பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.
கொல்கத்தா போராட்டம்
கொல்கத்தாவின் பூங்காதெரு பகுதியில் ஒரு பெண்ணை கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது தாமதமின்றி விசாரணை நடத்தி தண்டிக்கக் கோரி பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் நடந்த வல்லுறவுக் கொலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட வர்மா கமிசனின் பரிந்துரைகளை நீர்த்துப்போக வைத்துவிட்டு,  ஒரு அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்தது. வர்மா கமிசனின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மசோதாவைத் தயாரித்து, அதை நாடாளுமன்றத்தில் விவாதித்துச் சட்டமாக்கி, பின்னர் அரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இச்சட்டத்தை அமலாக்க வேண்டுமென்பதால், இடைக்காலத்தில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக அரசு அறிவித்தது.

இப்படியொரு அவசரச் சட்டம் வந்த பிறகாவது பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மே.வங்கப் பெண் முதல்வரான மம்தா பானர்ஜியோ, மக்கள் தொகையும், கார்களும், சினிமா அரங்குகளும் அதிகரிக்கும்போது, பாலியல் குற்றங்களும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று ‘சமூக அக்கறை’யுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற அமைச்சர்கள் குழு பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவின் மீது மயிர்பிளக்கும் விவாதத்தை நடத்திக் கொண்டிருந்த போதே, தாஜ்மஹாலைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணியான ஜெசிகா டேவிஸ் எனும்  லண்டனைச் சேர்ந்த பெண்ணை, ஆக்ரா நகரில் அவர் தங்கியிருந்த ஓட்டல் முதலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், அப்பெண் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துக் கால்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

டெல்லி மங்கோல்புரி
டெல்லி மங்கோல்புரியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து பகுதி வாழ் உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – போலீசின் அடக்குமுறை ஓய்ந்த பின்னர் காணப்பட்ட போர்க்களம்.

கடந்த மார்ச் 15 அன்று ம.பி.யில் சுற்றுலாப் பயணிகளான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் சைக்கிளில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவில் காட்டுப்பகுதியில்  ஓய்வெடுத்தபோது, அங்கு ஒரு கும்பல் கணவனைத் தாக்கிவிட்டு, அப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வீச்சாக நடந்துள்ள தலைநகர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் 3 பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13,11,10,9 மற்றும் 7 வயது நிரம்பிய 5 சகோதரிகளையும் அச்சிறுமிகளின் சித்தப்பா கடந்த ஈராண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள கொடுமை இப்போது வெளியே வந்து, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மதுரை மாவட்டம், கூடல்நகர் அருகிலுள்ள குலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பழநி அருகேயுள்ள பதினாறுபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட விவகாரம் மக்களது போராட்டத்தால் அம்பலமானது. கடந்த ஓரிரு மாதங்களாக நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் கடுமையான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் நிலைமைகள் மாறிவிடவில்லை என்பதையும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படவில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டுகின்றன.

பஞ்சாப் போலீஸ்
பாலியல் தொல்லை கொடுத்தவனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் கொடுத்த பெண்ணையே தாக்கும் பஞ்சாப் போலீசு.

பஞ்சாபில் தரண்தரண் மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த ஹர்பிந்தர் கவுர் என்ற பெண்ணை, லாரி ஓட்டுநர் ஒருவன் பாலியல் தொல்லை செய்துள்ளான். உடனடியாக அருகிலுள்ள போலீசு நிலையத்துக்குச் சென்று ஹர்பிந்தர் கவுரின் தந்தை காஷ்மீர சிங்கும், அவரது சகோதரரும் உதவி கேட்டுள்ளனர். போலீசார் இது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்துவிட்டு, அவன் கொடுத்த மாமூல் பணத்தை வாங்கிக் கொண்டு உதவி கேட்ட ஹர்பிந்தர் கவுரையும் அவரது தந்தை மற்றும் சகோதரரையும் சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். காக்கிச் சீருடை அணிந்த கிரிமினல்கள் நடத்திய இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த ஒருவர் தனது கைபேசி காமிராவில் பதிவு செய்து, அதனை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்த வீடியோ, தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் வெளியாகி பரபரப்பானதைத் தொடர்ந்து இத்தாக்குதலை நடத்திய 4 பொறுக்கி போலீசாரும் தற்காலிகப் பணிநீக்கம் செயப்பட்டுள்ளனர். ஆனால், மாவட்டப் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, அப்பெண்ணின் தந்தை குடித்துவிட்டுத் தகராறு செததாகவும், அதைத் தடுக்க முயற்சித்த போலீசாரை அப்பெண் தடுத்ததால் அடித்ததாகவும் நியாயவாதம் பேசி கிரிமினல் போலீசுக்கு வக்காலத்து வாங்குகிறார். பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்தை மேலும் கடுமையாக்கி, தண்டனையை அதிகரிப்பதும், போலீசு ரோந்தை விரிவுபடுத்துவதும் வேண்டும் என்று முன்வைக்கப்படும் தீர்வின் அபத்தத்தை இந்த நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டுகிறது.

உ.பி.யின் டியோரியா பகுதியைச் சேர்ந்த 35 வயதான தாழ்த்தப்பட்ட விவசாயப் பெண், வயல்வெளியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது கழுத்தை நெறித்துக் கொல்லவும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த காமுகர்கள் முயற்சித்துள்ளனர். உள்ளூர் போலீசில் இது பற்றி புகார் கொடுத்த போதிலும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்டப் போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபோது,  பல குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள  35 வயதான பெண்ணை எவனும் பாலியல் பலாத்காரம் செவானா என்று கிண்டலடித்து நக்கல் செய்திருக்கிறார், அவர். அருகே இருந்த பத்திரிகையாளர்கள் இந்த வக்கிரத்தை உள்ளூர் நாளேடுகளில் அம்பலப்படுத்தினர். பாலியல் வன்கொடுமை பற்றி புகார் கொடுக்கும் பெண்களிடம் பரிவோடும் ஆறுதலாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டு உபதேசங்களைச் செய்தாலும், போலீசுத்துறை கடுகளவும் மாறிவிடவில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று கூறப் போதுமானது.

ஜெசிகா டேவிஸ்
பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க ஆக்ரா மஹால் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்துள்ள ஜெசிகா டேவிஸ் என்ற லண்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி.

ம.பி.யில் சுவிட்சர்லாந்து பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரோ, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக அரசால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்கிறார். அவரது பேச்சை பொன்மொழி போல ஐரோப்பாவின் ஊடகங்கள் விளம்பரப்படுத்துகின்றன. “இந்தியாவுக்குப் போகும் பெண்களுக்குச் சில எச்சரிக்கைகள்” என்று ஐரோப்பிய ஊடகங்களும் அரசும் விளம்பரப்படுத்தும் அளவுக்கு, இந்தியாவின் யோக்கியதை கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் வல்லுறவு நோயால் இந்திய ஜனநாயகம் சீக்குப் பிடித்துக் கிடக்கிறது என்று பல நாடுகளும் பரிகசிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் பெருகிவரும் இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் பெண்ணினத்தின் உரிமைகளையும் சமத்துவத்தையும் நிலைநாட்டவும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

மாறாக, டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மாண்டுபோன இளம்பெண்ணுக்கு நிர்பயா (அச்சமற்றவர்) என்று பெயர்சூட்டி, அவருக்கு வீரப்பெண்மணி விருதளித்தும், ரூ. 1000 கோடி முதலீட்டில் நிர்பயா என்ற பெயரில்பெண்களுக்கென தனி வங்கி தொடங்கப்போவதாக அறிவித்தும், பெண்ணினத்தின் மீது அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஆட்சியாளர்கள் காட்டிக் கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு  கடந்த மார்ச் 19 அன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளனர்.

தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது, ஒளிந்திருந்து பெண்களின் மறைவிடங்களைப் படம் பிடிப்பது-பரப்புவது உள்ளிட்ட குற்றங்களுக்குக் கடுமையான  தண்டனைகள், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை – முதலானவை இப்புதிய சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வர்மா கமிசனும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் அளித்த முக்கியமான பரிந்துரைகளை முற்றாகப் புறக்கணிக்கத்துவிட்டு, ஆணாதிக்கப் பிற்போக்குத்தனத்தைக் கட்டிக்காக்கும் வகையிலேதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“காப்” எனப்படும் சாதியப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதமானவை என்றும், அவை திருமண உறவு தொடர்பாக எந்த தீர்ப்பும் அளிக்க உரிமை  கிடையாது என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்தது. ஆனால், இச்சாதியக் கட்டப்பஞ்சாயத்துகளையும் கௌரவக் கொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இராணுவப் படையினரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கும் வகையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற வர்மா கமிசனின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே என்றும், மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் அவள் மீது பாலுறவைத் திணிப்பதும் வல்லுறவுக் குற்றமே என்றும் வர்மா கமிசன் பரிந்துரைத்ததையும் தற்போதைய சட்டம் நிராகரித்துள்ளது.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ஆதிக்கத்திலும் உள்ள ஒருவர் பாலியல் குற்றம் செய்தால் அது கொடிய குற்றம் என்று கருதப்படவேண்டும்  என்ற முந்தைய 2010-ஆம் ஆண்டின் உத்தேச மசோதாவின் விதிகளை நீர்த்துப் போக வைத்து, “சமூக, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தில் உள்ளவர்” என்ற சொல் திட்டமிட்டே இச்சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்ற பரிந்துரையும் ஏற்கப்படவில்லை.

ஒருவர் பாலுறவுக்கு மனப்பூர்வமாக இசைவு தெரிவிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் நீண்டகாலமாக நம் நாட்டில்  இருந்தது. இருப்பினும், ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிர்ப்பந்தத்தால், அதை 18 வயதாக தற்போதைய குற்றவியல் சட்டத் திருத்த மசோதா(2013)வில் இந்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

உடல் மற்றும் மன வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, உலகின் பெரும்பாலான நாடுகளில் பாலுறவுக்கான மனப்பூர்வ ஒப்புதல் அளிக்கும் வயது வரம்பு 16-ஆகத்தான் இருக்கிறது. பாலுறவுக்கான இசைவு வயது 16 என்று தீர்மானித்துள்ள நாடுகள், பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பள்ளிகளிலும் பாலியல் குறித்த விழிப்புணர்வை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், நம் நாட்டில் சாதிய- மதவாத அமைப்புகள்  குழந்தைத் திருமணங்களை ஆதரித்துக் கொண்டே, பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 16-ஆக இருப்பதையும் எதிர்க்கின்றன. தங்களது குடும்பம் மற்றும் சாதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேற்று சாதி இளைஞனைக் காதலிப்பதையும் திருமணம் செய்வதையும் தடுத்து தண்டிக்கும் நோக்கத்துடன்தான் ஆணாதிக்கப் பிற்போக்குவாதிகள் பாலியல் உறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதை 18-ஆக உயர்த்த வேண்டுமென்கின்றனர். இதன் மூலம் பெருகிவரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கப் போவதாக அரசு கூறிக் கொண்டாலும், காதலர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான வாய்ப்பையும் அதிகாரத்தையும்தான் இது போலீசுக்கு வழங்கியுள்ளது.

கடந்த  பிப்ரவரி 6-ஆம் தேதியன்று, டெல்லி சிறீராம் வணிகவியல் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவுக்கு வந்த இந்துவெறி பயங்கரவாத மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்குவந்த இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தள குண்டர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி, மாணவிகளின் ஆடைகளைக் கிழித்தும், மார்பகங்களைப் பிடித்து இழுத்தும் அவமானப்படுத்தினர். நூற்றுக்கணக்கில் போலீசு நிறுத்தப்பட்டிருந்தபோதிலும், இக்குண்டர்களைத் தடுக்கவோ, கைது செய்யவோ முன்வரவில்லை. பட்டப்பகலில் நடக்கும் ஒரு பாலியல் தாக்குதலைக்கூட தடுக்க முன்வராத இத்தகைய போலீசிடம்தான், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டத்தை அமலாக்கவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆணாதிக்கத் திமிர்த்தனத்தில் ஊறிப்போயுள்ள நீதித்துறையிடம்தான் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இப்புதிய சட்டமும் பெண்கள் மீதான வன்கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் ஒழித்துவிடாது என்பதையே இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

– பாலன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________