ளவரசன் மரணம் குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையினை முதலில் படியுங்கள்!
__________________________

“தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி, அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

சீமான்தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது, தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியிலும் கூட காதல் இலக்கியங்கள் இடம் பெறுகின்றன, காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், அதற்கு முழு முதற் காரணம், திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும், தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம், அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?

தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
_________________________________

இனி நமது விமரிசனத்தினை பார்ப்போம்.

இளவரசன் மரணம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பு, பண்பாட்டிற்கு ஏற்பட்ட ஒரு இழிவு என்று ஆரம்பிக்கிறார் அண்ணன் சீமான். அதுவும் காதலையும் வீரத்தையும் போற்றும் தமிழ் தேசிய இனத்தின் இழப்பாம். சரி, காதலும், வீரமும் தமிழ் தேசிய இனத்திற்கு மட்டும் சொந்தமான மரபு என்று எந்த அடி முட்டாள் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை. உலகில் ஆர்டிக் முதல் அண்டார்டிக் வரை உள்ள வளர்ச்சியடைந்த, வளர்ச்சி அடையாத தேசிய இனங்கள் அனைத்தையும் கேட்டீர்கள் என்றால் இந்த காதல், வீரம் குறித்த மரபும், பெருமையும் காது கொள்ளாத அளவுக்கு கேட்கலாம். ஆனால் அந்த மரபு எங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று மல்லுக்கட்டும் முட்டாள்தனம் தமிழினவாதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

முதலாளித்துவ உற்பத்தி முறை அறிமுகமாகாத, வளர்ச்சியடைந்த அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகங்களில் மக்களின் உணர்ச்சிகள் இந்த இரண்டில்தான் இயங்குகிறது. இன்றைக்கு இருக்கும் பண உணர்ச்சி, சினிமா உணர்ச்சி, நுகர்வுக் கலாச்சார உணர்ச்சி, பங்குச் சந்தை உணர்ச்சி, செல்பேசி உணர்ச்சி, முகநூல் உணர்ச்சி இன்னபிற உணர்ச்சிகளுக்கெல்லாம் அங்கு வாய்ப்போ, இடமோ, அடிப்படையோ இல்லை. ஆகவே ஆதி காலம் தொட்டு இருந்து வரும் பாலியல் உறவில் காதல் என்ற பரிணாம வளர்ச்சியும், மாற்று இனக்குழுக்கள், அரசுகளை வென்று காட்டும் ‘வீரமும்’தான் அந்த சமூகங்களின் அடிப்படைகள். அதனாலேயே நிலவுடைமை காலங்களில் உள்ள இலக்கியங்கள் இந்த இரண்டை மட்டும் – காதல்,வீரத்தை – அதிகம் பேசுகின்றன.

மேலும் இந்தக் காதலும், வீரமும் கூட பெரும்பான்மை மக்களின் இயக்கம் சார்ந்து முன்வைக்கப்படவில்லை. ஆளும் வர்க்கம் மற்றும் அரசர்களின் பெருமையாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. நிலவுடைமை சமூகம் விதித்திருக்கும் அகமண முறைகளுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்கள் அதை மீறுவதற்கு உரிமை கொண்டவர்கள் இல்லை. அந்த ஏக்கத்தையும் இத்தகைய இலக்கியங்கள் கொஞ்சம் பேசுகின்றன. ஆனால் ஆண்டான்களையும், அரசர்களையும், ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்து போராடிய வர்க்கப் போராட்டம்தான் மனித குலத்தை அடுத்தடுத்த வளர்ச்சி கட்டங்களுக்கு எடுத்துச் சென்றன. ஒரு தேசிய இனம் பெருமை கொள்ள வேண்டுமென்றால் அத்தகைய போராட்டங்களைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் நிலவுடைமை சமூகங்களில் தேசிய இன உணர்வு என்பது இன்றைக்கு இருப்பது போன்று இல்லை. வளர்ச்சியடைந்த தேசிய இன உணர்வும், உணர்ச்சியும் முதலாளித்துவ சந்தையின் விரிவு காரணமாக மட்டுமே தோன்றுகின்றன. ஆக அந்தக் காலத்தில் இந்தக் காலத்து தமிழ் உணர்வு இருப்பதாக பீற்றுவதும், அதில் காதல், வீரம் கொப்பளிப்பதாக கதைப்பதும் முட்டாள்தனம் மட்டுமே.

மாறாக அந்தக் காலத்து தமிழகத்திலும், இந்தக்காலத்து தமிழகத்திலும் நீடித்து இருக்கும் ஒரு மரபு என்னவென்றால் அது பார்ப்பனிய மதமும், அதன் படைப்பான சாதியும்தான். ஒருவேளை தமிழினவாதிகள் பெருமை கொள்ள வேண்டுமென்றால் இதைத்தான் எடுக்க வேண்டும். அப்போது அவர்களது பெரிய பங்காளிகளாக இந்துமத வெறியர்களும் கூட வருவார்கள். நாமோ இந்த பார்ப்பனிய மதம், சமூகத்தை எதிர்த்து நின்ற மரபை பெருமையாகவும், வாரிசாகவும் கொள்வோம். அது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உண்டு.

இந்தப் பின்புலத்தில் தமிழினவாதிகள் இந்துமதவெறி பால்தாக்கரே, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்ததும், அய்யா நெடுமாறன் இந்துமத வெறியர் அர்ஜூன் சம்பத்தை மேடையேற்றுவதும் வேறு வேறு அல்ல.

திவ்யா, இளவரசன் இருவருக்கும் இயல்பாக ஏற்பட்ட காதலை அரசியலாக்கியதன் விளைவுதான் இரண்டு தற்கொலைகளுக்கும் காரணம் என்று கூறுகிறார் சீமான். அரசியல் என்றால் ஆனந்த விகடன் உருவாக்கியிருக்கும் புரிதலையே சீமான் கொண்டிருப்பது கூட பிரச்சினையில்லை. ஆனால் அப்படி ‘அரசியலாக்கியது’ யார் என்று கூற வேண்டுமல்லவா? இல்லையெனில் அரசியலாக்குதல் எனும் வார்த்தைதான் இளவரசன் மரணத்திற்கு காரணம் என்றாகிவிடும். இதற்கு குறிப்பான காரணம் யாருமில்லை, பொதுவில் சாதியத்தை அரசியலாக்கிவிடுவதுதான் காரணமென்றால் என்ன பொருள்?

ஈழப்பிரச்சினைக்கு மட்டும் சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு என்று குறிப்பாக சொல்லும் அரசியல் புரிதல் கொண்ட சீமானுக்கு இளவரசனின் தற்கொலைக்கு காரணமான அரசியல்வாதிகள் யார், அரசியல் கட்சிகள் எது என்று தெரியாதா? இப்படி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் சீமானின் அடிப்பொடிகள் இன்னும் தெளிவாகச் சொல்லக்கூடும். அதாவது திவ்யா, இளவரசன் காதலை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் செய்த கட்சிகளைத்தான் அண்ணன் கூறுகிறார், அதனால்தான் குறிப்பாக யாரையும் கூறவில்லை என்று எடுத்துக் கொடுக்கலாம். எனில் இந்தக் காதலை அண்ணன் சீமான் ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? நிச்சயமாக ஆதரிக்கிறார் என்று கூறுவார்கள் தம்பிமார்கள். அப்படியானால் திவ்யாவின் காதலை ஆதரித்து சீமான் முழங்குவது மட்டும் அரசியலாக்குதல் இல்லையா?

அல்லது இந்தக் காதல் அரசியலாக்கப்பட்டதால்தான் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று இப்போது வகுப்பெடுக்கும் நாம் தமிழர்கள் முன்பேயே இந்த அரசியலாக்கப்பட்டதை தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லவா? இல்லை, இந்தக் காதலர்களை யாரும் பேசாமல் இருந்திருந்தால் அவர்களே அவர்களது பிரச்சினையை தீர்த்திருப்பார்கள், ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும் சவுண்டு கொடுத்ததுதான் இந்த முடிவுக்கு காரணம், இது தெரிந்துதான் அண்ணன் ஆரம்பத்திலேயே டீசண்டாக சவுண்டு விடாமல் ஒதுங்கி இருந்தார் என்று கூட அடிப்பொடிகள் பொழிப்புரை சொல்லக்கூடும்.

