இளவரசன் இறுதி ஊர்வலம் – படங்கள், வீடியோ !

15

இளவரசன் திவ்யா திருமணத்தை ஒட்டி நத்தம் காலனியை சூறையாடி, பின்னர் திவ்யாவை பிரித்து, இளவரசனை ‘தற்கொலை’ செய்ய வைத்து ஆட்டம் போட்ட பாமக சாதிவெறியர்களை கண்டு கொள்ளாத அரசு, இளவரசனது இறுதி நிகழ்விற்கு எல்லா அடக்குமுறைகளையும் ஏவியது.

இளவரசன் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்விற்கு நத்தம் காலனியில் உள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும், வெளியூர் சொந்தக்காரர்கள் கூட கலந்து கொள்ள முடியாது என்று கலெக்டர் உத்தரவு போட போலீசு அதை அமல்படுத்தியது. சேலத்தில் தங்கியிருந்த இளவரசனது வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கலெக்டர் போட்ட உத்தரவை ஏற்று போலீசு அவர்களையும் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டது.

இது போக எந்தக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை கறாராக அமல்படுத்தினார்கள். வழக்கறிஞர்கள் வரவில்லை என்றால் உடல் அடக்கம் செய்யப்படாது என்று இளவரசனது தந்தை இளங்கோ உறுதியாகச் சொல்ல, அதையும் போலீசு சட்டை செய்யவில்லை.

இறுதியில் உடல் அடக்கம் செய்வதென்று முடிவாக மக்களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் காட்டுப்பாதையில் போலீசுக்குத் தெரியாமல் நத்தம் காலனிக்கு வந்தார்கள். ஒரு தலித் இளைஞனது இறுதி நிகழ்ச்சிக்கு வெளிப்படையாக கலந்து கொள்ளக்கூட இங்கே ஜனநாயகம் இல்லை.

மேலும் திவ்யா இளவரசனை விட்டு பிரிந்து விட்டார் என்று அவர்கள் சேர்ந்த மாதிரி இருந்த பேனர்களைக்கூட போலிசு அகற்றிவிட்டது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஊருக்குள் வந்த போது அவரை கைது செய்ய போலீசு முயன்றது. ஆனால் மக்கள் உறுதியாக தடுத்து நிறுத்தி விட்டார்கள். இதனால் போலீசுக்கும் மக்களுக்கும் தள்ளு முள்ளு நடந்தது. போலீசு பலவாறு மிரட்டியும் சிவகாமியை கைது செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை.

பின்னர் மூக்குடைபட்ட போலீசு தாங்கள் சிவாகாமியை கைது செய்ய வரவில்லை, பார்த்து பேசத்தான் வந்தோம் என்று சமாளித்தது. பிறகு தன்னால் பிரச்சினை வேண்டாம் என்று சிவகாமியே போலிசிடம் பேசிவிட்டு வெளியேறினார். இதனிடையே பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் முழக்கமிட்டவாறு இளவரசனது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இளவரசனது உடலை புதைப்பதற்கும் நினைவு மண்டபம் கட்டுவதற்கும் முதன்மைச் சாலையருகே ஒரு நிலத்தை வாங்கியிருந்தார்கள். அங்கே இளவரசனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் முடிந்த உடன் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தோர் அஞ்சலி உரை ஆற்றினார்கள்.

இளவரசனது இறுதி நிகழ்ச்சிக்கு என்னென்ன தடைகள் போடமுடியுமோ அத்தனையும் போட்டு முடக்க நினைத்தது போலிசு. ஆனால் மக்களும் தோழர்களும் அதையும் தகர்த்து சில ஆயிரம் பேர் திரண்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை கூட கிடையாது என்பதற்கு இளவரசனது மரணம் ஒரு சான்று என்றால் அப்படி இறந்தவர்களை அணிதிரண்டு அடக்கம் செய்வதற்கும் உரிமை இல்லை என்பதை இளவரசனது இறுதி நிகழ்வு எடுத்துக் கூறியிருக்கிறது.

இறுதியில் பத்து நாட்களுக்குப் பிறகு இளவரசனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பத்து நாட்கள் ஆகியும் பாமக சாதிவெறியர்கள் கைது செய்யப்படவில்லை. அப்படிக் கைது செய்யப்பட வேண்டுமென்ற சுவரொட்டிகளைக்கூட விட்டு வைக்கவில்லை போலிசு. ஆதிக்க சாதிவெறியை எதிர்த்த நமது போராட்டம் சாதிவெறியர்களை எதிர்த்து மட்டுமல்ல, அதை தூக்கிப்பிடிக்கும் அரசையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

____________________

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காவல் துறை அதிகாரிகளுடன் விவாதம் :

இறுதி ஊர்வலம் :

வழக்கறிஞர் ராஜு உரை :

 

படங்கள், வீடியோ : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி.