கம்ப்யூட்டரில் அச்சடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தையே மைக் பார்க் (Mike Park) என்னும் கொரிய நாட்டைச் சேர்ந்த அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் காகிதத்தையே பார்த்தான். அதிலுள்ள வாசகங்களையே திரும்பத் திரும்ப படித்தான். ஆச்சர்யமும், வெறுமையும், அவமானமும் கலந்த உணர்ச்சி அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் ஆயுளில் ஒருமுறை, ஒரேயொரு முறை கூட இதுபோன்ற காகிதத்தில் அவன் கையெழுத்து போட்டதில்லை. வேலைநீக்க உத்தரவு, சம்பள வெட்டு ஆகிய ஆணைகளில் மட்டுமே இதுவரை கையெழுத்திட்டவன், முதல்முறையாக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து கையெழுத்து போட்டிருக்கிறான்.
அடுத்து வரும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில் தான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நினைக்கும்போதே மைக் பார்க்குக்கு ஜுரம் கண்டது.
‘ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்’ என்று இதுவரை அவன் கேள்விப்பட்டதுமில்லை. நிர்வாகவியல் தொடர்பாக அவன் படித்த பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற ஒரு பாடம் எப்போதேனும் நடத்தப்பட்டதா? மூளையை கசக்கிப் பார்த்தான். விடை கிடைக்கவேயில்லை.
அதுமட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இதுபோன்ற எழுச்சிமிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் நடந்ததாகவோ அவை வெற்றி பெற்றதாகவோ அவன் அறிந்ததேயில்லை. அதுபோன்ற எந்த சம்பவமும் அவன் பார்வைக்குக் கூட வந்ததில்லை. மறுகாலனியாதிக்கத்துக்காக நெகிழ்த்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை இப்படி ஒன்றிணைந்து தொழிலாளர்கள் அனைவரும் முறியடித்து விட்டார்களே என உள்ளுக்குள் குமுறினான்.
அலுப்பும், சோர்வும் ஒருசேர அவனை ஆட்கொண்டது.
தான் கையெழுத்திட்ட காகிதத்தை பார்த்துவிட்டு தொழிற்சாலையின் வெளியே தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்வார்கள் என்று கற்பனை செய்துப் பார்க்க முயன்றான். நிரந்தர தொழிலாளர்களை கட்டிப் பிடித்தபடி ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்குவார்களா? வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு ஆராவாரத்துடன் திரும்புவார்களா?
இருக்கும். இப்படியான காட்சிகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெருமூச்சு விட்டான்.
இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விதான் அவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு நெருக்கியது. முழி பிதுங்கியபோதும் விடையேதும் அவனுக்கு கிடைக்கவில்லை.
____________________________________
1969ம் ஆண்டு கொரியாவில் தொடங்கப்பட்ட ‘அனில் டியூப்’ (Hanil Tube) நிறுவனத்தை ஒருவகையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலையின் சகோதர நிறுவனம் என்று சொல்லலாம். ஹுண்டாய் மோட்டார் வாகனத்துக்கு பயன்படும் பெட்ரோல் – டீசல் டியூப், டிஸ்க் பிரேக் லைனில் வரும் மிகச் சிறிய துளை கொண்ட பைப்கள் ஆகிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதுதான் இந்த நிறுவனத்தின் பணி.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘பண்டி பைப் இந்தியா’ என்ற பெயரில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்கார்ட் தொழிற்பேட்டை வளாகத்தில், 2007ம் ஆண்டு முதல் ‘அனில் டியூப்’ என்ற புதிய பெயருடன் ஹுண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்க ஆரம்பித்தது.
இந்த தொழிற்சாலையின் டைரக்டராக பதவியேற்று கொரியாவிலிருந்து விமானம் மூலம் வந்து இறங்கியவன்தான் மைக் பார்க்.
‘பண்டி பைப் இந்தியா’ நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாளர்கள் என அனைத்து பிரிவு தொழிலாளர்களும் அப்படியே ‘அனில் டியூப்’ நிறுவனத்தின் தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். அவர்களது முந்தைய அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டதன் மூலம், ‘புதிய தொழிற்சாலையில்’ பணிபுரிவதை தொழிலாளர்கள் ஏற்கும்படி ‘அனில் டியூப்’ பார்த்துக் கொண்டது. டைரக்டர், மேனேஜிங் டைரக்டர், ஜெனரல் மேனேஜர் என குறிப்பிட்ட சில பதவிகளை மட்டும் கொரிய நாட்டவர்கள் ஆக்கிரமிக்க, எஞ்சிய மேலாளர் பதவிகள் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இத்தொழிற்சாலையில் 25 நிரந்தர பணியாளர்களும், 40 பயிற்சியாளர்களும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் மாதம் ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம். மற்றவர்களுக்கு குறைவுதான். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் சம்பளம் வெறும் ரூபாய் 4 ஆயிரம்தான்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், லோடிங், அன்லோடிங், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசாங்கத்திடம் சொல்லிவிட்டு அவர்களை நேரடியாக உற்பத்தியில் ‘அனில் டியூப்’ ஈடுபடுத்தி வருவதுதான். அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
அதுபோலவே முதல் ஷிப்டில் பணிக்கு வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி உண்டு. பயிற்சியாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகை கிடையாது. மதிய உணவிலும் தொழிலாளர்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிலாளர்களால் குரல் கொடுக்க முடியாது. காரணம், சங்கம் வைக்க நிர்வாகம் தடை செய்திருக்கிறது. ஆறு பேர் கொண்ட ‘ஒர்க்கிங் கமிட்டி’யிலும் இருப்பவர்கள், கருங்காலிகள்; நிர்வாகத்தின் கைக் கூலிகள்.
200க்கும் அதிகமான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், மூன்று ஒப்பந்ததாரரின் கீழ் வருகிறார்கள். ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழும், கீவனூர், காட்ராம்பாக்கம், பென்னாலூர் தண்டலம் ஆகிய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கிஷோர் என்ற ஒப்பந்ததாரரின் கீழும் வருகிறார்கள். இவர்களில் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்ட பெண் தொழிலாளர்கள். எஞ்சியிருக்கும் விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வட மாநிலத்தை, குறிப்பாக ஓரிசா, பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் மட்டுமல்ல, அவர்கள் நேரடியாக தொழிற்சாலை நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இல்லை என்பதற்கும், தொழிற்சங்கம் கட்டாமல் இருப்பதற்கும் இந்த ஒப்பந்ததாரர் முறை உதவுகிறது. இன்று இந்தியாவின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இதுதான் நடைமுறை.
____________________________________________________
இந்நிலையில்தான் 2009ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை அம்பத்தூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே தோழர்கள் ஆவடி – அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு தொழிலாளரின் வீட்டுக்கும் சென்று தோழர்கள் பேசினார்கள். மாநாட்டின் அவசியம் குறித்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்கள்.
இந்த வகையில் ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ‘அனில் டியூப்’ நிறுவனத்தில் பணிபுரிந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாள தொழிலாளர்களின் இல்லங்களுக்கும் பிரச்சாரம் சென்றது. குறித்த நாளில் மாநாடு நடந்து முடிந்தது. ஆனால், ‘அனில் டியூப்’ நிறுவன தொழிலாளர்கள் மாநாட்டுக்கு வரவில்லை.
இடையில் தொழிற்சங்கம் அமைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டு பிரபலமான ஓட்டுக் கட்சிகளது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் அணுகினார்கள். சொல்லி வைத்தது போல் அனைத்து சங்கங்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் கட்ட முடியாது. 25 நிரந்தர தொழிலாளர்களுக்காக சங்கம் உருவாக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.
நிரந்தர தொழிலாளிகளிடம் சங்கம் கட்டினால் சட்டபூர்வ பாதுகாப்பு உண்டு என்பதால் அவர்களிடம் தொழிற்சங்கம் கட்டி, தரகர் வேலை பார்த்து, சந்தாக்கள் வசூலித்து மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா தொழிற்சாலைகளிலும் நிரந்தரத் தொழிலாளிகள் சிறுபான்மையினராகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையினராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை காயடிப்பதற்காக இந்த அணுகுமுறை எல்லா நாடுகளிலும் முதலாளிகளால் பின்பற்றப்படுகின்றது.
இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கும் பலர், தங்கள் ஒப்பந்ததாரரை அணுகி பணி நிரந்தரம் செய்யும்படி கோரினார்கள். ஒப்பந்ததாரர்கள் அவர்களை கடுமையாக திட்டி, ‘இருக்கற வேலையை காப்பாத்திக்கப் பாருங்கடா’ என விரட்டியடித்திருக்கிறார்கள். சரி, நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம் என்று சென்றார்கள். அங்கு அவர்களுக்கு ‘எதுக்குடா பணி நிரந்தரம்? அதுதான் ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றாங்கல… கலைஞர் காப்பீடு திட்டம் மூலமா மருத்துவம் பார்த்துக்கறீங்கல… இலவச கலர் டிவி கிடைக்குதுல… இதுக்கு மேல என்னடா வேணும்…’ என்று பதில்தான் கிடைத்தது.
அனைத்து கதவுகளும் இப்படி மூடப்பட்ட நிலையில்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நினைவுக்கு வந்தது.
அன்றைய தினம் பணி முடித்து வீடு திரும்பியவர்கள், ஒன்பது மாதங்களாக தாங்கள் பாதுகாத்து வந்த பிரசுரத்தை எடுத்தார்கள். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார்கள். குறிப்பிட்ட இடத்தில் அவர்களை தோழர்கள் சந்தித்தார்கள். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்கள். உடனடியாக சங்கம் ஆரம்பித்தால் பெரிய அளவில் பணி இழப்பு ஏற்படும். அதை தொழிலாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், தோழர்களை தொடர்பு கொண்ட நிரந்தர தொழிலாளர்கள், தங்களுக்காக மட்டும் பேசவில்லை. பயிற்சியாளர் – ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோருக்காகவும் பேசினார்கள் என்பதுதான்.
சட்டரீதியான தோழர்களின் ஆலோசனைகள், நிர்வாகத்துடன் மோதும் போக்கில் பெரிய அளவு வெற்றி பெற்றது. இதனையடுத்து பு.ஜ.தொ.மு மீது அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறந்தது.
_______________________________________________
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயிற்சியாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருந்து நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி Tamilnadu Industrial Establishments (Conferment & Permanent Status to workmen) Act, 1981ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தொடர்ந்து அவர்கள் 45 நாட்கள் உற்பத்தியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ரகசியமாக, நிர்வாகம் கவனிக்காதபடி திரட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
இந்த ஆதாரங்களை காஞ்சிபுர மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் சமர்பித்ததுடன் வழக்கும் தொடரப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நிர்வாகம், முன்னணியாக இந்த விஷயத்தில் செயல்பட்ட 5 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. இவர்கள் அனைவருமே 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இப்படி வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று நிர்வாகத்துக்கும், தொழிலாளர் ஆய்வாளருக்கும் கடிதம் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. அத்துடன் ‘வழக்கு தொடர்ந்தவர்கள் யாருமே கையெழுத்திடவில்லை… அவர்கள் சார்பாக யாரோ போலியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள்’ என வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஆலோசனைகளை தொழிற்சாலை ஆய்வாளர் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதையெல்லாம் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ந்துப் போனார்கள். நிர்வாகமும், ஒப்பந்ததாரமும், அரசு அதிகாரிகளும் இப்படி கைக் கோர்த்து கள்ளக் கூட்டணியில் ஈடுபடுவார்கள் என தோழர்கள் சொன்னதை நேரடியாக பார்த்த அவர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றார்கள்.
இந்நிலையில் பணி நிரந்தர வழக்கு செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் நேரடியாக விசாரணையில் கலந்துக் கொண்டு பேசினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகமும், தொழிலாளர் ஆணையரும் திகைத்தார்கள். வழக்கை தள்ளி வைத்தார்கள்.
இப்போது நிர்வாகம் நிச்சயம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பது தெளிவாயிற்று. அதற்கு தகுந்தாற்போல இரண்டு பயிற்சியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போதே, பாதி ஷிப்டில், பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட சில ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் இதேபோல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை தொழிலாளர்களும் புரிந்துக் கொண்டார்கள்.
அக்டோபர் மாதம் பிறந்தது. ‘இதோ இன்று… இல்லை இல்லை நாளை…’ என ஒவ்வொரு நாளும் நெருப்பின் மீது அமர்வது போல் தொழிலாளர்களுக்கு அமைந்தது. இப்படியான உளவியல் போராட்டங்களுடனேயே ஆறு நாட்கள் கழிந்தது. அக்டோபர் 7ம் தேதி அதிகாலை –
ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவடி – அம்பத்தூர் பிக்கப் பாயிண்டிலிருந்து முதல் ஷிப்டுக்காக பேருந்தில் ஏறினார்கள். பூந்தமல்லியை தாண்டியதும் அப்பேருந்தை காரில் வந்த ஓய்.சின்னையா, வழிமறித்து நிறுத்தினான். பேருந்தில் ஏறியவன், குறிப்பிட்ட 7 ஒப்பந்தத் தொழிலாளர்களை இறங்குமாறு கட்டளையிட்டான். ‘பணி நிரந்தரமாடா கேட்குது? இன்னிலேந்து உங்களுக்கு வேலையே கிடையாதுடா…’ என கொக்கரித்தான். இத்தகைய கைக்கூலி வேலைக்குத்தான் ஒப்பந்ததாரர்கள் முதலாளிகளிடம் சன்மானம் பெறுகிறார்கள்.
இந்தச் செய்கையால் அதிர்ந்துப் போன நிரந்தர தொழிலாளர்கள், உடனே கைப்பேசி வழியே தோழர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அன்றைய தினம் காலை 11 மணிக்கு தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது ஷிப்டுக்கு வரும் சில ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் கிடைத்தது. இதை தடுக்க ஒரே வழி உள்ளிருப்பு போராட்டம்தான் என முடிவு செய்து, தொழிலாளர்களுக்கு தகவல் அனுப்பிய கையோடு இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்துக்கு தோழர்கள் வந்தார்கள். ‘அனில் டியூப்’ தொழிற்சாலையின் வாசலில், கேட்டுக்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும் நின்று கொண்டார்கள்.
முதல் ஷிப்ட் முடிந்து, இரண்டாவது ஷிப்ட் தொடங்கும்நேரத்தில் 18 தொழிலாளர்களை எதனால் நீக்கினார்கள் என அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து நிர்வாகத்திடம் கேட்பது. உரிய பதில் கிடைக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தொழிலாளர்கள், தோழர்களது வழிகாட்டுதலுடன் முடிவு செய்தார்கள்.
அதன்படியே அக்டோபர் 7 அன்று மதியம் 3 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் நிர்வாகத்தை அணுகி கேட்டார்கள். எதிர்பார்த்தது போலவே சரியாக பதில் சொல்லாமல் நிர்வாகம் அவர்களை அலட்சியப்படுத்தியது.
உடனே மதியம் 3.30 மணிக்கு நிரந்தர தொழிலாளர்களும், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மொத்தம் 100 தொழிலாளர்கள். முதல் ஷிப்ட் முடிந்து வெளியேறுபவர்களை தடுத்தும், இரண்டாவது ஷிப்டுக்கு வரும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதிக்காமலும் வழிமறித்து அமர்ந்து போராட ஆரம்பித்தார்கள்.
இவர்களால் என்ன செய்ய முடியும் என நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்த கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளார்களை அடுத்து சந்தித்தார்கள். ‘இந்தப் போராட்டத்தை நாங்கள் எங்களுக்காக நடத்தவில்லை. உங்களுக்காகத்தான் நடத்துகிறோம். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க வேண்டுமென்றுத்தான் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்கள்.
ஆண் ஒப்பந்தத் தொழிலாளார்கள் கூடிப் பேசி முடிவு எடுப்பதற்குள் –
கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் யோசிக்காமல் வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.இதைப் பார்த்த ஆண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தைரியம் பிறந்தது. அவர்களும் வந்து கலந்துக் கொண்டார்கள்.
‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறப்படும் பெண்ணினத்தை சேர்ந்த அந்த தொழிலாளிகள் கேட்ட மாத்திரத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வேலை நிறுத்தத்தில் உடன் கலந்து கொண்டார்கள். பெண் தொழிலாளர்களின் அந்த உறுதி சற்றே ஊசலாட்டத்தில் இருந்த சில ஆண் தொழிலாளிகளை திருத்தியிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.
ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரிந்தவர்கள், விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேசினார்கள். நிலமையை புரிய வைத்தார்கள். இதனையடுத்து அவர்களும் வந்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.
இப்போது நிர்வாகத்தினரையும், 6 கருங்காலிகளையும் தவிர வேறு யாருமே தொழிற்சாலைக்குள் இல்லை. இப்படியொரு மாற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத நிர்வாகம், உள்ளூர் காவலர்களையும், ஊராட்சி மன்றத் தலைவரையும் அழைத்தது.
இப்படி அழைப்பார்கள் என முன்பே தோழர்கள் தொழிலாளார்களிடம் சொல்லியிருந்தார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தொழிலாளர்கள் – அவர்களில் சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் – தங்கள் கைப்பேசி வழியே தலைவரை தொடர்பு கொண்டு, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆரம்பத்தில் கைப்பேசியில் நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவர், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களின் உறுதியை புரிந்துக் கொண்டு, இதற்கு மேல், தான் ஏதாவது பேசினால் அவர்களிடமிருந்து அம்பலப்பட்டு விடுவோம் என்பதை புரிந்துக் கொண்டார். எனவே தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்.
இந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களை நிர்வாகம் அழைத்தது. காவல்துறை வாகனத்தில் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பார்வையில், முதலில் தொழிற்சாலைக்கு வெளியே, சிப்காட் வளாகத்தில், நின்றிருந்த பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் தெரிந்தார்கள். காவல்துறையினரின் துணையுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.
ஆனால், ‘தொழிற்சாலைக்கு வெளியில்தான் நாங்கள் நிற்கிறோம். எந்தவிதமான அசம்பாவிதத்திலும் ஈடுபடவில்லை. போராட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. ஒரு முடிவு தெரியும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்’ என அழுத்தம்திருத்தமாக தோழர்கள் சொன்னதையடுத்து போராடும் நிரந்தர தொழிலாளார்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்.
முதலில் அவர்களை தனியாக அழைத்தார். ஆனால், ‘அப்படிச் சென்றால் நீங்களும் விலைபோய்விடுவீர்கள்; போராட்டமும் பிசுபிசுத்துவிடும்’ என அனைத்துத் தொழிலாளார்கள் முன்பும் பேச வேண்டியதை பேசும்படி நிரந்தர தொழிலாளர்கள் கோரினார்கள்.
‘கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். வேண்டிய சலுகைகள் கிடைக்கின்றன. எதற்காக மற்றவர்களுக்காக போராடுகிறீர்கள்’ என சப் இன்ஸ்பெக்டர் நைச்சியமாக பேசியதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பயிற்சியாளர்களோ, ஒப்பந்தத் தொழிலாளர்களோ அவர்களும் எங்களைப் போன்று உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறவர்கள்தான். எனவே அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். எங்களைப் போலவே அவர்களுக்கும் சம்பள உயர்வும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என உறுதியாக நின்றார்கள்.
வேறு வழியின்றி தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டு சப் இன்ஸ்பெக்டரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சென்றார்கள்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. நிர்வாகம் நேரடியாக பேச்சு வார்த்தைக்கு வரவேயில்லை. அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவும் இல்லை.
இரவு மணி 8. மதிய உணவுக்குப் பின், தொழிலாளர்கள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களுக்கு எந்த சாப்பாட்டையும், ஒரு கோப்பை தேநீரையும் நிர்வாகம் வழங்கவில்லை.
செய்தி கேள்விப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களின் நண்பர்கள் தொழிற்சாலைக்கு வந்தார்கள். அவர்களிடம் தோழர்கள், அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும், அவர்கள் நீண்ட நேரமாக எதுவும் சாப்பிடாமல் இருப்பது குறித்தும் சொல்லிவிட்டு, இரவு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள்.
மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டவர்கள், அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். உள்ளூர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அடுப்பை பற்ற வைத்தார்கள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான இரவு உணவு, அடுத்த ஒரு மணிநேரத்தில் வந்து இறங்கியது.
ஆனால், அந்த சாப்பாட்டை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செக்யூரிட்டிகளைக் கொண்டு தடுத்ததுடன், கோபம் தலைக்கேற காஞ்சிபுர மாவட்ட டிஎஸ்பியை தொடர்புக் கொண்டது.
