privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

-

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்

மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும்  அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.

முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு –  வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களின் அனுபவம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் எஜமானி தனது காலணியின் கூர்மையான அடிப்பகுதியை முதுகில் உதைத்ததை எதிர் கொண்ட வீணாவாக இருக்கலாம், அல்லது வேலைக்கு வைத்திருந்த நர்சினால் மார்பில் சூடு போடப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 15 வயது சோபனாவாக இருக்கலாம் அல்லது ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்தரங்க உறுப்புகள் பல முறை உருளைக் கட்டையால் தாக்கப்பட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஹசீனாவாக இருக்கலாம்.

“இந்தியாவில் 9 கோடி வீட்டு வேலை செய்பவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. புது தில்லியில் இருக்கும் சுமார் 2,300 ஏஜன்சிகளில் 269 மட்டுமே பதிவு செய்யப்பட்டவை”

இப்போது நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. (சென்ற மாதம் விடுமுறைக்கு சென்ற தம்பதியர் அவர்களது வீட்டில் வேலை செய்யும் 13 வயது ஜார்கண்ட் சிறுமியை மிகவும் சொற்பமான உணவுப் பொருட்களுடன் வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போன செய்தி வெளியானது). ஆனால், உண்மையில் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் (பட்டியலைப் பார்க்கவும்) வீட்டு உதவியாளர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

உடல்ரீதியாக வன்முறைக்குள்ளானவர்கள்

1. 2004 கல்கத்தாவின் கோல்பார்க் ஹோம்சில் உதவியாளராக வேலை செய்த 14 வயது சிறுமி தூக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் இருந்தும் போலிசு அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது.

2. ஜூன் 2009 நடிகர் ஷைனி அஹூஜா அவனது வீட்டு உதவியாளரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2011 இல் பிணை வழங்கப்பட்டது.

3. ஆகஸ்ட் 2009  நடிகர் ஊர்வசி தனோர்கரிடம் வேலை செய்யும் 10 வயது சிறுவன் கைகளில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் கீறல்களுடனும் மீட்கப்பட்டார்.

4. செப்டம்பர் 2011  ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூலில் 12 வயது சிறுமி எஜமானரின் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன.

5. டிசம்பர் 2011, 15000 ரூபாய் கடனைத் திருப்பித் தராத தனது வீட்டு உதவியாளரை எரித்ததாக உறுதி செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

6. மார்ச் 2012, ஒரு இந்திய வீட்டு உதவியாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றார். அவரது முன்னாள் எஜமானர்கள் நீனா மல்ஹோத்ரா என்ற ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தியதாகவும், அடிமை போல நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவருக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்கப்பட்டது.

7. மார்ச் 2012 தில்லியின் துவாரகாவிலிருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள். அவரது எஜமானர்கள் மருத்துவர்கள் சஞ்சய், சுனிதா வர்மா தம்பதியினர் தாய்லாந்துக்கு விடுமுறைக்குப் போகும்போது அவளை வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போனார்கள். அவள் உடல் முழுவதும் கிள்ளியது உள்ளிட்ட காயங்களுடன் காணப்பட்டாள். அவள் இரண்டு சப்பாத்தியும், உப்பும் கொண்ட உணவில் உயிர் பிழைத்திருந்திருக்கிறாள்.

8. ஏப்ரல் 2012 பீகாரைச் சேர்ந்த பதின்ம வயது வீட்டுத் தொழிலாளரை எஜமானர்களின் மகன்கள் நதீமாலும் பர்தீனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளி வந்தது. அந்தச் சிறுமியின் கைகளில் சூட்டுக் காயங்கள் இருந்தன. பர்தீன் கைது செய்யப்பட்டான்.

இந்த அப்பட்டமான கொடூரம் எங்கிருந்து உருவானது? நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு சந்தையில் தொழிலாளர்கள் நிறையக் கிடைப்பதும், அவர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதும்தான் காரணமா? மோசமான, கிட்டத்தட்ட இல்லவே இல்லாத குற்ற நிரூபண விகிதம், பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்ற நிலைமை இவைதான் நகரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இந்தக் கொடூர குணத்தை வளர்த்திருக்கிறதா? (இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. முன்பு குறிப்பிட்ட மருத்துவ தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போதே அவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள 75,000 ரூபாய் கொடுப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்).

புதிய பணக்காரர்கள் ஆகியிருக்கும், ஏழைகளை மனிதர்களாகவே மதிக்காத நடுத்தர வர்க்கத்திற்கு இது சிறப்பாகப் பொருந்துகிறது. உண்மையில் “ஒருவரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஏதோ சமூக சேவை செய்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் மத்தியில் நிறைய தார்மீக ஆவேசமும், கோபமும் இருக்கிறது” என்று பல பெண்களை மீட்பதற்கு உதவி செய்த சமூக ஆர்வலர் ரிஷி காந்த் சொல்கிறார். “’ஏன் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறீர்கள்..  குறைந்த பட்சம் இங்கு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம்’ என்று சில வீடுகளில் எஜமானர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…..” “இந்தக் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கி, பழைய உடைகளையும், மீந்து போன உணவையும் கொடுப்பதை பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்கிறார் இன்னொரு ஆர்வலர் ராகேஷ் செங்கர்.

