காவிரி உரிமை பிரச்சார நடைபயணம்
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் கர்நாடக அரசும், வஞ்சிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுச் செயல்படும் வேளையில் உச்சநீதிமன்றமும் தன்பங்கிற்கு வஞ்சகம் செய்கிறது. இந்த வஞ்சகத்தால் தமிழகமக்கள் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் மத்திய அரசு இது பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இங்குள்ள இயற்கை வளங்களான நிலக்கரி, மீத்தேன், ஷேல்,பெட்ரோலியம் போன்றவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுக்க காவிரி டெல்டாவை திட்டமிட்டு பாலைவனமாக்குகிறது மோடி அரசு.
மத்திய அரசின் இந்த தமிழக விரோதக் கொள்கைகளையும் திட்டத்தையும் முறியடிக்காமல் காவிரி நீர் உரிமையையும், தமிழக விவசாயத்தையும் காப்பாற்றமுடியாது. இதனை வலியுறுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்லணையிலிருந்து பூம்புகார்வரை பிரச்சார நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தோம். இதனை முடக்கும் விதமாக நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.
போலீசின் அனுமதி மறுப்பை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தோம். காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 30 நபர்கள் மட்டுமே இப்பிரச்சார நடைபயணத்தில் பங்கேற்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தது, மதுரை உயர் நீதிமன்றம்.
இதனையடுத்து, திட்டமிட்டபடி ஏப்ரல்-21 அன்று கல்லணையில் பிரச்சார நடைபயணம் தொடங்கியது. மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு கொடி அசைத்து நடைபயணத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற திருவையாறு சி.பி.எம். கட்சியின் விவசாய சங்க வட்டார செயலாளர் தோழர் ராமலிங்கம் மற்றும் விவசாயி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் கணேசன் உட்பட திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
காவிரி உரிமைப் பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு திருமுல்லைவாசலில் பிரச்சாரநடை பயணநிறைவு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். காவிரி உரிமைப்போராட்டத்தில் பெரும் திரளாக மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவிஅழைக்கிறோம்.
**
பிரச்சார நடைபயணம் இரண்டாவது நாளாக நேற்று (22.04.2018) காலை 7 மணிக்குத் திருக்காட்டுப்பள்ளியில் தொடங்கி நடுக்காவேரி, கண்டியூர் வழியாக திருவையாறு வந்தடைந்தது. இன்று 23.04.2018 காலை 7 மணிக்கு கண்டியூரிலிருந்து புறப்பட்டு திருச்சோற்றுத்துறை, மாத்தூர்,அய்யம்பேட்டை வழியாக பாபநாசம் வந்தடையும். பொதுமக்கள் வழியெங்கும் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றி.
தகவல்:
மக்கள் அதிகாரம்.
(99623 66321- 91768 01656 – 94431 88285)
வாழ்த்துக்கள்