ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம்! பகுதி 4 (இறுதிப் பகுதி)
கடந்த ஆகஸ்டு (2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி கட்சி: பிறப்பு இரகசியம்!” என்ற கட்டுரையில், பின்வருமாறு எழுதியிருந்தோம்:
“மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வேலைசெய்வது உண்மையானால், இந்திய அரசு ஏன் அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாரன் தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் வாயடைக்கும் வகையிலான, வழமையான கேள்வியொன்றை வீசியிருக்கிறார். இதற்கு இந்திய அரசு பதில் கூறவில்லை.
இதே எதிர்வாதத்தை, உதயகுமாரன் தனது அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள அரவிந்த் கேஜரிவால் மூன்றாண்டுகளுக்கு முன்பே வைத்தார். தனது “கபீர்” என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசனிடமிருந்து நாற்பதாயிரம் டாலர் நிதி பெற்றதாக அரவிந்த் கேஜரிவால் மீது அருந்ததி ராய் குற்றஞ்சாட்டியபோது அதை அவர் மறுக்கவில்லை. ஃபோர்டு ஃபவுண்டேசனின் இந்தியப் பிரதிநிதி ஸ்டீவன் சோல்னிக்குடன் சேர்ந்து ஒரு நேர்காணல் நடத்திய கேஜரிவால், “ஃபோர்டு ஃபவுண்டேசன் மோசமானதென்றால், பிறகு அதைத் தடை செய்யவேண்டியதுதானே!” என்ற அதே கேள்வியை வீசினார்.
“முதல் தவணையாக 2005-ம் ஆண்டு 1,72,000/- டாலரும், இரண்டாம் தவணையாக 2008-ம் ஆண்டு 1,97,000/- டாலரும் அந்த அரசுசாரா தொண்டு நிறுவனத்திற்கு அளித்தோம்; மூன்றாவது தவணையையும் அளிப்பதாக ஒப்புக்கொண்டோம்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக வேலைசெய்வதாக ஒப்புக்கொண்டு, அதைச் செய்யாததால் நிதி தரவில்லை” என்று ஸ்டீவன் சோல்னிக் உண்மையைச் சொல்லிவிட்டார்.
அது மட்டுமில்லை; அரவிந்த் கேஜரிவால், அன்னா ஹசாரே, அருணா ராய், கிரண் பேடி, இந்தியக் கடற்படை முன்னாள் துணை அட்மிரல் லட்சுமிநாராயண் ராமதாஸ், விவசாய விஞ்ஞானி என்று சொல்லிக்கொண்டு நமது நாட்டுப் பாரம்பரிய நெல் விதைகளைத் திருடி அமெரிக்க விதை கார்ப்பரேட் நிறுவங்களுக்கு விற்கும் எம். எஸ். சுவாமிநாதன் முதலான பலரும் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசனும் அதன் முன்னோடியான ராக்பெல்லர் ஃபவுண்டேசனும் இணைந்து தமது எடுபிடி பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் ரமோன் மாகசேசே பெயரில் நடத்தும், தலா 50,000 டாலர் கொண்ட விருதை பெற்றவர்கள்தாம்; அது தவிர, அரசு சாரா தொண்டு நிறுவனங்களை நடத்தி அந்நிய நிதி உதவி பெறுபவர்கள்தாம். இந்த உண்மை அரசியல் அறிந்த அனைவரும் அறிவர்.
அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராகச் சதி செய்வதாக ஒருபுறம் குற்றஞ்சாட்டினாலும், மறுபுறம் அவற்றைத் தடைசெய்து தகுந்த நடவடிக்கைகளை (காங்கிரசு அல்லது பா.ஜ.க என்று எந்த அரசானாலும்) மேற்கொள்வதில்லை. அது மட்டுமல்ல, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்காக இந்திய அரசு தனது எஜமானர்களான மேலைநாடுகளுக்கு உத்திரவாதமளித்துள்ளதோடு, அதற்குரிய ஐ.நா. ஒப்பந்தத்திலும் கைச்சாத்தளித்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலை? தனக்கு எதிராகச் சதிவேலைகள் செய்வதாகக் கருதும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்கு இந்திய அரசு ஏன் உத்திரவாதமளிக்க வேண்டும்?
ஐ.நா. அவை நிறைவேற்றிய சர்வதேசக் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை என்ற ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்துக்கு இந்திய அரசு முறைப்படி ஒப்புதல் அளித்திருக்கிறது. பொதுவிலானதாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தக் குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கும் பொருத்தி, சர்வதேசச்சட்டத்தில் பதிக்கப்படுள்ளது; அது குடிமைச் சமூகங்களில் அரசு தலையீடுகளிலிருந்து பாதுகாத்து நெறிப்படுத்தும் விதிகளையும் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது.
அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (வெவ்வேறு) நாடுகளில் பங்கேற்கும் உரிமை (அதாவது அரசுசாரா தொண்டு நிறுவனங்களை அமைத்துக்கொள்ளவும் அதில் இணையவும் தனிநபர்கள் உரிமை); அரசின் தலையீடின்றி அவற்றின் சட்டபூர்வ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் உரிமை; அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கருத்துரிமை; அவை தமது உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளுடன் தகவல்,தொடர்புகொள்ளும் உரிமை; அவர்கள் தமது நாடுகளின் எல்லை கடந்து நிதிப் பரிமாற்றம் உட்பட நிதி ஆதாரங்களைக்கோரவும் பெறவுமான உரிமை; அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசுக்கடமை – ஆகிய வழிகாட்டும் நெறிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.
உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஏகாதிபத்திய நிதி வர்த்தக அமைப்புகளின் நிபந்தனைகளையும், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைளைத் தலைவணங்கி ஒப்புக்கொண்டதோடு, மேற்படி சட்ட திட்டங்களையும் இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது; அவற்றுக்குக் கட்டுப்படவும் கடமைப்பட்டுவிட்டது.
கடந்த ஆகஸ்டு (2014) இதழில் பின்வருமாறு எழுதியிருந்தோம்: “முதலாளியத்துக்கு எப்போதும் சந்தை விரிவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. ஆனால், தற்போதைய சந்தை சுருங்கிவிட்டதால் கார்ப்பரேட் முதலாளிகள் தனிப்பட்ட தேசங்களில் இருந்து உலக அளவில் விரிவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். இதற்கு முன்பு சந்தைப் பொருளாக இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள் மட்டுமல்ல; வழமையாகச் சந்தைக்கு வெளியிலுள்ளதாகக் கருதப்பட்ட அரசாங்க நடவடிக்கைகள், பொறுப்புகள், கடைமைகள்கூட விற்பனைச் சரக்குகளாக, இலாபமீட்டும் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, சாலைப்போக்குவரத்து, முன்னேறிய வேலை நிலைமைகள் போன்றவைகூட சேவைச் சரக்குகளாக, வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டன. பொதுநலன்களுக்காகத் தனிமனிதத் திறமையையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நெறிப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்பதுபோய், கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில், சந்தை, வியாபார நலன்களுக்காக அரசாங்கக் கட்டுமானங்களையும், சமூகத்தையும் சட்டதிட்டங்களையும் நெறிப்படுத்துவதாக மாற்றப்படுகின்றன.”
இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு) நிறுவனங்களின் கூட்டுச்சதியில் சிந்தனைக் குழாம்களும் குடிமைச் சமூகங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. அதுமட்டுமல்ல, உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிதி, வர்த்தக அமைப்புகளின் உலகமயமாக்கம் மற்றும் மறுகாலனியாக்கப் பொதுத் திட்டத்திலும் அவற்றின் நிதி ஒதுக்கீட்டிலும் அரசுசாரா தொண்டு அமைப்புகளும் குடிமைச் சமூகங்களும் முக்கிய இடம் பெற்றுள்ளன. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தகக் கழகம், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் முதலாளிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல், பொருளாதாரம் முதல் சுற்றுச்சூழல் குறித்த முக்கிய அரை ஆண்டு, ஆண்டுக் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அரசுசாரா தொண்டு அமைப்புகள், குடிமைச் சமூங்களின் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக இடம் பெறுகின்றனர். இவை உருவாக்கும் பல்வேறு அரங்குகள், கூட்டமைப்புகளில் அவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுகிறார்கள். உலக நாடுகளின் அரசுத் தலைவர்கள், அமைச்சர்களுக்கும் நிகரான ஊதியமும் வசதிகளும் பாதுகாப்புகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, தொழிற்துறை, அரசுத்துறை ஆகியவற்றுக்கு நிகராக அதிகாரபூர்வமான ஏகாதிபத்திய எஜமானர்களால் மூன்றாவது துறையாக அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு காரணம், அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்களை வளர்ச்சிகான திட்டங்களில் பங்காளிகளாக கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு) நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
கடந்த ஆகஸ்டு புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதியிருந்தோம், “பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு முதலான சில விவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்வி-மருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் அரசு தலையீடு செய்யக்கூடாது. இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக் கொள்வார்கள். சாரமாகச் சொல்வதானால், கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செயல்படும் எலும்புக் கூடு போன்ற அரசு அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும். இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவது குடிமைச் சமூகத்தின் பொருளாதார-தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும். இவைதாம் அரசின், கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக்கூலிகளது பிரச்சாரம்.
அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கை துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள் முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படிப் பிரச்சாரத்துக்கு சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனைக் குழாம்கள் – குடிமைச் சமூகங்களின் பங்கு பாத்திரம் முன்தள்ளப்படுவதையும் முக்கியத்துவம் பெறுவதையும் புரிந்து கொள்ள முடியும்.”
மேற்கண்ட அடிப்படையில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினரின் இடத்தில் சிந்தனைக் குழாம்களையும் குடிமைச் சமூகங்களையும் வைப்பதுதான் ஏகாதிபத்திய எஜமானர்களின் திட்டமாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்களில் நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் வரப்பிரசாதமாக அரசுசாரா தொண்டு அமைப்புகளையும் குடிமைச் சமூகங்களையும் கார்ப்பரேட் கழகங்கள் நம்புகின்றன. “இலஞ்ச -ஊழல், அதிகாரமுறைகேடுகளுக்கு இடமில்லாதவை. தமது கட்டுப்பாட்டில் தாமே பொறுப்பேற்று செயல்படுத்துவன என்று மக்கள் நம்பக்கூடியவை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களிடையே எழும் எதிர்ப்புகளைத் திசைதிருப்பிவிட்டு, எளிதில் சமாளிக்கக்கூடியவை. அதைவிட முக்கியமாக, தற்போதைய அரசியல் கட்டமைப்பின் மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்திகள் மாபெரும் தன்னியல்பான போராட்டங்களாகவும் கட்டுப்படுத்த முடியாத எழுச்சிகளாகவும் வெடித்து விடும் அபாயத்தில் இருந்து அரசையும், ஆட்சியாளர்களையும் ஆளும்வர்க்கங்களையும் காக்கக் கூடியன” என்று கார்ப்பரேட் கழகங்கள் நம்புகின்றன. இந்த உண்மை ஏராளமான சிந்தனைக் குழாம்கள், குடிமைச் சமூகங்களின் சர்வதேச ஆய்வுகளில் நிறைந்திருக்கின்றன.
பல ஆண்டுகளாக மாறிமாறி நாட்டை ஆண்டுகொண்டிருந்த காங்கிரசு, பா.ஜ.க. மீது மட்டுமல்ல, ‘இடதுசாரிகள்’ உட்பட பலவண்ணக் கூட்டணி அரசுகள் மீதும் இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே இந்திய மக்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருந்து. ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, செயலிழந்துவரும் அரசு, அதிகரித்து வரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்து வரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசன் நிறுவனம் நிதியளித்து இயக்கிவரும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தும் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ் முதலானவர்கள் ஆம் ஆத்மி கட்சியைத் தோற்றுவித்தார்கள். பின்னாளில் நாடுமுழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் – இப்போது அவற்றில் பலவும் தம்மைக் குடிமைச் சமூகம் என்று சொல்லிக்கொள்கின்றன – இந்தக் கட்சியில் இணைந்து கொண்டன.
காங்கிரசு, பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகள் உட்பட பலவண்ணக் கூட்டணிகளுக்கும் ஒரு அரசியல் மாற்றுச் சக்தியாகக் காட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களோடு தனது முதல் சுற்று வரலாற்றுக் கடமையை முடித்துக்கொண்டது. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு நம்பிக்கையளிப்பதாக மோடி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டுவிட்டது. என்றாலும், பனிப்போர் முடிவுக்கு வந்தாலும் உலகின் பலநாடுகளிலும் பயங்கரவாத ஆபத்துக்களும் சர்வாதிகார, எதேச்சதிகார, அரை எதேச்சதிகார ஆட்சிகளும் நீடிப்பதால் அந்நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போர்த் தந்திரத்தின்படி தனக்குக் கீழ்ப்படியாத நாடுகளில் மனிதாபிமானத் தலையீடுகள் செய்வதற்கும் ஆட்சி மாற்றம் (Regime Changes) ,ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்வதற்கும் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல் – அமைப்புக் கருவிகளாக உள்ளன. அவை ஏகாதிபத்தியங்களின் செல்லப்பிள்ளைகளாகவே கருதப்படுகின்றன. அந்த வகையிலான அரசியல்-அமைப்புக் கருவிகளாக ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உட்பட குடிமைச் சமூகங்கள் ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கின்றன.
– ஆர்.கே.
(முற்றும்)
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________
நல்ல கற்பனை. உங்களை தவிர நாட்ல ஒரு பய போராட கூடாது. நீங்க மட்டும் தான் உத்தமன். நீங்க சொல்ற மாதிரி போராடரவங்க மட்டும் தான் போராளி.
ஜனனாயகமே இந்தியவில் இருக்குமதி செய்த ஒரு சரக்குதான்.
கொறங்காட்டி யார்னு தெரிந்தா குறங்கு எப்படி ஆடும்னு சொல்லலாம்னு ஒரு நம்மிகைதான்.
குறங்கு கயத்த அறத்துகிட்டு ஒடினால் பார்க்கலாம்.
அப்ப வினவு என்ன சொல்லுதுன்னு பாக்கலாம்.
அந்த இக்கட்டு வினவுக்கு வராதுன்னுதான் நெனைக்கிறேன்…