Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 717

தண்ணீர் – கேள்வி பதில் !

கேள்வி 1:
நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ?

கேள்வி 2:
தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ?

கேள்வி 3:
வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ?

– தளபதி பிரபு
_____________________________________________

அன்புள்ள தளபதி பிரபு,

மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

தண்ணீரை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்கள்சமீபத்தில் ஆவணப்படம் ஒன்றிற்காக பேட்டியளித்துள்ள பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் சேர்மன் பீட்டர் ப்ரெபெக், தண்ணீர் அடிப்படை மனித உரிமைகளின் கீழ் வராது என்றும், இது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டுமென்றும் பேசியுள்ளார். தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள் என்றும், மற்ற பண்டங்களுக்கு இருப்பதைப் போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

70-களின் மத்தியில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சந்தை மதிப்பாக மாற்ற முயற்சித்த நெஸ்லேவின் ‘பாரம்பரியம்’ பிரபலமானது. குழந்தைகளுக்கான தனது ஊட்டச்சத்து பானத்தின் சந்தையை விரிவுபடுத்துவதற்காக தாய்மார்கள் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்கச் செய்ய தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டது நெஸ்லே. இதற்காக பல்வேறு நாடுகளின் மகப்பேறு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் லாபி செய்து தனது ஊட்டச்சத்து பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு அரசின் செலவில் பிரச்சாரம் செய்ய வைத்தது. சுத்தமான நீர் கிடைக்காத ஏழை நாடுகளில், தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையற்ற நீரில் கரைத்த நெஸ்லேவின் ஊட்டச்சத்து பானம் கொடுக்கப்பட்டது பல குழந்தைகளின் இறப்புக்கு காரணமானது.

இப்போது, நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் ஆண்டுக்கு $6.9 பில்லியன் (சுமார் ரூ 38,000 கோடி) பாட்டில் நீர் விற்பனை செய்யும் அதன் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டவை என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லைதான்.

மூன்றாம் உலக நாடுகளில் குடிநீர் வினியோகத்தை மேற்கத்திய பன்னாட்டு தனியார் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் போக்கு எண்பதுகளிலேயே துவங்கி விட்டது. இந்த வகையில் தென்னாப்பிக்கா மற்றும் பல்வேறு தென்னமெரிக்க நாடுகள் ஏற்கனவே ‘சூடு கண்ட பூனைகளாக’ நம்முன் சிறந்த உதாரணமாக உள்ளன.

அர்ஜென்டினாவில் தனியார் மயம்
அர்ஜென்டினாவில் தண்ணீர் தனியார் மயம் : கூடுதல் தேர்வுகள்

1. 1990-களில் உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி, தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் கொச்சபாம்பா பகுதியின் நீர் வளம் முழுவதும் பெக்டெல் என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் பாதங்களில் ஒப்புவிக்கப்பட்டது. ‘தண்ணீர் சந்தையில்’ தனது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்ட பெக்டெல், அதைத் தொடர்ந்து குடிநீரின் விலையை அசாத்தியமான அளவுக்கு உயர்த்திக் கொண்டே போனது. வறண்ட வாய்க்குத் தண்ணீர் கூட கிடைக்காது என்கிற நிலைக்கு கொச்சபாம்பா மக்கள் தவிக்க விடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் ஆத்திரமுற்ற மக்கள் கொச்சபாம்பா தெருக்களில் போராட்டங்களில் இறங்கினர். தங்கள் உரிமைகளுக்காக போராடிய மக்களின் எழுச்சி நிலைத்து நின்றது – பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செமாப்பா என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் தண்ணீர் தனியார் மய முயற்சிகள் தொடர்ந்தன. பொலிவிய தலைநகரின் எல் அல்டோ பகுதியில் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் பன்னாட்டு நீர் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் எல் அல்டோ மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய பிறகு சூயஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

2. தென் ஆப்பிரிக்காவில் உலக வங்கி, ஐஎம்எப் மற்றும் மேற்கத்திய நாட்டு அரசுகளின் வழிகாட்டல்களை பின்பற்றி பன்னாட்டு நீர் நிறுவனங்களான சூயஸ், பைவாட்டர் போன்றவற்றின் வற்புறுத்தலுக்கு பணிந்து தண்ணீர் தனியார் மயம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தண்ணீர் வினியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பதற்கான நிதி ஏற்பாடுகளை அரசு உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பல உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன.

தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா : நிறவெறியை ஒழித்து விட்டு தண்ணீர் தனியார் மயத்தில் மக்களை அடிமைப்படுத்தும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்.

இதன் உடனடி விளைவாக ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டது. சூயஸ் நிறுவனத்தின் தனியார் சேவை அமல்படுத்தப்பட்ட 1994க்கும் 1996க்கும் இடையே கேப்டவுனிலுள்ள ஒரு நகரில் தண்ணீர் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டு மாதத்துக்கு R60 (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 350) என்று உயர்த்தப்பட்டது. கேப்டவுனின் பிற நகரங்களிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் சுரங்கங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உலக வங்கியின் ஆலோசனைப் படி தண்ணீருக்கான கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் கொள்கையும் அமல்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 1 கோடி ஏழை தென் ஆப்பிரிக்கர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலுவைகளை வசூலிக்கும் சட்ட நடைமுறைப் படி 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆதாரங்கள் மறுக்கப்பட்ட குடும்பங்கள் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஆதாரங்களிலிருந்தும் தொலை தூர கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் காரணமாக 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய காலரா கொள்ளை நோய் ஜூலு நேட்டாலில் பரவியது. 1.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூயஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ஜோகன்னஸ்பர்க்கின் அலெக்சாண்டிரா நகரீயத்தில் ஏற்பட்ட காலரா கொள்ளை நோய் பரவலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அரசின் தலையீடுதான் நோய் பரவலை தடுக்க முடிந்தது.

இந்தியாவிலும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் தங்களது உத்தியை நயவஞ்சகமான முறையில் செயல்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தேசிய நீர் கொள்கை 2012 தண்ணீர் சேவைகளில் அரசின் பங்கீடை குறைத்துக் கொண்டு பொதுத்துறை-தனியார் துறை கூட்டு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை முன் வைக்கிறது.

உள்ளூராட்சி நிர்வாக அலகுகளான நகராட்சி மாநகராட்சி மட்டங்களில் நீர் மேலாண்மைக்கான கூட்டுக்குழுக்கள் அல்லது ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தி, அவற்றுள் ஊடுருவி, “தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துவது பற்றிய வழிகாட்டுதல்களை” உள்ளூராட்சிகளுக்கு வழங்குகின்றன, பன்னாட்டு நிறுவனங்கள். இந்த வழிகாட்டுதல்களின் படி, நீர் வழங்கல் நடவடிக்கையில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

தண்ணீர் தனியார்மயம்
தண்ணீர் தனியார்மயம்

பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் இது போன்ற திட்டங்களுக்குத்தான் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளின் கடன் உதவி கொடுக்கப்படுகிறது. கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு கடன் வழங்கியது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கி; அதன் காண்டிராக்டுகளை எடுத்து லாபம் சம்பாதிப்பது பன்னாட்டு நிறுவனங்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் ஜப்பானிய பன்னாட்டு ஒத்துழைப்பு வங்கியிடம் கடன் வாங்கியே செயல்படுத்தப்படுகிறது.

காங்கிரசின் மன்மோகன் சிங்கும், ப சிதம்பரமும் நாட்டை அடகு வைப்பவர்கள், தேச பக்த பா.ஜ.க. ஆட்சி வந்தால் அன்னிய ஆதிக்கம் தகர்க்கப்பட்டு வரும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், தனது நாக்கின் ஒரு பிளவான குருமூர்த்தியை விட்டு சுதேசி பேசி வரும் ஆர்.எஸ்.எஸ் நச்சுப் பாம்புகள், இன்னொரு பிரிவான பாரதீய ஜனதாவை வைத்து தண்ணீர் தனியார்மயத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. கடந்த 5 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சி செய்து வரும் கருநாடகத்தின் பல்வேறு பகுதிளில் குடிநீர் வழங்கல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மைசூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் டாடாவின் ஜஸ்கோவிடம் (TATA owned JUSCO) ஒப்படைக்கப்பட்டுள்ளது. குல்பர்கா, ஹூப்ளி, பெல்காம் நகரங்கள் ஒவ்வொன்றிலும் 8 வார்டுகளில் குடிநீர் வழங்கல் வியோலியா என்கிற ப்ரெஞ்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமது நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு இதே திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்களை இந்த நகராட்சிகள் நிறைவேற்றியுள்ளன.

மங்களூர் மாநகராட்சியும், குண்டப்பூர், உடுப்பி, புத்தூர் நகராட்சிகளும் நீர் வினியோக கட்டமைப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான டெண்டர் நடைமுறையை ஆரம்பித்திருக்கின்றன. இவற்றைத் தவிர வட கர்நாடகாவில் உள்ள 16 நகராட்சிகள் நீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கின்றன.

மாநில அரசு தீட்டியுள்ள ‘கன்னட கங்கா’ என்கிற திட்டத்தின்படி சித்ரதுர்கா மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களின் குடிநீர் வழங்கல் நீண்ட கால் ஒப்பந்தங்களின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

வட கருநாடவின் இன்னும் 6 நகரங்களின் குடிநீர் திட்டங்களுக்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் பெறுவதற்கு கருநாடகா அரசு முயற்சித்து வருகிறது. இவை தவிர, ஏற்கனவே பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கான மீட்டர்கள் பொருத்தப்பட்டு நீர் நுகர்வின் அளவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுகர்வின் அடிப்படையில் விலை வைக்கும் முறையும் பெங்களூரின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதே போல், தில்லி மாநகராட்சியின் ‘ஜல் போர்ட்’, முன்னோட்டமாக மூன்று பகுதிகளில் குடிநீர் வழங்கலில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார் அரசு கூட்டுத் திட்டங்களின் அனுபவங்கள் கேவலமாக பல்லிளிக்கின்றன. “மகாராஷ்டிராவின் நாக்பூரில் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்து வந்த போது குழாய்கள் ஒழுகியதால் 45% நீர் வீணாவதாகவும், இதனை முறைப்படுத்த மாநகராட்சியிடம் போதுமான நிதி இல்லை என்றும் காரணம் காட்டி, தனியாரிடம் குடிநீர் வழங்கல் துறை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பும் 30% நீர் வீணடிக்கப்பட்டு வருவதற்கு என்ன காரணம் என்று யாரும் பேசுவதில்லை” என்று தில்லியில் கடந்த மார்ச் 17 அன்று நடந்த தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான கருத்தரங்கில் நாக்பூர் மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஜம்மு ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் அதே கருத்தரங்கில் பேசிய ஹிமான்ஷு தக்கார், “இந்தியாவில் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் ஏற்படுத்தியுள்ள ஒரே மாநிலமான மகாராஷ்டிராவில் அது பெரும் தோல்வியை சந்தித்துள்ளது” என்று தெரிவிதார். சுதந்திர இந்தியாவில் தண்ணீரில் நடந்த ஊழல்களிலேயே பெரிய ஊழல் மகாராஷ்டிராவின் அரசு – தனியார் கூட்டுத் திட்டத்தில் தான் நடந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ரூ 75 ஆயிரம் கோடி செலவானதாக அரசு கணக்குக் காட்டுகிறது. ஆனால் உண்மையில் ஒரு ஹெக்டேர் அளவுக்குக் கூட பாசன வசதி ஏதும் செய்து தரப்படவில்லை.

பச்சையாக “கைல காசு வாய்ல தோசை” என்பது போல் தண்ணீரை வியாபார சரக்காக்குவதில் உள்ள சிக்கல்களை ஆளும் கும்பல் மிக நன்றாக உணர்ந்துள்ளது. ஏற்கனவே உலக அளவிலான அனுபவங்களில் இருந்து படிப்பினைகளையும் கற்றுள்ளது. எனவே நீர்மேலாண்மை, நீர் ஒழுங்குமுறை ஆணையம், தனியார் – அரசு கூட்டுத் திட்டம் என்று பல்வேறு பசப்பல் வார்த்தைகளின் பின்னே ஒளிந்து கொண்டு தண்ணீர் தனியார்மயத்தை முன்னெடுத்து வருகிறது.

“அரசுத் துறை என்றாலே அதன் தரம் மோசமாக இருக்கும், நீர் வழங்கல் மட்டுமின்றி வேறு எந்தத் துறையானாலும் அரசால் உருப்படியான சேவை எதையும் அளிக்க முடியாது. தனியார் சேவை என்றால் அதில் ஒரு கார்ப்பரேட் ‘தரம்’ இருக்கும்” என்றும் தனியார்மயதாசர்கள் பிரச்சாரம் செய்கிறாரகள்.

இதன் முதல்கட்டமாக தண்ணீர் என்பது உரிமை என்பதாக இருக்கும் மக்களின் கருத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே, முதலில் தண்ணீருக்கான உள்கட்டமைப்பு வசதிகளை புறக்கணித்து செய்ற்கையான தண்ணீர் பஞசத்தை ஏற்படுத்துவது, தொடர்ந்து தண்ணீரை அரசே விற்கும் சரக்காக்குவது, பின்னர் தனியாரைக் கூட்டுச் சேர்ப்பது என்கிற பெயரில் ஒட்டகத்தை கூடாரத்துக்குள் நுழையவிடுவது என்கிற உத்தியைக் கையாள்கிறது ஆளும் வர்க்கம். இதற்காக மக்களை பல்வேறு வழிகளில் பயிற்றுவிக்கும் எட்டப்பன் வேலையை என்.ஜி.ஓக்களும் ஆளும் வர்க்க ஊடகங்களும் பரவலாக செய்து வருகின்றன.

மேலும் படிக்க
Nestle CEO says water isn’t a human right
The privitisation of water, Nestle denies that water is a fundamental human right
Privitisation of water in Bolivia
Karnataka shows way
Water privitisation is not for India
The struggle against water privitization in South Africa
Nestle Boycott
Open conference on water privitisation

மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !

1

மே தினத்தை ஒட்டி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் தொலைக்காட்சி நேர்முகம்.

பகுதி – 1

பகுதி – 2

நன்றி : கேப்டன் டிவி

முற்றுகையின் கீழ் !

0

முற்றுகையின் கீழ் – மக்மூத் தார்வீஷ்

மக்மூத் தார்வீஷ்
மக்மூத் தார்வீஷ்

ங்கு அரையிருள் கவிழ்ந்த
குன்றுகளின் சரிவில்
தோட்டத்தில் உடைந்து கிடக்கும்
நிழல்களை நெருங்கும்
காலத்தின் தடத்தில்
கைதிகள் செய்வதையே செய்கிறோம்:
வேலை தொலைத்தவர்கள் செய்வதையே செய்கிறோம்:
நாங்கள் நம்பிக்கையை பேணுகிறோம்.

***

விடியலுக்கு தயாராகும் ஒரு நாட்டில்
எங்கள் அறிவுத்திறம் குன்றி போகிறது
நாங்கள் வெற்றியை அணுக்கமாக
உணரும் இந்த பொழுதில் :
ஷெல்லடிகளால் ஒளிரும் எங்கள் இரவு இரவாக இல்லை
இந்த நிலவறையின் இருட்டில்
எங்கள் எதிரிகள் விழிப்பாக இருந்து
எங்களுக்கான ஒளியை ஏற்றுகிறார்கள்

***

இங்கு ‘நான்’ என்பது இல்லை
இங்கு ஆதாம் தனது களிமண்ணின்
துகளை அறிகிறார்.

****

சாவின் விளிம்பில் அவர் சொல்கிறார் :
இழப்பதற்கு எந்த தடமும் என்னிடம் இல்லை.
ஏதுமற்ற நான்
என் விடுதலைக்கு அருகாமையில் உள்ளேன்
என்னுடைய சொந்த கரங்களில்தான்
என்னுடைய எதிர்காலம் உள்ளது.
விரைவில் என் வாழ்வை
துருவிக் கண்டுணர்வேன்.
சுதந்திரமாகவும், பெற்றோரின்றியும்
நான் பிறப்பெடுப்பேன்.
எனது பெயராக
நீலவான எழுத்துக்களை தெரிவு செய்வேன்.

****

வாசலில் நிற்போரே, உள்ளே வாருங்கள்,
எங்களுடன் அரேபிய காபி அருந்துங்கள்
எங்களைப் போன்ற
மனிதர்களே நீங்களும் என்பதை உணர்வீர்கள்.
வீடுகளின் வாயில்களில் நிற்போரே
நமது காலைப் பொழுதுகளிலிருந்து வெளியேறுங்கள்,
உங்களைப் போன்ற மனிதர்கள் தான்
நாங்கள் என்று
மீளுறுதி செய்ய விரும்புகிறோம்.

****

விமானங்கள் மறையும் போது
அந்த தூய வெள்ளை புறாக்கள்
சொர்க்கத்தின் கன்னங்களை கழுவுகின்றன.
கூடவே தளர்த்தப்பட்ட சிறகுகளில்
கதிரொளியை திரும்ப எடுத்து கொண்டும்,
தூய வானவெளியுடன் கொண்டாட்டத்தை
தமதாக்கிக் கொண்டும்
அந்த தூய வெள்ளை புறாக்கள்
மேலே மேலே பறக்கின்றன.
அதோ! அந்த வானம் மட்டுமே மெய்ம்மை என்பது போல.
(இரு எறிகுண்டுகள் மத்தியில்
கடந்து சென்றவர் உரைத்தார், என்னிடம்)

***

மக்மூத் தார்வீஷ்

போர்வீரர்களின் பின்னால் நிற்கும் சைப்ரஸ் மரங்கள்
வானம் தகர்ந்து வீழாமல் தாங்கும் பள்ளிவாசல் தூபிகள்.
உருக்கு வேலிக்குப் பின்னால் –
ஒரு பீரங்கியின் காவல் கண்களுக்குக் கீழ்  –
வீரர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள்.
தேவாலயத்தின் ஞாயிறு கூடுகைக்குப் பின்
விரியும் ஒரு தெருவில் இலையுதிர் பருவநாள்
தனது பொன்மய அலைதலை முடிக்கிறது.

***

(ஒரு கொலையாளியிடம்) உன்னால் பாதிக்கப்பட்டவரின்
முகத்தை நீ கவனித்தாய் எனில்,
அது உன் எண்ணத்தை ஊடுருவியிருந்தால்,
வாயு கிடங்கில் இறந்த உனது தாய்
உன் நினைவில் வந்திருப்பார்.
இந்த துப்பாக்கியின் தேவையிலிருந்து
நீ விடுவிக்கப்பட்டிருப்பாய்.
மேலும், உனது மனம் அறிந்திருக்கும் : இதுவல்ல
ஒருவர் தன அடையாளத்தை தேடிக் கொள்ளும் முறை என்று.

***

புயலுக்கு மத்தியில் சாய்வு ஏணியில் காத்திருக்கும்
இந்த முற்றுகைநிலை ஒரு உக்கிரமான காத்திருப்பு.
மிகக் கீழ்நிலையில் மண்டியாக, தனிமையில்,
நாங்கள் தனிமையில்…
வானவில்லின் காட்சி உலா
மட்டும் இல்லை என்றால்.

***

இந்த அகல்பரப்புக்கு அப்பால் எங்களுக்கு
சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அருமையான சகோதரர்கள். அவர்கள்
எங்களை நேசிக்கிறார்கள். எங்களை நினைத்து
கண்ணீர் உகுக்கிறார்கள்.
”அதோ! இந்த முற்றுகை உறுதிசெய்யப்பட்டால்
….” அவர்கள் தங்கள் வாக்கியத்தை முடிக்கவில்லை:
”எங்களை கைவிட்டு விடாதீர்கள், விட்டுச் செல்லாதீர்”

***

எங்கள் இழப்புகள்: தினமும்
இரண்டிலிருந்து எட்டு தியாகிகள்.
பத்து பேர் காயமடைகிறார்கள்.
மேலும் இருபது வீடுகள்…
மேலும் ஐம்பது தேவதாரு மரங்கள்
இதனுடன் சேர்ந்து இந்த கவிதையும்
நாடகமும், முடிக்கப்படாத ஓவியமும்
சந்திக்கும் கட்டமைப்பு பிழை,.

***

ஒரு பெண் மேகத்திடம் உரைத்தாள் :
என் காதலனை மூடிக்கொள்
என் துணி அவன் ரத்தத்தால்
நனைந்துள்ளது.

***

நீ மழையாக இல்லையெனில், அன்பானவனே
மரமாக இரு
மனநிறைவூட்டும் வளப்பமான மரமாக
நீ மரமாக இல்லையெனில், அன்பானவனே
கல்லாக இரு
நீர்நயம் செறிந்த கல்லாக
நீ கல்லாக இல்லையெனில், அன்பானவனே
நிலவாக இரு
நேசித்த பெண்ணின் கனவில் வரும் நிலவாக
(மகனின் இறுதிச் சடங்கில், ஒரு தாய்)

***

ஓ! காவலர்களே! நீங்கள் களைப்படவில்லையா?
எங்கள் உப்பில் விழும் ஒளிக்காகவும்
எங்கள் புண்களிலிருந்து எழும்பும்
வெண்சுடருக்காகவும் காத்திருக்கும்
காவலர்களே! நீங்கள் களைப்படவில்லையா ?

***

இந்த காலங்களின் பளுவை
சற்று குறைக்க
இந்த இடத்தின் தூய்மைக்கேட்டை
சுத்தப்படுத்த
இந்த முழுமையான, முடிவற்ற நீலப்பெருவெளியின்
சிறுதிறம் போதுமானது

***

அந்த ஆன்மா அதன் உச்சியிலிருந்து
கீழிறங்க விரும்பட்டும்
என் அருகே கரம்கோர்த்து
அதன் பட்டுப் பாதங்களில்
நடக்கட்டும்
இரு நெடுநாளைய நண்பர்கள்
புராதன உணவையும், பழங்குவளையில்
மதுவையும் பகிர்வது போல
நாங்கள் இணைந்து சாலையில்
நடப்பதை யாசிக்கிறேன்.
அதன் பிறகு எங்கள் நாட்கள்
வேறுவேறாக திசைவழி கொள்ளும்
நான் இயற்கையை பின்னும் கடந்து
ஒரு உயரமான மலையில் அமர முடிவெடுப்பேன்.

***

என் உடைந்த கட்டுமானத்தில் விழும் நிழல்
பச்சையாக வளர்கிறது
என் ஆட்டின் தோல் மீது ஓநாய்
துயில் கொள்கிறது
தேவதையை போன்று, என்னைப் போன்று
அவனும் கனவு காண்கிறான்.
அந்த வாழ்க்கை இங்கு இருக்கிறது…
அங்கில்லை.

***

முற்றுகை நிலையில், காலம்
நித்தியத்துவத்தில் ஊன்றி நிற்கும் வெளி ஆகிறது
முற்றுகை நிலையில், வெளி நேற்றமையும்,
நாளையையும் தவறவிட்ட காலமாகிறது.

***

புதிய நாள் ஒன்றில் நான் வாழப்புகும் ஒவ்வொரு
கணத்திலும் ஒரு தியாகி என்னை வட்டமிடுகிறார்.
என்னிடம் கேள்விகள் தொடுக்கிறார் :
நீ எங்கே சென்றாய்? நீ எனக்களித்த ஒவ்வொரு
வார்த்தையையும் திரும்ப அகராதிக்கு
எடுத்துச் செல்
பின்னர் தூங்குவோரை பின்னொலியின்
சத்தத்திலிருந்து விடுவி.

***

அந்த தியாகவீரர் எனக்கு அறிவூட்டுகிறார்:
இந்த அகல்பரப்புக்கு அப்பால்
இறவா கன்னிகைகளை தேடவில்லை
இப்புவியின் அத்தி மற்றும் தேவதாரு
மரங்கள் மத்தியில் நான் வாழ ஆசைபடுகின்றேன்.
ஆனால், என்னால் அதனை அடைய முடியாது,
எனினும், எனது கடைசி உடமையாக இருக்கும்
ரத்தம் தோய்ந்த இந்த நீலவான உடலை
வைத்து குறி பார்க்கிறேன்.

***

தியாகவீரர் என்னை எச்சரித்தார்: அவர்கள் கதறலை
நம்பாதே
என் புகைப்படத்தை நோக்கியவாறு…
அழும் போது என் தந்தையை நம்பு என்றார்.
நாம் எப்படி நம் கடமைக்கூறை இழந்துள்ளோம்,
என் மகனே, என்னை எப்படி முந்தினாய்.
நான் முதலில். நானே முதலில்.

***

தியாக வீரர் என்னை சூழ்ந்து கொண்டார்:
இந்த இடம் மற்றும் செப்பமற்ற
மரச்சாமான்கள் போன்ற அனைத்தும்
நான் அமைத்து கொண்டது.
என் படுக்கையில் உள்ள வனப்பான
அரேபிய மான் நான் போட்டுக் கொண்டது
என் விரலில் இருக்கும் வளர்பிறை
என் துயரை ஆற்றுபடுத்துகிறது.

***

தீங்கற்ற அடிமைத்தனத்தை முழுமனதோடு
ஏற்க செய்யும் வரை
இந்த முற்றுகை நீடிக்கும்.

***

எதிர்ப்பு என்பது இதயத்தின் நலனை
ஒருவர் உறுதி செய்து கொள்வது
மேலும் விதைகள் மற்றும் தீவிரமான
வியாதியின் ஆரோக்கியம் சம்பந்தமானது:
அது நம்பிக்கையின் வியாதி.

***

மக்மூத் தார்வீஷ்

விடியல் பொழுதின் மிச்சத்தில்
என் புறம் நோக்கி நடக்கிறேன்.
இரவின் மிச்சத்தில்
என் காலடி ஒலியை கேட்கிறேன்.

***

ஈர்ப்போடு இந்த ஒளியின் போதையை,
பட்டாம்பூச்சியின் சுடரை, இந்த சுரங்கத்தின்
இருளை என்னுடன் பகிரும் இவரை
வாழ்த்துகிறேன்.

***

இரு வெளிகளை கடக்கும்
இந்த காரிருளின் இரவில் என்னோடு
மதுவை பகிரும் இவரை வாழ்த்துகிறேன்.
என்னுடைய ஆவியையும் வாழ்த்துகிறேன்.

***

என் நண்பர்கள் எப்போதும் எனக்கு
கடைசி விருந்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்த கருவாலி மரங்களின் நிழல்கள் மத்தியில்
என்னுடைய அமைதியான கல்லறை
பளிங்கிலான காலத்தின் கல்லறை வாசகம்
அவர்களை எப்போதும் ஈமச்சடங்கில்
எதிர்பார்ப்பேன்…
இறந்து போனது யார்.. யார்?

***

எழுதுதல் ஒரு நாய்க்குட்டி
இன்மையை கடித்தல்…
ஒருதுளி ரத்தம் சிந்தாமல் புண்களை எழுதுவது.

***

நமது காபி குடுவைகள். பறவைகள்,
பச்சை மரங்கள்.
இந்த நீலநிழலில், சூரியன் ஒரு மான் குட்டியை போன்று
ஒரு சுவரிலிருந்து இன்னொன்றிற்கு தாவுகிறது.
மேகங்களில் இருக்கும் நீர்
அதன் எல்லையில்லாத வடிவத்தை பெற்றிருக்கிறது.
தொங்கும் இதர நினைவுகள்
இந்த காலை ஆற்றலும், வனப்புமானது
என்று உணர்த்துகிறது.
மேலும் நாம் அமரத்துவத்தின் விருந்தாளிகள்
என்றும் உணர்த்துகிறது.

மக்மூத் தர்விஷ்
தமிழில் – சம்புகன்.

ஆசிரியர் குறிப்பு :

1941-ல் அல்பிர்வே என்னும் பாலஸ்தீன கிராமம் ஒன்றில் பிறந்த மக்மூத் தார்வீஷ் தனது ஏழு வயதிலே கிராம மக்களுடன் இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனத்தை விட்டே துரத்தப்பட்டார். அந்த கிராமத்தை தரைமட்டமாக்கியது ராணுவம். பின்னர் அங்கு யூத குடியேற்றம் நிகழ்ந்தது. தர்விஷ் குடும்பம் சிறிது காலத்திற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியது.

பாலஸ்தீனம்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம்

1960 வாக்கிலேயே அவர் தீவிரமாக அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டார். பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் 1961-லிருந்து இணைந்து பணியாற்றினார். 1970-க்கு பின்னர் சொந்த நாட்டில் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகியதால் மாஸ்கோ, பாரீஸ் என்று பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்தார். யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (PLO) இணைந்தார். பாலஸ்தீனத்தில், சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால அரசு நிர்வாகத்திற்கு வழிகோலும் ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிராகரித்து, PLO வின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் உலகப்பார்வையை கொண்டிருந்தார், தர்விஷ்.

அவர் சென்ற நாடுகளில் எல்லாம் தனது நாட்டையும், மக்களையும், அவர்களின் விடுதலை கனவையும் சுமந்தார். அவருடைய ‘Passers by in Passing Words’ என்னும் கவிதை அரேபிய மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டு மக்கள் கவிஞர் ஆனார். மக்கள் மருத்துவர், மக்கள் தலைவர் போன்று தர்விஷ் ஒரு மக்கள் கவிஞர். அரசியல் என்றால் கோஷம்; கோஷம் இலக்கியத்துக்கு தோஷம் என்பது நமது இலக்கிய நாட்டாமைகள் எழுதி வைத்திருக்கும் இலக்கிய சாசனம். சமூக உணர்வின் ஆழம் சிறந்த படைப்புகளை பிரசவிக்கும் என்பதற்கு மக்மூத் தார்வீஷின் கவிதைகள் எடுத்துக்காட்டு.

இனவெறிக்கு எதிராக இனவாதத்தை அல்ல; சர்வதேசியத்தை முன்வைத்தார். இந்த கவிதை ‘முற்றுகையின் கீழ்’ பாலஸ்தீன நகரம் ரமல்லா முற்றுகைக்குள்ளான போது எழுதப்பட்டது. ரமல்லா அவர் பிறந்த கிராமத்தை உள்ளடக்கிய மலை அடிவாரம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் அங்கு செயல்பட்டது. முஸ்லிம்களின் சம எண்ணிக்கையில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். மேலும், இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.

காணாமல் போகும் இந்திய விவசாயிகள் !

12
விவசாயி
படம் நன்றி : தி ஹிந்து

1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. கடந்த இருபத்திரண்டு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, விவசாயம் சாராத துறைகள் உள்ளிட்டு, பொதுவாகவே புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், விவசாயக் கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

1981-லிருந்து 1991 வரையிலான கால கட்டத்தில் விவசாயிகளின் (பயிர்த் தொழிலில் நேரடியாக ஈடுபடுவோர்) எண்ணிக்கை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆக, இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் பயிர் தொழிலில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசு வேறு ஒரு மோசடியான புள்ளிவிவரக் கணக்கை முன்வைக்கிறது. அதாவது, விவசாயத்தில் நேரடியான பயிர் தொழிலில் இல்லாமல், அதைச் சார்ந்த கூலி வேலைகள், கால் நடைகள் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோரையும் சேர்த்து மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் விவசாயத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இவ்வாறு சொல்வதன் மூலம், கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள 2,70,940 விவசாயிகள் தற்கொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.

ஒரு ‘விவசாயி தற்கொலை’ என்பதை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்? குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. இந்த வகையான மோசடிகளின் மூலம் 2006 – 2010 காலகட்டத்தில் 7,500 விவசாய தற்கொலைகள் பதிவான சட்டீஸ்கர் மாநிலம் கடந்தாண்டு விவசாய தற்கொலைகள் நிகழாத மாநிலமாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.

அரசு தரும் மோசடியான கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – இதனை மொத்த மக்கள் தொகையில் உள்ள விவசாயிகளின் சதவீதம் எட்டுக்கும் குறைவானது என்கிற திட்ட கமிஷன் அறிக்கையோடு பொருத்திப் பார்த்தால் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருக்கிறது. விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.

கிராமப் புற இந்தியாஇன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத்திற்கான பாசன வசதி, மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முற்றாக புறக்கணிக்கும் அரசு, சேவைத் துறையில் அந்நிய முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்காக நகரங்களை அழகு படுத்துவது நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளிலேயே அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது – தற்போது அது சுமார் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் விவசாயத் துறையின் வளர்ச்சியை அரசு புறக்கணித்து வரும் நிலையில், இந்தப் புறக்கணிப்புக்கு ஈடு கொடுத்து உயிர் பிழைத்துக் கிடக்கும் எஞ்சிய விவசாயிகளை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது. ஒப்பந்த விவசாயம், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிப்பது, பன்னாட்டு விதை மற்றும் உர நிறுவனங்களின் ஏகபோகத்தினுள் விவசாயிகளை சிக்க வைப்பது, வால்மார்ட் போன்ற பகாசூர நிறுவனங்களை சில்லறை வர்த்தகத்தில் நுழைய அனுமதித்து விவசாயிகளை காவு கொடுப்பது என்று தொடர்ச்சியான தாக்குல்தலைத் தொடுத்து வருகிறது.

உலகமய தாசர்களுக்கோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறது. நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள்.

இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில்துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது அச்சங்கம்.

சேவைத் துறையில் பெரும் பங்காற்றும் ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவின் தள்ளாட்டத்திற்கு தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் அத்துக் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை மீளவும் துவங்குவது சாத்தியமற்றதாகி விட்ட நிலையில், நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் ஆளும் கும்பலான எட்டப்பர்களை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

– தமிழரசன்

தகவல் மூலம்

சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !

1
பணத்தை பறி கொடுத்த மக்கள்
பணத்தை பறி கொடுத்த மக்கள்

கொல்கத்தாவை மையமாகக் கொண்டு மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த சாரதா குரூப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி திரட்டி பின் அதை மறைய வைத்து திவால் ஆகியிருக்கின்றன. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல்வாதிகள், ஊடக தொழிலதிபர்கள், அதிகார இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தொடர்பு கொண்டிருந்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

ஏப்ரல் 16-ம் தேதி சாரதா குழுமத்தின் ஊடக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் மூன்று பேர் தாம் திடீரென்று வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் புகார் செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூ 40,000 மற்றும் ரூ 1 லட்சம் பணம் முதலீடு செய்த சேமிப்பாளர்கள் இரண்டு பேர் தமது பணத்தை இழந்ததாக புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சாரதா குழுமத்தின் சேர்மன் சுதிப்தா சென்னும் அவரது உதவியாளர் தேப்ஜனி முகர்ஜியும் நிறுவனத்தின் மற்றொரு மேலாளர் அர்விந்த் சிங் சௌகானும் காஷ்மீரில் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏமாற்றுதலும் நேர்மையின்மையும், நம்பிக்கை மோசடி செய்தல், மிரட்டுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ம் தேதி சாரதா குழுமத்தில் ரூ 30,000 சேமித்திருந்த ஒரு 50 வயது பெண் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 27-ம் தேதி 35 வயதான தபன் பிஸ்வாஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ரூ 4 லட்சம் முதலீடு செய்திருந்தார்.

ஏப்ரல் 23-ம் தேதி இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் சாரதா நிறுவனம் தனது அனைத்து திட்டங்களையும் இழுத்து மூடி வைப்புதாரர்களுக்கு பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துக் கிளம்பும் இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு முறையும் மோசடி செய்த தனி நபர்களின் சூழ்ச்சி, தந்திரம் அல்லது ஏமாற்றப்பட்டவர்களின் மந்தைப் புத்தி, ஏமாளித் தனம், அல்லது மோசடியை தடுக்கும் பொறுப்பில் உள்ள அரசு அமைப்புகளின் கவனமின்மை என்று புதுப்புது காரணங்களை கண்டு பிடித்து சொல்கிறார்கள் நிபுணர்கள். அரசு ஒழுங்குமுறை சட்டங்களை வலுவாக்கி இனிமேல் இப்படி நடக்க விடாமல் தடுத்து விடுவதாக சொல்கிறது.

ஆனால் சாதாரண மக்களின் சேமிப்புகளை ஆட்டையைப் போடும் நிதித் துறை மோசடிகள் மீண்டும் மீண்டும் தலையெடுக்கின்றன.

சாரதா குழுமத்தை உருவாக்கியவரும் சேர்மனாக பொறுப்பு வகித்தவருமான சுதிப்தா சென், ஏப்ரல் 6-ம் தேதியிட்டு ஒரு கடிதத்தை தனது வாக்குமூலமாக சி.பி.ஐ.ன் கொல்கத்தா அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அதன் ஊடாக சாரதா ரியல்ட்டி எப்படி உருவாகி வளர்ந்தது, பணம் எப்படி திரட்டப்பட்டது, எப்படி செலவானது என்பதை பார்க்கலாம்.

சுதிப்தா சென்
சுதிப்தா சென்

சுதிப்தா சென் கொல்கத்தாவில் வாழ்ந்து மறைந்த துறவி ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா அம்மாவின் கோட்பாடுகளை நம்புபவராம். ஏழைகளுக்கு உதவுவதும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதும்தான் அவரது நோக்கமாம்.

அந்த நோக்கத்திற்காக அவர் சாரதா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினாராம். அதனைத் தொடர்ந்து பல்வேறு தேவைகளுக்காக சுமார் 160 நிறுவனங்களை தொடங்கினாராம். அனைத்து நிறுவனங்களும் சாரதா என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டனவாம்.

சிறுவயதிலிருந்தே மிகவும் உயர்ந்த இலக்குகளை எட்ட முயற்சிப்பாராம். அவரது இலக்குகளை அடைவதற்கு வானம்தான் எல்லை என்று நம்பினாராம். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ 33 கோடி செலவாகும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருந்தாராம். இப்படியாக ஆன்மீகமும், மோசடியும் கலந்த கலவையாக அவர் ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டார்.

சாரதா ரியால்ட்டி தொடக்கம்

ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட், சுற்றுலா போக்குவரத்து, சொகுசு சுற்றுலா தளங்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்களை செய்து கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரது டிரைவர்கள் ரத்தன், திப்பு ஆகியோர் ஷிப் நாராயண் தாஸ் என்பவரை அழைத்து வந்தார்களாம். இந்த ஷிப் நாராயண் தாஸ் பொலேரோ காரில் வந்திருக்கிறார். பாசுதேவ் மண்டல் என்பவர் நடத்தும் பிரயாக் குரூப்பின் சந்தைப்படுத்தல் அதிகாரியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

நெட்வொர்க் மார்கெட்டிங் அல்லது மல்டிலெவல் மார்கெட்டிங் (வலைப்பின்னல் திட்டம்) மூலமாக சுதிப்தா சென்னின் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி தருவதாகவும், திரட்டும் பணத்தில் 30% கமிஷனாக கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

சுதிப்தா சென் கொல்கத்தாவிலும் அசாமிலும் பிற வட இந்திய நகரங்களிலும் அவர்கள் செயல்படுவதற்கு அலுவலக வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களது செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதோடு, பிஷ்ணுபூரில் உள்ள சுதிப்தா சென்னின் சாரதா கார்டன் என்ற ரியல்எஸ்டேட் திட்டத்திற்கு போய் வரவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு சமூக பாதுகாப்பையும், சட்ட பாதுகாப்பையும் சென் வழங்க வேண்டும்.

2008-ம் ஆண்டு ஜூலை மாதம் சாரதா ரியால்டி என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஷிப்நாராயண் தாஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும் பங்குதாரராகவும் சேர்ந்தார். சுபீர் தாஸ் மார்கெட்டிங் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷிப்நாராயண் தாஸூம் அவரது நண்பர்களும் சென்னின் கொல்கத்தா, குவகாத்தி மற்றும் டெல்லி அலுவலகங்களை போய்ப் பார்த்து திருப்தி செய்து கொண்டார்களாம். ஜூலை 4-ம் தேதி பிஷ்ணுபூர் சாரதா கார்டனில் திட்டம் செவ்வனே தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டத்தைப் பற்றிய விளக்க அறிக்கை, விளம்பரத் துண்டறிக்கை அடித்து சுதிப்தா சென் பெயரை சேர்மனாக போட்டு சந்தைப்படுத்த ஆரம்பித்தார்கள். தங்களிடம் முதலீடு செய்யப்படும் பணத்தை ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, ஹோட்டல்கள் துறைகளில் பயன்படுத்தி சேமிப்பாளர்களுக்கு பெருமளவு லாபம் தரப் போவதாக விளக்கியிருந்தார்கள்.

15 முதல் 120 மாதங்கள் வரையிலான திட்டங்களில் ரூ 10,000 முதல் ரூ 1 லட்சம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 12 முதல் 24 சதவீதம் வட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். வைப்புத் தொகை முதிர்ச்சி அடைந்த பிறகு சேமிப்பாளர் விரும்பினால் பணத்துக்குப் பதிலாக நிலம் அல்லது ்பிளாட் வாங்கிக் கொள்ளலாம்.

இணைய மென்பொருள் மூலம் மக்களிடமிருந்து வாங்கும் பணத்துக்கு ரெசீது தயாரிக்கும் ஏற்பாட்டை செய்து கொண்டார்கள். முதலீட்டாளர்கள் பற்றிய தரவுகள் இணையம் மூலமாக அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள கணினியில் சேமிக்கப்பட்டு வந்திருக்கின்றன. கிழக்கு, வடகிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 4 மாதங்களில் கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான பேர் பங்குபெற்ற மாநாட்டை நடத்தி சாரதா குழுமத்துக்கு பெரும் அளவிலான பணத்தை திரட்டித் தருவதாக வாக்களித்தார்கள்.

திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு 16-17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை ஏற்படுத்தினார்கள். சுதீப் கோஷ் என்பவர் சாரதா ரியால்டி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டார்.

மக்களிடமிருந்து பணம் திரட்டும் திட்டம்

பணத்தை போட்ட மக்கள்
பணத்தை போட்ட மக்கள்

பணத்தை முதலீடு செய்பவர்கள் புதிய வைப்பாளர்களை கொண்டு வந்தால் புதிய வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் அறிமுகப் படுத்திய முதலீட்டாளர்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரின் வைப்புத் தொகைக்கும் இவர்களுக்கும் கமிஷன் வரும். மல்டிலெவல் மார்கெட்டிங் என்ற இந்த உத்தி, முதலில் பணம் போட்டவர்களுக்கு வட்டி கொடுக்க பிறகு முதலீடு செய்பவர்களின் பணத்தை பயன்படுத்துவது என்ற உத்தி, இவற்றின் மூலம் இந்த திட்டங்களை பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற முதியோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள், உழைக்கும் மக்கள் என்று பல தரப்பினரும் தமது சேமிப்புகளை அதிக லாபம் கிடைக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். பல ஆயிரம் கோடி அளவிலான நிதி குவிய ஆரம்பித்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு வைப்புத் தொகை, முதிர்ச்சியடையும் நாள், முதிர்ச்சித் தொகை இவற்றை குறிப்பிட்டு சுதிப்தா சென்னின் பெயரை முத்திரையாக பதித்து கொடுக்கும் நிதி சான்றிதழ் கொடுத்தார்கள். மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், ஒரிசா, ஜார்கண்ட், மாநிலங்களில் 4 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சாரதா ரியால்ட்டியிலிருந்து ஆதாயம் ஈட்டிய நபர்கள்

இந்த நடைமுறையில் பல முகவர்கள், முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, சாரதா நிறுவனத்திற்கு பணம் கட்டாமலேயே ரசீதை மட்டும் மென்பொருளிலிருந்து எடுத்து கொடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் சுதிப்தா சென்.

எந்தவிதமான மேற்பார்வையும் ஒழுங்குமுறை விதிகளும் இல்லாத நிறுவனத்தில் பெருமளவிலான பணம் புரளும் போது அவற்றிலிருந்து தமக்கு வேண்டியதை சுருட்டிக்கொள்ள பல்வேறு வகையினர் உருவாகிறார்கள். சாரதா குழுமத்திலிருந்து மக்கள் பணத்தை ஆட்டையை போட்டவர்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு தரப்பும் எத்தனை கோடி ரூபாய் எடுத்துக் கொண்டார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டே வந்தால் ஒழுகிப் போன பணத்தின் அளவை தெரிந்து கொள்ளலாம்.

  1. பிரதிதின் என்ற வங்காள மொழி பத்திரிகையைச் சேர்ந்த குணாள் கோஷ் (இப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்) என்பவர் சாரதா குழுமத்தை தாக்கி எழுத ஆரம்பித்தாராம். அவர், அப்போதைய மேற்கு வங்க மாநில நிதி அமைச்சர் அஸிம் தாஸ்குப்தாவைச் சந்தித்து சாரதா குழுமத்துக்கு எதிராக புகார் தெரிவித்தாராம். இத்தகைய ஊடகத் தாக்குதல்களை சமாளிக்க தானும் ஊடகத் துறையில் நுழைய வேண்டும் என்று சென் முடிவு செய்தாராம்.ஜெனிடிஸ் குரூப் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சாந்தனு கோஷ் என்பவரிடமிருந்து சேனல்-10 என்ற வங்காள மொழி தொலைக்காட்சி சேனலை ரூ 24 கோடி விலை கொடுத்து வாங்கினாராம். அந்த சேனலுக்கு ரூ 6 கோடி கடன்கள் இருந்திருக்கின்றன.இதற்கிடையில் குணாள் கோஷூம் சிறின்ஜய் போஸ் (இருவரும் இப்போது திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர்கள்) என்பவரும் பிரதிதின் நாளிதழுக்கு மாதம் ரூ 60 லட்சம் தர வேண்டும் என்றும் குணாள் கோஷை தொலைக்காட்சி சேனலின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்து மாதம் ரூ 15 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்களாம். நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை சேனலின் பிராண்ட் தூதுவராக கொண்டு வந்து அவருக்கு மாதம் ரூ 20 லட்சம் கொடுக்க வைத்தார்களாம்.இப்படி ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டால் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து சென்னின் தொழில்களை பாதுகாப்பதாக சொன்னார்களாம். மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொன்னார்களாம். அடுத்த 2 ஆண்டுகளில் சென் பிரதிதின் பத்திரிகைக்கு ரூ 20 கோடி வரை கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 44 கோடி)சேனல் 10ஐ நடத்துவதற்கு மாதம் ரூ 2 கோடி, குணாள் கோஷூக்கு ஒரு புதிய கார், அவரது செலவுகளுக்கு மாதா மாதம் ரூ 1.5 லட்சம் என்று செலவானதாம். சேனலின் பெயரை நிலைநாட்டுவதற்கு ரூ 50 கோடி செலவழித்ததாக கூறுகிறார் சென். (இதுவரை மொத்தம் ரூ 94 கோடி)ஆனால், குணாள் கோஷூம் சில முரடர்களும் சென்னின் அலுவலகத்துக்கு ஒரு நாள் வந்து ‘சென் ரூ 55 லட்சத்துக்கு சேனலை அவர்களுக்கு விற்று விட்டதாக’ ஆவணங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களாம். கூடவே, காலோம் என்ற உருது செய்தித் தாளை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்ததாகவும் ஆவணம் தயாரித்தார்களாம்.
  2. அடுத்ததாக, சாந்தனு கோஷூம் (சேனல் 10 விற்றவர்) இந்திரஜித் சந்திரா என்பவரும் வந்து அவர்களுக்கு சொந்தமான ஒரு மோட்டர் பைக் தொழிற்சாலையிலிருந்து மாதம் ரூ 55,000 கோடி வருமானம் ஈட்டலாம் என்றும் அந்த நிறுவனத்துக்கு இருக்கும் ரூ 200 கோடி வங்கிக் கடனை ரூ 144 கோடிக்கு செட்டில்மென்ட் வாங்கி 3-5 ஆண்டுகளில் கட்டுவதாக ஏற்பாடு செய்வதாகவும் கூறி சென்னிடம் ரூ 22 கோடி தரும்படி கேட்டிருக்கிறார்கள். ரூ 2.6 கோடி ரூபாய் கொடுத்த பிறகு அதிலிருந்து பின்வாங்க விரும்பிய சென்னுக்கு மோட்டர்பைக் நிறுவனத்தின் 75% பங்குகளை கொடுத்து அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், ரூ 5 கோடி தர வேண்டும் என்றும் இந்திரஜித் சந்திராவை தலைமை செயல்பாட்டு அலுவலராக நியமித்து மாதம் ரூ 6 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டார்களாம். சாந்தனு கோஷூக்கு ரூ 5 கோடியும், வங்கிகளுக்கு ரூ 29 கோடியும் கொடுத்திருக்கிறார் சென். (இதுவரை மொத்தம் ரூ 128 கோடி)பின்னர் குளோபல் ஆட்டோமொபைல்ஸ் என்ற மோட்டர் பைக் நிறுவனத்தை ஆய்வு செய்த குழு அதன் மதிப்பு ரூ 30 கோடி கூட இருக்காது என்று தெரிவித்ததாம். இதற்கிடையில் அந்த நிறுவனத்தை நடத்துவதற்காக சென் ரூ 20 கோடி செலவழித்திருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 148 கோடி)170 கோடி பைக்குகளை உற்பத்தி செய்ததாக கணக்கு காட்டி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கலால் வரித் துறை ரூ 55 கோடி வரி கட்டுமாறு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. சாந்தனு கோஷ் இந்த வகை வங்கிக் கடனாக ரூ 186 கோடி ரூபாயும், நிறுவன பங்குகளை அடமானம் வைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கடனாக ரூ 25 கோடியும் சுருட்டியிருந்தாராம். அதற்காக பல வங்கி மேலாளர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்தாராம்.
  3. திருமதி மனோரஞ்சனா சின்ஹ் என்பவர் பாசிடிவ் குரூப்ஸ் நிறுவனத்தை சென்னுக்கு விற்பதற்காக தொடர்பு கொண்டாராம். அவரை சென்னையில் உள்ள வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு அழைத்துப் போனாராம். நளினி சிதம்பரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிப்பதற்கு குவகாத்தியில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள உதவுமாறும் அவரது நிறுவனத்துக்கு ரூ 42 கோடி கடன் வழங்குமாறும் சென்னிடம் கேட்டாராம். தனது கன்சல்டன்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ 1 கோடி என்று அவரே நிர்ணயித்துக் கொண்டாராம். அந்த வகையில் ரூ 1 கோடிக்கு அதிகமான தொகை நளினி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்டதாம். (இதுவரை மொத்தம் ரூ 149 கோடி).அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் ஆதரவு இருந்தால் மத்திய அரசுடனான சிக்கல்களை எளிதாக தீர்த்துக் கொள்ளலாம் என்று மனோரஞ்சனா சின்ஹ் சொன்னாராம்.மனோரஞ்சனா சின்ஹ்க்கு சொந்தமான ஜி.என்.என். இந்தியா என்ற நிறுவனத்திற்கு சென் ரூ 25 கோடி கொடுத்தாராம். மனோரஞ்சனா சின்ஹாவின் ஹோட்டல் செலவுகளுக்காக ரூ 3 கோடி வரை செலவழித்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 177 கோடி)மனோரஞ்சனா சின்ஹின் முன்னாள் கணவர் மதாங் சின்ஹ்க்கு பல்வேறு கணக்குகளில் ரூ 28 கோடி கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 205 கோடி)
  4. ஹேமந்தா பிஸ்வாஸ் ஷர்மா என்பவர் பல்வேறு செலவுகளுக்காக ரூ 3 கோடி ரூபாய் எடுத்துக் கொண்டிருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 208 கோடி)
  5. அசாம் சட்டசபை உறுப்பினரும் அனுபூதி பப்ளிகேஷன்ஸ் உரிமையாளருமான அஞ்சன் தத்தாவுக்கு ரூ 6 கோடி கொடுத்து அவரது அச்சகத்தையும் செய்தித் தாளையும் சென் வாங்கியிருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 214 கோடி)
  6. 2010ம் ஆண்டு சாரதா ரியால்ட்டியின் நிதித் திட்டங்கள் பற்றி விளக்கம் கேட்டு இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் செபியிடமிருந்து கடிதம் வந்தவுடன் சென் மிகவும் பயந்து விட்டாராம். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் செயலர் தேபபிரதா சர்க்கார் என்ற நீத்து அவரை சந்தித்து, செபி விஷயத்தை தான் சமாளித்து விடுவதாகச் சொன்னாராம். செபியின் சேர்மன் யு கே சின்ஹாவிடம் அவருக்கு நெருக்கம் உள்ளதாகவும் அவரது கூட்டாளி சஜ்ஜன் அகர்வால் மற்றும் மகன் சந்தீப் அகர்வால் இருவரும் அப்போதைய நிதி அமைச்சர், (இன்றைய ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் சொன்னாராம். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் கொடுப்பதற்கு பணம் வேண்டும்.2010ல் ரூ 5 கோடி, அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ 80 லட்சம் என்று மூன்று ஆண்டுகளில் ரூ 40 கோடி அவர்கள் வாங்கிக் கொண்டார்களாம். (இதுவரை மொத்தம் ரூ 254 கோடி)பணம் கொடுப்பதை நிறுத்தினால் ஈஸ்ட் பெங்கால் கிளப் துணையுடன் சென்னுக்கு நல்லதொரு பாடம் கற்பிப்பதாக நீத்து மிரட்டினாராம். நீத்து இடது சாரி கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் தொடர்புடையவராம். ஈஸ்ட் பெங்கால் கிளப் ஸ்பான்சர்ஷிப்புக்கும் புதிய கேலரி கட்டவும் சென் ரூ 5 கோடி கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 259 கோடி)
  7. DY365 என்ற தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் சஞ்சீப் அகர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மிரட்ட ஆரம்பித்தாராம். அதை சமாளிக்க சேனல் DY365க்கு விளம்பரக் கட்டணமாக ரூ 27 லட்சம் கொடுத்தாராம். ஜார்கண்டிலுள்ள அவரது புராஜக்டில் ரூ 50 கோடி முதலீடு செய்ய சஞ்சீப் அகர்வால் கேட்டாராம். சென் தர மறுத்ததும் தவறான செய்திகளை வெளியிட்டு சென்னுக்கு எதிரான பிரச்சாரத்தை தனது தொலைக்காட்சி சேனலில் அவிழ்த்து விட்டாராம்.
  8. CNIBMல் வேலை செய்யும் சுமன் கல்யாண் சக்ரவர்த்தி என்பவர் டில்லியில் சேனல் ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர் பெயரில் ரூ 50 லட்சமும் இன்னொருவர் பெயரில் ரூ 25 லட்சமும் வாங்கிக் கொண்டாராம்.

இது போன்று அடிதடி மிரட்டல்கள் முதல் அரசு அதிகார மிரட்டல்கள் வரை சமாளிப்பதற்காக சுமார் ரூ 270 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் சென்.

இனிமேல் என்ன நடக்கும்?

மக்களிடம் திரட்டிய பணத்திற்கு ஈடாக கைவசம் இருக்கும் சொத்து விபரங்களையும் சென் குறிப்பிடுகிறார்.

குவஹாத்தியில் ரூ 5 கோடி மதிப்புள்ள ஆறு மாடி கட்டிடம். காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூரில் ரூ 6.75 கோடி மதிப்புள்ள நிலம், ரூ 10 கோடி மதிப்பிலான பசாங்க் பிஸ்கட் தொழிற்சாலை மற்றும் துப்ரி மார்கெட்டிலுள்ள கட்டிடம், ஜார்கண்டில் பொக்காரோ அருகில் 47 பிகா நிலம், ஒரிசா பாலாசோரில் நிலம் இவை சாரதா குழுமத்துக்கு சொந்தமாக, பல்வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சென் குறிப்பிடுகிறார். இவற்றின் மதிப்பு சுமார் ரூ 30 கோடி.

நிறுவனத்தை நடத்தும் போது ஏற்கனவே ரூ 2,000 கோடிக்கு கமிஷன், போனஸ், மார்கெட்டிங் அலவன்ஸ் என்று பணம் வழங்கியிருக்கிறாராம் சென். இந்த தொகை திரட்டிய மொத்த பணத்தில் 30% என்று வைத்துக் கொண்டால் மட்டும் மொத்தம் சுமார் ரூ 6,000 கோடி திரட்டியிருக்கிறது சாரதா ரியால்ட்டி.

சாரதா நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ 500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். அந்த நிதியை திரட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் 10% சிறப்பு வரி விதித்திருக்கிறார்.

பெரும்பான்மையான மக்களுக்கு பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

போராடும் மக்கள்
பணத்தை மீட்கக் கோரி போராடும் மக்கள்

சுதந்திரச் சந்தை, நிதிச் சந்தையின் அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் மக்களை ஏமாற்றும் இத்தகைய திட்டங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அதுவும் 1990களுக்குப் பிறகு தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனியார் நிறுவனங்களிடம் பெருமளவு கட்டணம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒரு சராசரி உழைக்கும் வர்க்க அல்லது நடுத்தர வர்க்க குடும்பம் அன்றாட உணவு, வீட்டு தேவைகள், போக்குவரத்து, பொருட்கள் வாங்குதல், வீட்டு வாடகை இவற்றுக்காக சம்பாதிக்க வேண்டும்; கூடவே யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்கு கொடுக்க பணம் சேர்க்க வேண்டும்; எதிர்காலத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கல்லூரியில் சேர்க்க தேவைப்படும் கட்டணத்தை சிறிது சிறிதாக சேர்த்து வைக்க வேண்டும்; உழைக்கும் வயது போய் முதுமை வந்த பிறகு தேவையான பணத்தையும் சேர்த்து வைக்க வேண்டும்; குடியிருக்க வீடு வேண்டுமானாலும் பணம் சேமிக்க வேண்டும்.

ஆனால் சேமிக்கும் பணத்தின் எதிர்கால மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. ரூ 10,000க்கு இன்று வாங்க முடிகிற அளவு பொருட்களையும் சேவைகளையும் 1 ஆண்டுக்குப் பிறகு வாங்குவதற்கு ரூ 11,000 தேவைப்படலாம். (10% பணவீக்கம் என்று சொல்லப்படும் விலைவாசி உயர்வு). சேமிக்கும் பணத்தை அதன் வாங்கும் மதிப்பு குறையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிப் போகிறது.

இந்த இலக்கை நோக்கித்தான் மக்கள் ஓடுகிறார்கள். அதிகரித்துக் கொண்டே வரும் சேமிப்புத் தேவைகளையும் (கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் தனியார் மயம்), குறைந்து கொண்டே வரும் சேமிக்கும் வாய்ப்புகளையும் (சேமநல நிதித் திட்டம் தனியார் மயம், ஓய்வூதியத் திட்டம் ரத்து) எதிர் கொள்ளும் மக்களின் தேடலை பயன்படுத்திக் கொண்டு மோசடி நிதி நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றன.

உழைக்கும் மக்கள் வேலை செய்யும் போது, கூலி பெறும் போது, பொருட்களை வாங்கும் போது, சேமிக்கும் போது என்று ஒவ்வொரு கட்டத்திலும் சுரண்டப்படுவதுதான் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடிப்படை. இந்த அமைப்பை தூக்கி எறிந்து அனைவருக்கும் சமூகக் கல்வி, சமூக மருத்துவம், சமூக பராமரிப்பு என்ற சோசலிசத்தை உருவாக்குவதுதான் இது போன்ற மோசடி திட்டங்களை ஒழிப்பதற்கான ஒரே வழி.

– அப்துல்

___________

மேலும் படிக்க
Sudipta Letter
Promoter at large, no trace of depositors money on Saradha
Saradha Group crisit reaches CMs doorstep

குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் ! நாடகமாடும் ஜெயா அரசு !

35

மிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார்.

இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும்.

“தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு சாதி பெண்களை மயக்கி காதலித்து திருமணம் செய்து விடுகிறார்கள்” என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊர் ஊராக போய் நடத்தி வருகின்றார் ராமதாஸ்.

2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழா மாநாட்டில் “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” என்று காடுவெட்டி குரு பேசினார்.

அந்த மாநாட்டைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தருமபுரியில் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் இளவரசன்-திவ்யா காதல் பிரச்சனையில் தலையிட்டு 300 தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளை அடித்து உடைத்து நாச வேலை செய்தனர். தொடர்ந்து, பல ஊர்களில் காதலித்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கொலை, இளம் பெண்கள் கொலை என்று வன்முறை நிகழ்வுகளுக்கு வித்திட்டனர் பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும்.

வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டு, ஆதரித்து பேசிய வன்னியர் சங்கத்தின் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் உரிய சட்டப் பிரிவுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஜெயா அரசு.

சாதி வெறி கூட்டணிதனது ‘கலாச்சாரக் காவலன்’ வேடத்தை அணிந்து கொண்டு ராமதாஸ், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் பயணம் செய்து அந்தந்த பகுதியில் உள்ள ஆதிக்க சாதி அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டம் நடத்தினார். ‘வீட்டுப் பெண்களை மயக்குகிறார்கள்; பெண்ணை திருமணம் செய்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள்’ என்ற பிரச்சாரம் ஒரு சராசரி நடுத்த வர்க்கமாயும் ஆதிக்க சாதியுமாய் இருப்பவர்களை இழுத்தது.

இதை அடிப்படையாக வைத்து சாதி சங்கங்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து நடத்தி உள்ளூர் தாதாக்களாக விளங்கும் பல்வேறு ஆதிக்க சாதி சங்க நபர்களை ஒருங்கிணைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் ஒரு பலமான சக்தியாக வளர்ந்து விடலாம் என்று திட்டமிடுகிறார் ராமதாஸ்.

மக்களிடையே சாதியின் பெயரால் பகைமையை வளர்த்து குளிர் காய நினைக்கும் வன்னியர் சங்கத்தை தடை செய்து ராமதாசையும், அவரது கும்பலையும் வன் கொடுமை சட்டத்தின் கீழும் குண்டர்களும் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல், ஓரிரு மாவட்டங்களில் ராமதாஸ் நுழையத் தடை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு மூலம் நாடகமாடியது ஜெயலலிதா அரசு. தேவைப்படும் போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து சுதந்திரமாக நடமாடி விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார் ராமதாஸ்.

பெரும்பான்மை வன்னியர்களிடையே அவரது அரசியலுக்கு ஆதரவு குறைந்து விட்ட நிலையில், வன்முறையை தூண்டி விடுவது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது பகைமையும், வன்மத்தையும் வளர்ப்பது என்ற அரசியலை தொடர முடிவு செய்து ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா என்று மாநாடு ஒன்றை நடத்தினார்கள் வன்னியர் சங்கத்தினர்.

pmk-crowd‘ஒரு கோடி வன்னியர் குடும்பங்கள் கூடும் மாநாடு’, ‘நாங்க வாளை உறையிலிருந்து வெளியில் எடுத்தா ரத்தம் பார்க்காம உள்ளே போகாது’ என்றெல்லாம் முட்டாள்தனமான அதே நேரம் வெறித்தனமான கோஷங்களுடன், ஆங்காங்கே கட்சி பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வளர்ந்திருக்கும் அரசியல் ரவுடிகள் திரட்டி வந்த ஆட்களை வைத்து மாநாடு நடத்தினர். போக வர வாகன வசதி; போகும் போதும், வரும் போதும், மாநாட்டின் போதும் குடிப்பதற்கு டாஸ்மாக் சரக்கு; பிரியாணி; மாமல்லபுரத்தில் குத்தாட்டம்; போன்ற கவர்ச்சிகளுடன் சில பல ஆயிரம் பா.ம.க.வினர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

மாமல்லபுரம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதிலிருந்தே அந்த மாநாட்டின் வெறி மற்றும் ‘வீரத்’ தன்மையை புரிந்து கொள்ளலாம். அந்த உதிரிகள்தான் போன வழியெல்லாம் அராஜகம் செய்து குடித்து கும்மாளமிட்டிருக்கின்றனர்; பெண்களை கேவலமாக பேசியிருக்கின்றனர்; வீடுகளை அடித்து உடைத்திருக்கின்றனர். இவர்களால் பாமகவிற்கு ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட லாயக்கில்லை.

“மாநாட்டுக்கு வரீங்க, ஆனா தேர்தல்ல ஓட்டு போட மாட்டேங்கறீங்க” என்று மேடையில் தலைவர்கள் புலம்புமளவுக்குத்தான் அந்த கூட்டம் இருந்தது. கூடிய நபர்களில் ஆளுக்கு 10 ஓட்டை வாங்கிக் கொடுத்தால் சில தொகுதிகளில் டெபாசிட்டாவது வாங்க முடியும். ஆனால், சென்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் வாங்குவதே முடியாது என்ற நிலையில்தான் இவர்களது கட்சி செல்வாக்கு இருக்கிறது.

மத்திய அரசில் அமைச்சர் பதவிகள் வகித்து அடித்த கொள்ளைப் பணத்தில் தொலைக்காட்சி, நாளிதழ் என்று தி.மு.க., அ.தி.மு.க. வணிக சாம்ராஜ்யங்களைப் போல தாமும் கட்டியமைக்க முயற்சித்தும் செல்ப் எடுக்கவில்லை.

இந்த சாதி வெறிக் கும்பலை கைது செய்து, வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டிய தமிழக அரசோ சட்ட வாதம் பேசி நாடகமாடுகிறது. ‘பிளெக்ஸ் பேனரில் வீரப்பன் படத்தை போட்டு விட்டார்கள்’, ’10 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை 11.30 வரை நீட்டித்தார்கள்’, ‘குடித்து விட்டு மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தினார்கள்’, ‘அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்’ என்று உப்புச் சப்பில்லாத பிரிவுகளில் வழக்குகளை தொடுக்கிறது ஜெயா அரசு.

வன்னியர் சங்கம்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கொலைவெறியைத் தூண்டினார்கள் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வகையில் வன்முறை பிரச்சாரம் செய்தார்கள் என்று குண்டர்கள் சட்டத்தின் கீழும் ராமதாசையும், காடுவெட்டி குருவையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய ஜெயலலிதா, “நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்’ என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.

தி.மு.க.வின் தலைவரோ கள்ள மௌனம் சாதிக்கிறார்.

இதற்கிடையே ராமதாஸ், ஜி கே மணி, காடுவெட்டி குரு கைதைத் தொடர்ந்து பா.ம.க. ரவுடிக் கும்பல் வட மாவட்டங்கள் எங்கும் பேருந்துகளை கொளுத்துவது, கல் எறிவது என்று நாச வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் இரண்டு பிரதான ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுமே ஓரிரு சீட்டுகளை கொடுத்து பா.ம.க.வை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் சாத்தியத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல், ராமதாசின் நச்சு அரசியலுக்கு பால் வார்க்கின்றனர். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளால் சாதி வேறுபாடுகளை ஒழிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

உழைக்கும் வன்னிய மக்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களின் ஆதரவுடன் ராமதாஸ், குரு மீது வன்கொடுமை சட்டம், குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும், வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் உடனே தடை செய்ய வேண்டும் என்றும் நாம் போராட வேண்டும்.

சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக !

4

சூரியநெல்லிப் பெண்17 ஆண்டுகள் ஓடி விட்டன. கிறிஸ்தவ விசுவாசிகளான அவளது பெற்றோர்கள் இப்போதெல்லாம் தேவாலயத்திற்கு செல்வதில்லை. குடும்பத்திற்குள் கூடி இறைவனைத் தினந்தோறும் வேண்டிக் கொள்கிறார்கள். வெளியே துணையாக இருப்பதாய் அவர்கள் நம்புவது அந்தக் கடவுளைத்தான். ஆனால் அவனது ஆலயத்திற்குள் செல்ல அவர்களால் முடியாது. 33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது.

தினந்தோறும் காலையில் பேருந்தில் அலுவலகம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புகிறாள். அலுவலகத்தில் வேலை செய்யும் 13 பேரில் பெரும்பாலானோர் அவளது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களது உறவினர்கள். எனவே தங்களது வெறுப்பை, புறக்கணிப்பை தினமும் அவள் மீது அவர்கள் உமிழ்கின்றனர். பேருந்தில் சென்றால் பயணிகள் அவளைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். தெரியாதவர்களை அழைத்து அவர்களிடமும் சொல்கிறார்கள் – “அவள்தான் அந்த சூரியநெல்லிப் பெண்.”

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த அவளது அப்பா அஞ்சல் துறையில் ஒரு அலுவலர், அம்மா தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இளைய மகள்தான் அப்பெண். இளமையில் குடல் சுருக்க நோயால் அவதிப்பட்ட அவளுக்கு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. பள்ளிக்கு செல்ல தினமும் 3 கிமீ தூரம் போக வேண்டியிருந்ததால் அவளுக்கு மாத்திரம் உதவிக்கு ஆள் வைத்தனர் பெற்றோர். 8-ம் வகுப்புக்கு மேல் அங்கு படிக்க வசதியில்லாத காரணத்தால் கோட்டயத்தில் விடுதியில் சேர்க்கப்பட்டாள். அந்த ஆண்டு தனிப்பயிற்சி ஆசிரியையிடம் காட்டுவதற்காக தனது புகைப்படமொன்றை எடுத்துச் செல்கிறாள் சூரியநெல்லிப் பெண்.

பேருந்தில் தவறி விழுந்த அப்புகைப்படத்தை கண்டெடுக்கிறான் நடத்துனரான அவளது நண்பன். கேட்டதற்கு தர மறுக்கிறான். மலைப்பகுதி கிராமப்புறத்தை சேர்ந்த விபரமறியாத பெண் என்பதால் மிரட்டத் துவங்குகிறான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவளது புகைப்படத்துடன் நிர்வாண படமொன்றை இணைத்து நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி விடுவதாக மிரட்டுகிறான். இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கூட அறிந்திராத அப்பெண் பரிதவிக்கிறாள். பெற்றோரிடம் சொல்லவும் அவளுக்கு பயம். தனது ஒழுக்கத்தைத்தான் கேள்வி கேட்பார்கள் என்பதால் யாரிடமும் அவள் உதவி கேட்கவில்லை. விடுதிக்கு போன பிறகும் விடாது அவளைத் துரத்தும் அவன் அடுத்த ஆண்டு தன் வழிக்குக் கொண்டு வருகிறான்.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உறவினர் ஒருவர் அன்று மாலையே அவளது பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். சந்தேகமடைந்த பெற்றோர் விடுதிக்கு ஃபோன் போடவே பெண் காணாமல் போனது தெரிய வருகின்றது. காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். 45 நாட்கள் தொடர்ந்து அப்பெண்ணை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது நடந்தது16 ஜனவரி 1996 இல். ஒரு நாள் அப்பெண் தந்தையின் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறாள். அவளது கோலத்தை பார்க்க சகிக்காத அவளது தந்தை கழிவறைக்குள் சென்று விம்மி அழுகிறார்.

மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவளது உடலிலும், பிறப்புறுப்பிலும் கடுமையான காயத்துடன் சீழ் பிடித்து இருந்ததுடன், நோய்த்தொற்றும் கடுமையாக இருந்திருக்கிறது. அப்போதுதான் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை அப்பெண் சொல்ல ஆரம்பிக்கிறாள். அவளைக் கூட்டிச் சென்ற நடத்துநர் முதலில் அவளை வல்லுறவு செய்கிறான். பின்னர் அவனது கூட்டாளிகள் ஏற்கெனவே தீட்டியிருந்த திட்டத்தின்படி சூரியநெல்லிப் பெண்ணை உஷா தேவி என்ற பெண்ணும், தருமராசன் என்னும் வழக்கறிஞரும் கூட்டிச் செல்கிறார்கள். அந்த வழக்கறிஞர் முதலில் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். பிறகு ஒருவர் கைமாற்றி ஒருவராக 41 நபர்கள் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள். நடக்கக் கூட முடியாத நிலைமையில் திரும்பி வந்த அப்பெண்ணின் வயது அப்போது 16 ஆண்டு 3 மாதம்.

இரண்டு வாரம் கழித்து தினசரி பத்திரிகையொன்றைப் படிக்கும்போது அதில் தன்னை இடுக்கி அரசு விருந்தினர் இல்லத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினவனது புகைப்படத்தைக் காண்கிறாள். அது பிஜே குரியன், அன்றைய மத்திய அமைச்சர். தற்போதைய ராஜ்யசபாவின் துணைத்தலைவர். அதாவது பெண்கள் மீதான வன்கொடுமைக்கெதிரான சட்ட திருத்தங்களை முன்வைக்கும் வர்மா கமிசனது அறிக்கையை ராஜ்யசபா விவாதிக்கையில் அவையை நடத்தப் போகின்ற சபாநாயகர். உடல் முழுதும் ரோமம் இருக்கும் நபர் என அடையாளம் காட்டி குரியன் மீதும் புகார் தருகிறார் சூரியநெல்லிப் பெண்.

அந்த ஆண்டு கேரள சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒன்றாக வந்தது. சூரியநெல்லிப் பெண் தான் தேர்தல் பிரச்சாரத்தின் மையமான பேசு பொருள். தேர்தலில் வென்ற இடது முன்னணி தலைமையிலான அரசு இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. ஆனால்1999 இல் விசாரணை துவங்கியபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து குரியனது பெயர் நீக்கப்பட்டிருந்தது.

2000 ஆவது ஆண்டில் அப்பெண்ணுக்கு விற்பனை வரித்துறையில் கடைநிலை ஊழியர் பதவி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு வந்த தீர்ப்பில் 35 பேர் 4 ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை பெற்றனர். 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 2 பேர் தலைமறைவாயினர். தருமராசனுக்கு மட்டும் ஆயுள்தண்டனை. 2005 இல் குற்றவாளிகளின் மேல்முறையீட்டின் பேரில் 35 பேரையும் விடுவித்த கேரள உயர்நீதி மன்றம், தருமராசனது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. தருமராசனின் தண்டனைக்கான குற்றத்தை பாலியல் வல்லுறவு என்பதிலிருந்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் என மாற்றியது கேரள உயர்நீதி மன்றம்.

நீதிபதி பாசந்த்
பாலியல் வன்முறையை விபச்சாரமாக மாற்றிய நீதிபதி பாசந்த்

குற்றம் சாட்டும் பெண் பாலியல் உறவுக்கான வயதை எட்டி விட்டதால் தனது சம்மதமில்லாமல்தான் பாலுறவு நடந்தது என்பதை நிரூபிக்க அவர் தரப்பு தவறி விட்டதாகவும் அத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய பெண் கடைசியில் நீதித்துறையின் பார்வையில் ஒரு விபச்சாரியாக மாற்றப்படுவது நடந்தேறியது.

‘வலுக்கட்டாயப்படுத்தினால் சத்தமோ அல்லது அழுகையோ வந்திருக்க வேண்டும். இப்படி ஏதேனும் நடந்ததாக அப்பெண் நிரூபிக்கவில்லை, எனவே அவளது சம்மதத்துடன்தான் உறவு நிகழ்ந்திருக்கிறது’ என்று தீர்ப்பெழுதினர் அப்துல் கபூர், பசந்த் என்ற இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள். உச்சநீதி மன்றத்தில் பெண் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கில் குரியனையும் சேர்த்துக் கொள்ள போலீசு தவறி விட்டதாக அப்பெண் பீர்மேடு மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்கிறாள். குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் குரியனை நேரில் விசாரணைக்கு அழைக்கிறது. கேரள உயர்நீதி மன்றத்தை அணுகிய குரியனை ஏற்கெனவே அனைவரும் விடுவிக்கப்பட்ட வழக்கில் புதிதாக யாரையும் சேர்க்கத் தேவையில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுவித்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் குரியன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து விட்டது. 2007 இல் இத்தீர்ப்பு வெளியானது.

முதலில் அப்பெண் மீது அனுதாபம் கொண்டிருந்த மலையாள மனோரமா போன்ற பத்திரிகைகள் பின்னாட்களில் பாசந்தின் சொற்களை வழிமொழிந்தன. அப்பெண் காதலனுடன் ஓடிப்போய் சீரழிந்தவளாக சித்தரிக்கப்படத் துவங்கினாள்.

பல முனைகளில் அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தது. அவளது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதற்காக வழக்கை வாபஸ் பெறச் சொல்லி சிலர் ‘நல்லுபதேசம்’ செய்தனர். காவல்துறையினர் மிரட்டினர். உறவினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டனர். தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்கள் இவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அவளது தாய் ஓய்வுபெற்ற பிறகு சமவெளிக்கு வந்து சூரியநெல்லியில் சொந்த வீட்டில் குடியேறினார்கள். உறவினர்கள், சுற்றத்தார் யாருடனும் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள முடியாத சமூக விலக்கு அவர்கள் மீது அப்போது அமுலில் இருந்தது. ஒதுக்குப் புறமாக இருக்க வேண்டும் எனப் பார்த்தே அந்த வீட்டை அவர்கள் கட்டியிருந்தனர்.

ஆனால் அப்பகுதிக்கு சுற்றுலா வரும் பலரும் சூரியநெல்லிக்கு வந்து அந்த வீட்டை நோக்கி வரத் துவங்கினர். தாங்கள் வந்த வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு, அனுமதியின்றி வீட்டிற்குள் வந்து பார்ப்பதும், அப்பெண்ணிடம் எப்படி சம்பவம் நடந்தது? என்ன செய்தார்கள்? எனக் கேள்விகளால் அப்பெண்ணைச் சூறையாடத் துவங்கினர். சூரியநெல்லிப் பெண்ணின் துயரம் கேளிக்கை சுற்றுலாவின் அங்கமாக மாறியது.

2005 கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களை அங்கிருந்து விரட்டத் துவங்கியது. யாரும் வர முடியாத தனிமையான வீடு ஒன்றை கோட்டயம் சிங்கவனம் பகுதியில் அவர்கள் தேடிக் கொண்டார்கள்.“நாங்கள் இங்கு வரும் போது சுற்றிலும் ஒன்றிரண்டு வீடுகள்தான் இருந்தன. யாரையும் பார்க்க வேண்டியதிருக்காது என்பதால் இதுதான் எங்களுக்கு நல்லது எனக் கருதினோம்” என்கிறார் அவளது தாய். ஏற்கெனவே அவர்களது தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களால் உறவினர்கள் புறக்கணித்திருந்தனர். சுற்றுமுற்றும் யாருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கவில்லை. வீட்டிற்குள் தினமும் முழங்கால் படியிட்டு இறைவனிடம் வேண்டத் துவங்கினர். இடையில் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவிற்கு வழக்கு எண் வழங்கப்படுகிறது. விரைவில் மனு விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இறைவன் தங்களைக் கைவிடவில்லை என அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அப்பெண் கைது செய்யப்படுகிறாள். விற்பனை வரித்துறை அலுவலகத்தில் ரூ.2.26 லட்சத்தை கையாடல் செய்து விட்டாள் என்பது குற்றச்சாட்டு. ஆனால் வங்கியில் கட்டியதற்கான பதிவேடு தொலைந்து போயிருந்ததால் கட்டியதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்லிதான் இந்த வழக்கே பதிவானது.

இப்பெண்ணுடன் இன்னும் இரண்டு பெண்களும் துறைவாரியான விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும், இவளுக்கு மட்டும் பிணை மறுக்கப்பட்டு ஒருவாரம் சிறையில் இருக்க நேர்ந்தது. மற்றவர்களுக்கு வெறும் இட மாறுதல் மட்டும் தான். தங்களது இரு மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து, பணத்தைக் கட்டி மகளை மீட்டனர் அப்பெற்றோர். பின்னர் நகையை மீட்க இயலாமல் அதுவும் மூழ்கிப் போனது.

பி.ஜே.குரியன்
ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன், சூரிய நெல்லி குற்றவாளிகளில் ஒருவர்.

தன் மீது குற்றம்சாட்டுபவர்கள் யோக்கியமானவர்கள் இல்லை என்று அவதூறு செய்வதன் மூலம், தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்வதற்கு குற்றவாளிகள் செய்யும் முயற்சி இது என்பது அப்பட்டமான உண்மை. இருப்பினும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கைதானதாலும், திருடி எனப் பட்டம் கிடைத்ததாலும் அந்தப் பகுதி மக்களும் அவளை திருடி என எச்சரிக்கையோடு பார்த்து விலகி நடக்கத் துவங்கினர்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் சூர்யநெல்லிப் பெண் இங்கிருப்பதையே தெரிந்து கொள்ள முடிந்தது என்கிறார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அப்பகுதித் தலைவி. பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான பெண் ஒருவர், அப்பகுதி மக்களது புறக்கணிப்பால் இவர்களுக்கு உதவி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருந்ததை ஒத்துக்கொள்கிறார். கைதான போது அப்பெண் உறுப்பினராக இருந்த பணியாளர் சங்கமும் உதவ முன்வரவில்லை.

“உச்சநீதி மன்றத்தில் வழக்கு எண் இடப்பட்டிருந்த காரணத்தால் அவளது நேர்மையின்மையை நிரூபிக்க முயன்ற எதிர்தரப்பின் கைங்கர்யமே இது’’ என்கிறார் சிபிஎம் சார்பு கலைக்குழுவைச் சேர்ந்த சுஜா சூசன் ஜார்ஜ்.

இந்தியா விஷண் என்ற மலையாள சேனலில், “அப்பெண் விபச்சார சிறுமி! அது பாலியல் வல்லுறவுமல்ல! அவள் பள்ளிக்கு கட்ட வேண்டிய பணத்தை தந்தையிடம் பெற்றுக்கொண்டு வீணாக செலவு செய்வாள். சிறுவயது முதலே அவளது நடத்தை யோக்யமானதல்ல..” எனப் பலவாறாக உளறியுள்ளார் நீதிபதி பாசந்த். அதற்கு சில நாட்கள் முன்னர்தான் ஜனவரி 31, 2013 அன்று அப்பெண்ணின் தாய் போட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் ஆறு மாதங்களுக்குள் மறுவிசாரணை நடத்தி முடிக்க கேரள உயர்நீதி மன்றத்திற்கு உத்திரவிட்டிருந்தது.

இதற்கிடையில் தலைமறைவாக உள்ள தருமராசன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் குரியனை விருந்தினர் மாளிகைக்கு அனுப்பியது தான் என ஒத்துக்கொண்டிருக்கிறார். விடுவிக்கப்பட்ட சிலர்“நாங்கள் தவறு செய்தது உண்மைதான், நான் பார்த்துக் கொள்கிறேன் என எங்களுக்கு பக்கபலமாக இருந்தவர் குரியன்” என்றும் சொல்லத் துவங்கியுள்ளனர்.

கேரளத்தில் 2007 முதல் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனாலும் மொத்த இந்தியாவும் எழுந்து விடவில்லை. வல்லுறவுக் குற்றவாளியின் சமூக அந்தஸ்தும், பாதிக்கப்படுபவர்களின் வர்க்கப்பின்னணியும்தான் பிரச்சினையை பேச வைக்கவோ அல்லது பேசாமல் இருத்தவோ வைக்கிறது. வல்லுறவு செய்தவர்கள் டெல்லியின் பேருந்து தொழிலாளியாய் இருந்து பாதிக்கப்பட்ட பெண் நடுத்தர வர்க்கமாகவும் இருந்தால் நடுத்தர வர்க்கம் மெழுவர்த்தி பிடிக்கிறது. வாச்சாத்தி பெண்கள், ராஜஸ்தானின் பன்வாரி தேவி, அரியானாவில் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்கள் என இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குரியன் வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் எழுப்புவதற்கு 16 ஆண்டுகளும், டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பெரும் மக்கள் போராட்டமும் தேவைப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான தலித் சிறுமிகளின் பெயர்களை வெளிப்படையாக உள்துறை அமைச்சர் ராஜ்யசபாவில் தெரிவித்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று முழங்கினார் அருண்ஜெட்லி.

அருண் ஜெட்லி கூறியதை கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி என ஷிண்டேக்கு ஞாபகமூட்டினார் அவையை நடத்திக் கொண்டிருந்த குரியன். 2007 இல் குரியனுக்காக உச்சநீதி மன்றத்தில் வாதாடி அவரை குற்றத்திலிருந்து விடுவித்தவர் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரான பாஜக வின் அருண் ஜேட்லி.

எப்படியும் என் சாவுக்கு முன்னரே நீதி கிடைத்து விடும் என நம்புகிறார் சூரியநெல்லிப் பெண்ணின் நடமாட இயலாத75 வயது தந்தை. “இந்த வேதனையையும், அவமானத்தையும் சுமக்கவா பிழைக்க வைத்தாய் இறைவா” எனக் கதறியபடி நியாயத்தீர்ப்பு நாளை மனதில் வைத்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அந்தத் தாய்.

– வசந்தன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

12

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் மே நாள் அன்று சென்னையில் பேரணி மற்றும் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தின. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து தோழர்கள், மக்கள், மாணவர்கள் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

“வைகோ, நெடுமா, சீமா கெளம்பிட்டாங்க டீமா”,  “இருட்டு, கும்மிருட்டு”, “ஏன் என்ற கேள்வியைக் கேள்”, “காங்கிரசு என்றொரு கட்சி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

உயர்நீதிமன்றத்திலிருந்து கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் நோக்கி பேரணி போய் டிஜிபி அலுவலகத்தை முற்றுகை இடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அதற்கு அனுமதி மறுத்தது. பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஆரம்பித்து மெமோரியல் ஹால் நோக்கி பேரணி நடத்த மட்டும்தான் அனுமதி வழங்கினார்கள். மெமோரியல் ஹால் தாண்டி போலீஸ் தடையரணை மீறி அண்ணா சாலை வழியாக டிஜிபி அலுவலகம் போவதாக முடிவு செய்யப்பட்டது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

பேரணிக்கு தலைமை தாங்கிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் தமிழக அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்காக கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் பற்றி விளக்கி, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் முற்றுகை நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்து பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா பேசினார்:

“கடந்த இரு மாதங்களாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். அந்த போராட்டங்கள் தொய்வடையாமல் உந்தித் தள்ளக் கூடிய சக்தியாக இருந்தவை நம்முடைய அமைப்புகள். அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தண்டிப்பது என்கிற கோரிக்கையோடு, ‘தமிழகத்தில் சிறப்பு அகதி முகாம் என்ற பெயரில் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்!’, ‘அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு’ என்ற முழக்கங்களோடு கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.”

“இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக போயிருக்கிறார்கள், இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்கள். கை, கால்களை இழந்து, உறவுகளை இழந்து, நாட்டை இழந்து வந்திருக்கிறவர்களின் உண்மையான நிலை என்ன?” என்று கேட்டு சிறப்பு முகாம்கள் என்பவை சித்திரவதை கூடாரங்களாக இருக்கின்றன என்பதை விளக்கும் சம்பவங்களை குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “இந்தியா முழுவதும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை கொடூரமானது. இந்த நாட்டின் சுதந்திரமான குடிமக்களாக வாழும் அவர்கள் 2 வயது குழந்தை முதல் முதியோர் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர்கள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முக்கிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.  இந்த நிலையில், போலீஸ்காரன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சூழலில் சிறப்பு முகாம்களில் வாழும் ஆதரவற்ற அகதிகளின் நிலைமை மிகவும் கொடூரமானதாக உள்ளது.  முகாம்களில் வசிக்கும் பெண்கள் எந்த நேரத்திலும் போலீசால் வேட்டையாடக் கூடிய நிலையில் அடிமைகளைப் போல இருக்கிறார்கள். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் போலீசாரின் கொடுமைகளை பார்க்கும் போது சிங்கள இராணுவமே பரவாயில்லை என்று தோன்றுவதாக சொல்கிறார்கள்.”

“ஈழத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பேன் என்று பேசக் கூடிய தமிழ் இன வாத அமைப்புகள், ‘ஜெயலலிதா ஈழம் வாங்கித் தருவார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஜெயலலிதா ஈழத் தாய், சட்ட மன்ற தீர்மானம்’ என்று பேசும் தமிழின வாதிகள் யாரும் இந்த பிரச்சனைக்காக ஏன் போராடவில்லை? ஜெயலலிதா ஒரே கையெழுத்தால் அகதி முகாம்களை இழுத்து மூட முடியும். தமிழினவாதிகள் பிழைப்பு வாதிகளாக இருக்கிறார்கள். மகஇக உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றன.”

“அந்த வகையில் அகதி முகாம்களை இழுத்து மூடி, அவற்றில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்வதற்கு புரட்சிகர அமைப்புகள் சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் எப்போதும் துணை நிற்கும்.”

என்று பேசினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஓவியா:

“உலகம் முழுவதும் பல நாடுகளில் அகதிகள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் பல நாடுகளுக்கு அகதிகளாக போயிருக்கிறார்கள். எந்த நாட்டிலும் அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதைப் போல நடத்தப்படுவதில்லை. பல நாடுகளில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஏன் இப்படி நடத்துகிறது என்றால்,  என்றுமே தமிழக அரசும் இந்திய அரசும் ஈழத் தமிழருக்கு எதிரானதுதான். இதே இந்தியாவில் பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் இது போல முள்வேலி முகாம்களில் இல்லை.”

“ஈழத் தமிழர்கள் அனைவருமே புலிகள், பயங்கவாதிகள் என்று முத்திரை குத்தி என்று அப்பாவி மக்களை இந்த அரசு சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. தொப்புள் கொடி உறவு என்று பல தமிழின வாதிகள் பேசுகிறார்கள். நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காகவே பிறப்பெடுத்தது போல பேசுகிறார்கள். நீங்க அமெரிக்காவிடம் போக வேண்டாம், இந்திய அரசிடம் வேண்டாம். தமிழக அரசிடம் ஏன் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராட முடியவில்லை. ஜெயலலிதாவால் செய்ய முடிகிற இந்த தீர்வுக்காக ஏன் போராடவில்லை. ”

“இந்த பிரச்சனைக்காக நக்சல்பாரி அமைப்புகளாகிய நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஈழத் தமிழ் மக்களுக்கு துணை நிற்போம். சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.”

என்று பேசினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

தைத் தொடர்ந்து மெமோரியல் ஹால் நோக்கி. விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பிய படி நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எல்லா பிரிவினரும் என 5000 பேர் பேரணியாக சென்றனர். இருபுறமும் நின்ற மக்களும் கடைக்காரர்களும் பேரணியின் முன்பு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் முகாமின் உருவரை மாதிரியினால் கவரப்பட்டார்கள்.

சுமார் 11.30 மணி அளவில் மெமோரியல் ஹால் அருகில் வந்து சேர்ந்த பேரணியை போலீசார் தடுப்பரண் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் கண்டன உரை ஆற்றினார்.

சிறப்பு அகதிகள் முகாம் என்பது எப்படிப்பட்ட சித்திரவதைக் கூடமாக செயல்படுகிறது என்பதை பல சம்பவங்கள் மூலம் விளக்கினார். சிறப்பு அகதி முகாமில் போலீஸ், கியூ பிராஞ்ச் துறைகளை சேர்ந்தவர்களின் கொட்டம், ஆதிக்கம், வெறியாட்டம் இவற்றை அம்பலப்படுத்தினார்.

“பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழ் பெண்களை அவர்கள் சீரழித்திருக்கின்றனர். ‘ஒன் பொண்டாட்டிய அனுப்பு’ என்றால் அனுப்பணும். இல்லை என்றால், அவரை புலி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு முகாமுக்கு போய் விட்டால் அவரது நிலைமை அவ்வளவுதான்.”

“இந்த நிலைமைகளை சகிக்க முடியாமல் பலர் ஆஸ்திரேலியாவுக்கு போக முயற்சிக்கின்றனர். 7,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு படகில் போக முடியாது, ஆனாலும் போகிறார்கள். ஏன்? இந்த கேள்வியை காவல் துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு கேட்டார். ” ‘ஆபத்து என்று தெரியாமலா போகிறோம். ஆனால் எப்படியாவது கியூ பிராஞ்சிடமிருந்தும் போலீசிடமிருந்தும் தப்பி விடத்தான் போகிறோம். இவர்களுக்கு ராஜபக்சேவே பரவாயில்லை’ என்று ஈழத் தமிழர்கள் காரி துப்புகிறார்கள்.”

“1987லிருந்து தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்கள் 8X8 அளவிலான தகரக் கொட்டாய்கள்தான். பகல் நேரத்தில் கரண்ட் கிடையாது. இரவில் ஒரே ஒரு குண்டு பல்புக்கு மட்டும் கரண்ட் கிடைக்கும். 6 மணிக்குள் வந்து அடைந்து விட வேண்டும். வேறு முகாமில் இருக்கும் உறவினர் யாராவது, அப்பா செத்துப் போய் விட்டால் கூட உடனேயே போக முடியாது. ஆர்டிஓ கையெழுத்து வேண்டும். ஆர்டிஓ கையெழுத்து வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது.”

“ஜெயலலிதா ஆரம்பத்தில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அவரால்  ஒரே கையெழுத்தில் இந்த அகதி முகாம்களை கலைக்க முடியும். 2009ல் கருணாநிதி ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று சொன்ன போது அதை எதிர்த்தவர்தான் ஜெயலலிதா. இவரைத்தான் ஈழத்தாய், ஈழம் வாங்கித் தருவார் என்று தமிழின வாதிகள் சொல்கிறார்கள்.”

“அகதி முகாமிலிருந்து ஒருத்தன் வெளிநாட்டிற்கு போனா உனக்கென்ன? பிடித்து வைக்க என்ன உரிமை இருக்கிறது. ஏன் தடுக்கிறீர்கள்?

“மே நாள் என்பது பாட்டாளி வர்க்கம் தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதோடு, தன்னைப் போலவே ஒடுக்கப்படுகிற பிற பிரிவினருக்காகவும் போராடும் நாள். அந்த வகையில் அகதி முகாம்களில் ஈழத் தமிழர்கள் விடுதலை, இரட்டை குடியுரிமை என்றும் நம்முடைய கோரிக்கை வைத்திருக்கிறோம்.”

“அகதிகள் தம் நாட்டில் விட்டு வந்த இடங்கள் எல்லாம் ராஜபக்சே அரசால் இந்திய தரகு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு ஈழத் தமிழருக்கு எதிரானது, என்று வலியுறுத்துகிறோம். சுயநிர்ணய உரிமைக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இந்தியாவிலுள்ள புரட்சிகர சக்திகளாகிய நாம் தொடர்ந்து போராடுவோம்.”

பேரணி போலீசார் அமைத்திருந்த தடையரணை மீறி முன்னேறி செல்லும் போது போலீசார் தோழர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் சென்னை ராயபுரத்தில் உள்ள 5 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்து மண்டபங்களிலும் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !

4

05-coffin-bloodநடைப்பிணங்கள் ஜாக்கிரதை!

ந்தக வெம்மையில்
கருகிய இலைகளின் நரம்புகள்,
கொஞ்சம் அழுந்தத் தொட்டால்
உதிரும் மழலையின் நாவுகள்.

அடுத்தடுத்து விழுந்து
ஆக்சிஜன் உறிஞ்சிய குண்டுகள்
அடுத்த தலைமுறையே இல்லாமல்
பிள்ளைகள் எரிய
தாயுடல் விறகுகள்.

முண்டம் வேறு தலை வேறாய்
முடிந்தவர்கள் கதையை விட
பயங்கரமானது,
முள்வேலிக்குள் அடைத்துவைத்து
முழு நிர்வாணமாக்கி
உணர்வுகளை சோதனையிட்டு
உறுப்புகளில் ‘பயங்கரவாதத்தை’ தேடும்
மீட்புப் பணி!

வெடித்துச் சிதறி
இரத்தத்தில் பிசறிக் கிடப்பது
பனை நுங்கின் சிதறலா?
இல்லை,
நிறைமாதக் கர்ப்பிணியின் சிசுக் கூழா?
வளி மண்டலமே
வலி மண்டலமாகும் படி
அதிர்ச்சியில் அலறிய காற்று
பிதுங்கிய விழிகளில்
பீதியில் உறைந்தது.

இசைப்பிரியாஉரிமைகள் உச்சரித்த
உதடுகள் குதறி…
தாய் மண் நிறைந்த
விழிக்கோளம் சிதறி…
உடல் திசுக்களெல்லாம்
வெறிப்பல் நுழைத்து…
பெண் என்பதற்கும் மேலாக
அவளது பிறப்புறுப்பில் இறங்கி,
இராணுவம் வேட்டையாடிய
ஈழத்து இசைப்பிரியாக்களின் உடம்பில்
இந்திய அரசின்  மேலாதிக்கம்
அம்பலமானது!

ஈழக்கொலைக்களத்தை
இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்!
இந்த உண்மையை உரைக்காமல்
இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல்,
ஈழத்தைக் காப்பாற்ற
இந்தியாவிடமே வலியுறுத்தும்
தில்லிவாய்க்கால்களின் மோசடிகள்
முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!

சனம்
தவியாய்த் தவிக்கையில்
பிணமாய்க் கிடந்தவர்கள்,
பிணங்கள் உறுதியானவுடன்
சனங்களுக்காக பேச
எழுந்துவர ஆரம்பித்து விட்டார்கள்,
தளபதியாய்… புரட்சித் தலைவியாய்…புரட்சிப் புயலாய்.
எச்சரிக்கை!

நடமாடும் தமிழகமே
நடைப் பிணங்கள் ஜாக்கிரதை!

– துரை. சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

மரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை !

49

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
பேச : 9443260164

நாள்: 30-04-13

மரக்காணம் கலவரம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை
(முதல் நிலை அறிக்கை)

25-4-13 அன்று வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் வழியாக சென்ற போது பகல் 12 மணியளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்தில் கட்டையன் தெரு தலித் சமூகத்தை சேர்ந்த சேட்டு என்பவரும், வன்னியர் தரப்பில் விவேக், செல்வராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். போலீசு துப்பாக்கிச் சூட்டில் (ரப்பர் குண்டு) பா.ம.க. தரப்பில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பா.ம.க வினரின் தாக்குதலில் தலித்துக்கள் தரப்பில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயம் என பத்துக்கும் மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர். மூன்று அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம் ஒன்றும், இன்னோவா காரும் கொளுத்தப்பட்டுள்ளன. கட்டையன் தெருவில் பத்து வீடுகளும், கழிக்குப்பத்தில் இரண்டு வீடுகளும், கூனிமேடில் ஒரு கறிக்கடையும் கொளுத்தபட்டதுடன், பல கடைகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொருள்களும் சூறையாடப்பட்டுள்ளன. டி.வி.எஸ் 50 வண்டி ஒன்றும் அடித்து சேதப்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளது. பாதிப்புகள் குறித்தும், கலவரத்திற்கான காரணம் பற்றியும் கண்டறிய மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 28-4-13 அன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரித்தோம்.

உண்மை அறியும் குழுவினர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் ( HRPC )

வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர்.ச.செந்தில்குமார், செயலாளர், கடலூர் மாவட்டம்.
வழக்கறிஞர்.ர. புஷ்பதேவன், இணை செயலாளர், கடலூர் மாவட்டம்
வழக்கறிஞர்.பி.அருள் பிரகாஷ்
திரு.சங்கர்,
திரு.எஸ்.பிரகாஷ்
திரு.சந்திரசேகரன்

மரக்காணம் காவல் நிலையத்திற்கு 1 கி.மீ. முன்பாக மெயின் ரோட்டிலிருந்து உள்புறமாக சுமார் அரை கி.மீ. சென்றால் இருப்பது தான் கட்டையன் தெரு. தலித் மக்கள் சுமார் 4,000 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கின்றனர். கட்டையன் தெருவிற்கு செல்லும் சாலையைத் தவிர பிற பகுதியில் தைல மரங்கள் மற்றும் முந்திரி மரங்கள் அடர்த்தியாக உள்ளன. இவை வனத்துறைக்கு சொந்தமானவை.

பகல் 12 மணியளவில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மெயின் ரோட்டில் மாநாட்டுக்கு சென்ற வன்னியர்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ரமேஷ் என்பவர் சுயநினைவிழக்கிறார். இச்செய்தி கேள்விபட்ட தலித் மக்கள் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்கின்றனர். இதனால் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் தடைபடுகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் தலித் மக்களை ஊருக்குள் செல்லும்படி விரட்டுகின்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை சாலையிலிருந்து கலைந்து போகும்படி எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. போலீசார் வானத்தை நோக்கி சுடுகின்றனர், பிறகு கூட்டத்தை பார்த்து ரப்பர் குண்டுகளால் போலீசார் சுடுகின்றனர். பா.ம.க.வினர் 4 பேருக்கு இதில் காயம் ஏற்படுகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் நிலை முற்றிலும் அடைபட்டு போகிறது. பல கி.மீ.மாநாட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

இந்த பதட்டமான நிலையில்தான் பா.ம.க.வை சேர்ந்த ஒரு கும்பல் தைல மரத்தோப்பு வழியாக கட்டையன் தெரு தலித் குடியிருப்பிற்குள் கழி, அருவாள், கம்பியுடன் நுழைந்து குடிசைகள் மேல் பெட்ரோல் பாம் போட்டு தீ வைக்கிறது. கண்ணில் பட்டவர்களை கடுமையாக தாக்குகிறது. பலாமரங்கள் முந்திரி மரங்கள் கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. இதில் சினை மாடு ஒன்று இறந்து விடுகிறது. தலித் சமூகத்தினை சார்ந்த கலைவாணன், ஏகாம்பரம், அல்லிமுத்து ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. படுகாயமடைந்த சேட்டு என்பவர் 28-4-13 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீசு ஆய்வாளர் வானத்தை நோக்கி சுட்ட பிறகுதான் கலவரக்கரார்கள் கலைந்து தைல மரத்தோப்பின் வழியாக ஓடிவிட்டனர். கட்டையன் தெரு தலித் மக்கள் பெரும்பகுதியினர் பெட்ரோல் பங்க் மறியலுக்கு சென்று விட்டதால் சம்பவ நேரத்தில் குறைவான தலித்துக்களே அந்த பகுதியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் நிகழவில்லை. அப்போது சுமார் மணி 02.30 இருக்கும்.

