
திருச்சி – பெல் (BHEL) அக்கிரகாரத்தைச் சேர்ந்த குழுவொன்று பாலே நடன நிகழ்ச்சிக்கு சிம்பனி இசைத் துணுக்குகளைச் சேகரித்துத் தொகுக்க (திருட) ஒரு பாடல் பதிவுக் கூடத்திற்கு வந்தது. ஆங்கிலப் படங்களில் சிம்பனி இசை ஒலிக்கத் தொடங்கியவுடனே ஒரு பிராணி வாய் திறந்தது. ”ஆகா… என்ன இமாஜினேஷன்! (கற்பனை). என்னமோ இளையராஜா இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”
தங்களுக்குப் புதியதொரு இசை மேதை கிடைத்துவிட்டானென மகிழ்கிறது லண்டன் பிலார்மோனிக் குழு. ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளோ” (புதுமைப்பித்தன்) சங்கடத்தில் நெளிகின்றன.
இளையராஜாவின் சிம்பனி பற்றி எழுதவேண்டும்; ஆனால் எழுதக்கூடாது. இதைச் சனாதனிகள் செய்து விட்டார்கள் – எழுத வேண்டியதை எழுதாமல் இருட்டடிப்பு செய்ததன் மூலம். ராக் என்றால் என்ன? ராப் என்றால் என்ன? மைக்கேல் ஜாக்சன் கொண்டு வரும் இசைக் கருவிகளின் மொத்த எடை என்ன? பாபாசெகல் வெற்றியின் ரகசியம் என்ன? – என்று கூவத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள், சிம்பனி என்றால் என்ன, இளையராஜாவுடைய சாதனையில் பரிமாணம் என்ன என்ற கேள்விகளை மட்டும் எழுப்பிப் பரிசீலிக்கவில்லை. இந்த மவுனத்திற்குக் காரணம் அழுக்காறு, அச்சம்.
அவாள், ஆசார, நியமங்களை மீறிக் கடல் கடந்தார்கள்; ஆங்கிலக் கல்வி கற்றார்கள்; குடுமியை மறைத்து டர்பன் கட்டினார்கள்; கோட்டு, சூட்டு போட்டார்கள்; வெள்ளைக்காரியைக் கூத்தியாளாக வைத்துக் குடித்தனம் நடத்தினார்கள். எல்லாம் சரிதான், ஒரு சிம்பனி இசை அமைக்க முடியவில்லையே ஏன்? செம்மங்குடியிடமும் பாலமுரளியிடமும் ‘நீங்கள் ஏன் இதுவரை சிம்பனி அமைக்கவில்லை’ என்று பேட்டி எடுத்திருக்கலாமே. ‘சரிகமபதநி’க்குள் சகலமும் அடக்கம் என்கிறீர்களே சிம்பனி அதற்குள் அடங்குமா? அடங்காதா? ”சிவபெருமான் அருளிய இசையில் சிம்பனி உண்டா” என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கலாமே. இவை எதையும் மேற்படி பத்திரிகைகள் செய்யவில்லை. தங்கள் சங்கீத கலாநிதிகளுக்கும் சிம்பனிக்கும் காததூரம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஏனென்றால் இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை. சநாதனிகளுடைய ஆன்மாவின் மொழியோ அக்கிரகாரத்தைத் தாண்டியதில்லை. இசையை மடடுமல்ல, இந்தியச் சமூகத்தையே எந்தத் துறையிலும் வளரவிடாமல் தடுப்பது இந்தப் பார்ப்பன இந்துப் பாரம்பரியம்தான். இந்த உண்மையை அம்பேத்கார் துணிந்து வெளியிட்டபோது அதையும் இருட்டடிப்பு செய்தார்க்ள. அதனால்தான் உயிர்வாழும் பிணமான சங்கராச்சாரி ( செத்துப்போன சீனியர் சங்கராச்சாரி ) முன்னால் மணிக்கணக்கில் மண்டியிட்டுக் கிடக்கும் தொலைக்காட்சிக் காமெரா இளையராஜாவை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது.
ஒருவேளை ”இசை முழுவதுமே – சிம்பனி உட்பட – தியாகப் பிரும்மத்துக்குள் அடக்கம்” என்று இளையராஜா சரணடைந்து இருந்தால் அவாள் ஆசீர்வதித்திருக்கக்கூடும். மாறாக, ஹேய்டன், பாக், மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் தியாகய்யரையும் சேர்த்தார் இளையராஜா. அப்படிச் சேர்த்தது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. (தியாகய்யரைப் போய் அம்மேதைகளுடன் சேர்த்தது நமக்கும்தான் பொறுக்கவில்லை). அவர்களைப் பொறுத்தவரை ‘கர்நாடக இசையென்னும் மந்திரச் சிமிழுக்குள், உலகமே அடக்கம். ‘சரஸ்வதி மஹாலின் சமஸ்கிருத ஓலைச்சுவடியைத் திருடிச் சென்றுதான் வெள்ளக்காரனே ராக்கெட் விட்டான்’.
‘சங்கரா பரணம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று டஜன் கணக்கில் படமெடுத்து, அவற்றில் இரண்டு மேற்கத்திய இசைத் துணுக்குகளை இசைத்துக் காட்டி எல்லாம் எமக்குள் அடக்கமென்று அற்பத்தனமாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அல்லது மேற்கத்திய இசையை விபச்சாரத்திற்கு இணையாக வைத்துக் கொச்சைப் படுத்தினார்கள். இதையெல்லாம் நடுவீதியில் போட்டு உடைத்தார் இளையராஜா. அந்த ஆத்திரம்தான் இந்த மகா மவுனத்திற்கு காரணம்.
மக்கள் எல்லா அறிவையும் பெற உரிமை படைத்தவர்கள்; இசைத் துறையிலும் மக்களின் பாமரத்தனத்தை அகற்ற வேண்டும். அதைச் செய்யாமல் மக்களின் அறியாமை குறித்து வருந்திப் பயனில்லை. ஆனால் மெல்ல மெல்ல அறிவொளி பெறத் தொடங்கும் மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது எப்படி என்று கவலைப்படுகிறார்கள் சனாதனிகள். இல்லையென்றால் பார்ப்பனர்களிலேயே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேருக்கு பரிச்சயமில்லாத கர்நாடக இசையைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுபவர்கள் சிம்பனியை அறிமுகப்படுத்தி ஏன் எழுதக்கூடாது? சிம்பனி இசை வடிவம் ஐரோப்பியப் பாரம்பரியம். 200 ஆண்டு பாரம்பரியம் இருந்தும் இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் அங்கேயே குறைவு. இசை அமைக்கத் தெரிந்தவர்களோ வெகு குறைவு. இது ஆசியர்களுக்கு, இந்தியருக்கு, தமிழர்களுக்கு வெகுதூரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கோ வெகு வெகுதூரம்.
உலகளவில் விஞ்ஞானிகளோ, ஓவியர்களோ, திரைப்பட இயக்குநர்களோ தத்தமது துறை பற்றி ஒன்றாகக் கூடி விவாதித்துவிட முடியும்; ஆனால், இசைத்துறை அப்படியல்ல. இசை விவரணைக்கு அடங்காதது. உணர்ச்சிச் செறிவானது. வேறு எந்த வடிவத்திலும் சொல்ல முடியாததை இசை சொல்கிறது. மங்கலான மேக வலைப் பின்னல்களாக நம்மைச் சுற்றிக் கவியும் இசை, மாயத தோற்றமல்ல; உண்மை. சுலபமாக உணர்ந்து மற்றவர்க்கும் எடுத்துச் சொல்ல இசை கணிதமல்ல. விஞ்ஞானங்களில் ஆகத் துல்லியமானது கணிதம்; கலைகளில் ஆகச் சூக்குமமானது இசை. மார்க்சிய இசையறிஞர் ஐஸ்லர் சொல்வது போல ஐன்ஸ்டீனின் ”ஆற்றல் பற்றிய விதி”யைக் கூட ஜனரஞ்சகமாக விளக்கிவிடலாம்; ஆனால் பீத்தோவனின் ஆக்கத்தை அவ்வாறு எளிதாக விளக்கிவிட முடியாது.

இத்தகையதொரு துறையில்தான் இளையராஜா சாதனை படைத்திருக்கிறார். பாக், மொசார்ட், பீத்தோவனை ரசிக்கத் தெரிந்தவர்களெல்லாம் புதிதாக சிம்பனியைப் படைத்துவிட முடியாது. அதற்குப் பயிற்சியும், ஆற்றலும் மட்டுமல்ல, மன எழுச்சியும் வேண்டும். அது கர்நாடக இசை ‘மேதை’களிடம் கிடையாது. செக்குமாடுகள் மான்களாக முடியாது. கர்நாடக இசையில் செய்வதாகச் சொல்லிக் கொள்ளப்படும் புது முயற்சிகள் கூட வெறும் கழைக்கூத்துகளே.
இன்னொருபுறம் அவர் பாவலருடன் இசைக் குழுவிலிருந்தார், இசையுடனேயே வளர்ந்தார். இன்று சிம்பனி அமைத்துவிட்டார் என்று கூறுவது பாமரத்தனமானதும் அவரது கடும் முயற்சியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும். இசை பற்றிய நமது அறிவை, ரசனையை விரிவாக்கிக் கொள்ளும்போதுதான் நமக்கு மறுக்கப்பட்ட அறிவின் பரிமாணம் புரியும். இல்லையேல் நாளை ராஜாவின் சிம்பனி வெளிவந்து அதை உலகவே ரசிக்கும் போது நாம் ரசிக்க முடியாது. நம்மூர் ஆள் போட்ட சிம்பனியை நம் காதிலேயே நுழைவிடாமல் இசை மடமை நம் காதை அடைத்துக்கொண்டிருக்கும்.
திரை இசை இல்லாமல் தனியானதொரு மேதைமையிலிருந்தும் ஊற்றெடுத்து சிம்பனி வந்து விடவில்லை. இதை இளையராஜாவே கூறுகிறார். நமக்குத் தெரிந்த இளையராஜா சினிமா இசை அமைப்பாளர்தான். பல படங்களில் அவரது பின்னணி இசையைக் கேட்கும்போது காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. பாடல் இசை அமைப்புக்களைக் கேட்கும்போது அந்தப் படத்தைப் பார்த்துவிடக் கூடாது என்ற உணர்வேற்படுகிறது. ஒருசில இயக்குநர்களின் படங்களைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அவரது இசை பிரம்மாண்டமான வண்ண ஓவியமாக விரிகிறதென்றால் திரைப்படத்தின் காட்சிகள் பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவுபடுத்துகின்றன. இந்தக் கணிப்பில் ஒருவேளை சில பிழைகள் இருக்கலாம்; ஆனால் பொதுவில் இதுவே உண்மை.
அப்படி அவர் இசையில் என்னதான் இருக்கிறது? ‘வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும், தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்…’ – இயற்கையில் தாளகதி இருக்கிறது; மனித உடலின் உள் இயக்கத்தில் இருக்கிறது; மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவில் இருக்கிறது. மனித உணர்ச்சிகளுடன் ஒட்டிப் பிறந்தும் அதன் ஒரு வெளிப்பாடும் தாளம். ‘காட்டுவழி போற புள்ளே கவலைப்படாதே…’ போன்ற ராஜாவின் பழைய பாடல்களிலும், ‘பண்ணைப்புற ராசாவே, கட்டினமெட்டிது லேசா…’,. ‘நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா, ஆமா…’ போன்ற பாடல்களிலும் விதவிதமான தாளகதிகள் வருகின்றன. பறையின் தாள ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இமைக்கும் நேரத்தில் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் ஆட்டம் தாளகதியாகக் காதில் பாய்கிறது. வெகு இயல்பாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்கிறது.
ஆனால், ”செவ்வியல் (Classical) இசை உயர்ந்தது, நாட்டுப்புற இசை தாழ்ந்தது” என்ற திமிர்த்தனம் கொண்ட சனாதனிகள் இந்த ‘அநீதி’ கண்டு கொதிக்கிறார்கள். ‘குனித்த புருவமும்…’ வேகம் குறைந்த கதியில் தொடங்கி, ‘ராக்கம்மா கையத்தட்டு…’ என்ற வரிகளின்போது, துரிதகதியில், ‘டப்பாங்குத்து’ தாளத்துக்குத் தேவாரத்தை இழுத்துச் சென்றிருப்பதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? (காட்சியில் தேவாரத்திடம் டப்பாங்குத்து மனதைப் பறிகொடுப்பது வேறு விஷயம்.) ஆம்! மேட்டுக்குடி வர்க்க வாழ்க்கை இயக்கத்தின் கதியும், உழைக்கும் மக்களின் வாழ்க்கை இயக்க்தின் கதியும் வேறு. இயக்குநர் பாலசந்தர் சொல்லைக் கேட்டுக் கொண்டு, தியாகய்யரின் கீர்த்தனைகளைத் தமிழாக்கி சேரிக்குச் சேரி ஒலிபரப்பினாலும் சத்தம்தான் சேரிக்குச் சேருமே ஒழிய சரக்கு சேரிக்குச் சேரவே சேராது.
உட்கார்ந்து தின்பவனின் நிதானம் உழைப்பவர்கள் வாழ்க்கையில் இருக்காது. அவர்களது இசையின் தாளத்திலும் இருக்காது. ஒன்று மற்றொன்றுக்கு உறுத்தத்தான் செய்யும். அதேபோல, மேற்கத்திய ‘ராக்’ போன்ற இசை வடிவங்களின் வெறிகொண்ட தாளம் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் மற்றும் அராஜகத்தின் வெளிப்பாடு.
நமக்குப் பழக்கமான, நமது வாழ்க்கைக்கு நெருக்கமான தாளகதியில் காலூன்ற வைத்து இசையுலகத்தை நமக்குச் சுற்றிக் காட்டுகிறார் ராஜா. அவர் அமைத்துள்ள சிம்பனி பற்றி கருத்து கூறும்போது மைக்கேல் டவுன் எண்ட் (Michael Townend இவர் ராஜாவின் சிம்பனிக்குப் பதிவு இயக்குநர்) அவற்றில் இளையராஜா பயன்படுத்தியுள்ள தாள வகைகளையே குறிப்பிட்டுச் சொல்லுகின்றார்.
அப்படியானால், தாளம்தான் அவரது தொழில் ரகசியமா? ‘அன்னக்கிளி’ வந்தபோது அப்படித்தான் பலர் சொன்னார்கள். ”இது தவுல் கம்பெனி, ரொம்பநாள் நிக்காது” என்றார்கள். தமிழ்த் திரையிசைக்கு வடக்கே இருந்து ஷெனாய் வந்தது; ஐரோப்பாவிலிருந்து பியானோ, அக்கார்டியன் வந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து டிரம்ஸ் வந்தது; ஆனால் உள்ளூரிலிருந்து (மன்னிக்கவும் ஊர் அல்ல சேரியிலிருந்து) தப்பும் பம்பையும் உறுமியும் மட்டும வரவில்லை. அதற்கு ‘உரியவர்’தான் அவற்றை எடுத்து வந்த தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த இந்தி மயக்கம் என்னும் பேயை விரட்டினார்.
இதற்கு முன்னாலும் திருவிழாவில் தலைகாட்டுவதுபோல அந்த இசைக்கருவிகள் தமிழ்ச் சினிமாவில் தலைகாட்டியிருக்கலாம். ஆனால் அந்தத் தவில் வேறு, இந்த மேளம் வேறு. அந்த நாதஸ்வரம் வேறு. இந்த நாயனம் வேறு; இரண்டுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதைகளும் வேறுவேறுதான்.
பலர் விரும்பியதைப்போல அவர் வெறும் ‘தவுல் கம்பெனி’யாக மட்டும் இருந்திருந்தால் 750 படங்களுக்கு இசை அமைத்திருக்க முடியாது. ‘அன்னக்கிளி’க்கு முன்பு ஜி.கே.வெங்கடேஷ் குழுவில் இசைக்கலைஞனாகப் பணியாற்றி போதே பல இசைத் துணுக்குகளை எழுதி சக கலைஞர்களுடன் சோதனை செய்து பார்த்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர் இசைவாணன் கூறுவதைப்போல ”’அன்னக்கிளி’ முதல் ‘வள்ளி’ வரை அவர் அள்ளி வழங்கியிருப்பவை விதவிதமான ஹார்மனி நெசவுகள். நாட்டுப்புற இசையோடு ஹார்மனியை இணைத்து நெய்து கொடுத்திருப்பது ‘அன்னக்கிளி’யின் சிறப்பம்சம். முதல் படத்தில் அடிவைக்கும்போதே ‘அடாஜியோ’ என்ற குறைந்த வேகத்திலமைந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுது…’ என்ற சோகப் பாடலை முயற்சித்து அவரது துணிச்சலான செயல்.”
துணிச்சலுக்குக் காரணம் புதிய முறைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கிருந்த ஆர்வம், தன்னம்பிக்கை. ‘இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு…’ என்ற பாடலில் திரையில் பிளாஷ் பேக்கில் கதைக் காட்சிகளாக நகர்ந்து செல்லும்போது அதன் பின்புலத்தில் ஓவர்ச்சர் என்னும் (ஓபரா இசை நாடக முன்னுரைப் பாணி – சிம்பனிக்கு முன்னோடியானதொரு வடிவம்) இசை நகர்ந்து செல்லும். ‘நிழல்கள்’ படத்தில் இந்திய இசை முறைகளைக் கையாண்டும், ‘மூடுபனி’யில் ஏற்கனவே புழக்கத்திலுள்ள ராகங்களுக்குப் பதிலாக காட்சியின் தேவைக்கேற்ப புதிதாக ‘இசை கரு’க்களை (Theme) உருவாக்கியும் காட்டினார். ‘ராஜபார்வை’யில் இந்திய, மேற்கத்திய தாளகதிகளையும், ஹார்மனியையும் சோதனைக் களன்களாக்கினார். நெசவில் டெக்ஸ்ச்சர் (இழை நயம்) என்று கூறுவார்களே, அதை இசையில் காட்டுகிறது ‘பூமாலையே தோள் சேரவா…’ என்ற பாடல். இப்பாடலின் பண்மிசைப் பண்ணாக, ஒன்றின் மீது இன்னொரு பண் உராய்வின்றி மிதந்து செல்லும் அழகைக் காணலாம். ராஜா பெரிதும் போற்றும் இசை மேதை பாக் – கை ‘பண்மிசைப் பண்ணின் (Counter Point)) தந்தை’ என்பார்கள். தந்தைக்கேற்ற தனயன்.
பரிச்சயமற்ற சொற்றொடர்களால் ராஜாவின் இசையை விளக்கிக் கொண்டிருப்பது ஏன், என்று வாசகர்கள் வியக்கலாம். இவை இசையின் நவீன வடிவங்கள், ஆழமான முறைகள். மோனோடோன் என்பது இசையின் புராதன வடிவம், ‘கர்நாடக இசை’, ‘இந்துஸ்தானி இசை’ ஆகியவை இந்த ரகம்தான். ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுரங்களில் ‘கர்நாடக’ இசையில் ஒரு தருணத்தில் ஒன்று மட்டும் ஒலிக்கும். ஒன்றுக்கொன்று இணையாகவோ, ஒன்றின்மீது ஒன்று தவழ்ந்தோ இந்தச் சுரங்கள் வராது. ஒன்றையொன்று பின்தொடர மட்டுமே செய்யும். இந்த இசையை நீண்ட நேரம் கேட்கும்போது அலுப்பு ஏற்படக் காரணம் இதுதான். ‘மனாடனஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் ‘சலிப்பூட்டுவது’ என்பதுதானே பொருள்! மோனோடோனுக்குப் பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படும் பாலிபோனி (Polyphony) பிறந்தது.
ஹார்மனி, இவையிரண்டிலிருந்தும் வேறுபட்டது. ஒரு பண், சுர இயைபுகளோடும் (Chords) வேறு ஒலிகளுடனும், (இசைக்கருவிகளுடனும்) இசைய நெய்யப்படுவதே ஹார்மனி. தற்போது ராஜா அமைத்துள்ள சிம்பனியில் 80க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார்கள். நாம் பெருமிதம் கொள்வது கருவிகளின் எண்ணிக்கையினால் அல்ல; அவை பயன்படுத்தப்பட்டுள்ள – சிம்பனி – இசை வடிவம் காரணமாகத்தான். மேலும் 10 இசைக் கருவிகளைக் கூட்டி 90 ஆக்கி ‘நம்மூர்’ கர்நாடக சங்கீத வித்வானின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்? மதுரை சோமு கச்சேரியை எட்டால் பெருக்கினால் என்ன விடை கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். ‘எந்தரோ மகானுபாவுலு…’ என்று செம்மங்குடி முதல் குரல் கொடுத்தால் 90 கருவிகளும் பள்ளிக்கூட கடவுள் வாழ்த்து போல அதையே திரும்பச் சொல்லும், அவ்வளவுதான். அதாவது, அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 கருக்கரிவாள்!
கர்நாடக இசையைக் கேவலப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; (இனிமேல் நாம் வந்து கேவலப்படுத்த அதில் ஏதும் மிச்சமில்லை என்பது வேறு விவகாரம்) இதன் வரம்பு அவ்வளவுதான். கர்நாடக இசையில் பாடகன்தான் (அல்லது முக்கியக் கருவி) சர்வாதிகாரி; மற்றவை பக்கவாத்தியங்கள் மட்டுமே. அவற்றுக்கு ‘தனி உரிமைகள்’ கிடையாது. ஆனால் ஹார்மனி ததும்பும் சிம்பனியில் எத்தனைக் கருவிகள் உண்டோ அத்தனைக்கும் தனிப்பங்கும் பாத்திரமும் உண்டு. அதனால்தான் சிம்பனி இசைப்பதிவு முடிந்தபின் அதில் பங்கேற்ற ஒரு கலைஞர் தனது கருவிக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக ராஜாவிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லியிருக்கிறார். பக்கவாத்தியக்காரரை முக்கியப் பாடகர் கச்சேரியினூடாகவே கவிழ்ப்பதும், மிரட்டுவதுமே கர்நாடக இசை மரபு.
பத்து வண்ணங்களில் பட்டு நூலைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து கொடுத்தால் கர்நாடக இசை அதைத் தாம்புக்கயிறாக்கும்; நூல் மிச்சமிருந்தால் இன்னும் தடியாக முறுக்கித் தேர்வடமாக்கும். ஆனால் சிம்பனியோ அதைத் தறியில் கொடுத்து நெஞ்சை அள்ளும் வண்ணத்தில் புடவையாக நெய்து காட்டும், பார்டராக, குறுக்குக் கோடுகளாக, புட்டாக்களாக, அள்ளி இறைக்கப்பட்ட புள்ளிகளாக… ஒவ்வொரு வண்ணமும் ஒரு தினுசு (Design) காட்டும். இந்தத் தினுசுகள்தான் சிம்பனியின் சுருக்கள் (Theme) . மொத்தப் புடவையும் தோற்றுவிக்கும் அழகியல் உணர்வுதான் ஒரு குறிப்பிட்ட சிம்பனி சொல்லும் செய்தி. கர்நாடக இசையில் பாடகன் எஞ்சின்; பக்கவாத்தியங்கள் அவன் பின்னே பிணைக்கப்பட்ட பெட்டிகள். சிம்பனியின் செய்தி என்பது சாலை விதி. அதை மீறாமல் சீறியும், பறந்தும், சுணங்கியும், நிதானமாகவும் செல்லும் பலவகை வாகனங்கள்தான் சிம்பனியின் உட்கூறுகளான இசைக்கருவிகள்.
இப்போது ராஜாவின் ‘நட்டுவச்ச ரோசாச்செடி…’, ‘பூமாலையே…’ போன்ற பல பாடல்களை மீண்டும் கேட்டுப் பாருங்கள். நெஞ்சை அள்ளும் விதவிதமான வண்ணங்கள் உங்கள் மனக்கண்ணில் விரியும். இந்த ‘வித்தை’ நமது சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகய்யருக்குப் பிடிக்காமல் ‘எவனோ ஒரு’ பீத்தோவனுக்கும் மொசார்ட்டுக்கும் கைவந்தது எப்படி? சிம்பனி திருவையாற்றுக் காவிரிக்கரையில் அவதரிக்காமல் வியன்னாவில் பிறந்தது ஏன்? சங்கீத சிரோன்மணிகளைக் குடையும் கேள்வி இது.

ஏனென்றால் பின்னாளில் இரண்டு காதும் கேட்காத பீத்தோவன் ஐரோப்பாவில் உள்ள குமுறலை தன் இதயத்தால் கேட்டார்; தியாகய்யரின் காதில் காலை நேர கோயில் மணி சத்தமும், மதியத்து ஒற்றைக்காக்கை அழைப்பும், இரவில் காவிரிக்கரை தவளைகளின் இரைச்சலுமே விழுந்தது. ‘எழுச்சிபெறும் தொழிலாளி வர்க்கத்திற்கே எதிர்காலம்’ என்று முன்னறிந்த பீத்தோவன், ‘தொழிலாளர் படையே வருக’ என்று தனது 9 – வது சிம்பனியையே அதற்கு வரவேற்பிசையாக்கினார். ‘எச்சரிக்ககா ரா… ரா…. ஹே ராமச்சந்திரா’ (பார்த்து வாப்பா ராமா) என்று மோட்டுவளையைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தார் தியாகய்யர்.
முடியரசர்களின் தலையை அப்புறப்படுத்திவிட்டு, குடியரசு அமைக்கும் பாதையில் ஐரோப்பா நடைபோட்டுக் கொண்டிருந்தது; மணிமுடியை பிரிட்டிஷ்காரனிடம் போக்கியத்துக்கு விட்டுவிட்டு, அவனுடைய எச்சில் காசில் வாழ்ந்த ‘சரபோஜி’க்கள் தாங்களும் மகாராஜாக்கள் என்று இங்கே கம்பீரமாக நடமாடிக் கொண்டிருந்தனர் (சரபோஜி – தியாகய்யர் காலத்து தஞ்சை மன்னன்). பீத்தோவனின் மூளையில் மின்னலாக வெட்டிப் பின்னர் பற்றிக் கொண்ட தீப்பிழம்பல்ல சிம்பனி; மொசார்ட்டுக்கு கர்த்தர் அதை அருளிச் செய்யவுமில்லை. மன்னனுக்கும் மக்களுக்கும் அன்று நடந்த யுத்தத்தில் அவர்கள் மக்கள் பக்கம் நின்றார்கள்; ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்த ஃப்ரீமேசோனியச் சிந்தனைகளை ஆதரித்தார்கள்; அதைப் பிரகடனமும் செய்தார்கள்.
”சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்; இயற்கை – பகுத்தறிவு – பேரறிவு” என்ற தங்கள் நம்பிக்கையை இசையில் வடித்தார்கள். ‘அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்; பிரம்மம் – பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது. எந்தப் ‘பெரியவாளும்’ இதற்கு ஆசீர்வதிக்கவும் முடியாது. இதுதான் காரணம்; இதுவே உண்மை. ‘வேத கணிதம்’ பற்றிப் பிதற்றிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரப் பயித்தியங்கள் ‘வேதகாலத்திலேயே சிம்பனி இருந்திருக்க வேண்டும்” என்று எங்கேயாவதொரு மூலையில் ஓலைச் சுவடிகளைக் கிளறிக் கொண்டிருக்கும் அபாயமும் உண்டு.
இத்தகையப் பைத்தியங்கள் கர்நாடக இசைக்கு முட்டுக் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட ‘சிந்து பைரவி’ படத்தை இன்னொரு முறை தரிசித்தால் பித்து தெளியக்கூடும். ‘மகா கணபதிம்…’ என்று சிவகுமார் கச்சேரியைத் துவங்கியவுடன் காமெராமேன் காமேராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்கு ஓடுகிறார்; தொலைக்காட்சியாக இருந்தால் பாடகரின் முகத்தையே ஒரு மணி நேரம் காட்டிக் கொண்டிருக்கலாம். இது சினிமாவாயிற்றே. காமெரா கடல், மலை, ஆறு, பிள்ளையார் கோயில் மீண்டும் ஆறு, மலை, கடல், பிள்ளையார் கோயில் என்று திரும்பத் திரும்ப காட்சி படிமங்களைத் தேடி அலைந்து சோர்ந்து கடைசியில் பாடகர் காலிலேயே வந்து விழுகிறது. காரணம் என்ன? இகலோகத்து மாந்தர்களுக்கும் இந்த இசை – கீர்த்தனைக்கும் எள்ளவும் சம்பந்தம் கிடையாது.
மன்னர்கள், பிரபுக்களின் ஒற்றை ஆணைக்குரலை மீறி பல்வேறு மக்கட் பிரிவினரின் குரலும் ஒலிக்கத் தொடங்கியதன் சமூக விளைவு, புரட்சி – ஜனநாயகம். மோனோடோனின் கையிலிருந்த சவுக்கைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் புரட்சியானது இசைத்துறையில் ஹார்மனியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. சமூகத்தைப் போலவே இசையும் அடுத்த நிலைக்கு முன்னேறியது.
இப்படி 18 -ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த, இசைத்துறை முன்னேற்றம் தான் ஹார்மனி. இதன் முக்கிய அங்கமான சுருதிக்கும் ஸ்தாயிக்குமுள்ள உறவை தேவதூதன் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ந்தான் பித்தகோரஸ். (செங்கோண முக்கோணத் தேற்றம் – பித்தாகோரஸ்தான்) வெவ்வேறு அளவில், கம்பிகளை இழுத்துக் கட்டி ஸ்வர வரிசையை எழுப்பினான். செவியால் உணரக்கூடிய ஒலியைக் கணிதத்தால் அளந்தான். இசையே கணிதம் என்றான்; அவன் ஒரு தத்துவஞானி. எனவே ஒருபடி மேலே போய் ‘எல்லாம் கணிதமே’ என்றான். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நம் ‘பாரத தத்துவஞானி’ கிருஷ்ண பரமாத்மா ‘எல்லாம் நானே’ என்று அர்ச்சுனன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தான்.
2500 ஆண்டுகளுக்கு முன் தன் புருவத்தை நெரித்து உலகை ஆராய்ந்து அறிவித்த அந்த மேதையின் வீரம் நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. ஆம்! அறிவியல் துறைகளிலேயே துல்லியமான கணிதம் பேரண்டத்தின் புற உலகின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது; கலைத்துறை அனைத்திலும் சூக்குமான இசை, மன உலகின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முற்படுகிறது. இசையில் கணிதம் உண்டு; ஆனால் இசையே கணிதமல்ல. தாளகதியும் ஸ்வரமும், ஸ்தாயியும் கணிதத்தால் கட்டுப்படுத்தப்படுபவை. இசையைத் தூண்டும் மன உணர்வுகளும், இசையால் தூண்டப்படும் மன உணர்வுகளும் கணிதத்திற்குக் கட்டுப்படாதவை. இதை 2500 ஆண்டுகளுக்கு முன் பித்தகோரஸ் சிந்தித்திருக்க முடியாது.
”என்ன பெரிய இளையராஜா? பீத்தோவன் காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது; இளையராஜா கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. சிம்பனி அமைப்பதில் என்ன கஷ்டம்?” என்று சில மேதாவிகள் தங்கள் அறிவியல் ஞானத்தை காட்டுகிறார்கள். ‘அமெரிக்காவில் ‘டியூன் வங்கி’யில் ஒரு லட்சம் மெட்டுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். வேண்டியவர்கள் வேண்டியதைப் பொறுக்கிக் கொள்ளலாம்’ என்கிறது விகடன். பொறுக்குபவர்கள் தங்கள் தேவைகளுக்கும் தம்மையொத்த பொறுக்கிகளையே பொறுக்கி எடுக்கிறார்கள். மணிரத்னம், ஷங்கர் வகையறா தங்கள் அலைவரிசையில் ரகுமானைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டதில் வியப்பில்லை. ஏற்கனவே ஒரு லட்சம் மெட்டுகள் உள்ளன என்றால் ‘லட்சத்து ஒன்று’ என அடுத்தபடியில் கால் வைப்பவன்தான் இசையமைப்பாளன். புதிது புதிதாய் தன் கண் முன்னே விரியும் வாழ்க்கையை, அதன் உணர்வுகளை பிரதிபலிப்பவனே கலைஞன். ‘எல்லாம் கங்கைக் கரையிலேலே சொல்லியாகிவிட்டது’ எனும் கூட்டம்தான் ‘எல்லாம் கம்ப்யூட்டருக்குள்’ இருப்பதாகவும் கூறுகிறது.
ஹார்மனியில் ஒலி உடன்பாடு, ஒலி முரண்பாடு இரண்டின் இயக்கத்தையும் ஆய்வு செய்து மாபெரும் சிம்பனி இசை ஓவியங்களைத் தீட்டிய மொசார்ட்டும், பீத்தோவனும் இசையின் இயக்கத்தைக் கணக்காக நிரூபித்த பித்தகோரசையே தம் முன்னோடியாக அறிவித்தார்கள். ராஜாவை இருட்டடிப்பு செய்ய முயல்வோர் பித்தகோரஸின் சமகாலத்திய கிருஷ்ண பரமாத்மாவின் வாரிசுகளாக இருக்கிறார்கள்! இது வரலாற்றின் நகைச்சுவை போலும்!
ஹார்மனி ததும்பும் இசைக்கோர்வைகள் திரையிசையில் வந்து விழ விழ ”என்ன, எல்லாம் சினிமா குப்பைதானே” என்று அவாள் முனகிக் கொண்டனர். ஆனால் தனி இசையாக ‘என்ன பெயரிட்டு அழைப்பது’ (How to name it) ‘காற்றைத் தவிர வேறிலலை (Nothing but wind) – ஆகிய இரு இசைப்பேழைகள் வந்தவுடன் இசை அறிஞர்கள் திரும்பிப் பார்த்தார்கள்; அவாளோ முகம் திருப்பிக் கொண்டார்கள். இப்போது ‘கிராண்ட் சிம்பனி’ ஒலிப்பேழையாக வருவதற்கு முன்பே ‘இது கலவை இசைதான் (Fusion) என்று ‘கிசுகிசு’ பரப்புகிறார்கள். ‘அக்மார்க்’ அய்யர்வாள் எல்.சுப்பிரமணியம் போன்றோரே செய்யத் துணியாத, முடியாத ஒன்றை ‘பண்ணைப்புரத்தான்’ செய்வதா என்ற வக்கிரம் தவிர இது வேறென்ன?
இளையராஜா அமைத்திருக்கும் சிம்பனி, ஐந்து இசையோட்டங்களில் அமைந்த முற்றிலும் மேலை இசை முறையிலானதுதான். எனினும் இந்திய இசை மரபிலிருந்து பெற்ற தாள முறைகள், பாணி, அலங்காரங்கள் ஆகியவை நிறைந்து காணப்படுவதாக பிலார்மோனிக் இசைக் குழுவினர் கூறுகின்றனர். அந்த சிம்பனியின் ஒலிப்பேழை வெளிவரும்போதுதான் அதன் செய்தி (உள்ளடக்கம்) குறித்து நாம் அறிய இயலும்.
”சிறந்த இசைக்கு வார்த்தைகளின் துணை தேவையில்லை” என்கிறார் ராஜா. அதாவது, தன்னளவில் முழுமை பெற்ற சுயேச்சையான கலை வடிவம்தான் இசை. மார்க்சிய இசை அறிஞரும், ஜெர்மனிய இசையமைப்பாளருமான ஐஸ்லர் ‘‘திரைப்படத்தில் பின்னணி இசை என்பது காட்சிக்குக் கனம் கூட்டுவதாக மட்டும் இருக்கக் கூடாது, காட்சியின் மீதான விமரிசனமாக இருக்க வேண்டும்” என்கிறார். ஆனால், நமக்குக் கோபத்தைத் தூண்டாத காட்சியில் ராஜாவின் இசையில் கோபம் கொப்புளிக்கிறது! நமக்கு அருவெறுப்பூட்டும் காதல் காட்சிகளில் அவரது இசை கொஞ்சுகிறது! நம்மைச் சிரிக்கச் செய்யும் சோகக் காட்சிகளில் அவரது இசை கண்ணீர் விடுகிறது. நாய்குடைகளாய் மறைய வேண்டிய பாடல் வரிகள் இசையமுதம் பருகி ஆலமரமாய் நிலை பெறுகின்றன. ராஜாவின் இசையெனம் நறுமலர்களால் மூடப்பட்ட மலங்கள் வாழ்வு பெற்று விடுகின்றன.
நாம் காறி உமிழ்ந்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறும் காட்சிகளிலிருந்து ‘உணர்வெழுச்சி’ பெற்று அவரால் எங்ஙனம் இசையமைக்க முடிகிறது? ‘நான் ஈடுபாட்டோடுதான் செய்கிறேன்’ என்கிறார் ராஜா. இது அதிர்ச்சியூட்டுகின்ற, ஆனால் நாணயமான பதில். ரே, கோடார்டு, ஃபெலினி என்று பத்திரிகைகளில் அறிவு ஜீவியாக நடித்துவிட்டு, திரையில் ஜிகினா உடையில் அற்பர்களாக வாழும் வேடதாரிகளை ஒப்பிடும்போது இந்தப் பதில் நாணயமானது; அதேநேரத்தில் மசாலாக்களுக்கு ஈடுபாட்டோடு இசையமைக்கும் நபர் சிம்பனி படைக்கும் கலைஞனாக எங்ஙனம் உயர முடியம் என்பது முரண்பாடு.
”அற்பமான காட்சிகளுக்கு இவர் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் விரிவாக இசையமைக்கிறார்?” என்று அதிசயிக்கிறார் ராஜாவின் நண்பர் பம்பாய் இசையமைப்பாளர் சந்த்வார்க்கர். ‘‘நான் பரிசோதனைகள் செய்து பார்க்கிறேன்” என்கிறார் ராஜா. அந்த முரண்பாட்டுக்கு இதுவே பதில். திரையில் ஓடும் காட்சிகளுக்கல்ல. அவை தன் மனக்கண்ணில் தோற்றுவிக்கும் காட்சிகளுக்குத்தான் அவர் இசையமைக்கிறார். காட்சியின் சிறுமை இசையால் பெருமைப் படுத்தப்படுகிறது. இசையின் பெருமை காட்சியால் சிறுமைப்படுத்தப்படுகிறது. பாடல்களைப் பொறுத்தவரை, கதை, காட்சியமைப்பு பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை இசைப் படிமங்களாக்குகிறார் ராஜா. இவ்வாறு ஒலியின் கவிதை எழுதப்பட்டபின் அதன் பரிமாணத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் சொல்லின் கவிதை (பாடல்) தடுமாறுகிறது. இசைப் படிமங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காட்சிப்படிமம் தோற்று விழுகிறது.
மலங்களும் குப்பைகளும் ‘சாகாவரம்’ பெறுவது இப்படித்தான் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்; ஆனால் இவற்றுக்கு ராஜா ஏன் சாகாவரம் ‘அருள’ வேண்டும்? வியாபாரம் – அதுதான் பதில். அற்ப உணர்வுகளைக் காசாக்கும் நோக்கத்திற்காகவே படம் எடுக்கும் தயாரிப்பாளன், அவற்றின் நெடியைக் கூட்டத்தான் இளையராஜாவை அமர்த்திக் கொள்கிறானேயன்றி, ஐஸ்லர் கூறுவதுபோல இசை விமரிசனம் எழுதி வாங்குவதற்கு அல்ல. இளையராஜா மட்டுமின்றி தொழில் முறைக் கலைஞர்கள் அனைவருமே சந்திக்கும் பிரச்சினை இது. எனினும் கவிதையும் ஓவியமும் பேசும் மொழி இசையைக் காட்டிலும் துல்லியமானது; அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் கூர்மையானது. இசையோ சூக்குமமானது. எளிதில் பிடிக்கு அடங்காதது.
வர்த்தக ஏடுகளின் கதை, கவிதைகளின் கருத்துக்கு ஏற்ப ஓவியம் வரையும் ஓவியன் தன் சொந்தக் கருத்தைச் சொல்ல ஓவியக் காட்சி வைக்கிறான்! ராஜா சிம்பனி அமைக்கிறார்! எனினும் இந்தக் கலை வியாபாரத்தில் ஒரு கலைஞர் செய்து கொள்ளும் சமரசத்தின் அளவு அவனுடைய நாணயத்தையும், ஆளுமையையும் ‘சகிப்புத் தன்மை’யையும் அளவிடும் அளவு கோலாகிறது. ”எண்சீர் விருத்தம் பாடுவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை” என்ற வாலியின் ‘பிரகடனம்’தான் இதன் பாதாளம் – ஆழம்.
அதேநேரத்தில், இந்தக் ‘குப்பைகளில்’ விழுந்து புரளாமல், மியூசிக் அகாதமியிலும் திருவையாற்றிலும் கச்சேரி நடத்திக் கொண்டிருந்திப்பாரானால், சத்தியமாக ராஜா சிம்பனி அமைத்திருக்க முடியாது. ஏனெனில் சினிமா – கோணல் மாணலாகவாவது – மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. தூய கலையோ தந்தக் கோபுரத்திலிருந்தபடியே குப்பையைச் சபித்துக் கொண்டிருக்கிறது. கோடம்பாக்கம் இகலோகத்திலேயே ‘போகாத ஊருக்கு’ வழிகாட்டுகிறது; நுங்கம்பாக்கமோ (சங்கீத வித்வ சபை) பரலோகத்திற்கு, ‘இல்லாத ஊருக்கு’ – வழி காட்டுகிறது. ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளிக்கக்கூடாது.
இசைதான் சூக்குமமேயொழிய இளையராஜாவின் உலகக் கண்ணோட்டம் ‘பூதக் கண்ணாடி’ வைத்துக் கண்டுபிடிக்குமளவு சூக்குமமானதல்ல; அவர் பெரிதும் விரும்புகின்ற ஐரோப்பிய இசை மேதை பாக்கைப் போலவே ராஜாவிடமும் ஆன்மிகமும் மனிதாபிமானமும் கலந்தே இருக்கிறது. பார்ப்பன மரபுக்கெதிராகச் சிறுமியை வேதம் சொல்ல வைக்கிறார்; ‘நான் இந்து அல்ல’ என்று பிலார்மோனிக் குழுவினரிடம் கூறுகிறார்; கர்நாடக இசைக்குக் கேவலம் சினிமாக்காரர்களாகிய நாங்கள் ‘உயிரூட்ட’ முடியுமா என்று அடிவெட்டு வெட்டுகிறார். கர்நாடக இசையின் சம்பிரதாயங்களை உடைத்துச் சநாதனிகளைச் சீண்டுகிறார்; கர்நாடக இசையின் வரம்புகளைக் கூறி அதன் முட்டாள்தனமான தன்னகங்காரத்தைச் சாடுகிறார்; ‘கர்நாடக வித்துவான்கள் பாடும் இசையைப் போலவே நாய் குரைப்பதும் ஒரு இசைதான்’ என்று அத்வைதிகளின் மொழியிலேயே வியாக்கியானம் செய்து அவாளின் வெறுப்பைத் தேடிக் கொள்கிறார். புகழ்மிக்க பாடகர்களும், இசையமைப்பாளர்களும் ‘இசையுலகின் சூத்திரர்களாக’ அவாளிடம் கைகட்டி நிற்கும் திரையுலகில் இது அதிசயம்தான்; மேடைக் கச்சேரியொன்று நடத்தி வசிட்டர்களின் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்குவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்தின் மத்தியில் இது கலகம்தான்; இதுதான் இசைத்துறையின் உன்னதமான சிம்பனி என்னும் உண்மையை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது.

சிம்பனி – அது தன்னுடைய ஆன்ம விடுதலையைச் சூனியத்தில் தேடியலைந்த தனியொரு இதயத்திலிருநது கசிந்த இசை வடிவமல்ல; தங்கள் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகளை நொறுக்கி அதன்மூலம் ஆன்ம விடுதலையைச் சாதிக்க முயன்ற மனிதகுலத்தின் இதயத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய உணர்ச்சி வெள்ளம். அது இறைவனின் படைப்பாற்றலின் முன் வியந்து மண்டியிட்ட மனிதனின் அவலமல்ல; தன்னுடைய படைப்பாற்றலை அறிவித்த மனித குலத்தின் கம்பீரம். மேலைநாட்டின் புரட்சிகர இசைமரபுடன் நமது பறையும், சூழலும் இணைந்து உருவாக இருக்கும் ஒரு பிரம்மாண்டமான இசை ஓவியம் நம் கண்முன் மங்கலாக விரிகிறது. இளையராஜாவின் ஆற்றல் இதைச் சாதிக்கும். அந்த ஓவியம் உருவாக்கவிருக்கும் உணர்வை அவரது சித்தாந்தம் தீர்மானிக்கும்.
அம்பேத்கரின் அரசியல் சட்டத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டு, இந்து மதத்தின் மீதான அவருடைய தாக்குதலை இருட்டடிப்பு செய்தது பார்ப்பனியம்! இளையராஜாவின் ஆன்மீகத்தையும் சீரங்கம் கோபுரத்துக்குக் கொடுக்கும் காசையும் வெட்கமின்றிப் பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனக் கும்பலும், தன் இசை மடமையின் மீதும், போலித்தனத்தின் மீதும் இளையராஜா தொடுக்கும் தாக்குதலை மட்டும் கவனமாக இருட்டடிப்பு செய்கிறது. அதன் கோரமுகத்தைப் பச்சையாக உரித்துக் காட்ட இளையராஜா தயங்கினாலும், தனது எதிர் நடவடிக்கை மூலம் பார்ப்பனியம் தன் அற்பத்தனத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கிறது.
”இருபத்தியொன்றாம் நூற்றாண்டெங்கும் உலகம் இளையராஜாவின் இசையில் திளைக்கும்” என்கிறார் பிலார்மோனிக் குழுவின் நடத்துனர். இருபது நூற்றாண்டுகளாக முகவரியில்லாதவர்கள், வருணத்தில் சேராதவர்கள் என்று யாரை இருட்டடிப்பு செய்ததோ, அவர்களில் ஒருவரின் பெயரை ‘மேற்பார்வை முகவரி’யாகப் போட்டுத்தான் இசை உலகில் இன்று தன்னை பார்ப்பனக் கும்பலும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘மேஸ்டிரோ’ என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள் பிலார்மோனிக் குழுவினர்; ஆசியன் என்கிறது உலகம்; இந்தியன் என்று அவசரமாக முத்திரையிடுகிறது பாராளுமன்றம் – அதுவும் ஒரு தமிழன் முன்மொழிந்த பிறகு. தமிழன் என்று அரவணைக்கிறது தமிழகம்.
மாபெரும் மேதைகளின் வரிசையில் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று பிலார்மோனிக் கலைஞர்கள் பெருமைப் படுகிறார்கள்; பண்ணைப்புரத்துப் பண்ணைகளோ கவலைப்படுகிறார்கள் – இன்னொரு ராஜா உருவாகிவிடக் கூடாதே என்று.
அந்தப் பண்ணைப்புரத்தில், ராசய்யாவின் (இளையராஜா) சகோதரர்கள் தேநீர் அருந்த இன்றும் எமது விவசாயிகள் விடுதலை முன்னணி போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரத்து மக்களுக்கு முறைப்பாரி தெரியும்; தெம்மாங்கு தெரியும், ஒப்பாரி தெரியும்; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்கள் பாட்டன்மார் என்ன மெட்டுகளில் பாட்டுக் கட்டினார்களோ அவையெல்லாம் தெரியும்; அவை மட்டும்தான் தெரியும். அவர்கள் கைமாற்றித் தந்து சென்ற பறை தெரியும்.
அவர்களுக்கு சிம்பனி தெரியாது; புரியாது; அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒரு மெட்டு; இரண்டாயிரம் ஆண்டுகளாய் தங்களை அழுத்தும் சோகத்தை, தாங்கள் அழுத்தி வைத்திருக்கும் கோபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மெட்டு – ஹார்மனியில் ஒரு இழை.
___________________________________
புதிய கலாச்சாரம் – அக்டோபர், 1993.
___________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- ரகுமானுக்கு ஆஸ்கார்! ஆழ்ந்த அனுதாபங்கள் !!
- பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- காலனிச் சத்தங்கள்
இளையராஜா: ஃபிலார்மோனிக்கிலிருந்து பண்ணைப்புரம் வரை !! | வினவு!…
அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது….
எவ்வித உணர்ச்சி நிலையிலும் இவரின் பாடல்களிலேயே துணை காண்கிறேன். வாழ்வின் சந்தடிகளில் இவரின் இசையில் இளைப்பாருகிறேன். பெரும்பாலான சமயங்களில் மனதின் காயங்களுக்கு அவரே மருந்து. இளையராஜாவின் இசை என் வாழ்வில் இழைந்தோடுகிறது. அந்த இழையில்லாமல் இன்று நானாகியிருக்கும் நான் நானாகியிருக்கவியலாது. சத்தியமாக இசைப்பற்றிய நுட்பங்கள் எதுவும் தெரியாது. ஆனால் பாமரனாகிய என்னையும் தேடிவந்து தேற்றும், மாற்றும், ஆக்கும் ஒரு கலைஞன் இனியும் சாதிக்கவேண்டியதுதான் என்ன?
//‘மேஸ்டிரோ’ என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள் பிலார்மோனிக் குழுவினர்; ஆசியன் என்கிறது உலகம்; இந்தியன் என்று அவசரமாக முத்திரையிடுகிறது பாராளுமன்றம் – அதுவும் ஒரு தமிழன் முன்மொழிந்த பிறகு. தமிழன் என்று அரவணைக்கிறது தமிழகம்.//
‘மெட்ராஸ் மொசார்ட்’ என்று எதிர்வினையாற்றிவிட்டார்களே சினிமா முதலாளிகள்! அதனைப்பற்றிய வினவின் கருத்தென்ன?
இளையராஜாவிற்கு தரப்படாத அங்கீகாரத்துக்கும் விருதுகளுக்கும் கொதிக்கும் என்போன்ற மனங்களுக்கு இப்பதிவு ஒரு நிவாரணம்.
நேற்றுவரை அழுகி பிண நாற்றம் எடுத்துக்கொண்டிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை, இன்றிலிருந்து விளையாட்டுத்தனமாகவே போய்விடும். பொதுமக்களுக்கு ஓரளவுக்கு சூடு சுரணை கொடுத்த இந்தப் பிண நாற்றம், இன்றிலிருந்து நாற்றுப் பற்று மணம் வீசும். ஏன் தெரியும? ஏஆர் ரகுமானின் ‘காமன்வெல்த் விளையாட்டின்’ இசை தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுவிட்டது. சொக்காய் பொத்தாங்களைக் கழற்றி, கைகளை உயர்த்தி, உச்ச்ச்ச ஸ்தாயியில், காமன்வெல்தை வைத்து ரகுமான் நாட்டுப் பற்று ஜூஸ் பிழிந்துகொண்டிருக்கிறார். விளம்பரங்கள் கிடைத்து விட்டதால் அனைத்து சானல்களும் தங்களது வாய்களைப் பொத்திக் கொள்வார்கள். ரசிகர்ளோ அந்த ‘பிட்டு’ பாட்டில் மனங்கிறங்கிப் போவார்கள்.
அவரது இசைக்குத் தேவை பணம், புகழ், கிராம்மி, ஆஸ்கார். ஆனால் இளையராஜா தன் இசையில் நெய்தது ரசனையளர்களின் இதையத்தை. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்து இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், எந்த சந்தில் புகுந்து, எந்த ராகத்தில் சிந்து பாடி அல்லது ஆலாபனை செய்து, எப்படி தடம் தவறி ரசிகர்களைக் கவர்ந்து ஆஸ்காரையும் கிராம்மியையும் பெரும் வழி என்ன என்று அவருக்கு சிந்திக்கத் தெரியவில்லை. ஆஸ்காரையும் கிராம்மியையும் வாங்கத் தவறியதுதான் இளைய ராஜாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
– புதிய பாமரன்.
//ஆஸ்காரையும் கிராம்மியையும் வாங்கத் தவறியதுதான் இளைய ராஜாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.// அருமையாக சொன்னீர்கள் புதிய பாமரன்.
நல்ல கட்டுரை . நான் நேற்று புலன் விசாரணை படம் பார்த்த பொழுது , காட்சிக்கு சம்மந்தம் இல்லாமல் இசை தனியாய் தெரிந்தது .இசை கேட்க்கும் பொழுது அற்புதமாய் இருக்கிறது , காட்சியை வீழ்த்துகிறது , ஏன் என்று புரியாமல் இருந்தது . இப்பொழுது புரிந்தது தோழர் . மேலும் சிம்பொனி இசை வடிவமே புரட்சிகரமான இசையை தோன்றுகிறது , கட்டுரை படித்த பின்பு . கர்நாடக இசையை போல் ஒருவர் பாட பக்க வாத்தியம் இசைக்க என்பது போல் அல்லாமல் , பல கருவிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன , அதுவே
ஒரு எழுச்சி மிகுந்ததாய் இருக்கிறது . பண்ணைபுரத்தில் ஒரு பீதோவன் ராஜா . புரட்சிகரமான எண்ணம் விரியும் பொழுது மட்டுமே அத்தகைய இசை ஊற்று எடுக்கும் தோழர் . ஆழமான கட்டுரை .
//நாய்குடைகளாய் மறைய வேண்டிய பாடல் வரிகள் இசையமுதம் பருகி ஆலமரமாய் நிலை பெறுகின்றன.// எவ்வளவு சரி!
நல்ல கட்டுரை. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த பதிவு இளையராஜாவை பெருமை படுத்துவதை விட பார்ப்பன எதிர்ப்பு தான் இருக்கிறது. 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் ஒரு பத்மஸ்ரீ கொடுக்க வில்லை. AR ரஹ்மானுடன் சேர்த்து கொடுத்தார்கள்?. அவரை அவமான படுத்தி இருந்தால் ஏன் அவர் பாலமுரளிக்ருஷ்ணா தலைமையில் திருவாசகம் வெளியிட்டார்?
RAJA ROCKS ALWAYS!!!
ஒப்பீடு லாஜிக்கலா இல்லையே. இரண்டு வேறு வேறான இசை வடிவங்கள். each is unique and great by itself. உங்க பாணியில் திருப்பி கேட்க்க முடியம் : சிம்பானி இசை உருவாக்கும் கலைஞர்கள், ஒரு கர்னாடக இசை வடிவ கீர்த்தனையை உருவாக்க முடியுமா ? மிகவும் அபத்தமான கேள்விகள் இவை.
இளையாரஜாவை இருட்டடிப்பு செய்ததாக அல்லது இகழ்ந்தாக தெரியவில்லை. செம்மங்குடி இளையாராஜாவின் இசைக்கு தீவீர ரசிகர். பல முறை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Music is divine, either western or carnatic or folk music. nothing is inferior or superior.
இளையராஜாவின் திருவாசக ஆர்டேரியா உருவகம் மிக அற்புதமானது. எம்மை வேறு உலகிற்க்கு இட்டு செல்கிறது. exhilarating music.
அதானே ரிட்லி ஸ்காட்டால ஒரு சித்தி சீரியல எடுக்க முடியுமா – ஒங்கொப்புறானே சத்தியமா முடியாது!
செம்மங்குடி வீட்டில் வைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர் நிழற்படம் ராஜாவினுடையதுதான். கர்னாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனமாய்த்திகழ்ந்த இசை விமர்சகர் சுப்புடுவால் (பிராமணரென்றுதான் நினைக்கிறேன்) பாராட்டப்பட்டதும் இளையராஜா மட்டுமே. ஆனால் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இளையராஜாவின் விடயத்தில் உண்மையில்லையே. என் திரையுலக நண்பர்கள் மூலம் நான் கேள்விப்பட்டதும் பார்ப்பன மேலாண்மையிடம் அவர்பட்ட (மற்றும் படும்) சிரமங்களும், அலட்சியப்படுத்தல்களும்தான். தோல்வி என்னமோ அவருக்கில்லை நமக்குத்தான்.
//ஒப்பீடு லாஜிக்கலா இல்லையே. இரண்டு வேறு வேறான இசை வடிவங்கள். each is unique and great by itself. உங்க பாணியில் திருப்பி கேட்க்க முடியம் : சிம்பானி இசை உருவாக்கும் கலைஞர்கள், ஒரு கர்னாடக இசை வடிவ கீர்த்தனையை உருவாக்க முடியுமா ? மிகவும் அபத்தமான கேள்விகள் இவை.
//
கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்ட(மனப்பாடம் செய்து கொண்ட) யார் வேண்டுமானாலும் பாடலாம், இசைக்கலாம். ஆனால், இசையமைப்பது என்பது வேறு.
இன்றைய நவீன யுகத்தில் இசையைப் பொறுத்தவரைக்கும் முன்னேறிய கலை வடிவமாக இருக்கும் சிம்பொனி அல்லது அதற்கு கீழே உள்ள வடிவமான ஹார்மோனி வடிவத்தில் செய்தால்தான் இசைக்கு மரியாதை. இன்னமும் நான் சேலேட்டு குச்சிதான் வைச்சி எழுதுவேன் என்பவர்களுக்கு (திருவையாறு கும்பலும், மார்கழி ஸ்பெசல் மட்டும் வெளியிடும் குமுதம், ஆ.வி வகையாற மாம்ஸ்களும்), கணிணியும் செலேட்டு குச்சியும் ஒப்பிடக் கூடிய கிரேட் வடிவங்களாக்வே தெரியும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.
60, 80 வருடங்களுக்கு முன்பு 130 பாடல்கள், 160 பாடல்கள் என்று விளம்பரப்படுத்தி போட்டி போட்டுக் கொண்டு மோனோடோனஸ் கர்நாடக பாடல்களை நொடிக்கொருதரம் பாடிக் கொண்டிருந்த சினிமாக்களை அதியமான் (ஆனந்த விகடனும்) இன்னமும் ரசித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் பொதுமக்களின் கலையுணர்வு காந்தி ராட்டை காலத்திலிருந்து விசைத்தறி காலத்திற்கு மாறிவிட்டது, அதன் உடன் நிகழ்வாக அவர்களின் ரசனையும் சிக்கல் (complex) நிறைந்ததாக மாறிவிட்டது.
லோ பட்ஜெட் படம் முதல் சிவாஜி படம் வரை குறைந்தபட்சத் தேவையாகவே இன்று ஹார்மோனி இசை வடிவம் இந்திய சமூகத்தின் வளர்ச்சி நிலைக்கு பொருத்தமான கலைவடிவமாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளிலோ முழுத் திரைப்படத்தையும் இசைக் கோப்புகளின் ஊடாகவே நடத்திச் செல்வது எனில் குறைந்த பட்சம் எளிய சிம்பொனி வடிவமாகவாவது இருக்க வேண்டும் என்ற நிலை (பேண்டம் ஆப் ஒபரே படம் உதாரணம்).
ஓவ்வொரு இசையும் அந்தந்த காலத்திற்கு கிரேட்தான். கர்நாடக இசையும் அப்படியே. ஆனால் இதில் இன்னொரு விதிவிலக்கு உள்ளது அது குறித்து கட்டுரையிலும் வருகிறது. அதனை அதியமான் படித்திருக்கவே மாட்டார் என்றே தோன்றுகிறது. அது என்னவென்றால், அன்றைய நாட்டார் இசை வடிவங்களை திருடித்தான் கர்நாடக இசை ஆவனப்படுத்தப்பட்டதுடன் பொய், புரட்டு புனித கதைகளும் அந்த இசையைச் சுற்றி புணையப்பட்டன.
துரதிருஷ்டம், காப்பியடித்து டாக்டர் வேலை செய்பவன் தொடர்ந்து காப்பியடிக்க வேண்டும். ஒரு முறை காப்பியடித்ததையே பத்து, நூறு தலைமுறைக்கும் பேசிக் கொண்டிருந்தால் என்னாகும்? மக்கள் இசை முன்னேறிச் சென்று ஹார்மோனிக்குப் போய்விட்டது, கர்நாடகமோ இன்னமும் மோனோடோனஸில் சிக்கி அழுது கொண்டிருக்கிறது, அந்த ஒற்றை நாதஸ்வரம் போல….
மிக சரியான பதில் தோழர்!! பார்ப்பனியம் தன்னை எப்படி நிலை படுத்தி கொள்ள நம்ம குறவன் முருகனை தண்டாயுத பாநியாகவும், நம்ம சுடலையாண்டியை ஈஸ்வரனாகவும் மாற்றியதோ, அது போலவே இதுவும் ஒரு கலாசார திருட்டு, பண்பாட்டு இருட்டடிப்பு. ஆனால் அவன் அறிவை எங்கே பார்க்கலாம் என்றால், அந்த திருடிய காலத்திற்கே அறியமான் போன்றோரை இழுத்து சென்று அதுதான் உண்மை என்று நம்ப வைப்பதில்தான். இப்போதைய சூழலில் ராஜாவே அப்படித்தான் நம்புகிறார் போலும். என்ன ராஜாவுடைய நம்பிக்கையும் ஒரு அவலம் தான். புதுமை பித்தனின் “சிற்பியின் நரகம்” கஹ்டையில் வரும் அந்த சிற்பியின் அதே அவலம்.
தென்றலே என்னை தோடு பாடல்களை கேட்ட போது இந்த இசைப்பதிவின் போது மொட்டை சாமி என்ன மனநிலையில் இருந்ததோ அது எப்பவும் நீடித்து இருக்க வேண்டும் என்று
நான் அப்போது வேண்டி கொண்டது நினைவுக்கு வருகிறது.இன்று வரை வேறு யார் இசையும் ஒரு மிதக்கும் உணர்வை எனக்கு தந்ததில்லை இந்த இடுகை வாசிக்கும் போது எழுதியவர் அறிவையும் சேர்த்தே வியந்தேன்.
சா என்று இழுக்கும் எந்த இசையை கேட்டாலும் எனக்கு வெறுப்பும் கோபமும் கொப்பளிக்கும். ஒன்று அது அவாளின் இசை அதனால் அது உயர்வானது என்ற பொது கருத்தாக்கம் செய்து வைத்திருப்பது இன்னொன்று அதனை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக உணர்ந்ததில்லை. அதன் பதிலை //உட்கார்ந்து தின்பவனின் நிதானம் உழைப்பவர்கள் வாழ்க்கையில் இருக்காது. அவர்களது இசையின் தாளத்திலும் இருக்காது. ஒன்று மற்றொன்றுக்கு உறுத்தத்தான் செய்யும். அதேபோல, மேற்கத்திய ‘ராக்’ போன்ற இசை வடிவங்களின் வெறிகொண்ட தாளம் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் மற்றும் அராஜகத்தின் வெளிப்பாடு// தெரிந்து கொண்டேன். இசை பற்றிய மிக நுட்பமான செய்திகளையும் எளிமையாக இசை பற்றிய எந்த அறிவுமற்ற என் போன்றோர் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது கட்டுரை. தொடர்து இது போன்ற பல கட்டுரைகளை வினவில் வெளி இட வேண்டுகிறேன்.
ஹேய்டன் என்பவர் கிரிக்கெட் வீரர் தானே! அவருக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்? ஹாண்டல் பற்றி சொல்ல நினைக்கிறாரோ கட்டுரையாளார்?
இளையராஜாவின் ஃபில்ஹார்மோனிக் சிம்பொனி ஏதோ காரணத்தால் இதுவரை வெளியிடப் படவில்லை. அதனால் அதை புகழவோ, இகழவோ, யாருக்கும் இதுவரை வாய்ப்புக் கிடைக்கவில்லை. வெளிவராத இசையை எப்படிப் பாராட்ட முடியும்?
இளையராஜாவையும் அவர் இசையையும் பார்ப்பனீயத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் எதிராக நிறுத்த எடுக்கும் முயற்சியாக இக்கட்டுரை இருப்பதாலேயே இதன் தரம் குறைகிறது. வாய்ப்புக் கிடைத்தால் தன்னை பார்ப்பனராரக் காட்டிக்கொள்ளவே ராஜா விரும்புவார் என்பது என் கருத்து. அதனால் அவரது மேதமையைக் குறைத்துச் சொல்லவில்லை. அவர் கொண்டாடும் செம்மங்குடியோ பாலமுரளியோ சிம்பொனி அமைக்காததால் தரம் தாழ்ந்த இசைக் கலைஞர்கள் ஆகிவிடவும் மாட்டார்கள்.
கடவுள் மறுப்பையும் கர்நாடக சங்கீதத்தையும் கலக்காதீர்கள். எந்த ஒரு கலைவடிவத்தையும் அரசியல் காரணங்களுக்காக மறுப்பது நமக்குதான் இழப்பு.
http://en.wikipedia.org/wiki/Joseph_Haydn
http://en.wikipedia.org/wiki/George_Frideric_Handel
பெயர்க்குழப்பம் செவ்வியல் இசையில் சகஜம். மொசார்ட் என்ற பெயரிலேயே மூன்று கலைஞர்கள் இருந்திர்க்கிரார்கள். இங்கே பாருங்கள் http://classiccat.net/composers.php
ilayaraja simponey is best. no one can ignore him. but one think oruvar matri sonnal udane parpaneeyam ,pramaneeyam, varkam endru pallavi paduvathen. isai isayagave irukkuttum. jathi sandai ulle varavendam
மிக அட்டகாசமான கட்டுரை.
Vinavu. Ellavatrayum VAKKIRA kan kondu parthal immadhiryana katturaigale minjum ; Ungalukku ARASIYALIL ,ARASIYALVADHIGALAI vimarsippadhil mihundha vallmai undu .NAAN POTRUHIREN ! .Athargaga isai matrum ungalukke satrum parichayame illadha vishayangalai vimarsanam seyya muyaladhirgal.
Ilayaraja is a legend in tamil cinema but he doesn’t need endorsement from people like vinavu
rightly said.
கலையும் மக்களும் வேறா ??????
கலையும் மக்களும் வேறு என்று சொல்பவர்கள் சொல்லும் கருத்தை முன்வைக்கிறீர்கள் ……
ஆனால் இயல்பில் ஒன்று மற்ற ஒன்றோடு சம்பந்தம் உள்ளது என்பதே உண்மை ….
இந்த கட்டுரை அரசியல் பார்வையுடன் கலையை பார்க்கிறது , கலை , அரசியல்
மக்கள் எல்லாம் வேறு வேறு அல்ல …அந்த கண்ணோட்டத்தில் படியுங்கள் நண்பரே
Nanbare ; Indha katturaiyai Ilayaraja kooda angeegarikka maatar ; AVAR ISAYIL IRAVANAI KAANKIRAR; Ungalukkelam dhan kadavule aahadhe ; Appuram yen makkal,kalai endra BHAMMATHU.
PL GET THIS ARTICLE ENDORSED BY ILAYARAJA FOR WHOM THIS IS WRITTEN.
DO NOT SPIT VENOM IN EVERYTHING
“இப்படி 18 -ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த, இசைத்துறை முன்னேற்றம் தான் ஹார்மனி. இதன் முக்கிய அங்கமான சுருதிக்கும் ஸ்தாயிக்குமுள்ள உறவை தேவதூதன் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ந்தான் பித்தகோரஸ். (செங்கோண முக்கோணத் தேற்றம் – பித்தாகோரஸ்தான்) வெவ்வேறு அளவில், கம்பிகளை இழுத்துக் கட்டி ஸ்வர வரிசையை எழுப்பினான். செவியால் உணரக்கூடிய ஒலியைக் கணிதத்தால் அளந்தான். இசையே கணிதம் என்றான்; அவன் ஒரு தத்துவஞானி. எனவே ஒருபடி மேலே போய் ‘எல்லாம் கணிதமே’ என்றான். ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நம் ‘பாரத தத்துவஞானி’ கிருஷ்ண பரமாத்மா ‘எல்லாம் நானே’ என்று அர்ச்சுனன் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தான்.”
Can u tell me who is “DEVATHOODHAN” mentioned in this. I will tell ur caste.I used to follow ur web as ANONY. Now after seeing so many articles targetting the minority Hindus( status of Hindus in india), dont want to visit ur web. This is my first comment in this web.
I accept that Ilayarajais great.
ஒரு கட்டுரை படிக்கும் போது, எந்த வாக்கியம் என்ன பொருளில் கையாள படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் பள்ளிக்கூடத்து பய்யன் மாதிரி பேசக்கூடாது ஆவின். அங்கே தேவ தூதன் என்று சொல்ல பட்டது ஒரு முரண நவிற்சிக்காக [ironic effect]சொல்லப்பட்டது. உங்களையெல்லாம் ஒரு கட்டுரை கொதிப்படைய செய்கிறது என்றால், அது கண்டிப்பாக நல கட்டுரை தான்.
“Ungalai ellam “, What do u mean by that? One more , Why can’t VINAVU write about the issue/problems in recognizing ILAYARAJA. Instead of , vinavu wants to include casteism in his most of the articles.Usually , i used to read and take only the core issue from vinvu and wont bother about cast CHADAL in the articles.But, because of minorty ( Hindus) in india, u can’t take it as granted and write anything about them.When u are facing issues related to caste, you can go and file the complaint and our media will give immediate response to that.
One more, why can’t vinavu fight for the tamil people.Most of the time, topic is not relating to our state issues. I don’t think other language blogs will discuss about other state issues in their blogs.
இளையராஜா இசை எனக்கு புடிக்கும் ஆனால் இங்கயும் சாதி பூச்சு எதுக்கு எனக்கு என்னவோ இப்போலாம் வினவு ஒரு சமுதாய பத்திரிகை போல தோணுது எப்ப பார்த்தாலும் தாழ்த்தப்படவர்களுக்கு என்று சொல்லியே இன்னும் அவர்களை மக்கள் மனதில் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில இருந்து வந்தார் என்பதை நாபகம் படுத்துவது போல இருக்கு, அவர் பண்ணை புரத்தில் இருந்து வந்தாருனு சொல்லி பெருமை பேசுவது இருக்கட்டும் அதறக்க இவர அவனக் பிறந்த ஊருக்கு என்ன செய்து இருகார் என்று ஒரு கட்டுரை எழுதின நல்லா இருக்கும், இவர் எதாவது உதவி இருந்தால் அந்த கிராமத்தை ஒரு முன்மாதிரியான கிராமமா பண்ணி இருக்கலாம் ஆனால் எனக்கு தெரிஞ்சு இவர் அப்படி எதாவது பண்ணி இருபார என்பது கேள்வி குறிதான் தான் கஷ்டத்துல இருந்து வந்தேன் என்றோ சொல்லி சில பேரு பெருமை அடிபதுதன் வேலை ஆனால் அந்த கஷ்டபட்ட ஊருக்கு நல்ல நிலமயுல வர எதாவது உதவி செய்தல் அதும் இன்னும் நல்ல இருக்கும்
////இளையராஜா இசை எனக்கு புடிக்கும் ஆனால் இங்கயும் சாதி பூச்சு எதுக்கு எனக்கு என்னவோ இப்போலாம் வினவு ஒரு சமுதாய பத்திரிகை போல தோணுது//// இந்த பதிவில் சாதி பூச்சு இருப்பதாகவும் வினவு இசையில் கூட சாதியை தினிப்பதாக பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு, சில உண்மைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன் பரமக்குடிலிருந்து முதுகுளத்தூர் போகிற வழியில் புழுதிக்குளம், சாம்பகுளம், என்று இரண்டு கிரமங்கள் இருக்கின்றன இந்த ஊர்களை சேர்ந்த நண்பர்கள் சவூதியில் வேலை பார்க்கிறார்கள் எனக்கு பக்கத்து ஊருகாரவுக பறையார் சாதியை சேர்ந்தவர்கள் ஒவ்வோரு வருடமும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்) மாதத்தில் ஊருக்கு விடுமுறையில் போவாங்க (அடப்பாவிகளா வெயில் மண்டையே போளக்குற மாதத்தில் அதுவும் அடிக்கடி காரண்ட் வேற போயிரும் அந்த வெர்வையேட எப்புடித்தான் பொண்டாட்டியோட குடும்பத்துல ஈடுபட போறீங்கன்னு தெரியால அப்புடியின்னு அந்த நன்பர்களை கேலி பன்னியிருக்கிறேன்) ஏனா அந்த மாசந்தே சாம்பகுள கோயில் திருவிழா. பரமக்குடி ஆத்துல அழகர் இறங்குவாரு, மானாமதுர ஆத்துல அழகர் எறங்குவாரு ஒடனே நம்ம சவூதியில இருக்கிற முனுசாமியும், பால்பாண்டியனும் பக்தியோட அழகர தரிசிக்க போரங்கன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுறாதீக அவுக போறது தப்பு அடிக்க அதாங்க கொட்டு அடிக்க (ஏ ஊருல உள்ள ஆதிக்கசாதிக்கராய்ங்க கையிலாம் வேளங்கம போச்ச) சவூதியிக்கி முனுசாமி கேளம்பும்போதே ஆதிக்கசாதிக்காரய்ங்க ஏங்காட ஏல்லா பறபயலும் சவூதி, குவைத், துபாயின்னு போயிட்ட ஊரு திருவிழாவுக்கும் எளவு வீட்டுக்கும் ஏவண்டா கொட்டு அடிக்கிறது என்று மிரட்ட நம்ம முனுசாமியின் தந்தை அய்யா தம்பி வேல பக்குற கம்பெனியில் வருச வருசம் லீவு அய்யா திருவிழா சமயத்துல தம்பி வந்துரும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தான் பிளேட் ஏறி வந்திருக்கிறார்கள் பேன்ட் இன் பன்னுன சட்ட ஏர்போட்டுல ஏறங்கி வீட்டுக்கு பேர வரைக்கிந்தே அப்புறம் பழைய கைலி தோலுல கொட்டு இவர்கள் இப்படி உருமற அந்த ஊர சேந்த முக்குலத்தோர் (சேர்வார், கள்ளர், தேவர்)இவர்கள் பரமக்குடி ஆத்தில் கள்ளழகர் சாமியாக அவதாரம் எடுத்து தண்ணியை பீச்சிகிட்டே ஆத்துல கம்பீரமாக நடந்து முன்னே செல்ல நம்ம முனுசாமி சட்ட இல்லாம கைலியை துக்கி கட்டி அவுந்துறம இருக்க சவூதியில வாங்கிட்டு போன (மெதல மார்க் பெல்ட்டு) பச்ச கலருல நாலு இஞ்சி அகலத்துல உள்ள பெல்ட்டு உருதுனைய இருக்கும் அவரின் அடிமைத்தனம் போலவே, இங்கு இசையில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக சொல்பவர்கள் நம்ம முனுசாமிய கள்ளழகர ஆக்கி நடக்கவிட்டு முக்குலத்தோரை கொட்டு அடிக்க வச்சிருங்க பாப்போம் சில உண்மைகள் இந்த கட்டுரை போல கசக்கத்தான் செய்யும்
இசையை பற்றிய தனது அறிவை தனது மறுமொழியில் பஞ்சாபி ரவியால் வெளிப்படுத்த முடியும்தானே
wonderful article.
Dear Vinavu,
In the Middle of 2000 Yamaha Keyboard company interduce one new keyboard with limited Music options. But Our Mastro Illayaraja Put more than 10 Music Options without any help of Computer. The Keyboard company Happly accepted that all the 10 music options or different and added on that
//மேற்கத்திய ‘ராக்’ போன்ற இசை வடிவங்களின் வெறிகொண்ட தாளம் ஏகாதிபத்தியத்தின் வெறித்தனம் மற்றும் அராஜகத்தின் வெளிப்பாடு //
வினவு, ஏதாவது எடிட்டிங் பிரச்சனையா ? எதிராக என்ற வார்த்தை விட்டுபோயவிட்டதா ?
மணிகண்டன்
நீங்கள் குறிப்பிட்ட வரிகள் மூலத்திலும் அப்படியேதான் வருகிறது. எடிட்டிங் பிரச்சினை எதுவுமில்லை.
இந்தக்கட்டுரை 1993ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. அதை அப்படியே இங்கு பிரசுரித்திருக்கிறோம். கட்டுரையின் கீழே பெயரே இல்லாமல் வந்தால் அது !! வினவு எழுதியது. பெயரோடு வந்தால் அது சம்பந்தப்பட்டவர்கள் எழுதியது. எனினும் புதிய கலாச்சாரத்தின் கட்டுரையோடு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம். நீங்கள் உங்கள் கேள்வியை அல்லது விமரிசனத்தை தெளிவாக வைத்தால் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ராக் இசை பற்றி தேவையென்றால் தனிப்பதிவு வெளியிட முயல்கிறோம். உங்களது விரிவான விமரிசனத்திற்கு காத்திருக்கிறோம்.
ராக் இசையைப் பற்றிய உங்கள் புரிதலை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். நீங்கள் புகழும் (மற்றும் உங்கள் hero இளையராஜா தேர்தெடுத்த) சிம்ஃபனி இசைதான் மேற்குலகில் நம் சாஸ்திரிய இசைக்கு சற்றும் குறையாத மேட்டிமைத்தன்மையைக் கொண்டது. ஒரு நிகழ்ச்சியை வழங்க ஆர்க்கெஸ்ட்டிராவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், acoustics வடிவமைக்கப்பட்ட மாபெரும் அரங்குகள் போன்ற ஆடம்பரங்கள் தேவைப்படும் ஒரு கலைவடிவம்தான் அது.
மாறாக, ராக், ஜாஸ், ராப் போன்றவற்றின் மூலத்தை ஆராய்த்தால் அது உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் சோகங்களை வெளிப்படுத்திய Blues இசையை அடிப்படையாகக் கொண்டதை அறியலாம். மூன்றே கலைஞர்கள் கொண்ட ஒரு ராக் இசைக்குழுவால் ஒரு நிறைவான இசை