privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னை செவிலியர் போராட்டம் - நேரடி ரிப்போர்ட்!

சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!

-

அப்பல்லோவின் மிடுக்கான மருத்துவ சேவை

சர்வதேச உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. ‘உலகத் தரத்திலான மருத்துவ சேவையை அளிக்க உங்களை அழைக்கிறோம்’ என்று செவிலியர்களை நோக்கிய விளம்பரம் அது. உழைக்கும் மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அப்பல்லோ குழுமம் பணி செய்யும் செவிலியரை போற்றியுள்ளதாக வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு அப்பல்லோ நிர்வாகம் செவிலியர்கள் தமது பணிச் சூழல்களை மேம்படுத்தக் கோரி நடத்த உத்தேசித்திருந்த போராட்டத்தை எதிர்த்து நீதி மன்ற உத்தரவு வாங்கியது அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘பங்குச் சந்தையில் தமது பங்குகளின் விலை பாதிக்கப்பட்டு விடக் கூடாது’ என்று போராட்டத்தை துணி போட்டு மூடி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் அப்பல்லோவின் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அந்த விளம்பரத்தில் தேடினால் கூட கிடைக்கவில்லை.

செவிலியர்கள் டிசம்பர் மாதமே தமது கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன் வைத்து, ஜனவரி 20 முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டிஸ் கொடுத்திருந்ததும் நிர்வாகம் சமரசத்துக்கு அழைத்து பின்னர் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பது அந்த விளம்பரத்தில் சொல்லப்படவில்லை. முந்தைய நாள் அப்போல்லோவைச் சேர்ந்த 800 நர்ஸூகளும் போர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த 200 நர்ஸூகளும் பார்க் டவுனில் உள்ள மெமோரியல் ஹாலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அந்த விளம்பரம் பேசவில்லை.

மூன்று ஆண்டுகள் அனுபவம் உடைய செவிலியருக்கு சுமர் 6,000 ரூபாய் மட்டும் மாதச் சம்பளம் வழங்குவது, அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பது, வேலையை விட்டு விலக விரும்பினால் அனுபவச் சான்றிதழையும் தகுதிச் சான்றிதழ்களையும் தராமல் மிரட்டுவது என்ற நடவடிக்கைகள் அந்த விளம்பரத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை.

மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம்

இதே போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளான முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர்களும் அதே மாதிரியான கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 2-ம் தேதி தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

அனுதினமும் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் நோயுற்றவர்களுக்கு உதவி புரியும் செவிலியர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையேதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். நிரந்தர வேலை என்ற உத்தரவாதம் கிடையாது, பற்றாக்குறை சம்பளம், கல்விக்கு வாங்கிய கடன் சுமை, குறைவான செவிலியர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தியிருப்பதால் அழுத்தும் வேலைப் பளு, இதன் நடுவில் இவர்கள் வேலை செய்வது இயந்திரங்களுடன் அல்ல நோயுற்ற மனிதர்களுடன். இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும் இன்முகத்துடன் கவனமாக சேவை செய்ய முனையும் வெள்ளுடை உழைப்பாளிகள் இவர்கள்.

இப்படியாக மிகுந்த பொறுப்புள்ள பணியில் பல அழுத்தங்களின் கீழ்தான் செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் தனியார் மருத்துவமனைகளில் கேட்கவே வேண்டாம். அந்த அழுத்தங்களை எதிர்த்து பீரிட்டு வெளிப்பட்டது செவிலியர்களின் போராட்டம்.

அவர்கள் வைத்த கோரிக்கைகள் ஜனநாயகமானவை மட்டுமல்ல, அத்தியாவசியமானவையும் கூட

  • – சம்பளம் உயர்வு வேண்டும்
  • – கொத்தடிமைகளை போல நடத்தக்கூடாது.
  • – தங்களிடம் வாங்கி வைத்துள்ள சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும்.
  • – தங்களுக்கு போட்டுள்ள பிணை ஒப்பந்தங்களை (bond) ரத்து செய்ய வேண்டும்.
  • – நோயாளிகளின் பராமரிப்புக்குத் தேவையான அளவு போதிய செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வில்லை. இந்த கோரிக்கைகளை 6 மாதம் முன்பே மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, மீண்டும் நினைவூட்டி கோரிக்கை மெனு கொடுத்துள்ளனர். ஒரு மாதம் கழித்தும் பதில் இல்லை.  ‘கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம்’ என்று நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு மாதத்திற்குப் பிறகும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவே தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

MMM மருத்துவமனை

சென்னையில் உயர்நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகமாக வாழும் அண்ணா நகர்-முகப்பேர் பகுதியில் உள்ளது மெட்ராஸ் மெடிகல் மிஷன் எனும் தனியார் மருத்துவமனை. ‘முழுக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்’ ஆரம்பிக்கபட்டதாக தன் வலைத்தளத்தில் முழங்குகிறது மருத்துவமனை நிர்வாகம். இந்த MMM  மருத்துவமனை கட்டிடங்கள் பார்க்க ஐந்து நட்சத்திர விடுதி மாதிரி ஜொலிக்கின்றன, நோயாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கும் குறைவில்லை. நோயாளிகளிடன் உறிஞ்சி நல்ல லாபம் பார்க்கும் அதே நேரம் செவிலியர்கள் போன்ற சாதாரண ஊழியர்களிடமிருந்தும் உறிஞ்சுகிறது.

மார்ச் 3-ம் தேதி, வியாழக் கிழமை அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் 300 செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஒன்றும் தொழிற்சாலையில் வேலை செய்யவில்லையே, வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகளை யார் பார்த்துக்கொள்வது? இந்த அக்கறையுடன் 60 செவிலியர்களை வார்டில் நிறுத்திவிட்டு, 240 பேர் மாத்திரம் கீழே வந்து போராடத் தொடங்கினார்கள்.

வேலை நிறுத்தம் தொடங்கும் முன் இவர்களாகவே போலிசுக்கும் அறிவித்தனர். இத்தனை நாள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மௌனம் சாதித்த நிர்வாகம், வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்த அரைமணி நேரத்தில் ஒரு நோட்டிஸ் அனுப்பியது. ‘வேலை நிறுத்தம் செய்யும் பெண்கள் உடனடியாக மருத்துவமனை ஆஸ்டலில் இருந்து வெளியேற வேண்டும். யாருக்கும் உணவு கிடையாது’ வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக 3 பேரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

சன் டீவி செய்தியாளர்கள் முதலில் வந்து செய்திகளை சேகரித்து போயிருக்கிறார்கள். நாம் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்ற போது சுதாரித்துக் கொண்டிருந்த நிர்வாகம் வேறு எந்த ஊடகங்களையும் வேலை நிறுத்தம் செய்யும் செவிலியர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.

போராட்டம் செய்பவர்களுடன் பேசியதில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 வருட படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. கடனுக்கு மாதம் ரூபாய் 3,500 வங்கிக்குக் கட்ட வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் 7,500ல் பிடிப்புகள் போக ரூபாய் 5,700தான் கையில் வரும். மருத்துவமனை ஆஸ்டலில் தங்க ரூபாய் 700, உணவுக்கு ரூபாய் 700 போக கையில் ரூபாய் 4,300 நிற்கும்.  பெரும்பாலனோருக்கு வங்கிக் கடன் போக கட்டியது போக மீதி 800 ரூபாய்தான் இருக்கும். வீட்டில் இருந்து ஏதாவது பணம் வாங்கித்தான் சென்னையில் பிழைப்பு ஓடுகிறது.

வெளியே வேலை தேடிச் செல்ல முடியாது. சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மருத்துவமை நிர்வாகத்திடமிருந்து கிடைக்காது. அவற்றை பெறுவதற்கு பிணை ஒப்பந்தத்தின்படி ரூபாய் 50,000 கொடுக்க வேண்டும், அப்படியே வெளியில் வேலை தேடினாலும் எங்கும் தனியார் மயமாகி விட்ட சூழலில் மற்ற மருத்துவமனைகளிலும் இதே போன்ற பணிச்சூழல்தான்.

”இதுக்கு மேலே என்ன சார் வேணும், வெளியேவும் பொழைக்க விடமாட்டாங்க, இங்கேயும் சம்பளம் கொடுக்கமாட்டாங்க, நாங்க என்ன செய்ய? எங்களுக்கு பயம் இல்லை, நாங்க போராடத்தான் போறோம். வீட்டில் சொல்லிட்டோம். அவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. எங்களுக்கு வேற என்ன வழி இருக்கு சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு போராட்ட களத்தில் இறங்கி நின்றார்கள் செவிலியர்கள்.

மறு நாள் போராட்டம் என்று தெரிந்தவுடன் அரசு பணிநல மேலாளர் இவர்களைச் சந்தித்துள்ளார். அரசு யாருக்கு ஆதரவு தரும்? ‘ஏதாவது நோயாளியின் உடல் நிலையை மோசமாகச் செய்து, செவிலியரின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிப்பு என்று நிர்வாகம் அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது கூட நடக்கலாம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு அக்கறையாக ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் அவர்.

செவிலியர்களின் பணிச் சூழல்

ஒரு காலத்தில் செவிலியர்கள் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் வளைகுடா நாடுகளுக்கும் பறந்தபடி இருக்க செவிலியர்களுக்கான படிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது, தனியார் செவிலியர் கல்லுரிகள் புற்றீசல் போல முளைத்தன. இப்போது அரசு மருத்துவ சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவதில்லை. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்பொழுது இருப்பது தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான். அவை இந்த ரிசர்வ் பட்டாளமாக நிற்கும் இந்த வேலையில்லா பட்டதாரிகளை சுரண்டி தமது வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்’ என்கிறார் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் செயலாளர் ஜினி கெம்ப். பல லட்ச ரூபாய் செலவு செய்து நர்ஸிங் படித்து விட்டு இது போன்ற பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொத்தடிமைகளாக பணி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான செவிலியர்கள். அந்த நிலைமையை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி தம்முடைய மற்றும் நோயாளிகளின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் அடி எடுத்து வைத்து முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

செவிலியர்கள் சங்கம் கேரளாவில் இது போன்ற போராட்டத்தின் மூலம், படித்து முடித்தபின் உடன் வேலைக்குச் சேரும் புதிய நர்ஸூக்கு 14,000 ரூபாய் சம்பளம் என்பதை சாதித்திருக்கிறார்கள்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மலர், MMM நிர்வாகங்கள் அடிபணிந்தன

ஐந்து நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்திருந்த அராஜக நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து,

  • — கட்டாயமாக வாங்கி வைத்திருந்த சான்றிதழ்களை திருப்பித் தந்து விடுவது
  • — பணியை விட்டுப் போகாமலிருக்க போட்டிருந்த பிணை ஒப்பந்தத்தை ரத்து செய்வது
  • — சம்பளத்தை உயர்த்துவது

என்ற போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளான அடிப்படை நியாயங்களை நிறைவேற்றுவதாக அடிபணிந்திருக்கிறார்கள். மலர், MMM மருத்துவமனை செவிலியர் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாலும் அப்போல்லோ செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தமது ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. இதை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

அடிப்படை வாழ்வுரிமை சுரண்டப்படும் போது அதை எதிர்த்து கிளர்ந்து எழுவது உழைக்கும் மக்களின் இயல்பு. ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் தகவல் தொடர்புத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ‘தாம் அடிமைகள்’ என்பதை உணர்வதற்கு கொஞ்சம் அதிக காலம் பிடிக்கும். ஆனால் எல்லோரும் ‘தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்பது சுரண்டலின் வடிவம், அதன் மூலம் தமக்கு கிடைத்திருப்பது கௌரவமான வாழ்க்கை இல்லை’ என்று உணரும் போது, முதலாளித்துவ அதிகார அமைப்புகளை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.

____________________________________________________

– வினவு செய்தியாளர்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்