அப்படி என்றால் தமிழ்நாட்டில் ஒரு தலித் இளைஞன் எந்த விதமான சமூக, அரசியல் குறுக்கீடும் இன்றி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடிக்க முடியுமா? இல்லை, யாரும் தலையிடாமல் அவர்களுக்குள்ளே காதலிக்கவும், திருமணம் செய்யவும் உரிமை இருக்கிறதா? இந்தப் பிரச்சினையை ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையிலிருந்து பார்த்தால் “அவர்களுக்கு ஆதரவாக” தலையிடுதல் வேண்டும் என்பது புரிய வரும். மாறாக ஆதிக்க சாதி உணர்வில் இருப்பவரை வைத்துத்தான் தமிழ் தேசம் கட்ட முடியும் என்றால் இப்படித்தான் அடிமுட்டாள்தனமாக பேச முடியும்.

தமிழர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் காதல் படங்கள் பெரும் வெற்றி பெற்றதை வைத்துப் பார்த்தால் இங்கே காதல் என்பது தமிழரின் வாழ்வியலில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்று கூறுகிறார் சீமான். தமிழர் இலக்கியம் குறித்து ஏற்கனவே பார்த்து விட்டோம். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுடைய கதையை மதுரை வீரன் போன்ற ஒரு சில நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், வழக்குகள் மூலம் அறிகிறோம். மற்றபடி சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சமூகத்திலேயே நடக்க முடியாத ஒன்றாக இருக்கும் போது இலக்கியத்திலாவது இருக்கட்டுமே என விரும்பவது தமிழினவாதிகளின் அசட்டுக் கனவில் மட்டுமே சாத்தியம். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சாதி மறுப்பு, தீண்டாமை மறுப்பு காதல்களையும் அதன் பிரச்சினைகளையும், சமூக பரிமாணங்களையும் ஒரு போதும் பேசியது கிடையாது. அப்படி ஒரு படத்தை உண்மையாக எடுப்பதற்கு கூட இங்கே துப்பு கிடையாது.

நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் ஜிகினாக் காதல்தான் தமிழ் சினிமாவில் கரை புரண்டு ஓடுகிறது. இதில் நடை, உடை, பாவனை, பாட்டு, பெற்றோர் சம்மதம், என்று சென்டிமென்டும், மார்க்கெட்டும் கலந்து கட்டிய வினோதமான பொருளாகத்தான் காதல் வருகிறதே அன்றி வேறல்ல. முக்கியமாக தமிழ் சமூகத்திலும் கூட ஒத்த சமூக அந்தஸ்து உடைய சாதிகளுக்கிடையே வேண்டுமானால் காதல் நடக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோடோ இல்லை குறிப்பிட்ட சாதியை விட சில படிகள் கீழே இருக்கும் சாதிகளோடோ திருமணமோ, காதலோ சாத்தியமே இல்லை. அப்படி மீறி நடந்தால் திவ்யா, இளவரசன் ஜோடி சந்தித்த எல்லா பிரச்சினைகளையும் மற்ற காதலர்கள் சந்திக்க வேண்டும். இன்றும் கூட அப்படி காதலித்து மணம் புரிந்து வாழ்பவர்கள் தமது சொந்த ஊருக்கு போகமுடியாமல் ஆண்டுக் கணக்கில் இருந்து வருகிறார்கள். பலர் ஜோடி ஜோடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனவே தமிழ்வாழ்வில் காதல் திருமணங்கள் சகஜமாக நடந்து வருகிறது என்றால் அது தமிழ் சமூகத்தையும் தமிழ் சினிமாவைப் போல கருதும் முட்டாள்களால் மட்டுமே சாத்தியம். திவ்யா, இளவரசனது காதலை அரசியலாக்கி விட்டார்கள் என்று குட்டிச்சுவரைப் பார்த்து புலம்பும் சீமான் உண்மையில் இந்தக் காதல் பிரச்சினையின் அரசியல் என்ன என்பதை கிஞ்சித்தும் அறிந்தவரில்லை. ஒரு வேளை அறிந்திருந்தாலும் அதை வெளியே சொன்னால் தமிழ் தேசியத்திற்கு பேதியாகிவிடும் என்ற பயம் காரணமாக அமுக்கப் பார்க்கிறார்.

