மிஸ்டர் மோ(ச)டி !

தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என காட்டி ஆட்சியைப் பிடித்த மோடி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

மிஸ்டர் மோ(ச)டி !

காங்கிரசு 60 ஆண்டுகளில் செய்யாததை 60 மாதங்களில் செய்து முடிக்கப் போவதாகக் கூறி பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி, சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டார்.

60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் என்ன நடந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியும். டாடாவும் பிர்லாவும் கொழுத்ததைத் தாண்டி, நகர்வாலா ஊழல், போஃபர்ஸ் ஊழல், பங்குச் சந்தை ஊழல், கேதான் பரீக் ஊழல், யு.டி.ஐ. மோசடி, தனியார் வங்கிகள் திவால் எனப் பல பெருமைகளைக் கொண்டது காங்கிரசு கட்சி.

நரேந்திர மோடிக்கு அம்பானி, அதானி. இதற்கு அப்பால், வியாபம் ஊழல், ரஃபேல் போர் விமான ஊழல் என ஊழல்கள் ஒரு பக்கம்; லலித் மோடி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி எனப் பொதுப்பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல் மறுபக்கம் என்ற நிலைமையை வைத்து மதிப்பிட்டால், 60 மாதங்கள் முடிவதற்கு முன்பே மோடி காங்கிரசின் சாதனையை வென்றுவிடுவார் எனக் கூறிவிடலாம்.

மோடியின் ஆட்சியில் மட்டும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பொதுத்துறை வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாமல் வைத்திருக்கும் கடன் பாக்கி 5.27 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்தப் பணமெல்லாம் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டு, அங்கே சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதை நிரவ் மோடி விவகாரம் உறுதிப்படுத்துகிறது.

நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றிலிருந்து பெறப்பட்ட உத்தரவாதக் கடிதங்களைப் பயன்படுத்தி 280 கோடி ருபாய் அளவிற்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாக கடந்த ஜனவரி 29-இல் பஞ்சாப் நேஷனல் வங்கி சி.பி.ஐ.யிடம் புகார் அளித்தது. பின்னர் இது குறித்து மேலும் விசாரித்த போது 150 உத்தரவாதக் கடிதங்கள் மூலம் நிரவ் மோடியும், அவரது தாய்மாமன் மெகுல் சோக்ஸியும் இணைந்து 12,800 கோடி ருபாய் அளவிற்கு ஆட்டையைப் போட்டிருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி குற்றஞ்சுமத்தியிருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடிக்கும் அவரது மாமாவிற்கும் 1500க்கும் அதிகமான உத்தரவாதக் கடிதங்களை அளித்திருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரசாத் சுக்லா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதங்களைப் பயன்படுத்தி அவர்கள் எவ்வளவு கோடி ரூபாய் வெளிநாடுகளில் வாங்கிப் பதுக்கியிருக்கிறார்கள், எவ்வளவு பணத்தை வங்கிக்கு திரும்பத் தந்திருக்கிறார்கள் என்பது தற்போது உறுதியாகத் தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். இதனால் நிரவ் மோடி இந்திய வங்கிகளில் ஆட்டையைப் போட்ட தொகை 12,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்க வாய்ப்புண்டு.

நிரவ் மோடி பெரும் தொழில்அதிபரான சூட்சமம் இதுதான். பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் நிரவ் மோடியின் லீலையை வெளியே சொல்லுவதற்கு முன்பே, அவர் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணை தொடங்கும் முன்பே மெகுல் சோக்ஸியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். லலித் மோடியும், விஜய் மல்லையாவும் எப்படி வழியனுப்பி வைக்கப்பட்டார்களோ, அது போலவே நிரவ் மோடியும் மெகுல் சோக்ஸியும் தப்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்.

* * * * *

கார்ப்பரேட் முதலாளிகளும் பெரும் வணிகர்களும் வங்கிப் பணத்தைக் கடனாக மட்டும் பெறுவதில்லை. எந்தவொரு ஈடும் காட்டாமல், வங்கிப் பணத்தை அவர்களுக்குக் கொடுப்பதற்கு ஓவர் டிராப்ட், எல்.ஓ.சி., என பல வழிமுறைகளைச் சட்டபூர்வமாகவே மைய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. அதிலொன்றுதான் எல்.ஓ.யு. எனப்படும் வங்கி உத்தரவாதக் கடிதங்கள் அளிக்கும் முறை.

இந்த உத்தரவாதக் கடிதங்கள் வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை இறக்குமதி செய்யும் முதலாளிகளுக்கு இந்திய வங்கிகள் அளிக்கும் கடனுக்கான சான்றாவணம் ஆகும். வெளிநாட்டிலிருந்து இத்துணை கோடி ரூபாய் பெறுமான சரக்குகளை இறக்குமதி செய்யப் போவதாக வங்கிக்குக் கணக்கு காண்பித்து இந்தக் கடிதத்தை இறக்குமதியாளர்கள் பெற முடியும். பின்னர் இதனைத் தங்களுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனத்திடம் அவர்கள் கொடுத்தால், அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இந்திய வங்கியின் கிளையிலும் கொடுத்துப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தப் பரிவர்த்தன முறை முறைகேடுகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் பல்வேறு ஓட்டைகளுடன்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, உத்தரவாதக் கடிதங்கள் மூலம் கடன் தரும் வங்கிகள் சரக்குகள் முறையாக இறக்குமதி செய்யப்படுகிறதா என்பதையெல்லாம் கண்காணிப்பதில்லை. இப்படி முறைகேடுகளைச் செய்வதற்கு ஏற்றபடி சட்டப்படியே உருவாக்கப்பட்ட இந்தப் பரிவர்த்தனை முறையில் நிரவ் மோடி கும்பல் சட்டவிரோதமான முறையிலும் முறைகேடுகளில் ஈடுபட்டு வங்கிப் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் நிரவ் மோடிக்கு உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளித்த கடன்களை, அவ்வங்கியின் மைய வரவு செலவுக் கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்துள்ளனர். தடயமே இல்லாமல் திருடுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளில் இதுவரை சுளையைத் தின்றவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிரவ் மோடி கும்பலோ வங்கி அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு முழு பலாப்பழத்தையே விழுங்கிச் செரித்திருக்கிறது.

உத்தரவாதக் கடிதம் பெறுவதற்கு இறக்குமதி செய்யும் சரக்கினுடைய அளவு மற்றும் மதிப்பிற்கு இறக்குமதியாளர்கள் காட்டும் ஒரே அத்தாட்சி ஏற்றுமதியாளரிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் மட்டுமே. இதிலும் நிரவ் மோடி கும்பல் வங்கி அதிகாரிகளின் துணையோடு தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து வைரக் கற்களை இறக்குமதி செய்வதாகக் கூறித்தான் நிரவ் மோடி வங்கி உத்தரவாதக் கடிதங்களைப் பெற்றிருக்கிறார். பெல்ஜியத்திலுள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம் நிரவ் மோடியின் தந்தைக்குச் சொந்தமானது.

தந்தை ஏற்றுமதி செய்கிறார். மகன் இறக்குமதி செய்கிறார். வங்கி மகன் வழியாகத் தந்தையிடம் பல ஆயிரம் கோடி பணத்தைக் கொண்டு சேர்க்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணையோடு நிரவ் மோடி குடும்பம் நடத்திய பணக் கடத்தலுக்கு ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் என்ற சாயம் பூசப்பட்டிருக்கிறது.

இந்திய இறக்குமதி சந்தையின் மொத்த மதிப்பான 10 இலட்சம் கோடி ருபாயில் 60 சதவீதம், அதாவது 6 இலட்சம் கோடி ருபாய், நிரவ் மோடிக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற உத்தரவாதக் கடிதங்களின் நிதியுதவியுடன் நடைபெறுவதாகப் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. அப்படியென்றால், மாட்டிக் கொள்ளாத பெருச்சாளிகள் இன்னும் எத்தனையோ! இந்த இலட்சணத்தில்தான், பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல்மயமாக்கிவிட்டால் கருப்புப் பணம் உருவாவதையும், அது வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதையும் தடுத்துவிட முடியும் என நரேந்திர மோடி கும்பல் பொதுமக்களின் காதில் பூ சுற்றிவருகிறது.

* * * * *

சூடு கண்ட பூனை பாலை ஒதுக்குவதைப் போல, நிரவ் மோடி மோசடி அம்பலமான பிறகு ரிசர்வ் வங்கி இறக்குமதியாளர்களுக்கு வங்கி உத்தரவாதக் கடிதங்கள் அளிக்கும் நடைமுறைக்குத் தடை விதிக்கிறது. மோடி அரசோ, நிரவ் மோடி மோசடி வங்கியின் தனிப்பட்ட தவறென்றும், காங்கிரசு ஆட்சியில் தங்க இறக்குமதி தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட 20:80 விதிதான் நிரவ் மோடி மோசடிகளுக்குக் காரணமென்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறது.

ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் உருவாகும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுவது) அதிகமானதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு மத்தியில் அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தங்க இறக்குமதிக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே, தங்க இறக்குமதியில் 20:80 என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டது.

இப்புதிய விதியின்படி, தங்கத்தை இறக்குமதி செய்யும் நிறுவனம், தான் இறக்குமதி செய்யும் மொத்தத் தங்கத்தில் 20 சதவீதத்தை நகைகளாகச் செய்து ஏற்றுமதி செய்தால், அந்த நிறுவனத்துக்கு மீண்டும் இறக்குமதி செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளிவர வேண்டிய நிலையில் இந்த விதிப்படி தங்கம் இறக்குமதி செய்து கொள்ளும் சலுகையை மேலும் ஏழு நிறுவனங்களுக்கு வழங்கினார், ப.சி. அந்த ஏழு நிறுவனங்களுள் நிரவ் மோடியின் நிறுவனமும், அவரது மாமா மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனமும் இருந்தன.

இந்த 20:80 விதி கொண்டுவரப்பட்ட போதே, அது உள்நாட்டில் உருவாகும் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திப் போவதற்குப் பயன்படும் எனக் குறிப்பிட்டு, வருவாய்ப் புலனாய்வுத் துறை எதிர்ப்புத் தெரிவித்தது. ப.சி. அளித்த இந்தச் சலுகையால் அரசிற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்றப் பொது கணக்குக் குழு இப்பொழுது குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இவற்றைக் காட்டி, காங்கிரசு மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

ப.சிதம்பரத்தால் 2013-ஆம் ஆண்டு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த 20:80 சலுகையை, பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த மறுநிமிடமே ரத்து செய்யவில்லை. ஐந்தாறு மாதங்கள் கழித்து சாவகாசமாக 2014 இறுதியில்தான் ரத்து செய்தது. இந்தத் தாமதம் யாருக்குப் பயன்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. காங்கிரசின் பாவத்தில் கையை நனைத்துவிட்டு, இப்பொழுது யோக்கியனைப் போல நாடகமாடுகிறது, பா.ஜ.க.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் முகவர்களுள் ஒருவரான பெங்களூருவைச் சேர்ந்த ஹரிபிரசாத், கீதாஞ்சலி நிறுவனம் 31 வங்கிகளிலிருந்து பத்தாயிரம் கோடி ருபாய் அளவிற்கு கடன் வாங்கி, அவற்றைப் பல்வேறு போலி நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாகக் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சுமத்திப் பிரதமர் மோடி அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் மீது உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, நிரவ் மோடி-மெகுல் சோக்ஸி குடும்பம் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பிறகு, அவர்களை விட்டேனா, பார் எனச் சவடால் அடித்துவருகிறது. இதைக் கேட்டு லலித் மோடியும் விஜய் மல்லையாவும் வாயாலா சிரிப்பார்கள்?

* * * * *

பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றிருக்கும் மோசடிகள் அம்பலமாகும்போதெல்லாம், அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்குவதுதான் இதற்குத் தீர்வு என்று மழைக்காலத் தவளைகள் போல முதலாளித்துவ நிபுணர்கள் கத்துவது வாடிக்கை. இப்பொழுதும் அந்த உபதேசத்தைத் தரகு முதலாளிகள் சங்கமான அசோசெம், மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, கோத்ரேஜ் குழுமங்களின் தலைவர் ஆதி கோத்ரேஜ் உள்ளிட்ட பலரும் காது புளிக்கும் வண்ணம் சொல்லி வருகின்றனர்.

1967-க்கு முன்பு இந்திய வங்கித் துறை தனியாரின் வசம்தான் இருந்தது. அக்காலக் கட்டத்தில் தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளால் ஆண்டொன்றுக்கு 35 தனியார் வங்கிகள் திவாலாகி, பொதுமக்களின் பணத்திற்கு வேட்டு வைத்தன. இந்திரா காந்தி வங்கித் துறையை அரசுடமையாக்கியதற்கு, தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளும் திவாலும் முக்கிய காரணமாக அமைந்தன.

வங்கிகள் அரசுடமையாக்கப்பட்ட பிறகு, எந்தவொரு அரசு வங்கியும் திவாலாகவில்லை. அதன் பிறகுதான் கிராமப்புறங்களை நோக்கி வங்கிகள் செல்லத் தொடங்கின. தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வங்கித்துறையில் மீண்டும் தனியார் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குளோபல் டிரஸ்ட் வங்கி உள்ளிட்ட சில தனியார் வங்கிகள் தமது தில்லுமுல்லுகளால் திவாலாகின.

உண்மை இவ்வாறிருக்க, வங்கிகளைத் தனியார்மயப்படுத்தினால் மோசடி நடைபெறாது என நிபுணர்களும் தரகு முதலாளிகளும் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பொய்.

தற்பொழுது அரசு வங்கிகளை ஏமாற்றி வெளிநாடுகளுக்குத் தப்பியோடியிருப்பவர்கள் யார்? விவசாயிகளா, ஏழை மாணவர்களா, சிறுதொழில் முனைவோரா? ஓடிப்போன அனைவரும் விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி வகைப்பட்ட தரகு முதலாளிகள்தான். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர்களும் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள்தான். ஏர்டெல் நிறுவனம் வங்கி சேவையில் இறங்கியவுடனேயே தில்லுமுல்லு செய்து பிடிபட்டு, ஐந்து கோடி ரூபாய் அபராதம் செலுத்தித் தப்பியிருக்கிறது. இப்படிப்பட்ட தில்லுமுல்லு முதலாளிகளிடம் அரசு வங்கிகளை ஒப்படைக்கக் கோருவது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுக்கச் சொல்லுவதற்கு ஒப்பானது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பன்னாட்டு மற்றும் தேசங் கடந்த தனியார் வங்கிகள் நடத்திய சப்-பிரைம் மோசடி காரணமாக, உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிவரும் வேளையில், நரேந்திர மோடி அரசு வங்கிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க முயலுவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, பேரபாயத்தை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பானது.

-கதிர்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க