Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 718

சோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்?

4

“மேற்கத்திய பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடம் பணம் இருக்கிறது, அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதனால்தான் அவர்களால் புதிய புதிய மருந்துகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. அந்த மருந்துகளே இல்லை என்றால் குறைந்த விலைக்கு கொடு என்று எப்படி கேட்பீர்கள்?”

“உழைக்காத சோம்பேறி கூட்டங்கள், 1 ரூபாய் இட்லிக்கு வரிசையில் நிற்கும் ஆட்டு மந்தைகள், இவங்களுக்கு எல்லாம் புற்றுநோய் சிகிச்சை கேக்குதோ” என்று வசை பாடுகிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

பல லட்சம் கோடிகளில் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்தான், ‘கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், அறிவியலை வளர்த்துச் செல்பவர்கள், மனித குலத்துக்கு தொண்டு செய்பவர்கள்’ என்று புகழ் பாடுகிறார்கள்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொண்டு செய்யும் இலட்சணம்தான் என்ன? இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் முறைக்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

கிளாக்சோ ஸ்மித்கிளைன் கார்ட்டூன்
கிளாக்சோ ஸ்மித்கிளைன் மருந்து விற்று ஈட்டும் லாபம் விண்ணைத் தொடுகிறது, மருந்தக ஆராய்ச்சிக்கான செலவுகள் பாதாளத்தில் வீழ்கின்றன. மக்கள் தூக்கில் தொங்குகிறார்கள்.

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நடத்திய மருத்துவ ஆராய்ச்சிகளில் 2,644 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 475 புதிய மருந்துகளை பயன்படுத்தி இந்திய நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 மருந்துகள் மட்டுமே இந்தியாவில் பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டவை.

உயிரிழந்தவர்களில் 80 பேர் மட்டுமே ஆராய்ச்சிக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவாக இறந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 2005 முதல் 2012 வரையிலான 7 ஆண்டு காலத்தில் மருந்து ஆராய்ச்சிகளுக்குட்படுத்தப்பட்ட 57,303 நோயாளிகளில் உயிரிழப்புகளை தவிர 11,972 மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட்டன எனவும், அவற்றில் 506 மட்டுமே ஆராய்ச்சி மருந்துகளால் ஏற்பட்டவை என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலர் கேஷவ் தேசிராஜூ நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.

பேயர் நிறுவனத்தின் ரிவரோக்சபன், நோவார்டிஸ் நிறுவனத்தின் (அதே புற்று நோய் மருந்து கிலிவெக் புகழ் அதே நோவார்டிஸ்) அலிஸ்கிரின் ஆகிய மருந்துகள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளன. ரிவரோக்சபன் ஆராய்ச்சி சோதனைகளில் 2008-ம் ஆண்டு 21 மரணங்களும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 125 மரணங்களும் பதிவாகியுள்ளன. இரண்டு கால கட்டங்களிலும் தலா 5 உயிரிழப்புகள் மட்டுமே ஆராய்ச்சி மருந்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நோவார்டிஸ் அலிஸ்கிரின் என்ற ஆராய்ச்சி மருந்தை எனலாப்ரில் என்ற மருந்தோடு ஒப்பிடும் ஆராய்ச்சி நடத்தியதில் 47 மரணங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் 1 மட்டுமே மருந்தினால் விளைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதிலும், அவர்களில் எத்தனை பேர் மருந்தின் நேரடி தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகை பிரிப்பதிலும் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்தால் இந்த புள்ளிவிபரங்கள் பனிப் பாறையின் விளிம்பு மட்டுமே என்பது தெளிவாகும்.

புதிய மருந்துகளை ஆய்வுக் கூடங்களில் விலங்கு மற்றும் மனித செல்களிலும், பின்னர உயிருள்ள விலங்குகளிலும் செலுத்தி பரிசோதிக்கப்பட்ட பிறகு மனிதர்கள் மீது அவற்றை செலுத்தி பரிசோதிக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டம் – ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கொடுத்து பரிசோதிப்பது; இரண்டாவது கட்டம்: குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டும் கொடுத்து பரிசோதிப்பது; மூன்றாவது கட்டம்: பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரவலாக கொடுத்து பரிசோதிப்பது. கூடவே மருந்து சந்தையில் விற்பனை ஆரம்பித்த பிறகு பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளுக்கான நான்காவது கட்ட பரிசோதனைகள் சில சமயங்களில் நடத்தப்படுகின்றன.

மருந்தக ஆய்வுகள்ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும் முதல் கட்ட ஆராய்ச்சி பரிசோதனைகளுக்கு பத்திரிகைகளிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டு பங்கு பெறுவோர் அழைக்கப்படுகிறார்கள். பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. வேறு வேலையின்றி பணத்திற்காக இத்தகைய அபாயங்களை இந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பரிசோதனையில் மருந்து உள்வாங்கப்படுதல், வளர்சிதை மாற்றம், உடலிலிருந்து வெளித்தள்ளப்படுதல் இவற்றை அளவிடுவதும், படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்து மருந்தின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத் தன்மையை அளவிடுவதும் செய்யப்படுகின்றன.

இரண்டாம் கட்டத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்பவர்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள். அவர்களுக்கு பணம், அல்லது இலவச மருத்துவ சிகிச்சை அல்லது இலவச மருந்து வடிவத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சி பரிசோதனைகள் மூலம் மருந்தின் பாதுகாப்பும் செயல்படும் திறனும் அளவிடப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கும் (நோயாளிகள்) சரி, ஆய்வு செய்பவர்களுக்கும் (மருத்துவர்கள்) சரி, எந்த நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது, எந்த நோயாளிக்கு வெறும் சர்க்கரை மாத்திரை தரப்படுகிறது என்று தெரிவதில்லை.

மூன்றாவது கட்ட ஆராய்ச்சிகள் பல லட்சம் நோயாளிகள் மீது உலக அளவில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மருந்தின் பாதுகாப்புத் தன்மை, திறன், மற்ற மருந்துகளுடன் சேரும் போது ஏற்படும் விளைவுகள், மோசமான பக்க விளைவுகள், கொடுக்க வேண்டிய பொருத்தமான அளவு போன்றவை தீர்மானிக்கப்படுகின்றன.

மருந்தக ஆராய்ச்சி - இந்தியா
பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு இந்தியா மருந்தக ஆராய்ச்சிக்கு கவர்ச்சிகரமான நாடாக விளங்குவது ஏன்?

உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப, (பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தேவைக்கேற்ப), இந்தியாவின் புதிய மருந்துகளுக்கான சட்டம் 2005-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஒரு மருந்துக்கான மருந்தக ஆராய்ச்சி சோதனைகளை மற்ற நாடுகளில் நடக்கும் போதே இந்தியாவிலும் இணையாக நடத்துவதற்கு அந்த சட்டத் திருத்தம் வழி செய்து கொடுத்தது. அதற்கு முன்பு மற்ற நாடுகளில் ஆராய்ச்சி பரிசோதனைகள் முடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியாவில் ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் வளர்ந்த நாடுகளில் மருந்தக ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒப்புதல் கிடைக்காத மருந்துகளை இந்திய மக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது. மேலும் மருந்தக ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகளில் செலவாவதை விட இந்தியாவில் சுமார் 50% தான் செலவாகிறது. இந்தியாவின் பெரும் மக்கள் தொகை, பரவலான மருத்துவமனை வலைப்பின்னல், திறமையான மருத்துவ ஊழியர்கள் இவை அனைத்தும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு (நோயாளிகளுக்கு) நடத்தப்படும் ஆராய்ச்சி பற்றிய விபரங்கள், எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள், ரகசிய காப்பு பிரச்சனைகள், உரிமைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட வேண்டும். ஆங்கிலம் தெரியாத நோயாளிக்கு அவரது தாய்மொழியில் விபரங்கள் தரப்பட வேண்டும். தரப்பட்ட விபரங்களை முழுமையாக படித்து புரிந்து கொள்வதற்கு போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். அவற்றைக் குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் பேசி முடிவு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவே மருத்துவர் நோயாளியை சந்திக்க வேண்டும். அதற்கு பிறகுதான் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட ஒப்புதல் அளிக்க வேண்டும். எந்த நேரத்திலும் காரணம் எதுவும் சொல்லாமல் ஆராய்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளவும் நோயாளிக்கு உரிமை இருக்க வேண்டும்.

மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

  • இது வரை நிரூபிக்கப்படாத மருந்துகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளனவா?
  • இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
  • இந்த ஆய்வு எத்தனை காலம் நடத்தப்படும்?
  • இதன் பக்க விளைவுகள் என்னென்ன?
  • என்னனென்ன அபாயங்கள் ஏற்படலாம்?
  • என்னென்ன ஆய்வக சோதனைகள் நடத்தப்படும்?
  • வேறு விதமான சிகிச்சைகள் உள்ளனவா?
  • மோசமான விளைவுகள் ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
  • தனிநபர் விபரங்களும் பதிவுகளும் ரகசியமாக வைக்கப்படுமா?
  • காப்பீடு உள்ளதா? இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு?
  • மருத்துவ நெருக்கடி ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு பரிசோதனையை நடத்தும் ஊழியர்களின் தொடர்பு எண்கள்.
  • ஒப்புதல் அளித்த அமைப்பின் செயலரின் தொடர்பு எண்கள்
  • ஒப்புதல் கையொப்பமிட்ட படிவம் நோயாளிக்குத் தரப்படுமா?
  • போக்குவரத்து, கூடுதல் மருத்துவ செலவுகள் தரப்படுமா?
  • ஊக்கத் தொகை விபரங்கள்
  • ஆராய்ச்சிப் பணி முடிந்த பிறகு மருந்து இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்கப்படுமா?
இந்திய மருத்துவமனை ஒன்றில்
இந்திய மருத்துவமனை ஒன்றில்

மருத்துவர்களை கடவுளாக கருதும் இந்தியாவில் நோயாளிகள் மருத்துவர் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை காட்டுவதையும், மருத்துவர் சொல்லும் எந்த ஆவணத்திலும் கையொப்பமிட தயாராக இருப்பதையும், மருத்துவர் சொல்வதை எல்லாம் செய்வதையும் பார்க்கலாம். மருந்தக ஆராய்ச்சிகளில் பங்கேற்கும் பெரும்பான்மை நோயாளிகள் அவர்களது மருத்துவர்கள் சொன்னதால் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். என்ன ஏது என்ற விபரங்களை நோயாளிகள் கேட்டு தெரிந்து கொள்வது அரிதாகவே நடக்கிறது.

மருந்து நிறுவனம் தருவதாகச் சொல்லும் புகழும் பணமும் பல மருத்துவர்களை கவர்கின்றன. அவை நோயாளிகளை வரைமுறையற்று ஆராய்ச்சிகளில் சேர்த்துக் கொள்வதிலும் சேர்ப்பதிலும், முழு விபரங்களை தெரிவித்து ஒப்புதல் பெறாமல் சேர்ப்பதிலும் கொண்டு விடுகின்றன.

ஆராய்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் மருந்து நிறுவனங்கள், ‘அவை தமது மருந்தினால்தான் ஏற்பட்டது’ என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வாடிக்கை. அப்படி நிரூபித்தால்தான் சிகிச்சை அளிப்பதற்கான செலவை ஏற்றுக் கொள்வோம் என்றும் சொல்கிறார்கள். நோயாளிக்கு ஏற்பட்ட சிக்கல் ஆராய்ச்சி மருந்து மற்ற மருந்துகளுடன் சேர்வதாலோ அதனுடன் நேரடியாக இணைக்க முடியாத இன்னும் பல காரணங்களாலோ ஏற்பட்டிருக்கலாம் எனும் போது தமது பொறுப்பைத் தட்டிக் கழித்து செலவைக் குறைப்பதுதான் மருந்து நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது.

மருந்தக ஆராய்ச்சிகளில் பல விதமான சமரசங்களும் சுரண்டல்களும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆராய்ச்சி நடத்தச் சொல்லும் மருந்து நிறுவனத்துக்கும் ஆராய்ச்சியை நடத்தும் மருத்துவருக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் நோயாளிக்கும் இடையே, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே, மருந்து நிறுவனத்துக்கும் ஒழுங்கு முறை அமைப்புக்கும், ஒழுங்கு முறை அமைப்புக்கும் மருத்துவருக்கும் இடையே என்று ஒவ்வொரு மட்டத்திலும் பணமும், நோயாளியின் நலனுக்குப் புறம்பான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன.

இலவச மருந்துகள், இலவச சிகிச்சை அல்லது பணம் கொடுப்பதன் மூலம் பலரை கவர்ந்து விடலாம். குறிப்பாக வசதி குறைந்த, படிப்பறிவற்ற ஏழை மக்களை முழு விபரங்களையும் பரிசீலிக்காமலேயே மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்ந்து கொள்ள தூண்டுவதும் ஆராய்ச்சி விதிமுறைகளிலிருந்து விலகல்கள், மீறல்கள், மாறுதல்கள் இவற்றை ஒழுங்கு முறை அமைப்பு கண்டு கொள்ளாமல் விடுவதும் பரவலாக நடக்கிறது.

தொலை தூரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருந்தக ஆராய்ச்சிகளில் சேர்க்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சி மருந்து இலவசமாக கொடுக்கப்பட்டாலும், சோதனைகளுக்கான கட்டணங்களும் போக்குவரத்து செலவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் பரிசோதனையில் கலந்து கொள்ளா விட்டால் செலவாவதை விட அதிகமாகவே செலவழிக்க நேரிடுகிறது. மலிவான, நிரூபிக்கப்பட்ட மருந்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற சோதனைகளையும், சிகிச்சைகளையும் தவிர்த்திருக்கலாம். ஆராய்ச்சி தேவைக்காக வாரா வாரம் அல்லது மாதா மாதம் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது நாட்டை மாற்றி, அவர்களது லாப வெறிக்கு நமது மக்களை பலியாக கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் தனியார் மய, தாராள மய, உலக மயமாக்கல் கொள்கைகளின் நோக்கம். அது சீரும் சிறப்புமாக நிறைவேறி வருகிறது என்பதைத்தான் மருந்தக ஆராய்ச்சி பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
2,644 died during clinical trial of drugs in 7 years – Govt to SC

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

13
மத்யமர்

மத்யமர்‘கல்கி’யில் சுஜாதா: மத்யமரைப் பற்றி ஒரு மத்யமர்

ங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. அவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக்கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்… இந்த மவுனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.

மத்யமர் (நடுத்தரவர்க்கம்)”

என்ற பீடிகையுடன் ‘கல்கி’ இதழில் ஏப்ரல் மாதம் முதல், வாரம் ஒரு சிறுகதை எழுதுகிறார் சுஜாதா. இதுவரை 8 சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

ஒவ்வொரு கதையின் மீதும் வாசகர் கடிதங்களைப் பிரசுரித்து அதற்குப் பரிசும் கொடுக்கிறது கல்கி. தோற்றத்தில் நடுத்தர வர்க்கத்தை எள்ளி நகையாடுவதைப் போல அமைந்திருக்கும் இந்தக் கதைகளை பெரும்பாலான வாசகர்கள் பாராட்டுகிறார்கள்.

தன்னுடைய வர்க்கம் கேலிக்குள்ளாக்கப்டுவதைக் கண்டு சீறாவிட்டாலும் சீராட்டுகிறார்களே இந்த வாசகர்கள். இது விநோதமாகவல்லவா இருக்கிறது! –என்பது ஒரு கேள்வி.

தன்னுடைய எழுத்தைத் தின்று தனக்குச் சோறு போடும் தன்னுடைய வர்க்கத்தையே சுஜாதா கேலி செய்கிறாரே, இதுஎப்படி. ஏன்?

பார்ப்பன, மேல்சாதி நடுத்தர வர்க்கத்தைமட்டுமே நம்பி நடத்தப்படும் கல்கி இதழ் இத்தகைய கதைகளை ஏன் பிரசுரிக்கிறது?

இப்படிப் பல கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு சுஜாதாவின் கதைகளுக்குள் நாம் செல்ல வேண்டும். வாசகர்கள் அனைவருமே இவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கதைகளின் சுருக்கத்தை முதலில் பார்ப்போம்.

ஒரு கல்யாண ஏற்பாடு

அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐயங்கார் பையனுக்கு அவனுடைய பெற்றோர் சென்னையில் பெண் பார்த்துப் பேசி முடிப்பதுதான் கதை. ‘மணமகள் தேவை’ விளம்பரத்தின் மூலம் அதே சாதியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் பெண் பார்க்கப் போகின்றனர் பையனின் பெற்றோர். பரஸ்பர பேச்சுவார்த்தைகளில் போலித்தனம் பொங்கி வழிகிறது. வரதட்சிணையும் இன்ன பிறவும் மிகவும் நாசூக்காகப் பேசி முடிக்கப்படுகின்றன. பெண் பார்க்கும் படலத்திற்கு புடவை கட்டிவந்த பெண் பையனின் பெற்றோர் கிளம்பும் போது சட்டை பாண்ட் போட்டிருக்கிறாள்.

வீட்டிற்கு வந்தபின் பையனின் அம்மா தன் கணவனிடம் “சுரேஷூக்கு கச்சிதமா பொருந்தும். அமெரிக்கால ஃபேஷனா இருக்கறதுக்கு தோதுப்படும்.”

“அதை அவர்கிட்ட சொல்ல வேண்டாமா?” கணவன்

“எதை”

“அமெரிக்காவிலே உன் பையன் நீக்ரோ பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு டைவோர்ஸ் வாங்கினதை!”

“நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை!”

பெண்ணின் தந்தை தன் மனைவியிடம்.

“அதைஅவாகிட்ட சொல்ல வேண்டாமா?”

எதை?”

“டெல்லியில ஒரு மாசம் உம்பொண்ணு அந்த பஞ்சாபிப் பையனோட…”

“நீங்க பேசாம இருங்கோ. அது முடிஞ்சு போன கதை….”

புது மோதிரம்

நவ நாகரீகத்தின் வாசனைகளுடன் வளர்க்கப்பட்டு அடுப்படி வாசனைக்கு வாழ்க்கைப்பட்ட நடுத்தர வர்க்கப் பார்ப்பனப் பெண் பத்மா தன் மகளை சினிமா நடிகையாக்க முயற்சிப்பது கதை. கணவனும் மனைவியும் மகளுடன் சினிமா இயக்குனரை அவரது நட்சத்திர ஓட்டல் அறையில் சந்திக்கிறார்கள். மகளுக்கு இணையாகத் தாயும் இளமையாக இருப்பதை பேச்சுவாக்கில் கொஞ்சம் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார் இயக்குனர். மகளை எப்படியாவது நடிகையாக்கிப் பார்க்க அவளுக்குள்ள வெறியை மனதில் குறித்துக்கொள்கிறார்.

அடுத்த முறை தன்னை சந்திக்க வரும் பத்மாவிடம் “உங்க விருப்பமில்லாம நான் எதுவும் செய்ய விரும்பலை. உங்களுக்கு இஷ்டம்னா கதவை உள்பக்கம் சாத்திக்கலாம். இல்லை. கதவு திறந்தே இருக்கு” என்று ‘கவுரவமாக’ தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் இயக்குனர். மகளை எப்படியும் நடிகையாக்கி விடுவது என்று முடிவு செய்கிறாள் பத்மா.

தர்ட்டி ஃபார்ட்டி

நஞ்சுண்டராவ் ஒரு பெங்களூர்வாசி. பெங்களூர் நகர வளர்ச்சிக் குழுமத்திலிருந்து மனை ஒதுக்கித் தருவதாக அழைப்பு வருகிறது. வரிசைப்படி மனை கிடைக்க பல வருடம் ஆகுமென்றும வேறு ஒரு பார்ட்டியிடமிருந்து குறைந்த விலையில் மனை ஒன்று வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டுகிறான் வளர்ச்சி குழும குமாஸ்தா சிவண்ணா. மனையையும் காட்டுகிறான்.

பிராவிடண்டு ஃபண்டு லோன் வாங்கி, மனைவியின் நகையை அடகுவைத்து, பெண் கல்யாணத்துக்கு சேமித்த தொகையையும் சேர்த்து அறுபதாயிரம் ரூபாயை சிவண்ணாவிடம் கொடுத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு மனைக்குப் போனால் அங்கே வேறொருவர் வேலி கட்டிக் கொண்டு இருக்கிறார. பார்த்த மனைக்குப் பக்கத்து மனைதான் வாங்கிய மனை. வாங்கிய மனையின் மையத்தில் ஒரு குன்று. பணம் திரும்ப வராது. கோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காது.

“நஞ்சுண்டராவின் சுவாச மூக்கு துடித்து பெரிதாக மூச்சு விடத் தொடங்கினார். முகம் சிவந்து கைநடுங்க அந்த சிவன்ணாவை…. சிவண்ணாவை அப்படியே ஒரு கடப்பாரையை எடுத்து அவன் மண்டையைப் பிளந்துரணும்”

மறுநாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய உடனே கடப்பாரையுடன் வெளியே கிளம்புகிறார் நஞ்சுண்டராவ். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கவலைப்பட்டு நடுங்கி அவரது மனைவியும் நண்பர்களும் அவரைத் தேடிக் கிளம்பும் நேரத்தில் கையில் கடப்பாரை, கிழிந்த சட்டையுடன் எதிர்ப்படுகிறார்.

“அய்யோ, ஏன் இப்படி மிரள மிரளப் பார்க்கிறீங்க? என்ன பண்ணீங்க?” மனைவி.

“அந்தப் பாறைய கடப்பாறையால் தட்டிப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா ஒடச்சுரலாம். நாளையிலேர்ந்து நீயும் வா கோதாவரி ஒத்தாசைக்கு. ரெண்டு பேருமா சேர்ந்துண்டு உடைச்சுரலாம்”

அறிவுரை

லஞ்சம் கதவைத் தட்டுகிறது பஞ்சம் ‘கதவைத் திற’ என்று கிசுகிசுக்கிறது. நெஞ்சம் தடுமாறுகிறது. தயக்கத்துடன் கதவைத் திறக்கிறது கதை.

ஒரு பைசா லஞ்சம் வாங்காமல், ஆபீஸ் ஜீப்பை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தாமல், கஷ்டப்பட்டும் நேர்மையாக வாழ்ந்த தந்தையின் மகன் என்ற முறையில் தீயாய் இருக்கிறான் ராமலிங்கம். அவன் மனைவி ராமலிங்கத்தையும் லஞ்சம் வாங்கச் சொல்கிறாள்.

ராமலிங்கத்திற்கு மனப்போராட்டம், அப்பாவை சந்திக்கச் செல்கிறான்.

“ஒரு ஆளு பில்லு பாஸ் பண்ணினா எழுபதாயிம் தர்றதாச் சொல்றான்… நான் கடன்லே இருக்கேன். மீனாட்சி வாங்கு வாங்குன்னு போட்டு உலுக்கறா… ஆனா லஞ்சம் வாங்க இஷ்டமில்லை. உங்களப் பத்தி நெனப்பு வர்றது. எப்படிப்பா சமாளிச்சீங்ங்க?… எப்படி உங்களுக்கு அத்தனை மனபலம் இருந்திச்சு? அந்த ரகசியத்தைச் சொல்லுங்கப்பா.”

அப்பா சற்றுநேரம் மௌனமாக இருந்தார். “சொல்றேன் கிட்ட வா” என்றார். மெல்லக் குரலை தாழ்த்தி “லஞ்சம் வருதுன்னா வாங்கிடு” என்றார்.

“என்னப்பா சொல்றீங்க?” என்றான் ராமலிங்கம் அதிர்ச்சியடைந்து.

“ஆமாடா… நான் வாழ்நாள் முழுதும் லஞ்சம் வாங்காம என்னத்தைக் கண்டேன். பரம்பரை வீட்டை வித்துட்டு புதுசா வீடு கட்டி முடிக்காம ஒழுகுது. உங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியலை. இத்தனை பேர் இருக்கீங்க. மகனுக, மகளுக, யாரும் என்னைத் தீண்டறதில்லை. நீயே கடைசியா பாரு! மூணு வருஷம்! எங்கிட்ட மட்டும் லஞ்சம் வாங்கிப் பணம் காசு இருந்தா இப்படி உதாசீனம் பண்ணுவீங்களா? சொல்லுப்பா. அந்தக் கதி உனக்கு வராமலிருக்க வாங்குப்பா. தாராளமா வாங்கு . உன் பொண்டாட்டி சொல்றதுதான் சரி. வாங்கு.”

ஜாதி இரண்டொழிய:

பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் அதிகாரி நரசிம்மன் ‘தகுதியுள்ள’ உயர் சாதிக்காரர்களுக்கு வேலை தரமுடியாமலும், ‘தகுதியற்ற’ தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை தரவேண்டிய சூழ்நிலையையும் எண்ணிப் பொருமுவதுதான் கதை.

அந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தவர்களில் ரமேஷ் எல்லாவற்றிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்தித்திருந்தும் வேலை கிடைக்காத, ஒரு மகன்; நான்கு சகோதரிகளுக்குத் திருமணம் செய்து தரவேண்டிய பொறுப்பில் உள்ளவன். இருந்தும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து ஒன்றை அவனுக்கு ஒதுக்கி வேலைதர அரசு விதியும், தேர்வுக்குழுவில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி அதிகாரியும் தடையாய் இருக்கிறார்கள்.

அடுத்து வந்த ஷீலாவிடம் பெயருக்கு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாகரிக மிதப்பும், பணிவின்மையும், தகுதியின்மையும் காரணமாக அவளுக்கு வேலை தரவேண்டாமென்று நினைக்கிறார் நரசிம்மன்.

அவள் போனதும் “வாட் டு யு ஸே மிஸ்டர் சித்தார்த்தன். இவளுக்கு வேலை கொடுக்க வேண்டுமா?” என்றார் நரசிம்மன் .

“ஏன் அதில் என்ன சந்தேகம்?”

“இந்தப் பெண் பாக்வார்டு கிளாஸா? தந்தை சென்ட்ரல் கவர்ன்மென்ட் லாபில் டைரக்டர். ஸ்விட்ஸர்லாந்து எல்லாம் சுற்றிவிட்டு வந்திருக்கிறாள்.”

சித்தார்த்தன் “அந்தப் பெண்ணின் காஸ்ட் சர்டிபிகேட்டைப் பாருங்கள்” என்றார். ஷீலாவின் பெயருக்கெதிரில் ஸூட்டபிள் என்று எழுதிக் கையெழுத்திட்டார் நரசிம்மன். அவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து காரில் கிளம்பும்போது ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். ஷீலா தன் தந்தையின் அலுவலகக் காரில் கிளம்பிச் சென்று கொண்டிருந்தாள்.

சாட்சி:

மளிகைக் கடைக்கும், கோயிலுக்கும் போவதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் சமூகத் தொடர்பு இல்லாத சரளா என்ற இளம் மனைவி ஒருநாள் மளிகைக்கடைக்கு கடுகு வாங்கப் போனபோது கண்ணெதிரே இரண்டு ரவுடிகள் பெட்டிக் கடைக்காரரைக் கொல்வதைப் பார்த்து விடுகிறாள். பீதியடைந்து வீட்டுக்கு ஓடுகிறாள். மாமியார், மாமனார், கணவன், மைத்துனன் அனைவரும் கூடி யோசனை செய்கிறார்கள்.  போலீசு வரும்போது என்ன பதில் சொல்வது என்பதே பிரச்சினை.

“ஒன்றுமே தெரியாது என்று சொன்னால் போலீசு விரோதம்; சாட்சி சொன்னால் ரவுடி விரோதம்; பேசாமல் வீட்டைக் காலி செய்துவிடலாம்” –என்று பல யோசனைகள். கடைசியில், மளிகைக் கடைக்குப் போனேன். ஆனால் கொலையைப் பார்க்கவில்லையெனச் சொல்வது என்று முடிவாயிற்று.

சப்-இன்ஸ்பெக்டர் வருகிறார். கேட்கிறார். எல்லா திட்டங்களும் தவிடுபொடியாக சரளா தான் பார்த்ததைப் பார்த்தபடியே விளக்குகிறாள்.

நீலப்புடவை, ரோஜாப்பூ:

மோகனரங்கம்-பத்மாவின் 18 வருட மணவாழ்க்கையில் சிறிது சிறிதாக இடைவெளி விழுந்து கடைசியில் அவர்கள் அன்றாடம் பேசிக் கொள்வதே எண்ணி சில வார்த்தைகள்தான் என்று ஆகிவிட்டது. சண்டையோ, விரோதமோ இல்லை. மெதுவாக அதிகரித்துவிட்ட இடைவெளி. இப்படிப்பட்டவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்த பேனா நண்பர்களை அறிமும் செய்யும் ஒரு அமைப்பை மோகனரங்கத்துக்கு சிபாரிசு செய்கிறான் சுதர்சன். பேனா நண்பராகக் கிடைத்த ஒரு பெண்ணும் மோகனரங்கமும் தங்கள் பிரச்சினைகளை, விருப்பு வெறுப்புகளை கடிதம் மூலம் பரிமாறிக் கொள்கிறார்கள். பேனா நண்பர்கள் சந்திக்கக் கூடாது என்ற விதியை மீறி சந்திக்க முடிவு செய்கிறார்கள். இவன் நீலச்சட்டையிலும் அவள் நீலப்புடவையிலும் கையில் ரோஜாவுடன் பூங்காவில் சந்திக்க ஏற்பாடு. குறிப்பிட்ட நேரத்தில் அவள் பூங்காவின் ஒரு வாயிலிலும் அவன் மறுவாயிலிலும் காத்திருந்து சந்திக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். நேர்ந்துவிட்ட தவறினால் சோர்ந்து போய் வீடு திரும்பும் மோகனரங்கம் தற்செயலாய் மனைவியின் அறையைப் பார்க்கிறான். அங்கே அவளது கட்டிலின் மேல் நீலப்புடவையும் ஒரு ரோஜாவும்.

மற்றொருத்தி:

தன் கணவன் சின்னவீடு வைத்திருப்பதாக தம்பி சுப்புராஜூ சொன்னபோது சாரதாவுக்கு அதிர்ச்சிக்குப் பதில் வருத்தமே மேலிட்டது. ஆனால் என்ன செய்வது என்ற கேள்விதான் அவளை அலைக்கழித்தது. “தனியாக வாழ முடியுமா என்னால்?” –தன் மாமனார் மாமியாரிடம் சென்று முறையிட முடிவு செய்தாள். மாமனார் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில். மாமியாரிடம் சுமையை இறக்கினாள். “எனக்கு ஒரு வழி சொல்லுங்க” என்று கேட்டாள்.

மாமியாரோ எல்லா ஆண்களும் ஆடி அடங்கிச் சாயும்போதுதான் மனைவிக்கு விசுவாசமாக இருப்பார்களென்றும் தன்னுடைய அனுபவமும் அதுதான் என்றும் புத்திமதி சொல்லி அனுப்புகிறாள்.

****

மத்யமர்
2010 – உயிர்மையின் சுஜாதா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள்

ல்கியால் ‘வாசகர்கள்’ என்றும், சுஜாதாவால் ‘விசிறிகள்’ என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் ‘மார்க்கெட்’ என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பீற்றிக் கொள்ளும் ஒழுக்க நெறிமுறைகள் நாளாக ஆகத் தேய்ந்து கட்டெறும்பாகி வருகின்றன. மத்யமரும் மத்தியம வர்க்கத்தின் பிரதிநிதியுமான சுஜாதா இதைத்தான் சித்தரிக்கிறார்.

ஆளும் வர்க்கத்தின் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் செல்லப்பிள்ளையாகவும் இருந்து ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் சேர்த்து, மிகுந்த தேர்ச்சி நயத்துடன் நடுத்தர வர்க்கம் தயாரித்துக் கொடுத்த நல்லொழுக்க நெறிப்பட்டியலை ‘காலத்திற்கொவ்வாதது’ என ஆளும் வர்க்கம் புறங்கையால் தள்ளுகிறது. ‘நான் கை நீட்டும் திசையில் தான் சொர்க்கம் இருக்கிறது; நான் நடப்பது தான் அதற்குண்டான பாதை; நான் அதற்குக் கையாளும் தகிடுதத்தங்கள்தான் காலத்திற்கேற்ற தருமம்” என்று மிட்டாதாரைப் போல ஆளும் வர்க்கம் முன்னே நடக்ககிறது. அடைப்பக்காரனைப் போல நடுத்தர வர்க்கம் பின்னால் ஓடுகிறது.

கண்மண் தெரியாத இந்த ஓட்டத்தில் நீதி, அநீதி, நியாயம், அநியாயம், ஒழுக்கம், கற்பு, நேர்மை, நன்றி, வீரம், தியாகம், பாசம், காதல் என்று ஆயிரம் கற்கள் கொண்டு நடுத்தர வர்க்கம் கட்டிய நல்லொழுக்க நெறிமுறைக் கோட்டை இடிந்து தவிடு பொடியாகி புழுதியாய் பறக்கிறது. இப்படி ஓட விரும்பாத சிலர் நின்றுவிட்டார்கள். பலர் ஓட முடியாததால் அங்கலாய்க்கிறார்கள். ஓடுபவர்கள் ஓட்டத்தினூடே ‘ஆத்மசோதனை’ செய்கிறார்கள். இத்தகையதொரு ஆத்ம சோதனைதான் சுஜாதாவின் ‘மத்யமர்’.

கல்யாண ஏற்பாடு கதையின் பெற்றொர்களின் போலிப் பகட்டு, நிற்குமிடத்தில் நிறைவு கொள்ளாத நடுத்தர வர்க்கத்தின் மேலேறத் துடிக்கும் நிரந்தரமான வெறியைக் காட்டுகிறது. அந்தஸ்து விஷயத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள் ஒழுக்கம் என்று வரும்போது, இருப்பதை இல்லாதது போலக் காட்டிக்கொள்வது தான் விநோதம்! தனது மகன் ஏற்கனவே ஒரு கருப்பின பெண்ணை மணந்து விவாகரத்து செய்ததை வெளிப்படையாகச் சொல்லவும், தனது பெண் ஒரு பஞ்சாபி இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்ததைச் சொல்லவும் பிள்ளையின் பெற்றோரையும் பெண்ணின் பெற்றோரையும் தடுத்தது எது? திருமணத்திற்கு முன் உறவு கூடாதென்ற தங்களது பழைய மதிப்பீட்டின் மீது உள்ள நம்பிக்கையா? இல்லை. நம்பிக்கை, நாணயமான நடவடிக்கையையல்லவா கோருகிறது! இந்த நம்பிக்கைத் துரோகத்தின் காரணம் பழைய மதிப்பீடுகளைப் பெருங்காயப் பாண்டமாக வைத்துக் கொள்ளும் போலித்தனம். சக மனிதனை ஏய்ப்பது குறித்து சிறிதும் குற்றவுணர்வு கொள்ளாத ஒரு முதலாளியின் வியாபார நீதி.

புது மோதிரம் கதையின் தாய்க்கு தான் சோரம் போவது குறித்து கணவனை ஏமாற்றுகிறோம் என்ற உறுத்தல் சிறிதும் இல்லை. பகட்டான வாழ்க்கை எனும் கனவு மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது. அந்தக் கனவை நனவாக்கிக்கொள்ள நனவுலகின் எந்த விதிமுறைகளையும் மீற அவள் தயார். கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கட்டியிருக்கும் நுகர்ப்பொருள் ஜிகினா வேடத்தில் மயங்கி வரும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிதான் பத்மா. நிர்வாக இயலின் தாரக மந்திரமான ‘காரியங்களை சாதிப்பது’ (To Get Things Done) அதற்கான வழி முறைகளுக்கு பூரணசுதந்திரம் வழங்குகிறது. லஞ்சம், மோசடி எந்த ஆயுதத்தையும் பிரயோகித்து காண்டிராக்டைப் பெறுபவன்தான் திறமையான நிர்வாகி. ஒழுக்கம், விதிமுறைகள் போன்ற அநாவசியமான வேகத்தடைகளை முதலாளிகள் விரும்புவதில்லை. மகளைக் கதாநாயகியாக்கிப் பார்க்கத் துடிக்கும் தாய்க்கு கற்பு, ஒழுக்கம் போன்றவை கூட வேகத்தடைகளாகிப் போனதில் வியப்பில்லை.

தர்ட்டி பார்ட்டி நஞ்சுண்டராவ் நடுத்தர வர்க்கத்தின் இயலாமையின் பிரதிநிதி. ஏமாந்த பின் என்ன செய்வது? கோபத்தை மனைவி மீது அல்லது குழந்தைகள் மீது காட்டலாம். இரண்டையும் செய்ய விரும்பாத நாணயமிக்க கோழையான நஞ்சுண்டராவின் கடப்பாரை, பாறை மீதுதான் வேகத்தைக் காட்டுகிறது: ஆயிரக்கணக்கான சிவண்ணாக்கள் – நடுத்தர வர்க்கம் என்ற முறையில் நஞ்சுண்டராவின் உறவினர்கள் – அதிகார வர்க்க மலையாக இறுகியிருக்கிறார்களே அந்த மலையின் மீது, பாறையை வேண்டாம் பார்வையைத் திருப்பக் கூட நஞ்சுண்டராவால் முடியாது. ஏனென்றால் தனது காணிநிலம், தென்னை மரத்துக்கு அப்பால், தனது காம்பவுண்டு சுவருக்கு வெளியே உலகம் என்று சென்று இயங்கிக் கொண்டிருப்பதையே நடுத்தர வர்க்கம் அங்கீகரிப்பதில்லை. கண்டுகொள்வதுமில்லை. நஞ்சுண்டராவின் கடப்பாறை அவரது பிளாட்டுக்கு வெளியே நிச்சயம் போகாது.

லஞ்சம் வாங்கு என்ற அறிவுரை சொல்லும் ராமலிங்கத்தின் தந்தை இன்றைய நரை விழுந்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. உலகம் கெட்டுப் போனது பற்றி அவர்கள் பிரலாபிப்பார்கள். உலகத்தை மேலும் கெடுப்பதா அல்லது தன் பங்குக்கு மட்டுமாவது கெடுக்காமலிருப்பதா என்று வாரிசுகள் கேள்வி கேட்கும் போது ஊரோடு ஒத்து கெடுக்கும்படி உபதேசம் செய்வார்கள். சமூக நோக்கம் அல்லது செயல்பாடு ஏதுமின்றி தன்னளவில் யோக்கியமாக நடந்து பொருளாதார ரீதியாகத் தோற்றும் போன தந்தை கடந்த காலத்தில் தான் தவறு செய்து விட்டதாக நினைக்கிறார். மிரட்டல் மூலம் சிறுவர்களிடம் நிலை நிறுத்தப்படும் ஒழுக்கம் அவர்கள் இளைஞர்களானவுடனே, பெரும்பாலும் சிதறிவிடுவதைப் போல லஞ்சம் வாங்காமல் இருந்ததற்கு அவர் எதிர் பார்த்த ‘வெகுமதி’ கிடைக்காததால் மகனை வாங்கச் சொல்லி அறிவுரை சொல்கிறார் தந்தை.

சுஜாதாமற்ற கதைகளில் பாத்திரங்களிலிருந்து விலகி நின்று சித்தரிப்பதைப் போலத் தோற்றம் தரும் சுஜாதா ‘சாதி, இரண்டொழிய’-வில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தேர்வுக் குழுத்தலைவர் நரசிம்மனாகவே மாறுகிறார். கதையினுள்ளே நரசிம்மனுக்கும் சித்தார்த்தனுக்கும் நடக்கும் விவாதத்தில், பாப் வெட்டிக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணைப் பற்றிய சித்தரிப்பில் இட ஒதுக்கீட்டின் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்ற ‘தாழ்ந்த’ சாதியினர்மீது பார்ப்பன நடுத்தர வர்க்கம் கொண்டுள்ள கோபமும், அருவெறுப்பும் விகாரமாகத் தலை நீட்டுகின்றன.

பார்ப்பனப் பையன் ரமேஷ் முனிசிபல் குழாயில் தண்ணீர் குடிப்பதும், ஷீலா சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாக இண்டர்வியூவுக்கு வந்து இறங்குவதும் வக்கிரச் சித்தரிப்பின் எல்லைகள். அறிவுத் திறன் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டு ‘என்னய்யா தேசம் இது?’ என்று அலுத்துக் கொள்ளும் பார்ப்பன நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி நரசிம்மன். சொகுசு வாழ்க்கை தேடி அமெரிக்கா போனது என்ன தேசப்பற்று? தங்களது ஒழுக்க சீலத்திற்கு தங்களது அறிவுத்திறனையே உத்திரவாதமாகக் காட்டுவது நடுத்தர வர்க்கத்தின் பழக்கம். அறிவுத்திறனும் ஒழுக்கசீலமும் ஒன்றோடொன்று கைகோர்த்து செல்வது அபூர்வம் என்பதற்கு நரசிம்மன் ஒரு உதாரணம்.

கண்ணால் பார்த்த கொலைக்கு சாட்சி சொல்வதற்குக் கூட அஞ்சும், மறுக்கும் நடுத்தர வர்க்கம் சமூகத்திலிருந்து விலகி நிற்கும் அதன் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கொலை நடந்து விட்டதே என்று பதறுவதை விட அதை நாம் பார்க்க நேர்ந்ததே என்று பதறுவதும், அந்த வட்டாரத்திலிருந்தே, வீட்டை காலி செய்வதன் மூலம் சமூகத்தின் எல்லாவிதக் குறுக்கீடுகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிடலாம் என்று கனவு காண்பதும், சட்டம் அறிந்த அதன் அசட்டு வீரம் காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் கரைவதும் மத்தியமரின் கோழைத்தனத்திற்கு மட்டுமல்ல சமூக விரோதப் போக்கிற்கும் சாட்சியங்கள்.

நீலப் புடவை ரோஜாப்பூவில் கணவன் மனைவியிடையே தோன்றி வளர்ந்துவிட்ட இடைவெளியை நிரப்ப அவர்களில் ஒருவர் முயலவில்லை என்பது மட்டுமல்ல, மூன்றாமவரின் உதவியுடன் அதைத் தீர்த்துக்கொள்ளவும் அவர்களது ‘கவுரவம்’ இடம் தர மறுக்கிறது. ஆனால், பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளைக் கண்டுபிடிக்கவும் ஒருவருக்கொருவர் ‘காகித துரோகம்’ செய்து கொள்ளவும் கவுரவம் தடையாயில்லை. பெண்ணடிமைத்தனம், மாறிவரும் சமூகச் சூழலில் பெண்ணின் உரிமைகளை அங்கீகரிக்கத் தயங்கும் ஆணாதிக்கம், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் கோழைத்தனம் ஆகியவை படித்த நகர்ப்புற ‘மத்யமரின்’ குணநலன்கள். கூட்டுக் குடும்பங்களில் குரலை உயர்த்தி குடும்ப முரண்பாடுகளை ‘தீர்க்கும் பாட்டனின் வேலையை இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் செய்து வருகின்றன. தீர்க்கப்படாத முரண்பாடுகளின் விளைவாய் உறவுகள் அழுகி வருகின்றன.

மற்றொருத்தி தன் கணவனின் வாழ்வில் குறுக்கிட்டு விட்டதை ஒரு வேலைக்காரனுக்கேயுரிய விரக்தியுடனும் ஆத்திரத்துடனும் விழுங்கிக் கொள்கிறாள் மனைவி. எதுவாயிருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய குடும்பத்தின் புனிதம் பற்றிய மாயை, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் போது நடுத்தர வர்க்கம் முதுகில் சுமந்து வந்த பெண்ணடிமைத்தனம் பற்றிய கோட்பாடுகள் அனைத்துமாகச் சேர்ந்து மனைவியைக் கட்டிப் போடுகின்றன. மாமியாரின் உபதேசம் முடிச்சை மேலும் இறுக்குகிறது. அந்த ‘இன்னொருத்தி’யும் நடுத்தர வர்க்கம் என்பதுதான் எழுதப்படாத உண்மை.

***

“விசயம் தெரியாதவன் முட்டாள்: தெரிந்தும் மவுனமாக இருப்பவன் கிரிமினல்” என்றார் பெர்டோல்டு பிரெக்ட், என்ற ஜெர்மன் நாடகாசிரியர். நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நடைபெற்ற நூரன்பர்க் விசாரணையில் ஹிட்லர் அரசில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்து லட்சக்கணக்கான யூதர்களையும், ஜனநாயகவாதிகளையும் படுகொலை செய்தவர்கள் விசாரிக்கப்பட்டபோது “நாங்கள் அரசு உத்தரவை நிறைவேற்றினோமே தவிர இந்தக் கொலைகளில் எங்களுக்கு நேரடிப் பங்கு இல்லை; நாங்கள் நாஜிகளும் இல்லை” என்று வாதிட்டார்கள். தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்ற அவர்கள் சாதித்த மவுனம் மன்னிக்கப்படவில்லை.

இந்த நடுத்தர வர்க்கத்தைத்தான் ‘மவுனப் பெரும்பான்மை’ என்று குறிப்பிடுகிறார் சுஜாதா. உண்மையில் மவுனப் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள்; அவர்களுடைய மவுனம் அறியாமையின் விளைவு; நடுத்தர வர்க்கத்தின் மவுனமோ காரியக்காரனின் மவுனம்.

ஆனால் எழுத்தாளர்கள் பலரும், பத்திரிக்கைகளும் மக்கள் என்று குறிப்பிடும் போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைத்தான் அர்த்தப்படுத்துகிறார்கள். ஏனெனில் இந்த மந்தைதான் விருப்பு வெறுப்புகள் இன்ப துன்பங்களை அணுகி ஆய்ந்து எழுதுவதின் மூலம் இவர்களைச் சொறிந்து விடுவதுடன் தமக்குத் தாமே சொறிந்துவிட்டுக் கொள்கிறார்கள் இந்த மத்தியமர்கள்.

நடுத்தர வர்க்கத்தின்அருமை பெருமைகளைப்பற்றி இவர்கள் அள்ளிவிடும் சரக்குகளுக்கு அளவே இல்லை. ‘படித்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை; அது ஒரு சாக்கடை என்பதால் இறங்கத் தயங்குகிறார்கள்’ என்பது திண்ணை தூங்கிகளின் பத்திரிக்கையான துக்ளக்கின் கருத்து. இதில் அங்கலாய்க்க எதுவும் இல்லை. ஓட்டுச் சீட்டு அரசியலின் ஒப்பீட்டளவிலான நிச்சயமின்மையைக் கூட நடுத்தர வர்க்கத்தால் சீரணிக்க முடிவதில்லை. அது எதிர்பார்க்கின்ற உத்திரவாதங்கள் அங்கே கிடைப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. ஒரு வேளை அரசியல் சூதாட்டக் களத்தில் இவர்கள் இறங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள், சுஜாதாவின் 8 கதைகளையும் மனதில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் – இவர்களுடைய வரவு அரசியல் ஒழுக்கத்தை முன்னேற்றிவிடுமா என்று.

நடுத்தர வர்க்கம் நிரந்தரமாக ஏணிப்படிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தாலும், தரை சமீபத்தில் இருந்தாலும் அதன் சிந்தனை, ஏணியின் உச்சிப்படியில் தான் இருக்கும். மேலே ஏறும் மோதலில் தள்ளிவிடப்படுவர்களையும் தடுமாறி விழுபவர்களையும் பற்றி அவர்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. இந்தக் கசப்பான உண்மையின் காரணமாகத்தான் தங்களால் ஏற்றிப் போற்றிக் கூறப்பட்ட ஒழுக்க நெறிகளை சிறிதும் கூச்சமின்றி அவர்கள் உதறுகிறார்கள். சக மனிதனை மனிதனாகக் கருதாமல் பயன்படுத்திவிட்டுத் தூர எறியக்கூடிய பொருளாக நினைக்கிறார்கள். தங்களது இந்தச் சரிவிற்கு நியாயமும் கற்பிக்கிறார்கள்.

மத்தியமரின் பலவீனங்களை எழுதப் புகுந்த சுஜாதாவின் ‘நேர்மையை’ப் பாராட்ட முடியுமா? இயலாது. பார்ப்பனியக் கலாச்சாரத்தின் சில கூறுகளை கேலி செய்யும் எஸ்.வி.சேகரைப் போல, தன்னைத்தானே கேலி செய்து கொள்ளும் ‘சோ’ வைப்போலத்தான் சுஜாதா தன்னுடைய வர்க்கத்தைக் ‘கேலி’ செய்கிறார். இந்தக் கேலி வாசகர்களைக் கூனிக் குறுகச் செய்ய வேண்டும். தங்களது பண்பாட்டின் இழிவுகுறித்து வெட்கித் தலைகுனியச் செய்யவேண்டும். ஆனால் சுஜாதாவே நடுத்தர வர்க்கத்தின் பண்பாட்டு சீரழிவுக்காக வெட்கப்படவில்லை; சீரழிவைப் பிரதிபலிக்கிறார் அவ்வளவுதான்.

ஆனால் வாசகர்களோ சுஜாதாவைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சறுக்கி விழும் ஒவ்வொரு பாத்திரமும் அவ்வாறு விழ நேர்ந்ததற்கான காரணங்களை தத்தம் போக்கில் வியாக்கியானம் செய்கிறார்கள். மற்றப்படி வாழ்க்கை சீராக, அமைதியாகச் செல்வது குறித்து மகிழ்ந்து கொள்கிறார்கள்.

பரிவும், அக்கறையும், நல்லெண்ணமும் மருந்துக்குக் கூட இல்லாமல் ஆனால் இருப்பதைப் போன்ற ஒரு முகத்தை, அணிந்துகொண்டு பக்கத்து வீட்டுக்காரரை நலம் விசாரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் போல – சுஜாதா எழுதுகிறார்; கல்கி பிரசுரிக்கிறது. வாசகர் படிக்கிறார். பிறகு ‘சாட்சி’ எழுதிய சுஜாதா ஒரு அவசர நிலைவரும் போது சீரங்கத்து அம்மா மண்டபம் படித்துறை பற்றி எழுதிக் கொண்டிருப்பார் அல்லது அவசரநிலை வராதபோதோ கலைஞர் பிறந்த நாள் விழாவில் வாழ்த்துறை வழங்கிக் கொண்டிருப்பார். ‘கல்யாண ஏற்பாடு’ பிரசுரித்த கல்கி பிட்ஸ்பர்க் பார்ப்பனர்களின் பக்தி சிரத்தை பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிடும். வாசகர் கல்கியை எடைக்குப் போட்டுவிடுவார்; அல்லது சுஜாதா கதையை மட்டும் கிழித்து பைண்டிங் செய்து அலமாரியில் பத்திரப்படுத்துவதுடன் சுஜாதாவின் ‘மத்தியமராக’வே நீடிப்பார்.

– பஷீர்
_____________________________________________
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1990
_____________________________________________

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

62

ஈழப்போராட்டம் குறித்து  பல வருடங்களுக்கு முன்னர் என்ன சொன்னோம் என்று தமிழினவாத இயக்கங்களிடம் கேட்டால் அவற்றை மீட்டுப்பார்க்க விரும்ப மாட்டார்கள். பொதுவில் இந்தியாவுக்கு காவடி தூக்கியும், ஓட்டுக்கட்சி தலைவர்களின் பிழைப்புவாதத்திற்கு ஒத்துப் போனதையும் மறைக்கவே விரும்புவார்கள். ஈழப்போராளிகள், புலிகளும் கூட இந்த அணுகுமுறையைத்தான் பொதுவில் கொண்டிருந்தனர். ஆனால் ம.க.இ.க அமைப்புகள் மட்டுமே ஈழம் குறித்த சரியான பார்வையை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது குறித்து கடந்த 25 ஆண்டுகளில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் ஈழம்  தொடர்பாக வந்த கட்டுரைகளை இங்கு வெளியிடுகிறோம். ஈழப்போராட்டம் முள்ளிவாய்க்கால் போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை பலி கொடுத்து பரிதவிக்கும் நேரத்தில் இந்த வரலாற்று பார்வை ஒரு ஆவணம் போல உண்மைகளை வெளிக் கொண்டு வருகிறது. ஈழத்தின் நண்பன் யார், எதிரி யார், பாதை என்ன, செயல் தந்திரம் என்ன என்பதையெல்லாம் இந்த வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். படித்துப் பாருங்கள்!

– வினவு

________________________________________________________

(நவம்பர் 1986ல் வெளியானது)

எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்திதுரோகம்! தன்னிடம் தஞ்சம் புகுந்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேய காலனியவாதிகளிடம் காட்டிக் கொடுத்துக் கைது செய்து, புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமான் செய்தது துரோகம். சிங்கள இனவெறிபிடித்த பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடி வரும் ஈழ விடுதலைப் போராளிகள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கெதிராக நவம்பர் 7-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர் கும்பல் மோகன்தாஸ்-தேவாரம் தலைமையிலான போலீசுப் படையை ஏவி திடீர்த் ‘தாக்குதல்’ நடத்தியிருப்பது துரோகம்.

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஈழப் போராளி அமைப்புகளின் முகாம்கள், அலுவலகங்கள், இல்லங்களை ஆயுதம் தாங்கிய தமிழ்நாடு சிறப்புக் காவற்படையினரோடு போய் திடீர் சோதனை நடத்தினர். தலைவர்கள் உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புடைய அதிநவீன ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள “க்யூ” பிரிவு போலீசாரால் பல மணி நேரம் விசாரணைக்குப் பிறகு, புகைப்படங்களும் அடையாளக் குறிகளும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் போராளிகளில் அணிகள் பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே கலந்தாலோசித்து திட்டமிட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது; எனினும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மத்திய அரசு மழுப்புகிறது. முரண்பட்ட தகவல்கள் தரப்படுகின்றன. “’சட்டத்தை தங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ள முடியாது’ என்று போராளிகளை எச்சரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

“பெங்களூரில் நடக்கவிருக்கும் தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு சங்கக் கூட்டத்துக்கு வரும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை; அந்தச் சமயத்தில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறெங்கும், குறிப்பாக பெங்களூருக்குச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்ட பின் பெரும்பாலான போராளிகள் நிராயுதபாணிகளாக விடப்பட்டு பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

ராஜீவ் காந்தி, ஜெயவர்தனே
ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா

ஈழப் போராளிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை சிங்கள இனவெறியர்களையும் அவர்களது இந்தியப் பங்காளிகளையும் குதூகலமடையச் செய்துள்ளது. கொழும்பில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. “தங்களுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்த மக்களையே விழுங்கிவிடும் அளவுக்கு போராளிகள் பயங்கர பூதமாக உருவாவதை பிரதமர் ராஜீவும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் விரும்பவில்லை என்பதையே அவர்களின் ஒப்புதலுடன் நடந்த இந்த வேட்டை புலப்படுத்துகிறது” என்று இலங்கை அரசுப் பத்திரிக்கை எழுதுகிறது. “இது துணிச்சலான செயலாகும், முன்பு ஈழத்தலைவர்களை வெளியேற்றிய போது நடந்ததைப் போல இந்தத் தடவை தென்னாட்டின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு ராஜீவும், எம்ஜிஆரும் பணிந்து விட மாட்டார்கள்” என்று வேறொரு பத்திரிகை நம்புகிறது.

“தமிழகக் கொரில்லாக்களை இந்தியத் தலைவர்கள் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்” என்று சிங்கள இராணுவ மந்திரி லலித் அதுலத் முதலி பாராட்டியுள்ளார். “பல தோல்விகளால் சோர்வடைந்துள்ள இலங்கை ராணுவத்துக்கு தமிழ்ப் போராளிகள் மீது நடந்த வேட்டை உற்சாகமும் புதிய நம்பிக்கையும் அளிக்கும்; இதைச் சாதகமாக்கிக் கொண்டு வட பகுதி போராளிகள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு சிங்கள இனத்தினர் நிர்ப்பந்திக்கலாம்” என்று இந்தியப் பிற்போக்குப் பத்திரிகைகளே ஊகிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை சிங்கள பேரினவாதத்துக்கு அடகு வைக்கும்படியான ஒரு சமரசத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி ஈழப் போராளிகளை இந்திய பாசிச ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல் நிர்ப்பந்தித்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த அதிரடித் தாக்குதல்.

ஏற்கனவே, ஈழப் போராளிகளின் பிரதிநிதிகளை நாடு கடத்தியும், பலமுறை எச்சரித்தும், தொலைபேசித் தொடர்புகளைத் துண்டித்தும், ஈழப் போராளிகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் இதைச் செய்து வருகிறது ராஜீவ்-எம்.ஜி.ஆர். கும்பல். தீபாவளி நாளன்று சென்னையில் ஒரு ஈழ அமைப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்களில் ஈழப் போராளிகள் நடந்து கொள்ளும் அராஜகவாத நடவடிக்கைகள் மேற்கண்ட நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழப் போராளி அமைப்புகள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. “இது இனப்படுகொலை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும்; எவ்வித விளக்கம் அளிக்கப்பட்டாலும் ஜெயவர்த்தனாவை மகிழ்விக்க எடுத்த நடவடிக்கை இது. விடுதலை இயக்கம் அவமானத்துக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம். முன் கூட்டியே எச்சரிக்கை விட்டிருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருப்போம்” என்று விடுதலைப் புலிகள் அறிக்கை விட்டுள்ளனர்.

ஈழப் போராளிகளுக்கு வேண்டுமானால் இந்த நடவடிக்கை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளித்திருக்கலாம். இது என்றாவது ஒரு நாள் நடக்குமென்று நாம் முன் கூட்டி முடிவு செய்ததுதான். “நரிகளின் தயவில் புலிகளா?”, “நாயிடமிருந்து பிடுங்குவது பேயிடம் தருவதற்கோ?” – என்று ஏற்கனவே புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் ஆகிய புரட்சிகர ஏடுகள் கேட்டிருக்கின்றன.

ஆனால், ஆயுதம் தரித்த அந்த “மாவீரர்கள்” எப்போதும் இந்தியப் புரட்சியாளர்களை அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர். தாக்குதல் தொடுக்கிறது ராஜீவ்-எம்ஜிஆர் கும்பல். கருத்து சொல்ல மறுக்கிறது கருணாநிதி கூட்டம்.

இப்போதும் காலம் மீறிப் போய் விடவில்லை. இந்திய ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளையும், தமிழக அரசியல் பிழைப்பு வாதிகளையும் நம்பி, சார்ந்து ஈழ விடுதலைப் போராளிகள் நிற்பதைக் கைவிட வேண்டும். சர்வதேசப் பாட்டாளி வர்க்கமும், புரட்சியாளர்களும்தான் தேசிய இன விடுதலைக்கு நம்பகமான கூட்டாளிகள் என்பதை ஏற்க வேண்டும்.

எட்டப்பர்களாக போலிக் கம்யூனிஸ்டுகள்

நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் இறந்து போனார். எல்லா அரசியல் கட்சிகளையும் முந்திக் கொண்டு அறிக்கை விட்டார் வி.பி.சிந்தன். ஈ.பி.ஆர்.எல்.எ்ப் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள ருஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் இந்திய அடிவருடிக் கட்சிகளில் ஒன்றான ‘மார்க்சிஸ்ட்’ கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.

“உடனடியாக ஈழ அமைப்புகளின் அலுவலகங்கள், முகாம்கள், வீடுகள் அனைத்திலும் சோதனை நடத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களால் தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது” வி.பி.சிந்தனின் இந்த எட்டப்பன் எச்சரிக்கையை அப்படியே ஏற்று அடுத்த வாரமே ஈழப்போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினார் அவரது “சகபாடி” எம்.ஜி.ஆர்.

இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எட்டப்பர்களின் திலகம் கல்யாணசுந்தரம், “தமிழக போலீசின் நடவடிக்கை பிரதமர் ராஜீவ் காந்திக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று கண்டிக்கிறார். ராஜீவின் ஏவுதலால் நடந்த நடவடிக்கை காரணமாக ராஜீவுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற அக்கறையைத்தான் முக்கியமாக கல்யாணசுந்தரம் காட்டுகிறாரே தவிர, ஈழப் போராளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அல்ல. சர்வதேச விடுதலைக்காகப் போராடி வரும் புரட்சிகர சர்வதேச தலைவராக ஈ.பி.ஆர்.எல்.எ்ப் கொண்டாடும் கல்யாணசுந்தரத்தின் யோக்கியதை இதுதான்! “அவரது புரட்சிகர அனுபவங்களை சுவீகரித்துக் கொள்வோம்” என்று புத்தகம் போட்ட போராளி பத்மநாபா பார்வைக்கு இந்த எட்டப்பன் வேலைகளை முன் வைக்கிறோம்.
_______________________________________________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 1986
________________________________________________________________________

வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!

4

ந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது.

நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது.

மருந்து சுமை
மருந்து சுமை

மருந்துகள், இரசாயன உரங்களைத் தயாரிக்கும் செய்முறைக்கு மட்டும்தான் வடிவுரிமை வழங்கப்படும். ஒரு பொருளைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதற்கும் இந்தியச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் வடிவுரிமைச் சட்டமோ, பொருட்களின் மீதே வடிவுரிமை வழங்குவதோடு, வடிவுரிமை பெற்ற பொருட்களைப் பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி தயாரிப்பதைத் தடுத்து விடுகிறது.

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, இந்திய வடிவுரிமைச் சட்டத்தில் ஏற்கெனவே இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய வடிவுரிமைச் சட்டத்தை முற்றிலுமாக அமெரிக்க பாணியில் மாற்றியமைக்கும் அரசாணையை, கடந்த டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரியாமல் மைய அரசு அறிவித்தது. இப்பொழுது, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் அந்த அரசாணையைச் சட்டமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டத்திற்குப் பதில் இன்னொரு சட்டம் வருகிறது என இந்த மாற்றத்தை சாதாரணமாகப் பார்க்க முடியாது. இந்த மாற்றத்தின் மூலம் இந்திய மக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் கிடையாது. அதைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்குச் சொன்னால், தொற்று வியாதிக்குக் கொடுக்கப்படும் சிப்ரோஃபிளாக்சின் என்ற மருந்து இந்தியாவில் 29 ரூபாய்க்கு (500 மி.கி. கொண்ட 10 மாத்திரைகளின் விலை) விற்கப்படுகிறது. அமெரிக்காவிலோ இந்த 10 மாத்திரைகளின் விலை 2,352 ரூபாய். ‘எய்ட்ஸ்” நோயாளிகள் அமெரிக்க தயாரிப்பு மருந்துகளை வாங்க ஆண்டொன்றுக்கு 5,40,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்த பொழுது, இந்திய மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை 6,300 ரூபாய்க்குத் தயாரித்து விற்றன.

இந்தியாவில் பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட விலை மலிவாகக் கிடைத்ததற்கு 1970ஆம் ஆண்டு இந்திய வடிவுரிமைச் சட்டம்தான் காரணமாக இருந்தது. இச்சட்டத்தை மாற்றுவதன் மூலம் 1970க்கு முன்பிருந்த நிலையை மருந்துகளின் உற்பத்தியையும், விலையையும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தான் தீர்மானிக்கும் என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். “இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத மருந்துகள் இப்புதிய வடிவுரிமை சட்டத்தின் கீழ் சென்று விடும்; சாதாரண தலைவலி, காய்ச்சல் மருந்துகள் கூட 300 சதவீதம் விலை உயரும்” என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு மருந்தை, பல்வேறு செய்முறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் முறையை இப்புதிய வடிவுரிமைச் சட்டம் தடுத்துவிடுவதால், ஆயிரக்கணக்கான இந்திய மருந்து நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். “அறிவுசார் கண்டுபிடிப்புகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும், அக்கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் முறைகேடாக ‘காப்பி’யடிப்பதைத் தடுக்கவும்தான் புதிய வடிவுரிமைச் சட்டம் கொண்டு வரப்படுவதாக” உலக வர்த்தகக் கழகம் கூறுகிறது. மாறாக, இச்சட்டம் மருந்து தயாரிக்கும் செய்முறைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், புதிய பல்வேறு தரப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு தடை போடுகிறது; போட்டியாளர்களைச் சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒவ்வொரு நாடும் தனது மொத்த வருவாயில், 5 சதவீதத்தைப் பொது சுகாதாரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்கும் செலவழிக்க வேண்டும். ஆனால் இந்திய அரசோ, இதற்குத் தனது வருவாயில் 0.9 சதவீத நிதியைத்தான் ஒதுக்குகிறது. இந்த அற்பமான நிதியையும், இனி பன்னாட்டு மருந்து கம்பெனிகளே தின்று தீர்த்து விடும்.

உதாரணத்திற்குச் சொன்னால், வெறிநாய்க்கடிக்கு இந்தியாவிலேயே தயாராகும் நரம்புத் திசு தடுப்பு மருந்தின் விலை நான்கு ரூபாய்தான். இந்த ஊசி மருந்தைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ‘அபய்ராப்” என்ற மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டது.

பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து விற்கும் ‘அபய்ராப்” மருந்தின் விலை ரூ. 350. சென்னை புறநகர் பகுதியில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இப்புதிய நாய்க்கடி மருந்தை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஆண்டுக்கு நாற்பது இலட்சம் ரூபாய் தேவைப்படும். ஆனால், அம்மருத்துவமனைக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி ரூ. 25 இலட்சம்தான். இந்த நிதியை புதிய நாய்க்கடி மருந்து வாங்கவே செலவழித்து விட்டால், மற்ற நோய்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?

‘பல்வேறு விதமான மருந்துகளின் மீது வடிவுரிமை கேட்டு 5,636 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும்; இவற்றுள் 4,398 விண்ணப்பங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் அனுப்பியிருப்பதாகவும்” இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் எல்லாம் புதிய கண்டுபிடிப்புகளுக்குதான் வடிவுரிமை கோருகின்றன எனச் சொல்ல முடியாது. ஏனென்றால், புதிய வடிவுரிமைச் சட்டம் “கண்டுபிடிப்புகளுக்கு”ப் பல ஓட்டைகளைக் கொண்ட விளக்கத்தைத்தான் தருகிறது. இதனால், பழைய மருந்தைக் கூட புதிய நோய்க்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, வடிவுரிமையைப் பெற்று விடலாம் என இந்திய மருந்து நிறுவனங்களே உண்மையைப் புட்டு வைத்துள்ளன.

1970ஆம் ஆண்டு வடிவுரிமை சட்டத்தில் இப்படி முறைகேடாக வடிவுரிமை பெறுவதைத் தடுக்க வழி இருந்தது. அச்சட்டத்தின்படி, வடிவுரிமை கொடுப்பதற்கு முன்பே, அதனை எதிர்த்து வழக்கத் தொடுக்க முடியும். ஆனால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தில் இப்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வடிவுரிமை கொடுத்த பிறகு வழக்கு தொடரலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கச் சொல்லுகிறது, மைய அரசு.

இப்புதிய வடிவுரிமை சட்டத்தால், மருந்து மாத்திரைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; நமது நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியமான உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றிக் கிடைக்கும் என்பதற்குக் கூட இனி எந்த உத்திரவாதமும் கிடையாது.

மலேரியா, காலரா, காச நோய், மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள்தான் அடித்தட்டு மக்களைத் தாக்குகின்றன. சாதாரண மலேரியா நோயோடு இப்பொழுது மனித மூளையைத் தாக்கும் புதுவகை மலேரியா நோய் கூட வந்துவிட்டது. இதற்குத் தேவையான சிகிச்சைக்கு, மருந்து மாத்திரைக்கு அடித்தட்டு மக்கள் அரசாங்க மருத்துவமனைகளை நோக்கிதான் ஓடுகிறார்கள். அரசாங்கமோ மருந்து மாத்திரைகளுக்கு பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்பியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் “வயாகரா”, “எய்ட்ஸ்” பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.

கொள்ளை நோய்கள் ஒரு நாட்டைத் தாக்கினால், அதற்குத் தேவையான மருந்து மாத்திரைகளுக்குப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளை நம்ப முடியாது என்பதை உலக வர்த்தகக் கழகம் கூட ஒப்புக் கொண்டுள்ளது. அதனால்தான், தொற்று நோய் தாக்கும் அவசர காலங்களில், வடிவுரிமைச் சட்டத்தை மீறி, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடே மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளலாம் என்ற சலுகையை உலக வர்த்தக கழகம் வழங்கியிருக்கிறது.

இந்தச் சலுகை நாயிடம் கிடைத்த தேங்காயைப் போன்றது. ஏனென்றால், ஒரு நாடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உலக வர்த்தகக் கழகம்தான் தீர்மானிக்கும். உலக வர்த்தகக் கழகம் தீர்மானித்த பிறகு, தொற்று நோய் தாக்கப்பட்ட நாடு இந்தச் சலுகையைப் பயன்படுத்தி மருந்துகளைத் தயாரித்து, நோயாளிக்குக் கொடுப்பதற்குள் நிலைமை கையை மீறிப் போய்விடும். எனவே, அடித்தட்டு மக்கள் தங்களை நோயிலிருந்து காத்துக் கொள்ள, பழைய காலம் போல மாந்தரீகம், நாட்டு வைத்தியத்திற்குத் திரும்ப வேண்டியதுதான்!

இப்புதிய வடிவுரிமைச் சட்டம் மக்களின் உயிரோடு மட்டும் விளையாடப் போவதில்லை; இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திலும் கைவைக்கப் போகிறது. இப்புதிய வடிவுரிமைச் சட்டத்தின்படி விதைகள், தாவரங்களை வடிவுரிமை செய்து கொள்வதற்கு இனி தடையேதும் கிடையாது. இதற்குத் தகுந்தாற்போல, இந்திய விதைகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விவசாயிகள் விதைகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்; விதைகளை மறு உற்பத்தி செய்து கொள்ளவும்; விதைகளை சக விவசாயிகளுக்கு விற்கவும் (1966ஆம் ஆண்டு விதைகள்) சட்டம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தற்பொழுது இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்களின் பெயரைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதாவது, இனி விதை நெல்லைக் கூட தங்களின் இஷ்டத்திற்கு விவசாயிகள் சேமித்து வைக்கக் கூடாது; அப்படி எடுத்து வைத்தால் அது சட்டவிரோதம் என விவசாயிகளை மிரட்டுகிறது, மைய அரசு. இம்மிரட்டலின் மூலம் வடிவுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்க முயலுகிறது.

இந்திய மக்களின் உணவுத் தேவைக்கும், அவர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் ஏகாதிபத்தியங்களை நத்திப் பிழைக்க வேண்டும் என்றால், இந்திய சுதந்திரத்தின் பொருள்தான் என்ன?

– செல்வம்
__________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2005
__________________________________________________________________________

லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!

0

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கடைக்கு சாமான் வாங்க விருத்தாச்சலம் செல்கிறார். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை சந்தேகப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற குற்றப் பிரிவு போலீசார், காவல் நிலையத்தில் அவரை அடித்து சித்ரவதை செய்ததால் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்து விருத்தாசலம் காவல் நிலையத்திலேயே 8-11-2004 காலை மரணம் அடைந்தார்.

குற்றவாளி போலீசாருக்கு தண்டனை கிடைக்கவும், அண்ணாதுரை குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறது.

  • இழப்பீடு கோரி அவரது மனைவி செல்வி பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2005 ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஏப்ரல் 2, 2013 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இழப்பீடாக ரூபாய் 5,90,000 தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பாக 2007-ல் குற்றவாளி போலீசாருக்கு எதிராக நாங்கள் நடத்திய மாநில மனித உரிமை ஆணைய வழக்கில் துணை ஆய்வாளர், பாபு குற்றம் செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்து ரூபாய் 1,50,000 இழப்பீடு வழங்கி உத்திரவிட்டிருந்தார். அதனை கழித்து கொண்டு ரூ.4,40,000 இரண்டு மாதத்தில் இறந்து போன அண்ணாதுரையின் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
  • குற்றம் இழைத்த துணை ஆய்வாளர் பாபு மீது கடலூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் நிலுவையில் உள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டங்களை திரும்பி பார்ப்பது குற்றவாளி போலீசாரை தண்டிப்பது எவ்வளவு கடினமானது, அனைவருக்கும் இது சாத்தியமானதா? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணாதுரையின் உடலை ஊர் மக்கள் வாங்க மறுத்து சாலை மறியல் செய்கின்றனர். அவர்களுடன் மனித உரிமை பாதுகாப்பு மையமும் குற்றவாளி போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறுதியாக மக்களைத் திரட்டிப் போராடியது. குற்றப் பிரிவு எஸ்.ஐ.பாபு மற்றும் 3 காவலர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அன்றைய கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தது பிரேம் குமார். இவர்  சங்கராச்சாரி கைதில் புகழ் அடைந்தவர், நல்லகாமன் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இவரை நல்லகாமனுடன் இணைந்து நாங்கள் தான் போராடி பணி நீக்கம் செய்தோம்.

மேலும் கோட்டாட்சியர் இங்கேயே விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சாட்சிகளை ஒழுங்கமைத்து அண்ணாதுரை மரணம் தொடர்பாக நடந்த உண்மைகளை பிரேதம் வாங்கும் முன்பாகவே மருத்துவமனை வளாகத்திலேயே பதிவு செய்ய வைத்தோம்.

இறந்து போன அண்ணாதுரைக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தனர். சொந்தமாக இருந்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தியவர். குடிப்பழக்கம் காரணமாக தன்னுடைய பழைய மோட்டாரை இரும்புக் கடையில் விற்று விட்டு குடித்துள்ளார். ஊருக்கு போவதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அண்ணாதுரையை பார்த்தவுடன் போலீசாருக்கு சந்தேகம் வந்து விட்டது. போலீசார் ஆளாளுக்கு ரெண்டு தட்டு தட்டி மடக்கி மடக்கி கேள்வி கேட்டவுடன் பயந்து கொண்டு அண்ணாதுரை குடி போதையில் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார்.

குற்றவாளியை கைது செய்த பெருமையுடன், அவர் நிலத்தில் வேலை செய்யும் பழனிவேல் என்ற அப்பாவியையும் கையில் விலங்கிட்டு, விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஜட்டியுடன் அடைத்து வைத்தனர் போலீசார். ஊர் முக்கியஸ்தர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அண்ணாதுரையை பற்றி நல்லவிதமாக சொல்லி நாளைக்கு பகலில் விசாரணைக்கு அழைத்து வருகிறோம் என மன்றாடியும் குற்றப்பிரிவு போலீசார் விட மறுத்து விட்டனர். இதற்கு மேல் இங்கே நின்றால் உங்கள் மீதும் திருட்டு கேசு போட்டு விடுவேன் என மிரட்டியதும் ஊர் முக்கியஸ்தர்கள் திரும்பி சென்று விட்டனர். இரவு முழுவதும் அடித்து மிதித்து, ஊர் உலகத்தில் நடந்த திருட்டை பற்றி எல்லாம் விசாரித்த போலீசாரால் எந்த தகவலும் அண்ணாதுரையிடமிருந்து பெற முடியவில்லை. அதிகாலை இரத்தம் வழிய காவல் நிலையத்தில் சீரியசான நிலைமையில் இருந்த போது கூட போலீசார் ’அவன் நல்லா நடிப்பான்,பேசமா இரு’ என உடன் இருந்த பழனிவேலிடம் அலட்சியமாக பேசியுள்ளனர். இவை அனைத்தையும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் விசாரணை நடத்தி உறுதி செய்து கொண்டோம்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் இறந்து விட்டார். ஆளுங்கட்சி பிரமுகர் மூலம் தகவல் சொல்லி “இழுப்பு வந்துவிட்டது, இறந்துவிட்டார்” என காவல்துறை மூடிமறைக்கப் பார்த்தது. அப்போதைய டி.எஸ்.பி.பழனிவேலு உரிமைகளை மயிருக்குச் சமமாக மதிக்கும் குணம் உடையவர். நாங்கள் போலீசாரை கண்டித்து பிரசுரம் வினியோகித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பல கட்சி நிர்வாகிகளை அழைத்து “சுமூகமாக முடியுங்கள், பணம் ஏதேனும் கொடுத்து விடலாம்” என போலீசார் முயன்றனர். மக்களோடு நாங்கள் நின்று உறுதியாக போராடியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அண்ணாதுரை மரணம் தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு மனைவி செல்வி மூலம் புகார் மனு பிறகு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். குற்றவாளி போலீசார் துணை ஆய்வாளர் பாபு கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்துவிட்டோம். அது அண்ணாதுரை மீது உள்ள சந்தேக வழக்கு ஆகும். எனவே ஒரு சம்பவத்திற்கு இரு முதல் தகவல் அறிக்கை போட முடியாது என நமது வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிறகு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மனவி செல்வி மூலம் புகார் அனுப்பினோம். அங்கிருந்து ஆய்வாளர் ஒருவர் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வந்தார். கோட்டாட்சியர் போல அவரிடமும் அனைத்து சாட்சிகளையும் நடந்த சம்பவங்களை தொகுத்துச் சொல்லுங்கள் என அழைத்து சென்றோம்.

ஆய்வாளரின் விசாரணை அறிக்கைக்கு பிறகு மனித உரிமை ஆணையம் வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரித்தது. நாங்கள் மரணம் அடைந்த அண்ணாதுரையின் மனைவி மற்றும் மகன், உறவினர்கள் என அனைவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் கொடுக்கச் செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 2007-ல் மாநில மனித உரிமை ஆணையம் துணை ஆய்வாளருக்கு எதிராக ஆணை பிறப்பித்தது. அதில் “போலீசார் பேருந்து நிலையித்திலும், காவல் நிலையத்திலும் வைத்து அண்ணாதுரையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் மூலம் உடலில் பல காயங்கள் ஏற்பட்டதுடன் அதன் விளைவாகத் தான் அண்ணாதுரை மரணம் அடைந்துள்ளார். இது போலீசரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றம் ஆகும். குற்றவாளி போலீசார் இந்த ஆணையத்தையும், உயர் அதிகாரிகளையும் வேண்டுமென்றே தவறான தகவல் அளித்து திசை திருப்பியுள்ளனர். எனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக அண்ணாதுரை குடும்பத்திற்கு துணை ஆய்வாளர் சம்பளத்திலிருந்து பிடித்துத் தர வேண்டும். மேலும் தமிழக அரசு 50,000 ரூபாய் அண்ணாதுரை வாரிசுகளுக்கு மனிதாபிமான முறையில் கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

‘இந்த உத்தரவு கிடைத்த ஒரு மாதத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என சொல்லப்பட்டது. ஆனால் ஆறு மாதம் ஆகியும் அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். 4 வாய்தா போன பிறகு கொடுத்து விடுகிறோம் என அரசு கூறியதை கேட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார். ஏன் இது வரை கொடுக்கவில்லை என சத்தமாகக் கூட கேட்கவில்லை. கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி செல்விக்கு ரூ 1,50,000 பணத்தை மனித உரிமை பாது காப்பு மையம் முன் நின்று வாங்கிக் கொடுத்தது.

பிறகு கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையையும், அதன் முடிவுகளையும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தர வேண்டும் என மனு கொடுத்தோம். ‘நாங்கள் அரசுக்கு அனுப்பி விடுவோம் உங்களுக்கு தரமுடியாது. போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் அரசின் விருப்பம். நான் எதுவும் செய்ய முடியாது’ என கோட்டாட்சியர் கையை விரித்துவிட்டார்.

மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அண்ணாதுரை மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் எங்களுக்குத் தர வேண்டும் என கேட்டோம். பல முறை வாய்தா ஆனது. பிறகு நீதிபதி “ஏன் கொடுக்கக் கூடாது, பாதிக்கப்பட்டவருக்கு கொடுங்கள்” என அரசுக்கு உத்தரவிட்டார். “இப்போது தகவல் அறியும் சட்டம் எல்லாம் வந்த பிறகு ஏன் மறுக்கிறீர்கள்” என செல்லமாக கடிந்து கொண்டார்.

கோட்டாட்சியரிடம் ஒரு வழியாக விசாரணை அறிக்கையை வாங்கினோம். அதில் “அண்ணாதுரையை போலீசார் அடித்து துன்புறுத்தியது உண்மை, ஆனால் அண்ணாதுரை போலீசு அடித்ததால் சாகவில்லை. எனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு 2008-ல் மீண்டும் உயர்நீதிமன்றம் சென்றோம். குற்றவாளி போலீசாரை சக போலீசே எப்படி விசாரிக்க முடியும் எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தோம். சில வாய்தா போனது. இறுதியில் நீதிபதி கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அண்ணாதுரை மரணம் அடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டார்.

ஒருவழியாக சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளர் விசாரணைக்கு வந்தார். சாட்சிகள் அனைவரையும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார். நாம் தலையிட்டு “காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது, ஊருக்கே சென்று விசாரியுங்கள், அப்போது தான் மக்கள் அச்சம் இல்லாமல் சொல்லுவார்கள். மேலும் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாதி பேர் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்க கூடும், எனவே கவனமாக விசாரிக்க வேண்டும்” என துணை கண்காணிப்பாளரிடம் சொன்னோம், அதன்படி விசாரணை நடந்தது.

இறுதியில் குற்றப்பத்திரிகை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. குற்றப் பிரிவு துணை ஆய்வாளர் பாபு மட்டும் குற்றவாளி, அவர்அண்ணாதுரையை அடித்து காயப்படுத்தியுள்ளார் என்பது மட்டும்தான் குற்றச்சாட்டு. மருத்துவ காரணங்களால் மூச்சுத் திணறி இறந்து போனார் என்பதை முடிவாக்கப்பட்டு தற்போது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

திடீரென்று ஒருநாள் சாட்சி விசாரணைக்கு அனைவரும் கடலூருக்கு வர வேண்டும் என 2013 ஆண்டில் செல்வி உட்பட அனைவருக்கும் சம்மன் வந்தது. அவர்களுக்கு எப்படி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டும் என ஒருமுறை கூட தற்போதைய அரசு வழக்கறிஞர் சொல்லவில்லை. வழக்கு விசாரணை தேதி குறித்து நடத்த நீதிமன்றமும் தயாராக உள்ளதை அறிந்த நாளில், நாம் தலையிட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை எங்களுக்கு தர வேண்டும். போலீசுக்கு ஆதரவான அரசுத் தரப்பு வழக்கறிஞரே, எப்படி போலீசு குற்றவாளியாக உள்ள வழக்கில் வழக்கறிஞராக செயல்படமுடியும் என ஆட்சேபணை செய்து வழக்கு விசாரணையை நடக்காமல் ஒத்திவைக்க மனு போட்டோம். வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பினோம்.

காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்கு என்பதால் “எங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர் அரசு சார்பில் வைத்து கொடுக்க வேண்டும். என் கணவர் மரணத்திற்கு உண்டான வழக்குப் பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. அடிதடி வழக்குபோல் சாதாரண பிரிவே போடப்பட்டுள்ளது. இதை உரிய ஆதாரங்களுடன் வாதிட திறமையான வழக்கறிஞர் வைக்க ஆவன செய்ய வேண்டும்” என்று அனுப்பிய மனு அதே நிலையில் உள்ள நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் சென்று வழக்கு போட்டோம். பல வாய்தாக்களாக நடந்து வருகிறது.

இப்படி தொடர்ந்து சென்னைக்கு செல்வதும் உயர்நீதிமன்றத்தை நாடுவதும் அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இந்த வழக்கில் ஆரம்பத்தில் வழக்கறிஞர் சிவஞானம் என்ற விருத்தாசலம் நண்பர் நடத்தினார். பிறகு இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் வழக்கறிஞர் சத்தியசந்திரன் சளைக்காமல் இன்று வரை உறுதியாக நடத்தி வருகிறார்.

அண்ணாதுரை மரணத்திற்கு காரணமான காவல் துணை ஆய்வாளர் பாபு மீது உள்ள கிரிமினல் வழக்கில் தண்டனை வழங்கப்படும் போதுதான் முழுமையான நீதி கிடைத்ததாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வாங்கிக் கொடுக்க ஒன்பது ஆண்டுகள், போலீசை தண்டிக்க எத்தனை ஆண்டுகள். . .அரசை எதிர்த்து சமரசமின்றி உறுதியோடு போராடினால் சட்டத்தின் ஆட்சி சந்தி சிரிக்கும். பிறகு தான் நீதி கிடைக்கும்.?

காவல் நிலைய மரணத்தில் மட்டுமல்ல எடுத்து கொண்ட அனைத்து வழக்குகளிலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நீதி கிடைக்க இறுதி வரை போராடி வருகிறது, போராடும்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மராட்டிய தண்ணீர் பஞ்சம்!

2

solapur-protest-2காராஷ்டிராவின் பூனே, சோலாப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்  உஜானி அணையிலிருந்து குடிநீர் வழங்கும்படி கோரி போராடி வருகின்றனர். பிரபாகர் தேஷ்முக் என்னும் விவசாயி பிற விவசாயிகளுடன் இணைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜீத் பவார் குடிதண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி குறிப்பிடுகையில், ‘அணையில் தண்ணீர் இல்லையென்றால் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? அணையில் சிறுநீர் கழித்தா தண்ணீர் திறந்து விட முடியும்? குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத போது, சிறுநீர் கூட வராதே’ என்று ஏளனமாக பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சோலாப்பூர் மாவட்டம்  தண்ணீர் இல்லாத வறண்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் குடிக்க தண்ணீர் இல்லாமல்  பல ஆடு மாடுகள் இறந்து விட்டன. வறட்சியால் 5 மனித உயிர்களும் பலியாகியுள்ளன. இவ்வருட துவக்கத்தில், உஜானி அணையிலிருந்து ஜனவரி மாதம் முதல் தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

பொறுப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்த, சோலாப்பூரின் கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும், பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகம் இயங்கும் மந்த்ராலயாவை முற்றுகையிட்டனர். ஆசாத் மைதானத்தில் அவர்கள் 23 நாட்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அதிகார வர்க்கம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தது. போராடும் மக்களை போலீஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி துன்புறுத்தினார்கள். விவசாயிகள் விரக்தியுடன் திரும்பினார்கள்.

உஜானி அணை
உஜானி அணை

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் ரூ 70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பொருளாதாரக் கணிப்பில், இத்திட்டங்களினால் நீர்ப்பாசன ஆற்றல் 0.1% அளவுதான் உயர்ந்துள்ளதென்று தெரிய வந்தது.

நீர்ப்பாசன ஊழல்களில் முக்கிய பங்கு வகித்தவர் அஜீத் பவார். 13 வருடகாலமாக நீர்ப்பாசனத்துறையை தங்கள் கைவசம் வைத்துள்ள பெருமையுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கட்சித் தலைவரும் மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத்பவாரின் உறவினர். 10 வருட காலமாக அத்துறை அஜீத் பவாரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. 2009-இல் இருந்து அஜீத் பவாரின் நெருங்கிய உறவினர் சுனில் தட்காரே பொறுப்பில் உள்ளார்.

செப்டம்பர் 2012இல் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊழலில் அஜீத் பவார் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியானதும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அந்த மானஸ்தன். பத்திரிகைகள் அந்த விவகாரத்தை மறக்கத் தொடங்கியதும், தன் குடும்ப அரசியல் செல்வாக்கில் மீண்டும் அதே பதவியில் பவனி வர ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இன்று போராடும் விவசாயிகளின் நிலைமை நீர்ப்பாசனத் திட்டங்களில் நடந்த ஊழல்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கடுப்பில்தான் மக்களின் கஷ்டங்களை இழிவுபடுத்தும் விதம் பேசியிருக்கிறார்.

மேலும், பூனே மாவட்டத்தில் உள்ள இந்திராப்பூர் தேஹ்சில் கிராமப்புறத்தில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில், அதிகநேர மின்வெட்டு குறித்து பேசிய அஜீத் பவார், ‘மின்வெட்டு அதிகரித்து இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளது’ என்று மக்கள் பிரச்சனையை அவமானப்படுத்தி பேசியுள்ளார்.

‘இது போன்ற கருத்துக்களை பொது இடத்தில் பேசக் கூடாது என்ற இங்கிதம் தெரியாதவராக அஜீத் பவார் இருக்கிறாரே’ என்று நொந்து கொண்டே அவரது சித்தப்பா சரத் பவார், ‘வக்கிரம் பிடித்த வார்த்தைகளை தெரியாமல் பேசியிருப்பார்’ என்று தனது அண்ணன் மகனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்

தான் பேசியது ஊடகங்களில் அடிபட்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பாதகமாக பயன்ப்படுத்தப்படலாம் என்று கருதிய அஜீத் பவார் “யார் மனதையும் புண்ப்படுத்தும் நோக்கில் பேசவில்லை” என்று இப்போது மன்னிப்பு கேட்டு மழுப்புகிறார், உண்ணாவிரதம் இருந்து பரிகாரம் செய்வதாக நாடகம் ஆடுகிறார்.

ஆனால், இது போன்ற கருத்துக்கள் அஜீத் பவார் போன்ற அரசியல் தரகர்களின் உண்மையான மனநிலையை காட்டுகின்றன என்பதுதான் நிதர்சனம்.

அரசியல்வாதிகள்
சுசில் குமார் ஷிண்டே, சரத் பவார், ஆர் ஆர் பட்டீல்  (படம் உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

 

றண்ட பூமியாக மாற்றப்பட்ட சோலாப்பூர் பல அரசியல் முக்கிய புள்ளிகளின் வாசஸ்தலமாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மாநில உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பட்டீல் ஆகிய பெருந்தலைகளின் சொந்த ஊர் சோலாப்பூர்.

பூனே அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகும் பீமா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உஜானி அணை, சோலாப்பூர் மற்றும் பூனே மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்கும் முக்கியமான அணையாகும்.

336.50 சதுர கிலோ மீட்டர் நீர்த்தேக்க பகுதியும், 14,850 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு பரப்பும் கொண்ட உஜானி அணையின் கொள்ளளவு 144 கோடி கன மீட்டர் (1.44 லட்சம் கோடி லிட்டர்).

சோலாப்பூர் மற்றும் அவுரங்கபாத் மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு முக்கிய காரணம் அரசியல் பெருந்தலைகளால் தமது வணிக லாபத்துக்காக அரங்கேற்றப்படும் தண்ணீர் கொள்ளையே ஆகும். மக்களுக்கு வாரத்துக்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படும் இப்பகுதிகளில், அரசியல்வாதிகளாலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாலும் நடத்தப்படும் தொழிலகங்களுக்கு கணக்கின்றி, தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகின்றது.

மக்களுக்கு திறந்து விடப்படாத உஜானி அணையிலிருந்து சரத் பவாரின் நெருங்கிய உறவினர் நடத்தும் டைனமிக்ஸ் டெய்ரி என்ற பால் பண்ணைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது.

இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுவதற்கு முக்கிய காரணம், இயற்கைக்கு முரணாக தண்ணீர் தீவிரமாக தேவைப்படும் கரும்பு விவசாயத்தை இப்பகுதியில் செய்வதால்தான் என்று கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

1 ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ஒரு பயிர் சுழற்சி காலத்தில் 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகளில் 1,000 மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 357.37 கன மீட்டர் (3.57 லட்சம் லிட்டர்) தண்ணீர் தேவைப்படுகிறது.

‘இப்பகுதியின் இயற்கைக்கு ஏற்ப வளரக் கூடிய சோளம் மற்றும் நிலக்கடலை விவசாயத்தை விட்டு கரும்பு சாகுபடி, மற்றும் சர்க்கரை உற்பத்தி இங்கு முக்கியத்துவப்படுத்துவதற்கு காரணம், பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதுதான்’ என்கிறார் நீர் உரிமை ஆர்வலரான ஹிமான்ஷு தாகேர்.

மகாராஷ்டிராவில் உள்ள 160 சர்க்கரை ஆலைகளில் 16 பூனேவிலும் 18 சோலாப்பூரிலும் உள்ளன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உஜானி அணையிலிருந்து தண்ணீர் தரப்படுவதாக குறிப்பிடுகின்றனர் சோலாப்பூர் கிராமவாசிகள். பாபன் ராவ் ஷிண்டே என்ற தேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அவருக்கு சொந்தமான  விட்டல் ராவ் சர்க்கரை ஆலைக்கு தேவையான நீர் உஜானி அணையில் இருந்துதான் எடுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சோலாப்பூரில் தண்ணீர் இல்லாநிலைக்கு சர்க்கரை ஆலைகள் காரணம் என்றால் 311 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்கபாத்தினை டிஸ்ட்டில்லரீஸ் வடிசாலை தொழிலகங்கள் தண்ணீரை உறிஞ்சி சூறையாடுகின்றன.

அவுரங்கபாதுக்கு நீர் தரும் முக்கிய அணை ஜெயக்வாடி ஆகும். 350 சதுர கி.மீ நீர்த்தேக்க பகுதியும், 290.9 கோடி கன மீட்டர் (2.9 லட்சம் கோடி லிட்டர்) கொள்ளளவும் கொண்ட இந்த அணை 1.83 லட்சம் ஹெக்டர் நீர்ப் பிடிப்பு பகுதியை கொண்டது.

மில்லினியம் பீர் இந்திய லிமிடெட் என்ற தனியார் நிறுவனதிற்கு மட்டும் தினமும் 2,014 கோடி லிட்டர் தண்ணீர் இந்த அணையிலிருந்து எடுக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் வழங்கும் தண்ணீர் அளவு இரு மடங்காக்கப்பட்டுள்ளதாம்.

அங்கு இயங்கும் நிறுவனங்களில் பெயரும் அவற்றுக்கு தினசரி வழங்கப்படும் நீரின் அளவின் விவரங்களும்:

நிறுவனம்

ஜனவரி 2012

நவம்பர் 2012

பாஸ்டர்ஸ் இந்தியா லிமிடெட்

888.7 கோடி லிட்டர்

1,000.7 கோடி லிட்டர்

அவுரங்காபாத் புரூவரீஸ்

1400.3 கோடி லிட்டர்

1,462.1 கோடி லிட்டர்

இந்தோ ஐரோப்பியன் பெவரேஜஸ்

252.1 கோடி லிட்டர்

470.1 கோடி லிட்டர்

பஞ்சம் என்று இயற்கையின் மேல் பழி சொல்லி மக்களுக்கு குடிநீரை மறுக்கும் அரசு, முதலாளிகளுக்கு வழங்கும் நீரின் அளவை அதிகரித்திருக்கும் களவாணித்தனத்தை இவ்விவரங்கள் தெளிவு செய்கின்றன.

உருவாக்கப்பட்ட வறட்சி இயற்கை பேரிடரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, சுரண்டும் முதலாளிகளால், சக மனிதர்கள் மீது ஏவப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவர்களை எதிர்த்து நியாயமான கோரிக்கைக்காக போராடும் விவசாயிகளைத்தான் ஏளனமான கருத்துகளை பேசி அவமானப் படுத்தியுள்ளார் அஜீத் பவார். அவரின் செயலை பிற ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் கூட பகிரங்கமாக எதிர்க்கவில்லை.

மும்பை உயர் நீதி மன்றம் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று, உஜானியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் திறந்துவிடக்கோரி உத்தரவு பிறப்பித்தது.  ஆனால், இன்று வரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

ஏப்ரல் 18 அன்று பொறுமை இழந்த 1,500க்கும் அதிகமான கிராம மக்கள் சட்ட சபையை அணிவகுத்து சென்று முற்றுகையிட்டனர். போலீஸார் போராட்டக் காரர்கள் வேன்களில் ஏற்றி ஆசாத் மைதானத்தில்  கொண்டு விட்டனர். போராட்டத்தில் கலந்துக்கொண்ட 22 வயதான விவசாயி தனாஜி பாவாலே அங்குள்ள மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்தப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றுள்ள பிரபாகர் தேஷ்முக், ‘அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையில், உயர் நீதி மன்ற உத்தரவு மூலம் எப்படி தண்ணீர் வழங்க முடியும்’ என்று விரக்த்தியுடன் கூறுகிறார்.

குடிக்கத் தண்ணீர் இன்றி மக்கள் மடிந்தாலும், முதலாளித்துவத்தின் சூறையாடல்களை அரசாங்கமும், அதிகார வர்க்கமும் தடை செய்யப்போவதில்லை என்பதோடு தாமும் அந்தக் கொள்ளையில் நேரடியாக பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதே உண்மை!

மேலும் படிக்க
Sugar politics deals a bitter pill in Solapur
Associate of fasting Maharashtra farmer attempts suicide

வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்! இரையாகும் கிராமப் பொருளாதாரம்!!

3

(புதிய ஜனநாயகத்தில் 2005ம் ஆண்டு வெளியான கட்டுரை)

வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில், நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் பன்னாட்டு நிறுவனங்கள் திணறுகின்றன. பழைய வாடிக்கையாளர்களையே மீண்டும் குறிவைத்து விற்பனைக்கான தாக்குதலைத் தொடுக்கின்றன. பல்வேறு விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட விசயத்தை உறுதிப்படுத்துகிறது.

உதாரணமாக, “சன்சில்க் ஷாம்பு” விளம்பரத்தில், “சன்சில்க் உபயோகிப்பதை தினமும் ஓர் பழக்கமாக்குங்கள்” என்பதும் “இரவிலும் கிருமிகள் பற்களை தாக்குகின்றன ஆகையால் இரவிலும் பல் துலக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் விளம்பரமும் மேற்குறிப்பிட்ட விசயத்தை தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும் சந்தை விரிவடைதற்கான வாய்ப்புகளோ, அறிகுறிகளோ தெரியவில்லை. ஆரம்பத்தில், 10 சதவீத மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கமே வாடிக்கையாளர்கள்; மீதம் 90 சதவீத பேர் பற்றி கவலையில்லை என்று கூறிய இந்நிறுவனங்கள், நகர்ப்புற பொருளாதார தேக்கத்தின் பின்னணியில் புதிய களங்களைத் தேட ஆரம்பித்தன. இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்கான புதிய இரையாக கிராமங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

கிராமச் சந்தையின் பின்புலம்

இந்திய கிராமம்நம் நாட்டின் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், கிட்டதட்ட 75 கோடி மக்கள் கிராமங்களில் உள்ளனர். இம்மக்கள் 6.4 லட்ச கிராமங்களில் வசிக்கின்றனர். இதில், ஒரு லட்ச கிராமங்கள் 2,000 முதல் 10,000 வரையும், 2.2 லட்ச கிராமங்கள் 500க்கும் குறைவான மக்கள்தொகையும் கொண்டவையாகும். முதலில் கூறப்பட்ட ஒரு லட்சம் கிராமங்கள் ஒட்டுமொத்த கிராம மக்கள் தொகையில் 50 சதம் கொண்டதாகவும் 60 சதவீத கிராம பொருளாதாரம் கொண்டதாகவும் உள்ளன. அன்றாட மற்றும் துரித தேவையான பொருட்கள் (fast moving consumer goods) ஆன பற்பசை, சோப், பவுடர் போன்ற பொருட்களின் கிராமச் சந்தை மதிப்பு ரூ. 65,000 கோடியாகவும், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வகையறாக்களின் சந்தை மதிப்பு ரூ. 5,000 கோடியாகவும், விவசாய இடுபொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 45,000 கோடியாகவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன சந்தை மதிப்பு ரூ. 8,000 கோடியாகவும் உள்ளது. அதாவது, மொத்த இந்திய கிராமச் சந்தையின் ஆண்டு மதிப்பு ரூ. 1,23,000 கோடியாகும். இந்த பிரமாண்டமான சந்தையில் 35 முதல் 44 சதம் வரை மட்டுமே பன்னாட்டு மற்றும் இந்திய தரகு முதலாளிகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மீதியுள்ள சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக, இந்திய கிராமங்கள் மிகவும் விரிந்து பரந்து பல்வேறு புவியியல் அமைப்புகளில் உள்ளன. மேலும் 30 சதவீத கிராமங்கள் சொற்பமான மக்கட் தொகையே கொண்டுள்ளன. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. கிராம மக்கள், பாரம்பரியத்தாலும் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தினாலும் பின்னிப் பிணையப்பட்டுள்ளார்கள்; அவர்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவு. விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. ஆனால், மக்கள் அல்லும் பகலுமாய் சுழற்சியாய் உழைத்துக் கொண்டு, பொருளாதாரத்தை ஈட்டி தமது தேவையை உள்ளூர் மற்றும் அருகாமையில் உற்பத்தியாகும் பொருட்களின் மூலம் ஈடேற்றிக் கொள்கின்றனர். இவ்வளவு சிக்கல்கள் இருப்பினும், இந்த ஏழை எளிய கிராம மக்களிடம் உள்ள சொற்ப செல்வங்களைக் கூட கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்கிற வெறியில், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு நம்பகமான தொழிற் கூட்டாளிகள் தேவைப்படுகிறார்கள். யார் இவர்களின் நம்பகமான கூட்டாளி?

நம்பகமான கூட்டாளிகள்

ரூ. 1,23,000 கோடி மதிப்புள்ள கிராமச் சந்தையை அடைவதற்கு பல்வேறு திறம்பட்ட கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். கிராம மூலை முடுக்கெல்லாம் சென்றடைய சங்கிலித் தொடர் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தேவை; கிராம பாரம்பரியத்தையும் உழைக்கும் மக்களின் கலாச்சார பின்னணியையும் உடைத்தெறிந்து நுகர்வெறி கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடிய ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தேவை. மேற்குறிப்பிட்ட அம்சங்களை ஏற்படுத்திக் கொடுக்கத் தேவையான முதலீட்டைக் கொடுக்க, நிதி நிறுவனங்கள் தேவை. சாராம்சமாக, குறைந்த முதலீட்டை போட்டு அதிக லாபத்தை எடுக்க என்னென்ன அம்சங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை முடித்துக் கொடுக்கிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கூட்டாளிகளாகத் தேவை. இந்தப் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நம்பகமான, திறமையான கூட்டாளிகளாக தன்னார்வக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்த்துக் கொண்டன.

தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள்

தன்னார்வக் குழுக்கள் நாடு முழுவதும் கிராமங்களில் பல லட்சக்கணக்கான சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் அமைப்புகள், கூட்டுறவு குழுக்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன. 2005 இறுதிக்குள் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் நம் நாட்டில் கட்டப்பட்டிருக்கும். சில கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் இருக்கின்றன. இந்த வலைப்பின்னல் பல்வேறு வகைகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. சுய உதவி குழுக்கள், நுண் தொழில் மூலம் (micro enterprises) மூலம் சுயசார்பு பெற்று வருவதாக செய்தி ஊடகங்களில் தன்னார்வக் குழுக்கள் பெருமையாக பீற்றிக் கொள்கின்றன. ஆனால் யதார்த்த நிலையோ வேறு.

பன்னாட்டு நிறுவனமான “ஹிந்துஸ்தான் லீவர்” 2001ஆம் ஆண்டில் 4 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் உள்ள 5000 கிராமங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பதற்காக பல்வேறு தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதனின் சுயஉதவிக் குழுக்களுடன் கூட்டு வைத்து விற்பனையை ஒத்திகை பார்த்தது. இந்த வெற்றியின் பின்னணியில், இவ்வழி முறையை 8 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி 130 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களை இந்நிறுவனத்தினர் சென்றடைகின்றனர். இத்திட்டத்திற்கு சுய உதவி குழுக்களிலிருந்து பெண்களை, தன்னார்வக் குழுக்களின் மேற்பார்வையில் தேர்ந்தெடுத்து பொருட்களை விற்பதற்கான பயிற்சியையும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்நிறுவனத்தினர் கற்றுத் தருகின்றனர்.

இந்தியா கிராமம்இப்படி பயிற்சி அளிக்கப்பட்ட பெண்களுக்கு “சக்தி அம்மா” என்ற பட்டத்தையும் சூட்டுகின்றனர். சக்தி அம்மாக்கள் கிராமங்களுக்குச் சென்று சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி போதித்து “குளோசப்” மற்றும் “பெப்சோடெண்ட்” பயன்படுத்துங்கள் என்றும், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியில்லை என்றும், 50 பைசாவுக்கு “கிளினிக் ப்ளஸ்” இருக்கும் பொழுது சீயக்காய் எதற்கு என்றும் கூறி விற்பனை செய்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பற்களில் கிருமி தாக்குதலை பற்றி வகுப்பும் எடுக்கிறார்கள்.

மறுபுறம், தன்னார்வக் குழுக்கள் ஸ்டாக் ஏஜெண்டாகவும், கிராமச் சந்தையை ஆய்வு செய்து கொடுக்கும் நிறுவனமாகவும் செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆசியாவின் மிகப்பெரிய தன்னார்வ குழுவான “பெய்ப்” ம், இந்தியாவின் மிகப் பெரிய வலைபின்னலை கொண்ட “கேர்” என்ற தன்னார்வ குழுவையும் கொண்டுள்ளது. பெயிப் நிறுவனம் கீழிருந்து தனியார்மயத்தை நடைமுறைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. “கேர்” என்பது பல்வேறு நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக செயல்படுகிறது. சமீபத்தில் இராக்கின் “கேர்” நிறுவனத் தலைமையை இராக் போராளிகள் கடத்தி சென்று கொன்று விட்டனர். (இதற்காக “இந்து” போன்ற நாளிதழ்கள் “கேர்” தலைவரின் சேவையைப் புகழ்ந்து அழுது தீர்த்தன). இப்படி 133 தன்னார்வ குழுக்கள் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் செயல்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ரூ. 600 கோடி மதிப்புள்ள பொருட்களை கிராமங்களில் விற்றுள்ளன. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, ஒரு கோடி மக்களைச் சென்றடைய வேலைகளை முடுக்கி விட்டு வருகிறார்கள், ஹிந்துஸ்தான் லீவர் அதிகாரிகள்.

இந்தப் போக்கைப் பயன்படுத்தி 75 கோடி மக்களைக் கபளீகரம் செய்ய ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட விபரங்களிலிருந்து தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்தியத்தின் இன்னுமொரு கைக்கூலி பட்டாளமே என்பது நிரூபணமாகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

தற்சமயம் செய்தி ஊடகங்களான வானொலி, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி 57 சத கிராம மக்களைத்தான் சென்றடைகிறது. பெரும்பான்மையான கிராமங்களில் தொலைபேசி இல்லை. கணினி, இணையம் என்பதோ நகரத்துடன் முடிந்து விடுகிறது. மறுபுறம், நகரத்தில் மேற்குறிப்பிட்ட விசயங்கள் எதிர்மாறாக உள்ளன. இந்தப் பின்னணியில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் நகரத்திற்கும் கிராமத்திற்கும் அல்லது பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில் நிலவுகின்ற டிஜிட்டல் பாகுபாட்டை (digital divide) குறைப்பது மூலம் ஏழை எளிய மக்கள் பல்வேறு புதிய தகவல்களைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிநாதன் அறக்கட்டளை, புதுவையில் பல்வேறு கிராமங்களில் கணினி மற்றும் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விசேட் மற்றும் கோர்டெக்ட் தொழில்நுட்பத்தினால் டெலிபோன் இல்லாத கிராமங்களுக்கும் எந்த கம்பிகள் இல்லாமல் இணையம் மற்றும் தொலைபேசி வசதியைச் செய்து கொடுக்கக்கூடிய சூழ்நிலையில், என்லாக் என்ற சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், பல்வேறு தன்னார்வக் குழுக்கள், தரகு முதலாளித்துவ மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கணினியையும் இணையத்தையும் கிராமம் கிராமமாக நிறுவிக் கொண்டு வருகின்றன. இன்னொருபுறம், சில மாநில அரசுகள் (குறிப்பாக, ஆந்திரா) மேற்குறிப்பிட்ட வேலையை செய்து வருகின்றன.

அரசின் திட்டக் குழுவில் இருக்கும் சுவாமிநாதன், சுனாமி தாக்குதலின் பின்னணியில் “கிராமங்களில் இணைய நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்; ஆகையால், அரசு இவ்விசயத்தில் மெத்தனப்போக்கு காட்டக்கூடாது” என்கிறார். ஆனால், சுவாமிநாதனுக்கு உண்மை தெரியாமல் இல்லை. “அமெரிக்காவின் கூட்டாளியான இங்கிலாந்து இராணுவத்துக்கே தகவல் கொடுக்காமல் அமெரிக்கா இருட்டடிப்பு செய்தது” (பார்க்க: “இந்து”, ஜனவரி 8, 2005). இருப்பினும் தன் ஏகாதிபத்திய சேவையை, சுனாமியில் உயிரிழந்த ஏழை மக்களின் பிணங்களின் மேல் செய்யத் துடிக்கிறார், அவர்.

நம் நாட்டில் தற்சமயம் 60,000க்கு மேற்பட்ட கிராமங்கள் இணைய வசதியால் இணைக்கப்பட்டுள்ளன. ஐ.டி.சி. நிறுவனம் மட்டும் 5000க்கும் மேற்பட்ட கிராம இணைய நிலையங்களை நிறுவி 30 லட்ச மக்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 30 புதிய கிராமங்களை இணையத்தின் வலையில் இணைக்கிறது.

மரபு செய்தி ஊடகங்களான டி.வி., வானொலி மற்றும் பத்திரிகைகள், ஒருவழி செய்தி ஊடகமாகும். பயனீட்டாளர் முனையிலிருந்து செய்தி பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மாறாக, இணையத்தின் மூலம் பயனீட்டாளர் முனையிலிருந்து செய்திகளை மற்றும் தகவல்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்ப முடியும். அதாவது, இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இரு வழி தொடர்பு என்பது எளிதாகி விட்டது. இந்த கூடுதல் அம்சம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பரிமாற்றம் மற்றும் புதிய மாற்றங்களைக் கண்டறிவதை எளிதாகி விட்டது. இந்த தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அரசு இணைய கல்லூரிகளை உருவாக்கலாம், அரசு பற்றிய திட்டங்களை வெளியிடலாம், மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இவைகளெல்லாம் நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் கிராமச் சந்தையை சீர்படுத்தி ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் நுகர்வெறி கலாச்சாரத்தை தூண்டி விடுவதற்கும்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஐ.டி.சி. நிறுவனம் கிராம இணைய நிலையங்கள் மூலம் ரூ. 450 கோடிக்கு வியாபார பரிமாற்றம் செய்துள்ளது. அதன் புதிய சிகரெட் நுகர்வோர்களில் 10 முதல் 15 சதம் பேர் கிராம இணைய நிலையத்தின் மூலம் வந்தவர்கள் ஆவார்கள்.

டாடா, மகேந்திரா அண்டு மகேந்திரா, ஹிந்துஸ்தான் லீவர், தான் அகடெமி, இ.ஐ.டி. பாரி மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் துணையுடன் பல ஆயிரக்கணக்கான கிராமங்களை இணையத்துடன் இணைத்த வண்ணம் இருக்கின்றன். இந்த கிராம இணைய நிலையங்கள் மூலம் கிராமச் சந்தை தேவையை அறிந்து கொள்வது, விநியோக சங்கிலியை ஒருங்கிணைப்பது, கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்வது, ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்துவது, நுகர்வெறியைத் தூண்டுவது முதலானவை எளிதாக ஆக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அரசும் மற்ற பங்கேற்பாளர்களும் மேற்குறிப்பிட்ட விசயங்களைக் கூறாமல், நடப்பதை மறைத்து கிராம வளர்ச்சிக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் தான் இவை செய்யப்படுகிறது என்கிறார்கள்.

நிதி நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்களின் உத்திரவாதத்தில் கடன் கொடுக்கவும் தங்களுடைய சேவைத் திட்டங்களை கிராமப்புறங்களில் விற்கவும் பல நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல் கிராமத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் மேற்பார்வையில் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடைய நுண்கடன் சந்தையின் மதிப்பு 15 முதல் 45 ஆயிரம் கோடியாகும். இக்கடன்களை திருப்பிப் பெற்று தர, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இருப்பதால் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது.

தன்னார்வக் குழுக்களோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யக்கூடிய திட்டங்களுக்கு மட்டுமே உத்திரவாதம் தர முன் வருகின்றன. அதாவது, கிராம இணைய நிலையங்கள் வைப்பதற்கும், பன்னாட்டு நிறுவன பொருட்களை விற்பதற்கும் சுய உதவிக் குழுக்கள் நுண்கடன்களை வாங்க உத்திரவாதம் கொடுக்கின்றன. தன்னார்வக் குழுக்களின் பிரதான வேலை, அசலையும் வட்டியையும் கறாராகப் பெற்று நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்; அதாவது, அடியாள் வேலை!

உலக வங்கியின் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி நூறுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் போக்கில், நுண்கடன் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்ட டாக்டர் சுதிர்ரேந்தர் சர்மா, அவ்வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் கூற்றுப்படி, “நுண் கடன் என்பது செயற்கையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறது; இந்த நுண் கடன் மூலம் பெரும்பான்மையான தன்னார்வக் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுகின்றன் மேலும் இந்நுண்கடன்கள், சமூக உணர்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் வாழ்வுரிமைப் பாதுகாப்பை அடியோடு அரித்து விடுகின்றன; நுண்கடன் என்பது மாபெரும் சதி வலை” என்கிறார்.

இன்னொருபுறம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பொது மற்றும் ஆயுள் காப்பீடு சேவை திட்டங்களை கிராமங்களில் விற்கவும் முனைந்துள்ளன. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற தரகு பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிறுவனம் பயிர் மற்றும் கால்நடை, மழை போன்ற காப்பீடுகளில் இறங்கியுள்ளது. ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டத்தில் மழைக்கான காப்பீடுகளை விவசாய அமைப்புகளிடம் விற்று ஒத்திகை பார்த்துள்ளது.

விவசாயம் போண்டியாகி வரும் பின்னணியில், எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையைத் தீர்வாகக் கொண்டுள்ள சூழ்நிலையில், இந்நிறுவனங்கள் இருக்கும் மிச்ச மீதியையும் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதோடு ஒத்திகையும் பார்த்து வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் மட்டும் விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்கள் தங்கள் ஆயுட்காப்பீட்டுக்காக எல்.ஐ.சி.யிடம் ரூ. 1,000 கோடி அளவுக்கு பிரிமியம் கட்டியுள்ளார்கள். அண்மைக்காலமாக சந்தையின் வீழ்ச்சியாலும் வறட்சியாலும் பிரிமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியவில்லை. வாடிக்கையாளர்கள் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், விதிமுறைகளை காட்டி, மக்கள் கட்டிய ரூ. 1,000 கோடியையும் எல்.ஐ.சி. விழுங்கிக் கொண்டு விட்டது. அரசு சார்ந்த நிறுவனத்திடம் சிக்கியவர்களின் நிலைமை இப்படியிருக்கும் பொழுது, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏதேனும் எதிர்பார்க்க முடியுமா?

பதினைந்து ஆண்டுகளாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக, விவசாயிகள் வாழ்வுரிமை இழந்து குற்றுயிருடன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இருக்கும் மிச்ச சொச்சங்களையும் கொள்ளையடிக்க கிராம வளர்ச்சி என்கிற போர்வையில் பிணந்தின்னிக் கழுகுகளாக தன்னார்வக் குழுக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிராமங்களை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.

– செஞ்சுடர்
__________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2005
__________________________________________________________________________

அர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல!

19

அனைத்துச்சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் ! கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் !
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்

கண்டன ஆர்ப்பாட்டம்

துரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக 22.04.2013 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரெங்கநாதன் தலைமையேற்றார்.

மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு, ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், விவசாயிகள் விடுதலை முன்னணி உசிலை வட்டாரச் செயலாளர் தோழர் ந.குருசாமி, ம.உ.பா.மையத்தின் மதுரைக் கிளைத் துணைச் செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர் திரு.அறவாழி, ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சக மாணவர்கள் அர்ச்சகர் தோற்றத்திலேயே கலந்து கொண்டதோடு வேத மந்திரங்கள், தேவார திருவாசகங்களை தமிழிலும், சமஸ்கிருதத் திலும் துல்லியமாக ஓதி தாங்கள் பார்ப்பனர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை திரளான பொதுமக்களுக்கு உணர்த்திக் காட்டினர்.

முதலில் பேசிய வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளை இதுவரை யாரும் அகற்ற முன்வரவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சக மாணவர்களை ஒன்றுதிரட்டி சங்கம் அமைத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது. இது எங்களுடைய (இந்து) மத உரிமையை பாதிப்பதாகும் என்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களாகிய ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். சட்டம் இயற்றி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் திறந்து 206 மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்து அவர்கள் தீட்சையும் பெற்றுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலுள்ள தடையை நீக்குவதற்கு தி.மு.க.அரசு முயற்சி செய்யவில்லை. அர்ச்சக மாணவர்களுக்கு வேலை தரவும் முடியாது என்று மறுத்து விட்டது. 2008ம் ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்கள் இன்று வரை வேலை இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அர்ச்சக மாணவர்களை உச்சநீதிமன்ற வழக்கில் ஒருதரப்பினராகச் சேர்த்து நாங்கள் போராடி வருகின்றோம். இப்போது ஜெயலலிதா அரசு இந்த வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுடன் சுமுக தீர்வு ஏற்படுத்திக் கொள்வதாக உச்சநீதிமன்றத்திலே அறிவித்திருக்கிறது. அது எந்த வகையான சுமுக தீர்வு என்று சொல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சக மாணவர் தரப்பினை கேட்காமல் எவ்வாறு சுமுக தீர்வு எட்ட முடியும். சுமுக தீர்வு என்ற பெயராலே அர்ச்சக மாணவர்களை ஒதுக்குப்புறமாக உள்ள கோவில்களில் குறைந்த சம்பளத்திற்கு நியமிக்கும் மோசடித் திட்டம் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் எவ்வாறு உடன் பட முடியும். அர்ச்சக மாணவர்களுக்கு வேலை வழங்கவில்லையென்றால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து மீனாட்சியிடமே கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.

மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி பேசும்போது அர்ச்சகர் ஆக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் அவருடைய வேலையை தனது உறவினர்கள் மூலம் செய்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது. அவரை கருவறைக்குள் அனுமதித்தது யார்? பார்ப்பன பட்டர்கள் அனைவருமே தீயவர்களாக உள்ளனர். அதனால் தான் இந்த நாடு சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். அதுவரை மாணவர்களோடும், ம.உ.பா.மையத்தோடும் இணைந்து வழக்கறிஞர் சங்கம் போராடும் என்று கூறினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.மு.திருநாவுக்கரசு பிறப்பால் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைப்பது சட்டத்துக்கு புறம்பானது. தேவநாதனும், சங்கராச்சாரியும் தொட்டால் தீட்டுப்படாத சாமி அரசு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தொட்டால் மட்டும் தீட்டாகி விடுமா என்று கேள்வி எழுப்பினார்.

ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன், உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்தாமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்ற அரசுகள் வழக்கை விரைந்து நடத்தி முடித்து பணிநியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உசிலை வட்ட வி.வி.மு. செயலர் தோழர் குருசாமி பேசும் போது தந்தை பெரியார் தொடங்கிய இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்திலே மீனாட்சி கோவில் பட்டர்கள் வழக்கு தொடுத்த போது அதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பார்ப்பன பட்டர்களை திருப்திப் படுத்துகின்ற வகையிலும், சட்டம் இயற்றிய அரசை திருப்திப் படுத்துகின்ற வகையிலும் தீர்ப்பு வழங்கியது. இதைத் தான் ஆப்பரேசன் வெற்றி, நோயாளி மரணம் என்று பெரியார் குறிப்பிட்டார். நாங்கள் அர்ச்சக மாணவர்களை கைவிடமாட்டோம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்.

அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரெங்கநாதன், திக்குத் தெரியாத காட்டில் நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு திகைத்து நின்ற வேலையிலே மனித உரிமை பாதுகாப்பு மையம் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திரு.ராஜூ எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டினார். சிதறிக் கிடந்த எங்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எங்களுடைய பிரச்சினையை மக்களின் கவனத்திற்கு கொண்டு போய் இன்றைக்கு அது எல்லோராலும் அறியப்பட்ட ஒரு பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஒன்றுபட்டு போராடி ம.உ.பா.மையத்தோடு இணைந்து நாங்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவை அகற்றுவதோடு மாத்திரமல்லாமல் பணி நியமனமும் பெறுவோம் என்று கூறினார்.

இறுதியாக உரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மாவட்டச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ், மீனாட்சி கோவில் ஆதி சிவாச்சாரியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் பார்ப்பன பட்டர்கள் கோவிலுக்குள்ளே பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழையக் கூடாது என்று சொல்லி மீனாட்சிக்கு அர்ச்சனை செய்ய மறுத்து அம்போ என்று விட்டு விட்டு ஓடிவிட்டவர்கள் தான். மேலும் வெள்ளைப் பரங்கியர்களுடைய ஆட்சி போனது எண்ணி வருந்தி எங்களுடைய ஆட்சியும் பறிபோய் விட்டது என்று கூறியவர்கள் தான் இந்தப் பார்ப்பனப்பட்டர்கள். இன்றைக்கும் பார்ப்பனர்கள் தங்களுடைய வாரிசுகளை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி தாய்நாட்டின் நலனுக்கெதிராக அந்நியர்களுக்கு சேவகம் செய்து சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பப்படி ஒரு தொழிலையோ அல்லது பணியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வதைப்போல அர்ச்சக மாணவர்களும் இறைவனுக்கு திருத்தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆவலோடு தான் இந்தப் பயிற்சிக்கு வந்தார்கள். பல இன்னல்களுக்கு மத்தியிலே படித்து முடித்தார்கள். ஆனால் அரசு ஊழியர்களாக சம்பளம் பெற்றுக் கொண்டு அர்ச்சகர் பணி செய்யும் சிவாச்சாரியார்கள் அரசை எதிர்த்து சாதியின் பெயராலே, ஆகமத்தின் பெயராலே கருவறைக்குள்ளே தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். அதை இந்த அரசு அனுமதிக்கிறது. அரசியல் சட்டம் தீண்டாமையை குற்றம் என்று வரையறுக்கிறது. ஆனால் பார்ப்பனர்கள் இந்துக்களின் உரிமை என்கிறார்கள். அப்படியானால் அரசியல் சட்டம் பெரிதா, ஆகம விதிகள் பெரிதா? என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பெரிய கோவில்களிலே அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களிடம் தான் இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், அதிகார வர்க்கத்தினரும், அரசியல் தலைவர்களும், முதலாளிகளும் போய் பவ்வியமாக நின்று பிரசாதம் வாங்குகிறார்கள். இவர்கள் எப்படி பார்ப்பனப்பட்டர்களுக்கு எதிராக இருப்பார்கள்.

அரசை நம்பி படித்து முடித்து பட்டம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்பும் வேலை தரப்படாமல் அனாதைகளாக அர்ச்சக மாணவர்கள் விடப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

மாணவர்களுடைய ஒத்துழைப்போடு சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் இதனை நாங்கள் முறியடிப்போம். சூத்திரப் பஞ்சம சாதிகளின் மீதான இந்த இழிவை துடைத்தெறிவோம். அர்ச்சகர் மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்காவிட்டால் மீனாட்சி கோவில் கருவறைக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டியே தீர்வோம் என்றார்.

பழனி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் காட்டு ராஜா சமஸ்கிருத ஸ்லோகங்களையும், தமிழ்ப்பதிகங்களையும் இறுதியில் பாடினார். கூடியிருந்த மக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நின்று கவனித்து கேட்டு பாராட்டிச் சென்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்று சிறப்பித்தனர்.

தகவல்:
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை

தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

10

ன்று தோழர் லெனின் பிறந்த நாள். மனித குல வரலாற்றிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களை, ஒடுக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி மக்களுக்காக அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் லெனின். தனது 40 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் உழைக்கும் மக்களின் நலனோடு தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாகவும், முழுமையாகவும் விளக்கியிருக்கிறார் லெனின்.

தோழர் லெனின் முதலாளித்துவ தேசிய இனவாதத்துக்கு எதிராக முன் வைக்கும் சில குறிப்புகளை பார்ப்போம்.

லெனின்

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் கோஷம் “தேசிய இனக் கலாச்சாரம்” அல்ல; ஜனநாயகத்தின், உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வ தேசியக் கலாச்சாரம் ஆகும். எல்லா விதமான “நேர்முக” தேசிய இன வேலைத் திட்டங்களையும் கொண்டு முதலாளி வர்க்கம் மக்களை ஏமாற்றட்டும். வர்க்க உணர்வு படைத்த தொழிலாளி அதற்குக் கூறும் பதில் இதுதான்: தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வு (முதலாளித்துவ உலகில், இலாபத்துக்கும் சண்டை சச்சரவுக்கும் சுரண்டலுக்குமான உலகில், பொதுவாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்படியான அளவுக்கு) ஒன்றே ஒன்றுதான்; முரணற்ற ஜனநாயகம் ஒன்றேதான் அந்தத் தீர்வு.தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:

எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை; தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்; எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாக இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும், இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்.

மொழிப்பிரச்சினை குறித்தும் இதையொத்த பிற பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு பூர்ஷ்வாக் கட்சிகளும் நடத்தும் தேசியவாதச் சச்சரவுகளுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்க ஜனநாயகம் என்ன கோருகிறது என்றால், எந்த விதமான பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும். இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும், மூலதனத்துக்கு எதிராக – மூலதனம் ஏற்கனவே சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ளது., மேலும் மேலும் சர்வதேசியத் தன்மையைப் பெற்று வருகிறது – தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாத்து நிற்க முடியும். எல்லாத் தனியுரிமைகளுக்கும் எல்லாச் சுரண்டல்களுக்கும் அன்னியமான புதிய வாழ்க்கை முறையை நோக்கி மனிதகுலம் வளர்ச்சியுறுவதற்காகப் போராட முடியும்.

மிதவாத பூர்ஷ்வா தேசியவாதம் எல்லாம், தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் சீர்கேட்டை உண்டாக்குகின்றன. சுதந்திர இலட்சியத்துக்கும் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட இலட்சியத்துக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு இழைக்கின்றன என்பதுதான். இந்த பூர்ஷ்வா போக்கானது (மற்றும் பூர்ஷ்வா-பிரபுத்துவ) போக்கானது “தேசிய இனக் கலாச்சாரம்” என்ற கோஷத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதால், இது மேலும் அதிக அபாயம் விளைவிப்பதாகி விடுகிறது.

மார்க்சியக் கோணத்தில், அதாவது வர்க்கப் போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போமாயின், கோஷங்களை அர்த்தமற்ற “பொதுக் கோட்பாடுகளோடும்” பகட்டுப் பேச்சுக்களோடும் தொடர்களோடும் அல்லாமல் வர்க்கங்களது நலன்களோடும் கொள்கைகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின், இன்றைய தேசிய இன வாழ்க்கையின் உண்மைகள் மேற்கூறியவாறே உள்ளன

தேசிய இனக் கலாச்சாரம் என்னும் கோஷம் பூர்ஷ்வா ஏமாற்றாகும். நம்முடைய கோஷம்: ஜனநாயகத்தின், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரமாகும்.

தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் – வளர்ச்சியடைந்த வடிவில் இல்லை என்றாலும் – ஜனநாயக சோஷலிசக் கலாச்சாரத்தின் கூறுகள் எப்படியும் இருக்கவே செய்கின்றன. ஏனென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைப்போரும் சுரண்டப்படுபவோருமான மக்கள் திரளினர் இருக்கிறார்கள், இவர்களது வாழ்க்கை நிலைமைகள் தவிர்க்வொண்ணாதவாறு ஜனநாயக, சோஷலிச சித்தாந்தத்தை உதித்தெழச் செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் பூர்ஷ்வா கலாச்சாரமும் இருக்கிறது – கூறுகளின் வடிவில் அல்ல, ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரத்தின் வடிவில் இருக்கிறது. ஆகவே பொதுவான “தேசிய இனக் கலாச்சாரம்” என்பது நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள், முதலாளி வர்க்கத்தார் ஆகியோரது கலாச்சாரம் ஆகும்.

“ஜனநாயகத்தின் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரம்” என்ற கோஷத்தை முன் வைக்கும் நாம், தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றின் இடமிருந்தும் அதன் ஜனநாயக சோஷலிசக் கூறுகளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு தேசிய இனத்துக்கான பூர்ஷ்வாக் கலாச்சாரத்தையும் பூர்ஷ்வா தேசியவாதத்தையும் நிபந்தனையின்றி எதிர்ப்பதற்காக மட்டும்தான் அவற்றை எடுத்துக் கொள்கிறோம். எந்த ஜனநாயகவாதியும், இன்னும் அதிகமாக எந்த மார்க்சியவாதியும் மொழிகளது சமத்துவத்தை மறுக்கவோ, சொந்த மொழியிலே “சொந்த நாட்டு” முதலாளி வர்க்கத்தாருடன் வாக்குவாதம் புரிவதும்ம், “சொந்த நாட்டு” விவசாயிகளிடையிலும் குட்டி முதலாளித்துவப் பகுதியோரிடையிலும் சமய குருமார் எதிர்ப்பு அல்லது முதலாளித்துவ எதிர்ப்புக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதும் அவசியமென்பதை மறுக்கவோ இல்லை.

பூர்ஷ்வா தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வேதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோஷங்களாகும். இவை முதலாளித்துவ உலகில் முழுமையிலும் நிலவும் மாபெரும் இரு வேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து, தேசிய இனப் பிரச்சசினையில் இருவேறு கொள்கைகளின் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.

வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா வித மான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உருவாக்கப்படுதலும்.

இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்தின் உலகு தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சியடைந்து சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். மார்க்சியவாதிகளது தேசிய இன வேலைத் திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காக பாடுபடுகிறது. முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்த விதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது என்பதற்காகவும்; இரண்டாவதாக, சர்வதேசிய வாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும், பூர்ஷ்வா தேசியவாதத்தால்- மிக மிக நயமானதாலுங் கூட – பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவும்.

தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1979ல் வெளியிடப்பட்டது) என்ற நூலிலிருந்து.
மொழிபெயர்ப்பாளர்
: ரா கிருஷ்ணையா.

கொலைகாரன் யார்? இந்திய அரசா, புல்லரா?

4

“சட்டத்தின் மாண்பு ஆட்சி செய்யும் நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதி என்று கருத வேண்டும். மரண தண்டனைக்கு உரிய குற்றங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, அரசுத் தரப்பு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சியங்களையும் தடயங்களையும் சட்டப்பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு வாதிடுவதை சீர் தூக்கி கீழமை நீதிமன்றத்ததில் தீர்ப்பு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு, இறுதியாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு என்று பல கட்டங்களைத் தாண்டித்தான் ஒரு குற்றவாளியின் உயிரை எடுக்கும் முடிவை இந்த அரசு எடுக்கிறது.”

killer-handகோட்பாட்டளவில் இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் ஒருவர் ஏழை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு கிடைக்கும் நீதி ஒரு வகையினதாகவும், பணக்கார, பார்ப்பனிய இந்துத்துவ ஆதிக்க சாதி பின்னணி கொண்டவருக்கு நீதி இன்னொரு வகையினதாகவும் இருக்கிறது என்று பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அப்சல் குருவை தூக்கில் இட்டு கொலை அரசு என்று தன்னை நிலை நாட்டிக் கொண்ட இந்திய அரசு இப்போது தேவேந்தர் பால் சிங் புல்லர் என்ற சீக்கியரை அலட்சியமாகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூக்கில் போட முடிவு செய்திருக்கிறது.

1993-ம் ஆண்டு டெல்லி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தின் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு புல்லர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜெர்மனியில் இருந்த புல்லரை ஜெர்மனியின் நீதித் துறைக்கு விண்ணப்பித்து இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஜெர்மனியின் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று புல்லரை இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மரண தண்டனைக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ‘புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது’ என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறது.

இரண்டாவதாக, புல்லருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தடா சட்டத்தின் கீழ் அவரிடமிருந்து போலீஸ் பெற்ற வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நீதிமன்றத்தில் போலீஸ் சித்திரவதையினால் வாக்குமூலம் அளித்ததாக தனது வாக்குமூலத்தை புல்லர் மறுத்திருக்கிறார். புல்லரை குண்டு வெடிப்புடன் தொடர்புபடுத்துவதற்கான ஏற்கத்தக்க வேறு எந்த சாட்சியங்களும், தடயங்களும் அரசு தரப்பினால் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. அவரது வாக்குமூலத்தில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த தயாசிங் லகோரியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

மூன்றாவதாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் 2 நீதிபதிகள் புல்லருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தனர். அமர்வின் தலைமை நீதிபதி எம்.பி.ஷா தனது மாற்றுத் தீர்ப்பில், ‘புல்லர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே அவர் நிரபராதி’ என்பதையும் ‘அவரது வாக்குமூலம் போலீஸ் பாதுகாப்பில் சித்திரவதை மூலம் பெறப்பட்டது’ என்பதையும் ‘அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வழங்கப்படவில்லை’ என்பதையும், ‘புல்லரின் ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை’ என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

புல்லருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த மற்ற இரண்டு நீதிபதிகள், ‘குடியரசுத் தலைவர் புல்லரின் கருணை மனுவை பரிசீலிக்கும் போது, குற்றவியல் சட்டத்தின் 432(2)ம் பிரிவின் கீழ், மாற்றுத் தீர்ப்பை எழுதிய நீதிபதியின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்திருந்தனர். அதாவது தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளும் அந்தத் தண்டனை குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்று கருதியிருக்கின்றனர்.

