுத்து முன்பதிவு செஞ்சுவைக்கணும்.

நாலு அஞ்சு ஓட்டு ஓட்டுனாதான் நடவுக்கு வயல் தயாராகும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 15 முதல் 18 ஆள்வரை வேணும். வரப்பு வெட்ட, பட்டம் புடிக்க, நாத்து பறிக்க, நாத்து வெலம்ப என்று ஒவ்வொரு வேலைக்கும் ஆளு நின்னு நடவு நட்டு முடிப்பாங்க. பிறகு மொத களை ரெண்டாவது களைன்னு மூணு களையெடுக்கணும். அடி உரம்னும் மேல் உரம்னும் ரெண்டுதடவ மருந்தடிக்கணும். பூச்சி மருந்தடிக்கணும். இதுக்கு மேலயும் பயிரு நல்லா இல்லைன்னா மேலும் மருந்தும், பூச்சியடிச்சா பூச்சி மருந்தும் அடிக்கணும்.

இதுவரை சொன்ன வேலைகளுக்கு செலவு செய்ய என்ன செய்வான் சிறு விவசாயி. ஏரு மாடு அவர்கிட்ட இருக்கும். இப்ப அதுவும் இல்ல. அந்த குடும்பத்தில் உள்ள பெரியவங்கள்ளேர்ந்து, சின்ன புள்ள வரைக்கும் பாதி வேலை செய்வாங்க. மீதி உள்ள பணத் தேவைக்கு தோடு, மூக்குத்தி, தாலி முதல் தண்ணி எடுக்கும் குடம், தோண்டி வரை அடகு கடைக்கு போயிரும்.

வெவசாய வேல இருக்குற காலகட்டத்துல நெதமும் கூலி வேலைக்கு போகவும் செய்வாங்க. அதுல வர்ர வருமானத்துலதான் கொழப்பு காச்சுறதுல இருந்து, வெத்தல பாக்கு, மூக்குப் பொடி வரைக்கும் வாங்கனும். பிறகு கொண்டான் கொடுத்தான் (சொந்தக்காரன்) கல்யாணம், காதுகுத்து முதல் கருமாதி எழவு வரைக்கும் மொய்யெழுதணும்.

இந்த அளவு கஷ்டப்பட்ட பிறகு மனச குளிரவைக்கிற மாதிரி கதுரு வந்து எட்டி பாக்கும். கதுரு வர்ர வனப்பை பாத்தா ஊருலய நமக்குதான் நல்ல வெளைச்சல் வரும். கதுரருத்து வச்சதையல்லாம் மூட்டுட்டு சாப்பாட்டுக்கு வருசத்துக்கும் வச்சுக்கனும் என்ற பெரும் பேராசை மனசு நெறையா நெறஞ்சு கெடக்கும்.

நுகர்வு
நுகர்வே வாழ்க்கை

கதுரு வந்து ஒத்தழிக்குற நேரமா பாத்து மழை அதிகமா போச்சு அத்தனையும் சாவியா போயிரும். இல்ல வறட்சி வந்து தண்ணியே இல்லாம அத்தனையும் கருக்கா போயிரும். வானம் கண்ண தொறந்தோ இல்ல கண்ண மூடியோ எண்ணத்துல மண்ணள்ளி போட்டுரும்.

வெவசாயம்னா நீங்க குளிச்சு முடிச்சு ஃபுல் மேக்கப்புல ஏசி காருல ஆபிசுக்கு போறது மாதிரி அவ்வளவு சுலபம் இல்லைங்க. கோழி கூவ எந்திரிச்சா, கரிச்சான் கத்துறப்ப கூட படுக்க முடியாது. ஒரு தண்ணி பாச்ச பத்து நடை நடக்கனும். தண்ணிய தொறந்து விட்டுட்டு சாப்பிட்டுட்டுப் போகலான்னு வீட்டுக்கு வந்தா அடுத்தவன் வந்து மடைய தொறந்துருவான். மழை வந்தா கதுரு சாஞ்சுருமேன்னு தண்ணிய வடிய வைக்கனும். மழை வராமப் போச்சுன்னா திரும்ப தண்ணிய பாச்சணும்.

ஆடு மாடு மேச்சலுக்கு போகையிலும், கட்டுத்தறிக்கு ஓட்டிட்டு வரும்போதும் காவல் காக்கணும். இல்லன்னா திங்கறதோட விடாம பயிர தொவச்சு எடுத்துறும். நெல்லு பழுத்துட்டா சிட்டு வெறட்டனும். நடவு நட்டு கதுரு அறுக்குறதுக்குள்ள வீட்டுக்கும் வயலுக்குமா ஒரு பயிருக்கு ஒரு நட நடக்கனும்.

வருசமெல்லாம் பாடுபடுபட்டாலும், அவன் செய்ற வேலைக்கு கூலி கணக்கு பாக்குறதில்ல. வெளஞ்ச வெள்ளாம மட்டுந்தான் கணக்கு. காலமெல்லாம் ஒழச்சாலும் நித்தமும் சாப்பாட்டுக்குப் போராட்டமாதான் இருக்கும். இதுதான் சாதாரண சிறு விவசாயி வெள்ளாமை விட்டு பொழைக்கிற பொழைப்பு

தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி ஆலோசித்துக் கொண்டும், பீட்சான்னும் பர்க்கர்ன்னு வயிருமுட்ட தின்னுட்டு, செரிமானத்துக்காக மல்டிப்ள்க்ஸ் தியேட்டர்ல படம் பார்த்துட்டு, மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு, வீக் எண்டு கொண்டாட்டம் போடும் நுகர்வோருக்கு மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!

– வேணி

பெண்கள் விளையாட்டுக்கு பிகு பண்ணும் சவுதி அரேபியா !

15

“இனிமேல் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது” இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அரசின் அறிவிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் இது சவுதி அரேபியாவின் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு விளையாடும் உரிமையை வழங்கிய சவுதி மன்னரின் அறிவிப்புதான் அது.

சவுதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. இந்த புதிய சட்டம் ஷரியத் விதிகளின்படியும், இஸ்லாமிய சட்டங்களுக்கு ஏற்பவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதி முஹம்மத் அல் தக்கினி, “எங்கள் மத போதனைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் பிறந்துள்ளது என்றும், ஷரியத்திற்கு ஏற்ப பெண்களை பள்ளிகளில் விளையாட அது அனுமதிக்கிறது” என்றும் அறிவித்துள்ளார்.

arabes2இத்தனை நாட்கள் பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காத ஷரியத் விதிகளும், இஸ்லாமிய போதனைகளும் திடீரென மாற்றத்தை அனுமதிப்பதும், அது தனியார் பள்ளிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

சென்ற ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது வெறும் ஆண் வீரர்களை மட்டும் அனுப்பும் பழக்கத்தை கைவிட்டு பெண் வீரர்களையும் அனுப்ப வேண்டும் என்று சர்வதேசிய ஒலிம்பிக் கமிட்டி சவுதி அரேபியாவுக்கு செல்லமாக அழுத்தம் கொடுத்தது. சவுதி முதலான வளைகுடா நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தோடு கூட்டணியில் இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ‘ஜனநாயகம்’ மட்டும் அங்கில்லை. இதில் அரபுலக மக்கள் எழுச்சி லேசாவாவது சவுதியையும் தொட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை சவுதிக்கும் உள்ளது; அமெரிக்காவிற்கும் உள்ளது. அதற்கு மாற்றாகத்தான் இத்தகைய மேலோட்டமான உரிமைகளை வழங்கலாமா என்று சவுதி மன்னர் குடும்பம் அமெரிக்க வழிகாட்டுதலில் யோசிக்கிறது.

இப்படித்தான் முன்பு எப்போதும் இல்லாமல் அபூர்வமாக சவுதி அரபியாவை சேர்ந்த இரண்டு பெண் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண்களை அனுப்பியதையடுத்து எழுந்த விவாதங்களை சமாளிக்கும் நோக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ளதுதான் தனியார் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உரிமை என்பது.

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படும் சவுதி அரேபியா பெண்களின் வாழ்க்கையை பொறுத்த வரை இன்னமும் 8-ம் நூற்றாண்டிலேயே இருந்து வருகிறது. சவுதி அரேபியாவில் மேட்டுக்குடிச் சீமாட்டிகளின் பொழுது போக்காக மட்டுமே விளையாட்டுகள் நடைபெற்று வந்தன. பெரும் பணம் செலவழித்து அவர்கள் உறுப்பினராக உள்ள ஆடம்பர உடல் நல கிளப்களில் நடைபெறும் விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்க முடியும். 2010-க்கு பிறகு இந்நிலையங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தற்போது அவை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல பணக்கார தனியார் பள்ளிகளில் பெண்களுக்கு விளையாட்டு, உடற்கல்வி முதலியன அரசாங்க ஒப்புதல் இல்லாமலே நடந்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது என்பதுதான் நிஜம்.

இப்போது அதை கண்டுகொள்வது போல நடிக்கிறது சவுதி அரசாங்கம். பெரும்பான்மை பெண்கள் செல்லும் அரசு பள்ளிகளுக்கு இந்த உரிமை வழங்கப்படாமல், தனியார் பள்ளிகளிடம் மட்டும் மதத்தின் புனிதம் சரணடைந்துள்ளது. அரசுத் துறையான உடல்நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாடும் உரிமை கிடைப்பதை இன்னமும் ஷரியத் விதிகள் அனுமதிக்கவில்லையாம்

பணக்கார ஷேக்குகள் வீட்டின் பெண்களுக்கும், மன்னர்களின் வீட்டு இளவரசிகளுக்கும் பிறப்புரிமைகளாக இருப்பவை நடுத்தர – ஏழை இஸ்லாமியர்களுக்கு எளிதாக கிடைத்துவிடுமா?

சவுதி அரேபியாவின் மூத்த மத குருக்களோ இதைக்கூட ஏற்கத் தயாராக இல்லை, இப்போது வழங்கவிருக்கும் விளையாட்டு உரிமை தவறு என்று பிரகடனம் செய்திருக்கிறார்கள். பெண் என்பவள் வெளிப்படையாக பொது பாத்திரம் ஏற்கக் கூடாது, அவ்வாறு செய்வது அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கமாக அமையும் என்று தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஷேக் அப்துல்லா – அல் மனீயா என்ற மத அறிஞர்களின் சுப்ரீம் கவுன்சில் தலைவர், 2009-ல்  “பெண்கள் அதிகப்படியான உடல் அசைவு, குதித்தல் போன்றவைகள் தேவைப்படும் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளில் ஈடுபட்டால் கன்னித்திரை கிழிந்து அவர்கள் கன்னித்தன்மையும் புனிதத்தையும் இழந்து விடுவர்” என்று புலம்பியுள்ளார்.

இவ்வாறான பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.

தனியார் பள்ளிகளில் விளையாட்டுகளை அனுமதிக்கும் அதே வேளையில் பெண் குழந்தைகள் கண்ணியமான ஆடைகள் அணிந்துக்கொள்வதையும், விளையாட்டு பயிற்சிகள் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடத்துவதையும் உறுதி செய்யுமாறு சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பெண்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து அடக்கி வைக்கும் சவுதி அரேபிய அரசு வளர்ந்து வரும் அந்நாட்டு பெண்களின் கோரிக்கைகளால் சில சீர்திருத்தங்களை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டில் நடைமுறையில் அவை பலனற்று போகின்றன.

saudi-women-saidaonline

கண்ணியமான உடை என்ற பெயரில் பெண்கள் உடுத்தும் உடைக்கு கடுமையான கட்டுப்பாடு சவுதியில் உள்ளது. முகத்தை நிகாப் என்ற துணியால் மறைத்துக்கொண்டு தான் அவர்கள் வெளியே செல்ல வேண்டும், சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களும் கூட கறுப்பான, இறுக்கமற்ற அபாயா என்ற மேல் அங்கியை அணிந்தே தீரவேண்டிய சட்டதிட்டங்கள் அங்கு உள்ளன.

சவுதி அரேபியாவின் வஹாபிய சட்டங்கள் பெண்கள் நாட்டை விட்டு வெளிநாடுகள் போவதற்குக்குக் கூட அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் உள்ள ஆண் காவலர்களான – கணவன், தந்தை, சகோதரன், இவர்களில் ஒருவரின் அனுமதியை விமான நிலையத்தில் அல்லது எல்லையில் பெற்றுதான் பெண்கள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதிலும் தவறுகளை தடுக்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் நடவடிக்கைகளை வேவுபார்த்து வருகின்றது அரசு. பெண்கள் எங்கு வெளியூர் சென்றாலும் அதைப்பற்றிய குறுஞ்செய்தி உடனே பெண்ணின் ஆண் காவலர்களுக்கு செல்பேசியில் அனுப்பப்படுகிறது

உலக அளவில் பாலின பாகுபாடுகள் உள்ள 135 நாடுகளில் சௌதி அரேபிய 131-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை மறுத்திருக்கும் ஒரே நாடு சவுதி அரேபியாதான். பெண்கள் வாகனம் ஓட்ட நேரிட்டால் மக்ஹரம் அல்லாத பிற ஆண்களுடன் பேச நேரிடலாம் என்றும், அதிகமான வண்டிகள் தெருக்களில் ஓடும் சூழல் இதனால் உண்டாகி பிற இளம் ஆண்களை வாகனம் ஓட்டும் வாய்ப்பினை குறைக்கும் என்று இதற்கு காரணங்களை கூறுகின்றனர்.

ரியாத் மற்றும் ஜெட்டா போன்ற நகரங்களில், ஆடவர்களுடன் ஏற்படும் சந்திப்புகளை தடுக்கவே பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுமையாக இருப்பினும், டாக்ஸி அல்லது தனியார் வாகனங்களில் தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

சென்ற ஜனவரியில் சவுதி அரேபியாவின் சூரா கவுன்சிலில் மன்னர் அப்துல்லா பின் அப்துல்அஜீசின் அறிவுரையாளர்களாக பணிபுரிய 30 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஆண்கள் இருக்கும் அவையில் சேர்த்து அமர்த்தப்படாமல், பிரித்து வைக்கப்பட்டனர். தடுப்பு அரண் ஒன்றை கட்டும் திட்டமும் விவாதத்தில் உள்ளது.

மன்னர் அப்துல்லா, இளவரசர் அஜீஸ்
சவுதி மன்னர் அப்துல்லாவும், இளவரசர் சுல்தான் அப்துல் அஜீஸூம் நஜ்ரன் நகரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்களுடன்.