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
நமிதா ஹல்தார். நமிதா வேலை செய்யும் பத்துப் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை என்பது இந்தியாவின் வளரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இருந்தும் அவர் தன்னை அதிர்ஷ்டக்காரராகவே கருதிக்கொள்ள வேண்டும். இன்னும் பலருக்கு அவமதிப்புகள் உடல் ரீதியான கொடுமைகள் வரை நீள்கின்றன.

சமீபத்தில் வெளியான நிகழ்வுகளையும், அது பற்றிய கொதிப்புகளையும் (குறைந்தபட்சம் ஊடகங்களில்) தொடர்ந்து இந்த உறவை நவீன எஜமானருக்கும் அடிமைக்குமான உறவாகப் பலர் சித்தரிக்கிறார்கள். இது மிகச் சிறிய பரிமாற்றங்களில் கூட பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கொல்கத்தாவின் நமீதா ஹல்தார் பல வீடுகளில் வேலை பார்த்தாலும் ஒரு வீட்டில் கூட கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. “அவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு நமக்குத் தோன்றாததற்குக் காரணம் நமது ஆழ் மனதில் அவர்களை மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறோம் என்பதுதான். பணம் கொடுப்பதாலேயே கடைசி பைசா வரை தமது பணத்தின் மதிப்பைக் கறந்து விட வேண்டும் என்று வேலைக்கு வைப்பவர்கள் நினைக்கிறார்கள்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பரிசித்தி அமைப்பின் காகுலி தேப் சொல்கிறார்.

நாடு முழுவதிலும் இருக்கும் 9 கோடி வீட்டு உதவியாளர்களில் பெரும்பகுதியினர் வறிய பகுதிகளான ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிருந்து வருகின்றனர். நகர்ப்புற வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், நகர வாசிகளின் அவசர வாழ்க்கையை வசதியாக்கவும் இந்தத் தொழிலாளர்களில் பலர் பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் 2010 ஆம் ஆண்டும் 2011 ஆ ம் ஆண்டும் 8,000 சிறுமிகள் தொலைந்து போனதாகப் பதிவாகியிருக்கின்றது. வேறு புகல் இல்லாத பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் கே. மிஷ்ரா. அவர் மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார். “அவர்கள் எளிமையானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஆதரவும் இல்லாதவர்கள். அதனால் நடக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பதிவாகாமலேயே போய் விடுகின்றன”. சிறுமிகளை ஏஜென்சிகள் எங்கு கொண்டு செல்கின்றன என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்தப் பெரிய சந்தையில் தெளிவற்ற அடையாளத்துடன் கொழுக்கும் பல ‘ஆள் சேர்ப்பு ஏஜென்சிகள்’ செயல்படுகின்றன (தில்லியில் மட்டும் சுமார் 2,300). எஜமானர்கள் வேலைக்கு ஆள் தேட இந்த ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு, பெரும்பாலும் மாதச் சம்பளத்தையும் தொழிலாளருக்குக் கொடுக்காமல் ஏஜென்சியிடம் கொடுக்கின்றனர்.

குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதைப் பற்றிய உறுத்தல் இருந்தாலும் பலர் இன்றும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் கரியாகாத் பகுதியில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் முகுல் தாஸ் “வீட்டு வேலை செய்யும் சிறுமிகள்” கூடுதல் பணிவுடன் இருக்கிறார்கள் என்கிறார். அவரது வீட்டில் கடைசியாக வேலை செய்த 8 வயது ஷெபாலி கழுவுவது, பெருக்குவது, சமைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து விட்டு, தரையில் படுத்து உறங்கி விடுவாள். அது நிச்சயமாக லாபகரமான ஒப்பந்தம்தான். சென்ற ஆண்டு தில்லியின் நடுத்தர வர்க்க வீடுகளிலிருந்து 116 ‘தொழிலாளர்கள்’ மீட்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 18 வயதுக்கு அதிகமானவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடத்தப்பட்ட சர்வேயில் 5-14 வயதுடைய சிறுமிகள் கிட்டத்தட்ட 60,000 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தது.

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
18 வயதே ஆகும் சாந்தினி. அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்பத் திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஒரு ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவள் செய்த பல ஆண்டு வேலைக்கு ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை

இந்தியா முழுவதிலும் 1.26 கோடி சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களில் 86% சிறுமிகள், 25% பேர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 14 வயதை விட குறைவானவர்கள்.

