Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 705

தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

134

பா.ம.க – ராமதாசு – வன்னிய சாதிவெறி போன்ற சொற்களே இல்லாமல், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட பல மொண்ணை அறிக்கைகள் இளவரசன் மரணத்தையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீமான் வெளியிட்ட அத்தகையதொரு அறிக்கையை விமரிசித்து நாம் நேற்று முன்தினம் ஒரு பதிவு எழுதியிருந்தோம்.

அதற்குப் பின்னூட்டமிட்ட சிலர் வளைத்து வளைத்து பல வார்த்தைகளில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். “எல்லா கட்சிகளும் மழுப்பியிருக்கும்போது எங்கள் செந்தமிழனை மட்டும் ஏன் வறுக்கிறீர்கள்?”, “சாதிப்பூசல் வந்து தமிழர் ஒற்றுமை கெட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகத்தான் அண்ணன் பா.ம.கவை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை” – இதுதான் அவர்களுடைய லா பாயின்ட்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

இனி விசயத்துக்கு வருவோம். சீமான் மீது நமக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய பொதுக்கூட்டத்தை இந்து மதவெறியர்கள் தாக்கியபோது அதைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறோம். கருணாநிதி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ததை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறோம். இதெல்லாம் சொற்ப காலம்.

2009 வாக்கில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து அவர் நடத்தத் தொடங்கிய இனவாத-சந்தர்ப்பவாத அரசியல், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பாசிச ஜெயாவுக்கு காவடி எடுத்தது, ஈழத்தை கோட்சே ஆதரித்தால் நான் கோட்சே கட்சி என்று கொள்கை விளக்கமளித்தது, மும்பை முஸ்லிம் இனப்படுகொலையை நடத்திய சிவசேனாவை ஆதரித்து தேர்தல் வேலை செய்தது, முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு .. என வெகு வேகமாக தன்னைத்தானே அவர் அம்பலமாக்கிக் கொண்டார். பிறகு பெரியார் எதிர்ப்பை மையமாகக் கொண்ட பார்ப்பன அடிவருடி அரசியலை, “திராவிட இயக்க எதிர்ப்பு” என்ற பெயரில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டார். பிறகு மூக்குடைபட்டு மழுப்பினார்.

சீமான் கடை விரித்து வருவது ராஜ் தாக்கரே பாணியிலான இனவெறி அரசியல். இதற்குப் பொருத்தமாக, பிழைப்புவாத லும்பன்களுக்கே உரிய சவடால் பேச்சை அவர் ஆயுதமாக ஏந்தியிருக்கிறார். இந்த சவடால் பேச்சின் காரணமாக அரசியல் எதிர்காலம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவர்கள் தமிழினத்தின் எதிரிகள் அல்லர். சீமானுக்கு மூத்தவர்களான பல இனவாதிகள். சீமான் அளவுக்கு இவர்களுக்குத் தொண்டையில் தெம்பில்லை என்பது மட்டுமின்றி, விஜய்-தனுஷ் ரசிகர்களின் அறிவு மட்டத்திற்குப் பொருந்தும் விதத்தில் தமிழின விடுதலைக்கு திரைக்கதை வசனம் எழுதும் திறன் இவர்களுக்கு இல்லை.

“உலகம் உருண்டையானது” என்ற அறிவியல் உண்மையை வெளியிடுவதாக இருந்தாலும் கூட, தொண்டை நரம்பு புடைக்காமலோ, யாருக்காவது சவால் விடாமலோ, ஒரு கையால் தனது இன்னொரு கையை குத்தித் தள்ளாமலோ அவரால் அதனை வெளியிட முடியாது. “காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்ற வரியை அவர் மேடையில் பேசினாலும், அது “மென்னியைப் பிடித்து கொன்று விடுவேன்” என்பதாக நம் காதில் ஒலிக்கும். காரணம் அவ்வளவு காரம், அவ்வளவு போர்க்குணம்.

சீமான்
அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா

வைகோவுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. அவர் பேச்சின் இடையே தனது தோளில் கொள்கை உறுதியோடு விரைப்பாகத் தொங்கும் குவாலியர் சூட்டிங் பாண்ட் பிட்டை ஏற்றி இறக்குவார். சீமான் திரைப்பட இயக்குநர் என்பதால், தனது பேச்சின் ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் ஒரு “சைலன்ட் ஷாட்” வைத்திருக்கிறார். அந்த சைலன்ஸ் என்பது புயலுக்கு முந்தைய அமைதிக்கு இணையானது. காமெராவின் பானிங் ஷாட் போல அவர் கூட்டத்தை ஒருமுறை பார்ப்பார். அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது.

வலுவான செவிப்புலன் வாய்க்கப் பெறாத தமிழர்கள், சீமானின் கருத்துக்களால் நடுங்கும் ஸ்பீக்கர் செட்டைக் கூட எதிர்கொள்ள இயலாது. அதிகம் சொல்வானேன். ஏற்கெனவே வைகோவின் மைக் செட்டுக்கு இருந்து வந்த செல்வாக்கை சீமான் கட்டிய குழாய் விஞ்சி விட்டது.

இதன் காரணமாக அவர் தமிழின விடுதலைக்கான அடுத்த போர்வாளாக ஆனது மட்டுமின்றி, அடுத்த தமிழக முதல்வருக்கான காத்திருப்போர் பட்டியலுக்கும் வந்து விட்டார். இதன் காரணமாகத்தான் அவருடைய கருத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதை சீமானின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி அவருடைய அறிக்கையின் வரிகளுக்கு வருவோம்.

“நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகி விடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”

சாதிய சக்தி“கள்” என்று சீமான் குறிப்பிடுகிறாரே, இளவரசனையும் திவ்யாவையும் பிரித்த சாதிய சக்தி பா.ம.க மட்டும்தானே. அங்கே “கள்” ளுக்கு வேலை என்ன? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக “பிராமணர் முதல் தேவர்-நாடார் வரையிலான” சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்து மாமல்லபுரத்தில் விழா நடத்தியது வன்னியர் சங்கம்தானே!

உலகத்துக்கே தெரிந்த இந்த உண்மையை சீமான் கூறாமல் தவிர்ப்பதற்கு காரணம், தமிழின ஒற்றுமை மீது அவருக்கு இருக்கும் அக்கறையாம். இதன்படி ஆர்.எஸ்.எஸ்ஸை இந்து மதவெறியர்கள் என்றோ, தாலிபானை இசுலாமிய மதவெறியர்கள் என்றோ சொல்வது தவறு. மதவாத சக்திகள் என்றுதான் சொல்லவேண்டும். வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர பா.ம.க தான் அந்த சாதிய சக்தி என்பதில் அண்ணன் தெளிவாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள் பின்னூட்டம் போடும் அவருடைய தம்பிகள்.

மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்
மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்

“ஆழம்” மாத இதழில் (ஜூலை 2013) சீமானின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அண்ணனுடைய அறிவின் ஆழம் அன்டார்ட்டிக்கா வரை செல்கிறது. “ஒரு மாநில அரசு (ஈழப்பிரச்சினையில்) இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும்?” என்ற கேள்விக்கு கீழ்வருமாறு பதிலளிக்கிறார் சீமான் :

“நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது!”

“நான் வன்னியன்” என்று ராமதாசு தெளிவாக பிரகடனம் செய்த பிறகும், அவரால் ஏத்தி விடப்பட்ட சொந்தங்கள் “நாங்கள் பல்லவ பரம்பரை” என்று கூறி மாமல்லபுரம் கோயில் மீது டான்ஸ் ஆடியபிறகும், நத்தம் காலனி தாக்குதல், மரக்காணம் தாக்குதல் என்று சாதிவெறித்தனங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிய பிறகும், சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.

“வட தமிழ்நாட்டை தனியாகப் பிரி. அப்போதுதான் வன்னியர் முதல்வராக முடியும்” என்கிறார் மருத்துவரய்யா. அய்யா முதல்வராக இருந்திருந்தால், இந்திய அரசை எதிர்த்து தமிழ் நாட்டையே தனிநாடு ஆக்கியிருப்பார் என்கிறார் சீமான். குச்சு கொளுத்தி என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களிடம் பட்டம் பெற்ற மருத்துவரய்யா, வன்னியில் கதறிய ஈழத்தமிழரை காப்பாற்றியிருப்பாராம்.

இப்படி சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட வன்னியரல்லாத அந்நியத் தமிழர்கள் காறித்துப்பி விடுவார்கள் என்பதால், முதல்வர் பதவியை திருமாவுக்கும் தனக்கும் வழங்கிக் கொள்கிறார். “உயிரைப் பணயம் வைத்து” ஈழம் சென்று வந்த வைகோ வடுகர் என்பதால் அவருக்கு இந்த முதல்வர் பட்டியலில் இடம் கிடையாது.

ஏனென்றால் ஈழத் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டு துடிக்க வேண்டுமென்றால், உங்கள் உடம்பில் தெலுங்கு, மலையாளி, கன்னட கலப்பில்லாத தமிழ் ரத்தம் ஓட வேண்டுமாம். அப்படிப்பட்ட தமிழ் ரத்தம் கொங்கு ஈசுவரன், சேதுராமன், பொன் இராதா கிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றோரின் உடலில்தான் ஓடுகிறதாம். ஏனென்றால் இவர்களெல்லாம் தமிழ்ச் சாதிகளாம்!

ஆல் இன் ஆல் அழகுராஜா
இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது

பெரியார்தாசன் சொல்லும் ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. “தமிழனுக்கு அறிவு இல்லை, தமிழனுக்கு மானம் இல்லை” என்று என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள். எவனும் கேட்கமாட்டான். “செட்டியாருக்கு அறிவில்லை, தேவருக்கு மானமில்லை” என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் வீடு போய் சேர முடியாது. இங்கே செட்டியாரும் முதலியாரும்தான் இருக்கிறான். தமிழன் இல்லை” என்பார்.

தமிழன் தன் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்திருந்த சாதியைக் கத்தரித்தார் பெரியார். வன்னியத் தமிழன், கவுண்டத் தமிழன் என்று “தமிழ்ச்சாதி”களை உருவாக்கி வரும் இந்த “நாம் தமிழர்கள்”, பெரியார் மரபை ஒழித்துக்கட்டி தமிழின உணர்வை உருவாக்கப் போகிறார்களாம்! பார்ப்பனியம்-சாதியம் என்ற இந்த விளக்குமாத்துக்கு தமிழின உணர்வு என்றொரு பட்டுக் குஞ்சம்!

வினவு, பா.ம.க வின் பெயரைச் சொல்லி சாதி வெறியர்கள் என்று சாடினால், தமிழர்களைப் பிளவு படுத்துவதாக குதிக்கிறார்கள் “நாம் டம்லர்” தம்பிகள். நாம் மட்டுமா? நத்தம் காலனி தாழ்த்தப்பட்ட மக்கள் ராமதாசின் பெயரைச் சொல்லித்தான் மண்ணை வாரி இறைக்கிறார்கள். நாடே காறித் துப்புகிறது. எனில் நத்தம் காலனி மக்கள் தமிழினத் துரோகிகளா, காடு வெட்டி குருதான் தமிழினப் போராளியா?

அண்ணன் இதனைத் தெளிவாக விளக்குகிறார். “பரமக்குடி, தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?” என்ற ஆழம் பத்திரிகையின் கேள்விக்கு சீமானின் பதில் இது:

“எங்கள் தமிழினப் பிள்ளைகளிடையே சாதியப் பிரிவினையை உண்டு பண்ணுகிற அரசியல் மேலாதிக்க சக்திகள்தான் இதற்கெல்லாம் காரணம்… இந்த திராவிடக் கட்சிகளின் தலைமை எதுவும் இங்கே ஒரு சாதிய வேரோ இங்கே ஓர் ஆழமான உறவு வேரோ இல்லாதவை! பள்ளரையும் பறையரையும் மோதவிட்டு, படையாட்சியையும் பறையரையும் மோதவிட்டு அரசியல் செய்தால்தான் இவர்கள் பிழைப்பு நடத்த முடியும்… நான் முதலமைச்சரானால், “என்னப்பா.. இமானுவேல் நம்ம ஐயாப்பா. தேவரும் நம்ம ஐயாப்பா. ரெண்டு பேருமே நம்ம பாட்டன்யா. போய் அவங்கள சாமியா நெனச்சி கும்பிட்டு வாய்யா. நமக்குள்ள சண்டை போட்டுக்கிடறது பைத்தியக்காரத்தனமில்லையா. வாய்யா கிருஷ்ணசாமி, வாய்யா சேதுராமன் ரெண்டு பேரும் ஒண்ணா போய்க் கும்பிடுங்க. நானும் உங்களோட வரேன்” என்று சமாதானம் செய்து வைப்பேன்.” என்கிறார்.

“அப்படீன்னா இதுதான் மான்டிலாண்ணே? ஆமாண்டா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது!”

அழகுராஜா தத்துவத்தின் படி வெட்டுன தேவரையும் வெட்டுப் பட்ட இமானுவேலையும் கும்பிட வைப்பாராம். மேலவளவு முருகேசனை தேவமார்கள் கும்பிடணும். அவரை வெட்டிய தேவர் சாதிவெறியர்கள் அம்புட்டுப் பேரையும் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிடணும். இளவரசனை சின்னய்யா கும்பிடணும். காடு வெட்டி குருவுக்கு நத்தம் காலனியில கோயில் கட்டணும்.

“இவ்வளவு அருமையான திட்டம் அண்ணன் கையில் இருக்கையில தெக்கு வடக்கு தெரியாம நாம தவிச்சுகிட்டிருக்கோமே, அண்ணன் இப்பவே இதை செஞ்சு காட்டிரலாமே” என்று நீங்கள் நினைக்கலாம்.

செஞ்சிருவாரு. ஆனால் அதுக்கு முன்னாலே நீங்க ஒரு சின்ன வேலை செய்யணும்னு அண்ணன் சொல்லியிருக்காருல்ல, அதக் கவனிங்க. அண்ணனை நீங்க முதல்வராக்கணும். அப்பதான் அவரால சமாதானம் செய்து வைக்க முடியுமாம். தமிழனுக்கு தமிழுணர்வு வந்து அவன் ஓட்டுப் போட்டு, அண்ணன் தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வராகி அப்புறம்தான் சாதிச் சண்டையை நிறுத்தணும்னா, தமிழினம் எந்தக் காலத்திலயும் விடுதலை பெறவே முடியாது. அண்ணனை முதல்வராக்குறது தமிழுணர்வாளர்கள் பொறுப்பு. தேர்தல்ல நின்னாதான் முதல்வராக முடியுமா என்ன? அதிரடிப்படை -2 மாதிரி முதல்வன் -2 எடுக்கச் சொல்லி இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டுப் பாக்கலாமே.

செந்தில்
மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்

பழைய காமெடியா யாவகத்துக்கு வருதே! ஊர்க்காரங்கள்ட்ட காசு வசூல் பண்ணிட்டு, மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்னு சொல்வாரே செந்தில், அதே காமெடிதான். இது ரீமிக்ஸ்.

திராவிடக் கட்சிகளுக்கு இங்கே தமிழ்ச் சாதிய வேர் இல்லையாம். அந்த காரணத்தினாலதான் திராவிட இயக்கம் தமிழ்ச் சாதிகளை மோதவிடுதாம். இப்போ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்னியர்களையும், பிற ஆதிக்க சாதிகளையும் தூண்டுவது யார்? கருணாநிதியா, வைகோவா, விஜயகாந்தா, ஜெயலலிதாவா? வன்னியர், கவுண்டர், தேவர் என்று இங்கே தமிழ் வேர் உள்ள சாதிகள்தானே தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறார்கள். அது ஒடுக்குமுறை இல்லையாம், தமிழர்களுக்குள் மோதலாம்.

சீமான் கூறுவதற்கு நேர் எதிராகத்தான் இருக்கிறது எதார்த்தம். நேர் எதிராகத்தான் இருக்கிறது மக்கள் கருத்து. இங்கே வேரோ ஆள்பலமோ இல்லாத சாதிக்காரன் கட்சித் தலைவனாக இருந்தால்தான் ஓரளவு நடுநிலையாக இருப்பான் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு கொண்டுவரப்படுகின்றனர். சீமானுக்கு புரியும் மொழியில் சொல்வதன்றால், “வன்னியத் தமிழனையோ, கவுண்டத் தமிழனையோ, தேவர்குலத் தமிழனையோ நம்ப முடியாது. வடுகர் கருணாநிதியை, மலையாளி எம்ஜியாரை, கன்னடத்து ஜெயாவை நம்பலாம்” என்று பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுகின்றனர். இது தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்து மட்டுமல்ல, வன்னியரைப் பள்ளி என்று ஏசும் கவுண்டர் முதல் தேவர், கள்ளர், நாடார் உள்ளிட்ட அனைத்து சாதிகளும் ஒருவரைப் பற்றி ஒருவர் வைத்திருக்கும் கருத்து இதுதான்.

மற்ற சாதிக்காரனை நம்ப முடியாது என்கிறான் ஒரு சாதித் தமிழன். சாதிய உணர்வின் பிச்சையில் தமிழன உணர்வுக்கு வாழ்வு கொடுக்கிறான் வேர் உள்ள சாதித் தமிழன். இப்பேற்பட்ட தமிழுணர்வுதான் புரட்சியை சாதிக்கும் என்கிறார் சீமான்.

இந்தக் கேவலமான நிலைமை குறித்து நமக்கு மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது. கல்லானாலும் தமிழன் மிதிக்கும் கல்லாவேன், மரமானாலும் தமிழன் வெட்டும் மரமாவேன் என்பது நம் கொள்கையல்ல. அது இனவாதிகளின் கொள்கை. மதிப்பாகச் சொல்லிக் கொண்டால் – தமிழினவுணர்வு.

திராவிடக் கட்சிகளைச் சாடி விட்டு, சாதிய வேர் உள்ள தமிழர்களின் கட்சிகளுக்கு வருகிறார் சீமான். “ராமதாஸ் அய்யா கடந்த காங்கிரசு ஆட்சியில் ஈழப்படுகொலைகள் நடந்த போதே அதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தாலோ, அண்ணன் திருமாவளவன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து நின்றிருந்தாலோ நான் அவர்கள் பின்னால் நின்றிருப்பேன். நாம் தமிழர் கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே வந்திருக்காது”

கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்தது கிடக்கட்டும், பச்சைத் தமிழ் இரத்தம் உடம்பில் ஓடும் ராமதாசும், திருமாவும் ஏன் பதவி விலகவில்லை? ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலைக்கு இவர்கள் இருவரும் துணை நின்றார்கள் என்பது சீமானின் முதல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றத்தின் உடன் விளைவாக நாம் தமிழர் என்றொரு கட்சியை துவக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள் என்பது, அவர்கள் மீது சீமான் வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு.

முதல் குற்றம் முடிந்து விட்டது. இரண்டாவது குற்றத்தின் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு !

7

மோடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் முசுலீம் படுகொலை குறித்த வழக்கு-விசாரணைகள் ஒருபுறமிருக்க, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ். பேடி என்பவர் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று அம்மாநிலத்தில் 2003-க்கும் 2006-க்கும் இடைபட்ட காலத்தில் நடந்த 16 ‘மோதல்’ கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. 2004-ம் ஆண்டு நடந்த இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் படுகொலை, 2005-ம் ஆண்டு நடந்த சோராபுதீன் படுகொலை, 2006-ம் ஆண்டு நடந்த துளசிராம் பிரஜாபதி படுகொலை ஆகியவை போலிமோதல் கொலைகள் என்பது நிரூபணமாகி, இவை தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகின்றன. குஜராத் முசுலீம் படுகொலையின்பொழுது மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவின் கொலைக்கும், சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலைகளுக்கும் இடையே உள்ள தொடர்போ மர்மங்கள் நிறைந்த துப்பறியும் நாவலைப் போல விரிகிறது.

போலி மோதல் கொலைகள்
போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள். (உள்படம்) இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படம்)

சோராபுதீன் போலிமோதல் கொலைவழக்கு தொடர்பாக குஜராத் அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீசு அதிகாரிகள் மட்டுமின்றி, மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும் அவரது அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித் ஷாவும் கைது செய்யப்பட்டு, தற்பொழுது அவர் பிணையில் விடப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலிமோதல் படுகொலையில் 21 உயர் போலீசு அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது, சி.பி.ஐ. இப்படுகொலையில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளைக் காப்பாற்றுவது தொடர்பாக விவாதிப்பதற்கு மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்த பிரபுல் படேல் தலைமையில் நவம்பர் 2011-ல் இரகசியக் கூட்டமொன்று நடந்துள்ளது. இப்படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் கிரிஷ் லஷ்மண் சிங்கால் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து வைத்திருந்ததை, தற்பொழுது சி.பி.ஐ.-யிடம் சாட்சியமாக அளித்திருக்கிறார்.

ஏதோ ஒரு சில போலீசு அதிகாரிகள் மட்டுமல்ல, மோடி அரசு முழுவதுமே கிரிமினல் கும்பலைப் போலச் செயல்பட்டு வருவதை இப்போலி மோதல் கொலை வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. நரோடா பாட்டியா படுகொலைக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோத்நானிக்கு, மோடி தனது அரசில் அமைச்சர் பதவி கொடுத்து வைத்திருந்ததும்; சோராபுதீன் கொலைவழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டு பதவி விலகியுள்ள அமித் ஷாவை மோடி உ.பி.யின் பொறுப்பாளராக நியமித்திருப்பதும் அரசு மற்றும் அரசியல் அமைப்புகளை மோடி எந்தளவிற்கு கிரிமினல்மயமாக்கி வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இக்கிரிமினல்மயம்தான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்!

ராஜேந்தர் குமார்
குஜராத் போலீசு நடத்திய இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலைக்கு உடந்தையாக இருந்த மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்.

ஓட்டுப் பொறுக்குவதில் எலியும் பூனையும் போல நிற்கும் மோடியும் காங்கிரசும் முசுலீம் தீவிரவாத எதிர்ப்பு அரசியலில் நெருங்கிய தோழர்களாகச் செயல்பட்டுவருவதை இஷ்ரத் ஜஹான் மற்றும் சோராபுதீன் போலிமோதல் கொலை வழக்குகளில் காணமுடியும். சோராபுதீனை ஆந்திராவிலிருந்து குஜராத்திற்குக் கடத்தி வருவதில் குஜராத் போலீசுக்கு, காங்கிரசு ஆட்சியிலுள்ள ஆந்திரா போலீசார் உதவியுள்ளனர். இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை வழக்கிலோ, மத்திய காங்கிரசு அரசு மோடியின் பங்காளியாகச் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி வருகிறது.

“இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற “பிட்டை” – போலீசு மொழியில் உளவுத் தகவலை – மோடி அரசிடம் போட்டதே மைய அரசின் உளவுத்துறைதான் என்பது ஏற்கெனவே மைய அரசாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. வெறும் உளவுத் தகவலை அளித்ததோடு மட்டும் உளவுத் துறையின் பங்கு முடிந்து விடவில்லை என்பது இப்பொழுது அம்பலமாகி இருக்கிறது. அச்சமயத்தில் உளவுத் துறையின் குஜராத் மாநிலத் தலைமை அதிகாரியாக இருந்த ராஜேந்தர் குமார் (தற்பொழுது இவர் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர்) இந்த உளவுத் தகவலை அளித்ததோடு, அந்த நால்வரையும் சட்டவிரோதமாகக் கொலை செய்வதில் குஜராத் போலீசு அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் சி.பி.ஐ. குற்றஞ்சுமத்துகிறது.

“அவர்கள் நால்வரும் குஜராத் போலீசின் சட்ட விரோதக் காவலில் இருந்த பொழுது ராஜேந்தர் குமார் நேரடியாக வந்து அவர்களைச் சந்தித்தார்; ஏ.கே. 56 இரகத் துப்பாக்கி ஒன்றை குஜராத் போலீசிடம் கொடுத்து, அத்துப்பாக்கியை அத்தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறும்படித் திட்டம் போட்டுக் கொடுத்ததே ராஜேந்தர் குமார்தான்” என இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசு அதிகாரிகள் சி.பி.ஐ.-யிடம் சாட்சியம் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இது மட்டுமின்றி, ராஜேந்தர் குமார் அவர்கள் நால்வரையும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அளித்த உளவுத் தகவலையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, சி.பி.ஐ. இந்த வழக்கு விசாரணை புலி வாலைப் பிடித்த கதையைப் போலாகிவிட்டதால், காங்கிரசு அரசு வேறுவழியின்றித் தனது உளவுத் துறையின் மானம் மரியாதையைக் காப்பாற்ற குறுக்கு வழியில் இறங்கியிருக்கிறது.

சி.பி.ஐ., ராஜேந்தர் குமாரை இரண்டாம் முறையாக விசாரணைக்கு அழைத்தவுடனேயே, மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், சி.பி.ஐ., மற்றும் உளவுத் துறை இயக்குநர்களை அழைத்து ஒரு பஞ்சாயத்தை நடத்தி வைத்தார். இதன் காரணமாக ராஜேந்தர் குமாருக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவரை விசாரிப்பதற்கே ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் விதித்த மைய அரசு, இவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறுவதை அனுமதிக்குமா என்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள கேள்வியாக எழுந்து நிற்கிறது. மேலும், இவ்வழக்கில் தற்பொழுது தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் குற்றப்பிரிவு போலீசு அதிகாரி பி.பி.பாண்டேவிற்கு காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மைய அமைச்சர்கள்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹரேன் பாண்டியா
குஜராத் முசுலீம் படுகொலையில் மோடிக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்ட குஜராத் மாநில முன்னாள் வருவாய்த்துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா.

இதுவொருபுறமிருக்க, இஷ்ரத் ஜஹானோடு சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளைக்கும் லஷ்கர் அமைப்பின் கமாண்டர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்களை ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் தொலைக்காட்சியின் வழியாக இப்பொழுது கசியவிட்டு, அதன் மூலம் “அந்நால்வரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான்; மோடியைக் கொல்ல வந்தவர்கள்தான்” என்ற தனது பொயை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றது, உளவுத்துறை. “இந்த ஒலிநாடாவை இத்தனை நாட்களாக நீதிமன்றத்தில் கொடுக்காமல் இருந்தது ஏன்?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அம்பலப்பட்டும் போனது.

போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்நால்வரையும் உளவுத்துறை கீழ்த்தரமான முறையில் குற்றஞ்சாட்டுவதும் அதற்கு முதலாளித்துவப் பத்திரிகைகள் கூஜாவாகச் செயல்படுவதும் புதியதல்ல. மும்பய்த் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் டேவிட் ஹெட்லி, “இஷ்ரத் ஜஹான் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்தான்” என அமெரிக்க போலீசிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஒரு செய்தியை சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கைகளில் கசியவிட்டது, உளவுத் துறை. இதனைப் பின்னர் மைய அரசின் தேசியப் புலனாய்வு ஏஜென்சி மறுத்து, டேவிட் ஹெட்லி அப்படியெல்லாம் வாக்குமூலம் அளிக்கவில்லை என விளக்கம் அளித்தது. ஆனாலும், மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பிரபலமான முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட உளவுத் துறை கசியவிட்ட இப்பொய்ச் செய்தியை இன்றும்கூட திரும்பத்திரும்ப வெளியிட்டு, இப்படுகொலையை நியாயப்படுத்த முயன்று வருகிறார்கள்.

இதைவிடக் கேவலமாக இப்பிரச்சினையில் நடந்துகொண்டார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. சிறப்புப் புலனாய்வுக் குழு, இது போலிமோதல் கொலைதான் என்பதை உறுதிசெய்து குஜராத் உயர் நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்த சமயத்தில், “இஷ்ரத் ஜஹான் வெவ்வேறு விடுதிகளில் பல ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி, அவ்விளம் பெண்ணின் நடத்தையை அசிங்கப்படுத்த முயன்றார், அவர். இந்த அவதூறை தேசியப் பத்திரிகைகள் ஏதோ அரிய கண்டுபிடிப்பைப் போல வெளியிட்டு, உளவுத் துறைக்கு முட்டுக் கொடுத்தன.

கோட்னானி, அமித்ஷாஇஷ்ரத் ஜஹான் மட்டுமல்ல, மோடியின் ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட அனைவருமே தீவிரவாதிகளாகவும், இக்கொலைகள் அனைத்துமே நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன. “பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்படும் தீவிரவாதிகளால் மோடிக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், எனினும் மோடி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும்” பில்ட்-அப் கொடுக்கப்பட்டு, இப்போலிமோதல் கொலைகள் பச்சையாக நியாயப்படுத்தப்படுகின்றன.

ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிராகவே இருக்கிறது. ஹரேன் பாண்டியாவை முசுலீம் தீவிரவாதிகள்தான் கொலை செய்ததாகக் கூறியது மோடி அரசு. ஆனால், இவ்வழக்கில் கைது செயப்பட்ட 12 முசுலீம்களும் குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சாதிக் ஜமால் என்ற முசுலீம் இளைஞரை ஜனவரி 2003-ல் ‘மோதலில்’ சுட்டுக் கொன்ற குஜராத் போலீசு, “சாதிக், மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்த லஷ்கர் தீவிரவாதி” எனக் கூறியது. ஆனால், இது பற்றி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், சாதிக் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண முசுலீம் வாலிபர் என்பது அம்பலமாகியிருக்கிறது.

சோராபுதீன் உள்ளூர் தாதா என்பதும், அவனுக்கும் அமித் ஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் ஊரறிந்த உண்மை. குஜராத் முசுலீம் படுகொலையில் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்த பிறகுதான் கொலை செயப்பட்டார். இக்கொலையில் சோராபுதீன் கும்பலுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகியதையடுத்து, சோராபுதீனும் அவனது அடியாளான துளசிராம் பிரஜாபதியும் போலி மோதலில் கொல்லப்பட்டனர். மேலும், சோராபுதீன் கொலை ராஜஸ்தானின் மார்பிள் சுரங்க முதலாளிகள் மற்றும் குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடத்தப்பட்ட சுபாரி கொலை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. மோடியும் அவரது அரசும் தமது கிரிமினல் குற்றங்கள் அனைத்தையும் மறைப்பதற்கு முசுலீம் தீவிரவாத பூச்சாண்டி அரசியலைப் பயன்படுத்தி வருவதை இவை எடுத்துக் காட்டுகின்றன.

இப்படிபட்ட நிலையில் இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலையை விசாரித்து வரும் குஜராத் உயர் நீதிமன்றம், “அவர்கள் தீவிரவாதிகளா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு அக்கறையில்லை; அவர்கள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டது உண்மையானதா, போலியானதா என்பதில் மட்டும் கவனம் செலுத்தி, குற்றப் பத்திரிகையை ஜூலை 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு” சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டதை விசாரிக்கத் தொடங்கினால், அது மோடியின் கிரிமினல்தனத்தை மட்டுமல்ல, காங்கிரசு அரசு, அதன் உளவுத்துறையின் யோக்கியதையை மட்டுமல்ல, முசுலீம் தீவிரவாத எதிர்ப்பு அரசியலின் கிரிமினல்தனத்தையே பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிடும். அப்படிபட்ட விசாரணை கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிவதைப் போலாகிவிடும் என்பதாலேயே, அடக்கி வாசிக்குமாறு சி.பி.ஐ.-க்குக் கட்டளையிடுகிறார்கள் நீதிபதிகள்.

– குப்பன்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !

4

1. அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம் தெருமுனைக் கூட்டம்

னைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், (இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) சார்பில் 04-07-13 அன்று மாலை 6 மணிக்கு தொழிலாளர் ஒற்றுமையை கட்டியமைப்போம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!  என்ற தலைப்பில் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் தெரு முனைக் கூட்டம் நடத்தது. சங்கத் தலைவர் தோழர்.மகாலிங்கம் தலைமை தாங்க, சிறப்புத் தலைவர் தோழர். சேகர் சிறப்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் தோழர். இலியாஸ் நன்றி கூறினார். 40க்கும் மேற்ப்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தோழர். சேகர் தனது உரையில்

“முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் ஒன்று பட வேண்டும். முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது, அரிசி விலை ஏறுது. நெல் விலை குறையுது! உற்பத்தி செய்த விவசாயிக்கும் லாபம் இல்லை! வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கும் லாபம் இல்லை! இடையில் முதலாளி தான் கொள்ளையடிக்கிறான். சேவைத் துறையாக இருந்த கல்வித்துறையை கைப்பற்றி, கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி, பால்வாடிக்கு சேர்க்கும் போதே ரூ 10,000 ரூ 20,000 என கொள்ளையடிப்பதுதான் கல்வி முதலாளிகளின் வேலையாக இருக்கிறது. குடிக்கிற தண்ணீரைக் கூட பாட்டிலில் அடைத்து, அதிலும் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.

அதனால்தான் முதலாளிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறோம். இதற்கு அடிப்படையான தனியார்மயக் கொள்கைகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக அளவில் மின்சாரம் தரக் கூடிய நெய்வேலி அனல்மின் நிலையம் இருக்கிறது. அதையும் தனியாரிடம் விற்க காங்கிரஸ் அரசு துடிக்கிறது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அது அவர்களின் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல! ஆலையையும் காப்பாற்றுவதற்காகத்தான். தமிழக மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.

ஆலையில் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக முதலாளி, தொழிலாளர்களில் சிலரை கருங்காலிகளாக்கி, சங்கம் அமைப்பான். அதைப் போலவே தரைக்கடை வியாபாரிகளில் சிலரை கருங்காலிகளாக்கி, சங்கம் அமைத்து, வியாபாரிகளின் ஒற்றுமையை குலைக்கிறது போலீசு. எனவே சிறுவியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் இணைந்து முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலக வர்த்தகக் கழகம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தையே சுற்றி வளைக்கிறார்கள். எனவே, இவர்களை எதிர்கொள்ள சிறு முதலாளிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இங்கே சாரதாஸ், மங்கள் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக போக்குவரத்து நெருக்கடி எனக் காரணம் காட்டி, தரைக்கடை வியாபாரிகளை போலீசு விரட்டுகிறது. ஒரிசாவில் போஸ்கோ முதலாளிக்காக ஒரிசா விவசாயிகளை நிலத்தை விட்டே விரட்டுகிறது ஒரிசா போலீசு. எங்கேயும் போலீசும், அரசாங்கமும் முதலாளிகளுக்காகவே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதை எந்த கட்சிகளும் எதிர்ப்பதில்லை -நக்சல்பாரிகளைத் தவிர. முதலாளிகளிடம் கையூட்டு வாங்கவே மற்ற ஓட்டுகட்சிகள் அலையாய் அலைகிறார்கள். அதற்கு கைமாறாக காடு, மலை, ஆலை, சாலை அனைத்தையும் பங்கிட்டுக் கொடுக்கிறான். இது முதலாளித்துவ பயங்கரவாதம் மட்டுமல்ல! நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கையாகும். எனவே இதை முறியடிக்க உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்”

என்று பேசினார்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி : பு.ஜ.தொ.மு., திருச்சி

2. பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கம்

தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் திருச்சியில் 7-7-13 அன்று மாலை 5.30 மணிக்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. நகரம் முழுவதும் இதற்காக விளம்பரம் செய்யப்பட்டது.

மாலை 5 மணி முதலே தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் நிகழ்ச்சி நடத்த திருவரம்பூர் பாரத் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர்.சுந்தராஜ் அவர்கள் இக்கூட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக வந்த புதுதில்லியின் தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தோழர் அசோக்ராவ் அவர்கள் 15 வருடமாக நமக்கு ஆதரவு தெரிவித்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை நினைவு படுத்தினார்.

“முதலில் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன், இப்படிப்பட்ட இந்தியாவை உங்களிடம் ஒப்படைத்து செல்வதற்காக.

கடந்த காலத்தில் இந்த நாடு இப்படி இருக்கவில்லை. ஆனால் சோசலிச வீழ்ச்சிக்கு பின் குளிர் விட்டுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் மூலமாக கடன் கொடுப்பதன் மூலமும், அடிமை ஒப்பந்தங்களின் மூலமாகவும் ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்துகின்றனர்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அத்தகைய அடிமை ஒப்பந்தங்களின் மூலமாகத்தான் இந்த நாட்டில் நுழைந்தன. தற்பொழுது இந்த நாட்டில் கல்வி, மருத்துவம் இவற்றை அவர்கள் கையில் ஒப்படைத்ததன் மூலம், மக்களின் படிப்பையும், ஆரோக்கியத்தையும் அடுத்தவன் கையில் ஒப்படைத்துள்ளது.

கனிமவளம், தண்ணீர் என ஒவ்வொன்றிலும் அவர்களின் உத்தரவுபடியே நடக்கிறது. இந்த உத்தரவு இந்தியாவின் ‘தலைநகரான’ வாசிங்டனில் இருந்து வருகிறது.

பல நூறு ஏக்கர் விளை நிலங்கள் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நிலம் விழுங்கப்படுகிறது. இதை மோடி சிறப்பாக செய்வதால் அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக அறிவிக்கப்படுகிறார். இந்தியாவின் விதை பன்னாட்டு கம்பெனிகளின் கையில் சென்றுவிட்டது. சரத்பவார் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் காலத்தின் தேவை என்கிறார்.

மேலும் சில்லறை வணிகத்திலும் அன்னிய மூலதனம் வந்துள்ளது. வால்மார்டில் சட்டை மிக மலிவாக கிடைக்கும் என்று காரணம் சொல்கின்றனர். இந்த மலிவான சட்டை கிடைக்கத்தானே வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர் விட்டனர். இது அவர்களின் ரத்தம் என்று புரியவில்லையா. இந்தக் கடைகளில் விற்பதற்கான காய்கறிகளை விளைவிக்க விளைநிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் பொருள் வாங்க வேண்டும் என்பதற்காகவே ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டம். இதன் விளைவு இந்த நாட்டின் உணவு கலகத்தில் கொண்டுபோய்விடும்.

இதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலைமை, கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மனி, ஏன் அமெரிக்க மக்கள் கூட இதற்கு எதிராய் போராடுகின்றனர். உலகம் கம்யூனிசத்திற்காக ஏங்குகிறது. அதை நம் மண்ணில் விதைப்பது நமது தொழிலாளி வர்க்கத்தின் கடமை, அதை நாம் செய்ய வேண்டும்.”

என்று பேசினார்.

அடுத்து பேசிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் தோழர் தங்கராசு அவர்கள்,

“கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளிகள் 8 மணி நேர வேலை, சமவேலைக்கு சம ஊதியம், வாரம் ஒரு நாள் விடுமுறை என்று என்னென்ன  கோரிக்கைகளை வைத்து போராடினார்களோ அதே கோரிக்கைகளுக்காக இன்று போராட வேண்டி உள்ளது.

அன்று தொழிலாளிகளை ஜாதி பெயரை சொல்லி திட்டக் கூடாது என்று போராடினார்கள். மாருதி தொழிற்சாலையில் தொழிலாளியை ஜாதியை சொல்லி திட்டியதாலேயே போராட்டம் வெடித்தது.

அன்று சங்கம் துவங்கிய திரு.வி.க போன்ற சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றும் அதே நிலைமை. ஒரு தொழிற்சாலையில் சங்கம் துவங்க முன்னணியாக செயல்பட்டவரை மற்ற தொழிலாளிகள் அடித்தால்தான் நான் எல்லோருக்கும் வேலை தருவேன் என்று மிரட்டி அடிக்க வைத்து உள்ளான்.

முன்பாவது தொழிலாளர்கள் தங்களது கஷ்டத்தை தணித்துக் கொள்ள ரேசன், அரசுப் பள்ளி, E.S.I மருத்துவ வசதி, P.F என்று இருந்தது. இன்று அவை எல்லாம் பறிக்கப்பட்டு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். அப்படி வேலைக்குச் செல்லும் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது.

இதை எல்லாம் பாரளுமன்றத்தில் தீர்ப்பதாக சொல்பவர்கள் மக்களிடம் ஓட்டுவாங்கி கொண்டு, முன்பு 7 பேர் சேர்ந்தால் சங்கம் துவங்கலாம் என்று இருந்த சட்டத்தை 100 பேர் இருந்தால்தான் சங்கம் துவங்க முடியும் என்று மாற்றி உள்ளனர்.

இந்த இயக்கத்தின் நோக்கம் என்பது இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது என்பதுதான். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முடிவு கட்ட வேண்டும் என்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும். முதலாளி சமுதாயத்தை அழிக்கிறான், பாட்டாளி சமுதாயத்தை படைக்கிறான். முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போரிடாமல் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. அது தான் நமக்கும் மற்ற சங்கங்களுக்குமான வேறுபாடு. நாம் நமது நோக்கத்தை தொழிலாளிகளிடம் கொண்டு சென்று அவர்களை அமைப்பாக்கி புதிய வரலாற்றை எழுத வேண்டும்”

என்று கூறினார்.

இறுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காலுக்கடியில் பூமி நழுவுது காலனியாக்கம் கண்ணில் தெரியுது என்று தோழர்கள் பாடிய பொழுது இசைக்கு ஏற்றவாறு மக்களும் கைதட்டி ரசித்தனர்.

இக்கூட்டத்தை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனைச் சேர்ந்த தோழர்.பொன்னுசாமி நன்றியுரை கூறி முடித்து வைத்தார். பல நபர்கள் பு.ஜ.தொ.முவில் உறுப்பினராக சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் தந்தனர். இவை எல்லாம் திருச்சி மண் சிவக்க தொடங்கி உள்ள அடையாளமாக தெரிந்தன.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, திருச்சி பகுதி

பார்ப்பன பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள் !

12

லது-இடது போலி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற அரசியல் சாக்கடையில் தம் சொந்த விருப்பத்தின் பேரில்தான் இறங்கியிருக்கின்றனர் என்பது உண்மையே எனினும், அவர்களைத் திணறத் திணற அந்தச் சாக்கடைக்குள் முக்கி எடுப்பதற்கு ஒரு ஜெயலலிதா தேவைப்படுகிறார். நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல் கூத்துகள் போலிகளின் முக விலாசத்தை முற்றிலும் அம்பலமாக்கி விட்டன. தங்களுடைய மாநிலங்களவை வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரி சென்னைக்குக் காவடி எடுத்த வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் காக்க வைத்து, பார்க்க மறுத்து, பிறகு ஆதரவு இல்லை என்று டில்லியில் அறிவித்து கதவை மூடிய பின்னரும் காம்பவுண்டுக்கு வெளியே காத்திருந்தனர் போலி கம்யூனிஸ்டுகள்.

பல்லக்கு
பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள்.

ஐந்து வேட்பாளர்களை அறிவித்து, அதில் சரவணபெருமாள் கிரிமினலென்று அம்பலமான பின்னரும் விடாமல், மாற்று வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமளவுக்கு வாக்குகளைத் திரட்ட முடியாது என்று தெரிந்த பின்னர்தான், பிச்சைக்காரனுக்கு மிச்சம் மீதியை எறிவதைப் போல ஒரு இடத்தைப் போலிகளுக்கு விட்டெறிந்தார் ஜெயலலிதா. தன்னுடைய ஆசிபெற்ற தா.பாண்டியனுக்குப் பதிலாக ராஜாவை நிறுத்தியதன் காரணமாகத்தான் இந்த விசேட அவமதிப்பு என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ஜெயலலதாவின் அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் அ.தி.மு.க. அடிமைகளை விஞ்சியவர்கள் போலிகள்.

பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக ஆதரித்த ஜெயாவுடன் 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துவிட்டு, “அவர் மாறிவிட்டார்” என்று விளக்கமளித்தனர். மதமாற்றத் தடைச்சட்டம், கிடாவெட்டுத் தடைசட்டம், அரசு ஊழியர் மீதான அடக்குமுறை – என அடுக்கடுக்காக விழுந்தன செருப்படிகள். “தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தால் எலிக்கறி தின்கிறார்கள்” என்று சொன்னதற்காக இவர்களது எம்.எல்.ஏ.வின் வீடு தாக்கப்பட்டது. “தரிசு நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்காதீர்கள், நிலமற்ற விவசாயிகளுக்குக் கொடுங்கள்” என்று கேட்ட இவர்களை “நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்குப் பணம் கேட்பீர்கள்” என்று ஜெ எள்ளி நகையாடினார். இந்த ஆளும் வர்க்க, பார்ப்பனத் திமிரும் அவமதிப்புகளும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எள்ளளவும் கோபத்தை ஏற்படுத்தாமைக்கு ஒரே காரணம், அவர்களுக்கும் அ.தி.மு.க.வின் பிழைப்புவாத அடிமைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை – தோளில் போட்டிருக்கும் துண்டின் நிறத்தைத் தவிர.

தனியார்மய எதிர்ப்பையும் மதச்சார்பின்மையையும் வைத்துத்தான் போலிகள் தங்களைச் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள். தனியார்மய எதிர்ப்புமே வங்கத்தில் சந்தி சிரித்து விட்டது. எஞ்சியிருப்பது மதச்சார்பின்மை. இந்தியாவில் மிக மோசமான சந்தர்ப்பவாதக் கட்சிகூட வெறுத்து ஒதுக்கும் பாசிசக் கொலைகாரன் மோடியை “தனது அருமை நண்பர்” என்று திமிராகப் பிரகடனம் செய்து கொள்ளும் ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா. “அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா” என்று சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஏற்கெனவே பிரச்சாரம் செய்து வருகிறது. இதெல்லாம் தெரிந்துதான் போலி கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குகிறார்கள். நாளை மோடியை ஜெ ஆதரிக்கும் போது, “நாங்கள் ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி, அவர் மோடியுடன் கூட்டணி வைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இவர்கள் கூசாமல்பேசுவார்கள். போலிகளின் தனியார்மய எதிர்ப்பு முகமூடி மமதா பானர்ஜி என்றவொரு பாசிஸ்டின் கையால் கிழிபட்டது. மதச்சார்பின்மை முகமூடியோ ஒரு பார்ப்பன பாசிஸ்டின் கரத்தால் கிழிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

தப்பு கொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும் ?

54

நான் சின்ன வயசா இருக்கும் போது, ஒரு நாள், தாளம் தட்டிப் பாட்டு பாடிக்கிட்டே ஒருவர் வீடு வீடா பிச்சை எடுத்துகிட்டு வந்தார். அவர் பின்னாலேயே பாட்டை கேட்டுக்கிட்டே நெறையா பசங்க போனாங்க. நானும் போனேன். ஒரு வீட்டில் அவர் பாடிக்கிட்டு இருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து தென்னை அடி மட்டையை எடுத்துக்கிட்டு அடி அடின்னு அடிச்சாரு, அடி தாங்காமல் ஓடி ஒரு மரத்தடியில் உக்கார்ந்து அழுதுகிட்டே இருந்தாரு. பிறகு பக்கத்துத் தெருவுல போய் பாட ஆரம்பித்தார்.

விவசாயக் கூலிகள்
வேலைக்கு வாடான்னா வேற வேல இருக்குதுங்குறானுவ, தெருவுக்குள்ள வந்தா துண்ட தோள்ள போட்டுகிட்டே வர்றானுவ,

அடித்தவர் காங்கிரசுகாரர், மூப்பனாருக்கு கூட்டாளி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் என வகைபிரிக்கப்பட்டுள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். சாதி வெறிபிடித்தவர்.

அந்த அப்பாவியை அடித்துவிட்டு, திண்ணையில் ஒக்காந்து கொண்டு, வெத்தல பாக்கு போட்டுகிட்டே, அக்கம் பக்கம் கேக்குறமாதிரி பேச ஆரம்பித்தார்.

”அம்மா, தாயேன்னு பிச்சையெடுத்தவனுவ இப்ப பாட்டு பாடிகிட்டு வாரான். வீட்டுல உள்ள பொம்பளைங்க இளிச்சுகிட்டு வந்து கேக்குறாளுங்க, இவன சொல்லி குத்தமில்ல, இசையமைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு, இளையராஜான்னு வந்துருக்கானே அவன ஒதைக்கனும் மொதல்ல. பிச்சையெடுக்கப் பாட்டுப் பாட்றாப்போல ”ஆத்தா ஆத்தோரமா வர்ரியா”ன்னு பொம்பளைய கூப்புட்றான்.

ஊருக்குள்ள டீக்கடைக்குப் போனா அவம்பாட்டுதான் போட்றாய்ங்க, பஸ்லப் போனா அவம்பாட்டத்தான் போட்றாய்ங்க, கல்யாண வீடு, கோயிலு திருவிழா, எங்க பாத்தாலும் அவம்பாட்டத்தான் கேக்குறாய்ங்க. பறப்பய பாட்டு போட்றானாம், இவங்க ரசிக்கிறாய்ங்கலாம். தப்புகொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும், செத்த மாட்ட உரிச்சு தப்புக் கட்டி எடுத்துட்டு வந்துட்டான் தாளம் போட்றதுக்கு.

பறப்பயலப் பெரியாளா ஆக்குறோமேன்னு, நம்ம ஆளுங்களுக்கு வெக்கமே கெடையாது. எப்புடியோ இளையராஜாவ வளத்துட்டாய்ங்க, இன்னம் பறப்பயல தப்படிக்க கூப்புட்டா தாளத்தப்பத்தி பேசப்போறானுவ, நம்ம ஆளு பெரிய இடத்துல இருக்கான், இவனுவளயெல்லாம் நாம மதிக்க வேண்டியது இல்ல, நம்ம லெவலே மாறப்போவுதுன்னு தலக்கனம் புடிச்சு திரிய போறானுவ. இதுதான் நடக்கப் போவுது.

ஏற்கனவே நம்ம பறப்பயலுவ சொல்ற பேச்ச கேக்க மாட்டேங்குறானுவ. வேலைக்கு வாடான்னா வேற வேல இருக்குதுங்குறானுவ, தெருவுக்குள்ள வந்தா துண்ட தோள்ள போட்டுகிட்டே வர்றானுவ, ஆளு நடமாட்டம் இல்லாத நேரமா பாத்து கோயிலு கொளத்துல குளிக்குறானுவ, நம்ம ஆளுவள பாத்து சைக்கிள்ள வர்றீங்களாய்யான்னு ஏத்திக்கிட்டு வர்றானுவ, இவனுவளும் வெக்கமே இல்லாம ஏறிகிட்டு வர்றானுவ, இப்படியே போனா பொண்ணு கொடுங்க நீங்களும் நாங்களும் ஒன்னுன்னு சொன்னாலும் சொல்லப் போறானுவ, ஆச்சர்யப்பட்றதுக்கு ஒன்னுமில்ல” என்றார்.

கிராமத்துல வாழ்ந்த எனக்கு அந்த வயசுல இளையராஜான்னா யாருன்னே தெரியல. ஆனா இளையராஜாவ பறப்பயன்னு சொன்னது மட்டும் ஞாபகம் இருந்தது. அந்த சாதி குறித்து அவர் திட்டியது எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த வயசுலயும் தாழ்த்தப்பட்டவங்கன்னா எப்படியெல்லாம் நடத்துவாங்கன்னு தெளிவா தெரிஞ்சுருந்துச்சு. அந்த அளவுக்கு ஆதிக்க சாதி வெறியரான அந்த ஆளு, பச்சபுள்ளை மனசுலயும் பதியிற மாதிரி சாதி வெறியோட நடந்து கிட்டான் என்பதுதான் உண்மை.

இது நடந்து இருவத்தஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு. ஆனால் இன்னைக்கும் கிராமங்களில் ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து, தலித்துக்கள் நிலை அப்படி ஒன்னும் மாறிடல. வெளிப்படையா சாதி வெறியை காட்ட முடியலன்னாலும் சம்பிரதாயத்தை விட்டுட கூடாது என்ற அடிப்படையில் சாதி வெறி இருந்துகிட்டுதான் இருக்கு. சாதி தீண்டாமை கொடுமையை உருவாக்கி அவற்றை நியாயப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் கூறும் வார்த்தைதான் சம்பிரதாயம்.

சாதிக் கொடுமைக்கு எதிராக பேசுபவர்கள், தீண்டாமை, தனிக் குடியிருப்பு, தனிச் சுடுகாடு தனிக் குவளை, என்ற அடிமை நிலையைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அதைத் தாண்டி அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், சுய மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

ஒரு ஆதிக்க சாதி குடும்பத்துக்கு தலித்து அடிமையாய் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வகை வாரியாக பிரித்து வைச்சிருக்காங்க. அப்படி பிரிக்கப்பட்ட குடும்பத்துக்கு கல்யாணம் முதல் கருமாதி வரைக்கும் அடிமை வேலை செய்யணும்.

இருவது முப்பது குடும்பம் கொண்ட வகையறாவுக்கு நாலு அஞ்சு தலித் குடும்பம் அடிமையா இருக்கணும். இப்படி வகை பிரிக்கப்பட்ட ஆதிக்க சாதியின் முப்பது குடும்பங்களில் நாலு அல்லது அஞ்சு பணக்காரங்க இருப்பாங்க. மீதமுள்ள அனைவரும் சாதாரண விவசாயி அல்லது கூலி விவசாயியாகத்தான் இருப்பாங்க. தலித் குடும்பத்தை வருச பண்ணையாளா பணக்காரன்தான் வச்சுக்குவான். உழைப்பின் தேவையும் அவனுக்குதான் இருக்கும். ஆதிக்க சாதியில் சாதாரண விவசாயிக்கு ஆள் வச்சு செய்ற அளவுக்கு வேலை இருக்காது. ஆனால் இவர்களுக்கும் மேல் சாதிக்கு உரிய அடிமை சம்பிரதாய வேலையை செய்ய வேண்டும்.

ஆதிக்க சாதியின் வீட்டு பண்ணையாளா இருக்குறவங்க, விவசாய வேலைக்கி கூலி வாங்கக் கூடாது. வருசத்துக்கும் வேலை பாத்துட்டு கடைசியா கொஞ்சம் நெல்லு கொடுப்பாங்க. அதுதான் வருசக் கூலி. அது அவங்க உழைப்புக்கு ஏத்த ஊதியமா இருக்காது. பண்ணைக்கு இருக்குறவங்க, முதலாளி வீட்டு வேலை இல்லாத அன்னைக்கு வேற யாருக்காவது கூலிக்கு வேலைக்குப் போகலாம்.

வகை பிரிக்கப்பட்ட அத்தனை தலித்துக் குடும்பமும், பணக்கார ஆதிக்க சாதி வயல் வேலைக்கு வருசம் பூராவும் வந்தாகணும். அதுக்கும் கூலி கிடையாது, கலம் பொடைக்கிறது மட்டும் தான். கதிரறுத்து அடிக்குற நெல்ல அள்ளுனது போக கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும். கூலி இல்லாம வேல செஞ்சுட்டு, சிந்துனது செதறுனத எடுத்துக்கறதுக்கு பேருதான் கலம் பொடைக்குறது.

அப்படிப் பண்ணைக்கு இருக்கும் போது அவங்களுக்கு சாப்பாடு மாட்டுக் கொட்டைகையிலதான் போடுவாங்க. இல்லன்னா திண்ணையில ஒரு மூலையில ஓரமா ஒக்கார வச்சு போடுவாங்க. சாப்பிடும் பாத்திரம் அவங்களே வச்சுக்கணும். அதையும் மாட்டுக் கொட்டகையில ஒரு ஓரமா சொருகி வைக்கணும். தொட்டுக்க வாங்க பாத்திரம் வச்சுக்கலன்னா பூவரச இலையில கொடுப்பாங்க, இல்லன்னா கொட்டாங்குச்சியில (தேங்கா சிரட்டை) கொடுப்பாங்க. மீறி ஏதாவது தண்ணி கொடுக்குற மாதிரி வந்தா, தலித்துக்குன்னு ஒரு பாத்திரம் இருக்கும் அதுல தண்ணி குடுப்பாங்க குடிச்சுட்டு பாத்திரத்த குப்பற கவுத்து வைக்கனும். பாத்திரத்து மேல தண்ணிய ஊத்தி தீட்டு கழிச்சுட்டு எடுத்துப்பாங்க. ஊருக்குள்ள வரும் போது தண்ணி தாகம் வந்து யாரிடமாவது தண்ணி கேட்டா பாத்திரத்துல கொடுக்க மாட்டாங்க, கைய குவிக்கச் சொல்லி கையில ஊத்துவாங்க குடிச்சுக்கணும்.

வயல்களில் வேலை செய்யும் போது தலித்துகளுக்கு சாப்பாடு, பாத்திரத்துல போட மாட்டாங்க. வயல்ல இருக்கும் பணங்குட்டி மட்டைய வெட்டி ஓலையில் தொண்ணை செஞ்சு அதுல ஊத்துவாங்க. கொழம்பு வச்ச சாப்பாடே கிடையாது. கஞ்சி சாப்பாடு மட்டும் தான். தொட்டுக்க உப்பு போட்ட மாங்காகீத்து அத கடிச்சுக்கணும். இதுதான் அவங்களுக்கு ஒதுக்குன சாப்பாடு.

ஆதிக்க சாதி கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, பூப்பு நீராட்டு, நிச்சயதார்த்தம்னு எல்லா நல்லது கெட்டதுக்கும் வெறகு ஒடைக்கணும், பந்தல் போடணும், வாழைமரம் கட்டணும். பொம்பளைங்க வீட்டுக்கு வெளிய உள்ள தட்டு முட்டு வேலை பாக்கணும், எச்சி இலை எடுக்கணும், அண்டா குண்டா கழுவணும். விசேசம் முடிச்சதும் இதுக்கு எல்லாம் கூலியா கூட சோறு வாங்கிக்கணும்.

விசேசம் நடக்கும் பந்தல்லயே தலித்துகள் தப்பு மேளத்தோடு, தட்டு வருசை, சாமானோடு ஆடு புடிச்சு கட்டணும். இது எதுக்குன்னா ஊருக்குள்ள பள்ளன், பறையன வச்சு வேலவாங்கற பரம்பர சாதிக்காரன்தான் நானு, ஆளா சங்கதியா இருக்கென்னு கெத்து காண்பிக்க. வந்தார் குடின்னு சொல்ற ஆட்களுக்கு வகை பிரிச்சு ஒதுக்குற தலித் முறை இருக்காது. தலித்து ஒதுக்கப்படலன்னா அவங்கள அந்த ஊர் ஆதிக்க சாதியில் சமமா பாக்க மாட்டாங்க. பொண்ணு கொடுக்குறவனும் எடுக்குறவனும் சம்பந்தம் பண்ண தயங்குவாங்க.

கூலிக்கு நெல்
கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும்.

ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும், ஊரு ஊரா சொந்தக்காரனுக்கெல்லாம் எழவு சொல்லி போகணும், பொணத்த தூக்கிட்டு சுடுகாடு போறதுக்குள்ள பந்தல் பிரிக்கணும், பொணத்த எரிக்கணும் இதுக்கெல்லாம் எந்த கூலியும் கெடையாது.

துக்கத்துக்கு வர்ர ஒரமரக்காரன் (சம்மந்தி) மொறையுள்ள எல்லாரும் எளவு பணம்னு அஞ்சு பத்து மொய் போடுவாங்க. சம்பந்தி கொட்டுன்னு நெல்லு கொஞ்சம் கொண்டுட்டு வருவாங்க. இந்த நெல்ல வித்துட்டு அதுல வர்ர பணத்தையும், எளவு பணத்தையும் சேத்து, தப்பு அடிச்சவங்க மொதக்கொண்டு, பொணம் எரிச்சவங்க, பந்தப் போட்டவங்க வரைக்கும் சாவுக்கு வேலபாத்த எல்லா தலித்தும் பிரிச்சு எடுத்துக்கணும். அந்த பணம் அவங்களுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கே வராது.

வெளியூருக்கு துக்கம் சொல்லி போறவங்களுக்கு சைக்கிள் மட்டும்தான் கொடுப்பாங்க, துக்கம் சொல்லப்போன வீட்டுல ஒருபடி நெல்லு கொடுப்பாங்க ஒரு ஊருபூராச் சொன்னாலும் ரெண்டு – மூணு கிலோ நெல்லு தேறாது. அத வித்துத்தான் அவர் வழிச்செலவு, சாப்பாடு, டீ, எல்லாத்துக்கும் வச்சுக்கணும். அஞ்சாறு ஊருக்கு ஒரு ஆளுன்னு கணக்கு வச்சு, பத்து பேருக்கு மேல துக்கம் சொல்லி போவணும்.

இது தவிர பொங்கல், தீபாவளின்னா ஆதிக்க சாதிக்காரங்க வீட்டுக்கு சாப்பாடு வாங்க தலித்துகள் வரணும். பொங்கல்னா கரும்பு, வாழப்பழம், பச்சரிசி, கொடுப்பாங்க. வாழப்பழன்னா இருக்குறதுலயே சின்னதான காயா இருக்கும் அது பழுக்கவே பழுக்காது. தலித்துக்களுக்கு கொடுக்றதுக்குன்னே மார்க்கெட்டுல மலிவா விப்பாங்க. கரும்பும் அப்படிதான் வெளையாததா பாத்து கொடுப்பாங்க, வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லா காயும் போட்ட கூட்டு, தலித்துக்கு மட்டும் பரங்கிக்காவுல பண்ணுன கூட்டு.

தீபாவளின்னா பலகாரம் வாங்க வரணும். அதுவும் இதுபோலதான் முறுக்கு, அதிரசம், லட்டு, பாதுசா, நெய்யுருண்டைன்னு, வகவகயா செஞ்சு வச்சுகிட்டு, இவங்களுக்கு மட்டும் இட்லியும், அரிசில நாலு உளுந்தப் போட்டு வடையின்னு பேருவச்சு சுட்டுப்போடுவாங்க, வருசத்துக்கு ஒரு நாள் வர்ரதுக்கே இப்படி பாகுபாடு பாத்து, இழிவு படுத்தி சாப்பாடு போடுவாங்க. முன்னமாதிரி எல்லாம் இப்ப யாரும் சாப்பாடு வாங்க வர்றதே இல்ல பறப்பயலுவொ கொழுத்து போயி திரியரானுவன்னு அதிகாரம் வேற தூள் பறக்கும்.

இப்படி வகைப்படுத்தப்பட்ட தலித்துக்கள் வீட்டு திருமணம் என்றால் அவர்களை அடிமைகளாக கொண்ட ஆதிக்க சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாலியும், பொண்ணு – மாப்பிள்ளைக்கு புதுத்துணியும் எடுத்துக்கொடுக்கனும். ஆதிக்க சாதி மனிதர்கள் தலித்து திருமணத்துக்கு போக மாட்டாங்க. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் மணக்கோலத்திலேயே ஆதிக்க சாதி வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கணும். மணக்கோலத்திலயே தம்பதிகள் ஊர் பார்க்க நடந்து வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எந்த அளவு கூசிப்போவார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பாருங்கள்.

எப்படி எல்லாம் தலித்துக்களை தன்மான உணர்வு இல்லாமல் தன் அடிமையாக வைத்துக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் சாதகமாக சம்பர்தாயத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இப்படியெல்லாம் தலித்துக்களை அடிமைபடுத்தும் நிலை மாறிவிட்டது. இப்பல்லாம் யாருங்க சாதிப்பாக்குறா என்ற பேச்சுப் பரவலாக இருந்துகிட்டு இருக்கு.

காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் படித்தவர்கள், இளைஞர்கள், இதுபோல கீழ்த்தரமான சம்பர்தாய வேலைகளுக்கு வர மறுக்கிறார்கள். பெற்றொர்களையும் தடுக்கிறார்கள். உள்ளூரில் வேலை செய்வதை தவிர்த்து வெளியில் நகரத்துக்கு வேலைக்கு போகிறார்கள். இவர்களிடம் கூனி குறுகி வேலை செய்வதைவிட வெளி வேலைக்கு செல்வதை கௌரவமாக நினைக்கிறார்கள்.

ஆனால் பெற்றோரோ, வெளியில் வேலைக்கு செல்லும் நீங்க வேண்டுமென்றால் போகாமல் இருக்கலாம் நாங்க இவங்க்கிட்டதானே வேலைக்கு போகணும் அவர்களை எதிர்க்க முடியாது அனுசரித்துதான் போக வேண்டும் என்கிறார்கள். என்ன நல்லது கெட்டதுன்னா போயி சாப்பாடு வாங்கணும். செத்தா சாவுல நிக்கணும். பேருக்கு நாலு வீடு எளவு சொல்லி போவணும். முன்ன மாதிரி இப்பெல்லாம் ரொம்ப கொடுமப்படுத்துறது இல்ல. சம்பர்தாயத்துக்கு செஞ்சாகணுன்னு சொல்றாங்க. அத செஞ்சுட்டா ஒன்னும் பிரச்சினை இல்லை என்கிறார்கள்.

முன்பு ஒருவர் இறந்துவிட்டால் எல்லா ஊருக்கும் தலித்துத்தான் சாவு சொல்லி போகவேண்டும். ஆனால் இப்போது செல்போன் இருக்கு முக்கியமானவங்களுக்கு உடனே தகவல் போயிடுது மத்தவங்களுக்கு காருல ஆரண் கட்டி அனௌன்ஸ் பண்றாங்க துக்கத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தர்றாங்க. ஆனாலும் சம்பர்தாயத்துக்கு துக்கம் சொல்லி அனுப்புறாங்க. இதுபோலத்தான் ஒவ்வொரு ஒடுக்குமுறை நிகழ்வுகளையும், சாதிய சடங்குகளிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை சம்பர்தாயம் என்ற நிலையில் கட்டுமானத்தில் வைத்துள்ளனர்.

சம்பிரதாயத்துக்கு அடிமை வேலை
சம்பர்தாயத்துக்கு செஞ்சாகணுன்னு சொல்றாங்க. அத செஞ்சுட்டா ஒன்னும் பிரச்சினை இல்லை

ஒருவர் சாதி சம்பர்தாய சடங்குமுறையை தவிர்த்து திருமணம் செய்து கொண்டார். அனைவருக்கும் மேலான சாதியாக கருதப்படும் பார்ப்பனர் வீட்டுக்கு வந்தார். ”ஒரு வார்த்த வாங்கன்னு கல்யானத்துக்கு கூப்பிடல, கல்யாணம் நடந்த முறையை கேள்விப் பட்டேன். எப்படியெல்லாம் நடக்க வேண்டிய கல்யாணம். புதுசு புதுசா பழக்கம் இல்லாத்தையெல்லாம் பசங்க செய்றாங்க, பெரியவங்க நீங்களும் கேக்க மாட்டேங்குறிங்க. இதெல்லாம் நல்லதுக்கில்ல. எப்படியோ நல்ல காரியம் நடந்துருச்சு, நல்லாருக்கட்டும். சரி, சம்பர்தாயன்னு ஒன்னு இருக்குல்ல கொடுக்க வேண்டிய தட்சணைய கொடுங்க நான் கிளம்பணும்” என்றார்.அந்த வீட்டம்மாவும் பயபக்தியுடன் 500 ரூபா பணம், தேங்கா – பழம், வெத்தல – பாக்கு என்று மரியாதையுடன் எடுத்து வந்து கொடுத்தார்.

சம்பர்தாயம் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் இன்னமும் சாதிய கட்டுமானங்களைக் கடைபிடித்துக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் இருந்தே பார்க்கலாம். காலப்போக்கில் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக விட்டுக்கொடுக்கப்பட்டு சம்பர்தாயத்தைச் சொல்லி ஆதிக்க சாதி வெறி வேரூன்றி இருப்பது தான் உண்மை. உழைக்காமல், அதிகாரத்துடன் ஒரு பாப்பான் வந்து கேட்டா பயபக்தியுடன் கொடுப்பவர்கள். உடல் நோக உழைத்தாலும் தலித்துக்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்பதே இதற்கு சாட்சி.

அதே தஞ்சாவூரில் மாவட்டத்திலேதான் இந்த ஆண்டு நடந்த நிகழ்வு. பெண் பார்த்து பிடித்துவிட்டது. ஜாதகமும் பொருத்தமாக உள்ளது. மற்ற சீர்வரிசை, நகை, திருமண செலவு போன்ற விசயங்களுக்கு பெண்வீட்டார்கள் சம்மதித்து விட்டார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்கிறார்கள் என்றால், ஊருக்குள் நுழையும் இரண்டு வழியிலேயும் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை முதலில் வைத்து ஊர் அமைவது நல்லதுக்கல்ல என்று கூறி பெண்ணை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இன்றளவும் நடைமுறையில் சாதி வெறி உள்ளதற்கு இந்த நிகழ்வே சாட்சி.

இப்படியெல்லாம் காலங்காலமாக ஆதிக்க சாதியினருக்கு அல்லும் பகலும் உழைக்கும் தலித் மக்களது துன்பங்களை உணராம அவங்களையும் ஆதிக்க சாதிக்கு இணையா பாத்து பேசுற மவரசாங்கள என்ன செய்யலாம்? ஒண்ணு செய்யலாம், பேசாம இவங்களை தலித் மக்களுக்கு ஒதுக்கி விட்டு ஒரு நூறு வருசம் மேல பாத்த வேலைங்களை செய்யச் சொன்னா என்ன?

– சரசம்மா

நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

12

கவல் தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன. எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்களனைத்தும் மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு- வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி, அவை ஸ்மார்ட் போன் என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக கருதப்பட்டது.

கூகிள் கிளாஸ்
கூகிள் கிளாஸ்

இன்றைய நவீன தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது என்பது விமரிசனத்திற்குரியது. மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக் கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு அருகில் ஒளிஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen) காட்டும்.

கூகிள் கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (processor), புவியிடங்காட்டி (GPS), கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி, வெளியீட்டு கருவி (mike, speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளிப்படக்காட்டி (Projector) மற்றும் இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.

நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் புரஜெக்டரானது நேரடியாக ஒருவரது விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் நிஜக்காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.

கூகிள் கிளாஸ் பெண்
கூகிள் கிளாஸ் அணிந்த பெண்

கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண் கணினியை ஸ்மார்ட் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள காமிராவின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point) படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.

கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடி கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் பிரச்சனையுள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் சோதித்தறிந்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகளால் அனைத்து சாதாரண தகவல்களுக்கும் கூட கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று விஞ்ஞானிகளில் சிலர் எச்சரித்துள்ளனர்.

மறுசாரார் கூகிள் கிளாஸ் போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு நியூரான்கள் விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு சிந்திப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.

கூகிள் எப்போதும் இல்லாத வகையில் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் சாதனத்தை வெளியிட்டுள்ளதாகவும், இந்த வகை கருவிகளின் உதவியால் அடுத்தவர்களை மறைமுகமாக புகைப்படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ முடிவதுடன் அவற்றை இணையத்தில் உடனடியாக பரவவிடவும் முடிவதால் தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என ஒருசாரார் குற்றம் சாட்டுகின்றனர். நடைமுறையிலிருக்கும் செல்போன் காமிராக்களே எப்படி பெண்களை படமெடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின்
கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின்

பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது அனைத்து நாடுகளின் உளவுத்துறைகளும் பாசிசமயமாகி மக்களனைவரையும் வேவுபார்ப்பது அம்பலமாகியிருக்கிறது. கூகிள் கிளாஸ் போன்ற கருவிகள் ஒவ்வொரு தனி நபரின் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களையும், உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கச் செய்வதன் மூலம் உளவு நிறுவனங்களின் வேலையை மேலும் எளிதாக்கும். யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும். ஸ்னோடன் அம்பலப்படுத்தலிலேயே இணையம், செல்பேசி எல்லாம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருப்பதை பார்க்கும் போது கூகுள் கிளாஸ் அதை மேலும் பரவலாக்குகிறது.

இணையம் உருவான போது அது பல சாதனைகளை நிகழ்த்தும், விண்ணையும் மண்ணையும் புரட்டிப் போட்டுவிடும் என்று பரவலாக பிரச்சாரம் செய்தார்கள். மனித குலத்தின் அறிவு வளர்ச்சிக்கும், கல்விக்கும் பெருமளவு உதவும் என்று அறிஞர்கள் கனவு கண்டனர். இவற்றையெல்லாம் ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில் வாழும் உலகில் சாத்தியமா என்பதை கணினி வல்லுநர்களும், பயனோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அப்படி சாத்தியமாகும் என்று நம்புவோரும் அதன் வரம்பு மிகவும் குறுகியது என்பதை ஒப்புக் கொள்வர்.

மேலும் நிதி சூதாட்டத்திற்கே இணையம் அதிக அளவில் பயன்படுகிறது. இதற்கு இணையாக இணையத் தொழில் நுட்பத்தை போர்ன்(பாலுறுவு தொழில்) துறைக்கு பயன்படுத்தி 97 பில்லியன் டாலர் (சுமார் ரூ 5.3 லட்சம் கோடி) ஆன்லைன் ஆபாசப்பட தொழிலாக வளர்த்து வைத்திருக்கிறது முதலாளித்துவ உலகம். சில போர்ன் துறை நிறுவனங்கள் கூகிள் கிளாஸ் கொண்டு உயர் தரமான ஆபாசப்படங்களை தன்நோக்கு நிலையிலிருந்து எடுக்க முடியுமென்பதால் அது சந்தைக்கு வருவதை எதிர்நோக்கியுள்ளதாக கருத்து தெரிவித்திருந்தன. மேலும் கூகிள் கிளாசினால் மிக எளிமையாக படமெடுக்க முடியுமென்பதால் தயாரிப்பு செலவு குறையுமென்றும் அதனால் கூகிள் கிளாஸ் போர்ன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துமென்றும் தொழில் முறையில்லாத தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். கடைசியில் கூகுள் கிளாஸை ஆவலோடு எதிர்பார்ப்பவர்கள் பிட்டுப் படங்களை எடுப்பவர்கள் என்றால் என்ன சொல்ல!

ஆபாச படங்களால் ஏற்படும் சீரழிவு என்ற ஒரு எல்லையை தாண்டிப்பார்த்தாலும், இன்றைய இணையத்தின் கலாச்சார தாக்கத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. இணையம் என்றாலே பேஸ்புக் என்றாகி, மெய்நிகர் உலகே வாழ்க்கையென சமூக வலைத்தளங்களின் போதையில் வீழ்ந்து கிடக்கும் வண்ணம் நம்மை பயிற்றுவிக்கிறார்கள். சிந்திப்பது, உரையாடுவது, ரசனை, விருப்பம் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிப்பதாக இருக்கிறது. அந்தவகையில் இந்த கூகிள் கிளாசும் பேஸ்புக்கில் நிமிடத்திற்கொருமுறை ஸ்டேடஸ் பகிர்ந்து கொண்டு மேலும் மெய்நிகர் உலகினுள் அர்த்தமற்ற முறையில் மூழ்கிக்கிடக்கத்தானே உதவும்? ஒருவேளை அதனால் நேரடி போராட்டம் இன்னபிற நல்ல விசயங்களை படம்பிடிக்கலாம் என்றால் அது விதிவிலக்காக இருக்குமே அன்றி பொது போக்காக இருக்காது.

வேண்டுமானால் இன்று தமிழ் இணையத்தில் அதிகம் பேசப்படும் விசயம் தமிழ் சினிமா சார்ந்ததாகவே இருக்கிறது என்ற உண்மையினை பரிசீலித்துப் பாருங்கள். நாம் பேசும் அரசியல் விசயங்களின் வீச்சை விட சினிமாவிற்கே பரப்பளவு அதிகம்.

இந்நிலையில் நவீன தொழிநுட்பத்திற்கும், கூகிள் கிளாஸ் போன்ற கருவிகளுக்கும் மனிதனின் அபரிதமான ஆற்றலை வெளிக்கொணரும் திறன் இருப்பதாக வாதாடும் நுகர்வுக் கலாச்சார பயங்கரவாதிகளுக்கு எப்படி புரியவைக்க முடியும்?

– மார்ட்டின்

மேலும் படிக்க :

பாமக என்றால் சீமானுக்கு பயம் பயம் !

289

ளவரசன் மரணம் குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையினை முதலில் படியுங்கள்!
__________________________

“தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி, அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

சீமான்தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது, தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியிலும் கூட காதல் இலக்கியங்கள் இடம் பெறுகின்றன, காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், அதற்கு முழு முதற் காரணம், திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும், தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம், அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?

தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
_________________________________

இனி நமது விமரிசனத்தினை பார்ப்போம்.

இளவரசன் மரணம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பு, பண்பாட்டிற்கு ஏற்பட்ட ஒரு இழிவு என்று ஆரம்பிக்கிறார் அண்ணன் சீமான். அதுவும் காதலையும் வீரத்தையும் போற்றும் தமிழ் தேசிய இனத்தின் இழப்பாம். சரி, காதலும், வீரமும் தமிழ் தேசிய இனத்திற்கு மட்டும் சொந்தமான மரபு என்று எந்த அடி முட்டாள் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை. உலகில் ஆர்டிக் முதல் அண்டார்டிக் வரை உள்ள வளர்ச்சியடைந்த, வளர்ச்சி அடையாத தேசிய இனங்கள் அனைத்தையும் கேட்டீர்கள் என்றால் இந்த காதல், வீரம் குறித்த மரபும், பெருமையும் காது கொள்ளாத அளவுக்கு கேட்கலாம். ஆனால் அந்த மரபு எங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று மல்லுக்கட்டும் முட்டாள்தனம் தமிழினவாதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

முதலாளித்துவ உற்பத்தி முறை அறிமுகமாகாத, வளர்ச்சியடைந்த அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகங்களில் மக்களின் உணர்ச்சிகள் இந்த இரண்டில்தான் இயங்குகிறது. இன்றைக்கு இருக்கும் பண உணர்ச்சி, சினிமா உணர்ச்சி, நுகர்வுக் கலாச்சார உணர்ச்சி, பங்குச் சந்தை உணர்ச்சி, செல்பேசி உணர்ச்சி, முகநூல் உணர்ச்சி இன்னபிற உணர்ச்சிகளுக்கெல்லாம் அங்கு வாய்ப்போ, இடமோ, அடிப்படையோ இல்லை. ஆகவே ஆதி காலம் தொட்டு இருந்து வரும் பாலியல் உறவில் காதல் என்ற பரிணாம வளர்ச்சியும், மாற்று இனக்குழுக்கள், அரசுகளை வென்று காட்டும் ‘வீரமும்’தான் அந்த சமூகங்களின் அடிப்படைகள். அதனாலேயே நிலவுடைமை காலங்களில் உள்ள இலக்கியங்கள் இந்த இரண்டை மட்டும் – காதல்,வீரத்தை – அதிகம் பேசுகின்றன.

மேலும் இந்தக் காதலும், வீரமும் கூட பெரும்பான்மை மக்களின் இயக்கம் சார்ந்து முன்வைக்கப்படவில்லை. ஆளும் வர்க்கம் மற்றும் அரசர்களின் பெருமையாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. நிலவுடைமை சமூகம் விதித்திருக்கும் அகமண முறைகளுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்கள் அதை மீறுவதற்கு உரிமை கொண்டவர்கள் இல்லை. அந்த ஏக்கத்தையும் இத்தகைய இலக்கியங்கள் கொஞ்சம் பேசுகின்றன. ஆனால் ஆண்டான்களையும், அரசர்களையும், ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்து போராடிய வர்க்கப் போராட்டம்தான் மனித குலத்தை அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களுக்கு எடுத்துச் சென்றன. ஒரு தேசிய இனம் பெருமை கொள்ள வேண்டுமென்றால் அத்தகைய போராட்டங்களைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் நிலவுடைமை சமூகங்களில் தேசிய இன உணர்வு என்பது இன்றைக்கு இருப்பது போன்று இல்லை. வளர்ச்சியடைந்த தேசிய இன உணர்வும், உணர்ச்சியும் முதலாளித்துவ சந்தையின் விரிவு காரணமாக மட்டுமே தோன்றுகின்றன. ஆக அந்தக் காலத்தில் இந்தக் காலத்து தமிழ் உணர்வு இருப்பதாக பீற்றுவதும், அதில் காதல், வீரம் கொப்பளிப்பதாக கதைப்பதும் முட்டாள்தனம் மட்டுமே.

மாறாக அந்தக் காலத்து தமிழகத்திலும், இந்தக்காலத்து தமிழகத்திலும் நீடித்து இருக்கும் ஒரு மரபு என்னவென்றால் அது பார்ப்பனிய மதமும், அதன் படைப்பான சாதியும்தான். ஒருவேளை தமிழினவாதிகள் பெருமை கொள்ள வேண்டுமென்றால் இதைத்தான் எடுக்க வேண்டும். அப்போது அவர்களது பெரிய பங்காளிகளாக இந்துமத வெறியர்களும் கூட வருவார்கள். நாமோ இந்த பார்ப்பனிய மதம், சமூகத்தை எதிர்த்து நின்ற மரபை பெருமையாகவும், வாரிசாகவும் கொள்வோம். அது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உண்டு.

இந்தப் பின்புலத்தில் தமிழினவாதிகள் இந்துமதவெறி பால்தாக்கரே, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்ததும், அய்யா நெடுமாறன் இந்துமத வெறியர் அர்ஜூன் சம்பத்தை மேடையேற்றுவதும் வேறு வேறு அல்ல.

திவ்யா, இளவரசன் இருவருக்கும் இயல்பாக ஏற்பட்ட காதலை அரசியலாக்கியதன் விளைவுதான் இரண்டு தற்கொலைகளுக்கும் காரணம் என்று கூறுகிறார் சீமான். அரசியல் என்றால் ஆனந்த விகடன் உருவாக்கியிருக்கும் புரிதலையே சீமான் கொண்டிருப்பது கூட பிரச்சினையில்லை. ஆனால் அப்படி ‘அரசியலாக்கியது’ யார் என்று கூற வேண்டுமல்லவா? இல்லையெனில் அரசியலாக்குதல் எனும் வார்த்தைதான் இளவரசன் மரணத்திற்கு காரணம் என்றாகிவிடும். இதற்கு குறிப்பான காரணம் யாருமில்லை, பொதுவில் சாதியத்தை அரசியலாக்கிவிடுவதுதான் காரணமென்றால் என்ன பொருள்?

ஈழப்பிரச்சினைக்கு மட்டும் சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு என்று குறிப்பாக சொல்லும் அரசியல் புரிதல் கொண்ட சீமானுக்கு இளவரசனின் தற்கொலைக்கு காரணமான அரசியல்வாதிகள் யார், அரசியல் கட்சிகள் எது என்று தெரியாதா? இப்படி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் சீமானின் அடிப்பொடிகள் இன்னும் தெளிவாகச் சொல்லக்கூடும். அதாவது திவ்யா, இளவரசன் காதலை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் செய்த கட்சிகளைத்தான் அண்ணன் கூறுகிறார், அதனால்தான் குறிப்பாக யாரையும் கூறவில்லை என்று எடுத்துக் கொடுக்கலாம். எனில் இந்தக் காதலை அண்ணன் சீமான் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? நிச்சயமாக ஆதரிக்கிறார் என்று கூறுவார்கள் தம்பிமார்கள். அப்படியானால் திவ்யாவின் காதலை ஆதரித்து சீமான் முழங்குவது மட்டும் அரசியலாக்குதல் இல்லையா?

அல்லது இந்தக் காதல் அரசியலாக்கப்பட்டதால்தான் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று இப்போது வகுப்பெடுக்கும் நாம் தமிழர்கள் முன்பேயே இந்த அரசியலாக்கப்பட்டதை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? இல்லை, இந்தக் காதலர்களை யாரும் பேசாமல் இருந்திருந்தால் அவர்களே அவர்களது பிரச்சினையை தீர்த்திருப்பார்கள், ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும் சவுண்டு கொடுத்ததுதான் இந்த முடிவுக்கு காரணம், இது தெரிந்துதான் அண்ணன் ஆரம்பத்திலேயே டீசண்டாக சவுண்டு விடாமல் ஒதுங்கி இருந்தார் என்று கூட அடிப்பொடிகள் பொழிப்புரை சொல்லக்கூடும்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் ஒரு தலித் இளைஞன் எந்த விதமான சமூக, அரசியல் குறுக்கீடும் இன்றி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடிக்க முடியுமா? இல்லை, யாரும் தலையிடாமல் அவர்களுக்குள்ளே காதலிக்கவும், திருமணம் செய்யவும் உரிமை இருக்கிறதா? இந்தப் பிரச்சினையை ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையிலிருந்து பார்த்தால் “அவர்களுக்கு ஆதரவாக” தலையிடுதல் வேண்டும் என்பது புரிய வரும். மாறாக ஆதிக்க சாதி உணர்வில் இருப்பவரை வைத்துத்தான் தமிழ் தேசம் கட்ட முடியும் என்றால் இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக பேச முடியும்.

தமிழர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் காதல் படங்கள் பெரும் வெற்றி பெற்றதை வைத்துப் பார்த்தால் இங்கே காதல் என்பது தமிழரின் வாழ்வியலில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்று கூறுகிறார் சீமான். தமிழர் இலக்கியம் குறித்து ஏற்கனவே பார்த்து விட்டோம். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுடைய கதையை மதுரை வீரன் போன்ற ஒரு சில நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், வழக்குகள் மூலம் அறிகிறோம். மற்றபடி சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சமூகத்திலேயே நடக்க முடியாத ஒன்றாக இருக்கும் போது இலக்கியத்திலாவது இருக்கட்டுமே என விரும்பவது தமிழினவாதிகளின் அசட்டுக் கனவில் மட்டுமே சாத்தியம். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சாதி மறுப்பு, தீண்டாமை மறுப்பு காதல்களையும் அதன் பிரச்சினைகளையும், சமூக பரிமாணங்களையும் ஒரு போதும் பேசியது கிடையாது. அப்படி ஒரு படத்தை உண்மையாக எடுப்பதற்கு கூட இங்கே துப்பு கிடையாது.

நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் ஜிகினாக் காதல்தான் தமிழ் சினிமாவில் கரை புரண்டு ஓடுகிறது. இதில் நடை, உடை, பாவனை, பாட்டு, பெற்றோர் சம்மதம், என்று சென்டிமென்டும், மார்க்கெட்டும் கலந்து கட்டிய வினோதமான பொருளாகத்தான் காதல் வருகிறதே அன்றி வேறல்ல. முக்கியமாக தமிழ் சமூகத்திலும் கூட ஒத்த சமூக அந்தஸ்து உடைய சாதிகளுக்கிடையே வேண்டுமானால் காதல் நடக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோடோ இல்லை குறிப்பிட்ட சாதியை விட சில படிகள் கீழே இருக்கும் சாதிகளோடோ திருமணமோ, காதலோ சாத்தியமே இல்லை. அப்படி மீறி நடந்தால் திவ்யா, இளவரசன் ஜோடி சந்தித்த எல்லா பிரச்சினைகளையும் மற்ற காதலர்கள் சந்திக்க வேண்டும். இன்றும் கூட அப்படி காதலித்து மணம் புரிந்து வாழ்பவர்கள் தமது சொந்த ஊருக்கு போகமுடியாமல் ஆண்டுக் கணக்கில் இருந்து வருகிறார்கள். பலர் ஜோடி ஜோடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழ்வாழ்வில் காதல் திருமணங்கள் சகஜமாக நடந்து வருகிறது என்றால் அது தமிழ் சமூகத்தையும் தமிழ் சினிமாவைப் போல கருதும் முட்டாள்களால் மட்டுமே சாத்தியம். திவ்யா, இளவரசனது காதலை அரசியலாக்கி விட்டார்கள் என்று குட்டிச்சுவரைப் பார்த்து புலம்பும் சீமான் உண்மையில் இந்தக் காதல் பிரச்சினையின் அரசியல் என்ன என்பதை கிஞ்சித்தும் அறிந்தவரில்லை. ஒரு வேளை அறிந்திருந்தாலும் அதை வெளியே சொன்னால் தமிழ் தேசியத்திற்கு பேதியாகிவிடும் என்ற பயம் காரணமாக அமுக்கப் பார்க்கிறார்.

சீமான்இந்தக் காதல் விவகாரம் உரிய முறையில் கையாளப்படவில்லை என்று சொல்லும் சீமான் யார் அப்படி தவறாக கையாண்டார்கள் என்று கூறவில்லை. சரி, மற்றவர்கள்தான் தப்புத் தப்பாக கையாண்டார்கள் என்றால் அண்ணன் முன்னமே சரியாக கையாள்வது எப்படி என்று ஒரு வகுப்பு எடுத்து எல்லோரையும் வந்து படிக்கச் சொல்லியிருக்கலாமே? சில காதல் திருமணங்கள் சாதிய பார்வையாலும், சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சினையாக்கப்படுகின்றன என்று கூறும் சீமான் ஏன் ஒரு மர்மக் கதை போல மறைக்க வேண்டும்.? யாராய்யா அந்த சாதி மாண்பை காப்பாற்றுவர்கள்? சொன்னால் உங்களை தலையை எடுத்து விடுவார்களா? இதுதான் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய சங்கர் சினிமா வரைக்கும் வியந்தோதப்படும் தமிழனது வீரமா? ஒரு இளவரசனது மரணத்திற்கு கூட வில்லன்கள் பெயரைக் கூற பயப்படும் நீங்களா இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவீர்கள்? இதில் அடிக்கடி முஷ்டியை உயர்த்தியவாறு போஸ் வேறு? வெட்கமாயில்லையா சீமான் அவர்களே?

இளவரசனது தற்கொலை போன்ற காதல் பிரச்சினைகள் தமிழினமும், தமிழ்நாடும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்காக ஒன்று போட்டு போராட வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுவதாக கவலைப்படுகிறார் சீமான். ஒருவேளை இளவரசன் எனும் தலித் இளைஞர் திவ்யா எனும் வன்னியப் பெண்ணை காதலிக்காமல் தனது சாதிக்குள்ளேயே யாரையாவது திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் அவர் மட்டுமல்ல, தமிழினமும் நிம்மதியாக வாழ்ந்திருக்கும் என்பதாகவும் இதை நாம் புரிந்து கொள்ளலாம். வார்த்தைகளுக்கு இடையே உள்ள மவுனத்தின் அழகை புரிந்து கொள்வதுதான் கவிதை என்றால் தமிழினவாதிகளின் வார்த்தைகளுக்கிடையே உள்ள கோடிட்ட இடங்களை நிரப்பினால் அவர்களது சந்தர்ப்பவாத அழகு பளிச்சென்று தெரியும்.

அதாவது தலித்துக்கள் ஆதிக்க சாதியினரோடு காதல் கொண்டால் பிரச்சினை வருகிறது. அப்படி பிரச்சினை வந்தால் தமிழினம் இரண்டுபட்டு பிரிகிறது. இப்படி இரண்டு பட்டு நிற்கும் போது ஆதிக்க சாதியினரை பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பதற்கு கூட பயம். இந்நிலையில் என்ன செய்யலாம்? பேசாமல் தலித்துக்கள் யாரும் ஆதிக்க சாதியினரை காதலிக்காமல் இருங்கள், தமிழினம் ஒற்றுமையோடு இருப்பதற்கு இந்த தியாகத்தை செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்கலாமே சீமான் அவர்களே?

இப்படி தமிழனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அரசியலை தமிழக மக்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லையேல் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் சீமானது முயற்சி தோற்றுவிடுமாம். பிறகு தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு எல்லாம் கேள்விக்குறியாகிவிடும் என்கிறார் சீமான். சரி, தமிழனத்தின் ஒற்றுமைக்கே, உரிமைக்கே, விடுதலைக்கே உலை வைக்கும் அந்த சக்திகளை சீமான் ஏன் பெயரிட்டு அடையாளம் காட்டவில்லை?

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது யார்? ஏதாவது டிராகுலா பேயா, இல்லை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசா? அங்கே வாய் புடைக்க ராஜபக்சேவை அடையாளம் காட்டும் சீமான் இங்கே வாய் மௌனிக்க புலம்ப வேண்டிய அவசியம் என்ன? தமிழினத்திற்கு வேட்டு வைக்கும் சாதிய சக்திகளை அடையாளம் காட்டி தமிழக மக்கள் புறக்கணித்தால்தானே ஒற்றுமை வரும். பிறகு அது யார் என்று சொல்லாமல் போங்காட்டம் ஆடுவது ஏன்?

விசயம் எளிமையானது. இங்கே தமிழ் உணர்வு என்பது இல்லை, சாதிய உணர்வுதான் மக்களிடையே செல்வாக்கோடு உள்ளது என்பதை சீமான் ஏற்கிறார். எனவே குறிப்பிட்டு ஒரு சாதியின் சாதிவெறியை கண்டித்தால் நாம் பிழைப்பு நடத்தும் தமிழின அரசியலுக்கு ஆள் இருக்காது என்று அண்ணன் உறுதியாக நம்புகிறார். சாதிய சக்திகளை பொதுவாக பேசிவிட்டு அடையாளம் காட்டாமல் இருந்தால் தமிழ் உணர்வு தப்பிப் பிழைக்கும். சாதிய வெறியை இன்னது என்று குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டினால் தமிழ் உணர்வு உருகி ஓடிவிடும்.

திவ்யாவின் தந்தை தற்கொலைக்கோ, இல்லை இளவரசனது மரணத்திற்கோ காரணம் வன்னிய சாதிவெறிதான். இந்த வன்னிய சாதிய வெறியை உருவாக்கி உலவ விட்டு ஆட்டம் போடுவது வன்னியர் சங்கமும், பாமகவும்தான். அதிலும் ராமராஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில் என்று குறிப்பாக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஆக இளவரசனது மரணத்திற்கு நீதி வேண்டுமென்றால் இவர்களை குறிப்பாக கண்டிக்க வேண்டும். இந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று போராட வேண்டும். அதை கவனமாக தவிர்த்து விட்டு மக்களுக்கு அட்வைசு செய்வது என்பது சாதிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டும், அதை எதிர்க்க முடியாதபடி உள்ள கோழைத்தனத்தின் வெளிப்பாடும் ஆகும்.

ஆழம் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாமகதான் தமிழனது கட்சி என்று பாராட்டு பத்திரம் வாசித்த சீமான் திராவிடர் கட்சியெல்லாம் தமிழன் கட்சியில்லை என்று சாடுகிறார். ஆனால் பாமக எனும் தமிழனது கட்சியின் யோக்கியதை என்ன, வன்னிய சாதிவெறியை முன்வைத்து கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதன் செயல்பாடு என்ன என்பதை நாம் அறிவோம்.

சுருங்கச் சொன்னால் சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது. இப்படி ஆதிக்க சாதிகளுக்கு கட்டுப்பட்டு இவர்கள் உருவாக்கும் தமிழ் தேசியம்தான் தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் விடுதலையைத் தருமாம். அதை நாம் நம்ப வேண்டுமாம்.

ஒருவேளை சீமான் தலைமையில் இங்கும், ஈழத்திலும் தமிழர் நாடு உருவானால் எப்படி இருக்கும்? நிச்சயமாக அங்கே காதல் பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் இருக்காது. ஏனெனில் அங்கே யாரும் சாதி விட்டு சாதி காதலிப்பதற்கு அனுமதியே இருக்காது.

ஆம், நண்பர்களே! சீமான் பெருமையுடன் இலவசமாக அளிக்கும் தமிழ் தேசியம் என்பது ஆதிக்க சாதி கண்டிசன்ஸ் அப்ளைக்கு உட்பட்டது.

ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி !

17

பாரதீய ஜனதா கட்சி என்கிற பெயர் ஒன்றே போதும்; தரம் எளிதில் விளங்கும். இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரலாம். சிலருக்கு காக்கி, காவி, ரத்தம், கடப்பாறை போன்ற வஸ்துக்களும் சிலருக்கு ஊழல், திருட்டு, கொள்ளை, பிட்டுப்படங்கள் போன்ற கந்தாயங்களும் நினைவுக்கு வரக்கூடும். மொத்தத்தில் நாட்டு மக்கள் எவருக்கும் இந்தப் பெயர் மரியாதையான எதையும் நினைவூட்டும் படிக்கு அவர்கள் கட்சி நடத்தியதில்லை.

நாங்கள் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், பாரதிய ஜனதாவின் அப்பனான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெள்ளைக்காரனின் அடிவருடி இயக்கம். அதன் நிறுவனர் ஹெட்கேவார் வெள்ளைக்காரனுக்கு ஆள்காட்டி வேலைபார்த்தவர் என்பது வரலாற்றில் அழிக்கமுடியாத எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இவர்களின் ஆள்காட்டி வரலாறு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களின் வெள்ளை அடிவருடித்தனத்தில் வேர்கொண்டிருக்கிறது.

பாஜகவை தெரிந்து கொள்ளுங்கள் !
பாஜகவை தெரிந்து கொள்ளுங்கள் !

நாம் சமகாலத்துக்கு வருவோம். கடந்த இரு பத்தாண்டுகளில் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக தேசத்தின் வளங்கள் ஒவ்வொன்றாய்க் கூறு போட்டு விற்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலும் ஒரு புதிய உயரத்தைத் தொட்ட கட்சி பாரதிய ஜனதா. உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாக பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதற்காகவே தனியே ஒரு அமைச்சரவையை அமைத்து அமைச்சர் ஒருவரைப் பொறுப்பாக நியமித்து தனது விசுவாசத்தை நிரூபித்த கட்சி, பாரதிய ஜனதா. இந்த விசயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பெர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார்கள்.

இப்படி ஏகாதிபத்திய சேவைக்கு அடியாட்களைத் தயாரிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சி முறைகளில் தேறி வருபவர்கள் தான் பாரதிய ஜனதாவின் தலைமைப் பதவிகளை அலங்கரிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முறைகள் என்பவை சாமானியப்பட்டவை அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளோடு புண்ணிய பாரத தேசத்தின் பழைய புராணங்களிலும், சனாதன தத்துவங்களிலும், இந்து ஞானமரபிலும் ஆழமான பயிற்சிகளை வழங்குகிறார்கள்.

அந்த வகையில் புராண புருஷர்கள் தான் இன்றைய பாரதிய ஜனதா தலைவர்களின் வழிகாட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு கடுமையான பயிற்சிகளில் தேறிவரும் பாரதிய ஜனதா தலைவர்கள் களத்தில் தகத்தகாய சூரியர்களாய் மிளிர்வதை நாடு அவ்வப்போது கண்டு களித்து வருகிறது. நினைவூட்டலுக்காக சில சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் மேல் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர் ஜனக் தாவேயின் கவனத்தை சவுத்ரி மற்றும் பரத்வாஜ் என்கிற இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கவர்ந்துள்ளனர். கையில் ஐ-பேட் கருவியை வைத்து எதைப் பற்றியோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்த இரண்டு எம்.எல்.ஏக்களையும் கூர்ந்து கவனித்துள்ளார் ஜனக். அப்போது தான் விசயம் விளங்கியுள்ளது; அதாவது, நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் சூட்டைத் தணிப்பதற்காக இவ்விரண்டு எம்.எல்.ஏக்களும் நீலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காவி நாயகர்கள் நீலத்திற்கும் இரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

‘ஆபாசப் படம்’ என்பது பாரதத்தின் ஞான மரபின் ஆழ அகலங்களை அறியாத சிறுவர்களான நமது புரிதலுக்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் கொள்க. இந்துக் கோயில் சுற்றுச் சுவர்களில் தானே அந்தக்கால ‘டைம்பாஸ்’ பத்திரிகையே அச்சடிக்கப்பட்டுள்ளது. போகட்டும். குஜராத் பாரதிய ஜனதாவின் சாதனைகளை அதே சமயத்தில் கருநாடக பாரதிய ஜனதா விஞ்சிய சம்பவமும் நடந்தது. எடியூரப்பாவையே இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிளையாயிற்றே கருநாடக பா.ஜ.க கிளை!

குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் என்றால் கருநாடகத்தில் அமைச்சர்கள். அதுவும் மூன்று அமைச்சர்கள். பாட்டில், கிருஷ்ணா மற்றும் லக்ஸ்மன் ஆகிய மூன்று அமைச்சர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருநாடக சட்டசபையில் அமர்ந்து மன அமைதிக்காக பிட்டுப்படங்கள் பார்த்த சம்பவம் பாரதத் தாயின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பொருத்துவதாக அமைந்தது. இதைத் தான் ஆர்.எஸ்.எஸ் வாலாக்கள் தங்களது தினசரி பிரார்த்தனையின் இறுதி வரியாகச் சொல்கிறார்கள் – ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ ; அதாவது, பாரதத் தாயே, உன்னை இந்த உலகில் பரம வைபவமான நிலைக்கு உயர்த்துவேன்.

ராகவ்ஜி
ராகவ்ஜி

பாரதத் தாயின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும் இந்த புண்ணிய காரியத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் சஞ்செய் ஜோஷியின் சி.டியையும், உமா பாரதி கோவிந்தாச்சார்யாவின் துறவுக் காதலையும் நன்றி கெட்ட இந்த நாடு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஸ்வயம் சேவகர்களால் மறக்க முடியாது. இவ்வாறான புண்ணிய காரியங்களைப் பட்டியலிடத் துவங்கினால் அதற்கு இந்தப் பூமிப் பந்தின் மேலிருக்கும் மரங்களையெல்லாம் காகிதமாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கினாலும் முடியாது. அப்படியும் மீறி முயற்சிக்க வேண்டுமானால், பட்டியல் எழுதப்படும் காகிதம் பறந்து போகாமல் பிடித்துக் கொள்ள நிலவுக்கு நான்கு ஸ்வயம் சேவகர்களை அனுப்ப வேண்டியிருக்கும். நீளம் அதிகமாயிற்றே!

சரி இருக்கட்டும் சார், எதுக்கு இந்தப் பழைய பெருமைகளையெல்லாம் இப்போ பேசிக்கிட்டு? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் தீரர்களின் வரிசையில் தற்போது இன்னுமொருவர் சேர்ந்துள்ளார். அவரை அறிமுகம் செய்வதற்கான பீடிகை தான் இது.

மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசின் நிதி மந்திரியாக இருந்தவர் ராகவ்ஜி. 79 வயது இளைஞர். இவரது வேலைக்கார இளைஞர் தன்னை ராகவ்ஜி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகவும் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சி.டி ஒன்றையும் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட சி.டியைப் பார்த்த சி.என்.என் ஐபிஎன், ராகவ்ஜி மாத்திரமின்றி அவரது சகாக்களும் அந்த இளைஞரைத் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது. விவகாரம் வெடித்த பின், கதவைத் திறந்தால் கேமரா வரும் என்கிற பௌதீக விதியைக் கூட அறியாத அப்பாவியான ராகவ்ஜியை பாரதிய ஜனதா ராஜினாமா செய்ய வைத்துள்ளது. சி.டியில் கண்டுள்ள செயல் குற்றமா அல்லது செயலுக்கு கட்டாயப்படுத்தியது குற்றமா என்று இன்னும் பாரதிய ஜனதா மேலிடம் தெளிவு படுத்தவில்லை என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு விடுகிறோம். நடுநிலைமை முக்கியமாயிற்றே!

ஸவ்யம் சேவகர்கள்
ஸவ்யம் சேவகர்கள்

அடுத்து பாலியல் வன்முறையில் ஆண் பெண்ணை வன்புணர்ச்சி செய்வதுதான் நமது பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. ஆனால் ஒரு ஆண் அதுவும் வயதான ஆண் ஒரு இளவயது ஆணை வன்புணர்ச்சி செய்யலாம் என்று பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். பாலியல் சிந்தனை குறித்த கலகம் அதுவும் ஒரு காவிக் கட்சியிடம் இருந்து வருகிறது என்றால் அது அடையள அரசியலின் வெற்றியல்லவா!

போகட்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உலகிலேயே புராணங்களின் அடிப்படையில் கட்சி நடத்துவது பாரதிய ஜனதா மட்டுமே. அவ்வாறிருக்க பாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் ராகவ்ஜி புதிதாக செய்து விடவில்லை என்பது எமது துணிபு. ஐயப்பனை தெய்வமாகக் கொண்டிருக்கும் தேசத்தில் ராகவ்ஜி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விட்டு விடுகிறோம்.

தினசரி சூரிய நமஸ்காரத்தாலும் குத்துச் சண்டை பயிற்சிகளாலும் ஸ்வயம்சேவகர்களின் உடலைத் தயார்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனதுக்கு இந்திரன் தொடங்கி சந்திரனில் தொடர்ந்து சிரீ கிருஷ்ணர் வரையிலான உத்தம புருஷர்களின் கதைகளின் மூலம் உரமூட்டுகிறது. இவ்வாறு புடம் போடப்பட்டு பாரதிய ஜனதாவின் தலைவர்களாக உயரும் ஸ்வயம்சேவகர்கள், தாங்கள் செவிவழியாகக் கற்றுக் கொண்ட பாடங்களை செயல்வழியாக பரீட்சித்துப் பார்ப்பதில் தர்க்க மீறல் ஏதும் இருப்பதாக எமது சிறுமூளைக்குத் தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அமைச்சர் ராகவ்ஜி தனது 79 வயதில் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைக் கொண்டாடாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை, உங்களுக்குப் புரிகிறதா?

அடுத்து ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று பா.ஜ.க உறுதியாகச் சொல்லி வருகிறது. ஒரு வேளை அவர்கள் அப்படி ஆட்சியைப் பிடித்து விட்டால் ஊடகங்களுக்கும், இரசிகர்களுக்கும் சென்சேஷன் செய்திகளுக்கு கொண்டாட்டம்தான். பிட்டுப்படங்களையும், பலான காட்சிகளையும், நீலக் காட்சிகளையும், மஞ்சள் எழுத்துக்களையும் தேடிப்பிடித்து அறிய வேண்டிய தொல்லையை காவிக் கட்சி தரவே தராது. ஏனெனில் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, பலான கட்சியும் கூட.

– தமிழரசன்.
_______________________

வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

22

1. திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவின் வன்னிய சாதி வெறியர்களே! என்ற தலைப்பில் திருச்சியில் 06.07.2013 மாலை 6 மணி அளவில் இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் முன்பு ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய அமைப்பை சேர்ந்த தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். திருச்சி பகுதி ம.க.இ.கவின் தோழர்.ஜீவா தலைமையேற்று நடத்தினார்.

இவ்வார்ப்பட்டத்தில் இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவைச் சேர்ந்த இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை வன்கொடுமை கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் வன்னியர் சங்கத்தை தடை செய்யக் கோரியும் இதை உடனடியாக செய்யாவிட்டால் இன்னும் ஆயிரம் ஆயிரம் இராமதாசுகள் சாதிய கொலை வெறியோடு முளைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் இதற்க்கு சாதியை மறுத்து உழைக்கும் மக்கள் ஓர் அணியில் அணிதிரண்டு போராட அறைகூவல் விடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெருவாரியான மக்கள் ஆர்வத்தோடு நின்று கருத்துக்களை கவனித்தனர். மையக்கலைக்குழுவினரின் ஆயிரம் காலம் அடிமை என்றாயே ! அரிசனன்னு பேரு வைக்க யாருடா நாயே ! என்ற பாடல் நின்று கவனித்துக்கொண்டிருந்த மக்களிடம் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கங்கள்:

கைது செய்! கைது செய்!
இளவரசன் மரணத்துக்கு
காரணமான குற்றவாளிகள்
பா.ம.க சாதிவெறியர்களை
வன்கொடுமை சட்டத்தின் கீழ்
கைது செய்! கைது செய்!

தடை செய்! தடை செய்!
சாதிவெறியை மூட்டிவிடும்
வன்னிய சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
தடை செய்! தடை செய்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதிய குப்பையை தூக்கியெறிந்து
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றினைவோம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
குச்சி கொளுத்தி ராமதாசை,
காடுவெட்டி கயவாளியை,
சாதிவெறி பயங்கரவாதிகளை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி : ம.க.இ.க.திருச்சி

2. விழுப்புரம்

விழுப்புரத்தில் 05.07.13- வெள்ளி   மாலை மிகச் சரியாக ஐந்து மணிக்கு கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் வி.வி.மு சார்பில் ஒன்பது பேரும், புமாஇமு  சார்பில் இருபது பேரும் கலந்து கொண்டனர்.

காவல் அனுமதி வாங்காமல், அனைத்து பத்திரிக்கை/ தொலைக்காட்சிகளுக்கு முறையாக தகவல் தந்தோம். திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் கூடி முழக்கங்களை எழுப்பினோம். ஏப்ரல் 25 அன்று ராமதாசுக்காக போட்ட144 தடையுத்தரவை இரண்டு மாதங்களுக்கு பிறகு மிகசரியாக ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் வாபஸ் பெற்றார்கள். மாவட்ட ஆட்சியர் collector அலுவலக வாயில் சமீப காலமாக யாருக்கும் கூட்டங்களுக்கு அனுமதியும் தருவதில்லை. இச்சூழலில் நாம் திடிரென ஆர்ப்பாட்டம் நடத்தியதும், முதலில் திகைத்த போலீஸ் சுதாரித்துகொண்டு நம்மை மிரட்ட ஆரம்பித்தனர். “அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், உங்களை சும்மா விடமாட்டேன், உடனே கலைந்து செல்லைவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுப்பேன்…ஆ,ஊ..” என சத்தம் போட்டு பார்த்தார் காவல் ஆய்வாளர். பதிலுக்கு நாமும் முழக்கத்தை நிறுத்தாமல்,  “நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் ராமதாஸ்,  அன்புமணி, காடுவெட்டி குரு போன்றோர் மீது நடவடிக்கை எடு! வன்னியர் சங்கத்தை தடை செய்! ” என்று   வாதம் செய்துகொண்டே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் திமு திமுவென்று குவிந்து செய்தி சேகரிக்க. வழக்கத்திற்கு மாறாக மக்கள் அதிகளவில் கூட ஆரம்பித்தனர்.

பீதியடைந்த போலீசு வலுக்கட்டாயமாக தோழர்களை இழுத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தோழர்களை ஜிப்பிலும், ஷேர் ஆட்டோவிலும் தாலுக்கா ஸ்டேஷன் அழைத்து சென்றார்கள். ஜீப்பில் முழக்கம் போடும்போது, “உங்களை கைது செய்துள்ளோம். என் கஸ்டடியில் உள்ளீர்கள், முழக்கமெல்லாம் போடக்கூடாது” என்று மிரட்ட தொடங்கினார் ஆய்வாளர். முன்பை விட அதிக சத்தத்துடன் முழக்கம் எழுப்பி எங்கள் உரிமையை நிலைநாட்டினோம். ஜீப்பில் இருந்து இறங்கி ஸ்டேஷன் வாசலில் நின்று முழக்கம் போட்டதும் அவரின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்து காச்சு, மூச்சு என்று கத்த ஆரம்பித்தார். நாம் அப்போதும் நிறுத்தாமல் உள்வரை  முழக்கம் எழுப்பியபடியே சென்றோம். உங்களை கட்டாயம் ரிமாண்டில் அடிப்பேன் என்று எகிற ஆரம்பித்தார். அது பற்றி எல்லாம் நாம் கவலைபடாமல் நங்கள் செய்தது சரிஎன்று வாதிட்டு வென்றோம். மூணு மணிநேரம் வைத்திருந்து விட்டு ஒன்பது மணிக்கு சொந்த ஜாமீனில் வெளியிட்டார்கள்.

எங்களை கைது செய்து அழைத்து வந்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் கூடிய கூட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் கலையவில்லையாம். போலிசை குவித்து மக்களை மிரட்டி கலையவைத்துஉள்ளார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

3. மதுரை

துரையில் 6/7/13 அன்று மாலை 5 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் ம.க.இ.க.,புஜதொமு, விவிமு, புமாஇமு ஆகிய அமைப்புகள் சார்பில் “இளவரசனின் மரணத்திற்கு காரணமான பாமக, வன்னிய சாதி வெறியர்களை வன்கொடுமை, கொலை வழக்கில் சிறையிலடை” என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக அமைப்பாளர் தோழர். இராமலிங்கம் தலைமை தாங்கினார். விவிமு தோழர். ஆசை மனித உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட கிளை செயலர் தோழர்.லயனல் அந்தோனிராசு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

4. உசிலை (கூடுதல் படங்கள்)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை

5. தருமபுரி, விழுப்புரம் போஸ்டர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இளவரசனது இறுதிக் கடிதம் !

48

( இந்தக் கடிதம் பல்வேறு ஊடகங்களில் சுருக்கியும், சிலவற்றில் முழுமையாகவும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தகத் கடிதத்தின் கையெழுத்து இளவரசனுடையதுதானா என்று உறுதி செய்வதற்கு தடயவியில் துறைக்கு அனுப்பியிருப்பதாக காவல் துறை கூறியிருக்கிறது.  – வினவு )

ன் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாது. ஆனால் நீ என்னை விட்டு பிரிந்த நாட்களில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜூலை 1-ம் தேதி வரை நான் நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீதான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய். என் அப்பா உண்மையிலேயே என் மேல் பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப் பழியை போட்டு விட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்வாய்.

திவ்யா - இளவரசன்
திவ்யா – இளவரசன்

அதே போல நீ என்னிடம் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழ முடியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு நம்ம இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும். திவ்யா, எனக்கு உன்னன ரொம்ப புடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன், ஏன் என் கூட வாழ வர மாட்டேங்கறனு கண்டிப்பா எனக்குத் தெரியல.

நம்ம இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டத்திற்கு மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும், நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி பொறாமைப் படும் அளவுக்கு உன்ன அழகா, கண் கலங்காம வெச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுதா நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்து ஆனா இப்போ எதிலும் நீ என்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என்மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் என்ன விட்டு போகனும்னு.

கண்டிப்பா சொல்றேன், நான் உன்னை விட்டு போகனும்னு நினைக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசை, ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சுடு, நான் இந்த உலகத்த விட்டு போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I LOVE YOU SO MUCH BABY
I LOVE YOU SO MUCH

எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் திவ்யா

__________________

ன் பாசத்திற்கு உரிய அப்பாவிற்கு,

என்னை மன்னிச்சிடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவ கஷ்டப்படுத்தாதிங்கபா.
__________________

ன் நேசமிகு அம்மாவிற்கு, அம்மா என்னை மன்னிச்சிடு. எனக்கு உன்னை நல்ல வெச்சி பாக்கனும்னு ஆசை.

நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்ன வளர்த்து, படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல. என்ன மன்னிச்சிருங்க.

அடுத்து ஜென்மத்துல நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கணும்.
__________________
ன்னோட Best friend என் அண்ணன் பாலாஜிக்கு, என்னை மன்னிச்சிறு பாலா. நீ எனக்கு எப்பவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனா என்னால முடியல பாலா. I am really sorry Bala.
__________________
ன்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும்.

என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி திவ்யா வந்தால் யாரும் அவளை திட்ட வேண்டாம். Please அவளை யாரும் கோவமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு, எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கட்டும்.