சீமான்இந்தக் காதல் விவகாரம் உரிய முறையில் கையாளப்படவில்லை என்று சொல்லும் சீமான் யார் அப்படி தவறாக கையாண்டார்கள் என்று கூறவில்லை. சரி, மற்றவர்கள்தான் தப்புத் தப்பாக கையாண்டார்கள் என்றால் அண்ணன் முன்னமே சரியாக கையாள்வது எப்படி என்று ஒரு வகுப்பு எடுத்து எல்லோரையும் வந்து படிக்கச் சொல்லியிருக்கலாமே? சில காதல் திருமணங்கள் சாதிய பார்வையாலும், சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சினையாக்கப்படுகின்றன என்று கூறும் சீமான் ஏன் ஒரு மர்மக் கதை போல மறைக்க வேண்டும்.? யாராய்யா அந்த சாதி மாண்பை காப்பாற்றுவர்கள்? சொன்னால் உங்களை தலையை எடுத்து விடுவார்களா? இதுதான் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய சங்கர் சினிமா வரைக்கும் வியந்தோதப்படும் தமிழனது வீரமா? ஒரு இளவரசனது மரணத்திற்கு கூட வில்லன்கள் பெயரைக் கூற பயப்படும் நீங்களா இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களின் விடுதலையை வாங்கித் தருவீர்கள்? இதில் அடிக்கடி முஷ்டியை உயர்த்தியவாறு போஸ் வேறு? வெட்கமாயில்லையா சீமான் அவர்களே?

இளவரசனது தற்கொலை போன்ற காதல் பிரச்சினைகள் தமிழினமும், தமிழ்நாடும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்காக ஒன்று போட்டு போராட வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுவதாக கவலைப்படுகிறார் சீமான். ஒருவேளை இளவரசன் எனும் தலித் இளைஞர் திவ்யா எனும் வன்னியப் பெண்ணை காதலிக்காமல் தனது சாதிக்குள்ளேயே யாரையாவது திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் அவர் மட்டுமல்ல, தமிழினமும் நிம்மதியாக வாழ்ந்திருக்கும் என்பதாகவும் இதை நாம் புரிந்து கொள்ளலாம். வார்த்தைகளுக்கு இடையே உள்ள மவுனத்தின் அழகை புரிந்து கொள்வதுதான் கவிதை என்றால் தமிழினவாதிகளின் வார்த்தைகளுக்கிடையே உள்ள கோடிட்ட இடங்களை நிரப்பினால் அவர்களது சந்தர்ப்பவாத அழகு பளிச்சென்று தெரியும்.

அதாவது தலித்துக்கள் ஆதிக்க சாதியினரோடு காதல் கொண்டால் பிரச்சினை வருகிறது. அப்படி பிரச்சினை வந்தால் தமிழினம் இரண்டுபட்டு பிரிகிறது. இப்படி இரண்டு பட்டு நிற்கும் போது ஆதிக்க சாதியினரை பார்த்து கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பதற்கு கூட பயம். இந்நிலையில் என்ன செய்யலாம்? பேசாமல் தலித்துக்கள் யாரும் ஆதிக்க சாதியினரை காதலிக்காமல் இருங்கள், தமிழினம் ஒற்றுமையோடு இருப்பதற்கு இந்த தியாகத்தை செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்கலாமே சீமான் அவர்களே?

இப்படி தமிழனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அரசியலை தமிழக மக்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லையேல் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் சீமானது முயற்சி தோற்றுவிடுமாம். பிறகு தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு எல்லாம் கேள்விக்குறியாகிவிடும் என்கிறார் சீமான். சரி, தமிழனத்தின் ஒற்றுமைக்கே, உரிமைக்கே, விடுதலைக்கே உலை வைக்கும் அந்த சக்திகளை சீமான் ஏன் பெயரிட்டு அடையாளம் காட்டவில்லை?