வரலாறு காணாத அதிசயமாக முதன் முறையாக ஒரு பெண் சட்ட பயிற்சி பெற சென்ற ஏப்ரலில் அனுமதி வழங்கியுள்ளது சவுதி அரசாங்கம். ஆனால் நீதிமன்றத்தில் ஆண்கள் வழக்கறிஞர்கள், நீதிபதி என்று இருக்கும் பட்சத்தில் பாலின பாகுபாடு அங்கு எவ்வாறு நுழைக்கப்படும், நீதிமன்றத்தில் தடுப்பு அரண் கட்ட முடியுமா என்ற பிரச்சனையெல்லாம் இனிமேல்தான் வரும்

விற்பனை வேலையில் பங்கு பெற அண்மையில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பெண்கள் ஆடை, உள்ளாடை விற்கும் கடைகளில் மட்டும் தான் வேலை செய்யமுடியும் என்ற துணைவிதியும் கூடவே உள்ளது. இத்தனை நாள் ஆண்களை பயன்படுத்தி செய்து வந்த இவ்வேலையில், அவர்கள் வாடிக்கையாளர்களான பெண்களிடம் பழகுவதற்கிருந்த வாய்ப்பு ஷரியத்படி அமைந்ததுதானா என்று ஆலோசிக்க கமிட்டி எதாவது அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை

இந்த அழகில் 2015 முதல் நகராட்சி தேர்தலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கவிருக்கிறாராம் ‘மன்னர்’ அப்துல்லா. பெண்கள் முகம் முழுவதும் தெரிவதனால் அவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்குவதைக்கூட இஸ்லாம் போதிக்கும் பர்தா முறையை மீறி புனிதம் கெடுகின்றது என்று உறுமும் மதகுருமார்கள் இதையெல்லாம் அனுமதித்து விடுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இவ்வாறு பெயரளவிலான பெண் உரிமைகள் கூட மதத்தின் புனிதத்தை கெடுகிறது என்றால் அமெரிக்காவின் ஏகாதிபத்திய போருக்கு அடியாட்களும், கூலிப்படையும் தந்து உதவி ஈராக், சிரியா, லெபனான் நாடுகளில் அப்பாவி குழந்தைகளையும் மக்களையும் கொல்வதற்கு துணை நின்றது மதத்தின் புனிதத்தை காக்கும் நற்செயலா என்ன?

ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வலிந்து ஜனநாயகத்தையும், மனித உரிமையும் ‘ஏற்றுமதி’ செய்யும் அமெரிக்கா, தனது வளர்ப்பு பிராணியான சவுதி அரேபிய அரசின் பிற்போக்கு பெண் அடிமைத்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து ஒரு அறிக்கைகூட விடுவதில்லை. மாறாக, சர்வாதிகார சவுதி மன்னர்களுக்கும், ஷேக்குகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதின் மூலம் ஜனநாயகம் மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் சவுதி மக்களுக்கு கிடைக்காமல் இருக்கவே வழிசெய்கிறது.

15 வயது பெண்ணை விளையாட அனுமதிக்காத சவுதி அவர்களை 90 வயது கிழட்டு ஷேக்குகளுக்கு மணம் முடிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்குகிறது. மனிதாபிமானமற்ற இச்செயல்கள் மதத்தின் புனித்த்தை காப்பது என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேற்கப்படும் வன்முறைகள்.

ஒடுக்கப்படும் மக்களோடு பெண்களும் இணைந்து வீதியில் இறங்கி போராடி இந்த மன்னர்களின் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் போது மட்டுமே உண்மையான ஜனநாயகமும், பெண் உரிமையும் அங்கு மலரும்.

– ஜென்னி

வடுகப்பட்டி தேவர் சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

17

உசிலம்பட்டியில் தொடரும் தீண்டாமைக் கொடுமை! தீண்டாமையை குற்றமாகப் பார்க்க மறுக்கும் தேவர் சாதி வெறித்தனம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, உசிலம்பட்டியிலிருந்து கிழக்கு நோக்கி 5 கி.மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த காலம் சென்ற பாண்டி, நாகம்மாள் இவர்களின் மகன் 11 வயது அருண்குமார் என்ற மாணவனை காலில் செருப்பு அணிந்து செல்ல விடாமல் அவன் தலையில் சுமக்க வைத்த காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது.

வடுகப்பட்டிவடுகபட்டியில் ஊரின் மேல்புறத்தில் அமைந்துள்ள கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்த அருண்குமார் தான் ஆறாம் வகுப்பில் பாஸ் ஆகிவிட்டோமா என்று பார்ப்பதற்காக கடந்த 3.6.2013-ம் தேதியில் பள்ளிக்குச் சென்றவனை அதே ஊரைச்சேர்ந்த வீராயி கோவில் பூசாரி பதிவுராஜா என்பவரின் மகன் நிலமாலை என்ற தேவர் சாதி வெறியன் மாணவன் அருண்குமாரிடம், “செருப்பு போட்டு நடந்து போக கூடாது என்பது தெரியாதோ? செருப்பை கழட்டுடா” என்று மிரட்டி தலையில் செருப்பை வைக்கச் சொல்லி நடந்து போக வைத்து ரசித்து இருக்கிறான்.

விசயத்தை கேள்விப்பட்ட அருண்குமாரின் தாயார் நாகம்மாள் “என் மகன் பச்ச மண்ணு, அவனுக்கு என்னா தெரியும் அவன்கிட்ட இப்படி நடந்துகிட்ட இது நியாயமா?” என நிலமாலையின் தம்பியிடம் தெரியப்படுத்தி விட்டு வந்துள்ளார். இந்த நிகழ்வை அறிந்த ஊர் மக்கள் யாரும் இதுபற்றி கண்டு கொள்ளவில்லை.

5.6.2013-ம் தேதி ஒரு காதணி விழா நிகழ்ச்சியில் நிலமாலை மது அருந்திய நிலையில் நாகம்மாளை சத்தம் போட்டிருக்கிறான். பிறகு மீண்டும் நாகம்மாளின் வீட்டில் வந்து சத்தம் போட்டிருக்கிறான். “பறச்சி அழிச்சிடுவேன் செருப்பு போடக்கூடாதுன்னா சரி என்று கேட்டு நடக்கனும்” என்று சத்தம் போட்டிருக்கிறான். அதன் பிறகுதான் நாகம்மாள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

காவல் துறையில் சார்பு ஆய்வாளர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த பிரச்சனையை மறைக்க முயன்றுள்ளார் சார்பு ஆய்வாளர். உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் நிலமாலையை அன்றே கைது செய்திருக்க முடியும். குற்றவாளியை தப்பிக்க வைத்த குற்றத்தை காவல்துறை செய்தது. செய்தி ஊடகங்களில் வந்த பின்புதான் வழக்கை பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தது போலிஸ்.

உசிலை வட்டாரத்தில் பல கிராமங்களில் சாதி ஆதிக்கம், தீண்டாமை, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை பதவி ஏற்கவிடாமல் தடுப்பது போன்ற சாதி ஆதிக்கம் இருந்தாலும் இங்கு கூடுதலாக இருப்பதை பார்க்க முடிகிறது.

பல ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு போட்டு நடந்து போவது, ஊருக்குள் சைக்கிள் ஓட்டிச்செல்வது போன்றவை வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் இங்கு இன்றுவரை ஊருக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு போட்டு நடப்பதில்லை சைக்கிள், மோட்டார்சைக்கிள் ஓட்டிச்செல்ல விடுவதில்லை, வேட்டியை மடித்துக்கட்டி நடந்து போக முடிவதில்லை

எல்லா ஊர்களிலும் தீண்டாமை கடைப்பிடிக்கும் இடமாக கோவில்தான் உள்ளது என்றாலும் இங்கு சற்று கூடுதலாக உள்ளது. திருவிழா காலங்களில் மட்டும் பல ஊர்களில் கோவிலில் சாமி இருப்பிடம் வரை தாழ்த்தப்பட்டவர்களை செல்ல அனுமதிப்பார்கள். இங்கு கோவில் படியில் மட்டும் ஏறி நின்று மாவிளக்கு, தீச்சட்டி எடுப்பது, திருநீர் வாங்குதற்கு செல்லாம், திருவிழாவில் ஒரே நேரத்தில் எல்லோரும் பொங்கல் வைப்பார்கள், பூசாரி எல்லா பொங்கல் பானைக்கும் திருநீர் போடுவார், பிறகு எல்லா குடத்திலும் பூசைக்கு பொங்கல் எடுப்பார்கள், அப்படி எடுப்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பொங்கல் எடுப்பதில்லை.

காலப் போக்கில் தானாக ஏற்பட்ட மாற்றம் டீ டம்ளர், குடி தண்ணீர் போன்றவைகளுக்கு ஒரு முறை பயன்படுத்தகூடிய கப் வந்ததால் எல்லோருக்கும் ஒரே டம்ளர் என்று பல ஊர்களில் வந்து விட்டது. இங்கும் மாறி உள்ளது. எந்த ஊரிலும் கிணறுகளில் குடிநீர் எடுப்பது இந்தப் பக்கம் ஒழிந்து விட்டது. எல்லா ஊர்களிலும் ஆழ்துளை கிணறு மூலம் மோட்டார் வைத்து வாட்டர் டேங்குகளில் நீர் ஏற்றி குழாய்வழியாக கொடுப்பதால் எல்லா சாதிக்கும் எல்லா ஊர்களிலும் ஒரே குடிநீர் தொட்டி ஆக மாறிவிட்டது. இங்கும் மாறி உள்ளது.

இந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைத்தனமான வேலையை மறுத்து ஒழித்தது மேளம் அடிப்பதை மட்டும்தான். எங்களுக்கு அடிப்பதற்கு ஆள் இல்லை என்று அடிக்க மறுத்து ஜெயித்து இருக்கிறார்கள். அதை தவிர்த்து பிணம் எரிப்பது, பிணம் புதைக்க குழி தோண்டுவது, உறவினர்களுக்கு சாவு செய்தி சொல்ல செல்வது, போன்ற தோட்டி வேலைகளை அச்சுபிசகாமல் செய்து வருகிறார்கள். இது அடிமைத்தனமான வேலை வேண்டாம் என்று ஏன் நீங்கள் மறுக்கவில்லை என்று கேட்டால் ஏதோ நாங்கள் இருக்கிற வரைக்கும் எங்களோட செய்துவிட்டு போகிறோம் ஊரை பகைத்து கொண்டு வாழ முடிக்குமா? என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பகுதியில் எல்லா ஊரிலும் இருப்பதை போல் இங்கும் தனிச்சுடுகாடுதான் உள்ளது. ஆனால் இரு சுடுகாட்டுக்குமே பிணம் எரிக்க மேல்கூரை இல்லை. அதில் இருவரும் சமம்தான்.

vadugapatti-2இவ்வளவு அடக்கு முறை இருந்தும் சாதிக்கலவரம் இங்கு நடக்கவில்லை. காரணம், அடங்க மறுத்தால் தானே கலவரம் நடக்கும், சரி ஏன் இந்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பது இல்லை. இப்பகுதியில் இதுபோன்ற இழி நிலை பல ஆண்டுகளுக்கு முன்பே பல ஊரில் ஒழிந்து போன பின்பும் இங்கு மட்டும் ஏன் நீடிக்கிறது. தேவர் சமூகத்தைச் சேர்ந்த (பிரமலை கள்ளர்) சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த (பறையர்) சுமார் 120 குடும்பங்கள் உள்ளது அருந்ததியர் 3 குடும்பம் மட்டும்தான் உள்ளது. வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை.

இங்கு போக்குவரத்து பாதை மற்ற ஊர்களில் இருந்து வேறுபட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியூர்களுக்கு செல்ல மெயின்ரோட்டை அடைய பொதுவாக மற்ற ஊர்களில் ஊரின் நடு வழியாகத்தான் போக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் அடிக்கடி செருப்பு போட்டு செல்வது, மோட்டார் சைக்கிள்களில் செல்வது போன்றவைகளை தடுப்பது சாத்தியமில்லாத அணைமீறிய காரியமாக மாறிவிடுவதால் அந்த ஊர் கள்ளர்களும் முக்கி முனங்கி கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கு கள்ளர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் வசிக்கும் பகுதியின் நடு வீதி வழியாக திருமங்கலம் மெயின்ரோட்டுக்கு வரவேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி திருமங்கலம் மெயின்ரோட்டின் மேல்புறத்தில் உள்ளது. ஊருக்குள் வருவதற்கு இன்னொரு வழிச்சாலை உள்ளது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுற்றுப் பாதை என்பதால் அதை பயன்படுத்துவதில்லை.

இந்த இயற்கை சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் செல்ல வேண்டிய அவசியம் மிக குறைவாக உள்ளதால் யாராவது எப்போதாவது ஊருக்குள் செல்லுகிறார்கள் ரேசன் பொருள் வாங்க மாதத்தில் ஒரு நாள், ஏதாவது கோவில் திருவிழா நடைபெற்றால் வருடத்தில் ஒருநாள், பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளைச் சேர்க்க இதுபோன்று வருடத்தில் ஒன்று இரண்டு நாள்தான் சிலர் அந்த வழியாக போக வேண்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொடிய மிருகங்களுக்கு பயந்து ஒதுங்கி போகும் மனிதர்களைப் போல் ஊர் வழியில் செல்லாமல் காட்டுப்பாதையில் சென்று விடுவார்கள். இதனால்தான் அப்படி தவிர்க்க முடியாத சில பெரியவர்கள் அடங்கி பழக்கப்பட்வர்கள் தேவையில்லாத சண்டை என்று கள்ளர்கள் விருப்பத்திற்கு அடங்கி செல்கிறார்கள். அவசரத்தில் ஒரு சிலர் கவனமில்லாமல் செருப்பு போட்டு போனாலோ, சைக்கிள் ஓட்டிப்போனாலோ, கள்ளர் சாதி ஆண், பெண் யார் பார்த்தாலும் சத்தம் போட்டு தடுப்பார்கள் “எங்களுக்கு பயப்படாட்டியும் தெய்வத்துக்குப் பயந்து போங்கடா” என்று எச்சரிப்பார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும் மீறுவதில்லை.

அந்த ஊரைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள் நடந்த சம்பவத்தை குற்றமாக கருதாமல் நடக்காததைப் போல் பேசுகிறார்கள், பிரச்சனை முடிந்து விட்டது. ஏன் ஊடகத்தில் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள் என்று தான் பார்க்கிறார்கள், செருப்பு போட விடாமல் செய்த குற்றத்தை இது வரை வெறும் அதட்டியே வைத்திருந்தோம் இந்த நிலமாலையின் செயலால் உலகத்துக்கு தெரிந்து விட்டது காரியம் கைமீறி போய்விடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள்.

11-வயது சிறுவனை இப்படி வன்முறை செய்ததற்கு கவலைப்படாத ஊர் மக்கள் நிலமாலையின் அப்பா பூசாரி பூசை செய்ய விடாமல் கைதாகிவிட்டாரே என்று கவலைப்டுகிறார்கள்.

ஊரில் முறையான சாக்கடை வசதியில்லை. சுடுகாட்டிற்கு மயான கூரையில்லை, திருமண மண்டபம் இல்லை, ரேசன்கடை அரசு கட்டிடம் இல்லை அதில் போடும் தரமில்லாத அரிசியை குறைவாக போடுவதை தடுக்க வேண்டும் என்று சிந்திக்க முடியாத மனித பிறவிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் எவன் செருப்பு போட்டு நடக்கிறான், எவன் வேட்டியை மடித்து கட்டி நடக்கிறான், எவன் மோட்டார் சைக்கிளில் ஏறி ஓட்டி செல்கிறான் என்பதை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் ஊரில் எல்லோரும் விழிப்பாக உள்ளார்கள்.

விவசாயம் சுமார் 80 சதவீதம் அழிந்து விட்டது. வாழ்வுக்காக நகரத்திற்கு விரட்டப் படுகிறார்கள், அதுபற்றி கவலைப்படுவதாக இல்லை.

சிறுவன் அருண்குமார் இந்த அவமானம் தாங்காமல் இந்த பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளிக்கு செல்வதை வருத்தத்தோடு பள்ளி ஆசிரியர்கள் “நல்லா படிக்கிற உனக்கு இப்படி ஒரு நிலைமையா?” என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள் அப்படி ஒரு கவலை அந்த ஊரைச்சேர்ந்தவர்களுக்கு இல்லை.

அருண்குமார், தாயார் நாகம்மாளின் துணிச்சல் செயலால் ‘தாயா பிள்ளையா வாழ்கிறோம்’ என்ற தேவர் சாதி டையலாக் அம்பலமாகி ஊர் உலகமெல்லாம் நாற்றமடிக்கிறது.

செய்தி :
விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டம்

எதிர்கொள்வோம் !

19

இவ்வளவு நாளாகப் புலிகளையும் பிரபாகரனையும் பாசிஸ்டு என்று கூறிவிட்டு, மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, தாங்களும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்.

இப்படிச் சொல்லுவது கொஞ்சமும் உண்மைக் கலப்பில்லாத முழுப்பொய். பாசிஸ்டுகளின் அதிகாரபூர்வ ஊதுகுழல்களான கோயபல்சு – கோயரிங் போன்றவர்கள்கூட இப்படிப் புளுகுவதற்குத் துணிய மாட்டார்கள். ஆனால், தங்களுக்கென்று எந்தவொரு சொந்த அரசியல் திட்டமும் நடைமுறையும் இல்லாமல் ஈழச் சிக்கலை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் சில அரசியல் காளான்கள் தொடர்ந்து இப்படிப் புளுகி வருகிறார்கள்.

சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டம்
“ஈழத்திலே வெறியாட்டம் ! இங்கே எதற்கு குடியரசுக் கொண்டாட்டம் !!” என்ற முழக்கத்தின் கீழ் ஈழத்தின் மீது நடத்தப்படும் போரில் இந்திய அரசு உடந்தையாக இருப்பதை அம்பலப்படுத்தி ஜனவரி 26, 2009 அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்).

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு என்ற நிலையிலிருந்து ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் ஒரு போதும் விலகியிருந்ததாகவோ, ஒதுங்கியிருந்ததாகவோ, அல்லது மற்ற அமைப்புகளை விடப் பின்தங்கியிருந்ததாகவோ இவர்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா? அதற்கு மாறாக, ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்போதும் தம் தலையில் தாங்கிச் சுமப்பவர்களாகக் காட்டிக் கொள்ளும் நெடுமா, வைகோ, பெம, ராமா, திருமா, தியாகு, சுப.வீ., வீரமணி போன்றவர்களெல்லாம் தமது பிழைப்புவாத அரசியல் நலனுக்காகவும் தம் தோலைக் காத்துக் கொள்வற்கும் ஈழம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கோ, எழுதுவதற்கோ கூட அஞ்சிய தருணங்களையும் நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும்.

அவர்களோடு சேர்ந்து இப்போது முளைத்துள்ள புலிகளின் புதிய துதிபாடிகளும் ஈழத்தின் எதிரிகளை வீழ்த்துவதை விட, ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., மற்றும் இவற்றின் தோழமை அமைப்புகளை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவை என்று புளுகி, இவற்றைத் தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் பணியை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் பாசிஸ்டுகள் என்று மதிப்பிடுவதாலும் ஈழச் சிக்கலுக்குப் “பொதுவாக்கெடுப்பு” என்று ஒருபுறம் முழுங்கிக் கொண்டே, “தனி ஈழம்தான் ஒரே தீர்வு” என்பதை இப்பொழுதே முடிந்த முடிவாகக் கூறாதவர்களை, ஈழப் போராட்ட ஆதரவுக்கு எதிர்நிலைக்குத் தள்ளுகின்றனர்.

பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்று இப்போதும்தான் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகள் கூறி வருகின்றன; எதற்காகவும் யாருக்காகவும் அவ்வாறு கூறுவதை இந்த அமைப்புகள் நிறுத்திவிடவில்லை; பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. பிரபாகரன் மற்றும் அவர் தலைமையிலான விடுதலைப் புலிகளின் முந்தைய பாசிச அரசியல், இராணுவத் தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்ளவேண்டும். மீண்டும் அவர்களின் வழிமுறைகளை யாரும் பின்பற்றக் கூடாது.

ஆனால், கடந்த முப்பதாண்டுகால ஈழப் போராட்டத்தில் பிரபாகரனும் புலிகளும் தவறே செய்யவில்லை; ஈழப்போரின் துயரமான முடிவுகளுக்குப் பன்னாட்டுச் சதியும் இலங்கை, இந்திய அரசுகள் நடத்திய கொடூரமான தாக்குதல் மட்டும்தான் காரணம் என்று கூறி, பிரபாகரன் மற்றும் புலிகளின் பாசிச அரசியல், இராணுவ நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டு, பிரபாகரன் மற்றும் புலிகள் மீது கட்டியெழுப்பப்பட்ட பிரமை, தனிநபர் வழிபாடு, கற்பிதங்கள் எல்லாமும் தொடரும் பொழுது இந்த விடயம் அவசியமாகிறது. இந்த அளவுக்குத்தான் ஈழச்சிக்கலின் இன்றைய நிலையில் பிரபாகரன் மற்றும் புலிகளை பாசிஸ்டுகள் என்ற கருத்து-மதிப்பீடு முக்கியத்துவமுடையது.

“மாணவர் போராட்டம் அளித்த நிர்ப்பந்தம்” என்பது கடைந்தெடுத்த பொய்யும் மாணவர் போராட்டம் பற்றிய ஞான சூனியத்தின் பிதற்றலும் தான். கடந்த பல ஆண்டுகளில் ஈழ ஆதரவு மாணவர் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதில் ம.க.இ.க., புதிய ஜனநாயகம் மற்றும் இதன் தோழமை அமைப்புகளின் பங்கு, குறிப்பாக, புட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

புலிகளிடமிருந்து ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்ட இலங்கை பாசிச இராணுவம் 2008 நவம்பரில் வன்னியின் மீது தாக்குதல் தொடுத்து, புலிகளின் தலைமையகமாக இருந்த கிளிநொச்சியைச் சுற்றிவளைத்தது.

கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், தமிழக மக்கள் போராட்டங்கள் இந்திய அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக நடத்தப்பட வேண்டும் என்று ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் முன்வைத்தன. அந்த அடிப்படையில் அவ்வமைப்பினர், 2008 நவம்பரில் “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணைநிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?” – என விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பி, சென்னை அண்ணா சாலையை மறித்து, நந்தனம் இராணுவ எஸ்டேட் அலுவலகத்தைத் திடீரென்று முற்றுகையிட்டுப் போராடினர். திருச்சி இராணுவ வளாகத்தை (கண்டோன்மெண்ட்) ம.க.இ.க., பு.மா.இ.மு. முதலான அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தின.

“சென்னையில் மட்டுமின்றி, அதே முழக்கங்களை முன்வைத்து இந்தப் புரட்சிகர அமைப்புகள் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர் அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

பு.மா.இ.மு. முற்றுகை
ராஜபக்சே கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்திவரும் இந்திய அரசை அம்பலப்படுத்தி, 12.02.2009 அன்று திருச்சியில் அனைத்துப் பள்ளி – கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி, மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள 117-வது பிரதேச இராணுவப் படைத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

அந்த நாளில் போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பல பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர் பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின. 19.10.08 அன்று கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தினர் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 20.10.08 அன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.”

“13.11.08 அன்று அதிராம்பட்டினத்தில், ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராக வி.வி.மு; பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 19.11.08 அன்று கிருஷ்ணகிரியில் பு.ஜ.தொ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் பகுதிவாழ் மக்களின் ஊக்கமான பங்கேற்போடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் – நெல்லிக்குப்பத்தில், வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழர் படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைச் சாடிப் பொதுக்கூட்டம் நடத்தின. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 22.11.08 அன்று கோட்டக்குப்பத்தில் இதே முழக்கத்தின் கீழ் பொதுக்கூட்டத்தை நடத்தின. இப்பொதுக்கூட்டங்களும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் நெஞ்சில் ஈழ ஆதரவு அரசியலைப் பதியவைத்தன.”

“2008 – ஆம் ஆண்டு இறுதியில் ஈழத்தமிழர்கள் மீதான அழித்தொழிப்புப் போர் உச்சமடைந்து வந்த சூழலில் பாசிச சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இப்படுகொலைகளுக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கெதிராகவும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடர் பிரச்சார இயக்கத்தை மேலும் உறுதியாக நடத்தியது.

“திருச்சியில், 08.12.08 அன்று மாலை பாலக்கரை பிரபாத் திரையரங்கம் எதிரில் அனைத்துக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பு.மா.இ.மு. தலைமையில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, இன்ஃபன்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ம.க.இ.க., பு.மா.இ.மு., தோழர்களோடு மாணவர் பிரதிநிதிகளும் எழுச்சியோடு உரையாற்றினர்” (ஆதாரம்: புதிய ஜனநாயகம், 2008).

தஞ்சை பேரணி
ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து, 2009-ம் ஆண்டு மே தினத்தன்று, “ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுப்போம்!” என்ற அரசியல் முழக்கத்தை முன் வைத்து தஞ்சையில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி. (கோப்புப் படம்)

2009 ஜனவரி-பிப்ரவரியில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு தள்ளப்பட்ட நிலையில் “எப்படியாவது போரை நிறுத்துங்கள், இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று துயரக்குரல் எழுப்பினர், ஈழத் தமிழர். முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தையும் மாணவர்கள், வழக்குரைஞர்கள் போராட்டங்களையும் போர்க்குணமிக்கவையாக மாற்றியதில் பு.மா.இ.மு., ம.க.இ.க. தோழர்களின் பாத்திரம் முதன்மையானதாக இருந்தது.

பு.மா.இ.மு. தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் சாலை மறியலில் இறங்கி, போலீசு கைது முயற்சியை முறியடித்தனர். முத்துக்குமார் உடலடக்கத்தை அரசியலற்றதாக நடத்தும்படியான போலீசின் கோரிக்கையை தமிழினவாதக் குழுக்கள் ஏற்ற நிலையில், ம.க.இ.க. பு.மா.இ.மு., தோழர்கள் தலையிட்டு அதை அரசியல் ரீதியிலானதாக்கினர். பு.மா.இ.மு., தோழர்கள் சிங்கள இராணுவ வெறியின் கொடூரங்களை சித்தரிக்கும் காட்சிகளோடு முத்துக்குமார் இறுதி ஊர்வலம் அரசியல் எழுச்சியோடு நடந்தது.

அதன்பிறகும், ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையும் அழித்தொழிக்கும் பயங்கரவாதப் போரை சிங்கள இனவெறி அரசோடு கூட்டுச் சேர்ந்து நடத்திய இந்தியாவின் சதிச் செயலை எதிர்க்காமல், ஈழப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமே கெஞ்சிக் கேட்கும் அடையாளப் போராட்டங்களை மட்டும் நடத்திவந்தன, தமிழினவாதக் குழுக்கள். ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., முதலிய புரட்சிகர அமைப்புகள் மட்டுமே ஈழத் தமிழர் ஆதரவு போர் நிறுத்தக் கோரிக்கையோடு, இந்தியாவின் சதிச் செயலை எதிர்த்த தொடர் பிரச்சார இயக்கத்தைத் தமிழகமெங்கும் நடத்தி வந்தன. ஈழப் போர் நிறுத்தத்திற்காகப் பல பத்தாயிரம் துண்டறிக்கைகளையும் பிரசுரங்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டு, பிரச்சாரக் குழுக்களைக் கொண்டு ரயில்களிலும் பேருந்துகளிலும் பிரச்சார இயக்கங்களைத் தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து நடத்தின. ஆனால், தமிழினக் குழுக்களோ, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் “ஜெயா- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் போர்நிறுத்தம் ஏற்படும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற மயக்கத்தில் மாணவர்களையும் மக்களையும் மூழ்கடித்தனர்.

2009 தமிழினப் படுகொலைக்குப் பின் அடுத்த நான்காண்டுகளில் தமிழக மாணவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரிய அளவு எழுச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. பெரும்பாலும் ஈழ ஆதரவு இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் பங்கேற்ற போராட்டங்கள் மட்டுமே நடந்தன. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டது கண்டு பிரமை தட்டிப் போயிருந்த தமிழினக் குழுக்கள், “பிரபாகரன் கொல்லப் படவில்லை; பிரபாகரனோடு விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்; சிங்கள வெறியர்களைப் பழி தீர்ப்பார்கள்” என்று புளுகி வந்தார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் மட்டுமே ஈழப் போரின் இறுதி நாட்களின் உண்மைகளைச் சொன்னதோடு, போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிப்பது, ஈழ விடுதலைப் போராட்டம் தொடருவது ஆகியவற்றுக்காக மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் தீர்வை முன்வைத்து செயல்படுகின்றன.

உண்மை இவ்வாறு இருக்கையில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகள் நடந்து கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்குப் பிறகு வந்த “மாணவர் போராட்ட நிர்ப்பந்தம் காரணமாகத்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக்கொள்கிறீர்கள். அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிக்கிறீர்கள்” என நம்மைப் பார்த்துக் கூறுவது பச்சைப் பொய் தவிர வேறென்ன? முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு பிரபாகரன், புலிகள் மட்டுமல்ல; தமக்குரிய பங்கை மூடி மறைப்பதற்காகவும், அதைச் சொல்லும் நமது வாயை மூடுவதற்காகவும் தமிழினவாதக் குழுக்கள் இவ்வாறு அவதூறு செய்கின்றன. ஆனால், அவர்கள் கனவு பலிக்காது.

மேலும், “ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்” என்பது எமது பு.மா.இ.மு. தலைமையிலான “ஈழத் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி”யையும் உள்ளடக்கியதுதான். விமான நிலைய முற்றுகை, ரயில்வே தலைமை அலுவலக முற்றுகை உட்பட சென்னை, கோவை, திருச்சி எனத் தமிழகமெங்கும் அவ்வமைப்பு நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று வேறு வழியில்லாமல் காட்டிக் கொள்ளும் அல்லது ஆதாயம் அடைவதற்காக இப்படி நடிப்பு என்று சொல்வதன் மூலம் அவற்றில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைத்தான் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.

– ஆசிரியர் குழு.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

உங்கள் ஜன்னலுக்கு உள்ளே பாருங்கள் மாலன் !

10

மிழ்நாட்டில் சமூக விழிப்புணர்வைக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற இலட்சியத்துடன் நடத்தப்படும் வார இதழ் புதிய தலைமுறை. அதன் ஆசிரியர் மாலன் (நாராயணன்) ஜூன் 27, 2013 தேதியிட்ட இதழில் “நெருக்கடியை நோக்கி…” என்ற தலைப்பில் “இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி விட்டு, அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார், “இந்தியாவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமோ, அதுதான் இதற்கும் காரணம். ஆம் ஊழல்!”.

புதிய தலைமுறை
‘சமூக விழிப்புணர்வுக்கு போராடும்’ புதிய தலைமுறை பத்திரிகை

அதே இதழின் தலையங்கத்தில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து விடக் கூடாது என்று சில லாபிகள் மிரட்டுவதாக சொன்னதை கடுமையாக விமர்சித்து, முடிக்கும் போது “லாபிகள்தான் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றன, அரசை வழி நடத்துகின்றன என்பது உண்மையானால், தன்னை மிரட்டுவது யார் அல்லது எந்த லாபி என்ற விவரங்களை பகிரங்கமாக அமைச்சர் அறிவிக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த உண்மையை அறிந்து கொள்ள உரிமை உண்டு” என்று சாட்டையை விளாசுகிறார்.

வெளி நாடுகளில் வேலை செய்யப் போய் ஏமாற்றப்படுபவர்கள், மாற்று எரிசக்தி, விவசாய பிரச்சனைகள் போன்று பல முக்கியமான விஷயங்களைக் குறித்து ‘சமூகத்தில் விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் திரு மாலனின் கவனத்துக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கொண்டு வர விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கொள்ளை பற்றிய விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை வெளியிடும்படி புதிய தலைமுறை ஆசிரியரை கேட்டுக் கொள்கிறோம். அது குறித்து ஆய்வு செய்வதற்காக மாலனோ, அவரது உதவி ஆசிரியர்களோ ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஆர்.பி.சத்தியநாராயணனிடமிருந்து ஆரம்பித்தாலே போதும்.

முதலில், பேராசிரியர் ஆர் பி சத்தியநாராயணன் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தலைவர் ஆக பதவி வகிக்கிறார் என்றும் அவரது தந்தை டாக்டர் டி ஆர் பச்சமுத்து பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும், சகோதரர் திரு ரவி பச்சமுத்து சேர்மனாகவும், மச்சான் டாக்டர் ஆர் ஷிவகுமார் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பதன் மூலம் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் விவகாரங்கள் அனைத்தையும் குடும்பமாக கட்டுப்படுத்துகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் பின் நோக்கி போனால், எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தை நடத்தும் வள்ளியம்மை அறக்கட்டளையிலும் பச்சமுத்து, அவரது மகன்கள், மருமகன், மற்றும் மகள் மட்டுமே அறங்காவலர்களாக இருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும்.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு வருமானத்தை கையாளுகிறது என்று தகவல்களை தேடினால், அனைத்து கல்லூரிகளையும் சேர்த்து சுமார் 30,000 மாணவர்கள் எஸ்ஆர்எம் குழும கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதையும் அவர்களில் 80%க்கும் மேல் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து ஒடிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து படிப்பவர்கள் என்பதையும் 2012-ம் ஆண்டில் அவர்கள் மூலம் வந்த கட்டண வருமானம் 23% வளர்ச்சியடைந்து ரூ 622 கோடியை எட்டியது என்பதையும் செலவுகள் போக நிகர வருமானமாக ரூ 255 கோடி மிஞ்சியது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

பச்சமுத்து, ரவி
சிபிஐ விசாரணைக்கு வரும் பச்சமுத்து, ரவி பச்சமுத்து

சென்ற வாரம், புதிய தலைமுறை பத்திரிகை அலுவலகம் உட்பட எஸ்ஆர்எம் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களிலும், பச்ச முத்து குடும்பத்தினரின் வீடுகளிலும் வருமான வரித் துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஏன் என்றும் விசாரித்துப் பார்க்கலாம்.

ஒரு வடமாநில நபரின் வீட்டில் நடந்த வருமானவரித் துறை தேடலின் போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 30 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது குறித்துக் கேட்க, அதை எஸ்ஆர்எம் கல்லூரியில் தன் மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்க நன்கொடையாக கொடுத்தாக சொல்லியிருக்கிறார். அதற்கு விளக்கம் சொல்வதற்காகத்தான் பச்சமுத்து குழுமத்துக்கும் புதிய தலைமுறை அலுவலகத்துக்கும் வருமான வரித் துறை தொந்தரவு கொடுக்க வேண்டியது ஏற்பட்டது என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். வருமான வரித் துறையின் திருப்திக்காக ரூ 6.75 கோடியை வேந்தன் மூவீஸ் அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்ல பச்சமுத்து அனுமதித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் விசாரிக்கலாம்.

லாப நோக்கில்லாத அறக்கட்டளையின் நிதியை, கல்லூரிகளுக்கு வேலை செய்ததாக கூடுதல் செலவு கணக்கு காட்டி குழும நிறுவனங்களுக்கு மடை மாற்றியதாக கூறப்படுவது உண்மையா என்றும் கண்டு பிடிக்கலாம். 2012-ம் ஆண்டு எஸ்ஆர்எம் எஞ்சினியரிங் நிறுவனத்தில் விற்பனை வருவாய் ரூ 200 கோடியாகவும், எஸ்ஆர் எம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ 50 கோடியாகவும், எஸ்ஆர்எம் போக்குவரத்து நிறுவனத்தின் வருமானம் ரூ 75 கோடியாகவும், எஸ்ஆர்எம் ஹோட்டல்களின் வருமானம் ரூ 30 கோடியாகவும் உள்ளதாக அதிகாரபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

2000-ம் ஆண்டில் ராமாபுரம் வளாகத்தை நிகர்நிலை பல்கலைக் கழகமாக பதிவு செய்து கொண்ட எஸ்ஆர்எம், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் வெளி கல்லூரிகளை இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருந்தாலும், வெளி வளாக கல்லூரிகள் என்ற பெயரில் காட்டாங்கொளத்தூர், திருச்சி, வடபழனி, டெல்லி மோதி நகர் பகுதிகளில் கல்லூரிகளை நடத்துவது தெரியவரும்.

இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிலான பணம் ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் 8,000 மாணவர்களிடம் நன்கொடையாக வசூலிக்கப்படும் முறையையும் கண்டு பிடிக்கலாம்.

மாலன்
புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்

புதிய தலைமுறை பத்திரிகை, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றில் பொறுப்பு வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் பகுதி பொறுப்பாளர்களுக்கும் ஆளுக்கு இத்தனை என்று கல்லூரி சீட்டுகள் பிரித்து கொடுக்கப்படுகின்றன; அவர்கள் ஏஜெண்டுகள் மூலம் வட மாநில மாணவர்களை வலை வீசி பிடிக்கிறார்கள் என்று பேசப்படுவதன் நம்பகத் தன்மையை குறித்து விசாரிக்கலாம். ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்ப படிவத்தை விற்கும் போதே பொறியியல் சேர்க்கைக்கு ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையும் மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்க ரூ 30 லட்சம் முதல் ரூ 60 லட்சம் வரை வசூலிப்பதாக சொல்லப்படுவது தொடர்பான ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணம், ரொக்கமாகவும், போலி அறக்கட்டளைகள் மூலமாகவும் கையாளப்படுகிறதா என்று ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம்.

கூடவே, எஸ்ஆர்எம் பச்சமுத்துவைப் போலவே தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அரசியல்வாதிகளாக இருந்து கல்வித்தந்தைகளாக உருவெடுத்த விஐடி விஸ்வநாதன், ஏ சி சண்முகம், ஜேபிஆர் போன்றவர்கள் இது போன்ற குடும்ப சாம்ராஜ்யங்களை நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் முன் அம்பலப்படுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நற்பணியை செய்யலாம். திரு மாலன் அதைச் செய்வாரா?

மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் ஒத்துக் கொள்வதோடு கண்டனமும் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் இத்தனை நாட்கள் ஆய்வு செய்து பார்க்கவில்லை?

கல்லூரிகளுக்கு நன்கொடை கொடுப்பதெல்லாம் ஊழலில் வராது என்று அவர் முடிவு செய்திருக்கலாம். உண்மைதான் கொள்ளையடிப்பதையும், வழிப்பறி செய்வதையும் ஊழல் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் அந்தக் கொள்ளைப் பணத்தில் மாத ஊதியம் வாங்கிக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது பிரச்சினையில்லையா? மாலன் தன் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது முக்கியமில்லை, ஜன்னலுக்கு உள்ளே என்ன என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க

சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

5

புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கு, மரபு சாராத, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களின் மூலம், தூய்மையான மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தூய்மையான மின்சாரம் என்ற பெயரில்தான் அமெரிக்கா தனது காலாவதியான அணு உலைகளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறது.

அணு மின்சக்தியில் மட்டுமின்றி, சூரிய ஒளி மின்திட்டங்களிலும் சுயசார்பு நிலையை எட்டவிடாமல், காலாவதியான தங்களது தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா வாங்க வேண்டும் என அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. உள்நாட்டு சூரிய மின் கருவித் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், இது காட் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கூறி, இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்க அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது.

சநாந்த் மின்சக்தி நிலையம்
குஜராத்தில் சர்தார் சரோவர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சநாந்த் கால்வாயின் மேல்பகுதியில் அமெரிக்க நிதியுதவியோடு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையம்.

2022-ஆம் ஆண்டிற்குள் 22 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு. கடந்த 6 மாதங்களில், ஐந்து மாநிலங்களில் மட்டும் 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்குப் புதிய சூரிய ஒளி மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் மூன்றே ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செயப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படுகின்ற இந்த சூரிய மின்சக்தித் திட்டங்கள் சுயசார்பானவையா என்றால், இல்லை. ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களில் 60 சதவீத நிலையங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை நம்பியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்று கூறப்படும் குஜராத் முழுவதும் அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் போட்டோ வோல்டாயிக் சோலார் செல்களில் இரண்டு வகை; உண்டு. ஒன்று, கிரிஸ்டலைன் செல்கள்; இரண்டாவது வகை, தின்-பிலிம் செல்கள். கிரிஸ்டலைன் செல்கள் எனப்படுவதே நவீன தொழில் நுட்பம். இதில் உலகிலேயே சீனா முன்னிலை வகிக்கிறது. தின்-பிலிம் என்பது உற்பத்தி திறன் குறைந்த தொழில்நுட்பம்; அதன் ஆயுளும் குறைவு. அமெரிக்க கம்பெனிகள் இதையே உற்பத்தி செய்கின்றன.

சூரிய மின்சக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை 2011-இல் அறிவித்த மத்திய அரசு, கிரிஸ்டலைன் செல்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடு சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. தின்-பிலிம் செல்கள் என்ற அமெரிக்க தொழில்நுட்பத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அமெரிக்க இறக்குமதிக்கு வழிசெய்யும் வகையில் அது பற்றி வேண்டுமென்றே குறிப்பிடாமல் விடப்பட்டிருந்தது.

இத்தகைய சாதகமான நிலைமையிலும்கூட, சீனத் தயாரிப்புகளையும், இந்திய சூரிய ஒளி மின்கருவிகளையும் நேருக்கு நேர் போட்டியில் சந்திக்கும் ஆற்றல் அமெரிக்க முதலாளிகளுக்கு இல்லை. இதற்காக அமெரிக்காவின் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் வங்கி மற்றும் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளையும் அமெரிக்க அரசு களமிறக்கியது.

அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு 3% ஆண்டு வட்டியில் முழுத்தொகையும் கடனாகத் தரப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலமும் 18 ஆண்டுகள் என்று கூறி மின் கருவிகள் வாங்குவோர் அனைவரையும் அமெரிக்க நிறுவனங்கள் கவர்ந்திழுத்தன. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை வாங்குவற்கான கடனுக்கு இந்திய வங்கிகள் விதிக்கும் வட்டியோ 14% ஆக இருந்தது. தவணைக்காலமும் குறைவு.

மேற்படி அமெரிக்க வங்கிகளால் மட்டும் எப்படி இத்தனை குறைந்த வட்டிக்குக் கடன் தர இயலுகிறது என்று துருவி ஆராய்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தில்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், அமெரிக்காவின் கீழ்த்தரமான மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது.

13-solar-3இவ்விரு வங்கிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கவில்லை, மாறாக, ஐ.நா.வின் ‘பாஸ்ட்-பார்வர்டு’ நிதியை இதற்காக இந்த வங்கிகள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா.வின் உலக தட்பவெட்ப மாற்றங்கள் குறித்த உச்சி மாநாடு, 2011-12 ஆண்டுகளில் ஏழை நாடுகளில் மாற்று எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்காகச் செலவிட 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது.

இந்த நிதியையே தங்களது வங்கியின் கடன்கள் என்ற பெயரில் வழங்கியது மட்டுமன்றி, கடன் வேண்டுமென்றால், குறிப்பிட்ட சில அமெரிக்க நிறுவனங்களின் சோலார் செல்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி, காலாவதியான அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இந்திய வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியதுடன், ஏழை நாடுகளின் மாற்று எரிசக்தி வளர்ச்சிக்காக என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியை அமெரிக்க கம்பெனிகள் திருடித் தின்றிருக்கின்றன.

தற்போது இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்து விட்டன. சூரிய சக்தி மின்கருவிகளைத் தயாரிக்கும் பெல் நிறுவனம், டாடா உள்ளிட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களால் அமெரிக்காவின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. பலர் முற்றிலுமாகவே தமது தொழிலை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்ட அறிவிப்பை 2012-இல் வெளியிட்ட போது, தின்-பிலிம் செல் தொழில்நுட்பத்துக்கும் சேர்த்துக் கட்டுப்பாட்டை அறிவித்தது இந்திய அரசு.

இந்தியாவைப் போன்றே கனடா, பிரான்ஸ், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் சோலார் செல் இறக்குமதிக்குப் பல்வேறு தடைகளைப் போட்டுள்ளன. அவ்வளவு ஏன், சீனா தனது நாட்டு சோலார் உற்பத்தியாளர்களுக்கு அதிகமாக மானியம் வழங்குகிறது என்று கூறி சீன இறக்குமதிகள் மீது கடுமையாக வரி விதித்திருக்கிறது, அமெரிக்கா.

இருப்பினும், இந்திய அரசு தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்திருப்பதாகவும், இச்செயல் காட் ஒப்பந்த விதிகளை மீறுகிறது என்றும் கூறி உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரானதொரு வழக்கை தொடுத்திருக்கிறது, அமெரிக்கா.

சூரிய மின்சக்தி என்பது எதிர்காலத்தின் மிக முக்கியமான ஆற்றல் மூலம். இத்தொழில் நுட்பத்தில் மேலாண்மை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் இது தொடர்பான ஆராய்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகளை ஏற்கெனவே செலவிட்டிருக்கின்றன. இருப்பினும், இத்துறையில் சமீபத்தில் நுழைந்த சீனா, கிரிஸ்டலைன் செல்களின் உலகச் சந்தையில் மேலாண்மை பெற்று விட்டது.

சீனாவுடன் இந்தத் துறையில் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்கா, ஏகாதிபத்தியத்துக்கே உரிய முறையில் கையை முறுக்கிக் காரியம் சாதிக்க முனைந்திருக்கிறது. அதுதான் உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு. இந்திய அரசு இதற்கு எதிராக ஒருபுறம் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவிக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் படி, பெல் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றை வழக்கம் போல அமெரிக்க நிறுவனங்கள்தான் கைப்பற்றி வருகின்றன. தாமிரவருணித் தண்ணீரை புட்டியில் பிடித்துத் தருவதற்கே “கோக்” கின் தொழில்நுட்பம் தேவைப்படும்போது, சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கித் தருவதற்கு அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !

2

ஆர்ப்பாட்டம்ஓசூரில் சட்டவிரோத லேஆஃப்களை முறியடிப்போம்!
ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற பயங்கரவாத சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!

என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15.06.2013 மாலை 5மணியளவில் ராம்நகர் அண்ணாசிலை அருகே எழுச்சியோடு நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் மற்றும் அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் மற்றும் திரளான தொழிலாளர்கள் எழுச்சியுடன் கண்டன முழக்கங்களை விண்ணதிர முழங்கினர். திரளான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இவ்வார்ப்பாட்டத்தைக் கண்டு வாழ்த்திச் சென்றனர்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில்,

“ஓசூர் அசோக் லேலண்டில் ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிவடைந்து ஓராண்டுக்கும் மேலே ஆகியும் இன்னும் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேவேளையில் தற்போது லேஆஃப், ஆட்குறைப்பு போன்ற நிர்வாகத்தின் தாக்குதல்களால் தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த சம்பளமும் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். ஆதலால் இவர்கள் நிர்வாகத்தை எதிர்த்து போராடுகிறார்கள். எனவே இதனை ஆதரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை.

இந்திய அரசாங்கத்தின் தொழிற்தகராறு சட்டம்-1947 அத்தியாயங்கள் 5-A, B-வில் சொல்லப்பட்டுள்ள சட்டவிதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அதனடிப்படையில் இந்த லேஆஃப்புகள் ஆலை நிர்வாகங்களினால் அறிவிக்கப்படவில்லை. ஏன்? எனென்றால் இந்த ஆலைநிர்வாகங்கள் வரைமுறையற்ற அளவிலே உற்பத்தியை செய்து ஏற்கனவே திணித்து வைத்திருக்கின்றன.

posterஓராண்டு முழுவதும் செய்யவேண்டிய ஒன்னேகால் லட்சம் வண்டியை ஒன்பதே மாதங்களில் செய்து முடித்து தேக்கி வைத்து விட்டான் என்பதுதான் அதனுடைய முன் நிபந்தனை. தேவையான உற்பத்தியை முன் கூட்டியே செய்து நிறைத்து வைத்து விட்டதனால்தான் தற்போது குறைந்தபட்ச சட்ட விதிமுறைகளையும் கூட அவன் பின்பற்ற தயாராகவில்லை. இதற்காகவும் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அதற்காக இது அநீதி இல்லை என்ற அர்த்தத்தில் நாங்கள் இங்கே சொல்லவில்லை. அநீதிதான் என்ற போதிலும் இதற்காகவும் இங்கே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை.

ஏன் இவன் சட்டத்தை மதிப்பதில்லை? ஏனென்றால்… சட்டத்தை துளியளவு கூட மதிக்காமல் சட்டவிரோதமாக இதே சங்கங்களின் எதிர்ப்பின்றியே சட்ட விரோத உற்பத்தி முறையை ஏற்கனவே அவன் புகுத்தி வைத்திருக்கிறான். அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், ஏ.எல்.டி.எஸ், லாஜிஸ்டிக்ஸ் என்று பலவிதமான சட்டவிரோத உற்பத்திமுறையை புகுத்தி வைத்திருக்கிறான். காண்ட்ராக்ட் தொழிலாளர்கள், சி.எல் தொழிலாளர்கள், அப்பரண்டீசு- என அனைவரையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறான்.

இதுபோன்ற சட்டவிரோதமான வகையில் உற்பத்தி செய்து கொள்ளை லாபமீட்டி வருகிறான். இதெல்லாம் இல்லையெனில் சட்டபூர்வமாகவே உற்பத்தி செய்தானென்றால் தொழிலாளர்களுக்கு இப்போதைய இந்த நெருக்கடி இல்லை. இன்றைய நிலைமையில் தொழிலாளர்களை உட்கார வைத்தோ அல்லது அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவோ முடியும். அதற்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த கேள்விகளை எழுப்பி இதற்கு நியாயம் கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை.

அடுத்து கமாஸ் வெக்ட்ராவை எடுத்துக்கொண்டால்… அங்கேயும் 13 தொழிலாளர்கள் வேலைநீக்கம், லேஆஃப், மற்றும் சட்டவிரோத உற்பத்திமுறையை நடைமுறைப்படுத்துகிறான். லேலண்டில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சங்கம் மேற்கண்ட சட்டவிரோத உற்பத்திமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இங்கே கமாஸ் வெக்ட்ராவில் உள்ள தொழிற்சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிதும் சமரசமின்றிப் போராடிவருகிறது. ஆனாலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்துகிறான். இரண்டு கம்பெனிகளிலும் நடக்கின்ற மறுகாலனியத் தாக்குதல் ஒன்றுதான். இதற்காகக் கூட இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், உடனடி அவசர அவசிய கடமை என்னவென்றால்… இப்படிப்பட்ட தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற கம்பெனிகளான அசோக் லேலண்டு மற்றும் கமாஸ் வெக்ட்ரா ஆகிய இரண்டு கம்பெனிகளின் நிர்வாகங்கள் என்பவர்கள் யார்? அவற்றின் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? என்பதுதான் இப்ப நாம் பேசப்படவேண்டிய விசயமாக இருக்கிறது. அந்தவகையிலே ஒரு அபாய சங்கை போல தொழிலாளர்களுக்கும் அவர்களை நம்பியுள்ள பிற உழைக்கும் மக்களுக்கும் அறிவிக்கும் வகையிலே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

notice-1அசோக் லேலண்டு தொழிலாளர்கள் என்பவர் யார்?

ஓசூர் லேலண்டு தொழிலாளர்கள் என்பவர்கள் யாரென்றால் ..எந்தவொரு கம்பெனியில் பிரச்சினையென்றாலும் காலையில் தகவல் கிடைத்ததும் மாலையில் கேட் வசூல் செய்து நிதிதிரட்டிக் கொடுத்தும் அவர்களின் போராட்டத்திற்கு ஓடோடிச் சென்று ஊக்கமான ஆதரவு கொடுத்தும் வந்தவர்கள்தான் லேலண்டு தொழிலாளர்கள். அதுமட்டுமின்றி ஈழப் பிரச்சினையானாலும், ஓசூரில் எந்த ஒரு நல்வாழ்வுப் பிரச்சினையானாலும் ஓடோடி சென்று அதற்காக போராடியவர்கள்தான் இந்த லேலாண்டு தொழிலாளர்கள். ஆனால் இன்றோ ஒரு அடையாள உண்ணாவிரதம், தொடர் உண்ணாவிரதம், சார் ஆட்சியரிடம் மனு கொடுப்பது, குடும்பத்துடன் தர்ணா போன்ற சட்டபூர்வ அகிம்சை முறையிலான போராட்டங்களை மட்டுமே அறிவித்து நடத்தி வருகின்றனர்.

மற்ற கம்பெனிகளின் தொழிற்சங்கங்கள் இதனை கூட அறிவிக்க தயங்குகின்ற இவ்வேளையில் ஓசூரிலே ஒரு பெரிய தொழிற்சங்கம் என்பதாலே துணிச்சலுடன் அறிவிக்கின்றனர். ஆளும் வர்க்கமும் அரசும் இதன்மீது உடனடியாக தடை விதித்தால் பிரச்சனையாகி விடும் என அஞ்சியே அனுமதித்துவருகின்றனர் என்பதே உண்மை நிலை. இந்த நிலையைக் கூட விட்டு வைக்காமல் அதற்கும் வேட்டு வைக்கவே இப்போது அவர்கள் மீது லேஆப், ஆலைமூடல், ஆட்குறைப்பு என முதலாளிகளால் பெரும் தாக்குதல்கள் ஏவப்பட்டிருக்கிறது. நம்முடைய மூதாதையர்கள் முன்னோடிகள் என்பதால் அவர்கள் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். ஓசூர் தொழிலாளர்களுக்கு இதனை உணர்த்தியும் வருகிறோம். அடுத்து

அசோக் லேலண்டு முதலாளி என்பவன் யார்?

அசோக்லேலண்டு நிர்வாகம் என்பது யாரென்றால்.. இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தின் தலைவன், இந்திய அரசிடம் நேரிலே சென்று தனக்கு வேண்டிய அளவில் கொள்கை மாற்றங்களை அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தவன். இதனைப் பற்றி அதிகம் விளக்க வேண்டிய தேவையில்லை, யாவரும் அறிந்ததே. இன்றைக்கு ஓசூரில் முதலாளிகளின் சங்கமான ஓசூர் எச். ஆர் அசோஷியேசனை வழிநடத்திச் செல்பவன்தான் இந்த அசோக் லேலண்டு நிர்வாகம். எனவே, லேலண்டு ஒரு முடிவை எடுத்தால் அதனை இங்கிருக்கும் எல்லா கம்பெனி நிர்வாகங்களும் பின் தொடர்ந்து செல்லும். அதற்கு அண்மைய உதாரணம் ஐ.என்.ஈ.எல், எக்ஸைடு, பைமெட்டல் பேரிங் போன்ற கம்பெனிகள் அதன் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. ஆதலால் லேலாண்டில் லேஆப், ஆட்குறைப்பு என்றால் அது மற்ற கம்பெனிகளில் நடத்தவிருக்கின்ற தாக்குதலுக்கு ஒரு முன்மாதிரி அதாவது லேலண்டு என்பது சோதனைச் சாலை. இது ஏதோ லேலண்டில் மட்டும் நடக்கின்ற தாக்குதல் என்று சுருக்கிப் பார்த்து விடக் கூடாது. இது முதல் விசயம். இரண்டாவதாக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் மீதான தாக்குதல்.

கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் என்பவர் யார்?

கமாஸ் வெக்ட்ரா ஆலையில் இருக்கும் தொழிற் சங்கமானது போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தி ஓசூர் மக்களின் மனதை வென்று அவர்களின் ஆதரவோடு அரசையும் நிர்வாகத்தையும் பணிய வைத்து உரிமைகளைப் போராடிப் பெற்ற புரட்சிகர தொழிற்சங்கம். இது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கம். ஒரு ஆலையில் ஒரு தொழிலாளிக்குப் பிரச்சினை என்றாலும் எல்லா ஆலைத் தொழிலாளர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்ற வகையில் வர்க்க ஒற்றுமையை கட்டி வரும் தொழிற்சங்கம். இதனை வளரவிடக் கூடாது என்று ஒசூர் முதலாளிகள் ஒன்று திரண்டு மாதம் இரண்டு நாட்கள் இதற்காகவே கூடித் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார்கள். இதற்கு அரசு பக்க மேளம் வாசித்துவருகிறது.

எனவே, இந்த இரண்டு தொழிற்சங்கங்களின் மீதான முதலாளிகளின் தாக்குதல் என்பது அடுத்தடுத்த பல கம்பெனிகளின் தொழிற்சங்கங்களுக்கு நேரவிருக்கின்ற தாக்குதலை முன்னறிவிப்பதாக உள்ளது. இது ஒரு சோதனைச் சாலையாக இவ்விரு ஆலைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் மீதான முதலாளிகளின் தாக்குதல் அமைந்துள்ளது. தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் ஓரளவிற்கு கணிசமாக இருக்கின்ற லேலண்டிலே இனி நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை என்றாகிவிட்டால்… ஓசூர் முழுவதற்கும் இனி இதே நிலைதான். இது ஒரு தொடக்கம் அல்ல, மாறாக முடிவின் ஓர் அறிவிப்பு! எனவே இதனை ஓசூர் தொழிலாளர்களுக்கு உணர்த்தி எச்சரிக்கும் வகையிலே இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். அந்த வகையிலே ஓசூர் தொழிலாளர்கள் எதிர் வர இருக்கும் ஆபத்தை உணர்ந்து இனியும் தன் வீடு, தன் பெண்டு என்றெல்லாம் சுருங்கி வாழாமல் விசாலமான பார்வையினை வரித்துக் கொண்டு எங்களுடன் இணைந்து கரம் கோர்த்துப் போராட அறை கூவி அழைக்கிறோம்”

என பேசி முடித்தார்.

notice-2அடுத்து தோழர் சின்னசாமி பேசுகையில்,

”முதலாளிகள் இல்லாமல் முதலாளிகளின் தொழிற்சாலைகள் இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை எனும் வாதத்தை அம்பலப்படுத்திப் பேசினார். தொழிலாளர்கள் இல்லாமல் இவ்வுலகமே இயங்கமுடியாது. ஆனால் முதலாளி இல்லாமல் உலகம் இயங்கமுடியும். எனவே முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்ட தொழிலாளர்கள் கம்யூனிசத்தை கைக்கொள்வது என்பது தவிர்க்க முடியாதது. முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்!” என்ற தலைப்பில் எழுச்சிமிகு கண்டன உரையாற்றினார். இது பார்வையாளர்களை கவர்ந்திழுத்து உணர்வூட்டியதாக இருந்தது.

இவ்வார்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர்களிடையே புதுநம்பிக்கையை விதைப்பதாக இருந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி இவ்வமைப்பினர் ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை மற்றும் நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டியும் தெருமுனைப் பிரச்சாரம், ஆலை வாயில்களில் பிரச்சாரம் என வீச்சாக பிரச்சாரம் செய்திருந்தனர். அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை அப்படியே இங்கே தருகிறோம்.

அன்பார்ந்த தொழிலாளர்களே!

அசோக் லேலண்டு நிறுவனம் பல ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லேஆஃப் அறிவித்து வருகிறது. சந்தையில் தேக்க நிலை இருப்பதால்தான் லேஆப் அறிவித்துள்ளதாக லேலாண்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்கள் சொல்வது யதார்த்தம் என்றால் கீழ்க்கண்ட முறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பது சட்டம்.

  • லே-ஆஃப் அறிவிப்பதற்கு இந்திய தொழிற்தகராறு சட்டம் – 1947 அத்தியாயங்கள் 5-அ, ஆ வில் கூறப்பட்டுள்ள சட்ட முறைகளுக்குக் கட்டுப்பட்டு, தொழிலாளர் இணை ஆணையர் (சமரசம்), சென்னையிடம் லே-ஆஃப் செய்வதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
  • இதனை, அவர் ஏற்றுக்கொண்டதற்கான அறிவிப்பை முறைப்படி தொழிலாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
  • மேற்கண்ட சட்டப் பிரிவின் கீழ் அரசு கேட்டுள்ள 23 கேள்விகளுக்கு பதிலை இணைப்பாக இணைத்திருக்க வேண்டும்.
  • கேள்வி எண்கள் 15, 17, 18, 19, 20, 21, 22 ஆகியவை மிகமிக முக்கியமானவை.
    கேள்வி எண் 15 – கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலுள்ள நிர்வாக, பொதுவான மற்றும் விற்பனை செலவு (முழுமையாக), மொத்த செலவீனத்தில் அதன் சதவீதம்.
    கேள்வி எண் 17- லே ஆஃப் கொடுப்பதால் ஆலைக்கு கிடைக்கும் கூடுதல் லாபம் (சேமிப்பு!).
    கேள்வி எண்18- நிர்வாக ஊதியம், விற்பனை ஊக்குவிப்பு செலவு மற்றும் பொது நிர்வாகச் செலவுகள் ஆகியவைகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு உண்டாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்பதைப் பற்றி.
    கேள்வி எண்19- கடந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி நாளன்று உள்ள கையிருப்பு சரக்கு வளத்தின் நிலை.
    கேள்வி எண்20- கடந்த 3 ஆண்டுகளிலுள்ள விற்பனை விவரங்கள் மற்றும் கடந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலுள்ள இனவாரியாக, மதிப்பு வாரியாக விற்பனை விவரங்கள்.
    கேள்வி எண்21- தற்போது திட்டமிடப்பட்டுள்ள பணி வழங்காமையின் காரணங்கள்.
    கேள்வி எண்22- தற்போது கருதப்பட்டுள்ள பணி வழங்காமையை தவிர்ப்பதற்காக குறிப்பாக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்.

மேற்கண்ட கேள்விகளுக்கு லேலண்டு நிர்வாகம் பதிலளிக்கத் தயாராக இல்லை. காரணம், இது ஒரு சட்ட விரோதமான லே ஆஃப் என்று லேலண்டு நிர்வாகம் தெரிந்தே செய்துவருகிறது. சட்டவிரோத, தொழிலாளர் விரோத லே-ஆஃப்பின் நோக்கம் என்ன? இதன் உடனடி நோக்கம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஒரு அற்பத்தொகை கொடுத்து பட்டை நாமம் போடவேண்டும் என்பதே! இதன் எதிர்கால நோக்கம், ஆட்குறைப்பு செய்வது! ஒரு பன்னாட்டு பகாசூர கம்பெனியாக வளர்வதற்காக லேலண்டு நிர்வாகம் இந்த தொழிலாளர் விரோத, சட்ட விரோத செயல்பாடுகளை செய்து வருகிறது!

சந்தையின் தேவையைவிட பல மடங்கு அதிகமான உற்பத்தியை லேலண்டு நிர்வாகம் செய்துள்ளது. இதற்கேற்ப சட்டவிரோதமான அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட், ஏ.எல்.டி.எஸ் உற்பத்தி முறை என்ற பல அடக்கு முறைகளை தொழிலாளர்கள் மீது திணித்து வைத்துள்ளது. இந்த பின்புலத்தை தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டுள்ளது. சந்தையில் மந்த நிலை என்பதும் இந்த மிகை உற்பத்தியின் விளைவே!

லேலண்டின் சட்ட விரோத லே-ஆஃப் என்பது இத்துடன் நின்று விடுவதல்ல. அடுத்து இது ஆட்குறைப்பு நடவடிக்கையையும் ஆலை மூடலையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், லேஆஃப் கொண்டு வருவதற்கு முன்னரே ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை தருவதை நிறுத்திக்கொண்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவிற்கே அலையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், லேலண்டின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும் லே ஆஃப்பையும் சாதகமாக்கிக் கொண்டு எக்ஸைடு, கார்போரண்டம், கமாஸ் வெக்ட்ரா உள்ளிட்ட பல ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்களை மிரட்டி வருகின்றன. கமாஸ் வெக்ட்ரா நிர்வாகம் அறிவித்த சட்டவிரோத லேஆஃப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு மூலமாக தடையாணைப் பெறப்பட்டது. ஆனால், கமாஸ் நிர்வாகமோ அதனை மதிக்காமல் கழிப்பறைக் காகிதத்தைப் போல தூக்கியெறிந்துவிட்டது. வட்டாட்சியரின் ஆலோசனைகளை மயிரளவிற்கும் மதிக்கவில்லை.

மொத்தத்தில், தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று கூறி ஒடுக்கி வருகின்ற அரசுக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கும் முதலாளிகளின் இந்த சட்ட விரோத அடக்கு முறைகள் தெரியாதல்ல. தெரியும். இருப்பினும் முதலாளிகளுக்கு விசுவாசமாக செயல்படக் காரணம், இந்த அரசும் சட்டமும் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே உள்ளன. இதனால்தான் அதிகாரிகளும் சட்டமும் முதலாளிகள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதை ஆதரிக்கிறது. அதற்கு துணை போகிறது.

ஏற்கனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளமும் போனஸ் உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக புகுத்தப்பட்டு வருகின்ற நிலையில் லே – ஆஃப் முறை வரைமுறையின்றி கொண்டுவருவது தொடர்ந்தால் எதிர்காலத்தில் சட்டவிரோத அடக்குமுறைகள் மேலும் அதிகரித்து தொழிலாளர்களாகிய நாம் பேசுவதற்கான குறைந்த பட்ச உரிமைகளைக்கூட இழக்க நேரிடும். போராடி பெற்ற சட்டபூர்வ உரிமைகளை போராடித்தான் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

ஆகையால், லேலண்டு, கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையையும் பிற ஆலைத் தொழிலாளர்கள் மீது அவ்வாலை நிர்வாகங்கள் தொடுத்து வருகின்ற லே-ஆஃப் உள்ளிட்ட அடக்குமுறைகளையும் முறியடிக்க ஓசூரில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.‎

  • சட்டவிரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!
  • ஒப்பந்தத் தொழிலாளர்களை கசக்கி பிழியும் நிரந்திரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அரசும் சட்டமும் துணைபுரிவதை முறியடிப்போம்!
  • முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள், பதிவு எண் 24-KRI)
தொடர்புக்கு: எல் 416, ஏ.எஸ்.டி.சி பழைய அட்கோ, ஓசூர்.
செல்-97880 11784.

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்

அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !

3

(கடந்த மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தை குறித்து மும்பையை சேர்ந்த ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிடிக்கல் எகானமி (R.U.P.E) என்ற பொருளாதார ஆய்வு அமைப்பின் வலைப்பதிவில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.)

ந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது மக்களின் வாழ்க்கையோடு சம்பநதப்பட்ட குறிப்பிட்ட நிலைமையின் பருண்மையான பொருளை அறிந்து கொள்ள உதவும்.

இலங்கையின் கொலைக்களங்கள்
இலங்கையின் கொலைக்களங்கள்

ஐ.நா மனித உரிமைகள் குழுவில் அமெரிக்க ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மார்ச் 2013-ல் முன்மொழிந்து சுற்றுக்கு விட்டது. பிரிட்டனின் சேனல் 4 ‘போர் நடைபெறாத பகுதி – இலங்கையின் கொலைக்களம்’ என்றவொரு உண்மை விளக்கப் படத்தை அங்கு திரையிடப் போகிறது. இதற்கு முன்பு இரண்டு உண்மை விளக்கப் படங்களை அதே தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் படம் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஜூன் 2011-ல் வெளியிடப்பட்டது. பல அதிர்ச்சியூட்டும் போர்க்குற்றக் காட்சிகளின் தொகுப்பு இது. ‘கொலை களங்கள் : தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற இரண்டாவது படம் மார்ச் 2012-ல் வெளியிடப்பட்டது. இலங்கை அரசின் போர்க் குற்றத்துக்கு திட்டவட்டமான ஆதாரமாக இப்படம் விளங்கியது. மூன்றாவது படம் ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் காண்பிக்கப்படுவதற்கு முன்பாக டில்லியில் பிப்ரவரி 2-ல் ஒரு முறை திரையிடப்பட்டது.

இந்த உண்மை விளக்கப் படம் வெளிக்கொணர்ந்த ஒரு காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரனின் மகன் உயிருடன், துன்புறாமல் இலங்கை ராணுவத்தால் பிடிக்கப்படுகிறார். சில மணித்துளிகளுக்குப் பிறகு அவர் நெஞ்சில் ஐந்து குண்டுகள் துளைக்கப்பட்ட காட்சி வருகிறது. இந்த காட்சிகள் 2009-ன் கொடுங்கனவு நினைவுகளை மக்களின் எண்ணங்களில் கிளர்த்தி விட்டுள்ளது. ஆனால் அந்த கொடுங்கனவு பற்றிய விழிப்புணர்வு புதிதல்ல ; இக்குற்றங்கள் நடைபெற்ற போதே உலகத்தின் முன்பு ஆதாரங்கள் குவிந்தன. தமிழ் மக்கள் நடத்தும் உணர்ச்சிமிக்க போராட்டங்கள் இந்திய அரசுக்கு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கடுமையான அழுத்தத்தை வழங்குவதாக ஒரு கருத்தை வெளியிடுகின்றன, பத்திரிக்கைகள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்துக்கும் இத்தீர்மானத்தை ஆதரிக்க இந்தியாவை வலியுறுத்துவதில் ஒரு போட்டியே நிலவுகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை; 2012-ல் ஐ.நா.மனித உரிமைகள் குழு இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் போதும் இல்லை; அவை பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. 2009-ல் போர் உச்சத்தை தொட்ட போது ஓர் அழுத்தம் வழங்கப்பட்டிருந்தால் அது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கும். ஐ.நா மற்றும் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது நன்கு தெரியும். எனினும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இவர்களுடைய தற்போதைய பாசாங்கான கரிசனத்திற்கு பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளன. ராஜபக்சே தன பங்கிற்கு தன்னை இலங்கையின் நலனை மேற்கு நாடுகளின் கோபத்தையும் சம்பாதித்து, சமரசமின்றி பாதுகாக்கும் காவலனாக முன்னிறுத்துகிறார்.

2006-ல் நிலவிய சூழல்

16 ஆண்டுகளுக்கு முன்பாக 1997-லேயே அமெரிக்கா விடுதலைப் புலிகளை அந்நிய ‘பயங்கரவாத அமைப்பு’ என்று பிரகடனம் செய்தது. 2001-ல் அமெரிக்கா, புலிகளுக்கு கூடுதல் பெயரடை ஒன்றை வழங்கியது. ‘தனிச்சிறப்பான உலக பயங்கரவாதி’ என்று தனது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்’ கொள்கைக்கு ஏற்ப புலிகளை சித்தரித்தது. 2006 மே மாதத்தில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளை பயங்கரவாத அமைப்பில் பட்டியலிட்டது. 9|11 க்குப் பிறகான உலக நிலைமையில் இலங்கைக்கு ஒரு தாக்குதலை நிகழ்த்த இது தெளிவான சுட்டுக்குறியை வழங்கியது. அதே வருடம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு வந்து கொண்டிருந்த நிதியை நிறுத்த இலங்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கனடா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஏவுகணைகள் கொள்முதல் செய்த புலிகளின் முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒரு குறைந்த இடைவெளி நேரத்தில் புலிகள் தமது இருப்புக்கு ஆதாரமான தேசங்கடந்த நிதி மூலத்தை இழந்தார்கள். (புலிகளுக்கு எந்த அரசும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

ராஜபக்சே - கருணா
ராஜபக்சே – கருணா

2004-ல் வி.முரளிதரன் [கர்னல் கருணா] தலைமையில் ஒரு பிரிவு புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி இலங்கை அரசுடன் இணைந்தது. புலிகளின் ராணுவ பலம் மற்றும் புலிகள் பற்றிய ரகசியங்களை நன்கறிந்தவர் கருணா. புலிகள் இப்படி பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருந்த போது, இலங்கை அரசு மிகப்பெரிய அளவுக்கு ராணுவ பலத்தை கூட்டியது. 2005 – 2008 காலகட்டத்தில் இலங்கையின் ராணுவ பட்ஜெட்  முன்பிருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்ததோடு, ராணுவ பலம் 70 சதவீதம் உயர்வு பெற்றது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் இலங்கைக்கு போர் விமானங்களையும், ரோந்து விமானங்களையும் அளித்தது. இந்தியா ரோந்து கப்பல்களையும், ரேடார் கருவிகளையும் வழங்கியது. முக்கியமாக, இந்தியாவின் தென்மண்டல கடற்படை, புலிகளின் ஆயுதவரத்தை முறியடிக்க இலங்கை கடற்படைக்கு பேருதவி அளித்தது. மேலும் புலிகளின் கடல் போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது, இந்தியா.

பாகிஸ்தான் போர்க்கருவிகளையும் போர்க்கருவிகளையும், கையெறி குண்டுகளையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. சீனா வாகனங்கள், சிறிய வகை ஆயுதங்கள், எளிமையாக கையாளும் போர்க்கருவிகள், பீரங்கிகள் மற்றும் படைத்தளவாடங்கள் முதலியவற்றை பெருமளவுக்கு வழங்கியது. இது போக போர் விமானங்களும், ரேடார் கருவிகளையும் வழங்கியது. ஜப்பானை இடம் பெயர்த்து சீனா இலங்கைக்கு பொருளாதார உதவி செய்வதில் முன்னணி நாடாக ஆனது.

அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளின் ராணுவ பயிற்சி இலங்கை ராணுவத்தின் திறனை அதிகரித்தது. 2009 ‘அயலுறவுக்கான அமெரிக்க செனட் கமிட்டியின்’ அறிக்கையில் அமெரிக்க விமானங்கள் இலங்கையை சுற்றி பறப்பதற்கும், இலங்கையில் தரை இறக்குவதற்கும் இலங்கை இசைவுச் சான்று வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை பயன்படுத்தவும் இலங்கை அனுமதி வழங்கியது. மேலும் அமெரிக்க ராணுவத்தின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும், ஐ. நா அமைதி நோக்கங்களுக்கும் இலங்கை தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தெரிவித்துள்ள விருப்பமும் அந்த அறிக்கையில் உள்ளது. 2007-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையே அதிக அளவு ராணுவ ஒத்துழைப்புக்கு வகை செய்யும் ஒப்பந்தம் ஓன்று கையெழுத்தானது. இது அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இலங்கையிடமிருந்து எரிபொருள் பெற வழிவகை செய்கிறது. 2007-ல் அமெரிக்கா வழங்கிய அதிநவீன ரேடார் கருவிகள் தான் புலிகளின் கடற்படையை நிர்மூலமாக்க இலங்கைக்கு பயன்பட்டது. சுருங்கக் கூறின் புலிகளை ராணுவ ரீதியாக பலகீனப் படுத்தி மூச்சுத் திணற வைத்ததிலும், தமிழ் மக்கள் மீது இலங்கையின் கொடூரத் தாக்குதலுக்கு பின்னணியிலும் பல நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளன. இந்த நாடுகள் அனைத்தின் கைகளிலும் ரத்தக்கறை படிந்தே உள்ளன.

அமெரிக்காவின் விமர்சன கூச்சல்களும், உண்மையான அக்கறைகளும்

அமெரிக்கா இப்போது தனது முந்தைய நிலையை மாற்றியுள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலை பிரச்சினை அதன் அடுத்த கட்டத்தில் இருக்கும் நிலையில் அமெரிக்கா இலங்கையைக் கண்டித்து கூச்சலை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பும், இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தொடர்பும் இருக்க வேண்டும் எனவும் கோருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஒபாமாவின் முதல் அறிக்கை 2009, மே 14-ல் வெளிவந்தது. மக்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தமும், இலங்கை ‘அதன் அனைத்து பிரிவு மக்களும் மதிப்புடன் வாழ அமைதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிகாரப் பகிர்வுக்கான ”உறுதிமிக்க நடவடிக்கைகளை” மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்பு
அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்பு

ஒரு குழந்தைக்கு கூட தெரிந்த உண்மை இருக்கிறது. அமெரிக்கா இப்பிரச்சினையில் ஏதேனும் உருப்படியான மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினால் இது போன்ற துல்லியமற்ற விண்ணப்பங்களுடன் நிறுத்திக் கொள்ளாது. யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன், லிபியா மத்திய ஆப்ரிக்க குடியரசு மற்றும் பல்வேறு செய்து வருவது போல பலவகைகளில் குறுக்கீடு செய்யும். தன்னுடைய படைகளை அனுப்ப விரும்பாத  இடங்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் எதிர்ப்பு படைகளுக்கு வழங்கி வந்திருக்கிறது. பொருளாதாரத் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் சிரியாவை கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வருவதை ரசியாவும், சீனாவும் தடுத்த போது ‘சிரியாவின் சர்வதேச நண்பர்கள்’ என்றொரு கூட்டமைப்பை ஏற்படுத்தி சிரிய அரசுக்கு நெருக்கடியும் சிரியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவும் வழங்கியது அமெரிக்கா. அது போல ஈரானின் அணுத் திட்டங்களை காரணம் காட்டி அதன் மீது பொருளாதார தடைகளை ரசியா மற்றும் சீனாவின் ஆதரவு இல்லாமலே கொண்டுவர துணிந்தது அமெரிக்கா.

இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் இலங்கை அதிபரின் சகோதரர், பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க குடிமகனாக தொடர்ந்து உள்ளார். இன்னொரு சகோதரன், பாசில் ராஜபக்சே இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகராக இருக்கின்ற அவரும் அமெரிக்க பச்சை அட்டையை வைத்திருப்பவர். இதில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு போர்க் குற்றத்தோடு நேரடி தொடர்பு உள்ளது. [ஆயுதமின்றி பிடிபட்ட புலிகளை கொலை செய்தது தொடர்பாக, சரத் பொன்சேகா உட்பட்ட ராணுவ அதிகாரிகளின் சாட்சியம் இந்த நபருக்கு எதிராக உள்ளது.]

ஆக, அமெரிக்கா, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அதன் கவலையை பேரழிவு ஓன்று நடந்து முடிந்த பின்னர், புலிகள முழுமையாக துடைத்தழிக்கப்பட்ட பின்னரே அழுத்தமாக வெளியிட்டது. அதன் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகள் போலியானது.

2005-லிருந்து, குறிப்பாக ராஜபக்சே இலங்கையின் அதிபரானதிலிருந்து இலங்கைக்கும், சீனாவுக்குமான உறவு மிகவும் அழுத்தம் பெற துவங்கியது. அமெரிக்காவின் மனப்பான்மையும், ராணுவ கட்டுப்பாடுகளுமே சீனா, பர்மா, ஈரான் மற்றும் லிபியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான காரணம் என்று கூறுகிறது, இலங்கை அரசு. திச விதரன எனும் இலங்கை மந்திரி, ‘நம்மை சீனா பக்கம் தள்ளியமைக்கு நாம் அமெரிக்காவுக்கு நன்றி சொல்வோம்’ என்றார். விதரன கூற்றுப்படி, மேற்கு நாடுகள் புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்ய உதவாத நிலையில், அதிபர் ராஜபக்சே பிற நாடுகளின் உதவி பெறும்படி தள்ளப்பட்டார். இது இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் நீண்டகால போர்த்தந்திர நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.

சீனா ஆயுதங்களை மட்டும் இலங்கைக்கு வழங்கவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார உதவியையும் இலங்கைக்கு அளித்துள்ளது. பல அடிப்படை கட்டுமான பணிகளை சீனா, இலங்கையில் செயல்படுத்தி வருகிறது. ராஜபக்சேவின் பூர்வேகமான ஹம்பன்டோடாவில் பெருமுதலீட்டில் துறைமுக வளாகமும், விமான நிலையமும் சீனா அமைத்து வருகிறது. மேலும், பெரிய அளவுக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக 10,000 த்திலிருந்து 16,000 சீனப் பொறியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையில் தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சீனா, இலங்கையில் கட்டிக்கொண்டிருக்கும் அடிப்படைக் கட்டுமானத் திட்டங்கள் ராணுவ ரீதியிலானதல்ல; வணிக ரீதியிலானது என்றொரு தோற்றம் உள்ளது. சீனாவுக்கும், இலங்கைக்கும் பொருட்படுத்த தகுந்த போர்த்தந்தந்திரம் சார்ந்த உறவுகள் இல்லையென்பது போல தோன்றும். ஆனால், சீன மற்றும் அமெரிக்க போர் வல்லுனர்கள் இலங்கையின் ஹம்பன்டோடாவை சீனாவின் முத்துச்சரம் என்றே அழைக்கிறார்கள். சீனாவின் கடல்சார் போர்த்திறத்தை முத்துச்சரம் என்று முதன்முதலில் அழைத்தார், அமெரிக்க ராணுவ ஒப்பந்ததரரான பூஸ் ஆலன் ஹாமில்டன். அன்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீன போர் வல்லுனர்கள் இந்த பதத்தை ஏதோ சீனாவே உருவாக்கிக் கொண்டது போல மிகச் சாதரணமாக பயன்படுத்தி வருகின்றனர். முத்துச்சரத்துக்கு ,அமெரிக்க ராணுவ கல்லூரி’ ஒன்று அளித்த விளக்கம் சீனா குறித்த அமெரிக்காவின் கவலையை அறியத் தருகிறது.

சீனாவின் முத்துச்சரம்
சீனாவின் முத்துச்சரம்

முத்துச்சரம் என்றால் என்ன ? முத்துச்சரத்தில் இருக்கும் ஒவ்வொரு முத்தும் சீனாவின் புவிசார் அரசியல் ஆதிக்கம் அல்லது ராணுவ இருத்தலோடு நெருங்கிய பிணைப்பை கொண்டது. சமீபத்தில் ராணுவ ரீதியாக உயர்ஊட்டம் பெற்ற ஹைநான் தீவு ஒரு ‘முத்து’. வியட்நாமிற்கு கிழக்காக கடல் மார்க்கத்தில் 300 மைல் தொலைவில் உள்ள வுடி தீவில் [Woody Island ] உயர்வூட்டம் பெற்ற ஒரு தற்காலிக விமான நிலையம் ஒரு ‘முத்து’. வங்கதேசத்தில் சிட்டகாங் கப்பல் கொள்கலம் ஒரு ‘முத்து’. மியான்மரின் சித்வேயில் கட்டப்படும் ஆழ் துறைமுகம் ஒரு ‘முத்து’. பாகிஸ்தானின் க்வாடரில் கட்டப்படும் கப்பற்படைத்தளம் ஒரு ‘முத்து’. துறைமுகங்கள், விமான நிலையங்கள் அரசுதந்திர உறவுகள் மற்றும் கட்டாய நவீனமயமாக்கம் ஆகியவை முத்துச்சரத்தில் கோர்க்கப்படுகின்ற முத்துக்கள். சீனாவின் கடலோர நிலப்பரப்பிலிருந்து தெற்கு சீனாவின் கடலோரப் பகுதி வரை மற்றும் மலாக்கா கடற்கால், இந்துமகா சமுத்திரம், அரபிக் கடலின் கடலோரப் பகுதி மற்றும் பாரசீக வளைகுடா வரை சீனாவின் முத்துச்சரம் பரந்து விரிந்து கிடக்கிறது. மத்திய கிழக்குப் பகுதிகளுடன் இணைக்கும் கடலோர தொடர்புநிலைகளுடன் சீனா போர்த்தந்திர உறவுகளையும், முன்னேறிய இருப்பையும் மேற்கொண்டு வருகிறது.

‘உலக அளவில் எண்ணெய் ஆதார வளங்களை பெறுவதில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது’, என்று 2005-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் உள்ள பகைமைக்கான காரணத்தை விளக்குகிறது. 2012-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, சீனாவின் பலகீனங்களை அமெரிக்கா எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. “சீனத் தலைவர்கள், சீனாவின் அதிகப்படியான அயலக எண்ணெய் சார்பை போர்த்திறம் சார்ந்த பலகீனமாக பார்க்கிறார்கள். எண்ணெய் இறக்குமதிக்கு சீனா பெருமளவு கடல் வணிகப் பாதையை நம்பியுள்ளது. மலாக்கா கடற்கால் மற்றும் ஹொர்முஸ் கடற்கால் பகுதிகள் சீனாவுக்கு முக்கியமானவை. போர்த்ததந்திர ரீதியில் இலங்கை அது அமைந்துள்ள இடத்தால் முக்கியத்துவம் பெறுகிறது” என்கிறது.

அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது, “சீனாவின் நடவடிக்கைகள் இந்த பிரதேசத்தில் இலங்கை போன்ற நாடுகளை நட்பு பிடிப்பது; அதன் மூலமாக கடலோர தொடர்பு நிலைகள் – ஹொர்முஸ் கடல்காலிலிருந்து இந்து மகாசமுத்திரத்தின் மேற்காக மலாக்கா கடல்கால் வரையிலும் தனது வணிக மற்றும் எண்ணெய் இறக்குமதி நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வது தான்” என்கிறது.

அமெரிக்காவின் ஆசிய சுழல்முனை கொள்கை

ன் தவறை மறைத்து மற்றவர் மீது பழி சுமத்துவதை பிராயிட் புறந்தள்ளல் [projection ] என்கிறார். உண்மையில் இந்த சீனாவின் முத்துச்சரம் கொள்கைக்கு எதிராக அமெரிக்கா ஆசியாவை முன்வைத்து உருவாக்கிக் கொண்ட திட்டம் தான் ஆசிய சுழல்முனைக் கொள்கை. ஒரு மாமாங்க காலத்திற்கும் மேலாக ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் மிகத் துல்லியமாக வடகிழக்கு ஆசியா மற்றும் இந்து மகா சமுத்திர வட்டப்பகுதியில் தனது உறவையும், ராணுவ நிலைகொள்ளலையும் வலுப்படுத்தி வருகிறது. மிகச்சமீபத்தில் அமெரிக்கா தனது நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. நவ.2011-ல் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஒபாமா, “ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நெறிப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை வடிவமைக்கவும் அமெரிக்காவுக்கு பெரிய, நீண்டகால திட்டம் உள்ளதாக” தெரிவித்தார். ஜூன் 2012-ல் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனிட்டா சிங்கப்பூரில் நடந்த வருடாந்திர ஷங்க்ரி லா பேச்சுவார்த்தையின் போது கூறியதாவது, ஆசியா தொடர்பாக தனது சக்திகளை மீள்சமநிலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, 2020 வாக்கில், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் 50 – 50 என்று இன்று பிரித்து நிலை நிறுத்தப்பட்டிருக்கும் கப்பற்படையை 60 – 40 என்ற அளவில் மாற்றி அமைக்க இருப்பதாக தெரிவித்தார். அதன்படி 6 போர் விமானத் தாங்கிகள், கப்பல்களை அழிக்கும் நீர் மூழ்கிப் படகுகள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாளைய நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்றவற்றை இணைத்துக் கொண்டு சீனாவுடன் முரண்பாடு கொண்டுள்ள நாடுகளுடன் புதிய இணக்கத்தை மேற்கொள்வது அமெரிக்காவின் திட்டம்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன்
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன்

அமெரிக்காவின் ‘ஆசிய சுழல்முனை’யை அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் நவ. 2011-ல் ‘அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு’ எனும் கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்குகிறார். இது ‘அயலகக் கொள்கை’ எனும் இதழில் வெளியானது. “ஈராக்குடனான போர் முடிவு பெற்ற நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ள சூழ்நிலையில் அமெரிக்கா ஒரு முக்கியப் புள்ளியில் நிற்கிறது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கானஅமெரிக்காவின் முக்கியமான ஆட்சிப் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் போர்த்தந்திரம் சார்ந்த வகைகளில் வலுவான முதலீட்டை அங்கு குவிப்பதாகும். பசிபிக் பெருங்கடலையும், இந்து மகாசமுத்திரத்தையும் கப்பல் போக்குவரவு மற்றும் போர்த்திறம் சார்ந்து இணைக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர். அமெரிக்காவின் உலகத் தலைமைக்கு இந்த ஒழுங்கு மிக முக்கியமானது எனவும் இந்தப் பகுதி அந்த நோக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் கருதுகிறார்.

இங்கு போர்த்தந்திரம் என்பது என்ன ? தமது ‘முன்னோக்கிய விரிவு’ என்ற ராஜதந்திரத்தின் மீதான நீடித்த ஈடுபாடு என்கிறார், ஹிலாரி. அதாவது, உயரதிகாரிகள், தனித்திறம் மிக்கவர்கள், சர்வதேச வணிக முகவர்கள் மற்றும் இதர உடைமைக் கூறுகள் அனைத்தையும் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மூலைக்கும், நாட்டிற்கும் அனுப்புவதாகும் என்று விளக்குகிறார். மேலும், இந்தப் பகுதியின் உடனடி, மற்றும் நீண்ட மாறுதல்களுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளுதல், இப்பிராந்தியத்தின் நாடுகளுடன் மாறாத, நிலைபேறுள்ள உறவை அமைத்துக் கொள்வது குறித்தும் பேசுகிறார். மட்டுமின்றி, இப்பிராந்தியத்தில் எழும் புதிய சவால்களுக்கு ராணுவத்தை பரவலாக்குவதன் மூலம் தீர்வு காணலாம் என்றும் நம்பிக்கை கொள்கிறார். மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மேம்பட்ட வகையில் உதவி செய்ய தகுதியோடு இருப்பதை நினைவுபடுத்தும் ஹிலாரி கிளிண்டன், நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது அப்பிராந்தியத்தின் அமைதிக்கும், உறுதிப்பாட்டிற்கும் ஒரு கொத்தளம் போன்ற பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார்.

ஹிலாரி கிளிண்டன் தமது வழமையான் சீனாவுடன் நல்லுறவு பேணல் என்ற கூச்சலையும் எழுப்ப தவறவில்லை. அப்படியானால், யாருக்கு எதிராக இந்த ராஜதந்திர காய் நகர்வு ? சீனாவின் கப்பல் போக்குவரவு ஏன் தடம் பற்றப்படுகிறது ? ஹிலாரி சொல்கிறார், “அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் சீனத்தின் எத்தனிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. சீனாவின் ராணுவ நவீனமயமாக்கமும், விரிவாக்க நோக்கமும் பல கேள்விகளை எழுப்புகின்றன” என்கிறார். அதே வேளை இந்தியாவின் அதிகார விழைவு அமெரிக்க கண்களை உறுத்தவில்லை என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உரை நிகழ்த்திய ஒபாமா இந்திய–அமெரிக்க உறவு என்பது 21 -ஆம் நூற்றாண்டில் பொதுவான எண்ணங்களையும், நலன்களையும் கொண்ட உறுதிமிக்க நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்று ஆவல் தெரிவித்தார். இரு நாடுகளின் இணக்கத்திற்கு தடைகள் இல்லாமல் இல்லை. ஆனால், ஒரு போர்த்தந்திர பணயத்தை இந்தியா மீது வைக்கிறது, அமெரிக்கா. இந்தியாவுக்கு உலகின் அமைதியையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதில் பெரும் பங்கு இருப்பதை நினைவுபடுத்துகிறார், ஒபாமா. இந்தியா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு ஒருங்கிணைவை விரும்புகிறது, அமெரிக்கா. இந்தியாவை காப்பணியாக வைத்தி பொருளாதாரா ரீதியாக ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக நிலையான தெற்கு மற்றும் மத்திய ஆசியா குறித்த புதிய பார்வையை அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

ஆசியாவை ஆட்கொள்ளும் போர்த்தந்திர நகர்வுக்கு ‘மனித உரிமைகள்’ பிரச்சினை மிகவும் முக்கியமானது. “நமது நாட்டின் முதன்மையான உடைமை என்பது நமது மதிப்பீடுகள் — மிகக் குறிப்பாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு நாம் வழங்கி வரும் உறுதிமிக்க ஆதரவு. மேலும் இது நமக்கு ஆழமான தேசிய பண்பை வழங்குவதுடன், நமது அயல் விவகாரக் கொள்கையின் இதயம் போன்றது. நமது ஆசிய – பசிபிக் பிராந்தியக் கொள்கையிலும் இதுவே பிரதிபலிக்கிறது. நாம் தீவிரமாக ஈடுபாடு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமக்கு இந்த பிரச்சினைகளில் முரண்பாடு தோன்றும் போது, நாம் அவர்களை சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியும், ஆட்சித்திறனை மேம்படுத்தவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், அரசியல் சுதந்திரத்தை அளிக்கவும் தீவிரமாக வற்புறுத்துவோம். வியட்நாம் மற்றும் பர்மாவில் இதனை செய்துள்ளோம்”.

மனித உரிமைகள் விவகாரத்தை பயன்படுத்தி பர்மாவை சீன தாக்கத்திலிருந்து பிரிப்பது

ஒபாமா, சூ கீ
பர்மாவில் அமெரிக்காவின் ஈடுபாடு

பர்மாவில், குற்றம் நாடுகிற முறையில் ‘மனித உரிமைகள்’ பிரச்சினையை அமெரிக்கா எழுப்பியது. 1997-லிருந்து பொருளாதார தடையை பர்மா மீது விதித்துள்ளது. இந்த நிலையில் பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் சீனா பக்கம் சாய்ந்தனர். எப்படி வல்லரசு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை தமது போர்த்தந்திர நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதற்கு பர்மா மீது அமெரிக்கா எழுப்பும் ‘மனித உரிமைகள்’ பிரச்சினை சான்று பகர்கிறது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிய பின்னர் ‘மனித உரிமைகள்’ நிலைமை மோசமாக சென்றாலும் அந்நாடு அமெரிக்காவின் இகழ்ச்சிக்கு ஆளாகாது. ‘மனித உரிமைகள்’ என்ற கருவியை தனது வெளியுறவு கொள்கையில் இணைத்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் பல நாடுகளில் அமெரிக்கா தனது நோக்கங்களை வெற்றி பெறச் செய்துள்ளது. பர்மாவில் தனது நோக்கத்தை ‘ஆட்சி மாற்றத்தால்’ அல்ல; ‘ஆட்சி ஒழுங்கமைவு’ ஒன்றின் மூலம் சாதித்துள்ளது.

ராஜபக்சே நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு உதவியும், ஊக்கமும் அளித்தவை அமெரிக்காவும், இஸ்ரேலும். இறுதிப் போரின் போது, பொதுவான கோரிக்கையுடன் அமெரிக்கா தன்னை வரம்பிட்டுக் கொண்டது. கவனமாக தவிர்க்கப்பட்ட வார்த்தைகள் ராஜபக்சேவுக்கு தெளிவான சுட்டுக் குறியை அளித்தது. இப்போது, படுகொலைகள் முடிந்த பின்னர், குவியும் ஆதாரம் இலங்கையை தனது போர்த்தந்திர ஒழுங்கிற்கு பணிய வைக்கும் வாய்ப்பாக அமெரிக்காவுக்கு பயன்படுகிறது. பர்மாவை போன்று இலங்கை அமெரிக்காவுக்கு சுலபமான ஒன்றல்ல. பர்மா அரசு மக்கள் செல்வாக்கை இழந்து, மக்களின் கோபத்துக்கு ஆளாகியிருந்தது. ஆனால், இலங்கையின் ராஜபக்சேவோ சிங்கள பேரினவாத உணர்ச்சிக்கு ஆட்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுள்ளார். வெளியிலிருந்து அளிக்கப்படும் நெருக்கடியை காரணம் காட்டி, சிங்கள நலனை காக்கும் காப்பாளனாக தன்னை முன்நிறுத்துகிறார். மட்டுமின்றி, இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் பிணைப்புகள் பர்மாவுடையதை விட ஆழமானது.

இலங்கையுடனான அமெரிக்காவின் தற்போதைய செயல்முறைகள் சற்று கடினமானதாக தோன்றலாம்; அனால், அவற்றின் இனிப்பான பலன்களுக்காக காத்திருக்கிறது, அமெரிக்கா. அயல் உறவுகளுக்கான செனட் ஆணையம் 2009-லேயே தமிழ் அகதிகள் பிரச்சினை குறித்து இவ்வாறு கருத்துரைத்தது. “இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல்சார் வணிகப்பாதையில் ஐரோப்பா, சீனாவின் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பகுதிகளை இணைக்கும் புள்ளியில் அமைந்துள்ளது. அமெரிக்காவால் இலங்கையை நிச்சயமாக இழக்க முடியாது.” என்கிறது அந்த அறிக்கையின் வாசகங்கள். மேலும், அமெரிக்க ராணுவம் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகள், இலங்கை ராணுவ அதிகாரிகளின் எதிர்கால நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அமையப் பயிற்சி அளித்து, உறவு மேம்பட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

இந்திய ஆட்சியாளர்களின் மாற்றத்தில் தமிழ் உணர்வுகளுக்கு இடமில்லை

இந்திய கொள்கை
இந்திய அரசின் கொள்கை மாற்றங்களில் தமிழ் உணர்வுகளுக்கு எந்த இடமும் இல்லை.

தமிழ் மக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தான் இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்ற வாதத்தை ஏற்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 2009-ல் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது இந்தியா தனது கப்பற்படையை புலிகளின் கப்பற்படைக்கு எதிராக கொண்டு நிறுத்திய போது தமிழகத்தில் கிளர்ந்த தமிழ் உணர்ச்சி கைகொடுக்கவில்லை. இப்போதும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் போராட்டங்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை. உண்மையில் ஜெயலலிதாவின் ஆவேசங்கள் அமெரிக்காவின் திசை மாறும் கொள்கையை ஒப்பனையற்று தடம் பற்றுகிறது. ஒரு கூடுதல் மிகை மற்றும் தீவிரத்தன்மையுடன் புலிகளிடம் வெளிப்படையான பகைமையை பாராட்டிக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. தொடக்கத்தில் ராஜபக்சேவின் போருக்கு மறைமுக ஆதரவையே வழங்கினார். ஜனவரி 2009-ல், இன்று நமக்கு தேவை போர் நிறுத்தம். அதனை எப்படி சாதிக்க முடியும்? புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் தானே இது சாத்தியமாகும். அதே ஆண்டு மார்ச் 10-ம் தேதி அவர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் ஒரு சுயநிர்ணய உரிமையை கோரினார். மே 10-ம் தேதி ‘ தனித் தமிழீழமே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரே தீர்வு. இந்திய ராணுவத்தை இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வங்கதேசத்தை அமைத்தது போல ஈழம் அமைப்பேன்’ என்றார். வெறும் நான்கே மாதங்களில், புலிகளை ஆயுதங்களை கீழே போட கேட்டுக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து தடம் புரண்டு ஈழத்தை பெற்றுத்தர இந்திய ராணுவம் ஆயுதம் தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தாவினார்.

ஜூன் 2011-ல் இந்தியா வருகை தந்த ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவை சந்தித்தார். அமெரிக்க அரசுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்ட தகவலில் இருவரும் இலங்கை குறித்து விவாதித்துள்ளார்கள். அண்ணா மைய நூலகத்தில் ஹிலாரி பேசும் போது அமெரிக்காவும் இந்தியாவும் ஜனநாயக மதிப்பீடுகளுக்காக இப்பிராந்தியத்தில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் அவர், “அமெரிக்கா பசிபிக் பிராந்தியத்தில் சக்தி படைத்த நாடு. இந்து மகா சமுத்திரம் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையே இருக்கும் பிராந்தியத்தில் இந்தியா ஒரு மேலாளர். இந்த பகுதி விதிமுறைகளை ஒழுங்காக கடைப் பிடிக்குமா? சர்வதேச விதிமுறைகளை கடைப்பிடித்து இங்கு சமூக நிறுவனங்கள் எழுப்பப்படுமா ? இரு நாடுகளுக்கும் இந்த பகுதியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும்பங்கு உள்ளது” என்று தெரிவித்து விட்டு சென்றார்.

இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தம் என்பது 2011 -க்குப் பிறகு வேகம் பெற்றது. ஜெயலலிதாவும் அன்றிலிருந்து இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக உரத்த கடுங்குரல் எழுப்பி வருகிறார். அவருடைய பகட்டு நடிப்புத்திறம் கருணாநிதியையும் விஞ்சி நிற்கிறது. இலங்கை தொடர்பாக இரண்டு கணக்குகளை இந்தியா எடைபோட்டு வருகிறது. இரண்டுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானதல்ல. ஒரு பக்கம் தனது செல்வாக்குமிக்க பகுதியில் சீனா செய்து வரும் ஆதிக்கத்தால் இந்தியா கவலை கொள்கிறது. 2007-ல் இலங்கை JY –11 3D ரேடார் கருவியை சீனாவிடமிருந்து பெற்றபோது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணன் ஆவேசப்பட்டார். அதை, இந்திய வளிமண்டலத்தை ஆக்கிரமிக்கும் சீனாவின் சதியாக கருதினார். இலங்கைக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியாவால் தர இயலும் என்று கூறினார். அதனை அடியொற்றி 2009-ல், ஐ.நா மனித உரிமைகள் குழுவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா இந்திய ஆட்சியாளர்களிடம் இலங்கையில் ஒரு ‘ஆட்சி மீள்ஒழுங்கமைவு’ ஒன்றிற்கு ஒத்துழைப்பை கோரியிருப்பதாக தெரிகிறது. இந்தியாவுக்குரிய வெகுமானத்தையும் அமெரிக்கா அளிக்கும். அதன்படியே 2009-ல் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.

மூலம் : Whose Agenda? US Strategic Interests, India, and Sri Lankan War Crimes
தமிழில் : சம்புகன்