Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 706

திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

82
திவ்யா
சென்னை உயர்நீதி மன்றத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் திவ்யா

திவ்யாவின் தாலியை இரக்கமின்றி அறுத்தெறிந்த பாமகவினர் இன்று காலையில் திவ்யாவையும், அவரது தாயாரையும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்தனர்.

மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான். நாகராஜின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த சாதி வெறியர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதும் உடன் திட்டமிட்டு தலித் மக்களின் ஊர்களை நாசமாக்கினர். அப்போதும் பாமகவின் சாதி வெறி அடங்கவில்லை. இவர்களை துணிவுடன் எதிர்த்து நின்று கணவன் இளவரசனுடன் வாழ்ந்து வந்த திவ்யாவை எப்படி பிரிப்பது என்று இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்.

பல மாதங்களுக்கு பிறகு திவ்யாவை தந்திரமாக ஊருக்கு வரவழைத்து தாய், தம்பிக்கு ஏதாவது ஏற்படும் என்று அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அவரை இளவரசனிடமிருந்து பிரித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அழுதவாறே பேசும் திவ்யாவே இதற்கு சாட்சி. இதன் மூலம் வன்னிய மானம், கௌரவம் மீட்கப்பட்டதாக வெட்கமின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பேசி வந்தனர் பாமக சாதி வெறியர்கள். அதன் ஆதாரங்களை ராமதாஸின் அடியாள் அருளின் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்நிலையில்தான் இளவரசனது மரணம் ஏற்படுகிறது. இது கொலையா, தற்கொலையா என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இரண்டுக்குமே இந்த சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இளவரசன் மரணத்திற்கு பிறகு திவ்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பையும் பாமகவினர் வைத்திருந்தனர். ஏனெனில் திவ்யாவும், அவரது தாயார் தேன்மொழியும் அவர்களது சிறையில்தான் இருந்தார்கள். இளவரசன் மரணம் கண்டு கலங்கி, தான் எவ்வாறு பாமகவினரால் அச்சுறுத்தப்பட்டேன் என்று திவ்யா கூறிவிட்டால் பாமக தலைகளுக்கு ஆபத்து உறுதி. இதனாலும், திவ்யா ஏதும் மனம் மாறி தங்களது வன்னிய மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் அவருக்கு ஆபத்து என்பது நிச்சயமாகவே நிறையவே இருந்தது. மேலும் இந்த பாமக சாதி வெறியர்கள் எந்த கொலைபாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் என்பதும் கூடுதல் காரணம்.

இதை முன்யூகித்தே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நேற்று தொடுத்த வழக்கில் திவ்யாவுக்கு கவுரவக் கொலை நிகழும் ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டியது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உடன் அரசு அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் திவ்யாவை பார்த்து அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இளவரசனது மறைவை அடுத்து ஊடகங்கள் மற்றும் இணையம், கள நிலவரப்படி தமிழக அரசியல் அரங்கில் பாமக சாதி வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இளவரசனது மரணம் சாதி வேறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரையும் பாமகவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திவ்யாவுக்கு ஏதாவது நேர்ந்தால் தமது தலை தப்பாது என்று பயந்து போயே இப்போது தாய், மகளை தருமபுரி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இந்த ஒப்படைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பாமக தலைவர்களிடம் கேட்டால், “இல்லையே நாங்கள் ஒப்படைக்கவில்லையே, அவர்களாகத்தான் சென்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று பட்டுக் கொள்ளாமல் பேசுகிறார்களாம். ஆனால் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர் பேசும் போதும் கூட தீவட்டி தடியர்கள் போன்று நின்று கொண்டு போஸ் கொடுத்த போது இருந்த ‘வீரம்’ இப்போது எங்கே போனது? இல்லை இதுநாள் வரையிலும் திவ்யா பாமக கட்டுப்பாட்டில்தான் இருந்தார் என்பதற்கு இந்த கோர்ட் காட்சிகளும், அது வெளியான எல்லா டிவி காட்சிகளும் இருக்கிறது என்பது கூட இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ஆனால் பாமக தொண்டர்களிடம் கேட்டால், “எதுக்கு சார் பிரச்சினை, இனிமேலும் அந்த பெண்ணை வைத்திருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சினை அதான் கொண்டு விட்டுவிட்டோம்” என்று பட்டென்று பேசுகிறார்களாம். இதெல்லாம் நமது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்த செய்திகள். மேலும் இளவரசனது மறைவை ஒட்டி பத்திரிகையாளர்கள் திவ்யாவை சந்திப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்தும் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் காத்ததும் இதே பாமக தலைவர்கள்தான்.

தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திவ்யா என்ன பேச வேண்டும் என்று இவர்கள் மிரட்டியபடியே சொல்லிக் கொடுத்துதான் அனுப்பியிருப்பார்கள். ஆனால் திவ்யா அதை மறுத்து உண்மையை பேச வேண்டும். பேசினால் இளவரசனது மரணத்திற்கு இந்த பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும். இளவரசன் மறைவுக்காக கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் திவ்யா அதைச் செய்ய வேண்டும். தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும். ஆனால் அப்படி திவ்யா பேசிவிடக்கூடாது என்பதில் அவரது தாயார் கூட இருந்து கவனிப்பார் என்பது பாமக சாதி வெறியர்களது எதிர்பார்ப்பு.

மகன் மறைவு குறித்து ஆரம்பத்தில் திவ்யாவை அழுது கொண்டே திட்டிய இளவரசனது தந்தை தற்போது பாசம் கொண்டு பேசுகிறார். இப்போதும் திவ்யா தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் ஏற்றுக் கொள்வேன், அவளைப் படிக்க வைத்து மறுமணமும் செய்து வைப்பேன் என்று கூறுகிறார். எவ்வளவு துயரத்திலும் உழைக்கும் மக்களின் பண்பாடு எப்படி மேலானதாக இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்?

மறுபுறம் பாமக சாதிவெறியர்கள் ஒரு இளஞ்சோடியை பிரித்து கணவனை கொன்று அடையும் மகிழ்ச்சியின் வக்கிரத்தை இதோடு ஒப்பிட்டு பாருங்கள்!

பாமக சாதிவெறியர்களை ஒழிக்க வேண்டும் என்பதில் யாராவது மாறுபட முடியுமா?

இந்த நேரத்தில் வன்னிய இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் வெளிப்படையாக இந்த பாமக சாதிவெறியர்களை கண்டிக்க முன்வரவேண்டும். அது ஏதோ தலித் மக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நமது தமிழக மக்கள் அனைவருக்கும் செய்து கொள்ளும் உதவியாக இருக்கும். சாதி வேறுபாடு இன்றி வர்க்கமாக நாம் ஒன்றிணையும் போதுதான் நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட முடியும்.

பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!

ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

31

1. சென்னையில் புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

என்ற முழக்கங்களுடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

2. திருச்சி மனித உரிமை பாதுகாப்பு மையம் நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம்

  • இளவரசன் மரணம் தற்கொலையல்ல! ஆதிக்க சாதிவெறிப் படுகொலை!
  • திருச்சியில் நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் எழுச்சிமிக்க போராட்டம்!
  • ராமதாஸ் படம், பா.ம.க கொடிகள் எரிப்பு!

ருமபுரியில் திவ்யா-இளவரசன் காதல் தம்பதியரைப் பிரித்த சாதி வெறியர்களின் கொடுஞ்செயலால் தமிழகமே குமுறிக்கொண்டிருந்த நிலையில் 04.07.2013 அன்று வந்து சேர்ந்த இளவரசனின் மரணச்செய்தி நம்மை அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. அதே நேரத்தில் சாதிவெறிக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் பாடை கட்டுவதில் முன்கையெடுத்து இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த – பெரியார் பிறந்த இந்த மண்ணில் இன்று சாதி வெறி தலை விரித்தாடும் நிலையும் அதை தடுக்க முடியாத இயலாமையும் நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

அனைத்து ஓட்டுச் சீட்டு கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் சாதிவெறி தலைவிரித்தாடும் நிலையில் ஜனநாயக சக்திகள் சோம்பிக்கிடக்க முடியாது; எதிர் வினை செய்தே தீர வேண்டும் என்ற வகையில் தமிழகத்தின் மவுனத்தை உடைக்கும் முயற்சியாக 05.07.2013 அன்று காலை 10 மணியளவில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற வாயிலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் இரா.ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், “இளவரசனின் மரணம் தற்கொலையல்ல; ஆதிக்க சாதிவெறிப் படுகொலையே” என்று வலியுறுத்தியதுடன், ஆதிக்க சாதி வெறி கொடூரன் ராமதாஸ் தலைமையிலான சமூக விரோத கும்பலைக் கைது செய்யவும், பா.ம.க, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தடை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் இராமதாசின் உருவப்படம் மற்றும் பாமக கொடிகளும் எரிக்கப் பட்டன.

  • பெரியார் பிறந்த மண்ணில் ஆதிக்க சாதிவெறியாட்டத்தை அனுமதியோம்!
  • ஆதிக்க சாதிவெறியர்கள் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை கைது செய்!
  • பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை தடை செய்!

என்று முழக்கமிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலமாக நாம் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட போது வழக்கறிஞர்கள் பலரும் தங்களை இப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டணர்.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த மக்களைப் பார்த்து, ”பாமக-வும் ராமதாசும் பதவி சுகம் அனுபவிக்க மக்கள் ரத்தம் சிந்தணுமா?”,என்று முழக்கமிட்டு கேள்வி எழுப்பியது அவர்களின் சிந்தனையைத் தூண்டியது. மேலும் சாதியையும் மனுநீதியையும் மக்களை திரட்டி அழித்தொழிப்போம் என்று உணர்வுபூர்வமாக நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி பகுதியில் சாதியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னோட்டமாக இருந்தது. காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய நம்மை முன்கூட்டியே வந்து கைது செய்ய காத்துக்கொண்டிருந்த போலீஸ் பட்டாளம் – இப்போராட்டத்திற்கு மக்கள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் வெளிப்பட்ட ஆதரவை கண்டு அடக்கிக்கொண்டது.

சாதி வெறிக்கு தனது தந்தையையும் தற்போது கணவனையும் பலி கொடுத்து தவிக்கிறார் திவ்யா. தனது தாயையும் தம்பியையும் இழந்து விடுவேனோ என்று அஞ்சுமளவுக்கு அச்சுறுத்தப்பட்ட அவர் தற்போது தன்னையும் இழந்து நிற்கிறார். சாதி வெறிக்கு மண்டியிட்டு பணிந்து போவதா? தமது ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் இளமை முறுக்கோடு எதிர்த்து நிற்பதா என்பது இன்று ஒவ்வொரு தமிழ் இளையோரின் முன்னும் நிற்கும் முக்கிய கேள்வி! பின்வாங்கி காட்டு மிராண்டி காலத்திற்கு செல்ல முடியாது. காட்டு மிராண்டிகளை காட்சி சாலையிலும் அவர்களின் காலத்திற்கொவ்வாத கலாச்சாரத்தை சவக்குழியிலும் வைக்க வேண்டிய அவசியம் எழுந்து விட்டது.

பதவிக்காகவும் பவிசுக்காகவும் கற்காலத்தை மீட்க துணிந்து விட்டது ஒரு கூட்டம்! சவாலை எதிர்கொள்ள இளைய சமுதாயமே எழுந்து நில்!

எதிர்காலக் கனவுகளை நெஞ்சில் தேக்கி புது வாழ்வு துவங்கிய அந்தத் தம்பதிகளை துவக்கம் முதலே துன்புறுத்தி மகிழ்ச்சியைக் குலைத்து அடுத்தடுத்து கொடுமைக்குள்ளாக்கி அதில் பட்டாசு வெடித்து இன்புறும் கயவர்களை எதிர்த்த சாதிவெறிக்கெதிரான இப்போராட்டத் தீ நாடு முழுவதும் பரவ வேண்டும். அந்த அப்பாவி சகோதரிக்கு நாம் காட்டும் ஆதரவுதான் எதிர் காலத்தில் மேலும் பல நிராதரவான திவ்யாக்கள் உருவாகாமல் தடுக்கும். இளம் உள்ளங்களின் இரத்தம் குடிக்கும் சாதி வெறிக் காட்டேரிகளை தமிழகத்தின் மண்ணிலிருந்தே துடைத்தொழிக்க வழி வகுக்கும். அந்த திசையில் தொடர்ந்து போராடுவோம்!

கவுரவக் கொலைகள், கட்டைப்பஞ்சாயத்து வகையறாக்களை தமிழக மண்ணிலிருந்தும் இந்திய மண்ணிலிருந்தும் விரட்டியடிப்போம் வாரீர் என அறைகூவியழைக்கிறோம். ஜனநாயக உள்ளங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஓரணி திரள வேண்டிய தருணமிது.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு, திருச்சிக் கிளை

3. கோவை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – பேரணி, ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புகள் 05.07.2013-ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவை நீதி  மன்ற வளாகத்திலிருந்து தோழர் விளைவை ராமசாமி (பு.ஜ.தொ.மு செயலாளர்) தலைமையில் தோழர் ராஜன் ( பு.ஜ.தொ.மு தலைவர்), தோழர்  மணிவண்ணன் (ம.க.இ.க  செயலாளர்) தோழர்கள் உடன் 70 பேர் அணிதிரண்டு

  • ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, முதலான வன்னிய சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலை குற்றத்தின்கீழ் கைது செய் !
  • வன்னிய சாதி சங்கத்தை தடை செய் !

என்று  முழக்கம்  இட்டபடி கோவை செஞ்சிலுவை  சங்கத்தை நோக்கி  பேரணியாக   சென்றனர் .

சாதி  சங்கங்கள் மட்டுமே போராடக்கூடிய நிலையில் வர்க்க ஒற்றுமையுடன் தொழிலாளர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது கோவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SRI,CRI,CPC, NTC தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை சீருடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல் துறை அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்தார்கள். அங்கு சாதி வெறியர்களை குறித்து ஒரு அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது.

செய்தி : கோபிநாத், கோவை.

4. உசிலம்பட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே !
பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!

05.07.2013 மாலை 5.45 மணிக்கு இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே ! பா.ம.க தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய்!! எனும் மைய முழக்கத்தின்கீழ் விவசாயிகள் விடுதலை முன்னணியின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையை மீறி உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து வி.வி.மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் இடத்தின் அருகே ஆங்காங்கே நின்று சரியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் நேரத்தில் திடீரென கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் விண்ணதிர துவங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டதின் கூட்டத்தில் ஒருபுறம் காவல்துறை தடையை எதிர்கொண்டு தோழர் குருசாமி உசிலை வி.வி.மு செயலர் ஆற்றிய போர்க்குணமான உரையும் மறுபுறம் தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமையில் தோழர்களின் விண்ணதிரும் முழக்கமும் பார்வையாளர்களை உணர்ச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் மாற்றியது. பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாவதைக் கண்டு காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கியது. வி.வி.மு தோழர்கள் தங்களுக்குள் கைகள் கோர்த்துக்கொண்டு காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுத்த காட்சி உசிலைப்பகுதிக்கு புதிதாகவும் வி.வி.மு வின் போர்க்குணத்தை பறைசாற்றுவது போலவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

காவல்துறையின் தள்ளுமுள்ளுகளை சமாளித்தும் காவல்துறையின் அராஜகக நடவடிக்கையையும் அம்பலப்படுத்தியும் சுமார் 20 நிமிடம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இறுதியாக வி.வி.மு சார்பாக 11 பேர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக 7 பேர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட முழக்கங்கள் முழங்கப்பட்டன

தமிழக அரசே
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே
சாதி வெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

தகவல்
பு.ஜ.செய்தியாளர்கள், உசிலம்பட்டி

5. கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

ருமபுரி இளவரசனின் மரணம் – கருவறுத்த பா.ம.க சாதி வெறிக்கு முடிவு கட்டுவோம்

சாதி மாற்றி காதல் செய்து மணம் புரிந்த தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, அதற்கு பா.ம.க சாதி வெறியர்களே காரணம் என்றும், பா.ம.க, வன்னியர் சங்கத்தை தடைசெய்யக் கோரியும், கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் அனுமதி பெறவில்லை. உளவுப் பிரிவும், பத்திரிகைகளும் வந்து படம் எடுத்துக்கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகவும் இருந்ததால் கிட்டத்தட்ட 1.45 மணிநேரம் வரை சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுக்கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகளின் பிரமுகர்களும் நமது நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தலித் இயக்கங்களும் இந்த செய்தியை குறித்து குழம்பிப் போன நிலையில் புரட்சிகர அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளவரசன் எப்படி சாகடிக்கப்பட்டார். அவர் சாவின் மர்மம் என்ன? இந்த பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்க சாதி வெறிக்கு நக்சல்பாரி வழியில் வர்க்க ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், சாதி மாறி காதலித்தால் நாய் நரியும் பிறந்திடுமா? சுற்றும் பூமி நின்றிடுமா? என்று கேள்வி எழுப்பியும், மானங்கெட்ட ராமதாசே, பா.ம.க சாதி வெறியர்களே சாதி பெருமை பேசும் நீங்கள் உங்கள் சாதிப்பெண்ணை வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ளத்தயாரா? என்ற கேள்விகளுடன் தோழர்களின் கண்டன உரை கணீர் என இருந்தது. பொது மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.

வன்னியர் சாதி வெறியர்களின் முகத்தில் காரி உமிழும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடனடியாக திட்டமிட்டு தமிழக அளவில் நாம் மட்டுமே செய்துள்ளோம். கல்லூரி மாணவர்கள் ஈழத்துக்காக போராடியது போல சாதி வெறிக்கெதிராக போராட வேண்டும் என்று கூறினார். உளவுத்துறை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார், மற்றபடி காவல் துறையினர் இந்த சரியான விஷயத்திற்கு எங்களது ஆதரவு என்கிற வகையில் அனுமதி வாங்காத நிலையிலும் கிட்ட திட்ட 1.45 மணி நேரம் வரை நடத்த அனுமதித்தனர். காவல் துறை வரவேயில்லை.

தலைமை : தோழர் கருணாமூர்த்தி, செயலாளர், பு.மா.இ.மு, கடலூர்.
கண்டன உரை :
தோழர் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம், கடலூர்.
தோழர் கதிர்வேல், பு.மா.இ.மு., விருதை.
தோழர் நந்தா, இணைச் செயலாளர், கடலூர்

தகவல்
புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !

17

இளவரசன் அம்மகொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!
அவன் சாவுக்கு காரணம்
வன்னிய சாதிவெறி கவுச்சி!

அடுக்கடுக்காக
வாழ விட்டதா சாதிய வன்மம்!

திவ்யா தந்தையை ‘தற்கொலை’ செய்து
அவர் பிணத்தை வைத்தே காலனி எரித்து
சேர்ந்து வாழ்ந்த ஜோடியைப் பிரித்து,
குடும்பங்களை சின்னா பின்னமாக்கி
கடைசியில்,
சாதி தாண்டி சிந்தித்தவனை
மூளை சிதைய பிணமாக்கி…
இந்த கேவலங்களைச் செய்வதற்கு
சாதிப் பெருமை என்ன இருக்கு?

எல்லா சாதிக்கும் பசிக்கும்
எல்லா சாதிக்கும் வலிக்கும்
எல்லா சாதிக்கும் காதல் வரும்

எங்க சாதி தான் ஒசத்தியென்று…
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை…
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?

ஓ! சந்தேகமேயில்லை!
கொலையை மகிழவும்
பிணத்தை ரசிக்கவும் முடிந்த நீ
உண்மையிலேயே ‘ஆண்ட’ பரம்பரைதான்டா?

சந்தேகம் ஒன்று
சாதிப் புழுவாய் நெளிவதற்கு
மனிதப் பிறவி ஏன்டா?

என்ன குற்றம் செய்தான் இளவரசன்?

காதலித்தவளையே கரம்பிடிப்பதும்
கவுரவமாக இல்லறம் காண்பதும்
உன் சாதிக்கு ஒவ்வாது என்பதை விட
ஒழுக்கக்கேடு வேறு உண்டா?

எல்லோரையும் போல
அவனும் வாழ விருப்பமுள்ள, இளைஞன்,
விரும்பிய பெண்ணை மணமுடிக்க
அவனுக்கும் ஆசையுண்டு… உரிமையுண்டு,

குடும்பப் பாசமுண்டு
வேலைதேடும் குறிக்கோள் உண்டு,
நிறுத்தப்பட்ட அவன் இதயத்துடிப்பில்
திவ்யாவுடன் மட்டுமல்ல,
இந்தச் சமூகத்துடனும் பகிர்ந்துகொள்ள
நிறைய உணர்ச்சியுண்டு…

பிடித்த மனைவியை
பிரித்த போதும்
கண்ணியம் காத்த இளைஞனை
காவு வாங்கி விட்டு
வன்னியப் பெருமையென
பட்டாசு கொளுத்தி
கொண்டாடுபவனை விட
பயங்கரவாதி யாருண்டு?

சேர்ந்து வாழ்ந்தவன்
முகத்தைப் பார்க்கவும் முடியாமல்
வாழ்வின் காரணங்கள் நெருக்க
உயிரோடு அறுக்கப்படுகிறாள் திவ்யா,

சேர்ந்து வாழ்வோம் எனும் நம்பிக்கையில்
ஆவி ஆடங்கி,
சாவுக்கான காரணம் தேடி
பிணமாக அறுக்கப்படுகிறான் இளவரசன்.

குருத்துவிடும் வாழையை
குலைக்கும் எருமையை
எங்கள் வீட்டு பெருமை என்று
எவனும் இழுத்து வைத்து கொஞ்சுவதில்லை!

இளைய வாழ்வை
அவலமாக்கிய அயோக்கியர்களை
சொந்த சாதி என்று அணைக்க
உனக்கு வெட்கமாய் இல்லை?

வன்னியரை
மனித இனத்துக்கே
அன்னியராக்கும் சாதிவெறி!
வந்து அதை பற்ற வைப்பவன்
உன் வர்க்க எதிரி!

உன் அக்கினி குண்டத்தின் பெருமையை எடுத்து,
சொந்த சாதி அயோக்கியத்தனத்தை
சுட்டு எரி!

தாழ்த்தப்பட்டவர்
தான் ஜீன்ஸ் பேண்ட் போட்டதையும்,
கூலிங்கிளாஸ் அணிந்ததையும் கூட
தாங்க முடியாமல்,

ஊருக்கு ஊர்போய் ‘நாடகக் காதல்’
‘நாடகத் திருமணம்’ என உசுப்பிவிட்டு
ஊரையே கொலையில் இழுத்து விட்டு
இப்போது சொல்கிறார்கள்
இந்த யோக்கியர்கள் “காதல் தனிப்பட்ட பிரச்சனை”
பிணத்தைப் போட்டு தாண்டுவதில்
பா.ம.க.வுக்கு உலகில் எந்தப் பொய்யன்
ஈடு இணை!

இளைய சமூகமே!
பறிகொடுத்திருப்பது
யாரோ ஒரு பையனை அல்ல,
ஒரு புதிய தலைமுறையை!
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கவோ
நாம் இத்தனைப் பேரும்…

புலரும் விடியல் அனைத்தையும்
சாதிவெறிக்கு பழியாக்கும்
ஆதிக்க சாதிவெறி கொடூரத்தை
தேசமே திரண்டெழுந்து ஒழிப்போம்!

– துரை.சண்முகம்

திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

2

ளவரசன் மரணத்தை அடுத்து, திவ்யா மற்றும் இளவரசனின் உறவினர்களின் உரிமைகள் பாதுகாப்பதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மூத்த வழக்கறிஞர் வைகை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஆஜரானார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை 5-ம் தேதி பிற்பகல் நடைபெற்றது.

chennaihighcourt

பிரதான மனுவில், இளவரசன் மரணம் குறித்தும், திவ்யா மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதைத் தவிர இடைக்கால நிவாரணம் கோரி பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

1. திவ்யாவுக்கு உடனடியாக முறையான கவுன்சலிங், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  அவரது பாதுகாப்பு, நலவாழ்வு, மனித உரிமைகளை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

2. இளவரசனுடைய இறுதி நிகழ்வுகளில் திவ்யா பங்கேற்க விருப்பப்பட்டால் அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து, தகுந்த  பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

3. தருமபுரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவின் காரணமாக இளவரசனுடைய உறவினர்களும், நண்பர்களும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

4. தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், திவ்யாவின் மீது செலுத்தப்பட்ட சாதீய அமைப்புகளின் தாக்கத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

காலையில் வழக்கறிஞர் சங்கரசுப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், இளவரசன் உடலின் போஸ்ட்மார்ட்டத்தை காலையில் 7-9 மணிக்கே முடித்து விட்டதாகவும், அந்த அறிக்கையை தருவதாகவும், அதில் திருப்தி இல்லை என்றால் மறு பரிசோதனை செய்யலாம் என்றும் அது வரை உடலை பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு உடலை செவ்வாய் கிழமை வரை அடக்கம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

திவ்யா-இளவரசன் காதலை முன் வைத்து ஏற்கனவே திவ்யாவின் தந்தை, இளவரசன் என்று 2 உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன. திவ்யாவும் கௌரவக் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த உயிர்ப்பலியை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திவ்யாவை உடனடியாக அரசு பாதுகாப்பில் அழைத்து வந்து சென்னையில் பெண்கள் விடுதி ஒன்றில் தங்க வைத்து உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று வாதாடப்பட்டது.  அரசு அதிகாரிகளும், மன நல மருத்துவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும்  திவ்யாவை சந்தித்து பேசுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் அரசே அதிகாரியையும் மனநல மருத்துவரையும் அனுப்பி அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

அதை அடுத்து, இது குறித்து திவ்யாவின் விருப்பத்தை தெரிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசின் பொறுப்பான அதிகாரியை இதற்காக நியமித்து, அரசு மனநல மருத்துவருடன் அவர் திவ்யாவை சந்தித்து, அவருக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா, அச்சுறுத்தல்கள் எதுவும் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். அவருக்கு மனநல கவுன்சலிங் வேண்டுமா, இது குறித்து பேசுவதற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் இருக்கிறதா என்றும் திவ்யாவிடம் கேட்டு திங்கள் கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டனர்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !

3
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன்

ளவரசனின் உடல் வைக்கப்பட்டிருந்த தருமபுரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் அவசர அவசரமாக பரிசோதனை செய்து விட்டு அடக்கம் செய்து விட போலீசும் அரசும் திட்டமிட்டிருந்தனர். 144 தடை உத்தரவு இருப்பதால் இறுதி ஊர்வலத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்று காவல் துறை கண்காணிப்பாளர் கூறியிருந்தார்.

இதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இன்று காலை மருத்துவமனை முன்பு பெரும் எண்ணிக்கையில் கூடினர். இளவரசன் தரப்பில் 2 மருத்துவர்களும் பிரேத பரிசோதனையின் போது உடனிருக்க வேண்டும், உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இளவரசனின் வழக்கறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து முழக்கம் எழுப்பினர். மருத்துவமனை முன்பு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர்.

இதற்கிடையில் வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், அரசுத் தரப்பில் இளவரசனின் உடலை பதப்படுத்தி பத்திரமாக மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையையும், அதன் வீடியோ பதிவையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திவ்யாவை பாட்டாளி மக்கள் கட்சியின் பிடியிலிருந்து விடுவித்து அரசு பாதுகாப்பில் அல்லது நீதி மன்ற பாதுகாப்பில் பராமரிக்க வேண்டும் என்ற மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்த மக்கள் கூட்டம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களின் பிரச்சாரம், முழக்கம்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]

செய்தி, படங்கள் : விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி

பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!

12

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே !

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்றும், நாளையும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

ஆர்ப்பாட்டத்தின் மைய முழக்கங்கள் :

தமிழக அரசே,

  • ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
  • வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே,

  • சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
  • சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

தகவல் :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

ளவரசன் மரணத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜூ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு , விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்

நாள் 5-7-13

பத்திரிக்கைச் செய்தி

ருமபுரியில் நிகழ்ந்த இளவரசனின் மரணம், அதன் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போதும், இறந்த சூழ்நிலையை ஒப்பிட்டு பார்க்கும்போதும் அது திட்டமிட்ட படு கொலையாகவே தெரிகிறது. திவ்யா இளவரசன் காதல் திருமணத்தின் விளைவாக, திவ்யாவின் தந்தை படுகொலை, பிறகு நத்தம் காலனி சூறையாடல், தீவைப்பு, பிறகு மரக்காணம் கலவரம், அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாடக காதல் என பா.ம.க ஆதிக்க சாதியினரை ஒன்றிணைத்து தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக நடத்திய சாதி வெறி பிரச்சாரம், கடலூர் மாவட்டத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகள், இவற்றின் தொடர்ச்சியே திவ்யா-இளவரசன் நீதிமன்றப் பிரிவு, இறுதியில் இளவரசன் படுகொலை.

தன் தாய் விருப்பப்படி வாழப்போகிறேன். இனி இளவரசனுடன் சேர்ந்து வாழத்தயாரில்லை என்று திவ்யா நீதிமன்றத்தில் கூறியிருப்பது போலீசு காவலில் அச்சத்தால் கைதி கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றது. அதனை நீதிமன்றம் அப்படியே எடுத்து கொண்டு தாயாருடன் திவ்யாவை அனுப்பியது சரியல்ல. திவ்யாவிற்கும் இளவரசனுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. சாதி வெறி அரசியல் எப்படி திவ்யாவின் தந்தையை தற்கொலைக்கு தள்ளியதோ, அதுபோல் இவர்களை பிரித்ததுடன், இளவரசனையும் பலி வாங்கி விட்டது.

திவ்யாவின் தாயார் தன் பெண்ணை கடத்திவிட்டார்கள் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். திவ்யா யாரும் என்னை கடத்த வில்லை, விரும்பித்தான் இளவரசனுடன் போனேன் என நீதிபதியிடம் கூறினார். பிறகு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக தாயாருடன் செல்வதாக நேற்று முன்தினம் கூறினார். ஆரம்பம் முதலே திவ்யாவின் உறவினர்கள் மற்றும் தாயாரின் தனிப்பட்ட குடும்ப விவகாரமாக இந்த காதல் விவகாரம் இல்லை. மிகப்பெரும் சாதி வெறி அரசியலாக இப்பிரச்சனை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசனின் மரணத்தின் பின்புலத்தில் உள்ள சதிகளை மறைக்கும் பொருட்டு திவ்யா கொல்லப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியாகிய திவ்யாவை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இயற்கை காப்பாளர் என்ற முறையில் அவருடைய தாயாரிடம் விடுவதென்பது சாதிவெறி சக்திகளிடம் ஒப்படைப்பதாகவே இருக்கும். அதேபோல ஒருவேளை திவ்யாவின் சுய விருப்பத்தின் பேரில் ஆனாலும் கூட அவர் தன்னுடைய தாயாருடன் இருக்க அனுமதிப்பது ஆபத்தானது. புலன் விசாரணை முடியும் வரை அவர் அரசு அல்லது நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து இன்று எமது அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

திவ்யாவை மிரட்டிய சதிகாரர்கள் தொடங்கி இளவரசன் படுகொலை வரை, முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் தீண்டாமை வன்கொடுமை குற்றத்தில் தண்டிக்கப்படுவதை அரசும் நீதிமன்றமும் உத்திரவாதப்படுத்த வேண்டும். வெளிப்படையாக சாதி வெறி அரசியல் நடத்தி வரும் வன்னியர் சங்கத்துக்கு தடை விதிக்க வேண்டும். நத்தம் காலனி, மாமல்லபுரம், கடலூர் மாவட்ட கவுரவக் கொலைகள் வரையிலான அனைத்திலும் சாதிவெறியைத் தூண்டிவிட்ட ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர்தான், இளவரசனின் சாவுக்கும் காரணம் என்பதால், இவர்கள் அனைவரும் வன்கொடுமைக் கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு

இளவரசனின் இறுதி நாள் !

33

ருமபுரியிலிருந்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை.

தருமபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.

3-ம் தேதி அதாவது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில்தான் இருந்திருக்கிறார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக பழகியிருக்கிறார்.

4-ம் தேதி இன்று காலையில் சுமார் 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை, இளவரசன் சந்தித்திருக்கிறார். மாமாவிடம் தினத்தந்தியில் வந்த செய்தியினைக் காண்பித்து திவ்யா இப்படி கூறியிருக்கிறாளே இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் போலிஸ் வேலைக்கு செல்வதாகவும் கூறியிருக்கிறார்.

திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு போலிஸ் வேலை கிடைப்பது உறுதி என்று இளவரசன் கருதியிருக்கிறார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேறு வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தனது மாமாவிடம் சகஜமாக கூறியிருக்கிறார்.

பிறகு மாமாவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இளவரசனது தந்தை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் ரிப்போர்ட்டர் எனும் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய இளவரசன், அப்பாவிடம் இருக்கும் பல்சர் இரு சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி அப்பாவைப் பார்த்து பல்சர் வண்டியினை வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணம் 9000-த்தை சீட்டு கட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத்திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.

பல்சர் வண்டியினை அப்பாவிடம் வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையினை பார்க்கச் சென்றிருக்கிறார் இளவரசன். அங்குதான் அத்தையிடம் தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப்பகுதியில் இருக்கும் ஒரு நண்பனை பார்க்கச் செல்வதாக கூறியிருக்கிறார். இந்த நண்பர் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். 3-ம் தேதி இரவு இவர் நத்தத்தில் இளவரசனோடு அவரது வீட்டில் தங்கியிருக்கிறார். இவரை சந்திக்கச் செல்வதாக அத்தையிடம் கூறியிருக்கிறார் இளவரசன்.

அத்தையும் வெளியே தேவையின்றி சுத்தாதே என்றும், அடையாளம் தெரிந்து யாராவது அடித்துவிடக்கூடும், ஹெல்மெட் போட்டுக் கொண்டு போ எனக் கூறியிருக்கிறார். ஹெல்மெட் வேண்டாம் என்று கூறியபடி இளவரசன் நண்பனை பார்க்கச் சென்றிருக்கிறார்.

பிறகு மதியம் இளவரசன் தந்தைக்கு அவருக்கு தெரிந்த போலீஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாக கூறியிருக்கிறார் அந்த போலீசு. அங்கே சென்ற பிறகுதான் தனது மகன் இறந்து கிடப்பது அவருக்கு தெரியும்.

இளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது. மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டிலும் இருந்தது. கூட இருந்த பையில் 2011-ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள் இருந்ததாக போலிசு தெரிவித்திருக்கிறது.

இளவரசன் தந்தையிடம் பேசிய போது இது தற்கொலை என்பதை அவர் நம்ப முடியவில்லை. இளவரசனது ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். ஏனெனில் தனக்கு எப்படியும் போலீஸ் வேலை கிடைக்கும், வேலை கிடைத்ததும் திவ்யா திரும்ப வருவாள் என்றுதான் பலரிடம் அவர் பேசியிருக்கிறார். பிரச்சனை வந்த போது தனது பெற்றோருக்கு அவரே ஆறுதல் சொல்வார் என்று தந்தை கூறுகிறார்.

செய்தி கிடைத்ததும் நத்தம் காலனி மற்றும் அருகாமை ஊர்களிலில் இருந்து மக்கள், தருமபுரி மருத்துவக் கல்லூரியில் குழுமி விட்டனர். நாளை காலை 9 மணிக்கு அங்கே இளவரசனது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அந்த பிரேதப் பரிசோதனை துறையில்தான் இளவரசனது தந்தை வேலை செய்கிறார் என்பது துயரம் வாய்ந்தது.

நத்தம் காலனி மக்களிடம் பேசிய போலிஸ் எஸ்.பி அஸ்க்ராகார்க் 144 தடை உத்திரவு போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு, இறுதி ஊர்வலத்திற்கு கூட்டமாக யாரும் செல்லக் கூடாது என்றும் பத்துபேர் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா, இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை மற்றும் அடுத்த கட்ட விசாரணைகளில் அது உறுதியாகத் தெரியவரும். ஆனால் இளவரசனை அறிந்தவர்கள் அவர் தற்கொலை செய்திருப்பார் என்பதை பெருமளவு நம்பவில்லை.

திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் மற்றும் அருகில் இருக்கும் பெரியார் மேட்டுப்பட்டி, அரியாகுளம் போன்ற ஊர்களில் இருக்கும் வன்னிய சாதி வெறியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று அருகாமை வட்டாரங்களில் தகவலை தெரிவித்துவிட்டு கூடவே பட்டாசையும் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இளவரசனது உடல் தருமபுரி மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் அமைதியாக உறங்குகிறது.

______________________________________________________________________
தகவல் மற்றும் படங்கள்: விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி.
______________________________________________________________________

யில்வே டிராக்குக்கு அருகில் இளவரசன் உடல் கிடந்த இடத்தில் மக்கள் கூடினர்.

ருமபுரி அரசு மருத்துவமனைக்கு வெளியில் இளவரசனின் உறவினர்களும் ஊர் மக்களும் கூடி நிற்கின்றனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இளவரசன் மரணம் : திவ்யாவின் தாலியறுத்த பா.ம.க சாதி வெறியர்கள் !

130

ன்று காலை தருமபுரி கலைக்கல்லூரிக்குப் பின் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது கொலையா தற்கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை.

இளவரசன்
இளவரசன்

இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய கொலையாளிகள பா.ம.க வின் சாதிவெறியர்கள்.

திவ்யாவின் தந்தையுடைய மரணத்துக்கும் இவர்கள்தான் காரணம். ஒரு கலவரம் நடத்துவதற்காகவே திவ்யாவின் தந்தையை மரணத்துக்குத் தள்ளியவர்கள் இந்த கொலைகாரர்கள்.

நேற்று திவ்யாவை உயர்நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து “நான் சேர்ந்து வாழ விரும்வில்லை” என்று பேட்டி கொடுக்க வைத்தார்கள். அதை மிகவும் பெருமையாக பிரசுரித்து மகிழ்ந்தார் பசுமைப்பக்கங்கள் அருள்.

இன்று “வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா” என்று தலைப்பிட்டு பசுமைப்பக்கங்கள் அருள் மிகவும் சந்தோசமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவருடைய மட்டற்ற மகிழ்ச்சிக்கு காரணம், குரல் தழுதழுக்க திவ்யா அளித்திருக்கும் தொலைக்காட்சி பேட்டி. அவர் வெளியிட்டிருக்கும் அந்த பேட்டியில் திவ்யா கூறியிருந்தது இதுதான்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன். அம்மாவும் வேணும் அவுங்களும் வேணும்னுதான் இவ்வளவு நாள் வரையிலும் இருந்திட்டிருந்தேன். ஆனா மேற்கொண்டு எனக்கு என்னுடைய அப்பாவோட நினைவுகள் இருந்துகிட்டே இருக்கிறதுனாலே எனக்கு சேர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் சேர்ந்து வாழத் தயாராவே இல்லை. நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன். இதைத்தான் நான் நீதிபதிகிட்டேயும் சொன்னேன். ஆனா ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால, இன்னிக்கி நான் யாரோட ஆதரவுமே இல்லாம தனிமையில நிக்கிறேன். நான் வந்ததே என்னுடை பேரண்ட்சோட எதிர்பார்ப்புக்காகத்தான், அவுங்க கூட வாழணும். எனக்கு நீங்கதான் முக்கியம். நான் செஞ்சது தப்பு அப்பிடிங்கிறத உணர்ந்து நான் வந்தேன். ஆனா அவுங்க ஒரு தவறான செய்திய வெளியிட்டதனால, எல்லார் மத்தியிலயும் எனக்கு ஒரு ஆதரவு கிடைக்காம இன்னக்கி நான் தனிமையில நிக்கிறேன். அத விளக்குறத்துக்காகத்தான் நான் இன்னிக்கி கோர்ட்டுக்கு வந்தேன்”

“தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார் “ என்று நாம் சென்ற பதிவில் எழுதியிருந்தோம். “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று தெளிவுபடுத்துவதற்காக திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் சத்திரியர்கள்.

இந்த ஒரு வரியைக் காட்டி வினவின் முகத்தில் திவ்யா கரி பூசிவிட்டதாக கொக்கரித்திருந்தார் அருள்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொல்லத் தொடங்கி, “வாழத்தயாராக இல்லை” என்று கூறி முடிக்கும், பரிதாபத்துக்குரிய ஒரு பெண்ணின் கண்ணீரில் மகிழ்ச்சியடையும் மனவக்கிரம் பிடித்த இந்த மிருகங்களை என்ன செய்வது?

கண்ணகி, முருகேசன் கொலை ஒரு ரகம். இது ஒரு ரகம்.

நேற்று திவ்யாவின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினார்கள். இன்று தாலி கட்டிய கணவன் அகற்றப்பட்டு விட்டான்.

மீண்டும் சொல்கிறோம். தற்கொலையே ஆனாலும் இது கொலைதான். இதற்கு முழுப்பொறுப்பு பா.ம.க.

ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!

திவ்யாவை உடனே அவரது குடும்பத்தினரிடமிருந்தும் சாதி வெறிக் கும்பலிடமிருந்தும் விடுவிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் திவ்யாவையும் இளவரசனையும் மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உடனே திவ்யாவை விடுவிக்காவிட்டால், தங்களுடைய குற்றங்களை மறைக்கும் பொருட்டு, சாதிவெறியர்கள் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு, தற்கொலை என்று முடித்து விடுவார்கள்.

சாதி வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வோம்! சாதிக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்!

கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

16

ன்னியர்களை மணமுடிக்கும் தலித்துக்களின் காதலை நாடகக்காதல் என்று வெறி கொண்டு எதிர்க்கும் பாமக, இதற்காக தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை அணிதிரட்டி வருவது நமக்கு தெரியும். இதற்காகவே தருமபுரி தலித் இளைஞரான இளவரசனிடம் இருந்து வன்னியப் பெண்ணான திவ்யாவை மிரட்டி பிரித்து வைத்து அழகு பார்த்தவர்கள் இந்த வன்னிய குல ஷத்திரியர்கள் ! நிர்ப்பந்தத்தில் பேசும் திவ்யாவின் அவலத்தை வைத்தே வன்னிய மானம் மீட்கப்பட்டதாக துள்ளிக் குதிப்பவர்கள் இந்த சாதி வெறியர்கள்.

ஆனாலும் வரலாறு அவர்களின் துள்ளலை எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கும்? சொந்த சாதியில் பெற்றோர், உற்றோர் உறவினர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நாடகக் காதலை எதிர்க்கும் பாமகவினர் தமது சொந்த வாழ்க்கையில் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்? இதோ கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் கதையை படியுங்கள்!

அரசியல் ரவுடி
திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பாட்டாளி மக்கள் கட்சி.

ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான ஆறுமுகம். அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய இவர் பா.ம.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதானவர்.

மே மாதம் காதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு வெயிலுக்கு அஞ்சி திருச்சி சிறையில் இருந்த போது மேற்படி ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். மே 22-ம் தேதி நடந்த அவரது மகள் திருமணத்துக்குக் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் அவர் இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறது. பின்னர் மே 27-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்திருக்கிறார். இப்படி பாமக கொள்கையிலும், போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட மாபெரும் வன்னிய குல ஷத்திரிய வீரர்தான் இந்த ஆறுமுகம்.

கள்ளக் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் எதிரான பா.ம.க.வின் உண்மையான களப் போராளியான ஆறுமுகம் மே மாதம் 30-ம் தேதி கொத்தாம்பாடி வழியாகச் செல்லும் வசிஷ்ட நதிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்ததால் ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள் மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு பாமக பிரமுகரும் களப் போராளியுமான ஆறுமுகம் உடைந்த வளையல்கள் சூழ ஏன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? கொள்கைக்காக கொல்லப்பட்டிருந்தால் வெளிப்படையாக இன்னார்தான் எதிரிகள் என்று தெரிந்திருக்கும். கொள்கை இடத்தில் மர்மமும் வளையலும் இருந்தால் என்ன பொருள்?

பா.ம.க.வின் சமூக நீதி கோட்பாட்டின்படி முறையாக திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு 25, 21 வயதான இரண்டு மகன்களும் 22 வயதான மகளும் உள்ளனர். அதாவது பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் அய்யா ஆறுமுகம் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது. வன்னிய மக்களின் மானத்திற்கும், பொறுப்பிற்கும் சொந்தக்காரர்களான பாமக கட்சியின் பிரமுகரே அதுவும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதால் ‘அம்மாவின்’ ஆத்தூர் போலீசு கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். தமிழகத்திலேயே புகழ் பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பாமகவின் மானத்தையும், மர்மத்தையும் கண்டு பிடிக்க வேண்டிய கடமையை நாய் அர்ஜூன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

விசாரணையின் போது கல்பகனூரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. உடனே ஒரு பாமக பிரமுகர் கள்ள உறவு வைத்திருப்பதா என்று பாமக சொந்தங்கள் பொங்கி எழுமென்று யாரும் எதிர்பார்க்கவேண்டாம். கள்ள உறவு இல்லையென்றால் ஷத்திரிய குலத்தின் ஆண்மைக்கு பெருமையில்லை.

எனினும் போலீசார் மனதை இரும்பாக்கிக் கொண்டு அந்த செல்வியிடம் விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் செல்வியும் அழுது அரற்றியவாறு கூறியது என்னவென்றால் வசிஷ்ட நதிக்கரையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், “மாஜி’ கள்ளக் காதலன் வனராஜா எட்டி உதைத்தபோது, ஆறுமுகத்தின் ஆண் குறியில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

இப்படி புராணச் சிறப்புள்ள இந்த மர்மக் கொலையின் மூலத்தை ஆத்தூர் போலீசு தொடர்ந்து தேடியபோது முதலில் வனராஜாவை குறிவைத்தார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே வனராஜா காஷ்மீர் போகும் லாரியில் ஓட்டுனராக சென்று விட்டதும், அவர் இப்போது குஜராத்தில் இருப்பதும் தெரிய வந்தது. வனராஜா, வசிஷ்ட நதி, காஷ்மீர், குஜராத் எல்லாம் சேர்ந்து பார்த்தால் இதில் மகாபாரதமே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

வனராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்பதை போலீசார் பல சுற்று விசாரணையில் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னரே போலீசிடம் கதை சொன்ன செல்வி பின்னர் தலைமறைவாக இருந்து விட்டு வேறு வழியின்றி ஜூன் 6-ம் தேதி கல்பகனூர் வி.ஏ.ஓ. அத்தியப்பன் முன்பு ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

பிறகு போலீசில் செல்வி அம்மையார் கொடுத்த வாக்குமூலத்தை படியுங்கள்:

“என் சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அனுப்பூர். தாய்மாமன் ரத்தினவேலை நான் திருமணம் செய்தேன். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தினவேலின் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், நான் கல்பகனூரில் உள்ள எனது தாய் பழனியம்மாளுடன் வந்து வசித்து வந்தேன்.

அப்போது, பா.ம.க., கட்சியில் உள்ள பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆறுமுகம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29-ம் தேதி, கொடுத்த பணத்தை அவர் கேட்டதால், பணத்தை திருப்பி கொடுக்ககூடாது என்று முடிவு செய்த நான் இரவு 9.30 மணியளவில் அவரை “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று வசிஷ்ட நதிக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை நசுக்கிப் பிடித்து கசக்கி கொலை செய்தேன், பின்னர் நான் வீட்டுக்கு போய்விட்டேன்.”

இதுதான் செல்வி அளித்திருக்கும் வாக்குமூலம்! செல்வி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலே எழுதிய அனைத்தும் எமது சொந்தச் சரக்கு அல்ல. அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகளைத்தான் தொகுத்து எழுதியிருக்கிறோம். பொதுவில் கள்ளக்காதல் கொலை என்றால் ஊடகங்கள் அதை மலிவான ரசனையை தூண்டும் விதத்தில் எழுதும். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இங்கே ஒரு முக்கியமான பாமக பிரமுகர் கள்ளக் காதலியால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காதல், நாடகக் காதல், வன்னிய குல ஷத்திரிய வீரம், அக்னிக்கு பிறந்தவர்கள், ஒழுக்கம், என்று ஏகப்பட்ட விசயங்களைப் பேசும் அய்யாவின் பாமக நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இந்த ஆறுமுகம் ஒரு சான்று இல்லையா? பெண்டாளுவதையே ஆண்மையின் வீரம் என்று கொண்டாடுவது எல்லா ஆதிக்க சாதியிடத்திலும் உண்டு. அதிலும் இந்த ‘ஷத்திரிய’ வகை சாதிகளில் இது இன்னும் அதிகம். இந்த ஆணாதிக்க திமிர்தான் சாதிப் பெருமை என்று தலித்துக்களின் காதலை வெறுப்புணர்வுடன் ஒழிக்க நினைக்கிறது.

ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம்.

எனினும் அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது.

பின் குறிப்பு: செல்வியின் வாக்குமூலத்தில் ஆறுமுகத்தின் பாமக இமேஜை காப்பாற்ற வேண்டி சில பல மிகைப்படுத்தல்கள் போலிசால் சேர்க்கப்பட்டிருக்கலாம். செல்வியை ஒரு விலை மாது போல சித்தரிப்பது கூட அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனாலும் ஆணுறுப்பை நசுக்கி கொலை செய்யும் வண்ணம் செல்விக்கு என்ன கோபம், இது வெறும் பணத்திற்காக மட்டுமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். ஆறுமுகம்  எனும் பாமக நபர் செல்வி எனும் பெண்ணால் ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் இதில் தெரிய வரும் உண்மை. ஆகவே நமது பாமக அடிமை அருள் அவர்கள் சேலம் சிறையில் இருக்கும் செல்வியை சந்தித்து ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது ஏன் என்று வீடியோ நேர்காணல் எடுத்து உண்மையை அறியத்தருவார் என்று நம்புவோம்.

மேலும் படிக்க

சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !

1

கேரள அரசியல் தமிழ்நாடு போல இல்லை. போலி கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி எளிமையாக இருப்பார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள் என்று முன்பெல்லாம் சில அறிஞர் பெருமக்கள் பேசுவார்கள். அவர்களை கிண்டல் செய்யும் வண்ணம் சமீப காலமாக ஏராளமான ஊழல் செய்திகள் கேரளத்தில் பொங்கி வழிகின்றன.

லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினிடம் 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற சிபிஎம்மின் பினரயி விஜயன் முதல் இப்போது சரிதா நாயர் என்ற தொழில் முனைவரிடம் பல்லிளித்து நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள் வரை கேரளமும் மைய நீரோட்டத்தில் இணைந்திருப்பதை தனியார் மயமாக்கலின் சாதனை என்று சொல்லலாம்.

சரிதா எஸ் நாயர்
சரிதா எஸ் நாயர்

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க பேனல் அமைப்பது, காற்றாலை அமைப்பது போன்ற மாற்று மின் உற்பத்திக்கான வழிமுறைகளின் பெயரால் சரிதா நாயரும் அவரது கூட்டாளிகளும் கேரள மாநிலத்தில் அரங்கேற்றிய மிகப்பெரிய நிதி மோசடி ஆளும் காங்கிரசு கூட்டணியை சந்தி சிரிக்க வைத்துள்ளது.

ஆலப்புழை, செங்கனூரிலுள்ள சாதாரண குடும்பத்தை சேர்ந்த சரிதா எஸ் நாயர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்கிறார். கேரள ஹவுசிங் ஃபைனான்சு என்ற தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் சரிதா உதவி மேலாளர் பதவி வரை எட்டுகிறார். 2004-ல் பண மோசடி செய்ததாக அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகிறார்.

2006 துவக்கத்தில் தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு தனது நண்பர் அரசு அதிகாரியான பிஜூ ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து வாழத் துவங்குகிறார். சரிதாவுடன் வாழ்வதற்காக தனது முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் பிஜூ கைதாகி ஜாமீனில் வெளியில் வந்து புதிய வாழ்க்கையை தொடருகிறார்.

இவர்கள் இருவரும் காற்றாலை உற்பத்தியில் முதலீடு செய்யக் கோரி கேரள, தமிழக தொழிலதிபர்களை அணுகி இலட்சக் கணக்கில் பணம் திரட்டுகின்றனர். பிறகு காற்றாலை அமைத்துத் தராமல் கம்பி நீட்டுகின்றனர். வடவள்ளி, நீலகிரி எனத் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்ட அவர்கள் 2008-ல் பிடிபட்டனர்.

ஜாமீனில் வெளி வந்த பின்னர் சோலார் பேனல் வைத்து தருவதாக கேரளாவில் பணம் திரட்டத் தொடங்கினர். இப்போது மோசடி கோடிக் கணக்கான ரூபாய்களில் நடந்தது. தொழிலதிபர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் நம்ப வைக்க அப்போது ஆட்சியிலிருந்த இடது முன்னணி மற்றும் இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரசு என எல்லோரையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

  • 2011-ல் துவங்கிய டீம் சோலார் என்ற பெயரிலான இவர்களது நிறுவனத்தை கோட்டயத்தில் திறந்து வைத்தவர் காங்கிரசைச் சேர்ந்த கேரள கலாச்சார அமைச்சர் கே.சி. ஜோசப்.
  • மத்திய புதுப்பிக்கத்தக்க எரிபொருள் துணை அமைச்சரான கே.சி.வேணுகோபாலுடன் சரிதாவின் இரவு நேர உரையாடல்கள் வெளியாகியிருக்கின்றன.
  • தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிஜூ கடந்த செப்டம்பரில் தான் முதல்வரை சந்தித்து கேரள வன, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் கே பி கணேஷ்குமார் மற்றும் சரிதாவின் முறைகேடான உறவு பற்றி முறையிட்டதாக சொல்லி இருக்கிறார்.
  • உம்மன் சாண்டியின் நெருங்கிய நண்பரான தாமஸ் குருவில்லா கடந்த டிசம்பர் 12-ல் டெல்லியில் நடந்த விஞ்ஞான் பவன் நாரில் சரிதாவை சாண்டியுடன் சந்திக்க தான் ஏற்பாடு செய்ததாக டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
  • எதிர்க்கட்சி துணைத்தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனை மாமா என்று கூப்பிடுமளவுக்கு அவருடன் சரிதா எஸ்.நாயர் நெருக்கமாம்.

இரண்டு ஆண்டுகளுக்குள் சரிதா நாயர், பிஜூ தம்பதியினர் செய்த மோசடி ரூ 10 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

தங்களிருவரையும் ஆசிய வளர்ச்சி வங்கியின் செயல் திட்ட அலுவலர் மற்றும் ஆடிட்டர் என்றும் சொல்லி கடன் பெற்றுத்தர முன்வைப்புத் தொகை வசூலித்திருக்கிறார்கள். ஒரு கட்டட நிபுணரிடம் ரூ 40 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் சரிதா நாயர்
கைது செய்யப்படும் சரிதா நாயர்

சரிதா-பிஜூ ஜோடியினர் டீம் சோலார் நிறுவனத்தை மக்களிடம் விளம்பரப்படுத்த ஷாலு மேனன் என்ற நடிகையை ஏற்பாடு செய்திருந்தார்களாம். ஷாலு மேனன் வீட்டில் சோலார் பேனல் பதிக்கிறோம் எனக் கூறி ரூ. 20 லட்சம் வாங்கியிருக்கிறார்கள். இப்போது போலீசு விசாரணையில் ஷாலு மேனனை ஏமாற்றும் எண்ணம் இல்லை என்றும், ஷாலுவை தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் பிஜூ கூறியிருக்கிறார்.

கே. சஜ்ஜத் என்ற தொழிலதிபரிடம் ரூ 40 லட்சத்தை சுவாகா செய்வதற்கு முதல்வர் உம்மன் சாண்டியின் ஆலோசகர் என்று லெட்டர் பேட் கொண்டு வந்துள்ளார் பிஜூ.

பணம் தந்த பிறகும் வேலை நடைபெறுவது போல தெரியாத காரணத்தால் போலீசில் புகார் தெரிவித்தார் சஜ்ஜத். ஜூன் 13-ம் தேதி கைதான சரிதா நாயர் என் கணவர் பிஜூ நாராயணன் சொன்னதன் பேரில்தான் அனைத்தையும் செய்தேன் என வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆனால் கைதாவற்கு முன்பு அவரது செல்போனிலிருந்து செய்யப்பட்ட 70 அழைப்புகளும் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர் டென்னி ஜேப்பன் மற்றும் பாதுகாவலர் சலீம் குமாருக்கு போயிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், அவர்களது செல்போனை வழக்கமாக பயன்படுத்துவதே உம்மன் சாண்டிதான் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்.

17-ம் தேதி கோவை ராம்நகர் பகுதியில் பதுங்கியிருந்த பிஜூவை போலீசார் கைது செய்தனர்.

“இதை நாங்கள் சும்மா விட மாட்டோம், உம்மன் சாண்டி கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் மீசை முறுக்கினாலும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி முதல் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்டுகள் வரை அனைவரும் இந்த மோசடிக்கு துணை போனவர்கள்தான்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, புதிய துறைகளில் தொழில் முனைவு என்று உழைக்காமல் பணம் பண்ணக் கூடிய வாய்ப்புகளை உலகமயமாக்கல் சமூக விரோதிகளுக்கு வழங்கியிருக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடும் சரிதா, பிஜூ போன்றவர்கள் அதிகார வர்க்கத்தையும் அரசியல்வாதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எளிய பின்னணி கொண்ட இத்தம்பதியினர் மிகச் சாதாரணமாக பத்தாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்யுமளவுக்கு அதிகார வர்க்க உதவி கிட்டியிருக்கிறது.

சூரியனையும், காற்றையும் வைத்தே ஒரு மோசடித் தம்பதியினர் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் இவர்களைப் போன்றவர்கள் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என்பதை விரிக்கத் தேவையில்லை. மதுரை கிரானைட் கொள்ளையன் பிஆர்பி மீதான வழக்குகள் ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து தற்போது அமுங்கிய வரலாறும் நமக்குத் தெரியும்.

இன்றைய அரசியல் அமைப்பும், உலகமயமாக்கமும் இத்தகைய ஒட்டுண்ணிகளை ஏராளம் பெற்றெடுத்து உலவ விடுகிறது. அரசியல் கட்சிகளும், அதிகார வர்க்கமும், தொழில்முறை முதலாளிகளும் சேர்ந்துதான் இத்தகைய கொள்ளைகளை நடத்துகின்றனர். படிப்பறிவில் முன்னணி வகிக்கும் கேரளாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

– வசந்தன்

ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா !

6

லகின் ஒற்றைத் துருவ வல்லரசின் தொடைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எட்வர்ட் ஸ்னோடன் என்ற தனி ஒரு மனிதரை எதிர்த்து உலக நாடுகளின் அரசுகளுக்கெல்லாம் மிரட்டல் அனுப்பி கொண்டிருக்கிறது அமெரிக்க ‘வல்லரசு’.

பொலிவிய அதிபர் விமானம்
திசை திருப்பப்பட்ட பொலிவிய அதிபர் விமானம்

மனித உரிமை, பேச்சுரிமை, தகவல் உரிமை என்று முழக்கங்களை வைத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் புனித பிரச்சாரம் செய்து வந்த அமெரிக்க போதனையின் லட்சணம் உலகெங்கும் நாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களுக்கு எதிராக எந்த வித குற்றச் செயலும் செய்யாத ஸ்னோடனை தேடிப் பிடிக்கும் நோக்கத்தில் அடிப்படை மனித நாகரீங்கள் அனைத்தையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு.

மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு சென்ற பொலிவிய அதிபர் ஈவோ மோராலசின் விமானத்தை தமது வான் எல்லைக்குள் அனுமதிக்க மறுத்து பிரான்சும் போர்ச்சுகலும் இத்தாலியும் அடாவடி செய்திருக்கின்றன. அந்த விமானத்தில் எட்வர்ட் ஸ்னோடன் இருக்கிறார் என்ற வதந்தியை நம்பி, அமெரிக்க அரசுக்கு கோபம் வந்து விடுமோ என்ற பயத்தில் அந்த அரசுகள் அப்படி செய்திருக்கின்றன. இறுதியில் ஸ்பெயின் நாட்டில் எரிபொருள் நிரப்பிய பிறகு அந்த விமானம் திசை திருப்பப்பட்டு வியன்னாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவில் அரசு முறை பயணமாக போயிருந்த பொலிவிய அதிபர் ஸ்னோடனின் புகலிட கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்.

பொலிவிய அதிபரும், வெனிசுவேலா அதிபர் மடேரோவும் ஸ்னோடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாஸ்கோ விமான நிலையம் ஒன்றின் தங்கும் கூடத்தில் இருந்து கொண்டே எட்வர்ட் ஸ்னோடன் உலக நாட்டு அரசுகளின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழற்றி எறிந்து கொண்டிருக்கிறார். பொலிவியா, வெனிசுவேலா நாடுகளைத் தவிர 19 நாடுகளிடம் ஸ்னோடனின் வழக்கறிஞர் விக்கி லீக்சைச் சேர்ந்த சாரா ஹேரிசன் புகலிட கோரிக்கை அனுப்பியிருக்கிறார்.

இந்திய தூதரகம்
ஒட்டுக் கேட்கப்பட்ட இந்திய தூதரகம்

அந்த கோரிக்கையில் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசினால் தனது உயிருக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்னோடன் குறிப்பிட்டிருக்கிறார். உலக நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தின்படி அரசியல் புகலிடம் தேடி வருபவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். ஆனால், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய ‘ஜனநாயக’ நாடுகள் புகலிட கோரிக்கையை தமது நாட்டிற்குள் வந்துதான் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி விட்டிருக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும் நாடு, மனித உரிமைகளை தூக்கிப் பிடிக்க தலாய் லாமாவுக்கே அடைக்கலம் கொடுத்த நாடான இந்தியா இன்று ஸ்னோடனின் புகலிட கோரிக்கையை வெகு வேகமாக நிராகரித்திருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதற்கே சில நாட்கள் காத்திருக்கும் அரசு, ஸ்னோடனின் கோரிக்கையை நிராகரிக்க சில மணி நேரங்களே எடுத்துக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஸ்னோடனிடமிருந்து புகலிட கோரிக்கை வந்ததாகவும், அதை கவனமாக பரிசீலித்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று முடிவு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அரசு இந்திய தூதரகத்தை உளவு பார்த்தது என்ற தகவல்களுக்கு பெயரளவில் கூட தனது கண்டனத்தை தெரிவிக்க தைரியமில்லாமல் வாலை கால்களுக்குள் இடுக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வெளிக் கேட்டில் இருக்கும் பெயின்டை சுரண்டுவதற்கு கூட தைரியமில்லாத அடிமை இந்திய அரசு ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்ப்பது சகஜம்தான் என்று அமெரிக்கா இந்திய தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்களை கண்காணித்ததை சப்பை கட்டுக் கட்டுகிறது.

தூதரகங்களை உளவு பார்ப்பது 1961-ம் ஆண்டின் வெளியுறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்திற்கு விரோதமானதாகும். ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இந்திய தூதரகத்தை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஒட்டுக் கேட்டன என்ற தகவலை பெரிது படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். “தகவல் பரிமாற்றங்களையே அவர்கள் ஒட்டுக் கேட்கவில்லை. மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் பற்றிய விபரங்களைத்தான் அவர்கள் திரட்டி ஆய்வு செய்திருக்கிறார்கள்” என்று அவர் அமெரிக்காவுக்கு துதி பாடியிருக்கிறார்.

சல்மான் குர்ஷீதும், ஜான் கெரியும்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெரியும் அவருக்கு சேவை செய்யும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீதும்.

இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கையெழுத்தான காலத்தில் இந்தியாவின் அமெரிக்க தூதராக வாஷிங்டனில் இருந்தவர் ரொணன் சென் என்ற அதிகாரி இப்போது டாடா மோட்டார்சின் இயக்குனராக பிழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் “நாடுகள் ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது சாதாரணமாக நடப்பதுதான். வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மின்னணு தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க உளவுத் துறை கண்காணித்ததில் ஒன்றும் தவறில்லை” என்று தனது விசுவாசத்தை தெரிவித்திருக்கிறார்.

தனது பதவி காலத்தில் இந்திய தூதரகத்துக்கு யாரிடமிருந்தெல்லாம் அழைப்புகள் வருகின்றன, என்னென்ன தகவல் பரிமாற்றங்கள் நடந்தன என்ற தகவல்கள், அமெரிக்க அரசு தனக்கு சாதகமாக அணுசக்தி ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்த உதவியிருக்கும் என்ற அடிப்படை நாட்டுப் பற்று கூட இல்லாத ரோணண் சென் போன்றவர்கள்தான் நாட்டையும், நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் நிர்வகிக்கிறார்கள்.

அமெரிக்காவின் அழுக்கு உண்மைகளை மேலும் வெளியிட மாட்டேன் என்று உறுதி அளித்தால் ரஷ்யாவில் புகலிடம் தருவதாக சொன்ன ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் நிபந்தனையுடன் கூடிய புகலிடத்தை நிராகரித்திருக்கிறார், ஸ்னோடன். ஸ்னோடனின் தந்தை லன் ஸ்னோடன், தனது மகனை அமெரிக்க சுதந்திர போராட்ட வீரர் பால் ரெவருடன் ஒப்பிட்டு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதியுள்ளார்.

உலக மக்களின் உரிமைகளுக்காக தனி மனிதனாக, மாஸ்கோ விமான நிலையத்தின் தங்கும் கூடத்தில் இருந்து கொண்டு உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து போராடும் ஸ்னோடனை பாதுகாக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

101

ருமபுரி நாய்க்கன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா-இளவரசன் தம்பதியினர் பற்றிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி நடந்தது.

திவ்யா, தேன்மொழி
சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவும் அவரது தாயார் தேன்மொழியும்

திவ்யாவின் தாய் தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் மீது ஜூன் 6-ம் தேதி நடந்த விசாரணை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு நீதிபதிகள் வழக்கை தமது அறையில் விசாரிக்க விரும்புவதாக சொன்னார்கள். அதன்படி, இருதரப்பு வழக்கறிஞர்களை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு எம் ஜெய்சந்திரன், எம் எம் சுந்தரேஷ் என்ற இரு நீதிபதிகளும் நீதிபதியின் அறையில் திவ்யாவின் கருத்தை கேட்டார்கள்.

திவ்யா சொன்ன கருத்துக்கள் பற்றிய விபரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இளவரசனுடனான திருமணத்துக்குப் பிறகு தந்தை நாகராஜனின் தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், அதே போல தனது தாயையும், தம்பியையும் இழந்து விடுவோமோ என்று பயப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இளவரசன் தன்னிடம் அன்பாக இருந்ததாகவும், அவரது பெற்றோர் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும், இளவரசனை பார்க்கும் போதெல்லாம், தனது தந்தையின் மரணம் நினைவுக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்.

நீதிமன்றத்துக்கு வந்திருந்த இளவரசன் திவ்யாவை சந்திக்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை. “திவ்யா எப்போது திரும்பி வந்தாலும் அவருடன் வாழ்வேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்திலும், சமூகத்திலும் இவ்வளவு களேபரங்களுக்கு பிறகும் தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர். அந்தக் கூட்டம் இப்போதும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல வேஷம் போடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, திவ்யா-இளவரசன் விவகாரத்தில் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான விவகாரம் என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் எந்த வகையிலும் தலையிட வேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களிடம் கூறியிருப்பதாகவும் நடிக்கிறார். தலித் இளைஞர்கள் வன்னிய சாதி பெண்களை காதலிப்பதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்த போது ராமதாசுக்கு இந்த ஞானம் உதிக்காமல் போனது ஏனோ!

திவ்யா-இளவரசன் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தலையிட்டு, நடந்த கொடூரங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக இருப்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான். திவ்யாவின் தந்தை நாகராஜனை தற்கொலைக்கு தூண்டிய வன்னியர் சாதி வெறி, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை அடித்து உடைத்தது, திவ்யாவின் தாய் தேன்மொழியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்து அவரை இளவரசனிடமிருந்து பிரித்தது என்று அடுத்தடுத்த அராஜகங்களுக்கு மூல காரணம் அந்த கட்சியினர்தான்.

இந்த நீதிமன்ற வழக்கிலேயே இதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உள்ளன.

  • திவ்யாவின் தாயார் தேன்மொழியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் க பாலு.
  • ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும் தருமபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செந்தில் என்பவர் திவ்யாவின் வீட்டுக்குப் போனதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த இணையப் புள்ளி அருள் தனது பதிவில் கட்டுரை வெளியிட்டார்.
    முற்போக்காளர்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து திவ்யாவின் கல்விக்கு இடையூறு செய்து விட்டதாகவும், அந்த சிறுமியை படிக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதாகவும் நீலிக் கண்ணீர் வடித்திருந்தது அந்தக் கட்டுரை.
    டாக்டர் செந்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி விட்டாரா, அல்லது அன்புமணியின் கட்டளை அவரை கட்டுப்படுத்தாதா என்று விசாரித்து அருள் ஒரு பதிவு வெளியிட வேண்டும்.
  • அருள் தனது வலைப்பதிவில், ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது தானும் உடனிருந்ததாகவும், திவ்யா தானாகவே தாலியை கழற்றி எறிந்து விட்டதாகவும், அவர் தனது காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அறிவித்திருந்தார்.
    இந்த வழக்கில் அருளின் தலையீடு அன்புமணி ராமதாஸின் முடிவுக்கு எதிரானதா இல்லையா என்று விளக்கியும் அருள் ஒரு பதிவு வெளியிடலாம்.

இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்களான திவ்யா, இளவரசன், இளவரசனின் பெற்றோர் அனைவரும் பொறுப்பான, கௌரவமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

திவ்யாவின் தாய், வன்னிய சாதி அரசியல் அழுத்தத்தால் மகளின் வாழ்க்கைக்கு எதிராக நிற்கிறார். பாமக போன்ற அமைப்புகளால் தூண்டி விடப்பட்ட சாதி வெறியால் திவ்யா, இளவரசன் போன்ற இளைஞர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ற வாழ்க்கையை அமைப்பது தடை செய்யப்படுகிறது.

திவ்யா-இளவரசன் என்ற இரு இளைஞர்களின் வாழ்க்கையையும், பல நூறு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும் குலைத்து, சாதி வெறியைத் தூண்டுவது மருத்துவர் ராமதாசும் அவரது கட்சியினரும். உழைக்கும் வன்னிய மக்களை தவறாக வழி நடத்தி அரசியல் ஆதாயங்களை குவிக்கத் துடிக்கும் அந்த கும்பலை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

மேலும் படிக்க

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

3

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது  செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.

மரியா பால் கைது
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம். அவர்களில் நால்வர் வைத்திருந்த ஆயுதங்களுக்கு முறையான லைசென்சு வேறு கிடையாதாம். கடந்த மே 12 அன்று இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ள இவர்கள் அதற்கு தரும் மாத வாடகை மட்டும் ரூ. 4 லட்சம்.

தப்பி விட்ட சுகாஸ் சாதாரண நபரல்ல

  • அவர் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் 2009-ல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று கூறி ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பெங்களூருவை சேர்ந்த சுகாஸ் தனது நண்பரும் முன்னாள் முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் கவுடா என தன்னை சொல்லிக் கொண்டு ஒரு தொழிலதிபரிடம் ரூ. 1 கோடியை ஏப்பம் விட்டிருக்கிறார்.

ஒரு பரிமாற்றம் நடந்த பிறகு தனது பெயரையும், சிம் கார்டையும் மாற்றிவிடும் சுகாஸ் தனது இருப்பிடத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றிக் கொள்வார்.

திரைப்பட வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி மரியா பாலை ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார் சுகாஸ். சொகுசு வாழ்க்கையும், அது தரும் சுகமும் அதற்காக மோசடியில் ஈடுபடுவது தவறில்லை என்ற நிலைக்கு மரியா பாலை மாறச் செய்கிறது. பின்னர் நடந்த மோசடிகளில் மரியா பால் சம பங்காளியாக மாறி விடுகிறார். இருவரும் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

  • கொச்சியை சேர்ந்த இமானுவேல் சில்க்ஸின் உரிமையாளரிடம் அவரது கடைத் திறப்பு விழாவுக்கு பிரபல நடிகைகளைக் கூட்டி வருவதாகச் சொல்லி பணம் வாங்கி விட்டு கம்பி நீட்டியிருக்கின்றனர்.
  • ஒப்பந்த அடிப்படையில் உடைகள் தைத்து தருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தத சென்னையைச் சேர்ந்த ஸ்கைலாக் நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியை சுகாஸ் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயக்குமார் என்றும், மரியா பால் அவரது உதவியாளர் என்றும் நடித்து தொலைபேசி வழியாக தொடர்பு கொள்கிறார்கள். கர்நாடக அரசின் போக்குவரத்து, உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்கான ரூ 400 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அதற்கு முன்வைப்புத் தொகையாக தான் சொல்லும் வங்கிக் கணக்கில் ரூ.62,47,016 ஐ கட்டச் சொல்லி உள்ளார். பணத்தை கட்டிய பிறகு எந்த ஒப்பந்தமும் நடக்கவில்லை.
  • சென்னை அம்பத்தூரை சேர்ந்த சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்யும் பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் தம்பதியிடம் ரூ.360 கோடி மதிப்பிலான கர்நாடக மாநில பெண்களுக்கான இலவச நாப்கின் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு வைப்பு நிதியாக ரூ.19 கோடி கேட்டிருக்கிறார் சுகாஸ்.
    நம்பிக்கையை பெறுவதற்காக இவர் கர்நாடக மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான் சௌதா பகுதியை சேர்ந்த லேண்ட்லைன் ஃபோனில் வருவாராம். மறுமுனையில் அரசு அலுவலகம் என்று உறுதி செய்யும் மரியா பால் இணைப்பை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கும் சுகாஸுக்கு மாற்றித் தருவாராம். இதை நம்பிய பாலசுப்ரமணியமும் பணத்தை தர முன்வந்திருக்கிறார்.
    ஆனால் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. சூழலைப் புரிந்துகொண்ட சுகாஸ் அம்பத்தூர் கனரா வங்கியின் மேலாளரை தொலைபேசியில் அழைத்து பாலசுப்ரமணியத்துக்கு கடன் வழங்கச் சொல்லி இருக்கிறார். வங்கி மேலாளரால் ரூ 50 லட்சத்துக்கு மேல் கடனுக்கு ஒப்புதல் வழங்க இயலாது என்ற போதிலும் அவரை தனது பேச்சு வசியத்தால் மாற்றி இருக்கிறார் சுகாஸ். போதாத குறைக்கு வங்கி மேலாளரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பரிந்துரைக்க வைத்துள்ளார். அரசு ஒப்பந்தம்தானே, லோன் கொடுங்கள் என வீட்டாரைப் பேச வைத்துள்ளார் சுகாஸ்.
    கனரா வங்கி துணைப் பொது மேலாளர் இம்மோசடியை புரிந்துகொண்டு புகார் கொடுத்திருக்கிறார். வங்கிக் கணக்குகளை முடக்குவதற்குள் ரூ 12 கோடியை ஆட்டையைப் போட்டு முடித்திருந்தார் சுகாஸ்.

வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் வங்கி மேலாளர் ஜெகதீஷ், கடன் வாங்கிய பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் மார்ச் 20-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அப்போதும் தன்னுடன் ஃபோனில் பேசியவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார் வங்கி மேலாளர். அவரது புகைப்படத்தை காட்டி, துரை தயாநிதி பெயரால் ஏமாற்றியதை எல்லாம் போலீசார் சொன்ன போதும் கூட அவர் நம்பத் தயாராக இல்லை.

சொகுசு கார்கள்
சொகுசு கார்கள்

ஆட்டையைப் போட்ட பணத்துடன் டெல்லிக்குப் போய் பண்ணை வீடு, ஆடம்பர கார், கேளிக்கைகள் என வாழத் துவங்கிய பிறகு இருவரது கையும் அரிக்கத் துவங்கியது. அங்கும் ஒரு ஏமாற்று வேலையை துவங்கினர். ஏமாந்தவர் பணத்தை திரும்பப் பெற முயன்ற போது போலீசுக்கும் தகவல் தந்து விட்டார். போலீசார் சுகாஸைப் பிடிக்க திட்டமிட்டனர். கடைசி நேரத்தில் அவருக்கு போலீசிலிருந்தே தகவல் கசியவே மரியா பாலை அம்போவென விட்டுவிட்டு தப்பி விட்டார்.

ஒரு இண்டர்காம் போர்டும், பெண் உதவியாளரும் இருப்பதாக காட்டிக் கொண்டு ஐ.ஏ.எஸ் என ஒரு முதலாளியை மட்டுமின்றி வங்கி மேலாளரையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளான் விகாஸ். விவசாயக் கடனுக்கோ, கல்விக் கடனுக்கோ ஒரு சில லட்சங்களை வாங்குவதற்கே அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என அலைக்கழிக்கும் வங்கி நேரில் பார்க்காத ஒருவனை நம்பி ரூ 19 கோடி கடன் கொடுத்துள்ளது என்றால் அதிகார வர்க்கத்தின் சட்ட திட்டங்களின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம். சக்கரவர்த்தி, பாலசுப்பிரமணியன் போன்ற முதலாளிகள் அரசு ஒப்பந்தம் என்ற பெயரால் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்ற நப்பாசையில் விழுந்திருக்கின்றனர்.

சினிமா உலகில் சம்பாதிப்பதைக் காட்டிலும் ஏமாற்றி சம்பாதிப்பது எளிது என்பதைப் புரிந்துகொண்ட லீனா பால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தனியார்மயம் வந்த பிறகுதான் இதுபோன்ற மோசடிகளுக்கு வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. சீருடை தைப்பது அல்லது நாப்கின் தயாரிப்பது என எல்லாவற்றையும் அரசே ஒரு பொதுத்துறை நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தால் இந்த மோசடி எப்படி நடந்திருக்க முடியும்?

இராணுவத்திற்கு தேவையான ஹெலிகாப்டர்கள் துவங்கி அரசுப்பணியாளர் சீருடை வரை தனியார் முதலாளிகள் இப்படித்தான் இலஞ்சம் கொடுத்து ஆர்டர் பெறுகின்றனர். முதலாளிகள் வளைப்பதற்கும், அவர்களுக்காக வளைந்து கொள்வதும்தான் நமது ‘ஜனநாயகத்தின்’ அழகு. அந்த அழகுதான் இத்தகைய மோசடி சீமான்களையும் சீமாட்டிகளையும் பெற்றுப் போடுகிறது.

ஒரு தொலைபேசி, ஒரு பெண் குரல், ஒரு நுனி நாக்கு ஆங்கிலம் மூன்றும் இருந்தால் போதும். கொள்ளையை நீங்கள் கோடிகளில் நடத்தலாம்.

தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !

11

சேத்தியாதோப்பு பூதங்குடி உட்பட எஸ்.டி. சியோன் மெட்ரிக் பள்ளிக்கு, வடலூர், சோழத்தரம், ஆகிய ஊர்களில் நான்கு கிளைகள் உள்ளன. துண்டு சீட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணத்தை மூன்று மடங்காக்கி அதில் ஒரு பகுதியை முதல் தவணையாக வசூலிக்கிறார்கள். ரெசீது கேட்கும் பெற்றோர்களை, கேள்வி கேட்கும் பெற்றோர்களை டி.சி.கொடுத்து விடுவேன் என மிரட்டுகின்றனர். அரசு கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை.

ஆனால், இன்று பெற்றோர்கள் போலீசு பாதுகாப்புடன் அரசு கட்டணத்தை கட்டினர். அது நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் சாத்தியமானது.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சேத்தியாதோப்பு கிளை சார்பில் அரசு கட்டண விபரங்கள் அச்சிட்ட பிரசுரமாக பள்ளி வளாகம் முன்பு விநியோகிக்கப்பட்டது. பள்ளி முதலாளியின் மகன் பிரசுரங்களை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

முதலாளி நமது அமைப்பாளர் பாலு மகேந்திரனை,”வாங்க உட்கார்ந்து பேசலாம்” வாங்க என கையை பிடித்து இழுத்தார்.

“வரமுடியாது, கோரிக்கையை நிறைவேற்று, தனியே பேச முடியாது” என மறுத்ததுடன், பள்ளி முதலாளியின் மகன் மீது போலீசில் புகார் மனு எழுதி கொடுத்தார்.

சேத்தியாதோப்பு ஆய்வாளர், “பஸ்டாண்டில் கொடுக்க வேண்டியதுதானே, பள்ளி வளாகத்தில் முன்பு ஏன் கொடுத்தாய்? உன்னை ரிமாண்ட் செய்யட்டுமா? பணம் கேட்டு மிரட்டினாய் என வழக்கு போட்டுவிடுவேன்” என அச்சுறுத்தினார்.

நமது மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆய்வாளரிடம், “அரசு உத்திரவை மீறி பல மடங்கு பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் பள்ளி தாளாளரை கைது செய்வீர்களா?” எனக் கேட்டனர்.

ஆய்வாளர், “நான் பள்ளியில் விசாரித்தேன் அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கிறேன் எனக் கூறினார் ரசீது புத்தகத்தையும் காட்டினார்” என நற்சான்று கொடுத்தார்.

“திருடன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வில்லை என்றால் விட்டு விடுவீர்களா?” என திருப்பிக் கேட்டதும் “நான் என்ன செய்ய முடியும்?” என்று நழுவினார்.

எஸ்.டி எஸ். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைமீது நடவடிக்கை எடுக்காத கல்வி துறை அதிகாரிகளை கண்டித்து சேத்தியாதோப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு சேத்தியாதோப்பு ஆய்வாளர் “எஸ்.பி. பள்ளி நிர்வாகத்திடம் எங்களையே பேசி சரிபண்ணச் சொல்லியுள்ளார். அதோடு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியும் மறுக்க சொல்லி எஸ்பி சொல்லிட்டாங்க” என பதிலளித்தார்.

28 -6-13 அன்று மாலை சேத்தியாதோப்பில் அரங்கு கூட்டம் நடத்தினோம். அரங்கு கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பிறகு பெற்றோர்கள் கும்பலாக சென்று அரசு கட்டணத்தை செலுத்துவது, அதற்கு போலீஸ் பாதுகாப்பு பெறுவது என முடிவு செய்யபட்டது.

போலீஸ் வாக்குவாதம்
போலீஸூடன் வாக்குவாதம்.

திட்டமிட்டபடி சங்கப் பெற்றோர்கள் அனைவரும் 1-7-2013 அன்று காலை 9-00 மணிக்கே திரண்டனர். ”அரசு கட்டணத்தை மட்டும் ரசீது பெற்று செலுத்துவோம்” என கையில் அட்டையை பிடித்து கொண்டு சக பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே பணம் செலுத்தினர். 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றனர்.

டியூசன் பீஸ் என எழுதியதை ”இயர்லி பீஸ்” என மாற்றி எழுதி வாங்கினர். முழுத் தொகை கட்டினால்தான் வாங்குவேன் என முரண்டு பிடித்த பள்ளி நிர்வாகத்திடம் நமது அமைப்பாளர்கள்  ”கொடுக்கும் பணத்தை வரவு வைத்து கொண்டு பாக்கியை குறித்து கொடு” என வாதிட்டு அதையும் நடைமுறையும் படுத்தினர்.

பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் கூட்டமாக வெளியே வந்து, “கூட்டமாக நிற்காதீர்கள் வெளியே போங்கள்” என பெற்றோர்களை விரட்ட முயன்றனர்.

அதற்கு பெற்றோர் ஒருவர் ”உன் வேலை பாடம் நடத்துவது, அதை போய்ப் பார். நிர்வாகத்திற்கு ஆதரவாக கூட்டம் கூட்டினால் நாங்களும் இன்னும் அதிகமான பெற்றோர்களை வெளியில் இருந்து வரவழைப்போம்” என்றதும் அனைவரும் வாயை பொத்திக்கொண்டு சென்றனர்.

இரண்டு எஸ்பி சிஐடி, இரண்டு காவலர்கள், ஒரு துணை ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பள்ளி தாளாளர், அவர் மனைவி, மகன், முதல்வர் என அனைவரும் அடுத்து சுற்றில் பெற்றோர்களை தவிர சங்க நிர்வாகிகள் யாரும் இருக்ககூடாது என நிபந்தனை விதித்தனர்.

போராடிய பெற்றோர்
போராடிய பெற்றோர்

நமது சங்க நிர்வாகிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறை துணை ஆய்வாளரிடம்

”காசாளரை தவிர நிர்வாகிகள் யாருக்கும் இங்கு வேலையில்லை அவர்களை போகச்சொல்லுங்கள். நாங்கள் இல்லையென்றால் அரசு கட்டணத்தை வாங்கமாட்டார்கள், ரசீதும் கொடுக்க மாட்டார்கள். மேலும் எங்கள் வழக்கறிஞர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் அனைவரும் டி.எஸ்பி.யை பார்த்து பேசிவிட்டோம். எந்த பிரச்சினையும் வராமல் இருக்கவே நாங்கள் இருக்கிறோம்” என்று விளக்கியதும்,  நியாயத்தை வேறு வழியில்லாமல் போலீசார் ஏற்று கொண்டனர்.

பள்ளி முதலாளி பல அடியாட்களை இறக்கியிருந்தார். ஒரு பக்கம் காவல்துறை, மறுபுறம் வலிமையான உள்ளுர் பெற்றோர்கள் இருந்ததால் மோதல் ஏற்படாமல் அரசு கட்டணத்தை பெற்றோர்கள் மகிழ்ச்சியாக கட்டினர்.

நாம் பலமுறை சொல்லியும் பத்திரிக்கையாளர்கள் யாரும் வந்து செய்தி சேகரிக்க மறுத்துவிட்டனர். இதற்கு முன்னதாக நாம் எஸ்.டி.எஸ்.மெட்ரிக் பள்ளிக்கு எதிராக போஸ்டர், பிரசுரம், அரங்கு கூட்டம், ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு, சங்கத்தை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை என தொடர்ந்து போராடி, மக்கள் மத்தியில் கருத்து ஆதரவு வளர்ந்து வருவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.

மேலும் டி.எஸ்.பி. தலைமையில் இரண்டு எஸ்.ஐ. நான்கு காவலர்களுடன் பள்ளி முதலாளியிடம் ”மரியாதையா அரசு கட்டணத்தை வாங்கு, அதற்கு ரசீது கொடு, உன்னால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது” என மிரட்டி விட்டு வந்தனர்.

சங்கத்தினரும், வழக்கறிஞர்களும். பெற்றோர்களும், “அரசு கட்டணத்தை வாங்கினால் நாங்கள் ஒத்துழைப்போம், இல்லையென்றால் போராடுவோம், உரிய அதிகாரிகள் பிரச்சினையை தீர்க்கட்டும். காவல்துறை அதை தடுக்கக் கூடாது. கல்வி உரிமைக்காக போராடுவது எங்களின் ஜனநாயக உரிமை” என வாதிட்டோம்.

அதன் விளைவாகத்தான் இன்று கிடைத்த மேற்படி ஆரம்ப வெற்றி. இது நிரந்தரமாக அனைத்து பெற்றோர்களுக்கும் கிடைக்கும் வரை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் போராட்டம் தொடரும். நமது பெற்றோர் சங்க நடவடிக்கைகளுக்கு காரணம் கல்வித்துறையின் கையாலாகத்தனமும், தனியார் பள்ளி முதலாளியின் பணத்திமிரும்தான். கல்வி, கட்டணம் என்பதை தாண்டி பள்ளி முதலாளி பெற்றோர்களுக்கு இழைக்கும் அவமரியாதைதான் பெற்றோர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கிறது.

தகவல் : மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

அத்வானியின் குரு சியாமா பிரசாத் முகர்ஜி யாருக்கு அடியாள் ?

2

முன்னுரை:

பாரத மாதாவை பாசத்துடன் உச்சிமோரும் தேசபக்திக்கு ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் போல சங்க பரிவாரங்கள் காட்டிக் கொள்வதுண்டு. ஆனால் இது அப்பட்டமான வரலாற்று மோசடி என்பதற்கு ஆங்கிலேயர் காலம் முதல் வரலாற்றின் பக்கங்களில் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. இன்றைக்கு அமெரிக்க கூஜாக்களாக இருக்கும் இந்துமதவெறியர்கள் 47-க்கு முன்னர் ஆங்கிலேயரது கூஜாக்களாக அடியாள் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சில கட்டுரைகளை வினவில் வெளியிட்டிருக்கிறோம். சமீபத்திய அத்வானி – மோடி அதிகாரச் சண்டையின் போது வயிற்று வலியால் துடித்த பீஷ்ம பிதாமகர் அத்வானி புலம்பியது நினைவிருக்கிறதா? சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்கள் ஆரம்பித்து வைத்த பாஜக இன்று சுய மோக தலைவர்களால் சீர்குலைந்து வருகிறது என்று தனது வயிற்று வலிக்கு காரணம் சொன்னார் அத்வானி. ஆனால் அத்வானி கொண்டாடும் இந்த சியாம் பிரசாத் முகர்ஜி ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிமை என்பதை திரைகிழித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை. பொய்களாலும், மதவெறியாலும் வரலாற்றை மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் யோக்கியதையை படியுங்கள், பகிருங்கள்!

வினவு

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி : இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ புனிதர்

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி (1901-1953) ஆர்எஸ்எஸ்/பிஜேபி முகாமின் முக்கியமான இந்துத்துவ புனிதர். எம் எஸ் கோல்வால்கரின் ஆலோசனையின் பேரில் 1951-ம் ஆண்டு பாரதீய ஜன சங்கத்தை உருவாக்கி ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவின் முதல் தலைவர் ஆக பணியாற்றியவர் அவர். ஜூன் 23, 1953-ல் ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் கைதாகி இருக்கும் போது அவர் மரணமடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது இறந்த நாள், ‘பிரிவு 370-ஐ ரத்து செய்யும் நாள்’ என்றும் ‘காஷ்மீரை பாதுகாப்போம்’ என்றும் இந்துத்துவ அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது.

சியாமா பிரசாத் முகர்ஜி
பிரிட்டிஷ் அடிவருடி சியாமா பிரசாத் முகர்ஜி

இந்த ஆண்டும் ஜம்மு காஷ்மீருக்காக டாக்டர் முகர்ஜி செய்த தியாகங்களை போற்றும் விதமாக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எல் கே அத்வானியும், நரேந்திர மோடியும் முறையே டெல்லியிலும் பஞ்சாபின் மாதேபுராவிலும் நடந்த கூட்டங்களில் உரையாற்றினார்கள். டாக்டர் மூகர்ஜி ஒரு மகத்தான தேசியவாதியாகவும், தேசப்பக்தராகவும் போற்றப்பட்டார்.

தனது வலைப்பதிவில் அத்வானி ஜூன் 23, 2013 அன்று ‘ஒரு மகத்தான தியாகிக்கு வணக்கங்கள்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். டாக்டர் முகர்ஜி பாரதீய ஜனசங்கத்தை உருவாக்கியது, காஷ்மீர் போராட்டம், மாதோபூரில் கைது செய்யப்பட்டது, தொடர்ந்து ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் மரணமடைந்தது போன்றவை பற்றிய விபரங்களை குறிப்பிட்டதோடு அவரை, ‘மாபெரும் தலைவர்’ என்றும் ‘பிறவியிலிருந்தே ஒரு மகத்தான தேசபக்தர்’ என்றும் அத்வானி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியினர் இப்போது இந்திய அரசியலில் தாம் வகிக்கும் இடத்துக்கு, முன்பு வந்த ஆயிரக்கணக்கானவர்களின் முயற்சிகளுக்கு அனைத்துக்கும் மேலாக டாக்டர் முகர்ஜியின் தியாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

அதே நாளில், நரேந்திர மோடி எழுதிய செய்தி அத்வானியின் பதிவில் வெளியிடப்பட்டது:

“மகத்தான சியாமா பிரசாத் முகர்ஜியை நாம் இன்று நினைவு கூர்கிறோம். அவர் ஒரு ராஜதந்திரி, சிந்தனையாளர், தேசபக்தர், தனது வாழ்வை தேசிய ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். பாரதீய ஜனசங்கத்தை உருவாக்கியவரான அவர் 59 ஆண்டுகளுக்கு முன்பு 1953-ம் ஆண்டு இதே நாளில் நம்மை விட்டுப் பிரிந்தார். அவரை நினைவுகூரும் விதமாக அத்வானிஜி, மனதைத் தொடும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.”

ஆர்எஸ்எஸ்/பாஜக முகாமின் இந்த இரண்டு இரும்பு மனிதர்களின் வாய்வீச்சை அந்த காலத்திய ஆவணங்களுடன் சரிபார்த்தல் அவசியமான ஒன்று. அந்த ஆவணங்களை பரிசீலிப்பதன் மூலம் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஒரு ‘மகத்தான தலைவர்’ மற்றும் ‘பிறவியிலிருந்தே மகத்தான தேசபக்தர்’ என்பது ஒரு மோசடி என்று தெரிய வருகிறது. இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட சுதந்திர போராட்டத்தில் டாக்டர் முகர்ஜி கலந்து கொள்ளவில்லை. தேசபக்தி என்றால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகங்கள் செய்வது என்றால், டாக்டர் முகர்ஜி அதிலிருந்து விலகி இருந்ததோடு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடனும் முஸ்லீம் லீகுடனும் சேர்ந்து கொண்டு அதற்கு துரோகமும் இழைத்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வங்காளத்தை இரண்டாக பிரிப்பதற்கு பெரும் ஆதரவாளராக அவர் இருந்தார்.

இந்து மகாசபை
காலனிய எஜமானர்களின் சேவையில் இந்து மகாசபை.

சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் அவர் வி டி சாவார்க்கர் தலைமையிலான இந்து மகாசபாவின் முக்கியமான தலைவராக இருந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மக்கள் வெள்ளை ஆட்சியாளர்களை நாட்டை விட்டு வெளியேற கோரிய போது, ஆட்சியாளர்கள் மக்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகளை அவிழ்த்து விட்டனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கான பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இந்து மகாசபாவும், எம் ஏ ஜின்னாவின் தலைமையிலான முஸ்லீம் லீகும் சிந்து, வங்காளம், வடமேற்கு எல்லைப் புற மாகாணம் ஆகிய இடங்களில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தனர். ‘வீர்’ சாவார்க்கரின் பின் வரும் உரையிலிருந்து அது நிரூபணமாகிறது (1942-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இந்து மகாசபாவின் 24-வது மாநாட்டில் அவரது தலைமை உரையிலிருந்து) :

“நடைமுறை அரசியலில் சாத்தியமாகும் சமரசங்கள் மூலம் முன்னேற வேண்டும் என்று மகாசபாவுக்கும் தெரியும். சமீபத்தில் சிந்து இந்து மகாசபை அழைப்பின் பேரில் லீகுடன் கை கோர்த்து சிந்துவில் ஒரு கூட்டணி அரசை நடத்துவதற்கு முன் வந்துள்ளது என்ற உண்மையை பாருங்கள். வங்காளத்தைப் பற்றிய விபரங்கள் அனைவருக்கும் தெரிந்தவை. காங்கிரஸ் தனது அடிபணிதல்களால் மகிழ்விக்க முடியாத காட்டுத் தனமான லீகினர் இந்து மகாசபையின் தொடர்பில் வந்ததும் போதுமான அளவுக்கு சமரசம் செய்பவர்களாகவும், சேர்ந்து செயல்படத் தகுந்தவர்களாகவும் மாறினர். திரு பஸ்லுல் ஹக்கின் தலைமையில், நமது பெருமை வாய்ந்த மகாசபா தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வழிகாட்டலின் கீழ் கூட்டணி அரசாங்கம் ஒரு ஆண்டு வரையில் இரண்டு மதத்தினருக்கும் ஆதாயம் அளிக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுகிறது.”

சிந்துவில் மதசார்பற்ற பிரதமர் (அப்போது மாநில முதலமைச்சர்கள் பிரதமர் என்று அழைக்கப்பட்டனர்) அல்லா பக்ஷ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பிரிட்டிஷ் ஆளுனரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்து மகாசபா முஸ்லீம் லீகுடன் கூட்டணி அரசு அமைத்தது. அல்லா பக்ஷ் இத்திஹாத் (ஒற்றுமை) கட்சி அரசுக்கு தலைமை வகித்து வந்தார். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என்று அனைத்து தரப்பு மக்களைச் சார்ந்த அந்த கட்சி, முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான சிந்துவுக்குள் முஸ்லீம் லீகை நுழைய விடாமல் தடுத்து வந்தது. 1943-ல் அவர் முஸ்லீம் லீக் முரடர்களால் கொலை செய்யப்பட்டார். பின்னர் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்திலும் இந்து மகாசபைக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையிலான கூட்டணி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி இந்திய தேசிய இராணுவம் அமைத்த காலத்தில் பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவி செய்தது சியாமா பிரசாத் முகர்ஜியின் இந்து மகாசபை

மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் டாக்டர் முகர்ஜியின் இந்து மகாசபா இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆதரிக்க முடிவு செய்தது என்பது. அந்த நேரத்தில்தான் நேதாஜி என்று அறியப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய இராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்) உருவாக்கி பிரிட்டிஷாரை துரத்த முயற்சித்து கொண்டிருந்தார். பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு உதவி செய்ய இந்து மகாசபை எந்த அளவு தயாராக இருந்தது என்பதை இந்து மகாசபையின் தலைவராக சாவார்க்கர் வெளியிட்ட உத்தரவிலிருந்து தெரிந்து கொள்ளலாம் :

“இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை, இந்துத்துவம் எந்த விட தயக்கமுமின்றி, ஒத்துழைப்பு உணர்வோடு, இந்து நலன்களோடு பொருந்தி வருவது வரை இந்திய அரசின் போர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ராணுவம், கடற்படை, விமானப் படை போன்றவற்றில் பெரும் எண்ணிக்கைகளில் சேருவது, அனைத்து ஆயுத, வெடிமருந்து மற்றும் போர்த் தளவாட தொழிற்சாலைகளில் நுழைவது மூலம் இதை செய்ய வேண்டும்.

போரில் ஜப்பானின் நுழைவு நம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பிரிட்டனின் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. விளைவாக, நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நமது இல்லங்களையும், நாட்டையும் போரின் அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பதற்கான அரசின் போர் முயற்சிகளை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபை இந்துக்களை குறிப்பாக வங்காளத்திலும் அஸ்ஸாமிலும் உள்ள இந்துக்களை திறமையாக, உடனடியாக எழுச்சியடையச் செய்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் இராணுவப் படைகளில் சேர வைக்க வேண்டும்” [வி டி சாவார்க்கர், சமாக்ர சாவார்க்கர் வாங்மயா : ஹிந்து ராஷ்டிரா தர்ஷன், தொகுதி 6, மகாராஷ்டிரா பிராந்திக் ஹிந்துசபா, பூனா, 1963, பக்கம் 460]

இந்து மகாசபை பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்குத் தேவையான மனித மற்றும் பொருள் வளங்களை ஏற்பாடு செய்வதற்காக பிரிட்டிஷ் வைஸ்ராயுடனும், பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் தலைமை தளபதியுடனும் நேரடி தொடர்பில் இருந்தது. அது போர்ப்படைகளுக்கான ஆள் எடுக்கும் முகாம்களை ஏற்பாடு செய்தது. பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் சேர முன்வரும் அனைத்து இந்துக்களையும் “இராணுவ ஒழுக்கத்துக்கும் விதிமுறைகளுக்கும் அவை இந்து கௌரவத்தை பாதிக்காதது வரை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் அடிபணியவும் வேண்டும்” என்று சாவார்க்கர் அறிவுறுத்தினார். [ஏ எஸ் பீடே (ஓய்வு), வினாயக் தாமோதர் சாவார்கரின் சூறாவளி பிரச்சாரம் : டிசம்பர் 1937 முதல் அக்டோபர் 1941 வரையிலான பிரச்சார பயணங்களைப் பற்றிய தலைவரின் நாட்குறிப்புகள், நேர்முகங்களிலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், பம்பாய், 1940 பக்கம். xxviii]

த்வானியின் பதிவில், வங்காளத்தில் முஸ்லீம் லீக் அரசாங்கத்தில் டாக்டர் முகர்ஜி பங்கேற்றது பற்றி குறிப்பிட்டு அதைப் பற்றி அவரது கருத்தை வேண்டி நான் ஜூன் 23, 2013 அன்று 9.14 மணிக்கு பின்னூட்டம் ஒன்றை இட்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பின்னூட்டம் நீக்கப்பட்டது. நான் மீண்டும் 10:43-க்கு பின்னூட்டத்தை சமர்ப்பித்தேன், அதற்கும் அதே கதிதான் ஏற்பட்டது. 26-ம் தேதி எனது பின்னூட்டம் மீண்டும் தோன்றியது, ஆனால் அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.

ஸ்டார்பக்ஸ் அத்வானி
அமெரிக்க காபிக் கடையான ஸ்டார்பக்சில் தேசபக்தர் அத்வானி.

அந்த வலைப்பதிவு ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர் அத்வானியுடையது, அதில் எதை வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், அவர் வெளியிட்டிருக்கும் பதிவு தொடர்பான, “ஜனநாயக, மதசார்பற்ற இந்தியாவுக்கு டாக்டர் முகர்ஜி ஒரு தேசபக்தரா?” என்ற எனது கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவரது வாய்வீச்சுக்கு வரம்பு இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதை அவரது அமைதி காட்டுகிறது.

நான் அவரது நிலையை புரிந்து கொள்ளாமல் இல்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாகாணங்களை நிர்வாகம் செய்ய இந்து மகாசபை உதவி செய்தது என்ற முரண்பாட்டை திறமை வாய்ந்த புரட்டாளர் கூட எதிர் கொள்ள முடியாதுதான்.

எண்ணிலடங்கா இந்தியர்கள் “பிரிட்டிஷ் மகுடத்தில் இருக்கும் நகை’ மீண்டும் தமது நாடாக மாற வேண்டும் என்று விரும்பிய காலத்தில், அதற்காக சுபாஷ் போஸ் படை திரட்டிய காலத்தில், டாக்டர் முகர்ஜியின் குரு சாவார்க்கர் பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு உதவி செய்தார் என்பதை அத்வானி கூட விளக்க முடியாதுதான். சாவார்க்கரும் டாக்டர் முகர்ஜியும் தலைமை வகித்த ஹிந்து மகாசபை காலனிய எஜமானர்களின் போர் முயற்சிகளுக்கு வசதி செய்து கொடுத்திருந்த காலத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள், “ஒரு ஆள் கூட கிடையாது, ஒரு பைசா கூட கிடையாது” என்று முழக்கம் எழுப்பியதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.

இறுதியாக, ‘டாக்டர் முகர்ஜி பிறந்ததிலிருந்தே ஒரு மகத்தான தேசபக்தர்’ என்பதற்கான, வேறு யாருக்கும் தெரியாத, ஆதாரங்களை வெளியிடும்படி இந்திய வரலாற்றின் மாணவனாக நான் அத்வானியை கேட்டுக் கொள்கிறேன். அத்வானியின் வலைப்பதிவில் பதில் பெறுவதற்கான எனது உரிமை மறுக்கப்பட்டது, இந்த கட்டுரை மூலமாவது அந்த ஆர்எஸ்எஸ் மூதறிஞரின் விளக்கம் வெளி வந்து டாக்டர் முகர்ஜி பற்றிய தேசத்தின் நினைவுகளை அது செறிவூட்டும் என்று நம்புகிறேன்.

நன்றி : – ஷம்சுல் இஸ்லாம், Countercurrents.org – ஜூன் 27, 2013.

தமிழாக்கம்: பண்பரசு.