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது யார்? ஏதாவது டிராகுலா பேயா, இல்லை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசா? அங்கே வாய் புடைக்க ராஜபக்சேவை அடையாளம் காட்டும் சீமான் இங்கே வாய் மௌனிக்க புலம்ப வேண்டிய அவசியம் என்ன? தமிழினத்திற்கு வேட்டு வைக்கும் சாதிய சக்திகளை அடையாளம் காட்டி தமிழக மக்கள் புறக்கணித்தால்தானே ஒற்றுமை வரும். பிறகு அது யார் என்று சொல்லாமல் போங்காட்டம் ஆடுவது ஏன்?

விசயம் எளிமையானது. இங்கே தமிழ் உணர்வு என்பது இல்லை, சாதிய உணர்வுதான் மக்களிடையே செல்வாக்கோடு உள்ளது என்பதை சீமான் ஏற்கிறார். எனவே குறிப்பிட்டு ஒரு சாதியின் சாதிவெறியை கண்டித்தால் நாம் பிழைப்பு நடத்தும் தமிழின அரசியலுக்கு ஆள் இருக்காது என்று அண்ணன் உறுதியாக நம்புகிறார். சாதிய சக்திகளை பொதுவாக பேசிவிட்டு அடையாளம் காட்டாமல் இருந்தால் தமிழ் உணர்வு தப்பிப் பிழைக்கும். சாதிய வெறியை இன்னது என்று குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டினால் தமிழ் உணர்வு உருகி ஓடிவிடும்.

திவ்யாவின் தந்தை தற்கொலைக்கோ, இல்லை இளவரசனது மரணத்திற்கோ காரணம் வன்னிய சாதிவெறிதான். இந்த வன்னிய சாதிய வெறியை உருவாக்கி உலவ விட்டு ஆட்டம் போடுவது வன்னியர் சங்கமும், பாமகவும்தான். அதிலும் ராமராஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில் என்று குறிப்பாக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஆக இளவரசனது மரணத்திற்கு நீதி வேண்டுமென்றால் இவர்களை குறிப்பாக கண்டிக்க வேண்டும். இந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று போராட வேண்டும். அதை கவனமாக தவிர்த்து விட்டு மக்களுக்கு அட்வைசு செய்வது என்பது சாதிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டும், அதை எதிர்க்க முடியாதபடி உள்ள கோழைத்தனத்தின் வெளிப்பாடும் ஆகும்.

ஆழம் பத்திரிகை பேட்டி ஒன்றில் பாமகதான் தமிழனது கட்சி என்று பாராட்டு பத்திரம் வாசித்த சீமான் திராவிடர் கட்சியெல்லாம் தமிழன் கட்சியில்லை என்று சாடுகிறார். ஆனால் பாமக எனும் தமிழனது கட்சியின் யோக்கியதை என்ன, வன்னிய சாதிவெறியை முன்வைத்து கட்சி ஆரம்பித்த நாள் முதல் அதன் செயல்பாடு என்ன என்பதை நாம் அறிவோம்.

சுருங்கச் சொன்னால் சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது. இப்படி ஆதிக்க சாதிகளுக்கு கட்டுப்பட்டு இவர்கள் உருவாக்கும் தமிழ் தேசியம்தான் தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் விடுதலையைத் தருமாம். அதை நாம் நம்ப வேண்டுமாம்.

ஒருவேளை சீமான் தலைமையில் இங்கும், ஈழத்திலும் தமிழர் நாடு உருவானால் எப்படி இருக்கும்? நிச்சயமாக அங்கே காதல் பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் இருக்காது. ஏனெனில் அங்கே யாரும் சாதி விட்டு சாதி காதலிப்பதற்கு அனுமதியே இருக்காது.

ஆம், நண்பர்களே! சீமான் பெருமையுடன் இலவசமாக அளிக்கும் தமிழ் தேசியம் என்பது ஆதிக்க சாதி கண்டிசன்ஸ் அப்ளைக்கு உட்பட்டது.