Sunday, July 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி!

சந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி!

-

ஜனார்தன-ரெட்டி
சுஷ்மா சுவராஜுடன் ரெட்டி சகோதரர்கள்

லஞ்சம் பெற்றுக் கொண்டு பிணை வழங்கிய விவகாரத்தில் ஹைதராபாத் சி.பி.ஐ நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பட்டாபிராம ராவ் கையும் களவுமாகப் பிடிபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கருநாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சட்டவிரோதமான முறையில் இரும்புத் தாதுக்களை தோண்டியெடுத்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனார்த்தன ரெட்டியுடன் அவரது கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ராஜகோபால் மற்றும் சிரீலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சன்ச்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க நீதிபதியை இடைத்தரகர்கள் மூலம் அணுகிய ரெட்டி சகோதரர்கள், பத்து கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பேசிமுடித்து முன் பணமாக மூன்று கோடி ரூபாய்களை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த மே 11-ம் தேதி பிணை கோரிக்கை விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பட்டாபிராம ராவ், ஜனார்த்தன ரெட்டிக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனை ஏற்றுக் கொண்டு பிணை வழங்கியிருக்கிறார். மே 11-ம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது முன்கூட்டியே தயாராக ஐந்து லட்ச ரூபாயுடன் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்துடன் தயாராக காத்திருந்துள்ளார். அதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த சி.பி.ஐ, பிணை வழங்கப்பட்டதன் பின்னணியை விசாரித்துப் பார்த்த போது தான், லஞ்ச விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

தற்போது நீதிபதி பட்டாபிராம ராவ் உடன் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன், ஓய்வு பெற்ற செசன்ஸ் கோர்ட் நீதிபதி சலபதிராவ் மற்றும் அவரது மகன் பாலாஜி, யாதகிரி ராவ் என்கிற ரவுடி மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஜனார்தன-ரெட்டி
ஜனார்தன ரெட்டி

“நாட்ல எது நடந்தாலும் அது சட்டப்படி நடக்கனும்; நீதிமன்றங்கள் என்ன சொல்கிறதோ அதை அரசியல்வாதிகளும் பிறரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று தான் இன்று வரை நீதித்துறையின் புனித வட்டத்திற்கு  சீரியல் செட் மாட்டிக் கொண்டிருந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லி வந்தன. ஆனால் இன்றோ, “ பாவிகளின் பாவங்களைக் கழுவும் கங்கையே பாவப்பட்டு விட்டதே…” காமெடி நடிகர் செந்தில் கணக்காக இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நீதிபதியே இப்படிச் செய்து விட்டால் மக்களுக்கு வேறு போக்கிடம் ஏது என்று ஆங்கில ஊடகங்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றன.

என்னவோ இத்தனை நாட்களும் இந்திய நீதித் துறை யோக்கியமாக இருந்தது போலவும் இந்தச் சம்பவத்தின் மூலம் கறை படிந்து விட்டது போலவும் புலம்பும் இந்த ஊடகங்கள் அழுகி நாறும் நீதித் துறையை ஜாக்கி வைத்துத் தூக்கி நிறுத்த முடியுமா என்று பார்க்கின்றன. ஆனால், நீதித் துறையின் யோக்கியதை என்னவென்பது இதற்கு முன்பே பல்வேறு வழக்குகளில் சந்தி சிரித்துள்ள சம்பவங்கள் நம் கண் முன்னேயே உள்ளன. அது அன்றைய பாபர் மசூதி வழக்கிலாகட்டும்,  நேற்று வெளியான பதனி டோலா படுகொலை வழக்கிலாகட்டும் – எண்ணற்ற வழக்குகளில் நீதி மன்றங்களின் அயோக்கியத் தனங்கள் இதற்கு முன்பும் இரத்த சாட்சியமாய் அம்பலமாகியே இருக்கின்றது.

கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாய் இருந்த சௌமித்ரா சென் என்பவர், பொருளாதார வழக்குகளில் நீதி மன்றத்தால் பிணைத் தொகையாக பிடித்தம் செய்து வைக்கப்பட்ட பணத்தைக் கையாடல் செய்தது, உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரத்தின் அரசுக் கருவூலத்தில்  இருந்த தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரும் அலகபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிலரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்து, பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் பதினைந்து லட்சம் லஞ்சமாகப் பெற்றது என்று நீதித் துறையில் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல்கள் பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றது.

ஆனாலும், நீதிமன்றத்தின் மாண்பு – யோக்கியதை – புனிதம் என்றெல்லாம் சரடு சுத்தி அந்தப் புனித வட்டத்தின் ஒளி மங்கி விடாமல் பார்த்துக் கொள்வதில் ஆளும் வர்க்கத்தின் நலன்கள் அடங்கியிருக்கிறது. கேள்விகளுக்கப்பாற்பட்ட மத நம்பிக்கையைப் போல் நீதித் துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் பக்தி மயக்கம் குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் தான் அநீதிகளுக்கு எதிரான மக்களின் ஆத்திரத்திற்கு உத்திரவாதமான வடிகால் ஒன்றை ஆளும் வர்க்கத்தால் பராமரிக்க முடிகிறது.

எனினும், அவ்வப்போது இவ்வாறு வெளியாகும் ஊழல்களை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த வழக்கையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஜனார்த்தன ரெட்டியின் ஓபுலாபுரம் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம் பல ஆண்டுகளாக பெல்லாரி மாவட்டத்தின் இரும்புத் தாதுக்களை எந்தக் கேள்வி முறையுமின்றி கொள்ளையடித்து வந்துள்ளது. கருநாடக மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியப் பிரமுகரான இவர், அம்மாநில ஆளும் பா.ஜ.க மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவரும் கூட. இவரது சகோதரர்களும் பாரதிய ஜனதா கட்சியில் எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர்.

பட்டாபிராம்-ராவ்
பட்டாபிராம் ராவ்

இந்நிலையில், இரும்புத் தாதுக்களைக் கொள்ளையிட்டுப் பங்கு பிரித்துக் கொள்வதில் ரெட்டிகளுக்கும் பெல்லாரி இரும்புத் தாது ப்ரைவேட் லிமிடெட் (BIOP – Bellary Iron ore Pvt Ltd) எனும் நிறுவனத்துக்கும் ஏற்கனவே தொழில்  போட்டி இருந்துள்ளது. பெல்லாரி மாவட்டத்தில் தோண்டப்படும் இரும்புத் தாதுக்களை அதிகளவில் கொள்முதல் செய்வது ஜிண்டால் எனும் இந்தியத் தரகுக் கார்ப்பரேட் கம்பெனி. இவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும், அந்த முரண்பாட்டினை காங்கிரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பியதும்தான் ஜனார்த்தன் ரெட்டி மேலான வழக்குகளை சி.பி.ஐ இத்தனை தீவிரமாக விசாரிக்கக் காரணம்.

குஜராத் படுகொலை வழக்கோ, புருலியாவில் ஆயுதங்கள் தரையிறக்கப்பட்ட வழக்கோ, இன்னும் எண்ணற்ற ஊழல் வழக்குகளில் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையான சி.பி.ஐ எந்த லட்சணத்தில் விசாரணை நடத்தியது என்பதையும், எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளைத் தப்ப விட்டுள்ளது எனபதும் யாருக்கும் தெரியாத ரகசியங்களல்ல.  முதலாளிகளுக்கு இடையிலான முரண்பாடுகளினால் அவ்வப்போது வெளியாகும் ஊழல்களில், அந்தந்த சமயத்தில் யாருடைய கை ஓங்கியிருக்கிறதோ என்று காங்கிரசு அல்லது பா.ஜ.க மத்திய அரசு சார்பாக விசாரணையை நடத்துவது தான் சி.பி.ஐயின் யோக்கியதை.

எம்.பி, எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், ஐ.ஏ.எஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட எண்ணற்றோரின் மேல் எத்தனையோ ஊழல் முறைகேடு வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் அவையத்தனையையும் ‘சட்டபூர்வமாகவே’ முறியடித்து விட்டுதான் அவர்கள் தங்கள் சேவையைத் தொடர்ந்து வருகிறார்கள். வழக்குகளுக்காக நீதிமன்றத்தை நாடும் சாதாரண மக்களை இழுத்தடிக்கும் அதே நீதிமன்றமும் புலனாய்வு அமைப்புகளும் தான் ஆளும் வர்க்கத்தின் பாதந்தாங்கிகளாக இருக்கின்றன. இந்த உண்மையை மறைக்கத் தான் அவ்வப்போது எதேச்சையாக வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் மேல் எடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகள் பயன்படுகின்றன.

நீதிமன்றங்களும் போலீசு சிறைச்சாலைகள் உள்ளிட்ட இன்னபிற அரசு இயந்திரங்களின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்வதோடு தமக்கான நீதியை இந்த சட்டகத்துக்கு வெளியேதான் போராடிப் பெற வேண்டும் என்று உணர்ந்து கொள்ளும் போது தான் உண்மையான நீதியை நாம் பெற முடியும்.

இறுதியாக இந்த ரெட்டி சகோதரர்களின் கொள்ளைப் பணத்தை வைத்துத்தான் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி. தென்னிந்தியாவின் முதல் இந்து அரசு என்று போற்றப்பட்ட இந்த அரசின் யோக்கியதையை எடியூரப்பாவும், அவரை முன்னிறுத்திய ரெட்டி சகோதரர்களும் பறைசாற்றுகின்றனர். ரெட்டி காருவுக்கு மாளிகை இருக்கிறது, ஹெலிகாப்டர் இருக்கிறது என்பது போல நீதிமன்றத்தையும் அவர் ஒரு பத்து கோடி ரூபாய்க்கு முடித்திருக்கிறார். இத்தகைய தளபதிகளைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தால் காங்கிரசு அரசு செய்யும் பித்தலாட்டங்களை இரண்டு மடங்கு வேகத்தில் செய்யும்.

சாதாரண ஏழை மக்கள் பிணைக்காகவும், அந்த பிணைக்கான குறைந்த பட்ச உத்திரவாதத் தொகை, ரேசன் கார்டுக்காகவும் நாட்கணக்கில் அலையும் போது ஒரு முதலாளி மட்டும் எப்படி பணத்தை வீசி பிணையை மட்டுமல்ல, நீதிபதியையே விலைக்கு வாங்க முடிகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் கோபமாக, நடவடிக்கையாக எழும்வரை ரெட்டி காருக்களின் இந்த பணநாயக ஆட்சிதான் கோலேச்சும். அந்தக் கோலை மக்கள் என்று முறிப்பார்கள்?

____________________________________________________________

– தமிழரசன்

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அப்பப்போ ..தங்கம் விலை மாதிரி…. பங்கு விலை மாதிரி …நீதிபதி ரேட்டை அமேரிக்கா தீர்மானித்தால் ஊழல் நடைபெறாது…..

 2. நீதி துறையை தனியார்மையமாக்கிவிட்டால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும். அமெரிக்காவில் நீதி முறை நன்றாக உள்ளது அதனால் அமெரிக்கவிற்கு இந்திய நீதித்துறையை அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்…ஐ ஜாலி

  • In every state of our country either the CM or his/ her deputies are involved in amassing of Public Funds and the Judges are becoming puppets in their hands..Preent day trend is that the judges have to transfer the cases to the places of choce of the victims/ politicians…very good examples are Jaya CM and Yedyurappa Ex CM…
   Even in the case of Raja 2 G the SC cannot do anything…Now the existence of C & A G of India is being questioned …
   Our present Union Home Minister P. Chidambaram was fund guilty of putting on pressure on Election Commission..
   Bribary and amassing of Public Money is very common in our country with the connivance of Justice an Police..

 3. // கடந்த மே 11-ம் தேதி பிணை கோரிக்கை விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பட்டாபிராம ராவ், ஜனார்த்தன ரெட்டிக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான சொந்த ஜாமீனை ஏற்றுக் கொண்டு பிணை வழங்கியிருக்கிறார். மே 11-ம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது முன்கூட்டியே தயாராக ஐந்து லட்ச ரூபாயுடன் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்துடன் தயாராக காத்திருந்துள்ளார். அதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த சி.பி.ஐ, பிணை வழங்கப்பட்டதன் பின்னணியை விசாரித்துப் பார்த்த போது தான், லஞ்ச விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. //

  சி.பி.ஐ. இந்த மாதிரி எத்தனை ஜாமீன்களைப் பார்த்திருக்குமோ..?!!!

 4. மனிதனுக்கு பிரச்சனையின்னா அந்த நீதிபதிகிட்ட முறையிடலாம். அந்த நீதிபதி(துறை)யே பிரச்சனைன்னா யாருகிட்ட முறையிட முடியும். நீதியை மக்கள் கையிலெடுக்க வேண்டியதுதான்.

  • The day will come for the people to take law in their hands and for doing justice to the affected and poor people and
   to punish the wrong and mischevous politicians…

   • These words seem nice for a movie. But it would turn ugly in reality. I’m not saying these judges are sacrosanct. But when people take law in their own hands, they either go on a killing spree or follow orders from their leader ( and who is to say that the leader will be a just person)?

  • நீதி துறையில் தவறு இருக்கும்பட்சத்தில் அந்த தவறை களைய முனைவது தான் சாமர்த்தியம். மக்கள் கையிலெடுத்தால் அது கலவரத்தில் தான் முடியும்.

   • எப்படி?? அந்த சாமர்த்தியத்தை விளக்கினால் நாங்கள் அளவிலா மகிழ்ச்சியை உய்வோம்!!

 5. //முதலாளிகளுக்கு இடையிலான முரண்பாடுகளினால் அவ்வப்போது வெளியாகும் ஊழல்களில், அந்தந்த சமயத்தில் யாருடைய கை ஓங்கியிருக்கிறதோ என்று காங்கிரசு அல்லது பா.ஜ.க மத்திய அரசு சார்பாக விசாரணையை நடத்துவது தான் சி.பி.ஐயின் யோக்கியதை.//

  மிகச்சரி. ஆனால் மக்களோ மத்தியில் காங்கிரசையும், பிஜேபியையும், இங்கு திருடர் முன்னேற்றக் கழகத்தையும் அடாவடி திருடர் முன்னேற்றக் கழகத்தையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருவதினால் சிபிஐயும் போலிஸும் ‘ஒருபக்க’ சார்பாக விசாரிக்க முடியாமல் கேஸுகளை உளுத்துப் போகவிட வேண்டியதாகிவிடுகிறது!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க