I Love you so much da Baby Dhivya.
__________________

பின் குறிப்பு: இந்தக் கடிதம் ஒரு காதலனது ஏக்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில் நாம் ஒன்று சேர்ந்தோம் என்று இளவரசன் எழுதியிருப்பதன் பொருள் நாம் அறிந்ததே. பாமக சாதிவெறியர்கள் நத்தம் காலனியில் நடத்திய சூறையாடல் துவங்கி திவ்யாவின் தந்தை தற்கொலை வரை அதன் இழப்புகளும், துயரமும் அதிகம்.  அடுத்த ஜன்மத்தில் ஒரே சாதியில் பிறந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வோம் என்ற வரிகள் சாதிவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்கிறது. வேறு வேறு சாதியில் பிறந்தால் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ முடியாது என்பது சாதி வெறியர்களின் அட்டூழியத்திற்கு மக்கள் பயப்படுவதையே காட்டுகிறது. அதன் படி இந்த சம்பவத்திற்கு காரணமாக பாமக சாதிவெறியர்களை தண்டிப்பதன் மூலமே சாதிகளை மறுத்து வரும் காதல் திருமணங்கள் சாத்தியமாகும். ஆனால் அந்த சாதி வெறியர்கள் தண்டிக்கப்பட்டு தனது காதல் நிறைவேறாது என்று விரக்திக்கு ஆளானதாலேயே இளவரசன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இனி காதலிக்கும் இளவரசன்கள் தற்கொலை செய்யக்கூடாது என்றால் சாதிவெறியர்கள் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இறுதியாக ஜீன்ஸ் பாண்ட், கூலிங்கிளாஸ், நாடகக் காதல், பணம் பறிப்பது என்று சாதித்திமிருடன் கொச்சைப்படுத்திய ராமதாஸின் அவதூறுகளுக்கு தனது உயிரை பதிலாய் தந்து விட்டு மரித்திருக்கிறார் இளவரசன். இது உண்மையான காதல் என்பதை இந்த காட்டுமிராண்டிகளுக்கு உணர்த்துவதற்கு அவர் தனது உயிரையே பறித்திருக்கிறார். மேலும் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி திவ்யாவை பிரித்த பாமக சாதிவெறியர்களை கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை.  ஒருவேளை அப்படி குறிப்பிட்டிருந்தால் திவ்யாவின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்று கூட அவர் பயந்திருக்கலாம்.  அதனால்தான் தான் இறந்த பிறகு வரும் திவ்யாவை யாரும் திட்டதீர்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். என்னால் அவள் கஷ்டப்பட்டது போதும் என்றும் இனிமேலாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கடிதத்தை முடித்துக் கொள்கிறார். நாம் பாமக சாதிவெறியர்களை தனிமைப்படுத்தி தண்டிப்பதற்கு தொடர்ந்து போராடுவோம்.

– வினவு
_____________________________

இளவரசன் தற்கொலைக்கு பாமகதான் குற்றவாளி !

58

ரணமடைவதற்கு முன் இளவரசன் எழுதிய கடிதம் கிடைத்திருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், திவ்யாவுக்கும் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று அவர் எழுதியிருப்பதாக தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் தெரிவித்திருக்கிறார். அக்கடிதம் இளவரசன் எழுதியதுதான என்பதை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

இளவரசன் கிடந்த இடத்தில் போலீசுக்கு முன்பாகவே சென்றவர்கள் அக்கடிதத்தை எடுத்திருப்பதாகவும், பின்னர் விசாரணையில் கடிதம் கிடைத்திருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசன் உடல்
ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் கொல்லப்பட்ட இளவரசனின் உடல்.

சரி, இதன்படி இளவரசன் தற்கொலையே செய்திருப்பதாக முடிவு செய்வோம். இதனால் இளவரசன் மரணத்திற்கு காரணம் பாமக சாதிவெறியர்கள்தான் என்ற முடிவில் மாற்றமில்லை. மாறாக நமது குற்றச்சாட்டு உண்மை என்பதையே இளவரசனது முடிவும், கடிதமும் நிரூபிக்கின்றன. இளவரசன் கொலை செய்யப்பட்டோ இறந்திருந்தாலோ இல்லை தற்கொலையோ செய்திருந்தாலும் அதற்கு காரணம் பாமகவினர்தான் என்று இதற்கு முன்னர் எழுதிய பதிவுகளில் தெரிவித்திருக்கிறோம்.

இளவரசன் திவ்யா திருமணம் முடிந்த பிறகு பாமக சாதிவெறியர்கள் திவ்யாவின் தந்தையை மனம் குறுகும் வண்ணம் கேலி செய்து, விமரிசனம் செய்து, குத்திக் காட்டி, சாதி கௌரவம் இவரால் போனது என்றெல்லாம் பலவாறாக பேசுகிறார்கள். இதை முந்தைய மாதங்களில் திவ்யாவே சில பத்திரிகை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவர் கூறவில்லை என்றாலும் அதுதான் உண்மை. அந்த கேலி, கிண்டல், அவதூறு பொறுக்க முடியாமல் திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்கிறார்.

மேலும் இந்த தற்கொலை எப்போது நிகழும், அதற்கு பின்னர் தலித் மக்களின் ஊர்களில் ஆள் சேதமில்லாமல் குடியிருப்பு, பொருட்களை எப்படி அழிக்கலாம் என்று வன்னிய சாதிவெறியர்கள் பாமகவின் தலைமையில் திட்டத்தோடு காத்திருந்தனர். அதன்படி நாகராஜன் மரணம் நடந்த சில மணிநேரங்களில் நத்தம் காலனி மற்றும் அருகாமை தலித் ஊர்கள் சூறையாடப்படுகின்றன.

பிறகு ராமதாஸ் ஏனைய ஆதிக்க சாதிவெறி தலைவர்களோடு ஊர் ஊராக சென்று “நாடகக் காதல்” எதிர்ப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீதான துவேசத்தையும், வெறுப்பையும் கிளப்புகிறார். இந்த பின்னணியில் திவ்யா மட்டும் இளவரசனோடு வாழ்ந்தால் தமது வன்னிய கௌரவம், சாதிவெறி, மற்றும் பாமகவின் இமேஜ் பாதிக்கும் என்று இந்த சாதிவெறியர்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள்.

அதன்படி இந்த கிரிமினல்கள் திட்டமிட்டு திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கிறார்கள். அதன் பிறகு திவ்யாவின் தாய் தேன்மொழி போட்டிருந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது பாமக சாதிவெறியர்கள் புடை சூழ திவ்யா கைது செய்யப்பட்டது போல நீதிமன்றம் வருகிறார். பிறகு அவரை அழுது கொண்டே “நான் இளவரசனோடு இனி எப்போதும் சேர்ந்து வாழ முடியாது” என்று பேசவைக்கிறார்கள். அவர் கூற்றில் முக்கியமானது தனது தாய், தம்பி இருவருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதுதான். அதன்படி இந்த சாதிவெறியர்கள் எப்படியெல்லாம் மிரட்டியிருப்பார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

பிறகு திவ்யாவை இப்படி வலுக்கட்டாயமாக பிரிப்பதற்கு தேன்மொழி சார்பில் வக்கீலாக பாமகவின் பாலுதான் ஆஜராகியிருக்கிறார். அடுத்து திவ்யா இப்படி பிரிந்து விட்டார் என்று எச்சில் ஊற வன்னிய சாதிவெறியுடன் பாமகவின் இணைய கோயாபல்சு அருள் தொடர்ந்து பதிவுகள் போடுகிறார். அதில் பார், நாங்கள் திவ்யாவை பிரித்து விட்டோம், திவ்யா வாயாலேயே பேசவைத்துவிட்டோம் என்ற காட்டுமிராண்டித்தனம் அப்பட்டமாக நெளிகிறது. இது போல திவ்யாவைச் சுற்றி தீவட்டி தடியர்களாக பல பாமகவினர் நின்றார்கள்.

உயர்நீதிமன்றத்தில் திவ்யா
உயர்நீதிமன்றத்தில் திவ்யா

திவ்யா சென்னையில் பாமக ஏற்பாட்டில், பாமக குண்டர்கள் புடைசூழத்தான் தங்க வைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இதிலெல்லாம் பாமக சம்பந்தப்படவில்லை என்று யாராவது சொன்னால் அது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை விட பயங்கரமானது. அடுத்து பாமக வழக்கறிஞர் பாலு ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் யார் கூப்பிட்டாலும் வாதாட போவார், அதை வைத்து இது பாமக சதி என்று கூறக்கூடாது என்று சிலர் லா பாயிண்ட் கேட்கிறார்கள். சரி, ஒரு பறையர் இளைஞன், ஒரு வன்னிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வழக்கில் தனக்காக வாதாடுமாறு இந்த பாலுவை கூப்பிட்டால் வருவாரா? இல்லை இதுவரை எந்த காதல் கதைகளில் இவர் தலித் இளைஞர்களுக்காக வாதாடியிருக்கிறார்?

ஆனால் இணைய கோயாபல்ஸ் அருளே இவர் பாமக வழக்கறிஞர் என்பதால்தான் வாதாடினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக நாகராஜின் தற்கொலை முதல் திவ்யாவின் நீதிமன்ற வாக்குமூலம் வரை பாமகவின் சதிக்குற்றத்தினை ஆதாரத்தோடு பார்த்து விட்டோம்.

அடுத்த நாள் தினத்தந்தியில் திவ்யாவின் வாக்குமூலத்தை பார்த்து இளவரசன் மனம் உடைகிறார். அவரது கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனதாக சோர்ந்து போயிருக்கிறார். பாமக எனும் கட்சி, வன்னியர் சங்கம் எனும் கூட்டம், இவர்களை ஒரு எளிய தலித் இளைஞன் எதிர் கொண்டு வாழ முடியாது என்று அவருக்கு தோன்றியிருக்கலாம்.

தன்னை ஆழமாக நேசித்து காதலித்து மணம் முடித்த தனது மனைவியையே இப்படி மிரட்டி பேசவைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் அவரை அலைக்கழித்திருக்கிறது. இனி எந்நாளும் சேர முடியாது என்று அவர் முடிவு செய்கிறார். இந்தப் போக்கில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆக, தான் வாழ முடியாது, திவ்யாவுடன் சேர முடியாது, திவ்யாவை பாமக சாதிவெறியர்கள் இருக்கும் வரையிலும் திரும்பப் பெற முடியாது என்ற உண்மைதான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்திருக்கிறதே அன்றி வேறு எதுவும் அல்ல. ஒரு இளைஞன் தான் இந்த சமூகத்தில் வாழமுடியாது எனும் நிலை எடுக்க வேண்டுமென்றால் அது பாரதூரமான காரணங்களாலேயே இருக்க முடியும்.

ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளும் நபர் அந்தக் கணத்தில் தனது உயிரினைத் துறக்கும அதீத தைரியத்தை பெறுகிறார். அதாவது தனது உயிரை ஒருவன் துறக்கிறான் என்றால் அவனுக்கு இந்த வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழியில்லை என்ற யதார்த்தமே அப்படி தள்ளுகிறது.

அந்த வகையில் பாமக சாதிவெறியர்கள்தான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்த முதன்மையான குற்றவாளிகள். அந்த வகையில் தற்கொலையை நிறைவேற்றியவர்கள் என்ற வகையில் இவர்கள் கைது செய்யப்பட்டு உரிய பிரிவுகளில் வழக்கு தொடுக்க வேண்டும். அதன்படி இளவரசனது தந்தை கொடுத்திருக்கும் புகாரின் படி ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில், வழக்கறிஞர் பாலு அனைவரும் கைது செய்யப்படவேண்டும். மேலும் தருமபுரி உள்ளூர் அளவில் உள்ள பாமக தலைவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

திவ்யாவின் தாயார் தேன்மொழியை சந்தித்து குறுக்கு விசாரணை செய்யும் எவரும் மேற்கண்ட உண்மைகளை சுலபமாக வெளியே கொண்டு வரலாம். தனது தந்தை, மற்றும் கணவனைக் கொன்றுவிட்டவர்கள் யார் என்பதை அறிந்த திவ்யாவும் உண்மைகளை பேசினால் வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.

ஆனால் இளவரசனது மரணத்திற்கு காரணமான பாமக சாதிவெறியர்களை தப்புவிக்கும் முகமாகவே அரசு செயல்பட்டு வருகிறது. தன்னை எதிர்த்துப் பேசியதால் பாமக தலை முதல் வால் வரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் ஜெயா அரசு, இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் வாயே திறக்கவில்லை. அவர் நியமித்திருக்கும் நீதிபதி விசாரணை கூட இளவரசன் குடும்பத்திற்கு ஏதாவது நிவாரணம் என்று மட்டுமே முடியும்.

தருமபுரி வந்து விசாரித்து சென்றிருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறது. மேலும் அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், தலைவர்களும் கூட “நடந்தது நடந்து விட்டது, இனி சமாதானமாகவே வாழ்வோம்” என்று நடந்த குற்றத்தை மறைக்கவே செய்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்று அரசியல் செய்யும் விடுதலைச் சிறுத்தைகளும் இளவரசன் மரணத்துக்குக் காரணமான பாமக குற்றவாளிகளை கைது செய் என்று கோரவில்லை. ஏனெனில் பாமகவுடன் சுமுக உறவு வைத்திருந்தால்தான் விடுதலைச் சிறுத்தைகளும் அரசியலில் காலம் தள்ள முடியும். மாறாக, வட தமிழகத்தில் பல்வேறு வன்னியர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வன்னியர்களைத் திரட்டியிருக்கும் எமது மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்தான் பாமக சாதி வெறியர்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகிறோம்.

எனவே, தமிழகம் சாதி வேறுபாடுகளின்றி சமத்துவ உரிமையுடன் மக்கள் வாழவேண்டுமென்றால் பாமக சாதி வெறியர்கள் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

ஒரு தலித் இளைஞன் காதலித்தால் அவன் வாழ முடியாது என்று இந்த சாதிவெறியர்கள் விதித்திருக்கும் பத்வாவை ஒழிக்காமல் அப்படி பத்வாவை விதித்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளை தண்டிக்காமல் நாம் நாகரீக உலகில் வாழ்கிறோம் என்று யாரும் சொல்ல முடியாது.

எனவே இளவரசனது கொலையை விட தற்கொலை என்பது பாரிய அளவில் பார்க்கப்பட வேண்டும். அதற்கு காரணமாக பாமக சாதிவெறியர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

32

வுதி அரேபியா தன் மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை தர வேண்டும் என்று கொண்டு வந்துள்ள நிதாகத் சட்டத்தினால் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து வீடு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர். சவுதி அரசுக்கு தன் மக்கள் மீது உருவாகியிருக்கும் “குபீர்” கரிசனம் ஏன்? நாடு திரும்பிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்தியத் தொழிலாளர்கள்
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்கள்.

எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவிற்கு அறிமுகம் தேவையில்லை. எண்ணெய் வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிட்டு எண்ணெய் விலை சூதாட்டத்தில் உருவான ஷேக்குகளின் ஆடம்பரம், அமெரிக்க மோகம், இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க அரசு, பின்பு அமெரிக்காவிற்கு விசுவாச அடிமைகளான கதை எல்லாம் நாம் அறிந்ததே.

ஒரு பக்கம் அல்லாவின் தேசம் என்று சொல்லி கடுமையான ஷரியத் சட்டங்களை நடைமுறை படுத்தி தன்னை இசுலாமிய மத அரசாக காட்டிகொண்டு, மறுபுறம் குடி கூத்துக்களோடு உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் ஷேக்குகளின் ராஜ தந்திரம் யாருக்கு வரும்?

வளைகுடா ஷேக்குகளுக்காக கட்டிடங்களை எழுப்ப கடும் சூட்டில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வந்து உயிரை கொடுத்த கதையை வினவில் பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். (மேலும் கட்டுரைகள் கீழே தொடர்புள்ள இடுகைகளில்).

சவுதி அரசு ஏற்கனவே 1991-ல் சவுதிமயமாக்கல் எனும் சட்டத்தை இயற்றியிருந்தது அதன்படி அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் சவுதியின் மண்ணின் மைந்தர்கள் சுமார் 30 சதவீதத்தினர் வரை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டம் நடைமுறையாகவில்லை. நடைமுறைப்படுத்தவும் அரசு பெரும் அக்கறை காட்டவில்லை. மீண்டு எழுந்த பொருளாதாரம் அப்போதைக்கு இதையெல்லாம் தள்ளிப்போட்டது. குறைந்த செலவில் உழைப்பதற்கு ஏழை நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதை சவுதி ஷேக்குகள் ஊக்குவித்தார்கள்.

சவுதி ஊழியர்கள்
சவுதி ஊழியர்கள்

ஆனால் 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தம் சவுதி அரேபியாவை காட்டமாக தாக்கியுள்ளது, மீண்டு எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் மங்கத் தொடங்கியுள்ளது. இதனால் 2013-ம் ஆண்டில் பெருகி வரும் வேலையில்லா சவுதி அரேபியர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வரும் நாட்களில் 6.3 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் சவுதி அரசு தன் பழைய சட்டத்தை தூசி தட்டி அதில் ஏற்பட்ட தவறுகளை களைந்து புதிதாக நிதாகத் எனும் சட்டதை இயற்றியுள்ளது. அதன்படி, மொத்த வேலை வாய்ப்பில் 10 சதவீதம் வேலைகள் சவுதி அரேபியர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை இவை நிறைவேற்றப்பட வேண்டும்.

30 சதவீதம் என்று முன்னர் சொன்ன சவுதிமயமாக்கல் சட்டத்தை விட இது கொஞ்சம் விட்டுப் பிடிக்கும் சட்டம். காரணம் சவுதியில் தேவையான மற்றும் தகுதியான வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு, அதனால் உடனடியாக இத்தனை சதவீதம் பேர் வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் போடாமல், ஒவ்வொரு துறையாக பிரித்து மெல்ல ஒவ்வொரு துறைகளிலும் கணிசமானோரை சில ஆண்டுகளில் வேலைக்கு அமர்த்திவிட வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம்.

சவுதி அரேபியாவில் குடியேற்றம் பெற்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் இருக்கும். இதில் கூலி வேலை, சாதாரண வீட்டு வேலைகள், உழைக்கும் தொழிலாளர்கள் கணிசமானோர். இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள். பெரும்பான்மையானோர் இந்தியர்கள் (சுமார் 20 லட்சம்). இந்தியர்களில் பெரும்பான்மையானோர் கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

நிதாகத் சட்டதின் முதல் படியாக, முறையான வேலை பர்மிட் இல்லாதவர்களை சவுதி அரசு வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள், இதேபோல் 30 ஆயிரம் பாகிஸ்தானியர்களும் அவர்கள் நாட்டு தூதரகத்தின் முன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியா - இந்திய ஊழியர்கள்
சவுதி அரேபியா – இந்திய ஊழியர்கள்

முதல் கெடுவாக மார்ச் மாதத்துக்குள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என கட்டளை இடப்பட்டது, ஆனால் ஆயிரக் கணக்கானோரை நாடு திரும்ப வைக்க கடினமாக இருந்ததால், அந்தக் கெடு ஜூலை மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது, சொன்ன கெடுவிற்குள் இவர்கள் சவுதியை விட்டு வெளியேறவில்லை என்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்போதைக்கு முறையான வேலை பர்மிட் வாங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு பிரச்சனை இல்லை.

சவுதியில் இத்தனை நாள் உழைத்து வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சவுதி பணத்தில் சுமார் 900 ஆயிரம் முதல் 1000 ரியால்கள் வரை குறைந்தபட்ச சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிது. இதுவும் பர்மிட் இல்லாத தொழிலாளிகளுக்கு சம்பளம் இன்னும் குறைவு. ஆனால் சவுதியின் நிதாகத் சட்டமோ உள்நாட்டைச் சேர்ந்த சவுதி அரேபிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக சுமார் 3000 ரியால்கள் கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. இப்படி சவுதி அரேபிய இசுலாமியர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டு இசுலாமியர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை அல்லா எப்படி அனுமதிக்கிறான், ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை மார்க்க பேரறிஞர் பி. ஜெய்னுலாபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

இத்தனை நாட்களாக தம் நாட்டு மக்கள் மீது இல்லாத கரிசனம் திடீரென சவுதி மன்னருக்கு பொங்கி வழிய அல்லாவின் அருள்தான் காரணமென்று நினைத்தால் அது இல்லை. அதன் காரணம் ‘அரபு வசந்தம்’.