பிரிவு 432(2)ன்படி தண்டனையை குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிக்கு மனு வரும் போது, தண்டனையை உறுதி செய்த நீதிமன்றத்தின் நீதிபதியிடம் மனுவை ஏற்றுக் கொள்ளலாமா என்று கருத்து கேட்கலாம்.

நான்காவதாக, புல்லரின் கருணை மனுவை கையாண்டதில் மத்திய அரசின் அலட்சியமும், கவனமின்மையும்.

புல்லரின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற அமர்வு 2002-ம் ஆண்டு பெரும்பான்மை முடிவின்படி தள்ளுபடி செய்தது. புல்லர் தனது கருணை மனுவை 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நீதிபதி ஷா அந்த ஆண்டு செப்டம்பர் 24 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். உள் துறை அமைச்சகம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பரிந்துரையின் படி அப்போது பணியில் இருந்த நீதிபதி ஷாவிடம் கருத்து கேட்டிருந்தால், அவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்திருப்பார். அதைச் செய்ய அரசு தவறியது.

இப்போது ஓய்வு பெற்று அகமதாபாத்தில் வசிக்கும் நீதிபதி ஷா, “மாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதுதான் நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பது புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

புல்லரின் கருணை மனு மீதான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், “இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வழக்கு. குற்றம் தடா சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டது. குற்றவாளி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் குறைந்த பட்சம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். என்னுடைய கருத்துப்படி பயங்கரவாத வழக்குகளைப் பொறுத்த வரை எந்த கருணையும் காட்டப்படக் கூடாது. எனவே, மரண தண்டனையை உறுதி செய்யும்படி நான் பரிந்துரைக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

இதே கருத்தை எதிரொலித்து கருணை மனுவை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்படுவதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர்.

அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு மாறாக, நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், போலி தேசபக்தியின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்தும் முயற்சிகள் என்று முற்றிலும் ஜனநாயகமற்ற, சட்ட விரோதமான முறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இதுதான் இந்திய ஜனநாயகத்தின் லட்சணம்.

மேலும் படிக்க
Judges wanterd Bhullar sentence commuted
Akalis seek Germany’s intervention in Bhullar’s death sentence
There is case for commuting Bhullar sentence – M B Shah

தகவல் அறியும் கடிதம் – கேள்வி பதில்!

1

கேள்வி:
ஒரு தலைவர் தகவல் அறியும் கடிதம் வாங்க மறுத்து விட்டார். நான் எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்?

– சுப்புராஜு
__________
அன்புள்ள சுப்புராஜு

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
“தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்த பிறகு என் பதவி பெயரையும் மாற்றிக் கொண்டேன்” (படம் உதவி : டைம்ஸ் ஆப் இந்தியா)

உங்கள் கேள்வி முழுமையாக புரியவில்லை. எனினும் தகவல் அறியும் என்ற வார்த்தைகளை வைத்து பதிலளிக்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள், அவற்றின் துறைகள் மட்டுமே வருகின்றன. அதன்படி இந்தத்  துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி நாம் தகவல்களை கேட்டு வாங்க முடியும். இதிலும் இராணுவம், உளவுத்துறை, அணுசக்தி போன்ற துறைகள் விதிவிலக்கு. இவற்றை நாம் கேட்கவே, தகவல் பெறவோ முடியாது. இது போக தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் இச்சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.

வெளிப்படையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றை மேம்படுத்த வந்ததாக கூறப்படும் இச்சட்டத்தின் கீழ் சில பல தகவல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் இதை வைத்துக் கொண்டு மட்டும் நாம் மக்கள் பிரச்சினைகளில் வென்று விட முடியாது. மேலும் பாதுகாப்பு, நாட்டின் நலன் போன்ற வார்த்தைகளை வைத்து முக்கியமான பல கொள்ளைகள் இச்சட்டத்தினை கேலி செய்து விட்டு தொடருகின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் இங்கே அரசுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தையெல்லாம் நாம் இச்சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசியல் தலைவரிடம் இச்சட்டப்படி எந்த தகவலையும் கோர முடியாது. மற்றபடி எல்லா ஓட்டுக்கட்சி தலைவர்களிடமும் மக்கள் விரோத, சுரண்டல், கொள்ளை தொடர்பான ஏராளமான தகவல்கள் பதுங்கிக் கிடக்கின்றன. முக்கியமாக இந்த தகவல்களின் முழு சூத்திரதாரிகளான தரகு முதலாளிகளின் முழு நடவடிக்கைகளும் மர்மம் நிறைந்தவை. சொல்லப் போனால் அரசுத் துறைகளோடு கூடவே தனியார் நிறுவனங்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால்தான் உண்மையிலேயே பலனிருக்கும்.

அதுவரை அவர்களை நாம் மக்கள் மன்றத்தில் வீழ்த்தும் போதுதான் அந்த தகவல்கள் வெளிவருவதோடு அதற்கான தண்டனையையும் வாங்கித் தரமுடியும். தகவலை வெளிக் கொண்டு வருவதை விட அதன் மீதான நடவடிக்கைதான் முக்கியம். அதை மக்களைத் திரட்டித்தான் சாதிக்க முடியும்.

கீழே தொடர்புடைய ஒரு கட்டுரையை படியுங்கள். இச்சட்டம் ஒரு பாமரனை எப்படி பந்தாடியது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

25

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்!
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சார்யர்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நேரம் : 22-04-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம் : மாவட்ட நீதிமன்றம் முன்பு, மதுரை

தலைமை : திரு ரங்கநாதன் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு

கண்டன உரை:

வழக்கறிஞர் A K ராமசாமி அவர்கள், செயலாளர், வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை
தோழர் கதிரவன், மக்கள் கலை இலக்கிய கழகம், மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் ந. குருசாமி செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை
வழக்கறிஞர் சே வாஞ்சிநாதன் துணைச் செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
வழக்கறிஞர் மு திருநாவுக்கரசு, தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மதுரை
திரு ம லயனல் அந்தோணிராஜ் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

மற்றும் அர்ச்சகர் மாணவர்கள், கிராமப் பூசாரிகள்

நன்றியுரை : வழக்கறிஞர் பா. நடராஜன் துணைத்தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

கோயில்னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2007ம் ஆண்டில் தமிழகத்தின் ஆறு முக்கியமான கோவில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு துவங்கியது. 2007-08 கல்வி ஆண்டில் ஒரு வருட அர்ச்சகர் கல்விப் பயிற்சியும், இருமாத புத்தாக்கப் பயிற்சியினையும் 206 பேர் முடித்தனர். 2006ம் ஆண்டில் தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க அன்றைய தி.மு.க. அரசாங்கம் மறுத்து விட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினை” உருவாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகிப் போராடி வருகின்றனர். இடைக்காலத் தடையினை விலக்கவோ, வழக்கினை விரைவுபடுத்துவோ முயற்சிக்காத தி.மு.க. அரசாங்கம், அவரச சட்டத்திற்குப் பதிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்திலோ அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான முக்கியமான பிரிவையே நீக்கி விட்டது. உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி நிலையினை எட்டி 23.04.2013 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதா அரசாங்கமோ சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாக கழுத்தறுப்பு வேலையினை செய்யத் துவங்கியுள்ளது.

கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் தகுதி பார்ப்பன சாதியினருக்குத் தவிர மற்றவருக்குக் கிடையாது என்பது பார்ப்பன வர்ணாஸ்சிரமம் உருவாக்கிய அநீதி. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக் குழு, 2008ல் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களில் 80 சதவீதம் பேர் முறையான பயிற்சியில்லாமலும், வாரிசுதாரர் உரிமையிலும்தான் பூசை செய்து வருகின்றனர். கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பூசை செய்யக் கூடாதாம். ஏனெனில் இம்மாணவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை. எனவே சாமியைத் தொட்டால் தீட்டாம்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை அல்ல இது. கருவறைக்குள் நிலவும் சாதித் தீண்டாமையை ஒழிக்க வேண்டிய பிரச்சனை, குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, 976ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கிற்குப் பின்பாக, அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை, அது எவ்வகையிலும் மத சுதந்திரத்திலை தலையிடுவதாகக் கருத முடியாது என பல வழக்குகளின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிறப்பால் இழிவானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர், இவர்கள் பூசை செய்தால் புனிதம் கெட்டு, சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனரல்லாதோர் மேல் சுமத்தப்படும் இழிவினை இன்னமும் ஏற்கத்தான் வேண்டுமா என தமிழகம் கிளர்ந்தெழவில்லை. கருவறைக்குள் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்க்க வேண்டிய நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதியினர் திரட்டப்படுகின்றனர். அதனால் தான், தமிழக அரசால் இவ்வழக்கினை நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் மிகத் துணிச்சலாகக் கூற முடிகின்றது.

பெரியார்பெரியார் பிறந்த மண் என்ற மூச்சுக்க்கு முன்னூறு தடவை பேசுவதால் பயனில்லை. மாறாக ஜெயலலிதா அரசாங்கத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை நாட்டல் நடவடிக்கைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்து “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என முழங்க வேண்டிய தருணமிது. “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இந்த அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியைத் தவிக்க விட்டு பூசை செய்யாமல் ஓடிப் போனவர்கள்தான் இந்த ஆதி சிவாச்சாரியர்கள். பிரிட்டிஷ் ஆட்சி போடவுடன் எங்கள் அதிகாரமும் போய் விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய “தேசபக்தர்கள்”தான் இவர்கள். இன்றைக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் போராடுகிறவர்களும் இவர்கள்தான். இவர்களிடம் கடவுள் பக்தி மட்டும் அல்ல. கடவுள் மீது மரியாதை கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால் மீனாட்சியைப் புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளை பறிபோய் விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர். அப்படியானால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக்கள் இல்லையா?

தமிழக அரசே!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை இழுத்தடிக்காமல் விரைவுபடுத்து!
மீனாட்சி கோவில் பட்டர்களுக்கு ஆதரவாக பார்ப்பன ஆதிக்கத்தினை கருவறைக்குள் நிலைநாட்ட முயற்சிக்காதே!
பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கு பாரபட்சமின்றி உடனே வேலை கொடு!

தமிழக மக்களே!

கருவறைக்குள் நிலவும் சாதி தீண்டாமைக்கு எதிராகப் போராடுவோம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்கப்பட கிளர்ந்தெழுவோம்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
தொடர்புக்கு : 9443471003

இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

5

முஸ்லிம்கள் என்றால் ஜனநாயக உணர்வற்ற பழைமைவாதிகள், இஸ்லாமிய மதவெறியிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிக் கிடப்பவர்கள் என்று இந்துத்துவ ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் தவறான கருத்துதான் நமது நாட்டில் நிலவுகிறது. ஆனால், இது எவ்வளவு பச்சைப்பொய் என்பதை அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் இஸ்லாமிய மதவெறிக் கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இஸ்லாமிய மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் குண்டர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போராடும் மக்களை அச்சுறுத்திய போதிலும், அவற்றைத் துச்சமாக மதித்து வங்கதேச மக்கள் நீதிக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர்.

வங்கதேசத்தில் – அதாவது, பாகிஸ்தானின் மாநிலமாக இருந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி 99 சதவீத அளவுக்கு மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு,மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. இதை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பரவின. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர். வங்கதேச மதவெறிக் கட்சியான ஜமாத் -இ-இஸ்லாமி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொண்டு போராடும் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது. தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக்குழுக்களைக் கட்டியமைத்து முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தது.

ஷாபாக் ஆர்ப்பாட்டம்
“போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சியைத் தடை செய்!” – டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் நடந்த மக்களின் பேரெழுச்சி.

இராணுவ அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகப் போராடிய வங்கதேச மக்கள், முக்தி பாஹினி எனும் இயக்கத்தின் மூலம் பாகிஸ்தானிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர். வங்கதேச விடுதலைப் போரின்போது, ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, ஒரு கோடிப் பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இந்த அவலத்தைச் சாதகமாக்கிக் கொண் டு, பிராந்திய விரிவாக்க நோக்கத்துடன் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் வங்கதேச விடுதலைப் போரை ஆதரித்து, முக்திபாஹினி இயக்கத்தின் பெயரால் 1971, டிசம்பர் 3 அன்று இந்திய இராணுவத்தைக் கொண்டு வங்கதேசத்தில் வெளிப்படையாகத் தலையிட்டார். பாகிஸ்தான் இப்போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 16 அன்று முஜிபுர் ரஹ்மானை அதிபராகக் கொண்ட வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. போர் முடிவுக்கு வரும் முன்னரே, வங்கதேச இடைக்கால அரசாங்கம் மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்தது.

புதிய நாடு உருவான பின்னர், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை நடத்தித் தண்டிக்கக் கோரி மக்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. இருப்பினும் கொலைகள், பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு 1973-இல் முஜிபுர் அரசு பொது மன்னிப்பு அளித்ததேயன்றி, குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை. முஜிபுர் ரஹ்மானின் ஆட்சியானது, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாமல், ஒரு கட்சி சர்வாதிகாரத்தைக் கொண்டு மக்களின் போராட்டங்களை ஒடுக்கியது.

பின்னர், 1975-இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் முஜிபுர் கொல்லப்பட்டு, இராணுவத் தளபதியான ஜியா உர் ரஹ்மான் நாட்டின் அதிபரானார். இந்த இராணுவ ஆட்சியாலும் நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டுவந்ததோடு, மதவாதக் கட்சிகளின் மீதான தடையையும் ஜியா நீக்கினார்.

ரஜீப் ஹைதர்
ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து இணையத்தின் மூலம் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திக இளைஞர் ரஜீப் ஹைதர்.

இருப்பினும், விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்று போர்க்குற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் ஜமாத் கட்சிக்கு தேர்தலில் நிற்க அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்கள் பின்பற்றிய உத்தியுடன், வங்கதேச ஜமாத் கட்சியானது, இஸ்லாமிய ஜனநாயக லீக் என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. அதன் இளைஞர்-மாணவர் அமைப்புகள் இஸ்லாமி சத்ர ஷிபிர் என்ற பெயரில் மறுஅவதாரம் பெற்றன. பின்னர் 1982-இல் மீண்டும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஹுசைன் முகம்மது எர்ஷாத் அதிபரான பின்னரே, ஜமாத் கட்சி தனது சோந்தப் பெயரிலேயே செயல்படத் தொடங்கியது.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழான இந்த ஆட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாமல், 1991-இல் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் அடிப்படையில் வங்கதேசத்தில் தேர்தல்கள் நடந்தன. முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையிலான அவாமி லீக் கட்சியும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செதன. ஆண்டுகள் பல கடந்த போதிலும், போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென்ற வங்கதேச மக்களின் நீதிக்கான உணர்வு மங்கிவிடாமல் நீறுபூத்த நெருப்பாகவே நீடித்து வந்தது.

இந்நிலையில், 1971 விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தித் தண்டிப்பதாகக் கடந்த 2008 தேர்தலின் போது வாக்களித்து ஆட்சிக்கு வந்தார், அவாமி லீக் கட்சியின் தலைவியான ஹசீனா பேகம். அதன்படி, 2009-ஆம் ஆண்டு 3 உறுப்பினர் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம், 7 உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்களைக் கொண்ட வழக்குரைஞர்கள் குழு – ஆகியன உருவாக்கப்பட்டன. இப்போர்க்குற்ற விசாரணை மன்றம், பாகிஸ்தானுக்குத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு கடந்த ஜனவரி 2013-இல் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

ரஜீப் இறுதி ஊர்வலம்
ஜமாத் கட்சியின் குண்டர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ரஜீப் ஹைதரின் இறுதி ஊர்வலம்.

ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவரும், மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் என்று மக்களால் காறி உமிழப்படும் போர்க்குற்றவாளியுமான அப்துல் காதர் மொல்லாவுக்கு கடந்த பிப்ரவரி 5 அன்று இந்த விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அதைத் துச்சமாக மதித்து, அப்துல் காதர் மொல்லாவும் ஜமாத் கட்சியின் குண்டர்களும் இரண்டு விரல்களைக் காட்டி வெற்றிப் பெருமிதத்துடன் ஆரவாரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள், அவனுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகரான டாக்காவிலுள்ள ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிப்ரவரி 5-ஆம் தேதியன்று ஷாபாக் சதுக்கத்தில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், “போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முழக்கத் தட்டிகள், கருத்தோவியங்கள், கேலிச்சித்திரங்கள், கொடும்பாவி எரிப்பு – எனப் பல்வேறு வடிவங்களுடன் காட்டுத்தீயாக நாடெங்கும் பரவியது. 1971-இல் ஒவ்வொரு வங்காளிக் குடும்பமும் தமது உறவினர்களைப் பறிகொடுத்துள்ளதால், எத்தனை ஆண்டுகளானாலும் இக்கொடிய வன்கொடுமையை மக்கள் மறக்கத் தயாராக இல்லை.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஜமாத் கட்சியின் குண்டர்கள் போராடும் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி எதிர்ப்போராட்டங்களை நடத்தினர். இணையத்தின் மூலம் ஜமாத் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராட்டத்துக்கு அணிதிரட்டிய நாத்திகரான அகமது ரஜீப் ஹைதர் என்ற இளைஞர், ஜமாத் கட்சியின் சத்ர ஷிபிர் எனும் மாணவர் அமைப்பின் குண்டர்களால் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஜமாத்தின் மாணவர் அமைப்பானது, போலீசையும் பத்திரிகையாளர்களையும் கொடூரமாகத் தாக்கியதோடு, பொதுச்சோத்துக்களையும் நாசமாக்கிக் கையெறி குண்டுகளை வீசி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தியது. இந்தத் தாக்குதலில் ஜமாத் குண்டர்களும் போலீசாரும் உள்ளிட்டு ஏறத்தாழ 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்ட போர்க்குற்றவாளிகள்: “மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன்” என்று மக்களால் காறி உமிழப்படும் ஜமாத் கட்சியின் முக்கியத் தலைவரான அப்துல் காதல் மொல்லா (இடது). மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜமாத் கட்சியின் துணைத்தலைவர் தெல்வார் ஹூசைன் சயீதி.

இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களால் மக்களின் போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை. ஜமாத் கட்சியின் வர்த்தக அமைப்புகளான இஸ்லாமி வங்கி, ஐ.பி.என். சினா உள்ளிட்ட இதர நிறுவனங்களையும், டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, சோனார் பங்களா வலைத்தளம் உள்ளிட்ட ஊடகங்களையும், ஜமாத் கட்சியின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களையும் தடை செய்யுமாறும், ராசாக்கர்கள் – அல் பதார் குண்டர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்களைத் தண்டிக்கக் கோரியும் வங்கதேச மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். பிப்ரவரி 28 அன்று போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் ஜமாத் இ இஸ்லாமியின் துணைத் தலைவரான தெல்வார் ஹுசைன் சயீதிக்கு மரண தண்டனை விதித்ததும், போராடும் மக்கள் இதனை நாடெங்கும் திருவிழா போலக் கொண்டாடினர். போர்க்குற்றவாளிகளுக்கும் மதவெறியர்களுக்கும் எதிராக மாபெரும் எழுச்சியை வங்கதேச மக்கள் நடத்தியுள்ள போதிலும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டுள்ள ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் இப்போராட்டம் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

முன்னணியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான கலீடா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியின் ஆதரவோடு ஜமாத் கட்சியின் ஒரு சிறுகும்பல் வன்முறை வெறியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. வங்கதேச சிறுபான்மை இந்துக்களைத் தாக்கியும் இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தியும் பிரச்சினையைத் திசை திருப்ப இக்கும்பல் முயற்சிக்கிறது. இந்தியாவின் சதி, நாத்திக சதி, காஃபிர்களின் சதி என்றெல்லாம் அவர்கள் கூச்சலிட்டாலும், வங்கதேச மக்கள் இஸ்லாமிய மத வெறியர்களைத் தண்டிப்பதில் ஓரணியில் நின்று உறுதியாகப் போராடி வருகின்றனர்.

“நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்!” என்ற முழக்கத்தோடு போராடும் வங்கதேச மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய மதவெறியையும் விட வங்காள தேசியத்தையே பெருமிதமாகக் கருதுகின்றனர். இத்தகைய மக்கள்திரள் போராட்டங்களின் மூலம்தான் எந்த நாட்டிலும் மதவெறியர்களையும் போர்க்குற்றவாளிகளையும் தண்டிக்க முடியுமே தவிர, கடுமையான காகிதச் சட்டங்களாலோ, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் தயவினாலோ அல்ல என்பதை வங்கதேச மக்கள் போராட்டம் படிப்பினையாக உணர்த்துகிறது. இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிராக நம்நாட்டிலும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் பெருகும்போது, இந்துவெறி பாசிசப் பரிவாரங்கள் தண்டிக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுவார்கள்.

– குமார்.
___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

பயங்கரவாத மோடி : இந்திய நாட்டின் அவமானச் சின்னம்!

12
மோடி
மோடியை புகழ்வதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 9 லட்சம் கொடுக்கப்பட்டது – இந்தியன் எக்ஸ்பிரஸ் – மார்ச் 30, 2013.

மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதைக் குறித்து புதிய ஜனநாயகம் இதழில் 2005ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.

“மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்” என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

“மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது” என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

குஜராத்தில் கொத்துக் கொத்தாக முசுலீம்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த பொழுது விசுவ இந்து பரிசத்தின் குஜராத் மாநிலத் தலைவர் கேசவ்ராம் காசிராம் சாஸ்திரி “ஆம். நாங்கள் திட்டமிட்டுத்தான் கலவரம் நடத்தினோம்” எனப் பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். இந்த இனப்படுகொலையின் தளபதி நரேந்திர மோடிதான் என்பதை கலவரத்துக்குப் பின் கோவாவில் நடந்த பா.ஜ.க.வின் உயர்மட்டக் கூட்டம் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நம் கண் முன் நடந்தவை.

இந்த சமீபத்திய வரலாற்று உண்மைகளை முசுலீம் பிணங்களோடு போட்டுப் புதைத்துவிட்டு “எந்த நிரூபணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் பத்திரிகை உலகமும் நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரங்களைப் பின் நின்று நடத்தி அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முத்திரையைக் குத்தி விட்டன… அமெரிக்காவிற்கு இந்த முத்திரை பயன்பட்டது…. அமெரிக்க நடவடிக்கை கண்டிக்கத் தகுந்தது” எனப் பொய்யைக் கக்கி மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார் துக்ளக் “சோ”.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலோ இன்னும் ஒருபடி மேலே போய் மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை “இந்திய அரசியல் சாசனத்திற்கும் இந்திய மக்களுக்கும் நேர்ந்துவிட்ட அவமானமாகவும்; இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழுக்காகவும்” ஊதிப் பெருக்குகிறது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் “சோதனை” என்ற பெயரில் துகில் உரியப்பட்டார். ஒரு கிறித்தவ இந்திய அமைச்சருக்கு நேர்ந்த அவமானத்தை இந்திய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்த அவமானமாக பா.ஜ.க. அரசு கருதவில்லை. மாறாக “அது அமெரிக்காவின் சட்டம்” என்று சொல்லி அவமானத்தைச் சகித்துக் கொண்டார்கள்.

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட பின் இந்தியா உள்ளிட்ட சில ஏழை ஆசிய கண்டத்து நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைவரும் தங்களின் கைரேகைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இரவு நேரத்தில் சந்தேகத்தில் பிடித்துக் கொள்ளும் நபர்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்து கொள்கிறார்களே அதற்கும் அமெரிக்காவின் சட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.

இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தீவிரவாதியாகச் சந்தேகிக்கும் இந்தச் சட்டத்தை பா.ஜ.க. அவமானமாகப் பார்க்கவில்லை. ஆனால் இந்துமத பயங்கரவாதி மோடிக்கு விசா மறுக்கப்பட்டதை அரசியல் சாசனத்தின் அவமானமாக ஒப்பிடுகிறது. அப்படியென்றால் மோடி என்ற கேடியைக் காப்பாற்றுவதுதான் அரசியல் சாசனத்தின் வேலையா?

இந்தக் கேள்விக்கு பா.ஜ.க. மட்டுமல்ல மதச்சார்பற்ற காங்கிரசும் கூட “ஆம்” என்று தான் பதில் அளிக்கிறது. “மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரி; குஜராத் கலவரங்களுக்காக அவர் எந்தவொரு இந்திய நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை; எனவே அவருக்கு விசா மறுக்கப்பட்டதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இந்திய அரசின் சார்பாகவே அமெரிக்காவிடம் வேண்டுகிறார்கள்.

2000 முசுலீம்களைக் கொன்ற மோடி சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஓட்டாண்டித்தனத்தைத் தான் காட்டுகிறது.

“இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. இதைத்தான் பா.ஜ.க. இந்துத்துவா என்கிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காகச் செதுக்கப்பட்ட தூண்களை பாபர் மசூதி வளாகத்தில் வைத்துப் பூசை செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் செய்தபொழுது உச்சநீதி மன்றம் அப்பூசையைத் தடை செய்யவில்லை. மாறாக வளாகத்திற்கு வெளியே பூசை நடத்திக் கொள்ளுங்கள் என்ற சந்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி பலவிதங்களில் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் நீதிமன்றங்கள் மோடியைத் தண்டிக்க வேண்டும் என்றால் சூரியன் மேற்கேதான் உதிக்க வேண்டும். மோடி தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் அவமானமேயொழிய அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டிருப்பது அவமானத்திற்குரியதல்ல! ···

“சவூதி அரேபியா ஈரானில் எல்லாம் மதவெறி ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான் வங்காள தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். அந்நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு விசாவை மறுக்காத அமெரிக்கா மோடிக்கு மட்டும் மறுத்திருக்கிறது” என அமெரிக்காவின் இரட்டை வேடத்தை பா.ஜ.க. அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்காவின் இந்த இரட்டைவேடத்தினால் பா.ஜ.க.வும்தான் பலன் அடைந்திருக்கிறது. கொசோவாவில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைச் சாக்காக வைத்து யுகோஸ்லாவியா நாட்டின் மீது அமெரிக்கா போரே தொடுத்தது. அதே அமெரிக்கா குஜராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது அதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. இதற்குக் காரணம் குஜராத் கலவரம் நடந்தபொழுது ஆட்சியில் இருந்த வாஜ்பாயி அரசுக்கும் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் இடையே இருந்த நெருக்கம்தான்.

அமெரிக்காவில் உண்டியலைக் குலுக்கி வசூலிக்கப்பட்ட டாலர்கள் குஜராத் கலவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பல்வேறு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனாலும் விசுவ இந்து பரிசத் அமெரிக்காவில் உண்டியல் குலுக்குவதை இன்று வரை புஷ் தடை செய்யவில்லை.

“சுதந்திரத்துக்கு” முன்னும் பின்னும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நூற்றுக்கணக்கான மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கிறது. மதச் சுதந்திரத்துக்கே வேட்டு வைக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. இதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருக்குமே “விசா” மறுக்கப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவோ மோடிக்கு மட்டும் விசாவை மறுத்துவிட்டு எங்களுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக அறிக்கை விடுகிறது.

இந்தியாவின் அத்வானி இசுரேலின் ஏரியல் ஷரோன் போன்ற மதவெறி பிடித்த அரசியல் தலைவர்களுக்குக் கூட “விசா” வழங்கி வரும் அமெரிக்கா கம்யூனிஸ்டுகள் இடது சாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களுக்கு “விசா” வழங்க மறுப்பதை அரசியல் தந்திரமாகவே கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி பா.ஜ.க. என்றைக்காவது வாயைத் திறந்ததுண்டா?

அமெரிக்காவின் நலன்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மதச் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்கு விசா வழங்க எந்தத் தடையும் இல்லை என அமெரிக்க சட்டமே கூறுகிறது. அதனால்தான் அத்வானி வாஜ்பாயி வகையறாக்களின் விசா ரத்து செய்யப்படவில்லை. மோடியின் விசா ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு விதி விலக்கு. நமது நாட்டு நீதிமன்றங்கள் மனித உரிமைகளை மீறிய போலீசு அதிகாரிகளை அதிசயமாகத் தண்டிப்பது போல! ···

ஈராக் ஆக்கிரமிப்பு அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் இவற்றைக் காட்டி மனித உரிமை பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதியில்லை என வாதாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதைதான் இது.

இந்திய மக்களின் சட்டபூர்வ மனித உரிமைகள் அனைத்தையும் பறிப்பதற்காகவே “பொடா” என்ற கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் பா.ஜ. கட்சியினர். மனித உரிமைப் போராளிகள் இச்சட்டத்தை எதிர்த்த பொழுது அமெரிக்காவிலும் இது போன்ற சட்டம் பேட்ரியாட் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறி நியாயப்படுத்தினார்கள்.

இது மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கத் திட்டம் போட்ட பொழுது தீவிரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மன்றாடியது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின் அமெரிக்காவின் தயவில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு வியாபார ஒப்பந்தம் வாங்கித் தருவதற்காக “அமெரிக்காவுக்கு உதவ ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்புவதாக” புஷ்ஷிடம் வாக்குறுதி கொடுத்தார் அத்வானி. உள்நாட்டு எதிர்ப்பின் காரணமாக படைகளை அனுப்ப முடியாமல் போனதால் முன்னாள் இராணுவ வீரர்களைக் கூலிப் படைகளாக ஏற்றுமதி செய்ய பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அனுமதித்தது.

இப்படி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு அடியாளாக வேலை செய்ய விருப்பம் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் “மனித உரிமைகளை மீறிய அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா விசாவை மறுத்தால் என்னவாகும்?” எனச் சவால் விடுகிறது.

ஒருவேளை அப்படி நடந்து விடுகிறது எனக் கற்பனை செய்து கொள்வோம். பிறகு அந்நிய நிதி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு இந்தியா எந்த நாட்டிடம் கையேந்தி நிற்க முடியும்?

1994இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் பொழுது அமெரிக்க என்ரான் நிறுவனத்தை அரபிக் கடலில் தூக்கியெறிவோம் எனச் சவடால் அடித்தது பா.ஜ.க. ஆனால் அந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தபின் என்ரானின் இரண்டாவது மின்திட்டத்திற்கும் சேர்த்தே அனுமதி கொடுத்தது.

வாஜ்பாயின் ஆட்சியில் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா இந்தியா மீது அணு ஆராய்ச்சி சம்மந்தமான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நியப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவில் உள்ள தடைகளை நீக்கி விடுகிறோம் என அமெரிக்காவோடு பேரம் நடத்திதான் பொருளாதாரத் தடையை நீக்கச் செய்தது வாஜ்பாயி அரசு. இதுதான் பா.ஜ.க.வின் கடந்தகால அமெரிக்க எதிர்ப்பு வீர வரலாறு!

மோடிக்கு விசா வழங்கப்பட்டதை எதிர்த்து அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் “நமது நாட்டின் சட்டம் இப்படி இருக்க வேண்டும்; நமது நாட்டின் பாடநூல்கள் இப்படி இருக்க வேண்டும் என அமெரிக்கா கட்டளையிடுவதா?” என்று கொதிப்போடு பேசினாராம் மோடி. பா.ஜ.க. இந்தப் பேரணிக்கு “சுயமரியாதை பேரணி” எனப் பெயரிட்டிருந்தது.

அமெரிக்கா உத்திரவு போட்டு காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது; அமெரிக்கா உத்திரவு போட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபொழுது பா.ஜ.க.வின் சுயமரியாதை எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

“குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிட்டுத் தீர்ப்புச் சொல்ல அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடையாது” என பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு காங்கிரசும் தர்க்க நியாயம் பேசுகிறது.

இந்திரா காந்தியின் அவசரநிலை காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலையிட்டதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வரவேற்றிருக்கிறது. கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர கிளிண்டனோடு இரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார் வாஜ்பாயி. இவையெல்லாம் சர்வதேசப் பிரச்சினைகளா?

இந்த உள்நாட்டு அளவுகோலை ஈராக் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரயோகித்தால் அமெரிக்கப் படைகளை அந்நாடுகளில் இருந்து வெளியேறச் சொல்ல வேண்டும். அந்த நாணயம் காங்கிரசு பா.ஜ.க. விடம் உண்டா?

அமெரிக்கா சதாமை சர்வாதிகாரி எனக் குற்றம் சாட்டியபொழுது “அதை ஈராக் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; அதில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என மோடியோ அத்வானியோ எதிர்த்துப் பேசியதுண்டா? மாறாக “சதாமை நீங்கள் தண்டிக்க விரும்பினால் ஐ.நா.வின் ஒப்புதலோடு தண்டியுங்கள்” என்றுதான் அமெரிக்காவிடம் மன்றாடினார்கள்.

இன்றுள்ள உலகச் சூழலில் சில பிரச்சினைகளை உள்நாட்டு பிரச்சினைகள் என ஒதுக்கி விட முடியாது. தென்னப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இனவெறி அரசு கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த பொழுது அந்நாட்டை உலக நாடுகள் கண்டித்ததோடு அந்நாட்டோடு வர்த்தக அரசியல் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்தன. பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பூமியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கத்தோடு இசுரேல் கட்டிவரும் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. போஸ்னியாவிலும் கொசாவாவிலும் முசுலீம்களை இனப்படுகொலை செய்த யுகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் அந்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறார்.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை கூட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்குக் கொடூரமானவைதான். இந்த இனப்படுகொலையின் தளபதியான மோடியை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க மறுக்கும் பொழுது அவனைத் தண்டிக்கக் கோரும் உரிமையை அமெரிக்க அரசிற்கு (அதனின் இரட்டை வேடம் காரணமாக) வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் உலக மக்கள் அப்படிக் கோருவதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இன்று போர் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷைத் தண்டிக்கக் கோரி போராடும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நாளை மோடியையும் தண்டிக்கக் கோரி போராடினால் அதை நாம் இருகரம் கூப்பி வரவேற்கத்தான் வேண்டும்.

– முத்து
______________________________________________________________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2005
______________________________________________________________________________

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா பயங்கரவாதம்!

0

17.04.2013, ஓசூர்.

பு.ஜ.தொ.மு., ஓசூர்ஓசூரில் கனரக வாகன உற்பத்தி நிறுவனமான கமாஸ் வெக்ட்ராவில் நடக்கின்ற தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாத அடக்குமுறைகளை அவ்வாலைத் தொழிலாளர்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர். ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டுவரும் தொழிலாளர் நலத்துறை, ஆய்வகத்துறையைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரில் கடந்த பிப்ரவரி 2013-ல் ஆர்ப்பாட்டம் என பலவேறு போராட்டங்களை நடத்திவந்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15.04.2013 அன்று காலை 10 மணியளவில் ஓசூர் நகராட்சி முன்பாக ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில் தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். கமாஸ் வெக்ட்ரா கிளைச் சங்கத்தின் பொருளாளர் தோழர் முரளி இறுதியாக நன்றியுரையாற்றினார்.

திரளான மக்கள் திரண்டு நின்று கவணித்து ஆதரவளித்துச் சென்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் அச்சடித்து நகர்முழுவதும் விநியோகித்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருந்தனர்.

ஓசூர் ரஷ்ய பன்னாட்டு கம்பெனி கமாஸ்வெக்ட்ராவின் தொழிலாளர்மீதான முதலாளித்துவ அடக்குமுறையை முறியடிப்போம்!
நிர்வாக அதிகாரிகளின் கிரிமினல் வேலைகளை அம்பலப்படுத்துவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா எனும் ரசியாவை சேர்ந்த கனரக வாகன தொழிற்சாலை இயங்கிவருகிறது. இவ்வாலையில் உற்பத்தி செய்யப்படும் லாரிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2010-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்ட எத்தனித்தது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் ரஷ்ய நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. மேலும் நயவஞ்சகமாக 2010-ல் அத்திப்பள்ளிக்கு விரட்டப்பட்ட 15 தொழிலாளர்களின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

கமாஸ் வெக்ட்ரா கம்பெனியா? பட்டறையா?

52 நிரந்தரத் தொழிலாளர்களை கொண்ட இவ்வாலையில் தற்போது சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 13 தொழிலாளர்கள் சஸ்பெண்டு, 3 தொழிலாளர்கள் வடமாநிலங்களுக்கு விரட்டியடிப்பு, 18 தொழிலாளர்கள் சர்வீஸ், மார்க்கெட்டிங் பிரிவுகளுக்கும் மாற்றப்பட்டு எஞ்சிய 16 நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு கம்பெனி இயங்குகிறதாம். நேரடி உற்பத்தி பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், அதிகாரிகளை திணித்துவிட்டு நிரந்தரத் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனி இந்தியாவுக்குள் வந்தால் தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் “2020-ல் இந்தியா வல்லரசு” ஆகிவிடும் என்றும் அப்துல்கலாம் முதல் பிரதமர் மன்மோகன்சிங் வரை பேசுபவர்களின் முகத்தில் காரி உமிழ்கிறார்கள் இவ்வாலை நிர்வாகிகள்.

ரஷ்ய நிறுவனத்தின் அடாவடிகளும், அயோக்கியத்தனங்களும்;

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை முன்னால் போடப்பட்ட 12/3 ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. அசெம்பிளி லைனில் 12/3 ஒப்பந்தப்படி 34 நிரந்தரத் தொழிலாளர்கள் வழங்கப்படுவதில்லை. அதேசமயம் ஆட்குறைப்பு அடக்குமுறையும், உற்பத்தி உயர்வும் திணிக்கப்படுகிறது. 12/3 ஒப்பந்தப்படி உற்பத்தி உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்று வேலைசெய்யும் 27 இளந்தொழிலாளர்களுக்கு ரூ 7,000 ஊதிய உயர்வு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை. இதுதவிர ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட போனஸ் ரூ 8,400, பரிசுப் பொருட்கள்(ரூ 5,000 மதிப்பு), சீருடை, காலணி போன்ற எதுவும் வழங்கப்படவில்லை. தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வாளர் ஜெகதீசனிடம் புகார் கூறியதற்காக 8 நாட்கள் சம்பளவெட்டு செய்யப்பட்டுள்ளது.

ரசிய நிர்வாகம் உரிமைகளை பறித்து நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டவும் கிரிமினல் வேலைகளை செய்யும் எச். ஆர், ஐ.ஆர், ஜி. எம் என்ற பெயரில் அடியாட்களை வைத்துள்ளது. ராஜூ ஆறுமுகம்(எச். ஆர்) ரூ 32 லட்சம், சுந்திரமூர்த்தி(ஜி. எம்) ரூ 24 லட்சம், காமவெறியன் ஏகாம்பரம்(ஐ.ஆர்) ரூ 18 லட்சம் என பெருந்தொகையை வெளிநாட்டு நிறுவனத்திடம் பேரம் பேசி பெற்றுக்கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கிவருகின்றார்கள். “இந்தியாவில் எங்கே போய் புகார் கொடுத்தாலும் எங்கள்மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க, சும்மா இல்ல 4 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு செலவு செய்திருக்கோம். மேனேஜ்மென்ட் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் ஒழிக்காம விடாது.” இப்படி ரௌடிகளைவிட மிகமோசமாக கொக்கரித்துவருபவர்கள்தான் மேற்கண்ட மும்மூர்த்திகள். சொத்துக்குவிப்பு, கிரிமினல் வழக்குகள் இவர்கள்மீது பாய்வதில்லை. காரணம் இவர்கள் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் அடிவருடிகள் என்பதால்தான்.

தொழிலாளர் நல அலுவலரும், தொழிற்சாலைகள் ஆய்வாளரும் நிர்வாகத்தின் உளவாளிகளே!

மேற்கண்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்வது என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். பல தொழிற்தகராறு வழக்குகள் தொழிலாளர் அலுவலரிடம் போடப்பட்டபோதும் தொழிலாளர் அலுவலர் ரமேஷ்குமார் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டுவருகிறார். தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2k வழக்குக்கு போடவேண்டிய சமரச முறிவறிக்கைக்கு 12 (4)க்கு பதிலாக அவரே நிர்வாகத்தின் கட்டளைப்படி அரசாங்கத்திற்கு விவரம் தெரிவிக்காமல் திருத்தப்பட்ட தொழில்தாவா கீழ் நீதிமன்றத்துக்கு செல்லும்படி அறிவுரை கூறினார். இது ஒரு தீய உள்நோக்கம் கொண்ட கட்டப்பஞ்சாயத்து ஆகும். தொழிற்சாலை ஆய்வாளர் திரு நாகராஜன், ஜெகதீசன் ஆகியோர் தொழிலாளர்களுக்கு எதிராகவும், நிர்வாகத்திற்கு சாதகமாகவும் தங்கள் சுயலாபத்திற்காக செயல்படுகின்றனர். நிர்வாகத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் குறித்து புகார் அளித்தும் பல புகார் கடிதங்களுக்கு பதில் இல்லை.

வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர்துறை அதிகாரிகள், தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் சென்றால் அவரும் அதே அதிகாரிகளிடம் மனுக்களை திருப்பி அனுப்புகிறார். எங்கிருந்து தீரும் மக்கள் குறை?

சாதாரண மனிதன் சட்டத்தை மீறினால் உடனடியாக பாய்கிறது சட்டம், சிறை, தண்டனை, ஆனால் முதலாளிகள் மற்றும் அவர்களின் அடியாட்களான எச்.ஆர்., ஐ.ஆர். போன்ற அதிகாரிகள் சட்டத்தை மீறும்போது சட்டபுத்தகங்கள் எல்லாம் முதலாளிகளின் கழிவறை காகிதங்களாக மாறுகிறது.

விசாரணை அதிகாரியின் துரோகங்கள்!

சஸ்பண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு விசாரணை என்ற பெயரில் ஆலைவளாகத்திற்குள் வைத்து நிர்வாகத்திற்கு சாதகமாக பதிவு செய்தும், தொழிலாளர்களை மிரட்டுவதும், தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளை நிராகரிப்பதும், உதவி செய்யும் சக தொழிலாளியை மிரட்டுவதும், விசாரனைக்கு சம்மந்தம் இல்லாத அதிகாரிகள் விசாரணையில் குறுக்கீடு செய்வதும், விசாரணை குறிப்பை படித்துப் பார்க்க நேரம் கொடுக்க மறுப்பதும், விசாரணைக்கு தேவையான காலஅவகாசம் கொடுக்க மறுப்பதும் இதுபோன்ற செயல்களை விசாரணை அதிகாரி திரு. கே. கோவிந்தராஜன் செயல்பட்டுவருகிறார்.

தொழிலாளர்களை விசாரணையின்போது வெளியே போ! நான் அப்படிதான் எழுதுவேன். அதிகம் பேசினால் விசாரணையை நிர்வாகத்திற்கு சாதகமாக இன்றே முடித்துவிடுவேன் என்று கத்துகிறார். பல கம்பெனியில் நிர்வாகத்திற்கு சாதகமாக இயற்கை நீதியை மறுத்து ஒருதலைபட்சமாக செயல்பட்டதை பாதிக்கப்பட்ட டெனக்கோ(Tenneco) தொழிலாளர்களை கேட்டால் தெரியும். கோவிந்தராஜன் செய்வது அனைத்தும் மோசடி சதிவேலையாகும். தன்னை நல்லவன்போல காட்டிக்கொள்ள நேஷனல் அரிமா சங்க செயலாளர் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

தொழிலாளர்களே!

மீண்டும் தற்போது 2013-ல் நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட எத்தணிக்கிறது. வெறிப்பிடித்த ரஷ்ய நிறுவனத்தின் அடியாட்கள் அடிவருடிகளை அம்பலப்படுத்துவோம்!

சட்டபூர்வ உரிமைகளை 12(3) எதையும் மதிக்காத கிரிமினல் ரஷ்ய கமாஸ் வெக்ட்ரா நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலை தொழிலாளர்களின் ஒற்றுமையால் முறியடிப்போம்!

ஒப்பந்த, தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற பெயரில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டிடுவோம்!

அசோக்லேலாண்டு, எக்ஸைடு, கார்போரண்டம் போன்ற ஆலைகளில் வேலைப்பளு அதிகரிப்பு, ஊதிய உயர்வுக்கு முட்டுக்கட்டை பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தையும் லாபவெறியையும் அம்பலப்படுத்துவோம்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம்! போராடுவோம்!

தமிழக அரசே தலையிடு!

12/3 ஒப்பந்தத்தை மதித்து நடக்க உத்தரவிடு!

ஒப்பந்தத்தை மதிக்காமல் தொழிலாளர்கள்மீது அடக்குமுறை ஏவும் கிரிமினல் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடு!

சஸ்பண்ட் செய்யப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிடு!

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட்(கிளை),
(கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்)
பதிவு எண்: 24 KRI,
செல்- 9788011784.