1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாங்கி பல்கலைக்கழகம், அறிவியல் ஆராய்ச்சி, சட்டம், விவசாயம், சுதந்திரக் கலைகள், பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

தோள்களில் முதுகுப் பையுடன் ஊதா நிற சட்டை அணிந்துள்ள ‘ஙய் பகோம்’ (Ngai Pacome), அவரது நாட்டின் அவல நிலையை விவரிக்கும் போதும் புன்னகைக்கிறார்.

“நாட்டின் சில பகுதிகளில், நிலைமை சோகமாகவும் துயரமானதாகவும் இருக்கிறது” என்று 23 வயதான, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக முதுகலை மாணவர் கூறுகிறார்.

2005-2008 காலகட்டத்தில் அதிபர் ஃபாஸ்டின் அர்சேன்ஞ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.

”நிகழ்ந்துவரும் வன்முறை காரணமாக நாட்டில் பொருளாதார செயல்பாடே முற்றிலும் இல்லை. இது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது, இங்குள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்” என்கிறார் பகோம்.

ஏன் இந்நிலை என்பது புரிந்துகொள்ள கடினமாக இல்லை. 2013 மார்ச்சில் செலேகா என்ற ஆயுதக் குழுவினர் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிபர் ஃபிரான்கிஸ் போஸைசை நீக்கியதிலிருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு அராஜகத்திற்கு நெருக்கமான நிலையில் இருக்கிறது. இரத்தம் தோய்ந்த கைப்பற்றுதல் நடவடிக்கை, பழிவாங்கும் தாக்குதல்கள், இன அழிப்பு மற்றும் வெகுஜன இடப்பெயர்வுகள் உள்ளிட்ட வன்முறையின் கொடூரமான செயல்களால் விளைந்தது.

‘‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அதன் முன்னாள் காலனிய எஜமானரான பிரான்சிடமிருந்து முற்றிலும் விடுதலை பெறவில்லை. நாட்டின் நிகழ்ச்சிநிரல் வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் 22 வயதான அன்னே பெர்டில் டுய்ஸ்ஸிட் வோபியண்ட் என்ற மாணவி.

நாட்டை 2013-ஆம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வந்த வன்முறைகளுக்கு 2016-ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் சிறு ஆறுதலை தந்தது. தலைநகர் பாங்கிக்கு வெளியில் புதிய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேல் ஆயுதக்குழுக்களின் கட்டுபாட்டில் உள்ளன. அவை வரிகள் வசூலித்தல் உள்ளிட்ட தேசிய அரசாங்கத்திற்கு இணையான நிர்வாகங்களை இயக்கி வருகிறார்கள்.

நாட்டில் நடக்கும் மோதல்கள், கல்வி மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை நாசப்படுத்தியுள்ளன; மற்ற பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு இடையில் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்க அரசாங்கம் போராடுகிறது.

இந்த உள்நாட்டுப் போரால் விளைந்த முக்கிய சேதங்களில் ஒன்றாக கல்வி உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மக்கட்தொகையில் சுமார் 75 சதவீதத்தினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள். இளைஞர் வேலையின்மை வீதம் 12.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதையொட்டி இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறைந்திருக்கலாம்; ஆனால் அதன் முகப்பிற்குப் பின்னால் வேளாண்மை மற்றும் விவசாய நுட்பங்களை கணிசமாக ஆராய்ச்சி செய்துவருகிறது.

மலாவி, சாட் மற்றும் நைஜர் போன்ற மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உயர் கல்வியில் நுழையும் மாணவர்கள் விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 26% ஆகும்.

பல்கலைக்கழகங்களில் நுழையும் நற்பேறு கொண்ட சிறுபான்மை மத்திய ஆப்பிரிக்கர்களுக்கும் கூட நிலவும் இடையறாத போர் மற்றும் நெருக்கடியினாலும், ஆசிரியர் பற்றாக்குறையினாலும் வகுப்புகள் பெரும்பாலும்  தள்ளிவைக்கப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.

கிருஸ்தவ – முஸ்லீம் இனங்களுக்கு இடையிலான இடைவிடாத பதட்டத்தின் காரணமாக பாங்கியை விட்டுத் தப்பிச் சென்ற நண்பர்கள் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறார்கள்.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பட்டப்படிப்பை முடிக்க இருமடங்கு காலமாவதாக சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘‘நான் எனது சட்ட முதுகலை படிப்பை முடிக்க விரும்புகிறேன். ஆனால் இங்கு போதிய தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை. அதனால் நான் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார் ஃபியர் பெபனிசிங்கோ என்ற மாணவர்.

அறிவியல் மற்றும் மருத்துவத் துறை கட்டிடங்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலையைப் போல் காட்சியளிக்கின்றன.

தலைநகர் பாங்கி முழுவதும் மின்சாரம் மற்றும்  நீர் பற்றாக்குறையால் அவதியுறும்போது இத்தொந்தரவுகளுக்கு பல்கலைக்கழகம் விதிவிலக்கல்ல. இந்த வசதி, வளங்களின் பற்றாக்குறையையும் தாண்டி தொழில்நுட்ப துறையிலுள்ள வகுப்பறைகளின் சன்னல்கள் பெரும்பாலும் உடைந்துள்ளன. சுவர்கள் பெயர்ந்துள்ளன, வண்ணப் பூச்சுகள் உரிந்து சிதிலமடைந்துள்ளன.

‘‘இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது’’ என்கிறார் 18 வயதான மாணவி பெனிசியா டொய்னா. இங்குள்ள நிலைமைகள் இளைஞர்களை இங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கின்றன என்கிறார்.

படிப்பதற்கு அல்லது வேலைக்காக வேறு இடத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போக விரும்புவதாக 22 வயதான டயானே நகோப் கூறுகிறார்.

இந்த உள்நாட்டுப் போருக்கு முன்னரே நாட்டின் கல்விநிலை மோசமாக தானிருந்தது. ஆனால், 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்வி பெறும் வாய்ப்பே மிக மோசமாகிவிட்டது.

யுனிசெஃபின் கணக்கீட்டின் படி மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் கல்வியறிவற்றவர்கள்.

ஒரு அரசியல்வாதியாகி தனது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை கொண்டுவர விரும்புவதாக சொல்கிறார் 23 வயதான ஙய் பகோம்.

‘‘தலைநகருக்கு வெளியில் உள்ள நகரங்கள் கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் பள்ளி, கல்லூரிகளைக் கைப்பற்றி வைத்துள்ளனர். அமைதிப்படையினரும் கூட பள்ளி கட்டிடங்களை தங்களுக்கான முகாம்கள் அல்லது தளங்களாகப் பயன்படுத்துகின்றனர் அல்லது பள்ளி விளையாட்டுத்திடல்களில் தங்கள் படைதளத்தை அமைத்துள்ளனர்’’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

நாட்டில் உறுதியற்ற தன்மை தொடர்வதால் மாணவர்களின் வகுப்புகள் தொடர்ச்சியாக ஒத்திவைப்பு மற்றும் ரத்து செய்யப்படுகின்றன.

மிகப் பெரிய கல்வி நெருக்கடி உட்பட நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்கிறார் பகோம்.  “என்ன இருந்தாலும் இது எங்களுடைய வீடு என்பதை  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நான் படிப்பதற்கு வேறு இடத்திற்குப் போனாலும், நான் திரும்பி வர வேண்டும், வந்து இந்த இடத்தை சரி செய்ய வேண்டும்” என்கிறார் பகோம்.

தொடர்ச்சியான நெருக்கடி இருந்தபோதிலும், பல மாணவர்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: அல்ஜசீரா.
ஆதாரம்: CAR: ‘To live and study in Bangui is a type of torture’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க