சம்பவத்தை பார்த்த பெண்கள் கூறும் போது ”நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். பலர் மஞ்சள் கலர் பனியன் போட்டிருந்தனர். பெருமளவில் இளைஞர்கள் கையில் தடி. கம்பி, வீச்சரிவாள், பீர்பாட்டில் வைத்திருந்தனர். எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர். அனைவரும் குடி போதையில் இருந்தனர். நாங்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினோம். பெட்ரோல் பாம் போட்டதால் வீட்டின் மண் சுவரை தவிர அனைத்தும் எரிந்து சாம்பாலாயின. தீயணைப்பு துறையினருக்கு அணைக்கும் வேலையே இல்லை” என்றனர்.

அது போல் ஏகாம்பரம் கூறும் போது ”சாதியை பற்றி கேவலமாக பேசிக் கொண்டே வேகமாக ஓடி வந்தனர். சுமார் 200 பேர் இருக்கும். தலையில் கிரிக்கட் பேட்டால் திரும்ப திரும்ப கடுமையாக தாக்கினர். 30 தையல் போட்டுள்ளேன். 2002 சம்பவத்தை மனதில் வைத்து தான் இந்த கலவரத்தை நடத்தியுள்ளனர்”.

கலைவாணன் என்பவர் கூறும் போது ”வந்தவர்கள் குடி போதையில் எதையும் கேட்காதவர்களாக வெறிபிடித்த மாதிரி நடந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி சுட்டதால்தான் அவர்கள் தைல மரத் தோப்பு வழியாக ஓடினர். என்னை தடியால் தாக்கியதால் தலை முழுவதும் தையல் போட்டுள்ளேன். தலையில் அடித்ததால் நாக்கு நசுங்கி விட்டது. அங்கும் தையல் போட்டுள்ளேன். சண்டைக்கு வருவது போல் வந்தனர்”. அல்லிமுத்து என்பவர் ”என் கையில் பீர் பாட்டிலால் கிழித்து விட்டனர்” என்றார். இது போல் சிறிதும் பெரிதுமாக காயங்கள் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகில் 2002 ல் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது அதற்கு பழிவாங்கவே இன்று திட்டமிட்டு எங்களை தாக்கி வீடுகளை கொளுத்தியுள்ளனர். அரை கி.மீ.தைல மரத் தோட்டத்தை கடந்து வந்து பெட்ரோல் பாம் போட்டதும், வந்தவர்கள் எங்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதும், நன்கு திட்டமிடப்பட்டது” என குற்றம் சாட்டினர். “போலீசார் தங்களையும் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் தலித் ஆண்கள் பலர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர்”, என போலீசை பற்றிய அச்சத்தையும் கூறினர்.

அதுபோல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள கழிக்குப்பம் என்ற தலித் குடியிருப்பில் இரண்டு வீடுகள் எரிக்கபட்டுள்ளன. கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. சமுதாய கூடத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மூன்று அரசு பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு கொளுத்தப்பட்டன. முற்றிலும் எரிந்து போனது. சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல் கேட்டிலும் தகராறு செய்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் மாநாட்டிற்கு வந்த பா.ம.க.வினர்தான் செய்துள்ளனர்.

கூனிமேடு இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இங்கும் வண்டியின் கூரை மீது அமர்ந்து கொண்டு குடித்து விட்டு ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்வது, பீர் பாட்டிலை குடித்து விட்டு சாலையில் போவோர் மீது வீசுவது என அத்துமீறல்கள் நடந்துள்ளது. பேன்சி கடையில் சிறுவர்கள் விளையாட்டு பொருள், ரெடிமேட் துணி கொள்ளையடிக்கபட்டுள்ளன. குடத்தை இடுப்பில் வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டு சென்றுள்ளனர். தடி, வீச்சரிவாள், கழி ஆகியவற்றை காட்டி கடையை சாத்த சொல்லி மிரட்டியுள்ளனர். இரு சக்கர வாகனத்தை ரோட்டில் போட்டு சேதப்படுத்தியுள்ளனர். டீ கடையில் உள்ள கிளாஸ் அனைத்தும் உடைக்கபட்டுள்ளன. இப்ராகிம் என்பவர் கறிக்கடையை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மதர்சா அரபிக் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய பெண்களை பார்த்து கைலியை தூக்கி காட்டியது என பா.ம.க.வினரின் அத்துமீறல் எல்லை தாண்டி தொடர்ந்ததால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க. கொடி கட்டிய அனைத்து வாகனங்களையும் அடிக்கத் தொடங்கினர். குறிப்பாக கூனிமேடு வன்னியர்களும், இஸ்லாமியர்களோடு சேர்ந்து பா.ம.க வண்டிகளை அடித்துள்ளனர். மரக்காணம் வழியாக மாநாட்டுக்கு போக முடியாமல் ஊருக்கே திரும்பி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான பா.ம.க. வாகனங்கள், போலீசார் கூனி மேடு மக்களை சமாதானம் செய்த பிறகே மாலை 4-30 மணியளவில் பா.ம.க கொடிகளை கழட்டி அவ்வூரைத் தாண்டி அமைதியாக செல்ல அனுமதிக்கபட்டன.

கூனி மேடு இஸ்லாமிய இளைஞர்கள் “ராமதாசு தன் கட்சிகாரர்களை முதலில் திருத்தட்டும். முடிந்தால் குடிகாரர்களை கட்சியை விட்டு நீக்கட்டும், பிறகு மதுவை ஒழித்து மற்ற மக்களுக்காக போராடலாம்” என்றனர். இதுவரை ”இது போன்று சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது இல்லை. வன்னியர், மீனவர், இஸ்லாமியர், பிற சமூகத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோம். மகாபலிபுரம் சித்திரை விழாவை இனிமேல் நடத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறினர். ”வருடா வருடம் குடித்து விட்டு வாகனத்தின் மேல் அமர்ந்து ரவுடித்தனம் செய்வதனையும் தொடர அனுமதிக்கக் கூடாது” எனக் கூறினர்.

வன்னியர் சங்க விழாவாக இருந்த சித்திரை பெருவிழா இன்று அனைத்து ஆதிக்க சாதியினரையும் இனணத்து நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு குருவின் சாதி வெறிப் பேச்சு தருமபுரி கலவரத்திற்கும், அதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் நிகழ காரணமாக இருந்தது. தற்போது மரக்காணத்திலும் அத்தகைய சாதி வெறிக்கலவரம் நடந்துள்ளது. இவ்வாறு தலித் மக்களுக்கு எதிராக கலவரம் தொடருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி பகுதி கடைகளில் சாப்பிட்டுவிட்டு சரியாக பணம் கொடுக்காமலும், குடித்து விட்டு தகராறு என வழி நெடுகிலும் பிரச்சினை செய்ததால் ஊர் மக்கள் வரிசையில் நின்றிருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பா.ம.க.வை சேர்ந்த விவேக் பேருந்தில் இருந்து விழுந்து விபத்தில் இறந்து போனதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். செல்வராஜ் கலவரத்தில் தாக்கபட்டு இறந்தாரா? அல்லது விபத்தின் காரணமாக இறந்தாரா என்பதை மருத்துவ பிரேத விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் உறுதியாக கூறமுடியும் என்ற நிலை உள்ளது.

மரக்காணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் கலவரம் தொடர்பாக பதிவு செய்யபட்ட வழக்கு விபரங்களை கேட்டோம். ”உயர் அதிகாரிகளை கேட்காமல் கொடுக்க முடியாது.கேட்டுச் சொல்கிறேன் என கூறி பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை” எனக் கூறிவிட்டார்.அந்த பகுதியில் பா.ம.க. தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கலவரம் தொடர்பாக மருத்துவர் ராமதாசின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளதை இக்குழு ஆராய்ந்துள்ளது.

முடிவுகள்

  1. மாநாட்டுக்கு வந்த பா.ம.க. தொண்டர்கள் பெருமளவில் குடி போதையில் இருந்துள்ளனர். வாகனத்தின் மேல் அமர்ந்து பயணித்ததுடன், ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல், கேலி செய்துள்ளனர். வாகனங்களில் ஆயுதங்கள், பெட்ரோல் பாம் எடுத்து சென்றுள்ளனர். பீர், பிராந்தி வாகனங்களில் போதுமான அளவில் கொண்டு வந்துள்ளனர்.
  2. 2002-ல் நடந்த சாதி பிரச்சினைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே மரக்காணம் கட்டையன் தெரு தலித் மக்கள் மீதான தாக்குதல் பா.ம.க. வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
  3. தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் சித்திரை திருவிழா, போதையேற்றும் புதுச்சேரியை கடந்து செல்வது என்ற கூடுதல் முக்கியத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதி வெறியூட்டும் அரசியலை இராமதாசு எடுத்துள்ள சூழலில், மரக்காணம் ஏற்கனவே பிரச்சனைக்கு உரிய பகுதி என்பது தெரிந்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.
  4. காவல்துறையினர் மிக அருகாமையில் இருக்கும் போதுதான் கட்டையன் தெரு தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
  5. மாநாட்டுக்கு சென்ற பா.ம.க.வினர் குடித்து விட்டு காலித்தனம் செய்ததால்தான் தலித் மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வன்னியர்கள் என பொது மக்கள் ஒன்று சேர்ந்து பா.ம.க. வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பரிந்துரைகள்

  1. மரக்காணம் கலவரத்தில் பாதிக்கபட்ட தலித் மக்கள் அனைவருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
  2. பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மரக்காணம் துணை கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. மகாபலிபுரம் சித்திரை திருவிழா வன்னியர் சங்க விழா என்பதை கடந்து அனைத்து ஆதிக்க சாதியினரும் தலித் மக்களுக்கு எதிராக ஒன்று சேரும் விழாவாக மாறியுள்ளது. எனவே வருங்காலத்தில் சித்திரை திருவிழா போன்று எந்த ஒரு ஆதிக்க சாதி விழாவினையும் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மேலும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்.
  4. தங்களது பதவி ஆசைக்காக அடித்தட்டு மக்களிடையே சாதிவெறியை தூண்டி தமிழகத்தில் சாதிய மோதல்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதட்டத்தை உருவாக்கி வரும் மருத்துவர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தமிழக அரசு கைது செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

கும்பமேளா: இந்தியாவின் புனிதமா, அழுக்காŸ?

52

ட இந்தியாவைப் போல தமிழகத்தில் கும்பமேளா குறித்து அத்தனை ஆர்வம் இருப்பதில்லை. ஒருவேளை குடந்தை குளத்தில் அம்மா கைங்கைரியத்தில் சில பல தமிழர்கள் முக்தி அடைந்ததின் கசப்பான நினைவுகள் தமிழ் மக்களை கிலியடைச் செய்திருக்குமோ தெரியவில்லை.

அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா நடக்கிறது. கும்பமேளா தோன்றிய புராணக்கதையே நம்மூர் எச்சக்கலை கதைகளை விஞ்சி விடும் தரம் கொண்டது.

தன்னை மதிக்காத இந்திரனைக் கண்டு கோபமடையும் துர்வாசர் அவனை பிச்சைக்காரனாக ஒழிந்து போ என்று சாபம் கொடுக்கிறார். இதனால் இந்திரன் மட்டுமல்ல, தேவர்கள் அத்தனை பேரும் தங்களது சுகமான தேவலோக வாழ்க்கையை இழந்தனர். அது என்ன சுக போகம்? ரம்பா, ஊர்வசி, மேனகைகளால் ஆடப்படும் இந்திர லோகத்து குத்தாட்டங்களை இனி பார்த்து மகிழ முடியாது.

இதனால் அசுரர்கள் கை ஓங்கியதாம். இதனால் கலங்கிய தேவர்கள் பிரம்மா தலைமையில் சிவனிடம் புகார் கொடுத்தார்களாம். அவர் கொடுத்த ஆலோசனையின் படி விஷ்ணுவிடம் வழி கேட்க, அவரோ பாற்கடலை கடைந்து அமுதத்தை எடுத்து அருந்தினால் இழந்த சுகபோக வாழ்க்கை, பலம் அனைத்தும் கிடைக்கும் என்றாராம்.

ஆனால் அமுதத்தை தனியாக கடைந்து எடுக்க முடியாது என்பதால் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு தேவர்கள் பாற்கடலை கடைய இறுதியில் தன்வந்திரி அமுதக் கலசத்துடன் தோன்றுகிறார். கடைவதற்கு துணை நின்ற அசுரர்களுக்கு பாதி பங்கை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் தேவர்கள். இதற்காகவே விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதக் குண்டானை எடுத்துக் கொண்டு ஓடுகிறார். அசுரர்கள் துரத்துகிறார்கள். இந்த ஓட்டம் தேவலோக கணக்குப்படி 12 நாளுக்கு நடந்ததாம். நமது கணக்கின் படி 12 ஆண்டுகளாம். இந்த ‘சேசிங்கில்’ அமுதக் குண்டானிலிருந்து நான்கு துளிகள் மேற்படி கும்பமேளா இடங்களில் விழுந்ததாம். இதனால் அந்த தலங்கள் புனிதமடைந்து அமுதத் துளி விழுந்த தினத்தில் கும்பமேளா நடக்கிறதாம்.

அமுதத் துளி விழுந்த நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி அடையப் பெறுவார்களாம். ஆக சிந்திய நான்கு துளிகளுக்கு இப்படி ஒரு நிகழ்வை நடத்தி அதையும் உலகில் அதிகம் மக்கள் ஒன்றுகூடும் மதத்திருவிழா என்று வேறு பெருமை பேசி திரிகிறார்கள். அந்த அமுதத்தின் பிறப்பே ஒரு மோசடியில் குடிகொண்டிருக்கிறது எனும் போது அதன் எச்சில் துளிகள் எப்படி பாவத்தை போக்கும்?

மூன்று கோடி மக்கள் நீராடினார்கள், அரசு ஆயிரம் கோடி செலவழித்தது, வர்த்தக முதலாளிகள் பத்தாயிரம் கோடிகளை அள்ளினார்கள் என்று கும்பமேளாவின் கணக்குகள் எல்லாம் கோடிகளில்தான். கூடவே அலகாபாத் ரெயில் நிலைய நெரிசலில் முப்பது, நாற்பது பேர் இறந்து போயிருக்கின்றனர் என்ற கணக்கும் உண்டு. மதக்கூடல் நடக்கும் மெக்காவோ இல்லை கங்கையோ எங்கும் இத்தகைய பலிகளை ஆண்டுதோறும் பார்க்கிறோம்.

அலகாபாத் கங்கையில் குளித்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி பிறப்பில்லா முக்தி நிலை கைவரப்பெறுமாம். இந்த குறுக்கு வழி முக்தியில் பெரிய அளவு சிரமப்படத் தேவையில்லை என்பதால் வட இந்தியாவில் இருக்கும் எல்லா வகை சாமியார்களும் கும்பமேளாவில் ஆஜராகிறார்கள். பாவத்தையே தொழிலாகக் கொண்ட நித்தியானந்தா, ஜெயேந்திரன் போன்ற தென்னிந்திய மோசடி சாமியார்களும் கூட கும்பமேளாவில் குளிக்கிறார்கள். பாவம் கங்கை!

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

வாழ்நாள் முழுக்க மௌன விரதம் இருக்கும் பரிவாஜக சாமியார்கள் தங்கள் வருகையை மணி அடித்து தெரிவிப்பார்களாம். தங்களது உடலை வருத்தி முக்தியடையலாம் எனும் ஊர்த்துக வாஹூர சாமியார்கள், தலைகீழாக தவம் செய்யும் சிரசாசன சாமியார்கள், திசைகளை ஆடையாகத் தரித்த திகம்பர சாமியார்கள், நிர்வாணிகள், அப்புறம் நிர்வாண நாகா சாமியார்கள் என்று கும்பமேளாவில் கவர்ச்சியே இத்தகைய வேடிக்கை சாமியார்கள்தான்.

இவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் கங்கையில் குளிப்பார்களாம். இவர்களை பார்ப்பதற்கென்றே பெரும் கூட்டம் கும்பமேளாவிற்கு வருகிறது. விளம்பர நடிகை பூனம் பாண்டே கூட இந்த ஆண்டு கும்பமேளா சென்று குளித்து சாமியார்களின் ஆசிகளை வாங்கியிருக்கிறாராம். இருவரது தொழிலும் உடை குறைவு என்பது ஒரு ஒற்றுமை.

வண்டலூர் உயிரியில் பூங்கா போல தினுசு தினுசான இந்த சாமியார்களுக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை திறந்தால் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் இந்த ஜந்துக்களை பார்க்கலாம். நிர்வாண சாமியார்கள் பணம் கொடுத்தால்தான் ஆசிர்வாதம் மட்டுமல்ல, காமராவுக்கு போசே கொடுப்பார்களாம். இவர்களில் சிலர் பைக்கெல்லாம் வைத்து ஓட்டுகிறார்கள். சமயங்களில் நவநாகரிக அடைகளும் அணிகிறார்கள். காமராவைத் திறந்தால் உடன் ஆடைகளை களைந்து கொண்டு ரெடியாகிறார்கள்.

கஞ்சா முதலான போதை பொருட்கள், மக்கள் கொடுக்கும் பணம் என்று சாமியார்களின் வாழ்க்கை பேஷாகவே கழிகிறது. அரசர்களைப் போல அலங்காரத்துடன் உருத்திராட்சக் கொட்டை, காவிப்பட்டையுடன் வரும் சாமியார்களும் இங்கு உண்டு. இவர்கள் கார்ப்பரேட் சாமியார்கள் போல பரிவாரங்களுடன் வருவார்கள். அடுத்து கும்பமேளாவின் விசித்திரக் காட்சிகளை பார்ப்பதற்கென்றே வெளிநாட்டாரும் கணிசமாக வருகின்றனர். அவர்களில் சிலர் இந்தியாவில் ஏதோ ஆன்மீக மர்மம் குடிகொண்டிருக்கிறது அதை கண்டு கொண்டால் நிம்மதி என்று அறியாமையிலும் வருகிறார்கள்.

இருப்பினும் இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்று வெளிநாட்டவர்களால் கேலி செய்யப்படுகிறது என்று சங்கபரிவார பக்தர்கள் சினமுறுவார்கள். ஆனால் அந்த கேலி போதாது என்பதைத்தானே கும்பமேளா காட்டுகிறது?

– வேல்ராசன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

போர்னோகிராஃபி : பாலியல் சுதந்திரமா , அடிமைத்தனமா ?

6
இணைய மேய்வு
படம் நன்றி: தி இந்து நாளிதழ்
இணைய மேய்வு
சமூக இழப்புகள்: போர்னோகிராபி பயங்கர வடிவங்களை கொண்டாடி, அவற்றை இயல்பானதாக முன் வைக்கிறது. இது இந்தியா போன்ற இடங்களில் ஆட்கொல்லியாக மாறுகிறது. (படம் நன்றி: தி இந்து நாளிதழ்)

க‌மலேஷ் வஸ்வானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் போர்னோகிராபியை (பாலியல் காட்சிகள்) இணையத்தில் பார்ப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும், மீறி பார்ப்பவர்களை பிணையில் வர இயலாத பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இணையத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பாலியல் உறவுகளுக்காக நிற்பதாக சொல்லிக் கொள்ளும் இணையதளப் போராளிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கமலேஷின் கோரிக்கை, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு போர்னோ ஒரு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகிறது. போர்னோ என்பது கருத்து சுதந்திரமா இல்லை கருத்துருவாக்கமா என்ற கேள்வியை பலரும் பரிசீலிப்பதில்லை. தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ அறிவுஜீவிகள் விதந்தோதும் கட்டற்ற சுதந்திரத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க வேண்டியதாகிறது.

இப்படி சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர். இரண்டாவது 2012 இல் உலகிலேயே கூகுள் தேடுபொறியில் அதிகமுறை போர்ன் என்ற வார்த்தையை தேடியது டெல்லியில்தானாம். அதற்கு இணையாக தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வல்லுறவுக் குற்றம் கடந்த ஆண்டுதான் அதிகமாம். இது பிற ஆண்டுகளைக் காட்டிலும் சற்றேறக்குறைய இருமடங்கு அதிகம்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொது இடங்களில் இது போன்ற இணைய தளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கூடுகின்ற இடங்களில் ஆபாசப் படங்களை வைக்க தடை உள்ளது. காரணம் கூகுள் இணைய தளத்தில் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் அல்லது சிறுமி போர்ன் என்ற வார்த்தையை போட்டுத் தேடினால் கிடைப்பது பெரும்பாலும் காடு அல்லது வயல்வெளியில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகும் பெண்ணின் கதைதான். பாலியல் உறவு என்பதே அந்த பதின்ம வயது இளைஞர்களிடம் வன்முறை கலந்த இன்பமாகத்தான் பதிவாகிறது. சில காலம் கழித்து இதுவெல்லாம் சாதாரணம் என்ற அளவுக்கு புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள். ஊடகங்களும், சினிமாவும் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களை ஒரு ஸ்டீரியோ டைப் இல் பார்க்க சொல்லித் தருவதால் இளைஞர்களுக்கு பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக மாறுவது பெரிய விசயமாகப் படுவதேயில்லை.

போர்னோகிராபி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு இணங்க நிஜ உலகில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வயதும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே ஃபோர்னோ தளங்களை சரோஜாதேவி புத்தகத்தின் ஈ-பதிப்பு என்று குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அமெரிக்க நீதித்துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து செய்யும் குழுவான பாலியல் வல்லுறவுக் குற்றம் 1994-98 இல் 7 சதவீதமாக இருந்து, 2005-10 இல் 10% ஆக உயர்ந்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இப்படி வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சியை பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது இளைஞர்களின் ஆண்மைக்கு அடையாளமாக மாறி உள்ளது. பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பது, பாலியல் உறவுக்கான கருவி என ஸ்டீரியோடைப்பாக பார்க்கப் பழகிய இவர்களை அடுத்த கட்டமாக அந்த அரைத்த மாவில் கல் தோசை, மசாலா தோசை, பொடி தோசை என சுட வைக்கும் வேலையை சோசியல் மீடியா செய்யத் தூண்டுகிறது. ஏற்கெனவே உள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பும், வளர்ந்து வரும் நுகர்வு மோகமும் ஒரே பெண்ணிடம் விதவிதமான உறவு என வெரைட்டி காண்பிக்கிறது. தன்னைப் போன்ற ஒரு சக பயணி என்ற உணர்வு இந்த அமெரிக்க பாணி இளைஞனிடம் சுட்டுப்போட்டாலும் வராது.

க‌டந்த ஆண்டு அமெரிக்க நாட்டின் ஓகியோவிலுள்ள ஸ்டூபன்வில் உயர்தரப் பள்ளியில் நடந்த குழுவான பாலியல் வன்முறையில் பல மாணவர்கள் இணைந்து ஒரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து போட்டனர். இக்குற்றத்தில் சாட்சியாக இருந்த மாணவர்கள் இதனை ஒரு வல்லுறவு என்று நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்தா பார்த்தன்ஸ் என்ற அமெரிக்க மாணவியும், ஆட்ரே போட்ஸ் என்ற கனடா மாணவியும் இதே போன்ற நிகழ்வால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போர்னோ தளங்களில் உண்மையான பாலியல் காட்சி என்று போட்டால்தான் மவுசு அதிகம். அது அமெரிக்காவில் தோழிகளை படம் பிடிப்பதாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகளில் தன்னிடம் வேலை பார்க்கும் பதின்ம வயதுப் பெண்களை மிரட்டி படம் பிடிப்பதாக உள்ளது. இந்த இடத்தில்தான் சமூக தளமும், போர்னோ தளமும் பிரியும் கோடு அழியத் துவங்குகிறது. போர்னோ தளத்தில் பார்த்த போது தெரிந்த கற்பனையான பக்கத்து வீட்டு ஆண்டி இப்போது சக மாணவியாக, உடன் வேலை செய்பவராக மாறத் துவங்குகிறது. நேரடியாக போர்னோ தளத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியாவிட்டாலும், இத்தளங்களை பார்ப்பதன் அதீதம் காரணமாக நிறைய மணமுறிவு, விவாகரத்துகள் நடந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

‘மூன்றாண்டு வரை தண்டனை தருமளவுக்கு ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்ன வரைமுறைப்படுத்த உள்ளீர்கள்’ என்றெல்லாம் கேட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள் சிலவற்றுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஏப் 29 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘போர்னோ பார்ப்பதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்பது போன்ற சட்டங்கள் போடப்படலாம். சினிமாவுக்கு இருப்பது போல சென்சார் போடுவது சாத்தியமில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? எனத் தெரியவில்லை. ஆனால் போர்னோ தளங்கள் வெறும் கள்ளக் குழந்தை மட்டுமல்ல. மனித சமூகம் பண்பட எடுத்துக்கொண்ட பல நூற்றாண்டு காலத்தை பின்னோக்கி செலுத்த சில நிமிடங்கள் மட்டுமே அதற்கு தேவைப்படுகிறது. நிழலை நிஜமாக்க இளைஞர்கள் முந்துகிறார்கள். பாலியல் சுதந்திரம், எழுத சுதந்திரம் என கட்டற்ற சுதந்திரம் கடைசியில் பெண்களது உயிரோடும், சமத்துவமாகவும், சுய மானத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.

மேலும் படிக்க
Freedom that must have limits

அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !

35
தமிழர் கூட்டம்
'அம்மா' உணவகத்தில் தமிழர் கூட்டம்! திருவோட்டுத் தமிழர்களை உருவாக்கிய அன்னலட்சுமி!
தமிழர் கூட்டம்
‘அம்மா’ உணவகத்தில் தமிழர் கூட்டம்! திருவோட்டுத் தமிழர்களை உருவாக்கிய அன்னலட்சுமி!

சென்னை நகரில் அம்மாவின் அரசு தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட மலிவு விலைச் சிற்றுண்டிக் கடைகளைத் திறந்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் வார்டுக்கு ஒன்று என சென்னைக்குள் மட்டும் இருநூறு கடைகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தக் கடைகளில் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காலைச் சிற்றுண்டியாக இட்லியும், மதியம் பணிரெண்டு மணி முதல் மூன்று மணி வரை தயிர் சோறும், சாம்பார் சோறும் வழங்கப்படுகின்றன முறையே ஒரு ரூபாய், மூன்று ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் விலையில்.

எல்லா இடங்களிலும் காலை ஏழு மணிக்கே கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களை உள்ளங்கைகளில் வைத்து உருட்டியபடியே நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாக பத்து மணிக்கு உணவுச் சீட்டு வழங்கும் அறை மூடப்படுகிறது. அதே போல மதியம் மூன்று மணிக்கும் சடாரென்று சாத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நொடியே வந்தாலும் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் தான். இப்படிக் கடைசி நொடிகளில் ஏமாந்து திரும்புபவர்களே நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். கடை திறப்பதற்கு முன்னதாக காத்திருப்பவர்களும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ஆட்டோ டிரைவர், வாட்ச் மேன், கார்பெண்டர், பெயிண்டர், கொத்தனார், மூட்டை தூக்குபவர்கள், அலைந்து திரிந்து விற்பனை செய்பவர்கள், பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்பவர்கள் என்று உதிரி வேலை செய்பவர்கள் தான் இங்கு எழுபது சதவீதத்திற்கும் அதிகமாக வருகின்றனர். இவர்களைத் தவிர அரசுக் கல்லூரி மாணவர்கள், படித்துவிட்டு வேலை தேடுபவர்கள், மாநகராட்சி பள்ளிச் சிறுவர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோருடன் வரும் தனியார் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர், சிறிய நிறுவனங்களில் பனியாற்றும் ஊழியர்கள், பெண்கள், உழைத்து நைந்து போன நடுத்தர வர்க்கம், கொஞ்சம் ஐ.டி துறை ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் இங்கு பார்க்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கை பிரம்மாண்டமான அளவில் இந்திய கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு பெயர்த்தெடுத்திருக்கிறது. கிராம மக்களில் கணிசமான பகுதியினரை நகர்ப்புற வேலைகளைச் சார்ந்து வாழும்படி நிர்ப்பந்தித்திருக்கிறது. இவர்களின் உணவுத் தேவைகளுக்காக கடந்த 5,6 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கில் கையேந்தி பவன்கள் என்று அழைக்கப்படும் தள்ளுவண்டிக் கடைகள் பல்கிப் பெருகியுள்ளன.

அன்னலட்சுமிசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளில், கைகளில் தட்டை ஏந்தி நின்று சாப்பிடுபவர்கள் அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினராகத்தான் இருந்தனர். இன்றோ வளர்ச்சி, வல்லரசு ஆகியவற்றின் அடையாளமாகக் சித்தரிக்கப்படும் ஐ.டி துறை, பன்னாட்டு நிறுவனங்கள், விமானக் கம்பெனிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் வெள்ளைக்காலர் பணிகளில் அமர்ந்திருக்கின்ற, நாக்கில் ஆங்கிலம் புழங்குகின்ற இளைஞர்களும் பெண்களும் கையேந்தி பவன் இட்லிக்கு காத்திருப்பதை சென்னையில் மிகச் சாதாரணமாக காணமுடிகிறது.

ஆங்கிலம் பேசினாலும், தமிழ் பேசினாலும், இந்தி பேசினாலும், டை கட்டியிருந்தாலும், லுங்கி கட்டியிருந்தாலும், கையில் கரணை பிடித்தாலும், மவுஸ் பிடித்தாலும், பேனா பிடித்தாலும், யாராயிருந்தாலும் அன்றாட சராசரி ஊதியம் ரூ.200 என்று உழைப்பின் சந்தை விலையை நிர்ணயித்திருக்கிறது மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கை. சித்தாள் முதல் ஐ.டி துறை ஊழியர்கள் வரை மட்டுமின்றி, எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களுக்கும் கூட தனியார் மருத்துவமனைகள் வழங்கும் ஊதியம் கிட்டத்தட்ட இதுதான்.

விலைவாசி உயர்வு என்று கூறப்படுகின்ற முதலாளித்துவக் கொள்ளையும், தீவிரமடைந்து வரும் உழைப்புச் சுரண்டலும், உழைப்பாளிகளின் உண்மை ஊதியம் மற்றும் வாங்கும் சக்தியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த வீழ்ச்சி, உட்கார்ந்து சாப்பிடுவதைக் கூட மக்களின் கைக்கு எட்டாத ஒரு ஆடம்பரமாக்கி விட்டது.

இத்தகைய கையேந்தி பவன்கள் பெருகியிருக்கும் அதேநேரத்தில், மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.சி கடைகளும், சைனிஸ்,மெக்சிகன், தாய் உணவு வகைகளுக்கான தனித்தனி கடைகளும், 30,40 வகை காப்பிகளை வழங்குகின்ற காபி பார்களும், சரவண பவன், சங்கீதாஸ் போன்ற உயர்தர சைவ உணவகங்களும் இதே சென்னையில் பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். உணவுத் திருவிழாக்கள் நடக்கின்றன. சென்னையின் எந்தக் கடையில் என்ன உணவு சிறப்பு என்பதைப் பற்றி, “நாவன்மை” கொண்ட வல்லுநர்கள் எச்சில் ஊறவைக்கும் எழுத்துகளை நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் துப்புகிறார்கள். மாதம் ஒரு நாளாவது இத்தகைய கடையொன்றில் அமர்ந்து சாப்பிடுவது மக்களின் வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக வடிவெடுத்திருக்கிறது.

உணவு விடுதிகளில் சாப்பாடு மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல், அடாத விலைக்கு விற்கக் கூடாது என்ற கட்டுப்பாடு முன்னர் பெயரளவிலாவது இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் படி, இது சுதந்திரச் சந்தையில் தலையிடும் நடவடிக்கை. அதாவது ஒரு இட்டிலி 20 ரூபாய் என்ற விலைக்கு விற்று, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை உயர்த்த ஒரு தொழிலதிபர் முயற்சிக்கும்போது, இட்டிலியின் அதிகபட்ச விலை 10 ரூபாய் என்று அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்குமானால், அது நாட்டின் வளர்ச்சி வீதத்தை பாதியாக முடக்கும் பயங்கரவாத நடவடிக்கை ஆகிவிடுகிறது. மேலும் 20 அல்லது 30 ரூபாய் கொடுத்து உயர்தரமான இட்டிலியை வாங்கிச் சாப்பிடும் ஜனநாயக உரிமையை வசதியுள்ளவர்களிடமிருந்து பறிக்கின்ற அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையும் ஆகிவிடுகின்றது. எனவேதான் 30 ரூபாய் இட்டிலி சாப்பிடுவோரின் உரிமையைப் பறிக்காமலேயே ஒரு ரூபாய் இட்டிலியையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார் அம்மா.

00

அன்னலட்சுமிநாடு வல்லரசாகிறது என்ற கூச்சல் எந்த அளவுக்கு எழுகிறதோ அதே அளவுக்கு சமூகத்தில் வர்க்கப் பிளவும் ஆழமாவதை தான் முப்பது ரூபாய் இட்லியும் ஒரு ரூபாய் இட்லியும் காட்டுகின்றன. கையேந்தி பவன்களிலேயே முந்தின நாள் வரை சாப்பிட்ட கடையை விட்டு அடுத்த, தரம் சற்றுக் குறைவானாலும் விலை குறைவான கடைக்கு நகரும் அளவுக்கு மக்களின் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சியின் எல்லைதான் அம்மா தொடங்கியிருக்கும் ஒரு ரூபாய் இட்டிலி கடை.

முன்னர் எம்.ஜி. ஆரின் சத்துணவுத் திட்டம் தொடங்கியபோது, “பெத்தவனால் பிள்ளைக்கு சோறு போட முடியாதா? இது மக்களை இழிவு படுத்தும் செயல் அல்லவா? ” என்ற விமரிசனம் எழுந்தது.

ஆனால் மக்களின் வாங்கும் திறன் குறையக் குறைய, கையேந்துகின்ற நிலைக்குத் மிகப் பெரும்பான்மையான மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். நாளடைவில் இதை மக்களும் அங்கீகரித்து எம்.ஜி.ஆரை ஏழைப்பங்காளன் ஆக்கினர். இந்த ‘பொறுப்புமிக்க’ செயலை உலக வங்கி உடனே பாராட்டியது. புரட்சித்தலைவர் மகனுக்கு உணவளித்தார், புரட்சித்தலைவியோ தந்தைக்கும் உண்டியளிக்கும் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்.

ஆடு, மாடுகளுக்கும், முதுமலையில் யானைகளுக்கும் உணவிடும் அம்மாவின் ‘கருணை’ உள்ளம், அதே வகையில் மனிதர்களுக்கும் உணவிடுவது, அம்மாவை உயர்த்துகிறதா, மனிதர்களைத் தாழ்த்துகிறதா? பெரும்பான்மையான மக்களால் இது அம்மாவின் கருணை என்றே அங்கீகரிக்கப்படுகிறது.

இறந்த பின் சொர்க்கம் செல்ல விரும்பிய செல்வந்தர்கள், பட்டினியில் வாடிய ஏழை மக்களுக்கு சோறிடுவதற்காக சோழ வளநாட்டில் அறக்கூழ்ச் சாலைகள் அமைத்திருந்ததை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் நிலைமை மாறிவிடவில்லை. அன்று ஆற்றுப்படை பாடிய பாணர்களைப் போல, ஒரு ரூபாய் இட்டிலிக்கு வரிசையில் நிற்பவர்கள் அம்மாவின் கருணையைப் போற்றுகிறார்கள்.

இது மனிதர்களுக்குரிய நிலை அல்ல, எதுவுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களை நடைப்பிணங்களாகப் பராமரிக்கும் நிலை. இது வாழ்வதற்குரிய ஏற்பாடல்ல உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான ஏற்பாடு. இது கோசாலைகளில் மாட்டைக்கட்டி தீனி போடுவதைப் போன்ற விலங்கு நிலைக்கு மக்களைத் தாழ்த்துவது.

அன்னலட்சுமி திருவோடுஅரசின் இது போன்ற ’மனிதாபிமான’ நடவடிக்கைகளை மக்கள் ஏழைகள் மீதான அக்கறை, இரக்கத்தால் செய்யப்படுகிறது என்று அறியாமையால் கருதுகிறார்கள், மக்கள் அவ்வாறு கருதுவதாலேயே இவையெல்லாம் மனிதாபிமானச் செயல்களாகிவிடாது. சோறு போடுவது மனிதாபிமான நடவடிக்கை என்றால் குடிநீர் கேட்டு போராடும் போது எலும்பை முறிப்பது என்ன வகையான நடவடிக்கை ?

இலவச அரிசியோ, ஒரு ரூபாய் இட்டிலியோ இவையனைத்துமே மக்களின் கோபம் எல்லை மீறாமல் இருப்பதற்காக வீசப்படும் எலும்புத் துண்டுகள், கொந்தளித்துவிடாமல் தடுப்பதற்கான வடிகால்கள், உரிமைகளை கேட்கும் மனித நிலைக்கு உயர்ந்து விடாமல் இருத்தி வைக்கும் தடைகள்.

நிதி மூலதனக் கும்பல்களால் பொருளாதார திவால் நிலைக்கு ஆளாக்கப்பட்ட கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில், பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களின் ஓய்வூதியத் தொகை வெட்டப்பட்டது, சுரங்கத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை நீக்கம் செய்யப்பட்டு சுரங்கங்கள் தனி உடைமை ஆக்கப்பட்டன. ஊதியங்கள் குறைக்கப்பட்டன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துக்குமான மானியங்கள் வெட்டப்பட்டன..

இந்த நடவடிக்கைகள் தோற்றுவித்த கோபம் எரிமலையாய் வெடித்து கிரீஸ் எங்கும் தீப்பிழம்பாய் ஓடியது. இருப்பினும் அரசும் ஆளும் வர்க்கமும் பின்வாங்கவில்லை. தாங்களத் திட்டமிட்டிருந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தையும் அமல் படுத்தினார்கள். மக்கள் போராட்டங்களை ஒடுக்கினார்கள்.

இப்போது முற்றிலுமாக வாங்கும் சக்தி இழந்து பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்படும் மக்களுக்கு இலவச ரொட்டித் துண்டுகளும், காய்கறிகளும் வழங்குகிறார்கள். ஜெயலலிதாவின் மலிவு விலைச் சிற்றுண்டி ரகம் தான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இங்கே விலை, அங்கே இலவசம்.

ஜெயலலிதா இப்படி ஒரு கடையைத் திறந்த மறுகணமே ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் கூடுகிறார்கள், என்பது புரிந்து கொள்ள முடியாததல்ல. மக்களின் வாழ்நிலையில் ஏற்பட்டுவரும் இந்த வீழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் ஜெ அரசு இந்த சிற்றுண்டிச் சாலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்க்கும் சமூக அமைதி நாளுக்கு நாள் குலைந்து வருகிறது. உடமையை இழந்த, ஓட்டாண்டி நிலையிலுள்ள, வாங்கும் சக்தியற்ற வர்க்கங்களின் அதிருப்தியை, கலக உணர்வை, கொந்தளிப்பை மட்டுப்படுத்தும் வடிகால்களாகவே இத்தகை இலவச திட்டங்களும், மலிவு விலை சிற்றுண்டிகளும் பயன்படுகின்றன. இதனை, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் இன்னொரு டாஸ்மாக் என்றும் சொல்லலாம்.

வறுமையின் காரணமாக தனது குடும்பத்தினரின் பசியைப் போக்குவதற்கு, வேறு வழியில்லாமல் குப்பைக் கீரையைக் கொணர்ந்து, அதை உப்பு போட்டு வேக வைப்பதற்குக் கூட வழியில்லாத காரணத்தினால், வெறுமனே வேகவைத்து உணவு தயாரிக்கும் பெண்ணைப் பற்றி சிறு பாணாற்றுப்படை கூறுகிறது. அது மட்டுமல்ல, தனது குடும்ப வறுமை வெளியே தெரிந்தால் கேலி செய்வார்களே என்று கூச்சப்பட்டுக் கொண்டு கதவையும் தாளிட்டுக்கொள்கிறாள் அந்தப் பெண் என்கிறது சிறு பாணாற்றப் படை. இது சங்க இலக்கியம்.

பல நூற்றாண்டுகள் தாண்டி, இன்று நவீன தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் பெருகியிருக்கும் சூழலில், ஒரு ரூபாய் இட்டிலிக்காக, “அன்ன லட்சுமி தாயே” என்று திருவோட்டைக் கையிலேந்தி குரல் கொடுக்கிறது தமிழகம்.

– வையவன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

ஆதிக்க சாதி வெறி அடால்ப் ஹிட்லர் ராமதாசு!

34

தமிழ்நாட்டு ராஜபக்சே

டால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவை தோற்றுவித்தது போல மருத்துவர் ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி முயற்சி செய்கிறார். 25.04.13 இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா அதை முன்னுரைக்கிறது.

சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று அதில் தோற்றுப் போன ராமதாசு இப்போது அப்பட்டமான சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்து அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அதற்காக ஆண்ட பரம்பரை என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரையும் திரட்டி வருகிறார்.

எண்பதுகளில் ராமதாசு வன்னியர் சங்கத்தைத் தொடங்கி மார்க்ஸ் முதல் அம்பேத்கர், பெரியார் வரை இணைத்துக் கொண்டு முற்போக்கு வேடமிட்டபோது தமிழகத்தின் பல்வேறு “முற்போக்குகள்” சிலிர்த்துப் போனார்கள். ஆனால் ‘ராமதாசு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆதிக்க சாதிவெறியால் ஓட்டுப் பொறுக்கி பிழைக்கும் ரகம்தான்’ என்பதை அன்றிலிருந்தே மகஇக உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் சொல்லி வருகின்றன. அதனை இன்று உண்மையென்று உணர்த்தியிருக்கிறார் ராமதாசு.

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி  அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல ரத்தச் சேற்றில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டார் ராமதாசு.

அதனை எடுத்துரைக்கவே இந்தச் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் கலாச்சார மாநாடு”.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை, சம நீதிப் பேரவை என்ற பெயர்களிலே ஆதிக்க சாதிச் சங்கங்களையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். அவரே சொல்வதைப் போல பிராமணர்கள் முதல் நரிக்குறவர் வரை இதில் இணைத்திருக்கிறார்களாம். இவர்களெல்லாம் தாழ்த்தப்பட்ட குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (பறையர்) சேர்ந்தவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். சொத்து பத்துக்கள் பெண்டு பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் ராமதாசை அடைக்கலம் தேடி வந்துள்ளார்களாம். இதை மேடையில் அறிவிக்கிறார், ராமதாசு.

தேவர் சாதியின் பெயரால் தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்கொடுமைக்குத் தலைமை தாங்கும் சாதிவெறியன் பி.டி.அரச குமார், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக முழங்கிய சங்கநாதம் இதுதான்;

வன்கொடுமை தடுப்புச் சட்டம் (PCR ACT) நீக்கப்பட வேண்டும்; (ராமதாசுக்கு மட்டும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.) தாழ்த்தப்பட்டவர்கள் நடத்துகிற காதல் நாடகம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நாடாள வேண்டும்; எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்; 2016- சட்டமன்றத் தேர்தலில் சின்ன அய்யா அன்புமணி ராமதாசு முதலமைச்சராக அமர வேண்டும்; அப்போது தான் வன்னியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் என்று ஐநா சபையே புகழ்ந்ததாம். பொது இடத்தில் புகைக்கக் கூடாது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் இவர் கொண்டு வந்த உலகிலேயே முன்னோடித் திட்டமாம். தமிழ்நாட்டுக்கு அவரை விட சிறந்த முதலமைச்சர் கிடைக்க மாட்டார் என்று புகழாதவர்கள் பாக்கி இல்லை. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பலகோடி சுருட்டியதாக அன்புமணி மீது வழக்கு உள்ளதை அக்கினி சட்டி பரம்பரையினர் யாருக்கும் நினைவில்லை போலும். பசுமைத்தாயகம் திட்டத்திற்காக ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பெறப்படும் நிதி எங்கே போகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. வன்னிய சங்கமும், பா.ம.கவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற இயக்கங்கள் என்பதைப் போலவே பேசப்பட்டது.

தேவர் சாதி வெறியன் பி.டி.அரச குமார் பேசும்போது “கடந்த அக்டோபர் 30-ல் தேவர் குருபூசை விழாவுக்கு வந்த அப்பாவி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதையும், மதுரை சிந்தாமணியில் தேவர் பூசைக்கு செல்பவர் போல் நடித்து ஏமாற்றி வேனுக்குத் தீ வைத்து பலர் கொலை செய்யப்பட்டதையும் எவனாவது கேட்டானா? தாழ்த்தப்பட்டவன் ஒருவன் தாக்கப்பட்டால் அவனுக்காக எல்லோரும் குரல் கொடுக்கின்றான். நான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு பயல் வெளியே நடமாடமுடியாது, வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. அய்யா (ராமதாசு) என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். காலம் கனியட்டும் அதுவரை காத்திரு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று வன்கொடுமையாக கொப்பளித்தார்.

“ஈழத் தமிழர் நலனுக்காகவும் அன்னைத் தமிழுக்காகவும், மதுவை ஒழிக்கவும் வாழ்கின்ற ஐயாவின் பின்னால் நாமெல்லாம் அணிவகுத்துள்ளோம். இத்தனை லட்சோப லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கிற இந்தக் கூட்டத்தில் ஒரு சதவீதமாவது சாராய வாடை இருக்குமா? சொல்ல முடியுமா” என்று கேட்டார் அரசகுமார். தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிலே குடிக்காத ஒரே தலைவர் மருத்துவர் ஐயா தான் என்று சான்றிதழும் வழங்கினார் அந்தக் குடிகார அரச குமார்.

ஆனால் சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடந்த அன்று பகலில் புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வந்தவர்கள் மரக்காணம் வழியாக வரக்கூடாது என்று போலீஸ் தடுத்தும் கூட கேட்காமல் அதே வழி வந்தவர்கள் வேன் கூரைமேல் அமர்ந்து குடித்து விட்டு பீர் பாட்டிலை (அது ஏவுகணையைப் போல இருக்கும்) சாலையில் நின்ற இளைஞர்கள் மீது எரிந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கத்தி, அரிவாள் உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் மரக்காணம் காலனிக்குள் சென்று வீட்டிலிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்ததாகத் பல்வேறு தினசரிகளின் செய்திகள் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரனின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இருந்த காவலர்களால் சமாளிக்க முடியாமல் கூடுதல் காவல்படை வரவழைக்கப்பட்டு தடியடியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பி.டி.அரச குமாருக்கு சாராய வாடையே இல்லையாம். குடித்திருப்பவனுக்கு வாசனை தெரியாது என்பது உண்மைதான்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

ராமதாசு ஹிட்லரின் வாரிசு என்றால் காடுவெட்டி ஜெ.குரு கோயபல்சு என்று சொல்லலாம். ஆனால் காடுவெட்டி, கோயபல்சையும் விஞ்சியவர் என்பது தெரிந்தது. குரு பேசியவுடன் கூட்டம் குத்தாட்டம் போட்டது.

காடுவெட்டியின் தலைமையில் தான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வன்னிய சாதிவெறி மாநாடு நடைபெற்றது. அவர் சிந்திய மாணிக்கப் பரல்களில் சில:-

“வன்னியன் ஆண்ட பரம்பரை. ஆனால் இன்று பன்னி மேய்க்கிற நிலையில் உள்ளான். சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் பரம்பரை. சத்திரிய குலம். சிவபெருமான் பார்வதி முன்னிலையில் பித்ரு முனிவர் நடத்திய யாகத்தின் போது நெருப்பில் போடப்பட்ட வன்னிக்குச்சியிலிருந்து உருவெடுத்தவன் தான் வன்னியன். முருகன், விநாயகன் நமது சகோதரர்கள். சீதை அக்கினிப் பிரவேசம் செய்தவள், பாஞ்சாலி அக்கினி பிரவேசம் செய்தவள். வன்னியன் அக்கினியிலிருந்து பிறந்தவன். அவனை யாராலும் அழிக்க முடியாது.”

“80 களில் ஐயா வன்னியர் சங்கத்தை தொடங்கி இருக்காவிட்டால் ஆந்திராவைப் போல் நாங்கள் எல்லாம் நக்சலைட்டுகளாக மாறியிருப்போம். ஐயா தான் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி எங்களை கட்டுப்படுத்தினார். ”

“தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியவர் மருத்துவர் ஐயா தான். நம்மிடமே அவர்கள் வேலையைக் காட்டுகின்றனர். ‘வாய்யா என்று கையைக் கொடுத்தால் உம் பொண்ணக் குடுன்றான்’ என்ன திமிர். நீ காதலி, உன் மாமன் பொண்ணக் காதலி, அக்கா பொண்ணக் காதலி, யாரு வேணாம்னு சொல்றா? அத விட்டுப்புட்டு எங்க பொண்ணக் கிட்ட வந்து காதல் நாடகம் ஆடுறியே விடுவமா? தருமபுரி கலவரத்துக்கு நாங்க காரணம்னு எல்லா கச்சிக்காரணும் சொல்றான். ஊடகங்களும் சொல்லுது. ஆனா நாங்களா காரணம், நியாயத்தை சொல்லணும்.”

‘வன்னியன் பொண்டாட்டி எனக்கு வப்பாட்டி’ என்கிறான். நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நான் காவல்துறைக்கு, சிறைக்கு அஞ்சாதவன். நான் பார்க்காத சிறையா? நான் எதற்கும் தயார். நான் என்ன மோளம் வாசிக்கிறவனா?”

“வன்னியன் படிப்பறிவில்லாத முட்டாள். தலித்களுக்கு இன்னைக்கு அரசாங்கம் எல்லா வசதியும் கொடுக்குது. 20% இட ஒதுக்கீடு ஐயா கேட்டார். கொடுத்திருந்தா இப்படில்லாம் நடக்குமா?”

“மாநாட்டுக்கு வர்றீங்க, கூட்டமெல்லாம் கூடுறீங்க ஆனா ஓட்டுமட்டும் போட மாட்டேன்றீங்க. இலவசத்தக் கொடுத்து இந்த திராவிடக் கட்சிக்காரங்க. நம்மள பிச்சைக் காரனா ஆக்கிட்டாங்க. யாருக்கு வேணும் உங்க இலவசம். எங்களுக்கு அதிகாரம் வேணும். ஆனா நம்ம வன்னியன் தேர்தல் வரைக்கும் நல்லா இருப்பான். தேர்தல் வரும் போது ஓட்டுக்கு 3000, 2000 வாங்குவான். ஒரு வீட்டுல 6 ஓட்டு இருந்தா 3 ஓட்டு 3000 தந்தவனுக்கு. 2 ஓட்டு 2000 தந்தவனுக்கு. ஒரு ஓட்டு மட்டும் வன்னியனுக்கு. ஒரு ஓட்டு வாங்கி வன்னியன் எப்படி ஜெயிப்பான். எனவே ஓட்டுக்கு காசு வாங்குறது கேவலம். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் (காடுவெட்டி குரு தலித் ஒழிப்புத்துறை அமைச்சராவாரோ?) வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”

கடைசியில் வன்னியன் ஆண்ட பரம்பரை என்பதற்கு காடுவெட்டி தரும் ஆதாரம் என்ன? பித்ரு முனிவர் யாகத்தில் பிறந்தவனாம். சிவன்- பார்வதி வழித்தோன்றல்களாம். இத்தகைய புளுகு பார்ப்பனப் புரட்டுக்கள்தான் வன்னியர் வரலாறு என்றால் பெரியார் மட்டும் இருந்திருந்தால் குருவை வெறித்துப் பார்த்தே விரட்டியிருப்பார். இதில் பெரியார் உயிரோடு இருந்த போது அவரை அதிகம் வன்னியர்கள் பின்பற்றினார்கள் என்று வேறு பெருமை பேசினார் குரு. உண்மைதான். இன்றும்  பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது. இதில் வன்னிய மக்கள் நக்சலைட்டுகளாக மாறுவதை ராமதாஸ் தடுத்து நிறுத்தினார்; வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தவுடன் வன்னிய இளைஞர்கள் நக்சல் கட்சிகளுக்கு போகவில்லை என்று பெருமை பேசினார். அதென்னவோ உண்மைதான்.இந்த ஆளும் வர்க்க எடுபிடித்தனத்துக்காக உருவாக்கப்பட்டதுதானே பாமக?

தலித்துகளைப் பற்றி குரு பேசியது வெளிப்படையான சாதித்தமிர். ஏதோ இவர்களது தயவில்தான் தலித்துகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது போலவும் அதை கெடுத்துக் கொண்டால் நடப்பது வேறு என்பதாக பச்சையாக மிரட்டி பேசினார். இதை தமிழ்த்திரைப்படங்களில் நம்பியார், பொன்னம்பலம் போன்றோர் கிராமத்து ஏழைகளைப் பார்த்து பேசுவது போலவே அச்சு அசலாக இருந்தது.

கடைசியாக மருத்துவர் ராமதாசு பேசினார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.

காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது.

நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது

தலித்துகளை வளர்த்துவிட்டது நான்தான். அவர்களுடைய பிரச்சனைகளுக்காக என்னை விட அதிகமாகப் போராடியவன் எவன் உண்டு. அப்படி இல்லாமலா அம்பேத்கார் விருது, தமிழ்குடி தாங்கி விருதெல்லாம் எனக்கு கொடுத்தார்கள். இப்போது பலர் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். “நீங்கள் தானே அவர்களை வளர்த்து விட்டீர்கள்” என்று.

தமிழ்நாட்டில் 2 ½ கோடி வன்னியர்கள் இருக்கிறோம். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நமது பின்னணியில் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரம் நம் கையில் இல்லை. அதிகாரம் நம் கையில் வேண்டும். தமிழ்நாட்டில் நாம் தான் பெரும்பான்மை சமூகம். ஆனால் சிதறுண்டு கிடக்கிறோம். திராவிடக் கட்சிகளின் பின்னால் சென்று அவர்களை வாழவைத்து விட்டோம். நம்பி ஏமாந்து விட்டோம். இனி ஒரு போதும் நாம் யாரோடும் கூட்டணி சேரப்போவதில்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் நம்மோடு கூட்டணி சேரலாம்.

என்னை சாதிவெறியன் என்று சொல்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைச் சொல்ல மறுக்கின்றன. நான் சாதிவெறியன் இல்லை. ஒரு சிறுபான்மை பிரிவினருக்கு அதிக சலுகை இருக்கிறது. சட்டம் அவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. காவல்துறை அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. அவர்கள் நாடகக் காதல் செய்கின்றனர். நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அப்படியானால் நல்லிணக்கம் எப்படி வரும்? வராது. அதனால் தான் கருத்து ஒற்றுமை உடையவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளோம். இந்தக் கூட்டணி பலமான கூட்டணி 82% பெரும்பான்மை கூட்டணி.

இவ்வாறு ராமதாஸ் பேசினார். அவர் பேசியது அனைத்தும் காவல் துறைக்குத்தான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார்.

தமிழ்நாட்டு ராஜபக்சே

ராமதாஸின் காதல் குறித்த விளக்கம் என்ன? அதாவது தைலாபுரம் தோட்டத்து வன்னிய பண்ணைகள் காங்கிரசிலிருக்கும் கிருஷ்ணசாமி போன்ற பண்ணைகளோடு காதல் வைத்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி ஒரு ஏழை வன்னிய இளைஞன் கூட ஒரு பணக்கார பாமக வன்னியர் பெண்ணை காதலிக்கக் கூடாது. இதைத் தவிர மற்ற காதல்களையெல்லாம் நாடகம் என்று எதிர்க்கிறார் ராமதாஸ். இதற்கு ஆதரவாக முசுலீம் மற்ற பிற ஆதிக்கசாதிகளை அணி சேர்க்கிறார். முசுலீம் இளைய தலைமுறை மாற்று மத, சாதியினரோடு காதலிக்க கூடாது என்பதற்கு தமுமுக மற்றும் தவ்கீத் ஜமாத் உட்பட பல்வேறு இசுலாமிய அமைப்புகள் ஆதரவு தரும். அந்த வகையில் இசுலாமிய அமைப்புகள் ஆதிக்க சாதிவெறியர்களின் அணியில்தான் இருக்கின்றனர் என்பதை முசுலீம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகமயமாக்க ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழலில் மண முறிவு என்பது அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குற்றம் சுமத்துவது நவீன மனுவாதம் அன்றி வேறென்ன? சாதியை வைத்துப் பிழைப்பு நடத்த துணிந்து விட்ட ராமதாசுக்கு தன் சாதியக் கூட்டமைப்பு தகர்வதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. எனவே தான் மோடியைப் போல திட்டமிடுகிறார்.

தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று கூறி பட்டம் வாங்கும் ராமதாசு காதலும் வீரமும் தமிழர் தம் பண்பாடு என்பதிலிருந்து வன்னியப் பெண்களுக்கு விலக்கு அளிக்க விரும்புகிறார்.

அடுத்து ஆதிக்கசாதி வெறியின் பெரும்பான்மையை வைத்து தலித் மக்களை அவர் எச்சரிக்கிறார். இதே பெரும்பான்மையை வைத்துத்தான் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இசுலாமிய மற்றும் கிறித்தவ மக்களை எச்சரிக்கிறது. அந்த வகையில் சாதிவெறியும், மதவெறியும் ஓரிழையில் ஒன்றிணைகின்றன. சாதி மாறி காதலித்தால் பண்பாடு கெட்டு விடும் என்ற வாதத்தை இந்துமதவெறியர்களும் மனம்குளிர ஆதரிப்பார்கள்.

காதலுக்கு எதிரி இல்லை. சாதிவெறியன் இல்லை. சமூக நீதிக்காகத்தான் பாடுபடு கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் ராமதாசு வன்னியன், தேவர், நாயுடு, கவுண்டர், நாடார் என்பவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்று கருதுகிறார்? ஆண்ட பரம்பரை தான் அது தான் மீண்டும் ஆளவேண்டும் என்றால் மன்னராட்சி முறையல்லவா வரவேண்டும். அதனால் தான் வாரிசுரிமை என்ற அடிப்படையில் அன்புமணி (சின்ன அய்யா) யைக் கொண்டு வந்திருக்கிறார். அதையும் அவருடைய அனைத்து சாதி ஜால்ராக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வன்னிய இளைஞர்களை நல்வழிப் படுத்துவதற்காக அவர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறை நடத்துவதாகச் சொல்கிறார். அதன் லட்சணம் மரக்காணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. வீரம் என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ‘சேரி’ (ராமதாசு சொன்ன வார்த்தை) மக்களை மேலும் மேலேறித் தாக்குவது, குடி போதையில் ரவுடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுவது, சேரிப் பெண்களைப் பெண்டாள்வது இது தான் இவர்களுக்கு கற்றுத்தரும் பண்பாட்டின் பின்னணி. 82 % பெரும்பான்மை சமூகம் 18% சிறுபான்மை சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று ராமதாசு சொல்வது வடிவேலுவே பொறுத்துக் கொள்ள முடியாத காமெடி. சட்டம் அப்படி PCR விஷயத்தில் துல்லியமாக வேலை செய்கிறதாம். என்ன கூத்து இது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்தால் காவல்துறை அந்தப் புகாரைப் பதிவு செய்வதே இல்லை. புகார் பதிவு செய்யப்படுவதற்கே-ஏன் பெற்றுக் கொள்வதற்கே- மிகப் பெரிய அழுத்தம் தரவேண்டும் என்பதே உண்மை. பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை சமரசம் செய்வதற்கே முயற்சி செய்கிறது.

இரண்டாவதாக அப்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்து எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளி விவரத்தைத் தேடினால் பதிவு செய்யப்படும் வழக்குகள்-மற்றும் தீர்ப்புகளின் நிலை மிகப் பரிதாப நிலையிலேயே உள்ளது.

எப்படி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு என்று அரசாங்கம் முன்வைக்கும் தண்டனைகள் ஒரு …யும் புடுங்கவில்லையோ, அது போலவே தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதாரமான சட்டங்களின் நிலையும் அதற்கு காரணம் பார்பனீயம் ஏற்படுத்திய சாதிய அடுக்குமுறையும் அதைப் பேணிப் பாதுகாக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் அரசியல் அதிகாரமும் தான்.

இந்தச் சூழ்நிலையில் அப்பட்டமான பிழைப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி மதிப்பிழந்து போன ராமதாசு கேடு கட்ட சாதி அரசியலைக் கையிலெடுத்து மறுபடியும் முதல் பரோட்டாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். இந்தக் கழுதைக்குப் பெயர் முத்துமாலையாம்.

மாநாட்டுக்கு அழைப்பு விடும் மன்னர் பரம்பரை

வன்னியர் புராணப் புளுகு

-செவத்தி வீரன்.

புதிய கலாச்சாரம் – மார்ச் 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

2

புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள்!
  2. மாணவர் எழுச்சி : போராடும் பண்பு வளரட்டும்!
  3. அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன்!
  4. கும்பமேளா : இந்தியாவின் புனிதமா, அழுக்கா?
  5. சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ்பிராடு!
  6. ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு!
  7. தீம் திருமணங்கள்! அழகின் வக்கிரம்!!
  8. கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம்!
  9. உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் மூன்று திரைப்படங்கள்
  10. சூரியநெல்லி: குற்றவாளிகளே நீதிபதிகளாக!
  11. அயோத்தி: ரியல் எஸ்டேட் மாபியாக்களாக சாமியார்கள்!
  12. நடைப்பிணங்கள் ஜாக்கிரதை!

புதிய கலாச்சாரம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)