நள்ளிரவு 11 மணிக்கு தனது பரிவாரங்களுடன் வந்திறங்கிய டிஎஸ்பி, வழக்கம் போல் அடித்து விரட்டுவதில் ஆர்வம் காட்டினார். ‘பசியுடன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்த உணவுப் பொட்டலங்கள் இதோ இருக்கின்றன. நிர்வாகம், இதை அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. எந்தத் தொழிலாளியாவது மயக்கம் போட்டு விழுந்தால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு’ என்று தோழர்கள் அழுத்தமாக சொன்னார்கள்.
விபரீதத்தை புரிந்துக் கொண்ட டிஎஸ்பி, நிர்வாகத்துடன் பேசுவதற்காக உள்ளே சென்றார். அதற்குள் உணவுப் பொட்டலங்கள் தொழிலாளார்கள் மூலம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
நிர்வாகத்துடன் பேசிவிட்டு வந்த டிஎஸ்பி, முன்னணியில் இருக்கும் 6 தொழிலாளர்களை கைது செய்யப் போவதாக அறிவித்தார். என்ன செய்வதென்று தொழிலாளர்கள் கேட்க ‘இது சட்ட ஒழுங்கு பிரச்னையில்லை. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நடக்கும் பிரச்னை. எனவே கைது செய்ய காவல்துறைக்கு உரிமையில்லை. அப்படியே கைது செய்வதாக இருந்தால், அனைத்து தொழிலாளர்களும் கைதாகும்படி’ வழிகாட்டப்பட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத டிஎஸ்பி, பின்வாங்கினார். அத்துடன் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் தொழிலாளர்களையாவது கட்டாயம் வீட்டுக்கு செல்லும்படி கெஞ்சினார். ஆனால், பெண் தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்தனர். போராட்டத்தின் முடிவு தெரியும் வரை, நகர மாட்டோம் என உறுதியுடன் நின்றார்கள்.
இருப்பினும் பெண் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்வதுதான் சரி என்றும், மறுநாள் காலையில் வந்து அவர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்று பெண் தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
அடுத்ததாக தோழர்களிடம் வந்த டிஎஸ்பி, ‘இரவு முழுக்க நீங்கள் இங்கே இருந்தால் எனக்குத்தான் பிரச்னை. தயவுசெய்து கலைந்துச் செல்லுங்கள். இந்த சிப்காட் வளாகம் தனியாருக்கு சொந்தமானது. அவர்களுக்கெல்லாம் நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்’ என மன்றாடினார். ‘போராட்டத்தின் முடிவு தெரியாமல் நகர மாட்டோம். போராடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. அவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை’ என தெளிவாக சொல்லிவிட்டு தோழர்கள் நகர மறுத்தார்கள். வேறு வழியின்றி டிஎஸ்பி தன் பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார்.
இதன் பிறகும் நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அத்துடன் இரவு முழுக்க கருங்காலிகளும், உள்ளூர் மேலாளர்களும் வெளியே வந்து அடிக்கடி பார்த்துவிட்டும், தொழிலாளர்களை நோக்கி ‘சவுண்டு’ விட்டுவிட்டும் சென்றனர். கொரிய நாட்டைச் சேர்ந்த மைக் பார்க் உட்பட எந்த டைரக்டரும் வெளியே வரவில்லை. தங்கள் இருப்பிடத்துக்கும் அவர்கள் செல்லவில்லை.
அக்டோபர் 7ம் தேதி இரவு முழுக்க அனைத்துத் தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் உறுதியுடன் நின்றார்கள். மறுநாள் பொழுதுவிடிந்தது. முதல் ஷிப்டுக்கான வேலை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அமர்ந்திருந்த இடத்தை விட்டு எந்தத் தொழிலாளியும் எழுந்திருக்கவில்லை.
வேனில் வந்த ஆண் – பெண் தொழிலாளார்களும் வாகனத்தை விட்டு இறங்கவில்லை.
உடனே, ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரியும் யூடிஎஸ் என்ற உள்ளூர் ஒப்பந்தத்தாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ‘அனில் டியூப்’ நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்களை வைத்து உற்பத்தியை தொடங்க ‘அனில் டியூப்’ நிறுவனம் திட்டமிட்டது. தொழிலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளை நிறுத்தும் வழக்கமான தந்திரம்தான்.
ஆனால், இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. வந்தவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்காததுடன், யூடிஎஸ் ஒப்பந்ததாரரை சந்தித்து, ‘நாளையே உங்களுக்கு கீழ் இயங்கும் தொழிலாளர்கள் போராடும்போது அவர்களுக்கு பதிலாக எங்களை ஹுண்டாயில் வேலை செய்ய இறக்கினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?’ என்று தொழிலாளிகள் கேட்டார்கள். போராட்டத்தின் நியாயத்தை யூடிஎஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணர்ந்தார்கள். அவர்களும் வேலை செய்ய மறுத்தார்கள். மீண்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.
இதற்குப் பிறகுதான் மைக் பார்க், தனது அறையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு பின்னால் வந்த உள்ளூர் மேலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம். காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘லத்தி சார்ஜ்’ நடத்தலாம் என ஆலோசனை வழங்கினார்கள்.
ஆனால், இதற்கு மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தனது பதவிக்கு ஆபத்து என்பதை புரிந்துக் கொண்ட மைக் பார்க், தொழிலாளர்களிடம் வந்து, ‘உங்களுக்கு என்ன பிரச்னை? உங்கள் கோரிக்கை என்ன?’ என்று கேட்டான்.
முந்தைய நாள் மதியம் முதல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்போது வந்து ‘என்ன கோரிக்கை?’ என்று கேட்கிறான்!
அனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளை உரத்து சொன்னார்கள். ‘எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். போய் வேலையைப் பாருங்கள்’ என்றான். வாய்மொழி உத்தரவு வேண்டாம். முறைப்படி எழுதிக் கொடுங்கள் என தொழிலாளிகள் ஆணையிட்டார்கள்.
உள்ளே சென்று தன் ஆட்களுடன் பேசினான். பிறகு வெளியே வந்து தொழிலாளர்களிடம் பேசினான். இப்படியாக இந்த ‘உள்ளே வெளியே’ விளையாட்டு ஐந்தாறு முறை தொடர்ந்த பிறகு எழுத்துப் பூர்வமாக தர சம்மதித்தான்.
இப்போது கூட தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய அவனது ஈகோ தடுத்தது. எனவே கையெழுத்திட்ட அறிக்கையை நோட்டீஸ் போர்டில் ஓட்ட சம்மதித்தான்.
போராடிய தொழிலாளர்கள் 3 கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
1. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான ஊழிய உயர்வும், சலுகைகளும் நிரந்தர தொழிலாளர்களுக்கு தருவது போலவே வழங்க வேண்டும்.
2. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஓய்.சின்னையா என்ற ஒப்பந்தத்தாரரின் கீழ் வரும் 18 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும்.
3. உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது.
இந்த கோரிக்கைகளில் 2 மற்றும் 3 ஐ ஏற்க நிர்வாகம் சம்மதித்தது. முதல் கோரிக்கையை மட்டும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்கள்.
தொழிலாளர்கள் இதற்கு சம்மதித்தார்கள். முதலில் மைக் பார்க் எழுதிய நகலில் உரிய திருத்தங்களை செய்து தொழிலாளர்கள் கொடுத்தார்கள். அதை நிர்வாகம் ஏற்றது.
தோழர்கள் செய்த திருத்தங்களை, வார்த்தைகளை மைக் பார்க் அப்படியே ஏற்றான். கூடவே இரண்டு ஷிப்டுகளில் நடக்காத உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.
இதனையடுத்து தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெற்றி பெற்றது.
மைக் பார்க் கையெழுத்திட்ட காகிதம் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு அதன் நகல் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
__________________________________________________
அட்டைப் பூச்சியைப் போல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறியும் மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால், வர்க்க உணர்வுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் சாம்ராஜ்ஜியங்களில் தொழிற்சங்கம் கட்டுவது என்பது எளிதான விஷயமல்ல. விரல்விட்டு எண்ணக் கூடிய தொழிலாளர்களை மட்டும் நிரந்தரமாக்கிவிட்டு மற்றவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்தால் தொழிலாளர்கள் பிளவுபடுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளார்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.
‘அனில் டியூப்’ தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், இது தப்புக் கணக்கு என காட்டியிருக்கிறார்கள். நிரந்தரமோ, பயிற்சியாளனோ, ஒப்பந்தமோ அனைவருமே தொழிலாளர்கள்தான் என்பதை தங்கள் வர்க்க ஒற்றுமை மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
இவர்களது போராட்டம் வெற்றி பெற்றிருப்பது ஒர் ஆரம்பம்தான். ஸ்ரீபெரும்புத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதிக்கு இடையிலுள்ள எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இத்தகைய அடக்குமுறை சூழலில்தான் பணிபுரிகிறார்கள். ஃபாக்ஸ்கான் ஆலையில் சி.ஐ.டி.யு உதவியுடன் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.
இனி அப்படி நடக்காது என்பதை இருங்காட்டுக் கோட்டையில் முளைத்த இந்தச் செடி உணர்த்தியிருக்கிறது.
புஜதொமு வழிகாட்டுதலில் போராடிய ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இந்த வெற்றி, வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் வெற்றிக்கான ஆரம்பம் இது.
வெள்ளேந்தியாக எல்லா அடிமைத்தனங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த அந்த தொழிலாளிகள் இந்த போராட்ட அனுபவத்தோடு தங்களது வர்க்க ஆயுதங்களை கண்டுபடித்திருக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் முன் கொரியா முதலாளி என்ன, அமெரிக்க முதலாளியும் கூட பெரியவிசயமில்லைதான்.
தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!
________________________________
– வினவு செய்தியாளர், சென்னை
________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
- முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!
- ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!
- சென்னையில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !
- முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை-சூன்யம்
பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!…
பிரித்து வைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணியது நிர்வாகம்: தேசிய-பாலின-ஊதிய வேறுபாடுகள் தாண்டி ‘நாங்கள் தொழிலாளிகள்’ என வர்க்க ஒற்றுமையுடன் பதிலடி கொடுத்தனர் தொழிலாளர்கள்…
🙂
வாழ்த்துகள் வினவு..
[…] This post was mentioned on Twitter by வினவு, yathirigan, Kirubakaran S, shunmugam M, sandanamullai and others. sandanamullai said: பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்! http://j.mp/9ljot6 #vinavu […]
சூப்பர்… தோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்லது. முதல் கோரிக்கையும் நிறைவேறியிருந்தால் … இன்னும் நன்றாய் இருந்திருக்கும். வாழ்த்துக்கள்…!
தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வணக்கங்கள்!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்குக.
தோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தனது மேலதிகாரிகளுக்கு இந்தியர்கள் காட்டும் விசுவாசம் மிக பிரமிக்கவைக்கக் கூடியது. கூனிக் குறுகி கூழைக் கும்பிடு போடுவதென்றால் அதுவே நமது பண்பாடும் கூட! அப்படியே பழக்கப் பட்டுவிட்டோம். அந்த வகையில் கருங்காலிகள் இருக்கத்தான் செய்வார்கள். நண்பன் ஒருவனுக்கு வர இருந்த பணிநிரந்தர ஆணையை தடை செய்து முட்டுக்கட்டையாக இருந்ததும் இதுபோன்ற நம்மூர் கருங்காலி ஒருவன் என நண்பன் சொன்னது தான் இதைப் படிக்கும் போது நினைவில் எழுகிறது. நல்லபகிர்வு.
happy to hear this news, tholilaalar otrumai onguga,
இந்த உணர்ச்சிகரமான போராட்ட அனுபவத்தை எமக்குத் தந்த வினவுக்கு பாராட்டுக்கள்!
இப்போராட்டத்திற்கு வழிகாட்டி களத்தில் நின்ற தோழர்களுக்கும், வர்க்க ஒற்றுமையுடன் போராடி, ஏனைய நிறுவனங்களில் மறுகாலனிய ஒடுக்குமுறையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகளுக்கும் வழிகாட்டிய அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உளமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வர்க்க ஒற்றுமையின் அவசியத்தை, அதன் உன்னதத்தை நேரடி அனுபவமாக நமக்குத் தந்திருக்கிறது, இப்போராட்டம்.
மறுகாலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அனைத்தும் வெல்லட்டும்!
தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்! 🙂
அலைமோதும் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தையில்லை.. ஓங்கட்டும் தொழிலாளர்கள் ஒற்றுமை.. வெல்லட்டும் அவர்கள் போராட்டம். போராடும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்…!
போராட்டம்-வெற்றி என்பது திரைப்படத்தில் கதாநாயகன் மட்டுமே சாத்தியம் என்பதை மாற்றி போராட்டத்தின் வெற்றி திரைக்கதையை வெளியிட்ட வினவுக்கு நன்றி! இது போராட்டத்தில் வெற்றி பெறும் காலம் இல்லை என்ற போதிலும், இவ்வெற்றியை சாத்தியமாக்கிய “கதாநாயர்களான தொழிலாளர்களுக்கு” எம் வாழ்த்துகள்! ஒரே நாளில் வெற்றியை சாதித்து விட முடியாது என்பதனையும், படிப்படியான அணுகுமுறையும், வர்க்க ஒற்றுமையும் இதை சாதித்துள்ளது!
பூசணிக்காயை விட பச்சை மிளகாய் காரமானதுதான்
வாழ்த்துகள்.
தோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வினவுக்கு நன்றி.
///உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.///
தொழிற்சங்கம் என்றாலே வேலை செய்யாமல் ஏமாற்றி சம்பளம் வாங்குவதற்கு தான் என்னும் அரைவேக்காடுகளின் கருத்துக்கு தொழிலாளர்கள் பதிலளித்துள்ளனர்.
///இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.///
///ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.///
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
பணம் வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கமுடியாது. அப்படிப்பட்ட மக்கள் போட்ட ஓட்டினால் தான் அரசியல் வியாபாரிகள் மக்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைக்கத்தான் செய்வார்கள்.
தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!
ulamaarndha vazthukkal………. thozhilalar ottrumai veeriyamadayattum……….. thannalam meethu ulla bayam saarathu thoal kodutha nirandara thozhilalar-ku sevvanakkam…………
Congrats ! Greetings to Pu ja tho mu. Greetings to employees of Hanil lear.
A true leader is who leads by example. NDLF IS LEADING THE JOURNEY FOR A REVOLUTION.
*********
Let’s build working class unity cutting across party lines.
*********
CONGRATS
KKR
__ _ __ __ __
தோழர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் வணக்கங்கள்!
தொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் எதிர் கொண்டு சாதித்திருக்கும் இப்போராட்ட முறை அனுபவத்தை படித்தவுடன் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவூட்டுவதாக இருந்தது. தனக்கு தனக்கு என்று சிந்திப்பதே ‘மனிதம்’ என்ற முதலாளித்துவ தலைகீழ் பார்வையை நேர்படுத்தி சக மனிதனுக்காக போராடுவதுதான் மனிதத்தின் சாரம் என்பதை உணர்த்தியிருக்கிறது தொழிலாளி வர்க்கம்.
இந்த போராட்டம் எந்திரன் படம் மாதிரியே …ஒரே சவுண்டு… ஆனா ஒரு சரக்கும் இல்லை 🙂
அணில் டியூப் கம்பனியை இழுத்து மூடிட்டு புனேயுக்கோ இல்லேன்னா வேறே எங்கேயோ போய்ட்டாங்கன்ன
எல்லாரும் காத்து தான் குடிக்கணும்…
did it happen in chennai ? wow. Vinavu Thozars must have participated in any of this activity right ? did they ? atleast for raising awareness ? or talking to concern end users and all ?
வாழ்த்துக்கள்
உங்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். பு.ஜ.தொ.மு, சி.ஐ.டி.யு மற்றும் அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களும்(ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லாமல்) ஒன்று சேர்ந்தால் இது போன்ற பல வெற்றிகள் அடைய வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. இடதுசாரிகளின் ஒற்றுமைதான் அவர்களை வளர்க்கும். அப்போது தான் திமுக, பாமக, கேப்டன், ஜெயலலிதா என்று பிரிந்து பலமிழந்து நிற்கும் தொழிலாளர்களையும் பெரும் கூட்டம் கூட்டமாய் வென்று இணைக்கமுடியும்.
///ஒன்று சேர்ந்தால்///
🙁 🙁
நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில்.. இந்த வெற்றி தொழிலாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் அருமையான வெற்றி. ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமே இல்லை என்பதை போராட்டம் நீரூபித்திருக்கிறது. போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்தை நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள்.
//அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.//
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்கிற உவமை தவறு என கருதுகிறேன். நிரந்தர தொழிலாளிக்கு கொடுக்கப்படும் சம்பளம் மலையெல்லாம் கிடையாது.
தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?
ஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்…போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது. தொடர..
குருத்து தளத்திலிருந்து
http://socratesjr2007.blogspot.com/2010/10/blog-post_26.html
வட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும்! கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளும்!
பூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி, கடுமையான அடிபட்டதாய் தகவல் வந்தது.
ஒரு தொழிலாளிக்கு கொஞ்சம் பெரியதாக அடிபட்டால் இ.எஸ்.ஐ. அலுவலகத்திற்கு இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் காய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவருக்கு சேர வேண்டிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்குரிய விண்ணப்பத்தை எடுத்து கொண்டு தொழிற்சாலைக்கு சென்றேன். அடிபட்ட தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அடிபட்டவர் ஒரு வட மாநில தொழிலாளி. அவரைப் பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது தான் அடிபட்டதாக உடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் சாட்சி கையெழுத்திடவேண்டும். அதற்காக இரண்டு தொழிலாளர்களை வரச் சொன்னேன். வந்தவர்கள் கையெழுத்திட சொன்னால்… ஒரு தொழிலாளிக்கு இரண்டு விரல்கள் இல்லை. இன்னொரு தொழிலாளிக்கு ஐந்து விரல்களுமே இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இருவருக்கும் வயது 25ஐ தாண்டாது. ஒரு தொழிலாளிக்கு உழைப்புக்கு அடிப்படையானது கைகள் தானே! கைகளே போய்விட்டால்…இனி வாழும் காலத்தில் இவர்கள் என்ன வேலை செய்து வாழ்க்கையை தொடர்வார்கள். விசாரித்ததில் இரு விபத்துகளுமே 8 மாத இடைவெளியில் நடைபெற்றவை தான் என்றார்கள்.
தொடர….
http://socratesjr2007.blogspot.com/2010/10/blog-post_27.html
வாழ்த்துகள் பு.ஜ.தொ.மு & வாழ்த்துகள் வினவு..
மூன்று கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கைக்காகத்தான் போராட்டமே நடந்தது. அந்த கோரிக்கையை முழுமையாக வலியுறுத்தாமல், போராட்டத்தின் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்களுக்கு திரும்ப வேலை பெற வகை செய்ததும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்க கூடாது என்ற மூன்றாவது கோரிக்கையை முதலாளி சம்மதித்ததும் வெற்றியே அல்ல. போராட்டத்திற்கு பதிலாக அவர்கள் வேலை செய்திருந்தால் கூட இரண்டு மற்றும் மூன்றாவது கோரிக்கைகளின் தேவையே வந்திருக்காது சம்பளமும் கிடைத்திருக்கும். இந்த போராட்டத்தில் நிச்சயமாக முதல் கோரிக்கையில் ஏதேனும் சலுகைகள் அல்லது உறுதிமொழி கிடைத்திருந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டிருக்கவேண்டும். போராட்டத்தில் சிறிதளவேனும் வெற்றி என்று கொண்டாட முடியும். இந்த போராட்டம், புலிவாலை பிடித்த கதையாகிவிட்டது. போராட்டம் ஆரம்பித்த பிறகு அதில் முக்கிய கோரிக்கையில் உறுதி குறைந்து, எங்களை பழிவாங்கக்கூடாது என்பதும், வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதும், பாய்ந்த பிறகு பம்முவதாகவே தெரிகின்றது.
இதில் ஒரே ஒரு நன்மை மட்டுமே உள்ளது. இந்த முதலாளிகளுக்கு, தொழிலாளர்களால் ஒன்றுபட்டு போராடவும் முடியும் என்று உணர்த்தியது மட்டுமே. இதற்கு விலை அவர்களின் இரண்டு நாள் சம்பளம்.