கடந்த சில மாதங்களுக்கு முன், மக்கள் நலனை புறக்கணித்து ஆண்டு வந்த சர்வாதிகாரிகளை மத்திய கிழக்கு மக்கள் வீதிக்கு வந்து போராடி துரத்தியடித்த சம்பவங்கள் அவை. ஒரு பாரிய புரட்சி இல்லையென்றாலும், அதன்படி தன் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்த்திருக்கிறார் சவுதி அரசர். இப்போதைக்கு தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் உடனடியாக தன் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.

என்ன தான் மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் மக்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. எகிப்திலும், துனிசியாவிலும், இசுலாமிய மக்கள், இசுலாமிய அதிபர்களை தான் துரத்தியடித்தார்கள். ”நானும் இசுலாமியன், உன் சகோதரன்” என்று அதிபர்கள் உருகியிருந்தால் உதைபட்டிருப்பார்கள், அதே தான் சவுதிக்கும் பொருந்தும், இது அல்லாவின் தேசமல்லவா ”ஏழைகளே பொறுங்கள், ரம்ஜான் மாதத்தில் கருணையுடன் நான் நோன்பிருந்து உங்கள் பசியை அறிந்து கொள்வேன், பின்னர் என்னால் முடிந்த சில ரொட்டிகளை உங்கள் பாத்திரங்களில் இடுவேன், நீங்கள் பசியாறலாம்” என்று சவுதி மன்னர் சொன்னால் அவர் அரண்மனை கைப்பற்றப்படும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் நிதாகத் சட்டம் வந்தேவிட்டது.

சவுதியில் கணக்கு வேலை அல்லது மென்பொருள் வேலை பார்க்கும் இந்தியருக்கு கிடைக்கும் வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருக்கும்; சவுதி மக்கள் மெல்ல தொழில்நுட்ப அறிவு பெற்று, அலுவலக வேலைகளுக்கு தகுதியானவர்களாக உயர்த்திக் கொண்டதும் அத்தகைய வேலைகளிலும் அவர்கள் அமர்த்தப்படும் சாத்தியம் ஏற்படும். அப்பொழுது வேலை செய்வதற்கான உரிமை பெற்று இப்பொழுது தங்கள் சக சகோதரர்கள் வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க வெளிநாட்டு ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள்.

மன்மோகன் சிங், சவுதி மன்னர் அப்துல்லா
மன்மோகன் சிங் சவுதி அரேபியாவில்

இனி இந்தியாவின் நிலைமை. ஆயிரக்கணக்கில் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் நிலை?

சவுதி கனவென்பது அமெரிக்கக் கனவை போன்றதல்ல. விவசாயத்தை இழந்த எண்ணற்ற விவசாயிகள் உதிரிகளாக ஆக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன்பட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து சவுதி வெயிலில் அவதிப்பட்டு பணம் சேர்க்க நினைத்த கனவு. பெரும்பான்மையான உதிரித் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் மிருகங்களை போல் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களில் இருந்து பார்த்தால், அவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது அப்பாவித் தனமானது மட்டுமே. அதுதான் அவர்களை போராடவிடாமல் ஷேக்குகளின் முன் அடிமைகளாக இருப்பதற்கு உதவி செய்கிறது.

இப்பொழுது நாடு திரும்பி இருக்கும் இவர்கள் வெளிநாடு சென்றதற்கான கடனை அடைக்க வேண்டும், தன் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு மறு வாழ்வளிக்க அரசு ஏற்பாடு செய்யும் என இந்திய அரசு சொல்லியுள்ளது எல்லாம் பச்சையான ஏமாற்று மட்டுமே. நாட்டில் பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு இவர்களை காப்பாற்றிவிடும் என்பதை ஆண்டவனே கூட நம்பமாட்டான்.

உலகம் முழுவதிலும் முதாளித்துவத்தின் தோல்வியால் வேலை இல்லாமல் திண்டாடும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் உபரியான, உதிரியான தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்ய, உபரி கூலிப் பட்டாளம் தேவை. அவர்களை திட்டமிட்டு உருவாக்கும் முதலாளித்துவம், தேக்க நிலை வரும் போது அவர்களை பராமரிக்க முடியாமல் தவிக்கிறது.

இதே நிலை தான் இப்பொழுது உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கினால் ஆளும் வர்க்க அரசுகளுக்கு ஆபத்து என்பதால் போர்கள், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், சாதி கலவரங்கள் போன்ற மக்களை பிளவுபடுத்தும் திசையில் கோபத்தை திசை திருப்ப ஆளும் வர்க்கங்கள் முயற்சிக்கின்றன.

அப்படித்தான் சவுதி அரசும் தனது நெருக்கடியை மறைக்க வெளிநாட்டு தொழிலாளிகளை விரட்டி உள்நாட்டு தொழிலாளிகளை ஊக்குவிப்பதாக நாடகமாடுகிறது. பார்க்கலாம், இந்த நாடகம் இன்னும் எத்தனை காலமென்று!

-ஆதவன்

மேலும் படிக்க

நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

3

என்எல்சின்.எல்.சியின் 5% பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அந்நிறுவன ஊழியர்கள் கடந்த வாரம் புதன்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். ஏறக்குறைய 14 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 11 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பங்கேற்கும் இந்த மாபெரும் வேலை நிறுத்தம் நெய்வேலி மக்களின் போராட்டமாகவும் மாறத் துவங்கியுள்ளது. வியாபாரிகள் கடையடைப்பு நடத்துகின்றனர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

முன் அறிவிப்பு கொடுத்து 14 நாள் அவகாசம் கொடுத்த பிறகே வேலைநிறுத்தம் துவங்க வேண்டும் என்ற இந்திய தொழில் தகராறு சட்ட விதிமுறை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 4-ம் தேதி தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சங்கங்கள் மாத்திரம் வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கின. எனினும், நிரந்த தொழிலாளர்களுடன் இணைந்து எந்த அரசு சலுகைகளும் இல்லாத 11 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாள்ர்களும் இந்த தனியார்மய நடவடிக்கைக்கு எதிராக தமது வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கம்ஆண்டுதோறும் சுமார் 6 சதவீதம் இலாப வளர்ச்சி காணும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. அது ஆண்டுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டுகிறது. ஆண்டுக்கு 24 மெட்ரிக் டன் லிக்னைட் நிலக்கரியை வெட்டியெடுத்து அதன் மூலமாக 2740 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கிறது. தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் என தென் மாநிலங்கள் அனைத்துக்கும் மின்சாரத் தேவையை ஈடுசெய்ய இந்நிறுவனம் உதவுகிறது. இப்போதைய வேலைநிறுத்தம் காரணமாக உற்பத்தி கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. நிலக்கரி சுரங்க வேலைகள் நடைபெறுவது அடியோடு நின்று விட்டதால் சுரங்கங்களின் உட்புறம் நீர் நிரம்ப வாய்ப்புள்ளது.

இங்குள்ள 3 சுரங்கங்களில் ஏறக்குறைய 33,000 கோடி டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பயன்படக் கூடிய அளவு இருப்புள்ள இச்சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது எனப் போராடுபவர்கள் எந்தப் பணிப் பாதுகாப்பும் இல்லாத சுரங்கத் தொழிலாளர்கள். நிலக்கரி ஊழல் புகழ் மன்மோகன் சிங் வகையறாக்கள் இத்தனியார்மய நடவடிக்கையில் பின்வாங்குவது போலத் தெரியவில்லை. ஏற்கெனவே 6.44 சதவீத பங்குகளை விற்றுவிட்ட அவர்கள் தற்போது விற்கவுள்ள 5 சதவீத பங்கின் மதிப்பு 500 கோடி ரூபாய். இப்போது நெய்வேலி போராட்டத்தை முடக்குவதற்க்காக நிர்வாகம் அனுபவமற்ற நபர்களை வைத்து விலை உயர்ந்த இயந்திரங்களை இயக்குவதால் ஏற்படும் பழுதை சரிசெய்யவே இதனை விட அதிக செலவாகும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொதுத் துறை நிறுவனங்களில் 10% பங்குகள் மக்களிடம் (அதாவது, தனியார் முதலாளிகளிடம்) இருக்க வேண்டும் எனும் மத்திய பங்குச் சந்தை ஆணையத்தின் விதிகளின்படி பங்குகளை விற்றே தீர வேண்டும் என்று சட்டம் பேசுகிறது மத்திய அரசு. அந்த விதிகளை உருவாக்கியதே இதே மத்திய அரசுதான் என்பதையும் உருவாக்கிய அவர்கள் தேவைப்பட்டால் அதை மாற்ற முடியும் என்பதையும் மறைத்துவிட்டு நாடகமாடுகின்றனர்.

என்எல்சிஎன்.எல்.சி இன் பெரிய தொழிற்சங்கமான திமுகவின் தொமுச மற்றும் அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, ஐஎன்டியூசி என அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். சில சங்கங்கள் பின்வாங்க நினைத்த போதிலும் தொழிலாளி வர்க்கம் உறுதியாக இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்க்கிறது. இடையில் ஜெயலலிதா தமிழக அரசு நிறுவனங்களே 5 சதவீத பங்குகளை வாங்க செபி (பங்குச் சந்தை ஆணையம்) அனுமதி தரக் கோரி இருக்கிறார். அவரும், கருணாநிதியும் இதனை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

மத்திய அரசின் பங்குகளை மாநில அரசிடம் விற்பது என்பது பின்னர் கைமாற்ற தோதாக அமையும் என இவர்கள் எதிர்பார்க்கக் கூடும். அப்படி கைமாற்ற அனுமதிப்பது என்பதே புறவாசல் வழியாக தனியார்மயத்தை மீண்டுமொரு முறை அமல்படுத்துவதேயாகும். மேலும் மக்கள் சொத்தான நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பங்குகளை மீண்டும் மக்கள் பணத்தில் வாங்குவது என்பது கடைந்தெடுத்த மோசடியாகும்.

இதற்கிடையில் ஜெயாவின் எதிர்ப்புக்கு லாவணியாக, “டிஎன்பிஎல் பங்குகளை மறைமுகமாக விற்ற ஜெயாவுக்கு நேரடியாக நாங்கள் என்.எல்.சி பங்குகளை விற்பதை எதிர்க்கத் தகுதியில்லை” என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என இவர்கள் ஊர்ச்சொத்தைத் திருடுவதிலும் கூட போட்டி போடத் துவங்கியுள்ளனர். பா.ஜ.க வின் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு சீக்கிரம் கூடங்குளத்தை ஆரம்பித்தால் நல்லது என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

நிலக்கரி வயல்களை குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு விற்று ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்த கல்லுளிமங்கள் மன்மோகன் சிங், இப்போது ஏற்கெனவே உள்ள வயல்களை வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்கத் துவங்கியுள்ளார். இப்போது வெறும் 90 காசுக்கு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்.எல்.சி நிறுவனத்தை டாடாவிடமும், அம்பானியிடமும் கொடுத்தால் 18 ரூபாய் கொடுத்துதான் யூனிட் மின்சாரத்தை வாங்க வேண்டும். அதன்பிறகு மின்சாரத்தில் சுயசார்பை இந்தியா நினைத்தாலும் பெற முடியாது.

நாட்டுப்பற்று மிக்க என்.எல்.சி தொழிலாளிகளும், அப்பகுதி மக்களும் தனியார்மயத்திற்கு எதிராக தங்களது போராட்டத்தை துவக்கியுள்ளனர். வரும் 9-ம் தேதியன்று 15 தொழிற்சங்கங்களும் இணைந்து என்.எல்.சி முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. தேசப்பற்றுள்ள அனைவரும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜூலை 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலை உணர்த்தும் உண்மை : பகற்கொள்ளையின் மறுபெயர்தான் தனியார்மயம்!
  2. போலி கம்யூனிஸ்டுகள் : பார்ப்பன பாசிசத்தின் பல்லக்குத் தூக்கிகள் !
  3. சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல் !
  4. சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !
  5. “அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி !
  6. சட்டத்தின் ஆட்சியா? வர்க்கத்தின் ஆட்சியா? – சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்!
  7. ஓசூரில் சட்ட விரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! ஆட்குறைப்பு, ஆலைமூடல் சதிகளைத் தகர்த்தெறிவோம்!! – பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்
  8. சிதம்பரம் வீனஸ் பள்ளி : கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் பெற்றோர் போராட்டம்!
  9. எதிர் கொள்வோம் !
  10. டாஸ்மாக் சாராயக் கடையை விரட்டிய மக்கள் போராட்டம் !
  11. அரியானா அரசு – போலீசு – நீதிமன்றம் : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !
  12. இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !
  13. குஜராத் முசுலீம் படுகொலை : சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள்!
  14. தாழ்த்தப்பட்ட சிறுவன் தலையில் செருப்பைச் சுமக்க வைத்த தேவர் சாதிவெறி!
  15. இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக் கூட்டு!
  16. ஈனப்பிறவிகள்!

புதிய ஜனநாயகம் ஜூலை 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

82
திவ்யா
சென்னை உயர்நீதி மன்றத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் திவ்யா

திவ்யாவின் தாலியை இரக்கமின்றி அறுத்தெறிந்த பாமகவினர் இன்று காலையில் திவ்யாவையும், அவரது தாயாரையும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்தனர்.

மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான். நாகராஜின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த சாதி வெறியர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதும் உடன் திட்டமிட்டு தலித் மக்களின் ஊர்களை நாசமாக்கினர். அப்போதும் பாமகவின் சாதி வெறி அடங்கவில்லை. இவர்களை துணிவுடன் எதிர்த்து நின்று கணவன் இளவரசனுடன் வாழ்ந்து வந்த திவ்யாவை எப்படி பிரிப்பது என்று இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்.

பல மாதங்களுக்கு பிறகு திவ்யாவை தந்திரமாக ஊருக்கு வரவழைத்து தாய், தம்பிக்கு ஏதாவது ஏற்படும் என்று அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அவரை இளவரசனிடமிருந்து பிரித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அழுதவாறே பேசும் திவ்யாவே இதற்கு சாட்சி. இதன் மூலம் வன்னிய மானம், கௌரவம் மீட்கப்பட்டதாக வெட்கமின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பேசி வந்தனர் பாமக சாதி வெறியர்கள். அதன் ஆதாரங்களை ராமதாஸின் அடியாள் அருளின் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்நிலையில்தான் இளவரசனது மரணம் ஏற்படுகிறது. இது கொலையா, தற்கொலையா என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இரண்டுக்குமே இந்த சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இளவரசன் மரணத்திற்கு பிறகு திவ்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பையும் பாமகவினர் வைத்திருந்தனர். ஏனெனில் திவ்யாவும், அவரது தாயார் தேன்மொழியும் அவர்களது சிறையில்தான் இருந்தார்கள். இளவரசன் மரணம் கண்டு கலங்கி, தான் எவ்வாறு பாமகவினரால் அச்சுறுத்தப்பட்டேன் என்று திவ்யா கூறிவிட்டால் பாமக தலைகளுக்கு ஆபத்து உறுதி. இதனாலும், திவ்யா ஏதும் மனம் மாறி தங்களது வன்னிய மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் அவருக்கு ஆபத்து என்பது நிச்சயமாகவே நிறையவே இருந்தது. மேலும் இந்த பாமக சாதி வெறியர்கள் எந்த கொலைபாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் என்பதும் கூடுதல் காரணம்.

இதை முன்யூகித்தே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நேற்று தொடுத்த வழக்கில் திவ்யாவுக்கு கவுரவக் கொலை நிகழும் ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டியது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உடன் அரசு அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் திவ்யாவை பார்த்து அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இளவரசனது மறைவை அடுத்து ஊடகங்கள் மற்றும் இணையம், கள நிலவரப்படி தமிழக அரசியல் அரங்கில் பாமக சாதி வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இளவரசனது மரணம் சாதி வேறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரையும் பாமகவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திவ்யாவுக்கு ஏதாவது நேர்ந்தால் தமது தலை தப்பாது என்று பயந்து போயே இப்போது தாய், மகளை தருமபுரி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இந்த ஒப்படைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பாமக தலைவர்களிடம் கேட்டால், “இல்லையே நாங்கள் ஒப்படைக்கவில்லையே, அவர்களாகத்தான் சென்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று பட்டுக் கொள்ளாமல் பேசுகிறார்களாம். ஆனால் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர் பேசும் போதும் கூட தீவட்டி தடியர்கள் போன்று நின்று கொண்டு போஸ் கொடுத்த போது இருந்த ‘வீரம்’ இப்போது எங்கே போனது? இல்லை இதுநாள் வரையிலும் திவ்யா பாமக கட்டுப்பாட்டில்தான் இருந்தார் என்பதற்கு இந்த கோர்ட் காட்சிகளும், அது வெளியான எல்லா டிவி காட்சிகளும் இருக்கிறது என்பது கூட இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ஆனால் பாமக தொண்டர்களிடம் கேட்டால், “எதுக்கு சார் பிரச்சினை, இனிமேலும் அந்த பெண்ணை வைத்திருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சினை அதான் கொண்டு விட்டுவிட்டோம்” என்று பட்டென்று பேசுகிறார்களாம். இதெல்லாம் நமது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்த செய்திகள். மேலும் இளவரசனது மறைவை ஒட்டி பத்திரிகையாளர்கள் திவ்யாவை சந்திப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்தும் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் காத்ததும் இதே பாமக தலைவர்கள்தான்.

தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திவ்யா என்ன பேச வேண்டும் என்று இவர்கள் மிரட்டியபடியே சொல்லிக் கொடுத்துதான் அனுப்பியிருப்பார்கள். ஆனால் திவ்யா அதை மறுத்து உண்மையை பேச வேண்டும். பேசினால் இளவரசனது மரணத்திற்கு இந்த பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும். இளவரசன் மறைவுக்காக கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் திவ்யா அதைச் செய்ய வேண்டும். தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும். ஆனால் அப்படி திவ்யா பேசிவிடக்கூடாது என்பதில் அவரது தாயார் கூட இருந்து கவனிப்பார் என்பது பாமக சாதி வெறியர்களது எதிர்பார்ப்பு.

மகன் மறைவு குறித்து ஆரம்பத்தில் திவ்யாவை அழுது கொண்டே திட்டிய இளவரசனது தந்தை தற்போது பாசம் கொண்டு பேசுகிறார். இப்போதும் திவ்யா தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் ஏற்றுக் கொள்வேன், அவளைப் படிக்க வைத்து மறுமணமும் செய்து வைப்பேன் என்று கூறுகிறார். எவ்வளவு துயரத்திலும் உழைக்கும் மக்களின் பண்பாடு எப்படி மேலானதாக இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்?

மறுபுறம் பாமக சாதிவெறியர்கள் ஒரு இளஞ்சோடியை பிரித்து கணவனை கொன்று அடையும் மகிழ்ச்சியின் வக்கிரத்தை இதோடு ஒப்பிட்டு பாருங்கள்!

பாமக சாதிவெறியர்களை ஒழிக்க வேண்டும் என்பதில் யாராவது மாறுபட முடியுமா?

இந்த நேரத்தில் வன்னிய இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் வெளிப்படையாக இந்த பாமக சாதிவெறியர்களை கண்டிக்க முன்வரவேண்டும். அது ஏதோ தலித் மக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நமது தமிழக மக்கள் அனைவருக்கும் செய்து கொள்ளும் உதவியாக இருக்கும். சாதி வேறுபாடு இன்றி வர்க்கமாக நாம் ஒன்றிணையும் போதுதான் நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட முடியும்.

பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!