‘குறைந்த பட்சம் இந்த குழந்தைகளுக்கு உணவும் உடையும் கிடைக்கிறது. விபச்சார விடுதியில் போய்ச் சேராமல் போனது அவர்கள் அதிர்ஷ்டம்’ என்ற வழக்கமான நியாயப்படுத்தல் நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கின்றது.  ஆனால், அவர்கள் எஜமானர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது 18 வயதாகும் சாந்தினி அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்ப திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். தனது துன்பங்களை நினைவு கூரும் அவள், தனது வீட்டுக்கு உதவி கேட்டு அழைக்கக் கூட முடியவில்லை என்கிறாள். “அவர்கள் வெளியில் போகும் வீட்டுத் தொலைபேசியை பூட்டி விட்டுதான் போவார்கள். என்னைச் செருப்பால் அடிப்பார்கள். நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்கவில்லை” என்கிறாள் அவள். அவளது பிரச்சனையைப் பற்றி விபரம் சேகரிக்க வந்த தில்லி பத்திரிகையாளர் மாதுரி சிங் இப்போது அவளை வேலைக்கு வைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சிறுமிகளைச் சுரண்டுவதற்கு காரணம் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாமல் இருப்பதே ஆகும் என்று அவர் கருதுகிறார். “அதிகார மட்டங்களில் தங்களது சொல்தான் எடுபடும் என்று எஜமானர்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்களின் பேச்சு எடுபடாது.”

கொடுமை என்னவென்றால் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வீட்டு உதவியாளர்களைத் துன்புறுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. தேசிய வீட்டுத் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஆந்திரப் பிரிவு தலைவர் அத்தகைய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஹைதரபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற டிஐஜியின் வீட்டில் இரண்டு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 14 வயதும் 15 வயதுமான அந்தச் சிறுமிகள் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஒருமுறை அந்தக் குழந்தை நீச்சல் குளத்துக்கு அருகில் போய் விட்டதைத் தொடர்ந்து, தண்டிக்கும் விதமாக அந்தச் சிறுமிகளைக் கழுத்தளவு தண்ணீரீல் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நிற்க வைத்தார் டிஐஜி. “அந்தக் குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து போன போது, அந்தச் சிறுமிகள் நகைகளைத் திருடி விட்டதாக அவர் போலி வழக்கு பதிவு செய்தார். விசாரணையின் போது அந்தச் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.”

 

இந்திய-வீட்டுப்-பணியாளர்கள்
ராஞ்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மணிரூபா என்ற சிறுமி தில்லியில் பல கொடுமைகளை அனுபவித்தாள். பின்னர் ஒரு தன்னார்வக் குழுவால் மீட்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டாள்

வீட்டுத் தொழிலாளர் சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஏஜென்சிகள் தொழிலாளர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது. அதன் மூலம் சுரண்டல் எளிதாகி விடுகின்றது. “ஒவ்வொரு ஏஜென்சியும் தான் சேர்த்து விடும் வீட்டு உதவியாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதற்கு, அவள் ஒரு ஆட்டுக் குட்டியோ அல்லது அலங்கார பொருளோ அல்ல. நீங்கள் அப்படி ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது ஏதாவது ஒரு இடத்தில் ஏன் பதிவு செய்யப்படக் கூடாது” என்று கேட்கிறார் அமைப்பு சாரா துறைகளின் தொழிலாளர்களுக்கான தேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பட்நாகர்.

வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம் 2008 லேயே தயாராக இருந்தாலும் அது இன்னமும் தேசிய பெண்கள் ஆணையத்தில் (NCW) தேங்கிக் கிடக்கிறது. “அது சட்டமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட  காலம் ஆகும். அதிகார மையங்களில் இருக்கும் பலர் வீட்டு உதவியாளர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என்கிறார் தில்லி குழந்தைகள் நல வாழ்வு குழுவின் முன்னாள் தலைவர் பாரதி ஷர்மா.

இது போலவே, மாநிலங்களிலும் சட்டங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, 2007 இல் திமுக அமைச்சரிடம் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கும்படி வலியுறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் முடிவு தள்ளிப் போடப்பட்டு விட்டது. “சென்ற ஆண்டு தொடக்கத்தில்,  தேர்தல்கள் வரும் நேரத்தில் வேலைக்கு வைப்பவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முடிவு தள்ளிப்போடப்பட்டதாக அமைச்சர் என்னிடம் சொன்னார்”. மார்ச்சில் தொழிலாளர் துறைச் செயலரைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் “விசயம் பரிசீலனையில் இருப்பதாக” சொல்லப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு அதற்கே உரிய காலம் பிடிக்கலாம், ஆனால், சுதந்திர இந்தியாவில் நடுத்தர வர்க்க வீடுகளில் சமத்துவமின்மையும், அடக்குமுறையும் நிலவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.

(தனிநபர் நலன்களை பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

____________________________________________________________________________________________

கட்டுரை – படங்கள் – அவுட்லுக், ஆங்கில வார இதழ் ((தேபாஷி தாஸ்குப்தா, தோலா மித்ரா, புஷ்பா ஐயங்கார், மாதவி டாடா, சந்திரானி பானர்ஜி, அம்பா பத்ரா பாக்ஷி)

தமிழாக்கம்: அப்துல்.

__________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: