Saturday, May 15, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் - நேரடி ரிப்போர்ட்

ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்

-

சென்னை- ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் பாக்ஸ்கான் என்ற பன்னாட்டு நிறுவனம், சட்டவிரோதமாக தனது உற்பத்தியை நிறுத்தி ஆலையை மூடிவிட்டது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணிபுரிந்த 1,700 நிரந்தர ஊழியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர். திடீர் ஆலை மூடலை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோத ஆலை மூடலுக்கு எதிராக, அரசின் தொழிலாளர் உதவி ஆணையர் பேச்சு வார்த்தைக்கு பலமுறை அழைத்தும் வராமல், தனக்கு வேலை செய்த தொழிலாளர்களை குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிந்தது போலவே, இந்திய தொழிலாளர் சட்டங்களையும் கழித்து வீசியிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் சோனி, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பொருட்களை தயாரிக்கும், உலகின் மிகப்பெரும் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்களின் உழைப்பை பிழிந்து ஆலைகளில் வைத்தே அவர்களை பிணமாக்கியது பற்றிய செய்திகள் வினவில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. பாக்ஸ்கான் ஆலைகளில் தொழிலாளர்கள் ‘தற்கொலை’ செய்துகொண்ட செய்திகள், உலகத் தொழிலாளர்களை உலுக்கியது.

இப்போழுது, இந்தியாவில் அதன் கொடுங்கரத்தின் வெறிச் செயல்கள் வெளிப்படுகின்றன. இந்திய தொழிலாளர் சட்டங்களும் அதிகாரவர்க்கமும் ஓட்டுச்சீட்டு அரசியல் தொழிற்சங்கங்களும் அவற்றை முறியடிக்க வக்கற்று, சமரசம், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை காவு கேட்கும் அதன் ரத்தப்பசிக்கு தீனிபோடுகிறார்கள்.

இதோ அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களின் குரல்களை கேளுங்கள்…

ரஜினி, பாக்ஸ்கான், சிஐடியு தொழிற்சங்க தலைவர்

நோக்கியா கம்பெனிக்கு சப்ளையர் இந்த கம்பெனி. ஆனாலும் அதைவிட பெரிய கம்பெனி. நோக்கியா மூடியபிறகும் எந்த பாதிப்பும் இல்லாமல் உற்பத்தி நடந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்ந்தது. இந்த கம்பெனி நோக்கியாவுக்கு மட்டுமல்ல, சோனி, மோட்டரோலா கம்பெனிகளுக்கும் பாகங்களை எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருந்தாங்க. நோக்கியாவோட தொழிற்சாலை தமிழ்நாட்டுலயே இருந்ததாலே அதுக்கு முன்னுரிமையா செய்து கொடுத்திட்டிருந்தோம். ஒரு கட்டத்துல, இந்த கம்பெனியில, 19,000 பேர் வேலை பார்த்தாங்க.

ரஜினி
ரஜினி, பாக்ஸ்கான் சி.ஐ.டி.யு தலைவர்

தற்போது இருப்பது நிரந்தர ஊழியர்கள் 1,700 பேர் மட்டும்தான்.

9,000 பேர் டெம்பரவரியா வேலை செய்தாங்க, தங்கள் வயித்துப் பொழப்புக்காக வேற வழியில்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக, 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான சம்பளத்துக்கு எந்த வித உரிமையும் இல்லாம வாழ்க்கைய ஓட்டிக்கிட்டிருந்தாங்க. ஊழியர்கள், 280 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த பிறகு 2 நாட்கள் விடுமுறை கொடுத்துட்டு, மறுபடியும் வேலையிலே ரி-என்டிரி கொடுத்து, மீண்ட்டும் டெம்பரவரியாக சேர்த்துக் கொள்வார்கள்.

கம்பெனிக்காரனுங்க பயங்கரமா தந்திரம் தெரிஞ்சவனுங்க. அதுமட்டுமில்லாம, அவனுங்க பின்னாடி ஒருகூட்டம் லீகல் அட்வைசர்னு அலையுது. பெர்மனன்ட் ஐடியான எனக்கு ஆரம்ப சம்பளமாக ரூ 2,900 இருந்தது. 8வருடங்கள் கழித்து இப்பத்தான் சம்பளம் 15ஆயிரம்.

4 மாதங்களுக்கு முன்பு 400 பெண் ஊழியர்களுக்கு வி.ஆர்எஸ் கொடுத்து அனுப்பினாங்க.

இதுவரைக்கும் நேரடியாக மேனேஜ்மென்ட் தொழிலாளர்களிடம் ஆலையை மூடப்போவதாக எந்த முன் அறிவிப்பும் கொடுக்கல. டிவியும், பத்திரிகைகளும்தான் ஆலையை மூடப்போவதாக சொல்கிறார்கள். கவர்மென்ட் ஆபிசர்களும், கஷ்டப்படற தொழிலாளர்களிடம் எதுவும் கேட்காமல், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” ன்னு நிறுவனத்திடம், கேட்கிறாங்களே ஒழிய அவங்கள தண்டிக்க ஏதுவும் செய்யல.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை நடுத்தெருவுக்கு வந்துவிடுமே என்ற எண்ணம் எவனுக்கும் இல்லை. அதைவிட்டு, எரிறதுல எண்ணெய் ஊத்தி லாபம் பார்க்கிறானுங்க பத்திரிக்காரனுங்க. எத, எதல லாபம் பாக்கிறதுனு விவஸ்தல இல்லையா. செய்திகளையும் அப்படித்தான் போடுறானுங்க. 1000 பேர் போராட்டம் செய்து அரெஸ்ட் ஆனா, 512 னு போடுறானுங்க.

கவர்மெண்ட் எதுக்கு இருக்கு, மக்களுக்கு சேவை செய்ய. ஆனா, அவன் கம்பெனிக்காரனுக்குத்தான் கவலைப்படறான். நிலைமை இப்படித்தான் இருக்கு. தானாகவே ஒரு ரூமரைக் கிளப்பிவிட்டுட்டு, அதை உண்மையாக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் துணை நிக்குது. ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு எந்த அதிகாரி ஜனநாயகத்தை மதிக்கிறான், எந்த பத்திரிகைக்காரன் உண்மைநிலையை சொல்றான்.

ஏசி (போலீசு)லயிருந்து கலெக்டரு, பத்திரிக்கைனு எவனும் ஜனங்க பிரச்சினைய பாக்குறதில்ல.

இப்படியே, நியாயமில்லாம, வேலையைவிட்டு தூக்குவது தொடர்ந்தால் ஆலையின் முன், குடும்பத்துடன் போராட வேண்டிய நிலைமைதான்வரும். அப்பறம் குடும்பத்துக்கு கம்பெனிக்காரன் சோறுப் போடுவானோ? இல்லை, போலீசுக்காரனுங்க சோறு போடுவானுங்களோ தெரியாது.

சக்திவேல், திருவொற்றியூர், 8வருடங்களாக வேலை செய்பவர்.

சக்திவேல்
சக்திவேல்

என்னுடைய வேலைய நம்பித்தான் என் குடும்பமே இருக்கு. இதைத் தவிர வேற எந்த வேலையும் எனக்கு தெரியாது. பன்னிரெண்டாவது முடிச்சிட்டு உடனே வேலைக்கு வந்துட்டேன். அப்பா கூலித்தொழிலாளி. இவ்ளோ நாளும் என்னை நம்பி குடும்பமே போய்ட்டு இருக்கு. இருக்க வீடுகூட கிடையாது.

கம்பெனி மூடுறாங்கனு கேள்விப்பட்டதும், என்ன செய்யறதுன்னே தெரியல. 8 வருஷமாக இங்கேயே ஓட்டிட்டேன். இந்த வேலைகள்தான் எனக்கு அத்துபடி. இனிமேல் நான் வேறு வேலையும் கத்துக்கமுடியாது. வேற கம்பெனிக்குக்கு போகலாமுனுப்பார்த்தா, வயசு பார் ஆயிடுச்சினுவாங்க. என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திருங்காங்க, இதனால கல்யாணமும் தடைபடுது. வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கு, என்ன செய்யறனுன்னே தெரியல.

எட்டு வருடங்கள் கழித்து இப்பதான், சம்பளம் 2000-லிருந்து 15,000-த்துக்கு அதிகரிச்சி கொஞ்சம் நிம்மதியா இருக்காலாமுனு பார்த்தா இப்படியொரு நிலை ஆயிடுச்சி. ஒரே மனஉளைச்சலா இருக்கு. சாதாரண போராட்டம்னு ஆலைக்கு முன்னே வந்தாலே, போலீசு அரஸ்ட் பண்ண வந்திடுறாங்க. வேலையே போகப்போகுது, இப்ப போலீசு என்ன பண்ணுவானுங்கனே தெரியல. எல்லாம், கம்பெனிக்காரனுக்கு ஆதரவாதான் இருக்கானுங்க.

கம்பெனியில 200-க்கும் அதிகமான கேமராக்கள் இருக்குது. பாத்ரூம் போனாக்கூட எல்லாருக்கும் தெரியும். பெல்லு அடிக்கிறதுக்கு முன்னே வந்துடணும். டாய்லெட்டுக்கு போறதுக்கும் கணக்கு உண்டு. டூட்டியில, நாலுவாட்டி பாத்ரூம் போனா வார்னிங் எல்லார் முன்னாலயும் நடக்கும்.

ஊதிய உயர்வுக்காக போராட்டம் பண்ணப்போ வேலூர் ஜெயில 5 நாட்கள் தூக்கிப் போட்டுட்டானுங்க. 219 பேர் ஜெயிலுக்குப்போனோம். குற்றம் செய்றவனுக்குத்தான் ஜெயிலுனு நினைச்சிருந்தேன். ஆனா, தொழிலாளி உரிமைக்கேட்டு போராடுனாலும் ஜெயிலுத்தானு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அதோடு மட்டுமில்லாமல், வார்னிங் லெட்டர் வேற அனுப்பிட்டாங்க. இப்படியே என் வாழ்க்கை கழிச்சிப்போச்சி. அதுக்கப்புறம், எதைக்கேட்டாலும் சஸ்பென்ட்தான்.

சாப்பாடு பத்தாம கேட்டாலும் கேவலப்படுத்துவாங்க. தரம் இல்லாத சாப்பாடுதான்.

இப்ப வேலையில்லாதது என் வாழ்க்கையையே இருட்டில் தள்ளிடிச்சு. இந்த கம்பெனியில வேலைப்பார்த்த அனுபவத்தை சொல்லி, எந்த கம்பெனிக்கு போய் நின்னாலும் வேலை கொடுக்கமாட்டேன்றாங்க. என்ன விஷயமென்றே புரியல.

கம்பெனி கட்டாய விஆர்எஸ் கொடுத்துட்டு, எக்ஸ்பீரியன்ஸ் சர்பிகேட் தரனுன்னு சொல்றாங்க. இந்த கம்பெனியில நான் கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததுக்குக் காரணம், 58 வயசு வரைக்கும் வேலை உத்திரவாதம்னு நினைச்சுதான். என்னுடைய ஜாயினிங் ஆர்டருல இருக்கு. எனக்கு வேலைதான் வேணும். இழப்பீடு தேவையில்லை.

அரசு எங்களுக்கு பதில் சொல்லியாகணும். அவங்க சொல்ற பதிலில்தான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை அடங்கி இருக்கு. இதுக்கு சரியான வழிகாட்டலனா அரசாங்கத்த எதிர்த்து போராட்டம் பண்ணுவோம்.

வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!

சரவணன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர்

சரவணன்
சரவணன்

அக்கா, தங்கை, அப்பா, அம்மா என்று அனைவரும் இந்த வேலைய நம்பித்தான் இருக்கோம். வாடகை வீடுதான். கடந்த 3 மாதங்களாக உற்பத்தி குறைவுனு காரணம் காட்டி தொழிற்சாலைய மூடப்பாக்குறாங்க. நோக்கியாவை நம்பித்தான் நாங்க வந்தோமுனு கம்பெனி சொல்றத ஏத்துக்கவே முடியாது. ஏன்னா, இங்க செல்போன் பாகங்கள் மட்டும் உற்பத்தி நடக்கல. லேப்டாப், எல்இடி டிவிக்கள் பாகங்களும் உற்பத்தி நடக்குது; ஏற்றுமதி ஆகுது.

இந்த கம்பெனியில வேலை பார்த்தவங்க வெளியப் போய் வேலைச் செய்ய முடியாது. டெம்பரவரி தொழிலாளர்களாக வெளியேற்றப்பட்டவர்கள் எல்லாம் ஏற்கனவே, வெளியில் வேலையில்லாமல், இருக்காங்க. ஆலையை மூடக்காரணம், முழுசா எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு, டெம்பரவரி ஆளுங்களை வைச்சி கம்மியான சம்பளம் கொடுத்துட்டு வேலை வாங்கிக்கலாம்னு நினைக்கிறாங்க. இங்க, இருக்கற மெஷின்களை வெளியிடத்துக்கு எடுத்துச் செல்ல, இப்ப லீவுனு சொல்றானுங்க.

சீனிவாசன்

என்னை டெக்னிஷியன் கேட்டகிரியில் எடுத்தார்கள். நாங்க யூனியனிலும் சேரக்கூடாது. சம்பள உயர்வு போன்ற போராட்டங்களில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று முதலிலேயே சொல்லிட்டாங்க. இங்கு மோல்டிங் டீம், அசெம்பிளி டீம் என்று, 6 விதமான டிபார்ட்மெண்ட்டுகள் இருக்குது, இவை எல்லாவற்றிலும் மேனேஜர், சூப்ரவைசர்கள், டெக்னிசியன்கள் என்று தரவாரியாக பிரித்துள்ளார்கள்.

கடந்த இரண்டு வருடமாகத் தொடர்ந்து, காலையில் எச் ஆர் வருவாரு. ஒவ்வொரு யூனிட்டுல இருந்து நாலு பேரைக் கூப்பிடுவாரு. இரண்டு நிமிஷம் கண்ணீர்விட்டு ,

‘கம்பெனி புரடக்ஷன் குறைஞ்சிடுச்சி, கம்பெனி மூடுற நிலைமைக்கு வந்துடுச்சி, உங்கள மட்டும் நான் காப்பாத்திறேன். மூணு மாச சம்பளம் தர்றோம், நீங்களே வாலண்டிரா விஆர்எஸ் கொடுத்துட்டு செட்டில்மெண்ட வாங்கிக்கினு போயிடுங்க’

னு சொல்லுவாரு. உடனே,

‘எங்களுக்கு வேற வேலை கிடைச்சிட்டதால நாங்க இங்க வேலையை விட்டு விடுகிறோம’

என்று எழுதிக் கையெழுத்து வாங்கிடுவாங்க. ஐடிகார்டு, ஷூ, யூனிபார்ம் எல்லாத்தையும் வாங்கிட்டு வெளியே அனுப்பிடுவாங்க. தினமும், கூட்டமாக ஆடுகள் நிற்கும் எந்த ஆடு இன்னிக்கி வெட்டுவாங்கனு தெரியாது. 2009-ல் இருந்தே இப்படி தினமும் நடக்குது.

எனக்கும் அந்த முறை வந்தது. நான், என் குடும்ப நிலைமையைப்பற்றி சொன்னேன். உடனே,

‘நாளைக்கு நீ வேளைக்கு வரமுடியாது. வெளியத்தான் நிக்கணும்’

என்றார்கள். மறுநாள் வந்தேன். சூப்ரவைசர் உள்ள அனுமதிக்கல. நான் வெளியேற்றப்பட்டேன். மற்ற தொழிலாளர்கள், தொழிலாளர் சங்கத்தை அணுகுவது நல்லது என்றார்கள். நான் புஜதொமு தொழிற்சங்கத்தை அணுகினேன்.

“திடீரென்று வீட்டுக்கு அனுப்பினால், என் குடும்பம் என்னாகுறது. அதனால, நான் வேலையை விடமாட்டேன்”

என்று கம்பெனிக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கம்பெனியிலிருந்து அதற்கு, ஒருமாதம் கழித்து லெட்டர் வருது.

‘தொடர்ந்து வேலைக்கு வராதக் காரணத்தினால் உங்களை வேலையிலருந்து ஏன் தூக்கக்கூடாது’

னு. அந்த லெட்டர எடுத்துகுனு நான் மறுநாள், கம்பெனிக்கு போனேன். என்னை, ஐஆர் (இன்ட்ரசியல் ரிலேஷன்ஷிப்) தொழிற்சாலையிலுள்ள ‘வக்கீல்’ கிட்ட அனுப்பினாங்க, அங்கு அவர்கள்,

‘கம்பெனி மூடப்போறோம். அதனால, நீ விஆர் கொடுத்துடு’

என்று மிரட்டினார்கள். உடனே, நான் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு போனேன். அங்கு, நிர்வாகம்

‘நாங்க இவரை வேலைவிட்டு எடுக்கவும்இல்ல, சஸ்பென்டும் செய்யல’

என்று அசராமல் பொய் சொல்லியது.

உதவி ஆணையர் அலுவலகத்தின் அதிகாரி தர்மசீலன், கம்பெனிக்கு உடந்தையா இருந்தாரு. திரும்பவும் என்னை என்கொயரிக்கு கம்பெனிக்கு கூப்பிடறேனு சொன்னவங்க. பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கல, கூப்பிடவும் இல்ல. இதெல்லாம் சுமார் ஒரு வருடகாலம் நடந்தது.

அதன்பிறகு,

“நான் வேலையில்லாம இருப்பதால பிழைப்பு ஊதியம் தரணும்”

னு கேட்டேன்.

‘நீ வேலைவிட்டு நின்னுட்டே, அதனால பிழைப்பு ஊதியம்தர முடியாது’

ன்னுட்டாங்க. தொடர்ந்து இம்மாதிரி பச்சைப்பொய்ய அரசு அதிகாரிங்க துணையோட நிர்வாகத்துகாரங்க தைரியமாக சொல்றாங்க. இங்க என்ன மாதிரி பர்மனெண்ட் எம்பிளாயிக்கே இந்த நிலைமைதான். பிறகு, காண்டிராக்ட், டெம்பரவரி தொழிலாளிகள் எப்படி உரிமையைப்பத்தி பேசமுடியும்.

தொழிலாளி வேலைக்கு மட்டுமில்ல உயிருக்கும் இங்க உத்திரவாதம் இல்ல. 2010-ல் கம்பெனியின் ஏசி மெஷினைகளை நீண்ட நாள் சுத்தம் பண்ணாம இருந்ததாலே, ஊழியர்கள், விஷவாயு தாக்கி 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அதற்கு எதிராக பணிபாதுகாப்புக்கோரி, 60 நாட்கள் போராட்டம்,இரயில் மறியல்,செய்ததற்கு போலீசு, வேலூர் ஜெயில்ல அடைச்சாங்க. பல போராட்டம் செய்தப் பிறகுத்தான் சம்பளமும் உயர்த்தினாங்க.

இப்ப வேலையே இல்லனு தைரியமா சொல்றானுங்க. அவனுக்கு இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் இருக்கும் தைரியத்தில்தான் எல்லாம் செய்யிறான்.

பாக்ஸ்கான் போராட்டடத்தில் சி.ஐ டி யு தொழிற்சங்கம் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.எல்.ஏ., சட்டமன்றக் குழுத் தலைவர் திரு சௌந்தர்ராஜன் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, வினவு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

வினவு : “நோக்கியா…வழியில் பாக்ஸ்கான் செல்கிறதா?”

திரு.செளந்தர்ராஜன்

திரு சௌந்தர்ராஜன்
திரு சௌந்தர்ராஜன்

“பாக்ஸ்கான் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தை முன் கூட்டியே சொல்ல முடியாது. கம்பெனி மூடுவதைத் தடுப்போம். கம்பெனிக்காரனின் நடவடிக்கையேப் பொறுத்தே எங்கள் நடவடிக்கை இருக்கும்.

ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி இருப்பதற்கு, மோடி அரசுதான் காரணம். தொழிலாளர்களுக்கு அரசியல் அறிவு குறைவாக உள்ளது. தொழிலாளர்களே காரியவாதமாக செயல்படுகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் 20 ஆயிரம் பேர் கூட சங்கம்மாக்கப்படவில்லை.

இங்க, மட்டுமல்ல, படித்தவர்கள் மத்தியிலும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை. முப்பத்தைந்து வயதுக்கு மேல வேலையை விட்டு தூக்குவது வாடிக்கையா இருக்கு.

வினவு : “40ஆண்டுகளுக்கு முன்பே, ஆலை நிர்வாகத்திற்கு எதிரா,திடீர் முற்றுகை, ஆர்ப்பாட்டம் போராட்ட வடிமாக இருந்தது. இப்போது அவை கற்பனையில்தான் உள்ளது, ஏன் இந்த நிலை?”

திரு.செளந்தர்ராஜன்

“அம்மாதிரி போராட்டங்களுக்கு திரும்பணும்னா, வலுவும் பலமும் இருக்கணும், அப்படியில்லாமல் நிர்வாகத்தோட மூக்கை சொறிஞ்சிட்டு, உதை வாங்கிட்டு வரக்கூடாது.”

பாக்ஸ்கான் தொழிலாளர்களில் சிலர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வினவு : “நிர்வாகம்,தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது சட்டவிரோதமாக்கப்படவில்லை. பிறகு, எப்படி தொழிலாளி அச்சமின்றி சங்கமாக திரள்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்.”

திரு செளந்தர்ராஜன்

“முதலாளிகள் இச்சட்டத்தை இயற்றக்கூடாது என்றும் இடது சாரிகள் உள்ளே புகுந்து ஆலையைக் கொடுத்து விடுவார்கள் என்று அரசை மிரட்டுகிறார்கள்.”

வினவு : “‘சுதந்திரம்’ கிடைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகுமா இந்த நிலைமை ?”

திரு.செளந்தர்ராஜன்

“ஒட்டு மொத்த சமூக நிலைமைதான் இதற்கு காரணம்… இதைப்பற்றி பேசும் நேரம் அல்ல இது.”

என்று முடித்துக் கொண்டார்.

அவருடன் வந்த சி.ஐ.டி.யு சங்கத்தினர், பாக்ஸ்கான் ஆலை மூடலுக்கு எதிராக தமிழக முதலமைச்சரின் தலையீட்டை கோரும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு. சௌந்தர்ராஜனின் கோரிக்கை மனுக்களை பிரதிகள் எடுத்து தொழிலாளர்களிடம் விநியோகித்து ஆலைமூடலுக்கு எதிரான போரட்டம் ‘உயர்ந்த’ மட்டத்தில் நடப்பது போல பிரச்சாரம் செய்தனர்.

workers-reading-petitionதெருவில் வீசியெறியப்பட்ட ஸ்ரீபெருமந்தூர் பாஸ்கான் தொழிலாளர்களுக்கு இப்போரட்டக்களம் புதிதல்ல! கடந்த 2010-ம் ஆண்டுகளிலேயே பிணந்தின்னும் பன்னாட்டு பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை, ரயில் மறியல், ஆலை முற்றுகை, கைது, சிறை என்று அனைத்தையும் பார்த்தவர்கள். அதிகாரவர்க்கம், போலீசு, அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்கள்.

workers

நிர்வாகத்தின் தொடர் தாக்குதலுக்கு எதிராக இவர்கள், அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவது திண்ணம். அதே நேரம் வழமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டும் இதை சாதித்துவிட முடியாது. ஏனெனில் தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு, அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள், ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்கின்றன.

தமது வேலை இழப்புக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டால்தான் முதலமைச்சருக்கு மனு போன்ற அசட்டுத்தனமாக காரியங்களில் தொழிலாளிகள் ஈடுபட மாட்டார்கள். தொழிலாளிகளின் உரிமையை தீர்மானிப்பது தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சக்திதான். அதுவும் ஒரு துறையில்லாமல் அனைத்து துறைகளிலும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வலிமையின் மூலமே தங்களது உரிமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலையினை தொழிலாளிகள் அடைவார்கள். அது இறுதியில் இந்தியாவை இந்திய மக்கள் பாதுகாக்கும் வழியையும் கண்டறியும்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளிகளின் வேலை இழப்பின் பின் உள்ள கதைகளும் வலிகளும் நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அதனால் உருவாகும் சமூக குலைவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே. எனவே இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை.

ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க